Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More

கிளாடிஸ் அயில்வார்ட் (பிப்ரவரி 24, 1902 - ஜனவரி 3, 1970) இலண்டனில் பிறந்து சீனா, ஹாங்காங், தைவான் ஆகிய நாடுகளில் சீனர்களிடையே ஊழியம் செய்த ஒரு மிஷனரி.

இளமைப் பருவத்தில், கிளாடிஸ் ஒரு வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணிபுரிந்தார். தேவன் தன்னைச் சீனாவிற்கு மிஷனரியாகச் செல்லுமாறு அழைத்த அழைப்பைத் தொடர்ந்து, அவர் China Inland Mission மூலமாக சீனாவிற்குச் செல்ல முயன்றார். ஆனால், அவரால் சீன மொழியைக் கற்கமுடியாததால் அவரை யாரும் மிஷனரியாக ஏற்றுக்கொள்ளவில்லை.

அவர் தன் வாழ்நாள் முழுவதும் சேமித்த பணத்தைக்கொண்டு இரயிலில் மூன்றாம் வகுப்பில், 1932 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி, சீனாவின் ஷாங்சி மாநிலத்தில் உள்ள யாங்செங்கிற்குப் புறப்பட்டார். ஆபத்தான பயணம். சைபீரியாவில் யுத்தம் நடந்துகொண்டிருந்தது. ரஷ்யர்களால் கைதுசெய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். உள்ளூர்காரர்களின் உதவியோடு, ஜப்பானிய மீன்பிடிக் கப்பலில் ஜப்பானுக்குச் சென்று, பின் மற்றொரு கப்பலில் சீனாவுக்குச் சென்றார்.

சீனாவில் ஒரு வயதான மிஷனரியான ஜீனி லாசனுடன் இணைந்து ஊழியம் செய்தார். அவர்கள் அங்கு ஒரு சத்திரத்தை அமைத்து அந்த ஊருக்கு வந்த கோவேறு கழுதைகளுக்கும், கழுதைகளை ஒட்டி வந்தவர்களுக்கும் விருந்தோம்பல் வழங்கினார்கள். அங்கு தங்கியவர்களுக்கு கதைகளைச் சொல்லி நற்செய்தி அறிவித்தார்கள். சில காலம் கிளாடிஸ் "கால் ஆய்வாளராக"ப் பணியாற்றினார், கால்களைக் கட்டும் பழக்கத்துக்கு எதிரான புதிய சட்டத்தை அமல்படுத்துவதற்காக கிராமப்புறங்களில் சுற்றுப்பயணம் செய்தார்.

கிளாடிஸ் அயில்வார்ட் சீன மக்களிடையே மிகவும் மரியாதைக்குரியவர். அனாதைக் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்தார். ஒரு கொந்தளிப்பான சிறைக் கலவரத்தில் தலையிட்டு, அதைத் தீர்த்துவைத்தார். தேவைப்படுபவர்களுக்கு உதவுவதற்காக தன் உயிரைப் பலமுறை பணயம் வைத்தார். 1938 ஆம் ஆண்டில், ஜப்பானிய படையெடுப்பின்போது அவர் 100க்கும் மேற்பட்ட அனாதைக் குழந்தைகளை மலைகளின்வழியாகப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றார். நோய்வாய்ப்பட்டபோதிலும், அவர் தன் இலக்கிலிருந்து திசைமாறவில்லை.

17 ஆண்டுகள் அங்கு ஊழியம் செய்தபின், அவர் 1949இல் இங்கிலாந்துக்குத் திரும்பினார். இறுதியாக 1958 இல் அவர் தைவானில் குடியேறினார், அங்கு, அவர் 1970இல் இறக்கும்வரை ஊழியம்செய்தார்.

கிளாடிஸ் அயில்வார்ட்

ஆண்டவராகிய இயேசு சில ஆயிரம் மக்களின் பசியைப் போக்க ஒரு சிறுவன் தன்னிடமிருந்த இரண்டு மீன்களையும், ஐந்து அப்பங்களையும் கொடுத்ததுபோல, கானாவூர் கல்யாணத்தில் குறைவை நீக்க ஆண்டவராகிய இயேசு சொன்னபடி வேலைக்காரர்கள் கற்சாடியில் தண்ணீர் ஊற்றியதுபோல, தேவன் எனக்குத் தந்த வேலையை நான் செய்கிறேன். இது எத்தனை ஆயிரம்பேரின் பசியைப் போக்கும், குறைவை நீக்கும் என்பது தேவனைப் பொறுத்தது.

இன்று நாம் பார்க்கப்போகிற மிஷனரியைப்பற்றி ஒருசிலரே கேள்விப்பட்டிருப்பார்கள். இவர் அலட்டிக்கொள்ளாத, பகட்டிக்கொள்ளாத ஒரு சாதாரணமான பெண், அற்பமான உருவமும், வெறும் ஐந்தடி உயரமும் கொண்ட பெண். ஆனால், ஊடுருவித் துளைக்கும் கூர்மையான கண்களும், கவர்ந்திழுக்கும் ஆளுமையும் கொண்டவர். பரபரப்பான மக்கள் வெள்ளத்தில் இவர் பத்தோடு பதினொன்றாகத்தான் இருந்திருப்பார். ஆனால், அவரை நேரில் சந்திக்கவும், அவர் தேவனுடைய வேலையைப்பற்றி பேசுவதையும் கேட்க நேர்ந்தால், அவரைப்பற்றிய அபிப்பிராயம் மாறிவிடும், உயர்ந்துவிடும். அந்தச் சந்திப்பு நிச்சயமாக ஒரு மாபெரும் தாக்கத்தை ஏற்படும். இந்தச் "சிறு பெண்" எவ்வளவு உறுதியானவர், எவ்வளவு திடமானவர் என்பதை அப்போது காணலாம்.

அவர் கர்த்தரைப்பற்றி மணிக்கணக்காகப் பேசியபோதும், மக்கள் சலிப்பில்லாமல் கேட்டார்கள், அவர் பேசும்போது யாரும் தங்கள் கைக்கடிகாரங்களைப் பார்க்கவில்லை. நீண்ட நேரம் பேசினாலும், அனைவரையும் அவர் தன் பேச்சினால் கட்டிப்போட்டார். மக்கள் அவர் பேசுவதைக் கேட்க ஏன் இப்படித் திரண்டுவந்தார்கள்? என்ன காரணம்? அவர் ஒரு சாதாரணமான பெண்தானே! அவர் அப்படியொன்றும் தனிச்சிறப்பு வாய்ந்தவரோ, சிறப்பியல்புகள் உடையவரோ இல்லை. தேவன் தன்னை அழைத்தபோது, அவர் தேவனுக்கு, "இதோ அடியேன்," என்று மறுமொழி சொன்னதால், இந்தச் சாதாரணமான பெண் தன் வாழ்வில் அசாதாரணமானவைகளை அனுபவித்தார். "ஆனால், ஆம், இதோ அடியேன் என்று சொல்வதற்கு எனக்குக் கொஞ்சக்காலம் ஆயிற்று," அவர் சொன்னார்.

இவருடைய பெயர் கிளாடிஸ் அயில்வார்ட் . கிளாடிஸ் 1902ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இலண்டனில் எட்மண்டன் என்ற இடத்தில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார். சிறுவயதிலேயே, அவர் மக்கு, கூர்ந்த அறிவில்லாதவர் என்பதை அவருடைய பெற்றோர் பார்க்கத் தவறவில்லை. அவர் வழக்கமான பள்ளியில் சேர்ந்து படிக்க இலாயக்கற்றவர் என்றே தோன்றியது. கணிதம் சுத்தமாக வராது. எனவே, பெற்றோரின் அனுமதியோடு, அவர் தன் பதினான்காவது வயதில் பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு, வேலைக்குப் போகத் தொடங்கினார்.

அங்கும் இங்குமாகச் சின்னச்சின்ன வேலைகள் செய்தபின், இலண்டனில் ஒரு வீட்டில் பார்லர் பணிப்பெண்ணாக வேலைசெய்ய ஆரம்பித்தார். வேலை நேரம் அதிகம், குறைந்த சம்பளம். வேலை கடினம்தான். ஆயினும், கிளாடிஸ் அந்த வேலையை விரும்பினார். ஏனென்றால், இலண்டனில் அவர் வேலை செய்த இடத்தில் நிறைய திரையரங்குகள் இருந்தன. இலண்டனின் சிற்றின்பங்களை அனுபவிக்க அன்று அதுதான் சிறந்த இடம். பட்டு அங்கிகளும், பளபளக்கும் ஆடைகளும், நவநாகரீகமான தொப்பிகளும் அணிந்து பகட்டாக உலாவரும் நடிகர் நடிகைகளையும், பணக்காரர்களையும் பிரபலமானவர்களையும் அந்தத் தெருக்களில் பார்க்கலாம். இலண்டனின் செல்வந்தர்கள், வசதியானவர்கள், பிரபலமானவர்கள் அங்குதான் வாழ்ந்தார்கள்.

வேலைசெய்ய வேண்டும், வேடிக்கையும், கேளிக்கையும், உல்லாசமும் வேண்டும் என்பதைத்தவிர வேறு எண்ணம் அவருக்குக் கிடையாது. எனவே, தன் உறவினர் குய்னீயோடு சேர்ந்து உணவகங்களுக்குச் செல்வதும், நடனமாடுவதும், திரையரங்குகளுக்குச் செல்வதும் அவருக்கு இன்பமாயிருந்தன.

ஒருநாள் வேலை முடிந்தபின், கடைகளையும், மக்களையும் வேடிக்கைபார்த்துக்கொண்டு அவர் தெருக்களின்வழியாக நடந்துபோய்க்கொண்டிருந்தார். அப்போது ஓர் ஆலயத்துக்கு வெளியே சில வாலிபர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். கிளாடிஸ் அவர்களைத் தாண்டிச் செல்லும்போது, அவர்கள், "உள்ளே வாருங்கள், தயவுசெய்து வாருங்கள். ஆராதனையில் எங்களோடு சேர்ந்துகொள்ளுங்கள்," என்று கிளாடிசை வருந்தி அழைத்தார்கள். "என் அருமையான மாலைப் பொழுதை நான் ஓர் ஆலயத்தில் கழிக்கவிரும்பவில்லை. நான் ஆராதனையில் கலந்துகொள்ளப்போவதில்லை," என்று சிந்தித்துக்கொண்டே, "நான் வரவில்லை," என்று சொன்னார். அவர்கள் அன்போடு அவருடைய கையைப்பிடித்துக் குலுக்கித் தங்கள் வணக்கத்தைத் தெரிவித்தார்கள். அவருடைய கையைப்பிடித்ததும், எல்லோரோடும் சேர்ந்து கிளாடிசும் ஆலயத்துக்குள்ளே போகத் தொடங்கினார். உள்ளே நடந்துபோய்க்கொண்டிருக்கும்போதே, "நான் ஏன் இங்கு வந்தேன்? நான் வரவில்லை. இவர்கள்தான் என்னைக் கட்டாயப்படுத்தி இழுத்துக்கொண்டுவருகிறார்கள்," என்று நினைத்துகொண்டேபோய் அங்கிருந்த ஓர் இருக்கையில் எரிச்சலுடன் உட்கார்ந்தார். அவரைச்சுற்றி அந்த வாலிபர்கள் உட்கார்ந்தார்கள். வேண்டாவெறுப்போடு முறுமுறுத்துக்கொண்டே அவர் பிரசங்கத்தைக் கேட்டார். "ஓ! இதை நான் ஏற்கெனவே கேட்டிருக்கிறேன். இது எனக்கு ஏற்கெனவே தெரியும்," என்று அவர் நினைத்தார். உண்மைதான். அவருக்கு ஏற்கெனவே தெரியும். ஏனென்றால், சிறுவயதில் அவர் சபையில் ஞாயிறு பள்ளி வகுப்புகளில் இவைகளைக் கேள்விப்பட்டிருந்தார். ஆனால், இப்போது அங்கு சபையில் பிரசங்கியார் பாரத்தோடும், தவிப்போடும் பேசிக்கொண்டிருந்தார். கிளாடிசால் உட்காரமுடியவில்லை. புழுபோல் நெளிந்தார். அவருக்குத் தர்மசங்கடமாக இருந்தது. எனவே, ஆராதனை முடிந்த அடுத்த நொடியில் அவர் வெளியேற விரும்பினார். கூட்டம் முடிந்தவுடன் கதவைநோக்கி நடக்க ஆரம்பித்தார். ஆனால், கதவைத் திறந்து அவர் வெளியே போவதற்குள் அங்கிருந்த யாரோவொருவர் அவரைக் கூப்பிட்டு, "தேவன் உங்களை விரும்புகிறார்," என்று சொன்னார். உடனே அவர் தன்னைக் கூப்பிட்டவரை நோக்கி, "கவலைப்பட வேண்டாம். நான் அவரை விரும்பவில்லை," என்று சொன்னார். அதற்கு அவரைக் கூப்பிட்ட அந்த நபர், "ஒருவேளை நீங்கள் அவரை விரும்பாமல் போகலாம். ஆனால், நிச்சயமாக அவர் உங்களை விரும்புகிறார். தேவன் உங்களுக்கு ஒரு வேலை வைத்திருக்கிறார்," என்று பதிலளித்தார். "ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து என் பாவங்களுக்காக மரித்தார்," என்பதை அன்றுதான் முதன்முதலாக கிளாடிஸ் உணர்ந்தார். "தேவனே, நீர் நிஜம் என்று இன்றிரவு எனக்கு நிரூபித்தால், நீர் என்ன சொன்னாலும் நான் செய்வேன் என்று வாக்குறுதி அளிக்கிறேன்," என்று சொன்னார். அன்றிலிருந்து அவருடைய வாழ்க்கைப் பாதையும், பயணமும் மாறின.

இந்த நிகழ்ச்சி அவரை மிகவும் பாதித்தது. ஒருவகையான கலக்கம், குழப்பம். அவருடைய சமாதானம் கலைந்தது, அமைதி குலைந்தது. கலக்கத்திலிருந்தும், குழப்பத்திலிருந்தும் அவரால் வெளியே வரமுடியவில்லை. தன் கையறு நிலையிலிருந்து ஈடேற வேண்டுமானால் ஒரு போதகரைச் சந்தித்து ஆலோசனை பெற்றாக வேண்டும் என்று அவர் முடிவுசெய்தார்.

தன் உள்ளத்தின் உண்மையான நிலையைப்பற்றிப் பேசுவதற்காக அவர் ஒரு போதகரைச் சந்திக்க அவருடைய வீட்டுக்குச் சென்றார். அவர் அங்கு போனபோது பாதிரியார் வீட்டில் இல்லை. பாதிரியாரின் மனைவிதான் வீட்டில் இருந்தார். பாதிரியாரின் மனைவியோடு அவர் பேசினார். கிளாடிசையும், அவருடைய பிரச்சினையையும், அவருடைய இக்கட்டான நிலைமையையும் பாதிரியாரின் மனைவி தெளிவாகப் புரிந்துகொண்டார். இருவரும் அடிக்கடிச் சந்தித்துப் பேசினார்கள். கிளாடிஸ் ஒரு முடிவு எடுத்தாக வேண்டும் என்று இருவரும் நினைத்தார்கள். ஒன்று, கிளாடிஸ் தேவனைத் தள்ளிவிட்டு, தற்போது வாழ்ந்துகொண்டிருப்பதுபோல் தொடர்ந்து வாழலாம். அல்லது அவர் தன் வாழக்கையை முழுவதும் தேவனுக்கு அர்ப்பணிக்கலாம். இரண்டில் ஒன்றை அவர் தெரிந்தெடுக்க வேண்டும்.

அன்றே, அப்போதே, எந்த ஆரவாரமுமின்றி, கிளாடிஸ் முழங்கால்படியிட்டு, "கர்த்தாவே, நீர் என் வாழ்வில் வாரும். நான் உம் கரத்தில், நாம் உமக்குச் சொந்தம், உம் சித்தம்போல் என்னைப் பயன்படுத்தும்," என்று கர்த்தராகிய இயேசுவுக்குத் தன்னை நூறு விழுக்காடு அர்ப்பணித்தார்.

ஒரு நாள் கிளாடிஸ் ஓர் இதழில் சீனாவைப்பற்றிய ஒரு கட்டுரையைப் படித்தார். சீனாவில் இலட்சக்கணக்கானோர் இன்னும் இயேசுவின் நற்செய்தியைக் கேட்டதேயில்லை, அவர்களிடம் வேதாகமம் இல்லை என்று அந்தக் கட்டுரையில் வாசித்து, அவர் அதிர்ச்சியடைந்தார். அன்றிலிருந்து அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு அவர் சீனாவைப்பற்றியே பேசினார். தான் சந்தித்த தன் உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் என எல்லாரிடமும் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்கச் சீனாவுக்குச் செல்லுமாறு வருந்தி வேண்டினார். அவர்களில் பலர் மருத்துவர்கள், செவிலியர்கள், உயர் பதவியில் இருந்தவர்கள், புத்திசாலிகள், திறமைசாலிகள், நன்கு படித்தவர்கள், நல்லவர்கள், அற்புதமானவர்கள். ஆனால், அவர்களில் ஒருவர்கூட கிளாடிஸ் சொன்னதை அக்கறையோடு, ஆர்வத்தோடு எடுத்துக்கொள்ளாமல், விளையாட்டாக எடுத்துக்கொண்டார்கள்.

"இவளுக்குப் புத்தி பேதலித்துவிட்டதோ! பைத்தியக்காரிபோல் பேசுகிறாள்!" என்று சிலர் முகத்துக்குநேரே சொன்னார்கள், வேறு சிலர் முதுகுக்குப்பின் சொன்னார்கள். நொறுங்கிவிட்டார். "சீனாவில் பல இலட்சம் மக்கள் இன்னும் நற்செய்தியைக் கேள்விப்பட்டதில்லையாம்; அவர்களிடம் வேதாகமம் இல்லையாம். நாம் அங்கு மிஷனரிகளை அனுப்ப வேண்டும்," என்று அவர் தெரிந்தவர், தெரியாதவர் என்று எல்லாரிடமும் எப்போதும் சொல்லிக்கொண்டேயிருந்தார். அதைக் கேட்டு சலிப்படைந்த அவருடைய உறவினர்கள், "கிளாடிஸ், இதற்கும் உனக்கும் என்ன சம்பந்தம்? சீனாவுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்?" என்று கேட்கத் தொடங்கினார்கள். ஒரு நாள் கிளாடிஸ் இப்படிப் பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு கட்டத்தில், அவருடைய அப்பா, "கிளாடிஸ், இதெல்லாம் வெட்டிப் பேச்சு. சீனாவில் நீ என்ன செய்யப் போவதாக உத்தேசம்? நீ ஒரு செவிலியரா? இல்லை. நீ ஓர் ஆசிரியையா? இல்லை. நீ ஒரு மருத்துவரா? இல்லை. அவர்களுடைய சீன மொழி உனக்குத் தெரியுமா? தெரியாது. சீனாவுக்குப் போய் அங்கு நீ என்ன சாதிக்கலாம் என்று நினைக்கிறாய்? ஒன்று சொல்லட்டுமா? நீ ஒரேவொரு காரியம் நன்றாகச் செய்வாய். உனக்கு நன்றாகப் பேசத் தெரியும். வாய்ச்சொல், வாய் கிழியப் பேசத் தெரியும். வாயாடி. அதைத்தவிர உனக்கு வேறொன்றும் தெரியாது," என்று கோபத்தோடு கூறினார். அதைக் கேட்ட கிளாடிஸ் அழுதுகொண்டு தன் அறைக்குள் ஓடினார். ஓடியவர் நின்றார். "ஆம், என் அப்பா சொன்னது சரி. எனக்குப் பேசத் தெரியும்," என்று நிதானித்தறிந்தார்.

