ஆஸ்வால்ட் சேம்பர்ஸ் (24 ஜூலை 1874 - 15 நவம்பர் 1917) ஸ்காட்லாந்தில் பிறந்து, இங்கிலாந்து, ஜப்பான், அமெரிக்கா, எகிப்து போன்ற பல நாடுகளில் மதப்போதகராகவும், வேதாகமக் கல்லூரியில் ஆசிரியராகவும் ஊழியம் செய்தவர். அவருடைய MY Utmost for His Highest என்ற தியானப் புத்தகம் மிகவும் பிரபலமானது.
1917ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி ஆஸ்வால்ட் சேம்பர்ஸ் குடல் அழற்சி நோயால் தாக்கப்பட்டார். முதல் உலகப் போரின்போது அவர் எகிப்தில் சிப்பாய்களிடையே ஒரு மதகுருவாகப் பணியாற்றினார். காயமடைந்த வீரர்களுக்குப் படுக்கைகள் அவசரமாகத் தேவைப்படும் என்பதால் அவர் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்வதைத் தவிர்த்தார். 1917, அக்டோபர் 29ஆம் தேதி அதி அவசர குடல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், சேம்பர்ஸ் அறுவைசிகிச்சைக்கு இரண்டு வாரங்களுக்குப்பிறகு காலமானார். அவர் ஒய்எம்சிஏ மதகுருவாக இருந்தபோதும், முழு இராணுவ மரியாதையுடன் கெய்ரோவில் அடக்கம் செய்யப்பட்டார்.
இலண்டனில் வேதாகமக் கல்லூரியிலும், எகிப்தில் சீடௌன் இராணுவ முகாம்களிலும் ஆஸ்வால்டு பேசியவைகளை அவருடைய மனைவி பிடி சுருக்கெழுத்தில் எழுதிவைத்திருந்தார். ஆஸ்வால்டின் மறைவுக்குப்பின் அவருடைய மனைவி அவைகளைப் புத்தகங்களாகவும், கட்டுரைகளாகவும் வெளியிட்டார். முப்பது புத்தகங்களில் மிகவும் வெற்றிகரமானது, பிரபலமானது MY Utmost for His Highest (1924). இது அனுதின மன்னா, அன்றன்றுள்ள அப்பம்போல், 365 பகுதிகள் கொண்ட ஒரு தியானப் புத்தகம். ஒவ்வொரு பத்தியும் சுமார் 500 வார்த்தைகள் கொண்டது. இந்தப் புத்தகம் இதுவரை 1 கோடியே 30 இலட்சம் பிரதிகள் விற்பனையாகியுள்ளன. 40 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
1917ஆம் ஆண்டு, நவம்பர் 16. பல்லாயிரம் போர்வீரர்கள் புடைசூழ, எகிப்தின் பாமரர்கள் பிரமித்துப் பார்க்க, இராணுவ உயர் அதிகாரிகள் அணிவகுக்க, ஓர் இறுதி ஊர்வலம் எகிப்தில் நைல் நதியின்குறுக்கே பழைய கெய்ரோவில் உள்ள பிரிட்டிஷ் இராணுவக் கல்லறைத் தோட்டத்துக்குள் நுழைகிறது. பிரிட்டிஷ் இராணுவத்தில் YMCA மதபோதகராகப் பணியாற்றிய இவர், அவருடைய ஆவிக்குரிய ஞானத்தையும், அவருடைய இனிமையான நட்பையும் மிக அதிகமாக நேசித்தவர்களால், எகிப்தில் அவரோடு பணியாற்றிய நண்பர்களால் அங்கு அடக்கம் செய்யப்பட்டார். கொடைபெற்ற இந்த வாலிபனைத் தேவன் இளம் வயதிலேயே ஏன் எடுத்துக்கொண்டார் என்று அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர் மரித்து நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்று எகிப்தில் அவருடைய கல்லறையின்மேல் ஓர் எளிமையான கல் நிற்கிறது. மக்கள் அவரை மறந்திருப்பார்கள் என்று நினைத்திருக்கலாம் அல்லது மறந்துவிடுவார்கள் என்று எதிர்பார்த்திருக்கலாம். மாறாக, மறக்கவில்லை. அவர் இன்னும் மக்கள் மனதில் வாழ்கிறார்.
இவருடைய பெயர் ஆஸ்வால்ட் சேம்பர்ஸ். இரண்டு ஆண்டுகள் என் காலைத் தியானத்திற்காக நான் பயன்படுத்திய, இப்போதும் தேவைப்படும்போதெல்லாம் திருப்பிப்பார்ப்பதற்காக நான் பயன்படுத்திக்கொண்டிருக்கிற, ஒரு புத்தகம் உண்டு. ஒருவேளை உங்களில் சிலர் இந்தப் புத்தகத்தைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம்; வேறு சிலர் இதை வாசித்திருக்கவும் கூடும். இந்தப் புத்தகத்தின் பெயர் My utmost for his highest. உன்னதமானவருக்கு என் உச்சிதம். அதிகமாக விற்பனையாகிக்கொண்டிருக்கும் கிறிஸ்தவப் புத்தகங்களில் இதுவும் ஒன்று. இது ஒரு தியானப் புத்தகம். இது 1927இல் முதன்முதலாக வெளியிடப்பட்டதிலிருந்து இன்றுவரை சுமார் 1 கோடியே 30 இலட்சம் பிரதிகள் விற்பனையாகியிருக்கிறது. இந்தப் புத்தகம் 40க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
இது தன் உச்சிதமானதை உன்னதமானவருக்குக் கொடுத்த ஒரு மனிதனையும், அந்த மனிதனுடைய வார்த்தைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த ஒரு பெண்ணையும்பற்றிய சுருக்கமான வரலாறு.
ஆஸ்வால்ட் சேம்பெர்ஸ் ஸ்காட்லாந்தின் வடகிழக்கில் உள்ள அபெர்டீன் என்ற நகரத்தில் 1874ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி பிறந்தார். அவருடைய அப்பா reverend கிளாரன்ஸ், அம்மா அன்னா. நல்ல கிறிஸ்தவக் குடும்பம். அப்பா கண்டிப்பானவர்; அம்மா கனிவானவர். அவர்களுக்கு மொத்தம் ஒன்பது குழந்தைகள். ஆஸ்வால்ட் எட்டாவது குழந்தை.
இளமையில் அவர் எந்தக் கவலையுமின்றி மகிழ்ச்சியோடு துள்ளித்திரிந்தார்; அருகிலிருந்த ஆற்றில் ஆர்வத்தோடு நீந்தி மகிழ்ந்தார்; குன்றுகளிலும், மலைகளிலும் காலாற நடந்தார்; மரங்களில் ஏறிக்குதித்தார்; பிற்காலத்தில் அவர் ஒரு சிறந்த அறிஞராக மாறுவார் என்பதற்கான எந்த அறிகுறியும் அப்போது தெரியவில்லை. இருப்பினும், கலையில் அவருக்கு அசாதாரண திறமை இருந்தது.
ஆஸ்வால்ட் குழந்தையாக இருந்தபோது, தேவன்மேல் உண்மையாகவே ஒரு குழந்தையைப்போல் விசுவாசம் வைத்திருந்தார். அவருக்கு அப்போது வயது ஐந்து. சிறு வயதில் ஆஸ்வால்ட் இரவு நேரத்தில் தன் படுக்கையருகே முழங்காலில் நின்று உரத்த சத்தத்தோடு ஜெபிப்பாராம். அவர் ஜெபிப்பதைப் பார்ப்பதாகவும், கேட்பதற்காகவும் அவருடைய மூத்த சகோதர்கள் காத்திருப்பார்களாம், ஒளிந்திருந்து கேட்பார்களாம். ஒருநாள் ஆஸ்வால்ட் தேவனிடம், “தேவனே, எனக்கு இரண்டு சீமப்பெருச்சாளி வேண்டும். நான் அவைகளை வீட்டில் செல்லப்பிராணிகளாக வளர்க்க விரும்புகிறேன்,” என்று ஜெபித்ததை அவருடைய சகோதரர்கள் ஒட்டுக்கேட்டார்கள். அவர் ஒவ்வொரு நாளும் சீமப்பெருச்சாளிகளுக்காக ஊக்கமாக, விடாமல் ஜெபித்தார். அவருடைய சகோதரர்களும் இதைக் கேட்டுக்கொண்டேயிருந்தார்கள். ஒருநாள், “தேவனே, எனக்கு இவைகளை இன்று தாரும்,” என்று ஆஸ்வால்ட் ஜெபித்தார். அடுத்தநாள் அவருக்கு இரண்டு சீமப் பெருச்சாளிகள் பட்டுவாடா செய்யப்பட்டிருந்தன. உடனே, அவர் அவைகளை எடுத்துக்கொண்டு, நேரே தன் அறைக்குச் சென்று, “தேவனே, நீர் என் ஜெபத்தைக் கேட்டு, இரண்டு சீமப் பெருச்சாளிகளை அனுப்பியதற்காக நன்றி,” என்று தேவனுக்கு நன்றி கூறினார். அவர் தன் சகோதரர்களிடமோ, பெற்றோரிடமோ ஒருபோதும், “நீங்களா வாங்கி அனுப்பினீர்கள்?” என்று கேட்கவில்லை. தேவனே அவைகளைத் தனக்குக் கொடுத்தார் என்று அவர் உறுதியாக நம்பினார். ஆம், சிறுவயதில் அவர் தேவனை இப்படித்தான் விசுவாசித்தார். அவருடைய பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு நல்ல போதனைகளைப் போதித்தார்கள்; வேதாகமத்தை நேர்த்தியாகக் கற்பித்தார்கள்.
பள்ளியில் பயிற்றுவிக்கும் வழக்கமான பாடங்களைக் கற்பதில் அவர் அதிக ஆர்வம் காட்டவில்லை. ஆனால், கலையிலும், ஓவியங்கள் வரைவதிலும் அவர் சிறந்து விளங்கினார். ஒருமுறை அவர் தன் பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு ஓர் அழகான கழுகின் படம் வரைந்து கொடுத்தார். அதிகாரிகளோ, விருந்தினர்களோ அந்தப் பள்ளிக்கு வருகைதந்தபோதெல்லாம் தலைமை ஆசிரியர் ஆஸ்வால்ட் வரைந்த கழுகின் படத்தை எடுத்து வரவேற்பறையில் வைத்தார். அது அவ்வளவு அழகாக இருந்தது! ஓவியம் வரைவதில் அவர் மிகத் திறமைசாலி.
அதுபோல, பியானோ வாசிப்பதிலும் அவர் வல்லவர். ஆனால், ஆஸ்வால்டைவிட அவருடைய மூத்த சகோதரர் இன்னும் நன்றாக வாசித்தார். ஆகவே, பியானோ வாசிப்பதிலும் ஆஸ்வால்ட் திறைமையானவர் என்று பலருக்குத் தெரியாமல் போனது; சூரிய வெளிச்சத்தில் நிலா வெளிச்சம் மங்கிற்று.
அவருடைய 15ஆவது வயதில் அவருடைய குடும்பம் ஸ்காட்லாந்திலிருந்து இலண்டனுக்குக் குடிபெயர்ந்தது. ஆஸ்வால்ட் இதைக்குறித்து மகிழ்ச்சியடைந்தார். கலைத்துறையில் மேற்படிப்பு படிக்கவும், நல்ல வேலை கிடைக்கவும், நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவும் இலண்டன்தான் சரியான இடம் என்று அவர் நினைத்தார். அது உண்மைதான். அங்கு அவர் கண்ட அற்புதமான கட்டிடக்கலையும், பேரரசின் அடையாளச் சின்னங்களும் ஆஸ்வால்டின் கலை ஆர்வத்தை இன்னும் அதிகமாகத் தூண்டின; அவைகளால் அவர் ஈர்க்கப்பட்டார், இழுக்கப்பட்டார். அவை அவருடைய கலை ஆர்வத்தைக் கிளர்ந்தெழுப்பின. தன் திறமைகளைச் செதுக்குவதற்கும், தன் கலை ஆற்றல்களை வளர்ப்பதற்கும் இலண்டன்தான் மிகச் சரியான இடம் என்று அவர் உறுதியாக நம்பினார். எனவே, அவருடைய குடும்பம் இலண்டனுக்குக் குடிபெயர்ந்ததில் அவருக்கு மகிழ்ச்சி.
ஒருபுறம் மகிழ்ச்சி. இன்னொரு புறம், அவர் தான் இலண்டனில் கண்ட காட்சிகளை, ஸ்காட்லாந்தின் நிலவரத்தோடு ஒப்பிட்டுப்பார்த்தார்; அது அவருக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது. இலண்டனில், எல்லாம் அதிகமாக இருந்தது. அவர் 15 வயது இளைஞன். இருப்பினும், அவர் இலண்டனின் கவர்ச்சிகளை ஆடம்பரம், ஊதாரித்தனம் என்று கருதினார். ஒரு புறம் கண்கவர் நட்சத்திர உணவகங்கள், ஆடம்பரமான தங்கும் விடுதிகள், பளபளப்பான திரையரங்குகள்; இன்னொருபுறம், அதே தெருவில், கண்ணீரில் ஏழைகள், வறுமையில் வறியவர்கள், முடங்கிக்கிடக்கும் முதியவர்கள். ஒரு புறம் வளமை; மறுபுறம் வறுமை. ஒருபுறம் உயர்ந்த மாடிவீடுகள்; மறுபுறம் தாழ்ந்த குடிசைகள். சேம்பர்ஸ் ஒரு கிறிஸ்தவ வீட்டில் வளர்ந்திருந்தாலும், போதுமான அளவுக்குப் போதனைகளைக் கற்றிருந்தாலும், வேதாகமத்தை ஓரளவுக்கு அறிந்திருந்தாலும், இலண்டனில் அவர் கண்ட முரண்பட்ட காட்சிகள் அவருக்குள் பல கேள்விகளை எழுப்பின. அவர் எதையோ தேடினார். தான் தேடுவது என்னவென்பதை அவர் தன் இருதயத்தில் அறிந்திருந்தார். அவர் இதுவரைத் தனிப்பட்ட முறையில் தேவனை அறியவில்லை; தன்னைத் தேவனுக்கு அர்ப்பணிக்கவில்லை. ஆனால், அவருக்குள் ஆவிக்குரிய தேடல்களும், ஏக்கங்களும் இருந்தன.
அவருக்கு அப்போது 16 வயது இருக்கலாம். அப்போது இலண்டனில் ஒரு மாநாட்டில் ஒரு பிரபல பிரசங்கியார் பிரசங்கித்துக்கொண்டிருந்தார். ஒரு நாள் ஆஸ்வால்டின் அப்பா அவரை அந்தக் கூட்டத்துக்கு அழைத்துச் சென்றார். இந்தப் பிரசங்கியார் வேறு யாரும் அல்ல. C H Spurgeon என்றழைக்கப்படும் Charles Spurgeon. அவர் அந்தக் கூட்டத்தில் மாலை நேரங்களில் பேசினார். சார்லஸ் ஸ்பர்ஜனை பிரசங்கிகளின் இளவரசன் என்று சொல்வதுண்டு. ஒருவன் அவருடைய பிரசங்கத்தைத் கேட்டபிறகு, அதைக் கேட்பதற்குமுன்பு இருந்ததுபோல் இருக்க முடியாது. அது இடி முழக்கமா, இளம் தென்றலா, சுடும் நெருப்பா என்பது கேட்பவர்களைப் பொறுத்தது. ஆனால், மாற்றம் நிச்சயம். ஸ்பர்ஜனின் பிரசங்கத்தைக் கேட்டதும், ஆஸ்வால்ட் தொடப்பட்டார் என்று சொல்வதைவிட, தாக்கப்பட்டார் என்று சொல்லலாம். அது அவரை உலுக்கியது, உசுப்பியது. கூட்டத்தின் முடிவில் ஸ்பர்ஜன், “நீங்கள் ஆண்டவராகிய இயேசுவை விசுவாசித்தால், அவரைத் தேவனாக ஏற்றுக்கொள்ள விரும்பினால், அவரை உங்கள் இரட்சகராகப் பெற்றுக்கொள்ள விரும்பினால், முன்னால் வாருங்கள்,” என்று அழைப்பு விடுத்தார். ஆஸ்வால்ட் எழுந்து முன்னால் செல்ல விரும்பினார். ஆனால், செல்லவில்லை. என்ன தடுத்ததோ தெரியாது. அவர் போகவில்லை. கூட்டம் முடிந்தது. அப்பாவும், மகனும் வீட்டுக்கு நடந்துபோய்க்கொண்டிருக்கிறார்கள். செல்லும் வழியில் ஆஸ்வால்ட் திடீரென்று நின்று, “அப்பா, பிரசங்கியார் முன்னால் வருமாறு அழைத்தபோது நான் போயிருக்கலாம்; போக விரும்பினேன். ஆனால், போகவில்லை. ஒருவேளை எனக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்திருந்தால், நான் நிச்சயமாக முன்னால் போயிருப்பேன், என்னை ஒப்புக்கொடுத்திருப்பேன்,” என்றார். அவருடைய அப்பா ஆஸ்வால்டை நடுத்தெருவில் அங்கேயே நிறுத்தி, “சரி, என் மகனே, நீ இப்போதே அதைச் செய்யலாம். நீ இப்போதே இங்கேயே தீர்மானிக்கலாம்,” என்றார். இருவரும், அந்த ஞாயிற்றுக்கிழமை, இலண்டன் வீதியில், ஒரு தெருவிளக்கின்கீழ் நின்றார்கள். அங்கு ஆஸ்வால்ட் சேம்பர்ஸ் தன் வாழ்க்கையைத் தேவனுக்குக் கையளித்தார். அவர் திட்டவட்டமாக மறுபடி பிறந்தார். அவர் தன் 16ஆவது பிறந்தநாளுக்குப்பிறகு விரைவில் ஞானஸ்நானம் பெற்றார்.
அப்பாவும், மகனும் சார்லஸ் ஸ்பர்ஜனின் கூட்டத்துக்குப் போனதும், பிரசங்கத்தைக் கேட்டதும், வீட்டுக்குத் திரும்பிவரும் வழியில் ஆஸ்வால்ட் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதும் அவருடைய சகோதர்களுக்குத் தெரியாது. ஆனால், ஆஸ்வால்டின் நடை உடை பாவனையில் அவர்கள் வித்தியாசத்தைக் காணத் தவறவில்லை. அவர்கள் தங்கள் தம்பியின் வாழ்க்கையில் ஒரு வித்தியாசமான, ஆர்வமான தேடலைக் கண்டார்கள். தேவன் அவரை வியத்தகுமுறையில் வேகமாக மாற்றுவதை அவர்கள் கண்கூடாகக் கண்டார்கள்.
அவர் ஓர் ஆவிக்குரிய சபையில் ஊக்கமாக ஈடுபாடு கொண்டார். அங்கு அவர் ஜெபத்திலும், விசுவாசத்திலும் வளர்ந்தார். அருகில் ஏழைகள் வாழ்ந்த இடங்களுக்குச் சென்று அடிக்கடி நற்செய்தி அறிவித்தார்.
ஆஸ்வால்ட் இரட்சிக்கப்பட்டிருந்தபோதும், தான் ஒரு கலைஞனாக, ஓவியனாக, மாற வேண்டும் என்ற தன் கனவை அவர் கைவிடவில்லை, மறக்கவில்லை. ஆனால், ஆஸ்வால்டின் விருப்பத்தை அவருடைய அப்பா அங்கீகரிக்கவோ, ஆதரிக்கவோ, வரவேற்கவோ இல்லை. அதை அவர் எதிர்த்தார். “இது நடைமுறைக்குறியதில்லை; இது ஏற்புடையதில்லை. முதலாவது இது நல்ல தொழில் இல்லை; இரண்டாவது, என்னைப் பொறுத்தவரை, இது கொஞ்சம் ஒழுக்கக்கேடானது,” என்று அவர் சொன்னார். ஆனால், தன்னை எப்போதும் ஒரு கலைஞனாகவே கருதிய ஆஸ்வால்ட், “கலை என்பது இந்தப் பூமியில் வாழ்வின் சுமைகளைக் கொஞ்சம் இறக்கிவைத்து, வாழ்வைச் சுவையாக்கத் தேவன் மனிதனுக்குக் தந்த ஒரு கொடை, ஒரு பரிசு. தேவனுடைய மகிமைக்காக கலையும், கலைஞர்களும் இருக்க வேண்டும். என் கலை தேவன் எனக்குத் தந்திருக்கும் ஒரு பரிசு, கொடை, என்று எனக்குத் தெரியும். அதைப் பயன்படுத்தி நான் கர்த்தரைச் சேவிப்பேன்,” என்று தன் அப்பாவிடம் எடுத்துரைத்தார். ஆஸ்வால்ட் சொன்னதைக் கேட்டு அவருடைய அப்பா ஒன்றும் இணங்கவில்லை, அசையவில்லை.
