Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More

வேதவசனம்:

 யோவான் 16:8-10; ரோமர் 4:24-25; 5:1-2; 6:23; 8:31-39; 1 கொரிந்தியர் 6:19-20; 10:13; 2 கொரிந்தியர் 5:9, 14-15, 18-21; எபிரேயர் 7:25; 1 பேதுரு 1:18-19; 1 யோவான் 1:5; 2:2; வெளி. 14:12

11-நீதிப்படுத்தப்படுதல்.pdf

நீதிப்படுத்தப்படுதல் - 11

விசுவாசத்தால் கிருபையில் நிற்றல்

நீதிப்படுத்தப்படுதல்

பரிசுத்த ஆவியானவர் நம்மை மாற்றுகிற வேலை நம் வாழ்நாள் முழுவதும் நடைபெறுகிறது. இந்த வேலை நாம் நீதிப்படுத்தப்படுவதோடு நெருங்கிய தொடர்புடையது; நீதிப்படுத்தப்படுவது என்றால் நாம் மீண்டும் பிறந்தபோது தேவனுக்குமுன்பாக நிற்பதற்கு அவர் நமக்கு நீதியுள்ள நிலைமையை வழங்கியிருக்கிறார் என்று பொருள்.

புதிய பிறப்பு - புதிய நிலை

நாம் “விசுவாசத்தால் நீதிப்படுத்தப்படும்போது” தேவன் நமக்கு ஒரு புதிய நிலைப்பாட்டையும், புதிய இடத்தையும் இலவசமான கொடையாகக் கணப்பொழுதில் நமக்குத் தந்துவிடுகிறார். புதிய பிறப்பு, நீதிபடுத்தப்படுதல் என்ற அதிசயங்கள் எப்போதும் சேர்ந்தே செல்கின்றன; அவை நம்மைப் பரிசுத்தமாக்கப்படுவதற்கு நேராக நடத்துகின்றன. நீதிப்படுத்தப்படுதல் கணப்பொழுதில் நடந்துமுடிந்துவிடுகிறது; ஆனால், பரிசுத்தமாக்கப்படுதலோ வாழ்நாள் முழுவதும் நடைபெறுகிறது.

தேவன் பரிசுத்தர்; ஆனால் நாம் பாவிகள். பாவிகளாகிய நமக்குப் பரிசுத்தமான தேவனோடு உறவு வேண்டுமானால் நாம் நீதிப்படுத்தப்பட வேண்டும். எனவே, நீதிப்படுத்தப்படுதல், நாம் பாவிகள் என்ற முறையில், பரிசுத்தமான தேவனோடு நமக்குள்ள உறவோடு சம்பந்தப்பட்டது. அது தேவனுக்குமுன்பாக நாம் எங்கு நிற்கிறோம் என்ற பிரச்சினையோடு இடைப்படுகிறது. மன்னிக்கப்படாத பாவிகள் இந்த முறையில் நாம் நம் தளத்திலேயே நின்றால் நாம் ஆக்கினைக்குள்ளானவர்களாகவும், தொலைந்துபோனவர்களாகுமே இருப்போம். ஆனால், தகுதியில்லாத நமக்குத் தேவன் இலவசமாகத் தருகிற கொடையாகிய இரட்சிப்பை நாம் ஏற்றுக்கொண்டால், மன்னிக்கப்பட்ட பாவிகள் என்ற முறையில் அவர் நமக்கு ஒரு புதிய நிலைப்பாட்டை, நிலையை, தருகிறார். இந்தக் காரியத்தில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். ஒரு கணப்பொழுதில் நாம் பாவமன்னிப்பைப் பெறுகிறோம், தேவனோடு ஒப்புரவாக்கப்படுகிறோம், நித்திய ஜீவனைப் பெறுகிறோம்.

ஆனால், பரிசுத்த ஆவியானவர் நம்மை மாற்றுகிற வேலை நம் வாழ்நாள் முழுவதும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. நம் நிலையையும், நிலைமையையும் பொறுத்தவரை, நாம் இன்னும் பாவமுடையவர்களாக இருந்தாலும், நாம் தேவனுடைய பிள்ளைகள். தேவன் நம்மை அவருடைய பிள்ளைகளாகக் கருதுகிறார்.

