வேத வாசிப்பு
மத். 16:16; யோவான் 14:6; ரோமர் 1:20; 5:14; 2 கொரி. 4:4; எபே. 1:4; கொலோ. 1:15; 1 தெச. 1:9; 5:23; 1 தீமோ. 6:4-16; எபி. 1:1-3; 2:5-9; 1 பேதுரு 2:5; 2 பேதுரு 1:4; 1 யோவான் 5:11-12; வெளி. 1:17; ஆதி. 1:26-28; 2:7; 3:22-24; யாத். 3:13-15; சங். 14:1; ஏசாயா 44:6
வெளி. 10:7இன்படி தேவனே “வானத்தையும் அதிலுள்ளவைகளையும், பூமியையும் அதிலுள்ளவைகளையும், சமுத்திரத்தையும் அதிலுள்ளவைகளையும் சிருஷ்டித்தவரும், சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவருமாவார்”. தேவன் படைத்தவர். மீதியனைத்தும் படைக்கப்பட்டவை.
படைப்பின் ஒழுங்கைப் பார்த்தாலே, இந்த ஒழுங்கின்பின் ஒருவர் இருக்க வேண்டும் என்ற எண்ணம் எந்த மனிதனுக்கும் எழும். சூரிய மண்டலத்தில் கோள்கள் தத்தம் பாதையில் பயணிப்பது தானாக நிகழ்ந்த செயல் என்று ஒருவன் சொன்னால் அவனுடைய அறிவீனத்தை என்னவென்பது! “வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது. பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது, இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது… அவைகளில் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை ஸ்தாபித்தார்,” என்று சங்கீதம் 19 கூறுகிறது. எனவே, சங்கீதம் 14:1இன்படி “தேவன் இல்லை என்று சொல்பவன் மதிகேடன்.” ஏனென்றால், ரோமர் 1:19, 20இன்படி “தேவனைக்குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் ‘தேவனை எனக்குத் தெரியாது,’ என்று சாக்குப்போக்குச் சொல்ல ஒருவனுக்கும் இடமே இல்லை.” தேவனே பிரபஞ்சத்தையும், உலகத்தையும் (மாற்கு 13:19), மனிதனையும், எல்லாவற்றையும் (எபே. 3:11) படைத்தார். “அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது” என்று கொலோ. 1:16 ஆணித்தரமாகக் கூறுகிறது.
மனிதனும் படைக்கப்பட்டவனே. அவன் விலங்கிலிருந்தோ, வேறு இனத்திலிருந்தோ, விண்கற்களிலிருந்தோ, வெற்றிடத்திலிருந்தோ தோன்றவில்லை,; மாறாக, “தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்,” என்று ஆதியாகமம் 1:28ம், “தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்,” என்று ஆதியாகமம் 2:7ம் அழுத்தம் திருத்தமாகக் கூறுகின்றன. மனிதன் படைக்கப்பட்டவன், தேவனால் படைக்கப்பட்டவன்.
ஆம், தேவனே, மனிதன் உட்பட, எல்லாவற்றையும் சிருஷ்டித்தார், உண்டாக்கினார், படைத்தார்.
தேவன் படைத்தவர். மீதியனைத்தும் படைக்கப்பட்டவை. படைத்த தேவனுக்கும் அவருடைய படைப்புக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி, பிளவு, இருக்கிறது. இது நாம் புரிந்துகொள்ளவேண்டிய முதலாவது பெரிய இடைவெளி, பிளவு.
தேவன் என்று ஒருவர் இருக்கிறார் என்றால், அவர்தாம் வானத்தையும், பூமியையும், சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் படைத்தவர் என்றால், இவர் எப்படிப்பட்டவர், இவருடைய குணம் என்ன?
தேவன் இறையாண்மையுள்ளவர், தாமாக-இருக்கிறவர், தொடக்கமும் முடிவும் இல்லாதவர், அரூபியானவர், எங்கும் நிறைந்தவர், எல்லா நன்மைகளுக்கும் ஆதிகாரணர், எல்லாம்-கடந்தவர், எல்லாம் அறிந்தவர், மேன்மையும், மகத்துவமும், மாட்சியும் நிறைந்தவர், நித்தியானந்தமுள்ள ஏக சக்கராதிபதி, ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தர், ஒருவர், எல்லாவற்றையும், எல்லாரையும் உயிரோடு வைத்திருக்கிறவர், சாவை அறியாதவர், அணுகமுடியாத ஒளியில் வாழ்பவர், மனிதரில் ஒருவரும் கண்டிராதவர், காணமுடியாதவர் என்று வேதாகமம், குறிப்பாக 1 தீமோ. 6:14-16, அவருடைய குணாம்சங்களை விவரிக்கிறது.
