Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More

வேத வாசிப்பு 

1 கொரி. 15:20-28; 2 கொரி. 4:17; 5:17; பிலி. 3:20; 2 தீமோ. 2:10-13; எபி. 11:10; 12:22=29; 13:14; 1 பேதுரு 2:4-5; 1 யோவான் 1:5; வெளி. 3:21; ஆதி. 1:1-5; ஏசாயா 9:7

20-தேவனுடைய தலைநகரமும், இராஜ்ஜியமும்.pdf

மீட்கப்பட்ட பிரபஞ்சத்தில் தேவனுடைய தலைநகரமும், இராஜ்ஜியமும் - 20

இதோ! புதிய வானம், புதிய பூமி. புதிய பூமியில் புதிய எருசலேம், அதுவே புதிய தலைநகரம். இந்தப் புதிய யுகத்தையும், ஒழுங்குமுறையையும்பற்றி திருவெளிப்பாடு 21:1-22:5 இல் நாம் பார்க்கிறோம். ஆம், வரலாற்றின் கடைசி அதிகாரம் ஏற்கெனவே எழுதப்பட்டாயிற்று, அது எழுதி முடிக்கப்பட்டாயிற்று. பழைய ஒழுங்குமுறை, யுகம் முடிந்துவிட்டது. “முந்தினவைகள் ஒழிந்துபோயின”. முதல் ஒழுங்குமுறைக்குறியவைகள், முதல் யுகத்துக்குரியவைகள், முடிந்துவிட்டன. நமக்குத் தெரிந்த பருப்பொருள் சார்ந்த, இயற்கையான, அணுக்களாலான இப்போதைய இந்தப் படைப்பு முடிந்துவிட்டது. கடல், இரவு, சூரியன், சந்திரன் ஆகியவைகள் இல்லாமல் போய்விட்டன. பாவம், மரணம், புலம்பல், அழுகை, வலி ஆகியவைகளும், சாத்தானும் அவனுக்குரியவைகளும் நிரந்தரமாக விரட்டப்பட்டுவிட்டன. ஒரு புதிய யுகம் விடிகிறது; ஒரு புதிய உலகம் உதயமாகிறது. திருவெளிப்பாடு 20 விவரிக்கிற, இந்தப் பூமியில் ஆண்டவராகிய இயேசுவின் ஆயிரவருட அரசாட்சி, சாத்தானின் கடைசிக் கலகம், நியாயத்தீர்ப்பு நாள், ஆகியவைகளெல்லாம் முடிந்துவிட்டன. இந்த உலகத்தையும், இஸ்ரயேலையும்பற்றிய எல்லாத் தீர்க்கதரிசனங்களும் நிறைவேறிவிட்டன. இப்போது முற்றிலும் புதிதான ஒரு புதிய ஒழுங்குமுறை வந்துவிட்டது. “இதோ, சகலத்தையும் நான் புதிதாக்குகிறேன்”.

வேதாகமத்தின் குறிப்பிடத்தக்க இந்தப் பகுதியை வாசிக்கும்போது, இப்போதைய இந்தப் படைப்பாகிய ஒழுங்குமுறை ஒரு தற்காலிகமான ஏற்பாடாக இருக்குமாறு மட்டுமே வடிவமைக்கப்பட்டது என்ற அதிர்ச்சியான உண்மையை நாம் நினைவில்கொள்ள வேண்டும். “பூமியிலிருந்து உண்டான முதல் மனிதனாகிய ஆதாம்” உட்பட இயற்கையான இந்த ஒழுங்குமுறையையும், பிரபஞ்சத்தையும் படைத்தபோது, அது தாற்காலிகமாகத்தான் இருக்கும், இருக்க முடியும் என்று அவருக்குத் தெரியும். இந்த நோக்கத்தோடுதான் தேவன் அதைப் படைத்தார். நாம் அறிந்திருப்பதுபோல, காலத்திலும், இடத்திலும் என்றென்றைக்கும் வாழ்வதற்காக மனிதன் படைக்கப்படவில்லை; அவனுக்காக வகுக்கப்பட்ட திட்டம் அதைவிட மிக மிக உயர்வானது. “காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள்; காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்,” என்று 2 கொரிந்தியர் 4:8இல் நாம் வாசிக்கிறோம்.. மேலும், கிறிஸ்துவுக்கும் ஆதாமுக்கும் இடையேயுள்ள முரண்பாட்டைச் சொல்லும்போது, “ஆவிக்குரிய சரீரம் முந்தினதல்ல, ஜென்மசரீரமே முந்தினது; ஆவிக்குரிய சரீரம் பிந்தினது,” என்று 1 கொரிந்தியர் 15:46இல் பவுல் எழுதுகிறார். அதாவது ஆவிக்குரிய சரீரமல்ல, இயற்கையான சரீரமே முதலாவது வந்தது; ஆவிக்குரிய சரீரம் அதற்குப்பின் வந்தது. உண்மையில் இது எல்லா முதல் காரியங்களுக்கும் பொருந்தும்; உலகத்தைப்பொறுத்தவரை, இவைகளெல்லாம் ஒழிந்துபோயின என்று சொல்லப்பட்டிருக்கிறது.