ஆனால், ஆஸ்வால்டின் அப்பா கொஞ்சம் விட்டுக்கொடுத்து, இறங்கிவந்து, “வேண்டுமானால் நீ ஒரு சிற்பியாகலாம். அதற்கான பயிற்சிபெற நான் ஏற்பாடுசெய்கிறேன்,” என்று சொல்லி சிற்பங்கள் செதுக்கும் சிற்பி பயிற்சி பெறுவதற்கு அவர் ஏற்பாடு செய்தார். ஆனால், அவர் பயிற்சிவகுப்பில் சேருவதற்குச் சற்றுமுன்பு, டிராம் வண்டியிலிருந்து கீழே விழுந்தார்; பலமான காயம் ஏற்பட்டது. பயிற்சியில் சேர முடியவில்லை. பள்ளியில் சேரக் காலதாமதமானதால், அனுமதி மறுக்கப்பட்டது. அப்பாவின் மாற்று யோசனை வேலைசெய்யவில்லை. ஆஸ்வால்ட் சிற்பியாகவில்லை.
ஆஸ்வால்டின் அம்மா அவருடைய அப்பாவிடம் பேசினார்களா அல்லது அவரை வற்புறுத்தினார்களா அல்லது பயமுறுத்தினார்களா என்று தெரியாது. ஆனால், அவருடைய அப்பா ஆஸ்வால்டை புதிய பள்ளிப் பருவத்தின் தொடக்கத்தில், இலண்டனில் உள்ள தேசிய கலைப் பயிற்சிப் பள்ளியில் கலையும், ஓவியமும் கற்க சேர்க்க முடிவுசெய்தார். “ஒருவேளை கலையும், ஓவியமும்தான் தேவன் அவனுக்கு வைத்திருக்கும் அழைப்போ!” என்று அவருடைய அப்பாவும் ஒப்புக்கொண்டு ஆஸ்வால்டை ராயல் கலைக் கல்லூரியில் சேர்த்தார். ஆஸ்வால்ட் அங்கு தன் கலை, ஓவியக் கல்வியைத் தொடர்ந்தார்.
ஆஸ்வால்ட், பொதுவாகவே, ஒரு சிறந்த கலை மாணவராக இருந்தபோதும், பென்சில் ஓவியங்களும், கரிஓவியங்களும் வரைவதில் அவர் மிகச் சிறந்து விளங்கினார். இது அவர் வரைந்த பீத்தோவனின் உருவப்படம். அவருடைய திறமையின் காரணமாக, கல்லூரி அவருக்கு கல்விஉதவித்தொகை கொடுக்க முன்வந்தது. இந்த உதவித்தொகை பெறும் மாணவர்கள் ஐரோப்பாவிலுள்ள எல்லாக் கலைக்கல்லூரிகளுக்கும் சென்று, நுண்கலைகளைக் கற்கலாம். பயணம், தங்கும் இடம், கல்விக் கட்டணம் எல்லாம் இலவசம். ஆனால், ஆஸ்வால்ட் இந்த உதவித்தொகையை நிராகரித்தார். அவருடைய நண்பர்களுக்கு இது ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. ஆஸ்வால்டின் செயலை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. இந்தக் கல்வி உதவித்தொகை பெற்று, ஐரோப்பா முழுவதும் பயணம் செய்து, கலை ஓவியம் ஆகியவைகளின்பின்னால் ஓடிய பலரை அவர் ஏற்கனவே பார்த்திருந்தார். அவர்களில் பலர் கர்த்தரைவிட்டுப் பின்வாங்கிப்போனது அவருக்குத் தெரியும். அவர்களில் பலர் உண்மையாகவே முற்றிலும் மாறிவிட்டார்கள்; அவர்களுடைய மதிப்பீடுகளும் பெரிதும் மாறிவிட்டன. “இவர்களையெல்லாம் பார்க்கும்போது, இந்தப் பாதை சரியானது என்று எனக்குத் தோன்றவில்லை. எனக்கு இந்தப் பாதை வேண்டாம். நான் வித்தியாசமானவன்; எனவே, நான் இந்தப் பாதையில் தைரியமாகப் பயணிக்கலாம் என்று சொல்ல எனக்குத் துணிவில்லை,” என்று ஆஸ்வால்ட் நினைத்தார். ஏனென்றால், தன் வாழ்வில் அவர் தேவனுக்கே முதலிடம் கொடுக்க விரும்பினார். எனவேதான், அவர் கல்வி உதவித்தொகையை நிராகரித்தார். உண்மையில் அவர் இந்த உதவித்தொகையை ஏற்று, ஐரோப்பா முழுவதும் பயணம் செய்து, அங்கிருந்த எல்லாக் கலை மையங்களிலும் கலையும், ஓவியமும் கற்றிருந்தால், ஒருவேளை ஒரு மாபெரும் கலைஞராக ஆகியிருக்கலாம்.
அதற்குப்பதிலாக, அவர் அந்தக் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, ஸ்காட்லாந்தில் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் சேர முடிவு செய்தார். இது மிகவும் கடினமான ஒரு முடிவு. ஆனால், தான் செய்வது சரி என்று அவர் உணர்ந்தார். அப்போது அவருக்கு வயது 21. அங்கு அவர் தன் படிப்பைத் தொடர்ந்தார். எடின்பர்க் பல்கலைக்கழகம் வளரும் கலைஞர்களுக்கு ஏற்ற இடமாக இருந்தது. அந்தப் பல்கலைக்கழகம் சர்வதேச அளவில் நுண்கலைகளுக்குப் புகழ்வாய்ந்தது. வெளிநாடுகளிலிருந்தும் பிரபலமான பல பேராசிரியர்கள் அங்கு கற்பித்தார்கள். எனவே, அந்தக் கல்லூரி கலைஞர்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை அமைப்பதற்கு ஏற்ற படிக்கல்லாகக் கருதப்பட்டது. அந்தப் பல்கலைக்கழகத்தின் எழுச்சியான, சுறுசுறுப்பான, உயிரோட்டமான சூழலை ஆஸ்வால்ட் நேசித்தார். திறமையான பேராசிரியர்களின் துணையோடு ஆஸ்வால்ட் அங்கு பண்டைய கலை, அறநெறி தத்துவம், சொல்லாட்சி ஆகியவைகளின் வரலாற்றைப் படித்தார்; கலைகளிலும், ஓவியங்களிலும் மூழ்கினார். அவர் கலையில் சிறந்து விளங்க விரும்பினார்; ஆனால் தனக்காக அல்ல; கலையிலும், ஓவியத்திலும் தேவன் தனக்குத் தந்திருக்கும் திட்டவட்டமான கொடையைப் பயன்படுத்தி தேவனை மகிமைப்படுத்த வேண்டும் என்பதே அவருடைய இலக்கு, அவருடைய நோக்கம். எல்லாரிடமிருந்தும் ஒதுங்கி ஒரு முனிவர்போல வாழ ஆரம்பித்தார்; கலையில் மட்டுமே கவனம் செலுத்தினார். அது பலனளித்தது. ஏனென்றால், பல்கலைக் கழகத்தின் நுண்கலைப்பிரிவில் அவர் மூன்றாம் பரிசுப் பதக்கத்தைப் பெற்றார்; அவர் எழுதிய கட்டுரைகளுக்காகப் பல பரிசுகளை வென்றார்; கலையியல் துறையில் அவருடைய பல படைப்புகளுக்காகப் பாராட்டுகளும், வெகுமதிகளும் குவிந்தன. “தேவன் என்னை ஒரு கலைஞனாக, அவரை மகிமைப்படுத்தும் ஒரு கலைஞனாக, இருக்கவே அழைத்திருக்கிறார் என்பதுபோல் தோன்றுகிறது,” என்று அவர் நினைக்கத் தொடங்கினார். ஆனால், நிலைமைகளும், சூழ்நிலைகளும் அவர் நினைத்ததுபோல் அப்படியே இருக்கவில்லை. அடுத்த வருடம் ஒரு பருவத்தில் அவரால் கல்விக் கட்டணம் செலுத்த முடியவில்லை; அவருடைய குடும்பத்தாலும் உதவ முடியவில்லை. ஆகவே, அவர் படிப்பை நிறுத்திவிட்டு வெளியேறினார்.
ஒரு கட்டத்தில் இலண்டனில் இருந்த மிகப் பிரபலமான ஒரு வெளியீட்டாளர் தங்கள் இதழில் அவருடைய கலைப்படைப்புக்களை வெளியிடுவதற்கு விரும்பினார்கள்; அவரைச் சந்தித்துப் பேசினார்கள். இது ஆஸ்வால்ட் அடுத்த கட்டத்துக்கு முன்னேறுவதற்கான நல்ல வாய்ப்பு என்று எல்லோரும் கருதினார்கள், சொன்னார்கள். ஆனால், எதுவும் நடக்கவில்லை.
அந்த நேரத்தில், “நான் வேறு ஏதாவது செய்ய வேண்டும் என்று தேவன் எதிர்பார்கிறாரோ? அவர் கலையை விரும்பவில்லையோ!” என்ற ஒரு சிறிய எண்ணம் அவருக்குள் பொறிபோல் எழுந்து மறைந்தது. ஆனால், அந்த எண்ணத்தை அவர் உடனே ஒதுக்கிவிட்டார். “ஓ, தேவன் தம் அனந்த ஞானத்தின்படி, அவருக்கு மகிமையுண்டாக என்னைக் கலைத்துறையில் பயன்படுத்த முடியுமானால், அந்தக் கனத்தை நான் எப்படி அடைக்கிவைக்க முடியும்?” என்று நினைத்தார்.
கலைஞனாக வேண்டும், கலையால் தேவனைச் சேவிக்க வேண்டும் என்ற பாதையில் பயணித்தபோதும், திடீரென்று ஒருநாள் தான் ஒரு போதகராக வேண்டும் என்று எண்ணம் அவருக்குள் தோன்றி மறைந்தது. உடனே அவர், “இது என் எண்ணம் இல்லையே! எனக்கு இப்படித் தோன்றாதே! அப்படியானால், இந்த எண்ணம் எங்கிருந்து வந்தது?” என்று சிந்திக்கத் தொடங்கினார். அந்த எண்ணம் அவருக்கு விநோதமாக இருந்ததால், பீதியடைந்தார். அவர் ஒரு போதகராக விரும்பவில்லை. மற்றவர்களும், அறிமுகமேயில்லாதவர்களும், அவரை அறிந்த கிறிஸ்தவ நண்பர்களும் அவரிடம் வந்து, “தேவன் உன்னை ஊழியத்திற்கு அழைக்கிறார் என்று நான் உணர்கிறேன். நீ ஒரு போதகராக வேண்டும்,” என்று சொல்லத் தொடங்கினார்கள். இது உண்மையில் ஆஸ்வால்டுக்கு மிகவும் குழப்பமாக இருந்தது; எரிச்சலடைந்தார்; ஆஸ்வால்ட் அவர்களுடைய கருத்தை வரவேற்கவில்லை; அதை அவர் ஒதுக்கித்தள்ளினார். ஏனென்றால், “கலைதான் என் அழைப்பு. கலையின்மூலம் அவருக்குப் பணிவிடை செய்யுமாறு தேவன் என்னை அழைத்திருக்கிறார்,” என்று ஆஸ்வால்ட் நினைத்தார், நம்பினார். அப்படியிருக்க, அவருக்குள் எழுந்த எண்ணமும், பிறர் அவரிடம் வந்து சொன்னதும் அவருக்குக் குழப்பமாகவும், எரிச்சலாகவும் இருந்தது. “திடீரென்று ஏன் இந்தச் சந்தேகம் வர ஆரம்பித்தது?” என்று திணறினார். “தேவனே என் கழுத்தைப்பிடித்து, இழுத்து ஊழியத்துக்குள் தூக்கி எறிந்தாலொழிய நானாக ஊழியத்திற்கு வரமாட்டேன்,” என்று அவர் தன் நாட்குறிப்பில் எழுதினார்.
அவருடைய சூழ்நிலைகள் மாறத் தொடங்கின. அவர் யாரையும் சாராமல் சுதந்திரமாக, சுயமாக கலைப்படைப்புகளை உருவாக்கிக்கொண்டிருந்தார். அந்த வாய்ப்புகள் நாளடைவில் வறண்டுபோயின; நிதி நெருக்கடி ஏற்பட்டது. “நான் ஒரு புதிய திசையில் பயணிக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறாரோ!” என்று ஆஸ்வால்ட் சிந்திக்க ஆரம்பித்தார்.
ஒருநாள் மாலை, அவருடைய இருதயத்தில் இந்தக் காரியத்தைக்குறித்த ஒரு பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டது. “என்ன செய்வது, எந்தத் திசையில் பயணிப்பது,” என்று அவருக்குத் தெரியவில்லை. எடின்பர்க்குக்கு அருகில் அணைந்துபோன ஓர் எரிமலை இருந்தது. அதில் ஆர்தர் இருக்கை என்ற ஓர் இடம். ஆஸ்வால்ட் அந்த மலையின் உச்சிக்கு ஏறி, இராமுழுவதும் ஜெபிக்கத் தீர்மானித்தார். அவர் அந்த மலையில் அந்த இடத்திற்குச் சென்று, தேவனுடைய திட்டவட்டமான சித்தத்தை அறிய இரவு முழுவதும் தேவனோடு போராடினார். “தேவனே, உம் பதிலைக் கேட்கும்வரை நான் இந்த இடத்தைவிட்டுப் போகமாட்டேன்,” என்று அவர் உரத்த சத்தமாக ஜெபித்தார். “தேவனே, எனக்கான உம் வழி என்ன? என்ன? என்ன? உமக்கு என்ன வேண்டும்? நான் என்ன செய்ய வேண்டும் என்றும், எந்தத் திசையில் பயணிக்க வேண்டும் என்றும் நீர் விரும்புகிறீர் என்று எனக்குச் சொல்லும்,” என்று போராடி ஜெபித்தார். இறுதியாக, விடியற்காலையில், அவர் தேவனுடைய பதிலைக் கேட்டார். தேவன் அவரிடம், “எனக்கு நீ ஊழியம் செய்ய வேண்டும். ஆனால், நீ இல்லாவிட்டாலும் என் வேலை தொடரும்,” என்றார். தேவன் தன்னை ஊழியத்துக்கு அழைப்பதை ஆஸ்வால்ட் அங்கு, அப்போது, தெளிவாகப் புரிந்துகொண்டார்.
அவர் வீட்டிற்குத் திரும்பிச் சென்றார்; அன்று காலை அவர் தனக்கு வந்திருந்த கடிதங்களை எடுத்துப் பார்த்தார்; அங்கு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரத்தில் ஓடுகிற கிளைட் ஆற்றின் குறுக்கேயுள்ள டானூன் என்ற ஒரு சிறிய நகரத்தில் செயல்படுகிற ஓர் இறையியல் கல்லூரியைப்பற்றிய ஒரு சிற்றேடு இருந்தது. அது தேவனே தனக்கு அனுப்பியது என்று அவர் கருதினார். அந்தக் கையேட்டில் அந்த வேதாகமக் கல்லூரிக்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பமும் இருந்தது. அவர் அந்தக் கல்லூரியில் அனுமதி கோரி கல்லூரி முதல்வரான டங்கன் மெக்ரிகோருக்கு ஒரு கடிதம் எழுதினார்.
தேவனுடைய பேசுதலைக் கேட்டபிறகும், தேவன் தன்னை என்ன செய்யச் சொல்லுகிறார் என்று அறிந்தபிறகும், இறையியல் கல்லூரிக்கு விண்ணப்பித்தபிறகும், அவருடைய சந்தேகம் இன்னும் முழுமையாகத் தீரவில்லை. தான் செய்வது சரியா தவறா என்ற நிச்சயம் இல்லை. தான் போகும் பாதை சரிதானா என்று அவரால் தீர்மானிக்கமுடியவில்லை. தான் செய்வது அவருக்குப் புரியவில்லை. ஒரு வகையான குழப்பம்.
அந்த நேரத்தில் ஹட்சன் டெய்லர் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே பேச வந்திருந்தார்.. ஆஸ்வால்ட் ஹட்சன் டெய்லர் பேசியதைக் கேட்டார். “உங்கள் உத்தமத்தில் அல்ல, தேவனுடைய உத்தமத்தில் நம்பிக்கை வையுங்கள்,” என்று அவர் சொன்ன ஒரு வாக்கியம் ஆஸ்வால்டின் இருதயத்தில் ஆணித்தரமாகப் பதிந்தது. தான் செய்ய வேண்டிய காரியம் என்ன, தான் போக வேண்டிய பாதை என்னவென்பதை அந்த எளிய வார்த்தைகள் ஆஸ்வால்டுக்குத் தெள்ளத்தெளிவாக்கின. “ஆம், அர்த்தமில்லாத ஒன்றைச் செய்வது ஒருவேளை சரியான செயலாக இருக்கலாம். ஏனென்றால், அது தேவன் விரும்புகிற காரியம்,” என்று முடிவுசெய்தார்.
ஆஸ்வால்டுக்கு அந்த இறையியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. சில மாதங்களுக்குப்பிறகு அவர் எடின்பர்க் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறி, டுனூனுக்குப் புறப்பட்டார். அவருடைய இந்த முடிவை அவருடைய சில நண்பர்கள் பாராட்டினார்கள், வரவேற்றார்கள்; வேறு சில நண்பர்களும், உறவினர்களும் அவரை ‘முட்டாள்’, ‘கிறுக்கன்’, ‘பைத்தியக்காரன்’ என்று விமரிசித்தார்கள். “இவன் எடின்பர்க் பல்கலைக்கழகம் என்ற கடலில் மீன்பிடிப்பதை விட்டுவிட்டு, எங்கோவொரு குட்டையில் மீன்பிடிக்கப்போகிறான். உலகப் புகழ்பெற்ற பேராசிரியர்களிடம் கற்றுக்கொள்வதை விட்டுவிட்டு, எங்கோவொரு மூலையில் இருக்கும் ஒரு கற்றுக்குட்டியிடம் கற்றுக்கொள்ளப் போகிறான். உலகத்தின் அதிபுத்திசாலிகளுடன் சேர்ந்து படிப்பதை விட்டுவிட்டு சாதாரணமான பள்ளியில்கூட அனுமதிக்கப்படாத மட்டமான மாணவர்களுடன் சேர்ந்து இறையியல் படிக்கப்போகிறான். ஒளிமயமான எதிர்காலத்தை விட்டுவிட்டு, இருட்டைத் தேடிப் போகிறான்,” என்று விமரிசித்தார்கள். அவர்கள் சொன்னது உண்மைதான். டுனூன் ஸ்காட்லாந்தில் எங்கோ தொலைதூரத்தில் உள்ள ஒரு சிறிய நகரம்தான். அங்கு இருந்த இறையியல் கல்லூரி சாதாரணமான ஒரு கல்லூரிதான். அங்கு இருந்த 30 மாணவர்கள் சாதாரணமானவர்கள்தான். அந்தக் கல்லூரியின் முதல்வர் மிகச் சாதாரணமானவர்தான். சிலர் அவரிடம், “நீ என்ன செய்கிறாய் என்று உனக்குத் தெரியுமா? நீ எடுத்திருக்கும் முடிவும், நீ போகும் பாதையும் சரி என்று நீ உறுதியாக நம்புகிறாயா? இது நிச்சயமா? இது உண்மையா? நீ இதைத்தான் செய்ய வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்று உறுதியாக நம்புகிறாயா?” என்று கேட்டார்கள்.
“தேவன் நமக்குத் தரிசனம் தருகிறார். அதன்பின் நம்மை அடித்து, உடைத்து, உருக்கி, நொறுக்கி அந்தத் தரிசனத்துக்கு ஏற்றாற்போல் உருவாக்க அவர் நம்மைப் பள்ளத்தாக்குக்கு அழைத்துச்செல்கிறார். ஆனால், அந்தப் பள்ளத்தாக்கில்தான் நம்மில் பலர் சோர்ந்து, தரிசனத்தை இழந்துவிடுகிறோம். நாம் என்னவாக இருக்க வேண்டும் என்றும், என்ன செய்ய வேண்டும் என்றும் தேவன் விரும்புகிறாரோ, அந்தத் தரிசனம் நிச்சயமாக நிஜமாகும், நாம் பொறுமையாக இருந்தால்,” என்று ஆஸ்வால்ட் நம்பினார்.
