Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More


ஜார்ஜ் விட்ஃபீல்ட் (1714, டிசம்பர் 14 - 1770, செப்டம்பர் 30)  ஓர் ஆங்கிலேய ஆங்கிலிக்கன் மதகுரு, அவர் ஒரு நற்செய்தியாளர், போதகர். மெதடிசம், நற்செய்தி இயக்கம் ஆகியவைகளை நிறுவிய பல நிறுவனர்களில் அவரும் ஒருவர்.

அவர் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கலையில் இளங்கலைப் பட்டம் பெற்றவுடன் ஆங்கிலிக்கன் சபையில் ஒரு மதகுருவாக நியமிக்கப்பட்டார். உடனே அவர் நாலாபக்கமும் சென்று நற்செய்தியை அறிவிக்க ஆரம்பித்தார். 1740இல், அவர் வடமெரிக்காவுக்குச் சென்றார். அங்கு, அவருடைய தொடர் பிரசங்கத்தின் விளைவாக மாபெரும் எழுப்புதல் ஏற்பட்டது. அந்த எழுப்புதல் கூட்டங்களால் மக்களிடையே பெரிய விழிப்புணர்வு உண்டாயிற்று. 

விட்ஃபீல்டின் ஊழியத்துக்குப் பரவலான அங்கீகாரம் கிடைத்தது. இங்கிலாந்திலும், அமெரிக்கக் குடியேற்றங்களிலும் குறைந்தது 18000 முறை, 1 கோடி மக்களுக்குப் பிரசங்கித்தாராம். அவருடைய பிரசங்கத்தினால் மக்கள் கவர்ந்திழுக்கப்பட்டார்கள். அவர் பலரை ஆண்டவராகிய இயேசுவிடம் நடத்தினார்.

ஜார்ஜ் விட்ஃபீல்ட் - ஓர் அறிமுகம்

ஜார்ஜ் விட்ஃபீல்ட் (1714, டிசம்பர் 14 - 1770, செப்டம்பர் 30) ஓர் ஆங்கிலிக்கன் மதகுரு, ஒரு நற்செய்தியாளர், ஒரு போதகர். மெதடிசம், நற்செய்தி இயக்கம் ஆகியவைகளை நிறுவிய பல நிறுவனர்களில் அவரும் ஒருவர்.

அவர் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் கலையில் இளங்கலைப் பட்டம் பெற்றவுடன் ஆங்கிலிக்கன் சபையில் ஒரு மதகுருவாக நியமிக்கப்பட்டார். உடனே அவர் நாலாபக்கமும் சென்று நற்செய்தியை அறிவிக்க ஆரம்பித்தார். 1740இல், அவர் வடமெரிக்காவுக்குச் சென்றார். அங்கு, அவருடைய தொடர் பிரசங்கத்தின் விளைவாக மாபெரும் எழுப்புதல் ஏற்பட்டது. அந்த எழுப்புதல் கூட்டங்களால் மக்களிடையே பெரிய விழிப்புணர்வு உண்டாயிற்று.

விட்ஃபீல்டின் ஊழியத்துக்குப் பரவலான அங்கீகாரம் கிடைத்தது. அவர் இங்கிலாந்திலும், அமெரிக்கக் குடியேற்றங்களிலும் குறைந்தது 18000 முறை, 1 கோடி மக்களுக்குப் பிரசங்கித்தாராம். அவருடைய பிரசங்கத்தினால் மக்கள் கவர்ந்திழுக்கப்பட்டார்கள். அவர் பலரை ஆண்டவராகிய இயேசுவிடம் நடத்தினார்.

இன்று நற்செய்தியாளர் ஜார்ஜ் விட்ஃபீல்ட் என்ற பரிசுத்தவானைப்பற்றி பேசப்போகிறேன்.

பிறப்பும், குடும்பமும்

ஜார்ஜ் விட்ஃபீல்ட் 1714ஆம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்தார். அவருடைய குடும்பத்தார் ஒரு சத்திரம் நடத்தினார்கள். அவருடைய அம்மாதான் அதன் உரிமையாளார், அவருடைய அப்பா அந்தச் சத்திரத்தைப் பராமரித்தார். இந்த சத்திரம் இங்கிலாந்தின் க்ளோசெஸ்டர் நகரத்தில் இன்றைக்கும் இருக்கிறது. அவர்கள் பெரிய பணக்காரர்கள் இல்லை. ஒரு சராசரியான குடும்பம். உழைக்கும் இனம். ஜார்ஜ் விட்பீல்டும் தன் குடும்பத்தின் தேவைகளுக்காகச் சில பல வேலைகளைச் செய்யவேண்டியிருந்தது. ஓரளவுக்குச் சுமாரான வாழ்க்கை வாழ்வதற்கு குடும்பத்தில் இருந்த எல்லாரும் வேலைசெய்ய வேண்டியிருந்தது. அதனால் அவரும் இப்படிச் சில சில்லறை வேலைகளைச் செய்தார்.

பள்ளிப்படிப்பு

ஆனால், அந்தக் காலத்திலேயே இங்கிலாந்தில் ஒரு பெரிய நகரமான க்ளோசெஸ்டரில் அவர் வாழ்ந்தது அவருடைய பாக்கியம் என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால், அந்த நகரத்தில் சிறுவர்களுக்கான ஓர் இலவசப்பள்ளி இருந்தது. நம் ஊர்களில் வசதியில்லாதவர்கள் அரசுப் பள்ளியில் படிப்பதுபோல், அங்கும் ஏழைகள், சாமான்யர்கள் இலவசப் பள்ளியில்தான் படித்தார்கள். இலவசப்பள்ளி இல்லாதிருந்தால் அவர் படித்திருப்பாரா என்று நமக்குத் தெரியாது. ஜார்ஜ் விட்ஃபீல்ட் அந்தப் பள்ளியில் சேர்ந்து இலவசக் கல்வி பெற்றார். அவர் நன்றாகப் படித்தார்.

பேச்சாற்றலும், நாடக விருப்பமும்

பள்ளியில் படித்தபோது பொதுக்கூட்டங்களில் பேசுவதற்குப் பெரும்பாலும் அவரையே தெரிந்தெடுத்தார்கள். ஆண்டுதோறும் அதிகாரிகள் பள்ளியைப் பார்வையிட வந்தபோது, பள்ளியில் நடக்கும் கூட்டங்களில் பொதுமேடையில் பேசுவதற்காக, அவர்கள் அவரையே தெரிந்தெடுத்தார்கள். நல்ல மேடைப் பாணியும், கணீர் குரலும் இருந்ததால் ஆசிரியர்கள் எப்போதும் அவரையே அழைத்தார்கள். மேலும், அவர் வாலிபனானபோது, நாடகமன்றங்களை அதிகமாக விரும்பினார். அவருடைய கணீர் குரலையும், மேடைப் பாணியையும் பார்த்தவர்கள் நாடகங்களிலும், திரையுலகத்திலும் அவருக்கு ஒரு நல்ல எதிர்காலம் இருக்கும் என்று நினைத்தார்கள், சொன்னார்கள். அவரும் அப்படியே நினைத்தார். நாடகங்களின் பெரும்பாலான பகுதிகளை அவர் மிக எளிதாக மனப்பாடம் செய்தார். மேலும் நாடக வசனங்களை ஏற்ற இறக்கங்களோடு அற்புதமாகப் பேசினார். அற்புதமான குரல். அவர் ஒரு சிறந்த பேச்சாளர். எனவே, அவர் ஒரு சிறந்த நடிகராக வருவார் என்று எல்லோரும் நினைத்தார்கள்.

இங்கிலாந்தில் கிறிஸ்தவம்

ஜார்ஜ் விட்ஃபீல்ட் வாழ்ந்த அந்த 1700களில் இங்கிலாந்து நாடு ஒரு கிறிஸ்தவ நாடு என்று நாம் நினைக்கக்கூடும். ஏனென்றால், ஒவ்வொரு கிராமத்தின் நடுவிலும் ஒரு தேவாலயம் இருந்தது. தேவாலயம்தான் கிராமத்தின் மையம். எல்லோரும், குறைந்தது மரியாதைக்குரிய எல்லாரும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தேவாலயத்திற்குச் சென்றுவந்தார்கள். ஆலயத்தின் மணிகள் ஓங்கி ஒலிக்கும், ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் தவறாமல் ஆராதனை இருக்கும். மக்கள் எப்போதுமே தேவாலயத்திற்குச் சென்றார்கள். ஆனால், ஏழைகள் பெரும்பாலும் ஆலயத்துக்குச் செல்லவில்லை, ஏனென்றால், அவர்களை யாரும் வரவேற்கவில்லை. தேவாலயம்போன்ற ஒரு பரிசுத்தமான இடத்துக்குச் செல்லும் அளவுக்கு அவர்கள் உயர்ந்தவர்களாக, சுத்தமானவர்களாக, தகுதியுள்ளவர்களாகக் கருதப்படவில்லை. அவர்கள் மிகவும் தாழ்ந்தவர்களாக, மிகவும் அழுக்கானவர்களாக, மிகவும் தகுதியற்றவர்களாகக் கருதப்பட்டார்கள்.

அந்தக் காலத்தில் இங்கிலாந்தில் ஒரு மதப்போதகராக இருப்பது மரியாதைக்குரிய ஒரு வேலையாகக் கருதப்பட்டது. அது ஓர் உயர்ந்த தொழிலாகக் கருதப்பட்டது. கிறிஸ்தவப் போதகராக இருப்பது ஒரு வழக்கறிஞராக, ஒரு மருத்துவராக இருப்பதுபோல ஓர் உயர்ந்த வேலையாகக் கருதப்பட்டது. அது மிகவும் பாதுகாப்பான வேலை, வசதியான வேலை. நல்ல சம்பளம். ஆனால், கிறிஸ்தவப் பாதிரிமார்கள் நன்றாகக் படித்தவர்கள். நல்ல கல்வியறிவு உடையவர்கள். அவர்களுக்குக் கிரேக்க மொழி, இலத்தீன் மொழிகூட தெரியும். அந்த அளவுக்கு நன்கு படித்தவர்கள். ஆனால், பெரும்பாலும் அவர்கள் இரட்சிக்கப்படாதவர்கள். அவர்களுக்கு இரட்சிப்பைப்பற்றி எதுவும் தெரியாது. அவர்கள் இரட்சிப்பைப்பற்றி ஒருபோதும் நினைத்ததேயில்லை. அவர்கள் நன்கு படித்தவர்கள், மதபோதகத்தை ஒரு வேலையாகச் செய்தார்கள். பாதுகாப்பான, நல்ல சம்பளம் கிடைத்த வேலை. மதிப்பு, மரியாதை, செல்வாக்கு எல்லாம் கிடைத்தன.

அந்த நேரத்தில் இன்னொரு காரியம் என்னவென்றால், புத்தகங்களின் விலை மிக அதிகம். சாமான்ய மக்களால் புத்தகம் வாங்க முடியாது. எனவே, ஒரு சிலர் மட்டுமே வேதாகமம் வைத்திருந்தார்கள். ஏழை மக்களால், சாமானியர்களால் வேதாகமத்தை விலை கொடுத்து வாங்க முடியவில்லை. எனவே, பாதிரிமார்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் தேவாலயத்தில் பேசும்போது மட்டுமே இவர்கள் நற்செய்தியைக்குறித்தோ அல்லது தேவனைக்குறித்தோ அல்லது வேதாகமத்தைக்குறித்தோ ஏதாவது கேட்க வாய்ப்பு உண்டு. அன்று இங்கிலாந்து ஒரு கிறிஸ்தவ நாடு என்று வெளியுலகம் நினைத்தது. அவர்கள் எல்லாரும் கிறிஸ்தவர்கள் என்று வெளியுலகம் நினைத்தது. ஆனால், உண்மையில், அவர்களுடைய வாழ்க்கையில் கிறிஸ்துவின் ஆழமோ, கிறிஸ்துவின் ஜீவனோ இல்லை.

இங்கிலாந்தின் சமூகநிலை

இங்கிலாந்தின் வரலாற்றில் இது மிகக் கடினமான நேரம் என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால், அந்த நாட்களில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே ஒரு மிகப்பெரிய இடைவெளி இருந்ததது. ஏழைகள் மிகவும் வறுமையில் உழன்றனர், பணக்காரர்கள் செல்வச் செழிப்பில் மிதந்தனர். பணக்காரர்களுக்குப் பெரிய தோட்டங்கள் இருந்தன, அடிக்கடி விருந்துகள் கொடுத்தார்கள், விருந்துகளில் கலந்துகொண்டார்கள். பிரபுக்கள்போல் ஆடம்பரமான, வசதியான வாழ்க்கையை அனுபவித்தார்கள். எனவே, பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே ஆழமான, பலமான இடைவெளி இருந்தது. ஒருவன் ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்திருந்தால், அவன் தன் எதிர்காலத்தை மாற்றுவதற்கு எந்த வாய்ப்பும், நம்பிக்கையும் இல்லவே இல்லை. பெற்றோர் செய்த தொழிலையே பிள்ளைகள் செய்தார்கள். பெற்றோர்கள் ஏழைகள் என்றால் பிள்ளைகளும் ஏழைகளே. பெற்றோர்களைப்போல் பிள்ளைகளும் பரிதாபமான வாழ்க்கையே வாழ்ந்தார்கள்.

இந்தக் காலகட்டத்தில் அமெரிக்காவில் முக்கியமான ஒரு காரியம் நடந்துகொண்டிருந்தது. அமெரிக்காவில் குடியேறிய மக்கள் இப்போதுதான் நகரங்களைக் கட்டத் தொடங்கியிருந்தார்கள். குடியேற்றங்கள் இப்போதுதான் உருவாகத் தொடங்கின. பென்சில்வேனியா நகரம் இப்போதுதான் நிறுவப்பட்டது. போஸ்டன்போன்ற இடங்களில் குடியேறிய மக்கள் இடங்களைச் சுத்தப்படுத்தி, சாலைகள் போட்டு, நகரங்களைக் கட்டிக்கொண்டிருந்தார்கள். இதுதான் ஜார்ஜ் விட்ஃபீல்டின் காலகட்டம்.

கல்லூரி வாழ்க்கை

ஜார்ஜ் விட்ஃபீல்ட் தன் 16ஆவது வயதில் பள்ளிப்படிப்பை நிறுத்தவேண்டியதாயிற்று. ஏனென்றால் அவர்களுடைய குடும்பச் சத்திரம் சரியாகச் செயல்படவில்லை, வேலைக்கு ஆள் வைக்கக்கூடிய அளவுக்கு வசதியோ, வருமானமோ இல்லை. எனவே, 16 வயதில் விட்ஃபீல்ட் தன் பள்ளிப்படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு சத்திரத்தில் வேலைசெய்யப்போனார். அவருடைய அம்மா அதை விரும்பினார், வேலை செய்வதற்கு விட்ஃபீல்ட் தேவை என்று அவருடைய அம்மா நினைத்தார். எனவே, அவர் சத்திரத்தில் அறைகளைச் சுத்தம்செய்தல், பாத்திரங்கள் கழுவுதல்போன்ற பராமரிப்பு வேலைகளைச் செய்ய ஆரம்பித்தார்.

ஜார்ஜ் விட்ஃபீல்ட் ஒரு சாதாரணமான மாணவனாக இருந்திருந்தால் யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். ஆனார் அவர் ஓர் அசாதாரணமான, தனிச்சிறப்புமிக்க மாணவனாக இருந்ததால் அவருடைய பள்ளி ஆசிரியர் அவரை நினைவுகூர்ந்தார். அவருடைய பள்ளி ஆசிரியர் ஒருநாள் அவருடைய அம்மாவைச் சந்தித்து, ஜார்ஜ் விட்ஃபீல்டை மேற்படிப்புக்கு அனுப்புமாறு உற்சாகப்படுத்தினார். அவருக்கு அப்போது வயது 18.

