Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More

நம் தனிப்பட்ட வாழ்க்கையும், கூட்டு வாழ்க்கையும் தேவனுடைய நித்திய நோக்கம் நிறைவேறுவதற்காகவே

Unedited transcript of a message spoken in November 2013 in Chennai 

By Milton Rajendram

“உன் ஆடுகளின் நிலைமையை நன்றாய் அறிந்துகொள்; உன் மந்தைகளின்மேல் கவனமாயிரு” (நீதிமொழிகள் 27:23).

தேவனுடைய இலக்கு

தம் குமாரனாகிய கிறிஸ்துவை ஒரு சமுதாய மக்கள்மூலமாக வெளிக்காண்பிக்க வேண்டும் அல்லது வெளியாக்கவேண்டும் என்பதே தேவனுடைய இலக்கு, தேவனுடைய குறிக்கோள். இதைத் திரும்பத் திரும்பச் சொல்லவேண்டியது அவசியம். தேவனுடைய இந்த இலக்கும், குறிக்கோளும் நம்முடைய கண்களுக்குமுன்பாக எப்போதும் இருக்க வேண்டும். என்மூலமாகவும், நம்மூலமாகவும் தேவன் கிறிஸ்துவை வெளிக்காண்பிக்க விரும்புகிறார், வெளியாக்க விரும்புகிறார். இந்த ஒ‍ன்றேவொன்றிற்காகத் தேவன் இந்த முழுப் படைப்பையும் படைத்திருக்கிறார். இந்த ஒன்றிற்காக அவர் தம் குமாரனை இந்தப் பூமிக்கு அனுப்பினார். அவருடைய மனுவுருவாதல், மனித வாழ்க்கை, மரணம், உயிர்த்தெழுதல், பரமேறுதல், பரிசுத்த ஆவியைப் பொழிந்தருளுதல் ஆகிய எல்லாவற்றையும் அவர் இந்த ஒன்றேவொன்றிற்காக, இந்த ஒரேவொரு இலக்கிற்காக, இந்த ஒரேவொரு குறிக்கோளுக்காகத்தான் செய்துகொண்டிருக்கிறார்.

இன்றைக்கு இந்தப் பூமியில் உள்ள எல்லா இராஜ்ஜியங்களும் இந்த ஒரேவொரு குறிக்கோளுக்காகத்தான் இயங்கிக்கொண்டிருக்கின்றன. அமெரிக்காவாக இருந்தாலும் சரி அல்லது இந்தியாவாக இருந்தாலும் சரி, நாம் மேற்போக்காகப் பார்க்கும்போது ஏதோ அரசர்களும், அமைச்சர்களும் அங்கும் இங்குமாகப் போவதும் வருவதுமாக இருக்கிறார்கள். ஆனால், அப்படியல்ல; தேவன் தம்முடைய இலக்கும், தம்முடைய குறிக்கோளுமாகிய அவருடைய குமாரனை வெளியாக்குகிற ஒரு பாத்திரம், ஒரு மானிடப் பாத்திரம் அல்லது ஒரு மனிதப் பாத்திரம் வேண்டும் என்பதற்காகவும், அதை உருவாக்குவதற்காகவுமே தேவன் எல்லாவற்றையும் இந்தப் பூமியிலே, இந்தப் படைப்பிலே, நடத்திக்கொண்டிருக்கிறார் என்று எபேசியர் 1:12 சொல்கிறது. “தமது சித்தத்தின் ஆலோசனைக்குத்தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிற அவருடைய தீர்மானம்.” Who works all things according to the counsel of His will. எல்லாவற்றையும் தம்முடைய ஆலோசனையின் சித்தத்திற்குத் தக்கதாக அவர் நடப்பித்துக்கொண்டிருக்கிறார். சில நம்முடைய பார்வையிலே நன்மைகள்போல் தோன்றும், பல நம்முடைய பார்வையிலே தீமைகள்போல் தோன்றும். ஆனால், எல்லாவற்றின்மேலும் தேவன் அரசாட்சி செய்துகொண்டிருக்கிறார். நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, நம்முடைய குடும்பத்திலும் சரி, நம்முடைய சமுதாயத்திலும் சரி, நாட்டிலும் சரி, உலகத்திலும் சரி.

