George Müller (1805-1898) was born in Prussia, and his youth was spent in utter ungodliness, even surpassing many of his age in sin and folly. His conversion was strangely sudden and happened simply by finding himself for the first time in the company of praying people. His life was at once turned wholly to God, and he rapidly grew in the knowledge of Him.
He is remembered chiefly for his work among orphans in Bristol, England. In this work he proved that God could and would supply the need of those who trusted in Him and made their requests to God alone.
மு ஜார்ஜ் முல்லர் - சுருக்கமான வாழ்க்கை வரலாறு
ஜார்ஜ் முல்லர். இவரைப்பற்றித் தெரிந்துகொள்ள நாம் 1800களுக்கும், ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய இரு நாடுகளுக்கும் செல்ல வேண்டும்.
ஜார்ஜ் முல்லர் ஒரு பெரிய பணக்காரக் குடும்பத்தில் பிறந்தார். அவருடைய அப்பா வரி வசூலிக்கிற ஓர் அரசு அதிகாரி. அவர் இப்போது வடக்கு ஜெர்மனியில் இருக்கிற பிரஸ்ஸியாவில் பிறந்தார். அவர் கொஞ்சம் முரட்டுத்தனமான குழந்தையாக வளர்ந்தார். அதாவது குறும்புக்காரன், சேட்டை கொஞ்சம் அதிகம். அவருக்கு அப்போது 16 வயது. ஒருமுறை இரவு முழுவதும் குடித்து, சூதாடிக்கொண்டிருந்தார். அன்றிரவு, அவருடைய தாய் இறந்துகொண்டிருந்தது அவருக்குத் தெரியாது. அடுத்த நாள் காலையில் அவர் போதை தெளிந்து வீட்டிற்குச் சென்றபோது அவருடைய அப்பா அவருடைய அம்மாவின் மரணச் செய்தியை அவரிடம் சொன்னார். ஜார்ஜ் முல்லர் அதைக்குறித்துக் கொஞ்சம்கூடக் கவலைப்படவில்லை. அவருடைய அப்பா சொன்னதை அவர் காதில்கூட வாங்கிக்கொள்ளவில்லை. அந்தத் துக்கச் செய்தி அவர்மேல் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஜார்ஜ் முல்லர் அவருடைய ஆரம்ப காலத்தில் இப்படிப்பட்டவராகத்தான் இருந்தார்.
அவர் தன் 16 வயதில் ஒரு மாதம் சிறையில் இருந்தார். அவர் ஏன் சிறைக்குச் சென்றார் தெரியுமா? அவர் ஓர் ஆடம்பர விடுதியில் ஒரு வாரம் தங்கி விடுமுறையை உல்லாசமாகக் கழித்தார். ஆனால், விடுதிக்குப் பணம் செலுத்தாமலே விடுதியைக் காலிசெய்துவிட்டுப் போய்விட்டார். இந்த விடுதியைக் காலிசெய்தபின் இன்னோர் ஆடம்பர விடுதியில் இதுபோல் ஒரு வாரம் தங்கினார், அந்த விடுதிக்கும் பணம் செலுத்தாமல் அறையைக் காலிசெய்துவிட்டுப் போய்விட்டார். இப்படி மற்றவர்களை ஏமாற்றுவது பெரிய புத்திசாலித்தனம் என்று அவர் நினைத்தார். ஆனால், மாட்டிக்கொண்டார்; சிறையில் அடைக்கப்பட்டார். அவருடைய அப்பா மிகவும் நல்லவர். அவர் பெரிய பணக்காரராக இருந்ததால், கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுத்து, அபராதம் செலுத்தி, அவரைச் சிறையிலிருந்து வெளியே கொண்டுவந்தார். ஆனால், ஜார்ஜ் முல்லர் தன் வழிகளை மாற்றவில்லை. நடந்த நிகழ்ச்சிகள் அவரில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. உண்மையில், அவர் தான் மாட்டிக்கொண்டதற்காகத்தான் வருந்தினாரேதவிர, தன் செயல்களுக்காகத் துளிகூட வருந்தவில்லை. இவ்வாறு, அவருடைய இளமைப்பருவம் மோசடி, ஏமாற்று, பொய் போன்ற தீய செயல்களில் கழிந்தது. அவர் தன் நெருங்கிய நண்பர்களைக்கூட ஏமாற்றினார். மேலும் அவர் நிறைய திருட்டுச் செயல்களிலும் ஈடுபட்டார். அவர் ஒரு நல்ல தந்திரக்காரர். அவர் தன் மனம்போல் வாழ முனைந்தார். அவர் தனக்காகவே வாழ்ந்தார்.
இப்படியெல்லாம் நடந்தபிறகும், ஜார்ஜ் முல்லர் லூத்தரன் சபையில் ஒரு பாஸ்டராக வேண்டும் என்று அவருடைய அப்பா விரும்பினார். உண்மையில் இதைச் சொல்வதே மிகவும் வேடிக்கையாகத் தோன்றுகிறது. ஆனால், உண்மையில் அவருடைய அப்பா அதை மிகவும் விரும்பினார்! ஜார்ஜ் முல்லர் ஒரு பாஸ்டராக வேண்டும் என்று அவருடைய அப்பா விரும்பியதற்குக் காரணம் அவருடைய வாழ்க்கை மாறிவிடும் அல்லது அவர் கர்த்தருக்காக வாழ ஆரம்பித்துவிடுவார் என்ற எதிர்பார்ப்போ அல்லது நம்பிக்கையோ அல்ல. அன்று ஏதோவொரு சபையில் ஒரு பாஸ்டராக இருப்பது நல்ல, கௌரவமான வேலையாகக் கருதப்பட்டது. அது ஒரு நிரந்தரமான வேலை என்பதாலும், அதிக வருமானம் வரும் என்பதாலும், நல்ல வாழ்க்கை கிடைக்கும் என்பதாலும் அவர் இப்படி நினைத்தார். ஜார்ஜ் முல்லர் ஒரு பணக்காரச் சபையின் போதகராகிவிட்டால், அவருக்கு நிறையப் பணம் கிடைக்கும் என்றும், அதனால் தான் ஒய்வு பெற்றபின் தன் கடைசிக் காலத்தில் நாட்டுப்புறத்தில் நல்ல வசதியோடு, நிம்மதியாக வாழலாம் என்றும் அவர் நினைத்தார். இதுதான் அவருடைய அப்பாவின் திட்டம். ஜார்ஜ் முல்லர் ஒரு சிறப்புப் பல்கலைக்கழகத்திற்குச் சென்று, அங்கு அவர் இறையியல் படித்து, பாஸ்டராகத் தகுதிபெறவேண்டும் என்று அவருடைய அப்பா விரும்பினார், திட்டமிட்டார்.
ஆனால், ஜார்ஜ் முல்லருக்கு இதில் கடுகளவுகூட விருப்பமில்லை. இறையியல் படிக்க வேண்டும் என்ற எண்ணமே அவருக்கு மிகவும் எரிச்சலாக இருந்தது. எனினும், அவர் எப்படியோ இந்தப் பல்கலைக்கழகத்தில் போய்ச் சேர்ந்தார். அங்கு அவர் படிப்பதற்குப்பதிலாக வேறு பல காரியங்களைச் செய்தார். அவர் தன் பெரும்பாலான நேரத்தை மதுபானக் கடையிலும், சூதாடும் இடங்களிலும்தான் கழித்தார். கூத்து, கும்மாளம் ஆகியவைகளின் உயிர்நாடி ஜார்ஜ் முல்லர் என்று சொல்லும் அளவுக்கு அவருடைய வாழ்க்கை மாறிற்று. ஒரு நிமிடத்தில் 10 பீர் குடித்துவிடுவார். சூதாட்டத்தில் திளைத்தார். பிற மாணவர்களையும் இந்த வழியில் இழுத்தார். பல்கலைக்கழகத்தின் மற்ற மாணவர்களில் பலர் கிறிஸ்தவர்கள் அல்ல. மிகச் சிலரே கிறிஸ்தவர்கள். ஆனால், அவர்களெல்லாம் சபைப் போதகர்களாக ஆவதற்கு இறையியல் படிக்க வந்திருந்தார்கள்.
ஒரு நாள் அவர் அந்தப் பல்கலைக்கழகத்தில் தன் குழந்தைப்பருவ நண்பர் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. அவருடைய பெயர் பீட்டா. அவர் மிகவும் நல்லவர், பக்தியுள்ளவர், ஒழுக்கமானவர் என்று ஜார்ஜ் முல்லருக்குத் தெரியும். ஜார்ஜ் முல்லர் ஒரு காட்டுமிராண்டித்தனமான வாழ்க்கை வாழ்ந்தபோதும், தான் ஏதோவொரு கட்டத்தில் மாற வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் எங்கோவொரு மூலையில் இருந்தது. ஒரு புறம் நல்ல ஆடுகளை மேய்க்கும் ஒரு மேய்ப்பனாக இருந்துகொண்டு, மறுபுறம் இப்படி ஒரு காட்டுமிராண்டித்தனமான வாழ்க்கை வாழ முடியாது என்று அவருக்குத் தெரியும். இப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்வது சாத்தியம் இல்லை என்பதை அவர் அறிந்திருந்தார். ஆகவே, பீட்டா என்ற இந்த மனிதனுடன் நட்பு தனக்குச் சாதகமாக இருக்கும் என்று அவர் நினைத்தார். ஏனென்றால், அவருடைய நட்பின்மூலம் அவருடைய நல்ல ஒழுக்கங்கள் தனக்கும் வரக்கூடும், அதனால் தான் தன் தவறான வழிகளைத் திருத்த முடியும் என்று அவர் நினைத்தார், துரதிர்ஷ்டவசமாக, அது நடக்கவில்லை. பீட்டாவின் நட்பு அவருக்குக் கிடைத்தது. ஆனால், பீட்டா ஜார்ஜ் முல்லரின் வாழ்க்கையை மாற்றுவதற்குப்பதிலாக, ஜார்ஜ் முல்லர் பீட்டாவை மாற்றிவிட்டார். பீட்டா ஜார்ஜ் முல்லரைப் பின்பற்றத் தொடங்கினார். அவர் ஜார்ஜ் முல்லரோடு சேர்ந்து சாராயக் கடைக்குச் சென்று, குடிக்கவும், சூதாடவும் ஆரம்பித்தார்.
ஆனால், பீட்டாவுக்குள் ஓர் உறுத்துதல் இருந்துகொண்டேயிருந்தது. அது அவ்வப்போது அவரை உணர்த்தியது. ஒரு நாள் அவர் ஜார்ஜுடன் செல்ல வேண்டாம் என்று முடிவுசெய்தார். ஜார்ஜ் பீட்டாவிடம், "நீ என்னுடன் வரவில்லையென்றால், வேறு எங்கு போகப்போகிறாய்? என்ன செய்யப்போகிறாய்? சொல்," என்று கேட்டார். அதற்கு அவர், "இன்று நான் உன்னுடன் வரப்போவதில்லை. நீயும் அங்கு போகப்போவதில்லை," என்றார். உடனே ஜார்ஜ், "மன்னிக்கவும், நான் எங்கு செல்ல விரும்புகிறேன், என்ன செய்ய விரும்புகிறேன் என்று உனக்கு எப்படி தெரியும்?" என்று கேட்டார். அதற்கு பீட்டா, "இன்று நான் செல்ல விரும்புகிற இடத்துக்கு நீ வர விரும்பமாட்டாய்," என்றார். ஜார்ஜ், "சரி, ஒரு சவால்! நான் இன்று உன்னுடன் வருகிறேன். நீ எங்குபோனாலும் நான் உன்னுடன் வருகிறேன்," என்றார். பீட்டா, "நான் இன்று ஒரு வேதபாட வகுப்பில் கலந்துகொள்ளப் போகிறேன்," என்றார். ஜார்ஜ் கொஞ்சம் சிரித்துவிட்டு, பின்னர், "ஓ, நான் வேதபாட வகுப்புக்கு வரமாட்டேன் என்று நீ ஏன் நினைக்கிறாய்?" என்று கேட்டார். பீட்டா, "ஏனென்றால், அங்கு அவர்கள் வேதாகமத்தை வாசிப்பார்கள், பாடல்கள் பாடுவார்கள், ஜெபிப்பார்கள்," என்றார்.
ஜார்ஜ் ஒப்புக்கொண்டபடியே, பீட்டாவுடன் வேதபாட வகுப்புக்குச் சென்றார். அங்கு போனால் கொஞ்சம் வேடிக்கையாகவும் இருக்கும், நல்ல பொழுதும் போகும் என்று அவர் நினைத்தார். ஆனால், அவர் அங்கு போனவுடன் தன்னைப்பற்றி அவர் மிகவும் தாழ்வாக நினைக்க ஆரம்பித்தார். அவர் போன இடம் ஒரு தேவாலயம் அல்ல. அது ஒரு வீடு. அந்த வீட்டில்தான் வேதபாட வகுப்பு நடைபெற்றது. அங்கு மக்கள் ஜெபித்தார்கள். அவர்கள் ஜெபித்தபோது, "இவர்கள் உண்மையாகவே தங்கள் உள்ளத்திலிருப்பதைச் சொல்லுகிறார்கள்," என்று அவர் நினைத்தார். முன்னால் இருந்தவர் வேதத்தைப்பற்றிப் பேசியபோது, அவர்கள் எல்லாரும் வேதாகமத்தைத் திறந்து பார்த்தார்கள், அவர்கள் வேதாகமத்தை நல்ல இலக்கியமாகவோ, வெறுமனே ஒரு புத்தகமாகவோ பார்க்கவில்லை. மாறாக, நல்ல வாழ்க்கை வாழ்வதற்கு உதவும் நடைமுறைக்குரியதாகப் பார்த்தார்கள். இவர்கள் உண்மையாகவே தேவனை விசுவாசிக்கிறார்கள் என்றும், இவர்கள் தேவனுக்காக வாழ விரும்புகிறார்கள் என்றும் அவர் உணர்ந்தார். இதுபோன்ற உண்மையான கிறிஸ்தவர்களை அவர் இப்போதுதான் முதன்முறையாகச் சந்தித்தார்.
அது அவர்மேல் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வேதபாட வகுப்பு முடிந்து அவர் வந்தபின், மீண்டும் அடுத்த முறை அங்கு போவதென்று தீர்மானித்தார். அந்த வாரம், அவர் ஒவ்வொரு நாளும் வேதபாட வகுப்புக்குச் சென்றார். அந்த வேதபாட வகுப்பு ஒருவருடைய வீட்டில் நடைபெற்றது. அந்த வாரத்தின் கடைசி நாளில் ஜார்ஜ் முல்லர் பல்கலைக்கழகத்தில் அவருடைய அறையில் முழங்கால்படியிட்டார். அவர் தன் வாழ்க்கையில் அதுவரை செய்த எல்லாவற்றுக்காகவும் தேவனிடம் மன்னிப்புக் கேட்டார். அவர் ஒரு புதிய வாழ்க்கை வாழ விரும்பினார். இவ்வாறு ஜார்ஜ் முல்லர் தன் 20ஆவது வயதில் இரட்சிக்கப்பட்டார்.
அவருடைய நடவடிக்கைகளிலும், குணத்திலும் பெரிய மாற்றம் ஏற்பட்டது. அவர் இரட்சிக்கப்படுவதற்குமுன், அவர்தான் அவருடைய கூட்டத்தின் உயிர்நாடி, அவர்தான் சூத்திரதாரி. அவருடைய நடத்தையில் வியத்தகு மாற்றங்கள் ஏற்பட்டபோதும், அவருடைய பழைய நண்பர்கள் அவரை விடவில்லை. அவர்கள் கொதித்தெழுந்தார்கள். "உனக்கு என்ன நடந்தது? இப்போதெல்லாம் நீ ஏன் எங்களோடு வருவதில்லை? ஏன் அந்த வீட்டுக்குப் போகிறாய்? எதற்காக வேதாகமத்தையும், மதம் சம்பந்தப்பட்ட புத்தகங்களையும் வாசிக்கிறாய்? இதுபோன்ற காரியங்களில் இதற்குமுன் உனக்கு எந்த விருப்பமும் இருந்ததில்லையே?" என்று அவரைக் கேள்விகளால் துளைத்தெடுத்தார்கள். அது உண்மைதான், இதற்குமுன் செய்த எல்லாக் காரியங்களிலும் இருந்த நாட்டத்தை ஜார்ஜ் முல்லர் இப்போது இழந்துவிட்டார். பழைய காரியங்களில் அவருக்கு எந்த ஆர்வமும் இல்லை.
இரட்சிக்கப்பட்டு ஆறு வாரங்களுக்குள் ஒரு மிஷனரியாகச் செல்ல வேண்டும் என்ற வாஞ்சை அவருக்கு ஏற்பட்டது. மத்திய கிழக்கு நாடுகள், சீனா உட்பட அந்த நாட்களில் மக்கள் அதுவரை ஒருபோதும் கேள்விப்படாத நாடுகளுக்குச் சென்று நற்செய்தியை அறிவிக்க வேண்டும் என்ற பாரம் அவருக்குள் எழுந்தது. அவர் உண்மையாகவே அதைச் செய்ய விரும்பினார். அதனால், மிஷனரிகளாகச் செல்ல வேண்டும் என்று விரும்பிய பலரை அவர் சந்தித்தார். அவர்கள் அவர்மேல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். அவர் தன் அப்பாவிடம் சென்று காரியங்களை சரிசெய்வது நல்லது என்று நினைத்தார். ஏனென்றால், அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த உறவு மிகவும் மோசமாக இருந்தது. ஏறக்குறைய எந்த உறவும் இல்லை என்று சொல்லலாம். அவர் தன் அப்பாவிடம் மன்னிப்புக் கேட்கவும், தான் உண்மையிலேயே மனந்திரும்பி இயேசுவை விசுவாசிப்பதையும், தான் லூத்தரன் சபையின் போதகராக விரும்பவில்லை, மாறாக ஒரு மிஷனரியாக மாற விரும்புவதையும் சொல்லத் தீர்மானித்தார். இதைத் தன் அப்பா உண்மையிலேயே பாராட்டுவார் என்று அவர் நினைத்தார். எனவே, அவர் இதை அவருடைய அப்பாவிடம் சொன்னபோது, அவருடைய அப்பா நடந்துகொண்ட விதத்தைக்கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். ஜார்ஜ் சொன்னதைக் கேட்ட அவருடைய அப்பா கோபமாக, "இத்தனை வருடங்களாக நான் உன் கல்விக்காக எவ்வளவு செலவழித்திருக்கிறேன் தெரியுமா? அதையெல்லாம் இப்போது தூக்கியெறிந்துவிட்டு, ஒரு மிஷனரியாக மாறப்போகிறாயா?" என்று கர்ச்சித்தார். ஜார்ஜ் முற்றிலுமாக மனம்மாறியதை அவருடைய அப்பா ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. தான் வசதியாக ஓய்வுபெறமுடியாமல் போகும் என்பதையும், ஜார்ஜ் ஒரு மிஷனரியாகப் போகிறான் என்பதையும் அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை."என் கண்ணில் படாமல் ஓடிவிடு," என்பதே ஜார்ஜ் முல்லரிடம் அவர் சொன்ன கடைசி வார்த்தைகள்.
