Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More

கிறிஸ்துவை ஆதாயம்பண்ணுதல்

Transcribed from a message spoken in October 2016 in Chennai

By Milton Rajendram

பொதுவாக தேவனுடைய மக்கள் ஒருவரையொருவர் சந்திக்கும்போது, “நீங்கள் எந்த சபையைச் சேர்ந்தவர்கள்? உங்களுடைய உபதேசம் என்ன?” என்ற கேள்விகள் எழும்புவது மிகவும் இயல்பு. எனவே, ஒரு வரலாற்றுப் பின்னணியும், ஒரு வரலாற்றுத் தொடர்பும் கொடுக்கவேண்டியது அவசியமாயிருக்கிறது. இந்த நாட்டிலே மிக நெருங்கிய வரலாற்றுப் பின்னணி சகோதரர்பக்த்சிங். தேவனுடைய மக்களுடைய வாழ்க்கைதான் மிக வலுவான, மிக ஆற்றல்வாய்ந்த, நற்செய்தி என்பது அந்தச் சகோதரனுடைய ஒரு மாபெரும் வெளிப்பாடு.

தேவனுடைய மக்கள் இன்றைக்கு அற்புத அடையாளங்களை மிக அதிகமாக நம்புகிறார்கள். நாம் அற்புத அடையாளங்களுக்கு எதிராளிகள் அல்ல. அற்புத அடையாளங்கள் நடந்துவிட்டால் புறவினத்தார், இயேசுவை அறியாதவர்கள், இயேசுவை ஏற்றுக்கொள்வார்கள் என்பது அவர்களுடைய எண்ணம். ஆனால், பெரும்பாலும் அது நடைபெறுவது இல்லை.

உண்மையாகவே, என்னுடைய புரிந்துகொள்ளுதலின்படி, நம்முடைய கண்களுக்குமுன்பாக ஒரு மனிதன் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் அடிச்சுவடிலே வாழும்போது அப்படிப்பட்ட மனிதர்களால் ஈர்க்கப்படுகிறோம், வசீகரிக்கப்படுகிறோம், கவரப்படுகிறோம், ஆண்டவராகிய இயேசுவை நாம் இரட்சகராக ஏற்றுக்கொள்கிறோம். என்னுடைய அனுபவம் அது. பலருடைய அனுபவம் அதுவாக இருக்கும்.

பிரான்சிஸ் அசிசி என்பவர் “We should always preach the gospel and if necessary, with words,” என்று சொன்னார். நாம் 24 மணி நேரமும், 7 நாட்களும், எப்பொழுதுமே நற்செய்தி அறிவிக்கிறவர்களாக இருக்க வேண்டும். நம்முடைய வீட்டிலே, நம்முடைய போக்குவரத்திலே, படிக்கிற இடத்திலே, வேலை பார்க்கிற இடத்திலே, என்று எப்போதும் நாம் நற்செய்தியை, தேவைப்பட்டால் வார்த்தைகளைக் கொண்டு, அறிவிக்க வேண்டும். Always preach the gospel, if necessary with words. இதற்கு அர்த்தம் நற்செய்தியை வார்த்தைகளைக்கொண்டு அறிவிக்க வேண்டிய அவசியமில்லை என்று நான் சொல்வதாக நினைத்துக்கொள்ள வேண்டாம். வார்த்தைகளைக்கொண்டு அறிவிக்க வேண்டும். வார்த்தைகளை விட நம்முடைய வாழ்க்கை, நம்முடைய குணம், அதிக வலிமையும், அதிக ஆற்றலும் வாய்ந்தது.

இன்றைக்கு நாம் வாழ்கின்;;;ற இந்த நாட்டிலே பலர் இயேசுகிறிஸ்துவிடம் வசீகரிக்கப்படவில்லை, ஈர்க்கப்படவில்லை என்றால் உடனே நாம், “இந்த நாட்டிலே இந்துத்துவவாதிகள் பெருகிவிட்டார்கள்,” என்று சொல்ல வேண்டாம். தேவனுடைய மக்களுடைய நிலை, அவர்களுடைய குணம், அவர்க ளுடைய உள்ளமைப்பு, அவர்கள் வாழ்கின்ற வழிகள் போன்றவைகள் மிகவும் பலவீனமாக இருக்கின்றன. இந்த 20 நூற்றாண்டுகளிலே நாம் வாழ்கின்ற சூழ்நிலையைவிட மிகக் கடுமையான சூழ்நிலைகளிலே தேவனுடைய மக்கள் வாழ்ந்திருக்கின்றார்கள். முதல் மூன்று நூற்றாண்டுகளிலே தேவனுடைய மக்கள் வாழ்ந்ததைவிட நாம் கடுமையான சூழ்நிலையிலே வாழ்ந்துவிடவில்லை. முதல் மூன்று நூற் றாண்டுகளிலே நற்செய்தி பரவினதுபோல, பல்வேறுபட்ட மக்கள் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து வினிடத்தில் ஈர்க்கப்பட்டதுபோல, இந்த நாட்களிலே பல்வேறு விதமான மக்கள் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவினிடத்திலே ஈர்க்கப்படவில்லை. எனவே, தேவனுடைய மக்களாகிய நாம் நம்மைத் தாழ்த்தி, மனந்திரும்பி, நம்முடைய நிலையைச் சற்று நிதானிக்க வேண்டும்.

நம்மில் ஒருவர்கூட நற்செய்தி அறிவிப்பதற்குத் திராணியற்றவா;கள் அல்ல. ஒவ்வொருவரும் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்க முடியும். அதற்கு மிகச் சிறப்பான திறமைகள் வேண்டும் என்று யாரும் சொல்ல முடியாது. ஐந்து வருடம், பத்து வருடம் பயிற்சி பெற்றபிறகுதான் நாம் ஆண்டவராகிய இயேசுவின் நற்செய்தியைச் சொல்ல முடியும் என்று சொல்லவே முடியாது. நான் ஆண்டவராகிய இயேசுவை ஏற்றுக்கொண்டு நற்செய்தி என்றால் என்னவென்று தெரிந்துகொள்வதற்கு முன்பு பலருக்கு நற்செய்தியை அறிவித்திருக்கிறேன். அவர்கள் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மனந்திரும்பி இயேசுவை ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கைகூட இல்லாமல் நான் சொல்லியிருக்கிறேன். அவர்கள் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

ஆகவே, தேவனுடைய மக்களாகிய நாம் வாழ்கின்ற காலத்திலே எப்படிப்பட்ட கிறிஸ்துவை வழங்குகிறோம் என்பதைக்குறித்து நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நமக்குள் இருக்கிற கிறிஸ்துவின் அளவு போதுமானதாக இருக்குமென்றால் நாம் மற்றவர்களுக்கு இந்தக் கிறிஸ்துவை வழங்க முடியும். நமக்குள் இருக்கிற கிறிஸ்துவின் அளவு குறைவாக இருக்குமென்றால் நாம் மற்றவர்களுக்குக் கிறிஸ்துவை வழங்க முடியாது. 2 கொரிந்தியரிலே அப்போஸ்தலனாகிய பவுல் “எங்களைக்கொண்டு கிறிஸ்துவின் நறுமணத்தை எல்லா இடங்களிலேயும் பரப்புகிற எங்கள் தேவனாகிய கா;த்தருக்கு ஸ்தோத்திரம்,” என்று சொல்லுகிறார். “எங்களைக்கொண்டு கிறிஸ்துவை அறிகிற அறிவை, நறுமணத்தை, நர்க்கந்தத்தைப் பரப்புகிற எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்,” என்று சொல் கிறார். நாம் எந்த நிலையில் இருந்தாலும் சரி Some sweet smell, aroma of Christ should be coming out of our life.

