Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More

தேவனுடைய இறுதி இலக்கு - புதிய எருசலேம்

Transcribed from a message spoken in May 2016 in Chennai

By Milton Rajendram

தேவனுடைய திட்டத்தையும், தேவனுடைய நோக்கத்தையும், தேவனுடைய இலக்கையும்பற்றி நான் அடிக்கடி வலியுறுத்துவதற்கு ஒரு காரணம் உண்டு. அது என்னவென்றால், இது நம்முடைய வாழ்க்கையையும், நம்முடைய உழைப்பையும் ஆளுகைசெய்ய வேண்டும். நம்முடைய வாழ்க்கை, நம்முடைய உழைப்பு, நாம் எதற்காகப் பிரயாசப்படுகிற‍ேம் ஆகிய எல்லாவற்றையும் தேவனுடைய திட்டமும், தேவனுடைய நோக்கமும், தேவனுடைய இலக்கும் ஆளுகைசெய்ய வேண்டும். வாழ்‍க்கை, உழைப்பு என்பது எங்கோ நடைபெறுவதில்லை. அதை நாம் ஒவ்வொரு நாளும், 24 மணிநேரமும், 7 நாட்களும், 365 நாட்களும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அப்படிப்பட்ட வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளையும், விவரங்களையும் தேவனுடைய இந்த நோக்கமும், இலக்கும் ஆளுகைசெய்ய வேண்டும்.

வேதத்திலிருந்து நாம் சுவாரசியமான பல சங்கதிகளைப் பேசலாம். ஆனால், அவைகள் நம்முயை வாழ்க்கையை ஆளுகைசெய்யக்கூடாது. எடுத்துக்காட்டாக, வேதத்தை ஒரு management புத்தகம்போல்கூட நாம் பயன்படுத்தலாம். தங்கள் நிறுவனங்களில் வேலைசெய்பவர்களை ஊக்குவிப்பதற்காகவும், தங்கள் நிறுவனத்தின் உற்பத்தித்திறனைப் பெருக்குவதற்காகவும், அவர்கள் ஒரு management குருவைக் கூட்டிக்கொண்டு வந்து அவர்களுக்கு அவ்வப்போது seminar நடத்துவார்கள் அல்லது அவர்களை அவ்வப்போது வெளியே கூட்டிக்கொண்டுபோய் “எப்படி companyயாக எல்லாரும் blendஆவது” என்று கற்றுக்கொடுப்பார்கள்.

வேதாகமத்தின் நோக்கம்

அதுபோல, வேதாகமத்தை, “எப்படி நாம் பணக்காரர்களாக மாறுவது?” என்பதற்குத் தேவையான விவரங்களை அறிந்துகொள்வதற்கான ஒரு புத்தகமாகப் பயன்படுத்துகிற தேவனுடைய மக்கள் உண்டு. நிச்சயமாக வேதாகமத்தின்படி ஒருவன் வாழ்ந்தால், அவன் பணக்காரனாக மாறலாம். அதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. தேவனுடைய வார்த்தையில் இருக்கிற கோட்பாடுகளின்படி ஒருவன் செய்தால் அவன் நிச்சயமாகப் பணக்காரனாக மாறுவான். பணக்காரனாக மாறுவதுதான் ஒருவனுடைய இலக்கு என்றால் அவன் பணக்காரனாக மாறுவான்.

ஆனால், தேவனுடைய திட்டம், நோக்கம், இலக்கு ஆகியவைகளுக்காக வாழ்கின்ற மக்கள் பணக்காரர்களாக மாறுவது மிகவும் அரிது. அது அவர்களுடைய choice, அவர்களுடைய தெரிந்தெடுப்பு. பணக்காரர்களாக மாறமுடியாது என்பதால் அவர்கள் அப்படி வாழ்வதில்லை. “பணக்காரர்களாக மாறுகிறோமா, மாறவில்லையா என்பது ஒரு பொருட்டல்ல. அதுவல்ல காரியம்,” என்று அவர்கள் தெரிந்தெடுக்கிறார்கள். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொன்னதுபோல் இவர்கள் “பரலோகராஜ்யத்தினிமித்தம் தங்களை அண்ணகர்களாக்கிக்கொண்டவர்கள். இதை ஏற்றுக்கொள்ள வல்லவன் ஏற்றுக்கொள்ளக்கடவன்.” கேட்க முடிந்தவன் இதைக் கேட்கட்டும், ஏற்றுக்கொள்ள முடிந்தவன் இதை ஏற்றுக்கொள்ளட்டும். “எல்லாரும் ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று அவர் கண்டிப்பாகவோ, வலியுறுத்தியோ சொல்லவில்லை.

நீங்கள் அந்த முழு contextஐயும் பார்க்கவேண்டும். திருமணத்‍தைப்பற்றிய காரியம் வரும்போது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த வாக்கியங்களைச் சொல்லுகிறார். ஆனால், இது திருமணத்தைப்பற்றிய காரியத்திற்கு மட்டுமல்ல, வாழ்கையின் எல்லாப் பகுதிகளுக்கும் இந்தக் கோட்பாட்டைப் பரவலாக நாம் பயன்படுத்தலாம். தேவனுடைய ராஜ்யத்தினிமித்தம் தங்களை அண்ணகர்களாக்கிக்கொண்டவர்கள் அல்லது ஏழைகளாக்கிக் கொண்டவர்கள் உண்டு. “நீங்கள் இதை இப்படிச் செய்தாக வேண்டும்,” என்று அவர் சொல்லவில்லை. “இயன்றால் நீங்கள் இதைச் செய்யுங்கள். ஏற்றுக்கொள்ள முடிந்தவன் ஏற்றுக்கொள்ளட்டும்,” என்று அவர் சொல்லுகிறார்.

ஆகவே, நாம் பணக்காரர்களாக மாறுகிறோமா அல்லது இந்த உலகத்திலே வெற்றிபெற்ற மக்களாக மாறுகின்றோமா என்பது நம்முடைய இலக்கு அல்ல. இதை நீங்கள் நல்ல ஒரு சமநிலையோடு எடுத்துக்கொள்ள வேண்டும். தேவனுடைய மக்கள் நேர்த்தியான ஒரு படிப்பைப் பெற வேண்டும், தேவனுடைய மக்கள் நேர்த்தியான ஒரு வேலையைத் தேட வேண்டும். தேவனுடைய மக்கள் நேர்த்தியாகப் பொருள் ஈட்ட வேண்டும், வருவாய் ஈட்ட வேண்டும். சோம்பேறித்தனத்திற்குப் பக்தியை, ஜெபத்தை, வேத வாசிப்பை, ஊழியத்தை ஒரு போர்வையாக, ஒரு சாக்குப்போக்காக, பயன்படுத்தக்கூடாது. இதை நான் தெளிவுப்படுத்திவிட்டேனா?

ஒரு மாணவனிடம், “நீ ஏன் நேற்று தேர்வு எழுத வரவில்லை?” என்று கேட்கிறேன். அவன், “எங்கள் சபையில் மூன்று நாட்கள் வருடாந்தர convention நடக்கிறது. அதனால் வரவில்லை. ”முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்,” என்றான்.”முதலாவது தேவனுடைய இராஜ்ஜியத்தையும், அவருடைய நீதியையும் தேடுங்கள். அப்பொழுது continuous assessment testஇல் உங்களுக்கு மதிப்பெண் automaticஆகக் கொடுக்கப்படும்,” என்று மத்தேயு 6:33யைத் துஷ்பிரயோகம் செய்கின்ற இளம் பிள்ளைகளை நான் பார்த்திருக்கிறேன். அவர்களைச் சொல்லி ஒன்றும் பயனில்லை. அவர்களை அப்படி நடத்துகிறது யார்? அவர்களை நடத்துகின்றவர்கள் தந்தைமார், அண்ணன்மார், மூத்தவர்கள். குற்றம் இளையவர்கள் இவர்கள் வாசலில் இல்லை. குற்றம் யாருடைய வாசலில் உள்ளது? உன்னுடைய பொறுப்பை நீ நிறைவேற்று.

ஆனால், இப்படி நான் சொன்னபோதிலும்கூட, தேவனுடைய இறுதி இலக்கு என்னவாக இருக்கிறதோ அதுவே தேவனுடைய மக்களுடைய இலக்காகவும் இருக்க வேண்டும். இதை நாம் நம் கண்களுக்குமுன்பாக வைத்துக்கொள்ள வேண்டும். இதைப்பற்றி பொதுவாகச் சிந்திக்கின்ற, நேரம் எடுத்து ஆழ்ந்து சிந்திக்கின்ற, தேவனுடைய மக்களுடைய எண்ணிக்கை மிகக் குறைவு. உடனே நாம் மிகவும் பிரத்தியேகமானவர்கள் என்று நினைத்துவிட வேண்டாம்.

தேவனுடைய இறுதி இலக்கு - புதிய எருசலேம்

தேவனுடைய இறுதி இலக்கு என்ன? What is God’s ultimate objective? எந்த இறுதி இலக்கை எட்டவேண்டும், அடைய வேண்டும், என்பதற்காகத் தேவன் இந்த உலகம் தொடங்கினது முதற்கொண்டு எல்லா நூற்றாண்டுகளிலும் இயங்கிக்கொண்டிருக்கிறார்?

இந்த வாழ்க்கையில் நாம் எப்படி வெற்றியுள்ளவர்களாக இருப்பது என்பதைத்தான் இன்றைக்குத் தேவனுடைய மக்கள் நாடித் தேடி, ஓடி, ஆசையாய்ப் பின்பற்றுகிறார்கள். இந்த வாழ்க்கையில் ஒரு வெற்றியைப் பெறுவதற்காக, “இயேசு கிறிஸ்து நீங்கள் தோப்புக்கரணம் போட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்,” என்று சொன்னால்கூட அதைப் போடுவதற்கு அவர்கள் ஆயத்தமாக இருக்கிறார்கள்.

