Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More

தேவனுடைய இறுதி நோக்கம்

Transcribed from a message spoken in April 2016 in Chennai

By Milton Rajendram

ஆதியாகமம்முதல் திருவெளிப்பாடுவரை

நாம் மறுவுருவாக வேண்டும் என்று தேவன் திட்டமிட்டிருக்கிறார், எதிர்பார்க்கிறார். இந்த முழு வேதாகமத்தையும் நாம் வாசிக்கும்போது, எப்போதுமே தேவனுடைய இறுதிக் குறிக்கோளும், இறுதி இலக்கும் என்ன என்பதை நாம் நம் கண்களுக்குமுன்பாக நிறுத்திக்கொள்ள வேண்டும். இந்த முழு வேதாகமத்திலிருந்தும் நாம் எதைக் கற்றுக்கொள்கிறோம், எதைப் பெற்றுக்கொள்கிறோம், எதை முதன்மையாகக் கருதுகிறோம், எதை அருமையாகக் கருதுகிறோம் என்பதை தேவனுடைய இறுதிக் குறிக்கோளே, இறுதி இலக்கே, தீர்மானிக்கிறது. God’s ultimate intention and ultimate objective.

தேவனுடைய இறுதிக் குறிக்கோளையும், இறுதி இலக்க‍ையும், நாம் வேதாகமத்தின் முதல் புத்தகத்தின் முதல் அதிகாரத்திலிருந்து கடைசிப் புத்தகத்தின் கடைசி அதிகாரம்வரைப் பார்க்கலாம். ஆதியாகமம் முதல் அதிகாரத்தில் தேவன் இந்த பிரபஞ்சத்தைப் படைத்தது தொடங்கி, திருவெளிப்பாட்டின் கடைசி அதிகாரத்தில் புதிய வானம், புதிய பூமியில் புதிய எருசலேமைக் காண்கின்றவரை தேவனுடைய அந்த ஒரே குறிக்கோளும், ஒரே இலக்கும், ஓர் இழைபோல ஒடிக்கொண்டிருக்கிறது. எப்படி ஒரு மரத்திற்கு ஒரு தண்டு இருக்கிறதோ, அதுபோல் தேவனுடைய இறுதிக் குறிக்கோளும், இறுதி இலக்கும் ஒரு தண்டுபோல, ஓர் இழைபோல, ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு மரத்திற்குப் பல கிளைகளும், துணைக் கிளைகளும், சிறு கிளைகளும் இருக்கலாம். ஆனால், முதலாவது அந்த மரத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், அந்த மரம் என்ன வடிவத்தில் இருக்கிறது என்று பார்க்க வேண்டும் என்றால், நாம் அதன் தண்டைப் பார்க்க‍ வேண்டும்.

ஓர் வரைபடம் - புதிய எருசலேம்

தேவனுடைய இறுதிக் குறிக்கோளை, இறுதி இலக்கை, வருணிப்பதற்கு புதிய ஏற்பாடு பயன்படுத்துகிற ஒரு சொல் ‘புதிய எருசலேம்’. இன்றைக்கு நான் பகிர்ந்துகொள்கிற காரியம் கொஞ்சம் புதுமையாக இருக்கலாம் அல்லது கேள்விப்படாததுபோல் இருக்கலாம் அல்லது உடனடியாக அதை எப்படி நடைமுறைப்படுத்துவது என்று நான் சொல்லாமல்கூட விட்டுவிடலாம். அதை எப்படி நடைமுறையாக்குவது அல்லது நடைமுறைப்படுத்துவது, நடைமுற‍ையில் அது நமக்கு எப்படிப் பயனுள்ளதாக இருக்கிறது என்பதை நாம் இன்னொருமுறைகூடப் பார்க்கலாம். ஆனால், ஓர் உண்மையை நாம் இன்றைக்குப் புரிந்துகொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

புதிய எருசலேம் - தேவன் தோற்றுவாய்

வெளிப்படுத்தினவிஷேசம், the book of Revelation. அதை நான் திருவெளிப்பாடு என்று மொழிபெயர்க்கிறேன். திருவெளிப்பாடு வேதாகமத்தின் கடைசிப் புத்தகம். அதன் கடைசி இரண்டு அதிகாரங்கள் 21, 22. ஏறக்குறைய காலம் என்கின்ற வரைச்சட்டத்திலே, frameworkலே, தேவன் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பதின் முடிவை நாம் திருவெளிப்பாட்டின் கடைசி இரண்டு அதிகாரங்களில் பார்க்கிறோம். தேவன் காலம் தொடங்கினபோது என்ன செய்யத் தொடங்கினாரோ, காலம் நிறைவேறும்போது அவர் அதில் எதை நிறைவேற்றுகிறார், எதைச் செய்து முடிக்கிறார், என்பதை இந்த இரண்டு அதிகாரங்களில் நாம் பார்க்கிறோம். காலம் என்கின்ற ஒன்று முடிவடையும்போது தேவன் எதைச் செய்து முடித்திருப்பார்? தேவன் எதைச் செய்து முடித்திருப்பார் என்றால் திருவெளிப்பாடு 21ஆம் அதிகாரம் 1, 2 ஆகிய வசனங்களை நாம் வாசிப்போம். “பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; சமுத்திரமும் இல்லாமற்போயிற்று. யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கிவரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது.” பழைய வானமும் பழைய பூமியும் மறைந்துபோயின, புதிய வானமும் புதிய பூமியும் உண்டாயின. எப்படிப் பழைய வானம் பழைய பூமியில், அதாவது பழைய பிரபஞ்சத்தில், பல்வேறு காரியங்களைப் பார்க்கிறோமோ, அதுபோல புதிய வானம் புதிய பூமியில், அதாவது புதிய பிரபஞ்சத்தில், ஒரு புதிய யுகத்தில், யோவான் பரிசுத்த நகரமாகிய புதிய எருசலேமைக் காண்கிறார். அது தேவனிடத்திலிருந்து பரலோகத்தைவிட்டு இறங்கி வருகிறது. ஆகவே, இந்தப் புதிய எருசலேமின் அல்லது பரிசுத்த நகரத்தின் மூலம், அதன் தோற்றுவாய், தேவன். ஏனென்றால், அது தேவனிடத்திலிருந்து வருகிறது.

புதிய எருசலேம் - பரத்திற்குரியது

அது பரத்திற்குரியது; ஏனென்றால், அது பரலோகத்திலிருந்து வருகிறது. அதில் பூமிக்குரிய பாவமோ அல்லது மற்ற மூலக்கூறுகளோ இல்லை. அது தன் கணவனுக்காக அல்லது தன் மணவாளனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது. புருஷனுக்காக என்றிருக்கிறது. அது தன் கணவனுக்காக அல்லது மணவாளனுக்காக ஆயத்தமாக்கப்பட்ட ஒரு மணவாட்டியைப்போல் இருந்தது.

வேதாகமத்தில் உருவகம்

திருவெளிப்பாட்டில் தேவனுடைய பல்வேறு உண்மைகளைக் குறியீடுகளினாலும், அடையாளங்களினாலும் பார்க்கிறோம். அது நகரம் என்றால் உடனே நாம் இன்றைக்குப் பார்ப்பதுபோல ஒரு நகரத்தை நாம் கற்பனைசெய்துகொள்ளக் கூடாது. அதுபோல, ஒரு மணவாட்டி என்றவுடனே ஒரு மணவாட்டியைக் கற்பனைசெய்துகொள்ளக் கூடாது. நகரம் என்பது ஓர் உருவகம்; மணவாட்டி என்பது ஓர் உருவகம். தேவனுடைய சபை என்பது ஒரு மணவாட்டி என்றால் அது ஓர் உருவகம். தேவனுடைய சபை என்பது தேவனுடைய வீடு என்றால் அது ஓர் உருவகம்.

வேதாகமத்தில் பார்க்கிற எல்லாவற்றையும் நம் மனம்போல எதெல்லாம் எனக்குப் பிடித்திருக்கிறதோ, அதெல்லாம் உருவகம் என்று சொல்லிவிடக் கூடாது. எடுத்துக்காட்டாக, ஒரு மனிதன் எருசலேமிலிருந்து எரிகோவிற்குப் போனான். அவன் வழியிலே கள்ளர் க‍ையிலே அகப்பட்டு அடிக்கப்பட்டான். பிறகு ஒரு சமாரியன் அவனைக் கண்டு, அவனை ஒரு சத்திரத்திலே கொண்டுபோய்க் கொடுத்து, அவனுக்கு இரண்டு காசுகளைக் கொடுக்கிறான். அவனுக்கு திராட்சை ரசமும், என்ணெயும் வார்த்தான். “திராட்சை ரசம் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்திற்கு அடையாளம். எண்ணெய் பரிசுத்த ஆவிக்கு அடையாளம். அவன் சத்திரக்காரரிடத்தில் இரண்டு காசுகளைக் கொடுத்தான். ஒன்று புதிய ஏற்பாட்டிற்கு அடையாளம். இன்னொன்று பழைய ஏற்பாட்டிற்கு அடையாளம்,” என்பதுபோன்ற இந்த உருவகங்களில் நாம் ஈடுபடக் கூடாது. இப்படிப்பட்ட ஒரு கருத்தோடு இந்த உவமைக் கதை இங்கு எழுதப்பட்டிருக்கவில்லை. நம்முடைய அயலான் யார் என்பதை நமக்குத் தெளிவுபடுத்துவதற்காக ஆண்டவராகிய இயேசு இந்த உவமைக் கதையை மக்களுக்குச் சொல்லுகிறார். மற்றபடி “எருசலேம் என்பது நல்ல வாழ்க்கை, எரிகோ என்பது தீய வாழ்க்கை, கள்ளன் என்பது பிசாசு,” என்பதுபோன்ற உருவகங்களுக்கு இங்கு இடங்கொடுப்பதற்கு சாத்தியமில்லை. அது நம்முடைய கற்பனை. ஆகவே எடுத்ததையெல்லாம் நாம் உருவகப்படுத்தக் கூடாது.

