“கிறிஸ்தவத்தில் மிகச் செல்வாக்குடைய, பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஓர் இறையியலாளர், கூர்மதியுடைய மேதை, கற்பதில் பெருவேட்கையுடையவர், சாதுரியமான தர்க்கரீதியான மனமுடையவர்,” என்று பலரால் மதிக்கப்படுகிற ஒரு தேவ மனிதனுடைய வாழ்க்கையைப் பார்க்கப்போகிறோம். இவருடைய பெயர் ஜோனதன் எட்வர்ட்ஸ்.
இவரைப்பற்றித் தெரிந்துகொள்ள நாம் 18ஆம் நூற்றாண்டுக்கும், அமெரிக்காவில் அப்போது உருவாக்கிக்கொண்டிருந்த புதிய குடியேற்றங்களுக்கும் செல்ல வேண்டும். 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்த அமெரிக்கா, இப்போதிருக்கும் அமெரிக்காபோன்றதில்லை. இன்றைய அமெரிக்கா 50 மாநிலங்களை உள்ளடக்கிய ஓர் ஐக்கிய நாடு. அது ஐரோப்பியர்கள் அமெரிக்காவில் குடியேறிக்கொண்டிருந்த காலம். அன்றைய அமெரிக்காவில் தனித்தனிக் குடியேற்றங்கள் இருந்தன. சில குடியேற்றங்கள் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தின்கீழ், வேறு சில பிரெஞ்சுக்காரர்களின் அதிகாரத்தின்கீழ், இன்னும் சில ஸ்பானியர்களின் கட்டுப்பாட்டின்கீழ் என அன்றைய அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளை பல்வேறு நாடுகள் கைப்பற்றியிருந்தன. அது அமெரிக்கா என்ற ஓர் ஐக்கிய நாடு இன்னும் உருவாகாத காலம். அன்று அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகள் மக்கள் இன்னும் குடியேறாத, மக்கள் நடமாட்டம் இல்லாத, அடர்ந்த காடுகளாகவே இருந்தன. அங்கு குடியேறிய ஆங்கிலேயர்கள் அமெரிக்காவின் கடலோரங்களில் 13 சிறிய குடியேற்றங்களை காலனிகளை ஏற்படுத்தினார்கள்.
அங்கு குடியேறியவர்களில் பெரும்பாலானவர்கள் இங்கிலாந்திலிருந்து வந்த தூய்மையாளர்கள் என்றழைக்கப்படும் பியூரிடன்கள். இவர்கள் சர்ச் ஆஃப் இங்கிலாந்தின் உபதேசங்களிலும், நடவடிக்கைகளிலும் உடன்படவில்லை. எனவே, இங்கிலாந்தில் இவர்கள் மறுப்பாளர்கள் அல்லது எதிர்ப்பாளர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். இந்த மறுப்பாளர்கள் அவர்களால் துன்புறுத்தப்பட்டார்கள். அவர்கள் அங்கு தேவனை விடுதலையோடு ஆராதிக்கமுடியவில்லை; தங்கள் விசுவாசத்தையும், உபதேசத்தையும் பிரசங்கிக்க அனுமதியோ, சுதந்திரமோ கிடைக்கவில்லை. எனவே, அமெரிக்காவில் குடியேறுவதற்கு வாய்ப்பு கிடைத்தபோது, இவர்களில் பலர் புத்தம் புது வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவும், தங்கள் கிறிஸ்தவ வாழ்க்கையை விடுதலையோடு வாழவும் புதிதாக உருவாக்கிக்கொண்டிருந்த அமெரிக்காவுக்குக் குடியேறினார்கள்.
ஆங்கிலேயர்கள் 13 சிறிய குடியேற்றங்களை உருவாக்கினார்கள் என்று சொன்னேன். அதில் ஒன்று நியூ இங்கிலாந்து என்ற குடியேற்றம். நியூ இங்கிலாந்து என்றவுடன் இங்கிலாந்து நாடு என்று நினைக்க வேண்டாம்.. இது அமெரிக்காவில் ஆங்கிலேயர்களுடைய ஒரு குடியேற்றத்தின் பெயர்.
நாம் ஜோனதன் எட்வர்ட்சைப்பற்றிப் பார்க்கப்போவதால் அவர் வாழ்ந்த நியூ இங்கிலாந்து என்ற குடியேற்றத்தைப்பற்றி மட்டும் பேசுவோம். இந்தக் குடியேற்றப் பகுதியில்தான் மாசசூசெட்ஸ், கனெக்டிகட் என்ற இடங்கள் இருந்தன. இன்று இந்த இரண்டும் இரண்டு மாநிலங்கள். ஆங்கிலேயர்கள் அமெரிக்காவில் குடியேறியபிறகும் அவர்கள் தங்களை இன்னும் பிரிட்டிஸ்காரர்களாகவே பார்த்தார்கள். எனவே, அவர்கள் பிரிட்டிஷ் என்ற அடையாளத்தைவிட்டுவிட்டு அமெரிக்கன் என்ற அடையாளத்தை அவர்கள் இன்னும் எடுக்கவில்லை.
அன்று அமெரிக்காவில் ஆங்கிலேயர்கள் மட்டும்தான் குடியேறினார்கள் என்று நினைக்க வேண்டாம். நியூ இங்கிலாந்து குடியிருப்புக்கு அருகேயிருந்த புளோரிடா ஸ்பெயினுக்குச் சொந்தம். லூயிசியானா என்ற பகுதி பிரான்சுக்குச் சொந்தம். பொதுவாக ஐரோப்பியர்கள் ஆக்கிரமித்தார்கள். எனவே, வெவ்வேறு குடியேற்றங்களுக்கிடையேயும், குடியேறிய வெவ்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கிடையேயேயும் நிறைய மோதல்கள், ஏற்பட்டன.
இது ஒரு புறம். இன்னொரு புறம் அமெரிக்காவின் பூர்வீகக்குடிகளான செவ்விந்தியர்கள் புதிய குடியேற்றங்களுக்குள் நுழைந்து பிரச்சினைகள் ஏற்படுத்தினார்கள். செவ்விந்தியர்கள் பெரும்பாலும் பிரெஞ்சுக்காரர்களுடன் சேர்ந்துகொண்டு ஆங்கிலேயர்களின் குடியேற்றங்களில் வன்முறையில் ஈடுபட்டார்கள். அங்கும் இங்கும் போர்கள் வெடித்தன. சில சமயங்களில் பழங்குடியினர் புதிய குடியேற்றங்கலுக்குள் நுழைந்து, இரவோடு இரவாக ஒரு நகரத்தை முழுவதும் எரித்துவிட்டுப்போனார்கள்.
ஆகவே, நான் அமெரிக்கா என்று சொல்லும்போது அல்லது உங்களுக்குப் பரிச்சயமான அமெரிக்க நகரங்களின் பெயர்களைக் குறிப்பிடும்போது, நீங்கள் இன்றைய அமெரிக்காவைக் கற்பனை செய்யவேண்டாம்; அதற்குப் பதிலாக புதிய குடியேற்றங்களில் இருக்கும் இராணுவ முகாம்களையும், முகாம்களைச் சுற்றியிருக்கும் முள்வேலிகளையும், முள்வேலிகளுக்கு வெளியேயிருக்கும் அரண்களையும், சின்னச்சிறு பண்ணைகளையும், குடியேற்றங்களுக்கு அப்பால் இருக்கும் பரந்து விரிந்த அடர்ந்த காடுகளையும் கற்பனை செய்ய வேண்டும்.
அது மட்டும் அல்ல. 1800கள் மிகவும் ஆபத்தான காலம் என்பதை மறக்க வேண்டாம். அன்று போக்குவரத்து மிகவும் கடினம்; எங்கு பார்த்தாலும் மரணம். அந்த நாட்களில் குழந்தைகள் படிப்பதற்குப் பயன்படுத்திய பாடப் புத்தகத்தைப் பார்த்தால் அந்தச் சூழ்நிலை உங்களுக்குக் கொஞ்சம் புரியும். நாம் தமிழ் கற்றுக்கொள்வதற்கு அரிச்சுவடி பயன்படுத்துவதுபோல் அவர்கள் ஆங்கிலம் கற்றுக்கொள்வதற்குப் புத்தகங்கள் பயன்படுத்தினார்கள். இந்தப் புத்தகத்தைப் பாருங்கள். T என்ற எழுத்தை எழுதியிருக்கிறார்கள். அதை விளக்க அதற்குக் கீழே “நேரம் அனைவரையும் வெட்டிச் சாய்க்கிறது; பெரியோர், சிறியோர் அனைவரையும் வெட்டிச்சாய்க்கிறது” என்று இரண்டு வரிகளில் ஒரு சிறு கவிதை. அதனருகே ஒருவன் கோடாரியை வைத்து வெட்டுகிற ஒரு படம் வரையப்பட்டிருக்கிறது. அதுபோல Y என்ற எழுத்தை எழுதியிருக்கிறார்கள். அதற்குக் கீழே “முன்னேறும் வாலிபன் சறுக்குகிறான்; பின்வரும் மரணம் விரைவில் கிள்ளுகிறது” என்ற இரண்டு வரிக் கவிதை உள்ளது. அதனருகே ஒரு குழந்தை ஓடுகிற படமும், அந்தக் குழந்தையை விரட்டுகிற மரணத்தின் படமும் வரையப்பட்டிருக்கின்றன. குழந்தைகளுக்கு எழுத்துக்களைக் கற்பிக்க வேறு கவிதைகளோ, படங்களோ கிடைக்கவில்லையா? அன்று எங்கும் எப்போதும் மரணம் அவர்களைத் துரத்திக்கொண்டேயிருந்தது என்பதற்கு இது நிரூபணம். அன்று குழந்தைகள் ஐந்து வயதைத் தாண்டுவது அபூர்வம். அவ்வளவுதான் அவர்களுடைய ஆயுள். உரிய மருத்துவ வசதி இல்லாததால் பேறுகாலத்தின்போது பல தாய்மார்கள் இறந்தார்கள். மரணம் நிகழாத குடும்பமே இல்லை.
இந்தக் கொந்தளிப்பான சூழ்நிலையில்தான் ஜோனதன் எட்வர்ட்ஸ் 1703ஆம் வருடம் அக்டோபர் மாதம் 3ஆம் தேதி கனெக்டிகட் மாநிலத்திலுள்ள கிழக்கு வின்ட்சர் என்ற நகரத்தில் மிகவும் மதிப்புவாய்ந்த ஒரு குடும்பத்தில் பிறந்தார். அவருடைய தாத்தா reverend சாலொமோன் ஸ்றோடார்ட் அந்தப் பகுதியில் மிகவும் பிரபலமானவர்; அவர் நார்த்தாம்ப்டனில் இருந்த சபையின் போதகர். ஜோனதனின் அப்பா தீமோத்தேயு எட்வர்ட்ஸ் கிழக்கு விண்ட்சரில் இருந்த சபையின் போதகர். தீமோத்தேயு எட்வர்ட்சுக்கு மொத்தம் பதினோரு குழந்தைகள். ஜோனதன் ஐந்தாவது குழந்தை. இவர் மட்டுமே அவர்களுடைய ஒரே பையன். ஜோனதனும் அவருடைய பத்து சகோதரிகளும் ஆறடி உயரம். எனவே, அவருடைய அப்பா “என் அறுபது அடி மகள்கள்” என்று விளையாட்டாகப் பேசுவதுண்டு. ஒவ்வொருவரும் 6 அடி உயரம். 10 x 6 = 60. எனவே 60 அடி மகள்கள் என்று கூறினார். ஆணாதிக்கச் சமூகத்தில் அந்தக் குடும்பத்தில் ஜோனதன் ஒரே பையன் என்பதால் எல்லாருக்கும் அவன் செல்லப்பிள்ளை. ஆனால், இன்னொரு புறம் அவனுக்குப் பொறுப்பும் அதிகம்.
மாசசூசெட்ஸின் நார்தாம்ப்டன் சபையின் ரெவ. சாலொமோன் ஸ்டோடார்டின் மகளான அவருடைய அம்மா எஸ்தர் ஸ்டோடார்ட் அசாதாரணமான வரங்களும், சுதந்திரமான குணமும் கொண்டவர்.
பள்ளிப்படிப்பை முடித்த மாணவர்கள் கல்லூரியில் நுழைவதற்கு ஏதுவாக தீமோத்தேயு எட்வர்ட்ஸ் அவர்களுக்குப் பாடங்கள் கற்றுக்கொடுத்தார். அப்படிப்பட்டவர் தன் பிள்ளைகள் படிப்பில் பின்தங்கியிருப்பதை விரும்புவாரா? இல்லை. அவர் ஜோனதனையும், அவனுடைய சகோதரிகள் அனைவரையும் கல்லூரிக்குத் தயார்படுத்தினார். அவர்கள் அனைவரும் மிகச் சிறந்த கல்வியைப் பெற வேண்டும் என்பதில் அவர் மிகக் குறியாக இருந்தார். தன் பிள்ளகைள் மிகச் சிறந்த கல்வி பெற வேண்டும் என்று மட்டும் அல்ல, அவர்கள் அனைவரும் மிக நேர்த்தியான குணமுடையவர்களாக இருக்க வேண்டும், குறிப்பாக,சோம்பேறித்தனம், சுயநலம் போன்ற எதிர்மறையான குணங்களின் சுவடுகூட இருக்கக்கூடாது என்றும் அவர் விரும்பினார். அவர் தன் மகன் ஜோனாதனிடமிருந்து நிறைய எதிர்பார்த்தார்.
தீமோத்தேயு எட்வர்ட்ஸ் இரட்சிப்பைப்பற்றிய மிகத் தெளிவான, உறுதியான பார்வை உடையவர். உண்மையான மனந்திரும்புதல் என்றால் என்னவென்று அவருக்குத் தெரியும்.
அந்தக் காலத்தில் சபைக் கட்டிடங்கள் மிகவும் எளிமையாக இருந்தன. பிரமாண்டமான கட்டிடங்கள் இல்லை. அவை பரிசுத்தவான்கள் கூடும் இடங்கள். அவ்வளவே. அவைகள் பார்ப்பதற்கு மிகவும் சாதாரணமாகத் தோன்றின. நகரத்தில் இருந்த மற்ற வீடுகளுக்கும், கட்டிடங்களுக்கும் சபைக் கட்டிடங்களுக்கும் எந்த வித்தியாசமும் இருக்காது. அவை பிற வீடுகளைப்போல ஒரு வீடு அல்லது கட்டிடம். அதற்குக் காரணம் என்னவென்றால், சபை அல்லது ஆலயம் என்பது ஒரு கட்டிடம் அல்ல; மாறாக பரிசுத்த ஆவியானவர் விசுவாசிகளுக்குள் வாசம்செய்வதால், விசுவாசிகள்தான் சபை என்று புயூரிட்டன்ஸ் நம்பினார்கள். எனவே, கட்டிடங்களுக்கு அவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை; பெரிய மதிப்பளிக்கவில்லை. ஐரோப்பாவில் பிரமாண்டமான ஆலயங்கள் இருந்தன. ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவில் குடியேறிய புயூரிட்டன்ஸின் இந்தப் புரிதல், பேராலயங்களின் போக்குக்கு முற்றிலும் எதிரானது. தீமோத்தேயு எட்வர்ட்ஸ் இதை முழுமையாக விசுவாசித்தார். ஏனென்றால், அவர்கள் கால்வினிஸ்டுகள். மனந்திரும்புதல், பாவ மன்னிப்பு, இரட்சிப்பு, சபை ஆகியவைகளைத் தீமோத்தேயு மிகத் தெளிவாகப் புரிந்திருந்தார்.
இரட்சிப்பு தேவன் தரும் ஓர் இலவசமான ஈவு என்றும், தம் அழைப்பின் குரலுக்கு நேர்மறையாக மறுமொழி கொடுக்கும் மக்களைத் தேவனே முன்குறித்து, ஏற்ற காலத்தில் தெரிந்தெடுக்கிறார் என்றும் கால்வினிஸ்டுகள் விசுவாசித்தார்கள். எனவே, தேவனுக்குமுன் தங்கள் நிலைப்பாடு என்னவென்று தன் சபை விசுவாசிகள் திட்டவட்டமாக அறிந்திருக்க வேண்டும் என்றும், எல்லாரும் உண்மையாகவே மனந்திரும்பியிருக்க வேண்டும் என்றும், அதில் தெளிவாக இருக்க வேண்டும் என்றும் அவர் விரும்பினார், எதிர்பார்த்தார். அவர் இந்தக் காரியத்தைக்குறித்து மிக ஆழமாகச் சிந்தித்தார். இதன் பொருள் சவுல் தமஸ்குவுக்குச் செல்லும் வழியில் இயேசுவைச் சந்தித்ததுபோன்ற வியத்தகு அனுபவத்தை எல்லாரும் பெற வேண்டும் என்று அவர் எதிர்பார்த்தார் என்பதல்ல. அதுபோல ஒரு குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் தான் மனந்திரும்பி, இரட்சிக்கப்பட்டதாக ஒவ்வொருவரும் சொல்ல வேண்டும் என்றும் அவர் எதிர்பார்க்கவில்லை. ஆனால், ஒவ்வொருவருடைய அனுபவத்திலும் மூன்று முக்கியமான படிகள் இருக்க வேண்டும் என்று அவர் நினைத்தார்.
இந்த மூன்று காரியங்களையும் மக்கள் பகிரங்கமாக அறிக்கைசெய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஏனென்றால், இந்த அனுபவங்கள் தங்களுக்கு இல்லாமலிருந்தும் இருப்பதாக நினைத்து யாரும் தங்களை வஞ்சிக்கக்கூடாது, தாங்கள் இரட்சிக்கப்படாதிருந்தும் இரட்சிக்கப்பட்டிருப்பதாக யாரும் நினைக்கக்கூடாது என்று நினைத்தார். அவர்கள் உண்மையாகவே இயேசு கிறிஸ்துவின் சீடர்களாக, மறுசாயலாக்கப்பட்டவர்களாக, இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். இரட்சிப்பைப்பற்றிய அவருடைய அப்பாவின் கண்ணோட்டம் ஜோனத்தனின் உள்ளத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
ஜோனதன் பக்தியுள்ள வாழ்க்கை வாழ விரும்பினார். ஜோனதனுக்கு அப்போது ஒன்பது வயது. அவர் அருகிலிருந்த அடர்ந்த காட்டுக்குள் சென்று, பாதுகாப்பான ஒரு மறைவிடத்தைக் கட்டினார். அதில் அசாதாரணமோ, இரகசியமோ எதுவும் இல்லை. அவர் அடிக்கடி அந்த மறைவிடத்துக்குச் சென்று ஜெபிக்க ஆரம்பித்தார். இது அவருடைய பழக்கமாயிற்று. ஒவ்வொரு நாளும் பல தடவை இந்த மறைவிடத்துக்குச் சென்று அவர் ஜெபித்தார். அந்த மறைவிடத்தில் தன்னோடு சேர்ந்து ஜெபிக்க வருமாறு அவர் பிற சிறுவர்களையும் அழைத்தார். இது அவரே உருவாக்கிக்கொண்ட பக்திமுயற்சி. அவர் தன் அப்பாவின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வாழ விரும்பினார். ஆனால், இந்த மறைவிடத்தில் விநோதமாகவோ, விசித்திரமாகவோ ஒன்றும் நடைபெறவில்லை. நாட்கள் செல்லச்செல்ல, அங்கு ஜெபிப்பதைவிட தன் நண்பர்களோடு சேர்ந்து அதிகமாக விளையாட ஆரம்பித்தார். அவர்கள் பலவிதமான விளையாட்டுகள் விளையாடினார்கள். சில வேளைகளில் அவர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து ஒரு குழுவினர் தங்களை ஐரோப்பியர்களாகவும் இன்னொரு குழுவினர் தங்களைச் செவ்விந்தியர்களாகவும் பாவித்து போர்புரிவதுபோல் விளையாடினார்கள்.
ஜோனதன் இரட்சிப்பைப்பற்றிய காரியத்தில் போராடினார். இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று அவருடைய அப்பாவின் தாக்கம். இன்னொன்று, அவர் உண்மையாகவே இரட்சிப்பை மிக உயர்வாகக் கருதினார். எனவே, தான் உண்மையியாகவே மறுபடி பிறந்திருப்பதை, இரட்சிக்கப்பட்டிருப்பதை, உறுதிப்படுத்த விரும்பினார். இதை அவர் ஏனோதானோவென்று எடுதிக்கொள்ளவில்லை, எடுத்துக்கொள்ள விரும்பவில்லை.
அவர் தன் அப்பாவிடமிருந்தும், மூத்த சகோதரிகளிடமிருந்தும் நிறையக் கற்றுக்கொண்டார். முடிந்த எல்லாவற்றையும் கற்றுக்கொண்டார்; எதையும் கற்றுக்கொள்ளாமல் விடவில்லை. தவறு செய்தால் தப்பிக்கவில்லை, உரிய பாடத்தைக் கற்றுக்கொண்டார்.