இந்த உலகத்து மக்கள் தங்களுடைய வாழ்க்கையிலே ஒரு நிறைவிற்காகவும், ஒரு திருப்திக்காகவும், ஒரு ஓய்வுக்காகவும், ஒரு இளைப்பாறுதலுக்காகவும் ஓடித்திரிகிறார்கள். ஐந்து நாள், ஆறு நாள் வேலை செய்கிறார்கள். வாரத்தின் முடிவிலே weekend party போகிறார்கள். Corporates என்று சொல்லக்கூடியவர்கள் தங்கள் பணியாட்களை பாண்டிச்சேரிக்கும், பெங்களூருக்கும், கொடைக்கானலுக்கும் கூட்டிக்கொண்டுபோகிறார்கள். உலகத்து மக்கள் அதை நாடித் தேடுகிறார்கள். ஒரு relaxation, sense of fulfillment, sense of rest, sense of refreshment வேண்டுமென்று திரிகிறார்கள். ஆனால், அவர்கள் அதைப் பெற்றதுபோல் எனக்குத் தோன்றவில்லை.

இந்த உலகம் கண்ட ஞானிகளிலே தலைசிறந்த ஞானியாகிய சாலொமோன், “காண்கிறதினால் கண் திருப்தியாகிறதில்லை. கேட்கிறதினால் செவி நிரப்பப்படுகிறதுமில்லை,” (பிர. 1:8) என்று சொல்கிறார். தேவனுடைய மக்கள் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவில் எப்படிப்பட்ட திருப்தியைக் காண்கிறார்களோ அந்த அளவுக்குத்தான் மற்றவர்கள் இயேசுகிறிஸ்துவினிடத்தில் ஈர்க்கப்படுவார்கள். இயேசு கிறிஸ்து என்னுடைய வாழ்க்கையிலே திருப்தியாக, நிறைவாக, மாறவில்லையென்றால் மற்றவர்களுக்கு அவர் திருப்தியாக, நிறைவாக, மாறுவதில்லை.

கிறிஸ்துவை ஆதாயம்பண்ணுவது

ஆகவே, ஒரு காரியத்தை நான் வலியுறுத்த விரும்புகிறேன். தேவனுடைய மக்களுக்காக அவருடைய குறிக்கோள் நாம் கிறிஸ்துவை எந்த அளவிற்குச் சுதந்தரிக்க முடியுமோ, எந்த அளவிற்கு ஆதாயம்பண்ண முடியுமோ, அந்த அளவிற்குச் சுதந்தரிக்க வேண்டும், அந்த அளவிற்கு ஆதாயம்பண்ண வேண்டும்.We have to inherit Christ, gain Christ as much as possible in this life. What is the purpose of your life அல்லது உங்கள் வாழ்க்கைக்காகத் தேவனுடைய நோக்கம் என்ன என்று கேட்கலாம். நான் கண்டறிந்தவரை இந்த முழு வேதாகமத்தின் அடிப்படையிலே, வெளிச்சத்திலே, தேவனுடைய மக்களுக்காக தேவனுடைய நோக்கம் அவர்கள் கிறிஸ்துவைச் சுதந்தரித்துக்கொள்ள வேண்டும்; கிறிஸ்துவை ஆதாயம்பண்ணிக்கொள்ள வேண்டும்; அவர்களுக்குள் கிறிஸ்துவின் அளவு பெருக வேண்டும்; அவர்கள்மூலமாக கிறிஸ்து வெளிப்பட வேண்டும் என்பது தேவனுடைய நோக்கமாக இருக்கிறது.

தேவன் எபிரேயர்களை எகிப்திலிருந்து விடுவித்துக்கொண்டு வரும்போது அவர்கள் வாழ்க்கைக்காக அவருடைய இலக்கு என்ன, நோக்கம் என்ன, என்று சொல்கிறார். “நான் உங்களை எகிப்தின் சிறுமையிலிருந்து நீக்கி, பாலும் தேனும் ஓடுகிற தேசமாகிய…தேசத்துக்குக் கொண்டுபோவேன்,” (யாத். 3:17) என்று வாக்குறுதி அளிக்கிறார். தேவன் தம்முடைய மக்களை எகிப்திலிருந்து விடுவித்துக்கொண்டு வந்தபோது எகிப்திலே அவர் கள் துன்புறுகிறார்கள். எனவே எகிப்திலிருந்து அவர்கள் வெளிவந்தால் போதும் என்பதல்ல அவருடைய இலக்கு. Devern F.Fromke தன்னுடைய Ultimate Intention என்ற புத்தகத்தில் It is not enough to come out of Egypt, out of Egypt into Canaan என்று கூறுகிறார். எகிப்திலிருந்து கானானுக்குள். தேவனுடைய இலக்கு, தேவனுடைய நோக்கம், வெறுமனே எகிப்திலிருந்து வெளிவருவது மட்டுமல்ல. நல்ல தேசத்திற்குள் நுழைவது. இது வேதத்தின் முதல் நான்கு புத்தகங்களிலும் யோசுவாவிலும், காணப்படுகிறது. தேவனுடைய மக்கள் தேவன் வாக்குறுதி அளித்த பாலும் தேனும் ஓடுகிற நல்ல தேசமாகிய கானானை எப்படிச் சுதந்தரித்துக்கொள்கிறார்கள் என்பது ஏறக்குறைய யாத்திராகமம் தொடங்கி யோசுவாவின் புத்தகம் முடிய அந்த நான்கு புத்தகங்களின் சாராம்சமாக இருக்கிறது.

கானான் இயேசுவுக்கு முன்னடையாளம்

பாலும் தேனும் ஓடுகிற நல்ல தேசமாகிய கானான் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவுக்கு ஒரு முன்னடையாளம். நீங்கள் முழு வேதாகமத்தையும் வாசிக்கும்போது அல்லது புதிய ஏற்பாட்டிலே எபிரெயருக்கு எழுதின கடிதத்தை வாசிக்கும்போது, குறிப்பாக 3, 4ஆம் அதிகாரங்களிலே அது எழுதப்பட்டிருக்கிறது. யோசுவா அவர்களை இளைப்பாறுதலுக்குள் அல்லது ஓய்வுக்குள் நடத்த முடியவில்லை. அவர்கள் தேவன் வாக்குறுதி அளித்த அந்த ஓய்வுக்குள் நுழையவில்லை. அவர்கள் அவிசுவாசத்தினால் நுழையாமல் போனார்கள். ஆனால், விசுவாசிக்கிறவகளாகிய நாமோ அப்படிப்பட்ட இளைப்பாறுதலுக்குள், ஓய்வுக்குள், நுழைகிறோம். நான் புரிந்துகொண்டவரை, எங்கு நாம் உண்மையாகவே மனநிறைவாகவும், திருப்தியாகவும் இருக்கிறோமோ அதைத்தான் ஓய்வு என்று சொல்ல முடியும். “என்னுடைய வாழ்க்கையிலே எந்தக் குறைவும் இல்லை; நான் மிகவும் நிறைவாக, மிகவும் திருப்தியாக இருக்கின்றேன். எனக்கு இனிமேல் ஒன்றுமே தேவையில்லை,” என்கிற நிலைமையைத்தான் நாம் ஓய்வு என்று சொல்ல முடியும். ஒரு காரியத்தைச் செய்தபிறகு நாம் களைப்படைந்து, “இனிமேல் நாம் கொஞ்சம் இளைப்பாற வேண்டும்,” என்று நினைத்தால் அந்தக் காரியம் உண்மையாகவே நமக்கு இளைப்பாறுதலை அல்லது ஓய்வைத் தரவில்லை என்று பொருள்.

