Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More


ஜேம்ஸ் ஹட்சன் டெய்லர் China Inland Mission என்ற நிறுவனத்தின் நிறுவனர். அவர் தன் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் தேவனுடைய சித்தத்தை சிரத்தையோடு நாடுவதில் உறுதியாக இருந்தார். சீனாவில் நற்செய்தி அறிவித்து அங்கு ஒரு மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதில் அவருடைய பங்கு மகத்தானது.

1832இல் பிறந்த ஹட்சன் டெய்லர் இங்கிலாந்தின் யார்க் ஷயரில் வளர்ந்தார். அவருடைய அப்பா ஒரு வேதியியலாளர், மெதடிஸ்ட் போதகர். ஹட்சன் கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தபோதும், இளைஞனாக இருந்தபோது, தான் உண்மையில் தேவனை விசுவாசிக்கிறேனா என்ற சந்தேகம் எழுந்தது. ஆழ்ந்த சிந்தனைக்கும், நீண்ட தேடலுக்கும்பிறகு அவர் தேவனிடம் திரும்பி, இரட்சிக்கப்பட்டார்.

17 வயதிலேயே, தேவன் தன்னை எந்தத் திசையில் நடத்துகிறார் என்றும், தன் வாழ்க்கையின் நோக்கம் என்னவென்றும் ஹட்சன் டெய்லருக்குத் திட்டவட்டமாகத் தெரியும். தேவன் அவரைச் சீனாவுக்குச் செல்லுமாறு அழைத்தார். நற்செய்திப் பணிக்காக அவர் சீனாவில் 51 ஆண்டுகள் வாழ்ந்தார்.

அவர் நிறுவிய China Inland Mission சீனாவுக்குள் 800க்கும் அதிகமான மிஷனரிகளை அனுப்பினார்கள். 125 பள்ளிகளை நிறுவி நடத்தினார்கள். சீனா முழுவதும் 18,000 பேருக்குமேல் மனந்திரும்பி இரட்சிக்கப்பட்டார்கள்.

ஜேம்ஸ் ஹட்சன் டெய்லர்

இன்று நான் பேசப்போகிற நபரைப்பற்றி ஒருவேளை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். குறிப்பாக சீனர்களுக்கு அவரைத் தெரியும் என்று நான் நம்புகிறேன். தெரிந்திருக்க வேண்டும். அந்த அளவுக்கு அவர் சீனர்களிடையே பிரபலமானவர். அவருடைய பெயர் ஜேம்ஸ் ஹட்சன் டெய்லர். உங்களுக்கு அவரைத் தெரியுமா? கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அவர் சீனாவில் ஊழியம் செய்தபின் மிகவும் பிரபலமானார். சீனாவில் அவருடைய ஊழியத்தைப்பற்றி, அவருடைய வாழ்வின் பிற்பகுதியைப்பற்றிப் நான் பேசப்போவதில்லை. நான் அவருடைய வாழ்க்கையின் முற்பகுதியைப்பற்றி, அதாவது, வாலிபப்பருவத்தைப்பற்றி, பேசப்போகிறேன். இதற்கு ஒரு காரணம் உண்டு. அது என்னவென்றால், நான் அவரைப்பற்றி வாசித்தபோது, அவருடைய வாழ்க்கையின் பிற்பகுதியைவிட முற்பகுதி என்னை அதிகமாகப் பாதித்தது. அது எனக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. எனவே, நான் அவருடைய இளமைப்பருவத்தைப்பற்றி, அவருடைய வாழ்க்கையின் முதல் முற்பகுதியைப்பற்றிப் பேசப்போகிறேன்.

பின்புலம் - காலம், குடும்பம்

1800ஆம் ஆண்டு. அந்த நாட்களில் தொலைபேசி கிடையாது. அது தொலைபேசி கண்டுபிடிக்கப்படுவதற்கு முந்தைய காலம். தொலைபேசி கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே அவருடைய வாழ்க்கையின் பெரும்பகுதி கழிந்துவிட்டது. அது மக்கள் கப்பலில் பயணம் செய்த காலம்; அது பல நாடுகள் இதுவரை கண்டுபிடிக்கப்படாத காலம். எனவே, நாம் அவருடைய வரலாற்றைப் படிக்கும்போது, அதன் பின்புலத்தையும் மனதில் கொள்ள வேண்டும்.

பின்புலம் - குடும்பம்

ஹட்சன் டெய்லர் 1832ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி இங்கிலாந்தில் தேவ பயமும், தேவ பக்தியுமுள்ள ஒரு குடும்பத்தில் பிறந்தார். அவருடைய அப்பா ஒரு மெதடிஸ்ட் போதகர். அவர் ஒரு மதகுரு அல்ல. இன்று நாம் சொல்வதுபோல் ஒரு ஐயர் அல்ல. அவர் பல இடங்களுக்குச் சென்று பல்வேறு சபைகளில் பிரசங்கித்தார். அவருடைய பெற்றோர் இருவரும் மிகவும் பக்தியுள்ளவர்கள். அவர்கள் தேவனை நேசித்த, சேவித்த உறுதியான, உண்மையான கிறிஸ்தவர்கள். வேதாகமம் மனித வாழ்க்கைக்குத் தேவையான நடைமுறைக்குரிய வழிகாட்டி என்று அவர்கள் உறுதியாக நம்பினார்கள். ஹட்சன் டெய்லர் இப்படிப்பட்ட ஒரு குடும்பத்தில் பிறந்தார்.

ஹட்சனின் அப்பா ஜேம்ஸ் ஒரு வேதியியலாளர். கெமிஸ்ட். இங்கிலாந்தின் யார்க்ஷயர் என்ற நகரத்தில் ஒரு முக்கியமான தெருவில் அவர் ஒரு கடை வைத்திருந்தார். அவர்கள் பெரிய பணக்காரக் குடும்பம் என்று சொல்ல முடியாது. ஆனால் கொஞ்சம் வசதியான வாழ்க்கை வாழ்வதற்குத் தேவையான வருமானம் இருந்தது. எனவே, ஹட்சன் கொஞ்சம் சவுகரியமாகத்தான் வளர்ந்தார் என்று சொல்லவேண்டும்.

ஹட்சன் பிறப்பதற்கு முந்தி ஒருநாள் அவருடைய தந்தை வழக்கம்போல வேதாகமத்தை வாசித்துக்கொண்டிருக்கையில், வேதாகமத்தில் “முதற்பேறனைத்தையும் எனக்குப் பரிசுத்தப்படுத்து; அது என்னுடையது” என்ற வசனத்தை வாசித்தார். அதை வாசித்தபோது, தேவன் கூடிய விரைவில் தங்களுக்கு ஒரு குழந்தையைத் தரப்போகிறார் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. அது மட்டுமல்ல. அவர் வாசித்த அந்த வசனத்தை வெறுமனே ஒரு பழைய ஏற்பாட்டுச் சட்டம் என்றோ அல்லது அது எபிரேயர்களுடைய கலாச்சாரம் என்றோ அவர் எடுத்துக்கொள்ளவில்லை. மாறாக, “முதற்பேறனைத்தையும் எனக்குப் பரிசுத்தப்படுத்து; அது என்னுடையது” என்று தேவன் தனக்குச் சொல்வதாகவே அவர் எடுத்துக்கொண்டார். ஆகவே, அந்த வசனத்தைப் படித்தபோது, அவரும் அவருடைய மனைவியும் முழங்கால்படியிட்டு, தேவன் தங்களுக்குத் தரப்போகிற குழந்தையைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுத்தார்கள். பிறக்கப்போகிற குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்றுகூட அந்த நேரத்தில் அவர்களுக்குத் தெரியாது, ஆனால் பிறக்கப்போகிற முதல் குழந்தை கர்த்தருக்கென்றும், கர்த்தருடைய வேலைக்கென்றும் அவர்கள் ஒப்புக்கொடுத்தார்கள்.

ஒழுங்கும், ஒழுக்கமும்

ஹட்சன் டெய்லர் இப்படிப்பட்ட ஒரு நல்ல கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார். ஒழுக்கமும், ஒழுங்கும் நிறைந்த குடும்பம். கர்த்தருக்குப் பயப்படுகிற குடும்பம், கர்த்தரை நேசிக்கிற குடும்பம், கர்த்தரைச் சேவிக்கிற குடும்பம். அவருடைய வீட்டுக்கு மிஷனரிகள், பிரசங்கிமார்கள் என விருந்தினர்கள் வந்துபோய்க் கொண்டேயிருந்தார்கள். அதனால், பல்வேறு நாடுகளுக்கும், இடங்களுக்கும் சென்று ஊழியம்செய்த மிஷனரிகள், பிரசங்கிமார்கள் சொன்ன நிறையக் கதைகள் கேட்டு அவர் வளர்ந்தார்.

அவருடைய பெற்றோர் எவ்வளவு கண்டிப்பானவர் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு சொல்லலாம். 1800களில், குழந்தைகள் தாங்கள் சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டும் என்று பெற்றோர் எதிர்பார்த்தார்கள். குழந்தைகள் சுதந்தரமாகப் பேசுவதற்குப் பெற்றோர் அனுமதிக்கவில்லை. வீட்டுக்கு விருந்தினர்கள் வந்திருக்கும்போது குழந்தைகள் பேசக்கூடாது என்றும், குறிப்பாகச் சாப்பிடும்போது பேசாமல் அமைதியாக உட்கார்ந்து, அவர்களுடைய உரையாடலைக் கேட்டுக்கொண்டே சாப்பிட வேண்டும் என்று சொல்லிக்கொடுத்திருந்தார்கள். பெரியவர்கள் பேசும்போது ஒருபோதும் குறுக்கிடக்கூடாது அல்லது எதுவும் கேட்கக்கூடாது அல்லது யாரையும் கூப்பிடக்கூடாது என்றும் கற்றுக்கொடுத்திருந்தார்கள். இப்படிப் பல காரியங்கள். செய்யலாம் செய்யக்கூடாது என்று பல காரியங்கள்.

ஹட்சன் டெய்லருக்கு அப்போது ஐந்து வயது இருக்கும். ஒருநாள் அவருடைய வீட்டுக்கு சில விருந்தினர்கள் வந்திருந்தார்கள். ஐந்து வயது சிறுவன் ஹட்சன் டெய்லர் சாப்பாட்டு மேஜையில் ஒரு ஓரத்தில் தட்டை வைத்துக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தார், அவருடைய அம்மா அங்கும் இங்குமாக ஓடிஓடி வந்திருந்த விருந்தினர்கள் அனைவருக்கும் உணவு பரிமாறிக்கொண்டிருந்தார்கள், விருந்தினர்களைக் கவனிக்கும் பரபரப்பில் 5 வயது ஹட்சனை மறந்துவிட்டார். ஹட்சன் காலித் தட்டை வைத்துக்கொண்டு அமைதியாக உட்கார்ந்திருந்தார். வந்திருந்தவர்கள் பல காரியங்களைப் பேசிக்கொண்டும், விவாதித்துக்கொண்டும் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். காலித் தட்டைப் பார்த்துக்கொண்டிருந்த ஹட்சன் யோசிக்க ஆரம்பித்தார். “யாரையும் தொந்தரவுசெய்யாமல், அம்மாவின் கவனத்தை என் பக்கமாகத் திருப்புவது எப்படி? இப்போது நான் சாப்பாடு கேட்காவிட்டால் என்ன நடக்கும்? எனக்குச் சாப்பாடு கிடைக்குமா கிடைக்காதா” என்று சிந்திக்க ஆரம்பித்தார். வந்திருந்தவர்கள் பாதிச் சாப்பாட்டை முடித்துவிட்டார்கள். விருந்து தடபுடலாக நடந்துகொண்டிருந்தது. ஹட்சனுக்குப் பயங்கர பசி. ஒரு காரியம் செய்வதென்று தீர்மானித்தார். என்ன செய்யலாம்? உப்பு. உப்பு கேட்கலாம் என்று முடிவு செய்தார். தன் இடது பக்கம் இருந்தவரிடம், மிக அமைதியாக, “மன்னிக்கவும், தயவுசெய்து உங்கள் அருகில் இருக்கிற அந்த உப்பை கொஞ்சம் என் பக்கம் நகர்த்துவீர்களா?” என்று கேட்டார். அவர், “நிச்சயமாக, இதோ!” என்று கூறி உப்பை அவர் பக்கம் நகர்த்தினார். நகர்த்தும்போதே “தம்பி, உனக்கு உப்பு எதற்கு? உன் தட்டு காலியாயிருக்கிறதே. உன் தட்டில் உணவு இல்லையே” என்று கூறினார், அதற்கு அவர் “நான் இப்போதுதான் சாப்பிடத் தயாராகிக்கொண்டிருக்கிறேன், என் அம்மா என்னை மறக்கமாட்டார்கள் என்று எனக்குத் தெரியும்,” என்றார். ஹட்சன் டெய்லர் வளர்ந்த இந்த வீட்டில் ஒழுக்கத்துக்கு இது ஒரு சிறிய எடுத்துக்காட்டு.

அவருக்கு அமலியா என்ற ஒரு தங்கை இருந்தார், அவரைவிட நான்கு வயது இளையவர். நான் ஏற்கெனவே சொன்னதுபோல், ஹட்சன் டெய்லரின் குடும்பத்தார் உண்மையான, உறுதியான விசுவாசிகள். ஒவ்வொரு நாளும் அவர்கள் வீட்டில் குடும்ப ஜெபம் உண்டு. அப்போது வேதாகமத்திலிருந்து வசனங்களை வாசித்து, அதைப்பற்றிப் பேசினார்கள். அவர்களுடைய அப்பா இதில் மிகவும் கண்டிப்பாக இருந்தார். அவர் வேதாகமத்திலிருந்து ஒரு பகுதியை வாசித்து அதை அவர்களுக்கு விளக்குவார், ஆதியாகமத்திலிருந்து திருவெளிப்பாடுவரை அவர் அவர்களுக்கு இப்படி விளக்கிச் சொன்னார். இப்படி அவர்கள் முழு வேதாகமத்தையும் படித்தார்கள். குடும்ப ஜெபத்தோடு நிறுத்தாமல் குடும்பத்தார் அனைவரும் தேவனுடன் தனிப்பட்ட நேரம் செலவழிக்க வேண்டும் என்றும், அதற்காக ஒரு குறிப்பிட்ட நேரத்தையும், இடத்தையும் ஒதுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஹட்சன் டெய்லர் இப்படிப்பட்ட சூழலில் வளர்ந்தார். சிறிய வயதிலிருந்தே இப்படிப்பட்ட பழக்கங்கள் அவருக்குள் உருவாயின.

மிஷனரிகளின் உறவும், வரலாறும்

இன்னொரு காரியத்தை நான் இப்போது சொல்லியாகவேண்டும். இந்தக் காலகட்டத்தில்தான் மக்கள் புதிய நிலப்பரப்புகளைத் தேடிபோய்க்கொண்டிருந்தார்கள். ஆஸ்திரேலியாபோன்ற நாடுகளில் இப்போதுதான் மக்கள் குடியேறியிருந்தார்கள். 1830களில், சீனா இன்னும் கண்டுபிடிக்கப்படாத ஒரு இடமாகவே இருந்தது. ஒருசில ஐரோப்பியர்கள் மட்டுமே அந்த நாட்டின் உட்பகுதிகளுக்குள் சென்றார்கள். அவர்களும் வியாபாரத்திற்காகத்தான் சென்றார்களே தவிர வேறு நோக்கத்திற்காகச் செல்லவில்லை. நிச்சயமாக நற்செய்தி அறிவிக்கச் செல்லவில்லை. மேலும் அவர்கள் ஷாங்காய், ஹாங்காங் துறைமுகங்களுக்கு மட்டுமே சென்று வந்தார்கள். வெளியுலக மக்களுக்கும் சீனாவுக்கும்இருந்த ஒரே தொடர்பு வியாபாரம், வியாபாரத்துக்குக்காக அவர்கள் இந்த இரண்டு துறைமுகங்களுக்குச் சென்றார்கள். இந்தச் சமயத்தில்தான் சீனாவைப்பற்றிய ஒரு சிறிய கைப்பிரதி ஹட்சன் டெய்லரின் கண்களில் பட்டது. அதை அவர் சுவாரசியமாக வாசித்தார். அவர் சீனாவையும், அதன் பாரம்பரியங்களையும், பழக்கங்களையும், அங்குள்ள மக்களையும்பற்றி வாசித்து பரவசமடைந்தார். அந்த நாடு அவரைக் கவர்ந்தது. அவர் அந்தக் கைப்பிரதியை ஒரு வரி விடாமல் மனப்பாடம் செய்தார்.