மேற்படிப்புக்கு பல்கலைக்கழகத்துக்கு அனுப்பக்கூடிய பொருளாதார வசதி அவர்களிடம் இல்லை. குடும்பத்துக்குப் போதுமான வருமானம் இல்லை என்பதால்தானே பள்ளிப்படிப்பை நிறுத்தினார். இருப்பினும் உயர்கல்விக்காக அவரைப் பல்கலைக்கழகத்துக்கு அனுப்புவதற்கு அவர்கள் முடிவு செய்தனர். அவருடைய அம்மாவுக்குத் தெரிந்த சிலர் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் இருந்ததால் அவரை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்திற்கு அனுப்புவதற்கு முடிவு செய்தனர். அந்தப் பல்கலைக்கழகம் அவர்களுடைய நகரத்திலிருந்து வெகு தொலைவில் இல்லை. அவர் அந்தப் பல்கலைக்கழகத்தில் வெறுமனே படிக்கும் மாணவனாகச் சேரவில்லை.வேலையும் செய்ய வேண்டும், படிக்கவும் வேண்டும் இந்த இரண்டையும் ஒரே நேரத்தில் செய்ய வேண்டும். ஒரு பணிமாணவன்.

கல்லூரியில் விடுதிக்கும், உணவுக்கும், புத்தகங்களுக்கும் கொடுக்கப் பணம் இல்லை. எனவே, இவைகளுக்குப் பணம் செலுத்த முடியாத இளங்கலை மாணவர்கள் முதுகலை மாணவர்களுக்குப் பணிவிடைசெய்தார்கள். அவர்கள் மூத்த, பணக்கார மாணவர்களுடைய புத்தகங்களை அவர்கள் சொல்லுகிற இடத்துக்குக் கொண்டுபோக வேண்டும். அவர்கள் சொல்லுகிற நபரிடம் கொண்டுபோய்க் கொடுக்க வேண்டும். அவர்களுடைய காலணிகளைத் துடைத்துச் சுத்தம்செய்து பளபளப்பாக வைக்கவேண்டும். அவர்களுடைய ஆடைகளைத் துவைத்துச் சுத்தம் செய்ய வேண்டும்.. அவர்களுக்கு உணவு வாங்கிக் கொண்டுவந்து கொடுக்க வேண்டும். அவர்களுடைய அறைகளைச் சுத்தம் செய்ய வேண்டும். சில சமயங்களில் கல்லூரியில் அவர்களுடைய வகுப்பில் அவர்களுக்காகக் குறிப்புகள் எடுக்க வேண்டும். அவர்களுடைய வீட்டுப்பாடங்களைச் செய்துகொடுக்க வேண்டும். இதுபோன்ற பல வேலைகள். ஜார்ஜ் விட்ஃபீல்ட் கல்லூரியில் சேர்ந்து மூத்த, பணக்கார மாணவர்களுக்குப் பணிவிடைசெய்துதான் படித்தார்.

அவர் கல்லூரியில் சேர்ந்த புதிதில், பிற மாணவர்களைப்போல், ஒழுங்கற்றவராகத்தான் இருந்தார். அந்தக் காலத்திலும் சரி, இந்தக் காலத்திலும் சரி, கல்லூரி மாணவர்கள் செய்வதுபோல் அவரும் விடுதிகளில் தன் சகாக்களுடன் சேர்ந்து சீட்டு விளையாடுவதுபோன்ற உலகப்பிரகாரமான காரியங்களைச் செய்தார். ஆனால், காரியங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அதே நேரத்தில் தேவனைப்பற்றிய ஒரு பலமான உணர்வும் அவரிடம் இருந்தது. ஏனென்றால், சீட்டு விளையாடிவிட்டு வரும்போது பெரும்பாலும் ஒருவகையான குற்றஉணர்வோடுதான் அவர் தன் விடுதிக்குத் திரும்பினார். அவர் புறம்பாக இவைகளைச் செய்தபோதும் உண்மையில் உள்ளாக ஒருவிதமான பக்தியும், பரிசுத்தமும் வேண்டும் என்று அவர் விரும்பினார். ஆனால், அதன் பொருள் என்னவென்று அவருக்குத் தெரியவில்லை. ஆகவே, அவர் இந்த இரண்டு அற்றங்களுக்கிடையே ஊசலாடிக்கொண்டிருந்தார். ஒரு பக்கம் அவர் தன் நண்பர்களுடன், சகாக்களுடன் சேர்ந்து அவர்கள் செய்தவைகளையே தானும் செய்தார். இன்னொரு பக்கம், ஒரு குற்ற உணர்ச்சி ஏற்படுகிறது. அதனால் பக்தியாகவும், பரிசுத்தமாகவும் வாழ விரும்பினார். ஆயினும் அவர் தன் நடத்தையையோ, போக்கையோ மாற்ற விரும்பவில்லை.

ஒருநாள் அவர் “பக்தியுள்ள, புனித வாழ்க்கைக்கு ஓர் அழைப்பு” என்ற ஒரு புத்தகத்தைப் படித்தார். இந்த புத்தகம் அவரை உண்மையாகவே மாற்றிற்று. அதன்பின் அவர் உண்மையாகவே பரிசுத்தமாக இருக்க விரும்பினார், பரிசுத்தமான, நீதியுள்ள நபராக இருக்க அவர் பெரிதும் முயன்றார்.

வெஸ்லி சகோதர்கள்

அந்த நேரத்தில், அதே கல்லூரியில் சில மூத்த மாணவர்கள் ஒன்றாகக்கூடி நல்ல பக்தியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்தார்கள். இந்தக் குழுவில் இருந்தவர்கள் மிகவும் ஒழுக்கமானவர்கள், ஒழுங்கானவர்கள். அவர்கள் வேதாகமத்தையும், வேதாகமத்தைப்பற்றிய பிற புனித நூல்களையும், புனித எழுத்துக்களையும் ஒன்றாகச் சேர்ந்து படித்தார்கள். இந்தக் குழுவை ஜான் வெஸ்லியும், அவருடைய தம்பி சார்லஸ் வெஸ்லியும் தலைமை தாங்கி நடத்தினார்கள். அவர்கள் இருவரும் அப்போது ஆக்ஸ்போர்டில் படித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரும், குறிப்பாக, சார்லஸ் வெஸ்லி ஜார்ஜ் விட்ஃபீல்டை உன்னிப்பாகக் கண்காணித்தார். அவர்கள் ஜார்ஜ் விட்ஃபீல்டை அவர்களுடைய குழுவில் சேர்த்துக்கொண்டார்கள், மற்ற மாணவர்கள் இந்தக் குழுவை ஹோலி கிளப் என்று பெயரிட்டு கேலிசெய்தார்கள்.

விட் ஃபீல்ட் வெஸ்லி சகோதர்களிடமிருந்து நிறையக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். அவர் அவர்களிடமிருந்து நிறையப் புத்தகங்களை இரவல்வாங்கிப் படித்தார். அவர் கல்லூரியில் படித்த காலத்தில் ஒருபோதும் சொந்தமாகப் புத்தகங்கள் வாங்கவில்லை. சொந்தமாகப் புத்தகங்கள் வாங்கும் அளவுக்கு வசதி இல்லை. பள்ளியில் படித்த காலத்திலிருந்தே அவர் புத்தகங்களை இரவல் வாங்கித்தான் படித்தார். அவர் இப்போது அதிகமாக வாசிக்க ஆரம்பித்தார். அதன் விளைவாக அவர் இரட்சிப்புக்காக மிகவும் ஏங்கினார். அவர் புரிந்துகொண்டபடி, இப்படிப்பட்ட பரிசுத்தத்தையும், நீதியையும் அடைந்துவிட்டால், பரலோகத்திற்குச் செல்ல தகுதியாகிவிடலாம் என்று அவர் நினைத்தார். உபவாசித்தல், ஒரு நாளைக்கு மூன்றுமுறை ஜெபித்தல், எல்லா ஆராதனைகளிலும் கலந்துகொள்ளுதல்போன்ற பக்திமுயற்சிகள் பரலோகத்துக்குச் செல்லும் ஏணியின் படிகள் போன்றவை என்று அவர் நினைத்தார். எனவே, அவர் இவைகளில் மிகவும் ஆர்வம்கொண்டார்.

கிறிஸ்துவைத் தேடுதல்

ஜார்ஜ் விட்ஃபீல்ட் சார்லஸ் வெஸ்லியிடமிருந்து இரவல்வாங்கிய பல புத்தகங்களில் ஹென்றி ஸ்கோகல் எழுதிய “மனிதனின் ஆத்துமாவில் தேவனின் ஜீவன் (வாழ்க்கை)” என்ற புத்தகமும் ஒன்று. விட்ஃபீல்ட் அதைப் படித்தவுடன், அதை உடனடியாகச் சுட்டெரிக்கவேண்டும் என்று நினைத்தார். ஏனென்றால், “நம் கிரியைகளினால் அல்ல, மாறாக, தேவனுடைய கிருபையினாலேயே நாம் இரட்சிக்கப்படுகிறோம்,” என்று அந்தப் புத்தகத்தில் அவர் வாசித்தார். இந்தக் கூற்றை அவரால் ஏற்றுக்கொள்ளவோ, ஜீரணிக்கவோ முடியவில்லை. “இரட்சிப்பை நாம் சம்பாதிக்கவேண்டும்” என்றும், “பரலோகத்துக்குப் போகும் தகுதியை நாம் விலைகொடுத்து வாங்கவேண்டும்” என்றும் அவர் நினைத்தார். மறுபடிபிறக்கவேண்டும் என்பதும், தேவனுடைய இந்தப் புதிய ஜீவனைப் பெற வேண்டும் என்பதும் வாலிபனாகிய ஜார்ஜ் விட்ஃபீல்டிற்கு முற்றிலும் புதிய கருத்தாக இருந்தது. இந்தக் கருத்தையும் அவர் தன் மனம்போல் புரிந்துகொண்டார்.

நல்ல, நீதியான, பரிசுத்தமான வாழ்க்கை வாழ வேண்டும் என்றும், அப்படி வாழும்போது நாம் மறுபடிபிறக்கத் தகுதியான நிலையை அடையலாம் என்றும் அவர் விளங்கிக்கொண்டார். எனவே, அந்த நிலையை அடையவேண்டும் என்பதற்காக அவர் இன்னும் கடுமையாகப் பிரயாசப்பட்டார். அவர் தம் முயற்சிகளை இன்னும் மும்முரப்படுத்தினார். தன் வாழ்வின் எல்லா அம்சங்களிலும் தன்னை ஒழுங்குபடுத்தினார். எனவே, அவர் தன்னைச்சுற்றியிருந்த எல்லாரிடமிருந்தும் தன்னைப் பிரித்துக்கொண்டார். உண்மையில், சாத்தானுக்கு இதில் கொஞ்சம் பங்கு இருக்க வேண்டும் என்று சொல்லலாம். எந்த அளவுக்கு அவர் தன்னைத் துண்டித்துக்கொண்டார் என்றால் தனக்குப் பேருதவியாக இருந்த ஹோலி கிளப்பிலிருந்தும் தன்னைத் துண்டித்துக்கொள்ளத் தொடங்கினார்; ஜாண் வெஸ்லி, சார்லஸ் வெஸ்லியின் நட்பையும் தவிர்த்தார். எல்லாரிடமிருந்தும் ஒதுங்கி, தனிமையை நாடினார். தன் பக்தியில் மட்டும் கவனமாக இருந்தால், கிறிஸ்துவோடு ஐக்கியம் இருக்கும் என்றும், அதனால் மறுபடி பிறக்கத் தகுதியாகிவிடலாம் என்றும் அவர் நினைத்தார்.

பிறரைச் சந்திப்பதை நிறுத்தினார், தவறாமல் உபவாசித்தார், எல்லா நேரமும் ஜெபித்தார். அலங்கோலமான சால்வைபோன்ற ஒன்றை மட்டுமே ஆடையாக அணிவது, இரவில் உறைபனி குளிரில் வெளியே சென்று கைகள் நீலநிறமாக மாறும்வரை ஜெபிப்பதுபோன்ற விசித்திரமான காரியங்களைச் செய்தார். அவருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்றே அவருடைய ஆசிரியர் நினைத்தார். அவருடைய நண்பர்களும் அப்படியே நினைத்தார்கள், எனவே, அவர்கள் அவரைப் பார்த்து நகைத்தார்கள், அவர் இப்படி உபவாசம் இருந்து சீக்கிரம் சாகப்போகிறார் என்று நினைத்தார்கள். சார்லஸ் வெஸ்லி விட்ஃபீல்டைக்குறித்து மிகவும் கவலைப்பட்டார். “பரிசுத்தமான வாழ்க்கை வாழவேண்டும் என்ற உண்மையை ஜார்ஜ் தேவைக்கும் அதிகமாக ஓர் அற்றத்துக்குக் கொண்டுசென்றுவிட்டார்,” என்று அவர் நினைத்தார். இதைப்பற்றி அவர் தன் சகோதரன் ஜாணிடம் பேசினார். ஆனால், என்ன செய்வதென்று அவர்களுக்குத் தெரியவில்லை.

கிறிஸ்துவைநோக்கி - அனுபவம் - கைதி

ஒரு நாள், ஜார்ஜ் விட்ஃபீல்ட் ஒரு பாலத்தில் நடந்துபோய்க் கொண்டிருந்தார். அப்போது அந்தப் பாலத்தின் எதிர்பக்கத்திலிருந்து ஒரு பெண் அவரைநோக்கித் தட்டுத் தடுமாறி ஓடிவந்துகொண்டிருந்தாள். அவள் ஈரம் சொட்ட நனைந்திருந்தாள். அழுதுகொண்டே, கதறிக்கொண்டே ஓடிவந்தாள். அவள் அவருடைய அருகில் வந்ததும் விட்ஃபீல்ட் அவளை அடையாளம் கண்டுகொண்டார். அவள் அவருக்குத் தெரிந்த ஒரு சிறைக்கைதியின் மனைவி. ஒரு கைதியின் மனைவியை எப்படி அவருக்குத் தெரியும் என்றால், அவர் தன் பரிசுத்தத்தை அடையும் முயற்சியில் சிறைகளுக்குச் சென்று கைதிகளைச் சந்திப்பதுபோன்ற பலவிதமான நல்ல செயல்களைச் செய்தார்.

அவர் சிறைச்சாலைக்குச் சென்றபோது அவர் அவளை அங்கு அடிக்கடி பார்த்திருக்கிறார். எனவே, அவர் அவளை உடனடியாக அடையாளம் கண்டுகொண்டார். அவள் சிறைக்கு மிக அருகிலேயே வசித்தாள். ஆகவே, அவள் அந்தச் சிறையில் இருந்த தன் கணவனை அடிக்கடி போய்ப்பார்ப்பது வழக்கம். அந்தப் பெண், விட்ஃபீல்டைப் பார்த்ததும் கீழே விழுந்து அழுதாள். என்ன நடக்கிறது என்று அவரால் புரிந்துகொள்ளமுடியவில்லை. அவள் அவரிடம், “வாழ்க்கையில் எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. எல்லா நம்பிக்கையையும் இழந்துவிட்டேன். என் பிள்ளைகள் பட்டினியால் சாகிறார்கள். என்னால் அதைப் பார்க்கச் சகிக்கவில்லை. என் கணவர் சிறையிலிருந்து விடுதலையாவார் என்ற நம்பிக்கையும் இல்லை. மிகவும் மோசமான சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தனியாக இருந்து மிகவும் கஷ்டப்படுகிறேன். செத்துவிட்டால் எல்லாப் பிரச்சினையும் தீர்ந்துவிடும் என்று நினைத்து நான் சாக முடிவுசெய்தேன். தற்கொலை செய்துக்கொள்வதற்காக ஆற்றில் குதித்தேன். ஆனால், யாரோ ஒரு மனிதன் என்னை ஆற்றிலிருந்து வெளியே இழுத்துக் காப்பாற்றினார். துரதிர்ஷ்டவசமாக, நான் இன்னும் உயிருடன் இருக்கிறேன்,” என்று சொன்னாள். ”

என்ன சொல்வதென்றும், என்ன செய்வதென்றும் அவருக்குத் தெரியவில்லை. ஆனால் அந்தப் பெண் அவரிடம், “விட் ஃபீல்ட் அவர்களே, எனக்காக யாராவது தேவனிடம் பரிந்துபேச வேண்டுமானால், எனக்குத் தெரிந்த ஒரே நபர் நீங்கள்தான்,” என்று அவரிடம் கெஞ்சினாள். எனவே, விட்ஃபீல்டும் அந்தப் பெண்ணும் அவளுடைய கணவரைப் பார்க்கச் சிறைக்குச் சென்றார்கள்.

