Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More

வேத வாசிப்பு  

மத். 6:19-34; 13:22; 26:41; மாற்கு 4:19; லூக்கா 8:14; 17:26-30; 21:26, 34-36; யோவான் 10:10, 27-29; 1 கொரி. 6:17; 9:24-27; கலா. 3:5; எபே. 6:18; பிலி. 1:19; 3:12-14; 4:6-7; கொலோ. 2:19; 4:2; 1 தீமோ. 6:9-10; 2 தீமோ. 3:2-4; எபி. 3:12-14; 4:11-13; யாக்கோபு 1:22; 4:1-4; 2 பேதுரு 1:5-11

13-இயேசு கிறிஸ்துவில் ஜீவனைப் பராமரித்தல்.pdf

இயேசு கிறிஸ்துவில் ஜீவனைப் பராமரித்தல் - 13

உண்மையான கிறிஸ்தவனுடைய ஆவிக்குரிய முன்னேற்றத்திலும், அனுபவத்திலும்கூட நிச்சயமாகத் தடைகள் ஏற்பட முடியும். அவனுடைய ஆவிக்குரிய முன்னேற்றத்துக்கும், அனுபவத்துக்கும் எந்த உத்தரவாதமும் இல்லை; அவைகள் தானாகவே நடந்துவிடாது; நடந்துவிடும் என்று எதிர்பார்க்கவும் கூடாது. இது நாம் கர்த்தருடன் எந்த அளவுக்கு ஒத்துழைக்கிறோம் என்பதைச் சார்ந்திருக்கிறது. எனவே, அப்படிப்பட்ட சில தடைகளை, சில தடங்கல்களை, நாம் இப்போது பார்ப்போம்.

நாம் “கிறிஸ்துவில் மறைந்திருக்கிறோம்” என்பதும், “கிறிஸ்து நம்மில் இருக்கிறார்” என்பதும், “நாம் அவருடன் இணைந்திருக்கிறோம்” என்பதும் உண்மை. ஆனாலும், இந்த உண்மைகள் தேவனுடைய நோக்கம் நம் வாழ்க்கையில் நிறைவேறிவிடும் என்பதற்கோ, அவரில் நமக்கிருக்கும் எல்லா உடைமைகளையும் நாம் நம் ஆயுட்காலத்தில் அல்லது நித்தியத்தில் உடைமையாக்கிக்கொள்வோம் என்பதற்கோ உத்தரவாதம் இல்லை. தேவனுடைய நோக்கம் நம்மில் மெய்யாவதற்கு நம் ஒத்துழைப்பு இன்றியமையாததாகும்.

தடைபட்ட உறவு

முதலாவது, இரண்டாவது படத்தைப் பாருங்கள். கர்த்தருடனான நம் இணைப்பு முறிந்துவிடவோ, அவருடைய ஜீவ ஓட்டம் முற்றிலுமாகத் துண்டிக்கப்படவோ இல்லை; மாறாக, தடைபட்டிருக்கிறது என்று இரண்டாவது படம் விவரிக்கிறது.

