Preloader
சாட்சியின் கூடாரம்
15 Oct 2026 : என் உறவுகள் மேலும் வாசிக்க
3 Oct 2026 : ஆரம்பமும், முடிவும் மேலும் வாசிக்க
21 Sep 2026 : வனாந்தர வளங்கள் மேலும் வாசிக்க

உரை

கிறிஸ்துவை விதைத்து, அறுத்தல்

Transcribed from a message spoken on August 2013 in Chennai

By Milton Rajendram

“மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார். மளிதன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான். ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்திய ஜீவனை அறுப்பான். நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக. நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம். ஆகையால். நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம்” (கலா.6:7-10). “போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசு கிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது. ஒருவன் அந்த அஸ்திபாரத்தின்மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல், மரம், புல், வைக்கோல் ஆகிய இவைகளைக் கட்டினால், அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும். நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில், அது அக்கினியினாலே வெளிப்படுத்தப்படும். அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும். அதின்மேல் ஒருவன் கட்டினது நிலைத்தால், அவன் கூலியைப் பெறுவான். ஒருவன் கட்டினது வெந்துபோனால், அவன் நஷ்டமடைவான். அவனோ இரட்சிக்கப்படுவான். அதுவும் அக்கினியிலகப்பட்டுத் தப்பினதுபோலிருக்கும்” (1 கொரி. 3:11-15).

நம்முடைய வாழ்க்கையிலே-நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும், நம்முடைய உறவின் வாழ்க்கையிலும்-நாம் கிறிஸ்துவை விதைக்க வேண்டும் அல்லது கிறிஸ்துவை முதலீடு செய்ய வேண்டும். அப்போது, ஏற்றகாலத்திலே நாம் கிறிஸ்துவை அறுவடை செய்வோம் அல்லது கிறிஸ்துவை நாம் பெற்றுக்கொள்வோம் என்று இந்த இரண்டு பகுதிகளிலும் பார்க்கிறோம்.

தேவனுடைய குறிக்கோள்

தேவனுடைய குறிக்கோள் அவருடைய குமாரனாகிய கிறிஸ்துவை தேவனுடைய மக்கள்மூலமாக வெளிக்காண்பிப்பது. தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவை அவருடைய முழு அளவிலே, அவருடைய முழு நிறைவிலே, அவருடைய முழு வளர்த்தியிலே, தேவனுடைய மக்கள்மூலமாக வெளிக்காண்பிப்பது, வெளியாக்குவது, வெளிப்படுத்துவது தேவனுடைய குறிக்கோள்.

தேவனுடைய மக்களாகிய நாம் பல்வேறு சூழ்நிலைகளில் உள்ளோம். உங்களுடைய சூழ்நிலைகள் எனக்குத் தெரியாது. ஒருவேளை உங்கள் முகத்தைப் பார்க்கும்போது அல்லது உங்கள் நடையைப் பார்க்கும்போது அல்லது உங்கள் குரலைப் பார்க்கும்போது ஓரளவுக்கு உங்கள் உள்ளான நிலைமை என்னவாக இருக்குமென்று நான் யூகிக்கலாம். நீங்கள் உட்கார்ந்திருக்கின்ற உட்காருதல் மிகவும் தொய்வாக இருக்குமென்றால் நாம் யூகிக்கலாம். ஒருவேளை ஒரு பாடு அல்லது வேதனை அல்லது வலி இந்தச் சகோதரியினுடைய அல்லது இந்தச் சகோதரனுடைய வாழ்க்கையில் இன்றைக்கு இருக்கிறது என்று நாம் யூகிக்கலாம். ஆனால், தெள்ளத்தெளிவாக அறிந்துகொள்ள முடியாது. இப்படி தேவனுடைய பிள்ளைகள் பல்வேறு நிலைகளிலும், சூழ்நிலைகளிலும், நெருக்கங்களிலும், தேவைகளிலும் நாம் இருக்கிறோம்.

உடனே நம்முடைய மாறுத்தரம், பதில், என்னவாக இருக்குமென்றால் இப்படி பல்வேறு நிலைகளிலும், சூழ்நிலைகளிலும், நெருக்கங்களிலும், அழுத்தங்களிலும் இருக்கிற தேவனுடைய பிள்ளைகள் அதிலிருந்து ஒரு விடுதலையை, ஒரு நன்மையை, ஒரு ஆசீர்வாதத்தை, பெற்றுக்கொள்வதற்கு தேவன் ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும். தேவன் அதை எப்படிச் செய்வார் என்பதை நாம் முக்கியமானதாகக் கருதுவோம். ஒருவேளை வியாதியினாலே மிகவும் பாடுபடுகிற ஒரு சகோதரி இருந்தால் அந்த வியாதியிலிருந்து எப்படி விடுதலை பெறலாம் என்று சொல்ல நாம் முயற்சி செய்வோம். வருவாயின்றி அல்லது வேலையின்றி நெருக்கத்திலும், அழுத்தத்திலும் ஒரு சகோதரன் இருக்கும்போது அந்த நெருக்கத்திலும், அழுத்தத்திலுமிருந்து அவர்கள் எப்படி வெளிவருவது, தேவன் எப்படி அவர்களை வெளிக்கொண்டுவருவார் என்று சொல்வதற்கு நாம் முயற்சி செய்வோம். இவைகளெல்லாம் சரிதான்.

சிலருக்கு உறவுகளிலே நெருக்கங்களும், அழுத்தங்களும் இருக்கும். சில சமயங்களில் பணம் இல்லாமல்கூட வாழ்ந்துவிடலாம்; வியாதியில்கூட வாழ்ந்துவிடலாம். ஆனால், நம்முடைய உறவுகளிலே பெரிய நெருக்கங்கள் இருக்கும்போது அந்த வாழ்க்கை மிகவும் வேதனையும், நோவும் நிறைந்த வாழ்க்கையாக இருக்கும். நம்மில் பலருக்கு அப்படித் தெரியாது. ஆனால், உலகத்திலே பெரிய நெருக்கமும், அழுத்தமும், வேதனையும், துன்பமும் உறவுகளிலேதான் இருக்கும்.

எல்லா நிலைமைகளிலும் கிறிஸ்து

என்னுடைய நிதானம், என்னுடைய கணிப்பு, என்னுடைய தீர்ப்பு என்னவென்றால் மூன்று கோடிச் சூழ்நிலைகள் இருந்தாலும் தேவனுடைய இலக்கும், தேவனுடைய குறிக்கோளும் ஒன்றேவொன்றுதான். எந்த நிலையிலும், எந்தச் சூழ்நிலையிலும் நாம் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவைக் காண வேண்டும். தேவனுடைய மக்களுக்கும் பிறருக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் தேவனுடைய மக்கள் ஒரு சூழ்நிலையிலே கிறிஸ்துவைப் பார்ப்பார்கள்; தேவனுடைய கரத்தைப் பார்ப்பார்கள். ஆனால், இந்த உலகத்து மக்கள் தேவனுடைய கரத்தைப் பார்ப்பதில்லை; அவர்கள் கிறிஸ்துவைப் பார்ப்பதில்லை. பரிசுத்த ஆவியானவருடைய முதன்மையான பிரதானமான வேலை என்னவென்றால் அந்தச் சூழ்நிலையிலே கிறிஸ்துவை நமக்குக் காண்பிப்பது.

