Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More

வேத வாசிப்பு: 

மத். 25:46; யோவான் 3:3, 5-7; 6:57; 14:6; 2 கொரி. 11:3; எபே. 1:4; வெளி. 20:14-15; ஆதி. 1:26-28; 2:7-9, 15-17; 3:1-8, 22-24; உபா. 30:19-20; நீதி. 14:12

தேவனுடைய அழைப்பும், ஆதாமின் தேர்ந்தெடுப்பும் - 02

I. இரண்டு மரங்கள்

ஏதேன் தோட்டம்! தேவனாகிய கர்த்தர் “தோட்டத்தின் நடுவிலே ஜீவவிருட்சத்தையும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணினார்” (ஆதி. 2:9). ஜீவ விருட்சம். விருட்சம் என்றால் மரம். தோட்டத்தின் நடுவில் ஜீவ-மரம்! ஜீவ-மரத்தின் அருகில் “நன்மை தீமை அறியத்தக்க விருட்சம்.” அதாவது, நன்மை தீமையுடைய அறிவு-மரம்! நன்றாகக் கவனியுங்கள். இந்த மரத்தில் தீமை மட்டுமல்ல, நன்மையும் இருக்கிறது. ஜீவ மரம், அறிவு மரம் ஆகிய இந்த இரண்டு மரங்களும் அருகருகே இருக்கின்றன. இந்த இரண்டு மரங்களுக்கும் ஆழமான “உட்பொருள்” உண்டு. கர்த்தருடைய பந்தியில் அப்பமும், திராட்சைரசமும் இயேசு கிறிஸ்துவின் உடலையும், இரத்தத்தையும் குறிப்பதுபோல, இந்த இரண்டு மரங்களும் ஜீவனையும் மரணத்தையும் குறிக்கின்றன.

1. ஜீவ-மரம்

ஜீவ-மரம் ஜீவனுக்கு அடையாளம். அறிவு-மரம் மரணத்துக்கு அடையாளம். ஜீவ-மரம் ஜீவனுக்கு அடையாளம் என்பதை எளிமையாகப் புரிந்துகொள்ள முடிகிறது. ஏனென்றால், இதில் ஜீவன் இருக்கிறது என்று தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஜீவ-மரம் கிறிஸ்துவில் தேவனைக் குறிக்கிறது. ஏனென்றால், அவரே ஜீவனுள்ள தேவன். யோவான் 14:6இல் “நானே ஜீவன்” என்றும், யோவான் 6:57இல் “என்னைப் புசிக்கிறவன் என்னாலே வாழ்வான்” என்றும் இயேசு சொன்னார். “அவருக்குள் ஜீவன் இருந்தது” என்று யோவான் 1:4ம் கூறுகிறது

2. அறிவு-மரம்

ஜீவ-மரம் ஜீவனுக்கு அடையாளம் என்பதை எளிமையாகப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், நன்மை தீமையுடைய அறிவு-மரம் எப்படி மரணத்துக்கு அடையாளம் என்ற கேள்வி நிச்சயமாக எழும். அது அறிவு-மரம்தானே என்று எண்ணத் தோன்றும். ஆதி. 2:16, 17இல் பார்ப்பதுபோல் “தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்” என்று சொன்னாரே. அப்படியானால், அதில் மரணம்தான் இருக்கிறது? எனவே, அறிவு-மரம் என்பது மரண-மரமே.

II. ஆதாமுக்கு அழைப்பு

ஆதாம் மொத்த மனித இனத்தின் பிரதிநிதி. எனவே, ஜீவ-மரத்தில் பங்குபெறுமாறு தேவன் ஆதாமுக்கு அழைப்பு விடுத்தபோது அது முழு மனுக்குலத்துக்கு விடுக்கப்பட்ட அழைப்பாகும். இந்த அழைப்பு எதற்காக? 1. நித்திய ஜீவனைப் பெறுவதற்கும், 2. தேவனோடு சிறப்பான உறவுக்குள் வருவதற்கும், 3. தேவனுடன் ஒன்றிணைந்து, உண்மையான, முழுமையான மனிதனாக மாறுவதற்கும், 4. தேவனுடைய பிள்ளையாக மாறுவதற்கும், 5. நித்திய உலகத்தில் வாழ்வதற்குத் தேவையான ஆவிக்குரிய கட்டமைப்பைப் பெறுவதற்கும், 6. காலத்தையும், இடத்தையும் கடந்த “பரலோக” மண்டலத்தைச் சார்ந்தவனாக மாறுவதற்கும் தேவன் ஆதாமை அழைத்தார்.

