Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More


எலிசபெத் எலியட் (1926 - 2015) திறமையான எழுத்தாளர், சிறந்த பேச்சாளர், மொழியியலாளர். அவருடைய கணவர், ஜிம் எலியட் நற்செய்தி அறிவிப்பதற்காகாக 1956இல் கிழக்கு ஈக்குவடாரில் அமேசான் வடிநிலத்தில் வௌராணி செவ்விந்தியர்களைத் தொடர்புகொள்ள முயன்றபோது அவர்களால் ஈட்டியெறிந்து கொல்லப்பட்டார். பின்னர் எலிசபெத் தன் கணவரைக் கொன்ற ஆதிவாசிகளுக்கு நற்செய்தி அறிவிக்கத் தன் கைக்குழந்தை வலேரியுடன் அங்கு மிஷனரியாகச் சென்று, இரண்டு ஆண்டுகள் அவர்களோடு வாழ்ந்தார். தென் அமெரிக்காவில், ஈக்குவடாரில் எட்டு ஆண்டுகள் வாழ்ந்து அங்கு பல்வேறு பழங்குடியினருக்கு நற்செய்தி அறிவித்தார். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவுக்குத் திரும்பிய அவர், இருபத்தைந்து புத்தகங்கள் எழுதினார். பல்கலைக்கழகங்களில் மாணவர்களிடையே உரையாற்றினார். எலிசபெத் தன் எழுபதுகளில் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தன் அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டார்.

என் வாய் உங்களோடே பேசத் திறந்திருக்கிறது, என் இருதயம் பூரித்திருக்கிறது. கிறிஸ்தவர்களின் ஆவிக்குரிய புலன் இன்னும் செயல் இழக்கவில்லை, அவர்களுடைய ஆவிக்குரிய புரிதலும், அறிவும், பகுத்துணர்வும், கூர்மையும் இன்னும் மழுங்கவில்லை, கிறிஸ்துவின்மேல் அவர்களுடைய பசியும் தாகமும் இன்னும் தணியவில்லை, கிறிஸ்துவின் நற்செய்தியை வார்த்தையாலும், வாழ்க்கையிலும் அறிவிக்கவும், நிரூபிக்கவும் வேண்டும் என்ற அவர்களுடைய வேட்கை இன்னும் வற்றவில்லை, தேவனுடைய அரசை விரிவாக்க அவரோடு சேர்ந்து உழைக்க வேண்டும் என்ற அவர்களுடைய நாட்டம் இன்னும் தேயவில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன். "நான் வருமளவும் வாசிக்கிறதில் ஜாக்கிரதையாயிரு," என்று பவுல் தீமோத்தேயுக்குச் சொன்னதுபோல, கிறிஸ்து வருமளவும் பரிசுத்த ஆவியானவரின் ஆளுகைக்கு முரணானவைகளில் மூழ்கிவிடாமல், அவருடைய குணத்துக்கு இசைவானவைகளை வாசிப்பதற்கும், கேட்பதற்கும், பார்ப்பதற்கும் உங்களை உற்சாகப்படுத்துகிறேன்.

இன்று நாம் எலிசபெத் எலியட் என்ற ஒரு பரிசுத்தவதியைப்பற்றிப் பார்க்கப்போகிறோம்.

எலிசபெத் 1926இல் பெல்ஜியம் நாட்டில் பிரஸல்ஸ் என்ற நகரத்தில் பிறந்தார். அவருடைய பெற்றோர் இருவரும் நல்ல கிறிஸ்தவர்கள், தெளிவான, திடமான விசுவாசமும், ஊழிய வாஞ்சையும், மிஷனரி வேட்கையும் கொண்டவர்கள். ஆழமான கிறிஸ்தவப் போதனைகள் என்ற அடித்தளத்தின்மேல் உறுதியாகக் கட்டப்பட்ட குடும்பம். அவருடைய அம்மா மிகவும் வசதியான, பணக்காரக் குடும்பத்திலிருந்து வந்தவர். அவருடைய அப்பா நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்தவர்.

எலிசபெத் பிறந்த ஒரு சில வருடங்களில், அவருடைய அப்பாவுக்கு Sunday School Times என்ற இதழில் ஆசிரியர் வேலை கிடைத்தது, ஆகவே, அவர்களுடைய குடும்பம் பெல்ஜியத்திலிருந்து அமெரிக்காவிலுள்ள பிலடெல்பியாவிற்குக் குடிபெயர்ந்தது. ஏனென்றால், அவருடைய அப்பாவுக்கு அங்குதான் வேலை. அவருடைய பெற்றோர் தங்கள் பிள்ளைகளை ஒழுக்கத்திலும், ஒழுங்கிலும் சிரத்தையோடு வளர்த்தார்கள். அவர்கள் கண்டிப்பானவர்கள். பிள்ளைகள் எல்லாரும் காலை உணவுக்கு தவறாமல் காலை 6:59 மணிக்கு வர வேண்டும் என்றும், ஒவ்வொரு நாளும் குடும்ப ஆராதனையில் பங்குபெற வேண்டும் என்றும் அவருடைய பெற்றோர் வலியுறுத்தினார்கள். குடும்ப ஜெபம் எவ்வளவு முக்கியம் என்பதை எலிசபெத் தெளிவாக உணர்ந்திருந்தார். ஜெபம் முடிந்தபிறகு அவருடைய அப்பா ஜோனதன் எட்வர்ட்ஸ், சார்லஸ் ஸ்பர்ஜன்போன்றோரின் புத்தகங்களை வாசித்து, விளக்கிச்சொன்னபோது, எலிசபெத் மிகக் கவனமாகக் கேட்டார். எல்லாரும் சேர்ந்து பாடல்கள் பாடினார்கள், வேதாகமத்தை வாசிதார்கள். வருடத்தில் ஒரு நாள்கூட அவர்கள் இந்த நேரத்தை தவறவிடவில்லை. விடுமுறைக்கு வெளியேபோனபோதுகூட, அடுத்தநாள் அதிகாலை 5 மணிக்கே எழுந்து வீட்டுக்குச் சென்றார்கள். ஏனென்றால், அவர்கள் 6.59 மணிக்கு வீட்டில் காலை ஜெபத்தில் இருந்தாக வேண்டும். இது கட்டாயம் என்பதால் அல்ல, எலிசபெத் உண்மையாகவே அந்த நேரத்தைத் தவறவிட விரும்பவில்லை. அந்த நேரத்தை அவர் விரும்பினார். அவருடைய பெற்றோர் இவ்வளவு கண்டிப்பாக இருந்ததால், பிள்ளைகள் எல்லாரும் சுருங்கிய முகத்தோடு, இறுக்கமான சூழலில்தான் வளர்ந்திருப்பார்கள் என்று தவறாக நினைக்க வேண்டாம். அப்படியல்ல. அவருடைய பெற்றோர் பிள்ளைகள்மேல் வைத்திருந்த தங்கள் அன்பை, பாசத்தை, பகட்டாக, பட்டவர்த்தனமாக, காட்டவில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம்.

அவருடைய குடும்பத்தாரும், நண்பர்களும் எலிசபெத்தை Betty என்று செல்லமாக அழைத்தார்கள். அவர் தன் சிறு வயதிலேயே, நான்கு அல்லது ஐந்து வயதிலேயே, ஆண்டவராகிய இயேசுவைத் தன் சொந்த இரட்சகராக விசுவாசித்து, ஏற்றுக்கொண்டார். அவர் சிறு வயதில் சந்தித்த பலர் அவரில் இயேசுவைப்பற்றிய ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதால், சின்னஞ்சிறு வயதிலேயே அவர் எளிதாக இந்தத் தீர்மானத்திற்கு வந்துவிட்டார். அவருடைய அப்பா Sunday School Times இதழின் ஆசிரியராக இருந்ததால், பலவிதமான விருந்தினர்கள் அவருடைய வீட்டுக்கு வந்துபோனார்கள். ஆப்பிரிக்கா, இந்தியா, சீனாபோன்ற நாடுகளில் ஊழியம் செய்த பல மிஷனரிகள் அவருடைய வீட்டுக்கு வந்தபோது அவர்கள் சொன்ன கதைகளை அவர் உன்னிப்பாகக் கவனித்துக் கேட்டார். பலவிதமான கதைகள், பலவிதமான மிஷனரிகள். குழந்தைப் பருவத்திலேயே அது அவருக்குள் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்படிப் பலர் வந்துபோனார்கள். ஒருநாள் ஒரு சகோதரி அவருடைய வீட்டுக்கு விருந்துக்கு வந்திருந்தார். அவருடைய பெயரும் Bettyதான். அவர், "நான் சீனாவுக்கு மிஷனரியாகச் செல்லவிருக்கிறேன். அங்கு நான் ஒரு கிராமத்தில்தான் தங்கி, ஊழியம் செய்யப்போகிறேன். ஏற்கெனவே, அங்கு மிஷனரியாகப் பணியாற்றிக்கொண்டிருக்கும் ஒருவரைத் திருமணமும் செய்யப்போகிறேன்," என்று அவர்கள் இருவரும் சாப்பிட்டுக்கொண்டு பேசிக்கொண்டேயிருந்தார்கள். கொஞ்ச நாட்கள் கழித்து, அந்த மிஷனரி தம்பதிகள் சீனாவில் ஏற்பட்ட உள்நாட்டுப்போரில் கம்யூனிஸ்ட்களிடம் சிக்கிக்கொண்டதாகவும், அவர்கள் இந்த மிஷனரிகள் இருவரையும் கிராமத்தைவிட்டு வெளியே இழுத்துச்சென்று, அவர்களுடைய தலையை வெட்டிக்கொன்றதாகவும் இளந்தளிர் எலிசபெத் கேள்விப்பட்டார். அவர்களைக் கிராமத்திலிருந்து வெளியே இழுத்துச் செல்வதற்குச் சில நிமிடங்களுக்குமுன்பு, அவர்கள் தங்கள் கைக்குழந்தையை ஒரு சிறிய கூடையில் வைத்து, அந்தக் குழந்தையின் சட்டைப்பையில் கொஞ்சம் பணத்தை மறைத்துவைத்ததாகவும் கேள்விப்பட்டாள். எலிசபெத் தன் வீட்டுக்கு விருந்துக்கு வந்த அந்த மிஷனரியை நினைவுகூர்ந்தார். எட்டு வயது எலிசபெத்தின் இருதயத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. கர்த்தரை உண்மையும், உத்தமுமாகப் பின்பற்றுவதானால் அதற்காகத் தன் உயிரையும் இழக்க நேரிடும் என்பதை இளமைப்பருவத்திலிருந்தே அவர் மிகத் தெளிவாகப் புரிந்துகொண்டார்.

எலிசபெத் ஹாம்ப்டன் டுபோஸ் என்ற ஒரு கிறிஸ்தவ உறைவிடப் பள்ளியில் பயின்றார். இந்தப் பள்ளி அவருடைய பதின்ம வயதில் அவருடைய ஆளுமையை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தது என்று சொல்லலாம். பொதுவாக, "அந்தப் பள்ளி, மாணவர்களை மிகக் கண்டிப்பாகவும், கடுமையாகவும் நடத்துகிறது. அந்தப் பள்ளியில் நிறைய சட்டதிட்டங்கள் இருக்கின்றன," என்று சிலர் அந்தப் பள்ளியின்மேல் குற்றம்சாட்டினார்கள். ஆனால் Betty, "அந்தப் பள்ளி எனக்கு மிகவும் உதவியாக இருந்தது," என்றே நினைத்தார், சொன்னார். இப்பள்ளியில் படித்த மாணவர்களை எம்.கே., பி.கே, ஓகே என்று மூன்று குழுக்களாகப் பிரித்தார்கள். எம்.கே என்றால் missionaries kids மிஷனரிமார்களின் குழந்தைகள், பி.கே என்றால் preachers kids பிரசங்கிமார்களின் குழந்தைகள், ஓ.கே என்றால் ordinary kids சாமான்யர்களின் குழந்தைகள் என்று பொருள். அந்தப் பள்ளியில் பரந்துவிரிந்த கல்வித்திட்டம் இருந்தது. அதாவது வழக்கமான கல்வியோடு வேறு பலவிதமான தொழிற்கல்வியும் கற்பித்தார்கள். அதற்கும்மேலாக திடமான, உரமிக்க கிறிஸ்தவத் தலைவர்களாகவும், மிஷனரிகளாகவும் மாறுவதற்குத் தேவையான திறமைகளையும், குணங்களையும் அவர்களில் ஏற்படுத்தினார்கள். எலிசபெத் சாப்பாட்டு மேசையில் பயன்படுத்துவதற்குத் தேவையான சிறிய கைகுட்டைகளை மடிப்பதற்கும், அடுக்கிவைப்பதற்கும், கோழி வெட்டுவதற்கும், சுடுவதற்கும், முகாமிடும்போது நெருப்புமூட்டுவதற்கும் கற்றுக்கொண்டார். நீண்ட தூரம் நடப்பது, மலையேறுவது, துடுப்புப்போட்டு படகோட்டுவதுபோன்ற நிறைய உடற்பயிற்சிகளில் ஈடுபட்டார்.

அந்தப் பள்ளித் தலைமையாசிரியரின் மனைவி, திருமதி போஸ் ஒரு கறார்பேர்வழி. அவர்களைச் சமாளிப்பது கடினம். அவர் சில காரியங்களை மிகவும் வலியுறுத்தினார். அவர் மிஷனரிகளின் பிள்ளைகளிடம், "இன்று நீங்கள் உங்கள் படுக்கைக்கு அடியில் இருக்கும் தூசியைக்கூட ஒழுங்காகத் தட்டிச் சுத்தம் செய்யவில்லையென்றால், பிற்காலத்தில் ஒரு மிஷனரியாகச் செல்ல வேண்டும் என்று கனவுகாண வேண்டாம்," என்று அடிக்கடி சொன்னார். "சின்னச்சின்ன காரியங்களில் நீங்கள் சரியாக இல்லாவிட்டால், உங்களால் பெரிய காரியங்களைச் செய்ய முடியாது," என்று அவர் அவர்களுக்குக் காண்பித்தார். அவருடைய இந்த வார்த்தைகளை எலிசபெத் தனக்குள் வாங்கிக்கொண்டார். "ஓ! சிறிய காரியங்களில் என் மனப்பாங்கு எப்படி இருக்கிறதோ, அப்படியே பெரிய காரியங்களிலும் இருக்கும்," என்று அவர் புரிந்துகொண்டார்.

உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்ததும், மேற்படிப்புக்காக Wheaton கல்லூரியில் சேர்ந்தார். உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது மொழிகளை எளிதில் கற்கும் தாலந்து அவரிடம் இருப்பது தெளிவாகத் தெரிந்தது. மொழி, மொழியியல்போன்ற காரியங்களில் அவர் சிறந்துவிளங்கினார். எனவே, அவர் தன் தாலந்துகளைப் பயன்படுத்தி பல மொழிகளைக் கற்க விரும்பினார். இது ஒருபுறம் இருக்க, அந்த நேரத்தில் தான் ஒரு மிஷனரியாகப் போக வேண்டும் என்ற காரியத்தில் அவர் தெளிவாகவும், உறுதியாகவும் இருந்தார்.

தேவன் தன்னை ஒரு மிஷனரியாக அழைப்பதை உணர்ந்த எலிசபெத், மொழிகளைப் படிப்பதில் தனக்கிருந்த ஆர்வத்தினிமித்தம் கிரேக்க மொழி படிக்க முடிவு செய்தார். தான் ஒரு மொழிபெயர்ப்பாளராக மாறுவதற்கும், வேதாகமத்தை மொழிபெயர்க்கவும் அது உதவும் என்று அவர் உணர்ந்தார்.

Wheaton கல்லூரியில் அவர் ஜிம் எலியட் என்ற ஒரு வாலிபனைச் சந்தித்தார். ஜிம் எலியட் கலகலப்பான, கட்டுறுதியான, விளையாட்டுவீரன், தேவன்மேல் பக்திவைராக்கியம் உடையவன். தொலைதூரப் பகுதிகளுக்கும், இதுவரை நற்செய்தி அறிவிக்கப்படாத பகுதிகளுக்கும் நற்செய்தி அறிவிக்கத் தேவன் தன்னை அழைக்கிறார் என்ற மிகத் தெளிவான எண்ணமும், தரிசனமும் அவரிடம் இருந்தது. எலிசபெத்துக்கு அவர்மேல் ஓர் ஈர்ப்பு ஏற்பட்டது.

Betty மிகவும் கூச்சசுபாவமுடையவர், எல்லாரிடமிருந்தும் ஒதுங்கியிருப்பவர், தன்னைப் பிறருடைய பார்வையிலிருந்து மறைத்துக்கொள்பவர். தான் இப்படிப்பட்ட ஆள்தான் என்று அவருக்குத் தெரியும். எனவே, ஜிம் தன்னைக் கவனிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக Betty நிச்சயமாக நினைக்கவில்லை. தான் ஒரு சுவர்ப்பூ, அதாவது, ஒதுங்கிருப்பவர், எதிலும் மூக்கைத் துளைக்காதவர், தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவர், தன்னை முன்னிலைப்படுத்தாதவர் என்று அவருக்கு நன்றாகத் தெரியும். அவருடன் பழகும்போது அவர் மிகவும் குளிர்ந்தவர்போலவும், பிறருடன் பழகுவதற்கு விரும்பாதவர்போலவும் தோன்றும். அவருடைய பதில்கள் அவ்வளவு குளிர்ந்திருக்கும். இது அவருக்குத் தெரியும். நெருங்கிப் பழகமாட்டார், பட்டும் படாமல், தொட்டும் தொடாமல், போயிடுவார். இப்படிப்பட்ட ஒருவர் எப்படி ஒரு மிஷனரியாகச் செல்ல முடியும்? அவர் மாற விரும்பினார். இந்தப் பிரச்சினை அவர் வாழ்க்கையில் திரும்பத்திரும்ப வந்தது. இப்படிப்பட்ட ஒருவர் ஜிம்மை நெருங்கிச் செல்வாரா? தன்னை அறிமுகம்செய்வாரா? தன் விருப்பத்தைச் சொல்வாரா? சாத்தியமேயில்லை. எனவே, Betty ஜிம்மை தூரத்திலிருந்து விரும்பினார்.

