Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More


John Wesley (1703 – 1791) was an English clergyman, theologian and evangelist who led a revival movement within the Church of England that soon became known as Methodism. In 1738, he was converted after serving as an ordained missionary to America for two years. 

Wesley, like George Whitefield, found the need and usefulness of preaching outdoors. Across Great Britain and Ireland, he helped form and organise small Christian groups that developed intensive and personal accountability, discipleship and Bible teaching, and, in a radical departure from normal practice at the time, he appointed itinerant, unordained evangelists to care for these groups of people. Under Wesley's direction, Methodists became leaders in many social issues of their day, including prison reform and the abolition of slavery. 

Wesley's extensive travels and many varied experiences as a servant of God are chronicled in some detail in his journals and letters.  By the end of his life, Wesley was described as "the best-loved man in England".

ஜாண் வெஸ்லி - ஒரு சுருக்கமான வரலாறு

ஜாண் வெஸ்லி என்ற தேவ மனிதனைப்பற்றி, ஒருவேளை, நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இவருடைய வாழ்க்கையும், வரலாறும் ஜார்ஜ் விட்ஃபீல்ட் என்ற தேவமனிதனின் வாழ்க்கையோடு பின்னிப்பிணைத்துள்ளது. இவர்கள் இருவரும் சமகாலத்தில் வாழ்ந்தவர்கள்; இருவரும் நல்ல நண்பர்கள்; இருவரும் சேர்ந்து ஊழியம் செய்தார்கள். எனினும், ஜாண் வெஸ்லியின் வரலாறு வித்தியாசமானது.

அவருடைய வரலாற்றைப் பார்ப்பதற்குமுன், 1700களில் இங்கிலாந்தில் நிலவிய சூழலைப் புரிந்துகொள்வது முக்கியம். இங்கிலாந்தைப் பொறுத்தவரை, அது ஓர் இருண்ட காலம் என்றுதான் சொல்ல வேண்டும். அன்று, இங்கிலாந்தில் ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு அதிகமாக இருந்தது. செல்வந்தர்கள் செல்வச் செழிப்பில் கொழுத்தார்கள். வறியவர்கள் வறுமையில் வாடினார்கள். ஏழைகளுக்கு வாழ்க்கையில் எந்த நம்பிக்கையும் இல்லை. பணக்காரர்கள் ஏழைகளை வெறுமனே ஒரு பண்டதைப்போல், ஒரு பொருளைப்போல், மட்டுமே பயன்படுத்தினார்கள், நடத்தினார்கள். ஏழைகள் தங்களுக்கு இன்னும் அதிகமான பணம் சம்பாதித்துக் கொடுப்பதற்கான ஒரு வழி, ஒரு கருவி, என்றுதான் பணக்காரர்கள் கருதினார்கள். ஏழைகள் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு எந்த வாய்ப்பும் இருக்கவில்லை. அவர்கள் தங்கள் நிலைமையை மாற்றிக்கொள்வதற்கு வாய்ப்பேயில்லை. ஏழையாகப் பிறந்தவன் ஏழையாகவே வாழ்ந்து, ஏழையாகவே மடிந்தான்.

1700களில், ஜின் என்ற மதுபானம் இங்கிலாந்தில் ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இது பீரைவிட அதிகமான போதை உண்டாக்கியது. ஆனால், பீரைவிட மலிவானது. 1700களில், ஜின் உற்பத்தி செய்வதில் எந்தக் கட்டுப்பாடும் இல்லாததால், சமுதாயத்தில் குழப்பமும், கொந்தளிப்பும், பல பிரச்சினைகளும், சிக்கல்களும் ஏற்பட்டன. சமுதாயத்தில் ஏற்பட்ட சிக்கல்களின் காரணமாக, ஜின் உற்பத்தியை முறைப்படுத்த அரசு சட்டங்களை நிறைவேற்ற முயன்றது. ஆனால், அரசு சட்டங்களை நிறைவேற்றுவதற்குமுன்பே, சமுதாயத்தில் ஏற்கெனவே நிறைய பாதிப்புக்கள் ஏற்பட்டுவிட்டன. குடிப்பழக்கத்தால் அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்கள் ஏழைகளே. பெற்றோர்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமைகளானார்கள். அவர்கள் ஏற்கெனவே வறுமையில் வாடினார்கள். இப்போது போதையும் சேர்ந்துகொண்டது. அந்தக் குடும்பங்களில் இருந்த குழந்தைகளைக் கவனிப்பாரில்லை. குழந்தைகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டார்கள். பிறந்த குழந்தைகளை வீதிகளில் போட்டுவிட்டுச் சென்றார்கள். கவனிப்பாரில்லை. மக்களின் வேலை பறிபோயிற்று. மதுவுக்காக மக்கள் நிறையப் பணம் செலவளித்தார்கள். குடும்பங்கள் சின்னாபின்னமாகின. சமுதாயத்தில் வன்முறை வெடித்தது. சட்டம் ஒழுங்கு கெட்டது. அமைதி குலைந்தது. குற்றச்செயல்கள் பெருகின. இதுதான் அன்றைய இங்கிலாந்தின் அவல நிலைமை.

அந்த நேரத்தில், இங்கிலாந்துக்கு அருகே இருக்கும் பிரான்ஸ் நாட்டிலும் இதுபோன்ற ஒரு குழப்பமான சூழல் நிலவியது. அங்கும் கலவரமும், வன்முறையும் வெடித்தன. எங்கும் அமைதியின்மை. பல பிரச்சினைகள். அதனால், ஒரு மாபெரும் புரட்சி ஏற்பட்டது. இங்கிலாந்தும் ஏறக்குறைய அதே அழிவுப் பாதையில்தான் சென்றுகொண்டிருந்தது. உண்மையில், ஜாண் வெஸ்லிதான் இங்கிலாந்தை இப்படிப்பட்ட ஒரு புரட்சியிலிருந்து காப்பாற்றினார் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

சரி, நாம் ஜாண் வெஸ்லியின் கதைக்கு வருவோம். லிங்கன்ஷயரில் எப்வொர்த் என்ற ஊர். ஜாண் வெஸ்லி இங்குதான் பிறந்தார். அவருடைய தந்தை சாமுவேல் வெஸ்லி, அவருடைய தாய் சூசன்னா. அவருடைய தந்தை ஒரு மதகுரு, மதபோதகர். அவர் பல சபைகள் அடங்கிய ஒரு வட்டாரத்துக்குப் போதகராக இருந்தார். அவருடைய கண்காணிப்பின்கீழ் பல போதகர்கள் இருந்தார்கள். பல மதகுருமார்கள் அவரை விரும்பவில்லை. இந்த நேரத்தில் அவர்களுடைய வாழ்க்கையில் ஓர் அசம்பாவிதம் நடந்தது. இந்த அசம்பாவிதம் தற்செயலாக நடந்தது என்று எடுத்துக்கொள்ள முடியுமா என்று தெரியவில்லை.

ஒரு நாள் இரவு, வீட்டில் எல்லாரும் நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தார்கள். திடீரென்று வீடு தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. எரிந்துகொண்டிருந்த வீட்டுக் கூரையின் ஒரு பகுதி 11 வயதான அவர்களுடைய மகளின் படுக்கையில் விழ, படுக்கையும் தீப்பற்றிக்கொண்டது. திடுக்கிட்டு விழித்தெழுந்த அவள், உறக்கக் கத்தினாள். மகளின் கதறல் கேட்டு அவளுடைய அப்பா எழுந்தார். நிலைமையை அறிந்த அவர் தம் மனைவியை எழுப்பினார். அவர் ஓடிப்போய் குழந்தைகளை எழுப்பினார். அவருடைய மனைவி சில குழந்தைகளை எழுப்பிக்கொண்டிருந்தபோது அவர் மாடியில் இருந்த சிறு பிள்ளைகளுக்கான அறைக்குப் போய் பணிப்பெண்ணைக் கூப்பிட்டார். பணிப்பெண் கட்டிலில் படுத்திருந்த கைக்குழந்தை சார்லஸைத் தூக்கிக்கொண்டு, அங்கிருந்த பிற குழந்தைகளை இழுத்துக்கொண்டு, வீட்டைவிட்டு வெளியே ஓடினார். எல்லாரும் வீட்டுக்கு வெளியேவந்தபின் சாமுவேல் தன் பிள்ளைகளைப் பார்த்தார். ஜாண் மட்டும் அங்கு இல்லை. மீதி எல்லாரும் அங்கு இருந்தார்கள். "ஜாண் எங்கே?" என்று கேட்டார். எல்லார் முகத்திலும் அதிர்ச்சி. சாமுவேல் ஜாணைத் தேடி வீட்டிற்குள் ஓடினார். ஐந்து வயது சிறுவன் ஜாண் அங்கு நடப்பது எதுவும் தெரியாமல் வீட்டில் நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருந்தான்.

சிறு குழந்தைகள் படுத்திருக்கும் அறைக்குப் போகும் படிக்கட்டு தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது. அவரால் படிகளில் ஏற முடியவில்லை. கதறினார். வீட்டைவிட்டு வெளியே ஓடினார். முழங்கால் படியிட்டு, ஜாண் வெஸ்லியின் ஆத்துமாவைத் தேவனிடம் ஒப்புக்கொடுத்தார். இதற்கிடையில், சிறுவன் ஜாண் விழித்துவிட்டான். அறையைவிட்டு வெளியேற கதவை நோக்கி ஓடினான். அங்கு தீ மளமளவென எரிந்துகொண்டிருந்தது. வெளியேற வழியில்லை. ஜன்னல் பக்கம் ஓடினான். தாழ்ப்பாளை அகற்றிவிட்டு அங்கிருந்து கூப்பிட்டான். வீடு முழுவதும் புகை சூழ்ந்திருந்ததால் அவன் அங்கு நிற்பது யாருக்கும் தெரியவில்லை. உதவி கேட்டு கூப்பிட்டுக்கொண்டேயிருந்தான். அவனுடைய அபயக் குரல் பக்கத்துக்கு வீட்டுக்காரர் காதுகளில் விழுந்தது. உற்றுப்பார்த்தார். அங்கு ஒரு சிறுவன் நிற்பதைக் கண்டார். ஒரு ஏணி கிடைக்குமா என்று தேடினார். அங்கு நின்றுகொண்டிருந்த வேறொருவர், "இப்போது இது ஏணி தேடுவதற்கான நேரம் இல்லை," என்று சொல்லி, பக்கத்திலிருந்தவரைப் பார்த்து, "நான் இப்படி நேராக நிற்கிறேன். நீங்கள் என் தோள்மேல் ஏறி நில்லுங்கள், அதன்பின் சிறுவனைக் குதிக்கச் சொல்லுங்கள்," என்றார். இருவரும் ஒருவர் தோள்மேல் ஒருவர் நிற்க, தோள்மேல் நின்றவர் சிறுவன் ஜாணை ஜன்னலிருந்து வெளியே இழுத்தார். மூவரும் தரையில் விழுந்தார்கள்.

அவர்களுடைய வீடும், வீட்டிலிருந்த அவர்களுடைய எல்லா உடைமைகளும், அவர்களுடைய கண்ணெதிரே எரிந்து சாம்பலாகின. அப்போதும் சாமுவேல், "நான் ஒரு பெரிய பணக்காரன், என் குழந்தைகள் அனைவரும் உயிரோடிருக்கிறார்கள்," என்று கூறினார். ஏதோவொரு முக்கியமான காரணத்திற்காகத் தேவன் தம் மகன் ஜாண் வெஸ்லியைக் காப்பாற்றியதாக சூசன்னா வெஸ்லி உணர்ந்தார். அவருடைய பெற்றோருக்கு மொத்தம் 19 குழந்தைகள். ஜாண் வெஸ்லி அவர்களுடைய 15ஆவது குழந்தை. அந்த நாட்களில் குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகம். அவர்களுடைய 19 குழந்தைகளில் 10 குழந்தைகள் மட்டுமே தப்பித் பிழைத்தார்கள். மீதி 9 குழந்தைகள் சிறு வயதிலேயே இறந்துவிட்டார்கள். அதில் 4 குழந்தைகள் இரட்டைப் பிள்ளைகள்.

எல்லாக் குழந்தைகளும் தேவன் தங்களுக்குத் தந்த ஒரு கொடை என்றே சூசன்னா கருதினார். "என்னுடைய ஒவ்வொரு குழந்தையும் தேவன் எங்களை நம்பி எங்களிடம் ஒப்படைத்திருக்கும் தாலந்துபோன்றவர்கள்," என்று அவர் சொன்னார். சூசன்னா ஒரு பரவசமான பெண்மணி என்றுதான் சொல்ல வேண்டும். அந்தக் காலத்தைப் பொறுத்தவரை, அவர் ஓர் அசாதாரணமான பெண்மணி என்று சொன்னால் அது மிகையாகாது. அவர் நன்கு கற்றவர், கல்வியறிவு உடையவர். அவருக்கு இலத்தீன் மொழியும், கிரேக்க மொழியும் தெரியும். அவருக்கு வரலாற்றைப்பற்றி நிறையத் தெரியும். அது மட்டும் அல்ல. பல காரியங்களில் அவர் தீர்க்கமான, திடமான அபிப்பிராயம் உடையவர். தன் தீர்மானங்களில், கண்ணோட்டங்களில், அவர் மிகவும் உறுதியாக இருந்தார். அவைகளை அவர் விட்டுக்கொடுக்கவில்லை. ஓர் எடுத்துக்காட்டு சொல்லவேண்டுமானால், குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதைப்பற்றிய தன் கருத்துக்களில் அவர் மிகவும் பிடிவாதமாக இருந்தார். அவர்களுடைய வாழ்க்கையில் அவருக்கும் அவருடைய கணவருக்கும் பல்வேறு விஷயங்களில் பல்வேறு வேளைகளில் கருத்துவேறுபாடு ஏற்பட்டது, அதில் அவர்கள் மோதிக்கொண்டார்கள். அவருடைய கணவர் சாமுவேல் லிங்கன் கோட்டையில் கடனாளிகளின் சிறையில் அடைக்கப்பட்டபோது அவருடைய உறுதியான ஆளுமையே அவருக்கு அதைத் தாங்கும் திறனளித்தது. அவருடைய கணவர் தான் வாங்கிய கடனைக் குறித்த நேரத்தில் திருப்பிக்கொடுக்காததால் அந்தச் சிறையில் அடைக்கப்பட்டார். யாருடைய பண உதவியும், உடல் உழைப்பும், உதவியும் இல்லாமல் அவர் 10 குழந்தைகளை வளர்க்க வேண்டியிருந்தது. அவ்வளவு சவால்களையும் சமாளித்து அவர் 10 குழந்தைகளையும் பாதுகாத்துப் பராமரித்து வளர்த்தார். ஜாண் வெஸ்லி பின்னாட்களில் தன் தாயைப்பற்றி, " என் அப்பாவைவிட என் அம்மா பிறர்மேல் கொஞ்சம் குறைவான கரிசனை உள்ளவர்போல் தோன்றலாம். ஆனால், அவர் என் அப்பாவைவிட பத்து மடங்கு அதிகமாகச் செய்தார்," என்று சொன்னார்.