நாம் உண்மையாகவே மறுபடி பிறந்திருந்தால், நாம் கர்த்தருடன் என்றென்றைக்கும் இணைந்திருக்கிறோம். ஆயினும், நம் இரட்சிப்பின் நோக்கம் தடைபடலாம். நம் இரட்சிப்பின் நோக்கத்தை நாம் தவறவிடலாம். நாம் மறுபடி பிறந்ததற்கான நிரூபணம் நம் ஆவிக்குரிய முன்னேற்றத்திலும், அனுபவத்திலும் இல்லையென்றால், உண்மையாகவே நாம் மறுபடி பிறந்திருக்கிறோமா என்பது ஒரு கேள்விக்குறி. அப்படிப்பட்டவன் ‘பின்வாங்கிப்போகிற’, ஆபத்தான, நிச்சயமற்ற நிலையில் இருக்கலாம். அவன் இரட்சிக்கப்படவில்லை என்று துணிந்து சொல்வதற்குப்பதிலாக, அவனுடைய இரட்சிப்பில் எங்கேயோ ஏதோவொரு தவறு நடந்திருக்கிறது என்று நாம் சொல்வது சரியாக இருக்கும். இப்படிப்பட்டவர்கள் எப்போதோ ஒருமுறை ஒரு “தீர்மானம்” எடுத்திருக்கலாம் அல்லது சில “அனுபவங்களைப்” பெற்றிருக்கலாம். அவர்கள் எடுத்த தீர்மானத்தினாலோ அல்லது அவர்கள் பெற்ற அனுபவங்களாலோ அவர்கள் இரட்சிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியாது. ஏனென்றால், அவர்கள் இரட்சிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதற்கான உள்ளான அல்லது புறம்பான எந்த நிரூபணமும் இப்போது அவர்கள் வாழ்க்கையில் காணப்படவில்லை. எனினும், உண்மையாகவே கார்தருடையவர்களாகிய இவர்கள் வாழ்க்கையில் “தடையூறு,” “தடங்கல்” இருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. இதைத்தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

இரண்டாவது, பரிசுத்த ஆவியானவர் நமக்குத் தெரியாமலேயே நம் வாழ்நாள் முழுவதும் நம்மில் செய்துகொண்டிருக்கிற ஆழமான மறுவுருவாக்குகிற வேலைக்கும், இரட்சிப்பை அனுதினமும் அனுபவமாக்குவதற்கும், அனுபவிப்பதற்கும் இந்தத் தடைகள் முட்டுக்கட்டையாக இருக்கின்றன. ஆவியானவர் நம்மில் செய்துகொண்டிருக்கிற மருவுருவாக்குகிற வேலையை முதல் வரைபடம் விளக்குகிறது. இரட்சிப்பை அனுபவமாக்குவதற்கும், அனுபவிப்பதற்கும் தடைகள் முட்டுக்கட்டையாக இருப்பதை மூன்றாவது வரைபடம் விளக்குகிறது.

இப்போது நாம் சில தடைகளைப் பார்ப்போம்:

1.அறியாமை:

இரட்சிப்பைக்குறித்த தேவனுடைய நோக்கத்தை நாம் அறியாவிட்டால், நம் எல்லாத் தேவைகளுக்கும் அவருடைய நிறைவான வழங்கீடு அவருடைய குமாரனில் இருக்கிறது என்பதை நாம் அறியாவிட்டால் நிச்சயமாகக் கடுமையான விளைவுகள் ஏற்படும். எபேசியர் 1:15-23இல் பவுல் எபேசியர்களுக்காக ஜெபிக்கிற ஜெபத்தில் இதைக்குறித்த அவருடைய கரிசனையைத் தெரியப்டுத்துகிறார். அவர்களுக்கான தேவனுடைய மாபெரும் திட்டத்தைக் காண்பதற்கும், அந்தத் திட்டத்தை அவர்களுடைய வாழ்க்கையில் செய்துமுடிப்பதற்காக அவர்களுக்கு ஒப்புவிக்கப்பட்டுள்ள அவருடைய மாபெரும் வல்லமையைக் காண்பதற்கும் அவர்களுடைய கண்கள் திறக்கப்பட வேண்டுமென்று பவுல் ஏங்குகிறார். இரட்சிக்கப்படாதவர்களுக்காக அல்ல, மாறாகக் கிறிஸ்தவர்களுக்காக அவர் ஜெபிக்கிறார் என்பதைக் கவனியுங்கள். கிறிஸ்தவர்கள் தங்கள் அறியாமையினால் பல காரியங்களைத் தவறவிட முடியும் என்று அவருக்குத் தெரியும். இந்தக் காரணத்தினால்தான் நாம் ஒவ்வொருவரும் வேதவாக்கியங்களைக் கருத்தாய் வாசிக்கவும், ஆராய்ந்துபார்க்கவும் வேண்டும். சபை வாழ்க்கையில் வேதவாக்கியங்களைப்பற்றிய வெளிப்பாடு மிகவும் அவசியம்.

