Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More


முதல் பாகம், முன்னுரை

இது ஜாண் நியூட்டனின் வாழ்க்கை வரலாற்றின் இரண்டாம் பாகம். முதல் பாகம் உங்களுக்கு நினைவிருக்கும் என்று நான் நம்புகிறேன். அவர் ஆண்டவராகிய இயேசுவை விசுவாசித்து இரட்சிக்கப்படுவதற்குமுன் எவ்வளவு மோசமானவர், கேவலமானவர், கொடுமையானவர், இழிவானவர் என்று முதல் பாகத்தில் நாம் பார்த்தோம். அவருடைய வாழ்க்கை வரலாற்றை அறியும்போது, அவர் கேடுகெட்டவர் என்ற எண்ணம் நிச்சயமாக வரும். அவர் ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், வளர்ந்து பெரியவனானபோது நாத்திகரானார்; தேவன் ஒருவர் இருக்கிறார் என்று அவர் நம்பவில்லை; அவருடைய வாழ்க்கையில் தேவனுக்கோ, பிறருக்கோ இடமே கிடையாது. அவர்தான் அவருடைய வாழ்க்கையின் மையம். அவர் தான் விரும்பியதைச் செய்தார், பேசினார். தன் சொற்களும், செயல்களும் பிறரைப் பாதிப்பதைப்பற்றி அவர் கடுகளவும் கவலைப்படவில்லை, பொருட்படுத்தவில்லை. அவர் தனக்காகவே வாழ்ந்தார். இதுதான் அவருடைய பிறவிக்குணம்.

அடிமை வியாபாரம்

இதற்கிடையில் அவர் ஓர் அடிமை வியாபாரியாக மாறினார் என்றும் பார்த்தோம். இந்த அடிமை வியாபாரம் செய்வதற்காக அவர் ஆப்பிரிக்காவில் வசித்தார். ஏனென்றால், ஆப்பிரிக்காவில் அடிமைகளைக் கண்டுபிடித்து, விலைக்கு வாங்கி, பின்னர் அவர்களைக் கப்பலில் கொண்டுபோய் ஜமைக்காபோன்ற இடங்களிலும், கரீபியன் பகுதிகளிலும் விற்றார். இந்தத் தொழிலை அவர் மிகவும் ஆர்வத்தோடும், விருப்பதோடும் செய்தார். இந்த அடிமை வியாபாரம் செய்வதைப்பற்றி அவருக்கு எந்த உறுத்துதலும் இல்லை. அவருக்கு மட்டும் இல்லை. “இது தவறு” என்ற எண்ணம் அந்த நேரத்தில் உலகதத்தில் யாருக்கும் எழவில்லை.

மனந்திரும்புதல்

அவருடைய ஆச்சரியமான மனந்திரும்புதலைக்குறித்தும் முதல் பாகத்தில் பார்த்தோம். அவருடைய சிறு வயதிலிருந்தே தேவனுடைய கரம் அவர்மேல் இருந்தது. நியூட்டன் தேவனைத் தேடினாரோ இல்லையோ, தேவன் அவரைத் தேடினார். நியூட்டன் தேவன்பின்னால் ஓடவில்லை. தேவன் நியூட்டனின் பின்னால் ஓடினார். அவர் பல ‘மரண அனுபவங்களை’ அனுபவித்தார். ஆம், அவர் மரணத்தின் விளிம்புவரை சென்று மீண்ட நிகழ்ச்சிகள் பல உள்ளன. மரணத்தின் பிடியிலிருந்து தேவன்தாம் தன்னைக் காப்பாற்றினார் என்று முதலில் அவருக்குத் தெரியாது. ஆனால், இரட்சிப்பின் அனுபவத்திற்குப்பின், அது தேவனுடைய அன்பின் கரம் என்று அவருக்குத் தெரியும். கிரேஹவுண்ட் கப்பலில் பயணித்தபோது ஏற்பட்ட நிகழ்ச்சியிலிருந்து, தேவனுடைய கரத்தையும், இறையாண்மையையும், பிரசன்னத்தையும், நடத்துதலையும் அவர் திட்டவட்டமாக அனுபவித்தார். அது அவருடைய வாழ்வில் நிகழ்ந்த மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்வு என்று சொல்லலாம். கப்பல் கடும் புயலில் சிக்கி, கொடும் அலைகளால் அலைக்கழிக்கப்பட்டு, “பிழைப்போம் என்ற நம்பிக்கை அற்றுப்போன” வேளையில், தேவன் அவரைச் சந்தித்தார். ஜாண் நியூட்டனும் தேவனைத் தனிப்பட்ட விதத்தில் சந்தித்தார்.

அப்போது அவர் இரட்சிக்கப்பட்டிருந்தாலும், தேவனைப்பற்றி அவருக்கு அதற்குமேல் ஒன்றும் தெரியாது; வேதாகமத்தையும் தெரியாது; வேறு கிறிஸ்தவர்களையும் தெரியாது. ஆனால், தேவன் தன்னை இரட்சித்திருக்கிறார் என்ற உறுதியான எண்ணம் அவருக்குள் இருந்தது. எனவே, “நான் தேவனுக்குக் கடன்பட்டவன். அவர் என்னை இரட்சித்திருக்கிறார். நான் அவருக்குப் பிரியமாக வாழ வேண்டும். என் வாழ்க்கையை நான் மாற்ற வேண்டும்,” என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. இதன் விளைவாக அவர் தன்னை மாற்ற, தன் பழைய வாழ்க்கையை மறுக்க, கடினமாக முயன்றார். முயன்று தோற்றார். கடுமையாகப் பிரயத்தனம்செய்தார், மோசமாகத் தோற்றார்.

அலெக்ஸ் குளூனி

இரட்சிக்கப்பட்டபிறகு கொஞ்ச நாள்களிலேயே அவர் தன் பழைய பழக்கவழக்கங்களுக்குத் திரும்பினார். அந்த நேரத்தில்தான் அவர் அலெக்ஸ் குளூனி என்ற ஒரு கிறிஸ்தவனைச் சந்தித்தார்; அவரோடு நீண்ட நேரம் உரையாடியபோதுதான் கிருபை என்றால் என்னவென்று அவர் புரிந்துகொண்டார்; வேதத்தைப் புரிந்துகொள்ள ஆரம்பித்தார்; அந்த சந்திப்பு அவருடைய ஆவிக்குரிய கண்களை முழுமையாகத் திறந்தது என்று சொல்லலாம். அதற்குப்பின் இங்கிலாந்துக்குத் திரும்பியபோது, அவர் பழைய நியூட்டன் இல்லை; முற்றிலும் ஒரு புதிய நியூட்டன். தேவன் தன்னை இரட்சித்திருக்கிறார் என்பதை வெறுமனே மேலோட்டமாகப் பார்க்காமல், கர்த்தர் தனக்காகச் செய்து முடித்திருக்கும் செயலின் ஆழத்தையும், அருமையையும் அவர் அதிகமாகப் பார்த்தார். முதல் பாகத்தில் நாம் இங்குதான் நிறுத்தினோம்.

இரண்டாம் பாகம்

சரி, இப்போது நாம் விட்ட இடத்திலிருந்து தொடர்வோம். அவர் இன்னும் ஓர் அடிமை வியாபாரியாகவே தொடர்ந்தார். இந்தக் கட்டத்தில், அவர் ஒரு கப்பல் நிறுவனத்தில் பணிபுரிந்தார். கேப்டன் மனிஸ்டீ என்பவர்தான் இந்தப் பெரிய நிறுவனத்தின் முதலாளி. அந்தக் காலகட்டத்தில் அடிமை வியாபாரம் ஒரு கெளரவமான தொழிலாகக் கருதப்பட்டது என்பதை நீங்கள் நினைவில்கொள்ள வேண்டும். அடிமை வியாபாரிகள் பெரிய பணக்காரர்கள். அடிமை வியாபாரம் இங்கிலாந்திலும், பல ஐரோப்பிய நாடுகளிலும் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்தது. அடிமை வியாபாரத்தால் இங்கிலாந்து மிகவும் பணக்கார நாடாகியது. எனவே, அடிமை வியாபாரத்தை யாரும் கேள்வி கேட்கவில்லை. ஆனால், ஜாண் நியூட்டன் அந்த நேரத்தில், தான் செய்யும் அடிமை வியாபாரத்தைக்குறித்து மிகவும் சங்கடப்பட்டார். முக்கியமாக அடிமை வியாபாரத்தின் வன்முறையை அவர் வெறுத்தார்; வன்முறையைக் கையாண்ட மாலுமிகளுடன் சேர்ந்து வேலை செய்யவேண்டியிருந்தது; அடிமைகளைச் சமாளிக்க வன்முறையைக் கையாள வேண்டியிருந்தது. சில நேரங்களில் அடிமைகள் எதிர்த்துப் போராட முயன்றபோது, மாலுமிகளுக்கும் அடிமைகளுக்கும் இடையே சண்டைகள் ஏற்பட்டன. அடிமை வியாபாரத்தில் வன்முறை மேலோங்கிநின்றது. அந்த நேரத்தில் ஜாண் நியூட்டன் அடிமை வியாபாரத்தை வெறுத்தார் என்பதைவிட, அடிமை வியாபாரத்தின் வன்முறையை வெறுத்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.

விடுதலைக்காக ஜெபம்

இது ஒரு புறம். இன்னொரு புறம், அவருக்கு அப்போதுதான் திருமணமாகி இருந்தது. புதுமணத் தம்பதிகள். கப்பலில் தொடர்ந்து வேலை செய்தால் அவர் மாதக்கணக்கில் தன் மனைவியைவிட்டுப் பிரிந்திருக்க நேரிடும். எத்தனை மாதங்கள் கப்பலில் இருக்க நேரிடும் என்று சொல்லமுடியாது. கப்பலில் ஏறிவிட்டால் நாடு திரும்ப மூன்று மாதங்களாகலாம், ஒரு வருடமாகலாம்; எதையும் உறுதியாகச் சொல்லமுடியாது. நாடு திரும்பியபிறகும், ஒரு சில வாரங்கள்தான் வீட்டில் தங்க முடியும். நிலையற்ற வாழ்வு! இதுவும் அவரைக் கவலையில் ஆழ்த்தியது. அவருடைய மனைவி பாலி இதைப்பற்றி ஒன்றும் சொல்லாவிட்டாலும், அவருக்கும் இது வேதனையாகத்தான் இருக்கும் என்று நியூட்டனுக்குத் தெரியும். அவருடைய மனைவி அப்போது ஒரு பெயர்க் கிறிஸ்தவர். அவர் தன்னைக் கிறிஸ்தவள் என்று சொன்னபோதும், அவருக்கு இரட்சிப்பின் அனுபவம் கிடையாது; தனிப்பட்ட முறையில் தேவனோடு உறவு கிடையாது. இது ஜாண் நியூட்டனுக்குத் தெரியும். அவர் பாரம்பரிய வழக்கத்தின்படி வாராவாரம் ஆலயத்துக்குச் சென்று வந்தார். அங்கு சொன்ன காரியங்களைக் கேட்டார். கிறிஸ்தவ மதத்தைக்குறித்த சில விஷயங்கள் அவருக்குத் தெரியும். அவ்வளவே.

இவைகளையெல்லாம் இருதயத்தில் வைத்துக்கொண்டு ஜாண் நியூட்டன் தேவனிடம் ஜெபிக்கத் தொடங்கினார். “தேவனே, என் நிலைமை உமக்குத் தெரியும். நான் இப்போது செய்துகொண்டிருக்கும் அடிமை வியாபாரத்தை நான் வெறுக்கிறேன்; இந்த வேலையிலிருந்து என்னை விடுதலையாகும்; என் குடும்பம் உமக்குத் தெரியும்; என்னை உமக்குத் தெரியும்; என்னை விடுவியும்,” என்று ஜாண் நியூட்டன் ஜெபித்தார்.

அந்த நாட்களில், பிள்ளைகள் பெற்றோருடைய வேலையையே தொடர்ந்து செய்தார்கள். அப்பா ஆசிரியர் என்றால், மகனும் ஆசிரியராகவே தொடர்ந்தான். அப்பா போதகர் என்றால் மகனும் போதகராகவே தொடர்ந்தான். அப்பா மாலுமி என்றால், மகனும் இயல்பாகவே மாலுமியாகவே மாறினான். குடும்பத்தில் பிள்ளைகள் பெற்றோரின் வேலையை மாற்றவில்லை. வாழ்வதற்கும், வருமானத்திற்கும் அவர்களுக்கு ஒரு வேலை இருந்தது. இதுதான் அன்றைய வழக்கம். இப்போது அந்த வழக்கத்துக்கு மாறாக, ஜாண் நியூட்டன் தன் வேலையை மாற்ற விரும்பினார். அப்போது அவருக்கு வயது 21 அல்லது 22 இருக்கலாம். அந்த வயதில் வேலையை மாற்றுவது சாத்தியம் இல்லை; அது அசாதாரணம். ஆனால், ஜாண் நியூட்டன் தன் வேலையை மாற்றுவதற்காகத் தேவனிடம் ஊக்கமாக ஜெபிக்கத் தொடங்கினார். அவருடைய ஜெபத்திற்குத் தேவனிடமிருந்து உடனடியாக எந்தப் பதிலும் வரவில்லை.

தேவனுடைய கரம்

இதற்கிடையில் அவர் வேறொரு கப்பலின் மாலுமியாக அமர்த்தப்பட்டார். கப்பல் பயணத்திற்கு இன்னும் ஆறு வாரங்கள் இருந்தன. அவர் லிவர்பூலுக்கு மாற்றப்பட்டார். அவருடைய மனைவி பாலியும் அவருடன் சேர்ந்துகொண்டார். அவருடைய கப்பல் பயணத்திற்குமுன் இருக்கும் ஒவ்வொரு நொடியையும் அவர்கள் பயனுள்ள வகையில் செலவழிக்க முடிவுசெய்து அப்படியே வாழ்ந்தார்கள். ஏனென்றால், ஜாண் நியூட்டன் கப்பலில் ஏறிவிட்டால் அவர் எப்போது நாடு திரும்புவார் என்று சொல்ல முடியாது. எட்டு அல்லது ஒன்பது மாதங்கள் ஆகலாம். நாள்கள் கடந்தன.

நியூட்டனின் கப்பல் புறப்படுவதற்கு இன்னும் இரண்டு நாள்கள் இருந்தன. அவர் காலையில் கப்பலுக்குச் சென்று, ஏற்ற வேண்டிய சரக்குகளையெல்லாம் ஏற்றி, விவரங்களையெல்லாம் சரிபார்த்து முடித்தார். வீட்டுக்குத் திரும்பிவந்து அவர் தன் மனைவி பாலியுடன் உட்கார்ந்து தேநீர் அருந்த உட்கார்ந்தார். அப்போது அவர் திடீரென்று நிலைகுலைந்து தரையில் சாய்ந்தார். நியூட்டன் இறந்துவிட்டார் என்றே பாலி நினைத்தார். மூச்சுப்பேச்சு இல்லை. அவருக்கு ஏதோவொரு வகையான வலிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று பாலி உடனடியாகப் புரிந்துகொண்டு, உதவி நாடி, அவர் வெளியே ஓடினார். அங்கு ஓர் ஆளைக் கண்டுபிடித்து, விவரத்தைச் சொல்லி, அவரை மருத்துவரிடம் அனுப்பினார். மருத்துவர் வந்தார். ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப்பின் கடைசியாக, ஜாண் நியூட்டன் கண்ணைத் திறந்து, சுயநினைவடைந்து, எழுந்து உட்கார்ந்தார். மருத்துவர் நியூட்டனிடம், “நீங்கள் இனிமேல் கப்பலில் பயணம் செய்ய முடியாது; நீங்கள் அதற்குத் தகுதியற்றவர். இன்னும் இரண்டு நாட்களில் மட்டுமல்ல, உங்களுடைய இந்த நிலைமையில் நீங்கள் இனிமேல் கடலுக்குப் போக முடியாது, போகக் கூடாது,” என்றார்.