கடைசியாக கேட்கிறதற்கு இன்னும் ஒரேவொரு ஆள்தான் பாக்கி. அவருடைய சகோதரன். கிளாடிஸ் அவரிடம், "நீ சீனாவுக்கு மிஷனரியாகச் செல்வாயா? நான் உனக்கு வேண்டிய எல்லா உதவியும் செய்வேன்," என்று சொன்னார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தவன், சமாளித்துக்கொண்டு, "இது உன் ஆர்வக்கோளாறு," என்று கிண்டல்செய்துவிட்டு ஓடிவிட்டான். கதவுக்கு வெளியே நின்றகொண்டு, உள்ளே எட்டிப்பார்த்து, "உண்மையிலேயே யாராவது சீனாவுக்கு மிஷனரியாகச் செல்ல வேண்டும் என்று நீ நினைத்தால், நீயே ஏன் செல்லக்கூடாது?" என்று கேட்டுவிட்டு, கதவை ஓங்கிச்சாத்திவிட்டு ஓடிவிட்டான். கிளாடிஸ் உறைந்துபோய் நின்றார். எவ்வளவு நேரம் அங்கு நின்றார் என்று தெரியாது. அவருக்குள் ஒரு பூகம்பம் வெடித்தது. "நான் போக வேண்டுமா? போகலாமா? நானா? நான்தானா? நான் இல்லையோ? வேறு யார்? எத்தனை இலட்சம் ஆத்துமாக்கள்? நானாக இருக்க முடியாது!" என்று குழம்பித் தவித்து, இறுதியில் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார். அவர் தேவனுக்கு இரண்டு வாக்குறுதிகளை அளித்தார். ஒன்று : அன்புள்ள ஆண்டவராகிய இயேசுவே, நீர் வழியைத் திறந்தால், வழியைக் காண்பித்தால் நானே சீனாவுக்குச் செல்வேன். இரண்டு : கிளாடிஸ் அயில்வார்ட் என்ற நபர் என்ன செய்ய வேண்டும் என்று நீ சொல்வதாக நான் நம்புகிறேனோ, அதைச் செய்யும்படி நான் வேறு யாரிடமும் கேட்கமாட்டேன்."

அவர் சீனாவுக்கு மிஷனரியாகச் செல்ல முடிவுசெய்து, 1930இல் China Inland Mission பயிற்சிப் பள்ளியில் சேர விண்ணப்பித்தார். China Inland Mission 1865ஆம் ஆண்டு, ஜூன் 25இல் ஜேம்ஸ் ஹட்சன் டெய்லரால் நிறுவப்பட்டது. இந்தப் பயிற்சி மையத்தின் ஆதாரங்கள் விசுவாசம், ஜெபம். நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்தர்வர்களுக்குப் பயிற்சி அளித்து, அவர்களைச் சீனாவுக்கு மிஷனரிகளாக அனுப்பினார்கள். ஹட்சன் டெய்லர் மரித்த நேரத்தில், இந்தப் பயிற்சி மையத்தின்மூலம் 800க்கும் மேற்பட்ட மிஷனரிகள் அனுப்பப்பட்டிருந்தார்கள். சீனாவில் 125,000 கிறிஸ்தவர்கள் இருந்தார்கள், 205 மிஷன் நிலையங்கள் இருந்தன. இந்த மிஷன் பள்ளிக்குத்தான் கிளாடிஸ் அயில்வார்ட் விண்ணப்பித்தார். ஒரு வருடப் பயிற்சி அளிக்கப்படும். இந்தப் பயிற்சி பள்ளியில் அவர்கள் மிஷனரிக்குத் தேவையான பாடங்களையும், சீன மொழியையும், சீனக் கலாச்சாரத்தையும் கற்றுக்கொடுத்தார்கள். அதே நேரத்தில் நடைமுறைப் பயிற்சிக்காக அருகிலிருந்த கிராமங்களிலும், குப்பங்களிலும், பின்தங்கிய மக்கள் வாழ்ந்த குடியிருப்புகளிலும் ஊழியம் செய்தார்கள். அங்கு அவர்கள் பிரசங்கித்தார்கள், அங்கிருந்த பெண்களுடன் சேர்ந்து வேலைசெய்தார்கள், அங்கிருந்த ஞாயிறு பள்ளியில் குழந்தைகளுக்கு வேதகாமத்தைக் கற்பித்தார்கள். மிஷனரிப் பயிற்சிக்காக வந்திருந்த பெண்களில் கிளாடிஸ் மிகவும் நேர்த்தியானவராகவும், நடைமுறைக்குரியவராகவும் இருந்தார். அது மட்டுமல்ல, ஞாயிறு பள்ளியில் கலந்துகொண்ட சுட்டிக் குழந்தைகளை அவரால் மட்டுமே கட்டுப்படுத்த முடிந்தது. இலண்டனைச் சுற்றியிருந்த குடிசைப்பகுதிகளில் வாழ்ந்த பெண்களிடம் அவர் உண்மையிலேயே மிகவும் நாசுக்காகப் பேசினார், நயமாகப் பழகினார். அவர் பேசும் விதமும், பழகும் விதமும் மிகவும் அருமையாக இருந்தன. ஆனால், வகுப்பறையில் அவருடைய கதையே வேறு. எவ்வளவு முயன்றும் வகுப்பறைப் பாடங்களைக் கற்கமுடியவில்லை, கேட்டவையெல்லாம் ஒரு காதுவழியாகப் போய் அடுத்த காதுவழியாக வெளியேறின. எதுவும் உள்ளே தங்கவில்லை. தலைகீழாக நின்றாலும் சீன மொழி தலைக்குள் ஏற மறுத்தது. சகமாணவர்கள் அவருக்கு உதவினார்கள். எனினும், எல்லாப் பாடங்களிலும் அவர் படுபயங்கரமாக மண்ணைக் கவ்வினார். ஒருபுறம் அவர் நேரம் தவறாதவர், நேர்த்தியானவர், நயமானவர், நாசுக்கானவர், காரியங்களைக் கையாளுவதில் கைதேர்ந்தவர். ஆனால், மறுபுறம், படிப்பில் படுமோசம். சீன மொழியைக் கற்பதில் கோளாறு, வகுப்பறைப் பாடங்களுக்கும் அவருக்கும் காத தூரம். எனவே, மூன்று மாதங்களுக்குப்பிறகு, மிஷன் நிர்வாகத்தார், "நீ நல்ல பெண். ஆனால், சீனாவில் மிஷனரியாகப் பணியாற்ற நீ தகுதியற்றவள். சீனாவுக்கு மிஷனரியாகச் செல்லவேண்டுமானால், குறைந்தபட்சம், சீன மொழி தெரிந்தாக வேண்டும். ஆனால், அந்த மொழியைக் கற்கும் திறன் உன்னிடம் இல்லவே இல்லை. எனவே, நாங்கள் எங்கள் வளங்களை வீணாக்க விரும்பவில்லை. நீயும் உன் நேரத்தை வீணாக்க வேண்டாம்," என்று வருத்தத்தோடு கூறி அவரை வெளியேற்றினார்கள். அவர் கதறி அழுதார். கலங்கி நின்றார்.

ஆனால், தேவன் தன்னை சீனாவுக்கு அழைக்கிறார் என்று அவர் உறுதியாக நம்பினார். எனவே, "நீ சீனாவுக்கு மிஷனரியாகச் செல்ல இலாயக்கற்றவள்," என்று பயிற்சி மையத்தில் சொன்னதால் எல்லாம் முடிந்துவிட்டது என்று அவர் நினைக்கவில்லை. காயப்பட்டார், சங்கடப்பட்டார் என்று வேண்டுமானால் சொல்லலாம். அவர் பயிற்சி நிலையத்தை விட்டு வெளியேறுவதற்குமுன், அவர்கள் சீனாவில் மிஷனரிகளாக ஊழியம்செய்துவிட்டு தற்போது இலண்டலில் வசிக்கின்ற இரண்டுபேருடைய முகவரிகளைக் கொடுத்தார்கள். கிளாடிஸ் அவர்களைச் சந்தித்தார். அவர்களோடு சேர்ந்து பிரிஸ்டோலில் இருந்த குடிசைப்பகுதிகளில் ஊழியம்செய்ய ஆரம்பித்தார். அவர் இலண்டலில் வறுமையைப் பார்த்திருந்தார். எனவே, அவருக்கு வறுமை என்றால் என்னவென்று கொஞ்சம் தெரியும். ஆனால், இங்கு, பிரிஸ்டோலின் குடிசைப்பகுதிகளில் கண்டதைப்போன்ற வறுமையை அவர் இதுவரை எங்கும் கண்டதில்லை. கிளாடிஸ் அங்கு அந்த ஊழியத்தில் தன்னை முழுமையாக ஊற்றினார். அங்கு பெண்களுக்கு ஒரு விடுதி இருந்தது. அந்த விடுதியில் தங்கியிருந்த பெண்கள் அந்தக் குடிசைப்பகுதிக்குச் சென்று குடிசைவாசிகளுக்கு உதவினார்கள்.

கிளாடிஸ் அவர்களோடு அங்கு சென்று அவர்களுக்கு உதவினார். பட்டினிகிடந்த குழந்தைகளை மடியில் தூக்கிவைத்து உணவு ஊட்டினார். கிழிந்த, அழுக்கடைந்த ஆடைகளுடன் இருந்த குழந்தைகளைக் கழுவிச் சுத்தம்செய்தார், குளிப்பாட்டினார், வாழ்வில் பாதைமாறிய பெண்களின் வாழ்வை நேராக்கினார், குடித்துவெறித்துக்கிடந்த ஆண்களின் விடுதைலைக்காக உழைத்தார், கிளாடிஸ் அங்கிருந்த குடும்பங்களுக்கெல்லாம் உதவினார், ஒழுங்குசெய்தார். அவர்களுக்குத் தேவையான உணவு, உடை, மருந்து மாத்திரைகளைச் சேகரித்து அவர்களுக்குக் கொடுத்தார். கிளாடிஸ் இவைகளையெல்லாம் மிகத் திறமையாகக் கையாண்டதால், மிஷனரி நண்பர்கள் அவரிடம், "கிளாடிஸ், இதுதான் உன் அழைப்பு. நீ சீனாவுக்குச் செல்வதல்ல உன் அழைப்பு. இதுதான் நீ செய்யவேண்டியது. இவ்வளவு குறுகிய காலத்தில் நீ எவ்வளவு வேலை செய்திருக்கிறாய், பார்," என்று சொன்னார்கள்.

கிளாடிஸ் பதில் சொல்லவில்லை. தான் அங்கு நிரந்தரமாக இருக்கப் போவதில்லை என்றும், தேவன் தன்னை சீனாவுக்கு அழைத்திருக்கிறார் என்றும் அவர் திட்டவட்டமாக அறிந்திருந்தார்.

அந்தக் குடிசைவாசிகளுக்காக கிளாடிஸ் தன்னைப் பானபலியாக ஊற்றினார். நோய்வாய்ப்பட்டார். எனவே, அவர் அங்கு தன் பணியை நிறுத்திவிட்டு, சிகிச்சைக்காகத் தன் பெற்றோரின் வீட்டுக்குத் திரும்பினார்.

தேவனுடைய நடத்துதலுக்காகக் காத்திருந்தார். கிளாடிசின் வாட்டத்தைப் போக்க, அவருடைய அம்மா ஒருநாள் அவரை சபைக் கூட்டத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு அமர்ந்திருந்தபோது, அருகிலிருந்த இரு பெண்கள் 74 வயதான ஒரு மிஷனரியைப்பற்றி மெதுவாகப் பேசிக்கொண்டிருந்தது கிளாடிசின் காதுகளில் விழுந்தது. அந்த மிஷனரியின் பெயர் Jeannie Lawson என்றும், அவருடைய கணவர் இறந்துவிட்டார் என்றும், அவர் சீனாவில் ஊழியம் செய்துகொண்டிருக்கிறார் என்றும், அவர் தனக்கு உதவிசெய்ய இளைய மிஷனரிகளைத் தேடிக்கொண்டிருக்கிறார் என்றும் அந்த இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள். "Jeannie Lawson தேடிக்கொண்டிருக்கும் அந்த இளம் மிஷனரி நான்தான். தேவன் அனுப்புகிற அந்த இளம் மிஷனரி நான்தான். Jeannie Lawsonனோடு சேர்ந்து ஊழியம் செய்யப்போகும் அந்த இளம் மிஷனரி நான்தான்," என்று கிளாடிஸ் உணர்ந்தார். அவருக்கு அதில் சந்தேகமே இல்லை.

எனவே, அவர் களத்தில் இறங்கத் தொடங்கினார். "கர்த்தர் என்னைச் சீனாவுக்கு அழைத்திருக்கிறார். ஆனால், சீனாவுக்கு மிஷனரிகளை அனுப்புகிற மிகப் பெரிய மிஷனரி நிறுவனமாகிய china inland mission என்னை ஏற்றுக்கொள்ளவில்லை, ஏதோவொரு மிஷன் நிறுவனத்தின் ஆதரவோடு செல்லமுடியாவிட்டால், சீனாவுக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளை நானே செய்வேன்," என்று தீர்மானித்து ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தார்.

ஒரு பயண முகவரிடம் சென்று, "ஐயா, சீனாவுக்குச் செல்ல மிகக் குறைந்த ஒருவழிப் பயணச் சீட்டு வேண்டும்," என்று கேட்டார். "கப்பலில் செல்வது பாதுகாப்பானது, வசதியானது. ஆனால், 90 பவுண்டுகள் ஆகும். ரயில் பயணம் பாதுகாப்பானதல்ல, வசதியானதல்ல. ஆனால், மலிவானது. ஐரோப்பா வழியாகவும் , அதன்பின் ரஷ்யா, சைபீரியாவழியாகவும் சீனாவுக்குப் போகலாம். மூன்றாம் வகுப்பில் பயணிக்க 47 பவுண்ட் ஆகும்," என்றார். அவர் அந்தப் பயண முகவரிடம் சீனாவுக்குச் செல்வதற்கானப் பயணச்சீட்டை முன்பதிவு செய்யச் சொன்னார். ஆனால், பணம் கொடுக்கவில்லை. கையில் காசு இருந்தால்தானே கொடுக்கமுடியும்! "வாராவாரம் தவணைமுறையில் நான் உங்களுக்குப் பணம் கொடுத்துவிடுவேன்," என்று சொல்லி பயணச்சீட்டை முன்பதிவுசெய்தார். "அங்கு இப்போது உள்நாட்டுப் போர் நடந்துகொண்டிருக்கிறது. ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையே அதிகாரப்பூர்வமற்ற போர் நடக்கிறது. நீங்கள் இப்போது அங்கு போவது பாதுகாப்பானதல்ல. எங்கள் பயணிகள் அனைவரும் உயிரோடு திரும்பிவர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்," என்று பயண முகவர் கூறினார்.

பயணச் சீட்டுக்குத் தேவையான பணம் சம்பாதிக்க வேண்டும். எனவே, கடினமாக இருந்தபோதும், தன் இலக்கை நோக்கிச் செல்வதற்காக, அவர் மீண்டும் பணிப்பெண்ணாக வேலைசெய்ய ஆரம்பித்தார். சீனா. சீனா! அவருடைய மூச்சு, பேச்சு எல்லாம் சீனா, சீனா, சீனா. அவர் வேலை செய்த இடத்தில் ஒரு சிறிய அறைக்குச் சென்று, தன் வேதாகமத்தையும், தன்னிடமிருந்த சில்லறையையும் மேசையின்மேல் வைத்து, "ஆண்டவரே! இதோ என் வேதாகமம், இதோ என்னிடம் இருக்கும் சில்லறை. இவைகளோடுசேர்த்து இதோ, ஆண்டவரே! நானும் இருக்கிறேன். இவைகளே என் மொத்த சொத்து," என்று சொல்லி தன்னை அர்ப்பணித்தார்.

பணிப்பெண்ணாக அவர் நீண்ட நேரம் வேலைசெய்தார், உணவகங்களில் பாத்திரங்கள் கழுவினார், உணவு பரிமாறினார், சம்பாதித்த பணத்தைத் தன்னால் முடிந்த எல்லா வழிகளிலும் சிக்கனப்படுத்தினார். திரையரங்குகளுக்கும், நடனங்களுக்கும் செல்வதை அடியோடு நிறுத்தினார், வெறுத்தார். இரட்சிப்பின் அனுபவத்துக்குப்பின் இவைகளை அவர் விரும்பவில்லை என்பது ஒரு காரணம். இன்னொரு காரணம் அவர் பணத்தைச் சேமிக்க விரும்பினார். எளிமையான, மலிவான ஆடைகளை உடுத்தினார், அதனால் பணத்தைச் சேமித்தார். அவரிடம் விலையுயர்ந்த, மிகவும் சவுகரியமான தோல் காலணிகள் இருந்தன. ஒருநாள் அவர் இலண்டனில் ஆக்ஸ்போர்டு தெருவில் இருந்த வூல்வொர்த்சுக்குச் சென்றார். அங்கு எதையெடுத்தாலும் 3 பென்சுக்கு காலணிகள் கிடைக்கும். அவர் தன் அளவுக்குச் சரியான காலணிகளை எடுத்தார். ஆனால், ஒரு சின்னப் பிரச்சினை. அவை இரண்டுமே இடது கால்களுக்கானவை. அவைகளை அவர் வாங்கினார். பின்னர் அவர் போர்ட்டபெல்லா சாலைக்குச் சென்று தன் விலையுயர்ந்த காலணிகளை விற்றார். ஆம், சீனாவுக்குச் செல்ல வேண்டும். சீனாவுக்காக.

இங்கிலாந்திலிருந்து சீனாவரை அவர் இந்தக் காலணிகளைத்தான் அணிந்திருந்தார். எவ்வளவு சங்கடமாக இருந்திருக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கு விட்டுவிடுகிறேன்.

சீனாவுக்கு மிஷனரியாகச் செல்வதற்குத் தனக்கு ஒரு நல்ல அடித்தளம் அவசியம் என்பதை கிளாடிஸ் அறிந்திருந்தார். பிறருக்கு வேதாகமத்தைக் கற்பிக்க வேண்டுமானால், முதலாவது தான் வேதாகமத்தை நன்றாக அறிந்திருக்க வேண்டும் என்பதால், அவர் வேதாகமத்தை ஆழமாகப் படித்தார். மேலும், சீனாவில் நற்செய்தி அறிவிக்க வேண்டுமானால், அதை இங்கேயே பயிற்சி செய்ய வேண்டும் என்று முடிவுசெய்தார். "நான் என் வீட்டில் மிஷனரியாக இல்லையென்றால், கடல்தண்டி வேறொரு நாட்டுக்குச் சென்றதும் மிஷனரியாக மாற முடியாது," என்று அவர் நம்பினார். எனவே, அவர் இலண்டனின் பூங்காக்களில் பிரசங்கிக்கத் தொடங்கினார். அவர் இலண்டனில் இருந்த speakers Cornerருக்குச் சென்றார். ஐந்தடி உயரமேயுள்ள ஒரு வாலிபப் பெண் ஒரு பெட்டியின்மேல் ஏறிநின்று பிரசங்கிப்பதை உங்கள் கற்பனைக்கு விட்டுவிடுகிறேன். அவர் பிரசங்கித்தபோது இடைமறித்தார்கள், கேள்விகேட்டார்கள், தொந்தரவுசெய்தார்கள், அவர்மீது பொருட்களை வீசியெறிந்தார்கள். தான் சீனாவுக்குச் சென்றபின் அங்கு என்ன நடக்கலாம் என்பதற்கு அது ஒரு முன்சுவை என்றே அவர் கருதினார். இலண்டனில் இப்படி நடந்தால் சீனாவில் இதைவிட மோசமாக இருக்கும் என்று அவர் புரிந்துகொண்டார். நற்செய்தியை எதிர்ப்பவர்களுக்கு எப்படி நற்செய்தியைப் பிரசங்கிக்க வேண்டும் என்பதற்கு இது அவருக்கு நல்ல அனுபவமாக அமைந்தது.

