Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More


"அமேசிங் கிரேஸ்" "நல் மீட்பர் இயேசு நாமமே" என்ற பாடல்களை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள், பலமுறை பாடியிருப்பீர்கள். இந்தப் பாடல்களைப் பாடாத கிறிஸ்தவப் பாடகர்களோ, சபைகளோ இருக்க முடியாது.  " அமேசிங் கிரேஸ்" என்ற பாடலுக்கு வயது 250. இந்தப் பாடல் உட்பட மொத்தம் 283 பாடல்கள் எழுதியவர் யார் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஆம், இந்தப் பாடலை எழுதியவரைப்பற்றித்தான் நான் இன்று பேசப்போகிறேன்.

இவருடைய பெயர் ஜான் நியூட்டன். இவரைப்பற்றி உங்களுக்கு அதிகமாகத் தெரியாவிட்டாலும், இந்தப் பெயரைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இவருடைய வாழ்க்கை வரலாறு வியப்பானது, விந்தையானது. இவரை அறிய அறிய நாம் திக்குமுக்காடுவோம், திகைப்போம், மலைப்போம். ஒருவேளை, அதனால்தானோ என்னவோ, "வியத்தகு கிருபை" என்ற பாடலை எழுதினார்.

சரி, ஆரம்பிபோம். 

ஜான் நியூட்டன் இங்கிலாந்தில் இலண்டன் மாநகரத்தில் தேம்ஸ் நதியோரத்திலுள்ள வாப்பிங் என்ற இடத்தில 1725இல் பிறந்தார். அவருடைய அப்பா பிரபலமான ஒரு கப்பல் மாலுமி. பெரிய பணக்காரர் என்று சொல்ல முடியாது. மோசமானவர் என்றும் சொல்லமுடியாது. திறமையான கப்பல் மாலுமி. அதில் சந்தேகமில்லை. பிரபலமானவர். கண்டிப்பானவர், கடுமையானவர். நிறைய நண்பர்கள் உண்டு. 

கப்பல் மாலுமிகள் தரையில் பிறந்து தண்ணீரில் வாழ்பவர்கள். ஜான் நியூட்டனின் அப்பா மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன? அவருடைய அப்பாவும், எல்லா மாலுமிகளையும்போல், ஒரு வருடத்தில் பல மாதங்களைக் கடலில்தான் கழித்தார். வீட்டில் அவரும் அவருடைய அம்மாவும்தான் தனியாக வாழ்ந்தார்கள்.

அவருடைய அப்பா பணிமுடிந்து வீட்டிற்கு வரும்போது ஜான் நியூட்டன் பயந்தார். அவர் அவரைப் பார்க்க விரும்பவில்லை. அவருடைய அப்பா கப்பலில் எப்படிக் கடுமையாகவும், கண்டிப்பாகவும் இருந்தாரோ, அப்படிதான் வீட்டிலும் இருந்தார், நடந்தார்.  

அவருடைய அம்மா, எலிசபெத், அவருடைய அப்பாவுக்கு முற்றிலும் மாறுபட்டவர். இப்படிப்பட்ட இருதுருவங்கள் எப்படி ஒன்று சேர்ந்தார்கள் என்பது விந்தைதான். அவருடைய அம்மா பக்தியுள்ளவர், மிகவும் மென்மையானர். அதிகம் பேசமாட்டார், காரியங்களைத் தனக்குள்ளேயே வைத்துக்கொண்டார். வீட்டில் அவரும், அவருடைய அம்மாவும் மட்டுமே இருந்ததால் இருவரும் ஒன்றாக நிறைய நேரம் செலவிட்டார்கள். அவருடைய அம்மா மெத்தப்படித்த மேதாவி இல்லை. ஆனால், அவர் தனக்குத் தெரிந்த அனைத்தையும் தன் மகனுக்குக் கற்றுக்கொடுத்தார். மிக முக்கியமாகத் தேவனையும், மதத்தையும்பற்றிய தன் உணர்வுகளையும், நம்பிக்கைகளையும் தன் மகனுக்குக் கடத்தினார். தன் மகன் அவனுடைய அப்பாவின் வழியைப் பின்பற்றி ஒரு மாலுமியாக மாறுவதை அவர் விரும்பவில்லை. மாறாக, தன் மகன் ஒரு மதபோதகராக மாற வேண்டும் என்று அவர் விரும்பினார்.

அவர் தன் மகன் நியூட்டனை உள்ளூரில் இருந்த ஆலயத்துக்கு அழைத்துச் செல்வது வழக்கம். ஆலயத்துக்கு இருவரும் சேர்ந்து நடந்துபோனார்கள். போகும்போதும் வரும்போதும் இருவரும் தேவனைப்பற்றியே பேசினார்கள். ஆலயத்தில் நியூட்டன் வேதாகமத்தைப்பற்றி பல விஷயங்களைக் கற்றுக்கொண்டான். பொதுவாக சபைகளில் பாரம்பரியமான பழைய பாடல்களைப் பாடினார்கள். ஆனால், இந்த ஆலயத்தில் மிகச் சமீபத்தில் எழுதப்பட்ட புதுப்புது பாடல்களைப் பாடினார்கள். நியூட்டன் இந்த அழகான பாடல்களை விரும்பினான். இந்தப் பாடல்கள் மிகவும் வித்தியாசமாக இருந்தன. இந்தப் பாடல்களை மெல்லிசையோடு பாடும்போது அது அருமையாகவும், கவர்ச்சியாகவும் இருந்தது. அந்தப் பாடல்கள் நியூட்டனின் இருதயத்தைக் கொள்ளைகொண்டன.

இந்தப் புதிய பாடலாசிரியரை அந்த ஆலயத்திலிருந்த போதகருக்கு நன்றாகத் தெரியும். இவர் அவருடைய நண்பர். அந்தப் பாடலாசிரியரின் பெயர் ஐசக் வாட்ஸ். அவர் அப்போது அந்த நகரத்திற்கு அருகிலிருந்த இன்னொரு நகரத்தில் போதகராக இருந்தார். அப்போதுதான் அவர் "மாட்சியின் கர்த்தர் தொங்கி மாண்ட, அற்புத சிலுவை காண்கையில்" என்ற (when I survey the wondrous cross on which the young prince of glory died) பாடலை எழுதியிருந்தார். ஆலயத்தில் விசுவாசிகள் இந்தப் பாடலைப் பாடியபோது சிறுவன் ஜான் நியூட்டன் பரவசமடைந்தான். இந்தப் பாடல் அவனுடைய இருதயத்தில் பதிந்துவிட்டது. எனவே, பாடல்களைக் கேட்க வேண்டும் என்பதற்காகவே அவன் ஆலயத்திற்குச் செல்ல விரும்பினான். அவனும், அவனுடைய அம்மாவும் தவறாமல் ஆலயத்துக்குச் சென்றார்கள். மெல்லிசைப் பாடல்களும், பாடல் வரிகளும், பிரசங்கங்களும் அவனுக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தின. இதன்மூலம் அவன் தன் அப்பாவின் வழியில் போகாமலிருக்கக் கற்றுக்கொண்டான்.

அவனுடைய ஆறாவது வயதில் வீட்டில் நிலைமை மாறத் தொடங்கியது. அவனுடைய அம்மாவுக்கு உடல்நலம் சரியில்லை என்று அதுவரை நியூட்டனுக்குத் தெரியாது. ஆம், அவனுடைய அம்மா காசநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதை அவர் தன் மகனிடம் ஒருபோதும் சொல்லவில்லை. இதனால்தான், அவர் காரியங்களைத் தன் இருதயத்துக்குள் மறைத்து வைத்துக்கொள்ளக்கூடியவர் என்று ஏற்கெனவே சொன்னேன்.  அவர் ஒவ்வொருநாளும் இறந்துகொண்டிருந்தார், மரணத்தை நெருங்கிக்கொண்டிருந்தார். ஆனால், நியூட்டனுக்கு இது தெரியவே தெரியாது.

ஒரு நாள் அவனுடைய ஒரு தூரத்து உறவினர் அவனுடைய வீட்டிற்கு வந்தார். வந்தவர், "உன் அம்மாவுக்குக்  கொஞ்சம் சுத்தமான, சுகாதாரமான காற்று தேவைப்படுகிறது. அது கிராமப்புறத்தில்தான் கிடைக்கும். எனவே, உன் அம்மாவை நான் கொஞ்ச நாள்கள் என் கிராமத்திற்கு அழைத்துச் செல்லுகிறேன்," என்று கூறி அவனுடைய அம்மாவைத் தன்னுடன் அழைத்துச் சென்றார். அவர் சொன்னதை ஜான் உண்மையில் புரிந்துகொள்ளவில்லை. சிறுவன்தானே! அம்மா கொஞ்ச நாள்களில் திரும்பிவந்துவிடுவார்கள் என்று ஜான் நினைத்தான். அவனுடைய அம்மா இறப்பதை சிறுவன் ஜான் பார்க்கக்கூடாது என்பதற்காகத்தான் அவனுடைய உறவினர் அவனுடைய அம்மாவைத் தன் ஊருக்கு அழைத்துச் சென்றார். அம்மா தன் ஏழாவது பிறந்தநாளுக்குமுன் திரும்பிவிடுவார்  என்று ஜான் நினைத்தான். ஆனால், அவர் திரும்பி வரவில்லை. சில வாரங்களில் அவனுடைய அம்மா இறந்துவிட்டார் என்ற துயரச் செய்தியைத் தன் குடும்ப நண்பர் ஒருவர்மூலம் ஜான் தெரிந்துகொண்டான். ஜான் மனமுடைந்தான்.

இந்த நேரத்தில், அவனுடைய அப்பா வீட்டில் இல்லை. வேலையினிமித்தம் கடலில் இருந்தார். மாலுமி இல்லையா! எனவே, ஜான் பக்கத்து வீட்டுக்காரருடன் தங்கியிருந்தான். அவனுடைய அப்பாவைத் தொடர்புகொள்ள வழியேயில்லை. இப்போது அம்மா இல்லை! அம்மாவை இழந்துவிட்டான். அப்பாவும் அருகில் இல்லை! மோசமான நிலைமை! நிலைமையைச் சமாளிக்கக் கடினமாக இருந்தது.  

மாலுமி அப்பா கடலில் பல மாதங்கள் தன் பணி முடித்து ஒருநாள் வீடுதிரும்பினார். வீட்டிற்கு வந்தார். வீடு பூட்டியிருந்தது. வீட்டின் ஜன்னல்களில், துக்கத்தின் அடையாளமாக, கறுப்புத் துணிகள் கட்டப்பட்டிருந்தன. அடுத்த வீட்டிற்குச் சென்றார்; அங்கு மகனும், துக்கத்தின் அடையாளமாக, கருப்பு உடை உடுத்தியிருந்தான். ஆம், தன் மனைவி இறந்துவிட்டார் என்பதை அவர் புரிந்துகொண்டார். சிறுவன் ஜானை ஆறுதல்படுத்துவதற்குப்பதிலாக, ஜானிடம், "அழாதே, உறுதியாக இரு," என்றார். ஆம், அவனுடைய அம்மா இறந்த துக்கத்திற்காக அழுவதற்குக்கூட அவனுடைய அப்பா அனுமதிக்கவில்லை.

அம்மா இறந்தபோது அப்பா வீட்டில் இல்லை. அம்மா இறந்தபிறகு, வீட்டிற்கு வந்த அப்பா அம்மாவிற்காக அழுவதற்கு ஜானை அனுமதிக்கவில்லை. வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சுவதுபோல, அவனுடைய அப்பா  மிக விரைவில் வேறொரு பெண்ணைத்  திருமணம் செய்தார். ஜானின் இந்த இளம் மாற்றாந்தாய் அவனைக்  கவனிக்கவில்லை. அவளுக்கு அவன்மேல் எந்த அக்கறையும் இல்லை. சிறுவன் ஜான் நியூட்டனின்மேல் அன்புகாட்ட ஆளில்லை. அவனைக் கவனிக்க ஆளில்லாததால் அவனே தன்னைக் கவனித்துக்கொள்ள வேண்டியிருந்தது. அவனுக்கு எந்த உதவியும் யாரிடமிருந்தும் கிடைக்கவில்லை. அவனுடைய மாலுமி அப்பா கடலில் கப்பலில் காலத்தைக் கழித்தார். அவனுக்கு வழிகாட்ட, அவனை வழிநடத்த ஆளில்லை. அவன்தான் அவன் வாழ்க்கையின் அதிகாரி. தனக்கு விருப்பமானவைகளைச் செய்தான். எனவே, அவன்  சிக்கலில் சிக்கத் தொடங்கினான்.  

நியூட்டனை அவனுடைய அப்பா உறைவிடப் பள்ளியில் சேர்த்தார். அங்கும் அவன் நிறையப் பிரச்சினைகளை ஏற்படுத்தினான். அங்கு ஒரு நல்ல காரியம் நடந்தது. என்னவென்றால், அவன் கல்வி பயின்றான். எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டான். கணிதம் கற்றுக்கொண்டான். ஆனால், அவன் உறைவிடப்பள்ளியை வெறுத்தான். 

அவனுடைய பதினோராவது வயதில் அவனுடைய அப்பா உறைவிடப்பள்ளிக்கு வந்து, "நீ படித்தது போதும். உனக்கு இனி படிப்பு வேண்டாம். என்னோடு வா. நீ பெரியவனாகிவிட்டாய். நீ ஒரு மாலுமியாவதற்குத் தேவையான பயிற்சி பெற வேண்டும். நீயும் என்னைப்போல ஒரு மாலுமியாக மாறி நம்  குடும்பத்தின் பாரம்பரியத்தைத் தொடரவேண்டும்," என்று கூறி அவனை பள்ளியிலிருந்து கூட்டிகொண்டுபோனார். 

ஆம், ஜான் அவனுடைய பதினோராவது வயதில் மாலுமியின் பயிற்சி பெற கப்பலில் ஏற்றப்பட்டான்.

ஜான் சிறுவனாக இருந்தபோதே அவனுடைய வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் பல நடந்தன. இவையனைத்தும் அவனுடைய வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின என்று அவர் பிற்காலத்தில் கூறினார். 

அவனுடைய பத்தாவது வயதில் நடந்த ஒரு சம்பவத்தை நான் குறிப்பிட விரும்புகிறேன். ஒருநாள் ஒரு போர்க்கப்பல் தேம்ஸ் ஆற்றில் நங்கூரமிட்டிருந்தது. நதிக்கரையில் வாழ்ந்த ஜானும், வேறு பல சிறுவர்களும் அந்தப் போர்க்கப்பலை வேடிக்கைபார்த்தார்கள். எல்லாரும் அதைப்பற்றியே பரவசமாகப் பேசினார்கள். சிறிய படகுகளில் சரக்குகளைக் கப்பல்களிலிருந்து கரைக்கும், கரையிலிருந்து கப்பல்களுக்கும்  கொண்டுபோகும் படகோட்டிகள் கரைக்கு வந்தபோது, கரையிலிருந்த சிறுவர்கள், "நாங்கள் அந்தக் கப்பலுக்கு வரட்டுமா?" என்று கேட்டார்கள். படகோட்டி, "அதற்கென்ன. நான் உங்களைக் கூட்டிகொண்டுபோகிறேன்," என்று உறுதியளித்தார். "போர்க்கப்பலுக்கு மிக அருகில் செல்லலாம், அதன்மேல் ஏறலாம், அதைத் தொடலாம், உள்ளேபோகலாம், அதைச் சுற்றிவரலாம்" என்று நினைத்தபோதே சிறுவர்கள் பரவசமடைந்தார்கள். ஜான் அந்தத் தருணத்தை ஆவலோடு எதிர்பார்த்தான். அடுத்த ஞாயிறு மதியம் சிறுவர்களைக் கூட்டிக்கொண்டுபோக ஏற்பாடுசெய்யப்பட்டது. 

