இன்று நான் பேசப்போகிற பரிசுத்தவானைப்பற்றி பெரும்பாலும் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இவருடைய காலத்தில், இவர் வாழ்ந்த நாட்டில் இவர் மிகப் பிரபலமானவர். இவர் நித்தியத்துக்குள் நுழைந்து 400 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்றும் இவர் பிரபலமானவர்தான். இவர் ஓர் எழுத்தாளர் என்று பெரும்பாலான கிறிஸ்தவர்களுக்குத் தெரியும். ஆம், Pilgrims Progress என்ற புத்தகத்தின் ஆசிரியராகிய ஜாண் பனியனைப்பற்றி நான் இன்று பேசப்போகிறேன். இந்தப் புத்தகம் தமிழில் மோட்சப் பயணம் என்றழைக்கப்படுகிறது. சரி, நாம் ஜாண் பன்யனைப்பற்றிப் பேசுவோம்.
ஜான் பன்யனின் வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாகப் பாப்பதற்குமுன், இவர் வாழ்ந்த காலகட்டத்தின் வரலாற்றுப் பின்புலத்தை நாம் ஓரளவுக்கு அறிந்திருக்க வேண்டும். அப்போதுதான் அவருடைய வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வுகள் ஏற்படுத்திய தாக்கத்தை நாம் புரிந்துகொள்ள முடியும்.
ஷேக்ஸ்பியர் என்ற ஆங்கிலக் கவிஞன் இறந்து 12 ஆண்டுகளுக்குப்பிறகு ஜாண் பன்யன் பிறந்தார். ஆம், நாம் 1628யைப்பற்றிப் பேசுகிறோம். அது இங்கிலாந்தில் உள்நாட்டுப் போர் நடந்துகொண்டிருந்த காலம். இங்கிலாந்தின் வரலாற்றில் ஒரு கொந்தளிப்பான காலகட்டத்தில்தான் பன்யன் பிறந்தார், வாழ்ந்தார். அப்போது இங்கிலாந்தில் முதலாம் சார்லஸ் அரசர் ஆட்சிசெய்துகொண்டிருந்தார். இவர்தான் இங்கிலாந்தில் உள்நாட்டுப் போர் தொடங்கக் காரணம் என்று சொன்னால் மிகையாகாது. அவருக்கும் அவருடைய பாராளுமன்றத்துக்கும் இடையே போர் நடந்துகொண்டிருந்தது. இந்தப் போரில் முதலாம் சார்லஸ் அரசர் தோற்கடிக்கப்பட்டார்.
அவருக்குப்பின் இங்கிலாந்தில் ஆலிவர் க்ராம்வெல் என்பவர் லார்ட் ப்ரொடெக்டர் அதாவது நாட்டின் பாதுகாவலராக இருந்தார். ஆலிவர் க்ராம்வெல்லின் பராமரிப்பின்கீழ் நாட்டின் விவகாரங்கள் சீராகச் செயல்படத் தொடங்கின. மக்களுக்கு நிறைய சுதந்திரம் கிடைத்தது. இந்தக் காலகட்டத்தில் இங்கிலாந்தில் ஆங்கிலிக்கன் சர்ச் என்று அழைக்கப்படுகிற சர்ச் ஆஃப் இங்கிலாந்து இங்கிலாந்து நாட்டின் அரசியலமைப்பின், சட்டத்தின், ஒரு பகுதியாக, இருந்தது. இங்கிலாந்து நாட்டவர்கள் தங்கள் பிறப்பால் சர்ச் ஆஃப் இங்கிலாந்தின் உறுப்பினர்களானார்கள்; இந்தியாவில் பிறந்தவன் இந்தியன் என்பதுபோல, இங்கிலாந்தில் பிறந்தவன் சர்ச் ஆஃப் இங்கிலாந்தின் உறுப்பினன். அவர்கள் சர்ச் ஆஃப் இங்கிலாந்துக்குச் செல்ல வேண்டும் என்பது சட்டம். அதுதான் தேசீய மதம். ஆனால், ஆலிவர் க்ரோம்வெல் பொறுப்பேற்றபின் சர்ச் ஆப் இங்கிலாந்தின் விவகாரங்களை ஆராய்ந்துபார்க்கத் தொடங்கினார்கள். வேதத்துக்குப் புறம்பான, வேதத்துக்கு ஒவ்வாத, வேத ஆதாரமில்லாத பல சடங்குகள், சம்பிரதாயங்கள், பாரம்பரியங்கள், சட்டதிட்டங்கள், பழக்கவழக்கங்கள் அங்கு இருப்பதை அவர்கள் கவனித்தார்கள். ஆகவே, உண்மையான கிறிஸ்தவர்களாக இருக்க விரும்பியவர்கள் சர்ச் ஆஃப் இங்கிலாந்திலிருந்து வெளியேற விரும்பினார்கள். இவர்கள்தான் பியூரிடன்ஸ் என்று அழைக்கப்படுகிற தூய்மையாளர்கள். அவர்கள் வேதாகமத்தின் தூய்மையான வார்த்தைகளுக்குத் திரும்பி, வேதத்துக்கு ஒத்த வாழ்க்கை வாழ விரும்பினார்கள்.
ஆலிவர் க்ரோம்வெல் காலத்தில் பியூரிடன்ஸ் தங்கள் விருப்பப்படி காரியங்களைச் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டார்கள். சர்ச் ஆஃப் இங்கிலாந்தின் கூட்டங்களுக்குதான் செல்லவேண்டும் என்ற சட்டம் தளர்த்தப்பட்டு, அவர்கள் விருப்பப்படி கூட்டங்கள் நடத்துவதற்கும், பாடல்கள் பாடுவதற்கும், ஜெபிப்பதற்கும் அனுமதிக்கப்பட்டார்கள். அந்த நேரத்தில், இங்கிலாந்து சபையில் பொதுவான ஒரு ஜெபப் புத்தகம் இருந்தது. இது உண்மையில் ஜெபப் புத்தகம் இல்லை. இது இன்று தென்னிந்திய திருச்சபைகளில் பயன்படுத்தப்படுகிற காலை ஆராதனை, மாலை ஆராதனை, திருவிருந்து ஆராதனை, திருமண ஆராதனை எனப் பல ஆராதனைகளின் ஒழுங்குமுறைகளைப்பற்றிய ஒரு கையேடு.
பியூரிடன்ஸ், “இது தவறு, இப்படிச் செய்யக்கூடாது. எனவே, நாங்கள் இதைப் பயன்படுத்த மாட்டோம்,” என்று கூறினார்கள்.
ஆலிவர் க்ரோம்வெல் பியூரிடன்சின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். ஆனால், ஆலிவர் க்ரோம்வெல் இறந்தபிறகு இங்கிலாந்தில் நிலைமை மோசமாயிற்று. அவருக்குப்பின் இரண்டாம் சார்லஸ் அரியணை ஏறினார். அவர் காரியங்களைத் தலைகீழாக மாற்றினார். “சர்ச் ஆஃப் இங்கிலாந்துதான் பிரதானமான சபை. சர்ச் ஆஃப் இங்கிலாந்தின் கூட்டங்களில்தான் எல்லாரும் பங்குபெற வேண்டும். அதற்கு வெளியே யாரும் கூட்டம் நடத்தக்கூடாது. அப்படி வெளியே கூட்டம் நடத்த வேண்டுமானால் அரசின் முன்னனுமதி பெற்று, அங்கீகரிக்கப்பட்ட ஆராதனை ஒழுங்குறையைப்பின்பற்ற வேண்டும். பொதுவான ஆராதனை ஒழுங்குமுறைக் கையேட்டைக் கிரமமாய்ப் பின்பற்ற வேண்டும். மேலும், உரிமம் பெற்றவர்கள்தான் பிரசங்கிக்க வேண்டும். உரிமம் இல்லாதவர்கள் பிரசங்கிக்கக் கூடாது,” என்ற சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்த மாற்றங்கள் ஜாண் பன்யன் வாழ்ந்த காலத்தில் இரண்டாம் சார்லஸ் மன்னரின் ஆட்சியின்போது கொண்டுவரப்பட்டன. 1661-1665இல் கொண்டுவரப்பட்ட இந்த நான்கு விதிகள் கிளாரெண்டன் குறியீடு என்று அழைக்கப்பட்டன.
இந்த நேரத்தில், இரண்டாம் சார்லஸின் ஆட்சியின்போது, அரசால் அங்கீகரிக்கப்பட்ட, ஆனால் வேதத்துக்கு ஒவ்வாத, காரியங்களைச் செய்ய விரும்பாத பியூரிடன்ஸ் என்ற தூய்மையாளர்கள் அதிகமாகத் துன்புறுத்தப்பட்டார்கள். சர்ச் ஆஃ ப் இங்கிலாந்து வேதத்தின்படி நடப்பதாக அவர்கள் நம்பவில்லை. பியூரிடன்ஸ் துன்புறுத்தப்பட்டார்கள், கொல்லப்பட்டார்கள், சித்திரவதை செய்யப்பட்டார்கள். ஆம், இங்கிலாந்தில் கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டார்கள், சித்திரவதைசெய்யப்பட்டார்கள். இதுதான் அன்றைய பின்புலம்.
ஜாண் பன்யனின் ஒரு மேற்கோளோடு ஆரம்பிப்போம்
“பன்றி எந்த அளவுக்குக் கொழுத்திருக்கிறதோ அந்த அளவுக்கு அது சேற்றை நாடுகிறது. எருது எந்த அளவுக்குக் கொழுத்திருக்கிறதோ அந்த அளவுக்கு அது கும்மாளம் போட்டுக்கொண்டுக் கொலைக்களத்துக்குப் போகிறது. சிற்றின்பப் பிரியன் எந்த அளவுக்கு சுகபோகமாக இருக்கிறானோ அந்தக் அளவுக்கு அவன் தீமையின்மேல் நாட்டங்கொள்ளுகிறான். வருடம் முழுவதும் இடைவிடாது விழித்திருப்பதைவிட ஒரேவோர் இரவு கண்விழித்திருப்பது இலேசான காரியம். வாழ்வின் முடிவுபரியந்தம் தேவபக்தியாக வாழ்வதைவிட ஆரம்பத்தில் கொஞ்சக்காலம் பக்தியாக இருப்பது இலேசான காரியம். கப்பல் கடும்புயலில் சிக்கித் தத்தளிக்கையில் எந்த மாலுமியும் அற்பப்பயனுள்ள பொருட்களை மனமுவந்து கடலில் தூக்கியெறிவான். அப்போதுங்கூட முதல்தரமான விலையேறப்பெற்ற பொருட்களை எந்த மாலுமியாவது தூக்கியெறிவானா? ஒரு சிறிய துவாரம் பெருங்கப்பலையும் அமிழ்த்திவிடும். ஒரு சிறிய பாவம் பாவியை நிர்மூலமாக்கிவிடும். நண்பனை மறக்கிறவன் நன்றிகெட்டவன் என்பது உண்மைதான். ஆனால் தன் இரட்சகரை மறக்கிறவனோ தன்னையே நாசமாக்குகிறான். பாவத்தில் வாழ்ந்து கொண்டு புதிய படைப்பில் பங்குபெறுவேன் என்று எதிர் நோக்குகிறவன் முட்பூண்டுகளை விதைத்து நவதானியங்களைக் களத்தில் சேர்ப்பேன் என்று நினைக்கிறவனுக்கு ஒப்பானவன். ஒருவன் புதிய படைப்பில் பங்குபெற விரும்பினால் அவன் தன் மரண நாளை நினைவில் கொண்டு அதை ஒரு ஊன்றுகோலைப்போலப் பயன்படுத்த வேண்டும்”
“மோட்சப் பிரயாணி” என்ற உலகப் புகழ்பெற்ற கிறிஸ்தவ நூலை எழுதிய ஜாண் பன்யன் இங்கிலாந்தில் பெட்ஃபோர்ட் நகருக்கு அருகிலுள்ள எல்ஸ்டவ் என்ற ஒரு கிராமத்தில் 1628ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிறந்தார். இவருடைய பெற்றோராகிய தாமசும், மார்க்கரெட்டும் இரட்சிக்கப்பட்ட விசுவாசிகள் இல்லை. முன்னொரு காலத்தில் அவருடைய மூதாதையர்கள் ஒருவேளை பெரிய நிலச்சுவான்தார்களாக வாழ்ந்திருக்கலாம். ஆனால், ஜாண் பன்யன் பிறப்பதற்குமுன்பே அவருடைய குடும்பத்தின் செழிப்பும், செல்வாக்கும் காற்றாய்ப் பறந்துபோய்விட்டன. அவர் மிக ஏழ்மையில்தான் பிறந்தார்; ஏழையிலும் ஏழையாகத்தான் வளர்ந்தார்.