III. ஆதாம் உண்டாக்கப்படுதல்

1. மண்ணினால் உண்டாக்கப்படுதல்

ஒரு பள்ளியில் பயிலும் மாணவனைப்போல, ஆதாம் தன் உண்மையான அழைப்பை அறிந்துகொள்ள, இந்தப் பூமியில் கொஞ்சக் காலம் வாழ்வதற்காக ’மண்ணினால் உண்டாக்கப்பட்டான்.” விண்வெளியில் பயணம் செய்கிற விண்வெளிவீரர்கள் அதற்கேற்ற ஆடைகளை உடுத்திக்கொள்வதுபோல, ஆதாம் இந்தப் பூமியில் வாழ்வதற்காகத் தேவன் அவனுக்கு ‘மண்’ ஆடையை உடுத்தினார்.

2. ஆதாமின் விதி

பூமியைத் தாண்டி ‘மேலே இருக்கும் பரம உலகத்தில்’ கிறிஸ்துவுடன் ஒன்றிணைந்து வாழ்வதே அவனுடைய உண்மையான விதி. யோவான் 3:3, 5இல் சொல்லப்பட்டுள்ள “மறுபடி பிறத்தல்” என்பதை “பரத்திலிருந்து பிறத்தல்” “மேலிருந்து பிறத்தல்” என்றும் சொல்லலாம். யோவான் 3:3, 5-7இல் சொல்லப்பட்டுள்ளபடி தேவனால் பிறந்த அவருடைய பிள்ளைகளாகிய உண்மையான கிறிஸ்தவர்கள் “உலகத் தோற்றத்திற்குமுன்னே கிறிஸ்துவுக்குள் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்,” என்று எபேசியர் 1:4 கூறுகிறது.

3. நித்தியத்துக்குரிய மூலப்பொருள்

ஆதாம் படைக்கப்பட்டபோது அவன் நித்தியத்துக்கேற்ற ஒரு மூலப்பொருளாக மட்டுமே இருந்தான். “தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்” (ஆதி. 1:26-28). ஆதாமிடம் தேவனுடைய சாயல் மட்டுமே இருந்தது. தேவனைச் சார்ந்து வாழ்வதற்கும், தேவனோடு ஒன்றிணைந்து வாழ்வதற்கும் அவன் ஜீவ-மரத்தில் பங்குபெற்று, அதை உண்டு வளர வேண்டும். இதை அவன்தான் தெரிந்தெடுக்க வேண்டும் (ஆதி. 2:7-9, 15-17). இந்த முறையில்தான் அவன் நித்திய ஜீவனையும், நித்திய உலகத்தில் வாழ்வதற்குத் தேவையான ஆவிக்குரிய கட்டமைப்பையும் பெற்றுக்கொள்ள முடியும். அப்போது அவன் தேவனுடன் இணைந்து உண்மையான, முழுமையான மனிதனாக மாற முடியும்.

ஆதாம் படைக்கப்பட்டபோது, பூமியில் வாழ்வதற்கேற்ற கட்டமைப்பு மட்டுமே அவனிடம் இருந்தது. அவன் “மேலிருந்து பிறக்க வேண்டியிருந்தது,” அதாவது அவன் தேவனால் மறுபடியும் பிறக்க வேண்டியிருந்தது. ஏனென்றால், 1 கொரிந்தியர் 15:50இல் வாசிப்பதுபோல், “மாம்சமும் இரத்தமும் தேவனுடைய இராஜ்ஜியத்தைச் சுதந்தரிக்க முடியாது.”