தேவன் மனிர்களுக்குத் தேவையான உண்மையான ஓய்வை, இளைப்பாறுதலை, நிறைவை, திருப்தியை ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவில் வைத்திருக்கிறார். “நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்,” என்று அவர் சொன்னதின் பொருள் “இந்த உலகத்திலே உங்களுக்கு நிறைய போராட்டங்கள் உண்டு. அந்தப் போராட்டங்களிலிருந்தெல்லாம் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்,” என்பது மட்டுமல்ல. The ultimate fulfillment and satisfaction is only in Christ.

இலக்கு - கிறிஸ்துவை அறிவதும், ஆதாயம்பண்ணுவதும், சுதந்தரிப்பதும்

“அவருக்குச் சொந்தமானவர்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக மீட்கப்படுவார்கள் என்பதற்கு ஆவியானவர் நம்முடைய சுதந்தரத்தின் அச்சாரமாயிருக்கிறார்” (எபே. 1:14) என்று அப்போஸ்தலனாகிய பவுல் சொல்கிறார். ஒரு நாளிலே நாம் ஒன்றைச் சுதந்தரித்துக்கொள்வோம். சுதந்தரித்துக் கொள்வதென்றால் ஆதாயம்பண்ணிக்கொள்வதாகும்.

(குப்பையை யாரும் சுதந்தரம் என்று சொல்லமாட்டோம். ஒரு பெரிய சொத்தை அல்லது ஒரு பெரிய வீட்டைத்தான் நாம் சுதந்தரம் என்று சொல்வோம். நம் பெற்றோர் நமக்கு ஒரு பேனாவும் பென்சிலும் தந்தால் அதை நாம் பெரிய சுதந்தரம் என்று சொல்ல மாட்டோம். ஆனால், என் வாழ்க்கை முழுவதும் நான் சம்பாதித்தும் அதைப் பெற முடியாது. அதைக் கொடுத்துவிட்டார்கள் என்றால் அதற்குப் பெயர்தான் சுதந்தரம், inheritance).

ஒரு நாளிலே நாம் எதைச் சுதந்தரிப்பதற்காக அழைக்கப்பட்டிருக்கிறோமோ அதை உண்மையாகவே முற்றுமுடிய சுதந்தரித்துக்கொள்வோம் என்று நான் நம்பியிருக்கிறேன். அந்த நம்பிக்கைக்கு நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற பரிசுத்த ஆவியானவர் அத்தாட்சியாக அல்லது அச்சாரமாக இருக்கிறார். அச்சாரம் என்றால் token payment. இயேசுகிறிஸ்துவைச் சுதந்தரிப்பதற்காகவும், ஆதாயம்பண்ணுவதற்காகவும் தேவன் நம்மை அழைத்திருக்கிறார். ஒரு நாளிலே இந்த அழைப்பு நம்முடைய வாழ்க்கையிலே நிறைவேறும் என்பதற்கு என்ன அத்தாட்சி? Guarantee is the Holy Spirit who has been given to us.

பிலிப்பியர் 3ஆம் அதிகாரத்திலே பவுல் தன்னுடைய வாழ்க்கையின் இலக்கு என்னவென்று சொல்கிறார். “நான் இலக்கை நோக்கி ஆசையாய்த் தொடருகிறேன்,” (பிலி. 3:12) என்கிற வாக்கியம் அதில் வருகிறது. என்னுடைய வாழ்க்கையின் இலக்கு, என்னுடைய வாழ்க்கையின் நோக்கம், என்னவென்றால் தேவன் என்னை ஒரு பரம அழைப்போடு அழைத்திருக்கிறார்; அந்த அழைப்பை நான் நிறைவேற்றும்போது அவர் எனக்கு ஒரு பரிசைத் தருவார்; எனக்கு வெகுமதி தருவார். எப்படியாவது அந்தப் பரிசை, அந்த வெகுமதியை, பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் என்னுடைய வாழ்க்கையின் இலக்கு. அதே பிலிப்பியர் 3ஆம் அதிகாரத்திலே அந்த இலக்கைப்பற்றி அவர் சொல்லும்போது, “கிறிஸ்துவை ஆதாயம்பண்ணுவது அந்த இலக்கு அல்லது கிறிஸ்துவை அறிவது அந்த இலக்கு,” என்று சொல்கிறார். “நான் என்னுடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக என்னுடைய வாழ்க்கையிலே இலாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளையெல்லாம் நட்டமாக விட்டேன், குப்பையுமாக எண்ணுகிறேன். எதற்காகவென்றால் கிறிஸ்துவை ஆதாயம்பண்ணிக்கொள்ளும்படிக்கு, to gain Christ. கிறிஸ்துவை அறிவதற்கு,” (பிலி. 3:8, 10) என்று சொல்கிறார்.

நான் இதுவரை சொன்னதின் சுருக்கம். தேவன் தம்முடைய மக்களுக்காக வைத்திருக்கிற நோக்கம் அல்லது இலக்கு நாம் கிறிஸ்துவை அறிய வேண்டும், கிறிஸ்துவை ஆதாயம்பண்ணிக்கொள்ள வேண்டும், கிறிஸ்துவைச் சுதந்தரித்துக்கொள்ள வேண்டும். 

கிறிஸ்துவை அறிவது, ஆதாயம்பண்ணுவது, சுதந்தரிப்பது – பொருள்

இந்த வாக்கியத்திற்குக் கொஞ்சம் விளக்கம் தேவைப்படுகிறது. கிறிஸ்துவை அறிவது, கிறிஸ்துவை ஆதாயம்பண்ணுவது, கிறிஸ்துவைச் சுதந்தரித்துக்கொள்வதென்றால் நடைமுறை வாழ்க்கையிலே அதன் அர்த்தம் என்னவென்று சொல்ல வேண்டும். ஒரு நாளிலே நம்முடைய குணம் கிறிஸ்துவின் குணத்தைப்போல மாறுவது அல்லது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவினிடத்தில் என்ன காணப்பட்டதோ அது தேவனுடைய மக்களிடத்திலும் காணப்படும்போது நாம் கிறிஸ்துவை உண்மையாகவே அறிந்திருக்கிறோம், ஆதாயம்பண்ணியிருக்கிறோம், சுதந்தரித்திருக்கிறோம் என்று பொருள். கிறிஸ்துவினிடத்தில் என்ன காணப்பட்டதோ அல்லது கிறிஸ்து எப்படிப்பட்டவராக இருந்தாரோ அது நம்மிடத் தில் காணப்படும். அதிலே கிறிஸ்துவின் குணம் உண்டு, கிறிஸ்துவின் ஜீவன் உண்டு, கிறிஸ்துவின் வல்லமை உண்டு. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து இந்தப் பூமியிலே எப்படிப்பட்டவராய் வாழ்ந்தாரோ அதேவண்ணமாய் நாமும் இந்தப் பூமியிலே வாழ்வோம். இந்த மனித வாழ்க்கையிலே நாம் எந்த அளவுக்கு மற்றவர்களுக்குக் கிறிஸ்துவை வழங்குகிறோமோ, கிறிஸ்துவைப் பகிர்ந்தளிக்கிறோமோ, கிறிஸ்துவைப் பரிமாறுகிறோமோ அந்த அளவிற்குத்தான் நம்முடைய வாழ்க்கையிலே நாம் மகிழ்ச்சியும், கனியும், சமாதானமும் உடையவர்களாக இருப்போம். எந்த அளவிற்கு நாம் கிறிஸ்துவில் திருப்தியடைந்திருக்கிறோமோ, எந்த அளவிற்கு நாம் பிறருக்குக் கிறிஸ்துவை வழங்குகிறோமோ, பகிர்ந்தளிக்கிறோமோ, பரிமாறுகிறோமோ அந்த அளவிற்குத்தான் நம்முடைய வாழ்க்கையிலே மகிழ்ச்சியும், கனியும், சமாதானமும், ஓய்வும் காணப்படும்.

