Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More

வேத வாசிப்பு

மத். 3:7;  7:13-14;  25:46; யோவான் 3:16, 36, 14:6; அப்.1:8; 15:14; ரோமர் 3:23; 5:8; 6:23; 1 கொரி.. 2:2; 6:6; 2 கொரி. 5:20; எபே. 1:6; 2:1-5, 12; 4:18; கொலோ. 1:13, 21; 1 தெச. 4:13; 2 தெச. 1:9; எபி. 1:3; 2:10; 1 யோவான் 5:19; எரே. 17:9

03-மனிதனுடைய வீழ்ச்சியின் பொருளும், கீழ்ப்படியாமையின் விளைவுகளும்.pdf

மனிதனுடைய வீழ்ச்சியின் பொருளும், கீழ்ப்படியாமையின் விளைவுகளும் - 03

தேவனுடைய அற்புதமான மீட்பின் வேலையைப் பார்ப்பதற்குமுன், மனிதனுடைய வீழ்ச்சியினால் ஏற்பட்ட விளைவுகளையும், அவைகளைச் சரிசெய்து, அவனை இரட்சிப்பதிலுள்ள பிரச்சினைகளையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும்,

1. வீழ்ச்சியின் விளைவு

மனிதன் எப்படிப்பட்டவனாக மாறியிருக்க முடியும்; ஆனால், உண்மையில் அவன் எப்படிப்பட்டவனாக மாறினான் என்று முதல் வரைபடத்தில் பார்க்கிறோம்.

“தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளினார்” என்று யோவான் 3:16யிலும், “குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை,” என்று யோவான் 3:36யிலும் வாசிப்பதுபோல், மனிதன் ‘நித்திய ஜீவனைப்’ பெற்று தேவன் தன்னைப் படைத்ததின் உயர்ந்த நோக்கத்தை அடைந்திருக்க முடியும். ஆனால், அவன் ‘நித்திய ஜீவனைப்’ புசிக்கவில்லை. எனவே, அதைப் புசிந்திருந்தால் ஏற்பட்டிருக்கக்கூடிய அனுகூலங்களை அவன் இழந்தான். ஜீவ மரத்திற்குப் போகும் வழி அடைக்கப்பட்டது.

அது மட்டுமல்ல; அவன் ஒழுங்கற்றவனாக, குழம்பிப்போய் திக்குத்தெரியாமல் தடவித்திரிகிறவனாக மாறிவிட்டான். வீழ்ச்சியின் விளைவாக “எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களானார்கள்” என்று ரோமர் 3:23ம், “உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் போயிற்று” என்று 1 யோவான் 5:19ம், மனிதனுடைய “இருதயம் திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிற்று” என்று எரே. 17:9ம் கூறுகின்றன. அவன் நித்திய ஜீவனைப் புசித்திருந்தால், அவனுடைய ஆவி ‘தேவனுடைய ஜீவனால்’ ஆளப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்டு, நடத்தப்பட்டிருக்க முடியும்; ‘தேவனுடைய ஜீவன்’ அவனுக்குள் பெருகிக்கொண்டேபோயிருக்க முடியும். ஆனால், அதற்குப்பதிலாக அவன் ஆவிக்குரியவிதத்தில் மரித்துப்போனான். இதைத்தான் நீங்கள் “அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்தீர்கள்” என்று எபே. 2:1ம், “நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்துகொண்டீர்கள்” என்று எபே. 2:2ம், “புத்தியில் அந்தகாரப்பட்டு, தன் இருதய கடினத்தினால் தன்னில் இருக்கும் அறியாமையினாலே தேவனுடைய ஜீவனுக்கு அந்நியரானான்” என்று எபே. 4:18ம் கூறுகின்றன.

அடுத்து, அவன் தேவனுடைய நண்பனாக மாறியிருக்கலாம். ஆனால், அதற்குப்பதிலாக அவன் “தேவனுக்குச் சத்துருவானான்” என்று ரோமர் 5:10ம், “அந்நியராயும் துர்க்கிரியைகளினால் மனதிலே சத்துருவுமானான்” என்று கொலோ. 1:13ம் கூறுகின்றன. ஆம், அவன் தேவனுடைய எதிரியாக மாறினான்.