ஆனால், சில காரியங்கள் தெள்ளத்தெளிவாக உருவகப்படுத்தப்பட்டிருக்கிறது. எடுத்துக்காட்டாக, விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான்; அதிலே வழியருகே நிலம், முள்ளுள்ள நிலம், கற்பாறை நிலம், நல்ல நிலம் என்றிருக்கிறது. நிலம் என்பது இருதயத்தைக் குறிக்கிறது. இது உருவகம் இல்லை. “நிலம் இருதயத்துக்கு ஒப்பாய் இருக்கிறது,” என்று ஆண்டவராகிய இயேசுவே சொல்லுகிறார். ஆகவே, இங்கு நாம் வரிந்துகட்டிக்கொண்டு ஓர் உருவகத்தைத் தேடவேண்டிய அவசியம் இல்லை. நிலம் என்பது இருதயத்துக்கு ஒப்பாயிருப்பதினால் நல்ல நிலம், கற்பாறை நிலம், முள்ளுள்ள நிலம், வழியருகே நிலம் என்பவை இருதயங்களின் பல்வேறு நிலமையைக் குறிக்கிறது என்பதை நாம் மிக எளிமையாகப் புரிந்துகொள்ளலாம். வழியருகேயான நிலம் என்பது ஒருவிதமான இருதயம், முள்ளுள்ள நிலம் என்பது ஒருவிதமான இருதயம். “அவர்களுக்கு உலக இச்சைகளிலே மிக ஈடுபாடு இருக்கிறது என்றால் அந்த இருதயம் முள்ளுள்ள நிலத்திற்கு ஒப்பாக இருக்கிறது,” என்று அவர் சொல்லுகிறார். ஆகவே எவைகள் உருவகங்கள், எவைகள் உருவகங்கள் இல்லை என்பதற்குப் போதுமான அளவிற்கு சான்றுகள் வேதாகமத்திலே உள்ளன.

நகரம் என்பது ஓர் உருவகம். மணவாட்டி என்பது ஓர் உருவகம்.

அதே 21ஆம் அதிகாரம் 9, 10ஆம் வசனங்கள். “பின்பு, கடைசியான ஏழு வாதைகளால் நிறைந்த ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் என்னிடத்தில் வந்து: நீ இங்கே வா, ஆட்டுக்குட்டியானவருடைய மனைவியாகிய மணவாட்டியை உனக்குக் காண்பிக்கிறேன் என்று சொல்லி, பெரிதும் உயரமுமான ஒரு பர்வதத்தின்மேல் என்னை ஆவியில் கொண்டுபோய், தேவனுடைய மகிமையை அடைந்த எருசலேமாகிய பரிசுத்த நகரம் பரலோகத்தைவிட்டு தேவனிடத்திலிருந்து இறங்கிவருகிறதை எனக்குக் காண்பித்தான்.” மீண்டும் ஒன்று நடைபெறுகிறது. இரண்டாம் வசனத்தில் யோவான் எப்படி பரிசுத்த நகரமாகிய எருசலேம் தேவனிடத்திலிருந்து பரலோகத்தைவிட்டு இறங்கி வருகிறதைக் கண்டதாகச் சொல்லுகிறாரோ, அதுபோல் இப்போதும் “தேவனுடைய மகிமையை அடைந்த எருசலேமாகிய பரிசுத்த நகரம் பரலோகத்தைவிட்டு தேவனிடத்திலிருந்து இறங்கிவருகிறதைக் கண்டதாகச்” சொல்லுகிறார். அது தேவனிடத்திலிருந்து பரலோகத்தைவிட்டு இறங்கிவருகிறது.

ஆகவே, இந்தக் கருத்து ஏதோ இலைமறைக் காயாக எங்கோ ஒழிந்துகொண்டிருக்கவில்லை. இந்தக் கருத்து, இந்த உண்மை, தேவனுடைய வார்த்தையில், வேதாகமத்தில், மிக வெளிப்படையாக இருக்கிறது. தேவனுடைய எல்லா இயக்கங்களின், எல்லா அசைவுகளின், எல்லாச் செயல்பாடுகளின், மு‍டிவு புதிய எருசலேம். இந்த உண்மையை நாம் தெளிவுபடுத்த வேண்டும். தேவனுடைய எல்லா அசைவுகளின், எல்லா இயக்கங்களின், எல்லாச் செயல்பாடுகளின் விளைவு, முடிவு, புதிய எருசலேம். ஏன் இப்படி இந்தக் காரியத்தை இரண்டுமுறை அதே வார்த்தைகளில் திரும்பச் சொல்லுகிறேன் என்றால், definitionலே வார்த்தைகளை மாற்றக்கூடாது. வரையறை என்பதில் வார்த்தைகளை மாற்றக்கூடாது.

“நியூட்டனின் மூன்று விதிகளை வரையறுக்கவும்” என்றால், அதில் நம் சொந்த வார்த்தைகளைப் போடுவது பெரும்பாலும் பிரயோஜனமாயிருக்காது. வரையறை என்றால் அதிலிருந்து ஒரு வார்த்தையைக் குறைத்தால் அது வரையறையாக இருக்காது. அதில் ஒரு வார்த்தையை கூட்டினாலும் வரையறையாக இருக்காது. நான் அப்படியே சொல்லவில்லை; ஆனால், ஏறக்குறைய வார்த்தைகளை நாம் மிகவும் சிரத்தையோடும், கவனமாகவும் கையாள வேண்டும். This is the ultimate conclusion of all God’s actions and movements throughout His time.

மணவாளன் கிறிஸ்து

புதிய எருசலேம் ஆட்டுக்குட்டியானவரின் மனைவியாகிய மணவாட்டி என்று வேதாகமம் மறுபடியும் கூறுகிறது. அதை சித்திரிப்பதற்கு, வர்ணிப்பதற்கு, தேவன் பயன்படுத்தகிற வார்த்தை - இது ஒரு நகரம், பரிசுத்த நகரம். இது ஒரு மணவாட்டி. முன்பு மணவாளனுக்காக ஆயத்தமாக்கப்பட்ட மணவாட்டி. இப்போது, அந்த மணவாளன் யார் என்று வேதாகமம் கூறுகிறது; அவர் ஆட்டுக்குட்டியானவர். ஆட்டுக்குட்டியானவர் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து என்பதற்கு எந்த விளக்கமும் தேவையில்லை. புதிய எருசலேம் இயேசு கிறிஸ்துவுக்காக ஆயத்தமாக்கப்பட்ட, அலங்கரிக்கப்பட்ட, மணவாட்டி. அதன் பொருள் என்னவென்றால் எல்லாவிதத்திலும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்குப் பொருத்தமான ஒரு நிலையை அடைந்த ஒரு மணவாட்டி என்று வைத்துக்கொள்வோம்.

அதன்பிறகு, 21ஆம் அதிகாரத்திலும், 22ஆம் அதிகாரத்திலும் புதிய எருசலேமைப்பற்றிய ஒரு சித்தரிப்பு அல்லது ஒரு வருணனை காணப்படுகிறது. இதை நான் உங்களுக்கு ஒரு வீட்டுப் பாடமாகத் தருகிறேன். நீங்கள் அதை அக்கறையோடு, சிரத்தையோடு, செய்யுங்கள். இதைப் படித்தவுடன் நீங்கள் அதைப் புரிந்துகொள்ள மாட்டீர்கள். எனக்கும் அது புரியவில்லை. சில சமயங்களில் சில காரியங்கள் புரியவில்லை என்றால், புரிந்துகொள்கிற அவசரத்திலே நாமே ஒரு அர்த்தத்தை அதற்குச் சேர்த்துக்கொள்வோம். புரிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆத்திரம், அவசரம்; அங்கு அந்த அர்த்தம் இல்லை. ஆனால் எனக்கு உடனடியாக புரிந்துகொள்ள வேண்டும் என்று ஒரே அவசரம். ஆகவே, நான் ஒரு அர்த்தத்தை அதற்கு ஏற்றுகிறேன் அல்லது சூட்டிக்கொள்கிறேன். அந்த அர்த்தம் அங்கு இருக்காது.