இவ்வாறு, வீட்டில் அவர் மிஷனரிகளைப்பற்றிக் கேள்விப்பட்டார். இந்தக் கைப்பிரதிமூலம் அப்போதே அவருக்கு சீனாமீது ஆர்வம் ஏற்பட்டது. குடும்பம் தெய்வ பக்தியுள்ள, பயமுள்ள குடும்பம். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் அவர் வாழ்ந்தார், வளர்ந்தார்.

மதச்சடங்குகளைப்பற்றிய கேள்விகள்

சரி, இப்போது அவருடைய வாலிபப்பருவத்துக்குப் போவோம். அவருக்கு அப்போது வயது 17 இருக்கும். பார்வைக்கு மிக ஒழுக்கமான ஒரு பையன்போல்தான் தோன்றினார். அவரிடம் நல்ல பழக்கவழக்கங்கள் இருந்தன, அவர் தெய்வபக்தியுள்ள ஒரு வீட்டில் வளர்ந்தார். வெளியேயிருந்து பார்க்கிறவர்கள் அவர் ஒரு நல்ல கிறிஸ்தவர் என்றுதான் நினைத்திருப்பார்கள். ஆனால் உண்மையில், உள்ளத்தில் அவர் அப்படி இல்லை. உள்ளத்தில் முரட்டாட்டமும், அவிசுவாசமும் நிறைந்திருந்தன.

தான் ஒரு நல்ல கிறிஸ்தவன்போல் பாசாங்குசெய்வதை, நடிப்பதை அவர் வெறுத்தார். அதில் அவருக்கு உடன்பாடு இல்லை. தன்னுடைய வெளிவேடத்தில் அவர் களைத்துப்போனார். அவர் அப்படிப்பட்ட முரண்பாட்டைத் தொடர விரும்பவில்லை. ஒவ்வொரு நாளும் வேதாமத்தை வாசிப்பது, குடும்பத்தில் ஜெபிப்பதுபோன்ற காரியங்களெல்லாம் அவருக்கு வெறும் மதச்சடங்குகளாகவே தோன்றின. எனவே, இவைகளைச் செய்வதில் ஆர்வம் தணிந்தது.

இவ்வளவுக்கும் அவருக்கு வேதாகமம் நன்றாகத் தெரியும். சிறுவயதுமுதல் அதை வாசித்தார். வசனங்களெல்லாம் அவருக்கு மிகவும் பரிச்சயம். எனினும், வேதாகமத்தால் தனக்கு எந்தப் பயனுமில்லை, அது வெறும் செத்த எழுத்துக்கள் என்றே அவர் நினைத்தார். 17 வயதில் அவருக்கு ஒரு வங்கியில் வேலை கிடைத்தது. புதிய சூழ்நிலை, புதிய மனிதர்கள். அங்கு வேலைசெய்த வாலிபர்கள் மதத்தைச் சந்தேகக் கண்ணோடுதான் பார்த்தார்கள். மதத்தைப்பற்றி அவர்களுக்கு நிறைய கேள்விகள் இருந்தன. அவர்கள் மதத்தைக் கிண்டல்செய்தார்கள். மதம் அது பழமைவாதிகளுக்குரியது என்று கேலிசெய்தார்கள். ஆலயத்திற்கு செல்வது, ஆராதனையில் கலந்துகொள்வது, வேதம் வாசிப்பது, கூட்டங்களுக்குப் போவதுபோன்ற மதசம்பந்தமான காரியங்கள் நேரத்தை வீணாக்கும் செயல்கள் என்று ஏளனம்செய்தார்கள். ஹட்சன் டெய்லர் தானும் அவர்களைப்போலவே இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்தார்.

போராட்டமான வாலிபப்பருவம்

அந்த நாட்களில் வாலிபர்கள் வேட்டையாடுவதில் ஆர்வமாகயிருந்தார்கள். அன்றைக்கு அதுதான் அவர்களுடைய பொழுதுபோக்கு, வேட்கை, வாடிக்கை. அன்று வாலிபர்கள் நகரத்தைச் சுற்றிவந்தார்கள். நகரத்திலுள்ள கேளிக்கை விடுதிகளுக்குச் சென்றார்கள் . ஒன்றாகச் சேர்ந்து எங்காவது சுற்றுலா சென்றார்கள். எதையாவது சேர்ந்து செய்துகொண்டேயிருந்தார்கள். ஆனால், அவர் அவர்களோடு சேரவில்லை. அவர் வீட்டுக்குப் போய்விடுவார். கூட்டங்களுக்குப் போனார். ஆனாலும், தொடர்ந்து இப்படி வாழ்வதில் அவருக்கு உடன்பாடு இல்லை. சோர்வடைந்தார். களைத்துப்போனார். அவர் அவருடைய பிற சகாக்களைப்போல் சுதந்தரமாக இருக்க ஆசைப்பட்டார். தவித்தார்.

ஆனால், நல்ல காலம் அவர் விரும்பியது நடக்கவில்லை. அது மின்சாரமும், மின்விளக்கும் கண்டுபிடிக்கப்படாத காலம். எரிவாயு விளக்குகளையும், மண்ணெண்ணெய் விளக்குகளைப் பயன்படுத்தினார்கள். ஹட்சன் வங்கியில் நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டியிருந்தது. எரிவாயுவையும், மண்ணெண்ணையையும் நீண்ட நேரம் பயன்படுத்தியதால் அவருடைய கண்களில் ஒருவிதமான எரிச்சல் ஏற்பட்டது. எனவே, அவரால் வங்கியில் தொடர்ந்து வேலை செய்ய முடியவில்லை. அவர் வங்கி வேலையை விடவேண்டியதாயிற்று. ஆனால், அவர் வங்கியில் பணிபுரிந்த காலத்தில் சந்தித்த நண்பர்களின் கண்ணோட்டங்களும், பழக்கவழக்கங்களும், அவருக்குள் ஒரு தாக்கத்தை உண்டாக்கின. என்பது உண்மை. இப்போது வேலையில்லை, உடல்நலம் சரியில்லை. வங்கியில் வேலைசெய்த நாட்களில் அவருடைய நண்பர்கள் மூலம் உலகத்தில் உல்லாசமாக இருப்பது என்றால் என்ன என்பதை ஓரளவுக்குப் புரிந்துகொண்டார். அவர் அந்த உல்லாசத்தை விரும்பினார். ஆனால் தான் ஒரு கிறிஸ்தவன் என்ற போலி வேடம் போடவேண்டியிருந்ததால் அந்த உல்லாசத்தை, சுதந்தரத்தை, அனுபவிக்க முடியவில்லை. எனவே, அவர் மிகவும் பரிதாபமான நிலைமையில் இருந்தார். போராட்டம். குழப்பம். கலக்கம்.

கண்டிப்பான அப்பா

ஹட்சன் டெய்லர் இப்போது வேலையில்லாமல் வீட்டில் இருந்தார். அவருடைய அப்பா ஒரு வேதியியலாளராக இருந்ததால், ஹட்சன் டெய்லருக்குத் தன் மருந்துக்கடையில் மருந்தாளுநர் பயிற்சிகொடுக்க முடிவு செய்தார். ஹட்சன் அவருடைய அப்பாவுடன் சேர்ந்து கடையில் வேலைசெய்ய ஆரம்பித்தார். ஆனால், மருந்துக் கடையில் வேலைசெய்வது அவருக்குப் பிடிக்கவில்லை. அப்பாவுக்கும் மகனுக்கும் இடையே நிறைய உராய்வுகள், சச்சரவுகள் ஏற்பட்டன. ஏனென்றால் ஹட்சன் டெய்லரின் உள்ளத்தில் திருப்தி இல்லை, மகிழ்ச்சி இல்லை. உள்ளே போராட்டம். குழப்பம். அவருடைய அப்பா மிக கண்டிப்பானவர். அவர் ஹட்சன் டெய்லரின் பிரச்சினையைப் புரிந்துகொள்ளவில்லை. எனவே அவர்களுக்கிடையே நிறைய பிரச்சினைகள் ஏற்பட்டன.

கனிவான அம்மா

ஆனால், அவருடைய அம்மா அவரை நன்றாகப் புரிந்துகொண்டார் என்றுதான் சொல்லவேண்டும். ஹட்சன் கர்த்தரைத் தனிப்பட்ட முறையில் தன் இரட்சகராக அறியவேண்டும். அவன் இதுவரை அப்படி அறியாததுதான் அவனுடைய பிரச்சினை என்று அவர் தெளிவாகப் புரிந்துகொண்டார். சிறு வயதிலிருந்து அவர் ஜெபித்தார், வேதம் வாசித்தார், குடும்ப ஜெபத்தில் பங்கெடுத்தார். ஆனால், தனிப்பட்ட முறையில் அவர் இன்னும் கர்த்தரை அறியவில்லை. எனவே, அவருடைய அம்மா ஒவ்வொரு நாளும் ஹட்சனின் இரட்சிப்புக்காகச் ஜெபிக்க ஆரம்பித்தார்.

ஜெபிக்கும் தங்கை

இந்த நிலைமையில் அவருடைய 14 வயதான தங்கை அமலியாதான் ஹட்சன் டெய்லருடன் மிக நெருக்கமாக இருந்தார். அவர் தன் தங்கையின்மேல் அவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தார். அவர் அவளிடம் தன் விரக்தியையும், கோபத்தையும், துக்கத்தையும் பகிர்ந்துகொண்டார். அவள் ஒரு இளம் பெண்ணாக இருந்தபோதும், அண்ணன் இன்னும் மனந்திரும்பி இரட்சிக்கப்படாததுதான் அவருடைய பிரச்சினை என்று அவளும் புரிந்துகொண்டாள். எனவே, தன் அண்ணன் ஹட்சன் டெய்லர் மனந்திரும்பி இரட்சிக்கப்படும்வரை அவருக்காக ஒவ்வொரு நாளும் மூன்று முறை ஜெபிப்பேன் என்று தன் நாளேட்டில் எழுதிவைத்தார்.

கைப்பிரதியின்மூலம் இரட்சிப்பின் செய்தி

ஒருநாள் ஹட்சன் டெய்லருக்கு விடுமுறை கிடைத்தது, வீட்டில் தனியாக இருந்தார். அவருடைய அம்மா 80 மைல் தூரத்தில் இருந்த இன்னொரு ஊரில் அவருடைய நண்பர்களைச் சந்திக்கப் போயிருந்தார். அவருடைய தங்கை அமலியா வெளியே போயிருந்தார். ஹட்சன் டெய்லர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார், வீட்டில் தனியாக இருப்பது சலிப்பாக இருந்ததால் அவர் வீட்டிலிருந்த புத்தகங்களைப் புரட்டிக்கொண்டிருந்தார். அவருடைய அப்பாவின் புத்தக அலமாரியைத் திறந்து, தான் இதுவரை வாசிக்காத புத்தகம் ஏதாவது இருக்குமா என்று தேடிப்பார்த்தார். அங்கு ஒரு கூடை இருந்தது. அதில் நற்செய்தி அறிவிக்கும் சிறு கைப்பிரதிகள் நிறைய இருந்தன. அவைகளைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, “இரட்சிப்பு எனக்குரியது இல்லை” என்று வாய்விட்டுச் சத்தமாகக் கூறினார்.

ஆனால் இந்த நற்செய்திப் பிரதிகளில் சுவாரஸ்யமான சிறிய எடுத்துக்காட்டு அல்லது கதை அல்லது எளிமையான விளக்கப்படம் இருக்கும் என்று அவருக்குத் தெரியும். எனவே, “இந்த நற்செய்திப் பிரதியின் ஆரம்பத்தில் இருக்கும் சுவாரஸ்யமான கதையை மட்டும் வாசிக்கலாம். நற்செய்திப் பகுதியை வாசிக்கவேண்டாம்,” எண்டு தனக்குத்தானே பேசிக்கொண்டார். பொழுதைப் போக்குவதற்காக நற்செய்திப் பிரதிகளிலிருந்த கதைகளையும், எடுத்துக்காட்டுகளையும் வாசிக்கத் தீர்மானித்தார். ஒரு கைப்பிரதியை எடுத்தார், அதைப் பார்த்தார். அதில் எழுதியிருந்த, “கிறிஸ்து செய்துமுடித்த வேலை” என்ற வார்த்தைகளை வாசித்தார். அதை வாசித்தவுடன், “செய்து முடிக்கப்பட்ட வேலையா? அது என்ன வேலை? செய்து முடிக்கப்பட்ட அந்த வேலை என்ன?” என்று அவர் தன்னைத்தானே கேட்டுக்கொண்டார். அந்தக் கேள்விக்குப் பதிலை அவர் உடனடியாகப் புரிந்து கொண்டார்.

சிறுவயதிலிருந்தே வேதாகமத்தில் பரிச்சயம் இருந்ததால் அந்தக் கேள்விக்குப் பதில் என்னவென்பதை அவர் உடனடியாகப் புரிந்து கொண்டார். “பாவப்பரிகாரம். கிறிஸ்துவின் சிலுவை மரணத்தால் என் பாவக் கடன்கள் தீர்ந்துவிட்டன,” என்ற பதிலைத் தனக்குத்தானே சொல்லிக்கொண்டார். இது அவருக்கு ஏற்கனவே தெரியும். என்றாலும், அந்த வார்த்தைகளை அப்போதுதான் அவர் முதன்முறையாகக் கேட்டது போல் இருந்தது.

அதே நேரத்தில், அவருடைய அம்மா 80 மைல் தொலைவில், தன் நண்பரின் வீட்டில் சாப்பிடுவதற்காக உட்கார்ந்திருந்தார். திடீரென்று தான் எழுந்துபோய் ஜெபிக்க வேண்டும் என்பதுபோல் உணர்ந்தார். எனவே, அவர் எழுந்து, அவருடைய அறைக்குச் சென்று, கதவை மூடிவிட்டு, முழங்கால்படியிட்டு ஜெபிக்க ஆரம்பித்தார். தன் மகனுக்காக ஜெபிக்க வேண்டும் என்ற பாரம் அவரை அழுத்தியது. அவர் தன் மகனுக்காக மணிக்கணக்கில் ஜெபித்தார். ஹட்சன் மனந்திரும்பி இரட்சிக்கப்பட்டான் என்று தேவன் அவரிடம் சொன்னதுபோல் அவர் உணர்ந்தார். அவர் தேவனுக்கு நன்றி சொன்னார்.

ஹட்சன் டெய்லர் கிறிஸ்து செய்துமுடித்த வேலையைப்பற்றி நினைத்துக்கொண்டு அந்தத் துண்டுப் பிரதியைப் பார்த்துக்கொண்டிருந்தார். “என் கடன்களையெல்லாம் கிறிஸ்து கொடுத்துத்தீர்த்து விட்டார் என்றால், என் பாவங்களையெல்லாம் கிறிஸ்து சிலுவையில் சுமந்து தீர்த்துவிட்டார் என்றால், நான் என்ன செய்ய வேண்டும்? நான் செய்வதற்கு ஏதாவது இருக்கிறதா?” என்று அவர் தன்னைத்தானே கேட்டுக்கொண்டார். அது “கிறிஸ்து செய்து முடித்த வேலை” என்ற வெளிச்சம் அவருக்குள் வீசியது. அது முடிந்துவிட்டது, அது நிறைவடைந்தது. அவர் செய்வதற்கு ஒன்றும் இல்லை. அது தன் ஆத்துமாவுக்குள் ஒளிவெள்ளம் வீசியதுபோல் இருந்தது என்று ஹட்சன் டெய்லர் பின்னர் எழுதினார்.

அவர் பல ஆண்டுகளாக அறிந்திருந்த, பல ஆண்டுகளுக்குமுன்பே வாசித்திருந்த, ஆனால் அவரைப் பொறுத்தவரை அதுவரை உயிரற்றிருந்த அந்த வார்த்தைகள் இப்போது உயிரடைந்தன. கிறிஸ்துவின் மரணமும், உயிர்த்தெழுதலும் இப்போது அவரைப்பொறுத்தவரை நிஜமாயின. அவர் முழங்கால் படியிட்டார். தன் முரட்டாட்டம், அவநம்பிக்கை, பெருமை ஆகியவைகளுக்காக மனந்திரும்பி மன்னிப்புக் கேட்டார். அவர் மனந்திரும்பினார். “என் வாழ்க்கைக்குள் வாரும்,” என்று அவர் தேவனிடம் கெஞ்சினார்.

