வேத வாசிப்பு
மத். 13:54-57; 17:2; 25:34; லூக். 1:35; 2:41-52; 7:32; யோவான் 1:18; 2:1-12; 5:19; 6:15; 7:2-10; 10:25; 11:25; 14:11-12; 17:14- 16; 18:36; அப். 10:36; ரோமர் 1:16; 8:29; 2 கொரி. 4:6; எபே. 2:10; பிலி. 2:9-11; கொலோ. 1:15; 2:9; 1 தீமோ. 2:5-6; 3:16; எபி. 4:15; 1 யோவான் 4:17; வெளி. 1:17-18; 13:8; ஏசாயா 44:6
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்துக்கு வந்தபோது, தேவன் தம் மீட்பின் வேலையை எப்படிச் செயல்படுத்தத் தொடங்கினார் என்று நாம் இப்போது பார்ப்போம். “உலகத் தோற்றத்திற்குமுன்” அவர் ஏற்கெனவே தம் திட்டங்களைத் தீட்டிவிட்டார். ஆயினும், நாம் வரலாற்றிலும், நேரத்திலும், இடத்திலும் வாழ்வதால், தேவன் இவைகளில் எப்படித் தலையிட்டார் அல்லது குறுக்கிட்டார் என்பதைப் பார்க்கிறோம்.
முதலாவது, ஆண்டவராகிய இயேசு என்ற நபரைப்பற்றிய பரமஇரகசியத்தை நாம் தெளிவாகப் பார்க்க வேண்டும். அவர் குமாரனாகிய தேவன், திரியேகத்துவத்தின் இரண்டாவது நபர், எல்லா விதத்திலும் பிதாவுக்கும், பரிசுத்த ஆவியானவருக்கும் சமமானவர். யோவான் நற்செய்தியின் முதல் அதிகாரத்தில் அவர் “தேவனுடைய வார்த்தை” என்று அழைக்கப்படுகிறார். ஏனென்றால், அவர் மூலமாகத்தான் திரியேக தேவன் பேசுகிறார், செயல்படுகிறார், தம்மை வெளியாக்குகிறார், வெளியரங்கமாக்குகிறார், வெளிப்படுத்துகிறார். அவரே “கட்புலனாகாத (காணமுடியாத) தேவனின் தற்சுரூபம்”. “தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை…ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்”. ஆண்டவராகிய இயேசுவின்மூலம் தேவன் தம்மை வெளியாக்குகிறார், வெளிப்படுத்துகிறார், நம்மோடு தொடர்புகொள்கிறார், செயல்படுகிறார். “அந்த வார்த்தை தேவனாயிருந்தது”. பெத்லகேமில் “அந்த வார்த்தை மாம்சமானது”. நித்திய குமாரன் மனுவுருவான குமாரனும்கூட. அவர் தேவன்-மனிதர். “தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாகக் கிறிஸ்துவுக்குள் வாசமாயிருக்கிறது”. இது ஒரு பெரிய பரமஇரகசியம்; மட்டுப்பட்ட நம் மனதால் இதைப் புரிந்துகொள்ளவோ, விளக்கவோ முடியாது; இதைப் புரிந்துகொள்ளவோ, விளக்கவோ நாம் முயலவேண்டிய அவசியமும் இல்லை. ஆண்டவராகிய இயேசு மெய்யான தேவன், மெய்யான மனிதன். நாம் இவ்வளவு தெரிந்துகொண்டால் போதும். இதில் நாம் உறுதியாக இருப்போமாக. அவர் முழுமையான தேவனாக இல்லாமல் அதற்குக் குறைவாக இருந்திருந்தால் அல்லது மெய்யான மனிதனாக இல்லாமல் இருந்திருந்தால் அவர் நம்மை மீட்டிருக்க முடியாது