எல்லாருடைய வாழ்க்கையிலுந்தான் சேவல் கூவுகிறது. ஆனால், சேவல் கூவியபோது பேதுரு கர்த்தர் சொன்ன வார்த்தையை நினைத்து மனங்கசந்து வெளியேபோய் அழுதான் என்று எழுதியிருக்கிறது. பிலேயாம் ஏறிப்போன கழுதை அவனை வேலியருகே கொண்டுபோய் நெருக்கிற்று. அப்பொழுது பிலேயாம் கழுதையை அடிக்கிறான். கழுதை வாயைத் திறந்து அவனிடத்தில் பேசுகிறது. காரியம் என்னவென்றால் “இந்தக் கழுதை எனக்கு மிகவும் துன்பத்தைத் தருகிறது,” என்பதைத்தான் பிலேயாம் பார்த்தான். அதற்குப் பின்புலத்தில் அல்லது திரைக்கு மறைவிலிருக்கிற தேவனுடைய கரத்தை அல்லது கிறிஸ்துவை அவன் பார்க்கவில்லை.

நம்முடைய வாழ்க்கையின் எல்லாச் சூழ்நிலைகளிலும்-உயர்வோ தாழ்வோ, ஏற்றமோ இறக்கமோ, பசியோ பரிபூரணமோ-அங்கே கிறிஸ்து இருக்கிறாரா? வேதனையையும், வலியையும் தாங்காமல், “போதும் கர்த்தாவே, போதும். என்னுடைய பிதாக்களைப்பார்க்கிலும் நான் நல்லவன் இல்லை. என்னை எடுத்துக்கொள்ளும்,” என்கிற ஒரு சூழ்நிலை வந்தால், அங்கே கர்த்தர் இருக்கிறாரா? அங்கேயும் கர்த்தர் இருக்கிறார். அந்த ஜெபத்தையும் கர்த்தர் கேட்கிறார். எலியா அப்படி ஜெபிக்கிறார். ஏனென்றால், “இந்தப் பாடு, இந்த வேதனை, இந்த வலி, இந்த நோவு என்னால் தாங்க முடியவில்லை,” என்பது போன்ற சூழ்நிலையிலும் கர்த்தர் இருக்கிறார்.

எனவே, அருமையான சகோதர சகோதரிகளே, நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் சரி அல்லது நம்முடைய உறவின் வாழ்க்கையாக இருந்தாலும் சரி, எல்லாவற்றிலும் நாம் பொறுமையோடு கிறிஸ்துவைக் காண வேண்டும், கிறிஸ்துவை வாழ வேண்டும், கிறிஸ்துவை நாம் கொடுக்க வேண்டும். இவைகள் மிகவும் நடைமுறைக்குரியவைகள். “நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான். ஆனால், இது நடைமுறை வாழ்க்கைக்குப் பொருந்தாது,” என்றோ அல்லது “நீங்கள் ரொம்ப ஆவிக்குரியவராக இருக்கலாம். இது உங்கள் வாழ்க்கைக்குப் பொருந்தலாம். ஆனால், இது எங்கள் வாழ்க்கைக்குப் பொருந்தாது,” என்றோ நீங்கள் தவறாக நினைக்கலாம்.

தனிப்பட்ட வாழ்க்கையில் கிறிஸ்து

நம்முடைய நிலைமை என்னவாக இருந்தாலும் சரி. தொடக்கப்பள்ளியில் படிக்கிற நிலைமையிலிருந்தாலும் சரி அல்லது மிக உயர்படிப்புப் படிக்கிற நிலைமையிலிருந்தாலும் சரி, வீட்டிலிருந்தாலும் சரி அல்லது வேலைக்குப் போனாலும் சரி நான் சொல்வது எல்லாருக்கும் பொருந்தும். ஒருவேளை வீட்டிலிருக்கிறவர்கள் எப்படிக் கிறிஸ்துவைக் காண முடியும் என்று நினைக்கலாம். “வெளியே போக்கும் வரத்துமாயிருப்பவர்களுக்குச் சூழ்நிலைகள் மாறுபடும். அவர்கள் பல்வேறு விதமான மனிதர்களைப் பார்ப்பார்கள். பல்வேறு விதமான சூழ்நிலைகள் அவர்களுடைய வாழ்க்கையில் நேரிடும். எனவே, அவர்கள் கிறிஸ்துவைக் காண முடியும். வீட்டிலே இருப்பவர்கள் பல்வேறு விதமான சூழ்நிலையையும், மனிதர்களையும் காண்பது இல்லையே! இங்கு என்ன கிறிஸ்துவை வாழ முடியும்?” என்ற எண்ணம் எழுந்தால், என்னுடைய துணிவு, கணிப்பு, நிதானம் என்னவென்றால் எந்த நிலைமையிலிருந்தாலும் சரி. அந்த நிலைமையிலே நம்முடைய வாழ்க்கையிலே கிறிஸ்து என்னவாக இருக்கிறார், என்ன செய்ய முயல்கிறார், என்ன செய்ய விரும்புகிறார் என்பதை நாம் காண வேண்டும், வாழ வேண்டும். கிறிஸ்துவைத் தனிப்பட்ட வாழ்க்கையிலே நாம் அப்படி எடுத்துக்கொள்ள வேண்டும். இது உறவின் வாழ்க்கையென்றால் அந்த நிலைமையிலே கிறிஸ்துவை நாம் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும். இது சாத்தியம். இதைத்தான் கலாத்தியர் 6ஆம் அதிகாரம், கிறிஸ்துவை நாம் விதைக்க வேண்டும் அல்லது கிறிஸ்துவை நாம் முதலீடுசெய்ய வேண்டும் என்று சொல்லுகிறது.

உறவின் வாழ்க்கையில் கிறிஸ்து

முதலாவது, தனிப்பட்ட வாழ்க்கை. இரண்டாவது, நம்முடைய உறவின் வாழ்க்கை அல்லது கூட்டு வாழ்க்கை. சபை வாழ்க்கை, கூட்டு வாழ்க்கை எனப் பல வார்த்தைகளை நான் நினைத்துப்பார்ப்பதுண்டு. “மோசம்போகாதிருங்கள். தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார். மனிதன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.” அறுவடை ரொம்பப் பரபரப்பான காலம். விதைப்பது என்பது பரபரப்பான காலம் அல்ல. நம்முடைய அறுவடை ஒரு வருடம் கழித்து வரலாம் அல்லது பத்து வருடம் கழித்து வரலாம் அல்லது ஐம்பது வருடம் கழித்து வரலாம். ஆனால், இன்றிலிருந்து ஐம்பது வருடம் கழித்து நாம் எப்படிப்பட்ட கிறிஸ்துவை நமக்குள் வைத்திருப்போம், பிறருக்குக் கொடுப்போம் என்பது இன்றைக்கு எப்படிப்பட்ட கிறிஸ்துவை நாம் விதைக்கின்றோம், எப்படிப்பட்ட கிறிஸ்துவை நாம் முதலீடு செய்கின்றோம் அதாவது எப்படிப்பட்ட கிறிஸ்துவை நம்முடைய வாழ்க்கைச் சூழ்நிலையிலே பார்க்கிறோம், வாழ்கிறோம், மற்றவர்களுக்கு வழங்குகிறோம் என்பதையே பொறுத்திருக்கிறது.