சிறு வயதிலேயே ஜோனதன் இலத்தீன், கிரேக்க மொழிகளில் புலமைபெற்றார். நாம் எட்டாம் வகுப்புப் படிக்கும் வயதில், அவர் தன் 13ஆவது வயதில் 1716இல் ஹேவன் என்ற நகரத்தில் இருந்த யேல் பல்கலைக்கழகத்தில் இறையியல் படிக்கச் சேர்ந்தார். யேல் பல்கலைக்கழகம் அப்போதுதான் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. புத்தம்புது பல்கலைக்கழகம். அந்த நேரத்தில் அந்தப் பல்கலைக்கழகத்தில் அனுமதி கோரி விண்ணப்பித்தவர்களில் அவர்தான் மிகவும் இளையவர். “நீ மிகவும் இளையவன் என்பதால் அல்ல, இலத்தீன், கிரேக்க மொழியில் உனக்கிருக்கும் புலமையினிமித்தம் உனக்குக் கல்லூரியில் அனுமதி வழங்குகிறோம்,” என்று சொல்லி கல்லூரியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். பல்கலைக்கழகத்தில் அவர் மிகவும் அக்கறையுடனும், ஊக்கமாகவும் படித்தார்.
சிறுவயதிலிருந்தே ஒழுக்கமும், ஒழுங்கும் அவர் வாழ்வின் இணைபிரியாத நண்பர்களானார்கள். ஆனால், விசுவாச வாழ்க்கையில் அவர் போராடினார். ஊழியக்காரர்கள் நிறைந்த குடும்பம். தாத்தா, அப்பா இருவரும் ஊழியக்காரர்கள். கண்டிப்பும், ஒழுக்கமும், பக்தியும் நிறைந்த குடும்பம். ஆயினும், அவரால் எளிதில் விசுவாசிக்க முடியவில்லை.
யேல் பல்கலைக்கழகத்தின் புதிய நூலகத்தில் ஐசக் நியூட்டன்போன்ற நவீன சிந்தனையாளர்களின் புத்தகங்கள் உட்பட ஏராளமான புத்தகங்கள் இருந்தன. அவைகள் மாணவர்களுக்கு மிக எளிதில் கிடைத்தன. அந்த நேரத்தில் ஐசக் நியூட்டனின் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் உலகத்தை உலுக்கிக்கொண்டிருந்தன. ஐசக் நியூட்டன்போன்ற நவீன அறிவியலார்களின் புத்தகங்களை மட்டும் அல்ல, பல தத்துவவாதிகளின் புத்தகங்களையும் அவர் படித்தார்.
கல்லூரியில் சேர்ந்த ஒரு வருடத்தில் ஜான் லாக் எழுதிய “Essay Concerning Human Understanding” மனிதனுடைய புரிதல்பற்றிய ஒரு கட்டுரையைப் படித்து, அதன் தாக்கத்துக்கு உள்ளானார். “மனம்”, (அணுக் கோட்பாட்டின் விவாதம் அடங்கிய) “இயற்கை அறிவியல்”, “வேதங்கள்”, “இதரங்கள்” என்ற தலைப்புகளில் அவர் நிறைய எழுதினார். எதிர்காலத்தில் இயற்கையான, உளரீதியான தத்துவம் படிக்க வேண்டும் என்ற பெரிய திட்டம் தீட்டியிருந்தார்.
அவர் இயற்கையில் மிகவும் ஆர்வமுடையவர். அவர் 11 வயது சிறுவனாக இருந்தபோது, சில சிலந்திகள் தங்கள் உடலை ஊதி பலூன்போல் விரிவடையைச் செய்யும் நடத்தையை விவரிக்கும் ஒரு கட்டுரை எழுதினார். பின்னர் எட்வர்ட்ஸ் இந்தக் கட்டுரைக்கு “பறக்கும் சிலந்தி” என்று பேரிட்டார். இது சிலந்திகளைப்பற்றிய சமகாலக் கட்டுரைகளுள் மதிப்புடையதாகக் கருதப்படுகிறது.
யேலில் இரண்டு ஆண்டுகள் இறையியல் படித்து பட்டம் பெற்றபிறகும், எட்வர்ட்ஸ் அறிவியலில் தொடர்ந்து ஆர்வம் காட்டினார். பல ஐரோப்பிய அறிவியல் அறிஞர்களும், அமெரிக்க மதகுருமார்களும் அறிவியலையும், மதத்தையும் சமரசம் செய்யமுடியாமல் திணறினார்கள். அறிவியல் ஏற்படுத்திய பாதிப்பால் பலர் தேவனை மறுத்து இயற்கையை வழிபட ஆரம்பித்தார்கள். ஆனால், இயற்கை உலகம் தேவனுடைய தலைசிறந்த வடிவமைப்பிற்கு ஆதாரம் என்று எட்வர்ட்ஸ் நம்பினார். எட்வர்ட்ஸ் தன் வாழ்நாள் முழுவதும், இயற்கையின் அழகையும், ஆறுதலையும் அனுபவித்தார். எனவேதான், அவர் ஜெபிப்பதற்கும், ஆராதிப்பதற்கும் அடிக்கடி காடுகளுக்குச் சென்றார்.
இந்தக் கட்டத்தில் ஜோனதன் எட்வர்ட்ஸ் ஒரு முக்கியமான காரியத்தில் போராடிக்கொண்டிருந்தார். “தேவன் நல்லவர்; ஆனால் நல்ல தேவன் கொஞ்சப்பேரை மட்டும் தெரிந்தெடுத்து பரலோகத்துக்குக் கொண்டுபோகிறார், மீதிப்பேரை நரகத்தில் தள்ளுகிறரே! இது எப்படி சாத்தியமாகும்?” இதுதான் அவருடைய போராட்டம். “தேவன் இறையாண்மையுள்ளவர்; எனவே, தேர்ந்தெடுக்கும் உரிமை அவருக்கு உண்டு,” என்ற கருத்து அவருக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. இதை அவரால் ஏற்க முடியவில்லை. ஏற்க முடியவில்லை என்பதைவிட ஏற்க விரும்பவில்லை என்பதுதான் சரி. “இது மிகவும் மோசமான உபதேசம்,” என்று அவர் நினைத்தார். ஆனாலும், “தேவன் இல்லையென்றால் நான் நரகத்துக்குத்தான் செல்வேன்,” என்பதை அவர் ஏற்றுக்கொண்டார். “தேவனுடைய நித்திய நோக்கத்திலும், திட்டத்திலும் நம் உலகக் கவலைகளெல்லாம் மறைந்துவிடும், மங்கிவிடும்,” என்று அவர் நியாயப்படுத்தினார். இவையெல்லாம் இரட்சிப்பில் அடங்கும் என்பதை அவர் புரிந்துகொண்டதால், தான் உண்மையாகவே இரட்சிக்கப்பட்டிருக்கிறேனா இல்லையா என்பதை உறுதிப்படுத்த விரும்பினார்.
அவர் தன் 16ஆவது வயதில், Plurisy ப்ளூரிசி என்ற நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டார். அந்த நாட்களில் இது உயிருக்கு மிகவும் ஆபத்தானது. அவர் உயிர் பிழைப்பார் என்று யாரும் நினைக்கவில்லை. அவர் தேவனிடம், “தேவனே, நான் நிச்சயமாக மாறுவேன்; நீர் என்னை மாற்றுவீர்,” என்று வாக்குறுதி அளித்தார். மரணத்தின் விளிம்பில், அவர் இரட்சிப்புக்காக ஏங்கினார், தவித்தார். பிற்காலத்தில் அவர் இந்த அனுபவத்தை “நரகக் குழிக்குமேல் அசைக்கப்பட்ட அனுபவம்” என்று விவரித்தார். ஆம், அவர் குணமடைந்தார்.
உடல்நலம் திரும்பியவுடன், அவர் தன் பழைய வாழ்கைக்குத் திரும்பினார். அவருடைய முந்தைய பார்வையிலும், கண்ணோட்டத்திலும், கருத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றம் ஒன்றும் ஏற்படவில்லை. அவர் இதைப்பற்றி சிந்தித்துப்பார்த்தார். “தேவனுக்கு வாக்குறுதி கொடுத்துவிட்டு, மாறுவதாகப் பொருத்தனை செய்துவிட்டு, எப்படி என்னால் என் பழைய வழிகளுக்கு இவ்வளவு சீக்கிரத்தில் திரும்பிச் செல்லமுடிகிறது,” என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். ஆனால், இம்முறை தேவன் அவரை விடுவதாக இல்லை.
ஒரு நாள், அவர் “நித்தியமும் அழிவில்லாமையும் அதரிசனமுமுள்ள ராஜனுமாய், தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாயிருக்கிறவருக்கு, கனமும் மகிமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்,” என்ற 1 தீமோத்தேயு 1:17ஆம் வசனத்தைப் படிக்க நேர்ந்தது. அவர் இந்த வசனத்தை இதற்குமுன் பலமுறை படித்திருந்தார். ஆனால், இந்தமுறை, பரிசுத்த ஆவியானவர் அவருடன் பேசினார். அப்போது பரந்த பிரபஞ்சத்தைப் படைத்த, நித்தியமும், சர்வ ஞானமுமுள்ள, மகிமையான தேவனைப்பற்றிய ஒரு தெய்வீகப் பார்வை அவருக்குக் கிடைத்தது. அவர் இதைப்பற்றி, “தெய்வீகமானவரின் மகிமை என் ஆத்துமாவுக்குள் ஊடுருவியது. இதுவரை நான் அனுபவித்திராத அல்லது நான் இதுவரை அனுபவித்ததிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய உணர்வு என் ஆத்துமாவுக்குள் ஊடுருவியது,” என்று அவர் எழுதினார். இதற்குப்பின் அவருடைய ஜெபம் மாறிற்று. தேவன்மேல் அவர் கொண்டிருந்த அன்பு பசுமையாயிற்று. விவரிக்கமுடியாத மகிழ்ச்சி அவர் உள்ளத்தை நிரப்பிற்று. ஆயினும், அவர் இதைப்பற்றி மிகவும் எச்சரிக்கையாகவே இருந்தார். ஏனென்றால், இந்த ஒரேவொரு அனுபவத்தில் அவர் அதிகமாகக் கவனம் செலுத்த விரும்பவில்லை. இந்த ஒரேவொரு அனுபவத்தில் மட்டும் அவர் சாய்ந்துகொள்ள விரும்பவில்லை, சார்ந்துகொள்ள விரும்பவில்லை. உண்மையில் இது தன் வாழ்க்கையில் தனக்கு ஒரு பெரிய திருப்புமுனையா என்றுகூட அவருக்கு உறுதியாகத் தெரியவில்லை, ஆனால் இன்று நாம் அதைத் திரும்பிப்பார்க்கும்போது, அதுதான் அவருடைய வாழ்க்கையின் மிகப் பெரிய திருப்புமுனை என்பதைக் காணலாம்.
இந்த அனுபவத்திற்குப்பிறகு, அவர் உலகத்தை வித்தியாசமாகப் பார்க்கத் தொடங்கினார். வேதவாக்கியங்களிலிருந்து புதிய வெளிச்சத்தைப் பெறத் தொடங்கினார். தேவனுடைய படைப்பில் காட்டுமலர்கள், இடிமுழக்கங்கள், மலைகள், மடுக்கள் அனைத்தும் தேவனையும், இறுதியில் கிறிஸ்துவின் அன்பையும் சுட்டிக்காட்டும் அடையாளங்களாகவும், மாதிரிகளாகவும் அவருக்குத் தோன்றின. தேவனுடைய இறையாண்மை இப்போது அவருக்கு ஒரு மோசமான உபதேசமாகத் தெரியவில்லை; மாறாக, மனோரஞ்சிதமான திடநம்பிக்கையாக, பற்றுறுதியாக மாறிற்று.
அப்போது ஜோனதன் யேல் பல்கலைக்கழகத்தில் இறையியலில் முதுகலைப்பட்டம் படித்துக்கொண்டிருந்தார். 1722முதல் 1723 வரை, அவர் நியூயார்க்கில் வில்லியம் தெருவில் இருந்த ஒரு சிறிய Presbyterian சபையில் எட்டு மாதங்கள் பிரதிஷ்டை செய்யப்படாத “supply” pastorஆகப் பணியாற்றினார். “supply” pastor என்றால் நிரந்தரமான போதகராக நியமிக்கபடாமல் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு சபையில் பிரசங்கிக்கவும், ஊழியம் செய்யவும் பணியமர்த்தப்படும் பாஸ்டர் என்று பொருள். அப்போது அவருக்கு வயது 18. சபையார் ஜோனதனை அன்போடு வரவேற்று ஏற்றுக்கொண்டார்கள். நாளடைவில் அந்தச் சபை அவருக்கு ஒரு குடும்பம்போல் ஆனது. சபையார் அவரைத் தங்கள் நிரந்தர போதகராக இருக்குமாறு வேண்டினார்கள். அவர் அதை அன்போடு நிராகரித்தார்.
நியூயார்க் நகரம் அவருடைய கண்களைத் திறந்தது. உலகம் என்றால் என்னவென்பதைப் பார்ப்பதற்கு நியூயார்க்தான் வழிவகுத்தது. நியூயார்க் நகரத்தில் அப்போது பல்வேறு நாட்டைச் சார்ந்த 10,000 மக்கள் வாழ்ந்தார்கள். அது வேகமாக வளர்ந்துகொண்டிருந்த செழிப்பான, துடிப்பான, சுறுசுப்பான நகரம். நியூயார்க் நகரம் அவருடைய சொந்த ஊராகிய கிழக்கு விண்ட்சரையும், அவருடைய கல்லூரி இருந்த நியூ ஹாவனையும்விட மிகவும் வித்தியாசமாக இருந்தது. நியூயார்க் நகரத்தில் ஐரோப்பிய நாடுகளிருந்து குடியேறியவர்களும், ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட அடிமைகளும் வாழ்ந்தார்கள். மேலும், இதுவரை கிறிஸ்தவர்களையே பார்த்துப் பழக்கப்பட்ட ஜோனதன் முதன்முறையாக நியூயார்க் நகரத்தில் கிறிஸ்தவர் அல்லாதவர்களையும் பார்த்தார். உலகத்தில் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களும் இருக்கிறார்கள் என்று அப்போதுதான் அவருக்குத் தெரியும்.
ஜோனதன் எட்வர்ட்ஸ் தூய்மையாளர்கள் என்று அழைக்கப்படும் பியூரிட்டன்ஸ் சமூகத்தில் வளர்ந்தவர் என்பதை மறக்க வேண்டாம்.
நியூயார்க் நகரத்தில் ஞாயிற்றுக்கிழமைதோறும் விசுவாசிகள், அவிசுவாசிகள் என எல்லாரும் சபைக்குச் சென்றார்கள். “எங்களுக்கு மதம் என்று ஒன்று இல்லை,” என்று சொன்னவர்களும் சபைக்குச் செல்வதை அவர் பார்த்தார். இது அவருக்கு வினோதமாக இருந்தது. இது அவருக்குப் புதிய அனுபவம். இவ்வாறு நியூயார்க் நகரம் அவருடைய உலகக் கண்களைத் திறந்தது. அங்குதான் அவர் முதன்முறையாக யூதர்களையும் சந்தித்தார்.
அவர் நியூயார்க் சபையில் தற்காலிகமான போதகராக இருந்த இரண்டு வருடங்களில் கிறிஸ்துவில் மிக நேர்த்தியாக வளர்ந்தார். எதிர்காலத்தில் என்னவாக மாறலாம் என்பதைத் தெரிந்தெடுக்க அவருக்குப் பல வாய்ப்புகள் இருந்தன. அவரிடம் நிறைய தாலந்துக்களும், திறமைகளும் இருந்தன. அவர் கல்வியாளராக, விரிவுரையாளராக, மாறலாம். அவருக்கு அறிவியலில் அதிக ஆர்வம் இருந்தது. இவர் அறிவியலில் அவருடைய சமகாலத்தவரான பெஞ்சமின் ஃபிராங்க்ளினுக்குச் சளைத்தவர் அல்ல. எனவே, அவர் விரும்பினால், அறிவியலாளராக மாறலாம். அல்லது அவருடைய குடும்பப் பாரம்பரியத்தின்படி ஒரு போதகராக மாறலாம். எதிர்காலம் எப்படியிருக்கும், எதிர்காலத்தில் தான் என்னவாக இருப்பேன் என்பது ஒரு புறம் இருக்க இன்னொருபுறம் கல்லூரி வாழ்க்கை வழக்கம்போல் தொடர்ந்தது.
அவர் தேவனுக்குமுன்பாக பரிசுத்தமான வாழ்க்கை வாழ பாடுபட்டார். இந்தக் கட்டத்தில் அவர் தன் தனிப்பட்ட வாழ்க்கையில் பல காரியங்களோடு போராடினார்: குறிப்பாக தன் எரிச்சலோடும், நாக்கைக் கட்டுப்படுத்துவதிலும் போராடினார். தன்னிடம் பெருமை இருப்பதையும் உணர்ந்தார். தன்னிடம் உண்மையாகவே விசுவாசம் இருக்கிறதா என்ற சந்தேகம் பல சமயங்களில் அவருக்குள் எழுந்தது. தன் ஆவிக்குரிய வளர்ச்சியைச் சிந்தித்துப்பார்த்து தன் வளர்ச்சியின்மையையும், குன்றிய வளர்ச்சியையும் பார்த்துத் துக்கித்தார். அவர் எழுதிய நாட்குறிப்புகளிலிருந்து நாம் இவைகளை அறியமுடிகிறது.
குணம், நேரம், ஜெபம்போன்ற 70 காரியங்களில் தான் தீர்மானங்கள் எடுத்ததாகவும் அதில் எழுதியிருக்கிறார். இந்தத் தீர்மானங்களுக்கு “தேவனுடைய உதவியில்லாமல் என்னால் எதுவும் செய்ய முடியாது. இந்தத் தீர்மானங்கள் அவருடைய குணத்துக்கு ஒத்தவைகள் என்றால், அவருக்கு விருப்பமானால், கிறிஸ்துவினிமித்தம் அவருடைய கிருபையால் நான் இவைகளைக் கடைப்பிடிக்க எனக்கு உதவுமாறு நான் வேண்டிக்கொள்கிறேன்,” என்று ஒரு முன்னுரை எழுதியிருக்கிறார். “நான் என் வாழ்வில் ஒரு நிமிடத்தைக்கூட வீணாக்காமல் இருக்கத் தீர்மானிக்கிறேன். என்னால் முடிந்தவரை ஒவ்வொரு நிமிடத்தையும் மிகவும் பயனுள்ள வகையில் செலவழிப்பேன்,” என்று நேரத்தை எப்படிச் செலவிட வேண்டும் என்று தீர்மானித்தார். அவர் தான் தீர்மானித்தபடியே வாழ்ந்தார். இதை நாம் போகப்போகப் பார்ப்போம். இதுபோன்ற பல தீர்மானங்களை அவர் எடுத்தார். தான் எடுத்த தீர்மானங்களின்படியே வாழ்ந்தார். “நான் செய்துகொண்டிருக்கும் காரியங்களையெல்லாம் அவ்வப்போது சீர்தூக்கிப்பார்க்கிறேன். இன்றுதான் என் வாழ்வின் கடைசி நாளாக இருந்தால், நான் செய்த எந்தக் காரியத்தைக்குறித்தாவது வருத்தப்பட நேர்ந்தால் அதை நான் திருத்திக்கொள்வேன்,” என்பது இன்னொரு தீர்மானம்.
அவருடைய தீர்மானங்களை வாசிக்கும்போது, “இவைகளெல்லாம் அவருடைய சுய வளர்ச்சியைப் பற்றியவைகளாக இருக்கின்றனவே!” என்று எண்ணத் தோன்றலாம். அப்படியல்ல. ஜோனதன் எட்வர்ட்ஸ் தன் பாவ உணர்வுகளும், இயற்கையான சுயமும் தேவனுக்குப் பணிந்தடங்க வேண்டும் என்று விரும்பினார். தேவனுடைய நித்திய நோக்கமும், தேவன் தனக்காகத் தீட்டியிருக்கும் திட்டமும் தன் வாழ்வில் முழுமையாக நிறைவேறுதற்காகவும், அவர் தன்னிடம் பேச விரும்புவதைக் கேட்பதற்கு வசதியாகவும், அவருடைய சித்தம் எந்தத் தங்குதடையுமின்றி செயல்படுதற்காகவும் ஜோனதன் வளைந்துகொடுக்க விரும்பினார், விட்டுக்கொடுக்க விரும்பினார். இதன் விளைவுதான் அத்தனை தீர்மானங்கள்.
