Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More

வேத வாசிப்பு  

ரோமர் 6:14; 7:17, 20; 8:12, 13; 1 கொரி. 11:1, 28; 2 கொரி. 5:17; 13:5; கலா. 2:20; 5:16-25; எபே. 2:10, 15; 5:1; கொலோ. 1:29; 2:20-3:4; எபி. 12:6, 10; 2 பேதுரு 1:3-11; ஏசாயா 64:4

16-மனிதனின் முப்பகுதி.pdf

மனிதனின் முப்பகுதி அமைப்பு - ஆவி, ஆத்துமா, சரீரம் - 16

மனிதன் மூன்று பகுதிகளாலான ஓர் ஒருமை என்று வேதவாக்கியங்கள் கூறுகின்றன. ஆனால், இதன் முக்கியத்துவத்தை, குறிப்பாக, ஆத்துமாவுக்கும் ஆவிக்கும் இடையேயுள்ள வேறுபாட்டை மக்கள் சரியாகப் புரிந்துகொண்டதுபோல் தெரியவில்லை. ’மனித இயல்பில் உடல்சார்ந்த பாகம், உடல்சாராத பாகம் என இரண்டு பாகங்கள் இருப்பதாகப் புதிய ஏற்பாடு பல இடங்களில் கூறுகிறது. ஆனால், மனிதன் ஆவி, ஆத்துமா, சரீரம் என்ற முப்பகுதிகளை உடையவன் என்றும் சில நேரங்களில் புதிய ஏற்பாடு கூறுகிறது. அப்படியானால், மனிதன் இரண்டு பகுதிகளை உடையவனா அல்லது மூன்று பகுதிகளை உடையவனா? மனிதனின் உடல்சார்ந்த பாகத்தை நாம் எளிதில் புரிந்துகொள்கிறோம். ஆனால், அவனுடைய உடல்சாராத பாகத்தில் ஆத்துமா என்ற ஒரு தாழ்வான பகுதியும், ஆவி என்ற ஆளுகைசெய்யும் புலனும் இருப்பதைப் பார்க்கிறோம். மனிதன் தன் ஆவியினால் மட்டுமே தேவனுடன் உறவாடவும், அந்த உறவைப் பராமரிக்கவும் முடியும்.

மனிதன் வெறுமனே ஓர் உயர்தரமான விலங்கு என்ற ஒரு கூற்று உண்டு. ஆனால், மனிதனுக்கு ஆவிக்குரிய ஒரு புலன் உண்டு என்ற உண்மை இந்தக் கூற்றுக்கு, இந்தத் தேற்றத்துக்கு, நிச்சயமாக ஒரு பெரிய சவால்.

மனிதன் ஓர் ஒருமையே; ஆனால், ஒருமையில் அவன் ஒரு மூவொருமை. மனிதனுடைய ஆத்துமா வேறு, அவனுடைய ஆவி வேறு. அவனுடைய ஆத்துமாவுக்கும் ஆவிக்கும் இடையே வேறுபாடு இருப்பதால், அவன் தனித்தனி அறைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறான் என்பதல்ல இதன் பொருள். மனிதன் ஒரு கூட்டொருமை. மனிதனுடைய சரீரத்துக்கும் ஆத்துமாவுக்கும் இடையே நெருக்கமான இணைப்பு இருப்பதை மருத்துவர்கள் உறுதிசெய்கிறார்கள். உடல்சார்ந்த நோய்களைப்போல், மனம்சார்ந்த நோய்களும் இருக்கின்றன. உடல்நலம் குறைந்தால் மனம் சோர்வடைகிறது. மனம் சோர்ந்தால், உடல்நலம் குறைகிறது. அதுபோலவே, ஆத்துமாவுக்கும் ஆவிக்கும் இடையே நெருக்கமான இணைப்பு இருக்கிறது. இரண்டும் வேறு; ஆயினும் அவை ஒன்றோடொன்று இணைந்து செயல்படுகின்றன.