எனவே, இனிமேல் அப்பா தனக்குப் பணம் தரமாட்டார் என்று ஜார்ஜ் முல்லருக்குத் தெரிந்துவிட்டது. அவரும், தன் அப்பாவிடம் பணம் கேட்கப்போவதில்லை என்று முடிவுசெய்தார். இது ஒரு பெரிய சிக்கலை ஏற்படுத்தியது. ஏனென்றால், அவர் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தார். கல்விக் கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது, நிறையப் புத்தகங்கள் வாங்க வேண்டியிருந்தது. பிற மாணவர்களைப்போலவே அவரும் பல்கலைக்கழகத்தில் ஒரு சிறிய அறையை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்தார். இப்போது பணத்துக்கு எந்த வழியும் இல்லை என்பதைப் புரிந்துகொண்டார். அவர் தன் அப்பாவிடமிருந்து எந்த உதவியும் ஏற்க விரும்பவில்லை. அப்படிச் செய்வது சரியல்ல என்று அவருக்குத் தெரியும். அதனால் அவர் முழங்காலில் நின்று, கர்த்தரை நோக்கி, "இந்தக் காரியத்தில் நான் என் பூமிக்குரிய அப்பாவுடனான உறவைத் துண்டித்துவிட்டேன். ஆனால், எனக்குத் தேவையானவைகளை வழங்குவதற்காக என் பரலோகத் தகப்பனாகிய உம்மை நான் நம்புகிறேன்," என்று கூறினார். இது அவர் விசுவாசத்தோடு தேவனைத் தேடிய முதல் அனுபவம் என்று சொல்லலாம். அவர் இவ்வாறு ஜெபித்து சுமார் ஒரு மணிநேரத்திற்குள், அவருடைய சிறிய அறையின் கதவை ஒருவர் தட்டினார். பல்கலைக்கழக ஆசிரியர் ஒருவர் அங்கு நின்றுகொண்டிருந்தார். அவர், "அமெரிக்காவிலிருந்து இரண்டு விரிவுரையாளர்கள் நம் பல்கலைக்கழகத்திற்கு வர இருக்கிறார்கள். அவர்களுக்கு ஜெர்மன் மொழி தெரியாது. எனவே, நீ அவர்களுக்கு மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும்," என்று சொன்னார். ஜார்ஜ் முல்லருக்கு ஆங்கிலமும், ஜெர்மனியும் நன்றாகத் தெரியும். இரண்டு மொழிகளிலும் அவர் புலமைபெற்றவர் என்று அங்கு அனைவருக்கும் தெரியும். எனவே, அவர் ஜெபித்துமுடித்தத கொஞ்ச நேரத்தில் ஜார்ஜ் முல்லருக்கு மொழிபெயர்க்கும் வேலை கிடைத்தது. மேலும் ஜெர்மன் மொழியைக் கற்பிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அமெரிக்கப் பேராசிரியர்கள் அவர் மொழிபெயர்ப்பதற்காக அவருக்குப் பணம் கொடுக்க முன்வந்தார்கள். அவர்கள் கொடுத்த பணம் அவருடைய கல்விக் கட்டணத்தைக் கட்டுவதற்கும், புத்தகங்கள் வாங்குவதற்கும் போதுமானதாக இருந்தது. அது மட்டும் அல்ல. பல்கலைக்கழகச் சாலையின் எதிரே ஓர் அனாதை இல்லம் இருந்தது. அவர்கள் தங்களுடைய அனாதை இல்லத்தில் ஓர் அறையைப் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் தங்குவதற்குக் கொடுத்தார்கள். எந்தக் காரணமுமின்றி அவர்கள் அந்த அறையை ஜார்ஜ் முல்லருக்குக் கொடுத்தார்கள். எனவே, நாம் தேவனை முழுமையாக விசுவாசிக்கும்போது அவர் நிச்சயமாக நம் தேவைகளை நிறைவாக்குவார் என்பதை ஜார்ஜ் முல்லர் தம் இளமையிலேயே கண்டுகொண்டார்.
அவர் இந்த அனாதை இல்லத்தில் தங்கியிருந்தபோது, அந்த அனாதை இல்லத்தை நடத்தியவர் ஒரு கிறிஸ்தவர் என்று அறிந்தார். அவர் ஜார்ஜ் முல்லரை ஒரு சிறிய கிராமப்புற தேவாலயத்தில் பிரசங்கிக்க வருமாறு அழைத்தார். இதுவே ஜார்ஜ் முல்லர் மாணவனாக இருந்தபோது பிரசங்கித்த முதல் பிரசங்கம்.
ஜார்ஜ் முல்லர் தான் பிரசங்கிக்கப்போவதை மிகவும் சிரத்தையாகக் கருதி, பல மணி நேரம் செலவழித்து பிரசங்கத்தை ஆயத்தம்பண்ணினார். பிரசங்கக் குறிப்புகளை வரிசைப்படுத்தினார், மொழி, நடை, வார்த்தைகள் எல்லாம் சரியாக இருக்கின்றனவா என்பதை உறுதிப்படுத்தினார், பல மணி நேரம் செலவழித்து முழுச் செய்தியையும் அவர் மனப்பாடம் செய்தார். உச்சரிப்பு, தொனி, குரல், அழுத்தம் எல்லாவற்றையும் பயிற்சி செய்தார். பிரசங்கிக்க வேண்டிய நாளில் தேவாலயத்திற்குச் சென்றார். பிரசங்க மேடையில் ஏறி நின்றார். தான் ஆயத்தம் செய்திருந்த பிரசங்கத்தை எழுத்து விடாமல் அருமையாகப் பேசினார். எல்லாம் சரியாக இருந்தது, வலியுறுத்த வேண்டியவைகளை வலியுறுத்தி ஏற்ற இறக்கத்தோடு அற்புதமாகப் பேசினார். பிரசங்கித்து முடித்தபின், அவர் அந்தக் கிராமப்புறத்தில் இருந்த கல்வியறிவற்ற விவசாயிகள், தொழிலாளர்கள், விதவைகள் அனைவருடனும் கைகுலுக்கிக்கொண்டிருந்தபோது, ஒருவர் அவரிடம் வந்து, "உங்களுடைய பிரசங்கம் மிகவும் அருமையாக இருந்தது. ஆனால், என்னால் ஒரு வார்த்தையைக்கூடப் புரிந்துகொள்ள முடியவில்லை," என்று சொன்னார். ஜார்ஜ் முல்லர் இதைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தார். "இதன் பொருள் என்ன? இதோ படிப்பறிவற்ற இந்த மக்களுடன் நான் பேசுகிறேன். நான் பிரசங்கித்த பிரசங்கம் நன்றாக இருந்தது என்று சொல்லுகிறார்கள். ஆனால், எதுவும் புரியவில்லை என்றும் சொல்லுகிறார்களே!" என்று சிந்திக்க ஆரம்பித்தார்.
பிரசங்கித்து முடித்தபின் மதிய உணவு சாப்பிட வருமாறு அவரை அழைத்தார்கள். அப்போது அவர், "மன்னிக்கவும். சாயங்காலம் மீண்டும் பேச வேண்டியிருப்பதால், என்ன பேச வேண்டும் என்பதைக் கொஞ்சம் ஆயத்தம் செய்ய வேண்டும். ஜெபிக்க வேண்டும், நேரம் வேண்டும். எனவே, நான் வரவில்லை," என்று சொன்னார். தான் பேச வேண்டிய செய்தியை அவர் மிகவும் விவரமாக ஏற்கெனவே ஆயத்தம்பண்ணி வைத்திருந்தார். தான் ஆயத்தம்பண்ணி வைத்திருந்த செய்தியைக் குப்பைத்தொட்டியில் தூக்கியெறிந்தார். ஜெபிக்க ஆரம்பித்தார். "தேவனே, இப்போது என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை! பல்கலைக்கழகத்திலும், இறையியல் கல்லூரியிலும் கற்ற காரியங்கள் வேலைசெய்யாது என்று தெரிகிறது. இந்த மக்கள் புரிந்துகொள்ளுமாறு அவர்களுக்குக் கற்பிக்க எனக்கு வார்த்தைகள் வேண்டும். அவர்களைத் தொட வேண்டும்," என்று ஜெபித்தார். அவர் அன்று மாலை பேசவேண்டிய செய்தியைக் கர்த்தர் அவருக்குக் கொடுத்தார். கர்த்தர் சொன்னதை அவர் மிகவும் வித்தியாசமாகவும், எளிமையாகவும், தெளிவாகவும் பேசினார். மக்கள் தொடப்பட்டார்கள். மக்கள் தொடப்படும்படியாக அவர் பேசிய முதல் செய்தி அநேகமாக அதுவாகத்தான் இருக்கும்.
அவர் வேறு சில கிறிஸ்தவர்களைத் தொடர்புகொண்டார். அவர் ஒரு மிஷனரியாக வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். அவர்கள் அவரை ஒரு மிஷனரியாக அனுப்ப முடிவுசெய்தார்கள். ஆனால், தொலைதூர நாட்டிற்கு அல்ல, அருகிலுள்ள ஏதோவோர் இடத்துக்கு. அந்த இடம் அருகிலேயே இருந்தாலும், அந்த நாட்களில், அந்த இடம் தொலைதூரம் என்றுதான் கருதப்பட்டது. அவர் இலண்டனுக்குச் சென்று, அங்கு யூதர்கள் வாழும் குடியிருப்புக்களில் நற்செய்தி அறிவிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். அந்த நாட்களில் ஏராளமான யூதர்கள் இப்படித் தனிச் சமுதாயங்களாக வாழ்ந்தார்கள். அநேகர் மிஷனரிகளாகச் சென்று அவர்களுக்கு நற்செய்தியை அறிவித்தார்கள். அங்கு சென்று, அவர்களுக்கு நற்செய்தி அறிவிக்க வேண்டும் என்பதை நினைத்து ஜார்ஜ் முல்லர் பரவசமடைந்தார். அவர் பல தடைகளைத் தாண்டி, இறுதியாக, இலண்டன் சென்றடைந்தார். அவர் ஒரு நாளைக்குப் 12 மணிநேரம் செலவழித்து எபிரேய மொழியைக் கற்றார். ஆறு மாதங்களில், அவர் எபிரேய மொழியில் சரளமாகப் பேசவும், வாசிக்கவும் ஆரம்பித்தார். எபிரேய மொழியில் கொஞ்சம் எழுதவும் ஆரம்பித்தார்.
இலண்டனுக்கு மிஷனரியாகச் செல்வதற்காகவும், அங்குள்ள யூதர்களுக்கு நற்செய்தி அறிவிப்பதற்காக எபிரேய மொழி கற்பதற்காகவும் அவர் கடுமையாக உழைத்தார். அதனால், அவர் மிகவும் நோய்வாய்ப்பட்டார். அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போயிற்று. இதற்குமுன் ஒருமுறை அவருடைய வயிற்றில் ஓர் இரத்த நாளம் வெடித்துப் பிரச்சினையாயிற்று. அது இப்போது மீண்டும் சிக்கலாயிற்று. மருத்துவர்கள் அவரிடம், "நீங்கள் காரியங்களை மெதுவாகச் செய்ய வேண்டும். இப்போது உங்களுடைய எல்லா வேலைகளையும் நிறுத்திவிட்டு, ஓய்வெடுக்க வேண்டும்," என்று கூறினார்கள். அந்த நாட்களில், இப்படிச் சொன்னால், "நீங்கள் கொஞ்சம் ஆரோக்கியமான காற்றைச் சுவாசிப்பதற்காக கிராமப்புறதுக்குச் செல்ல வேண்டும்," என்று பொருள். எனவே, யூத சமூகங்களில் ஒரு மிஷனரியாகச் செல்லவிருந்த அந்தத் தருணத்தில், ஓய்வுக்காக அவர் டீக்ன்மவுத் என்ற ஒரு கடலோர நகரத்திற்கு அனுப்பப்பட்டார்.
டீக்ன்மவுத் ஒரு சிறிய கடற்கரை நகரம், மீன்பிடி நகரம். அங்கு ஒரு துறைமுகம் இருந்தது. அவர் இந்த நகரத்தில் ஓய்வெடுக்கச் சென்றார். போதிய அளவுக்கு ஓய்வெடுத்தால் சீக்கிரம் குணமடையலாம் என்பதற்காக மட்டுமே அவர் இங்கு தங்கினார். ஆனால், அவர் இந்த நகரத்தில் ஹென்றி கிரெய்க் என்ற ஒரு மனிதரைச் சந்தித்தார். ஹென்றி கிரெய்க் ஒரு நல்ல கிறிஸ்தவர், அவர் இந்தச் சிறிய நகரத்தில் பல ஆண்டுகளாக ஊழியம் செய்துகொண்டிருந்தார். அவர் ஜார்ஜ் முல்லரை வேறு சில மிஷனரிகளுக்கு அறிமுகப்படுத்தினார். க்ரோவ்ஸ் என்ற ஒரு மனிதர் அங்கு இருந்தார், அவர் தன்னிடம் இருந்த அனைத்தையும் விற்றுவிட்டு, பெர்சியாவுக்கு மிஷனரியாகச் சென்றிருந்தார். ஜார்ஜ் முல்லர் இந்தக் குடும்பத்தை சந்தித்தார், அதன் விளைவாக அவர் கிளர்ந்தெழுந்தார், எழுச்சியடைந்தார். எனவே, பெர்சியாவுக்குச் செல்லவேண்டும் என்ற எண்ணம் அவருக்கு எழுந்தது. பெர்சியாவுக்கு மிஷனரியாகச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் இதற்குமுன் பலருக்கு வந்ததில்லை. எனவே, மிஷனரியாக வேண்டும் என்ற எண்ணம் மீண்டும் அவருடைய மனதில் ஏற்பட்டது.
வேதாகமத்தை எப்படி முறையாக வாசிக்க வேண்டும் என்று ஹென்றி கிரெய்க்கிடமிருந்து ஜார்ஜ் முல்லர் கற்றுக்கொண்டார். இதற்குமுன்பும் அவர் வேதாகமத்தை வாசித்தார். ஆனால், இப்போது அவர் வேதாகமத்தையும், வேதாகமத்தைப்பற்றிய பல ஆவிக்குரிய புத்தகங்களையும் படித்தார். வேதாகமத்தை வாசிக்கவும், கர்த்தர் என்ன சொல்லுகிறார் என்பதை உன்னிப்பாகக் கவனிக்கவும், அவர் சொல்வதை அவருடைய வார்த்தையின்படி, எழுத்தின்படி, எடுத்துக்கொள்ளவும் ஹென்றி அவருக்குக் கற்றுக்கொடுத்தார். எனவே, ஜார்ஜ் முல்லர் வேதாகமத்தை மிகவும் உத்தமமாக வாசிக்கத் தொடங்கினார், அவர் வேதாகமத்தை ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய நான்குமுறை வாசித்தார்.
அவர் கொஞ்சம் குணமடைந்தபின் மீண்டும் இலண்டனுக்குத் திரும்பினார். "நான் என் படிப்பை முடிக்கும்வரை ஏன் காத்திருக்க வேண்டும்? நான் ஏன் இப்போதே வெளியே சென்று மக்களைச் சந்தித்து, துண்டுப்பிரசுரங்களைக் கொடுத்து அவர்களோடு பேசக்கூடாது? இதை அதிகாரப்பூர்வமாகச் செய்யும்வரை நான் ஏன் காத்திருக்க வேண்டும்?" என்று சிந்திக்கத் தொடங்கினார். எனவே, அவர் தன் எண்ணத்தைச் செயல்படுத்த ஆரம்பித்தார். ஆம், அவர் வெளியே சென்று தெருக்களில் மக்களைச் சந்தித்துத் துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்கத் தொடங்கினார். யூதர்களுக்கு மட்டும் அல்ல, உண்மையில் எல்லோருக்கும் தேவன் தேவைப்படுகிறார் என்று அவர் கண்டுகொண்டார். ஏனென்றால், அந்த நாட்களில் இங்கிலாந்தில் எல்லோரும் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்பட்டாலும், உண்மையான கிறிஸ்தவர்கள் ஒரு சிலர் மட்டுமே இருந்தார்கள். பெரும்பாலானவர்கள் பெயரளவில் மட்டுமே கிறிஸ்தவர்களாக இருந்தார்கள். அவர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்ற முத்திரை இருந்தது. ஆனால், உண்மையில் அவர்களுக்குக் கிறிஸ்துவையும், கிறிஸ்தவத்தையும் தெரியாது. எனவே, யூதர்களுக்கு மட்டும் அல்ல, எல்லாருக்கும் நற்செய்தியை அறிவிக்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.
