Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More

வேத வாசிப்பு 

யோவான் 3:6; அப். 6:3; ரோமர் 12:2; கலா. 6:1; எபே. 4:23; 1 கொரி. 2:1-5, 13-15; 15:45-50; எபி. 9:14; பதினாறாவது பாடத்திலுள்ள வசனங்களையும் பார்க்கவும்

17-இயற்கையான மனிதனும், ஆவிக்குரிய மனிதனும்.pdf

இயற்கையான மனிதனும், ஆவிக்குரிய மனிதனும் - 17

ஆத்துமாவுக்கும், ஆவிக்கும் இடையேயுள்ள வேறுபாட்டை நாம் 16ஆம் அதிகாரத்தில் பார்த்தோம். இப்போது நாம் ஆத்தும மனிதனுக்கும், ஆவிக்குரிய மனிதனுக்கும் இடையேயுள்ள வேறுபாட்டைப் பார்ப்போம்.

ஆத்தும மனிதன் என்பவன் இயற்கையான மனிதன். படைக்கப்பட்ட தன் ஆத்துமாவினால் மாத்திரம் வாழ்கிறவன் இயற்கையான மனிதன். அவன் நித்திய ஜீவன் இல்லாதவன்; அவன் பரிசுத்த ஆவியானவர் இல்லாதவன்; “இயற்கையான” என்ற வார்த்தை வேதாகமத்தில் “ஆவிக்குரியதல்லாத”“உடலுக்குரிய”“உலகத்துக்குரிய” என்று பலவிதமாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. எனினும், இந்த வார்த்தையைக் கறாராக மொழிபெயர்த்தால் “மனம்சார்ந்த” என்று மொழிபெயர்க்க வேண்டும் அல்லது இந்த வார்த்தையின் முக்கியத்துவத்தைச் சரியாகப் புரிந்துகொள்வதற்காக “ஆத்துமார்த்தமான” என்ற ஒரு புதிய வார்த்தையை நாம் உருவாக்கலாம். ஆத்துமார்த்தமான மனிதன் என்றால் ஆத்துமாவினால், ஆத்துமத்திலிருந்து, ஆத்துமாவுக்காக வாழ்கிற மனிதன் என்று பொருள். ஆத்தும மனிதனுக்கு எதிர்ப்பதம் ஆவிக்குரிய மனிதன். ஆவிக்குரிய மனிதன் என்பவன் அவனுடைய மனித ஆவியில் வாசம்பண்ணுகிற பரிசுத்த ஆவியினால் இயக்கப்பட்டு, ஆளப்பட்டு, கட்டுப்படுத்தப்படுகிற மனிதன் என்று பொருள். ஆவிக்குரிய மனிதனை “மனிதனாகிய கிறிஸ்து இயேசுவில்” பார்க்க முடிகிறது.

சிலுவை சுயத்தை மையமாகக்கொண்ட மனித இயல்போடு மட்டும் இடைப்படுவதாக நினைக்க வேண்டாம்; அது இயல்பாக நாம் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறோமோ அவை எல்லாவற்றோடும், அதாவது தேவன் நமக்குத் தந்திருக்கிற நம் இயற்கையான திறமைகள், ஆற்றல்கள், தாலந்துகள், நல்ல பண்புகள்போன்ற எல்லாவற்றோடும் இடைப்படுகிறது. “பழைய” மனிதன் விலகிப் “புதிய” மனிதனுக்கு வழிவிட்டால் மட்டும் போதாது. ஆத்தும மனிதன் விலகி ஆவிக்குரிய மனிதனுக்கு வழிகொடுக்க வேண்டும்.

ஆத்தும மனிதன் என்று சொல்லும்போது ஆதாம் விலக்கப்பட்ட மரத்தின் கனியைச் சாப்பிடுவதற்குமுன், வீழ்ச்சிக்குமுன், தேவனால் படைக்கப்பட்டபோது எப்படிப்பட்டவனாக இருந்தானோ அந்த மனிதனை, “ஜீவனுள்ள ஆத்துமா”வாகிய அந்த மனிதனை, இயல்பின்படியான மனிதனை, மாம்சமும் இரத்தமுமான மனிதனை, “பூமியிலிருந்து உண்டான” மனிதனை, நித்திய ஜீவன் இல்லாத மனிதனைக் குறிப்பிடுகிறேன்.