ஆகவே, கிறிஸ்துவைச் சுதந்தரிப்பது, கிறிஸ்துவை ஆதாயம்பண்ணிக்கொள்வது, கிறிஸ்துவை அறிவதென்றால் இதுதான். நாம் கிறிஸ்துவை அறிகிறோம் அல்லது கிறிஸ்துவை ஆதாயம்பண்ணுகிறோமென்றால் உண்மையிலேயே நம்முடைய வாழ்க்கையிலே திருப்தி காணப்படும். கிறிஸ்துவை அறிகிறோம், கிறிஸ்துவை ஆதாயம்பண்ணுகிறோம் என்பது தேவையிலிருக்கிற மற்றவர்களுக்குக் கொடுப்பதற்கு நம்மிடத்தில் கிறிஸ்து இருப்பார். இன்றைக்கு மற்றவர்கள் தேவையில் இருக்கிறார்கள். ஆனால் மற்றவர்களுக்குக் கொடுப்பதற்கு நம்மிடத்தில் கிறிஸ்து இல்லையென்றால் அது பரிதாபம். நம்முடைய நண்பர்கள், நம்மோடு உடன் வேலைபார்க்கிறவர்கள், உடன் படிக்கிறவர்களுடைய வாழ்க்கைக்குள்ளே நம்மால் கிறிஸ்துவைக் கொண்டுவர முடியவில்லை. நாம் தடுமாறுகிறோம். இந்தச் சூழ்நிலையை நாம் சரிசெய்ய வேண்டும். எப்படிச் சரிசெய்வது? ஏதோவொன்று இன்றைக்குத் தேவனுடைய மக்களுடைய வாழ்க்கையிலே குறைவுபடுகிறது. அவர்கள் கிறிஸ்துவை அறியவில்லை அல்லது கிறிஸ்துவை ஆதாயம்பண்ணவில்லை. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய வாழ்க்கையிலே கிறிஸ்துவினுடைய அளவு பெருகவில்லை. எபேசியர் 3, 4ஆம் அதிகாரங்களிலே கிறிஸ்துவின் பூரண வளர்த்தியின் அளவு என்ற வாக்கியம் உண்டு. கிறிஸ்துவின் நிறைவான வளர்த்தியின் அளவு** என்று ஒன்று உண்டு.

கிறிஸ்துவின் நிறைவான வளர்த்தியின் அளவு

எகிப்திலும் எபிரெய மக்கள் கிறிஸ்துவை அனுபவித்தார்கள். அவர்கள் பஸ்கா ஆட்டுக்குட்டியைப் பலியிட்டபோது அது அவர்கள் கிறிஸ்துவை அனுபவிப்பதற்கு ஒரு அடையாளமாக இருக்கிறது. வனாந்தரத்திலும் அவர்கள் கிறிஸ்துவை அனுபவித்தார்கள். அவர்கள் மன்னாவினால் வாழ்ந்தது, கற்பாறையிலிருந்து தண்ணீரைக் குடித்தது, பகலிலே மேகஸ்தம்பத்திலும், இரவிலே அக்கினி ஸ்தம்பத்திலும் நடந்தது, வஸ்திரங்கள் பழையதாகவில்லை, அவர்கள் பாதரட்சைகள் தேய்ந்துபோகவில்லை. இவைகளெல்லாம் அவர்கள் கிறிஸ்துவை அனுபவித்ததற்கு அடையாளமாக இருக்கிறது. அங்கேயும்;; அவர்கள் கிறிஸ்துவை அனுபவித்தார்கள். கடைசியாக அவர்கள் பாலும் தேனும ஓடுகிற கானானிலும் கிறிஸ்துவை அனுபவித்தார்கள். அவர்கள் அனுபவித்த அந்த கிறிஸ்துவினுடைய அளவு வேறுபட்டது. எகிப்திலே அவர்கள் அனுபவித்த கிறிஸ்துவின் அளவு வேறு. வனாந்தரத்திலே அவர்கள் அனுபவத்த கிறிஸ்துவின் அளவு வேறு. நல்ல தேசத்திலே அவர்கள் அனுபவித்த கிறிஸ்துவின் அளவு வேறு.

தேவனுடைய ஒரே நோக்கம் அவர்கள் கிறிஸ்துவின் நிறைவான வளர்ச்சியின் அளவை எட்டுவது. ஆனால், அப்படிப்பட்ட நிறைவான வளர்ச்சி தேவனுடைய மக்களிடத்திலே காணப்படவில்லை.

கிறிஸ்தவர்கள், விசுவாசிகள், பரிசுத்தவான்கள் என்ற வார்த்தைகளுக்குப்பதிலாக நான் தேவனுடைய மக்கள், God’s consecrated people, என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறேன். பரிசுத்தவான்கள் என்று சொன்னால் முதல் நூற்றாண்டிலே, இரண்டாம் நூற்றாண்டிலே வாழ்ந்த பரிசுத்தவான்கள் என்று நினைத்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் தேவனுடைய மக்கள் என்று சொல்கிறேன்.

1. சிலுவையே வழி

கிறிஸ்துவை நாம் அறிவதற்கும், ஆதாயம்பண்ணுவதற்கும், சுதந்தரிப்பதற்கும், அவருடைய அளவு நம்மில் பெருகுவதற்கும் வழி என்ன? ஏன் இன்று தேவனுடைய மக்களுடைய மத்தியிலே கிறிஸ்துவின் அளவு மிகக் குறைவாகக் காணப்படுகிறது? “இவர்களிடத்தில் ஏதோ ஒரு ஈர்ப்புச் சக்தி, ஏதோ ஒரு காந்த சக்தி, ஏதோ ஒரு நறுமணம் இருக்கிறது!” என்று நம்மைச் சுற்றியுள்ள மக்களால் ஏன் சாட்சி பகர முடியவில்லை? “இதோ நம்மிடத்தில் எப்போதும் வந்துபோகிற தேவனுடைய மனுஷனாகிய இவர் பரிசுத்தவான்,” என்று எலிசாவைப்பற்றி சூனேமியாள் சொன்னதுபோல, எந்தத் துண்டுப் பிரசுரமும் கொடுக்காமல், எந்தச் செய்தியும் கொடுக்காமல், எந்தப் பாட்டும் பாடாமல், எந்தத் துதி ஆராதனையும் செய்யாமல் “நம்மிடையே வாழ்கின்ற இந்த மனிதன் தேவனுடைய மனிதன் என்று காண்கிறேன்; நம்மிடையே வந்து போகிற இந்த மனிதன் தேவனுடைய மனிதன், இவர்கள் தேவனுடைய பிள்ளைகள், தேவனுடைய மக்கள், என்று காண்கிறேன்,” என்று நம்மைச் சுற்றியுள்ள மக்களால் ஏன் உணரவோ, சாட்சி பகரவோ முடிவதில்லை? காரணம் என்ன? சிலுவையின் வாழ்க்கை இல்லை. நான் அறிந்தவரை கிறிஸ்துவை அறிவதும், ஆதாயம்பண்ணுவதும், சுதந்தரிப்பதும் ஒரேவொரு வழியில்தான் சாத்தியம். சிலுவையின் வழியில் மட்டுமே அது சாத்தியம்.

சிலுவைக்கு இரண்டு பக்கங்கள் உண்டு. ஒரு பக்கம் மரணம். இன்னொரு பக்கம் உயிர்த்தெழுதல். தேவனுடைய மக்களுக்கு இதில் தவறான கருத்து உண்டு. சிலுவை என்றால் அவர்கள் மரணத்தோடு உடனே தொடர்புபடுத்துவார்கள், உயிர்த்தெழுதலோடு தொடர்புபடுத்தமாட்டார்கள். சிலுவையின் ஒரு பக்கம் மரணம். சிலுவையின் மறு பக்கம் உயிர்த்தெழுதல். கிறிஸ்துவை ஆதாயம்பண்ணுவது என்பது இந்த மரணம், உயிர்த்தெழுதல்வழியாகச் சென்றுதான் ஆதாயம்பண்ண முடியுமேதவிர இந்தச் சிலுவையை byepassபண்ணி, short circuit பண்ணி நாம் ஒருநாளும் கிறிஸ்துவை ஆதாயம்பண்ண முடியாது.