கேப்டன் மானிஸ்டிக்கு உடனடியாகத் தகவல் சொல்லி அனுப்பினார்கள். ஏனென்றால், இன்னும் இரண்டு நாள்களில் கப்பல் புறப்பட வேண்டுமே! எல்லாம் தயாராக இருக்கிறதே! அவர் வேறொரு மாலுமியை ஏற்பாடு செய்தார். அவர்களுடைய அடிமை வியாபாரக் கப்பல் தன் பயணத்தைக் தொடங்கியது. ஜாண் நியூட்டனுக்கு பல மாதங்கள் ‘மருத்துவ விடுப்பு’ வழங்கப்பட்டது.

அவர் தன் மருத்துவ விடுப்பை வீணாக்காமல், வீட்டில் சும்மா இருக்காமல், விடுப்பின்போது பிரெஞ்சு, இலத்தீன் மொழிகளைக் கற்கத் தொடங்கினார். அவர் 11 வயதுவரை மட்டுமே பள்ளியில் பயின்றார் என்றும், குறைந்தபட்ச அடிப்படைக் கல்வி மட்டுமே அவர் பெற்றிருந்தார் என்றும் ஏற்கெனவே பார்த்தோம். இப்போது அவர் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தன்னால் இயன்ற அனைத்தையும் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். வேதாகமத்தை மிகவும் ஆழமாக நீண்ட நேரம் வாசித்தார். அவர் உள்ளூர் ஆலயத்துக்குச் செல்லத் தொடங்கினார். ஆலயத்தில் இரட்சிக்கப்படாத மதகுருமார்கள் வழிபாடு நடத்துவதையும், பிரசங்கிப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர்கள் சபை மக்களுக்கு தேவனுக்குரிய, ஆவிக்குரிய, ஜீவனுக்குரிய எதையும் பகிர்ந்தளிக்கவில்லை என்பதை அவர் அழுத்தமாக உணர்ந்தார். ஆலய வழிபாடுகளில் கலந்துகொண்டபிறகு அவர் மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளானார். உயிரற்ற சடங்குகளுக்குகளில் கலந்துகொள்வதைவிட வீட்டிலேயே இருப்பதுதான் ஆசீர்வாதம் என்று அவர் உணர்ந்தார். ஏனென்றால், அன்றைய பெரும்பாலான மதகுருமார்கள் வேதத்தைப் புரிந்துகொள்ளவில்லை; தேவனை அறியவில்லை; அவர்களுக்கு இரட்சிப்பின் அனுபவம் இல்லை. அவர்களுக்கு அது ஒரு கௌரவமான, நிரந்தரமான, வேலை. அவ்வளவே.

அந்தக் காலகட்டத்தில் சர்ச் ஆஃப் இங்கிலாந்தில் இருந்த இந்தப் பிரச்சினையை மக்கள் கவனிக்கத் தவறவில்லை. சர்ச் ஆஃப் இங்கிலாந்தின் சபை ஒவ்வொரு கிராமத்திலும் இருந்தது. 1700களில் இங்கிலாந்தில் இருந்த எல்லாரும் பழக்கத்தின் காரணமாவது ஆலயத்துக்குச் சென்றார்கள், ஆராதனையில் கலந்துகொண்டார்கள். அங்கு அப்போது எல்லாரும் கிறிஸ்தவர்களே. பெயரளவிலாவது. மதகுருமார்கள் இரட்சிக்கப்படாதவர்கள் என்றும், அவர்களால் சபை மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்பதையும் ஆலயத்துக்குச் சென்ற ஒன்றிரண்டு நாள்களிலேயே ஜாண் நியூட்டன் மிகத் தெளிவாகப் புரிந்துகொண்டார். அவர்களுக்கு தேவனையோ, வேதாகமத்தையோ பற்றிய எந்தப் புரிதலும், அனுபவமும் இல்லை. அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த ஜாண் வெஸ்லி, ஜார்ஜ் விட்ஃபீல்ட்போன்ற பரிசுத்தவான்களும் இதை நன்றாக உணர்ந்திருந்தார்கள். தேவனை விசுவாசிக்காதவர்கள், வேதாகமத்தை நம்பாதவர்கள் சபை மக்களுக்குத் தேவனையும், வேதகாமத்தையும் பிரசங்கித்தார்கள். இது அன்றைய இங்கிலாந்தின் ஒரு மிகப் பெரிய அவலம்.

இந்தப் பின்புலத்தில்தான், ஜார்ஜ் விட்ஃபீல்ட் இங்கிலாந்து முழுவதும் சுற்றுப்பயணம் செய்து திறந்த வெளிகளில் நற்செய்தி அறிவித்துக்கொண்டிருந்தார். ஜாண் நியூட்டன் ஜார்ஜ் விட்ஃபீல்ட்டைப்பற்றிக் கேள்விப்பட்டிருந்தார். ஜார்ஜ் விட்ஃபீல்ட் மிகவும் வித்தியாசமானவர். பிரசங்கிக்க ஆலயம் இல்லை என்று அவர் கவலைப்படவில்லை, ஆலயம் அவசியம் என்றும் அவர் நினைக்கவில்லை. அவர் அன்றைய நடைமுறை வழக்கத்திற்கு மாறாகச் செயல்பட்டார். வயல்களில் விவசாயிகளுக்கும், சந்தைகளிலும் கடைவீதிகளிலும் சாமான்ய மக்களுக்கும், மக்கள் குடியிருக்கும் பகுதிகளிலும், சுரங்கங்களுக்கருகிலும் எனத் திறந்த வெளிகளில் பிரசங்கித்தார். இது அன்றைய மதவாதிகளாலும், பொதுமக்களாலும் மிகவும் வித்தியாசமாகவும் தவறாகவும் பார்க்கப்பட்டது. பேராலயத்துவெளியே அல்லது ஆலயக் கட்டிடத்திற்குவெளியே திறந்த வெளியில், வேதாகமத்திலிருந்து தேவனைப்பற்றி பிரசங்கிக்க முடியும் என்ற எண்ணம் அன்று மிகவும் அசாதாரணமானதாகக் கருதப்பட்டது. “பிரசங்கம் தலைக்கு மட்டுமல்ல, இருதயத்திற்கும் உரியது,” என்று ஜார்ஜ் விட்ஃபீல்ட் நம்பினார். ஆகவே, அவருடைய பிரசங்கம் மிகவும் வித்தியாசமாக இருந்தது. அவர் அறிவாளி மட்டுமல்ல; அவர் மிகவும் அழகாக, நேர்த்தியான ஆங்கிலத்தித்திலும் பேசினார். தேவனையும், வேதகாமத்தையும் அவர் மக்களிடம் கொண்டுசேர்க்க விரும்பினார், முயன்றார். இது அந்த நேரத்தில் மிகவும் அசாதாரணமானது.

ஒருமுறை ஜாண் நியூட்டன் ஜார்ஜ் விட்ஃபீல்ட்டின் பிரசங்கத்தைக் கேட்டார். ஜார்ஜ் விட்ஃபீல்ட் மூன்று மணி நேரம் பிரசங்கித்தார். பிரசங்கிக்கும்போது கீர்த்தனைகள் பாடப்பட்டன. விட்ஃபீல்ட் பிரசங்கத்தைக் கேட்டுப் பரவசமடைந்த ஜாண் நியூட்டன், “இதுதான் பிரசங்கம்! இப்படித்தான் இருக்க வேண்டும் பிரசங்கம்! இதுதான் ஜீவன்!” என்று பறைசாற்றினார். அதுதான் ஜார்ஜ் விட்ஃபீல்ட். மக்கள் இரட்சிக்கப்பட வேண்டும் என்ற ஆர்வத்தோடும், பாரத்தோடும், தவிப்போடும் ஜார்ஜ் விட்ஃபீல்ட் பிரசங்கித்தார். ஜாண் நியூட்டன் முதன்முறையாக ஜார்ஜ் விட்ஃபீல்ட்டின் பிரசங்கத்தைக் கேட்டார். ஆலயத்துக்குள் அவிசுவாசியான மதப்போதகர்களின் பிரசங்கத்தைக் கேட்டுப் பழக்கப்பட்டிருந்த நியூட்டனுக்கு ஜார்ஜ் விட்ஃபீல்ட்டின் பிரசங்கம் புதுமையாகவும், பசுமையாகவும் இருந்தது. விட்ஃபீல்டின் பிரசங்கத்தால் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட நியூட்டன் தானும் இவ்வாறு தேவனுக்கு ஊழியம் செய்ய வேண்டும் என்று முடிவுசெய்தார். விட்ஃபீல்டின் கூட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டார்கள். உட்காரப் போதுமான இடம் இல்லாததால் மக்கள் நெருக்கிக்கொண்டு நின்றார்கள். இது அவர் பிரசங்கித்த ஒரு வயல்வெளியின் ஓவியம். அவர் சென்ற இடங்களிலிருந்த பல்வேறு கட்டிடங்களிலும், சந்தைகளிலும், நகரங்களிலும் பிரசங்கித்தார். எல்லா இடங்களிலும் அவர் சாமான்ய மக்களிடம் பேசினார். அவர்களையே நாடித் தேடிப் பிரசங்கித்தார்.

ஜாண் நியூட்டன் மீண்டும் கப்பலுக்குச் செல்ல விரும்பவில்லை என்று அவருடைய முதலாளியான மாலுமி மனிஸ்டீக்கு இப்போது நன்றாகத் தெரிந்தது. நியூட்டன் இன்னும் மருத்துவ விடுப்பில்தான் இருந்தார். ஆயினும், மாலுமி மனிஸ்டீ, “நியூட்டனை என்ன செய்யலாம். அவன் நிச்சயமாகக் கடலுக்கு செல்ல விரும்பவில்லை. என் தொழிலில் இவனை வேறு எப்படி பயன்படுத்தலாம்? இவனுக்கு வேறு என்ன வேலை கொடுக்கலாம்?” என்று சிந்தித்தார்.

மாலுமி மனிஷ்டீ நினைத்தபடியே நடந்தது. Tide Surveyor என்ற அலை அளவர் வேலை காலியாக இருந்தது. Tide Surveyor. இந்த அலை அளவர் துறைமுகங்களுக்குச் சென்று, துறைமுகங்களைக் கண்காணிக்க வேண்டும்; துறைமுகங்களில் நிற்கும் கப்பல்களுக்குச் சென்று, சரக்குகளைப் பரிசோதித்து தேவையான வரி விதித்து, அந்த வரியை வசூலிக்க வேண்டும்; கடல் அலைகளையும் கண்காணிக்க வேண்டும். இதுபோன்ற பல்வேறு வேலைகளைச் செய்ய வேண்டும். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இது கரையில் துறைமுகத்தில் செய்யவேண்டிய வேலை. கப்பலுக்குப் போக வேண்டிய அவசியம் இல்லை. இது மிகவும் நல்ல வேலை. இந்த வேலை அவ்வளவு எளிதில் கிடைக்காது. கௌரவமான வேலை.

ஓர் அலை அளவர் பணியிடம் காலியாக இருப்பதை அறிந்ததும் கேப்டன் மனிஸ்டீக்கு நியூட்டனைப்பற்றிய எண்ணம் எழுந்தது. அவர் உடனே உயர் அதிகாரிகளுக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில், ’’ஓர் அலை அளவர் பணியிடம் காலியாக இருப்பதாக அறிகிறேன். அந்த இடத்தில ஜாண் நியூட்டனை அமர்த்துமாறு நாம் பரிந்துரைக்கிறேன். அவர் இந்த வேலைக்கு மிகவும் பொருத்தமானவர்,” என்று எழுதினார். கேப்டன் மனிஸ்டீ அதிக செல்வாக்குடையவர்; அவர் தன் செல்வாக்கைப் பயன்படுத்தி ஜாண் நியூட்டனுக்கு அந்த வேலையை வாங்கித்தர முயன்றார். அவர் தன் பரிந்துரைக் கடிதத்தை அதிகாரிக்கு அனுப்பிவிட்டு அலுவலகத்துக்கு வந்தபோது, மிகவும் குழப்பமடைந்தார். ஏனென்றால், அவர் கேள்விப்பட்டதுபோல் அலை அளவர் பணியிடம் எதுவும் காலியாக இல்லை. தான் அதிகாரிகளுக்கு எழுதிய பரிந்துரைக் கடிதத்தை நினைத்து அவர் மிகவும் சங்கடப்பட்டார். அது மட்டுமல்ல. உண்மையில், அப்போதைய அலை அளவர் இன்னும் தன் பதவியில் இருப்பதாகவும் கேள்விப்பட்டார். “ஆம், ஜாண் நியூட்டன் இந்த வேலைக்குச் சரியான ஆள்தான். ஆனால், வேலை காலியில்லையே! இது எப்படி நடந்தது! அவரசரப்பட்டு கடிதம் வேறு எழுதிவிட்டேனோ!” என்று மனிஸ்டீ நினைத்துக்கொண்டிருந்தார். எழுதிய கடிதம் எழுதியதுதான். கடிதம் போய்விட்டது.

ஆனால், அடுத்த நாள் அந்த அலை அளவர் பணிக்கு வரவில்லை. அவர் தூக்கத்திலேயே இறந்துவிட்டதை அன்று பிற்பகல் அவருடைய நண்பர்கள் கண்டுபிடித்தார்கள்.

அன்று மாலை அலுவலகத்துக்கு வந்த அதிகாரிகள் கேப்டன் மணிஷ்டீ அனுப்பியிருந்த கடிதத்தைத் திறந்துபார்த்தார்கள். அலை அளவர் பணிக்கு ஜாண் நியூட்டனை நியமிக்க மனிஷ்டீயின் பரிந்துரையைப் படித்தார்கள்.

இதை நீங்கள் என்ன சொல்வீர்கள்? கேப்டன் மனிஸ்டீ தேவனால் நடத்தப்பட்டார் என்று நான் நினைக்கிறேன். அந்த வேலை ஜாண் நியூட்டனுக்குக் கிடைத்தது. நடந்த விஷயத்தை அறிந்த நியூட்டன், ’’இது நிச்சயமாக தேவனுடைய அற்புதச் செயலே!” என்று அறிந்துகொண்டார்.

அவருடைய புதிய வேலையினிமித்தம் அவர் லிவர்பூல் என்ற இடத்துக்குச் செல்ல வேண்டியிருந்தது. ஆனால், அது அவ்வளவு நல்ல இடம் இல்லை. அங்கு எப்போதும் ஒரு வகையான பனிமூட்டம் இருந்துகொண்டேயிருக்கும். அங்கு நிறையத் தொழிற்சாலைகள் இருந்தன. அது தொழிலாளிகள் அதிகம் வாழ்ந்த இடம். வசதியான இடம் என்று சொல்லவே முடியாது. இந்த நேரத்தில் அவருடைய மனைவி பாலிக்கு உடல்நலம் சரியில்லை. என்ன பிரச்சினை என்று திட்டவட்டமாகத் தெரியவில்லை. ஆனால், அவருக்கு ஒருவிதமான அதிர்ச்சி ஏற்பட்டிருக்கலாம் என்று சொல்லுகிறார்கள். ஜாண் நியூட்டன் கீழே விழுந்த அந்த நிகழ்ச்சியில் அவர் இறந்துவிட்டதாகவே அவர் நினைத்தார். அப்போது அவர் பதற்றமடையவில்லை. எல்லாவற்றையும் மிகவும் நிதானமாகக் கையாண்டார். ஆனால், அதற்குப்பின் அவர் கவலைப்பட்டிருக்கலாம். அதன் விளைவாக நரம்புத்தளர்ச்சி நோய் ஏற்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறார்கள். எதையும் திட்டவட்டமாகச் சொல்லமுடியவில்லை. இதுபோன்ற பிரச்சினைகளுக்கு அந்த நாட்களில் மருந்து கிடையாது அல்லது வேறு ஏதாவது நாட்பட்ட நோய் இருந்திருக்கலாம்.