IV. மனித இனத்திற்கான இலக்கு

1. மனிதன் மறுபடியும் பிறத்தல்

மனிதன் ‘மறுபடி’ பிறக்க வேண்டும்,‘மேலிருந்து’பிறக்க வேண்டும், ’பரத்திலிருந்து’பிறக்க வேண்டும், ’தேவனால்’ பிறக்க வேண்டும். நாம் பாவிகளாக இருப்பதால் மட்டும் நாம் “ஆவியால் பிறக்க வேண்டும்” என்று சொல்லவில்லை. விண்வெளிப் பயணத்தைச் சிந்தித்துப்பாருங்கள். மனிதன் இந்தப் பூமியைவிட்டு விண்வெளிக்குப் போகும்போது, அவன் அங்கு உயிர்வாழ்வதற்காக அசாதாரணமான காரியங்களைச் செய்யவேண்டியிருக்கிறது. ஏனென்றால், நிலாவிலோ அல்லது வேறொரு கிரகத்திலோ வாழ்வதற்கேற்ற கட்டமைப்பு அவனிடம் இல்லை. அதுபோல, மனிதன் படைக்கப்பட்ட மனிதனாக இருக்கும்வரை, இந்தப் பூமியைத்தாண்டி மேலே இருக்கும் பரலோகத்தில் அல்லது ஆவிக்குரிய உலகத்தில் அவனால் வாழ முடியாது. ஆதாம் தன் உண்மையான விதியை எட்டுவதற்கு அவன் ஜீவ-மரத்தில் பங்குபெற வேண்டியது இன்றியமையாததாகும். இல்லையென்றால், அவன் “பூமியைநோக்கியவனாக”, “பூமிக்குரியவனாகவே” இருப்பான்.

V. ஜீவ-மரத்தின் விளைவுகள்

அவன் ஜீவ-மரத்தில் பங்குபெற்றிருந்தால் அவன் உடனடியாக இந்தப் பூமியைவிட்டுப் பரலோகத்துக்குச் சென்றிருப்பான் என்று நான் சொல்லவில்லை. மாறாக, 1. அவன் தேவனுடன் ஓர் உயர்ந்த, நிறைவான, வளர்ந்துகொண்டேபோகிற உறவுக்குள் வந்திருப்பான். 2. அது இந்தப் பூமியில் அவனுடைய வாழ்க்கையை அடியோடு மாற்றியிருக்கும். 3. பரலோகமே அவனுடைய உண்மையான வீடாகவும், அவன் போய்ச் சேரும் இடமாகவும் மாறியிருக்கும். 4. அவன் ஜீவ-மரத்தில் பங்குபெற்று நித்திய ஜீவனைப் பெற்றிருந்தால் அவனுடைய மனிதத்துவம் மறுசாயலாகியிருக்கும். இயேசு கிறிஸ்துவில் மட்டுமே பார்க்கிற மனிதத்துவத்தை, மெய்யான முழுமையான மனிதத்துவத்தை, அவன் அடைந்திருப்பான்.

VI. ஆதாமின் தேர்ந்தெடுப்பு

1. அருகருகே இரண்டு மரங்கள்

நன்மை தீமையுடைய அறிவு-மரம், ஏவாள் சொன்னதுபோல, தோட்டத்தின் நடுவில் இருக்கவில்லை. மாறாக, அது ஜீவ-மரத்தின் அருகே இருந்தது. இந்த இரண்டு மரங்களும் அருகருகே இருக்கும்போதுதான், பரீட்சையும் தேர்ந்தெடுப்பும் உண்மையாக இருக்க முடியும். இரண்டும் தூரமாக இருக்கும்போது பரீட்சை அவ்வளவு கடுமையாக இருக்காது.

2. பிசாசின் தந்திரம்

பிசாசின் தந்திரங்களைக் கவனியுங்கள். “சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்” (2 கொரி. 11:3). ஏவாள் தோட்டத்தின் நடுவில் இருந்த ஜீவ-மரத்தைவிட்டுத் தன் கண்களை விலக்கினாள். அவளுடைய கவனம் அதன் அருகிலிருந்த அறிவு-மரத்தின்மேல் சென்றது. நம் கண்களை, முதலாவது, இயேசுவைவிட்டு விலக்குவதுதான் எப்போதுமே பிசாசின் தந்திரம்.

