Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More

வேத வாசிப்பு  

மத். 16:18; யோவான் 14:26; 16:13-14; அப். 1:4, 8; 2:33; ரோமர் 8:29; 12:3-8; 1 கொரி. 3:16-17; 6:19-20; 12:4-7, 12-14, 28-31; எபே. 1:13, 22-23; 2:19-22; 4:1-16, 30; 5:18, 25-27; கொலோ. 1:18; 2 தீமோ. 2:19-21; 1 பேதுரு 2:4-10; 5:1-6; வெளி. 1:3; 21:2

18-உண்மையான சபை - பிதாவின் குடும்பம்.pdf

உண்மையான சபை - பிதாவின் குடும்பம் - 18

சபை என்ற வார்த்தைக்குப் பல்வேறு விளக்கங்கள் கொடுக்கப்படுகின்றன. சில நேரங்களில் ஒரு கட்டிடத்தை சபை என்கிறார்கள்; வேறு சில நேரங்களில் ஒரு கூடுகையை சபை என்று சொல்கிறார்கள்; பல்வேறு விதமான நிறுவனங்களைச் சபைகள் என்றழைக்கிறார்கள். ஆயினும், இவைகளெல்லாம் இயேசு கிறிஸ்து தம் சொந்த இரத்தத்தினால் விலைக்கு வாங்கிய, வேதவாக்கியங்கள் விவரிக்கிற, சபையல்ல. உண்மையான சபை, முதன்முதலாக, பிதாவின் குடும்பம்.

தேவன் தம் குமாரனுடைய சாயலில் ஒரு குடும்பத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறார். இதைச் சாத்தியமாக்க ஆண்டவராகிய இயேசு இந்த உலகத்துக்கு வந்தார், வாழ்ந்தார், மரித்தார், உயிர்த்தார். அந்த வேலையை மகிமையோடு நிறைவாக்க இப்போது பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய பிள்ளைகளுக்குள் வந்திருக்கிறார்.

கர்த்தர் நம்மெல்லாரையும் சிதறிக்கிடக்கிற, தனித்தனி நபர்களாகப் பார்க்காமல், அவருடைய குடும்பத்தின் உறுப்பினர்களாகப் பார்க்கிறார். பிதாவோடு நிச்சயமாக நமக்குத் தனிப்பட்ட உறவு உண்டு; ஆனால், அவருடைய குடும்பத்தின் உறுப்பினர் என்ற முறையில்தான் நமக்கு அவரோடு இந்த உறவு உண்டு. ஒவ்வொரு விசுவாசியும் அவருடைய சபையின் ஒரு பகுதி, அவருடைய குடும்பத்தின் ஓர் உறுப்பினர். எனவே, அவர்கள் தேவனுடைய ஆலயத்தில் ஆசாரியர்களாக அவரைச் சேவிக்கிறார்கள்; ஒரு குமாரன் தன் தகப்பனின் வேலையைச் செய்வதுபோல், அவர்கள் தேவனுடைய வேலையைச் செய்கிறார்கள்.

தேவனோடும், பிறரோடும் நமக்கிருக்கும் இந்த உறவு தன்னை மையமாகக்கொண்ட தனித்துவத்தைத் தவிடுபொடியாக்கிவிடும். ஒருவருக்கொருவர் இல்லாமல் நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. நம்மை நாம் தனிமைப்படுத்திக்கொண்டால், ஆவிக்குரிய வகையில் நாம் வளரவோ அல்லது தாக்குப்பிடிக்கவோ முடியாது.

உண்மையான சபை மறுபடி பிறந்த விசுவாசிகளாலான குடும்பம். இது சபை என்று அழைக்கப்படுகிற மனிதர்களால் உருவாக்கப்பட்ட நிறுவனங்களுக்கு மாறானது. இந்தக் குடும்பத்தைப்பற்றிய முதல் காரியம் என்னவென்றால் அது ஓர் உயிருள்ள உயிரி. இது வெறுமனே சில நம்பிக்கைகளை ஒப்புக்கொள்கிற அல்லது ஆமோதிக்கிற, சில பயிற்சிகளைப் பின்பற்றுகிற மக்களாலான ஒரு நிறுவனம் இல்லை. கர்த்தருடைய ஜீவனைப் பெற்றிருப்பதால், ஆவிக்குரிய வகையில் உயிரோடிருக்கிற மக்களாலான சபையை மட்டுமே தேவன் அங்கீகரிக்கிறார். “நான் என் சபையைக் கட்டுவேன்,” என்று அவர் சொன்னார். அவர் “உயிருள்ள கற்களை” உருவாக்கி, அவைகளைக்கொண்டு இந்தச் சபையைக் கட்டுகிறார். மனிதர்கள் என்ன சொன்னாலும் சரி, என்ன நினைத்தாலும் சரி, தேவன் கட்டிக்கொண்டிருக்கும் இந்தச் சபையைத்தவிர வேறு சபை இல்லை.