அவருடைய ஆரோக்கியத்துக்கு லிவர்பூல் ஏற்ற இடம் இல்லை. அது ஆரோக்யமானவர்கள் வாழ்வதற்கே ஏற்ற இடம் இல்லை. அப்படியிருக்க நோய்வாய்ப்பட்ட பாலி எப்படி அங்கு வாழ முடியும்? எனவே, அவர் கிராமப்புறத்தில் இருந்த தன் குடும்பத்துடன் வாழச் சென்றார். இருவரும் கனத்த இருதயத்தோடு பிரிந்தார்கள். ஆயினும், அவர்கள் அடிக்கடி கடிதங்கள் எழுதினார்கள். அவர்களுடைய பல கடிதங்கள் இன்றும் இருக்கின்றன. வாசித்துப் பாருங்கள்.

இதற்கிடையில் விட்ஃபீல்ட் இங்கிலாந்து முழுவதும் பயணித்து நற்செய்தி அறிவித்துக்கொண்டிருந்தார். அவர் ஒருமுறை லிவர்பூலுக்கு வந்தார். விட்ஃபீல்ட் லிவர்பூலுக்கு பிரசங்கிக்க வருகிறார் என்று நியூட்டன் கேள்விப்பட்டபோது, மிகவும் பரவசமடைந்தார். அந்தக் கூட்டத்துக்கு அவர் தன்னால் முடிந்த அளவுக்கு அனைவரையும் அழைக்க விரும்பினார், முயன்றார். அவர் தான் முன்பு குடியிருந்த வீட்டின் சொந்தக்காரையும் சந்தித்து, ‘’நீங்கள் கண்டிப்பாக இந்தக் கூட்டத்துக்கு வர வேண்டும். நீங்கள் வந்து இவர் பேசுவதைக் கேட்க வேண்டும். இவர் தேவனுடைய வார்த்தையைப் பிரசங்கிக்கிறார். இவர் நற்செய்தி அறிவிக்கிறார்; மக்கள் மனந்திரும்பி இரட்சிக்கப்பட வேண்டும் என்று இவர் விரும்புகிறார்; இவரைப்போல் ஒருவர் பேசுவதை நீங்கள் ஒருபோதும் கேட்டிருக்க மாட்டீர்கள்,” என்று வருந்தி அழைத்தார். அந்த வீட்டுக்காரருக்குப் பயங்கர கோபம், ஆத்திரம், எரிச்சல். அவர் வெறுப்புடன்,’’ஒருவன் திறந்த வெளியில் நின்று, பரிசுத்த வேதாகமத்தைத் திறந்து பிரசங்கிப்பானான்; நான் அதைக் கேட்க வேண்டுமாம். இது மிகவும் தவறு,” என்று கூறினார். தேவனைப்பற்றியும், வேதகாமத்தைப்பற்றியும் ஆலயத்திற்குள்தான் பேச வேண்டும் என்றும், வெளியே பேசுவது தவறு என்றும் அந்நாட்களில் மக்கள் நினைத்தார்கள்.

வீட்டுக்காரர் இப்படிச் சொன்னபோதும், நியூட்டன் வரப்போகிற பிரசங்கியாரையும், அவருடைய பிரசங்கத்தையும்பற்றிச் சொல்லச்சொல்ல ஆர்வம் அதிகமாகி, ’’போய்ப் பார்க்கலாம்” என்று முடிவுசெய்து அவர் அந்தக் கூட்டத்துக்குப் போனார். விட்ஃபீல்ட்டின் பிரசங்கத்தைக் கேட்டு அவர் மாறிவிட்டார். லிவர்பூலிலும், லிவெர்பூலுக்கு அருகிலும் விட்ஃபீல்ட் பிரசங்கித்த எல்லாக் கூட்டங்களிலும் அவர் கலந்துகொண்டார். அவரையும், இன்னும் பலரையும் நியூட்டன் விட்ஃபீல்டின் கூட்டத்துக்கு அழைத்துச் சென்றார். விட்ஃபீல்ட்டின் பிரசங்கத்தைக் கேட்ட பலர் இரட்சிக்கப்பட்டார்கள்.

ஒருநாள் அந்த வீட்டுக்காரர் நியூட்டனிடம், “விட்ஃபீல்டை நாம் நம் வீட்டுக்கு விருந்துக்கு வருமாறு அழைப்போமா? இந்த ஞாயிற்றுக்கிழமை வருமாறு அழைப்போம். அவர் வந்தால் நாம் அவரோடு நெருக்கமாக உரையாடலாம், நிறையக் கற்றுக்கொள்ளலாம்,” என்று சொன்னார்.

பாலி உடல்நலம் கருதி அவருடைய குடும்பத்தாரோடு கிராமத்தில் வாழ்ந்தபோதும் நியூட்டனும், அவரும் தொடர்ந்து கடிதம் எழுதிக்கொண்டேயிருந்தார்கள். அவர்களுடைய கடிதப் பரிமாற்றம் ஒருபோதும் நிற்கவில்லை. ஒரு நாள், வழக்கம்போல் பாலியிடமிருந்து அவருக்கு ஒரு கடிதம் வந்திருந்தது. பாலி அதிகம் படிக்காதவர். அவருக்குக் கொஞ்சம் எழுதப்படிக்கத் தெரியும். எனவே, அவருடைய கடிதங்கள் பெரும்பாலும் மிகச் சுருக்கமாகவே இருக்கும். எழுத்துக்களும் சிறியதாகவே இருக்கும். ஆனாலும், நியூட்டன் அந்தக் கடிதத்தையும், அதற்குப்பின்னால் இருக்கும் பாலியின் இருதயத்தையும் நன்றாகப் புரிந்துகொண்டார். நியூட்டனின் கடிதங்கள் பெரும்பாலும் நீளமானவை.

நியூட்டன் அந்தக் கடிதத்தைத் திறந்து படித்தார். அந்தக் கடிதத்தில், பாலி, “இன்று, நான் தேவனிடம் சத்தமாக ஜெபித்தேன். அவர் என்னை விடுவித்தார். எல்லா மருந்துகளையும், மருத்துவரையும்விட மிகச் சிறந்த மருத்துராகிய அவர் எனக்கு மாபெரும் நன்மைசெய்தார்,” என்று எழுதியிருந்தார். அந்த வரிகளை வாசித்தபோது தன் அன்பு மனைவி இப்போது இரட்சிக்கப்பட்டுவிட்டாள் என்பதை நியூட்டன் புரிந்துகொண்டார். அவள் இரட்சிக்கப்பட வேண்டும் என்பது அவருடைய இருதயத்தின் ஏக்கம். அதற்காக அவர் தொடர்ந்து ஜெபித்துக்கொண்டிருந்தார். தன் ஜெபத்திற்குப் பதிலளித்த தேவனை நியூட்டன் துதித்தார்.

உடனே அவர் பாலிக்குக் கடிதம் எழுதினார். “உன் கடிதத்தின் வரிகளை வாசிக்கும்போது நம் தற்காலிகப் பிரிவு ஒரு பொருட்டல்ல என்று தோன்றுகிறது.”பயப்பட வேண்டாம் - விசுவாசி. அது போதும். உனக்குத் தேவையானவரும், நீ தேடுகிறவருமான கர்த்தராகிய இயேசு, உன்னை அழைக்கிறார். அவர், “என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை,” என்று கூறுகிறார். “நம் இயல்பின்படி, நாம் அனைவரும் அவருடைய நற்செய்தியை விரும்புவதில்லை; நாம் விரும்பத்தக்க எந்த அருமைபெருமையும் அவரிடம் இருப்பதாக நாம் கருதுவதில்லை. தற்சமயம் இது உன் குணமாக இல்லாமல் போகலாம். ஆனால், தேவன் ஏற்கனவே இந்த வேலையைச் செய்ய ஆரம்பித்துவிட்டார். இந்த மாற்றம் அவருடைய வேலை. அவர் விவேகமற்றமுறையிலோ, கவனக்குறைவாகவோ கட்டிடம் கட்டமாட்டார். அவர் தாம் கட்டத் தொடங்கியதை, கட்டிமுடிக்கத் திறமையுள்ளவர். அதை அவர் விரும்புகிறார். ஒருவேளை நீ உன் இருதயத்தில் பின்தங்கிய தன்மையையும் கடினத்தன்மையையும் நினைத்து வருந்தக்கூடும். (என் இருதயம் எவ்வளவு கடினமானது, பின்தங்கியிருக்கிறது என்பது தேவனுக்கு மட்டுமே தெரியும்). இதனால் நீ சோர்ந்துபோகாதே. அவர் கல்லான இருதயத்தைச் சதையான இதயமாக மாற்ற வல்லவர். இப்போது, நீ கலப்பையில் கைவைத்து விட்டாய். இனி எதிரி உன்னைத் தாக்கி தொந்தரவு செய்தால், அதை விசித்திரமாக நினைக்க வேண்டாம். பிசாசு, முடிந்தால், தேவன் அனுமதித்தால், நீ இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கும் இரட்சிப்பின் நிஜத்தைச் சந்தேகிக்கத் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்வான், சோதிப்பான். அவன் உன் பாவங்களை ஒவ்வொன்றாக உன் கண்முன் கொண்டுவந்து நிறுத்தி,”இதோ பார்! இதுதான் நீ. இதுதான் உன் இலட்சணம். இதுதான் உன் தகுதி!தேவன் உன்னை ஏற்றுக்கொள்வார் என்று நினைக்கிறாயா? ஏமாறாதே!” என்று உன்னை ஏமாற்ற முயல்வான். தேவனுடைய வார்த்தையிலிருந்து அவனுக்குப் பதில் சொல். அவன் பொய்யன் என்றும், பொய்க்குப் பிதா என்றும் அவனிடம் சொல்.” என்னே அற்புதமான கடிதம்! ஆம், இந்த நேரத்தில் பாலி இரட்சிக்கப்பட்டிருந்தார்.

நியூட்டன் இயல்பின்படி எப்படிப்பட்ட ஆள் என்று முதல் பாகத்தில் பார்த்தோம். அவர் மனசாட்சியே இல்லாதவர்; யாரைப்பற்றியும் கவலைப்படாதவர்; ஆனால், அவர் இரட்சிக்கப்பட்டபின் கர்த்தர் அவரை அடியோடு மாற்றிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும். இப்போது அவருடைய மனசாட்சி மிகக் கூர்மையாக வேலைசெய்தது. ஏனென்றால், அது இப்போது இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்ட மனசாட்சி.

அவர் தன் வேலையினிமித்தம் கப்பல்களுக்குச் சென்று, சரக்குகளைப் பார்வையிட்டு, “இந்தச் சரக்குக்கு இவ்வளவு வரி. அந்தப் பொருளுக்கு இவ்வளவு வரி,” என்று எழுதினார்.

துறைமுகத்தில் ஒரு பழக்கம் இருந்தது. கப்பல் மாலுமிகள் இந்த அலை அளவருக்குக் கொஞ்சம் கையூட்டும், சில பரிசுகளும் கொடுத்துவிட்டு, சரக்குகளுக்கு வரி செலுத்தாமல் அல்லது பெயரளவில் குறைந்த வரி செலுத்திவிட்டு சரக்குகளை இறக்கிவிடுவார்கள். இது அவர்களுக்கு வாடிக்கை. இப்படி நடக்கிறது என்று எல்லாருக்கும் தெரியும். எனவே, அலை அளவருக்குக் கிம்பளம் நிறையைக் கிடைக்கும் என்பதால் குறைந்த சம்பளமே கொடுக்கப்பட்டது. இதை யாரும் ஆட்சேபிக்கவில்லை. அவர்களுக்குக் கிடைக்கும் கிம்பளமும், பரிசுகளும் அவர்களுடைய சம்பளமாகவே கருதப்பட்டன.

ஜாண் நியூட்டன் முதன்முறையாகச் சரக்குகளை சரிபார்த்து வரி நிர்ணயித்தபோது, அவருக்குக் கொடுக்கப்பட்ட கையூட்டையும், பரிசுகளையும் அவர் தயக்கத்தோடு பெற்றுக்கொண்டார். ஆனால், அதற்குப்பின் குற்றவுணர்வு அவரைத் தாக்கியது. “இல்லை, இது தவறு. இது நேர்மையல்ல. இது உத்தமம் அல்ல. கர்த்தர் இப்படிச் செய்யமாட்டார்,” என்ற கோணத்தில் அவர் சிந்திக்க ஆரம்பித்தார். அதற்குப்பின் அவர் கையூட்டையும், பரிசுகளையும் ஏற்க மறுத்தார். துறைமுகப் பணியாளர்கள் அவரைப்பார்த்து நகைத்தார்கள்; அவரை ஏளனம்செய்தார்கள். நியூட்டன் தன் நிலைப்பாட்டில் உறுதியாக நின்றார். அதன் விளைவாக, அவர் வருவாய் குறைந்தது. அலை அளவருக்குக் குறைந்த சம்பளமே கிடைத்தது. அந்தச் சம்பளம் அவர் வாழ்வதற்குப் போதவில்லை. வாய்க்கும் வயிற்றுக்கும் போராட்டம். செலவுகளைக் குறைத்துக்கொண்டு மிகச் சிக்கனமாக வாழ்ந்தார். வறுமை! மக்கள் அவரை ஒரு வேடிக்கையாகப் பார்த்தார்கள்.

அந்த நேரத்தில், அவர் உள்ளூர் செய்தித்தாளில் சிறிய கட்டுரைகள் எழுதத் தொடங்கினார்; வேதாகமத்தின் சில பத்திகளை அல்லது வசனங்களைப்பற்றி அவர் தன் எண்ணங்களை எழுதினார். மக்கள் அவரை ஏற்கெனவே வேடிக்கையாகப் பார்த்தார்கள். இப்போது அவர் வேதாகமத்தின் வசனங்களைப்பற்றிய தன் கருத்துக்களை எழுதுவதை மக்கள் இன்னும் நூதனமாகப் பார்த்தார்கள். “இவர் யார்! படிக்காத ஒரு மாலுமி! தான்தோன்றித்தனமாக வாழ்ந்த ஒரு மாலுமி! இப்போது இவர் ஓர் அலை அளவர்! இப்படிப்பட்டவரா மதசம்பந்தமான, வேதாகமத்துக்குரிய காரியங்களை எழுதுகிறார்! இவர் இலஞ்சம் வாங்குவதில்லையாம்! இவர் என்ன ஒரு நூதனப் பிறவியோ!” என்று மக்கள் நினைத்தார்கள், பேசினார்கள். அவர் தன்னைச் சுற்றியிருந்த அனைவருக்கும் வேடிக்கையானார்.

நியூட்டன் ஏதோவொரு வகையில் தேவனுக்கு ஊழியம்செய்ய வேண்டும் என்று விரும்பினார். அந்தக் காலகட்டத்தில், ஊழியம் என்றால் பிரசங்கித்தல் என்றுதான் மக்கள் நினைத்தார்கள். மதகுருவாக இருந்தால்தான் ஊழியம்செய்ய முடியும். நியூட்டன் ஊழியம்செய்ய விரும்பினார், அதாவது பிரசங்கிக்க விரும்பினார். பேச விரும்பினார். ஆனால், அவர் போதிக்க முயன்றபோதெல்லாம் அவருடைய நாக்கு மேல்வாயோடு ஒட்டிக்கொண்டது. வார்த்தைகளுக்காகத் தடுமாறினார். அவருடைய சிந்தனையின் வேகத்துக்கு வார்த்தைகள் ஒத்துழைக்கவில்லை. அவருடைய பேசுதல் சிறுபிள்ளைத்தனமாக இருந்தது. “தேவன் என்னைப் பயன்படுத்த விரும்பினால், நிச்சயமாக அவர் என்னைப் பிரசங்கிக்கச் சொல்லமாட்டார். பிரசங்கிக்கும் கொடை எனக்கு இல்லை,” என்று நியூட்டன் நினைத்தார்.