சூசன்னா குழந்தைகளை மிகக் கண்டிப்பாக நடத்தினார். அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல, தரமான கல்வி கொடுத்தார்கள். எல்லாரையும் நன்றாகப் படிக்கவைத்தார்கள். ஆனால், அவர்கள் தவறு செய்தபோது கடுமையாகத் தண்டிக்கப்பட்டார்கள். தவறு செய்தபோது தண்டிக்கப்பட்டாலும் சரி, குற்றம் செய்தபோது அடிக்கப்பட்டாலும் சரி, “அழக்கூடாது; மாறாக, வேண்டுமானால் சத்தம் கேட்காமல் முனகிக்கொள்ளலாம்”. இது அவர் தன் பிள்ளைகளுக்குக் கொடுத்திருந்த அறிவுரை. அவர் மிகக் கடுமையான ஒழுக்கத்தையும், ஒழுங்கையும் பின்பற்றினார். தன் பிள்ளைகளுக்கும் அதைக் கற்பித்தார். அவருடைய ஒழுங்கும், ஒழுக்கமும் அவருடைய பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களானபிறகும் அவர்களுடைய வாழ்க்கையில் ஆழமாக வேரூன்றியிருந்தன. அவர் அவர்களுக்கு வேதாகமத்தைக் கற்றுக்கொடுத்தார். 10 குழந்தைகள் இருந்தார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். வேதாகமத்தை வாசிப்பதற்கு அவர் ஓர் அட்டவணை வைத்திருந்தார். அவர்கள் அந்த அட்டவணையின்படி வேதாகமத்தை வாசித்தார்கள். வாரம் ஒருமுறை ஒரு குழந்தையோடு தனியாக நேரம் செலவளித்தார்கள். அப்போது அந்தக் குழந்தைக்கு இன்னும் கூடுதலான போதனையும், அறிவுரையும் தந்து, அந்தக் குழந்தையின் ஆளுமையின் வளர்ச்சிக்கும், முதிர்ச்சிக்கும் தேவையான காரியங்களையும் கற்பித்தார்கள். எல்லாப் பிள்ளைகளும் மிக எளிதில் வாசிப்பதற்குச் சொல்லிக்கொடுத்தார். அவர் அவ்வளவு திறமைசாலி. பிள்ளைகள் மிக எளிதில் வாசிப்பதற்குக் கற்றுக்கொடுக்கத் தான் பின்பற்றும் திறமையான வழி நிச்சயமாக வேலை செய்யும் என்று அவர் சாதித்தார். அது உண்மை. ஜாண் வெஸ்லி இரண்டே நாட்களில் வாசிக்கக் கற்றுக்கொண்டார்.

ஜாண் வெஸ்லி மிகவும் பிரகாசமான சிறுவன். பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோதே பிறர் அவருடைய அறிவுக்கூர்மையையும், திறமையையும் காணத் தவறவில்லை. எனவே, மேற்படிப்புக்காக அவர் ஆக்ஸ்போர்ட பல்கலைக்கழகத்துக்குப் படிக்கச் செல்வதற்கு அவர்கள் அவருக்கு உதவித்தொகை வழங்கினார்கள். பல்கலைக்கழகத்திலும் அவர் சிறந்து விளங்கினார். அவர் இலத்தீன், கிரேக்கு, எபிரேய மொழிகளைச் சிறப்பாகக் கற்றுத் தேறினார். அந்த மொழிகளில் அவர் சரளமாகப் பேசினார். அவர் தர்க்கவியலும், செம்மொழிகளும் படித்தார். அவர் பல்கலைக்கழகத்தில் படித்த நாட்கள் மிகவும் இனிமையான நாட்களாக அமைந்தன. அவர் மிகவும் கடினமாகப் படித்தார். அவர் ஆக்ஸ்போர்டில் படித்தபோது, லிங்கன் கல்லூரியின் ஃபெலோவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த விருது ஏதோவொரு வகையில் சிறந்துவிளங்கிய மூத்த கல்வியாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. அப்படிப்பட்ட விருது ஜாண் வெஸ்லிக்கு வழங்கப்பட்டது அவருக்குக் கிடைத்த கௌரவம். சாமுவேல் வெஸ்லி தன் மகனைக்குறித்து மிகவும் பெருமைப்பட்டார்.

ஜாண் வெஸ்லி, தன் தாய் தன்னில் விதைத்து, வளர்த்த உறுதியான ஒழுங்கையும், ஒழுக்கத்தையும் தொடர விரும்பினார். அவர் உண்மையாகவே ஒரு பரிசுத்தமான வாழ்க்கை வாழ விரும்பினார். நாடோறும், கணந்தோறும் அவர் பரிசுத்தமாக வாழ விரும்பினார். எனவே, அவர் ஒவ்வொரு நாளும், தான் பேசுவதையும், செய்வதையும் எழுத ஆரம்பித்தார். எல்லாவற்றையும் எழுத முடியாதபோது, முக்கியமான காரியங்களை எழுதிவைத்தார். அவைகளைச் சீக்கிரமாக எழுத வேண்டும் என்பதற்காகச் சுருக்கெழுத்தில் எழுதினார். அவைகளை வேறு யாரும் பார்த்துப் புரிந்துகொள்ளக்கூடாது என்பதற்காக குறியீடுகளையும், குறியீட்டுச் சொற்களையும் பயன்படுத்தி எழுதினார். அவர் மிக நல்ல, தரமான குறியீட்டைப் பயன்படுத்தி எழுதியதால், அவர் தன் குறிப்பேட்டில் எழுதியவைகளின் பொருளைக் கண்டுபிடிப்பதற்கு 250 ஆண்டுகள் ஆயிற்று. அவர் வேதாகமத்தை மிக ஆழமாக வாசித்தார். கிரேக்கு, இலத்தீன் மொழிகளிலும் அவரால் வேதாகமத்தை வாசிக்க முடியும். பரிபூரணமான வாழ்க்கை வாழ அவர் பிரயாசப்பட்டார். வெற்றுப் பேச்சுக்களையும், வீண் விளையாட்டுக்களையும், அதுபோன்ற பல்வேறு காரியங்களையும் தான் விட்டுவிடப்போவதாக அவர் தன் குறிப்பேட்டில் எழுதியிருந்தார். உண்மையில் அவர் ஒரு பரிசுத்தவானாக வாழ விரும்பினார்.

சில வருடங்களுக்குப்பின் அவருடைய தம்பி சார்லஸ் வெஸ்லி அதே ஆக்ஸ்போர்டில் படிக்க வந்தார். அவர் தன் அண்ணனின் வாழ்க்கைமுறையைக் கவனித்தார். ஆனால், ஜாண் வெஸ்லியின் பரிசுத்தமான வாழ்க்கை அவரை ஈர்க்கவில்லை. நாடகம், கலை, கவிதை ஆகியவைகளில் அவருக்கு நாட்டம். குறிப்பாக கவிதை எழுதுவதில் அவர் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால், தன் தம்பியும் தன்னைப்போல் இந்தப் பரிசுத்தமான தேடலைப் பின்பற்ற வேண்டும் என்று ஜாண் வெஸ்லி விரும்பினார். ஜாண் வெஸ்லி பல புத்தகங்களைப் படித்தார். அவர் படித்த ஒரு புத்தகத்தின் தலைப்பு "பக்தியுள்ள, புனித வாழ்க்கைக்கு ஓர் அழைப்பு." இந்தப் புத்தகம் அவருடைய இருதயத்துக்கு மிக நெருக்கமான புத்தகம். தன் வாழ்வின் முடிவில் தேவன் தன்னை ஏற்றுக்கொள்ளும் வகையில் தன்னைத் தகுதிப்படுத்துவதற்கு அவர் நாடோறும் பிரயாசப்பட்டார், பாடுபட்டார்.

21ஆவது வயதில், வெஸ்லி குருப்பட்டம் பெற்றார். அதாவது ஒரு மதகுருவாக நியமிக்கப்பட்டார். தன் தந்தை ஒரு மதகுருவாக இருந்ததால், தானும் ஒரு மதகுருவாவதுதான் தான் செல்லவேண்டிய தெளிவான பாதைபோல் அவருக்குத் தோன்றியது. அதுதான் அந்த நாட்களின் பழக்கம். தகப்பனின் தொழிலையே பிள்ளைகள் செய்தார்கள். தகப்பனின் அடிச்சுவடுகளையே பிள்ளைகள் பின்பற்றினார்கள். அந்த நாட்களில் மதகுருவாக இருப்பது நல்ல வேலையாகக் கருதப்பட்டது. வேலை நிரந்தரம், வருமானம் நிரந்தரம், சமுதாயத்தில் நல்ல மதிப்பும், மரியாதையும் உண்டு. இது ஜாண் வெஸ்லிக்குத் தெரியும். ஆனால், அவர் மதகுரு என்பதைத் தொழிலாகக் கருதவில்லை. அதைத் தேவனுக்குச் செய்யும் பணிவிடையாகக் கருதினார். எனவே, அவர் தன் சபைக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக இருக்க விரும்பினார்.

ஒரு முறை ஒரு முதியவர் சொன்ன ஒருசில வார்த்தைகளை அவர் தன் வாழ்நாள் முழுவதும் தன் இருதயத்தில் ஆழமாக வைத்துக்கொண்டார். அந்த முதியவர் ஜாண் வெஸ்லியிடம், "வேதாகமத்துக்கு ஒரு தனி மதத்தைப்பற்றி எதுவும் தெரியாது. நீ தேவனுக்குத் தன்னந்தனியே ஊழியம்செய்ய முடியாது. எனவே, நீ தோழர்களைக் கண்டுபிடிக்க வேண்டும் அல்லது அவர்களை உருவாக்க வேண்டும்," என்று கூறினார். அவர் சொன்ன இந்த வார்த்தைகள் அவருடைய இருதயத்தில் ஆழமாகப் பதிந்தன. எனவே, "நான் பரிசுத்தமாக இருக்க வேண்டுமானால், அதில் எனக்கு உதவக்கூடியவர்களை நான் கண்டுபிடித்து, அவர்களுக்கு நான் கணக்குஒப்புவிக்க வேண்டும்," என்று நினைத்தார். அவருடைய சகோதரன் சார்லஸ்தான் அவருடைய முதல் கூட்டாளியாக மாறினார். ஏற்கெனவே, அவருடைய சகோதரன் வெஸ்லியின் தாக்கம் அவர்மேல் இருந்தது. எனவே, அவர் தான் முன்பு செய்த, இப்போதும் செய்யவிரும்பிய அநேகக் காரியங்களை விட்டுவிட்டார். அவர் தன் மூத்த சகோதரரின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற விரும்பினார். விரைவில் பல கூட்டாளிகள் அவர்களுடன் சேர்ந்து கொண்டனர். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மற்ற மாணவர்கள் இவர்களைப் பார்த்து நகைத்தார்கள். இவர்களைக் கேலிசெய்தார்கள். இவர்கள் அனைவரும் பரிபூரணமாகவும், பரிசுத்தமாகவும் இருக்க முயன்றதால், அந்தப் பல்கலைக்கழக மாணவர்கள் இந்தக் குழுவை "தி ஹோலி கிளப்" என்று அழைத்தனர். அந்தக் குழுவில் இருந்த அனைவரையும் பொருள்நிறைந்த, தெய்வீக வாழ்க்கை வாழ்வதற்கு அவர் உற்சாகப்படுத்தினார். எல்லாரும் ஒன்றாகச் சேர்ந்து இவ்வாறு பிரயாசப்பட்டால், தங்கள் வாழ்வின் முடிவில், பரலோகத்திற்குள் நுழையும் பாக்கியம் கிட்டிவிடும் என்று அவர் நினைத்தார்.

தலைமைதாங்கி வழிநடத்தும் குணம் இயல்பாகவே வெஸ்லியிடம் இருந்தது. அவர் படிப்பில் சிறந்து விளங்கினார். கற்கும் திறனும், கற்பிக்கும் திறனும் அவரிடம் இருந்தன. எனவே, கல்வியைப் பொறுத்தவரையிலும் பலர் அவருடைய வழிநடத்துதலைப் பின்பற்றினார்கள். அவர் எல்லாவற்றையும் மிகவும் நேர்த்தியாகவும், ஒழுங்காகவும் செய்தார். எல்லாவற்றையும் சீரும் சிறப்புமாகச் செய்யவேண்டும் என்ற நோக்கம் கொண்டவர். மிகவும் ஒழக்கமானவர். இவையெல்லாவற்றையும் செய்வதற்கு ஆற்றலும், திறமையும் கொண்டவர். எனவே, அவரைச் சுற்றியிருந்தவர்கள் எல்லாவற்றிக்கும் அவருடைய வழிநடத்துதலை எதிர்பார்த்தார்கள். இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால், அவர் எல்லாவற்றிக்கும் ஒரு முன்மாதிரியாக இருந்தார். அவர் தம் வார்த்தையால் அல்ல, வாழ்க்கையால் வழிநடத்தினார்.

ஏழைகளுக்குத் தாராளமாகக் கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் எழுந்தது. அதற்காகச் சேமிக்க வேண்டும் என்று அவர் நினைத்தார். அவர் பல வகைகளில் பணத்தைச் சேமிக்க விரும்பினார். எடுத்துக்காட்டாக, கடுங்குளிர் காலத்திலும் அவர் தன் அறையில் நெருப்புமூட்ட மாட்டார். அதற்குச் செலவழிக்கும் பணத்தைச் சேமித்தார். அந்தப் பணத்தை ஏழைகளுக்குக் கொடுக்க விரும்பினார். வாரத்திற்கு இரண்டுமுறை உபவாசம் இருந்தார். அதுபோல குதிரைகளில் பயணித்துப் பணத்தை வீணாக்குவதற்குப்பதிலாக, நடந்து செல்வது நல்லது என்று முடிவு செய்தார். பணமும் மிச்சம். அது நல்ல உடல்பயிற்சியுமாகும் என்று அவர் நினைத்தார். இவைகளெல்லாம் மிக முக்கியமான முடிவுகள். ஏனென்றால், எங்காவது போகவேண்டுமானால், நடந்துதான் போக வேண்டும் என்றால், அவர் தன் பெற்றோர்களைப் பார்க்கப் போவதற்கு 240 கிலோமீட்டர் தூரம் நடந்து போக வேண்டும். போய்வர 480 கிலோமீட்டர். அவரும், அவருடைய சகோதரர் சார்லசும் தங்கள் பெற்றோரைப் பார்க்க இப்படி நடந்துதான் போய்வந்தார்கள். இதையறிந்த அவருடைய பெற்றோர் அதிர்ச்சியடைந்தார்கள். "நீங்கள் இப்படி நடந்து வந்து எங்களைப் பார்க்க வரவேண்டாம். நீங்கள் இருவரும் ஒரு வாரம் நடந்து வந்து எங்களைப் பார்க்க வர வேண்டாம். இது எங்களுக்குக் கவலையாகவும், பாரமாகவும் இருக்கிறது. இது எங்களை அழுத்துகிறது. இந்த நடைப்பயணத்தில் உங்களுக்கு என்ன நேரிடுமோ என்று நாங்கள் பயப்படுகிறோம். வழிப்பயணத்தில் கொள்ளையர்கள் உங்களைத் தாக்கலாம். எனவே, இவ்வளவு இன்னல்களுக்கிடையில் நீங்கள் எங்களைப் பார்க்க வருவது அவ்வளவு உகந்ததல்ல. எனவே, வரவேண்டாம்," என்று சொன்னார்கள். ஆனால், அவர்கள் தங்கள் பெற்றோரைப் பார்க்கத் தொடர்ந்து வந்துபோய்க்கொண்டிருந்தார்கள். வழிநெடுகிலும் அவர்கள் வாசித்துக்கொண்டும், பல காரியங்களைக்குறித்து உரையாடிக்கொண்டும் வந்தார்கள். நேரத்தை வீணாக்காமல் அதை நல்ல முறையில் பயன்படுத்தவேண்டும் என்பதைக்குறித்து வெஸ்லி தெளிவாகவும், உறுதியாகவும் இருந்தார். அவர்களுடைய தாய் சூசன்னாகூட அவர்களிடம், "நான் உங்களைக்குறித்து வெட்கப்படுகிறேன். உங்களுடைய இந்த உபவாசம், இந்த நடைபயணம் ஆகியவைகள் பொருளற்றவை என்பதை நீங்கள் சீக்கிரம் புரிந்துகொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன்," என்று சொன்னார். பொதுவாக, பிற மக்களும் அவர்களைப்பற்றி அப்படித்தான் நினைத்தார்கள்.