சரீரத்துக்கும் ஆத்துமாவுக்கும் இடையேயுள்ள வேறுபாட்டையும், ஆத்துமாவுக்கும் ஆவிக்கும் இடையேயுள்ள வேறுபாட்டையும் நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு. நாம் பரிசுத்தமாக்கப்படுவதையும், கர்த்தர் நம்முடன் எப்படி இடைப்படுகிறார், ஏன் ஒரு குறிப்பிட்ட விதத்தில் இடைப்படுகிறார் என்பதையும் தெளிவாகப் புரிந்துகொள்வதற்கு இது முக்கியமானதும், பயனுள்ளதுமாகும். மேலும், நம் தனிப்பட்ட வாழ்க்கையிலும், கூட்டு வாழ்க்கையிலும் நாம் சந்திக்கின்ற பல பிரச்சினைகளுக்கான காரணத்தை அறிவதற்குத் தேவையான திறவுகோலும் அதில் இருக்கிறது.

சரீரம் உலகத்தைக்குறித்த உணர்வுநிலையின் இருப்பிடம். இந்தச் சரீரத்தினால் “பொல்லாங்கனின் கட்டுப்பாட்டின்கீழ்” கிடக்கிற நம்மைச்சுற்றி இருக்கிற உலகத்தோடு தொடர்புகொள்கிறோம். நம் சரீரத்தின்மூலம் நாம் நம்மை வெளியாக்குகிறோம்; பிறரோடு தொடர்புகொள்கிறோம். சரீரத்தின் முக்கியத்துவத்தை வேதாகமம் வலியுறுத்துகிறது.

ஆத்துமா சுயத்தைக்குறித்த உணர்வுநிலை, அதாவது ஆளுமை அல்லது ஒருவனுடைய தனித்தன்மையின் இருப்பிடம். மனிதனுடைய சித்தம் (விருப்பம், தேர்ந்தெடுப்பு), உணர்ச்சி (பாசம், உணர்ச்சிவசம்), மனம் (எண்ணங்கள், கருத்துக்கள்) ஆகியவைகளை வைத்துத்தான் நாம் மனிதனைப் புரிந்துகொள்ள முடியும். மனிதப்பிறவிகள் என்ற முறையில் இதுதான் நாம். “மனிதன் ஜீவிக்கும் ஆத்துமா.”

மனிதனுடைய ஆவி தேவனைப்பற்றிய உணர்வுநிலையின் இருப்பிடம். மனிதனுடைய ஆவிக்கு உயர்ந்த ஆற்றல்கள் உண்டு. தன் ஆவியினால் அவன் இடத்தையும், நேரத்தையும் தாண்டி ஆவிக்குரிய உலகத்தோடு தொடர்புகொள்ள முடியும். மனிதனுடைய ஆவிக்கு மூன்று சிறப்பியல்புகள் உள்ளன: 1. இதற்குத் தேவனை ஆராதிப்பதற்கும், தேவனோடு உறவாடுவதற்கும் திராணி உண்டு; 2. இதில் மனச்சாட்சி உண்டு. மனச்சாட்சி கர்த்தருடைய கட்டுப்பாட்டின்கீழும், அவருடைய வார்த்தையால் போதிக்கப்பட்டும் இருக்கும்போது மட்டுமே நேர்த்தியாகச் செயல்படும்; 3. அதில் தேவைக்கேற்ப கர்த்தரால் கொடுக்கப்படும் உள்ளறிவு அல்லது புலனுணர்வு உண்டு.

எனவே, படைக்கப்பட்ட மனிதன் வெளியே ஓர் உடலையும், உள்ளே ஓர் ஆவியையும் அல்லது ஆவிக்குரிய ஆற்றலையும் கொண்ட ஒரு ஜீவிக்கும் ஆத்துமா, ஓர் ஆள், என்று நாம் சொல்லலாம்.

மனிதனின் ஆவி ஆதாமின் வீழ்ச்சியினால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே, அது சுத்தமாக்கப்பட்டு, புதிதாக்கப்பட்டு, “கிறிஸ்து இயேசுவில் தேவனுக்கென்று உயிருள்ளதாக” ஆக்கப்பட வேண்டும். மனிதனுடைய ஆவி பரிசுத்த ஆவியானவரால் ஆட்கொள்ளப்பட்டு, ஆளப்படவில்லையென்றால், சாத்தான் அவனை வஞ்சித்து, அவனைக் கட்டுப்படுத்துவதற்கு அது ஒரு வழியாக மாறிவிடும்.