1756இல் இங்கிலாந்தில் போர் மூண்டது. துறைமுகப் பணிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. அதனால் நியூட்டன் பார்த்த அலை அளவர் வேலையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. துறைமுகத்தில் வேலை இல்லாததால் நியூட்டனுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. அப்போது நிறையக் காரியங்களைப்பற்றிச் சிந்திப்பதற்கு அவருக்கு நேரம் கிடைத்தது. அந்த நேரத்தில், “நீ வேலைக்குப் போகாமல், விடுப்பில் வீட்டில் சும்மா இருப்பதற்குப்பதிலாக எங்களோடு வந்து தங்கலாமே!” என்று யார்க்ஷயரில் இருந்த அவருடைய சில நண்பர்கள் அவரை அழைத்தார்கள். இங்கிலாந்தின் வடக்கே இருக்கும் யார்க்ஷயரும் மிகவும் கடினமான ஓர் இடம்தான். நண்பர்களின் அழைப்பை ஏற்று நியூட்டன் யார்க்ஷயருக்குப் போனார். ஒருவன் யார்க்ஷயர்காரன் என்றால் அவன் மிகக் கடினமான ஆள் என்று எல்லாருக்கும் தெரியும். ஏனென்றால், அங்கு வாழ்வது கடினம். மிக மோசமான வானிலை. ஒருவிதமான கிராமப்புற வாழ்க்கை; விவசாயப் பகுதிகள் அதிகம்.

நியூட்டன் அங்கு போனார். அவர் யார்க்ஷயரில் விவசாயிகளைச் சந்தித்து, அவர்களோடு உரையாடினார். அவர் பேசுவதைக் கேட்க மக்கள் ஆர்வத்துடன் கூடினார்கள். வேதாகமத்தைப்பற்றிப் பேசினார்; கடலையும், கப்பலையும்பற்றிப் பேசினார்; கதைகள் சொன்னார்; வேதாகமத்தை விளக்கத் தன் வாழ்க்கையிலிருந்து நிகழ்ச்சிகளை எடுத்துச் சொன்னார். நியூட்டன் பேசுவதைக் கேட்க மக்கள் திரள ஆரம்பித்தார்கள். ஆனால், தான் என்ன செய்கிறோம் என்று நியூட்டனுக்குத் தெரியவில்லை.

ஒரு முன்னாள் மாலுமி சுவாரஸ்யமாகக் கதை சொல்வதைக் கேட்க மக்க கூடினார்கள். அவருடைய பேசுதல் மக்களுடைய இருதயங்களில் வேலைசெய்தது. அவருடைய நண்பர்கள் நியூட்டனிடம், “நீ பேச வேண்டும்; நீ பிரசங்கிக்க வேண்டும்; ஏதாவது செய்ய வேண்டும்; ஏனென்றால், மக்கள் நீ பேசுவதைக் கேட்க விரும்புகிறார்கள்,” என்று சொன்னார்கள். இப்படிக் கதை சொல்வது தனக்கு இவ்வளவு எளிதாக வரும் என்றோ அல்லது பிரசங்கிப்பது, ஒரு வகையில், இப்படிப்பட்டதுதான் என்றோ நியூட்டனுக்குத் தெரியாது.

“அப்படியானால், நான் இந்த வேலையை விட்டுவிட்டு மதகுருவாக மாற வேண்டுமோ!” என்று நியூட்டன் தீவிரமாகச் சிந்திக்கத் தொடங்கினார். அந்த நாள்களில் ஒருவன் மதகுருவாக மாற விரும்பினால், சபை அவனைப் பரிந்துரைக்க வேண்டும்; இறையியல் கல்லூரிக்குச் செல்ல வேண்டும்; இறையியல் படிக்க வேண்டும்; பின்னர் சபையில் பிரதிஷ்டை செய்யப்பட வேண்டும்; இதுதான் அன்றைய நடைமுறைப் பழக்கம். ஒருவன் தானாக முன்வந்து, இறையியல் கல்லூரிக்கு விண்ணப்பம் அனுப்பி, இறையியல் கற்று, சபையோடு சேரவில்லை. முதலாவது சபை பரிந்துரைக்க வேண்டும்.

அப்போது ஜாண் வெஸ்லி, ஜார்ஜ் விட்ஃபீல்ட்போன்ற தேவ மனிதர்களுக்கு நியூட்டனைத் தெறியும். எனவே, கல்லூரியில் இறையியல் படிப்பதற்கு நியூட்டனைப் பரிந்துரைசெய்வதில் எந்தப் பிரச்சினையும் எழவில்லை. ஆனால், பேராயர் அவருடைய விண்ணப்பத்தைப் பார்த்துவிட்டு, “யார் இவன்! ஒரு மாலுமி! ஆக்ஸ்போர்டில் படித்தவனா அல்லது கேம்பிரிட்ஜ்ஜில் படித்தவனா? அடிப்படைக் கல்விகூட இல்லை! இவரை எப்படிப் பரிந்துரைக்கலாம்!” என்று கையை விரித்துவிட்டார். ஜாண் நியூட்டனைப்போன்ற ஒருவன் ஒரு மதகுருவாக மாறலாம் என்பது முட்டாள்தனமான ஆலோசனை என்று ஆயர் நினைத்தார்.

ஆனால், தான் நற்செய்தி அறிவிக்க வேண்டும் என்றும், தேவனுக்காகப் பேச வேண்டும் என்றும் நியூட்டன் உணர்ந்தார். நற்செய்தியைச் சாமான்யர்களுக்குக் கொண்டு செல்ல விரும்பினார். ஆனால், எல்லாப் பக்கங்களிலும் கதவுகள் அடைபட்டதுபோல் தோன்றியது.

நியூட்டன் மீண்டும் லிவெர்பூலுக்குத் திரும்பினார். “ஒருவேளை இதுதான் தேவன் எனக்கு கொடுத்த வேலையாக இருக்கக்கூடும்,” என்று நினைத்து, அவர் அலை அளவர் வேலையைத் தொடர்ந்தார். அப்போது அங்கு நியூட்டனைப்பற்றி மக்களிடையே நிறைய கிசுகிசுக்கள் வரத் தொடங்கின. ஏனென்றால், கடந்த காலத்தில் அவர் ஒரு மனச்சாட்சியற்ற, மோசமான மாலுமி. இப்போது ஓர் அலை அளவர். அதற்குமேல் இவர் இப்போது ஒரு மதகுருவாக விரும்புகிறார். மக்கள் இதை மிகவும் வேடிக்கையாகப் பார்த்தார்கள். மக்கள் அவரைப் பார்த்து நகைத்தார்கள். இங்கிலாந்து சபை தன்னை ஒரு போதகராக இருக்கத் தகுதியற்றவன் என்று நிராகரித்துவிட்டதால், தேவன் தனக்கு வேறு ஏதாவது வேலை வைத்திருக்கலாம் என்று நியூட்டன் நினைத்தார்.

அவர் துறைமுகத்தில் அலை அளவராகப் பணிபுரிந்த நாட்களில், தன் கடமையில் தவறியதேயில்லை. பணிக்கு ஒருபோதும் காலதாமதமாக வந்ததில்லை. ஒருநாளும் தாமதமாக வரமாட்டார். ஒருநாள் அவர் எப்படியோ வேலைக்குத் தாமதமாகிவிட்டார். இதுதான் அவர் வேலைக்குத் தாமதாகச் சென்ற ஒரே நாள். என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆனால், தாமதமாகிவிட்டார். அன்று காலை 10 மணிக்கு அவர் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கப்பலை ஆய்வு செய்ய வேண்டும். அந்தக் கப்பல் கரையிலிருந்து வெகு தொலைவில் நிறுத்தப்பட்டிருந்தது. அவர் சிறிய படகில் தொடுத்துக்கொண்டு அந்தக் கப்பலுக்குச் செல்ல வேண்டும். கைக்கடிகாரத்தைப் பார்த்தார். மிகவும் தாமதமாகிவிட்டது. அவசரமாகப் படகில் ஏறி, வேகமாகத் தொடுக்க ஆரம்பித்தார். பாதி தூரம் சென்றுவிட்டார். திடீரென்று ஒரு வெடிச்சத்தம் கேட்டது. அவர் ஆய்வு செய்ய போய்க்கொண்டிருந்த கப்பல்தான் வெடித்துச் சிதறியது. அந்தக் கப்பலில் வெடிப்பொருட்கள் இருந்திருக்கலாம்; எப்படியோ ஒரு தீப்பொறி அதன்மேல் விழ, கப்பல் வெடித்துச் சிதறியது. கப்பலில் இருந்த அனைவரும் கொல்லப்பட்டார்கள்.

தேவன் தன்னை மீண்டும் காப்பற்றியதை நியூட்டன் திட்டவட்டமாக உணர்ந்தார். நியூட்டன் பாதியிலேயே கரைக்குத் திரும்பினார். “கப்பல் வெடித்துச் சிதறிய நேரத்தில், நான் கப்பலில் இருந்திருக்க வேண்டும். நானும் இறந்திருக்க வேண்டும். தேவன் எனக்கு வேறு ஏதோ வேலை வைத்திருக்கிறார். தேவன் நடத்துவார். நான் பொறுமையாக இருக்க வேண்டும்,” என்று நியூட்டன் புரிந்துகொண்டார்.

கதைகள் சொல்வதற்கும், பேசுவதற்கும் நியூட்டன் வரம் பெற்றவர் என்பதை பலர் உணர்ந்தார்கள். நற்செய்தியின்மேல் அவருக்கு இருந்த உண்மையான வாஞ்சையையும், எப்படியாவது பொதுமக்களுக்கு நற்செய்தியை அறிவிக்க வேண்டும் என்ற அவருடைய பாரத்தையும் மக்கள் கண்டார்கள். எனவே, பலர் அவரிடம், “இங்கிலாந்து சபை உங்களை ஒருபோதும் போதகராக ஏற்றுக்கொள்ளாது. அப்படியானால், நீங்களே ஏன் ஒரு சபையை ஆரம்பிக்கக்கூடாது?” என்று கேட்டார்கள். இப்படி ஆரம்பிக்கப்பட்ட சபைகள் அந்த நாட்களில், “அதிருப்தியாளர்களின் சபைகள்” என்றழைக்கப்பட்டன. அதாவது இங்கிலாந்து சபையோடு சேராமல் தனிநபர்கள் நடத்திய சபைகள். எனவே, மக்கள் அவரிடம் சொன்னதின் பொருள் என்னவென்றால், “நீங்கள் யார்க்ஷயருக்குப் போங்கள். நீங்கள் அங்கு உங்கள் சொந்த சபையை நிறுவுங்கள். அதிருப்தியாளராக இருந்துவிட்டுப்போங்கள். இங்கிலாந்து சபையிலிருந்து கருத்து வேறுபாடு கொண்டவராக இருங்கள்; கொஞ்சம் வித்தியாசமாக இருங்கள். நீங்கள் பிரசங்கியுங்கள்; மக்கள் உங்களிடம் வருவார்கள்,” என்று அவரை உற்சாகப்படுத்தினார்கள். ஜாண் நியூட்டன் தான் நினைத்ததைச் செய்யவேண்டும் என்ற மனப்பாங்குடையவர் என்று நான் ஏற்கெனவே சொன்னேன். ஆகவே, உடனே அவர் போய் அங்கு ஒரு சபையை நிறுவியிருக்கலாம். ஆனால், நியூட்டன் அப்படிச் செய்யவில்லை. அவருடைய மனைவி பாலி அவரைத் தடுத்து நிறுத்தி, “வேண்டாம். நாம் அப்படிச் செய்யவேண்டாம். அப்படிச் செய்வதை நினைக்கும்போது எனக்குள் சமாதானம் இல்லை. நாம் பொறுமையுடன் காத்திருப்போம். தேவன் நம்மைத் திட்டவட்டமாக நடத்துவார்,” என்றார். அதற்கு நியூட்டன், “என்னது! காத்திருப்பதா? என்று வினவ, பாலி, “ஆம், கர்த்தருடைய வழிநடத்துதலுக்காகக் காத்திருங்கள். உடனடியாக நாம் இதைச் செய்யவேண்டாம்,” என்றார்.

இந்தச் சூழ்நிலையில் இன்னொரு நிகழ்ச்சி நடந்தது. இதைச் தற்செயல் என்பதா அல்லது தேவனுடைய இறையாண்மையின் செயல் என்பதா என்பதை நீங்களே முடிவுசெய்துகொள்ளுங்கள். இந்த நிகழ்ச்சியை நான் அதிகமாக விவரிக்கப்போவதில்லை. சுருக்கமாகச் சொல்லுகிறேன். லார்ட் டார்ட்மவுத் என்ற மிக முக்கியமான மனிதர் ஒருவர் இருந்தார். சமுதாயத்தில் மிக உயர்ந்த வகுப்பைச் சேர்ந்தவர்; செல்வாக்குமிக்கவர். இந்த டார்ட்மவுத்துக்கு ஜாண் நியூட்டனைத் தெரியும். ஏனென்றால், நியூட்டனின் பெயர் பத்திரிகைகளில் அடிபட்டது; . நியூட்டன் லிவர்பூலின் உள்ளூர் பத்திரிகையில் சிறு கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்தார். உள்ளூர் மக்களின் பேச்சிலும் அவர் பெயர் அடிபட்டது; ஏனென்றால், அவர் வித்தியாசமான ஓர் அலை அளவர். ஆலயத்தின் வட்டாரத்திலும் அவருடைய பெயர் அடிபட்டது; ஏனென்றால், ஜாண் நியூட்டனை இங்கிலாந்து சபை ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்துவிட்டது அனைவருக்கும் தெரியும்.

ஒரு சிறிய நகரம்; மிகவும் நல்ல நகரம் என்று சொல்லமுடியாது. அந்த நகரத்தில் ஒரு சிறிய ஆலயம். அந்த ஆலயத்தில் போதகரும் இல்லை. ஆலயத்துக்கு ஆட்களும் வரவில்லை. லார்ட் டார்ட்மவுத் அந்தப் பகுதியில்தான் வாழ்ந்தார். தன் சொந்த ஊர் ஆலயத்துக்கு ஒரு போதகர் வேண்டும் என்று தீர்மானித்தார். அவர் இங்கிலாந்து சபையின் மிக உயர்ந்த பதவியில் இருந்த ஆயர்களிடம் தன் செல்வாக்கைப் பயன்படுத்தி ஜாண் நியூட்டனை ஒரு மதகுருவாக நியமிக்கும்படி வற்புறுத்தினார். ஆயர்களால் அவருடைய பரிந்துரையை மறுக்க முடியவில்லை. அவர்கள் அவரைப் போதகராக நியமிக்க ஒப்புக்கொண்டார்கள்.

ஆயர்களால் ஆகாதவனென்று நிராகரிக்கப்பட்ட நியூட்டன் ஒரு மதகுருவாக நியமிக்கப்படப் போகிறார். எனவே, அவர் இலண்டனுக்குப் புறப்பட்டார்.