கொஞ்ச நேரம் கழித்து, வெளியேபோயிருந்த அமலியா வீட்டுக்குத் திரும்பி வந்தாள், ஆனால், ஹட்சன் டெய்லர் அவளிடம் அப்போது ஒன்றும் சொல்லவில்லை. சில நாட்கள் கழித்துத்தான் அவர் அவளிடம் தன் மனந்திரும்புதலைப்பற்றியும், தான் இரட்சிக்கப்பட்டைக்குறித்தும், நடந்த எல்லாவற்றையும் சொன்னார். இரண்டு வாரங்களுக்குப்பின் அவருடைய அம்மா வீட்டுக்குத் திரும்பிவந்தார். தான் இரட்சிக்கப்பட நல்ல செய்தியைத் தன் அம்மாவுக்குச் சொல்லவேண்டும் என்று ஹட்சன் டெய்லர் ஆவலோடு காத்துக்கொண்டிருந்தார். அவருடைய அம்மா வீட்டை நோக்கி நடந்து வந்து கொண்டிருக்கையில் ஹட்சன் ஓடோடிச்சென்று, “அம்மா, உங்களுக்கு நான் ஒரு நல்ல செய்தி வைத்திருக்கிறேன்,” என்றார். அதற்கு அவர், “ஆம், மகனே, எனக்குத் தெரியும், எனக்குத் தெரியும்,” என்றாள். அவர், “என்ன? தெரியுமா? அமலியாவுக்கு மட்டும்தானே தெரியும். அவள் யாரிடமும் சொல்லமாட்டேன் என்று வாக்குறுதி அளித்தாளே. ஒருவேளை அவள் உங்களுக்குக் கடிதம் எழுதியிருந்தாளா அல்லது எனக்கு முந்தி உங்களிடம் சொன்னாளா?” என்று கேட்டார். அதற்கு அவர், “இல்லை, இல்லை, இல்லை, இல்லை, என் மகனே, தேவன் என்னிடம் சொன்னார்” என்றாள். ஹட்சன் டெய்லரால் அதை நம்ப முடியவில்லை, என்ன நடந்தது என்று அவருடைய அம்மாவுக்கு ஏற்கனவே தெரியும்.

கர்த்தருடைய அழைப்பு

அடுத்த நாள் அவர் தன் நாளேட்டில் சில குறிப்புகளை எழுத விரும்பினார். அதற்காக அவர் தன் நாளேட்டை எடுத்து அதைப் புரட்டிக்கொண்டிருந்தார். சில பக்கங்களைப் புரட்டியபின் அந்த நாளேடு தன்னுடையது அல்ல, அது தன் தங்கை அமலியாவின் நாளேடு என்று தெரிந்தது. அதில் ஒரு மாதத்திற்குமுன்பு, “என் அண்ணனுக்காக, என் அண்ணனுடைய இரட்சிப்புக்காக, அவர் மனந்திரும்பும்வரை ஒரு நாளைக்கு மூன்று முறை நான் ஜெபிப்பேன் என்று வாக்குறுதிசெய்கிறேன்,” என்று அமலியா எழுதியிருந்த குறிப்பு அவருடைய கண்களில் பட்டது. அதை வாசித்ததும் தேவன் தன்னை அழைக்கிறார் என்பதையும், தன் வாழ்க்கையில் திட்டவட்டமாகச் செயல்படப்போகிறார் என்பதையும் அவர் ஆழமாக உணர்ந்தார். கர்த்தர் தன்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பதை அவர் பலமாக உணர்ந்தார். நற்செய்தி அறிவித்தல்

இரட்சிக்கப்பட்டபின் அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். அவர் தான் பெற்ற இரட்சிப்பின் நற்செய்தியைப் பிறருக்கும் அறிவிக்க விரும்பினார். புதிய பிறப்பையும், புதிய பிறப்பின்மூலம் பெறுகிற புதிய ஜீவனையும் அவர் தெளிவாகப் புரிந்துகொண்டார். ஏனென்றால் சிறுவயதுமுதல் அவர் இவைகளைப்பற்றிக் கேள்விட்பட்டிருந்தார். சிறுவயதிலிருந்து ஜெபித்தல், வேதம் வாசித்தல், ஆலயத்துக்குச் செல்லுதல்போன்ற காரியங்களில் அவர் ஈடுபட்டிருந்ததால் இதை அவர் எளிதில் புரிந்துகொண்டார்.

மேலும், அவருடைய அப்பா இவைகளையெல்லாம் அவர்களுக்கு விளக்கிச் சொல்லியிருந்தார். எனவே, அன்று வெறும் பழக்கங்களாக இருந்தவை இன்று உயிர் பெற்றன. அன்று பொருளற்றவைகளாகத் தோன்றியவை இன்று பொருள் பெற்றன. ஆகையால், இன்று உட்கார்ந்து படிப்பதும் புரிந்துகொள்வதும் அவருக்கு மிகவும் எளிதாயிற்று. அவர் தான் பெற்ற இன்பத்தை இன்னும் பலருடன் பகிர்ந்துகொள்ள விரும்பினார். ஆகவே, அவரும் அமலியாவும் ஞாயிற்றுக்கிழமைதோறும் மாலை வேளையில் உணவுப் பொட்டலங்களையும், நற்செய்திப் பிரதிகளையும் எடுத்துக்கொண்டு நகரத்தின் ஏழ்மையான பகுதிகளுக்குச் சென்று, அங்கிருந்த மக்களோடு பேசினார்கள். இப்படிச் செய்வது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. ஞாயிற்றுக்கிழமை மட்டுமே விடுமுறை என்பதால் ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியே சென்றார்கள்.

புதிய ஜீவன் - புதிய வாழ்க்கை

அப்போது அவருக்கு வயது 17 இருக்கும். அந்த நேரத்தில் அவருடைய வாழ்க்கையில் சில மாற்றங்கள் நிகழ்ந்தன. ஒரு மாற்றம் என்னவென்றால், அவருடைய தங்கை அமலியா வேறொரு ஊரில் இருந்த ஒரு பெண்கள் பள்ளியில் சேர்க்கப்பட்டார். எனவே, அவள் அந்த ஊரில் இருந்த அவர்களுடைய அத்தை வீட்டில் தங்கிப் படித்தாள். ஹட்சனின் அத்தை மகன் ஜான் ஹட்சன் வீட்டில் வந்து தங்கவேண்டியதாயிற்று. ஹட்சன் டெய்லரின் அறையில்தான் ஜான் தங்கியிருந்தான். எனவே, அவருடைய சுதந்திரம் கொஞ்சம் பறிபோயிற்று. தனியாக இருக்க நேரமும், இடமும் கிடைக்கவில்லை. எப்போதும் ஆட்கள் இருந்துகொண்டேயிருந்தார்கள். ஆனாலும் அத்தை மகன் கூடத்தங்கியிருந்தது அவருக்குச் சந்தோஷமாகத்தான் இருந்தது. ஆனால், நேரமும், தனிமையும் குறைவாக இருக்கிறதே என்று கொஞ்சம் வருந்தினார்.

மருந்துக்கடையில் அப்பாவுடன் உராய்வுகளும், சிராய்ப்புகளும் கொஞ்சம் அதிமகமாயின. கடையில் அவர் மிக நீண்ட நேரம் வேலை செய்தார். எரிச்சலும், அதிருப்தியும் அதிகமாயின. மனந்திரும்பியபின் ஏற்பட்ட மகிழ்ச்சி மறைய ஆரம்பித்தது; அது வெறுமனே ஒரு நினைவாக மாறிற்று. அவருக்குத் தன்மேல் கோபமும், ஆத்திரமும் ஏற்பட்டன.

ரோமருக்கு எழுதிய நிருபத்தில் பவுல் விவரிக்கிற “நான் செய்கிறது எனக்கே சம்மதியில்லை; நான் விரும்புகிறதைச் செய்யாமல், நான் வெறுக்கிறதையே செய்கிறேன்,” என்பதை அவர் உணர்ந்தார். தேவன் தனக்குத் தந்திருக்கும் புதிய ஜீவனால் புதிய வாழ்க்கை வாழ முடியவில்லையே என்று அவர் விரக்தியடைந்தார். தான் பின்வாங்குவதாக அவர் நினைத்தார்.

தன்மேலே அவருக்குக் கோபம், ஆத்திரம், விரக்தி. முழங்கால் படியிட்டு ஜெபித்தார். அவர் கர்த்தரை நோக்கி, “என்னிடத்தில் இருக்கிற பிரச்சினை என்ன? நீர் எனக்குத் தந்திருக்கும் புதிய ஜீவனால் இந்தப் புதிய வாழ்க்கையை ஏன் என்னால் வாழ முடியவில்லை?” என்று அவர் கேட்டார். அவர் கர்த்தரை நோக்கி, “நீர் என்னையும் எனக்குரிய எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன், என் வாழ்க்கையும், என்னிடம் இருக்கும் அனைத்தையும் நீர் உம் விருப்பம்போல் கையாளும்,” என்று ஜெபித்தார்.

ஒரு பலிபீடத்தில் ஒரு மிருகத்தை ஒப்புக்கொடுக்க விரும்புவதுபோல் அவர் தன்னைக் கர்த்தருக்காக ஒப்புக்கொடுப்பதுபோல் உணர்ந்தார். “ஆண்டவரே, நீர் என்னை அழைத்திருக்கிறீர் என்று எனக்குத் தெரியும், எனவே உம் வேலைக்கு என்னைப் பயன்படுத்தும்,” என்று சொன்னார். அவர் எல்லாவற்றையும் கர்த்தருக்கு ஒப்புக்கொடுத்தார். பின்னாட்களில் அவர் இதைப்பற்றி எழுதினார். அவர் இவ்வாறு ஜெபித்த அந்த நேரத்தில் தான் கர்த்தரிடம் சொன்ன எல்லாவற்றையும் திரும்பப் பெற முடிந்தால் எவ்வளவு நலமாக இருக்கும் என்று அவர் விரும்பியதைப்போல் இருந்ததாம். ஏனென்றால், அவர் தன்னைத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்தபோது அவர் தேவனோடு ஓர் உடன்படிக்கை செய்ததைப்போல இருந்ததாம். அது மிகவும் கனமான காரியமாக இருந்ததால் அவருடைய ஜெபத்தைக்குறித்து அவர் பயந்துவிட்டார். அவர் ஜெபித்தபோது “நான் உன் பலியை ஏற்றுக்கொள்கிறேன்,” என்று கர்த்தர் சொன்னதுபோல் இருந்ததாம்.

அவர் ஜெபித்துமுடித்தவுடன், அவர் ஒரு குரலைக் கேட்டதுபோல் உணர்ந்தார். அந்தக் குரல் அவரிடம் மிகத் தெளிவாக, “அப்படியானால் நீ எனக்காகச் சீனாவுக்குச் செல்,” என்று கூறிற்று.

சீனாவுக்குச் செல்ல அழைப்பு

அந்தக் காலத்தில் சீனா இன்னும் அறியப்படாத ஒரு நாடு என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அன்று ஒருவனை நீ சீனாவுக்குச் செல் என்று சொல்வது அவனை நீ நிலாவுக்குச் செல் என்று சொல்வதற்குச் சமம். ஏனென்றால், அன்று மக்களுக்கு சீனாவைப்பற்றி ஒன்றும் தெரியாது, சீனாவைப்பற்றி ஒரு புத்தகத்தைக்கூட யாரும் பார்த்திருக்கமாட்டார்கள்.

சீன மொழியை எளிதாகக் கற்றுக்கொள்ளமுடியாது. ஆனால் 17 வயது வாலிபனைத் தேவன் சீனாவுக்குப் போ என்று சொன்னார். தேவன் தன்னைச் சீனாவுக்கு அனுப்புகிறார் என்பதை ஹட்சன் தெளிவாக அறிந்திருந்தார், ஆனால் அங்கு எப்படிச் செல்வது என்று அவருக்கு தெரியாது. அங்கு செல்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று அவருக்கு தெரியாது. இது ஒருவேளை கப்பலில் எட்டு மாதப் பயணமாக இருக்கலாம்..அந்த நாட்டின் கலாச்சாரம், மொழி, எதைப்பற்றியும் ஒன்றும் தெரியாது. அவருக்கு மட்டும் அல்ல. அன்று நிறையப்பேருக்கு சீனாவைப்பற்றி எதுவும் தெரியாது.

சீனாவைப்பற்றித் தனக்கு ஒன்றும் தெரியாது என்பதால் அவர் தன் எண்ணத்தை மாற்றிக் கொள்ளவில்லை. அவருடைய உறுதியில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அது அவருக்கு ஒரு தடையாக இருக்கவில்லை. அன்றிலிருந்து தேவன் தன்னை சீன்னாவுக்கு ஒரு மிஷனரியாக அழைக்கிறார் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். சீன மக்களின் தேவையை அவர் உணர்ந்தார். கோடிக்கணக்கான சீன மக்களை இயேசு கிறிஸ்துவைப்பற்றியோ, வேதாகமத்தைப்பற்றியோ இதுவரை ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை; ஆனால், இங்கு இங்கிலாந்தில் ஆலயங்களில் வசதியாக அமர்ந்திருக்கும் இலட்சக்கணக்கான மக்கள் அதைப்பற்றிக் கவலைப்படாமல் இருக்கிறார்கள் என்று அவர் கருதினார். எனவே, சீன மக்களின் இன்றியமையாத் தேவையை அவர் உணர்ந்தார். அன்றிலிருந்து சீனாவுக்குச் செல்வதே தன் வாழ்க்கையின் நோக்கம் என்று அவர் திட்டவட்டமாக அறிந்திருந்தார்.

மிஷனரி வாழ்க்கைக்கு ஆயத்தம்

ஹட்சன் அப்போது 17 வயது வாலிபன் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அந்த வயதில் அவர் ஒரு சில காரியங்களை மட்டுமே புரிந்துகொண்டார். இங்கு இங்கிலாந்தில் இப்போது பெற்றோருடைய வீட்டில் சவுகரியமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார். வசதியான வீடு, தனி அறை, வேலை, வருமானம். சீனாவுக்கு மிஷனரியாகச் செல்வது என்றால் அது கடினமாகவும், கஷ்டமாகவும் இருக்கும் என்று புரிந்துகொண்டார். எனவே, அவர் செய்த முதல் காரியம் அவர் தன் சொகுசு மெத்தையைக் கொடுத்துவிட்டு, வெறும் பலகைகளில் தூங்க ஆரம்பித்தார். ஏனெனில் அவர் தன்னை ஒரு கடினமான வாழ்க்கைக்குப் பழக்கப்படுத்திக்கொள்ள விரும்பினார். இதுதான் அவர் செய்த முதல் காரியம்.

நான் ஏற்கனவே சொன்னதுபோல், அவர்களுடைய வீட்டுக்குப் பல மிஷனரிகள் வந்துபோய்க் கொண்டிருந்தார்கள். அவர் செய்த இரண்டாவது காரியம் என்னவென்றால், தன் வீட்டுக்கு வந்த மிஷனரிகளோடு அவர் அதிக நேரம் பேச ஆரம்பித்தார். சீனாவில் மிஷனரியாக இருந்த ஒருவரை அவர் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த மிஷனரி சீனாவுக்குள் செல்லவில்லை, அவர் ஷாங்காயில் ஊழியம்செய்தாராம். சீன மொழியில் லூக்கா நற்செய்தி அவரிடம் இருந்தது. ஹட்சன் டெய்லர் அவரிடம், “தேவன் என்னை சீனாவுக்கு அழைத்திருக்கிறார்,” என்று சொன்னார், உடனே அந்த மிஷனரி, “சரி, அப்படியானால் இந்த லூக்கா நற்செய்தியை நீ வைத்துக்கொள்,” என்று சொல்லி அதை ஹட்சனிடம் கொடுத்தார். ஹட்சன் டெய்லர் சீன மொழி லூக்கா நற்செய்தியை வாங்கிக்கொண்டார்.