அவர் ஜீவனுள்ள தேவன், ஜீவிக்கும் தேவன், அவர் சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவர், மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவர் என்று வெளி. 1:18 கூறுகிறது. அவர் இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர், அவர் அல்பா ஒமெகா, அவர் ஆதி அந்தம், அவர் முதலும் இறுதியும், தொடக்கமும் முடிவும், முந்தினவர் பிந்தினவர், யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லாதவர் (யாக்கோபு 1:17).
இந்தத் தேவன் யார்? இவருடைய பெயர் என்ன?
உலகத்தில் பல மதங்கள் இருக்கின்றன. பொய்யான மதங்களும், மதவழிபாடுகளும் மலிந்துகிடக்கின்றன. போலியான கிறிஸ்தவமும் இருக்கிறது. விழுந்துபோன மனிதனுடைய மனமும், தன்மையுமே இவைகளுக்குக் காரணம். இவைகள் மனிதனின் கண்டுபிடிப்புகளும், கற்பனைகளுமேயாகும். எனவே, இவர்களைப் பொறுத்தவரை, “தேவன்” என்ற வார்த்தை பொருளற்றது. ஏனென்றால், இவர்கள் தாங்கள் கண்டுபிடித்த, தங்கள் கற்பனையில் உதித்த, தாங்கள் உண்டாக்கிய விக்கிரகங்களை, சிலைகளை, உருவங்களை, படங்களை, இல்லாத தெய்வங்களை, தெய்வங்கள் என்று ஆராதிக்கிறார்கள். இவர்கள் தங்களைப் படைத்தவரை வணங்காமல் தாங்கள் படைத்ததை வணங்குகிறார்கள்.
மக்கள் பொய்யான, வீணான, அந்நிய தேவர்களை உருவாக்கி, ஆராதிப்பதால், வேதாகமம் உண்மையான தேவனை அடையாளம் காட்டி, அவரை வெளிப்படுத்த முனைகிறது. வேதாகமம் இந்த உண்மையான தேவனை நமக்கு அடையாளம் காட்டுகிறது. உண்மையான தேவனை நாம் இனங்கண்டாக வேண்டும். ஏனென்றால், “நாங்கள் கடவுளை நம்புகிறோம்,” என்று ஒருவன் சொல்லும்போது அவன் யாரைக் கடவுள் என்று குறிப்பிடுகிறான் என்று சொல்லாதவரை கடவுள் என்ற வார்த்தை பொருளற்றது. தாங்கள் ஒரே கடவுளை விசுவாசிப்பதாகப் பலர் சொல்லலாம். ஆனால், பிசாசுகளும் தேவனை விசுவாசிக்கின்றனவே! எனவே, தேவனே படைத்தவர் என்றும், படைத்தவர் எப்படிப்பட்டவர், இவருடைய குணம் என்ன என்றும் தெரிந்தால் மட்டும் போதாது. இவர் யார் என்றும் அறிய வேண்டும். இவருடைய பெயர் என்ன?
உண்மையான தேவனை நாம் அறிய வேண்டுமானால், அவரே தம்மை வெளிப்படுத்த வேண்டும். படைத்த இந்தத் தேவன் தம்மை வெளிப்படுத்தியிருக்கிறார். “எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு; அவர் எல்லார்மேலும், எல்லாரோடும், உங்கள் எல்லாருக்குள்ளும் இருக்கிறவர்” என்று எபே. 4:16 கூறுகிறது. இவர் “நம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவன்” என்று எபேசியர் 1:7 கூறுகிறது. பழைய ஏற்பாட்டில் இவர், யாத். 6:3இல் சொல்லப்பட்டுள்ளபடி, தம்மை “யெஹோவா” என்ற பெயரில் வெளிப்படுத்தினார். புதிய ஏற்பாட்டில் இவர் தம்மைத் தம் குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்ற நபரில் வெளிப்படுத்தினார், வெளியரங்கமாக்கினார். ஆம், ஆண்டவராகிய இயேசு யெஹோவாவை வெளிப்படுத்தினார். “தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்” (யோவான் 1:18). “அவர் அதரிசனமான தேவனின் தற்சுரூபம்” (கொலோ. 1:15). அதரிசனமான தேவனின் தற்சுரூபம் என்றால் இயேசு காணமுடியாத தேவனின் காணத்தக்க ரூபம்; என்று பொருள். புலப்படாத தேவனைப் புலப்படுத்தியவர் என்று பொருள். “இவர் (இயேசு ) அவருடைய மகிமையின் பிரகாசம், அவருடைய தன்மையின் சொரூபம்” (எபிரேயர் 1:3). எனவே, இயேசு மெய்யான தேவன். ஆண்டவராகிய இயேசுவைப்பற்றி யோவான் தன் நற்செய்தியில் முதல் அதிகாரத்தில் 1முதல் 3வரை “ஆதியிலே வார்த்தை இருந்தது; அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது; அவர் ஆதியிலே தேவனோடிருந்தார், சகலமும் அவர்மூலமாய் உண்டாயிற்று, உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை,” என்று சொல்லியபின், 14ஆம் வசனத்தில் “அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது,” என்று கூறுகிறார். எந்த வார்த்தை? ஆதியிலே இருந்த வார்த்தை. வனாந்தரத்தில் தேவன் தம் மக்களிடையே ஒரு கூடாரத்தில் வாசம்செய்ததுபோல், ஆதியிலே இருந்த வார்த்தையானவர் இந்தப் பூமியில் மனிதர்களிடையே வாசம்செய்தார், கூடாரமடித்தார்.
“தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்” என்று ஆதியாகமம் 1:27 கூறுகிறது. 2 கொரிந்தியர் 4:4 “கிறிஸ்து தேவனுடைய சாயல்” என்று கூறுகிறது. அப்படியானால், தேவன் தம் சாயலாகிய கிறிஸ்துவின் சாயலில், குணத்தில், தன்மையில், இயல்பில், ஆதாமைப் படைத்தார். ஆம், இயேசு கிறிஸ்து தேவனின் வெளியாக்கம், வெளியரங்கம், வெளிப்பாடு. ஒருவன் தேவனைக் காணவேண்டுமானால், சந்திக்க வேண்டுமானால், தொட வேண்டுமானால், தொடர்புகொள்ள வேண்டுமானால், அவன் இயேசு கிறிஸ்துவிடம்தான் வரவேண்டும். “என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்” என்றும், “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” (யோவான் 14:6) என்றும் ஆண்டவராகிய இயேசு மிகத் தெளிவாகக் கூறினார்.
உண்மையான தேவனை நாம் அறிய வேண்டுமானால் அவரே தம்மை வெளிப்படுத்த வேண்டும். அவர் தம்மைத் தம் குமாரனாகிய இயேசுகிறிஸ்துவில், இயேசு கிறிஸ்துவில் மட்டுமே, வெளிப்படுத்தியிருக்கிறார். ஆவிக்குரிய சரிவும், இறக்கமும், வீழ்ச்சியும் நிறைந்த காலகட்டத்தில், யோவான் தம் முதல் நிருபத்தைக் கிறிஸ்தவர்களுக்கு எழுதினார். அந்த நிருபத்தில் அவர் எழுதியிருக்கும் “இவரே (இயேசுவே) மெய்யான தேவனும், நித்திய ஜீவனுமாயிருக்கிறார்…நீங்கள் விக்கிரகங்களுக்கு விலகி உங்களை காத்துக்கொள்வீர்களாக” என்ற கடைசி வார்த்தைகளை நன்றாகக் கவனியுங்கள் (1 யோவான் 5:20-21). இயேசு “ஜீவனுள்ள மெய்யான தேவன்” (1 தெச. 1:9).
முதலாவது படைத்தவருக்கும், அவருடைய படைப்புக்கும் இடையேயுள்ள பெரிய இடைவெளி, பிளவு, இருக்கிறது இரண்டாவது, தேவனுடைய நித்திய ஜீவனுக்கும், பிற உயிர்களுக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி, பிளவு, இருக்கிறது.
“நித்திய ஜீவன்” என்பது என்றென்றைக்கும் இருக்கிற அல்லது முடிவில்லாத ஜீவன் என்பது மட்டுமல்ல; அது அதைவிட மிகவும் அதிகமானது. அது தொடக்கமும் முடிவும் இல்லாத ஜீவன், சிருஷ்டிக்கப்படாத ஜீவன், சிருஷ்டிக்கப்படமுடியாத ஜீவன், அழியாத ஜீவன், அழிக்கமுடியாத ஜீவன், தேவனுடைய ஜீவன், தெய்வீக ஜீவன், பரம ஜீவன், நிலையான ஜீவன், நிரந்தரமான ஜீவன், நீடித்த ஜீவன். நிலைவரமான ஜீவன். படைக்கப்படாத நித்திய ஜீவனுக்கும், படைக்கப்பட்ட மற்ற உயிர்களுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை நாம் பார்க்கவேண்டும். கடந்த நித்தியத்தில் தேவன் ஒருவரே எல்லாம் கடந்த மகிமையோடும், மகிழ்ச்சியோடும் இருந்தார் என்று நாம் சொல்லலாம். அவருடைய மகிமையிலும், மகிழ்ச்சியிலும் பங்குபெற வேண்டும் என்பதற்காக அவர் ஒருநாள் இப்பிரபஞ்சத்தை, குறிப்பாக மனிதனை, படைக்கத் தொடங்கினார். அப்போதுதான் படைக்கப்பட்ட இந்த முழுப் பிரபஞ்சம், உலகங்கள், தூதர்கள், மனிதர்கள் எல்லாம் உருவாக்கப்பட்டன.
