Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More


நபீல் குரேஷி

முன்னுரை

பெரும்பாலான இஸ்லாமிய நாடுகள் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை எதிர்த்தாலும், தேவன் தம்மை அவர்களுக்கும் வெளிப்படுத்தப் பிரியமாயிருக்கிறார். நம் தேவன் இஸ்லாமியர்களிடையே செயல்படுவதையும், அவர்களிலிருந்து கிறிஸ்துவுக்குச் சாட்சிகள் எழும்புவதையும் காணும்போது இதயம் களிகூருகிறது. இப்படிப்பட்ட ஒருவருடைய சாட்சியைத்தான் நான் இன்று உங்களோடு பகிர்ந்துகொள்ளப் போகிறேன்.

இவர் நம் சம காலத்தில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, மரித்த ஒரு சகோதரன். இது அவருடைய வாழ்க்கை வரலாறு என்று சொல்வதைவிட, அவருடைய இரட்சிப்பின் சாட்சி என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். இவருடைய சாட்சி ஆழமானது, அழுத்தமானது. “நசரேத்திலிருந்து யாதொரு நன்மை வரக்கூடுமா?” என்று அன்று நாத்தான்யேல் பிலிப்புவிடம் கேட்டதுபோல, “முஸ்லிம்கள் இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொள்வார்களா? இது சாத்தியமா?” என்ற சிலருடைய கேள்விக்கும், சந்தேகத்துக்கும் இவருடைய சாட்சியே பதில்.

குடும்பப் பின்புலம்

இவருடைய பெயர் நபீல் குரேஷி. இவர் மிகப் பெருமைவாய்ந்த, பாரம்பரியமான ஒரு பாகிஸ்தானி. இவருடைய குடும்பம் ஒரு சாதாரணமான, சராசரி முஸ்லிம் குடும்பம் இல்லை. இவருடைய குடும்பத்தார் அனைவரும் பல தலைமுறைகளாக மிகவும் பக்திவைராக்கியமுள்ள முஸ்லிம்கள். கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்க நம் கிறிஸ்தவத்தில் மிஷனரிகள் பல இடங்களுக்குச் செல்வதுபோல், இஸ்லாத்திலும் முஸ்லிம் மிஷனரிகள் எல்லா நாடுகளுக்கும் சென்று தங்கள் விசுவாசத்தைப் பரப்புகிறார்கள். இவருடைய அம்மாவின் குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக உகாண்டா, இந்தோனேசியா போன்ற பல நாடுகளில் மிஷனரிகளாகப் பணியாற்றினார்கள்.

இவருடைய அம்மாவே ஒரு மிஷனரிதான். அவர் இந்தோனேசியாவில் மிஷனரியாகப் பணியாற்றினார். அவர் அங்கிருந்த பல்வேறு இஸ்லாமியச் சமுதாயங்களில் இஸ்லாத்தைப் போதித்தார், கற்பித்தார். அவருக்குத் திருமணமாகும்வரை அவர் அங்குதான் வாழ்ந்தார், பணிபுரிந்தார். திருமணத்திற்காகத்தான் அவர் பாகிஸ்தானுக்குத் திரும்பிவந்தார். அவர் திருமணம் செய்தவர் அமெரிக்கக் கப்பற்படையில் பணிபுரிந்த ஒரு பாகிஸ்தானி. அவருடைய குடும்பப் பெயரைப் பார்க்கும்போது அவர் பெருமைமிக்க முகமது நபியின் வம்சத்தைச் சேர்ந்தவர் என்று தெரிகிறது.

இஸ்லாத்தில் ஷியா, சன்னி என்ற இரு பெரும் பிரிவுகள் உள்ளன. நபீல் அஹமதியர் என்ற இன்னொரு பிரிவைச் சேர்ந்தவர். அஹமதியர்கள் பொதுவாக மிகவும் அமைதியானவர்கள்.

பிறப்பு

நபீல் 1983ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்திலுள்ள சந்தியாகோ நகரில் பிறந்தார். நபீல் இந்தத் தம்பதியின் இரண்டாவது குழந்தை. யூதக் குழந்தைகள் பிறந்தவுடன், குழந்தைகளின் காதுகளில் குழந்தையின் அப்பா முதன்முதலாக, “இஸ்ரயேலே கேள், உன் தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்,” என்ற வார்த்தைகளைக் கூறுவார்களாம். அதுபோல நபீல் பிறந்தவுடன் அவனுடைய அப்பா அவனை முதன்முறையாகத் தன் கையில் தூக்கிக்கொண்டு, “என் மகனே கேள், அல்லாவே மிகப் பெரியவர். அல்லாவைத்தவிர வேறு தேவன் இல்லை. முகமது அல்லாவின் தூதுவர்,” என்ற வார்த்தைகளை அவனுடைய காதுகளில் ஓதினார். இவைகள்தான் நபீல் கேட்ட முதல் வார்த்தைகள்.

குழந்தைப்பருவம்

இவருக்கு ஓர் அக்கா உண்டு. இவருடைய அப்பா அமெரிக்கக் கடற்படையில் வேலை பார்த்ததால், அவர்களுடைய குடும்பம் பல்வேறு நாடுகளுக்குக் குடிபெயர்ந்துபோக வேண்டியிருந்தது. எனவே, நபீல் தன் அப்பாவுடன் சேர்ந்து பல்வேறு நாடுகளுக்குச் சென்றான். அவனுடைய குழந்தைப்பருவம் பெரும்பாலும் ஸ்காட்லாந்தின் டுனூன் நகரத்தில் கழிந்தது. வெளி உலகத்தோடு அதிமான தொடர்பு கிடையாது. மிகவும் பாதுகாப்பான வளர்ப்பு. எங்கு சென்றாலும் பாகிஸ்தானின், இஸ்லாத்தின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், பாரம்பரியத்தையும், பழக்கவழக்கங்களையுமே பின்பற்றினார்கள், கடைப்பிடித்தார்கள்.

வளர்ப்பும், இஸ்லாத்தின் வழக்கமும்

கடற்படையில் பணிபுரிகிறவர் பெரும்பாலும் கடலில்தான் இருக்க முடியும்; அதிகமாக வீட்டில் இருக்க முடியாது. எனவே, குடும்பதைக் கவனிக்கும் பொறுப்பு பெரும்பாலும் அவருடைய அம்மாவின் தோள்களில் விழுந்தது. நபீலின் அம்மா ஒரே தேவன், அவருடைய தீர்க்கதரிசிகள், குரான், காணப்படாத உலகம், நியாயத்தீர்ப்பு, அல்லாவின் கட்டளைகள் ஆகிய இஸ்லாத்தின் ஆறு விசுவாசப்பிரமாணத்தையும், விசுவாசத்துக்கு சாட்சிபகர்தல், சமயப் பிரார்த்தனை, தானதர்மம் செய்தல், உபவாசம், மெக்கா பயணம் ஆகிய விசுவாசத்தின் ஐந்து ண்களையும் தன் பிள்ளைகளுக்குக் கண்ணுங்கருத்துமாகக் கற்பித்தார்.

“உன் ஒழுக்கம், ஒழுங்கு, கட்டுப்பாடு, மரியாதை, பண்பு, குணம் எல்லாம் மிக உயர்ந்தவைகளாக இருக்க வேண்டும். ஏனென்றால், நீ இஸ்லாத்தின் சாட்சி,” என்று அவனுடைய அம்மா அவனுக்குச் சொல்லி வளர்த்தார்.

காலையில் படுக்கையைவிட்டு எழுந்து, கால்களைத் தரையில் வைப்பதற்குமுன், “அல்லாஹ்வே, எனக்கு உயிர் தந்ததற்காக உமக்கு நன்றி. இன்றிரவு உறங்கச் சென்றால் நாளைக்குக் கண்விழிப்பேனா என்று எனக்குத் தெரியாது. எனக்கு மரணத்தைத் தருகிறவரும் நீரே. ஒவ்வொரு நாளும் என்னை விழிக்கச் செய்கிறீர். உமக்கு நன்றி. நான் மரித்தாலும், நீர் என்னை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்புவீர்,” என்ற பாரம்பரிய ஜெபத்தைப் பக்தியுள்ள முஸ்லிம்கள் சொல்வார்கள். நபீல் இப்படித்தான் வளர்ந்தான்.

பக்தியுள்ள முஸ்லிம்கள் எந்த அளவுக்குப் பாரம்பரியங்களையும், மதச் சடங்குகளையும் பின்பற்றுவார்கள் என்பதற்கு நான் ஓர் எடுத்துக்காட்டுச் சொல்ல விரும்புகிறேன். கடவுளின் தூதன் என்று அவர்கள் நம்புகிற முகமது கழுவறைக்குப் போனபோது முதலாவது தன் இடது காலை எடுத்து வைத்தாராம். எனவே, இவர்களும் தங்கள் இடது காலைத்தான் முதலாவது உள்ளே வைப்பார்கள். அதன்பின் வலது கையையும், இடது கையையும் மூன்று முறை கழுவுவார்கள். எல்லா வகையிலும் அவர்கள் முகமதுவைப் பின்பற்ற வேண்டுமாம்.

நபீலுக்கு அப்போது வயது மூன்று. அவன் வீட்டில் குட்டிக் கார்களைவைத்து விளையாடிக்கொண்டிருந்தான். அவை எதிர்பாராதவிதமாக காண்ணாடி ஜன்னல்களில் மோதி கண்ணாடிகள் உடைந்தன. உடைந்த கண்ணாடித் துண்டுகள் அவன்மேல் சிதறி விழுந்தன. அவனுடைய கையில் காயம் ஏற்பட்டது. அவனுடைய அம்மா ஜன்னல் உடைந்த சத்தத்தைக் கேட்டு ஓடி வந்து, அவனை வாரித் தூக்கி அணைத்துக்கொண்டு, காயத்தின் இரத்தத்தைத் துடைத்து, காயத்துக்குக் கட்டுப்போட்டு, வேகமாக அவனைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார். இவ்வளவு களேபரத்திலும் அவர் மூச்சு விடாமல் தன் ஜெபத்தைச் சொல்லிக்கொண்டேயிருந்தார். அமைதியாக அல்ல, சத்தமாகவே சொன்னார். மருத்துவமனையில் மருத்துவர்கள் காயப்பட்ட கையில் தையல் போட்டுக்கொண்டிருந்தபோதும் அவர் தன் ஜெபத்தை முணுமுணுத்துக்கொண்டேயிருந்தார். இது நபீலின் உள்ளத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தன் அம்மா அப்பாவுக்கு இஸ்லாம் ஒரு மதம் மட்டும் அல்ல, அதுதான் அவர்களுடைய வாழ்க்கை என்று அவன் புரிந்துகொண்டான்.

ஆம், நபீலின் குடும்பம் முழுக்கமுழுக்க இஸ்லாத்தை மையமாகக் கொண்ட குடும்பம். அவர்களுடைய பேச்சு, மூச்சு எல்லாம் இஸ்லாம்தான். இஸ்லாம்தான் நபீலினுடைய வாழ்வின் கட்டமைப்பு, வரைபடம், அடையாளம்.

அரபு மொழியும், குரானும்

அரபு மொழி தெரியாவிட்டால் குரானை வாசித்துப் புரிந்துகொள்வது சற்றுக் கடினம். நபீல் ஒரு பாகிஸ்தானி என்பதால் அவனுக்கு உருது தெரியும்; ஆனால், அரபு தெரியாது. எனவே, குரானை வாசித்துப் புரிந்துகொள்ள அவன் அரபு கற்கவேண்டியிருந்தது. “குரான் ஆங்கிலத்தில் கிடைக்குமே! அதை வாசிக்கலாமே!” என்று எண்ணத்தோன்றும். ஆம், குரான் எல்லா மொழிகளிலும் கிடைக்கும். ஆனால், அரபு மொழி குரானை மட்டுமே இஸ்லாமியர்கள் கடவுளின் நேரடி வார்த்தையாகக் கருதுகிறார்கள். வேற்று மொழிகளில் உள்ள குரானை அவர்கள் அந்தத் தரத்தில் கருதவில்லை. எனவே, நபீல் ஆங்கிலம் கற்பதற்குமுன் முதலாவது அரபு மொழி கற்கத்தொடங்கினான்; மெல்ல மெல்ல எழுத்துக்கூட்டி வாசிக்க ஆரம்பித்தான்; கடைசியாக குரானை வாசிக்கும் அளவுக்குத் தேறினான். அரபு மொழியை நபீல் முழுமையாக, சரளமாகக் கற்க வேண்டும் என்று அவனுடைய பெற்றோர் வற்புறுத்தினார்கள், வலியுறுத்தினார்கள். அதாவது, நாம் புரிந்துகொள்வதற்காக வேதாகமத்தை வாசிக்கின்றோம். ஆனால் இஸ்லாமியர்கள் புரிந்துகொள்வதற்காகக் குரானை வாசிக்கவில்லை. புரிந்துகொள்வது இரண்டாம்பட்சம்; புரிந்துகொண்டாலும் சரி, புரிந்துகொள்ளாவிட்டாலும் சரி. குரானை மனப்பாடம் செய்வதுதான் அவர்களுக்கு முதல் காரியம். மனப்பாடம் செய்யவேண்டும், மனப்பாடம் செய்ததை ஒப்பிக்க வேண்டும். இதுதான் அவர்களுடைய நோக்கம். வசனங்களின் பொருளையோ, இடஅமைப்பையோபற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. அது அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல.

ஆறு வயது ஆவதற்குள் நபீல் முழு குரானையும் அரபு மொழியில் வாசித்துவிட வேண்டும் என்று அவனுடைய பெற்றோர் விரும்பினார்கள். அவனுடைய அக்கா தன் ஏழாவது வயதில் குரான் முழுவதையும் அரபு மொழியில் படித்துமுடித்தாள். “உன் அக்கா ஏழு வயதிற்குள் குரானை வாசித்து முடித்தாள். நீ அவளுக்குச் சவால் விடும் வகையில் ஆறு வயதிற்குள் வாசித்து முடித்துவிட வேண்டும்,” என்று அவனுடைய அம்மா அவனை உற்சாகப்படுத்தினார்.

யாருடைய உதவியும் இல்லாமல் தன்னால் குரானை அரபு மொழியில் வாசிக்க முடியும் என்ற நிலையை நபீல் எட்டினான். ஒருநாள் அவன் பரவசத்தோடு தன் அக்காவின் அறைக்கு ஓடினான். அவள் தன் அறையில் தரையில் உட்கார்ந்து விளையாடிக்கொண்டிருந்தாள். நபீல் அந்த அறையிலிருந்த குரானை எடுத்து அவளருகே தரையில் வைத்தான். யாருடைய உதவியும் இல்லாமல் தன்னால் குரானை அரபு மொழியில் வாசிக்க முடியும் என்று அவன் தன் அக்காவுக்குக் காட்ட விரும்பினான். அவனுடைய அம்மா உரத்த சத்தத்தோடு அந்த அறைக்குள் ஓடி வந்தார். தரையில் வைத்திருந்த குரானைக் கையில் எடுத்துக்கொண்டு, தன் பிள்ளைகளை நோக்கி, “குரானை ஒருபோதும் தரையில் வைக்கக்கூடாது. குரானை எப்போதும் மிக உயர்ந்த இடத்தில்தான் வைக்க வேண்டும். குரான் ஒருபோதும் தரையைத் தொடக்கூடாது,” என்று கண்டிப்பாகப் பேசினார்.

இந்த நிகழ்ச்சியை நபீல் ஒருபோதும் மறக்கவில்லை. அது அவனுக்குள் ஆழமாகப் பதிந்துவிட்டது. குரான் மிக, மிகப் பரிசுத்தமான புத்தகம் என்றும், அது கடவுளுடைய வார்த்தை என்றும் அவன் புரிந்துகொண்டான். அன்றிலிருந்து, அவன் வீட்டுக்குள் குரானை எடுத்துக்கொண்டு நடக்க நேரிட்டபோதுகூட, அதைத் தன் தலைக்குமேல் தூக்கிப்பிடித்துக்கொண்டு மெதுவாக நடந்தான். ஏனென்றால், அதுதானே மிக உயர்ந்த இடம்! அந்த அளவுக்கு அந்த நிகழ்ச்சி அவனுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இஸ்லாத்தின் விசுவாசம் அவனுடைய வாழ்க்கையின் பிரிக்கமுடியாத ஓர் அங்கமாக மாறிற்று. அவர்கள் வாழ்ந்த நகரத்தில் மசூதி இல்லாததால் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு அவர்கள் டுனூன் நகரத்திலிருந்து க்ளாஸ்கோ என்ற நகரத்துக்குச் செல்ல வேண்டியிருந்தது. நீண்ட தூரப் பயணம். ஆனால், அவர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. போகும்போதும், வரும்போதும் நேரத்தை வீணாக்காமல் அவருடைய பெற்றோர் முகமதுவின் வாழ்க்கையைப்பற்றிப் உரையாடினார்கள், குரானிலிருந்து கேள்வி கேட்டார்கள். அவர்களுடைய கேள்விகளுக்கு நபீல் சரியாகப் பதில் சொன்னான். அவர்கள் கேட்ட வசனங்களை மனப்பாடமாக ஒப்பித்தான். அவனுடைய பெற்றோர் நபீலைக்குறித்து மிகவும் பெருமைப்பட்டார்கள்.
ஐந்து வயது ஆவதற்குள் நபீல் மொத்தக் குரானை அரபு மொழியில் வாசித்தான். பல அத்தியாயங்களை மனப்பாடம் செய்தான். இஸ்லாத்தை நம்புவதற்கு மட்டும் அல்ல, இஸ்லாத்தைக்குறித்து விசாரிப்பவர்களுக்கு உரிய பதில் கொடுக்கவும், கிறிஸ்தவம்போன்ற வேற மதங்களை மறுக்கவும் அவனுடைய பெற்றோர் நபீலுக்குக் கற்பித்தார்கள். இளமையிலேயே குரான் நபீலுக்கு மிகவும் பரிச்சயமான புத்தகமாயிற்று. முகமதுவின் வாழ்க்கையைப்பற்றியும் அவன் நிறைய அறிந்திருந்தான்.