சிறைக்குச் சென்று அவளுடைய கணவரைப் பார்த்தார்கள். அவள் தன் கணவர் அருகே மிகவும் சோகமாக உட்கார்ந்திருந்தாள். அப்போதும் என்ன செய்வது என்று அவருக்குத் தெரியவில்லை, ஆனால், அவர் சிறைக்குச் செல்லும்போதெல்லாம் வேதாகமத்திலிருந்து ஒரு பகுதியை வாசிப்பது வழக்கம். வழக்கமாகச் செய்வதுபோல, அப்போதும் வேதாகமத்திலிருந்து யோவான் 3ஆம் அதிகாரத்தை அவர்கள் இரண்டுபேருக்கும் வாசிக்கத் தொடங்கினார்.

அவர் யோவான் 3:17யை வாசித்தபோது, அந்தப் பெண் குதித்தெழுந்து, “நான் இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதால் அழிந்துபோகமாட்டேன் என்று நான் நம்புகிறேன். ஓ! நான் இரட்சிக்கப்பட்டேன், நான் இரட்சிக்கப்பட்டேன், நான் மீண்டும்பிறந்தேன்,” என்று மகிழ்ச்சியால் குதித்தாள். அவள் அருகில் இருந்த அவளுடைய கணவன் நடுக்கத்தோடு, “இல்லை, இல்லை, நான் இன்னும் நரகத்தின் விளிம்பில்தான் இருக்கிறேன். மிஸ்டர் விட்ஃபீல்ட், அந்த வசனத்தை மீண்டும் வாசிக்கமுடியுமா?” என்று வினவினார். ஜார்ஜ் யோவான் 3யை மீண்டும் வாசித்தார். அவர் யோவான் 3:16க்கு வந்தபோது, அந்த மனிதன் குதித்தெழுந்து, “ஓ, நான் அதைப் பார்க்கிறேன், நான் அதைப் பார்க்கிறேன். ஓ, மகிழ்ச்சி, நான் இரட்சிக்கப்பட்டேன்,” என்று கூறினார். அவர் அந்த இரண்டுபேரையும் பார்த்தார், அவர்களுடைய முகங்களில் உண்மையான மகிழ்ச்சியைக் கண்டார். தங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன என்று அவர்கள் உறுதியாக நம்பினார்கள். விட் ஃபீல்ட் மிகவும் அதிர்ச்சியடைந்தார். “இந்த இரண்டு பேரும் எப்படி ஒரு கணத்தில் இரட்சிக்கப்பட்டு, மறுபடிபிறக்க முடியும்?” என்று நினைத்தார். இந்த நிகழ்ச்சி அவரைச் சிந்திக்க வைத்தது.

கிறிஸ்துவைநோக்கி -பக்திமுயற்சிகள்

ஈஸ்டர் பண்டிகை நெருங்கிவந்துகொண்டிருந்தது. பெரிய வாரம் என்பதால் ஜார்ஜ் விட்ஃபீல்ட் தன் பக்திமுயற்சிகளைத் தீவிரமாகச் செய்ய ஆரம்பித்தார். முன்பு இருந்ததைவிட இன்னும் அதிகமாக உபவாசம் இருந்தார். இரவில் உறைபனி குளிரில் ஒரு சால்வைகூட போடாமல் வெளியே சென்றார், கைகள் உறைந்து கிட்டத்தட்ட கருப்பு நிறமாக மாறும்வரை ஜெபித்தார்.

ஒருநாள் அவர் இப்படிச் செய்துவிட்டுத் தன் அறைக்குத் திரும்பி வந்தார். அறைக்குச் செல்லும் படிக்கட்டில் ஏறிக்கொண்டிருக்கும்போது மயங்கிக் கீழே விழுந்தார். மயங்கிக்கிடந்த அவரை அவருடைய ஆசிரியர் கண்டு, அவருடைய அறைக்குத் தூக்கிச் சென்று, படுக்கவைத்து, அதன்பின் ஒரு மருத்துவரை அழைத்தார். சோர்வினாலும், ஊட்டச்சத்து குறையினாலும் அவர் மயங்கி விழுந்ததாக மருத்துவர் கூறினார்.

அவருடைய சகாக்களும், நண்பர்களும், அவரைப் பார்த்து நகைத்தார்கள். “நிச்சயமாக இவன் ஒரு முட்டாள்! சாப்பிடுவதேயில்லை. எப்போதும் உபவாசம் இருக்கிறான். இவன் 20 வயதில் தன்னைத்தானே மாய்த்துக்கொள்ளப்போகிறான். அதுதான் நடக்கப்போகிறது,” என்று நினைத்தார்கள், சொன்னார்கள். மூன்று வாரங்கள், அசைய முடியாமல் படுத்த படுக்கையாய்க் கிடந்தார். நிலைமை அவ்வளவு மோசமாக இருந்தது. திட உணவு சாப்பிடமுடியவில்லை. கொஞ்சம் சூப் மட்டுமே உறிஞ்சி குடிக்க முடிந்தது. உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. நீதியான, ஒழுக்கமான வாழ்க்கை வாழவேண்டும் என்பதற்காக உடலையும், உணர்ச்சியையும் வருத்திக்கொண்டதன் விளைவாகவே நோய்வாய்ப்பட்டார் என்று சொல்லவேண்டும்.

கிறிஸ்துவைத் தேடி-தேடலின் தொடர்ச்சி

உடல் கொஞ்சம் தேறியவுடன், அவர் மீண்டும் படிக்கத் தொடங்கினார், அவர் முன்பு வாசித்த மற்ற எல்லாப் புத்தகங்களையும் விட்டுவிட்டு வேதாகமத்தை வாசிக்க ஆரம்பித்தார். அவர் கிரேக்க மொழியில் புதிய ஏற்பாட்டை வாசிக்கத் தொடங்கினார்.

யோவான் 7ஆம் அதிகாரத்துக்கு வந்தபோது, இயேசு சொன்ன ஒரு காரியம் திடீரென்று அவருக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. “பண்டிகையின் கடைசிநாளாகிய பிரதான நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன். வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்.” ஜார்ஜ் விட்ஃபீல்ட் அதை வாசித்தபோது, அவர் தேவனைநோக்கி, “தேவனே, நான் தாகமாயிருக்கிறேன், நான் தாகமாயிருக்கிறேன்,” என்று கதறினார்.

ஜார்ஜ் ஜெபத்தில் தேவனை முழுமையாக நம்பிச்சார்ந்து கதறியது இதுவே முதன்முறை. அந்த ஜெபத்தில் அவரைப்பற்றியது எதுவும் இல்லை, அவருக்குரியது எதுவும் இல்லை, அவருடைய சொந்த முயற்சி எதுவும் இல்லை, அவர் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும். இப்போது அவர் தன்னை முழுவதுமாகத் தேவனிடம் கையளித்துவிட்டார். திடீரென்று, ஜார்ஜ் விட்ஃபீல்ட் மிகுந்த மகிழ்ச்சியால் நிரம்பினார். இதுவரை ஒருபோதும் அனுபவிக்காத ஒருவிதமான மகிழ்ச்சி அவருடைய உள்ளத்தை நிரப்பிற்று.

கிறிஸ்துவைக் கண்டடைதல்

கர்த்தர் அவரிடம், “ஜார்ஜ், நீ கேட்டது உனக்குக் கிடைத்தது. நீ உன் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு, மிக எளிமையாக என்னை விசுவாசித்தாய். இப்போது நீ மீண்டும் பிறந்துவிட்டாய்,” என்று சொன்னதுபோல் இருந்தது. இவ்வளவு எளிமையான ஜெபத்திற்கு இப்படி ஒரு மென்மையான பதிலா! மறுபடி பிறப்பது இவ்வளவு எளிமையானதா என்பதை நினைத்து அவர் புன்னகை பூத்தார். பலவீனமாக இருந்தபோதும், குதித்தெழுந்து அறையைவிட்டு வெளியே ஓடினார். அப்போது அவர் பார்த்த முதல் நபர் அந்தக் கல்லூரி போர்ட்டர். அவர் பலவகையான பெட்டிகளைப் படிக்கட்டுகளில் தூக்கிக்கொண்டுபோய்க்கொண்டிருந்தார். அவர் இந்தப் போர்ட்டரைக் கட்டியணைத்து, முதுகில் செல்லமாகத் தட்டிக்கொடுத்தார். அவர் சற்று ஆச்சரியப்பட்டார். பின்னர் அவர் தன் நண்பர்களிடம் போய்த் தான் மறுபடிபிறந்துவிட்டதாகச் சொன்னார். அவர் தன் குடும்பத்தினருக்கு கடிதங்களை எழுதி, அவர்கள் மறுபடிபிறக்க வேண்டும் என்று சொன்னார்.

இளங்கலைப் பட்டம்

சில ஆண்டுகள் கழிந்தன. விட்ஃபீல்ட் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் கலையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அவருடைய 21ஆவது வயதில் அவர் போதகராகப் பிரதிஷ்டை செய்யப்பட்டார். குளோசிஸ்டர் பிஷப் ஜார்ஜ் விட்ஃபீல்டின் தாலந்துகளைக் கவனிக்க ஆரம்பித்தார். அவர் அவருக்கு ஐந்து தங்க நாணயங்களைக் கொடுத்து புத்தகங்கள் வாங்கிப் படிக்குமாறு சொன்னார். அந்த நாட்களில் அது பெரிய தொகை. அவர் சில புத்தகங்களை வாங்கினார், குறிப்பாக வேதாகமத்தைச் சரியாகப் புரிந்துகொள்வதைப்பற்றிய புத்தகங்களை வாங்கிப் படித்தார். பிஷப் அவருக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். அதிகமாக உதவினார். ஆனால் அவருடைய குடும்பத்தார் இதை விரும்பவுமில்லை, ஆதரிக்கவுமில்லை. அதற்கு மாறாக அவருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்று அவர்கள் நினைத்தார்கள். “மதத்துக்கடுத்த விஷயங்களில் அவன் ஏன் இவ்வளவு ஆர்வமாக இருக்கிறான்?” என்றே அவர்கள் நினைத்தார்கள். எனவே, அவரால் தன் குடும்பத்தாரோடு நல்ல உறவு வைத்துக்கொள்ள முடியவில்லை. உண்மையில் அவருடைய குடும்பத்தார் அவர் பேசுவதைக் கேட்க விரும்பவில்லை என்றே சொல்ல வேண்டும்.

கிறிஸ்துவை அறிவித்தல்

விட்ஃபீல்ட் வழக்கம்போல் சிறைச்சாலைக்குச் சென்று சிறைக்கைதிகளைச் சந்தித்தார், குடிசைப்பகுதிகளில் வாழும் குடிசைவாசிகளைச் சந்தித்தார். அப்போது தேவனை அறிந்துகொள்ளவேண்டும் என்ற பசியும், தாகமும் அவர்களிடம் இருப்பதை அவர் கவனித்தார். சில நேரங்களில் அவர் துக்கத்தோடும், துயரத்தோடும், வருத்தத்தோடும், வேதனையோடும் இருக்கும் மக்களுடன் சந்தைவெளிகளில் உட்கார்ந்து பேசினார். அவருடன் பேசி முடித்தபின், அவர்கள் தேவனை விசுவாசித்து, மறுபடி பிறந்த அனுபவத்தோடு திரும்பிச் சென்றார்கள். இவ்வாறு மக்கள் வேதத்தை அறிவதற்கும், தேவனை அறிவதற்கும், தேவனை விசுவாசிப்பதற்கும் பசியோடும், தாகத்தோடும் இருப்பதைக் கண்டு ஜார்ஜ் விட்ஃபீல்ட் மிகவும் ஆச்சரியப்பட்டார்.

ஜாண் வெஸ்லியின் தேடல்

இதற்கிடையில், ஜாண் வெஸ்லி ஆக்ஸ்ஃபோர்டை விட்டு வெளியேறி, அமெரிக்காவின் புதிய குடியேற்றங்களில் அமெரிக்காவின் பூர்வீக மக்களுக்கு நற்செய்தியை அறிவிக்க ஒரு மிஷனரியாகச் சென்றார். ஜாண் வெஸ்லியும், சார்லஸ் வெஸ்லியும் தான் பெற்ற மறுபடிபிறக்கும் அனுபவத்தைப் பெறவில்லை என்பதை ஜார்ஜ் உணர்ந்தார். தேவனுடைய அங்கீகாரத்தைப் பெறுவதற்காக நாம் சில காரியங்களை செய்யவேண்டும், சில ஒழுக்கங்களும், ஒழுங்குகளும் அவசியம் என்ற மனப்பாங்கு வெஸ்லி சகோதர்களிடம் இருந்தது. அதனால் அவர்களுடைய இரட்சிப்புக்காக அவர் ஊக்கமாகச் ஜெபித்தார். உண்மையில், ஜாண் வெஸ்லி அமெரிக்காவில் மிஷனரியாகப் பணியாற்றிய காலங்கள் அவருக்குத் துக்கத்தையே வருவித்தன. ஒருமுறை அவர் ஒரு கடிதத்தில், “அமெரிக்காவில் பூர்வீக மக்களை மாற்றுவதற்காக ஒரு மிஷனரியாக நான் இங்கு வந்தேன், ஆனால் ஓ, என்னை யார் மாற்றுவார்?” என்று எழுதினர். தன்னிடம் ஏதோ குறைவுபடுகிறது என்பதை வெஸ்லி அறிந்திருந்தார். தேவன் அவர்கள் இருவரையும் வல்லமையாய்ப் பயன்படுத்துமாறும், அவர்களுடைய கண்களைத் திறக்குமாறும் விட்ஃபீல்ட் அவர்களுக்காகத் தேவனிடம் ஊக்கமாகச் ஜெபித்தார்.

நற்செய்தியும், ஆத்தும பாரமும்

இளம் வயதிலேயே அவர் பிரசங்கிக்க ஆரம்பித்தார். ஒருநாள் அவர் இலண்டனில் உள்ள ஒரு சிறிய தேவாலயத்தில் பிரசங்கித்துக்கொண்டிருந்தார். சபையார் அனைவரும் அவரை ஆச்சரியத்தோடு பார்த்தார்கள். அவர் அவர்களுக்கு மிகவும் வித்தியாசமானவராகத் தோன்றினார். 22 வயது வாலிபன். மிகவும் இளமையானவன். எனவே, அவர்கள் அவரை ஒரு சிறுவனைப் பார்ப்பதுபோல் பார்த்தார்கள். ஆனால், அவர் வாய் திறந்து பேச ஆரம்பித்தவுடன், அவர்கள் ஸ்தம்பித்துப்போனார்கள்.

மிகவும் வித்தியாசமாகப் பேசினார், மிகுந்த ஆர்வத்தோடும் உணர்ச்சியோடும் பேசினார், அவருடைய குரலில் அழுத்தமும், ஆழமும் இருந்தது. மக்கள்மேல் உண்மையான பாரம் இருந்தது. நாளடைவில், மக்கள் அவருடைய பிரசங்கத்தைக் கேட்க மிகவும் விரும்பினார்கள். துறைமுகங்களில் மாலுமிகளுடன் பேசினார். சிறைகளுக்குச் சென்று கைதிகளுடன் பேசினார். அரண்மனையில் உள்ள காவலர்களுடன் உரையாடினார். இராணுவக் குடும்பங்களைச் சந்தித்தார். எல்லாரிடமும் நற்செய்தியைக் கொண்டுசென்றார். எனவே, இந்த வாலிபன் மிகவும் வித்தியாசமானவர் என்று மக்கள் பார்க்கத் தொடங்கினார்கள்.

அமெரிக்கச் செவ்விந்தியர்களுக்கு நற்செய்தி

ஒரு நாள், அவருக்கு ஒரு கடிதம் வந்தது, அமெரிக்காவில் உருவாகிக்கொண்டிருந்த குடியேற்றங்களில் குடியேறுகிற மக்களுக்கு உதவ ஒரு மிஷனரியாக, வரமுடியுமா என்று கேட்டு கடிதம் எழுதியிருந்தார்கள். ஜாண் வெஸ்லி அங்கு ஏற்கெனவே மிஷனரியாகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். அவருக்குப்பதிலாக இவரை அழைத்தார்கள். அங்கிருந்த பூர்வீகக் குடிகளுக்கு மட்டும் அல்ல, குடியேறுகிறவர்களுக்கும் நற்செய்தியை அறிவிக்க வேண்டிய தேவை இருந்தது. அங்கு பல சிக்கல்கள் இருந்தன. ஏராளமான அனாதைகள் இருந்தார்கள், அவர்களைக் கவனிக்க யாரும் இல்லை.