இந்த வேதாகமக் கல்லூரியின் முதல்வர், ரெவரெண்ட் டங்கன் மெக்ரிகோர் மிகவும் அசாதாரணமான மனிதர். ஒரு புதுமையான சிந்தனையாளர். அவர் இந்த இறையியல் கல்லூரியை ஆரம்பித்ததற்கு ஒரு குறிப்பிட்ட நோக்கம் இருந்தது. அவர் விசுவாச வீரர்களை உருவாக்கவும், கட்டியெழுப்பவும் விரும்பினார்; கர்த்தருக்குப் பணிவிடைசெய்ய விரும்புகிறவர்கள் அதற்குத் தேவையான ஆற்றல்களையுடைவர்களாக இருக்க வேண்டிய ஒரு தேவை இருப்பதை அவர் பார்த்தார். ஊழியம் செய்வதற்காக இறையியல் படிக்கும் மாணவர்கள் உள்ளே பயிற்சி வகுப்புகளில் குறைவாகவும், வெளியே பயிற்சிக் களத்தில் அதிகமாகவும் பயிற்சி பெற வேண்டும் என்று விரும்பினார். அவர்கள் உண்மையாகவே ஆண்டவராகிய இயேசுவின் சீடர்களாக வாழ வேண்டும், அந்த வாஞ்சையை அவர்களுக்குள் உருவாக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். எனவே, கல்லூரியில் சேர வந்த மாணவர்களை நேர்காணல்செய்தபோது, “நீ எப்போது மனந்திரும்பி, இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொண்டு மறுபடி பிறந்தாய்?” என்ற ஒரேவொரு கேள்விதான் அவர் கேட்டார். அவ்வளவுதான். கல்லூரியில் சேர விரும்பினவர்கள் உண்மையாகவே மறுபடியும் பிறந்திருக்க வேண்டும் என்பதுதான் அவருடைய ஒரேவொரு நிபந்தனை. டங்கன் மெக்ரிகோர் வேறு எதையும் முக்கியமாகக் கருதவில்லை.
1897ஆம் ஆண்டு குளிர்காலத்தில் ஒரு நாள், ஆஸ்வால்ட் சேம்பர்ஸ் தன் வாழ்வின் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்க ஸ்காட்லாந்தின் டுனூன் நகரத்திற்குப் படகில் வந்து இறங்கினார். டுனூனில் ஆஸ்வால்ட் சேம்பர்ஸ் மிகவும் அதிகமாகக் கற்றுக்கொண்டார். அவர் கிராமப்புறங்களை நேசித்தார். அவர் ட்வீட் என்று அழைக்கப்படும் பார்டர் கோலியுடன் மலைகளில் சுற்றித்திரிந்தார். இருவரும் காடுகளில் காலாற நடந்தார்கள். கல்லூரியில் மிகவும் பிரயாசப்பட்டுப் படித்தார்; நிறையக் கற்றுக்கொண்டார். அவர் வகுப்பறையில் கற்றுக்கொண்டதைவிட டங்கன் மெக்ரிகோரிடமிருந்தும், அவருடைய வாழ்க்கையிலிருந்தும், அவர் நடக்கும் விதத்திலிருந்தும், அவர் பிறரை நடத்தும் விதத்திலிருந்தும் நிறையக்கற்றுக்கொண்டார். தேவன் தன்னை ஒரு போதகனாக்குவதற்காக வழிநடத்துகிறார் என்பதை அவர் உணர்ந்தார்.
கல்லூரி முதல்வரும், மாணவர்களும் கல்லூரியிலேயே சேர்ந்து ஒன்றாக வாழ்ந்தார்கள். இது ஆஸ்வால்டின் வாழ்வில் ஒரு நேர்மறையான பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. மெக்ரிகோரின் வீடும் அங்குதான் இருந்தது. மெக்ரிகோர் தன் மனைவி, மக்களை நடத்துகிற விதத்தை ஆஸ்வால்ட் பார்த்தார். டங்கன் மெக்ரிகோர் ஆஸ்வால்ட் சேம்பர்சுக்கு வழிகாட்டியாகவும், முன்மாதிரியாகவும், நண்பராகவும் ஆனார்.
கல்லூரியில் மாணவர்களிடம் பேசுவதற்கு டங்கன் மெக்ரிகோர் வெளியேயிருந்து மிகச் சிறந்த போதகர்களையும், ஆசிரியர்களையும் அடிக்கடிக் கல்லூரிக்குக் கூட்டிவந்தார். அவர்களில் ஒருவர் வில்லியம் குவாரியர். இவர் ஒரு விசுவாச வீரர். எப்படியெனில் இவர் ஸ்காட்லாந்தில் நிறைய அனாதை இல்லங்களை நடத்தினார். ஆயினும், அந்த அனாதை இல்லங்களை நடத்துவதற்கு அவர் யாரிடமும் ஒருபோதும் கையேந்தவில்லை.
அதுபோல அவர் ஒருநாள் FB மெய்யரை அழைத்துவந்தார். அவருடைய வருகை ஆஸ்வால்ட் சேம்பர்சுக்கு ஒரு திருப்புமுனையாக, வரப்பிரசாதமாக, அமைந்தது. இவர் இலண்டனைச் சேர்ந்த பிரபலமான பிரசங்கியார். மெய்யர் பரிசுத்த ஆவியைப்பற்றியும், ஒருவன் ஊழியம் செய்ய விரும்பினால் அவன் பரிசுத்த ஆவியின் ஆவியால் நிரப்பப்படவேண்டிய அவசியத்தைப்பற்றியும் பேசினார். “நீங்கள் தேவனுடைய ஊழியத்தை வீரியமாகச் செய்ய விரும்பினால், நீங்கள் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட வேண்டும். இல்லையென்றால் நீங்கள் செய்வதெல்லாம் வீண்,” என்று அவர் கூறினார்.
“இதுதான் எனக்கு வேண்டும். நான் தேவனுக்கு வீரியமாக ஊழியம்செய்ய விரும்புகிறேன்,” என்று ஆஸ்வால்ட் தனக்குள் நினைத்துக்கொண்டார். அவர் ஏற்கெனவே, கல்லூரியில் வகுப்புகள் நடத்த ஆரம்பித்திருந்தார், சபைகளில் பிரசங்கமும் செய்யத் தொடங்கியிருந்தார். எனவே, தான் வீரியமாக ஊழியம் செய்யவேண்டும் என்று விரும்பினார். மெய்யர் பேசிமுடித்தபிறகு அவர் தன் படுக்கையறைக்குச் சென்று, பரிசுத்த ஆவியால் நிரப்பும்படி கர்த்தரிடம் கேட்டார். இது ஆஸ்வால்ட் சேம்பர்ஸ் வாழ்க்கையில் ஓர் இருண்ட காலம். ஏனென்றால், பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட வேண்டும் என்று அவர் கேட்டபோது, அவர் எதையும் உணரவில்லை. மேலும், தேவனுடன் இன்பமான, இணக்கமான, இசைவான, இறுக்கமான உறவும், தொடர்பும், உரையாடலும் ஏற்படுவதற்குப்பதிலாக, இடைவெளி அதிகமாயிற்று; வேதாகமத்தை வாசிக்கும் வேட்கை வற்றத் தொடங்கியது; வேதாகமத்தை வாசிப்பது சலிப்பாக இருந்தது. அதில் மகிழ்ச்சி இல்லை; சுவை இல்லை; விருப்பம் இல்லை. தன்னை வருத்தி, வற்புறுத்தி வாசித்தார். இது ஆஸ்வால்டின் ஆவிக்குரிய வாழ்க்கையின் குளிர்காலம் , கடினமான காலம். ஆஸ்வால்ட் தன் வாழ்வின் அடுத்த நான்கு ஆண்டுகளை ‘நரகம்’ என்று விவரிக்கிறார். வெளிப்புறமாக, பிறரைப்பொறுத்தவரை, அனைத்தும் நன்றாகச் செயல்படுவதாகத் தோன்றினாலும், ஆஸ்வால்டைப் பொறுத்தவரை, உள்ளாக அவர் இருண்ட சுரங்கப்பாதையின் வழியாகப் போய்க்கொண்டிருந்தார். இந்த இருண்ட காலத்தில் அவர் தன் பாவத்தின் ஆழத்தையும், அருவருப்பையும், அசிங்கத்தையும் பார்த்தார். “அன்றிலிருந்து அடுத்த நான்கு ஆண்டுகளுக்குத் தேவனின் மேலான கிருபையும், நண்பர்களின் தயவும், குறிப்பாக, டங்கன் மெக்ரிகோரும் அவருடைய மனைவியும் இல்லையென்றால் நான் ஒரு மனநல காப்பகத்தில் இருந்திருப்பேன். தேவனுடைய கிருபையும், நண்பர்களின் தயவும் என்னைக் காத்தது. இந்த நான்கு ஆண்டுகளில் நான் சும்மா இருக்கவில்லை. வழக்கம்போல் நான் பிரசங்கித்தேன். மக்கள் மனந்திரும்பி, இரட்சிக்கப்பட்டார்கள். தேவன் என்னைப் பயன்படுத்தினார். ஆனால், தேவனுடன் எனக்கு ஆழமான, அந்தரங்கமான, அந்நியோந்நியமான உறவு இருக்கவில்லை. வேதாகாமம்தான் இருப்பதிலேயே மிகவும் மந்தமான, சுவையற்ற புத்தகம்போல இருந்தது. என் இயல்பின் இழிநிலையையும், இழிவான தன்மையையும், மோசமான உள்நோக்கதையும் கண்டபோது அது பயங்கரமாக இருந்தது,” என்று ஆஸ்வால்ட் கூறினார்.
அவர் தன் தோல்விகளையும், பாவங்களையும் பார்த்தார். வாழ்வில் மகிழ்ச்சி இல்லை, அமைதி இல்லை. தேவனுக்குமுன் தன்னை ஆராய்ந்துபார்த்தார். தான் பலிபீடத்தில் வைக்கவேண்டிய காரியங்கள் ஏதாவது இருக்கிறதா என்று சிந்தித்தார். தான் ஒரு கலைஞனாக வேண்டும் என்ற கனவு தனக்குள் இன்னும் மறைந்திருப்பதை உணர்ந்தார். அவர் அதைப் பலிபீடத்தில் வைக்க முடிவுசெய்தார்.
அதன்பின் கர்த்தர் தன்னைப் பரிசுத்த ஆவியால் நிரப்பக்கூடும் என்றும், தான் ஊழியத்தை வீரியமாகச் செய்ய முடியும் என்றும் ஆஸ்வால்ட் எதிர்பார்த்தார். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. அவர் இன்னும் வெறுமையாகவும், வறட்சியாகவுமே இருந்தார். எல்லாம் மந்தமாகவும், சலிப்பாகவும் இருப்பதாக உணர்ந்தார். எனினும், அவர் கல்லூரியில் தொடர்ந்து பாடங்கள் நடத்தினார்; அழைத்தபோதெல்லாம் பிரசங்கித்தார். அவருக்குள் நடந்துகொண்டிருந்த போராட்டத்தைப்பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது. உண்மையில், மக்கள் அவரைப் புகழ்ந்தார்கள்; அவரை ஒரு சிறந்த முன்மாதிரி என்று வாலிபர்கள் நினைத்தார்கள்.
“எங்காவது ஓடிவிடலாமா?” என்று அவர் நினைத்தார். ஆம், சில வேளைகளில், அவர் அருகிலிருந்த பென் நெவிஸ் மலைக்குச் சென்றார்; அதிகாலையிலேயே எழுந்து நாள் முழுவதும் நடந்து மாலையில் அந்த மலையை அடைந்தார்; தான் செய்வது என்னவென்று தெரியாமலே மலையின் உச்சிக்குச் சென்றார். அது ஒரு பயங்கரமான மலை. ஆனால், அவர் இப்படி வெளியே தன்னந்தனியாக இருட்டில் மலைகளில் நடந்ததால் தன் மனஅழுத்தத்திலிருந்து ஒருவிதமான விடுதலையைப் பெற்றார். இந்த இருண்ட காலத்திலும் அவருடைய ஊழியத்தின் விளைவாக பலர் இரட்சிக்கப்பட்டார்கள். ஆனால், உள்ளத்தில் அவர் சிதைந்திருந்தார்.
அவருடைய போராட்டம் டங்கன் மெக்ரிகோருக்கும், அவருடைய மனைவிக்கும் தெரியும். சில இரவுகளில் டங்கன் ஜன்னலுக்கு வெளியே பார்த்தபோது, ஆஸ்வால்ட் மலைகளின்வழியாக நடந்து செல்வதைக் கண்டார், ஆஸ்வால்டுக்கு எந்த வகையில் உதவிசெய்வது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. ஆனால் அவர்கள் அவரை நிபந்தனையின்றி நேசித்தார்கள்; அவருக்காகத் தொடர்ந்து ஜெபித்தார்கள்.
அந்த நாட்களில் ஆஸ்வால்ட் வரைந்த ஓவியங்களும், எழுதிய கவிதைகளும் அவருடைய தாங்கொணா துயரத்தையும், வேதனையையும், மனக்கிலேசத்தையும் வெளிப்படுத்துகின்றன. “ஆண்டவராகிய இயேசுவே, நான் உமக்கென்று பிரதிஷ்டை பண்ணப்பட்ட வாழ்க்கை வாழ வேண்டுமென்ற என் கதறலைக் கேளும். இந்த இருண்ட போராட்டத்திலிருந்து நான் விடுதலையாக முயன்று, என் முயற்சியில் நான் படுபயங்கரமாக மண்ணைக் கவ்வுகிறேன். என்னைத் தள்ளிவிடாமல் உதவிக்கரம் நீட்டும்,” என்று அவர் ஒரு கவிதை எழுதினார்.
இந்த இருண்ட நிலைமை சில ஆண்டுகள் நீடித்தது. ஆனால், இறுதியாக, ஒரு வசனம் ஆஸ்வால்டின் கண்களைத் திறந்தது. அது அவர் பலமுறை படித்த வசனம்தான், அவருக்குப் பரிச்சயமான வசனம்தான். அது லூக்கா 11:13: “பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரம பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?” இந்த வசனத்தை வாசித்தபோது திடீரென்று அவருக்குள் ஒரு வெளிச்சம் உதித்தது. “இருபது ஆண்டுகளுக்குமுன் நான் சிறுவனாக இருந்தபோது இரண்டு சீமப்பெருச்சாளி கேட்டபோது தேவன் தாந்தாரே! அதுபோன்ற குழந்தைத்தனத்தோடு இப்போதும் கேட்டால் போதும், வேறு எதுவும் தேவையில்லை,” என்று அவர் உணர்ந்தார். தேவன் தன் தந்தை என்பதை உணரவும், அவரை விடுதலையோடு அணுகவும் அப்படிப்பட்ட’எளிமையான விசுவாசம்தான் தேவை என்று அவர் உணர்ந்தார். “பரிசுத்த ஆவியைப் பெறுவதற்கு ஏதோவொரு வகையில் நான் என்னைத் தகுதிப்படுத்தவோ, தயாராக்கவோ வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் இல்லை. நான் ஒரு குழந்தையைப்போல கேட்க வேண்டும். அவ்வளவுதான்,” என்று அவர் புரிந்துகொண்டார்.
ஒரு நாள் சபையில் ஒரு ஜெபக்கூட்டத்தில் ஆஸ்வால்ட் அனைவருக்கும்முன்பாக எழுந்து நின்று, “நான் கடந்த சில வருடங்களாக வெறுமையாகவும், வறட்சியாகவும் இருக்கிறேன். எங்கு திரும்பினாலும் இருளாகத் தோன்றுகிறது. வேதாகமத்தைப் படிக்க விரும்பவில்லை; தேவ மக்களோடு ஐக்கியம்கொள்ள விரும்பவில்லை; எல்லாவற்றிலிருந்தும், எல்லாரிடமிருந்தும் நான் விலகி ஓடிவிட விரும்புகிறேன். தேவன் விரும்பும் வாழ்க்கை வாழ்வதற்கும், அவர் விரும்பும் வேலையைச் செய்வதற்கும் எனக்கு உடனடியாகப் பரிசுத்த ஆவியின் வல்லமை தேவை,” என்று எல்லோரிடமும் ஒப்புக்கொண்டார். அனைவருக்கும் முன்பாக, மீண்டும் ஜெபித்து, அமர்ந்தார். அதன்பிறகு, அவர் எதையும் உணரவில்லை. உள்ளாக எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அவருடைய மனநிலையிலோ, அவருடைய வாழ்க்கையை மூடியிருந்த இருண்ட உணர்விலோ எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இது அவர் தன்னை முழுமையாகவும், முற்றிலுமாகவும் தேவனுக்கு விட்டுக்கொடுக்கவும், ஒப்புக்கொடுக்கவும் எடுத்த ஒரு நடவடிக்கையாகும்.
இரண்டு நாட்களுக்குப்பிறகு, அவர் வழக்கம்போல் சபையில் பிரசங்கித்தார். அன்று அவருடைய பிரசங்கத்தைக் கேட்டவர்களில் 40 பேர் இரட்சிக்கப்பட்டார்கள். அவர்கள் அத்தனைபேரும் முன்னால் வந்து, கர்த்தரை விசுவாசித்து, இரட்சகராக ஏற்றுக்கொள்வதாகப் பகிரங்கமாக அறிவித்தார்கள். அந்த 40 பேரையும் கவனித்துக்கொள்ளுமாறு அங்கிருந்த மற்ற ஊழியக்காரர்களிடம் சொல்லிவிட்டு, ஆஸ்வால்ட் அங்கிருந்து ஓடிவிட்டார். அன்று 40 பேர் இரட்சிக்கப்பட்டதைக் கண்டதும் அவர் பயந்துபோனார். அவருக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் டங்கன் மெக்ரிகரிடம் இதைப்பற்றிப் பேசினார், மெக்ரிகர், “நீ பரிசுத்த ஆவியைக் கேட்டாயல்லவா? நீ இப்போது பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிறாய். அவர் வேலை செய்கிறார்,” என்று சொன்னார். ஆஸ்வால்டின் கண்கள் திறக்கப்பட்டன. ஏனென்றால், அவர் தன்னிலிருந்து, தனக்குரிய ஏதோவொரு வல்லமை வெளிவரும் என்று நினைத்தார். அந்த வல்லமை தனக்குரியது, தன்னிலிருந்தே வரும் என்றுதான் அவர் நினைத்தார். ஆனால், இப்போது பரிசுத்த ஆவியானவர் தனக்குள் வாசமாயிருப்பதையும், தனக்குள்ளிருந்து ஒரு வகையான வல்லமை வெளிவருவதை தான் உணராவிட்டாலும், பரிசுத்த ஆவியானவர் வேலை செய்கிறார் என்பதையும், அதனால்தான் அன்று 40 பேர் இரட்சிக்கப்பட்டார்கள் என்பதையும் அவர் உணர ஆரம்பித்தார். இந்த எளிமையான புரிதல் வந்தவுடன் அவருடைய அடிமைச் சங்கிலிகள் முறிந்தன. அவருடைய பாவத்தின் கொடுங்கோன்மை வீழ்ந்தது. “அதுதான் என் வாழ்வின் புதிய தொடக்கம்,” என்று ஆஸ்வால்ட் தன் நாளேட்டில் எழுதினார்.
டங்கன் மெக்ரிகோர் ஆஸ்வால்டுக்கு ஓர் அற்புதமான எடுத்துக்காட்டாக இருந்தார். அவர் ஆஸ்வால்டின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். டங்கன் மெக்ரிகோர் ஆஸ்வால்டைவிட 25 வயது மூத்தவர். இருப்பினும் இருவரும் மிக மிக நெருக்கமான நண்பர்களாக இருந்தார்கள். ஆஸ்வால்ட் அவரிடமிருந்து நிறையக் கற்றுக்கொண்டார். டங்கன் குழந்தைகளை அதிகமாக நேசிப்பவர் என்று அந்த நகரத்தாருக்கு நன்றாகத் தெரியும். அவர் தெருவில் நடந்துபோகும்போது, எல்லாக் குழந்தைகளும் அவரிடம் வந்து, அவரைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துவிட்டுப்போவார்கள். அவர் எல்லாக் குழந்தைகளையும் பெயர் சொல்லிக் கூப்பிடுவார், விசாரிப்பார். எல்லாருக்கும் நேரம் செலவழிப்பார். ஒருநாள் அவரும் ஆஸ்வால்டும் தெருவில் நடந்துபோய்க்கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு சிறுமி அவரிடம் ஓடி வந்தாள். பரட்டைத் தலை; அந்தப் பரட்டைத் தலையில் பளிச்சென்று பேன்கள்; சிக்குப்பிடித்த தலைமுடி; அழுக்கு முகம்; கிழிந்த கந்தல் ஆடைகள்; ஓடி வந்து டங்கனைக் கட்டித் தழுவினாள். பின் நின்று, தன் சட்டைப் பையில் கையை விட்டு, பாதி சப்பியிருந்த லாலிபாப் மிட்டாயை எடுத்து, அன்போடு டங்கனுக்குக் கொடுத்தாள். டங்கன் மகிழ்ச்சியோடு வாங்கி சாப்பிட ஆரம்பித்தார். “வேண்டாம், வேண்டாம், தயவுசெய்து வேண்டாம்,” என்று சொல்ல ஆஸ்வால்ட் நினைத்தார். ஆனால், சொல்லவில்லை. இந்த மனிதர் உண்மையில் குழந்தைகளைப் புரிந்துகொண்டவர், குழந்தைகளை நேசித்தவர், குழந்தைகளுக்காக எதையும் செய்யத் தயாராக இருந்தவர் என்று ஆஸ்வால்ட் புரிந்துகொண்டார்.