ஞாயிற்றுக்கிழமை ஜான் வழக்கம்போல் ஆலயத்துக்குச் சென்றான். பிரசங்கியார் பிரசங்கித்துக்கொண்டிருந்தார். பிரசங்கம் எப்போது முடியும் என்று காத்திருக்க, அது நீண்டுகொண்டேபோனது. நின்றபாடில்லை. ஜான் நெளிய ஆரம்பித்தான். ஒருவழியாகப் பிரசங்கம் முடிந்தது. வீட்டிற்குப் போனான். வீட்டில் சாப்பிட்டுவிட்டுத்தான் எதையும் செய்ய வேண்டும் என்ற நிபந்தனை. அந்த நாட்களில் சிறுவர்களை யாரும் பொருட்படுத்தவில்லை; அவர்களுடைய பேச்சை மதிக்கவில்லை, கேட்கவில்லை. எனவே, அவன் சாப்பிட்டால் மட்டும் போதாது. மற்றவர்களும் சாப்பிட்டு முடிக்கும்வரைக் காத்திருக்க வேண்டும். கெஞ்சினான், கொஞ்சினான். அவனுடைய அப்பா அசையவில்லை. அவன் அங்கேயே உட்கார்ந்து காத்திருக்க வேண்டியிருந்தது. ஜானுக்கு எல்லார்மேலும் கோபம், ஆத்திரம். "நான் இப்போது நதிக்கரையில் இருக்கவேண்டும். நான் கப்பலுக்குச் செல்ல வேண்டும், கப்பலைப் பார்க்க வேண்டும். என் நண்பர்கள் இப்போது படகில் ஏறிக்கொண்டிருப்பார்கள். என்னை விட்டுவிட்டுச் சென்றுவிடுவார்களோ! என் வாய்ப்பு நழுவிவிடுமோ!," என்று எண்ணத் தொடங்கினான். கடைசியில், ஒருவழியாக, அவனுடைய அப்பா, "சரி, போ," என்று கூறினார். அவன் தலைதெறிக்க ஓடினான். போர்க்கப்பலைப் பார்க்க படகோட்டி அவர்களை அழைத்துச் செல்லும் இடத்திற்குச் செல்ல மூன்று கிலோமீட்டர் ஓட வேண்டும். ஓடினான். இடத்தை அடைந்தான். இதோ! அப்போதுதான் சிறிய படகு கரையிலிருந்து கிளம்புகிறது. ஏமாற்றம்! அவனுடைய நண்பர்கள் படகிலிருந்து அவனைப்பார்த்து நக்கலாகச் சிரித்தார்கள். "தாமதமாக வந்தால் இதுதான் கதி" என்று கிண்டலித்தார்கள்.  அவன் கரையில் நின்று கொதித்துக்கொண்டிருந்தான். கோபம் கொப்பளித்தது. "இந்தப் பிரசங்கியார் எதற்கு இன்றைக்கு இவ்வளவு நேரம் பிரசங்கித்தார். யார் இவரை இவ்வளவு நேரம் பிரசங்கிக்கச் சொன்னது! என் அப்பா இன்றைக்கு ஏன் இப்படி நடந்துகொண்டார். நான் சாப்பிட்டு முடித்தவுடன் என்னைப் போகச் சொல்லியிருக்கலாமே! எல்லாரும் சாப்பிடும்வரை ஏன் என்னைக் காத்திருக்கச் சொன்னார்!" மனக்குமுறல்! இதோ படகு போர்க்கப்பலை நெருங்குகிறது!  திடீரென்று படகு எதிலோ மோதுகிறது. தண்ணீருக்கு அடியில் இருந்த எதிலோ மோதி படகு கவிழ்கிறது. படகிலிருந்த எல்லாரும் தண்ணீரில் தத்தளிக்கிறார்கள். கவிழ்ந்த படகு கொஞ்ச நேரத்தில் மூழ்கியது. படகில் பயணித்த அனைவரும் மூழ்கினார்கள். நியூட்டன் கரையில் செய்வதறியாது திகைத்து நின்றான். தன் நெருங்கிய நண்பர்கள் நீரில் மூழ்குவதைப் பார்த்துக் கதறினான். பத்து வயதுச் சிறுவன் அதிர்ச்சியடைந்தான். ஆனால், அவன் இதைப் புரிந்துகொண்டான். தான் காப்பாற்றப்பட்டதைப் புரிந்துகொண்டான். இரண்டு நிமிடம் முன்னதாக வந்திருந்தால் அவனும் படகில் சென்றிருப்பான், ஆற்றில் மூழ்கி இருந்திருப்பான்.

இந்தச் சம்பவம் அவனுடைய உள்ளத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. அவனுடைய வாழ்வில் இதுபோல் பல சம்பவங்கள்  நிகழ்ந்தன. அவன் மரணத்திற்கு மிக அருகில் சென்றவந்த நேரங்கள் பல உள்ளன. பின்னாட்களில் அவர் அந்தத் தருணங்களை நன்றியோடு நினைவுகூர்ந்தார்.

ஜான் தன் நண்பர்களின் அடக்க ஆராதனைக்குச் சென்றான். அந்த நேரத்தில் அவன் உண்மையில் கொஞ்சம் மனந்திரும்பினான் என்று நினைக்கத்தோன்றுகிறது. "நான் கெட்ட பையன்; கொஞ்சம் காட்டுத்தனமானவன். சரி, இனி ஒவ்வொரு நாள் இரவும் பக்திக்கேதுவான சில பத்திகளை வாசிப்பேன், ஜெபிப்பேன்," என்று தீர்மானித்தான். தீர்மானித்தபடியே கொஞ்ச நாள்கள் செய்தான். ஆனால், அவனுடைய நடத்தையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அவை வெறும் பக்திமுயற்சிகளாவே நின்றுவிட்டன.

இப்போது நாம் கொஞ்சம் முன்னோக்கிப் போவோம். அப்போது ஜானுக்கு 17 வயது. அவனுடைய அப்பா ஒரு செல்வாக்குமிக்க மாலுமி. நான் ஏற்கெனவே சொன்னதுபோல், தன் மகனும் தன்னைப்போல ஒரு நல்ல மாலுமியாக வேண்டும் என்று அவர் விரும்பினார். எனவே, அவர் தன் செல்வாக்கைப் பயன்படுத்தித் தன் மகனை ஒரு நல்ல இடத்தில் சேர்க்க முயன்றார். அவர் ஜானை மனிஸ்டீ என்ற ஒரு பணக்கார மாலுமிக்கு அறிமுகப்படுத்தினார். மனிஸ்டீயும் ஜானின் அப்பாவும் நல்ல நண்பர்கள். அந்த மாலுமி தன் நண்பரின் வேண்டுகோளை ஏற்று, “சரி, நான் உன் மகனை ஏற்றுக்கொள்கிறேன். அவனை நான் பயிற்றுவித்து ஒரு நல்ல மாலுமியாக்குவேன். எல்லாவற்றையும் நான் அவனுக்குக் கற்றுக்கொடுப்பேன். என்னிடத்தில் சொல்லிவிட்டாய் இல்லையா? நீ இனி நிம்மதியாய் இருக்கலாம். அவனை மாலுமியாக மாற்றுவது என் பொறுப்பு," என்றார். இது ஜானுக்கு ஓர் அற்புதமான வாய்ப்பு.

மாலுமி மனிஸ்டீ ஓர் அடிமை வியாபாரி. இந்தக் காலகட்டத்தில், அதாவது 1700களில், இங்கிலாந்து அட்லாண்டிக் பெருங்கடலில் அடிமை வியாபாரம் செய்தது. இங்கிலாந்துக்காரர்கள் கப்பல்களில் இங்கிலாந்திலிருந்து புறப்பட்டு ஆப்பிரிக்காவின் கரையோரமாகப் பயணித்து, அங்கிருந்த பூர்வீக ஆப்பிரிக்கர்களை சிறைப்பிடித்து, பின்னர் அவர்களை ஜமைக்காவிற்கும், அமெரிக்காவிற்கும் கொண்டுபோய்  அடிமைகளாக விற்றார்கள். இதுதான் அவர்களுடைய அடிமை வியாபாரம். கொண்டுவந்த அடிமைச் சரக்குகளை விற்றுவிட்டு அவர்கள் இங்கிலாந்துக்குத் திரும்பிச்சென்றார்கள். இது மிகவும் இலாபகரமான அடிமை வியாபாரம். இந்த அடிமைகளை அவர்கள் வெறும் சரக்குகளாகத்தான் பார்த்தார்கள். அவர்களை யாரும் மனிதர்களாகக் கருதவில்லை. 

மாலுமி மானெஸ்டி மிகவும் பணக்கார அடிமை வியாபாரி. இந்த நேரத்தில் 17 வயதான ஜான் நியூட்டணுக்குக் கடலைப்பற்றியும், அடிமை வியாபாரத்தைப்பற்றியும், மாலுமிகளைப்பற்றியும் கொஞ்சம் தெரியும். ஏனென்றால், அவர் தன் அப்பாவோடு சில தடவை கப்பலில் போய்வந்தார். மனிஸ்டீ ஜானிடம், "நீ கொஞ்சம் புத்தசாலியாக இருந்தால், கொஞ்சம் கடினமாக உழைத்தால், உனக்கு 30 வயது ஆவதற்குமுன் நீ மிகப்  பெரிய பணக்காரனாக மாறிவிடலாம். ஒருவேளை நீ ஒரு பெரிய சாம்ராஜ்யத்தையே உருவாக்கலாம்; நிறைய சொத்துக்களைச் சம்பாதிக்கலாம்; ஏன், நீ இங்கிலாந்தின் பாராளுமன்றத்திற்குச் செல்வதற்கும்கூட வழிபிறக்கும்," என்றார். இதைத்தான் அவனுடைய அப்பாவும் விரும்பினார். அவர் சொன்னது ஜானுக்கு பிடித்தது. மாலுமி மனிஸ்டீயிடம் எல்லாவற்றையும் கற்றுத் தேர்ந்து தானும் ஓர் அடிமை வியாபாரியாக மாற  இது ஓர் அறிய வாய்ப்பு என்று ஜான் நினைத்தான். தொழிலில் சாதிக்கலாம், கொடிகட்டிப்பறக்கலாம், பணம் சம்பாதிக்கலாம், பேரும் புகழும் கிடைக்கும், பெரிய ஆளாகலாம். அவருடைய அப்பாவுக்கும் இதில் பெரிய மகிழ்ச்சி. 

மாலுமி மனிஸ்டீயுடன் புறப்படுவதற்கு ஒரு வாரத்துக்குமுன் ஜானுக்கு ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதம் ஜானின் அம்மாவை அவருடைய கடைசி நாள்களில் தன் வீட்டில் வைத்துக் கவனித்த அவருடைய உறவினரிடமிருந்து வந்தது. தன்னை வந்து பார்க்குமாறு அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தார்கள். போவதா வேண்டாமா என்று அவனுக்குத் தெரியவில்லை. "என் அம்மாவை அவருடைய கடைசி காலத்தில் கவனித்தவர்கள் அல்லவா? ஒரு மரியாதைக்காவது போய்வந்துவிடலாம்," என்று தீர்மானித்து, கப்பல் புறப்படுவதற்கு மூன்று நாட்களுக்குமுன்பு, கென்ட் என்ற இடத்திலிருந்த தன் உறவினர் வீட்டுக்கு ஜான் போனான்.

அங்கு, அவன் அந்தக் குடும்பத்தாரையும், குறிப்பாக, குடும்பத்தின் மூத்த மகள், மேரி கேட்லெட் என்ற பாலியையும் பார்த்தான். 17 வயது ஜான் நியூட்டன் அந்தப் பெண்ணைப் பார்த்ததும் விரும்ப ஆரம்பித்துவிட்டான். அந்தப் பெண்ணுக்கு அப்போது 14 அல்லது 15 வயது இருக்கும். அவர்களைப் பார்த்துவிட்டு, ஒரேவோர் இரவு மட்டும் தங்கிவிட்டு, அடுத்த நாள் புறப்பட்டு கப்பலுக்கு வந்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் ஜான் அங்கு போனான். ஆனால், கப்பல் பயணத்தையும், மாலுமி மானெஸ்டியையும் மறந்து, அங்கு மூன்று வாரங்கள் தங்கினான். அடிமை வியாபாரியாக மாறும் கனவை நினைவாக்கும் பயணத்தை  முற்றிலும் மறந்துவிட்டான். முதல் பார்வையிலே காதலில் விழுந்துவிட்டதால் மூன்று வாரங்கள் சென்றது அவனுக்குத் தெரியவில்லை. அவன் கப்பலில் போக வேண்டும் என்று அவனுடைய உறவினருக்குத் தெரியாது. ஜான் தன் உணர்வுகளை அங்கு யாருடனும் பகிர்ந்துகொள்ளவில்லை. ‘இந்தப் பெண்ணின் முதல் பார்வையிலேயே நான் என்னைத் தொலைத்தேன். அந்தக் கணத்திலிருந்து என் இதயத்தில் ஒரு கணம்கூட அதன் தாக்கம்  குறையவில்லை; அவள்மேல் என் அன்பு அதிகரித்தது" என்று பின்னாட்களில் அவர் எழுதினார். 

மூன்று வாரங்களுக்குப்பின் ஊருக்குத்திரும்பிச்செல்வதை நினைத்து அவன் பயந்தான். "நான் அப்பா ஏற்பாடுசெய்தபடி மாலுமி மானெஷ்டியுடன் கப்பலில் செல்லவில்லை. என் அப்பாவுக்கு இது நிச்சயமாகத் தெரியவரும். என்ன நடக்கும் என்று நினைக்கவே பயமாக இருக்கிறது," என்ற எண்ண அலைகள் அவனுடைய மனதில் எழுந்தன. அவனால் அதற்குமேல் அங்கு தங்க முடியவில்லை. எப்படியும் ஊருக்குத்திரும்பிச்சென்றாக வேண்டும். தள்ளிப்போடலாம், தாமதிக்கலாம், ஆனால் தவிர்க்கமுடியாதே. 

தன் மகன் மாலுமி மானெஷ்டியுடன் கப்பலில் புறப்படவில்லை என்று அவனுடைய அப்பா ஏற்கெனவே தெரிந்துகொண்டார். ஒருவேளை தன் மகன் இலண்டனிலிருந்து கென்ட்டிற்குச் செல்லும் வழியில் கொல்லப்பட்டிருக்கலாம் என்றுதான் அவர் ஆரம்பத்தில் நினைத்தார். எனவே, அவனைத் தேடிப்பார்க்க ஆள்களை அனுப்புவதற்குக்கூட அவர் ஏற்பாடுசெய்தார்.

ஜான் திரும்பி வந்தான். "அப்பா, என்னை மன்னித்துவிடுங்கள். போன இடத்தில் நான் தற்செயலாக அதிக நாள்கள் தங்கிவிட்டேன்," என்றான். அவனுடைய அப்பா கோபத்தில் கொந்தளித்தார். ஆத்திரத்தில், “இனி அவ்வளவுதான். நான் உனக்காக ஏற்பாடுசெய்த இந்த அருமையான வாய்ப்பை நீ நாசமாக்கிவிட்டாய். இனி நான் ஒன்றும் செய்யப்போவதில்லை. இதுதான் உனக்குத் தண்டனை," என்றார்.

கொஞ்ச நாள்களுக்குப்பின் அவனுடைய அப்பா இங்கிலாந்திற்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்குமிடையே பயணம் செய்யும் ஒரு வணிகக் கப்பலில் அவனை மிகச் சாதாரணமான, கடைநிலை பணியாளாக, சேர்த்துவிட்டார். சம்பளம் கிடையாது. இவ்வாறு, ஜான் நியூட்டன் மீண்டும் கப்பலில் ஏற்றப்பட்டார். மிகக் கீழ்மட்டத்திலுள்ள  மாலுமி செய்யவேண்டிய எல்லாவிதமான தாழ்வான, மலிவான, வேலைகளையும் அவர் செய்ய வேண்டியிருந்தது. இதன்மூலம் ஜான் வாழ்க்கையில் நல்ல பாடத்தைக் கற்றுக்கொண்டான் என்று நினைக்கிறீர்களா? இல்லை. கற்றுக்கொள்ளவேண்டியதைக் கற்றுக்கொள்ளாமல், கற்றுக்கொள்ளக்கூடாததைக் கற்றுக்கொண்டான். 

அவனுடைய அம்மா அவனுடைய இளம் வயதில் தேவனையும், மதத்தையும்பற்றிச் சொல்லியிருந்த பல காரியங்களை ஜான் இதுவரை நம்பினான், அவைகள் ஏதோவொரு வகையில் அவனுக்குள் இருந்தன. ஆனால், இப்போது இந்தக் கப்பல் பயணம் அவனுடைய மத நம்பிக்கைளைத் தவிடுபொடியாக்கிற்று. அவன்  மாலுமிகளின் வாழ்க்கைமுறையையும், வழிகளையும் கற்றுக்கொள்ளத் தொடங்கினான். மாலுமிகள் உடனடிச் சிற்றின்பங்களை அனுபவித்தார்கள். அவர்கள் சுதந்திரமானவர்கள். அவர்களைப்போல் ஜானின் உரையாடலின் தரம் தாழ்ந்தது, புகைக்கவும், குடிக்கவும் ஆரம்பித்தான். தட்டிக்கேட்கவும், வழிநடத்தவும், தட்டிக்கொடுக்கவும், தவறைச் சுட்டிக்காட்டவும் ஆள் கிடையாது. மாலுமிகள் செய்த எல்லாவற்றையும் செய்தான். உல்லாசம், சிற்றின்பம், சுதந்திரப்பறவை. அவன் இந்த வாழ்க்கையை விரும்பினான். 