இலண்டனில், நியூட்டன் இங்கிலாந்து சபையில் ஒரு போதகராக பிரதிஷ்டை செய்யப்பட்டார். அதன்பின் அவர் அந்தச் சிறிய கிராமப்புற நகரத்துக்குப் புறப்பட்டார். கிராமப்புறம் என்றதும் ஓர் அழகான கிராமத்தைக் கற்பனை செய்யவேண்டாம். அது மிகவும் ஏழ்மையான கிராமப்புற நகரம். எப்போதும் மூடுபனி சூழ்ந்திருக்கும்; பனிமூட்டமாகவே இருக்கும்; ஊரின் வழியாக ஒரு நீரோடை ஓடியது. நீரோடையில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படும். அருகிலிருக்கிற வீடுகளுக்கும், நிலங்களுக்கும் அதிக சேதம் உண்டாகும். அங்கிருந்த ஆண்கள் பொதுவாக சுற்றியுள்ள வயல்களில் மட்டுமே வேலை செய்தார்கள்; பெண்கள் சரிகை தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்தார்கள். தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் வேலைசெய்வதற்கு நல்ல சுகாதாரமான சூழ்நிலை கிடையாது. ஆகையால், பெண்கள் அடிக்கடி பல நோய்களால் பாதிக்கப்பட்டார்கள். தொழிற்சாலையிலிருந்து வெளிவந்த புகையினால் காற்று மாசுபட்டது. எனவே, சுவாசிப்பதற்கு நல்ல ஆரோக்கியமான காற்று கிடையாது. இதனால், ஊரில் பலருக்கு நுரையீரல் பிரச்சினைகள் ஏற்பட்டன. ஆக மொத்தத்தில் ஊரில் வறுமை தாண்டவமாடியது; நோய்கள் கோலோச்சின. அது ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கு ஏற்ற இடம் இல்லை.

நியூட்டன் அந்த நகரத்தின் வழியாக சவாரிபோனபோது, அந்த மக்கள்மேல் மனதுருகினார். அவர்களுடைய நிலைமையைக் கண்டு அவர்கள்மேல் இரங்கினார். அவர் ஆலயத்துக்குப் பக்கத்தில் போதகருக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த வீட்டில் போய்த் தாங்கினார். “இந்த ஊரும், இந்த ஏழை மக்களும், தேவனுடைய நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்குத் தேவன் எனக்குக் கொடுத்த அருமையான வாய்ப்பு. இந்த ஏழை மக்களைக் கவனிக்க வேண்டியது தேவன் எனக்குத் தந்த ஆசீர்வாதம்,” என்று நியூட்டன் நினைத்தார், நம்பினார். குளிரில் வீட்டுக்குள் விறகுவைத்து நெருப்பு மூட்டி சூடு உண்டாக்குவதற்காக வீடுகளில் ஒரு குறிப்பிட்ட இடம் இருக்கும். அதனருகே நியூட்டன் ஒரு மேஜையைப் போட்டு அதில் உட்கார்ந்து படித்தார். தன் மேஜைக்கு அருகே இருந்த சுவரில் “நீ எகிப்திலே அடிமையாயிருந்ததையும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னை அங்கேயிருந்து மீட்டுக்கொண்டுவந்ததையும் நினைப்பாயாக” என்ற உபாகமம் 24:18யைப் பெரிய எழுத்துக்களில் எழுதிவைத்தார்.

இன்று பலர் போராடிக்கொண்டிருக்கிற அல்லது போராடித் தோற்றுக்கொண்டிருக்கிற பெருமை என்கிற காரியத்தில் ஜாண் நியூட்டன் ஒருபோதும் போராடவேயில்லை. அவர் தன் வாழ்நாள் முழுவதும் என்ன செய்தபோதும், “கடந்த காலத்தில் நான் எப்படிப்பட்ட நபராக இருந்தேன், என்ன செய்தேன்,” என்பதை அவர் ஒருபோதும் மறக்கவில்லை. அது எப்போதும் அவருடைய கண்முன் இருந்தது. அவர் எழுதி வைத்திருந்த அந்த வசனம் அவருக்கு மிகவும் பிடித்தமான வசனம். கடந்தகாலத்தில் தான் மிகப் பரிதாபமான ஒரு சூழ்நிலையில் ஓர் அடிமையாக இருந்ததையும், கர்த்தர் தன்னை மீட்டதையும் அவர் மறக்கவில்லை. தன்னிடம் எப்போதாவது ஒரு சிறு துளி பெருமை வந்தபோது, அவர் அந்த வசனத்தைப் பார்த்தார்; தன்னை மீட்டது தேவனே என்றும், தான் அதற்குத் தகுதியற்றவன் என்றும் அவர் நினைவுகூர்ந்தார்.

அவர் சீக்கிரத்தில் அங்கு மிகப் பிரபலம் ஆகிவிட்டார். ஏனென்றால், அவர் ஒரு சம்பிரதாயமான மதகுருவைப்போல சிந்திக்கவில்லை. அக்காலத்து மதகுருமார்கள் பெரிய அறிஞர்கள், உயர் கல்வி கற்றவர்கள்; அவர்கள் ஆலயத்துக்கு வருவார்கள்; பிரசங்கிப்பார்கள்; யாரையாவது சந்திக்க வேண்டுமானால், தேவைப்பட்டால் சந்திப்பார்கள்; பின்னர் அவர்கள் தங்கள் வீட்டுக்குச் சென்று ஆவிக்குரிய புத்தகங்களைப் படிப்பார்கள்; அவர்கள் கொஞ்சம் இறுக்கமானவர்கள்; சிடுசிடு பார்வையுள்ளவர்கள்; பிறரிடமிருந்து ஒதுங்கி இருந்தார்கள். அன்றைய மதகுருக்கள் இப்படித்தான் இருந்தார்கள். ஜாண் நியூட்டன் இதற்கு முற்றிலும் மாறுபட்டவர். அவர் வாரந்தோறும் வியாழக்கிழமை அந்த ஊரின் குழந்தைகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார்.

அந்த ஊருக்குக் கொஞ்சம் வெளியே பிரபு டார்ட்மவுத்துக்குச் சொந்தமான ஒரு பெரிய தோட்டம் இருந்தது. அதில் ஒரு பண்ணை வீடும் இருந்தது. கொஞ்சம் இடிந்த பழைய வீடு; அங்கு யாரும் வசிக்கவில்லை. காலியாக இருந்தது. அவருக்குப் பல வீடுகள் இருந்தன. அவைகளுள் இது ஒன்று.

ஜாண் நியூட்டன் அந்தப் பண்ணை வீட்டின் ஓர் அறையைச் சுத்தம்செய்து குழந்தைகளுக்காகப் பயன்படுத்த ஆரம்பித்தார். வியாழன்தோறும் நகரத்தின் எல்லாக் குழந்தைகளும் அங்கு கூடுவார்கள்; நியூட்டன் அவர்களுக்கு வேதாகமத்திலிருந்து கதைகள் சொல்லி விளக்கினார்; கதைகள் சொல்லும்போது தன் கடல் அனுபவங்களையும் சேர்த்துச் சொல்வார். வேதாகமத்திலிருந்தும், தன் வாழ்க்கையிலிருந்தும் கதைகள் சொல்லும்போது, கடைசியில் அவைகளிலிருந்து அவர்கள் கற்கவேண்டிய தேவனுடைய கோட்பாடுகளையும் சொல்வார். தன் வாழ்க்கையில் நடந்தவைகளைச் சுவையாகச் சொல்வார். நாடகங்கள் நடத்தினார்கள். குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்றார்கள். முதல் வியாழகிழமை மொத்தம் 89 குழந்தைகள் வந்தார்கள். வாராவாரம் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. குழந்தைகள் வாரந்தவறாமல் வந்தார்கள். ஏனென்றால், அவர்கள் நியூட்டனை மிகவும் நேசித்தார்கள். அவர் சொல்லும் கதைகளைக் கேட்க அவர்கள் ஆவலோடு காத்திருந்தார்கள். ஒரு முன்னாள் மாலுமியின் கதைகளை அவர்கள் ஆசையாய்க் கேட்டார்கள்.

ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அது குழந்தைகளுக்கு ஞாயிறு பள்ளிக்கூடம் இல்லாத காலம். அது அப்படிப்பட்ட பார்வை இல்லாத காலம். ஞாயிறு பள்ளிக்கூடம் என்று ஒன்று உருவாவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பு நியூட்டன் இப்படிச் செய்தார். குழந்தைகளுக்குத் தனியாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் அன்று யாருக்கும் எழவில்லை. ஏனென்றால், அன்று குழந்தைகளை யாரும் ஒரு பொருட்டாகக் கருதவில்லை; அவர்கள் பெரியவர்கள் சொல்வதை உட்கார்ந்து மரியாதையாகக் கேட்க வேண்டும்; அல்லது பேசாமல் அமைதியாக இருக்க வேண்டும். அந்தக் காலத்தில் அப்படித்தான் இருந்தது.

ஜாண் நியூட்டன் குழந்தைகளுக்கென்று பிரத்தியேகமாக கூட்டங்களை நடத்தியது வழக்கத்திற்கு முற்றிலும் மாறானது, புரட்சிகரமானது. அது மட்டுமல்ல, அவர் வழக்கமான, சம்பிரதாயமான போதகர்களைப் போன்றவரல்ல. அவர் அதையும் மாற்றினார். வழக்கமான போதகர்கள் சிரித்தால் பாவம் என்பதுபோல் முகத்தை உம்மென்று வைத்திருந்தார்கள். நியூட்டன் எல்லாரையும் பார்த்துப் புன்முறுவல் பூத்தார். கொஞ்சம் வாய்விட்டுச் சிரித்தார். அன்றைய மதகுருமார்கள் எங்கு போனாலும் தங்கள் நீணட அங்கிகளில்தான் போனார்கள். நியூட்டன் சாதாரணமான உடையில் வெளியே போய்வந்தார். இன்னும் சொல்லப்போனால், அவர் கப்பலில் போட்டிருந்த ஜாக்கெட்டைப் போட்டுக்கொண்டு போனார். உண்மையில், இங்கிலாந்தின் குளிருக்கு அந்த ஜாக்கெட் நன்றாக இருந்தது. அவர் ஊர் முழுவதும் சுற்றிவருவார். தன்னிடம் இருந்ததை அவர் எல்லாருக்கும் தாராளமாகக் கொடுத்தார். ஏழைகளுக்கு உதவினார்; அடிக்கடி மக்களைச் சந்தித்தார். அவருடைய வீடு திறந்த வீடு. எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் வரலாம். மக்கள் அவரை ஒரு மதகுருவாகப் பார்க்கவில்லை; எல்லாரும் அவரை ஜாலி கடல் கேப்டன் என்றுதான் அழைத்தார்கள். குழந்தைகள் அவரை எங்கு பார்த்தாலும், கதை கேட்டால் தயங்காமல் உடனே ஒரு கதை சொல்வார். எல்லாரையும் புன்னகையுடன் வாழ்த்தினார்.

அலெக்ஸ் குளூனி நியூட்டனைப் ர்க்க வந்தபோது, அங்கு இருந்த நிலைமையைப் பார்த்து வியந்தார். ஏனென்றால், குளிர்காலத்தில் இங்கிலாந்தில் சாலைகளைப் பனிக்கட்டிகள் மூடியிருக்கும்; உடலை உறையவைக்கும் குளிர் காற்றும் வேகமாக வீசும்; இப்படிப்பட்ட சூழ்நிலையில் மக்கள் எல்லாத் திசைகளிலிருந்தும் ஆலயத்துக்கு நடந்துவந்தார்கள் என்று அவர் குறிப்பிட்டார். அந்த மக்கள் இப்படித் திரண்டதற்குக் காரணம் என்ன? அவர்கள் அவரை நேசித்தார்கள். நியூட்டன் அவர்கள்மேல் உண்மையான கரிசனையும், அக்கறையும் கொண்டிருந்தார். அவருடைய பிரசங்கத்தையும் அவர்கள் விரும்பிக் கேட்டார்கள். ஆனால், அவர் அவ்வளவு நல்ல பிரசங்கியார் இல்லை. ஆனால், அவர்கள் அவரைப் பாராட்டினார்கள், மதித்தார்கள். அவர்களுடைய அன்பு அப்படி.

அது ஏழ்மையான நகரம். எனவே, அவருக்கு அங்கு போதுமான வருமானம் இல்லை.

போதுமான வருமானம் இல்லாததால், அவர் மிகவும் எளிமையாக வாழ்ந்தார். இன்னொரு பிரச்சினை என்னவென்றால், அவருடைய எல்லாச் சேமிப்பும் கப்பல் நிறுவனத்திடம் இருந்தது. கேப்டன் மனிஸ்டியின் கப்பல் நிறுவனமும், மொத்த வியாபாரமும் திவாலாகிவிட்டன. நிறுவனம் திவாலானது; அவருடைய சேமிப்பும் மூழ்கியது. எல்லாவற்றையும் இழந்தார். அந்தச் சிறிய ஊரில் போதகராக அதிக வருமானம் கிடைக்கவில்லை. ஏழை எளிய மக்கள். சொற்ப வருமானம். ஆகவே, அவரும் பாலியும் மிக மிக எளிமையாக வாழ வேண்டியிருந்தது. கிடைத்த மிகக் குறைந்த வருவாயில் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள். முடிந்த அளவுக்குப் பிறருக்கு உதவியும் செய்தார்கள். இந்தச் சூழ்நிலையில் தேவன் என்ன செய்யப்போகிறார் என்று நியூட்டன் சில வேளைகளில் திகைத்தாலும், அவர் ஏதொவொன்றைச் செய்யப்போகிறார் என்றும், எப்படியாவது தன் தேவைகளைப் பூர்த்தியாக்குவார் என்றும் நம்பினார்.

ஆம், நியூட்டன் நம்பியபடியே, தேவன் அவர்களுடைய தேவைகளை நிறைவாக்கினார். இன்னொரு மதகுரு, அந்த நேரத்தில், நியூட்டனை அவருடைய சுயவரலாற்றை எழுதுமாறு உற்சாகப்படுத்தினார். நியூட்டன் அதில் ஆர்வம் காட்டவில்லை. “நான் வாலிபனாக இருந்தபோது எவ்வளவு மோசமானவன், கொடூராமானவன் என்று எல்லாரும் தெரிந்துகொள்ளவேண்டுமா? நான் அதை விரும்பவில்லை,” என்று நியூட்டன் நினைத்தார். “இல்லை, நீ நினைப்பதுபோல் இல்லை. உன் வாழ்க்கை வரலாற்றின் மதிப்பு உனக்குத் தெரியாது. நீ எழுது; மக்கள் அதை அறிய விரும்புவார்கள்; அது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்,” என்று அவருடைய நண்பர் விடாப்பிடியாய் அவர் ஊக்கப்படுத்தினார். நியூட்டன் தன் வாழ்க்கை வரலாற்றை எழுதச் சம்மதித்தார். சில நண்பர்களின் உதவியோடு அவர் தன் வாழ்க்கை வரலாற்றை எழுதிமுடித்தார்.

ஜார்ஜ் ஹவுஸ் என்ற இன்னொரு மதகுரு இருந்தார். அவருக்கு அச்சகத் தொழிலில் ஈடுபட்டிருந்த சிலரைத் தெரியும். அவருடைய உதவியோடு நியூட்டன் தன் வாழ்க்கை வரலாற்றை அச்சிட்டு, வெளியிட்டு, விநியோகித்தார். அவருடைய வாழ்க்கை வரலாற்றை மக்கள் விரும்பி வாங்கி, வாசித்தார்கள். அவருடைய வாழ்க்கை வரலாற்றுக்கு அவர் கொடுத்த பெயர் என்ன தெரியுமா? “…” மேற்கோள்குறிக்குள் மூன்று புள்ளிகள் வைத்தார். அதாவது அதில் அவர் பெயரை எழுதியிருக்க வேண்டும். ஆனால், அவர் தன் பெயர் எழுத விரும்பவில்லை. “வாழ்வின் உண்மைக் கதை” என்று பெயரிட்டார். அவர் தன் பெயரை எழுதவில்லை. அவர் தன் பெயரை எங்கும் எழுதவில்லை, எழுத விரும்பவில்லை. இந்தக் கதை ஜான் நியூட்டன் என்ற தன்னைப்பற்றிய கதை என்பதை மக்கள் அறிவதை அவர் விரும்பவில்லை.