சரி, இப்போது நாம் ஜாண் பன்யனின் வாழ்க்கையைப் பார்ப்போம். அவருடைய அப்பா இரும்பு, வெண்கலம், தகரப் பாத்திரங்கள் பழுதுபார்க்கிற ஒரு தொழிலாளி. ஏழ்மையின் காரணத்தால் பனியன் ஆரம்பப் பள்ளிப் படிப்பைக்கூட முடிக்கவில்லை. அவர் தன் ஊரிலிருந்த பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோதே தன் பத்தாவது வயதில் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, தன் அப்பாவுடன் சேர்ந்து பாத்திரத் தொழிலைச் செய்தார். அவ்வளவு பொருளாதார நெருக்கடி. அவருக்கு அப்போது எழுதப் படிக்கத் தெரியும். அவ்வளவுதான். அப்பாவுடன் சேர்ந்து வேலை செய்ய ஆரம்பித்தபிறகு, படிப்பு சுத்தமாக மறந்துபோய்விட்டது, பறந்துபோய்விட்டது.
பன்யன் தன் இளமையில் நண்பர்களோடு சேர்ந்துகொண்டு ஊரில் தான்தோன்றித்தனமாக வாழ்ந்தார். பிறரை ஏமாற்றுவது, பொய் சொல்வது, பெரியவர்களைக் கிண்டல் செய்வது, சபிப்பது, தூஷிப்பது, தேவனை நிந்திப்பதுபோன்ற கெட்ட பழக்கங்களில் ஊரில் அவருக்கு இணை வேறு யாரும் இல்லை. கண்ணிகள்வைத்து முயல்களையும், பறவைகளையும் பிடிப்பது, பிறருடைய பழத்தோட்டங்களை கொள்ளைபடிப்பதுபோன்ற செயல்களுக்கு அவரே வழிகாட்டி. அவருடைய ஊரில் அவர்தான் துன்மார்க்கர்களின் கூட்டத்தின் தலைவர். எல்ஸ்டவ் ஊராரால் இழிவாகக் கருதப்பட்ட ஒழுக்கம்குறைந்த பெண்கள்கூட ஜாண் பன்யனைக் காரி உமிழ்ந்து, வெறுத்தார்கள் என்றால் அவருடைய கேடுகெட்ட நடத்தையின் அவலட்சணத்தை நீங்களே கற்பனைசெய்துகொள்ளுங்கள். தன் துன்மார்க்கக் கூட்டாளிகளுடன் சேர்ந்து நடனம் ஆடுவது அவருக்கு மிகவும் பிடிக்கும். சலங்கை மணிகளை கால்களிலும், கைகளிலும் கட்டிக்கொண்டு நண்பர்களோடு சேர்ந்து விளையாடினார். ஞாயிற்றுக்கிழமை ஆலயத்தில் ஆராதனை நடந்துகொண்டிருந்தபோது ஆலயத்துக்கு வெளியே நண்பர்களுடன் “டிப்-காட்” என்ற ஒரு விளையாட்டை அவர் ஆர்வமாக விளையாடினார். “டிப்-காட்” விளையாட்டு கிராமங்களில் சிறுவர்கள் விளையாடும் “கிட்டிப்புள்” என்ற “குச்சிக்கம்பு” விளையாட்டாகும். இரு பக்கமும் கூர்மையாக சீவப்பட்ட ஒரு சிறிய குச்சியை தரையில் வைத்து மற்றொரு கடினமான சிறிய கட்டையால் தரையில் கிடக்கும் குச்சியின் ஓர் ஓரத்தை மெல்லத் தட்டி எழுப்பி, மேலே எழுந்து வரும் குச்சியை அதே கட்டையால் ஓங்கி அடிக்கும்போது, அந்தக் கூர்மையான குச்சி பறந்து போகும். பறந்துபோகும் அந்தக் குச்சியைப் பிடித்து விட்டால் அதை அடித்த நபர் ஆட்டத்திலிருந்து நீக்கப்படுவார். இந்த விளையாட்டின் காரணமாக தங்கள் கண் பார்வையை இழந்த சிறுவர்கள் பலருண்டு.
அவருக்கு 15 வயதானபோது, அவருடைய அம்மா திடீரெனக் காலமானார். சில வாரங்களில் அவருடைய 13 வயது சகோதரியும் காலமானார். குடும்பத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த மரணங்கள் ஜான் பன்யனை மிகவும் பாதித்தன. அதன்பின் விரைவிலேயே அவருடைய அப்பா மறுமணம் செய்துகொண்டார். 15 வயதில், தன் அம்மாவை இழக்கிறார், தன் நெருங்கிய சகோதரியை இழக்கிறார், வீட்டிற்கு ஒரு மாற்றாந்தாய் வருகிறார்; நிலைமையை நீங்களே கொஞ்சம் கற்பனைசெய்துகொள்ளுங்கள்.
ஜாண் பன்யன் இரட்சிக்கப்படுவதற்குமுன்பே, அவர் வாலிபனாக இருந்தபோதே, தேவன் அவரைப் பலமுறை மரணத்தின் விளிம்பிலிருந்து அற்புதமாகப் பாதுகாத்தார். தன்னைப் பாதுகாத்தது தேவனுடைய கரம் என்று அப்போது அவனுக்குத் தெரியாது.
அவர் தன் இழப்பிலிருந்தும், துக்கத்திலிருந்தும் விடுபடுவதற்குமுன்பே, இங்கிலாந்தின் உள்நாட்டுப் போரில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காகப் போரிட இராணுவத்தில் சேர்ந்தார். ஜான் பன்யனுக்கு அப்போது வயது 16. அவர் இராணுவத்தில் இருந்த காலத்தில், மரணத்தின் விளிம்புவரை சென்று மீண்டுவந்த அனுபவங்கள் பல உள்ளன. அவை அவர்மேல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின.
ஒருநாள் அவர்கள் படகில் ஓர் ஆற்றைக் கடக்கமுயன்றபோது, அவர் தவறி கீழே விழுந்தார். அவருடைய நண்பர்கள் அவரை ஆச்சரியமாகக் காப்பாற்றினார்கள். இன்னொருமுறை அவர் இரண்டு மலைகளுக்கு இடையேயுள்ள மிகக் குறுகலான ஒரு கடற்கழியில் விழுந்து, மூழ்கிக்கொண்டிருந்தார். மரணம் நிச்சயம்! அப்போதும் தேவன் அவரை அற்புதமாகக் காப்பாற்றினார். இந்த இரண்டு அனுபவங்களும் அவருடைய மனதின் ஆழத்தில் பதிந்துவிட்டன. இதுபோன்ற இன்னொரு நிகழ்ச்சியும் நடந்தது. அவர் ஒருமுறை கொஞ்சம் குடிபோதையில் தன் நண்பருடன் நடந்துபோய்க்கொண்டிருந்தார். அப்போது ஒரு கட்டுவிரியன் பாம்பு அவருடைய பாதையின் குறுக்கே ஓடியது. போதையில், முட்டாள்தனமாக, அதன்மேல் ஒரு குச்சியை வீசி எறிந்தார். பின்னர் அதன் தலையைப்பிடித்து, ஒரு குச்சியை அதன் வாயில் சொருகி, அதன் விஷப் பற்களைப் பிடுங்கி எடுத்தார். “இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்! ஒரு நொடிப்பொழுதில் நான் இறந்திருக்கக் கூடும். தேவன் அப்போதும் என்னை மீண்டும் காப்பாற்றினார்,” என்று பிற்காலத்தில் பன்யன் கூறினார்.
பன்யன் தன் வாழ்நாள் முழுவதும் தன் ஆண்டவருக்கு நன்றி சொல்லத்தக்க நிகழ்ச்சிகள் ஏராளம் உள்ளன. இதோ! இது இன்னோர் அசாதாரண சம்பவம். அப்போது அவர் இராணுவத்தில் பணிபுரிந்துகொண்டிருந்தார். அன்று ஒரு குறிப்பிட்ட இடத்தை அவருடைய படைப்பிரிவு முற்றுகையிட வேண்டும் என்பது மேலிடத்து உத்தரவு. போர்வீரர்கள் போகத் தயாரானார்கள். ஜாண் பன்யனுக்கு ஒரு பணியைக் கொடுத்து ஒரு குறிப்பிட்ட இடத்தில் அவரைக் காவலாளியாக நிற்கச் சொன்னார்கள். அதிகாரி உத்தரவிட்டபடியே அவர் போய் நின்றார். உடனே அவருடைய ஒரு கூட்டாளி அவரிடத்தில் வந்து, “நான் உன் இடத்தில் காவலாளியாக நிற்கிறேன். நீ வேறோர் இடத்திற்குச் செல்,” என்று சொல்ல, பன்யனும் சம்மதித்தார். அவர் அந்த இடத்தைவிட்டு நகர்ந்ததும், அவருடைய இடத்தில் வந்து நின்ற போர்வீரனின் தலையை எதிரியின் துப்பாக்கியிலிருந்து வந்த ஒரு குண்டு துளைத்துச் சென்றது. அந்த இடத்திலேயே அவருடைய நண்பன் துடிதுடித்து மாண்டான். தான் துடிதுடித்துச் சாக வேண்டிய இடத்தில் தன் நண்பன் மடிந்ததை அவர் பின்னாட்களில் மிகுந்த கண்ணீரோடு நினைவுகூர்ந்தார். இவைகள் நடந்தபிறகும் பன்யன் மனந்திரும்பவில்லை. தேவனுடைய கிருபை, இரக்கம், அன்பு என்னவென்று அவருக்குத் தெரியாது. இவைகள் பன்யனின் வாழ்வில் ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. “வாழ்க்கை எவ்வளவு குறுகியது. எனவே, உருப்படியாக ஏதாவது செய்ய வேண்டும்,” என்று உணர்ந்துகொள்வதற்குப்பதிலாக, அதற்கு எதிர்த்திசையில் அவர் பயணிக்க ஆரம்பித்தார். ஆம், அவர் இதுவரை உலகம் கண்டிராத மிகப் பெரிய பாவியாக இருக்க முடிவுசெய்தார். எப்படித் தெரியுமா? “பிசாசுக்கும் தோழர்கள் தேவை. நான்தான் அவனுடைய நம்பத்தக்க கூட்டாளியாக இருக்கப்போகிறேன்,” என்று அவர் தீர்மானித்தார். அன்று இதுதான் அவருடைய குறிக்கோள்.
ஜான் பன்யன் காட்டுமிராண்டித்தனமான கயவனைப்போல் வாழ்ந்தார். அவருடைய நாட்களில் அவருடைய ஊரில் பொய், ஆணையிடுதல், குடிப்பழக்கம்போன்ற அனைத்துக் கெட்டபழக்கங்களுக்கும் பன்யன் பெயர் பெற்றவர். அந்த நாட்களில் இப்படிப்பட்ட செயல்கள் தேவனுக்குஎதிரான நிந்தைகளாகக் கருதப்பட்டன. ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அந்த நாட்களில் பொது இடங்களில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு நீந்திமன்றத்தில் நிறுத்தப்பட்டார்கள். அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்த நாட்களில் ஒருவேளை இவைகள் அவ்வளவு மோசமானவை இல்லை என்று மக்கள் நினைக்கலாம். ஆனால் அந்த நாட்களில் இவைகள் பெருங்குற்றங்களாகக் கருதப்பட்டன. அவர் ஞாயிற்றுக்கிழமைகளில் சூதாடினார். 1600களில் சாதாரணமானவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடவில்லை. அது இப்படிப்பட்டவர்கள் தேவனை எதிர்ப்பதாகக் கருதப்பட்ட காலம். இதுதான் ஜான் பன்யனின் வாழ்க்கை. அவருடைய ஆரம்பகால இழப்புக்கள், துக்கம், மரண அனுபவங்கள், போரில் ஏற்பட்ட சிரமங்கள், ஆகியவைகளின் விளைவாக அவர் முன்பைவிட மோசமாகிவிட்டார்.
1642இல் இங்கிலாந்தில் உள்நாட்டுப் போர் வெடித்தது. 1644இல் பன்யனின் தாயும், சகோதரியும் காலமானார்கள் என்று ஏற்கெனவே சொன்னேன். அந்த வருடத்தில்தான், பன்யன் தன் பதினாறு வயதில் இங்கிலாந்து அரசர் முதலாம் சார்லசோடு போரிட்டுக்கொண்டிருந்த நாடாளுமன்றப் படையில் இணைந்தார். 1647இல் அவர் பணிபுரிந்த படைப்பிரிவு கலைக்கப்பட்டதால் அவர் மறுபடியும் தன் ஊருக்குத் திரும்பினார்.
ஜாண் பன்யன் சிறு வயதிலிருந்தே நிறைய கனவுகள் கண்டார். ஓர் கனவில் இயேசு இந்தப் பூமிக்கு வருவதையும், அவருடைய வருகையில் ஆயத்தமானோர் எடுத்துக்கொள்ளப்படுவதையும், பாவத்தில் வாழும் தான் தேவனால் கைவிடப்படுவதையும் கண்டு அலறினார். அவருடைய பாவச்செயல்கள் அதிகரிக்க, அதிகரிக்க அவர் கண்ட கனவுகளும் அவரைக் கதிகலங்கச்செய்தன. ஒருமுறை ஒரு கனவில் பிசாசு தன்னைக் கட்டி நரகத்தில் தள்ள கொண்டு வந்த இரும்பு சங்கிலிகளின் சலசலக்கும் ஓசையைக் கேட்டு அவர் வேர்த்து விறுவிறுத்து நடுநடுங்கித் திகைத்து எழும்பினார். இன்னொரு கனவில் அடித்தளமே இல்லாத நரக தீச்சூளை தனக்குமுன் திறந்திருப்பதைப் பார்த்து ஓலமிட்டுப் புலம்பினார்.