சமுதாயத்தின் ஒழுக்கங்கள், சட்டதிட்டங்கள், ஒழுங்குமுறைகள் ஆகியவைகளைக் கற்றுக்கொள்வதற்குப் பதிலாக, அவைகளைக் காற்றில் பறக்கவிட்டு, கட்டுப்பாடற்ற வாழ்க்கை வாழக் கற்றுக்கொண்டான். கடலில் கப்பலில் அவன் மனம்போல் வாழ முடிந்தது. அந்த வாழ்க்கையை அவன் விரும்பினான். மேலும், அவன் பல்வேறு நாடுகளுக்கும், நகரங்களுக்கும் போவதை விரும்பினான். உலகைப் பார்க்க விரும்பினான். எனவே, ஏதோவொரு வகையில் அவன் தன் வாழ்க்கையை மாலுமியாக வாழ விரும்பினான். அதற்காகப் பாடுபடத் தீர்மானித்தான்.

ஒரு முறை அவர் பயணித்த கப்பல் வெனிஸ் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. அவன் கப்பலில் தூங்கிக்கொண்டிருந்தான். அப்போது அவன் ஒரு கனவு கண்டான். அவன் கண்ட இந்தக் கனவு அவனுக்குள் நீண்ட காலம் நிலைத்திருந்தது. இது ஒரு சாதாரணமான கனவாக இருந்திருந்தால் அவன் சீக்கிரத்தில் மறந்திருப்பான். ஆனால், இந்தக் கனவு அவருக்குள் கடைசிவரை நீடித்தது. இது ஓர் அசாதாரணமான கனவு. இதோ அவனுடைய கனவு.

ஒரு மனிதன் அவனிடம் வந்து, ஒரு மோதிரத்தைக் கொடுத்து, "இந்த மோதிரத்தைப் பத்திரமாக வைத்துக்கொள். நீ இதைத் தொலைத்துவிட்டால், உன் வாழ்க்கையில் சிறுமை, வறுமை ஆகியவைகளை அனுபவிப்பாய். பரிதாபமாகிவிடுவாய்; நிர்க்கதியாக நிற்பாய். எனவே, இதைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்," என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான். இப்போது ஜானின் கையில் அந்த மோதிரம் இருக்கிறது. அப்போது  இரண்டாவது இன்னொரு மனிதன் வந்து, "நீ கையில் என்ன வைத்திருக்கிறாய்?" என்ற கேட்க, ஜான் "இது ஒரு மோதிரம். ஒருவர் இதை என்னிடம் கொடுத்து, பத்திரமாக வைத்துகொள்ளச் சொன்னார்," என்று விவரமாகச் சொன்னான். வந்த இரண்டாவது மனிதர், “அந்த மோதிரத்தை நீ உண்மையாகவே பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறாயா? நீ அதைத் தூக்கி எறிந்துவிடு. அதற்கு எந்த மதிப்பும் இல்லை," என்ற சந்தேக விதைகளை அவனுடைய உள்ளத்திற்குள் விதைத்தான். விஷம் உடலில் கொஞ்சம்கொஞ்சமாக ஏறி வேலைசெய்வதுபோல், இரண்டாவது மனிதனுடைய வார்த்தைகள் அவனுக்குள் வேலைசெய்ய ஆரம்பித்தன. ஜான் நியூட்டன் தன் பிடியைக் கொஞ்சம்கொஞ்சமாக தளர்த்த ஆரம்பித்தான். இரண்டாவது மனிதன் தொடர்ந்து பேசிக்கொண்டேயிருந்தான். சந்தேகத்தை விதைத்துக்கொண்டேயிருந்தான். கடைசியாக ஜான்  மோதிரத்தைக் கடலில் வீசியெறிந்தான். அவன் மோதிரத்தைக் கடலில் வீசியெறிந்தவுடன், தூரத்திலிருந்த ஒரு மலை தீப்பற்றி எரிந்தது. அப்போது, "தேவனுடைய இரக்கங்களெல்லாம் அந்த மோதிரத்தில்தான் இருந்தன. நீ அவைகளை வேண்டாமென்று தூக்கியெறிந்துவிட்டாய். எனவே, அதோ பற்றியெரியும் நெருப்பு உனக்குத்தான்," என்ற வார்த்தைகளை ஜான் நியூட்டன் கேட்டான். நியூட்டன் பயந்து நடுங்கினான். மூன்றாவது இன்னொரு மனிதன் வந்து, "உன் மோதிரம் எங்கே?" என்று கேட்க, "நான் கடலில் எறிந்துவிட்டேன்," என்று ஜான் சொன்னான்.  மூன்றாவது மனிதன் கடலுக்குள் மூழ்கி மோதிரத்தை மீட்டுக்கொண்டுவந்து, “இந்த மோதிரத்தை இனி நீ வைத்திருக்க முடியாது. உனக்காக நான் என்னிடம் பத்திரமாக வைத்துக்கொள்கிறேன். பின்னர் நீ பெற்றுக்கொள்ளலாம்," என்று ஜானிடம் சொன்னான்.  

ஜானுக்கு இந்தக் கனவின் பொருள் புரியவில்லை. ஆனால், இந்தக் கனவை அவன் நீண்ட காலம் நினைவில் வைத்திருந்தான். இந்தக் கனவை நினைத்தபோதெல்லாம் அவன் பயந்தான். அவன் தன் வாழ்க்கையைப்பற்றிச் சிந்தித்தான். தன் வாழ்க்கை படுபாதாளத்தைநோக்கி வேகமாகச் செல்வதை அவன் உணர்ந்தான். "சரி, இனிமேல் ஜெபமெல்லாம் வேண்டாம். நிறுத்திவிடுவோம்," என்று அவன் நினைத்தான். ஆம், இந்தக் கனவினால் அவனுடைய வாழ்க்கையில் எந்த மாற்றமும் நிகழவில்லை.

ஒரு மாலுமியின் வாழ்க்கை மிகவும் கடினமான வாழ்க்கை. ஒருமுறை கப்பலில் ஏறினால், அந்தப் பயணம் எத்தனை மாதங்கள் நீடிக்கும் என்று தெரியாது. ஒரு வாரமா, ஒரு மாதமா, ஒரு வருடமா என்று தெரியாது. கரைக்குத் திரும்பியபிறகும், கரையில் ஒரு வாரமா, ஒரு மாதமா என்று தெரியாது. எதையும் உறுதியாகச் சொல்லமுடியாது. தெரியாது. மிகக் கடினமான வாழ்க்கை. 

ஒருமுறை ஒரு பயணத்திற்குப்பின் கிறிஸ்துமஸ் விடுமுறையின்போது அவன் இங்கிலாந்துக்குத் திரும்பினான், அடுத்த கப்பல் பயணத்திற்கு இன்னும் ஓரிரு வாரங்கள் இருந்தன. அவன் மேரி கேட்லட்டை இன்னும் மிகவும் காதலித்தான். எனவே, அவன் அவளைப் பார்க்க விரும்பினான். ஆனால், அவனுடைய அப்பா, "போகாதே," என்று கூறினார். ஏனென்றால், அந்த நேரத்தில் இங்கிலாந்தில் போர் மூண்டிருந்தது. இராணுவத்தில், குறிப்பாக கடற்படையில், ஆள்சேர்க்க அரசு மும்முரமாக ஈடுபட்டிருந்தது. தரைப்படையில் சேர்வதற்கு ஆள்கள் கிடைத்தார்கள். கடற்படையில் சேர்வதற்கு ஆள்கள் கிடைக்கவில்லை. ஆகையால், இவர்கள் கடற்கரை நகரங்களுக்குச் சென்று, கப்பல் பணியில் அனுபவமுள்ளவர்களைத் தேடினார்கள். அப்படிப்பட்டவர்களைக் கண்டுபிடித்து, கடத்திச்சென்று  கடற்படையில் சேர்த்தார்கள், தள்ளினார்கள். சேர்வதற்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. கட்டாயப்படுத்தினார்கள். ஏனென்றால், கடற்படையில் சேர நிறையப்பேர் முன்வரவில்லை. அன்று கடற்படையில் சேர்வது சிறைக்குச்செல்வதைவிட மோசமானதாகக் கருதப்பட்டது. அது ஒரு பயங்கரமான வேலை. போதுமான ஆள்கள் கிடைக்காததால் அவர்கள் சிறைச்சாலையில் இருந்த ஆயுள்கைதிகளையும், சிறையிலிருந்து விடுதலையான பழைய குற்றவாளிகளையும் தேடிக் கண்டுபிடித்து, அவர்களைக் கடற்படையில் சேர்த்தார்கள்.

"நீ போகிற ஊரின் பிரதான சாலைகளில் கடற்படைக்கு ஆள்கள் சேர்க்கும் அதிகாரிகள் குவிந்திருக்கிறார்கள். உன்னைப்போன்ற வாலிபர்களைப் பிடித்துகொண்டுபோய்விடுவார்கள். எனவே, நீ அங்கு போக வேண்டாம்," என்று அவருடைய அப்பா சொன்னார். ஆனால், நியூட்டன் அவனுடைய அப்பா சொன்னால் கேட்பாரா என்ன? அவன் அப்படிப்பட்ட ஆளில்லையே! ஒன்றைச் செய்ய வேண்டும் என்று முடிவுசெய்துவிட்டால் ஜான் செய்துவிடுவான். யார் சொன்னாலும் கேட்கமாட்டான். குறிப்பாக அவனுடைய அப்பா சொன்னால் கேட்கவே மாட்டான்.  எனவே, அவன் தான் நினைத்தபடி போகத் துணிந்தான், பயணத்தை ஆரம்பித்தான். பிரதான சாலையில் காத்திருந்த கடற்படைக்கு ஆள்சேர்க்கும் அதிகாரிகளிடம் மாட்டிக்கொண்டான். அவனுடைய பிரத்தியேகமான நடையிலிருந்தே அவன் கடல் அனுபவமுடையவன் என்று அவர்கள் புரிந்துகொண்டார்கள். தனக்கும் கடலுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்று பொய் சொல்லி தப்பிக்க முயன்றான். ஆனால், அந்த அதிகாரிகளில் ஒருவருக்கு ஜானைத் தெரியும். தப்பிக்க வழியில்லை. மாட்டிக்கொண்டான். 

இதைக் கேள்விப்பட்ட அவனுடைய அப்பா ஓடோடிவந்து அவனைக் காப்பாற்ற முயன்றார். முடியவில்லை. அவர் தலையிட்டது இன்னும் சிக்கலாயிற்று. ஏனென்றால், அவர் ஒரு மாலுமி என்று எல்லாருக்கும் தெரியும். ஜான் அவருடைய மகன் என்று தெரிந்ததும், அவருடைய மகனுக்கு நிச்சயமாகக் கடல் அனுபவம் நிறைய இருக்கும் என்றும், அவன் கடற்படையில் தங்களுக்கு மிகவும் பயனுள்ளவனாக இருப்பான் என்றும் அவர்கள் முடிவுசெய்தார்கள். 

ஒருவழியாக, ஜான் கடற்படையில் சேர்க்கப்பட்டான். அவன் இங்கிலாந்தில் கடற்படையிலுள்ள HMS Harwich என்ற கப்பலில் சேர்ந்தான். கடற்படையில் வாழ்க்கை மிகவும் கடினமாக இருந்தது. "கடலோடிகளின் உறுதியை, உரத்தை உடைக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் மாலுமிகளின் கட்டளைக்குக் கீழ்ப்படிவார்கள்; போர் ஏற்பட்டால் தப்பியோடமாட்டார்கள்," என்று அந்நாள்களில் மாலுமிகளும், அதிகாரிகளும் நினைத்தார்கள். ஆகவே, ஒரு கடலோடியின் வாழ்க்கை கொடுமையானது; பாதி வயிறுகூட நிரம்பாது; பட்டினிதான்; சாப்பாடு அளந்துகொடுப்பார்கள்; கொடுக்கப்படும் உணவின் தரத்தைப்பற்றிச் சொல்லவே வேண்டாம். ஒருவகையான பயம் அவர்களை ஆட்கொண்டிருக்கும். அவர்கள் கப்பலில் அடித்தளத்தில் வைக்கப்பட்டிருந்தார்கள். அதிகாரிகளின் கட்டளையை மீறியவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டார்கள். ஜான் இப்படிப்பட்ட வாழ்க்கை வாழவேண்டியதாயிற்று. 

பொதுவாகவே, மாலுமிகள் கரடுமுரடானவர்கள். ஆனால் இப்போதோ அவரைச்சுற்றி இருந்தவர்கள் சாதாரணமானவர்கள் இல்லை, குற்றவாளிகள், ஆயுட்கைதிகள், குடும்பங்களில் பெற்றோர்களுக்கு அடங்காதவர்கள். மனமுவந்து கடற்படையில் சேர்ந்தவன் ஒருவனும் இல்லை. ஒழுங்கற்றவர்கள், ஒழுக்கமற்றவர்கள், தான்தோன்றித்தனமாகத் தெரிந்தவர்கள், அடங்காதவர்கள், குடும்பங்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள், வாழ்வில் தோற்றுப்போனவர்கள். 

இவர்கள்தான் கடற்படையில் பணியாற்றினார்கள். இப்படிப்பட்டவர்கள்தான் நியூட்டனைச் சுற்றியிருந்தவர்கள். இது அவனுடைய இருதயத்தை இன்னும் அதிகக் கடினமாக்கியது. இது அவனுக்குள் வெறுப்பை ஏற்படுத்தியது. 

நியூட்டனின் திறமைகளையும், அனுபவத்தையும் கண்ட அந்தக் கப்பல் மாலுமி நியூட்டனுக்குப் பதவி உயர்வு அளித்தார். அதன்பின் அவன் பிறரைப்போல் ஒரு சாதாரண கடற்படை வீரன் அல்ல. இந்தப் பதவி உயர்வை நியூட்டன் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தியிருப்பான் என்று ஒருவேளை நீங்கள் நினைக்கலாம். அவன்  அப்படிச் செய்யவில்லை. மாறாக, அவனுடைய உயரதிகாரிகள் பிறரை நடத்தினதைவிட நியூட்டன் மிக மோசமாக நடத்தத் தீர்மானித்தான். நேற்றுவரை நியூட்டன் அவர்களுக்குச் சமம். இப்போது இவன் அவர்களை இறுமாப்பாய் ஆளுகைசெய்ய முற்பட்டான். அவர்களுடைய வேலைப்பளுவை முன்பைவிட இரண்டு மடங்கு கடினமாக்கினான். எல்லாரும் அவனை வெறுத்தார்கள். ஆனால், அவன் அதைப் பொருட்படுத்தவில்லை. மற்றவர்களின் வாழ்க்கையை அழித்து, அவர்களைத் துன்பப்படுத்த முடியும் என்ற இந்த எண்ணத்தை அவன்  மிகவும் விரும்பினான். ஜான் இப்படிப்பட்ட ஓர் ஆள்.

அந்தக் கப்பலில் அவனுக்கு மிட்செல் என்ற ஒரு நண்பர் கிடைத்தார். இருவரும் ஜாடிக்கேற்ற மூடி இருவரும் கரடுமுரடானவர்கள், பிறருடைய துன்பத்தில் இன்புறுபவர்கள். இருவரும் உரையாட ஆரம்பித்தார்கள்.   "கடவுள் என்று ஒருவர் இல்லவே இல்லை. நம் சமூகம் ஆலயம், மதம், கடவுள் என்று பேசுவதெல்லாம் குப்பை," என்று ஒருநாள் மிட்செல் நியூட்டனிடம் கூறினான். 

இந்த நேரத்தில் ஒருவன் உண்மையான கிறிஸ்தவனாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, தேவன் ஒருவர் இருக்கிறார் என்று எல்லாரும் நம்பினார்கள் என்பதை நீங்கள் நினைவில்கொள்ளுங்கள். இங்கிலாந்து பாராளுமன்றம்கூட வேதாகமத்தை ஆதாரமாகக்கொண்டுதான் இயங்கியது. இங்கிலாந்து மக்களின் வாழ்க்கையில் வேதாகமம் மையமாக இருந்தது.

ஆனால், இந்த மிட்செல் அதற்கு முற்றிலும் வித்தியாசமானவன். நியூட்டன் அவனுடைய பேச்சை ஆர்வமாகக்  கேட்க ஆரம்பித்தான். விஷம் சொட்டு சொட்டாக ஒருவனுக்குள் இறங்குவதுபோல், அவனுடைய வார்த்தைகள் நியூட்டனுக்குள் இறங்கி, ஓர் எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்தியது. மிட்செல் பேசும்போது தத்துவவாதிகளை மேற்கோள்காட்டினான். "சரி, தவறு என்று ஒன்று கிடையாது. நீ எதை விரும்புகிறாயோ  அதுதான் சரி. சட்டம் என்று ஒன்று கிடையாது. ஒழுக்கம் என்று ஒன்று இல்லை. எது உனக்கு மகிழ்ச்சியைத் தருகிறதோ, அதைச் செய்துவிட்டுப் போய்க்கொண்டேயிரு," போன்ற விஷத்தை அவன்  கக்கிக்கொண்டேயிருந்தான். நியூட்டன் இந்தச் சுதந்திரத்தை விரும்பினான்; தேவன் இல்லை என்ற கருத்தை அவன் ஏற்றுக்கொண்டான். மனசாட்சியின் கடிவாளத்தையும், தேவனையும், மதத்தையும், வாழ்க்கையையும்பற்றி அவனுடைய அம்மா அவனுக்குள் விதைத்திருந்த கருத்துக்களையும், நம்பிக்கைகளையும் அவன் பிடுங்கி எறிய ஆயத்தமானான். அடித்தளம் ஆட ஆரம்பித்தது. 