கிறிஸ்துவை விதைத்தல் (அல்லது) முதலீடுசெய்தல்

இரண்டு குறிப்புகளைச் சொல்கிறேன். முதலில் நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையில் கிறிஸ்துவை எப்படி விதைப்பது, முதலீடு செய்வது? இன்னொன்று, நம்முடைய உறவின் வாழ்க்கையில் கிறிஸ்துவை விதைப்பது அல்லது முதலீடு செய்வது. கலாத்தியர் 6ஆம் அதிகாரமும், 1 கொரிந்தியர் 3ஆம் அதிகாரமும் கிறிஸ்துவை மற்றவர்களுக்கு வழங்குவதைப்பற்றிப் பேசுகிறது. கலாத்தியர் 6 தனிப்பட்ட வாழ்க்கையில் நாம் கிறிஸ்துவை விதைப்பது அல்லது முதலீடு செய்வதைப்பற்றிப் பேசுகிறது. 1 கொரிந்தியர் 3 பிறருக்குக் கிறிஸ்துவை விதைப்பது அல்லது முதலீடு செய்வதைப்பற்றிப் பேசுகிறது.

மாம்சத்திற்கென்று அல்லது ஆவிக்கென்று விதைத்து அறுத்தல்

கலாத்தியரிலே “ஒருவன் மாம்சத்திற்கென்று விதைத்தால் மாம்சத்தினாலே அழிவை அறுப்பான். ஆவிக்கென்று விதைத்தால் ஆவியினாலே நித்திய ஜீவனை அறுப்பான்,” என்று பவுல் சொல்கிறார். அது ரொம்ப நன்றாக இருக்கிறது. “நீங்கள் மோசம் போகாதிருங்கள்,” என்றால் ஏமாந்து போகாதிருங்கள் என்று பொருள். இன்றைக்கு நாம் இப்படியும் விதைக்கலாம். அப்படியும் விதைக்கலாம். நம்முடைய மாம்சத்திற்கென்று நாம் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும் விதைத்துக்கொண்டிருக்கலாம். அப்போது ஐம்பது வருடம் கழித்து அதையும் நாம் அறுவடை செய்வோம். நம்முடைய ஆவிக்கென்றும் நாம் விதைத்துக்கொண்டிருக்கலாம் அல்லது முதலீடு செய்துகொண்டிருக்கலாம். அதையும் நாம் பத்து வருடம் அல்லது இருபது வருடம் அல்லது ஐம்பது வருடம் கழித்து அறுவடை செய்வோம். இன்னொன்றையும்கூடச் சொல்லிவிடுகிறேன். நம்முடைய அடுத்த தலைமுறையும் அறுவடை செய்யும். இது நமக்கு எச்சரிப்பாக இருக்க வேண்டும்.

மூன்றுகட்ட அறுவடை

நாம் மாம்சத்திற்கென்று அல்லது ஆவிக்கென்று விதைத்து அறுப்பதை மூன்று கட்டங்களில் அறுப்போம் என்று நான் சொன்னேன். நம்முடைய அடுத்த தலைமுறை அறுவடை செய்யும் என்று சொன்னவுடன் எசேக்கியா ராஜா, “குறைந்தபட்சம் என்னுடைய தலைமுறையிலே அறுவடை செய்ய மாட்டேன். என்னுடைய மகனும் மகளும்தான் அதை அறுப்பார்கள். நான் அதைப் பார்க்க இருக்க மாட்டேன்,” என்று சொன்னதைப்போல் சொல்வது மூடத்தனம். என் ஒரு ஆளோடு அந்த அறுவடைப் போய்விட்டதென்றால் நல்லது. என்னுடைய தலைமுறைகள் அறுக்குமென்றால் பல பத்துப் பேர், பல நூறு பேர், பல ஆயிரம் பேர், பல பல்லாயிரம் பேர் அந்தத் துன்பத்தை அல்லது அந்த ஆசீர்வாதத்தை அறுவடை செய்வார்கள். சரித்திரம் சான்று பகர்கிறது. அது மூன்றாவது கட்டம்.

இரண்டாவது கட்டம், நம்முடைய வாழ்வின் இறுதிக்கட்டத்திற்கு வரும்போது நாம் அதை அறுவடை செய்வோம். “நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு. அந்த மனுஷனுடைய முடிவு, சமாதானம்” (சங். 37:37). நாம் மாம்சத்திற்கென்று விதைத்தால் நம்முடைய வாழ்வின் இறுதிக்கட்டத்திற்கு வரும்போது நாம் அழிவைப் பார்ப்போம். ஆவிக்கென்று விதைத்தால் ஆசீர்வாதத்தைப் பார்ப்போம். நம்முடைய வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் மாம்சத்திற்கென்று அழிவைப் பார்ப்போம் அல்லது ஆவிக்கென்று நித்திய ஜீவனைப் பார்ப்போம்.

முதலாவது, இறுதிக்கட்டம்வரை நாம் காத்திருக்க வேண்டாம். நம்முடைய வாழ்க்கையில் இன்றேகூட நாம் அதைப் பார்ப்போம். இன்றைக்கு மாம்சத்திற்கு விதைத்தால், ஏறக்குறைய உடனடியாக நாம் அதின் பலனை அனுபவிக்க முடியும்.

கிறிஸ்துவை விதைத்தல்

பவுல் தொடர்ந்து, “ஆகையால், நமக்கு உண்டாயிருக்கிற சமயத்திற்குத்தக்கதாக எல்லாருக்கும், விசேஷமாக விசுவாசக் குடும்பத்தார்களுக்கும், நாம் நன்மை செய்யக்கடவோம்,” (கலா. 6:10) என்று சொல்லுகிறார். எனக்குத் தெரிந்த நன்மை ஒன்றேவொன்றுதான். கிறிஸ்து மட்டுந்தான் நன்மை. அப்படியென்றால் கொடுக்கிற நூறு ரூபாய் நன்மை இல்லையா? அந்த நூறு ரூபாய் கிறிஸ்துவாக இல்லாவிட்டால் நன்மை இல்லை. கோழிக்குஞ்சு குறித்த காலத்தில் முட்டையைவிட்டு வெளியே வருவதற்குப்பதிலாக, காலத்திற்கு முன்பு முட்டையைவிட்டு வெளியே வருவதற்கு நாம் உதவிசெய்தால் அது உதவியாக இருக்காது. மாறாக, உபத்திரவமாக இருக்கும். சில சமயங்களில் நாம் பிறருக்குச் செய்கிற உதவிகள் அப்படித்தான் இருக்கின்றன. காலத்துக்குமுந்தியோ அல்லது பிந்தியோ கொடுக்கிற நூறு ரூபாய் கிறிஸ்துவல்ல; உள்நோக்கத்தோடு கொடுக்கிற நூறு ரூபாயும் கிறிஸ்துவல்ல. நன்மை கிறிஸ்துவாக இருக்கலாம். ஆனால், நன்மைபோலத் தோன்றுகிற எல்லாக் காரியங்களிலும் கிறஸ்து இல்லை.