குப்பையாகக் கருதுதலும், நட்டமாக விடுதலும்

அப்போஸ்தலனாகிய பவுல் கிறிஸ்துவை அறிவதைப்பற்றிக் கூறும்போது “இப்படி நான் அவரையும், அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி… to know Him and the power of His resurrection and the fellowship of His sufferings being conformed to His death.“ (பிலி. 3:10) என்று கூறுகிறார். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை அறிவதைப்பற்றி அல்லது அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையை அறிவதைப்பற்றிக் கூறும்போது அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிய வேண்டும் என்று தொடர்ந்து சொல்கிறார். இயேசுகிறிஸ்துவினுடைய மரணத்தின் ஐக்கியத்தை அறியாமல் அவருடைய உயிர்த்தெழுதலின் ஐக்கியத்தை நாம் அறிய முடியாது அல்லது நான் முதலாவது சொன்னதுபோல, “என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நட்டமென்று விட்டேன். குப்பையுமாக எண்ணுகிறேன், கருருதுகிறேன்,” என்ற அனுபவம் வேண்டும். கிறிஸ்துவை ஆதாயம்பண்ணுவதில் ஏதோவொன்றை நட்டமாக விடுவதும், விட்டுவிட்டு அதைக் குப்பையுமாகக் கருதுவதும் அடங்கியுள்ளது. ஏதோவொன்றை நாம் நட்டமாக விடவுமில்லை. விட்டுவிட்டு குப்பையுமாகக் கருதவுமில்லையென்றால் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஆதாயம்பண்ணுவது சாத்தியமில்லை.

“நாங்கள் எகிப்திலே இருக்கும்போது, நாங்கள் எகிப்தியருக்கு வேலைசெய்ய எங்களை சும்மா விட்டுவிடும் என்று சொன்னோம் அல்லவா? நாங்கள் வனாந்தரத்தில் சாகிறதைப்பார்க்கிலும் எகிப்தியருக்கு வேலை செய்கிறது எங்களுக்கு நலமாயிருக்குமே!” (யாத். 14:12) என்றும், “நாங்கள் எகிப்திலே கிரயமில்லாமல் சாப்பிட்ட மச்சங்களையும், வௌ;ளரிக்காய்களையும், கொம்மட்டிக்காய்களையும், கீரைகளையும், வெண்காயங்களையும், வெள்ளைப்பூண்டுகளையும் நினைக்கிறோம்,” (எண், 11:5) என்றும் அவர்கள் தங்கள் எகிப்தின் வாழ்க்கையை நினைத்து தேவனுக்கு விரோதமாக முறுமுறுத்தார்கள். கிறிஸ்துவினுடைய நிரப்பீட்டினால் அவர்கள் நெஞ்சம் திருப்தியாக முடியவில்லை. அவர்கள் ஏதோவொன்றை விட்டுவிட்டு வெளியேறிவிட்டார்கள். ஆனால் வெளியேறியபிறகு தாங்கள் விட்டதை அவர்களால் நட்டமாகக் கருத முடியவில்லை. ஏதோ மிகவும் விலையேறப்பெற்ற ஒன்றை விட்டுவிட்டு வெளியே வந்துவிட்டதாகத்தான் கருதினார்களேதவிர தாங்கள் பெற்றதோடு ஒப்பிடும்போது தாங்கள் விட்டது ஒரு குப்பை என்று கருதுகிற ஒரு நிறைவுக்கும், திருப்திக்கும் அவர்களால் வரமுடியவில்லை.

நன்றாகக் கவனிக்க வேண்டும். We should not put up a show. “நான் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டிருக்கிறேன். ஆனால், உண்மையாகவே எனக்குத் திருப்தியில்லை. என்ன செய்வது? பத்து வருடம் இயேசுகிறிஸ்துவை விசுவாசித்து ஆகிவிட்டது. ஆதலால் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு திருப்தியடைந்ததுபோல I have to put up a performance. I really long for the world.” என்று நடிக்க வேண்டிய தேவையில்லை.

ஏன் தேவனுடைய மக்கள் சிலுவையின் வழியாகச் செல்ல முடியவில்லை? ஏன் செல்ல முடியவில்லை என்றால் நாம் எதை நட்டமாக விடுகிறோமோ அது மிகப் பெரியது என்றும், இதன் வழியாய்ச் சென்று நாம் எதை இலாபமாகப் பெறப் போகிறோமோ அது ஒன்றும் அவ்வளவு பெரிய காரியம் இல்லை என்றும் கருதுகிறோம். நம்முடைய உள்ளமைப்பின் ஆழத்திலே நமக்கு அப்படிப்பட்ட ஒரு எண்ணமும், நம்பிக்கையும் வேரூன்றி இருக்கிறது. எப்பொழுது நாம் ஒன்றை நட்டமென்று விடுவோம்? “இதை விட்டால் எனக்குக் கிடைக்கப்போகிறது இதைவிட மிக அருமையானது, இதைவிட விலையேறப்பெற் றது, இதைவிட மதிப்பு வாய்ந்தது,” என்று நாம் எண்ணுவோமென்றால் இந்தப் பொருளை நட்டமாக விடுவதைப்பற்றி, குப்பையாக எண்ணுவதைப்பற்றி நாம் கவலைப்பட மாட்டோம். ஒருவேளை நான் இதை நட்டமாக விட்டபின் எனக்கு எந்த இலாபமும் கிடைக்கவில்லை என்றால்! இது என்னுடைய முதல் குறிப்பு. சிலுவை.

2. விலை கொடுத்தல்

இரண்டாவது குறிப்பைச் சொல்லுகிறேன். A.W.Tozer எழுதிய The old cross and the new என்ற ஒரு பக்க செய்தியை நீங்கள் இணையதளத்திலே படித்துப்பாருங்கள். பழைய சிலுவையும் புதிய சிலுவையும். இயேசுகிறிஸ்து நமக்காகச் சிலுவையிலே எல்லாவற்றையும் செய்து முடித்துவிட்டார். ஆகையால், நாம் ஒன்றும் செய்யவேண்டிய அவசியம் இல்லை. இது உண்மையா, பொய்யா? இதில் உண்மையும் இருக்கிறது; பொய்யும் இருக்கிறது. ஏனென்றால், சிலுவைக்கு இரண்டு அம்சங்கள் உள்ளன. ஒன்று ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவை. இன்னொன்று நம்முடைய சிலுவை அனுபவம். ஒருவன் தன் சிலுவையை எடுத்துக்கொண்டுத் தன்னைப் பின்பற்றி வரவேண்டும் என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொன்னார். “அவராலே உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறது. நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன்,” (கலா. 6:14) என்றும், “கர்த்தராகிய இயேசுவினுடைய அச்சடையாளங்களை நான் என் சரீரத்திலே தரித்துக்கொண்டிருக்கிறேன்,” (கலா. 6:17) என்றும், “கிறிஸ்துவினுடைய உபத்திரவங்களில் குறைவானதை அவருடைய சரீரமாகிய சபைக்காக, என் மாம்சத்தில் நிறைவேற்றுகிறேன்,” (கொலோ. 1:24) என்றும் பவுல் சொல்லுகிறார்.