ஐந்து வயதாவதற்குள் குரானின் கடைசி ஏழு அதிகாரங்களை மனப்பாடம் செய்தான். முஸ்லிம்கள் ஒவ்வொரு நாளும் ஐந்து முறை ஜெபிக்க வேண்டும். குரானின் வசனங்கள் தெரியாமல் ஜெபிக்க முடியாதே! வசனங்களை ஒப்பிக்க வேண்டுமே! 15 வயதாவதற்குள் நபீல் குரானின் கடைசி 15 அதிகாரங்களை மனம்பாடம் செய்தான்.

இளமையில், நபீல் கொஞ்சம் சுட்டிப்பையன் என்று சொல்லலாம். அப்போது அவனுக்கு 5 வயது இருக்கும். ஒருநாள் அவனுடைய வீட்டில் அவனுடைய அப்பா, மாமா, இன்னும் பல உறவினர்கள் சேர்ந்து ஜெபித்துக்கொண்டிருந்தார்கள். நபீலும் அங்கு உட்கார்ந்திருந்தான். ஜெபம் அலுப்பாக இருந்தது. எனவே, எல்லாரும் ஜெபித்துக்கொண்டிருந்தபோதே, அவன் எழுந்து அவர்கள் ஜெபித்துக்கொண்டிருந்த இடத்தைச் சுற்றி ஓட ஆரம்பித்தான். திடீரென்று அவனை யாரோவொருவர் பின்னாலிருந்து அடித்தார்கள். நபீல் திரும்பிப்பார்த்தான். அவனுடைய மாமா அங்கு நின்று கொண்டிருந்தார். ஆனால், அவர் அவனை அடித்ததுபோல் தோன்றவில்லை. ஏனென்றால் அவர் ஜெபித்துக்கொண்டிருந்தார். ஜெபம் முடிந்தபிறகு, நபீல், அவரிடம், “நீங்களா என்னை அடித்தீர்கள்? நீங்கள்தான் அங்கு நின்றுகொண்டிருந்தீர்கள்,” என்று கேட்டான். அதற்கு அவர் எந்தச் சலனமும் இல்லாமல், “நான் இல்லை. அல்லாதான் உன்னை அடித்திருப்பார்,” என்றார். “அப்படியானால், அல்லாதான் பரலோகத்திலிருந்து தன் கையை நீட்டி என்னை அடித்திருப்பாராக்கும்,” என்று நபீல் நினைத்தான். இந்த நிகழ்ச்சிக்குப்பின் அவன் ஜெப வேளைகளில் மிகவும் பக்தியோடும், பயத்தோடும் இருந்தான்.

இஸ்லாம்

இஸ்லாமியர்களின் ஜெபம் மிகவும் வித்தியாசமானது. அவர்கள் ஜெபத்தில் தேவனைத் தேடுவதோ, தொடர்புகொள்வதோ, தொடுவதோ இல்லை. அவர்களைப் பொறுத்தவரை ஜெபம் அவர்களுடைய ஒரு மதச் சடங்கு. அவ்வளவுதான். எனவேதான் அவர்கள் குர்ரானின் வசனங்களை மனப்பாடம் செய்து ஒப்பித்தார்கள். அவர்களுடைய ஜெபத்தின் தரம் இவ்வளவே.
ஒரு நாளில் அவர்கள் ஐந்துமுறை குறிப்பிட்ட இடைவெளிவிட்டு அல்லாவைத் தொழுகிறார்கள். ஏனென்றால், கழுவப்படுதலே முஸ்லிம்களுடைய ஜெபத்தின் நோக்கம். ஆவிக்குரிய கழுவுதல் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதே அவர்களுடைய நோக்கம். “ஒரு நாளில் ஐந்து முறை ஜெபிப்பதற்குப்பதிலாக, மூன்றுவேளை தொடர்ந்து ஜெபிக்கவில்லையென்றால், அது இருதயத்தில் ஒருபோதும் அழிக்கமுடியாத ஒரு கரும்புள்ளியாகிவிடும்,” என்று அவனுடைய அம்மா அவனுக்குச் சொன்னார்.

உயர்நிலைப்பள்ளியில் கிறிஸ்தவர்களின் அறிமுகம்

அவனுடைய அப்பாவுக்குக் கடற்படையில் Lieutenant Commander என்ற பதவி உயர்வு கிடைத்தது; அவர்களுடைய குடும்பம் மீண்டும் அமெரிக்காவிலுள்ள விர்ஜினியா மாநிலத்துக்குக் குடிபெயர்ந்தது. வாழ்க்கை, உலகம், மதம் போன்ற பல்வேறு காரியங்களை இப்போதுதான் நபீல் புரிந்துகொள்ளத் தொடங்கினான். அமெரிக்காவில் முதன்முதலாக அவன் தன் இஸ்லாமிய விசுவாசத்துக்கும் மேற்கத்திய முறைக்கும் இடையேயுள்ள முரண்பாட்டைப் பார்க்க ஆரம்பித்தான்.

நபீல் அங்கு உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்தான். அந்தப் பள்ளியில்தான் அவன் முதன்முதலாக கிறிஸ்தவர்களைச் சந்தித்தான். தான் அந்தப் பள்ளியில் இஸ்லாத்தின் மிகச் சிறந்த ஒரு தூதுவனாக இருக்க வேண்டும் என்று அவன் தீர்மானித்தான். ஏனென்றால், அந்த நேரத்தில் அந்தப் பள்ளியில் முஸ்லிம் மாணவர்கள் அதிகம் இருக்கவில்லை. இஸ்லாம்தான் மிகச் சிறந்த மாணவர்களை, அசாத்திய திறமையுள்ள மாணவர்களை, மிக உயர்ந்த குணமுள்ள மாணவர்களை உருவாக்க முடியும் என்றும், எனவே முஸ்லிம் உலகமே வியந்து பாராட்டும் வகையில் தான் அந்தப் பள்ளியில் இஸ்லாத்தின் தலைசிறந்த சாட்சியாக வாழ வேண்டும் என்றும் நபீல் தீர்மானித்தான். உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்து கிறிஸ்தவ மாணவர்களோடு சேர்ந்து படித்தபோது இதுதான் நபீலின் மனநிலை.

அவன் அந்தப் பள்ளியில் படிக்கையில், அவனுடைய கிறிஸ்தவ நண்பர்களின் தாக்கம் அவன்மேல் அதிகமாக இருந்ததை அவன் உணர ஆரம்பித்தான். பாகிஸ்தானியக் கலாச்சாரத்தையும், இஸ்லாமிய விசுவாசத்தையும் கடைப்பிடிப்பதும், கைக்கொள்வதும் அவனுக்குக் கடினமாக இருந்தது. அந்தக் கூட்டத்திலிருந்து தான் வேறுபட்டவன் என்று அவனுக்குத் தெரிந்தது. நண்பர்களோடு ஒட்டவும் முடியவில்லை, அவர்களை வெட்டவும் முடியவில்லை. நெருங்கிப் பழகவும் முடியவில்லை, ஒதுங்கி விலகவும் முடியவில்லை. தான் மட்டும் ஒரு பக்கம் தனியாகவும், தன் சக மாணவர்களெல்லாம் இன்னொரு பக்கம் நிற்பதாகவும் அவன் உணர்ந்தான்.

புறம்பாக அவர்கள் அமெரிக்காவில் வாழ்ந்தபோதும், அமெரிக்கர்களாக இருந்தபோதும் உள்ளார்ந்தவிதத்தில் அவர்கள் பாகிஸ்தானிகளாகவும், இஸ்லாமியர்களாகவுமே வாழ்ந்தார்கள். அதில் எந்த மாற்றமும் இல்லை. அவனுடைய பெற்றோர் கிறிஸ்தவர்களையோ, கிறிஸ்தவத்தையோ, உயர்வாகக் கருதவில்லை. வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் அவர்கள் கிறிஸ்தவர்களையும், கிறிஸ்தவத்தையும் மட்டம்தட்டிப் பேசினார்கள். அவர்களைப் பொறுத்தவரை மேற்கத்திய நாட்டினர் அனைவரும் கிறிஸ்தவர்கள். அவர்கள் கிறிஸ்துவை விசுவாசிக்கிறார்களா இல்லையா என்பதைப்பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. எனவே, அமெரிக்கர்கள் உடை அணியும் விதத்தைச் சுட்டிக்காட்டி, “பார், எவ்வளவு மோசமாக உடுத்துகிறார்கள். இதுதான் கிறிஸ்தவர்களுடைய ஒழுக்கத்தின் தரம். அந்தத் திரைப்படத்தில் பார். அவர்களெல்லாரும் கிறிஸ்தவர்கள்தான். எப்படி நடிக்கிறார்கள். இதுதான் கிறிஸ்தவம். இந்த விளம்பரத்தைப் பார். இதுதான் கிறிஸ்தவம். குடிக்கிறார்கள், சண்டைபோடுகிறார்கள், போதைப்பொருட்கள் பயன்படுகிறார்கள். இதுதான் கிறிஸ்தவத்தின் தராதரம்,” என்று வாய்ப்பு கிடைத்ததெல்லாம் கிறிஸ்தவர்களையும், கிறிஸ்தவத்தையும் தரக்குறைவாக விமரிசித்தார்கள். கிறிஸ்தவர்கள் பக்தியற்றவர்கள், தேவ பயமற்றவர்கள், சீர்கெட்டவர்கள் என்ற எண்ணத்தை அவருடைய பெற்றோர் நபீலின் இருதயத்துக்குள் விதைத்தார்கள்.

ஆயினும், தன் பெற்றோர் சொல்வதெல்லாம் உண்மையில்லை என்று நபீல் அந்த வயதிலேயே புரிந்துகொள்ள ஆரம்பித்தான். உண்மையான கிறிஸ்தவர்களையும், பெயர்க் கிறிஸ்தவர்களையும் நபீல் இனங்கண்டுகொண்டான். தன் பள்ளியில் படித்த எல்லாரும் கிறிஸ்தவர்கள் இல்லை என்று நபீல் புரிந்துகொண்டான். இன்னும் சொல்லப்போனால் அவனோடு படித்த பலர் தாங்கள் கிறிஸ்தவர்கள் என்று ஒருபோதும் சொல்லவில்லை. தன் பெற்றோர் கலாச்சாரத்தையும் மதத்தையும் ஒன்றாகப் பார்க்கிறார்கள் என்று நபீல் தெளிவாகப் புரிந்துகொண்டான். அவர்களைப்பொறுத்தவரை மேற்கத்திய நாட்டினர் அனைவரும் கிறிஸ்தவர்கள். ஆகையால், கிறிஸ்தவர்கள் சீர்கெட்டவர்கள்.

“இஸ்லாத்துக்கு ஆதரவாகப் பேச வேண்டும்; அதன் விசுவாசத்துக்காக உறுதியாக நிற்க வேண்டும்” என்று மாத்திரம் அல்ல. “பிற மதங்களையும், அவர்களுடைய விசுவாசத்தையும் எப்படித் தாக்க வேண்டும், தகர்க்க வேண்டும்,” என்றும் அவனுடைய பெற்றோர் அவனுக்குக் கற்பித்தார்கள். எனவே, இயேசுவை ஏற்றுக்கொள்ளுமாறு, நற்செய்தியைக் கேட்குமாறு யாராவது சொன்னபோது அவர்களுக்குத் தக்க பதில் கொடுக்க நபீல் எப்போதும் ஆயத்தமாக இருந்தான்.

அனுபவம்

நபீல் அப்போது 11ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். அவனுடைய வகுப்பில் மிகவும் வெளிப்டையாகப் பேசக்கூடிய பெற்சி என்ற ஒரு மாணவி இருந்தாள். அவள் மென்மையானவள், ஆனால் உறுதியானவள். பிடிவாதக்காரி என்றுகூடச் சொல்லலாம். அந்தப் பெண் தன் விசுவாசத்தைப்பற்றி வெளிப்படையாகப் பேசினாள். யாரும் அவளை ஒன்றும் சொல்லவில்லை. எல்லாரும் அவளை அவள் போக்கில் விட்டுவிட்டார்கள். எனவே, அவளோடு பழகுவதற்குப் பலர் சங்கடப்பட்டார்கள்.

அது இலத்தீன் வகுப்பு. ஆசிரியர் வெளியே போய்விட்டார். முன்னிருக்கையில் உட்கார்ந்திருந்தவள் அவன் பக்கமாகத் திரும்பி, “நபீல், நான் ஒரு கேள்வி கேட்கட்டுமா?” என்று கேட்டாள். அதற்கு நபீல், “நிச்சயமாக. உன் கேள்வி என்ன?” என்று சொன்னான். “உனக்கு இயேசுவைத் தெரியுமா?” என்று கேட்டாள்.

இதுதான் ஒருவர் நபீலிடம் கிறிஸ்தவத்தைப்பற்றி பேசிய முதல் தருணம். அவளுடைய கேள்வியை நபீல் நூதனமாகப் பார்க்கவில்லை. அந்தக் கேள்வியினால் அவன் அதிர்ச்சியடையவுமில்லை. உண்மையில், இதுவரை இந்தக் கேள்வியைத் தன்னிடம் யாரும் கேட்கவில்லையே என்றுதான் அவன் ஆச்சரியப்பட்டான். உண்மையான கிறிஸ்தவன் தன் விசுவாசத்தை அறிக்கைசெய்யாமல் இருக்க முடியாது என்று நபீல் உறுதியாக நம்பினான். “ஏன் இதுவரை என்னிடம் யாரும் இந்தக் கேள்வியைக் கேட்கவில்லை? அவர்கள் தாங்கள் விசுவாசிப்பவரைப்பற்றி ஏன் பேசுவதில்லை?” என்று நபீல் சிந்தித்ததுண்டு. எனவே, பெற்சியின் கேள்வியை அவன் வரவேற்றான். பெற்சியின் கேள்வியின்மூலம் இயேசுவைத் தெரிந்துகொள்ளலாம் என்பதைவிட அவளுக்கு இஸ்லாத்தைப்பற்றிச் சொல்லலாம் என்று நபீல் நினைத்தான். இரண்டாவது, தன் பெற்றோர் ஏற்கனவே சொன்னபடி கிறிஸ்தவத்தின் வெறுமையைத் தோலுரித்திக் காட்டுவதற்கும் இது ஒரு நல்ல வாய்ப்பு என்று அவன் கருதினான். எனவே, “ஆம், எனக்கு இயேசுவைத் தெரியும். அவர் கன்னியிடம் பிறந்தார், அற்புதங்கள் செய்தார், பார்வையற்றவர்களுக்குப் பார்வையளித்தார், தொழுநோயாளிகளைக் குணப்படுத்தினார், மரித்தோரை உயிரோடெழுப்பினார், அவர் பாவமற்ற மேசியா, இந்த உலகத்தின் முடிவில் அவர் மீண்டும் வருவார்,” என்று சொன்னான். முஸ்லிம்கள் ஆண்டவராகிய இயேசுவைப்பற்றி இத்தனை காரியங்களை விசுவாசிக்கிறார்கள் என்று பெற்சிக்குத் தெரியாது. அவள் கொஞ்சம் ஆடிப்போனாள். “ஆனால், இயேசு தேவன் இல்லை. அவர் ஒரு மனிதர். பல தீர்க்கதரிசிகள் இருக்கிறார்கள். அவரும் ஒரு தீர்க்கதரிசி. அவ்வளவுதான். அவர் தேவன் என்று சொல்வது தேவதூஷணம்,” என்று நபீல் தொடர்ந்து சொன்னான். அதற்கு அவள், “இல்லை, இல்லை. அவர் தேவன், அவர் நம் பாவங்களுக்காகச் சிலுவையில் மரித்தார்,” என்று கூறி அவனுடைய கூற்றை மறுத்தாள். கிறிஸ்தவர்கள் இப்படிச் சொல்வார்கள் என்று நபீலுக்குத் தெரியும். “சரி, உங்கள் வேதாகமம் நம்பத்தக்கது என்றே வைத்துக்கொள்வோம். இயேசு எங்கேயாவது தாம் தேவன் என்று சொன்னதாக உங்கள் நெற்செய்தியில் இருந்தால் எனக்குக் காட்டு,” என்று கேட்டான். “பிதாவும் நானும் ஒன்றாயிருக்கிறோம் என்று இயேசு சொன்னதாக யோவான் நற்செய்தியில் வாசிக்கிறோம்,” என்றாள். “ஓ, எனக்குத் தெரியும். ஆனால், அந்த இடத்தில் இயேசு தான் தேவன் என்றோ, தானும் தேவனும் ஒன்று என்றோ சொல்லவில்லை. மாறாக, தான் தேவனுடைய சித்தத்தோடு ஒன்றாக இருப்பதாக மட்டுமே சொல்லுகிறார். தான் தேவனோடு ஒன்றாக இருப்பதுபோல் தம் சீடர்களும் தேவனோடு ஒன்றாக இருக்குமாறு அவர் ஜெபிக்கிறார். பிதாவும் தானும் ஒன்று என்று சொல்வதால் அவர் தேவன் என்றால், பிற சீடர்கள் பிதாவோடு ஒன்றாக இருந்தால், அவர்களும் தேவனா? கலிலேயாவில் இருந்தபோது ஒருமுறை தன்னால் அற்புதங்கள் செய்ய முடியவில்லை என்று இயேசு சொன்னதாக மாற்கு நற்செய்தி கூறுகிறது. தேவன் ஒருவரைத்தவிர நல்லவர் ஒருவர் இல்லை என்றும், தன்னை நல்லவர் என்று அழைக்கக்கூடாது என்றும் இயேசு சொன்னதாக வேதாகமம் சொல்லியவில்லையா? பிதா ஒருவரைத்தவிர குமாரனோ, தூதர்களோ வேறு ஒருவருக்கும் கடைசி நேரம் எதுவென்று தெரியாது என்று இயேசு சொன்னாரே. அவர் தேவனானால் அவருக்குக் கடைசிக் காலம் தெரிந்திருக்க வேண்டும்,” என்று நபீல் மேற்கோள்களை அடுக்கிக்கொண்டே போகையில் தான் தோற்றுப்போனதை அவள் உணர்ந்தாள். “பெற்சி, பிதா என்னிலும் பெரியவர் என்று இயேசு சொன்னதாக யோவான் நற்செய்தியில் நீ வாசித்ததில்லையா? நான் இயேசுவை விசுவாசிக்கிறேன். ஆனால், தேவன் இயேசுவைவிடப் பெரியவர். இயேசு யார் என்று நீ தெரிந்துகொள்ள விரும்பினால், என்னைக் கேள். நான் உனக்கு இஸ்லாத்தைப்பற்றிச் சொல்கிறேன்,” என்று சொன்னேன்.