இரண்டு ஆண்டுகள் மட்டும் இராணுவத்தில் பணிபுரிந்தபின் ஊர்திரும்பிய பன்யன் தன் 20ஆவது வயதில் தேவபக்தியுள்ள ஓர் ஏழைப் பெண்ணைத் திருமணம் செய்தார் அவருடைய பெயர் தெரியவில்லை. Arthur Dent எழுதிய Plain Man’s Pathway to Heaven and Lewis Bayly எழுதிய Practice of Piety என்ற இரண்டு புத்தகங்கள்தான் அவள் புகுந்த வீட்டுக்குக் கொண்டுவந்த சொத்துக்கள். இவர்கள் இருவரும் பியூரிட்டன்ஸ். இந்த இரண்டு புத்தகங்களும் அவளுடைய அப்பா அவளுக்குக் கொடுத்த பரம்பரைச் சொத்து.
அவர்களுடைய ஏழ்மையை நீங்கள் புரிந்துகொள்வதற்காக நான் ஒரேவோர் எடுத்துக்காட்டு தருகிறேன். அவர்கள் இருவரும் சாப்பிடுவதற்கு வீட்டில் ஒரேவொரு தட்டும், ஒரேவொரு கரண்டியும்தான் இருந்தன. இருவரும் ஒரே தட்டையும், கரண்டியும் மாறிமாறிப் பயன்படுத்தினார்கள். ஒன்றைக் கவனியுங்கள். பாத்திரங்கள் செய்வதும், பாத்திரங்கள் பழுதுபார்ப்பதும் அவருடைய தொழில். ஆனால், அவருக்கென்று சொந்தமாக ஒரு தட்டு இல்லை. அவர்களுடைய வறுமையை எப்படி விவரிப்பது!
இந்த இரண்டு புத்தகங்களையும் பன்யன் வாசிக்கத் தொடங்கினார். உண்மையில் இந்தப் புத்தகங்களை வாசிக்கத் தொடங்கியபிறகுதான் அவர் ஒழுங்காகப் படிக்கக் கற்றுக்கொண்டார் என்று சொல்லலாம். ஏனென்றால், 10 வயதில் படிப்பை நிறுத்தியவர், எல்லாவற்றையும் மறந்துவிட்டார். இந்த இரண்டு புத்தகங்களும் தேவனுடைய நீதி, பரலோகம் போன்ற ஆழமான காரியங்களைபற்றிப் பேசின. இந்தப் புத்தகங்களைப் படிக்கத் தொடங்கியபிறகு அவருக்குள் ஏதோ ஒன்று எழுந்தது. அவர் தன் வழிகளையும், வாழ்க்கையையும் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று உணர்ந்தார். திருமணமானபிறகும் அவர் தன் கெட்ட வாழ்க்கையை இன்னும் மாற்றிக்கொள்ளவில்லை. இந்தப் புத்தகங்களைப்படித்தபிறகு, அவர் படிப்படியாக மாறத்தொடங்கினார். அவருடைய வாழ்வில் பல நிகழ்ச்சிகள் சங்கிலித் தொடர்போல் நடக்க ஆரம்பித்தன.1. பக்தியுள்ள மனைவி. அவருடைய பேச்சு, நடத்தை ஆகியவைகள் பன்யனுக்குள் நேர்மறையான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தின. 2. Arthur Dent எழுதிய Plain Man’s Pathway to Heaven and Lewis Bayly எழுதிய Practice of Piety என்ற இரண்டு புத்தகங்கள் அவருடைய மனச்சாட்சியைத் தட்டி எழுப்பின. 3. அதனால், அவர் தவறாமல் ஆயத்திற்குச் செல்லத் தொடங்கினார். ஏன் போகிறோம் என்று அவருக்குத் தெரியாது. ஒருவேளை மனைவியைப் பிரியப்படுத்துவதற்காக இருக்கலாம் அல்லது குற்றமுள்ள மனச்சாட்சியை அமைதிப்படுத்துவதற்காக இருக்கலாம் அல்லது தன்னை நல்லவன்போல் காட்டிக்கொள்வதற்காக இருக்கலாம்.
ஆலயத்துக்குச் செல்வதாலும், போதகர்களை வாழ்த்துவதாலும் ஏதோவொரு வகையில் தனக்கு ஆசீர்வாதங்கள் கிடைக்கும் என்று அவர் நினைத்தார். எனவே, அவர் ஆலயத்துக்குப் போனார். ஆனால், அவருடைய வாழ்க்கையில் இன்னும் குறிப்பிடத்தக்க எந்த மாற்றமும் ஏற்படவில்லை. பழைய குருடி கதவைத் திறடி என்பதுபோல் அவர் தன் பாவ வாழ்க்கையைத் தொடர்ந்தார்.
அவர் இராணுவத்தில் இருந்தபோது யாரோவொருவர் அவருக்குக் கொடுத்திருந்த ஒரு வேதாகமம் அவரிடம் இருந்தது. அவர் அதை ஒருமுறைகூடத் திறந்ததில்லை. இப்போது முதன்முறையாக அவர் அதைத் திறந்து பார்த்தார். வாசிக்கத் தொடங்கினார். ஒன்றும் புரியவில்லை. மூடிவைத்துவிட்டார்.
அவர் பாத்திரங்கள் பழுதுபார்ப்பதற்காக கால்நடையாகக் கிராமங்களுக்குச் செல்வது வழக்கம். ஊர்களில் பொதுவான இடத்தில் பட்டறை போட்டு மக்களுக்காகக் காத்திருப்பார். அப்படி ஒரு நாள் அவர் ஒரு கிராமத்திற்குச் சென்றிருந்தபோது ஒரு வயதான பெண்மணி அவரிடம் வந்து, “உன்னைப்போல ஓர் அயோக்கியனை நான் இதுவரைப் பார்த்ததேயில்லை. இந்த ஊரிலுள்ள வாலிபர்கள்மேல் உன் பார்வை பட்டாலே போதும். எல்லாரும் நாசமாய்ப் போய்விடுவார்கள்,” என்று கோபமாகப் பேசினார். அப்படிப் பேசிய பெண்மணி அந்த ஊரிலிருந்த மிக மோசமான ஒரு பெண்மணி.
பன்யன் அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார். ஆனால் அவர் அதை வெளியே காட்டவில்லை. “என் வாழ்க்கை எவ்வளவு கேவலமாக இருந்தால் இவர் என்னைப் பார்த்து இப்படிச் சொல்லுவார்!” என்று நினைத்து வருத்தப்பட்டார். தன் பாவ வாழ்க்கையை உணர்ந்து மிகவும் வெட்கப்பட்டார். எனவே, தான் மாற வேண்டும் என்று தீர்மானித்தார். மாற கடினமாக முயன்றார். பொய் சொல்வதைக் குறைத்தார்; தூஷிப்பதைக் குறைத்தார்; குடிப்பழக்கத்தையும், சண்டைபோடுவதையும் நிறுத்தினார்; ஞாயிற்றுக்கிழமைகளில் சூதாட்டத்தை நிறுத்த முயன்றார். மனதை ஒழுக்கமாக வைத்துக்கொள்ளப் பிரயாசப்பட்டார்; தன் நடவடிக்கைகளில் ஒருவரும் எந்தக் குற்றமும் கண்டுபிடிக்கமுடியாத அளவுக்கு செயல்களை மாற்றினார். இத்தனைக்குப்பிறகும் உள்ளத்தில் சமாதானம் இல்லை. சமாதானத்துக்குப்பதிலாக பயம் அதிகமாயிற்று. முன்பு இருந்ததைவிட இப்போது மிகவும் பதற்றமடைந்தார். அவர் தன் பாவத்தைப் புரிந்துகொண்டார்; தன் இருதயம் பாவ இருதயம் என்பதைப் புரிந்துகொண்டார்.
ஒருமுறை ஆலயத்தின் கோபுரத்தில் மணி அடிக்க வேண்டிய முறை பன்யனுக்கு வந்தது. அவர் மணி அடிக்கப் போனார். அப்போது, “தேவன் இந்த மணியின் சங்கிலியை அறுக்கப்போகிறார். மணி அறுந்து விழுந்து என்னை நசுக்கப்போகிறது,” என்ற எண்ணம் எழ, பயத்தில் மணி அடிக்காமல், தலைதெறிக்க வெளியே ஓடி வெட்டவெளியில் இருந்த வளைவில் நின்றுகொண்டார். நின்றுகொண்டிருக்கும்போது, “இல்லை, நான் இங்கு நிற்பதுகூட பாதுகாப்பானது இல்லை. யாரோவொருவர் மணி அடிக்கப்போகிறார். மணி அறுந்து இந்த வளைவில் விழப்போகிறது. வளைவு இடிந்து என்மேல் விழப்போகிறது,” என்ற எண்ணம் எழ, பயத்தில் கோபுரத்தைவிட்டு வெளியே ஓடினார். பின்னர் கோபுரம் தன் மீது விழும் என்று நினைத்து, பயத்தில், அங்கிருந்து வெளியே ஓடினார். தன் பாவத்தினிமித்தம் தேவன் தன்னை எப்போது வேண்டுமானாலும் தாக்கக்கூடும் என்ற பயத்திலேயே வாழ்ந்தார். குற்ற உணர்வு, பாவத்தின் அழுத்தம். என்ன செய்வது என்று அவருக்குத் தெரியவில்லை.
சில கெட்ட பழக்கங்களை விட்டார். இருந்தபோதும் பாவத்தின் கொடூரத்தைக்குறித்து அவர் கவலைப்படவில்லை. பிறர் பன்யனிடம் பெரிய மாற்றத்தைக் கண்டார்கள். முன்பு அவர் மோசமானவர்களில் மிக மோசமானவர் என்ற பட்டம் பெற்றிருந்தார். இப்போது அவரிடம் உண்மையான மாற்றத்தைக் கண்டவர்கள் அவரைப் பாராட்டினார்கள். ஆனால், தான் உண்மையாகவே மாறிவிட்டதை அவர் உணரவில்லை. ஏனென்றால், தன் உள்ளத்தின் அவலநிலை அவருக்குத் தெரியும். தன் மனஉறுதியால் மட்டுமே வெளியே இந்த மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்று அவருக்குத் தெரியும். எனவே, தன் பாவ நிலையை அறிய அறிய அவருடைய பயம் கூடினதேதவிர குறையவில்லை.
ஒருநாள் அவர் வழக்கம்போல் ஒரு கிராமத்தின் சதுக்கத்தில் பாத்திரங்கள் பழுதுபார்த்துக்கொண்டிருந்தார். அங்கு மூன்று நாட்டுப்புறப் பெண்கள் ஏதோ செய்து கொண்டிருந்தார்கள். அவர் அவர்களைக் கடந்துபோகும்போது, அவர்கள் மதத்தைபற்றிப் பேசிக்கொண்டிருப்பதைக் கவனித்தார். உடனே அவர், “எனக்கு மதத்தைப்பற்றி தெரியும். எனவே, நான் போய் அவர்களுடைய உரையாடலில் கலந்துகொள்வேன். அவர்கள் ஏதாவது தவறாகச் சொன்னால், நான் அவர்களைத் திருத்துவேன்,” என்று நினைத்துக்கொண்டு தைரியமாக அவர்களிடம் நடந்து சென்றார். அருகில் போனார். அவர்கள் பேசுவதை உன்னிப்பாகக் கேட்டார். அவர்கள் புதிய பிறப்பைக்குறித்தும், தங்களுடைய முந்தைய நிலைமையையும், இப்போதைய நிலைமையையும்குறித்தும், இயேசு தங்களை எவ்வாறு மாற்றினார் என்பதைக்குறித்தும், இயேசு கிறிஸ்துவின் கிருபையால் தங்களால் எப்படிப் பிசாசின் சோதனைகளை எதிர்த்துநிற்க முடிகிறது என்பதைக்குறித்தும் பேசிக்கொண்டிருந்தார்கள். இவைகளெல்லாம் அவருக்கு அந்நிய காரியங்களாகத் தோன்றின. பன்யன் ஒரு வார்த்தை பேசாமல் அமைதியாக நின்று அவர்கள் பேசுவதை உற்றுக்கவனித்தார். அவர்கள் வேறொரு உலகத்தின் காரியத்தைப் பேசுவதுபோலத் தோன்றியது. அவர்களுடைய மகிழ்ச்சியை அவர் கவனித்தார். “எனக்குள் பயம்தான் இருக்கிறது! அதனால்தான் எனக்கு இந்தக் காரியங்கள் புரியவில்லையோ!” என்று நினைத்தார். கடைசியாக அவர் அந்தப் பெண்களிடம் பேசினார். அவர்கள் அவரை அருகிலிருந்த ஒரு சபைக்குப் போகச் சொன்னார்கள்.
அன்று அவர்கள்மூலம் நற்செய்தியைக் கேட்ட பன்யன் அதற்குப்பின் வீட்டில் வேதாகமத்தை வாசிக்க ஆரம்பித்தார். வேதத்தை வாசிக்க வாசிக்க தான் ஒரு பாவி என்ற அவர் உணரத் தொடங்கினார். நாட்கள் செல்லச்செல்ல பாவத்தின் அகோரத்தை உணர்ந்து, ஆழமாக வருந்தி, அதிலிருந்து விடுபட்டு இரட்சிப்படைய வேண்டும் என்று அவர் வாஞ்சித்தார்.