எல்லாருக்கும் நற்செய்தி அறிவிக்க வேண்டும் என்று அவர் முடிவு செய்தார். கர்த்தர் அவரை அந்தப் பாதையில் நடத்தினார். எனவே, மிஷன் சொசைட்டியுடனான உறவை அவர் துண்டித்தார். அவர்களோடு தன் உறவைத் தொடர்வது சரியல்ல என்று அவர் நினைத்தார். ஏனென்றால், அவர்கள் அவரை யூத மக்களுக்கு மட்டுமே நற்செய்தி அறிவிக்க வேண்டும் என்று விரும்பினார்கள். ஆனால், தேவன் தன்னை இந்த யூத மக்களுக்காக மட்டும் தெரிந்தெடுக்கவில்லை. எந்த அளவுக்கு அவர்களுக்கு நற்செய்தி தேவைப்படுகிறதோ அந்த அளவுக்கு இன்னும் அநேகருக்குத் தேவைப்படுகிறது. அவர்களுக்கும் பணிவிடை செய்யவேண்டும் என்று அவர் உணர்ந்தார். அவரை டீக்ன்மவுத்துக்குத் திரும்பிவருமாறு ஹென்றி கிரெய்க் வேண்டினார். எனவே, அவர் டீக்ன்மவுத்துக்குத் திரும்பிச் சென்றார். அவர் அந்தக் கடலோர நகரத்தில் எபினேசர் சபை என்று அழைக்கப்பட்ட ஒரு சிறிய தேவாலயத்தின் போதகரானார். இந்தச் சிறிய தேவாலயத்தில் படிப்பறிவில்லாத 18 மீனவர்கள் இருந்தார்கள். அவர்கள் இந்தத் தேவாலயத்தின் ஆராதனைகளில் உண்மையும் உத்தமுமாகக் கலந்துகொண்டார்கள். ஜெர்மனியைச் சேர்ந்த இந்த வெளிநாட்டவர் படிப்பறிவில்லாத இந்தப் 18பேர் மட்டுமே இருக்கிற இந்தச் சபையில் பணியாற்ற ஏன் வந்தார் என்று சிலர் ஆச்சரியப்பட்ட்டார்கள். அங்கிருப்பவர்கள் படிக்காதவர்கள், இவரோ நன்கு படித்தவர். இது மிகவும் விசித்திரமானது என்று மக்கள் நினைத்தார்கள். ஆனால், இந்தச் சபை வளர்ந்தது, மக்கள் அவருடைய விசித்திரமான ஆங்கில உச்சரிப்பை ஆர்வமாகக் கேட்டார்கள். ஆனாலும், சபை வளர்ந்தது.
டீக்ன்மவுத்தில் இன்னொரு காரியமும் நடந்தது. க்ரோவ்ஸின் என்ற ஒரு மிஷனரியின் சகோதரியை ஜார்ஜ் முல்லர் இங்கு சந்தித்தார். அவருடைய பெயர் மேரி. அவர் ஜார்ஜ் முல்லரைவிடச் சற்று வயதானவர். தேவன்மேல் உறுதியான விசுவாசம் கொண்டவர். அவர்கள் இருவரும் காதலித்து 1830இல் திருமணம் செய்துகொண்டார்கள்.
அவர்கள் இருவரும் தங்கள் சமூகத்திற்கு ஒரு நல்ல முன்மாதிரியாக வாழ வேண்டும் என்று முடிவுசெய்தார்கள். அந்தச் சிறிய மீனவ நகரம்தான் அவர்களுடைய சமூகம். அது மிகவும் ஏழ்மையான, எளிமையான நகரம். அன்றைய பழக்கத்தின்படி மேரி திருமணமானபிறகு தன்னுடைய நகைகளையும், தேநீர் போடுவதற்கான பெட்டிகளையும், வேறுசில தட்டுமுட்டுச் சாமான்களையும் தன்னுடன் கொண்டு வந்திருந்தார். அவர் அவைகளைத் தங்கள் புதிய வீட்டிலே, ஜார்ஜ் முல்லர் வாழ்ந்த வீட்டிலே, ஒழுங்காக அடுக்கிவைத்தார்கள். ஜார்ஜ் முல்லர் மட்டும் அந்த வீட்டில் இருந்தபோது அங்கு பெரிய சாமான்கள் ஒன்றும் இருக்கவில்லை. இப்போது கொஞ்சம் சாமான்கள் இருந்தன; வீடும் அழகாக, நேர்த்தியாக இருந்தது.
ஆனால், ஜார்ஜ் வீட்டைச் சுற்றிப்பார்த்துவிட்டு, "நமக்கு இவைகள் தேவையில்லை. நாம் இவைகளைப் பிறருக்குக் கொடுத்துவிட வேண்டும் அல்லது விற்று, அந்தப் பணத்தை ஏழைகளுக்குக் கொடுக்க வேண்டும். நாம் மிக எளிமையாக வாழ வேண்டும். நாம் யாருக்குப் பணிவிடை செய்கிறோமோ அவர்களைப்போலவே நாமும் இருக்க வேண்டும்," என்று தன் மனைவியிடம் சொன்னார். ஆகவே, மேரி தன் சாமான்களையெல்லாம் விற்று, அந்தப் பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்தார்.
அது மட்டும் அல்ல. ஒருநாள் ஜார்ஜ் வேதத்தைப் படித்துக்கொண்டிருந்தபோது ஒரு காரியம் அவருக்கு நெருடலாக இருந்தது. கொஞ்ச நாட்களாகவே அது அவருடைய மனச்சாட்சியைத் தொந்தரவுசெய்துகொண்டிருந்தது. அந்த நாட்களில் அது மிகவும் பாரம்பரியமான ஒன்று. ஆலயத்தின் முன்னிருக்கைகளை வாடகைக்கு விடும் ஒரு பழக்கம் இருந்தது. சபையின் பாஸ்டர் இந்த இருக்கைகளை வாடகைக்கு விட்டு, அதனால் கிடைக்கும் வருமானத்தை எடுத்துக்கொண்டார். பணக்காரர்கள் அந்த இருக்கைகளை வாடகைக்கு வாங்குவார்கள். பெரிய பணக்காரர்கள் முன்னிருக்கையில் உட்கார்ந்தார்கள். அவர்கள் பாஸ்டருக்கு நெருக்கமானவர்களானார்கள். அந்த இருக்கைகள் வசதியாக இருந்தன. சாய்ந்துகொள்வதற்கு தலையணைபோன்றவை கொடுக்கப்பட்டன. இந்தப் பழக்கம் அன்று எல்லாச் சபைகளிலும் இருந்தது. இது ஏதோ ஒன்றிரண்டு சபைகளில் மட்டும் அல்ல, ஐரோப்பா முழுவதும் இந்தப் பழக்கம் இருந்தது, இது மிகவும் சாதாரணமானது. ஆனால், ஜார்ஜ் இதை விரும்பவில்லை. இது வேதத்திற்கு முரணானது என்று அவர் உணர்ந்தார். சபையின் விவகாரங்களில் பணக்காரர்களின் தலையீடு அதிகமாக இருந்தது. ஏழை மக்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. சபையிலும் அவர்கள் கடைசியில் எங்கோவொரு மூலையில் உட்கார்ந்திருந்தார்கள். எனவே, அவர்களை யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆகையால், இருக்கைகளை வாடகைக்கு விடும் பழக்கத்தை ஒழித்தாக வேண்டும் என்று அவர் நினைத்தார். எனவே, அவர் தன் மனைவியிடம், "நான் சபையிலிருந்து சம்பளம் வாங்குவதை விரும்பவில்லை. இதுபோன்ற எல்லாவற்றையும் நான் விட்டுவிடப்போகிறேன்," என்றார். அதற்கு அவருடைய மனைவி கொஞ்சம் சந்தேகத்தோடு, "நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?" என்று கேட்டார். "இனிமேல் இந்த வாடகைமூலம் கிடைக்கும் வழக்கமான வருமானத்தை நான் விரும்பவில்லை, அது தவறு என்று நான் நினைக்கிறேன்" என்றார். அவள், "சரி, அப்படியானால் நாம் எப்படிப் பிழைக்கப் போகிறோம்?" என்று கேட்டார். அதற்கு அவர், “கர்த்தர் தருவார்” என்றார். அவருடைய மனைவி, "சரி" என்று சொன்னார்.
எனவே, அவர்கள் அந்தப் பழக்கத்தைக் கைவிட்டார்கள்; அதற்குப்பதிலாக, அவர்கள் ஆலயத்தின் பின்புறத்தில் ஒரு சிறிய பெட்டியை வைத்தார்கள். அதில் "மனஉற்சாகமான காணிக்கை" என்று எழுதிவைத்தார்கள் பொதுமக்கள், குறிப்பாக பாஸ்டர்கள், இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்கள். இது தேவையற்றது என்றும், இது பாரம்பரியத்தையும், பழக்கத்தையும் மீறும் செயல் என்றும் அவர்கள் நினைத்தார்கள். அது மட்டுமல்ல, மக்கள் காணிக்கை கொடுக்கவும் விரும்பவில்லை. இப்போது யார் எங்கு வேண்டுமானாலும் உட்காரலாம்; பணம் கொடுத்தாலும் பயன் இல்லை, கொடுக்காவிட்டாலும் பயன் இல்லை என்றாகிவிட்டதால், எதற்காக காணிக்கை கொடுக்க வேண்டும் என்று நினைத்திருக்கலாம். பணம் கொடுத்தால் எதுவும் கிடைக்கப்போவதில்லை, கொடுக்காவிட்டால் எதையும் இழக்கப்போவதில்லை என்ற நிலைமை ஏற்பட்டதால், காணிக்கை எதுவும் கிடைக்கவில்லை. ஜார்ஜ் முல்லரும், மேரியும் மிகவும் துன்பப்பட்டார்கள். அவர்களிடம் ஒன்றும் இல்லை. அதற்குமுன் அவர்களுக்கு ஆண்டுக்கு 55 பவுண்டு சம்பளம் கொடுத்தார்கள். இப்போது அந்தச் சம்பளத்தை வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். இப்போது மக்கள் காணிக்கைப் பெட்டியில் போடும் சில்லறைகளை மட்டுமே நம்பியிருந்தார்கள்..பொதுவாக, மக்கள் காணிக்கை போடவில்லை. சில நேரங்களில் சிலர் கொடுத்தார்கள், பலர் கொடுக்கவில்லை.
ஆனால், ஜார்ஜ் முல்லர் தன் முடிவிலும், தன் செயலிலும் உறுதியாகவும், தெளிவாகவும் இருந்தார். ஏனென்றால், அவர் கர்த்தருடைய வார்த்தையை நம்பினார். நாம் கர்த்தரைக் கனம்பண்ணினால், அவர் நம்மைக் கனம்பண்ணுவார் என்றும், அவர் நம் தேவைகளை நிறைவாக்குவார் என்றும், அவர் நமக்கு வழிகாட்டுவார் என்றும் வேதாகமம் கூறும் வாக்குறுதி அவருக்குத் தெரியும். அவர் அதை நம்பினார். எனவே, அவர் கர்த்தரை நோக்கி, "நான் எடுத்த முடிவுகள் சரியானவை என்று நான் நினைக்கிறேன், எனவே, நான் அவைகளைச் செய்தேன். நீர் எனக்குத் தேவையானவைகளைத் தருவீர் என்று எனக்குத் தெரியும்," என்று சொன்னார்.
சில நேரங்களில் ஜார்ஜ் முல்லரும் அவருடைய மனைவியும் இரவு உணவு சாப்பிடுவதற்காக உட்கார்ந்திருப்பார்கள். ஆனால், அவர்களுக்குமுன்னால் காலித் தட்டும், காலிக் கோப்பையும்தான் இருக்கும். சாப்பிடுவதற்கு எதுவும் இருக்காது. ஒரு ரொட்டித்துண்டு வாங்க ஒரு பைசாகூட இருக்காது. அவர்கள் அங்கே உட்கார்ந்து ஜெபித்துவிட்டு எழுந்துபோய்விடுவார்கள். "தேவனே, உம் கிருபைக்காக நன்றி. உம் ஏற்பாட்டிற்காக நன்றி," என்று ஜெபிப்பார்கள். பல நேரங்களில், பலர் அவருடைய வீட்டுக் கதவைத் தட்டி, "உங்களுக்கு ரொட்டி வேண்டுமா?" என்று கேட்டதாகவும், வேறு சில நேரங்களில் வேறு சிலர், "என்னால் உட்கார்ந்து சாப்பிட முடியவில்லை, ஏனென்றால், நான் இங்கு வந்து இந்த ரொட்டியை உங்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று கர்த்தர் சொன்னார்," என்று சொன்னதாகவும் அவர் தன் நாளேட்டில் எழுதியிருந்தார். இப்படி நடந்தபோதெல்லாம், ஜார்ஜ் கர்த்தருக்கு நன்றி சொல்லியபின், தன் மனைவி மேரியிடம், "இதோ, பார்த்தாயா. கர்த்தர் இந்த முறையும் நமக்கு அருளியிருக்கிறார்," என்று கூறுவாராம்.
இந்த நேரத்தில் ஹென்றி கிரெய்க் பிரிஸ்டலுக்குக் குடிபெயர்ந்தார், பிரிஸ்டல் ஒரு பெரிய நகரம், அவர் பிரிஸ்டல் நகரத்தின் நடுவில், சில தேவாலயங்களில் ஊழியம் செய்ய விரும்பினார், ஜார்ஜ் முல்லரும் தன்னுடன் வர வேண்டும் என்று அவர் விரும்பினார். அந்த நேரத்தில் ஜார்ஜ் முல்லர் டீக்ன்மவுத்தில் இருந்தார். அவர் அங்கு வந்து கொஞ்சக் காலம் ஆயிற்று. தான் அந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றே அவரும் நினைத்தார். எனவே, அவரும் ஹென்றியும் சேர்ந்து ஊழியம்செய்தார்கள். அவர்கள் பிரிஸ்டலில் உள்ள மக்களுக்கு ஊழியம் செய்யத் தீர்மானித்தார்கள். இருவரும் இரண்டு சிறு ஆலயங்களில் ஊழியம் செய்தார்கள். இருவரும் இரண்டு சபைகளில் மாறிமாறி பிரசங்கித்தார்கள். சபையின் இருக்கைகளை வாடகைக்குவிடும் பழக்கத்தை ஒழித்தார்கள். மக்கள் கொடுத்த சிறுசிறு காணிக்கைகளைக்கொண்டு வாழ ஆரம்பித்தார்கள். அவர்கள் இருவரும் மிக எளிமையான வாழ்க்கை வாழ்வதென முடிவு செய்தார்கள். இவ்வாறு வாழ்வதென்றும், சபைகளை நடத்துவதென்றும் தீர்மானித்தார்கள்.
ஜார்ஜ் முல்லரின் மனைவி மேரிக்கு இது கடினமாக இருந்தது. ஏனென்றால், பிரிஸ்டல் ஒரு துறைமுக நகரம். அப்போது எங்கும் தொழில் புரட்சி நடந்துகொண்டிருந்தது. மக்கள் கூட்டம்கூட்டமாக வேலைகளுக்காக நகரங்களுக்குக் குடிபெயர்ந்துகொண்டிருந்தார்கள். பிரிஸ்டலிலும் தொழில்புரட்சி ஏற்பட்டது. எனவே, அந்த நகரம் மிகவும் அழுக்காக இருந்தது. மக்கள் நகரத்துக்குக் குடிபெயர்ந்ததால் நெரிசல் அதிகமாயிற்று. ஏராளமான தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டன. பிரிஸ்டல் மேரிக்குப் பழக்கமான இடம் அல்ல. அந்த நகரமும், அந்த நகரத்தின் சூழலும் மேரிக்கு மிகவும் சிக்கலாயிற்று. அவர் டெவோன், டீக்ன்மவுத்போன்ற அழகான மலைப்பாங்கான பகுதிகளில் வாழ்ந்து பழகிய ஒரு கிராமத்துப்பெண். எனவே, நகரத்தில் வாழ்வது அவருக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. அவர்கள் அங்கு போனபோது, அந்த நகரம் முழுவதும் காலரா நோய் பரவிக்கொண்டிருந்தது. காலரா அவருடைய பிரச்சினையை இன்னும் அதிகமாக்கிற்று. அந்த நாட்களில் காலராவுக்கு உரிய மருந்து இல்லாததால் அந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்குப்பிறகு இறந்துவிடுவார்கள். அந்த நாட்களில் எந்த சிகிச்சையும் இல்லை. அவர்கள் பிரிஸ்டலுக்கு சென்றபோது இந்தக் காலரா பயங்கரமாகப் பரவிக்கொண்டிருந்தது.
முல்லருக்கு இது மிகவும் சிக்கலாகிவிட்டது. ஏனென்றால், அவரையும் ஹென்றியையும் மக்கள் தங்கள் வீடுகளுக்கு அழைத்தார்கள். மக்கள் காலராவினால் இறந்துகொண்டிருந்தார்கள். நோய்வாய்ப்பட்ட மக்களுக்காகவும், மரணத்தருவாயில் இருந்த மக்களுக்காகவும் ஜெபிக்க வருமாறு மக்கள் அவர்களை அழைத்தார்கள். அவர்களுடைய வீடுகளுக்குப் போவதாலும், நோய்வாய்ப்பட்டவர்கள்மேல் தங்கள் கைகளைவைத்து ஜெபிப்பதாலும் அவர்களுக்கும் நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாயின. இந்தக் கட்டத்தில், மேரி கர்ப்பமாக இருந்தார். அது அவர்களுடைய முதல் குழந்தை. ஜார்ஜ் காலராவினால் பாதிக்கப்பட்டு இறந்துவிடுவாரோ என்றும், அதனால் தானும் குழைந்தையும் இந்தப் பூமியில் தனியாக வாழ நேரிடுமோ என்றும் அவர் மிகவும் பயந்தார்.