கிளாடிஸ் பணிப்பெண்ணாக வேலைசெய்துகொண்டிருந்த மிஷனரியின் வீட்டு நூலகத்தில் சீனாவைப்பற்றி நூற்றுக்கணக்கான புத்தகங்கள் இருந்தன. அவருக்கு சீனாவைப்பற்றி ஒன்றும் தெரியாது. அவர் ஒவ்வொரு நாளும் அந்த நூலக அறையைச் சுத்தம்செய்தபோது அலமாரியிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து, இரவு முழுவதும் கண்விழித்துப் படித்துவிட்டு அடுத்த நாள் காலையில் அதை அந்த இடத்தில வைத்துவிடுவார். அடுத்து இன்னொரு புத்தகம், மறுநாள் வேறொரு புத்தகம். இப்படியே படித்தார். ஒருநாள் அந்த மிஷனரி கிளாடிசை அழைத்து, "நீ என் நூலகத்திலிருந்து புத்தகங்களைத் திருடுகிறாய்," என்றார். திருடுகிறாய் என்ற வார்த்தையைக் கேட்டவுடன் அவர் உடைந்து போய், "இல்லை, நான் புத்தகங்களைத் திருடவில்லை. தேவன் என்னை சீனாவுக்கு ஒரு மிஷனரியாக அழைத்திருக்கிறார். எனவே, என்னால் முடிந்த அளவுக்கு நான் சீனாவைப்பற்றித் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். அதற்காகத்தான் உங்கள் புத்தகங்களை எடுத்துப் படித்தேன். எடுத்த எல்லாப் புத்தகங்களையும் நான் எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டேன். இனி இப்படிச் செய்யமாட்டேன்," என்றார். அதற்கு அவர், "இல்லை, நீ எத்தனை புத்தகங்களை வேண்டுமானாலும் எடுத்துப் படிக்கலாம்," என்றார். அன்றிலிருந்து அவர் சீனாவைப்பற்றிய புத்தகங்களை விரும்பம்போல் எடுத்துப் படித்தார்.

சம்பாதித்து, சேமித்த பணத்தை பயணச்சீட்டுக்குக் கொடுத்தார். பயணத்தை ஆரம்பித்தார். மிக மலிவான மூன்றாம் வகுப்பில். இதோ! இலண்டன் லிவர்பூல் ரயில் நிலையத்திலிருந்து கிளாடிஸ் தன் சீனப் பயணத்தை ஆரம்பிக்கிறார். கையில் இரண்டு பெட்டிகள். ஒரு பெட்டியில் கொஞ்சம் உணவுப் பொருட்களும், ஒரு சுருட்டிய படுக்கையும். இன்னொரு பெட்டியில் அவருடைய துணிமணிகள். முகாம்களில் பயன்படுத்தும் ஓர் அடுப்பையும், தண்ணீரை சூடுபண்ண ஒரு பாத்திரத்தையும் ஒரு பெட்டியோடு கட்டிவைத்துக்கொள்கிறார். இரண்டு பெட்டிகளோடு ரயில் ஏறுகிறார். அவர் இதற்குமுன் நாட்டைவிட்டு ஒருபோதும் வெளியே சென்றதேயில்லை, இதுபோன்ற நீண்ட தொடர்வண்டியில் நெடுந்தூரம் பயணித்ததில்லை. கப்பல் பயணம் செய்ததில்லை. ஆங்கிலத்தைத்தவிர வேறு மொழி தெரியாது. "திரும்பி வருவேனா, திரும்பப் பார்ப்பேனா?" என்று தெரியாது. அன்புக்குரியவர்களிடமிருந்து விடைபெறுகிறார். தன் பிரியமான நாட்டுக்கு விடைகொடுக்கிறார். சீனாவுக்கு மிஷனரியாகச் செல்ல வேண்டும் என்பதே அவருடைய நாட்டம், தேட்டம். அதற்கு அவர் பெரிய விலை கொடுத்தார்.

ரயில் நகர்கிறது. பயணம் தொடங்குகிறது. ஐரோப்பிய நாடுகளின்வழியாக ரயில் பயணிக்கிறது. இங்கிலாந்தைவிட்டு விலகிச் செல்லச் செல்ல தான் மிகவும் தனிமையாக இருப்பதாக உணர்கிறார். அவருக்கு ஆங்கிலம் மட்டுமே தெரியும். சக பயணிகளுக்கு ஆங்கிலம் தெரியவில்லை. எனவே, உரையாடுவது மிகவும் கடினமாக இருந்தது. மேலும், நாடுகளின் எல்லைகளில் சண்டை நடந்துகொண்டிருந்தது.

இரயிலில் அவர் டென்மார்க் தூதரகத்தில் பணிபுரிந்த ஒரு தம்பதியைச் சந்தித்தார். அவர்கள், "நாங்கள் இங்கிலாந்தில் நடைபெற்ற ஒரு கிறிஸ்தவ மாநாட்டில் கலந்துகொண்டு நாடுதிரும்பிக்கொண்டிருக்கிறோம். இதற்குமுன்பு நாங்கள் ஒரு மிஷனரியை முகமுகமாகப் பார்த்ததில்லை. இப்போதுதான் பார்க்கிறோம். நாங்கள் எங்கள் வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு நாளும் உங்களுக்காக ஜெபிப்போம்," என்று சொல்லி, இறங்கும்போது, கிளாடிசின் கையில் ஸ்கோஃபீல்டின் வேதாகமத்தையும், ஒரு பவுண்டு பணத்தையும் கொடுத்துவிட்டு இறங்கினார்கள். "இந்தப் பணம் எனக்கு எதற்கு? இதைவைத்து நான் என்ன செய்யப்போகிறன்?" என்று கிளாடிஸ் நினைத்தார். ஆனால் அந்தப் பவுண்டைப் பயன்படுத்த தேவன் திட்டமிட்டிருந்தார். வேகவைத்த முட்டைகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், பிஸ்கட் ஆகியவைகளே அவருடைய உணவு. தண்ணீரைச் சூடாக்கிக் குடித்தார்.

இரயில் ரஷ்ய எல்லைக்குள் நுழைகிறது. அப்போது ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையே மோதல். அது கிளாடிஸின் இரயில் பயணத்தைப் பாதித்தது. பயணிகளோடு உரையாடுவதற்கு மொழி ஒரு பிரச்சினையாக இருந்ததால் என்ன நடக்கிறது என்று அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஒரு கட்டத்தில், இரயில் சைபீரியாவை எட்டியவுடன், பயணிகள் அனைவரும் இரயிலிலிருந்து இறங்கினார்கள். பலர் ரஷ்ய மொழியில் கிளாடிசைப் பார்த்துக் கத்தினார்கள். அவருக்கு ஒன்றும் புரியவில்லை, அவர் இரயிலிலிருந்து இறங்கவுமில்லை. "இரயில் எப்படியும் தொடர்ந்து செல்லும். நான் சீனாவுக்குச் செல்வேன்," என்று நினைத்து உட்கார்ந்துகொண்டார். ஆனால், தூரத்தில் துப்பாக்கிச் சத்தம் கேட்டது. இரயில் நின்றுவிட்டது. "அருகில் போர் நடந்துகொண்டிருக்கிறது. இதற்குமேல் இரயில் போகாது. நீங்கள் இங்கு இறங்கி, அருகிலிருக்கும் சிட்டா என்ற நகரத்துக்கு நடந்து செல்ல வேண்டும். அங்கிருந்து நீங்கள் போக வேண்டிய ஊருக்கு இரயில் கிடைக்கும்," என்று ஒரு வழியாக காவலர்கள் நிலைமையை அவருக்குப் புரியவைத்தார்கள். கிளாடிஸ் தன் உடைமைகளை எடுத்துக்கொண்டு இரயில் பாதையில் நடக்க ஆரம்பித்தார். ஒன்றரை நாள் பயணம்.

சைபீரியாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் குளிர் தோலைத் துளைக்கும். போர்வையைப் போர்த்திக்கொண்டு, இரண்டு பெட்டிகளைத் தூக்கிக்கொண்டு நடக்க அரம்பித்தார். உறைந்து இறந்துவிடும் அளவுக்குக் குளிர் வாட்டியது. அன்றிரவு நடந்துபோய்க்கொண்டிருந்தபோது, தூரத்தில் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டது. "ஓ, இந்தக் குளிரில் யாராவது நாய்களை இப்படி வெளியேவிடுவார்களா? என்று அவர் வியந்தார். அவை உண்மையில் நாய்கள் இல்லை, ஓநாய்கள் என்று பின்னர் புரிந்துகொண்டார்,

இறுதியாக, ஒருநாள் முழுவதும் நடந்து, கிளாடிஸ் அந்த நகரத்தை அடைந்தார். சோர்வு, களைப்பு. அங்கு அவருக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. கிளாடிஸ் கைது செய்யப்பட்டார். நகரத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதில் மட்டும்தான் அவர் தங்க வேண்டும் என்ற நிபந்தனை விதித்தார்கள்.

ஒருவன் அவருடைய கடவுச்சீட்டைப் பார்த்து, அதில் missionary என்று எழுதியிருப்பதை machinery என்று புரிந்துகொண்டான். எனவே, "ஓ, இவருக்கு machinery தெரியும்போலும்," என்று நினைத்தான். ஓர் இராணுவவீரன் அவரைக் கூட்டிக்கொண்டு போகும்போது, "எங்களுக்கு machinery இயக்கத் தெரிந்தவர் தேவை. நீங்கள் எங்களோடு தங்குங்கள்," என்று சொல்லிக்கொண்டே போனான். இறுதியாக கிளாடிஸ் ஒரு பழைய விடுதியில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். தவிப்போடும், தத்தளிப்போடும் கிளாடிஸ் ஜெபித்தார். கொஞ்ச நேரத்தில் ஒரு வாலிபப் பெண் அங்கு வந்து, "நீங்கள் பேராபத்தில் சிக்கியிருக்கிறீர்கள். தப்பித்துப் போய்விடுங்கள். இன்று நடுஇரவில் ஒருவர் உங்களைச் சந்திக்க வருவார். அவரோடு கிளம்புவதற்கு நீங்கள் தயாராக இருங்கள்," என்று சொல்லிவிட்டுச் சென்றாள்.

அவரால் இரவு தூங்க முடியவில்லை, பயம். கதவைத் தட்டும் சத்தம் கேட்டு கதவைத் திறந்தார். குடிபோதையில் இருந்த ஒருவன் அறைக்குள் நுழைய முயன்றான். "என் தேவன் என்னைப் பாதுகாப்பார்" என்று உரக்கச் சொல்லி அவனை வெளியே தள்ளி, கதவைச் சாத்தினார். பொழுது புலரும் நேரத்தில் இன்னொரு சத்தம் கேட்டது. தயக்கத்தோடு திறந்தார். அங்கு ஒரு முதியவர் நின்று கொண்டிருந்தார். இவர்தான் அந்த வாலிபப் பெண் சொன்ன நபராக இருக்கும் என்று நம்பி அவருடன் சென்றார். கப்பல்துறைமுகம் பக்கமாக அழைத்துச் சென்றார். அங்கு அந்த வாலிபப்பெண் இருந்தாள். "உங்கள் உதவிக்கு நன்றி. உங்களுக்கு ஏதாவது வேண்டுமா?" என்று கிளாடிஸ் கேட்டார். அந்தப் பெண், "முடிந்தால் ஏதாவது உடைகள் தரமுடியுமா?" என்று கேட்டார். கிளாடிஸ் தன் பையில் வைத்திருந்த ஒரு ஜோடி காலுறைகளையும், தன் கையுறைகளையும் கொடுத்தார். அவ்வளவுதான் அவரால் செய்யமுடிந்தது.

இராணுவ வீரர்கள் நெருங்கி வரும் சத்தம் கேட்டது. அந்த வாலிபப்பெண் கிளாடிஸை தூரத்தில் காத்திருந்த ஒரு குறிப்பிட்ட மீன்பிடி கப்பலுக்கு உடனே ஓடுமாறு சைகை காட்டினாள். கிளாடிஸ் கப்பலைநோக்கி வெறித்தனமாக ஓடினார், அந்த வாலிபப்பெண் அந்த இடத்தைவிட்டு ஓடினாள்.

கிளாடிஸ் கப்பலுக்குள் ஏறவிருக்கையில், திடீரென்று இரண்டு பலமான கைகள் அவருக்குப்பின்னாலிருந்து அவரை இழுத்தன. ஆம், இராணுவவீரர்கள் அவரைப் பிடித்துவிட்டார்கள். கிளாடிஸ் உடனே ஜெபித்தார். இரயிலில் டென்மார்க் தம்பதிகள் கொடுத்த ஒரு பவுண்ட் பணம் கிளாடிசின் நினைவுக்கு வந்தது. கிளாடிஸ் மிக விரைவாக அதை எடுத்து அவர்களுக்குக் கொடுத்தார். கிளாடிசை மீண்டும் இழுத்துக்கொண்டு போவதைவிட, அவர் கொடுத்ததை வாங்கிக்கொண்டு செல்வது மேல் என்று நினைத்து, இராணுவவீரர்கள் அதை வாங்கிக்கொண்டு அவரை விட்டுவிட்டார்கள். கிளாடிஸ் நிம்மதியோடு அந்த மீன்பிடிக் கப்பலில் ஏறினார். அங்கு அவருக்கு அடுத்த அதிர்ச்சி, "நீங்கள் இப்போது என் கைதி!" என்று அந்தக் கப்பலின் மாலுமி, ஒரு ஜப்பானியர், அறிவித்தார். ஆயினும், அவருடைய அதிர்ச்சி விரைவில் நீங்கியது. அந்த மாலுமி உண்மையில் மிகவும் நல்லவர். கிளாடிசுக்கு உதவுவதற்காகவே அவர் அப்படி அறிவித்தார். ஏனென்றால், கிளாடிசை ஒரு கைதியாக அறிவிப்பதுதான் அவரைச் சட்டப்பூர்வமாக அங்கிருந்து வெளியே கொண்டுபோவதற்கான ஒரே வழி. கிளாடிஸ் அயில்வார்ட் தன் பயணத்தைத் தொடர்ந்தார். கப்பல் ஜப்பானுக்குச் சென்றடைந்தது. அங்கிருந்த பிரிட்டிஷ் தூதரகத்தின் உதவியால் கப்பலேறி இறுதியாக சீன மண்ணை மிதித்தார்.

லாசன் பெய்ஜிங்கின் கப்பல் துறைமுகத்தில் தன்னை வரவேற்று, தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று சூடான தேநீர் தருவார் என்று கிளாடிஸ் கற்பனை செய்திருந்தார். ஆனால், அவர் கற்பனைசெய்தபடி எதுவும் நடக்கவில்லை. லாவ்சன் வரவில்லை. மாறாக, அவரை வரவேற்க லியு என்ற ஒருவரை அனுப்பியிருந்தார். அசௌகர்யமான இரயில் பயணம், அதைத் தொடர்ந்து கடினமான பேருந்துப் பயணம். கடைசியாக லாவ்சன் இருந்த இடத்துக்குச் செல்ல கோவேறு கழுதையில் இரண்டு நாட்கள் சவாரி. பயணக் களைப்பு, மனச்சோர்வு, அழுக்கான ஆடைகள், பரட்டைத் தலை, கிழிந்த காலணிகள், சப்பிப்போன பெட்டிகள். தன் இரண்டு பெட்டிகளையும் ஒரு கோவேறுக்கழுதையின்மீது ஏற்றி, அவரும் அதின்மேல் உட்கார்ந்து, யாங்சாங்கை நோக்கிப் புறப்பட்டார்.

அது ஒரு பழைய நகரம். நகரம் என்று சொல்வதைவிட, மலையின்மேல் இருந்த ஒரு கிராமப்புற நகரம் என்று சொல்லலாம். அந்தக் கிராமத்தைப் பார்த்து கிளாடிஸ் பரவசமடைவில்லை. பழுதடைந்த, ஏழைக் கிராமம்போல் தெரிந்தது. கடைசியாக கிளாசிஸ் லாசன் வாழ்ந்த வீட்டில் போய் நின்றார்.

ஒரு குள்ளப் பெண் ஆரஞ்சு நிற ஆடையும், மட்டமான கோட்டும் அணிந்துகொண்டு, பரட்டைத் தலையோடு, கிழிந்த காலணிகளோடு, அடிபட்டு சப்பிப்போன இரண்டு பெட்டிகளோடு நிற்பதைப் பார்த்த லாவ்சனின் முதல் கேள்வி: "நீ யார்?" அவர் உண்மையில் பானை விற்க வந்திருக்கும் குறத்திப்பெண்ணோ என்று அவர் நினைத்தாராம். இதுதான் அவர்களுடைய முதல் சந்திப்பு, முதல் அறிமுகம். லாசன் ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர். வயது 75 இருக்கும். அங்கு மிஷனரியாக ஊழியம்செய்துகொண்டிருந்தார்கள். அவர் ஒரு விதவை.

இந்த அறிமுகத்துக்குப்பின் இருவரும் நன்றாகப் பழகினார்கள். அவர்கள் இருவரும் மிகவும் உற்சாகமான, உறுதியான குணமுடையவர்கள். எனவே, இருவருக்குமிடையே எப்போதாவது காரசாரமான விவாதங்கள் எழுவதுண்டு. அந்தக் கிராமத்துக்கு வருவதற்கு ஒரே வழி கோவேறுகழுதைதான். எனவே, அங்கு வருகிற கோவேறுகழுதைகளும், கழுதை ஓட்டிகளும் தங்குவதற்கு வசதியாக ஒரு சத்திரம், வழிப்போக்கர் விடுதி, திறக்க வேண்டும் என்று லாசன் விரும்பினார். அது தேவன் தனக்குத் தந்த பாரம் என்று அவர் சொன்னார். கோவேறு கழுதைகளுக்கும், அவைகளை ஓட்டிவருபவர்களுக்கும் போதுமான உணவு, வசதிகள் செய்துகொடுக்க விரும்பினார். அங்கு வந்து தங்குபவர்களுக்கு வேதாகமத்திலிருந்து கதைகளையும் சொல்ல வேண்டும் என்று விரும்பினார். ஏனென்றால், சீனர்கள் கதைகள் கேட்பதில் ஆர்வமுள்ளவர்கள். இதைக் கேட்டு கிளாடிஸ் திகைத்தார்.

"நான் இவ்வளவு பாடுபட்டு, எனக்குரிய எல்லாவற்றையும் பலிபீடத்தில் கிடத்திவிட்டு, சீனாவுக்கு வந்தது நற்செய்தி அறிவிக்கவா அல்லது வழிப்போக்கர் விடுதி நடத்தவா?" என்ற கேள்வி கிளாடிசுக்குள் எழுந்தது. நாட்கள் செல்லச்செல்ல கிளாடிஸ் கொஞ்சம்கொஞ்சமாக லாவ்சனையும், அவருடைய ஆத்தும பாரத்தையும் புரிந்துகொண்டார். இருவரும் மண்தரையில் முழங்காலில் நின்று ஜெபித்தார்கள். கிளாடிஸ் இதற்குமுன் சபைக்குச் சென்றார், ஜெபக்கூட்டங்களில் கலந்துகொண்டார். ஆனால், லாவ்சனைபோல் ஒருவர் ஜெபித்ததையோ, ஆத்தும பாரத்தோடு கதறியதையோ, திறப்பின் வாசலில் நின்றதையோ அவர் இதற்குமுன் பார்த்ததில்லை. கிளாடிஸ் ஜெபிக்கவும், ஆத்துமாக்களை ஆதாயம்பண்ணவும் கற்றுக்கொண்டார். சீனர்களின் குச்சியைவைத்து சாப்பிடக் கற்றுக்கொண்டார்.

லாசன் நினைத்தபடி விடுதியைத் திறக்க முடிவுசெய்தார். அங்கு தங்குபவர்களுக்கு லாவ்சன் கதை சொல்வார். ஆனால், கிளாடிஸ்தான் ஆட்களை உள்ளே அழைத்துக்கொண்டு வர வேண்டும். அவர் சத்திரத்துக்கு வெளியே நின்றுகொண்டு, அந்த வழியாகக் கோவேறு கழுதைகளை ஓட்டிக்கொண்டு வருபவர்களை அன்போடு உள்ளேவருமாறு அழைக்க வேண்டும்.

'இயேசு உங்களை நேசிக்கிறார்" என்பதுதான் தான் சீன மொழியில் பேசுகிற முதல் வாக்கியமாக இருக்க வேண்டும் என்று கிளாடிஸ் முடிவுசெய்திருந்தார். ஆனால், அவர் சீன மொழியில் கற்ற முதல் வாக்கியம் அதுவல்ல.