அவன் நாத்திகத்தை ஏற்றுக்கொண்டாலும், தேவன் இல்லை என்றும், இந்தப் பாதையில்தான் இனிமேல் பயணிக்க வேண்டும் என்றும் முடிவுசெய்தாலும், நூறு விழுக்காடு அவன் இதில் உறுதியாகிவிடவில்லை. இன்னும் கொஞ்சம் தடுமாற்றம் இருந்தது. ஆனால், எந்தப் பாதை என்பதைத் தீர்மானிப்பதற்குள், மிட்செலின் கருத்துக்களை அரவணைத்துக்கொண்டு, தேவனுக்கு எதிரான இந்தச் சுதந்திர சிந்தனையை அவன் பிறரோடு பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தான். அவன் பிறரைத் தன் வழிக்குக் கொண்டுவரும் முயற்சியில் இறங்கினான். 

அவன் லூயிஸ் என்ற இன்னொரு பயிற்சி மாலுமியோடு பேச ஆரம்பித்தான். அவனும் நியூட்டனைப்போல் வேண்டாவெறுப்போடுதான் கடற்படையில் சேர்க்கப்பட்டவன். அவன் தேவபக்தியுள்ளவன், தன் மதநம்பிக்கையை உறுதியாகப் பற்றிக்கொண்டிருந்தான். நியூட்டன் அவனைத் தன் இலக்காகக் கொண்டு, தாக்க ஆரம்பித்தான். "நீ ஒரு முட்டாள், உன் நம்பிக்கைகள் முட்டாள்தனமானவை. தேவன் இல்லை, தேவன்  இல்லை, தேவன் இல்லவே இல்லை," என்று எல்லாம் தெரிந்தவன்போல் பேச ஆரம்பித்தான். நியூட்டனின் பேச்சைக் கேட்டு, லூயிஸ் விரைவிலேயே தேவன், வேதாகமம், மதம் ஆகியவைகளைப்பற்றிய தன் நம்பிக்கைகளை மெல்லமெல்ல விட்டுவிட்டு, நாத்திகத்தைத் தழுவ ஆரம்பித்தான். தேவ நம்பிக்கையுடைய ஒருவனைத் தன் பக்கம் இழுத்ததால், தான் பெரிய ஆள் என்றும், பலமானவன் என்றும், தன் கருத்துக்கள் சரியானவை என்றும் நியூட்டன் எண்ணினான். ஆயினும், அவன் இரவில் கப்பலின் மேல்தளத்தில் தன் பணியில் தனியாக இருந்தபோது, கண்ணுக்கெட்டிய தூரம்வரை பரந்துவிரிந்த கடலைப்பார்த்தபோது, மேலே கண்களை உயர்த்தி வானத்து நட்சத்திரங்களைப்பார்த்தபோது, அவன் அடிக்கடி பயந்தான். இரவு நேரத்தில் தனியாகப் பணியில் இருப்பதை அவன் வெறுத்தான்.  ஏதோவொன்று அவனை உறுத்தியது. கப்பலின் மேல்தளத்தில் இரவில் தனியாக இருந்தபோது, வானத்து நட்சத்திரங்களைப் பார்த்தபோது, சில நேரங்களில், "when I survey the wondrous cross, on which the young prince of glory died", என்ற ஐசக் வாட்சின் பாடல் வரிகள் அவருக்கு நினைவுவந்தன. அந்தப் பாடல் வரிகள் மீண்டும் மீண்டும் அவனுடைய நினைவில் ஓடிக்கொண்டேயிருந்தன. அவன் அதைத் தடுக்கவும், தவிர்க்கவும் முயன்றான். முடியவில்லை. மனதைக் கட்டுப்படுத்த முயன்றான். தோற்றான். ஆனால் அந்த வரிகள் ஒலித்துக்கொண்டேயிருந்தன. "இந்த மாட்சியின் கர்த்தர் என்னைவிட்டுப் போனால் எவ்வளவு நன்றாக இருக்கும்!" என்று அவன் எண்ணினான்.

அவன் சில வருடங்கள் கடற்படையில் பணியாற்றினான். அங்கு வாழ்க்கை மிகக் கடினமாக இருந்தது. அவன்  முரட்டுத்தனமான, இழிவான, அருவருக்கத்தக்க ஒரு மனிதனாக மாறினான். அவன் பழகுவதற்கோ, பேசுவதற்கோ இனிமையான நபர் இல்லை. நான் ஏறெகெனவே சொன்னதுபோல, அவன் தான் நினைத்ததைச் செய்யக்கூடிய நபர். 

ஒருமுறை அவர்களுடைய கப்பல் இங்கிலாந்தின் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. கடைக்குச் சென்று சாமான்கள் வாங்கிவருமாறு கப்பல் மாலுமி நியூட்டனினிடம் கூறினார். கப்பலிலிருந்து காலி பீப்பாய்களைக் கடைக்கு எடுத்துச் சென்று, அவைகளை நிரப்பிக்கொண்டு மீண்டும் கப்பலுக்குக் கொண்டுவர வேண்டும். இதுதான் வேலை. இதைச் செய்வதற்கு ஆள்கள் இருந்தார்கள். நியூட்டன் இதை மேற்பார்வைசெய்ய வேண்டும். பீப்பாய்களை எடுத்துக்கொண்டு துறைமுகத்துக்குச் சென்றார்கள். வந்தவர்கள் பீப்பாய்களை நிரப்பிக்கொண்டிருக்கையில், "இது நான் தப்பிக்க நல்ல வாய்ப்பு" என்று நியூட்டன் நினைக்க ஆரம்பித்தான். அவனுடைய கப்பல் அப்போது இங்கிலாந்தின் எந்தத் துறைமுகத்தில் நங்கூரம் போட்டிருந்தார்கள் என்று நியூட்டனுக்குத் தெரியும். "இங்கிருந்து நடந்தே என் அப்பா இருக்கும் இடத்துக்கு என்னால் போக முடியும். என் அப்பா எங்கு இருப்பார் என்று எனக்குத் தெரியும். இதுதான் நான் கடற்படையிலிருந்து தப்பிக்கச் சரியான வேளை. என்னால் முடியும்," என்று நினைத்துக்கொண்டே, எல்லோரும் தங்கள் தங்கள் வேலையில் மும்முரமாக மூழ்கியிருக்கையில், நியூட்டன் நாசுக்காக நழுவினான். ஓர் அதிகாரி கொடுத்த வேலையை மிகச் சிரத்தையோடு செய்கிற ஓர் உண்மையான வேலையாளைப்போல்  நியூட்டன் மிக நம்பிக்கையோடு நகரத்தின் வழியாக நடந்தான். நகருக்கு வெளியே வந்தவுடன், தான் எங்கு, எப்படி போக வேண்டும் என்று அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது. நகரத்தின்வழியாக நடக்காமல், நகரத்தைச் சுற்றி நடந்துபோனான். இரவுநேரங்களில் திறந்த வெளிகளில் படுத்தார். பிரதான சாலைகளை விட்டுவிட்டு ஒதுக்குப்புறமாகவே நடந்தான். கப்பல்   நிறுத்தியிருந்த இடத்திலிருந்து அவன் அதிக தூரம் வந்துவிட்டான். "வந்துவிட்டேன். தப்பித்துவிட்டேன்," என்று அவன் நினைக்கத் தொடங்கினான். 

இன்னும் இரண்டு மணி நேரம் நடந்தால் அவனுடைய அப்பா இருக்கும் இடத்தை அவன் அடைந்துவிடுவான். இதோ எட்டிப்பார்க்கிறான். அங்கு அவனுக்கு நேராக கடற்படை வீரர்கள் அநேகர் நின்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் கடற்படையிலிருந்து தப்பியோடுபவர்களைத் தேடிக்கொண்டிருந்தார்கள். நியூட்டன் தன்னந்தனியாக நடந்துகொண்டிருக்கிறான். அவர்கள் நியூட்டனைநோக்கி நடந்துவருகிறார்கள். அவர்கள் அவனைப் பார்த்துவிட்டார்கள். அவனால் ஓட முடியவில்லை. ஒன்றும் செய்ய முடியவில்லை. பொய்ச்சொல்லி தப்பிக்க முயன்றான். சமாளித்துப் பார்த்தான். ஆனால், அவன் அணிந்திருந்த சீருடை அவனைக் காட்டிக்கொடுத்தது. அவர்கள் அவனை 40 கிலோமீட்டர் தூரம் மீண்டும் பிளைமவுத்துக்குக் கூட்டிக்கொண்டுபோனார்கள். ஆம், தப்பிக்க முயன்று சரியாக மாட்டிக்கொண்டான். 

திரும்பி வரும் வழியில், "எனக்கு என்ன தண்டனை கிடைக்குமோ!" என்று நியூட்டன் தனக்குத்தானே நினைத்துக் கொண்டான். அந்தக் காலத்தில் இப்படித் தப்பித்துச்செல்பவர்களுக்கு சில நேரங்களில் மரண தண்டனைகூடக் கொடுக்கப்பட்டது. என்ன தண்டனை என்பது மாலுமியின் விருப்பத்தைப் பொறுத்தது. அவன் விரும்பினால் விடுதலைசெய்யலாம் அல்லது என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுக்கலாம். கடுமையான தண்டனை கொடுக்கப்பட்டது. நியூட்டன் திரும்பி வந்ததும், கப்பல் மாலுமி கடுங்கோபம்கொண்டான். நியூட்டனின் பதவி உயர்வு, பட்டம் எல்லாவற்றையும் பறித்துக்கொண்டு, அரைநிர்வாணமாக்கி, சங்கிலிகளால் கட்டி, கப்பலின் அடித்தளத்தில் போட்டார்கள். 

கப்பல் சிப்பந்திகள் அனைவரும் திரும்பிவந்ததும், அவர்கள் மீண்டும் பயணம் செய்யத் தயாரானார்கள். பயணம் தொடங்கியது. கொஞ்ச நேரத்தில் மாலுமி நியூட்டனை எழுப்பி, நிர்வாணமாக்கி, எல்லாருக்குமுன்பாக காட்சிப்பொருளைப்போல் நடத்தினான். வாரினால் அடித்தான். அந்த நாட்களில் கசையடிகள் மிகவும் கொடூரமானவை. 24 கசையடிகள். அதைவிட அதிகமாகவும் இருக்கலாம். ஒருவனை நிரந்தரமாக முடமாக்குவதற்கு 24 கசையடிகள் போதும். அசராமல் அடிவாங்கினான். முதுகில் இரத்தம் சொட்டச்சொட்ட வேறுபல வேலைகளையும் அவன் செய்யவேண்டியதாயிற்று. நியூட்டன் மனம்வருந்தவுமில்லை, திருந்தவுமில்லை. மாறாக, கோபம். மாலுமியின்மேல் கோபம். அவரைக்கூட்டிக்கொண்டுவந்த ஆள்கள்மேல் கோபம். அதிகாரிகள்மேல் கோபம். உள்ளத்தில் எல்லார்மேலும் வெறுப்பு. 

"என்றைக்காவது ஒருநாள் இந்த மாலுமியை நான் கொலைசெய்வேன்," என்று நினைத்து அவனைக் கொலைசெய்யத் திட்டமிட்டான். அவரைக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொள்ளலாம் என்று அவன் நினைத்தான். "தேவன் என்று ஒருவர் இல்லை. நீதிபதி என்று ஒருவர் இல்லை. எனக்கு நானே நீதிபதி. நான் செய்வது நியாயம்," என்று அவன் நினைக்கத் தொடங்கினான். "நியூட்டன் அடிபட்ட, காயப்பட்ட பூனை. இந்தப் பூனை என்ன வேண்டுமானாலும் செய்யும்," என்று அங்கிருந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும். எனவே, அவர்கள் அவனிடம் அன்புடன் நடந்துகொள்ள முயன்றார்கள். ஆனால், நியூட்டன் அவர்களைத் திட்டி அனுப்பினான். அவனுடைய உள்ளத்தில் வெறுப்பும், கோபமும் கொழுந்துவிட்டு எரிந்தன.

நியூட்டனின் வாழ்க்கையில் ஏராளமான திருப்பங்களும், திருப்புமுனைகளும் உள்ளன. இதோ அப்படியொரு திருப்பம்! சிலர் இதைச் தற்செயல் சென்று சொல்லலாம். ஆனால், இது தேவனுடைய இறையாண்மையின் செயல். ஒருநாள் அவன் நீண்டநேரம் தூங்கிவிட்டான். குறித்த நேரத்தில் பணிக்குச் செல்லவில்லை. அவனுடைய  மேற்பார்வையாளர் நியூட்டன் தூங்கிக்கொண்டிருந்த ஊஞ்சல்படுக்கையின் கயிறை ஒரு கத்தியால் அறுத்தான். தூங்கிக்கொண்டிருந்த நியூட்டன் தொப்படீரென்று தரையில் விழுந்தான். கயிறை அறுத்துவிட்ட மேற்பார்வையாளர் ஒன்றும் நடக்காததுபோல் முகத்தை வேறொரு பக்கம் திருப்பிக்கொண்டார். கப்பலின் மேல்தளத்தில் ஒரே சத்தம். ஆனால், என்ன நடக்கிறது என்று நியூட்டனுக்குத் தெரியவில்லை. "மேலே ஒரே இரைச்சலாக இருக்கிறது. என்ன நடக்கிறது?" என்று நியூட்டன் கேட்டார். "அருகில் இன்னொரு கப்பல் நிற்கிறது. அவர்கள் கப்பலில் சிப்பந்திகள் குறைவாக இருக்கிறார்களாம். எனவே, அவர்கள் ஆள்கள் தேடுகிறார்கள்," என்று அந்த மேற்பார்வையாளர் சொன்னார். நியூட்டன், எப்போதும்போல் இப்போதும், "இது நான் இங்கிருந்து வெளியேற நல்ல வாய்ப்பு," என்று நினைத்துக்கொண்டு தன் சாமான்களையெல்லாம் எடுத்துக்கொண்டு, "அந்தக் கப்பலுக்கு என்னை அனுப்ப இந்த மாலுமி சம்மதிக்க வேண்டும். சம்மதிக்க வைக்க வேண்டும். அதற்கு என்ன வழி!" என்று சிந்திக்க ஆரம்பித்தான். அந்தக் கப்பல் என்ன கப்பல், எங்கு போகிறது என்று அவனுக்கு எதுவும் தெரியாது. ஆனால், இந்தக் கப்பலிலிருந்து வெளியேற இதுதான் ஒரே வழி என்று அவன் நினைத்தான் .

கப்பல்களில் சிப்பந்திகள் இறப்பார்கள். ஆள்கள் குறைந்துவிடுவார்கள் அல்லது சிப்பந்திகளை மாற்றிக்கொள்வார்கள். இப்படி நடப்பதுண்டு. புதிய கப்ப்பலுக்குச் செல்ல ஒருவரை மாலுமி ஏற்கெனவே தெரிந்தெடுத்திருந்தார். அவர் இந்தக் கப்பலிலிருந்து அந்தக் கப்பலுக்கு ஏறிக்கொண்டிருந்தார். நியூட்டன் மாலுமியிடம் சென்று, "என்னை அந்தக் கப்பலுக்கு அனுப்பிவிடுங்கள்," என்று கேட்டான். நியூட்டன் இந்தக் கப்பலில் பெரிய தொல்லையாக இருந்ததால் அவரை அங்கு அனுப்புவதில் மாலுமிக்கு மிகவும் மகிழ்ச்சி. நியூட்டன் தன்னைக் கொலைசெய்யத் திட்டம்போட்டிருக்கிறான் என்ற தகவலும் மாலுமிக்குத் தெரிந்திருக்கலாம். எனவே, மாலுமி, "போய்த் தொலை," என்று சொன்னான்.