நபீலிடம் கிறிஸ்துவின் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ள விரும்பிய ஒரேவொரு நபரின் கதி இதுவாயிற்று.

ஆனால், அவள் இந்தக் கேள்வியைக் கேட்டபிறகு நபீல் அவள்மேல் வைத்திருந்த மதிப்பு இன்னும் அதிகமாயிற்று. ஏனென்றால், “நான் இயேசுவைப்பற்றி என்ன நினைக்கிறேன் என்று பிற கிறிஸ்தவர்கள் ஏன் என்னிடம் இதுவரை கேட்கவில்லை? நான் பரலோகத்துக்குப் போக வேண்டும் என்று இவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், அவர்கள் என்னிடம் இயேசுவைபற்றிச் சொல்லவில்லையென்றால் ஒன்று, நான் பரலோகத்துக்குப் போகாமல் நரகத்துக்குப் போவதைப்பற்றி அவர்களுக்குக் கவலையில்லை, தாங்கள் மட்டும் பரலோகத்துக்குப் போனால் போதும் என்று நினைக்கிறார்கள் அல்லது பரலோகத்திற்குப் போவதற்கு இயேசுதான் ஒரே வழி என்று அவர்கள் விசுவாசிக்கவில்லை என்று பொருள், அதாவது இந்தக் கிறிஸ்தவர்கள் தங்கள் விசுவாசத்தை நம்பவில்லை என்று பொருள். அவள் தன் விசுவாசத்தை நம்பினாள். நானும் விசுவாசிக்க வேண்டும் என்று அவள் விரும்பினாள்,” என்று பின்னாட்களில் இந்த உரையாடலைப்பற்றி நபீல் கூறினான்.

ஒவ்வோர் உரையாடலும் ஓர் அற்புதம்.

“வேதாகமத்தில் இந்த ஒரு வசனத்தைத்தவிர இன்னும் அநேக வசனங்கள் இருக்கின்றன என்று தெரியும். ஆனால், எனக்கு இப்போது உடனடியாகத் தெரியவில்லை. கொஞ்சம் நேரம் கொடு. நான் உனக்கு ஆதாரம் தருகிறேன்,” என்றாள். அதற்கு நபீல், “இருந்தால்தானே தருவதற்கு. ஏனென்றால், தான் தேவன் என்று இயேசு சொல்லவுமில்லை; அவர் சொன்னதாக உங்கள் வேதாகமமும் சொல்லவில்லை. அவர் தன்னை மனித குமாரன் என்றுதான் சொன்னார்,” என்று நபீல் பதில் சொன்னான். பெற்சிக்கு வருத்தம், ஏமாற்றம்.

அந்த வாரம் சபையில் ஒரு நாடக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனவே, “நீ இந்த வாரம் எங்கள் சபைக்கு வருவாயா? play school இருக்கிறது. அங்கு நாம் பேசலாம்,” என்றாள். நபீல் இதுபோன்ற உரையாடலை விரும்பினான். எனவே, தான் வருவதாகச் சொன்னான்.

தன் அப்பாவையும் அந்த நாடக நிகழ்ச்சிக்குக் கூட்டிக்கொண்டு வரலாமா என்று நபீல் பெற்சியிடம் கேட்டான். அவள் சம்மதித்தாள்.

நபீல் இதற்குமுன் கிறிஸ்தவக் கூடுகைக்குச் சென்றதில்லை, கிறிஸ்தவ ஆலயத்துக்குள் நுழைந்ததில்லை. இதுவே முதல் முறை. கிறிஸ்தவ ஆலயங்கள் ஒருவிதமான புதிரான இடங்களாக இருக்கும் என்று நபீல் நினைத்தான். நபீல் சென்றான். அது ஓர் அரங்கம்போல் இருந்தது.

கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிப்பதைப்பற்றிய ஒரு நாடக நிகழ்ச்சி நடைபெற்றது. கிறிஸ்துவின் நற்செய்தியைக் கேட்கும்போது பல்வேறு மக்கள் எப்படி பல்வேறு விதங்களில் மாறுத்தரம் அளிக்கிறார்கள் என்று அந்த நாடகத்தில் விளக்கினார்கள். அந்த நாடகத்தின் ஒரு கதாபாத்திரம் ஒரு மோசமான பாடகர். அவருக்கு நற்செய்தி அறிவிக்கும்போது, அவர் அதை ஏற்றுக்கொண்டு, இயேசுவை இரட்சகராக விசுவாசிக்கிறார். அடுத்த காட்சியில் அவர் ஒரு பயங்கரமான விபத்தில் இறந்துவிடுகிறார். நாடகத்தின் கடைசிக் காட்சியில் இரண்டு தேவ தூதர்கள் அவரைத் தூக்கிக்கொண்டு பரலோகத்துக்குச் செல்கிறார்கள். அத்துடன் நாடகம் நிறைவடைந்தது. நாடகம் முடிந்தபிறகு, “இது அபத்தம்,” என்ற எண்ணம்தான் அவனுக்குள் எழுந்தது.

அவனுடைய அப்பா அவனைக்குறித்து மிகப் பெருமைப்பட்டார். தன் மகன் தன் இஸ்லாமிய விசுவாசத்தைக்குறித்து ஒரு கிறிஸ்தவப் பெண்ணிடம் பேசினான் என்பதற்காகவும், கிறிஸ்தவத்தின் பொய்மையைத் தோலுரித்துக் காட்டினான் என்பதற்காகவும் அவர் மிகவும் பெருமைப்பட்டார்.

நாடகம் முடிந்தபிறகு இருவரும் அந்த நாடகத்தைக்குறித்துப் பேசிக்கொண்டுபோனார்கள். “மதத்தின் நோக்கம் நல்ல மனிதர்களை உருவாக்க வேண்டும். நல்ல மனிதர்களை உருவாக்கினால் நல்ல சமுதாயத்தை உருவாக்கலாம். இந்த நாடகத்தில் சொல்லப்படுவதுபோல் சிந்திப்பது தவறு. ஒருவன் தன் வாழ்நாள் முழுவதும் தான்தோன்றித்தனமாக வாழ்வானாம். திடீரென்று ஒருநாள் அவன் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வானாம். அதன்பின் அவன் மரித்தால் பரலோகத்துக்குப் போவானாம். இதனால்தான் அமெரிக்கா இப்படி இருக்கிறது. கிறிஸ்தவப் போதனை தவறு. இப்படி வாழும்போது யாரும் யாருக்கும் கணக்கு ஒப்புவிக்க வேண்டியதில்லை, பாவத்துக்குத் தண்டனையும் இல்லாமல் போய்விடும். இது பொறுப்பற்ற தன்மை,” என்று விவாதித்தார்கள், விமரிசித்தார்கள்.

கல்லூரிப் பருவம்

நபீல் 2001இல் விர்ஜினியாவில் இருந்த Old Dominion பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தான். போதைப்பொருட்களுக்கு அடிமைப்பட்டவர்கள், ஓரினச்சேர்க்கையாளர்கள் எனப் பலதரப்பட்ட மாணவ மாணவிகள் அங்கு படித்தார்கள். இவையெல்லாம் நபீலுக்கு அதிர்ச்சியாக இருந்தன. உலகத்தைப் புரிந்துகொள்ள ஆரம்பித்தான்.

அவனுடைய பெற்றோர் நபீலைப் பொத்திப்பொத்தி வளர்த்ததால், தொலைவில் இருந்த கல்லூரியில் சேர்க்க விரும்பவில்லை. மேலும், அவனுடைய அக்காவும் இந்தக் கல்லூரியில்தான் படித்தார்.

2001 செப்டம்பர் மாதம் ஒன்பதாம் தேதி செய்வாய்க்கிழமை. உடற்கூறு வகுப்பு நடந்துகொண்டிருந்தபோது அவனுடைய அப்பா அவனைக் கைபேசியில் அழைத்தார். இது ஓர் அசாதாரணமான செயல். ஏனென்றால், இதற்குமுன் அவனுடைய அப்பா இப்படி வகுப்பு நேரத்தில் அவனை அழைத்ததேயில்லை. நபீல் பேசத் தொடங்குமுன், மறுமுனையில் அவனுடைய அப்பா, “உடனடியாக வீட்டிற்கு வா,” என்று கத்தினார் என்று சொல்லலாம். நபீல், “நான் வகுப்பில் இருக்கிறேன், வகுப்பு முடிந்தபிறகு வருகிறேன்,” என்று பதில் சொன்னான். அதற்கு அவனுடைய அப்பா, “உடனடியாகக் கிளம்பி உன் அக்காவையும் கூட்டிக்கொண்டு வீட்டுக்கு வா. அமெரிக்காவில் பயங்கவாதிகளின் தாக்குதல் என்று நீ கேள்விப்படவில்லையா? இரட்டைக் கோபுரத்தைத் தகர்த்துவிட்டார்கள். தீவிரவாதிகள் அமெரிக்காவைத் தாக்கிவிட்டார்கள்,” என்று எடுத்துரைத்தார். அப்போது எல்லாமே வித்தியாசமாக இருப்பதுபோல் நபீல் உணர்ந்தான். வகுப்பை விட்டு வெளியே வந்த நபீல், ஆங்காங்கே மாணவர்கள் தொலைக்காட்சிப்பெட்டிகளைச் சுற்றி உட்கார்ந்திருப்பதையும், நிறைய விமானங்கள் பறந்து போவதையும் கண்டான்.

தீவிரவாதிகளின் தாக்குதலுக்குப்பின் குடும்பத்தார் அனைவரும் ஒரு வாரம் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடந்தார்கள். அமெரிக்கா முழுவதும் பல்வேறு இடங்களில் வாழ்ந்த முஸ்லிம்கள்மேல் சின்னத் தாக்குதல்களும், விரும்பத்தகாத சில அசம்பாவிதங்களும் நடந்தன. நபீல் குடும்பத்தார் வெளியே சென்று அமெரிக்க நாட்டுக் கொடிகளை வாங்கிவந்து வீட்டின் பல்வேறு இடங்களில் தொங்கவிட்டார்கள். வெளியே போகும்போது காரில் அமெரிக்கக் கொடியைக் கட்டிக்கொண்டுபோனார்கள்.

இஸ்லாத்தைக்குறித்த கேள்வி

இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் முஸ்லிம்கள் என்பதாலும், தானும் ஒரு முஸ்லீம் என்பதாலும் தான் ஒருவேளை துன்புறுத்தப்படலாம் என்ற உண்மையான பயம் ஒரு புறம். ஆனால், இந்தத் தீவிரவாதச் செயலைச் செய்தவர்கள் இஸ்லாத்தின் பெயரால் செய்ததால் நபீல் நிலைகுலைந்துபோனான். எது இஸ்லாம், எது இஸ்லாம் இல்லை என்று தன் பெற்றோர் இதுவரைத் தனக்குப் போதித்த, கற்பித்த எல்லாக் கோட்பாடுகளையும், கொள்கைகளையும் அந்தத் தீவிரவாதத் தாக்குதல் தவிடுபொடியாக்கிற்று. பூர்வீகம் பாகிஸ்தானாக இருந்தபோதும், தன் தாய் நாடான அமெரிக்காவின்மேல் இஸ்லாத்தின் பெயரால் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் நபீலுக்குள் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தான் இஸ்லாத்தைப்பற்றிக் கற்றதையும், இஸ்லாத்தின் பெயரால் நடப்பதையும் நபீலால் சமரசம்செய்யமுடியவில்லை. தன் இஸ்லாமிய விசுவாசத்தைத் தான் இன்னும் தெளிவாகவும், ஆழமாகவும் புரிந்துகொள்ள வேண்டும் என்று நபீல் உணர்ந்தான்.

தீவிரவாதிகளின் தாக்குதலுக்குப்பின் விர்ஜினியாவில் நிலைமை கொஞ்சம் சீரடைந்தபின், நபீல் வழக்கம்போல் மீண்டும் கல்லூரிக்குச் செல்ல ஆரம்பித்தான். நபீல் வகுப்பறைப் பாடங்களை மட்டும் படிப்பதோடு நிறுத்தவில்லை. பாடத்திட்டம் சாராத பல செயல்களிலும் அவன் ஈடுபாடுகொண்டிருந்தான். அதில் ஒன்று அறிவியல் போட்டி. ஆம், அவன் மருத்துவத் தடயவியல் சார்ந்த அறிவியல் போட்டிகளில் கலந்துகொண்டான். இந்தப் போட்டியில் பல கல்லூரிகள் பங்கேற்றன. இந்தப் போட்டியில் பங்குபெறுவதற்கு நபீல் விர்ஜினியா மாநிலத்திலிருந்து பென்சில்வானியா மாநிலத்துக்குப் போக வேண்டியிருந்தது. இந்தப் பயணம், இந்தப் போட்டி, அவனுடைய வாழ்க்கையில் ஒரு மாபெரும் திருப்பமாக அமைந்தது.

நபீலும் டேவிட்டும் சந்திப்பு

அப்போது நபீலுக்கு 19-20 வயது இருக்கலாம். அவன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தான். வாலிபன். ஆனால், அவன் இதுவரை வீட்டைவிட்டுத் தனியாக வெளியூருக்குப் போனதில்லை. வெளியே எங்கும் தனியாகத் தங்கியதில்லை. எனவே, இது அவனுடைய வாழ்வில் ஒரு பெரிய படி. அவனுடைய அம்மா விமான நிலையத்திற்குச் சென்று அவனை வழியனுப்பினார்.

நபீல் இந்தப் பயணத்தின்போது சந்தித்த முதல் நபர் டேவிட் வுட் என்ற ஓர் அமெரிக்க மாணவன். டேவிட் உருவத்தில் நபீலுக்கு முற்றிலும் எதிர்ப்பதம். நபீல் உயரமானவன், ஒல்லியானவன், சுத்தமான ஆடைகளை எப்போதும் நேர்த்தியாக உடுத்துபவன், தன் தோற்றத்தில் மிகக் கவனம் செலுத்துபவன், பெற்றோர்களால் பொத்திப்பொத்தி வளர்க்கப்பட்டவன், பெற்றோர்களின் அன்பிலும், பாதுகாப்பிலும், பராமரிப்பிலும், போதிப்பிலும், போஷிப்பிலும் வளர்ந்தவன். டேவிட் வாட்டசாட்டமான ஆள், ஜீன்ஸ் காற்சட்டையும் கசங்கிய டி சட்டையும் அணிந்திருந்தான், கடந்த காலத்தில் அவன் சிறைக்குச் சென்றவன். அவனுக்குச் சொந்த வீடு கிடையாது. அவன் trailer park என்ற நடமாடும் வீட்டில் வாழ்ந்தான். ஆம், அவனுடைய வீட்டை எங்கு வேண்டுமானாலும் ஒட்டிக்கொண்டுபோகலாம். மிக முக்கியமான வேறுபாடு என்னவென்றால் நபீல் ஒரு முஸ்லீம். டேவிட் ஐந்து ஆண்டுகளுக்குமுன் கிறிஸ்தவனாக மாறியிருந்தான்.

பென்சில்வானியா மாநிலத்தில் அறிவியல் போட்டியில் கலந்துகொள்ளப் போயிருந்தபோது அவர்கள் இருவரும் ஒரே அறையில் தங்க நேர்ந்தது. இது தேவனுடைய இறையாண்மை. வீட்டை விட்டு வெளியேபோய் தனியாகத் தங்கியிருக்கும் கல்லூரி மாணவர்கள் பொதுவாக வழக்கமாகச் செய்வதுபோல போட்டியாளர்கள் மது அருந்தினார்கள், கேளிக்கைகளுக்கும், உணவு விடுதிகளுக்கும் சென்றார்கள். நபீல் எதிலும் கலந்துகொள்ளவில்லை. ஆனால், நபீலுக்கு ஆச்சரியம் என்னவென்றால் டேவிட்டும் எதிலும் கலந்துகொள்ளவில்லை. மாறாக, நேரம் கிடைத்தபோதெல்லாம் டேவிட் தன் படுக்கையில் அமர்ந்து பரிசுத்த வேதாகமத்தை வாசித்துக்கொண்டிருந்தான். கிறிஸ்தவர்கள் வேதாகமத்தை இவ்வளவு சிரத்தையுடன் வாசிப்பார்கள் என்று நபீல் நினைக்கவில்லை; மேலோட்டமாகப் புரட்டுவார்கள் என்றுதான் நபீல் நினைத்தான். கிறிஸ்தவர்கள் வேதாகமத்தை ஆலயத்துக்குள் மட்டுமே வாசிப்பார்கள் என்றும் அவன் நினைத்தான். மேலும், வேதாகமம் நம்பத்தக்கதல்ல, அப்படியிருக்கையில் அதை யார் படிப்பார் என்றும் அவன் நினைத்தான். ஆனால், அவனுடைய கண்களுக்குமுன்பாக இதோ ஒரு கிறிஸ்தவன் தேர்வுக்குப் படிப்பதுபோல் வேதாகமத்தை உன்னிப்பாகப் படித்துக்கொண்டிருக்கிறான். இது நபீலுக்கு விசித்திரமாகத் தோன்றியது.