அந்த நற்செய்தியைப் பயன்படுத்தி சீன எழுத்துக்களைக் கற்றுக்கொள்ளத் தீர்மானித்தார். எனவே, அவர் ஆங்கில வேதாகமத்தில் லூக்கா நற்செய்தியைத் திறந்து, ஒரு வசனத்தைக் கண்டுபிடிப்பார், பின்னர் அதே வார்தையுள்ள வேறு சில வசனங்களைக் கண்டுபிடிப்பார். பின்பு அந்த வசனங்களை சீன மொழியில் பார்த்து பொதுவான எழுத்துக்களைக் கண்டுபிடித்து அவைகளை ஒரு புத்தகத்தில் எழுத ஆரம்பித்தார். இப்படியாக அவர் 500 சீன எழுத்துக்களைக் கற்றுக்கொண்டார்.

இதோ ஒரு வாலிபன். தேவன் தன்னை சீனாவுக்கு எப்படி அழைத்துக்கொண்டுபோவார் என்று அவருக்குத் தெரியாது. ஆனால், சீனாவுக்குச் செல்வதற்கு தன்னை ஆயத்தம்பண்ண வேண்டும் என்று அவருக்குத் தெளிவாகத் தெரிந்திருந்தது.

பெற்றோரின் ஒத்துழைப்பு

தேவன் ஹட்சனைத் திட்டவட்டமாக அழைக்கிறார் என்பதைத் தெரிந்த அவருடைய பெற்றோர் அவருக்கு ஆதரவாகவே இருந்தார்கள். ஏனென்றால், அவர்கள் தங்கள் முதல் குழந்தையைக் கர்த்தருக்கென்று அர்பணித்திருந்தார்கள். எனவே, ஹட்சன் தன் அழைப்பைப்பற்றிச் சொன்னபோது அவர்கள் ஆச்சரியப்படவில்லை. அவருடைய அம்மா தன் நாட்குறிப்பில், “என் மகனை அழைத்த தேவன் உண்மையுள்ளவர். அவர் அதைச் செய்துமுடிப்பார்,” என்று எழுதியிருந்தார். எனவே, தன் மகன், என்றோ ஒருநாள் சீனாவுக்கு மிஷனரியாகச் செல்வான் என்று அவர் நம்பினார். வேறு நாடுகளுக்கு ஒரு மிஷனரியாகச் செல்வதற்கு என்ன வழி என்பதைத் தெரிந்துகொள்வதற்காக அவர்கள் தங்களுக்குத் தெரிந்த நபர்களையும், பல மிஷனரி அமைப்புகளைத் தொடர்புகொண்டார்கள்.

சீனாவுக்குச் செல்ல முயற்சி

சீனாவைப்பற்றி ஒரு மிஷனரி எழுதிய ஒரு புத்தகத்தைப்பற்றி அவர் கேள்விப்பட்டார். அவர் அதை ஒரு நூலகத்திலிருந்து எடுத்து வந்து படித்தார். இப்படிக் கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் அவர் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார். ஏனென்றால், சீனாவுக்குச் சென்றுவந்த ஒருவரைக் கண்டுபிடிப்பது அன்று மிகவும் அரிதாக இருந்தது.

அவர் பல மிஷனரி அலுவலகங்களுக்குக் கடிதம் எழுதியிருந்தார். ஒரு மிஷனரி அலுவலகத்திலிருந்து அவருக்குப் பதில் எழுதியிருந்தார்கள். “ஆம், நாங்கள் மிஷனரிகளை அனுப்புகிறோம். ஆனால் நீ இன்னும் ஒரு சிறு பையன்தான். உனக்குப் 18 வயதுதான் ஆகிறது, நீ இப்போது என்ன செய்ய முடியும்? எதிர்காலத்தில் நீ மிகவும் பயனுள்ளவனாக இருப்பாய். சீனா இன்று மிஷனரிகளை வரவேற்கிற ஒரு நாடு அல்ல. அவர்கள் ஐரோப்பியர்களையோ அல்லது வெள்ளையர்களையோ விரும்பவில்லை. எனவே, நீ இன்னொரு திறமையை வளர்த்துக்கொண்டால் சீனாவுக்குப் போவது எளிதாகிவிடும். எடுத்துக்காட்டாக, மருத்துவம்போன்ற ஏதாவதொன்றைப் படித்தால் நீ அங்குள்ள மக்களுக்கு உதவியாக இருப்பாய். அப்போது சீனா உன்னை வரவேற்கும். சீனா உன்னை அனுமதிக்கலாம். உன்னிடம் இருக்கும் அந்தக் கூடுதல் திறமையினிமித்தம் அந்த நாடு உன்னை அனுமதிக்கக்கூடும்,” என்று சொன்னார்கள். எனவே ஹட்சன் டெய்லர் உடனடியாக மருத்துவம் படிக்கத் தீர்மானித்தார். சீனாவுக்கு ஒரு மிஷனரியாக செல்லவும், மிஷனரியாகச் சென்றபின் அங்குள்ள மக்களுக்கும் உதவியாக இருக்கும் என்பதற்காக அவர் மருத்துவம் படிக்க முடிவு செய்தார்.

மருத்துவப் படிப்பு

1880களில் மருத்துவம் படிக்க வேண்டுமானால் நேரே கல்லூரியில் போய்ச் சேர்ந்து மருத்துவம் படிக்க முடியாது. முதலாவது ஒரு மருத்துவரிடம் உதவியாளராகச் சேர வேண்டும். மருத்துவர் சொல்லுகிற எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும். அது மருத்துவம் சார்ந்த வேலைகளாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மருத்துவர் செய்வதை உன்னிப்பாய்க் கவனித்து அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். அதற்குப்பின் கல்லூரிக்குச் செல்ல வேண்டும். கல்லூரியில் படிக்கும்போது மருத்துவமனையில் வேலையும் செய்ய வேண்டும். படிக்கவும் வேண்டும். அதே நேரத்தில் வேலையும் செய்ய வேண்டும். அதற்குப்பின் இன்னொரு கல்லூரிக்குச் செல்ல வேண்டும். இவ்வாறு மருத்துவப் படிப்பைப் படித்துமுடிக்க நீண்ட காலம் ஆகும். எனவே, ஹட்சன் முதலாவது பயிற்சி பெறுவதற்காக ஒரு மருத்துவரைத் தேடினார். மிஷனரியாகச் செல்லும்போது மருத்துவம் படித்திருந்தால் மிகவும் பயனாக இருக்கும் என்பதால் எப்படியும் மருத்துவம் படிக்க வேண்டும் என்று அவர் தீர்மானித்தார்.

திசைதிருப்பம்

இந்த நேரத்தில், அமலியா விடுமுறைக்காக வீட்டிற்கு வந்திருந்தாள். அவள் வந்தபோது அவளுடைய தோழியும் அவளுடன் வந்தாள். அவள் இசை கற்றுக்கொடுக்கும் ஓர் ஆசிரியர். அவளுடைய பெயர் மிஸ் வி. அவளுடைய முழுப் பெயர் என்னவென்று தெரியவில்லை. இது அவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்பம். திசைதிருப்பம் என்றுகூடச் சொல்லலாம்.

அவள் மிக அழகான பெண், மிக இனிமையாகப் பாடினாள். ஹட்சன் அவளை விரும்பினார். அந்தப் பெண்ணின்மேல் தனக்கு ஓர் ஈர்ப்பு இருப்பதை டெய்லர் உணர்ந்தார், ஆனால் இது தன் கவனத்தைத் திசைதிருப்புகிற ஒரு காரியம் என்பதையும் அவர் உணரத்தவறவில்லை. அவள் ஒரு கிறிஸ்தவள். அமலியா மிகவும் சந்தோஷப்பட்டாள். ஆனால் ஹட்சன் டெய்லர் இதை நினைத்து வருந்தினார். ஒரு மிஷனரியின் வாழ்க்கை மிகவும் கடினமாக இருக்கும் என்று அவருக்கு நன்றாகத் தெரியும். குறிப்பாக இந்தக் கட்டத்தில் ஒரு மனைவியைக் கவனிக்கும் அளவுக்குத் தனக்கு வருமானமோ, வசதியோ இல்லை என்பதையும் அவர் அறிந்திருந்தார். தான் அவளை விரும்புவதை யாருக்கும் அப்போது தெரிந்துவிடக்கூடாது என்று அவர் விரும்பினார். ஆனால் மிஸ் வியும் ஹட்சனை விரும்பினார். எனவே இது ஒரு பெரிய திசைதிருப்பமாக மாறிற்று.

அதே நேரத்தில், ஹட்சன் டெய்லர் இங்கிலாந்தின் ஹல் நகரில் ஹார்டி என்ற ஒரு மருத்துவரிடம் மருத்துவப் பயிற்சி பெறப் போய்ச் சேர்ந்தார். அமலியா படித்துக்கொண்டிருந்த பள்ளிக்கூடமும், மிஸ் வி வேலைசெய்துகொண்டு தங்கியிருந்த இடமும் ஹல் என்ற நகரத்துக்கு அருகிலேயே இருந்தன.

எனவே, டெய்லரும் இதைக்குறித்து மிகவும் சந்தோஷப்பட்டார். “நான் முன்பைவிட இப்போது அவளுக்கு அருகில் வந்துவிட்டேன். இப்போது வருடத்துக்கு ஒருமுறையல்ல. எப்போது வேண்டுமானாலும் அவளைப் போய்ப் பார்க்கலாம்,” என்ற எண்ணம் அவருக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அதே நேரத்தில், இது தன் கவனத்தைத் திசைதிருப்புகிற ஒரு காரியம் என்பதையும் உணர்ந்தார்.

மிஸ் வி ஹட்சன் டெய்லர் சொல்வதைக் கேட்க விரும்பினாலும், சீன மக்கள் மேல் அவருக்கிருக்கும் பாரத்தையும், பாசத்தையும் அவர் அறிந்திருந்தாலும், “நீ சீனாவுக்குப் போய்த்தான் ஆக வேண்டுமா? அது வெகு தொலைவில் இருக்கிறதே!” என்பதுபோன்ற கருத்துக்களைத் தெரிவிக்கத் தொடங்கினார். அவள் தேவன் தன்னை அழைத்திருப்பதைப் புரிந்துகொள்ளவில்லை என்றும், தன் அழைப்பை அவள் முக்கியமாகக் கருதவில்லை என்றும் அவர் தன் உள்ளத்தின் ஆழத்தில் அறிந்திருந்தார். அவர் தன் அழைப்பைப்பற்றியும், சீனாவுக்குச் செல்வதைப்பற்றியும் பேசுவது நாளடைவில் மறைந்துவிடும் என்று அவள் நினைத்தாள், நம்பினாள். அவள் இப்படி நினைப்பது ஹட்சன் டெய்லருக்குத் தெரியும். எனவே, இந்த உறவு நீடிக்காது என்று அவர் உணர்ந்தார். தேவனின் அழைப்பை ஏற்பதற்காக இந்த உறவு பலிபீடத்தில் வைக்கவேண்டிய ஒன்று அவர் உணர்ந்தார்.

கர்த்தரைச் சார்ந்து வாழ்தல் - அத்தை வீட்டைவிட்டு வெளியேறுதல்

அவர் ஹல் நகரத்தில் மருத்துவரிடம் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்தபோது, அவருடைய அத்தை வீட்டில் தங்கியிருந்தார். அந்த நாட்களில் மிக நீண்ட நேரம் வேலை செய்யவேண்டியிருந்தது. நாம் இன்று அலுவலகத்தில் செய்வதுபோல் 8 மணிநேர வேலையல்ல. அன்று 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். அதே நேரத்தில் படிக்கவும் வேண்டும். அவர் மருத்துவத்தைப்பற்றி பல்வேறு விஷயங்களைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினார்.

ஓய்வு இல்லாத பரபரப்பான வாழ்க்கை. அவருடைய அத்தை குடும்பத்தாரும் கிறிஸ்தவர்களே. அவர்கள் ஆலயத்திலும், கூட்டங்களிலும் மும்முரமாக இருந்தார்கள். ஆலயத்தில் பலவிதமான கூட்டங்கள் நடைபெற்றுக்கொண்டேயிருக்கும். அவர்கள் அவைகளில் தவறாமல் கலந்து கொண்டேயிருந்தார்கள்.

அவர் மருத்துவரிடம் பயிற்சி பெறுவதில் மும்முரமாக இருந்தார், ஆனால் அவர் வசதியாக வாழ்ந்தார், அவருக்குத் தேவையான எல்லாம் அவருக்குக் கிடைத்தது. உணவு, உடை, உறைவிடம். வேலை, படிப்பு என்று இருந்ததால், வேறு எதைப்பற்றியும் சிந்திப்பதற்கோ, வேறு வேலை செய்வதற்கோ அவருக்கு நேரம் இல்லை. மேலும் தனியாக இருப்பதற்கான நேரமும் கிடைக்கவில்லை, இடமும் கிடைக்கவில்லை. ஏனென்றால், அவருடைய அறையில் யாரவது இருந்துகொண்டேயிருந்தார்கள்.

எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்தது. ஒருநாள் கர்த்தர் அவரிடம், “நீ இந்த வீட்டை விட்டு வெளியேறு,” என்று சொன்னார். அவர் அவருடைய அத்தை வீட்டில் மிகவும் சவுகரியமாக இருந்தார்.எந்தக் குறையும் இல்லை. பயிற்சிபெறும் மருத்துவமனை பக்கத்தில் இருந்தது. வாழ்க்கைக்குத் தேவையான உணவு, உடை எல்லாம் கிடைத்தன. ஆனால், அவர் அவர்களைவிட்டு விலகி வாழ வேண்டும் என்ற எண்ணத்தைத் தேவன் அவருடைய இதயத்தில் வைத்தார். அந்த வீட்டில் வாழ்வது சிறந்தது, இல்லையா? ஆனால் கர்த்தர் அவரிடம், “நீ வெளியேற வேண்டும்” என்று கூறிக்கொண்டே இருந்தார்.

கர்த்தரைச் சார்ந்து வாழ்தல் - வடிகால் குடியிருப்பில் வாடகை வீடு

ஹட்சன் டெய்லர் மருத்துவப் பயிற்சி பெறும்போதே அவருக்குச் கொஞ்சம் சம்பளம் கிடைத்தது. பெரிய வருமானம் என்று சொல்ல முடியாது. ஆனாலும் அந்த வருவாய் அவருக்குப் பேருதவியாக இருந்தது. வரவுக்குள் வாழ வேண்டும் என்பதற்காக, “சரி, குறைந்த வாடகைக்கு ஓர் இடத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். குறைந்த வாடகைக்கு ஓர் இடம் கிடைத்தால் என் வருவாயில் கொஞ்சம் செலவழித்து, மீதியைச் சேமிக்கலாம். முடிந்தவரை சேமிக்க வேண்டும். ஏனென்றால் எதிர்காலத்தில் சீனாவுக்குப் போக வேண்டும். பயணத்துக்குப் பணம் வேண்டும். எனக்கு உதவ யாரும் இல்லை யாரையும் சார்ந்திருக்கக் கூடாது,” என்று நினைத்தார்.

மேலும், அவர் தாராளமாகக் கொடுக்க விரும்பினார். பிறருக்குக் கொடுக்க வேண்டும். கொடுப்பதற்காகச் சேமிக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். அப்படிப்பட்ட பரந்த மனம் அவரிடம் இருந்தது. சீனர்களுக்கு மட்டும் அல்ல, தன்னைச் சுற்றியிருந்த அனைவருக்கும் அவர் கொடுக்க விரும்பினார். எனவே நகரத்தின் மிக ஏழ்மையான ஒரு பகுதியில் இடம் பார்க்க முடிவு செய்தார், Drainside வடிகால்குடியிருப்பு என்ற இடத்தில் ஓர் அறையை வாடகைக்கு எடுத்தார்.

Drainside என்ற இடம் புறநகரின் ஒரு குடிசைப்பகுதிபோன்றது. ஒரு பக்கம் நகரம். நகரத்தைத் தாண்டினால் அங்கு தரிசு நிலம். தரிசு நிலத்தைக் கடந்தால் அங்கு இந்தக் குடிசைபோன்ற வீடுகள் அடுக்கடுக்காய் இருந்தன. ஏழை எளிய மக்கள் வாழ்ந்த குடியிருப்புகள். Drainside வரிசைவரிசையாக மொட்டை மாடி வீடுகள் இருந்தன. எல்லா வீடுகளும் சாம்பல் நிற செங்கற்களால் கட்டப்பட்டவை. ஒரேமாதிரியான அடுக்குமாடி வீடுகள். நம் ஊர் குடிசைமாற்று வாரியக் குடியிருப்புக்களைப்போல. மொட்டை மாடி குடியிருப்புகள். இதுதான் Drainside என்றழைக்கப்பட்டது. அதாவது வடிகால்குடியிருப்பு.