ஜாண் வெஸ்லிகூட, “விட்ஃபீல்ட், இந்த அழைப்பைப்பெற்ற அந்த மனிதன் நீயாக இருக்கலாம்?” என்று விட்ஃபீல்டிற்குக் கடிதம் எழுதி இருந்தார். “இதுதான் என் அழைப்போ! அங்குதான் நான் என் வாழ்வைச் செலவிட வேண்டியிருக்குமோ! நான் அங்கு ஒரு மிஷனரியாகப் போகவேண்டுமோ!” என்று விட்ஃஃபீல்ட் நினைத்தார். ஆனால், அவருடைய பெற்றோர், குறிப்பாக அவருடைய அம்மா, அவரைப் “போக வேண்டாம்” என்று வற்புறுத்தினார். அவருடைய அப்பா ஏற்கனவே இறந்துவிட்டார். வேறொரு மாற்றாந்தந்தை இருந்தார். அவர்கள் விட்ஃபீல்டுக்கு ஆதரவாக இருக்கவில்லை. புதிய குடியேற்றங்கள் மிகக் கடினமான இடங்கள். இப்படிப்பட்ட புதிய, இடங்களுக்குச் சென்று அங்கு வாழ வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்குப் பிடிக்கவில்லை.

நற்செய்தி அறிவிக்க பயனுள்ள பாத்திரம்

அவர் தன் குடும்பத்தாரோடு தங்கியிருந்து, தன் புதிய பணியைப்பற்றி அவர்களிடம் எடுத்துரைக்க முயன்றார். அப்போது ஒருநாள், க்ளூசெஸ்டரைச் சேர்ந்த முதிய போதகர் ஒருவர் அவரிடத்தில் வந்து, “இந்த ஞாயிற்றுக்கிழமை எங்கள் ஆலயத்தில் பிரசங்கிக்க வருகிறீர்களா? இது உங்கள் திருச்சபை,” என்று சொல்லி அவரை அன்புடன் அழைத்தார். விட் ஃபீல்ட் சம்மதித்தார். சொன்னபடியே, அந்த ஞாயிற்றுக்கிழமை அவர் சபையில் பேசினார். தேவன் உண்மையிலேயே அவரைப் பயன்படுத்தினார், அன்று பலர் இரட்சிக்கப்பட்டார்கள். அந்த முதிய பாதிரியார் இதைக்கண்டு மிகவும் அதிர்ச்சியடைந்தார். “நீங்கள் அடுத்த வாரமும் பேச வரமுடியுமா?” என்று கேட்டார்.

விட்ஃபீல்ட் சம்மதித்து, அதற்கடுத்த வாரமும் பிரசங்கிக்கச் சென்றார். பேசினார். அவருடைய பிரசங்கத்தைக் கேட்ட பலர் இரட்சிக்கப்பட்டார்கள் என்ற செய்தி பரவியதால் மற்ற குருக்களும், போதகர்களும் தங்கள் தங்கள் திருச்சபையிலும் வந்து பேசுமாறு அவரை அன்புடன் அழைத்தார்கள். அமெரிக்காவிற்கு மிஷனரியாகச் செல்வதற்குமுன், அதற்காக அவர் தன்னைக் கொஞ்சம் ஆயத்தம்செய்ய விரும்பினார். அதற்காக அவர் பிரிஸ்டல் என்ற இடத்துக்குச் சென்றார். அவர் அங்கு வந்திருப்பதைக் கேள்விப்பட்ட அனைத்து குருக்களும், போதகர்களும் அவரிடம் வந்து, “நீங்கள் எங்கள் திருச்சபைக்கு வந்து பிரசங்கிக்க முடியுமா?” என்று வருந்தி அழைத்தார்கள். இதனால், அவர் வாரத்திற்கு ஐந்துமுறை பிரசங்கிக்க வேண்டியதாயிற்று.

கர்த்தர் உண்மையிலேயே தன்னைப் பயன்படுத்துவதையும், தன் பேசுதலின்மூலம் வேலைசெய்வதையும் அவர் உணர்ந்தார், ஏனென்றால், அவர் பேசுவதைக் கேட்க மக்கள் கூட்டங்கூட்டமாக வந்தார்கள்.

அமெரிக்கப் பயணம்

ஏதோ சில காரணங்களால், அவருடைய அமெரிக்கப் பயணம் தள்ளிப்போய்க்கொண்டேயிருந்தது. பயணம் தாமதமானதால், பல இடங்களில் இன்னும் அதிகமாகப் பேசுவதற்கு அவருக்கு நேரம் கிடைத்தது. அவருடைய அமெரிக்கப் பயணம் மீண்டும் தாமதமானது. வானிலை மோசம், கப்பல் இல்லை, மாலுமி இல்லைபோன்ற பல காரணங்களால் அவருடைய அமெரிக்கப் பயணம் தள்ளிப்போனது. அவருக்கு இதில் கொஞ்சம் வருத்தம்தான். எனினும், தான் எதிர்பார்க்காத வகையில் தேவன் தன்னைப் பயன்படுத்துவதை அவர் கவனிக்கத் தவறவில்லை. “தேவனே, நீர் விரும்புவதை என் வாழ்வில் தங்குதடையின்றி செய்வீராக,” என்று விட்ஃபீல்ட் ஏற்கெனவே தேவனிடம் சொல்லியிருந்தார். எனவே, அமெரிக்கப் பயணம் தள்ளிப்போவதும், அவர் இருந்த இடங்களில் பிரசங்கிக்க வாய்ப்புகள் வந்ததும், மக்கள் மனந்திரும்புவதும் தேவனுடைய திட்டத்தின் ஒரு பகுதிதான் என்பதை அவர் புரிந்துகொண்டார்.

பிரிஸ்டோலில் இருந்த அனைவரும் விட் பீல்டையும், அவருடைய பிரசாங்கத்தையும்பற்றிக் கேள்விப்பட்டிருந்தார்கள். அந்த நகரத்தில் அவர் மிகவும் பிரபலமானார். அமெரிக்காவிற்குக் கப்பலேற அவர் இலண்டனுக்குச் சென்றபோது, பேரும் புகழும் அவரைப் பின்தொடர்ந்தது. அங்கிருந்தவர்கள் அவரை எளிதில் அடையாளம் கண்டுகொண்டார்கள். அவர் அப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தார். இது ஜார்ஜ் விட்ஃபீல்டுக்கு மிகவும் பயமாக இருக்கிறது. புகழையும், பெருமையையும் கண்டு அவர் மிகவும் பயந்தார். ஆனால் கர்த்தர் வேலைசெய்வதை அவர் கண்டார்.

வறியவர்களுக்கு நற்செய்தி

பிரசங்கிக்க வருமாறு அவரை மீண்டும் மீண்டும் அழைத்தார்கள். சில நேரங்களில் அவர் ஒரே நாளில் பலமுறை பிரசங்கித்தார். கர்த்தருடைய கிருபையினால், அவருடைய பிரசங்கத்தின்மூலம், இலண்டனில் அநேகர் இரட்சிக்கப்பட்டார்கள். எனவே, அவர், “தேவன் இங்கிலாந்திலேயே வல்லமையாய் வேலைசெய்கிறாரே! அப்படியிருக்க நான் ஏன் அமெரிக்காவுக்குச் செல்ல வேண்டும்?” என்று நினைத்தார். ஆயினும், அவர் அமெரிக்கா செல்வதற்கான வழிகள் திறந்தன. புறப்பட்டார். ஆயினும், அவர் இலண்டனில் இருந்த நாட்களில் ஒரு காரியம் அவரைத் தொந்தரவு செய்தது.

அவர் இலண்டனில் இருந்தபோது அங்கு வறுமையில் வாழ்ந்த மக்களைக் கண்டு மிகவும் வருந்தினார். அங்கு ஏழைகள் அதிகமாக இருப்பதாக அவர் உணர்ந்தார். அது அவரை உருத்தியது. அவர் பல்வேறு இடங்களில் எல்லாவிதமான திருச்சபைகளிலும் பலமுறை பேசினார். ஆனாலும், தேவனுடைய வார்த்தையை ஒருபோதும் கேட்டிராத மக்கள் நிறையப்பேர் இருப்பதை அவர் உணர்ந்தார். குடிசைகளில், குறுக்குச் சந்துகளில் வாழ்ந்த ஏழை மக்கள் நிறைப்பேர் இருந்தார்கள். அவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது எலிகள் ஓடிக்கொண்டிருக்கும். கவனிப்பாரற்ற குழந்தைகள். குடிபோதையில் தள்ளாடும் பெற்றோர்கள். பரிதாபமான ஏழைகள், வறியவர்கள். இது ஜார்ஜ் விட்ஃபீல்டைத் தொந்தரவு செய்தது.

அமெரிக்கப் பயணம்

அவர் அமெரிக்காவுக்குப் புறப்பட்டார். கப்பல் பயணம். அமெரிக்காவில் ஜார்ஜியா என்ற நகரத்தில் இறங்கினார். ஜார்ஜியாவில் ஓர் அனாதை இல்லத்தை அமைக்க உதவுமாறு அவரிடம் கேட்டிருந்தார்கள். அங்கு ஓர் அனாதை இல்லம் நிச்சயமாகத் தேவை என்று ஜானண் வெஸ்லியும் நினைத்தார். அவர் இங்கிலாந்தில் செய்துகொண்டிருந்த ஊழியத்தைவிட்டுவிட்டு அமெரிக்காவுக்குச் செல்வது அவருக்கு மிகவும் கடினமாக இருந்தது. அவர் கப்பலில் பயணித்துக்கொண்டிருந்தபோதுகூட, இங்கிலாந்தில் ஒரு பெரிய அறுவடை காத்துக்கொண்டிருப்பதால், தேவன் அதற்காக அநேக வேலையாட்களை எழுப்புமாறு ஜெபித்தார். அங்கு அநேகர் தேவன்மேல் பசி தாகத்தோடு இருப்பதை அவர் கண்கூடாகக் கண்டார். ஆயினும், அவர் இங்கிலாந்தைவிட்டு அமெரிக்காவுக்குப் போனார்.

ஜான் வெஸ்லியின் வெளியேற்றம்

தேவன் விட் ஃபீல்ட்டின் ஜெபத்தைக் கேட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், இந்தக் கட்டத்தில் தேவன் ஜாண் வெஸ்லியின் கண்களைத் திறந்தார்.

ஜாண் வெஸ்லி அமெரிக்காவிலிருந்து மிகவும் துக்கத்தோடும், விசனத்தோடும் இங்கிலாந்திற்குத் திரும்பினார். இங்கிலாந்துக்குத் திரும்பிவந்தபின் அவர் தேவனுடைய கிருபையைப்பற்றி மீண்டும் வாசிக்க ஆரம்பித்தார். கிரியைகளினால் அல்ல, கிருபையால்தான் இரட்சிப்பு என்பதைப்பற்றிய செய்திகளையும், புத்தகங்களையும் மீண்டும் வாசித்தார். அதனால், அவர் தெளிவடைந்தார், அவருடைய கண்கள் திறக்கப்பட்டன, அவர் பார்வையடைந்தார், அவர் மறுபடி பிறந்தார். அவர் மட்டுமல்ல, அவருடைய தம்பி சார்லசும் மறுபடி பிறந்தார்.

விட்ஃபீல்ட் அமெரிக்காவுக்குக் கப்பலில் போய்க்கொண்டிருக்கும்போதே, இங்கிலாந்தில் ஜாண் வெஸ்லியும், சார்லஸ் வெஸ்லியும் மறுபடி பிறந்தார்கள். எனவே, இவர்களுடைய வாழ்வில் ஏற்பட்ட மாற்றம் இன்னும் விட்ஃபீல்டுக்குத் தெரியாது. வெஸ்லி சகோதர்களின் வாழ்வில் புதிய வீரியமும், புதிய ஜீவனும் காணப்பட்டன. ஜாண் வெஸ்லியின் பிரசங்கத்தில் ஒரு புதிய எழுச்சியும், மாற்றமும் காணப்பட்டன. ஜாண் வெஸ்லி இங்கிலாந்தின் நாலா திசைகளுக்கும் சென்று நற்செய்தியைப் பிரசங்கித்தார். ஜாண் வெஸ்லியைப்பற்றி இன்னொரு நாள் பேசலாம்.

ஜார்ஜியா அனாதை இல்லம்

ஜார்ஜியா என்ற மாநிலத்தில் சவன்னா என்ற இடத்தில் ஓர் அனாதை இல்லம் கட்ட வேண்டும் என்பது விட்ஃபீல்டின் மிகப்பெரிய திட்டம். அங்கிருந்த அனாதைக் குழந்தைகளை அவர் மிக அதிகமாக நேசித்தார். அவர்களுக்கு வாழ்க்கையையும், கிறிஸ்துவையும் கற்பிப்பதற்கான வழிகளை அவர் தேட ஆரம்பித்தார். அவர் அந்தக் குழந்தைகளைப் பாதுகாத்து, பராமரிக்க விரும்பினார், அந்தக் குழந்தைகளை மட்டுமல்ல, அங்கு வேலைசெய்தவர்களையும் அவர் மிகவும் நேசித்தார். அவர்கள்மேல் அவர் மிகுந்த அக்கறையும் கரிசனையும் கொண்டிருந்தார். ஆனால், அனாதை இல்லத்தை எப்படி நிர்வகிப்பது என்று ஜார்ஜ் விட்ஃபீல்டுக்குத் தெரியவில்லை. இது அவருக்கு ஒரு பிரச்சினையாகவே இருந்தது. அவருக்கு நிர்வாகத்திறமை இருந்ததுபோலத் தெரியவில்லை. தேவன் அவருக்கு அப்படிப்பட்ட தாலந்தைக் கொடுக்கவில்லை என்றே தோன்றுகிறது. இருப்பினும், அவர் ஜார்ஜியாவில் இருந்த காலத்தில் பலவிதமான கூட்டங்களில் பிரசங்கித்தார்.

அவர் இருந்த இடம் ஒரு மோசமான குடியேற்றம். எல்லா இடங்களிலிருந்தும், ஐரோப்பாவின் சில பகுதிகளிலிருந்தும் மக்கள் அங்கு குடியேறியிருந்தார்கள். ஜார்ஜியர்களும், அங்கு வாழ்ந்த பூர்வீகக் குடிகளும், அங்கு குடியேறிய மக்களும் ஜாண் வெஸ்லியைக் கொஞ்சம்கூட விரும்பவில்லை. அவர்கள் அவரிடம் அன்பாக நடக்கவுமில்லை. ஏனென்றால், அவர் மிகக் கடுமையானவர் என்றும், கோபக்காரர் என்றும் அவர்கள் நினைத்தார்கள், ஆனால், அவர்கள் ஜார்ஜ் விட்ஃபீல்டை அவர்கள் நேசித்தார்கள். அவர்களில் பலருடைய வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. ஆனால் ஒரு வருடம் கழித்து, அவர் அங்கு செய்துகொண்டிருந்த வேலையையும் அனாதை இல்லத்தையும் விரிவுபடுத்துவதற்குத் தேவையான நிதி திரட்ட அவர் மீண்டும் இங்கிலாந்து செல்ல வேண்டியிருந்தது.

மதகுருமார்களோடு கருத்து வேறுபாடு

அவர் இங்கிலாந்துக்குத் திரும்பிவந்தபோது, அங்கு காரியங்கள் முற்றிலும் தலைகீழாக மாறி இருப்பதைக் கண்டார். அவர் அமெரிக்காவில் இருந்தபோதும், இங்கிலாந்துக்குக் கப்பலில் பயணித்தபோதும் பல கட்டுரைகளை எழுதினார், கப்பலில் பல வாரங்கள் பயணம் செய்யவேண்டும். அவர் புதிய பிறப்பைப்பற்றி, இரட்சிப்பைப்பற்றி எழுதினார்,

மதகுருக்களுக்கு நேரடியாக எழுதினர். “உங்களை ஆராய்ந்துபாருங்கள். நீங்கள் மறுபடிபிறந்தீர்களா என்று ஆராய்ந்துபாருங்கள். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நீங்கள் பிரசங்கிக்கும் வார்த்தைகள் ஜீவனைக் கொடுக்கிறதா அல்லது மரணத்தைக் கொடுக்கிறதா என்று ஆராய்ந்துபாருங்கள்,” என்று கேள்விகள் கேட்டு எழுதினார். இதனால் மதகுருமார்கள் மிகக் கோபமடைந்தார்கள், இதை அறிந்த சில வாலிபர்கள் மதபோதகர்களுடைய கல்வியையும், கற்றலையும் கேள்விகேட்கத் தொடங்கினார்கள்.