பரலோகத் தீர்ப்பு

இதை நாம் இப்படி விளக்கலாம். நாம் கலகக்காரர்கள், சட்டத்தை மீறியவர்கள் என்ற முறையில், நாம் பரலோக நீதிமன்றத்தில் பரிசுத்தமான தேவனுக்குமுன்பாக மரண ஆக்கினைத்தீர்ப்பு வழங்கப்பட்ட குற்றவாளிகளாக நிற்கிறோம்; ஆனால், நாம் வாழ்ந்திருக்கவேண்டிய பூரணமான வாழ்க்கையை ஆண்டவராகிய இயேசு வாழ்ந்தார். நமக்குப்பதிலாக அவர் நம் பாவங்களுக்காக மரித்தார். ஆகையால், நாம் “குற்றமற்றவர்கள்” என்ற தீர்ப்பு வழங்கப்பட்டு, நம்மில் சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்படுகிறோம். அவர் சிந்திய இரத்தத்தில் நாம் பாவமன்னிப்பைப் பெறுகிறோம். அவருடைய நீதியுள்ள வாழ்க்கையினால் நாம் விடுதலையைப் பெறுகிறோம்; நீதிமன்றத்தைவிட்டு நாம் விடுதலையோடு வெளியேறுகிறோம்; புதுப்பிறப்பின்மூலம் தேவன் நமக்குத் தந்த புதிய வாழ்க்கையை வாழ்வதற்கு நாம் விடுதலையோடு புறப்பட்டுச்செல்கிறோம்.

நீதிப்படுத்தப்படுதல் என்றால் இதுவே பொருள். நாம் இன்னும் பாவிகள்தான். ஆனால், தேவன் இனிமேல் நம் பாவத்தன்மையை, நம் நிலையை, பார்ப்பதில்லை. அவர் நம்மை மூடிமறைத்திருக்கிற இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தையும், அவருடைய பூரணமாக வாழ்க்கையையும் பார்க்கிறார். அவருடைய இரத்தமும், அவருடைய வாழ்க்கையும் “நம் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளன”. இதனால் மட்டுமே பரிசுத்த தேவன் நம்மோடு இடைப்படமுடிகிறது. இல்லையென்றால் அவரால் நம்மோடு இடைப்படமுடியாது. அது சாத்தியமாயிருக்காது. இதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். நாம் இப்போது அவருடைய பிள்ளைகள். நாம் அவரை “அப்பா” என்று அழைக்க முடிகிறது. ஆனால், இவைகளெல்லாம் அவருடைய ஆச்சரியமான கிருபையினால் மட்டுமே சாத்தியமாயிற்று. நாம் இதைத் தகாச்சலுகையாகவோ, பரிச்சயத்தினால் ஏனோதானோவென்றோ எடுத்துக்கொள்ளக்கூடாது.

விசுவாசத்தை மட்டுமே, “இயேசுவில் விசுவாசத்தை” மட்டுமே, ஆதாரமாகக்கொண்டு பாவியை இலவசமாக மன்னித்து, நீதிப்படுத்துற இந்த ஆச்சரியமான கிருபை உண்மையான கிறிஸ்தவத்தை வேறுபடுத்திக்காட்டுகிற மாபெரும் சிறப்பம்சம். “மனிதன் ஏதோவொரு வகையில் அல்லது அளவில் இரட்சிப்பைச் சம்பாதிக்க வேண்டும், அதற்காகக் கடுமையாகப் பிரயாசப்பட்டு உழைக்க வேண்டும்” என்று பொய்யான கிறிஸ்தவம் உட்பட மற்ற எல்லா மதங்களும் கோருகின்றன.

பரிசுத்தமாக்கப்படுதல்

உண்மையான நீதிப்படுத்துதல் பரிசுத்தமாக்கப்படுவதற்கு நேராக நடத்துகிறது. ஒருவனுடைய வாழ்க்கையில் பரிசுத்தமாக்கப்படுதல் நடைபெறவில்லையென்றால், அவன் உண்மையாகவே நீதிப்படுத்தப்பட்டிருக்கிறானா என்ற கேள்வி எழத்தான் செய்யும். அதுபோல, ஒருவன் உண்மையாகவே நீதிப்படுத்தப்பட்டிருந்தால் மட்டுமே அதன் விளைவாக உண்மையான பரிசுத்தமாக்கப்படுதல் சாத்தியமாகும். தங்களை நீதிப்படுத்திக்கொள்வதற்காக பலர் தங்களைத் தாங்களே பரிசுத்தமாக்கிக்கொள்ளவும், கட்டளைகளைக் கடைப்பிடிக்கவும், இயேசுவைப்போல பாவனைசெய்யவும் போராடுகிறார்கள். இது மிக ஆபத்தான தவறான புரிந்துகொள்ளுதல். சுயமுயற்சியினால் அல்ல, பரிசுத்த ஆவியானவரின் ஆற்றலால் மட்டுமே பரிசுத்தமாக்கப்படுதல் சாத்தியமாகும். இதற்கு நீதிப்படுத்தப்படுதல் உறுதியான ஆதாரம். பரிசுத்தமாக்கப்படுதல் நீதிப்படுத்தப்படுவதில் வேர்கொண்டிருக்கிறது. நாம் விசுவாசத்தால் கிருபையின்மூலம் நீதிப்படுத்தப்பட்டிருக்கிறோம். ஆகையால், நாம் பரிசுத்தமாக்கப்படுவதற்காகக் கர்த்தருடன் ஒத்துழைக்கிறோம். நீதிப்படுத்தப்படுவதும், பரிசுத்தமாக்கப்படுவதும் இணைபிரியாத இரட்டைப்பிள்ளைகள்.