ஆயினும், ஜிம் எலியட் Bettyயைக் கவனிக்கத் தவறவில்லை. ஆனால், தேவன் தன்னை ஒரு மிஷனரியாக அழைக்கிறார் என்பதில் ஜிம் தெளிவாகவும், உறுதியாகவும் இருந்தார். அது மட்டும் இல்லை. திருமணம் செய்தால், மிஷனரியாகப்போகிற ஆபத்தான பகுதிகளில் தேவனுக்கு முழுஇருதயத்தோடு ஊழியம் செய்ய முடியாது என்ற உறுதியான கோட்பாடும் வைத்திருந்தார். அவர் தன்னைக் கிறிஸ்துவுக்கு முற்றிலும் அர்ப்பணித்த வாழ்க்கை வாழ விரும்பினார். அவர் தன் நாட்குறிப்பில், இன்று மிகப் பிரபலமாக இருக்கிற, "இழக்க முடியாததைப் பெறுவதற்காக, தக்கவைத்துக்கொள்ள முடியாததை விட்டுவிடுகிறவன் முட்டாள் அல்ல," என்று எழுதினார்.

எலிசபெத், ஜிம் எலியட் ஆகிய இருவருடைய ஆளுமையும், பழகும் விதமும், வித்தியாசமானவை. எலியட் எல்லோரோடும் சகஜமாகப் பழகக்கூடியவர், கலகலப்பாகப் பேசக்கூடியவர். எலிசபெத் தான் உண்டு தன் வேலை உண்டு என்று எல்லாரிடமிருந்தும் ஒதுங்கியிருப்பவர். இருந்தபோதும், மிஷனரியாகச் செல்ல வேண்டும் என்று இருவருடைய மனதிலும் ஒரே எண்ணம் இருந்ததால், இருவரும் ஒருவர்பால் ஒருவர் ஈர்க்கப்பட்டார்கள், ஒருவரையொருவர் விரும்பினார்கள்.

அவர்கள் ஒருவரையொருவர் நெருக்கமாக அறிவதற்குச் சூழ்நிலைகளும் சாதகமாக அமைந்தன. எலிசபெத் ஏற்கெனவே கிரேக்க மொழி படித்துக்கொண்டிருந்தார். ஜிம் எலியட்டும் கிரேக்க மொழி படித்துக்கொண்டிருந்தார். ஆகவே, இருவரும் அடிக்கடிச் சந்திக்க வாய்ப்புக் கிடைத்தது. மேலும், ஜிம் எலியட் எலிசபெத்தின் சகோதரர் டேவ் தங்கியிருந்த அறையிலேயே தங்கியிருந்தார். இருவரும் அறைத்தோழர்கள். கர்த்தர் தன்னை ஒரு மிஷனரியாக அழைக்கிறார் என்று ஜிம் மிகத் தெளிவாக அறிந்திருந்தார். எனவே, இந்த விவகாரத்தில் என்ன செய்வது என்று அவருக்குத் தெரியவில்லை. ஒருவேளை தான் இதையும் பலிபீடத்தில் கிடத்தவேண்டும் என்று தேவன் விரும்புகிறாரோ என்று அவர் நினைத்தார். ஆனால், எலிசபெத்தை விரும்புவதை அவரால் தவிர்க்கமுடியவில்லை. அந்த எண்ணம் அவரை ஆக்கிரமித்திருந்தது. ஆகவே அவர்கள் இருவரும் முதலாவது கர்த்தரை ஆசையாய்ப் பின்தொடர முடிவுசெய்தார்கள். எலிசபெத் தான் தனிமையாக இருப்பதாக உணர்ந்தார். ஏற்கெனவே, அவர் தனிமை விரும்பி. இப்போது அவர் இன்னும் தனித்துவிடப்பட்டார். அவர் ஜிம் எலியட்டை மிகவும் விரும்பினார். ஆனால், இந்தக் காரியத்தில் ஜிம் எலியட்டால் உடனடியாக ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. குழப்பம், கலக்கம். எலிசபெத் தன் எதிர்காலத்தைப்பற்றிச் சிந்திக்க ஆரம்பித்தார். அவருக்கும் என்னசெய்வதென்று தெரியவில்லை. திருமணம்செய்யாமல் தனியாகத்தான் மிஷனரி வேலை செய்ய வேண்டும் என்ற கொள்கையில் ஜிம் உறுதியாக இருந்தார். மற்றவர்களும் அப்படி இருக்க வேண்டும் என்று அவர் ஊக்குவித்தார். அவர் அப்போது பவுலின் நிருபங்களை வாசித்துக்கொண்டிருந்தார். எதிலும் சிக்கிக்கொள்ளாமல், மாட்டிக்கொள்ளாமல் விடுதலையோடு கர்த்தரைச் சேவிக்க வேண்டுமானால் திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பது சிறந்தது என்று அவர் நினைத்தார்.

இந்த நேரத்தில் எலிசபெத்தின் தங்கைக்கு நிச்சயதார்த்தம் நடக்கவிருந்தது. தங்கைக்கு நிச்சயதார்த்தம். ஒரு பக்கம் மகிழ்ச்சி. இன்னொரு பக்கம், தன் நிலையை நினைத்து வருந்தினார். தனக்கு ஏன் இப்படி நடக்கிறது என்று கலங்கினார். ஆட்களே இல்லாத ஒரு தீவில் தன்னந்தனியாக மாட்டிக்கொண்டதுபோன்ற ஓர் உணர்வு அவருக்கு ஏற்பட்டது. ஜிம் எலியட் திருமணத்தைப்பற்றிய பவுலின் நிருபங்களை வாசித்துக்கொண்டிருந்தார். இந்தக் காரியத்தில் எலியட்டால் ஒரு தீர்மானத்துக்கு வர முடியவில்லை. அவர் தேவனுடைய சித்ததையும், நடத்துதலையும் சிரத்தையுடன் நாடினார். தர்மசங்கடமான நிலைமை! "இந்த உறவு சரியா, தவறா? நான் இதைத் தொடர வேண்டுமா அல்லது கைவிட வேண்டுமா? நான் திருமணம்செய்யலாமா அல்லது காத்திருக்க வேண்டுமா? நான் என்ன செய்யவேண்டும்," என்று ஜிம் யோசித்துக்கொண்டிருந்தார். எலிசபெத் செய்வதறியாது திகைத்து நின்றார். எலிசபெத்தின் நண்பர்களும், அவரை அறிந்தவர்களும் அவரைப் பார்த்தபோதெல்லாம் புருவங்களை உயர்த்தினார்கள், நெற்றியைச் சுளித்தார்கள். தேவனைத் தேடுவதையும், பின்தொடர்வதையும்தவிர தன்னால் வேறொன்றும் செய்யமுடியாது என்று எலிசபெத் புரிந்துகொண்டார். எனவே, தனியாக மிஷனரி ஊழியம் செய்வதற்குத் தேவையான பயிற்சிலும் ஈடுபட்டார். அது மிகவும் குழப்பமான சூழ்நிலை. எலிசபெத், ஜிம் ஆகிய இருவரும் ஒருவரையொருவர் விரும்புகிறார்கள் என்று இருவருடைய குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் நன்றாகத் தெரியும். ஜிம்மின் நண்பர்கள்கூட அவரிடம், "நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய்? நீ செய்வது சரியல்ல," என்று முகத்துக்கு நேரே சொன்னார்கள்.

தென் அமெரிக்காவில் பிரேசில், அர்ஜென்டினா, சிலி போல், ஈக்வடார் என்ற ஒரு சிறிய நாடும் இருக்கிறது. ஜிம் எலியட் ஈக்வடார் நாட்டிற்குச் செல்வதற்கு ஒரு வாய்ப்பு ஏற்பட்டது. அங்கு அப்போது குடியேறிய மக்களுக்காக ஒரு புதிய குடியிருப்பை உருவாக்கிக்கொண்டிருந்தார்கள். அங்கு கட்டிடங்கள் கட்டுதல், பள்ளியில் குழந்தைகளுக்குப் பாடம் கற்பித்தல்போன்ற பல்வேறு வேலைகள் செய்வதற்கு அவரையும், அவருடைய நண்பர் பீட் பிளெமிங்கையும் அனுப்பினார்கள். இந்தப் புதிய குடியிருப்பு ஈக்வடாரின் மேற்குப் பகுதியில் அமேசான் படுகையில் இருந்தது. அவர்கள் அங்கு புயுபுங்கு என்ற ஆதிவாசிகளோடு சேர்ந்து வேலை செய்யவேண்டும். எலிசபெத் ஜிம்முக்கு விடைகொடுத்து அனுப்பினார். திருமணம் நடக்குமா நடக்காதா? ஒன்றும் தெரியவில்லை. இருள்தான் மிச்சம்.

1952இல், கர்த்தர் தன்னை ஈக்வடாருக்கு அழைப்பதாக Betty உணர்ந்தார். அங்கு அவருக்குப் பொருத்தமான மொழிபெயர்ப்பு ஒரு வாய்ப்பு வந்தது. இதுவரை எழுத்து வடிவம் இல்லாத ஒரு மொழியில் வேதாகமத்தை மொழிபெயர்க்கும் வேலை அங்கு உருவானது. அவர் ஈக்வடாரின் கிழக்குப் பகுதியில் இருந்த கொலராடோஸ் ஆதிவாசிகளிடையே அனுப்பப்பட்டார். அவர் இந்த வாய்ப்பைக்குறித்துப் பரவசமடைந்தார். அற்புதமான வாய்ப்பு. தான் கற்றுக்கொண்ட, வளர்த்துக்கொண்ட திறமைகளையும், தன் தாலந்துகளையும், கொடைகளையும் பயன்படுத்துவதற்கு இது ஓர் அற்புதமான வாய்ப்பு என்று அவர் கருதினார். எனவே, அவர் இதற்காக ஆவலுடன் காத்திருந்தார். ஆனால், "அவர் ஜிம் எலியட்டின் பின்னால் ஓடுகிறார்," என்று பலர் ஏளனம்செய்தார்கள். அவர் ஜிம்மின்பின்னால் ஓடவில்லை. அவர் தேவனைப் பின்பற்றி ஓடினார்.

ஈக்வடாருக்குப் போவதற்காகக் காத்திருந்த நேரத்தில் அவர் தன்னை மிஷனரி வாழ்க்கைக்காக ஆயத்தம்பண்ணிக்கொண்டிருந்தார். அந்த நேரத்தை அவர் மிகவும் பயனுள்ள விதத்தில் செலவழித்தார். மிஷனரி வாழ்க்கை எப்படி இருக்கும் என்று சிந்தித்துப்பார்த்தார். "தேவனே, நான் ஈக்வடாருக்குச் செல்வதில் எனக்கு எந்த உள்நோக்கமோ, தன்னலமோ இல்லை என்று உமக்குத் தெரியும். நீர் அனுப்புவதால் போகிறேன். தேவனே, தன்னலமில்லாமல் உமக்குக் கீழ்ப்படிக்கிறேன். நீர் உம் வல்லமையை விளங்கப்பண்ணுவீராக. ஆத்துமாக்களை அறுவடை செய்வீராக. ஆவிக்குரிய வெற்றியை அருள்வீராக," என்று ஜெபித்தார். அவர் பாடுபடுவதற்கும், துன்பங்களைச் சகிப்பதற்கும் தயாராகிவிட்டார். பாடுகளையும், துன்பங்களையும்பற்றி அவருக்கு எந்தக் கவலையும் இல்லை. மிஷனரியின் வாழ்க்கை கடினமாக இருக்கும் என்று அவருக்கு ஏற்கெனவே தெரியும். ஆயினும், பாடுகளின், துன்பத்தில் மத்தியில் மகிமையான வெற்றி கிடைக்கும் என்று அவர் நம்பினார்.

எலிசபெத் அங்கு சென்றார், அயராது உழைத்தார், அந்த ஆதிவாசிகள் பேசிய மொழியைக் கற்பதில் மும்முரமாகவும், முழுமையாகவும் ஈடுபட்டார். அந்த மொழியைக் கற்பது மிகவும் கடினமாக இருந்தது. அந்த மொழிக்கு எழுத்துருவம் கிடையாது. எனவே, பேச்சு வழக்கில் இருக்கும் ஒரு மொழியைக் கற்று, அந்த மொழிக்கு எழுத்துரு கொடுக்க வேண்டும். இந்த அரும்பணியைச் செய்வதற்கு ஸ்பானிஷ் மொழியும், அந்த ஆதிவாசிகள் பேசிய கொலராடோஸ் மொழியும் பேசக்கூடியவர்கள் தேவை. அப்படிப்பட்டவர்கள் உதவியில்லாமல் இந்தப் பணியைச் செய்ய முடியாது. ஆனால், அப்படிப்பட்ட ஒருவரைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக இருந்தது. எலிசபெத் இதற்காக ஜெபித்தார். "தேவனே, இது உம் ஊழியம். நான் இந்த ஊழியத்தைச் செய்வதற்கு எனக்கு உதவ இந்த இரு மொழிகளும் தெரிந்த ஒருவரை எனக்குத் தாரும்," என்று ஜெபித்தார். கர்த்தர் அவருடைய ஜெபத்தைக் கேட்டு, பதிலளித்தார். அந்த மனிதரின் பெயர் டான் மக்காரியோ.

டான் மக்காரியோ எலிசபெத் எதிர்பார்த்த சரியான நபர். ஏனென்றால், அவருக்கு ஸ்பானிஷ் மொழியும், கொலராடோஸ் மொழியும் தெரியும். மேலும் அவர் ஒரு விசுவாசி, சமீபத்தில்தான் விசுவாசியாகியிருந்தார். அவருக்கு ஒரு வேலை தேவைப்பட்டது. எலிசபெத்துக்கு ஏற்கெனவே ஸ்பானிஷ் மொழி தெரியும். எனவே, டான் மக்காரியோவின் உதவியுடன் அந்த ஆதிவாசிகளின் மொழியைச் சீக்கிரமாகக் கற்கவும், எழுத்துருவை உருவாக்கவும், சொற்களைச் சேகரிக்கவும், புரிந்துகொள்ளவும் முடியும் என்று அவர் உறுதியாக நம்பினார். அவர் தேவனுக்கு நன்றி கூறினார். டான் மக்காரியோவின் உதவியோடு மொழியைக் கற்கிற, வார்த்தைகளை சேகரிக்கிற, எழுத்துக்களை உருவாக்குகிற வேலை நன்றாக முன்னேறிக்கொண்டிருந்தது. அவர் அதைக்குறித்த வரைபடங்களை வரைந்தார், வார்த்தைகளின் ஒலிகளைப் பதிவுசெய்தார், சொற்களஞ்சியத்தை உருவாக்கினார்.

எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்தது. கொஞ்ச நாட்களுக்குப்பின் ஓர் அசம்பாவிதம் நடந்தது. ஒருநாள் டான் மக்காரியோ தன் குடியிருப்புக்கு அருகில் இருந்த தன் பண்ணையில் வேலைசெய்துகொண்டிருந்தான். அப்போது ஒரு சிலர் அங்கு வந்து, "இந்த நிலம் எங்களுடையது. இந்த இடத்தைவிட்டு மரியாதையா ஓடிப்போ," என்று அடாவடியாகப் பேசினார்கள். அதற்கு மக்காரியோ, "இல்லை. இந்த நிலம் என்னுடையது. இது எனக்குச் சொந்தம்," என்று மிகவும் மரியாதையாகப் பதில் சொன்னான். வந்த மனிதர்களில் ஒருவன் திடுதிப்பென்று துப்பாக்கியை எடுத்து மக்காரியோவை தலையில் சுட்டான். துப்பாக்கி சத்தத்தைக் கேட்ட மிஷனரிகளும், வேறு சில ஊழியக்கார்களும் சத்தம் கேட்ட இடத்தை நோக்கி ஓடினார்கள். அங்கு மக்காரியோ இரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்கள். அவனுடைய உடலை ஒரு துணியில் சுற்றி எடுத்துக்கொண்டுவந்தார்கள்.

இந்த அநீதியை, அநியாயத்தை, அட்டூழியத்தைக் கண்ட எலிசபெத் உடைந்துபோனார். காரணமேயின்றி கண்டபடி வந்து கண்மூடித்தனமானச் சுட்டுக் கொன்றுவிட்டுப் போய்விட்டார்கள். இவர்கள் யார், எங்கிருந்து வந்தார்கள்? அறிவற்ற பைத்தியக்காரச் செயல். தேவன் ஏன் இதை அனுமதித்தார்? மக்காரியோ மட்டும்தான் ஸ்பானிஷ் மொழியும், கொலராடோஸ் மொழியும் பேசக்கூடிய ஒரே நபர். அப்போதுதான் அவர்கள் ஆதிவாசிகளின் மொழியைக் கற்க ஆரம்பித்திருந்தார்கள். சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது. இப்போது எல்லாம் நின்றுவிட்டது. உண்மையாகவே இதில் தேவன் எப்படிச் செயல்படுகிறார் என்று Bettyயால் புரிந்துகொள்ளமுடியவில்லை, போராடினார்.

ஈக்வடாரில் மேற்குப் பகுதியில் ஜிம் எலியட்டும், அவருடைய நண்பர்களும் ஊழியம்செய்துகொண்டிருந்தார்கள். ஒருநாள் ஜிம் எலியட்டின் நண்பர் ஒருவரிடமிருந்து எலிசபெத்துக்கு ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தில், "நீங்கள் ஜிம் எலியட்டைச் சந்திக்க உடனடியாக குய்டோவுக்கு வாருங்கள்," என்று எழுதியிருந்தது. எலிசபெத்தின் நெஞ்சம் படபடத்தது. "இவ்வளவு காலத்திற்குப்பிறகு, ஜிம் இறுதியாகத் திருமணம்செய்ய முடிவுசெய்துவிட்டாரோ! என்னைத் திருமணம்செய்துகொள்வாயா என்று என்னிடம் கேட்பாரோ!" என்று அவர் பலவாறு சிந்திக்கத் தொடங்கினார்.