அந்தப் பெண்கள் பரிந்துரைத்த சபை சர்ச் ஆஃப் இங்கிலாந்து அல்ல. அந்த நாட்களில் அதுபோன்ற சபைகள் இணக்கமற்ற சபைகள், nonconformist churches என்று அழைக்கப்பட்டன. அந்தச் சபையில் ஜான் கிஃபோர்ட் என்பவர் போதகராக இருந்தார். அவர் பன்யனைக் கிறிஸ்துவுக்கு நேராக நடத்தினார். ஜான் பன்யன் வேதத்தைப் புரிந்துகொள்ள ஆரம்பித்தார். ஆயினும், இந்தக் கட்டத்தில்கூட இரட்சிப்பைக்குறித்த நிச்சயம் அவருக்கு ஏற்படவில்லை.
அவர் காயீனைப்பற்றியும், ஏசா தன் பிறப்புரிமையை விற்றதையும், யூதாஸ் இயேசுவைக் காட்டிக்கொடுத்ததையும், மன்னிப்புப்பெறாமல் தற்கொலை செய்துகொண்டதையும்பற்றி வாசித்தார். தான் இப்படிப்பட்டவர்களைப்போல் இருப்பதாகவும், எனவே, தன்னைப்போன்ற ஒரு மனிதன் இரட்சிக்கப்பட வாய்ப்பேயில்லை என்றும் அவர் நினைத்தார். தன் அசிங்கமான கடந்த காலத்தை நினைத்துப்பார்த்தார். “வேறு யார் வேண்டுமானாலும் இரட்சிக்கப்படலாம். ஆனால், அது எனக்கு அல்ல. நான் இரட்சிப்பைத் தவறவிட்டுவிட்டேன்,” என்று அவர் நினைத்தார். விடுதலையோடும், மகிழ்ச்சியோடும் துள்ளித்திரியும் விலங்கினங்களைப் பார்த்து அவர் பொறாமைப்பட்டார். அவர் தன் பாவத்தையும், பாவத்தின் அகோரத்தையும் பார்த்தார். அதைப் பார்க்கப்பார்க்க தான் இரட்சிப்பின் திட்டத்திலிருந்து துண்டிக்கப்பட்டுவிட்டதாகவே அவர் கருதினார். காயீன், ஏசா, யூதாஸ் போன்றவர்களைப்பற்றிப் படிக்கப்படிக்க அவர் விரக்தியடைந்தார்.
அவருடைய போராட்டம் தொடர்ந்தது. சில நேரங்களில் பிசாசு அருகில் வந்து அவருடைய காதுகளில், “நீ எதற்காக ஜெபிக்கிறாய்? உன் ஜெபத்தைத் தேவன் கேட்கமாட்டார். உன் ஜெபங்கள் பரலோகத்திற்குப் போகாது. நீ ஏற்கனவே தொலைந்துவிட்டாய்,” என்று ஊதினான். வேறு சில நேரங்களில், “நீ மிகவும் தாமதமாக வந்திருக்கிறாய். ஒருவேளை, சற்று முன் வந்திருந்தால் நிலைமை மாறியிருக்கலாம். எனவே, நீ ஏன் இப்போது ஒழுக்கமான வாழ்க்கை வாழ வேண்டும்? நீ உன் பழைய பாவ வாழ்கைக்குத் திரும்பிச் செல். நீ உன்னைக் கட்டுப்படுத்தாதே. உன் விரும்பம்போல் வாழ். உனக்கு இரட்சிப்பு இல்லை என்றாகிவிட்டது. நீ மிகத் தாமதமாகிவிட்டாய்,” என்று சந்தேக விதைகளை விதைதான், அதைரியப்படுத்தினான். இன்னும் சில நேரங்களில், பிசாசு, “உன் வீண் முயற்சியைக் கைவிடு, இந்தக் கிறிஸ்துவை மறந்துவிடு,” என்றான். ஆனால் ஜான் பன்யன் தன் தேடலைக் கைவிடவில்லை, நிறுத்தவில்லை. எதைத் தேடுகிறோம் என்று தெரியாமலே அவர் எதையோ தேடினார். ஆனால் தான் தேடுவது தனக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு வேதாகமத்தை ஆராய்ந்தார்.
ஒரு நாள் அவர் வேதாமத்தை வாசித்துக்கொண்டிருந்தபோது அவருக்குப் பரிச்சயமான ஒரு வசனம் அவருடைய கண்ணில் பட்டது. அந்த வசனம் அவருடைய மனதில் மூன்றுமுறை மீண்டும் மீண்டும் ஒலித்தது. “என் கிருபை உனக்குப் போதும்.” இதுதான் அந்த வசனம். ஒவ்வொரு முறையும் அந்த வசனத்தைச் சொல்லும்போதும் தேவனே உண்மையாகவே அந்த வசனத்தைத் தன்னிடம் கூறுவதாக பன்யன் உணர்ந்தார். “என் கிருபை போதுமானது, அது போதும்.” ஆனாலும் பன்யன் அதை இன்னும் நம்பவில்லை. “ஒருவேளை இது தவறான நம்பிக்கையோ!”என்று அவர் பயந்தார. எனவே, அவர் அந்த வசனத்தை நம்புவதற்குப் பயந்தார்.
கொஞ்ச நேரத்திற்குப்பின் அவர் ஒரு வயல்வழியாக நடந்துசென்றார். அவர் தன் பாவத்தை நினைத்து வருந்தினார்.
ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இந்தப் போராட்டம் சில ஆண்டுகள் நீடித்தது. அது கிட்டத்தட்ட விரக்தியின் பாதை, ஒருவகையான தவிப்பு, தத்தளிப்பு, கடலலைகளைப்போல் ஏற்றத் தாழ்வுகள்.
ஒருநாள் அவர் ஒரு வயல்வழியாக நடந்துபோய்க் கொண்டிருந்தபோது, தன் பாவ வாழ்க்கையையும், செய்த காரியங்களையும், தவறவிட்ட இரட்சிப்பையும்குறித்து நினைத்து சோர்வடைந்தார். திடீரென்று, “உன் நீதி பரலோகத்தில் இயேசு கிறிஸ்துவுடன் இருக்கிறது,” என்ற வார்த்தைகளை யாரோவொருவர் அவருடைய காதுகளில் மிகத் தெளிவாகப் பேசியதுபோல் இருந்தது. அந்த வார்த்தைகளைத் தான் பேசவில்லை என்று அவருக்குத் தெரியும். ஏனென்றால், முதலாவது அவர் அதைப் புரிந்துகொள்ளவில்லை. மீண்டும், அந்த வார்த்தைகளை யாரோவொருவர் அவருடைய காதுகளில் பேசினார்கள்.”உன் நீதி பரலோகத்தில் இருக்கும் இயேசுவிடம் உள்ளது.” திடீரென்று, உள்ளத்தில் ஒளி வெள்ளம் வீசியதுபோல் இருந்தது. “இரட்சிப்பு என் சொந்த நீதியையோ அல்லது என் பாவத்தையோ பொறுத்ததல்ல. இது கிறிஸ்துவைப் பொறுத்தது. கிறிஸ்துவே. இது என் முயற்சியைச் சார்ந்ததல்ல. இது என் கடந்த காலத்தைப்பற்றியதல்ல. இவையனைத்தும் கிறிஸ்து செய்துமுடித்தவைகளையே சார்ந்திருக்கிறது,” என்று அவர் புரிந்துகொண்டார்.
இயேசு நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர் என்ற இன்னொரு வசனம் அவருடைய நினைவுக்கு வந்தது. இறுதியாக, “இதில் என் வேலை ஒன்றும் இல்லை. இது கர்த்தராகிய இயேசுவும், அவருடைய மரணம், உயிர்த்தெழுதலும் சம்பந்தம்பட்டவை,” என்று அவர் உணர்ந்தார். அந்த நேரத்தில், தேவனுடைய அன்பும் மகிழ்ச்சியும் அவருடைய உள்ளத்தை நிரப்பிற்று. அவர் தேவனின் இரக்கத்தைப் புரிந்துகொண்டார். எந்த அளவுக்கு அவர் இவைகளைப் புரிந்துகொண்டார் என்றால், அங்கு அப்போதே அவர் வயலில் இருந்த காகங்களுக்குப் பிரசங்கிக்கத் துடித்தார். ஆம், அன்று ஒரு பெரிய நற்செய்தியாளர் பிறந்தார். ஐந்து வருட போராட்டத்திற்கு பிறகு இது நடந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஜான் பன்யன் தேவனுடைய நற்செய்தியை அறிவிக்க மிகவும் ஆர்வமாக இருந்தார். ஆனால், அந்த நாட்களில், மிகவும் கற்றறிந்த இறையியலாளர்கள்தான் பிரசங்கித்தார்கள். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி கற்றவர்கள்; சமுதாயத்தில் உயர் அந்தஸ்துடையவர்கள். இப்படியிருக்க, படிப்பறிவில்லாத, சமூகத்தின் கீழ்மட்டத்தில் இருக்கிற, ஓட்ட உடைசல் பாத்திரங்களைப் பழுதுபார்க்கிற ஒரு பாத்திரக்காரன், கடந்த காலத்தில் மிக மோசமாக வாழ்ந்தவன் பிரசங்கிக்க விரும்புவது முற்றிலும் வினோதமான எண்ணம்; இது கேள்விக்குரியது. அவர் பிரசங்கியாக மாற விரும்பியது அதிகப்பிரசங்கித்தனம் என்று ஒருவேளை சிலர் நினைத்திருக்கலாம்.
இது ஒரு பிச்சைக்காரன் அடுத்த நாள் ஒரு நரம்பியல் நிபுணராக மாற விரும்புவதுபோல் இல்லையா? எனவே, பன்யனின் எண்ணம் அபத்தமானது. ஆனால், அவர் பிரசங்கிக்க ஆரம்பித்தார். பின்னாட்களில் அவர் பொத்தல் பிரசங்கியார் என்று அழைக்கப்பட்டார். அவர் பிரசங்கிப்பதைக் கண்ட, கேட்ட சிலர், “இது அட்டூழியம். இவர் தேவனுடைய வார்த்தையை அவமதிக்கிறார். இவர் படிக்காதவர்; இவருக்கு என்ன தெரியும்; ஒன்றும் தெரியாது. இவர் பள்ளிக்குச் சென்றார்; அவ்வளவுதான்; ஒழுங்காக எழுதப்படிக்கத் தெரியுமா என்பதே கேள்விக்குறி,” என்று மதவாதிகள் கொதித்தெழுந்தார்கள். ஆனால், இது அவருக்குச் சாதகமாக மாறியது. ஏனென்றால், பலர் அவரைப் பார்க்கவும், அவர் பேசுவதைக் கேட்கவும் விரும்பினார்கள். அவர் பிரசங்கத்தைக் கேட்டவர்கள், ஜான் பன்யனிடம் பிரசங்கிக்கும் கொடை இருப்பதை விரைவில் உணர்ந்தார்கள்.
அவர் ஒரு நற்செய்தியாளர். அவர் தன் இருதயத்தின் ஆழத்திலிருந்து நற்செய்தியை அறிவித்தார். மனச்சோர்வு, விரக்தி, ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த அந்த ஐந்து வருடங்களில் தேவன் அவரை ஒரு நற்செய்தியாளராக உருவாக்கினார். அந்த ஐந்து வருடங்களில் வேதத்தை வாசித்தது, பிசாசின் சோதனைகளை எதிர்த்து நின்றது எனப் பல வகைகளில் தேவன் அவரை உருவாக்கினார். அவர் ஒரு பிரபலமான போதகரானார்.
ஒருமுறை அவர் இலண்டனுக்குச் சென்றார். தடபுடலான ஏற்பாடு ஒன்றும் கிடையாது. மிகக் குறுகிய கால அறிவிப்பு. “நாளை காலையில் ஜாண் பன்யன் ஒரு திறந்த வெளியில் காலை ஏழு மணிக்குப் பிரசங்கிப்பார்” என்று அறிவித்தார்கள். காலை ஏழு மணிக்கு, இலண்டனில், கடுங்குளிர் வாட்டும். திறந்தவெளி அரங்கம். ஒருநாள் முன்கூட்டி அறிவிப்பு. அவ்வளவுதான். அடுத்த நாள் அவருடைய பிரசங்கத்தைக் கேட்க 1200 பேர் திறந்த வெளியில் கூடினார்கள்.
அந்த நேரத்தில், ஜான் ஓவன் என்ற இறையியலாளர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகவும் இருந்தார். அவர் ஜான் பன்யனின் பிரசங்கங்களை ஆர்வமாகக் கேட்டார். ஒருமுறை இரண்டாம் சார்லஸ் மன்னர், “கல்விமானும், இறையியலாளருமான நீங்கள் கல்வியறிவற்ற, ஒரு பொத்தல் பிரசங்கியார் தெருக்களில் பிரசங்கிப்பதைக் கேட்கப் போகிறீர்கள்,” என்று கேட்டார். அதற்கு ஓவென், “மனிதர்களின் இதயங்களைத் தொடும் வல்லமையை பன்யன் எனக்குத் தருவதாக இருந்தால் நான் என் கல்வியையும், இறையியலையும் நான் அவருக்குக் கொடுத்துவிடுவேன்,” என்றார்.