சேம்பர்ஸ் டுனூனில் ஒன்பது ஆண்டுகள் கழித்தார். அவர் தன் 22ஆவது வயதில் அங்கு வந்து, 31ஆவது வயதில் சாரமேற்றப்பட்ட, பக்குவப்பட்ட, மெருகேற்றப்பட்ட, செறிவூட்டப்பட்ட ஒரு நல்ல ஆவிக்குரிய மனிதனாக வெளியேறினார். மாணவனாக வந்தார்; ஆசிரியராக வெளியேறினார். தேவனுடைய சித்தத்தைத் தேடி வந்தார்; தேவனுடைய ஆழமான அனுபவத்தோடு வெளியேறினார். அவர் அங்கிருந்து வெளியேறும்போது, “உலகமெங்கும் சென்று, சகல ஜாதிகளையும் சீடர்களாக்க வேண்டும் என்று என் நாடி நரம்புகளில் எனக்குத் தெரியும். தேவனுக்கு மகிமையுண்டாவதாக! இதோ! நான் போகிறேன்,” என்ற வார்த்தைகளை எழுதிவிட்டுச் சென்றார்.
அந்த நேரத்தில் டி எல் மூடி இங்கிலாந்திலும், ஸ்காட்லாந்திலும் நற்செய்திக் கூட்டங்கள் நடத்திக்கொண்டிருந்தார். ஏராளமானவர்கள் இரட்சிக்கப்பட்டார்கள்; டி எல் மூடி அங்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். இங்கிலாந்தில், அப்போதும் சிறுசிறு ஸ்தாபனங்கள் நிறைய இருந்தன. அவர்கள் ஒருபோதும் எதற்கும் ஒன்றாகச் சேர்ந்து வரவில்லை; அவர்களுக்கிடையே இடைவெளி அதிகமாகிக்கொண்டேதான் போனது. மூடியின் கூட்டங்களுக்குப்பின் நிறையப்பேர் இரட்சிக்கப்பட்டிருந்ததால், சபைகள் ஏதோவொன்றை அடிப்படையாகக்கொண்டு இணைந்து பணியாற்ற வேண்டும் என்று அன்று பலர் நினைத்தார்கள், விரும்பினார்கள். அப்படி ஒரு தேவை இருப்பதைப் பலர் பார்த்தார்கள். ரீட்டா ஹாரிஸ் என்ற மிகப் பிரபலமான ஒரு வழக்கறிஞர் இருந்தார். இங்கிலாந்து முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று அவர் முடிவு செய்தார். எனவே, கடந்த பல ஆண்டுகளில் இரட்சிக்கப்பட்ட புதிய கிறிஸ்தவர்களுக்காகவும், நாட்டுக்காகவும் ஜெபிப்பதற்காக ஸ்தாபனங்கள் வேறுபாடின்றி எல்லாக் கிறிஸ்தவர்களையும் ஒன்றிணைக்க, league of prayer என்ற ஓர் அமைப்பை ஆரம்பித்தார். எல்லாரும் ஒருவரொருவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், ஸ்தாபனங்களின் தடுப்புச்சுவர்களை இடிக்க வேண்டும் என்றும் அவர் விரும்பினார்.
ஆஸ்வால்ட் இதில் ஈடுபடத் தொடங்கினார். அதனால் அவர் ஊழியம் செய்வதற்கு ஏராளமான வாசல்கள் திறந்தன. முன்பு ஒரு சிறிய நகரத்தில் வேதாகமக் கல்லூரியில் பணியாற்றினார். இப்போது முழு உலகமும் அவருடைய ஊழியக் களமாக மாறிற்று. அதிகமாகப் பயணித்தார்; பிரசங்கம், போதனை, பத்திரிகை, எழுத்து, எனப் பல காரியங்களைச் செய்ய வேண்டியிருந்தது. இடைவிடாமல் மக்களையும் சந்தித்தார். ஒரு ஞாயிற்றுக்கிழமை அவர் தன் சகோதரர் ஆர்தர் பாஸ்டராக இருந்த சபையில் பிரசங்கிக்கச் சென்றிருந்தார். கூட்டம் முடிந்தபிறகு ஒரு விசுவாசியின் வீட்டில் மதிய உணவு சாப்பிட வருமாறு அவரை அழைத்திருந்தார்கள். அங்கு அவர் முதன்முறையாக கெர்ட்ரூட் ஹாப்ஸ் என்ற ஒரு வாலிபப் பெண்ணைச் சந்தித்தார். இருவரும் ஒருவரையொருவர் கவனித்தார்கள், அவ்வப்போது ஒருவரையொருவர் பார்த்தார்கள், அறிமுகமானார்கள். இந்த முதல் சந்திப்பிற்குப்பின் இரண்டு ஆண்டுகளில் அவர்கள் திருமணம் செய்துகொள்வார்கள் என்று இருவரும் கற்பனைகூட செய்திருக்கமாட்டார்கள்.
league of prayerமூலம் சேம்பர்ஸ் நிறையப்பேரைச் சந்தித்தார். அவர்களில் ஒருவர் பெயர் ஜி ஜி மிகாடோ. இவர் ஒரு மிஷனரி. இவர் ஜப்பானில் மிஷனரியாக ஊழியம்செய்தார். அங்கு ஒரு சிறிய மிஷன் அமைப்பையும் நிறுவியிருந்தார். இருவருக்கும் பொதுவான காரியங்கள் மிகமிகக் குறைவு. மிகாடோ குள்ளமானவர், கொஞ்சம் குண்டாகவும் இருந்தார். ஆஸ்வால்ட் உயரமானவர், ஒல்லியானவர். அவர்கள் இருவரும் அருகருகே நிற்கும்போது வேடிக்கையாக இருக்கும். ஆனால், அவர்களுக்கிடையே சில முக்கியமான ஒற்றுமைகள் இருந்தன. இருவரும் சில வருடங்கள் இருளில் பயணித்தார்கள்; இருவரும் பரிசுத்த ஆவியானவரின் நிரப்புதலுக்காக வேண்டினார்கள்; இருவரும் ஆத்தும தாகம் கொண்டிருந்தார்கள். எனவே, இருவரும் மிக நல்ல நண்பர்களானார்கள்.
இருவரும் சேர்ந்து ஜப்பானுக்கு ஊழியம்செய்யச் சென்றார்கள். அங்கு ஆஸ்வால்ட் கொஞ்சக் காலம் பல்வேறு கூட்டங்களில் பிரசங்கித்தார். ஆஸ்வால்ட் ஆங்கிலத்தில் பேசினார், மிகாடோ ஜப்பான் மொழியில் மொழிபெயர்த்தார். அங்கு அவர் டோக்கியோ வேதாகமக் கல்லூரியை நிறுவ அரும் பாடுபட்டார். சிலைவழிபாடு என்றால் என்னவென்பதை ஆஸ்வால்ட் ஜப்பானில்தான் புரிந்துகொண்டார். அங்கு சென்றபிறகுதான் உலகெங்கிலும் என்ன நடக்கிறது என்பதைப்பற்றிய பார்வை பிறந்தது. அது அவருடைய கண்களைத் திறந்தது. அதே நேரத்தில், ஆஸ்வால்ட் ஜப்பானில் பார்த்ததுபோன்ற ஆவிக்குரிய பசியையும், தாகத்தையும் வேறு எங்கும் அதுவரை அவர் கண்டதில்லை.
அவர் ஜப்பானில் நீண்ட காலம் ஊழியம் செய்யவில்லை. அவர் பிரிட்டனுக்குத் திரும்பினார். இங்கிலாந்து முழுவதும் பயணம் செய்து சபைகளிலும், மிஷன் அரங்குகளிலும் பிரசங்கித்தார். பிரபலமான league of prayerரின் தூதராகவும் இருந்ததால் முழுநேரமும் பரபரப்பாகவும், சுறுசுப்பாகவும் செயல்பட்டார்.
அவர் இலண்டனில் இருந்தபோது, தன் அண்ணனின் வீட்டில் தங்கினார். அவருடைய அண்ணன் பிள்ளைகள் ஆஸ்வால்டை மிகவும் நேசித்தார்கள். அவருடைய வருகையை அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள். குறிப்பாக அவருடைய அண்ணன் மகள் ஐரீன் என்ற குட்டிப் பிள்ளை ஆஸ்வால்டை அதிகம் விரும்பினாள். ஆஸ்வால்ட் சமையலறை மேசையில் அமர்ந்து வேதாகமத்தைப் படித்துக்கொண்டிருப்பார் என்று ஐரீனுக்குத் தெரியும். எனவே, அவளும் அதிகாலையில் எழுந்து சமயலறைக்குச் சென்று, உட்கார்ந்துகொண்டு, தன் சித்தப்பாவைப் பார்த்துக்கொண்டிருப்பாள். சில சமயங்களில் படிப்பதுபோல் அல்லது எழுதுவதுபோல் அல்லது ஏதொவொன்றைச் செய்வதுபோல் பாசாங்குசெய்வாள். அந்தக் காலை நேரத்தில் தன் சித்தப்பா செய்வதெல்லாம் அவளுக்கு விநோதமாக இருக்கும். ஆனால், ரொம்பப் பிடிக்கும்.
ஒரு நாள் ஒரு கூட்டத்திற்குப்பிறகு ஐரீனோடு சேர்ந்து விளையாடப்போவதாக ஆஸ்வால்ட் உறுதியளித்திருந்தார். கூட்டம் முடிந்தது; அவர்கள் கதவைத்திறந்துகொண்டு வெளியே போகவிருந்தபோது ஒரு வயதான பெண்மணி ஆஸ்வால்டை நிறுத்தி, “ஓ, மிஸ்டர் சேம்பர்ஸ், என்னைப்பற்றி நான் உங்களிடம் கொஞ்சம் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்,” என்று சொல்லி அவரைத் தடுத்து நிறுத்தினார். ஐரீனின் முகம் வெளுத்தது. “ஓ, குறைந்தது இரண்டு மணிநேரமாவது ஆகும்,” என்று நினைத்துக்கொண்டு, வேகமாக நடந்து, கதவுக்கு வெளியே போய் நின்று அவள் காத்திருந்தாள். “எவ்வளவு நேரம் ஆகும் என்று தெரியவில்லை,” என்று நினைத்துக்கொண்டு நாற்காலியில் அமர்ந்தாள். இரண்டு நிமிடங்களுக்குப்பிறகு, ஆஸ்வால்டும், அந்த வயதான பெண்மணியும் வெளியே வந்தார்கள். ஐரீன் தன் சித்தப்பாவின் கைகளைப்பிடித்து துள்ளிக்குதித்துக்கொண்டு வீட்டிற்குச் சென்றாள். அந்த வயதான பெண்மணி சிறிது தூரம் சென்றபிறகு, “இவ்வளவு சீக்கிரமாகப் பேசிமுடித்துவிட்டீர்களே! ஆச்சரியமாயிருக்கிறது!” என்று ஐரீன் சொன்னாள். அதற்கு ஆஸ்வால்ட், “நீங்கள் இப்போது என்னிடம் சொல்ல விரும்புவதை எப்போதாவது தேவனிடம் சொன்னீர்களா என்று நான் அவரிடம் கேட்டேன். அவர் ‘இல்லை’ என்று சொன்னார். அதனால், அவரை வீட்டுக்குப் போகச் சொல்லி, முதலாவது அவரைப்பற்றிய எல்லாற்றையும் தேவனிடம் சொல்லச்சொன்னேன். நேரே தலைமையகத்தைத் தொடர்புகொள்வதற்குப்பதிலாக கிளை நிலையங்களை ஏன் தொடர்புகொள்ள வேண்டும்? என்று சொன்னேன். எனவே, அவர் போய்விட்டார்,” என்று சொன்னார்.
League of prayerசார்பாக அமெரிக்காஉட்பட பல நாடுகளுக்கு அவர் பயணம் செய்தார். 1906ஆம் ஆண்டு அவர் அமெரிக்காவுக்குச் சென்றார். கப்பல் பயணம் உண்மையாகவே அவருடைய ஓய்வு நாட்கள் என்று சொல்லலாம். ஏனென்றால், இதுபோன்ற பயணங்களை ஓய்வெடுக்கவும், படிக்கவும், எழுதவும், எல்லாவற்றையும் சீர்தூக்கிப்பார்க்கவும் அவர் பயன்படுத்தினார். அந்தப் பயணத்தில், அதே கப்பலில் அவருக்குத் தெரிந்த ஒருவர் இருந்தார். அவர் வேறு யாரும் இல்லை, கெர்ட்ரூட் ஹாப்ஸ்.
கெர்ட்ரூட் ஓர் அசாதாரணமான பெண்மணி. அவர் அமெரிக்காவுக்குப் பயணம் செய்துகொண்டிருக்கிறார். அவரிடம் ஒரு வழிப் பயணச்சீட்டுதான் இருக்கிறது. இங்கிலாந்துக்குத் திரும்பிவரும் எண்ணம் இருப்பதுபோல் தெரியவில்லை. அவருடைய பையில் வெறும் 16 டாலர் மட்டுமே இருக்கிறது. அவர் புதிய நாடான அமெரிக்காவில் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கப்போய்க்கொண்டிருக்கிறார்.
இவரைப்பற்றிக் சொல்லியே ஆகவேண்டும். இவருடைய வளர்ப்பு மிகவும் சுவாரஸ்யமானது. இவர் நோய்வாய்ப்பட்ட குழந்தையாக இருந்ததால் வழக்கமான பள்ளிக்குச் செல்லவில்லை. செல்லவில்லை என்பதைவிட செல்ல முடியவில்லை. எனவே, வீட்டில் இருக்க வேண்டியிருந்தது. ஆனால், இவர் அதிபுத்திசாலி. எனவே, வீட்டில் சும்மா இருக்கவிரும்பவில்லை; நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. அவர் சுருக்கெழுத்துக் கற்றுக்கொள்ள முடிவுசெய்தார். ஒருவர் பேசுவதை அவர் பேசும் வேகத்தில் வார்த்தைக்கு வார்த்தை அப்படியே எழுதமுடியாது. எனவே, சில குறியீடுகளைப் பயன்படுத்தி அவர் பேசுவதை அப்படியே எழுதுவார்கள். சுருக்கெழுத்து. அவர் சாதாரணமாக மக்கள் பயன்படுத்தும் குறியீடுகளைப் பயன்படுத்துவதற்குப்பதிலாக, அவரே சில பிரத்தியேகமான குறியீடுகளை உருவாக்கினார். இங்கிலாந்தில் தன்னைவிட வேகமாக சுருக்கெழுத்து எழுதக்கூடியவர் வேறு யாரும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவர் வேகமாக சுருக்கெழுத்து எழுத வேண்டும் என்று தீர்மானித்தார். ஏன்? அவருக்கு ஓர் இலட்சியம் இருந்தது. இங்கிலாந்து பிரதமரின் செயலாளராக மாற வேண்டும் என்பதே அவருடைய இலட்சியம். இங்கிலாந்து பிரதமரின் செயலாளராக நிறையப்பேர் போட்டிபோடுவார்கள். தன்னைத்தான் தெரிந்தெடுக்க வேண்டுமானால் தனித்திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து, தனக்கென ஒரு புதிய முறையை வகுத்தார்.
அவருடைய சகோதரிகள் கட்டுரைகளை வேகமாகப் படிப்பார்கள். ஹாப்ஸ் அதை வார்த்தைக்கு வார்த்தை அப்படியே எழுதுவார். அவர் எழுதியதை அவருடைய சகோதரிகள் சரிபார்ப்பார்கள்; கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி குற்றம் கண்டுபிடிப்பார்கள். ஒரு தவறு காணமுடியாது. வெளியே கூட்டங்களுக்குச் சென்று பேச்சாளர்கள் பேசும்போது அவர் குறிப்புகளைச் சுருக்கெழுத்தில் எழுதி, பேச்சாளர் மேடையிலிருந்து இறங்கி வெளியே போவதற்குள் அதை வார்த்தைக்கு வார்த்தை எழுதி அவருடைய கையில் கொடுத்து விடுவார். அந்த அளவுக்கு அவர் திறமைசாலி. கேட்டதைச் சுருக்கெழுத்தில் எழுதி, பின் சுருக்கெழுத்தில் எழுதியதை மிக வேகமாக எழுத்து மொழியாக மாற்றிக்கொடுத்தார். அவர் ஒரு நிமிடத்தில் 250 வார்த்தைகளை எழுதினார். ஒருவன் ஒரு நிமிடத்தில் இத்தனை வார்த்தைகளைப் பேச முடியுமா என்பதே சந்தேகம். அவர் மிக நல்ல பெண்.
இந்த அமெரிக்கப் பயணத்தின்போதுதான் இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளவும், விரும்பவும் ஆரம்பித்தார்கள். இதற்குமுன்பே இருவரும் ஒருவரையொருவர் சந்தித்திருக்கிறார்கள்; அறிமுகம் உண்டு. ஆனால், நெருக்கமாகப் பழகவில்லை. இந்தப் பயணம் தேவன் அவர்களுக்காகவே ஏற்பாடு செய்ததுபோல் இருந்தது.
ஆஸ்வால்ட் எல்லாருக்கும் புனைபெயர் சூட்டுவதில் பெயர்பெற்றவர். எடுத்துக்காட்டாக டுனூன் கல்லூரி முதல்வர் டங்கன் மேக்ரிகோரை கிராண்ட் ஓல்ட் மேக் என்று அழைத்தார். அவர் யாரையும் விட்டுவைக்கவில்லை. எனவே, அவர் கெர்ட்ரூட்டுக்கும் புனைபெயர் வைத்தார். ஏனென்றால், அவருடைய அக்கா பெயரும் கெர்ட்ரூட்தான். இவரையும் கெர்ட்ரூட் என்று அழைத்தால் குழப்பமாகிவிடும். கெர்ட்ரூட்டை beloved disciple என்று அழைத்தார். இது கூப்பிடுவதற்கு நீளமாக இருக்கும் என்பதால் beloved என்ற வார்த்தையின் முதல் எழுத்து B யையும், disciple என்ற வார்த்தையின் முதல் எழுத்து d யையும் சேர்த்து BD என்றைழைத்தார். இந்தப் பெயர்தான் அவர் வாழ்நாள் முழுவதும் அவரோடு ஒட்டிக்கொண்டது. அமெரிக்காவில் அவர் சின்சினாட்டியில் உள்ள வேதாகமக் கல்லூரியில் ஆறு மாதங்கள் கற்பித்தார். அங்கு அவர் அமெரிக்கர்களின் உற்சாகம், சுதந்திரம், படைப்பாற்றல் ஆகியவைகளை மிகவும் நேசித்தார். சின்சினாட்டியில் அதைப் பார்த்தபிறகு பிரிட்டனில் ஒரு வேதாகமக் கல்லூரியை நிறுவும் யோசனை அவருக்குள் பிறந்தது.
அவர்கள் இருவரும் இங்கிலாந்துக்குத் திரும்பியபிறகு மீண்டும் சந்தித்தார்கள். ஆஸ்வால்ட் ஒரு கலைஞர் இல்லையா? 1908 நவம்பர் மாதம் ஒரு நாள் அவர் பிடியை இலண்டனில் உள்ள புனித பவுல் பேராலயத்துக்கு அழைத்துச் சென்று, அவர்களுடைய வழக்கத்தின்படியே, “நான் உன்னைத் திருமணம்செய்ய விரும்புகிறேன்,” என்று முன்மொழிந்தார். ஏன் அவர் அந்தப் பேராலயத்தைத் தெரிந்தெடுத்தார்? அங்கு ஹோல்மன் ஹன்ட்டின் உலகப் புகழ்வாய்ந்த ’உலகின் ஒளி” ஓவியம் இருக்கிறது. அந்த ஓவியத்தின்முன் நின்று, இருவரும் ஒருவருக்கொருவர் தங்கள் அன்பை அறிக்கைசெய்தார்கள். ஆனால் உண்மையில், அவர்கள் முதலாவது, “தேவனே, நாங்கள் எங்களை முதலாவது உமக்கும், உம்மை நேசிப்பதற்கும், இந்த இருண்ட உலகில் உம் ஒளியைப் பரப்பும் பணியைச் செய்வதற்கும் ஒப்புக்கொடுக்கிறோம், உறுதி அளிக்கிறோம். நாங்கள் இருவரும் இந்தத் தரிசனத்திலிருந்து பின்வாங்க மாட்டோம். ஒன்றாகச் சேர்ந்து பயணிப்போம். இதற்காக நாங்கள் செலவுபண்ணவும், செலவுபண்ணப்படவும் ஆயத்தமாயிருக்கிறோம்,” என்று தங்களை அர்பணித்தார்கள். ஒரு வருடம் கழித்து, 1910இல் அவர்கள் திருமணம் செய்தார்கள்.
