Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More

வேத வாசிப்பு

மத். 17:2, 5; லூக்கா 2:49; 3:22; 4:1-14; 6:12; 9:22, 31; 10:21; 17:30, 19:10; 22:69; யோவான் 5:19, 30; 6:38, 57; 10:25, 37-38; 12:24; 14:9-11; அப். 1:2; 2:22; 10:38; 2 கொரி. 4:6; எபே. 2:15; கொலோ. 1:15; 3:3; பிலி. 2:5-11; எபி. 4:15; 5:7-10; 7:28; 1 பேதுரு 2:9

07-மனுவுருவாதல்-இரண்டு அம்சங்கள்.pdf

மனுவுருவாதல்- இரண்டு அம்சங்கள் - 07

இயேசு கிறிஸ்துவின் மனுவுருவாதலில் ஒரு முக்கியமான அம்சத்தை நாம் விவரமாகப் பார்க்க வேண்டும். ஏனென்றால், நெடுந்தூர விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய உட்பொருள் அதற்கு உண்டு.

இயேசு-இலட்சிய மனிதர்

ஆண்டவராகிய இயேசு இந்த உலகத்திற்கு மனிதனாக வந்தபோது அவர் பிதாவாகிய தேவனை வெளியாக்குவதற்கும், அவர் எப்படிப்பட்டவர் என்பதைக் காண்பிப்பதற்கு மட்டும் வரவில்லை; மனிதத்துவத்தை எய்துவதற்கும், பூரணமான மனிதனாக இருப்பதற்கும், அவர் வந்தார். இன்னொரு பொருளில் சொல்வதானால், பூரணமான மனிதனாக மாறுவதற்கும் அவர் வந்தார். ஆதாம் தோற்றுப்போன காரியத்தில் அவர் வெற்றிபெற வேண்டியிருந்தது; அவன் தோற்கடிக்கப்பட்ட காரியத்தில் அவர் வாகைசூட வேண்டியிருந்தது. ஆதாம் ஒருபோதும் வாழாத ஒரு வகையான மனிதனை, ஒரு வகையான மனிதத்துவத்தை, ஒரு வகையான மானிடத்தை, அவர் முன்வைக்க வேண்டியிருந்தது. மனிதனைக்குறித்த தேவனுடைய நித்திய நோக்கத்துக்குள் ஆதாம் ஒருபோதும் நுழையவேயில்லை. ஜீவ-மரத்தில் தேவன் அவனுக்கு நித்திய ஜீவனை, ஜீவனில்-ஒன்றிப்பை, வழங்க முன்வந்தார். ஆனால், அவன் அதில் பங்குபெறவில்லை. அவன் நித்திய ஜீவனைப் பெறவில்லை. எனவே, பரலோகத்தின் பார்வையிலும், பொருளிலும், கண்ணோட்டத்திலும் அவன் உண்மையான மனிதனாக மாறவில்லை. தேவனுடைய இலட்சிய மனிதனை நாசரேத்து இயேசுவில் மட்டுமே பார்க்கிறோம். அவரில், அவர் ஒருவரில் மட்டுமே, இந்தப் பூமியில் முழுமையான மனிதத்துவத்தைப் பூரணமாகக் காண்கிறோம். வேறு யாரும் இந்தப் பூமியில் உண்மையான மனிதத்துவத்தைப் பூரணமாகக் காட்டவில்லை. வீழ்ந்துபோகாத ஆதாமைக் கொண்டல்ல, மாறாக இயேசுவைக்கொண்டே தேவன் எல்லாவற்றையும் அளக்கிறார். இயேசு ஒருவரே தேவனுடைய அளவுகோல். நாமும் அப்படித்தான் செய்யவேண்டும். மனிதனைக்குறித்த தேவனுடைய நோக்கம் ஆதாமில் ஒருபோதும் மெய்ப்படவில்லை. இயேசு ஒருவரே முடிசூட்டப்பட்டார்.