ஆனால், அவருடைய வாழ்க்கை வலி நிறைந்தது. திருமணமாகி 10 ஆண்டுகளுக்குப்பிறகு, அவருடைய மனைவி பேறுகாலத்தின்போது காலமானார். அப்போது அவருக்கு 10 வயதுக்குட்பட்ட நான்கு குழந்தைகள் இருந்தார்கள். அவருடைய முதல் குழந்தை, மேரி, பார்வையற்றவர். அவளை பன்யன் மிகவும் நேசித்தார். அவளைக்குறித்து அவர் மிகவும் கவலைப்பட்டார். ஏனென்றால், அந்த நாட்களில், ஒருவர் பார்வையற்றவர் என்றால், அவருடைய எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். ஒன்று அவர் பிச்சைக்காரராவார் அல்லது , ஆதரவின்றித் தவிப்பார். எனவே, அவர் மேரிமீது அதிக அக்கறை காட்டினார். அந்த நேரத்தில், நாட்டின் அரசியல் சூழ்நிலை மாறத்தொடங்கியது.
தான் மனந்திரும்பக் காரணமாக இருந்த ஒரு சம்பவத்தை ஜாண் பன்யனே தன் சொந்த வார்த்தைகளால் இப்படிக் கூறுகிறார்:- “கர்த்தருடைய பரிசுத்த ஓய்வு நாளை பரிசுத்தமாக ஆசரிக்க வேண்டியதன் அவசியத்தை அன்று போதகர் ஆலயத்தில் அத்தனை கண்டிப்பாகப் பேசினார். அந்த நாளில் வேலை செய்வதோ, விளையாடுவதோ மற்ற கேளிக்கை நிகழ்ச்சிகளில் பொழுதைப் போக்குவதோ கண்டிப்பாகக் கூடாது என்று திட்டமாகக் கூறினார். அவருடைய தேவ செய்தி என் உள்ளத்தை தொட்டது. என் பாவங்களை உணர்ந்து இனிமேல் ஓய்வு நாளைப் பரிசுத்தமாக ஆசரிக்க வேண்டும் என்ற தீர்மானத்தோடு வீட்டுக்கு வந்த நான் நன்றாக சாப்பிட்டுவிட்டு உணர்வற்ற மிருகம்போல”குச்சிக்கம்பு” விளையாடச் சென்றேன். தரையில் கிடந்த குச்சியை என் கையிலிருந்த சிறிய கட்டைக்கம்பால் அடித்தேன்; குச்சி மேலே எழும்பியது; மேலே எழும்பிய குச்சியை கையிலிருந்த கட்டையால் இன்னொரு அடி அடித்துத் தூரமாக அனுப்ப முயன்றபோது “உன் பாவங்களை விட்டுவிட்டு பரலோகம் செல்வாயா அல்லது பாவங்கள் செய்து நரகம் செல்லப் போகின்றாயா?” என்று வானத்திலிருந்து ஒரு சத்தம் கூர்மையான அம்பைப்போல என் இருதயத்தை ஊடுருவிச் சென்றது. என்னோடு பேசிய ஆண்டவரின் பரலோக வார்த்தையால் நான் தாக்குண்டு இனி பாவத்தில் நீடித்தால் அழிவே என் பங்காகிவிடும் என்ற பயத்தால் இரட்சிப்பை தேட ஆரம்பித்தேன்,” என்றார்.
ஜாண் பன்யனை இரட்சிப்பின் நிச்சயத்துக்குள்ளும், மறுபடியும் பிறந்த பரலோக அனுபவத்துக்குள்ளும் பெட்ஃபோர்ட் நகரத்துப் போதகராக இருந்த ஜாண் கிஃபோர்ட் வழிநடத்தினார் என்று நான் ஏற்கெனவே சொன்னேன். அந்த நகரத்தில் இருந்த தேவ மக்கள் தேவனற்ற பலரை இந்தப் போதகரிடம் அழைத்து வந்தார்கள். இவர் அவர்களைக் கிறிஸ்துவுக்கு நேராக வழிநடத்தினார்.
கர்த்தருடைய இரட்சிப்பைக் கண்டடைந்த ஜாண் பன்யனைத் தேவன் பயன்படுத்த ஆரம்பித்தார். ஜாண் பன்யன் நல்ல உயரமானவர். செந்நிறமான தலைமுடி, கூர்மையான கண்கள், அகன்ற நெற்றி, உறுதியான முகப்பார்வை, கோபம்கொண்டவனைப்போன்ற தோற்றம். ஆனால், அன்பானவர், தாழ்மையயானவர், எளிமையானவர். அவருடைய செய்திகளில் பயபக்தி இருக்கும். “தேவனுக்குப் பயப்படாமல் தங்கள் பாவங்களில் வாழ்பவர்களுக்கு அவருடைய செய்தி பயங்கரமான மின்னல் தாக்குதல்போல இருக்கும்” என்று அவருடைய நண்பர் ஒருவர் கூறினார்.
அவர் இரட்சிக்கப்பட்ட கொஞ்ச நாட்களில் அவருடைய மனைவி இறந்துபோனார். அது அவருக்குப் பெரிய இழப்பு. தன் இரட்சகர் மட்டுமே தன்னோடு இறுதிவரை இருக்கமுடியும் என்றும், உதவ முடியும் என்றும் அவர் கற்றுக்கொண்டார். அவர் தன் வாழ்வைத் தேவனுக்கு முழுமையாக ஒப்புக்கொடுத்தார். பாத்திரங்கங்ளைப் பழுதுபார்ப்பதற்காகவும், விற்பதற்காகவும் பல இடங்களுக்குச் சென்றபோது, வீடுகளில் நற்செய்தியும் அறிவித்தார். அநேகர் இரட்சிக்கப்பட்டார்கள். அவருடைய வியாபாரமும் நன்றாக நடந்தது.
ஜாண் பன்யன் எந்த வேதாகமக் கல்லூரிக்கும் சென்று இறையியல் கற்கவில்லை; அதிகமாகப் படிக்கவில்லை; பள்ளிப்படிப்பைக்கூட முடிக்கவில்லை. தட்டுத்தடுமாறி எழுதப்படிக்கத் தெரியும். ஆனால், நற்செய்தியைப் பிரசங்கித்தார். அவருடைய பிரசங்கத்தைக் கேட்ட மக்கள்இரட்சிக்கப்பட்டார்கள். அவருடைய பிரசங்கத்தில் தேவனுடைய வல்லமை நிறைந்திருப்பதை மக்கள் கண்டார்கள். அந்த நாட்களில் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ளுமாறு பிரசங்கித்த பிரசங்கியார்கள் குறைவு. ஆனால், ஜான் பன்யன் நித்திய ஜீவனைப்பற்றிப் பிரசங்கித்தார். ஜாண் பன்யன் வெறுமனே மனந்திரும்பிய ஒரு சாதாரண விசுவாசி அல்ல என்றும், வெறுமனே தண்ணீரில் மட்டும் மூழ்கி ஞானஸ்நானம் பெற்றவர் அல்ல என்றும், உண்மையாகவே பரிசுத்த ஆவியால் நிரம்பியவர் என்றும் பெட்ஃபோர்ட்டில் இருந்த தேவ மக்கள் புரிந்துகொண்டார்கள்.
தன்னை அணுகி தேவனுடைய வார்த்தைகளைக் கேட்க விரும்பியவர்களுக்கு ஜாண் பன்யன் மிகவும் தாழ்மையோடு கர்த்தருடைய வார்த்தைகளை விளக்கிக்கூறினார். வீடுகளில் மக்களை சந்தித்துப் பேசினார். பெருங்கூட்டங்களில் பேசுவதைவிட சிறு கூட்டங்களில் பேசுவதையே அவர் அதிமாக விரும்புவார். எனினும், இரண்டு பெரிய ஆராதனைக் கூட்டங்களில் அவர் வாடிக்கையாகப் பேசினார். அவருடைய பிரசங்கங்களைக் கேட்டவர்கள் தங்கள் முழு இருதயத்தோடும் கர்த்தருக்கு நன்றி கூறி அவரைத் துதித்து மகிமைப்படுத்தினார்கள்.
ஜாண் பன்யன் அவருடைய சொந்த ஊரான எல்ஸ்டவ்விலும், பெட்ஃபோர்ட்டிலும் அதிகமாகப் பிரசங்கிக்கவில்லை. ஆனால், சுற்றியிருந்த பல இடங்களில் பிரசங்கித்து திரளான மக்களை அவர் கர்த்தரிடம் வழிநடத்தினார். அவருடைய பிரசங்கத்தைக் கேட்க நூற்றுக்கணக்கான மக்கள் சமீபத்திலும், தூரத்திலுமிருந்து வந்தார்கள். “மக்களின் பாவ நிலைமையையும், அதனால் அவர்கள் சந்திக்கப்போகும் பயங்கரமான நித்திய நியாயத்தீர்ப்பையும் நினைத்து நான் இரண்டு வருடங்கள் அழுதுகொண்டே சுற்றித்திரிந்து நற்செய்தியை அறிவித்தேன்,” என்று பன்யன் ஒரு தடவை கூறினார்.
“நான் பிரசங்கிக்கும்போது ‘தேவனே, உம் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருக்கும் உம் மக்கள் ஆத்தும இரட்சிப்பைப் பெற்றுக்கொள்வார்களாக’ என்று என் இருதயம் எனக்குள் அடிக்கடி கதறிக் கூக்குரலிடும்” என்று அவர் சொன்னார்.
அவர் தன் பிரசங்கத்தை முன்னதாகவே ஆயத்தம் செய்தார். பிரசங்கக் குறிப்புகள் அவரிடம் இருக்கும். அவருடைய பிரசங்கங்கள் பெரும்பாலும் ஆத்தும ஆதாயத்தையே மையமாகக் கொண்டிருந்தன.
அவர் தன் பிரசங்கக் குறிப்புகளைப் பத்திரமாக வைத்திருந்தார். எனவேதான், பிற்காலத்தில் அவைகள் 60 புத்தகங்களாக அச்சிடப்பட்டன. லூக்கா 16ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள பணக்காரன்-லாசரு நிகழ்ச்சியை வைத்து அவர் எழுதியுள்ள “நஷ்டப்பட்ட பாவியின் துயரப் புலம்பல்கள்” என்ற புத்தகத்தில் அந்தப் பணக்காரன் நரகத்திலிருந்து எழுப்புகிற வியாகுலங்களை வாசிக்கும்பொது கல்மனங்கள் கரையும்.
இங்கிலாந்தின் பல்வேறு இடங்களிலிருந்து பேச வருமாறு அவருக்கு அழைப்புகள் வந்தன. ஆனால் அவர் அவைகளை ஏற்றுக்கொள்ளவில்லை. அப்படி பெரிய கூட்டங்களுக்குச் சென்றால், அதிகமான பணம் கிடைக்கும் என்றும், அதனால் தன் தற்போதைய எளிய நிலை போய்விடும் என்றும், தான் பெற்ற தேவனுடைய அளவற்ற கிருபையை இழக்க நேரிடும் என்று அஞ்சி அப்படிப்பட்ட பெருங்கூட்ட அழைப்புகளை எல்லாம் அவர் திட்டமாக மறுத்து உதறித் தள்ளினார்.
உலகப் புகழ் பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் அந்த நாட்களில் துணை வேந்தராக (Vice-Chancellor) இருந்த மா மேதையும், ஒப்பற்ற ஞானவானும், சிறந்த தேவ பக்தனுமான ஜாண் ஓவன் ஜான் பன்யனின் பிரசங்கங்களை ஆர்வமாகக் கேட்டார். ஒருமுறை இரண்டாம் சார்லஸ் மன்னர், “கல்விமானும், இறையியலாளருமான நீங்கள் ஏன் கல்வியறிவற்ற, ஒரு பொத்தல் பிரசங்கியார் தெருக்களில் பிரசங்கிப்பதைக் கேட்கப் போகிறீர்கள்?” என்று கேட்டபோது ” “பெட்ஃபோர்ட் பாத்திரக்காரர் ஜாண் பன்யன் கிறிஸ்து இரட்சகரைப் பிரசங்கிக்கும் கொடையை, மனிதர்களின் இதயங்களைத் தொடும் வல்லமையை, என்னிடம் பண்டமாற்று செய்து கொள்ள முடியுமானால், என் கல்வியையும், இறையியலையும், திறமைகளையும் நான் அவருக்கு மனமுவந்து கையளிக்க ஆவலாக இருக்கின்றேன்” என்று மன்னர் வியப்பில் ஆழ்ந்து போகும் வண்ணம் சொன்னார்.
ஆலிவர் க்ரோம்வெல் தளர்த்தியிருந்த சட்டங்களை இரண்டாம் சார்லஸ் மன்னர் மாற்றப்போகிறார் என்ற வதந்திகள் உலாவரத் தொடங்கின.