அவருடைய சுயவரலாறு மக்களிடையே பிரபலமானது. டார்ட்மவுத் பிரபுவின் கையிலும் ஒரு பிரதி கிடைத்தது. அவர் அதைப் படித்துவிட்டு, “இது யார் என்று எனக்குத் தெரியும்,” என்று சொல்லிவிட்டு, அந்தப் புத்தகத்தைத் தன் நண்பர்களுக்கும் வாங்கிக் கொடுத்தார். பல பிரபுக்கள், பணக்கார வணிகர்கள், மேல்தட்டு மக்கள் எனப் பலரும் அதைப் படித்தார்கள். அதில் ஒருவர் குறிப்பிடத்தக்கவர். அவர் அந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு, “இந்தப் புத்தகம் எனக்கு நன்றாகத் தெரிந்த ஒருவரைப்பற்றியது,” என்று சொன்னார். ஏனென்றால், அந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருந்த பல நிகழ்ச்சிகளை அவர் அடையாளங்கண்டுகொண்டார். அந்தப் பகுதியில் அன்று எழுத்தபடிக்கத் தெரிந்தவர்கள் மிகக் குறைவு. எனவே, அவர் என்ன செய்தார் என்றால், எழுதப்படிக்கத் தெரிந்த ஒருவரைக் கண்டுபிடித்து, அவரிடம் இந்தப் புத்தகத்தைக் கொடுத்து, அங்கிருந்த மக்களை ஓரிடத்தில் கூட்டி அவர்களுக்கு அதை வாசித்துக்காட்டச் சொன்னார். இவ்வாறு, செல்வந்தர்கள் படித்தார்கள், வசதியுள்ளவர்கள் படித்தார்கள், வாசிக்கத்தெரியாதவர்களுக்கு வாசித்துக்காட்டினார்கள். அந்தப் புத்தகம் எல்லாரையும் சென்றடைந்தது. நியூட்டனைப்பற்றி நிறையப்பேர் தெரிந்துகொண்டார்கள். நியூட்டன் பின்னர் குளூனிக்கு, “நண்பா, எல்லோரும் என்னை முறைத்துப்பார்க்கிறார்கள். சரிதான், அவர்கள் என்னை முறைத்துப்பார்க்காமல் வேறு எப்படிப் பார்க்க முடியும்? ஏனென்றால், அவர்களுக்கு மட்டுமல்ல, எனக்கேகூட நான் ஆச்சரியமாகத்தான் இருக்கிறேன்,” என்று எழுதினார்.

இந்தப் புத்தகத்தின்மூலம் நிறையப்பேர் நியூட்டனை அறிந்துகொண்டார்கள். ஒருநாள் ஒரு பெரிய பணக்காரர் நியூட்டனைப் பார்க்கவந்தார். இவருடைய பெயர் ஜாண் தோர்ன்டன். 1720-1790இல் வாழ்ந்த இவர் பெரிய வணிகர், கிறிஸ்தவர், பரோபகாரரி. இவர் வட கடல் ரஷ்யா வர்த்தகத்தில் முதலீடுசெய்ததின்மூலம் பெரும் செல்வந்தரானார். இவர் தன் கிறிஸ்தவ விசுவாசத்தின் விளைவாக, தன் சொத்தின் பெரும்பகுதியை ஏராளமான நல்ல காரணங்களுக்காக வாரி வழங்கினார். இவர்தான் பதினெட்டாம் நூற்றாண்டின் தலைசிறந்த பரோபகாரி. வணிகத்தில் பெரும் வெற்றியடைந்து, 1790இல் இறக்கும்போது, தோர்ன்டன்தான் ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய பணக்காரர் என்று கூறப்படுகிறது.

இவர் டார்ட்மவுத் பிரபுவின் நண்பர். அவர் நியூட்டனின் வாழ்க்கைவரலாற்றைப் படித்தபோது அது யாரைப் பற்றியது என்று கண்டுகொண்டார். அவர் நியூட்டனைப் பார்க்க விரும்பினார். இப்படி நியூட்டனுக்கு சமூகத்தின் எல்லாவிதமான மக்களோடும் தொடர்பு கிடைத்தது.

ஜாண் நியூட்டன் தன் புத்தகத்தின்மூலம் சந்தித்த மற்றொரு நபர் வில்லியம் கூப்பர் என்ற ஒரு வாலிபன். வில்லியம் கூப்பர் மிகவும் பலவீனமானவர், பதட்டமானவர், நன்கு படித்தவர். அவர் நரம்பு தளர்ச்சிநோயால் அவதிப்பட்டிருக்கலாம். அவர் என்ன நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார் என்று அன்றைய மருத்துவத்தால் கண்டுபிடிக்கமுடியவில்லை. ஆனால், அவருடைய வாழ்க்கையைப் படிக்கும்போது அப்படியிருக்கலாம் என்று தோன்றுகிறது. ஏனென்றால், மிகக் கடுமையான மனச்சோர்வினால் கூப்பர் மூன்று முறை தற்கொலைக்கு முயன்றார்.

அந்த நேரத்தில், அதாவது, நியூட்டனின் புத்தகத்தை வாசித்து முடித்த நேரத்தில், வில்லியம் அன்வின் என்ற ஓய்வுபெற்ற ஒரு மதகுருவோடு தங்கியிருந்தார். அவரும் அவருடைய மனைவியும் வில்லியமைக் கவனித்துக்கொண்டிருந்தார்கள். வில்லியம் மூன்றாவது முறை தற்கொலை செய்யமுயன்று, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப்பின் அப்போதுதான் வீடு திரும்பியிருந்தார். வில்லியம் நியூட்டனின் வாழ்க்கை வரலாற்றை வாசித்தபின், அவர் நியூட்டனைச் சந்திக்க விரும்பினார். அன்வின் குடும்பத்தார் அதற்கு ஏற்பாடுசெய்தார்கள். அவர்கள் நியூட்டன் வசித்த இடத்துக்கு வெகு தூரத்தில் வசிக்கவில்லை, அருகில்தான் இருந்தார்கள். நியூட்டன் தானே அவர்களைப் போய்ச் சந்தித்தார். ஒருநாள் மத்தியானம் அவர் அங்கு போனார். அப்போது அந்த வீட்டில் ஒரே கலபரமாக இருந்தது. ஒருவிதமான சோகம் கவ்வியிருந்தது. அதற்கு முந்தைய நாள், போதகர் அன்வின் குதிரை சவாரிபோகும்போது விபத்து ஏற்பட்டு இறந்துவிட்டார். இது தெரியாமல், நியூட்டன் அங்கு வந்து சேர்ந்தார். என்ன செய்வது என்று தெரியவில்லை. அது மட்டுமல்ல. போதகர் அன்வின் இறந்தபிறகு அவருடைய மனைவியும், வில்லியமும்கூட அந்த வீட்டில் தங்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அவர்களும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றார்கள்.

இந்தச் சூழ்நிலையில்தான் நியூட்டன் அங்கு வந்தார். நியூட்டன் உடனே செயலில் இறங்கினார். அவர் அவர்களுக்காக நகரத்தில் ஒரு வீட்டைக் கண்டுபிடித்தார். அவர்கள் அந்த வீட்டுக்கு உடனே குடிபோக முடியவில்லை. அந்த வீடு தயாராகும்வரை அவர் அவர்களைத் தங்களோடு தங்கவைத்தார். எனவே, இப்போது அவர்கள் இருவரும் நியூட்டனோடும், பாலியோடும் சேர்ந்து வாழ்ந்தார்கள். வில்லியம் கூப்பர் ஜாண் நியூட்டனின் நல்ல நண்பரானார்.

ஒரு நாள் கூப்பர் வழக்கத்திற்குமாறாக விடிவதற்குமுன்பே எழுந்துவிட்டார். எழுந்து ஆதியாகமத்தை வாசித்தார்; ஏனோக்கு தேவனோடு நடந்தான் என்ற வரிகளைப் படித்தார். அந்த சொற்றொடரைப்பற்றிச் சிந்திக்கத் தொடங்கினார். தன் எழுதுகோலை எடுத்தார்.

“தேவனுடன் நெருக்கமாக நடக்க, அமைதியான, பரலோக சட்டகம்” என்று எழுதினார். கொஞ்ச நேரத்தில் மீண்டும் தூங்கச் சென்றார். அவர் மீண்டும் எழுந்தபோது, பாடல் வரிகள் காதில் கிசுகிசுப்பதுபோல் அல்லது மனத்திரையில் ஓடுவதுபோல் இருந்தது. மீண்டும் எழுதுகோலை எடுத்து,

“சாலையில் ஒளிரும் ஒளி செம்மறிக்கு நடத்தும் வழி” என்று அடுத்த இரண்டு வரிகளை எழுதினார். காலைச் சிற்றுண்டி சாப்பிடும் நேரத்தில், “தேவனோடு நெருங்கி நடத்தல்” என்ற தன் பிரபலமான பாடலின் அனைத்து சரணங்களையும் எழுதி முடித்தார். இதன்மூலம், தன்னால் கவிதைகள் எழுத முடியும், நல்ல கவிஞனாக முடியும் என்று அவர் நினைத்தார்.

அவருடைய காலத்தின் மிகப் பிரபலமான கவிஞர்களில் ஒருவரான கூப்பர் 18 ஆம் நூற்றாண்டின் இயற்கைக் கவிதையின் திசையை மாற்றினார்; அன்றாட வாழ்க்கையையும், இங்கிலாந்தின் கிராமப்புற காட்சிகளையும்பற்றி கவிதை எழுதினார். பல வழிகளில், அவர் Romantic கவிதைகளின் முன்னோடி என்று சொல்லலாம். சாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜ் அவரை “சிறந்த நவீன கவிஞர்” என்று அழைத்தார்; வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் அவருடைய “யார்ட்லி-ஓக்” கவிதையைப் பாராட்டினார்.

அவரும் ஜாண் நியூட்டனும் சேர்ந்து “ஓல்னி ஹிம்ஸ்” ஓல்னி பாடல்கள் எழுதினார்கள். “Light Shining out of Darkness” என்ற அவருடைய கவிதையிலிருந்துதான் “தேவன் அதிசயமானமுறையில் வழிநடத்துகிறார்” என்ற சொற்றொடர் உருவானது.

அவர் அடிமை எதிர்ப்புக் கவிதைகளையும் எழுதினார். நியூட்டனும் அடிமை எதிர்ப்புப் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்ததால், இருவரும் அடிமை வியாபாரத்தை எதிர்த்து கவிதைகள் எழுதினார்கள். கூப்பர் “தி நீக்ரோஸ் கம்ப்ளெய்ன்ட்” (1788) என்ற கவிதையை எழுதினார், அது மிகவும் பிரபலமானது. 20 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் கறுப்பர்களின் உரிமைகளுக்கான போராட்டத்தின்போது மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் இந்தக் கவிதையை அடிக்கடி மேற்கோள் காட்டினார்.

ஒன்றை நினைவில்வைத்துக்கொள்ளுங்கள். அந்த நேரத்தில் ஆலயத்தில் யாரும் பாடல்கள் பாடவில்லை. சங்கீதங்களை வாசித்தார்கள். வேதாகமத்திலிருந்து சில பத்திகளை ஒரு பிரத்தியேகமான தொனியில் வாசித்தார்கள். நிச்சயமாக இன்று பாடுவதுபோல் பாடல்களோ, இசையே கிடையாது. அதுவும், சாமான்யர்கள் இதுபோன்ற பக்திப்பாடல்களை எழுதுவது அந்நாட்களில் மிகவும் அசாதாரணமானதாகக் கருதப்பட்டது. இந்த எண்ணம் அவர்களுக்கு மிகவும் நூதனமாகத் தோன்றியது. நியூட்டனும் இந்த பாடல்களின் மதிப்பைக் கண்டார், அவருடைய இளமைப் பருவத்தில், ஐசக் வாட்ஸ் எழுதிய சில பாடல்கள் நியூட்டனின் வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கத்தைப்பற்றி முதல் பாகத்தில் பார்த்தோம். எனவே. ஒவ்வொரு வாரமும் சபைக்கு ஒரு புதிய பாடலை எழுதிக்கொண்டு வந்தால் எவ்வளவு அற்புதமாக இருக்கும் என்று நியூட்டன் நினைத்தார். அவரும் கூப்பரும் சேர்ந்து பாடல்கள் எழுதினார்கள். “இம்மானுவேலின் இரத்தத்தால் திறந்த ஊற்றுண்டே” என்ற எனக்கு மிகவும் பிடித்த பாடல் அவர் எழுதியது. “நல் மீட்பர் இயேசு நாமமே” என்பது நியூட்டன் எழுதிய பாடல்.

1773இல், கூப்பரின் வாழ்வில் மீண்டும் ஒரு பின்னடைவு ஏற்பட்டது. ஆம், அவர் மீண்டும் ஒரு பெரிய மனஅழுத்தத்தில் மூழ்கினார். நிலைமை மிகவும் மோசமாயிற்று. தற்கொலைசெய்யும் எண்ணம் அவரை ஆட்டிப்படைத்தது. யாரிடமும் எதுவும் பேசவில்லை. நியூட்டனும் அந்த நேரத்தில் அவரைப்பற்றி எதுவும் எழுதவில்லை. கூப்பர் பல மாதங்களாக பேசவில்லை, சிரிக்கவில்லை. நியூட்டனும் பாலியும் அவரைத் தங்கள் வீட்டில் வைத்து நன்றாகக் கவனித்தார்கள். கதைகள் சொன்னார்கள், சிரிப்புண்டாக்கினார்கள்; அவரை அந்த நிலைமையிலிருந்து வெளியே கொண்டுவர எல்லா வழிகளிலும் முயன்றார்கள். அவருடைய இறுக்கத்தைப் போக்கி, இருதயத்தை இலகுவாக்க முயன்றார்கள். கூப்பரிடம் எந்த மாற்றமும் இல்லை. நியூட்டனும், பாலியும் மிகவும் சங்கடப்பட்டார்கள். அவருக்காக விடாமல் ஜெபித்தார்கள். அவருடைய நிலைமையை மாற்றவும், மனச்சோர்விலிருந்து அவரை விடுவிக்கவும் அவர்கள் ஊக்கமாக ஜெபித்தார்கள், போராடினார்கள்.

ஒரு நாள் நியூட்டன் கூப்பரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, அவருக்குக் கதைகள் சொன்னார். அப்போது கூப்பர் ஒரு சிறு புன்னகை பூத்தார். பல மாதங்கள் கடுமையான மனஅழுத்தத்திற்குப்பிறகு அன்றுதான் அவர் மெல்லப் புன்னகைத்தார். குணமடைவதற்கான அறிகுறியோ! கூப்பர் அந்த மனச்சோர்விலிருந்து வெளியே வந்தார். அவர் குணமடைந்தபின் எழுதிய “God works in mysterious ways” “தேவன் அதிசயமான முறையில் அசைகிறார்” என்ற பாடல் மிகவும் பிரபலமான பாடல்.

நியூட்டனும் கூப்பரும் சேர்ந்து மொத்தம் 282 பாடல்கள் எழுதினார்கள். அவை அனைத்தும் இப்போது நம்மிடம் இல்லை. இவைகளில் பல அவருடைய சபையில் மட்டுமே பாடுவதற்காகப் பிரத்தியேகமாக எழுதப்பட்டவை. அவர் தாம் எழுதிய பாடல்களையெல்லாம் ஒரு புத்தககமாகச் சேர்த்துவைத்தார். அவர்களுடைய இந்த வேலை மிகவும் குறிப்பிடத்தக்கது என்று நான் கருதுகிறேன். அவருடைய இந்த வேளையில் பரலோகம் மகிழ்ந்திருக்கும் என்று நான் நினைக்கிறன். ஏனென்றால், ஒரு காலத்தில் முரட்டுத்தனமான கவிதைகள் எழுதுவதிலும், கேப்டனைப்பற்றி மோசமான பாடல்கள் எழுதுவதிலும் தன் நேரத்தைச் செலவழித்த நியூட்டன் இப்போது தேவனைத் துதிக்கும் பாடல்களையும், தேவ மக்களை வழிநடத்தும் பாடல்களையும் எழுதிக்கொண்டிருக்கிறார். முன்பு மட்டமான பாடல்கள் எழுதிய விரல்கள் இப்போது மகிமையான பாடல்களை எழுதிக்கொண்டிருக்கின்றன. முன்பு காட்டுமிராண்டித்தனமான காரியங்களை எழுதிய எழுதுகோல் இப்போது கனத்துக்குரிய காரியங்களை எழுதிக்கொண்டிருக்கிறது. அவருடைய “அருள்! அற்புதமாம் அருள்! பாடல் பாடாத கிறிஸ்தவன் உண்டோ!