அன்றும் இன்றும்

அன்றைய மதகுருக்கள் எந்த வகையிலும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கத் தகுதியானவர்கள் இல்லை என்று அவர்கள் சாடினார்கள். ஆகையால், அவர் இங்கிலாந்துக்குத் திரும்பி வந்தபோது, மதபோதகர்கள் அவரை அன்புடன் வரவேற்கவில்லை. முன்பு அவரை அன்புடன் வரவேற்று தங்கள் சபைகளில் பிரசங்கிக்கக் கதவுகளைத் திறந்துகொடுத்தார்கள். இப்போது அதே கதவுகளை இறுக்கி மூடிவிட்டார்கள். மதகுருக்கள் அவரை ஏற்கவோ, வரவேற்கவோ இல்லை. அவர்கள் விட்ஃபீல்டுக்குத் தங்கள் பிரசங்க மேடையில் இடம் கொடுக்கவில்லை. தங்கள் திருச்சபையின் வாசலில் நுழையக்கூட அவரை அனுமதிக்கவில்லை.

இன்னும் சொல்லப்போனால், அந்த நகர மதகுருமார்கள் பலர் ஒன்றுகூடி, விட்ஃபீல்டுக்கு எதிராகப் பிரசங்கிப்பது என்றும், அவரைத் தங்கள் திருச்சபைக்குள் நுழையவோ, பிரசங்கிக்கவோ அனுமதிக்கக்கூடாது என்றும் தீர்மானித்தார்கள். எனவே, இது விட்ஃபீல்டுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அவர் இங்கிலாந்தைவிட்டுப் போகும்போது எல்லாரும் அவரை விரும்பி அழைத்தார்கள், ஆனால், இப்போது திரும்பிவந்தபின் பார்த்தால், எல்லாக் கதவுகளும் அடைபட்டுவிட்டன. அன்று நேசித்தவர்கள், இன்று வெறுக்கிறார்கள். அன்று அழைத்தவர்கள் இன்று விரட்டுகிறார்கள். அன்று கதவைத் திறந்தவர்கள் இன்று அதே கதவை மூடுகிறார்கள். அன்று வீடு தேடி வந்து அழைத்தார்கள், இன்று அவர்களைத் தேடிப்போனாலும் திருப்பி அனுப்புகிறார்கள். எல்லாம் தலைகீழாய் மாறிவிட்டது. என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தார், ஆயினும், உண்மையாகவே இரட்சிக்கப்பட்ட, ஆண்டவராகிய இயேசுவை உண்மையாகவே விசுவாசித்த, உண்மையாகவே மறுபடி பிறந்த சில மதகுருமார்கள் இருக்கத்தான் செய்தார்கள்.

எளியவர்களுக்கு நற்செய்தி

ஒரு நாள் அவர் ஒரு கிராமத்துக்குப் போயிருந்தபோது, ஒரு மதபோதகர் அவரிடம் வந்து, “எனக்கு உங்களைத் தெரியும். தயவுசெய்து நீங்கள் எங்கள் திருச்சபைக்கு வந்து பிரசங்கிக்கமுடியுமா?” என்று கேட்டார்.

அது ஒரு சிறிய கிராமம். அது குளிர்காலம். அவர் அந்தச் சபைக்குச் சென்றார். குளிர்காலத்தில் கதவு ஜன்னல்களையெல்லாம் மூடிவிடுவார்கள். விட்ஃபீல்டு பிரசங்கிக்க எழுந்தபோது ஆலயத்துக்கு வெளியே அநேகர் இருப்பதை அவர் உணர்ந்தார், இல்லை மணந்தார் என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால், ஏழைகள் ஆலயத்துக்கு வெளியே நின்றார்கள். அவர்கள் ஆலயத்துக்கு உள்ளே வரவில்லை. அவர் அவர்களைப் பார்ப்பதற்குமுன்பே இப்படிப்பட்ட ஏழைகள் வெளியே நிற்பதை அவர் முகர்ந்தார். வெளியேயிருந்து ஒருவகையான வாசனை உள்ளே வந்தது. அது அழுக்கு வாசனை, மதுபான வாசனை. அந்த வாசனையிலிருந்து ஏழைகள் சபைக்கு வந்திருப்பதையும், ஆனால் உள்ளே வராமல் வெளியே நிற்பதையும் அவர் புரிந்துகொண்டார்.

ஜன்னல் துவாரங்கள்வழியாக அவர் அவர்களுடைய கண்களைப் பார்த்தார். குளிர்காலத்தில் நடுங்கும் குளிரில் அவரைப் பார்க்க அல்லது அவர் பேசுவதைக் கேட்க, இந்த மக்கள் வந்து, ஆலயத்துக்கு வெளியே நிற்கிறார்கள் என்றால் அவர்கள் தேவனுடைய வார்த்தையின்மேல் எவ்வளவு பசி தாகத்தோடு இருக்க வேண்டும் என்பதை அவர் உணர்ந்தார்.

எனவே, அவர் அன்று சபைக்கு உள்ளே இருப்பவர்களுக்குப் பிரசங்கிப்பதற்குப்பதிலாக வெளியே நிற்கும் மக்களுக்குப் பிரசங்கிக்கத் தீர்மானித்தார். அவர் தன் குரலை உயர்த்திச் சத்தமாகப் பேசினார், ஆலயத்துக்கு வெளியே இருந்தவர்கள் தெளிவாகக் கேட்கும் அளவுக்கு அவர் குரலை உயர்த்திப் பேசினார். சபைப் போதகரும், உள்ளே இருந்தவர்களும் ஆலயத்தின் ஜன்னல்கள் உடைந்துவிடுமோ என்று பதறும் அளவுக்கு அவர் உரத்த குரலில் பேசினார்.

அவர் பிரசங்கித்து முடித்து வெளியே வந்தபோது, ஆலயத்துக்கு வெளியே கிழிந்த ஆடைகளுடன் தவிப்போடு காத்திருந்த மக்களைக் கண்டவுடன் அவர்களுடன் மீண்டும் பேச வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் உதித்தது. ஆனால், உடனடியாக அவர் அவர்களுடன் பேசவில்லை. ஏனென்றால், “நீ இப்போதுதான் ஆலயத்திற்குள் பிரசங்கித்தாய். மீண்டும் இவர்களுக்குப் பிரசங்கிக்கப் போகிறாயா? அது மட்டுமல்ல ஆலயத்துக்குள்தான் பிரசங்கிக்க வேண்டும். ஆலயத்துக்கு வெளியே ஒருபோதும் பிரசங்கிக்கக்கூடாது,” என்று யாரோவொருவர் அவர் காதில் சொல்வதுபோல் இருந்தது. அவர்களோடு பேசுவது அவருக்கு மரியாதை குறைவான செயல்போன்றும், கிட்டத்தட்ட பாவச்செயல்போன்றும் தோன்றியது. இப்படிப்பட்ட எண்ணங்கள் அவருக்குள் அலைமோதியபோதும், யாரோவொருவர், “நீ அவர்களுடன் பேசு,” என்று உந்தித்தள்ளுவதுபோல் இருந்தது. ஆனாலும், அவர் அவர்களுடன் பேசவில்லை. அது தவறு என்று அவர் நினைத்தார்.

நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களுக்கு நற்செய்தி

பிரிஸ்டல் என்று ஒரு நகரம். அதன் புறநகரில் பல நிலக்கரிச் சுரங்கங்கள் இருந்தன. அந்த நிலக்கரிச் சுரங்கங்களின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. இங்கிலாந்தில் ஏழைகள் இருந்தார்கள் என்று அவருக்குத் தெரியும். ஆனால், அந்த நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களோ ஏழைகளிலும் ஏழைகள்.

அவர்கள் இங்கிலாந்தின் இந்தியர்கள் என்று அழைக்கப்பட்டனர். என்னவோ தெரியவில்லை இந்தியர்கள் என்றால் ஏழைகள், அழுக்கானவர்கள் என்ற கருத்து அன்றுமுதல் இன்றுவரை தொடர்கிறது. அமெரிக்காவின் பூர்வீகக் குடிகள் செவ்விந்தியர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். இங்கிலாந்தின் ஏழைகளிலும் ஏழைகளாகிய நிலக்கரிச்சுரங்கத் தொழிலாளர்கள் இங்கிலாந்தின் இந்தியர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.

நிலக்கரியின் தூசி அவர்கள்மேல் படிந்ததால் அவர்களுடைய தோல் கறுப்பாக இருந்தது. அவர்கள் ஒருபோதும் குளிக்கவில்லை. அந்தச் சுரங்கத் தொழிலாளர்கள் மோசமான சூழ்நிலையில் வாழ்ந்தார்கள், அவர்களுடைய வேலையும் மோசமாக இருந்தது. அவர்கள் நிலக்கரி வெட்டும் குழிகளில் வேலை செய்ததால் அங்கிருந்த நச்சு நிறைந்த தூசியைச் சுவாசித்தார்கள். உடல்நலம் குன்றியது. அற்ப ஆயுள். அவர்களுடைய குழந்தைகள் நல்ல சூழ்நிலையில் வளரவில்லை. அவர்கள் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டார்கள். அவர்களை அவ்வளவு கரிசனையோடும், அக்கறையோடும் யாரும் கவனிக்கவில்லை.

இரவும் பகலும் ஒவ்வொரு நாளும் அவர்கள் மிகவும் கடுமையாக உழைத்தார்கள், குடிப்பதையும் சண்டை போடுவதையும்தவிர வேறு எந்தக் கேளிக்கையும் கிடையாது. பிறர் அவர்களைக் குற்றவாளிகளாகவும், கொடூரமானவர்களாகவும் பார்த்தார்கள். எனவே, மக்கள், உண்மையில், அவர்களைத் தனியாக விட்டுவிட்டார்கள். அவர்களோடு எந்த உறவும் வைத்துக்கொள்ளவில்லை. இந்த நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களைப் பார்த்து அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் பயந்தார்கள்.

அவர்கள் பரம ஏழைகள், மறக்கப்பட்டவர்கள். ஒடுக்கப்பட்டவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள், அற்பமாய் எண்ணப்பட்டவர்கள்.

கிங்ஸ்வுட் காட்டின் அருகில் வாழ்ந்த ஒரு வயதான போதகர்மூலம் இந்த நிலக்கரிச்சுரங்கத் தொழிலாளர்களின் அவலநிலையைப்பற்றி விட்ஃபீல்ட் கேள்விப்பட்டார். இவர்களை நிலக்கரிக்காரர்கள் என்று கிண்டலாக அழைத்தார்கள்.

இந்த நிலக்கரிக்காரர்கள் காட்டின் மறுபுறம், சுரங்கங்களுக்கு அருகில், தேவையில்லையென்று தூக்கியெறிந்த மரங்களையும், உலோகத்தையும்கொண்டு ஒருவிதமான குடிசைகளைக் கட்டிக்கொண்டு வாழ்வதாகவும், அப்படிப்பட்ட ஒரு சிறிய குடிசை நகரம் அங்கிருப்பதாகவும் அவர் சொன்னார். அந்த மதபோதகர் அவர்களைப்பற்றி பேசியதைக் கேட்ட விட்ஃபீல்ட், “இவர்கள் ஒருபோதும் நற்செய்தியைக் கேள்விப்பட்டிருக்கமாட்டார்கள். அதற்கு வாய்ப்பேயில்லை. எனவே, நாம் இந்த மக்களுடன் கண்டிப்பாகப் பேச வேண்டும்,” என்று நினைத்தார். அவர்கள் வேலை முடிந்து சுரங்கங்களைவிட்டு வெளியே வரும்போது அவர்களைச் சந்திக்கலாம் என்று அவர்கள் தீர்மானித்தார்கள்.

நிலக்கரிக்காரர்களுக்கு நற்செய்தி

நிலக்கரிக்காரர்களைச் சந்தித்துப் பேச வேண்டும் என்று முடிவுசெய்தவுடனேயே, விட்ஃபீல்டும், அவருடைய சிறிய குழுவும், அந்த வயதான போதகரும், இன்னும் சிலரும் காட்டு வழியாக அந்தக் குடிசை நகரத்துக்குச் சென்றார்கள். அவர்கள் அந்த இடத்தை அடைந்தபோது மக்கள் நிலக்கரிச் சுரங்கங்களைவிட்டு வெளியே வந்துகொண்டிருந்தார்கள். உடனே, அவர் பிரசங்கிக்க முடிவுசெய்தார்.

இயேசு ஒரு மலையின்மேல் நின்று திரளான மக்களுக்குப் பிரசங்கித்தார் என்று மத்தேயு 5இல் வாசித்தது அவர் நினைவுக்கு வந்ததால் அந்த நிலக்கரிக்காரர்களுக்குப் பிரசங்கிக்க அவர் முடிவுசெய்தார். இயேசு அப்படிச் செய்யமுடியுமென்றால், மக்களுக்குப் பிரசங்கிப்பதற்கு அவருக்கு ஒரு மலை போதும் என்றால், விட்ஃபீல்டும் ஒரு குன்றின்மேல் நின்று நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களுக்குப் பிரசங்கிக்கலாம் என்று முடிவுசெய்தார். அந்த நாட்களில் இப்படி யாரும் செய்யவில்லையென்றாலும், இதுதான் சரியான செயல் என்று அவர் உறுதியாக நம்பினார். எனவே, விட்ஃபீல்ட் ஒரு குன்றின்மீது நின்று, ஆழ்ந்த பெருமூச்சுவிட்டு, சுமார் 300 அடி தூரத்தில் இருப்பவர்களுக்கும் கேட்குமாறு தன் குரலை உயர்த்தி, “ஆவியில் எளியவர்கள் பாக்கியவான்கள். பரலோக இராஜ்ஜியம் அவர்களுடையது,” என்று பிரசங்கிக்க ஆரம்பித்தார்.

சுரங்கங்களில் இருந்து வெளியே வந்துகொண்டிருந்த சுரங்கத் தொழிலாளர்கள் அவர் பேசுவதைக் கேட்டார்கள். ஆனால் அவர்களால் அதை நம்ப முடியவில்லை. அவர்கள் நின்று அவரை முறைத்துப்பார்த்தார்கள். அங்கியணிந்த ஒரு மதகுரு ஒரு குன்றின்மேல் நின்று சத்தம்போட்டு பேசுவதைக் கேட்ட சுரங்கத் தொழிலாளர்கள் ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்தார்கள். ஏறக்குறைய 200 பேர் அவரைச் சுற்றி கூடி நின்றார்கள்.

இதற்கிடையில், அங்கிருந்த வயதான போதகரும், மற்ற நண்பர்களும் இதைப்பார்த்து மிகவும் பயந்து, விட்ஃபீல்டுக்குப்பின்னால் அமைதியாக ஜெபித்துக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை இந்த நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் அவரைக் கொல்லலாம் அல்லது அவர்கள் எல்லாரையும் கொல்லக்கூடும் அல்லது அவர்கள் சண்டைபோடுவார்கள் அல்லது கலவரங்கள் வெடிக்கலாம் அல்லது பொது இடத்தில் பிரசங்கித்ததற்காக அவர்கள் அனைவரையும் கைது செய்யக்கூடும் என்று நினைத்துப் பயந்தார்கள். ஆனால், விட்ஃபீல்ட் தொடர்ந்து பேசிக்கொண்டேயிருந்தார்.