தன் மனைவி இறந்து சுமார் ஒரு வருடம்கழித்து, ஜான் பன்யன் மறுமணம் செய்துகொண்டார். அவர் திருமணம் செய்த பெண்ணின் பெயர் எலிசபெத். இவரைப்பற்றி நான் பின்னர் கொஞ்சம் பேசுவேன். இவர் அவ்வளவு அற்புதமான பெண்மணி. ஏற்கெனவே அவருக்கு நான்கு குழந்தைகள் இருக்கிறார்கள்; மூத்த மகள் பார்வையற்றவர்; நாட்டின் அரசியல் சூழ்நிலை தலைகீழாக மாறுகிறது.
கிளாரெண்டன் குறியீட்டின்படி உரிமம் இல்லாமல் பிரசங்கிக்கக் கூடாது என்ற சட்டத்திருத்தம் உடனடியாகக் கொண்டுவரப்பட்டது. சர்ச் ஆஃப் இங்கிலாந்து கட்டிடத்திற்கு வெளியே ஐந்து பேருக்குமேல் கூடிப் பிரசங்கிக்கக் கூடாது என்ற இன்னொரு சட்டம். இந்தச் சட்டத்தின்படி சர்ச் ஆஃப் இங்கிலாந்து கட்டிடத்துக்கு வெளியே மக்களைக் கூட்டி நற்செய்தி அறிவிக்க முடியாது. திறந்தவெளிப் பிரசங்கத்துக்கு வழியே இல்லை. சர்ச் ஆஃப் இங்கிலாந்தோடு ஒத்துப்போகாகத இணக்கமற்ற சபைகள் அப்போது நிறைய இருந்தன. அவை அனைத்தும் இப்போது சட்டவிரோதமானவை என்று அறிவிக்கப்பட்டன. சர்ச் ஆஃப் இங்கிலாந்து பயன்படுத்திய பொதுவான ஆராதனை ஒழுங்குமுறைப் புத்தகத்தைத்தான் எல்லாரும் பய்ன்படுத்த வேண்டும் என்ற சட்டம் அமுலுக்கு வந்தது. வேறு எதையும் யாரும் பயனபடுத்த அனுமதி இல்லை. சந்தேகத்துக்குரியவர்களைக் காவலர்கள் கண்காணித்தார்கள், சோதனைசெய்தார்கள். எல்லாம் மாறத்தொடங்கின.
ஜாண் பன்யன் இந்த உலகத்தில் 60 ஆண்டுகள் வாழ்ந்தார். அதில் 12 ஆண்டுகள் சிறையில் வாழ்ந்தார். பெரிய பாதகச் செயலைச் செய்ததால் அவர் சிறைவாசம் அனுபவித்தார் என்று நினைக்கிறீர்களா? இல்லை. அந்த நாட்களில் இங்கிலாந்தில் தேவனுடைய நற்செய்தியை சர்ச் ஆஃப் இங்கிலாந்தின் ஆலயங்களில் உரிமம் பெற்ற, அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட போதகர்கள் மட்டுமே பிரசங்கிக்க முடியும். உரிமம் இல்லாத, அரசால் அங்கீகரிக்கப்படாதவர்கள் பிரசங்கிக்கக்கூடாது என்ற ஒரு சட்டம் அமுலில் இருந்தது. பன்யன் தெருக்கள், சந்தைகள், திறந்தவெளிகள், அரங்கங்கள், பண்ணை வீடுகளின் தானிய சேமிப்புக் கிடங்குகள் என மக்கள் கூடிய இடங்களிலெல்லாம் பிரசங்கித்தார். இங்கிலாந்தின் ஆங்கிலிகன் சபை பயன்படுத்திய “பொதுவான ஜெபப் புத்தகத்தை” (Common Prayer Book) அவர் ஏற்றுக்கொள்ளவில்லை, எனவே அவர் அதைப் பயன்படுத்த மறுத்தார்.
பன்யன் அரசின் சட்டத்தை மீறவிரும்பாவிட்டாலும், உலகமெங்கும் எல்லாருக்கும் நற்செய்தியை அறிவிக்க வேண்டும் என்ற தேவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிய விரும்பினார். எனவே, அவர் நற்செய்தியைத் தொடர்ந்து அறிவித்தார். அரசின் சட்டத்தை மீறியவர்கள் கைதுசெய்யப்பட்டு, கடுமையாகத் தண்டிக்கப்பட்டார்கள்.
இந்தச் சூழ்நிலையில் பன்யன் ஒருநாள் ஒரு பண்ணையில் பிரசங்கிக்க ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. அவர் அங்கு சென்றார். மக்கள் கூடியிருந்தார்கள். கூடியிருந்தவர்களில் ஒருவர், “சகோதரரே, நாம் கூட்டத்தைத் தள்ளிப்போடுவோமா? இந்தச் சூழ்நிலையில் இது புத்திசாலித்தனமாகத் தோன்றவில்லையே! இப்போதுதான் இந்தச் சட்டத்திருத்தங்கள் நடைமுறைக்கு வந்திருக்கின்றன. நிலைமை கொஞ்சம் சரியாகும்வரை நாம் காத்திருக்கலாம்!” என்று சொன்னார். அதற்குப் பன்யன், “இல்லை. நாம் இங்கு தேவனுடைய வார்த்தையைப் பிரசங்கிக்கவும், கேட்கவும் கூடியிருக்கிறோம். நற்செய்தியை அறிவிப்பதற்கு நாம் ஒருபோதும் வெட்கப்படக்கூடாது,” என்று சொன்னார்.
பன்யன் மிகவும் பிரபலமான பிரசங்கியார் என்பதால் அரசு அவரைக் கண்காணித்துக்கொண்டிருந்தது. காவலர்கள் அந்தப் பண்ணையில் அவரைக் கண்காணித்துக்கொண்டிருந்தார்கள். இது பன்யனுக்கும் தெரியும். பன்யன் எழுந்து நின்று பிரசங்கிக்கத் தொடங்கினார். அவர் பிரசங்கித்துக்கொண்டிருந்தபோது காவலர்கள் உள்ளே நுழைந்து அவரைக் கைதுசெய்தார்கள். அவர் விருப்பத்தோடு அவர்களோடு சென்றார். போகும்போது மக்களை நோக்கி, “தேவனுக்காக நன்மை செய்து பாடநுபவிப்பது நல்லது,” என்று சொல்லிச் சென்றார்.
கைதுசெய்து அவரை நீதிமன்றத்தில் நீதிபதியின்முன் நிறுத்தினார்கள். நீதிபதி, “பழைய பாத்திரங்களைப் பழுதுபார்ப்பதுதான் உன் வேலை, உன் அழைப்பு. அதைச் செய். பிரசங்கிப்பது உன் வேலை இல்லை,” என்றார். பன்யன், “இரண்டும் என் வேலை, என் அழைப்பு,” என்றார். அதற்கு நீதிபதி, “சரி, அது சட்டவிரோதம். இனிமேல் நீ பிரசங்கிக்கக்கூடாது. பிரசங்கிப்பதை நீ நிறுத்த வேண்டும். பிரசங்கிப்பதை நிறுத்துவதாக வாக்களித்தால் நான் உன்னைச் சிறையில் அடைக்க மாட்டேன்,” என்றார். பன்யன், “நான் தேவன் கட்டளையிட்டபடி அவருடைய நற்செய்தியைப் பிரசங்கிப்பதை ஒருபோதும் நிறுத்த மாட்டேன்,” என்றார். இந்த உரையாடலுக்குப்பின் நீதிபதி கொஞ்சம் இறங்கிவந்து, தந்திரமாக, “நீ உன் குழந்தைகளை நேசிக்கிறாயா?” என்று கேட்டார், இதற்கு பன்யன் சொன்ன பதில் இன்று மிகவும் பிரபலம் . “ஐயா, நான் என் குழந்தைகளை மிகவும் அதிகமாக நேசிக்கிறேன். ஆனால், நான் என் இயேசுவின்மேல் வைத்திருக்கும் அன்போடு ஒப்பிடுகையில், நான் என் பிள்ளைகளின்மேல் வைத்திருக்கும் அன்பு ஒன்றுமேயில்லை,” என்றார். நீதிபதி அவரை சிறையில் அடைத்தார்; அந்த நேரத்தில் அவருக்கு மூன்று மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பெட்ஃபோர்ட் சிறையில் அடைக்கப்பட்டார். சிறைவாசம் மூன்று மாதங்களில் முடியவில்லை. 12 வருடங்கள் நீடித்தது. நீதிமன்றம் எதிர்பார்த்த உறுதிமொழியைக் கொடுத்துவிட்டு அவர் எப்போது வேண்டுமானாலும் வெளியேறியிருக்கலாம். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை.
சிறையில் அதிகாரிகள் அவரிடம், “நான் இனிப் பிரசங்கிக்கமாட்டேன் என்று சொல்லி, இதில் ஒரு கையெழுத்து போட்டால் போதும். உனக்கு விடுதலை. சிறைக்கதவு உனக்குத் திறக்கும். நீ விடுதலையோடு வெளியே சென்று, உன் குடும்பத்தோடு சேர்ந்து வாழலாம்,” என்று பசப்பு வார்த்தைகளைக் கூறினார்கள்.
அப்போதுதான் இரண்டாவது திருமணம் செய்திருந்தார். 10 வயதிற்குட்பட்ட நான்கு குழந்தைகள். மூத்தவளுக்குப் பார்வையில்லை. “நான் இங்குத் தனியாக இருக்கிறேன். குடும்பம் அங்கு தனியாக இருக்கிறது. எந்த வருமானமும் இல்லை. நிர்கதியாக நிற்கிறார்கள். கையெழுத்துப்போட்டால் விடுதலை,” எனப் பலவாறு எண்ணங்கள் அலைமோதின.
நிச்சயமாக அவர் சிறையில் அவதிப்படுவார். ஆனால், அவரைவிட குடும்பத்தார் மிகவும் அவதிப்படுவார்கள். அவர்கள் ஆதரவற்றவர்களாவார்கள். பிறருடைய தயவில்தான் வாழ்ந்தாக வேண்டும். எலிசபெத் தான் பெறாத நான்கு பிள்ளைகளை வளர்க்க வேண்டும். வருமானம் இல்லை. பன்யன் மனம் தளரவில்லை. அது ஒரு பெரிய சோதனையாக இருந்தபோதும், அவர் கையெழுத்திடவில்லை, கையெழுத்துப்போட்டு வெளியே போய் வாழ்நாள் முழுவதும் தேவனுக்குவிரோதமாகக் குற்றம் செய்தேன் என்ற குற்ற உணர்ச்சியோடு வாழ்வதைவிட, வாழ்நாள் முழுவதும் இந்தச் சிறையிலேயே வாழ்வது நலம் என்று அவர் முடிவுசெய்தார்.
17 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் சிறைச்சாலைகளின் நிலைமை மிக மோசமாக இருந்தது. அவர் அடைக்கப்பட்டிருந்த பெட்போர்ட் சிறையில் குளிர்காய கணப்பு அடுப்புகள் கிடையாது. கைதிகள் தரையில் வைக்கோற் புல்லில் படுத்தார்கள். கழிப்பிட வசதிகளைப்பற்றி சொல்லவே வேண்டாம். ஆனால், அந்தச் சிறை அதிகாரி அவருக்கு நிறைய உதவிசெய்தார். அவருடைய உதவியோடு அவ்வப்போது அவர் வெளியே சென்று நற்செய்தி அறிவித்துவிட்டு மீண்டும் சிறைக்கு வந்துவிட்டார். ஒரு தடவை அவருடைய உதவியால் அவர் இலண்டன் வரைகூடப் போய் வந்தார். இவையெல்லாவற்றிலும் தேவனுடைய பாதுகாக்கும் கரம் அவருடன் இருந்தது என்பதை மறுக்க முடியாது.
ஒரு நாள் இரவு அவர் தன் மனைவி பிள்ளைகளைப் பார்ப்பதற்காக சிறை அதிகாரியின் அனுமதியோடு வீட்டிற்குச் சென்றிருந்தார். ஜாண் பன்யன் குடும்பத்தோடு கொஞ்ச நேரம் செலவழித்தபின் உடனடியாக சிறைக்குத் திரும்புமாறு ஆவியானவர் அவரை ஏவினார். அவர் மிக விரைவாக சிறைக்குத் திரும்பினார். கொஞ்ச நேரத்தில் இங்கிலாந்து மன்னரின் ஆட்கள் காவல்துறை அதிகாரிகளுடன் சிறைக்கு வந்து ஜாண் பன்யன் சிறையில் இருக்கின்றாரா என்பதை உறுதிசெய்ய அவருடைய அறைக்குச் சென்றார்கள். அங்கு அவர் இருப்பதைக் கண்டு திருப்தியுடன் திரும்பிச் சென்றார்கள்.
இங்கிலாந்தின் மன்னரே தனக்கு விரோதமாக இருப்பதை உணர்ந்த பன்யன் என்றாவது ஒரு நாள் தனக்கு நிச்சயமாகத் தூக்குத்தண்டனை கிடைக்கும் என்றுதான் நினைத்தார். சிறையில் இருந்தபோது தன் கரிய நிழல் உருவத்தைப் பார்த்தபோதெல்லாம் அது தன்னை விரைவில் சந்திக்கவிருக்கும் மரணமே என்று எண்ணியதாக அவர் பின்னாட்களில் கூறினார்.