அவர் ஈக்வடாரின் கிழக்குப் பகுதியிலிருந்து, ஜிம் எலியட்டும் அவருடைய நண்பர்களும் ஊழியம்செய்த அன்றைய முக்கிய நகரங்களில் ஒன்றான குய்டோவுக்குப் புறப்பட்டார். நீண்ட பயணம்! கடினமான பயணம். அங்கு அவர் ஒரு மிஷனரி தம்பதியோடு தங்கினார். ஜிம் வந்தார், எலிசபெத்தைத் திருமணம்செய்ய முன்மொழிந்தார். நிச்சயமற்ற ஐந்து வருடங்கள் வந்தன. ஐந்து வருடங்கள்! அவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்ய முடிவுசெய்தார்கள்.

குய்ட்டோ நகரில் சில நாட்கள் தங்கியிருந்தபின், எலிசபெத் கொலராடோஸ் ஆதிவாசிகளிடம் திரும்பினார். திருமணம் ஆனபின் அவர்களிடையே தங்கியிருந்து ஊழியம் செய்யமுடியாது என்பதாலும், ஜிம் எலியட் தங்கியிருக்கும் இடத்தில்தான் ஊழியத்தைத் தொடரவேண்டியிருக்கும் என்பதாலும், அவர்களிடையே தங்கியிருக்கும் நாட்களை மிகவும் பயனுள்ள வகையில் பயன்படுத்த விரும்பினார். அவர் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. எஞ்சியிருக்கும் நேரம் மிகக் குறைவு என்று அவருக்குத் தெரியும். மின்னல் வேகத்தில் அவர் செயல்படத் தொடங்கினார். வேதாகமத்தை அந்த ஆதிவாசிகள் பேசிய மொழியில் மொழிபெயர்ப்பதற்குத் தேவையான எல்லா ஆயத்த வேலைகளையும் அவர் நேர்தியாகச் செய்துமுடிக்க விரும்பினார். இந்த வேலையில் அவர் முழுமூச்சுடன் இறங்கினார். அந்த மொழியை அவர் ஓரளவுக்குப் புரிந்துகொண்டார். ஆனால், தான் இதுவரை செய்துமுடித்திருக்கும் வேலை வேதாகமத்தை அந்த ஆதிவாசிகளின் மொழியில் மொழிபெயர்க்க எந்த அளவுக்கு உதவும் என்று அவரால் சரிபார்க்க முடியவில்லை. ஏனென்றால், இரண்டு மொழிகளையும் தெரிந்த ஒரேவொரு நபரையும் சுட்டுக்கொன்றுவிட்டார்கள். இரண்டு மொழிகளையும் பேசக்கூடிய ஒருவர் இப்போது அங்கு இல்லை. எனவே அவர் தான் சேகரித்த எல்லா வார்த்தைகளையும் பதிவுசெய்ய விரும்பினார். அவர் தன்னிடம் இருந்த எல்லாவற்றையும், எல்லாக் கோப்புக்களையும், வரிசைப்படுத்தி, ஒழுங்குபடுத்தி, எல்லாற்றுக்கும் பெயர் எழுதி ஒட்டினார். அவர் புறப்படும் நேரம் வந்தபோது, தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் அவர் ஒரு பெட்டியில் வரிசைக்கிரமமாக அடுக்கிவைத்தார். நூற்றுக்கணக்கான சொற்களஞ்சியங்கள், ஒலி விளக்கப்படங்கள். அங்கு தங்கியிருக்கும் மிஷனரிகளுக்கும், இனி அங்கு வரப்போகிற மிஷனரிகளுக்கும் மொழிபெயர்க்கும் வேலைக்குத் தேவையான ஆயத்த வேலைகள் அனைத்தையும் அவர் செய்துமுடித்துவிட்டார். அவருடைய விடாமுயற்சி, அவருடைய பிரயாசம் மிகப் பெரிது.

கொஞ்ச நாட்களுக்குப்பிறகு, எலிசபெத் கெச்சுவா என்ற ஆதிவாசிகள் குடியிருந்த வேறொரு இடத்திற்கு ஊழியம் செய்யச் சென்றார். அங்கு ஊழியம் செய்ய அவர் அந்த ஆதிவாசிகளின் மொழியைக் கற்க வேண்டியிருந்தது. அவர் கெச்சுவா மொழியைப் படிக்கத் தொடங்கினார். அவர் அங்கிருந்தபோது ஒருநாள் கொலராடோஸ் பகுதியில் ஊழியம் செய்துகொண்டிருந்த ஒரு மிஷனரியிடமிருந்து அவருக்கு ஒரு தந்தி வந்தது. அந்தத் தந்தியில், "நீங்கள் வைத்துவிட்டுப்போன பெட்டியை யாரோ திருடிக்கொண்டுபோய்விட்டார்கள்," என்று எழுதியிருந்தது. "என் உழைப்பு! எத்தனை ஆண்டுகள் உழைப்பு, வேதாகமத்தை மொழி பெயர்ப்பதற்காக நான் பட்ட அதனை பிரயாசங்களும் அந்தப் பெட்டியில்தானே இருந்தன. எத்தனையோ பெட்டிகள் அங்கி இருக்கையில் இந்தப் பேட்டி மட்டும் ஏன் திருடப்படவேண்டும்? எல்லா வேலைகளும் போய்விட்டன! என்னால் நம்ப முடியவில்லை," என்று கதறினார். என்ன நடக்கிறது என்பதை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. இரண்டு அசம்பாவிதங்கள். ஒன்று, மக்காரியோ கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டது. இரண்டு, மொழிபெயர்ப்பதற்காகச் செய்திருந்த அணைத்து ஆயத்த வேலைகளும் திருடப்பட்டன. கொலராடோஸ் செவ்விந்தியர்களிடையே ஆற்றிய அரும்பணி அனைத்தும் வீணாயிற்றே என்று கலங்கினார். நேரம், உழைப்பு, பணம் எல்லாம் வீணா? இந்த நிகழ்ச்சிகளையும், அசம்பாவிதங்களையும் எலிசபெத் திரும்பத்திரும்ப அசைபோட்டார். Betty கொஞ்சம்கொஞ்சமாகப் புரிந்துகொள்ள ஆரம்பித்தார். "இவையெல்லாம் தேவன் எனக்குத் தருகின்ற நல்ல, ஆனால் கடினமான, பயிற்சிகள்," என்று அவர் புரிந்துகொண்டார். இவைகளின்மூலம் தேவனுடைய இறையாண்மையைப்பற்றிய மிக முக்கியமான பாடத்தையும், மனத்தாழ்மையையும் அவர் கற்றுக்கொண்டார். இதற்குமுன் கோட்பாட்டளவில் அவருக்கு நிச்சயமாக இது நன்றாகத் தெரியும். ஆனால், தன் வழிகள் தேவனுடைய வழிகள் இல்லை என்று இப்போது புரிந்துகொண்டார். முன்பு இருந்தது ஏட்டறிவு, இப்போது இருப்பது பட்டறிவு. முன்பு எழுத்தின்படி தெரியும். இப்போது ஆவியின்படியும் தெரியும்.

திருமணமானவுடன் ஜிம்மும், எலிசபெத்தும் புயுபுங்கு செவ்விந்தியர்கள் வாழ்ந்த பகுதிக்குக் குடிபெயர்ந்தார்கள். அங்கு செய்வதற்கு நிறைய வேலைகள் இருந்ததால் அவர்கள் உடனடியாகத் தங்கள் வேலையில் மும்முரமாக இறங்கிவிட்டார்கள். கட்டிட வேலைகள் இருந்தன. ஜிம் அவர்களுக்காக ஏற்கெனவே ஒரு வீட்டைக் கட்டிமுடித்திருந்தார். எலிசபெத் பள்ளியில் பிள்ளைகளுக்குப் பாடங்கள் கற்பித்தார். அவர் பேறுகால மருத்துவ உதவி அளிப்பதற்கு ஏற்கெனவே பயிற்சிபெற்றிருந்தார். எனவே, பேறுகால உதவி அளித்தார். பாம்புக்கடிக்கு சிகிச்சை அளித்தார், எல்லா வகையான நோய்த்தொற்றுகளுக்கும் தேவையான மருந்துமாத்திரைகள் வழங்கினார். தேவைப்பட்டபோது ஊசிபோட்டார். குவெச்சுவா செவ்விந்தியர்கள் இவர்களுடைய உதவியை முழுமனதோடு ஏற்றுக்கொண்டார்கள். அவர்கள் தங்கள் நன்றியைக் காண்பிக்கும்விதமாக தாங்கள் வேட்டையாடிக் கொன்ற மிருகத்தின் ஒரு பகுதியை அவர்களுக்கு உணவாகக் கொடுத்தார்கள். அது ஒருவேளை எறும்புதின்னும் அழுங்கின் ஒரு காலாக அல்லது ஒரு கிழங்காக அல்லது சுட்ட மீனாக அல்லது ஒரு குரங்காக இருக்கலாம். அவர்கள் ஆதிவாசிகள் வாழ்ந்ததுபோலவே வாழப் பிரயத்தனம்செய்தார்கள். அவர்கள் குவெச்சுவா மக்களின் கலாச்சாரத்தைப் புரிந்துகொள்ள முயன்றார்கள்.அடர்ந்த காடுகளின்வழியாக மலையேறக் கற்றுக்கொண்டார்கள். ஒருமுறை ஒரு பெண்ணுக்குப் பேறுகாலம் பார்க்க எலிசபெத் அடர்ந்த காட்டில் வெறுங்காலோடு ஓடினார்.

அப்போது ஷெல் எண்ணெய் நிறுவனத்தார் அங்கு, அமேசான் காட்டில் எண்ணெய் தேடுவதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்கள். இதற்கான முன்முயற்சிகளைச் செய்ய அவர்கள் தங்கள் ஆட்களை அங்கு குடியமர்த்துவதற்கான இடத்தைத் தேடிக்கொண்டிருந்தார்கள். ஆம், அவர்கள் அங்கு ஒரு குடியிருப்பை ஏற்படுத்த முயற்சித்தார்கள். அவர்கள் தங்கள் குடியிருப்பை அமைக்க முயன்ற இடம் வௌரானி என்ற ஆதிவாசிகளின் நிலங்களுக்கு மிக அருகில் இருந்தது. அவர்களுடைய நிலத்தில் என்று சொல்லமுடியாது. அவர்களுடைய நிலத்தை ஒட்டி என்று சொல்லலாம். வௌரானி செவ்விந்தியர்கள் முரட்டுத்தனமானவர்கள், வன்முறைக்குப் பெயர்பெற்றவர்கள், கொலைகாரர்கள், கொடூரமானவர்கள். குவெச்சுவா ஆதிவாசிகள் உட்பட பிற ஆதிவாசிகள் வௌரானி செவ்விந்தியர்களைப் பார்த்து அஞ்சிநடுங்கினார்கள். ஷெல் எண்ணெய் நிறுவனத்தின் தொழிலாளர்கள் பலரை வௌரானி ஆதிவாசிகள் ஈட்டியெறிந்து கொன்றார்கள். வௌரானியர்கள் காட்டிலிருந்து திடீரென்று வெளிப்பட்டு, அவர்கள்மீது ஈட்டியெறிந்து கொன்றுவிட்டு, வந்த வேகத்தில் மறைந்துபோனார்கள். எனவே, ஷெல் எண்ணெய் நிறுவனம் தங்கள் தொழிலார்களை அங்கு குடியேற்றும் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டு வெளியேறியது. ஈக்வடார் நாட்டவர்கள்கூட அங்கு செல்ல மாட்டார்கள். அந்த அளவுக்கு வௌரானியர்கள்மேல் பயம்.

ஜிம் எலியட்டின் ஒரு நண்பர் பெயர் நேட் செயிண்ட். அவர் மிஷனரி ஏவியேஷன் பெல்லோஷிப் MAF என்ற ஒரு கிறிஸ்தவ நிறுவனத்தில் விமானியாகப் பணிபுரிந்தார். நகர்ப்புறத்தில் வாழ்ந்த மக்களோடு எந்தத் தொடர்பில்லாமல் ஒதுக்குப்புறத்தில், காட்டில், தொலைதூரத்தில் ஊழியம் செய்துகொண்டிருந்த மிஷனரிகளைச் சிறியரக விமானத்தில் பறந்துபோய்ப் பார்ப்பதும், அவர்களுக்குத் தேவையான பொருட்கள், துணிகள், மருந்துகள்போன்றவைகளை வழங்குவதும் அவருடைய வேலை. காட்டின்மேல் பறக்கும்போது தப்பித்தவறிகூட அமேசான் காட்டில் வௌரானி செவ்விந்தியர்கள் வாழும் பகுதியின்மேல் பறக்கக்கூடாது என்று அவருக்குக் கண்டிப்பாகக் கூறியிருந்தார்கள். என்ன காரணம்? அவர்கள் வாழும் பகுதியின்மேல் பறக்கும்போது விமானத்தில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டு, அவசரமாகத் தரையிறங்க வேண்டியிருந்தால், அவரை ஈட்டியெறிந்து கொல்வார்கள். விமானத்தைச் சுக்குநூறாக உடைத்துவிடுவார்கள்.

வௌரானி செவ்விந்தியர்களைப்பற்றிய கதைகளையெல்லாம் ஜிம் கேள்விப்பட்டிருந்தார். இந்த ஆதிவாசிகளுக்குக் கிறிஸ்துவின் நற்செய்தியைக் கொண்டுசெல்ல என்ன வழி என்று அவர் சிந்திக்கக் தொடங்கினார். அவருக்கு இந்த மக்கள்மேல் இனம்புரியாத ஓர் ஈர்ப்பு ஏற்பட்டிருந்தது. எந்தவொரு வெளிநாட்டவரும் இதுவரை தொடர்பேகொள்ளாத இந்த வௌரானி ஆதிவாசிகளை எப்படியாவது தொடர்புகொள்ள முடியுமா, சந்திக்க முடியுமா என்று அவர்கள் சிந்திக்க ஆரம்பித்தார்கள். ஜிம் மட்டுமல்ல, அவரோடுகூட இருந்த வேறு மூன்று மிஷனரிகளுக்கும் இதே பாரமும், பார்வையும் இருந்தது. எனவே, அவர்களெல்லாரும் சேர்ந்து ஜெபிக்க ஆரம்பித்தார்கள். "தேவனே, உம் நற்செய்தி இந்த மக்களைச் சென்றடைய வேண்டும் என்று நீர் விரும்புகிறீர். இவர்கள் இரட்சிக்கப்பட வேண்டும் என்பது உம் சித்தம். இவர்களைத் தொடர்புகொள்வதற்கான வழிகளை எங்களுக்குக் காண்பியும்," என்று அவர்கள் ஜெபித்தார்கள். நாளடைவில் இன்னொரு மிஷனரியும் கூடச் சேர்ந்துகொண்டார். இப்போது ஐந்துபேரும் ஊக்கமாகச் ஜெபித்தார்கள். வெள்ளையர்களாகிய தாங்கள் உண்மையில் அவர்களுடைய நண்பர்கள் என்று அவர்களுக்கு நிரூபிப்பதற்கான வழிகளை ஆராய்ந்தார்கள். தாங்கள் அவர்களைச் சந்திக்க விரும்புவது அவர்களுடைய சமாதானத்துக்காகவே, நன்மைக்காகவே என்று காண்பிக்க என்ன வழி என்று அவர்கள் சிந்தித்தார்கள்.

அவர்கள் தாயுமா என்ற ஒரு வௌரானி ஆதிவாசிப் பெண்ணைக்குறித்துக் கேள்விப்பட்டார்கள். இவள் அவர்களுக்கிடையே ஏற்பட்ட ஏதோவொரு தகராறினால் அந்த இனத்தைவிட்டுத் தப்பியோடி எங்கோவொரு பண்ணையில் வேலைசெய்துகொண்டிருந்தாள். அவளுக்கு கெச்சுவா ஆதிவாசிகளின் மொழியும் தெரியும். அவளுடைய உதவியோடு, ஜிம்மும் பிற மிஷனரிகளை வௌரானி மொழியில், "நாங்கள் உங்கள் நண்பர்கள், நாங்கள் சமாதானத்தோடு வருகிறோம்" போன்ற சில சொற்றொடர்களைக் கற்றுக்கொண்டார்கள்.

தாங்கள் சமாதானத்தோடுதான், நண்பர்களாகத்தான் வருகிறோம் என்பதை வெறும் வார்த்தைகளால் மட்டும் அல்ல, தங்கள் செயல்களாலும் காண்பிக்க வேண்டும் என்று ஜிம்மும் பிற மிஷனரிகளும் விரும்பினார்கள். வௌரானி ஆதிவாசிகள் நம்பும்படி அதைச் செய்ய வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்கள். எனவே, சிறியரக விமானத்தில் காட்டில் மிகத் தாழ்வாகப் பறந்துபோய், அவர்கள் வாழ்கின்ற பகுதிகளில் அவர்களுக்குப் பரிசுப்பொருட்களைப் போடலாம் என்று முடிவுசெய்தார்கள். அந்த ஆதிவாசிகள் வாழும் பகுதிகளை விமானி நேட் செயிண்ட் தன் குட்டி விமானத்தில் பறந்தபோய் ஏற்கெனவே கண்டுபிடித்திருந்தார். எனவே, நேட் செயிண்ட் விமானத்தில் தாழ்வாகப் பறந்துபோய் அவர்களுடைய குடியிருப்புகளுக்கு அருகே ஆற்றின் கரையோரம் பரிசுப்பொருட்களைப் போடலாம் என்றும், இதனால் அவர்கள் தங்களை நண்பர்களாகக் கருதுவார்கள் என்றும் அவர்கள் நினைத்தார்கள்.