இன்னொரு ஆபத்தான காரியம் என்னவென்றால், ஏராளமான மக்கள் ஆலயங்களுக்கு வர ஆரம்பித்தார்கள். ஏனென்றால், மரணபயம் எல்லாரையும் கவ்விக்கொண்டது. ஜார்ஜ் முல்லரும், ஹென்றியும் ஊழியம் செய்த பெதஸ்தா ஆலயத்துக்கும், கிதியோன் ஆலயத்துக்கும் மக்கள் திரண்டுவந்தார்கள். மக்கள் கூட்டம் அலைமோதியது. மக்கள் கூட்டத்தினால், நோய் எளிதில் பரவக்கூடும் என்பதால் மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களை முற்றிலும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டார்கள். ஆனால், ஆலயங்களுக்கு வருபவர்களை அவர்களால் வெளியேறச் சொல்ல முடியவில்லை. எனவே, ஜார்ஜ் முல்லரும், ஹென்றியும் தங்கள் சபைக்காக ஊக்கமாக ஜெபித்தார்கள். ஆலயங்களுக்கு வருபவர்கள் யாரும் நோய்க்கு ஆளாக மாட்டார்கள் என்று நம்பினார்கள். உண்மையில், அவர்களுடைய சபைகளில் ஒரோவொருவர் மட்டுமே காலராவால் இறந்தார் என்று காலரா நின்றபின் பல மாதங்களுக்குப்பிறகு அவர்கள் தெரிந்துகொண்டார்கள்.
அவர்களுடைய முதல் குழந்தையின் பெயர் லிடியா. மிகக் கடினமான இந்த நேரத்தில்தான் அவள் பிறந்தாள், அந்தக் குழந்தை உயிர் பிழைத்தது தேவ கிருபை, ஆச்சரியம்.
மிஷனரியாக வேண்டும் என்ற எண்ணத்தை ஜார்ஜ் முல்லர் ஒருபோதும் கைவிடவில்லை. உலகத்தின் கடைசிமுனைவரை சென்று நற்செய்தி அறிவிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருடைய மனதில் இன்னும் இருந்தது. அவர் ஒரு நாள் பிரிஸ்டலின் தெருக்களில் இதைப்பற்றி யோசித்துக்கொண்டு நடந்து போய்க்கொண்டிருந்தார். அப்போது, ஒரு சிறிய கை அவருடைய முழங்கையைத் தட்டியது. அவர் திரும்பிப் பார்த்தார், அங்கு ஒரு சிறுமி நின்றுகொண்டிருந்தாள். சுமார் ஐந்து வயது இருக்கலாம். அவள் தன் முதுகில் ஒரு சிறுவனைச் சுமந்துகொண்டிருந்தாள், அவனுக்கு அநேகமாக ஒரு வயது இருக்கலாம். அவள் அழுக்காக இருந்தாள், பரட்டைத் தலை, உடல் முழுவதும் குப்பை. கால்களில் காலணிகள் இல்லை, கிழிந்த ஆடை. முதுகில் இருந்த குழந்தை எலும்பும் தோலுமாக இருந்தது. உயிர் இருக்கிறதா இல்லையா என்று சொல்லமுடியாத அளவுக்கு அசைவற்றிருந்தது. அந்தச் சிறுமி கையை நீட்டி அவரிடம் பிச்சை கேட்டாள். ஜார்ஜ் முல்லர் அவளுக்குப் பிச்சை போட்டபின், "உன் பெற்றோர் எங்கே? நீ எங்கே வாழ்கிறாய்?" என்று கேட்டார். அவள், "என் அம்மா காலராவால் இறந்துவிட்டாள், சுரங்க வேலைக்குப்போன என் தந்தை சுரங்கத்திலிருந்து திரும்பி வரவில்லை," என்று கூறினாள்.
அப்போது தேவனே அவருடைய முழங்கையில் தட்டி, "இதுதான் நீ செய்ய வேண்டிய ஊழியம். இதுதான் நீ ஊழியம் செய்யவேண்டிய களம்," என்று சொன்னதுபோல் இருந்ததாம். தான் ஊழியம் செய்யவேண்டிய இடம் பெர்சியாவோ, சீனாவோ அல்லது தொலைதூர இடங்களோ அல்ல, மாறாக இங்கு, பிரிஸ்டோலில், தன் கண்களுக்குமுன் இருக்கிறது என்பதை அவர் உணர்ந்தார்.
காலராவினால் அநேகர் இறந்ததால், ஏராளமான குழந்தைகள் அனாதைகளாகிவிட்டார்கள் என்பதை அவர் தெரிந்துகொண்டார். அநேகக் குழந்தைகள் தங்கள் இரு பெற்றோறையும் இழந்திருந்தார்கள். பலர் தாயை மட்டும் இழந்திருந்தார்கள், ஆனால், தாய் இல்லாமல் குழந்தைகளைப் பராமரிக்கமுடியாததால் தந்தைமார்கள் குழந்தைகளை விட்டுவிட்டுப் போய்விட்டார்கள். அதனால் ஏராளமான குழந்தைகள் தெருக்களில் அனாதைகளாகச் சுற்றித்திரிந்தார்கள், உணவுக்காகப் பிச்சை எடுத்தார்கள். தங்குவதற்கு இடம் இல்லாத பல குடும்பங்கள் இருந்தன. ஏனென்றால், தந்தை இறந்துவிட்டார், தாயால் குழந்தைகளை ஆதரிக்கமுடியவில்லை, வாடகை செலுத்த முடியவில்லை. எனவே, தான் ஊழியம் செய்ய வேண்டிய இடம் பிரிஸ்டலில் தன் கண் எதிரே இருப்பதைக் கண்டார்.
உடனடியாக, அவர் ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பினார். எனவே, அவர் தன் மனைவியிடம், நிறையக் கஞ்சி தயாரிக்கச் சொன்னார். அவர் எல்லாக் குழந்தைகளையும் கஞ்சி குடிக்க வருமாறு அழைத்தார். அவர் வாழ்ந்த இடத்தில் உள்ள எல்லாக் குழந்தைகளும் கஞ்சி குடிக்க வந்தார்கள். நாட்கள் செல்லச்செல்ல கஞ்சி குடிக்க வந்த குழந்தைகளின் எண்ணிக்கை பெருகியது. அவர்கள் கைகளையும், முகங்களையும் கழுவுவதற்கு வெளியே தண்ணீர் வைத்தார்கள். பின்னர், அவர்கள் வரிசையாக வந்து நின்றார்கள். அவர்களுடைய சாப்பாட்டு அறையில் தற்காலிகமாக ஒரு நீண்ட மேசையை வைத்தார்கள். அந்தக் குழந்தைகள் அந்த மேஜையைச்சுற்றி ஆப்பிள் கூடைகளில் உட்கார்ந்தார்கள். அவருடைய மனைவி மேரி ஓட்ஸ் கஞ்சியும், இனிப்பான தேநீரும் வழங்கினார். அப்போது, ஜார்ஜ் வேதாகமத்திலிருந்து பேசினார். அவர் அவர்களுக்கு வேதாகமத்திலிருந்து கதைகள் சொன்னார். சில நேரங்களில் அவர் வேதத்தின் சில பகுதிகளை நடித்துக்காட்டினார். இந்தப் பழக்கம் "காலைஉணவு மன்றம்" என்றழைக்கப்பட்டது. இதில் நாளடைவில் பெரியவர்களும் கலந்துகொண்டார்கள்.
ஆனால், "இது ஒன்றும் இல்லை; இது போதாது, இது பாதிக் குழந்தைகளுக்குக்கூட போதவில்லையே! இங்கு இருக்கும் எல்லா அனாதைக் குழந்தைகளுக்கும் ஒருவேளை சாப்பாடுகூடக் கொடுக்க முடியவில்லையே!" என்று ஜார்ஜ் வருந்தினார். அவர் இன்னும் அதிகமாகச் செய்ய விரும்பினார். எனவே, அந்தத் தேவையை நிறைவாக்க அவர் வழக்கத்துக்கு மாறாக எதையாவது தொடங்க முடிவு செய்தார். அவர் "வேத அறிவு நிலையம்" என்று ஒன்றைத் தொடங்க விரும்பினார், இந்த யோசனை நிச்சயமாகத் தேவனிடமிருந்து வந்ததாக அவர் நினைத்தார், ஆனாலும், இதை அவரால் உறுதியாகச் சொல்லமுடியவில்லை. பள்ளிகள் தொடங்க வேண்டும் என்று விரும்பினார். பிற பள்ளிகளைப்போன்ற பள்ளிகள் இந்த ஏழைக் குழந்தைகள் அனைவருக்கும் வேண்டும் என்று அவர் உணர்ந்தார். தான் பள்ளிக்கூடங்கள் தொடங்கவில்லையென்றால், இந்தக் குழந்தைகள் ஒருபோதும் பள்ளிக்குச் செல்லமாட்டார்கள் என்று அவர் உறுதியாக நினைத்தார். உலகக் கல்விக்கான பள்ளிகள் மட்டுமல்ல, வேதாகமத்தைக் கற்றுக்கொடுக்க ஞாயிற்றுக்கிழமை பள்ளிகளும் தொடங்கத் திட்டமிட்டார். அவர் பெரியவர்களுக்காகவும் ஒரு பள்ளி ஆரம்பித்து, அதில் பெரியவர்களுக்குப் பயிற்சி கொடுக்க விரும்பினார். "இந்த ஏழை மக்களால் விலை கொடுத்து வேதாகமம் வாங்க முடியாது என்பதால் அவரே பணம் கொடுத்து வேதாகமம் வாங்கி அந்த மக்கள் அனைவருக்கும் இலவசமாக விநியோகிக்க விரும்பினார். மற்ற இடங்களுக்குச் செல்லும் மிஷனரிகளையும் அவர் ஆதரிக்க விரும்பினார். அவரிடம் இத்தனை யோசனைகள் இருந்தன, தான் தொடங்கவிருக்கும் வேத அறிவு நிலையத்தைப்பற்றி அவர் மக்களிடம் மிகவும் உற்சாகமாகப் பேசினார், எல்லோரும் அவரைப் பார்த்து நகைத்தார்கள். இவைகளையெல்லாம் நடைமுறைப்படுத்த அவரிடம் ஒரு பைசாகூட இல்லை. சாப்பாட்டுக்கே வழியில்லாமல் திண்டாடினார். யாராவது காணிக்கை தரமாட்டார்களா, யாராவது கொஞ்சம் ரொட்டி தரமாட்டார்களா என்ற நிலைமையில்தான் அவர் இன்னும் வாழ்ந்துகொண்டிருந்தார். இப்படிப்பட்ட நிலைமையில் இருப்பவர் பள்ளிக்கூடம் ஆரம்பிக்க வேண்டும், வேத அறிவு நிலையம் தொடங்க வேண்டும், முதியவர்களுக்கும் பயிற்சிப்பள்ளி ஆரம்பிக்க வேண்டும் என்று சொன்னால் பிறர் நகைக்காமல் வேறு என்ன செய்வார்கள்!
தன் எண்ணங்கள் ஈடேறவில்லை என்பதால் ஜார்ஜ் கொஞ்சம் விரக்தியடைந்தார். அவருடைய திட்டங்களை நிறைவேற்ற அவரிடம் பணம் இல்லை, அவரிடம் எண்ணங்களும், திட்டங்களும் மட்டுமே இருந்தன, அவர் ஒருநாள், விரக்தியோடு முழங்கால் படியிட்டு ஜெபித்தார். அவர் கர்த்தரை நோக்கி, "ஆண்டவரே, இந்த எண்ணங்களும், திட்டங்களும் வெறுமனே என்னுடையவைகள்தானா அல்லது இவைகள் உம்முடையவைகளா என்று நீர் எனக்குக் காட்ட வேண்டும். இவை உம்முடையவைகள் என்றால், அதற்கு ஓர் அடையாளமாக நீர் எனக்கு யார்மூலமாவது 20 பவுண்டுகள் அனுப்பித்தர வேண்டும், அந்தப் பணத்தைக்கொண்டு நான் உடனடியாக வேதாகமங்கள் வாங்கி இந்த ஏழைக் குடும்பங்களுக்கு கொடுக்கத் தொடங்குவேன்," என்று சொன்னார்.
அவர் ஜெபித்துமுடித்து எழுந்தபோது, யாரோவொருவர் கதவைத் தட்டினார். அங்கு ஒரு பெண்மணி நின்று கொண்டிருந்தார். அவர் கையில் ஓர் உறை இருந்தது. அவர் முல்லரிடம், "இது உங்களுக்குப் பயன்படும் என்று நான் நினைக்கிறன்," என்று சொல்லி தன் கையிலிருந்த உறையை முல்லரிடம் கொடுத்தார். ஜார்ஜ் முல்லர் உடனடியாகத் தேவனுக்கு நன்றி சொன்னார். அவருடைய ஜெபத்திற்குத் தேவன் உடனடியாகப் பதில் கொடுத்தார். அந்தப் பெண்மணி கொடுத்த உறையை அவர் இன்னும் திறந்து பார்க்கவில்லை. திறந்து பார்க்கத் தேவையில்லை, ஏனென்றால், அந்த உறையில் 20 பவுண்டுகள் இருக்கும் என்று அவருக்குத் தெரியும். ஆயினும், அவர் அந்த பெண்மணியிடம், "இந்த பணத்தை நான் ஏதாவது குறிப்பிட்ட காரியத்துக்குப் பயன்படுத்த வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா?" என்று கேட்டார். அவள், "ஐயா, எனக்குத் தெரியாது, உங்களுக்குப் பல தேவைகள் இருக்கலாம், ஆனால், இந்தப் பணத்தைக்கொண்டு நீங்கள் சில வேதாகமங்கள் வாங்கி இந்த ஏழைக் குடும்பங்களுக்கு கொடுக்கலாம் என்று நான் நினைத்தேன்," என்று சொன்னாள். எனவே, தேவன் தன் ஜெபத்தைக் கேட்டார் என்பதையும், தன் எண்ணங்களும் திட்டங்களும் வெறுமனே தன்னுடையவை அல்ல, மாறாக அவைகள் தேவனுடையவை என்பதையும் ஜார்ஜ் முல்லர் புரிந்துகொண்டார். தன் எண்ணங்கள் பரலோகத்திலிருந்து வந்தவை என்று அவர் திட்டவட்டமாகப் புரிந்துகொண்டார். இந்த யோசனை தேவனிடமிருந்தும், பரலோகத்திலிருந்தும் வந்தது என்று அவர் உறுதியாக நம்பியதால், அதற்குத் தேவையான எல்லாவற்றையும் கர்த்தர் தருவார் என்று அவர் அறிந்திருந்தார். எனவே, தன்னிடம் ஒரு பைசாக்கூட இல்லையே என்று கவலைப்படவில்லை. எப்படியாவது தேவன் எல்லாவற்றையும் வழங்குவார் என்பதை அவர் அறிந்திருந்தார்.
ஆம், கர்த்தர் கொடுத்தார். சில நேரங்களில் கர்த்தர் ஒருசில பென்சில்கள் மட்டுமே கொடுத்தார். வேறு சில நேரங்களில் சிலர் நாற்காலிகள் கொடுத்தார்கள், சிலர் ஒரு மேஜையை நன்கொடையாகக் கொடுத்தார்கள். இதுபோன்ற பல்வேறு காரியங்களைக் கர்த்தர் செய்தார். சிலர் பணம் நன்கொடையாக வழங்கினார்கள். சிலர் கொஞ்சம் கொடுத்தார்கள், சிலர் அதிகம் கொடுத்தார்கள். கர்த்தர் கொடுத்த எல்லாவற்றையும் அவர் ஒரு புத்தகத்தில் மிக விவரமாக எழுதிவைத்தார். ஏனென்றால், அவையனைத்தும் தேவன் தனக்குத் தந்த நன்கொடை என்று அவர் உறுதியாக நம்பினார்.
இப்படியெல்லாம் நடந்துகொண்டிருந்த அதே நேரத்தில், அவருடைய குடும்பத்தில் ஒரு சோகம் நிகழ்ந்தது. அவர்களுடைய இரண்டாவது குழந்தை எலியாவுக்கு அப்போது ஒரு வயது இருக்கும். அவன் நோய்வாய்ப்பட்டான். நோயுற்ற சில நாட்களில் அவன் இறந்துவிட்டான். இது அவர்களுக்கு பெரும் துக்கமாக இருந்தது. அதே வாரத்தில் அவருடைய மனைவியின் தந்தையும் இறந்தார். எனவே, ஒரே வாரத்தில் அவர்கள் இரண்டு இறுதிச்சடங்குகளை ஏற்பாடுசெய்யவேண்டியிருந்தது. இது அவர்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது. இதற்குப்பின், ஜார்ஜ் மீண்டும் மிகவும் நோய்வாய்ப்பட்டார். மருத்துவர் அவரிடம், "நீங்கள் உங்கள் வேலையையெல்லாம் நிறுத்திவிட்டு, இந்த ஊரைவிட்டு கிராமப்புறத்துக்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள், உங்கள் குடும்பத்தையும் அழைத்துச் செல்லுங்கள்," என்று அறிவுறுத்தினார்.
மருத்துவர் சொன்னபடி, அவர் எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு, தன் குடும்பத்தோடு கிராமப்புரத்துக்குச் சென்றார். ஹென்றி கிரெய்கைத் தனியாக விட்டுவிட்டுச் செல்வது அவருக்குப் பிடிக்கவில்லை. அப்படிச் சென்றால், ஹென்றி நிறைய வேலைகளைச் செய்யவேண்டியிருக்கும் என்பதை நினைத்து அவர் வருந்தினார். அவர் கிராமத்துக்குச் சென்று ஓய்வெடுத்துக்கொண்டிருந்தபோதும் அவர் ஒவ்வொரு நாளும் ஹென்றிக்காக ஜெபித்தார். கிராமத்தில் தங்கியிருந்த காலத்தை அவர் நன்றாகப் பயன்படுத்தினார். அவர் வேதத்தை நிறைய வாசித்தார்; அதிகமாகப் படித்தார்; அதிகமாக ஜெபித்தார். அவர் செய்த இன்னொரு காரியம் என்னவென்றால், அவர் பல பரிசுத்தவான்களைப்பற்றிய வாழ்க்கை வரலாறுகளைப் படித்தார். இந்த நேரத்தில்தான் அவர் ஜான் நியூட்டனின் வாழ்க்கை வரலாற்றையும் படித்தார். கொஞ்ச நாட்களில் அவர் முழுமையாகக் குணமடைந்தார். எனவே, அவர் தன் ஊழியத்தைத் தொடர பிரிஸ்டலுக்குத் திரும்பினார்.