3. சுயாதீனத்தைத் தேர்ந்தெடுத்தல்

“மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்” (நீதிமொழிகள் 14:12). அறிவு-வழியைத் தேர்ந்தெடுக்கும்போது வல்லமையும், சுயாதீனமும் கிடைக்கும் என்பதுபோல் தோன்றுகிறது. ஆதாம் அந்த வழியைத் தெரிந்துகொண்டு, அவன் தன் விருப்பம்போல் நடக்கலாம். அவன் அந்த அறிவு-வழியைத்தான் தெரிந்தெடுத்தான். அதன் விளைவுகளை நாம் வரலாறு முழுவதும் கண்கூடாகக் காண்கிறோம். மனிதன் தன் விருப்பப்படி எப்போதும் சுயாதீனமாக வாழ்வதையே விரும்புகிறான்.

3.1 மதம்

மனிதன் தன் சுய தேவைகளைப் பூர்த்திசெய்வதிலேயே குறியாக இருக்கிறான். அதுதான் இன்றைய நவீனகாலத்து எண்ணப்போக்காகும். இந்தப் பயங்கரமான எண்ணம் மனிதனை ஆட்டிப்படைக்கிறது. இதற்கு ஒருவேளை “மதம்” உதவியாக இருந்தால் அதன் உதவியையும் அவன் எடுத்துக்கொள்வான். ஆனால், அந்த மதம் தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து இல்லாத ‘மதமாக’ இருக்க வேண்டும் என்று அவன் நினைக்கிறான். விழுந்துபோன மனிதன் ஒரு ‘மதவாதியாக’ மாறிவிட்டான். ஏதோவொரு வடிவத்தில் அவனிடம் ‘மதம்’ இருக்கிறது. அது இந்த உலகத்தில் இருக்கிற ஏதோவொரு மதமாக இருக்கலாம் அல்லது ‘மக்கள்நலமாக’ இருக்கலாம். ‘மக்கள்நலம்’ என்பது வேறொன்றும் இல்லை. அது மனிதன் தன்னைத்தானே ஆராதிப்பதற்குப் பயன்படுத்துகிற வார்த்தையாகும். ‘மக்கள்நலத்தில்’ மனிதன்தான் அவன் நினைக்கிற, செய்கிற எல்லாவற்றின் மையம். அந்த ஏதோவொரு மதம் கிறிஸ்தவத்தின் இன்னொரு பதிப்பாகக்கூட இருக்கலாம். ஆனால், அது அவனுடைய சொந்தப் பதிப்பாக இருக்கும். அது அவனுடைய நிபந்தனைகளுக்குட்பட்ட கிறிஸ்தவமாக இருக்கும். அவன் தன் நிபந்தனைகளின்படி அதை ஏற்றுக்கொள்வான். அவன் தன் இருதயத்தை இயேசு கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுக்க மாட்டான். ஆனால், அதுதான் தேவனுடைய நிபந்தனை.

3.2 மனித அறிவு

எல்லா அறிவுக்கும் ஆபத்தை விளைவிக்கும் இயல்பான ஆற்றல் உண்டு என்பதைக் கவனிக்க வேண்டும். தேவனைச் சார்ந்திருக்கும்போது மட்டுமே மனிதனுடைய அறிவு பாதுகாப்பானதாக இருக்கும். இல்லையென்றால் அது பெருமையையும், அழிவையுமே ஏற்படுத்தும். மனிதன் கண்டுபிடித்த எத்தனையோ நல்ல கண்டுபிடிப்புகள் சொல்லமுடியாத பேரழிவுகளையும், இடர்களையும் உண்டாக்கியிருக்கின்றன. அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆச்சரியமாகத் தோன்றுகின்றன. ஆனால், அவைகள் எப்பேர்ப்பட்ட பேரழிவுகளையும், இடர்களையும் ஏற்படுத்துகின்றன! இதுவரை ஒருபோதும் இல்லாத அளவுக்கு இன்று அறிவு பெருகிக்கொண்டிருக்கிறது. இன்று மனிதர்கள் ’அறிவியலை’த் தேவனாக ஆராதித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இவர்கள் ஆராதிக்கிற இந்த அறிவியல் தேவன் மனிதனை அழிப்பதற்குத் தேவையான வழிவகைளை இப்போது வழங்கிக்கொண்டிருக்கிறான்.