நேட் செயின்ட் குட்டி விமானத்தில் பறந்து போய், வௌரானி ஆதிவாசிகள் வாழும் பகுதியில் அவர்களுக்குப் பரிசுப்பொருட்களைப் போட்டார். அவர்கள் வந்து அவைகளை எடுத்துக்கொண்டு காட்டுக்குள் ஓடினார்கள். இது இப்போது வழக்கமான செயலாக மாறிற்று. பல மாதங்கள் இப்படியே தொடர்ந்து செய்துகொண்டிருந்தார்கள். வௌரானி ஆதிவாசிகள் வாழும் இடத்தை அவர்கள் துல்லியமாக அறிந்திருந்தார்கள். கோடாரிகள், அலுமினியப்பாத்திரங்கள் என அவர்களுக்குத் தேவையானவை என்று அவர்கள் நினைத்த பலவிதமான பொருட்களை அவர்கள் கீழே போட்டார்கள். காலப்போக்கில் அவர்கள் குட்டிவிமானத்திலிருந்து ஒரு கயிற்றில் ஒரு வாளியைக் கட்டி, அதில் பொருட்களைவைத்துக் கீழே இறக்கினார்கள். வௌரானி மக்கள் ஓடி வந்து வாளியில் இருந்த பொருட்களை எடுத்தார்கள். நாளடைவில் அந்த ஆதிவாசிகள் குட்டி விமானத்தை ஆவலுடன் எதிர்பார்க்கத் தொடங்கினார்கள். விமானத்தின் இரைச்சலைக் கேட்டதும் சிறியோர் பெரியோர் வெளியே ஓடிவந்து, விமானத்திலிருந்து வரும் வாளிக்காகக் காத்திருந்தார்கள். எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்தது. வௌரானி ஆதிவாசிகள் வாளியில் இருந்ததை எடுத்துக்கொண்டதோடு நிற்காமல், அவர்களும் அந்த வாளியில் தங்கள் பரிசை வைத்தார்கள். ஒருமுறை அவர்கள் கைகளால் பின்னப்பட்ட பரிவட்டங்களையும், இன்னொரு முறை ஒரு கிளியையும், உயிரோடு, வாளியில் வைத்து அனுப்பினார்கள். இவைகளெல்லாம் நம்பிக்கையின் அடையாளங்கள் என்றே அவர்கள் நினைத்தார்கள். தங்களை இந்த ஆதிவாசிகள் புரிந்துகொண்டார்கள் என்றும், தாங்கள் சமாதானத்துக்கானவர்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள் என்றும் இவைகள் காண்பிக்கின்றன என்று அவர்கள் நினைத்தார்கள்.

வௌரானி ஆதிவாசிகளை முதன்முறையாகச் சந்திப்பதற்கு ஜிம் உட்பட ஐந்து மிஷனரிகளும் மிகவும் ஆவலாக இருந்தார்கள். அவர்களைப்போல எலிசபெத்தும் பரவசமாக இருந்தார். அவரும் அவர்களை சந்திக்க மிகவும் ஆர்வமாக இருந்தார். "உண்மையில், நான் அவர்களோடு வருவது இன்னும் பாதுகாப்பானது. ஏனென்றால்,ஒரு பெண் உங்களோடு வருவதைப் பார்த்தால், நீங்கள் சண்டைபோட வரவில்லை, மாறாக சமாதானத்துக்காகத்தான் வருகிறீர்கள் என்று அவர்கள் தெளிவாகப் புரிந்துகொள்வார்கள், நான் உங்களுடன் வருவது நீங்கள் நண்பர்களாகத்தான் வருகிறீர்கள் என்று அவர்களுக்கு நேர்மறையாக அறிவிக்க நல்ல வாய்ப்பாக இருக்கும்," என்று அவர் எடுத்துரைத்தார், நம்பினார். ஆனால், ஜிம் அந்த யோசனையை ஏற்க மறுத்துவிட்டார். குறிப்பாக இப்போது. ஏனென்றால், 1955இல் அவர்களுக்கு வலேரி என்ற ஒரு பெண் குழந்தை பிறந்தது. இப்போது பத்துமாதக் குழந்தை. எலிசபெத் அந்தக் குழந்தையைப் பராமரிக்க வேண்டியிருந்தது.

குட்டி விமானத்தில் பறந்து போய்ப் பரிசுப்பொருட்களைக் கீழே போடுகிற பழக்கம் பல மாதங்கள் நீடித்தது. "சரி, இனி இவர்களை நேரடியாகச் சந்திக்கலாம், நேரடியாகச் சந்திக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது," என்று மிஷனரிகள் முடிவுசெய்தார்கள். அப்படி ஒரு சந்திப்பு நிகழ்ந்தால் அது வரலாறாகிவிடும். அவர்கள் வௌரானி

ஆதிவாசிகள் வாழ்ந்த இடத்துக்கு அருகே ஓர் ஆற்றுப்படுகையில் விமானத்தைத் தரையிறக்கப்போகிறார்கள். தாங்கள் தரையிறங்கப்போகும் அந்த ஆற்றுப்படுகைக்கு அவர்கள் பாம் பீச் என்று செல்லப்பெயர் சூட்டினார்கள். குட்டிவிமானம் காட்டின்மேல் பறக்கிறது. இதோ வௌரானி ஆதிவாசிகளின் குடியிருப்புக்களை அவர்கள் விமானத்திலிருந்து பார்க்கிறார்கள். அந்தக் குட்டி விமானத்தில் பயணிக்கும் மிஷனரிகள் தங்களிடமிருக்கும் கையடக்க வானொலிமூலம் மிஷன் தளத்தில் தங்கியிருக்கும் தங்கள் மனைவிகளோடும், நண்பர்களோடும் பேசிக்கொண்டேபோகிறார்கள். இந்தத் தருணத்திற்காக அவர்களெல்லாரும் எத்தனை மாதங்களாக ஜெபித்தார்கள்! ஒன்றா, இரண்டா? இதோ! எல்லாம் அவர்கள் திட்டமிட்டபடி போய்க்கொண்டிருக்கின்றன. அவர்கள் ஆற்றுப்படுகையில் தரையிறங்குகிறார்கள். அவர்கள் தங்குவதற்குத் தற்காலிகமான முகாமை அமைக்கிறார்கள். ஒரு சில நாட்களில் இரண்டு வௌரானி ஆண்களும் இரண்டு வௌரானிப் பெண்களும் காட்டிலிருந்து மெல்ல எட்டிப்பார்க்கிறார்கள். அவர்கள் மிஷனரிகள் தங்கியிருக்கும் முகாமைநோக்கி வருகிறார்கள். ஜிம்மும் கூட இருந்த மற்ற மிஷனரிகளும் தாங்கள் கற்று வைத்திருந்த வௌரானி மொழிச் சொற்றொடர்களை மனதுக்குள் திரும்பத்திரும்பச் சொல்லிப்பார்க்கிறார்கள். எதையும் தவறாகச் சொல்லிவிடக்கூடாதே! தாங்கள் இங்கு வந்திருப்பது சமாதானத்திற்காகத்தான் என்பதையும், தாங்கள் கூறும் வார்த்தைகள் சமாதானத்தின் வார்த்தைகள்தான் என்பதையும் வருகிறவர்கள் புரிந்துகொள்ள வேண்டுமல்லவா? நான்கு வௌரானி ஆதிவாசிகள் வருகிறார்கள். மிஷனரிகளோடு சேர்ந்து சாப்பிடுகிறார்கள். எல்லாரும் மிகவும் மகிழ்ச்சியடைகிறார்கள். அன்றிரவு எல்லாரும் அவர்களுடைய தற்காலிக முகாமில் சேர்ந்து தூங்குகிறார்கள். அவர்களைக்குறித்துக் கேள்விப்பட்டிருந்ததுபோல எதுவும் நடக்கவில்லை. உண்மையில், அந்தச் சந்திப்பு மிகவும் இனிமையாகவும், நம்பிக்கைக்குரியதாகவும் இருந்தது. தேவன் தங்கள் ஜெபத்திற்குப் பலளிக்கிறார் என்று அவர்கள் நினைத்தார்கள். அவர்கள் எதிர்பார்த்தபடியும், நம்பியபடியும் இதுவரை எல்லாம் நடந்தது.

அடுத்த நாள் காலையில் அந்த நான்கு வௌரானியர்களும் காட்டுக்குள் போய்விட்டார்கள். "போன நான்குபேரும் திரும்பி வருவார்களா, வரமாட்டார்களா? வந்தால், வரும்போது இன்னும் அதிகமான மக்களைக் கூட்டிக்கொண்டு வருவார்களோ! வந்தவர்கள் சாதாரணமானவர்களோ! எனவே, அவர்கள் காட்டுக்குள்போய் முக்கியமானவர்களை, தலைவர்களை, கூட்டிகொண்டுவருவார்களோ! முக்கியமான நபர்கள் மட்டும்தான் வருவார்களா? வருவார்களா, வரமாட்டார்களா," என்று அவர்கள் பலவாறு சிந்தித்தார்கள். எதையும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. அதற்கு முந்தைய நாள் அவர்களுடைய சந்திப்பு மிக இயல்பாகவே இருந்தது. சண்டையோ, கோபமோ, வன்முறையோ கிடையாது, சங்கடப்படும்படியாகவோ, சந்தேகப்படும்படியாகவோ எதுவும் நடக்கவில்லை.

அன்று காலை நேட் செயிண்ட் குட்டி விமானத்தில் வௌரானியர்களின் குடியிருப்பின்மேல் பறந்துபோகிறார். சில மனிதர்கள் காட்டில் நடந்துபோவதையும், அவர்கள் மிஷனரிகள் அமைத்திருந்த தற்காலிகமான முகாமைநோக்கிச் செல்வதையும் பார்க்கிறார். அவர் உடனடியாகத் தன் வானொலின்மூலம், "காட்டில் மக்கள் நடமாடுகிறார்கள், அவர்கள் எங்களைநோக்கி வந்துகொண்டிருக்கிறார்கள். நாங்கள் இருக்கும் இடத்துக்கு அவர்கள் அநேகமாக இன்று மதியம் வந்துவிடுவார்கள். இது நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த நாள். நாம் வௌரானியர்களை சந்திக்கப்போகிறோம்," என்று மிஷன் தளத்திற்கும், ஐந்து மிஷனரிகளின் மனைவிகளுக்கும் செய்தி அனுப்பினார். அன்று சாயங்காலம் 4:30 மணிக்கு மீண்டும் ரேடியோ செய்தி அனுப்புவதாகவும் அவர் சொன்னார்.

காட்டுக்குள் திரும்பிச் சென்ற நான்குபேரில் இருவர் மிஷனரிகளைப்பற்றி தவறாகச் சொல்லியிருக்கிறார்கள். "இவர்கள் நம் நண்பர்கள் இல்லை, எதிரிகள்.இவர்கள் சமாதானத்துக்காக வரவில்லை. நம்மைக் கொலைசெய்ய வந்திருக்கிறார்கள்," என்று பொய்சொல்லியிருக்கிறார்கள். மிஷனரிகளைப்பற்றி அவர்கள் இவ்வாறு அவதூறான பொய் சொல்வதற்கு என்ன காரணம்? வௌரானியருக்கிடையே சமீபத்தில் ஏதோவொரு பெரிய தகராறு ஏற்பட்டிருக்கிறது. அந்தத் தகராறில் மிஷனரிகளைச் சந்தித்த நான்குபேரில் இருவர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். மொத்த வௌரானியர்களும் அந்த இருவர்பேரில் கடுங்கோபமாக இருந்திருக்கிறார்கள். தங்கள் இனத்தாருக்குத் தங்கள்மேல் இருக்கும் கோபத்தைத் தணிக்கவும், அவர்களுடைய பழிவாங்கும் நடவடிக்கைக்குத் தப்பிக்கவும் சம்பந்தமேயில்லாத ஒரு பழியை மிஷனரிகள்மேல் சுமத்தினார்கள். தங்கள் சொந்த நலனுக்காக, தங்களைக் காப்பாற்றுவதற்காக, மொத்த வௌரானியர்களின் கோபத்தை மிஷனரிகளின்மேல் திருப்பிவிட்டார்கள்.

வௌரானியர்கள் காட்டில் வெறியோடு ஓடிவருவதை மிஷனரிகள் பார்த்தார்கள். அவர்கள் வருகிற விதத்தைப் பார்த்தபோது அவர்கள் சமாதானத்துக்காக வருகிறவர்கள்போல் தெரியவில்லை. உண்மையில், அவர்கள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்திருக்கிறார்கள். ஆவேசத்துடன் வந்துகொண்டிருந்தார்கள். ஜிம்மும், மற்ற நால்வரும் காத்திருந்தார்கள். இறுதியாக, முன்புவந்த இரண்டு பெண்கள் காட்டிலிருந்து அவர்களை நோக்கி நடந்து வருவதைக் கண்டதும், ஜிம் உடனே எழுந்து, தான் கற்றிருந்த சமாதானத்தின் வார்த்தைகளைச் சத்தமாகக் கூறி, கையை அசைத்தார். அவர்களை அன்புடன் வரவேற்கக் காத்திருக்கிறோம் என்று வௌரானி ஆதிவாசிகளுக்குக் காட்ட பீட் ஃப்ளெமிங்கும் ஜிம்முடன் சேர்ந்து நடந்தார். இருவரும் அந்த இரண்டு வௌரானிப் பெண்களைநோக்கி ஓடினார்கள். ஜிம்மும், பீட் ஃப்ளெமிங்கும் அவர்கள் அருகே போனதும், சிலர் காட்டிலிருந்து திடீரென்று வெளிப்பட்டார்கள். குறைந்தது ஐந்துபேர் அங்கு தங்கள் ஈட்டிகளுடன் நின்றுகொண்டிருந்தார்கள். முதல் ஈட்டி ஜிம்மின் மார்பைத் துளைத்தது. சரிந்து விழுந்தார். அடுத்து பீட் ஃப்ளெமிங். சில நிமிடங்களில், ஐந்து மிஷனரிகளும் ஈட்டியால் குத்திக்கொல்லப்பட்டார்கள். வௌரானியர்களின் வழக்கத்தின்படி, உடல்களை அடையாளம் காணமுடியாத அளவுக்கு ஈட்டியால் குத்திக்குத்திச் சிதைத்தார்கள்.குட்டி விமானத்தை அடித்து நொறுக்கி நாசமாக்கினார்கள். வந்த வொரானியர்களின் வேலை முடிந்தது, மீண்டும் காட்டுக்குள் மறைந்தார்கள்.

மிஷன் தளத்தில் மிஷனரிகளின் குடும்பத்தார் வானொலித் தகவலுக்காக மதியம் முழுவதும் காத்திருந்தார்கள். மாலை 4:30ஆகியும் வானொலிச்செய்தி எதுவும் வராததால் எல்லாரும் மிகவும் பதற்றமடைந்தார்கள். ஆனால், எலிசபெத் கொஞ்சம்கூடக் கவலைப்படவில்லை, அவர், "மிஷனரிகள் வௌரானியர்களைச் சந்தித்தப் பரவசத்தில் வானொலிச்செய்தி அனுப்ப மறந்திருப்பார்கள். இன்றிரவு நிச்சசயமாக செய்தி வரும்," என்றே அவர் நினைத்தார். ஆனால், அன்றிரவும் எந்தச் செய்தியும் வரவில்லை. செய்தி வராதது மட்டும் அல்ல. வானொலி நிசப்தமாக இருந்தது. அதில் கரகர சத்தம்கூட இல்லை. அவர்கள் கவலைப்படத் தொடங்கினார்கள். மறுநாள் காலையில், வானொலிசெய்தி வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லை, செய்தியும் இல்லை, அவர்கள் மிகவும் கவலைப்பட்டார்கள். அன்று மிஷன் தளத்துக்கு வந்த இன்னொரு MAF விமானத்தை வாடகைக்கு அமர்த்தி, மிஷனரிகள் முகாமிட்டிருந்த இடத்துக்குமேல் பறக்க ஆரம்பித்தார்கள். நேட் செயின்டின் விமானம் நொறுங்கிச் சின்னாபின்னமாகியிருப்பதைக் கண்டபோது, ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்கிறது என்று நிச்சயமாகத் தெரிந்துகொண்டார்கள். உடனே அவர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டார்கள். ஆற்றுப் படுகையில் நடந்தபோது, அவர்கள் அங்கு ஐந்து உடல்களைக் கண்டார்கள். உடல்களினருகே கிடந்த ஷூக்களையும், துணிகளையும் வைத்துத்தான் ஆட்களை அடையாளம் கண்டுபிடிக்கமுடிந்தது.

Betty இப்போது ஒரு விதவை. 10 மாதப் பெண் குழந்தை, கைக்குழந்தை. திருமணமாகி இரண்டு வருடங்கள். கர்த்தர் ஏன் இதை அனுமதித்தார் என்று Bettyயால் புரிந்துகொள்ளமுடியவில்லை. பல கேள்விகள். ஆனால், எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. எல்லாவற்றையும் சிலுவையில் கிடத்த வேண்டும் என்ற பாடத்தை அவர் ஏற்கெனவே கற்றுக்கொண்டார். தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஊழியம் செய்த எமி கார்மைக்கேல் எலிசபெத்துக்கு மிகவும் பிடித்த, அவர் அதிகமாக மதித்த ஒரு மிஷனரி. "மிஷனரியாக இருப்பது இறப்பதற்கு ஒரு வாய்ப்பு," என்று எமி கார்மைக்கேல் கூறிய பிரபலமான வார்த்தைகள் எலிசபெத்துக்குத் தெரியும். இறப்பதற்கு ஒரு வாய்ப்பு என்று அவர் உடல்ரீதியான மரணத்தைக் குறிப்பிடவில்லை. மாறாக, ஒவ்வொருநாளும் நாம் நம் எண்ணங்களுக்கும், உணர்ச்சிகளுக்கும், கேள்விகளுக்கும் மரிக்க வேண்டும் என்று சொன்னார் என்பதை அவர் புரிந்துகொண்டார். ஒவ்வொருநாளும் எல்லாவற்றையும் பலிபீடத்தில் கிடத்தும் வாழ்க்கை. ஒவ்வொருநாளும் நம்மைச் சிலுவையில் கிடத்தும் வாழ்க்கை. இதை எலிசபெத் நன்றாகக் புரிந்துகொண்டார். "தேவன் இவ்வாறு ஏற்பாடுசெய்திருக்கிறார். எனவே, இது அப்படித்தான் இருக்க வேண்டும்," என்று எலிசபெத் தன் நாளேட்டில் எழுதினார்.