மாலுமியின் இந்த வார்த்தைகள் நியூட்டனுக்கு விடுதலையின் வார்த்தைகளாக மாறின. ஆம், நியூட்டன் கடற்படையிலிருந்து வெளியேறினான். அவன் ஏறிய கப்பல் ஓர் அடிமை வியாபாரியின் கப்பல், அதாவது  அடிமைகளைக் கடத்தி விற்கும் வியாபாரியின் கப்பல், என்று நியூட்டனுக்குத் தெரியாது. அது இப்போது எங்கே போகிறது, என்ன செய்கிறது என்று அவருக்கு ஒன்றும் தெரியாது. நியூட்டன் கப்பலில் ஏறியதும், அவரைப் பார்த்த அந்தக் கப்பல் மாலுமி அதிர்ச்சியடைந்து, "நீ மாலுமி நியூட்டனின் மகன் இல்லையா?" என்று கேட்டார்.  அதற்கு ஜான், "ஆம், நான் அவருடைய மகன்தான்," என்றான். வட ஆப்பிரிக்காவின் கினியாவுக்குச் சென்றுகொண்டிருந்த அந்தக் கப்பலின் மாலுமி, "உன் அப்பாவை எனக்கு நன்றாகத் தெரியும்," என்றார். இது ஜானுக்கு மிகவும் சாதகமாயிற்று. அந்த மாலுமி நியூட்டனை மிகவும் நன்றாக நடத்தினார். "இவன் என் நல்ல, மரியாதைக்குரிய நண்பரின் மகன்," என்பதால் அவர் நியூட்டனை அப்படி நடத்தினார். ஜான் நியூட்டன் தான் இந்தக் கப்பலுக்கு வந்ததைக்குறித்து மிகவும் மகிழ்ச்சியடைந்தான்.

ஆனாலும், அந்தக் கப்பலில் உண்மையாகவே என்ன நடக்கிறது என்று நியூட்டனுக்குத் தெரியாது. ஆனால், தான் இருக்கும் கப்பல் ஆப்பிரிக்காவிற்குச் செல்கிறது என்று அவன் விரைவில் அறிந்துகொண்டான். கினியா அல்லது சியரா லியோனாக இருக்கலாம் என்றும் அவன் தெரிந்துகொண்டான். அந்தக் கப்பலில் அப்போது அடிமைகள் இருந்தார்கள்; அவர்களைச் சங்கிலியால் கட்டி கப்பலின் கீழ்தளத்தில் வைத்திருந்தார்கள். இவர்களை மேற்கு இந்தியத்தீவுகளில்,  ஜமைக்காவியாவில், விற்பதற்காகக் கொண்டுபோய்க்கொண்டிருந்தார்கள். இது ஒரு பயங்கரமான வியாபாரம். 1700களில் நடந்த காரியத்தைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அந்த நாள்களில் இந்த அடிமை வியாபாரத்தை கிறிஸ்தவர்களோ, சபையோ, யாருமோ எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. இந்த அடிமை வியாபாரம் அன்று  இங்கிலாந்துபோன்ற பல நாடுகளின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்ததால் யாரும் அதைக் கேள்வி கேட்கவில்லை. சபைத் தலைவர்களோ, உலகத் தலைவர்களோ ஒருவர்கூட இந்தக் கட்டத்தில் இதைக் கேள்வி கேட்கவில்லை. ஜான் நியூட்டனுக்கு இது தெரியும். அன்று அது ஒரு ஜென்டில்மேன் வியாபாரம். உண்மையில் அது ஒரு மரியாதைக்குரிய தொழிலாகக் கருதப்பட்டது. 

இன்று நினைத்துப்பார்க்கும்போது அது எவ்வளவு மோசமானது, பயங்கரமானது என்று நாம் நினைக்கிறோம்.  மனிதர்களைச் சங்கிலியால் கட்டிவைத்து, பண்டங்களை சந்தையில் கொண்டு விற்பதுபோல், அவர்களை அடிமைகளாக விற்பதை எண்ணிப்பார்ப்பதே இன்று அருவருப்பாக இருக்கிறது. மாலுமிகளும், கப்பல் சிப்பந்திகளும் இந்த அடிமைகளை என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அடிமைப் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்கள். ஆண்கள் மோசமாக நடத்தப்பட்டார்கள். அடிமைகள் பதில் சொல்லவில்லையென்றால், ஒழுங்காக நடந்துகொள்ளவில்லையென்றால், அவர்களைக் கொன்றுவிடலாம். ஆனால், பெரும்பாலும் அடிமைகள் கொல்லப்படவில்லை. ஏனென்றால், அவர்கள் வியாபாரிகளின் சரக்கு. விற்றால் பணம் கிடைக்குமே! கொன்றால் பணத்தை இழந்துவிடுவார்களே! அதுதான் ஒரே காரணம்.

நியூட்டன் தற்செயலாக இந்த அடிமை வியாபாரத்தில் சிக்கிக்கொண்டான். அவன் இந்தப் புதிய வாய்ப்பைப் பயன்படுத்தியிருக்கலாம், மாறியிருக்கலாம். ஆனால், அவன் மாறவில்லை. அவன் அப்படிப்பட்ட ஆள் இல்லை. அவன் முன்பு இருந்தபோலவே கோபக்கார, வெறுக்கத்தக்க மனிதனாகவே இருந்தான். மாலுமிக்கு அவன்மேல் கடுங்கோபம். "எனக்கு உன் அப்பாவைத் தெரியும். அவர் என் நல்ல நண்பர். இந்த ஒரே காரணத்துக்காக நான் உன்னைப் பொறுத்துக்கொள்கிறேன். இல்லையென்றால், உன்னை அப்போதே தூக்கியெறிந்திருப்பேன்," என்றார். ஜான் நியூட்டன் இந்த நிலைமையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு வேண்டாத வேலைகளைச் செய்தான். மற்ற சிப்பந்திகளை ஏமாற்றினான். கிறிஸ்தவர்களையும், நற்செய்தியையும் கேலி செய்தான். மதநம்பிக்கையுள்ளவர்களை, பக்தியுள்ளவர்களை கெட்டவார்த்தைகளில் திட்டினான். பிரசங்கிகளையும், பிரசங்கத்தையும் கிண்டல்செய்து நடித்துக்காட்டினான். அவன் தன் நாத்திகத்தையும், சுதந்திர சிந்தனையையும், தான்தோன்றித்தனமான வாழ்க்கைமுறையையும் அங்கிருந்தவர்களுக்குள் விதைத்தான். அவன் அங்கிருந்த எல்லாருடைய வாழ்க்கையையும் மோசமாகப் பாதித்தான். மாலுமியால் அவனை அதற்குமேல் சகிக்கமுடியவில்லை. சில நேரங்களில் குடிபோதையில் பிறருடன் சண்டைபோட்டான். குறிப்பாக கப்பலில் மாலுமிக்கு அடுத்த இரண்டாவது பொறுப்பில் இருந்தவருடன் நியூட்டனுக்கு எப்போதும் உராய்வும், சிராய்ப்பும் இருந்துகொண்டேயிருந்தது. அதைப்பற்றி நியூட்டன் கொஞ்சங்கூட கவலைப்படவில்லை. "மாலுமி என் அப்பாவின் நண்பர். அவர் எனக்கு விரோதமாக ஒன்றும் செய்யமாட்டார். அவர் என் பக்கம் இருக்கும்போது யாரைப்பற்றியும் எனக்குக் கவலையில்லை," என்பதுதான் நியூட்டனின் மனப்பாங்கு.

ஒரு நாள் இரவு, மாலுமி மாரடைப்பினால் மரணமானார். நியூட்டனுக்கு எல்லாம் தலைகீழாக மாறியது. இரண்டாவது இடத்தில் இருந்தவர்தான் இப்போது முதல் மாலுமி. அவர் சொல்வதுதான் சட்டம். அவர் நினைப்பதுதான் நடக்கும். நியூட்டனின் அப்பாவுக்கும் இவருக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. இவருக்கு நியூட்டனின் அப்பாவைக் கடுகளவும் தெரியாது. இப்போது அந்த மாலுமி தான் நினைத்ததைச் செய்யலாம். தான் சிக்கலில் இருப்பதை நியூட்டன் உணர்ந்தான். விபத்துபோல் ஒன்றை ஏற்பாடுசெய்து தன்னைக் கொன்றுவிடக்கூடும் என்றுகூட நியூட்டன் நினைத்தான். நிலைமை அவ்வளவு மோசமாக மாறிற்று. எனவே, ஏதாவது செய்து அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று நினைத்தான். தப்பிக்க என்ன வழி என்று சிந்திக்கத்தொடங்கினான். 

ஒரு வாய்ப்பு வந்தது, அவர்கள் சியரா லியோன் என்ற இடத்தில் கப்பலை நிறுத்தினார்கள். அந்தக் கடற்கரையில் ஆங்கிலேயர்கள் தங்கள் அடிமை வியாபாரத்திற்காக அலுவலகங்கள், தொழிற்சாலைகள், தங்குமிடங்கள் போன்றவைகளைக் கட்டிவைத்திருந்தார்கள். அவர்கள் வாழ்வதற்கு அங்கு வீடுகளும் இருந்தன. சியாரா லியோன் கடற்கரையில் கிளவ் என்ற ஒருவர் இப்படி வியாபாரம்செய்தார். நியூட்டன் அவரிடம் போய், "நான் உங்களோடு வந்து தங்கட்டுமா? நான் உங்கள் வியாபாரத்தில் உங்களுக்கு உதவிசெய்வேன். என்னால் உங்கள் வியாபாரம் வளரும்," என்று சொன்னான். இதைக் கேட்ட மாலுமி, நியூட்டன் தொலைந்தால் போதும் என்ற எண்ணத்தில், "நீ இவனை எடுத்துக்கொள். இவனை விடுவிப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை," என்றான். இப்படித்தான் நியூட்டன் அந்தத் தொழிலதிபரிடம் சிக்கினான். 

நியூட்டன் ஆப்பிரிக்காவின் சியரா லியோனில் அவரோடு தங்கினான். அவன் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி,  பணம் சம்பாதிக்க முடிவுசெய்தான். அங்கிருந்த புத்திசாலியான தொழிலதிபருக்கு இணையாக நியூட்டனும் தந்திரமாக வியாபாரம் செய்யக் கற்றுக்கொண்டான். கடுமையாக உழைத்தான். இருவரும் ஒன்றுசேர்ந்து ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கினர்கள். வணிக வீடுகளைக் கட்டினார்கள், சரக்குகளை வைப்பதற்கு இடங்கள் கட்டினார்கள், கப்பல் கட்டினார்கள், உள்ளூர் பழங்குடியினத் தலைவர்களுடன் சேர்ந்து அடிமைகளை வாங்கி வேறு நாடுகளில் விற்றார்கள் அல்லது அங்கு வந்து இறங்கிய வியாபாரிகளிடம் விற்றார்கள். அவர்களுடைய வியாபாரம் கொடிகட்டிப் பறந்தது.

அவனுடைய தொழில் நண்பன் ஆமோஸ் கிளவ் ஒரு பழங்குடியின இளவரசியைத் திருமணம்செய்தான். திருமணம்செய்தான் என்பதைவிட சேர்த்துக்கொண்டான் என்று சொல்லலாம். இவள் மிகவும் புத்திசாலி, தந்திரசாலி. இவள்  ஐரோப்பியர்களின் வழிகளையும், கலாச்சாரத்தையும் மிக விரைவில் கற்றுக்கொண்டாள். இவளுக்கு நியூட்டன்மீது பெரிய வெறுப்பு. நியூட்டனை அறவே பிடிக்காது. இவள் ஒரு சூழ்ச்சிக்காரி. நியூட்டனும் கிளவும் தங்கள் வியாபாரத்தில் கிடைத்த இலாபத்தைப் பகிர்ந்துகொண்டார்கள். இது அவளுக்குப் பிடிக்கவில்லை. 

ஒரு நாள் நியூட்டன் காய்ச்சலால் படுத்தப்படுக்கையானான். அவனும் கிளவும் சேர்ந்து உள்ளூர்களுக்குச் சென்று அடிமைகளை வாங்கிவரவேண்டியிருந்தது. நியூட்டனுக்கு உடல்நலம் சரியில்லாததால் அவனால் கிளவுடன் சேர்ந்து செல்ல முடியவில்லை. அவன் அங்கேயே தங்கிவிட்டான். கிளவுட் மட்டும் சென்றார். 

அவருடைய மனைவி இந்த வாய்ப்பைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டாள். நியூட்டன் படுத்த படுக்கை. மிகவும் பலவீனமாக இருந்தான், பிறருடைய உதவியின்றி அவனால் எதுவும் செய்ய முடியாது. அவள் நியூட்டனை அவனுடைய வசதியான வீட்டிலிருந்து தூக்கிக்கொண்டு, அடிமைகளை வைக்கும் களஞ்சியசாலையில் சங்கிலிகளால் கட்டி அடைத்துவைத்தாள். நியூட்டனுக்குப் போதுமான உணவு கொடுக்கவில்லை; யாரும் உணவு கொடுக்கக்கூடாது என்று அவள் கட்டளை பிறப்பித்திருந்தாள். சில நேரங்களில் கொஞ்சம் கஞ்சி கொடுத்தனுப்பினாள். இன்னும் சில நேரங்களில் அவள் சாப்பிட்டபின் தட்டில் இருந்த எச்சில்களைக் கொடுத்தனுப்பினாள். அவனைக் கேவலமாக நடத்துமாறு அங்கிருந்த பிற அடிமைகளுக்குக் கட்டளையிட்டாள். நியூட்டனைக் கல்லால் எறிந்தார்கள். கொஞ்சம் உடல் நலம் தேறியதும், நியூட்டன் ஊர்ந்துபோய் வெளியே குட்டைகளில் தேங்கியிருந்த மழைத்தண்ணீரைக் குடிக்க முயன்றான். அதைப் பார்த்த பிற அடிமைகள் ஓடி வந்து அவனைக் காலால் எட்டி உதைத்தார்கள். வலி, வேதனை, பலவீனம்,பட்டினி. எல்லாவற்றுக்குமேலாக தான் ஓர் அடிமையைப்போல் நடத்தப்பட்டது அவருக்கு மிக மோசமான வேதனையாக இருந்தது. "நான் இப்போது அடிமைகளின் அடிமை" என்று நியூட்டன் உணரத் தொடங்கினான்.

கிளவ் திரும்பிவந்தபோது, "உம்முடைய மனைவி என்னை மோசமாக நடத்தினார். இங்குதான் நான் தூங்கவேண்டியிருந்தது," என்று நியூட்டன் அவரிடம் நடந்ததைச் சொன்னான். அவர் நம்பவில்லை. அவருடைய மனைவி நியூட்டனைவிட தந்திரசாலி, புத்திசாலி. அவள் எல்லாவற்றையும் தலைகீழாகச் சொன்னாள். "நியூட்டன் உங்களை இந்நாள்வரை ஏமாற்றிக்கொண்டிருக்கிறான். பொய் சொல்லுகிறான். திருடுகிறான். பொய்க்கணக்குக் காட்டி உங்களை வஞ்சிக்கிறான்," என்று அவள் குற்றச்சாட்டுகளை அடுக்கிக்கொண்டேபோனாள். ஒருநாள் குடிபோதையில், கோபத்தில், கிளவும் நியூட்டன்மேல் எறிந்துவிழுந்தான். அவன் மனைவி சொன்ன எல்லாக் குற்றங்களையும் அவன்மேல் சுமத்தினான். நியூட்டன் மறுத்தான். கிளவ் அவனை அடித்து, கால்களைச் சங்கிலிகளால் பிணைத்துக் கட்டினான். "இனி இதுதான் உன் கதி. அயோக்கியப்பயலே!" என்று முடிவுசெய்தான். நியூட்டன் எல்லா நேரமும் இரும்புச் சங்கிலிகள் மாட்டப்பட்ட கால்களை இழுத்துஇழுத்து நடந்தான். மேலும், அவன் மற்ற அடிமைகளுடன் சேர்ந்து தோட்டங்களில் வேலையும் செய்யவேண்டியிருந்தது.

இதோ! நியூட்டன் ஆப்பிரிக்காவில் ஒரு கடற்கரையில் அடிமையாக இருக்கிறான். அவன் எங்கு இருக்கிறான்  என்று அவனுடைய அப்பாஉட்பட யாருக்கும் தெரியாது. அவன் இங்கு இரக்கமற்ற ஒரு தொழிலதிபரிடமும், அவருடைய  மூர்க்கமான, தந்திரமான மனைவியின் தயவிலும் இருக்கிறான். இங்கே அவன் ஒரு தோட்டத்தில் சிக்கித்தவிக்கிறான்; அடிமைகளிடையே ஓர் அடிமைபோல் வேலை செய்கிறான். 