பாடல்கள் ஒருபுறம். இன்னொருபுறம், அவருடைய கடிதங்கள். அவர் எழுதிய கடிதங்கள்வாயிலாகவும் நாம் அவரைப்பற்றி நிறையத் தெரிந்துகொள்ளலாம். அவர் யாருக்கும், எல்லாருக்கும் கடிதங்கள் எழுதுவதை தன் ஊழியத்தின் ஒரு பகுதியாக நினைத்தார். அவரை அறிந்தவர்கள், அவருடைய புத்தகத்தைப் படித்தவர்கள் அவருக்குக் கடிதம் எழுதினார்கள். அவர் அவர்கள் எழுதிய கடிதங்களுக்குப் பதிலளித்தார். இதற்காக அவர் ஒரு நாளில் பல மணி நேரங்கள் செலவழித்தார். அவர் ஒரு வீட்டிற்குச் செல்லும்போது அல்லது போய் வந்தபிறகு அந்த வீட்டிலுள்ள அனைவருக்கும் கடிதம் எழுதினார் அல்லது நேரில் ஒன்றிடந்து வாக்கியங்கள் எழுதிக் கொடுத்தார். உற்சாகமூட்டும் வார்த்தைகள், அறிவுரைகள். இது அவருடைய வழக்கம். ஊக்குவிப்பதும் கற்பிப்பதும், தேவைக்கேற்ப அறிவுரை வழங்குவதும் தன் ஊழியத்தின் ஒரு பகுதி என்று அவர் உறுதியாக நம்பினார்.

எல்லாம் - நல்ல விஷயங்களோ, கேட்ட விஷயங்களோ - ஒருநாள் முடிவுக்கு வரும். ஒன்லியில் 16 ஆண்டுகளுக்குப்பிறகு நிலைமை மாறத்தொடங்கியது. அதை நியூட்டனும் உணர்ந்தார். அங்கிருந்த மக்கள் நியூட்டனின் இரக்க குணத்தையும், தாராள மனப்பான்மையையும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டிருந்தார்கள். நியூட்டனும் உண்மையில் களைத்துபோனார் என்றுகூட சொல்லலாம். அந்த நேரத்தில் இன்னும் சில நிகழ்வுகளும் நடந்தன; தேவன் தன்னை வேறொரு இடத்திற்குக் கொண்டுபோகப் போகிறார் என்ற எண்ணம் நியூட்டனுக்குள் எழுந்தது. ஆனால், எங்கு, எப்படி, எப்போது என்று அவருக்குத் தெரியாது. ஒன்லியில் தன் நேரம் முடிவுக்கு வருகிறது என்று அவருக்கு நிச்சயமாகத் தெரிந்தது.

ஜான் தோர்ன்டன் என்ற ஒரு மிகப் பெரிய பணக்கார தொழிலதிபரைப்பற்றி ஏற்கெனவே சொன்னேன். இலண்டனில் இருந்த ஒரு ஆலயத்தின் மதகுரு சமீபத்தில் இறந்துவிட்டதாகக் கேள்விப்பட்டார். அங்கு அவருக்குப் பதிலாக ஒருவர் தேவைப்பட்டார். அவர் நியூட்டனைப்பற்றிக் கேள்விப்பட்டிருந்ததால் அவர் நியூட்டனைத் தொடர்புகொண்டு அவரை உடனே இலண்டன் சபைக்குச் செல்லச் சொன்னார். நியூட்டன் ஒன்லியில் யாரையும் சந்தித்துக் கலந்துபேசுவதற்குக்கூட நேரம் இல்லாமல் உடனே இலண்டனுக்குப் புறப்பட்டார். இப்போது அவர் இலண்டன் மாநகரில் ரெவெரென்ட் நியூட்டன்.

அவர் இன்றைக்கும் இலண்டனின் மையப்பகுதியில் இருக்கும் தூய மேரி உல்நோத் ஆலயத்தின் ரெவெரெண்ட் நியூட்டனானார். அவரும் பாலியும் வசித்த இடம் மிகவும் சுவாரஸ்யமான இடம். இங்கிலாந்தின் பாராளுமன்ற உறுப்பினர்களும், செல்வந்தர்களும் வாழ்ந்த இடம். அவர்கள் இந்த ஆலயத்துக்குத்தான் சென்றார்கள். இதே பகுதியில் பரம ஏழைகளும் இருந்தார்கள். அவர்கள் வீடுகளில் வாழவில்லை. அவர்கள் தெருக்களில் பிச்சை எடுத்தார்கள். முரண்பாடான பகுதி. தேவன் தன்னை ஏதோவொரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகாகவே அங்கு கொண்டுவந்திருப்பதாக அவர் உறுதியாக நம்பினார். அப்போது அவருக்கு 50 வயது இருக்கும்.

அவர் “திறந்த வீடு” என்ற கோட்பாடு உடையவர் என்பதால் ஏராளமானோர் அவருடைய வீட்டுக்கு வந்தார்கள். ஏழைகள் அடிக்கடி வந்தார்கள். வந்தவர்களில் சிலர் அவ்வளவு உண்மையானவர்கள் இல்லை என்றும், அவர்கள் தன்னைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள் என்றும் அவருக்குத் தெரியும். ஆனால், அவர் அதைப் பொருட்படுத்தவில்லை. அதனால் அவர் சிறு சலனம்கூட அடையவில்லை. அவர் அவ்வளவு பரந்த இருதயமுடையவர்.

நியூட்டன் இங்கு மிகவும் பிரபலமானார். ஏனென்றால், அவர் காலைதோறும் தன் வீட்டில் குடும்ப வழிபாடு செய்தார். அப்போது அவர் வேதாகமத்தின் ஓர் அதிகாரத்தை வாசித்து அதிலிருந்து பேசினார். மக்கள் அந்தக் காலை வழிபாட்டுக்கு வரத்தொடங்கினார்கள். காலைச் சிற்றுண்டிக்குமுன், காலை வழிபாட்டில் மக்கள் கூட்டம் வீடு முழுவதும் நிரம்பி வழியும். காலை வழிபாடு முடிந்தவுடன் எல்லாரும் சேர்ந்து காலைச் சிற்றுண்டி சாபிட்டார்கள். அதன்பிறகு, அவர் தன் படிப்பறைக்குச் செல்வார். அப்போதும் மக்கள் அங்கு அவரோடு தங்கியிருந்து உரையாடினார்கள். அவர் வேதத்தைப்பற்றி மட்டுமே பேசுவார்; அவர் அவர்களுக்கு நிறைய விஷயங்களைக் கற்பிப்பார். இப்படி ஜாண் நியூட்டன் செய்த பல விஷயங்கள் மிகவும் வழக்கத்திற்கு மாறானவை. அவர் ஆலயத்தில் பிரசங்கிப்பதோடு நிற்கவில்லை. ஆலயத்திற்கு வெளியே நிறையக் காரியங்கள் செய்தார். வீட்டில் மக்களை சந்தித்தது மட்டுமல்ல. அவர் அவர்கள் இருந்த இடத்திலே சந்தித்தார்.

1785 - ஒருநாள் ஜாண் நியூட்டமின் படிப்பறை மேஜையில் ஒரு தாள் மடித்துவைக்கப்பட்டிருந்தது. அவர் அதை எடுத்து விரித்துப் பார்த்தார். “நான் உங்களைத் தனியாக, இரகசியமாக, சந்திக்க விரும்புகிறேன். இப்படிக்கு, வில்லியம்” என்று எழுதப்பட்டிருந்தது. தொடர்புகொள்வதற்கு முகவரியும் எழுதப்பட்டிருந்தது. நியூட்டன் அவரைச் சந்திக்க ஒப்புக்கொண்டு, அவருக்கு செய்தி அனுப்பினார். சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. ஏற்பாடு செய்யப்பட்ட நாளில், நேரத்தில் 23 வயதுடைய ஒரு வாலிபன் நியூட்டனின் வீட்டுக்கு வந்தான். அவன்தான் வில்லியம் வில்பர்ஃபோர்ஸ். உயர் கல்வி கற்றவர்; பெரிய பணக்காரர்; பிரபலமானவர்; மிக முக்கியமாக இங்கிலாந்தின் பாராளுமன்ற உறுப்பினர். வில்பர்ஃபோர்சுக்கு ஜாண் நியூட்டனை ஏற்கெனவே தெரியும். எப்படியென்றால், டார்ட்மவுத் பிரபுவின் பழைய பங்களாவில் ஜாண் நியூட்டன் குழந்தைகளுக்கு கதைகள் சொன்னார், நாடகங்கள் நடத்தினார் என்று ஏற்கெனவே பார்த்தோம். லார்ட் டார்ட்மவுத் வீட்டில் கதைகளைக் கேட்ட, நாடகங்களில் நடித்த குழந்தைகளில் வில்லியமும் ஒருவர். அது மட்டுமல்ல, வில்பர்ஃபோர்ஸ் ஜாண் தோர்ன்டனின் மருமகனனுமாவார். இவைகளெல்லாம் ஒன்றோடொன்று தொடர்புடையவை. வில்பர்ஃபோர்சின் வாழ்க்கையில் இப்போது ஒரு நெருக்கடி ஏற்பட்டிருந்தது. அதற்கு விடை தேடித்தான் அவர் நியூட்டனிடம் வந்தார். அவர் சிறுவனாக இருந்தபோது அதாவது கதைகள் கேட்டபோது, நாடகங்கள் நடித்தபோது இயேசுவை விசுவாசிக்கவில்லை. ஆனால், சமீபத்தில் அவர் இயேசுவை விசுவாசித்து இரட்சிக்கப்பட்டிருந்தார். அவர் தேவனுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பினார். அதனால் அவர் நியூட்டனிடம் பேசினார். “நான் கர்த்தருக்காக ஏதாவது செய்யவேண்டும் என்று விரும்புகிறேன்; செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியும். நான் என்ன செய்யவேண்டும்? நான் இப்போது ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். நான் ஒரு மதகுருவாக விரும்புகிறேன். இதில் உங்களுக்கு ஏற்கெனவே நல்ல அனுபவம் உண்டு. இதற்கு என்ன வழி?” என்று அவர் கேட்டார். நியூட்டன் ஆழ்ந்து சிந்தித்தார். “நீ கர்த்தருக்காக என்ன செய்ய விரும்பினாலும் அதைப் பாராளுமன்றத்தில் இருந்துகொண்டேதான் செய்யவேண்டும் என்று நான் உணர்கிறேன். தேவனுடைய வேலையை நீ பாராளுமன்றத்தில் செய்யலாம்,” என்று சொன்னார்.

ஜாண் நியூட்டன் இதைக்குறித்து வில்லியம் கூப்பருக்கு எழுதினார். கூப்பர் பதில் கடிதம் எழுதினார். அதில், ” வில்பர்ஃபோர்ஸ் சரியான பாதையில்தான் செல்கிறார் என்று நான் உறுதியாக நினைக்கிறேன். அவர் ஒரு நல்ல கிறிஸ்தவராகவும், அரசியல்வாதியாகவும் இருக்க தேவன் அவரை ஆசீர்வதிப்பார் என்று நான் நம்புகிறேன். ஏனென்றால், ஒருவன் நல்ல கிறிஸ்தவனாகவும், அதே நேரத்தில் நல்ல அரசியவாதியாகவும் இருப்பது அரிது,” என்று எழுதினார். அவர் எழுதியது உண்மைதான். ஆனால், இது நடக்கும். இது சாத்தியமே. இது நடந்தது. வில்பர்ஃபோர்ஸ் ஜாண் நியூட்டனிடம் அடிமை வர்த்தகம்பற்றி பேசினார். ஜாண் நியூட்டனின் வாழ்க்கையில் அடிமை வியாபரத்தைப்பற்றிய காரியம் அவரை மிகவும் பாதித்தது. “நான் அடிமை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தேனே!” என்ற எண்ணம் அவரை வாதித்தது. “நான் எப்படி இதைச் செய்தேன்! நான் என் சக மனிதனுக்கு இதைச் செய்தேன்!” என்ற எண்ணம் அவரைப் பாடாய்ப்படுத்தினது. இது நியூட்டனுக்கு பெரும் சுமையாக இருந்தது. “மக்களை விலைக்கு வாங்கி இன்னொரு நாட்டில் அடிமைகளாக விற்றேனே! இதற்குத் தீர்வு கண்டாக வேண்டும். இதற்குப் பரிகாரம்செய்தாக வேண்டும்,” என்று அவர் சிந்திக்கத்தொடங்கினார். ஆனால் பாராளுமன்றத்தில் சட்டத்திருத்தம் செய்யாமல் இதை மாற்ற முடியாது.

ஏதாவது செய்ய வேண்டும் என்று தெரிந்தது. ஆனால், என்ன செய்வது என்று தெரியவில்லை. தன் கடந்த காலத் தவறை எப்படிச் சரி செய்வது என்று அவருக்குத் தெரியவில்லை. அவர் இதைப்பற்றி வில்பர்ஃபோர்சிடம் பேசினார். வில்பர்ஃபோர்சுக்கு அடிமை வர்த்தகம்பற்றி நேரடியாக எதுவும் தெரியாது. அவர் ஒரு மாலுமி இல்லையே!. எனவே, நியூட்டன் அவரிடம் அடிமை வியாபாரத்தைப்பற்றி எடுத்துரைத்தார். “அடிமைகளை அழுக்கான, துர்நாற்றம் வீசும் கப்பலின் அடித்தளத்தில் சிறு மீன்களைக் கொட்டிவைப்பதுபோல், சங்கிலிகளால் கட்டி அடைத்து வைத்திருப்பார்கள். நகரக்கூட இடம் இருக்காது. அவர்கள் தங்கள் சொந்த மலத்தில்மேல் உட்கார்ந்திருக்க வேண்டும்,” என்று அடிமை வியாபாரத்தைப்பற்றி விவரித்தார். இதைக் கேட்ட வில்பர்ஃபோர்ஸ் அதிர்ச்சியடைந்தார். தான் தேவனுக்காக ஏதாவது செய்ய வேண்டுமானால் பிரிட்டன் செய்துகொண்டிருந்த பக்தியற்ற, மனிதாபிமானமற்ற இந்த அடிமைவியாபாரத்தை ஒழிக்க ஏதாவது செய்ய வேண்டும் என்ற உணர்வு அவருக்கு ஏற்பட்டது. பிரிட்டிஷ் அடிமை வர்த்தகத்தை ஒழித்து, “இதற்கு இனி அனுமதியில்லை” என்ற ஒரு சட்டத்தை இயற்றப் பாடுபட வேண்டும் என்று உணர்ந்தார். இது ஒரு பெரிய சவால் என்று அவருக்குத் தெளிவாகத் தெரியும். ஏனென்றால், இந்த அடிமை வியாபாரத்தைப் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்தார்கள், ஆமோதித்தார்கள். அதைத் தடைசெய்யும் சட்டத்தை அவர்கள் நிச்சயமாக எதிர்ப்பார்கள் என்று வில்பர்ஃபோர்சுக்குத் தெரியும். ஏனென்றால், இந்த அடிமை வியாபாரம் இங்கிலாந்தின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்தது. அது மட்டுமல்ல, இதுவரை அது மனிதாபிமானமற்ற செயல் என்று ஒருவர்கூட சொல்லவுமில்லை, அதைக் கேள்வி கேட்கவுமில்லை. வில்பர்ஃபோர்ஸ் அதைச் செய்ய முடிவுசெய்தார். நியூட்டன் அவரை ஆதரித்தார், உற்சாகப்படுத்தினார். நியூட்டன் அடிமை வியாபாரத்தைப்பற்றி ஒரு துண்டுப்பிரசுரம் எழுதினார். அதை மக்களுக்கு விநியோகித்தார். அடிமை வர்த்தகத்தைப்பற்றி தன் அனுபவங்களை எழுதினார். மக்கள் அடிமை வியாபாரத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினார். மக்கள் மாலுமிகள் இல்லையே எல்லாவற்றையும் அறிந்துகொள்ள. அவர்களுக்கு இந்த அடிமை வியாபாரத்தைப்பற்றி எதுவும் தெரியவில்லை. அடிமை வியாபாரத்தினால் இங்கிலாந்து பணக்கார நாடாயிற்று என்று மட்டும் தெரியும். எனவே அவர் எழுதினார், அது எவ்வளவு தவறானது என்பதை மக்கள் புரிந்துகொள்ள உதவ முயன்றார். மக்கள் அதன் பக்தியற்ற, மனிதனாபிமானமற்ற தன்மையைப் புரிந்துகொள்ள ஆரம்பித்தார்கள். ஒருவன் தன் சக மனிதனை ஏதோ ஒரு பொருளைப்போல விற்பது எவ்வளவு தவறானது என்று அவர் சுட்டிக்காட்டினார். இது இவர்கள் மட்டும் சம்பந்தப்பட்டது இல்லை. இது சட்டமாக வேண்டுமானால் போக வேண்டிய தூரம் அதிகம்.