இயேசு-மனித குமாரன்

ஆண்டவராகிய இயேசு ஒருவரே ஒப்பற்ற, தன்னிகரற்ற, ஈடுயிணையற்ற தேவன்-மனிதர். எனினும், அவர் மனிதகுமாரன் என்ற பட்டத்தை அதிகமாக விரும்பினார். அந்தப் பெயரே அவருக்கு மிகவும் பிடித்தமான பெயர் என்பதை நாம் ஊன்றிக் கவனிக்க வேண்டும். இதைக் கவனமாகப் பார்க்க வேண்டும். ஏனென்றால், தேவன் மனிதனைப் படைத்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக அவர் இங்கு, இந்தப் பூமியில், வரலாற்றில், காலத்திலும் இடத்திலும், உண்மையான மனிதனாக இருக்க வந்தார் என்று நாம் வலியுறுத்துகிற காரியத்துக்கு மனிதகுமாரன் என்ற பட்டம் வலுவூட்டுகிறது.

வேதாகமத்தில் சில பகுதிகள் விசித்திரமாகத் தோன்றலாம். அப்படிப்பட்ட பகுதிகளுக்கு இதுவே விளக்கமும், வியாக்கியானமுமாகும். எடுத்துக்காட்டாக, “அவர் மாம்சத்தில் இருந்த நாட்களில்…அவர் குமாரனாயிருந்தும் பட்ட பாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு தாம் பூரணரானபின்பு தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணரானார்,” என்று எபிரெயரில் வாசிக்கிறோம். “அவர் ஏன் கீழ்ப்படித்தைக் கற்றுக்கொள்ள வேண்டும்? அவர் ஏற்கெனவே பரிபூரணர்தானே? அப்படியானால் அவர் ஏன் பூரணராக வேண்டும்?” என்று எண்ணத் தோன்றும். மனிதகுமாரன் என்ற பட்டம் இதற்குப் போதுமான விளக்கத்தைத் தருகிறது. அவர் பாவம் இல்லாதவர். ஆயினும், விழுந்துபோன இந்த உலகத்தில் பட்ட பாடுகளின்மூலம், வாழ்க்கையில் சந்தித்த பரீட்சைகள், சோதனைகள், சிட்சைகள்வழியாக அவர் மனிதத்தின் பரிபூரணத்தை அடைந்தார். வாழ்க்கையில் சந்தித்த போராட்டங்களிலும், சாத்தானின் தாக்குதல்களிலும் அவர் தம் பிதாவுக்குக் கீழ்ப்படிந்து, அவரையே சார்ந்திருந்தார். அதற்குமுன்போ அதுமுதலோ, பூமியில் காணப்படாத ஒருவகையான மனிதத்துவத்தை, பூரண மனிதத்துவத்தை, அவர் வெளிப்படுத்தினார். உண்மையாய் மறுபடி பிறந்த விசுவாசிகளிடம் இதை ஓரளவுக்குக் காணலாம்.

இயேசுவின் உருமாற்றம்

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு ஆறு மாதங்களுக்குமுன் தம் சீடர்களை ஒரு மலைக்கு அழைத்துக்கொண்டுபோய், அவர்களுக்குமுன்பாக உருமாறினார். இது மிக முக்கியமான ஒரு நிகழ்ச்சி. இதன் முக்கியத்துவம் என்ன? மனிதனைக்குறித்த தேவனுடைய இலக்கை இயேசு கிறிஸ்து எய்திவிட்டார் என்பதே இதன் பொருள். அவருடைய உருமாற்றம் அவருடைய தேவத்துவத்தின் செயல்முறை விளக்கம் அல்ல. அது தாம் தேவன் என்று தம் சீடர்களுக்கு நிரூபிக்கும் நிகழ்ச்சி அல்ல; மாறாக, மனிதன் என்ற முறையில் தேவனுடைய மகிமை பிரகாசிப்பதற்கு அவர் இப்போது பூரணமான பாத்திரமாக மாறிவிட்டார் என்பதே இதன் பொருள். “அவர் முகம் சூரியனைப்போல் பிரகாசித்தது.” தேவனுடைய மகிமை இயேசுவின் முகத்தில் காணப்பட்டது. பூரணப்படுத்தப்பட்ட மனிதத்துவம் இங்கு, இந்த மலையில், மகிமைப்படுத்தப்படுவதைப் பார்க்கிறோம். மனிதனைப் படைத்த தேவனுடைய நோக்கம் அவருடைய குமாரனில் நிறைவேறுகிறது. இதோ, ஒரு மனிதன்! தேவன் இந்த மனிதனைப் பார்க்கிறார். இதோ, அவருடைய இலட்சியம் இந்த மனிதனில் மெய்ப்படுகிறது.