ஆனால், தேவனுடைய வார்த்தை தேவனுடைய இலக்கை இலைமறை காயாகவோ, ஒளிவு மறைவாகவோ நமக்குப் போதிக்கவில்லை. தேவனுடைய இலக்கு, தேவனுடைய வார்த்தையில், புதிய எருசலேம் என்று வர்ணிக்கப்படுகிறது, சித்தரிக்கப்படுகிறது. தேவனுடைய இலக்கு என்ன? புதிய எருசலேம். மீண்டும் எச்சரிக்கிறேன்.

புதிய எருசலேம் - ஒரு நகரம், ஒரு மணவாட்டி

இந்த வார்த்தைகள் தெரிந்தவுடனே “ஏதோ நம்முடைய வாழ்க்கையிலே இது அனுபவமாகிவிட்டது” என்று நாம் நினைத்துவிடக் கூடாது. ஆனால், சில உண்மைகள் தெரிய வேண்டும். தேவனுடைய இறுதி இலக்கு புதிய எருசலேம். புதிய எருசலேம் என்பது ஒரு நகரம் என்று வர்ணிக்கப்படுகிறது. புதிய எருசலேம் ஒரு மணப்பெண் என்று வர்ணிக்கப்படுகிறது. புதிய எருசலேம் ஒரு மனைவி என்று வர்ணிக்கப்படுகிறது. இவைகளெல்லாம் வர்ணனைகள், சித்திரங்கள்.

இதன் உண்மையான பொருள் என்ன? “ஆவிக்குரிய பொருள் என்ன?” என்றுகூட நான் கேட்க மாட்டேன். உண்மையான பொருள் என்ன? தேவனுடைய வார்த்தையெங்கும் இதுபோன்ற சில படங்களை, சித்திரங்களை, வருணனைகளைவைத்து தேவன் சில பொருள்களை விளக்குகிறார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும், விளக்குகிறார். மிதமிஞ்சிப்போய் “அதற்கு அர்த்தம் இது, இதற்கு அர்த்தம் அது,” என்றெல்லாம் சொல்லக்கூடாது. மிதமிஞ்சிப்போய். கூடுமானவரை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

திருவெளிப்பாடு 21, 22 ஆம் அதிகாரங்களில் புதிய எருசலேம் என்கிற நகரத்தைப்பற்றி, மணப்பெண்ணைப்பற்றிப் பார்க்கிறோம். தமிழ் வேதாகமம் மணவாட்டி என்று கூறுகிறது. நான் அதை மணப்பெண், bride என்று மொழிபெயர்க்கிறேன். மனைவி, wife of the Lamb, ஆட்டுக்குட்டியானவருடைய மனைவி என்று எழுதப்பட்டிருக்கிறது. கலாத்தியர் 5ஆம் அதிகாரத்திலும் இந்தப் புதிய எருசலேமைப்பற்றி எழுதியிருக்கிறது. பரத்திலிருந்து வருகிற எருசலேம். Jerusalem above. “மேலான எருசலேமோ சுயாதீனமுள்ளவள், அவளே நம்மெல்லாருக்கும் தாயானவள்,” என்று மேலான எருசலேம், Jerusalem above, அல்லது மேலிருந்து வருகிற எருசலேம், பரத்திலிருந்து வருகிற எருசலேம் என்று கலாத்தியர் 4ஆம் அதிகாரம் கூறுகிறது. அதுபோல, எபிரேயருக்கு எழுதின கடிதத்தில் 11ஆம் அதிகாரம் விசுவாச வீரர்களின் பட்டியலைப்பற்றிப் பேசுகிறது. அதில் ஆபிரகாமைப்பற்றிப் பேசும்போது “தேவன் தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்கு அவன் காத்திருந்தான்,” என்று பேசுகிறது. அதுபோல், 12ஆம் அதிகாரத்திலும் “அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம்,” என்று எழுதியிருக்கிறது. இந்தப் புதிய எருசலேம் நிலையான நகரம், அசையாத இராஜ்ஜியம், Unshakable kingdom. மேலும், நாம் “ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமினிடத்திற்கு வந்திருக்கிறோம்,” என்றும் எழுதப்பட்டிருக்கிறது.

ஆகவே, புதிய எருசலேம் என்கிற உண்மை அல்லது ஒரு கருத்து பூடகமானதோ, ஒளிவுமறைவானதோ, அரிதானதோ இல்லை. இதை யாரும் ஆராய்ச்சிசெய்து கண்டுபிடிக்கத் தேவையில்லை. தேவனுடைய வார்த்தையில், குறிப்பாக, புதிய ஏற்பாட்டை எளிமையாக வாசித்தாலே போதும்; அதை யார் வேண்டுமானாலும் கண்டுபிடித்துவிடலாம். ஆனால், நாம் ஏற்கெனவே பாரபட்சமாகவும், ஒருதலைப்பக்கமாகவும் இருக்கும்போது தேவனுடைய இறுதி இலக்கைப் பார்ப்பது கடினம். “நாம் ஒரு நாளில் இறந்தபிறகு பரலோகத்துக்குப் போவோம்,” என்கிற ஒரு prejudice, தப்பெண்ணம், தவறான அபிப்பிராயம், பாரபட்சம் இருக்கும்போது, என்கிற ஒரு திரை அவர்களுடைய கண்களுக்குமுன்பாக இருக்கும்போது, தேவனுடைய இறுதி இலக்கு என்ன என்பதைப்பற்றி அவர்கள் வாசித்தாலும்கூட அது அவர்களுக்கு விளங்காது. ஏனென்றால், அவர்களைப் பொறுத்தவரை இறுதி இலக்கு என்பது “பரலோகம் என்று ஒரு இடம் இருக்கும்; அந்தப் பரலோகத்திலே யெஹோவாவின் சாட்சிகள் நல்ல வண்ண நிறத்தில் கைப்பிரதிகள் கொடுப்பார்கள். பரலோகத்தில் பூக்கள் இருக்கும், வானவில் இருக்கும், ஒரு ஆறு ஓடும், பட்டாம் பூச்சிகள் பறந்துகொண்டிருக்கும். அங்கு ஒரு தாய், தந்தை, இரண்டு பிள்ளைகள் அல்லது மூன்று பிள்ளைகள் விளையாடிக்கொண்டிருப்பார்கள். இதுதான் யெஹோவாவின் அரசு,” என்று அவர்கள் சொல்லுவார்கள்.

புதிய எருசலேம் - மறுவுருவாக்கப்பட்டு, கட்டியெழுப்பப்பட்ட தேவமக்களின் சமுதாயம்

புதிய எருசலே‍ம் - பரிசுத்த நகரம், ஆட்டுக்குட்டியானவருடைய மணப்பெண். ஆட்டுக்குட்டியானவருடைய மணவாட்டி என்றால் அது தேவ மக்களாலான ஒரு சமுதாயம்; ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சாயலுக்கு ஒத்த உருவாக்கப்பட்ட மக்களாலான ஒரு சமுதாயம். இதுதான் தேவனுடைய இறுதி இலக்கு. தேவனுடைய மக்கள் என்றால் நாம் மட்டுமல்ல; உலகம் தோன்றினது முதற்கொண்டு எல்லா நூற்றாண்டுகளிலும் வாழ்ந்த தேவனுடைய மக்களெல்லாரும் மறுவுருவாக்கப்பட்டு, கட்டியெழுப்பப்பட்ட, ஒரு சமுதாயம்தான் தேவனுடைய இறுதி இலக்கு. அந்த சமுதாயத்தை வர்ணிப்பதற்குத்தான், சித்தரிப்பதற்குத்தான் இந்த மாதிரி வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. என்றைக்கு நாம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சாயலுக்கு மறுவுருவாக்கப்பட்டு, தேவனுடைய மக்களோடு ஒருவரோடொருவர் கட்டியெழுப்பப்படுவோம்? என்றைக்கு? இன்றைக்கா அல்லது என்றைக்கோ நடக்கப்போகிறதா? ஒரு வீடு கட்டிமுடிக்க ஒரு வருடம் ஆகிறது. கல்கல்லாக, கல்கல்லாக, பல ஆண்டுகள் கட்டுகிறார்கள். அதுபோல் தேவனுடைய இறுதி இலக்காகிய மறுவுருவாக்கப்பட்டு, கட்டியெழுப்பப்பட்ட இந்தச் சமுதாயம்…

நன்றாய்க் கவனிக்க வேண்டும். “இது நான் புதிய எருசலேமிற்குக் கொடுக்கிற வரையறை,” என்று நான் சொல்ல விரும்பவில்லை. மனதில் பதிவதற்காக நான் பயன்படுத்துகிற வார்த்தை “மறுவுருவாக்கப்பட்டு, கட்டியெழுப்பப்பட்ட, தேவமக்களின் சமுதாயம். Transformed and built-up community of God’s people.” மறுவுருவாக்கப்படுவதும், கட்டியெழுப்பப்படுவதும் என்றைக்கோ ஒரு நாள் நடைபெறப்போகிறதில்லை. அது என்றைக்கு நடைபெறுகிறது? இன்றைக்கு. மறுவுருவாக்கப்படுவதும், கட்டியெழுப்பப்படுவதும் இப்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மறுவுருவாக்கப்படுவதும், கட்டியெயழுப்பப்படுவதும் இப்போதும் நடந்துகொண்டிருக்கிறது.