சமயத்திற்குத்தக்கதாக என்றால் வாய்ப்புகளுக்குத்தக்கதாக என்று பொருள். நமக்கு உண்டாயிருக்கும் வாய்ப்புகளுக்குத்தக்கதாக எல்லாருக்கும், குறிப்பாக விசுவாச குடும்பத்தாருக்கும் அல்லது தேவனுடைய மக்களுக்கும் அல்லது பரிசுத்தவான்களுக்கும் நன்மை செய்யக்கடவோம். ஏனென்றால், நாம் விதைப்பது கிறிஸ்து. நாம் முதலீடு செய்வது கிறிஸ்து. ஆதலால், விதைத்தால் கிடைப்பது அறுவடை. முதலீடு செய்தால் இலாபத்தை அல்லது வட்டியை நாம் அனுபவிப்போம்.

1. தனிப்பட்ட வாழ்க்கையில் கிறிஸ்துவை விதைத்தல்

தனிப்பட்ட வாழ்க்கையிலே விதைப்பது அல்லது முதலீடு செய்வது என்றால் என்ன? “நீங்கள் புசித்தாலும் குடித்தாலும் எதைச் செய்தாலும் எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்” (1 கொரி. 10:31). “தேவனுடைய ராஜ்ஜியம் புசிப்பும் குடிப்புமல்ல. அது நீதியும், சமாதானமும், பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது” (ரோமர் 14:17). புசிப்பும், குடிப்பும் தேவனுடைய ராஜ்ஜியம் அல்ல என்று ரோமர் சொல்கிறது. ஆனால், “நீங்கள் புசித்தாலும் குடித்தாலும் எதைச் செய்தாலும் எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்,” என்று கொரிந்தியரில் பவுல் சொல்லுகிறார். தேவனுடைய மகிமைக்கென்று செய்வது என்றால் அதில் கிறிஸ்துவை நாம் விதைக்க வேண்டும்; கிறிஸ்துவை நாம்; முதலீடு செய்ய வேண்டும்; கிறிஸ்துவை நாம் காண வேண்டும்; கிறிஸ்துவை நாம் வாழ வேண்டும்; கிறிஸ்துவை நாம் வழங்க வேண்டும். எனவே, வீட்டிலிருந்தாலும் சரி, வேலைக்குப் போனாலும் சரி. நம்முடைய வாழ்க்கையிலே சவாலான சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்றாலும் சரி, புசிப்பது குடிப்பதுபோன்ற நம்முடைய வாழ்க்கையின் சாதாரண நிகழ்ச்சிகளில் நாம் கிறிஸ்துவை விதைக்க வேண்டும்.

இந்தப் பட்டியலில் பல பத்துக் காரியங்களைச் சேர்க்கலாம். புசித்தாலும் குடித்தாலும், தூங்கினாலும் எழுந்தாலும், பேருந்தில் போனாலும் பைக்கில் போனாலும், வேலைக்குப் போனாலும் வீட்டில் இருந்தாலும், கடைக்குப் போனாலும், காய்கறி வெட்டினாலும், பாத்திரம் கழுவினாலும், சமைத்தாலும், துணி துவைத்தாலும், துணி காயப் போட்டாலும், துணி மடித்து வைத்தாலும், எனப் பட்டியலை நீட்டிக் கொண்டேபோகலாம். புசித்தாலும், குடித்தாலும் என்று பவுல் எடுத்துக்காட்டாகச் சொல்கிறார் என்றே நான் நினைக்கிறேன். ஏனென்றால், அதைத் தொடர்ந்து எல்லாவற்றையும் என்று பவுல் சொல்லுகிறார். எதைச் செய்தாலும் அவையெல்லாவற்றிலும் நாம் கிறிஸ்துவை விதைக்க முடியுமா? கல்லூரிக்குப் போனாலும் வகுப்பறையிலிருந்தாலும் வீட்டுப்பாடம் எழுதினாலும் வாரத் தேர்வு எழுதினாலும் அரையாண்டுத் தேர்வு எழுதினாலும், தேர்வு முடிவுகளைப் பார்த்தாலும் என இது ஒரு நீண்ட பட்டியல். ஒருபக்கம், இவைகள் தேவனுடைய இராஜ்ஜியம் அல்ல. ஆனால், இதில் தேவனுடைய மகிமைக்கென்று, கிறிஸ்து நமக்குள் வளர்வதற்கும், பெருகுவதற்கும், அதிகரிப்பதற்கும் ஏதுவாக நாம் இவைகளைச் செய்ய முடியும். இப்படித்தான் நாம் அவைகளைச் செய்ய வேண்டும். அதுதான் தேவனுடைய மக்களுக்கும் தேவனற்றவர்களுக்கும் உள்ள வேறுபாடு. நாம் திரைக்குப் பின்னால் இதிலே மறைவிலே கிறிஸ்து இருப்பதை நாம் பார்க்கிறோம். இதை இப்படிச் செய்தால் கிறிஸ்து இருக்கும். அப்படிச் செய்தால் கிறிஸ்து இல்லை என்று நாம் பார்ப்போம்.

விதைக்கிற காலத்தில் ஊர்வழி போனால் அறுக்கிற காலத்தில் உனக்கு ஒன்றும் இருக்காது. அதுதான் அந்தப் பழமொழியினுடைய சாராம்சம். “காற்றைக் கவனிக்கிறவன் விதைக்கமாட்டான். மேகத்தை நோக்குகிறவன் அறுக்கமாட்டான்” (பிர. 11:4). “ஐயையோ! காற்று அடித்தால் விதையெல்லாம் அங்கங்கே பறந்து போய்விடுமே,” என்று பயந்து காற்று அடித்தால் விதைக்கமாட்டான். எப்படியோ விதைத்துவிட்டான் என்று வைத்துக்கொள்வோம். இப்போது அறுக்க வேண்டும். ஆனால், “ஐயையோ! இப்போது மழை வரப் போகிறது,” என்று மேகத்தைப் பார்த்தால் அறுக்க மாட்டான். இது என்னுடைய முதல் குறிப்பு.

நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கைச் சூழ்நிலையில் நாம் கிறிஸ்துவை விதைக்க வேண்டும். நான் சூழ்நிலை என்று சொல்லும்போது சர்வசாதாரணமான சூழ்நிலையைச் சொல்கிறேன். இதைப் பார்ப்பதற்கு பரிசுத்த ஆவியானவர் நம் கண்களைத் திறக்க வேண்டும். நம்முடைய சூழ்நிலையில் நாம் கிறிஸ்துவையும் பார்க்கலாம் அல்லது வெறுமனே காரியங்களை மட்டும் பார்க்கலாம். படிப்பு என்றால் படிப்பு, பரீட்சை என்றால் பரீட்சை, பணம் என்றால் பணம், சமையல் என்றால் சமையல் எனவும் பார்க்கலாம் அல்லது இவைகளையெல்லாம் கிறிஸ்துவுக்கு ஏற்றவாறு, கிறிஸ்து நமக்குள் பெருகுமாறு, வளருமாறு, விருத்தியாகுமாறு எப்படி செய்வது என்றும் பார்க்கலாம். நமக்கு எது அதிக மதிப்புள்ளதோ அதை நாம் எடுத்துக்கொள்வோம்.