ஆரோக்கியமான குடும்பச் சூழல்

தேவனுடைய மற்ற பிள்ளைகளோடு ஒப்பிட்டுப்பார்த்து நாம் நம்மை உயர்ந்தவர்களாகக் கருதவில்லை. ஆனால், தேவனுடைய மற்ற பிள்ளைகளைப் பார்க்கும்போது, நம்முடைய இருதயத்தில் ஒரு பரிவு எழுகிறது. தேவனுடைய மக்கள் தேவனுடைய இலக்கையும், குறிக்கோளையும் விட்டுவிட்டு வேறு வழிகளில் தடம்புரண்டு போவதைப் பார்க்கும்போது நம் இருதயம் வலிக்கிறது. தேவன் தம் இலக்கிலும், திட்டத்திலும் நம்மை வைத்திருப்பதற்காக உண்மையிலேயே நாம் தேவனைத் துதிக்கின்றோம். ஏனென்றால், நாம் கட்டியெழுப்புகிற குடும்பச் சூழல் பாதுகாப்பான சூழலாக இருக்கிறது.

குடும்பச் சூழல் என்றால் என்ன? நான் ஒரு காரியத்தைச் சொல்கிறேன் என்றால், “சகோதரனே, நீங்கள் சொல்வதின் உண்மையான பொருள் இதுதானா?” என்று எல்லோரும் கேட்கிறதற்கு அங்கு சுதந்திரமும், உரிமையும், வாய்ப்பும் இருக்க வேண்டும்.

எடுத்துக்காட்டாக, “உங்களில் யாராவது பாவம் செய்திருந்தால், அடுத்த வாரம் உங்கள் பாவப் பட்டியலோடு வாருங்கள். அடுத்த வாரம் பாவ அறிக்கை வாரம். அதற்கடுத்த வாரம் புதிய வருடம். அதற்குமுன் நாம் பாவ அறிக்கை வாரம் வைத்து நம் பாவங்களையெல்லாம் அறிக்கைசெய்வோம். வருகிற புத்தாண்டில் கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பதற்காக நாம் இப்படிச் செய்யப்போகிறோம்,” என்று சொல்கிறேன் என்று வைத்துக்கொள்வோம். இவ்வாறு பாவ அறிக்கைசெய்வதைப் போகியோடு ஒப்பிட்டு, அதற்கு ஓர் ஆவிக்குரிய விளக்கம் கொடுத்து “நாம் அடுத்த வாரம் பாவ-போகி கொண்டாடப்போகிறோம்,” என்று சொல்கிறேன் என்று வைத்துக்கொள்வோம். இதற்கு ஆதாரமாக “விசுவாசித்தவர்களில் அநேகர் வந்து, தங்கள் செய்கைகளை வெளிப்படுத்தி அறிக்கையிட்டார்கள். மாயவித்தைக்காரராயிருந்தவர்களில் அநேகர் தங்கள் புஸ்தகங்களைக் கொண்டுவந்து, எல்லாருக்கு முன்பாகச் சுட்டெரித்தார்கள்,” என்று நடபடிகள் 19:18, 19 போன்ற சில வசனங்களை அங்கும் இங்குமாக மேற்கோள் காட்டுகிறேன் என்றும் வைத்துக்கொள்வோம். இவ்வாறு நாம் தேவனுடைய மக்களின் உணர்வுகளைத் தூண்டி, தட்டியெழுப்பி, கொந்தளிக்கச்செய்யமுடியும். “நாமெல்லாரும் நம்முடைய பாவங்களைப் பொதுவில் போட்டு நாம் தீக்கொளுத்தப் போகிறோம். பரிசுத்த ஆவியானவர் நம்முடைய உள்ளங்களையும், இல்லங்களையும் சுத்திகரிப்பார். வருகிற புத்தாண்டில் நீங்கள் வேண்டுவதெல்லாம் உங்களுக்குக் கிடைக்கும்,” என்று சொன்னால் ஒரு கூட்டம் மக்கள் கவரப்படுவார்களா? நிச்சயமாக. ஏனென்றால், நிறைவேறாத சில ஆசைகளும், விருப்பங்களும் தேவனுடைய மக்களுக்கு உண்டு. “ஏதாவது ஒன்றை நீ செய். அந்த ஆசை நிறைவேறும்,” என்று சொன்னால் போதும், அவர்கள் செய்வார்கள். தண்ணீரில் மூழ்கிக்கொண்டிருக்கிறவன் உயிர் பிழைப்பதற்கு கையில் எது கிடைத்தாலும் அதை இறுகப் பற்றிக்கொள்வான். அது இன்னொரு செத்த பிணமாக இருத்தாலும்கூட அதை இறுகப் பற்றிக்கொள்வான். அதுபோல, ஓ ! நீண்ட நாட்களாக நிறைவேறாத தங்களுடைய ஆசைகளை நிறைவேற்றுவதற்கு ஒரு வாய்ப்பு அல்லது ஒரு வழி கிடைக்கிறது என்று தெரிந்தவுடன், அவர்கள் அதைப் பற்றிப்பிடித்துக்கொள்வார்கள்.