தன் வாழ்க்கையை அவன் தன் கையில் எடுத்துக்கொண்டான். அதாவது தன் வாழ்க்கைக்கு அவனே ‘ராஜாவாக’ மாறிவிட்டான். தேவனுடைய அரசாங்கத்தின்கீழ் வாழ்வதற்குப்பதிலாக அவன் சுயாட்சியைத் தேர்ந்தெடுத்தான். அவனுடைய எண்ணங்களும், உணர்ச்சிகளும், அபிப்பிராயங்களும், சுயவிருப்பங்களும் அவனை ஆளத்தொடங்கின. ஆட்சியை அவனுடைய சுயம் தன் கையில் எடுத்துக்கொண்டது. தன்னைத் தேவனுக்கு விட்டுக்கொடுப்பதற்குப்பதிலாக அவனே தன்னை ஆளத்தொடங்கினான். மனச்சாட்சிபோன்ற அவனுடைய ஆவிக்குரிய புலன்கள் சிறைக்கைதிகள் ஆகிவிட்டன என்று சொல்லலாம். அவன் தன் “மாம்ச இச்சையின்படியே நடந்து, மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாக மாறினான்” என்று எபே. 2:3 கூறுகின்றது. அவன் இப்போது தேவன் விரும்பியதுபோல் செயல்படவில்லை. அவனுக்குள் இசைவுக்குப்பதிலாக முரண்பாடும், “பாவம், மரணம் என்பவைகளின் பிரமாணமும்” இப்போது அவனுக்குள் செயல்பட ஆரம்பித்தன என்று ரோமர் 8:2 கூறுகிறது.

இந்த நிலைமையில் அவன் உளவியல் மருத்துவரைப் பார்க்கவேண்டிய ஒரு நோயாளியாக மாறியிருந்தான். ஆனால், மனோவியல் மருத்துவர்களால் உண்மையான தீர்வுகளைக் கொடுக்க முடியாது. அதிகபட்சம் அவனுடைய பிரச்சினையை அப்போதைக்குக் குறைக்கிற மருந்துகளையோ, ஆலோசனைகளையோ அல்லது இடைக்கால நிவாரணத்தையோதான் அவர்களால் கொடுக்க முடியும். சில சமயங்களில் அவர்கள் கொடுக்கிற தீர்வுகள் பொய்யான தீர்வுகளாகவும் இருக்க முடியும். கிறிஸ்துவின் நற்செய்தி மட்டுமே உண்மையான பதில்களையும், தீர்வுகளையும் தரும்.

புறக்கணிக்கப்பட்ட இனம்

ஆதாமின் வீழ்ச்சியின் விளைவாக, மனித இனம் தேவனால் புறக்கணிக்கப்பட்ட இனமாக மாறிவிட்டது என்று இரண்டாவது வரைபடத்தில் பார்க்கிறோம். நாம் அந்த இனத்தைச் சார்ந்தவர்கள். நாம் தேவனால் புறக்கணிக்கப்பட்டவர்கள். “அக்காலத்திலே கிறிஸ்துவைச் சேராதவர்களும், இஸ்ரயேலுடைய காணியாட்சிக்குப் புறம்பானவர்களும், வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கைகளுக்கு அந்நியரும், நம்பிக்கையில்லாதவர்களும், இவ்வுலகத்தில் தேவனற்றவர்களுமாயிருந்தீர்களென்று நினைத்துக்கொள்ளுங்கள்” என்று எபே. 2:1-5, 12 கூறுகின்றன.