அறுவடை செய்யும்போது நெல்லும் கிடைக்கிறது, வைக்கோலும் கிடைக்கிறது. ஒருவனுக்கு நெல் மதிப்புள்ளது; இன்னொருவனுக்கு வைக்கோல் மதிப்புள்ளது. சூழ்நிலையைப் பார்க்கும்போது புசிப்பு, குடிப்பு, பணம், வேலை என்று பார்க்கிறோம். ஆனால், பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவி செய்யும்போது, பரிசுத்த ஆவியானவருக்குச் செவிசாய்க்கும்போது, நாம் கிறிஸ்துவைப் பார்க்கிறோம்.

2. உறவின் வாழ்க்கையில் கிறிஸ்துவை விதைத்தல்

இரண்டாவது, இயேசுகிறிஸ்துவாகிய அஸ்திபாரம் போடப்பட்டிருக்கிறது. இந்த அஸ்திபாரத்தின்மேல் நாம் பல்வேறு விதமாகக் கட்டலாம். நம் எல்லாருக்குள்ளும் இயேசுகிறிஸ்துவாகிய அஸ்திபாரம் போடப்பட்டிருக்கிறது. நாம் உறவுகளின்மூலமாக கிறிஸ்துவை அவர்களுக்குள் கட்டுகிறோம். கட்டுவது என்றால் பரிசுத்தவான்கள் தங்களுக்கிடையேயுள்ள உறவின் காரணமாக ஒருவருக்கொருவர் கிறிஸ்துவைக் காண்பிக்கிறோம், கிறிஸ்துவைக் கூட்டுகிறோம் என்று பொருள். இதுதான் நம்முடைய உறவின் அர்த்தம். நாம் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கற்களைக்கொண்டும் கட்டலாம்; மரம், புல், வைக்கோல் ஆகியவைகளைக்கொண்டும் கட்டலாம். பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கற்கள் என்றால் நம்முடைய கொடுக்கல் வாங்கலிலே, நம்முடைய இடைப்பாடுகளிலே, நாம் ஒருவருக்கொருவர் கிறிஸ்துவை வழங்குகிறோம் என்று பொருள். மரம், புல், வைக்கோல் என்றால் அங்கே இடைப்பாடுகள் இருக்கும், பரிமாற்றங்கள் இருக்கும்; ஆனால், அங்கு கிறிஸ்து பரிமாறப்படுகிற, கிறிஸ்து கூட்டிச்சேர்க்கப்படுகிற, வளருகிற, விருத்தியாகிற செயல் நடைபெறவில்லை என்று பொருள்.

நாம் ஐம்பதுபேர் கூடி வந்தாலும், கூடி வாழ்ந்தாலும் நம்முடைய இடைப்பாடுகளிலே, நம்முடைய பரிமாற்றங்களிலே, கிறிஸ்து பரிமாறப்படலாம், கிறிஸ்து அதிகரிக்கலாம் அல்லது நம்முடைய இடைப்பாடுகளிலே, நம்முடைய பரிமாற்றங்களிலே, கிறிஸ்து இல்லாமலும் போகலாம். இதற்கு வாய்ப்பு இருக்கிறது.

தேவன் நம்மெல்லாருக்கும் கொடைகளைக் கொடுத்திருக்கிறார். எபேசியர் 4ஆம் அதிகாரத்தில் இது சொல்லப்பட்டிருக்கிறது. தேவன் தம்முடைய மக்கள் எல்லாருக்கும் கொடைகளை அருளியிருக்கிறார். ஏதோவொரு விதத்திலே நாம் மற்றவர்களுக்குள் கிறிஸ்துவைப் பரிமாறுவதுதான் கொடை.

பேசுவதுதான் பெரிய கொடை என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. இன்னும் சொல்லப்போனால், பேசுகிறவர்களைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள். பிரசங்கம் பண்ணுகிறவர்களைக்குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பிரசங்கமெல்லாம் அடங்கினபிறகு, கன்னியாகுமரிக்கும், காஷ்மீருக்கும், நாகலாந்துக்கும், குஜராத்துக்கும் ஓடி ஒடுங்கினபின்பு அல்லது அமெரிக்காவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் ஓடி ஒடுங்கினபின்பு இவர்களுக்குள்ளிருந்து வருகிற நறுமணம் என்ன என்பதுதான் அவர்களுடைய கிறிஸ்துவின் அளவை வெளிப்படுத்துமேதவிர, இந்தப் பிரசங்கங்கள், ஊழியங்கள் ஒரு மனிதனுக்குள் இருக்கிற கிறிஸ்துவை வெளிப்படுத்துவதில்லை. சில சமயங்களில் இவைகளெல்லாம் ஒரு மனிதனுக்குள் இல்லாத கிறிஸ்துவை மறைப்பதற்கு உதவி செய்கின்றன. சில சமயங்களில் பிரசங்கம் அல்லது ஊழியம் ஒரு மனிதனுக்குள் இருக்கிற கிறிஸ்துவை வெளிப்படுத்த உதவி செய்யும். பல சமயங்களில் இவனுக்குள் இல்லாத கிறிஸ்துவை மறைப்பதற்கு உதவி செய்யும். ஊழியத்திலே பாட்டு கூத்து என்று எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளலாம்.

கிறிஸ்துவைப் பரிமாறுகிற கொடை

எனவே, சகோதரன் ஒருவன் பேச முடியவில்லையென்றால் அது ஒரு பொருட்டல்ல. ஆனால், எனக்குக் கிடைத்த வாய்ப்புகளிலே நான் ஏதோவொரு விதத்திலே கிறிஸ்துவை வழங்கியிருக்கிறேன் என்பது முக்கியமான காரியம். அதற்கு யாரும் எந்தச் சாக்குப்போக்கும் சொல்லக்கூடாது. அப்படி நாம் செய்யவில்லை என்றால் நாம் கிறிஸ்துவை விதைக்கவில்லை அல்லது முதலீடு செய்யவில்லை என்று பொருள்.

ஒன்று, வாய்ப்புகள் நம்மைக் கடந்து போகும். இன்னொன்று வாய்ப்புகளை நாம் தேடிப்போக வேண்டும். இரண்டுமே நடக்கும். இந்த உலகத்திலே எவைகளையெல்லாம் பொருள் வளங்கள், செல்வங்கள், மதிப்புக்குரியவைகள், விலையேறப்பெற்றவைகள் என்று கருதுகிறோமோ அவைகைள நாம் தேடிப்போகிறோம். எனவே, ஒருவருக்கொருவர் நன்மை செய்கிற வாய்ப்புகளை நாம் தேடிப்போக வேண்டும்.

ஜெபத்தின்மூலமாக

நம்முடைய உறவின் வாழ்க்கையிலே சிறிதளவு பொன், சிறிதளவு வெள்ளி, சிறிதளவு விலையேறப்பெற்ற கல் ஆகியவைகளை நாம் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும். அது நம்முடைய ஜெபமாக இருக்கலாம். தேவனுடைய மக்களோடு ஒன்றுபட்டு, இணைந்து, இசைந்து ஜெபியுங்கள். இது நீங்கள் கிறிஸ்துவை விதைப்பது. எனக்காக, என்னுடைய பிள்ளைகளுக்காக, என்னுடைய மனைவிக்காக, என்னுடைய கணவருக்காக, நான் ஜெபிப்பதைவிட தேவனுடைய மக்களுக்கு நாம் கிறிஸ்துவை விதைப்பதற்கு, கிறிஸ்துவை முதலீடு செய்வதற்கு, நமக்கொரு வாய்ப்பு இருக்கிறது. ஒரு சிலராய் கூடிவந்து நமக்காகவும், நம் குடும்பத்தில் உள்ளவர்களுடைய தேவைகளுக்காகவும் அல்ல, தேவனுடைய மக்கள் எல்லாருக்காகவும் ஜெபியுங்கள். ஜெபிக்கும்போது தேவன் ஒரு மாற்றத்தைச் செய்வார்.