அவர் தன் குடும்பத்தை நினைத்து மிகவும் கவலைப்பட்டார். பெட்போர்ட் சிறையில் இருந்தபோது அவர் தன் மனைவி பிள்ளைகளைக் காப்பாற்ற Tagged Laces தயாரித்து அவைகளைத் தன் பிள்ளைகளுக்குக் கொடுத்தனுப்பினார். அவர்கள் அவைகளைத் தெருக்களில் விற்பனை செய்து, அதன்மூலம் கிடைத்த பணத்தைக்கொண்டு குடும்பத்தை நடத்தினார்கள்
அந்த நேரத்தில், தேவன் “திக்கற்றவர்களாய்ப்போகும் உன் பிள்ளைகளை ஒப்புவி, நான் அவர்களை உயிரோடே காப்பாற்றுவேன்; உன் விதவைகள் என்னை நம்புவார்களாக,” என்ற எரேமியா 49:11ஆம் வசனத்தின்மூலம் பன்யனோடு பேசினார். அதை அவர் தன் வாழ்நாள் முழுவதும் தன் இருதயத்துக்குள் வைத்துக்கொண்டார். அதை அவர் உறுதியாகப் பற்றிக்கொள்ள வேண்டியிருந்தது. ஏனென்றால், மூன்று மாதச் சிறைத்தண்டனை மூன்று மாதங்களில் முடியவில்லை; அவர் விடுவிக்கப்படவுமில்லை. மூன்று மாதங்கள் 12 வருடங்களாக மாறியது.
சிறைச்சாலைக்கு வெளியே நடக்கும் காரியங்களைக் கேள்விப்பட்ட பனியன் அதிர்ச்சியடைந்தார். உரிமம் இல்லாமல் பிரசங்கித்தவர்கள் கொல்லப்பட்டார்கள்; ஒரு மாவட்டத்தில், உரிமம் இல்லாத எல்லாப் பிரசங்கிமார்களும் ஒரு பாலத்தில் தூக்கிலிடப்பட்டார்கள். இன்னும் சில இடங்களில் பிரசங்கிமார்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள், சித்திரவதைசெய்யப்பட்டார்கள்.
அடுத்த நாள் அவர் விடுதலையாவாரா அல்லது கொல்லப்படுவாரா என்று அவருக்குத் தெரியாது. எந்த நிச்சயமுமற்ற நிலையில் அந்தச் சிறையில் நீண்ட 12 ஆண்டுகள் வாழ்ந்தார்.
அந்தச் சிறையில் அவரோடு இன்னும் நிறைய கைதிகள் இருந்தார்கள். பன்யன் தன் அறையில் இருந்துகொண்டு அவர்களுக்குப் பிரசங்கித்தார். நாட்கள் செல்லச்செல்ல மற்ற கைதிகள் அவருடைய அறைக்குமுன் கூடினார்கள். பிரசங்கிக்குமாறு அவரை வேண்டினார்கள். பன்யன் பிரசங்கித்தார். அந்தச் சிறை அதிகாரி மிகவும் மென்மையாக நடந்துகொண்டார். “பன்யன், உரிமம் இல்லாமல் பிரசங்கித்த குற்றச்சாட்டுக்காக ஏற்கனவே சிறையில் இருக்கிறார். இங்கு பிரசங்கிக்கிறார் என்பதற்காக அவரை வேறு என்ன செய்ய முடியும்?” என்று நினைத்த சிறை அதிகாரி அவரைப் பிரசங்கம் செய்ய அனுமதித்தார்.
சிறையில் இருந்த காலத்தில் அவர் எழுதினார். அவர் தன் சுயவரலாற்றையும் அப்போதுதான் எழுதினார். அதை சுயவரலாறு என்று சொல்வதைவிட அவருடைய உள்ளத்தின் எண்ணங்கள் என்று சொல்லலாம். ஏனென்றால், அந்த சுய வரலாற்றில் அவர் தன்னைப்பற்றி எதையும் விவரமாகச் சொல்லவில்லை. தன் வாழ்க்கை வரலாற்றுக்கு Grace, abounding to the chief of sinners, பிரதான பாவிக்குப் பெருகும் கிருபை, என்று பெயரிட்டார்.
அவருடைய மனைவி எலிசபெத்தைப்பற்றி நான் சொல்லியேயாக வேண்டும். இந்த இளம் பெண் ஜாண் பன்யனின் விசுவாசத்தையும், தரிசனத்தையும் சரியாகப் புரிந்துகொண்டு, தன் முழு இருதயத்தோடும் அவரோடு ஒன்றித்திருந்தார். பன்யனைக் கைதுசெய்த நேரத்தில் அவர் கர்ப்பமாக இருந்தார். அந்த சூழ்நிலையின் அழுத்தத்திலும், என்ன நடக்கிறது என்று தெரியாத மனஅழுத்தத்திலும் குறிப்பிட்ட நாளுக்குமுன்பே அவருக்குப் பேறுகால வலி ஏற்பட்டது. இந்த வலி எட்டு நாட்கள் நீடித்தது. அதன்பிறகு குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தை இறந்தது. கணவர் சிறையில் இருக்கிறார்; பிறந்த குழந்தை இறக்கிறது; தான் பெறாத 10 வயதிற்குட்பட்ட நான்கு குழந்தைகள் இருக்கிறார்கள்; அவர்களில் மூத்தவள் பார்வையற்றவள். எல்லாரும் இப்போது ஆதரவற்றவர்கள்; இந்தச் சூழ்நிலையில்தான் தான் இனி ஒருபோதும் பிரசங்கிக்கமாட்டேன் என்று தன் கணவன் சொல்லவோ, கையெழுத்துப்போடவோ கூடாது என்று அவர் உறுதியாகச் சொன்னார்; அவரை ஊக்குவித்தார். இப்படிச் சொல்ல எவ்வளவு தைரியம் வேண்டும்? எவ்வளவு உறுதி வேண்டும்! தெளிந்த பார்வை வேண்டும்? அவள் சாதாரணமான ஒரு ஏழை நாட்டுப்புறப் பெண். அவர்கள் வாழ்ந்த காலத்தையும், அவர்களுடைய சூழ்நிலையையும் பார்க்கும்போது இது வியப்பாக இருக்கிறது.
பன்யன் சிறையில் அடைக்கப்பட்டு ஒரு வருடம் ஆனபிறகு அவர் அதிகாரிகளைச் சந்தித்து பன்யனை விடுதலைசெய்யுமாறு மனுசெய்ய முடிவுசெய்தார். நீதி கேட்டு முறையிடத் தீர்மானித்தார். மூன்று நாட்கள் நடந்தே இலண்டனுக்குச் சென்றார். அங்கு நீதிமன்றத்தில் அவர் நீதிபதிகளின்முன் தன் நியாயத்தை எடுத்துரைத்தார். என்ன நடந்தது என்று பாருங்கள். “என் கணவர், ஜான் பன்யனை, விடுதலை செய்ய வேண்டும். மூன்று மாதச் சிறைத் தண்டனைதான் வழங்கப்பட்டது. ஒரு வருடமாகியும் அவர் இன்னும் விடுதலையாகவில்லை,” நீதிபதி, “சரி, அவர் ஏன் நான் இனிப் பிரசங்கிக்க மாட்டேன் என்று இதுவரை சொல்லவில்லை.” எலிசபெத், “அவரால் பேசமுடிந்தவரை அவர் பிரசங்கிப்பதை நிறுத்தமாட்டார்.” “அப்படியானால் நீங்கள் எதற்கு இங்கு வந்தீர்கள்?” “எனக்கு நான்கு சிறிய குழந்தைகள் இருக்கிறார்கள். பிறருடைய தயவில்தான் நாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். வேறு எந்த ஆதரவும் இல்லை. அவர் கைது செய்யப்பட்ட அதிர்ச்சியில், எனக்கு குறிப்பிட்ட காலத்திற்குமுன்பே பேறுகால வலி ஏற்பட்டு குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தையும் இறந்துவிட்டது.” இதைக் கேட்ட இரண்டு நீதிபதிகளில் ஒருவருடைய மனம் இளகியது. ஆனால், மற்றொருவர் குறுக்கிட்டு, “அதனால் எங்களுக்கு என்ன? அவர் பிரசங்கிப்பதை நிறுத்துவதாக வாக்களித்தால் விடுதலை. இல்லையென்றால் விடுதலை இல்லை. பாத்திரங்களைப் பழுதுபார்க்கிறவன் அந்த வேலையைச் செய்யவேண்டும்.” எலிசபெத் “பிரதான சபை என் கணவரை அப்படிதான் அழைக்கிறது. நீதிமன்றமும் என் கணவரை அப்படியே பார்க்கிறது. நீங்கள் அவரை வெறுக்கிறீர்கள். நியாயத்தைத் தேடி வந்தேன். கிடைக்காது என்று இப்போது தெரிகிறது.” நீதிபதி, “அவர் சட்டத்திற்கு விரோதமாகப் பிரசங்கிக்கிறார், அது உங்களுக்குத் தெரியும்.” எலிசபெத், “அவர் தேவனுடைய வார்த்தையைப் பிரசங்கிக்கிறார். ஐயா, அவர் தேவனுக்குச் சொந்தம். தேவனிடமிருந்து அவர் பெற்ற நன்மைகள் ஏராளம். அவரால் பிரசங்கிக்காமல் இருக்க முடியாது.” நீதிபதி, “ஆனால் அவர் பிசாசின் உபதேசத்தைப் பிரசங்கிக்கிறார்.” எலிசபெத், “இல்லை, ஐயா, அவர் பிரசங்கிப்பது தேவனுடைய உபதேசம் என்று நீதியுள்ள நீதிபதி தோன்றும்போது நிச்சயமாகத் தெரியும்.” அவருடைய மனுவை நீதிபதிகள் ஏற்கவில்லை. அது வேறு காரியம். ஆனால், ஒரு சாதாரண ஏழை நாட்டுப்புறப் பெண் நீதிபதிகளிடம் பேசிய ஞானத்தையும், துணிவையும், விவேகத்தையும், நேர்மையையும் கண்டு வியந்தார்கள்.
12 ஆண்டுகளுக்குப்பிறகு, நாட்டின் அரசியல் சூழ்நிலையில் மாற்றம் ஏற்பட்டது. இரண்டாம் சார்லஸ் மன்னருடைய திருமண விவகாரத்தினாலோ அல்லது வேறு எதோ காரணத்தினாலோ அவருடைய மனம் கொஞ்சம் மாறத் தொடங்கியது. தான் இயற்றிய சில சட்டங்களை அவர் தளர்த்த முடிவு செய்தார்.
ஆனால் இடைப்பட்ட காலத்தில் பன்யனின் மூத்த மகள் மேரி நோய்வாய்ப்பட்டு காலமானார். 12 ஆண்டு சிறைவாசத்திற்குப்பின் அவர் விடுதலையானார். விடுதலையானதும் நேரே அவர் பெட்ஃபோர்டுக்குத் திரும்பினார். அருகிலிருந்த ஒரு கிராமத்தில் கிடைத்த தானியக் கிடங்கை அவர் மாற்றியமைத்து அங்கு அவர் பிரசங்கிக்க ஆரம்பித்தார். அந்தக் கிடங்கில்தான் அவர் 16 ஆண்டுகள் பிரசங்கித்தார்.
சார்லஸ் மன்னர் தன் மனதை மாற்றிக்கொண்டு சட்டங்களைத் தளர்த்தியபோதும், அரசியல் சூழ்நிலை நிலையற்றிருந்தது. ஏனென்றால், அவர் தளர்த்திய சட்டங்களை மீண்டும் அமுலுக்குக் கொண்டுவர அதிக நேரம் ஆகாது என்று எல்லோரும் நினைத்தார்கள். மக்கள் நினைத்ததுபோல் இரண்டு மூன்று ஆண்டுகளுக்குள் காரியங்கள் முந்தைய நிலைக்கே திரும்பின. பழைய சட்டங்கள் அனைத்தும் மீண்டும் நடைமுறைக்கு வந்தன. அதனால் பன்யன் மீண்டும் கைது செய்யப்பட்டு தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். அது ஓர் இருட்டறை. ஈரமான, சிறிய அறை; அது ஓர் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட ஒரு பாலத்தின் அடியில் இருந்தது. அந்தத் தனி அறை அவருடைய ஊரிலிருந்து வெகு தொலைவில் இருந்தது. இந்தமுறை ஆறு மாதச் சிறைவாசம். ஆனால், இந்த ஆறு மாதச் சிறை வாசத்திற்காக நாம் கர்த்தருக்கு நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால், அப்போதுதான் அவர் இப்போதைய மிகப் பிரபலமான மோட்சப் பிரயாணம் என்ற புத்தகத்தை எழுதி முடித்தார்.