இந்த வரிசைவீடுகள் வடிகால்வீடுகள் என அழைக்கப்பட்டன. இதற்கு ஒரு கரணம் உண்டு. இந்தக் குடியிருப்புகளின் நடுவில் ஆழமற்ற ஒரு வடிகால் இருந்தது. இந்த ஆழமற்ற வடிகாலை அவர்கள் சாக்கடைபோல் பயன்படுத்தினார்கள். கழிவுநீரையும், உணவுப் பொருட்களையும், பிற கழிவுகளையும், குப்பைகளையும் மக்கள் இந்த வடிகாலில்தான் எறிந்தார்கள். அவைகள் பெரும்பாலும் அங்கு தேங்கி சேறும் சகதியுமாக இருந்தது. சரியாகச் சொல்வதானால் அது ஒரு சாக்கடை. வடிகாலில் நீர் ஓடினாலும் மிதந்துகொண்டிருந்த குப்பை கூளங்கள்தான் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. திடமான பொருட்கள் அடியில் எப்போதும் தேங்கியிருந்தது. அதனால், அந்த இடத்தில் எப்போதும் துர்நாற்றம் வீசிக்கொண்டேயிருக்கும்.

மிகவும் மோசமான, நாற்றமெடுத்த, அசிங்கமான இடம். அது நிச்சயமாகவே பரம ஏழைகளுக்கான இடம்தான். இப்படிப்பட்ட இடத்தில்தான் அவர் ஓர் அறையை வாடகைக்குக் கண்டுபிடித்தார். அந்த அறை ஒரு மாலுமியின் மனைவிக்குச் சொந்தமானது. அந்த மாலுமியின் மனைவி தன் அறையை வாடகைக்கு விட விரும்பினார். அதனால் வரும் வருமானம் அவருக்குத் தேவைப்பட்டது. ஏனெனில் மாலுமிகள் பொதுவாகத் தங்கள் சம்பளத்தின் பெரும் பகுதியை வீட்டிற்கு அனுப்பமாட்டார்கள். சில சமயங்களில் அவர்கள் தங்கள் சம்பாத்தியம் முழுவதையும் செலவழித்துவிடுவார்கள். வீட்டிற்குப் பணம் அனுப்பமாட்டார்கள். இந்த நிலைமையைச் சமாளிக்க அவர் தன் வீட்டின் மேலறையை வாடகைக்குவிட்டார். எனவே, ஹட்சன் வாடகைக்கு வந்தது அவருக்கு மிகவும் சந்தோஷம்.

தேவனோடு தனிமையில்

அது சின்ன அறை. குளிர் காலத்தில் நெருப்பு உண்டாக்குவதற்கு ஓர் இடம் இருந்தது. ஒரு சிறிய படுக்கை, ஒரு சிறிய மேஜை, ஒரு சிறிய பேசின் இவைகளே அந்த அறையில் இருந்த பொருட்கள். இதுதான் ஹட்சன் டெய்லர் தங்கியிருந்த இடம். பொதுவான ஒரு சமையலறை. அங்கு ஓர் அடுப்பு. அந்த அடுப்பில் ஒரு பானை வைக்கலாம். அதுதான் சமையலறை. இந்த சமையலறையை வீட்டுச் சொந்தக்காரரும் அவரும் பகிர்ந்துகொண்டார்கள். தான் இங்குதான் தங்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்று ஹட்சன் உணர்ந்தார்.

தேவன் அவரை இந்த இடத்தில் தங்க வைத்ததற்கான காரணத்தை அவர் விரைவில் புரிந்துகொண்டார். இப்போது அவர் விரும்பியதைச் செய்ய அவருக்கு நிறைய நேரம் கிடைத்தது, இடமும் கிடைத்தது.

தேவன் தன்னைத் தனியாக இருக்கச் சொல்லுகிறார் என்றும், இந்தத் தனிமையான நேரம் தனக்குத் தேவை என்பதையும், இந்த நேரத்தை ஜெபிக்கவும் கர்த்தருடைய பிரசன்னத்தை தேடவும் கர்த்தர் தனக்குப் பயிற்சி அளிப்பதுபோல அவர் உணர்ந்தார். அவர் இப்போது முன்புபோல் பரபரப்பாகச் செயல்படவில்லை. நீண்ட நேர வேலைக்குப்பிறகு, தரிசு நிலத்தின் குறுக்கே ஒரு மணி நேரம் மிகவும் சாகவசமாக நடந்து வீட்டுக்குச் சென்றார். அறைக்கு வந்தால் அங்கு தொந்தரவு செய்ய யாரும் இல்லை. தனிமையான நேரம்.

கர்த்தரைச் சார்ந்து வாழ்தல் - தேவைகளைக் குறைத்தல்

அவருடைய வீட்டிலும், அவருடைய அத்தை வீட்டிலும் அவர் வசதியாகவும், சவுகரியமாகவும், பரபரப்பாகவும் வாழ்ந்தார். ஆனால், இப்போது அவருடைய வாழ்க்கையில் வசதிகளும், சவுகரியங்களும், பரபரப்பும் குறைந்துவிட்டன. இப்போது சில சமயம் மந்தமாக இருப்பதுபோல் உணர்ந்தார். ஆனால் இது மிகவும் அவசியம் என்பதை அவர் புரிந்துகொண்டார்.

எந்த அளவுக்குத் தன் வருமானத்தைச் சேமிக்க முடியுமோ அந்த அளவுக்குச் சேமிக்க முயன்றார். ஆகையால் இறைச்சி, வெண்ணெய், பால், பால்பொருட்கள் ஆகியவைகளை சாப்பிடுவதை நிறுத்திக்கொண்டார். அவைகள் வாழ்கைக்குத் தேவையானவை என்றாலும், அவைகள் வாழ்க்கையின் ஆடம்பரத் தேவைகள் என்று அவர் கருதினார். ஓட்சும், கரடுமுரடான பார்லியும் சாப்பிட்டால் சிக்கனமாக வாழலாம் என்று முடிவு செய்தார். எனவே, அவர் ஓட்சையும் பார்லியையும் வேகவைத்துச் சாப்பிட ஆரம்பித்தார். அதுவே அவருடைய அன்றாட உணவாயிற்று. இது ஆரோக்கியமான உணவல்ல.

மேலும் சுகாதாரமற்ற ஒரு சூழலில்தான் அவர் வாழ்ந்தார். இருப்பினும் அந்த வடிகால்குடியிருப்பின் அருகில் ஒரு மிஷன் அலுவலகம் இருப்பதாகக் கேள்விப்பட்டார். தன்னைச்சுற்றி தேவையுள்ள ஏராளமான மக்கள் இருப்பதை அவர் அறிந்தார். அவர்களுக்கு உதவி தேவைப்பட்டது. அது ஏழைகள் வாழ்ந்த இடம். அந்த இடத்தில் வாழ்ந்த மக்களுக்கு வாழ்க்கை ஒரு போராட்டம். அவர் தன் நேரத்தை தன் அறையில் அல்லது அந்தப் பகுதியில் வாழ்ந்த அனைத்து மக்களுடன் செலவிட்டார்.

கர்த்தர் தனக்குப் பல காரியங்களைக் கற்பிக்கவும், பல்வேறு வழிகளில் தன்னைத் தயார்படுத்தவும் விரும்புகிறார் என்பதை ஹட்சன் டெய்லர் உணர்ந்தார், முக்கியமாக, கர்த்தரை முற்றிலும் சார்ந்து வாழ்வது எப்படி என்ற பாடத்தை கர்த்தர் அவருக்குக் கற்றுக்கொடுக்க விரும்பினார்.

கர்த்தரைச் சார்ந்து வாழ்தல் - தேவனிடம் தெரிவித்தல்

இவருக்குப் பயிற்சி கொடுத்த மருத்துவர் ஹார்டி ஞாபகமறதிக்காரர். மேலும் அவருக்கு நிறைய வேலைகள் உண்டு. எனவே, சம்பளம் வழங்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, ஹட்சன் டெய்லர் மருத்துவரின் தோளில் மெல்லத் தட்டி, “நாளைக்கு, எனக்குச் சம்பளம் கொடுக்க வேண்டும்” என்று சொல்வது வழக்கம். “ஆ, நீ எனக்கு நினைவுபடுத்த வேண்டும் - இல்லையெனில் நான் மறந்துவிடுவேன். ஆம், நல்லது. நீ எனக்கு நினைப்பூட்டியதற்கு நன்றி. நான் சம்பளம் கொடுத்துவிடுவேன்,” என்று அவர் சொல்வார். இந்த ஏற்பாட்டை அந்த மருத்துவர் வரவேற்றார். இந்த ஏற்பாடு அவருக்குப் பிடித்திருந்தது.

ஆனால் இனிமேல் சம்பளத்துக்காக மருத்துவரை நினைவுபடுத்தக்கூடாது என்றும், அதற்குப்பதிலாக அவர் கர்த்தரை நம்ப வேண்டும் என்றும் கர்த்தர் சொல்கிறார் என்று ஹட்சன் டெய்லர் உணர்ந்தார்.

அதனால் அவர், “சரி. நான் இனிமேல் என் சம்பளத்துக்காக நான் மருத்துவரை நினைவுபடுத்த மாட்டேன்,” என்று தீர்மானித்தார். அவர் சம்பளம் பெரும் நாள் வந்தது. மருத்துவர் மறந்துவிட்டார், ஹட்சன் டெய்லர், “ஓ, அவர் மறந்துவிட்டார். நல்லது. நான் நினைவுபடுத்தப்போவதில்லை,” என்று உறுதியாக இருந்துவிட்டார்.

நாட்கள் கடந்தன, வாரங்கள் கடந்தன, மருத்துவர் ஹட்சன் டெய்லருக்குச் சம்பளம் கொடுக்க வேண்டும் என்பதை அறவே மறந்துவிட்டார். ஹட்சன் டெய்லர் கவலைப்படத் தொடங்கினார், ஏனென்றால் வாடகை கொடுக்க வேண்டும். சமையல் சாமான்கள் வாங்க வேண்டும், அவ்வளவு சிக்கனமாக வாழ்ந்தபோதும், சேமித்துவைத்திருந்த பணம் நீண்ட நாட்களுக்கு வராது. சேமிப்பு கரைய ஆரம்பித்தது.

ஒரு நாள், தன்னிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்று பார்த்தார். ஒரேவொரு நாணயம் மீதியிருந்தது. நம் பணத்தின் மதிப்பின்படி சுமார் 350 ரூபாய். அதைவைத்துக்கொண்டு நீண்ட நாட்களுக்குத் தாக்குப்பிடிக்க முடியாது என்று அவருக்குத் தெரியும். ஆனால் அவ்வளவுதான் இருந்தது. அது மட்டுமல்ல, வீட்டில் சாப்பாடும் இல்லை, சமைக்கப் பொருட்களும் இல்லை என்பதையும் உணர்ந்தார். அன்றிரவு கொஞ்சம் கஞ்சி சமைத்தார். கொஞ்சம் குடித்துவிட்டு மீதியை காலையில் சாப்பிடுவதற்காக வைத்துக்கொண்டார். மீதியிருந்த 350 ரூபாயையும், மீதியிருந்த கஞ்சியையும் பார்த்துக்கொண்டு, “ஆண்டவரே, நான் நாளைக்கு மருத்துவரை தோளில் தட்டி என் சம்பளத்தை நினைவுபடுத்தட்டுமா?” என்று கேட்டார். ஆனால் தேவன் , “இல்லை, நீ அவரை நினைவுபடுத்த வேண்டாம். நீ என்னைச் சார்ந்து என்னை நம்ப வேண்டும்” என்று சொன்னதை அவர் உணர்ந்தார்.

கர்த்தரைச் சார்ந்து வாழ்தல் - தன்னிடமிருப்பதைக் கொடுத்தல்

அன்று மாலை, ஒருவர் அவருடைய அறைக் கதவைத் தட்டினார். ஹட்சன் டெய்லர் எழுந்துபோய்க் கதவைத் திறந்தார். அங்கு ஒரு ஐரிஷ்காரர் நின்றுகொண்டிருந்தார். அவர் பக்கத்தில்தான் குடியிருந்தார். ஹட்சன் டெய்லரை அவருக்குத் தெரியும். அவர் ஹட்சன் டெய்லரிடம், “தயவுசெய்து, நீங்கள் என்னோடு வர முடியுமா? என் மனைவி உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். நீங்கள் வந்து அவளுக்காக ஜெபிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவள் நாளைக்குக் காலைவரைத் தாக்குப்பிடிப்பார் என்று நான் நினைக்கவில்லை” என்று சொன்னார். ஹட்சன் டெய்லர், அவருடன் போனார்.

ஆனால் அவரிடம், “நீங்கள் ஐரிஷ்காரர். நீங்கள் ஏன்”பாதிரியாரை அழைக்கவில்லை? என்று கேட்டார். ஏனென்றால் ஐரிஷ்காரர்களெல்லாம் கத்தோலிக்கர்கள். அதற்கு அவர் “பாதிரியார்கள் நிறைய பணம் கேட்கிறார்கள். அவர்கள் கேட்கிற பணத்தைக் கொடுக்க என்னிடம் வசதி இல்லை ,” என்றார். எனவே ஹட்சன் டெய்லர் இந்த ஐரிஷ்காரரோடு அவருடைய வீட்டுக்குப் போனார். அவரும் அந்த வடிகால் குடியிருப்பில் ஒரு மாடி அறையை வாடகைக்கு எடுத்து அதில் குடியிருந்தார்.

ஹட்சன் டெய்லர் படிக்கட்டுகளில் ஏறி, அந்த மங்கலான அறைக்குள் நுழைந்தார். அந்த அறைய நோட்டம் விட்டார். மிகவும் மோசமாக இருந்தது, மூலையில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள சில குழந்தைகள் இருந்தார்கள். உடனே அந்தக் குடும்பம் பட்டினி கிடப்பதை அவர் புரிந்துகொண்டார். மூலையில் வைக்கோலில், அவருடைய மனைவி படுத்துக்கிடந்தார். ஒரு வாரத்திற்கு முன்பு அவள் ஒரு குழந்தையைப் பெற்றிருந்தார்.

அவள் மிகவும் பலவீனமாக இருந்தாள், ஏனென்றால் அவளும் ஒன்றும் சாப்பிடாமல் பட்டினி கிடந்ததாள், அவள் சாகுந்தறுவாயில் இருந்தாள். பிறந்த குழந்தை எலும்பும் தோலுமாக இருந்தது. அந்தக் குழந்தை அழக்கூட இல்லை. அழப் பலம் இல்லை. அவ்வளவு பலவீனமாக இருந்தது. அந்தக் குழந்தை இலேசாக முனகியது. ஹட்சன் டெய்லர் பார்த்தார், இந்தக் குடும்பத்திற்கு உண்மையில் உதவி தேவை என்பதை அவர் கண்டார். அவர் முழங்கால்படியிட்டு அவர்களுக்காகச் ஜெபித்தார்.

நற்செய்தியைக் கேட்குமாறும், கர்த்தரை ஏற்றுக்கொள்ளுமாறும் அவர்களை வேண்டினார். அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போது பரிசுத்த ஆவியானவர் “இந்தக் குடும்பத்துக்கு உன்னால் உதவி செய்யமுடியும். அதற்கான வளங்கள் உன்னிடம் உள்ளன,” என்று அவரைத் தூண்டிவிட்டுக் கொண்டிருந்தார். இந்த ஐரிஷ்காரர், “நன்றி, நீங்கள் எங்களுக்கு ஏதாவது செய்ய முடியுமா? நாங்கள் பட்டினி கிடக்கிறோம், எங்களிடம் எதுவும் இல்லை, என் குழந்தைகளுக்கு கொடுக்க என்னிடம் உணவு இல்லை. தயவுசெய்து உங்களிடம் ஏதாவது இருக்கிறதா?” என்று கேட்டார். தன்னிடம் சில்லறையாக இருந்தால் நலமாக இருந்திருக்கும் என்று அவர் நினைத்தார். ஏனென்றால் தன்னிடம் இருந்ததில் அவர்களுக்குப் பாதியைக் கொடுத்துவிட்டு தனக்காக மீதியை வைத்துக்கொள்ளலாம் என்று அவர் நினைத்தார். ஆனால் ஒன்றும் செய்யாமல், “நான் உங்களுக்காக மீண்டும் ஜெபிக்கிறேன்” என்றார். ஆனால் அவருடைய வார்த்தைகள் அவர்களுடைய காதில் விழுந்ததுபோல் தெரியவில்லை.