ஆயினும், தேவன் நம்மில் அன்புகூருகிறார். நாம் சீரழிந்துபோயிருந்தாலும், நாம் அவரால் படைக்கப்பட்டவர்கள் என்பதாலும், எப்பேர்ப்பட்டவர்களாக மாற முடியும் என்பதாலும், அவர் நம்மை நேசிக்கிறார். எனவேதான், “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்” என்று ரோமர் 5:8ம், “தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்துமூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார்,” என்று எபே. 1:6ம் கூறுகின்ற்றன. நாம் புறக்கணிக்கப்பட்டவர்கள்; இருந்தபோதும், தேவன் நம்மை இன்னும் கைவிடவில்லை. நாம் ஏதேன் தோட்டத்திலிருந்து விரட்டப்பட்டவர்கள்; ஜீவ மரத்தில் பங்குபெறாதபடி நமக்கு வழி அடைக்கப்பட்டது; அது நமக்குத் தடைசெய்யப்பட்டது. இருப்பினும், நமக்கு ஒரு மீட்பர் வருவார் என்ற வாக்குறுதி கொடுக்கப்பட்டது. பாவத்தினாலும், மரணத்தினாலும் சிதைந்து சின்னாபின்னமாகிப்போனதாலும், தேவனுடைய நோக்கம் நிறைவேறுவதற்குத் தகுதியில்லாத, பாழடைந்த, சீரழிந்த இனமாக மாறிவிட்டதால், புறக்கணிக்கப்பட்ட இனமாக இருந்தபோதும், நாம் தேவனுடைய மிகுந்த அன்புக்குரியவர்கள்.

தேவனுடைய அன்பு

தேவனுடைய அன்பு நம் அன்பிலிருந்து மிக வேறுபட்டது! அது மலிவான உணர்ச்சிகளின் அடிப்படையிலான அன்பல்ல! அது பரிசுத்தமான அன்பு! அது நம் மிக உயர்ந்த நன்மையைக்குறித்த கரிசனையும், அக்கறையும் கொண்ட அன்பு. அது ஆக்கினைத்தீர்ப்பிலிருந்தும், பேரழிவிலிருந்தும் தப்பித்துக்கொள்வதற்கான வழியை ஏற்படுத்துகிற அன்பு.

கலகக்காரர்கள், குற்றவாளிகள், நோயாளிகள்

வீழ்ச்சியின் விளைவால் ஏற்பட்ட நம்முடைய பரிதாபமான நிலையை இரண்டாவது வரைபடம் விளக்குகிறது. தேவனுடைய சட்டத்தை மீறியவர்கள் என்பதாலும், கலகக்காரர்கள் என்பதாலும் நாம் குற்றவாளிகள், ஆக்கினைத்தீர்ப்புக்கு ஏதுவானவர்கள். இன்றைய காலகட்டத்தில் மக்கள் பாவத்தைப் பாவமாகக் கருதவில்லை. நியாயத்தீர்ப்பையும், நரகத்தை.யும் அவர்கள் நம்பவில்லை. பாவத்தைப் பாவமாகக் கருதாத, நியாயத்தீர்ப்பையும் நரகத்தையும் நம்பாத மதத் தலைவர்களும் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நாட்களில் வரப்போகிற பயங்கரமான ஆபத்தாகிய நித்திய ஆக்கினையைக்குறித்தும், வரப்போகிற கோபாக்கினையைக்குறித்தும் மற்ற யாரையும்விட ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவே அதிகமாக எச்சரித்தார் என்பதை நினைவில்கொள்வது “இவர்கள் நித்திய ஆக்கினை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள்,” என்று மத். 25:46இல் ஆண்டவராகிய இயேசு கூறினார்.

நல்லது. தேவன் தம் அன்பின் காரணமாக நாம் தப்பித்துக்கொள்வதற்கான ஒரு வழியை நமக்கு ஏற்படுத்தியிருக்கிறார். மனிதர்கள் என்ன சொன்னாலும் சரி, இந்த மனித இனம் இன்று அவருடைய பரிசுத்த கோபத்தின் நிழலில் இருக்கிறது. “பரிசேயரிலும் சதுசேயரிலும் அநேகர் தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெறும்படி வருகிறதை அவன் கண்டு: விரியன் பாம்புக் குட்டிகளே! வருங்கோபத்துக்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வகைகாட்டினவன் யார்?” என்று மத். 3:7இல் யோவான் ஸ்நானன் கேள்வி எழுப்பினார்.