ஓர் உயிருள்ள உயிரியைப்போல, சபைக்கு அதற்குரிய வடிவமும், கட்டமைப்பும் இருக்கிறது. எல்லா உயிர்களுக்கும் இந்த உண்மை பொருந்தும். சபையாகிய உயிரியும் அதன் உயிரின் வெளியாக்கமாக மட்டுமே இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, ஜெபம் சபையின் உயிர்மூச்சாக இருப்பதால், ஜெபிப்பதற்காக சபை கூடிவருகிறது. இது ஒரு கிறிஸ்தவன் என்றால் அவன் ஆராதனையில் கலந்துகொள்ள வேண்டும் என்ற கட்டாயத்தினாலோ, கடமையினாலோ, மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதினாலோ செய்யப்படுகிற காரியம் இல்லை. உண்மையான சபை தனக்குள் இருக்கும் உயிரை வெளிப்படுத்துவற்காகக் கூடுகிறது. புதிய ஏற்பாட்டில் சபையை விளக்குவதற்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கும் “அவருடைய சரீரம்…பரிசுத்த நகரம்…ஆவிக்குரிய வீடு அல்லது வீட்டார்” போன்ற பல்வேறு படங்கள், அவருடைய குடும்பமாகிய சபை அதன் ஜீவனையும், இயல்பையும், குணத்தையும் வெளியாக்கும்போது, சபையைப்பற்றிய தேவனுடைய எண்ணத்தைப் புரிந்துகொள்வதற்கு உதவியாக இருக்கின்றன.

ஒருநாள் கர்த்தர் தம் “கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையை”ப் பெறுவார். ஆனால், அந்த வேலை இப்போது நடந்துகொண்டிருக்கிறது. இது அவருடைய மாபெரும் வேலை, அவருடைய இருதயத்தின் ஆழமான ஆசை. இதற்கு, நாம் எந்த வகையிலாவது அவருடன் ஒத்துழைக்க முடியுமா என்று பார்க்க வேண்டும்.

முதலாவது, உண்மையாகவே மீண்டும்-பிறந்த எல்லா விசுவாசிகளையும் கிறிஸ்துவில் நம் சகோதர சகோதரிகளாக ஏற்றுக்கொண்டு, அவர்களைச் சேவிக்க வேண்டும். இவர்களே, இப்படிப்பட்டவர்களே, அவருடைய உண்மையான சபை. உண்மையாகவே கர்த்தருடையவர்களுக்கும், வெறுமனே “சபைக்குப் போகிற” அல்லது தேவனை விசுவாசிப்பதாகச் சொல்லுகிற அல்லது தாங்கள் கிறிஸ்தவர்கள் என்று நம்பிக்கொண்டிருக்கிற அல்லது தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கிற மக்களுக்குமிடையேயுள்ள தெளிவான வேறுபாட்டை நாம் இனங்காண வேண்டும்.

ஆனால், எந்தப் பெருமையும் இல்லாமல் நாம் இதைச் செய்ய வேண்டும். உண்மையான நிலைமையை நாம் நேருக்குநேர் சந்தித்தாக வேண்டும். தெளிவு வேண்டுமானால் இந்த வேறுபாட்டை அறிந்தாக வேண்டும். பாசாங்கு யாருக்கும் உதவாது. உண்மையாகவே பிதாவின் குடும்பத்தில் இருக்கிற தேவனுடைய மக்கள் எல்லோரோடும்-உள்ளூரில் இருக்கிறவர்களோடும், உலகம் முழுவதும் இருக்கிறவர்களோடும்- ஜெபத்திலும், முடிந்தவரையில் நடைமுறைக்குரிய வழிகளிலும், ஒன்றுபட்டு வாழுமாறு நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். தேவனுடைய மற்ற மக்களை ஒதுக்கித்தள்ளிவிட்டு, அவர்களோடு பழகாமல் ஒதுங்கியிருக்கிற ஒரு பிரத்தியேகமான குழுவாக வாழ்கிற குறுகிய மனப்பான்மையை நாம் ஒதுக்கித்தள்ள வேண்டும்.