1. முதல் கேள்வி. வேதாகமம் நம்பத்தக்கதா

“இவன் வஞ்சிக்கப்பட்டிருக்கிறான். சரி, இவனைக் கொஞ்சம் சீண்டிப்பார்க்கலாம்,” என்று முடிவுசெய்தான். இருவரும் ஒருவரையொருவர் சந்தித்து ஒருநாள்தான் ஆயிற்று. ஒருநாள் பழக்கம். ஆயினும் நபீல் தயங்காமல் டேவிட்டிடம், “டேவிட், நீ தீவிரமான ஒரு கிறிஸ்தவன் என்று நான் நினைக்கிறன். ஆனால், உன் வேதாகமம் உண்மையல்ல, அது நம்பத்தக்கதல்ல, அதில் பல திரிபுகள் உள்ளன. சரிதானே! உன் வேதாகமத்தில் பல பிழைகள் உள்ளன. காலத்துக்குத்தக்க உன் வேதாகமத்தை மாற்றியிருக்கிறார்கள். இயேசு ஆங்கிலம் பேசவில்லை. அவர் அரமைக் பேசினார். ஆதிச் சபை எபிரேயச் சபை. அவர்கள் எபிரேயம் பேசினார்கள். பழைய ஏற்பாடு எபிரேய மொழியில் எழுதப்பட்டது. புதிய ஏற்பாடு கிரேக்க மொழியில் எழுதப்பட்டது. அதன்பின் இலத்தீன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட வேதாகமம் 1000 ஆண்டுகளுக்கும் அதிகமாக பயன்படுத்தப்பட்டது. அதிலிருந்து ஜெர்மன் மொழிக்கு, அதன்பின் ஆங்கிலம் என உன் கையிலிருப்பது ஒரு மொழிபெயர்ப்பு. KJV, NKJV, RSV, NIV எனப் பல பதிப்புக்கள் உள்ளன. எது உண்மையாகவே தேவனுடைய வார்த்தை என்று எப்படிப் புரிந்துகொள்ள முடியும்? தேவனுடைய வார்த்தை மாறாது. சரிதானே! ஆனால், மொழிபெயர்ப்பில் எத்தனை தவறுகள் நிகழ்ந்திருக்கும்!” என்று சவாலாகச் சொன்னான். நபீலின் இந்த வாதத்துக்குப் பதில் சொல்ல முடியாமல் கடந்த காலத்தில் அவனுடைய பல கிறிஸ்தவ நண்பர்கள் நழுவினார்கள். டேவிட்டும் அதுபோல் பின்வாங்கிவிடுவான் என்று நபீல் நினைத்தான். டேவிட் நபீலைப் பார்த்தான். “நபீல், நான் ஒன்று கேட்கட்டுமா? சில நிமிடங்களுக்குமுன் நீ உன் அம்மாவுடன் கைபேசியில் பேசினாய். நீ உன் அம்மாவுடன் ஆங்கிலத்தில் பேசவில்லை. ஆனால் என்ன பேசினீர்கள் என்று நீ எனக்கு ஆங்கிலத்தில் விவரமாகச் சொன்னாய். மோசமாக மொழிபெயர்த்துச் சொன்னாயா அல்லது சரியாகச் சொன்னாயா?” “சரியாகச் சொன்னேன்.” “உனக்கு இரண்டு மொழிகளும் தெரியும். ஒரு மொழியில் கேட்பதை இன்னொரு மொழியில் எந்தப் பிழையுமின்றிப் பகிர்ந்துகொள்ள முடிகிறது. இதைத்தான் இயேசுவின் சீடர்களும் செய்தார்கள். இயேசு என்ன மொழி பேசினார் என்பது ஒரு பொருட்டல்ல. அவர் பேசியதை கிரேக்க மொழியிலோ, இலத்தீன் மொழியிலோ, ஏதோவொரு மொழியில் எழுதினார்கள். புதிய ஏற்பாடு நீ சொன்னதுபோல் கிரேக்க மொழியில் எழுதப்பட்டது. கிரேக்க மொழியில் எழுதப்பட்ட புதிய ஏற்பாட்டின் 5500 கைப்பிரதிகள் இருக்கின்றன. இந்தக் கிரேக்க புதிய ஏற்பாட்டுக் கைப்பிரதிகளெல்லாம் ஒருநாள் மாயமாக மறைந்துபோனாலும், அவைகளிலிருந்து நேரடியாக மொழிபெயர்க்கப்பட்ட இலத்தின், சிரியா, காப்டிக் மொழிபெயர்ப்புகள் பத்தாயிரக் கணக்கில் இருக்கின்றன. அவைகளிலிருந்து புதிய ஏற்பாட்டைத் திரும்பவும் எழுதிவிடலாம். இன்று இருக்கும் ஆங்கிலப் பதிப்புகள் இல்லாமல் போனாலும், இலத்தீன் சிரியா மொழிபெயர்ப்புகள் இல்லாமல் போனாலும், ஆதிச் சபைப் பிதாக்கள் தங்கள் புத்தகங்களில் எழுதியிருக்கும் 30000 புதிய ஏற்பாட்டு மேற்கோள்களை ஒன்று திரட்டினாலே போதும். முழு புதிய ஏற்பாட்டையும் எழுதிவிடலாம். புதிய ஏற்பாட்டின் செய்தியை முழு நிச்சயமாக நாம் தெரிந்துகொள்ள முடியும். சபைப் பிதாக்கள் எழுதிய நிருபங்கள், பிரசங்கங்கள், புத்தகங்கள் எல்லாவற்றிலும் அவர்கள் புதிய ஏற்பாட்டை அதிகமாக மேற்கோள்காட்டினார்கள்,” என்று சொன்னான்.

நபீல் இந்தப் பதிலை எதிர்பார்க்கவில்லை. தான் கேட்ட கேள்வியினால் டேவிட் தூள்தூளாக நொறுங்கிவிடுவான் என்று நபீல் நினைத்தான். ஆனாலும் சமாளித்துக்கொண்டு, “இது நீ தயாரித்த கதை,” என்றான். “இல்லை, இது உண்மை. நீயே இந்தக் காரியத்தைத் தொடங்கினாய். எனவே, இதன் முடிவை நாம் பார்த்துவிடுவோம்.”

இருவரும் தேவனைப்பற்றியும், மதத்தைப்பற்றியும் பேசத் தொடங்கினார்கள். யார் உண்மையான தேவன், எந்த மதம் உண்மையான மதம், யார் தங்கள் விசுவாசத்தின்படி வாழ்கிறார்கள் என்ற காரியங்களைத் தேட ஆரம்பித்தார்கள். தான் தோற்றுவிடக்கூடாது என்ற எண்ணம் நபீல் உள்ளத்தின் ஆழத்தில் இருந்தபோதும், இருவரும் சேர்ந்து சத்தியத்தைத் தேடினார்கள். இருவரும் 24 மணிநேரமும் இதுபோன்ற உரையாடல்களிலும், விவாதத்திலும் மூழ்கிவிட்டதால், கல்லூரியில் இருவரும் ஒரே பாடம் படிக்க ஆரம்பித்தார்கள். அப்போதுதானே எப்போதும் வாதம் பண்ண முடியும். இல்லையென்றால் இடைவெளி விழுந்து தொய்வு ஏற்பட்டுவிடுமே! இதற்கு வசதியாக அவர்கள் பாடங்களையும், வகுப்புகளையும் மாற்றிக்கொண்டார்கள்.

இருவரும் மிக நல்ல நண்பர்களானார்கள். டேவிட் தனக்காகத் தன் உயிரையும் கொடுப்பான் என்று சொல்லும் அளவுக்கு இருவரும் மிக நெருக்கமான நண்பர்களானார்கள்.

நம் நம்பிக்கைக்குரிய ஒருவர் நற்செய்தி அறிவிக்கும்போது அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, நற்செய்தி அறிவிப்பதற்குமுன் நற்செய்தியைக் கேட்பவரின் நம்பிக்கையைப் பெற வேண்டும். அப்போதுதான் அவர்கள் நாம் சொல்வதைக் கேட்பார்கள்.

நபீல் கிறிஸ்துவின் நற்செய்தியைக் கேட்பதற்கு டேவிட்டின் நட்பும், நம்பிக்கையும் பேருதவியாக அமைந்தன. இந்த நட்பும், நம்பிக்கையும், நெருக்கமும் ஒரே நாளில் ஏற்பட்டுவிடவில்லை. நீண்ட நாட்கள் ஆயின.

இருவரும் மிக நல்ல நண்பர்களாகத் தங்கள் கல்லூரி வாழ்க்கையைத் தொடர்ந்தார்கள். சில நேரங்களில் இருவருடைய வாதங்களும் மிகக் கூர்மையாகவும், கடுமையாகவும் இருந்தன. இருவரும் காரசாரமாக விவாதித்தார்கள். சில நேரங்களில் கோபப்பட்டார்கள். கோபத்தில் கதவை ஓங்கிச் சாத்திவிட்டு, “இனிமேல் நான் உன்னோடு பேசப்போவதில்லை,” என்று சூளுரைத்தார்கள். ஆனால், அடுத்த நாள் வழக்கம்போல் மீண்டும் தொடர்ந்தார்கள். நட்பு தொடர்ந்தது. இருவரும் சேர்ந்து கிறிஸ்தவத்தின் சாராம்சத்தை ஆராய்ந்தார்கள்.

2. இரண்டாவது கேள்வி. இயேசு தேவனா

ஒரு வருடம் வாக்குவாதத்திலும், தேடலிலும் ஓடியது. ஒரு வருடத்திற்குப்பின், “டேவிட், இப்போது நான் வேதாகமத்தை நம்புகிறேன். அது நம்பத்தத்தக்கது என்று உறுதியாக நம்புகிறேன். ஆனால், இயேசு தான் தேவன் என்று சொன்னதாக புதிய ஏற்பாட்டில் எங்கும் சொல்லப்படவில்லையே!” என்று கேட்டான்.

முஸ்லிம்களைப்பொறுத்தவரை இயேசு தேவன் என்பதுதான் பெரிய சிக்கல். இயேசு மேசியா என்றும், இயேசுவே இந்தப் பூமியில் வாழ்ந்த மிக அற்புதமான மனிதர் என்றும், அவர் மட்டுமே இந்த உலகத்தில் வாழ்ந்த பாவமற்ற ஒரே உண்மையான தீர்க்கதரிசி என்றும் விசுவாசிப்பதில் முஸ்லிம்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அவர்கள் அப்படிதான் நினைக்கிறார்கள். ஆனால், இயேசு தேவன் என்று சொன்னால், ஒரு முஸ்லிமின் பார்வையில் அது மிக மோசமான தேவதூஷணம். ஏனென்றால், “இயேசு தேவன் என்று நீ விசுவாசித்தால் நீ நரகத்துக்குப் போவாய்,” என்று குரானின் 4ஆம் அதிகாரம் 171ஆம் வசனமும், 5ஆம் அதிகாரம் 72ஆம் வசனமும் கூறுகின்றன.

டேவிட், “நபீல், உன் கேள்வியை நான் புரிந்துகொள்கிறேன். நீ என்ன சொல்ல வருகிறாய் என்று தெரிகிறது. நீ யோவான் 1:1யைப்பற்றிப் பேசுகிறாய்,” என்று சொன்னான். நபீலுக்கு யோவான் 1:1 தெரியவில்லை. டேவிட், “அந்த வசனம் இயேசு தேவன் என்று கூறுகிறது. ”ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.” இந்த வார்த்தை யார்? இதே அதிகாரம் 14ஆம் வசனம் அந்த வார்த்தை யார் என்று கூறுகிறது. ”அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது,” என்று சொன்னான். நபீல் திருப்தியாகவில்லை.”இங்கு இயேசு தேவன் என்று யோவான் என்ற நற்செய்தியாளர் சொல்லுகிறார். தான் தேவன் என்று இயேசு சொன்னாரா என்பதுதான் என் கேள்வி. தான் தேவன் என்று அவர் ஒருபோதும் சொல்லவில்லேயே!” என்று நபீல் தன் வாதத்தைத் தொடர்ந்தான்.

இருவருடைய உரையாடலும், வாதப்பிரதிவாதமும் தொடர்ந்தன. நபீலின் எல்லாக் கேள்விகளுக்கும் டேவிட் சளைக்காமல் பதில் சொன்னான். பதில் தெரியாதபோது பதிலைத் தேடினான். வேதாகமத்தின் நம்பகத்தன்மையையும், நிச்சயத்தையும், சத்தியத்தையும் டேவிட் வலியுறுத்தினான், வற்புறுத்தினான். டேவிட்டுக்குத் தெரிந்த அளவுக்குத் தனக்குத் தெரியவில்லை என்று நபீல் முதன்முறையாக உணர ஆரம்பித்தான். ஆனால், நேருக்குநேர் தன்னோடு வாதிட ஒருவன் தயாராக இருப்பதை நினைத்து நபீல் பரவசமடைந்தான்.

டேவிட் வேறொருவர் சொன்னதாலோ, பாரம்பரியத்தினாலோ இயேசுவைத் தன் இரட்சகராக ஏற்றுக்கொள்ளவில்லை. தான் விசுவாசிப்பவர் யார் என்று அவனுக்குத் தெரியும். கிறிஸ்தவமே உண்மை என்று அவனுக்கு நிச்சயமாகத் தெரியும். இயேசு உண்மையான, மெய்யான தேவன் என்றும், வேதாகமம் முற்றிலும் நம்பத்தக்கது என்றும் நபீலுக்கு நிரூபிப்பதற்காக டேவிட் வேதாகமத்தை ஆழமாகப் படித்தான். அவன் இதற்குமுன் ஒரு முஸ்லிமைச் சந்தித்தமும் இல்லை, பேசியதும் இல்லை, அவனுக்கு நற்செய்தி அறிவித்தமும் இல்லை, குரானை வாசித்ததும் இல்லை. எனவே, டேவிட் அதிகமாகப் படித்தான், ஆராய்ந்தான்; கிறிஸ்துவையும், கிறிஸ்தவத்தையும்பற்றிய ஒரு முஸ்லிமின் கண்ணோட்டத்தைப் புரிந்துகொள்ள முயன்றான்.

3. மூன்றாவது கேள்வி: இயேசு மரித்து உயிர்த்தாரா ?

இருவருடைய உரையாடலும், வாதப்பிரதிவாதங்களும் தொடர்ந்தன. கிறிஸ்தவத்தின் ஆணிவேரை அடியோடு பிடுங்கியெறிய நபீல் இயேசுவின் சிலுவை மரணத்தையும், உயிர்தெழுதலையும்பற்றிப் பேசத் தீர்மானித்தான். “கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால், எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா. கிறிஸ்து எழுந்திராவிட்டால், உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும்,” என்று பவுல் சொல்வதுபோல் இயேசுவின் சிலுவை மரணமும், உயிர்த்தெழுதலும் கிறிஸ்தவத்தின் ஆணிவேர் போன்றவை.

ஆனால், இயேசு சிலுவையில் மரித்ததையும், அடக்கம்பண்ணப்பட்டு, மூன்றாம் நாள் உயிர்தெழுந்ததையும் முஸ்லிம்கள் நம்புவதில்லை. நபீலும் நம்பவில்லை. டேவிட்டும் நபீலும் இதைப்பற்றி விவாதிப்பதற்குத் தயாராக இருந்தார்கள். மைக், கேரி என்ற இரண்டு மூத்த நண்பர்களை இந்த விவாதத்தில் கலந்துகொள்ள டேவிட் அழைத்தான். இருவரும் கொஞ்சம் வயதானவர்கள், சட்டம் படித்தவர்கள், இயேசுவின் சிலுவை மரணத்தையும், உயிர்தெழுதலையும்பற்றி ஆராய்சி செய்திருந்தார்கள். அந்த வரலாற்று உண்மைகளைப்பற்றி அவர்கள் இருவரும் பல்வேறு கூட்டங்களில் பேசினார்கள். அவர்களில் ஒருவர் அதைப்பற்றி ஒரு புத்தகம்கூட எழுதியிருந்தார். எனவே, அவர்கள் இருவரும் இந்த விவாதத்தில் கலந்துகொள்வது தனக்குச் சாதகமாக இருக்கும் என்று டேவிட் நினைத்தான்.

இந்த விவாதத்தில் கலந்துகொள்ள நபீல் தன் அப்பாவைக் கூட்டிக்கொண்டுவரத் தீர்மானித்தான். அவன் தன் அப்பாவைத்தான் எல்லாவற்றிற்கும் மாதிரியாக எடுத்துக்கொண்டான். அவனுடைய அப்பா இஸ்லாத்தைப்பற்றி நன்கு அறிந்தவர். இஸ்லாம் அறிஞர்கள் எழுதிய பல நூல்களையும், விரிவுரைகளையும், கிறிஸ்தவத்துக்கு எதிரான விவாதங்களையும், ஆதாரங்களையும் அவர் படித்திருந்தார். நபீல் தன் அப்பாவை ஒரு குடும்பத் தலைவனாக மட்டும் அல்ல, எல்லா நேரங்களிலும் சார்ந்துகொள்வதற்கேற்ற ஒரு பாறையாக, வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஒரு வழிகாட்டியாக, நம்பிக்கைக்குரிய ஒரு தோழனாக என எல்லாமுமாகக் கருதினான். அவனுடைய அப்பாவும் நண்பர்களின் விவாதத்தில் பங்குபெற ஆர்வமாக இருந்தார். உரையாடல் ஆரம்பித்து வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டபோது இயேசுவின் மரணத்தையும், உயிர்தெழுதலையும்பற்றிய இஸ்லாத்தின் தவறான கருத்துக்கள் ஒன்றன்பின் ஒன்றாகத் தகர்க்கப்பட்டன. சிறுவயதுமுதல் தனக்குப் போதிக்கப்பட்டவை பொய் என்ற உணர்வு நபீலுக்குள் எழுந்தது. இயேசுவின் மரணத்தையும், உயிர்த்தெழுதலையும்பற்றிய முஸ்லிம்களின் பார்வை தவறு என்று நபீல் உணர ஆரம்பித்தான்.

இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின், அவர் சிலுவையில் மயங்கிவிட்டார் என்றும், அவருடைய சீடர்கள் இயேசு இறந்துவிட்டார் என்று மிகைப்படுத்தி எழுதினார்கள் என்றும், மயங்கி விழுந்தவர் பின்பு மயக்கம் தெளிந்து எழுந்தார் என்றும் முஸ்லிம்கள் நம்புவதாக நபீலின் அப்பா கூறினார். எனவே, இயேசு உயிர்த்தெழுந்தார் என்பது அவருடைய சீடர்கள் உருவாக்கிய கதை என்று நபீலின் அப்பா கூறினார். இயேசு மரிக்கவில்லை, எனவே அவர் உயிர்த்தெழ வேண்டிய தேவையில்லை என்பது அவருடைய வாதம். இயேசு சிலுவையில் மரித்தார், அடக்கம்பண்ணப்பட்டார், மரித்த மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்பது கிறிஸ்தவர்களின் விசுவாசம் மட்டும் அல்ல, மறுக்கமுடியாது வரலாற்று உண்மையாகும். இயேசுவின் சிலுவை மரணத்தையும், உயிர்த்தெழுதலையும் நம்புவதற்கு ஒருவன் கிறிஸ்தவனாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, வேதாகமத்தை வாசிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இவை வரலாற்று உண்மைகள். இதற்கான நிரூபணங்களும், சான்றுகளும், சாட்சிகளும் ஏராளம் இருக்கின்றன.

இந்த வரலாற்று உண்மைகளைப்பற்றிய முஸ்லிம்களின் பார்வை குறையுள்ளது என்று நபீல் எண்ணத் தொடங்கினான். நபீல் மிகவும் சங்கடப்பட்டான். அவனுடைய அப்பா தான் சொன்னதையே திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார். அதில் எந்தப் பொருளும் இல்லை என்று நபீலுக்குத் தெளிவாகத் தெரிய ஆரம்பித்தது. தன் அப்பாவுக்கு இதில் தெளிவில்லை, அவருக்கு உண்மை முழுமையாகத் தெரியவில்லை என்று நபீல் புரிந்துகொண்டான்.

கிறிஸ்தவத்தைப்பற்றி மேலும் பல கேள்விகள் எழுந்தன. கிறிஸ்தவத்தின் அடிப்படை சாராம்சம் என்ன? இயேசு தேவன் என்பதுதான் அடிப்படை சாராம்சமா? அல்லது இன்னும் கூடுதலாக ஏதாவது இருக்கிறதா என்ற கேள்வி எழுந்தது. இந்தக் கேள்விக்கும், “கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்,” என்ற ரோமர் 10:9மூலம் நபீலுக்குப் பதில் கிடைத்தது. “இயேசு தேவனாக இருக்க வேண்டும்; அது மட்டும் போதாது. அவர் சிலுவையில் மரிக்க வேண்டும், அவர் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருக்க வேண்டும். அப்போதுதான் கிறிஸ்தவம் உண்மையாக இருக்க முடியும்,” என்று நபீல் இந்த வசனத்தின்மூலம் புரிந்துகொண்டான். “மனித குமாரனை வாரினால் அடித்து, கொலை செய்வார்கள்; மூன்றாம் நாளிலே அவர் உயிரோடே எழுந்திருப்பார்,” என்பது தான் தேவன் என்பதற்கு நிரூபணம் என்பதுபோல் இயேசு ஏற்கெனவே சொல்லியிருந்தார்.

ஒருவன் தன்னைத் தேவன் என்று சொன்னால் மனிதர்கள் அவனைப் பைத்தியம் என்பார்கள். ஆனால், இயேசு தான் தேவன் என்று சொன்னதோடு நிற்கவில்லை. மாறாக, தன்னைக் கொலை செய்வார்கள் என்றும், மரித்த மூன்றாம் நாள் தான் உயிரோடு எழுந்து வருவதாகவும் சொன்னார். அப்படியே அவர் செய்தார். இந்த வரலாற்று உண்மைகளை டேவிட்டும் நபீலும் சேர்ந்து ஆராய்ந்தார்கள். “இயேசு உண்மையிலேயே சிலுவையில் மரித்தாரா? மரித்த மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தாரா?” என்று ஆராய்ந்துபார்த்து, “ஆம், இது மாறாத உண்மை,” என்ற முடிவுக்கு நபீல் வந்தான். நபீல் இந்தக் கட்டத்தை அடைய மூன்று வருடங்கள் ஆயின.

குரானை அம்பலப்படுத்த, “இயேசு சிலுவையில் மரித்தார்,” என்ற ஒரேவொரு வரலாற்று உண்மை போதும்.

குரானை ஆராய்தல்

ஒருநாள் டேவிட், “நபீல், நீ ஏன் இன்னும் நற்செய்தியை விசுவாசிக்கவில்லை? ஏன் இன்னும் இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொள்ளவில்லை?” என்று கேட்டான். “என்னதான் இருந்தாலும் இஸ்லாம் 100 விழுக்காடு சரி என்று எனக்கு நிச்சயமாகத் தெரியும். கிறிஸ்தவத்தின்மேல் 80-85 விழுக்காடு எனக்கு நம்பிக்கை ஏற்பட்டிருந்தாலும், இஸ்லாத்தின்மேல் என் விசுவாசம் கடுகளவும் குறையவில்லை,” என்று சொன்னான். அதற்கு டேவிட், “நீ கிறிஸ்தவத்தை எப்படி சந்தேகக்கண்ணோடு, கேள்விக்கணைகளோடு, பார்த்தாயோ, விமரிசித்தாயோ அதேபோல் இஸ்லாத்தையும் பார். நீ இதுவரை அப்படிச் செய்யவில்லை. இரண்டுக்கும் ஒரே அளவுகோலைப் பயன்படுத்து. கிறிஸ்தவத்தில் சொல்லப்பட்டுள்ளவை வரலாற்று உண்மைகள்தானா அல்லது புனையப்பட்டவையா என்றெல்லாம் கேட்டதுபோல, இஸ்லாத்தையும் பரீட்சித்துப் பார், கேள்வி கேட்டுப் பார்,” என்றான்.

இது நபீலுக்குப் பேரிடி. ஏனென்றால், “குரானைச் சந்தேகிப்பதா? குரானைக் கேள்வி கேட்பதா? அது 100 விழுக்காடு தேவனுடைய வார்த்தையாயிற்றே! இது சாத்தியம் இல்லை,” என்று நபீல் நினைத்தான். அவன் இஸ்லாத்தை ஆராயத்தொடங்கியபோது, அவன் தேடிய எந்தச் சான்றும், நிரூபணமும் கிடைக்கவில்லை. அவன் உடைந்துபோனான். இஸ்லாம் உண்மை என்று சொல்வதற்கான ஒரு ஆதாரம்கூட கிடைக்கவில்லை. கிறிஸ்துவையும், கிறிஸ்தவத்தையும்பற்றி நபீல் டேவிட்டிடம் கேட்ட கேள்விகளை இப்போது டேவிட் இஸ்லாத்தைப்பற்றி நபீலிடம் கேட்டான். டேவிட் கேட்ட அத்தனை கேள்விகளையும் நபீல் பொருட்படுத்தவில்லை; அசட்டை செய்தான், உதாசீனம் செய்தான். எனினும், உள்ளத்தில் கலக்கம். உள்ளத்தில் அவனுக்கு உண்மை தெரிந்தது.

இஸ்லாத்தின் நம்பிக்கையை டேவிட் கேள்வி கேட்கத் தொடங்கினான். முஹம்மது கடவுளின் உண்மையான தீர்க்கதரிசி என்பதே இஸ்லாத்தின் மையக் கூற்று. ஆனால் முதன்மையான ஆதாரங்களையும், சுயவரலாறுகளையும் படித்தபிறகு, முஹம்மது தீர்க்கதரிசிகளில் மிகப் பெரியவர், வரலாற்றின் மிகச் சிறந்த மனிதர் என்ற கருத்தை நியாயமான முறையில் ஏற்றுக்கொள்ள முடியாது என்று நபீல் முடிவுசெய்தான்.

உண்மையான தேவனைத் தேடுதல்

ஒரு நாள், இருவரும் வகுப்புக்கு நடந்துபோய்க்கொண்டிருந்தபோது, டேவிட் நபீலிடம், “ஒரு முக்கியமான கேள்வி. இத்தனை வருடங்களாக நாம் வாதப்பிரதிவாதங்களும், ஆராய்ச்சிகளும் செய்துகொண்டிருக்கிறோம். ஆதாரங்களையும், சான்றுகளையும் தேடிக்கொண்டிருக்கிறோம். காரண காரியங்களை அலசிக்கொண்டிருக்கிறோம். கிறிஸ்தவம் உண்மையென்றால், நீ கிறிஸ்துவை விசுவாசிக்கவும், பின்பற்றவும் தயாரா, விரும்புகிறாயா?” என்று கேட்டான். “ஆம், நான் சத்தியத்தை அறிய விரும்புகிறேன், பின்பற்ற விரும்புகிறேன்,” என்று நபீல் சொன்னான்.

இந்தப் பதிலைச் சொன்னபின், “கிறிஸ்தவம்தான் உண்மை, இஸ்லாம் பொய் என்றால் நான் எல்லாவற்றையும் இழக்க நேரிடும், எல்லாவற்றையும் அழிக்க நேரிடும், என் குடும்பம் அழிந்துவிடும். என் கொள்ளுத்தாத்தா, தாத்தா இஸ்லாத்தைப் பரப்பினார்கள், போதித்தார்கள். ஆனால், இஸ்லாம் உண்மை இல்லை என்ற நிலைப்பாட்டில் நான் இங்கு நிற்கிறேன்,” என்ற உள்ளக் குமுறல்.

அவன் ஜெபிக்க ஆரம்பித்தான், “தேவனே நீர் யார்?” இதுதான் அவனுடைய ஒரு புத்தகத்தில் தலைப்பு. “அல்லாவைத் தேடி, இயேசுவைக் கண்டேன்.”

டேவிட் நபீலிடம் Josh McDowell, Sean McDowell என்பவர்கள் எழுதிய more than a carpenter என்ற புத்தகத்தைக் கொடுத்து வாசிக்கச் சொன்னான். புத்தகங்கள் வாசிப்பதில் மிகவும் ஆர்வமுள்ள நபீல் சில மணி நேரங்களில் அந்தப் புத்தகத்தை வாசித்து முடித்துவிட்டான். வாசித்து முடித்தான் என்பதைவிட கரைத்துக்குடித்துவிட்டான். அவன் பசி அடங்கவில்லை. இன்னும் அதிகமான உணவு தேவைப்பட்டது. அந்தப் புத்தகத்தின் ஆசிரியர் தன் புத்தகத்தில் யோவான் நற்செய்தியிலிருந்து நிறைய மேற்கோள்கள் காட்டியிருந்தார். எனவே, நபீல் யோவான் நற்செய்தியை வாசிக்கத் தொடங்கினான். வாசிக்கத் தொடங்கியதும் வேதாகமம் குரானிலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்று தெரிய ஆரம்பித்தது. குரானைப்பொறுத்தவரை வசனங்களுக்கிடையே எந்தத் தொடர்பும் இருக்காது. அவைகள் நம் நீதிமொழிகள் புத்தகம்போல் இருக்கும். எல்லாம் தனித்தனி வசனங்கள். அங்கு இடஅமைப்புக்கு வேலையே இல்லை. அவை வசனங்கள், வர்ணனைகள், விவரங்கள். அவைகளை யாரும் புரிந்துகொள்ள வேண்டும் என்று யாரும் எதிர்பார்ப்பதில்லை. அவைகளை மனப்பாடம் செய்ய வேண்டும், கிளிப்பிள்ளைபோல் ஒப்பிக்க வேண்டும் என்பதுதான் அவர்களுடைய நோக்கம்.

யோவான் நற்செய்தியை வாசித்தபோது அவைகள் கோர்வையான நிகழ்ச்சிகள் என்றும், இடஅமைப்பு முக்கியம் என்றும், வசனங்களுக்கிடையே நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்றும் நபீல் புரிந்துகொண்டான். மேலும் இயேசு சொல்வதையும் அவன் எளிதாகப் புரிந்துகொண்டான். அவர் சொல்வதைப் புரிந்துகொள்ள விளக்கமோ, வியாக்கானமோ தேவைப்படவில்லை.

யோவான் முதல் அதிகாரம் முதல் வசனம் அவனுடைய எண்ணங்களைத் தவிடுபொடியாக்கியது.

“ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்,” என்ற இந்த வசனத்தை டேவிட் ஏற்கெனவே நபீலுக்கு மேற்கோள் காட்டியிருந்தான். “இயேசு தேவன் என்றால், இஸ்லாம் ஒரு பொய்யான மதமாகிவிடும்,” என்ற எண்ணம் வந்தவுடன், நபீல் வேதாகமத்தைத் தொடர்ந்து படிக்கவில்லை. தனக்கு உதவுமாறும், வழிகாட்டுமாறும் அவன் அல்லாவிடம் ஜெபித்தான். என்ன செய்ய வேண்டும் என்று அவனுக்குத் தெரியவில்லை.

4. நான்காவது கேள்வி: இரட்சிப்பு என்றால் என்ன

டேவிட்டும், நபீலும் ஒருநாள் இரட்சிப்பைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். இரட்சிப்பைப்பற்றிய முஸ்லிம்களின் கண்ணோட்டம் கிறிஸ்தவர்களின் கண்ணோட்டத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்று டேவிட் விரைவில் புரிந்துகொண்டான். முஸ்லிம்களைப் பொறுத்தவரை பரலோகத்துக்குச் செல்வதுதான் இரட்சிப்பு. ஒருவன் இந்த உலகத்தில் வாழ்கின்றபோது அவனுடைய கெட்ட செயல்களைவிட, நல்ல செயல்கள் அதிகமாக இருந்தால், அவன் பரலோகத்தின் பார்வையில் நல்லவன் என்று கருதப்படுவான். அதன்பின் அவன் பரலோகத்துக்குச் செல்வான். அவர்களைப்பொறுத்தவரை குற்றம், பாவம், பாவமன்னிப்பு என்பவைகளெல்லாம் கிடையாது. ஒருவனுடைய செயல் கனத்துக்குரியதா அல்லது கனவீனமானதா, அதனால் நற்பெயர் ஏற்படுமா அல்லது களங்கம் ஏற்படுமா என்பதுதான் காரியம். ஒரு முஸ்லிம் தவறு செய்கிறான் என்றும், அவன் செய்யும் தவறு வேறு யாருக்கும் தெரியாது என்றும், அதனால் அவன் குடும்பத்துக்கு எந்த அவமானமும் இல்லை என்றும் வைத்துக்கொள்வோம். அப்படியானால் அவனுடைய செயல் சரி என்று எடுத்துக்கொள்ளப்படும். ஆனால், அவனுடைய செயல் தெரிய வந்தால், அதனால் அவனுடைய குடும்பத்துக்கு அவமானம் ஏற்பட்டால், அவர்களுடைய கௌரவம் குறைந்தால் அது ஒரு பிரச்சினை. எனவே, கனத்துக்குரியதா, கனவீனமானதா, நற்பெயரா களங்கமா என்பதுதான் காரியமே தவிர குற்றமா குற்றமற்றதா என்பதல்ல காரியம்.

எனவே, நபீலால் பாவத்தைப் புரிந்துகொள்ளமுடியவில்லை. சூரியன் கிழக்கே உதிக்கிறது என்ற உண்மையைப்போல் தான் ஒரு பாவி என்ற உண்மை நபீலுக்குப் புரிந்தது. ஆனால், அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. “நான் ஒரு பாவி. என் பாவத்துக்குப் பரிகாரமாக நான் ஒன்றும் செய்யமுடியாது. என் பாவத்தைச் சுமந்து தீர்க்க பாவமற்ற இயேசு இந்த உலகத்துக்கு வர வேண்டியிருந்தது. எனவே, அவர் வந்தார், என் பாவத்துக்குப் பரிகாரமாக சிலுவையில் மரித்தார். தம் சிலுவை மரணத்தின்மூலம் பாவத்துக்கு முடிவுகட்டினார்,” என்பதை நபீலால் புரிந்துகொள்ளமுடியவில்லை. அவனுடைய முஸ்லிம் மனம் இதை ஏற்க மறுத்தது என்பதைவிட, புரிந்துகொள்ள இயலவில்லை. “இயேசு கிறிஸ்து ஏன் மரிக்க வேண்டும்? அப்படியானால், தேவன் இரத்தத்தைக் குடிக்கிறாரா?” என்ற கேள்வி அவனுக்குள் எழுந்தது.

இந்தக் காரியத்திலும் டேவிட்டின் பதிலைக் கேட்டு நபீல் திணறினான், திக்குமுக்காடினான். “நபீல், உன் கூற்றின்படி ஒருவன் நல்லவனா கெட்டவனா என்பதுதான் காரியம் என்றால், ஒருவனுடைய தீமையைவிட நன்மை அதிகமாக இருந்தால் அவன் பரலோகத்துக்குச் செல்வான் என்றால், பரலோகத்தில் நிறைய பாவிகள் இருப்பார்கள். இல்லையா? அப்படியானால், பரலோகம் பரிபூரணமான, பரிசுத்தமான இடம் இல்லையா? ஏனென்றால், அங்கு பாவிகள் இருக்கிறார்களே! தேவனுடைய பிரசன்னத்தில் பாவம் எப்படி இருக்க முடியும்? அல்லாஹ் பாவிகளை நேசிப்பதில்லை என்று உன் குரான் கூறுகிறதே!” என்று கேட்டான். “டேவிட், உன் கூற்றின்படி பார்த்தால் யாரும் பரலோகத்திற்குச் செல்ல முடியாது. யாருக்கும் எந்த நம்பிக்கையும் இல்லை.” “இல்லை நபீல். நம்பிக்கை இருக்கிறது. தேவனுடைய கிருபையே நம்பிக்கை.” “ஆனால், தேவன் இந்தக் கிருபையை ஏன் எனக்குத் தர வேண்டும்?” “ஏனென்றால், அவர் உன்னை நேசிக்கிறார்.” “நான் பாவி. அப்படியிருக்கையில் தேவன் ஏன் என்னை நேசிக்க வேண்டும்? தேவன் பாவிகளை நேசிப்பதில்லை. எனவே, அவர் ஏன் என்னை நேசிக்கிறார்?” “ஏனென்றால் அவர் உன் அப்பா.” நபீல் ஒரு கணம் தடுமாறினான். “தேவன் என் அப்பாவா!”