இதுபோல் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான குழுக்கள் உள்ளன. தேவனுடைய பிற மக்களைவிட நாம் உயர்ந்தவர்கள் என்பதால் நான் இதைச் சொல்லவில்லை; மாறாக, நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகச் சொல்லுகிறேன். எப்போதும் நாம் எச்சரிக்கை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

CPMக்குப் போகிற ஒரு சகோதரனை எனக்குத் தெரியும். “Brother, நான் அங்கு போனவுடன் கீழே விழுந்துவிட்டேன். அந்த ஊழியக்காரர் என் முன்னால் வந்து நின்றார்; நான் விழக்கூடாது என்று தீர்மானமாகத்தான் இருந்தேன். ஆனால், நான் விழுந்துவிட்டேன். இனிமேல் நான் CPMயைத்தவிர வேறு எங்கும் போகமாட்டேன். நான் விழக்கூடாது என்ற தீர்மானத்தோடு போனேன்; ஆனால் அவர் ஒவ்வொருவருக்காக ஜெபித்துக்கொண்டு வரும்போது, என்னிடம் வந்தார். நான் பல்லைக் கடித்துக்கொண்டு விழக்கூடாது என்றுதான் இருந்தேன்; ஆனால், நானும் விழுந்துவிட்டேன்,” என்றார்.

நல்ல காலம், இவர் சாய்பாபாவைச் சந்திக்கவில்லை. அவரைச் சந்தித்திருந்தால், அவர் தலையிலிருந்து சாம்பலை எடுத்துக் கொடுத்திருப்பார், எங்கிருந்தோ விபூதி வந்திருக்கும், இன்னும் என்னவெல்லாமோ செய்வதாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

தேவ மக்களுக்குத் தீராத ஆசை ஒன்று உண்டு. “தேவனுடைய வல்லமை என்மூலமாகச் செயல்பட வேண்டும். நான் தேவனுக்காகப் பலத்த அற்புதங்களைச் செய்ய வேண்டும்,” என்கின்ற ஒரு தீராத ஆசை அவர்களுடைய இருதயத்தில் இருக்கும்போது, அதைப்போன்ற ஒரு பலத்த காரியத்தை ஒருவர் செய்தால் அவர்பால் நாம் ஈர்க்கப்படுவோம்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அப்படி ஒன்றும் செய்யவில்லை. இன்னும் சொல்லப்போனால், பல தீர்க்கத்தரிசிகள் அப்படிச் செய்யவே இல்லை. ஒருமுறை சீரிய ராஜாவின் படைத்தலைவனாகிய நாகமான் என்ற ஒரு தொழுநோயாளி தன் குதிரைகளோடும், தன் இரதத்தோடும் வந்து எலிசாவின் வாசற்படியிலே நின்றான். எலிசா தீர்க்கத்தரிசியை நாடிவருகிறான். எலிசா வெளியேகூட வரவில்லை. எலிசா “அவனிடத்தில் ஆள் அனுப்பி, நீ போய், யோர்தானில் ஏழுதரம் ஸ்நானம்பண்ணு; அப்பொழுது உன் மாம்சம் மாறி, நீ சுத்தமாவாய்,” என்று சொல்லச் சொன்னான். “நீ போய் யோர்தானிலே மூழ்கிவிட்டு அப்படியே வீட்டுக்குப்‍ போய்விடு.” அவ்வளவுதான். நாகமானுக்குப் பயங்கரக் கோபம்.. ஏனென்றால், அவன் நாட்டின் படைத்தளபதி. “தீர்க்கத்தரிசி என்றால் அவன் வெளியே வருவான், வரும்போது கையில் வேப்பிலைக் கொத்தோடு, உடுக்கை அடித்துக்கொண்டு, ஆடிக்கொண்டு வருவான்; வந்து மேலும் கீழும் தடவுவான். அப்புறம் ’நீ மூன்று நாள் உபவாசம் இருக்க வேண்டும்; நான்காவது நாள் ஓமம் வளர்க்க வேண்டும்; அதில் எண்ணெய் ஊற்ற வேண்டும்; அப்புறம் நான் அதைச் சுற்றிச்சுற்றி வருவேன்.” இப்படியெல்லாம் அவன் சொல்லவில்லை. ஆனால், இதற்குச் சமானமாக, “அவன் வெளியே வந்து நின்று, தன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் தொழுது, தன் கையினால் அந்த இடத்தைத் தடவி, இவ்விதமாய்க் குஷ்டரோகத்தை நீக்கிவிடுவான் என்று எனக்குள் நினைத்திருந்தேன். நான் ஸ்நானம்பண்ணிச் சுத்தமாகிறதற்கு இஸ்ரவேலின் தண்ணீர்கள் எல்லாவற்றைப்பார்க்கிலும் தமஸ்குவின் நதிகளாகிய ஆப்னாவும் பர்பாரும் நல்லதல்லவோ!” என்ற கோபம்.