அந்த நேரத்தில், அங்கு ஓர் வாலிபன் இருந்தான். அவன் அந்தப் பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவன். ஆயினும், அவன் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த மூத்த மாணவர்களுக்கு ஒரு வேலைக்காரனைப்போல் பணிவிடைசெய்தான். அவனுடைய பெயர் ஜார்ஜ் விட்ஃபீல்ட். சார்லஸ் இந்த வாலிபனைக் கொஞ்சம் உன்னிப்பாகக் கவனித்துவந்தார். ஜார்ஜ் விட்ஃபீல்டுக்கும் நற்செய்தியைக் கேட்பதில் ஆர்வம் இருந்தது. ஒருநாள் சார்லஸ் அந்த வாலிபனைத் தங்கள் ஹோலி கிளப்புக்கு வருமாறு அழைத்தார். விட்ஃபீல்ட் ஹோலி கிளப்பில் சேர்ந்தார். அங்கு அவர் ஜாண் வெஸ்லியைப் பார்த்துப் பிரமித்தார். ஏனென்றால், அறிவிலும், புரிதலிலும், கல்வியிலும் மட்டும் அல்ல, ஆவிக்குரிய வகையிலும் வெஸ்லி மிகவும் வளர்ந்திருந்தார். அவர் வேத வாக்கியங்களை நன்றாக அறிந்திருந்தார். ஆனால், விட்ஃபீல்ட் ஒரு காரியத்தைப் புரிந்துகொள்ள மிகவும் சிரமப்பட்டார்.

அந்தக் காலத்தில், பெரும்பாலான கிறிஸ்தவர்கள் நினைத்ததுபோல, குழந்தையாயிருக்கும்போது ஒருவனை ஆலயத்துக்குக் கொண்டுபோய் கிறிஸ்தவப் பெயர்சூட்டும்போது அவன் மறுபடி பிறக்கிறான் என்றும், பரிபூரணமான கிறிஸ்தவனாக வாழ்வதற்கு அவனுக்கு ஒரு வாழ்க்கைக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும், அவனுடைய வாழ்க்கையின் முடிவில் அந்தப் பரிபூரணத்தை அவன் எட்டியிருந்தால், தேவன் அவனை அங்கீகரித்து, தம்மோடு பரலோகத்தில் வாழ அவன் தகுதியுள்ளவன் என்று கருதி, அவனைப் பரலோகத்திற்குள் ஏற்றுக்கொள்வார் என்று ஜாண் வெஸ்லியும் நம்பினார். ஆனால், இந்தக் கருத்தை விட்ஃபீல்ட் ஏற்றுக்கொள்ளவில்லை. இப்படிப்பட்ட எண்ணம் வேதாகமத்தில் எங்கும் இருப்பதாக அவர் நினைக்கவில்லை. அந்த எண்ணம் வேதத்துக்குப் பொருந்தவில்லை. எனினும், தம் வழிகாட்டிகளாகக் கருதிய ஜாண் வெஸ்லியையும், சார்லஸ் வெஸ்லியையும் குறித்த ஒரு பிரமிப்பு ஜார்ஜ் விட்ஃபீல்டிடம் இருந்ததால், இந்தக் காரியத்தைப்பற்றி அவர் அவர்களிடம் பேசத்துணியவில்லை. மாறாக, அவர்களுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றி, முழுமையான பரிசுத்தமான வாழ்க்கை வாழ முடிவுசெய்தார்.

ஜாண் வெஸ்லியின் தந்தை சாமுவேல் வெஸ்லி மரணத் தருவாயில் இருந்தார். அந்த நேரத்தில் அவர் அருகே இருக்க வேண்டும் என்பதற்காக வெஸ்லி சகோதர்கள் இருவரும் வழக்கம்போல் ஊருக்கு நடந்தே சென்றார்கள். வீட்டில் கொஞ்ச நாட்கள் தங்கவேண்டியதாயிற்று. அவர்கள் இருவரும் பல்கலைக்கழகத்திலிருந்து ஊருக்கு தந்தையைப் பார்க்கச் சென்றிருந்த நேரத்தில், ஜார்ஜ் விட்ஃபீல்டின் போராட்டம் முடிவுக்கு வந்தது. அப்போது, அவர் உண்மையாகவே தேவனை அனுபவித்தார். அவர் தனியாக இருந்த அந்த நேரத்தில், அவர் "கிருபை" என்ற வார்த்தையைப் புரிந்துகொண்டார். அவர் கிருபையை அனுபவித்தார். விட்ஃபீல்ட் முற்றிலும் மறுசாயலாகிவிட்டார். அவர் ஒருவிதமான மகிழ்ச்சியை அனுபவித்தார். அந்த மகிழ்ச்சி நிரம்பிவழிந்தது. அப்போது, வேதாகமம் அவரைப்பொறுத்தவரை உயிருள்ளதாக மாறிற்று. மறுபடி பிறப்பதென்றால் என்னவென்று அவர் புரிந்துகொண்டார். வெஸ்லிக்கு அவர் ஒரு நீண்ட கடிதம் எழுதினார். ஏனென்றால், வெஸ்லி சகோதர்கள் இருவருக்கும் இந்த அனுபவம் இல்லை என்று அவருக்குத் தெரியும். அவர்கள் இருவரும் இன்னும் மறுபடி பிறக்கவில்லை என்று அவர் அறிந்திருந்தார். அவர்கள் நியாயப்பிரமாணத்தைப் பிடித்துக்கொண்டு கடுமையாகப் போராடிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் கிருபையைப் புரிந்துகொள்ளவில்லை. விட்ஃபீல்ட் ஜாண் வெஸ்லிக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் தன் அனுபவத்தை விவரித்து எழுதினார். கிருபை என்றால் என்னவென்று வேதாகமத்திலிருந்து விளக்கிச் சொன்னார். ஆனால், விட்ஃபீல்ட் எழுதியவைகளை வெஸ்லி ஒப்புக்கொள்ளவில்லை.

இந்தக் காலகட்டத்தில்தான் அமெரிக்காவில் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டன. ஐரோப்பாவிலிருந்தும் வேறு பல நாடுகளிலிருந்தும் மக்கள் அமெரிக்காவில் அப்போதுதான் குடியேறிக்கொண்டிருந்தார்கள். அமெரிக்காவின் பூர்வீகக் குடிகளான செவ்விந்தியர்களுக்கும், அங்கு புதிதாகக் குடியேறியர்வர்களுக்கும் நற்செய்தி அறிவிக்க வெஸ்லியை ஒரு மிஷனரியாக வருமாறு அழைத்தார்கள். அந்த நேரத்தில் அங்கு ஊழியக்காரர் என்று யாரும் இல்லை. ஏதொவொரு வகையில் ஊழியம் என்று ஒன்றை நிறுவ வேண்டும் என்று அங்கிருந்தவர்கள் நினைத்தார்கள். இது ஒரு நல்ல வாய்ப்பு என்றே வெஸ்லியும் கருதினார். சார்லஸையும் ஏதோவொரு அமைச்சகத்தின் செயலாளர்போன்ற ஒரு பொறுப்பைக்கொடுத்து வரவழைத்தார்கள். ஆனால், வெஸ்லி தன் நோக்கம் என்னவென்பதில் திட்டவட்டமாக இருந்தார். இது கொஞ்சம் கேள்விக்குறியதுதான். ஆயினும், அமெரிக்காவுக்கு ஒரு மிஷனரியாகச் சென்று, அங்கிருக்கும் பூர்வீகக் குடிகளுக்கு நற்செய்தி அறிவிப்பதின்மூலம் தன் ஆத்துமாவை இரட்சிக்க முடியும் என்று அவர் நினைத்தார். இது பக்தியுள்ள, பரிசுத்தமான வாழ்க்கையில் முன்னேற உதவியாக இருக்கும் என்றும் அவர் நினைத்தார். பிறருக்கு நற்செய்தி அறிவிக்கும்போது அதைத் தானும் புரிந்துகொள்ள முடியும் என்றும் அவர் நம்பினார்.

கப்பல் பயணத்தில் அவர் பல புயல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அந்தக் கப்பலில் ஜெர்மானியர்கள் நிறையப்பேர் இருந்தார்கள். அவர்கள் தங்கள் நாட்டில் நடந்துகொண்டிருந்த சித்திரவதையிலிருந்து தப்பித்துப் போய்க்கொண்டிருந்தார்கள். இந்த ஜெர்மானியர்கள் மொராவியன் என்று அழைக்கப்பட்டார்கள். அவர்கள் கிறிஸ்தவர்கள், விசுவாசிகள். ஜெர்மனியில் இவர்கள் கத்தோலிக்கச் சபையால் மிகவும் துன்புறுத்தப்பட்டார்கள், சித்திரவதை செய்யப்பட்டார்கள். இவர்கள் ஒரு புதிய வாழ்க்கையைத் தேடி அமெரிக்காவுக்குச் சென்றுகொண்டிருந்தார்கள். இந்த மக்களோடு சரளமாக உரையாட வேண்டும் என்பதற்காக அவர் தன் கப்பல் பயணத்தின்போது ஜெர்மன் மொழி கற்க ஆரம்பித்தார். இவர் அவர்களோடு அமர்ந்து, அவர்களுடைய உரையாடலை உற்றுக் கவனித்தார். அவர்களுடைய கூட்டங்களில் இவர் கலந்துகொண்டார். இந்த மக்கள் மிகவும் வித்தியாசமான மக்கள் என்பதை அவர் கவனித்தார். அவர்கள் மிகவும் எளிமையான மக்கள். ஆனால், மிகவும் வித்தியாசமான மக்கள். தன்னிடம் இல்லாத ஒரு மகிழ்ச்சி அவர்களிடம் இருப்பதை அவர் காணத் தவறவில்லை.

ஓர் இரவு கடும் புயல் ஏற்பட்டது. அப்போது அவர் இந்த ஜெர்மானியர்களோடும், வேறு பல ஆங்கிலேய கப்பல் பணியாளர்களோடும் இருந்தார். அவர்கள் எல்லோரும் தேவனைத் துதித்துப் பாடிக்கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு பேரலைக் கப்பலின் பக்கவாட்டில் மோதி, கப்பலைத் தூக்கியெறிந்து, பின்னர் கப்பலின் முன்னணியத்தில் மோதியது. கப்பலின் முக்கியமான பாய் கிழிந்தது. அனுபவமிக்க மாலுமிகள்கூட பயத்தில் அலறினார்கள். அன்றிரவு தங்கள் கதை முடியப்போகிறது என்றே எல்லோரும் நினைத்தார்கள். வெஸ்லியும் பயந்து நடுங்கினார். பயத்தில் கத்தினார், கதறினார். ஆனால், இந்த ஜெர்மானியர்களோ எந்தச் சலனமுமின்றி தங்கள் பாடலை முழுவதும் பாடி முடித்தார்கள் என்று அவர்களைப்பற்றி பின்னர் கூறினார். அவர்கள் அலறவுமில்லை, கதறவுமில்லை. பேரலையில் சிக்கிக் கொந்தளிக்கும் கடலுக்குள் சென்றுவிடாதபடி எல்லாரும் எதையோ பிடித்துக்கொண்டிருந்தபோதும், கடும் புயலின் மத்தியிலும், இந்த ஜெர்மானியர்கள் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் மிகவும் சாந்தமாகவும், சமாதானமாகவும் இருந்தார்கள்.

இந்த அனுபவம் வெஸ்லியை உலுக்கியது, ஏனென்றால், அந்த இரவு மரண பயம் அவரை கவ்விக்கொண்டது. மரண பயத்தில் அவர் அலறினார். அவர் அமெரிக்காவில், ஜார்ஜியா மாநிலத்தின் சவன்னா என்ற துறைமுகத்தில் வந்திறங்கினார். அங்கு அவர் ஒரு ஜெர்மன் பாஸ்டரைச் சந்தித்தார். அவர் வெஸ்லியின் தேவையையும், அவரையும் கொஞ்சம் புரிந்துகொண்டார். அந்தப் பாஸ்டர் வெஸ்லியிடம், "இயேசு கிறிஸ்துவை உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார். வெஸ்லி உடனே, " அவர் உலகத்தின் இரட்சகர் என்று எனக்குத் தெரியும்," என்றார். அந்தப் பாஸ்டர், "உண்மை. ஆனால், அவர் உங்களை இரட்சித்திருக்கிறார் என்று உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார். வெஸ்லி, "அவர் என்னை இரட்சித்திருக்கிறார் என்று நான் நம்புகிறேன்," என்றார். அவர் மீண்டும் அழுத்தமாக, "இது உங்களுக்கு நிச்சயமாகத் தெரியுமா?" என்று கேட்டார். வெஸ்லி, " தெரியும் என்று நினைக்கிறேன்," என்றார். ஆனால், அவர் தன் நாளேட்டில், "தெரியும் என்று நான் நினைக்கிறேன் என்றது வீண் வார்த்தைகள்," என்று எழுதினார்..

வெஸ்லி அமெரிக்காவில் தங்கியிருந்த நாட்கள் பயங்கரமான தோல்வி என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால், தன் ஆவிக்குரிய வாழ்வில் தான் முன்னேற வேண்டும் என்பதற்காகவும், தன் கடுமையான பரிசுத்த வாழ்க்கைமுறையைப் பின்பற்றுவதற்காகவும், அமெரிக்காவின் பூர்வீகக் குடிகளான செவ்விந்தியர்களை மனமாற்றுவதற்காகவும், நற்செய்தியை அறிவிக்கும்போது தன் புரிதல் இன்னும் அதிகமாகும் என்பதற்காகவும் அவர் அங்கு சென்றார். ஆனால், அவருடைய எண்ணம் எதுவும் ஈடேறவில்லை. அவர் நினைத்தபடி எதுவும் நடக்கவில்லை. முதலாவது, அங்கிருந்த செவ்விந்தியர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை, அவரைப் புறக்கணித்தார்கள். அவர்களால் அவரோடு உறவுகொள்ளவே முடியவில்லை. அவர்களில் ஒருவர்கூட அவர் சொன்ன செய்தியில் எந்த அக்கறையும் காட்டவில்லை. இங்கிலாந்திலிருந்து வந்திருக்கும் இந்த நூதனமான மனிதன் தங்களுக்கு ஓர் இடைஞ்சலாக இருக்கிறான் என்றுதான் அங்கு குடியேறியவர்களும் நினைத்தார்கள். அவர்கள் அவரை விரும்பவில்லை. அவர் மிகவும் கண்டிப்பானவர், கடுமையானவர் என்று அவர்கள் நினைத்தார்கள். அவர்களில் யாரும் அவரை விரும்பவேயில்லை. இந்தச் சூழ்நிலையில் அங்கு இருப்பது வெஸ்லிக்கும் மிகவும் கடினமாக இருந்தது. பிரசங்கிப்பதும் அவருக்கு மிகவும் கடினமாக இருந்தது. அவரால் மக்களுக்கு ஒன்றும் கற்பிக்க முடியவில்லை. ஒருவர்கூட அவரை விரும்பவில்லை. இதற்கிடையில் காதல் விவகாரமும் பிரச்சினையாக மாறியது.