லாசன் வீட்டில் யாங் என்ற ஒரு சீன சமையல்காரர் இருந்தார். அவரிடமிருந்துதான் கிளாடிஸ் சீன வார்த்தைகளைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். சத்திரத்திற்கு வாடிக்கையாளர்களை அழைப்பதற்கு ஏற்ற அன்பான வார்த்தைகளை அவர் முதலாவது கற்றுக்கொண்டார். "மூட்டைப்பூச்சி கிடையாது. நல்லது, நல்லது, நல்லது, வாருங்கள், வாருங்கள், வாருங்கள்." இவைகள்தான் அவர் பேசிய முதல் சீன வார்த்தைகள். விடுதிக்கு வெளியே நின்று வாடிக்கையாளர்களை அழைத்தார்; யாரும் உள்ளே வரவில்லை. தான் சொன்னவைகளை நினைத்து கிளாடிஸ் சிரித்துக்கொண்டார். லாவ்சன், "நீ என்ன செய்ற? மூட்டைப்பூச்சி இல்ல, உண்ணி இல்ல. நல்லது, நல்லது, நல்லது," என்று வெளியே நின்று கத்தினால் ஆட்கள் உள்ளே வந்துவிடுவார்களா? நீ கோவேறு கழுதைக்கு முன்னால் போய் நில். அதை வழிமறித்து, மூக்கணாங்கயிற்றைப் பிடித்து இழுத்துக்கொண்டு வா. முதலாவது வரக்கூடிய கோவேறுக்கழுதையைப் பிடித்து இழுத்தால் போதும், பின்னால் வரக்கூடிய மற்ற கழுதைகள் அதன் பின்னால் தானாக வந்து விடும்," என்று சொன்னார். ஒரு கழுதை ஒரு பக்கமாகத் திரும்பியவுடன், பிற கழுதைகளும் அந்தப் பக்கமாகத் திரும்பி நடக்க ஆரம்பித்துவிடும். இது கழுதையின் இயல்பு. ஆனால், கழுதையை ஓட்டி வருபவனுக்குப் பிடிக்கவில்லையென்றால், என்ன செய்வது? கழுதைகள் ஒரு பக்கமாகத் திரும்பிவிட்டால், அதன்பின் ஓட்டுபவனால்கூட அப்போது ஒன்றும் செய்ய முடியாது. மேலும், அவன் பயணக்களைப்பில் இருப்பான். அவன் சீக்கிரமாக ஓய்வெடுக்க விரும்புவான். எனவே, கழுதைகளைத் திருப்பிக்கொண்டு போகும் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டு, அவைகள் செல்லும் இடத்துக்கு அவன் போய்விடுவான். கிளாடிஸ் ஒரு கழுதையின் மூக்கணாங்கயிரைப் பிடித்து இழுத்தவுடன், அவர்கள், "சரி, சரி, வருகிறேன்," என்று சத்திரத்துக்குள் வந்தார்கள். லாவ்சன் சொன்னபடி கிளாடிஸ் சொன்னார், செய்தார். கழுதைகளை முற்றத்துக்குள் இழுத்துக்கொண்டு வந்தார். கழுதையை ஓட்டியவர்கள் ஆரம்பத்தில் தயங்கினாலும், ஒன்றும் செய்யமுடியாமல் அவருடன் உள்ளே சென்றார்கள். அங்கு அவர்களுக்கு சூடான, சுவையான நூடுல் சூப், படுப்பதற்குச் சூடான படுக்கை என தடபுடலாக விருந்தோம்பல் நடந்தது. எல்லாவற்றுக்கும்மேலாக லாவ்சன் வேதாகமத்திலிருந்து கதைகள் சொன்னார். அங்கு தங்கியவர்கள் ஆவலோடும், ஆர்வத்தோடும் கதை கேட்டார்கள். வந்தவர்களுக்கு இடம் பிடித்துவிட்டது. ஓரிரு நாட்களுக்குப்பின் லாவ்சனோ, கிளாடிசோ கோவேறுகழுதைகளை ஓட்டிவந்தவர்களைக் கடத்திவரவேண்டிய அவசியம் இருக்கவில்லை. அவர்கள் கூப்பிடக்கூட அவசியம் இருக்கவில்லை. அழைக்காமலே நிறையப்பேர் சத்திரத்துக்கு வந்தார்கள்.

கோவேறு கழுதைஓட்டிகள் தங்கள் சகாக்களிடம் இந்தச் சத்திரத்தைப்பற்றிப் புகழ்ந்து பேசினார்கள். "அந்த ஊருக்குப் போனால், நீங்கள் அந்தச் சத்திரத்தில் தங்குங்கள். சாப்பாடு நன்றாக இருக்கும். படுக்கை வசதியாக இருக்கும். அதற்கும்மேலாக அங்கு இலவச பொழுதுபோக்கு கிடைக்கும். ஆம், அங்கு இருக்கும் வயதான பெண்மணி நல்ல கதைகள் சொல்வார்," என்று சொன்னார்கள். லாவ்சனின் புத்திசாலித்தனமான இந்த யோசனை வேலைசெய்ய ஆரம்பித்தது.

இந்தக் கழுதைகளெல்லாம் வேறு எங்காவது போய்த் தங்கினால் நன்றாக இருக்கும் என்று கிளாடிஸ் ஆரம்பத்தில் நினைத்தார். கழுதைகளால் ஏற்பட்ட அசிங்கம், தொந்தரவு, துர்நாற்றம் ஆகியவைகளை கிளாடிசால் தாங்கமுடியவில்லை. கர்த்தரையும், பரலோகத்தையும், நற்செய்தியையும், ஆத்துமாக்களின் மதிப்பையும் பார்த்தபோது அவைகள் ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. எல்லாவற்றையும் மறந்தார். இவைகளுக்கு மத்தியில் லாசன் எந்தச் சலனமுமின்றி அங்கு அமைதியாக அமர்ந்திருந்தார். கழுதைகளின் உரிமையாளர்கள் அவர் பக்கமாகச் சாய்ந்து, அவர் சொல்லும் கதையின் ஒவ்வொரு வார்த்தையையும் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருந்தார்கள். கிளாடிசுக்கு இவைகள் ஆரம்பத்தில் கடினமாக இருந்தன. ஆனால், அவர் மாறினார்.

தேவன் தன்னைச் சீனாவுக்கு அழைப்பதாக கிளாடிஸ் உணர்ந்தாலும், உண்மையில் சீனாவில் வாழ்வதற்கேதுவாக எதுவும் அவரை ஆயத்தப்படுத்தியிருக்க முடியாது. உடுத்தும் விதம், உண்ணும் விதம், உறங்கும் விதம், உறவுகொள்ளும் விதம் என ஏறக்குறைய அனைத்தையும் அவர் புதிதாகக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.

சீனர்கள் வெளிநாட்டவர்களை வெளிநாட்டுப் பிசாசுகள் என்று அழைத்தார்கள். கிளாடிஸ் தெருக்களில் நடந்தபோது அவரையும் அப்படிதான் அழைத்தார்கள்; குழந்தைகள் அவரைச் சூழ்ந்துகொண்டு கெட்ட வார்த்தைகளால் திட்டினார்கள், அவரை விரட்டினார்கள். ஆனால், உண்மையில் இது கிளாடிசுக்குச் சாதகமாக இருந்தது. ஏனென்றால், அந்தக் குழந்தைகளைமூலமாகவும் அவர் சீன மொழியைக் கற்க ஆரம்பித்தார். நம்பமுடியாத வேகத்தில் மிகத் துல்லியமாக அவர் சீன மொழியைக் கற்றார். உண்மையில், மற்ற பல மிஷனரிகளைவிட கிளாடிஸ் சீன மொழியை சீக்கிரமாகக் கற்றுக்கொண்டார். கிளாடிஸ் என்ற பெயர் சீனர்களின் வாயில் நுழையவில்லை. அவர்களால் அவருடைய பெயரை உச்சரிக்க முடியவில்லை. எனவே, லாசன் அவருடைய பெயரை ஐவாடே என்று மாற்றினார். அதற்கு நற்பண்புடையவர் என்று பொருள். இந்தப் பெயரில்தான் அவர் சீனாவில் அறியப்பட்டார்.

கழுதைகளின் வரவும், கழுதை ஓட்டிகளின் வரவும் அதிகமாயிற்று. சத்திரத்தைப் பராமரித்துக்கொண்டே, இருவரும் அருகிலுள்ள கிராமங்களுக்குச் சென்று நற்செய்தி அறிவித்தார்கள்.

கழுதைகளின் வரவு அதிகமானதால் லாசனும், கிளாடிசும் வேறொரு வீட்டில் குடியேறினார்கள். ஒருநாள் லாவ்சன் வீட்டில் தடுமாறி கீழே விழுந்தபின் மிகவும் நோய்வாய்ப்பட்டார். கிளாடிஸ் சீனாவுக்கு வந்த ஒரு வருடத்தில் அவர் இறந்துவிட்டார். அவர் இறந்தபின் கிளாடிஸ் இப்போது தனிமரமானார். கொஞ்ச நாட்களில் கொஞ்சத் தொலைவில் வாழ்ந்த டேவிட், ஜீன் டேவிட் என்ற ஒரு பிரிட்டிஷ் மிஷனரி தம்பதியின் தொடர்பும், உறவும் கிடைத்தது. அதில் அவர் கொஞ்சம் ஆறுதல் அடைத்தார். அவர்கள் கிளாடிசுக்கு நெருக்கமான நண்பர்களானார்கள். ஆயினும், அடிக்கடி சந்திக்கமுடியவில்லை. ஏனென்றால், தூரம் அதிகம். எனவே, அவர் தான் தனியாக இருப்பதாகவே உணர்ந்தார். "நான் திமணமாகாத. தனியாக இருக்கின்ற, ஒரு வாலிபப்பெண். இனி நான் இங்கிருப்பது சரியாக இருக்காது. ஊரைவிட்டுச் செல்வதுதான் சரி," என்று அவர் நினைத்தார்.

கிளாடிஸ் வெளியேபோய் மக்களைச் சந்தித்து நற்செய்தி அறிவிக்க விரும்பினார். ஆனால், அந்த நாட்களில் சீனாவில் வாலிபப்பெண்கள் வெளியே தனியாகப் போகும் பழக்கம் இல்லை. எனவே, இவரால் போகமுடியவில்லை. மேலும், அவர் சத்திரத்தில் சிக்கிக்கொண்டார். ஒவ்வொருநாளும் சத்திரத்தில் கழுதைகளும், கழுதையோட்டிகளும் நிறைந்திருந்தார்கள். சத்திரத்தை என்ன செய்வதென்றும் தெரியவில்லை. சத்திரத்தை நடத்த லாவ்சன் நிறையப் பணம் செலவழித்தார் என்றும், அதைத் தொடர்ந்து நடத்த நிறையப் பணம் தேவைப்படும் என்றும் அவருக்குத் தெரியும். லாவ்சனுக்கு China Inland Mission உதவினார்கள். ஆனால், கிளாடிஸ் எந்தவொரு மிஷன் அமைப்போடும் சேர்ந்து அங்கு ஊழியம் செய்யவில்லை. எனவே, அவருக்கு எந்த ஆதரவும் கிடையாது. அவரிடத்திலும் எதுவும் இல்லை. தன் தனிப்பட்ட தேவைகளுக்கே பணம் இல்லாதபோது, விடுதியை எப்படி நடத்துவது? கிளாடிசுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. சத்திரத்தைத் தொடர்ந்து நடத்துவதற்கு எந்த வழியும் இல்லை. சரி, போவதானால் எங்கே போவது? தெரியாது. வேறு யாரையும் தெரியாது. ஆனால், எங்கு செல்ல வேண்டும் என்று தேவன் சொல்வார் என்று அவர் உறுதியாக நம்பினார்.

நம்பிக்கை அற்றுப்போன அந்த நேரத்தில் யாங்சாங்கின் ஆளுநர் பெரும் ஆரவாரத்துடன் அவரைச் சந்திக்க விடுதிக்கு வந்தார். கிளாடிஸ் மிகவும் பயந்தார். ஏனெனில், ஓர் ஆளுநர் சாதாரணமான ஒரு விடுதிக்கு வருவாரா? ஒருவருக்கொருவர் வாழ்த்துத் தெரிவித்து, நலம் விசாரித்தபின், அவர், "குழந்தைகளின் கால்களைக் கட்டுவது இப்போது சீனாவில் சட்டவிரோதமானது என்பது உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார். அந்த நேரத்தில், சீனாவில், குறிப்பாக கிராமப்புறங்களில் கால் கட்டும் பழக்கம் இன்னும் நடைமுறையில் இருந்தது. கால் கட்டும் பழக்கம் என்றால் இரண்டுமுதல் நான்கு வயதுக்குள் பெண்குழந்தைகளின் கால்விரல்களை ஒன்றாகச் சேர்த்துவைத்துக் கட்டிவிடுவார்கள். அந்த விரல்கள் வளைந்து, சிதைத்து உருத்தெரியாமல் ஊனமாகிவிடும். காலில் விரல்களே இல்லாததுபோல் கால் சிறியதாக இருக்கும். பாதங்கள் சிறியதாக இருந்தால் குழந்தை மிகவும் அழகாக இருக்கும் என்றும், அவர்களுக்குச் சீக்கிரத்தில் திருமணம் ஆகும் என்றும், பாதங்கள் பெரிதாக இருந்தால், அசிங்கமாக இருக்கும் என்றும், அவர்களுக்குத் திருமணம் ஆகாதென்றும் அவர்கள் நினைத்தார்கள்.1912இல் இந்தப் பழக்கம் சீனாவில் தடைசெய்யப்பட்டது. ஆயினும், கிராமங்களில், குறிப்பாக யாங்சிங்கைச் சுற்றியிருந்த கிராமங்களில் மக்கள் இந்தப் பழக்கத்தைக் கைவிடவில்லை. இந்தப் பழக்கம் அங்கு தொடர்ந்தது. அரசாங்கம் உண்மையில் இந்தப் பழக்கத்தை அடியோடு ஒழிக்க விரும்பியது. எனவே, அந்தப் பகுதியின் ஆளுநர் அந்தச் சட்டத்தை அமுல்படுத்தி, அந்தப் பழக்கத்தை ஒழிக்க ஓர் ஆய்வாளரைத் தேடினார். அதில் இரண்டு சிக்கல்கள்: ஒன்று, ஆண்கள் பெண்களின் பாதங்களைப் பரிசோதிக்க முடியாது. அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எனவே, அந்த வேலைக்கு ஒரு பெண் தேவை. இன்னொரு பிரச்சினை என்னவென்றால் யாங் சாங்கில் இருந்த எல்லாப் பெண்களுக்கும் ஏறக்குறைய பாதங்களின் விரல்களைக் கட்டியிருந்தார்கள். பெண்களுக்குக் கால் விரல்கள் கட்டப்பட்டிருக்கிறதா என்பதைப் பரிசோதிக்கக் கால் விரல்கள் கட்டப்பட்ட ஒரு பெண்ணை நியமிக்க முடியாதே! தலைமைக் கால் ஆய்வாளரின் கால் விரல்கள் கட்டப்பட்டிருந்தால் வேடிக்கையாக இருந்திருக்கும். அங்கு அப்போது கால் விரல்கள் கட்டப்படாத ஒரே பெண் கிளாடிஸ்தான். அவரைத்தான் அந்த வேலைக்கு அமர்த்த முடியும். அவர் என்ன செய்ய வேண்டும்? கிராமங்களுக்குச் சென்று பெண்பிள்ளைகளின் கால்களைப் பரிசோதித்து, கட்டியிருக்கும் கட்டுகளை அகற்றவேண்டும். இனிமேல் பெண்குழந்தைகளுக்குக் கால்விரல்கள் கட்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தாய்மார்களுக்கு இதைப்பற்றிய நலக்கல்வி அளிக்க வேண்டும். "நான் அரசாங்கம், கால், நலக்கல்வி, அரசியல்போன்ற காரியங்களில் மாட்டிக்கொள்ள விரும்பவில்லை. நாம் இங்கு ஆத்துமாக்களை ஆதாயம்பண்ண வந்திருக்கிறேன்," என்று கிளாடிஸ் நினைத்தார். அப்போது, "ஒன்றைச் செய்ய ஒருவன் செல்ல வேண்டுமானால் அது ஏன் நீயாக இருக்கக்கூடாது? என்று அவருடைய சகோதரர் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தன. "நான் உங்களைத் தலைமைக் கால் ஆய்வாளராக நியமிக்க விரும்புகிறேன்," என்றார் ஆளுநர். "இது நீங்கள் எனக்களிக்கும் கௌரவம் என்று சொல்வதா அல்லது வேறு என்ன சொல்வது," என்று அவருக்குத் தெரியவில்லை. ஆனால், இது தேவனுடைய நடத்துதல் என்று அவர் உணர்ந்தார்.

கிளாடிஸ் ஆளுநரிடம், "நான் இதைச் செய்ய ஒப்புக்கொள்கிறேன். இந்த வாய்ப்புக்கு நன்றி. ஆனால், ஒரு நிபந்தனை. நான் சந்திக்கும் எல்லாப் பெண்களிடமும் என் தேவனைப்பற்றிப் பேசுவேன். இதற்குச் சம்மதமா?" என்று கேட்டார். அதற்கு ஆளுநர், "உங்கள் தேவன் இப்படிக் கால் கட்டுவதை விரும்புகிறாரா? ஊக்குவிக்கிறாரா?" என்று கேட்டார். அதற்கு கிளாடிஸ், "இல்லை, நிச்சயமாக இல்லை," என்று கூறினார். எனவே அந்த ஆளுநர், "அப்படியானால் நிச்சயமாக, நீங்கள் உங்கள் தேவனைபற்றிப் பேசலாம். மக்களுடைய இந்த மூடப் பழக்கத்தை நிறுத்துவதற்காக நீங்கள் என்னவேண்டுமானாலும் செய்யலாம்," என்று சொன்னார். கிளாடிஸ் அவருக்கு நன்றி சொன்னார். தேவனே தனக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறார் என்று அவர் உணர்ந்தார். அவருக்குச் சீன மொழி தெரியும் என்பதாலோ, மலையேறத் தெரியும் என்பதாலோ, மலையில் வாழ்ந்த மக்களையெல்லாம் தெரியும் என்பதாலோ அல்ல, அவருடைய கால்கள் மட்டும்தான் ஒழுங்கான கால்கள் என்பதால் அவர் கால் ஆய்வாளராக நியமிக்கப்பட்டார்.

கோவேறுகழுதையில்தான் பயணம். அவர் கிராமங்கள்தோறும் சென்று, பெண்களைச் சந்தித்து, பாதங்களைப் பரிசோதித்து, அதை ஒழிக்க அரும்பாடுபட்டார். அவர் இப்போது சீன அரசின் அதிகாரபூர்வமான அதிகாரி. " உனக்குப் பேசத் தெரியும். பேச மட்டும்தான் தெரியும்," என்று அவருடைய அப்பா அவரைப்பற்றிச் சொன்ன வார்த்தைகள் நூற்றுக்குநூறு உண்மை. அவரால் அங்கு செய்யமுடிந்ததெல்லாம் ஒன்றெவொன்றுதான். பேசினார், பேசினார், பேசினார். அவர் தனக்குத் தெரிந்த அரைகுறை சீன மொழியில் வாய்கிழியப் பேசினார். அவர் மிகவும் நயம்பட, சுவைபட, கதைசொன்னார். போன இடங்களிலெல்லாம் கதைகள் சொன்னார். பாதியில் விட்டுப்போன மீதிக் கதைகளைக் கேட்பதற்காகப் பெண்கள் கிராமங்களில் ஆவலோடு காத்திருந்தார்கள். அவர்களால் காத்திருக்கமுடியவில்லை. அவர் சொன்ன கதைகள் அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் வேதாகமத்தின் கதைகளைச் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் கொஞ்சம் மாற்றியமைத்தார். "எகிப்தில் இஸ்ரயேலர்கள் அடிமைகளாக வாழ்ந்தார்கள். அவர்கள் எகிப்தின் ஆளுநரின் அதிகாரத்திலிருந்து வெளியே தப்பித்துப்போனார்கள். போகும்போது கையில் கோப்பைகள் வைத்திருந்தார்கள். கோப்பையில் சூப் இருந்தது. குச்சி வைத்திருந்தார்க்ள, தடி வைத்திருந்தார்கள்," என்று கதையைக் கொஞ்சம் மாற்றிக்கொண்டார். ஊரின் மையப்பகுதியில் எல்லாரையும் கூட்டிவைத்து பாடினார், பாடச் சொல்லிக்கொடுத்தார். மக்கள் பாடக் கற்றுக்கொண்டார்கள். தேவனைப்பற்றித் தெரிந்துகொண்டார்கள்.