ஆஸ்வால்ட் சென்ற இடமெல்லாம் பிரசங்கித்தார். அவருடைய மனைவி biddy விருந்தோம்பலின் இலக்கணம், வரையறை. அவர்கள் இருவரும் பிரசங்கத்தின்மூலமாகவும், விருந்தோம்பலின்மூலமாகவும் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்தார்கள். திருமணமானபின் இருவரும் தேனிலவுக்காக நான்கு மாதம் அமெரிக்காவுக்குச் சென்றார்கள். அங்கு அவர் பல புனித முகாம் கூட்டங்களில் பேசினார். நியூயார்க்கின் கேட்ஸ்கில் மலைகளில் சிறிது காலம் தங்கியிருந்தபோது, ஆஸ்வால்டின் பிரசங்கத்தை biddy சுருக்கெழுத்தில் எழுதினார்.
ஆஸ்வால்டின் பிரசங்கங்களை biddy சுருக்கெழுத்தில் எழுதியபோது அவை என்னவாகும் என்று அவர்கள் இருவருக்கும் தெரியாது. ஆனால், இன்று அவர்கள் இருவரும் கற்பனைகூட செய்யமுடியாத அளவுக்கு மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கான விதை அன்று விதைக்கப்பட்டது.
தேனிலவுக்குப்பின், நிச்சயமற்ற எதிர்காலத்தோடு, ஆனால், நிச்சயமான தேவனோடு, அவர்கள் பிரிட்டனுக்குத் திரும்பினார்கள். அவர்களிடம் எதிர்காலத்தைக்குறித்த திட்டவட்டமான திட்டம் எதுவும் இல்லை. எந்தத் திட்டமும் இல்லை, பணமும் இல்லை, வீடும் இல்லை. கிறிஸ்துவைத்தவிர வேறொன்றும் இல்லை. இந்தச் சூழிநிலையில் இருக்கும் புதிய தம்பதிகளின் உரையாடல் பெரும்பாலும் எதிர்காலத்தைக்குறித்துதான் இருக்கும். ஆனால் ஆஸ்வால்டும், பிடியும் வித்தியாசமானவர்கள். “தேவனை நம்புங்கள். நம்பி, அடுத்து என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யுங்கள். எடுத்துக்காட்டாக, அடுத்து தூங்க வேண்டும் என்றால் தூங்குங்கள்,” என்பது அவர்களுடைய வாழ்வின் அசைக்கமுடியாத கோட்பாடு. அவர்கள் அப்படித்தான் வாழ்ந்தார்கள். அடுத்த காரியத்திற்காகத் தேவனை நம்பினார்கள். “மகிழ்ச்சியாக வாழ்வதற்கு நாம் எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை,” என்று அவர்கள் நம்பினார்கள். ஆம், அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் ஆழமாக நேசித்தார்கள்; தேவன்மேல் உறுதியான நம்பிக்கையும், அன்பும் கொண்டிருந்தார்கள்.
League of prayerஇல் அவருடைய ஈடுபாட்டின் காரணமாக அவருடைய பணிச்சுமை அதிகமாயிற்று. அவர் அஞ்சல்வழியாக இறையியல் வகுப்பு நடத்தினார். நாடு முழுவதிலுமிருந்து ஏறக்குறைய 6000 மாணவர்கள் அஞ்சல் வழியாக இறையியல் கற்றார்கள். இவர்களுக்குப் பாடத்திட்டங்கள் தயாரிக்க வேண்டும், அனுப்ப வேண்டும், மாணவர்கள் அனுப்பும் விடைத்தாள்களைத் திருத்த வேண்டும், அவர்களுடைய கேள்விகளுப் பதில் சொல்ல வேண்டும். இவைகளோடு சபைகளில் பிரசங்கிக்க வேண்டும். வேதாகமக் கல்லூரிகளில் பாடம் நடத்த வேண்டும். மக்கள் அவரிடம், “இவைகளையெல்லாம் நீங்கள் எப்படிச் செய்கிறீர்கள்? இரவு கண்விழித்து நீண்ட நேரம் வேலை செய்தாலும், அடுத்த நாள் காலையில் வழக்கம்போல் சீக்கிரம் எழுந்துவிடுகிறீர்கள்,” என்று சொன்னார்கள். ஆஸ்வால்ட் சேம்பர்ஸ் மிகவும் எளிமையாகச் சொன்னார், “என்னுடைய அறிவுரை இதுதான். படுக்கையை விட்டு எழுந்திருங்கள். பிறகு யோசியுங்கள்.”
மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கு வசதியாக ஓர் உறைவிட வேதாகமக் கல்லூரியைத் தொடங்க வேண்டும் என்று ஆஸ்வால்ட் பல ஆண்டுகளாக கனவு கண்டார். வேதாகமக் கல்லூரி ஆரம்பிக்க வேண்டும் என்பதற்கு டங்கன் மெக்ரிகோர் ஒரு காரணம். அமெரிக்காவில் அவர் பணியாற்றிய வேதாகமக் கல்லூரி இன்னொரு காரணம். ஊழியம் செய்ய விரும்புகிறவர்களைப் பயிற்றுவிக்கவும், படிப்பிக்கவும், பழக்குவிக்கவும் வேண்டிய இன்றியமையாத தேவை இருப்பதை ஆஸ்வால்ட் உணர்ந்தார். ஊழியம் செய்ய விரும்புகிறவர்கள் மிஷனரிகளாகவோ, பாஸ்டர்களாகவோ, போதகர்களாகவோ யாராக இருந்தாலும் சரி, அவர்கள் ஆண்டவராகிய இயேசுவின் சீடனுக்கேற்ற வாழ்க்கை வாழ வேண்டும் என்றும், வாழ வேண்டும் என்ற வாஞ்சை அவர்களுக்கு வேண்டும் என்றும் அவர் நம்பினார். “இறையியல் ஒருபுறம் இருக்கட்டும், அது முக்கியம்தான். அதற்குரிய இடம் உண்டு. ஆனால், எல்லாரும் இயேசுவின் சீடர்களாக வாழ வேண்டும்; எல்லாரும் தேவனுக்காக எரிந்து பிரகாசிக்கிற விளக்காக இருக்க வேண்டும். தேவன்மேலுள்ள அன்பினால் தேவ மக்களுடைய இருதயங்கள் கொழுந்துவிட்டு எரிய வேண்டும்,” என்பதே அவருடைய பாரம். தன் சொந்த வேதாகமக் கல்லூரி இருந்தால் இதைச் செய்வது இலகுவாக இருக்கும் என்று அவர் நினைத்தார்.
அவருடைய கனவு நனவாகும் வகையில் இலண்டனின் தென்மேற்குப் பகுதியில் ஒரு கம்பீரமான வீடு அவருக்குக் கிடைத்தது. 1910ஆம் ஆண்டு, டிசம்பர் மாதத்தில் league of prayer ரின் உதவியால் அந்த வீடு அவருக்குக் கிடைத்தது. ஜெப லீக் அந்த வீட்டைக் கண்டுபிடித்துக் கொடுத்தார்கள். அவ்வளவே. யாருடைய பொருளாதார உதவியும் கிடையாது; உதவி கிடைக்கும் என்ற உத்தரவாதமும் கிடையாது; வேதாகமக் கல்லூரியில் சேர மாணவர்கள் கிடையாது; வீட்டில் மேஜை, நாற்காலி ஒன்றும் கிடையாது. காலி வீடு மட்டும் கிடைத்தது. விசுவாசத்தோடு, அவர்கள் அந்த வீட்டைக் குத்தகைக்கு எடுத்தார்கள். குத்தகைக்கு வாங்கிய ஒரு மாதத்தில் கல்லூரியைத் தொடங்க முடிவுசெய்தார்கள். அந்த வீட்டில் மொத்தம் 19 அறைகள் இருந்தன. 25 மாணவர்கள் தங்கிப் படிக்க முடியும். சில விரிவுரையாளர்களும் தங்கலாம். வகுப்பறை, புழங்கும் அறை, சாப்பாட்டு அறை எல்லாம் இருந்தன. ஒரு மாதத்தில் திறக்கத் தயாரானார்கள். முதன்முதலாக ஆஸ்வால்டும், பிடியும் அந்த வீட்டுக்கு வந்து, படிக்கட்டுகளில் ஏறி உச்சிக்குச் சென்று உள்ளேயும், வெளியேயும் பார்த்து வியந்தார்கள். அவர்கள் ஒவ்வோர் அறைக்கும் சென்று, நின்று ஜெபித்தார்கள். “தேவனே, இந்த வீட்டின் சூழலை உம் பரிசுத்த ஆவியால் நிரப்பும்,” என்று பாரத்தோடு ஜெபித்தார்கள். வகுப்பறையைப்போலவே சாப்பாட்டு அறையையும் ஆஸ்வால்ட் முக்கியமானதாகக் கருதினார்.
ஆஸ்வால்ட் மாணவர்களுக்குக் கற்பிப்பதற்குத் தேவையான பாடத் திட்டங்களைத் தயாரிக்க ஆரம்பித்தார்; வேதாகம உளவியல், வேதாகமத்தின் பொழிப்புரை போன்றவைகளைக் கற்பிக்கும் யோசனையும் கொண்டிருந்தார். நான்கு நற்செய்திகளுக்கும் பொழிப்புரையும், இறையியலும் கற்பிக்க விரும்பினார். அவைகளுக்கான பாடத் திட்டங்களை ஆயத்தம் செய்யத் தொடங்கினார். மாணவர்கள் வேதாகமத்தை மனப்பாடம்செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார், உள்ளூர் ஞாயிறு பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் வகுப்புகள் நடத்த விரும்பினர்.
வீடு கிடைத்த ஒரு மாதத்திற்குள் இவையனைத்தும் நடக்க வேண்டும். வேதாகமக் கல்லூரி திறக்கப்பட்டது. முதல் நாளில் ஒரேவொரு மாணவன் கல்லூரியில் சேர வந்தான். தான் மட்டுமே அங்கு இருப்பதைக் கண்ட அந்த மாணவன் அன்று இரவே யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டான். காலையில் பார்த்தால் அங்கு ஆள் இல்லை. அடுத்த நான் வேறொரு மாணவன் சேர்ந்தான். அவன் ஒருவன் மட்டும்தான் அடுத்த ஒரு வாரத்தில் கல்லூரியில் இருந்த ஒரே மாணவன். ஆனால், அதற்கடுத்த வாரத்தில் 25 மாணவர்கள் சேர்ந்தார்கள். கல்லூரி முழு கொள்ளளவை எட்டிற்று. அதன்பின் அந்தப் பயிற்சிக் கல்லூரி ஒரு பரபரப்பான மையமாக மாறிற்று.
BD விருந்தோம்பலில் இலக்கணம் என்று நான் ஏற்கெனவே சொன்னேன். வீட்டை நிர்வகிப்பதில், கணக்குவழக்குகளைப் பராமரிப்பதில், கடிதங்கள் எழுதுவதில் எனப் பல்வேறு காரியங்களில் அவர் சிறந்துவிளங்கினார். எல்லாவற்றுக்கும்மேலாக அவருடைய விருந்தோம்பல் அற்புதமானது. இதோ ஓர் எடுத்துக்காட்டு! ஒரு நாள், “இன்னும் இரண்டு மணி நேரத்தில், ஒரு மிஷனரியின் குடும்பம் ஆப்பிரிக்காவிலிருந்து வந்து இங்கு தங்கப்போகிறார்கள். அந்தக் குடும்பத்தில் மொத்தம் ஏழு பேர். எவ்வளவு காலம் இங்கு தங்குவார்கள் என்று தெரியாது. அவர்கள் தங்குவதற்கு உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும். அவர்களுடைய குழந்தைகள் இதற்குமுன் ஆப்பிரிக்காவைவிட்டு ஒருமுறைகூட வெளியே சென்றதில்லை. அவர்கள் ஆப்பிரிக்காவில் ஒரு பழங்குடியினரிடையே ஊழியம்செய்துகொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக, அவர்கள் இலண்டனைப் பார்த்ததும் அதிர்ச்சியடைவார்கள்,” என்று ஆஸ்வால்ட் விவரமாகச் சொன்னார். BD உடனே களத்தில் இறங்கினார். பம்பரம்போல் சுழன்றார். இரண்டு மணி நேரத்தில், அவர்களுக்கான படுக்கையறைகளை ஏற்பாடுசெய்தார். சில மாணவர்களை வேறு அறைகளுக்கு மாற்றினார். ஏழு பேருக்கு சூடான உணவைச் சமைத்தார். அவர்களுக்குத் தேவையான ஆடைகளை வாங்கினார். மலிவான ஆடைகளை அல்ல, இரண்டாந்தரமான ஆடைகளை அல்ல, வேண்டாமென்று தூக்கியெறியும் ஆடைகளை அல்ல, மிகவும் நல்ல, சரியான, தரமான ஆடைகளை வாங்கினார். குழந்தைகள் தூங்கும்போது அவர்களுடைய தலையணையருகே வைப்பதற்கு அவர்களுக்கு நல்ல பொம்மைகள் வாங்கினார். வருகிற விருந்தாளிகளை தாங்கள் மதிக்கிறோம், வரவேற்கிறோம், விரும்புகிறோம் என்று எந்தெந்த வகைகளில் காண்பிக்க முடியுமோ அத்தனை வழிகளிலும் அதை அவர் நிரூபித்தார். BD இப்படிப்பட்ட நபர். அவர் தன் திராணிக்கு மிஞ்சி விருந்தோம்பல் செய்தார். கற்பனைகூட செய்யமுடியாத அளவுக்கு அவர் விருந்தோம்பல் செய்தார். தங்களைத் தேடி வருகிற அனைவரையும் அவர் சர்வவல்லவரின் விருந்தாளிகள் என்று கருதினார். வேதாகமப் பயிற்சிக் கல்லூரி அங்கு படிக்கும் மாணவர்களுக்கு ஓர் ‘அடைக்கலப் பட்டணமாக’ இருக்க வேண்டும் என்றே அவர் விரும்பினார். வேதாகமக் கல்லூரி பகலில் பாடங்கள் நடத்தும்போது மட்டும் அல்ல, 24/7 திறந்திருக்கும் என்று மாணவர்களுக்குத் தெரியும். ஆம், அவர்கள் எப்போது வேண்டுமானாலும் ஆலோசனை வேண்டி வரலாம். விரித்த கரங்களோடும், திறந்த மனதோடும், மலர்ந்த முகத்தோடும், உள்ள மலர்ச்சியோடும் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்கள்.
கல்லூரியில் எல்லாரும் சேர்ந்து வாழும்போது, சேர்ந்து சாப்பிடும்போது, அவரவர் தங்கள் தங்கள் விமரிசனங்களைச் சொல்வதற்கு ஆஸ்வால்ட் சுதந்திரம் கொடுத்திருந்தார். எல்லாருடைய விமரிசனங்களும், அபிப்பிராயங்களும் அடுத்த உணவு வேளையில் கல்லூரி முதல்வர் முன்னிலையில் விவாதிக்கப்படும், கேள்விகள் கேட்கப்படும்.. ஆஸ்வால்ட் ஒருபோதும் அவர்களோடு வாதிடவில்லை, வாக்குவாதம் செய்யவில்லை. அவர் ஒருபோதும் தன் கண்ணோட்டத்தை மாணவர்கள்மேல் திணிக்க முற்படவில்லை. தேவனுடைய கண்ணோட்டம் என்னவென்பதை அவர்களே கலந்துரையாடித் தெரிந்துகொள்ளட்டும் என்று அவர் பொறுமையோடு அமர்ந்திருந்தார்.
“ஆண்டிற்கு ஒரேவொரு மாணவனாவது தேவனுடைய அழைப்புக்குக் கீழ்ப்படிந்தாலே போதும்; நான் வேதாகமக் கல்லூரியைத் தொடர்ந்து நடத்துவேன்,” என்று சேம்பர்ஸ் கூறினார். அங்கு பயிற்சி பெற வரும் மாணவர்களுக்குள் தேவன் தம்மைப் பகிர்ந்தளிப்பதற்கு அந்தக் கல்லூரி உதவ வேண்டும் என்பதே அவருடைய ஒரே நோக்கம்.
ஆஸ்வால்ட் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் எழுந்து தேவனோடு தனியாக நேரம் செலவழித்தார்; அதன்பின் நீண்ட நேரம் வேதம் வாசித்தார். அதற்குப்பின் அவருக்கென்று தனிப்பட்ட நேரம் கிடையாது. அவர் ஒவ்வொரு நாளும் கல்லூரியில் பயிற்சி பெறும் மாணவர்களுக்குப் பாடங்கள் நடத்தினார்; மாலையில் இலண்டனில் மாலை வகுப்புகள் நடத்தினார்; வாரத்தின் இறுதி நாட்களில் சபைகளில் பிரசங்கித்தார். இவைகளோடுகூட அஞ்சல்வழியாக 3000 மாணவர்களுக்கு இறையியல் கற்பித்தார்.
அந்த வேதாகமக் கல்லூரியில் ஒரு தம்பதியர் வேலைபார்த்தார்கள். அவர்கள் வீட்டையும், கல்லூரியையும் மேலாண்மை செய்தார்கள் என்று சொல்லலாம். அவர்கள் அங்கிருந்த முட்கரண்டிகள், கரண்டிகள், பீங்கான் பாத்திரங்கள், துணிகள்போன்ற பொருட்களை அவ்வப்போது திருடினார்கள். இதை அங்கிருந்த மாணவர்கள் கண்டுபிடித்தார்கள். ஒரு மாணவர் ஆஸ்வால்டிடமும், BDயிடமும், “இவர்கள் உங்களிடமிருந்து திருடுகிறார்கள். இது ரொம்ப நாடகளாகத் தொடர்கிறது,” என்று சொன்னான். இன்னொருநாள் இன்னொரு மாணவன் வந்து, “அவர்கள் பழங்களையும், காய்கறிகளையும் எடுத்துக்கொண்டுபோகிறார்கள்,” என்றான். அதற்கு ஆஸ்வால்ட், “ஆம், எனக்குத் தெரியும்,” என்றார். ஆஸ்வால்ட் அந்தத் தம்பதிகளிடம் ஒன்றும் சொல்லவில்லை. இன்னும் சில மாணவர்கள் அவர்களிடம் வந்து, “அவர்கள் ஒவ்வொருநாளும் திருடுகிறார்கள். இது அவர்களுக்கு வாடிக்கையாயிற்று,” என்று சொன்னார்கள். ஆஸ்வால்ட் இதைப்பற்றி அந்தத் தம்பதியிடம் ஒன்றும் பேசவில்லை, பேச விரும்பவுமில்லை. சில மாதங்கள் கழிந்தன. ஒருநாள் அந்தத் தம்பதிகள் ஆஸ்வால்டின் அலுவலகத்திற்கு வந்து, தங்கள் செயலுக்காக மனம்வருந்தி, கண்ணீருடன் ஒப்புக்கொண்டார்கள். “ஆம், நாங்கள் திருடினோம். ஏன் இப்படிச் செய்தோம் என்று எங்களுக்குத் தெரியவில்லை. பல மாதங்களாக நாங்கள் திருடிக்கொண்டிருக்கிறோம். வருந்துகிறோம். எங்களை மன்னியுங்கள்,” என்று மன்னிப்புக் கேட்டார்கள். ஆஸ்வால்ட் அவர்களுக்கு நன்றி தெரிவித்து, “ஆம், நீங்கள் திருடுகிறீர்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால், முதலாவது தேவன் உங்களோடு பேசட்டும் என்று நான் காத்திருந்தேன். அவர் உங்களோடு பேசுவதற்குமுன் நான் பேச விரும்பவில்லை,” என்று சொன்னார். அதைக் கேட்டதும் அவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். ஆஸ்வால்டுக்கும், BD க்கும் ஏற்கெனவே இது தெரியும். எனினும், அவர்கள் அங்கேயே தொடர்ந்து தங்கவும், வேலை செய்யவும் அனுமதித்தார்கள். அது மட்டும் அல்ல. தெரிந்தும், அவர்கள்மேல் வைத்திருந்த அவர்களுடைய அன்பில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. முன்புபோலவே அவர்களைக் கவனித்துக்கொண்டார்கள். அன்றே அவர்கள் இருவரும் தங்கள் வாழ்க்கையைத் தேவனுக்கு முழுமையாக அர்பணித்தார்கள்.
அங்கு படித்த அத்தனை மாணவர்களையும் அவர்கள் தங்கள் சொந்தப் பிள்ளைகளைப்போல் கவனித்தார்கள். எனவே, மாணவர்களும் தாங்கள் ஒரு பெரிய குடும்பத்தில் இருப்பதைப்போலவே உணர்ந்தார்கள். 1913ஆம் ஆண்டில், அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு புதிய வரவு. அவர்களுக்கு ஒரு மகள் பிறந்தாள். அவளுடைய பெயர் கேத்லீன். ஆஸ்வால்ட் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அந்தப் புதிய வரவால் மொத்தக் கல்லூரியும் பேருவகை கொண்டது. அவள் எல்லாருக்கும் செல்லப்பிள்ளையானாள். கேத்லீன் எல்லாருடைய அறைகளுக்கும் செல்வாள்; எல்லாரும் அவளைத் தூக்கிக் கொஞ்சினார்கள்; நூலகத்துக்குச் சென்று நூல்களைப் புரட்டினாள். வகுப்பறைக்குச் சென்று உட்கார்ந்தாள். இந்தச் சூழலில்தான் கேத்லீன் வளர்ந்தாள்.