அவருடைய பள்ளியில் இருந்த குழந்தைகளை அவர் கண்ணுங்கருத்துமாகப் பார்த்துக்கொண்டார். அவருடைய பள்ளியில் இப்போது 100 குழந்தைகள் சேர்ந்திருந்தார்கள். அவர் ஒருநாள் பள்ளியில் இருந்த குழைந்தைகளைப் பார்த்துக்கொண்டு வரும்போது ஒரு குழந்தை இல்லாததைக் கவனித்தார். வராத குழந்தையைக்குறித்து அவர் ஆசிரியர்களிடம், "அந்தப் பையன் எங்கே? அவன் ஏன் இன்று வரவில்லை?" என்று விசாரித்தார். அதற்கு ஆசிரியர், "அவனுடைய குடும்பம் அரசு நடத்தும் பணிமனைக்குப் போய்விட்டது," என்று கூறினார். அவர் ஓய்வெடுப்பதற்காக அந்த நகரத்தைவிட்டு வெளியே போயிருந்த காலத்தில் நகரத்தின் சட்டம் மாறியிருந்தது என்பதை அவர் அறிந்தார். அரசாங்கத்திடம் பணமில்லை. எனவே, அரசு வழக்கமாக ஏழைகளுக்குக் கொடுத்த சலுகைகளையும், உதவித்தொகையையும் நிறுத்திவிட்டது. அதற்குப்பதிலாக, அரசு இதுபோன்ற பணிமனைகளை அமைத்து இந்த ஏழைகளை அங்கு தங்கவைத்தார்கள். ஏற்கெனவே, இதுபோன்ற பல பனிமனைகள் இருந்தன. ஆனால், அவைகள் போதாது என்பதால் இன்னும் பல பணிமனைகளை நிறுவினார்கள். இந்தப் பணிமனைகள் சுத்தமாக இருக்காது; ஆரோக்கியமான சூழல் கிடையாது. அங்கு மிக மோசமான சூழ்நிலை நிலவியது. மக்கள் ஆடுமாடுகளைப்போல் அடைத்துவைக்கப்பட்டார்கள். இந்தப் பணிமனைகளைப்பற்றி வரலாற்று ஆவணங்கள் விவரமாகக் கூறுகின்றன. வேலையில்லாததால் வருமானம் இல்லை. வருமானம் இல்லாததால் வீட்டு வாடகை கொடுக்க முடியவில்லை. குடும்பத்தைப் பராமரிக்க இயலவில்லை. எனவே, அரசாங்கம் இப்படிப்பட்ட குடும்பங்களை இந்த இடங்களில் தங்க வைத்தார்கள். குடும்பத்தில் உள்ள அனைவரையும் ஒரே இல்லத்தில் தங்க வைத்திருந்தால்கூட பரவாயில்லை என்று சொல்லலாம். அரசு இப்படிப்பட்ட குடும்பங்களைப் பிரித்து குடும்பத்திலிருந்து நபர்களைத் தனித்தனியே வெவ்வேறு பணிமனைகளில் தங்க வைத்தது. ஆண்கள் ஒரு பக்கம், பெண்கள் இன்னொரு பக்கம், குழந்தைகள் வேறொரு பக்கம். அது மட்டும் அல்ல. அவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. கடினமான எலும்பு முறிக்கும் வேலை செய்தார்கள். ஆம், உண்மையில், அவர்கள் எலும்புகளை உடைத்து உரமாக மாற்றும் வேலை செய்தார்கள். உழைப்புக்கு ஏற்ற உணவு கிடைக்கவில்லை. சத்தற்ற, சுத்தமில்லாத, உணவு குறைவாகவே கிடைத்தது. அங்கிருந்த சூழலை விவரிப்பது சற்று கடினம். அது அழுக்கடைந்த இருட்டறை. ஆனால், அரசாங்கம் அதைப் பொருட்படுத்தவில்லை. ஏனெனில், அந்தப் பணிமனைகள் அங்கிருந்தவர்களுக்கு ஒரு தண்டனை என்றும், மற்ற ஏழைகளுக்கு ஓர் எச்சரிக்கை என்றும் அரசு நினைத்தது. "நான் அந்தப் பணிமனைக்குச் செல்ல விரும்புகிறேன். அங்கு குறைந்தபட்சம் உணவாவது எனக்குக் கிடைக்கும்," என்று அவர்கள் நினைத்துவிடக்கூடாது என்பதில் அரசு கவனமாக இருந்தது. ஏழைகள் அந்தப் பணிமனைகளுக்கு வராதபடி பார்த்துக்கொள்வதில் அரசு கவனமாக இருந்தது. 1800களில் வறுமை கிட்டத்தட்ட ஒரு குற்றமாகக் கருதப்பட்டது.
அந்தச் சிறுவனின் குடும்பம் மிக ஏழைக் குடும்பம். எனவே, அவர்கள் அரசு நடத்தும் பணிமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்கள். அதனால், அவன் பள்ளிக்கு வரவில்லை. அது மட்டும் இல்லை. அவன் பெரியவர்களைப்போல் வேலையும் செய்யவேண்டியிருந்தது. ஏனென்றால், ஏழு வயதுக்கு மேற்பட்ட எல்லாரும் வேலைசெய்ய வேண்டியிருந்தது.
தன் பள்ளியில் இருக்கும் எல்லாக் குழந்தைகளுக்கும் இதுதான் நடக்கும் என்பதை ஜார்ஜ் உணர்ந்தார், ஏனென்றால், அவருடைய பள்ளிக்கு வந்துகொண்டிருந்த எல்லாக் குழந்தைகளும் ஏழைகளிலும் ஏழைகள். அவர்களுடைய குடும்பங்களில் எதுவும் இல்லை, வசதியோ, வாய்ப்போ இல்லை. தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பக்கூடிய வசதி அவர்கள் யாருக்கும் இல்லை. எனவேதான், ஜார்ஜ் பள்ளி ஆரம்பித்தார். அந்தப் பிள்ளைகள் அந்தப் பள்ளியில் படித்தார்கள். ஆனால், முந்தியோ பிந்தியோ அவர்கள் அனைவரும் அரசு நடத்தும் பணிமனைகளுக்குக் கொண்டுசெல்லப்படுவார்கள் என்பதை அவர் உணர்ந்தார். அதை நினைத்து அவர் வருந்தினார்.
ஜார்ஜ் முல்லர் இதைப்பற்றி மிகவும் வருத்தப்பட்டார். "ஏதாவது ஒரு வழி இருக்க வேண்டும், இந்தக் குழந்தைகளுக்கு உதவவும், இவர்கள் தொடர்ந்து படிப்பதற்கும் நான் செய்யக்கூடிய ஏதோவொன்று இருக்க வேண்டும். அது என்ன?" என்று அவர் சிந்திக்க ஆரம்பித்தார். அவர் அங்கிருந்த அனைவரையும் உன்னிப்பாகக் கவனித்தார். அப்போது அங்கு எல்லாருக்கும் ஒரு பொதுவான காரியம் இருப்பதை அவர் கவனித்தார், அது என்னவென்றால், அவர் ஊழியம் செய்த இடத்தில் வாழ்ந்த அனைவரும் கொடிய வறுமையில் வாழ்ந்தார்கள்; அவர்கள் அனைவரும் அரசு நடத்தும் பணிமனைகளுக்குப் போகப் பயந்தார்கள். அப்படிப்பட்ட நிலைமை தங்களுக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக குடும்பத்தில் இருந்த பெரியவர்கள் கடுமையாக உழைத்தார்கள். ஒரு நாளில் அவர்கள் பெரும்பாலும் இரண்டு அல்லது மூன்று வேலைகள் செய்தார்கள். ஒரு நாளில் அவர்கள் 16 மணிநேரம் உழைத்தார்கள். வாரத்தில் ஆறு நாட்களும் வேலைசெய்தார்கள். ஏனெனில், தங்கள் குடும்பங்கள் அரசு பணிமனைகளுக்குக் கொண்டுசெல்லப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. அவர்கள் அனைவரும் அதை வெறுத்தார்கள். அந்தக் கொடுமையான இடங்களுக்குப் போவதையும், குடும்பங்கள் பிரிந்துபோவதையும் நினைத்து அவர்கள் பயந்தார்கள்.
"நீங்கள் கர்த்தருக்குமுன்பாக அதிக நேரம் செலவிடவேண்டும். அவருடைய வார்த்தையை நீங்கள் படிக்க வேண்டும்," என்று ஜார்ஜ் முல்லர் அந்த மக்களை உற்சாகப்படுத்தினார். அவர்கள் அவரைப் பார்த்து நகைத்தார்கள். "நாங்கள் ஒவ்வொரு நாளும் 16 மணி நேரம் வேலை செய்கிறோம். வாரத்தில் ஆறு நாட்களும் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. வேலை முடித்து வீட்டுக்கு வரும்போது களைத்துப்போகிறோம். கொஞ்சம் ஓய்வெடுக்கிறோம். அடுத்த நாள் அதே வேலையை மீண்டும் தொடர்கிறோம். நீர் பிரசங்க மேடையிலிருந்து கர்த்தற்குமுன் அதிக நேரம் செலவிடச் சொல்வதும், வேதாகமத்தைப் படிக்கச் சொல்வதும் எளிது. ஆனால், அது எங்களைப்பொறுத்தவரை சாத்தியம் இல்லை," என்று சொன்னார்கள். ஒவ்வொரு நாளும் 16 மணி நேரம், வாரத்தில் 6 நாட்கள் வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பதை அவர்கள் உணர வேண்டும் என்று ஜார்ஜ் விரும்பினார். எனவே, அவர் அவர்களிடம், "நீங்கள் தேவனைக் கனம்பண்ணினால், அவர் உங்கள் தேவைகளைத் தருவார். அவர் உங்கள்மேல் அக்கறை கொண்டவர்," என்று சொன்னார். ஆனால் அவர்களில் பலர், "இது எங்களுக்கு மிஞ்சின காரியம். இதற்காக நாங்கள் எங்கள் குடும்பங்களைப் பணயம் வைக்க வேண்டும் என்று நீர் விரும்புகிறீரா?" என்று கேட்டார்கள்.
முல்லருக்கு ஒரு தீவிரமான எண்ணம் உதித்தது. அவருடைய அந்த எண்ணம், இன்று, நமக்குத் தீவிரமான எண்ணம்போல் தோன்றாமல் போகலாம். ஆனால், அன்று, அது மிகமிகத் தீவிரமான யோசனை. ஓர் அனாதை இல்லம் நிறுவ வேண்டும் என்பதே அந்த யோசனை. அந்தக் காலத்தில் பிரிட்டன் நாடு முழுவதும் மொத்தம் 10 அனாதை இல்லங்கள் மட்டுமே இருந்தன. அந்த அனாதை இல்லங்களில் பணக்காரர்களுக்கு மட்டுமே இடம் கிடைத்தது. நிறைய சொத்துக்களும், வசதி வாய்ப்புகளும் உடையவர்கள் மட்டுமே அனாதை இல்லங்களில் தங்க முடிந்தது. அது மட்டும் அல்ல. நோயுற்றவர்களுக்கும், ஊனமுற்றவர்களுக்கும் அனாதை இல்லத்தில் இடம் கிடைக்கவில்லை. சாதாரண தொழிலாளியின் மகனுக்கோ அல்லது ஒரு வியாபாரியின் மகனுக்கோ அங்கு இடம் கிடைக்காது. ஆகவே, பெரிய பணக்கார அனாதைக்குழந்தைகள் மட்டுமே அந்த அனாதை இல்லங்களில் வாழ்ந்தார்கள். அதனால், ஒரு சிலர் மட்டுமே பயனடைந்தவர்கள்.
"இவர்களுக்கு இங்கே ஏதாவது தேவை. ஏழைகளிலும் ஏழைகளான இவர்களுக்கு நான் ஓர் அனாதை இல்லத்தைத் தொடங்க விரும்புகிறேன், அது வெறுமனே அவர்கள் தங்குவதற்கான ஓர் இடமாக மட்டும் இருக்கப்போவதில்லை. அங்கு அவர்களுக்குக் கல்வி, கைத்தொழில், தொழில்பயிற்சி போன்றவை வழங்கப்படும். நான் அவர்களுக்குத் தேவனுடைய வார்த்தையைக் கற்பிக்க விரும்புகிறேன். நம் பரம பிதா தாய்தகப்பன் இல்லாதவர்களைக்குறித்து மிகவும் அக்கறைப்படுகிறார் என்பதை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்," என்று ஜார்ஜ் முல்லர் நினைத்தார். அந்தக் குழந்தைகள் ஒரு பைசாக்கூடக் கொடுக்க வேண்டியதில்லை என்று அவர் விரும்பினார். அவர்கள் போட்டிருக்கும் கிழிந்த துணியோடு வந்தால் போதும். அதுதான் அவர் விருப்பம். இதற்குத் தேவையான எல்லாவற்றையும் கர்த்தர் தருவார் என்ற விசுவாசத்தோடு அவர் காத்திருந்தார்.
தான் செய்ய நினைத்த, விரும்பிய எல்லாவற்றையும் அவர் மிகுந்த உற்சாகத்தோடு ஆலயத்தில் அறிவித்தார். அவருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்றே எல்லாரும் நினைத்தார்கள். "அவர் வெளிநாட்டவர். அவர் கொஞ்சம் விசித்திரமானவர். அவரிடம் சில வேடிக்கையான, வினோதமான யோசனைகள் உள்ளன, ஏனென்றால் அவர் ஒரு வெளிநாட்டவர்," என்று பெரும்பாலான மக்கள் நினைத்தார்கள். ஆனால், தன்னுடைய இந்தத் திட்டத்தில் தேவன் இருக்கிறார் என்று ஜார்ஜ் உறுதியாக அறிந்திருந்தார், ஆகையால், தான் திட்டமிட்ட காரியங்களைத் தொடர வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்பதில் ஜார்ஜ் உறுதியாக இருந்தார்.
"இவைகளையெல்லாம் எங்கு நிறுவப்போகிறீர்? அனாதை இல்லம் எங்கே இருக்கும்," என்று மக்கள் அவரிடம் கேள்வி கேட்கத் தொடங்கினார்கள், அவர், "எனக்குத் தெரியாது" என்று கூறினார். "இவைகளையெல்லாம் எப்போது தொடங்கப் போகிறீர்?" என்ற கேள்விக்கும், "எனக்கு தெரியாது," என்பதே அவருடைய பதில். "தேவையான தட்டுமுட்டுச் சாமான்களையும், தளவாடங்களையும் எப்படி வாங்கப்போகிறீர்? என்ற கேள்விக்கும், "எனக்கு தெரியாது," என்பதே அவருடைய பதில். அவர்களுடைய எல்லாக் கேள்விகளுக்கும் அவர், "எனக்குத் தெரியாது," என்றே பதிலளிக்க வேண்டியிருந்தது. ஆனால், இவைகளுக்குப்பின்னால் ஏதோவொரு விதத்தில் தேவன் இருக்கிறார் என்று அவருக்குத் திட்டவட்டமாகத் தெரியும். எனவே, இந்தக் கேள்விகளுக்கான எல்லாப் பதில்களையும் தேவன் தருவார் என்று அவர் அறிந்திருந்தார்.
ஜார்ஜ் முல்லர் செய்ய நினைத்த காரியங்களைக் கேள்விப்பட்ட சிலர் தொடப்பட்டார்கள். மேலும் சில நாளேடுகளும், செய்தித்தாள்களும், "வெளிநாட்டுப் போதகர் பிரிஸ்டலின் நடுவில் அனாதை இல்லங்களை அமைக்க விரும்புகிறார், ஆனால், அவைகளை எங்கு நிறுவப்போகிறார் என்று அவருக்குத் தெரியாது," என்று அவரைக் கிண்டல்செய்து செய்தி வெளியிட்டன. அந்தச் சிறிய கட்டுரையைப் பார்த்த சிலர் ஜார்ஜ் முல்லரைக்குறித்து கேள்விப்பட்டார்கள். "உண்மையாகவே தேவன் இந்தத் திட்டத்தில் இருக்கிறார்," என்று அவர்கள் நினைத்தார்கள். சில நேரங்களில் கர்த்தர் கதவைத் திறந்தார், அப்போது சிலர் அனாதை இல்லத்திற்காகத் தங்களிடமிருந்த கரண்டிகளையோ, பாத்திரங்களையோ கொடுத்தார்கள். ஒருவர் 28 தகரத் தட்டுகளையும், ஆறு கோப்பைகளையும் கொடுத்துதவினார். சிலர் கைக்குட்டைகளையும், துவாலைகளையும் கொடுத்தார்கள். மக்கள் இவைகளையெல்லாம் கர்த்தருக்கென்று மனப்பூர்வமாகக் கொடுத்தார்கள் என்றே ஜார்ஜ் முல்லர் உணர்ந்தார்.
ஒரு நாள் யாரோவொருவர் அவருக்கு 100 பவுண்டுகள் அனுப்பியிருந்தார். 100 பவுண்டுகள் என்பது சுமார் இரண்டு வருட ஊதியம். அதை அனுப்பியது யார் என்று அவருக்குத் தெரியும். ஒரு விதவை அந்தப் பணத்தை அனுப்பியிருந்தார். அவருடைய தந்தை அப்போதுதான் இறந்திருந்தார். இறந்துபோன அவருடைய தந்தை விட்டுப்போன சொத்தை அவர் ஜார்ஜ் முல்லருக்கு அனுப்பினார். இது அவருடைய மொத்த சொத்து. அவர் தன்னிடமிருந்த எல்லாவற்றையும் கொடுத்தார். ஆனால், ஜார்ஜ் அதை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. எனவே, அவர் அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு அவளுடைய வீட்டுக்குப் போனார். "நீங்கள் மிகவும் நல்லவர் என்றும், தாராளகுணமுடையவர் என்றும் எனக்குத் தெரியும். ஆனால், நீங்கள் ஒரு விதவை. உங்களுடைய முழு ஆதரவையும், ஆதாரத்தையும் எனக்குக் கொடுத்துவிட்டால், உங்கள் வாழ்க்கைக்கு என்ன செய்வீர்கள்? இந்தப் பணத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது," என்று சொல்லி அதைத் திருப்பிக்கொடுத்தார். அதற்கு அவர், "கர்த்தராகிய இயேசு எனக்காக மரித்தாரே! அப்படியிருக்க நான் அவருக்குக் கொடுப்பது எம்மாத்திரம்," என்றாள்.