அவருடைய எல்லாத் தீர்மானங்களும் ஒருவேளை மிகவும் ஞானமுள்ளவைபோல் தோன்றாமல் போகலாம். எடுத்துக்காட்டாக, சாப்பிடுவதையும், குடிப்பதையும்குறித்தும் அவர் தீர்மானங்கள் எடுத்தார். என்ன சாப்பிட வேண்டும், எவ்வளவு சாப்பிட வேண்டும், எப்போது சாப்பிட வேண்டும் என்பதில் அவர் மிகவும் கவனமாக இருந்தார். தேவையற்ற உணவை அல்லது தேவையான உணவேயானாலும் தேவைக்கு அதிகமாகச் சாப்பிட்டு செரிமானமின்மை ஏற்பட்டால், நேரமும் உழைப்பும் வீணாகும்; படிக்க முடியாது, பயணிக்க முடியாது, மக்களைச் சந்திக்க முடியாது; உடல் நலம் கெடும்; தேவனுடைய ஊழியம் பாதிக்கும் என்று அவர் உணர்ந்ததுதான் இதற்குக் காரணம். எனவே, அவர் உயிர்வாழத் தேவையான உணவை, போதுமான அளவு மட்டுமே சாப்பிட்டார். தேவைக்கு அதிகமாகவோ, தேவையற்ற உணவையோ அவர் சாப்பிடவில்லை. எனவே, அவர் மெலிந்து காணப்பட்டார். பிரசங்கிக்க அவர் பிரசங்கமேடையில் ஏறியபோது அவரைப் பார்த்த மக்கள், “இவ்வளவு பலவீனமாகவும், மெலிந்தும் இருக்கிறார்! நோய்வாய்ப்பட்டவர்போலக் காணப்படுகிறாரே! சாப்பாட்டைக்குறித்த அவருடைய தீர்மானம் புத்திசாலித்தனமான தீர்மானம்போல் தெரியவில்லை,” என்று சொன்னார்கள். அவருடைய பரபரப்பான, சுறுசுறுப்பான அட்டவணையையும், செயல்களையும், அவருடைய உணவுப் பழக்கவழக்கங்களையும் அறிந்தவர்கள், “ஜோனதன் 40 வயதைத் தாண்டமாட்டார்,” என்று நினைத்தார்கள்.
யேல் பல்கலைக்கழகம் இருந்த ஹாவெனில் ஜேம்ஸ் பியர்பான்ட் என்பவரின் ஒரு குடும்பம். இவர் யேல் பல்கலைக்கழகத்தின் ஒரு நிறுவனர். இவருடைய மனைவி கனெக்டிகட் குடியேற்றத்தை ஏற்படுத்திய தாமஸ் ஹூகரின் மகள். இந்தக் குடும்பத்தை ஜோனத்தனின் குடும்பத்துக்கு நன்றாகத் தெரியும். இரு குடும்பத்தாரும் நல்ல நண்பர்கள். பியர்பான்ட்டின் குடும்பத்தார் யேல் பல்கலைக்கழகத்துக்கு அருகில் வசித்தார்கள். ஒருநாள் ஜோனதன் அவர்களுடைய வீட்டுக்குச் சென்றிருந்தார். அவர்களுக்கு சாராள் என்ற ஒரு மகள் இருந்தாள். அவளுக்கு அப்போது வயது 13. அந்த வயதில் அவளுடைய ஆவிக்குரிய முதிர்ச்சியும், ஆழமான விசுவாசமும், தேவனுடனான நெருங்கிய நடையும் ஜோனதானைக் கவர்ந்தன. ஜோனதன் அந்தப் பெண்ணை விரும்பினார். ஜோனதனுக்கு அப்போது வயது 19.
ஜோனதன் யேலுக்குத் திரும்பி, முதுகலைப் பட்டப்படிப்பை முடித்தார். படிப்பை முடித்து பட்டம் பெற்றவுடன் அவர் யேலில் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 21. ஆனால், இது அவருக்கு மிகவும் கொந்தளிப்பான, கலக்கமான, காலமாக மாறியது. ஏனென்றால், யேல் பல்கலைக்கழகத்தின் முகவர் தீமோத்தேயு கட்லர் சமீபத்தில்தான் பதவி விலகியிருந்தார். அது கல்லூரி நிர்வாகத்தில் ஒரு பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியிருந்தது. இரண்டு ஆண்டுகளாகியும் அவருக்குப்பதிலாக சரியான நபரை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, கல்லூரியை நிர்வகிக்கும் சுமை ஜோனதன்மேலும், இன்னொரு ஆசிரியர்மேலும் விழுந்தது. இது 1724-1726 கால கட்டம். பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த ஆசிரியர்களும், சில சமயங்களில் உள்ளூர் மதகுருமார்களும் நிர்வாகத்தை நடத்த ஒத்துழைத்தார்கள். ஆனால், எதுவும் அவர்கள் நினைத்ததுபோல், எதிர்பார்த்ததுபோல் சரியாக நடக்கவில்லை.
மாணவர்களைச் சமாளிக்க முடியவில்லை. பழைய மாணவர்கள் மட்டும் அல்ல, புதிய மாணவர்களும் நிலைமையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, போக்கிரித்தனமான செயல்களில் ஈடுபட்டார்கள். நடைக்கூடங்களிலும், அரங்கங்களிலும், திறந்த வெளிகளிலும் கூச்சலிட்டார்கள், அமளிசெய்தார்கள், வகுப்புகள் நடந்துகொண்டிருந்தபோதே தாழ்வாரங்கள் வழியாக ஓடி மணிஅடித்தார்கள். துயில்கூடத்தில் கண்ணாடிகளை உடைத்தார்கள்; துப்பாக்கியால் சுட்டு விளையாடினார்கள்.
மூன்று ஆண்டுகள் கழிந்தன. இந்த மூன்று ஆண்டுகள் ஆவிக்குரிய இடுக்கண்களும், துன்பங்களும் நிறைந்தவை என்று அவர் குறிப்பிடுகிறார். அந்த நாட்களில் அவருடைய இந்த நிலைக்கு என்ன காரணம் என்று தெளிவாகத் தெரியவில்லை. என்னவாக இருக்கலாம் என்று சில குறிப்புகளிலிருந்து ஊகிக்கலாம். அந்தப் போக்கிரி மாணவர்களோடு நல்லுறவை ஏற்படுத்த அவர் மிகவும் போராடினார் என்று தெரிகிறது. அவர்கள் படிக்க வந்தவர்கள்போல் தெரியவில்லை. அவர்கள் படிப்பை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. மேலும், சாராளைப்பற்றிய நினைவும் அவருடைய கவனத்தைத் திசைதிருப்பியிருக்கலாம் என்று தெரிகிறது. அவர் உயர்ந்த தரமான வாழ்க்கை வாழ விரும்பினார். தான் தேவனுக்குமுன்பாக வாழும் வாழ்க்கையைவிட்டு எதுவும் திசைதிருப்பக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அந்த நாட்களில் அவர் தன் நாளேட்டில் எழுதியுள்ள சில வரிகள் இந்தப் போராட்டத்தை விவரிக்கின்றன. டிசம்பர் 29 இல் “மந்தம், உயிரில்லை” என்றும், ஜனவரி 9இல், “சிதைந்து, அழுகுகிறேன்” என்றும் ஜனவரி 10இல், “குணமடைகிறேன்” என்றும் எழுதியிருக்கிறார்.
பிப்ரவரி 15, 1727இல், ஜோனதன் நார்தாம்ப்டனில் போதகராகப் பிரதிஷ்டை செய்யப்பட்டார். அங்கு அப்போது போதகராக இருந்த தன் தாத்தா சாலொமோன் ஸ்டோடார்டுக்கு உதவியாளராக நியமிக்கப்பட்டார். அவருடைய தாத்தா மிகவும் பிரபலமானவர் என்று ஏற்கெனவே சொன்னேன்.
அவருடைய தாத்தா சாலொமோன் ஸ்டோடார்ட் மிகவும் வயதானவர். அவருக்கு நிச்சயமாக உதவி தேவைப்பட்டது. உதவிக்கு மட்டும் அல்ல, விரைவில் தனக்குப்பதிலாக இன்னொருவர் தேவைப்படுவார் என்றும் அவருக்குத் தெரியும். எனவே, தன் பேரன் ஜோனதன் எட்வர்ட்ஸ் ஊழியத்தில் தனக்கு உதவ முன்வந்ததற்காக மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அந்த நாட்கள் ஜோனதன் எட்வர்ட்சுக்கு நல்ல பயிற்சியும் கிடைத்தது என்று சொல்லலாம்.
அதே வருடம் ஜோனதன் எட்வர்ட்ஸ் தன் 23ஆவது வயதில் 17 வயது சாராள் பியர்பான்ட்டைத் திருமணம்செய்தார்.
சாலொமோன் ஸ்டோடார்ட் பிப்ரவரி 11, 1729இல் காலமானார். 13 குடியேற்றங்களில் இருந்த சபைகளில் நார்தாம்ப்டன் சபைதான் மிகப் பெரிய, பணக்காரச் சபை. அந்தச் சபைக்கு ஜோனதன் இப்போது நிரந்தர போதகரானார். அந்தச் சபையின் உறுப்பினர்கள் தங்கள் ஒழுக்கம், கலாச்சாரம், நற்பெயர் ஆகியவைகளில் பெருமிதம் கொண்டவர்கள். ஜோனதன் தன் இள வயதில், 25ஆவது வயதில், அந்தச் சபையில் ஏற்படுத்திய தாக்கத்தைப்பற்றி, “ஒரு பக்கம் பெர்க்கிலியைப்பற்றியும், இன்னொருபுறம் லாக், டெஸ்கார்டெஸ், ஹோப்ஸ் போன்றவர்களைப்பற்றியும் தியானித்த ஜோனதன் கிறிஸ்தவத்தைப் பகுத்தறிவுவாதம் என்னும் முட்டுக்கட்டையிலிருந்தும், சந்தேகம் என்னும் முடக்குவாதத்திலிருந்தும் காக்க முடியும் என்று நம்பினார்,” என்று ஜாண் ஸ்மித் எழுதுகிறார்.
அப்போது நார்தாம்ப்டனில் சுமார் ஆயிரம்பேர் இருந்தார்கள். அது பரபரப்பான, வளமான, வளர்ந்துகொண்டிருந்த ஒரு நகரம். ஜோனதனுக்கும் சாராளுக்கும் நகரத்தார் 10 ஏக்கர் நிலம் கொடுத்தார்கள். எந்த நகரத்தில் சபை இருக்கிறதோ, அந்த நகரத்தார் போதகருக்குத் தேவையான நிலத்தைக் கொடுப்பது அன்றைய பழக்கம். போதகர் தனக்காகவும் தன் குடும்பத்துக்காகவும் நிலத்தைப் பண்படுத்தி, பயிரிட்டு, பலனை அனுபவிக்கலாம். இதுதான் அன்றைய ஏற்பாடு.
அவர்களுடைய முதல் குழந்தை 1728இல் பிறந்தது. அவர்களுக்கு மொத்தம் 11 குழந்தைகள். அந்த நாட்களில் எல்லாக் குடும்பங்களிலும் சராசரியாக எட்டு அல்லது ஒன்பது குழந்தைகள் இருந்தார்கள். ஆனால், நிறையக் குழந்தைகள் ஐந்து வயதை எட்டுவதற்குள் இறந்துவிட்டார்கள். தேவனுடைய கிருபையால் ஜோனதன் தம்பதியின் பதினொரு குழந்தைகளும் தப்பிப்பிழைத்தார்கள். இது அந்த நாட்களில் மிகவும் அசாதாரணமானது.
நார்தாம்ப்டனில் 1000பேர் இருந்தார்கள் என்று நான் ஏற்கெனவே சொன்னேன். அங்கு வாழ்ந்த எல்லாரும், சபைக்குச் சென்றார்கள், எல்லாக் கூட்டங்களிலும், ஆராதனைகளில் கலந்துகொண்டார்கள். ஆயினும், அவர்களில் பலர் உண்மையாகவே இரட்சிக்கப்படவில்லை என்பதை ஜோனதன் உணர்ந்தார். இந்த நிலைமையைப்பற்றி அவர், “மக்கள் ஓய்வுநாள்தோறும் தவறாமல் சபைக்கு வருகிறார்கள். தேவனுடைய வார்த்தையைக் கேட்கிறார்கள்; ஆனால் தாங்கள் இரட்சிக்கப்பட வேண்டும் என்ற ஆர்வமோ, ஆவலோ, தவிப்போ அவர்கள் உள்ளத்தில் எழவில்லை. அவர்கள் கேட்கிற வார்த்தையால் அவர்கள் உயிரடையவில்லை” என்று கருதினார்.
நார்தாம்ப்டனில் நிலங்களைக்குறித்த சட்டங்கள் மாறிக்கொண்டிருந்தன. புதிய நிலச் சட்டத்தின்படி, வாலிபர்கள் தங்கள் குடும்ப வீட்டைவிட்டு உடனடியாக வெளியேற முடியவில்லை; எனவே அவர்கள் முன்பைவிட நீண்ட காலம் பெற்றோருடன் சேர்ந்து வாழ்ந்தார்கள். இதன் விளைவாக நார்தாம்ப்டனிலும், பிற இடங்களிலும் வாலிபர்கள் தங்களுக்கென்று ஒரு புதிய கலாச்சாரத்தை உருவாக்கத் தொடங்கினார்கள்.
வாலிபர்களின் புதிய கலாசாரத்தின் விளைவாகப் போதகர்களுக்கு மரியாதை குறைந்தது; வாலிபர்கள் போதகர்களை மதிக்கவில்லை. விரும்பத்தகாத பல புதிய பழக்கங்கள் உருவெடுத்தன. குறிப்பிடத்தக்க ஒரு பழக்கம் என்னவென்றால் உல்லாசமாக இருப்பது. அதாவது ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் நிறைந்த ஒரு கலாச்சாரம், குத்தாட்டம், கும்மாளம், கூத்து, கேளிக்கை நிறைந்த ஒரு கலாச்சாரம், உருவெடுத்தது. ஞாயிற்றுக்கிழமைகளில் சபைக் கூட்டங்களில் கலந்துகொண்டபின், சபையின் ஆராதனைகளும், எல்லாக் கூட்டங்களும் முடிந்தபின் வாலிபர்கள் இரவு நேரங்களில் ஓரிடத்தில் கூடி கும்மாளம் போட்டார்கள். ஞாயிற்றுக்கிழமையின் இறுக்கத்தைப் போக்குகிறார்களாம்! கட்டுப்பாடுகளைக் காற்றில் பறக்கவிட்டார்கள், ஒழுக்கம் வழுக்க ஆரம்பித்தது. தெருக்களில் கூச்சலிட்டுக்கொண்டு ஓடினார்கள். உள்ளூர் உணவகங்களில் கேளிக்கைகள் நடத்தினார்கள். பாலியல் ஒழுக்கக்கேடுகள் அதிகரித்தன. அநேகப் பெண்கள் திருமணத்திற்குமுன்பே கருவுற்றார்கள்.
இந்தச் சூழ்நிலையில், நகரின் பிரபலமான, பலரால் மதிக்கப்பட்ட ஒரு வாலிபன் 1734இல் நோய்வாய்ப்பட்டு, இரண்டே நாட்களில் இறந்தான். பிற வாலிபர்கள் மட்டும் அல்ல, நார்தாம்ப்டன் நகரமே அதிர்ச்சியில் உறைந்தது. ஜோனதான் அந்த அடக்க ஆராதனையில், “அவர்களை வெள்ளம்போல் வாரிக்கொண்டுபோகிறீர்; நித்திரைக்கு ஒத்திருக்கிறார்கள்; காலையிலே முளைக்கிற புல்லுக்கு ஒப்பாயிருக்கிறார்கள். அது காலையிலே முளைத்துப் பூத்து, மாலையிலே அறுப்புண்டு உலர்ந்துபோம்,” என்று சங்கீதம் 90:5, 6யை ஆதாரமாகவைத்துப் பிரசங்கித்தார். “வாலிபர்களே, சிந்தியுங்கள், சிந்தியுங்கள். வாழ்க்கை என்னவென்று சிந்தியுங்கள். இதுபோன்ற ஓர் அடக்கப்பெட்டியில் நீங்கள் கிடத்தப்பட்டிருக்கும் அந்த நாளைச் சிந்தியுங்கள். அதற்குமுன், இன்றே கிறிஸ்துவை விசுவாசித்து, அவரிடம் திரும்புங்கள்,” என்று அழுத்தமாகப் பேசினார். இப்படிப்பட்ட பிரசங்கத்தைக் கேட்பவன் அமர்ந்திருக்க முடியுமா? அவர் இடிமுழக்கம்போல் பிரசங்கிப்பவர் அல்ல. அவருடைய பிரசங்கம் அமர்ந்த மெல்லிய சத்தம்போன்றது. ஜோனதனின் உயிரோட்டமான பிரசங்கம் வாலிபர்களுக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. இதற்குப்பிறகு ஒன்றிரண்டு நாட்களில் இன்னொரு மரணம். அதே நேரத்தில் மற்றொரு வாலிபப்பெண் மிகவும் நோய்வாய்ப்பட்டாள். மரணப் படுக்கையில் இருந்தபோதும் அவள் கிறிஸ்துவின் அன்பைப் பறைசாற்றினாள். ஒன்றிரண்டு நாட்களில் இறந்துபோனாள். அவளுடைய அடக்க ஆராதனையில் ஜோனதன் பிரசங்கித்தார். “இந்தப் பெண் இப்போது கர்த்தருடன் இருக்கிறாள் என்பதை அறியும்போது ஏற்படும் மகிழ்ச்சியை விவரிக்க முடியாது. இந்த உலகத்தின் அன்பைவிட மிக மேலான அன்பினால் அவள் மூடப்பட்டிருக்கிறாள், பொதிந்துவைக்கப்பட்டிருக்கிறாள், என்பதை அறியும்போது எழும் உவகையை என்னென்போம்!” என்று பிரசங்கித்தார். அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த மரணங்கள் அங்கிருந்த வாலிபர்களை உலுக்கியது. இறந்தவர்கள் ஊரில் செல்வாக்குமிக்கவர்கள், உயர்குடிமக்கள். இந்த மரணங்கள் வாலிபர்களின் உள்ளத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இரண்டு மாறுபட்ட மரணங்கள். ஒரு வாலிபன் கிறிஸ்துவை விசுவாசிக்காமல் மரித்தான்; ஒரு வாலிபப் பெண் கிறிஸ்துவை விசுவாசித்து மரித்தாள்.
அதே ஆண்டின் இலையுதிர்காலத்தில், அதாவது 1734இல், வாலிபர்கள் உண்மையாகவே மனந்திரும்பினார்கள், மாறத் தொடங்கினார்கள். தெருக்களில் கூடி கூத்தடிப்பதையும், மதுக்கடைகளில் குழுமி குடிப்பதையும் நிறுத்திவிட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவுகளில் வீடுகளில் சிறுசிறுக் குழுக்களாகக் கூட ஆரம்பித்தார்கள். அவர்களைத் தொடர்ந்து பெரியவர்களும் வீட்டுக் கூட்டங்களில் பங்கெடுக்க ஆரம்பித்தார்கள். இது வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க காலம் என்று சொல்ல வேண்டும். ஒரு மாபெரும் எழுப்புதல், உயிர்மீட்சி, ஏற்பட்டது. பரிசுத்த ஆவியானவர் வல்லமையாக வேலை செய்துகொண்டிருந்தார். வாராவாரம் 100க்கணக்கான மக்கள் மனந்திரும்பினார்கள். இந்த எழுப்புதல் 5-6 வாரங்கள் நீடித்தது. மக்கள் கூட்டம் கூட்டமாக மனந்திரும்பி, பாவமன்னிப்பின் நிச்சயத்தைப் பெற்றார்கள், இரட்சிக்கப்பட்டார்கள்.
அடுத்த ஆண்டு முழுவதும், நார்தாம்ப்டனிலும், நியூ இங்கிலாந்தின் வேறு பல இடங்களிலும், பிரிட்டனிலும் அதற்கு அப்பாலும் இந்த எழுப்புதல் தொடர்ந்தது. இந்த உயிர்மீட்சியின் காலங்களில் தேவன் தம் மக்களுக்கு மிக அருகில் நெருங்கி வந்தார்; அவிசுவாசிகள் பாவ உணர்வடைந்து, மனந்திரும்பினார்கள். விசுவாசிகள் ஆவிக்குரிய நிஜத்தைப்பற்றிய ஆழமான உணர்வடைந்தார்கள்.
அந்த நகரத்தில் தேவனை நிராகரித்த, விசுவாசிக்க மறுத்த, மிகவும் பிரபலமான ஓர் இளம் பெண் இருந்தாள். அவள் மிகவும் கரடுமுரடானவள், ஒழுக்கத்தைப் பொருட்படுத்தாதவள். அவள் ஒருநாள் ஜோனதனின் வீட்டிற்கு வந்து, அவரைச் சந்தித்து அவரோடு பேசினாள். அந்தச் சந்திப்புக்குப்பின் அவள் இரட்சிக்கப்பட்டாள். அதைத் தொடர்ந்து அவள் தான் பெற்ற இரட்சிப்பைப்பற்றித் தன் சகாக்களுக்குச் சாட்சி சொல்ல ஆரம்பித்தாள். அவளுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட வியத்தகு மாற்றத்தைக் கண்டு மக்கள் வியந்தார்கள். அவளுடைய சாட்சியைக் கேட்ட பலர் இரட்சிக்கப்பட்டார்கள்.