புதிய எருசலேம் - தேவனுடைய மகிமை

இது தேவனுடைய மகிமையை அடைந்த எருசலேம் என்று அது வர்ணிக்கப்படுகிறது. இந்தப் புதிய எருசலேம் என்கிற நகரம் அல்லது மணவாட்டி தேவனுடைய மகிமையைப் பெற்றுவிட்டது. தேவனுடைய மகிமை என்பது தேவனுடைய ஜீவன், தேவனுடைய தன்மை, தேவனுடைய குணம், தேவனுடைய உள்ளமைப்பு, தேவனுடைய வல்லமை, தேவனுடைய வழிகள் - இவைகளெல்லாம் மனிதர்கள் பார்க்குமாறு, கேட்குமாறு, மனிதர்களுக்குப் புலப்படுமாறு வெளிப்படுவதுதான் தேவனுடைய மகிமை. மீண்டும் சொல்லுகிறேன். தேவன் மிகவும் வல்லமையுள்ளவர். ஆனால், நமக்கு அது புலப்படும்போதுதான் அது தேவனுடைய மகிமையாக மாறுகிறது. நமக்குப் புலப்படாவிட்டால் அது தேவனுடைய மகிமையில்லை.

யோவான் முதல் அதிகாரத்தில் “அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது,” என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைபற்றி எழுதப்பட்டிருக்கிறது. அவருடைய மகிமை தேவனுடைய ஒரேபேறான குமாரனுக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது. “தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.” தேவன் யார் என்பதை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வெளிப்படுத்துகிறார். ஆகவே, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துமூலம் தேவனுடைய மகிமை வெளிப்பட்டது. ஆகவே, மறைவான தேவனுடைய ஜீவனையும், அவருடைய தன்மையையும், அவருடைய குணத்தையும், அவருடைய வல்லமையையும், அவருடைய வழிகளையும் மனிதர்கள் காணுமாறு வெளிப்படுத்துவது அல்லது புலப்படுத்துவதுதான் தேவனுடைய மகிமை.

தேவனுடைய மகிமை. இப்படி ஒரு வரையறையைத் தரும்போது நீங்கள் அதை மனதில் வைத்துக்கொண்டு முழு வேதாகமத்தையும் வாசிக்கும்போது ஆதியாகமத்திலிருந்து வெளிப்படுத்தினவிசேஷம்வரை நாம் பார்க்கும்போது எங்கெல்லாம் தேவனுடைய மகிமை என்ற வார்த்தை வருகிறதோ அப்‍போதெல்லாம் நீங்கள் இதைத் தொடர்புபடுத்திப்பார்க்க வேண்டும். இது ஒரு பெரிய பயிற்சி. புதிய எருசலேம் என்கிற நகரம் அல்லது மணவாட்டி தேவனுடைய மகிமையினால் நிறைந்திருக்கிறது என்றால், அதனுடைய பொருள் தேவனுடைய ஜீவன், தேவனுடைய தன்மை, God’s life, God’s nature, God’s character, God’s constitution, God’s power, God’s ways இவைகள் எல்லாம் இப்போது இந்தப் பரிசுத்த நகரத்திலும் அல்லது இந்த மணவாட்டியின்மூலமாகவும் வெளிப்படுகிறது.

தேவனுடைய மகிமை தேவ மக்கள்மூலம் வெளிப்படுதல்

தேவனுடைய மகிமை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துமூலமாக வெளிப்படுவது ஒன்று. ஆனால், தேவனுடைய மகிமை அவருடைய பிள்ளைகளாகிய நம் எல்லார்மூலமாகவும் வெளிப்படுவது இன்னொன்று. அவருடைய மகிமை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின்மூலமாக வெளிப்படுவது மட்டுமில்லை, அவருடைய மகிமை தேவனுடைய மக்கள் எல்லார்மூலமாகவும் வெளிப்படுவதுமே தேவனுடைய ஆசை, தேவனுடைய விருப்பம், தேவனுடைய வாஞ்சை. ஆகவேதான் ரோமர் 8 ஆம் அதிகாரம் 28, 29, 30 ஆம் வசனங்களிலே நாம் தேவனுடைய அந்த குறிக்கோளையும், தேவனுடைய நோக்கத்தையும்பற்றி, “அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்; எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்,” என்று வாசிக்கிறோம்.

தேவனுடைய செயல்பாடு எப்படியிருக்கும் என்றால் முதலாவது அவர் முன்னறிகிறார், பின்பு முன்குறிக்கிறார், அதன்பின் நீதிமான்களாக்குகிறார், கடைசியாக மகிமைப்படுத்துகிறார். நீதிமான்களாக்குவது ஒரு படி, மகிமைப்படுத்துவது இறுதிப் படி. என்றைக்கு நாம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறோமோ அன்றைக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினுடைய அருமையினால் நீதிமான்களாக்கப்படுகிறோம்; நாம் அருமையானவர்கள் என்பதால் இல்லை, இயேசு கிறிஸ்துவினுடைய வாழ்க்கையும், அவருடைய சிலுவை மரணமும், தேவனுடைய பார்வையிலே அருமையானது என்பதால், அவருடைய சிலுவை மரணத்தின் preciousness கருதி நாம் நீதிமான்களாக்கப்படுகிற‍ேம். நாம் நீதிமான்களாக்கப்படுவதற்கு எதையும் செய்யவேண்டிய அவசியம் இல்லை. இயேசு கிறிஸ்துவினுடைய சிலுவை மரணத்தின்மேல் நாம் வைக்கிற விசுவாசம் நம்மை நீதிமான்களாக்குகிறது. ஆனால், மகிமைப்படுத்துவது என்பது ஒரு வழிமுறை, ஒரு நிகழ்வுமுறை, ஒரு process. இந்த மனித வாழ்க்கை முழுவதும் நாம் கிறிஸ்துவின் சாயலுக்கு மறுஉருவாக்கப்பட்டு, இறுதியாக நாம் மகிமைப்படுத்தப்படுகிறோம். ஆகவே தேவனுடைய நோக்கம், தேவனுடைய குறிக்கோள், தேவனுடைய இலக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிற அவருடைய மக்கள் எல்லோரையும் முன்னறிந்தது மட்டும் அல்ல, முன்குறித்தது மட்டும் அல்ல, நீதிமான்களாக்கினது மட்டும் அல்ல, அவர்களை மகிமைப்படுத்தவும் வேண்டும்.

இந்தப் பரிசுத்த நகரத்தை, மணவாட்டியை, பார்க்கும்போது மகிமைப்படுத்தப்பட்டிருக்கிறது. தேவன் தம் நோக்கத்தை நிறைவேற்றியே தீருவார் என்பது நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இன்றைக்கு நம்முடைய வாழ்க்கையை அல்லது நம்மைச்சுற்றி இருப்பவர்களுடைய வாழ்க்கையைப் பார்க்கும்போது நாமெல்லாம் மகிமைப்படுத்தப்படுவோம் என்று நமக்கு அதிகமான நம்பிக்கை இல்லை. நம்மைப்பற்றியும் நம்பிக்கை இல்லை, நம்மைச்சுற்றி இருப்பவர்களைப்பற்றியும் நம்பிக்கை இல்லை. மகிமைப்படுத்துவோம் என்ற நம்பிக்கை இல்லை. ஆனால், தேவன் அந்தக் குறிக்கோளை நிறைவேற்றுகிறார்.

திருவெளிப்பாடு 21:11: “அதின் பிரகாசம் மிகவும் விலையுயர்ந்த இரத்தினக்கல்லைப்போலவும், பளிங்கினொளியுள்ள வச்சிரக்கல்லைப்போலவும் இருந்தது.” இன்னும் ஒரேயொரு வசனத்தை வாசிக்க விரும்புகிற‍ேன். 18ஆம் வசனம். “அதின் மதில் வச்சிரக்கல்லால் கட்டப்பட்டிருந்தது; நகரம் தெளிந்த பளிங்குக்கு ஒப்பான சுத்தப்பொன்னாயிருந்தது.” புதிய எருசலேமில் பொன், விலையேறப்பெற்ற கற்கள் போன்றவைகளை நாம் நிறையப் பார்ப்போம். வாசிப்போமா? புரிந்துகொள்ள முடியாவிட்டாலும் வாசிக்கலாம். பத்தொன்பதாம் வசனத்திலிருந்து இருபத்தோராம் வசனம்வரை. “நகரத்து மதிலின் அஸ்திபாரங்கள் சகலவித இரத்தினங்களினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன; முதலாம் அஸ்திபாரம் வச்சிரக்கல், இரண்டாவது இந்திரநீலம், மூன்றாவது சந்திரகாந்தம், நான்காவது மரகதம், ஐந்தாவது கோமேதகம், ஆறாவது பதுமராகம், ஏழாவது சுவர்ணரத்தினம், எட்டாவது படிகப்பச்சை, ஒன்பதாவது புஷ்பராகம், பத்தாவது வைடூரியம், பதினோராவது சுநீரம், பன்னிரண்டாவது சுகந்தி இவைகளே. பன்னிரண்டு வாசல்களும் பன்னிரண்டு முத்துக்களாயிருந்தன; ஒவ்வொரு வாசலும் ஒவ்வொரு முத்தாயிருந்தது. நகரத்தின் வீதி தெளிவுள்ள பளிங்குபோலச் சுத்தப்பொன்னாயிருந்தது.” 