ஆதியாகமத்தில் படைப்பைப்பற்றிய விவரங்களைப் பார்க்கும்போது, ஆதாமின் வீழ்ச்சிக்குமுன்பே, “இருளும், இரவும்” அந்தப் படைப்பின் ஒரு பகுதியாக இருந்தது என்ற அதிர்ச்சியான உண்மையைப் பார்க்கும்போது, இந்தக் காரியம் இன்னும் தெளிவாகத் தெரிகிறது. இவைகள் தேவனுடைய புதிய படைப்பில் இருக்காது. ஏன்? ஏனென்றால், முதல் படைப்பில் அவைகளுக்குப் பொருள் இருந்தது; ஒரு தேவையும் இருந்தது. ஏனென்றால், ஏதெனில் ஆதாமின் வீழ்ச்சிக்குமுன்பே, சாத்தான் விழுந்தான். ஆகையால், அவனுடைய வீழ்ச்சியினால், தீமையும், “இருளும்” பிரபஞ்சத்துக்குள் ஏற்கெனவே வந்துவிட்டன. ஆனால், தேவனுடைய புதிய ஒழுங்குமுறையில் இன்னொரு வீழ்ச்சிக்கு வாய்ப்பேயில்லை; அது சாத்தியமில்லை. எனவே, அங்கு இரவும் இருக்காது, இருளும் இருக்காது. ஏனென்றால், “தேவன் ஒளியாயிருக்கிறார்; அவரில் எவ்வளவேனும் இருள் இல்லை”. மேலும், முதல் படைப்பில் மரணம் நேரிடுவதற்கான சாத்தியம் இருந்தது. ஏனென்றால், ஆதாம் ஒருநாள் மரிப்பான் என்ற எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், புதிய ஒழுங்குமுறையில் மரணம் அழிக்கப்படுகிறது. ஆகவே, ஆதியாகமத்தில் பார்க்கிற காலம்/இடம் கொண்ட தற்காலிகமான படைப்பின் இலக்கு திருவெளிப்பாட்டில் பார்க்கிற நிரந்தரமான புதிய உலகத்தில் காணப்படுகிறது.

தேவனுடைய புதிய உலகத்தைப்பற்றி நினைக்கும்போது, தற்போதைய ஒழுங்குமுறையைப்போலவே புதிய உலகமும் இருக்கும் என்று நாம் நினைக்கக் கூடாது; தற்போதைய ஒழுங்குமுறையைப்பற்றிய அபிப்பிராயங்களையும், கருத்துக்களையும்வைத்து நாம் புதிய உலகத்தைத் தீர்மானிக்கக்கூடாது. இதைக்குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, பரிசுத்த நகரம் என்று சொன்னவுடன், அது இன்று நாம் இந்தப் பூமியில் பார்க்கிறதுபோல எழுத்தின்படி, பொன்னாலான வீதிகள் நிறைந்த ஒரு பருப்பொருள் நகரமாக இருக்கும் என்று நாம் நினைக்கக்கூடாது. அது “ஜீவனுள்ள கற்களாகிய” மக்களாலான ஆவிக்குரிய நகரம். இதற்கு ஆதாரமாக அங்கு பல விவரங்கள் சொல்லப்பட்டுள்ளன. குறிப்பாக, அந்த நகரம் கனசதுர வடிவத்தில் இருக்கிறது என்றும், சபையைக் குறிக்கிறது என்றும் சொல்லப்பட்டுள்ளது. அதுபோல அங்கு நாம் வாசிக்கிற நாடுகளும், அரசர்களும் இந்தப் பூமியில் நமக்குப் பரிச்சயமான நகரங்களையும், அரசர்களையும்போல இருக்க முடியாது. எல்லாம் புதிது; அடிப்படையிலும், கட்டமைப்பிலும் எல்லாம் வித்தியாசமானவை; அது தற்போதைய இந்த ஒழுங்குமுறையைவிட எந்த வகையிலும் நிஜத்தில் குறைந்ததல்ல, மாறாக எல்லா வகையிலும் மிகவும் நிஜமானது, அற்புதமானது.