ஜார்ஜ் உண்மையிலேயே தொடப்பட்டார். ஏனென்றால், தன் ஊழியம் தனக்காகவோ, தன் சொந்த நலனுக்காகவோ அல்ல. அது எல்லோருக்காகவும், எல்லாரும் பயன் பெறுவதற்காகவும் என்றும் அவருக்குத் தெரியும்.
ஜார்ஜ் முல்லருக்கு இந்த அனாதை இல்லத்தைப்பற்றிய ஒரு தெளிவான குறிக்கோள் இருந்தது. அது பொதுவாக அனாதை இல்லங்கள் நடத்துபவர்களுடைய குறிக்கோள் போன்றதல்ல. தன் குறிக்கோள் என்னவென்று அவர் தன் நாட்குறிப்பில் எழுதிவைத்தார். அவருடைய முதல் குறிக்கோள் என்னவென்றால், இந்த அனாதை இல்லம் கிறிஸ்தவர்களுக்குத் திடமான சாட்சியாக இருக்கும், அங்கு இருப்பவர்கள் தேவனை உறுதியாக நம்புவதற்குக் கற்பிக்க வேண்டும். தேவன் உண்மையுள்ளவர் என்பதை அவர் அறிந்திருந்ததால் அவர் அதைச் செய்ய விரும்பினார். அது மட்டுமல்ல. தேவன் உண்மையுள்ளவர் என்பதையும் இந்த அனாதை இல்லம் காண்பிக்கும் என்று அவர் அறிந்திருந்தார். இது உலகத்திற்கு தேவனுடைய சாட்சியாகவும், ஜார்ஜ் முல்லருடைய சாட்சியாகவும் இருக்கும். அது அவருடைய காலத்திற்கு மட்டுமல்ல, இன்று நமக்கும் சாட்சியாக இருக்கும் என்று ஒருவேளை அவர் நினைத்திருக்கமாட்டார். இன்றுவரை அது அங்கு சாட்சியாக இருக்கிறது.
அனாதைகள்மேலும், அன்புகூர ஆளில்லாதவர்கள்மேலும் தேவன் அக்கறையும், கரிசனையும் கொண்டிருக்கிறார் என்பதை நிரூபிப்பதே அவருடைய இரண்டாவது குறிக்கோள். இந்த எண்ணத்தை அவர் இந்தக் குழந்தைகளுக்கும், உலகத்திற்கும் காட்ட விரும்பினார்.
அவருடைய நோக்கம் நிறைவேற ஆரம்பித்தது. அவருடைய திட்டத்தில் கொஞ்சம் முன்னேற்றம் ஏற்பட்டது. வில்சன் தெரு என்ற ஒரு சிறிய தெரு அவருடைய கவனத்திற்கு வந்தது. அந்தத் தெருவில் மொட்டை மாடி வீடுகள் வரிசைவரிசையாக இருந்தன. அந்தத் தெருவில் ஒரு சிறிய வீடு, மூன்று மாடி வீடு, விற்பனைக்கு இருந்தது. அது பிரிஸ்டல் நகரின் நடுவில் மிகச் சாதாரணமான வீடு. "இதுதான். இதுதான் நாங்கள் பயன்படுத்தப் போகும் வீடு," என்று அவர் தனக்குத்தானே நினைத்துக்கொண்டார்.
அது ஒரு சாதாரணமான வீடு. தரைதளத்தைச் சமையலறையாகவும், நடுத்தளத்தை எல்லாரும் பயன்படுத்துகிற அறையாகவும், மேற்தளத்தைப் படுக்கையறையாகவும் பயன்படுத்தலாம் என்று நினைத்தார். மேற்தளத்தில் சில படுக்கையறைகள் இருந்தன. அதில் 10 பேர் தங்கலாம் என்று அவர் நினைத்தார். நம்முடைய தரத்தின்படி அதில் 10 பேர் தங்க முடியாது. அது அவ்வளவு சிறியது. ஆனால், "இது ஓர் ஆரம்பம், கர்த்தர் தருகிறார்," என்று அவர் நினைத்தார்.
கர்த்தர் பல நன்கொடைகளை வழங்க ஆரம்பித்தார். சிலர் பொருட்கள் கொடுத்தார்கள். வேறு சிலர் பணம் கொடுத்தார்கள். எனவே, அவர் அந்த இடத்தை வாடகைக்கு எடுத்தார். விரைவில் 7 வயதுமுதல் 12 வயதுவரையிலான பெண் குழந்தைகள் அந்த அனாதை இல்லத்தில் பதிவுசெய்யப்பட்டு, அங்கு வாழத் தொடங்கினார்கள்.
இது அவரைப்பொறுத்தவரை ஒரு பெரிய படிக்கல். ஏனென்றால், ஒன்றுமில்லாமையிலிருந்து அவர் இந்த அனாதை இல்லத்தைத் தொடங்கினார். இப்போது எல்லாம் சரியாக நடக்க ஆரம்பித்திருந்தது. சில நேரங்களில் சிலர் 50 பவுண்டுகள் கொடுத்தார்கள். அது பெரிய பணம். ஆனால், ஒரு சந்தர்ப்பத்தில் தெருவில் அனாதையாகத் திரிந்த ஒரு சிறுவன் அவருடைய கையைப் பிடித்துக்கொண்டு, ஒரு ஷில்லங்கைக் கொடுத்து, "இதை ஒருவர் எனக்குக் கொடுத்தார். ஒருவேளை இது உங்களுக்குத் தேவைப்படலாம். உங்கள் அனாதை இல்லத்தில் உள்ள பெண் குழந்தைகளுக்காக இதை வாங்கிக்கொள்ளுங்கள்," என்றான். இந்த விவரங்கள் எல்லாவற்றையும் அவர் தன் நாட்குறிப்பில் எழுதிவைத்தார். 100 பவுண்ட் கொடுத்தாலும் சரி, 1 ஷில்லாங் கொடுத்தாலும் சரி. பெரிய சிறிய தொகை எல்லாவற்றையும் மறக்காமல் விவரமாக எழுதிவைத்தார்.
முதல் ஆண்டில் மொத்தம் 26 சிறுமிகள் இருந்தார்கள். வீடு ஒழுங்காக இருந்தது. ஆனால், மிகவும் நெரிசலாக இருந்தது. கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது மேற்கிந்தியத் தீவுகளிலிருந்து யாரோவொருவர் அவர்களுக்கு வாழைப்பழங்களையும், ஆரஞ்சுப்பழங்களையும் அனுப்பியிருந்தார். இவைகளையெல்லாம் அந்தக் குழந்தைகள் அதுவரை பார்த்ததேயில்லை. இவ்வாறு, கர்த்தர் அவர்களுக்கு வழங்கிக்கொண்டேயிருந்தார். சில சமயங்களில், அவர் வெறுமனே அவர்களுடைய தேவைகளை மட்டுமல்ல, அவர்களுக்காக இன்னும் சில அதிகமான காரியங்களையும் செய்தார்.
நிறையக் குழந்தைகள் அனாதை இல்லத்துக்கு வர ஆரம்பித்தார்கள். ஒரு காவலர் தெருவில் நடந்துபோகிறார் என்று வைத்துக்கொள்வோம். சிறுவர்கள் தெருவில் நடந்துசெல்வதை அவர் பார்க்கிறார். தங்கள் பெயர்கூட அவர்களுக்குத் தெரியாது. அவர்களுடைய பெற்றோர் இறந்திருப்பார்கள் அல்லது அவர்களுக்கு ஏதோ நடந்திருக்கும். குடும்பத்தைக் கைவிட்டுவிட்டுப் போயிருப்பார்கள். எனவே, இந்தக் குழந்தைகள் தெருவுக்கு வரவேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கும். தங்குவதற்கு வீடு கிடையாது, கவனிப்பதற்கு ஆள் கிடையாது. ஒதுங்குவதற்கு கூரை கிடையாது, விசாரிக்க நாதி கிடையாது. வீடற்றவர்கள், அனாதைகள், நாதியற்றவர்கள், காவலர்கள் இவர்களை ஜார்ஜ் முல்லரின் அனாதை இல்லத்துக்கு அழைத்துவந்தார்கள். எனவே, அவர் தன் வேலையை விரிவுபடுத்த வேண்டும் என்று தீர்மானித்தார்.
கொஞ்ச நாட்களில் வில்சன் தெருவில் இன்னொரு வீடு வாடகைக்கு வந்தது, அவர் அதை வாடகைக்கு எடுத்து, பச்சிளம் குழந்தைகளுக்காகப் பயன்படுத்தினார். ஏனென்றால், இரண்டு வயது, மூன்று வயதுக் குழந்தைகள்கூட அவரிடம் இருந்தார்கள். சில சமயங்களில் சில பெற்றோர்கள் பிறந்த குழந்தைகளைக்கூட அவரிடம் கொடுத்துவிட்டுப் போய்விட்டார்கள். இவ்வாறு வந்து சேர்ந்த பல பச்சிளங் குழந்தைகளை அவர் பராமரிக்க வேண்டியிருந்தது. இன்னொரு வீட்டில் இருந்த பெரிய பிள்ளைகள் இந்த வீட்டுக்கு வந்து சிறு குழந்தைகளைக் கவனிக்க உதவினார்கள். ஆனாலும், அது இன்னும் போதுமானதாக இல்லை. ஏனென்றால், பல சிறுவர்கள் இன்னும் தெருக்களில் சுற்றித்திரிந்தார்கள்.
வில்சன் தெருவில் இன்னொரு வீடு வாடகைக்கு வந்தது. அந்த வீட்டை அவர் வாடகைக்கு வாங்கினார். அந்த வீடு சிறுவர்கள் தங்குவதற்கு வசதியாக இருந்தது. இப்போது வில்சன் தெருவில் மூன்று வீடுகளில் மொத்தம் 81 குழந்தைகள் வாழ்ந்தார்கள்.
இதைப்பற்றி இன்று நாம் ஒரு நிமிடம் யோசித்துப்பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. அங்கு வேலைபார்த்தவர்களுக்கு அவர் ஊதியம் கொடுக்க வேண்டும். அந்தக் குழந்தைகளைக் கவனிக்க எத்தனை ஆட்கள் இருந்திருப்பார்கள். சாப்பாடு சமைக்க எத்தனை சமையல்காரர்களும், உதவிக்காரர்களும் இருந்திருப்பார்கள். எல்லாருக்கும் சம்பளம் கொடுக்கவேண்டியிருக்கும். குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் பால், தேநீர், ரொட்டி, சர்க்கரை, இறைச்சி, உருளைக்கிழங்குபோன்ற எத்தனையோ உணவுப்பொருட்கள் ஒவ்வொரு நாளும் தேவைப்பட்டிருக்கும். அடுப்புக்கு நிலக்கரி தேவை. அடுப்புக்கு மட்டும் அல்ல. அது இங்கிலாந்தில் கடுங்குளிர் காலம். வீடு சூடாக இல்லையென்றால் குளிரில் உறைந்துபோவார்கள். எனவே, தேவையான அளவுக்கு வீட்டை சூடாக வைக்கவும் நிலக்கரி தேவை. நிலக்கரி இல்லையென்றால் சமைக்க முடியாது, வீட்டில் நெருப்பு மூட்ட முடியாது. வீட்டுக்குளேயே குளிரில் இறந்துவிடுவார்கள். மூன்று வீடுகளுக்கும் வாடகை கொடுக்க வேண்டும். அத்தனை குழந்தைகளுக்கும் தேவையான உடைகள் வாங்க வேண்டும். ஏனென்றால், அவர்கள் தெருக்களில் திரிந்த குழந்தைகள், போட்டிருந்த கிழிந்த ஆடையோடு அங்கு வந்தார்கள். இவை அனைத்தையும் ஜார்ஜ் முல்லர் தேவனிடம் கையளித்தார். தேவன் அவருக்கு எல்லாவற்றையும் தவறாமல் வழங்கினார். குழந்தைகள் ஒருநாள்கூட ஒருவேளை உணவு சாப்பிடாமல் இருந்ததில்லை.
இப்படியெல்லாம் நடந்தது என்று இன்று நமக்குத் தெரிகிறது. ஏனென்றால், அவர் எல்லாவற்றையும் தன் நாளேட்டில் விவரமாக எழுதிவைத்தார். அது மட்டும் அல்ல. அவர் கர்த்தருக்குமுன்பாக உண்மையும் உத்தமுமாக வாழ்ந்தார். யாராவது ஒருவர் அவருக்கு 10 பவுண்டுகள் கொடுத்து, "தயவுசெய்து இதைச் சிறுமிகளுக்காகத் துணி வாங்கப் பயன்படுத்துங்கள்," என்று சொன்னால், அவர் அதைச் சிறுமிகளுக்கு துணி வாங்குவதற்காகத்தான் பயன்படுத்தினார். நிலக்கரியோ அல்லது ரொட்டியோ அல்லது வேறோ ஏதோ அவசரமாகத் தேவைப்பட்டாலும், அந்தப் பணத்தை அவர் தன் தேவைகளுக்கேற்ப பயன்படுத்தாமல், கொடுத்தவர் சொன்னபடியே பயன்படுத்தினார். ஏனென்றால், மக்கள் கொடுத்தவையெல்லாம், தேவனே நேரடியாகப் பரத்திலிருந்து அனுப்பியது என்று அவர் கருதினார்.
ஆனால், வெகு விரைவில் வில்சன் தெருவில் வாழ்ந்த மக்களிடமிருந்து புகார்கள் வரத் தொடங்கின. தங்கள் தெருவில் இப்போது 120 குழந்தைகள் இருப்பதை அந்தக் குடியிருப்பில் வாழ்ந்தவர்கள் விரும்பவில்லை. குழந்தைகள் இருந்தால் சத்தம் இருக்கத்தான் செய்யும். குழந்தைகளின் சத்தத்தை குறைவாக வைத்துக்கொள்ள எவ்வளவோ முயன்றபோதும் அது சாத்தியமில்லாமல் போயிற்று. அவர்களுடைய மூன்று வீடுகளில் ஒரு வீடு அந்தத் தெருவின் மூலையில் இருந்தது. அந்த வீட்டின் வெளியே ஒரு நல்ல புல்தரை இருந்தது. எனவே, எல்லாக் குழந்தைகளும் வெளியேவந்து அந்தச் சிறிய முற்றத்தில் விளையாடினார்கள். ஆனால், அந்தக் குடியிருப்பில் வாழ்ந்தவர்கள் அதை விரும்பவில்லை. குழந்தைகளின் சத்தத்தைப்பற்றி அவர்கள் புகார் செய்தார்கள். அந்த நாட்களில் இந்தக் குழந்தைகளைப் பலர் பூச்சிகளைப்போல் பார்த்தார்கள். எனவே, அந்தத் தெருவில் 120 குழந்தைகள் இருப்பதைக்குறித்து குடியிருப்பாளர்கள் மகிழ்ச்சியாக இருக்கவில்லை.
ஜார்ஜ் முல்லர் இதைப் புரிந்துகொண்டார். தன் குழந்தைகளுக்கென்று தனி இடம் இருப்பது மிகவும் நல்லது என்று அவர் நினைத்தார். அப்படிப் பிரத்தியேகமான இடம் இருந்தால், சிறுவர்கள் தாராளமாகச் சுற்றி ஓடலாம், சிறுமிகளுக்கு இன்னும் கொஞ்சம் தாராளமான இடம் கிடைக்கும். இவ்வளவு நெருக்கமாக இருக்கவேண்டிய தேவையிருக்காது. பசுமையான காற்றையும் சுவாசிக்கலாம் என்று அவர் நினைத்தார். இப்படிப்பட்ட இலட்சிய யோசனை அவரிடம் இருந்தது. பிரிஸ்டலுக்கு வெளியே கிராமத்தில் அவர் நிலம் வாங்க விரும்பினார். அது மட்டும் அல்ல; கட்டப்போகும் கட்டிடங்கள் வில்சன் தெருவில் குடியிருக்கும் மொட்டை மாடி வீடுகள்போன்றவையல்ல. மாறாக, அந்தக் கட்டிடங்கள் குழந்தைகளுக்கென்று பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட வேண்டும், அது அவர்களுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். இதை எப்படிச் செய்வது என்று அவருக்குத் தெரியாது, ஏனென்றால் 120 குழந்தைகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும், நிலம் வாங்க, கட்டிடங்கள் கட்ட எனப் பல்லாயிரக்கணக்கான பவுண்டுகள் தேவை,
இதைக்குறித்து அவர் பல மாதங்கள் ஜெபித்தார். இது பேராசைபோல் தோன்றியது. ஆனால், அவர் ஜெபித்தார். அவர் ஒரு நாள் மிகவும் பாரத்தோடு ஊக்கமாக ஜெபித்து முடித்தவுடன், "ஆண்டவரே, நான் இங்கே வெறுமனே யோசனைகளை உருவாக்கவில்லை, மாறாக இந்த யோசனைகலெல்லாம் உம்மிடமிருந்தே வந்தன என்பதற்கான தெளிவான அடையாளத்தை நீர் எனக்குத் தர வேண்டும்," என்று தேவனிடம் கூறினார். கர்த்தர் அவருடைய ஜெபத்திற்குப் பதில் அளித்தார். ஒருவர் 1,000 பவுண்டுகள் அடங்கிய ஓர் உறையை அவருக்கு அனுப்பினார். அந்த நாட்களில் அது மிகப் பெரிய தொகை. அது பல வருட ஊதியம். எனவே, இது தேவனுடைய விருப்பம் என்பதற்கு அது ஒரு மிகப் பெரிய அடையாளமாக இருந்தது. அந்தத் தொகை போதாது. ஆனால், அது ஒரு நல்ல அடையாளம்.