ஜெபம் என்னுடைய புரிந்துகொள்ளுதலுக்கு அப்பாற்பட்டது. “தேவனே நீர் எங்கு வைத்திருக்கிறீர்? எந்தத் திசையிலிருந்து வரப்போகிறது? எப்பொழுது வரப்போகிறது? எனக்குத் தெரியாது. ஒரு பெரிய படை நம்மைச் சுற்றியிருக்கிறது. மக்களெல்லாம் பசியோடு இருக்கிறார்கள். நாளைக்கு இந்த இடத்திலே மக்களெல்லாரும் பரிபூரணமாய்ச் சாப்பிடுவார்கள் என்று சொல்கிறார். எப்படி அப்படிப்பட்ட ஒரு சாப்பாட்டைக் கொண்டுவரப்போகிறார் என்று எனக்குத் தெரியாது. ஆனால், தேவனுடைய வழி எப் பொழுதுமே அப்படித்தான். நம்முடைய புரிந்துகொள்ளுதலுக்கு அப்பாற்பட்டு நாம் ஜெபிக்கின்றோம். எனவே, தேவனுடைய மக்களுக்கு நன்மை செய்வதற்கு நாம் ஜெபிக்கலாம். அவர்களோடு பேசுவது. இங்கு கூட்டத்திலே வந்து பேசுவது ஒரு பொருட்டல்ல. தொலைபேசிமூலம் பேசலாம்.

தொடர்புகொள்வதின்மூலம்

நாம் தேவனுடைய குடும்பம் என்ற முறையில் ஒருவரைக்குறித்து ஒருவர் அக்கறையாக இருக்க வேண்டும். ஒன்றுமே பேச முடியவில்லை என்றால் “எப்படி இருக்கிறீர்கள்? நன்றாக இருக்கிறீர்களா? காரியங்கள் எப்படி இருக்கின்றன? ஒன்றும் விசேஷம் இல்லை. சும்மா ஹலோ சொல்லலாம் என்றுதான் ஃபோன் செய்தேன்,” என்று தாராளமாகச் சொல்லலாம்.

எனவே, நாம் ஜெபிக்கலாம். அவர்களோடு உரையாடலாம். ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது தேவனுடைய மக்களுக்கு எதையாவது கொடுப்பதற்கு நாம் ஆயத்தமாக இருக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால் நாம் தேவனுடைய மக்கள் எல்லாரையும்பற்றிச் சிந்திக்க வேண்டும். எல்லாரையும் பற்றி நாம் ஒருமுறை சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஜெபிக்கும்போது சிந்திப்போம். நான் கொடுக்கத் தக்க ஏதாவது ஒன்று இருக்கிறதா என்று சிந்தித்துப்பார்க்க வேண்டும். என்ன கொடுக்கலாம் என்று ஒரு பட்டியல் தயாரிக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. எதைக் கொடுக்கலாம் என்று தேவன் உணர்த்துவார்.

சில சமயங்களில் அவர்கள் நம்மைப் பார்ப்பது, நாம் அவர்களைப் பார்ப்பதே ஒரு விதமான நன்மையைக் கொடுப்பதுதான். இதை நீங்கள் நம்புகிறீர்களா? நாம் ஒருவரையொருவர் பார்ப்பதும், சந்திப்பதும்கூட நாம் ஒருவிதத்தில் நன்மையைக் கொடுப்பதுதான் என்று நீங்கள் நம்புகிறீர்களா? இதில் ஏதாவது நன்மை இருக்கிறதா? சில சமயங்களில் ஒரு ஆளைப் பார்க்கும்போது அவர்களுடைய நடை எப்படி இருக்கிறது, உட்காரும் விதம் எப்படி இருக்கிறது, அவர்களுடைய குரல் எப்படி இருக்கிறது, என்பதிலிருந்து அவர்களுடைய நிலையை ஒருவாறு நாம் யூகிக்கலாம்.

தேவனுடைய பிள்ளைகள் நம்மைப்பற்றி நினைப்பதும், நம்மைப்பற்றிய அவர்களுடைய கரிசனையும், அவர்களுடைய பராமரிப்பும், அவர்களுடைய அக்கறையும் நமக்கு எவ்வளவு அவசியம் தெரியுமா? எனவே, ஒரு மனிதன் இதைக் கொடுப்பதும் இல்லை, இதைப் பெறுவதும் இல்லை என்றால் அவன் விதைக்கிற, முதலீடு செய்கிற, கிறிஸ்துவின் அளவு மிக மிகக் குறைவு. சிலரால் கொடுக்கிற முறையில்தான் இருக்க முடியும். சிலரால் பெறுகிற முறையில்தான் இருக்க முடியும்.

கூடுகைகளில்

தேவனுடைய மக்கள் பேசும்போது தயவுசெய்து நீங்கள் மிகக் கூர்மையாகக் கவனியுங்கள். அவர்கள் பேசுகிற நேரத்தில் நீங்கள் என்ன பேசப்போகிறீர்கள் என்பதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம். கூட்டத்திற்குமுன்பு நீங்கள் பேசப்போவதைப்பற்றி யோசிப்பது மிகவும் நல்லது. கூட்டம் தொடங்கினபிறகு அதைப்பற்றி யோசிக்க வேண்டாம். அதற்குமுன்பே ஆயத்தம் பண்ணியிருந்தால், நீங்கள் பேச வேண்டியது அந்நேரத்திலே உங்களுக்கு அருளப்படும். மற்றவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை நாம் கூர்மையாகக் கவனிக்க வேண்டும். அதிலிருந்து ஒருவேளை எனக்குப் பயனுள்ள ஒன்று கிடைக்கும் அல்லது அவர்களுக்குப் பயனுள்ள ஒன்றை நான் கற்றுக்கொள்ள முடியும். எடுத்துக்காட்டாக, அந்தச் சகோதரனின் நிலை என்னவென்று தெரியாமல் நாம் என்ன கிறிஸ்துவை வழங்க முடியும்? பல பிரசங்கங்கள் பயனற்றவை. ஏனென்றால், நிலை என்னவென்று தெரியாமல் வழங்கப்படுகின்றன. பயங்கர ஜோடனையோடு ஒரு பிரசங்கம் பண்ணிவிடுகிறோம். ஆனால், அங்கிருக்கிற ஒருவருடைய நிலைமைக்குக்கூட ஒத்தஅதிர்வு ஏற்படவில்லையென்றால் அந்தச் செய்தியினுடைய பயன் என்ன? பூஜ்ஜியம்.