சிலருக்குத் தொழுநோயே வந்தால்கூட தாழ்மை வராது. “தீர்க்கத்தரிசி என்றால் அவன் எப்படி இருக்க வேண்டும், அவன் என்ன செய்ய வேண்டும்” என்ற ஒரு கற்பனையோடு நாகமான் வந்திருக்கிறான். “அங்கு வல்லமை வெளிப்பட வேண்டும், அவன் பெரிய ஆளாக இருக்க வேண்டும்,” என்ற கற்பனை.

அப்போது “அவன் ஊழியக்காரர் சமீபத்தில் வந்து, அவனை நோக்கி: தகப்பனே, அந்தத் தீர்க்கதரிசி ஒரு பெரிய காரியத்தைச் செய்ய உமக்குச் சொல்லியிருந்தால் அதை நீர் செய்வீர் அல்லவா? ஸ்நானம் பண்ணும், அப்பொழுது சுத்தமாவீர் என்று அவர் உம்மோடே சொல்லும்போது, அதைச் செய்யவேண்டியது எத்தனை அதிகம் என்று சொன்னார்கள்.” பேச்சுவழக்கில் சொல்வதானால், “தீர்க்கதரிசி இப்போது என்ன சொல்லிவிட்டார்? யோர்தானிலே மூழ்கச் சொன்னார். அவ்வளவுதானே! காசா, பணமா? மூழ்கிவிட்டுப் போவோமே!” என்றவுடனே நாகமானுடைய இறுமாப்பு, ஆணவம், செருக்கு, பெருமை, வீம்பு கொஞ்சம் அடங்குகிறது. “அப்பொழுது அவன் இறங்கி, தேவனுடைய மனுஷன் வார்த்தையின்படியே யோர்தானில் ஏழுதரம் முழுகினபோது, அவன் மாம்சம் ஒரு சிறுபிள்ளையின் மாம்சத்தைப்போல மாறி, அவன் சுத்தமானான்.”

எனவே, “நான் விழுந்துவிட்டேன்,” என்பது ஒரு பொருட்டே இல்லை.

தனிப்பட்ட வாழ்க்கையும், கூட்டு வாழ்க்கையும்

ஒரு சமுதாயத்திலுள்ள தேவ மக்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையும், உறவின் வாழ்க்கையும் தேவனுடைய நித்தியத் திட்டத்திற்கும், நித்திய நோக்கத்திற்கும், நித்தியக் குறிக்கோளுக்கும் இசையத்தக்கதாக இருக்கிறதா என்பதே கேள்வி. நான் மீண்டும் சொல்கிறேன்; நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையையும், உறவின் வாழ்க்கையையும் தேவனுடைய நித்தியத் திட்டமும், நோக்கமும், குறிக்கோளும் நிறைவேறுகிற வண்ணமாக நாம் வாழவேண்டும்.

இது ஒரு நீண்ட தலைப்பாக இருக்கலாம். ஆனால், அதுதான் தலைப்பு. தேவனுடைய மக்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை, கூட்டு வாழ்க்கை என்ற இரண்டு வார்த்தைகளை நாம் பயன்படுத்துகிறோம். தனிப்பட்ட வாழ்க்கை, கூட்டு வாழ்க்கை அல்லது தனிப்பட்ட வாழ்க்கை, உறவின் வாழ்க்கை. புரிந்துகொள்வதற்காக இப்படிச் சொல்கிறோம் - தனிப்பட்ட வாழ்க்கை, கூட்டு வாழ்க்கை. நமக்‍கு இரண்டு வாழ்க்கை கிடையாது, ஒரு வாழ்க்கைதான். அந்த வாழ்க்கையில் இரண்டு அம்சங்கள் உள்ளன. ஒன்று தனிப்பட்ட வாழ்க்கை, இன்னொன்று கூட்டு வாழ்க்கை. நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையையும், கூட்டு வாழ்க்கையையும் தேவனுடைய நித்தியத் திட்டமும், இலக்கும், குறிக்கோளும் நிறைவேறுகிறவிதமாக நாம் வாழ வேண்டும்.