மனிதன் தன் மடமையினால் இப்போது வரம்புமீறிபோய்க்கொண்டிருக்கிறான் என்று சொல்லலாம். ஏனென்றால், அவன் படைப்பின் அமைப்பிற்குள் தலையிடுகிறான். எடுத்துக்காட்டாக, கருத்தரித்தல் சம்பந்தப்பட்ட காரியத்துக்குள்ளும், பிறப்பின் தோற்றத்தைப்பற்றிய பொறியியலுக்குள்ளும் நுழைந்து மனிதன் செய்கிற காரியங்களைப் பாருங்கள். உண்மையில், விழுந்துபோன கலகக்கார மனிதனுக்கு அறிவு-மரம் மரண-மரமே.

4. தேவனைச் சார்ந்திருத்தல்

ஆகையால், ஜீவ-மரத்தில் உண்ணும்படி தேவன் ஆதாமை அழைத்தார். எனவேதான், அது தோட்டத்தின் நடுவில் இருந்தது. அறிவு-மரத்தின் கனியைச் சாப்பிடக்கூடாது என்றும் அவர் சொன்னார். தேவன்மேல் கொண்ட அன்பினால் அவரைச் சார்ந்து வாழ்வதற்கு அவன் தன்னை அவருக்கு அர்ப்பணிப்பானா அல்லது தன்னையே மையமாகவும், இலக்காகவும் கொண்டு வாழும் அழிவின் பாதையைத் தெரிந்துகொள்வானா என்பதுதான் அவனுக்குமுன்பாக இருந்த அன்றைய கேள்வி. இன்று நமக்குமுன்னால் இருக்கும் கேள்வியும் இதுவே.

வரைபடங்கள்

“நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் உனக்கு முன் வைத்தேன் என்று உங்கள்மேல் வானத்தையும் பூமியையும் இன்று சாட்சிவைக்கிறேன்; ஆகையால், நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு, நீ ஜீவனைத் தெரிந்துகொள்” (உபாகமம் 30:19). இரண்டு மரங்கள் இருக்கின்றன. ஜீவ-மரம் மேல்நோக்கிச் செல்வதற்கான நுழைவாயில். அறிவு-மரம் கீழ்நோக்கிச் செல்வதற்கான நுழைவாயில். ஆதாம் ஜீவ-மரத்தில் பங்குபெற்று, மேல்நோக்கிச் சென்று தேவனுடன் ஓர் உயர்ந்த உறவுக்குள் நுழைந்து, தன் உண்மையான விதியை எட்டுவானா அல்லது அறிவு-மரத்தில் பங்குபெற்று, கீழ்நோக்கிச் சென்று, தேவனுடைய எதிரியுடன் பயங்கரமான கூட்டுச்சேர்ந்து அவனுடைய நண்பனாகிவிடுவானா (ஆதி. 3:1-8, 22-24) என்பதுதான் அவனுக்கு வைக்கப்பட்ட பரீட்சை. என்ன நடந்தது என்றும், அதன் பயங்கரமான விளைவுகள் என்னவென்றும் நமக்குத் தெரியும்.

VII. தேவனுடைய நித்திய நோக்கம்

ஆதாம் தன் சுய சித்தத்தின்படி எதைத் தெரிந்தெடுப்பான் என்று தேவனுக்கு ஏற்கெனவே தெரியும். ஆயினும், அவனுடைய வீழ்ச்சி, அவமானம், அழிவு ஆகியவைகளிலிருந்து அவனை மகிமைக்குள் கொண்டுவருவதற்கான திட்டத்தை தேவன் ஏற்கெனவே தீட்டிவிட்டார்.

குறிப்பு: குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக ஒரு காரியத்தைத் தெளிவாக்க விரும்புகிறேன். தேவன் மனிதனுக்காகத் திட்டமிட்டிருந்த நித்திய நோக்கம் (உயர்ந்த விதி) என்னவென்று நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். மனிதனுடைய “இயற்கையான சாவாமை” என்றழைக்கப்படுகிற காரியத்தைப்பற்றி நான் இங்கு பேசவில்லை. அது முற்றிலும் வேறொரு காரியம். “இவர்கள் நித்திய ஆக்கினை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள்”“அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம். ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்” (மத். 25:46; வெளி. 20:14-15). “நித்திய ஆக்கினையாகிய இரண்டாம் மரணம்” பாவிக்காகக் காத்திருக்கிறது என்ற உண்மை வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ளது.