"இதற்கு நான் தகுதியானவன்தான். இப்படித் துன்பப்பட நான் தகுதியானவன்தான். எனக்கு வேண்டும்," என்று சில வேளைகளில் நியூட்டன் நினைத்தான். எனினும், மனந்திரும்பி தேவனிடம் வர வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு எழவில்லை. அதற்குப்பதிலாக அவனு டைய உள்ளத்தில் கசப்புதான் அதிகரித்தது. அவனுடைய பரிதாபமான நிலையைக் கண்ட ஓர் அடிமை அவன்மேல் இரக்கப்பட்டு, சில எழுதுப்பொருட்களை அவனுக்குக் கொடுத்தான். "இங்கு அவ்வப்போது சில கப்பல்கள் வந்துபோகின்றன. நான் என் அப்பாவுக்கு ஒரு கடிதம் எழுதப்போகிறேன். எப்படியாவது, என்றைக்காவது அது அவரிடம் கிடைக்கும். அவர் நிச்சயமாக என்னைத் தேடி வருவார்," என்று நினைத்துக்கொண்டே அவன் தன் அப்பாவுக்கு ஒரு கடிதம் எழுதினான். பல வாரங்களுக்குப்பிறகு, அங்கு ஒரு கப்பல் வந்தபோது, அதில் இருந்த ஓர் அடிமையிடம் அந்தக் கடிதத்தைக் கொடுத்தனுப்பினான்.  அந்தக் கடிதம் அவருடைய அப்பாவைச் சென்றடையுமா என்று தெரியாது. அப்படியே கிடைக்கும் என்று எடுத்துக்கொண்டால்கூட, அதற்கும் பல மாதங்கள் ஆகும். ஒருவித நம்பிக்கையோடு கடிதம் எழுதிக் கொடுத்தனுப்பினான். 

இந்த நேரத்தில், அவனிடம் ஒரு வடிவியல் புத்தகம் இருந்தது. இந்த ஒரு புத்தகத்தின்மூலம், அவன் வடிவவியலைக் கற்றுக்கொண்டு, புத்திபிசகாமல், தன் புத்திக்கூர்மையைக் காத்துக்கொண்டான் என்று சொல்லலாம். அவன் தான் கற்ற வரைபடங்களையும், கோணங்களையும் தரையில் வரைந்து பழகினான். இந்தப் புத்தகம்தான் அவனுடைய ஒரே நண்பன்.

மீண்டும் ஒரு வாய்ப்பு அவனுடைய வாழ்க்கைக் கதவைத் தட்டியது. ஒருநாள் வேறொரு அடிமை வியாபாரி கிளவைச் சந்தித்தார். வயலில் வேலைசெய்துகொண்டிருந்த கருப்பு அடிமைகளுக்கிடையே ஒரு வெள்ளைக்காரன் வேலை செய்வதை அவர் கவனித்தார். அது மட்டுமல்லாமல், அவர் அவனை உன்னிப்பாகக் கவனித்தார். அன்று மாலை, நியூட்டன் மணலில் வரைபடங்கள் வரைவதைப் பார்த்தார். அன்றிரவு அவர் கிளவிடம் சென்று, "அங்கு இருக்கும் அந்த வெள்ளைக்காரன் எனக்கு வேண்டும்," என்றார். நியூட்டனை  விடுவிப்பதில் கிளவுக்கு மிகவும் மகிழ்ச்சி. ஏனென்றால், நியூட்டன் சீக்கிரத்தில் இறந்துவிடுவான் என்றுதான் கிளவு நம்பினார். ஆனால், நியூட்டன் சீக்கிரம் இறக்கிற ஆளா என்ன! நியூட்டன் இறக்க மறுத்துவிட்டார். 

நியூட்டனை அவருடன் அனுப்புவதிற்கு கிளவு சம்மதித்தார். புதிய அடிமை வியாபாரி நியூட்டனை வாங்கி, அவனுடைய சங்கிலிகளை அறுத்தெறிந்து, நல்ல சாப்பாடும், ஆடையும் கொடுத்து, அவனுடைய நிலையையும், நிலைமையையும் முற்றிலும் மாற்றினார். நியூட்டன் மிகத் தாழ்ந்த நிலையிலிருந்து மீண்டும் உயர்ந்த நிலைக்கு மாறினான். 

நியூட்டன் இந்தப் புதிய அடிமைவியாபாரியுடன் சேர்ந்து கடற்கரையில் தங்கள் வியாபாரத்திற்குத் தேவையான எல்லா வசதிகளையும் உருவாக்கினார்கள். நியூட்டன் புத்திசாலி. தான் என்ன செய்கிறோம் என்று அவனுக்குத் தெரியும். அவர்களுடைய வியாபாரம் செழித்துவளர்ந்தது. நியூட்டன் தனக்கென்று ஒரு சாம்ராஜ்யத்தைக் காட்டினான். இதுதான் தன் வாழ்க்கையாக இருக்கும் என்று அவன் நினைக்க ஆரம்பித்தான். அவன்  ஏறக்குறைய இங்கிலாந்தை மறந்துவிட்டான் என்று சொல்லலாம். அவ்வப்போது அவனுடைய காதலி மேரி கேட்லட் நினைவு வந்துபோனது. அவன் இன்னும் அவளைக் காதலித்தான். ஆனால், இப்போது அவள் தன் காதலை ஏற்றுக்கொள்வாளா என்ற சந்தேகமும் கூடவே வந்தது. "என் வாழ்க்கை இவ்வளவு கேவலமானபிறகும், நான் அவளைப்பற்றி நினைப்பது நல்லதல்ல" என்று அவன் நினைத்தான். 

அங்கு அவனுடைய தொழில் பேரரசு பரந்துவிரிந்தது. அவன் பெரிய பணக்காரன் ஆனார். புத்திசாலிதனமான வியாபாரி. அவன் ஆப்பிரிக்க வாழ்க்கைமுறையை விரும்பினான். அவன் ஆப்பிரிக்க மக்களின் மந்திரம், தந்திரம், பழக்கவழக்கங்கள், பில்லிசூனியம், தாயத்து, ஆகியவைகளில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தான். உள்ளூர் பழக்கவழக்கங்களை அரவணைக்கத் தொடங்கினான். "இந்தக் கடற்கரையில் இதுதான் இப்போது என் வாழ்க்கை. என் வாழ்க்கை இப்படித்தான் இருக்கும்," என்று அவன் நினைத்தான்.

நியூட்டன் தன் அப்பாவுக்கு எழுதிய கடிதத்தை அடியோடு மறந்துவிட்டான். ஆனால், அவனுடைய கடிதம் அவனுடைய அப்பாவைச் சென்றடைந்தது. அவர் உடனே செயலில் இறங்கினார். அவர் கடிதம் தனக்குக் கிடைத்த அன்றைக்கே துறைமுகத்துக்குச் சென்று பல மாலுமிகளைச் சந்தித்தார். கடைசியாக கிரேஹவுண்ட் என்ற கப்பலின் மாலுமியைச் சந்தித்தார். "நீங்கள் செல்லும் வழியெங்கும் என் மகனைப்பற்றி விசாரியுங்கள். அவன் எங்கு இருக்கிறான் என்று திட்டவட்டமாகத் தெரியவில்லை. ஆனால், நான் சொல்லும் பாதையில் பயணித்தால் நிச்சயமாக நீங்கள் அவனைக் கண்டுபிடிக்க முடியும். என் மகனைக் கண்டுபிடித்து அவனை இங்கிலாந்துக்குக் கொண்டுவந்தால் உங்களுக்கு நான் பணம் தருவேன். நீங்கள் எதிர்பார்பதைவிட அதிகமாகத் தருவேன். கப்பல் நிற்கும் எல்லா இடங்களிலும் விசாரியுங்கள். அவனுடைய பெயர் ஜான் நியூட்டன்," என்று சொன்னார். அந்த மாலுமியும் ஒப்புக்கொண்டார். ஏனென்றால், இருவரும் நல்ல நண்பர்கள். நல்ல நண்பர் என்பதால் மட்டும் அல்ல, பணம் கிடைக்கும் என்பதாலும் அவர் உதவிசெய்யத் தீர்மானித்தார். 

கிரேஹவுண்ட் கப்பல் பயணம் ஆரம்பித்தது. அது இன்னொரு அடிமை வியாபாரக் கப்பல். கப்பலை நிறுத்திய இடங்களிலெல்லாம் அவர்கள் நியூட்டனின் பெயரைச் சொல்லி விசாரித்தார்கள். "அவர் இங்கு இருந்தார். இப்போது இல்லை. அவர் அங்கு இருக்கிறார். தெரியாது," என்று பலர் பலவிதமாகப் பதில் சொன்னார்கள். நியூட்டன், அந்த நேரத்தில், கடற்கரையிலிருந்து வெகு தொலைவில் இருந்தான். அவனுடைய அடிமை வியாபார சாம்ராஜ்யம் பரந்துவிரிந்திருந்தது.

கிரேஹவுண்ட் கப்பல் அவர் இருந்த கடற்கரையைக் கடந்துபோகிறபோது அவர் உள்நாட்டிற்குச் சென்று அடிமைகளை வாங்க அதிகமான சரக்குகளைத் தேடிக்கொண்டிருந்தார். ஆனால் அவரிடம் போதுமான சரக்குகள் இல்லை. அவரிடம் வியாபாரம் செய்ய போதுமான சரக்குகள் இல்லாததால், அவர் தன் ஆள்களிடம், "நாம் கடற்கரைக்குச் சென்று காத்திருப்போம்; கப்பல்கள் அந்த வழியாகக் கடந்துபோகும்போது, நாம் அவர்களுக்கு சமிக்ஞை செய்து அவர்களிடம் என்ன இருக்கிறது என்று பார்ப்போம். நம்மோடு வியாபாரம்செய்ய விரும்பினால், அவர்கள் சமிக்ஞை தருவார்கள். நாம் உள்நாட்டிற்குச் சென்று அடிமைகளை வாங்க இன்னும் நிறைய சரக்குகள் தேவைப்படும்," என்று சொல்லி கடற்கரைக்குச் சென்று அவர்கள் ஒரு தீவில் காத்திருந்தார்கள். அந்த நேரத்தில் ஒரு கப்பல் அந்த வழியாகச் சென்றது. அவருடைய ஓர் ஆள் புகையை எழுப்பி சமிக்ஞை கொடுத்தார். கப்பலிலிருந்தும் சமிக்ஞை வந்தது. எனவே, நியூட்டனின் ஆள்களில் ஒருவர் ஒரு சிறு படகில் கப்பலுக்குப் புறப்பட்டுப் போனார். அது கிரேஹவுண்ட் கப்பல். சரக்குகளை கொடுக்கல்வாங்கல்பற்றிப் பேசிமுடித்துப் புறப்படும் நேரத்தில், "ஓ, உங்களுக்கு ஜான் நியூட்டன் என்பவரைத் தெரியுமா?" என்று அந்த மாலுமி கேட்டான். அதைக் கேட்டவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். "ஓ! அவர் கரையில் இருக்கிறார்," என்று வந்தவர்கள் சொன்னார்கள். இப்போது மாலுமி ஆச்சரியப்பட்டார். அவர் இதுவரை நியூட்டனைக்குறித்து விசாரித்து சலித்துப்போனார், அவரைக் கண்டுபிடிக்க முடியும் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டார். எனவே, நியூட்டன் கரையில் இருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் மிகவும் அதிர்ச்சியடைந்தார். அவர் சிறிய படகில் ஏறி கரைக்குச் சென்றார். அங்கே, நியூட்டன் காத்திருந்தான். அவனைப் பார்த்ததும், "நீ  என்னுடன் வர வேண்டும். நான் உன்னை மீண்டும் இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்கிறேன்," என்று மாலுமி சொல்ல, நியூட்டனுக்குத் தலையும் புரியவில்லை, காலும் புரியவில்லை. நியூட்டன் அதிர்ச்சியடைந்தான். அதன்பிறகு மாலுமி அவன் எழுதிய கடிதத்தையும், அவனுடைய அப்பாவையும்பற்றிச் சொன்னார். 

ஒரு சில மாதங்களில் தன் வாழ்க்கை எவ்வளவு மாறிவிட்டது என்று நியூட்டன் சிந்தித்துப்பார்த்தான். "இல்லை, நான் திரும்பிவர மாட்டேன். இதுதான் என் வீடு; நான் சொந்த வியாபாரம் செய்கிறேன். என் வியாபாரம் பரந்துவிரிந்துள்ளது. இதையெல்லாம் விட்டுவிட்டு நான் இங்கிலாந்துக்குத் திரும்ப வேண்டும் என்று விரும்புகிறீர்களா. அது முடியாது," என்று நியூட்டன் பதில் சொன்னான். "நான் யாரைத் தேடினேனோ, அந்த மனிதன் என் கண்ணெதிரே நிற்கிறான். அவன் வரமுடியாது என்று சொன்னவுடன் நான் 'சரி' என்று சொல்லிவிட்டு, வெறுங்கையாய் நான் இங்கிலாந்துக்குச் செல்லப்போவதில்லை," என்று சிந்தித்துக்கொண்டே, "உன் தூரத்து உறவினர் ஒருவர் இறந்துவிட்டார். அவர் உனக்கு 400 பவுண்டுகள் விட்டுச் சென்றிருக்கிறார். நீ வந்தால் அது உனக்குக் கிடைக்கும். நீ என் கப்பலில் ஒரு பயணியாக வரலாம். நீ என்னோடு உட்கார்ந்து சாப்பிடலாம். கப்பலில் எந்த வேலையும் செய்ய வேண்டாம்," என்று மாலுமி கதையளந்தார். நியூட்டன் எதையும் நம்பவில்லை. ஆனால், அந்த நேரத்தில், அவன் மேரி கேட்லட்டை நினைத்தான். அவன் தான் நினைத்ததைச் செய்கிற குணமுடையவன். எனவே, "ஒருவேளை நான் அவளை மீண்டும் சந்திக்க வாய்ப்புக் கிடைக்கலாம். ஒருவேளை அவள் என்னை ஏற்றுக்கொள்ளக்கூடும்," என்ற எண்ணம் எழ, "சரி, வருகிறேன்," என்று சொன்னான். இதைக் கேட்ட அவனுடைய ஆள்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தார்கள். நியூட்டன் தனக்கு வேண்டிய அத்தியாவசியமான சிலவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு, மீதி எல்லாவற்றையும் விட்டுவிட்டு கிரேஹவுண்டில் ஏறி, இங்கிலாந்துக்குத் திரும்பினான். அவன் தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமலே செய்த செயல்கள் பல உண்டு. இது அதில் ஒன்று.  

கிரேஹவுண்டில், கேப்டன் தான் சொன்னபடியே நடந்தார். அவர் நியூட்டனிடம் எந்த வேலையும் வாங்கவில்லை. நியூட்டன் ஒரு பயணிபோலவே பயணித்தான். மாலுமியோடு சேர்ந்து சாப்பிட்டான். எல்லாச் சலுகைகளையும் அனுபவித்தான். அவன் கப்பலில் மாலுமிக்குப் பல வழிகளில் உதவியாக இருந்திருக்கலாம். ஏனென்றால்,  அவனுக்குக் கப்பலைப்பற்றி, கடலைப்பற்றி, கடல்தடத்தைப்பற்றி, கடல் வியாபாரத்தைப்பற்றி நிறையத் தெரியும். எல்லா வகைகளிலும் நியூட்டன் உதவியிருக்க முடியும். ஆனால், நியூட்டன் சும்மா சோம்பேறியாக இருந்தான். எதுவும் செய்யவில்லை. இது ஒரு புறம், இன்னொரு புறம், அவன் கப்பல் சிப்பந்திகளைக் கெடுத்தான். மாலுமியைப்பற்றி மோசமான கவிதைகள் எழுதிப் பாடினான். அவனைக் கப்பலில் அழைத்துச்செல்வத்தைக்குறித்து மாலுமி மிகவும் வருந்தினார். "இப்படிப்பட்ட ஒருவனையா நான் கூட்டிக்கொண்டுசெல்கிறேன்," என்று வெட்கப்பட்டார். நியூட்டன் எல்லாரும் அருவருக்கத்தக்கவிதத்தில் நடந்தான். அவனுடைய மோசமான பாதிப்பு பிறர்மேல் கண்கூடாகத் தெரிந்தது. நியூட்டனின் அப்பாவினிமித்தமும், ஒருவேளை அவர் தரப்போகிற பணத்திற்காகவும் மாலுமி நியூட்டனைப் பொறுத்துக்கொண்டார் என்று சொல்லலாம்.