கர்த்தர் தன்னிடம், “வெளிவேடக்காரனே! உனக்கு எவ்வளவு தைரியம்? அவர்களுக்கு நடைமுறைக்குரிய உதவி செய்ய உன்னிடம் வளங்கள் இருக்கும்போது, நீ அதைச் செய்யவில்லை. அதை விட்டுவிட்டு நற்செய்தியைப் பிரசங்கித்து, அவர்கள் நற்செய்தியை ஏற்றுக்கொண்டால் அவர்களுக்கு நித்திய மகிழ்ச்சி கிடைக்கும் என்று சொல்வது எவ்வளவு முரணானது. நீ சொல்லும் வார்த்தைகள் பொய். உன்னிடம் இருப்பதை நீ கொடுக்க மறுக்கிறாய்.” என்று தேவன் அவரிடம் சொல்வதுபோல் இருந்தது. ஹட்சன் டெய்லர் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது, “அந்த நாணயத்தை அவர்களுக்குக் கொடு” என்று தேவன் சொல்வதை அவர் உணர்ந்தார்.

ஆகவே, கடைசியாக அவர் “நான் ஒரு பணக்காரன் என்று ஒருவேளை நீங்கள் நினைக்கலாம், ஆனால் இதுதான் என்னுடைய கடைசி நாணயம், நான் இதை உங்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று கர்த்தர் என்னிடம் சொன்னார்” என்று சொல்லி தன் சட்டைப் பையிலிருந்து தான் வைத்திருந்த நாணயத்தை எடுத்து அவரிடம் கொடுத்தார். அந்த ஐரிஸ்காரர் மிகவும் சந்தோஷப்பட்டார். அந்தப் பணத்தைவைத்து அந்த நாட்களில் கொஞ்சம் மருந்தும், உணவுப்பொருட்களும் வாங்க முடியும். அதனால் அவர் நன்றி சொன்னார். ஹட்சன் டெய்லரின் பை இப்போது முற்றிலும் காலி. ஒரு பைசா கிடையாது. ஆனால் அவர் மகிழ்ச்சியாக இருந்தார், ஏனென்றால் தான் செய்தது சரி என்று அவருக்குத் தெரியும். அந்தப் பெண் உயிர் பிழைத்தார் என்றும், அவர் அந்தப் பணத்தைவைத்து உணவுப் பொருட்கள் வாங்கிச் சமைத்துபிள்ளைகள் சாப்பிட்டு, குழந்தைகள் நன்றாக இருக்கிறார்கள் என்றும், புதிதாகப் பிறந்த குழந்தையும் பிழைத்தது என்றும் அவர் கேள்விப்பட்டார். ஆனால் அவர் வீட்டிற்கு வந்ததும், “சரி, ஆண்டவரே, இப்போது எல்லாம் உம் கையில். என்னுடைய எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்து விட்டேன். இப்போது என்னிடம் ஒன்றும் இல்லை,” என்று சொன்னார்.

கர்த்தரைச் சார்ந்து வாழ்தல் - உண்மையுள்ள தேவன்

மறுநாள் காலையில் அவர் மீதியிருந்த கஞ்சியைக் குடித்துக்கொண்டிருந்தபோது, “இவ்வளவுதான். இனி ஒன்றும் இல்லை. எதையும் வாங்குவதற்கு வழியும் இல்லை, ஓட்ஸ்கூட இல்லை. ஒன்றுமில்லை. என்னால் ஒன்றும் செய்யமுடியாது,” என்று நினைத்தார். எந்த வருமானத்துக்கும் வழி இல்லை. அடுத்த நாள் திங்கள்கிழமை. திங்கள்கிழமை சம்பளம் கொடுக்கமாட்டார்கள் என்று அவருக்குத் தெரியும். எனவே, அவர், “சரி, ஆண்டவரே, நான் இப்போது என்ன செய்யப் போகிறேன்?” என்று கேட்டார். அப்போது யாரோ கதவைத் தட்டினார்கள். கதவைத் திறந்து பார்த்தார். அங்கு நிறையக் கடிதங்கள் இருந்தன. அதில் பெரும்பாலான கடிதங்கள் வீட்டுச் சொந்தக்காரருக்குரியவை. அந்த மாலுமியின் மனைவிக்கு வந்திருந்தன. ஒரேவொரு கடிதம் அவருக்கு வந்திருந்தது. அது அசாதாரணமானது என்று அவர் நினைத்தார்.

ஏனென்றால், அவருக்குப் பொதுவாகக் கடிதங்கள் வராது. எப்போதாவது அவருடைய குடும்பத்திலிருந்து கடிதம் வரும். சில குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே குடும்பத்திலிருந்து கடிதங்கள் வரும். அப்படிப்பட்ட நாள் அல்ல. அன்று ஞாயிற்றுக்கிழமை. அவருடைய குடும்பத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை கடிதம் வராது.

அவர் கடிதத்தைப் பார்த்தார். கடிதத்தில் திருப்பிஅனுப்பவேண்டிய முகவரி இல்லை. கடிதத்தைத் திறந்து பார்த்தார். உள்ளே ஒரு துண்டுத் தாள் இருந்தது, துண்டுத் தாளை விரித்துப் பார்த்தார். அது முற்றிலும் காலியாக இருந்தது, அதில் எதுவும் எழுதப்படவில்லை. ஆனால் உள்ளே $ 20 பணம் இருந்தது. அவர் அந்த ஐரிஷ்காரருக்குக் கொடுத்ததைவிட 4 மடங்கு அதிகமாக இருந்தது. அது தேவன் தனக்குத் தந்ததென்று அவர் புரிந்துகொண்டார். அந்தப் பணம் ஒரு வாரத்துக்குத் தேவையான உணவுப்பொருட்கள் வாங்குவதற்குப் போதும். எனவே அவர், “ஆம், நான் பாடத்தைக் கற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறேன்” என்று நினைத்துக்கொண்டார். அவர் தன்னுடைய சம்பளத்தைப்பற்றி இன்னும் மருத்துவரிடம் சொல்லவில்லை. மருத்துவர் மறந்துவிட்டார், மறந்தேவிட்டார்.

கர்த்தரைச் சார்ந்து வாழ்தல் - பயிற்றுவிக்கும் தேவன்

நாட்கள் கடந்தன, வாரங்கள் கடந்தன, ஹட்சன் டெய்லர் வீட்டு வாடகை கொடுக்க வேண்டிய நாள் நெருங்கிக்கொண்டிருந்தது. கையில் காசு இல்லை. அப்போது அவர், “ஆண்டவரே, இதோ நான் பழைய நிலைக்கு வந்துவிட்டேன். இப்போது எனக்கு உணவு இல்லை, அது ஒருபுறம். ஆனால் இன்னொரு புறம் மாலுமியின் மனைவி. அவருக்குப் பணம் வேண்டும். நான் கொடுக்கும் வாடகைப்பணம் அவருக்குத் தேவைப்படுகிறது. நான் வாடகை கொடுக்காவிட்டால் அவர்கள் கஷ்டப்படுவார்கள். நான் பசியோடு இருக்கலாம். ஆனால் அவர்களால் எப்படி முடியும்? அவர்களுக்குக் குழந்தைகள் இருக்கிறார்களே! அந்தக் குழந்தைகளுக்கு உணவளிக்க வேண்டுமே! ஆண்டவரே, நீர் என்ன செய்யப் போகிறீர்?” என்று ஜெபித்தார்.

அடுத்தநாள், வழக்கம்போல், அவர் வேலைக்குப்போனார். மருத்துவமனையில், மருத்துவர் சொன்னபடி, சோதனைக்கூடத்தில் அவர் கொஞ்சம் பொடிகளைக் கொதிக்கவைத்து அதனோடு வேறு சில பொருட்களையும் சேர்த்துக் கலக்கிக்கொண்டிருந்தார். அப்போது மருத்துவர் ஹட்ஷனின் மேசையினருகே வந்து உட்கார்ந்தார். அவர் தன் கணக்குகளைப் பார்த்துக்கொண்டிருந்தார். திடீரென்று, “ஆ, டெய்லர், நான் உனக்குச் சம்பளம் கொடுக்கவில்லையென்று நினைக்கிறேன். சரியா?” என்று கேட்டார். ஹட்சன் டெய்லருக்குத் தன் ஆச்சரியத்தைத் தாங்கமுடியவில்லை. மிகவும் உற்சாகமடைந்தார். அவர் தன் பரவசத்தை அடக்கிக்கொண்டு, “ஆம், நீங்கள் எனக்குப் பணம் கொடுக்கவில்லை” என்று கூறினார். அவர் இருதயம் நன்றியால் நிரம்பிற்று. அவர் தேவனுக்கு நன்றி சொன்னார். “நன்றி தேவனே. இந்தக் கடைசி நிமிடத்திலும் நீர் செய்ய வல்லவர். போதுமான விசுவாசம் இருந்தால் நீர் செய்வீர்,” என்று எனக்குத் தெரியும். அப்போது மருத்துவர், “ஆ, நீ முன்பே என்னிடம் சொல்லியிருக்க வேண்டும். இப்போது நான் எல்லாப் பணத்தையும் வங்கியில் போட்டுவிட்டேன். நீ அடுத்த வாரம்வரை காத்திருக்க வேண்டியிருக்கும்,” என்றார்.

டெய்லர் உடைந்துபோனார். அவருடைய கண்களில் கண்ணீர் கரைபுரண்டோடியது. அந்த நேரத்தில் சோதனைக்கூடத்தில் சோதனைக் குழாய்கள் வெடித்தன. எனவே, அதைக் கவனிக்க அவர் அங்கு வேகமாக ஓடினார். அந்தக் களேபரத்தில் மருத்துவர் ஹட்சன் அழுததைப் பார்க்கவில்லை. ஆனால் அவர் அழுதார். அவர் மிகவும் நொறுங்கிப்போனார். அவர், “ஆண்டவரே, ஏன்? இன்னும் ஒரு வாரம் என்னால் காத்திருக்க முடியாது” என்று கதறினார். அவர் மீண்டும் தன் வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார், எண்ண அலைகள் மோதிக்கொண்டிருந்தன. எனினும், “கர்த்தரை விசுவாசி,” என்ற எண்ணம் ஆழமாக இருந்தது.

அன்றைய வேலையை முடித்துக்கொண்டு அறைக்குச் செல்ல ஆயத்தமாகிக்கொண்டிருந்தார். இரவு 10 மணி. வேலை முடிந்தது. அறையைச் சுத்தம் செய்துகொண்டிருந்தார். வெளியே காலடிச் சத்தம் கேட்டது. மருத்துவர் திரும்பி வந்தார். உள்ளே வந்தவர், ஹட்ஷனிடம் , “நான் சொல்லப்போவதை நீ அவ்வளவு எளிதில் நம்ப மாட்டாய் டெய்லர். மிகவும் ஆச்சரியமான ஒரு காரியம் நடந்தது. என்னவென்றால் என் பணக்கார வாடிக்கையாளர் ஒருவர் கதவைத் தட்டினார். இரவு 10 மணி. அவர் தன் கணக்கை உடனடியாக தீர்க்கவேண்டும் என்று விரும்பினாராம். எனவே, இப்போது என்னிடம் வந்து எனக்குச் சேரவேண்டிய பணத்தைக் கொடுத்துவிட்டுச் சென்றார். இதற்குமுன் இதுபோல் நடந்ததில்லை!” என்று சொன்னார்.

ஹட்சன் டெய்லர் அதைப் பற்றி ஒன்றும் நினைக்கவில்லை, அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தபோது இன்னும் காற்றுப்போன பலூன்போல ஆகிவிட்டார். அவர் “ஆம்” என்று மட்டும் கூறினார். பின்னர் மருத்துவர் தன் கணக்குப் புத்தகத்தில் வரவு வைத்துவிட்டு, “டெய்லர் இந்தப் பணத்தை நீ இப்போது கொண்டுபோ. மீதி பணத்தை அடுத்தவாரம் தருகிறேன்,” என்றார். ஹட்சன் டெய்லர் ஆச்சரியப்பட்டார். அவர் அதை எதிர்பார்க்கவில்லை. அவர் அந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்டார். இப்போது பையில் பணத்தோடு வீட்டிற்கு நடந்து சென்றார், அவர் தேவனிடம், “ஆண்டவரே, நான் சீனாவுக்குப் போகத் தயார்” என்று சொன்னார்.

மருத்துவ மேற்படிப்பு

டாக்டர் ஹார்டி ஹட்சன் டெய்லரைப்பற்றி மிகவும் உயர்ந்த அபிப்பிராயம் வைத்திருந்தார். அவருடைய வேலையில் அவர் மிகவும் திருப்தியடைந்தார். ஹட்சன் டெய்லர் அப்போது மருத்துவப் படிப்பின் அடுத்த மட்டத்துக்குச் செல்ல வேண்டியிருந்தது. ஹட்சன் டெய்லர் தன் மருத்துவப் படிப்பை கே கல்லூரியில் படிப்பதற்கு அவர் உதவ முன்வந்தார். ஆனால் ஹட்சன் டெய்லருக்கு இதைக் குறித்து சமாதானம் இல்லை, தேவன் தன்னை இலண்டனுக்குச் செல்லும்படிச் சொல்வதாக அவர் உணர்ந்தார். லண்டனில்தான் மிஷன் அலுவலகங்கள் உட்பட எல்லாத் தலைமை அலுவலகங்களும் அங்குதான் இருந்தன. வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டுமானால் கப்பலேற வேண்டும். கப்பல்களும் இலண்டனிலிருந்தான் செல்லும். ஆகவே, கர்த்தர் “அடுத்த கட்டம் வருகிறது”என்று சொல்வது போல் இருந்தது. எனவே ஹட்சன் டெய்லர் மருத்துவரின் தாராளமான உதவியை மறுத்துவிட்டு லண்டனுக்கு செல்ல முடிவு செய்தார்.

லண்டனில் இருந்த ஒரு மிஷன் அலுவலகத்தை அவருக்கு ஏற்கனவே தெரியும். அவர்கள் அவருக்குக் கடிதம் எழுதியிருந்தார்கள். அவர்கள்தான் மருத்துவம் படித்தால் நல்லது என்ற ஆலோசனை சொல்லியிருந்தார்கள். அவர்கள், “நீ டாக்டராக விரும்பினால் உன் படிப்புச் செலவை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஏனென்றால் அது மிஷனரி பணிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எங்களுக்குத் தெரியும், எனவே நாங்கள் உனக்கு உதவுகிறோம்,” என்று ஏற்கனவே சொல்லியிருந்தார்கள். இப்போது ஹட்சன் மருத்துவப் படிப்பைத் தொடர முடிவு செய்து அவர்களுக்குத் தெரிவித்தார். அவர் அவர்களுக்குக் கடிதம் எழுதி, “நான் லண்டனுக்கு வருகிறேன், நான் என் மருத்துவப் படிப்பின் அடுத்த கட்டமாகக் கல்லூரிக்குச் செல்ல வேண்டும். மருத்துவமனையில் ஒரு பயிற்சியாளராகப் பணியாற்றவும் வேண்டும். எனவே, என் கல்லூரிப் படிப்புக்கு நீங்கள் உதவுவீர்களா என்று நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்,” என்று கேட்டு கடிதம் எழுதினார். அவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள், அவர் உண்மையில் ஒரு மிஷனரியாக ஆவதற்கு ஆர்வமாக இருந்தார், எனவே அவர்கள் அவருக்கு உதவ முன்வந்தார்கள். அவர் தன் உறவினர் ஒருவருடன் சேர்ந்து ஒரு பிளாட்டில் தங்கினார். அது ஒரேவொரு அறை. அந்த அறையை வாடகைக்கு எடுத்து அங்கு தங்கினார்கள். மருத்துவமனையில் பணிபுரிந்தார், அதே மருத்துவமனையில் படித்தார். படிக்கவும் வேண்டும், வேலைசெய்யவும் வேண்டும்.