நாம் இதை வலியுறுத்த வேண்டும். ஏனென்றால், வரலாறு முழுவதும் கிறிஸ்துவாகிய நபரைப்பற்றிய தவறான கருத்துக்களும், அபிப்பிராயங்களும், வேதப்புரட்டுகளும் மலிந்துகிடக்கின்றன. இன்றைக்கும் அவைகள் நம்மிடையே காணப்படுகின்றன. தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்கிற பொய்க் கிறிஸ்தவர்களும், தங்களைச் சபை என்று சொல்லிக்கொள்கிற சபைகளின் தலைவர்களும் கிறிஸ்துவைப்பற்றிய பல காரியங்களை விசுவாசிப்பதில்லை. அவர்கள் கிறிஸ்துவின் தெய்வீகத்தை விசுவாசிப்பதில்லை; அவருடைய தன்னிகரற்ற பாவமற்ற மானிடத்தை விசுவாசிப்பதில்லை; திரியேக தேவனை, திரியேகத்துவத்தை, விசுவாசிப்பதில்லை; இயேசு குமாரனாகிய தேவன் என்பதை விவாசிப்பதில்லை; திரியேகத்துவத்தின் மூன்றாம் நபராகிய பரிசுத்த ஆவியானவர் ஒரு நபர் என்பதை விசுவாசிப்பதில்லை; ஆண்டவராகிய இயேசு மெய்யாகவே தேவனும், மெய்யாகவே மனிதனுமாவார் என்பதை விசுவாசிப்பதில்லை; அவருடைய கன்னிப்பிறப்பை விசுவாசிப்பதில்லை. அவர்கள் விசுவாசிக்கிற கிறிஸ்தவ வேதாகமம் சொல்லுகிற மெய்யான கிறிஸ்து அல்ல; மாறாக, ஒருவிதமான கற்பனையான, வேதத்துக்குப் புறம்பான ஒரு பொய்யான கிறிஸ்துவை அவர்கள் விசுவாசிக்கிறார்கள். ஒருவேளை அவர்கள் வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ள வார்த்தைகளையே பயன்படுத்தக்கூடும். ஆனால், உண்மையாகவே எந்த அர்த்தத்தில் அந்த வார்த்தைகள் எழுதப்பட்டனவோ, அந்த அர்த்தத்தில் அவர்கள் அவைகளைப் பயன்படுத்தமாட்டார்கள். ஆண்டவராகிய இயேசு என்ற நபரைப்பற்றிய காரியங்களில் தவறானவர்கள் அல்லது தெளிவில்லாதவர்கள் அல்லது மழுப்புகிறவர்கள் நிச்சயமாகத் தேவனுடைய அடித்தளத்தின்மேல் கட்டவில்லை என்பது திண்ணம்.
ஆண்டவராகிய இயேசு இந்தப் பூமிக்கு வந்தபோது அவர் தம் தெய்வீகத்தைப் பரலோகத்தில் விட்டுவிட்டு வரவில்லை. மாறாக, அவர் இந்த உலகத்துக்கு வந்து, இங்கு வாழ்ந்தபோது மனிதனாக வாழ்வதை மனமுவந்து தெரிந்துகொண்டார். அவர் எந்த நேரத்திலும் தேவனாகச் செயல்பட்டிருக்க முடியும். ஏனென்றால், அவர் தேவன். ஆனால், அவர் மனிதன் என்ற முறையில், தம் பிதாவைச் சார்ந்துவாழ்வதைத் தெரிந்துகொண்டார். பழைய ஏற்பாட்டில் தேவன் பயன்படுத்திய “இருக்கிறேன்” என்ற தெய்வீகப் பெயரை இவர் மீண்டும் மீண்டும் பயன்படுத்தினார். ஆனால், அவர் அற்புதங்கள் செய்தபோது தம் தெய்வீக வல்லமையைப் பயன்படுத்தி அற்புதங்கள் செய்யவில்லை என்று சொல்லப்பட்டிருக்கிறது. மாறாக, பிதாவினால் அனுப்பப்பட்டவர் என்ற முறையில், எப்போதும் பிதாவைச் சார்ந்தே அற்புதங்கள் செய்தார். “பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ அதையேயன்றி வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்”. அவர் மனிதனாகப் பாசாங்கோ, பாவனையோ செய்யவில்லை; அவர் மனிதனாக நடிக்கவில்லை. அவர் ஒரு மனிதர். நம்மைப்போல் உண்மையான ஒரு மனிதர்; ஆனால், அவருக்கும் நமக்கும் இடையே மிகப் பெரிய வேறுபாடுகள் உள்ளன.