அப்படி வாழும்போது நாம் இப்பேர்ப்பட்ட பல ஆபத்துக்களுக்கும், விபத்துக்களுக்கும், தவறுகளுக்கும், பிரச்சினைகளுக்கும், பிசகுகளுக்கும் நீங்கலாக்கிப் பாதுகாக்கப்படுவோம்.

கூட்டு வாழ்க்கை

தனிப்பட்ட வாழ்க்கையைப்பற்றி தேவனுடைய மக்களுக்குச் சில கேள்விகள் இருந்தாலும், அதிகமான கேள்விகள் இருக்காது. ஆனால், கூட்டு வாழ்க்கையைப்பற்றி தேவனு‍டைய மக்களிடையே பல்வேறு விதமான கேள்விகள் உள்ளன. தேவனுடைய மக்களிடைய‍ே கூட்டு வாழ்க்கை அல்லது உறவின் வாழ்க்கை எப்படியிருக்க வேண்டும்? என்னைப் பொறுத்தவரை, தேவனுடைய மக்களிடையே கூட்டு வாழ்க்கை அல்லது உறவின் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்று நாம் கற்றுக்கொண்டிருக்கிறோம் என்றுதான் நான் சொல்வேனேதவிர கற்றுவிட்டோம் அல்லது தேறிவிட்டோம் என்று என்னால் சொல்ல முடியாது. இதற்கு அர்த்தம், “ஓ! நீதான் கற்றுவிடவில்லையே! தேறிவிடவில்லையே! அப்படியிருக்க நீ என்ன சொல்ல முடியும்!” என்று சிலர் சொல்லக்கூடும்.

நல்லது. நான் கற்றுத் தேறினவன் இல்லை. கற்றுக்கொள்கிறேன். எனவே, “இதுதான் தேவன் தம் மக்களுக்கு வகுத்த, நியமித்த, உறவின் வாழ்க்கை, கூட்டு வாழ்க்கை,” என்று துணிகரமாகச் சொல்லமாட்டேன். ஆனால், முழு வேதாகமத்தையும் நாம் பார்க்கும்போது, குறிப்பாக புதிய ஏற்பாட்டை ஆழ்ந்து படிக்கும்போது, தேவனுடைய மக்களுடைய உறவின் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை நாம் கொஞ்சங்கொஞ்சமாய்க் கற்றுக்கொள்கிறோம். அப்படிக் கற்றுக்கொள்ளும்போது, அது “இதுதான் உறவின் வாழ்க்கை அல்லது கூட்டு வாழ்க்கை அல்லது சபை வாழ்க்கை,” என்று இன்றைக்கு தேவனுடைய மக்கள் சொல்வதிலிருந்து குறிப்பிடத்தக்க விதங்களில் எவ்வளவு மாறுபட்டிருக்கிறது என்பதை நம்மால் காணமுடிகிறது. இதை நான் மீண்டும் சொல்கிறேன். ஒரு பக்கம், “இதுதான் தேவன் வகுத்த, தேவன் நியமித்த உறவின் வாழ்க்கை, கூட்டு வாழ்க்கை, சபை வாழ்க்கை,” என்று இன்றைக்குத் தேவனுடைய மக்கள் சொல்கிறார்கள். இன்னொரு பக்கம், தேவன் வகுத்த, தேவன் நியமித்த உறவின் வாழ்க்கை, கூட்டு வாழ்க்கை, சபை வாழ்க்கை இதுதான் என்று புதிய ஏற்பாட்டிலிருந்து அல்லது வேதாகமத்திலிருந்து நாம் ஓரளவிற்குப் புரிந்துகொள்கிறோம். அப்படி நாம் புரிந்துகொள்கிற வாழ்க்கை, பொதுவாக தேவனுடைய மக்களிடையே பார்க்கின்ற வாழ்க்கையிலிருந்து குறிப்பிடத்தக்க விதங்களிலே மாறுபட்டிருக்கிறது. அது முற்றிலும் மாறுபட்டிருக்கிறது என்று நான் சொல்லத் துணியமாட்டேன். ஆனால், குறிப்பிடத்தக்க விதங்களில், அது மாறுபட்டிருக்கிறது. அந்தக் குறிப்பிடத்தக்க விதங்கள் தேவனுக்கும், தேவனுடைய மக்களுக்கும் மிகவும் இன்றியமையாதவை. அதுதான் முக்கியம்.