சீன மிஷனரியுடன் சந்திப்பு

இதற்குமுன் அவர் தன் தங்கையுடன் ஒரேவோருமுறை லண்டனுக்குப் போயிருந்தார். சீனாவிலிருந்து வந்த ஒரு ஜெர்மன் மிஷனரி லண்டனுக்கு வந்திருக்கிறார் என்று அவர் கேள்விப்பட்டார். இந்த ஜெர்மன் மிஷனரி சீனாவின் உள்நாட்டின் சில இடங்களுக்குச் சென்றிருந்தார். வேறு சில மிஷனரிகளைவிட இவருக்குச் சீனாவைப்பற்றிக் கொஞ்சம் அதிகம் தெரியும். அவர் லண்டனில் சில இடங்களில் பேசுவதாகக் கேள்விப்பட்டார். எனவே, ஹட்சன் டெய்லர் அவர் பேசுவதைக் கேட்க லண்டனுக்குச் சென்றார். அங்கு அவர் பலரைச் சந்தித்தார், கடைசியில் அவர் இந்த ஜெர்மன் மிஷனரியையும் சந்தித்தார். வயதானவர், ஹட்சன் அவரிடம், “ஐயா, நானும் சீனாவுக்குப் போகிறேன். சீனாவுக்குச் செல்ல தேவன் என்னை அழைத்திருக்கிறார்,” என்று கூறினார். ஹட்சன் டெய்லருக்கு அப்போது வயது 18 என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அவர் நல்ல சாப்பாடு சாப்பிடாததால் ஒல்லியாக இருந்தார். மேலும் அவருடைய முடி கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். கண்கள் நீல நிறக் கண்கள். இந்த ஜெர்மன் மிஷனரி அவரைப் பார்த்து பயங்கரமாகச் சிரித்தார், “நீ சீனாவுக்கு மிஷனரியாகப் போகிறாயா? தேவன் உன்னை அழைத்திருக்கிறாரா? அவர்கள் என்னை சிவப்புச் சாத்தான் என்று அழைக்கிறார்கள். அவர்கள் உன்னை எப்படி அழைக்கப் போகிறார்களோ தெரியவில்லையே! உன் இளஞ்சிவப்பு முடியைப் பார். உன் நீலக் கண்களைப் பார்! நீ சொல்லும் ஒரு வார்த்தையைக்கூட அவர்கள் கேட்க மாட்டார்கள்!” என்று சொல்லிச் சிரித்தார். சிரித்துக்கொண்டே போய்விட்டார். ஆனால் ஹட்சன் டெய்லர் இதைக் கேட்டு அதைரியப்படவில்லை. சோர்ந்துபோகவில்லை. அவர் ஜெர்மன் மிஷனரியிடம், “இல்லை, ஐயா, சீனாவுக்கு ஒரு மிஷனரியாகச் செல்ல தேவன் என்னை அழைத்திருக்கிறார், அவருக்கு என் தலைமுடியும், கண்களின் நிறமும் தெரியும்,” என்று சொன்னார்.

சிக்கனமான வாழ்க்கை

அதற்குப்பின் இப்போதுதான் அவர் மீண்டும் லண்டனுக்கு வந்திருக்கிறார். 12 மணி நேரம் மருத்துவமனையில் வேலை செய்ய வேண்டும். அதற்குப்பின் படிக்க வேண்டும். ஒரே நேரத்தில் படிப்பதும் வேலை செய்வதும் அவருக்கு மிகவும் கடினமாக இருந்தது. மேலும் தன் செலவுக்காகவும், தன்னைச் சுற்றியுள்ள மற்றவர்களுக்குத் தாராளமாகக் கொடுப்பதற்காகவும் தன் வருமானத்தை முடிந்த அளவுக்குச் சேமிக்க விரும்பினார். எனவே, “ஏழை மனிதனின் ரொட்டி” என்று சொல்லப்பட்ட பழுப்பு ரொட்டி, அது ஒருவிதமான கரடுமுரடான பழுப்பு ரொட்டி, தண்ணீர், இரண்டு ஆப்பிள் ஆகியவைகளை மட்டுமே சாப்பிட ஆரம்பித்தார். இவைகளைச் சாப்பிடுவதே சேமிப்பதற்குச் சரியான வழி என்று அவர் முடிவுசெய்தார்.

அந்தப் பழுப்பு ரொட்டி நம் ஊர் இது ஒரு ருபாய் ரொட்டியைப்போல மலிவானது. இந்த உணவு நிச்சயமாக அவருக்குப் போதாது. ஏனென்றால், மருத்துவமனையில் நாள் முழுவதும் நின்றுகொண்டிருக்க வேண்டும். இரவு வெகு நேரம் விழித்திருந்து படிக்க வேண்டும். தங்கியிருந்த அறையிலிருந்து மருத்துவமனைக்குப் போய்வர இரண்டு மணி நேரம் நடக்க வேண்டும். மழையோ, ஆலங்கட்டி மழையோ, வெயிலோ, காற்றோ எப்போதும் நடைதான். பேருந்தில் பயணம் செய்து அவர் தன் பணத்தைச் செலவழிக்க விரும்பவில்லை. எனவே ரொட்டி, தண்ணீர், இரண்டு ஆப்பிள். இதுதான் அவருடைய அன்றாட உணவு. ரொட்டியை வாங்கும்போது கடைக்காரரிடம் அதை இரண்டாக வெட்டச் சொன்னார். ஏனென்றால் முழுசாகக் கொண்டுபோனால் முழுவதையும் ஒரே நேரத்தில் சாப்பிட்டுவிட நேரிடும், அதன்பின் பட்டினி கிடக்க வேண்டியிருக்கும் என்பதால் அப்படிச் செய்தார். இது அவருடைய பழக்கம்.

மேலும் அவசரத் தேவைக்கும், பிறருக்குக் கொடுப்பதற்கும் எப்போதும் பணம் வேண்டும் என்று அவர் நினைத்தார். அது மட்டும் அல்ல. சீனாவுக்குச் செல்ல வேண்டிய நேரம் நெருங்கிக்கொண்டிருக்கிறது என்ற வாசனையை அவர் முகர்ந்தார். அந்த வயதில் அவர் இப்படித்தான் வாழ்ந்தார்.

பணிவிடை முடியும்வரைத் தொடரும் வாழ்வு

ஒரு நாள் அவர் தன் அறையில் சில பழைய துணிகளைத் தைத்துக்கொண்டிருந்தபோது ஊசியால் விரலைக் குத்திவிட்டார். அவர் அதை ஒரு பொருட்டாகக் கருதவில்லை. அடுத்த நாள் அவர் மருத்துவமனைக்குச் சென்றபோது, அன்றைக்கு ஒரு பிரேதப் பரிசோதனை செய்யவேண்டியதாயிற்று. இறந்த மனிதன் மிக மோசமான ஒரு தொற்றுநோயால் இறந்திருந்தான்.

பிரேதப்பரிசோதனை செய்வதற்குமுன், மருத்துவப் பேராசிரியர் அவர்களிடம், “பிரேதப் பரிசோதனை செய்யும்போது நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் பயன்படுத்தும் எந்தக் கருவியும் உங்களைத் தொட்டுவிடக்கூடாது. அவைகளால் சொரியாதீர்கள். அப்படி நடந்தால் நிச்சயமாக உங்களுக்கு இந்தக் காய்ச்சல் வரும். எனவே நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.” என்று சொன்னார். ஹட்சன் டெய்லரும் அவருடைய மற்ற நண்பர்களும், சகாக்களும் இந்தப் பிரேத பரிசோதனையை மிகவும் கவனமாகச் செய்தார்கள்.

சிறிது நேரம் கழித்து, அன்று பிற்பகலில், ஹட்சன் டெய்லரின் கை முழுவதும் மிகவும் கடுமையான வலி ஏற்பட்டது, அது மட்டுமல்ல, உடல் முழுவதும் வேர்த்துக் கொட்டியது. அவர் எழுந்து நிற்க முடியாத அளவுக்கு நடுங்கிக்கொண்டிருந்தார். அவருடைய நண்பர்கள் கலங்கினார்கள். பேராசிரியர் வந்தார். ஹட்சன் தன் அறிகுறிகளை விளக்கிச் சொன்னார், பேராசிரியர், “பையா, நீ ஒரு வண்டியைப் பிடித்து, சீக்கிரமாக வீட்டுக்குப் போய், உன் விவகாரங்களை ஒழுங்குபடுத்து. நீ சீக்கிரம் சாகப்போகிறாய்,” என்றார். அதற்கு ஹட்சன் டெய்லர் மிகப் பலவீனமாக புன்னகைத்து, “இல்லை, ஐயா, நான் தவறாக நினைக்கவில்லை என்றால், தேவன் எனக்குச் சில வேலைகளை வைத்திருக்கிறார். அந்த வேலைகளைச் செய்துமுடிப்பதற்குமுன் சாகமாட்டேன்.” என்றார்.

அவர் மிக, மிக மோசமாக நோய்வாய்ப்பட்டார். அவருடைய விரலில் ஏற்பட்ட அந்தச் சிறிய குத்தை அவர் மறந்துவிட்டார். ஆனால், அந்தக் குத்தின் வழியாக அவருக்கு அந்தக் காய்ச்சல் வந்தது. வண்டி பிடித்து வீட்டிற்குப் போக அவரிடம் பணம் இல்லை, அவரிடம் பணம் இல்லாததற்கு காரணம் மற்றொரு சம்பவம். மாலுமி தன் மனைவிக்குப் பணம் அனுப்பினார் என்று ஏற்கனவே சொல்லியிருந்தேன். அந்தப் பணம் நேரடியாக அவருடைய மனைவிக்கு வீட்டுக்கு வராது. அவர் அனுப்புகிற பணம் அவருடைய கப்பல் அலுவலகத்துக்கு வரும். அங்கு போய் அவர் பணத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அந்த அலுவலகம் லண்டனில் இருந்தது. ஹட்சன் டெய்லர் இப்போது லண்டனில் படித்துக்கொண்டிருந்தார். எனவே, மாலுமியின் மனைவிக்கு உதவி செய்யும் வகையில் அவர் கப்பல் அலுவலகத்திற்கு சென்று, அந்தப் பணத்தை வாங்கி அவருக்கு அனுப்புவதை வழக்கமாக வைத்திருந்தார்.

எல்லா நாட்களிலும் அந்தக் கப்பல் அலுவலகத்துக்குச் செல்ல முடியாது. என்றைக்குச் சம்பளம் வருமோ அன்றைக்குத்தான் செல்ல முடியும். இந்த உதவியைச் செய்தால் மாலுமியின் மனைவிக்கு ஒரு வருமானம் வரும் என்று அவர் நினைத்தார். ஏனென்றால், அவளுடைய கணவன் அவளுக்கு ஒழுங்காகப் பணம் அனுப்பவில்லை. எனவே அவர் இதைச் செய்ய முடிவு செய்திருந்தார், அவர் ஒருநாள் இரவு வெகு நேரம் படித்ததால் அடுத்த நாள், கப்பல் அலுவலகத்துக்குப் போக வேண்டிய நாளில், அவரால் அந்த அலுவலகத்துக்குப் போகமுடியவில்லை. கொஞ்சம் தாமதமாகப் போனார். அவர் அங்கு போனபோது கப்பல் அலுவலகம் ஏற்கனவே மூடியிருந்தது. எனவே, அவர் தன் சொந்த பணத்தை அந்தப் பெண்மணிக்கு அனுப்பினார், அந்தப் பணத்தைப் பின்னர் கப்பல் அலுவலகத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்று அவர் நினைத்தார். அவர் மறுநாள் கப்பல் அலுவலகத்திற்குச் சென்றார். அங்கு நிச்சயமாகப் பணம் இருக்கும் என்று அவர் நம்பினார், அந்த அலுவலகத்தில் இருந்த எழுத்தரிடம் காரியத்தை விளக்கினார். எழுத்தர், “ஓ, அந்த மனிதர், அந்த மாலுமி, அவர் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு தங்கம் தோண்டப் போய்விட்டார்” என்றார். இதனால்தான் ஹட்சன் டெய்லரிடம் பணம் இல்லாமல் போயிற்று. எனவே, மருத்துவமனையிலிருந்து வண்டியில் வீட்டுக்குப் போக இப்போது அவர் கையில் பணம் இல்லை.

அவர் தட்டுத்தடுமாறி வீட்டிற்கு நடக்க ஆரம்பித்தார். நடக்க முடியவில்லை. ஆங்காங்கு உட்கார்ந்து ஓய்வெடுத்து ஓய்வெடுத்து நடந்தார். அவர் நடுங்கிக்கொண்டிருந்தார், மிகமிக மோசமாக நோய்வாய்ப்பட்டார். பாதி தூரம் நடந்தார். இன்னும் பாதிதூரம் நடக்க வேண்டும். சுகமா இருக்கும்போது நடந்தால் ஒரு மணி நேரம் நடக்க வேண்டும். இன்றைக்கு நடந்தால் எவ்வளவு நேரம் நடக்க வேண்டியிருக்கும். அவரால் நடக்க முடியவில்லை. எனவே, பேருந்தில் பயணிக்கலாம் என்று முடிவுசெய்தார். வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.

அந்த நாட்களில் விஷம் கலந்த இரத்தத்தை வெளியேற்றுவதற்காக பாதிக்கப்பட்ட இடத்தைக் கடித்து உறிஞ்சி துப்பினார்கள். அதுபோல அவர் வீட்டிற்கு வந்ததும், அவர் விரலில் ஊசி குத்திய இடத்தைக் கடித்து இரத்தத்தை உறிஞ்சி துப்பினார். ஆனால், அவர் அப்படிச் செய்துகொண்டிருக்கும்போதே மயங்கித் தரையில் விழுந்தார்.

அவருடைய அறையில் அவருடன் தங்கியிருந்த அவருடைய அத்தை மகன் அறைக்கு வந்தபோது, அவர் மயங்கிக்கிடப்பதைக் கண்டு, மருத்துவரை அழைத்திருப்பார் என்று தோன்றுகிறது. ஹட்சன் டெய்லர் கண்விழித்தபோது, தான் படுக்கையில் படுத்திருப்பதையும், படுக்கையருகே ஒரு மருத்துவர் நின்று பேசிக்கொண்டிருப்பதையும் பார்த்தார். மருத்துவர், “இவன் ஒரு ஆரோக்கியமான பையனாக இருந்தால், நல்ல ஆரோக்கியமான உணவை சாப்பிட்டிருந்தால், பிழைத்துவிடுவான், சரியாகிவிடுவான் என்று சொல்ல முடியும். ஆனால் இப்போது என்னால் அப்படி உறுதியாகச் சொல்ல முடியாது. பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்,” என்று சொன்னார்.

இந்த உரையாடலை ஹட்சன் டெய்லர் கேட்டுக் கொண்டிருந்தார், அப்போது அவர், “ஆண்டவரே, உம் வேலைக்கு நான் வேண்டும் என்று நீர் விரும்பினால், நீர் இப்போது இங்கு ஒரு அற்புதம் செய்தாக வேண்டும்,” என்று ஜெபித்தார். ஏனெனில், அவர் அப்படியொன்றும் திடமான, ஆரோக்கியமான உணவு சாப்பிடவில்லை. வாரங்கள் கடந்தன, அவருடைய உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. மோசமாகத்தான் இருந்தார். இழுத்துக்கொண்டேபோனார். சில வாரங்களில் அவர் எலும்பும் தோலுமாகிவிட்டார். அவர் மிகவும் பலவீனமாக இருந்தார், மருத்துவர் வந்து மீண்டும் பார்த்தார், “உன் குடும்பம் இருக்கும் யார்க்ஷயருக்கு நீ திரும்பிபோவது நல்லது. உன்னைக் கவனிக்க ஆள் வேண்டும். அப்போதுதான் நீ குணமடைய முடியும். இல்லையெனில், நீ செய்யவிரும்புகிற சாதாரணமான விஷயங்களைக்கூட உன்னால் ஒருபோதும் செய்ய முடியாது. எனவே நீ உன் சொந்த ஊருக்குத் திரும்பிப் போ,” என்று சொன்னார். ஹட்சன் டெய்லர் சிரித்தபடியே ஊருக்குச் செல்ல என்னிடம் போதுமான பணம் இல்லை என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டார்.