தமிழ் வேதாகமத்தில் ஜீவன் என்று சொல்லப்பட்டுள்ள வார்த்தைக்கு மூலமொழியாகிய கிரேக்க மொழியில் bios, psuche, zoe என்ற வெவ்வேறு வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த மூன்று வார்த்தைகளுக்கும் வெவ்வேறு பொருள் உண்டு. bios என்றால் உடலில் உள்ள உயிர் என்றும், psuche என்றால் ஆத்தும வாழ்வு, இயற்கையான வாழ்வு, என்றும், zoe என்றால் தேவனுடைய ஜீவன் என்றும் பொருள். biology, psychology என்ற வார்த்தைகள் நமக்குத் தெரியும். bios என்ற வார்த்தையின் நீட்டிப்பு biology. psuche என்ற வார்த்தையின் நீட்டிப்பு psychology. bios-உயிர் உடலோடும்,, psuche-வாழ்வு ஆத்துமாவோடும், zoe-ஜீவன் ஆவியோடும் சம்பந்தப்பட்டவை. தேவனுடைய உயிர்தான் நித்திய ஜீவன். நிலையான, நீடித்த, நிலைவரமான ஜீவன்.
இதைத் தெளிவாக்க ஒரேவொரு வசனத்தை நான் மேற்கோள்காட்டுகிறேன். மத். 6:25: “என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப் பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா?” இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ள “உங்கள் ஜீவனுக்காகவும்” என்பது “உங்கள் வாழ்க்கைக்காகவும்” “ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும்” என்பது “ஆகாரத்தைப்பார்க்கிலும் உயிரும்” என்று இருக்க வேண்டும். வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ள “தன் ஜீவனைக் காக்கிறவன்” என்பது “தன் ஆத்தும வாழ்வைக் காக்கிறவன்” என்றும், “தன் ஜீவனை ரட்சிக்க விரும்புகிறவன்” என்பது “தன் ஆத்தும வாழ்வை ரட்சிக்க விரும்புகிறவன்” என்றும் இருக்க வேண்டும்.
தேவனுடைய உயிரை வேதாகமம் ஜீவன் என்று குறிப்பிடுகிறது. பிற உயிர்கள் வெறும் உயிர்களே. தேவனுடைய உயிர் மட்டுமே ஜீவன். தேவனுடைய ஜீவன் நித்திய ஜீவன். “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்,” என்று ஆண்டவராகிய இயேசு கூறினார் (யோவான் 14:6). “அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது,” என்று யோவான் 1:4 கூறுகிறது. “நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.” யோவான் 10:10. இது தேவனுடைய நித்திய ஜீவன்.
“நித்திய ஜீவன்” மற்ற உயிர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இதை நான் கொஞ்சம் விளக்க விரும்புகிறேன். இப்பிரபஞ்சத்தில் வித்தியாசமான ஆறு உயிர்கள் இருக்கின்றன என்று சொல்லலாம்.
தேவனுடைய “நித்திய ஜீவனுக்கும்” பிற உயிர்களுக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி இருக்கிறது. இது இரண்டாவது பெரிய இடைவெளி, பிளவு.
நாம் நம் வாழ்க்கையைத் தேவனுடைய அடித்தளத்தின்மேல் கட்ட விரும்பினால், இயேசு கிறிஸ்து மட்டுமே உண்மையான அடித்தளம் என்பதை நாம் பார்க்கவேண்டும். 1 பேதுரு 2:4-5இல் வாசிப்பதுபோல் அவர் “ஜீவிக்கின்ற கல்”, அதாவது உயிரோடு இருக்கிற கல். யோவான் 14:6இல் “நானே…ஜீவனாயிருக்கிறேன்” என்றும், திருவெளிப்பாடு 1:18இல் “சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன்” என்றும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கூறுகிறார். கிறிஸ்து, “நானே ஜீவன்…நானே ஜீவிக்கிறவர்,” என்று சொல்லுகிறார். மறுபடிபிறந்த உண்மையான கிறிஸ்தவர்கள் எல்லாரும் அவர்மேல் கட்டப்பட்டுள்ள “ஜீவிக்கும் கற்கள்” என்று 1 பேதுரு 2:5 கூறுகிறது. உண்மையான கிறிஸ்தவன் தேவனுடைய ஜீவனாகிய படைக்கப்படாத “நித்திய ஜீவனை” உடையவன். “தேவன் நமக்கு நித்தியஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம். குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன். உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன்,” என்று 1 யோவான் 5:11-13 கூறுகின்றன. உண்மையான கிறிஸ்தவன் ஜீவிக்கின்ற கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டிருக்கிறான். இதைத்தான் 2 பேதுரு 1:4 “நாம் அவருடைய திவ்ய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்கள்” என்று கூறுகிறது.