இந்தச் சந்திப்பு ஒரு நல்ல ஆரம்பம். இருவரும் சந்தித்துப் பேசியபின் அவர்கள் எல்லாவற்றையும் மறந்துவிடவில்லை. தொடர்ந்து குரல் கொடுத்தார்கள். எழுதினார்கள். மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். போராடினார்கள். அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார்கள். கலந்துறவாடினார்கள். இந்த இரகசிய சந்திப்புக்குப்பின் மூன்று ஆண்டுகளுக்குப்பிறகு, அப்போதைய இங்கிலாந்து பிரதமர் இந்த விஷயத்தைப் பரிசீலிக்க ஒப்புக்கொண்டார். அடிமைவியாபாரத்தைத் தடைசெய்வதைப்பற்றிய தங்கள் கருத்துக்களைத் தன்னோடு பகிர்ந்துகொள்ள வருமாறு அவர் மக்களை அழைத்தார். அவர் குறிப்பாக, ஜாண் நியூட்டனை அழைத்தார். ஜாண் நியூட்டன் இங்கிலாந்தின் பிரதம மந்திரியின் இல்லமும் அலுவலகமுமான செயின்ட் ஜேம்ஸ் அரண்மனைக்குச் சென்றார். அலுவலகத்துக்கு வெளியே உட்கார்ந்திருந்தார். கதவு திறக்கப்பட்டது. “பிரதம மந்திரி ரெவரெண்ட் ஜாண் நியூட்டனை உள்ளே அழைக்கிறார்,” என்று ஒருவர் கூறி அழைத்தார். அலுவலகத்துக்குள் சென்றார். பிரதம மந்திரியைச் சந்தித்து, அடிமை வர்த்தகம்பற்றிய தன் கருத்துகளையும், கொள்கைகளையும், அனுபவங்களையும் எடுத்துரைத்தார்.

இந்தச் சந்திப்புக்குப்பின் அவர் இதைப்பற்றி ஒரு கடிதத்தில் என்ன கூறினார் தெரியுமா? “நான் அங்கு காத்திருந்தபோது ஒருவர் ரெவரெண்ட் ஜாண் நியூட்டன் என்று என்னை அழைத்ததை நினைத்துப்பார்க்கிறேன். நான் ரெவெரெண்டா? நானா? எங்கிருந்தவன், எப்படிப்பட்டவன் எவ்வளவு தூரம் வந்திருக்கிறேன்! என்று நினைத்துப்பார்க்கிறேன்,” என்று எழுதினார். தான் ஆப்பிரிக்காவில் அடிமைகளின் அடிமையாக இருந்தது; பணக்காரராக இருந்தது; தேவனை முற்றிலும் மறுதலித்து, நிராகரித்தது, தேவன் தன்னை இரட்சித்து, முற்றிலும் மாற்றியது எனப் பல காரியங்களை நினைத்துப்பார்த்தார். இது தேவனுடைய “இது ஆச்சரியமான கிருபை!” என்று அவருக்குத் தெரியும்.

ஊழியம் ஒரு புறம்; அரசியல் இன்னொரு புறம்; இப்படிப் பல காரியங்கள் வேகமாகப் போய்க்கொண்டிருந்தன. இவைகளுக்கிடையில் பாலி மிகவும் நோய்வாய்ப்பட்டார். மருத்துவரிடம் சென்று பரிசோதித்தபிறகு, மருத்துவர், “உங்களுக்குப் புற்றுநோய். அறுவைசிகிச்சை செய்யலாம்,” என்று கூறினார். அந்த நாட்களில், அறுவை சிகிச்சைக்குப் பயன்படுவதற்கு மயக்க மருந்து கிடையாது. வலியோடுதான் அறுவைசிகிச்சை செய்தார்கள். மேலும் அறுவை சிகிச்சைக்குப்பின் நோய்த்தொற்று ஆபத்து மிகவும் அதிகம். எனவே, அவர் அறுவைசிகிச்சைக்குச் சம்மதிக்கவில்லை. “நீங்கள் அதிகபட்சம் இன்னும் இரண்டு ஆண்டுகள் வாழலாம்,” என்று மருத்துவர் கூறி அனுப்பினார்.

பாலி மிகவும் நோய்வாய்ப்பட்டார், பலவீனமடைந்தார். அவர்கள் வாழ்ந்த சிறிய வீட்டின் மேல்மாடியிலிருந்து அவரால் கீழே இறங்கிவர முடியவில்லை. எனவே, அவர் பெரும்பாலும் மாடியில் தன் அறையிலேயே தங்கியிருந்தார். புத்தகங்கள் படித்தார், ஜெபித்தார்; நியூட்டனும் கூப்பரும் எழுதிய பாடல்களை வாசித்தார், பாடினார். ஜாண் நியூட்டனும் முடிந்த அளவுக்கு அவர் அருகே அமர்ந்து இருவரும் பாடல்கள் பாடினார்கள், ஜெபித்தார்கள்.பாலி நித்தியத்துக்குள் நுழைந்த நேரத்தில் ஜாண் நியூட்டன் அவர் அருகே அமர்ந்திருந்தார். ஜாண் நியூட்டனுக்கு இது மிகவும் கடினமான நேரம். பாலி இந்த உலகத்தில் தன்னோடு இருக்கப்போகிற நாள்கள் குறைவுதான் என்று நியூட்டனுக்கு ஏற்கெனவே தெரியும். அவர் மனத்தளவில் அதற்கு ஆயத்தமாகவே இருந்தார். ஆயினும், அந்த யதார்த்தத்தை நேருக்கு நேர் சந்திக்கும் நேரம் வந்தபோதுதான், தான் தன் வாழ்வின் அன்பிற்கினியாளை இழக்க முழுமையாகத் தயாராக இல்லை என்று தெரிந்தது. தன் அன்பு மனைவியின் அடக்க ஆராதனையில் தானே பேசுவேன் என்பதில் உறுதியாக இருந்தார். இந்த நாளில் பேசுவதற்காக அவர் தெரிந்தெடுத்து வைத்திருந்த பத்தி இதோ! “அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின் பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும், நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்” (ஆபகூக் 3:17). அன்று சபையில் அடக்க ஆராதனையில் அமர்ந்திருந்த கூப்பர், ஜாண் நியூட்டன் இந்த குறிப்பிட்ட வசனத்தை ஆதாரமாக வைத்துப் பேசியதைக் கேட்டபோது, அந்த வரிகளை தன் பாடல்களில் ஒன்றின் கடைசி சரணமாக மாற்றினார்.

பாலி இறந்தபின் நியூட்டன் மேலும் 17 வருடங்கள் இந்தப் பூமியில் வாழ்ந்தார். நியூட்டனுக்கு அப்போது 70 வயதிருக்கும். அவருடைய உடல்நிலை மோசமடைந்தபோதும் தொடர்ந்து பிரசங்கம் செய்தார்; ஊழியம் செய்தார். கண்பார்வை மங்கியது; செவித்திறன் குறைந்தது. ஆயினும் ஊழியத்தையும் விடவில்லை; வில்பர்ஃபோர்ஸை ஆதரிப்பதையும் விடவில்லை; பாராளுமன்றத்தில் நடப்பதை உன்னிப்பாகக் கவனிப்பதையும் விடவில்லை; அடிமை வியாபாரத்தைத் தடைசெய்வதற்குத் தன்னாலான உதவியைச் செய்வதையும் நிறுத்தவில்லை.

இந்த நேரத்தில் அவர் இன்னொரு முக்கியமான வேலை செய்தார். இந்த நேரத்தில்தான் கிறிஸ்தவ மிஷனரி சொசைட்டி என்ற சர்ச் மிஷனரி சங்கம் நிறுவப்பட்டது. இது இங்கிலாந்திலிருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு மிஷனரிகளை அனுப்புவதற்காக நிறுவப்பட்ட நிறுவனம். முதன்முறையாக இப்போதுதான் பல்வேறு நாடுகளுக்கு மிஷனரிகள் அனுப்பப்பட்டார்கள். ஜாண் நியூட்டன் இந்த முயற்சியை முழு மனதுடன் ஆதரித்தார்; மிஷனரிகள் ஆப்பிரிக்காவின் மேற்கு கடற்கரைக்குச் செல்ல வேண்டும் என்று அவர் விரும்பினார். தான் ஆப்ரிக்காவின் மேற்கு கடற்கரையில் வாழும் மக்களுக்கு ஏற்படுத்திய சேதங்களைச் சரிசெய்ய வேண்டும் என்ற பாரம் அவரை அழுத்தியது. எனவே அவர் அதை மும்முரமாக ஆதரித்தார். அவருக்கு 70 வயதிருக்கும் என்று சொன்னேன். நல்ல நாள்களிலேயே அவர் சிறந்த பிரசங்கியார் கிடையாது. இப்போது உடல்நிலை வேறு சரியில்லை. ஆனால் தொடர்ந்து பிரசங்கித்தார். தான் சிறந்த பிரசங்கியார் இல்லை என்று அவருக்கும் தெரியும்; மக்களுக்கும் தெரியும். பிரசங்கிக்கும்போது அவருடைய எண்ணங்கள் கோர்வையாக வராது; தொடர்பில்லாமல் பேசுவார்; பேச்சு தெளிவாக இருக்காது; அவருடைய பிரசங்கக் குறிப்புகள் ஒழுங்காக இருக்காது; வார்த்தைகளுக்காகக் கொஞ்சம் திணறுவார்; இடையிடையே சற்று அமைதியாக இருப்பார். இவ்வளவு குறைபாடுகள் இருந்தபோதும் அவருடைய பிரசங்கத்தைக் கேட்ட மக்கள் ஆசீர்வதிக்கப்பட்டார்கள். அவர் வேதத்தின்மேல் வைத்திருந்த உயர்ந்த பற்றுறுதியும், தேவன்மேல் மைத்திருந்த அன்பும், மக்கள்மேல் கொண்டிருந்த ஆர்வமும், அக்கறையும் மக்களை அவர்பால் ஈர்த்தது, மாற்றியது.

80 வயதான ஜான் நியூட்டன் தன் முதுமையில் மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் பிரசங்கம் செய்யவில்லை.1807 மார்ச் மாதம், பாராளுமன்ற உறுப்பினர் வில்பர்ஃபோர்ஸின் நீண்ட, கடினமான, தீவிர பிரச்சாரத்திற்குப்பிறகு, பிரிட்டனில் அடிமை வர்த்தகத்தை ஒழிக்க பாராளுமன்றம் முடிவெடுத்தது என்ற செய்தி அவருக்கு கிடைத்தது. நியூட்டன் நிம்மதிப் பெருமூச்சுவிட்டார். “நான் இந்தப் பயங்கரமான, பாவ வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தேனே!” என்ற சுமையை அவர் எப்போதும் சுமந்துகொண்டிருந்தார். அந்தச் செய்தியின்மூலம் அந்தப் பாரச்சுமை அவரைவிட்டு நீங்கிற்று.

அதே ஆண்டு, சில மாதங்களுக்குப் பிறகு, அவர் தன் நண்பர் ஒருவரிடம் சற்று வேடிக்கையாக, “நான் என் மூட்டைமுடிச்சுகளைக் கட்டிவைத்து, முத்திரையிட்டு, எனக்குக் குறிக்கப்பட்ட இடத்துக்குப் போகத் தயாராகிவிட்டேன்,” என்று கூறினார். இந்தப் பூமியில் தன் வேலை முடிந்துவிட்டது, தான் மீட்பரைச் சந்திக்கத் தயாராகிவிட்டேன் என்பதையே அவர் அப்படிக் கூறினார்.

அவருடைய உடல்நிலை மோசமானது. படுத்த படுக்கையானார். அப்போது அவருக்கு வயது 82. அவருடைய நண்பர்கள் அவருக்கு அருகில் இருந்தார்கள். அவர்களுக்கு மட்டும் கேட்கும் விதத்தில் மெல்ல கிசுகிசுத்தார். இதோ அவருடைய கடைசி வார்த்தைகள்: “என் நினைவு கிட்டத்தட்ட போய்விட்டது. ஆனால் இரண்டு விஷயங்கள் நினைவில் இருக்கின்றன. ஓன்று நான் ஒரு பெரிய பாவி, இன்னொன்று கிறிஸ்து பெரிய இரட்சகர்.” இந்த வார்த்தைகளோடு, ஒரு நிர்ப்பந்தமான மனிதன், தன் இளமைப்பருவத்தில் பிறரைப்பற்றி இம்மியளவும் கவலைப்படாத ஒரு மனிதன், பாவத்தில் உழன்று பாதாளம்வரை சென்ற ஒரு மனிதன், தாழ்மையையும் எளிமையையும் உடுத்தியிருந்த ஒரு மனிதன், கர்த்தருடைய மாபெரும் கிருபையால் இரட்சிக்கப்பட்ட ஒரு மனிதன் நித்தியத்துக்குள் நுழைந்தார்.

தன் கல்லறையில் அவர் பின்வருமாறு எழுதச் சொன்னார். அவருடைய கல்லறை ஓல்னியில் இருக்கிறது. என்ன எழுதச் சொன்னார்?

“ஜாண் நியூட்டன், எழுத்தன், ஒரு காலத்தில் நாத்திகன், மனம்போன போக்காளன், ஆப்பிரிக்காவில் அடிமைகளின் வேலைக்காரன், நம் கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் ஐசுவரியமான கிருபையால் பாதுகாக்கப்பட்டு, மீட்டெடுக்கப்பட்டு, மன்னிக்கப்பட்டு, நீண்டகாலமாக தான் அழிக்கப் பாடுபட்ட விசுவாசத்தை இந்தத் திருச்சபையின் பொறுப்பாளராக 16 ஆண்டுகளும், செயின்ட் மேரி வூல்னோத்தின் ரெக்டராக 28 ஆண்டுகளும் பிரசங்கிக்க நியமிக்கப்பட்டவன்.”