இதை இப்படி விளக்கலாம். தேவன் திட்டமிட்டிருந்தபடி ஆதாம் ஜீவமரத்தில் பங்குபெற்றிருந்தால், அவன் இந்தப் பூமியில் மட்டுமே வாழ்வதற்கு மட்டுப்படுத்தப்பட்டவனாக இல்லாமல், ஆவிக்குரிய உலகத்தைத் தொடர்புகொண்டு வாழ்வதற்குத் திராணியுடைய ஆவிக்குரிய மனிதனாகப் படிப்படியாக மாற்றப்பட்டிருப்பான். ஆனால், அறிவுமரத்தில் பங்குபெற்றதின் விளைவாக அவன் விழுந்துபோன மனிதனாக, விழுந்துபோனதும் புறக்கணிக்கப்பட்டதுமான மனித இனத்தின் தகப்பனாக, பழைய மனிதனாக மாறினான்.

அவன் இந்த இரண்டு மரங்களிலும் பங்குபெறாமல் இருந்திருந்தால் படைக்கப்பட்ட நிலையிலே, “பூமிக்குரியவனாக”, “ஜீவனுள்ள ஆத்துமாவாக”, “இயற்கையான மனிதனாக”, இந்தப் பூமியில் மட்டுமே வாழ்வதற்கேற்ற கட்டமைப்பு உடையவனாக இருந்திருப்பான். அவன் படைக்கப்பட்டபோது நித்திய ஜீவனையும், மகிமையையும் பெற்றுக்கொள்வதற்கேற்ற ஆற்றல் அவனிடம் இருந்தது; ஆனால், நித்திய ஜீவனும், மகிமையும் அப்போது அவனிடம் இருக்கவில்லை.

எந்த உலகத்தில் வாழ்வதற்கேற்ற கட்டமைப்பு நம்மிடம் இருக்கிறதோ அந்த உலகத்தில்தான் நாம் வாழ முடியும். மனிதன் அவனுடைய இயல்பின்படி, படைக்கப்பட்ட நிலையில், இப்போதைய விழுந்துபோன நிலையில், தேவனுடைய பிரசன்னத்தில் வாழ முடியாது.

“…மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டாது; அழிவுள்ளது அழியாமையைச் சுதந்தரிப்பதுமில்லை” (1 கொரி. 15:50).

எனவே, நாம் இரட்சிக்கப்படும்போது, அதாவது நாம் “மீண்டும் படைக்கப்படும்”போது, கர்த்தர் நம் பாவங்களோடு மட்டும் இடைப்படுவதில்லை; நித்திய ஜீவன் என்ற கொடையின்மூலம் அவர் நமக்கு ஓர் ஆவிக்குரிய கட்டமைப்பையும் தருகிறார். இதன் பொருள் என்னவென்று பூரண மனிதனாகிய நம் ஆண்டவராகிய இயேசுவில் கொஞ்சம் பார்த்தோம்.

ஜீவமரத்தின்மூலம் தம் அளவற்ற திட்டத்தில் பங்குபெறுவதற்கு, தம்மோடு ஓர் ஒப்பற்ற உறவுகொள்வதற்கு தேவன் ஆதாமுக்கு ஓர் வழி கொடுத்தார். ஆனால், அதை அனுபவிப்பதற்கு அவன் தன் சுயாதீனத்தை, தன் தனித்தன்மையை, படைக்கப்பட்டபோது தன்னிடமிருந்த திறமைகளைத் தேவனிடம் ஒப்படைக்கவேண்டியிருந்தது. அவன் ஒப்படைக்கவில்லை.

நமக்குப் பாவத்திலிருந்து மாத்திரம் விடுதலை கிடைத்தால் போதாது; ஆதாம் தேவனுடன் கொண்டிருந்திருக்கவேண்டிய, ஆனால் தவறவிட்ட, அந்த உறவை அனுபவிப்பதற்கு நமக்கு ஓர் ஆவிக்குரிய கட்டமைப்பு தேவைப்படுகிறது. அதை பெறும்போது, இங்கு இந்தப் பூமியில் இப்போதே நாம் உண்மையாகவே பரலோகவாசிகளைப்போல் வாழ ஆரம்பிக்கிறோம். ஆண்டவராகிய இயேசு இந்தப் பூமியில் வாழ்ந்தபோது எப்போதும் பிதாவைச் சார்ந்து, எல்லாவற்றிலும் பிதாவுக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்ததுபோல் நாமும் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.

இவைகளெல்லாம் உள்ளார்ந்தவிதத்தில் நித்திய ஜீவனாகிய கொடையில் இருக்கின்றன. ஆனால், நாம் இதைப் பற்றிப்பிடித்துக்கொள்ள வேண்டும். இதற்கு, வீழ்ச்சிக்குமுன் ஆதாம் செய்யவேண்டியிருந்ததுபோல, நமக்குரிய எல்லாவற்றையும் நாமாகவே முன்வந்து மனமுவந்து கர்த்தருக்கு ஒப்படைத்துவிட்டு, முற்றிலும் அவரையே சார்ந்துகொள்ள வேண்டும். பிதாவுக்குத் தன்னை முழுமையாக ஒப்படைப்பதின் பொருளை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவை நமக்கு வெளிப்படுத்துகிறது.