கூட்டம் முடிந்தபின் நாம் சேர்ந்து சாப்பிடுகிறோம். அப்போதும் மருவுருவாக்கப்படுவதும், கட்டியெழுப்பப்படுவதும் நடைபெறுகிறது; சாப்பாடு செய்வதற்கு நேற்று அரிசி வாங்க கடைக்குப்போனோம். அப்போதும் மறுவுருவாக்கப்படுவதும், கட்டியெழுப்பப்படுவதும் நடைபெறுகிறது. எல்லோரும் சாப்பிட்டு முடிந்தபிறகு சுத்தம்பண்ணி, துடைத்து, பெருக்கி, கடைசியாகப் போகிறோம்; அப்போதும் மறுவுருவாக்கப்படுவதும், கட்டியெழுப்பப்படுவதும் நடைபெறுகிறது. பைக்கில் வேலைக்குப்‍ போகும்போதும் மறுவுருவாக்கப்படுவதும், கட்டியெழுப்பப்படுவதும் நடைபெறுகிறது. நாம் மறுவுருவாக்கப்படாத, கட்டியெழுப்பப்படாத தருணம் ஒன்றுகூட இல்லை. ஒவ்வொரு மணியும், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நொடியும் நாம் மறுவுருவாக்கப்படுவது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு எண்ணமும்கூட நம்முடைய சாயல் என்ன என்பதைப் பாதிக்கிறது. எந்த எண்ணம் நம்முடைய மன‍திலே வெகு நேரம் தங்கியிருக்கிறது, திரும்பத் திரும்பத் தோன்றுகிறது என்பது நம்முடைய உள்ளான சாயலை வரையறுக்கிறது. அதனால், “இப்போது நான் மறுவுருவாக்கப்படுவதற்கு கொஞ்சம் break எடுத்திருக்கிறேன்,” என்று ஒன்று இல்லை.

நாம் எண்ணாத, நினைத்துப்பார்க்காத ஒரு நொடி உண்டா? “உங்கள் மனம் புதிதாகிறதினாலே” என்றால் ஒவ்வொரு எண்ணமும், ஒவ்வொரு சிந்தனையும், ஒவ்வொரு நினைப்பும், அந்த உள்ளமைப்பிலே ஒரு தடத்தைப் பதித்துக்கொண்டே இருக்கிறது அல்லது ஏற்கனவே பதிந்த தடத்திலே இன்னொரு தடத்தைப் பதிக்கிறது. எறும்புகள் ஒரு தடத்தில் போக ஆரம்பித்தால், எல்லா எறும்புகளும் ஒரே தடத்தில் போய், போய், போய் பாறையாக இருந்தால்கூட அதில் ஒரு தடம் ஏற்பட்டுவிடும். எறும்பூற கல்லும் தேயும். ஒரே எண்ணம் அந்தத் தடத்தில் போய், போய், போய், போய், போய் நாம் அறிவதற்குமுன்பே அது நம் சாயலைத் தீர்மானித்துவிடுகிறது.

புதிய எருசலேம் - தலையாய அம்சம் தேவனுடைய ஜீவன்

புதிய எருசலேம் என்றால் உண்மையிலே அதின் பொருள் என்ன என்பதற்கு சில அம்சங்களை எடுத்துக்காட்டலாம். புதிய எருசலேமின் தலையாய அம்சம் தேவனுடைய ஜீவன் என்று ஒருமுறை சொன்னேன். தேவ மக்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கை, கிறிஸ்தவ வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கை, குடும்ப வாழ்க்கையின் தலையாய அம்சம் outstanding feature என்னவாக இருக்க வேண்டும் என்றால் நம்மைச் சந்திக்கின்றவர்கள், நம்மிடம் வருகின்றவர்கள், நம்மைத் தொடர்புகொள்கின்றவர்கள், நாம் தொடர்புகொள்கின்றவர்கள் தேவனுடைய ஜீவனைத் தொடவேண்டும்.

சூனமித்தியாள் எலிசாவைப்பற்றி “இதோ, நம்மிடத்தில் எப்போதும் வந்துபோகிற தேவனுடைய மனுஷனாகிய இவர் பரிசுத்தவான் என்று காண்கிறேன்,” (2 ராஜா. 4:9) என்று சொன்னாள். இதற்குப் பெயர்தான் “மனிதர்கள் நம்மைத் தொடர்புகொள்ளும்போது தேவனுடைய ஜீவனைத் தொடுவது” என்பதின் பொருள்.

நான் நகைச்சுவையான ஒரு காரியம் படித்தேன். மூன்றாவது, நான்காவது நூற்றாண்டுகளிலே monastic system என்ற ஒரு முறை இருந்தது. தேவன‍ைத் தேடுகின்ற கிறிஸ்தவர்கள் சிலர் பாலைவனங்களுக்கும், காடுகளுக்குப்போய், அங்கே துறவிகளாக வாழ்ந்தார்கள். சாதாரண துறவரம் இல்லை. எல்லாவற்றையும் துறந்து வாழ்ந்தார்கள். மிகவும் அமைதியாக இருப்பார்கள். ஒன்று அல்லது இரண்டு வார்த்தைகள்தான் பேசுவார்கள். பெரும்பாலும் ஜெபிப்பார்கள், வேதத்தை வாசிப்பார்கள், மிக எளிமையான வேலைகள் செய்வார்கள். தட்டி முடைவது, கூடை முடைவதுபோன்ற சிறுசிறு வேலைகளைச் செய்வார்கள்.தங்களுடைய வருவாய்க்காக மாதத்திற்கு ஒரு முறையோ, இரண்டு மாதத்திற்கு ஒரு முறையோ அந்தக் கூடைகளைப் பக்கத்திலுள்ள நகரத்திற்குக் கொண்டுபோய் விற்று அவர்கள் கொடுக்கின்ற காசை வாங்கிக்கொண்டு வருவார்கள். ஒருமுறை நகரத்திலிருந்து ஒரு பெரிய தலைவர், ஒரு பெரிய ஆள், துறவரம் பூண்வதற்காகப் பாலைவனத்திற்குச் சென்றாராம். அங்கிருந்த சகோதரர்களோடு பேசினாராம். வெகு நேரம் பேசினாராம். அங்கிருந்த துறவரம் பூண்டிருந்த பத்துப் பதினைந்து பேர் இவர் நீண்ட நேரம் பேசுவதைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்டு, அவர் பேசி முடித்தபோது, “சகோதரனே, நீர் பக்கத்திலிருக்கிற அலெக்சாந்திரியாவில் ஆயராகவோ அல்லது குருவாக இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும். நீர் துறவியாக இருப்பது உதவியாக இருக்காது,” என்று சொன்னார்களாம்.

நிறையப் பேசுவதால் நாம் தேவனுடைய ஜீவனைக் கொடுத்துவிடுவது இல்லை. இன்னும் சொல்லப்போனால், நிறையப் பேசுவதால் நம்முடைய உண்மையான நிலையும், முகமும் என்ன என்பதை மறைத்துக்கூட விடலாம். “வெள்ளம் வடிந்தபிறகுதான், வற்றியபிறகுதான், ஒரு குளத்தின் அடியில் இருக்கும் பாறைகள் நம்முடைய கண்களுக்குத் தென்பட ஆரம்பிக்கும்,” என்று ஒரு சகோதரர் சொன்னது என் நினைவில் பசுமையாக உள்ளது. அங்கே எப்போதுமே பாறைகள் இருந்தன. ஆனால், அங்கு இருந்த பாறைகள் எப்போதுதான் தென்பட ஆரம்பிக்கும்? வெள்ளம் வடிந்தபிறகுதான். வெள்ளம் ஓடுகிறவரை அப்படிப்பட்ட பாறைகள் அங்கிருக்கின்றன என்று நம்முடைய கண்களுக்குத் தென்படாது.

கொஞ்சம் வாலிபமும், துடுக்கும், மிடுக்கும், இருக்கும்போது அங்கும் இங்கும் ஓடி, ஆடி, பேசி, வேலை செய்து, பாட்டுப்பாடி, நகைச்சுவை செய்து, ஊழியம் என்று ஒன்று செய்துகொண்டிருக்கும்போது, இந்த மனிதனுடைய உள்ளமைப்பில் இருக்கின்ற பாறைகள் கண்ணுக்குத் தட்டுப்படாது. இவருடைய பாடல், இவருடைய ஜெபம், இவருடைய பிரசங்கம், இவருடைய நிர்வாகத் திறமைகள்தான் வெளியேவரும். ஆடி அடங்கி, நாடி ஒடுங்கி, ஒரே இடத்திலே உட்காருகிற நாள், ஒரு நாள், எனக்கும் வரும், உங்களுக்கும் வரும், எல்லோருக்கும் வரும். பாட முடியாது, பிரசங்கம் பண்ண முடியாது, அங்கு பேருந்தில் ஏறி, இங்கு ரயிலில் பயணித்து, இங்கு விமானத்தில் பறந்துபோய் கவர்ச்சிகரமான செய்திகள் கொடுக்க முடியாது. அப்போது இருந்த இடத்திலே நம்மைத் தொடர்புக்கொள்கின்றவர்கள் “நம்மிடையே இருந்த அந்த மனிதர் தேவனுடைய மனிதன் என்று காண்கின்றேன்” என்று சொல்ல முடியுமா என்பதுதான் தேவனுடைய ஜீவன்.