தவறாத தேவன்

இங்கிலாந்தின் வடக்கே இருக்கும் தன் சொந்த ஊருக்கு இரயிலில் பயணம் செய்யப் போதுமான பணம் அவரிடம் இல்லை. எனவே, “என்ன செய்வது” என்று யோசித்தார். அவர் மிகப் பலவீனமாக இருந்தார். “கப்பல் அலுவலகத்திற்குப் போ,” என்று தேவன் சொல்வதாக அவர் உணர்ந்தார். அவர், “நான் எப்படி அங்கு செல்லமுடியும்? பேருந்தில் செல்வதற்குக்கூட என்னிடம் பணம் இல்லையே” என்று நினைத்தார் அவர் தன்னிடம் இருந்த கடைசிப் பணத்தை மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குத் திரும்பி வரும்போது பேருந்தில் செல்ல செலவழித்துவிட்டார். எனவே, அவர், “சரி, கப்பல் அலுவலகத்துக்குச் செல்ல வேண்டுமானால், ஆண்டவரே, நான் நடந்துபோகிறேன்,” என்று சொன்னார். நடக்க முடிவுசெய்தார். வெளிறிய முகம், எலும்புக்கூடுதான் மிச்சம். அறையிலிருந்து வெளியேறி நடக்க ஆரம்பித்தார். தட்டுத்தடுமாறி நடந்தார். சில நிமிடங்களுக்கு ஒருமுறை ஓய்வெடுத்தார், பின்னர் நடந்தார். நான்கு கிலோமீட்டர் தூரத்தில் இருந்த கப்பல் அலுவலகத்திற்குச் செல்ல நீண்ட நேரம் ஆயிற்று. அந்த அலுவலகம் இருந்த கட்டிடத்துக்குச் சென்றபிறகும், வரவேற்பறைக்குச் செல்ல படிகளில் ஏறிச் செல்ல வேண்டும் என்பதை நினைத்துப்பார்க்கவே அவருக்குப் பயமாக இருந்தது. எனவே, அவர் படிகளில் உட்கார்ந்துவிட்டார். உட்கார்ந்து கொஞ்சம் ஓய்வுஎடுத்துக்கொண்டு படிகளில் ஏறத் தொடங்கினார். அவர் தனக்குத்தானே, “ஆண்டவரே, இது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது! இதோ நான். நடக்கக்கூட முடியாத எலும்பும் தோலுமான ஒரு ஆள். நான் சீனாவுக்குச் செல்ல வேண்டும் என்று நீர் விரும்புகிறீர், இந்த அலுவலகத்திற்குக்கூட என்னால் ஏறிப்போக முடியாது,” என்று நினைத்துக் கொண்டார். ஆனால் அவர் படிகளில் ஏறி அலுவலகத்துக்குப் போனார். அவரைப் பார்த்த எழுத்தர் உறைந்துபோனார். அந்த எழுத்தருக்கு ஹட்சனைத் தெரியும். அவருடைய தோற்றத்தைப் பார்த்து அந்த எழுத்தர் அதிர்ச்சியடைந்தார். ஹட்சன் டெய்லர், “நான் தங்கம் தோண்டுவதற்காக ஓடிய மனிதரைப்பற்றி விசாரிக்க வந்திருக்கிறேன்,” என்றார். அந்த எழுத்தர், “வாருங்கள். நான் கடந்தமுறை உங்களுக்குத் தவறான தகவலைச் சொல்லிவிட்டேன். அதே பெயரில் இன்னொருவர் இருக்கிறார். நான் அவரைப்பற்றிச் சொல்லிவிட்டேன். மன்னிக்கவும். நீங்கள் எதிர்பார்த்த பணம் இங்கு இருக்கிறது. நீங்கள் வாங்கிக்கொள்ளலாம். அவருடைய குடும்பத்திற்கு இப்போது இது தேவைப்படும்,” என்று சொல்லி பணத்தைக் கொடுத்தார்.

ஹட்சன் டெய்லர் சிரித்தபடியே பணத்தைப் பெற்றுக்கொண்டார். அது நிச்சயமாக ரயில் டிக்கெட்டுக்குப் போதும். இப்போது வீட்டுக்குப் பேருந்தில் போவதற்கும் போதும். இவையெல்லாம் தேவனுடைய ஏற்பாடு என்பதை அவர் புரிந்துகொண்டார். அந்த எழுத்தர் ஹட்சன் டெய்லரின் தோற்றத்தையும், பலவீனமான நடையையும் கண்டு, “நீங்கள் என்னுடன் வாருங்கள். நாம் இருவரும் என் சூடான மதிய உணவைப் பகிர்ந்துகொண்டு சாப்பிடுவோம் வாருங்கள்,” என்று கூப்பிட்டார். ஹட்சன் டெய்லர் அவருடைய மதிய உணவைப் பகிர்ந்து சாப்பிட்டார். இது தேவன் தனக்கு ஏற்பாடு செய்த மதிய உணவு என்பதை அவர் உணர்ந்தார். அவர்கள் இருவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டார்கள். அப்போது ஹட்சன் அந்த எழுத்தரிடம் முழுக் கதையையும் விவரமாகச் சொன்னார், ஏனென்றால் அவருடைய உள்ளம் மகிழ்ச்சியால் நிறைந்திருந்தது. தேவன் எவ்வளவு உண்மையுள்ளவர் என்பதை அந்த எழுத்தர் உணர வேண்டும் என்று விரும்பினார். ஹட்சன் டெய்லரின் உரையாடல் அந்த எழுத்தருக்குள் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

பேருந்தில் ஏறி அவர் வீடு வந்து சேர்ந்தார். மறுநாள் மருத்துவர் அவரைப் பார்க்க வந்தார். அப்போது அவர் கப்பல் அலுவலகத்திற்கு நடந்து சென்றது, எழுத்தரைச் சந்தித்தது, பணம் கிடைத்தது, மதிய உணவு சாப்பிட்டது, திரும்பி வந்தது என முழுக் கதையையும் விவரமாகச் சொன்னார். அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். நடந்த எல்லாவற்றையும் மருத்துவரிடம் பகிர்ந்துகொண்டார். மருத்துவர் எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டுவிட்டு, தலையை அசைத்து, “கப்பல் அலுவலகத்திற்கு நான்கு கிலோமீட்டர் தூரம் நீ எப்படி நடந்துபோனாய்? இந்த அறையைவிட்டு நீ வெளியே போயிருக்கக்கூடாது. நடக்கவே கூடாது”. “உன்னிடம் இருப்பதுபோன்ற விசுவாசம் என்னிடம் இருந்தால் அதற்கு ஈடாக நான் இந்த உலகத்தைக்கூட கொடுத்துவிடுவேன்,” என்றார். ஹட்சன் டெய்லரின் வாழ்க்கையில் நடந்த அந்தக் காரியங்கள் அந்த மருத்துவருக்குள்ளும் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

மேற்படிப்பை நிறுத்துதல்

ஹட்சன் டெய்லர் மருத்துவப் படிப்பின் இரண்டாவது நிலையையும் நிறைவுசெய்தார். இனி காரியங்கள் வேகமாக நடக்கப்போகின்றன என்று தேவன் தன்னிடம் சொல்வதுபோல் அவர் உணர்ந்தார். அவர் மருத்துவப் படிப்பின் மூன்றாவது கட்டத்தைத் தொடர மிஷன் சொசைட்டி உதவ ஆயத்தமாயிருந்தது. “உங்களுக்கு நாங்கள் தொடர்ந்த உதவ ஆயத்தமாயிருக்கிறோம். எனவே, அறுவை சிகிச்சை கல்லூரிக்குச் சென்று உங்கள் படிப்பைத் தொடரலாம்,” என்று சொன்னார்கள். அந்த மேற்படிப்பைப் படித்துமுடிக்க இன்னும் சில ஆண்டுகள் ஆகும். அதை நினைத்தபோது ஹட்சன் டெய்லருக்கு சமாதானம் இல்லை, ஒருவேளை தான் மருத்துவப் படிப்பின் இறுதித் தகுதியைப் பெற தேவன் விரும்பவில்லையோ என்று அவர் தனக்குத்தானே நினைத்துக் கொண்டார். இது வேடிக்கையாகத் தோன்றியது, ஆனால் தனக்கு தேவையான அளவுக்கு மருத்துவ அறிவு இருப்பதாகவும், இறுதித் தகுதி மட்டும்தான் இல்லை என்றும், ஒருவேளை தான் அந்த இறுதித் தகுதியைப் பெற தேவன் விரும்பவில்லையோ என்றும் அவர் நினைத்தார். எனவே, அவர் அவர்களுடைய உதவியை மறுத்துவிட்டார், அவர் அவர்களிடம், “இன்னும் சில ஆண்டுகளை மருத்துவப் படிப்புக்காக என்னால் செலவழிக்க முடியாது. நான் இத்துடன் என் மருத்துவப் படிப்பை நிறுத்திக்கொள்கிறேன்,” என்று சொன்னார். எனவே, அவர் மருத்துவப் படிப்பில் முழுத் தகுதியையும் பெறவில்லை, ஆனால் அவருக்கு மருத்துவம் தெரியும். உண்மையில் அவருடைய இந்த முடிவு சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவாகும்.

சீனாவில் மிஷனரிகளின் தேவை

அந்த நேரத்தில் சீனாவில் சில காரியங்கள் நடந்துகொண்டிருந்தன. நாம் 1850களில் நடந்தவைகளைப் பேசுகிறோம். ஆனால், அங்கு என்ன நடந்துகொண்டிருந்தது என்று அவருக்குத் தெரியாது, அந்த நேரத்தில் தைப்பே கிளர்ச்சி நடைபெற்றது. அதனால் சீனாவில் கலகங்களும், கலவரங்களும் நிகழ்ந்தன. அங்கிருந்த ஒரு தலைவர் நற்செய்தியைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு மிஷனரியிடமிருந்து எப்படியோ ஒரு நற்செய்திப் பிரதி அவருக்குக் கிடைத்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் நற்செய்தியைக் கன்பூசியசின் கொள்கைகளோடு கலந்து ஒரு புதிய வழிபாட்டுமுறையை உருவாக்கினார். அவருக்குப் பல சீடர்கள் வந்தார்கள். பல தலைவர்களும் உருவானார்கள். அவர்கள் சீனா முழுவதும் பயணம் செய்து இந்தப் புதிய வழிப்பாட்டைப் பரப்பினார்கள். இதனால் நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டது. எங்கும் அமைதியின்மை. இந்தக் கலகத்தின் காரணமாக, அமைதியின்மை காரணமாக சீனா மிஷனரிகளை தங்கள் நாட்டுக்குள் அனுமதித்தார்கள். சீனா இதுவரை இல்லாத அளவுக்கு மிஷினரிகளுக்கு தன் நாட்டைத் திறந்துகொடுத்தார்கள்.

அந்தச் சமயத்தில் “எங்களுக்கு அதிகமான மிஷனரிகள் தேவை” என்ற செய்தி இங்கிலாந்துக்கு வந்தது. அந்த நாட்களில் செய்திகள் மிக மெதுவாகச் சென்றன என்பதை மறந்துவிட வேண்டாம். திடீரென்று அதிகமான மக்கள் சீனாவின் பல்வேறு மாகாணங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதற்கு முன்னர் இதுபோல் ஒருபோதும் அனுமதிக்கப்படவில்லை, மிஷனரிகளுக்கு அவசர அழைப்பு வந்தது. ஆனாலும் சீனாவுக்குச் செல்வதைப் பலரும் தடுத்தார்கள். அறியப்படாத நாடு, விசித்திரமான நாடு, அவ்வளவு தூரம் போக வேண்டும் என்ற எண்ணமே பலருக்குப் பிடிக்கவில்லை. தான் தன் படிப்பைத் தொடர விரும்பவில்லை என்றும், மிஷன் சொசைட்டியின் உதவி தனக்குத் தேவைப்படாது என்றும் ஹட்ஸன் எழுதிய கடிதம் வந்தபோது அவர்கள் உடனடியாக “நல்லது, இப்போது எங்களுக்கு மிஷனரிகள் அவசரமாகத் தேவை,” என்று அவருக்குப் பதில் எழுதினார்கள். இதனால்தான் இன்னும் ஒரு சில ஆண்டுகள் படிப்பதற்குச் செலவிட வேண்டாம் என்று தேவன் சொன்னாரோ என்று ஹட்சன் டெய்லர் நினைத்தார். அவர்கள், “நீங்கள் விரும்பினால், நீங்கள் எங்களுக்கு உடனடியாகத் தேவை,” என்று பதில் எழுதினார்கள்.

சீனா செல்ல ஆயத்தம்

ஹட்சன் டெய்லர் அவர்களுக்கு, “ஆம், நான் தயாராக இருக்கிறேன். தயவுசெய்து என் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்வீர்களா?” என்று உடனடியாகப் பதில் எழுதினார். அது ஜூலை மாதம். அந்த மாதத்தில் அவர்களுடைய ஒரு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் அவர்கள் இதைப்பற்றி விவாதித்து, அவருடைய விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டார்கள். அவர்கள் அவரை மிஷனரியாக சீனாவுக்கு அனுப்ப ஒப்புக்கொண்டார்கள். அப்போது அவருக்கு 21 வயது. அவர்கள் செப்டம்பர் ஒன்பதாம் தேதி மீண்டும் ஒரு கடிதம் எழுதி, “உங்கள் விண்ணப்பத்தை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம், இன்னும் 10 நாட்களில் ஷாங்காய்க்குப் பயணம் செய்ய நீங்கள் தயாராக இருக்க வேண்டும்” என்று சொன்னார்கள். அந்தக் கடிதம் கிடைத்ததும், அவர் தன் மூட்டைமுடிச்சுகளை தயார்படுத்திக்கொண்டார். அவர் ஏற்கனவே இதற்குத் தயாராகவே இருந்தார்.

அறிவுக்கு அப்பாற்பட்ட கிறிஸ்துவின் அன்பு

1853ஆம் வருடம் செப்டம்பர் 19 ஆம் தேதி, ஹட்சன் டெய்லர் முழங்கால்படியிட்டார். அவருடன் அவருடைய அம்மாவும் இருந்தார். அடுத்த எட்டு மாதங்கள் அவர் செலவழிக்கப்போகும் அறையில் அவர்கள் இருவரும் ஜெபித்தார்கள். அவர்கள் இருவரும் அதற்குமுன் இதுபோல் ஜெபித்ததில்லை. அப்படி ஜெபித்தார்கள், அவருடைய அம்மாவால் கண்ணீரை நிறுத்தமுடியவில்லை. கண்ணீரை அடக்கப் போராடிக்கொண்டிருந்தார். கப்பலில் சங்கு ஊதினார்கள். அவருடடைய அம்மா கப்பலிலிருந்து வெளியேற வேண்டிய நேரம் வந்துவிட்டது. பயணிகளைத்தவிர மீதி எல்லாரும் கப்பலைவிட்டு வெளியே போக வேண்டும். இனிமேல் தான் தன் மகனைப் பார்க்கப்போவதில்லை என்று அவருக்குத் தெரியும். அவர் கிளம்பினார்கள். போக மனமில்லாமல் கொஞ்சம் தரித்துநின்றார். அந்தக் கப்பலில் ஹட்சன் டெய்லர் மட்டுமே ஒரே பயணி. மற்றவர்களெல்லாம் அந்தக் கப்பலின் பணியாட்கள். ஏனென்றால் அது ஒரு சரக்குக் கப்பல்.

அவருடைய அம்மா அங்கே நின்று பார்த்துக்கொண்டிருந்தார். ஹட்சன் தன் அறைக்குள் ஓடினார், அவர் தன் சட்டைப் பையில் வைத்திருக்கும் ஒரு சிறிய நோட் புத்தகத்தின் முதல் பக்கத்தில், “கிறிஸ்துவின் அன்பு அறிவுக்கு அப்பாற்பட்டது, ஜேம்ஸ் ஹட்சன் டெய்லர்” என்று எழுதி, அதை டெக்கிலிருந்து அவருடைய அம்மாவுக்கு நேரே வீசினார். அவர் அதை எடுத்துக்கொண்டுபோய் வாழ்நாள் முழுவதும் தனக்கு மிக நெருக்கமாக வைத்திருந்தார். .

ஹட்சன் டெய்லர் அன்று தன் சீனப் பயணத்தைத் தொடங்கினார். ஷாங்காயை நோக்கி எட்டு மாதப் பயணம். கடைசியாக, ஒரு வகையில், அவர் தன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கினார், ஆனால் இன்னொரு வகையில், அந்த வாழ்க்கைப் பயணம் ஏற்கனவே தொடங்கிவிட்டது.