இதை வாசிக்கும்போது நம்முடைய பூமிக்குரிய மனம், “ஏ! அப்பா பொன், முத்து, விலையேறப்பெற்ற கற்களா!” என்று வியக்கும். தேவனுடைய மக்கள் இப்படிப் புரிந்துகொண்டதையும், பிரசங்கம் பண்ணுவதையும் நாம் அதிகமாய்க் கேட்டிருப்போம். “பரலோகத்திலே நாம் பொன் வீதியிலே நடப்போம். ஆகவே, நாம் இந்தப் பூமியில் இருக்கும்போது, பொன்னைக் காதில், கைகளில், போட்டுக்கொள்ளக் கூடாது. அந்தப் பொன் எங்கிருக்கும்? நம் கால்களுக்குக் கீழேயிருக்கும். கால்களுக்குக் கீழே இருக்கிற பொன்னை காதிலே போட்டுக்கொள்கிறாயே! இது சரியா?”” என்று பிரசங்கிக்கிற பிரசங்கிமார்களை நமக்குத் தெரியும். உடனே எல்லோரும், சரியில்லை,” என்று சொல்ல வேண்டும்.

தேவனுடைய மக்கள் தங்களைப் பொன்னால் அலங்கரிக்கக் கூடாது என்று அவர்களுக்குக் கற்பிப்பதற்கு வேறுவிதமாக வேண்டுமானால் கற்பிக்கலாமேதவிர இந்த வசனங்களை வைத்துக்கொண்டு கற்பிக்க முடியாது. ஏனென்றால், அந்த பரிசுத்த நகரத்தில் இருப்பதாகச் சொல்லப்பட்டுள்ள பொன் நாம் இன்று பயன்படுத்துகிற பொன் என்கிற ஓர் உலோகம் இல்லை. இங்கு சொல்லப்பட்டுள்ள பொன்னில் ஒரு சத்தியம், ஒரு கருத்து இருக்கும். எடுத்துக்காட்டாக, “அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்,” என்று 1 பேதுருவில் வாசிக்கிறோம். ஒரு காரியம் மிகவும் விலையேறப்பெற்றது, மிக அருமையானது, அழிந்துபோகாதது என்பதைச் சுட்டிக்காட்ட பொன்னை ஓர் உவமையாக, ஒப்பாக, சொல்லுகிறார்கள். ஒன்று அருமையானது, விலையேறப்பெற்றது என்பதை விளக்க பொன்னை ஓர் எடுத்துக்காட்டாகப் பயன்படுத்துகிறார்கள். பொன் துருப்பிடிக்காது. இல்லையா?

இதுபோன்ற சில அப்பட்டமான, வெளிப்படையான உண்மைகளை நாம் சொல்லலாம். “உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்து வந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல், குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே,” என்று பேதுரு தன் நிருபத்தில் குறிப்பிடுகிறார். ஆகவே, பொன்னைப்பற்றிச் சொல்லும்போது அது துருப்பிடிக்காதது, மங்காதது! இவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும்.

இங்கு சொல்லப்பட்டுள்ள பொன் நாம் இன்றைக்குப் பயன்படுத்துகிற பொன் அல்ல. பொன் என்பது தேவனுடைய ஒரு தன்மையை அல்லது தேவனுடைய ஒரு குணத்தைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிற ஒரு சொல். அது விலையேறப்பெற்றது, அருமையானது, துருப்பிடிக்காதது, மங்காதது. ஒருபடி மேலே போய், “அது தேவனுடைய சுபாவத்தைக் குறிக்கிறது, தேவனுடைய தன்மையைக் குறிக்கிறது. பொன் என்பது divine natureயைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிற ஒரு சொல்,” என்று என்னால் சொல்ல முடியும். அவ்வளவுதான் சொல்ல முடியும். ரொம்ப உற்சாக மிகுதியினால், “பொன் அதைக் குறிக்கிறது, இதைக் குறிக்கிறது,” என்று நாம் துள்ளிவிடக்கூடாது. பொன் என்பது தேவனுடைய தன்மையைக் குறிக்கிறது.

இந்த நகரத்தைப் பார்க்கும்போது, அதின் பிரகாசம் மிகவும் விலையுயர்ந்த இரத்தினக்கல்லைப்போலவும், பளிங்கின் ஒளியுள்ள வச்சிரக்கல்லைப்போலவும் இருந்தது என்று பதினோறாம் வசனத்தில் வாசிக்கிறோம். வச்சிரக்கல் - ஆங்கிலத்தில் Jasper.

ஆராய்தல்

சகோதர, சகோதரிகளே! இதைப்பற்றி நீங்கள் கொஞ்சம் ஆராய்ச்சிபண்ண வேண்டும். நன்றாகக் கவனிக்க வேண்டும், ஆராய்ச்சி வேறு, கற்பனை வேறு. இந்த ஆராய்ச்சி ஒரு வருடத்தில் முடிந்து விடும் என்று நான் நினைக்கவில்லை. இந்த ஆராய்ச்சி ஒரு வருடம் எடுக்கலாம், ஐந்து வருடம் எடுக்கலாம், பத்து வருடம் எடுக்கலாம். இன்னொரு பக்கம் ஆராய்ச்சிசெய்ய ஆரம்பித்தால் நமக்குமுன் இதைப்பற்றி ஆராய்ச்சிசெய்த, தலைசிறந்த ஆராய்ச்சியாளர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதைப்பற்றியும் நாம் ஆராய்ச்சிசெய்ய வேண்டும்? பத்துப்பேர் சொல்லியிருப்பார்கள்; அதில் தலைசிறந்த ஆராய்ச்சியாளர்கள் இரண்டுபேர்தான் இருப்பார்கள். மற்ற எட்டு‍ப்பேர் பொய்யான ஆராய்ச்சியாளர்களாக இருப்பார்கள். ஆகவே, ஆராய்ச்சிசெய்யும்போது யார் உண்மையான ஆராய்ச்சியாளன், யார் பொய்யான ஆராய்ச்சியாளன் என்று வேறுபிரிக்க வேண்டியது அவசியம்.

வச்சிரக்கல் - நகரம், சுவர், அடித்தளம், தேவன்

வச்சிரக்கல் பச்சை நிறமாக இருக்கும். பளிங்கிற்கு ஒப்பான அல்லது பளிங்கின் ஒளியுள்ள வச்சிரக்கல் என்றால் அது மிகவும் transparentஆன ஒரு பச்சைக்கல். அந்தப் பரிசுத்த நகரத்தை, புதிய எருசலேமை, பார்க்கும்போது, முதலாவது நமக்கு வருகின்ற impression என்ன? ஒருவேளை தூரத்திலிருந்து ஒரு நகரத்தைப் பார்க்கும்போது அல்லது அந்த நகரத்தின் அருகில் வருகின்றவர்கள் பெறுகின்ற முதலாவது உணர்வு என்ன? புதிய எருசலேமைப் பார்க்கிறவர்கள் பெறுகிற முதலாவது உணர்வு “இது பளிங்கின் ஒளியுள்ள ஒரு வச்சிரக்கல்.” இது மிகவும் முக்கியமானது என்பதைக் காண்பிப்பதற்காக அதே அதிகாரம் பதினெட்டாவது வசனத்தை வாசிப்போம். “அதின் மதில் வச்சிரக்கல்லால் கட்டப்பட்டிருந்தது.” தூரத்திலிருந்து பார்த்தவர்கள் முதலாவது “பளிங்கின் ஒளியுள்ள வச்சிரக்கல்லைப்” பார்த்தார்கள். அதின் சுவர் எப்படி இருந்தது? வச்சிரக்கல்லாக இருந்தது.

சுவருக்குக்கீழே அஸ்திபாரம், அடித்தளம், போட்டிருக்கின்றார்கள். பன்னிரெண்டு அஸ்திபாரங்கள். பன்னிரெண்டு அஸ்திபாரங்கள் என்றால் பன்னிரெண்டு அடுக்குகளாலான அடித்தளம் என்று நான் நினைக்கிறன். எடுத்துக்காட்டாக, முதலாவது மணல் போடுகின்றார்கள், அதற்குப்பின்பு ஜல்லி போடுகின்றார்கள், அதன்பிறகு இரும்பு grid போடுகிறார்கள். இப்படிப் பல அடுக்குகளால்தான் கட்டிடங்களைக் கட்டுவதற்கு அஸ்திபாரங்கள் போடுகின்றார்கள். நான் இப்படி கற்பனைசெய்கிறேன். பன்னிரெண்டு அடுக்குகளாலான ஓர் அடித்தளம். முதல் அடித்தளம் அல்லது முதல் அடுக்கு என்ன? முதலாம் அஸ்திபாரம் வச்சிரக்கல். ஆகவே, இந்த வச்சிரக்கல் மற்ற எல்லாவற்றையும்விட மிக முக்கியமானது என்று நான் நினைக்கிறன். நன்றாகக் கவனிக்க வேண்டும்.

நான் தேறிமுடித்து விட்டேன் என்பதுபோல் பேசவில்லை. இந்த மாதிரி காரியங்களைப் பேசும்போது நான் பொதுவாக திருவெளிப்பாட்டைப்பற்றி பேசுவதே கிடையாது. “நீங்கள் புதிய எருசலேமைப்பற்றி பேசியதே இல்லையே,” என்றுகூடச் சிலர் சொல்வதுண்டு.