ஒருவன் உண்மையாகவே மறுபடி பிறக்கும்போது, பரிசுத்த ஆவியானவர் அவனுடைய ஆவிக்குள் நுழைந்து, அவர் அதைத் தம் தலைமைச்செயலகமாக ஆக்கிக்கொள்கிறார். அவர் அங்கு இருந்துகொண்டு சித்தம், உணர்ச்சி, மனம் ஆகியவைகளைக்கொண்ட அவனுடைய ஆத்துமாவையும், அவனுடைய சரீரத்தையும் சொந்தமாக்கி முழு மனிதனையும் கிறிஸ்துவுக்காக ஆதாயப்படுத்துவதற்காக, அவனை முற்றிலும் தம் ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவருவதற்காகச் செயல்படுகிறார். பரிசுத்த ஆவியானவர் மனிதனுடைய சித்தம், மனம், உணர்ச்சி ஆகியவைகளைத் தம் ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவரச் செயல்படுகிறார் என்பதால் அவைகள் தம்மில்தாமே தீமையானவை என்பதல்ல அதன் பொருள். மனிதன் மனிதனாக இருப்பதற்கு அவை அவசியம். ஆனால், அவைகள் பாவத்தினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஆகவே, அவைகளை வென்றடக்கிக் கீழ்ப்படுத்த வேண்டும். சாத்தான் அவிசுவாசிகளைக் கைதிகளாகத் தன் சிறையிருப்பிலேயே வைத்துக்கொள்வதற்கு அவர்களுடைய சித்தம், மனம், உணர்ச்சி ஆகியவைகளைக் கர்த்தருக்கு எதிராகப் பயன்படுத்துகிறான் என்பது வெளிப்டையாகத் தெரிகிறது; அவிசுவாசிகளுக்கு மட்டும் அல்ல; விசுவாசிகளாகிய கிறிஸ்தவர்களுக்கும் அவர்களுடைய ஆத்துமா ஒரு பிரச்சினையாகவும், போர்க்களமுமாகவுமே இருக்கிறது.

இதை நாம் கொஞ்சம் விளக்கமாகப் பார்க்க வேண்டும். நாம் நம் ஆத்துமாவைப் பல வழிகளில் தூண்டியெழுப்பவும், கிளர்ந்தெழுப்பவும், பாதிக்கவும், பயன்படுத்தவும் முடியும். பிறரும் நம் ஆத்துமாவைத் தங்களுக்குச் சாதகமாகக் கையாள முடியும். எடுத்துக்காட்டாக 1. நம் ஆவியில் வாசம்பண்ணுகிற பரிசுத்த ஆவியானவரால், 2. விழுந்துபோன நம் இயல்பின்மூலம் அல்லது நம்மைச் சுற்றியுள்ள விழுந்துபோன உலகத்தின்மூலம் சாத்தான் செயல்படுவதால், 3. நாம் நம் மனோதிடத்தை அல்லது சில தியான உத்திகளைப் பயன்படுத்துவதால், 4. இயற்கையால், அதாவது நாம் பார்க்கின்ற சூரிய உதயம், சூரிய அஸ்தமனம், இயற்கைக் காட்சிகள் போன்றவைகளால் அல்லது நாம் கேட்கின்ற இசை, பாடல், சொற்பொழிவு போன்றவைகளால், 5. மற்றவர்களால், அதாவது குழுவாக இருக்கும் சூழ்நிலை, சுற்றுச்சூழல், உணர்ச்சிபூர்வமான கூட்டங்கள், வல்லமையான பிரசங்கம்போன்றவைகளால்.