கூட்டு வாழ்க்கையில் சமரசம்

“இல்லை, சில விஷயங்களை நாம் அனுசரித்துத்தான் போக வேண்டும். ஒரு குடும்பம் என்றால் அனுசரித்துப்போய்த்தான் ஆகவேண்டும்,” என்று சிலர் சொல்லக்கூடும். இது எனக்குப் புரியாத காரியம் இல்லை. ஒரு குடும்பம் என்றால் நாம் எந்த அளவுக்கு அனுசரித்துப் போக வேண்டுமோ அந்த அளவுக்கு அனுசரித்துப்‍ போய்த்தான் ஆகவேண்டும். தேவனுடைய மக்களோடு நாம் அனுசரித்துப் போகவேண்டும் என்று புதிய ஏற்பாட்டில் வசனம் இருக்கிறதா? இருக்கிறது. “கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்” ரோமர் 12:18. If it is possible, as much as depends on you, live peaceably with all men. உங்களால் கூடுமானவரை எல்லா மனுஷரோடும் - தேவனு‍டைய மக்களோடு மட்டுமல்ல, எல்லா மனுஷரோடும் - சமாதானமாய் இருக்கப் பாருங்கள். If it is possible, as much as depends on you, live peaceably with all men. எந்த அளவுக்கு மனிதர்களோடும், தேவனுடைய மக்களோடும், சமாதானமாய் இருக்க முடியுமோ, அந்த அளவுக்குச் சமாதானமாய் இருக்க நாம் முயல வேண்டும். அடுத்த சாரார் சமாதானமாய் இருக்க ஆர்வம் காட்டாதபோது, நாம் ஒன்றும் செய்ய முடியாது. உங்களைப் பொறுத்தமட்டில் என்ன செய்ய முடியுமோ, அதைச் செய்யுங்கள் என்றுதான் இந்த வசனம் சொல்லுகிறது. அவர்களைப் பொறுத்தமட்டில் நான் அரை தூரத்தைக் கடந்துபோகலாம், முக்கால் தூரத்தைக் கடந்துபோகலாம், 90 விழுக்காடு தூரத்தை கடந்துபோகலாம், 99 விழுக்காடு தூரத்தையும் கடந்துபோகலாம். ஆனால், அந்த ஒரு விழுக்காடு தூரத்தை அடுத்த சாரார்தான் கடக்கவேண்டியிருக்கும். The other party has to do that. அந்த அடுத்த சாரார் அந்த ஒரு விழுக்காடுகூட செய்யாதபோது, நாம் சமாதானத்தைக் காத்துக்கொள்ள முடியாதவர்களாய் இருப்போம். மற்றவர்களோடு சமாதானமாய் இருப்பதற்கு உன்னால் எதையெல்லாம் செய்யமுடியுமோ அதையெல்லாம் செய்யாமல் விட்டு விடாதே. எ‍டுத்துக்காட்டாக, எனக்குக் கொஞ்சம் அவமானம் நேரிடுகிறது. அந்த அவமானத்தை நான் சகித்துக்கொண்டால் இவர்களோடு சமாதானமாய் இருக்க முடியும் என்றால் நாம் அவமானத்தைச் சகித்துக்கொள்ள வேண்டும்.