தேவனுடைய அன்பைப்பற்றியும், நரகத்தைப்பற்றியும் அவர் மிகத் தெளிவாகப் பேசினார். நரகத்தின் இருள் அவர்கள் வேலைசெய்கிற குழிகளைவிட இருண்டது என்று சொன்னார். ஆகையால், 200 கருப்பு முகங்கள் உறைந்துபோய் அவரை உற்றுநோக்கின. கர்த்தராகிய இயேசு பாவிகளை மனந்திரும்புதலுக்கு அழைக்கிறார் என்றும் அவர் பாவிகளின் நண்பன் என்றும் அவர்கள் முதன்முறையாகக் கேள்விப்பட்டார்கள்.

அந்த நேரத்தில் அந்த இடத்தில் விட்ஃபீல்டின் குரலைத்தவிர வேறு எந்தக் குரலும் கேட்கவில்லை. அந்த அளவுக்கு அங்கு அமைதி நிலவியது. அந்தக் கருப்பு முகங்களில் வெள்ளைக் கோடுகள் இருப்பதை அவர் கவனித்தார். “அந்தக் கரடுமுரடான முகங்களில் காணப்பட்ட அந்த வெள்ளைக் கோடுகள் அவர்கள் கண்களில் வழிந்தோடிய கண்ணீர்”, என்று பின்னாட்களில் அவர் தம் பத்திரிகையில் எழுதினார்.

சில நாட்களுக்குப்பிறகு, டாம் என்ற ஒரு வாலிபன் விட்ஃபீல்டைச் சந்தித்து சுரங்கத் தொழிலார்களின் குடியிருப்புக்கு வருமாறு அழைத்தான். டாமின் முகம் பளிச்சென்று சுத்தமாக இருந்தது. அவனும் ஒரு சுரங்கத் தொழிலாளிதான். ஆனால், அவனுடைய முகம் கருப்பாக இல்லை. மாறாக, கொஞ்சம் சாம்பல் நிறமாக இருந்தது. தான் கிங்ஸ்வுட் காட்டைச் சேர்ந்த ஒரு நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளி என்றும், அவர் அன்று பிரசங்கித்த அதே குன்றுக்கு வந்து மீண்டும் பிரசங்கிக்க வருமாறு அழைக்க எல்லா நிலக்கரிக்காரர்களும் தன்னை அனுப்பியதாகவும் அவன் சொன்னான். விட்ஃபீல்ட் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அவருடைய மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. இப்படிப்பட்ட ஒரு வாய்ப்புக்காக அவர் காத்திருந்தார் என்று சொல்லவேண்டும். எல்லாருக்கும் வசதியான ஒரு நாள் அவர் அந்தக் குன்றுக்குச் சென்றார்.

இப்போது 200 நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் அல்ல, நிலக்கரித் தொழிலார்கள் அனைவரும், அவர்கள் எல்லாருடைய குடும்பத்தாரும் கூடிவந்தார்கள். அவர்கள் மட்டுமல்ல, “விட்ஃபீல்ட் என்ற ஒரு மதகுரு சுரங்கத்தின் அருகே ஒரு குன்றின்மேல் நின்று பிரசங்கித்தார்” என்று சுற்றியிருந்த கிராமத்தாரும் கேள்விப்பட்டிருந்ததால் அவர்களும் அங்கு கூடிவந்தார்கள். மொத்தத்தில் ஏறக்குறைய 1000 பேர் வந்திருப்பார்கள். விட்ஃபீல்ட் தன் குரலை உயர்த்தி கூடியிருந்த எல்லாரும் கேட்கும் வகையில், “ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான்,” என்ற வசனத்தின் அடிப்படையில் பேசினார்.

சபைக் குருக்கள் ஏற்கெனவே அவருக்குக் கதவை அடைத்துவிட்டார்கள். அவர்கள் தங்கள் சபைகளுக்கு அவரை அழைக்கவில்லை. பிரசங்கிக்கத் தங்கள் பிரசங்க மேடையில் இடங்கொடுக்கவில்லை. அவர் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களைச் சந்தித்துப் பேசியபின் அவர்கள் தங்கள் கதவை இன்னும் இறுக்கமாக மூடிவிட்டார்கள். ஆனால், கிங்ஸ்வுட் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் பிரசங்கிக்க வருமாறு அவரை மீண்டும் மீண்டும் அழைத்தார்கள். அடுத்த ஞாயிற்றுக்கிழமையும் அதே குன்று அவருடைய பிரசங்க மேடையாயிற்று. இந்தமுறை அங்கு 2,000பேர் கூடிவந்திருந்தார்கள். பிரிஸ்டலிலிருந்து மக்கள் குதிரையிலும் வண்டிகளிலும்கூட வந்திருந்தார்கள். யாரோ ஒருவர் எங்கிருந்தோ ஒரு மேஜையைக்கொண்டுவந்து அந்தக் குன்றின்மேல் வைத்தார். விட்ஃபீல்ட் மேஜையின்மேல் ஏறிநின்று தன் குரலை எல்லாருக்கும் கேட்கும் வகையில் உயர்த்திப் பேசினார். அது ஒரு மகத்தான கூட்டம்.

இந்த நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களின் வாழ்க்கையில் வெளிப்படையான மாற்றம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து அவரவர் தங்கள் திராணிக்கேற்ப கொஞ்சம் பணம் சேகரித்து தங்கள் குழந்தைகளுக்காக ஒரு பள்ளிக்கூடம் கட்டினார்கள், அந்தக் குழந்தைகளின் பழக்கங்கள் மாறின. அன்றைய மதத் தலைவர்களால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட இந்த மக்களின் வாழக்கையில் தேவன் மிகவும் வல்லமையாகச் செயல்பட்டார்.

ஜாண் வெஸ்லியுடன் கருத்துவேறுபாடு

ஒரு காரியம் விட்ஃபீல்டுக்கு மிகவும் சுமையாக இருந்தது. அந்தக் காரியம் அவரை மிகவும் அழுத்தியது. அதாவது, அந்த நேரத்தில் அவருடைய அன்பு நண்பர் ஜாண் வெஸ்லியும் இங்கிலாந்தின் பல இடங்களில் பிரசங்கித்துக்கொண்டிருந்தார். ஜார்ஜ் விட்ஃபீல்டின் மாதிரியைப் பின்பற்றி அவரும் திறந்தவெளியில் பிரசங்கிக்க ஆரம்பித்தார்.

ஆரம்பத்தில், திறந்த வெளியில் பிரசங்கிப்பது சரியான செயல் அல்ல என்று அவர் நினைத்தார். அது மட்டுமல்ல ஜாண் வெஸ்லி கொஞ்சம் அதிகார மனப்பான்மை கொண்டிருந்தார். ஆனால், இவர்களைவிட உபதேசரீதியாக ஒரு குறிப்பிட்ட காரியத்தில் அவர் விட்ஃபீல்டுடன் உடன்படவில்லை. அந்தக் காரியத்தில் அவர் விட் பீல்டனுடன் கடுமையாக நடந்துகொண்டார். இதைப்பற்றி அவர் பகிரங்கமாகவும் எழுதினார். இதைக்குறித்து விட்ஃபீல்ட் கொஞ்சம் வருத்தப்பட்டார்,

ஜாண் வெஸ்லி இதைக்குறித்து பகிரங்கமாக எழுதியதால், விட் பீல்டும் பகிரங்கமாகப் பதிலளித்தார். எனினும் அவர்கள் இருவரும் நண்பர்களாக, கிறிஸ்துவுக்குள் சகோதரர்களாகவே இருந்தார்கள். எப்படியென்றால் விட்ஃபீல்ட் ஜாண் வெஸ்லிக்கு, “என் அன்புச் சகோதரர் ஜாண் அவர்களே, உபதேசரீதியான இந்தச் சிறிய கருத்துவேறுபாட்டை நாம் ஒதுக்கிவைத்துவிட்டு, நம்முடைய பொதுவான தளமாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் நாம் தொடர்ந்து ஐக்கியம் கொள்வோம்,” என்று பதில் எழுதினார். இந்தக் காரியத்தில் அவர்கள் இருவரும் சமரசம்ஆனபோதிலும், துரதிர்ஷ்டவசமாக, அவர்களுக்கிடையே இருந்த கருத்து வேறுபாடு பொதுமக்களுக்கு வெளிப்படையாகத் தெரிந்ததால், அவர்கள் இருவர்பக்கமாகத் தனித்தனியாகப் பிரிந்தார்கள். அவர்களுக்கிடையே “நான் விட்ஃபீல்டைக் சார்ந்தவன், நான் ஜாண் வெஸ்லியைச் சார்ந்தவன்” என்ற குழு மனப்பான்மை ஏற்பட்டது.

சில நேரங்களில் விட்ஃபீல்ட் இந்தக் காரியத்தைக்குறித்து கொந்தளிப்போடு எழுதினார். ஒருவேளை அவர் வெஸ்லி எழுதியதுபோல் கொஞ்சம் தன்மையாக எழுதியிருக்கலாமோ! ஒருவேளை ஜாண் வெஸ்லி கொஞ்சம் விட்டுக்கொடுத்திருக்கலாமோ! ஆனால், விட்ஃபீல்ட் சரி என்றுதான் சொல்லத்தோன்றுகிறது. ஏனென்றால், வெஸ்லி தேவனுடைய கிருபையைவிட, நம் கிரியைகளினாலேயே நமக்கு இரட்சிப்பு உண்டு என்று பிரசங்கித்தார். இதைக்குறித்து விட்ஃபீல்ட் கவலைப்பட்டார், பயந்தார். ஆயினும், இருவரும் சகோதரர்களாகவே இருந்தனர். ஒரு சிறிய சம்பவத்தின்மூலம் இதை நாம் புரிந்துகொள்ளலாம்.

ஒருவன் தன்னை ஒரு வெஸ்லியன் என்று நினைத்தான். அதாவது வெஸ்லியின் போதனைகளையெல்லாம் ஏற்றுக்கொள்கிறவன் என்று நினைத்தான். நிச்சயமாக அவன் நினைத்ததுபோல் அவன் ஒரு வெஸ்லியன்தான். அது மட்டுமல்ல, அவன் விட்ஃபீல்ட் சொன்ன எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவன் ஒருமுறை வெஸ்லியைச் சந்திக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவன் வெஸ்லியிடம் ஒரு கேள்வி கேட்க விரும்பினான், அந்தக் கேள்வி கேட்பதற்குமுன்பே தான் கேட்கவிருந்த கேள்வியை நினைத்து தனக்குத்தானே சிரித்துக்கொண்டான். அவன் ஜாண் வெஸ்லியிடம், “ஐயா, ஜார்ஜ் விட்ஃபீல்டை நாம் பரலோகத்தில் பார்ப்போமா?” என்று கேட்டான். ஜாண் வெஸ்லி தாமதமேயின்றி உடனடியாக “இல்லை, பார்க்கமாட்டோம்,” என்றார். அந்த மனிதன் புன்னகை பூத்தான். எல்லாக் காரியங்களிலும் தான் ஜாண் வெஸ்லியின் நிலைப்பாட்டை எடுத்திருப்பதைக்குறித்துப் பெருமைப்பட்டான். ஆனால், வெஸ்லி அத்தோடு நிறுத்தாமல், தொடர்ந்து, “இல்லை, நாம் ஜார்ஜ் விட்ஃபீல்டை பரலோகத்தில் பார்க்க மாட்டோம் , ஏனென்றால் ஜார்ஜ் விட்ஃபீல்ட் தேவனுடைய சிங்காசனத்திற்கு மிக அருகில் இருப்பார், நாம் மிகத் தொலைவிலிருந்து அவரைப் பார்ப்பது கடினம்,” என்று கூறினார். அந்த மனிதன் அதிர்ச்சியடைந்தான். வாயடைத்துப்போனான். பேசுவதற்கு அவனிடம் வார்த்தைகள் இல்லை.

மூர்ஃபீல்ட் கூடாரம்

ஜார்ஜ் விட்ஃபீல்ட் 30 ஆண்டுகளாக இங்கிலாந்தின் நாலா திசைகளிலும் பயணம் செய்து தேவனுடைய நற்செய்தியைப் பிரசங்கித்தார். இங்கிலாந்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையே அவர் ஏழு முறை பயணம் செய்தார், அந்த நாளில் அது அசாதாரணமானது; ஏனென்றால் வாரக்கணக்கில் கப்பலில்தான் பயணம் செய்தார். மிகவும் ஆபத்தான பயணம். ஆயினும், இங்கிலாந்துக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அவர் ஏழு முறை பயணம் செய்தார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. அவர் இடைவிடாது நற்செய்தியைப் பிரசங்கித்தார்.

இங்கிலாந்தின் எல்லா மாவட்டடங்களிலும், அமெரிக்காவின் அனைத்து புதிய குடியேற்றங்களிலும் அவர் நற்செய்தியைப் பிரசங்கித்தார். யாராவது பிரசங்கிப்பதற்கு அழைத்தால் அந்த அழைப்பை அவர் ஒருபோதும் ஒதுக்கவில்லை. ஏனென்றால், பிரசங்கிப்பதற்கான கொடையை தேவன் தனக்குத் தந்திருப்பதை அவர் தெளிவாக அறிந்திருந்தார். எனவே, தன்னை அழைத்தபோதெல்லாம், சுகத்திலும் சுகவீனத்திலும், பலத்திலும் பலவீனத்திலும், அவர் எப்போதும் பிரசங்கிக்க விரும்பினார். வெயில் காலத்தில் வயல்வெளிகளிலும், திறந்த வெளிகளிலும் அவர் பிரசங்கித்தார். அவர் இப்படிச் செய்துகொண்டேயிருந்தார்.

சந்தைவெளிகளிலும், வயல்வெளிகளிலும், மலைகளிலும், குன்றுகளிலும், பொது இடங்களிலும், எல்லா வகையான இடங்களிலும் அவர் பிரசங்கித்தார். ஆனால் குளிர்காலத்தில் அப்படிச் செய்ய முடியாததால், அவர் மூர்ஃபீல்ட் கூடாரம் என்ற ஓர் இடத்தைக் கட்டினார். அது தற்காலிகமானது என்று அவர் உணர்ந்ததால் அதற்கு அவர் கூடாரம் என்று பெயரிட்டார். இப்படி இடம்விட்டு இடம் போய்க்கொண்டேயிருக்கமுடியும் என்ற எண்ணத்தை அவர் விரும்பினார். மேலும், மக்கள் கூடிவருவதற்கும், பிரசங்கிப்பதற்கும் ஏதுவாக இந்தக் கூடாரங்களை அங்கு ஏற்படுத்தினார். அவர் அந்தக் கூடாரத்தில் அடிக்கடி காலை 6:00 மணிக்குப் பேசினார், சில நேரங்களில் மக்களுக்குக் கற்பித்தார்.

ஜான் நியூட்டன்

இந்தக் குறிப்பிட்ட இடத்தில்தான் ஜான் நியூட்டன் விட்ஃபீல்ட் பலமுறை பிரசங்கிப்பதைக் கேட்டார். ஜார்ஜ் விட்ஃபீல்ட் தேவனுடைய அற்புதமான கிருபையைப்பற்றி பிரசங்கித்ததைக் கேட்டு புதிய விசுவாசியாகிய ஜான் நியூட்டன் மிகவும் பயனடைந்தார்.

தேவன் விட்ஃபீல்டிற்கு பிரசங்கிக்கும் தாலந்தைக் கொடுத்திருந்தார். அது தேவன் அவருக்குக் கொடுத்திருந்த ஒரு பிரத்தியேகமான கொடை. அவருடைய குரல் அதுவரை ஒருவரும் ஒருபோதும் கேட்டிராத தனித்துவமான குரல். அன்றைய நடிகர்கள்கூடக் கவனிக்கும் அளவுக்கு ஜார்ஜ் விட்ஃபீல்ட் அவ்வளவு திருத்தமாகப் பேசினார். அவ்வளவு அற்புதமாக விவரித்தார். எந்தக் குறிப்பும் இல்லாமல் அவர் பேசினார். அந்த நாட்களில் அதுபோல் யாரும் செய்யவில்லை. உண்மையில், அப்படிப் பேசுவதை அந்த நாட்களில் மக்கள் மிகவும் விசித்திரமாகப் பார்த்தார்கள். ஆனால், கர்த்தர் நடத்தியபடி அவர் பேசினார், அதுதான் வித்தியாசம். பெரும்பாலும் அவர் கண்ணீரோடு மட்டுமல்லாமல் நகைச்சுவையுடனும் பேசினார். அவர் தன் பிரசங்கத்தைக் கேட்கும் மக்களுக்குப் பொருந்தும் வகையில் எடுத்துக்காட்டுகள் கொடுத்துப் பேசினார்.