ஒருநாள் ஜார்ஜ் முல்லர் அவருடைய மனைவி மேரியின் உறவினர் ஒருவரைத் தற்செயலாய்ச் சந்தித்தார். தன் தேவை என்னவாக இருந்தாலும், ஒருபோதும் ஒருவரிடமும் எதையும் கேட்கக்கூடாது என்ற ஒரு கோட்பாடு ஜார்ஜ் முல்லர் வைத்திருந்தார். அவர் இந்த நபருடன் பேசிக்கொண்டிருந்தபோது, தான் ஒரு வீட்டைக் கட்டப்போவதாகவும், அதைக் கட்டுமாறு தேவன் தன்னிடம் சொன்னதாகவும் அவரிடம் சொன்னார். ஆனால், அதற்குத் தனக்கு உதவி தேவை என்று அவர் சொல்லவில்லை. அவர் அதைச் சாதாரணமாகச் சொல்லிக்கொண்டிருந்தார். அந்த மனிதர் அவரிடம், "நல்லது, நானும் உண்மையில் உங்களுக்காக ஜெபிக்கிறேன். நான் என் கொடைகளை ஏதோவொரு வகையில் தேவனுக்காகப் பயன்படுத்த விரும்புகிறேன். ஒருவேளை நான் உங்களுக்கு உதவ முடியும் என்று நினைக்கிறன்," என்று சொன்னார், அதற்கு ஜார்ஜ், "சரி, எந்த வகையில் நீங்கள் எனக்கு உதவமுடியும்?" என்று வினவினார். அவர், "நான் ஒரு கட்டிடக்கலைஞன். நீங்கள் கட்டவிருக்கும் கட்டிடத்தின் வரைபடம், கட்டுதல்போன்ற எல்லாவற்றிலும் நான் உங்களுக்கு உதவமுடியும். அதை நான் உங்களுக்கு இலவசமாகச் செய்கிறேன்," என்றார். இது தேவன் அவருடைய குறிப்பிட்ட ஜெபத்திற்கு மீண்டும் ஒருமுறை பதிலளித்த மற்றொரு நிகழ்ச்சி. தன் தாலந்துகளைத் தேவனுக்காகப் பயன்படுவதற்கான வாய்ப்புக்காக ஜெபித்துக்கொண்டிருந்த அவருடைய உறவினர் இது ஏதோவொரு வகையில் தேவனுடைய இராஜ்ஜியத்திற்காகச் சேவை செய்வதற்கான ஒரு வாய்ப்பு என்றே கருதினார்.
தன்னிடம் இருந்த பணத்தை வைத்து பிரிஸ்டலுக்கருகே நிலம் வாங்க முடியாது என்று அவருக்குத் தெரியும். ஏனென்றால், பிரிஸ்டலுக்கருகே நிலத்தின் விலை மிக அதிகம். ஆனால், ஓர் இடம் இருந்தது. அந்த நிலம் தான் விரும்பியபடி கட்டுவதற்கேற்ற சரியான இடம் என்று ஜார்ஜ் முல்லர் கருதினார். அந்த நிலத்தின் உரிமையாளர் அங்கு இருந்தார். அங்கு நிறைய நிலம் இருந்தது. ஆனால், தன் திட்டத்தின்படி எல்லாவற்றையும் கட்ட நிறைய நிலம் தேவையில்லை என்றும், ஏழு ஏக்கர் நிலம் போதும் என்றும் ஜார்ஜ் நினைத்தார். ஏழு ஏக்கர் பெரிய இடம்தான். அந்த நிலத்துக்குச் சொந்தக்காரர் ஓர் ஏக்கருக்கு 200 பவுண்டு என்று சொன்னார். அவர் சொன்னபடி அந்த நிலத்தை வாங்கப் போதுமான பணம் அவரிடம் இல்லை.
முல்லர் இந்தக் காரியத்தைத் தேவனிடம் கொண்டுபோனார். அன்றிரவு, அந்த நிலத்துக்குச் சொந்தக்காரருக்குத் தூக்கம் வரவில்லை. அவரால் தூங்க முடியவில்லை. கர்த்தர் அவரைத் தூங்கவிடாமல் குத்திக்கொண்டிருப்பதுபோல் அவர் உணர்ந்தார். கர்த்தர் அவரிடம், "நீ அதை ஏக்கருக்கு 200 பவுண்டுகளுக்கு விற்கக்கூடாது. ஏக்கருக்கு 120 பவுண்டுக்குத்தான் விற்கவேண்டும்," என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினார். விடியற்காலையில், நடுக்கத்தோடு அந்த மனிதன் ஜார்ஜ் முல்லரிடம் சென்று, "200 பவுண்டுகளை மறந்துவிடுங்கள், ஏக்கருக்கு 120 பவுண்டுகள்தான்," என்று கூறினார். ஜார்ஜ் மிகவும் ஆச்சரியப்பட்டார், அவர் மீண்டும், "தயவுசெய்து, தயவுசெய்து இதை ஏற்றுக்கொள்ளுங்கள். ஏனென்றால், கர்த்தர் இதை எனக்குத் தெரிவித்தார். இரவில் நான் நிம்மதியாக உறங்க விரும்புகிறேன்," என்று கூறினார். ஏக்கருக்கு 120 பவுண்டுகள் என்றால் ஏழு ஏக்கர் நிலம் வாங்க அவரிடம் போதுமான பணம் இருந்தது. எனவே, ஜார்ஜ் மிகவும் மகிழ்ச்சியடைந்தார், அவர் அந்த நிலத்தை வாங்கினார். அவர் வாங்கிய நிலம் ஆஷ்லே டவுன்ஸ் என்று அழைக்கப்பட்டது.
இந்த நிலம் ஓர் ஆரம்பம். கட்டிடக் கலைஞரின் உதவியுடன், விரைவில் எல்லாரும் எதிர்பார்த்ததைவிட அழகான ஓர் கட்டிடம் எழும்பியது. அவர் அப்போது தன்னிடம் இருந்த 120 குழந்தைகளுக்காக மட்டும் அல்ல, 300 பேர் தங்கக்கூடிய அளவுக்கு அது பெரிய கட்டிடம். விரைவில் மக்கள் இதைப்பற்றி கேள்விப்பட்டார்கள். பிரிஸ்டலில் உள்ளவர்கள் மட்டுமல்ல, அண்டை நகரங்களில் உள்ள மற்றவர்களும் இதைப்பற்றிக் கேள்விப்பட்டார்கள். விரைவில் இங்கிலாந்து முழுவதிலுமிருந்து அனாதைக் குழந்தைகள் ஆஷ்லே டவுன்சுக்கு வர ஆரம்பித்தார்கள்.
அவருடைய சேவை விரிவடைந்தது, 300க்கும் அதிகமான குழந்தைகள் வர ஆரம்பித்தார்கள். எனவே, அதிகமான கட்டிடங்கள் தேவைப்பட்டன. குழந்தைகளை மனிதில் வைத்து அவர்களுக்கேற்றாற்போலக் கட்டிடங்களை வடிவமைத்தார்கள். பாலர்களுக்கு ஒரு கட்டிடம். துணிகள் சலவைசெய்வதற்கு ஓர் இடம். ஒரு பெரிய சமையலறை. ஒரு பெரிய சாப்பாட்டு அறை. தையல் கற்றுக்கொள்வதற்கு ஓர் இடம். படிப்பதற்கு அறைகள். எல்லாக் குழந்தைகளும் தங்கள் துணிகளைத் தொங்கவிடுவதற்கேற்றாற்போல் சுவர்களில் சிறுசிறு ஏற்பாடுகள். அறைகள் மிகவும் ஒழுங்காக இருந்தன, எல்லாவற்றையும் மனதில்கொண்டு கட்டிடங்கள் வடிவமைக்கப்பட்டன. குழந்தைகள் விளையாடுவதற்கு புல்தரையில் ஊஞ்சலும், வேறு பல விளையாட்டுப் பொருட்களும் வைத்திருந்தார்கள். மருத்துவ உதவிக்காக ஓர் இடம்.
அவருடைய பணிவிடை விரிவடைந்தது, தேவை அதிகமாயிற்று. ஒரு கட்டிடத்தில் ஆரம்பித்து, இரண்டு மூன்று என்று அதிகரித்து இப்போது 5 கட்டிடங்கள் இருந்தன. 2,000க்கும் அதிகமான குழந்தைகள் இருந்தார்கள். 2000பேர் இருந்தும் நெரிசலாக இல்லை, சவுகரியமாகவே வாழ்ந்தார்கள். இந்தக் குழந்தைகள்மேல் உண்மையான அக்கறைகொண்ட 100 விசுவாசிகள் அவர்களைக் கவனித்துக்கொண்டார்கள். முல்லரின் ஊழியத்தில் உண்மையாகவே தேவன் இருக்கிறார் என்பதை அவர்கள் பார்த்தார்கள். சில நேரங்களில் அங்கு வேலை செய்த விசுவாசிகள் ஜார்ஜ் முல்லரின் வேலைக்கு தங்கள் சம்பளத்தைக் கொடுத்தார்கள். இவர்கள் தங்களையும் கொடுத்தார்கள், தங்களுடையதையும் கொடுத்தார்கள். சில நேரங்களில் குழந்தைகளுக்கு ரொட்டி இல்லாமல் போனால், இந்த வேலையாட்கள் தங்கள் சொந்தப் பணத்தைச் செலவழித்து அவர்களுக்கு ரொட்டி வாங்கிக் கொடுத்தார்கள். இப்படிப்பட்ட நேரங்களும் இருந்தன. இவர்கள் அங்கு தாங்கள் பணத்துக்காக வேலை செய்ததாக நினைக்கவில்லை. அவர்கள் தேவனுக்குப் பணிவிடை செய்வதாகவே நினைத்தார்கள். அவர்கள் தங்கள் பணிவிடையில் தேவனை கனம்பண்ணினார்கள். இவைகளுக்கும் அப்பாற்பட்டு, ஜார்ஜ் முல்லரையும், அவருடைய வேலையையும்பற்றி சில வதந்திகள் பரவத் தொடங்கியிருந்தன.
ஜார்ஜ் முல்லரின் அனாதை இல்லம் ஒரு பயங்கரமான இடம் என்றும், அந்த இடம் முழுவதும் எலிகள் இருக்கின்றன என்றும், அங்கிருக்கும் குழந்தைகள் பாதி பட்டினி கிடக்கிறார்கள் என்றும், அவர்கள் ஆரோக்கியமாக இல்லாததால், அவர்களுடைய தலையில் பேன்கள் நிறைய இருப்பதாகவும் வதந்திகள் பரவின. ஜார்ஜ் முல்லர் குழந்தைகளை அடிமைகளைப்போல நடத்தினார் என்றும் சொன்னார்கள். அவருடைய அதிகாரத்தின்கீழ் 2000 அடிமைகள் இருப்பதாகவும், அவர் அதிகார வெறியுடையவர் என்றும், அனாதை இல்லத்துக்காக வரும் நன்கொடைகளை அவர் தவறாகப் பயன்படுத்துவதாகவும், அவைகளைத் தனக்காகச் செலவிடுவதாகவும் வதந்திகள் பரவின. ஜார்ஜ் முல்லரையும், ஆஷ்லே டவுன்ஸையும் மக்கள் சந்தேகக் கண்ணோடு பார்க்கத் தொடங்கினர், மக்கள் அவரைப்பற்றியும், ஆஷ்லே டவுன்சைப்பற்றியும் கட்டுரைகள் எழுதினார்கள்.
இந்தச் சங்கதிகளெல்லாம் அந்த நாட்களில் மிகவும் பிரபலமான ஒரு நபரின் கவனத்திற்கு வந்தன. இந்த நபர் இங்கிலாந்தில் அனாதைகளின் அவலநிலையைக்குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அரும்பாடுபட்டார். பிரிட்டனில் பணக்காரர்கள் மிகவும் பணக்காரர்களாகவும், ஏழைகள் மிகவும் ஏழைகளாகவும் இருந்தார்கள். இது ஒரு பெரிய பிரச்சினை. இந்த மனிதர் இந்த அவலத்தைக்குறித்தும் நிறைய எழுதினார். அவருடைய எழுத்துக்கள் மக்களுடைய கவனத்தை ஈர்த்தன. மக்கள் அவர் சொன்ன காரியங்களைக்குறித்துச் சிந்திக்க ஆரம்பித்தார்கள். அவருடைய மிகப் பிரபலமான ஆலிவர் ட்விஸ்ட் என்ற கதை உங்களில் சிலருக்குத் தெரிந்திருக்கலாம்,
அவருடைய பெயர் சார்லஸ் டிக்கன்ஸ். அவர் ஜார்ஜ் முல்லர்மேல் மிகவும் கோபமடைந்தார். "இந்த அனாதைக் குழந்தைகளைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கும், அவர்களை அப்படி நடத்துவதற்கும் இவருக்கு எவ்வளவு தைரியம்!" என்று அவர் கோபமடைந்தார். எனவே, பிரிஸ்டலிலுள்ள ஆஷ்லே டவுன்சுக்குச் சென்று, அனாதை இல்லங்களைப் பார்வையிடவும், ஜார்ஜ் முல்லரை நேரில் சந்தித்துப் பேசவும் சார்லஸ் டிக்கன்ஸ் முடிவு செய்தார்.
பிரபல எழுத்தாளரான சார்லஸ் டிக்கன்ஸ் ஆஷ்லே டவுன்சுக்கு வருவதை ஜார்ஜ் முல்லர் அறிந்தபோது, மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.
ஜார்ஜ் முல்லரை கிழித்தெறிய வேண்டும் என்ற மனப்பாங்கோடு சார்லஸ் டிக்கன்ஸ் ஜார்ஜ் முல்லரைச் சந்திக்கப் பிரிஸ்டலுக்கு வந்தார். முல்லர் அங்கு வேலைசெய்த ஒரு வேலையாளைக் கூப்பிட்டு, சாவிக்கொத்தை அவரிடம் கொடுத்து, "இதோ சாவிக்கொத்து. எல்லா இடங்களுக்கும் சார்லஸ் டிக்கென்ஸை அழைத்துச்செல்லுங்கள். திரு.டிக்கன்ஸ் அலமாரியில் பார்க்க விரும்புவதாகக் கூறினால், அதை அவருக்குத் திறந்துகாண்பியுங்கள். நீங்கள் அவரை எல்லாக் கொட்டகைகளுக்கும், சாமான் அறைகளுக்கும், பிற அறைகளுக்கும் அழைத்துச் செல்லுங்கள், அவர் எங்கு போக விரும்பினாலும் அவரைக் கூப்பிட்டுக்கொண்டுபோங்கள், காட்டுங்கள்," என்று சொன்னார். எனவே, டிக்கன்ஸ் அந்தப் பணியாளோடு போனார். மூன்று மணி நேரம் கழித்து அவர் திரும்பி வந்தார், அவரால் தன் கண்களை நம்பமுடியவில்லை. ஜார்ஜ் முல்லரையும், அந்த அனாதை இல்லங்களைப்பற்றியும் எப்படி இவ்வளவு பொய்யான, தவறான வதந்திகளைப் பரப்பமுடியும் என்று நினைத்து அதிர்ச்சியடைந்தார். அவர் அங்கு ஒழுங்கையும், அமைதியையும் கண்டார். அவர் குளியலறைக்குச் சென்று பார்த்தார். கழிவறைக்குச் சென்று பார்த்தார். குளியலறைகளிலும், கழிப்பறைகளிலும் எல்லாக் குழந்தைகளும் தங்கள் சாமான்களைத் தொங்கவிட சுவர்களில் இடம் இருப்பதைக் கண்டார். சிறுமிகள் ஒவ்வொருவருக்கும் மூன்று ஜோடி காலணிகள் இருப்பதையும், அவர்கள் அனைவருக்கும் குளிர்காலத்தில் அணிவதற்கு கம்பளி ஆடைகளும், கோடை காலத்திற்கென தனி ஆடையும், சிறுவர்கள் மற்ற பள்ளிகளில் சொல்லிக்கொடுப்பதுபோல் வெறும் பாரம்பரியக் கல்வியை மட்டுமல்ல, மரவேலைபோன்ற தொழில் கல்வியையும் கற்றுக்கொண்டிருந்ததை அவர் பார்த்தார். பாலர்களுக்காக ஒரு பாலர் பள்ளி மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டிருப்பதை அவர் பார்த்தார். பொம்மைகள் வைப்பதற்கு தனிப் பெட்டிகள் இருந்தன, ஒவ்வொரு குழந்தையும் தான் விரும்பும் சிறிய பொம்மைகளை வைப்பதற்கு சிறிய துளைகள் இருந்தன, அவர்கள் தங்கள் பொம்மைகளை அந்தத் துளைகளில் வைத்தார்கள். குழந்தைகள் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. அங்கிருந்த பணியாட்கள் இந்தக் குழந்தைகளைக் கவனிப்பதை ஒரு வேலையாகச் செய்யாமல், இந்தக் குழந்தைகளை உண்மையாகவே நேசித்தார்கள். டிக்கென்ஸ் மிகவும் கோபமடைந்தார். ஆம், ஜார்ஜ் முல்லரையும், அவருடைய அனாதை இல்லத்தைப்பற்றியும் வதந்திகளைப் பரப்பியவர்கள்மேல் அவர் கோபமடைந்தார். எனவே, அவர் உடனடியாகச் சென்று மிகவும் பிரபலமான தன் பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதினார், ஜார்ஜ் முல்லருக்கு எதிரான தவறான எல்லா வதந்திகளையும் தவிடுபொடியாக்கி அவர் ஒரு கட்டுரை எழுதினார்.
2,000 அனாதைக் குழந்தைகள் இருந்தார்கள். இத்தனை குழந்தைகளைப் பராமரிக்க அவருக்கு எவ்வளவு தேவைகள் இருந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள். ஜார்ஜ் முல்லர் தன் தேவைகளை எந்த மனிதனிடமும் சொல்வதில்லை என்ற கோட்பாட்டின்படி வாழ்ந்ததால் பணப் பற்றாக்குறை இருந்தது. ஆனால், கர்த்தர் உண்மையுள்ளவர் என்பதையும், கர்த்தர் தேவைக்கேற்ப ஏற்ற வேளையில் தருவார் என்பதையும் அனைவருக்கும் காண்பிக்கும் வகையில் அவர் அப்படி வாழ விரும்பினார்.