தேவன் பாவத்தை ஒருபோதும் கண்டும் காணாதவர்போல் போவதில்லை அல்லது நம்மையும் அவர் சும்மா விட்டுவிடுவதில்லை. பாவம் கொடூரமானது. தேவன் நம்மை மன்னிக்கிறார், பொருத்தருள்கிறார், நீதிப்படுத்துகிறார்; இது நம்மை மாற்றுவதற்கான ஓர் ஆரம்பப் புள்ளி. நாம் பாவத்தை ஏனோதானோவென்று எடுத்துக்கொண்டு, அதற்குச் சாக்குப்போக்குச் சொல்லித் தட்டிக்கழிக்கக்கூடாது அல்லது நாம் இருக்கும் நிலைமையில் திருப்தியடையவும் கூடாது. மன்னிக்கப்பட்ட பாவிகள் என்ற முறையில், நமக்கு இப்போது ஒரு நிலைப்பாடு கொடுக்கப்பட்டிருக்கிறது. நாம் நீதிப்படுத்தப்பட்டிருக்கிறோம். இந்த நிலைப்பாடு நம்மை மறுசாயலாக்குவதற்குத் தேவையான முதல் படி. நாம் எப்படி இருக்கிறோமோ அப்படியே கர்த்தர் நம்மை ஏற்றுக்கொள்கிறார்; ஆனால், நாம் இருக்கிற நிலையில் அப்படியே இருக்கக் கூடாது. நாம் மாற வேண்டும்.

குற்றமற்ற மனச்சாட்சி

இயேசு கிறிஸ்துவின் இரத்தம் தேவனுடைய பரிசுத்தத்தைத் திருப்திப்படுத்துகிறது. அதனால் நாம் பாவமன்னிப்பைப் பெறுவதற்கு வழி ஏற்படுத்துகிறது. அது மட்டும் அல்ல; நவீனகால உளவியல் மும்முரமாகக் கவனம்செலுத்துகிற ‘குற்ற மனச்சாட்சி’ என்ற பிரச்சினைக்கும் அதுவே பதிலுமாகும். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொன்னதுபோல, பரிசுத்த ஆவியானவர் மக்களுடைய பாவத்தைக்குறித்துக் கண்டித்து உணர்த்தும்போது, அவர்கள் அதற்காக மனம்வருந்தி, இரட்சகரைத் தேட வேண்டும் என்பதில் அவர் அக்கறையுள்ளவராக இருக்கிறார். ஆனால், அதே வேளையில், பிசாசானவன் பரிசுத்த ஆவியானவரின் வேலையை நாசமாக்கி, மக்கள் பாவத்தைக்குறித்து கவலைப்படக்கூடாது என்பதற்காகப் பாவத்தை நியாயப்படுத்த அதிகமாக உழைக்கிறான்.கிறிஸ்துவின் இரத்தமே நம் குற்ற உணர்ச்சிக்கு உண்மையான பதில், தேவனுடைய பதில். ஆனால், மனிதன் பாவத்தையும், அதன் விளைவுகளையும் எப்போதும் நியாயப்படுத்த முயல்கிறான். இயேசு மரித்ததால், அவர் மரித்ததால் மட்டுமே, நாம் குற்றமனச்சாட்சி உள்ளவர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்கு நாம் அவரிடம் சரணடைந்திருக்க வேண்டும்.

நம் பாவத்தன்மையைக்குறித்த உணர்வு வரும்போது பிசாசானவன் நம்மில் குற்றம் சுமத்தினால் நாம் கலங்கத் தேவையில்லை. அவனுடன் எதிர்த்துப் போராடுவதில் எந்தப் பயனும் இல்லை. “சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கிற இயேசுவின் இரத்தத்தை” நாம் அவனுக்குச் சுட்டிக்காட்ட வேண்டும். அவருடைய இரத்தம் இல்லையென்றால் பிசாசானவன் பரலோக நீதிமன்றத்தில் நமக்கு எதிராக வழக்குத் தொடுக்க முடியும்; அந்த வழக்கில் நாம் தோற்றுப்போவோம். தேவன் பிசாசின் வழக்கைக் கேட்டு, நம்மைத் துரத்திவிடவேண்டியிருக்கும். ஆனால், “நம் ஆண்டவராகிய இயேசு நம் பாவங்களுக்காக மரணத்துக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிப்படுத்தப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருப்பதால்,” பிசாசு நம்மேல் வழக்குப்போட முடியாது. நாம் அவனுடைய எந்த வழக்குக்கும் பதில் சொல்லத் தேவையில்லை. நாம் நீதிப்படுத்தப்பட்டிருக்கிறோம்; நாம் விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம்.