நாம் அதைக் கணக்கிட்டுப் பார்க்கவேண்டும். உண்மையிலேயே என்ன நேரிடுகிறது என்பதை நாம் எடைதூக்கிப் பார்க்கவேண்டும். எடைதூக்கிப் பார்க்கும்போது நாம் கண்டுபிடித்துக்கொள்வோம். ஒன்றும் நேரிடவில்லை. எனக்கு அவமானம் மட்டும்தான் நேரிடுகிறது. ஆனால், தேவனுடைய பிள்ளைகளுக்கு ஊறு விளைவிக்கும், அவர்களுக்கு நட்டம் ஏற்படும், காலப்போக்கில் அவர்களுக்கு இது நட்டத்தை ஏற்படுத்தும், அவர்களுக்குத் துன்பத்தை ஏற்படுத்தும் என்றால் நான் அதைச் செய்யமாட்டேன், ஒத்துக்கொள்ள மாட்டேன். அதை நான் இரண்டு சகோதரர்களோடு cross check பண்ணிப்பார்ப்பேன். “இது தேவனுடைய மக்களுக்கு ஊறு விளைவிக்கும், துன்பம் விளைவிக்கும், நட்டத்தை ஏற்படுத்தும். ஆகவே, நாம் இதைச் செய்யக்கூடாது என்று நான் நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று நான் அவர்களிடம் கேட்பேன். தேவனைப் பொறுத்தமட்டில் சுத்த இருதயம் உள்ளவர்கள் கண்டிப்பாக தேவனுடைய இருதயத்தை இன்றைக்கோ அல்லது நாளைக்கோ கண்டுகொள்ள முடியும். ஒருவேளை இந்த அதிகாரத்தில் இல்லையென்றால், இதற்கு முந்தைய அதிகாரத்தில் இருக்கப்போகிறது அல்லது இந்த முழுப் புத்தகத்தையும் வாசித்தால் இருக்கப்போகிறது. இந்த முழு வேதாகமத்திலும் எப்படியாகிலும் தேவனுடைய இருதயத்தைக் கண்டுகொள்ளலாம்.

தேவன் தம் மக்களிடையே எப்படிப்பட்ட உறவின் வாழ்க்கையை, கூட்டு வாழ்க்கையை, சபை வாழ்க்கையை, வகுத்துள்ளார் அல்லது நியமித்துள்ளார் அல்லது விரும்புகிறார் என்பதை நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்த வேண்டியிருக்கிறது. ஒன்று நிச்சயம். அது என்னவென்றால், இந்தப் பூமிக்குரிய ஒரு பிரமாண்டத்தையோ, டாம்பீகத்தையோ, பகட்டையோ தேவன் தம்முடைய மக்கள் மத்தியில் விரும்பவில்லை.

கிறிஸ்து பெருக வேண்டும்

தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் சரி, உறவின் வாழ்க்கையாக இருந்தாலும் சரி, கிறிஸ்து தம்முடைய மக்களுக்குள் பெருக வேண்டும், கிறிஸ்து தம்முடைய மக்களுக்குள் உருவாக வேண்டும், கிறிஸ்து தம்முடைய மக்கள்மூலமாய் வெளியாக வேண்டும் என்பதுதான் தேவனுடைய இலக்கு, தேவனுடைய குறிக்கோள். அது தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் சரி, கூட்டு வாழ்க்கையாக இருந்தாலும் சரி.

ஆனால், மனிதர்களைப் பொறுத்தவரை அது நம்முடைய புலன்களைக் கவரவேண்டும், பகட்டாய் இருக்க வேண்டும், ஆடம்பரமாக இருக்க வேண்டும், டாம்பீகமாக இருக்க வேண்டும், பிரமாண்டமாக இருக்க வேண்டும். கொடிமரத்தின் உயரம் பரலோகத்தைத் தொடக்கூடிய அளவுக்கு உயரமாக இருக்க வேண்டும். இசைக்கருவிகள் மிக விலைமதிப்புடையதாக இருக்க வேண்டும். பெரிய கூடும் அரங்கம் வேண்டும். தேவனுக்கு இவைகளிலெல்லாம் எந்த ஈடுபாடும் இல்லை என்பது என் கருத்து. நடு இராத்திரியில், சிறைச்சாலையிலே பவுலும், சீலாவும் என்ன இசைக்கருவிகளை வைத்துக்கொண்டு பாடினார்கள்? நம்முடைய புலன்களைக் கவர்கின்ற விதத்திலே பகட்டான, பிரமாண்டமான, ஆடம்பரமான காரியங்களைத் தேவன் நாடார்.