இந்தக் கட்டத்தில் இயேசு நேரே பரலோகத்திற்குப் போயிருக்கலாம். அவரைப் பொறுத்தவரை இந்த உருமாற்றத்திற்குப்பின் உடனே அவர் பரமேறிச் சென்றிருக்கலாம். ஆனால், பாவிகள் பிழைப்பதற்கான வழியைத் திறப்பதற்காக அல்லவா அவர் அனுப்பப்பட்டார்! எனவே, நாம் அவரோடு இணைவதற்காக, “அநேகம் பிள்ளைகளை மகிமையில் கொண்டு சேர்ப்பதற்காக,” நமக்கு ஒரு ‘வெளியேறும்-வழியை’ ஆயத்தம் பண்ணுவதற்காக, அவர் மலையிலிருந்து கீழே இறங்கி வந்தார். ஒரு குமாரன் மரித்தால் மட்டுமே அநேகக் குமாரர்கள் உருவாக முடியும். “கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட் டால் தனித்திருக்கும். செத்ததேயாகில் மிகுந்த பலனைக் கொடுக்கும்.”

பரிசுத்தமாக்கப்படுத்தல்

இதற்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? இது நமக்கு எதை உணர்த்துகிறது? இது நமக்கு எந்த வகையில் பொருந்தும்? இதில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய காரியம் என்ன? இதைப் பார்க்கும்போது ‘பரிசுத்தமாக்கப்படுதலை’ நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். பரிசுத்தமாக்கப்படுதல் என்பது கிறிஸ்துவின் பூரணமாக குணம் நம்மில் உருவாக்கப்படுவது மட்டுமல்ல; அவர் வாழ்ந்ததுபோல நாமும் வாழுமாறு நம்மை மறுபடி உருவாக்குவதாகும். அவர் மிகவும் வேறொரு ஆதாரத்தின்மேல் தம் உண்மையான மனித வாழ்க்கையை வாழ்ந்தார். நாம் நம் தன்மையை ஆதாரமாகக்கொண்டு வாழ்வதுபோல் அவர் வாழவில்லை. இதற்கு எடுத்துக்காட்டுகளாக இரண்டு காரியங்களைச் சொல்லலாம்.

1. பிதாவைச் சார்ந்த வாழ்க்கை

அவர் தமக்குத் தேவையான எல்லா வளங்களையும் பிதாவிடமிருந்தே பெற்றுக்கொண்டார். “நான் என் பிதாவினால் வாழ்கிறேன்…நான் என் சுயமாய் ஒன்றும் செய்வதில்லை”. அவர் தம் தேவைகளுக்காக நேரடியாக இயற்கையான வழிவகைகளையோ, மனித வளங்களையோ, இந்த உலகத்தையோ சார்ந்திருக்கவில்லை. அவருடைய பிதா அவருடைய தேவைகளைப் பூர்த்திசெய்ய, பொதுவாக, இயற்கையான வழிவகைகளைப் பயன்படுத்தினபோதும், அவர் தம் பிதாவையே சார்ந்திருந்தார். நாற்பது நாட்கள் இரவும் பகலும் உபவாசம் இருந்தபின் வனாந்தரத்தில் பிசாசினால் சோதிக்கப்பட்டபோது, அவர் கற்களை அப்பங்களாக்க மறுத்துவிட்டார். அவர் தம் தேவைகளுக்காகப் பிதாவுக்குக் கீழ்ப்படிந்து அவரைச் சார்ந்திருக்கும் நிலையிலிருந்து விலக மறுத்து விட்டார். அவர் அப்படிச் செய்ய மாட்டார். பிதா தம் தேவைகளை நிச்சயமாக வழங்குவார் என்று அவருக்குத் தெரியும்.

வழக்கமாக அவர் சாப்பிடுவார், தூங்குவார். ஏனென்றால், அது அவருடைய பிதாவின் சித்தம். ஆனால், இரவு முழுவதும் அவர் தேவனை நோக்கி ஜெபம்பண்ணின வேளைகள் பல உண்டு. அதாவது, சில வேளைகளில், பிதா விரும்பினால், சாப்பிடுவது தூங்குவதுபோன்ற இயல்பான காரியங்களைக்கூட அவர் ஒதுக்கிவைத்துவிட்டார். இதுபோன்ற காரியங்களில் நாம் அவரைப்போல் பாவனைசெய்ய முயல்வது பயனற்றது. இயேசுவின் வாழ்க்கையைப் பரிசுத்த ஆவியானவர் நம்மில் உருவாக்க வேண்டும். இது உருவாக்கப்படுகிற காரியம். புறம்பாகப் பாவனை செய்கிற காரியம் அல்ல.