கடந்த நித்தியத்திலிருந்து தேவன் எந்த இலக்கைநோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறார் என்ற காட்சியை இந்த சில வசனங்களில் நாம் கொஞ்சம் பார்க்கிறோம். நித்திய யுகங்களைப்பற்றிய காட்சி அங்கு விரிகிறது; அங்கு கிறிஸ்துவில் தேவன் அரியணையில் அமர்த்தப்பட்டு, ஆராதிக்கப்பட்டு, தம் தலைநகரமாகிய “முதற்பேறானவர்களின் சபை”யிலிருந்தும், சபையின்மூலமாகவும் மீட்கப்பட்ட பிரபஞ்சத்தை ஆளுகைசெய்வதைப் பார்க்கிறோம்.

நாம் இங்கு பேசிக்கொண்டிருக்கும் காரியத்தின் உட்கருத்து இங்கு தெளிவாகத் தெரிகிறது. தேவனுடைய குமாரன் தம் நபரிலும், மனுஷீகத்திலும் ஒப்பற்றவர், அவர் நித்யமானவர், அவர் இந்த உலகத்துக்கு வந்தார், சிலுவையில் மரித்தார், மரித்த மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் - இந்த உண்மைகள் எல்லாவற்றுக்கும் மையம்போன்றவை. ஆகையால், அவர் எப்படிப்பட்ட நபராக இருக்கிறாரோ அந்த நபரிலும், அவர் செய்து முடித்த வேலையினாலும் அவரைப்போன்று, அவருடைய சாயலில், அவருடைய குணத்தில் ஒரு புதிய இனத்தைப் படைப்பதும், தேவனுடைய அரசிலும், மீட்கப்பட்ட பிரபஞ்சத்திலும் அவர் ஆளுகை செய்வதற்கு பிதாவுக்கு ஒரு தலைநகரத்தை உருவாக்குவதும் சாத்தியமாயிற்று. இதுவே இலக்கு. இவ்வாறு, புதிய ஒழுங்குமுறையின் மைய உண்மைகள் தெளிவாகத் தெரிகின்றன; ஆயினும், அதன் விவரங்கள் இப்போதைக்கு முழுமையாகத் தெரியவில்லை. இது கிறிஸ்தவ வாழ்க்கை முழுவதும் எப்படி இருக்க வேண்டும் என்பதையும், இங்கு இப்போது தம் சபை எப்படி இருக்க வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார் என்பதையும் தெளிவாகக் காண்பிக்கிறது.

இன்னும் அதிகமாகத் தியானிப்பதற்காகவும், படிப்பதற்காகவும் பின்வரும் குறிப்புக்களை உங்கள்முன் வைக்கிறோம்.