முடிந்தவரை, எல்லா ஊர்களிலும் கர்த்தர் தம் சபையின் வெளியாக்கத்தைக் கட்டியெழுப்ப விரும்புகிறார். இன்று, தேவனுடைய மக்களுக்கிடையே இருக்கிற பரிதாபமான குழப்பத்தினால், “முடிந்தவரை” என்ற வார்த்தையை வருத்தத்தோடு சொல்லவேண்டியிருக்கிறது. இந்தக் குழப்பத்துக்குப் பல காரணங்கள் உள்ளன. இது பொய்யான கிறிஸ்தவம் அதிகமாகக் காணப்பட்ட பல நூற்றாண்டுகளின் விளைவு என்று சொல்லலாம். சபையைப்பற்றிய நம் கருத்துக்களைப் புதிய ஏற்பாட்டின் வெளிச்சத்தில் சீர்தூக்கிப்பார்க்க விரும்பாத நம் விருப்பமின்மை அல்லது நம் இயலாமை இன்னொரு காரணம். கர்த்தர் எதையாவது செய்ய விரும்பினால் அல்லது செய்யத் தொடங்கினால், உடனே நம் விழுந்துபோன சுபாவம் அதற்குப் பெரிய அச்சுறுத்தலாக மாறிவிடுவது இன்னொரு காரணம். கர்த்தர் செய்கிற எல்லாவற்றையும் இயற்கையான நம் ஞானமும், உலகப்பிரகாரமான நம் வழிகளும் கெடுத்துவிடுகின்றன.

எனினும், கர்த்தர் தம் வாஞ்சையையும், சித்தத்தையும் நிறைவேற்றுவதற்கு முனையும்போது, முடிந்தவரை நாம் அவரோடு ஒத்துழைக்க வேண்டும். அன்றைய இயற்கையான நிலைமைகளுக்கும், உலகப்பிரகாரமான வழிகளுக்கும் அடிபணியாத, ஒத்துப்போகாத தேவ மக்களின்மூலமாகத்தான் சபை வரலாற்றின் எல்லா நன்மைகளும் நம்மை வந்தடைந்திருக்கின்றன. ஆனால், இதைச் செய்யவேண்டுமானால், உண்மையான சபை வாழ்க்கையின் இன்றியமையாத கூறுகளை நாம் தெளிவாகப் பார்க்கவேண்டும்.

உண்மையான சபை வாழ்க்கையின் இன்றியமையாத கூறுகளின் ஒரு சுருக்கமான தொகுப்பைப் பாப்போம்;

  1. உண்மையான சபை மீண்டும் பிறந்த விசுவாசிகளால், “ஜீவனுள்ள கற்களால்” மட்டுமே ஆனது; வேறு எதைக்கொண்டும் கர்த்தர் சபையைக் கட்டுவதில்லை.

  2. சபை பிதாவின் குடும்பம்; அது ஒரு நிறுவனம் இல்லை. குடும்ப வாழ்கைக்குப் பொருந்தாதது, முரணானது நிச்சயமாக பொய். புதிய ஏற்பாட்டில் நாம் பார்க்கிற எளிமை வேறு; இன்றும் சரி, கடந்த காலத்திலும் சரி. தங்களைச் சபை என்று அழைத்துக்கொண்ட நிறுவனங்களில் பார்க்கிற சிக்கலான நிலைமை வேறு; இரண்டும் ஒன்றுக்கொன்று முரணானவை.

  3. கிறிஸ்துவே சபையின் தலை. எல்லாவற்றையும் ஆரம்பிப்பதற்கும், நிர்வகிப்பதற்கும் அவரால் முடியும் என்று நாம் அவரை நம்ப வேண்டும். உண்மையில், எல்லாவற்றையும் தீர்மானிப்பதும், நடத்துவதும் நாமாக இருக்க, பெயரளவில் கர்த்தரைத் தலையாக ஒப்புக்கொள்வது பயனற்றது. சபை கூடும்போதெல்லாம், ஆவியானவரால் அவருடைய தலைமைத்துவத்தை அங்கீகரிப்பதும், உணர்வதும் மிகவும் அவசியம். சபை அவரிலும், அவரின்கீழும் கூடுகிறது.

  4. ஜீவனுள்ள வார்த்தையாகிய கிறிஸ்துவுக்கு அவருக்குரிய இடம் கொடுக்கப்படுவதுபோல, தேவனுடைய எழுதப்பட்ட வார்த்தையாகிய வேதவாக்கியங்களுக்கும் அதற்குரிய இடம் கொடுக்கப்பட வேண்டும். சபை வாழ்க்கைக்கும், சபை கட்டப்படுவதற்கும் வேதவாக்கியங்களைப் போதிப்பதும், பிரசங்கிப்பதும் அவசியம்.