ஆனால், “ஒரு கிறிஸ்தவன் பாவத்தில் விழுந்தால் என்ன நடக்கும்?” என்று நீங்கள் கேட்கலாம். நாம் பாவம் செய்யக்கூடாது; பாவம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால், சோதனை வேளைகளில் நாம் தப்பிப்பதற்கான வழியையும் தேவன் நமக்கு வழங்கியிருக்கிறார். “ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசு கிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்துபேசுகிறவராயிருக்கிறார். நம்முடைய பாவங்களை நிவிர்த்திசெய்கிற கிருபாதார பலி அவரே”. “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்”. யோவான் கிறிஸ்தவர்களுக்குத்தான் இந்த நிருபத்தை எழுதியிருக்கிறாரேதவிர பொதுப்படையாக எல்லாருக்கும் எழுதவில்லை. மறுபடி பிறந்தவர்களுக்கு மட்டுமே பிதாவினிடத்தில் பரிந்துபேசுகிற ஒருவர் இருக்கிறார். ஓர் அவிசுவாசி தேவனுடைய குமாரனுக்குத் தன்னை ஒப்படைக்காமல், மன்னிப்பு வேண்டும் என்பதற்காகத் தன் பாவத்தை அவ்வப்போது பொதுப்படையாக அறிக்கைசெய்வதால் எந்தப் பயனும் இல்லை. ஆனால், கர்த்தர் உண்மையான கிறிஸ்தவனைப் பரிசுத்தமாக்கப்படுதல் என்ற பாதையில் நடத்தும்போது, நீதிப்படுத்தப்படுதல் என்ற சத்தியத்தின்மேல் அவனுக்கு உறுதியான பிடிப்பு இருக்க வேண்டும். ஏனென்றால், அந்தப் பாதையில் அவன் தன் பாவத்தன்மையைச் சிறிதளவாவது காணத் தொடங்குகிறான். தன்மையின்படி நீங்கள் தன்னைத்தானே ஆராய்ந்துபார்க்கும் ஒரு நபர் என்றால், கடைசி இரண்டு பத்திகளை நன்றாகக் கவனியுங்கள்.

நாம் கர்த்தருக்குச் சொந்தம்

நாம் இனிமேல் நமக்குச் சொந்தம் அல்ல, கர்த்தருக்குச் சொந்தம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். கலகக்காரர்கள் என்ற முறையில் நாம் கடந்த காலத்தில் நாம் நம் விருப்பம்போல் நமக்குப் பிரியமாக வாழ்ந்தோம். இப்போது நாம் கிறிஸ்துவுக்குச் சொந்தம்; எனவே, நாம் அவருக்குப் பிரியமாக வாழ வேண்டும். “அவருடைய இரத்தத்தினாலே தேவனுக்கென்று விலைக்கு வாங்கப்பட்டிருக்கிறீர்கள்…கிரயத்துக்குக் கொள்ளப்பட்டிருக்கிறீர்கள்…கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினால் மீட்கப்பட்டிருக்கிறீர்கள்…நாம் நம்முடையவர்களல்ல”. நம்மைத் தமக்கென்று சொந்தமாக்கிக்கொள்ள அவர் மரித்தார்.

எனவே, அவருடைய இரத்தத்தினாலே நான் மன்னிப்பைப் பெற்று, மீண்டும் பிறந்ததுமுதல் பரலோகம் சென்று மகிமை அடைவதுவரை எல்லாம் சாத்தியமாயிற்று. நம்மை மாற்றுகிற வேலை நம் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து நடைபெறும்போது, அவருடைய நீதியும் அவருடைய பரிசுத்தமுமான நீதியுள்ள வாழ்க்கையும் நம்மை மூடுவதற்காக “நம் கணக்கில் சேர்க்கப்பட்டிருக்கின்றன”.

வேத வசனம் 

யோவான் 16:8-10; ரோமர் 4:24-25; 5:1-2; 6:23; 8:31-39; 1 கொரிந்தியர் 6:19-20; 10:13; 2 கொரிந்தியர் 5:9, 14-15, 18-21; எபிரேயர் 7:25; 1 பேதுரு 1:18-19; 1 யோவான் 1:5; 2:2; வெளி. 14:12