தன்னை இந்தச் சிறிய யாங்சாங் பகுதிக்குக் கொண்டுவந்த தேவனுடைய இறையாண்மையை கிளாடிஸ் புரிந்துகொண்டார். தன்னை அழைத்த தேவனுக்குத் தானே பதில் கொடுத்தார். தனியாக வந்தார்; இப்போது அங்கு இருக்கும் ஒரே வெளிநாட்டுக்காரர் அவரே. தனியாக நிற்கிறார். தன்னந்தனியாக. இப்போது அவருடைய பெயர் அய்வேதே . நற்பண்புடையவர் என்று பொருள்.

அவருடைய கதைகள் கிராமங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. விரைவில், கிராமங்களிலும், நகர்ப்புறங்களிலும் சிறுசிறுகுழுக்களும், சிறுசிறு கூட்டங்களும், சிறுசிறு சபைகளும் எழும்ப ஆரம்பித்தன. மக்கள் சிலைகளையும், தங்கள் குலதெய்வங்களை நெருப்பிலிட்டு சுட்டெரித்தார்கள். கிளாடிஸ் மிகவும் பிரபலமானார். மக்களிடையே அவருக்கு பேரும் புகழும் செல்வாக்கும் கிடைத்தன. அவருடைய செய்தி அந்தப் பகுதியெங்கும் பரவியது. கிளாடிஸ் கிராமங்களில் சொல்லும் கதைகளையும், செய்திகளையும் ஆளுநரும் கேள்விப்பட்டார்.

ஒரு நாள், ஆளுநர் அனுப்பிய ஓர் அலுவலர் கிளாடிசைச் சந்தித்து, "ஆளுநர் உங்களை அவசரமாக வரச் சொன்னார். உடனே கிளம்பி நீங்கள் சிறைச்சாலைக்கு வர வேண்டும்," என்று சொன்னார். ஏதோ தவறு நடந்துவிட்டதோ என்று கிளாடிஸ் நினைத்தார். அவரை வரச்சொன்ன சிறை ஆண்களுக்கான சிறை. அது மோசமான, பயங்கரமான ஆயுள் கைதிகள் வைக்கப்பட்டிருக்கும் சிறை. "இப்படிப்பட்ட சிறைக்கு ஆளுநர் என்னை ஏன் வரச் சொன்னார்!" என்று கிளாடிஸ் நினைத்தார். அவர் அங்கு சென்றார். ஆளுநர் அங்கு அவருக்காகக் காத்திருந்தார். கிளாடிசைப் பார்த்ததும் அவரைத் தன் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று, "நல்லது, நீங்கள் வந்துவிட்டீர்கள். இந்தச் சிறையில் இப்போது ஒரு பெரிய கலவரம் வெடித்துள்ளது. கைதிகள் ஒருவரையொருவர் கத்தியால் வெட்டிக் கொல்லுகிறார்கள். இங்கிருந்த காவலர்களும், போர்வீரர்களும் உயிருக்குப் பயந்து ஓடிவிட்டார்கள். நீங்கள் போய், கலவரத்தை அடக்க வேண்டும். கைதிகளை அமைதிப்படுத்த வேண்டும்," என்று சொன்னார். அங்கு கிளாடிஸ், ஒரு சிறிய பெண், தன் நீல நிற உடையில் நின்றுகொண்டிருந்தார். அவர் ஆளுநரிடம், "நான் ஏன் சிறைக்குள் சென்று கலவரத்தை அடக்க வேண்டும். அதுவும் ஆண்கள் சிறைக்குள்?," என்று நினைத்துக்கொண்டிருக்கும்போதே, ஆளுநர் அவரிடம், "நீங்கள் சீக்கிரம் செல்லுங்கள், இல்லையெனில் அனைவரும் ஒருவரையொருவர் வெட்டிக் கொன்றுவிடுவார்கள்," என்றார். அதற்கு கிளாடிஸ், "நான் ஏன் உள்ளே சென்று கலவரத்தை அடக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?" என்று கேட்டார். அதற்கு அவர், "உயிரோடிருக்கும் தேவன் உனக்குள் இருப்பதாக நீ எல்லாரிடமும் சொல்லிக்கொண்டிருக்கிறாய். எனவே, உனக்குள் இருக்கும் உயிருள்ள தேவனோடு நீ ஏன் சிறைக்குள் சென்று கலவரத்தை அடக்கக்கூடாது?" என்று சொன்னார். கிளாடிஸ் சிந்திக்க ஆரம்பித்தார். "உயிருள்ள தேவன் எனக்குள் இருக்கிறார் என்பது இவர் சொல்வதுபோல நடக்காது," என்று சொல்ல வாய் திறப்பதற்குமுன், "ஆம், உயிருள்ள தேவன் எனக்குள் இருக்கிறார் என்பதை நிரூபிக்க இது ஒரு வாய்ப்பு. நிச்சயமாக, நான் அங்கு செல்வேன்," என்று நினைத்துக்கொண்டே, "சரி, நான் செல்கிறேன்," என்றார்.

பெரிய இரும்பு வாயில்கள்வழியாக நடந்தார். கதவுகளில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்திருந்தன. ஜெபித்துக்கொண்டே நடந்துபோனார். ஒருவேளை இன்றுதான் தன் கடைசி நாளாக இருக்குமோ என்று அவர் நினைத்தார். "ஆண்டவரே, இதைத்தவிர எனக்கு வேறு வழியில்லை என்று உமக்குத் தெரியும். நீர் என்னுடன் இருக்கின்றீர் என்று எனக்குத் தெரியும். இதை இங்கிருக்கும் மக்கள் நம்புகிறார்கள். எனவே நான் உள்ளே செல்கிறேன், ஆண்டவரே, உம்மால் இதை அடக்கமுடியும், கட்டுக்குள் கொண்டுவர முடியும், தீர்க்கமுடியும்," என்று ஜெபித்தார். சிறைச்சாலைக்குள் நடந்தார். ஓர் இருண்ட சுரங்கப்பாதை வழியாக நடந்தார். கடைசியாக அவர் ஒரு முற்றத்தில் வந்து நின்றார். அங்கு கட்டுப்பாடற்ற கைதிகளின் கூச்சலையும், கொலைவெறியையும் கேட்டார், கண்டார்.

ஆங்காங்கு இரத்தம் சிந்திச் சிதறியிருப்பதையும், இறந்த உடல்கள் இரத்தத்தில் கிடப்பதையும் கண்டார். அவர் நடந்துசென்றுகொண்டிருந்தபோது அவருக்குப்பின்னால் இருந்த ஒரு பெட்டிக்குப்பின் ஒரு கைதி மறைந்திருந்தான். மறைந்திருந்த அந்தக் கைதியைக் கொல்ல இன்னொரு கைதி கத்திக்கொண்டு கையில் பெரிய கோடாரியோடு ஓடிவந்துகொண்டிருந்தான். இதைக் கண்ட கிளாடிஸ் மிகவும் கோபமடைந்தார். ஓங்கிய கோடாரியோடு ஓடிவந்துகொண்டிருந்தவனுக்குமுன்னால் நின்றுகொண்டு, "கீழே போடு. நிறுத்துங்கள்" என்று உரக்கக் கத்தினார். அவன் திரும்பிப்பார்த்து, உறைந்துபோனான். ஏனென்றால், பிரகாசமான நீல நிற உடையில் ஒரு சிறிய பெண் நின்றுகொண்டு கத்துகிறாள். அவன் செய்வதறியாது கோடாரியைத் தரையில் போட்டான். அமளி அடங்கியது; கூச்சல்களும், குழப்பங்களும் மறைந்தன. அனைவரும் திரும்பி அவரைப் பார்த்தார்கள். கிளாடிஸ் உள்ளுக்குள் நடுங்கிக்கொண்டிருந்தார். ஆனால், ஒரு சில நிமிடங்கள்தான் தனக்குத் தேவை என்று அவருக்குத் தெரியும். எனவே, அவர், "நீங்கள் எல்லாரும் இப்போதே இங்கே வாருங்கள். எல்லாரும் இங்கு வந்து வரிசையாக நில்லுங்கள்," என்று சொன்னார். எல்லாரும் ஒரு வார்த்தை சொல்லாமல், மிகவும் பணிவோடு வந்து, அவருக்குமுன் வரிசையில் வந்து நின்றார்கள். அவர் அவர்களிடம் பேசினார். "நீங்கள் இங்கு இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்? இதெல்லாம் என்ன?" என்ற தொனியில் பேசினார். அவர்களைப் பார்த்தவுடன் கைதிகளெல்லாம் பசியும் பட்டினியாக இருக்கிறார்கள் என்பதை கிளாடிஸ் உடனே புரிந்துகொண்டார். அவர்களுடைய உடலில் கொப்புளங்கள் இருந்ததைப் பார்த்தார். தங்கள் உறவினர்களோ அல்லது நண்பர்களோ கொண்டுவரும் உணவைச் சாப்பிட்டுத்தான் வாழ்வதாகக் கைதிகள் சொன்னார்கள். உறவினர்களோ, நண்பர்களோ இல்லாதவர்களுக்கு யாரும் உணவு கொடுக்காததால், அவர்கள் பட்டினியால் இறந்தார்கள். அவர்கள் அணிந்திருந்த கிழிந்த, கந்தல் துணிகளைப் பார்த்தார். அந்தக் கைதிகள்மேல் அவருக்குக் கோபம் வரவில்லை, மாறாக இரக்கம் பிறந்தது. அவர் அவர்களிடம், "நீங்கள் இந்த இடத்தைச் சுத்தம்செய்யுங்கள். இறந்த உடல்களை வரிசையாக வையுங்கள், உங்கள்சார்பாக நான் ஆளுநரிடம் முறையிடுவேன்," என்று சொன்னார். ஆளுநர் திரும்பிவந்ததும், "ஒரு வேண்டுகோள். கைதிகள் செய்த குற்றங்களுக்காக அவர்களைத் தண்டிக்க வேண்டாம். மேலும், இந்தச் சிறையில் நீங்கள் சில மாற்றங்களைச் செய்தாக வேண்டும்," என்று சொன்னார். ஆளுநரால் அவருடைய வேண்டுகோளை மறுக்கமுடியவில்லை.

அடுத்த சில வாரங்களில், சிறைக்கு நெசவுத்தறிகள் வழங்கப்பட்டன. தோட்டவேலைகள் செய்வதற்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. கைதிகள் சிறுசிறுக் குழுக்களாகப் பிரிந்து தோட்டங்களில் காய்கறிகள் பயிரிட்டார்கள். நெசவுத் தறிகளில் அவர்கள் தங்களுக்குத் தேவையான ஆடைகளைநெய்யத் தொடங்கினார்கள். முயல்கள் வளர்த்தார்கள். தங்கள் தேவைக்குப்போக மீதியிருந்த முயல்களைக் கைதிகளைப் பார்க்கவந்தவர்களிடமும், சுற்றியிருந்த கிராமங்களிலும் இறைச்சியாக விற்றார்கள். கொஞ்ச நாட்களுக்குப்பின் தங்களுக்குத் தேவையான தானியங்களை சிறையிலேயே அரைத்துக்கொண்டிருந்தாள். சிறையில் இப்படி ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்தன. சிறை புத்துயிரும், பொலிவும் பெற்றது. மக்கள் இவைகளையெல்லாம் கேள்விப்பட்டார்கள்.

கிளாடிஸ் சிறைச்சாலைக்கு அடிக்கடிவந்து கைதிகளைச் சந்தித்தார். கிளாடிஸ் அவர்களிடம் தேவனைப்பற்றிப் பேசினார். இந்தக் கைதிகளில் பலர் நாளடைவில் இயேசுவைத் தங்கள் இரட்சகராக ஏற்றுக்கொண்டார்கள்.

கிளாடிஸ் வேலையில், வீட்டில், இருதயத்தில், நகரத்தில் தான் தனிமையாக இருப்பதாக உணர்ந்தார். எனவே, அவர் தேவனிடம், "ஆண்டவரே, நான் மிகவும் தனிமையாக இருப்பதுபோல் உணர்கிறேன். கூடச்சேர்ந்து ஜெபிக்க, பாட, பேச, ஆலோசிக்க, எல்லாவற்றுக்கும் தீர்வாகா திருமணம் செய்துகொள்ளலாம் என்று நினைக்கிறன். அப்படி நான் திருமணம் செய்யவேண்டுமானால், சீனாவில் ஊழியம் செய்யவேண்டும் என்ற பாரமும், பார்வையும் உடைய ஒருவரை எனக்குக் கணவனாகத் தாரும். இதோ, நான் இங்கு, சீனாவின் ஒரு மூலையில் ஒரு கிராமத்தில் இருக்கிறேன். இருப்பினும், இது உமக்குச் சித்தமானால் நீர் இதை வாய்க்கப்பண்ணுவீர்," என்று ஜெபித்தார். அவர் எதிர்பார்த்தபடி கர்த்தர் அவருக்குப் பதில் கொடுக்கவில்லை. கிளாடிஸ் தன் வேதாகமத்தின் ஒரு பக்கத்தில், "தனிமை. தனிமையை நினைத்தால் கண்களில் கண்ணீர் கரைபுரண்டோடும். ஆனால், கிறிஸ்துவுடன் நடப்பவர்கள் ஒருபோதும் தனியாக நடப்பதில்லை. ஏனென்றால் கர்த்தர் அவர்களோடு இருக்கிறார்," என்று எழுதினார்.

கிளாடிஸ் ஒரு நாள் கிராமத்தின் தெருக்களில் நடந்துபோய்க்கொண்டிருந்தபோது ஒரு பெண்ணைப் பார்த்தார், அந்தப் பெண் மிகவும் வித்தியாசமாக இருந்தாள். அவள் அந்த ஊர்க்காரிபோல் தெரியவில்லை. அந்தப் பெண்ணருகே அழுக்கான, கந்தலாடையணிந்த, பரிதாபமான, நோய்வாய்ப்பட்ட ஒரு குழந்தை நடந்துபோய்க்கொண்டிருந்தது. பார்த்தவுடன், அந்தக் குழந்தைக்கு ஒழுங்கான சாப்பாடு கிடைக்கத்தால் இப்படியிருக்கிறது என்று தெரிந்தது. கிளாடிஸ் அந்தப் பெண்மணியைத் தடுத்தி நிறுத்தி, "உங்கள் குழந்தைக்கு உடல்நலம் சரியில்லை. அவளுக்கு உடனடியாக உதவி தேவை," என்றார். அந்தப் பெண்மணி கிளாடிசைப் பார்த்து, "நீங்கள் விரும்பினால், இந்தக் குழந்தையை நீங்கள் விலைக்கு வாங்கலாம், வளர்க்கலாம்," என்றார். ஓ, அப்படியானால், இந்தப் பெண் இந்தக் குழந்தையின் அம்மா இல்லை என்றும், அவர் இந்தக் குழந்தையை விற்க முயற்சிக்கிறார் என்றும் அவர் உடனே புரிந்துகொண்டார்.

உடனே, அவர் ஆளுநரிடம் சென்று, "என்ன நடக்கிறது தெரியுமா? ஒரு பெண் ஒரு குழந்தையை விற்கமுயல்கிறாள். இது மிக மோசம். இதைத் தடுத்துநிறுத்த வேண்டும்," என்று சொன்னார்.

ஆளுநர், "இது ஒரு கருப்புச் சந்தை. அதிகாரத்தில் இருப்பவர்கள் இப்படிக் குழந்தைகளை விற்பதை ஒரு வியாபாரமாக வைத்திருக்கிறார்கள். நாம் ஒன்றும் செய்ய முடியாது. இதில் நீங்கள் தலையிட வேண்டாம்," என்று சொல்லி அவரைப் போகச் சொன்னார். கிளாடிசுக்குக் கடுங்கோபம், ஆத்திரம். தானே அந்தக் குழந்தையை வாங்குவதுதான் ஒரே வழி என்று அவர் நினைத்தார். அவர் அந்தப் பெண்ணிடம் போய், "எவ்வளவு?" என்று கேட்டார். அந்தப் பெண், "100" என்றாள். கிளாடிஸ், "என்னிடம் 100 இல்லை," என்று சொல்லிவிட்டு தன் பையில் இருந்த ஒன்பது பென்சை எடுத்துக் கொடுத்து, "என்னிடம் இவ்வளவுதான் இருக்கிறது," என்றார். அந்தப் பெண், "சரி, கொடு," என்று சொல்லி நாணயங்களைப் பிடுங்கிக்கொண்டு நடையைக்கட்டினாள்.

கிளாடிசும், அவர் விலைக்கு வாங்கிய அந்த ஐந்து வயதுச் சிறுமியும் அங்கு இருக்கிறார்கள். அந்தச் சிறுமியின் பெயர் இப்போது Nine Pence. ஏன்? ஒன்பது பென்சுக்கு வாங்கியதால் nine pence. அந்தச் சிறுமி ஒழுங்காகச் சாப்பிட்டதுபோல் தெரியவில்லை. காரணத்தைக் கேட்டபோது, தனக்குக் கொடுப்பதைக் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு மீதியை அருகிலிருக்கும் தன்னைப்போன்ற வேறொரு சிறுவனுக்குக் கொடுப்பதாகச் சொன்னாள். கிளாடிஸ் அந்தச் சிறுவனைக் கூட்டிகொண்டுவந்தார். என்ன பெயர் Less. ஏன்? குறைவாகச் சாப்பிட்டதால் அந்தப் பெயர். சிறு குடும்பம் இப்போது வளர்கிறது. நைன் பென்ஸ் வெளியே சென்று தெருக்களில் அலைந்துகொண்டிருந்த தன்னைப்போன்ற வேறு பல சிறு குழந்தைகளை அழைத்துக்கொண்டு வந்தாள். இது தேவன் கிளாடிசின் ஜெபத்திற்குப் பதில் கொடுத்ததுபோல் இருந்தது. ஆம், இனி அவர் தனியாக இருக்கத் தேவையில்லை. தனியாக இருப்பதாக அவர் நினைக்கவும் தேவையில்லை. ஒரு குடும்பம் இருக்கிறது. குடும்பத்தைக் கவனிக்க வேண்டிய கடமை இருக்கிறது.

இப்படிப் பல்வேறு வழிகளில், பல்வேறு சூழ்நிலைகளிலிலிருந்து கிளாடிஸ் நிறையக் குழந்தைகளை மீட்டார். சிலர் குழந்தைகளை அவரைக் கேட்காமலே அவருடைய விடுதியில் விட்டுச் சென்றார்கள். "தேவனே, இப்போது நாங்கள் 40 பேர் இருக்கிறோம். என்னால் இதற்குமேல் சமாளிக்க முடியாது," என்று ஜெபித்தார். தேவன் எப்போதும் நாம் எதிர்பாப்பதுபோல் நம் ஜெபங்களுக்குப் பதில் அளிப்பதில்லை. அப்போது உலகப் போர் வருவதற்கான அறிகுறிகள் தெரிந்தன. அங்கும் இங்குமாகத் தாக்குதல்கள் நடந்துகொண்டிருந்தன. பாதிக்கப்பட்ட மக்கள் அகதிகளாக வேறு இடங்களுக்குக் குடிபெயர்ந்துகொண்டிருந்தார்கள். இந்த மலைக் கிராமத்தின் வழியாகப் போன அகதிகள் தங்கள் குழந்தைகளை விட்டுவிட்டுப் போய்விட்டார்கள். ஏனென்றால், அங்கு கிளாடிஸ் இருக்கிறாரே! இப்படி 80 குழந்தைகள் சேர்ந்துவிட்டார்கள். எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போயிற்று. அனால், தேவன் அவர்களுக்குத் தேவையான உணவு, உடை, உறைவிடம் எல்லாம் அளித்தார்.