அவருடைய வளங்களெல்லாம் பிதாவில் இருந்தன. ஆனால், நாமோ அவருடைய வழிகளுக்குமுரணாக, எப்போதும், இயற்கையான வழிவகைகளையே தெரிந்துகொள்கிறோம். அவைகளைச் சர்வசாதாரணமாக, மேம்போக்காக, எடுத்துக்கொள்கிறோம். நம் தேவைகளுக்காக இயற்கையான வழிகளை நாடுவதில் நமக்கு எந்தத் தயக்கமோ, வருத்தமோ இல்லை என்றே சொல்ல வேண்டும். இன்னும் சொல்லப்போனால், நம் தேவைகளுக்காக நாம் முதலாவது இயற்கையான வழிவகைகளையே நோக்கிப்பார்க்கிறோம். எல்லாவற்றிற்காகவும் நாம் பிதாவை நோக்கிப்பார்ப்பதோ, அவரைக் கலந்தாலோசிப்பதோ, அவரை நம்புவதோ இல்லை. பெரும்பாலும் நம் ஜெபங்கள்கூட சம்பிரதாயமாகவே இருக்கின்றன. இயேசு வாழ்ந்ததுபோல் நாம் வாழ்வதில்லை.

2. எல்லாவற்றிலும் அவர் பிதாவின் கட்டளைக்காகக் காத்திருந்தார்.

அவர் எப்போதும் பரலோகத்தின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கினார். பிதாவைக் கலந்தாலோசிக்காமல் அவர் சுயாதீனமாக எதையும் தீர்மானிக்கவில்லை அல்லது தெரிந்தெடுக்கவில்லை. அவர் தம் பிதாவோடு இடைவிடாது தொடர்ச்சியான ஐக்கியம் கொண்டிருந்தார்; அவர் இடைவிடாமல் எப்போதும் பிதாவின் காரியத்திலேயே கண்ணுங்கருத்துமாய் ஈடுபட்டிருந்தார்; அவர் பிதா இன்றி, பிதா இல்லாமல், தனக்கென்று ஓர் அந்தரங்கமான, தனிப்பட்ட வாழ்க்கையை, விரும்பவில்லை. இன்று நம்மில் பெரும்பாலோர் வாழ்வதுபோல் அவர் பகுதிநேர ஆவிக்குரிய வாழ்க்கை வாழவில்லை; அவர் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கணமும், பிதாவோடுள்ள தொடர்பிலேயே வாழ்ந்தார். அவருடைய தொடர்பைவிட்டு அவர் ஒரு கணம்கூட அகலவில்லை.

அவர் எந்த வகையிலும் மனிதர்களாலோ, உலகத்தின் அபிப்பிராயங்களாலோ, ஆளப்படவில்லை; மாறாக, அவர் எப்போதும் பிதாவால் மட்டுமே ஆளப்பட்டார். மனிதனாக அவருடைய முழு வாழ்க்கையும் பரலோகத்தின் ஆளுகையின்கீழ் மட்டுமே இருந்தது. பரலோகம் மட்டுமே அவருடைய வாழ்க்கையின் ஆதரவாகவும், ஆதாரமாகவும் இருந்தது. அதுவே அவருக்குப் பிதாவோடு இருந்த நிலைமை.

மறைவான 30 ஆண்டுகள், பகிரங்கமான மூன்று ஆண்டுகள்-உயிருள்ள வழி

அவர் தம் வாழ்க்கையின் முதல் 30 ஆண்டுகளில் நாசரேத்தில் மிகச் சாதாரணமான வாழ்க்கை வாழ்ந்தார். அவருடைய குடும்பத்தைப் பராமரிப்பதற்கு அவர் உதவி செய்தார். அவருடைய குடும்பத் தொழிலைச் செய்தார். அந்த முப்பது ஆண்டுகளில் அவருடைய வாழ்க்கையில் பரவசமான காரியம் எதுவும் இல்லை. இருப்பினும், அதுவும் அவருடைய பிதாவின் சித்தமே. மறைவான இந்த முப்பது ஆண்டுகள், அதைத் தொடர்ந்து வந்த வெளிப்படையான மூன்று ஆண்டுகள் சேவைக்கான ஆயத்தமாகும். இந்தச் சேவை அவருடைய மாபெரும் பணியாகிய சிலுவையில் உச்ச நிலையை எட்டியது.