நபீல் பிறந்தபோது அவனுடைய அப்பா அவனைத் தன் கரங்களில் ஏந்தி அவன் காதுகளில் ஓதிய வார்த்தைகள் அவனுக்குத் தெரியும். அந்த நாளிலிருந்து தன் அப்பா தன்னை எவ்வளவாய் நேசிக்கிறார், பாதுகாக்கிறார், பராமரிக்கிறார், போஷிக்கிறார் என்று நபீலுக்குத் தெரியும். இந்த அன்பைப் பெற தான் ஒன்றும் செய்யவில்லை. ஆயினும், தேவனைத் தன் அப்பாவாகவும், தன்னை அவருடைய மகனாகவும் அவன் சிந்தித்ததேயில்லை.

யோவான் 8:58இல், “ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்,” என்று இயேசு கூறியிருப்பதைப் பார்த்தான். யாத்திராகமம் 3:14இல் தேவன் மோசேயிடம் தன் பெயர் “இருக்கிறேன்” என்று சொன்னதையும், மாற்கு 14:62இல் பிரதான ஆசாரியனின், “நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா?” என்ற கேள்விக்கு இயேசு, “ஆம், நான் அவர்தான்,” என்று சொன்ன பதிலையும் வாசித்தபோது நபீலுக்கு விடை கிடைத்தது.

வேதாகமம் நம்பத்தக்கதல்ல, இயேசு தேவன் இல்லை, வேதாகமத்திலுள்ளவை புனையப்பட்டவை என்று எண்ணியிருந்த நபீலின் மனக்கோட்டை இடிய ஆரம்பித்தது. டேவிட்டும் விடவில்லை. நபீலின் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் ஆணித்தரமாகப் பதிலளித்தான். அவனுடைய வெற்றுக்கூற்றுகளை ஆதாரங்களோடு மறுத்தான். “இயேசுவோடு வாழ்ந்தவர்கள் எழுதினார்கள். அவர் காலத்தில் வாழ்ந்தவர்கள் பேசியவைகளைக் கேட்டவர்கள் எழுதினார்கள். வேதாகமம் குறிப்பிடும் வரலாறும், உண்மைகளும் தொல்பொருளாராய்ச்சியின் கண்டுபிடிப்புகளும் ஒத்துப்போகின்றன,” என்று போதுமான நிரூபணங்களையும் டேவிட் முன்வைத்தான்.

கிறிஸ்துவை விசுவாசிக்கத் தயக்கம்

ஆயினும், நபீல் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள இன்னும் தயாராக இல்லை.

வேதாகமம் நம்பத்தக்கது என்றும், இயேசு தான் தேவன் என்று சொன்னார் என்றும் தெளிவாகப் தெரிந்தபிறகும் நபீல் அசையவில்லை.

எவ்வளவு அதிகமாக வாசித்தானோ, போசினார்களோ, அவ்வளவு அதிகமாக நபீல் தெளிவடைந்தான். நற்செய்தி உண்மை என்று நிச்சயமாகத் தெரிந்தது. கிறிஸ்தவம் உண்மை, கிறிஸ்தவம் கூறுபவர்களும், கோருபவைகளும் உண்மை என்பது தெளிவாயிற்று.

மூன்று ஆண்டுகள் கடந்தன. டேவிட் சொன்ன அனைத்தும் உண்மை என்று உறுதியாகத் தெரிந்தபிறகும் அவன் இஸ்லாத்தைக் கைவிடத் தயாராக இல்லை. காரண காரியங்களை அலசிப்பார்ப்பதை நிறுத்திக்கொள்ளலாம் என்று முடிவுசெய்தான். தான் இப்போது ஒரு வெறுமையான கூடுபோல் இருப்பதாக நபீல் உணர்ந்தான். நபீல் இதுவரை தன் விசுவாசமே உண்மை என்றும், அதில் உறுதியாகவும், வைராக்கியமாகவும், துடிப்பாகவும் இருந்தான். தான் ஒரு முஸ்லீம் என்பதில் அவர் பெருமைப்பட்டான். தான் ஒரு முஸ்லீம் என்பதுதான் அவனுடைய அடையாளமாக இருந்தது. முஸ்லீம் சமுதாயம், முஸ்லீம் கலாச்சாரம், இவைகளில் அவன் பெருமைப்பட்டான். காரணகாரியங்களின்படி கிறிஸ்தவம் உண்மை என்று தெரிந்தபிறகும் அவன் கிறிஸ்தவ நற்செய்தியை ஏற்றுக்கொள்ள மறுத்தான்.

கல்லூரியில் பட்டமளிப்பு விழா முடிந்த அன்று இருவரும் காரில் வந்து உட்கார்ந்தார்கள். டேவிட், “நபீல், தேவன் தம்மை உனக்கு வெளிப்படுத்துவார். இது அவருடைய வாக்குறுதி,” என்று சொன்னான். வாதங்கள், விவாதங்கள், ஆராய்ச்சிகள் எல்லாம் முடிந்துவிட்டன என்று அவனுக்குத் தெரியும். இப்போது அவன் தேவனுடைய இரக்கத்தை வேண்ட வேண்டும், ஜெபிக்க வேண்டும் என்பதுபோல் உணர்ந்தான். ஜெபிக்கும் இடத்துக்குப் போனான். வழக்கமான ஜெபத்தை ஜெபித்தான். “அல்லா, எனக்கு சத்தியத்தைக் காண்பியும், ஒரு கனவின்மூலம் நீர் அல்லாவா இயேசுவா யார் என்று எனக்குத் தெரிவியும்,” என்று கேட்டான். தேவன் மக்களோடு நேரடியாகப் பேசுவார் என்று முஸ்லிம்கள் நம்புவதில்லை. ஒருவேளை பெரிய தீர்க்கதரிகளிடம் வேண்டுமானால் பேசக்கூடும் என்றும், ஆனால், அவர் கனவுகள், தரிசனங்கள்மூலம் பேசுவார் என்று அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். இஸ்லாத்தில் கனவுகளும் தரிசனங்களும் மிகவும் முக்கியமானவை. கனவுகளுக்கு வியாக்கியானம் கொடுப்பதைப்பற்றிய பல புத்தகங்கள் தன் பெற்றோரிடம் இருப்பது நபீலுக்குத் தெரியும். வழிகாட்டுவதற்காகவும், எச்சரிப்பதற்காகவும், முன்னுரைப்பதற்காகவும் தேவன் கனவுகளைப் பயன்படுத்துகிறார் என்று அவர்களுக்குத் தெரியும். அவர்கள் பல வழிகளில் கனவுகளுக்கு வியாக்கியானம் செய்தார்கள். கனவுகளையும், தரிசனங்களை அவர்கள் மிகச் சிரத்தையுடன் எடுத்துக்கொண்டார்கள். “டேவிட், வேதாகமம் கனவுகளைப்பற்றி என்ன சொல்லுகிறது? வேதாகமத்தில் யாரராவது கனவுகள் கண்டதாகவோ, தரிசனம் கண்டதாகவோ இருக்கிறதா?” “ஆம், பழைய ஏற்பாட்டில் யோசேப்பு. புதிய ஏற்பாட்டில் யோவான். இன்னும் பலர் இருக்கிறார்கள்.

“கேளுங்கள் கொடுக்கப்படும், தட்டுங்கள் திறக்கப்படும், தேடுங்கள் கண்டடைவீர்கள் ,”என்று வேதாகமம் கூறுகிறது என்று நபீலுக்குத் தெரியும். எனவே, தேவன் தன் ஜெபத்திற்குப் பதில் தருவார் என்று நபீல் உறுதியாக நம்பினான். அல்லாவோ, இயேசுவோ. யாராக இருந்தாலும் சரி.

தரிசனமும், கனவுகளும்

தேவன் நபீலின் ஜெபத்திற்குப் பதிலளித்தார். ஆனால், உடனே பதில் கொடுக்கவில்லை. டிசம்பர் 2004முதல் ஏப்ரல் 2005 வரை, நபீல் மூன்று தெளிவான கனவுகளைக் கண்டான். அவைகளின்மூலமாகவும் கிறிஸ்தவம் உண்மை என்றும், தான் கிறிஸ்துவைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவன் புரிந்துகொண்டான்.

நபீல் மருத்துவ மேற்படிப்பு படித்துக்கொண்டிருந்தான். முதல் பருவம் முடிந்திருந்தது. அவனுடைய அப்பா அவனுக்கு அன்பளிப்பாக அவனை புளோரிடாவுக்கு விடுமுறைக்குக் கூட்டிச் சென்றார். அவனும் அவனுடைய அப்பாவும் மட்டும். நிறையக் காரியங்களைப் பகிர்ந்துகொள்ள அருமையான நேரம். நபீலின் கல்லூரியைப்பற்றி, படிப்பைப்பற்றி, நண்பர்களைப்பற்றி, ஆய்வகங்களில் நடக்கும் வேடிக்கையான காரியங்களைக்குறித்து, அவனுடைய ஈடுபாடுகளைக்குறித்து என பல்வேறு காரியங்களைக்குறித்து அவனுடைய அப்பா கேட்டுத் தெரிந்துகொண்டார். அவருடைய அப்பாவும் கடற்படையில் தன் அனுபவங்களையும், சுவையான நிகழ்ச்சிகளையும் பகிர்ந்துகொண்டார். ஆனால், நபீலின் உள்ளத்தின் ஆழத்தில் அமைதி இல்லை. ஒருவகையான கலக்கம். தன் உள்ளத்தில் இருக்கும் குழப்பத்தையும், கேள்வியையும், சந்தேகத்தையும்பற்றி தன்னை மிகவும் நேசித்த அப்பாவிடம் ஒரு வார்த்தை பேச முடியவில்லை.

இருவரும் தங்கியிருந்த அறையில், ஒருநாள் இரவு அவனுடைய அப்பா உறங்கிக்கொண்டிருக்கையில், நபீல் படுக்கையிலிருந்து எழுந்து, “தேவனே, நீர் யார் என்று எனக்குக் காண்பியும்,” என்று ஜெபிக்க ஆரம்பித்தான். இரவு நேரம். அறை இருட்டாக இருந்தது. இரவு விளக்கு மட்டும் இலேசாக எரிந்துகொண்டிருந்தது. ஆனால், திடீரென்று அறையில் கும்மிருட்டு. நபீலுக்குமுன் ஏதோவொன்று தோன்றியது. அவனுக்குமுன்னால் இருந்த சுவர் மறைந்துவிட்டது. அதற்கு வெளியே பரந்த வயல்வெளி. அந்த வயல்வெளியில் அநேக மரச் சிலுவைகள். திரும்பிய பக்கமெல்லாம் ஒளிவீசும் சிலுவைகள். அந்த வெளிச்சம் அவனைச்சுற்றிப் பிரகாசித்தது. எங்கு பார்த்தாலும் ஒளிரும் சிலுவைகள். தரிசனம் மறைந்தது. “இது தேவனிடமிருந்து வந்த தரிசனமா? இது நான் இயேசுவின் சிலுவை மரணத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கும், நற்செய்தியை விசுவாசிக்க வேண்டும் என்பதற்கான செய்தியா? அல்லது ஒருவேளை இது சாத்தானின் வஞ்சகமாக இருக்குமோ! இதுபோன்ற ஆராய்ச்சியை நிறுத்த வேண்டும் என்பதற்கான எச்சரிக்கையோ. ஒருவேளை இது என் பயணக் களைப்பினால் ஏற்பட்ட பிரமையோ! இல்லை. பயணக் களைப்பினால் வந்த பிரமை என்று நான் இதை ஒதுக்கிவிடப் போவதில்லை,” என்று நினைத்துக்கொண்டே ஊக்கமாக ஜெபித்தான். “தேவனே, இது நியாயம் இல்லை. எனக்கு இன்னும் அதிகமாக வேண்டும். இந்தத் தரிசனம் போதாது. இந்த முறை நீர் எனக்கு ஒரு கனவு தருவீரா?” என்று கேட்டான். தேவன் தாராளமனப்பான்மையோடு ஒரேவொரு கனவு இல்லை, மூன்று விசித்திரமான கனவுகளைக் கொடுத்தார்.

இந்தக் கனவுகளைப்பற்றி யாரிடமாவது பேசலாமா வேண்டாமா என்று சிந்தித்துப்பார்த்தபின், டேவிட்டோடும், தன் அம்மாவோடும் பேசலாம் என்று முடிவுசெய்தான். அம்மா தன் கனவுகளுக்குத் தெளிவான விளக்கம் தர முடியும் என்று நபீல் நினைத்தான். மூன்றாவது கனவு மிகத் தெளிவாக இருந்தது.

இது அவன் கண்ட மூன்றாவது கனவு. அவன் ஒரு மசூதியில்,. மசூதியிலிருந்து வெளியே செல்லும் படிக்கட்டுகளில் உர்கார்த்திருக்கிறான். மக்கள் உள்ளே வருகிறார்கள். தரையில் விரிக்கப்பட்டிருக்கும் கம்பளத்தில் உட்காருகிறார்கள். அவன் அவர்களைப் படிக்கட்டிலிருந்து ஒரு பார்வையாளன்போல் பார்த்துக்கொண்டிருக்கிறான். அப்போது அவனுடைய அம்மா அங்கு வருகிறார். அவரும் போய் கம்பளத்தில் அமர்கிறார். இதைப் பார்ப்பது நபீலுக்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது. அவனுடைய அம்மா தரையில் உட்கார்ந்திருக்க, அவன் உயரமான படிக்கட்டில் உட்கார்ந்திருப்பது அம்மாவுக்குச் செய்யும் அவமரியாதை என்பதால் அவன் படிக்கட்டிலிருந்து எழுந்திருக்க முயல்கிறான். ஆனால், அவனால் அசைய முடியவில்லை. படிக்கட்டிலிருந்து எழுந்துபோய் கம்பளத்தில் உட்காரக் கடும் பிரயத்தனம் செய்கிறான். முடியவில்லை. அவனால் நகரக்கூட முடியவில்லை.

நபீல் இந்தக் கனவை தன் அம்மாவிடம் சொன்னான். “படிக்கட்டுகள் அந்தஸ்தின் உயரத்தை அல்லது வளர்ச்சியைக் குறிக்கின்றன. ஒருவேளை நீ உயர எழும்புவாய், உன் அந்தஸ்து உயரும். இது நேர்மறையான கனவு. ஒருவேளை மதம்சார்ந்த உன் அறிவு வளரும் என்பதையும், நீ பிறருக்கு ஆசீர்வாதமாக இருப்பாய் என்பதையும் குறிக்கலாம். மேலும், நீ அங்கு ஒரு பார்வையாளனாக இருக்கிறாய். பிற மக்களோடு கம்பளத்தில் இல்லை. நான் கம்பளத்தில் உட்கார்ந்திருக்கிறேன். உன்னால் அசையக்கூட முடியவில்லையே! அதன் பொருள் என்ன?.” அவனுடைய அம்மாவால் அதற்கு விளக்கம் கொடுக்க முடியவில்லை. ஆனால், இந்தக் கனவு நேர்மறையானது என்று சொன்னார்.

நபீல் குழம்பிப்போனான். எனவே, அவன் இந்தக் கனவை டேவிட்டிடமும் சொன்னான். “நபீல், நீ மசூதியிலிருந்து வெளியே வருகிற படிக்கட்டில் உட்கார்ந்திருக்கிறாய். நீ ஒரு கிறிஸ்தவனாக வேண்டும் என்பதற்காகத் தேவன் உன்னை அடித்துத் தூக்கி வெளியே எறிய வேண்டும் என்று எதிர்பார்க்கிறாயா?” என்று கேட்டான். டேவிட் சொல்வது சரி என்று நபீல் தன் உள்ளத்தின் ஆழத்தில் உணர்ந்தான். ஆனால், அவன் பயந்தான். மிகவும் வேதனையாக இருந்தது. இதுதான் அவனுடைய வாழ்க்கையின் வேதனையின் ஆரம்பம். தேவன் வெளிப்பாடுகள், தரிசனங்கள், கனவுகள் மூலம் பேசினார்.

இயேசுவைப் பின்பற்ற விலைக்கிரயம்

ஆயினும், நபீல், இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. அதற்கு நேர்மாறாகச் செயல்பட்டான். அவன் தன் கேள்விகளுக்கெல்லாம் இஸ்லாத்தில் பதில் தேட மும்முரமாக முயன்றான். அவன் தன் அப்பாவுடன் சேர்ந்து ஐரோப்பாவிலுள்ள மசூதிகளுக்குச் சென்றான். இஸ்லாமிய அறிஞர்களையும், இமாம்களையும் சந்தித்துப் பேசினான். தேவனிடமிருந்து அவன் இன்னும் அதிகமான காரியங்களை எதிர்பார்த்தான். ஆனால், எதுவும் வரவில்லை. தேவன் இதுவரை தன்னைக்குச் சொன்னவைகளைவிட அதிகமாக இதற்குமேல் தேவையில்லை என்று அவனுடைய இருதயத்தில் அவனுக்கு உறுதியாகத் தெரியும். மனமும் அதை உறுதிப்படுத்தியது. ஆனால், தான் எடுக்கப்போகும் முடிவின் விளைவையும், அதற்காகத் தான் கொடுக்கவேண்டிய விலையையும் எண்ணிப்பார்த்துத் தயங்கினான்.