விரைவில் ஆவிக்குரிய அறிவுரையும், ஆலோசனையும் கேட்க ஏராளமான மக்கள் ஜோனதனின் வீட்டிற்குமுன் நீண்ட வரிசையில் நின்றார்கள். அடிமைகள் ஆள்பவர்கள், ஏழை பணக்காரர்கள், பெரியவர்கள் சிறியவர்கள், ஆண்கள் பெண்கள் என எல்லா வயதினரும், எல்லாப் பின்புலத்தவர்களும் அவருடைய ஆலோசனையை நாடினார்கள்.
அங்கு ஏற்பட்ட உயிர்மீட்சியை, எழுப்புதலை, ஜோனதன் பார்த்தார். ஒருபுறம் அவர் பரவசமடைந்தார். இன்னொருபுறம் அவர் மிகவும் எச்சரிக்கையாக இருந்தார். ஏனென்றால், இது வெறுமனே உணர்ச்சிசார்ந்தததாக இருந்துவிடக் கூடாது என்பதில் அவர் கண்ணுங்கருத்துமாக இருந்தார். உணர்ச்சி வெள்ளத்தில் மக்கள் அடித்துச் செல்லப்பட முடியும், ஒருவிதமான உணர்ச்சிக் கிளர்ச்சியில் அவர்கள் சிக்கிக்கொள்ள முடியும் என்று அவருக்குத் தெரியும். உண்மையாகவே இரட்சிக்கப்பட்டவர்கள் யார் என்று தேவனுக்கு மட்டும்தான் தெரியும் என்றும் அவருக்குத் தெரியும். மனந்திரும்பிய மக்களுடைய வாழ்வில் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்டு, இது வெறுமனே உணர்ச்சிசார்ந்ததல்ல என்பதை அவர் போகபோகத் தெரிந்துகொண்டார். ஏற்பட்ட மாற்றங்கள் தற்காலிகமானவை அல்ல, மாற்றங்கள் நிலைத்திருந்தன.
ஆயிரம்பேர் வாழும் ஒரு நகரத்தில் சில நூறுபேர் உண்மையாகவே மனந்திரும்பி இரட்சிக்கப்பட்டது அங்கும், அருகிலிருந்த இடங்களிலும் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஜோனதன் ஆவிக்குரியவர் மட்டும் இல்லை, அவர் அறிவியல்பூர்வமானவரும் என்பதால் அவர் அந்த உயிர்மீட்சி எப்படி ஏற்பட்டது என்பதை அலசி ஆராய்ந்தார். மக்கள் மனந்திரும்பிய வழிகளையும், கட்டங்களையும், வகைகளையும் அவர் மிக நுணுக்கமாகப் பரிசீலித்து, நார்தாம்ப்டனில் “தேவனுடைய ஆச்சரியமான வேலையின் உண்மைக் கதை” என்ற தலைப்பில் ஒரு விரிவான கட்டுரை எழுதினார். பிறர் இதைப் படிக்கும்போது அவர்களுக்குள் இது நேர்மறையான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் நம்பினார். அவர் தான் எழுதிய கட்டுரையை, அந்த நேரத்தில் நியூ இங்கிலாந்தின் மிகப் பெரிய நகரமான பாஸ்டனில் இருந்த பெஞ்சமின் கோல்மன் என்ற ஒரு முக்கியமான போதகருக்கு அனுப்பினார்.
ஒரு வருடம் கழித்து, அவர் பல்வேறு முக்கியமான தலைப்புகளில், குறிப்பாக, எழுப்புதலுக்குப் பயனுள்ளவைகளாக இருந்த ஐந்து பிரசங்கங்களை வெளியிட்டார்.
ஆனால், அடுத்த ஆண்டு அதாவது ஜூன் 1735இல் ஒரு சோகச் சம்பவம் நிகழ்ந்தது. அந்த நகரத்தில் இருந்த ஒரு முக்கியமானவர் தன் கழுத்தை அறுத்துத் தற்கொலை செய்துகொண்டார். அவர் ஜோனதனின் உறவினரும் ஆவார். இவர் ஜோனாதனிடம் ஏற்கெனவே ஆலோசனை கேட்டிருந்தார். இவர் தன் பாவ நிலையை உணர்ந்து ஒரு விதமான விரக்தியில் இருந்தார். ஒரு விதமான மனச்சோர்வு. அதனால், அவர் தற்கொலைசெய்துகொண்டார். ஜோனதன் அதிர்ச்சியடைந்தார்; முழு நகரமும் உறைந்துபோனது. இந்த அசம்பாவிதத்திற்குப்பின் அந்த நகரத்தில் இருந்த அனைவரையும் பாவ உணர்வு ஆட்கொண்டது. ஒரு பக்கம், பாவ பாரத்தினால் பலர் மனந்திரும்பினார்கள்; இன்னொரு புறம், சிலர் தங்களை மாய்த்துக்கொண்டார்கள். இந்த அசம்பாவித்தால், அப்போது ஏற்பட்ட எழுப்புதல் தீ அணைந்துபோனது; இந்த மரணங்களும், தற்கொலைகளும் உயிர்மீட்சியின் வீரியத்தை முற்றிலும் முடக்கின.
ஜோனதன் தான் எழுதியனுப்பின கட்டுரையைத் திரும்ப வாங்கி, எழுப்புதலுக்குப் பிறகு அப்போது நடந்துகொண்டிருந்ததைப் பிற்சேர்க்கையாகச் சேர்த்து எழுதினார். தேவன் வேலைசெய்யும்போது சாத்தானும் சுறுசுறுப்பாக செயல்படுகிறான் என்றும், இந்த எழுப்புதல்கள், உயிர்மீட்சிகள், நீண்டநாள்கள் நிலைக்காது என்றும் அவர் புரிந்துகொண்டார். இந்தக் கால கட்டம் தேவனுடைய மும்முரமான செயல்களின் காலம், பரிசுத்த ஆவியானவர் வல்லமையாகச் செயல்பட்ட காலம். தேவன் தாம் ஆரம்பித்த வேலையைச் செய்து முடிப்பார் என்று அவருக்குத் தெரியும்.
ஜோனதன் நார்தாம்ப்டனில் உள்ள சபையின் எழுப்புதலுக்காக மட்டும் அல்ல, உலகளாவிய எழுப்புதலுக்காகவும் ஜெபிக்கத் தொடங்கினார். ஜோனதன் தான் திருத்தி எழுதிய கட்டுரையைப் பாஸ்டனிலிருந்த பெஞ்சமின் கோல்மனுக்கு மீண்டும் அனுப்பினார். அவர் அதை இங்கிலாந்திலிருந்த ஐசக் வாட்ஸ் என்ற போதகருக்கு அனுப்பினார். ஐசக் வாட்ஸ் அதைப் படித்துவிட்டு, அச்சிட்டு வெளியிட விரும்பினார். ஆனால், அதற்குமுன் அவர், “இன்னும் கொஞ்சம் கூடுதலான விவரங்களைச் சேர்க்குமாறு ஜோனதனிடம் சொல்லுங்கள்,” என்று பெஞ்சமின் கோல்மனுக்குக் கடிதம் எழுதினார். எனவே, இந்தக் கட்டுரை தொடர்பாக ஐசக் வாட்சும் ஜோனதன் எட்வர்ட்சும் கடிதப் பரிமாற்றங்கள் செய்தார்கள்.
அந்த நேரத்தில் ஐசக் வாட்ஸ் பல பாடல்கள் எழுதி அதை ஒரு புத்தகமாக வெளியிட்டிருந்தார். அந்தப் பாடல் புத்தகம் ஜோனதன் எட்வர்ட்சிடம் இருந்தது, ஜோனதனும், சாராளும் இசைப் பிரியர்கள். அவர்கள் ஐசக் வாட்சின் பாடல்களை மிகவும் ஆர்வத்தோடும், ஆவலோடும் பாடினார்கள். ஐசக் வாட்சின் பாடல் புத்தகம் இல்லாதபோது அதற்குமுன் அவர்கள் சங்கீதங்களை இராகத்தோடு வாசித்தார்கள். எனவே, பாடல் புத்தகம் அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்போல் இருந்தது. இது ஒரு பெரிய மாற்றம், முன்னேற்றம். குறிப்பாக வாலிபர்கள் ஐசக் வாட்சின் பாடல்களை மிகவும் விரும்பிப் பாடினார்கள். ஜோனதன் எட்வர்ட்சும், நார்தாம்ப்டனில் இருந்த அவருடைய சிறு மந்தையும் இன்று நாம் பாடுகிற அதே பாடல்களைப் பாடினார்கள் என்பதை நினைத்துப் பார்ப்பது எவ்வளவு இன்பமாக இருக்கிறது. “When I survey the wondrous cross (மாட்சியின் கர்த்தர் தொங்கி மாண்ட)”, “joy to the world.” “Our God, Our Help in Ages Past (கர்த்தாவே அடியார்க்கென்றும்)” “My God, My Portion, and My Love (என் தேவனே, பங்கே, அன்பே)” இவைகளெல்லாம் ஐசக் வாட்ஸ் எழுதிய சில பாடல்கள். நீங்கள் விரும்பினால் “When I survey the wondrous cross (மாட்சியின் கர்த்தர் தொங்கி மாண்ட),”My God, My Portion, and My Love (என் தேவனே, பங்கே, அன்பே)” ஆகிய பாடல்களை https://www.youtube.com/watch?v=-FqnDpUCTX4, https://www.youtube.com/watch?v=aBolCrTNp-0 யூடூப்பில் பார்க்கலாம், கேட்கலாம்
ஜோனதன் உலகம் முழுவதும் தேவனுடைய ஆணித்தரமான, அழுத்தமான அசைவுக்காக ஜெபித்துக்கொண்டிருந்த நேரத்தில் இங்கிலாந்தில் ஜார்ஜ் விட்ஃபீல்ட் என்ற ஒருவரை தேவன் இரட்சித்து, தன்னைச் சேவிக்க அழைத்திருந்தது ஜோனதனுக்குத் தெரியாது. ஜார்ஜ் விட்ஃபீல்ட் இங்கிலாந்து முழுவதும் பயணம் செய்து, அன்றைய வழக்கத்துக்கு மாறாக, சபைகளுக்கு வெளியே, திறந்த வெளிகளில் பிரசங்கித்தார். அவருடைய பிரசங்கத்தைக் கேட்கத் திரளான மக்கள் கூடினார்கள். அதே நேரத்தில்தான் ஜாண் வெஸ்லியும் தன் விசுவாசத்தில் போராடிக்கொண்டிருந்தார். அவரும் சமீபத்தில்தான் இரட்சிக்கப்பட்டிருந்தார். அவருடைய இருதயமும் அனல்கொண்டது. ஜோனதன் எழுதிய கட்டுரை இவர்கள் இருவருக்கும் கிடைத்தது. அவர்கள் படித்து மகிழ்ந்தார்கள், உற்சாகமடைந்தார்கள். ஊழியத்தில் உரம்கொண்டார்கள். ஜாண் வெஸ்லி அதைக் கொஞ்சம் மெருகேற்றி, திருத்திய பதிப்பை ஸ்காட்லாந்துக்கு அனுப்பினார். அங்கு அது மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
விட்ஃபீல்ட் முதன்முறை 1738இல் அமெரிக்காவிற்கு வந்தார். அதன்பின் அவர் தன் வாழ்நாளில் ஏழுமுறை அமெரிக்காவுக்கு வந்தார். பெஞ்சமின் ஃபிராங்க்ளின் விட்ஃபீல்ட்டின் பிரசங்கத்தை விரும்பிக் கேட்டார். சரியாகச் சொல்வதானால் விட்ஃபீல்ட் பிரசங்கித்த கருப்பொருளைவிட அவருடைய குரலை மிகவும் விரும்பினார். இன்றைக்கும் இப்படிப்பட்டவர்கள் அநேகர் இருக்கிறார்கள்.
அது கிறிஸ்தவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் எல்லாவற்றுக்கும் மதகுருமார்களைச் சார்ந்திருந்த, நோக்கிப்பார்த்த, காலம். ஆலயத்தில் மதகுருக்களுக்குத்தான் அதிகாரம் உண்டு என்ற உணர்வு மேலோங்கி நின்றது. கிறிஸ்தவர்கள் அவர்களை தங்கள் வாழ்வின் வழிகாட்டிகளாகக் கருதினார்கள். தங்கள் ஆவிக்குரிய தேவைகளுக்காக அவர்கள் மதகுருமார்களை நாடினார்கள்.
ஆனால், விட்ஃபீல்ட் மிகவும் வித்தியாசமானவர். ஏனென்றால், அவர் நேரடியாக மக்களிடம் பேசினார். “மதகுருக்களைச் சார்ந்திருப்பதை விட்டுவிட்டு, அவர்களை நோக்கிப்பார்ப்பதை விட்டுவிட்டு, நேரடியாக தேவனிடம் வாருங்கள்,” என்று அவர் அறைகூவல் விடுத்தார். அவருக்கு நிறைய மதகுருமார்களைத் தெரியும். அவர்களில் பலர் இன்னும் இரட்சிக்கப்படாதவர்கள் என்று அவர் திட்டவட்டமாக அறிந்திருந்தார். அன்றைய மதகுருமார்களைக்குறித்துப் பேச அவரிடம் நிறையக் காரியங்கள் இருந்தன. அவர் அவர்களைக், “குருடருக்கு வழிகாட்டுகிற குருடர்கள்,” என்று குறிப்பிட்டார். அவருடைய இந்தக் கூற்று 100 விழுக்காடு உண்மையில்லையென்றாலும், பெரும்பாலும் உண்மை என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்தக் காலகட்டத்தில் ஜோனதன் நார்தாம்ப்டனில் தன் சிறு மந்தையின் வெதுவெதுப்பான நிலையைக்குறித்து மிகவும் வருத்தப்பட்டார். 1734இல் ஏற்பட்ட அந்த எழுப்புதலுக்குப்பின், விஷயங்கள் மோசமாகத் தொடங்கின. சபைக் கட்டிடத்தைக்குறித்தும், புதிய சபைக் கட்டிடம் கட்டுவதைக்குறித்தும் உறுப்பினர்களுக்கிடையே சச்சரவுகள் எழுந்தன. சபையில் இருக்கைகளை எப்படி ஏற்பாடுசெய்யவேண்டும் என்பதைக்குறித்தும் சிக்கல் ஏற்பட்டது. ஆனால் தேவன் தாம் ஆரம்பித்த வேலையைத் தொய்வில்லாமல் தொடர்ந்து செய்வார் என்றும், இந்தச் சிக்கல்களையும், சச்சரவுகளையும் நிச்சயமாகத் தீர்ப்பார் என்றும் ஜோனதன் விசுவாசத்தோடு வாழ்ந்தார்.
விசுவாசிகளின் வாழ்வில் பின்னடைவும், சபையில் ஆவிக்குரிய வெதுவெதுப்பும் ஏற்பட்டபோதும் நார்தாம்ப்டனில் ஏற்பட்ட எழுப்புதலையும், இதில் ஜோனதனின் பங்கையும்பற்றிய தகவல் ஸ்காட்லாந்து, இங்கிலாந்து நாடுகள்வரை பரவியது. இதனால் ஜார்ஜ் விட்ஃபீல்ட் ஜோனதனைப்பற்றிக் கேள்விப்பட்டார். ஜார்ஜ் விட்ஃபீல்ட் 1739-1740இல் அமெரிக்காவில் பிரிட்டனின் ஆதிக்கத்தின்கீழ் இருந்த 13 குடியேற்றங்களில் பயணம்செய்து நற்செய்தி அறிவித்தார். முதலாவது போஸ்டனிலும், அடுத்து நார்த்தம்ப்டனிலும் பிரசங்கித்தார்.
நார்தாம்ப்டனில் அவர் ஜோனதன் வீட்டில்தான் தங்கினார். இரண்டுபேரும் மிகவும் மாறுபட்டவர்கள். ஜோனதன் உயரமானவர், ஒல்லியானவர், 37 வயதானவர், மிகவும் இறுக்கமானவர். அவருடைய கடுமையான வேலை, உணவுப்பழக்கம் ஆகியவைகளின் காரணமாக அவர் மிகவும் வயதானவர்போல் தோற்றமளித்தார். விட்ஃபீல்ட் பிரகாசமான, உயிர்த்துடிப்புள்ள, வலிமையான, ஆற்றல்மிக்க, வியத்தகு, பேச்சாற்றலுள்ள 25 வயது வாலிபன். ஆனால் அவர்கள் இருவரும் நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் ஆர்வமாக இருந்தார்கள். விட்ஃபீல்ட் ஜோனதனின் வீட்டில் தங்கி, அவரோடு பழகியபிறகு அவரால் ஈர்க்கப்பட்டார்.
மீண்டும் ஓர் உயிர்மீட்சி ஏற்பட்டது. நார்தாம்ப்டன் சபையில் விட்ஃபீல்ட் பிரசங்கித்தபோது, சில வருடங்களுக்கு முன்பு அவர்கள் பெற்ற உயிர்மீட்சியை அவர் அவர்களுக்கு நினைப்பூட்டினார். விட்ஃபீல்ட் பிரசங்கத்தைக் கேட்டு ஜோனதன் அழுதார். சபையார் அனைவரும் நொறுங்கினார்கள். “நான் அங்கு தங்கியிருந்து அடுத்த ஓய்வு நாளில் பிரசங்கித்தபோது ஜோனதன் அழுதுகொண்டேயிருந்தார். நியூ இங்கிலாந்தில் ஜோனதன், சாராள் எட்வர்ட்சைப்போன்றவர்களை நான் இதுவரை சந்திக்கவில்லை,” என்று விட்ஃபீல்ட் தன் நாளேட்டில் எழுதினார்.
ஜோனதனும், விட்ஃபீல்டும் ஒருநாள் கனெக்டிகட் ஆற்றின்வழியாக கிழக்கு விண்ட்சரை நோக்கிச் சென்றார்கள். அப்போது மக்களிடையே ஏற்பட்டிருந்த ஆவிக்குரிய எழுப்புதலை ஜோனதன் கண்கூடாகக் கண்டார். விட்ஃபீல்ட் வருகிறார் என்ற செய்தியைக் கேட்ட மக்கள் வயல்களிலும், பண்ணைகளிலும் தாங்கள் செய்து கொண்டிருந்த வேலைகளையும், கையில் வைத்திருந்த பொருட்களையும் அப்படியே போட்டுவிட்டு அவரைநோக்கி ஓடினார்கள். மக்கள் குதிரைகளில் ஏறிப் பறந்தார்கள் அல்லது கால்நடையாக வேகவேகமாக நடந்தார்கள். குதிரைகளும், ஆட்களும் ஓடியபோது எழுந்த புழுதி மேகங்கள் நகரத்தை மூடின.
மதகுருமார்களைக் “குருடர்களுக்கு வழிகாட்டுகிற குருடர்கள் என்று விட்ஃபீல்ட் கண்டனம்செய்வது எப்போதுமே புத்திசாலித்தனமாக இருக்காது,” என்று ஜோனதன் நினைத்தார். மதகுருமார்களைக்குறித்த தன் பார்வையை விட்ஃபீல்ட் கொஞ்சம் நிறுத்திவைக்க வேண்டும் அல்லது அவர் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ஜோனதன் உணர்ந்தார்.