பெஞ்சமின் பிராங்க்ளின்

ஒருநாள் அவர் அமெரிக்காவில் பிலடெல்பியாவில் இருந்த நீதிமன்ற வளாகத்தின் படிகளில் நின்று பிரசங்கித்துக்கொண்டிருந்தார் .திரளான மக்கள் கூட்டத்தில் ஒரு வாலிபன் இருந்தான், அவர் பேசுவதை அந்த வாலிபன் கேட்டுக்கொண்டிருந்தான், விட்ஃபீல்டின் குரலைக் கேட்டு அவன் பரவசமானான். அந்த வாலிபனின் பெயர் பெஞ்சமின் பிராங்க்ளின்.

பெஞ்சமின் பிராங்க்ளின் ஒரு பரிசோதனை செய்ய முடிவுசெய்தான். அது என்னவென்றால் நீதிமன்றத்தின் படிகளில் இருந்து ஒரு பிரதான சாலை நீளமாகச் சென்றது. அந்த சாலையில் கூடியிருந்த மக்கள் கூட்டத்துக்கு நடுவே அவன் நடந்து சென்றான். அவருடைய குரல் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து அவருடைய குரலும், வார்த்தைகளும் தெளிவாகக் கேட்கமுடியாத இடம்வரை அவன் நடந்து சென்றான். பின்பு அந்த இடத்துக்கும் விட்ஃபீல்ட் இருந்த இடத்துக்கும் இடையேயிருந்த தூரத்தைக் கணக்கிட்டான். அந்தத் தூரத்தை வைத்து ஓர் அரை வட்டம் வரைந்தால், ஒரு நபருக்கு இரண்டு சதுர அடி தேவைப்படும் என்று வைத்துக்கொண்டால், விட்ஃபீல்டால் 30,000 பேர் கொண்ட கூட்டத்துக்குப் பேச முடியும் என்று அவன் கணக்கிட்டான், அதாவது ஒலிபெருக்கி இல்லாமல் 30000பேர் தெளிவாகக் கேட்கும்படி அவரால் பேசமுடியும். என்னே அசாத்தியமான குரல்வளம்.

விட்ஃபீல்ட் பேசுவதைக் கேட்க பெஞ்சமின் பிராங்க்ளின் பலமுறை சென்றார். அவருடைய பிரசங்கத்தைப் பலமுறை கேட்டபோதும், “உங்கள் ஜெபத்தினால் நீங்கள் என்னைத் தேவனுடைய ராஜ்யத்தில் நுழையவைக்க முடியாது,” என்று பிராங்கிளின் சொன்னார். எனவே பெஞ்சமின் பிராங்க்ளின், நமக்குத் தெரிந்தவரை, உண்மையில் தேவனைப் பெற்றுக்கொள்ளவில்லை.

கிறிஸ்து பெருக வேண்டும்

ஜார்ஜ் விட்ஃபீல்டின் பிரசங்கங்கள் வீணாகவில்லை. அவருடைய பிரசங்கத்துக்குப் பலன் இல்லாமல் போகவில்லை. பொதுவாக, ஒரு மணி நேரம் பேசியபிறகு, அவர் உடல் முழுவதும் வியர்வையில் நனைந்திருக்கும். சில நேரங்களில், பிரசங்கித்துமுடித்தபின் வாந்தியெடுத்தார். ஏனென்றால், அந்த அளவுக்கு அவர் தன் குரலை உயர்த்திப் பேசவேண்டியிருந்தது. ஆத்தும பாரம், பிரசங்க அழுத்தம், உணர்ச்சியின் அழுத்தம் அவரைத் தாக்கின. ஆனால், இவைகளைவிட ‘பெருமை’ என்ற பாவத்தைக்குறித்தே அவர் அதிகமாகப் பயப்பட்டார். அவர் ஓர் இதழில், “விட்ஃபீல்ட் பெயர் அழிந்துபோகட்டும், ஆனால் கிறிஸ்து மகிமைப்படட்டும்” என்று எழுதினர். அது எப்போதும் அவருடைய ஜெபமாக இருந்தது.

இங்கிலாந்திலும், ஸ்காட்லாந்திலும், வேல்ஸிலுமுள்ள எல்லா மாவட்டங்களிலும் விட்ஃபீல்ட் பேசினார். போஸ்டனில் இருந்த 23,000 பேர் உட்பட அமெரிக்காவின் அனைத்து குடியேற்றங்களிலும் அவர் பேசினார். அமெரிக்காவில் புதிதாகக் கட்டப்பட்ட இரண்டு புதிய கல்லூரிகளில் பேசுவதற்கு அவரை அழைத்தார்கள். ஒன்று யேல் பல்கலைக்கழகம், மற்றொன்று ஹார்வர்ட் பல்கலைக்கழகம். அவர் களத்தில் சேற்றில் வேலைசெய்துகொண்டிருந்த அடிமைகளுடன் பேசினார். உயர்குடி மக்கள் தேநீர் அருந்திக்கொண்டிருக்கும்போது அவர்களுடைய அரண்மனையின் உல்லாச அறைகளில் உயர்குடி மக்களோடு பேசினார். கைதிகளிடம் பேசினார், குடிசைகளுக்குச் சென்று குடிசைவாசிகளோடு பேசினார். சந்தைகளில் பேசினார். அவர் பேசாத இடம் இல்லை, சந்திக்காத மக்கள் இல்லை.

தூக்குமேடையருகே நற்செய்தி

ஒருமுறை, தூக்கிலிடப்படவிருந்த ஒரு தூக்குக்கைதி அவருடைய பிரசங்கத்தைக் கேட்க விரும்பினான். அதுதான் தன் கடைசி ஆசை என்று சொன்னான். விட்ஃபீல்ட் நகரத்தில் இருப்பதைக் கேள்விப்பட்ட அவன் விட்ஃபீல்டை அழைக்குமாறு கெஞ்சினான். விட்ஃபீல்ட் உடனடியாக வந்தார்.

அவர் தூக்குமேடையில் தூக்குக்கைதியின் அருகே நின்று பிரசங்கித்தார். ஏற்கனவே அங்கு ஒரு பெரிய கூட்டம் கூடியிருந்தது. ஏனென்றால், அன்றைய நாட்களில் தூக்குக்கைதி தூக்கிலடப்படுவதைப் பார்ப்பது அவர்களுக்கு ஒரு பொழுதுபோக்கு.

மக்கள் மரணதண்டனை நிறைவேறுவதைப் பார்க்க விரும்பினார்கள். தூக்கிலிடப்போகிற கைதியின் பயத்தை வேடிக்கை பார்த்து கைதட்டினார்கள். கைதியின் சாவைப் பார்த்து கைதட்டி நகைத்தார்கள். அது அவர்களுக்கு ஒரு கொடுமையான பொழுதுபோக்கு. எனவே, மரணதண்டனை நிறைவேறுவதைப் பார்க்க ஏற்கெனவே பெரும் கூட்டம் கூடியிருந்தது. ஆனால் அவர்கள் சற்றும் எதிர்பாராத விட்ஃபீல்டின் பிரசங்கத்தைக் கேட்கவேண்டியிருந்தது.

விட்ஃபீல்ட் சிலுவையில் தொங்கிய கள்ளனைப்பற்றிப் பேசினார். தூக்கில் தொங்கப்போகிற மனிதனைப் பார்த்து, “கிறிஸ்து மரணத்தை வென்று, உன்னுடைய பாவங்களை முழுமையாக மன்னித்துவிட்டார், விரைவில் நீ கர்த்தரை முகமுகமாய்ப் பார்ப்பாய். இது உறுதி. உன் மரணத்தைச் சந்திக்க உனக்குப் பலம் தேவை. தைரியமாக இரு,” என்று கூறினார். விட்ஃபீல்ட் பேசி முடித்ததும், அந்த வாலிபனின் முகத்தைத் துணியால் மூடி, தூக்குக் கயிற்றைநோக்கிக் கூட்டிக்கொண்டுபோனார்கள். அவன் மிகுந்த நம்பிக்கையுடன் நடந்து சென்றான். அந்த மனிதனைத் தூக்கில் ஏற்றினார்கள். அவன் தூக்கில் தொங்குவதைப் பார்த்த அந்தக் கூட்டம், வழக்கத்துக்கு மாறாக, மிகவும் அமைதியாக இருந்தது, கர்த்தர் அவனுடைய பாவத்தை மன்னித்துவிட்டார் என்ற உண்மையை அவர்கள் அறிந்தார்கள். இந்த நிகழ்ச்சி அவரை மிகவும் பாதித்ததால் அவரால் அங்கு நிற்க முடியவில்லை. அவரால் இதைச் சகிக்க முடியவில்லை. அவர் தனியாகச் சென்று கதறி அழுதார். அந்தக் கூட்டதாரும் போய் அழுதார்கள். ஏனென்றால், அவர்களும் விட்ஃபீல்டின் பேச்சினால் தொடப்பட்டார்கள். அவர்களில் பலர் அன்றே இரட்சிக்கப்பட்டார்கள்.

உறக்கம் தெளிவிக்கும் நற்செய்தி

ஒருமுறை, நியூஜெர்சியில், விட்ஃபீல்ட் ஒரு சிறிய ஆலயத்தில் பிரசங்கித்துக்கொண்டிருந்தார். இது மிகவும் வித்தியாசமான நிகழ்ச்சி. அது ஒரு தூங்குமூஞ்சி சபை என்று சொல்லலாம். ஏனென்றால், உண்மையில், அவர்கள் தூங்குவதற்காகவே ஞாயிற்றுக்கிழமை சபைக்கு வந்தார்கள். அவர்களுக்கு ஜார்ஜ் விட்ஃபீல்டைத் தெரியாது. அவரைப்பற்றி அவர்கள் கேள்விப்பட்டதில்லை. அவர்கள் சபைக்கு வருவார்கள், வரும்போது தூங்குவதற்கு வசதியாக கூடவே சிறிய துண்டுகளையும் கொண்டுவருவார்கள். வருவார்கள், வந்து பெஞ்சில் உட்காருவார்கள். தூங்கிவிடுவார்கள்.

ஞாயிற்றுக்கிழமை ஆராதனை முடிந்தது. விட்ஃபீல்ட் பிரசங்க மேடையில் ஏறிப் பேசுவதற்குமுன்னரே, முன் வரிசையில் இருந்தவர் ஏற்கனவே கண்களை மூட ஆரம்பித்துவிட்டார். விட்ஃபீல்ட் பிரசங்கிக்க மேடையில் ஏறினார். “நான் என் பிரசங்கத்தை ஆரம்பிப்பதற்குமுன்பே, இவர்கள் அனைவரும் தூங்கஆரம்பித்துவிட்டார்களே. என்ன செய்வது?” என்ற எண்ணம் அவருக்குள் வந்தது. அவர் பிரசங்கிப்பதை நிறுத்தினார். அவர் கொஞ்சம் முன்னோக்கி சாய்ந்து, கொஞ்சம் பயமுறுத்தும் கிசுகிசுப்பில், “நான் என் பெயரில் உங்களிடம் வந்திருந்தால், நீங்கள் நிச்சயமாகத் தூங்கலாம்,” என்று சொல்லிவிட்டு, அதன்பின் அவர் இடிமுழக்கம்போல், தன முழங்கையை பிரசங்கமேடையில் தட்டி, கால்களை தரையில் மிதித்து, “நான் சேனைகளுடைய ஆண்டவரின் பெயரால் உங்களிடம் வந்திருக்கிறேன், நான் பேசுவதை நீங்கள் கண்டிப்பாக கேட்கவேண்டும், கேட்பீர்கள்,” என்று முழங்கினார். சபையார் தூக்கக்கலக்கத்திலிருந்து குதித்தெழுந்தார்கள். முதல் பெஞ்சில் இருந்தவர் கண்களைத் திறந்தார், அதற்குப்பின் சபை கண்ணைச் சிமிட்டவேயில்லை.அதுதான் விட்ஃபீல்ட். அவர் நற்செய்தியின் அவசரத்தை அறிந்திருந்தார்.

நற்செய்திக்கு எதிர்ப்பு

பொதுமக்கள், மேல்குடிமக்கள் என எல்லாரும் அவருடைய பிரசங்கத்தை மகிழ்ச்சியுடன் கேட்டிருப்பார்கள் என்று எண்ணத்தோன்றும். ஆனால், அப்படி இல்லை, ஏனென்றால் திறந்த வெளியில் பிரசங்கிப்பதில் பல ஆபத்துக்கள் இருந்தன. விட்ஃபீல்ட் செய்ததுபோல் திறந்தவெளியில் பிரசங்கித்த சிலர் கொல்லப்பட்டார்கள். வேறு சிலர் கல்லெறிந்து கொல்லப்பட்டார்கள். இன்னும் சிலர் அடித்தே கொல்லப்பட்டார்கள். இப்படிப் பல இன்னல்களை அனுபவித்தார்கள். அது மிகக் கடினமான நேரம். எனவே விட்ஃபீல்டிற்கும் இது எளிதானது அல்ல.

கண்காட்சியில் நற்செய்தி

ஒருமுறை, அவர் ஒரு ஈஸ்டர் கண்காட்சியில் பேசுவதற்கு முடிவு செய்தார். அன்றைய நாட்களில் ஈஸ்டர் கண்காட்சிகள், விடுமுறை கண்காட்சிகள்போன்ற பல கண்காட்சிகளில் சர்க்கஸ் காட்டினார்கள். சர்க்கஸ்களில் பயிற்சிபெற்ற கரடிகளையும், வேறு மிருகங்களையும் வைத்து வித்தைகள் செய்தார்கள். மிகப் பெரிய கண்காட்சிகள் ஒரு வகை. ஆனால், இதுபோன்ற கண்காட்சிகளில் பெரும்பாலும் மதுபானக் கடைகள் இருந்தன, சண்டைக் கூண்டுகள் இருந்தன. இது பாமர மக்கள் வேடிக்கை பார்ப்பதற்கும், பொழுதுபோக்குவதற்கும், நல்ல இடம்.

கண்காட்சியில் மதுபானக் கடைகள் இருந்தால் அந்த இடம் எப்படி இருக்கும் என்று சொல்லத் தேவையில்லை. விட்ஃபீல்ட் இப்படிப்பட்ட கண்காட்சிகளை மாயையின் கண்காட்சி என்று அழைத்தார். இந்த ஈஸ்டர் கண்காட்சியை அவர் நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கான ஒரு வாய்ப்பாகக் கருதினார். எனவே, அவர் ஈஸ்டர் கண்காட்சி நடைபெறும் இடத்துக்குச் சென்று பிரசங்கிக்க ஆரம்பித்தார்.

அவருடைய கதைகள், அவரது ஆர்வம், அவருடைய உணர்ச்சி ஆகியவைகளால் மக்கள் கவர்ந்திழுக்கப்பட்டார்கள். வெகு விரைவில் ஒரு கூட்டம் அவரைச்சுற்றி கூடி வந்தது. அவர் “சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனுஷகுமாரனும், தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும்.” என்று யோவான் 3 அதிகாரத்திலிருந்து அவர்களுக்குப் பிரசங்கிக்க ஆரம்பித்தார். இன்னும் அதிகக் கூட்டம் சேர்ந்தது. ஆனால், ஈஸ்டர் கண்காட்சியில் உள்ள கடைகளிலும், மதுபானக் கடைகளிலும் கூட்டம் குறைந்தது, வியாபாரம் சரிந்தது. சர்க்கசுக்கு ஆட்கள் போகவில்லை. அதனால் கடைக்காரர்கள் கோபமடைந்தார்கள்.