2. அலட்சியம்

“நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்,” என்று யாக்கோபு எழுதுகிறார். வெறுமனே கூட்டங்களில் கலந்துகொண்டு, செய்திகளைக் கேட்டுவிட்டு, அதன்பின் கர்த்தர் நமக்குக் காண்பிக்கிற காரியங்களிலிருந்து நாம் மிக எளிதாக விலகிச்செல்ல முடியும். இது சாத்தியம் என்று எபிரேயர் 2:1-3 எச்சரிக்கிறது. “உங்கள் அழைப்பையும், தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள்,” என்று பேதுரு கூறுகிறார். நாம் விழிப்பாகவும், கவனமாகவும் இருக்க வேண்டும் என்று தேவனுடைய வார்த்தை நம்மைத் தொடர்ந்து உற்சாகப்படுத்துகிறது. எல்லாக் கிறிஸ்தவர்களும் கிறிஸ்துவிலுள்ள தங்கள் சுதந்தரத்தை அடையமாட்டார்கள். நித்தியமாக இரட்சிக்கப்பட்டிருக்கிறோம் என்பது ஒரு காரியம். இலவசமாகக் கொடுக்கப்பட்டுள்ள நம் சுதந்தரத்தைத் சுதந்தரித்துக்கொள்வது வேறொரு காரியம். வாக்களிக்கப்பட்ட “பரிசையும்”, “கிரீடத்தையும்” பெற வேண்டும் என்பதைக் குறித்து பவுல் மிக அக்கறை கொண்டிருந்தார்.

3. அவிசுவாசம்.

“ஜீவனுள்ள தேவனைவிட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம்” ஆவிக்குரிய முன்னேற்றத்திற்கும், அனுபவத்திற்கும் தொடர்ச்சியான பயமுறுத்தலாகும். இஸ்ரயேலர்கள் அவிசுவாசத்தினால்தான் தங்கள் சுதந்தரமாகிய வாக்களிக்கப்பட்ட நாட்டை அடையவில்லை. நம் இருதயத்தில் சந்தேகங்கள் எவ்வளவு எளிதாக நுழைந்துவிடுகின்றன! சோதனை நேரங்களில் கர்த்தருடைய நற்குணத்தைக்குறித்த சந்தேகங்களும், பிரச்சினைகளும் வருகின்றன. சோதனைகள் வரும்போது, அவைகளின்வழியாக நம்மைக் கொண்டுபோவதற்கு அவருடைய திறமை போதுமா என்ற சந்தேகங்களும், நம் பரம பயணத்தில் நம்மைக் கடைசிவரைக் கொண்டுபோவதற்கு அவர் உத்தமமானவர்தானா என்ற சந்தேகங்களும் வருகின்றன. நாம் அவரை விசுவாசிக்கும்போது மட்டுமே நாம் முன்னேறிச்செல்லவும் முடியும், அவருடைய போதுமான நிறைவை அனுபவமாக்கவும் முடியும், அவர் வாக்களித்துள்ள “அபரிமிதமான ஜீவனை” அனுபவிக்கவும் முடியும் .

4. கீழ்ப்படியாமை.

விசுவாசமும் கீழ்ப்படிதலும் இணைந்திருப்பதுபோல, அவிசுவாசமும் கீழ்ப்படியாமையும் இணைந்திருக்கின்றன (எபி. 3:18-19). நம் இரட்சிப்பின் எல்லா அம்சங்களையும் விவரிக்கின்ற ரோமருக்கு எழுதின நிருபம் “விசுவாசத்துக்குக் கீழ்ப்படிதல்” (1:7; 16:25) என்ற காரியத்தில் தொடங்கி, அதிலேயே முடிவடைகிறது. உண்மையான விசுவாசமும், கீழ்ப்படிதலும் எப்போதும் சேர்ந்தே செல்கின்றன. வேதவாக்கியங்களுக்கு அல்லது ஐக்கியத்தின்மூலம் கர்த்தர் நமக்குச் சொல்பவைகளுக்குக் கீழ்ப்படியாதபோது தடங்கல் ஏற்படும்.