திருமணம் செய்யவேண்டும் என்று வெஸ்லி நினைக்கவில்லை. அமெரிக்காவின் கிராமப்புறங்களுக்குச் சென்று நற்செய்தி அறிவிக்க வேண்டியிருந்தால், தன்னைப்போன்ற ஒரு மிஷனரி திருமணம் செய்வது சரியாக இருக்காது என்று அவருக்குத் தெரியும். ஆனால், அவர் சோஃபி என்ற ஒரு பெண்ணை விரும்பினார். இது அந்தப் பெண்ணுக்குத் தெரியாது. இதைக்குறித்து அவருடைய நண்பர்கள் அவரை எச்சரித்தார்கள். இந்த விஷயத்தில் அவர் கவனமாக இருக்க வேண்டும் என்று அவர்கள் சொன்னார்கள். எனினும், அவர் இதில் கொஞ்சம் உணர்ச்சிபூர்வமாகத்தான் செயல்பட்டார். ஒருநாள் அவர் அந்தப் பெண்ணிடம் தன் விருப்பதைத் தெரிவித்தார். அந்தப் பெண் உடனே அதை மறுத்துவிட்டாள். மோசடிபோன்ற ஏதோவொரு குற்றத்திற்காகக் கைதாகி சிறையில் இருந்த ஒருவனோடு அவளுக்கு ஏற்கெனவே நிச்சயதார்த்தம் ஆகியிருந்தது. நிச்சயதார்த்தம் ஆனபிறகு, தான் திருமணம் செய்யப்போகிறவன் சிறைக்குச் சென்றதால், அவள் மிகவும் வேதனைப்பட்டாள். இந்த அனுபவம் அவளுக்குள் மிகுந்த கசப்பை ஏற்படுத்தியிருந்தது. எனவே, இனிமேல் திருமணம் செய்யக்கூடாது என்பதில் அவள் உறுதியாக இருந்தாள். ஆனால், இவள்தான் தான் திருமணம் செய்யவேண்டிய பெண் என்பதில் வெஸ்லி உறுதியாக இருந்தார். வெஸ்லி அந்தப் பெண்ணை அவ்வளவு அதிகமாக விரும்பினார். இதைக்குறித்து ஜெபிக்குமாறு அவருடைய நண்பர்கள் அவருக்கு அறிவுரை சொன்னார்கள். ஒரு கட்டத்தில், ஆதி அப்போஸ்தலர்கள் செய்ததுபோல் செய்ய முடிவுசெய்தார்கள். அதாவது, இந்தக் காரியத்தைத் தீர்மானிப்பதற்கு அவர்கள் சீட்டுப்போடுவது என்று தீர்மானித்தார்கள். மூன்று துண்டுத் தாள்களை எடுத்து, ஒரு தாளில், "திருமணம்செய்" என்றும், இரண்டாவது தாளில், "இதைப்பற்றி இனி நினைக்கவே வேண்டாம்" என்றும், மூன்றாவது தாளில், "இதைப்பற்றி இப்போது நினைக்க வேண்டாம்" என்றும் எழுதினார்கள். மூன்று தாள்களையும் ஒரு பையில் போட்டு, "தேவனே, வெஸ்லிக்குச் சரியான முடிவைக் காட்டும்," என்று சொல்லி எல்லோரும் ஊக்கமாகச் ஜெபித்தார்கள். ஜெபித்து முடித்தவுடன் வெஸ்லி அந்தப் பையிலிருந்து ஒரு தாளை எடுத்தார். திறந்து பார்த்தார். அந்தத் தாளில், ""இதைப்பற்றி இனி நினைக்கவே வேண்டாம்" என்று எழுதியிருந்தது.

ஆனால், வெஸ்லி அதைப்பற்றி யோசித்தார், அவர் அதைப்பற்றி நிறைய யோசித்தார். காலம் செல்லச்செல்ல, அவர் தொடர்ந்து சோஃபியைப்பற்றி யோசித்தார். ஆனால், சோஃபி இன்னும், "இல்லை, என்னால் உண்மையில் திருமணம் செய்ய முடியாது," என்று கூறினார். இந்தத் திருமணம் ஏன் சாத்தியமாகாது என்று நினைத்துப்பார்த்தார். ஆனால் சோஃபி, "இல்லை, என்னால் உண்மையில் திருமணம் செய்துகொள்ள முடியாது" என்று கூறினாள். இருப்பினும், அவள் யாரோவொருவரைக் காதலிப்பதாகவும், அவரோடு பழகுவதாகவும், அவருடைய பெயர் வில்லியம்சன் என்றும் வதந்திகள் வந்துகொண்டிருந்தன. வெஸ்லி அவளுடைய ஊருக்குத் திரும்பிவந்தபின், அவளைச் சந்தித்து, "நீ திருமணம் செய்யப்போவதில்லை என்று சொல்லுகிறாய். ஆனால், நீ ஒருவருடன் நெருக்கமாகப் பழகுவதாக நான் கேள்விப்படுகிறேன். இது உண்மையா?" என்று கேட்டார். "அது பொய்," என்று அவள் சொன்னாள். ஆனால், அடுத்த ஒரு வாரத்திற்குள் அதே வில்லியம்சனுடன் அவளுக்கு நிச்சயதார்த்தம் நடந்ததைக் கேள்விப்பட்டு அவர் வருத்தப்பட்டார். எனினும், பொருத்தமற்ற ஒரு திருமணத்திலிருந்து தேவன் தன்னைக் காப்பாற்றியதற்காகச் சந்தோஷப்பட்டார். அவள் திரும்பத்திரும்பத் தன்னிடம் பொய் சொல்லுகிறாள் என்பதையும், அவள் தன்னை ஏமாற்றுகிறாள் என்பதையும் அவரால் அப்போது புரிந்துகொள்ளமுடியவில்லை. அவர் தன்மேல் மிகவும் பரிதாபப்பட்டார். தனிமையில் இருப்பதாக உணர்ந்தார். கொஞ்ச நாட்கள் கழித்து சோஃபிக்கும் வில்லியம்சனுக்கும் திருமணம் நடந்தது. பல்வேறு காரியங்கள் நடைபெற்றன. ஒருமுறை, சோஃபி திருவிருந்தில் பங்குபெறுவதற்கு வெஸ்லி அனுமதிக்கவில்லை. ஏனென்றால், அவள் நேர்மையற்றவள், திருவிருந்தில் பங்குபெறத் தகுதியற்றவள் என்று அவர் நினைத்தார். இதையறிந்த வில்லியம்சன் ஆத்திரமடைந்தார். "சோஃபியிடம் இவ்வாறு சொல்ல இவருக்கு என்ன உரிமையுண்டு? இவர் யார் இதைச் சொல்ல? திருவிருந்தில் பங்குபெறுவதா வேண்டாமா என்பதை அவள்தான் முடிவுசெய்ய வேண்டும். இவர் யார் அதை முடிவுசெய்ய?" என்று வில்லியம்சன் வெகுண்டார். 1000 பவுண்ட்ஸ் அபராதம் செலுத்த வேண்டும் என்பதோடு, அவரைக் கைது செய்யவும் வில்லியம்சன் கைது வாரண்ட் பிறப்பித்தார். வெஸ்லியால் இவ்வளவு பெரிய தொகையை அபராதமாகச் செலுத்த முடியாது. இந்தக் காரியத்தில் குடியேறிய மக்களுக்கிடையே பிரிவினை ஏற்பட்டது. அவர்களில் பலர் வில்லியம்சனை ஆதரித்தனர், ஏனெனில் அவர்களுக்கு வெஸ்லியைப் பிடிக்கவில்லை. வேறு சிலர், "வெஸ்லிதான் இங்கு ஊழியக்காரர்," என்று சொல்லி அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். வெஸ்லி தன் முடிவில் உறுதியாக இருந்தார். அவர் இணங்கவுமில்லை, அபராதத்தொகையைக் கட்டவும் இல்லை. அபராதம் கட்ட மறுத்துவிட்டார்.

ஆனால், தான் அமெரிக்காவில் செலவழித்த காலம் வீணாய்ப்போயிற்று, பாழாய்ப்போயிற்று என்று அவர் தன் உள்ளத்தின் ஆழத்தில் அறிந்திருந்தார். எதிர்காலத்தில் தான் செய்ய நினைத்திருந்த வேலைகளும்கூட இப்போது சிக்கலாகிவிட்டன. அமெரிக்காவைவிட்டு வெளியேறுவதைத்தவிர வேறு வழி இல்லை என்று அவருக்குத் தெரிந்தது. அவர் வெளியேறினார். ஆம், இரவில் தப்பித்துச் சென்றார். அவரோடு வேறு இரண்டு பேர்களும் தப்பித்துச் சென்றார்கள். ஆற்றைக் கடந்தார்கள், சதுப்பு நிலங்களின் வழியாகவும், காடுகளின் வழியாகவும் நடந்து ஒரு நகரத்தை அடைந்தார்கள். அங்கிருந்த துறைமுகத்துக்குச் சென்று, அங்கிருந்து இங்கிலாந்துக்குச் செல்லும் கப்பலில் ஏறினார்கள். கப்பல் பயணத்தின்போது, அவர் எல்லாக் காரியங்களைக்குறித்தும் சிந்தித்தார். நிறைய நேரம் இருந்தது. தன் இருதயம் எப்படிப்பட்டது என்பதை அவர் ஓரளவுக்குப் பார்க்கத் தொடங்கினார். தன் விசுவாசம் எப்படிப்பட்டது என்பதையும் அவர் பார்த்தார். சொல்லும் அளவுக்குத் தன்னிடம் விசுவாசம் பெரிதாக இல்லை என்பதை அவர் பார்த்தார். மரணத்தைக் கண்டு பயந்தார். குடியேறியவர்கள் அவரை வெறுத்தார்கள். பூர்வீகக் குடிகள் அவரை உதாசீனம்செய்தார்கள். காதல் விவகாரத்தில் சிக்கி அவதிப்பட்டார். கைதுசெய்யப்பட்டு, அபராதம் செலுத்தவேண்டியிருந்தது. இடத்தைவிட்டு இரவில் தப்பியோட வேண்டியதாயிற்று. நாசம், பேரழிவு! பின்னாட்களில் அவர் தன் நாட்குறிப்பில், "என்னிடம் ஓர் அழகான கோடைகால மதம்தான் இருக்கிறது. அருகில் ஆபத்து ஒன்றும் இல்லையென்றால், நான் நன்றாகப் பேசுவேன், நான் என்னை நம்புவேன். ஆனால், மரணம் என்னருகே வரும்போது, என் ஆவி கலங்கும்போது, 'சாவு எனக்கு ஆதாயம்' என்று என்னால் சொல்ல முடியாது," என்று எழுதினார். ஆனால், அவருடைய கதை இத்தோடு முடியவில்லை.

ஒரு மே 24, அவருக்கு அப்போது வயது 35. ஒருநாள் அவர் தன் கிரேக்க மொழிப் புதிய ஏற்பாட்டைத் திறந்தார். "நீ தேவனுடைய இராஜ்ஜியத்துக்குத் தூரமானவன் அல்ல," என்ற வசனம் அவர் கண்களில் பட்டது. அன்று மாலை, சில ஜெர்மானியர்கள் அவரை ஒரு கூட்டத்துக்கு அழைத்திருந்தார்கள். உண்மையில் அவர் அந்தக் கூட்டத்துக்குப் போக விரும்பவில்லை. அவர் வீட்டில் இருக்கவே விரும்பினார். ஆயினும், மரியாதையினிமித்தம் கூட்டத்துக்குப் போனார். அந்தக் கூட்டத்தில் ரோமருக்கு எழுதிய நிருபத்துக்கு மார்ட்டின் லூத்தர் எழுதிய பொழிப்புரையிலிருந்து ஒருவர் ஒரு பகுதியை வாசிக்கவிருந்தார். நேரம் மாலை 8.45. தேவன் மனிதனுடைய இருதயத்தில் விசுவாசத்தால் ஏற்படுத்தும் மாற்றத்தைப்பற்றி மார்ட்டின் லூத்தர் சொன்ன வரிகளை ஒருவர் வாசித்தபோது வெஸ்லி நிமிர்ந்து உட்கார்ந்தார். இந்த அனுபவத்தைப்பற்றி, வெஸ்லி பின்னாட்களில் தன் குறிப்பேட்டில், "அந்த நேரத்தில் என் இருதயம் சற்று நூதனமாக அனலடைந்தது. திடீரென்று, என் இரட்சிப்புக்காக நான் கிறிஸ்துவை மட்டுமே விசுவாசிக்கிறேன் என்பதை உணர்ந்தேன். இயேசு கிறிஸ்து ஏற்கனவே என் பாவங்களைச் சுமந்து தீர்த்துவிட்டார் என்ற நிச்சயம் எனக்குள் வந்தது," என்று எழுதினார். ரோமருக்கு எழுதிய நிருபத்துக்கு மார்ட்டின் லூத்தரின் முன்னுரையைக் கேட்டபின் தான் இத்தனை வருடங்களாக நியாயப்பிரமாணத்தின்கீழ் வாழ்ந்துகொண்டிருந்ததை அவர் அறிந்தார். பரிபூரணமான, பரிசுத்தமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று விரும்பினார், எதிர்பார்த்தார், நம்பினார். ஆனால், தான் படுபயங்கரமாகத் தோற்றுப்போனதை அவர் உணர்ந்தார். இப்போது தான் ஒரு வெற்றியாளர் என்பதை உணர்ந்தார். தான் செய்த அல்லது சாதித்த ஏதோவொன்றினால் அல்ல, விசுவாசத்தால் தான் நீதிமானாக்கப்பட்டதை வெஸ்லி அப்போது அறிந்தார். அன்றிரவு தேவனோடு அவருக்குச் சமாதானம் உண்டானது.

ஆனால், பிசாசு மிக வேகமாகச் செயல்பட்டான். ஏனென்றால், அடுத்த நாள் தன்னிடம் பரவசமான உணர்ச்சிகள் எதுவும் இல்லாததால், தான் இரட்சிக்கப்பட்டது உண்மைதானா என்ற சந்தேகம் அவருக்குள் எழுந்தது. ஜார்ஜ் விட்பீல்ட் இரட்சிக்கப்பட்டபோது தன் அறையிலிருந்து வெளியே ஓடினார். படிகளில் இறங்கிச் செல்லும்போது தான் சந்தித்த முதல் நபரைக் கட்டிப்பிடித்து, நடனமாடினார். ஜாண் வெஸ்லி அப்படி இல்லை. அவரைப்பொறுத்தவரை, அவர் உணர்ச்சிகரமாக எதையும் செய்யவில்லை. தான் இரட்சிக்கப்பட்டிருக்கிறேன் என்ற உறுதியான நிச்சயம் அவருக்குள் இருந்தது. ஆயினும், பிசாசு அவரிடம், "இல்லை, நீ இரட்சிக்கப்படவில்லை," என்று சாதித்தான். ஜார்ஜ் விட்பீல்ட் தன் நீண்ட கடிதத்தில் விவரித்திருந்ததைப்போன்ற மகிழ்ச்சியோ அல்லது கப்பலில் தான் சந்தித்த ஜெர்மானியர்களிடம் கண்ட அந்த மகிழ்ச்சியோ அவரிடம் இருக்கவில்லை. ஆனால், இந்தச் சந்தேகம் பிசாசு கொண்டுவருகிற சோதனை என்பதை வெஸ்லி புரிந்துகொண்டார். எனவே, தான் இரட்சிக்கப்பட்டதையும், தேவன் தன்னில் வேலைசெய்துகொண்டிருப்பதையும், தன் உணர்ச்சிக்கும் தேவன் செய்துமுடித்த வேலைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதையும் அவர் புரிந்துகொண்டார்.