  5. புதிய ஏற்பாட்டில் மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ள சுயாதீனம், ஒழுங்கு ஆகிய இரண்டையும் சபையில் தொடர்ச்சியாக சமமாகப் பராமரிக்கவேண்டியது மிக முக்கியம். கர்த்தர் தம் ஜீவனை வெளியாக்குவதற்கு அவருக்குச் சுதந்திரம் இருக்க வேண்டும். ஆனால், அவருடைய ஜீவன் ஒழுங்கின்படியான ஜீவன்; மாம்சப்பிரகாரமான சுயவெளியாக்கத்துக்கு அங்கு இடம் இல்லை. இந்தப் பிரச்சினையைக்குறித்து பவுல் கொரிந்தியர்களுக்கு எழுதவேண்டியிருந்தது. “நேர்த்தியாகப் பராமரிக்கப்படும் கல்லறைத்தோட்டமாகவும்” இருக்கக்கூடாது, “கூச்சலும் குழப்பமுமான கூட்டமாகவும்” இருக்கக்கூடாது.

  6. சபை ஒரு குடும்பம் என்பதால், அந்தக் குடும்பத்திலுள்ள எல்லா உறுப்பினர்களுக்கும் அவரவர் பொறுப்பு உண்டு, அவரவர் நிறைவேற்றவேண்டிய பங்கு உண்டு, குடும்பத்திலுள்ள அனைவரின் நலனுக்காகப் பயன்படுத்துவதற்காகக் கர்த்தரிடமிருந்து பெற்ற கொடைகள் உண்டு. எல்லா உறுப்பினர்களும் ஒருவரையொருவர் சார்ந்துவாழ்வதை தொடர்ந்து உறுதிப்படுத்த வேண்டும். ஒரு சிலர் மட்டுமே எல்லாவற்றையும் செய்வது மிக எளிது.

  7. தேவனுடைய திட்டத்தில், தேவனுடைய குடும்பத்தை மேய்த்துப்பேணுதல், போதித்தல், முன்னடத்துதல்போன்ற பல சிறப்பான பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காக வரம்பெற்றவர்கள், அழைக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அந்தந்த ஊர்களில் இருக்கிற குடும்பத்தின் உறுப்பினர்களே; இவர்கள் எந்த வகையிலும் மற்ற உறுப்பினர்களைவிட உயர்ந்தவர்கள் இல்லை. ஆனால், தலையாகிய கிறிஸ்துவின்கீழ் இவர்களுக்குச் சிறப்பான பொறுப்புகள் உண்டு. தேவனுடைய குடும்பம் வளரவேண்டுமானால், இதை அங்கீகரித்தாக வேண்டும்.

மேற்சொன்ன காரியங்கள், இந்தப் பூமியில் கர்த்தருடைய சபையின் உள்ளூர் வெளியாக்கத்தைப்பற்றிய அவருடைய சித்தம் என்னவென்பதைச் சுட்டிக்காட்டுகிற குறைந்தபட்ச “கைகாட்டிகள்”போல் உள்ளன. கர்த்தருடைய பிரசன்னம் நம் மத்தியில் இருக்கிறது என்ற ஆவிக்குரிய உணர்வே உண்மையான சபை வாழ்க்கையின் இருதயம் என்றும், அவருடைய பிரசன்னம் இல்லையென்றால் நாம் கூடுவது வீண் என்றும் சொல்லத் தேவையில்லை.

“ஆகிலும் தேவனுடைய உறுதியான அஸ்திபாரம் நிலைத்திருக்கிறது; கர்த்தர் தம்முடையவர்களை அறிவாரென்பதும், கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லுகிற எவனும் அநியாயத்தைவிட்டு விலகக்கடவனென்பதும், அதற்கு முத்திரையாயிருக்கிறது. ஒரு பெரிய வீட்டிலே பொன்னும் வெள்ளியுமான பாத்திரங்களுமல்லாமல், மரமும் மண்ணுமான பாத்திரங்களுமுண்டு; அவைகளில் சில கனத்திற்கும் சில கனவீனத்திற்குமானவைகள். ஆகையால் ஒருவன் இவைகளைவிட்டு, தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும், எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான்”. 

வேத வாசிப்பு  

மத். 16:18; யோவான் 14:26; 16:13-14; அப். 1:4, 8; 2:33; ரோமர் 8:29; 12:3-8; 1 கொரி. 3:16-17; 6:19-20; 12:4-7, 12-14, 28-31; எபே. 1:13, 22-23; 2:19-22; 4:1-16, 30; 5:18, 25-27; கொலோ. 1:18; 2 தீமோ. 2:19-21; 1 பேதுரு 2:4-10; 5:1-6; வெளி. 1:3; 21:2