சாத்தானின் கூட்டாளிகள், கைதிகள்

மேலும், நாம் சாத்தானுடைய கூட்டாளிகளாகவும், கைதிகளாகவும் இருக்கிறோம். நாம் அவனுடைய கைப்பாவைகளாக மாறி, அவனுடைய விருப்பத்தைத்தான் செய்துகொண்டிருக்கிறோம். ஏனென்றால், நாம் நம் மனம்போல வாழவேண்டும் என்று தீர்மானித்தபோது உண்மையில் நாம் சாத்தானுடைய விருப்பப்படி வாழ்வதையே தெரிந்தெடுத்தோம். பாவம், சுயநலம் என்ற குணப்படுத்தமுடியாத புற்றுநோயினால் நாம் பாதிக்கப்பட்டிருக்கிறோம். பாவம் என்ற விஷம் நம் இரத்தத்தில், மனித உடலில், கலந்திருக்கிறது. அது நம் நாடிநரம்புகளில் இருக்கிறது. ஆவிக்குரியவிதத்தில் நாம் மரித்தவர்கள், அதாவது ஜீவனுள்ள தேவனைவிட்டு நாம் பிரிந்திருக்கிறோம். தேவன் நம்மைப் படைத்த நோக்கத்தைவிட்டு நாம் விலகிச் சென்றுவிட்டோம். எனவே, நாம் நம்பிக்கையற்றவர்களும், நியாயத்தீர்ப்பைத்தவிர எந்த எதிர்காலமுமற்றவர்களும், வாழ்க்கையில் உண்மையான நோக்கமற்றவர்களும், இந்தப் பூமியில் இருப்பதற்கு எந்தக் காரணமுமற்றவர்களுமாக இருக்கிறோம். ஏனென்றால், விழுந்துபோன மனிதனின் வாழ்க்கைக்கு எந்தப் பொருளும் இல்லை.

2. நம் தேவைகள்-மன்னிப்பு , விடுதலை, சுகம், சுத்திகரிப்பு, ஜீவன், ஏற்பு

எனவே, கலகக்காரர்கள் என்பதால் நமக்கு மன்னிப்புத் தேவை. தேவனோடு நாம் ஒப்புரவாக்கப்பட வேண்டும். ஏனென்றால், நாம் அவருக்கு எதிராகப் பாவம்செய்திருக்கிறோம். “ஆனபடியினாலே, தேவனானவர் எங்களைக்கொண்டு புத்திசொல்லுகிறதுபோல, நாங்கள் கிறிஸ்துவுக்காக ஸ்தானாபதிகளாயிருந்து, தேவனோடே ஒப்புரவாகுங்கள் என்று, கிறிஸ்துவினிமித்தம் உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம்” என்று 2 கொரி. 5:20இல் பவுல் எழுதுகிறார்.

நாம் கைதிகள் என்பதால் சாத்தானின் பிடியிலிருந்து நமக்கு விடுதலை வேண்டும். “இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம்”(கொலோ. 1:13).

நாம் குணப்படுத்தமுடியாத நோயாளிகள் என்பதால் நமக்கு மீட்பும், சுகமும் தேவை. “தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்”. அவருடைய மகிமையின் பிரகாசத்தால் மட்டுமே நமக்குள் இருக்கும் பாவப் புற்றுநோய்க் கிருமிகளைக் கொன்றழிக்க முடியும். “இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய், தம்மாலேதாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலதுபாரிசத்திலே உட்கார்ந்தார்” (எபி. 1:3).

நாம் விஷம் நிறைந்தவர்கள் என்பதால் நாம் கழுவப்பட்டுச் சுத்தமாக்கப்பட வேண்டும். நமக்கு ஆவிக்குரிய இரத்தமாற்று சிகிச்சை தேவை. அதாவது நமக்குள் ஆவிக்குரிய இரத்தம் செலுத்தப்பட வேண்டும். மரித்தவர்கள் என்ற முறையில் நாம் உயிர்ப்பிக்கப்பட வேண்டும். “அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்”. நமக்கு ஜீவன் வேண்டும். “பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்” (ரோமர் 6:23).