இப்போது பிடிக்கு முந்தி இருந்த பொறுப்புகளோடு தாய் என்ற பொறுப்பும் சேர்ந்துவிட்டது. ஏற்கெனவே, வீட்டைப் பராமரிப்பது, கல்லூரியை நிர்வகிப்பது, வகுப்புகள் நடத்துவது, விருந்தோம்பல் செய்வது எனப் பல வேலைகள் இருந்தன. ஆஸ்வால்ட் கல்லூரியில் பேசினார், கற்பித்தார், கூட்டங்களில் பிரசங்கித்தார், தன் மாணவர்களைத் தேவனுக்குள் உறுதிப்படுத்த ஒவ்வொரு நாளும் அவர்களோடு சேர்ந்து காலை ஆராதனை செய்தார், தியானம் செய்தார். கட்டுரைகள் எழுதினார், பாடத்திட்டங்கள் தயாரித்தார்.
எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்தது. ஓர் இரவு ஆஸ்வால்ட் கீழ்ப்படிதலைப்பற்றிப் பிரசங்கித்தார், அன்று அவர் பிரசங்கிப்பதற்கு எடுத்துக்கொண்ட தலைப்பு, “என்னைப் பின்பற்றுங்கள்.” “உண்மையில், நாம் எப்படி வாழ வேண்டும், எந்த வழியில் நடக்க வேண்டும் என்று நம் அனைவருக்கும் தெரியும், நமக்கு ஏற்கெனவே தெரிந்த வழியில் நாம் நடக்கத் தொடங்க வேண்டும். இதுதான் நம் தேவை,” என்று கீழ்ப்படிதலைப்பற்றிப் பேசினார். இது ஒரு மிக முக்கியமான பிரசங்கம். ஏனென்றால், அடுத்த நாள் காலையில், 1914ஆம் ஆண்டு ஆகஸ்டு 4ஆம் தேதி, அனைத்து நாளேடுகளிலும் “பிரிட்டன் போரில் குதித்தது” என்பதுதான் தலைப்புச்செய்தி. அது முதல் உலகப்போரின் தொடக்கம். படைகளில் சேர பிரிட்டன் மும்முரமாக ஆட்களைச் சேர்த்துக்கொண்டிருந்தது. ஆஸ்வால்டின் வேதாகமக் கல்லூரி இலண்டனில் மையத்தில் இருந்தது. அவர்கள் இருந்த இடத்தைச்சுற்றி ஆட்சேர்க்கும் பணி மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. இந்தச் சூழ்நிலையில் தான் என்ன செய்யவேண்டும் என்று ஆஸ்வால்ட் யோசித்தார். நாட்டிற்கும் சேவை செய்ய வேண்டிய அவசியம் இருப்பதை அவர் உணர்ந்தார். ஆனால், எந்த வகையில் அதைச் செய்ய முடியும் என்று அப்போது அவருக்குத் தெரியவில்லை. உலகப்போரைப்பற்றிக் கேள்விப்பட்ட செய்திகளெல்லாம் கொடூரமாகவும், பயங்கரமாகவும் இருந்தன. மக்கள் ஆரம்பத்தில் பேரார்வத்தோடும், ஊக்கத்தோடும், உணர்ச்சிவேகத்தோடும் இராணுவத்தில் சேர்ந்தார்கள். வீரர்கள் பிரான்சில் அகழிகளில் கொத்துகொத்தாக மடிந்தார்கள் என்ற செய்திகளைக் கேட்டு மக்கள் இராணுவத்தில் சேரத் தயங்கினார்கள். இலண்டனில் வாழ்ந்த ஒவ்வொரு குடும்பத்திலும் யாரோவொருவர் போரில் இறந்திருந்தார். எல்லார் வீட்டிலும் சாவு ஏற்பட்டிருந்தது. சாவு இல்லாத குடும்பம் இல்லை. பிரிட்டன் போரின் ஆரம்பக் கட்டத்தில் அடைந்த இந்தத் தோல்விக்குத் தேவனுடைய கோபமே காரணம் என்று சில கிறிஸ்தவர்கள் நம்பினார்கள். அது தேவனுடைய தண்டனை என்று அவர்கள் கருதினார்கள். ஆனால் சேம்பர்ஸ்போன்ற பெரும்பாலான கிறிஸ்தவர்கள் அப்படி நினைக்கவில்லை. அப்படி நினைப்பது இப்போது பயனற்றது என்று நினைத்தார்கள். தான் எழுதியதுபோல், பேசியதுபோல், கிறிஸ்துவுக்காக ஆக்ரோஷமாக வாழ வேண்டிய அவசரத்தை அவர் உணர்ந்தார்.
ஆஸ்வால்ட் தன்னை ஒய்.எம்.சி.ஏ என்ற கிறிஸ்தவ அமைப்பில் ஒரு Chaplainஆகப் பணிபுரிய பதிவுசெய்திருந்தார், இப்போது அவர் Chaplainஆக ஏற்றுக்கொள்ளப்பட்டார். அந்த நாட்களில் YMCA உண்மையாகவே ஒரு கிறிஸ்தவ அமைப்பாக இருந்தது, செயல்பட்டது. 1915 அக்டோபர் மாதம் அவர் எகிப்தில், சீடௌன் என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ முகாம்களில் தங்கியிருந்த நேசப்படைகளிடையே பணியாற்றுவதற்காக அனுப்பப்பட்டார். அவர் அந்தப் பொறுப்பை ஏற்று அங்கு சென்றார். அந்த முகாம் அவ்வளவு ஆபத்தானதல்ல. ஆஸ்வால்ட் மலைப்பாங்கான குளுகுளு அபெர்டெனில் பிறந்து, இங்கிலாந்தின் பசுமையான புல்வெளிகளில் வளர்ந்து, ஸ்காட்லாந்தின் மேடுகளிலும் காடுகளிலும் சுற்றித்திரிந்து, இப்போது எகிப்தின் சுடுமணலுக்குச் செல்கிறார். இரண்டு மாதங்களுக்குப்பிறகு, அவருடைய மனைவி பிடியும், மகள் கேத்லீனும், வேதாகமக் கல்லூரியிலிருந்த மேரி ரெய்லியும் எகிப்தில் அவருடன் சேர்ந்துகொண்டார்கள்.
எகிப்தில் இருந்த இந்த முகாம்களில் எப்போதும் கிட்டத்தட்ட 100,000 வீரர்கள் இருந்தார்கள். அவர்கள் கெய்ரோவில் இருந்த பள்ளிகளையும், பொழுதுபோக்குப் பூங்காக்களையும், விளையாட்டுத்திடல்களையும் இராணுவ மருத்துவமனைகளாக மாற்றியிருந்தார்கள். காயப்பட்ட வீரர்களுக்கு சிகிச்சையளிக்க அவர்களுக்கு நிறைய மருத்துவமனைகள் தேவைப்பட்டன. அந்தப் பகுதியைச் சுற்றி நடந்த போரில் காயமடைந்த அத்தனை வீரர்களும் இந்த முகாம்களுக்குத்தான் கொண்டுவரப்பட்டார்கள். போரில் ஏற்பட்ட அழிவுகளும், இழப்புகளும் அதிகம். எனவே, அதிகமான மருத்துவமனைகள் தேவைப்பட்டன. மருத்துவ சிகிச்சைக்காகத் தங்கியிருந்த வீரர்கள் ஒருபுறம். இன்னொரு புறம் போருக்குச் செல்வதற்குத் தேவையான பயிற்சிபெறும் வீரர்கள். போரில் காயமடைந்த, இறந்த வீரர்களை ஈடுசெய்ய பயிற்சிபெற்ற வீரர்களைப் போர்க்களத்துக்கு அனுப்பவேண்டும். இன்னொரு பக்கத்தில் பயிற்சி முடித்த வீரர்கள் எந்தப் போர்முனைக்குச் செல்ல வேண்டும் என்ற உத்தரவுக்காகக் காத்திருந்தார்கள். இவ்வாறு, இந்த முகாம்கள் 56 நாடுகளின் கூட்டமைப்பாகிய பிரிட்டிஷ் காமன்வெல்த்தைச் சார்ந்த எல்லா வீரர்களுக்கும் ஒரு சந்திப்புப்போல் செயல்பட்டது.
போரின் தாக்கத்தினால் இங்கிருந்த வீரர்கள் மனமுடைந்தார்கள். அவர்களில் பலர் மது, மாது, போதை, போதைப்பொருள்கள் ஆகியவைகளுக்கு அடிமைகளானார்கள். அவர்களில் பெரும்பாலோர் கட்டுப்பாடின்றி காட்டாற்றுவெள்ளம்போல வாழ்ந்தார்கள். அவர்கள் போரில் பார்த்த சோகம், இழப்பு, இறப்பு, காயம், ஆகியவைகளால் சுக்குநூறாக உடைந்து சின்னாபின்னமானார்கள். இப்படிப்பட்ட சிப்பாய்களை எப்படிப் போருக்கு அனுப்ப முடியும்? மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்; குடியில் குடியிருப்பவர்கள்; விபச்சார விடுதியில் தஞ்சமடைந்தவர்கள்; போதைப்பொருட்களுக்கு அடிமைகளானவர்கள்.
இது ஒரு பெரிய பிரச்சனையாக மாறிற்று. இராணுவத்தின் ஜெனரல்கள் ஒய்.எம்.சி.ஏவை அணுகி, “இந்தப் பிரச்சினையை எப்படித் தீர்க்கலாம் என்று பாருங்கள். ஒருபுறம் போர்க்களத்தில் நாங்கள் வேகவேகமாகச் சிப்பாய்களை இழக்கிறோம். இன்னொரு புறம் முகாம்களில் நிறையப்பேர் குடியால் அழிகிறார்கள். இதைத் தடுத்து நிறுத்தியாக வேண்டும்,” என்று வேண்டுகோள் விடுத்தார்கள்.
முகாம்களில் ஒய்.எம்.சி.ஏ அமைத்திருந்த ஒரு பெரிய கூடாரத்தை ஆஸ்வால்ட் பார்த்தார். அதில் ஜெபக் கூட்டங்கள் நடத்த முடியும். ஆனால், அதற்குப் பொறுப்பானவர், “இங்கு ஜெபக் கூட்டங்களில் வீரர்கள் கலந்துகொள்ளலாம்; ஆனால், யாரும் வருவதில்லை,” என்றார். ஆஸ்வால்ட் அந்த இடங்களைச் சுற்றிப்பார்த்தார். சுவர்களில், “சத்தியம் செய்யக்கூடாது, திருடக்கூடாது,” என்று எழுதப்பட்ட பெரிய பலகைகள் தொங்கிக்கொண்டிருந்தன. அது நேர்மறையான உணர்வைவிட எதிர்மறையான உணர்வையே ஏற்படுத்தியது. “நாங்கள் ஜெபக்கூட்டங்கள் நடத்துகிறோம். ஆனால், யாரும் வருவதில்லை. அவர்களுடைய உள்ளஉறுதியை உரப்படுத்த, உற்சாகப்படுத்த, வீரர்கள் கடிதம் எழுதுவதற்குத் தேவையான தாள்கள் உட்பட அனைத்தையும் இலவசமாக வழங்குகிறோம்; அவர்களுக்குத் தின்பண்டங்கள் வழங்க ஒரு சிற்றுண்டியகம் வைத்திருக்கிறோம். ஆனால், எதுவும் வேலைசெய்ததுபோல் தெரியவில்லை. எல்லாம் தோல்விபோல்தான் தெரிகிறது,” என்று அங்கிருந்தவர் சொன்னார்.
ஆஸ்வால்ட் முகாம்களைச் சுற்றிப்பார்த்தார். துருப்புக்களைப் பார்த்தபோது அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். அங்கிருந்த 18, 19 வயதுடைய இளம் சிப்பாய்களைப் பார்த்தபோது அவருடைய உள்ளம் உடைந்தது. எல்லாருடைய முகங்களிலும் பயம் கவ்விக்கொண்டிருந்தது. அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்பதைப்பற்றி அவர்களால் சிந்திக்கக்கூட முடியவில்லை. சிந்திப்பதைச் சகிக்கமுடியவில்லை.
ஒருநாள் அவர், “ஜெபத்தின் நன்மை என்ன?” என்ற தலைப்பில் பேசினார். வீரர்கள் அமைதியோடு கேட்டார்கள். அவர்கள் கடிதங்கள் எழுதிக்கொண்டிருந்தபோது அவர்களிடையே அவர் நடந்துபோனார். அன்று அந்த ஜெபக்கூட்டத்தில் கலந்துகொண்ட பெரும்பாலான வீரர்கள் ஆஸ்திரேலியர்கள். அவர்கள் எழுதிய கடிதங்களைப் பார்த்தபோது கிட்டத்தட்ட கடிதம் முழுவதும் அவநம்பிக்கையே நிறைந்திருந்தது. நம்பிக்கைத் துளி கடுகளவுகூட அதில் இல்லை. இந்தக் கடிதங்களைத்தான் அவர்கள் தங்கள் மனைவி, பிள்ளைகளுக்கு அனுப்பினார்கள். கடிதங்களை எழுதும்போது ஆஸ்வால்ட் அவர்களுடைய முகங்களைப் பார்த்தார். அவரால் தாங்கமுடியவில்லை. அவர்களுடைய முகங்களில் சாவு பயம் தெளிவாகத் தெரிந்தது. இவர்கள்தான் அடுத்த நாள் கல்லிபோலி என்ற இடத்தில் நடக்கும் போர்முனைக்கு அனுப்பப்படவிருந்தவர்கள் என்பதைக் கண்டுபிடித்தார். அந்தப் போர்முனைக்குச் சென்றவர்கள் உயிரோடு வந்ததில்லை என்ற வதந்தி அங்கு ஏற்கெனவே பரவியிருந்தது. இப்படிபட்ட போர்வீரர்களுக்கு அவர் கிறிஸ்துவைக் காண்பித்தார்; வழங்கினார்.
எகிப்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது; கொசுக்களின் தொல்லை அதிகமாக இருந்தது. ஒவ்வொரு நாளையும் கடத்துவது கடினமாக இருந்தது. நாளின் முடிவில் மனம் சோராவிட்டாலும், உடல் சோர்ந்து. ஆனால், சேம்பர்ஸ் எதைக்குறித்தும் ஒருபோதும் முறுமுறுக்கவோ, புகார் செய்யவோ, வருத்தப்படவோ இல்லை. பிறர் எகிப்தின் சுடுமணலைப் பார்த்தார்கள்; ஆனால், ஆஸ்வால்ட் சுடுமணலில் அழகைக் கண்டார். பிறர் எகிப்தில் பாலைவனத்தை மட்டுமே பார்த்தார்கள்; ஆனால், ஆஸ்வால்ட் பாலைவனத்தில் சூரிய உதயத்தின் அழகைக் கண்டு வியந்தார். பலர் எகிப்தின் பாலைவன முகாம்களின் வாழ்க்கை பரிதாபமானது என்றும், பயங்கரமானது என்றும் நினைத்தார்கள், பார்த்தார்கள். ஆஸ்வால்ட், பாலைவனத்தின் முகாம்களையும், கூடாரங்களையும் அற்புதமான இடமாகப் பார்த்தார்; அவர் பாலைவனத்தை விரும்பினார். அவர் தன் நாளேட்டில் சூரிய உதயத்தின் வண்ணங்களைப்பற்றி எழுதுகிறார்; அவர் எகிப்துக்கு வந்தவுடன், உபாகமத்தையும், அரேபிய இரவுகள் என்ற புத்தகத்தையும் படிக்க வேண்டும் என்று முடிவு செய்தார். ஏனென்றால், எகிப்தின் பின்புலத்தில் அந்தப் புத்தகங்களை வாசிக்கும்போது அவைகளின் பொருளை இன்னும் அதிகமாகப் புரிந்துகொள்ள முடியும் என்று அவர் நினைத்தார். அவர் எகிப்தின் நிறம், வெயில், சூடுபோன்ற அனைத்தையும் விரும்பினார். பிறர் சுட்டெரிக்கும் வெயிலைப்பற்றிப் பேசினார்கள். அவரும் அதே சூரியனைத்தான் பார்த்தார். ஆனால், அவர் சூரியனின் ஆற்றலைப்பற்றிப் பேசினார். அவர் நாள்முழுவதும் எகிப்தின் மணலின் வண்ணங்களைப்பற்றிப் பேசினார். எகிப்தில் தான் வாழ்ந்த வாழ்க்கை அற்புதமான அனுபவம் என்றுதான் அவர் கருதினாரேதவிர வேறு விதமாக நினைக்கவில்லை. எல்லாச் சூழ்நிலைகளிலும் ஆஸ்வால்ட் தேவனுடைய கரத்தைக் கண்டார்; குறிப்பாக, சிப்பாய்களுக்குக் கிறிஸ்துவை அறிவிக்கக் கிடைத்த வாய்ப்புகளில் தேவனுடைய நடத்துதலைக் கண்டார்.
போர்வீரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்தன. ஒரு சிறிய குடும்பம். ஆஸ்வால்ட், BD, கேத்லீன். ஆஸ்வால்ட் எந்த வகையிலும் தன் விசுவாசத்தின் தரத்தைக் குறைக்கவோ, சமரசம்செய்யவோ, விட்டுக்கொடுக்கவோ இல்லை. உண்மையில், அவர் சில கறாரான காரியங்களைச் செய்தார். அவர் ஜெபக் கூட்டங்களை நடத்தினார். ஆனால், ஞாயிற்றுக்கிழமைகளில் சிற்றுண்டியகத்தை மூடிவிட்டார். அன்று வீரர்கள் சிற்றுண்டியகத்தில் சாப்பிட்டுக்கொண்டு நேரத்தை வீணாக்குவதற்குப்பதிலாக தேவனின்மீது கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் விரும்பினார். தேவனோடு ஒப்புரவாகுமாறு அவர் வீரர்களை வலியுறுத்தினார், வேண்டினார். மரணத்தை எதிர்கொள்ள வேண்டும் என்ற உண்மையை அவர் எடுத்துரைத்தார். மனிதன் சாகாவரமுடையவன் இல்லை என்று அவர் அவர்களுக்கு உணர்த்தினார். அவருடைய போதனைகளும், பிரசங்கங்களும், ஜெபங்களும் ஒருபுறம் இருக்க, அவர் தன் வாழ்க்கையினாலும், அவர்கள்மேல் காட்டின அக்கறையினாலும், உண்மையான அன்பினாலும், அவர் அவர்களுடைய இருதயங்களைக் கொள்ளைகொண்டார். பெரும்பாலான போர்வீரர்கள் மனம்மாறினார்கள், முற்றிலும் மாறினார்கள். அவர் அந்த முகாம்களில் இருந்த போர்வீரர்களுக்கு மட்டும் அல்ல, எகிப்து நாடு முழுவதும் இருந்த YMCAயின் துணையோடு நாடு முழுவதும் வேத பாட வகுப்பு நடத்தினார். பிடி கல்லூரி வகுப்பறையில் ஆசிரியரின் விரிவுரையைக் குறிப்பெடுப்பதுபோல, ஆஸ்வால்ட் பேசியத்தைச் சுருக்கெழுத்தில் ஒரு வார்த்தை விடாமல் எழுதினார்.