பெற்றறிவும், உற்றறிவும்

ஆகவே, புதிய ஏற்பாடு இதைப்பற்றித் தெளிவாகச் சொல்கிறது. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவை என்று ஒன்று இருக்கிறது. அதிலே நமக்கு எந்தப் பங்கும் இல்லை. அவருடைய சிலுவையினாலே நாம் பாவமன்னிப்பையும், நித்தியஜீவனையும் பெறுகிறோம். ஆனால் நம்முடைய மனித வாழ்க்கையிலே சிலுவை அனுபவம் என்று ஒன்று உண்டு. முதல் அம்சம் சிலுவையைப்பற்றிய அனுபவம்சாராத உண்மை. இரண்டாவது அம்சம் சிலுவையைப்பற்றிய அனுபவம்சார்ந்த உண்மை. அது பெற்றறிந்த உண்மை. இது உற்றறிகிற அனுபவம். Objective fact and subjective experience. தேவ னுடைய மக்கள் இதை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். சிலுவைக்கு இரண்டு அம்சங்கள் உண்டு. ஒன்று நாம் பெற்றறிந்த அம்சம். இன்னொன்று நாம் உற்று அறிகின்ற அனுபவம். பாவ மன்னிப்பையும், நித்திய ஜீவனையும் பெறுவது இலவசம்தான். ஆனால், கிறிஸ்துவை ஆதாயம்பண்ணிக்கொள்வதும், கிறிஸ்துவைச் சுதந்தரிப்பதும், கிறிஸ்துவினுடைய அளவு நமக்குள் பெருகுவதும் இலவசம் அல்ல. கிறிஸ்துவை அறிவதும், கிறிஸ்துவை ஆதாயம்பண்ணுவதும், கிறிஸ்துவைச் சுதந்தரிப்பதும், கிறிஸ்துவின் அளவு நமக்குள் உருவாவதும்–இதினுடைய அர்த்தம் என்னவென்றால் கிறிஸ்துவின் குணம் உண்டாகிறது, கிறிஸ்துவினுடைய ஜீவன் உண்டாகிறது, கிறிஸ்துவின் வல்லமை உண்டாகிறது. ஆண்டவராகிய இயேசு எப்படி இருந்தாரோ அப்படிப்பட்டவர்களாய் நாம் இந்தப் பூமியில் வாழ்கிறோம். இதற்கு நாம் ஒரு விலை செலுத்த வேண்டும் என்பது என்னுடைய theology.

நான் ஒரு பிரசங்கம் கேட்டேன். ஒரு மல்யுத்த வீரர் போட்டிக்குப் போனார். போட்டியிலே நிறைய காயங்கள் பட்டார். ஆனால் கடைசியிலே அந்த மல்யுத்தத்திலே அவர் ஜெயித்துவிட்டார். நிறைய பணத்தை அவர் பரிசாகப் பெற்றார். அவர் வீட்டுக்கு வந்தபிறகு தான் பெற்ற வெற்றியைத் தன்னுடைய மனைவியிடம் சொன்னார். பரிசாகப் பெற்ற பணத்தையெல்லாம் தன்னுடைய மனைவியிடம் கொடுத்துவிட்டார். மனைவி மல்யுத்தப் போட்டியிலே பங்குபெறவில்லை. ஆனால், அதன் கனியையெல்லாம் அவர்கள் அனுபவித்தார்கள். அதுபோல் கிறிஸ்து நமக்காகப் போராடினார். நாம் அதிலே பங்குபெறவில்லை. நாம் அவருடைய போராட்டத்தின் விளைவுகளையெல்லாம் அனுபவிக்கிறோம். இதில் ஓரளவுக்கு உண்மை உண்டு. பாவ மன்னிப்பையும், நித்திய ஜீவனைபயும் பெறுவது, பரிசுத்த ஆவியாகிய கொடையைப் பெறுவது. இதிலே நமக்கு எந்தப் பங்கும் இல்லை. தேவன் இஸ்ரயேல் மக்களை எகிப்திலிருந்து வனாந்தரத்தின் வழியாய் பிள்ளைகளை நடத்துவதுபோல நடத்தினபோது உணவுக்காகவோ, தண்ணீருக்காகவோ, வெளிச்சத்திற்காகவோ, உடைக்காகவோ, பாதரட்சைக்காகவோ அவர்கள் எந்தப் போராட்டமும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், பாலும் தேனும் ஓடுகிற நல்ல தேசமாகிய கானானுக்குள் நுழைந்தபிறகு ஒவ்வொரு நாளும் போராட வேண்டும். தேவனே வாக்குறுதி செய்ததாக இருந்தாலும் அதைச் சுதந்தரிப்பதற்கு போராட்டம் உண்டு.

மிக முக்கியமான ஒரு தத்துவம். “God promised, so why should we fight? Why should we labor? Why should there be enemies?” என்ற எண்ணம் தேவனுடைய மக்களுக்கு உண்டு. ஆனால் சொல்லப்போனால், பெரிய யுத்தங்களே தேவனுடைய வாக்குறுதிக்குப்பின்தான் ஆரம்பிக்கிறது. உபாகமம் முடிந்தபிறகு யோசுவாவின் புத்தகம். அது யுத்தத்தின் புத்தகம், போராட்டங்களின் புத்தகம், போராளியின் புத்தகம். கிறிஸ்துவைச் சுதந்தரிப்பதற்கு தேவனுடைய மக்களுக்கு ஒரு போராட்டம் உண்டு; விசுவாசமும், ஒரு விலைக்கிரயமும் உண்டு.

சவுலின் பக்திவேடம்

1 சாமுவேல் 15ஆம் அதிகாரத்தில் ஒரு நிகழ்ச்சி இருக்கிறது. தேவன் சவுலிடம், “அமலேக்கியரோடு நீ செய்கிற போரிலே எல்லாவற்றையும் எரித்துவிடு. மனிதர்கள், மனுஷிகள், பிள்ளைகள், ஆடுகள், மாடுகள் ஒன்றையும் நீ விட்டுவைக்காதே. எல்லாவற்றையும் எரித்துவிடு,” என்று கட்டளையிடுகிறார். அவர்கள் எல்லாவற்றையும் எரிக்கவில்லை; ஆடுமாடுகளிலே நல்லவைகளைத் தக்கவைத்துக் கொண்டார்கள். சாமுவேல் சவுலைச் சந்திக்கப் போகும்போது சவுல், “தேவனாகிய கர்த்தர் சொன்ன எல்லாவற்றையும் நான் நிறைவேற்றினேன்,” என்று சொல்கிறான்.

இன்றைக்குக் கிறிஸ்தவர்களும் சவுலைப்போல, “I am obedient to the Lord. I have surrendered myself to the Lord,” என்று சொல்கிறார்கள். அவர்களுடைய பக்திமொழியைப் பார்க்கும்போது, “ஆ! இவ்வளவு ஒரு பக்தியா!” என்று நம்முடைய கண்களில் ஈரமும், நெஞ்சத்தில் நெகிழ்வும் வந்துவிடும்.

“தேவனாகிய கர்த்தர் செய்தபடியே எல்லாவற்றையும் செய்தேன்,” என்று சவுல் சொன்னதும் “அப்படியென்றால் என் காதுகளில் விழுகிற ஆடுகளின் சத்தமும், மாடுகளின் சத்தமும் என்ன?” என்று சாமுவேல் மிகவும் காரமாகக் கேட்கிறார்.

இது இரண்டு நண்பர்கள் உரையாடுவதுபோல் இல்லை. தாவீது பாவம் செய்தபிறகு நாத்தான் தீர்க்கதரிசி அவருடன் பேசியதுகூட கொஞ்சம் மரியாதையோடு பேசுவதுபோல இருக்கிறது. ஆனால், சாமுவேல் அப்படியெல்லாம் பேசவில்லை.