5. நெருக்கும் முட்கள்.

விதைக்கிறவனைப்பற்றிய உவமையில் சில விதைகள் முட்புதரில் விழுந்தன என்றும், முட்புதர்கள் வளர்ந்து விதைகளை நெருக்கிப்போட்டன என்றும் வாசிக்கிறோம். “உலகக் கவலைகளும், ஐசுவரியத்தின் மயக்கமும், வாழ்வின் சிற்றின்பங்களுமே’ இந்த முட்புதர்கள் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தத் தடைகள் என்னவாக இருக்கலாம்!

1. முதலாவது, உலகக் கவலைகள் -

கவலைகள், பயங்கள், சுமைகள். “ஒன்றைக்குறித்தும் கவலைப்படாதிருங்கள்” என்றும், “பயப்படாதிருங்கள்” என்றும் வேதாகமம் அடிக்கடிச் சொல்லவில்லையா? நம்பிக்கையும், கவலையும் சேர்ந்து வாழ முடியாது.

2. அடுத்தது, “ஐசுவரியத்தின் மயக்கம்”-

அதாவது பொருளாசை, பணஆசை. இது உலகத்தின் பேராசையுள்ள ஆவி. பணத்தை நேசிப்பது, ஆஸ்திகளைச் நேசிப்பது, அவைகளைச் சார்ந்திருப்பது, வாழ்க்கையில் ஏதோவொரு துறையில் வெற்றிபெற வேண்டும் என்று துடிப்பது - இவைகளெல்லாம் எப்பேர்ப்பட்ட சாபங்கள்!

3. அடுத்தது, “வாழ்வின் சிற்றின்பங்கள்”. 

தோன்றி மறைகின்ற உலகச் சிற்றின்பங்கள், கவர்ச்சிகள், களியாட்டங்கள் கண்ணிகள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. ஆனால், தீமையற்றதுபோல் தோன்றுகிற சில வீட்டு வசதிகளும், இன்பங்களும், நாம் விரும்பிச் செய்கிற சில காரியங்களும்கூட ஒரு கண்ணியாக மாறிவிடலாம். இந்த மூன்று காரியங்களும் உலகத்தின் குணங்கள் என்று சொல்லப்பட்டிருப்பதைக் கவனியுங்கள். இந்த உலகத்துக்குக் கர்த்தர் மீண்டும் வருவார்.

இந்தக் காரியங்களெல்லாம் நம் முன்னேற்றத்திற்கும், மகிழ்ச்சிக்கும் தடைக்கற்களாக இருக்க முடியும். கர்த்தர் தடையில்லாமல் பாய்ந்தோடுவதற்கும், செயல்படுவதற்கும், நம் வாழ்க்கை கனிநிறைந்ததாகவும், வீரியமுள்ளதாகவும், பொருளுள்ளதாகவும் இருப்பதற்கும், நாம் எப்போதும் பரத்தைநோக்கித் திறந்தவர்களாக இருக்க விழிப்புடன் இருப்போமாக. ஆமென்.

வேத வாசிப்பு  

மத். 6:19-34; 13:22; 26:41; மாற்கு 4:19; லூக்கா 8:14; 17:26-30; 21:26, 34-36; யோவான் 10:10, 27-29; 1 கொரி. 6:17; 9:24-27; கலா. 3:5; எபே. 6:18; பிலி. 1:19; 3:12-14; 4:6-7; கொலோ. 2:19; 4:2; 1 தீமோ. 6:9-10; 2 தீமோ. 3:2-4; எபி. 3:12-14; 4:11-13; யாக்கோபு 1:22; 4:1-4; 2 பேதுரு 1:5-11