இயேசுவும், பிலாத்தும்

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கும், பிலாத்துவுக்கும் நடுவில் ஐந்து நிமிட உரையாடல். அவ்வளவுதான் என்று நான் நினைக்கிறேன். ஐம்பது நிமிடம்கூட உரையாடல் நடைபெறட்டும். அதுவல்ல காரியம். இயேசு கிறிஸ்துவும், பிலாத்துவும் ஒரேயொருமுறைதான் சந்திக்கிறார்கள். அந்த ஒரேவொரு சந்திப்புக்குப்பின், “இயேசு தேவனுடைய குமாரன்,” என்று பிலாத்து சொன்னான். ஆகவே, “எங்களுக்கு ஒரு நியாயப்பிரமாணமுண்டு, இவன் தன்னை தேவனுடைய குமாரனென்று சொன்னபடியினால், அந்த நியாயப்பிரமாணத்தின்படியே, இவன் சாகவேண்டும்,” என்று அவரை எதிர்த்தவர்கள் சொன்னபோது பிலாத்து பயந்தான். “நீ தேவனுடைய குமாரனா?” என்று அவன் வினவியபோது இயேசு பதில் சொல்லவில்லை. அப்பொழுது பிலாத்து, “நீ என்னோடே பேசுகிறதில்லையா? உன்னைச் சிலுவையில் அறைய எனக்கு அதிகாரமுண்டென்றும், உன்னை விடுதலைபண்ண எனக்கு அதிகாரமுண்டென்றும் உனக்குத் தெரியாதா என்றான்.” அதற்கு இயேசு பிரதியுத்தரமாக, “பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாதிருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரமுமிராது,” என்றார். அந்த நாட்டின் ஆளுநர், “உன்னை விடுவிக்கவும், உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவும் எனக்கு அதிகாரம் உண்டு. நீ தேவனுடைய குமாரனா என்று நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் மெளனமாக இருக்கிறாய்,” என்று சொன்னதற்கு, “பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாதிருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரமுமிராது; ஆனபடியினாலே என்னை உம்மிடத்தில் ஒப்புக்கொடுத்தவனுக்கு அதிக பாவமுண்டு,” என்றார்.

இது மிகவும் பணிவான பதிலா அல்லது மிடுக்கான பதிலா? தானே இந்த நாட்டின் அதிபதி என்று பிலாத்து நினைக்கிறான். ஆனால், தான் சர்வலோகத்தின் அதிபதியோடு பேசிக் கொண்டிருப்பது அவனுக்குத் தெரியாது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மிகத் தாழ்மையான பதிலைக் கொடுக்கிறார். ஆனால், பிலாத்துவைப் பொறுத்தவரை அந்தப் பதில்கூட மிகவும் மிடுக்கான பதில்தான். இப்படிப் பதில் சொன்னால், ஆளுநரான பிலாத்து என்ன செய்ய வேண்டும்? “நீங்கள் சொன்னது சரிதான். இவனுக்குத் திமிர் கொஞ்சம் அதிகம்,” என்று சொல்லி கொலை செய்ய வேண்டும். ஆனால், அவன் வெளியே வந்து, “இவன்மேல் நீங்கள் சாட்டுகிற குற்றங்களில் ஒன்றையும் நான் இவனிடத்தில் காணவில்லை,” என்றான். அவன் நியாயாசனத்தில் உட்கார்ந்திருக்கையில், அவனுடைய மனைவி அவனிடத்தில் ஆளனுப்பி, “நீர் அந்த நீதிமானை ஒன்றும் செய்யவேண்டாம்; அவர்நிமித்தம் இன்றைக்குச் சொப்பனத்தில் வெகு பாடுபட்டேன் என்று சொல்லச் சொன்னாள்.”

1. பாய்ந்தோடும் கிறிஸ்துவின் ஜீவன்

நம்முடைய மேலாளரோ, நம்முடைய உயர் அதிகாரியோ, நம்முடைய துறைத் தலைவரோ - யாராவது ஒருவர் நம்மைப்பற்றி இப்படிச் சொல்வார்களா? இவைகளெல்லாம்தான் நம் வாழ்க்கையின் பெரிய அளவுகோல்கள் என்று நான் சொல்லவில்லை. ஆனால், உண்மையான தேவனுடைய மக்களைத் தொடர்புகொள்கிறவர்கள் இப்படிப்பட்ட தேவனுடைய ஜீவனைத் தொடுவார்கள். அதுதான் காரியம். என்ன பேசுகிறோம் என்பதைப்பற்றி மக்கள் impress ஆகக் கூடாது.

இதைப் புரிந்துகொள்வதற்கு எச‍ேக்கியல் 47யை நாம் வாசிக்க வேண்டும். தேவாலயத்தின் சிங்காசனத்தின் கீழிருந்து ஒரு நதி புறப்பட்டு ஓடுகிறது என்று நாம் கேட்டிருக்கிறோம். தீர்க்கதரிசியை ஆண்டவர் நடக்கச் சொல்கிறார். முதலாவது, “தண்ணீர் கணுக்கால் அளவாயிருந்தது.” பின்னும் கொஞ்சம் நடந்து போ என்று சொல்கிறார். “தண்ணீர் முழங்கால் அளவாயிருந்தது.” இன்னும் கொஞ்சம் தூரம் நடந்து போ என்று சொல்கிறார். “தண்ணீர் இடுப்பளவாயிருந்தது.” இன்னும் கொஞ்சம் தூரம் நடந்து போ என்று சொல்கிறார். “தண்ணீர் நீச்சாழமும் கடக்கமுடியாத நதியுமாயிருந்தது.” அதற்குமேல் தீர்க்கதரிசியால் அங்கு நிற்க முடியவில்லை .

உண்மையாகவே நாம் மறுவுருவாகக்கப்பட்டவர்கள் அல்லது கட்டியெழுப்பப் பட்டவர்கள் என்றால். நம்மைச் சந்திக்கின்றவர்கள் குறைந்தபட்சம் கணுக்கால் அளவு நீரிலாவது நடக்க வேண்டும். உயிர்த்துடிப்பு இருக்க வேண்டும். தேவனுடைய மக்களும், தேவனற்ற மக்களும் நம்மைச் சந்திக்கிறார்கள்; நாமும் அவர்களை சந்திக்கின்றோம். இவர்கள் நம்மையும், நாம் இவர்களையும் சந்திக்கின்றபோது, உறவாடுகின்றபோது, தொடர்புகொள்கின்றபோது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினுடைய அன்பு, அவருடைய பரிசுத்தம், அவருடைய நீதி, அவருடைய இரட்சிப்பு, அவருடைய விடுதலை, அவருடைய இளைப்பாறுதல் ஆகியவைகளோடு சந்திக்காமல் நம்முடைய முறைப்பு அல்லது விறைப்பு அல்லது நம்முடைய கண்டிப்பு ஆகியவைகளை மட்டும் சந்தித்தால் அது தேவனைச் சந்திப்பது இல்லை. கிறிஸ்துவைச் சந்திப்பது என்றால் கிறிஸ்துவின் அன்பு, பரிசுத்தம், நீதி, கண்டிப்பு, ஒழுங்கு ஆகியவைகளை மட்டும் அல்ல, அவைகளுக்கும் மேலாக அவருடைய இரட்சிப்பு, அவர் தருகின்ற விடுதலை, இளைப்பாறுதல் ஆகியவைகளை அவர்கள் சந்திப்பார்கள்.

“பூமியிலே வேறெங்கும் காணமுடியாத, பெற முடியாத ஒன்றை, பரத்திற்குரிய ஒன்றை, உம்முடைய பிள்ளைகளுக்கு ஒருவர்மூலமாய் ஒருவருக்கு அருள வேண்டும் ஆண்டவரே. இந்த உலகத்தில் அவர்கள் எங்குமே பெற முடியாத ஏதோவொன்றை அவர்கள் பெறவேண்டும்,” என்று நான் அடிக்கடி ஜெபிப்பதுண்டு, .

அந்த 47ஆம் அதிகாரத்தில் கொஞ்சம் தள்ளிப்போகும்போது, “இந்த நதி போகுமிடமெங்கும் சஞ்சரிக்கும் ஜீவபிராணிகள் யாவும் பிழைக்கும்; இந்தத் தண்ணீர் அங்கே வந்தபடியினால் வெகு ஏராளமான மச்சங்களும் உண்டாயிருக்கும்; இந்த நதி போகுமிடமெங்குமுள்ள யாவும் ஆரோக்கியப்பட்டுப் பிழைக்கும்,” என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதுதான் அளவுகோல். நாம் மறுவுருவாக்கப்பட்டு, கட்டியெழுப்பப்பட்ட சமுதாயமாய், மக்களாய், மாறுகிறோமா இல்லையா என்பதின் அளவுகோல் என்ன? இந்த நதி செல்லும் இடமெல்லாம் உயிர்கள் பிழைக்க வேண்டும். நம்முடைய பெற்றோர்களோடு தொடர்புகொள்கின்றோம், நண்பர்களோடு தொடர்புகொள்கின்ற‍ேம், பகைவர்களோடு தொடர்புகொள்கின்றோம். நமக்கு மேலிருப்பவர்கள், நமக்குக் கீழிருப்பவர்கள் - யாரோடு தொடர்புகொண்டாலும் அவர்கள் பிழைக்க வேண்டும். இது ஒன்று.

2. புதிய எருசலேமின் அஸ்திபாரங்கள்

இரண்டாவது, இந்தப் புதிய எருசலேமின் இன்னும் பல அம்சங்களை நான் உங்கள் சிந்தனைக்குத் தர விரும்புகிறேன். இந்தப் புதிய எருசலேம் ஒரு அஸ்திபாரம் உள்ள நகரம், அடித்தளம் உள்ள நகரம். அந்த அஸ்திபாரம் அல்லது அடித்தளம் பன்னிரெண்டு அடுக்குகளால் ஆக்கப்பட்டிருந்தது. அந்தப் பன்னிரெண்டு அடுக்குகளும் பன்னிரெண்டு விலையேறப்பெற்ற கற்கள் என்று நாம் பார்க்கிறோம். “நகரத்து மதிலின் அஸ்திபாரங்கள் சகலவித இரத்தினங்களினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன; முதலாம் அஸ்திபாரம் வச்சிரக்கல், இரண்டாவது இந்திரநீலம், மூன்றாவது சந்திரகாந்தம், நான்காவது மரகதம், ஐந்தாவது கோமேதகம், ஆறாவது பதுமராகம், ஏழாவது சுவர்ணரத்தினம், எட்டாவது படிகப்பச்சை, ஒன்பதாவது புஷ்பராகம், பத்தாவது வைடூரியம், பதினோராவது சுநீரம், பன்னிரண்டாவது சுகந்தி இவைகளே.”