  1. நபீல் தன் மருத்துவப் படிப்பைத் தொடர்ந்தான். அப்போது அவன் தன் குடும்பத்தைவிட்டு வெளியே போய் ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் தனியாகத் தங்க வேண்டியிருந்தது. அவனுடைய குடும்பத்தைப் பொறுத்தவரை இது ஒரு பெரிய காரியம். அமெரிக்காவில் 15 அல்லது 16 வயதில் பிள்ளைகள் தங்கள் பெற்றோரைவிட்டுத் தனியாக வாழப் போய்விடுவார்கள். அவனுக்குப் பிரமாண்டமான பிரியாவிடை கொடுத்தனுப்ப அவனுடைய உற்றார் உறவினர்கள், சமுதாயத்தினர் என நிறையப்பேர் கூடினார்கள், கொண்டாடினார்கள். அவன் வேறொரு மாநிலத்துக்குச் செல்லவில்லை. அவனுடைய புதிய குடியிருப்பு அவனுடைய வீட்டிலிருந்து 20 நிமிட கார் பயணத் தூரம்தான். அவ்வளவு அருகில். கூடியிருந்த அனைவரும் நபீலைக்குறித்து மிகவும் பெருமைப்பட்டார்கள். சிரிப்பலைகள், விசாரிப்புகள், அன்பின் பரிமாற்றங்கள் என கூட்டம் களைகட்டியிருந்தது. ஆனால், நபீலின் இருதயம் கனத்தது. தான் தீர்மானிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அவன் உணர்ந்தான். எதைத் தேர்ந்தெடுப்பது என்று அவனுக்குத் தெரியும். கொடுக்க வேண்டிய விலையை எண்ணிப்பார்த்தான். “இதோ, இவர்களையெல்லாம் இழக்க வேண்டும். இதுபோன்ற குடும்ப உறவு இனி கிடையாது. குடும்பத்திலிருந்தும், சமூகத்திலிருந்தும் முற்றிலும் துண்டிக்கப்படுவேன்.” இதயம் வெகுவாய்க் கனத்தது. அந்தக் கூட்டத்தின் ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவிக்க விரும்பினான். “இதுதான் நான் இவர்களோடு சேர்ந்து சிரிக்கிற கடைசி நாளாக இருக்கக்கூடும். நான் தனியாக வசிக்கப் போகும் நாள் நான் இவர்களையெல்லாம் விட்டு பிரியும் நாள்.” துக்கம், சோகம், நெஞ்சை அடைத்தது. கலக்கம், கொந்தளிப்பு, குமுறல்.

பல்கலைக்கழகத்துக்குச் சென்றான். அமைதி இல்லை. தன் புதிய குடியிருப்புக்குச் சென்றான். இருதயம் அமைதிப்படவில்லை. கீழே அமர்ந்தான். ஆறுதல் தேவைப்பட்டது. தன் ஆத்தும வலியைக் குறைக்க அவனுக்கு நிவாரணம் தேவைப்பட்டது. குரானை எடுத்து வாசிக்க ஆரம்பித்தான். 4 வயதிலிருந்து வாசிக்கிறான். நன்கு பரிச்சயம். ஆறுதலான வார்த்தைகள் எங்காவது இருக்குமா என்று தேடித்தேடிப் பார்த்தான். ஒரு வசனம் கிடைக்கவில்லை. எல்லாம் கடமைகளையும், நிபந்தனையோடுகூடிய அன்பையும், பொறுப்பையும்பற்றியே இருந்தன. அவன் தேடிய ஆறுதலான வார்த்தைகள் அங்கு இல்லை. குரான் தன துன்பத்தில் தனக்கு உதவாது என்று முதன்முறையாக அவன் நினைத்தான். அது வாழ்க்கைக்குப் பொருத்தமற்றது என்று தோன்றியது. செத்துப்போன புத்தகம்போல் உணர்ந்தான்.

எங்கும் போகாததால், டேவிட் தனக்குத் தந்திருந்த வேதாகமத்தை எடுத்தான். எங்கு தொடங்க வேண்டும் என்று தெரியவில்லை. ஏனென்றால், தனிப்பட்ட வழிநடத்துதலுக்காக இதற்குமுன் நபீல் வேதாகமத்தை வாசித்ததில்லை. புதிய ஏற்பாட்டில் தொடங்குவதுதான் சரியாக இருக்கும் என்று நினைத்து புதிய ஏற்பாட்டை வாசிக்கத் தொடங்கினான். மத்தேயு நற்செய்தியைப் புரட்டினான். “துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் ஆறுதலடைவார்கள்,” என்ற வசனம் அவன் கண்ணில் பட்டது. “என்னது துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்களா? இயேசு இப்படி கூறுகிறாரா?” தொடர்ந்து வாசித்தான். “நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் திருப்தியடைவார்கள்.” “இதோ இங்கு ஒரு தேவன் இருக்கிறார். இவர் உடைந்தவர்களை ஆறுதல் படுத்துகிற தேவன். நீதிமான்கள் பாக்கியவான்கள் என்று சொல்லவில்லை. நீதியின்மேல் பசிதாகம் உள்ளவர்கள் பாக்கியவான்கள் என்று சொல்லுகிறார். இவர் உடைந்துபோன உள்ளங்களை ஆசீர்வதிக்கிறார்.” இங்குதான் நபீல் இயேசுவைத் தனிப்பட்ட விதத்தில் சந்தித்தான். அவருடைய வார்தையின்மூலமாக. அவன் தொடர்ந்து வாசித்தான். வேகமாக இல்லை. மெதுவாக. அவன் தன் வேதாகமத்தில் கொடுக்கப்பட்டிருந்த cross references எடுத்து வாசித்தான்.

மத்தேயு நற்செய்தியில், “மனுஷர் முன்பாக என்னை அறிக்கைபண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைப் பண்ணுவேன். மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன்,” என்ற வசனங்களை வாசித்தபோது “நான் அவரை மனதளவில் ஏற்றுக்கொண்டு அமைதியாக இருக்க முடியாது, நான் என் விசுவாசத்தை அறிக்கைசெய்ய வேண்டும்,” என்ற எண்ணம் எழுந்தது. தொடர்ந்து வாசித்தபோது இயேசுவும் அவனும் உரையாடியதுபோல் இருந்தது. அவன் “பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்பவந்தேன். எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன். ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே. தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல. தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரன் அல்ல. தன் ஜீவனைக் காக்கிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தம் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் காப்பான்,” என்ற வசனங்களைத் தொடர்ந்து வாசித்தான்.

“தன் ஜீவனைக் காத்துக்கொள்கிறவன் அதை இழந்துபோவான். தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் காத்துக்கொள்வான்” என்ற வசனத்தை வாசித்தபோது தேவன் தன்னை மரிக்குமாறு அழைக்கிறார் என்று நபீல் உணர்ந்தான். தன் ஜீவனை இழப்பதுதான் தன் ஜீவனைக் காப்பதற்கான வழி என்ற வாக்குறுதியை நபீல் உறுதியாகப் பிடித்துக்கொண்டு செயல்பட ஆரம்பித்தான்.

இப்படிப் பல ஆண்டுகள் போராடியபிறகு நபீல் குரேஷி தன் வாழ்க்கையைக் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுத்தான். ஆனால், நபீல் இதைப்பற்றி யாரிடமும் எதுவும் சொல்லவில்லை. சில நாட்களுக்குப்பிறகு ஒரு ஞாயிற்றுக்கிழமை நபீல் டேவிட்டோடும் அவன் மனைவி மேரியோடும் சேர்ந்து சபைக்குச் செல்லத் தீர்மானித்தான். அன்று, டேவிட் சபையில் சில வாலிபர்களுக்கு வேத பாட வகுப்பு நடத்த வேண்டியிருந்தது. மத்தேயு நற்செய்தியில் 5, 6, 7 அதிகாரங்களிலுள்ள இயேசுவின் மலைப்பிரசங்கத்தை அவர்கள் படித்துக்கொண்டிருந்தார்கள். நபீல் அந்த வகுப்பில் கலந்துகொண்டான். அந்த வகுப்பில் கேட்கப்பட்ட எல்லாக் கேள்விகளுக்கும் அங்கிருந்த வாலிபர்கள் என்ன நினைப்பார்கள் என்பதைப்பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் நபீல் கேள்விகளுக்கெல்லாம் பதிலும், cross referencesசும் சொன்னான். அது மட்டும் அல்ல, அந்த வசனத்துக்கும் பழைய ஏற்பாட்டிலுள்ள நிகழ்ச்சிகளுக்கும் உள்ள சம்பந்தத்தையும் எடுத்துரைத்தான். வேதபாட வகுப்பு முடிந்தபிறகு, டேவிட், “நபீல், நீ ஒரு கிறிஸ்தவனைப்போல் பேசுகிறாய், செயல்படுகிறாய்,” என்று சொன்னான். அதற்கு நபீல், “ஆம், நான் ஒரு கிறிஸ்தவன்தான்,” என்று அவனால் சொல்லமுடியவில்லை. இன்னும் தயக்கம் போகவில்லை, தைரியம் வரவில்லை. இது அவனுக்கு விசித்திரமாகத் தோன்றியது. ஒரு வாரம் கழிந்தது. அடுத்த ஞாயிற்றுக்கிழமை டேவிட்டும் அவனுடைய சில நண்பர்களும் சபைக்குச் சென்றார்கள். ஆராதனை முடித்தபிறகு அவர்கள் அருகிலிருந்த சீன உணவகத்திற்குச் சென்றார்கள்.நபீலும் கூடச் சென்றான். எல்லாரும் சாப்பிடுவதற்குமுன் சாப்பாட்டுக்காகத் தான் ஜெபிக்க விரும்புவதாக நபீல் சொன்னான். “என்னது! கிறிஸ்தவர்கள் சாப்பிடப் போகிறார்கள். ஆனால், ஜெபிக்கப்போவது ஒரு முஸ்லிமா!” என்று டேவிட் வியந்தான். நபீல் அதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல், உணவுக்காகச் ஜெபித்தான். கடைசியில், “பிதா, குமாரன் பரிசுத்த ஆவியின் பெயரால் ஆமென்,” என்று முடித்தான். எல்லாரும் அவனை முறைத்துப்பார்த்தார்கள். ஒருவன், “நீ கிறிஸ்தவனாகவிட்டாய் என்று தெரிகிறது,” என்று சொல்லி அவனைக் கட்டித்தழுவினான். எல்லாரும் அவனை அன்போடு வாழ்த்தினார்கள். டேவிட் வாயடைத்துப்போனான். அவனுடைய நண்பர்கள், “கடைசியாக நீ ஒரு கிறிஸ்தவனாகிவிட்டாய். இதை எங்களுக்குச் சொல்ல நீ தெரிந்தெடுத்த இடம் இந்த சீன உணவகம்,” என்றார்கள்.

குடும்பத்தில் குழப்பம்

ஆயினும், அவனால் தன் பெற்றோரிடம் இதைச் சொல்லமுடியவில்லை. தாமதப்படுத்திக்கொண்டேயிருந்தான், தள்ளிப்போட்டுகொண்டேயிருந்தான். விரைவில் அவன் ஞானஸ்நானமும் பெற்றான். ஆனால், அவன் ஞானஸ்நானம் பெறுவதற்குமுன் அவன் கிறிஸ்தவனாகிவிட்டதை அவனுடைய பெற்றோர் தெரிந்துகொண்டார்கள். அவன் சொல்லித் தெரியவில்லை. தற்செயலாக அவனுடைய மடிக்கணினியில் வந்த ஒரு குறுஞ்செய்தியைப் பார்த்து அதைத் தெரிந்துகொண்டார்கள். அவன் விரைவில் ஞானஸ்நானம் பெறவிருப்பதை அறிந்த அவனுடைய ஒரு நண்பன் அவனுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தான். அவனும், அவனுடைய அப்பாவும் உட்கார்ந்து பேச ஆரம்பித்தார்கள். அவனுடைய பெற்றோர் கண்ணீர் வெள்ளத்தில் மூழ்கினார்கள். அவனுடைய அப்பா இப்படி அழுததை நபீல் பார்த்ததேயில்லை. கதறி அழுதார். கண்களில் கணீர் வழிந்தோட, “நபீல், இன்று என் முதுகெலும்பு உடைக்கப்பட்டு எடுத்து வெளியே எறியப்பட்டதுபோல் நான் உணர்கிறேன்,” என்று கூறினார். நபீல் பிறந்தவுடன் அவனைத் தன் கரங்களிலில் ஏந்தி அவன் காதுகளில் ஜெபம் ஓதியவர், அவனுடைய வாழ்க்கையில் அவனுக்கு ஒரு கதாநாயகன்போல் தோன்றியவர் இப்போது அவனுடைய கண்ணெதிரே கலங்கி கதறி அழுகிறார். அவர் இவ்வளவு சோகத்தில் மூழ்கியிருப்பதை நபீலால் தாங்கமுடியவில்லை. “தேவனே, என்னால் இதைக் காணச் சகிக்கமுடியவில்லை. என்னைக் கொன்றுபோடும்,” என்று நபீல் கதறினான். அவ்வளவு வலி. துடித்தான்.

அவனுடைய அம்மா சுக்குநூறாக உடைந்துபோனார். நோய்வாய்ப்பட்டார். மருத்துவமனையில் அனுமதித்தார்கள். அவர், “நீ ஏன் இப்படித் துரோகம்செய்தாய்? ஏன் எங்களை மறுதலித்தாய்?” என்று கேட்டுத் துடித்தார்.

பெற்றோர் தன்னை ஏற்றுக்கொள்ளாமல் ஒதிக்கிவிடுவார்கள் என்று நபீல் எதிர்பார்த்தான். அவனுடைய பெற்றோர் அவனை உடனடியாக ஒதுக்கிவிடவில்லை. அது அவனுடைய சமுதாயத்தில் சாதாரணமாக நடக்கும் காரியம். ஒருவன் கிறிஸ்தவனானால் அவனை அவர்களுடைய சமுதாயத்திலிருந்து ஒதுக்கிவைத்து விடுவார்கள்.

நபீல் இஸ்லாத்தைவிட்டு கிறிஸ்தவனானதை அவனுடைய பெற்றோர் பெரிய அவமானமாகக் கருதினார்கள். எனினும், தானாடாவிட்டாலும் தன் தசையாடும் என்பதற்கிணங்க, அவர்களால் நபீலை ஒதுக்க முடியவில்லை; விலக்க முடியவில்லை. ஆனால், அவர்கள் தங்கள் கோபத்தை டேவிட்டின்மேல் காட்டினார்கள். அவனை அயோக்கியன் என நினைத்தார்கள். அவன்தான் தன் மகனை மூளைச்சலவை செய்துவிட்டதாக நினைத்தார்கள். எனவே, அவர்கள் அவனை மனநல மருத்துவர்களிடம் அழைத்துச் சென்று ஆலோசனை பெற்றார்கள். நபீல், “நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று எனக்குப் புரிகிறது. என் பெற்றோர் கோபமாக இருக்கிறார்கள். நான் கிறிஸ்தவனானதை என் பெற்றோரால் ஜீரணிக்கமுடியவில்லை. அவர்களுக்குத்தான் ஆலோசனை தேவை,” என்று மருத்துவர்களோடு விவாதித்தான்.

தங்கள் மகன் தங்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டதாகவே அவனுடைய பெற்றோர் நினைத்தார்கள். அவர்களுடைய வாழ்க்கை கண்ணீரில் கழிந்தது, கரைந்தது. தொடர்ந்து அறிவுரைகள், போதனைகள், வாதங்கள், உராய்வுகள், கூர்மையான தடித்த வார்த்தைப் பிரயோகங்கள்.

சில ஆண்டுகள் கழித்து நபீல் மிச்செல் என்ற ஓர் அமெரிக்கக் கிறிஸ்தவப் பெண்ணைத் திருமணம் செய்தான். அவனுடைய பெற்றோர் இதையும் விரும்பவில்லை, சம்மதிக்கவில்லை, ஆமோதிக்கவில்லை, ஆசீர்வதிக்கவில்லை, திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை. அத்தோடு நபீலை அவர்கள் தலைமுழுகிவிட்டார்கள்.

நற்செய்தியாளர்

இத்தனை வருடப் போராட்டத்தின் விளைவாகக் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்க வேண்டும் என்ற வைராக்கியமும், பாராமும் நபீலுக்குள் ஏற்பட்டிருந்தன டேவிட்டுக்கும் அதே பாரம் இருந்தது. இருவரும் பல்வேறு நிகழ்வுகளில் பேசினார்கள். நபீல் பல்வேறு இடங்களில் பலரோடு தர்க்கித்துப் பேசினான். பல சபைகளில் தன் சாட்சியைப் பகிர்ந்துகொண்டான். அவனுடைய வாழ்க்கையில் மேலும் பல மாற்றங்கள் ஏற்பட்டன. கிறிஸ்தவனானபிறகு, கிறிஸ்துவைத்தவிர வேறொன்றைப்பற்றியும் அவன் கவலைப்படவில்லை. கிறிஸ்தவனாவதற்குமுன் அவனுக்குள் பல்வேறு கவலைகளும், பயங்களும் இருந்தன. இப்போது அவைகள் மறைந்துவிட்டன. அவன் பெரிய விடுதலையை அனுபவித்தான். பல காரியங்களை அவன் தெளிவாகப் பார்த்தான். குறிப்பாகப் பாவத்தைக்குறித்த ஓர் ஆழமான புரிதல் உண்டாயிற்று. பாவம் ஒரு மனிதனுடைய கண்களை எப்படிக் குருடாக்குகிறது என்பதை அவன் தெளிவாகப் பார்த்தான். மேலும், பாடுகளைக்குறித்த அவனுடைய புரிதலும் வித்தியாசமாக இருந்தது. இயேசு கிறிஸ்துவுக்காகத் துன்பப்படுவதற்குக்கூடத் தகுதி வேண்டும் என்று அவன் உணர்ந்தான். “இயேசு மிகவும் அற்புதமானவர். அவரைப் பின்பற்றுவதற்கும், அவருக்குகாகத் துன்பப்படுவதற்கும் அவர் தகுதியானவர்,” என்று நபீல் உறுதியாக விசுவாசித்தான். “இயேசுவைப் பின்பற்றுவதற்கு விலைக்கிரயம் கொடுத்தேயாக வேண்டும், அதன் வலியை அனுபவித்தேயாக வேண்டும், குடும்பத்தின் பிரிவினையைத் தவிர்க்க முடியாது. இயேசுவைப் பின்பற்றுவதற்கு இவையெல்லாம் தகும்,” என்று நபீலுக்குத் தெளிவாயிற்று.