"என் மதிப்புமிக்க சொத்தாகிய ஜிம்மை நான் இழந்துவிட்டேன். எங்கள் எதிர்காலத்தைக்குறித்து நாங்கள் எத்தனை திட்டங்கள் வைத்திருந்தோம்! ஷாண்டியாவில் உள்ள இந்த வீட்டில் தங்கியிருந்து இந்த ஆதிவாசிகளிடையே எப்படி ஊழியம் செய்யவேண்டும் என்று திட்டமிட்டிருந்தோம்! அவர்களுக்கு எந்தெந்த வழிகளில் பணிவிடை செய்யலாம் என்று யோசித்தோம். எங்கள் பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டோம்! நிறையக் குழந்தைகளைப் பெற வேண்டும் என்று வாஞ்சித்தோம். இன்னொரு பெண் குழந்தை பிறந்தால், அந்தக் குழந்தைக்கு எவாஞ்சலின் என்று பெயர் வைக்க வேண்டும் என்று முடிவுசெய்திருந்தோம். இத்தனை ஆண்டுகளாக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த அனைத்தும் ஜிம்மின் மரணத்தோடு முடிந்துவிட்டதே! எல்லாம் பறிபோய்விட்டதே!," என்று எலிசபெத் அங்கலாய்த்தார். ஆனால், கொஞ்சம் விசித்திரமான காரியம் என்னவென்றால் வௌரானியர்கள்மேல் அவருக்குக் கடுகளவுகூட வெறுப்போ, கசப்போ ஏற்படவில்லை. "இது என்ன? இந்த உணர்ச்சி நூதனமாக இருக்கிறதே!" என்றுகூட அவர் நினைத்தார். "கர்த்தாவே! நீர் என்னை இந்த ஆதிவாசிகளிடம் கொண்டுசெல்வீராக. நான் அவர்களுக்கு ஏதாவது செய்ய முடியும் என்று நம்புகிறேன், செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன்," என்று ஜெபித்தார். அந்த நேரத்தில், இது அபத்தமான ஜெபம் என்றுகூட அவர் நினைத்தார்.

இதற்குப்பின், எலிசபெத் என்ன செய்யவேண்டும் என்பதைப்பற்றி அவரவர் தங்கள் தங்கள் கருத்துக்களைக் கூறினார்கள். இப்போது அவர் ஒரு விதவை. எனவே, விதவைகள் என்ன செய்ய வேண்டும் என்றும் பலர் சொன்னார்கள். அமேசான் காட்டில் மிஷனரிகள் ஈட்டியால் குத்திக் கொல்லப்பட்டது அன்றைய அமெரிக்க நாளேடுகளில் தலைப்புச்செய்திகளாக வந்துகொண்டிருந்தன. எலிசபெத்துக்கு ஏராளமானோர் கடிதம் எழுதினார்கள். அனைவரும் தங்கள் தங்கள் கருத்துக்களைக் கூறினார்கள். உண்மையாகவே என்ன நடந்தது என்று தெரியாமலே, நேரில் பார்த்ததுபோல் பலர் என்ன நடந்தது என்றும், எப்படி இருந்திருக்க வேண்டும் என்றும், எப்படி நடந்திருக்கக்கூடாது என்றும், எது சரி, எது தவறு என்றும் எழுதினார்கள். எலிசபெத் மீண்டும் அமெரிக்காவுக்குத் திரும்ப வேண்டும் என்பதில் எல்லாரும் ஒருமனதாயிருந்தார்கள். ஒரு வாலிபப் பெண், இப்போது விதவை வேறு, கைக்குழந்தையோடு தன்னந்தனியாகக் காட்டில் வாழ்வது சரியல்ல என்று எல்லாரும் ஏகமனதாய்க் கூறினார்கள். அவர் அங்கு வாழ்வதாக இருந்தால் அவர் மட்டுமே சாண்டியாவில் கெச்சுவா ஆதிவாசிகளின் குடியிருப்பில் வாழும் ஒரே மிஷனரியாக இருப்பார். அவர் மட்டுமே, அவரும் அவருடைய கைகுழந்தையும் மட்டுமே. இது சரியாக இருக்காது. ஆனால், எலிசபெத் அமெரிக்காவுக்குத் திரும்ப விரும்பவில்லை. அவர் அந்தக் காட்டில் வாழ விரும்பினார். காட்டில் சும்மா இருப்பதற்காக அல்ல. அவர் கெச்சுவா ஆதிவாசிகளோடு வாழ்ந்து ஊழியம்செய்ய விரும்பினார். "நான் திரும்பி வரவில்லையென்றால், விசுவாசிகளுக்குக் கற்றுக்கொடு. நாம் விசுவாசிகளுக்குக் கற்பிக்க வேண்டும்," என்று ஜிம் தன்னிடம் கூறிய கடைசி வார்த்தைகளை அவர் நினைவுகூர்ந்தார். அவர் ஜிம்மின் அந்த வார்த்தைகளை மனதில்கொண்டு, அதைச் செய்ய முடிவுசெய்தார்.

எலிசபெத் ஜிம் விட்டுப்போன ஊழியத்தைத் தொடர முடிவுசெய்தார். அவர் ஷாண்டியாவில் ஊழியம்செய்ய ஆரம்பித்தபிறகுதான் அங்கு எவ்வளவு வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது என்று உணர ஆரம்பித்தார். ஜிம் இல்லாமல், அவ்வளவு வேலைகளைத் தனியாகச் செய்வது அவருக்கு அதிக பாரமாக இருந்தது. கட்டிட வேலை செய்யும் தொழிலாளர்களை நிர்வகிக்க வேண்டும்; தொழிலாளர்களின் சம்பளத்தைக் கவனிக்க வேண்டும், கண்காணிக்க வேண்டும். விமானம் ஓடும்பாதையைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டும், சுத்தமாக வைக்க வேண்டும். அங்கு இருந்த டீசல் ஜெனரேட்டரைத் தொடர்ந்து இயக்க வேண்டும். அங்கு நீரிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் ஒரு திட்டத்தை ஆரம்பித்துப் பாதியில் விட்டிருந்தார்கள். அதைப்பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது. அதைத் தொடர வேண்டும். அங்கிருந்த பள்ளியை நடத்த வேண்டும். அந்த ஆதிவாசிப் பெண்களுக்குப் பேறுகாலம் பார்க்க வேண்டும். பாம்புக்கடிக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். இவைகளோடு வழக்கமான வேலைகளையும் செய்ய வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் ஆதிவாசி ஆண்கள் ஆராதனைக்காகக் கூடிவரும்போது கூட்டங்களில் பேசுவார்கள் என்பதால் அவர்களுக்கு வேதாகமத்தை முறையாகக் கற்பிக்க வேண்டும். கூட்டங்களில் பிரசங்கிக்கும் பொறுப்பைத் தன்னால் ஏற்க முடியாது, அது அளவுக்கு மீறிய பாரம் என்று அவர் உணர்ந்தார். எனவே, ஆதிவாசி ஆண்களே தங்கள் சொந்த மக்களுக்குக் கற்பிப்பதற்கு ஏதுவாக அவர்களுக்கு வேதத்தை கற்பிக்க வேண்டும். அவரும் ஜிம்மும் சேர்ந்து லூக்கா நற்செய்தியை கெச்சுவா ஆதிவாசிகளின் மொழியில் மொழிபெயர்க்கும் வேலையை ஆரம்பித்திருந்தார்கள். அந்த வேலையைத் தொடர வேண்டும். ஒரு வயதே ஆன குழந்தையைக் கவனிக்க வேண்டும். நீங்கள் உங்களை கொஞ்சம் கற்பனைசெய்து பாருங்கள்.அவருடைய நிலைமையில் வைத்துக் கற்பனைசெய்துபாருங்கள்.

வேலைப்பளுவினால் விம்மினார். பாரங்களினால் அமிழ்ந்தார். பொறுப்புக்கள் சுமைகளாகின. பதற்றம், தவிப்பு, தத்தளிப்பு, தடுமாற்றம். கடுமையான தனிமை உணர்வு. அவருடைய நாட்கள் சிற்றேவல்களும், குற்றேவல்களும் செய்வதிலேயே கழிந்ததால், "நான் ஏன் இங்கிருக்கிறேன்?" என்றும் அவர் சில வேளைகளில் யோசித்தார். இன்னும் சில நேரங்களில், "கர்த்தாவே, என்னை எடுத்துக்கொள்ளும். நான் வாழ விரும்பவில்லை. என்னால் இதற்குமேல் தொடரமுடியாது," என்றும் அவர் ஜெபித்தார். ஜிம் இல்லாமல், அவரால் எல்லாவற்றையும் தொடர்ந்து செய்யமுடியவில்லை.

இப்படிப்பட்ட பாதையின்வழியாகப் போனதால் அவர் ஒரு பாடத்தைக் கற்றுக்கொண்டார். அது கடினமான பாடம், ஆனால் நல்ல பாடம். "சில நேரங்களில் வாழ்க்கை மிகமிகக் கடினமாக இருக்கும். நாம் அடுத்த காரியத்தை மட்டுமே செய்ய முடியும். அது எதுவாக இருந்தாலும் சரி, நாம் அடுத்த காரியத்தை மட்டுமே செய்யவேண்டும். தேவன் நம்மை அங்கே சந்திப்பார்," என்று அவர் தன் நாளேட்டில் எழுதினார். இது அவர் கற்றுக்கொண்ட கடினமான, நல்ல பாடம்.

மாதங்கள் பல உருண்டோடின. நாளடைவில் அவர் கெச்சுவா ஆதிவாசிகளிடையே தன் பிரயாசத்தின் பலனைக் காண ஆரம்பித்தார். அவர்களுடைய கூட்டங்களில் ஆண்கள் தேவனுக்காக மிக எளிமையாகப் பேசினார்கள். அந்த இனத்தைச் சேர்ந்த பலர் தேவனைத் தேடி வந்தார்கள். அவர்கள் தேவன்மேல் பசியும் தாக்கமும் கொண்டார்கள். அவர்கள் கர்த்தராகிய இயேசுவை அறிய விரும்பினார்கள். பலர் ஆண்டவராகிய இயேசுவை விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்றார்கள். அவர்கள் தேவனைப்பற்றி மேன்மேலும் அறிய ஆவலாக இருந்தார்கள். இதற்குமுன் இதுபோல் நடந்ததில்லை. பரிசுத்த ஆவியானவர் இந்த மக்களிடையே வல்லமையாய்ச் செயல்படுவதை எலிசபெத் உணர்ந்தார்.

எலிசபெத் அமெரிக்காவுக்குத் திரும்பி வந்து, கொஞ்ச நாட்கள் தங்கினார். கொல்லப்பட்ட ஐந்து மிஷனரிகளைப்பற்றியும், அங்கு நடந்ததைப்பற்றியும் எழுதுமாறு பலர் அவரைக் கேட்டுக்கொண்டதால், ஒரு புத்தகம் எழுதுவதற்காக அவர் அமெரிக்காவில் சிறிது காலம் தங்கினார். அவர் புத்தகம் எழுதினார். உங்களில் சிலர் ஒருவேளை இந்தப் புத்தகத்தைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம். அந்தப் புத்தகத்தின் பெயர் "Through Gates of Splendor". அந்த ஐந்து மிஷனரிகளும் வௌரானி ஆதிவாசிகளைச் சந்திக்கச் செல்வதற்குமுன் பாடிய ஒரு பாடலின் ஒரு வரிதான் இந்தப் புத்தகத்தின் தலைப்பு.

புத்தகத்தை எழுதி முடித்து, அச்சேற்றுவதற்கு வெளியீட்டாளர்களிடம் கொடுத்துவிட்டு, தன் மகள் வலேரியுடன் அவர் ஷாண்டியாவுக்குத் திரும்பினார். ஜிம்மும், மற்ற நான்கு மிஷனரிகளும் படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சியிலிருந்து, பேரிழப்பிலிருந்து, அவர் கொஞ்சம்கொஞ்சமாக மீண்டுவந்தார். ஏற்கெனவே அதிர்ச்சி, பேரிழப்பு, துக்கம். அவைகளோடு இப்போது கடின உழைப்பு, தனிமை ஆகியவைகள் சேர்ந்துகொண்டன. இவைகளிலிருந்தும் மீண்டார். ஆனால், இப்போது அவர் எதிர்பாராத இன்னொரு பெரிய சோதனை அவருக்காகக் காத்திருந்தது.

அவர் அமெரிக்காவிலிருந்து ஷாண்டியாவுக்குத் திரும்பியபோது, அவர்களுடைய வீட்டில் வேறொரு மிஷனரி குடும்பத்தார் தங்கியிருந்தார்கள். இரண்டு குடும்பங்கள் தங்கக்கூடிய அளவுக்கு அது பெரிய வீடுதான். எலிசபெத்தும் வலேரியும் ஒரு பக்கமும், மற்ற மிஷனரி குடும்பம் இன்னொரு பக்கமும் வாழத் தொடங்கினார்கள். ஒரே வீட்டில் இரண்டு குடும்பங்கள். ஒரே சமையலறை, ஒரே சாப்பாட்டு அறை. அந்தக் குடும்பத்தாரோடு சேர்ந்து வாழ்வது எலிசபெத்துக்குத் தொல்லையாக இருந்தது. அந்த மிஷனரி தம்பதியர் வீட்டுப் பொருட்களை ஒழுங்காக, சுத்தமாக வைக்கவில்லை. ஜிம் மிகவும் கவனமாக செய்து வைத்திருந்த மரச்சாமான்களை, பண்ட பாத்திரங்களை, தட்டுமுட்டுச் சாமான்களை அவர்கள் பொருட்படுத்தவில்லை. கவனமாகக் கையாளவில்லை. இரு குடும்பமும் அங்கு சேர்ந்து வாழ முடியாது என்பதற்கு நிரூபணமாக அந்த மிஷனரி சாப்பிடும்போது சாப்பாட்டு மேசையில் உட்கார்ந்துகொண்டு கொண்டைஊசியை வைத்துக் காது குடைந்து காதை சுத்தம்செய்துகொண்டிருந்தார். அதை மேஜையில் போட்டார். சுத்தம், ஒழுங்கு, பொறுப்பு இல்லை.

பொறுத்துப் பார்த்தார். இதற்குமேல் தாக்குப்பிடிக்க முடியாது என்ற கட்டத்தை எட்டிவிட்டார். எல்லாவற்றையும் மிகக் கவனமாகவும், கிரமமாகவும், செவ்வனே செய்கிற இயல்புடைய, துறவியைப்போல் ஒதுங்கியிருக்கும் குணமுடைய எலிசபெத் இந்தக் கட்டத்தில் போராடினார். அதிர்ச்சி, இழப்பு, சோகம், வேலைப்பளு, தனிமைபோன்ற எல்லாவற்றையும் வென்றுவிட்டார், மீண்டுவந்துவிட்டார். தான் சகித்த தனிமையைப்பற்றி, "ஓ, தனிமை, முற்றிலும் வெற்றிடமான, பரந்துவிரிந்த, ஆற்றுப்படுத்த முடியாத, ஈடுசெய்ய முடியாத தனிமை," என்று அவர் தன் நாளேட்டில் எழுதினார். எவ்வளவோ பெரிய இழப்புகளிலிருந்தும், அதிர்ச்சியிலிருந்தும் அவர் மீண்டு வந்தார். பாரங்களை, பொறுப்புக்களை எளிதில் சுமந்தார். ஆனால், இந்தக் காரியத்தை அவரால் தாங்க முடியவில்லை. இந்தக் குடும்பத்தாரைச் சகிக்கமுடியவில்லை. "ஆண்டவரே, இந்த நிலைமையிலிருந்து என்னை வெளியேகொண்டுவாரும்," என்று அவர் ஜெபித்தார். அற்பமாகத் தோன்றுகிற இந்தச் சூழ்நிலையின்மூலம், கர்த்தர் தம்மை எலிசபெத்துக்கு இன்னும் அதிகமாக வெளிப்படுத்தினார். "எனக்குரிய எல்லாவற்றையும் நான் கிறிஸ்துவுக்காக இன்னும் பலிபீடத்தில் வைக்கவில்லை," என்று அவர் உணர்ந்தார். ஜிம் கட்டிய, அவர்கள் வாழ்ந்துகொண்டிருந்த அந்த வீட்டை மிஷனரி குடும்பத்தார் வாழ்வதற்குக் கொடுத்துவிட்டு வீட்டைவிட்டு அவர்கள் வெளியேறினார்கள். ஆம், வலேரியுடன் எலிசபெத் வெளியேறினார்.