ஒவ்வொன்றைப்பற்றியும் சிந்தித்துப்பார்க்க வேண்டும்; நன்றாய்க் கவனிக்க வேண்டும். “நான் பெரிய அறிவாளி, ஞானி; அதனால் கர்த்தர் எனக்கு வெளிப்படுத்தினார்” என்று நான் சொல்லவில்லை. நீங்கள் போதுமான அளவுக்கு நேரம் செலவழித்து, போதுமான அளவுக்குத் தேவனுடைய வார்த்தையில் பரிச்சயம் இருந்தால், நீங்களும் நான் கற்றுக்கொண்டதைக் கற்றுக்கொள்வீர்கள்.

அந்த அடித்தளம் பல விலையேறப்பெற்ற Jewels நகைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நகைகளைவைத்து எங்கு அலங்கரிக்க வேண்டும்? அடித்தளம் என்பது கண்ணிற்குப் புலப்படுவதா அல்லது கண்ணிற்குப் புலப்படாததா? வேர் என்பது கண்ணிற்குப் புலப்படுவதா அல்லது கண்ணிற்குப் புலப்படாததா? புலப்படாதது. அடித்தளம், foundation அல்லது வேர் இவைகளெல்லாம் தரைக்குக்கீழே இருப்பது. தரைக்குமேலே இருப்பது கட்டிடம்; தரைக்குமேலே இருப்பது மரம். அதனுடைய அஸ்திபாரம் பல்வேறு கற்களால் அல்லது பல்வேறு நகைகளால், அலங்கரிக்கப்பட்டிருந்தது. யாராவது கண்ணிற்குத் தென்படாத ஓர் இடத்தை மிகவும் நல்ல, விலையேறப்பெற்ற நகைகளைவைத்து அலங்கரிப்பார்களா? அலங்கரிக்கமாட்டார்கள். நான் சொல்ல விரும்புகிற கருத்து என்னவென்றால் நம்மூலமாய் தேவனுடைய ஜீவனை உண்மையாகவே மற்றவர்களுக்குப் பகிர்ந்துகொடுப்பது அல்லது ஊட்டுவது நம்முடைய மறைவான வாழ்க்கையில் தொடங்குகிறது. இதுவே புதிய எருசலேம் அல்லது மறுவுருவாக்கப்படுவது, கட்டியெழுப்பப்படுவது. “நம்முடைய ஒளிப்பில், மறைவில், தேவன் நம்முடைய வாழ்க்கையில் என்ன செய்துகொண்டிருக்கிறார். மறைவில் அல்லது ஒளிப்பில் Hidden தேவன் என்னோடு எப்படி இடைப்படுகிறார். நான் தேவனுக்கு எப்படிப்பட்ட பதில் அளிக்கிறேன்,” என்பதுதான் இந்த மறுவுருவாக்கப்படுவதினுடைய அல்லது கட்டியெழுப்பப்படுவதினுடைய அடிப்படையான ஒன்று.

வேரும், அடித்தளமும்

“நீதிமானுடைய வேர் கனி கொடுக்கும்” (நீதி. 12:12). The root of the righteous yields fruit. வேர் விடுவதற்கு நீண்ட நாள் ஆகும். “யூதா வம்சத்தாரில் தப்பி மீந்திருக்கிறவர்கள் மறுபடியும் கீழே வேர்பற்றி மேலே கனிகொடுப்பார்கள்” (ஏசாயா 37:31). இஸ்ரயேல் மக்கள் சிறைப்பிடிக்கப்பட்டுப் பாபிலோனுக்குப் போனார்கள். ஒரு சிறு கூட்டம் திரும்பிவந்தது. அவர்களிடத்திலிருந்து எப்படி ஒரு கனி உருவாக முடியும்? வாய்ப்பே இல்லை. ஆனால், அவர்கள் வேர் பற்றி கனி கொடுப்பார்கள். நன்றாய்க் கவனிக்க வேண்டும். “நீதிமானுடைய வேர் கனி கொடுக்கும்.”

என்னுடைய பாரம் என்ன என்பதை நான் தெளிவுபடுத்துகிறேன். இன்றைக்குத் தேவனுடைய மக்கள் அடித்தளத்தைப்பற்றி, வேரைப்பற்றி, அக்கறை இல்லாத ஒரு காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். மேலோட்டமான, மேற்போக்கான, பூச்சுகள் makeup. பாடல்கள், இசை, பாடகர்கள், பாடகிகள், நல்ல ஆளுமையுள்ள பேச்சாளர்கள். ஆளுமையுள்ள பேச்சாளர்கள் என்றால் எப்படி இருக்க வேண்டும்? வாட்டசாட்டமாக இருக்க வேண்டும், கோட்டுப் போட்டிருக்க வேண்டும், டை போட்டிருக்க வேண்டும். அழகாக ஆங்கிலம் பேச வேண்டும், தமிழ் அழகாய்ப் பேச வேண்டும், நகைச்சுவை இருக்க வேண்டும்; ரொம்ப முக்கியமாக நல்ல கட்டிடம் இருக்க வேண்டும். “கூடு கட்டினால் புறா வரும்,” என்று ஒரு சகோதரர் என்னிடத்தில் சொன்னார். என்னே ஆழ்ந்த தத்துவம்! கூடு கட்டினால், புறா வரும். ஒரு கட்டிடம், குளிர்சாதன வசதி, சிறு பிள்ளைகளை நன்றாகக் கவனித்துக்கொள்வதற்கு ஓர் இடம்; ஒரு marriage service; ஒரு funeral service என்று. எல்லா ஏற்பாடுகளும் நன்றாய் இருந்தால் தேவனுடைய மக்கள் அதைக் கைதட்டி வரவேற்பார்கள். மந்தையைப்போல் அவர்கள் அதில் சேர்வார்கள். இது எதுவும் தவறு என்று நான் சொல்லவில்லை. அவர்கள் ஆராதனை என்று அழைப்பதற்கு அவர்கள் இன்று கொடுக்கிற முக்கியத்துவத்தைப் பாருங்கள். ஒருவர் “worship leader.” வேறு. தாவீதின் காலத்தில் தேவாலாயத்தில் பாடுவதற்குப் பாடகர்களை வைத்தார்கள் என்பது உண்மைதான். ஆனால், புதிய ஏற்பாட்டில் பாடுவதற்குப் பாடகர்களை வைத்தார் என்று நாம் எங்கும் பார்க்கவில்லை. அதனால், பாடுகிறவர்களை நான் தவறாகச் சொல்லவில்லை. எல்லோரும் பாடினார்கள். தேவனுடைய மக்கள் மிக எளிய முறையில்தான் வாழ்ந்தார்கள். அவர்களுடைய பாடல்கள் எளிமையாக இருந்தன. அவர்களுடைய பாடல் கருவிகள் எளிமையாக இருந்தன. ஒழுங்கீனமாக இருந்தது என்று நான் சொல்லவில்லை. ஆனால், அவர்கள் பாடல்கள்தான் காரியம் என்று, தேவனுடைய மக்கள் நினைப்பதுபோல், நினைக்கவுமில்லை, முக்கியத்துவம் கொடுக்கவுமில்லை.

“பெரிய கட்டிடம் இல்லை; இசைக்கருவிகள் இல்லை; பாடகர்கள் இல்லை; இதுபோன்ற புறம்பான காரியங்கள் நம்மிடத்தில் இல்லை; எனவே நாம் வெற்றிபெறவில்லை, நம் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை; நாம் மறுவுருவாகவில்லை, கட்டியெழுப்பப்படவில்லை,” என்று நாம் தவறாகக் கணக்குப்போடக் கூடாது.

நாம் மறுவுருவாவதற்கு, கட்டியெழுப்பப்படுவதற்கு அல்லது நம்மிடையே மக்கள் ஜீவனால் ஈர்க்கப்படாததற்குக் காரணத்தை நாம் எங்கு போய் ஆராய்ந்துபார்க்க வேண்டும்? நம்முடைய அடித்தளத்திற்கு, நம்முடைய வேருக்கு, போய் ஆராய்ந்துபார்க்க வேண்டும். நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் சரி, நம்முடைய கூட்டு வாழ்க்கையாக இருந்தாலும் சரி, அப்படிப்பட்ட ஒரு சிறு சமுதாயம் உருவாகும் என்றால் உண்மையிலே நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களுக்கு நாம் ஜீவனைப் பகிர்ந்துகொடுக்கின்ற வாய்க்கால்களாக இருப்போம். உண்மையிலே நாம் தெருவில் நடந்துபோகும்‍போதெல்லாம் உயிர்கள் பிழைக்கும்.

எலிசாவைப்பற்றி நான் இப்படி வாசித்திருக்கின்றேன். அவன் எப்படிப்பட்ட ஜீவனுள்ள மனிதன் என்றால், அவன் செத்தபிறகு, இன்னொரு செத்துப்போன மனிதனை இவனுடைய கல்லறையின் அருகில் போட்டவுடன், அவன் உயிருடன் எழுந்திருந்தான். உண்மையிலேயே உயிர்த்தெழுந்த வல்லமைக்கு இதைவிட நல்ல உதாரணம் முழு வேதாகமத்திலும் வேறெதுவும் இல்லை. உடனே நாம், “ஆண்டவரே, எங்களுக்கு அப்படிப்பட்ட ஓர் உயிர்த்துடிப்பும், உயி‍ரூட்டமும், ஒரு வல்லமையும் வேண்டும்,” என்று ஜெபித்தால் நாம் நம்முடைய வேரில் வேலை செய்ய வேண்டும், நம்முடைய அடித்தளத்தில் நாம் வேலை செய்ய வேண்டும். அடித்தளம் என்பது நாம் ஒவ்வொரு நாளும் இட்டுக்கொண்டிருக்கிறோம். நம்முடைய அலுவலகத்தில், நம்முடைய குடும்பத்தில், நம்முடைய போக்குவரத்தில், நம்முடைய சபை வாழ்க்கையில் - இப்படி எல்லா இடங்களிலும் நாம் அடித்தளம் போட்டுக்கொண்டிருக்கிறோம்.