மனிதன் தேவனுடைய படைப்பின் மகுடம். மனிதன் மட்டுமே தேவனை முழுமையாக வெளிக்காட்ட முடியும். ஏனெனில். அவன்தான் தேவனை வெளியாக்குவதற்கான மிக உயர்ந்த வழியாகும். மனிதன் தேவனுடைய “நித்திய ஜீவனைப்” பெற்று, அவரை வெளியாக்க வேண்டும் என்பதற்காகவும், அவர் சார்பாக அவருடைய படைப்பை ஆளுகைசெய்ய வேண்டும் என்பதற்காகவும், அவன் “அவருடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்டான்.” “தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்” (ஆதி. 2:7). “தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார். தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்” (ஆதி. 1:26-28). மனிதன் “நித்திய ஜீவனைப்” பெறும்போது மட்டுமே தேவனுடன் அவனுக்கு இப்பேர்ப்பட்ட ஒப்பற்ற உறவு கிடைக்கும் (ஆதி. 3:22-24).
தேவனை வெளியாக்குவதற்கும், தேவனுடைய சார்பாக ஆளுகை செய்வதற்கும் அவனுக்குத் தேவனுடைய நித்திய ஜீவன் வேண்டும். இங்குதான் நாம் படைப்பின் தேவனுக்கும், படைக்கப்பட்ட மனிதனுக்கும் இடையே இருந்த பெரிய இடைவெளியைப் பார்க்க வேண்டும்.
தேவன் படைக்கப்படாத, படைக்கமுடியாத, அழியாத, அழிக்கமுடியாத, தொடக்கமும் முடிவும் இல்லாத, நிலையான, நித்திய ஜீவனை உடையவர். ஆனால், மனிதன் படைக்கப்பட்டவன். படைக்கப்பட்ட அவனிடம் படைக்கப்பட்ட உயிர் மட்டுமே இருந்தது. முதல் மனிதனாகிய ஆதாம் படைக்கப்பட்டபோது, அவனிடம் நித்திய ஜீவன் இருக்கவில்லை. ஏனென்றால்,
நித்திய ஜீவன் படைக்கப்படாத ஜீவன். ஆதாம் படைக்கப்பட்டவன். படைக்கப்பட்டவனைப் படைக்கப்படாத ஜீவனோடு படைக்கமுடியாது. தேவன் அவனை நித்திய ஜீவனோடு படைத்திருக்க முடியாது. ஏனென்றால், நித்திய ஜீவன் படைக்கப்படாத ஜீவன். ஆனால், அவன் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ளக்கூடிய திறனை உடையவனாக “தேவனுடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்டான்.” அவனிடம் தேவனுடைய சாயல் மட்டுமே இருந்தது; தேவனுடைய ஜீவன் இருக்கவில்லை.
தேவனுடைய சாயலில் ஆதாம் படைக்கப்பட்டான் என்றதும் சிலர் இடறக்கூடும். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து “அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்,” என்று கொலோ. 1:15ம், “தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்து” என்று 2 கொரி. 4:4ம், “இவர் அவருடைய மகிமையின் பிரகாசம், அவருடைய தன்மையின் சொரூபம்” என்று எபி. 1:1-3ம் கூறுகின்றன. இந்த வசனங்களில் வரும் தற்சுரூபம், சொரூபம், என்ற வார்த்தைகளைக் கவனியுங்கள். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து “காணமுடியாத தேவனின் (பரிபூரணமான, முழுமையான, நிறைவான, காணத்தக்க) சாயல்.” உலகத் தோற்றத்துக்குமுன்னே, அதாவது உலகத்தைப் படைப்பதற்குமுன்பே, நித்திய தேவன் தம் முழுத் திட்டத்தையும் தீட்டிவிட்டார். ஆகையால், தேவன் ஆதாமைப் படைத்தபோது, அவருடைய மனதில் “மனிதனாகிய இயேசுகிறிஸ்து” இருந்தார் என்பதையும், ஆதாமைப் படைத்தபோது ஆதாமிடம் “நித்திய ஜீவன்” இருக்கவில்லை, மாறாக அவனிடம் படைக்கப்பட்ட உயிர் மட்டுமே இருந்தது என்பதையும் நாம் தெளிவாகப் பார்க்க வேண்டும். ஏனென்றால், இதில் ஏராளமான பொருள்கள் மறைந்திருக்கின்றன. “தமக்குமுன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டார்” என்று வேதம் சொல்லுகிறதென்றால், உலகத்தை உருவாக்குவதற்குமுன்பே தேவன் இந்த உலகத்தில் இயேசு என்ற பெயரில் மனித உருவில் வருவார் என்று அவருக்குத் தெரியும் என்பது திண்ணம்.