எது நம்மைத் தூண்டியெழுப்புகிறது அல்லது யார் நம்மைத் தூண்டியெழுப்புகிறார் என்பதுதான் எப்போதுமே மிக முக்கியமாகக் கவனிக்கவேண்டிய கேள்வி. நம் சித்தத்தை வற்புறுத்தித் தீர்மானங்களை எடுக்க வைக்கவும் முடியும்; எடுத்த தீர்மானங்களைச் செய்லபடுத்த வைக்கவும் முடியும். ஆனால், தீர்மானங்களை எடுக்கவோ, எடுத்த தீர்மானங்களைச் செயல்படுத்தவோ தேவன் இப்படி வற்புறுத்துவதில்லை. அதுபோல, நம் உணர்ச்சிகளையும் பல வழிகளில் கிளர்ந்தெழச்செய்ய முடியும். நம் உணர்ச்சிகள் சம்பந்தப்பட்ட நிலையிலும்கூட, தேவன் நம் உணர்ச்சிகளோடு ஒருபோதும் விளையாடுவதோ அல்லது நம் உணர்ச்சிகளைக் கிளுகிளுப்பாக்குவதோ இல்லை. அவர் ஒருபோதும் பதற்றத்தையோ அல்லது சமமின்மையோ உருவாக்குவதில்லை. தேவன் நம்மைத் தொடுகிறார்; அமைதியாக ஆனால் பலமாக. அதுபோல நம் மனதுக்குள் சில குறிப்பிட்ட போதனைகளைப் புகுத்தி, அவைகளால் மனதைத் தோய்த்துவிட முடியும். அல்லது பாரம்பரியத்தால், வளர்ப்புமுறையினால், மாற்றத்துக்கு விட்டுக்கொடுக்காத உபதேச முறைமைகளால், வியாக்கியானங்களால் மனம் ஆளப்பட முடியும். இந்த நிலைமையிலும்கூட, தேவன் சத்தியத்தை எடுத்துரைத்துவிட்டு, நம் மாறுத்தரத்திற்காகப் பொறுமையோடு காத்திருக்கிறார். ஆண்டவராகிய இயேசு மக்கள்மேல் எந்த அழுத்தத்தையும் வைக்கவில்லை. அவர் தம்மை அவர்களுக்கு எளிமையாகவும், இலகுவாகவும் வழங்கினார். இதனால் நம்மேல் செயல்படுகிற உண்மையான வலிமையையும், பொய்யான வலிமையையும் இனங்காண முடிகிறது. பொதுவாக, பொய்யான வலிமை அழுத்தம், கூச்சல், பாரம்பரியம் ஆகியவைகளின்மூலம் செயல்படுகிறது. உண்மையான வலிமையோ இணக்கம், அமைவு, வேதவாக்கியங்கள் ஆகியவைகளின்மூலம் செயல்படுகிறது.

நம் மனதிலிருந்து அல்லது நம் உணர்ச்சிகளிலிருந்து பிறக்கிறவைகளுக்கும், கர்த்தருக்குரியவைகளுக்கும் இடையேயுள்ள வேறுபாட்டை இனங்காண்பதற்கு எபிரேயர் 4:12 நல்ல மாதிரியாகும். “தேவனுடைய வார்த்தையானது…ஆத்துமாவையும் ஆவியையும் பிரிக்கத்தக்கதாக உருவக்குத்துகிறது.” ஆத்துமாவுக்கும் ஆவிக்கும் இடையேயுள்ள வேறுபாட்டை இனங்காண முடியாததே கிறிஸ்தவர்களிடையேயுள்ள பல குழப்பங்களுக்கும், தர்க்கங்களுக்கும் காரணமாகும். இதுவே அவர்கள் சரியான வழிகாட்டுதலைப் பெற்றுக்கொள்ளாததற்கும் காரணமாகும். வானொலி நிலையத்திலிருந்து ஒலி பரப்புகிறார்கள். நிலையத்திலிருந்து ஒலி அலைகளை அனுப்பும் கருவி சரியாக இயங்குகிறது. ஆனால், ஒலி பரப்பப்படும் அலைகளைப் பெரும் கருவி நம்மில் பழுதடைந்திருக்கிறது. எனவே, அந்த அலைகளைச் சரிவரப் பெறமுடியவில்லை. ஆனால், ஆத்துமாவுக்கும் ஆவிக்கும் இடையேயுள்ள, நம் சொந்த அபிப்பிராயங்களுக்கும் தேவனுடைய சித்தத்துக்கும் இடையேயுள்ள, உண்மையான அனுபவங்களுக்கும் பொய்யான அனுபவங்களுக்கும் இடையேயுள்ள, நம்மிலிருந்து புறப்படுகிற காரியங்களுக்கும் கர்த்தரிடமிருந்து வருகிற காரியங்களுக்கும் இடையேயுள்ள வேறுபாட்டைத் தேவனுடைய வார்த்தை திட்டவட்டமாகத் தெரிவிக்கின்றது. இந்த வேறுபாட்டை இனங்காண்பதற்கு நம் மனதைத் தேவனுடைய வார்த்தையைக்கொண்டு தோய்க்கவேண்டும் என்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.