அவர்கள் சென்ற இடங்களிலெல்லாம் விட்ஃபீல்டின் பிரசங்கத்தைக் கேட்ட மக்கள் உணர்ச்சிப்பரவசம் அடைந்ததை ஜோனதன் பார்த்தார். இதைக்குறித்து அவர் கொஞ்சம் கவலைப்பட்டார். எழுப்புதலின்போது , மக்கள் தங்கள் பாவத்தின் அகோரத்தைப் பார்க்கும்போது, தேவனுடைய மன்னிப்பையும் கிருபையையும் அறியும்போது, நிச்சயமாக உணர்ச்சிவசப்படத்தான் செய்வார்கள் என்பதை அவர் புரிந்துகொண்டார். ஆனால், உண்மை என்னவென்றால், பல சந்தர்ப்பங்களில் விதை ஆழமற்ற நிலத்தில் விதைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அவர் கவலைப்பட்டார். எனவே, இந்தப் பின்புலத்தில் அவர் விதைப்பவனின் உவமையைப்பற்றி அவர் சபையில் பேசினார். அவர்களுடைய இருதயங்களில் விதைக்கப்பட்ட விதைகள் மிதிபட்டு சாகும் வழியோரமாகவோ, ஆழமற்ற மேலெழுந்தவாரியான கற்பாறையாகவோ, உலகக் கவலைகளால் மூச்சுத்திணறிச் சாகும் முட்புதராகவோ மாறிவிடாமல் நல்ல பலன் தரும் பண்பட்ட நிலமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
சபையில் நான்கு சுவர்களுக்குள் மட்டும் அல்ல, வெளியேயும் சென்று நற்செய்தி அறிவிக்க வேண்டும் என்று ஜோனதன் விட்ஃபீல்டிடமிருந்து கற்றுக்கொண்டார். எனவே, நார்தாம்ப்டனில் இருந்த சபையைவிட்டு வெளியே சென்று மக்களைச் சந்திக்கவும், நற்செய்தி அறிவிக்கவும் முடிவுசெய்தார். முடிவுசெய்ததோடு நின்றுவிடாமல், அருகிலிருந்த ஊர்களுக்குச் சென்றார். விரைவில் மற்ற இடங்களில் பிரசங்கிக்க வருமாறு அவரை அழைத்தார்கள். ஒரு குறிப்பிட்ட புதன்கிழமை அவர் என்ஃபீல்டு என்ற நகரத்தின்வழியாகக் குதிரையில் போய்க்கொண்டிருந்தார். அன்று அங்கு பிரசங்கிக்க வேண்டிய போதகர் உடல்நலம் இல்லாததால் வரவில்லை. அங்கிருந்தவர்கள் ஜோனதனிடம் வந்து நிலைமையைச் சொல்லி, “தயவுசெய்து நீங்கள் பிரசங்கிப்பீர்களா?” என்று கேட்டார்கள். கடைசி நிமிடம். சமீபத்தில் ஜோனதன் ஒரு பிரசங்கம் எழுதியிருந்தார்; அதை நார்தாம்ப்டனில் இருந்த தன் சபையிலும் பிரசங்கித்திருந்தார். அந்தப் பிரசங்கக் குறிப்புகள் அப்போது அவருடைய குதிரையின் சேணப் பையில் இருந்தது. அவர் அன்று மாலை பிரசங்கம்செய்ய ஒப்புக்கொண்டார். மக்கள் தேவனுக்குமுன்பாக தங்கள் பாவத்தின் முழு கனபரிமாணத்தையும், மனந்திரும்பாதவன் இருக்கும் ஆபத்தான நிலைமையையும் பார்க்கவேண்டும் என்று அவர் அன்று மாலை பிரசங்கித்தார். “தேவன் நீதியுள்ள நீதிபதி. அவர் பாவிகளிலும், பாவத்திலும் பிரியப்படுகிறவர் அல்ல. அவர் அவர்கள்மேல் தங்கள் கோபத்தை வழங்காமல் தம்மைக் கட்டுப்படுத்திக்கொண்டிருக்கிறார். ஏனென்றால், பாவிகள் கிறிஸ்துவின் மன்னிப்பைப் பெறவேண்டும் என்பதற்கு அவர் அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்குகிறார். இந்த உண்மையை உணர வேண்டும்,” என்று அவர் எடுத்துரைத்தார்.
ஜோனதன் விட்ஃபீல்ட்டைப்போல் பேச்சுத்திறமை உள்ளவர் இல்லை என்பது உண்மை. இது அவருக்கும் தெரியும். உண்மையில் அவருடைய குரல் பலவீனமானது. மேலும் பேசும்போது மக்களைப் பார்த்துப் பேசுவதற்குச் சங்கடப்பட்டார். அவர் பேசும்போது பெரும்பாலும் சபைக்கூடத்தின் பின்புறம் இருந்த மணிக் கயிற்றை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார். அவர் பேசும்போது ஓரிடத்தில் நின்று பேச மாட்டார். நடந்துகொண்டிருப்பார். சைகைகள் காட்டமாட்டார். கையைக்காலை உதைக்கமாட்டார். ஆனால், அவருடைய வார்த்தைகள் மிகத் தெளிவாக இருந்தன; கத்திபோல் கூர்மையாக இருந்தன; அவருடைய அறிவுபூர்வமான தர்க்கமும் ஆவிக்குரிய அழுத்தமும், தீவிரமும் மக்களை மிகவும் கவர்ந்தன.
அவர் பிரசங்கித்தபோது தான் சொல்வதை விளக்கப் பெரும்பாலும் மக்களுக்குப் பரிச்சயமான படங்களை எடுத்துக்காட்டுகளாகப் பயன்படுத்தினார். எனவே, மக்கள் அவருடைய செய்தியைத் தெளிவாகப் புரிந்துகொண்டார்கள். எடுத்துக்காட்டாக, தேவனுடைய கோபத்தை விளக்க ஆகாயத்தில் திரண்டிருக்கும் கருமேகங்களை அல்லது அணையில் சேமித்துவைக்கைப்பட்டிருக்கும் தண்ணீரை எடுத்துக்காட்டுகளாகப் பயன்படுத்தினார். அணையில் எப்போதும் உயர்ந்துகொண்டேயிருக்கும் தண்ணீரைப்போல் தேவனுடைய கோபம் மனந்திரும்பாத பாவிமேல் வரும். தேவனுடைய கோபாக்கினையெனும் வில் வளைந்து அதில் தேவனுடைய நீதியெனும் அம்பு ஆயத்தமாயிருக்கிறது. இப்படி அவர் நிறைய எடுத்துக்காட்டுகள் பயன்படுத்தினார். அது மக்களை எளிதில் சென்றடைந்தது.
“கோபமான தேவனின் கைகளில் பாவிகள்,” என்ற தலைப்பில் அவர் பேசிய பிரசங்கம் மிக முக்கியமான பிரசங்கம் என்று இன்றும் கருதப்படுகிறது. இந்தத் தலைப்பை வாசிக்கும்போது, ஜோனதன் ஓர் உயர்ந்த மேடையில் நின்றுகொண்டு கோபமான வார்த்தைகளால் மக்களைப் பயமுறுத்துவதுபோலவும், மக்களைப் பலவந்தம்செய்து பரலோகத்துக்கு அனுப்புவதுபோலவும் ஒருவேளை பலர் கற்பனை செய்யக்கூடும். ஆனால், ஜோனதன் மக்களைப் பயமுறுத்தவில்லை; கோபமான வார்த்தைகளைக் கொட்டவில்லை. மாறாக அவர் உண்மையாகவே பாவிகளின் ஆபத்தான நிலைமையைக் கண்டார். எனவே, மனந்திரும்ப மக்களுக்கு அழைப்பு விடுத்தார். பாவிகள் தங்களுடைய பாவத்தை அறியாமல், அறியாமையில் இருப்பதை அவர் கண்டார். எனவே அவர், “ஓ! பாவியே, நீ எவ்வளவு ஆபத்தான நிலைமையில் இருக்கிறாய் என்பதைப் பார், நீ தெய்வீக கோபத்தின் தீப்பிழம்புகளால் எரிந்துகொண்டிருக்கிற ஒரு மெல்லிய நூலில் கட்டப்பட்ட உளுத்துப்போன ஒரு மரப்பலகையில் தொங்கிக்கொண்டிருக்கிறாய். அந்த மரப் பலகை நரகத்தின் வாயிலில் தொங்கிக்கொண்டிருக்கிறது,” என்று பிரசங்கித்தார். அவர் என்ஃபீல்டில் தன் பிரசங்கத்தை முடிக்கவே இல்லை, ஏனென்றால் இரண்டு அறைகள் கொண்ட அந்த வீடு அங்கு கூடியிருந்த மக்களின் அழுகையினால் நிரம்பிற்று! அவர்களுடைய புலம்பலில் அவருடைய பிரசங்க சத்தம் கேட்கவில்லை. “நாங்கள் என்ன செய்ய வேண்டும்? நாங்கள் இரட்சிக்கப்பட என்ன செய்ய வேண்டும்? நான் நரகத்திற்குப் போகிறேன். நரகத்திற்குத் தப்பிக்க நான் என்ன செய்யப்போகிறேன்?” என்று கேட்டு மக்கள் கதறினார்கள்.
கூட்டத்தில் இருந்த ஒருவன் ஜோனதனின் மேலாடையைப் பிடித்துக்கொண்டு, “தேவன் நிச்சயமாக இரக்கமுள்ளவர் இல்லையா?” என்று கதறினான். அங்கு ஏற்பட்ட குழப்பத்தில் தேவனுடைய இரக்கத்தைப்பற்றி ஜோனதனால் பேச முடியவில்லை. அவ்வளவு அழுகை! புலம்பல்! “கிறிஸ்து தம் இரக்கத்தின் வாசலை மக்களுக்கு அகலமாகத் திறந்து வைத்திருக்கிறார். இதனால் மக்கள் பாவமன்னிப்பைப் பெற முடியும்” என்று அவர் அவர்களுடன் பேச விரும்பினார், பேச முயன்றார். ஆனால், அவர் பேசுவதை அவர்கள் கேட்கவில்லை. ஆனால், அன்றிரவு பெரும்பாலானவர்கள் தேவ ஆலோசனை பெற்று, இரட்சிப்பின் நிச்சயத்தோடு வீடு திரும்பினார்கள். இது பரிசுத்த ஆவியானவரின் வேலை என்பதும், என்ஃபீல்ட் என்ற அந்தச் சிறிய நகரத்து மக்களைச் சந்திக்க வேண்டும் என்றும் தேவன் ஏற்கெனவே தீர்மானித்திருந்தார் என்றும் தெளிவாகத் தெரிகிறது.
ஜோனதனின் வாழ்க்கையையும், ஊழியத்தையும்பற்றி சிறிதளவு பார்த்தோம். சாராள் எட்வர்ட்ஸைப்பற்றியும் கொஞ்சம் பார்ப்போம். அவர் ஓர் அசாதாரணமான பெண்மணி. 17 வயதில் திருமணமானதிலிருந்து தன் கணவனுக்கு எல்லா வகைகளிலும் உதவ அவர் தன்னை முழுமையாக ஒப்புக்கொடுத்தார், அர்ப்பணித்தார். ஜோனதனுக்குத் தேவனுடைய தெளிவான அழைப்பு இருப்பதை சாராள் விரைவிலேயே புரிந்துகொண்டார். எனவே, வீட்டைப் பராமரிக்கும் முழுப் பொறுப்பையும் அவர் எடுத்துக்கொண்டார். வீட்டைப் பராமரிப்பதென்றால் பூப்பறிப்பதும், ஒட்டடையடிப்பதும் இல்லை. அந்த நாட்களில் வீட்டைப் பெருக்க வேண்டுமானால், முதலாவது துடைப்பம் செய்ய வேண்டும். அதன்பின் வீட்டைப் பெருக்க வேண்டும். ஆடைகள் வேண்டுமானால், முதலாவது நூல்களை நூற்க வேண்டும். அதன்பின் ஆடைகளைத் தைக்க வேண்டும். வெளிச்சம் வேண்டுமானால், முதலாவது மெழுகுதிரி செய்ய வேண்டும். அதன்பின் அதைக் கொளுத்த வேண்டும். துவைப்பதற்கு, சமைப்பதற்கு, கழுவுவதற்கு, குளிப்பதற்கு தண்ணீர் வேண்டுமென்றால், முதலாவது ஐஸ் கட்டிகளை உடைக்க வேண்டும்; அதன்பின் அவைகளைச் சூடாக்க வேண்டும். இவைகளோடு கூட வீட்டில் மாடுகளும் ஆடுகளும் உண்டு. அவைகளைப் பேணிப்பாராமரிக்க வேண்டும். குடும்பத்தில் உள்ளவர்களுக்குச் சமைக்க வேண்டும். மொத்தம் 11 குழந்தைகள் என்பதை மறக்க வேண்டாம். எல்லோருக்கும் இரண்டு ஆண்டுகள் இடைவெளி.
இது மட்டும் அல்ல. அவர்களுடைய வீடு ஒரு சத்திரம்போலவே செயல்பட்டது. பல நேரங்களில் பல மாணவர்கள் ஜோனதன் வீட்டில் தங்கி இறையியல் படித்தார்கள். சாராள் மிகத் திறமையானவர். எந்த அளவுக்கு அவர் வீட்டின் பொறுப்பைத் தன்னந்தனியாகச் சுமந்தார் என்றால் அவர்களுடைய வீட்டில் எத்தனை மாடுகள் இருந்தன என்று ஜோனதனுக்கு தெரியாது என்று கூறப்படுகிறது. ஜோனதன் வீட்டு விவகாரங்கள் அனைத்தையும் சாராளின் பொறுப்பில் விட்டுவிட்டார். ஒருமுறை சாராள் சில நாட்கள் வீட்டைவிட்டு வெளியே போயிருந்தார். அப்போது எல்லாவற்றையும் கவனித்துக்கொள்ளுமாறு மகள்களிடமும், ஜோனதனிடமும் சொல்லிவிட்டுப் புறப்பட்டார். அவர் கிளம்பிய ஒன்றிரண்டு நாட்களில் அவர், “நீ இல்லாமல் வீட்டை எப்படிப் பராமரிக்க வேண்டும் என்று தெரியவில்லை. நீ வீட்டைவிட்டுப் போய் சில நாட்களே ஆனபோதும், நீண்ட காலம் ஆனதுபோல் இருக்கிறது,” என்று அவருக்குக் கடிதம் எழுதினார்.
ஜோனதன் படிப்பதற்கு ஒரு நாளில் பொதுவாக சுமார் 13 மணிநேரம் செலவிட்டார். நிறைய வாசித்தார், படித்தார், கட்டுரைகள், கடிதங்கள், பிரசங்கங்கள், வகுப்புக்களுக்கான பாடங்கள் எழுதினார். அவர் தேவனுடைய வார்த்தையை மிக ஆழமாகப் படித்தார். கையில் கிடைத்த எல்லாப் புத்தகங்களையும் படித்தார். அதிக நேரம் ஜெபித்தார். தேவைப்பட்ட மக்களுக்குத் தேவைப்பட்டபோதெல்லாம் ஆலோசனை வழங்கினார். இறையியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்குக் கற்பிப்பதுபோல் வீட்டில் தங்கியிருந்த சில மாணவர்களுக்கு இறையியல் கற்பித்தார். படிக்கும்போது தன் கவனம் சிதறக்கூடாது என்பதற்காக பல வேளைகளில் இரவு உணவை மறந்தார். அவரை யாரும் தொந்தரவு செய்யமாட்டார்கள்.
அவர் படிப்பதற்கும், எழுதுவதற்கும், மக்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கும் ஏற்ற சூழலை உருவாக்குவதிலும், அதற்குப் போதுமான நேரத்தை ஒதுக்குவதிலும், எந்த இடைஞ்சலும் ஏற்படக்கூடாது என்பதிலும் சாராள் மிகக் கவனமாக இருந்தார். அதற்குத் தன்னால் இயன்றவரை பாடுபட்டார். எவ்வளவு வேலைகள் இருந்தபோதும் ஒவ்வொருநாளும் ஜோனதன் தன் எல்லாக் குழந்தைகளோடும் குறிப்பிட்ட நேரம் செலவிட்டார். அவர்களுடைய ஒழுக்கத்தில் அவர் மிகவும் அக்கறைகொண்டிருந்தார். அவரும், அவருடைய மனைவி சாராளும் அடிக்கடி குதிரை சவாரி செய்தார்கள். அவர்கள் இருவரும் ஒவ்வொரு நாளும் இரவில் சேர்ந்து ஜெபித்தார்கள்.
அவர்களுடைய வீட்டில் தங்கி இறையியல் படித்த சாமுவேல் ஹாப்கின்ஸ் என்ற மாணவன் பின்னாட்களில் ஜோனதனைப்பற்றியும், அவருடைய ஊழியத்தைப்பற்றியும் எழுதிய குறிப்புகளிலிருந்து சாராளைப்பற்றி நாம் அதிகமாகத் தெரிந்துகொள்ளலாம். அவர் ஜோனதனின் வீட்டிற்கு வந்தபோது, அவருடைய இரட்சிப்பைப்பற்றி அவருக்கு நிச்சயம் இல்லை. அங்கு வந்த புதிதில் தான் கிறிஸ்துவற்ற, கிருபையற்ற நிலையில் இருப்பதாக உணர்ந்ததாக அவர் தன் நாளேட்டில் எழுதியிருக்கிறார். அவர் கொஞ்சம் எதிர்மறையான, துவண்ட மனநிலை கொண்டவர். அவரோடு பேசச் சென்ற சாராள் இதைக் கவனித்தார். அவருடைய ஆறுதலான, உற்சாகமான வார்த்தைகளைக் கேட்டு ஹாப்கின்ஸ் உயிரடைந்தார். “நீங்கள் எங்கள் வீட்டுக்கு வந்த நாளிலிருந்து நான் உங்களுக்காக ஜெபிக்கிறேன். தேவன் உங்களைக்கொண்டு பெரிய காரியங்களைச் செய்ய விரும்புகிறார் என்று நான் நினைக்கிறன்,” என்று கூறினார். அவர்பல காரியங்களைகுறித்து ஹாப்கின்ஸிடம் பேசினார். நாளடைவில் ஹாப்கின்ஸ் ரோட் ஐலேண்ட் என்ற இடத்தில இருந்த ஒரு சபையில் போதகரானார்.
இவ்வாறு சாராள் எல்லா வகையிலும் ஜோனதனுக்கு உதவியாக இருந்தார். ஜோனதனின் பாரங்களைப் பகிர்ந்துகொண்டார், அவருடைய தனிப்பட்ட போராட்டங்களைப் புரிந்துகொண்டார். ஆனால், தன் தனிப்பட்ட போராட்டங்களை ஜோனதனின்மேல் சுமத்தாமல் தானே சுமந்தார். அவைகளை அவர் ஜோனதனின்மேல் சுமத்த விரும்பவில்லை.
பெரிய குடும்பம், சில மாணவர்கள் தங்கிப் படித்தார்கள். விருந்தினர்களும், பார்வையாளர்களும் அடிக்கடி வந்துபோனார்கள். குடும்பச் செலவுகள் அதிகமாயின. எனவே, 1741ஆம் ஆண்டில், ஜோனதன் தன் சம்பளத்தை உயர்த்துமாறு கேட்டுக்கொண்டார். அவருடைய வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது. அத்தோடு விட்டிருந்தால் பரவாயில்லை. “உங்கள் வீட்டிலுள்ள சாமான்களையெல்லாம் ஒரு பட்டியல் போட்டுத் தாருங்கள்; என்னென்ன செலவுகள் என்று விவரமாக எழுதிக்கொடுங்கள்,” என்று சொன்னார்கள். அவர்கள் ஆடம்பரச் செலவு செய்கிறார்களா, அளவுக்கு அதிகமான சாமான்கள் வைத்திருக்கிறார்களா என்று சபையார் பார்க்க விரும்பினார்கள். ஜோனதனும், சாராளும் இந்த அவமானத்தைச் சகிக்க வேண்டியிருந்தது. சாராள் தன் பிள்ளைகளின் ஆடைகள், துடைக்கப் பயன்படுத்தும் சாதாரணத் துணி, சாப்பிடும் தட்டுகள் என எல்லாச் சாமான்களையும் எண்ணி விவரமாக எழுதிக் கொடுத்தார்.
சாராளுக்குப் பலவிதமான அழுத்தங்கள். இந்தக் காலகட்டத்தில் ஜோனதன் அடிக்கடி வெளியேபோக வேண்டியிருந்தது. எங்கும் எழுப்புதல் தீ எரிந்துகொண்டிருந்ததால் ஜோனதன் மாசசூசெட்ஸ், கனெக்டிகட் முழுவதும் அடிக்கடி பயணம்செய்தார். ஜோனதன் அங்கு இல்லாத நேரங்களில் வேறு பிரசங்கிமார்கள் வந்து பிரசங்கித்தார்கள். சபையார் ஜோனதனைக் கனம்பண்ணியதைவிட வெளியேயிருந்து வந்த பிரசங்கிமார்களைச் சிறப்பாகக் கனம்பண்ணினார்கள், ஜோனதனின் பிரசங்கத்துக்குக் கொடுத்த மாறுத்தரத்தைவிட வெளியேயிருந்து வந்த பிரசங்கிமார்களுக்கு நன்றாகப் பதிலளித்தார்கள். இது சாராளுக்குப் பொறாமையாக இருந்தது.
ஒரு சந்தர்ப்பத்தில் ஜோனதன் சாராளைப்பற்றிச் சொன்ன ஒரு கருத்து அவருக்குப் பெருந் துயரத்தை வருவித்தது. ஒரு விசுவாசியை ஏதோவொரு காரியத்தில் சாராள் திருத்தினாரா அல்லது விமரிசித்தாரா என்று தெரியவில்லை. அதைக்குறித்து ஜோனதன், “நீ இந்தக் காரியத்தில் விவேகமில்லாமல் நடந்தாய்,” என்று விமரிசித்தார். சாராள் வேதனைப்பட்டார். தன் செயல்களுக்குத் தன் கணவரின் ஒப்புதலும், அங்கீகாரமும் எப்போதும் தேவைப்படுகிறது என்பதை அறிந்தபோது அவர் வருத்தப்பட்டார்.
குடும்பப் பாரம் ஒருபுறம். சபையாரின் அவமானம் இன்னொரு புறம். ஜோனதனின் விமரிசனம் மற்றொருபுறம். பொறுப்புகளும், பாரங்களும் அவரை அமுக்கின. தான் எல்லா வகையிலும் தோற்றுப்போனதாக அவர் உணர்ந்தார். பாவத்தைக்குறித்த உணர்வும் அப்போது அவருக்கு அதிகமாக இருந்தது. மனஉளைச்சல். மனமுறிவு.