அவர் நாசரேத்தில் 30 ஆண்டுகள் வாழ்ந்த அந்த மறைவான ஆண்டுகளின் முக்கியத்துவத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆண்டவராகிய இயேசு நமக்கு ஓர் உயிருள்ள வழியை நிறுவியிருக்கிறார். இந்த உயிருள்ள வழியில் அவருடைய முழு வாழ்க்கையும் அடங்கும். அவர் திரளான மக்களுக்குப் பிரசங்கித்தபோதும், 5000 மக்களுக்கு உணவளித்தபோதும் எப்படிப் பிதாவைத் தொடர்புகொண்டிருந்தாரோ, எப்படிப் பிதாவின் சித்தத்தைச் செய்தாரோ, அதுபோலவே தச்சுப்பட்டறையில் வேலைசெய்தபோதும், வீட்டு வேலைகளைச் செய்தபோதும், பிதாவைத் தொடர்புகொண்டிருந்தார், பிதாவின் சித்தத்தைச் செய்தார்.

நம் தவறான கருத்துக்கள்

நாம் நம் வழக்கமான வாழ்க்கையையும்,கர்த்தரைச் சேவிப்பதையும் தனித்தனியாகப் பிரித்துப்பார்க்கிறோம். மேலும், முழுநேர ஊழியம் என்று அழைக்கப்படுவதை மேலானதாக, உயர்ந்ததாக, கருதுகிறோம். அதைவிடக் குறைவான எதையும் இரண்டாந்தரமாகக் கருதுகிறோம். எவ்வளவு அதிகமாகக் கிறிஸ்தவ நடவடிக்கைகளில் ஈடுபடுகிறோமோ அந்த அளவுக்குக் கர்த்தர் நம்மேல் பிரியமாய் இருப்பார் என்று நாம் நினைக்கிறோம். நம் எண்ணமும், கருத்தும் தவறு என்று அந்த மறைவான 30 ஆண்டுகள் காண்பிக்கின்றன. எல்லாக் கிறிஸ்தவர்களும் எல்லா நாட்களும், ஒவ்வொரு நாளும், தாங்கள் செய்கிற எல்லாவற்றிலும் தேவனுடைய சித்தத்தின் மையத்தில் வாழ்ந்து, அவருடன் ஐக்கியம் கொண்டு கர்த்தருக்காக முழுநேரமும் இருக்க வேண்டும். இதுவே காரியம். இதுவே அவர் வாழ்ந்த உயிருள்ள வழியாகும்.

“அவருடைய மானிடம் பாவம் இல்லாத மானிடம். ஆகையால், அவர் தம் பிதாவோடு பூரணமாக ஒன்றித்த உறவு கொண்டிருந்தார். ஆனால், நாம் அப்படி வாழ முடியுமா?” என்று நாம் கேட்கலாம். நாம் அவரில் நிலைத்திருக்கும்போது, பரிசுத்த ஆவியானவருக்கு நம்மில் தங்குதடையற்ற ஆளுகை இருக்கும்போது, நாமும் பிதாவோடு இப்படிப்பட்ட கலந்துறவாடல் கொள்ள முடியும். “ஏனெனில் நீங்கள் மரித்தீர்கள். உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது.”

வேத வாசிப்பு  

மத். 17:2, 5; லூக்கா 2:49; 3:22; 4:1-14; 6:12; 9:22, 31; 10:21; 17:30, 19:10; 22:69; யோவான் 5:19, 30; 6:38, 57; 10:25, 37-38; 12:24; 14:9-11; அப். 1:2; 2:22; 10:38; 2 கொரி. 4:6; எபே. 2:15; கொலோ. 1:15; 3:3; பிலி. 2:5-11; எபி. 4:15; 5:7-10; 7:28; 1 பேதுரு 2:9