ஒருநாள், "ஏதோ சரியாக இல்லாததுபோல் தோன்றுகிறதே! இந்தக் குழந்தைகளோடு, இங்கிருக்கும் மக்களோடு, உண்மையாகவே ஓர் உள்ளூர்வாசியைப்போல் என்னால் உறவுகொள்ளமுடியவில்லையே! இதற்கு என்ன காரணம்?" என்ற எண்ணம் அவருக்குள் எழுந்தது. தான் ஏதோவொரு காரியத்தோடு இடைப்பட வேண்டும் என்று தேவன் எதிர்பார்ப்பதாக அவர் உணர்ந்தார். தன் நாட்டுப் பெருமைதான் இந்த மக்களோடு மக்களாகப் பழகவோ, நெருங்கவோ முடியாமல் இருப்பதற்குக் காரணம் என்று அவர் உணர்ந்தார். தான் சீனாவில் ஊழியம் செய்தாலும், மனத்தளவில் தான் இன்னும் இங்கிலாந்துக்காரி என்ற எண்ணம் ஆழமாக இருப்பதை அவர் பார்த்தார். இதுதான் உள்ளூர்வாசியைப்போல் உறவுகொள்ளமுடியாமல் இருப்பதற்குக் காரணம் என்று அவர் புரிந்துகொண்டார். எனவே, அந்நாள்வரை வேறு எந்த மிஷனரியும் செய்யாத ஒரு செயலை அவர் செய்தார். அவர் தன் பிரிட்டிஷ் கடவுச்சீட்டை கிழித்தெறிந்தார். அவர் தன் பிரிட்டிஷ் குடியுரிமையைத் துறந்துவிட்டு, சீனக் குடிமகளாக மாறினார். இதன் விளைவுகளைப்பற்றி கிளாடிசுக்கு ஒன்றும் தெரியாது. ஏனென்றால், இரண்டாம் உலகப்போர் வெடிக்கும் ஆபத்து அருகில் வந்துகொண்டிருப்பது அவருக்குத் தெரியாது.

யாங்சாங் ஒரு மலைக்கிராமம். ஜப்பான் சீனாமீது ஏற்கெனவே தன் தாக்குதலைத் தொடங்கியிருந்தது. ஜப்பானின் படையெடுப்பைப்பற்றி அவர்கள் கேள்விப்பட்டிருந்தார்கள். ஆயினும், தங்களுக்கு எந்தப் பாதிப்பும் இருக்கப்போவதில்லை என்று அவர் மட்டும் இல்லை, அங்கிருந்த எல்லாரும் நினைத்தார்கள். "நாங்கள் வெகு தூரத்தில் இருக்கிறோம். இது சாதாரணமான ஒரு மலைக்கிராமம். இந்தக் கிராமத்தின்மீது யாராவது தாக்குதல் நடத்துவார்களா? பெரிய பெரிய நகரங்களுக்குத்தான் பாதிப்பு ஏற்படும். ஜப்பான்காரன் ஒருவேளை கடற்கரையில் இருக்கும் இடங்களை வேண்டுமானால் தாக்கக்கூடும். நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம். எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லவே இல்லை, பிரச்சினையும் வரவே வராது," என்றே எல்லோரும் நம்பினார்கள்.

அது வசந்த காலம். ஒருநாள், 1938இல், விமானங்களின் இரைச்சல் சத்தம் கேட்டது. அந்த இரைச்சலைக் கேட்டதும் அது என்னவென்பதைக் கிளாடிஸ் புரிந்துகொண்டார். முதல் உலகப்போரின்போது இலண்டன்மீது குண்டுகள் வீசப்பட்டதைப்பற்றி அவர் கேள்விப்பட்டிருந்தார். ஆனால், அந்தக் கிராமத்து மக்கள் இதுவரை விமானங்களைப் பார்த்ததேயில்லை. எனவே, எல்லாரும் வீடுகளைவிட்டு வெளியே ஓடினார்கள். விமானத்தைப் பார்க்க. கிராமத்தின் மையப்பகுதியில் நின்றார்கள். வெள்ளிநிறப் பறவைகளைப்போல் விமானங்கள் இரைச்சலோடு பறந்துவந்தன. விமானங்கள் தாழப்பறந்து, யாங்சாங்கின்மீது குண்டுமழைகள் பொழிந்துவிட்டுப் பறந்துபோயின. கிளாடிசின் சத்திரத்தின்முன் ஒரு குண்டு விழுந்தது. கிளாடிஸ் தூக்கிவீசியெறியப்பட்டார். அவர் இடிபாடுகளுக்கிடையே சிக்கிக்கொண்டார். இடிபாடுகளிலிருந்து வெளியேறி, தெருக்களுக்கு ஓடினார். அங்கு அவர் கண்ட கோரக் காட்சி பயங்கரமாக இருந்தது. விமானங்களை வேடிக்கைபார்க்க வீட்டைவிட்டு வெளியே வந்த மக்கள் தெருக்களில் இறந்துகிடந்தார்கள். வீடுகள் தரைமட்டமாகியிருந்தன.

அவர் உடனே நடவடிக்கையில் இறங்கினார். காயமடைந்தவர்களுக்கு உதவவும், இடிபாடுகளை அகற்றவும் செயலில் இறங்கினார். அங்கிருந்த மக்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை அறிய அவரை நோக்கிப் பார்த்தார்கள். அவருடைய தலைமையின்கீழ் மீட்புப்பணிகள் மிகத் துரிதமாக நடைபெற்றன. இந்தப் பேரழிவிலிருந்து அவர்கள் மீண்டார்கள். இதன் விளைவாக கிளாடிசின் புகழ் மேலும் பரவியது.

அவர் ஏற்கெனவே தத்தெடுத்த குழந்தைகளை வளர்த்துக்கொண்டிருந்தார். இப்போது யாங்செங்கில் குண்டுகள் வீசப்பட்டபிறகு, இன்னும் அதிகமான குழந்தைகள் அனாதைகளாகிவிட்டார்கள். கிளாடிஸ் அவர்களையும் எடுத்து வளர்க்க ஆரம்பித்தார். கிராமம் பாதிப்பைச் சமாளித்துக் கொஞ்சம்கொஞ்சமாக இயல்பு நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்தது.

கிளாடிஸ் வழக்கம்போல் அதிகாரப்பூர்வ கால் ஆய்வாளராக மீண்டும் மக்களைச் சந்திக்கச் சென்றார். அவர் கிராமங்களுக்குப் போய்வரும்போது எதிரிநாட்டுப் போர்வீரர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதைத் துல்லியமாகக் கவனித்தார். பின்னர் அந்தத் தகவல்களையெல்லாம் சீன இராணுவத்திற்குத் தெரிவித்தார். ஆம், அவர் சீன அரசாங்கத்தின் ஒரு உளவாளிபோலவும் செயல்பட்டார். இதை அறிந்த ஜப்பான் இராணுவம், "அவர் எங்கு இருக்கிறார் என்று உங்களுக்குத் தெரிந்தால், அந்தத் தகவலைத் தருபவர்களுக்கு வெகுமதி தருகிறோம்" என்று நகரத்தில் சுவரொட்டி ஒட்டினார்கள். ஜப்பான் போர்வீரர்கள் மிக அருகில் வந்துவிட்டதாகக் கிராமத்தார் கேள்விப்பட்டார்கள். எனவே, அவர்கள் வருவதற்குமுன் எல்லாரும் கிராமத்தைவிட்டு வெளியேற முடிவுசெய்தார்கள். உறவினர்கள் வீடு, நண்பர்கள் வீடு, பண்ணைகள் என்று எங்காவது போய்விடுமாறு மக்களுக்குச் சொன்னார்கள். எங்கும் போக வழியில்லாதவர்களும் இருந்தார்கள். போக வழியில்லாதவர்களையும், குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு தன் பாதுகாப்பிற்காகவும், தன் குழந்தைகளின் பாதுகாப்பிற்காகவும் ஊரைவிட்டு அருகிலுள்ள ஏதாவதொரு மலைக்கிராமத்தில் போய் தங்குவது என்று கிளாடிஸ் தீர்மானித்தார்.

அவர் கிராமத்தைவிட்டுப் போவதற்குமுன் ஆளுநர் அவரைச் சந்தித்து, அவரை வழியனுப்ப விரும்பினார். ஜப்பானியர்களால் தாக்கப்பட்ட முழு கிராமம் வெறிச்சோடிக் கிடந்தது. இனி என்ன செய்யலாம் என்பதைத் தீர்மானிக்க ஆளுநரும், அவருடைய ஆலோசகர்களும் கூடினார்கள். கிளாடிசையும் இந்தக் கூட்டத்துக்கு அழைத்திருந்தார்கள். இது யாருக்கும் தெரியாது. ஒரு ஐரோப்பியர் சீனர்களின் கூட்டத்திலா? ஒரு ஐரோப்பியர் சீனர்களுக்காக உயிரைக் கொடுப்பாரா? கிளாடிஸ் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டதால், அவருடைய மரியாதை இன்னும் அதிகமாயிற்று. கூட்டம் முடிந்தபோது, ஆளுநர் அவருக்கு மிகுந்த நன்றியைத் தெரிவித்தார். "நாம் இனிச் சந்திப்போமா என்று தெரியாது. உங்களுடைய எல்லா உதவிகளுக்கும் நன்றி. உங்களைப்போன்ற ஒருவரை நான் என் வாழ்வில் சந்தித்ததில்லை," என்றார். ஆரம்பத்தில் அந்தக் கிராமத்தார் அவரை ஏற்றுக்கொள்ளாதபோதும், அவர் அந்தக் கிராமத்தார்மேல் வைத்திருந்த அன்பும், அக்கறையும், கரிசனையும், அவர் செய்த தியாகங்களும் அவர்மேல் மதிப்பையும், மரியாதையும் ஏற்படுத்தின. பல வருடங்களாக அவருடைய தியாகங்களையும், அர்ப்பணிப்பையும் கவனித்த ஆளுநர் கிறிஸ்தவரானார். கிளாடிஸ் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். அதே நேரத்தில் தன் நண்பரிடமிருந்து விடைபெறுவது அவருக்கு மிகவும் வருத்தமாகவும் இருந்தது. கிளாடிஸ் எல்லாரிடமிருந்தும் விடைபெற்றுக்கொண்டு தன் குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு மலைக்கிராமத்திற்குப் புறப்பட்டார். அவர்கள் இருவரும் அதன்பின் மீண்டும் ஒருவரை ஒருவர் சந்திக்கவேயில்லை.

அவர் கால் ஆய்வாளர் பணிக்காகச் சென்றபோது ஓர் ஊரைப் பார்த்திருந்தார். அந்த ஊரில் மொத்தம் எட்டு வீடுகள் மட்டுமே இருந்தன. அந்த ஊர் நாட்டின் வரைபடத்தில்கூட இல்லை. அந்த ஊருக்கு அருகே நிறைய குகைகள் இருந்தன. அவர் திக்கற்றவர்களையும், குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு இந்த மலைக் கிராமத்துக்குப் போனார். அங்கிருந்த குகைகளில் தங்கினார்கள். அருகிலிருந்த ஊரார் அவர்களுக்கு உணவளித்தார்கள்.

நாட்கள் நகர்ந்தன. நிலைமை கொஞ்சம் சீரடைந்தது. ஆயினும், அவர் ஊருக்குத் திரும்பமுடியவில்லை. ஏனென்றால், ஒரு பக்கம் ஜப்பான் இராணுவம் அவரைத் தேடுகிறது. மறுபக்கம் சீனக் கம்யூனிஸ்ட்டுக்கள் ஜப்பானை எதிர்த்துப் போராட ஆட்களைக் கடத்திக்கொண்டிருந்தார்கள். குறிப்பாகக் குழந்தைகளையும், வாலிபர்களையும். எனவே, குழந்தைகளுடன் ஊருக்குத் திரும்பமுடியாது. எந்த ஊருக்குப் போனாலும் இந்த இரு சாராரையும் சமாளிக்க வேண்டும். எத்தனை நாட்களுக்கு ஊர் ஊராகக் குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு செல்ல முடியும். பாதுகாப்பான இடம் தேடினார்கள். கடினமான, ஆபத்தான நேரம். குழந்தைகளோடு அங்கு நிச்சயமாகத் தங்கமுடியாது.

கிளாடிஸின் பராமரிப்பில் இப்போது 100க்கும் அதிகமான குழந்தைகள் இருந்தார்கள். அவர்களைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்வதுதான் இப்போது அவருடைய தலையாய கடமை. கிளாடிசை ஊரைவிட்டு வெளியே அனுப்புவது என்று முடிவுசெய்தார்கள். ஏனென்றால், அவர் ஒரு மிஷனரி என்றும் எல்லாருக்கும் தெரிந்திருந்ததால் அவருடைய உயிருக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எப்படியாவது உடனடியாக அவர் வெளியேறியாக வேண்டும். குழந்தைகள் அனைவரையும் ஊரைவிட்டு வெளியே அழைத்துக்கொண்டுபோக வேண்டும். ஒரேவொரு பெரிய ஆள் கிளாடிஸ் மட்டுமே. பதின்ம வயதுடைய சிலர் இருந்தார்கள். ஆனால் இந்த நெடுந்தூர, ஆபத்தான பயணத்தில், படையெடுக்கும் படைகளிடமிருந்து அவர்களைக் காப்பாற்றி அழைத்துச்சென்ற ஒரே பெரிய ஆள் கிளாடிஸ் மட்டுமே.

எங்கு போவது? மஞ்சள் ஆற்றின் மறுகரை மட்டுமே பாதுகாப்பான இடம் என்று அவர் கேள்விப்பட்டார். இரயிலிலும், சரக்குவண்டிகளிலும் மக்கள் அங்கு போய்க்கொண்டிருந்தார்கள். எனவே, கிளாடிசும் குழந்தைகளை அங்கு கூட்டிக்கொண்டுபோக முடிவுசெய்தார். ஆனால், அவர்கள் புறப்பட்ட நேரத்தில் இரயில்கள் ஓடவில்லை; சரக்குவண்டிகள் இல்லை; அங்கு அப்போது எந்தவிதமான போக்குவரத்தும் இல்லை. ஒரு நிமிடம்கூட அங்கு தாமதிக்கவும்கூடாது. குழந்தைகளை நடத்திக்கொண்டுபோக முடிவுசெய்தார்கள். ஆம், நடக்க முடிவுசெய்தார்கள். நடப்பதைத்தவிர வேறு வழியில்லை. நடக்க வேண்டும், சமவெளியில் அல்ல, மலைகளின்வழியாக, சுதந்தரமாக அல்ல, ஒளிந்து மறைந்து நடக்க வேண்டும். முதலாவது கிலா நதிவரை நடக்க வேண்டும். அங்கு இருக்கும் சிறு படகுகளின்மூலம் ஆற்றைக் கடக்க வேண்டும். பின் அங்கிருந்து எப்படியாவது ஷென்சென் நகருக்குச் செல்ல வேண்டும். அவருடைய மிஷனரி நண்பர் டேவிட், "நான் உங்களோடு வருகிறேன்," என்கிறார். சற்று நேரம் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். கிளாடிஸ், " வர வேண்டாம்," என்கிறார். "இல்லை, நானும் வருவேன். ஜப்பான் இராணுவத்தின் கண்ணில் மண்ணைத்தூவி, ஆபத்தான மலைகளின்வழியாக, தன்னந்தனியாக நூறு குழந்தைகளை நீங்கள் அழைத்துச் செல்ல வேண்டும். ஐந்தோ, பத்தோ அல்ல, 200 கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டும். இது சாத்தியமா? நினைத்துப் பார்த்தீர்களா?" என்று கேட்டார். கிளாடிஸ் பதில் சொல்லவில்லை. "சாத்தியம்" என்று உறுதியாக நம்பினால்தானே பதில்சொல்ல முடியும்! ஆனால், தேவன் தன்னைச் சீனாவுக்கு அழைத்தார் என்றும், இங்கு செய்வதற்கு வேலை இருக்கிறது என்றும் அவருக்குத் தெரியும். ஆயினும், குழந்தைகளை அழைத்துக்கொண்டு இப்படித் தப்பியோடும் எண்ணம் அவருக்குப் பிடிக்கவில்லை. ஏனென்றால், உண்மையிலேயே தான் இப்படித் தப்பிப்போக வேண்டும் என்று தேவன் விரும்புகிறாரா இல்லையா என்று அவருக்குத் தெரியவில்லை. மேலும் இந்தச் சூழ்நிலையில் அந்தக் கிராமத்தில் தங்குவதைவிட, குழந்தைகளை அழைத்துக்கொண்டு மலைகளின்வழியாக நடந்துபோவது அதைவிட ஆபத்தானது. தன் பாதுகாப்பு ஒருபுறம் இருக்க, குழந்தைகளின் பாதுகாப்பு அதைவிட முக்கியம் என்று அவர் நினைத்தார்.

அன்று வேதாகமத்தில் அவர் வாசித்த, "காத்சோரின் குடிகளே, ஓடி, தூரத்தில் அலையுங்கள்; பள்ளத்தில் ஒதுங்கிப் பதுங்குங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் உங்களுக்கு விரோதமாக ஆலோசனைசெய்து, உங்களுக்கு விரோதமாக உபாயங்களைச் சிந்தித்திருக்கிறான்," என்ற வசனம் அவருக்குள் ஆழமாகப் பதிந்தது,தேவனே, அந்த வசனத்தின்மூலம், தன்னோடு பேசியதாக அவர் உறுதியாக நம்பினார். அதைத் தேவனுடைய பேசுதலாக மட்டும் இல்ல, தேவனுடைய கட்டளையாகவே அவர் எடுத்துக்கொண்டார்.

அடுத்த நாளே, அவர் தன் குழந்தைகளை ஆயத்தப்படுத்தினார். ஒவ்வொருவருக்கும் ஒரு போர்வை, ஒரு கோப்பை, சீனர்கள் சாப்பிடப் பயன்படுத்தும் குச்சிகள், முகம் துடைக்க ஒரு சிறு துண்டு, சில உணவுப்பொருட்கள். பதின்ம பையன்கள் கூடுதலான உணவுப்பொட்டலங்களைக் கம்பங்களில் கட்டிச் சுமந்தார்கள். அங்கிருந்த சின்னக் குழந்தைகளைவிடக் குள்ளமான கிளாடிஸ் இவர்களை மலைகளின்வழியாக நடத்த ஆரம்பித்தார்.

கிளாடிசும், குழந்தைகளும் உயர்ந்த மலைத்தொடர்களில் பல வாரங்கள் நடந்தார்கள். பயணம் தொடர்ந்தது. மஞ்சள் நதியைச் சென்றடைய 200 கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டும். நடக்க ஆரம்பித்தபோது இருந்த உற்சாகம் நாட்கள் செல்லச்செல்லக் கொஞ்சங்கொஞ்சமாகக் கரைந்துபோனது. உணவு குறைந்துபோனது; களைப்பால், கடுங்குளிரால், கொடும்பசியால் வாடினார்கள். தங்க இடமில்லாமல் தவித்தார்கள், பல நேரங்களில் ஒதுங்கக்கூட இடம் இல்லாமல் வாட்டும் குளிரில், இரவில், திறந்த வெளியில் உறங்கினார்கள். சில நேரங்களில் அங்கும் இங்குமாக இருந்த புத்தகோவில்களில் ஒதுங்கினார்கள். வேறு சில நேரங்களில் ஒருவிதமான பாறை இடுக்குகளின்கீழ் பதுங்கினார்கள். மூன்று வயது, நான்கு வயதுக் குழந்தைகள் இருந்தார்கள் என்பதை மறக்க வேண்டாம். சோர்வும், களைப்பும், பசியும் இருந்தாலும் பதின்ம வயதினர் சிறியவர்களை அக்கறையோடு பார்த்துக்கொண்டார்கள். கிளாடிசுக்கு இது மிகக் கடினமான நேரம். உடலிலும், உள்ளத்திலும் சோர்ந்தார். எதிரி இராணுவவீரர்கள் எப்போது, எங்கிருந்து வருவார்கள் என்று தெரியாது. சோர்வு, பசி. பலருடைய காலணிகள் தேய்ந்து கிழிந்தன. கால்களில் வீக்கம். விரல்கள் வெளியே நீட்டிக்கொண்டிருந்தன. சில நேரங்களில் செங்குத்தான மலைகளில் அவர்கள் எல்லாரும் தங்கள் கைகளைகோர்த்து மனிதச்சங்கிலி உருவாக்கி, சிறியவர்களை மேலே ஏற்றிவிட்டார்கள். பசி, பட்டினி, களைப்பு, சோர்வு, மஞ்சள் நதிக்கரையைப் பாதுகாப்பாக சென்றைடையமுடியுமா என்று ஒருவேளை அவர்கள் நினைத்திருப்பார்கள். இரண்டு வாரங்கள் தொடர்ந்து நடந்தார்கள். இரவு நேரத்தில் மட்டும் எங்காவது ஓய்வெடுத்தார்கள்.