அடுத்த நாள் கடைக்காரர்கள் கொஞ்சப்பேர் சேர்ந்து விட்பீல்டுக்குச் சேரும் கூட்டத்தைக் கலைப்பது என்று முடிவு செய்தனர். ஆனால், கலைந்துபோகச் சொன்னால் அமைதியாகக் கலைந்து போகமாட்டார்கள் என்பதால் கலவரம் செய்து கூட்டத்தைக் கலைக்கலாம் என்று நினைத்தார்கள். கூடாரங்களை நேராக நிறுத்தப் பயன்படும் ஒரு பெரிய இரும்புக் கம்பத்தை எடுத்து, கூட்டத்தின் பின்புறமாகச் சென்று கம்பத்தை சுழற்றி எந்த அளவுக்கு கூடியிருப்பவர்களைக் காயப்படுத்தமுடியுமோ அந்த அளவுக்குக் காயப்படுத்துவது என்றும், மக்களுக்கு காயம் ஏற்பட்டால் அவர்கள் அங்குமிங்கும் சிதறி ஓடுவார்கள், அதனால் கூட்டம் கலைந்துவிடும் என்றும் அவர்கள் நினைத்தார்கள், எதிர்பார்த்தார்கள். அதுதான் அவர்களுடைய திட்டம். அவர் பேசுவதற்கு எழுந்தார். கூட்டம் கூட ஆரம்பிக்கிறது.

மக்கள் விட்ஃபீல்ட்டை உற்றுக்கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். கடைக்காரர்கள் பின்பக்கத்தில் இரும்புக் கம்பத்தை எடுக்கிறார்கள். விட்ஃபீல்ட் அதைப் பார்க்கிறார். அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை அவர் அனுமானிக்கிறார். உடனடியாக விட்ஃபீல்ட் பிரசங்கத்தை நிறுத்துகிறார். சத்தமாக ஜெபிக்க ஆரம்பிக்கிறார். ’’ஆண்டவரே, இந்தக் கூட்டத்தை பாதுகாப்பீராக. உம் வார்தையைப் பிரசங்கிப்பதற்காக நீர் தந்த இந்த வாய்ப்பைப் பாதுகாப்பீராக,” என்று அவர் ஜெபித்தார், என்ன நடக்கிறது என்று கூட்டத்திற்குத் தெரியவில்லை, ஆனால், இரும்புக் கம்பத்தை எடுத்தவர்கள் கம்பத்தோடு ஓடத் தொடங்கினார்கள். ஓடியஅனைவரும் திடீரென்று உறைந்துபோய் நின்றார்கள். விட்ஃபீல்ட் இன்னும் ஜெபித்துக்கொண்டிருந்தார். அவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்தார்கள். பின்னர் கம்பத்தை கீழேபோட்டுவிட்டு வாக்குவாதம் செய்யத் தொடங்கினார்கள். அவர்களுக்கிடையே கைகலப்பு உண்டாயிற்று. அடித்துக்கொண்டார்கள். சண்டைபோடத் தொடங்கினார்கள். விட்ஃபீல்ட் அதைப் பார்த்து, “நன்றி, ஆண்டவரே” என்று நினைத்தார். அதன்பின் அவர் பிசாசங்கத்தைத் தொடர்ந்தார்.

ஆனாலும், அவருடைய பல கூட்டங்களில் பல நேரங்களில் பலர் அவர்மேல் அழுகிய பழம், கெட்டுப்போன மீன்கள், இறைச்சி, கழிவுகள், குப்பை கூளங்கள், அழுகிய முட்டை, செத்த பூனைகள் போன்றவைகளை வீசினார்கள். அப்படி வீசப்பட்ட நேரங்களில் அவர் பிரசங்கத்தைச் சற்று நேரம் நிறுத்திவிட்டு, முகத்தில் வீசப்பட்டதைத் துடைத்துவிட்டு தொடர்ந்து பேசுவார்.

நற்செய்திப் பணியில் ஆபத்துக்கள்

இன்னொரு முறை, அவர் பேசி முடித்துவிட்டு பிரசங்க மேடையிலிருந்து கீழே இறங்கி வந்துகொண்டிருந்தார். அப்போது ஒரு வாலிபன் வேகமாக வந்தான். கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு கத்தியை உருவி அவரைக் குத்தச் சென்றான். ஆனால், அருகிருந்த இன்னொரு மனிதர் அவனை உடனடியாகத் தடுத்து நிறுத்தினார். அவர், ஒரு முன்னாள் இராணுவ வீரராக இருக்கலாம். அவர் மின்னல் வேகத்தில் அவனுடைய கத்தியைத் தட்டிவிட்டு, அவனை நிராயுதபாணியாக்கினார், கத்திக்கும் விட்ஃபீல்டுக்கும் இடையே ஒரு அங்குல இடைவெளி மட்டுமே இருந்திருக்கும்.

இன்னொரு நிகழ்ச்சி. ஒருமுறை ஒரு பையன் தன் மேற்சட்டை, காற்சட்டைப் பைகளைக் கற்களால் நிரப்பிக்கொண்டு அவருடைய கூட்டத்துக்கு வந்தான். கூட்டம் அதிகமாக இருக்கும்போது யாரும் பார்க்காத வகையில் கூட்டத்துக்குள் நுழைந்து முன்னுக்குச் சென்று, அவருக்கு அருகில் சென்று, அவர்மேல் கல்லெறிய வேண்டும், அவர் மண்டையை உடைக்க வேண்டும் என்பது அவனுடைய திட்டம்.

அவன் தன் திட்டத்தை நிறைவேற்ற ஆயத்தமானான். தான் நினைத்தபடியே பைகளில் கற்களை நிரப்பிக்கொண்டு கூட்டத்துக்குப் போனான். ஆனால், அவன் நினைத்ததுபோல் கூட்டத்துக்குள் அவ்வளவு எளிதாக நுழைந்து முன்னால் செல்ல முடியவில்லை. அவ்வளவு பெரிய கூட்டம். எனவே, அவன் இருந்த இடத்திலிருந்து விட்ஃபீல்ட் பேசுவதைக் கேட்டான். அவருடைய வார்த்தைகளால் அவன் மிகவும் தொடப்பட்டான். அவன் நின்ற இடத்திலேயே தன் பைகளிலிருந்த கற்களை எடுத்து வெளியே போட்டான். பின்பு அவன் ஜார்ஜ் விட்ஃபீல்டிடம் வந்து, தான் போட்டிருந்த திட்டத்தைச் சொன்னான். “நான் உங்கள் மண்டையை உடைக்க இங்கு வந்தேன். ஆனால், நீங்களோ என் இதயத்தை நொறுக்கிவிட்டீர்கள்”. என்று சொன்னான். அன்றே அவன் இரட்சிக்கப்பட்டான்.

நற்செய்திக்காக செலவுபண்ணுதலும், செலவுபண்ணப்படுதலும்

1770ஆம் வருடம், செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி. அன்று, விட்ஃபீல்ட் அமெரிக்காவிலுள்ள நியூபரி துறைமுகத்தில் வந்து இறங்குகிறார். சற்றுமுன்வரை அவர் நியூ இங்கிலாந்தில் பாஸ்டனில் பிரசங்கித்துக்கொண்டிருந்தார், அதன்பின் அமெரிக்காவில் எக்ஸிடெரில் ஒரு கூட்டம் மக்களுக்கு அவர் பிரசங்கித்தார்.

எக்ஸிடெரில் பிரசங்கித்தபோதே, அவர் சுகமில்லாதவர்போல் தோன்றினார். எனவே, மக்கள், “நீங்கள் சுகம் இல்லாதவர்போல் இருக்கிறீர்கள். எனவே, தொடர்ந்து பிரசங்கிக்க வேண்டுமா? நீங்கள் போதுமான ஆரோக்கியத்துடன் இருப்பதுபோல் இல்லை. நிறுத்திக்கொள்ளலாமா?” என்று சொன்னார்கள்.

ஆனால், பிரசங்கிப்பதற்குக் கிடைக்கும் வாய்ப்பை விட்ஃபீல்ட் நிச்சயமாக, ஒருபோதும் நழுவவிட மாட்டார். ஏனெற்றால், “துருப்பிடிப்பதைவிட களைப்படைவது நல்லது,” என்று அவர் அடிக்கடி சொல்வாராம். உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோதும், மறுநாள் காலையிலும் பேச ஒப்புக்கொண்டார். அவர் மிகவும் சோர்வாக இருந்தார், பேசி முடித்துவிட்டு படகில் ஏறும்போது அவர் எந்த அளவுக்குச் சோர்வாக இருந்தார் என்றால் பிறர் கைலாகு கொடுத்து அவரை ஏற்றவேண்டியிருந்தது.

கடைசிப் பிரசங்கம்

எக்ஸிடெரிலிருந்து நியூபரி துறைமுகத்தில் வந்திறங்குகிறார். துறைமுகத்திலிருந்து அவர் தங்குமிடத்துக்குப் போகிறார். அவர் அங்கு வருகிறார் என்று கேள்விப்பட்ட மக்கள் அவரைப் பார்க்கவும், அவர் பேசுவதைக் கேட்கவும் அவர் தங்கும் விடுதிக்கு வந்துவிடுகிறார்கள். அவர் அங்கு வருகிறார். அங்கு கூடியிருக்கும் மக்களைப் பார்க்கிறார். அவர்கள் அவரைப் பேசுமாறு வற்புறுத்துகிறார்கள். அவர் மிகவும் சோர்வாகவும், களைப்பாகவும் இருந்தார்.

எனவே, “இப்போது என்னால் பேச முடியாது. தயவுசெய்து, நாளைக்குக் காலையில் வாருங்கள், பேசலாம் . இப்போது என்னால் முடியாது” என்று கூறினார்.

இப்படிச் சொன்னபோதும் அவர் அவர்களுடைய முகங்களில் இருந்த தவிப்பையும், ஏக்கத்தையும் கவனித்தார். அவர் அப்போது படிகளில் ஏறிக்கொண்டிருந்தார். எல்லாரும் தூங்கப்போவதற்கு ஆயத்தமாக அறைகளிலும், படிகளிலும் மெழுகுதிரிகளை ஏற்றியிருந்தார்கள். அவர் தூங்குவதற்காகக் கிட்டத்தட்ட மாடிப்படிவரை சென்றுவிட்டார். ஆனால், அவர்கள் அவருடைய பிரசங்கத்தைக் கேட்க ஆவலோடு காத்துக்கொண்டிருந்ததால் அவர் திரும்பி வந்து அவர்களோடு உரையாற்றுவது என்று முடிவு செய்தார். அவர் அங்கே படிக்கட்டுகளின் உச்சியில் நின்றார், அவர்கள் படிக்கட்டுகளிலும், கீழே உள்ள அறைகளிலும் கூடிஇருந்தார்கள், அவர் அவர்களுடன் பேசினார், ஏற்றியிருந்த மெழுகுதிரி எரிந்துமுடியும்வரை அவர் பேசினார்.

பின்னர், 55 வயதான விட்ஃபீல்ட் ஓய்வெடுக்கத் தன் அறைக்குச் சென்றார். அடுத்த நாள் அவர் வெளியே வரவில்லை.

கர்த்தர் அவரை அடுத்த நாள் அதிகாலையில் அழைத்துக்கொண்டார். கடுமையான உடல்சோர்வு, இதற்குமேல் இயலாது எனும் அளவுக்குப் பயங்கரமான களைப்பு. களைப்பும், சோர்வும் அவருடைய மரணத்திற்குக் காரணமாயின. அவருடைய இதயம் இயங்க மறுத்தது. அவரால் சுவாசிக்க முடியவில்லை.

அவர் எக்ஸ்டெரில் அன்றிரவு படிகளில் நின்றுகொண்டு அங்கு கூடியிருந்த மக்களுக்குக் கடைசியாகப் பிரசங்கித்த பிரசங்கத்தின் தலைப்பு என்ன தெரியுமா? 2 கொரிந்தியர் 13: 5. அதுதான் அவருடைய கடைசி பிரசங்கம், “நீங்கள் விசுவாசமுள்ளவர்களோவென்று உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள்; உங்களை நீங்களே பரீட்சித்துப்பாருங்கள்.”

எழுச்சிமிகு நற்செய்தியாளர்

ஜார்ஜ் விட்ஃபீல்டின் காலத்தில் அவரைப்போல் வேறொரு மனிதன் இருந்திருப்பானா என்பது சந்தேகம்தான். சபை வரலாற்றில் அவர் ஒரு மிக முக்கியமான நபர். அவர் ஒரு வாரத்தில் சராசரியாக 40 மணி நேரம் பேசினாராம். ஒரு வாரத்தில் 40 மணி நேரம் பேச வேண்டும் என்றால், அதற்கு எத்தனை மணி நேரம் ஆயத்தம் செய்ய வேண்டும் என்பதை நினைத்துப்பாருங்கள்.

சில நேரங்களில் அவர் ஒரு வாரத்தில் 60 மணி நேரம்கூடப் பேசினாராம். இவைகளோடுச் சேர்த்து, ஓர் அனாதை இல்லம் கட்டிக்கொண்டிருந்தார், கடிதங்கள் எழுதினார், கட்டுரைகள் எழுதினார், பத்திரிகைகளில் எழுதினார், அவருடைய உதவியையும் ஆலோசனையையும் தேடி வந்த நூற்றுக்கணக்கான மக்களைச் சந்தித்தார்.

அவருடைய 34 ஆண்டுகால ஊழியத்தில், 18,000 முறை, 1 கோடி மக்களுக்குப் பேசியதாகச் சொல்லுகிறார்கள்.

அந்த நேரத்தில் அவருடைய சமகாலத்தில் வாழ்ந்த சுமார் 80 விழுக்காடு அமெரிக்கர்கள் அவருடைய பிரசங்கத்தைக் கேட்டார்களாம், அவருடைய பிரசங்கத்தைக் கேட்டது மட்டுமல்ல, அவரை நேரில் பார்த்தார்களாம், அவர்களால் அவரை அடையாளம் காண முடியும் அளவுக்கு அவரைத் தெரியுமாம். அந்த அளவுக்கு அவர் பயணம் செய்தார். அந்த அளவுக்கு அவருடைய செல்வாக்கும், தாக்கமும் அதிகமாக இருந்தன.

இவ்வளவு பரபரப்பான அலுவல்கள் இருந்தபோதும் அவருடைய பொறுமை மகத்தானது. இவ்வளவு அலுவல்கள் இருந்தபோதும் அவர் பரிசுத்த வேதாகமத்தை மிகக் கண்டிப்பான அட்டவணைவைத்துப் படித்தாராம். இன்னும் சொல்லப்போனால், அவர் முழங்காலில்நின்று வேதாகமத்தை வாசிப்பாராம். ஏனென்றால், கர்த்தருடனான தனிப்பட்ட நேரத்தின் முக்கியத்துவத்தை அவர் அறிந்திருந்தார்.

ஊழியம் ஆழமாக இருக்க வேண்டும் என்றும், தேவனுடனான ஐக்கியம் ஆழமாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். ஊழியம் ஆழமாக இருக்க வேண்டுமானால், கர்த்தருடன் ஐக்கியம் ஆழமாக இருக்க வேண்டும். கர்த்தருடன் ஐக்கியம் ஆழமாக இருந்தால் ஊழியத்தின் அகலத்தைக் கர்த்தர் பார்த்துக்கொள்வார் என்று அவர் நம்பினார்,

நற்செய்தி ஒளி பரவட்டும்

தேவன் தம் அன்பான ஊழியக்காரனாகிய ஜார்ஜ் விட்ஃபீல்டை ஒரு முழு தலைமுறைக்குப் புத்துயிர் அளிக்கப் பயன்படுத்தினார். விட்ஃபீல்டின் அடக்க ஆராதனையில் பேசியவர் யார் தெரியுமா? ஜாண் வெஸ்லி. “மிக உன்னதமான தேவனுடைய உத்தமமான தாசனாகிய ஜார்ஜ் விட்ஃபீல்டின் ஆவியிலும், நடைமுறையிலும் பிரத்தியேகமான காந்தத்துடன் வீசிய அந்தச் சுடரொளியின் ஒரு தீப்பொறி வரப்போகிற தலைமுறையினரைப் பற்றிப் பிடிக்கட்டும்,” என்று அவர் பேசினார்.

ஜார்ஜ் விட்ஃபீல்டின் உற்சாகமூட்டும் ஒரு வாக்கியத்தோடு முடித்துக்கொள்வோம்.

“இலக்கை நோக்கி முன்செல்லுங்கள். நிற்காதீர்கள். உங்கள் பயணத்தில் தரித்துநிற்காதீர்கள். உங்களுக்குமுன் வைக்கப்பட்டிருக்கும் பரிசைப் பெறுவதற்காக முனைந்து ஓடுங்கள்.”