அவர் பாவம் இல்லாதவர்; இந்தப் பூமியில் இதுவரை யாராவது ஒருவர் பாவம் இல்லாமல் வாழ்ந்தார் என்றால் இவரே அவர். இவர் ஒருவர் மட்டுமே பாவம் இல்லாமல் வாழ்ந்த ஒரே நபர். இவர் ஆதாமைப்போன்றவர் அல்ல. ஆதாமிடம் “நித்திய ஜீவன்” இருக்கவில்லை; ஆனால், இவர் “நித்திய ஜீவனுக்குச்” சொந்தக்காரர்.
உண்மையாகவே அவர் நம்மோடு ஒன்றாக இருக்கிறார். உண்மையாகவே அவர் மனிதர். ஆனால், அவர் வேறுபட்டவர்; நம்மிடம் பாவம் இருக்கிறது. அவர் பாவம் இல்லாதவர். நாம் “மறுபடியும் பிறக்காதவரை” நமக்கு “நித்திய ஜீவன்” கிடையாது. அவரிடம் “நித்திய ஜீவன்” இருக்கிறது. அவருடைய மானிடத்தை நோக்கும்போது மிகப் பெரிய இந்த வேறுபாடுகளைப் புரிந்துகொள்ள வேண்டியது மிக முக்கியம்.
அவர் தேவனும் மனிதனுமானவர் என்ற முறையில் அவர் ஒப்பற்றவர், தன்னிகரற்றவர், ஈடுயிணையற்றவர், தனித்தன்மைவாய்ந்தவர்; அவருடைய மனிதத்துவமும் ஒப்பற்றது, தன்னிகரற்றது, ஈடுயிணையற்றது, தனித்தன்மைவாய்ந்தது. அவர் தேவன்-மனிதன் என்ற முறையில், அவருடைய ஒப்பற்ற, ஈடுயிணையற்ற, தன்னிகரற்ற, தனித்தன்மையினால் அவர் என்றென்றைக்கும் நம்மிலிருந்து மாறுபட்டவர்.
-மனிதன் என்ற முறையில் அவர் நம்மோடு ஒன்றாக இருக்கிறார். ஆயினும், நாம் பரிசுத்த ஆவியினால் மறுபடி பிறந்து அவரோடு இணைக்கப்படும்வரை, அவர் நம்மிலிருந்து வேறுபட்டவர்.
-மனிதன் என்ற முறையில் அவர் “பாவம் இல்லாதவர்”, “நித்திய ஜீவனை” உடையவர்;
-மனிதன் என்ற முறையில் அவர் தேவனுடைய குணத்தைப் பரிபூரணமாக வெளிப்படுத்தினார். ஏனென்றால், அவர் “தேவனுடைய சாயல்”.
-மனிதன் என்ற முறையில் அவர் முழுமையாகவும், எல்லா வேளைகளிலும், உடனுக்குடனும், தொடர்ச்சியாகவும் பிதாவுக்குக் கீழ்ப்படிந்தும், பிதாவைச் சார்ந்தும் வாழ்ந்தார்.
அவருடைய மானிடத்தின் தனித்தன்மையையும், இயல்பையும் புரிந்துகொள்வது கிறிஸ்தவ வாழ்க்கையைப் புரிந்துகொள்வதற்கு மிக அவசியம். அவருடைய மானிடத்தை நம் மானிடத்தின் மட்டத்துக்குக் குறைக்கவோ, தாழ்த்தவோ கூடாது அல்லது விழுந்துபோகாத ஆதாமின் மானிடத்தோடு அடையாளப்படுத்தவும் கூடாது. அவருடைய மானிடமே தேவன் தேடுகிற, ஏற்றுக்கொள்கிற, உண்மையான மானிடத்தின் வரையறை. ஆண்டவராகிய இயேசு மனுவுருவெடுத்தபோது, அவர் நம் விழுந்துபோன நிலைமையையோ அல்லது ஆதாமின் விழுந்துபோகாத நிலைமையையோ எடுக்கவில்லை; மாறாக, தேவன் மனிதனைப் படைத்ததற்கான ஆதி நோக்கத்தை வெளிப்படுத்தினார். அது நம்மில் நிறைவேறுவதற்கான எல்லாவற்றையும் சாத்தியமாக்கிற்று.