“நான் செய்கிற நன்மைகள் எல்லாமுமே மற்றவர்களுக்குத் தெரிய வந்துவிடுகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்படியானால், என்னுடைய வாழ்க்கையில் வேர் அல்லது அடித்தளம் இல்லையென்று அர்த்தம்,” என்று ஒரு சகோதரன் சொன்னார். என்னிடத்தில் பத்து அடித்தளங்கள் இருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். மனைவி, மக்கள், சகோதர சகோதரிகள், மாணவர்கள் எனப் பத்து அடித்தளங்கள் இருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். என் வாழ்க்கையில் இருக்கும் பத்து நன்மைகளை இவர்கள் பார்க்கிறார்கள் என்றால், இவர்கள் பார்க்காத நன்மைகள் 90 இருக்க வேண்டும். நம்முடைய தீமைகளை மற்றவர்கள் பார்க்காதவாறு நாம் சாமர்த்தியமாக மூடிவிடுகிறோம்.இது நம் தந்தையாகிய ஆதாம் நமக்குக் கடத்தித்தந்த சுபாவம். நம்முடைய தீமைகளையும், குற்றங்களையும், குறைகளையும், தோல்விகளையும், பாவங்களையும் எப்படிச் சாமர்த்தியமாக மூட வேண்டும் என்று நமக்கு யாரும் சொல்லித்தர வேண்டியதில்லை. எப்படி நம் வாழ்க்கைத்துணையைப் பலியாக்குவது என்று யாரும் நமக்குக் கற்றுத்தர வேண்டியதில்லை. இதை நாம் மிகச் சாமத்தியமாகச் செய்வோம். நாம் இதை நம் தந்தையாகிய ஆதாமிடமிருந்து சுவிகரித்து, சுதந்தரித்துக்கொண்டிருக்கிறோம்.

இஸ்ரயேல் யூதா என்பவர்களை இலக்கம் பார்த்த விவகாரத்தில் தேவன் தாவீதைத் தண்டித்தார். “ஜனத்தை உபாதிக்கிற தூதனை தாவீது கண்டபோது, அவன் கர்த்தரை நோக்கி: இதோ, நான்தான் பாவஞ்செய்தேன்; நான்தான் அக்கிரமம்பண்ணினேன்; இந்த ஆடுகள் என்ன செய்தது? உம்முடைய கை எனக்கும் என் தகப்பன் வீட்டுக்கும் விரோதமாயிருப்பதாக என்று விண்ணப்பம்பண்ணினான்.” இது தாவீதின் ஜெபம். ஆனால், இன்றைய நவீன ஜெபம் எப்படி இருக்கிறது? ஏதோவொன்று குறைவுபடுகிறது அல்லது தவறாக இருக்கிறது என்றால், “ஆடுகளல்லவா பாவம் செய்தது; நான் என்ன செய்தேன்?” என்று குற்றத்தைப் பிறர்மேல் சுமத்திவிடுகிறோம். நம் மத்தியில் ஆசீர்வாதம் குறைவாக இருக்கிறது என்றால் அதற்கு நம்மைச் சுற்றியிருக்கிற ஆடுகள்தான் காரணம் என்று பழியை ஆடுகள்மேல் சுமத்துவோம். நம்மைப்பொறுத்தவரை நாம் குற்றமோ, குறையோ இல்லாதவர்கள்.

தானியேலின் ஜெபம்

தானியேல், நெகேமியாபோன்றோரின் ஜெபங்களை வாசித்துப்பாருங்கள். “நான் உபவாசம்பண்ணி, இரட்டிலும் சாம்பலிலும் உட்கார்ந்து, தேவனாகிய ஆண்டவரை ஜெபத்தினாலும் விண்ணப்பங்களினாலும் தேட என்முகத்தை அவருக்கு நேராக்கி, என் தேவனாகிய கர்த்தரை நோக்கி ஜெபம்பண்ணி, பாவ அறிக்கைசெய்து: ஆ ஆண்டவரே, உம்மில் அன்புகூர்ந்து, உம்முடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு உடன்படிக்கையையும் கிருபையையும் காக்கிற மகத்துவமும் பயங்கரமுமான தேவனே, நாங்கள் பாவஞ்செய்து, அக்கிரமக்காரராயிருந்து, துன்மார்க்கமாய் நடந்து, கலகம்பண்ணி, உம்முடைய கற்பனைகளையும் உம்முடைய நியாயங்களையும் விட்டு அகன்றுபோனோம். உமது நாமத்தினாலே எங்கள் ராஜாக்களோடும் எங்கள் பிரபுக்களோடும் எங்கள் பிதாக்களோடும் தேசத்தினுடைய சகல ஜனங்களோடும் பேசின தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியக்காரருக்குச் செவிகொடாமற்போனோம். ஆண்டவரே நானும் எங்கள் பிதாக்களும் பாவம் செய்தோம்.” *எங்கள் பிதாக்கள்தான் பாவம் செய்தார்கள்; அதனால் அவர்கள் கல்தேயருடைய நாட்டிற்கு‍ச் சிறைப்பிடித்துக் கொண்டுபோகப்பட்டார்கள். நான் அந்தத் தலைமுறை இல்லை; நான் அடுத்த தலைமுறை; தானியேலாகிய எனக்கும் அதற்கும் தொடர்பில்லை,” என்று தானியேல் ஜெபிக்கவில்லை.

நெகேமியாவின் ஜெபம்

இதுபோல அதற்கு அடுத்த, அடுத்தத் தலைமுறையைச் சார்ந்த நெகேமியாவின் ஜெபத்தைப் பாருங்கள். நெகேமியாவும், அவருடைய கூட்டாளிகளும் எருசலேமுக்குத் திரும்பிவருகிறார்கள். “நான் உட்கார்ந்து அழுது, சில நாளாய்த் துக்கித்து, உபவாசித்து, மன்றாடி, பரலோகத்தின் தேவனை நோக்கி: பரலோகத்தின் தேவனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூர்ந்து, உம்முடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, உடன்படிக்கையையும் கிருபையையும் காக்கிற மகத்துவமும் பயங்கரமுமான தேவனே, உமது அடியாராகிய இஸ்ரவேல் புத்திரருக்காக இன்று இரவும் பகலும் உமக்கு முன்பாக மன்றாடி, இஸ்ரவேல் புத்திரராகிய நாங்கள் உமக்கு விரோதமாகச் செய்த பாவங்களை அறிக்கையிடுகிற அடியேனுடைய ஜெபத்தைக் கேட்கிறதற்கு, உம்முடைய செவி கவனித்தும், உம்முடைய கண்கள் திறந்தும் இருப்பதாக; நானும் என் தகப்பன் வீட்டாரும் பாவஞ்செய்தோம். நாங்கள் உமக்கு முன்பாக மிகவும் கெட்டவர்களாய் நடந்தோம்; நீர் உம்முடைய தாசனாகிய மோசேக்குக் கற்பித்த கற்பனைகளையும், கட்டளைகளையும், நியாயங்களையும் கைக்கொள்ளாதேபோனோம்.” “நானும் என் தகப்பன் வீட்டாரும் பாவஞ்செய்தோம்” என்று நெகேமியா தன்னைத் தங்கள் பிதாக்களோடு அடையாளப்படுத்தவேண்டிய காரணம் என்ன? அவை வெற்று வார்த்தைகளா அல்லது காரணமற்றவைகளா? “நானும் என் பிதாக்களும்” என்று பெயரளவில் சொல்லுகிறார்களா? “உண்மையிலேயே நாங்கள் பாவம் செய்யவில்லை. ஆனால், ஜெபிக்கும்போது, எங்கள் பிதாக்கள்தான் பாவம் செய்தார்கள் என்று சொன்னால் நன்றாக இருக்காது இல்லையா, அதனால்தான் தேவனைப் பிரியப்படுத்துவதற்காக ‘நாங்களும் எங்கள் பிதாக்களும் பாவம் செய்தோம்’ என்று ஜெபித்தோம்” என்று தானியேலும், நெகேமியாவும் சொல்வார்களா? அப்படியல்ல, “நாங்கள் பாவம் செய்தோம்.”

வேர் அல்லது அடித்தளம் என்பது தேவனுக்காக, தேவனுடைய மக்களுக்காக மறைவில் நாம் செய்கிற காரியங்களே. “இது தேவனுக்குமுன்பாக அருமையானது! இது தேவனுடைய மக்களுக்கு நன்மையானது” என்பதற்காக மறைவில் நாம் செய்கிற நன்மைகளே வேர் அல்லது அடித்தளம். நன்மை என்றால் பணம் கொடுப்பதைப்பற்றிச் சொல்லவில்லை. பணமாகவும் இருக்கலாம். ஆனால், நாம் செய்கிற காரியம் பிறருக்கு ஒரு நன்மையாகத் தோன்றாமல்கூட இருக்கலாம்.

தேவனுடைய மக்கள், மனிதர்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்து ஜீவனைப் பெற்றுக்கொள்வதற்காக, “அவர்களும் சத்தியத்தினாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகும்படி, அவர்களுக்காக நான் என்னைத்தானே பரிசுத்தமாக்குகிறேன்,” என்று யோவான் 17:19இல் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஜெபிக்கிறார். நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்காக நம்மை நாமே பரிசுத்தமாக்குகிறோம். I sanctify myself. நம்மைச்சுற்றி இருப்பவர்களுக்காக நாம் நம்மைப் பரிசுத்தமாக்குவதால் என்ன நடக்கும்? அதுதான் தேவனுடைய வழி.