சுவர் வச்சிரக்கல், பளிங்கிற்கு ஒப்பான அல்லது ஒரு கண்ணாடியைப்போன்ற வச்சிரக்கல். அடித்தளத்தின் முதல் அடுக்கு வச்சிரக்கல். நகரம் வச்சிரக்கல்லைப்போல் இருந்தது. திருவெளிப்பாடு 4:2, 3ஆம் வசனங்களை வாசிப்போம். “உடனே ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது, இதோ, வானத்தில் ஒரு சிங்காசனம் வைக்கப்பட்டிருந்தது, அந்தச் சிங்காசனத்தின்மேல் ஒருவர் வீற்றிருந்தார். வீற்றிருந்தவர், பார்வைக்கு வச்சிரக்கல்லுக்கும் பதுமராகத்துக்கும் ஒப்பாயிருந்தார்; அந்தச் சிங்காசனத்தைச்சுற்றி ஒரு வானவில்லிருந்தது; அது பார்வைக்கு மரகதம்போல தோன்றிற்று.” அந்தச் சிங்காசனத்தைச்சுற்றி ஒரு வானவில் இருந்தது. அது பார்வைக்கு மரகதம்போல் தோன்றிற்று.

வேதாகமத்தில் நமக்குப் புரியாத காரியங்கள் நிறைய இருக்கும். ஆனால், சில காரியங்கள் தெளிவாகப் புரிந்துவிடும். புரிந்துகொள்கிற காரியங்களே நமக்கு மிகவும் பயனுள்ளவை. புரியாத காரியங்களைப்பற்றி நாம் மிகவும் அலட்டிக்கொள்ள வேண்டாம். நேரம் கிடைக்கும்போது நாம் ஆராய்ந்துபார்க்கலாம்.

யோவான் ஆவிக்குள்ளாகிறார். ஒன்றாம் வசனம். “இதோ, பரலோகத்தில் திறக்கப்பட்டிருந்த ஒரு வாசலைக் கண்டேன்.” இரண்டாம் வசனம். “இதோ, வானத்தில் ஒரு சிங்காசனம் வைக்கப்பட்டிருந்தது, அந்தச் சிங்காசனத்தின்மேல் ஒருவர் வீற்றிருந்தார்.” அது தேவன். வீற்றிருந்தவர் பார்வைக்கு எப்படி இருந்தார்? மூன்றாம் வசனம். “வீற்றிருந்தவர், பார்வைக்கு வச்சிரக்கல்லுக்கும் பதுமராகத்துக்கும் ஒப்பாயிருந்தார்.” ஒரு நபர் இருக்கிறார். அவர் வச்சிரக்கல்லுக்கு ஒப்பாயிருக்கிறார்.

இதை வாசிக்கும்போது அல்லது கேட்கும்போது உடனே “தேவன் வச்சிரக்கல்லில் செதுக்கப்பட்ட ஒரு சிலைபோல இருந்தார்,” என்று நாம் கற்பனைசெய்யக் கூடாது. இவையெல்லாம் குறியீடுகளும், அடையாளங்களும், உவமைகளும், உருவகங்களுமாய் இருக்கின்றன.

வச்சிரக்கல் - தேவனுடைய ஜீவன்

இப்போது நான் ஒரு தாண்டு தாண்டி ஒரு பொருள் கொடுக்கப்போகிறேன். சொல்லிவிட்டுத்தான் தாண்டுகிறேன். நான் தாண்டுகிறேன் என்பதால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். வச்சிரக்கல் என்பதற்கு பொருள் என்னவென்றால் அது பசுமையாக இருக்கிறது. ஆகவே, வச்சிரக்கல் என்பது தேவனுடைய ஜீவனைக் குறிக்கிறது. இவ்வளவுதான் நான் சொல்லுகிறேன். நான் இதற்குமேல் போகவில்லை. இதேயே நான் தாண்டல் என்றுதான் சொல்லுகிறேன்.

“என்ன அடிப்படையிலே வச்சிரக்கல் தேவனுடைய ஜீவன் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?” என்று நீங்கள் கேட்கலாம். அது பசுமையாக இருப்பதால் அது ஜீவனைக் குறிக்கிறது என்று நான் சொல்லுகிறேன். தேவன் வச்சிரக்கல்லுக்கு ஒப்பாயிருக்கிறார். தேவனுடைய மகிமையடைந்த புதிய எருசலேம் வச்சிரக்கல்லுக்கு ஒப்பாயிருக்கிறது. அதன் மதில் வச்சிரக்கல்லாய் இருக்கிறது. அதின் அடித்தளத்தின் முதல் அடுக்கு வச்சிரக்கல்லாய் இருக்கிறது. இது எதைக் குறிக்கிறது என்றால், தேவன் ஜீவனாக இருக்கிறார். நாம் மகிமை அடைவதற்கு முதல் அடிப்படையானது நாம் தேவனுடைய ஜீவனில் பங்குபெற்றிருக்கிறோம். தேவன் தம் எல்லா அசைவுகளையும், இயக்கங்களையும், செயல்பாடுகளையும் முடிக்கும்போது அந்த விளைபொருள் தேவனுடைய ஜீவனால் நிறைந்ததாக அது இருக்கும். அதைத் தூரத்தில் இருந்துப் பார்ப்பவர்களும் தேவனுடைய ஜீவனை உணர்வார்கள். அருகில் வந்து பார்ப்பவர்களும் தேவனுடைய ஜீவனை உணர்வார்கள். முற்றுமுடிய, முழுக்க முழுக்க இந்த விளைபொருள் தேவனுடைய ஜீவனால் நிறைந்ததாகவும், தேவனுடைய ஜீவனை மற்றவர்களுக்குப் பகிர்ந்தளிப்பதாகவும் இருக்கும்.

இதை வலியுறுத்துவதற்காக நான் இரண்டு வசனங்களைக் கூறுகிறேன். திருவெளிப்பாடு 22:1, 2 “பின்பு, பளிங்கைப்போல் தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டுவருகிறதை எனக்குக் காண்பித்தான். நகரத்து வீதியின் மத்தியிலும், நதியின் இருகரையிலும், பன்னிரண்டுவிதமான கனிகளைத்தரும் ஜீவவிருட்சம் இருந்தது, அது மாதந்தோறும் தன் கனியைக் கொடுக்கும்; அந்த விருட்சத்தின் இலைகள் ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவானவைகள்.” நகரத்தின் மத்தியில் ஜீவத் தண்ணீருள்ள பளிங்கிற்கு ஒப்பான பளிங்கைப்போல் தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி புறப்பட்டு ஓடுகிறது. நதியின் இரு மருங்கிலும், இரு கரைகளிலும், ஜீவதரு அல்லது ஜீவ விருட்சம் வளர்கிறது. அதே 22ஆம் அதிகாரம் 17ஆம் வசனம்: “ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்.”

ஆதியாகமத்தில் முதலாவது தேவனுடைய தோட்டத்தின் நடுவில் ஜீவதரு இருந்தது என்று நாம் பார்க்கிறோம். திருவெளிப்பாட்டின் கடைசி அதிகாரத்திலும் ஜீவதரு இருப்பதைப் பார்க்கிறோம். அதே அதிகாரம் 22:14 ஆம் வசனம். “ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.” ஆகவே, இந்த ஒரு குறிப்பில் நமக்கு எந்தச் சந்தேகமும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தேவனுடைய மக்களாகிய நம்மைத் தொடர்புகொள்கிறவர்கள் - தனிப்பட்ட விதத்திலும் சரி, சபையாகவும் சரி - முதலாவது எதைத் தொட வேண்டும்? நம்முடைய உபதேசத்தைத் தொடக்கூடாது, நம்முடைய ஒழுங்குமுறைகளைத் தொடக்கூடாது; நம்முடைய வேறு எதையும் அவர்கள் தொடக்கூடாது. நம்மோடு தொடர்புக்கு வருகிறவர்கள் முதலாவது தொடவேண்டியது நம்மிடத்திலுள்ள தேவனுடைய ஜீவன். நம்முடைய உபதேசம் மிக நேர்த்தியாக இருக்கலாம்; ஆனால், தேவனுடைய ஜீவன் இல்லாமல் போகிற வாய்ப்பு உண்டு. நம்முடைய ஒழுங்குமுறைகள், அமைப்புமுறைகள் மிக நேர்த்தியாக இருக்கலாம்; ஆனால், தேவனுடைய ஜீவனைத் தொடாமல் போகிற வாய்ப்பு உண்டு. சில பேரிடத்தில் உபதேசம் முன்னேபின்னே இருக்கும். அவர்களுடைய ஒழுங்குமுறைகளும், அமைப்புமுறைகளும் முன்னேபின்னே இருக்கும். ஆனால், மக்கள் அவர்களிடத்தில் எதைத் தொடுவார்கள்? தேவனுடைய ஜீவனை அவர்கள் தொடுவார்கள்.