இந்தச் சூழ்நிலையில் தேவன் சாராளை அசாதாரணமான முறையில் சந்தித்தார். சாராள் ஆவிக்குரிய பரவசத்தை அனுபவித்தார். அந்த நேரத்தில் சாராள் தரையில் விழுந்தார்; அவரால் பேசமுடியவில்லை. கர்த்தருடைய பிரசன்னத்தையும், மகிமையையும் மிக நெருக்கமாகவும், கூர்மையாகவும், தன் இரட்சிப்பின் அற்புதத்தை ஆழமாகவும் சாராள் உணர்ந்தார். இந்த அனுபவம் இடைவெளிவிட்டு பல வாரங்களாக மீண்டும் மீண்டும் நடந்தது. சொல்லவோ, விவரிக்கவோ முடியாத ஒளியும், அன்பும், இன்பமான ஆறுதலும், ஆத்தும ஓய்வும், மகிழ்ச்சியும் அவரை நிரப்பிற்று; மகிழ்ந்து பாடினார், ஜெபித்தார். பரவசமானார்.
சிலர் அவருடைய இந்தப் பரவச அனுபவங்கள் உளவியல் சம்பந்தப்பட்டவை என்றும், இவை அவருடைய மனஅழுத்தத்தின் வெளியாக்கம் என்றும், இதில் ஆவிக்குரியது ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை என்றும் சொல்லலாம். ஆனால், அவருடைய இளம்பருவத்திலிருந்தே அவருக்கு இப்படிப்பட்ட பரவச அனுபவங்கள் உண்டு. சாராளும், இதையறிந்த ஜோனதனும், “இது நிச்சயமாக தேவனுடைய சந்திப்பின் அனுபவம்,” என்று உறுதியாக உணர்ந்தார்கள்.
ஆண்டவராகிய இயேசு ஒருவனை “அவர்களுடைய கனிகளால் அவர்களை அறிவீர்கள்,” என்று சொன்னார். இந்தப் பரவசமான அனுபவங்களின் பலனை, கனியை, சாராளின் வாழ்க்கையில் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. இந்த அனுபவங்களுக்குப்பின் அவர் முன்பைவிட இப்போது வீட்டுக் காரியங்களையும், குடும்பப் பொறுப்புகளையும் தொடர்ந்து மிக இலாவகமாகக் கையாண்டார். அதில் எந்தத் தொய்வும், சோர்வும், ஏற்படவில்லை. அது மட்டும் அல்ல. சிலர்மேல் அவர் உள்ளத்தில் மறைந்திருந்த பொறாமை, பதற்றம், தன் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுமோ என்ற பயம், பிறருடைய அங்கீகாரத்தைத் தேடும் தேடல் ஆகியவைகள் அடியோடு மறைந்துவிட்டன.
இந்த அனுபவத்திற்குப்பின், “நான் கிறிஸ்துவினுடைய அன்பின் பரலோக இனிமையிலும், அவர் எனக்கு நெருக்கமாக இருக்கிறார், நான் அவருக்கு நெருக்கமாக இருக்கிறேன் என்ற நிலையான, தெளிவான, உயிரோட்டமான உணர்விலும் தொடர்ந்து வாழ்ந்தேன்,” என்று அவர் எழுதினார்.
வரப்போகிற நாட்களில் தேவனுடைய பிரசன்னத்தையும், தேவன் அவர்மேல் வைத்திருக்கும் அனபையும்குறித்த நிச்சயம் அவருக்கு எவ்வளவு தேவைப்படும் என்று அப்போது அவருக்குத் தெரியாது. தேவனுடைய கிருபை சாராளை எப்படித் தங்கியது என்பதற்கு நான் ஓர் எடுத்துக்காட்டு தருகிறேன். 1747ஆம் ஆண்டு, மே மாதம் ஒருநாள் டேவிட் பிரைனர்ட் என்பவர் மிகக் கொடிய காய்ச்சலோடு அவர்களுடைய வீட்டுக்கு வந்தார். அவர் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தார். அவருக்கு உடனடிக் கவனிப்பு தேவைப்பட்டது. டேவிட் பிரைனர்ட் நான்கைந்து ஆண்டுகளாக செவ்விந்தியர்களிடையே, அதாவது அமெரிக்காவின் பூர்வீகக் குடிகளிடையே, மிஷனரியாக ஊழியம் செய்தார்.
மூன்று வாரங்களுக்குமுன்புதான் சாராளுக்குப் பத்தாவது குழந்தை பிறந்திருந்தது. டேவிட்டிற்குத் தொடர்ந்து தீவிரமான கவனிப்பு தேவைப்படும். மேலும், நிச்சயமாக அந்தக் காய்ச்சல் எளிதில் பரவக்கூடிய தொற்றுநோயாக இருக்கலாம். ஜோனதன் குடும்பத்தார் விருந்தோம்பலுக்குப் பெயர்பெற்றவர்கள். மக்களைத் தங்கள் வீட்டுக்கு வரவழைத்து அவர்களுக்கு உணவு கொடுத்ததோடு அவர்கள் தங்கள் விருந்தோம்பலை நிறுத்தவில்லை. அவர்கள் நோயுற்ற மக்களையும் தன் வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு வந்து அவர்களைக் கண்ணுங்கருத்துமாகப் பரமாரித்தார்கள். அது அவர்களுடைய குணம். டேவிட் அங்கு வந்த நேரத்தில், ஜோனதனின் வீட்டில் ஏற்கெனவே உடல்நிலை சரியில்லாத இன்னொருவரைக் கவனித்துக்கொண்டிருந்தார்கள். வீடு முழுக்க பத்துக் குழந்தைகள். ஒரு பண்ணை இருக்கிறது. வீட்டிலுள்ளவர்கள் சாப்பிட வேண்டுமானால் பண்ணையில் வேலைசெய்ய வேண்டும். மூன்று வாரக் கைக்குழந்தை. அவருடைய நிலைமையை நான் உங்கள் கற்பனைக்கு விட்டுவிடுகிறேன்.
தன் வீட்டுக்கு வந்த நோய்வாய்ப்பட்ட டேவிட் பிரைனெர்ட்டையும் அவர் அப்படியே கவனித்துக்கொண்டார். டேவிட் பிரைனெர்ட் தன் கடைசி நாட்களை ஜோனதன் எட்வர்ட்ஸ் வீட்டில் கழித்தார். ஜோனதனின் மூத்த மகளுக்கு அப்போது வயது 17. இரண்டாவது மகள் ஜெருஷா. அவள் தேவன்மேல் வைத்திருந்த விசுவாசமும், தேவனோடு அவள் நெருங்கி நடப்பதும் எல்லோருக்கும் தெரியும். அவள்தான் பிரைனெர்டை அவருடைய கடைசிக் காலத்தில் ஐந்து மாதங்களுக்கும்மேலாகக் கவனித்துக்கொண்டாள். அவள் அவரை மிகவும் மகிழ்ச்சியோடு கவனித்தாள். அவளுடைய அப்பா அவளுடைய பணிவிடையைப்பற்றி, “அவள் மிகவும் மகிழ்ச்சியோடு, அர்ப்பணிப்போடு அவரைக் கவனித்துக்கொண்டாள். ஏனென்றால், அவரை இயேசு கிறிஸ்துவின் ஒரு சிறந்த ஊழியராக அவள் பார்த்தாள்,” என்று எழுதுகிறார். பிரைனெர்ட் அவளைப்பற்றி மிக உயர்ந்த அபிப்பிராயம் கொண்டிருந்தார். அவள்மேல் அவர் அளவுகடந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தார். ஒருநாள் அவர் ஜோனதன் எட்வர்ட்சிடம், “தேவனின் பொருட்டுப் பிறருக்கு நன்மைசெய்வதற்காகத் தன்னைத்தானே வெறுத்த உங்கள் மகளைப்போல் ஒரு வாலிபப்பெண்ணை நான் என் வாழ்க்கையில் இதுவரை பார்த்ததில்லை. அவள் ஒரு மேன்மையான பரிசுத்தவதி,” என்று கூறினார்.
ஜோனதனின் வீட்டில் பராமரிக்கப்பட்ட மற்றவர் குணமடைந்தார். ஆனால் டேவிட் பிரைனர்ட் குணமடையவில்லை. அவருடைய அடக்க ஆராதனையில் ஜோனதன் எட்வர்ட்ஸ் பிரசங்கித்தார். நான்கு மாதங்களுக்குப்பிறகு, சோகமே உருவான ஜோனதன் எட்வர்ட்ஸ் மற்றொரு அடக்க ஆராதனையில் மீண்டும் பிரசங்கித்தார். இந்த முறை அவர் தன் அன்பு மகள் ஜெருஷாவின் அடக்க ஆராதனையில் பிரசங்கித்தார். பிரைனெர்டை கவனித்துக்கொண்டதன் விளைவாக அவளும் நோய்வாய்ப்பட்டாள். அந்த நோயினால் அவள் இறந்தாள். ஜோனதன் எட்வர்ட்ஸ் ஜெருஷாவைத் தன் குடும்பத்தின் மலர் என்றும், அந்த மலர் தன் 18 வருட பூமிக்குரிய வாழ்க்கையில் தேவனுக்கு உண்மையும் உத்தமுமாக மணம் வீசி சேவை செய்தது என்றும் பேசினார். அவர்களுடைய குடும்பத்துக்குச் சொந்தமான ஓர் இடத்தில் பிரைனெர்டுடைய கல்லறையருகே ஜெருஷாவை அடக்கம்செய்தார்கள்.
டேவிட் தன் நாட்குறிப்புகளையும், நடவடிக்கைகளைப்பற்றிய விவரங்கள் அடங்கிய புத்தகங்களையும் எட்வர்ட்ஸ் குடும்பத்தாரிடம் விட்டுச் சென்றார்.
டேவிட் பிரைனெர்டின் மரணத்திற்குப்பின், எட்வர்ட்ஸ் இந்த நாட்குறிப்புகளைப் புத்தகமாக வெளியிட்டார். இதுதான் முதலாவது வெளிவந்த ஒரு மிஷனரியின் வாழ்க்கை வரலாறு என்று சொல்லலாம். 1790களில் இந்த வாழ்க்கை வரலாறு மக்கள்மேல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தியாவுக்குச் சென்ற வில்லியம் கேரி, மியான்மருக்குச் சென்ற அடோனிராம் ஜட்சன்போல் உலகின் பல்வேறு நாடுகளுக்கு மிஷனரிகளாகச் சென்றவர்கள் இவருடைய வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தைத் தங்களோடு கொண்டுசென்றார்கள்.
ஜோனதன் மரணத்தைக்குறித்த தன் எண்ணங்களை 1748இல் ஒரு நாட்குறிப்பில், “பழம் பழுத்தவுடன், அது எளிதாக விழுந்துவிடுகிறது. அது மரத்தோடு இறுக்கமாக ஒட்டிக்கொள்வதில்லை. மாறாக, மரத்தைவிட்டு விழத் தயாராக இருக்கிறது. எந்தக் காயமோ, கீறலோ இல்லாமல் அதை எடுத்துக்கொள்ளலாம். புதிய எருசலேமுக்குத் தகுதியான பரிசுத்தவானும் அப்படியே பழுத்திருக்கிறான். அவன் இந்த உலகத்தைவிட்டு மிக எளிதில் வெளியேறிவிடுகிறான்” என்று எழுதினார்.
ஜெருஷா மரித்த இரண்டு வாரங்களுக்குபிறகு ஜோனதன் எபினேசர் பார்க்மேன் என்ற தன் நண்பருக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் ஜெருஷா இறந்த செய்தியை அறிவிக்கிறார். ஒரு தந்தை தன் மகளின் இறப்போடு எப்படிப் போராடுகிறார் என்று அங்கு காண முடிகிறது. “எங்கள் அன்பு மகள் ஜெருஷாவை பரிசுத்தமான தேவன் மரணத்தின்மூலம் தம்மிடம் அழைத்துக்கொண்டார். இவ்வாறு எங்கள் குடும்பத்தைப் பரீட்சிப்பது அவருக்குப் பிரியமாயிருக்கிறது. எங்கள் குடும்பத்தில் நிகழ்ந்த மரணம் ஏற்படுத்திய வாட்டத்தை நீக்கி எங்களைப் பரிசுத்தமாக்குமாறு பெருந் துக்கத்தில் இருக்கும் எங்களுக்கு இந்தக் கடிதத்தின்மூலம் உங்கள் ஜெபங்களைக் கேட்கிறேன். அச்சுறுத்தும் சூழ்நிலையில் இருக்கும் இளையவர்களுக்காக ஜெபிக்குமாறு வேண்டுகிறேன்,” என்று எழுதினார்.
இந்த நேரத்தில் ஜோனதனுக்கும் சபையாருக்கும் இடையிலான உறவில் பெரிய விரிசல் ஏற்பட ஆரம்பித்தது. இந்த விரிசலுக்கு இரண்டு முக்கியமான சம்பவங்கள் வழிவகுத்தன. முதலாவது, அந்த நகரத்தில் இருந்த சில வாலிபர்களுக்கு உடல்கூறியலையும், பேறுகாலத்தையும்பற்றிய ஒரு புத்தகம் கிடைத்தது. அத்தகைய புத்தகங்கள் அந்த நாட்களில் மிகவும் அசாதாரணமானவை. புத்தகங்கள் பொதுவாக மிகவும் அரிதாகவே கிடைத்தன. இந்தப் புத்தகத்தைப் படித்த வாலிபர்கள் அதிலுள்ள விவரங்களையும், படங்களையும் மற்ற வாலிபர்களுடன் பகிர்ந்துகொண்டார்கள். விரைவில் அந்த வாலிபர்கள் நகரத்தின் வாலிபப் பெண்களைத் கிண்டல்செய்யத் தொடங்கினார்கள். ஒருவகையான பாலியல் தொந்தரவு என்று சொல்லலாம். அவர்களில் பெரும்பாலானவர்கள் பதின்ம வயது வாலிபர்கள். சிலர் 20-25 வயதுக்குட்பட்டவர்கள். பிரச்சினை என்னவென்றால் இவர்கள் விசுவாசிகள். அவர்கள் வாராவாரம் திருவிருந்திலும் கலந்துகொண்டார்கள். இந்த அசம்பாவிதம் கொஞ்ச நாட்களாகவே நடந்துகொண்டிருந்தது. ஆனால், நகரத்தில் இருந்த பெரியவர்கள் இதைத் தாமதமாகத்தான் தெரிந்துகொண்டார்கள். ஒருவேளை ஜோனதனின் மகள்கள்தான் இதைப்பற்றி அவரிடம் சொல்லியிருக்கக்கூடும். ஜோனதன் இதைப்பற்றிக் கேள்விப்பட்டதும், அவர் உடனடியாக இதை வேரோடு பிடுங்கியெறிய விரும்பினார். எனவே, அவர் சபையாரைக் கூட்டி, கூட்டத்தில் சம்பந்தப்பட்ட வாலிபர்களை அழைத்துக் கண்டித்தார். அவர்கள் மனந்திரும்பவில்லை, தங்கள் பாவத்தை ஒப்புக்கொள்ளவில்லை; அதற்குமாறாக அவர்கள் ஜோனதனைத் தரக்குறைவாகப் பேசினார்கள், அவமானப்படுத்தினார்கள். இந்தக் கூட்டத்தில் அவர் சம்பந்தப்பட்ட வாலிபர்களின் பெயர்களையும், இந்த ஒழுக்கக்கேடு நடப்பதை அறிந்தும் அதைக் கண்டும் காணாமல் மௌனியாக இருந்தவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டுச் சொன்னார். அதாவது இந்தக் காரியத்தில் ஈடுபட்டவர்களையும், அதற்குச் சாட்சிகளையும் அவர் குறிப்பிட்டார். இந்த இரண்டு சாராரையும் அவர் ஒரே தட்டில் வைத்துப்பார்த்தார். அவர்களுக்கிடையே அவர் எந்த வேறுபாட்டையும் பார்க்கவில்லை. எனவே, அவர் தங்கள் அனைவரையும் குற்றம் சாட்டுகிறார் என்று சபையார் நினைத்தார்கள். சபையாருக்கு அவர்மேல் கடுங்கோபம்.
நார்தாம்ப்டன் சபையில் இருந்த செல்வாக்குமிக்க சில குடும்பத்தார், “எங்கள் பிள்ளைகளுக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஆனால், எங்கள் பிள்ளைகளுக்கும் இந்தக் கண்ணியமற்ற நடத்தையில் பங்கு உண்டு என்பதுபோல் நீர் பேசுகிறீர். அதுபோல், எங்களுக்குத் தெரியும் என்பதால், எங்களையும் குற்றவாளிகளைப்போல் நடத்துகிறீர்,” என்று கொதித்தார்கள்.
இது மிகப் பெரிய எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்தியது. அந்த நகரத்திலிருந்த இதில் சம்பந்தப்பட்ட, சம்பந்தப்படாத எல்லா வாலிபர்களும், “இது ஓர் அற்ப காரியம். இது வயதுக் கோளாறு. ஜோனதன் நினைப்பதுபோல், பேசுவதுபோல், இதில் பெரிதாக எதுவும் இல்லை. நாங்கள் இன்னும் முதிர்ச்சியடையாத இளைஞர்கள்தானே. ஜோனதன் இதை ஊதிப் பெரிதாக்குகிறார். இந்தக் காரியத்தில் இவர் தான் வைத்ததுதான் சட்டம் என்பதுபோல் நடக்கிறார்,” என்று நினைத்தார்கள், பேசினார்கள். சபையாரும் அப்படியே நினைத்தார்கள். ஆனால், ஜோனதன் அப்படி நினைவில்லை. இது மேற்போக்கான, விளையாட்டான காரியம் அல்ல, இது மிக கனமான காரியம் என்று ஜோனதன் நினைத்தார். தேவனுக்குமுன்பாகத் தங்களை விசுவாசிகள் என அறிக்கைசெய்துவிட்டு, மக்களுக்குமுன் வெளிவேடக்காரர்களாக வாழ்வதை ஜோனதன் ஏற்க மறுத்தார். சமரசம் செய்ய மறுத்தார். அவர் தன் நிலைப்பாட்டை விட்டுக்கொடுக்கவில்லை. இது முதல் சம்பவம்.
இரண்டாவது நிகழ்ச்சி 1748இல் நிகழ்ந்தது. ஜோனதன் கர்த்தருடைய பந்தியைப்பற்றிய காரியங்களைக் கடுமையாக்க விரும்பினார். அதாவது, தேவனுடைய வார்த்தையின்படி, உண்மையாகவே மனந்திரும்பி இரட்சிக்கப்பட்டவர்கள் மட்டுமே, தாங்கள் உண்மையாகவே இரட்சிக்கப்பட்டிருக்கிறோம் என்று தெளிவாக அறிந்தவர்கள் மட்டுமே, கர்த்தருடைய பந்தியில் பங்கேற்க வேண்டும் என்று அவர் நினைத்தார், விரும்பினார். இதுதான் தூய்மையாளர்கள் என்ற puritans வழி. எட்வர்ட்ஸ் அந்த வழிக்குத் திரும்ப விரும்பினார்.
அவருடைய தாத்தா சாலொமோன் ஸ்டோடார்ட் கர்த்தருடைய பந்தியின் ஒழுங்கை மாற்றியிருந்தார். யார் வேண்டுமானாலும், சபைக்கு வருகிற யார் வேண்டுமானாலும், தன்னைக் கிறிஸ்தவன் என்று அழைக்கிற யார் வேண்டுமானாலும், கர்த்தருடைய பந்தியில் பங்கெடுக்கலாம் என்ற நிலைமைக்கு அவருடைய தாத்தாதான் காரணம். திருவிருந்தில் பங்கெடுப்பவர்கள் இரட்சிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றோ, அவர்கள் விசுவாசிகளாக இருக்க வேண்டும் என்றோ அவர் வலியுறுத்தவில்லை. அது அவசியம் என்று அவர் கருதவில்லை. அன்று திருவிருந்தில் பங்கெடுப்பது அவர்களுடைய ஒரு பாரம்பரியம். அவ்வளவுதான். அதை அதற்குமேல் முக்கியமானதாக அவர் கருதவில்லை.
ஜோனதன் இந்தக் காரியத்தில் பல ஆண்டுகளாக சங்கடப்பட்டார். உள்ளத்தில் அமைதியின்மை. மாற்ற வேண்டும் என்று தெரிந்தபிறகும் கொஞ்சக் காலம் அமைதியாக இருந்தார். இதற்குமேல் அமைதியாக இருக்கக்கூடாது என்ற நிலைமை வந்ததும் நிலைமையை மாற்றத் துணிந்தார். ஆனால், அவர் இந்த மாற்றத்தைச் செய்த நேரம் அவருக்குப் பாதகமாக மாறிற்று. சாலொமோன் ஸ்டோடார்டின் மகன் ஜெனரல் ஜான் ஸ்டோடார்ட் பக்கவாதத்தால் இறந்த நேரத்தில் அவர் இந்த மாற்றத்தை ஏற்படுத்தினார். ஜெனரல் ஜான் ஸ்டோடார்ட் சாலொமோன் ஸ்டோடார்டின் மகன் மட்டும் அல்ல. அவர் ஒரு நீதிபதி, சமூகத்தில் மிகவும் செல்வாக்குமிக்க மனிதர். அவர் சாலொமோன் ஸ்டோடார்டின் மகன் என்பதால், அவர் உயிரோடு இருந்திருந்தால் ஜோனதன் சபையில் ஒரு மாற்றத்தை செய்வதற்குமுன், அவரோடு கலந்தாலோசித்திருப்பார். இப்போது அவர் இல்லை. ஆயினும், அவர் தான் விரும்பிய, அவசியம் என்று நம்பிய மாற்றத்தைச் செய்தார்.