"வருங்காலத்தில் நான் என்ன செய்யப்போகிறேன்?" என்று அவருக்கு இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், வௌரானி ஆதிவாசிகளிடம் செல்லுமாறும், அவர்களுக்கு ஏதாவது செய்யுமாறும் தேவன் தன்னை அழைப்பதாக அவர் உணர்ந்தார். இந்த உணர்வு அவரிடம் ஆழமாகவும், அழுத்தமாகவும் இருந்தது. எனவே, அவர் வௌரானி செவ்விந்தியர்களிடம் போக விரும்பினார். ஆம், நண்பர்களாக, சமாதானத்தோடு சென்ற தன் கணவனையும், பிற மிஷனரிகளையும் கொடூரமாகக் குத்திக்கொன்ற கொலைகாரர்களிடம் செல்ல விரும்பினார். ஆனால், "நான் எப்படி அவர்களிடம் செல்லப் போகிறேன்? திடுதிப்பென்று காட்டுக்குள் நடந்துபோய் அவர்களுக்குமுன் நிற்கமுடியாது. ஏதோவொரு அற்புதம் நடந்தாலொழிய நான் அங்கு அவர்களிடம் போக முடியாது," என்று நினைக்கத் தொடங்கினார். "ஏன் போக முடியாது? முடியும். தேவன் தன் சித்தத்தைச் செய்யப் பலவீனமானவைகளைப் பயன்படுத்துகிறார். நானும், என் மகள் வலேரியும் பலவீனமானவர்கள். பலவீனமாக எங்களைத் தேவன் பயன்படுத்துவார்," என்றும் எலிசபெத் உணர்ந்தார்.

வௌரானியர்களின் நடமாட்டத்தைப்பற்றிய செய்திகள் அவ்வப்போது வந்துகொண்டிருந்தன. வௌரானியர்களின் நிலங்களுக்கு அருகேயிருந்த ஒரு விமான ஓடுபாதையின் ஓரத்தில் டாக்டர் திட்மார்ஷ் என்ற ஒரு மிஷனரி ஒரு குடிசைபோட முயன்றதாகவும், வௌரானி ஆதிவாசிகள் அந்தக் குடிசையை முற்றிலுமாக அழித்துச் சூறையாடி, அங்கிருந்த புத்தகங்களையும், அனைத்தையும் கிழித்தெரிந்ததாகவும் அவர் கேள்விப்பட்டார். அது மட்டும் அல்ல. அவர்கள் அந்தக் குடிசையின் வாசலில் இரண்டு ஈட்டிகளைக் குறுக்கும் நெடுக்குமாக விட்டுவிட்டுப் போனதாகவும் அறிந்தார். வௌரானியர்கள் குடிசைக்கு வந்தபோது டாக்டர் டிட்மார்ஷ் அங்கு இல்லையாம். தப்பித்தார்.

வௌரானியர்களைப்பற்றிய இதுபோன்ற செய்திகளால் எலிசபெத் கடுகளவும் பாதிக்கப்படவில்லை. அங்கு போக வேண்டும், அவர்களைச் சந்திக்க வேண்டும் என்ற அவருடைய எண்ணத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. "வௌரானியர்களிடம் செல்ல வேண்டும் என்று அவர் விரும்புகிறார் என்றால் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் ஆழமாக வேரூன்றியிருக்கிறது என்று பொருள்," என்றே அவருடைய உறவினர்கள் நினைத்தார்கள். ஆனால், இந்த எண்ணமும், பாரமும் தேவனிடமிருந்து வந்தவை என்று எலிசபெத் தெளிவாக அறிந்திருந்ததால், "இதோ, ஆண்டவரே, என்னை அனுப்பும்," என்று மேலும் மேலும் ஜெபித்தார்.

அற்புதம் நிகழ்ந்தது. ஜிம் இறந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு, 1957ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி அதிகாலை 6 மணிக்கு இரண்டு பெண்கள் காட்டிலிருந்து கெச்சுவா ஆதிவாசிகளின் குடியிருப்பைநோக்கி வந்தார்கள். அதிர்ச்சியடைந்த கெச்சுவா ஆதிவாசிகள் வந்தவர்கள் வௌரானியர்கள் என்று எளிதில் அடையாளம் கண்டுகொண்டார்கள். அவர்களுக்கு உணவு கொடுத்து, தங்குவதற்கு ஏற்பாடு செய்தார்கள். அவர்கள் ஏன் வந்தார்கள்? எங்கு போகிறார்கள்? எத்தனை நாள் தங்குவார்கள்? என்று எதுவும் யாருக்கும் தெரியவில்லை. சாப்பிட்டார்கள். தூங்கினார்கள்.

இந்தச் செய்தி காட்டுத்தீபோல் விரைவாகப் பரவியது. எலிசபெத்தின் காதுக்கும் இந்தச் செய்தி போய்ச் சேர்ந்தது. தற்செயலாகத்தான். ஒருநாள் எலிசபெத் இன்னொரு மிஷனரியைப் பார்க்கச் சென்றிருந்தார். அவர் தங்கியிருந்த இடம் இப்போது வௌரானிப் பெண்கள் வந்து தங்கியிருக்கும் கெச்சுவா குடியிருப்பிலிருந்து கொஞ்சத் தூரம். அதாவது 3-4 மணிநேரம் நடக்க வேண்டும். அந்த மிஷனரிக்கு வௌரானிப் பெண்கள் அங்கு வந்திருக்கும் செய்தி ஏற்கெனவே தெரியும். அவரைப் பார்க்க வந்த எலிசபெத்துக்கு அவர் இந்தச் செய்தியைச் சொன்னார். எலிசபெத் உடனடியாக டேப் ரெக்கார்டர் உட்பட தன்னிடம் இருந்த வேறு சில பொருட்களை எடுத்துக்கொண்டு அந்தப் பெண்களைச் சந்திக்க முடிவுசெய்து, புறப்பட்டார்.

அவர் அங்கு போய்ச் சேர்ந்ததும், அந்த இரண்டு பெண்களையும் பார்த்தார். அதில் ஒருவர் வயதானவர். வயதான அந்தப் பெண்ணை எலிசபெத் உடனடியாக அடையாளம் கண்டுகொண்டார். இரண்டு ஆண்டுகளுக்குமுன்பு ஐந்து மிஷனரிகள் வௌரானியர்களைச் சந்திக்க அவர்களுடைய குடியிருப்புக்கு அருகிலிருந்த ஆற்றுப்படுகையில் முகாமிட்டிருந்தபோது இரண்டு பெண்கள் வந்து அவர்களைச் சந்தித்துவிட்டுப் போனார்கள் அல்லவா? அதில் ஒருவர் இந்த வயதான பெண். அவரேதான் இவர். சந்தேகமேயில்லை. ஜிம்மும், மற்ற மிஷனரிகளும் புகைப்படம் எடுத்திருந்தார்கள். அதைவைத்து எலிசபெத் அந்த வயதான பெண்ணை எளிதில் அடையாளம் கண்டுகொண்டார்.

வந்த இருவரும் எங்கும் போவதாகத் தெரியவில்லை. போவதற்கான அறிகுறியே இல்லை. அவர்கள் அங்கு நிரந்தரமாகத் தங்கவந்தவர்கள்போல் தெரிந்தது. எனவே, எலிசபெத் வலேரியையும் கூட்டிக்கொண்டு வந்து அங்கு தங்குவது என முடிவுசெய்தார். அது மட்டும் அல்ல. அவர்கள் இந்தக் கெச்சுவா குடியிருப்பில் தங்கி, அந்த வௌரானிப் பெண்களுடன் பழகி, அவர்களுடைய மொழியைக் கொஞ்சமாவது கற்றுக்கொள்ளவும், அவர்களைப்பற்றித் தெரிந்துகொள்ளவும் விரும்பினார். இப்படிப்பட்ட வாய்ப்பை நினைத்து அவர் பரவசமடைந்தார். அவர்களுடைய மொழியைக் கற்பது பெரிய சவாலாக இருந்தது. தேவனே இதைத் திட்டமிட்டு, ஏற்பாடு செய்திருக்கிறார் என்று எலிசபெத் நம்பினார்.

அவர் அங்கு குடியேறிய மறுநாள் காலையில், தன் குழந்தை வலேரியை அருகிலிருந்த ஆற்றில் குளிப்பாட்டக் கொண்டுபோனார். ஆற்றில் குளிப்பாட்டிக்கொண்டிருக்கும்போது, திடீரென்று கெச்சுவா ஆட்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினார்கள். "வௌரானி, வௌரானி" என்று அவர்கள் அலறியடித்துக்கொண்டு நாலாபக்கமும் ஓடினார்கள். என்ன நடக்கிறது என்று எலிசபெத்துக்குத் தெரியவில்லை. அவரும் வலேரியைப் பிடித்து இழுத்துக்கொண்டு ஆற்றின்வழியாக ஓடினார். எங்கு ஓடுகிறோம் அல்லது ஏன் ஓடுகிறோம் என்று எதுவும் தெரியாது. வௌரானியர் சிலர் காட்டிலிருந்து வெளிப்பட்டு, கெச்சுவா இனத்தைச் சார்ந்த ஹோனராரியோ என்ற ஒரு வாலிபனை ஈட்டியால் குத்திக்கொன்றார்கள் என்று தெரிந்துகொண்டார். அவர்கள் அவனை 22 முறை ஈட்டியால் குத்திக்கொன்றார்கள். பின்னர் அவனுடைய இளம் மனைவியைக் கடத்திச் சென்றார்கள். கோரக்கொலை. எலிசபெத் ஹோனராரியோவின் உடலில் அத்தனை ஈட்டிகளும் குத்திக்கொண்டிருப்பதைப் பார்த்தார். அதைக் கண்டதும், அவருடைய கடந்தகால உணர்ச்சிகள் அவருக்குள் கொந்தளித்தன. ஜிம்மும், பிற நான்கு மிஷனரிகளும் எப்படிப் கொல்லப்பட்டிருப்பார்கள் என்று நினைத்துப்பார்த்தார். ஜிம் குத்திக் கொல்லப்பட்ட நாளில் தனக்குள் எழுந்த கசப்பான உணர்ச்சிகளை எலிசபெத் எண்ணிப்பார்த்தார். விவரிக்கமுடியாத வலி, வேதனை. துடித்தார். சிதைந்து உருத்தெரியாமல் போயிருந்த உடலைப் பார்த்ததும் ஓடிவிடவேண்டும்போல் உணர்ந்தார். ஆனால், உணர்ச்சியில் உறைந்துபோனார். இனம்புரியாத சுகவீனம், பலவீனம். ஓடத் துடித்தார். வெளியேறத் துடித்தார். எல்லாவற்றையும் மறந்துவிட விரும்பினார்.

எல்லாவற்றையும் பலிபீடத்தில் கிடத்திவிடவேண்டும் என்ற ஒரு பெரிய பாடத்தை எலிசபெத் மீண்டும் இந்தக் கட்டத்தில் கற்றுக்கொண்டார். எனவே, அவர், "ஆண்டவரே! எனக்குள் எழும்பி என்னை அலைக்கழிக்கிற இந்தப் பயங்கரமான உணர்ச்சிகளையும் நான் பலிபீடத்தில் கிடத்துகிறேன்," என்று சொல்லி ஜெபித்தார். அது மட்டும் அல்ல, "தேவனே, நான் இங்கு தங்க வேண்டும் என்று நீர் விரும்பினால், நான் தங்குகிறேன். ஆனால், அது உம கிருபையால் மட்டுமே முடியும்," என்று ஜெபித்துத் தன்னை ஒப்புக்கொடுத்தார்.

அந்த நேரத்தில், இந்த வௌரானி ஆதிவாசிகளைப்பற்றி அதிகமாகத் தெரியாது. நாம் 1950களின் பிற்பகுதியில் நடந்தவைகளைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம். இந்த வௌரானியர்கள் பல நூற்றாண்டுகளாக இப்படித் தனிமையில், ஒதுக்குப்புறமாக வாழ்ந்துகொண்டிருந்தார்கள். அவர்களுடைய மொழிக்கும் பிற ஆதிவாசிகளின் மொழிகளுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. அவர்கள் தங்கள் காது மடல்களில் ஓட்டைபோட்டு அதில் பால்சா என்ற மரத்தினாலான வட்டவடிவக் கம்மல் அணிந்திருந்தார்கள். பெரிய வட்டம். ஆண்கள் கோமணம் கட்டினார்கள். பெண்கள் ஒருவிதமான பிரத்தியேகமான ஆடை அணிந்தார்கள். கோமணத்தையும், மேலாடைகளையும் அவர்கள் தங்கள் பாணியில் உடுத்தினார்கள். மேலும் அவர்கள் அரை நாடோடிகளாகவே வாழ்ந்தார்கள். அதாவது அவர்கள் ஒருவிதமான விவசாயம் செய்தார்கள். ஆனால், விவசாயம் முடிந்தவுடன் அந்த இடத்தைக் காலிசெய்துவிட்டு வேறு இடத்துக்குப் போய்விடுவார்கள். அந்த இனம் மொத்தமாக அழிந்தொழிந்துவிடுமோ என்று சொல்லும் அளவுக்கு அவர்களிடையே வன்முறை தலைவிரித்தாடியது. அவர்கள் ஒருவரையொருவர் குத்திக்கொன்றார்கள். விடிந்தால் எழுந்தால் கொலை, கொலை, கொலை. தகராறுகளை அவர்கள் ஈட்டியின்மூலம் தீர்த்தார்கள். பிறப்பும், மரணமும் வௌரானி ஆதிவாசிகளின் வாழ்வில் மிகச் சாதாரணமான காரியமாகி விட்டன. அவர்கள் வெளிநாட்டவரை வெறுத்தார்கள், அவர்களுக்குப் பயந்தார்கள். வெளிநாட்டவர்கள் தாங்கள் வேட்டையாடும் இடங்களை ஆக்கிரமித்துக்கொண்டு தங்களைத் தங்கள் இடத்தைவிட்டு விரட்டுவதாக நினைத்தார்கள். எனவே, அவர்களை வெறுத்தார்கள் வௌரானியர்கள் நிகழ்காலத்தைக்குறித்து மட்டுமே கவலைப்படுபவர்கள். எதிர்காலத்தைப்பற்றிய எண்ணமே அவர்களுக்குக் கிடையாது. அவர்களுக்கு மதம் என்று ஒன்று இல்லை. உயிர்கள் எப்படித் தோன்றியிருக்கலாம் என்பதைப்பற்றி அவர்களிடம் ஒருவிதமான கருத்துக்கள் இருந்தன. ஆனாலும், அவர்கள் நிகழ்காலத்தில்தான் வாழ்ந்தார்கள். தங்கள் உணவுக்காக ஒவ்வொரு நாளும் வேட்டையாடினார்கள். தங்குவதற்கு மிக எளிமையான குடிசைகள் கட்டினார்கள். அவர்களுடைய குடிசைகளை ஒரு நாளில் கட்டிவிடலாம். ஒரு சில மணி நேரத்தில் பிரித்துவிடலாம். அவர்கள் நிகழ்காலத்தில் வாழ்ந்தார்கள், மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார்கள். இறந்த ஒருவருக்காகத் துக்கம் அனுசரிக்க வேண்டும் என்ற எண்ணம்கூட அவர்களுக்கு வினோதமாக இருந்தது. "ஏன் துக்கம் அனுசரிக்க வேண்டும்? அவர்கள் இறந்துவிட்டார்கள், அவர்கள் போய்விட்டார்கள். இனி ஏன் அழ வேண்டும்," அப்படித்தான் அவர்கள் வாழ்ந்தார்கள்.

எலிசபெத் காத்திருந்து காத்திருந்துக் களைத்துப்போனார். பொறுமையுடன் காத்திருப்பதற்குப் போராடினார். கெச்சுவா குடியிருப்பிற்கு வந்திருந்த இரண்டு வௌரானிப் பெண்களும் எங்கும் செல்வதாகத் தெரியவில்லை. அவர்களோடு உரையாடுவது மிகவும் கடினமாக இருந்தது. அவர்கள் அங்கு என்ன செய்துகொண்டிருக்கிறார்கள், ஏன் அங்கு வந்தார்கள், எவ்வளவு காலம் அங்கு தங்குவார்கள், என்ன நடக்கப்போகிறது என்று யாருக்கும் ஒன்றும் தெரியவில்லை. எலிசபெத் அவர்களுடையய மொழியைக் கற்பதற்கும், அவர்களோடு உரையாடுவதற்கும் கடுமையாக உழைத்தார். ஏனென்றால், அவர்களுக்கிடையே பொதுவான மொழி ஒன்று இல்லையே! அந்தப் பெண்கள் அங்கு என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்று எலிசபெத்துக்குப் புரியாததுபோல, எலிசபெத்து அங்கு என்ன செய்துகொண்டிருக்கிறார் என்று அந்த வௌரானிப் பெண்களுக்குப் புரியவில்லை. அவர்கள் எலிசபெத்தை ஒரு பொருட்டாகக் கருதவில்லை, அலட்சியப்படுத்தினார்கள். அவரைக் கண்டுகொள்ளவேயில்லை.