சாமுவேல் அப்படிச் சொன்னவுடன் சவுல் அதற்கு விளக்கம் கொடுக்கிறான். “நீர் எல்லாவற்றையும் எரித்துப்போட வேண்டும் என்று சொன்னீர். நானும் எல்லாவற்றையும் எரித்துப்போடத்தான் சொன்னேன். ஆனால், ஜனங்கள்தான் உம்முடைய தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடுவதற்காக நல்ல ஆடு மாடுகளை வைத்துக்கொள்ளலாம் என்று சொன்னார்கள்,” என்று ஒரு பக்திவேடம் போடுகிறான்.

தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் யாரும் இந்தப் பக்திவேடத்திற்குப் புறம்பானவர்களோ, அப்பாற்பட்டவர்களோ அல்ல. நன்றாகக் கவனித்துக்கொள்ள வேண்டும். நம் எல்லாருக்குள்ளும் ஒரு சவுல் இருப்பான். உயரம் கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கும். சிலருக்குத் தோளுக்குமேலே இருப்பான். சிலருக்குத் தோளுக்குக்கீழே இருப்பான். பல சமயங்களிலே புறம்பான ஒரு பக்திவேடம் தரிக்கிறோம். நான் தரிக்கிறேன். நீங்களும் தரிக்கிறீர்கள். தேவனுக்குமுன்பாகப் போகும்போது, “உமக்காகத்தானே ஐயா! உமக்காகத்தானே ஐயா! உயிர் வாழ்கிறேன் ஐயா!” என்பதுபோல பக்திப் பாடல்கள் பாடுவோம், பக்தி வேடங்கள் போடுவோம்.

சவுல் அப்படி விளக்கம் சொன்னபிறகும் சாமுவேல் அதைக்குறித்து அசைவதாக இல்லை. “நிறுத்தும், இந்தப் பேச்சை விடும்,” என்று தயவுதாட்சண்யம் காட்டாமல் பேசுகிறார். “நிறுத்தும்.” அப்பொழுது சாமுவேல், “பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், கர்த்தருடைய சத்தத்திற்குச் செவிகொடுத்தலும் நலம்,” என்று உறுதியாகச் சொல்லுகிறார்.

இது சிலுவையின் வழி. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை அறிவது, ஆதாயம்பண்ணுவது, சுதந்தரிப்பது என்பது தேவனுடைய மக்கள் ஏதோவொரு விலை கொடுக்க வேண்டும். It should cost us something.

தாவீதின் அனுபவம்

2 சாமுவேல் 24:24யை வாசியுங்கள். ஒருநாள் தாவீது இஸ்ரயேல் மக்களிலே யுத்தவீரர்களுடைய புள்ளிவிவரக் கணக்கெடுத்தான். அதற்காகத் தேவன் அவனைத் தண்டிக்கிறார். அவன் தேவன் அவனுக்கு முன்வைத்த மூன்று தண்டனைகளில் ஒன்றைத் தெரிந்தெடுக்க வேண்டும் என்று சொன்னபோது அவன் தேசத்திலே மூன்று நாள் கொள்ளைநோய் வருவதைத் தெரிந்தெடுக்கிறான். கொள்ளைநோய் முடிகிற தருவாயிலே அவன் அர்வனாவின் களத்திலே பலிசெலுத்துவதற்காக வருகிறான். தாவீது தான் வந்த நோக்கத்தைச் சொன்னபோது, அர்வனா தாவீதினிடத்தில், “ராஜாவாகிய ஆண்டவன் இதை வாங்கிக்கொண்டு தம்முடைய பார்வைக்கு நலமானபடி பலியிடுவாராக. இதோ தகனபலிக்கு மாடுகளும், விறகுக்குப் போரடிக்கிற உருளைகளும் மாடுகளின் நுகத்தடிகளும் இங்கே இருக்கிறது,” என்று சொல்கிறான். அப்போது தாவீது, “அப்படியல்ல, நான் இலவசமாய் வாங்கி. என் தேவனாகிய கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தாமல், அதை உன் கையிலே விலைக்கிரயமாய் வாங்குவேன்,” என்று சொல்லி ஐம்பது சேக்கல் நிறை வெள்ளியைக் கொடுத்து தாவீது அந்தக் களத்தையும் மாடுகளையும் விலைக்கு வாங்கினான். I will not offer sacrifice to the Lord which does not cost me anything.

யெஹோவா யீரே

ஆபிரகாம் ஈசாக்கைப் பலி செலுத்துவற்காகப் போகிறார். ஆபிரகாம் தன்னுடைய வேலைக்காரரிடத்தில், “நீங்கள் இங்கே காத்திருங்கள். நானும் பிள்ளையாண்டானும் அவ்விடம்மட்டும்போய், தொழுது கொண்டு, உங்களிடத்திற்குத் திரும்பிவருவோம்,” (ஆதி. 22:5) என்று சொல்கிறார்.

இன்றைக்கு ஆராதனை என்றால் நல்ல ஒரு guitar, ஒரு keyboard, ஒரு smoke machine என்று என்னவெல்லாம் தேவைப்படுகிறது!

அப்போது ஈசாக்கு ஆபிரகாமிடம், “அப்பா, நெருப்பும், விறகுகளும் இருக்கின்றன. தகனபலிக்கு ஆட்டுக்குட்டி எங்கே?” என்று கேட்கிறான். அதற்கு ஆபிரகாம், “என் மகனே, தேவன் தமக்குத் தகனபலிக்கான ஆட்டுக்குயைப் பார்த்துக்கொள்வார்,” என்று பதில் சொல்கிறான். அந்தச் சம்பவம் முடிந்தபிறகு அந்த மலைக்கு அவர் “யெஹோவா யீரே” என்று பெயரிடுகிறார். “Jehovah Jireh” என்றால் கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும் என்று அர்த்தம். யாருக்கு “யெஹோவா யீரே” என்றால் “ஆண்டவரே, உம்முடைய வழிகளில் நடப்பதற்கு எனக்கு அருமையான, எனக்கு விலையேறப்பெற்ற, எனக்கு மதிப்புள்ள, இந்த உலகம் கொண்டாடுகிற ஒன்றை நான் உமக்குப் பலியாக்குகிறேன்,” என்று சொல்பவர்களுக்குத்தான் தேவன் “யெஹோவா யீரே”வாக இருப்பார்.

“நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாய் இருக்கக் கற்றுக்கொண்டேன். தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும். எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன். பாடுகளாய் இருந்தாலும் சரி, சோதனைகளாக இருந்தாலும் சரி, நோய்களாய் இருந்தாலும் சரி, இல்லாமைகளாக இருந்தாலும் சரி, இயலாமைகளாக இருந்தாலும் சரி, குறைச்சலாக இருந்தாலும் சரி, தாழ்ச்சியாக இருந்தாலும் சரி, நாம் மனரம்மியமாய் வாழ முடியும். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து அந்த அளவிற்குப் போதுமானவர், நிறைவானவர் என்று விசுவாசிக்கிறேன், அறிந்திருக்கிறேன்,” என்பவர்களால்தான் ”என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ் செய்ய எனக்குப் பெலனுண்டு,” (பிலி. 4:13) என்று சொல்ல முடியும். அவர்களுக்குத்தான் “என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் தம்முடைய மகிமையில் நிறைவாக்குவார்,” (பிலி. 4:19) என்பது உண்மையாக இருக்கும்.

3. வெகுமதி

i. சுதந்தரித்த கிறிஸ்து மூன்றாவது, கடைசிக் குறிப்பு வெகுமதி. முதலாவது குறிப்பு, சிலுவை. இரண்டாவது குறிப்பு, விலை. மூன்றாவது குறிப்பு, வெகுமதி. 