சபையார் இந்த மாற்றத்தை விரும்பவில்லை, வரவேற்கவில்லை. “ஜெனரல் ஜான் ஸ்டோடார்ட் உயிரோடிருந்தபோது இந்த மாற்றத்தைச் செய்யாமல், அவர் இறந்தபிறகு செய்கிறார் என்றால், இவர் இதற்காகவே காத்திருத்ததுபோல் தோன்றுகிறது. நம் முன்னோர்களின் பாரம்பரியத்தை இவர் மாற்றுகிறார்,” என்று அவருக்கு விரோதமாகப் போர்க்கொடி உயர்த்தினார்கள். ஜோனதன் இந்த விஷயத்தில் வேத வெளிச்சத்தின்படி செய்ய வேண்டும் என்பதில் மிகவும் குறியாக இருந்தார். இது சாதகமா, பாதகமா என்று அவர் நேரத்தைப்பற்றியெல்லாம் சிந்திக்கவில்லை. மக்கள் தங்கள் பொய்யான மனநிறைவிலிருந்து வெளிவர வேண்டும் என்று அவர் விரும்பினார். அவர் இதை எப்படிப் பார்த்தார் என்பதை விளக்க அவர் பயன்படுத்திய உவமையைக் கூறுகிறேன். “ஒரு குழந்தையை பாம்பு கடித்து, விஷம் ஏறி, அந்தக் குழந்தையின் உடல் வீங்கிவிட்டது. ஆனால், அந்தக் குழந்தையின் பெற்றோர் தங்கள் குழந்தையின் ஆபத்தான, மோசமான, நிலைமையை உணராமல் குழந்தையின் அழுக்கு ஆடைகளைப்பற்றி வம்புபேசுகிறார்கள்,” என்று எடுத்துரைத்தார். ஆம், ஜோனதன் விஷமேறி வீக்கம் கண்ட குழந்தையைக் காப்பாற்றுவதில் குறியாக இருந்தார். மக்களோ குழந்தையின் உடையில் கவனமாக இருந்தார்கள். அவர் தான் செய்யும் மாற்றத்தின் நேரத்தைப்பற்றிச் சிந்திக்கவில்லை. செய்யப்போகும் மாற்றம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும், என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் சிந்திக்கவில்லை.
மக்கள் மீண்டும் கோபமடைந்தார்கள், கொதித்தெழுந்தார்கள். முதியவர்கள், வாலிபர்கள் யாரும் இந்த மாற்றத்தை விரும்பவில்லை. “சாலொமோன் ஸ்டோடார்ட் ஏற்படுத்திய ஒன்றை நீர் மாற்றுகிறீர். இப்போது சாலொமோன் ஸ்டோடார்டின் மகன் இறந்துவிட்டார். அவர்கள் யாருமே இல்லை என்ற தைரியத்தில் நீர் இந்த மாற்றத்தைச் செய்கிறீரா?” என்று மூத்தவர்கள் கேள்வி எழுப்பினார்கள். வாலிபர்களுக்கு அவர்மேல் ஏற்கெனவே கோபம், ஆத்திரம். அவர்களும் தங்கள் பங்குக்கு, “ஹா ஹா. பார்த்தீர்களா! இவர் எவ்வளவு எதேச்சை அதிகாரமாகச் செயல்படுகிறார் என்பதற்கு இது இன்னுமோர் எடுத்துக்காட்டு. எங்கள் பாரம்பரியத்தை நீங்கள் ஏன் மாற்றுகிறீர்கள்? எங்கள் உரிமையை ஏன் பறிக்கிறீர்கள்?” என்று தங்கள் எதிர்ப்பையும், ஆத்திரத்தையும் தெரிவித்தார்கள்.
இந்த இரண்டு முக்கியமான சம்பவங்களால் ஜோனதன் எட்வர்ட்ஸ் நகரவாசிகளின் ஆதரவை முற்றிலும் இழந்தார். இவரை நேசித்தவர்கள் இவருக்கு எதிராகத் திரும்பினார்கள். 1750இல் அவரை சபையின் போதகர் பொறுப்பிலிருந்து நீக்கினார்கள். 23 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு ஊழியம் செய்தார். அவர்கள் அவரைத் தேவையில்லையென்று தூக்கியெறிந்தார்கள். அவருக்கு இது மிகவும் சங்கடமாக இருந்தது. குடும்பம் நடுத்தெருவில் நின்றது. எங்கு போவது என்று தெரியவில்லை. உடனடியாக என்ன செய்வது என்றும் தெரியவில்லை. குடும்பத்தைக் காப்பாற்ற எந்த வருமானமும் இல்லை. வாழ இடம் இல்லை.
ஒரு வருடம் அவர் தன் குடும்பத்தோடு நார்த்தம்ப்டன் நகரத்தில்தான் தங்கியிருந்தார். அவருக்குக் கொடுத்திருந்த பண்ணை நிலத்தை அவரிடமிருந்து திரும்ப வாங்கிக்கொண்டார்கள். மேய்ச்சல் நிலத்தைப் பயன்படுத்தக்கூடாது என்றும், பண்ணை நிலத்தில் விவசாயம் செய்யக்கூடாது என்றும் தடுத்தார்கள். அவரைத் தள்ளியபோது, விளை நிலத்தில் இருந்து பெற்ற விளைபொருட்களைப் பயன்படுத்தக்கூடாது என்று பறித்துக்கொண்டார்கள். நகர சபையில் பிரசங்கிக்க ஆட்கள் இல்லாத சமயத்தில்கூட அவரைப் பிரசங்கிக்க அழைக்கவில்லை, அனுமதிக்கவில்லை. யாருமே இல்லாவிட்டால்கூட பரவாயில்லை, அவர் வேண்டாம் என்பதில் மக்கள் குறியாக இருந்தார்கள்.
குடும்பத்தின் வறுமையைப் போக்க, அவருடைய மகள்கள் தாள்களால் விசிறி செய்து சந்தையில் விற்றார்கள். எழுதுவதற்கு நோட்டுகள் இல்லாததாலும், வாங்குவதற்குக் கையில் பணம் இல்லாததாலும், தன் மகள்கள் தாள்களால் விசிறி செய்தபின் கிழித்துப்போட்டிருந்த துண்டுத் தாள்களைச் சேர்த்துத் தைத்து நோட்டுகளாக மாற்றி அவைகளில் எழுதினார்.நோட்டுப்புத்தகங்கள் தீர்ந்துபோகக்கூடாது என்பதற்காகச் சின்னச்சின்ன எழுத்துக்களாக எழுதினார்.
சோதனையான இந்தக் காலத்திலும் அவர்கள் தேவனையே நோக்கிப்பார்த்தார்கள், தேவனையே சார்ந்திருந்தார்கள். இந்தச் சிரமங்களெல்லாம் தங்களைப் பரிசுத்தமாக்குவதற்கான வழிகளே என்று அவர்கள் புரிந்துகொண்டார்கள். தனக்குள் இருக்கும் பெருமையோடு இடைப்பட்ட வேண்டும் என்று அவர் உணர்ந்தார். மக்களோடு கிருபையோடு இடைப்படும் பண்பும், கூடி வாழ வேண்டும் என்ற இயல்பும் தன்னிடம் இல்லை என்று அவர் உணர்ந்தார். அவர் பார்ப்பதற்குக் கடுமையானவர்போலும், பழகுவதற்கு நெருங்கிவராதவர்போலும், உறவுகளிலும், உரையாடல்களிலும் குளிர்ந்ந்தவர்போல் தோன்றியது. ஆனால், உண்மையில், அவருடைய இருதயம் எப்போதும் மக்களுக்காகத் துடித்தது.
பல மாதங்கள் ஜோனதனின் வீட்டில் தங்கி, அவரிடம் இறையியல் கற்ற சாமுவேல் ஹாப்கின்ஸ் “எட்வர்ட்ஸ் பிறருடைய நன்மைக்காக எப்போதும் எழுதினார், திட்டமிட்டுச் செயலாற்றினார், பிரயாசப்பட்டு உழைத்தார். அவர் மக்களுக்காக ஓயாமல் ஜெபித்தார். அவர் மக்களுக்காகவும், ஆத்துமாக்களுக்காகவும் 10,000முறை உருக்கமாகச் ஜெபித்திருப்பார்,” என்று ஜோனதன் மக்கள்மீது வைத்திருந்த அன்பை விவரித்து எழுதினார்.
ஜோனதன் அன்று மிகவும் பிரபலமானவர். பலர் பல இடங்களிலிருந்து, பல நாடுகளிலிருந்து, தங்கள் சபைக்குப் போதகராக வருமாறு அவரை அழைத்தார்கள். குறிப்பாக ஸ்காட்லாத்துக்கு வருமாறும், அமெரிக்காவில் வர்ஜீனியாவுக்கும் வருமாறு அழைத்தார்கள். அந்த அழைப்புக்களை அன்போடு மறுத்துவிட்டு மாசசூசெட்ஸில் ஸ்டாக்பிரிட்ஜில் உள்ள சபைக்குப் போதகராகவும், அங்கிருந்த ஹூசடோனிக் செவ்விந்தியர்களுக்கு மிஷனரியாகவும் போக முடிவுசெய்தார். ஆம், நார்த்தம்ப்டன் சபையிலிருந்து தள்ளப்பட்ட ஒரு வருடத்திற்குப்பிறகு கர்த்தர் அவருக்குப் பொருத்தமான ஊழியத்துக்கான வாசலைத் திறந்தார்.
ஸ்டாக்பிரிட்ஜ் தொலைதூரத்தில் இருந்த ஒரு சிறிய நகரம். இங்கு வாழ்ந்த பூர்வீகக் குடிகளிடையே டேவிட் பிரைனெர்ட் பணியாற்றினார். வேறு சில மிஷனரிகளும் அங்கு பணியாற்றினார்கள். இங்கு சுமார் 12 குடும்பங்கள் மட்டுமே வாழ்ந்தார்கள். இந்த நகரம் நார்தாம்ப்டனிலிருந்து 40 மைல் தொலைவில், ஒரு வனாந்தரத்தின் ஓரமாக இருந்தது. ஸ்டாக்பிரிட்ஜ் நகரத்தைச்சுற்றி மொஹிகன், மொஹாக் என்ற பூர்வீகக் குடிகள் மொத்தம் சுமார் 250 பேர் வாழ்ந்தார்கள். 1751இல், ஜோனதன் தன் குடும்பத்தோடு இந்த நகரத்தில் குடியேறினார். மிக விரைவில் அவருடைய பிள்ளைகள் அந்தப் பூர்வீகக் குடிகளோடு ஒன்றித்துவிட்டார்கள். அவர்கள் செவ்விந்தியர்களின் மொழிகளையும் மிக விரைவாகக் கற்றுக்கொண்டார்கள்.
ஜோனதனின் சம காலத்தில் வாழ்ந்தவர்களில் மிகவும் புத்திசாலியும், கூர்மதியும் உடைய இவர் ஒரு வனாந்தரத்தின் ஓரத்தில் இருந்த இந்தச் சிறிய நகரத்தில் செவ்விந்தியர்களோடு வாழ்ந்து அவர்களுக்கு ஊழியம் செய்தது உண்மையில் விநோதமாக இருக்கிறது.12 குடும்பங்கள் மட்டுமே வாழ்ந்த ஒரு நகரம். அங்கு அவர் செவ்விந்தியர்களின் குழந்தைகளுக்கு ஒரு பள்ளிக்கூடம் தொடங்கினார். அவர் ஸ்டாக்பிரிட்ஜ்ஜில் இருந்த காலத்தில் மிகவும் கடினமாக உழைத்தார். வெள்ளையர்கள் தங்கள் செல்வாக்கையும், அதிகாரத்தையும், பதவிகளையும் பயன்படுத்தி செவ்விந்தியர்களை நசுக்கினார்கள். ஆனால், ஜோனதன் அந்தப் பூர்வீகக் குடிகளின் நலன்களுக்காகத் தைரியமாகப் போராடினார்.
ஸ்டாக்பிரிட்ஜில் ஊழியம் செய்த காலம் மிகவும் ஆக்கபூர்வமான காலம். ஏனென்றால், அவர் தன் மிகச் சிறந்த பல படைப்புகளை இங்குதான் உருவாக்கினார். ஆம், மிகத் தரமான பல கட்டுரைகளையும், புத்தகங்களையும் அவர் இங்கு வாழ்ந்தபோதுதான் எழுதினார். குறிப்பாக கர்த்தருடைய பந்தியையை மையமாக வைத்து எழுதிய “Humble Relation” என்றழைக்கப்படும் “தாழ்மையான உறவு” என்ற கட்டுரை குறிப்பிடத்தக்கது. ஜோனதன் ஒரு தத்துவ இறையியலாளர் என்று அழைக்கப்படுவதற்கு முக்கிய காரணமான “Original Sin” “ஆதி பாவம்” என்ற ஆய்வுக் கட்டுரையையும் இங்கு இருந்தபோதுதான் எழுதினார்.
இன்னொரு புறம், அரசியல் களத்தில் எல்லாம் சுமுகமாகச் செல்லவில்லை. அரசியலில் கொந்தளிப்பான சூழ்நிலை நிலவியது. அமெரிக்காவின் பூர்வீகப் பழங்குடியினரும் கத்தோலிக்கப் பிரெஞ்சுக்காரர்களும் சேர்ந்து பல இடங்களில் புரொட்டஸ்டண்ட் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போர்புரிந்தார்கள். எங்கும் வன்முறைகள் நடந்துகொண்டிருந்தன. குழந்தைகள் கடத்தப்பட்டார்கள். நகரங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் தாக்குதல் நடைபெறலாம் என்ற வதந்திகள் எப்போதும் உலாவந்துகொண்டிருந்தன. பிரிட்டன் இராணுவம் ஸ்டாக்பிரிட்ஜுக்கு வந்து, ஸ்டாக்பிரிட்ஜில் ஜோனதனின் வீட்டைச்சுற்றி ஒரு முகாம் அமைத்துத் தங்கினார்கள்.
சாராள் சில வேளைகளில் அங்கு தங்கியிருந்த இராணுவ வீரர்களுக்கும், பல்வேறு நபர்களுக்கும் சேர்த்து மொத்தம் 800 பேருக்குச் சாப்பாடு கொடுத்தார்.
ஜோனதனுடைய மூன்றாவது மகள் எஸ்தர் எட்வர்ட்ஸ் பிரின்ஸ்டன் கல்லூரியின் முதல்வர் ஆரோன் பர் என்பவரைத் திருமணம் செய்திருந்தார். ஸ்டாக்பிரிட்ஜ்பற்றியும், அங்கு நிலவும் சூழ்நிலையைப்பற்றியும் அவள் கேள்விப்பட்டாள். அங்கிருந்த எல்லாச் செய்விந்தியர்களும் இடத்தைக் காலிசெய்துவிட்டு வெளியேறிவிட்டார்கள் என்றும், பிரெஞ்சுக்காரர்கள் நகரங்களை அழிக்கப் பழங்குடியினரை வற்புறுத்துகிறார்கள் என்றும் அவள் கேள்விப்பட்டு, பதற்றமடைந்தாள். இப்படிப்பட்ட செய்திகளும், வதந்திகளும் நாலாபக்கங்களிலுமிருந்து வந்துகொண்டேயிருந்தன. எது உண்மை, எது தகவல், எது வதந்தி என்று அவர்களால் பகுத்துணர முடியவில்லை. உண்மையில் அங்கு என்ன நடக்கிறது என்பதை அவர்களால் அறியமுடியவில்லை. எஸ்தருக்குப் பெருங் கவலை.
ஜோனதனும் சாராளும் ஸ்டாக்பிரிட்ஜில் தங்க முடிவுசெய்தார்கள். ஆனால் அவர்கள் தங்கள் இளைய குழந்தைகளை மட்டும் தங்கள் உறவினர்களோடு தங்க நார்தாம்ப்டனுக்கு அனுப்பினார்கள். ஒரு குழப்பமான சூழ்நிலை நிலவியது. எஸ்தர் தன் குடும்பத்திற்காகப் பாரத்தோடு ஜெபித்தாள். அவள் உள்ளத்தில் போராட்டம். ஒருநாள் அவள் தன் நாளேட்டில், “தேவன் ஏன் தம் பிள்ளைகளை இப்படிப் பிறர் வேட்டையாடுவதுவற்கு அனுமதிக்கிறார்?” என்று எழுதிவிட்டு, “இது மிகவும் தவறான மனப்பாங்கு. தெய்வீக உதவியால் இந்த எண்ணத்தை என்னால் முறியடிக்க முடியும் என்று நம்புகிறேன்,” என்று எழுதி முடித்தார்.
ஸ்டாக்பிரிட்ஜ் நகரம் இப்போது ஓர் இராணுவ முகாமாக மாறியிருந்தது. ஜோனதன் வீடுதான் இந்த முகாமின் நடுவில் இருந்தது. ஜோனதன் எட்வர்ட்ஸ் உள்ளத்தில் வாட்டம். அவர் செய்விந்தியக் குழந்தைகளுக்காக ஒரு பள்ளியைத் தொடங்கியிருந்தார். இப்போது எல்லா குழந்தைகளும் போய்விட்டதால் அவர் அதை மூடவேண்டியிருந்தது. இந்த நேரத்தில் அவர் நோய்வாய்ப்பட்டார். தொடர்ந்து காய்ச்சல். அரசியல் களத்தில் எங்கு பார்த்தாலும் போர். எல்லாம் தவறாகப்போவதுபோல் உணர்ந்தார்.
1755இல், இன்னும் போர் நடந்துகொண்டிருக்கையில், ஸ்டாக்பிரிட்ஜைச்சுற்றி அங்கும் இங்கும் எல்லா இடங்களிலும் வன்முறை தொடர்ந்துகொண்டிருக்கையில், ஒருநாள் கிடியோன் ஹவ்லி என்ற ஒரு மிஷனரி அங்கு வந்தார். அங்கிருந்து 300 கிலோமீட்டர் தொலைவில் செவ்விந்தியர்கள் இருப்பதாகக் கேள்விப்பட்டதாகவும், அவர்களுக்கு நற்செய்தி அறிவிக்கச் செல்வதாகவும் அவர் சொன்னார். ஆனால், தனக்கு செவ்விந்தியர்களின் மொழி தெரியாததால் தனக்கு ஒரு மொழிபெயர்ப்பாளர் தேவை என்று அவர் சொன்னார்.
ஜோனதனும் சாராளும் தங்கள் மகனை அவருடன் அனுப்ப முடிவுசெய்தார்கள். அந்த நாட்களில் பயணம் செய்வது மிகவும் கடினம். அந்த நேரமும் கொடியது. எங்கும் போர் நடந்துகொண்டிருக்கிறது. இந்த மிஷனரியும் தன் மகனும் போகப்போகிற இடத்தில் வாழும் செவ்விந்தியர்களைப்பற்றி அவர்களுக்கு அதிகமான விவரங்கள் தெரியாது. ஒருவேளை போகும் வழியில் இருவரும் கொல்லப்படலாம் அல்லது யாராவது அவர்களைப் பணத்திற்காகக் கடத்தலாம். எது வேண்டுமானாலும் நடக்கலாம். எனினும், அவர்கள் தங்கள் மகனை அவருடன் அனுப்பத் தீர்மானித்தார்கள். தேவனுடைய வேலைதான் முக்கியம், முதலிடம் என்று அவர்கள் முடிவுசெய்தார்கள். ஜோனதனின் மகன் கிடியோன் ஹாவ்லிக்கு மொழிபெயர்ப்பாளராகப் போகிறார் என்று நான் சொன்னவுடன் அவர் ஒரு வாலிபராக இருப்பார் என்று நினைத்தீர்களோ! இல்லை! இல்லை! ஒன்பது வயதுச் சிறுவன். அவனை மொழிபெயர்ப்பாளராக அனுப்பினார். ஜோனதன் தன் மகனின் பத்தாவது பிறந்தநாளுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார். இந்தக் கடிதம் குறிப்பிடத்தக்கது. ஜோனதன் நித்தியத்தின்மீது எவ்வளவு கவனம் செலுத்தினார் என்பதை இந்தக் கடிதத்திலிருந்து புரிந்துகொள்ளலாம். நித்தியத்துக்கும், நித்தியமான காரியங்களுக்கும் அவர் எவ்வளவு முன்னுரிமை அளித்தார் என்று இது காட்டுகிறது.