ஆண்டவராகிய இயேசு இந்தப் பூமியில் வாழ்ந்தபோது எப்படிப்பட்ட மானிடத்தை வெளிப்படுத்தினாரோ அதற்கொத்த மானிடத்துக்கு கிறிஸ்தவர்கள் என்ற முறையில் நாம் மறுசாயலாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம். இந்த மானிடம் மகிமைப்படுத்தப்பட்டது. அதாவது இந்த மானிடம் தேவனுடைய மகிமை வெளியரங்கமாவதற்கு ஒரு ‘வாய்க்காலாக’ மாறியது. இப்போது பரலோகத்தில் சிங்காசனத்தில் மகிமையடைந்த ஒரு மனிதர் அமர்ந்திருக்கிறார்; அவர் “மனிதனாகிய இயேசு கிறிஸ்து”. மனிதப்பிறவிகள் என்ற முறையில் நாம் நம்மை முன்னேற்ற வேண்டும், நிறைவாக்க வேண்டும் என்பதற்காகத் தேவன் செயல்படவில்லை.
நம் நிறைவாக்கமும், விதியும் நாம் கிறிஸ்துவுடன் இணைந்திருப்பதில்தான் இருக்கின்றன. இந்தப் பூமியில் வாழ்ந்த உண்மையான ஒரே மனிதர் அவர் மட்டுமே. ஆகையால், அவரைக்கொண்டுதான் மனிதத்துவத்தையும், கிறிஸ்தவ வாழ்க்கையையும் வரையறுக்க வேண்டும். அவருடைய குணத்தை மட்டும் அல்ல, அவர் வாழ்ந்த விதம், அவருடைய முழு வாழ்க்கை, அவரைச் சுற்றியிருந்த உலகத்தைக்குறித்த அவருடைய மனப்பாங்கு, கண்ணோட்டம் ஆகியவைகளையும் நாம் கவனமாக எண்ணிப்பார்க்க வேண்டும். அவரைச் சுற்றியிருந்த உலகமும் நம் இன்றைய உலகமும் சாராம்சத்தில் ஒரே தன்மை உள்ளவைகளே. குடும்ப வாழ்க்கை, வேலை, சமுதாய வாழ்க்கை, கலாசாரம், அரசியல்போன்ற எல்லாக் காரியங்களைக்குறித்தும் அவருடைய மனப்பாங்கு என்னவென்பதைக் கவனமாகப் பரிசீலித்து, அவருடைய மனப்பாங்கை நம் மனப்பாங்காக்கிக்கொள்ள வேண்டும். அவருடைய மனப்பாங்குதான் நம் மனப்பாங்கைத் தீர்மானிக்கவேண்டும்.
வேதாகமத்தில் இதற்கான “கைகாட்டிகள்” இருக்கின்றன. எடுத்துக்காட்டாக அவருடைய குடும்பத்தின் உறவினர்களைப் பார்க்கிறோம்; முப்பது வயதுவரை அவர் நாசரேத்தில் தச்சனாக வேலைசெய்தார்; கானாவூரில் ஒரு திருமணத்தில் கலந்துகொண்டார்; குழந்தைகள் விளையாடுவதைப் பார்த்துக்கொண்டிருந்தார்; பலவிதமான மக்கள் கொடுத்த விருந்தோம்பலை ஏற்றுக்கொண்டார்; அவர் உண்மையான மனித வாழ்க்கை வாழ்ந்தார்; அவர் இயற்கையையும், அன்றாட வாழ்க்கையையும் உன்னிப்பாகக் கவனித்தார் என்று அவருடைய உவமைகளிலிருந்து தெரிந்துகொள்ளலாம். ஆனால், அவர் உலகத்தின் கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார் என்றோ, அதில் அவருக்கு ஈடுபாடும், ஆர்வமும் இருந்தது என்றோ வேதாகமத்தில் எந்தக் குறிப்பும் இல்லை. அவருடைய ஆர்வம், ஈடுபாடு எல்லாம் மக்கள்மேல்தான் இருந்தது; அவருடைய கரிசனை, அக்கறை எல்லாம் மனிதர்களே. அரசியல் களத்தையும், கிளர்ச்சியையும் பொறுத்தவரை அதில் தலையிடுவதற்கோ, ஈடுபடுவதற்கோ அவர் மறுத்தார். “என்னுடைய