நாம் நம்பிக்கையற்றவர்கள் என்பதால், நியாயத்தீர்ப்பிலிருந்து நமக்கு விடுதலையும், அதைத் தொடர்ந்து இந்த வாழ்க்கைக்கும், வரப்போகிற வாழ்க்கைக்கும் நோக்கமும், அர்த்தமும் வேண்டும்.

நாம் புறக்கணிக்கப்பட்டவர்கள், சிதைக்கப்பட்டவர்கள், அழிக்கப்பட்டவர்கள், பயனற்றவர்கள் என்பதால், தேவன் நம்மை ஏற்றுக்கொள்ளவேண்டும். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிலும், கிறிஸ்துவின்மூலமாகவும் இது இப்போது சாத்தியமே. இவைகளெல்லாம் தேவனுடைய இரட்சிப்பின் திட்டத்தில் நமக்கு வழங்கப்பட்டுள்ளன. ஒன்றைக் கவனியுங்கள். நாம் இவைகளை அனுபவிக்க வேண்டுமானால் மும்முரமாக நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும்.

“நம்மை நாம் கொஞ்சம் சீர்படுத்திக்கொண்டால் போதும் அல்லது இப்போது இருப்பதைவிட இன்னும் கொஞ்சம் சிறப்பாக வாழ நமக்கு ஓர் உதவிக்கரம் கிடைத்தால் போதும்,” என்பது முற்றிலும் தவறாகும். ஒரு சாரார், “உலகத்திலுள்ள எல்லாருக்கும் தேவன் பிதா என்றும், உலகத்திலுள்ள எல்லாரும் சகோதரர்கள்,” என்றும் சொல்லி கிறிஸ்தவத்தை நீர்த்துப்போகச்செய்துவிட்டார்கள். இன்னொரு சாரார், “தேவன் அன்பாகவே இருக்கிறார். எனவே, கடைசியில் அவர் தம் அன்பினிமித்தம் எல்லாரையும் மன்னித்துத் தம்மிடம் சேர்த்துக்கொள்வார் அல்லது இந்தப் பூமியில் தம் அரசை நிறுவ வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தின் கடைசி முயற்சியாக இப்படிச் செய்வார்,” என்று தேவனுடைய வார்த்தையை ஏனோதானோவென்று எடுத்துக்கொள்கிறார்கள். இப்படி இவர்கள் ஒரு பொய்யான செய்தியை அறிவிக்கிறார்கள். படைத்தவர் என்ற முறையில் தேவன் எல்லாருக்கும் பிதா என்றும், படைக்கப்பட்டவர்கள் என்ற முறையில் நாம் எல்லாரும் சகோதரர்கள் என்றும் ஒருவகையில் சொல்லலாம். ஆனால், மறுபடியும் பிறந்தவர்களுக்கு மட்டுமே அவர் பிதா என்றும், அப்படி மறுபடி பிறந்தவர்கள் மட்டுமே சகோதரர்கள் என்றும் புதிய ஏற்பாடு திட்டவட்டமாகக் கூறுகிறது. எல்லாரும் பரலோகத்துக்கு போகலாம். ஆனால், தேவனுடைய நிபந்தனைகளின்படி அநேகர் பரலோகத்துக்கு போக மாட்டார்கள் என்று புதிய ஏற்பாடு தீர்க்கமாகக் கூறுகிறது. இரண்டாம் வருகையில் கிறிஸ்துதாமே தேவனுடைய அரசைப் பூமியில் நிறுவுவார் என்று பார்க்கிறோம். “அந்நாளிலே தம்முடைய பரிசுத்தவான்களில் மகிமைப்படத்தக்கவராயும், நீங்கள் எங்களுடைய சாட்சியை விசுவாசித்தபடியினாலே உங்களிடத்திலும், விசுவாசிக்கிறவர்களெல்லாரிடத்திலும் ஆச்சரியப்படத்தக்கவராயும், அவர் வருவார்” (2 தெச. 1:9). அவருடைய அரசைப் பூமியில் நிறுவுவதோ அல்லது இந்த உலகத்தைக் கிறிஸ்தவமாக்குவதோ இன்று சபைக்குக் கொடுக்கப்பட்ட கட்டளை அல்ல. அது நம் வேலை அல்ல. அவருடைய வருகைக்குமுன் அவருடைய “சாட்சிகளாகவும்,” “தூதுவர்களாகவும்” இருப்பதே சபையின் மெய்யான வேலையாகும். “பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்” (அப்.1:8).* “ஆனபடியினாலே, தேவனானவர் எங்களைக்கொண்டு புத்திசொல்லுகிறதுபோல, நாங்கள் கிறிஸ்துவுக்காக ஸ்தானாபதிகளாயிருந்து, தேவனோடே ஒப்புரவாகுங்கள் என்று, கிறிஸ்துவினிமித்தம் உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம்”* (2 கொரி. 5:20). சாட்சிகள், தூதுவர்கள். அப்போது தேவன் நற்செய்தியின்மூலம், அப்.15:14இன்படி தேசங்களிலிருந்து “தம்முடைய நாமத்திற்காக ஒரு கூட்டம் மக்களை,” ஒரு புதிய இனத்தை, கூட்டிச்சேர்த்து, எபி. 2:10இன்படி “அநேக சகோதரர்களை மகிமைக்குள்” கொண்டுவந்து சேர்ப்பார். உண்மையான சபை தேவனுடைய மாற்றுச் சமுதாயம். இது இந்த உலகத்தின் விழுந்துபோன சமுதாயத்திற்கு நேர் எதிராக நிற்கவேண்டும்.