நடைமுறையில் இதற்கு என்ன பொருள்? நாம் மறுபடிபிறப்பதற்குமுன் நம் வாழ்க்கையில் நம்மிடம் இருந்த நம் இயற்கையான திறமைகளையும், ஆற்றல்களையும், தாலந்துகளையும் நாம் மறுபடிபிறந்தபிறகு கர்த்தருக்காகப் பயன்படுத்தலாம் என்றும், பயன்படுத்த வேண்டும் என்றும் நாம் நினைக்கிறோம். ஆனால் சரியாகச் சொல்வதானால், இயற்கையான இந்தத் திறமைகளும், ஆற்றல்களும் சிலுவையின்கீழ் தொடர்ந்து இருக்கவில்லையென்றால், ஆவியானவருடைய பாதுகாப்பான கைகளில் தொடர்ந்து இருக்கவில்லையென்றால், அது அந்த நபருக்கும், சபைக்கும் ஓர் இடையூறாக, சொல்லப்போனால், ஒரு கேடாகக்கூட மாறிவிடலாம்.

சிலுவையின் வழியை விட்டுவிட்டு வேறு ஏதோவொரு புறவழியில் செல்கிற போக்கு கிறிஸ்தவர்களிடையே இருக்கிறது. சிலுவை மனித இயல்புக்கு இடறலாக இருக்கிறது. ஆகையால், கிறிஸ்தவர்களுக்கும், உலகத்துக்கும் அது இடறலாகவே இருக்கிறது. நாம் சிலுவையைத் தவிர்த்தால் அது நமக்குத்தான் நாசம். நாம் நம் சுயத்துக்குரிய எதையும் ஆவிக்குரிய வாழ்க்கைக்குள் கொண்டுபோக முடியாது. தேவன் தந்த திறமைகளெல்லாம் தவறானவை என்பதால் அல்ல. கர்த்தருடைய பாதுகாப்பான கைகளில் இருந்தாலொழிய அவைகள் ஆவிக்குரிய நோக்கத்தை நிறைவேற்ற பயன்படாது.

எடுத்துக்காட்டாக, புத்திசாலித்தனமான ஒருவன் ஆவிக்குரிய காரியங்களைப் படித்து, விளக்குவதற்குத் தகுதியானவன் என்று நாம் நினைக்கிறோம். அப்படியல்ல. “இயல்பின்படி என்னால் இதைச் செய்ய முடியாது, இயலாது, இதற்கான தகுதி என்னிடம் இல்லை,” என்று அவன் அறிக்கை செய்ய வேண்டும். அவன் தன் மனதைக் கர்த்தருக்கு ஒப்படைக்க வேண்டும், அதைப் புதிதாக்குமாறு வேண்ட வேண்டும், கர்த்தரைச் சார்ந்து நினைப்பதற்கும், படிப்பதற்கும் அவன் கற்றுக்கொள்ள வேண்டும்.

நல்ல பேச்சாற்றல் உடையவன் தேவனுடைய காரியங்களைப் பிரசங்கிப்பதற்கும், போதிப்பதற்கும் தகுதியானவன் என்று நாம் நினைக்கிறோம். அப்படியல்ல. அவன் தன் இயலாமையை ஒப்புக்கொள்ள வேண்டும். இயற்கையான தன் பேச்சுத்திறமையை கைவிட்டுவிட்டு, உண்மையாகவே அவன் கர்த்தரை நம்ப வேண்டும், பரிசுத்த ஆவியானவரால் மட்டுமே மனிதர்களுடைய இருதயங்களுக்குள் வீரியமாகச் சொல்ல முடியும்.

பிறப்பால் இயல்பாகவே தலைவனாக இருக்கிறவன் தேவனுடைய மக்களை நடத்தத் தகுதியானவன் என்று நாம் நினைக்கிறோம். அப்படியல்ல. ஆவிக்குரிய தலைமைத்துவம் என்பது முற்றிலும் வேறுபட்டது. ஆண்டவராகிய இயேசுவைப் பாருங்கள். பிறருடைய விருப்பங்களை, சித்தங்களை, சாதுரியமாக மடக்கக்கூடிய, பிறருடைய உணர்ச்சிகளைத் தூண்டிவிடுகிற அல்லது மனங்களை வளைக்கிற பிரபலமான ஆட்கள் நிறைய இருக்கிறார்கள். ஆனால், இது ஆவிக்குரிய தலைமைத்துவம் இல்லை.