சில ஆண்டுகளுக்குமுன்பு வௌரானி இனத்திலிருந்து தப்பித்துயோடி ஒரு பண்ணையில் வேலைசெய்துகொண்டிருந்த தாயுமா என்ற வௌரானிப் பெண் இப்போது இந்த இரு பெண்களைச் சந்திக்க இங்கு வந்தாள். அவள் இவர்களை உடனடியாக அடையாளம் கண்டுகொண்டாள். இந்தப் பெண்கள்மூலம் அவள் தன் குடும்பத்தைப்பற்றிய தகவல்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டாள். தாயுமா அந்தப் பெண்களோடுசேர்ந்து தன் குடும்பத்தைப் பார்க்கக் காட்டுக்குத் திரும்பிச் செல்ல முடிவுசெய்தாள். இப்போது அந்த வௌரானிப் பெண்களோடு உரையாட ஒரு வழி பிறந்தது. எப்படியென்றால் தாயுமாவுக்குக் கெச்சுவா மொழியும், கிட்டோ மொழியும் பேசத் தெரியும். அவள் வௌரானிப் பெண். எனவே வௌராணி மொழியும் தெரியும். அவள்மூலம், எலிசபெத் கொஞ்சம் கொஞ்சமாக வௌரானி மொழியைக் கற்கத் தொடங்கினார். மூன்று பெண்களும் காட்டுக்குத் திரும்பிச் செல்வதைப்பற்றிக் பேசிக்கொண்டிருந்தார்கள். "நீங்களும் எங்களோடு எங்கள் மக்களைப் பார்க்க வாருங்கள்," என்று அவர்கள் எலிசபெத்தை வற்புறுத்தி அழைத்தார்கள். அதற்கு எலிசபெத், "அவர்கள் என் கணவரைக் கொன்றார்கள், அவர்கள் என்னையும், என் பிள்ளை வலேரியையும் கொல்லமாட்டார்களா?" என்று கேட்டார். அந்தப் பெண்கள், "இல்லை, கொல்லமாட்டார்கள். நாங்கள் எங்கள் உணவை உங்களுடன் பகிர்ந்துகொள்வோம், நாங்கள் வலேரியை காட்டுப் பாதையில் தூக்கிச் சுமப்போம். நீங்கள் எங்களுக்கு அம்மாபோன்றவர் என்று நாங்கள் எங்கள் மக்களிடம் கூறுவோம். நாங்கள் உங்களை நேசிக்கிறோம்," என்று சொன்னார்கள். " அப்படித்தான் நடக்கும் என்று எலிசபெத்தால் உறுதியாகச் சொல்லமுடியவில்லை. அவருக்கு எப்படித் தெரியும்? ஆனால் அவர்களைச் சந்திக்க இது ஒரு நல்ல வாய்ப்பு என்று அவர் உணர்ந்தார்.

எலிசபெத்தும், குட்டி வலேரியும், நேட் செயின்டின் சகோதரி ரேச்சல் செயிண்டும் இந்தப் பெண்களுடன் காட்டுக்குள் சென்று வௌரானி ஆதிவாசிகளைச் சந்திக்க முடிவுசெய்தார்கள். அவர்கள் அந்த ஆதிவாசிகளைச் சந்தித்தபின் உயிரோடு இருந்தால் நிச்சயமாக அது வரலாறாக மாறிவிடும். இதுவரை நற்செய்தியைக் கேள்விப்படாத அந்த ஆதிவாசிகளுக்கு நற்செய்தியைக் கொண்டுசெல்வதும், அவர்களுடைய மொழியைக் கற்று, முடிந்தால் வேதாகமத்தின் ஒரு சில புத்தகங்களையாவது அவர்களுடைய மொழியில் மொழிபெயர்க்க வேண்டும் என்ற பாரத்தோடு அவர்கள் அங்கு போனார்கள். தங்கள் உயிருக்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று எலிசபெத்துக்குத் தெரியும். ஜிம்முக்கு நடந்தது அவருடைய மனத்திரையில் ஒருமுறை ஓடி மறைந்தது.

எலிசபெத் பல மொழிகளை எளிதில் கற்கும் கொடைபெற்றவர். அவருடைய மூன்று வயது மகள் வலேரியிடமும் அந்தத் தாலந்து இருந்தது. வலேரி வௌரானி மொழிப் பாடல்களை அப்படியே வாயசைத்துப் பாடினாள். அவளால் அந்த மொழியை நன்றாகப் பேச முடிந்தது, அவள் எல்லாரிடமிருந்தும் தினமும் புதிய புதிய வார்த்தைகளைக் கற்றுக்கொண்டாள். எலிசபெத்தையும், ரேச்சலையும் வௌரானி ஆதிவாசிகள் ஏற்றுக்கொண்டார்கள். ஆனாலும், அவர்களை மனமுவந்து வரவேற்றார்கள் என்று சொல்ல முடியாது. ஏனென்றால், அந்த ஆதிவாசிகள் அவர்களைப்பார்த்து எள்ளி நகையாடினார்கள், அவர்களைக் கிண்டல் கேலி பரிகாசம்செய்தார்கள். அவர்களை ஒரு வேடிக்கைப்பொருளைப் பார்ப்பதுபோல் பார்த்தார்கள். ஆனால் அவர்கள்மேல் அவர்கள் வன்முறையைக் காட்டவில்லை.

எலிசபெத் வௌரானியரின் மொழியைப் பதிவுசெய்யவும், கற்கவும் கடினமாக உழைத்தார், நிறையப் புகைப்படங்கள் எடுத்தார். எலிசபெத்தின் செயல்கள் எல்லாவற்றையும் வௌரானியினர்கள் உன்னிப்பாகக் கண்காணித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்குத் தெரியாமல் எலிசபெத்தால் எதுவும் செய்யமுடியவில்லை. அவர்கள் தங்கியிருந்த குடிசைக்கு சுவர்கள் கிடையாது. சுவர்கள் இல்லாத அவர்களுடைய குடிசைக்குள் ஆதிவாசிகள் தங்கள் விருப்பப்படி வந்து போனார்கள். தனியாக, மறைவாக இருக்க வசதியும், வாய்ப்பும் இல்லை. "அவர்கள் எப்போதும் எங்களைக் கண்காணித்துக்கொண்டேயிருந்தார்கள். சில நேரங்களில் தூக்கத்தில் எழுந்து பார்த்தபோது அருகில் சிலர் உட்கார்ந்து எங்களைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். வலேரியின் துணிகளை ஆற்றில் துவைத்தபோது அவர்கள் என்னைப் பார்த்து ஏளனமாய்ச் சிரித்தார்கள். நான் நேரத்தை வீணாக்குவதாக அவர்கள் நினைத்தார்கள். இவள் என்ன செய்கிறாள்? பானைகளைக் கழுவுகிறாள், துணிகளைத் துவைக்கிறாள். இது முட்டாள்தனம் என்று அவர்கள் கிண்டல்செய்தார்கள்," என்று எலிசபெத் தன் நாளேட்டில் எழுதுகிறார். "நான் என் நேரத்தையும், காலத்தையும் இங்கு வீணாக்கிக்கொண்டிருக்கிறேனோ!" என்று எலிசபெத் சில நேரங்களில் நினைத்தார். அங்கு கிடைத்த கிழங்கை அவரால் ஒழுங்காக வெட்ட முடியவில்லை. விறகு பொறுக்க முடியவில்லை, தெரியவில்லை. ஆதிவாசிக் குழந்தைகள் செய்த காரியங்களைக்கூட அவரால் செய்யமுடியவில்லை.

"நாங்கள் உண்மையிலேயே இந்த ஆதிவாசி மக்களுக்கு ஒரு சுமையாகிவிட்டோமே!" என்று அவர் நினைத்த நேரங்களும் உண்டு. ஆனால், அந்த மக்களிடையே வலேரி இயல்பாகப் பழகினாள், நிம்மதியாக இருந்தாள். ஆயினும், எலிசபெத்தும், ரேச்சலும் தாங்கள் அவர்களுக்கு ஒரு பாரமாக இருப்பதாக உணர்ந்தார்கள். வௌரானியினர் உணவுக்காக ஒவ்வொரு நாளும் வேட்டையாடுவார்கள். எலிசபெத்துக்கும், ரேச்சலுக்கும் வேட்டையாடத் தெரியாது. எனவே, வௌரானியினர் தாங்கள் வேட்டையாடிக் கொண்டுவந்ததை இவர்களோடு பகிர்ந்துகொண்டார்கள். வேட்டைக்குச் சென்று வெறுங்கையாய்த் திரும்பும் நாட்கள் உண்டு. அப்போது எல்லாரும் பட்டினி. இந்த நிலையைப் போக்க அவர்கள் MAF விமானங்கள்மூலம் தங்களுக்கு உணவுப்பொருட்களைப் பெற முடிவுசெய்தார்கள். விமானங்கள்மூலம், வலேரிக்குப் பால் பொருட்கள், இவர்களுக்குத் தேவையான சாமான்கள் எல்லாம் கீழே போட்டார்கள். வௌரானியினர் இதை வேடிக்கையாகப் பார்த்தார்கள். கீழே போடப்பட்ட உணவுப் பொருட்களை அவர்கள் விரல்களை வைத்துத் தொட்டுப் பார்த்தார்கள், முகர்ந்து பார்தார்கள். ஓட்ஸ், காபி போன்ற உணவுப் பொருட்களை அருவெறுப்பாகப் பார்த்தார்கள்.

தாயுமா ஆதிவாசிகளுடன் சேர்ந்து ஒன்றாகிவிட்டாள். அவளுக்கு இப்போது வயதாகிவிட்டது. அவள் வேதாகமத்திலிருந்து ரேச்சல் செயிண்டிடம் கற்றுக்கொண்ட கதைகளை தன் பழங்குடி மக்களோடு, குறிப்பாக, தன் குடும்பத்தாரோடு பகிர்ந்துகொள்ளத் தொடங்கினாள். இது அவர்களுக்கு மிகவும் நூதனமாக இருந்தது. ஏனென்றால், ஒரேவொருவர பேச, மற்றவர்கள் கேட்பது அந்த ஆதிவாசிகளின் பழக்கமில்லை. ஜெபம் என்றால் என்னவென்று தெரியாது. இவை அனைத்தும் அவர்களுக்கு மிகவும் அந்நியமானவை. எனினும், அவர்கள் இவைகளைக் கேட்கத் தயாராக இருந்தார்கள். இயேசு கிறிஸ்துவைப்பற்றியும், அவர் செய்தவைகளைப்பற்றியும் தாயுமா சொன்னதை அவர்கள் ஆர்வமாகக் கேட்டார்கள். படிப்படியாக, அவர்களுக்கு வேதாகமத்திலிருந்து சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தார்கள். இருப்பினும், வேதாகமத்தின் எண்ணங்களை அவர்களுக்குக் கற்பிப்பது மிகக் கடினமாக இருந்தது. ஏனென்றால், அவர்களுடைய மொழி காடுகளோடும், காட்டின் கலாச்சாரத்தோடும் தொடர்புடையது. வேதாகமத்தின் எண்ணங்களைக் கற்பிக்க அவர்களுடைய மொழியில் வார்த்தைகள் இல்லை. கர்த்தர் அந்த மக்களில் வேலைசெய்வதை எலிசபெத் ஆச்சரியத்துடன் பார்த்தார். அவர்கள் கடுமையான வீரர்கள், கொடூரமான மனிதர்கள், கொலைகாரர்கள். அவர்களில் சிலர் தங்கள் வன்முறை வாழ்க்கைமுறையை, ஈட்டியெறிந்து கொலைசெய்யும் வாழ்க்கையை விட்டுவிட முடிவுசெய்தார்கள். ஆம், "உங்களுக்காக ஒரு போர்வீரன் இயேசுவை ஈட்டியால் குத்தினான். உங்களுக்காக, உங்கள் பாவங்களுக்காக, இயேசு ஈட்டியால் குத்தப்பட்டார். எல்லோருக்காகவும் குத்தப்பட்டார். இனி ஒருவனும் இன்னொருவனை ஈட்டியால் குத்தத் தேவையில்லை," என்று நற்செய்தி அறிவித்தார்கள். இயேசு சென்ற அந்த காட்டுப் பாதையில் பயணிக்க பலர் விரும்பினார்கள்.

இதையெல்லாம் பார்த்த எலிசபெத் தான் எதையும் சாதித்துவிட்டதாகவோ, வெற்றி பெற்றுவிட்டதாகவோ நினைக்கவில்லை. மிகவும் மங்களாகவே, மேலோட்டமாகவே இவர்கள் கிறிஸ்துவைப் புரிந்திருக்கிறார்கள் என்று அவருக்குத் தெரியும். ஆனால், ஏதோவொரு விதத்தில் வௌரானியாருக்கு நற்செய்தி வந்ததால் மகிழ்ச்சியடைந்தார். ஏனென்றால், நற்செய்தியின் நேர்மறையான விளைவை அவர் அவர்களுடைய வாழ்க்கையில் கண்டார். அவர் அங்கு இருந்தபோது, 1956ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் தேதி ஐந்து மிஷனரிகளுக்கு நேர்ந்த கதியின் கதையைப்பற்றி விவரமாகத் தெரிந்துகொண்டார். அவர்கள் கொல்லப்பட்டதற்கான காரணத்தை அறிந்தபோது, அது எவ்வளவு பைத்தியக்காரத்தனம் என்று அவர் உணர்ந்தார். மிஷனரிகளின் செயல்களுக்கும் அவர்கள் கொல்லப்பட்டதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று தெரிந்துகொண்டார். வௌரானியருக்கிடையே இருந்த தகராறுதான் காரணம். "இதோ, என் கணவனை மிகக் கொடூரமாக ஈட்டியெறிந்து குத்திக்கொன்ற மனிதனோடு, நெருப்பைச் சுற்றி அமர்ந்துகொண்டு, வறுத்த குரங்கின் நகங்களைச் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன்," என்று எலிசபெத் வியந்தார். ஐந்து மிஷனரிகளைக் கொன்றவர்களில் ஒருவனாகிய மின்காயே ஒருநாள் அவரைக் கூப்பிட்டு, "நான்தான் உங்கள் கணவனைக் கொன்றேன். நான் அப்போது சிந்தித்துச் செயல்படவில்லை. ஆனால் இப்போது எங்களுக்குத் தெரியும். இப்போது நாங்கள் தேவனைப்பற்றி நினைக்கிறோம். இனி நாங்கள் ஈட்டி எடுக்க மாட்டோம். நீங்கள் இப்போது என் சகோதரி. உங்கள் அம்மா என் அம்மா. நீங்கள் என் குடும்பம் என்று சொல்வீர்களா," என்று சொன்னான். நற்செய்தியின் பலாபலனை எலிசபெத் கண்டார்.

சேறு சகதி, பூச்சிகள், பறவைகள், விலங்குகள், பாம்புகள், வேட்டை, விறகு பொறுக்குதல், பசி, ஒதுக்குப்புறம் இன்மை, உரையாடுவதில் குறைபாடு, என அமேசான் காட்டில் வாழ்க்கை கவிதைபோல் போய்க்கொண்டிருந்தது. எலிசபெத் அவர்களுடைய மொழியை மிக விரைவில் கற்றுக்கொண்டார். ஆனால் அவர் பேசுவதை வௌரானியினர் இன்னும் வேடிக்கையாகவே பார்த்தார்கள். அவருக்கு அது ஒரு பொருட்டல்ல. தனிமைதான் இந்த நேரத்தில் எலிசபெத்தின் மிகப்பெரிய போராட்டமாக இருந்தது. ஏனென்றால், ரேச்சலுடன் அவருக்கு இணக்கமான உறவு இருந்தது என்று சொல்ல முடியாது.

எலிசபெத், ரேச்சல் இருவரும் மிகவும் மாறுபட்டவர்கள். இருவரும் மிகவும் உறுதியானவர்கள், தனித்துவம்வாய்ந்தவர்கள். வேலையைப்பற்றியும், வேலைசெய்யும் முறைகளைப்பற்றியும் இருவரும் மிகவும் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருந்தார்கள். இந்த ஆதிவாசிகளிடம் தங்கி, வாழ்நாள் முழுவதும் அவர்களுடன் வாழ்வதுதான் தன் அழைப்பு என்று தனக்குத் தெளிவான தரிசனம் இருப்பதாக ரேச்சல் நம்பினார். எலிசபெத் அங்கு இருப்பதை அவர் விரும்பவில்லை, வரவேற்கவில்லை. அவர்களுடைய மொழியைக் கற்பதற்கும், வேதாகமத்தை அவர்களுடைய மொழியில் மொழிபெயர்பதற்கும் அவர் எலிசபெத்தின் உதவியை ஏற்க விரும்பவில்லை. வௌரானியரின் மொழியைக் கற்பதிலும், மொழிபெயர்ப்பதிலும் ரேச்சேலைவிட எலிசபெத் மிகவும் திறமையானவர் என்று'எல்லாருக்கும் தெரியும். ரேச்சலுக்கும் தெரியும்.

இந்த விவகாரம் எலிசபெத்துக்கு ஒரு தொடர் போராட்டமாகவும், பெரிய முள்ளாகவும் இருந்தது. அவர் இந்த உறவைப்பற்றி ஜெபித்தார். உண்மையில் அவர்களுக்கிடையில் எந்தவிதமான ஐக்கியமும் இல்லை. ரேச்சல் அதை விரும்புவதாகவும் தெரியவில்லை. எலிசபெத் ரேச்சலோடு ஒப்புரவாகவும், காரியங்களைச் சரிசெய்யவும் விரும்பினாலும், ரேச்சலுக்கு அதில் விருப்பம் இல்லை என்றே தோன்றியது. அவர்கள் வௌரானி மக்களுக்கு அந்நியமாக இருந்ததைவிட ஒருவருக்கு ஒருவர் மிகவும் அந்நியர்களாக இருந்தார்கள். எலிசபெத்துக்கு அது மிகவும் விசித்திரமாக இருந்தது.

அவர்கள் இருவரும் வௌரானிய ஆதிவாசிகளுக்கு வேதாகமத்தைக் கற்பித்த விதத்திலும் வேறுபாடுகள் அப்பட்டமாக வெளிப்பட்டன. எடுத்துக்காட்டாக அடக்கஒடுக்கத்தின் அடையாளமாக ஆதிவாசிகள் ஒழுங்காக ஆடைகளை அணிய வேண்டும் என்று ரேச்சேல் வற்புறுத்தினார். ஆனால் இது தேவையில்லை என்று எலிசபெத் உணர்ந்தார். ஏனென்றால், "இந்த மக்களிடம் ஆணவம், கர்வம், தற்பெருமை, மாயைபோன்ற எந்த போலித்தன்மையும் கிடையாது. இந்த மக்களுக்கு வெளித்தோற்றத்தைப்பற்றிய எண்ணமும் இல்லை. அவர்கள் அதில் கவனம் செலுத்தவில்லை. அப்படியிருக்க ஆடைதான் அடக்கஒடுக்கத்தின் அடையாளம் என்று வற்புறுத்தத் தேவையில்லை," என்று நினைத்தார். இதுபோன்ற நிகழ்ச்சிகளின்மூலம், "கிறிஸ்தவம் என்றால் என்ன, எது நியாயமான கலாச்சாரம்?" என்பவைகளை எலிசபெத் ஆராயமுனைந்தார்.