ஆகவே, நாம் செய்த எல்லா நன்மைகளையும் மக்கள் பார்க்கவில்லையென்றால் நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர வேண்டும். மத்தேயு 6, 7, 8 ஆம் அதிகாரங்களிலே ஆண்டவராகிய இயேசு என்ன சொல்கிறார்? “பரிசேயர்கள் ஜெபிக்கிறார்கள். ஆகவே, நீங்கள் ஜெபிக்க வேண்டாம். பரிசேயர்கள் உபவாசிக்கிறார்கள், ஆகையால், நீங்கள் உபவாசிக்கக்கூடாது. பரிசேயர்கள் தானதர்மம் பண்ணுகிறார்கள், அதனால் நீங்கள் காணிக்கை கொடுக்கக்கூடாது, தானதர்மம் பண்ணக்கூடாது,” என்று போதித்தாரா? “பரிசேயர்கள் ஜெபிக்கிறார்கள், எப்படி ஜெபிக்கிறார்கள்? தெருமுனைகளில் நின்று ஜெபிக்கிறார்கள். நீங்கள் அப்படி ஜெபிக்காதீர்கள். நீங்கள் உங்கள் அறையைப் பூட்டிக்கொண்டு ஜெபியுங்கள்” அப்படியென்றால் என்ன அர்த்தம்? நீங்கள் ஜெபிப்பது யாருக்கும் தெரியவேண்டாம். “நான் நேற்று இரவு ஜெபித்துக்கொண்டிருந்தபோது, தேவனுடைய தூதர் இறங்கி என்னோடு பேசினார்,” என்று ஒருவன் சொன்னால் அவன் புழுகுகிறான் என்று அர்த்தம். இவர் இப்படிச் சொல்வதற்கு என்ன காரணம்? “நம்மிடத்தில் பேசுகிற இவர் தேவனுடைய மனிதன்” என்று நாமெல்லாரும் புரிந்துகொள்ளவேண்டுமாம். அதற்கு ஒரு weight, கனமும், அதிகாரமும் சேர்ப்பதற்காக, “நான் உபவாசித்து ஜெபித்துக்கொண்டிருந்தபோது தேவனுடைய ஆவியானவர் என்னோடு பேசினார்,” என்ற வார்த்தைகளைச் சேர்த்துக்கொள்கிறார்கள்.

“பரிசேயர்கள் உபவாசிக்கிறார்கள், ஆகையால் நீங்கள் உபவாசிக்க வேண்டாம்,” என்று அவர் சொல்லவில்லை. மாறாக, “அவர்கள் உபவாசிப்பதுபோல் நீங்கள் உபவாசிக்காதீர்கள். நீங்கள் உபவாசிப்பது யாருக்கும் தெரிய வேண்டாம். அவர்கள் காணிக்கைக் கொடுக்கின்றார்கள், தான தர்மம் செய்கின்றார்கள், தெருமுனைகளிலிருந்து மேளம் கொட்டி, தம்பட்டம் அடித்து காணிக்கை போடுகிறார்கள். அப்படி நீங்கள் காணிக்கை கொடுக்க வேண்டாம். உங்கள் வலது கை கொடுப்பது உங்கள் இடது கை அறியாதிருக்கட்டும்.” இப்படி மறைவில், ஒளிப்பில், தேவனுக்குமுன்பாக நாம் வாழ்வது எப்படி என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து போதித்தார்.

தேவனுக்காகவும், தேவனுடைய மக்களூக்காகவும் மறைவில், ஒளிப்பில், நாம் நன்மைசெய்து வாழ்கிற, துன்புற்று வாழ்கிற, பாடுபட்டு வாழ்கிற, தியாகம்செய்து வாழ்கிற ஒரு வாழ்க்கையை நாம் தெரிந்தெடுக்க வேண்டும். அது இன்றைய கிறிஸ்தவர்கள் மத்தியில் மிகவும் அரிது. நாம் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் நம் மத்தியிலும் அது அரிதாய்ப் போய்விடும்.

நான் மீண்டும் சொல்லி முடிக்கிறேன். அடித்தளம் அல்லது வேர் என்பது தேவனுக்குமுன்பாக எது அருமையானதோ, தேவனுடைய மக்களுக்கு எது நன்மையானதோ, அதை மறைவில், யாரும் அறியாதவண்ணம் செய்யவேண்டும். நாம் செத்தபிறகுகூட அது தெரியக்கூடாது. autobiography சுயவரலாறெல்லாம் எழுதி வைக்கக்கூடாது.

புதிய எருசலேமா, பாபிலோனா

அப்போது “இது புதிய எருசலேமை அலங்கரிக்கின்ற நகை,” என்று ஆண்டவராகிய இயேசு சொல்வார். வெளியே தெரிந்தால் அது நகை அல்ல. மகா பாபிலோன் வெளியே makeup அடித்துக்கொண்டிருக்கிற வேசி என்று வேதம் சொல்கிறது. நான் இந்த வார்த்தையைப் பயன்படுத்துவதால் நீங்கள் அதிர்ச்சியடைய வேண்டாம். வேதாகமம் இந்த வார்த்தையைத்தான் பயன்படுத்துகிறது. திருவெளிப்பாடு 17. “ராஜகுமாரத்தி உள்ளாகப் பூரண மகிமையுள்ளவள்; அவள் உடை பொற்சரிகையாயிருக்கிறது” (சங். 45:13). வெளியே பகட்டு, show பண்ணுவது, காட்சிகாட்டுவது, உதடுகளுக்குச் சாயம்தீட்டி, கைகால் விரல்களுக்கு வண்ணம் அடித்து, உடலின் பல உறுப்புகளில் அலங்கார நகைகள் மாட்டித் தொங்கவிட்டு - இது பாபிலோன். இந்த விசயத்தைப் பொறுத்தவரை என்னுடைய நிலைப்பாட்டை நான் சொல்லிவிட்டேன். தேவனுடைய இராஜ்ஜியத்திநிமித்தம் தங்களை அண்ணகர்களாக்கிக்கொண்டவர்கள் உண்டு. ஏற்க மனதிருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். “இதை ஏற்றுக்கொண்டவர்கள் special பரிசுத்தவான்கள்; ஏற்றுக்கொள்ளாதவர்களுக்குப் பரலோகத்தில் ground floorஇல்தான் இருக்கை. இதை ஏற்றுக்கொண்டவர்களுக்கு மேல் மாடியிலே இருக்கை,” என்று சொல்பவனல்ல நான்.

மறைவாக, ஒளிப்பில் தேவனுக்காக, தேவனுடைய மக்களுக்காக, தேவனுடைய மக்களின் வளர்ச்சிக்காக, தேவனுடைய மக்கள் கட்டியெழுப்பப்படுவதற்காக, அவர்கள் தழைப்பதற்காக, பிழைப்பதற்காக, செழிப்பதற்காக, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நற்செய்திக்காக, நாம் செய்கின்ற பலிகள், நாம் இடுகின்ற பலிகள், தியாகங்கள், பாடுகள், துன்பங்கள், மனிதர்களுடைய கண்களுக்குத் தெரியாமல், யாருக்கு நன்மை செய்கிறோமோ அவர்களுக்கே நாம் நன்மை செய்கிறோம் என்று தெரியக்கூடாது என்பதுதான் புதிய ஏற்பாட்டின் மிகப் பெரிய பாடம். அது மட்டும் அல்ல, அவர்கள் நம்மைத் துரோகி என்று சொல்ல வேண்டும். அப்போதுதான் foundation work complete. தன்னுடைய திராணிக்கு மிஞ்சி ஒரு நபருக்காக அல்லது ஒரு குடும்பத்திற்காக, ஒரு சமுதாயத்திற்காக ஒரு தியாகம் செய்ய வேண்டும். அந்த நன்மையை அனுபவித்தபிறகு, அந்த நபரோ, குடும்பமோ, சமுதாயமோ எழுந்து, “இவனைப்போல ஒரு தீய மனிதன் எவனும் இல்லை,” என்று சொல்ல வேண்டும். அப்போதுதான் அடித்தளம் முழுமையடைந்தது என்று பொருள். அவர்கள் ஒன்றும் சொல்லாவிட்டால் அஸ்திபாரம் இன்னும் போட்டு முடியவில்லை.

ஏசாயா 53ஆம் அதிகாரத்தை நான் உங்களுக்கு வீட்டுப்பாடமாகத் தருகிறேன். “அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம்; அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம்.” அவர் நமக்காகப் பாடுபட்டார். நாமோ அவரை எண்ணாமல் போனோம். அவர் வேறு யாருக்காகவோ பாடுபட்டார் என்று நாம் நினைக்கிறோம். அவர் எனக்காகப் பாடுபட்டார்; என் அக்கிரமங்களைச் சுமந்தார்; எனக்காகத்தான் அடிவாங்கினார்; எனக்காகத்தான் சிலுவையில் மரித்தார்; ஆனால், நான் சிலுவையில் வழியாக நடந்துபோகும்போது, “யாருக்காகவோ இந்த மனிதன் அடிவாங்குகிறான்,” என்று நினைக்கிறேன். நாம் இப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்வதற்கு நம் மனங்களையும், இருதயங்களையும் ஆயத்தம்பண்ணிக்கொள்ள வேண்டும். நான் ஒரு கடினமான பாடத்தைச் சொல்கிறேன். நீங்கள் செய்த எல்லா நன்மைகளையும் பிறர் பாராட்டுவார்கள் என்று நினைக்கிறீர்களா? நினைக்கவில்லையா? நினைக்கவில்லையென்றால் நீங்கள் ஏற்கனவே புதிய எருசலேக்கு அடித்தளமாக மாறிவிட்டீர்கள் என்று பொருள்.