பிறப்பால் நல்ல திறமையான அமைப்பாளன் சபையை அல்லது தேவனுடைய வேலையை ஒழுங்கமைப்பதற்கும், நடத்துவதற்கும், நிர்வகிப்பதற்கும் தகுதியானவன் என்று நாம் நினைக்கிறோம். அப்படியல்ல. அவன் தன் இயலாமையை அறிக்கைசெய்ய வேண்டும்; கர்த்தரையே சார்ந்து வாழ வேண்டும். அப்போஸ்தலர் நடப்படிகள் 6ஆம் அதிகாரத்தில் பணத்தைக் கையாள்வதற்காகத் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் முதல் தகுதி என்னவென்றால் அவர்கள் “ஆவியினால் நிறைந்திருக்க வேண்டும்.”

இயல்பின்படி நம்மிடம் என்ன இருக்கிறதோ, நாம் என்னவாக இருக்கிறோமோ அவைகளால் தாமாகவே தேவனுடைய அரசுக்கு உதவமுடியாது என்பதை நாம் உணர்ந்து, ஒப்புக்கொள்ள வேண்டும். இயற்கையான திறமைகள் கர்த்தருடைய கைகளில் இருக்கும்போது மட்டுமே, உண்மையாகவே அவரைச் சார்ந்திருக்கும்போது மட்டுமே, ஆவிக்குரிய வகையில் பயனுள்ளவைகளாக மாறுகின்றன. நாம் என்னவாக இருக்கிறோமோ அதையும், நம்மிடம் என்ன இருக்கிறதோ அதையும் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று கர்த்தருக்கு மட்டுமே தெரியும். நிச்சயமாக அவர் பயன்படுத்துவார். ஆனால், அவருடைய விருப்பம்போல, அவருடைய நேரத்தில்.

ஆத்துமத்துக்குரியத்தையும். ஆவிக்குரியத்தையும் நாம் தொடர்ந்து குழப்பிக்கொண்டேயிருக்கிறோம். பிறப்பால் நம்மிடம் கவர்ச்சியான ஆளுமை, பலமான குணம், நீதியுள்ள பிறவிக்குணம், சாந்தமான மனநிலை, தாலந்துகள் போன்றவைகள் இருக்கலாம். ஆனால், இவைகளை ஆவியானவரின் கனிகளோடும், வரங்களோடும், கிருபையின்மூலமாகவும் புதுபிறப்பின்மூலமாகவும் நாம் என்னவாக இருக்கிறோமோ, நம்மிடம் என்ன இருக்கிறதோ அவைகளோடு குழப்பிக்கொள்ளக்கூடாது. எடுத்துக்காட்டாக இயற்கையான ஆர்வமும், ஆற்றலும், வைராக்கியமும் ஆவிக்குரிய ஆர்வமும், ஆற்றலும், வைராக்கியமும் ஒன்றல்ல. இயற்கையானது மங்கிப்போகும்; ஆவிக்குரியது நிலைத்திருக்கும். இயற்கையான கவர்ச்சியை கிறிஸ்துவின் உண்மையான தன்மையோடு குழப்பக்கூடாது.

கிருபையின்மூலமாக நாம் என்னவாக மாறுகிறோமோ அது பெரும்பாலும் நாம் இயல்பாக எப்படிப்பட்டவர்களாக இருக்கிறோமோ அதற்கு முரணாகவே இருக்கும். மிகத் திறமையான மோசே, பவுல் போன்றவர்களுடன் கர்த்தர் எப்படி இடைப்பட்டார் என்பதிலிருந்து இது மிகத் தெளிவாகத் தெரிகிறது. தேவன் அவர்களையும், அவர்களுடைய இயற்கையான திறமைகளையும் பயன்படுத்துவதற்குமுன் அவர்களுடைய தற்சார்பு நிலையிலிருந்து அவர்களை வெறுமையாக்கி, தம்மிடம் சரணடைந்து, தம்மை மட்டுமே சார்ந்துகொள்ளும் நிலைக்கு அவர்களைக் கொண்டுவர வேண்டியிருந்தது.

இதுவே கிருபை சிலுவையின்மூலமாக நமக்காகச் செய்துகொண்டிருந்த முக்கியமான, ஆழமான மருவுருவாக்கும் வேலையாகும். நாம் அவருடைய குமாரர்கள் என்ற முறையில் நாம் உண்மையாகவே அவரைச் சார்ந்து வாழ்வதற்கு கர்த்தர் நம் முழு ஒத்துழைப்பையும் நாடுகிறார்.

வேத வாசிப்பு 

யோவான் 3:6; அப். 6:3; ரோமர் 12:2; கலா. 6:1; எபே. 4:23; 1 கொரி. 2:1-5, 13-15; 15:45-50; எபி. 9:14; பதினாறாவது பாடத்திலுள்ள வசனங்களையும் பார்க்கவும்