இதற்குப்பின் வெஸ்லியின் ஊழியம் முற்றிலும் மாறிற்று. இப்போதுதான், பிரசங்கிப்பதற்கு அவருடைய வாழ்க்கையில் முதன்முறையாக ஒரு செய்தி இருந்தது. இப்போது அவர் நற்செய்தியை மிகத் தெளிவாகப் புரிந்துகொண்டார். இதுவரை மூடியிருந்த வேதவாக்கியங்கள் இப்போது திறக்க ஆரம்பித்தன. இதற்கிடையில், விட்பீல்ட் இங்கிலாந்து முழுவதும் பயணம் செய்து நற்செய்தியைப் பிரசங்கித்துக்கொண்டிருந்தார். அமெரிக்காவில் வெஸ்லி காலியாக விட்டுவந்த இடத்தை நிரப்ப அவர் அமெரிக்காவுக்குச் சென்றார். அமெரிக்காவில் ஆயிரக்கணக்கானோருக்கு அவர் நற்செய்தியைப் பிரசங்கித்தார், அங்கு குடியேறியிருந்தவர்கள் தேவனுடைய வார்த்தையின்மேல் அவ்வளவு பசியோடும், தாகத்தோடும் இருந்தார்கள். அமெரிக்காவில் அவருடைய அனுபவம் வெஸ்லியின் அனுபவத்துக்கு முற்றிலும் மாறாக இருந்தது. ஏனென்றால், வெஸ்லி நியாயப்பிரமாணத்தைப் பிரசங்கித்தார். ஆனால், விட்பீல்டோ நற்செய்தியைப் பிரசங்கித்தார். விட்ஃபீல்ட்டின் பிரசங்கத்தைக் கேட்டவர்கள் விட்ஃபீல்ட்டை நேசித்தார்கள். விட்ஃபீல்ட்டும் அவர்களை அவ்வளவாய் நேசித்தார். அதற்குமுன் அந்த மக்கள் வெஸ்லியை நேசிக்கவில்லை. வெஸ்லியும் விட்ஃபீல்ட்டைப்போல் அவர்களை நேசிக்கவில்லை. அது மட்டும் இல்லை. விட்ஃபீல்ட் அமெரிக்காவுக்குச் செல்வதற்குமுன் இங்கிலாந்தில் பிரசங்கித்தார். குறிப்பாக பிரிஸ்டோலில் பிரசங்கித்தார். அங்கு ஆயிரக்கணக்கானோருக்குப் பிரசங்கித்தார். இவைகளைப்பற்றி விட்ஃபீல்ட் ஏற்கெனவே வெஸ்லிக்கு விவரமாகக் கடிதம் எழுதியிருந்தார். "தேவன் இங்கு வேலைசெய்துகொண்டிருக்கிறார். என்னுடைய இந்த ஊழியத்தில் எனக்கு உதவுங்கள், என்னோடு சேர்ந்துகொள்ளுங்கள்," என்று அவர் எழுதியிருந்தார். விட்ஃபீல்ட் எழுதியிருந்த ஒரு சங்கதி வெஸ்லிக்கு ஆரம்பத்தில் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. விட்ஃபீல்ட் பிரிஸ்டோலுக்கு வெளியே கிங்ஸ்வுட் என்ற இடத்தில் வாழ்ந்த நிலக்கரிச்சுரங்கத் தொழிலாளர்களைப்பற்றி வெஸ்லிக்கு எழுதியிருந்தார். இந்த மக்கள் சமுதாயத்தில் வாழ்ந்த மற்ற மக்களிடமிருந்து விலகி ஒதுக்குப்புறமாக வாழ்ந்தார்கள். மிகவும் ஏழைகள், நிலக்கரிக்கார்கள். சாதாரண ஏழைகள் அல்ல. ஏழைகளிலும் ஏழைகள். வாழ்க்கையில் எந்த நம்பிக்கையும் இல்லாதவர்கள். அவர்கள் எல்லாரையும் விட்டு விலகி ஒதுங்கி குடிசைகளில் வாழ்ந்தார்கள். வன்முறைக்குப் பெயர்பெற்றவர்கள். குடிகாரர்கள். மிகக் கேவலமான வாழ்க்கை வாழ்ந்தார்கள். நிலக்கரிச்சுரங்கத் தொழிலாளர்கள் மட்டும் அல்ல, அவர்களுடைய பிள்ளைகளும்கூட நிலக்கரிச்சுரங்கங்களில் நீண்ட நேரம் வேலை செய்தார்கள். சுரங்கங்களில் வேலைசெய்துகொண்டிருக்கும்போது அநேகர் விபத்துக்குள்ளாகி இறந்தார்கள். இறந்த உடலைக்கூடச் சுரங்கத்துக்குள்ளிருந்து வெளியே கொண்டுவரவில்லை. அதற்கான செலவைவிட, இன்னொரு ஆளை வேலைக்கு அமர்த்துவது மலிவு. இதுதான் அவர்களுடைய மதிப்பு, மரியாதை. அவர்களுடைய பிள்ளைகளும் சிறிய சுரங்கத்துக்குள் வேலை செய்தார்கள். அவர்கள் சுரங்கத்துக்குள் செல்ல பயந்தால், சுரங்கத்தின் பணக்கார உரிமையாளர்கள் அவர்களுக்கு ஜின் என்ற மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். இந்த மக்களுடைய ஆயுள் மிகக் குறைவு. பலர் சுரங்கத்தில் நிலக்கரியின் நச்சுக் கலந்த தூசியைச் சுவாசித்து இறந்தார்கள், வேறு பலர் அங்கு ஏற்பட்ட விபத்துக்களால் இறந்தார்கள், வேறு பலர் குடிபோதையினால் இறந்தார்கள். இன்னும் பலர் அவர்களுக்கிடையில் ஏற்பட்ட வன்முறையில் இறந்தார்கள். இந்த மக்களைப் பிறர் எந்த அளவுக்கு வெறுத்தார்கள் என்றால், அன்றைய மதக்குருக்கள்கூட இவர்களைத் தங்கள் ஆலயத்துக்குள் வர அனுமதிக்கவில்லை. அவர்கள் வந்தால் ஆலயம் தீட்டுப்பட்டுவிடும் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆலயம் நல்ல அழகான கட்டிடம். நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களோ அழுக்கானவர்கள். அவர்கள் மறக்கப்படவேண்டிய ஒரு சமுதாயம் என்று பிறர் நினைத்தார்கள்.

ஆனால், விட்ஃபீல்ட் இந்த மக்களைப் போய்ப் பார்த்தார். அவர்களுடைய இடத்துக்குப் போய் அவர்களுக்கு நற்செய்தி அறிவித்தார். ஆயிரக்கணக்கான மக்கள் அவருடைய பிரசங்கத்தைக் கேட்டார்கள். தேவன்மேலும், தேவனுடைய வார்த்தையின்மேலும் அவர்கள் கொண்டிருந்த தாகத்தையும், பசியையும், இயேசு கிறிஸ்து மட்டுமே தருகிற நம்பிக்கைக்காக ஆவலுடன் காத்திருப்பதையும் அவர் கண்டார். விட்ஃபீல்ட் இவையெல்லாவற்றையும்குறித்து வெஸ்லிக்கு எழுதியிருந்தார். வெஸ்லி இதைக்குறித்து மிகவும் மகிழ்ச்சியடைந்தார். தேவன் வேலைசெய்கிறார் என்பதை வெஸ்லி உணர்ந்தார். ஆனால், ஒரு காரியம் வெஸ்லிக்கு உறுத்துதலாக இருந்தது. விட்ஃபீல்ட் ஆலயத்துக்கு உள்ளே பிரசங்கிக்காமல் ஆலயத்துக்கு வெளியே பிரசங்கித்தது அவருக்கு உறுத்துதலாக இருந்தது. அந்த நாட்களில் பிரசங்கிமார்கள் ஆலயத்துக்கு வெளியே பிரசங்கிக்கவில்லை. எனவே, விட்ஃபீல்ட் இவ்வாறு வெளியே பிரசங்கிப்பது சரியல்ல என்று மட்டும் அல்ல, அது அவமரியாதை என்றும் வெஸ்லி நினைத்தார். ஆலயத்துக்கு வெளியே ஒருவன் இரட்சிக்கப்பட முடியுமா? இது சாத்தியமா? அதுதான் அன்றைய எண்ணப்போக்கு. வெஸ்லியிடம் பல காரியங்களைப்பற்றி பாரம்பரியமான, பாரபட்சமான கண்ணோட்டமே இருந்தது. ஆனால், தேவன் அங்கு வேலைசெய்கிறார் என்பதை அவரால் மறுக்கமுடியவில்லை. இதைக்குறித்து அவர் சிந்தித்தார். ஒருநாள் அவர் ஆண்டவராகிய இயேசுவின் மலைப்பிரசங்கத்தை வாசிக்க நேர்ந்தது. இயேசு வயல்களிலும், கடற்கரையில் நின்று பிரசங்கித்தார் என்பதை அவர் வாசித்தார். உடனே, பாரம்பரியமான கருத்துக்கள் முட்டாள்தனமாவை என்பதை உணர்ந்தார், "அகில உலகமும் தேவனுடைய சபையே" என்று அவர் புரிந்துகொண்டார். அனைவரும் நற்செய்தியைக் கேட்கவேண்டும். ஆக்ஸ்போர்டுபோன்ற பெரிய பல்கலைக்கழகங்களில் உள்ள பிரபுக்களுக்கும், கல்வியாளர்களுக்கும் மட்டுமல்ல, நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களுக்கும், தகரச்சுரங்கத் தொழிலாளர்களுக்கும், தொழிற்சாலைத் தொழிலாளர்களுக்கும், புகைபோக்கியைத் துடைப்பவர்களுக்கும் பிரசங்கிக்கவும் கற்பிக்கவும் தேவன் தன்னை அழைத்திருக்கிறார் என்பதை வெஸ்லி அப்போது அறிந்துகொண்டார்.

விட்ஃபீல்ட் நம்பமுடியாத அளவுக்கு வீரியமாக நற்செய்தி அறிவித்துக்கொண்டிருந்தார். உணர்ச்சியோடு பேசினார், அருமையாகக் கதை சொன்னார். 10000 பேர் கேட்கக்கூடிய அளவுக்குக் குரலை உயர்த்திப் பேசினார். வெஸ்லியிடம் இப்படிப்பட்ட திறமைகளோ, தாலந்துக்களோ இல்லை. அவரிடம் வேறு வகையான வரங்கள் இருந்தன. விட்ஃபீல்டும், வெஸ்லியும் சேர்ந்து ஊழியம்செய்தார்கள். விட்ஃபீல்ட் பிரசங்கித்தார். ஆயிரக்கணக்கானவர்கள் இரட்சிக்கப்பட்டார்கள். வெஸ்லி அவர்களுக்குக் கற்பித்தார். இரட்சிக்கப்படுவது வேறு, அதன்பின் வளர்ச்சி என்பது வேறு என்பதை வெஸ்லி பார்த்தார். எனவே, இரட்சிக்கப்பட்டவர்களின் வாழ்க்கை அவர்கள் கேட்ட நற்செய்திக்கு முரணாக இருப்பதை வெஸ்லி பார்த்தார். அவர்கள் வாழ்க்கையில் மாற வேண்டிய, மாற்ற வேண்டிய காரியங்கள் நிறைய இருப்பதை அவர் உணர்ந்தார். இதை வெஸ்லி தெளிவாகப் பார்த்தார். இந்தப் புதிய விசுவாசிகள் கிறிஸ்துவில் வளர்வதற்கு வெஸ்லி பேருதவி செய்தார். எடுத்துக்காட்டாக, கிங்ஸ்வுட்டில் விட்ஃபீல்ட்டின் பிரசங்கத்தைக் கேட்ட சுரங்கத் தொழிலாளர்கள் நிறையப்பேர் இரட்சிக்கப்பட்டார்கள். அதன்பின் வெஸ்லிதான் அவர்களை வளர்த்தார். அங்கு, "சிறு சமுதாயங்கள்" என்றழைக்கப்படும் சிறு குழுக்களை ஆரம்பித்தார். பிற்காலத்தில் இவர்கள் பிறரை வழிநடத்துவார்கள் என்று சிலரை இனங்கண்டு அவர்களுக்குக் கற்பித்தார். அவர்கள் முதிர்ச்சியடைந்த தலைவர்களானார்கள். இவர்கள் சிறு குழுக்களை வழிநடத்தினார்கள். அந்தக் குழுக்களில் இருந்தவர்கள் தங்கள் வாழ்க்கையை இந்தத் தலைவர்களின் வழிகாட்டுதலின்படி வாழத்தொடங்கினார்கள். ஜின் என்ற குடியை நிறுத்துவதற்கு வெஸ்லி உதவினார். ஜின்னுக்குப்பதிலாக தேநீர் குடிக்கக் கற்றுக்கொடுத்தார். அவர்களுக்கு ஜெபிக்கக் கற்றுக்கொடுத்தார். அவர்கள் படிப்பறிவு இல்லாதவர்கள். வேதாகமத்தை வாசிக்கக் கற்றுக்கொடுக்க விரும்பினார். எனவே, வாசிக்கத் தெரிந்த சிலரைக் கண்டுபிடித்து அவர்களுக்கு வேதாகமத்தை வாசிக்கக் கற்றுக்கொடுத்தார். இவர்கள் வேதாகமத்தைப் பிறருக்கு வாசித்துச் சொன்னார்கள். அவர்களுடைய இருதயங்களில் விதைக்கப்பட்ட விதைகள் நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதையைப்போல் ஆழமாக வேரூன்றி நல்ல பலன் கொடுக்க வேண்டும் என்று வெஸ்லி பிரயாசப்பட்டார். சிறுவயதிலிருந்து தன் தாயிடம் கற்றுக்கொண்ட ஒழுங்கு அவருக்கு மிகவும் உதவியாக இருந்தது. அதே ஒழுங்கை அவர் பிறருக்குக் கற்றுக்கொடுத்தார். மக்கள் ஒன்றாகச் சேர்ந்து வாழ்வதற்கும், ஓர் அமைப்பாக மாறுவதற்கும், அவர் கற்றுக்கொண்ட ஒழுங்கு உதவியது. இதனால்தான் மெத்தடிஸ்ட் என்ற பெயர் வந்தது. இந்தச் சிறிய ஆலயங்கள், அறைகள், சமூகங்கள் ஆகியவைகளை மக்கள் தங்கள் இடங்களிலும் ஏற்படுத்தினார்கள். எல்லாம் ஒழுங்காயிற்று. வெஸ்லிதாமே இந்த வார்த்தையை ஒருபோதும் பயன்படுத்தவில்லை. ஆனால், மற்றவர்கள் கிண்டல்செய்யும்விதமாக இந்த வார்தையைப் பயன்படுத்தினார்கள். அவர்கள் அவரைப் பார்த்து நகைத்து, "இவருடைய முறைகளைப் பாருங்கள். விசித்திரமான முறைகள் இவரிடம் உள்ளன. எல்லாவற்றையும் ஒழுங்காகச் செய்கிறார். எல்லாவாற்றையும் அமைப்பாக்கிவிட்டார்," என்று சொன்னார்கள். எனவே, பிறர் அவரை ஒரு மெத்தடிஸ்ட் என்றழைத்தார்கள். ஆனால், வெஸ்லி அந்த நேரத்தில் இங்கிலாந்து சர்ச்சிற்கு எதிராக எதையும் செய்ய விரும்பவில்லை. அவர் ஒரு புதிய ஸ்தாபனத்தை உருவாக்க விரும்பவில்லை. பிறர் தேவனுக்குள் வளர அவர்களுக்கு உதவ வேண்டும் என்பதும், அவர்களைக் கிறிஸ்துவின் சீடர்களாக்க வேண்டும் என்பதுமே அவருடைய விருப்பம். அதுதான் தன் அழைப்பு என்று அவர் அறிந்திருந்தார்.