கடைசியாக அவர்கள் மஞ்சள் நதியை வந்தடைந்தார்கள். கண்டதும் களைப்பை மறந்து கரையைநோக்கி ஓடினார்கள். அங்குதானே பாதுகாப்பு. இப்போது மஞ்சள்நதியைக் கடக்க வேண்டும். அது ஒரு பரந்துவிரிந்த நதி. இரு கரைகளுக்கும் இடையே நீண்ட தூரம். ஆற்றைக் கடக்கப் படகுகள் வேண்டும். ஆனால், அங்கு படகுகள் இல்லை. ஆற்றைக் கடக்க வழி இல்லை. ஆற்றங்கரைகளில் இருந்த கிராமங்களில் ஆட்கள் இல்லாமல் கிராமங்கள் வெறிச்சோடிக்கிடந்தன. கரையோரக் கிராமங்களிலிருந்து உதவி கிடைக்கும் என்று அவர்கள் நம்பினார்கள். ஆனால், இப்போது அங்கு யாரும் இல்லை. ஆற்றைக் கடப்பதற்குத் தேவையான படகுகள், துடுப்புகள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு மக்கள் கிராமங்களைக் காலிசெய்ய வேண்டும் என்று கட்டளை கொடுக்கப்பட்டிருந்தது. ஏனென்றால், ஒருவேளை எதிரிகள் இந்தப் பக்கம் வந்தால் அவர்கள் மறுகரைக்குச் செல்வதைத் தடுக்கத் திட்டமிட்டிருந்தார்கள்.

கிளாடிஸ் கீழே உட்கார்ந்து கண்ணீர்விட்டுக் கதறி அழுதார். எல்லாரும் செய்வதறியாது கரையில் திகைத்து நின்றார்கள். இளைய பிள்ளைகள் கவலை மறந்து கரையிலும், தண்ணீரிலும் விளையாடினார்கள். எதிரி இராணுவம் எங்கோ அருகில்தான் இருக்க வேண்டும். விளையாடவோ, வேடிக்கைபார்க்கவோ, விறைத்துநிற்கவோ நேரமில்லை. தொட்டுவிடும் தூரத்தில்தான் தொடுவானம் என்பதுபோல, கிட்ட வந்தும், எட்ட முடியவில்லை. வெறுத்து, விறைத்து நின்றார். இரண்டு நாட்கள் கரையோரம் கழித்தார்கள். கொஞ்சம் வளர்ந்த பெண்கள் சூழ்நிலையைப் புரிந்துகொண்டார்கள். அவர்களில் ஒருவர் கிளாடிசிடம் வந்து, "நீங்கள் மோசேயைக்குறித்து ஒரு கதை சொன்னீர்கள். இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து வெளியேறியபோது பின்னால் பார்வோன் அரசனும், அவனுடைய சேனையும் இருந்ததாகவும், அவர்களுக்குமுன்னால் செங்கடல் இருந்ததாகவும் சொன்னீர்கள். மோசே ஜெபித்தபோது தேவன் செங்கடலைப் பிரித்தார் என்றும், அவர்கள் வெட்டாந்தரையில் நடப்பதுபோல் நடந்தார்கள் என்றும் நீங்கள் சொன்னீர்கள். நீங்கள் இப்போது இங்கு மோசேயைப்போல் இருக்கிறீர்கள். இந்த மஞ்சள் நதியைப் பிரிக்குமாறு நீங்கள் ஏன் ஜெபிக்கக்கூடாது?" என்று கேட்டார். அதற்கு கிளாடிஸ் கொஞ்சம் எரிச்சலோடு, "நான் மோசேயும் இல்லை. இது செங்கடலும் இல்லை," என்றார். அந்தப் பெண் அவரைத் திரும்பிப் பார்த்து, "ஆம், நீங்கள் மோசேயும் இல்லை, இது செங்கடலும் இல்லைதான். ஆனால் தேவன் அதே தேவன்தானே!" என்று சொன்னாள். கிளாடிஸ் உடனே உணர்வடைந்தார். எழுந்து உட்கார்ந்தார். "ஆம், அதே தேவன்தான். இஸ்ரயேலர்களைக் காப்பாற்றிய தேவனால் எங்களைக் காப்பாற்ற முடியும். எங்களை இந்தப் பாதையில் நடத்திய தேவன் அவர். கூட்டிக்கொண்டு போகச் சொன்ன தேவன் அவர். மஞ்சள் ஆறுவரைக் கூட்டிக்கொண்டு வந்து, ஆற்றங்கரையில் என்னைக் கைவிடமாட்டார். சூழ்நிலைகளைப் பார்த்து நான் பயந்துவிட்டேன். சந்தேகப்பட்டேன். என் பலவீனத்தால் சந்தேகப்பட்டேன்," என்ற உணர்வடைந்தார். எல்லாரும் அப்படியே ஜெபித்தார்கள், சேர்ந்து பாடினார்கள்.

கொஞ்சத் தூரத்தில் இருந்த ஒரு சீனப்போர்வீரன் கரையோரம் வரும் சத்தத்தைக் கேட்டு, இன்னும் சில சீன வீரர்களைக் கூட்டிக்கொண்டு வந்தான். அவர்கள் இவர்கள் அருகே வந்து பார்த்தார்கள். ஒரு வெளிநாட்டுக்காரர் 100 குழந்தைகளோடு அங்கு நிற்கிறார். ஆச்சரியப்பட்டார்கள். "நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? இங்கு ஏன் நிற்கிறீர்கள்? இது எவ்வளவு ஆபத்தான இடம் தெரியுமா?" எனப் பல கேள்விகள் கேட்டார்கள். கிளாடிஸ் எல்லாவற்றையும் விவரமாக எடுத்துரைத்தார். இறுதியில், மிகவும் எச்சரிக்கையோடும், கவனமாகவும் சீன வீரர்கள் மறுகரையிலிருந்து படகுகளை ஏற்பாடுசெய்து வரவழைத்தார்கள். கொஞ்சம்கொஞ்சமாக எல்லாரும் மறுகரையை அடைந்தார்கள். மஞ்சள் ஆற்றின் சில இடங்களில் சுழல்களில் சிக்கினார்கள். மோசேக்கு உதவிய அதே தேவன் கிளாடிசுக்கும் உதவினார்.

ஆனால், இது முடிவல்ல. கவலைப்படவோ, கண்ணீர் சிந்தவோ, கால்கடுக்கிறதே என்று களைப்பாறவோ நேரமில்லை. நடந்தார்கள். ஒரு நகரத்தை அடைந்தார்கள். அந்தச் சந்திப்பில் ஏராளமான அகதிகள் கூடியிருந்தார்கள். மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டுசெல்வதற்காக இரயில்கள் இலவசமாக இயக்கப்பட்டன. நிலக்கரி ஏற்றிச்செல்லும் ஒரு சரக்கு இரயிலில் குழந்தைகளை ஏற்றினார். பயணம் தொடர்ந்தது. எல்லாரும் நிலக்கரிகளின்மேல் படுத்து இளைப்பாறினார்கள். தேவையான இளைப்பாறுதல். இரயிலில் மக்கள் கூட்டம் நிரம்பிவழிந்தது. திடீரென்று அந்த இரயிலும் பாதி வழியில் நின்றது. ஏனென்றால், இரயில் பாதையில் ஜப்பான் இராணுவம் இருப்பதாகக் கேள்விப்பட்டார்கள். தளரவில்லை, மனந்தளரவில்லை. இறங்கி மலையில் மீண்டும் நடக்க ஆரம்பித்தார்கள்.

சில நாட்களுக்குப்பின், எல்லாரும் நிலைகுலைந்து சுருண்டுவிழக்கூடிய நிலையில், சியான் என்ற இடத்தை அடைந்தார்கள். அந்த நகரத்தில் தங்களுக்கு வரவேற்பு கிடைக்கும் என்று இவர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், கிடைத்ததோ ஏமாற்றம். "இங்கு இதற்குமேல் மக்கள் தங்குவதற்கு இடம் இல்லை. எங்களால் இதற்குமேல் ஏற்றுக்கொள்ளமுடியாது. குறிப்பாக 100 குழந்தைகளை எங்களால் சமாளிக்கமுடியாது. நீங்கள் வேறு எங்காவது போங்கள்," என்று சொன்னார்கள். வலிமையிழந்த, வளமிழந்த குழந்தைகளும் கிளாடிசும் கையறுநிலையில் நின்றார்கள்.

கிளாடிசும், குழந்தைகளும் அருகிலிருந்த அடுத்த ஊருக்கு நடந்தார்கள். நிர்பந்தம்! நிர்ப்பந்தமான நிலைமை! பூபெங் என்ற ஊரை நெருங்குகையில் கிளாடிசும், குழந்தைகளும் மயங்கிவிழும் நிலையில் இருந்தார்கள். கிளாடிஸ் நோயுற்றார். கிறங்க ஆரம்பித்தார். உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு, அந்த ஊரார் தன் குழந்தைகளை ஏற்றுக்கொள்வார்களா என்பதை அறிய ஆவலாயிருந்தார். "பியூபெங் அன்புடன் வரவேற்கிறது" என்ற வார்த்தைகள் அவருடைய காதுகளில் தேன்போல் ஒலித்தன. குழந்தைகள் ஆரவாரித்தார்கள்.

ஒருபுறம் மகிழ்ச்சி. மறுபுறம் களைப்பு. மயங்கிவிழுந்தார். 27 நாட்கள் நடைபயணம் முடிவுக்கு வந்தது. கிளாடிஸ் தன் குழந்தைகளையெல்லாம் அங்கிருந்த ஓர் அனாதை இல்லத்தில் ஒப்படைத்தார். மருத்துவர்களை அழைத்தார்கள். மருத்துவர் வந்தார். அவரைப் பரிசோதித்தார். டைபாய்டு காய்ச்சல், நிமோனியா. அந்த மருத்துவருக்கு அமெரிக்காவிலிருந்த சிலர் சோதனைசெய்து பார்ப்பதற்காக சில மருந்துகளை அனுப்பியிருந்தார்கள். அந்த மாத்திரைகள் அப்போது அவரிடம் இருந்ததால் அவரைக் காப்பாற்ற முடிந்தது. உடல்நலமும், உள்ள நலமும் கொஞ்சம் தேற மூன்று மாதங்கள் ஆயின. சில மிஷனரிகள் அவரைக் கவனித்துக்கொண்டார்கள். எப்படியாவது அவரை அவருடைய பழைய நிலமைக்குக் கொண்டுவர அவர்கள் தங்களாலான எல்லாவற்றையும் செய்தார்கள். ஆனால், அவர் தன் பழைய நிலைமைக்குத் திரும்பவேயில்லை. சில நேரங்களில் திடீரென்று தன்னிலை இழந்தார், சூழல் உணர்விழந்தார், என்ன பேசுகிறோம் என்று அவருக்குத் தெரியவில்லை, குழம்பிப்போயிருந்தார். காய்ச்சல் அவருடைய மூளையையும் பாதித்திருந்தது. எனினும், இவைகளையும் தாண்டி அவர் சலிப்பின்றி தன் பணிவிடையைத் தொடர்ந்தார்.

ஏறக்குறைய ஒரு வருடம் கழித்து, ஒருநாள் ஆலன் பெர்கெஸ் என்ற ஒரு பத்திரிகையாளர் அந்த நகரத்திற்கு வந்து, கிளாடிசைச் சந்தித்து, "இங்கு அய்-வே-தே என்ற ஓர் ஆங்கிலேயப் பெண்மணி இருப்பதாகக் கேள்விப்பட்டேன். உங்களுக்கு அவரைத் தெரியுமா?" என்று விசாரித்தார். கிளாடிஸ், "நான்தான் அவள்," என்றார். "சீனாவில் உங்கள் வாழ்க்கையையும், நீங்கள் சாதித்தவைகளையும்பற்றிக் கேட்க வந்திருக்கிறேன்," என்றார். அதற்கு அவர், "நான் இங்கு எதையும் சாதிக்கவில்லை," என்றார். "ஒருவேளை நான் தவறான நபரிடம் பேசிக்கொண்டிருக்கிறேனோ! நீங்கள் ஒன்றும் சாதிக்கவில்லையா? நீங்கள்தானே 100 குழந்தைகளை மலைகளின்வழியாக நடத்திவந்தீர்கள்? அதைக்குறித்து கொஞ்சம் சொல்லுங்களேன்," என்றார். "ஆம், ஜப்பான் இராணுவத்திடம் தப்பிக்க நான் சில குழந்தைகளை நடத்திக்கொண்டுவந்தேன்," "எத்தனை குழந்தைகள்?" "100பேர்" "எத்தனை பெரியவர்கள்?" "நான் மட்டும்தான் பெரிய ஆள்." இது அவருக்கு மிகவும் கவர்ச்சியாக இருந்தது. ஆனால், கிளாடிஸ் இதை ஒரு சர்வசாதாரணமாக காரியம்போல் பேசினார். அவர் ஏறக்குறைய 20 ஆண்டுகளாக சீனாவில் ஊழியம் செய்வதையும், ஒருமுறைகூட அவர் இங்கிலாந்துக்குத் திரும்பவில்லை என்பதையும் அறிந்த அவர் அவரை இங்கிலாந்துக்குச் சென்றுவர ஏற்பாடு செய்தார்.

இங்கிலாந்துக்குப் புறப்பட்டார். இங்கிலாந்துக்கு வந்து இரயில் நிலையத்தின் நடைமேடையில் நின்றபோது அவரை யாரும் அடையாளம் காணவில்லை. இலண்டன்வாசிகளும், இலண்டன் நகரமும் அவருக்கு அந்நியமாகவே இருந்தன. அவருடைய பெற்றோர் அவரை இரயில் நிலையத்திற்கு வந்து வரவேற்பதாகச் சொல்லியிருந்தார்கள். ஆனால், அவர்கள் வந்ததுபோல் தெரியவில்லை. இரயிலில் வந்த எல்லாப் பயணிகளும் போய்விட்டார்கள். வயதான ஒரு தம்பதியும், ஒரு சீனப் பெண்ணும் மட்டுமே நடைமேடையில் நின்றார்கள். அந்த தம்பதிக்கு இந்தச் சீனப் பெண்ணை அடையாளம் தெரியவில்லை. இந்தச் சீனப் பெண்ணுக்கு அந்த வயதான தம்பதியைத் தெரியவில்லை. அந்த வயதான தம்பதி அவருடைய பெற்றோர். இந்த சீனப் பெண் கிளாடிஸ். ஒலிபெருக்கியில் கிளாடிஸ் பெயரைச் சொல்லிக் கூபிட்டுகொண்டியிருந்தார்கள். கடைசியில் ஒருவரையொருவர் அடையாளம் கண்டார்கள். இருவருடைய ஆச்சரியத்திற்கும், மகிழ்ச்சிக்கும் அளவேயில்லை.

கிளாடிஸ் இங்கிலாந்துக்கு வருவதற்குமுன்பே, அவருடைய பேரும்புகழும் இங்கிலாந்துக்கு வந்துவிட்டது. அவர் இங்கிலாந்துக்கு வந்து சேர்ந்த நாளில் "கிளாடிஸ்அயில்வார்ட் சீனாவிலிருந்து இங்கிலாந்துக்கு வந்துள்ளாளார்," என்று செய்தித்தாளில் அவரைப்பற்றிய ஒரு செய்தி வெளியாகியிருந்தது. இது அவருக்குத் தெரியாது. சீனாவில் அவரைச் சந்தித்த ஆலன் பெர்கெஸ் கிளாடிசையும், சீனாவில் அவருடைய ஊழியத்தையும், அவர் 100 குழந்தைகளை மலைகளின்வழியாக நடத்திக்கொண்டு சென்றதையும்பற்றி Time இதழில் ஆலென் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அது மட்டுமல்லாமல், கிளாடிஸ் சீனாவிலிருந்து தன் அம்மாவுக்கு எழுதிய கடிதங்களையெல்லாம் அவருடைய அம்மா இங்கிலாந்தில் பெண்கள் கூடும் கூட்டங்களில் காட்டினார், பகிர்ந்துகொண்டார். எனவே, அங்கிருந்த பெண்மணிகள் அவரைபற்றிக் கேள்விப்பட்டிருந்தார்கள். தங்கள் கூட்டங்களில் வந்து பேசுமாறு அவர்கள் விரும்பி, வருந்தி அழைத்தார்கள். ஆனால், கிளாடிஸ் தன் இருதயத்தில் தன்னை இன்னும் ஒரு பார்லர் பணிப்பெண்ணாகவே பார்த்தார்.

இலண்டன் மேயர் அவரை விருந்துக்கு அழைத்தார். அவரோடு அமர்ந்து தேநீர் அருந்தும் எண்ணம் கிளாடிசுக்குச் சங்கடமாக இருந்தது. எனவே, "மன்னிக்கவும், என்னால் வர இயலாது, உங்கள் அழைப்பை ஏற்க இயலாததால் வருந்துகிறேன்," என்று சொன்னார். அவருடைய ஒரு தோழி கிளாடிசிடம், "மேயருக்கும் ஆத்துமா உண்டு என்றும், அவருக்கும் இரட்சிப்பு அவசியம் என்றும் நீ நினைக்கவில்லையா?" என்று கேட்டார். கிளாடிஸ் அதை ஏற்றுக்கொண்டார். இது மிகவும் புதிய சூழ்நிலை என்பதை அவர் உணர்ந்தார். தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள முடிவுசெய்தார். அவர் மேயரைச் சந்தித்தார். அதன்பின் ஆயர்களையும், பேராயர்களையும், இங்கிலாந்து மகாராணியையும் சந்தித்தார். பேச வருமாறு நாடெங்கிலுமிருந்து கிளாடிசை அழைத்தார்கள்.

சபைகளிலும், கூட்டங்களிலும் பேச வருமாறு அவரை அன்புடன் அழைத்தார்கள். தேவனுடைய உத்தமத்தைக்குறித்தும், யாங்சாங்கைக்குறித்தும், தன் குழந்தைகளைக்குறித்தும் பகிர்ந்துகொள்வது அவருக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆயினும், தன் குழந்தைகளைப்பற்றிப் பேசியபோது, அவருடைய இருதயம் விம்மியது, வலித்தது. குழந்தைகளைப்பற்றிய நினைவுகள் அவருடைய இருதயத்தை உடைத்தன. அவர் தன் குழந்தைகளைக்குறித்து, "அவர்களை நேசிக்கவும், வளர்க்கவும் தேவன் அவர்களை என்னிடம் கொடுத்தார். அவர்கள்தான் என் குடும்பம். அவர்கள் எங்கு போனாலும் சரி, எங்கு இருந்தாலும் சரி. அங்கு அவர்கள் தேவனுடைய சாட்சியாக இருக்க வேண்டும் என்று நான் ஏங்குகிறேன், இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன். அவர்களில் பலர் என்ன ஆனார்கள் என்று எனக்குத் தெரியாது. போர் பிரிக்கிறது, போர் கொல்லுகிறது, போர் காயப்படுத்துகிறது, போர் இதயத்தை உடைக்கிறது," என்றார்.