நான் வெகுமதியாக இரண்டைச் சொல்வேன். நாம் கிறிஸ்துவைச் சுதந்தரிக்கிறோம். அப்படி சுதந்தரிக்கிற அந்தக் கிறிஸ்து கடைசியிலே தேவனுக்குச் சுதந்தரமாக மாறிவிடுகிறார் என்று எபேசியர் முதல் அதிகாரத்தில் வாசிக்கிறோம். பரிசுத்தவான்களிடத்தில் தமக்கு உண்டாயிருக்கிற சுதந்தரம் (எபே. 1:18) என்று எழுதியிருக்கிறது. நம்மிடத்திலே தேவன் சுதந்தரிக்கிறதற்கு என்ன இருக்கிறது? நாம் அவ்வளவு அருமையான ஆட்களா? நம்மைவைத்துத் தேவன் என்ன செய்துவிடப் போகிறார்?

பயங்கரமான ஒரு பழமொழி உண்டு. மீன் செத்தால்கூட கருவாட்டுக்குதவும். மனிதன் செத்தால் ஒன்றுக்கும் ஆகமாட்டான்.

அப்படிப்பட்ட மனிதர்களிடத்திலே தேவன் எதை சுதந்தரித்துக்கொள்ளப் போகிறார் என்றால் நாம் ஆதாயம்பண்ணிக்கொண்ட, நாம் சுதந்தரித்துக்கொண்ட, நம்மிடத்தில் உருவாக்கப்பட்ட கிறிஸ்துதான் தேவனுடைய சுதந்தரம். ஆகவே, நாம் ஒரு நாளிலே தேவனைச் சந்திக்கும்போது நாம் அறிந்த, ஆதாயம்பண்ணின, சுதந்தரித்த கிறிஸ்துவை அவருக்குமுன்பாக நாம் படைப்பது தேவனுக்கு மகா பிரியமாய் இருக்கும், மகிமையாக இருக்கும்.

இருபத்து நான்கு மூப்பர்கள் தங்கள் தலைகளிலே இருந்த கிரீடங்களைக் கழற்றி சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கிறவருக்குமுன்பாக வைத்தார்கள் என்று (வெளி. 4:10) திருவெளிப்பாட்டில் பார்க்கிறோம். பொன் கிரீடம் என்றவுடன் ஒரு பொன் கிரீடத்தைக் கற்பனை செய்துகொள்ளக் கூடாது. நம்மிடத்தில் உருவாக்கப்பட்ட கிறிஸ்துவே நமக்குப் பொன் கிரீடமாக இருப்பார். அதைத் தேவனுக்கு முன்பாக படைக்கும்போது தேவன் மனமகிழ்ச்சியடைகிறார். அதைப்போன்ற நிறைவும், திருப்தியும் மனிதர்களுக்கு வேறு எதுவும் இல்லை.

ii. கிறிஸ்துவைப் பரிமாறுதல் இன்னொரு வெகுமதி என்னவென்றால் நாம் உயிரோடு வாழ்கின்ற நாட்களிலே கிறிஸ்து குறைவுபடுகிற மக்களுக்கு நம்மூலமாய் கிறிஸ்து பரிமாறப்படுகிறார். “கர்த்தராகிய இயேசுவினுடைய ஜீவனும் எங்கள் சரீரத்திலே விளங்கும்படிக்கு, இயேசுவின் மரணத்தை எங்கள் சரீரத்திலே சுமந்து திரிகிறோம். எப்படியெனில் சாவுக்கினமான எங்கள் மாம்சத்திலே இயேசுவினுடைய ஜீவனும் விளங்கும்படிக்கு உயிரோடிருக்கிற நாங்கள் எப்பொழுதும் இயேசுவினிமித்தம் மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கப்படுகிறோம். இப்படி மரணமானது எங்களிடத்திலும் ஜீவனானது உங்களிடத்திலும் கிரியைசெய்கிறது” (2 கொரி. 4:10-12). “We always carry about in our body the death of Jesus so that the life of Jesus may also be manifested. Thus death works in us and life in you”.

என்னைப் பொறுத்தவரை ஒரு கிறிஸ்தவ வாழ்க்கையினுடைய மிகப் பெரிய அளவுகோல் என்னவென்றால் நம்மோடு தொடர்புக்கு வருகிற மக்களுக்கு அவர்களுடைய தேவையிலும், அவர்களுடைய நெருக்கத்திலும், அவர்களுடைய அழுத்தத்திலும், கிறிஸ்துவை அவர்களுக்கு நாம் பரிமாற முடிகிறதா? பரிமாற முடிகிறதென்றால் இந்த மனிதன், இந்த மனுஷி, உண்மையாகவே சிலுவையின் வழியிலே விலைசெலுத்தி ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவைப் பின்பற்றுபவன்.

இதோடு ஒப்பிடும்போது உண்மையிலேயே இன்றைக்குத் தேவனுடைய மக்களுடைய வாழ்க்கைத்தரம் மிகக் குறைவாக உள்ளது.

வாழ்க்கைத்தரம் என்று சொல்லும்போது ஒரு விசுவாசியிடம் கார், வீடு, நிலம், சொத்து, நகை இருக்கிறது அல்லது இல்லை என்பதைச் சொல்லவில்லை. என்னைப் பொறுத்தவரை ஆசீர்வாதம் என்றால் உன்னுடைய வாழ்க்கையின்மூலமாக எத்தனைபேர் கிறிஸ்துவைப் பெற்றுக்கொண்டார்கள்? எத்தனை பேருடைய வாழ்க்கை உன்மூலமாக கிறிஸ்துவால் மலர்ந்தது, புதுப்பிக்கப்பட்டது, ஆசீர்வதிக்கப்பட்டது, உயிர்ப்பிக்கப்பட்டது என்பதுதான் அளவுகோல்.

பவுல் தன்னுடைய வாழ்க்கையின் முடிவுக்கு வரும்போது, “ஓட்டத்தை முடித்தேன். பத்து கிலோ தங்கம், இரண்டு கார், 5000 சதுர அடியில் ஒரு பெரிய வீடு ஆகியவைகளைச் சம்பாதித்தேன். அல்லேலூயா!” என்று சொல்லவில்லை.

இரண்டே இரண்டைத்தான் நான் வெகுமதி என்று கருதுகிறேன். ஒன்று, எப்படிப்பட்ட கிறிஸ்துவை நாம் தேவனுக்குமுன்பாக படைக்கிறோம்? இரண்டு, நாம் இந்தப் பூமியிலே வாழ்கின்ற நாட்களிலே எப்படிப்பட்ட கிறிஸ்துவை நம்மால் வழங்க முடிகிறது? இந்த வார்த்தைகளை நீங்கள் சிந்தித்துப் பாருங்கள்.

தேவனுடைய நோக்கம் நாம் கிறிஸ்துவை ஆதாயம்பண்ணிக்கொள்வது, சுதந்தரித்துக்கொள்வது. ஆனால், முதலாவது, தேவனுடைய வழி எப்போதுமே சிலுவையின் வழி. இரண்டு, சிலுவையின் வழி என்றால் நாம் கிறிஸ்துவை ஆதாயம்பண்ணுவதற்கு ஒரு விலை கொடுக்க வேண்டியிருக்கும். நம்பிக்கையில்லாத சூழ்நிலையிலே அவரை நம்புவதும், பற்றிக்கொண்டிருப்பதும் நாம் செலுத்துகிற விலை. மூன்றாவது, எல்லா விலைக்கும் தேவன் ஒரு வெகுமதியை வைத்திருக்கிறார். அந்த வெகுமதி நமக்குள் உருவாக்கப்பட்ட கிறிஸ்து தேவனுக்கு சுகந்த வாசனையான பலியாக இருப்பார். நமக்குள் உருவாக்கப்பட்ட கிறிஸ்துவைக்கொண்டு நம்மைச் சுற்றியிருக்கின்ற தேவனுடைய மக்களுக்கு நாம் கிறிஸ்துவைப் பகிர்ந்துகொடுக்க முடியும். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.