வெஸ்லியின் சகோதரர் சார்லசும் இரட்சிக்கப்பட்டார். அவரும் வெஸ்லியைப்போல் பிரசங்கித்தார். ஆனால், பிரசங்கிப்பது அல்ல, மாறாக பாடல் எழுதுவதே தேவன் தனக்குத் தந்திருக்கும் முக்கியமான வரம் என்பதை சார்லஸ் புரிந்துகொண்டார். சார்லஸ் தன் வாழ்நாளில் 6,000 பாடல்களை எழுதினார், அவருடைய பல பாடல்கள் இன்றும் நமக்குத் தெரியும், "கேள், ஜென்மித்த ராயர்க்கே, "ஒப்பில்லாத திவ்விய அன்பே", "மரித்தவர் உயிர்த்தார்"போன்ற பாடல்களெல்லாம் சார்லஸ் எழுதியவைகளே. உண்மையில், சார்லஸ் இந்தப் பாடல்களை எழுதியிருந்தாலும், அவருடைய எல்லாப் பாடல்களையும் ஜாண் திருத்தி மெருகூட்டினார். பாடல் வரிகளைக்குறித்து ஜாண் மிகவும் கவனமாக இருந்தார், எடுத்துக்காட்டாக, சார்லஸ் "பாவமற்றவர்" என்று எழுதியபோதெல்லாம், அதைக் "களங்கமற்றவர்" என்று அவர் திருத்தினார்; "அவரோடு" என்பதை "அவரில்" என்று மாற்றினார். இவ்வாறு, அவர் பாடலின் கருத்துக்கும், வார்த்தைகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் கொடுத்தார். ஏழை மக்களுக்குக் கற்பிப்பதற்காகவே அவர்கள் இந்தப் பாடல்களை எழுதினார்கள். எனவே, இந்தப் பாடல்களுக்கு மிகவும் எளிமையான, இனிமையான மெல்லிசை வேண்டும் என்று அவர் விரும்பினார்; அவர் தன் விருப்பத்தை சார்லசிடம் சொன்னார். “இசை மக்களைப் பாடல் வரிகளிலிருந்து திசைதிருப்பக்கூடாது,” என்று அவர் சார்லசிடம் கண்டிப்பாகச் சொல்லியிருந்தார். ஏழை மக்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. அவர்களிடம் வேதாகமம் இல்லை. எனவே, பாடல்களின்மூலமாக வேதாகமத்தின் முக்கியமான சத்தியங்களை அவர்களுக்குப் போதிக்க விரும்பினார்கள். நிலக்கரிச் சுரங்கங்களுக்குச் செல்லும்போது, இரவில் சாலைகளில் நடக்கும்போது, தொழிற்சாலைகளில் வேலைசெய்யும்போது இந்த ஏழை மக்கள் இந்தப் பாடல்களை அவர்களுடன் கொண்டுசெல்ல வேண்டும் என்று அவர் விரும்பினார். இந்த மக்கள் இந்தப் பாடல்களைத் தங்களுடன் வைத்திருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். அவர்களுடைய இந்தப் பாடல்களை உண்மையில் இங்கிலாந்தில் முதன்முதலாக இந்த நிலக்கரிச் சுரங்கப் பணியாளர்கள்தான் பாடினார்கள். இவைகள் முதலாவது ஆலயத்துக்குள்ளே, கட்டிடத்துக்குள்ளே பாடப்படவில்லை. அவை பெரும்பாலும் வயல்களில், தொழிற்சாலைகளில், நிலக்கரிச் சுரங்கங்களில் பாடப்பட்டன.

அவர்களுடைய அம்மா சூசன்னா வெஸ்லி தன் மகன்கள் இருவருடைய இரட்சிப்பைப்பற்றிக் கேள்விப்பட்டார். அவருக்கு இது மிகவும் விசித்திரமாகத் தோன்றியது. அவர் அவர்கள் சொன்னதற்குச் செவிசாய்த்தார். ஒரு ஞாயிற்றுக்கிழமை, அவர் தேவாலயத்தில் திருவிருந்தில் பங்குபெறுவதற்கு ஆயத்தமாக இருந்தார். அப்போது, இதற்குமுன் பல நூறுமுறை கேட்ட, "இது உங்களுக்காகச் சிந்தப்பட்ட கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம்," என்ற அந்த வார்த்தைகளை இப்போது அவர் மீண்டும் சொல்லக் கேட்டார். இப்போது திடீரென்று, இந்த வார்த்தைகள் அவரைப்பொறுத்தவரை உயிர்பெற்றன. அவர், "இயேசு கிறிஸ்துவின் இரத்தம் எனக்காகச் சிந்தப்பட்டது. அதன் அர்த்தம் இதுதான்!" என்று சொன்னார். கர்த்தர் எல்லோருக்காகவும் மரித்தார், அவருடைய இரத்தம் எனக்ககச் சிந்தப்பட்டது என்பதை அவர் உணர்ந்தார். இது ஏற்கனவே நடந்து முடிந்துவிட்டது. தன் மகன்கள் சொன்ன எல்லா விஷயங்களும் தான் இப்போது கேட்ட இந்த வார்த்தைகளுக்கு ஒத்திருக்கின்றன என்பதை அவர் அறிந்தார். பின்னர் அவர் தன் மகன்களுக்கு, "நான் அந்த வார்த்தைகளைக் கேட்ட அந்த நேரத்தில் கிறிஸ்து என் பாவங்களை மன்னித்துவிட்டார் என்று எனக்குத் தெரியும்," கடிதம் எழுதினார். இவ்வாறு, சூசன்னா வெஸ்லியும் அவருடைய பிற்காலத்தில் தேவனுக்கு ஊழியம் செய்தார்.

வெஸ்லி இங்கிலாந்தின் குறுக்கும் நெடுக்கும் குதிரையிலேயே பயணம் செய்தார், சில நேரங்களில் அவர் நடந்தும் சென்றார். தான் செய்யவேண்டிய வேலை நிறைய இருக்கிறதென்று அவர் புரிந்துகொண்டார். தேவன் தனக்குத் தந்த பொறுப்பை நிறைவேற்றுவதற்காக அவர் கடுமையாக உழைத்தார். அதைச் செய்வதற்கான ஆற்றலைத் தேவன் தனக்குத் தந்திருக்கிறார் என்றும் அவர் உணர்ந்தார். அதற்காக அவர் மிகக் கண்டிப்பான அட்டவணையைப் பின்பற்றினார். அவர் தினமும் அதிகாலை 4:00 மணிக்கு எழுந்திருப்பார். ஏனென்றால், பெரும்பாலும் அதிகாலை 5.00 மணிக்கு அவர் பிரசங்கிக்கவேண்டியிருந்தது. தொழிலாளர்கள் வேலைக்குச் செல்வதற்குமுன் அவர் அவர்களுக்குப் பிரசங்கித்தார். அவர் தன் வாழ்நாள் முழுவதும் இந்த மிகக் கண்டிப்பான அட்டவணையைப் பின்பற்றினார். ஆனால் அவர் போன எல்லா இடங்களிலும் மக்கள் அவரை வரவேற்றார்கள் என்று சொல்ல முடியாது.

ஒரு மாலை அவர் ஒரு கூட்டம் மக்களுக்குப் பிரசங்கித்துக்கொண்டிருந்தார். அவர்கள் ஒரு வீட்டின் அறையில் கூடியிருந்தார்கள். நிற்கவும் இடமில்லாத அளவுக்கு மக்கள் நெருக்கிக்கொண்டு நின்றார்கள். ஏராளமான மக்கள் கூடியதால், பாரம் தாங்காமல் தரையில் தொய்வு ஏற்பட்டது. கூடியிருந்த மக்கள் கதவுச்சட்டங்களையும், வேறு பல பொருட்களையும் பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்தார்கள். முழுத் தளமும் கீழே இறங்க ஆரம்பித்தது. அந்த வீட்டின் சொந்தக்காரர் இரண்டு நாட்களுக்குமுன்புதான் அவருடைய வீட்டின் அடித்தளத்தில் பல பீப்பாய்களைக் கொண்டு வந்து வைத்திருந்தார். அந்தப் பீப்பாய்களில் புகையிலையை வைத்து அடைத்திருந்தார். அதனால் கீழே இறங்கிய தளம் உடைந்து நொறுங்காமல் ஒரேவொரு மீட்டர் தூரம் கீழே இறங்கி அந்தப் பீப்பாய்களின்மேல் உட்கார்ந்துகொண்டது. எனவே, வெஸ்லி தொடர்ந்து பிரசங்கித்தார். யாருக்கும் சிறு காயம் ஏற்படவில்லை, அவர்கள் தொடர்ந்து அவருடைய பிரசங்கத்தைக் கேட்டார்கள். அவரும் எந்தத் தடையும் இல்லாமல் தொடர்ந்து பிரசங்கித்தார். அவருக்கு எந்தச் சிரமமும் ஏற்படவில்லை.

ஆயினும், அவருடைய கூட்டத்தில் பலர் பல வேளைகளில் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றார்கள். ஒருமுறை அவர் இலண்டனில் திறந்த வெளியில் ஒரு பெரிய கூட்டத்தில் பிரசங்கித்துக்கொண்டிருந்தார், சில வாலிபர்கள் அந்தக் கூட்டத்தில் குழப்பத்தை, முடிந்தால் கலவரத்தை, ஏற்படுத்த விரும்பினார்கள். ஒரு காளைமாட்டைக் கூட்டத்துக்குள் அனுப்பிக் குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்று அவர்கள் நினைத்தார்கள். மாட்டைக் கொண்டுவந்தார்கள். மாட்டை அடித்து உசுப்பிவிட்டார்கள். மாட்டைக் கூட்டத்தின் பின்புறமாகக் கூட்டிச்சென்று கூட்டத்துக்குள் தள்ளிவிட்டார்கள். மாடு கூட்டத்தின்ஊடாக ஓடும் என்றும், மக்களை மிதிக்கும் என்றும், மக்கள் அனைவரும் பயந்து ஓட்டுவார்கள் என்றும், அதனால் மக்கள் ஒருவரையொருவர் மிதிப்பார்கள், பலர் சாவார்கள் என்றும் அந்த வாலிபர்கள் நினைத்தார்கள். இப்படி நடந்தால் ஜாண் வெஸ்லி நகரத்திலிருந்து வெளியேறிவிடுவார் என்றும் அவர்கள் நம்பினார்கள். ஆனால், அவர்கள் மாட்டை அவிழ்த்துவிட்டபோது, மாடு கூட்டத்துக்குள் நேரே ஓடாமல், கூட்டத்தைச் சுற்றி ஓடியது. அந்த வாலிபர்களுக்குப் பயங்கர ஆத்திரம். திரும்பவும் போய் மாட்டைப் பிடித்துக்கொண்டு வந்து மீண்டும் மாட்டைக் கூட்டத்துக்குள் தள்ளிவிட்டார்கள். அந்த நேரத்தில் வெஸ்லி, "நியாயமாகச் செய்யுங்கள், இரக்கத்தை நேசியுங்கள், தேவனுக்குமுன் தாழ்மையுடன் நடந்து கொள்ளுங்கள்," என்ற வசனத்திலிருந்து பேசிக்கொண்டிருந்தார். அவர்கள் மாட்டை மீண்டும் அவிழ்த்துவிட்டார்கள். ஆனால் மீண்டும், மாடு கூட்டத்துக்குள் ஓடாமல், கூட்டத்தைச்சுற்றியே ஓடியது. அவர்கள் அதைக் கூட்டத்திற்குள் தள்ள முயன்றனர், ஆனால் அது மறுத்துவிட்டது. அது பக்கமாகத் திரும்பிச் சென்றது. பின்னர், கடைசியில், அவர்கள் மிகுந்த கோபத்தோடு கூட்டத்திற்குள் கொண்டுவர மாட்டை இழுத்தார்கள். மாடு மிரண்டு அவர்கள்மேல் பாய்ந்தது. மாட்டின் தாக்குதலிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள அவர்கள் அந்த இடத்தைவிட்டு ஓடினார்கள்.

உண்மையில், இதைப்போன்ற இன்னொரு நிகழ்ச்சி இரண்டாவது முறையாக வேறொரு ஊரில் நடந்தது. வெஸ்லி அந்த ஊருக்குப் பிரசங்கிக்கச் சென்றிருந்தார். ஒரு கும்பல் வெஸ்லியைக் கொல்ல விரும்பியது. அவர்கள் அவருடைய பிரசங்கத்தைக் கேட்க விரும்பவில்லை. இதற்காக அவர்கள் ஒரு காளைமாட்டைப் பயன்படுத்த விரும்பினார்கள். ஒரு காளையைப் பிடித்துக்கொண்டு வந்து அதை அடித்துக் காயப்படுத்தினார்கள். அதற்கு இரத்தக் காயங்கள் ஏற்படும்வரை அதை அடித்து நொறுக்கினார்கள். வெகுண்டெழுந்த காளைமாடு கூட்டத்துக்குள் மிரண்டு ஓடியது. மக்கள் கலைந்து நாலாபக்கமும் ஓடினார்கள். வெஸ்லி ஒரு மேஜையில் நின்று பிரசங்கித்துக்கொண்டிருந்தார். அவர்கள் காளையை இழுத்துக்கொண்டு வந்து வெஸ்லியின்முன்னால் நிறுத்தினார்கள். ஆனால், காளைமாடு ஒரு மரக்கட்டையைப்போல ஆடாமல் அசையாமல் நின்றது, அது நகரவேயில்லை. அதைக் கொண்டுவந்த வாலிபர்களுக்குக் கடுங்கோபம். அவர்கள் காளையை இன்னும் அதிகமாக அடித்து அதை வெஸ்லிக்கு மிக அருகில் கொண்டுபோனார்கள். காளை வெஸ்லிக்கு எவ்வளவு நெருக்கமாக நின்றது என்றால், வெஸ்லி பிரசங்கித்தபோது அவ்வப்போது காளையின் முகத்தைக் கொஞ்சம் திருப்பவேண்டியிருந்தது. வெஸ்லி தொடர்ந்து பிரசங்கித்துக்கொண்டேயிருந்தார். ஆத்திரமடைந்த வாலிபர்கள் வெஸ்லி நின்று பிரசங்கித்துக்கொண்டிருந்த மேசையை அடித்து நொறுக்கினார்கள். அவர்கள் வெஸ்லியைத் தாக்கக்கூடும் என்று நினைத்த அவருடைய நண்பர்களில் ஒருவர் வெஸ்லியை அழைத்துக்கொண்டு போனார். காளைமாடு அதே இடத்தில நின்றுகொண்டிருந்தது. வெஸ்லி பிரசங்கிப்பதற்கு சாலையின் வேறொரு இடத்தில் ஒரு மேஜையை ஏற்பாடு செய்தார்கள். வெஸ்லி அந்த மேஜையில் நின்று பிரசங்கித்தார். மக்கள் எல்லாரும் பிரசாங்கத்தைக் கேட்டார்கள். அந்த வாலிபர்களும், காளைமாடும் மட்டும் அதே இடத்தில் நின்றன.