வலேரிக்கு இப்போது வயது நான்கு. அவள், "அம்மா நாம் போகலாமா?" என்று கேட்கத் தொடங்கினாள். "தேவன் சொன்னால், தேவன் விரும்பினால், தேவன் நடத்தினால் நம் உணர்ச்சிகளையெல்லாம் ஒதுக்குத்தள்ளிவிட்டு, கீழ்ப்படிய வேண்டும்," என்ற விலையேறப்பெற்ற பாடத்தை எலிசபெத் தன் வாழ்க்கையில் கற்றுக்கொண்டிருந்தார். "கீழ்ப்படிதல்தான் முக்கியம். நான் இங்கு தங்க வேண்டும் என்று தேவன் விரும்பினால், நான் இங்கு செய்வதற்கு வேலை இருந்தால், என்னுடைய உணர்ச்சிகளும், உணர்வுகளும் ஒரு பொருட்டல்ல," என்று அவர் சொன்னார்.

வளர்ந்துகொண்டிருந்த வலேரியின் அறிவுக்குத் தேவையான தீனி அங்கு கிடைக்கவில்லை. புத்தகங்கள் இல்லை. தான் ஒரு பயனற்ற அம்மாவாக, கையாலாகாத அம்மாவாக, இருப்பதை நினைத்து எலிசபெத் வருந்தினார். நாட்டில் வாழ்ந்து பழகிய எலிசபெத்துக்கு காட்டில் வாழ்க்கை கடினமாகதான் இருந்தது. சூழ்நிலைகள் பாதகமாக இருந்தன. இவைகளைவிட ரேச்சலுடனான உறவில் உராய்வுகள், சிராய்ப்புகள். அது ஒரு பிரச்சினை. எலிசபெத் வேதாகமத்தை மொழிபெயர்க்கும் வேலைசெய்ய ரேச்சல் அனுமதிக்கவில்லை. "கிறிஸ்துவின் நெஞ்சார்ந்த பிரசன்னம் மட்டும் இல்லாதிருந்தால், உண்மையில் எனக்குப் பைத்தியம் பிடித்திருக்கும்," என்று எலிசபெத் எழுதுகிறார். இந்த நேரத்தில், அவர் பல இடங்களில், பல நாடுகளில் ஊழியம்செய்த டேவிட் லிவிங்ஸ்டன், மேரி ஸ்லெஸர், அடோனிராம் ஜட்சன்போன்ற சில மிஷனரிகளின் வாழ்க்கை வரலாற்றைப் படித்து, மிகவும் பலமடைந்தார், உற்சாகமடைந்தார். தற்போது தன்னிடம் இருக்கும் அதே உணர்வு அவர்களிடமும் இருந்ததை அறிந்து அவர் தைரியமடைந்தார். "கிறிஸ்துவின் பிரசன்னம் மட்டும் இல்லாதிருந்தால், எங்களுக்குப் பைத்தியம் பிடித்திருக்கும்," என்று அவர்களுடைய புத்தகத்திலும் அவர் வாசிக்க நேரிட்டது. "தேவன் என்னைக் கைவிடவில்லை என்று எனக்குத் தெரியும். தேவன் என்னோடுகூட இருக்கிறார் என்று எனக்குத் தெரியும்," என்று அவர் அறிவித்தார். எனவே, அவர் தொடர்ந்தார், அடுத்த காரியத்தைச் செய்தார்.

வௌரானியினரோடு இரண்டு வருடங்கள் வாழ்ந்தபிறகு, அவர்களைவிட்டு நாட்டுக்குத் திரும்ப எலிசபெத் முடிவெடுத்தார். இது ஒரு கடினமான முடிவு. அவருடைய நாளேட்டைப் படிக்கும்போது, இந்த முடிவை எடுப்பதற்குமுன் அவர் தன்னை எவ்வளவு அதிகமாகத் தற்பரிசோதனை செய்தார் என்பதைத் தெரிந்துகொள்ளலாம். "நான் இவர்களைவிட்டு நாட்டுக்குத் திரும்புவதால் தவறுசெய்கிறானோ! என்னில், என் குணத்தில் இருக்கும், குறைகளை நான் காணத் தவறுகிறேனோ! காண மறுக்கிறேனோ!" இவ்வாறு பல கேள்விகள். இப்படிச் சிந்தித்துத் சிந்தித்து அவருடைய உடல்நிலை சரியில்லாமல் போயிற்று. தாங்கமுடியாத மனஅழுத்தம்.

எலிசபெத் உண்மையில் ரேச்சல் செயிண்டை அதிகமாக மதித்தார், பாராட்டினார். அவருடைய அசைக்க முடியாத விடாமுயற்சி, போதிக்கும் போதனையில் அவருடைய உண்மை, உத்தமம் ஆகியவைகளை எலிசபெத் காணவோ, பாராட்டவோ தவறவில்லை. ரேச்சல் தன் வாழ்நாட்களை அங்கேயே வாழ விரும்புவதாகச் சொன்னார். அது மட்டும் அல்ல. அவர் தன் ஊழியத்தில் யாருடைய உதவியையும் விரும்பவில்லை. ரேச்சல் அந்த மக்களோடேயே வாழ்ந்து மரித்தார்.

"எலிசபெத்தும், வலேரியும் உங்கள்மேல் கோபமாக இருப்பதால், அவர்கள் உங்களைவிட்டு நாட்டுக்குத் திரும்பிப்போகிறார்கள்," என்று ரேச்சல் வௌரானியரிடம் சொன்னதை எலிசபெத் அறிந்தபோது மனமுடைந்தார், வேதனைப்பட்டார். இது அவர்களுக்கிடையே நூலிழையில் தொங்கிக்கொண்டிருந்த உறவை அறவே துண்டித்துவிட்டது. "ஆண்டவரே! நான் ரேச்சேலை மன்னிக்க விரும்புகிறேன். மன்னிக்கிறேன்," என்று ஜெபித்தார். அவர் வௌரானி மக்களிடமிருந்து விடைபெற்றார். இரண்டு ஆண்டுகள் அவர்களோடு வாழ்ந்து, விடைபெறும்போது எவ்வளவு சோகம் இருக்கும் இல்லையா? ஆனால், உண்மையில், வௌரானியினரும் அவர் செல்வதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. தங்கள் நன்றியையோ, வணக்கத்தையோ எதையும் தெரிவிக்கவில்லை. அவரும், வலேரியும் தங்களுடைய சில பொருட்களை எடுத்துக்கொண்டு அவர்களை விட்டு நடந்து வெளியேறினார்கள். அவர்கள் அருகிலிருந்த க்விட்டோ ஆதிவாசிகளின் குடியிருப்புக்குச் சென்றார்கள். "இந்தப் பூமியில் அடுத்து நான் என்ன செய்யப்போகிறேன், என்ன செய்ய வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்," என்று எண்ணத் தொடங்கினார். அவர் தன் அம்மாவுக்குக் கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில், "தேவன் ஒரு மனிதனை நடத்தும் வழிகளுக்குத் திருப்திகரமான விளக்கம் இல்லாதபோதுதான், விசுவாசம் மிக உறுதியாகச் செயல்படவேண்டிய நேரம் என்று நான் காண்கிறேன்," என்று எழுதினார்.

இருவரும் அமெரிக்காவுக்குத் திரும்ப முடிவுசெய்தார்கள். ஈக்வடாரில் சந்தித்த, பெற்ற, அனுபவங்களின்மூலம் அவர் நிறையப் பாடங்களைக் கற்றுக்கொண்டார். "தேவனுக்குக் கீழ்ப்படியும்போது, அவர் நம்மை ஓர் இடத்தைநோக்கி, ஓர் இலக்கைநோக்கி அழைத்துச்செல்வார் என்றும், அந்த இடத்தை, இலக்கை, எட்டியவுடன், அங்கு வாழ்வும் வளமும் செழிக்கும்," என்ற எண்ணம் எலிசபெத்தின் மனதில் முன்பு இருந்தது. ஆனால், இப்போது அவர் வேறுவிதமாக நினைத்தார். "கீழ்ப்படியும் வாழ்க்கை என்பது ஒருபோதும் தரையிறங்கி தரித்திருக்கும் வாழ்க்கை இல்லை. தரையிறங்குவதற்கு வாய்ப்பே வராது. அது பயணித்துக்கொண்டேயிருக்கும் வாழ்க்கை. தேவன் நடத்துகிறார். நாம் போய்க்கொண்டேயிருக்கிறோம். அவர் வலதுபுறம் போகிறார், இடதுபுறம் போகிறார், நேரே போகிறார். பரலோகம் சேரும்வரை அவர் இப்படியே நடத்துகிறார். அவர் நம்மிடம், 'இதோ இதுதான் நீ போய்ச் சேரவேண்டிய அந்த இடம், அந்த இலக்கு,' என்று ஒருபோதும் கூறுவதில்லை, மாறாக, 'இதோ நான் உன்னோடு இருக்கிறேன், பயப்படாதே' என்று கூறுகிறார்," என்று அவர் தன் நாளேட்டில் எழுதுகிறார்.

ஈக்வடாரை விட்டு வெளியேறி அமெரிக்காவுக்குத் திரும்பத் தீர்மானித்தபின், எலிசபெத் தன் உள்ளத்தில் சமாதானத்தை உணர்ந்தார். தன் முடிவு சரி என்று உணர்ந்தார். அவர் எட்டு வருடங்கள் ஈக்வடாரில் இருந்தார். அவர் அங்கிருந்து புறப்படுவதற்கு முந்தைய நாள் இரவு அவர் தங்கியிருந்த வீட்டில் அவருக்குப் பிரியாவிடை கூறி வழியனுப்ப குவெச்சுவா ஆதிவாசிகள் அவருடைய வீட்டுக்கு வந்திருந்தார்கள். வீடு முழுவதும் மக்கள் நிரம்பிவழிந்தார்கள். அந்த ஆரவாரத்தினிடையில் அவர் ஒரு மூலைக்குச் சென்று கொஞ்ச நேரம் தனியாக இருந்தார். அப்போது அவர் தன் நாளேட்டில் ஏசாயாவின் புத்தகத்திலுள்ள, "கர்த்தராகிய நான் உன்னை அழைத்தேன், நான் உன்னுடன் இருப்பேன்" என்ற வார்த்தைகளை எழுதினார். அதன்பின், "ஆண்டவரே, நீர் உம் வார்த்தையைக் காப்பாற்றுகிறீர்," என்று சொன்னார்.

அவர் அமெரிக்காவுக்குத் திரும்பியதும், தன் மகளுடன் ஒரு புதிய வாழ்க்கையை ஆரம்பித்தார். ஈக்வடாரில் இருந்த காலத்தில் தனக்குள் எரிந்துகொண்டிருந்த பல காரியங்களைக்குறித்து அவர் புத்தகங்கள் எழுதினார். பேசவருமாறு பல இடங்களிலிருந்து அவரை அழைத்தார்கள். அந்த நேரத்தில், பெண்ணியத்தைப்பற்றிய ஓர் எழுச்சி ஏற்பட்டிருந்தது. அவர் பெண்ணியவாதிகளோடு அடிக்கடி விவாதித்தார். அந்தப் பிரச்சினையைப்பற்றி அவர் எழுதினார். அவர் முக்கியமாக பல்கலைக்கழக மாணவர்களிடம் பேசினார்.

தான் மீண்டும் திருமணம்செய்ய நேரிடும் என்று அவர் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. ஆனால், அடிசன் லீட்ச் என்ற ஒரு நல்ல நண்பரை அவர் மணந்தார். நல்ல, ஆத்ம நண்பன். திருமணத்திற்குப்பிறகு, அடிசனுக்கு மிகத் தீவிரமான புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. எலிசபெத் நல்ல தாதியாக இருந்து அடிசனைக் கவனித்தார். திருமணமாகி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அடிசன் காலமானார்.

எலிசபெத் மீண்டும் தனிமரமானார். இப்போது அவருக்கு வயது 50 இருக்கும். வாழ்க்கைப் பாதையில் பல பாடங்களைக் கற்றுக்கொண்டார். வாழ்க்கைப் பயணம் தொடர்ந்தது. அவர் தொடர்ந்து பேசினார், எழுதினார், கற்பித்தார். Gateway to Joy என்ற வானொலி நிகழ்ச்சியைத் தொடங்கினார். அது வழக்கமான ஒன்றாயிற்று.

அவருடைய கடைசிக் காலமும் அவருக்கு மிகவும் கடினமாக இருந்தது. இது அவர் முன்பு சந்தித்த பாடுகள்போன்றவை அல்ல. இந்தத் திறமையான பேச்சாளர், எழுத்தாளர், மொழியியலாளர், முதுமையில் ஏற்படும் மறதி நோயினால் பாதிக்கப்பட்டார். அவர் தன் மொழியை முழுவதுமாக இழந்தார். 2015 இல், தன் 88ஆவது வயதில், எலிசபெத் எலியட் காலமானார்.

உண்மையும் உத்தமுமான இந்தப் பரிசுத்தவதி நமக்கு விட்டுச்சென்றிருக்கும் மரபுரிமைப் பேற்றை, செல்வத்தை என்னவென்போம்! அவருடைய பல்வேறு அனுபவங்கள், அவர் கற்றுக்கொண்ட கடினமான பாடங்கள் அவர் நமக்கு விட்டுச் சென்றிருக்கும் சொத்துக்கள். அவைகளில் பலவற்றைப்பற்றி அவர் தன் 25 புத்தகங்களில் பல இடங்களில் எழுதியிருக்கிறார், வானொலி நிகழ்ச்சியில் நிறையச் சொல்லியிருக்கிறார். அவருடைய வானொலி நிகழ்ச்சிகள் இப்போது இணையத்தில் போட்காஸ்ட்ஆக இருக்கின்றன. கேட்கலாம். அவருடைய புத்தகங்களும், போட்காஸ்ட்களும் இன்றைக்கும் தொடர்ந்து மக்களை உற்சாகப்படுத்துகின்றன, கிளர்ந்தெழுப்புகின்றன. இப்போது வௌரானி ஆதிவாசிகளிடையே நிறைய விசுவாசிகள் இருக்கிறார்கள். இந்த ஆதிவாசிகள் முன்புஇருந்ததைப்போல ஒதுக்குப்புறமாக, தனித்து மறைவாக வாழ்வதில்லை. அதிகமாக மேற்கத்தியமயமாகிவிட்டார்கள். 1992இல் வொரானி மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட வேதாகமத்தின் ஒரு மொழிபெயர்ப்பு இருக்கிறது.

அவர் மிஷனரியாக ஊழியம் செய்த நாட்களில் அவர் தான் விரும்பிய, எதிர்பார்த்த பலனை அறுக்கவில்லை. மேலும், அவருடைய கணவர் ஜிம்மின் மரணத்தைக்குறித்து பலர் பலவிதமாகப் பேசினார்கள். "அந்த ஐந்துபேரும் ஆதிவாசிகளின் கலாசாரத்தைப் புரிந்துகொள்ளாமல் உணர்ச்சிவசப்பட்டு காட்டுக்குள் சென்ற வாலிபர்கள்," என்று சிலர் சொன்னார்கள். வேறு சிலர் அவர்களைத் தன்னலமற்றவர்களாக, நல்ல முன்மாதிரிகளாக, இரத்தசாட்சிகளாகப் பார்த்தார்கள். இன்னும் சிலர் அவையெல்லாம் வீண் என்று நினைத்தார்கள். அமெரிக்காவில் எலிசபெத் கூட்டங்களில் பேசியபோது, "அந்த ஐந்துபேரையும் இப்படிக் கொடூரமாகக் குத்திக் கொலைசெய்வதற்கு தேவன் ஏன் அனுமதித்தார்?" என்று பலர் அடிக்கடி அவரிடம் கேட்டார்கள். எலிசபெத்தைப் பொறுத்தவரை அது பொருத்தமற்ற, தேவையற்ற கேள்வி. ஏனென்றால், "தேவனிடம் ஏன் என்று கேட்காமல், என்னவென்றுதான் கேட்க வேண்டும்," என்ற பாடத்தை அவர் கற்றுக்கொண்டார். "ஆண்டவரே, நான் என்ன செய்ய வேண்டும் என்று நீர் விரும்புகிறீர் என்று எனக்குக் காண்பியும். உம் விருப்பத்தை ஏற்றுக்கொண்டு, நான் கீழ்ப்படிவேன். அதில் சமாதானம் உண்டு," என்பதே அந்தப் பாடம்.

அவருடைய நாட்குறிப்புகளையும், கடிதங்களையும் வாசிக்கும்போது அவர் தன் குறைகளையும், தோல்விகளையும், பலவீனங்களையும் நன்றாகவே அறிந்திருந்தார் என்று தெரிகிறது. அவர் தன் பொறுமையின்மையையும், கூர்மையான நாக்கையும், உணர்த்திறனின்மையையும், பிடிவாதத்தையும்பற்றி எழுதியிருக்கிறார். அவருடைய ஒரு மேற்கோளோடு முடிக்கப்போகிறேன். "தேவனுடைய இராஜ்யம் அமைதியாகவும், அந்தரங்கமாகவும், மெதுவாகவும் செயல்படுகின்ற புளித்தமாவுக்கும், சிறு விதைக்கும் ஒப்பானது. ஒன்றை வெறும் மண்ணிலும், காரிருளிலும்கூட மறுசாயலாக்குவதற்காக அவைகளில் ஒளிந்திருக்கும் ஆற்றல் அளவிடமுடியாதது. இயேசுவுக்குக் கீழ்ப்படிந்து, அடுத்த காரியத்தைச் செய்கிற ஒரு சகவிசுவாசியின் வாழ்க்கையில் பரிசுத்த ஆவியானவர் வேலை செய்வதை பார்க்கும்போது, நாம் மிகவும் உற்சாகமடைகிறோம்." ஆமென்.