ஸ்டாக்பிரிட்ஜ்ஜில் ஜோனதனுடைய மகனின் ஒரு நண்பன், டேவிட் என்ற ஒரு சிறுவன், சமீபத்தில் இறந்துவிட்டான். ஜோனதன் தன் மகனுக்கு எழுதிய பிறந்த நாள் வாழ்த்துக் கடிதத்தில் உள்ளூர் செய்திகளைப்பற்றி அதிகம் பேசாவிட்டாலும் அவனுடைய நண்பன் டேவிட்டின் மரணத்தைக் குறிப்பிட்டுச் சொல்லிவிட்டு, அதன்பின் “மகனே, இது தேவன்,”மரணத்தைச் சந்திக்க எப்போதும் தயாராக இரு,” என்று உனக்குக் கூறும் உரத்த குரலாக இருக்கட்டும். நீ உண்மையாகவே மனந்திரும்பி, ஒரு புதிய படைப்பாக மாறியிருக்கிறாய் என்பதற்கான உறுதியான சான்றுகள் இல்லாதவரை ஓய்ந்திராதே,” என்று எழுதுகிறார். பத்து வயதுச் சிறுவனுக்குப் பிறந்த நாள் வாழ்த்து. நிச்சயமாக ஜோனதன் தன் மகனை மிகவும் நேசித்தார்; ஆனால், அவனை இறுகப் பற்றிக்கொள்ளவில்லை; தளர்வாக வைத்திருந்தார். பூமிக்குரிய கரிசனைகளைவிட நித்தியமான தேவைகளுக்கு அவர் முன்னுரிமை அளித்தார்.
எஸ்தருக்குத் திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகியிருந்தன. அவருக்கு இரண்டு குழந்தைகள் இருந்தார்கள். அவளுடைய கணவர், பிரின்ஸ்டன் கல்லூரியின் முதல்வர், ஆரோன் பர், தன் 41ஆவது வயதில் திடீரெனக் காலமானார். இந்தப் புயல் எல்லாரையும் புரட்டிப்போட்டது.
கல்லூரி முதல்வராக வந்து பொறுப்பேற்குமாறு ஜோனதன் எட்வர்ட்சை வருந்தி அழைத்தார்கள். தான் “வாழ்வின் சரிவுப்பாதையில்” இருப்பதாகவும், அந்தப் பொறுப்பை ஏற்கத் தான் பொருத்தமானவன் இல்லையென்றும் கூறி அதை ஏற்க மறுத்துவிட்டார். ஆயினும், மருமகன் விட்டுச்சென்ற இடம் ஒரு வருடம் ஆகியும் இன்னும் நிரப்பப்படாமல் காலியாக இருந்ததால், வந்து அந்தப் பொறுப்பை ஏற்குமாறு அவரைக் கட்டாயப்படுத்தினார்கள். அவர் அழைப்பை ஏற்றுக்கொண்டார்.
ஸ்டாக்பிரிட்ஜில் அவர் ஏழு வருடங்கள் ஊழியம் செய்தார். அவர்களைவிட்டுப்போக மனதில்லாமல், மிகவும் வருத்தத்தோடு அங்கிருந்து கிளம்பினார். அப்போது கடுங்குளிர்காலம் ஆரம்பித்திருந்தது. அவர் நியூ ஜெர்சிக்குச் சென்றார். இன்றைய பிரின்ஸ்ட்டன் கல்லூரி அன்று நியூ ஜெர்சி கல்லூரி என்றழைக்கப்பட்டது. அவர் நியூ ஜெர்சிக்குப் புறப்பட்டபோது சாராளையும், குடும்பத்தையும் தன்னோடு அழைத்துச் செல்லாமல் ஸ்டாக்பிரிட்ஜில் விட்டுச்சென்றார். அது கடுங்குளிர் காலம் என்பதால் மனைவி பிள்ளைகளை பனிப்பொழிவில் கூட்டிச்செல்வது இயலாத காரியம். குளிர்காலம் முடிந்து வசந்த காலம் தொடங்கியதும் அவர்கள் அவரோடு போய் சேர்ந்துகொள்ளலாம் என்று முடிவுசெய்தார்கள்.
அவர் பிப்ரவரி 16, 1758இல் கல்லூரி முதல்வராகப் பொறுப்பேற்றார். அவர் முதுகலைப்பட்டபடிப்பு மாணவர்களுக்கு இறையியல் கற்பித்தார்.
அவர் நியூ ஜெர்சிக்கு சென்றபோது, அங்கு பெரியம்மை தொற்றுநோய் பரவிக்கொண்டிருந்தது. அந்த நேரத்தில், தடுப்பூசிகள்போன்ற பல அறிவியல் கண்டுபிடிப்புகள் வெளிவந்துகொண்டிருந்தன. ஜோனதன் அறிவியல் சம்பந்தப்பட்ட காரியங்களை வாசிப்பதில் ஆர்வமுள்ளவர். அவர் தடுப்பீசிகளைப்பற்றிக் கேள்விப்பட்டார். அவர் தானும் தடுப்பூசி போட்டுக்கொண்டார். தன் மகளுக்கும், இரண்டு பேரக்குழந்தைகளுக்கும் பெரியம்மை தடுப்பூசி போட ஏற்பாடு செய்தார்.
ஜோனதன் பிரின்ஸ்டன் கல்லூரியின் முதல்வராகப் பொறுப்பேற்று பணியாற்றத் தொடங்கிய சில வாரங்களில் அவர் பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்டார். இது எதிர்பார்க்கப்பட்டது. பொதுவாக, தடுப்பூசி போட்டுக்கொண்டால் அந்த நோயால் பாதிக்கப்பட்டால், சில சங்கடங்கள் ஏற்பட்டாலும், அந்த நோயால் இறக்கமாட்டார்கள். இது நியதி. ஆனால், ஜோனதன் எட்வர்ட்சின் காரியத்தில், பெரியம்மை நோய் அவருடைய தொண்டையையும் வாயையும் அதிகமாகப் பாதித்தது. அவரால் எதையும் விழுங்க முடியவில்லை. மருத்துவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை.
மரணம் தன்னை நெருங்குவதையும், தான் நித்தியத்துக்குள் நுழையும் நேரம் வந்து கொண்டிருப்பதையும் அறிந்த ஜோனதன் எட்வர்ட்ஸ் தன் கடைசிச் செய்தியைத் தன் மகள் லூசியை அழைத்து எழுதச் சொன்னார். “அன்புள்ள லூசி, நான் விரைவில் உன்னைவிட்டுப் போக வேண்டும் என்பது தேவனுடைய விருப்பம் என்று எனக்குத் தோன்றுகிறது; எனவே என் அன்பு மனைவிக்கு என் உச்சிதமான அன்பைத் தெரிவியுங்கள். இவ்வளவு காலமாக எங்களுக்கிடையேயிருந்த அசாதாரணமான பிணைப்பு ஆவிக்குரியது என்று நான் நம்புவதால் இது என்றென்றும் தொடரும் என்று அவளிடம் சொல்லுங்கள். அவள் தேவனுடைய ஆதரவால் இவ்வளவு பெரிய பரீட்சையைத் தாங்குவாள், தாண்டுவாள் என்றும், தேவனுடைய சித்தத்திற்கு மகிழ்ச்சியுடன் அடிபணிவாள் என்றும் நம்புகிறேன். என் குழந்தைகளைப் பொறுத்தவரை, நீங்கள் இப்போது தந்தையற்றவர்களாக ஆகிவிடுகிறீர்கள். ஒருபோதும் தோற்காத, வழுவாத, தவறாத, ஒரு தந்தையைத் தேட உங்கள் அனைவருக்கும் இது ஒரு தூண்டுதலாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்,” என்று கூறினார்.
1758ஆம் வருடம் மார்ச் மாதம் 22ஆம் தேதி தன் 51ஆவது வயதில் தன் வீட்டிலிருந்து வெகு தொலைவில், 31 ஆண்டுகளாக தனக்கு எல்லா வழிகளிலும் உறுதுணையாக இருந்த அன்பு மனைவியிடமிருந்து வெகு தொலைவில், ஜோனதன் நித்தியத்துக்குள் நுழைந்தார். அவருக்கு மூன்று மகன்கள், எட்டு மகள்கள். இவருடைய சந்ததியிலிருந்து பின்னாட்களில் பதின்மூன்று கல்லூரி முதல்வர்கள், அறுபத்தைந்து பேராசிரியர்கள், 100 வழக்கறிஞர்கள், ஒரு சட்டப் பள்ளியின் டீன், முப்பது நீதிபதிகள், அறுபத்தாறு மருத்துவர்கள், ஒரு மருத்துவப் பள்ளியின் டீன், எண்பது பொதுத்துறை அலுவலர்கள், மூன்று அமெரிக்க செனட்டர்கள், மூன்று நகரங்களின் மேயர்கள், மூன்று மாநிலங்களின் ஆளுநர்கள், அமெரிக்காவின் ஒரு துணை ஜனாதிபதி, ஏராளமான தேவ ஊழியர்கள் உருவானார்கள்.
ஜோனதனின் மரணச் செய்தியும், அவருடைய கடைசிச் செய்தியும் சாராளுக்குப் பேரிடியாகவும், பேரதிர்ச்சியாகவும் இருந்தன. அவர் நியூ ஜெர்ஸியில் இருந்த தன் மகள் எஸ்தருக்குக் கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் அவர் எழுதியிருக்கும் வார்த்தைகள் நற்செய்தியின் மறுசாயலாக்கும் வல்லமையை மட்டும் அல்ல, அவருடைய முந்தைய அனுபவத்தின் பலன்களையும் காண்பிக்கின்றன.
“என் மிக அன்பான மகள் எஸ்தர், நான் என்ன சொல்வேன்? பரிசுத்தமான, நன்மைநிறை தேவன் நம்மை ஒரு கருமேகத்தால் மூடியுள்ளார். நாம் இதைச் செய்த கர்த்தரை முத்தமிட்டு, நம் வாயைக் கைகளால் மூடிக்கொள்வோமாக! கர்த்தர் இதைச் செய்தார். இவ்வளவு காலமாக நான் அவருடைய நற்குணத்தை அருகிருந்து பாராட்டுவதற்காக அவர் நம்மோடு இருந்தார். அவர் இன்று இல்லை; ஆனால், என் தேவன் வாழ்கிறார். அவருக்கு என் இதயம் சொந்தம். என் கணவரும், உங்கள் அப்பாவும் நமக்கு விட்டுச்சென்றிருக்கும் மரபுரிமைச்சொத்தை நான் என்னென்பேன்! நாம் அனைவரும் தேவனுக்குரியவர்கள், தேவனுக்கானவர்கள். நான் இதில் நிலைக்கிறேன். என்றும் உங்கள் பாசமுள்ள தாய், சாராள் எட்வர்ட்ஸ்.”
இந்தக் கடிதம் எஸ்தர் கையில் கிடைக்கவில்லை. ஏனென்றால், ஜோனதன் இறந்தபிறகு எஸ்தர் திடீரென நோய்வாய்ப்பட்டு ஏப்ரல் 1758இல் காலமானார். அவருடைய இரண்டு குழந்தைகள், சாலி, ஆரோன் இருவரும் அனாதைகளானார்கள். சாராளுக்கு இந்தச் செய்தி வந்தபோது மனமுடைந்து உட்கார்ந்துவிடவில்லை. அங்கிருந்து நியூ ஜெர்சி வெகு தொலைவில் இருந்தது. ஆயினும் தன் இரண்டு அனாதைப் பேரக்குழந்தைகளைக் கூட்டிக்கொண்டுவர அவர் நியூ ஜெர்சிக்குப் புறப்பட்டார். மிகக் கடினமான பயணம். உடலிலும், உள்ளத்திலும் பலவீனம். அவர் அங்கு போவதற்குமுன் அவருடைய இரண்டு பேரக் குழந்தைகளை மருமகனின் உறவினர்கள் பிலடெல்பியாவிற்கு கூட்டிக்கொண்டுபோய்விட்டார்கள். செப்டம்பர் மாதம் அவர் பிலடெல்பியாவிற்குக் கிளம்பினார். அங்கு போய் பேரப்பிள்ளைகளை அழைத்துக்கொண்டு அவர்கள் 23 ஆண்டுகள் வாழ்ந்த நார்தாம்ப்டனுக்குப் பயணத்தைத் தொடங்கினார். ஏனென்றால் அங்குதான் அவர்கள் வாழ விரும்பினார்கள். வீட்டிற்குத் திரும்பும் வழியில், அவர் வயிற்றுப்போக்கினால் மிகவும் நோய்வாய்ப்பட்டார். ஐந்து நாட்களுக்குப் பிறகு, ஜோனதன் இறந்த ஆறு மாதங்களுக்குப்பிறகு, அக்டோபர் 2, 1758 அன்று பிலடெல்பியாவில் அவருடைய நண்பர் ஒருவர் வீட்டில் நித்தியத்திற்குள் நுழைந்தார்.
சாராள் தன் மரணப் படுக்கையில் தன்னைத் தேவனுக்கு முழுவதும் ஒப்புக்கொடுத்து சமாதானத்தோடு இருந்ததாகவும், எல்லாவற்றிலும் தேவன் மகிமைப்பபட வேண்டும் என்று அவர் ஆசித்ததாகவும் அவருடைய நண்பர் கூறினார். தன் கடைசி நிமிடம்வரை அவரை மகிமைப்படுத்த தேவன் தன்னைப் பலப்படுத்துமாறு அவர் ஜெபித்தார்.
ஜோனதனும், சாராளும் தேவனுடைய தாங்கும் கிருபையால் வாழ முடியும் என்பதற்குப் பலமான இரண்டு சாட்சிகள், நிரூபணங்கள். அவர்கள் தேவன் தங்களுக்குத் தந்திருந்த வரங்களையும், வளங்களையும் பயன்படுத்தி தங்கள் தலைமுறைக்கு உண்மையோடும், உத்தமத்தோடும், முழுமனதோடும் சேவித்தார்கள். ஜோனதன் சுமார் 1,400 பிரசங்கங்களை நேர்த்தியாக எழுதினார்; இவையனைத்தையும் அவர் சின்னச்சின்ன வளைந்துநெளிந்த கையெழுத்துகளில் தன் கையால் தைத்த குறிப்பேடுகளில் எழுதினார். கடையில் சாமான்கள் வாங்கும்போது கிடைக்கும் இரசீதுகள், ஆடைகள் தைப்பதற்குமுன் மாதிரியாக வெட்டிவைத்துக்கொள்ளும் தாள்கள், தன் மகள்கள் தாள் விசிறிகள் செய்தபின் வெட்டிப்போட்ட துண்டுத்தாள்கள் போன்றவைகளைக்கொண்டு அவர் நோட்டுப்புத்தகங்கள் தைத்தார். இதில்தான் அவர் பிரசங்கங்களும், செய்திகளும், இறையியல் பாடங்களும் எழுதினார்.
அவர் மிகச் சிறந்த நூல்களும், கட்டுரைகளும் எழுதினார். அவருடைய எழுத்துக்களில் தத்துவமும், இறையியலும் கலந்திருக்கும். மிகப் பிரபலமான “ஆதிப் பாவம்” என்ற அவருடைய இறையியல் கட்டுரை அவருடைய படைப்புகளில் மிக முக்கியமான ஒன்றாகும். அவர் எழுதிய “சுயாதீன சித்தம்” தத்துவரீதியான ஆய்வுக்கட்டுரை. அவருடைய “மதத்துக்குரிய பாசம்” கிறிஸ்தவ வாழ்வின் ஒரு பகுதியாகிய உணர்ச்சிகளைப்பற்றிப் பேசுகிறது.
அவர் நிறையக் கடிதங்கள் எழுதினார், குறிப்பாக வாலிபர்களுக்கு ஆலோசனையும், அறிவுரையும் கூறி எழுதினார்; வேதாகமத்துக்கு விளக்கவுரை எழுதினார்; பல்வேறு தலைப்புகளில் தான் பெற்ற வெளிச்சத்தை எழுதினார்; அறிவியல் கட்டுரைகள் எழுதினார். பறக்கும் சிலந்திகளைப்பற்றிக்கூட அவர் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அவர் 4000க்கும் அதிகமான கட்டுரைகள் எழுதியிருப்பார் என்று அறிஞர்கள் கணக்கிடுகிறார்கள். கிறிஸ்தவம் இதயத்திற்கு மட்டும் அல்ல, அது அறிவுக்கும் உரியது என்று அவர் நிரூபித்தார். எல்லாவற்றுக்கும்மேலாக ஓர் உண்மையான விசுவாசியின் அடையாளம் அன்பு என்றும், அன்புடன் சேர்ந்து பணிவு வரும் என்றும், அதுவே தேவனுடைய சாரம், நமக்குள் இருக்கும் அவருடைய ஆவியானவரின் சாரம், என்றும், அதுவே நாம் உலகிற்குக் காட்டும் சாட்சி என்றும் ஜோனதன் எட்வர்ட்ஸ் நம்பினார். ஜோனதன் எட்வர்ட்ஸ் பாவத்தைக்குறித்தும், வரவிருக்கும் நியாயத்தீர்ப்பைக்குறித்தும் அதிகமாக வலியுறுத்தினார். இந்த இரண்டையும்குறித்த ஆழமான உணர்வு அவரிடம் இருந்தது. அதே நேரத்தில் அவர் கிறிஸ்துவின் அழகையும், அன்பையும், அவருக்காக வாழ்கின்ற மகிழ்ச்சியையும் மிகத் தெளிவாக உணர்ந்திருந்தார். ஒன்று இல்லாமல் மற்றொன்று இருக்க முடியாது என்று அவருக்கு நிச்சயமாகத் தெரியும்.
அவருடைய அன்பு மனைவி சாராள் இல்லாமல், அவருடைய பெரும்பாலான வேலைகள் சாத்தியமாயிருக்காது. சாராள்தான் அவருடைய உதவி, உறுதுணை, ஊன்றுகோல், பாறை.
20 வயது வாலிபனாக இருந்தபோது அவர் பிரசங்கித்த ஒரு பிரசங்கத்தின் சில வார்த்தைகளைச் சொல்லி நான் முடித்துக்கொள்கிறேன். “தேவனை அனுபவித்துமகிழ்வதே நேர்த்தியான, நம் ஆத்துமாவைத் திருப்தியாக்கும், ஒரே மகிழ்ச்சி. இந்தப் பூமியிலுள்ள மிக இரம்மியமான தங்குமிடங்களைவிட தேவனை முழுமையாக அனுபவித்துமகிழ நித்தியத்திற்குச் செல்வது கரைகாணா அளவுக்குச் சிறந்தது. அது பெற்றோர்கள், கணவர்கள், மனைவிகள், குழந்தைகள், நண்பர்கள், கூட்டாளிகள் எல்லோரையும்விடச் சிறந்தது. இவைகளெல்லாம் வெறும் நிழல்களே; தேவனை அனுபவித்துமகிழ்வதே காரியம். இவைகளெல்லாம் சிதறிக்கிடக்கும் கோள்கள். தேவனே சூரியன். இவைகளெல்லாம் நீரோடைகள்; தேவனே நீரூற்று. இவைகளெல்லாம் துளிகள்; தேவனே கடல்.”
ஜோனதனும், சாராளும் நார்த்தாம்டன் சபைக் கூட்டங்களிலும், வீட்டுக் கூட்டங்களிலும், முறைசாராக் கூட்டங்களிலும், தனியாகவும் பாடிய ஒரு பாடலைச் சொல்லி நான் முடிக்கப்போகிறேன். நிச்சயமாக ஸ்டாக்பிரிட்ஜிலும் அவர்கள் இதைப் பாடினார்கள். இந்தப் பாடல் என் இதய கீதம். அது ஐசக் வாட்ஸ் எழுதிய “மாட்சியின் கர்த்தர் தொங்கி மாண்ட, அற்புத சிலுவை காண்கையில்” என்ற துதிப்பாடல். இந்தப் பாடலின் பல வரிகள் ஜோனதன் எட்வர்ட்சின் வாழ்க்கைக்கும், அனுபவத்திற்கும் மிகவும் பொருத்தமானவை. அவர் இந்தப் பாடலைத் தன் குரலை உயர்த்தி முழு பலத்தோடும் பாடியிருப்பார் என்று என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும். “ஆணவம் ஆங்காரம் வீணே! என்ற வரிகள் அவருக்குப் பிடித்தமானவை! ஏனென்றால், அவர் பெருமையைக்குறித்து அடிக்கடி எழுதினார். அது மிகவும் ஆபத்தானது என்று அவர் உணர்ந்தார். தன் வாழ்வில் அது நுழைந்துவிடக் கூடாது என்பதில் கண்ணுங்கருத்துமாக இருந்தார். அதுபோல அவர் தேவனுடைய அன்பின் பரிமாணத்தையும் புரிந்துகொண்டார். ஜோனதனும், அவருடைய மனைவி சாராளும் தங்களையும், தங்களிடம் இருந்தவைகளையும், தங்களால் இயன்றவைகளையும் தேவனுக்காகவும் மக்களுக்காகவும் ஊற்றினார்கள், உடைத்தார்கள் என்று நிச்சயமாகச் சொல்லலாம். அவர் பூரணமானவர், பழுதற்றவர், குறைவற்றவர் என்று நான் நிச்சயமாகச் சொல்லவில்லை. அவரிடம் குருட்டுப் புள்ளிகள் இருந்திருக்கலாம். ஆனால், நிச்சயமாக அவர் தேவ மனிதர். அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய காரியங்கள் நிறைய உள்ளன.கற்றுக்கொள்ளலாம். கற்றுக்கொள்வோம்.