நிறைவுசெய்யும் தேவனுடைய ஜீவன்

தேவனுடைய ஜீவன் மனிதர்களுடைய மிக உள்ளான தேவையைப் பூர்த்திசெய்யும். “ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன்.” நம்முடைய உபதேசம் பூர்த்திசெய்ய முடியாததை, நம்முடைய ஒழுங்குமுறைகளும், அமைப்புமுறைகளும், நம்முடைய அறிவும், ஞானமும் பூர்த்திசெய்ய முடியாததை, நிறைவுசெய்ய முடியாததை தேவனுடைய ஜீவன் நிறைவு செய்யும். ஆகவே, “நான் யாரைத் தொடர்புகொள்கிறேனோ அல்லது யார் என்னைத் தொடர்புகொள்கிறார்களோ அவர்கள் முதலாவது என்னிடத்தில் தேவனுடைய ஜீவனைத் தொட வேண்டும்,” என்பது நம்முடைய ஒரு ஜெபமாக இருக்க வேண்டும்.

“வேதாகமம் எனக்கு நல்லாத் தெரியாது, நான் இப்போதுதான் வேதாகமத்தை வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன்,” என்று சிலர் சொல்லலாம். வேதாகமத்தை இப்போதுதான் வாசிக்க ஆரம்பித்திருப்பவர்கள் இயேசு கிறிஸ்துவைப்பற்றி ஒரு கடையில் போய்ச் சொல்லும்போது, அவர்கள் இரட்சிக்கப்பட முடியுமா, முடியாதா?. முடியும். நாம் எவ்வளவு அழகாக, எவ்வளவு ஒழுங்காக, எவ்வளவு நேர்த்தியாக இயேசுகிறிஸ்துவைப்பற்றிச் சொல்லுகிறோம் என்பதல்ல காரியம். நீங்கள் சொன்ன ஒரு வாக்கியம் அவர்களுக்குள் எங்கோ மறைந்திருந்த ஒரு குறைபாட்டை, ஒரு வெறுமையை, ஒரு மாயையை, ஒரு சூனியத்தை, ஓர் இருளை மாற்றியிருக்கும். அது தேவனுடைய ஜீவன். அது அவர்களுக்குப் பெரிய விடுதலையைத் தந்திருக்கும், பெரிய மகிழ்ச்சியைத் தந்திருக்கும், பெரிய இன்பத்தைத் தந்திருக்கும். அது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவோடு உங்களுக்குள்ள உறவைப் பொறுத்தது. அதற்கு நம்முடைய அறிவு, நம்முடைய ஞானம், நம்முடைய புத்திக்கூர்மை, நம்முடைய மதிநுட்பம், நம்முடைய ஒழுங்குமுறைகள், நம்முடைய அமைப்புமுறைகள் ஆகியவைகளெல்லாம் ஒரு பொருட்டல்ல.

நன்றாய்க் கவனிக்க வேண்டும். ஒழுங்குமுறை, அமைப்புமுறை, அறிவு, ஞானம், மதிநுட்பம் இவைககளெல்லாம் வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. ஆனால், அவைகள்‍ குறைவாக இருப்பது ஒரு மட்டுப்பாடு, ஒரு limitation இல்லை.

புதிய எருசலேம் - தேவனுடைய இறுதி இலக்கு

ஒன்றேயொன்று நான் சொல்லியிருக்கிறேன். தேவனுடைய இறுதிக் குறிக்கோள், தேவனுடைய இறுதி இலக்கு, பதிய எருசலேம். அது ஒரு நகரம். அது ஒரு மணவாட்டி. வேதாகமம் இந்த நகரத்தைப்பற்றி மிக விளக்கமாக சித்தரித்திருக்கிறது.

இப்போது நான் வச்சிரக்கல்லைப்பற்றிச் சொன்னதுபோல, மீதி பதினொரு கற்களுக்கு என்ன பொருள் என்று நீங்கள் ஆராய்ச்சிசெய்ய வேண்டும். இந்த ஆராய்ச்சியை நான் செய்ய மாட்டேன். நீங்கள் இதற்கு ஐந்து வருடம் எடுத்துக்கொள்ளுங்கள். கண்டதைப்பற்றியெல்லாம் ஆராய்ச்சிசெய்ய வேண்டாம். மிக முக்கியமான, மிக அருமையான காரியங்களை நாம் ஆராய்ச்சிசெய்ய வேண்டும்.

உண்மையிலேயே தேவன் இந்தப் பன்னிரெண்டு கற்களுக்குப்பின்பு ஓர் ஆவிக்குரிய உட்கருத்து அல்லது ஆவிக்குரிய பொருள், வைத்திருக்கிறாரா? வச்சிரக்கல்லினோடு என்னுடைய ஆராய்ச்சியை நான் முடித்துக்கொண்டேன். அவ்வளவுதான்.

“இந்தப் பன்னிரெண்டு கற்களும் ஏழு நிறங்களாலானவை. ஏழு நிறங்கள் வானவில்லின் ஏழு நிறங்கள். வானவில் என்பது தேவன் நோவாவோடு செய்த உடன்படிக்கையைக் குறிக்கிறது,” என்று இன்னொரு சகோதரர் சொல்லுகிறார். அதெல்லாம் சரியாக இருக்கலாம் அல்லது சரியாக இல்லாமல் இருக்கலாம். இதுதான் ஆராய்ச்சி செய்கிறவர்களுக்கு வருகின்ற பெரிய கஷ்டம். இப்போது இவர் சொல்லுகிறது சரியா, இல்லையா என்பதற்கு என்ன நிரூபணம்? அது உங்களுடைய கருத்து, அழகான கருத்து, பயனுள்ள கருத்து. ஆனால், அந்தக் கருத்து இங்கு சொல்லப்பட்ட கருத்தென்று சொல்ல முடியாது.

தேவனுடைய நித்திய நோக்கம்

“என்ன சகோதரரே, திடீரென்று நீங்கள் இன்றைக்கு‍ப் புதிய எருசலேமைப்பற்றி பேச வேண்டும் என்று தீர்மானித்து விட்டீர்களா?” என்று நீங்கள் கேட்கலாம். இல்லை இல்லை. நான் என்னுடைய கருப்பொருளைவிட்டு முன்பின் விலகுவது கிடையாது. ஒரு கூட்டம் மனிதர்களை அவருடைய முதல் மனிதனாகிய இயேசு கிறிஸ்துவின் சாயலுக்கு மறுவுருவாக்கி, ஒத்தவுருவாக்குவது தேவனுடைய நோக்கம். இது அவர் தனிப்பட்ட மனிதர்களிடத்தில் செய்கின்ற வேலை இல்லை. அதை ஒரு கூட்டம் அல்லது கூட்டம் என்று சொல்கிற வார்த்தை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் ஒரு சமுதாயம் மக்களிடத்தில் அவர் செய்கிறார். ரோமர் எட்டாம் அதிகாரம் 29 ஆம் வசனத்திலேயே இந்த எண்ணம் அடங்கியிருக்கிறது. “தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்.” இயேசு கிறிஸ்து தேவனுடைய முதல் மகன். அவருக்கு எத்தனை மகன்கள் வேண்டுமாம்? தேவனுக்குப் பல மகன்கள் அல்லது இயேசு கிறிஸ்துவுக்குப் பல சகோதரர்கள் வேண்டும். ஆகவே, தேவன் ஒற்றை ஒற்றையாய்ச் செய்யவில்லை; “இயேசு கிறிஸ்து தேவனின் முதல் மகன்; அதன்பின் இந்த ஒற்றைச் சகோதரன் மறுவுருவாக வேண்டும், அப்புறம் இரண்டாவது இந்த ஒற்றைச் சகோதரன் மறுவுருவாக வேண்டும். மூன்றாவது இந்த ஒற்றைச் சகோதரன் மறுவுருவாக வேண்டும்,” என்பதில்லை. அவர் ஒரு சமுதாயமாக அல்லது ஒரு குடும்பமாக பல சகோதரர்களை அழைத்திருக்கிறார்.

தேவனுடைய நித்திய நோக்கமும் தேவ மக்களுடைய உறவாடலும்

ஆகவே, இதை நன்றாய்க் கவனிக்க வேண்டும். நான் வலியுறுத்த விரும்புகிற காரியம் இதுதான். மறுவுருவாகுதல் என்பது ஒரு தீவிலோ அல்லது ஒரு குகையிலோ நடைபெறுகிற காரியம் இல்லை. மறுவுருவாதல் என்பது ஒரு குடும்பத்தில் நடைபெறுகிற காரியம். தேவனுடைய குடும்பத்தில் நடைபெறுகிற காரியம். ரோமர் 8:29 இல் இந்த எண்ணம் உள்ளது. ஏனென்றால் இயேசு கிறிஸ்து முதல் மகன்; நாம் அவருடைய பல சகோதரர்கள். பல சகோதரர்களாய்க் கூடிச்சேர்ந்துதான் நாம் மறுவுருவாக முடியும். கூடிச்சேர்ந்து வாழ்வது எளிமையானதா, கடினமானதா? கடினமானது. எந்த அளவுக்கு நாம் மற்றவர்களோடு interact பண்ணுகிறோமோ, (interact என்பதற்குத் தமிழ் மொழிபெயர்ப்பு உங்களிடத்தில் இருந்தால் கொடுங்கள். இல்லையென்றால் நானே சொல்லுகிறேன். ஊடாடுகிறோமோ, interact) அந்த அளவுக்குப் பிரச்சினைகள் அதிகம். Monastery, குருமடங்களுக்குப் போய்விட்டால் பிரச்சினைகள் மிகவும் குறைவு. அவரவர்களுக்கு அவரவர் அறை உண்டு. சாப்பிடப்போகும்போதுகூட அமைதியாகச் சாப்பிட போவோம். அமைதியாகப் சாப்பிடுவார்கள். அமைதியாகத் தங்கள் அறைகளுக்குத் திரும்பிவிடுவார்கள். Interaction அதிகமாக இருந்தால் பிரச்சினைகள், சிக்கல்கள் அதிகமாக இருக்கும்.