ஏதோவொரு வகையில் அநேகர் தங்கள் நம்பிக்கையை மதத்தின்மேல் வைத்திருக்கிறார்கள். ஆனால், மதம் என்பது விழுந்துபோன மனிதனுடைய மதவுணர்ச்சிகளின் வெளியாக்கம் மட்டுமே. மதத்தால் மனிதனைக் காப்பாற்ற முடியாது. இந்த உலகத்தின் மதங்களோ, பொய்யான கிறிஸ்தவமோ நம்மைக் காப்பாற்றவோ, இரட்சிக்கவோ முடியாது. எல்லா மதங்களும், உண்மையில், ஒரே தேவனையே ஆராதிக்கின்றன என்பதும், அவைகளெல்லாம் அவரிடமும், பரலோகத்துக்குமே நம்மை நடத்துகின்றன என்ற பிரபலமான கருத்தும் முழுக்கமுழுக்கப் பொய். மேலும், இரட்சிக்கப்படுவதற்கு எந்த வகையான மதம்சார்ந்த அனுபவங்களின்மேல் விசுவாசம் வைப்பது மிகவும் ஆபத்தானது. இயேசு ஒருவரே இரட்சிக்கிறார், கிறிஸ்து ஒருவரே ஒரேவழி. “இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” (யோவான் 14:6).

சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவே உண்மையான நற்செய்தியின் மையம். “இயேசுகிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன்” (1 கொரி. 2:2).

நம்மை மன்னிக்க ஆச்சரியமான கிருபை தேவை; நம்மை மீட்க வல்லமையுள்ள மீட்பர் தேவை; நம்மை சிகிச்சைசெய்து, நம்மைக் குணமாக்க அற்புதமாக சிகிச்சைநிபுணரும், மருத்துவரும் தேவை; பாவத்திலிருந்தும், மரணத்திலிருந்தும் நம்மை உயிர்ப்பித்து, அளவற்ற நம்பிக்கை நிறைந்த எதிர்காலத்தைக்கொண்ட ஒரு புதிய வாழ்க்கைக்குக் கொண்டுவர அற்புதம்செய்கிற தேவன் தேவை; புதிய ஏற்பாட்டின் வெளிச்சத்தின்படி மேலே சொன்ன பொய்யான கருத்துக்களை நம்புவது பேராபத்தை ஏற்படுத்தக்கூடிய தவறாகும். நம் ஆழமான தேவையையும், இரட்சிப்பில் உண்மையாகவே என்ன சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதையும் நாம் உணரவில்லை என்றால், தேவனுடைய அடித்தளத்தின்மேல் நாம் நம் வாழ்க்கையைக் கட்டியெழுப்புகிற காரியத்தில் வெகுதூரம் செல்ல மாட்டோம்.