புத்தகங்கள்

2013இலிருந்து 2017இல் அவர் நித்தியத்துக்குள் நுழையும்வரை ஒரு international ministryயின் ஆதரவோடு உலகின் பல நாடுகளுக்குச் சென்று கிறிஸ்துவின் நற்செய்தியை பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அறிவித்தார். குறிப்பாக இஸ்லாத்தைக்குறித்த பொதுவிவாதங்களில் கலந்துகொண்டான். இரட்சிக்கப்பட்ட நாளிலிருந்து மருத்துவமனையில் படுக்கும்வரை எப்போதும் பயணம். தான் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதைப்பற்றிய தன் சாட்சியை Seeking Allah, Finding Jesus: A Devout Muslim Encounters Christianity என்ற புத்தகத்தை 2014யிலும், Answering Jihad: A Better Way Forward என்ற புத்தகத்தை 2016 மார்ச் மாதத்திலும், No God But One: Allah or Jesus? A Former Muslim Investigates the Evidence for Islam and Christianity என்ற புத்தகத்தை 2016 ஆகஸ்ட் மாதத்திலும் எழுதி வெளியிட்டார். Seeking Allah, Finding Jesus என்ற புத்தகம் 2015இல் New York Times bestsellerஆக மாறியது. நபீல் அந்த ஆண்டின் மிகச் சிறந்த புதிய எழுத்தாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். Christianity Today என்ற இதழில் 2014இல் வளர்ந்துவரும் மதத் தலைவர்களைப்பற்றிய அட்டைப்படத்தில் “33 வயதுக்குட்பட்ட 33 பேர்”இல் நபீல் ஒருவராக அறிவிக்கப்பட்டார்.

கலந்துரையாடல்

நபீலும், அவருடைய நண்பர்கள் டேவிட் வுட், பால் ரெஸ்கல்லா ஆகியோர் அமெரிக்காவின் பல இடங்களில் நடந்த பல்வேறு விழாக்களுக்குச் சென்று அவைகளில் பங்குபெற்றவர்களுடன் தங்கள் கிறிஸ்தவ விசுவாசத்தைப்பற்றி அமைதியான முறையில் உரையாடினார்கள். ஒருமுறை அவர்கள் மூவரும் ஜூன் 18, 2010 அன்று டியர்போர்ன் அரபு விழாவில் கலந்துகொண்டவர்களுடன் கலந்துரையாடினார்கள். ஆனால் அந்த அரபு விழாவை ஏற்பாடு செய்த சில ஊழியர்களும், அதில் பங்குபெற்ற சிலரும் கொடுத்த தவறான தகவலின் அடிப்படையில் நபீலும், அவருடைய நண்பர்களும் மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையில் டியர்பார்ன் நகரத்தில் “அமைதியை மீறினார்கள்” என்ற குற்றச்சாட்டிற்காக கைது செய்யப்பட்டார்கள். டியர்போர்ன் மேயர் ஜான் பி. ஓ’ரெய்லி ஜூனியரும் அவர்கள் கைது செய்யப்பட்டதை நியாயப்படுத்தி ஓர் அறிக்கை வெளியிட்டார். அவர்கள் திருவிழாவில் கலந்துகொண்டபோது முஸ்லிம் இளைஞர்கள் சிலர் அவர்களிடம் கேள்விகள் கேட்பதையும், நபீலும் அவருடைய நண்பர்களும் அமைதியாகப் பதில் அளிப்பதையும் நிரூபிக்கும் வீடியோ ஆதாரத்தை நீதிமன்றத்தில் வழங்கினார்கள். எனவே, அவர்கள் மூவரும் அமைதியான உரையாடலில் ஈடுபட்டிருந்தார்கள் என்று டியர்போர்ன் நகரம் தீர்ப்பளித்தது. அவர்கள் விடுவிக்கப்பட்ட பிறகு, மூவரும் மேயர் ஓ’ரெய்லி, காவல்துறைத் தலைவர் ரொனால்ட் ஹடாட், 17 காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக தனித்தனி சிவில் வழக்கைத் தொடுத்தார்கள். அவர்கள் சார்பாக அமெரிக்க சுதந்திர சட்ட மையம் வாதிட்டது. குரேஷி, வுட், ரெஸ்கல்லா ஆகியோருக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது, டியர்பார்ன் அரசியலமைப்பு உரிமைகளை மீறியதாகவும், அவர்களைக் கைது செய்வதற்கு சட்டத்தில் எந்த அடிப்படையும் இல்லை என்றும் நீதிமன்றம் கண்டறிந்தது. தீர்ப்பின் ஒரு பகுதியாக, நகரம் முறையான மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், மூன்று ஆண்டுகளுக்கு அந்த மன்னிப்பை தங்கள் இணையதளத்தில் வைத்திருக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. மேயர் ஓ’ரெய்லி தீர்ப்பை ஏற்றுக்கொண்டார். அமெரிக்க சுதந்திர சட்ட மையத்தின் சார்பாக பேசிய ராபர்ட் மியூஸ், இந்த முடிவைப் பாராட்டினார், மேலும் கைது செய்யப்பட்டதற்கு வழிவகுத்த தவறான தகவலை வழங்கிய திருவிழாவில் கலந்து கொண்டவர்களும் பொறுப்பேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

டியர்பார்னில் நடந்த நிகழ்வுகளின் விளைவாக, நபீல் “மேற்கத்திய நாடுகளில் சுதந்திரமான பேச்சும், ஷரியாவும், இஸ்லாத்தும்” போன்ற காரியங்களில் கவனம் செலுத்தினான். இதுபோன்ற பல நிகழ்ச்சிகளின் விளைவாக முஸ்லிம்களுக்குக் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்க வேண்டும் என்ற பாரம் அவருக்குள் எழுந்தது.

குரேஷி பழைய டொமினியன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றபிறகு கிழக்கு வர்ஜீனியா மருத்துவப் பள்ளியில் மருத்துவப் பள்ளியில் பயின்றார். அங்கு டாக்டர் ஆஃப் மெடிசின் (எம்.டி.) முடித்தபிறகு, குரேஷி தன் வாழ்க்கையைக் கிறிஸ்தவ நற்செய்தியைப் படிப்பதிலும், பிரசங்கிப்பதிலும் செலவிட முடிவு செய்தார். மேலும் எனவே, அவர் ஒரு பன்னாட்டு ஊழியத்தில் சேர்ந்து உலகெங்கும் பிரசங்கித்தார்.

பல்கலைக்கழகங்களில் விரிவுரை

அவர் பயோலா பல்கலைக்கழகத்தில் apologeticsஇலும், டியூக் பல்கலைக்கழகத்தில் மதத்திலும் முதுகலைப் பட்டங்களை முடித்தார். அவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் யூத மதம் மற்றும் கிறிஸ்தவத்தில் எம்.பில் பட்டம் பெற்றார். 2017இல் இறந்தபோது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் புதிய ஏற்பாட்டில் முனைவர் பட்டத்துக்காகப் படித்துக்கொண்டிருந்தார்.

குரேஷி ஆக்ஸ்போர்டு, கொலம்பியா, டார்ட்மவுத், கார்னெல், பயோலா, ஜான்ஸ் ஹாப்கின்ஸ், ஹாங்காங் பல்கலைக்கழகங்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு விரிவுரையாற்றினார். அவர் வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியாவில் 18 பொது விவாதங்களில் பங்கேற்றார். 2015 இல், முஸ்லீம் அறிஞரான ஷபீர் அல்லியுடன் வெய்ன் மாநில பல்கலைக்கழகத்தில் விவாதம் செய்தார்.

2016இல் பிரஸ்ஸல்சில் நடந்த குண்டுவெடிப்புக்கும், ஈராக்கிலும் சிரியாவிலும் இஸ்லாமிய அரசு ஆட்சிபீடத்தில் அமர்ந்தபிறகும், இஸ்லாமிய பயங்கரவாதம் குர்ஆனின் சூரா 9யை எழுத்தின்படி புரிந்துகொள்வதின் விளைவு என்று USA Today இல் நபீல் ஒரு கடிதம் எழுதினார். பெரும்பாலான முஸ்லிம்கள் அந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். அவருடைய கடிதத்திற்கு முஸ்லீம் எழுத்தாளர்கள் பலர் பதிலளித்தார்கள். பதில் அளித்தவர்களுக்கு நன்றி கூறி, இப்படிப்பட்ட உரையாடலைத் தான் வரவேற்பதாகவும், பொது உரையாடலும், விவாதமும் முன்னோக்கிச் செல்வதற்கும், ஒருவரையொருவர் புரிந்துகொள்வதற்கும் முக்கியமாகும் என்று இன்னொரு கடிதம் எழுதினார். Answering Jihad என்ற தன் புத்தகத்தில் இந்த நிலையை அவர் விவரித்து எழுதுகிறார். ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியில் நேர்காணலின் போது தன் கருத்துக்களைப் பற்றி விரிவாகப் பேசினார்.

2014இல் மிச்செல் என்ற ஓர் அமெரிக்கக் கிறிஸ்தவப் பெண்ணைத் திருமணம் செய்தார். 2015இல் ஆயா குரேஷி பிறந்தாள்.

இஸ்லாமியர்களுக்குச் சரியான நற்செய்தியை அறிவிப்பதற்குக் கிறிஸ்தவர்கள் இஸ்லாத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் விரும்பினார்.

அவரிடம் ஓர் அவசர உணர்வு இருந்தது. ஒருமுறை தன் உடன் ஊழியக்காரரரிடம், “கர்த்தராகிய இயேசு என்னை எதற்காக அழைத்தாரோ, அதை நான் வேகமாகச் செய்து முடிக்க வேண்டும்,” என்று கூறினார். பூமியில் தன் வாழ்நாள் மிகக் குறுகியது என்ற உணர்வு நபீலுக்குள் இருந்தது.

2016 ஆகஸ்ட் மாதம் No God But One என்ற தன் புத்தக வெளியீட்டு நாளில், நபீல் ஃபேஸ்புக்கில் கீழ்க்கண்டவாறு எழுதினார்.

புற்றுநோய்பற்றி அறிவிப்பு

அன்பான நண்பர்களே, குடும்பத்தார்களே.

இது நான் எதிர்பார்க்காத ஓர் அறிவிப்பு, ஆனால் தேவன் தம் எல்லையற்ற, இறையாண்மையுள்ள ஞானத்தின்படி இந்தச் சுத்திகரிப்புக்காக என்னைத் தேர்ந்தெடுத்துள்ளார். அவர் என் உடல், ஆவிமூலம் மகிமைப்படுவார் என்று நான் நம்புகிறேன். எனக்கு வயிற்றுப் புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாகவும், அது மிகவும் மோசமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆயினும், தேவன் நாம் வேண்டிக்கொள்வதற்கும், நினைப்பதற்கும் அதிகமாகச் செய்ய வல்லவர் என்பதால் மருத்துவ சிகிச்சையைத் தொடங்குகிறேன்; அற்புத சுகத்தையும் ஆசையாய்த் தொடர்கிறேன்.

கடந்த சில நாட்களில், இதில் கர்த்தருடைய சித்தத்தை அறியவும், எதிர்காலம் எப்படி இருக்கும் என்றும் சிந்திக்கவும் முயன்றபோது என் ஆவி உயர்ந்து தாழ்ந்தது. ஆனால் இயேசுவே கர்த்தர், என்னை மீட்கும்படி அவர் தம் இரத்தத்தைச் சிந்தினார், அவருடைய காயங்களால் நான் குணமாகிவிட்டேன் என்பதை நான் ஒருபோதும் சந்தேகிக்கவில்லை. என் சாதனையினாலோ தகுதியினாலோ அல்ல, மாறாக மூவொரு தேவனின் கிருபையினாலும் இரக்கத்தினாலுமே என் ஆத்துமா இரட்சிக்கப்பட்டது என்று நான் உறுதியாக நம்புகிறேன். நான் பிதாவின் குழந்தை என்பதாலும், குமாரனால் மீட்கப்பட்டு, ஆவியானவரால் முத்திரையிடப்பட்டதாலும் நான் அவருக்கு மிகவும் நன்றி கூறுகிறேன்.இந்தப் புயலின் மத்தியில், நான் என் இரட்சிப்பைப்பற்றி கவலைப்பட வேண்டியதில்லை, அதற்காக நான் உம்மைப் போற்றுகிறேன், தேவனே.
. . நண்பர்களே, குடும்பத்தார்களே, நான் குணமடைய உபவாசித்துச் ஜெபிக்குமாறு நான் உங்களைத் தாழ்மையுடன் வேண்டுகிறேன். இதில் தேவனுடைய விருப்பம் என்னவென்று எனக்குத் தெரியும் என்று நான் கூறமாட்டேன். ஆனால் என் நெருங்கிய நண்பர்களும், நம்பிக்கைக்குரியவர்களும், “இது ஒரு சோதனை என்றும், இதன்மூலம் தேவன் என்னைச் சுத்திகரித்து உயிர்ப்பிப்பார் என்றும் நம்புகிறார்கள்.” அவருடைய சித்தம் நிறைவேறட்டும், இயேசுவின் நாமத்தினாலே நம்முடைய யெஹோவா ரபா என்னைக் குணமாக்கும்படி, என் சார்பாக உபவாசித்து, முழங்கால்களில் நின்று, அவரைத் தேட நான் உங்களை அழைக்கிறேன்.

நீங்கள் உபவாசித்து ஜெபிக்கையில், “உங்கள் வேண்டுதலினாலும் இயேசுகிறிஸ்துவினுடைய ஆவியின் உதவியினாலும் எனக்கு இரட்சிப்பாக முடியுமென்று அறிவேன். நான் ஒன்றிலும் வெட்கப்பட்டுப்போகாமல், எப்பொழுதும்போல இப்பொழுதும், மிகுந்த தைரியத்தோடே ஜீவனாலாகிலும், சாவினாலாகிலும், கிறிஸ்து என் சரீரத்தினாலே மகிமைப்படுவாரென்று எனக்கு உண்டாயிருக்கிற வாஞ்சைக்கும் நம்பிக்கைக்கும் தக்கதாய், அப்படி முடியும்.”  (பிலிப்பியர் 1:18-20)

அவருடைய மகிமைக்காக,

நபீல்

அவரைத் தெரிந்த அனைவரும் அவருக்கு ஆதரவளித்தார்கள், ஜெபித்தார்கள்.

அவரோடு தங்கள் உறவை முறித்திருந்த பெற்றோர், நபீலுக்குப் புற்றுநோய் என்றறிந்ததும் அவரோடு சேர்ந்து தங்கி அவரைக் கவனித்துக்கொள்ள அவர் வாழ்ந்த ஹூஸ்டன் நகருக்குக் குடிபெயர்ந்தார்கள். தங்கள் கசப்பு, காயம் எல்லாவற்றையும் தூக்கியெறிந்துவிட்டு அவரோடு தங்கினார்கள்.

புற்றுநோய்க்கு உரிய சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது வலைப்பதிவு இடுகைகள்மூலமாக நபீல் தன்னைக்குறித்த செய்திகளை உலகுக்குத் தெரிவித்துக்கொண்டேயிருந்தார். ஒருமுறை அவர் தன் இடுகையில், “தேவனின் இறையாண்மையே ஒரு கிறிஸ்தவனின் தலையணை,” என்று சார்லஸ் ஸ்பர்ஜன் சொன்னதை மேற்கோள் காட்டியிருந்தார். எல்லாரும் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்தார்கள். மருத்துவ ஆலோசனைகள், மருந்து மாத்திரைகள், புதிய மருந்துகள், ஜெபங்கள், உபவாசங்கள் …எல்லாம் இருந்தாலும் தேவனுடைய இறையாண்மையே நிற்கும் என்று நபீல் தெளிவாக அறிந்திருந்தார்.

நித்தியத்துக்குள் நுழைதல்

செப்டம்பர் 2017 இல், அவருடைய மருத்துவர்கள் அவரை நோய்த்தடுப்பு சிகிச்சையில் வைக்க முடிவு செய்தார்கள், ஏனென்றால் அதற்குமேல் மருத்துவ ரீதியாகச் செய்வதற்கு ஒன்றும் இல்லை. செப்டம்பர் 16, 2017இல், தேவனுடைய இறையாண்மையின்படி நபீல் தன் 34ஆவது வயதில் நித்தியத்துக்குள் நுழைந்தார்..

நபீல் மின்னல்போல் வந்தார். இரவின் இருண்ட வானத்தை ஒளிரச் செய்தார். ஒளிரச் செய்ய ஒளி தந்தவரிடம் திரும்பிவிட்டார்.

நபீல் தன் ஆண்டவருக்கு தன் இறுதி மூச்சுவரை சாட்சி பகர்ந்தார். கர்த்தருடைய தூதுவனாகப் பணிபுரிந்தார். அவர் கடைசியாகச் சொன்ன சில வார்த்தைகளைச் சொல்லி முடித்துக்கொள்கிறேன். “நம் தேவன் அன்பின் தேவன். அதுவே நம்மை உந்தித்தள்ளும் ஆற்றலாக இருக்க வேண்டும். அதுவே நம் மனதில் மேலோங்கி நிற்க வேண்டும். நீங்கள் ஒரு இந்துவிடமோ, யூதனிடமோ, முஸ்லிமிடமோ, கிறிஸ்தவனிடமோ யாரிடம் பேசினாலும் சரி. நீதியின்மேல் பசிதாகம் உள்ளவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் அவர்கள் திருப்தியடைவார்கள் என்பதை மறக்க வேண்டாம்”. ஆமென்.