ஆண்டவர் புதிய எருசலேமின் அஸ்திபாரத்தைக் கொஞ்சம் விலக்கிக் காண்பிக்கும்போது, அதில் பலருடைய தியாகங்களும், பலிகளும், துன்பங்களும், பாடுகளும், வருத்தங்களும், கண்ணீர்களும் இருப்பது தெரியவரும். ஒரு நாளில் அவர் அதைக் காட்டுவார். அது ஒரு transparent ஆன நகரம், பளிங்குபோன்ற நகரம். பூமியில்தான் மண்ணுக்குக்கீழே இருப்பதைப் பார்க்க முடியாது. ஆனால், அந்த நகரத்தில் மண்ணிற்குக்கீழே இருப்பதைக்கூடப் பார்க்கலாம். ஆம், அந்த நகரத்திற்குப் பன்னிரெண்டு அடுக்குகளாலான அஸ்திபாரங்கள் இருக்கின்றன. அது அலங்கரிக்கப்பட்டிருக்கிறது என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. அங்கு நம் கண்ணீர்கள், பாடுகள், துன்பங்கள், வருத்தங்கள், தியாகங்கள் அனைத்தும் இருக்கும். “ஒருவன்கூட என் தியாகத்தைப் பாராட்டவில்லையே! ஒருவன்கூட எனக்குத் தோள்கொடுக்க வரவில்லையே! பிறருடைய சுமைகளைக்கூட நானே சுமந்துகொண்டிருக்கிறேன். அவர்கள் கண்டுகொள்ளவில்லையே!” என்று எண்ண வேண்டாம். ஒரு நாள் வருகிறது. அந்த நாள் உங்களுக்கு மகிமையாக இருக்கும்.

ஒரு காரியம் சொல்லுகிறன். வயதான பெற்றோர்களைப் பராமரிப்பதைப்பற்றி நான் ஒன்று சொல்லுகிறேன். இது புதிய எருசலே‍மில் அம்பலமாகிவிடும். ஒரு பெற்றோருக்கு ஐந்து பிள்ளைகள் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர்களுடைய வயதான காலத்தில் அவர்களை எந்தப் பிள்ளைப் பராமரிக்க வேண்டும் என்பது இன்று பெரிய சிக்கல். “எங்கள் வீட்டில் மூன்று மாதம், உங்கள் வீட்டில் மூன்று மாதம், அவர்கள் வீட்டில் மூன்று மாதம்,” என்று பிள்ளைகள் பேச ஆரம்பித்துவிட்டார்கள். இந்தச் சூழ்நிலையில் பெற்றோரைப் பராமரிக்கும் பொறுப்பை ஒரு பிள்ளை ஏற்றுக்கொள்கிறான் என்று வைத்துக்கொள்வோம். மீதி நான்குபேர் அதைக்குறித்து சிந்திப்பதேயில்லை, விசாரிப்பதேயில்லை என்றும் வைத்துக்கொள்வோம். ஒன்றை நிச்சயமாகச் சொல்கிறேன். வயதான, தன்னிலை இழந்த, நோயுற்ற பெற்றோர்களைச் சேவிக்கிற தேவ மக்களை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அளவுகோலாகக் கொண்டு, “இதுதான் புதிய எருசலேம்” என்று சீர்த்தூக்கிக் காண்பிக்கிற நாளிலே அவர்கள் மகிமையாக இருப்பார்கள். “இப்போது நான் துன்பப்படுகிறேன்; பாடநுபவிக்கிறேன்,” என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், சாதாரண உலகத்து மனிதர்களுக்கும், பரம மனிதர்களுக்கும் உள்ள பெரிய வேறுபாடே அந்த நாளில் நாம் பெறுகிற மகிழ்ச்சியும், ஆனந்தமும், இன்பமும், களிப்பும்தான். இது உண்மை. “நான் சாவதற்குமுன்பே என்னுடைய எல்லாத் தியாகங்களுக்கும் கைமேல் பலன் வேண்டும்,” என்றால் அவன் ஓர் ஆவிக்குரிய மனிதன் இல்லை.

என் திருமணத்திற்கு முந்தியே நான் என் மனைவியினுடைய வங்கிக்கணக்கிலிருந்து பணம் எடுத்து ஊழியக்காரர்களுக்குக் கொடுத்தேன். என்னுடையதை விற்று நான் ஊழியக்காரர்களுக்குக் கொடுத்திருக்கின்றேன். எல்லாரும் அப்படிச் செய்யுங்கள் என்று நான் சொல்லவில்லை. ஆனால், நான் ஒன்று சொல்ல முடியும். “நான் இயேசு கிறிஸ்துவுக்காகக் கொடுத்தேன்; அதனால் நான் வறியவன், ஏழையாகி விட்டேன்,” என்பது நடக்கவே நடக்காது. இந்தப் பூமியிலே உங்களுக்குக் கைமாறு உண்டு. “இப்பொழுது இம்மையிலே, துன்பங்களோடேகூட நூறத்தனையாக, வீடுகளையும், சகோதரரையும், சகோதரிகளையும், தாய்களையும், பிள்ளைகளையும், நிலங்களையும், மறுமையிலே நித்திய ஜீவனையும் அடைவான்,” என்று ஆண்டவர் சொன்னார். ஆனால், நான் அந்த ஆசீர்வாதத்தைப்பற்றிச் சொல்லவில்லை.

அதுதான் ஆசீர்வாதம் என்று தேவனுடைய மக்கள் பொய்யாய் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதுவல்ல ஆசீர்வாதம். அது பழைய ஏற்பாட்டிலே இஸ்ரயேல் மக்கள்கூட பெற்றுக்கொண்டார்கள்.

ஒன்று உண்டு. அதற்குக் கைமாறு இந்தப் பூமியிலே இல்லை. நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையிலே அவர் அவருடைய புதிய எருசலேமை திரைநீக்கி இந்தப் பிரபஞ்சத்திற்குக் காண்பிக்கிற நாளிலே நாம் பெறுகிற ஒரு நன்மை, ஒரு ஆசீர்வாதம், ஒரு மகிழ்ச்சி, ஒரு களிப்பு உண்டு.

களிப்பு என்றால் தெரியுமா? களிப்பு என்கிற வார்த்தை எங்கிருந்து வருகிறது தெரியுமா? கள்ளுக்குடித்தால் களிப்பு வரும். கள் குடித்தவர்களைப் பார்த்திருக்கின்றீர்களா? கள் குடித்துவிட்டுத் தெருவில் நடந்துபோகும்போது அவர்கள் மிதந்துகொண்டிருப்பார்கள். நீங்கள் அப்படிப்பட்ட ஊரில் வளர்ந்திருந்தால் உங்களுக்குத் தெரியும். பட்டணத்தில் வாழ்ந்தவர்களுக்குத் தெரியாது. கிராமங்களில் வாழ்ந்தவர்களுக்குத் தெரியும். அவர்கள் கள்ளுக் கடையிலிருந்து வீடுவரை களிப்பில்தான் போவார்கள். அவர்களுடைய கால் மண்ணில் இருக்கிறது என்று சொன்னால் அவர்கள் நம்ப மாட்டார்கள். “இல்லை, இல்லை, நான் மிதந்துகொண்டிருக்கிறேன்,” என்று சொல்வார்கள்.

தேவ மக்கள் உண்மையான ஆனந்தம், இன்பம், களிப்புப் பெறுவார்கள். இந்த வார்த்தைகளால் நான் உங்களை ஊக்குவிக்கிறேன். சட்ட முறையிலே “நீ இதைச் செய்தால், நான் அதைச் செய்வேன். நீ அதைச் செய்தால் நான் இதைச் செய்வேன். நீ இவ்வளவு செய்தால் நான் அவ்வளவு செய்வேன். நீ அவ்வளவு செய்தால் நான் இவ்வளவு செய்வேன். நீ இவ்வளவு செய்தால் நான் பொறுப்பேன், இதற்கு மீறிப்போனால் நான் பொறுக்க மாட்டேன்,” என்ற அடிப்படையிலே தேவனுடைய மக்கள் ஒருவரோடொருவரும் மற்ற மனிதர்களோடும் உறவுகளைக் கட்டியெழுப்புவது இல்லை. மனிதர்களுடைய கண்களுக்குத் தென்படாத, புலப்படாத, தட்டுப்படாத, அவர்கள் போற்றாத, பாராட்டாத, புகழாத, கற்றுக்கொள்ளாத, எண்ணிக்கூடப் பார்க்காத பல வலிகளும், தியாகங்களும், உழைப்பும், கடும் உழைப்பும், கண்ணீரும், பாடுகளும், தேவனுக்காகவும், தேவனுடைய மக்களுக்காகவும் ஒருவரோடொருவருக்காகவும், நம்முடைய வாழ்க்கையிலே பல்லாயிரம் காணப்பட வேண்டும். இவைகள் புதிய எருசலேமுடைய அடித்தளமாய் மாறும். அப்படிப்பட்ட புதிய எருசலேமை நாம் ஒவ்வொரு நாளும் கட்டியெழுப்பிக்கொண்டிருக்கிற‍ேம். அதைக் கட்டியெழுப்புவதற்காகத்தான் நாம் ஒரு குடும்பமாக, சமுதாயமாக, தேவனுக்கு சாட்சிபகிர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இதைக் கட்டியெழுப்புகிற கிருபையையும், ஞானத்தையும், பரம வளங்களையும், எல்லாப் பொறுமையையும், இரக்கங்களின் பிதாவும், ஆறுதலின் தேவனுமானவர் நமக்கு அருள்வாராக. ஆமென்.