  1. சபைக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் - “பரிசுத்த நகரம்” - “புதிய எருசலேம்” - “மணவாட்டி” - “ஆட்டுக்குட்டியானவரின் மனைவி” - “தேவனுடைய வாசஸ்தலம்” என்ற பெயர்களின் உட்கருத்தைக் கவனியுங்கள்.
  2. புதிய எருசலேமாகிய, ஆட்டுக்குட்டியானவரின் மனைவியாகிய, மணவாட்டியின் இடம் நித்திய யுகங்களில் இருக்கும் எல்லாவற்றுக்கும் மையமும், திறவுகோலுமாகும்.
  3. நகரத்துக்கும், புதிய எருசலேமுக்கும், நகரத்தின் வெளிச்சத்தில் நடக்கும் நாடுகளுக்கும், தங்கள் மகிமையையும், கனத்தையும் ஒருபோதும் அடைக்கப்படாத வாசல்கள்வழியாகக் கொண்டுவருகிற அரசர்களுக்கும் இடையேயுள்ள உறவு.
  4. நகரத்தை விவரிக்கும்போது, “அதற்குத் தேவனுடைய மகிமை” இருக்கிறது என்பதே அதைப்பற்றிச் சொல்லப்பட்டுள்ள முதல் விவரம். இது யோவான் 17ஆம் அதிகாரத்தில் ஆண்டவராகிய இயேசு ஜெபித்த ஜெபத்தின் நிறைவேறுதலாகும். மேலும், அதன் பிரமாண்டமான, அழகான அடித்தளத்தையும் கவனியுங்கள். இந்தப் பூமியில் தேவன் நம்மோடு இடைப்பட்டு, நம்மை நித்தியத்துக்காக உருவாக்கிக்கொண்டிருக்கிறார்.
  5. அவருடைய பிராசனத்தின் மகிமையும், தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனமும் மையைப்போன்றவை, போதுமானவை. ஆலயம் தேவையில்லை, சூரியன் தேவையில்லை, தேவனைத்தவிர வேறொன்றும் தேவையில்லை; ஏனென்றால், கிறிஸ்துவில் தேவனே “எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார்”. 
  6. சிங்காசனத்திலிருந்து ஜீவநதி பாய்ந்தோடுகிறது. அந்த நதியின் இரு கரைகளிலும் பச்சை இலைகளோடும், சுவையான கனிகளோடும் ஜீவமரம் வளர்கிறது. இது பாயும் நதியும், ஜீவமரமும் இருந்த ஏதேன் தோட்டத்தை நமக்கு நினைவுபடுத்துகிறது. அன்று ஏதேன் தோட்டத்தில் தேவன் ஆதாமுக்கு வழங்க விரும்பிய, இன்று விழுந்துபோன இந்த இனத்துக்குத் தேவன் வழங்க விரும்புகிற கொடையின் முக்கியத்துவத்தை நாம் மீண்டும் பார்க்கிறோம்.

7)அவருடைய ஊழியக்காரர்கள் அவருடைய “அன்பின்-அடிமைகளாக” அவரைச் சேவிப்பதோடு மட்டுமின்றி, அவரோடுசேர்ந்து சதாகாலங்களிலும் ஆளுகையும்செய்கிறார்கள். இவ்வாறு, நாம் கிறிஸ்துவோடுசேர்ந்து ஆளுகைசெய்யும் நம் உயர்ந்த அழைப்பு, நாம் அன்பினால் நம்மை அவருக்கு அர்பணிப்பதோடும், கீழ்ப்படிவதோடும் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளது.

8)நித்திய யுகங்களை விவரிப்பதற்கு மட்டற்றதும், முடிவற்றதுமான மகிமையும், முன்னேற்றமும், விரிவாக்கமும் படங்களாகச் சொல்லப்பட்டுள்ளன. நித்திய யுகங்கள் செயல்படாத, குறிக்கோளற்ற, முடிவுறாத ஒரு விடுமுறை அல்லது ஒரு ஸ்தோத்திரக்கூட்டம் போன்றவை என்று நினைக்க வேண்டாம். அப்படியல்ல. அது செயல்படுகிற, ஆற்றலுள்ள, மாபெரும் தேவனுக்குத் தகுதியான வகையில் இருக்கும். அதன் எதிர்கால நோக்கம் நமக்கு ஆச்சரியமாக இருக்கும்.

“நிலையான நகரம் நமக்கு இங்கே இல்லை; வரப்போகிறதையே நாடித் தேடுகிறோம். நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது…நீங்களோ…ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமினிடத்திற்கு…வந்து சேர்ந்தீர்கள்… தேவன்தாமே கட்டி உண்டாக்கிய ஸ்திபாரங்களுள்ள நகரம்”. 

“சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார். பின்னும், அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார். அன்றியும், அவர் என்னை நோக்கி: ஆயிற்று, நான் அல்பாவும் ஒமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன். தாகமாயிருக்கிறவனுக்கு நான் ஜீவத்தண்ணீரூற்றில் இலவசமாய்க் கொடுப்பேன். ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான்.”

வேத வாசிப்பு 

1 கொரி. 15:20-28; 2 கொரி. 4:17; 5:17; பிலி. 3:20; 2 தீமோ. 2:10-13; எபி. 11:10; 12:22=29; 13:14; 1 பேதுரு 2:4-5; 1 யோவான் 1:5; வெளி. 3:21; ஆதி. 1:1-5; ஏசாயா 9:7