ஜான் பன்யன் சிறையியிலிருந்து விடுதலையானபிறகு சிலருடைய ஆலோசனையின்படி தன் புத்தகத்தை சில வெளியீட்டாளர்களிடம் காட்டினார். அந்தப் புத்தகம் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. பெரிய வரவேற்பைப் பெற்றது. ஆக்ஸ்போர்ட பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜான் ஓவன், பிரசங்கிகள் இளவரசன் சார்லஸ் ஸ்பர்ஜன் போன்றார் அந்தப் புத்தகத்தின் தனித்தன்மையை மிகவும் பாராட்டினார்கள். இதற்குமுன் இதுபோன்ற புத்தகம் வெளிவரவில்லை. மோட்சப் பிரயாணம் என்ற இந்தப் புத்தகம் தேவனுடைய ஜீவனுள்ள வார்த்தையால் நிரம்பி வழிந்தது. வேதாகமத்தின் நறுமணம் அதின் ஒவ்வொரு பக்கங்கத்திலும் வீசியது. ஜாண் பன்யனின் காலத்திலேயே அது பல தடவை அச்சிடப்பட்டது; அநேக ஐரோப்பிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது. “இந்தப் புத்தகத்தில் எந்த இடத்தில் ஊசியால் குத்தினாலும் தேவனுடைய ஜீவனுள்ள வார்த்தை அங்கிருந்து பாய்ந்தோடும்,” என்று சார்லஸ் ஸ்பர்ஜன் கூறினார். இதன் பொருள் என்னவென்றால், இதைப் படிக்கும்போது தேவனுடைய ஜீவனுள்ள வார்த்தைகள் பொங்கி வழிவதைப் பார்க்க முடியும் என்று கூறினார்.
பெட்போர்ட் சிறையில் வேதாகமமும், ஜாண் ஃபாக்ஸ் என்ற பரிசுத்தவான் எழுதிய “இரத்த சாட்சிகளின் வரலாறு” என்ற புத்தகமும், வேறு சிலர் எழுதிய வேத வியாக்கியானங்களுமே அவருடைய துணையாக இருந்தன. அவர் அவைகளில் மூழ்கிவிட்டார். 12 வருட சிறைவாசத்தைப் புத்தகங்கள் வாசிப்பதிலேயே செலவிட்டார். வேதாகமத்தை அவர் குறைந்தது நூறுமுறையாவது வாசித்திருப்பார் என்று சொல்லப்படுகிறது அவருடைய புத்தகங்களைப் படிக்கும்போது அவருடைய வேத அறிவை நாம் புரிந்துகொள்ளலாம்.
ஆறு மாதங்களுக்குப்பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். மீண்டும் நிலைமை மாறக்கூடும் என்பதாலும், மீண்டும் அவர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படக்கூடும் என்பதாலும், தன் குடும்பத்தைப் பராமரிப்பதற்கான வேலைகளில் அவர் ஈடுபட்டார். தன்னிடம் இருந்த உரிமைப் பத்திரங்கள், காப்புரிமை எல்லாவற்றையும் அவர் எலிசபெத்திடம் ஒப்படைத்தார். மீண்டும் கைதுசெய்யப்பட்டால் அல்லது அபராதம் விதிக்கப்பட்டால், தன் குடும்பம் இன்னும் சின்னாபின்னமாகிவிடுமோ என்ற பயத்தில் அப்படிச் செய்தார். நாட்டில் மதச்சூழ்நிலை இன்னும் மாறவில்லை. சர்ச் ஆஃப் இங்கிலாந்தின் சபையைச் சாராதவர்கள் பயத்தோடுதான் கூடிவந்தார்கள். காவலர்கள் கைதுசெய்ய வந்தால், கூடும் இடங்களில் தப்பிப்பதற்கு மறைவான கதவு வைத்திருந்தார்கள். சிலர் தங்கள் கூடும் இடங்களை மாற்றிக்கொண்டேயிருந்தார்கள். இன்னும் சிலர் நள்ளிரவில் அல்லது விடியற்காலையில் கூடினார்கள். அவர்கள் பாடுவதை நிறுத்தினார்கள். அமைதியாகக் கூடினார்கள். அது மிகவும் மன அழுத்தம் நிறைந்த நாட்கள். இங்கிலாந்தின் வரலாற்றில் அது மிகக் கடினமான நேரம். அதுதான் ஜான் பன்யன் பிரசங்கித்துக் கொண்டிருந்த நேரம். ஆனால் அதற்குப்பின் ஜான் பன்யன் மீண்டும் கைது செய்யப்படவில்லை. எனவே, அவர் தொடர்ந்து பிரசங்கம் செய்தார்.
மோட்சப் பிரயாணம் என்ற புத்தகம் பெரிய வெற்றி பெற்றது. ஆனால், ஜாண் பன்யன் அந்தப் புகழில் மயங்கிவிடவில்லை. அவர் பெட்ஃபோர்டிலிருந்த கிடங்கைவிட்டு வெளியேறவில்லை. அவர் அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள சிறிய கிராமங்களுக்குச் சென்று நற்செய்தி அறிவித்தார். இலண்டனில் பேசுவதற்கு அழைத்தபோது அவ்வப்போது சென்றுவந்தார். நிரந்தரமாக இலண்டனுக்குக் குடிபெயரவேண்டும் என்ற எண்ணம் அவருக்கு வரவில்லை. அவருடைய புத்தகம் பெரிய வரவேற்பைப் பெற்றதால் அவர் பெரிய பணக்காரராக மாறியிருப்பார் என்று ஒருவேளை நீங்கள் நினைக்கலாம். அப்படியில்லை. என்ன காரணம் என்று தெரியவில்லை.
அவர் அதிகமாக எழுதினார். பல இடங்களுக்கும் சென்று பிரசங்கித்தார், போதித்தார், ஆலோசனைகள் வழங்கினார், சபை மக்களைச் சந்தித்தார். அழைத்தபோது, முடிந்தபோது அவர் இலண்டனுக்குப் போய்வந்தார். இலண்டன் மாநகர மேயர் ஜாண் ஷார்ட்டர் ஜாண் பன்யனுடைய பிரசங்கங்களை ஆவலோடு கேட்டார். இலண்டனிலுள்ள பல சபைகளில் பிரசங்கித்தார். ஞாயிற்றுக்கிழமைகளில் அவர் இலண்டனிலுள்ள சபைகளில் பிரசங்கித்தால் சர்வசாதாரணமாக 3000 பேர்கள் கூடிவிடுவார்கள். சபையில் இடம் போதாததால் அவருடைய பிரசங்கத்தைக் கேட்க இயலாமல் வீட்டுக்குத் துக்கத்துடன் திரும்பிச் சென்றோர் ஏராளம். ஒருமுறை அடுத்த நாள் பனியன் பிரசங்கிக்கப் போகின்றார் என்று ஒரேவொரு நாளுக்கு முன்னர் அறிவித்தார்கள். அடுத்த நாள் கூட்டம். மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் அதிகாலை 7 மணிக்கு மக்கள் கூடினார்கள். 17 ஆம் நூற்றாண்டில் மக்கள் தொகை அதிகம் இல்லாத காலத்தில் மக்கள் இப்படிக் கூடினார்கள். அவருடைய பிரசங்கத்தைக் கேட்டு ஆண்டவரை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட மக்கள் ஏராளம்.
“மோட்சப் பிரயாணம்” என்ற அவருடைய புத்தகம் அவருடைய வாழ்நாட் காலத்திலேயே 1,00,000 (ஒரு லட்சம்) பிரதிகள் விற்பனையானது. 100மொழிகளுக்குமேல் அந்த நூலை மொழிபெயர்த்துள்ளார்கள். ஜாண் பன்யன் தன் புத்தகங்கள்மூலம் வருமானத்தைப் பெருக்கி ஆடம்பரமான வீடுகளையும், நிலபுலங்களையும், பெருஞ் செல்வத்தையும் சம்பாதித்திருக்க முடியும். ஆனால், அவர் தான் மரணம்வரை ஏழையாகவே வாழ்ந்து நித்யத்துக்குள் நுழைந்தார். அவர் மரிக்கும்போது அவர் விட்டுச் சென்ற செல்வம் வெறும் 42 பவுண்டுகள் 19 ஷில்லிங் மட்டுமே!
அவருடைய சபையில் இருந்த ஒரு வாலிபன் ஒருநாள் ஜான் பன்யனிடம், “என் அப்பா என்னை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். எனக்கும் என் அப்பாவுக்கும் நல்ல உறவு இல்லை. நீங்கள் ஒருமுறை என் அப்பாவைச் சந்தித்துப் பேசினால் நிலைமை சீராகிவிடும்,” என்று மன்றாடினான். ஜான் பன்யன் அந்த வாலிபனின் அப்பாவைச் சந்திக்க இலண்டனுக்குச் சென்றார். குதிரைப் பயணம். இலண்டனில் அவரைச் சந்தித்துப் பேசினார். ஜான் பன்யனிடம் பேசியபிறகு அவர் மனம்மாறினார். அப்பாவும் மகனும் ஒப்புரவானார்கள்.
இலண்டனில் சில இடங்களில் பிரசங்கித்தார். ஊருக்குத் திரும்பும் வழியில் மழை வெள்ளத்தில் சிக்கிக்கொண்டார். குதிரையில் சவாரிசெய்ததால் அவர் அதிகமாகப் பாதிக்கப்பட்டார். பலவீனமானார்; அவரால் தொடர்ந்து சவாரி செய்ய முடியவில்லை. எனவே, இலண்டனின் புறநகரில் வசித்த அவருக்குத் தெரிந்த ஒருவருடைய வீட்டில் தட்டுத்தடுமாறி தஞ்சம்புகுந்தார். அந்த இரவு அவர் அங்கு தங்கினார். ஒன்றிரண்டு நாட்களில் கொஞ்சம் தேறியபின் பயணத்தைக் தொடரலாம் என்று நினைத்திருந்தார். ஆனால், அவர் நினைத்தபடி உடல்நலம் தேறவில்லை. சில நாட்களுக்குப்பிறகு, அவருடைய குடும்பத்தாருக்குச் செய்தி அனுப்புவது நல்லது என்று நினைத்து சொல்லி அனுப்பினார்கள். செய்தி போய்ச் சேருவதற்கு சில நாட்கள் ஆகும். அவருடைய செய்தி குடும்பத்தாருக்குச் சென்றடைவதற்குள், பனியன் அதிக நோய்வாய்ப்பட்டார். வாழ்வின் பெரும்பகுதியத் தனிமையிலும், ஏழ்மையிலும் கழித்த பன்யன் வாழ்வின் கடைசி நேரத்தையும் குடும்பத்தாரைவிட்டுத் தூரமாகத் தனியாகவே இருந்தார். ஆனால் அவர் தங்கியிருந்த வீட்டில் அவருடைய அநேக நண்பர்கள் கூடினார்கள்.
1688 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி வெள்ளிக் கிழமை காலைவேளை. அவருடைய படுக்கைக்கு அருகே பலசரக்கு வியாபாரி ஜாண் ஸ்ட்ரட்விக், தேவ ஊழியர் ஜியார்ஜ் கோக்கின், சீப்புகள் செய்யும் சகோதரன் சார்லஸ் டோ ஆகிய மூவரும் இரவு முழுவதும் நின்று கவனித்துக்கொண்டிருந்தார்கள். தன் நண்பர் ஜியார்ஜ் கோக்கிடம் தான் கடைசியாக எழுதின “தேவனுக்கு உகந்த ஜீவபலி” என்ற புத்தகத்திற்கு தலையங்கம் எழுதுமாறு கேட்டுக்கொண்டார். அவருடைய நண்பர் சார்லஸ் டோ பன்யனின் படுக்கையருகே வந்து, அவருடைய முகத்துக்கு நேராகக் குனிந்து, அவருடைய கையைத் தூக்கி எடுத்து, அன்பொழுகத் தட்டிக்கொடுத்து, “சகோதரன் பன்யன், சகோதரன் பன்யன்,”கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்” என்ற தலைப்பில் நீங்கள் எழுதிய உங்கள் புத்தகத்தை நான் வாசித்து மகிழ்ந்தேன். உங்கள் புத்தகங்கள் அனைத்தும் அருமையானவை. அவைகளிலிருந்து பெருமளவிற்கு நான் தேவ சமாதானத்தையும், ஆறுதலையும் பெற்று ஆனந்தித்துக் கொண்டிருக்கின்றேன்” என்று கூறி அழுதார். அவர் அவர்களிடம், “எனக்காக அல்ல, உங்களுக்காகவே அழுங்கள்; ஏனென்றால், நான் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவினிடத்தில் போகிறேன்; அவர் ஒரு பாவியான என்னை ஏற்றுக்கொள்வார் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை,” என்றார். ஜாண் பன்யன் நித்தியத்துக்குள் நுழைந்தார். அப்போது அவருக்கு வயது 60. அவர் இலண்டனுக்கு அருகிலிருந்த பன்ஹில்ஃபீல்ட்ஸ் என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டார். அரசர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள “வெஸ்ட் மினிஸ்டர் அபி” உள்ள இலண்டனில் ஜாண் பன்யனுக்கு ஒரு நினைவுப் பலகணி நிறுவப்பட்டுள்ளது. பெட்போர்ட் நகரத்தில் பன்யனுடைய உருவச்சிலை எழுப்பப்பட்டு, அங்குள்ள அருங்காட்சியகத்தில் அவருடைய பொருட்கள் பலவும் வைக்கப்பட்டுள்ளன. மோட்சப் பிரயாணி புத்தகத்தில் வருகிற முக்கிய கதாபாத்திரத்தைப் போலவே, அவர் திடமான தரையைக் கடந்து பரம நகரத்தின் வாயில்கள் வழியாக நடந்தார்.