பார்ப்பதற்குக் கண் என்ற புலன் வேண்டும். கேட்பதற்குக் காது என்ற புலன் வேண்டும். அதுபோல, தேவனைப் பெற்றுக்கொள்ள மனிதனுக்கு ‘ஆவி’ என்ற புலன் வேண்டும். அந்தப் புலன் ஆதாமிடம் இருந்தது. தேவன் அவனை “ஆவி, ஆத்துமா, சரீரம்” என்ற மூன்று பகுதிகளை உடையவனாகப் படைத்தார் (1 தெச. 5:23). அவன் ஓர் ஆவியையும், ஒரு சரீரத்தையும் உடைய, ஆனால் “நித்திய ஜீவன்” இல்லாத “ஜீவாத்துமா (உயிருள்ள ஆத்துமா)” என்று சொல்லலாம். ஆண்டவராகிய இயேசு உயிர்தெழுந்தபிறகு, பூட்டியிருந்த வீட்டுக்குள் ஒளிந்திருந்த சீடர்களுக்குத் தோன்றி அவர்கள்மேல் ஊதியதைப்போல், தேவன் ஆதாமைப் படைத்து அவனுக்குள் தம் ‘ஜீவசுவாசத்தை’, அதாவது ஆவியை, ஊதினார். அப்போது ஆதாம் உயிருள்ள ஆத்துமாவானான். ஆதாமின் உடலுக்குள் தேவன் ஆவியை ஊத, அவன் உயிருள்ள ஆத்துமாவானான். ஆவி, ஆத்துமா, சரீரமுடைய ஒரு மனிதனானான்.
“நித்திய ஜீவன்” என்பது என்றென்றைக்கும் இருக்கிற அல்லது முடிவில்லாத ஜீவன் என்பது மட்டுமல்ல; அது அதைவிட மிகவும் அதிகமானது.
நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான திராணி அல்லது புலன் ஆதாமுக்கு இருந்தது. அவன் கிறிஸ்துவைச் சுட்டிக்காட்டும் ஜீவ-மரத்தில் புசித்து நித்திய ஜீவனைப் பெற்றிருந்தால், 2 பேதுரு 1:4இல் பார்ப்பதுபோல் தேவனுடைய ஜீவனிலும், தன்மையிலும் பங்குபெற்று, அவருடன் ஒப்பற்ற உறவு கொண்டிருந்திருப்பான். அவர்களுக்கிடையே படைத்தவர் படைக்கப்பட்டவன் என்ற உறவைத் தாண்டி தகப்பன்-மகன் என்ற உறவு ஏற்பட்டிருக்கும். இந்த உறவு அவருடைய தூதர்களுக்குக்கூட இல்லை. ஆதாம் அறிவு மரத்தில் பங்குபெறாமல், மனமுவந்து கிறிஸ்துவின் அடையாளமாகிய ஜீவமரத்தில் பங்குபெறுமாறு தேவன் அழைத்தார். ஆதாம் தானாகவே முன்வந்து, மனமுவந்து ஜீவ-மரத்தைத் தெரிந்தெடுக்க வேண்டும். படைத்தவர்-படைக்கப்பட்டவன் என்ற உறவைத் தாண்டி தகப்பன்-மகன் என்ற உறவை அவன் தெரிந்தெடுக்கவேண்டும். இந்தத் தார்மீகப் பொறுப்பு அவனைச் சார்ந்தது. அவனே தேவனை நம்பி மனமுவந்து, அவருக்குக் கீழ்ப்படிந்து அவரைச் சார்ந்து வாழ்வதைத் தெரிந்தெடுக்கும்போது மட்டுமே அவன் தேவனுடைய மகன் என்ற அற்புதமான உறவை அடைய முடியும். அவர் அந்த ஜீவனை தம் பிரத்தியேகமான படைப்பாகிய மனிதனுக்குத் தந்து, அவனைத் தம் மகன் என்ற சிறப்பான உறவுக்குள் கொண்டுவர வேண்டும் என்று விரும்புகிறார். அன்றும் அவர் விரும்பினார். இன்றும் அவர் விரும்புகிறார்.