பொதுமக்களிடமிருந்து மட்டும் அல்ல, பல்வேறு சபைகளைச் சேர்ந்த குருமார்களிடமிருந்தும் அவர் ஏராளமான பிரச்சினைகளையும், துன்பங்களையும் சந்திக்கவேண்டியிருந்தது. அந்த நாட்களில் அன்றைய குருமார்கள் நிறையப்பேர் இரட்சிக்கப்பட்டவர்கள் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். அது ஒரு நல்ல, பாதுகாப்பான வேலை என்பதால் அவர்கள் அதைச் செய்தார்கள். வெஸ்லியாலும், அவருடைய பல்வேறு வழிகளாலும், முறைகளாலும் தங்கள் தொழிலுக்குப் பேராபத்து என்று அவர்கள் நினைத்தார்கள். இங்கிலாந்தின் அப்போதைய சபைகளின் நிலைமையையும், குருமார்களின் பிரசங்கத்தின் தரத்தையும்பற்றி வரலாற்று ஆசிரியர்கள் என்ன சொல்லுகிறார்கள் தெரியுமா? அன்று ஒரு மதகுரு தேவாலயத்தில் பிரசங்கித்தபோது, அவர் கன்பூசியஸைப்பற்றியா, முஹமதைப்பற்றியா, கிறிஸ்துவைப்பற்றியா யாரைப்பற்றிப் பிரசங்கிக்கிறார் என்று சொல்லமுடியவில்லையாம். அந்த நேரத்தில் இங்கிலாந்தில் அதுதான் அன்றைய கிறிஸ்தவத்தின் நிலைமை. எனவே, வெஸ்லி கிறிஸ்துவைப்பற்றிப் பேசுவதைக் கேட்ட இந்தக் குருமார்கள், “அவர் மிகவும் தீவிரமானவர்,” என்று கருதினார்கள்.

ஒருமுறை வெஸ்லி தன் சொந்த ஊரான எப்வொர்த்திற்குப் போயிருந்தார். அங்கு இருந்த போதகர் வெஸ்லியை நோக்கி, "நீர் இந்தச் சபையில் பிரசங்கிப்பதற்கு நான் உம்மை அனுமதிக்கமாட்டேன்," என்று சொல்லி அனுமதி மறுத்துவிட்டார். அந்த ஞாயிற்றுக்கிழமை வெஸ்லி பிரசங்கிப்பார் என்று எப்வொர்த் மக்கள் எதிர்பார்த்தார்கள். எனவே, வெஸ்லியின் பிரசங்கத்தைக் கேட்க அண்டை நகரங்களிலிருந்தும்கூட மக்கள் திரண்டிருந்தார்கள். அவருக்குப்பதிலாக, உள்ளூர் மதகுரு பிரசங்கித்தபோது வந்திருந்தவர்கள் ஏமாற்றமடைந்தார்கள். ஜாண் வெஸ்லியைப்போன்ற பைத்தியக்காரர்களின் பிரசங்கத்தைக் கேட்பது ஆபத்தானது என்று அந்தப் போதகர் ஜாண் வெஸ்லிக்கு எதிராகப் பிரசங்கித்தார். ஜாண் வெஸ்லி அங்கு அமைதியாக உட்கார்ந்திருந்தார். ஆனால், அவர் தன் சொந்த ஊர் மக்களுக்குப் பிரசங்கிக்க வேண்டும் என்று விரும்பினார். எனவே, அவருடைய உதவியாளர் ஒருவர் ஆலயத்தைவிட்டு வெளியே செல்லும் வழியில் நின்று, "வெஸ்லி இன்றிரவு 6:00 மணிக்கு தேவாலயத்தில் பிரசங்கிப்பார்," என்று அறிவித்தார். உள்ளூர் போதகரோ, "இல்லை, இல்லை, அவர் பிரசங்கிக்கமாட்டார்," என்றார். ஆனால், வெஸ்லி அங்கு பிரசங்கிப்பதற்கு ஒரு வழி இருந்தது. தான் அன்று மாலை 6:00 மணிக்கு தேவாலயத்தில் பிரசங்கிக்க முடியும் என்று அவருக்குத் தெரியும். வெஸ்லி அன்றிரவு பிரசங்கிக்கப்போகிறார் என்ற செய்தி வேகமாகப் பரவியது. விரைவில் கூட்டம் கூடியது. சரியாக 6 மணிக்கு வெஸ்லி அங்கு இருந்தார். உள்ளூர் போதகர் வெஸ்லியிடம், "நான் உங்களை ஆலயத்துக்குள் பிரசங்கிக்க விடப்போவதில்லை,” என்றார். வெஸ்லி, "ஆம், எனக்குத் தெரியும், ஆலயத்துக்குள் நின்று நான் பிரசங்கிக்கப்போவதில்லை. ஆனால், எங்கள் குடும்பச் சொத்தில் நின்று பிரசங்கிக்க எனக்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை அல்லவா? அங்கு நின்று நான் பிரசங்கிப்பதை நீங்கள் தடுக்க முடியாதல்லவா?" என்று கூறினார். வெஸ்லியின் தந்தையின் கல்லறை ஆலயத்தின் வளாகத்தின் உள்ளே இருந்தது. வெஸ்லி அவருடைய தந்தையின் கல்லறையின்மேல் நின்றுகொண்டு பிரசங்கித்தார். உள்ளூர் போதகரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஏனென்றால், அது அவர்களுடைய குடும்பச் சொத்து. ஆலயத்தின் வளாகத்திற்குள்ளும், கல்லறைத் தோட்டத்திலும், வளாகத்துக்கு வெளியே தெருக்களிலும் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு அவர் பிரசங்கித்தார்.

ஒருமுறை பர்மிங்காமுக்கு அருகிலுள்ள ஒரு நகரத்தில் வெஸ்லி பிரசங்கித்துக்கொண்டிருந்தபோது, குடிபோதையில் இருந்த ஒரு பெரிய கும்பல் வந்து அவர் தங்கியிருந்த வீட்டைச் சுற்றிவளைத்தது. அது மிகவும் ஆபத்தான காலம். தாங்கள் ஒருபோதும் பிடிபடப்போவதில்லை என்ற தைரியத்தில் இந்த வன்முறைக் கும்பல் வன்முறையை அரங்கேற்றிக்கொண்டிருந்தது. சில நேரங்களில் காவலர்களும் இவர்களுடைய வன்முறையைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்கள். குறிப்பாக, அவர்களுக்குக் கொஞ்சம் இலஞ்சம் கொடுத்தால் போதும், கண்ணை மூடிக்கொண்டார்கள். எனவே, இப்படிப்பட்ட கும்பல் தான் தங்கியிருந்த வீட்டை முற்றுகையிட்டதால், தான் சிக்கலில் மாட்டிக்கொண்டிருப்பதை அவரும், அவருடைய நண்பர்களும் புரிந்துகொண்டார்கள். இந்தக் கும்பல் இரத்த வெறியோடு இருந்தது. வெஸ்லியை வெளியே வருமாறு கத்தினார்கள். அவர்கள், "அவனைக் கொலைசெய்! கொலைசெய்! மண்டையை உடை!" என்று கத்தினார்கள். ஒருவேளை அதுதான் தன் கடைசி இரவாக இருக்கலாம் என்று வெஸ்லி நினைத்தார். எனவே, அவர் வெளியே சென்று அவர்களைச் சந்திக்க முடிவு செய்தார். அவர் வெளியே போய், அந்தக் கும்பலின் நடுவே தனித்து நின்றார். குழப்பமும், கூச்சலும் அதிகமாக இருந்தபோதும், அவர் அங்கு அவர்களிடம் மிகவும் சாந்தத்தோடு பேசினார். அவர் அவர்களிடம் பேச முயன்றார். ஆனால், அவர்கள் கேட்க மறுத்துவிட்டார்கள். அவர்கள் அவரைப் பிடித்து இழுத்து, ஊரைவிட்டு விரட்ட விரும்பினார்கள். பின்னாட்களில் வெஸ்லி இந்தச் சந்தவத்தைப்பற்றி, "தேவன் அன்று எல்லாவற்றையும் முற்றிலுமாக முறியடித்தார். அவர் பல அற்புதங்கள் செய்தார். அன்று தேவன் கொஞ்சம் நகைச்சுவை உணர்வைக்கூடக் காட்டினார்," என்று கூறினார். முதலாவது, ஊருக்கு வெளியே செல்லும் சாலை மிகவும் செங்குத்தான சரிவில் இருந்தது. அந்தச் சாலை உருளைக்கற்களால் போடப்பட்ட சாலை. மேலும், அந்தச் சாலை ஈரமாகவும் இருந்தது. அந்தக் கும்பல் வெஸ்லியை இந்தச் சாலையில் மேலிருந்து கீழே தள்ளிவிட்டது. அவர் வழுக்கி விழுந்தால் அந்தக் கும்பல் அவரை மிதித்தே கொன்றுவிடும் என்று வெஸ்லிக்குத் தெரியும். தான் எந்த நேரத்திலும் வழுக்கிவிழ வாய்ப்புஉண்டு என்றும் அவருக்குத் தெரியும். ஆனால், அவர் அந்தச் சாலையில் வழுக்கிவிழவில்லை. அவர் சறுக்கவும் இல்லை. இரண்டாவது காரியம் என்னவென்றால், இந்தக் கும்பலில் நிறைய மல்யுத்தவீரார்கள், பலவகையான சண்டை விளையாட்டுக்களில் பங்குபெறுகிறவர்கள், இருந்தார்கள். முழங்கால்சண்டை, கரடிச்சண்டைபோன்ற பலவிதமான வன்முறை சம்பந்தப்பட்ட விளையாட்டுகள். இப்படிப்பட்ட பல போட்டிகளில் பரிசுபெற்ற வீரர்கள் அந்தக் கும்பலில் இருந்தார்கள். அவர்கள் வெஸ்லியின் ஆடைகளைப் பிடித்து இழுக்க முயன்றனர். ஆனால், அவர்களால் அவருடைய ஆடையைப் பற்றிப்பிடிக்கமுடியவில்லை. அவரைப் பிடித்தபோதெல்லாம் அவர்களுடைய கை நழுவிற்று. அவர்கள் எப்படித்தான் முயன்றபோதும் அவர்களால் அவரையோ, அவருடைய துணிகளையோ பிடிக்கமுடியவில்லை. மூன்றாவதாக, அங்கு ஒரு கட்டத்தில் ஒருவன் ஒரு பெரிய மரக்கட்டையோடு அவருக்குமுன்னால் நின்றான். அவன் வெஸ்லியின் தலைக்குக் குறி வைத்து அவரை அடிக்கத் தடியை ஓங்கினான். அந்த நேரத்தில், வெஸ்லி தன் உயிரைத் தேவனுக்கு அர்ப்பணித்தார். அந்த மனிதனால் வெஸ்லியை அடிக்க முடியவில்லை. அவன் அடிக்க முயன்றபோதெல்லாம், தடி அவருக்கு வலதுபுறம் அல்லது இடதுபுறம் சென்றது. அவனால் தடியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. வெஸ்லி இதைப் பார்த்துக்கொண்டிருந்தார். கொஞ்ச நேரத்திற்குப்பின் அந்த மனிதன் அவரை அடிக்கும் எண்ணத்தை விட்டுவிட்டான். அதற்குப்பின் இன்னொரு மனிதன் வந்து, அவரைப் பிடித்து அவரை ஓங்கிக் குத்துவதற்குத் தன் முஷ்டியை உயர்த்தினான். ஓங்கிய அவன் முஷ்டி அந்தரத்தில் அப்படியே நின்றது. "அவன் என் தலையை வருடிக்கொண்டு, 'என்னே மென்மையான முடி!' என்று சொன்னான். அவன் தான் எதற்காக வந்தான் என்பதையே மறந்துவிட்டான்போல இருந்தது," என்று பிற்காலத்தில் வெஸ்லி சொன்னார். இதற்கிடையில், வெஸ்லி நகரத்திலிருந்து வெளியேற்றப்பட்டார், கும்பல் கலைந்தது. அவருக்கு ஒரு சில காயங்களும், கீறல்களும், கோட் பையில் சில கிழிசல்களும் மட்டுமே ஏற்பட்டிருந்தன. வெஸ்லி அந்தக் கும்பலுக்குள் சென்றபோது, அவருடைய நண்பர்களும் அவரைத் தொடர்ந்து அங்கு போனார்கள். "கிறிஸ்து எங்களுக்காக மரித்ததால் நாங்கள் மரிக்கப் பயப்படவில்லை. இந்த இரவில் தேவைப்பட்டால் நாங்கள் எங்கள் உயிரைக் கொடுப்போம்," என்று கூறினார்கள். அன்றிரவு நிலைமை அவ்வளவு மோசமாக இருந்தது. அவர்கள் ஒருவருக்கும் எந்தச் சேதமும் இல்லாமல் அனைவரும் உயிருடன் இருப்பதைக்கண்டு ஆச்சரியப்பட்டார்கள்.

வெஸ்லிக்கு 40, 45 வயதிருக்கும். அப்போது அவர் திருமணம்செய்துகொள்வது நல்லது என்று அவருக்கு நெருக்கமானவர்கள் அவரை அறிவுறுத்தினார்கள். இது அவருடைய வாழ்க்கையின் ஒரு மிகப் பெரிய சோதனையாயிற்று. அவர் திருமணம் செய்தார். மோலி அல்லது மேரி என்ற ஒரு விதவையை அவர் மணந்தார். அந்தப் பெண்ணை சார்லசுக்கும், அவருடைய மனைவி சாராவுக்கும் நன்றாகத் தெரியும். இருவரும் திருமணம் செய்யப்போகிறார்கள் என்று சார்லஸ் கேள்விப்பட்டபோது அவர் அதிர்ச்சியடைந்தார். சார்லஸ், "இல்லை, இல்லை, இது நடக்கக்கூடாது," என்று நினைத்தார். ஆனால், ஜாண் அந்தப் பெண்ணையும், அவளுடைய பக்தியையும் கண்டார். அவள் கடின உழைப்பாளி, திறமையானவள். ஆனால், உண்மையில், அவர் இந்தப் பெண்ணைத் திருமணம்செய்வதற்குக் கொஞ்சம் அவசரப்பட்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. அவர் அந்தப் பெண்ணைத் திருமணம்செய்வதற்கு முன்மொழிந்தார், அந்தப் பெண்ணும் அவருடைய முன்மொழிதலை ஏற்றுக்கொண்டாள். வெஸ்லியையும், அவருடைய வாழ்க்கைமுறையையும்பற்றி அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே தெரியும். தான் திருமணம்செய்தபிறகும் தன் வாழ்க்கைமுறையில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்று வெஸ்லி அந்தப் பெண்ணிடம் மிகத் தெளிவாகக் கூறியிருந்தார். தேவன் அவரை ஒரு குறிப்பிட்ட காரியத்துக்காக அழைத்திருந்தார். இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் நாட்டு மக்களுக்குக் கிறிஸ்துவைப் பிரசங்கிக்கவும், போதிக்கவும் தேவன் அவரை அழைத்திருந்தார். அந்த அழைப்பை அவர் நிறைவேற்ற வேண்டியிருந்தது. அதுவே அவருடைய தெளிவான தரிசனம்.