எப்போதுமே பேசுவதற்குமுன்பு நாம் ஜெபிக்க வேண்டியது அவசியம். பேசுவது என்றால் இந்தக் கூடுகையில் மட்டுமல்ல, உரையாடலிலும். “ஆண்டவரே, அவர்களுடைய நிலைக்கு ஏற்ற ஒரு எண்ணத்தை அல்லது அந்த நிலையை அறிகிற ஒரு அறிவையும், திறனையும், திராணியையும் எனக்குத் தர வேண்டும்,” என்று நாம் ஜெபிக்க வேண்டும்.

எனவே, நம்முடைய கூடுகையில் நாம் ஒருவருக்கொருவர் கிறிஸ்துவை நம்மையாகக் கொடுக்க வேண்டும். வாரம் முழுவதும் நாம் கிறிஸ்துவை அவர்களுக்கு நன்மையாகக் கொடுக்கவில்லையென்றாலும், குறைந்தபட்சம், கூடிவரும்போதாவது ஏதாவதொரு நன்மையை நாம் வழங்கலாம். நாம் எடுத்துக்கொடுக்கிற ஒரு பாடல் நாம் எல்லாருக்கும் கொடுக்கிற ஒரு நன்மை. மூன்று அல்லது நான்கு நிமிடங்கள் நாம் பேசுகிற நம்முடைய அனுபவம் நாம் எல்லாருக்கும் கொடுக்கிற ஒரு நன்மை. நாம் கொண்டுவருகிற உணவு நாம் எல்லாருக்கும் கொடுக்கிற ஒரு நன்மை. கூட்டம் முடிந்தபின் ஒருவரோடொருவர் அன்போடும், கனிவோடும் பேசுவது நாம் எல்லாருக்கும் கொடுக்கிற ஒரு நன்மை. எல்லாவற்றிற்கும்மேலாக அவர்களுடைய நிலை என்னவென்று நாம் அறிந்துகொள்வது நாம் அவர்களுக்குக் கொடுக்கிற ஒரு நன்மை. அதுதவிர என்னுடைய நிலையை அவர்கள் அறிந்துகொள்வதும் நடைபெறுகிறது. இப்பேர்ப்பட்ட ஒரு ஆசீர்வாதத்தை நாம் இழந்துவிடக் கூடாது.

எனவே, அருமையான சகோதர சகோதரிகளே, நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் நம்முடைய உறவின் வாழ்க்கையிலும் நாம் கிறிஸ்துவை விதைக்க வேண்டும்; கிறிஸ்துவை நாம் முதலீடு செய்ய வேண்டும். “கூடுகைகளுக்கு வந்தால் என்ன கிடைக்கும்?” என்று யாராவது கேட்டால், “கிறிஸ்து தாராளமாய்க் கிடைப்பார்,” என்பதைத்தவிர வேறு எந்தப் பெரிய வாக்குறுதியையும் நான் கொடுக்கப் போவதில்லை. இன்றைக்கும் கிறிஸ்து கிடைப்பார். உங்கள் வாழ்வின் இறுதியிலும் கிறிஸ்து தாராளமாய் இருப்பார். உங்கள் தலைமுறைகளுக்கும் கிறிஸ்து தாராளமாக இருப்பார். 

கிறிஸ்துவை முதலீடுசெய்தல்

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது. “நல்ல படிப்பு, நல்ல வேலை, நல்ல குடும்பம், வாழ்க்கையில் வசதிபோன்றவைகள் எனக்குக் கிடைக்குமா?” என்று கேட்டால், என்னுடைய அனுபவத்தில் நான் கண்டது என்னவென்றால், முழு இருதயத்தோடு, அப்படிப்பட்ட ஒரு இருதயத்தோடு, கிறிஸ்துவை விதைப்பதற்கு, முதலீடு செய்வதற்கு, காண்பதற்கு, வாழ்வதற்கு, வழங்குவதற்கு என்று வாழ்கின்ற தேவனுடைய மக்கள் இந்த உலகத்து நன்மைகளிலே ஒருநாளும் குறைவுபட்டது இல்லை. ஆனால், உலகத்து நன்மைகள் குறைபட்டாலும் அது அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. இன்றைக்கு இந்த உலகத்து நன்மைகள் இருக்கலாம். நாளைக்கு இந்த உலகத்து நன்மையை தேவனுடைய இராஜ்ஜியத்தின்பொருட்டு நாம் சுருக்கிக்கொள்ளவேண்டியிருக்கலாம். அது நமக்கு ஒரு பொருட்டல்ல.

இந்த உலகத்து மக்கள் உலகத்துச் செல்வங்களை முதலீடு செய்கிறார்கள். நிலம் வாங்கி விற்கிற தொழில் இன்று கொடிகட்டிப் பறக்கிறது. “எங்கெல்லாம் நாம் விதைத்தால், முதலீடு செய்தால், இன்றிலிருந்து பத்து வருடம் அல்லது இருபது வருடம் கழித்து என்னுடைய பிள்ளைகள் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை. அவர்கள் படித்தாலும் சரி. படிக்காவிட்டாலும் சரி. அவர்களுடைய வாழ்க்கையில் பணப்பிரச்சினையே கிடையாது. என்னுடைய தலைமுறைகள் அனுபவிப்பார்கள்,” என்று நிலத்தில் முதலீடு செய்கிறார்கள். இன்னும் ஒரு சாரார் பங்குச் சந்தையில் முதலீடு செய்கிறார்கள். அவர்கள் எண்ணமெல்லாம் தாங்கள் வாங்கியிருக்கும் பங்கு ஏறுகிறதா இறங்குகிறதா என்பதிலேயே இருக்கிறது. இராத்திரியிலும் அவர்களுடைய மனதிற்கு இளைப்பாறுதலில்லை.

பங்குச் சந்தையைப்பற்றியும், நிலத்தைப்பற்றியும் எனக்கு எந்த அறிவும் இல்லை என்றாலும் சரி. கிறிஸ்துவை விதைப்பதையும், முதலீடு செய்வதையும் நான் முழு இருதயத்தோடு செய்தால் தேவன் இன்றைக்கும், என்னுடைய வாழ்க்கையின் முடிவிலும், தலைமுறை தலைமுறையாகவும் அந்தக் கிறிஸ்துவைப் பெருத்த அறுவடையாகத் தருவார். அதோடுகூட இந்த உலகத்து நன்மைகளைத் தேவன் தராமல் இருப்பதில்லை. “அது எப்படி? ஒரு நிலத்தை எப்படி வாங்க வேண்டும், பங்குச் சந்தையில் எப்படிப் போட வேண்டும், என்று தெரியவில்லை என்றாலுங்கூட இந்த உலகத்து நன்மைகளைப் பெற முடியுமா?” என்று நீங்கள் கேட்கலாம். என்னுடைய ஒரே பதில் “ஆம்! முடியும்.” தேவன் அவர்களுடைய ஈடுபாடுகளைப் பாதுகாத்துக் கொள்வார்.