சூரியன் கிழக்கே உதிக்கிறது என்பதை மனிதர்கள் ஒப்புக்கொண்டாலும் சரி, ஒப்புக்கொள்ளாவிட்டாலும் சரி, சூரியன் கிழக்கேதான் உதிக்கிறது. சூரியன் கிழக்கே உதிப்பதை ஒருவன் பார்த்தாலும் சரி, பார்க்காவிட்டாலும் சரி. சூரியன் கிழக்கேதான் உதிக்கிறது. அதுபோல மனிதர்கள் ஒப்புக்கொண்டாலும் சரி, ஒப்புக்கொள்ளாவிட்டாலும் சரி இந்த உலகத்திலுள்ள அனைவரும் அவரால் படைக்கப்பட்டவர்களே. இது அவருடைய படைப்பு. ஆனால், “அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்” (யோவான் 1:12). அன்றும் சரி, இன்றும் சரி, தம்மை ஏற்றுக்கொள்ளுமாறு அவர் ஒருவனையும் கட்டாயப்படுத்துவதில்லை, பலவந்தம்செய்வதில்லை. ஆதாம் படைக்கப்பட்டபின் தேவன் அவனைத் தகுதிகாண்பருவத்தில் வைத்திருந்தார், அதாவது அவனுடைய நடையைச் சற்றுக் கண்காணித்தார் என்று சொல்லலாம். படைக்கப்பட்டபோது அவன் தேவனுடைய ஜீவனையுடைய முழுமையானவன் அல்ல. அவன் பாவமற்ற அப்பாவி. நன்மை தீமை அறியாத வெகுளி. வெளுத்ததெல்லாம் பால் என்றும், மின்னுவதெல்லாம் பொன் என்றும், ரீங்கரிப்பதெல்லாம் தேனீ என்றும் நினைத்த ஒரு வெகுளி. கள்ளங்கபடற்றவன். எனவேதான் சர்ப்பத்தோடு சகஜமாக உரையாடினான். “இவன் தன்னை ஏமாற்றக்கூடும்!” என்று நினைக்கமுடியாத அளவுக்கு வெகுளி.
ஆதாம் விழுந்தபிறகு, “அவன் தன் கையை நீட்டி ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து, புசித்து, என்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்யவேண்டும் என்று, அவன் எடுக்கப்பட்ட மண்ணைப் பண்படுத்த தேவனாகிய கர்த்தர் அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பிவிட்டார். அவர் மனுஷனைத் துரத்திவிட்டு, ஜீவவிருட்சத்துக்குப் போம் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேரூபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளிப் பட்டயத்தையும் வைத்தார்.” ஆதாம் படைக்கப்பட்டபோது அவனுக்குள் தேவனுடைய ஜீவன் இருக்கவில்லை. அதைப் பெற்றுக்கொள்ள தேவன் அவனுக்கு வாய்ப்புக் கொடுத்தார். ஆனால், அவன் அதைத் தவறவிட்டான் என்று இந்த வசனம் ஆணித்தரமாகக் கூறுகிறது.
அவன் “நித்திய ஜீவனில்” பங்குபெற்றிருந்தால் நாம் இன்று ஒன்றும் செய்யவேண்டிய அவசியம் இல்லையா என்ற கேள்வி எழக்கூடும். விருத்தசேதனம் பண்ணப்பட்டவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் விருத்தசேதனம் பண்ணப்பட்டவர்களாகப் பிறப்பதில்லை. அவர்கள் பிறந்தபிறகுதான் அவர்களுக்கும் விருத்தசேதனம் பண்ணப்படும். இந்தப் பூமியில் யாரும் கிறிஸ்தவனாகப் பிறப்பதில்லை. பிறந்தபின் கிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொள்ளும்போது மட்டுமே ஒருவன் கிறிஸ்தவனாகிறான். நல்ல ஆவிக்குரிய கிறிஸ்தவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் கிறிஸ்தவர்களாகப் பிறப்பதில்லை. அதுபோல, ஆதாம் ஏதேன் தோட்டத்தில் தோற்றுப்போகாமல் இருந்திருந்தாலும் அவருடைய வழித்தோன்றல்கள் ஒவ்வொருவரும் ஆதாமைப்போல் ஜீவன் அல்லது மரணம் இரண்டில் ஒன்றைத் தெரிந்தெடுக்கத்தான் வேண்டும். ஏதெனில் தேவன் “ஜீவ மரத்தையும் மரண மரத்தையும்” ஆதாமுக்குமுன் வைத்தார். ஜீவனையும் மரணத்தையும் முன்வைத்தார். மோசே, உபாகமம் 30இல் “நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் உனக்கு முன் வைத்தேன் என்று உங்கள்மேல் வானத்தையும் பூமியையும் இன்று சாட்சிவைக்கிறேன்; ஆகையால், நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு, நீ ஜீவனைத் தெரிந்துகொண்டு, கர்த்தர் உன் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் கொடுப்பேன் என்று அவர்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்திலே குடியிருக்கும்படிக்கு, உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து, அவர் சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவரைப் பற்றிக்கொள்வாயாக; அவரே உனக்கு ஜீவனும் தீர்க்காயுசுமானவர் என்றான்.” “இதோ, ஜீவனையும் நன்மையையும், மரணத்தையும் தீமையையும் இன்று உனக்கு முன்னே வைத்தேன்.”
“இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.”
மனிதன் தொடக்கத்தில் பூமியில் வாழ்வதற்காகப் “பூமியின் மண்ணினாலே” (ஆதி. 2:7) உண்டாக்கப்பட்டான். நாம் மண்ணானவர்கள். எனவே, மண்ணை நேசிக்கிறோம். ஆனால், மனிதனுடைய கடைசி விதி அதைவிட மிகவும் உயர்ந்தது. இதுதான் தோட்டத்தின் நடுவில் இருக்கிற ஜீவ-மரத்தின் உட்கருத்தாகும். அந்த மரத்தில் எந்த மந்திரமோ, தந்திரமோ இல்லை. அது கிறிஸ்துவைக் காண்பிக்கிற ஒரு படம். அது “நித்திய ஜீவனுக்குச்” செல்வதற்கான ‘நுழைவாயில்’. எனவே, ஆதாம் மனமுவந்து அந்த மரத்தைத் தெரிந்தெடுப்பதற்கு அவனுக்கு அங்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. அவனுடைய விதி இந்த ஜீவ-மரத்தில் அவன் பங்குபெறுவதையே சார்ந்திருந்தது. அவன் இந்த ஜீவ-மரத்தில் பங்குபெற்றிருந்தால் மட்டுமே உண்மையான, முழுமையான மனிதனாக, அதாவது மனித வரலாற்றில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவில் மட்டுமே காணப்படுகிற பரிபூரணமான மனிதத்துவத்தை அவனும் பெற்றிருக்க முடியும்.
பரலோகத்தின் பார்வையில் “நித்திய ஜீவன்” இல்லாத மனிதன் உண்மையான மனிதன் அல்ல. விழுந்துபோன மனிதன் பொய்யான மனிதன். விழுந்துபோன மனிதன் இப்போது தேவனுடைய நித்திய நோக்கத்தின் மங்கலான ஒரு நிழலாக மட்டுமே இருக்கிறான். இதன் விளைவுகளைக் கவனியுங்கள். மனிதன் தேவனுடைய நோக்கத்திற்கு முற்றிலும் எதிராக, நன்மை-தீமையின் அறிவைப் பெருக்கிக்கொள்வதின்மூலம் தன்னை வளர்த்துக்கொண்டு, பெருகிக்கொண்டே இருக்கிறான் என்பதே மனித வரலாற்றின் சோகமாகும். அதனால், இன்று அவனால் தன் பூமிக்குரிய அழைப்பையும் நிறைவேற்ற முடியவில்லை; அதற்குரிய திராணி அவனிடம் இல்லை. மனிதன் நித்திய ஜீவனைத் தெரிந்தெடுப்பதற்குப்பதிலாக நன்மை-தீமை அறியத்தக்க அறிவைத் தெரிந்தெடுத்தான். இந்தச் சோகமான தேர்வையும், தேவனுடைய தீர்வையும் நாம் பின்பு பார்ப்போம்.
மத். 16:16; யோவான் 14:6; ரோமர் 1:20; 5:14; 2 கொரி. 4:4; எபே. 1:4; கொலோ. 1:15; 1 தெச. 1:9; 5:23; 1 தீமோ. 6:4-16; எபி. 1:1-3; 2:5-9; 1 பேதுரு 2:5; 2 பேதுரு 1:4; 1 யோவான் 5:11-12; வெளி. 1:17; ஆதி. 1:26-28; 2:7; 3:22-24; யாத். 3:13-15; சங். 14:1; ஏசாயா 44:6