ஒருநாள் ஒரு சபையில் பேசுமாறு அவர் அழைக்கப்பட்டார். அது சபைக் கூட்டம் என்பதைவிட சமுதாயக் கூட்டம் என்று சொல்லலாம். அங்கு வயதான பெண்கள் அதிகம். சாயங்காலத்தில் தேநீர் அருந்திக்கொண்டு, உரையாடிக்கொள்வார்கள். அப்போது போதகர் ஒன்றிரண்டு வசனங்களை வாசிப்பார். அவ்வளவுதான் கூட்டம்.

கிளாடிஸ் அமைதியாக வந்தார். அவரையும், அவருடைய நூதனமான உடையையும் பார்த்து அவர்கள் நகைத்தார்கள். அவர்கள் தேவனுடைய வார்தையைக் கேட்பதைவிட அன்றாட நடவடிக்கைகளைப் பேசுவதிலும், அதற்குப்பின் தேநீர் அருந்துவதிலும் குறியாக இருந்தார்கள். அவர்கள் எல்லாரும் தங்கள் தங்கள் இருக்கைகளில் அமர்ந்தார்கள். பேச வந்திருப்பவர் நீண்ட நேரம் பேச மாட்டார் என்று நினைத்தார்கள். கிளாடிஸ் எழுந்து நின்றார். பத்து நிமிடங்கள் ஒரு முன்னுரை வழங்கினார். பத்து நிமிடங்களுக்குப்பின் அவர் தன் பேச்சை ஆரம்பித்தார். இருக்கைகளில் சாகவாசமாக அமர்ந்திருந்தவர்கள் தங்கள் புருவங்களை உயர்த்திப் பார்த்தார்கள். "தேவன் ஆபிராமை நோக்கி, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ," என்று சொன்னார் என்று ஆரம்பித்து தேவன் சீனாவில் செய்துகொண்டிருக்கும் வேலையைப்பற்றி விவரமாகப் பேசினார். அங்கிருந்த அனைவரும் வைத்த கண் வாங்காமல் அவரைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். இருக்கையின் விளிம்புக்கு வந்துவிட்டார்கள். "சர்வ வல்லமையுள்ள தேவன் ஒருவனை அழைக்கும்போது, அவர் சொல்லும் வேலையைச் செய்வதற்குத் தேவையான வளங்களையும் கொடுக்கிறார். தேவன் இப்போது உங்களை அழைத்தால், நீங்கள் செல்வதற்குத் தயாரா?" என்று கிளாடிஸ் சவாலாகக் கேட்டார்.கிளாடிஸ் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாகப் பேசினார். ஒருவரும் ஒரு வார்த்தை பேசவில்லை. போதகர் வியப்பில் ஆழ்ந்தார்.

ஒருமுறை அவர் ஒரு பெண்மணியைப் பார்க்கச் சென்றிருந்தார். அவருடன் பேசிக்கொண்டிருக்கையில் அவர் உடல்நலம் சரியில்லாமல் இருப்பதும், ஏதோ அவரைத் தொந்தரவுசெய்வதும் தெரிந்தது. கிளாடிஸ் "என்ன ஒருமாதிரி இருக்கிறீர்கள்?" என்று கேட்டார். அந்தப் பெண்மணி, "உங்களுக்குத் தெரியும், என் கணவர் தன் முழு நேரத்தையும் குடிமனையில்தான் செலவிடுகிறார். அவர் குடிக்கிறார், போதையில் வீட்டிற்கு வருகிறார், வீட்டுக்கு வந்தபின்னும் குடிக்கிறார், குடிபோதையில் மிதக்கிறார், வெறிக்கிறார், என்ன செய்வது என்று தெரியவில்லை," என்று தன் ஆதங்கத்தைத் தெரிவித்தார். கிளாடிஸ் அவருடைய கையைப் பிடித்துக்கொண்டு, “சரி, அவரை நாம் இப்போது குடிமனையிலிருந்து வெளியே கொண்டுவருவோம். நாம் ஜெபித்து அவரை வெளியே கொண்டுவரப்போகிறோம்," என்றார். அவர் கூப்பிய கரங்களோடு ஜெபிக்க ஆரம்பித்தார், "ஆண்டவரே, இவருடைய கணவரை அந்தக் குடிமனையிலிருந்து இப்போதே வெளியேற்றும். இந்தக் கணத்தில், அவர் குடிக்கும் மது அவருக்குக் கசப்பாகட்டும். அதன் சுவையைப் பயங்கரமாக்கும். அதைக் கண்டாலே அவர் அதை வெறுக்கச்செய்யும். இந்தக் கணத்தில் அவர் அதை ஒதுக்கித் தள்ளிவிட்டு, அவருடைய இருக்கையிலிருந்து அவரை எழச்செய்யும். அவரைக் கதவுக்கு நேராக நடத்தும், கதவைத் திறந்து தெரு முனையில் நிற்கவைத்து, தெருவைக் கடந்து, வீட்டிற்குத் திரும்பிவரச் செய்யும், இப்போது அவரை இந்தக் கதவின்வழியாக வீட்டுக்குள் கொண்டுவாரும்," என்று ஜெபித்தார். அந்தப் பெண் பிரமித்துப்போனாள். ஆமென் என்று சொன்னாள். அவருடைய கணவன் கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்தார். இதுபோன்ற பல சம்பவங்கள் உண்டு.

இங்கிலாந்தில் அவர் மிகவும் பிரபலமானார். அவரைப்பற்றி சிலர் புத்தகம் எழுதினார்கள். ஒரு ஹாலிவுட் திரைப்படமும் எடுத்தார்கள். அந்தத் திரைப்படத்தில் பல மசாலாக்கள் சேர்த்திருந்தார்கள். அந்தப் படத்தில் பல தவறான தகவல்கள் இருந்ததால், அவர் மிகவும் வருத்தப்பட்டார். பிபிசி தொலைக்காட்சியில் பேட்டி அளித்தார். இவ்வளவு பேரும் புகழும் கிடைத்தபின்னும், அவர் சாதாரண கிளாடிஸ் அயில்வார்ட்தான். அவர் மாறவில்லை. பெருமையில் மிதக்கவில்லை. தலைக்கனம் துளியும் இல்லாமல் தரையில் வாழ்ந்தார். கிடைத்த எல்லாப் பணத்தையும் சீனாவில் தனக்குத் தெரிந்த பல்வேறு மிஷனரிகளுக்குக் கொடுத்தார். அநேக அனாதை இல்லங்களையும் ஏற்படுத்தினார்.

அவர் இங்கிலாந்தில் இருந்தபோதும் அவருடைய இருதயமோ இன்னும் சீனாவில்தான் இருந்தது. அப்போது சீனாவில் அரசியல் சூழ்நிலை அடியோடு மாறிவிட்டது. சீனாவை இப்போது கம்யூனிஸ்டுகள் கைப்பற்றியிருந்தார்கள். கம்யூனிஸ்ட்டுகள் கிறிஸ்தவர்களை, குறிப்பாக மிஷனரிகளை நாட்டுக்குள் அனுமதிக்கவில்லை. சீனாவில் இருந்த மிஷனரிகளைக் கொன்றார்கள். எனவே, அவர் ஹாங்காங்குக்குப் போனார். அங்கு சில ஆண்டுகள் ஊழியம்செய்தார். ஒரு சிறிய அறையை வாடகைக்கு எடுத்து அதில் தங்கினார். அடுத்து என்ன செய்யவேண்டும் என்று ஜெபித்தார். ஓர் அற்புதம் நடந்தது. ஒருநாள் ஒரு தெருவில் நடந்துபோய்க்கொண்டிருந்தபோது அவர் ஒரு பையனைப் பார்த்தார். அவன் அவர் வளர்த்த பையன். அவன் இறந்துவிட்டான் என்று கிளாடிஸ் நினைத்திருந்தார்.கிளாடிஸ் இறந்துவிட்டார் என்று அந்தப் பையன் நினைத்திருந்தான். என்ன ஆச்சரியம். ஹாங்காங்கின் கூட்ட நெரிசலில் ஒருவரையொருவர் சந்தித்தார்கள்.

ஒருநாள் இரவு அவர் தன் அறைக்குத் திரும்பியபோது, அறையில் யாரோ இருப்பதுபோல் உணர்ந்தார். அப்போதுதான் பிறந்த ஒரு குழந்தை முகம் கழுவும் தொட்டியில் இருந்தது. கிளாடிஸ் அந்தக் குழந்தையைக் கையில் எடுத்து வைத்துக்கொண்டு, "ஆண்டவரே, ஏதோ தவறு நடந்திருக்கிறது. எனக்கு இந்தக் குழந்தை வேண்டாம். இந்தக் குழந்தைக்குக் கொடுப்பதற்கு என்னிடம் உணவு இல்லை, உடை இல்லை, கவனிக்கப் போதுமான நேரம் இல்லை. மேலும், தாய்மார்கள் இளையவர்களாக இருப்பார்கள். எனக்கு இப்போது வயது 50கும் அதிமாகிவிட்டது. என்ன செய்வேன்? என் அன்பான ஆண்டவரே, கிளாடிஸ் அயில்வார்டாகிய நான் என்ன செய்ய வேண்டும் என்று நீர் என்னிடம் சொல்லுகிறீரே அதை இன்னொருவர் செய்யவேண்டும் என்று நான் ஒருபோதும் வற்புறுத்தமாட்டேன்," என்று சொன்னார். கௌலூன் என்ற இடத்தில் Hope Missionனை ஆரம்பித்தார்கள்.

அவர் அந்தக் குழந்தையை வளர்க்க ஆரம்பித்தார். கிளாடிஸ் தாயில்லாக் குழந்தைகளை மிகவும் நேசிக்கிறார் என்ற செய்தி நகரில் பரவியதால் கொஞ்ச நாட்களில் இன்னும் நிறையக் குழந்தைகள் சேர்ந்தார்கள். குழந்தைகளைத் தன் வீட்டில் வைத்துக்கொள்ளப் போதுமான இடம் இல்லாததால், ஒரு பழைய உணவுவிடுதியைக் கண்டுபிடித்து, அதை "கிளாடிஸ் அயில்வார்ட் குழந்தைகள் காப்பகமாக" மாற்றினார்கள்.

அங்கு காப்பகம் நிறுவப்பட்டு, ஸ்திரப்பட்டதும், அவர் தைவானுக்குச் சென்றார். அங்கும் குழந்தைகளுக்காகவே உழைத்தார். அவர் தைவானில் இருந்தபோதுதான் அவரைப்பற்றிய ஹாலிவுட் திரைப்படம் வெளியானது. திரைப்படம் வெற்றியடைந்தது. பாராட்டுக்களையும், விருதுகளையும் பெற்றது. அந்தப் படத்தைப் பார்த்தவர்கள் பரவசமடைந்தார்கள். தேவனுக்கு மகிமை உண்டாயிற்று. ஆயினும், படத்தில் சில காதல் காட்சிகள் சேர்க்கப்பட்டிருந்ததால் அவர் மனமுடைந்தார், சங்கடப்பட்டார். அதை நிவிர்த்திசெய்யும் வகையில் அவர் "The small woman" என்ற ஒரு புத்தகம் எழுதினார். பேர் புகழ் எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு, தைவானிலுள்ள அனாதைக் குழந்தைகளுடன் அவர் தன் பணியைத் தொடர்ந்தார்.

1957இல் அவர் தைவானுக்குச் சென்றார். தைவானில், சீனாவிலிருந்து தப்பித்துவந்த அகதிகள் ஏராளமானவர்கள் இருந்தார்கள். அந்த மக்களிடையே அவர் ஊழியம் செய்தார். அவர் முன்பு எப்படி ஒரு சிறிய அறையை வாடகைக்கு எடுத்து, ஒவ்வொரு நாளும் பயணித்து, பெண்களைச் சந்தித்து, கிறிஸ்துவை வழங்கினாரோ, அதுபோலவே இங்கும் வாழ்ந்தார். முன்பு எப்படி அனாதைக் குழந்தைகளை வளர்த்தாரோ அதுபோலவே இப்போதும் ஆதரவற்ற குழந்தைகளை வளர்க்க ஆரம்பித்தார். இப்படி அவர் பலருக்கு அம்மாவானார். அந்தக் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களானபிறகும் அவரை அம்மா என்றே அழைத்தார்கள்.

அவர் தன் பின்னாட்களில் சில காரியங்களுக்காக வருந்தினார். குறிப்பாக உலகம் முழுவதும் பயணம் செய்ததற்காக வருந்தினார். ஆம், அவர் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா, அமெரிக்கா, ஹாங்காங் எனப் பல நாடுகளுக்குப் பயணித்தார். ஹாங்காங்கில் அநாதை இல்லங்கள் நிறுவினார்.

இங்கிலாந்திலிருந்த தன் குடும்பத்தாருக்கு எழுதிய ஒரு கடிதத்தில், "என் இரத்தத்தில் அணுக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதாகவும், என் இரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். எனக்கு நரம்புத் தளர்ச்சி இருக்கிறது. பயங்கரமான கனவுகள் வருகின்றன. எது கனவு, எது நனவு என்று தெரியவில்லை. ஆனால், தேவன் என்னை வெற்றியாய்க் கடக்கச் செய்வார் என்று நான் நம்புகிறேன்," என்று எழுதினார்.

அவர் மிகவும் எளிமையான வீட்டில் வாழ்ந்தார். அவரிடம் கார் கிடையாது. அவர் தன் போக்குவரத்துக்கு நம் ஊரில் முன்பு இருந்த சைக்கிள் ரிக் ஷாவைப் பயன்படுத்தினார். பச்சரிசி கஞ்சியும், வேகவைத்த முட்டையும்தான் அவருடைய அன்றாட உணவு. சிலர் அவரிடம், “உங்களுக்கு நல்ல வருமானம் வருகிறதே! அப்படியிருக்க நீங்கள் ஏன் இப்படிப் பஞ்சப்பரதேசிபோல் வாழ்கிறீர்கள்?” என்று சில சமயங்களில் கேட்டார்களாம். அதற்கு அவர், "நான் சேமிக்கும் ஒவ்வொரு பென்னியும் என் குழந்தைகளுக்காக, அனாதை இல்லங்களில் இருக்கும் அத்தனை குழந்தைகளுக்காக, அவர்களுடைய படிப்புக்காக, அவர்களுடைய எதிர்காலத்துக்காக," என்று கூறினார். அவர் தன்னையும், தன்னிடமிருந்த அனைத்தையும் தேவனுக்கு அர்ப்பணித்தார். அவர் இறுதிவரை இப்படியே வாழ்ந்தார். எந்த நிலைமையிலும் அவர் ஒரே திசையில்தான் பயணித்தார்- ஆம், அது தேவனைப் பிரியப்படுத்தும் திசை. அவர் இப்படி முடிவுபரியந்தம் வாழ்ந்தார். தன் வாழ்வின் கடைசி நாள்வரை அவர் அப்படியே வாழ்ந்தார்.

1969இல், கிறிஸ்துமஸில், கிளாடிஸ் தைவானுக்குத் திரும்பினார். அவருக்கு அப்போது உடல்நிலை சரியில்லை. கொஞ்சம் சளி பிடித்திருந்தது. ஆனாலும், அவர் தன் வேலைகளை வழக்கம்போல் செய்துகொண்டிருந்தார். செவ்வாய்க்கிழமை, புதிய வருடப்பிறப்பு. ஒரு சபையில் பேசுமாறு அழைத்திருந்தார்கள். அவர் போகத் தீர்மானித்தார். ஆனால், அந்த நேரத்தில் அவரோடு வாழ்ந்துகொண்டிருந்த கேத்லீன் என்ற ஓர் இளம் மிஷனரி, "உங்களுக்கு உடம்பு சரியில்லை, போக வேண்டாம்," என்று சொன்னார். கிளாடிஸ், "ஓ, பரவாயில்லை," என்று சொல்லிவிட்டு அன்று இரவு போய் வந்தார். நல்ல குளிர், பனி. திரும்பி வந்த கிளாடிஸ் ஒன்றும் பேசாமல், நேரே படுக்கைக்குச் சென்றுவிட்டார். கேத்லீன் உடனடியாக மருத்துவரை அழைத்தார். மருத்துவர் வந்து கிளாடிசுக்கு நுரையீரல் பிரச்சினை இருப்பதைக் கண்டுபிடித்தார். ஊசி போட்டு, மருந்துமாத்திரைகள் கொடுத்துவிட்டு மருத்துவர் போய்விட்டார். அன்று இரவு, கேத்லீன் அவரைப் பார்க்க அவருடைய படுக்கைக்குச் சென்றார். கிளாடிஸ் நித்தியதுக்குள் நுழைந்துவிட்டார். அப்போது அவருக்கு வயது 67. அவருடைய சில நண்பர்கள் அவருடைய சீன வேதாகமத்தைத் திறந்து பார்த்தார்கள். அங்கு ஒரு மூலையில் "தேவனே, நீர் என்னை அழைக்கும் இந்த நேரத்தில் என்னைப் பலப்படுத்தும். ஆம் நீர் பலப்படுத்துகிறீர். தேவன் உண்மையுள்ளவர்," என்று எழுதப்பட்டிருந்தது. அவர் நித்தியத்துக்குள் நுழைவதற்கு சற்று முன்தான் அவர் அதை எழுதியிருக்க முடியும்.

கிளாடிஸ் சொன்ன சில வார்த்தைகளோடு முடிக்கப்போகிறேன்.

"தேவன் என்னை ஆப்பிரிக்காவுக்கு அனுப்பவில்லை. ஏனென்றால், நான் ஆப்பிரிக்காவுக்கு ஏற்றவள் இல்லை என்று அவருக்குத் தெரியும். அவர் என்னை இலண்டனில் இருக்கும் குடிசைவாசிகளிடம் அனுப்பவில்லை. ஏனென்றால், அங்கும் நான் பயன்படமாட்டேன் என்று அவருக்குத் தெரியும். அவர் என்னை சீனாவின் நடுப்பகுதிக்கு அனுப்பினார். ஏனென்றால் நான் அங்கு ஊழியம்செய்யத்தான் பொருத்தமானவள் என்று அவருக்குத் தெரியும். இப்படித்தான் நம் ஒவ்வொருவரையும் தேவன் நடத்துகிறார் என்று நான் நம்புகிறேன். நான் விரும்பியதைச் செய்யவில்லை, நான் விரும்பியதைச் சாப்பிடவில்லை, அல்லது நான் விரும்பியதை உடுத்தவில்லை, நான் விரும்பிய வீட்டில் வாழவில்லை. நான் திருமணம்செய்ய வேண்டும், குழந்தைகளைப் பெற வேண்டும், பாதுகாப்பாக வாழ வேண்டும், என்னில் அன்புகூர ஆள் வேண்டும் என்று ஏங்கினேன். ஆனால், தேவன் அவைகளை எனக்குத் தரவில்லை. தேவன் ஒரு சீன வேதாகமத்தை எனக்குத் தந்து என்னைப் 17 வருடங்கள் தனியாக விட்டுவிட்டார். உங்களுடைய சமீபத்திய நவீனங்கள், புதினங்கள், திரைப்படங்கள், திரையரங்குகள், கேளிக்கைகள் ஆகியவைகளைப்பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் மிகவும் காலாவதியான உலகில், காலம்கடந்த உலகில், வாழ்கிறேன். இது மிகவும் மோசம் இல்லையா? என்று நீங்கள் கூறுவீர்கள். இந்தப் பூமியில் காலடி எடுத்து வைத்த மகிழ்ச்சியான பெண்களில் நானும் ஒருத்தி. பிறர் பெற்ற பிள்ளைகள் என் சொந்தப் பிள்ளைகளானார்கள். இயேசு கிறிஸ்து என்னை நேசித்ததால் நானும் அவர்களை மிகவும் அதிகமாக நேசிக்கிறேன். என் குடும்பத்தில் இப்போது ஏராளமான குழந்தைகள். அவர்களுடைய அன்பு மழையில் நான் நனைகிறேன்," என்று சொன்னார்.