இராணுவ முகாம்களில் நடப்பதாகக் கேள்விப்பட்ட மாற்றங்களை உயர் அதிகாரிகள் நம்பவில்லை; அவர்கள் அவைகளை விளையாட்டென்று நினைத்தார்கள். “போர்வீரர்களெல்லாம் வேதபாட வகுப்புகளில் கலந்துகொள்கிறார்களா? ஜெபக்கூட்டங்களில் தவறாமல் பங்கெடுக்கிறார்களா? சிற்றுண்டியகத்தை மூடிவிட்டார்களா? ஞாயிற்றுக்கிழமை ஆராதனையா? மதுக்கடைகளும், விபச்சார விடுதிகளும் கதியென்று கிடந்தவர்கள் வேதாகமத்தை வாசிக்கிறார்களா? இது உண்மையாக இருக்காது. சும்மா சொல்கிறார்கள். சரி, இது உண்மையா பொய்யா என்று போய்ப் பார்ப்போம்,” என்று நினைத்து முகாம்களுக்கு வந்து பார்த்தார்கள். வியந்தார்கள்; மலைத்தார்கள்; பிரமித்தார்கள். “நாங்கள் கேள்விப்பட்டது நூற்றுக்குநூறு உண்மைதான். இந்தப் போர்வீரர்கள் உண்மையாகவே மாறிவிட்டார்கள்,” என்று ஒப்புக்கொண்டார்கள். முகாம்களில் இருந்த வீரர்கள் கிறிஸ்துவிடம் வருவதற்கு மூன்று வயது கேத்லீனும் ஒரு முக்கியக் காரணம். அவள் உயிர்த்துடிப்புள்ள, உயிரோட்டமான குழந்தை. அவள் பாலைவனத்தில் இருந்த முகாம்களில் ஓர் இளவரசியைப்போல் வலம்வந்தாள். கேத்லீன் எல்லோரோடும் மிகவும் இனிமையாக, நட்பாக, பழகினாள். வீரர்கள் அவளை மிகவும் நேசித்தார்கள். அவர்களில் பலர் அப்பாக்கள். அவர்களுக்குக் குழந்தைகள் இருந்தார்கள். கேத்லீனைப் பார்த்தபோது அவர்கள் தங்கள் குழந்தைகளைப் பார்த்ததுபோல் உணர்ந்தார்கள். அவர்கள் அவளைக் கூட்டி வைத்து, அவள் தூங்கும்வரை அவளுக்குக் கதைகள் சொன்னார்கள். அவளோடு சேர்ந்து புத்தகங்கள் வாசித்தார்கள். அவள் தன் அம்மாவுடன் சேர்ந்து ஜெபித்ததை ஜன்னல்வழியாக எட்டிப்பார்த்தார்கள். அவளைப் பார்த்தபோது அவர்களுக்கு அவர்களுடைய வீட்டையும், குழந்தைகளையும்பற்றிய நினைவு வந்தது. அவள் தான் கண்டெடுத்த ஒரு கல்லையோ, ஒரு பொம்மையையோ, தன் செல்லப்பிராணியையோ அவர்களுக்குக் காண்பித்தபோது அவர்கள் அதை ஆர்வமுடன் பார்த்தார்கள்; கேட்டார்கள். வீரர்கள் அவளுக்குத் தின்பண்டங்களையும், முயல்களையும் பரிசுகளாகக் கொடுத்தார்கள். ஆஸ்வால்ட் சேம்பர்ஸ்மூலம் இரட்சிப்பைப் பெற்ற பீட்டர் கே என்ற ஓர் ஆஸ்திரேலியர் அவளுக்கு ஒரு குட்டிக் கழுதையை அன்பளிப்பாகக் கொடுத்தார். அவள் அந்தக் கழுதையில்தான் முகாமைச் சுற்றிவந்தாள், ஓர் இளவரசியைப்போல். போரில் களைத்துப்போன வீரர்களுடன் பழகுவதற்கும், பகிர்ந்துகொள்வதற்கும், பல வேளைகளில், கேத்லீன் காரணமாக இருந்தாள். சின்னக் குழந்தை அவர்களுடைய முகாம்களுக்குச் சென்று அவர்களுக்குப் பிஸ்கட்டும், பழங்களும் கொடுத்தாள். இவ்வாறு அவள் அந்தச் சிப்பாய்களின் மனதைக் கொள்ளைகொண்டாள். கேத்லீன்தான் முதலாவது அந்தப் போர்வீரர்களின் நம்பிக்கையைப் பெற்றாள். அதன்பின்தான் அவர்கள் ஆஸ்வால்டைச் சந்தித்தார்கள். அவர் பேசுவதைக் கேட்டார்கள்.
பிடி போர்வீரர்களுக்குச் செய்த விருந்தோம்பலை எவராலும் மிஞ்சமுடியாது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மத்தியானத்தில் அவர்கள் 700 போர்வீரர்களுக்கு இலவச தேநீர் வழங்க முடிவுசெய்தார்கள். ஏற்கெனவே, ஆஸ்வால்ட் சிற்றுண்டியகத்தை மூடிவிட்டார். அதற்குப்பதிலாக “இப்படிச் செய்யலாமே!” என்று அவர் தீர்மானித்தார். YMCA, “நீங்கள் கிண்டல்செய்கிறீர்களா? ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒரே நேரத்தில் 700 போர்வீரர்களுக்கு இலவச தேநீர் வழங்கப்போகிறீர்களா? முதலாவது இது சாத்தியமில்லை. இரண்டாவது இன்னொன்று சொல்லுகிறோம். நீங்கள் தேநீர் கொடுக்க ஆரம்பித்தால், அதைத்தொடர்ந்து அவர்கள் இலவச மதிய உணவு கேட்பார்கள். உங்களால் கொடுக்க முடியுமா? அதைக் கொடுத்தால் வேறு எதையாவது கேட்பார்கள். இதற்கு முடிவே இராது. வேணடாம்,” என்றார்கள். ஆனால், ஆஸ்வால்ட் இதில் உறுதியாக இருந்தார். எனவே, அவர்கள், “சரி, செய்யுங்கள்,” என்று சொன்னார்கள்.
இது BDக்கு பெரிய பணிச்சுமையாக மாறிற்று. அவரும் மேரி ரிலே என்ற இன்னொரு மிஷனரியும், வேறு சில பெண்களும் சேர்ந்து 700 போர்வீரர்களுக்குத் தேவையான தேநீர் தயாரித்தார்கள். போர்வீரர்களுக்குக் கொடுக்க வீடுகளிலேயே கேக், முட்டை சாண்ட்விச் செய்தார்கள். அவர்கள் உட்கார்ந்து சாப்பிடும் மேசைக்குச் சுத்தமான வெள்ளைத் துணி ஏற்பாடுசெய்தார்கள். மேசையில் புதிய பூக்கள் வைத்தார்கள். இந்த நேரம் சிறப்பான நேரம் என்பதையும், வருகிறவர்களைத் தாங்கள் அதிகமாக நேசிக்கிறோம் என்பதைக் காட்டவும் அவர்கள் எல்லாவற்றையும் பார்த்துப்பார்த்துச் செய்தார்கள்.
வீரர்கள் வந்தார்கள்; விருந்து தடபுடலாக நடந்தது. தாங்கள் அங்கு நீண்ட நேரம் இருக்க நேரிடும் என்று அவர்கள் நினைத்தார்கள். ஏனென்றால், அது ஒரு நற்செய்திக் கூட்டமாக இருக்கலாம் என்றும், ஆஸ்வால்ட் பிரசங்கிக்கூடும் என்றும் அவர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், ஆஸ்வால்ட், “நிச்சயமாக நான் இப்போது பேசப்போவதில்லை. நீங்கள் இப்போது பிரசங்கம் கேட்க வரவில்லை, சாப்பிட வந்திருக்கிறீர்கள். இது நான் நற்செய்தி அறிவிப்பதற்காக வைத்திருக்கும் ஒரு பொறி அல்ல. இது தேநீர் வேளை மட்டுமே,” என்று கூறினார். அவர்கள் மிகவும் ஆச்சரியப்பட்டார்கள். ஆனால், ஞாயிற்றுக்கிழமை மாலையில் ஒரு கூட்டம் இருந்தது. அந்தக் கூட்டத்திற்குப் பல வீரர்கள் வரத் தொடங்கினார்கள். அந்தக் கூட்டத்திற்குப்பிறகு, 10 அல்லது 12 வீரர்கள் ஆஸ்வால்ட் பேசுவதை இன்னும் கேட்க விரும்பினார்கள். ஆஸ்வால்ட் மாலை கூட்டத்திற்குப்பிறகு அவர்களைத் தன் வீட்டிற்கு அழைத்துக்கொண்டுபோய், அவர்களோடு நீண்ட நேரம் உரையாடினார். BD அவர்களுக்கு இராவுணவு ஆயத்தம் செய்தார். இது ஞாயிற்றுக்கிழமைதோறும் நடக்கும் ஒரு வழக்கமான நிகழ்ச்சியாக மாறிற்று. அவர்கள் இப்படித்தான் வாழ்ந்தார்கள்.
ஆஸ்வால்டும், பிடியும் இப்படித்தான் ஊழியம் செய்தார்கள். அவர்களுடைய விருந்தோம்பல் அவர்களுடைய ஊழியத்திற்கு ஒரு நல்ல ஆரம்பமாக அமைந்தது. தன் அம்மா தன் வாழ்நாளில் முக்கால்வாசியை சமையலறையில் கழித்ததாக காத்லீன் சொன்னார். அது உண்மையாக இருக்கலாம். இருப்பினும், சமைத்துவிட்டு, சமயலறையைச் சுத்தம் செய்துவிட்டு, பாத்திரங்களைக் கழுவி வைத்துவிட்டு, தன் அம்மா கூட்டத்தில் வந்து உட்கார்ந்ததும், ஆஸ்வால்ட் பிரசங்கம் செய்யபோது, ஒரு வார்த்தை விடாமல் அதைத் தன் பிரத்தியேகமான சுருக்கெழுத்தால் அதிவேகமாக எழுதியதும் கேத்லீனுக்குத் தெரியாது. ஒவ்வொரு வார்த்தையையும் சுருக்கெழுத்தில் எழுதிவிடுவார். அது அவருடைய பழக்கம். வேதாகமக் கல்லூரியிலும்கூட அவர் கையில் ஒரு தியானப் புத்தகத்தோடு வகுப்பறையில் உட்கார்ந்திருப்பார். எனினும், ஆஸ்வால்ட் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் சுருக்கெழுத்தில் எழுதிவிடுவார். தான் எழுதிய எல்லாவற்றையும் பெட்டிகளில் பத்திரமாக வைத்தார்.
ஆஸ்வால்டும், பிடியும் தனியாகச் செலவழித்த தருணங்கள் மிகக் குறைவு. இவ்வளவு பரபரப்பான வேலைகளுக்கு மத்தியில் தனியாக நேரம் செலவழிக்க முடியவில்லை. ஆகவே, சில நேரங்களில், ஆஸ்வால்ட் தூங்கிக்கொண்டிருந்த கேத்லீனை தூக்கிக்கொண்டு, அவர்கள் இருவரும் பாலைவனத்தின்வழியாக இரவு வெகுநேரம் நடந்து சென்றார்கள். அதுதான் அவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொள்ளவும், பாரத்தைப் பகிர்ந்துகொள்ளவும் தெரிந்தெடுத்த நேரம். தேவனுடன் தங்களுக்கிருக்கும் தனிப்பட்ட உறவும், தனிப்பட்ட நடையும்தான் மிக முக்கியமானது என்பதை இருவரும் புரிந்துகொண்டார்கள். தேவனுடனான உறவை ஆழப்படுத்தவும், தேவனுடனான நடையை உறுதிப்படுத்தவும் ஒருவரையொருவர் ஊக்கப்படுத்தினார்கள். அவருடனான உறவு சரியாக இருந்தால் தங்களுக்கிடையேயான உறவு சரியாக இருக்கும் என்று அவர்களுக்குத் தெரியும்.
“நான் வளர்ந்து பெரியவளாகும்வரை என் அப்பா உயிரோடு இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அப்போது என் அப்பாவை நான் நன்றாக அறிந்திருப்பேன். அப்படி அறிந்திருக்க விரும்புகிறேன். ஆனால், எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர் ஒரு முழுமையான மனிதர், தேவனைப்பற்றிய ஆழமான அறிவும், தேவனோடு மிக நெருக்கமான உறவும் வைத்திருந்த ஒரு முதிர்ந்த மனிதர் என்று எனக்குத் தெரியும். தேவனைப்பற்றிய அவருடைய அறிவும், தேவனோடு அவர் வைத்திருந்த உறவும் அற்புதமானது, ஆச்சரியமானது. அவர் தேவன் படைத்த இயற்கையைப் பார்த்த விதமும், படித்த விதமும் வித்தியாசமானது. அவர் நிறையப் புத்தகங்களைப் படித்தார். எந்தத் தலைப்பைப்பற்றியும், எந்தப் பொருளைப்பற்றியும் என் அப்பா நன்றாக அறிந்திருந்தார். வெறுமனே மேலோட்டமாக அல்ல, அவைகளைப்பற்றி அதிகமாகவும், ஆழமாகவும் அவர் அறிந்திருந்தார். அவர் குழந்தைகளை மிகவும் நேசித்தார். முதல் உலகப்போரில் நிகழ்ந்த ஈவுஇரக்கமற்ற படுகொலைகளினால் மனமுடைந்த போர்வீரர்களுக்கு அவர் ஆறுதலாகவும், ஆசீர்வாதமாகவும் இருப்பதில் அவர் பேருவுவகை கொண்டார். இதற்குக் காரணம் அவர் தேவன் தனக்குத் தந்த அற்புதமான வாழ்க்கையை வாழ்வதில் மகிழ்ச்சியடைந்தார். அவர் காயப்பட்ட, மனமுடைந்த போர்வீரர்களைப் புரிந்துகொண்டார். ஏனெனில், அவர் மனிதனுடைய நிலையையும், மனநிலையையும் நன்றாகப் புரிந்துகொண்டார். இதற்குத் தீர்வு கிறிஸ்துவில் இருக்கிறது என்று அவர் எடுத்துரைத்தார்.” என்று கேத்லீன் கூறினார். “ஒரு மரணவேதனைக்குப்பிறகு, வாழ்வா சாவா என்பதுபோன்ற ஒரு போராட்டத்துக்குப்பிறகு, எந்த மனிதனும் முன்பு இருந்ததுபோல் இருப்பதில்லை. ஒன்று, அதற்குப்பிறகு, ஒருவன் சிறந்தவனாகிவிடுவான் அல்லது மோசமானவனாகிவிடுவான். பெரும்பாலும் ஒரு மரணவேதனையான அனுபவம்தான் இயேசு கிறிஸ்து தரும் மீட்பைப் பெறுவதற்கு ஒருவனுடைய கண்களைத் திறக்கிறது,” என்று அவர் கூறினார்.
BD எகிப்தில் இருந்தபோது சில சமயங்களில் ஆஸ்வால்டின் ஒரு பிரசங்கத்தைத் தட்டச்சு செய்து, அதை league of prayerருக்கு அனுப்பினார். அவர்கள் அதைத் தங்கள் இதழில் வெளியிட்டார்கள். அதைப் படித்தவர்கள், “ஆஸ்வால்டின் பிரசாங்கத்தைப் படித்தபின் நாங்கள் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறோம் தெரியுமா? அதை வாசித்தபோது ஆஸ்வால்ட் நேரில் பேசுவதைக் கேட்பதுபோலவே இருந்தது,” என்று பதில் எழுதினார்கள். ஆஸ்வால்ட் வேறொரு முகாமுக்கோ அல்லது வேறு எங்கோ செல்ல வேண்டியிருந்தால், அவர் BD யை உற்சாகப்படுத்துவதற்காக ஒரு சிறிய குறிப்பை BDயின் தலையணையின்கீழ் வைத்துவிட்டுச் சென்றார். முடிந்தபோது அல்லது கையில் கொஞ்சம் பணம் இருந்தால், ஆஸ்வால்ட் அவர்களை உணவகத்திற்கு அழைத்துச் சென்றார்; எகிப்தின் பிரமிடுகள்வழியாக கூட்டிக்கொண்டுசென்றார். கைநிறைய வேலைகள் இருந்தபோதும் அவர்கள் அவசரப்படவில்லை.
அவருடைய நாட்குறிப்புகள் தேவனை மகிழ்ச்சியோடும், உயிர்த்துடிப்போடும் சேவித்த ஒரு மனிதனைப்பற்றிப் பேசுகின்றன. அவர் எப்போதும் பிறரைப்பற்றியும், பிறருடைய தேவைகளைப்பற்றியும், கஷ்டங்களைப்பற்றியுமே பேசினார். BDயின் பணிச்சுமையை அவர் உணர்ந்தார். அவர் தன் நாளேட்டில் தன்னைப்பற்றி எதுவும் எழுதவில்லை. ஆனால், 1917 கோடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அவரைப்பற்றிப் பேசுகின்றன. அவருடைய அன்றைய புகைப்படங்களைப் பார்க்கும்போது அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார் என்பது தெளிவாகத் தெரிகிறது. களைத்துப்போன, சோர்ந்துபோன ஒரு மனிதன்; குழிவிழுந்த கன்னங்கள்; வறண்ட தோல்; மெலிந்த உருவம். இதுவே எகிப்தின் வறண்ட வாழ்க்கையின் உண்மை. இரண்டு ஆண்டுகள், இறுக்கமான அட்டவணை, புதிய வானிலை, மிகக் கடினமான வாழ்க்கை. தன் உடல்நலம் சரியில்லை என்பதை அவர் சில அறிகுறிகள்மூலம் உணர்ந்தார். ஆனால், தொடக்கத்திலேயே அவர் மருத்துவ உதவி பெற மறுத்துவிட்டார்.
1917 அக்டோபர் மாதத்தில், ஆஸ்வால்ட் உடல்நிலை மிகவும் மோசமானது. ஆனால், மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரைச் சந்திக்கத் தயங்கினார். மருத்துவரைச் சந்திக்கக்கூடாது அல்லது மருந்து சாப்பிடக்கூடாது என்பதல்ல காரணம். தன்னைவிட அதிக தேவையுள்ள காயப்பட்ட ஒரு சிப்பாய்க்குத் தேவையான படுக்கையைத் தான் எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதால் அவர் மருத்துவமனைக்குச் செல்லத் தயங்கினார். பாலஸ்தீனத்துக்குச் செல்ல ஆயத்தமாகிக்கொண்டிருந்த ஜெனரல் ஆலன்பி ஆஸ்வால்டை மருத்துவமனைக்கு வருமாறு வற்புறுத்தினார். ஆஸ்வால்ட் அப்போதும் மறுத்துவிட்டார். அந்த நேரத்தில், போர் தீவிரமாக நடந்துகொண்டிருந்தது. காயப்பட்ட வீரர்கள் நிறையப்பேர் அங்கு வந்தார்கள்; நிறையப்பேருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யவேண்டியிருந்தது. காயமடைந்த ஒரு போர்வீரனுக்குத் தேவையான படுக்கையை ஆஸ்வால்ட் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. அதனால், மறுத்துவிட்டார். மருத்துவ உதவியை அவர் நாடியே ஆக வேண்டும், மருத்துவமனைக்குச் சென்றே ஆக வேண்டும் என்று பிறர் அவரை வற்புறுத்தினார்கள், கட்டாயப்படுத்தினார்கள். அதற்குள் அவருடைய குடல்வாய் நோய் முற்றி குடல்முனை சிதைந்துவிட்டது. அதிஅவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவருக்குச் சுகமில்லை என்று போர்வீரர்களுக்குத் தெரியாது. இராணுவத்தில் பெரிய ஜெனரல்ஸ் இருந்தார்கள். ஆயினும், அந்த முகாம்களில் இருந்த போர்வீரர்கள் ஆஸ்வால்டைத்தான் பொறுப்பு அதிகாரி என்று அழைத்தார்கள். அனைவரும் அவருக்காகச் ஜெபித்தார்கள். சிறப்பு ஜெபக்கூட்டங்கள் ஏற்பாடு செய்தார்கள். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. கொஞ்சம் கொஞ்சமாகத் தேறினார்.
அறுவைசிகிச்சை முடிந்த மறுநாள் கேத்லீன் தன் அப்பாவை உற்சாகப்படுத்த தன் தலையில் அழகான நாடா வைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு வந்தாள். அவளால் தன் அப்பாவை அடையாளம்காண முடியவில்லை. அந்த அளவுக்கு அவர் மிகவும் பலவீனமாக இருந்தார், மெலிந்திருந்தார். அவர் தொடர்ந்து போராடினார். பிடியின் கவனிப்பினாலும், பராமரிப்பிலும் படிப்படியாக முன்னேறினார். ஆனால், திடீரென அவருடைய நுரையீரலில் இரத்தக்கசிவு ஏற்பட்டது. அதனால் ஏற்பட்ட சிக்கல்களின் காரணமாக 1917ஆம் ஆண்டு, நவம்பர் 15 ஆம் தேதி, அதிகாலையில் ஆஸ்வால்ட் சேம்பர்ஸ் தன் மனைவி பிடியும், தன் மகள் கேத்லீனும் அருகிருக்க தன் 43ஆவது வயதில் நித்தியத்துக்குள் நுழைந்தார்.