ஓர் எடுத்துக்காட்டு சொல்ல விரும்புகிறேன். ஒரு நாள் அனாதை இல்லத்தில் அவர்கள் சாப்பிடுவதற்கு ஒன்றும் இல்லை. 10 பைசாக்கூட இல்லை. அவர்களால் ஒன்றும் வாங்க முடியவில்லை. 300 குழந்தைகள் காலை உணவுக்காக வரிசையில் வந்து நின்றார்கள். அவரவர் தங்கள் மேஜைக்குமுன் வந்து, தங்கள் சிறிய நாற்காலியின் பின்னால் நின்றார்கள். ஆனால், அவர்களுக்கு முன்னால் இருந்த கிண்ணமும், கோப்பையும் காலியாக இருந்தன. ஜார்ஜ் முல்லர் இதைப்பற்றிச் சலனப்படவில்லை. அவர் குழந்தைகளிடம், "பரலோகத் தகப்பன், உங்கள் பரலோகத் தகப்பன், திக்கற்ற உங்கள்மேல் மிகவும் அக்கறை கொண்டவர் என்பதை இன்று நீங்கள் காண்பீர்கள். அதை நீங்கள் இன்று உங்கள் சொந்தக் கண்களால் பார்க்கப்போகிறீர்கள்," என்று சொன்னார். அவர் இல்லாத காலை உணவுக்காகத் தேவனுக்கு நன்றி தெரிவித்தார், அவர்கள் அனைவரும் அங்கே அமர்ந்தனர். அவர் தேவனுக்கு நன்றி தெரிவித்து முடித்தவுடன், தேவனுடைய ஏற்பாட்டிற்காகவும் நன்றி சொல்லி முடித்தவுடன், யாரோவொருவர் கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. ஒரு ரொட்டிக்கடைக்காரர் அங்கு நின்றுகொண்டிருந்தார். அவர் கொஞ்சம் கலக்கத்தோடு காணப்பட்டார். அவர் கொஞ்சம் சங்கடத்துடனும் இருந்தார். அவர் முல்லரிடம் சென்று, "நேற்று இரவு என்னால் தூங்க முடியவில்லை. அதனால் நான் அதிகாலை 2 மணிக்கு எழுந்து, ரொட்டி செய்ய ஆரம்பித்தேன். ஒருவேளை அவை உங்களுக்குத் தேவைப்படலாம்," என்று கூறினார். முல்லர் ஆச்சரியப்படவில்லை. இந்த மனிதன்மூலம் தேவன் ரொட்டி தந்ததற்காக அவர் தேவனுக்கு நன்றி தெரிவித்தார். அவர் கொண்டுவந்திருந்த சூடான ரொட்டியைக் குழந்தைகளுக்குக் கொடுத்து, "குழந்தைகளே, கர்த்தர் நம் தேவைகளைத் தருகிறவர் மட்டும் அல்ல. அவர் நமக்கு இருமடங்கு ஆசீர்வாதம் தந்திருக்கிறார். புதிய ரொட்டியையும் தந்திருக்கிறார், அதையும் சூடாகத் தந்திருக்கிறார்," என்றார்.
ரொட்டிக்காரர் போன கொஞ்ச நேரத்திற்குப்பின், இன்னொருவர் வந்து கதவைத் தட்டினார். கதவைத் திறந்தபோது அங்கு ஒரு பால்காரர் பதற்றத்துடன் நின்றுகொண்டிருந்தார். அவர் ஜார்ஜ் முல்லரிடம், "மிஸ்டர் முல்லர், தயவுசெய்து உங்களுடைய இல்லத்திலிருந்து சில பெரிய பையன்களை என்னோடு அனுப்பமுடியுமா? அவர்களுடைய உதவி எனக்குத் தேவைப்படுகிறது. என் பால் வண்டியின் சக்கரம் உடைந்துவிட்டது. என் வண்டிச் சக்கரத்தைச் சரிசெய்ய வேண்டுமானால், முதலாவது, என் வண்டியிலுள்ள சரக்கையெல்லாம் கீழே இறக்க வேண்டும். வண்டியிலிருக்கிற பால் உங்களுக்குப் பயன்படுமா?" என்று கேட்டார். சில சிறுவர்கள் அவருடன் சென்று வண்டியிலுள்ள பால் கேன்களையெல்லாம் கீழே இறக்கினார்கள். அன்று அவர்களுக்குப் பால் கேன்கள் கிடைத்தன, அவர்கள் அனைவருக்கும் புத்தம் புதிய பால் கிடைத்தது. அன்று காலை அந்தப் பால் 300 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.
அவருடைய உடன்ஊழியக்காரராகிய ஹென்றி கிரெய்க் 60ஆவது வயதில் காலமானார். அவருடைய மரணம் ஜார்ஜ் முல்லருக்கு பேரிடியாக இருந்தது. கனத்த இருதயத்தோடுதான் அவர் ஹென்றியின் அடக்க ஆராதனையை நடத்தினார். அவரும், அவருடைய மனைவி மேரியும் மிகக் கடினமாக உழைத்தார்கள். அவர்களுக்கும் 60 வயதுக்குமேல் ஆகிவிட்டது. எல்லா வேலைகளையும் முடிக்க அவர்கள் மிகக் கண்டிப்பான கால அட்டவணையைப் பின்பற்றவேண்டியிருந்தது. அவர் வாரத்திற்கு மூன்றுமுறை பிரசங்கித்தார்; 2,000 குழந்தைகளைப் பராமரிப்பதற்குத் தேவையான பொருட்கள், அனாதை இல்லங்களின் வரவு செலவு கணக்குகள் எல்லாவற்றையும் மேற்பார்வையிடவேண்டியிருந்தது. வேத அறிவு நிறுவனத்தையும் தொடர்ந்து நடத்தினார். அவருடைய பள்ளிகளிலும், ஞாயிற்றுக்கிழமை பள்ளிகளிலும் இன்னும் குழந்தைகள் படித்துக்கொண்டிருந்தார்கள். அது மட்டுமல்லாமல், சீனாவில் மிஷனரி வேலைசெய்துகொண்டிருந்த ஜேம்ஸ் ஹட்சன் டெய்லருக்கும், அவருடைய சீனா உள்நாட்டு மிஷனுக்கும் அவர் தன்னால் முடிந்த பணஉதவியைச் செய்தார். ஜார்ஜ் முல்லரிடம் கண்ட விசுவாசத்தினால் வாழ்வது, தேவனை உறுதியாக நம்புவது, யாரிடமும் ஒருபோதும் பணம் கேட்கக்கூடாதுபோன்ற கோட்பாடுகள் ஜேம்ஸ் ஹட்சன் டெய்லரின் வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின. அங்கிருந்த பிள்ளைகள் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்தவுடன், அனாதை இல்லத்தைவிட்டு வெளியேறும் நேரம் வந்தபோது, அவர் அவர்களைத் தனித்தனியே சந்தித்து, அவர்களுக்குத் தேவையான ஆலோசனை வழங்கினார். வெளியே போனபிறகு வேலைக்கான பயிற்சிபெறுவதற்கு அல்லது புதிய வேலை தொடங்குவதற்கு அவர் அவர்களை உற்சாகப்படுத்தினார். எல்லாவற்றுக்கும் மேலாக, அவர்கள் தேவனோடு நடக்குமாறு உற்சாகப்படுத்தினார்.
அவருடைய மனைவி மேரி அவரோடு சேர்ந்து மிகக் கடினமாக உழைத்தார். ஆஷ்லே டவுன்ஸில் இருந்த 21 ஆண்டுகளில், அவர் ஒரு நாள்கூட விடுமுறை எடுக்கவில்லை. ஒரு நாள், அவர் ஜார்ஜிடம், "நான் படுக்கப்போகிறேன்," என்று சொன்னபோது, ஜார்ஜ் முல்லர் உடனடியாக ஒரு மருத்துவரை அழைத்தார். தன் மனைவிக்கு உண்மையில் உடல்நிலை சரியில்லை என்று அவருக்குத் தெரியும். மருத்துவர் வந்து பரிசோதித்துப் பார்த்தபின், அவருக்கு வாதக் காய்ச்சல் இருப்பதாக அறிவித்தார். அன்று அது ஒரு மோசமான நோய். விசுவாசத்தினால் வாழ்ந்த ஜார்ஜ் முல்லருக்குத் தன் மனைவியின் நிலைமையைக்குறித்து தேவனிடமிருந்து எந்த வார்த்தையும் வரவில்லை. ஆனால், "கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்," என்ற தேவனுடைய வாக்குறுதியை அவர் நம்பினார். ஆகவே, அவர் கர்த்தரை நோக்கி, "கர்த்தாவே, எனக்கு எந்தவொரு நன்மையையும் வழங்காமல் இராதேயும். நீர் மேரியை அழைத்துக்கொள்வது நன்மை என்றால், அது அவளுக்கும் எனக்கும் நீர் தருகிற நன்மை என்று நான் புரிந்துகொள்வேன்," என்று ஜெபித்தார். கர்த்தர் மேரியை அழைத்துக்கொண்டார். ஜார்ஜும், அவருடைய மகள் லிடியாவும், 2,050 அனாதைக் குழந்தைகளுடன் துக்கங்கொண்டாடினார்கள். ஜார்ஜ் முல்லர் அவருடைய அடக்க ஆராதனையில் பேசினார், அது அவருக்கு மிகவும் கடினமாக இருந்தது, ஆனால் "தேவரீர் நல்லவரும், நன்மைசெய்கிறவருமாயிருக்கிறீர்; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்," என்ற வசனத்தைவைத்துப் பேசினார் (சங்கீதம் 119: 68).
ஜேம்ஸ் ரைட் என்பவர்தான் தங்களுடைய ஊழியத்தைத் தொடர்ந்து செய்வதற்கு ஏற்ற நபர் என்று ஜார்ஜ் முல்லரும், அவருடைய மனைவி மேரியும் ஏற்கனவே முடிவுசெய்திருந்தார்கள். அவர் ஏற்கெனவே அவர்களுடன் அங்கு பணிபுரிந்து வந்தார். ஜேம்ஸ் ரைட் அவர்களுடைய மகள் லிடியாவை விரும்புவது அவர்களுக்குத் தெரியாது. அப்போது ஜேம்சுக்கும் லிடியாவுக்கும் 30 வயதுக்குமேல் இருக்கும். இருவரும் மிகுந்த அர்ப்பணிப்போடு அந்த அனாதை இல்லத்தில் பணிபுரிந்தார்கள். அவர்களுடைய திருமணம் தேவனுடைய ஏற்பாடு என்றே சொல்ல வேண்டும். அவர்கள் இருவரும் மிகவும் திறமையானவர்கள். அவர்கள் ஆஷ்லே டவுன்சை சீராகவும், சிறப்பாகவும் நிர்வகித்தார்கள்.
ஜார்ஜ் முல்லர் பின்னாட்களில் மறுமணம்செய்தார். அப்போது அவருக்குக் கொஞ்சம் ஓய்வு நேரம் கிடைத்தது. இப்போது அவருக்கு 70 வயதுக்குமேல் இருக்கும். இந்த நேரத்தில் வெளிநாடுகளுக்குச் சென்று கிறிஸ்தவர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்ற பாரத்தைத் தேவன் அவருடைய இருதயத்தில் வைத்தார். அவர் நற்செய்தி அறிவிக்க வேண்டும் என்ற பாரத்தோடு பயணிக்கவில்லை. மாறாக, மற்ற கிறிஸ்தவர்கள் கர்த்தருடைய உத்தமத்தை நம்பி, விசுவாசத்தால் வாழ அவர்களை உற்சாகப்படுத்த விரும்பினார். பல கிறிஸ்தவர்கள் கர்த்தரை முழுமையாக நம்பாமல் பாதி வாழ்க்கை வாழ்வதை அவர் கண்டார். அவர் அதை மாற்ற விரும்பினார்.
அந்த நாட்களில் பயணம் செய்வது மிகக் கடினம். அவர் வெளிநாடுகளுக்குப் பயணம்செய்ய முடிவுசெய்தபோது அவருக்கு வயது 80க்குமேல் இருக்கும். சீனா, ஹாங்காங், இந்தியா, மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணம் செய்தார். இத்தாலி, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கும் சென்றார், அந்த நாடுகளுக்குச் சென்றபோது, சில இடங்களில், அவர் ஆஷ்லே டவுன்ஸில் அனாதைகளாக வளர்ந்து அப்போது அந்த நாடுகளில் வாழ்ந்தவர்களின் வீடுகளில் தங்கினார்.
அவருடைய மகள் லிதியா 50 வயதில் திடீரெனக் காலமானார். அவருடைய இரண்டாவது மனைவியும் காலமானார். அவருக்கு வயதாகிவிட்டது. ஆனாலும், அவருடைய சுறுசுறுப்பு குறையவில்லை. அவர் தன் சிறிய வீட்டைக் காலிசெய்துவிட்டு, ஆஷ்லே டவுன்ஸில் உள்ள ஓர் அனாதை இல்லத்தில் வசிக்கத் தொடங்கினார். இறுதியாக, 92 வயதில், அவர் சற்று சோர்வடைய ஆரம்பித்தார். அவர் தன் மருமகன் ஜேம்ஸிடம், "எனக்கு இன்று கொஞ்சம் களைப்பாக இருக்கிறது," என்று கூறினார். அதற்கு ஜேம்ஸ் அவரிடம், "சரி, உங்களைக் கவனித்துக்கொள்வதற்கு யாரையாவது ஏற்பாடுசெய்யலாம். காலையில் உங்களைப் படுக்கையிலிருந்து எழுப்ப, ஆடை அணிந்துவிட, என உங்களுக்கு உதவ ஒருவரை ஏற்பாடுசெய்வது நல்லது," என்று சொன்னார். ஜார்ஜ் முல்லர், "இல்லை, இல்லை, இல்லை, இன்று வேண்டாம். அதைப்பற்றி நாளைக்குப் பேசலாம்," என்றார். ஆனால், அடுத்த நாளை ஜார்ஜ் முல்லர் பார்க்கவில்லை. ஏனென்றால் அந்த இரவு, அநேகமாக விடியற்காலையில், அவர் இறந்துவிட்டார். அவர் தேவனிடம் சென்றுவிட்டார்.
இன்றைய மதிப்பின்படி, ஏறக்குறைய 15000 கோடி ரூபாய் அவர் கையாண்டார். அவர் 10,024 அனாதைக் குழந்தைகளைப் பராமரித்தார். 120,000 குழந்தைகள் அவருடைய பள்ளியில் பயின்றார்கள். அவர் பல்லாயிரக்கணக்கான வேதாகமங்களை ஏழைகளுக்கு இலவசமாகக் கொடுத்தார்.
ஜார்ஜ் முல்லரின் இறுதிச் சடங்குதான் பிரிஸ்டல் நகரம் அதுவரை கண்டிராத மிகப் பெரிய இறுதிச் சடங்காகும். அப்படிப்பட்ட ஓர் அடக்க ஆராதனையை பிரிஸ்டல் நகரம் இனிமேல் காணுமா என்பது சந்தேகமே. 2,050 அனாதைக் குழந்தைகளும், வில்சன் தெருவில் இருந்த வீட்டில் வசித்த குழந்தைகளும் அவருடைய உடலைச் சுமந்துசென்ற வண்டிக்குப்பின் பிரிஸ்டல் நகரத்துக்குள் நடந்து சென்றார்கள். பிரிஸ்டல் நகரத்தில் அவரால் தொடப்பட்ட மக்கள் அவருடைய இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டார்கள். பிரிஸ்டல் நகர மக்கள் அனைவரும் தெருக்களில் வரிசையாக நின்று அவருக்கு மரியாதை செலுத்தினார்கள். அந்த நகரமே ஸ்தம்பித்துவிட்டது.
அன்றைய ஒரு செய்தித்தாள் ஜார்ஜ் முல்லரைப்பற்றி, "ஜார்ஜ் முல்லர். கொடூரமான தெருக்களிலிருந்து அனாதைக் குழந்தைகளைக் கொள்ளையடித்தவர். அவர் இந்தக் குழந்தைகளை எப்படிக் கொள்ளையடித்தார்? ஜெபத்தின் மூலம்," என்று எழுதியது. ஆனாலும், அவருடைய வாழ்க்கையை அவருடைய சொந்த வார்த்தைகளில் கேட்பது அதைவிடச் சிறந்தது.
"என் அன்பான கிறிஸ்தவனே, நீ இந்த முறையை முயற்சிசெய்யமாட்டாயா? உன் கவலைகளையும், பாரங்களையும், சுமைகளையும், தேவைகளையும் தேவன்மேல் வைத்துவிடுவது எவ்வளவு அருமையானது, அதனால் வரும் மகிழ்ச்சி எவ்வளவு விலையேறப்பெற்றது என்பதை நீ அறிய வேண்டாமா? இந்த வழி எனக்குத் திறந்திருப்பதுபோல உனக்கும் திறந்திருக்கிறது. கர்த்தரை நம்பவும், முழு இருதயத்தோடு அவரை விசுவாசிக்கவும், உன் சுமைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடவும், துன்பப்படும் நாளில் அவரை நோக்கிக் கூப்பிடுமாறும் தேவன் எல்லாரையும் அழைக்கிறார், எல்லாருக்கும் கட்டளையிடுகிறார். கிறிஸ்துவில் என் அன்பான சகோதரரே, இதை நீங்கள் செய்யமாட்டீர்களா? நீங்கள் இதைச் செய்ய முடியும் என்றும், செய்ய வேண்டும் என்று நான் வாஞ்சிக்கிறேன். கஷ்டங்களும், தேவைகளும் சூழ்ந்திருந்தாலும், பரலோகத்தில் இருக்கும் உங்கள் ஜீவனுள்ள பிதாவாகிய தேவன் உங்கள்மேல் அக்கறையும், கரிசனையும் கொண்டவர் என்பதால் நீங்கள் சமாதானத்தோடு இருக்க முடியும். இப்படிப்பட்ட இருதயத்தின் இனிமையை நீங்கள் சுவைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்."