ஆனால், திருமணமான சில வாரங்களுக்குள் நிலைமை மாற ஆரம்பித்துவிட்டது. மோலி மிகவும் முரட்டுத்தனமான குணமும், பொறாமையும் கொண்டவள் என்று ஒருசில வாரங்களில் தெரிய ஆரம்பித்தது. பிரசங்கிப்பதற்காக அவர் எல்லா நேரமும் வெளியே போவதை அவள் வெறுத்தாள். அவர் எப்போதும் மக்களுக்குக் கடிதங்கள் எழுதுவதையும், பிரசங்கங்களை ஆயத்தம்பண்ணுவதையும் அவள் வெறுத்தாள். அவள் மிகவும் பொறாமைப்பட்டாள். சில நேரங்களில், அவள் அவர்மேலிருந்த தன் கோபத்தைக் காட்டும் வகையில், அவருடைய கடிதங்களையும், பிரசங்கக் குறிப்புகளையும் அவருக்குத் தெரியாமல் திருடி எரித்துவிட்டாள். அவர் ஏழை மக்கள்மேல் கொண்டிருந்த அவருடைய தாராள மனப்பான்மையையும் வெறுத்தாள். வெகு விரைவில் அது மிகவும் தெளிவாகத் தெரிந்தது. அவளுடைய இருதயம் தன்னோடு ஒன்றாக இல்லை, மாறாகத் தனக்கு எதிராக இருக்கிறது என்று ஜாண் வெஸ்லிக்குத் தெரியும். வெஸ்லி கர்த்தருக்குச் சேவை செய்வதையும், பிரசங்கிப்பதையும், அவருடைய அழைப்பை நிறைவேற்றுவதையும் தடுக்க அவள் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தாள். ஆனால், குறிப்பிட்ட இந்தச் சோதனையால் தேவன் வெஸ்லியைப் புடமிட்டு உருவாக்கினார் என்று சொல்லலாம். அவருடைய திருமணம் அவரை உடைத்து உருவாக்கியது என்று சொல்லலாம். இதனால், அவர் மிகவும் மென்மையான மனிதராக மாறினார். இதன் விளைவாக, அவர் மிகவும் சாந்தகுணமுள்ளவராகவும், மிருதுவானவராகவும் மாறினார். "அவர் மிகவும் பலவீனமாகிவிட்டார், அவர் இன்னும் கொஞ்சம் பலமாகவும், தைரியமாகவும் நடந்திருக்க வேண்டும்," என்று சொல்லக்கூடிய அளவுக்கு அவர் சாந்தமானார் என்றுகூடச் சொன்னார்கள். மோலி தன் கணவரைப்பற்றி அவதூறான கடிதங்களை எழுதினாள். அந்தக் கடிதங்களை அவரை வெறுக்கும் நபர்களுக்கு அனுப்பி அவர்களின் வெறுப்பை வளர்த்தாள். அங்கிருந்த போதகர்கள்மத்தியில் ஜாண் வெஸ்லிமீதான வெறுப்பை இன்னும் அதிகரிக்க அவள் தன்னால் இயன்ற எல்லாவற்றையும் செய்தாள். ஒரு முறை, ஜாண் வெஸ்லியின் நண்பர் ஒருவர் எந்த அறிவிப்பும் இல்லாமல் அவர்களுடைய வீட்டிற்கு வந்தார். அவர்களுடைய அறைக்குள் நுழைந்தபோது, மோலி உக்கிர கோபத்தோடு ஜாணின் தலைமுடியைப் பிடித்து தரையில் இழுத்துச் செல்வதைக் கண்டார். ஆனால், வெஸ்லி மிகவும் சாந்தமாகவும், மென்மையாகவும் இருந்தார். மோலி ஜாண் வெஸ்லியைவிட்டுப் பிரிந்துபோய் தன் உறவினர்களுடன் வாழ்ந்தாள். அதற்குப்பின் அவர்கள் சந்திக்கவேயில்லை.

வெஸ்லி தன் வாழ்நாள் முழுவதும் அங்கும் இங்கும் நற்செய்தியை அறிவித்து, மக்களுக்குக் கற்பித்துக்கொண்டேயிருந்தார். தன் கடைசிக்காலத்திலும் அவர் ஓய்வு பெறவில்லை. முன்பிருந்த அதே வேகத்தோடும், பாரத்தோடும் ஊழியம் செய்தார். தன் கண்டிப்பான அட்டவணையையும், வாழ்க்கைமுறையையும் அவர் மாற்றவில்லை. ஆயினும், அவர் நல்ல ஆரோக்கியமாக இருந்தார். ஒரேவொரு இலக்கோடு அவர் தன் வாழ்க்கைப் பயணத்தைக் தொடர்ந்தார். கிறிஸ்துவைப் பிரசங்கிக்க வேண்டும், விசுவாசிகளை வளர்க்க வேண்டும், சபையைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற ஒற்றை இலக்கோடு வாழ்ந்தார். கைநிறைய எப்போதும் அலுவல்கள் வைத்திருந்தார். கோடைகாலத்திலும் குளிர் காலத்திலும் பயணம் செய்து, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் என அருகிருந்த நாடுகளைசுற்றி வந்து ஊழியம் செய்தார். எல்லாக் கிராமங்களுக்கும் அவர் 15, 16 முறை போய்வந்தார். அந்த இடங்களில் உள்ள அனைத்து விசுவாசிகளையும், மக்களையும் போய்ச் சந்தித்தார். குளிர்காலத்தில் பயணம் செய்வது கடினமாக இருந்ததால் அவர் பெரும்பாலும் இலண்டன் அல்லது பிரிஸ்டலில் தங்கினார். அங்கு அவர் நிறுவியிருந்த பல பள்ளிகளையும், அனாதை இல்லங்களையும் கவனித்துக்கொண்டார். மேலும், சிறிய மெதடிஸ்ட் தேவாலயத்தில் தலைவர்களைச் சந்தித்து உரையாடினார்..

அவருடைய சிறிய அறைகளும், வீடுகளும் இங்கிலாந்து முழுவதும் உள்ள கிராமங்களில் முளைத்து வளர்ந்தன. இங்கு மக்கள் ஒருவரையொருவர் சந்திக்க வெஸ்லி அவர்களை ஊக்குவித்தார். ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமல்ல, மற்ற நேரங்களிலும் பாடல்களைப் பாடுவதற்கும், துதிப்பாடல்களைக் கற்பிப்பதற்கும், ஜெபிப்பதற்கும், ஒருவருக்கொருவர் பொறுப்புள்ளவர்களாக இருப்பதற்கும் மக்கள் இந்த இடங்களில் கூடுமாறு அவர்களை உற்சாகப்படுத்தினார். பலர் அப்படிச் செய்தார்கள்.

85 வயதிலும், வெஸ்லி பிரசங்கித்தார், இங்கிலாந்து நாடு முழுவதும் பயணம் செய்தார். ஆனால், சார்லஸ் அவ்வளவு ஆரோக்கியத்தோடு இல்லை. சார்லசின் மரணம் வெஸ்லியை மிகவும் பாதித்தது. அவருடைய மரணத்திற்குப்பின் மூன்று வாரங்களுக்குப்பிறகு, அவர் ஒரு கூட்டத்தில் பிரசங்கித்துக்கொண்டிருந்தார். அங்கே ஒரு சிறுவர் பாடகர் குழு இருந்தது, இந்தப் பாடகர் குழுவினர் சார்லஸின் ஒரு பாடலைப் பாடினார்கள். அவர் தம் வழக்கம்போல், எழுந்து நின்று, அவர்கள் பாடும் பாடலின் முதல் வரியை வாசித்தார். "என் தோழன் எனக்குமுன் சென்றுவிட்டான், நான் இங்கு தனித்து விடப்பட்டேன்," என்ற வரிகளை வாசித்தபோது நரைத்த முடிகொண்ட வெஸ்லி தன் முகத்தை மூடிக்கொண்டு அழுதார். சபையார் அனைவரும் அவரோடு சேர்ந்து அழுதார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆனால், அவர் தன் கண்ணீரைத் துடைத்துவிட்டு, மீண்டும் பிரசங்கித்தார். 85 வயதிலும், அவர் இன்னும் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தார். சிறிய கையெழுத்துக்களைப் படிக்கக் கொஞ்சம் சிரமப்பட்டார் என்பது அவருடைய ஒரே புகார். சிறிய எழுத்துக்களை வாசிக்க அவருக்கு மெழுகுதிரி வெளிச்சம் தேவைப்பட்டது. அவ்வளவே.

அவர் தொடர்ந்து பயணம் செய்தார், பிரசங்கம் செய்தார். அவர் வாழ்ந்த அந்தக் காலத்தில், அவர்தான் இங்கிலாந்தில் மிகவும் அன்புக்குரிய மனிதர் என்று கூறினார்கள். எந்த ஊரிலிருந்து ஒரு கும்பல் அவரை ஊரைவிட்டு வெளியேற்றியதோ, எந்த ஊரில் காளைமாட்டை அவருடைய கூட்டத்துக்குள் விரட்டிவிட்டார்களோ, அதே மக்கள், அதே கும்பல், இப்போது அவரைப் பார்க்கத் திரண்டு வந்தார்கள். தங்களைக் காப்பாற்றிய இந்த முதியவரின் பார்வையில்பட திரண்டு வந்தனர். பின்னர் அவர் எழுதினார், "நான் எப்போதும் துரிதமாகச் செயல்பட்டாலும், நான் ஒருபோதும் அவசரப்படுவதில்லை, ஏனென்றால், என்னால் செய்யமுடியாத அதிகமான வேலைகளை நான் ஒருபோதும் செய்ய மாட்டேன்; துரிதமாகச் செய்துவிட்டு பின்னர் அமைதலுள்ள ஆவியுடன் அவைகளைத் திரும்பிப்பார்ப்பேன்," என்று எழுதினார்.

87 வயதில், அவருடைய பலமும், ஆரோக்கியமும் குன்றத் தொடங்கின. அவர் மிகவும் பலவீனமாகி வருவதை அவருடைய நண்பர்கள் கவனித்தார்கள். ஒரு நாள் அவரால் படுக்கையிலிருந்து எழமுடியவில்லை. அப்போது அவருடைய ஓட்டம் முடிவை நெருங்குகிறது என்பதை அவருடைய நண்பர்கள் புரிந்துகொண்டார்கள். மார்ச் முதல் தேதி, செவ்வாய்க்கிழமை, உடலில் எந்தப் பலமும் இல்லை, முடிவு நெருங்கிவிட்டது என்பதை அவர்கள் அறிந்தார்கள். "எல்லாவற்றிலும் சிறந்தது என்னவென்றால் தேவன் நம்முடன் இருக்கிறார்". இவைகளே அவருடைய கடைசி வார்த்தைகள். இந்த வார்த்தைகளைச் சொல்லிமுடித்தபின் அவர் ஐசக் வாட்ஸ் அவர்களின் ஒரு பாடலைப் பாட முயன்றார்; ஆனால் அவர்கள் கேட்டதெல்லாம் "நான் அவரைத் துதிப்பேன், நான் அவரைத் துதிப்பேன்". அவர் மறுநாள் காலையில் தன் கர்த்தரும், எஜமானருமாகிய தேவனுடன் இருக்கச் சென்றுவிட்டார். அவர் பிரசங்கித்த கடைசி பிரசங்கம் - அவர் மரிப்பதற்குச் சில நாட்களுக்கு முன்புதான் அவர் அதைப் பிரசங்கித்தார் - "கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்".

வெஸ்லி ஒவ்வொரு வருடமும் நடந்து அல்லது குதிரையில் 8,000 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்தார்; அவர் அயராது மக்களுக்குக் கற்பித்தார்; மக்களைக் கட்டியெழுப்பினார்; புதிய விசுவாசிகளை உற்சாகப்படுத்தினார்; அவர்களை அடுத்த தலைமுறையை வழிநடத்தும் தலைவர்களாக உருவாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அவர் தன் வாழ்நாளில் 40,000 பிரசங்கங்களைப் பிரசங்கித்ததாகக் கூறுகிறார்கள். ஆனால் அதைவிட அதிகமாகவே அவர் பிரசங்கித்திருப்பார் என்று சொல்லுகிறார்கள். ஏராளமானவர்களை ஊக்குவித்தும், அறிவுறுத்தியும் அவர் பல கடிதங்களை எழுதினார். அவர் பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதினார்; நற்செய்தி அறிவிப்பதற்கும், விசுவாசிகளைக் கிறிஸ்துவுக்குள் கட்டியெழுப்புவதற்கும் துண்டுப்பிரசுரங்களை எழுதினார். எபிரேய இலக்கணம், ஆங்கில இலக்கணம், குழந்தைகளுக்கான வேதபாடங்கள், அவர் உதவிய பள்ளிகளிலும், அவர் ஆரம்பித்த பள்ளிகளிலும் படித்த பிள்ளைகளுக்கு வேத பாடங்கள் எழுதினார். அது மட்டுமல்லாமல், சார்லஸ் வெஸ்லி எழுதிய பல பாடல்களை அவர் திருத்தி மெருகூட்டினார். சில சமயங்களில் அவர் சேர்ந்து எழுதினார். இருப்பினும் அந்தப் பாடல்களையெல்லாம் எழுதியவர் சார்லஸ்தான் என்று சொன்னார்.

ஜாண் வெஸ்லியின் மரணத்தைக் கேள்விப்பட்ட ஜென்டில்மேன் என்ற ஒரு மதச்சார்பற்ற பத்திரிகை, அவரைப்பற்றி, "ஜாண் வெஸ்லி இலக்கியத்திற்கு வெறுமனே ஒரு ஆபரணமாக இருப்பதற்குப்பதிலாக, தன் சகஉயிரினங்களுக்கு ஓர் ஆசீர்வாதமாக இருந்தார். இந்த யுகத்தின் மேதையாக இருப்பதற்குப்பதிலாக, அவர் தேவனுடைய பணியாளாக இருந்தார்," என்று புகழ்ந்து எழுதியது.

ஆனால், வெஸ்லி தனக்காக எழுதிய கடைசி வார்த்தைகளில் நாமும் கொஞ்சம் பகிர்ந்துகொள்ளலாம், அது நம் ஜெபமாக மாறட்டும். "என் எஜமான் சொன்னதுபோல், வாழ்ந்ததுபோல், என் சித்தத்தை அல்ல, என்னை அனுப்பினவரின் சித்தத்தைச் செய்வதே என் இருதயத்தின் வாஞ்சையும், விருப்பமுமாகும்."