BD நிலைகுலைந்தார். என்ன செய்வது என்று தெரியவில்லை. மருத்துவமனையிலிருந்து கதவைத் திறந்துகொண்டு தட்டுத்தடுமாறி வெளியே வந்தார். எங்கு செல்வது என்றுகூடத் தெரியவில்லை. இதை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவருடைய குடும்பத்தாருக்கும், இங்கிலாந்திலிருந்த நண்பர்களுக்கும், league of praye ருக்கும் தந்தி அனுப்ப வேண்டியிருந்தது. என்ன எழுதுவது என்று தெரியவில்லை. “ஆஸ்வால்ட், கர்த்தருடைய சமுகத்தில்” என்று எழுதி தந்தி அனுப்பினார். அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
அவர் காலமான செய்தி முகாம்களில் பரவியதும் ஆஸ்வால்டை அறிந்தவர்களும், அவரை நேசித்தவர்களும் அதிர்ச்சியடைந்தார்கள். தங்கள் பொறுப்பு அதிகாரிக்கு முழு இராணுவ மரியாதை செய்து அடக்கம்செய்ய அவர்கள் முடிவுசெய்தார்கள். ஆம், அவர்கள் தங்கள் ஆத்தும நண்பருக்கு விடைகொடுத்து அனுப்பத் தீர்மானித்தார்கள். அவருடைய இறுதி ஊர்வலத்தின்போது மக்களுக்குப் பல கேள்விகள் எழுந்தன. “தேவன் ஏன் இதை அனுமதித்தார்? அவருடைய ஊழியம் எவ்வளவு பொருள்நிறைந்ததாக, கனிநிறைந்ததாக, வீரியம்நிறைந்ததாக இருந்தது. தேவன் ஏன் இதைத் தொடரவில்லை? ஆஸ்வால்ட் ஏன் முன்பே மருத்துவரிடம் செல்லவில்லை? ஆரம்பத்திலேயே சென்றிருக்கலாமே! இதைத் தடுத்திருக்கலாமே! அவர் ஏன் சிகிச்சையைத் தாமதப்படுத்தினார்? கர்த்தர் ஏன் அவரைக் குணமாக்கவில்லை? அவருடைய குடும்பம் என்னவாகும்?” போன்ற பல கேள்விகள். பழைய கெய்ரோவில் உள்ள பிரிட்டிஷ் கல்லறைத்தோட்டத்தில் முழு இராணுவ மரியாதையுடன் ஆஸ்வால்ட் சேம்பர்ஸ் அடக்கம்செய்யப்பட்டார். கிறிஸ்துவின் அன்பால் பலருடைய வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த அசாதாரண மனிதருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக சாமான்யர்கள், எகிப்தின் உழைக்கும் வர்க்கத்தார், அரசுப்பிரதிநிதிகள், உயர்மட்ட அதிகாரிகள், அந்த முகாமில் இருந்த பல்லாயிரம் வீரர்கள் எனத் திரளான மக்கள் கூட்டம் கூடியது.
BD எகிப்தில், நான்கரை வயது மகளுடன் தன்னந்தனியாக ஓர் இராணுவ முகாமில் இருக்கிறார். அவருடைய குடும்பமும், நண்பர்களும் இங்கிலாந்தில் மிகத் தொலைவில் இருக்கிறார்கள். ஆஸ்வால்டுடன் வாழ்ந்த வாழ்க்கையை, செய்த ஊழியத்தை சிந்தித்துப்பார்க்கிறார். செய்வதற்கு இன்னும் எவ்வளவோ இருக்கிறது. ஆனால், அவைகளைத் தன்னந்தனியாக எப்படிச் செய்ய முடியும் என்ற கேள்வி எழுகிறது. அமைதியாக அமர்ந்து சிந்தித்தபோது, ஆஸ்வால்ட் மருத்துவமனையில் இருந்தபோது சொன்ன, “மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்,” என்ற சில வசனங்கள் அவருடைய நினைவுக்கு வந்தன. தேவன் அந்த வசனத்தின்மூலம் தன்னிடம் பேசியதாக BD உணர்ந்தார். அதன் பொருள் அப்போது அவருக்கு முழுமையாகப் புரியவில்லை. அது அவருக்கு ஒரு வாக்குறுதிபோல தோன்றியது. அந்த வசனம் அவருக்கு ஆறுதல் அளித்தது. ஆஸ்வால்ட் மருத்துவமனையில் இருந்தபோது, அவர் குணமடைந்துவிடுவார் என்று அவர் உறுதியாக நம்பினார். ஆஸ்வால்ட் மருத்துவமனையில் இருந்தபோது சொன்ன வசனங்களை அவர் எழுதிவைத்திருந்தார். இப்போது அந்த வசனங்களை அவர் திரும்பிப்பார்த்தார். அவைகள் அவரை வேறுவிதமாக உற்சாகப்படுத்தின. தேவன் அவருடைய கண்களைத் திறந்தார். முன்பு முழுமையாகப் புரிந்துகொள்ளாத விஷயங்களை இப்போது புரிந்துகொள்ளத் தொடங்கினார்.
ஆஸ்வால்ட் தொடங்கிய ஊழியத்தைத் தொடர பிடியும், கேத்லீனும் சீடௌனில் தங்கியிருந்தார்கள். ஆஸ்வால்ட் இறந்த சில வாரங்களுக்குப்பிறகு, ஒருநாள் அவருடைய ஒரு நண்பர் பிடியிடம், “ஆஸ்வால்டின் ஏதாவதொரு பிரசங்கத்தை அச்சிட்டு, வரக்கூடிய கிறிஸ்துமசுக்குச் சிலருக்கு அனுப்பினால் நன்றாக இருக்கும் அல்லவா?” என்று சொன்னார். பிடி ஒரு செய்தியைத் தெரிந்தெடுத்து, அச்சிட்டு, அதை எகிப்திலும், பிரான்சிலும் தங்களுக்குத் தெரிந்த போர்வீரர்களுக்கு எந்தக் கட்டணமும் இல்லாமல் இலவசமாக அனுப்பினார்கள். அதற்கு அபரிமிதமான வரவேற்பு கிடைத்தது; எனவே, அவர்கள் அதற்கடுத்த மாதம் ஆஸ்வால்டின் இன்னொரு பிரசங்கத்தை அச்சிட்டு அதேபோல் அனுப்பினார்கள்; அதற்கடுத்த மாதம் இன்னொரு பிரசங்கம். கிடைத்த வரவேற்பைக் கண்டு அவர்கள் திணறினார்கள். ஒரு சிலரால் மட்டும் இந்தப் பணியைக் கையாள முடியாது என்ற அளவுக்கு வரவேற்பு கிடைத்தது. எனவே, விரைவில் இந்தப் பணிவிடையை அங்கிருந்த YMCA ஏற்றுக்கொண்டார்கள். மாதாமாதம் ஆஸ்வால்டின் ஒரு செய்தியைப் 10000 பிரதிகள் எடுத்து போர்க்களத்தில் இருந்த வீரர்களுக்கு அனுப்பத் தொடங்கினார்கள். ஆஸ்வால்டின் பிரசங்கங்களை முதலாவது எகிப்தில் இருந்த நைல் மிஷன் அச்சகத்தில் அச்சிட்டார்கள். கூடிய விரைவில் மெல்ல மெல்ல அவருடைய பிரசங்கங்கள் இராணுவ வீரர்களைத் தாண்டி, இங்கிலாந்து, அமெரிக்காபோன்ற பல நாடுகளில் இருந்த சாமான்யர்களையும், நண்பர்களையும் சென்றடைந்தது.
பிடி தன் சகோதரிக்கு எழுதிய ஒரு கடிதத்தில், “இப்போது நான் ஆஸ்வால்டின் இன்னொரு பிரசங்கத்தைத் தயாரித்துக்கொண்டிருக்கிறேன். சுருக்கெழுத்தில் எழுதியிருந்ததை வார்த்தைகளில் எழுதிக்கொண்டிருக்கிறேன். இந்தப் பிரசங்கத்தின் தலைப்பு : சோதனையின் நன்மை என்ன? இது நிச்சயமாக மிகச் சிறந்த ஒரு பிரசங்கம். அடுத்த புத்தகத்தையும் நான் தட்டச்சுசெய்துகொண்டிருக்கிறேன். அந்தப் புத்தகத்தின் தலைப்பு: வியாகுலத்தின் நிழல். நான் ஆஸ்வால்டுடன் வாழ்ந்த காலத்தில், அவர் பேசிய பிரசங்கங்கள் அனைத்தையும் சுருக்கெழுத்தில் எழுதிவைத்துள்ளேன். இந்தச் செல்வம் தீர்ந்துபோகாது என்று நான் நினைக்கிறன். தேவன்மேல் அவர் வைத்திருந்த விசுவாசத்தை நான் என் வாழ்க்கையில் கண்டேன். தேவனுக்கு அவர் எவ்வளவு உண்மையும், உத்தமுமாக இருந்தார் என்பதையும் நான் அறிவேன். எனவே, இன்றும் அவர் தம் வார்த்தைகளின்மூலம் நம்மிடம் பேசுகிறார் என்பதை அறிந்துகொள்கிறேன். இதுவே, நாங்கள் தொடர்ந்து மகிழ்ச்சியோடு வாழ்வதற்கான திறவுகோல்,” என்று எழுதினார்.
ஜூன் 1919இல் சீடௌன் முகாமிலிருந்த கடைசிப் போர்வீரன் வெளியேறும்வரை அவர்கள் அங்கு தங்கியிருந்தார்கள். அதன்பின் அவர்கள் இங்கிலாந்துக்குத் திரும்பும் நேரம் வந்தது. இங்கிலாந்துக்குச் செல்வதற்குமுந்தைய நாளில் என்ன செய்தார்கள் என்பதைப்பற்றி, “எகிப்தில் எங்கள் கடைசி நாளில் நாங்கள் பழைய கெய்ரோவுக்கு, அந்த இடத்துக்கு, சென்றோம். அந்த இடத்தில் அவருடைய ஆவியையும், அழகையும், அங்கு நிலவும் தனிமையையும் விவரிக்க முடியாது. நாங்கள் எகிப்தில் இருந்த பல வருடங்களில் தேவன் எங்களுக்கு தந்த அவரைப்பற்றிய அறிவுக்காக அவருக்கு நன்றி சொன்னோம். ஜீவ வார்த்தையைப்பற்றி நாங்கள் கேள்விப்பட்ட, பார்த்த எல்லாவற்றிற்காகவும் அவரைத் துதித்தோம். இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து வாழும் மகத்தான வாழ்க்கையை எங்களுக்குமுன் வாழ்ந்துகாட்டிய ஒருவருடன் வாழ்ந்ததுக்காகத் தேவனுக்கு நன்றி தெரிவித்தோம்,” என்று எழுதினார்.
1918இல் முதல் உலகப் போர் முடிந்தது. இராணுவ முகாம்கள் மூடப்பட்டன. BDயும் கேத்லீனும் எகிப்தைவிட்டு இங்கிலாந்துக்குத் திரும்பினார்கள். சிறு வயதிலேயே கேத்லீன் எகிப்துக்குச் சென்றுவிட்டதால், அவளுக்கு இங்கிலாந்தைப்பற்றி ஒன்றும் தெரியாது. அங்கு மக்களுடைய நிறத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்தாள். எகிப்தில் முகாம்களில் பெரிய பெரிய தடுப்பு வேலிகள் ஏராளமாக இருந்தன. இங்கு அப்படியொன்றும் இல்லை. எகிப்து ஒரு பாலைவனம். இலண்டன் ஒரு சோலைவனம். எகிப்தில் எங்கும் சுடு மணல். இலண்டனில் எங்கும் பசும் புல். இந்த அளவுக்குப் பச்சைப்பசேல் புல்வெளியை அவள் பார்த்ததில்லை. அவள் சந்தித்த பெரிய பிரிச்சினை கலாச்சார அதிர்ச்சி. கேத்லீனுக்கு இப்போது வயது ஆறு. எகிப்தில் பாலைவன முகாம்களுக்குள் சுதந்திரமாக ஓடித்திருந்தாள்; தன் அப்பாவுடன் விரும்பும்போதெல்லாம் கழுதை சவாரி செய்தாள்; பல்லிகளுடன் விளையாடினாள்; போர்வீரர்களுடன் ஓடியாடி முரட்டுத்தனமாக விளையாடினாள்; கத்திப் பேசினாள்; போர்வீரர்கள் போட்டிபோட்டுக்கொண்டு அவளுக்குத் தின்பண்டங்கள் வாங்கிக்கொடுத்தார்கள்; இலண்டனில் அவள் தன் பாட்டி வீட்டுக்குள் அடைந்துகிடந்தாள்; ஓடுவதற்கு இடம் இல்லை; அவளால் எங்கும் ஓடமுடியவில்லை; பாட்டி வீட்டிலிருந்த எதையும் தொடுவதற்குக்கூட பாட்டி அனுமதிக்கவில்லை; கேத்லீனுக்கு இது மிகவும் விசித்திரமாக இருந்தது. எகிப்தில் அவள் எல்லாரையும் தொட்டுப் பேசினாள். இலண்டனில் ஒருவரையும் தொட முடியவில்லை. குரலைக் குறைத்துப் பேசவேண்டியிருந்தது; எங்கும் ஓடாமல், ஆட்களைப் பார்த்து கைகாட்டாமல் இருப்பது அவளுக்கு மிகவும் கடினமாக இருந்தது.
அவளுடைய பாட்டி வீட்டின்கீழே இருந்த மளிகைக் கடையிலிருந்து கேத்லீன் திருடுகிறாள் என்று BD கேள்விப்பட்டார். எகிப்தில் வாழ்ந்தபோது அவள் சிற்றுண்டியகத்துக்குச் சென்று தனக்கு விருப்பமான எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொண்டாள். அதுதான் அவளுடைய பழக்கம். காசு கொடுக்கவேண்டியிருந்தால் அங்கிருந்த போர்வீரர்கள் யாராவது கொடுத்தார்கள். அதைத்தான் அவள் இங்கு செய்தாள். எனவே, BD கடைக்குச் சென்று கடைக்காரரிடம், “அவள் எடுக்கும் பொருட்களுக்குக் கணக்கு வைத்துகொள்ளுங்கள். மாதக் கடைசியில் பணம் கொடுத்துவிடுவேன்,” என்று சொல்லிவைத்தார். இந்தப் புதிய கலாச்சாரத்தைக் கேத்லீன் புரிந்துகொள்ளும்வரை, அவர் அந்த ஏற்பாடு செய்தார்.
பிடி ஆஸ்வால்டின் பிரசங்கங்களை சிறு புத்தகங்களாகவும், கையேடுகளாகவும் அச்சிடத் தொடங்கினார். இந்த நேரத்தில் BDக்கு ஒரு யோசனை தோன்றியது. தான் சுருக்கெழுத்தில் எழுதிவைத்திருப்பவைகளைக்கொண்டு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஓர் எண்ணம் அவருக்குள் எழுந்தது. ஆஸ்வால்ட் பேசிய எல்லாவற்றையும் அவர் சுருக்கெழுத்தில் எழுதி, அவைகளை ஒரு பெட்டியில் பத்திரமாக வைத்திருந்தார். ஏற்கெனவே அனுப்பியிருந்த செய்திகள் மக்களுக்கு மிகவும் ஊக்கமளிப்பதாக இருந்தன என்று அவருக்குத் தெரியும். அவருக்கு ஒரு யோசனை; அது ஒரு பெரிய வேலைதான்; ஆனாலும், செய்யத் துணிந்தார். அது என்னவென்றால், ஆஸ்வால்டின் பிரசங்கங்களிலிருந்து 365 சிறு பத்திகளைத் தொகுத்து ஒரு தியானப் புத்தகத்தை உருவாக்க வேண்டும். அவர் ஆஸ்வால்டின் பிரசங்கங்களை வாசித்து ஒரு குறிப்பிட்ட கருப்பொருளோடு தொடர்புடைய வாக்கியங்களை ஒன்றாக இணைத்து சிறுசிறு பத்திகளை உருவாக்கினார். ஆஸ்வால்ட் சுருக்கமாகப் பிரசங்கித்தால் எப்படி இருக்குமோ அப்படி இந்தப் பத்திகளைத் தொகுத்து ஒரு புத்தகமாக்க வேண்டும். இதைத் தானேதான் வெளியிடவேண்டும் என்பதும் அவருக்குத் தெரியும். அந்த நேரத்தில் கேத்லீனுக்கு வயது 11. மிகவும் கலகலப்பான பெண்.
தனக்கும், தன் மகளுக்கும் எந்த ஆதரவும் இல்லாததால் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் தங்குவதற்கு வசதியாக ஒரு விடுதியை நடத்தினார். அதன்மூலம் வந்த வருமானத்தினால் இருவரும் வாழ்ந்தார்கள்.
மூன்று ஆண்டுகளுக்குப்பிறகு, அவர் தான் திட்டமிட்டிருந்த 365 வெவ்வேறு பத்திகளையுடைய ஒரு புத்தகத்தைத் தொகுத்தார். அந்தப் புத்தகத்தில் அவர் தன் பெயரை எங்கும் குறிப்பிடவில்லை. அவர் அந்தப் புத்தகத்திற்கு ஒரு முன்னுரை எழுதினார். அதில் BD என்று தன் பெயரைக் குறிப்பிட்டிருந்தார். ஆஸ்வால்டின் வார்த்தைகளை உலகிற்குத் தெரிவிக்கும் ஒரு வாய்க்காலாக மட்டுமே தான் இருக்க வேண்டும் என்பதே அவருடைய ஒரே நோக்கம். புத்தகத்திற்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று சிந்தித்தார். அது அவருக்கு மிக எளிதாக இருந்தது. அவர் வைத்த தலைப்பு ஆஸ்வால்ட் பலமுறை கூறியது மட்டும் அல்ல, இருவரும் வாழ்ந்துகாட்டியது. “மற்ற எல்லா விஷயங்களையும் ஒதுக்கிவைத்துவிட்டு, இந்த ஒரேவொரு விஷயத்திற்காக மட்டும் உங்களைத் தேவனுக்குமுன்பாக வைத்துக்கொள்ளுங்கள்: My utmost for his highest. நான் முற்றிலுமாகவும், முழுமையாகவும் அவருக்காக, அவருக்காக மட்டுமே இருப்பதில் உறுதியாக இருக்கிறேன்,” என்று ஆஸ்வால்ட் சொன்ன வார்த்தைகளிலிருந்து My utmost for his highest என்ற தலைப்பை எடுத்தார். இந்தப் புத்தகம் முதன்முதலாக 1927இல் வெளியிடப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை பல பதிப்புகள் வெளியாகியுள்ளன. இதுவரை இந்தப் புத்தகம் ஒரு 1 கோடியே 30 இலட்சம் பிரதிகள் விற்பனையாகியுள்ளன.
இந்தப் புத்தகத்தை ஒரேவொரு முறை படித்தால், அதை நாம் வாழ்நாள் முழுவதும் நம்மோடு வைத்திருந்து, அடிக்கடி அதைத் திரும்பிப் படிப்போம். ஏனென்றால், இது ஆஸ்வால்ட், பிடி ஆகிய இருவருடைய வாழ்க்கையின் தொடர்ச்சி. இவை வெறும் வார்த்தைள் அல்ல. இது தங்களைத் தேவனுக்கு முழுக்க முழுக்க விற்றுப்போட்ட, மக்களுக்காகத் தங்களை ஊற்றிய, உடைத்த இருவருடைய ஆவியை வெளிப்படுத்துகிறது. அவருடைய எழுத்துக்கள் இயேசு கிறிஸ்து மட்டுமே நம் வாழ்வின் ஜீவ ஊற்று, வாழ்வின் ஒரே ஆதாரம் என்று காண்பிக்கின்றன, சுட்டிக்காட்டுகின்றன, பறைசாற்றுகின்றன.1966இல் பிடி இறப்பதற்குமுன், அவர் ஆஸ்வால்ட் சேம்பர்ஸ் பேசியவைகளைத் தொகுத்து சுமார் 30 புத்தகங்களை வெளியிட்டார். எந்தப் புத்தகத்திலும் அவர் தன் சொந்த பெயரைக் குறிப்பிடவில்லை. ஆஸ்வால்ட் சேம்பெர்ஸின் மரணத்திற்குப்பிறகு அவருக்குச் செலுத்தப்பட்ட மிகப்பெரிய அஞ்சலிகளில் ஒன்று என்ன தெரியுமா? தேவனுடைய அன்புக்குரிய ஊழியக்காரரான ஆஸ்வால்ட் சேம்பெர்ஸின் செய்தியின்மூலம் நம்மில் பலருக்கு வந்துள்ள மிகவும் விலைமதிப்பற்ற விஷயம் என்னவென்றால், மிகவும் தாழ்வான, எந்த நம்பிக்கையுமில்லாத, மிகவும் அற்பமான நபருக்குக்கூட மகத்தான வாழ்வு சாத்தியமாகும். நம் ஆண்டவராகிய கிறிஸ்து இயேசுவின்மூலம், சாதாரண மனிதர்களுக்குக்கூட மகத்தான காரியங்கள் கிடைக்கின்றன.
ஆஸ்வால்டின் ஒரு மேற்கோளோடு நான் முடிக்கப்போகிறேன். “நாம் மலைகளுக்காகவோ, சூரிய உதயங்களுக்காகவோ, வாழ்க்கையின் பிற அழகான கவர்ச்சிகளுக்காகவோ படைக்கப்படவில்லை; அவைகள் வெறுமனே கிளர்ச்சிகளைத் தூண்டிவிடும் தருணங்களாகத்தான் இருக்க முடியும். மாறாக, நாம் பள்ளத்தாக்கிற்காகவும், வாழ்க்கையின் சாதாரணமான விஷயங்களுக்காகவும் படைக்கப்பட்டுள்ளோம்; அங்குதான் நாம் நம் உள்ளஉறுதியையும், வலிமையையும் நிரூபிக்க வேண்டும்” ஆமென்.