நல்ல காலம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒரு monasteryஇல் வாழவில்லை. “அவர் வாழ்ந்தபோது monastery அதாவது குருமடமோ அல்லது சந்நியாசி மடங்களோ இல்லை. ஆகவே, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அப்படி வாழ்ந்தார்,” என்று நீங்கள் சொல்லலலாம். இல்லை இல்லை. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வாழ்ந்த காலத்திலேயே எசனேயர்கள் என்பவர்கள் வாழ்ந்தார்கள். எசனேயர்கள் Essanees வாழ்ந்தார்கள். அவர்கள் சந்நியாச வாழ்க்கை வாழ்ந்தார்கள். ஒரு பெரிய சமுதாயமாக வாழ்ந்தார்கள். வெள்ளை உடை உடுத்தியிருப்பார்கள். பெரும்பாலும் திருமணம் செய்ய மாட்டார்கள். எல்லாவற்றையும் பொதுவாக வைத்து அனுபவித்தார்கள். பொதுவாய்ச் சமைதார்கள். நீங்கள் ஒருவேளை எசனேயர்களைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால், யோவான் ஸ்நானன் ஒரு எசனேயர் என்றோ அல்லது எசனேயர்களால் வளர்க்கப்பட்டார் என்றோ நாம் கேள்விப்பட்டிருக்கமாட்டோம். அதைக் கேள்விப்படும்போது அது முற்றிலும் பொருத்தமாக இருக்கிறது. எசனேயர்களுடைய வாழ்க்கை எப்படிப்பட்டது?

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தேவனுக்குப் பிரியமான வாழ்க்கை வாழ வேண்டும் என்றுத் தீர்மானித்தபோது, ஆலோசனை கேட்பதற்கோ, கற்பிக்கப்படுவதற்கோ எசனேயர்களிடம் செல்லவில்லை. எசனேயர்களைப்பற்றி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்குத் தெரியும். ஆனால், இயேசு கிறிஸ்துவினுடைய போதகர்கள் எசனேயர்கள் இல்லை. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எசனேயர்களைவிடப் பல கோடி மடங்கு உயர்ந்த போதகர். அவர் ஒரு குடும்பத்தில் வாழ்ந்தார்; சீடர்களோடு ஒரு தெய்வீகக் குடும்பமாக வாழ்ந்தார்.

பக்திவிருத்தியா, கட்டியெழுப்படுவதா

ஆகவே, மறுவுருவாக்கப்படுவது என்பது நான் தேவனுடைய மக்களோடு எப்படி உறவாடுகிறோம் என்பதோடு நெருக்கமான தொடர்புடையது. இன்று என்னுடைய கருத்து இதுதான். மறுவுருவாக்கப்படுவதும், தேவனுடைய மக்களோடு நாம் எப்படி உறவாடுகிற‍ேம் என்பதும் மிகவும் நெருக்கமான தொடர்புடையது. தேவனுடைய மக்களோடு உறவாடுகிறதைத்தான் வேதம் அல்லது புதிய ஏற்பாடு கட்டியெழுப்பப்படுவது என்று அழைக்கிறது. துரதிஷ்டவசமாக எபேசியருக்கும், கொலோசெயருக்கும், கொரிந்தியருக்கும் பவுல் எழுதின கடிதங்களில் இந்த வார்த்தை வார்த்தை “பக்திவிருத்தி” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது பக்திவிருத்தி அல்ல, கட்டியெழுப்புதல். Build up. Build up என்கிற வார்த்தையைச் சில சமயங்களில் பக்திவிருத்தி என்று மொழிபெயர்க்கலாம். பல சமயங்களில் அதை “கட்டியெழுப்பப்படுவது” என்றுதான் மொழிபெயர்க்க வேண்டும். எபேசியர் 4ஆம் அதிகாரம் 16ஆம் வசனம், “அவராலே சரீரம் முழுதும், அதற்கு உதவியாயிருக்கிற சகல கணுக்களினாலும் இசைவாய்க் கூட்டி இணைக்கப்பட்டு, ஒவ்வொரு அவயவமும் தன்தன் அளவுக்குத்தக்கதாய்க் கிரியைசெய்கிறபடியே, அது அன்பினாலே தனக்கு பக்திவிருத்தி உண்டாக்குகிறதற்கேதுவாகச் சரீரவளர்ச்சியை உண்டாக்குகிறது,” என்று கூறுகிறது. “பக்திவிருத்தி” உண்டாக்குகிறது என்று எழுதியிருக்கிறது. இதைக் கட்டியெழுப்புகிறது என்று வாசிக்க வேண்டும்.

ஒருவன் சாப்பிட்டு உடற்பயிற்சி செய்வதின்மூலமாக அவருடைய உடல் வளர்கிறது என்று வைத்துக்கொள்வோம். உடல் பக்திவிருத்தி அடைகிறது என்று சொல்லலாமா? உடல் கட்டியெழுப்பப்படுகிறது என்று சொல்வோமா? உடல் கட்டியெழுப்பப்படுகிறது. கட்டப்படுவது அல்லது கட்டியெழுப்பப்படுவது என்பது ஒருவரோடு ஒருவர் நாம் எப்படி உறவாடுகிற‍ேம் என்பதைப் பொறுத்தது. ஆகவே, சபை என்பது பலர் நினைப்பதுபோல் ஒரு கட்டிடம் இல்லை. அது ஒரு கட்டிடம்தான். ஆனால், அது material things அல்லது ஜடப்பொருள்களால் கட்டப்பட்ட ஒரு கட்டிடம் இல்லை. தேவனுடைய மக்கள் ஒருவரோடு ஒருவர் எப்படி உறவாடுகின்றார்கள் என்பதுதான் கட்டப்படுவது. இந்த உலகத்திலே இது ஒரு மிகப் பெரிய பிரச்சினை. நாம் ஒரு குடும்பமாக இருந்தாலும் சரி அல்லது வேலை பார்க்கிற இடமாக இருந்தாலும் சரி ஒருவ‍ரோடொருவர் எப்படி உறவாடுவது என்பது மிகப் பெரிய பிரச்சினை. “இவர்கள் இந்த அலுவலகத்தைவிட்டுப் போய்விட மாட்டார்களா?” என்று அவர்களும், “அவர்கள் இந்த அலுவலகத்தைவிட்டுப் போய்விட மாட்டார்களா?” என்று இவர்களும் வாஞ்சிப்பதும், ஏங்குவதும், கதறுவதும் எல்லாத் தொழில் பார்க்கும் இடங்களிலும் இருக்கும்; வேலை பார்க்கிற எல்லோரும் இதற்குச் சாட்சி சொல்லலாம். “இந்த team leaderஐப்பற்றி அல்லது மேலாளரைப்பற்றி நாம் சாட்சி சொல்லலாம்.” “என்னுடைய team இல் இருக்கின்ற எல்‍லோரும் ரொம்ப perfect. பூரணமானவர்கள்,” என்று சாட்சி கொடுக்கிற team manager ஐ நாம் தேடினாலும் கண்டுப்பிடிக்க முடியாது.

ஒரு perfectஆன team manager இருந்தார், அவருடைய teamஇலும் சண்டையும் சச்சரவுமாகத்தான் இருந்தது. “நம்மில் யார் பெரியவன்” என்று சண்டை போட்டார்கள். “யார் அவருடைய வலது பக்கத்திலும், இடது பக்கத்திலும் இருப்பார்கள்,” என்று சண்டை போட்டார்கள். ஒருவன் தன்னுடைய வசத்தில் ஒப்புவிக்கப்பட்ட பொருளைத் திருட்டுத்தனமாகக் கையாடினான். யார் இந்த team manager? அவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. ஆனால், ஏறக்குறைய பதினொருபேர் pass பண்ணிவிட்டார்கள் அந்த team இல் ஒருவர்தவிர. எனவே, “மிகப் பெரிய ஆசிரியராகிய இயேசுவால்கூட மிகப் பூரணமான ஒரு வகுப்பை உருவாக்க முடியவில்லை? பன்னிரெண்டு மாணவர்களிலே ஒரு மாணவன் தோற்றுப்போனான்.ஆகவே, நம் மாணவர்களில் ஒருவன், பன்னிரெண்டில் ஒருவன், தோற்றுப்போனால் வருத்தப்பட வேண்டாம்,,” என்று ஒரு சகோதரர் சொன்னார்.