“அப்பொழுது கர்த்தருக்குப் பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொள்வார்கள். கர்த்தர் கவனித்துக் கேட்பார். கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காகவும், அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களுக்காகவும் ஞாபகப்புஸ்தகம் ஒன்று அவருக்குமுன்பாக எழுதப்பட்டிருக்கிறது. என் சம்பத்தை நான் சேர்க்கும் நாளிலே அவர்கள் என்னுடையவர்களாயிருப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். ஒரு மனுஷன் தனக்கு ஊழியஞ்செய்கிற தன்னுடைய குமாரனைக் கடாட்சிக்கிறதுபோல நான் அவர் களைக் கடாட்சிப்பேன். அப்பொழுது நீங்கள் நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்கும், தேவனுக்கு ஊழியஞ் செய்கிறவனுக்கும் அவருக்கு ஊழியம் செய்யாதவனுக்கும் இருக்கிற வித்தியாசத்தைத் திரும்பவும் காண்பீர்கள்” (மல். 3:16-18).

ஊழியம் செய்கிறவன், ஊழியம் செய்யாதவன் என்று சொன்னவுடன் நமக்குப் பல எண்ணங்கள் வரும். “இவர் வேலையை விட்டுவிட்டு கர்த்தருக்காக ஊழியம் செய்கிறார். இவர் பொறியியல் படித்தவர், இவர் மருத்துவர், இவர் உயர் பதவியில் இருந்தவர். அதையெல்லாம் விட்டுவிட்டு கர்த்தருக்காக ஊழியம்பண்ண வந்துவிட்டார்,” என்று யாராவது ஒருவர் சாட்சிகொடுத்தால் அந்தச் சாட்சியைக் கேட்கவே கூடாது. “மற்றவர்களை ஊக்குவிக்கிறதற்காக நான் அப்படிச் சொன்னேன்,” என்று அவர் சொன்னால், “மற்றவர்களை ஊக்குவிக்கிறதற்காகச் சொல்கிறீர்களா அல்லது நீங்கள் எவ்வளவு பெரிய ஆள் என்று சொல்கிறீர்களா!” என்பது ஒரு பொருட்டல்ல. அந்த ஊழியத்தை நான் சொல்லவில்லை.

தனிப்பட்ட வாழ்க்கையில், இந்தச் சூழ்நிலையில், நாம் கிறிஸ்துவை விதைக்கலாம் அல்லது கிறிஸ்துவை விதைக்காமலும் விடலாம். புசித்தலிலே, குடித்தலிலே, கல்யாணத்திலே, வீட்டை வாங்குவதிலே அல்லது இந்த வீட்டை விற்பதிலே அல்லது துணி துவைப்பதிலே, துணி அடுக்கி வைப்பதிலே, கடைக்குப் போவதிலே கிறிஸ்துவை நாம் வாழலாம் அல்லது கிறிஸ்துவை நாம் வாழாமல் விடலாம். நம்முடைய உறவின் வாழ்க்கையிலே, இந்தச் சூழலிலே, நாம் கிறிஸ்துவை வழங்கலாம் அல்லது கிறிஸ்துவை வழங்காமலும் விடலாம். அதுதான் ஊழியம் செய்வது, ஊழியம் செய்யாமல் இருப்பது. இதுதான் இரண்டிற்கும் உள்ள வேறுபாடு. கர்த்தர் அந்த வேறுபாட்டைக் காண்பிப்பார். “நான் என்னுடைய பொக்கிஷத்தை, என்னுடைய சம்பத்தைச் சேர்ப்பேன்,” என்று கர்த்தர் சொல்லுகிறார். ஒருநாளிலே “இவர்களெல்லாம் என்னுடைய அருமையான பொக்கிஷம்,” என்று கர்த்தர் சேகரிக்கும் நாளிலே நாம் அவருடைய சம்பத்தாக இருப்போம். நாம் தேவனுடைய சம்பத்தாக இருப்போம்.

எனவே, அருமையான பரிசுத்தவான்களே, இந்த வார்த்தைகளால் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்த வேண்டும். எந்த நிலையிலும், நெருக்கத்திலும், அழுத்தத்திலும் நாம் கிறிஸ்துவை விதைக்கலாம். ஆஸ்டின் ஸ்பார்க்ஸ் என்ற பரிசுத்தவான் சொன்ன ஒரு வாக்கியம் ஞாபகம் இருக்கிறது. சிலர் கர்த்தர்வழியாக மலையைப் பார்ப்பார்கள்; சிலர் மலைபோன்ற சூழ்நிலை வழியாகக் கர்த்தரைப் பார்ப்பார்கள். நம்முடைய மலைபோன்ற சூழ்நிலைவழியாய்க் கர்த்தரைப் பார்க்கும்போது நம்முடைய சூழ்நிலைதான் பெரிதாகத் தோன்றும்; கர்த்தர் சிறிதாகத் தோன்றுவார். கர்த்தர்வழியாக நம்முடைய வாழ்க்கைச் சூழ்நிலையைப் பார்க்கும்போது, கர்த்தர் பெரிதாக இருப்பார்; சூழ்நிலைகள் சிறிதாக இருக்கும்.

வைக்கோலையும் பார்க்கலாம்; நெல்லையும் பார்க்கலாம். நம்முடைய சூழ்நிலையிலே நாம் எப்படிப்பட்ட கிறிஸ்துவை வாழ வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். பசியாக இருக்கிறோம், வேதனையில் இருக்கிறோம், வேலையில்லாமல் இருக்கிறோம். நாம் என்ன கிறிஸ்துவை வாழ வேண்டுமென்று தேவன் விரும்புகிறாரோ, அதை வாழ்வதற்குரிய பலத்தை பரிசுத்த ஆவியானவர் நமக்குத் தருவார். அதுபோல, நம்முடைய உறவின் வாழ்க்கையிலே வாய்ப்புகள் வரும்போது அல்லது வாய்ப்புகளைத் தேடிச் செல்லும்போது, நாம் ஏதோவொரு விதத்திலே கிறிஸ்துவைப் பரிமாற முடியுமா அல்லது கிறிஸ்துவை நாம் சகோதரர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியுமா என்று பார்க்க வேண்டும். இரண்டிலும் நான் சமநிலை தவறக் கூடாது.

தேவனுடைய மக்களைத் தவறாக நடத்துகின்ற தலைமைத்துவத்திற்கு மாற்று தலைமைத்துவம் இல்லாதிருப்பது அல்ல. தேவனுடைய மக்களைத் தவறாக நடத்துகிற தலைமைத்துவத்திற்கு மாற்று ஆவிக்குரிய தலைமைத்துவம். அதுபோல, தேவனுடைய மக்களைக் கசக்கிப்பிழிந்து அவர்களிடமிருந்து பிடுங்குகின்ற, அவர்களைப் பயன்படுத்துகின்ற, ஒரு ஐக்கியத்திற்கு மாற்று ஐக்கியமே இல்லாமல் இருப்பது அல்ல. தேவனுக்கேற்ற ஆவிக்குரிய ஐக்கியம்.

பங்குச் சந்தையிலே எப்படி முதலீடு செய்வது, நிலத்திலே எப்படி முதலீடு செய்வது என்று நாம் கற்றுக்கொடுக்கவில்லை. நம்முடைய அன்றாட வாழ்க்கையின் நிலைகளிலே நம் வாழ்க்கையிலும், தேவனுடைய மக்களுடைய வாழ்க்கையிலும், கிறிஸ்துவை முதலீடு செய்வதில் கவனமாய் இருக்க வேண்டும். அதனுடைய வெகுமதியை இன்றைக்கும், வாழ்க்கையின் முடிவிலும், தலைமுறை தலைமுறையாகத் தேவன் நமக்குத் தருவார். ஆமென்.