கப்பலில் மாதக்கணக்கில் எதுவும் செய்யாமல் சும்மா இருந்த நேரத்தில், ஜான் நியூட்டன் அவ்வப்போது சில புத்தகங்களை எடுத்து வாசித்தான். ஒருமுறை ஒரு புத்தகத்தை எடுத்து புரட்டிக்கொண்டிருந்தார். அது "கிறிஸ்துநாதர் அனுசாரம்" என்ற "The imitation of Christ"புத்தகம். “இன்று மனிதன் வீரியமுள்ளவனாகவும், பலமாகவும், செழிப்பாகவும் இருக்கிறான்; நாளைக்கு அவன் வெட்டுண்டு, வாடிப்போய், வதங்கிவிடுகிறான்... நிர்ப்பந்தமான குற்றவாளியே! சிந்திக்காத முட்டாள் பாவியே! உபத்திரவத்தின்போது நீ எப்படி நிற்பாய்? தீர்ப்புக்காகக் காத்திருக்கும்போது நீ என்ன சாக்குபோக்குச் சொல்வாய்? எந்த மனிதனுக்கும் தெரியாத உன் அந்தரங்கமான அக்கிரமங்கள் உனக்குத் தீர்ப்பு வழங்குபவருக்குத் தெரியும். அவருக்கு எந்தச் சாட்சியும் தேவையில்லை. இது உனக்குத் தெரிந்திருந்தும், இதைப்பற்றிக் கவலைப்படாமல் இருந்தால், அந்தப்  பயங்கரமான நாளின் அகோரத்திலிருந்து நீ எப்படித் தப்பிப்பாய்?" என்ற வரிகள் அவனுடைய கண்களில் பட்டன. நியூட்டன் புத்தகத்தை மூடி வைத்துவிட்டான்.  ஆனால் அந்த வரிகள் அவனுக்குள் எதிரொலித்துக்கொண்டேயிருந்தன.

"என் எண்ணங்களும், கருத்துக்களும் ஒருவேளை தவறாக இருந்தால்!" என்ற ஓர் எண்ணம் திடீரென்று அவனுக்குள் எழுந்தது. அவன் இதுவரை "நானே ராஜா, நானே மந்திரி," என்ற பாணியில் வாழ்ந்தான். "என் வாழ்க்கை என் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. என் வாழ்க்கைக்கு நான்தான் பொறுப்பு. நான்தான் எனக்கு நீதிபதி. என்னைவிடப் பெரிய ஆள் ஒருவனும் இல்லை. தேவன் என்று ஒருவர் இல்லை," என்ற கொள்கையோடு இதுவரை வாழ்ந்தான். இப்போது அது தவறாக இருக்க முடியுமோ என்ற ஒரு  சிறிய சந்தேகம் எழுந்ததும் உள்ளத்தில் சமாதானம் குலைந்தது. ஆயினும், அவன் அந்த எண்ணத்தை ஒதுக்க முயன்றான். "இப்படித்தான் வாழ வேண்டும் என்று நான் முடிவுசெய்துவிட்டேன். இதன் விளைவுகளைச் சந்திக்க நான் தயார்," என்று நினைத்தான். 

அன்றிரவு அவன் மிகவும் அயர்ந்து தூங்கினான். ஆனால், தேவன் ஜான் நியூட்டனை விடவில்லை. 

நள்ளிரவில், அலறல், அழுகை சத்தம் கேட்டு நியூட்டன் விழித்தெழுந்தான். அவனுடைய அறையில் வெள்ளம் புகுந்திருந்தது. கப்பல் சாய்ந்துகொண்டிருப்பதை அவன் உணர்ந்தான். ஆம், நள்ளிரவில், பெரும் புயல் வீசியது; கப்பல் அலைகளில், ஒரு தீப்பெட்டிபோல், தத்தளித்துக்கொண்டிருந்தது. ஒரே ஒப்பாரி, ஓலம், அலறல், அழுகை. 

அவன் கப்பலின் மேல்தளத்திற்குப் போனான். கப்பலின் பாய்கள் கிழிந்து தொங்கிக்கொண்டிருந்தன. பாய்மரத்தில் ஏறி கிழிந்த பாயைச் சரிசெய்யலாம் என்று நினைத்து அவன் பாய்மரத்தில் ஏறத் தொடங்கினான். "ஏறாதே, கீழே இறங்கு. கீழே போய் ஒரு கத்தியை எடுத்துக்கொண்டு வா," என்று மாலுமி கத்தினார். நியூட்டன் பாய்மரத்திலிருந்து கீழே இறங்கி மாலுமி சொன்னபடி ஒரு கத்தியைத் தேடி கப்பலின் அடித்தளத்திற்குப் போனான். கத்தியை எடுத்துக்கொண்டு மேல்தளத்துக்கு வந்தான். அப்போது கப்பலின் பாய்மரத்தில் பாதிதூரத்தில் வேறொருவன் ஏறிக்கொண்டிருந்தான். திடீரென்று வந்த ஒரு பேரலையில் கப்பல் பயங்கரமாகச் சாய, பாய்மரத்தில் இருந்தவன் கடலில் விழுந்தான், இறந்தான்.

கொஞ்ச நேரத்திற்குமுன் அது நியூட்டன் இருந்த இடம். சில நொடிகளில் நியூட்டன் மீண்டும் உயிர்தப்பினான். 

கப்பல் முழுவதும் வெள்ளக்காடு. அன்றிரவு முழுவதும், அவன் கப்பலிலிருந்து தண்ணீரை வெளியேற்றும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டான். கப்பலில் சில இடங்களில் ஏற்பட்டிருந்த விரிசல்களை அடைக்க முயன்றார்கள். இரவு முழுவதும் உறைகுளிரில் பம்பரம்போல் வேலைசெய்தான். 

சிறுவயதில் அவனுடைய அம்மா அவனுக்குக் கற்றுக்கொடுத்த, இதுவரை அவன் ஒதுக்கிவைத்திருந்த, சில காரியங்களை அவன் நினைவுகூர்ந்தான்.  மரணத்தைக்குறித்த எண்ணம் தோன்றியது. எல்லாருடைய முகங்களிலும் மரணபயம். ஏனென்றால், பிழைக்கமுடியும் என்ற நம்பிக்கை இல்லை. அதற்கு வாய்ப்பு மிகமிகக் குறைவு.

காலை விடிந்தது. ஆனால், இன்னும் புயல் நிற்கவில்லை; அலைகள் இன்னும் ஓயவில்லை. நிறைய உணவுப்பொருட்களை இழந்துவிட்டார்கள். பாய்மரம் உடைந்துவிட்டது; பாய்கள் கிழிந்துவிட்டன; கப்பலில் விரிசல்; கப்பல் நகர முடியாது. அவர்களுடைய நம்பிக்கை அற்றுப்போயிற்று. நியூட்டனிடம் சில யோசனைகள் இருந்தன. நியூட்டன் தன் யோசனைகளை மாலுமியிடம் சொன்னபிறகு, "இவைகள் பலனளிக்கவில்லை என்றால், தேவன்தாமே நமக்கு இரங்குவாராக," என்றான். தான் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு அவனே அதிர்ச்சியடைந்தான். "தேவன் நமக்கு  இரங்குவாராக என்றா சொன்னேன். அவர் எப்படி எனக்கு இரங்குவார்?" என்று நினைத்தான். தன் சிறுவயதில் தன் அம்மா தனக்குக் கற்றுத் தந்தவைகளை மீண்டும் நினைத்துப்பார்த்தான். திடீரென்று அவனுக்கு நீதிமொழிகள் முதல் அதிகாரம் நினைவுக்கு வந்தது. "என் ஆலோசனையையெல்லாம் நீங்கள் தள்ளி, என் கடிந்துகொள்ளுதலை வெறுத்தீர்கள். ஆகையால், நானும் உங்கள் ஆபத்துக்காலத்தில் நகைத்து, நீங்கள் பயப்படுங்காரியம் வரும்போது ஆகடியம்பண்ணுவேன். நீங்கள் பயப்படுங்காரியம் புசல்போல் வரும்போதும், ஆபத்து சூறாவளிபோல் உங்களுக்கு நேரிடும்போதும், நெருக்கமும் இடுக்கணும் உங்கள்மேல் வரும்போதும், ஆகடியம்பண்ணுவேன். அப்பொழுது அவர்கள் என்னை நோக்கிக் கூப்பிடுவார்கள்; நான் மறுஉத்தரவு கொடுக்கமாட்டேன்; அவர்கள் அதிகாலையிலே என்னைத் தேடுவார்கள், என்னைக் காணமாட்டார்கள். அவர்கள் அறிவை வெறுத்தார்கள், கர்த்தருக்குப் பயப்படுதலைத் தெரிந்துகொள்ளாமற்போனார்கள். என் ஆலோசனையை அவர்கள் விரும்பவில்லை; என் கடிந்துகொள்ளுதலையெல்லாம் அசட்டைபண்ணினார்கள். ஆகையால் அவர்கள் தங்கள் வழியின் பலனைப் புசிப்பார்கள்; தங்கள் யோசனைகளினால் திருப்தியடைவார்கள். பேதைகளின் மாறுபாடு அவர்களைக் கொல்லும், மூடரின் நிர்விசாரம் அவர்களை அழிக்கும்." பல ஆண்டுகளுக்குப்பிறகு திடீரென்று அந்த முழு அதிகாரமும் அவனுடைய நினைவுக்கு வந்தது. இதோ! இறுக்கமான, மனக்கடினமான, தைரியமான, துணிச்சலான, சீர்கெட்ட இந்த மனிதன் இப்போது மரணத்தைக் கண்டு நடுங்குகிறான். முதன்முறையாக, இவன் இப்போது மரணத்திற்கு அஞ்சி நடுங்குகிறான். தன் அம்மா தனக்குக் கற்றுக்கொடுத்த ஏதாவது நினைவுக்கு வருமா என்று பார்த்தான். ஆலயத்தில் அன்று பாடிய  "மாட்சியின் கர்த்தர் தொங்கி மாண்ட அற்புத சிலுவை காண்கையில்" என்ற பாடல் வரிகளை அவன் நினைவு கூர்ந்தான். அந்த வரிகள் உண்மையாக இருக்க வேண்டும் என்று நியூட்டன் தன் வாழ்க்கையில் முதன்முறையாக விரும்பினான். கப்பல் மெல்ல மெல்ல ஆடி ஆடிப் பயணித்தது. பல நாட்களுக்குப்பிறகு, அவர்கள் நிலத்தைப் பார்த்தார்கள். கப்பலில் இருந்த எல்லாரும் "தரை, தரை," என்று ஆர்பரித்தார்கள். இருந்த உணவைக் கொஞ்சம்கொஞ்சமாகச் சாப்பிட்டார்கள். கப்பல் இப்படியே பயணித்திருந்தால் இருந்த உணவு இன்னும் ஒரு வாரத்திற்குத் தாக்குப்பிடித்திருக்கும். அதன்பின் என்னவாயிருக்கும் என்று சொல்லவேண்டாம். அவர்கள் தங்களிடமிருந்த ரொட்டியை மகிழ்ச்சியோடு சாப்பிட்டார்கள், பிராந்தியை உற்சாகமாக குடித்தார்கள்.  

அவர்கள் தாங்கள் சாப்பிடப்போகிற சூடான உணவு, படுக்கைகள், போர்வைகள், தரையில் அனுபவிக்கப்போகிற எல்லா வசதிகளையும்பற்றி பேசத்தொடங்கினார்கள். திடீரென்று பார்த்தால் எல்லாம் ஒரு மாயையாயிற்று. ஆம், அது ஒரு கடல் மூடுபனி, அது வெறும் கடல் மூடுபனி. மூடுபனியில் அது அவர்களுக்குக் கரைபோல் தோன்றியது. அவ்வளவுதான். மூடுபனி விலகியதும் அது ஒரு மாயை என்பதை அவர்கள் உணர்ந்தார்கள்.  அவர்கள் கடலில் எங்கு இருக்கிறார்கள், எங்கு போகிறார்கள் என்று தெரியவில்லை. திக்குத்தெரியாத கடலின் நடுவில் தவித்தார்கள். இப்போது, உணவு ஏறக்குறைய தீர்ந்துவிட்டது. சிலர் பட்டினியாலும், சோர்வாலும் இறந்தார்கள். இந்த நிலைமை நீடித்தால் அவர்கள் ஒருவரையொருவர் அடித்துச் சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள் என்று நியூட்டன் பயந்தான். "அந்த நிலைமை வந்தால் அவர்கள் முதலாவது என்னைத்தான் அடித்துச் சாப்பிடுவார்கள்," என்று நியூட்டன் நினைத்தான். ஏனென்றால் தான் அவ்வளவு மோசமானவன், வெறுக்கத்தக்கவன் என்று அவனுக்குத் தெரியும். எனவே, அவன் தூங்குவதற்குப் பயந்தான். படுத்தாலும் கண்களை மூடவில்லை. ஏதேனும் விபத்து நேரிட்டுத் தான் சாகக்கூடும் என்று பயந்தான். மேலும் கப்பல் மாலுமி, "எல்லோருக்காகவும் ஒருவன் மரிக்கப்போகிறான்" என்று சொல்லிக்கொண்டிருந்தார். மாலுமி தன்னைத்தான் குறிப்பிடுகிறார் என்று நியூட்டனுக்குத் தெரியும். மாலுமி வேதாகமத்திலிருந்து யோனாவின் நிகழ்ச்சியைப்பற்றி பேசுகிறார் என்று நியூட்டன் புரிந்துகொண்டான். 

நியூட்டன் நீண்ட காலத்திற்குப்பிறகு முதல் முறையாக ஜெபிக்க ஆரம்பித்தான். ஜெபிக்க மிகவும் சங்கடப்பட்டான். "நான் எப்படி ஜெபிக்க முடியும்? நான் எப்படி தேவனிடம் பேச முடியும்? அவர் எப்படி என்னோடு பேசுவார்?" என்ற சந்தேகம்.  எனினும், அவன் ஜெபித்தான். 

கப்பல் 14 நாட்கள் காற்றில் அலைபட்டு மெல்ல நகர்ந்தது. நியூட்டன் மிகவும் உறுதியாக, ஆனால் கொஞ்சம் பலவீனமாக, "தேவனே, எங்கள்மேல் இரங்கும்," என்று ஜெபிக்கத் தொடங்கினான். அவன் ஜெபிக்க ஆரம்பித்ததும் காற்றின் போக்கு மாறி, அவர்களுக்குச் சாதகமாக வீசியது. தாங்கள் உண்மையில் கரைக்கு மிக அருகில் இருப்பதை எல்லாரும் உணர்ந்தார்கள். ஆம், அவர்கள் இந்த நேரத்தில் அயர்லாந்து கடற்கரையருகே இருந்தார்கள். உண்மையில் அது கரைதான் என்று தெரிந்ததும் அவர்களுடைய மகிழ்ச்சிக்கு எல்லையேயில்லை. மாலுமிஉட்பட எல்லாரும் மகிழ்ச்சியோடு தரையிறங்கினார்கள். 

ஜான் நியூட்டன், தன் வாழ்க்கையில் முதன்முறையாக, தேவனுடைய இரக்கத்தை உணர ஆரம்பித்தான். கடந்த காலங்களில் தேவன் பல தடவை தன்மேல் காண்பித்த இரக்கத்தையும், தான் அதை இனங்காணாமல் ஒதுக்கிவிட்டதையும் எண்ணிப்பார்த்தான். ஆனால், இந்த முறை, அவன் தேவனுடைய இரக்கத்தை இனங்கண்டு, அங்கீகரித்தான்.

மாலுமிகளும், கப்பல் சிப்பந்திகளும் கரையில் இறங்கி தங்கள்தங்கள் வீடுகளுக்கு விரைந்தபோது, ஜான் நியூட்டன் ஆயத்திற்குப் போனான். சங்கடத்தோடு உள்ளே போய், ஒரு மூலையில் அமர்ந்தான். தன்னை யாரும் கவனிக்கமாட்டார்கள் என்று அவன் நம்பினான். அவன் தன்னையும், தன் வாழ்க்கையையும், தன் நிலைமையையும், எல்லாவற்றையும்பற்றி சிந்தித்து, வெட்கப்பட்டான். தன்னைக் காப்பாற்றியவர் தேவனே என்று நியூட்டனுக்குத் தெளிவாகத் தெரிந்தது. ஆனால், தன்னைப்போன்ற ஒருவனுக்கு தேவன் ஏன் இரங்கினார் என்பதை அவநால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவன் தேவனை விசுவாசித்தான். இப்போது அவனுடைய விசுவாசம் உறுதிப்பட்டது. ஆனால், அதற்குமேல் அவனுக்கு எதுவும் புரியவில்லை. "நான் தேவனுக்குக் கடன்காரன். நான் அவருக்குக் கடன்பட்டவன்," என்று அவன் நினைத்தான். அன்றுமுதல் அவன் தன்னைத் தேவனுடைய அடிமையாகப் பார்த்தான். "நான் இனிமேல் நேர்மையான வாழ்க்கை வாழ்வேன். ஒழுங்காகச் ஜெபிப்பேன். அப்போது ஒருவேளை தேவன் என்னை ஏற்றுக்கொள்வார்," என்றும் அவன் நினைத்தான். எனவே, அவன் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டான். இதற்குமிச்சம் அவனுக்கு எதுவும் தெரியாது. அந்த நாள்களில் அவன் தன்னை "ஆவிக்குரிய மூடுபனியில் ஒரு யாத்ரீகன்" என்று விவரித்தான். தான் போகும் பாதை அவனுக்குத் தெரியாது.