எங்கு நாம் கட்டப்படுகிறோமோ அங்குதான் நாம் மறுவுருவாக்கப்பட வேண்டும். இப்போது நான் “உறவாடுதல்” என்ற வார்த்தையை விட்டுவிட்டேன். என்ன வார்த்தையைப் பிடித்துக்கொண்டேன். “கட்டப்படுவது.” கட்டப்படுவது என்பது நாம் ஒருவரோடு ஒருவர் தேவனுக்கு ஏற்றவிதத்தில், கிறிஸ்துவுக்கு ஏற்றவிதத்தில், ஒருவரோடு ஒருவர் உறவாடுவதுதான் கட்டப்படுவது. இது புதிய ஏற்பாட்டில் மட்டும்தான் இருக்கிறது என்று நினைக்க வேண்டாம். புதிய ஏற்பாட்டிலும் இருக்கிறது. எடுத்துக்காட்டாக 1 பேதுரு 5ஆம் அதிகாரத்தில், “மூப்பர்களே, நீங்கள் ஒரு முன்மாதிரியான வாழ்க்கை வாழுங்கள். எப்படி உறவாடக்கூடாது. நீங்கள் துரைத்தனம் பண்ணக்கூடாது, இறுமாப்பாய் ஆளுகை செய்யக்கூடாது, இழிவான பொருள் ஆதாயத்துக்காக நீங்கள் உறவாடக்கூடாது,” என்றிருக்கிறது. “இளையவர்களே நீங்கள் கீழ்படிந்து அடங்குங்கள், கணவர்களே இப்படி இருங்கள். மனைவிகளே இப்படியிருங்கள்,” என்றெல்லாம் சொல்வது, நாம் ஒருவரோடொருவர் எப்படி, according to Christ, கிறிஸ்துவுக்கு ஒத்தவிதத்தில், கிறிஸ்துவுக்கு ஏற்றவிதத்தில், நாம் எப்படி ஒருவரோடு ஒருவர் உறவாடுவது என்பதின் விளக்கம். இதுதான் கட்டப்படுவது.

மருவுருவாதலும், கட்டப்படுதலும்

சபை இருப்பது அதற்காகத்தான். சப‍ை என்பது என்ன? நாம் எல்லோரும் ஒன்றாய் இருக்க வேண்டும், ஞாயிற்றுக் கிழமையானால் கூடிவரவேண்டும். அதைத் தேவன் மிகவும் எதிர்பார்க்கிறார். அதுவல்ல. நம் வாழ்க்கையில் நாம் ஒருவ‍ரோடு ஒருவர் எப்படி உறவாட வேண்டும். ஞாயிற்றுக் கிழமைக் கூடுகை அதற்கு உதவி செய்யும் என்றால் அது பயனுள்ளது. அது உதவி செய்யவில்லை என்றால் அது பயனற்றது.

அடுத்த கேள்வி ஏன் நாம் கட்டப்படவேண்டும்? ஏனென்றால் கட்டப்படும்போதுதான் நாம் மறுவுருவாக்கப்படுகிறோம். மறுவுருவாக்கப்படும்போதுதான் நாம் கட்டவும் படுகிறோம் என்றும் சொல்லலாம். இந்த இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. தனிப்பட்ட வாழ்க்கையிலே மறுவுருவாக்கப்படுவது நடக்கவில்லை என்றால் நாம் கூடிவாழும்போது ஒருவரோடு ஒருவர் கட்டப்பட்டுவிடுவோமா? Magicalஆக. தனிப்பட்ட வாழ்க்கையிலே நான் மறுவுருவாகுதல்பற்றி எனக்கு எந்த அக்கறையும் இல்லை. திடடீரென்று நாம் கூடிவாழும்போது நாம் ஒருவரோடு ஒருவர் கட்டப்பட்டுவிடுவோமா? நடைபெறாது. அதேபோல் நாம் ஒருவரோடு ஒருவர் கூடவாழும்போது கட்டப்படுவதை நான் நாடவில்லை என்றால் அல்லது அதில் சிக்கல் வருகிறது என்பதற்காக நான் கட்டப்படுவதையும், ஒருவரோடு ஒருவர் உறவாடுவதையும் தவிர்க்கிறேன் என்று வைத்துக்கொள்வோம். அப்போது நான் மறுவுருவாக்கப்பட முடியுமா என்றால், என்னுடைய பதில் “முடியாது”. நாம் கட்டப்படும்போது அல்லது ஒருவரோடு ஒருவர் உறவாடும்போது நிச்சயமாக சிக்கல்கள் வரும்.

நன்றாகக் கவனிக்க வேண்டும். சில உறவாடல்கள் அவசியமில்லை. அதையும் சொல்லிவிடுகிறேன். “ஒருவன் தெருவில் போகிற நாயின் வாலைப் பிடித்து இழுத்தானாம்,” என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. நீதிமொழியிலும் ஒரு வசனம் உண்டு. அலுவலகத்தில் உள்ள எல்லாருடைய பிரச்சினைகளையும் நாம் தீர்க்கக்கூடாது. இன்னும் சொல்லப்போனால், அவர்களுடைய பிரச்சினையை நம்மிடம் கொண்டு வந்து, நம்மையும் இந்தப் பிரச்சினையில் ஒரு ஆளாய் மாற்றுவார்கள். நமக்குத் தொடர்பில்லாத ஒரு பிரச்சினையில் நம்மை இழுப்பார்கள். சில உறவாடல்களை நாம் தவிர்க்க வேண்டும். அது நமக்குரியதல்ல. இந்த உலகத்தில் உள்ள எல்லாப் பிரச்சினைகளையும் நம்மிடத்தில் கொண்டு வருவார்கள். நம்முடைய பதில் என்னவாக இருக்க வேண்டுமென்றால், “பெரிய காரியங்களிலும், எனக்கு மிஞ்சின கருமங்களிலும் நான் தலையிடுகிறதுமில்லை,” என்று தாவீது ஜெபிக்கிறான் (சங்கீதம் 131:1). இது ஒரு பக்கம். ஆனால், இன்னொரு பக்கம் “நான் யாரோடும் உறவாடமாட்டேன். உறவாடினாலேயே பிரச்சினை வருகிறது என்பதற்காக நான் யாரோடும் எந்த fellowshipம் வைத்துக்கொள்ள மாட்டேன்.” இது இன்னொரு அற்றம்.

ஆகவே, இன்றைக்கு நாம் கற்றுக்கொண்ட காரியம் என்னவென்றால், மறுவுருவாவதும், கட்டப்படுவதும் நெருங்கியதொடர்புள்ளவைகள். நாம் நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையில் மறுவுருவாகும்போது நாம் கட்டப்படுவது அல்லது ஒருவரோடு ஒருவர் உறவாடுவது மிகவும் இனிமையானதாக இருக்கும். அதேபோல் நாம் கட்டப்படும்போது, ஒருவரோடு ஒருவர் கிறிஸ்துவுக்கு ஏற்றவண்ணம் நாம் உறவாடும்போது, நம் தனிப்பட்ட வாழ்க்கையில் நாம் மறுவுருவாவோம்.

தேவனுடைய இறுதிக் குறிக்கோளை, தேவனுடைய இறுதி இலக்கை, புதிய ஏற்பாடு புதிய எருசலேம் என்கிற பரிசுத்த நகரமாகவும், அலங்கரிக்கப்பட்ட ஒரு மணவாட்டியாகவும் சித்தரிக்கிறது, வருணிக்கிறது. ஆனால் இது ஒரு மணவாட்டியோ அல்லது ஒரு நகரமோ என்று கற்பனைசெய்துகொள்ள வேண்டாம். இது மறுவுருவாக்கப்பட்ட, ஒருவரோடு ஒருவர் இசைவாகக் கட்டப்பட்ட ஒரு சமுதாயத்தை, குறிக்கிறது. இந்த சமுதாயத்தினுடைய மிகப்பெரிய குணாம்சம் தேவனுடைய ஜீவன்.

அடக்குமுறையில் நாம் ஒருவரோடு ஒருவர் உறவாடலாம் அல்லது அரசியல்முறையிலே ஒருவரோடு ஒருவர் உறவாடலாம். இந்த உலகத்திலே பல்வேறு ஸ்தாபனங்கள், நிறுவனங்கள், அலுவலகங்கள் பல்வேறு முறை‍யிலே உறவாடுகின்றார்கள். ஆனால் தேவனுடைய மக்கள் ஒருவரோடு ஒருவர் ஐக்கியம்கொள்கின்ற, உறவாடுகின்ற முறை அவையெல்லாவற்றிலுமிருந்தும் - அந்த அலுவலகங்கள், அந்த ஸ்தாபனங்கள், அந்த நிறுவனங்கள், அந்த அரசியல்வாதிகள், ஒருவரோடு ஒருவர் உறவாடுகின்ற விதத்திலிருந்தும் - முற்றிலும் மேலானது. அப்படிப்பட்ட ஒரு சமுதாயத்தை தேவன் இன்று கட்டியெழுப்பிக்கொண்டிருக்கிறார். நாம் கூடி வாழ்கின்ற வாழ்க்கை அப்படிப்பட்ட ஒரு சமுதாயத்தின் ஒரு பகுதி. அப்படிப்பட்ட சமுதாயத்தில் அல்லது அப்படிப்பட்ட சபையிலே மக்கள் தொடர்புக்கு வரும்போது அவர்கள் உண்மையாகவே தேவனுடைய ஜீவனைத் தொடுவார்கள், தேவனுடைய ஜீவனைப் பெறுவார்கள். அவர்கள் உண்மையாகவே தேவனைக் கண்டுகொள்வார்கள். தேவனுடைய ஆசிர்வாதத்தைப் பெறுவார்கள்.