ராஜ்ஜியம் இவ்வுலகத்தைச் சார்ந்ததல்ல” என்று சொன்னார். அவருடைய நாட்களில் இருந்த பயங்கரமான கொடுமைகளாகிய அடிமைத்தனத்தையும், பிறந்தவுடன் குழந்தையைக் கொன்றுவிடும் பழக்கமாகிய சிசுவதையையும்குறித்து அவர் எதுவும் சொல்லவில்லை. அதைப்பற்றி அவருக்கு அக்கறை இல்லை என்பதால் அல்ல; அவர்கள்மேல் அவர் எவ்வளவு அக்கறை கொண்டிருந்தார் என்பதை அவருடைய வாழ்க்கை முழுவதும் பார்க்கலாம். “எல்லாருக்கும் கர்த்தராயிருக்கிற இயேசு கிறிஸ்து சமாதானத்தைச் சுவிசேஷமாகக் கூறினார்… நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்த ஆவியினாலும், வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மை செய்கிறவராயும், பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித் திரிந்தார்,” என்று வாசிக்கிறோம். அவர் இந்த உலகத்திற்குச் சீர்திருத்தவாதியாக வரவில்லை. இந்த உலகத்தைக் கலகக்காரர்கள் வாழ்வதற்கு ஏற்ற சிறந்த இடமாக மாற்றுவதற்காக அவர் வரவில்லை; மாறாக, அவர் மீட்பராக வந்தார்; இரட்சகராக வந்தார். எனவே, அவர் உலகத்தின் கேடுகளை எதிர்த்து, அறப்போர் தொடங்கவில்லை. நற்செய்தியின்மூலமாக தேவனுடைய வல்லமை மனிதர்களுடைய இருதயங்களை மாற்றும்போது மட்டுமே உண்மையாகவே எதையாவது சாதிக்க முடியும்.
இந்தக் காரியத்தை நாம் தெளிவாகப் புரிந்துகொள்வது இந்த உலகத்தில் நாம் அவருடைய சாட்சிகளாக எப்படி வாழ்கிறோம் என்பதைபே பாதிக்கும்; அது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். “நான் உலகத்தானல்லாததுபோல அவர்களும் உலகத்தாரல்ல,” என்று இயேசுகிறிஸ்து தம்முடையவர்களைக்குறித்துக் கூறினார். “அவர் இருக்கிறபிரகாரம் நாமும் இவ்வுலகத்தில் இருக்கிறோம்,” என்று யோவான் கூறுகிறார். கிறிஸ்தவன் என்றால் என்ன பொருள்? கிறிஸ்து எப்படி யோசித்தாரோ, எப்படி வாழ்ந்தாரோ அதுபோல் யோசிப்பதற்கும், வாழ்வதற்கும் முற்றிலும் நம்மை அவருடன் ஒத்ததாக்குவதே கிறிஸ்தவனாக இருப்பதின் பொருளாகும்.
ஆகவே, புறக்கணிக்கப்பட்ட இப்படிப்பட்ட இனத்திலிருந்து நம்மை மீட்டு இரட்சித்து, அவருடைய மரணம் உயிர்த்தெழுதல்மூலமாக அவரில் படைக்கப்பட்ட ஒரு புதிய இனத்துக்குள் நம்மைக் கொண்டுவர தேவன் தம் குமாரனாகிய இயேசுவில் மனித வரலாற்றில் நுழைந்தார்.
வேத வாசிப்பு
மத். 13:54-57; 17:2; 25:34; லூக். 1:35; 2:41-52; 7:32; யோவான் 1:18; 2:1-12; 5:19; 6:15; 7:2-10; 10:25; 11:25; 14:11-12; 17:14- 16; 18:36; அப். 10:36; ரோமர் 1:16; 8:29; 2 கொரி. 4:6; எபே. 2:10; பிலி. 2:9-11; கொலோ. 1:15; 2:9; 1 தீமோ. 2:5-6; 3:16; எபி. 4:15; 1 யோவான் 4:17; வெளி. 1:17-18; 13:8; ஏசாயா 44:6