வாழ்வதற்கு வேலை வேண்டும், வருமானம் வேண்டுமே! எனவே, இங்கிலாந்துக்குத் திரும்பிய கொஞ்சக் காலத்திற்குப்பின் அவன் மீண்டும் அடிமை வியாபாரக் கப்பலில் சேர்ந்தான். ஆனால், இந்தமுறை அவன்  வித்தியாசமான மனிதநாக இருக்கத் தீர்மானித்திருந்தான், உறுதிபூண்டிருந்தான். “நான் வேலையை ஒழுங்காகச் செய்வேன். நல்ல மனிதனாக இருப்பேன்,” என்று அவன் தனக்குத்தானே சொல்லிக்கொண்டான். அவன் நினைத்தபடியே தொடங்கினான். ஆனால் கப்பல் இங்கிலாந்து கடற்கரையைவிட்டு வெளியேறியதும், ஜான் நியூட்டன் ஜெபிப்பதை நிறுத்தினான். வேதாகமத்தை வாசிப்பதை நிறுத்தினான். கப்பல் சிப்பந்திகள்  செய்யும் வழக்கமான காரியங்களில் கலந்துகொள்ளத் தொடங்கினான். அவன் அடக்க முயன்ற பழைய பழக்கங்கள் அனைத்தும் படிப்படியாக மீண்டும் தலைதூக்கின. அவன் தன்னை நினைத்துத் திகைத்தான். 

கப்பல் ஆப்பிரிக்காவை அடைந்த நேரத்தில், அங்கு அவன் தனக்குப் பழக்கமான மேளசத்தத்தைக் கேட்டதும் அவனுடைய பழைய பழக்கங்கள் அனைத்தும் வெளிவந்தன. அவன் யாரையும் நிந்திக்கவில்லை. இந்த ஒன்றைத்தவிர மீதி எல்லாவற்றிலும் அவன் பழைய ஆளாகவே மாறிவிட்டான்.

தன்மேல் அவனுக்குப் பயங்கர கோபம். "தேவன் என்னை எத்தனைமுறை அற்புதமாகக் காப்பாற்றினார்! தேவனுடைய இரக்கத்தை நான் எத்தனைமுறை நேரடியாகக் கண்டிருக்கிறேன்! நான் இப்படி வாழக்கூடாது. இவைகளையெல்லாம் நான் ஏன் விடக்கூடாது?” என்று அவன்மேல் அவனுக்குக் கோபம். ஒருவிதமான விரக்தி, அவநம்பிக்கை, தவிப்பு. இறுதியில், அவன் ஜெபிக்க ஆரம்பித்தார். “தேவனே, உன் சித்தப்படி

எனக்குச் செய்யும். நீர் எனக்கு என்ன செய்ய விரும்புகிறீர் என்று எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால், என்னால் முடியாது, என் பழக்கங்களை என்னால் அடக்க முடியவில்லை; அடக்க முடியாது," என்று ஜெபித்தான். இந்த நேரத்தில், இந்தப் பயணங்களுக்குப் பிறகு, அவனிடம் சிறிதளவு விசுவாசம் இருந்தது. அதற்குமேல் அவன்  எதையும் புரிந்துகொள்ளவில்லை. அவன் தன் பழைய பழக்கங்களுடன் தொடர்ந்து போராடினான்.

அவன் தன் 25ஆவது வயதில், தன் காதலி மேரி கேட்லட்டைத் திருமணம் செய்ய முடிவுசெய்து அவளிடம் போய் கேட்டான். அவன் எப்படிப்பட்ட மனிதன் என்று தெரிந்தும் அவள் அவனைத் திருமணம்செய்யச் சம்மதித்தாள். அவள் சம்மதம் தெரிவித்ததால் அவன் ஆச்சரியப்பட்டான். மேரி நல்ல பெண். ஞாயிற்றுக்கிழமை ஆலயத்துக்குப் போனாள். அவ்வளவுதான். அவள் கிறிஸ்தவளா என்று சொல்ல முடியாது.

ஜான் நியூட்டன் விசுவாசத்தில் தெளிவாக இருந்தார் என்று சொல்லமுடியாது. அவர் தன் இருதயத்தில் விசுவாசித்தார். ஆனால், அவர் இதுவரைத் தன் விசுவாசத்தைப்பற்றி யாரிடமும் பேசியதில்லை. எனவே,  அவரால்  மேரியிடம்கூட பேசமுடியவில்லை. அவர்களுடைய திருமணத்திற்குப்பின் அவர் ஒரு நாள், மீண்டும் ஒரு பயணத்திற்கு ஆயத்தமாகிக்கொண்டிருந்தார். திரும்பிவரப் பல மாதங்களாகும். அவர்  புறப்படுவதற்குமுன், மேரி நியூட்டனிடம், “சரி, ஜெபித்துவிட்டுப் போகலாம்” என்று சொன்னாள். அதைக் கேட்டதும் நியூட்டன் மயங்கிவிழாத குறைதான். "என்னது! ஜெபமா? நானா? சத்தமாகவா?" என்று நியூட்டன் கேட்க, மேரி, "ஆம், நீதான், சத்தமாக ஜெபி," என்றாள். நியூட்டன் ஒருபோதும் சத்தமாகச் ஜெபித்ததில்லை. தனியாகச் ஜெபித்தபோதும் சத்தமாக ஜெபித்ததில்லை. பயத்தினால் அவர் ஒருபோதும் சத்தமாக ஜெபித்ததில்லை. ஏனென்றால், தன் விசுவாசம் மிகவும் குறைவானது என்று அவர் நினைத்ததால் பிறருக்கு அது தெரிந்துவிடக்கூடாது என்பதில் அவர் கவனமாக இருந்தார். தன் நல்ல நடத்தைமூலம் தான் ஒரு விசுவாசி என்று அவர் பிறருக்குக் காட்ட  வேண்டும் என்று நினைத்தார். ஆனால், உண்மையில் அதுவும் வேலை செய்யவில்லை. அதுவும் அவருக்கு மிகவும் கடினமாக இருந்தது. கடைசியில் ஒருவழியாக அவர் மேரியுடன் சேர்ந்து ஜெபித்தார். இது அவரைப் படிப்படியாக மாற்றத் தொடங்கியது. அவர் அவளுக்காக, அவளுடைய இரட்சிப்புக்காக ஜெபிக்க வேண்டும் என்று நினைத்தார். "அவள் தேவனைப்பற்றிய தன் புரிதலை என்னோடு பகிர்ந்துகொள்வாள். நானும் என் புரிதலை அவளோடு பகிர்ந்துகொள்வேன்," என்று அவர் நினைக்க, "எனக்கும் தேவனைப்பற்றி ஒன்றும் தெரியாதே!" அவர் நினைத்து ஜெபிக்க ஆரம்பித்தார்.

அடிமை வியாபாரத்தை தொடர்ந்தார். இதுவரை யாரும் அடிமை வியாபாரத்தைக் கேள்வி கேட்கவில்லை என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். ஆனால் நியூட்டன் தன் வேலையை வேறு கோணத்தில் பார்க்க ஆரம்பித்தார். அவர் அடிமை வியாபாரத்தின் பயங்கரமான விளைவுகளைப் பார்த்தார். விளைவு பயங்கரமான வன்முறை. சில நேரங்களில் சில அடிமைகள் கப்பல் சிப்பந்திகளைக் கொன்றார்கள். 200 அடிமைகளை இரண்டு மூன்று சிப்பந்திகள் கவனித்துக்கொள்ளமுடியுமா? எனவே அவ்வப்போது பெரிய வன்முறை ஏற்பட்டது. அதற்குப்பின் அடிமைகளுக்குத் தண்டனை. அடிமைப் பெண்கள் மிகக் கேவலமாக நடத்தப்பட்டார்கள். வன்முறை, வெறுப்பு, போதை, தூஷணவார்த்தைகள் - இதைச்சுற்றித்தான் அடிமை வியாபாரம் நடந்தது. நியூட்டன் இதை வெறுத்தார். "தேவனே, இந்த வேலையிலிருந்து என்னை விடுவிக்க ஏதாவது வழி இருக்கிறதா? அல்லது நான் தொடர்ந்து இந்த வேலையைச் செய்ய வேண்டுமா?" என்று நியூட்டன் தேவனிடம் ஜெபித்தார். தான் செய்யும் தொழில் தேவனுடைய பார்வையில் சரியல்ல என்றுகூட அவருக்குப் புரியவில்லை. அதிலிருந்து விடுபட்டால் நன்றாக இருக்கும் என்று நினைத்தார்.

நியூட்டன் இப்போது தன் 25ஆவது வயதில் ஆர்கைல் என்ற கப்பலின் மாலுமியாக இருந்தார். அவருடைய கப்பலில் ஜோ லூயிஸ் என்பவர் இருந்தார். இவர் வேறு யாருமல்ல. நியூட்டன்  ஒருமுறை வேறொரு கப்பலில் இவரைச் சந்தித்தார். அப்போது நியூட்டன் இவரை நாத்திகனாக மாற்றினார். லூயிஸ் இப்போது இவருடைய கப்பலில் ஒரு சிப்பந்தி. லூயிஸைப் பார்த்தபோது நியூட்டனின் இருதயம் உடைந்தது. கடந்த காலத்தில் நாத்திகம், சுதந்திர வாழ்வு என்று பேசி நியூட்டன் லூயிஸை அடியோடு மாற்றியிருந்தார். லூயிஸ் அந்த வாழ்க்கையை முழு சுதந்திரத்துடன் வாழ்ந்துகொண்டிருந்தான். லூயிஸ் தான் இளைமையில் எப்படி வாழ்ந்தேன் என்பதைக் காண்பிக்கும் ஒரு கண்ணாடி என்று நியூட்டன் புரிந்துகொண்டார். கட்டுப்பாடற்ற சுதந்திர வாழ்க்கை. நியூட்டன் லூயிஸைத் திருத்தப் போராடினார். தோற்றார். நியூட்டன்  மிகவும் வெட்கப்பட்டார், தலைகுனிந்தார். "நான் இன்னொரு ஆத்துமாவை அநியாயமாகச் சாகடித்துவிட்டேனே! இவன் எவ்வளவு சுத்தமான வாழ்க்கை வாழ்ந்தான்! பக்தியுள்ளவன்! தேவனுக்குப் பயந்தவன்! இவனைக் கெடுத்தேனே!" என்று கலங்கினார். லூயிஸை இந்த நிலைமைக்குக் கொண்டுவந்தது நியூட்டன்தான். ஒரு நாள் லூயிசுக்குக்  காய்ச்சல் வந்தது. நியூட்டன் அவன் கூடவே இருந்தார். கடைசியில் லூயிஸ் இறந்துவிட்டார். சாகும் நேரத்தில் அவன் கத்தினான். அவனுடைய கடைசி வார்த்தைகள் என்ன தெரியுமா? "நான் நரகத்திற்குள் இறங்குகிறேன்." "லூயிஸ் தேவனை நம்பினான்; ஆனால், மனந்திரும்பவில்லை," என்று நியூட்டன் பின்னாட்களில் தன் நாளேட்டில் எழுதினார். தன் மோசமான வாழ்க்கை மற்றவர்கள்மேல் ஏற்படுத்திய எதிர்மறையான தாக்கத்தை நினைத்து நியூட்டன் வெட்கப்பட்டார்.

அதே பயணத்தில், ஓய்வு நேரத்தில், ஆப்பிரிக்காவின் கடற்கரையில் கப்பலில் சரக்குகளை ஏற்றுவதற்காகக் காத்திருந்தார்கள். இன்னும் சில கப்பல்களும் அங்கு இருந்தன. சில மாலுமிகளும் இருந்தார்கள். ஒரு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. நியூட்டனும் இந்த விருந்தில் கலந்துகொண்டார். அந்த விருந்தில் அவர் அலெக்சாண்டர் குளூனி என்ற நபரைச் சந்தித்தார். அவர் ஸ்காட்லாந்து நாட்டைச் சார்ந்தவர். அவருடன் உரையாடியபோது அவர் ஒரு கிறிஸ்தவன் என்று புரிந்துகொண்டார். இது அரிது. பொதுவாக நல்ல கிறிஸ்தவர்கள் கப்பல்களில் வேலைசெய்யவில்லை. நியூட்டனுக்கு விருந்தில் எந்த ஆர்வமும் இல்லை.  அவர் அலெக்ஸாண்டரிடம் வேதத்தையும், கிறிஸ்தவத்தையும்குறித்துக் கேள்விகள் கேட்கத் தொடங்கினார். அலெக்சாண்டர் அவருக்கு வேதத்தைத் தெளிவாக விளக்கினார். நியூட்டன் தன் வாழ்க்கையில் முதல்முறையாக நல்ல ஐக்கியத்தை அனுபவித்தார். அவர் பேசப்பேச நியூட்டன் வேதத்திலுள்ளவைகளைப் பார்க்க ஆரம்பித்தார். இதுவரை தான் தன் சொந்த முயற்சியால் தன் கெட்ட பழக்கங்களையெல்லாம் அடக்குவதற்கு முயன்றதைப் புரிந்துகொண்டார். இது வேதத்திற்கு  முற்றிலும் முரணானது என்று அவருக்குத் தெளிவாகிற்று. தன் சொந்த  முயற்சியால் ஒழுக்கமான வாழ்க்கை வாழ்ந்து தேவனைப் பிரியப்படுத்தலாம் என்பது தவறு என்றும், அது முடியாது என்றும் நியூட்டன் இப்போது புரிந்துகொண்டார். குளூனி இதை அவருக்கு விளக்கியபிறகு இது தேவனுடைய கிருபையால் மட்டுமே சாத்தியம் என்று தெளிவாகப் புரிந்துகொண்டார். நியூட்டன் இதைப் பார்த்து மிகவும் வியப்படைந்தார். தேவன் தனக்குத் தந்த அற்புதமான கிருபையை அவரால் நம்ப முடியவில்லை. "நான் மிகத் தாழ்ந்தவர்களுக்கெல்லாம் தாழ்ந்தவன்," என்று அவர் கூறினார். அப்படியிருந்தும், அவர் தேவனுடைய அற்புதக் கிருபையை கண்டடைந்தார். தன் சொந்த நீதியல்ல, கர்த்தருடைய நீதியே தன்னை மாற்ற வல்லது என்று புரிந்துகொண்டார்.

நியூட்டனும் குளூனியும் பல வாரங்கள் தொடர்ந்து சந்தித்து ஐக்கியம்கொண்டார்கள். நியூட்டன் இங்கிலாந்துக்குத் திரும்புகையில் குளூனி சொன்ன எல்லாவற்றையும் பல மாதங்கள் அசைபோட்டார். "இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்," என்று ஆண்டவராகிய இயேசு சொன்ன வார்த்தைகள் அவருக்குள் ஆழமாகப் பதிந்துவிட்டது. ஏனென்றால், கிறிஸ்தவ வாழ்க்கை எங்கோ தொலைவில் இருக்கிற ஒரு நீதிபதியைப்பற்றியதல்ல, அருகில் கூடவே இருக்கிற ஒருவருடனான தனிப்பட்ட உறவைப்பற்றியது என்று அவர் தன வாழ்வில் முதன்முறையாகப் புரிந்துகொண்டார். பின்னாட்களில் நியூட்டன் தன் நாளேட்டில் தான் கற்ற எல்லாவற்றையும் எழுதிவைத்தார். அவருடைய இந்த வரிகள் அவர் கற்றுக்கொண்டதைச் சுருக்கமாக விவரிக்கின்றன;"என் ஆணடவரே, என் ஜீவனே, என் வழியே, என் அன்பே". அந்த நேரத்தில் அவர் உண்மையாகவே இரட்சிக்கப்பட்டிருந்தார். "அவர் என்னில் அன்புகூருகிறார் என்று நான் அறியும்போது நான் அவரில் அன்புகூர வேண்டும் என்ற எண்ணமும், உணர்வும் தானாக எழுகிறது." என்று எழுதினார். கிரேஹவுண்ட் கப்பல் பயணத்தில் ஏற்பட்ட புயலின்போதுதான் அவர் முதன்முதலாகத் தனிப்பட்ட முறையில் அவர் தேவனைச் சந்தித்தார். அன்றுமுதல் அவர் இரட்சிப்பின் மகிழ்ச்சியை உணரத்தொடங்கினார்.

நியூட்டன் இங்கிலாந்திற்குத் திரும்பினார். அவருடைய ஆர்கைல் கப்பல் துறைமுகத்தில் நங்கூரமிட்டது. அவர் கரையேறினார். இதுதான் அவருடைய கடைசிக் கப்பல் பயணம் என்று அவருக்கு அப்போது தெரியாது. இது அவருடைய வாழ்க்கையின் ஒரு புதிய தொடக்கம் என்றும் அவருக்குத் தெரியாது. 

இரண்டாம் பாகத்தில் தொடர்வோம்.