ஒருவன் தன் சொந்த விருப்பங்களாலும், கருத்துக்களாலும், உணர்ச்சிகளாலும், ஆளப்படுவது எளிது. உணர்ச்சிவசப்படுகிற ஒருவன் சூழ்நிலை, உடல்நிலை, தட்பவெப்பநிலைபோன்ற பல்வேறு நிலைகளைப்பொறுத்து மேலும் கீழும் போய்க்கொண்டிருப்பான். நல்ல மூளைக்காரன் தன் மூளையைப் பயன்படுத்தி வேதாகமத்தை வாசிப்பான். கர்த்தரைச் சார்ந்துகொள்ளாமல் தன் மூளையைப் பயன்படுத்தி அவன் காரியங்களை அலசிப்பார்ப்பான். ஆனால், ஆவிக்குரிய உண்மையை மனதைவிட மிக ஆழமான மட்டத்தில்தான் கிரகித்துக்கொள்ள முடியும், மனம் தேவையில்லை என்பதல்ல இதன் பொருள். மனம் நிச்சயமாகத் தேவை. ஆனால், வாக்குவாதம் செய்து அல்லது சம்மதிக்கச்செய்து அல்லது பட்டிமன்றம் நடத்தி மக்களைத் தேவனுடைய அரசுக்குள் கொண்டுவர முடியாது என்பதற்கும், இறையியல்சார்ந்த பயங்கரமான குழப்பத்துக்கும் இது ஒரு காரணம். மறுபடி பிறக்காத ஒருவனால், ஆவிக்குரிய காரியங்களைப் புரிந்துகொள்ள முடியாது. அப்படிப் புரிந்துகொள்ள முயல்வது வீண், ஆபத்தானது. கர்த்தருடைய கரத்தில் இருக்கும்போது மட்டுமே மனிதனுடைய மனம் பாதுகாப்பாக இருக்கும். அப்போது மட்டுமே அது விலையேறப்பெற்றது. அதுபோல, பலமான சித்தமுடையவனும், வலிமையான ஆளுமையுடையவனும் யாக்கோபைப்போல், யாப்போக்கு அனுபவத்தைப் பெறும்வரை தன் சொந்த பலத்தால் வாழ்வான், வாழ முயல்வான். நாம் நம் ஆத்துமாவின் கட்டுப்பாட்டில் வாழாமல் பரிசுத்த ஆவியானவரின் கட்டுப்பாட்டின்கீழ் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். இது கர்த்தர் நமக்குக் கற்றுத்தர முயல்கிற ஒரு மிக முக்கியமான பாடம்.

வேத வாசிப்பு  

மாற்கு 2:8; யோவான் 4:23-24; 5:40; 6:63; அப். 23:1; ரோமர் 1:9; 2:14-15; 6:11-14; 12:1; 1 கொரி. 6:19-20; 8:7; 14:14-16; 2 கொரி. 7:1; 10:5; எபே. 2:1-3; 4:23; கொலோ. 1:21; 2 தீமோ. 1:3; தீத்து 1:15; எபி. 12:9, 23; 1 யோவான் 2:26-27; 5:19; ஆதி. 2:7; 32:24