1. ஆடுகளின் நிலைமையை அறிதல்

தேவ‍னுடைய பார்வையிலே அருமையான மூன்று காரியங்களைச் சொல்லுகிறேன். ஒன்று, “உன் ஆடுகளின் நிலைமையை நன்றாய் அறிந்துகொள்; உன் மந்தைகளின்மேல் கவனமாயிரு” நீதிமொழிகள் 27:21. இதை ஞாபகத்தில் வைத்துக்கொள்வது மிக எளிது. தேவனுடைய மக்களிடையேயுள்ள உறவின் வாழ்க்கையிலே ஒருவரைக்குறித்து ஒருவர் நாம் நன்றாய் அறிந்துகொள்ள வேண்டும். “ஒ! அப்படியென்றால் நாம் துருவித்துருவி ஆராய்ச்சிபண்ணி ஆராய்ந்து அறிந்துகொள்ள வேண்டுமா? நீங்கள் என்ன படித்துள்ளீர்கள், எங்கு வேலை பார்க்கிறீர்கள்? எவ்வளவு சம்பளம்? இவைகளையெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்களா?” என்று நீங்கள் கேட்கலாம். நான் இதைச் சொல்லவில்லை. நன்றாய் அறிந்துகொள்வதென்றால் என்ன அர்த்தம்? நன்றாய்க் கவனிக்க வேண்டும். இதனால்தான் நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் சொல்லுகிறேன். இரண்டு அற்றங்கள் உள்ளன. நன்றாய் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக ஆதியோடு அந்தமாக தேவனுடைய மக்களுடைய வாழ்க்கையினுடைய எல்லா விபரங்களையும் தெரிந்துகொள்வது ஒரு அற்றம்.

எது கர்த்தருடைய அழைப்பு, எது வேலையில்லாததால் ஒருவன் ஊழியம் செய்கிறான் என்பதைத் தேவனை அறிந்த மக்கள் இனம்காண்பார்கள். ஒருவனுக்கு வேறு வேலையில்லை என்பதால் கர்த்தர் ஒருவனைத் தன் ஊழியத்துக்கு அழைப்பதில்லை. கர்த்தர் ஒருவனை அழைக்கிறார் என்றால் அழைக்கப்படுகிற மனிதன் தன் வேலையிலே கடும் பிரயாசப்பட்டுக்கொண்டிருப்பான். ஆதியாகமம்தொடங்கி திருவெளிப்பாடுவரை வாசித்துப்பாருங்கள். “நான் வேலைதேடிக்கொண்டிருக்கிறேன்,” என்று சொல்லுகிற ஒருவனை, “நான் வேலை தருகிறேன் வா,” என்று தேவன் அழைப்பதில்லை. வேலையில்லாதவர்களை வேலைக்கமர்த்தி கூலி கொடுக்கிற நிகழ்ச்சியை நான் சொல்லவில்லை.

ஏற்கெனவே முழுமூச்சுடன் வேலைசெய்கிற ஒருவனைத்தான் தேவன் தன் வேலைக்காகத் தேடுகிறார். மோசே மிகவும் பரபரப்பான ஆள். அவன் பார்வோனுக்காகப் பல நகரங்களைக் கட்டிக்கொண்டிருக்கிறான். அவன்மேல் தேவன் தம்முடைய கைகளைப் போடுகிறார். எலிசா பன்னிரெண்டு ஏர்களைப் பூட்டி உழுதுகொண்டிருந்தான். நாம் இரண்டு மாடு பூட்டி ஏர் உழுபவர்களைத்தான் பார்த்திருக்கிறோம். பன்னிரெண்டு மாடு பூட்டி ஏர் ஓட்டுகிறவர்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அப்படிப்பட்ட ஏர் எப்படியிருக்கும் என்றுகூட என்னால் கற்பனை செய்யவில்லை. பன்னிரெண்டு மாடு பூட்டி உழுது கொண்டிருந்தான் என்றால் அவன் எப்படிப்பட்ட உழைப்பாளி என்று பாருங்கள்! பன்னிரெண்டு ஏர் பூட்டி உழுகிற ஒரு மனிதன்! அப்படிப்பட்ட ஒரு மனிதன்மேல் தேவன் தம் கைகளைப் போடுகிறார். ஏர் பூட்டி உழுவதை அவன் எப்படித் தன் முழுப் பலத்தோடு செய்தானோ அதுபோல முழுப் பலத்தோடு பலியிடுகிறான், மாடுகளை வெட்டி அதே ஏர்களை விறகுளாகவைத்துப் பலியிடுகிறான். ஏர் பூட்டி உழுவதும் முழு இருதயத்தோடுதான். பலியிடுவதும் முழு இருதயத்தோடுதான். அதுவும் முழு இருதயம்தான், இதுவும் முழு இருதயம்தான். நம்மைப்பொறுத்தவரை அதுவும் பாதி இருதயம்தான்; பலி கொடுப்பதும் பாதி இருதயம்தான். பன்னிரெண்டு மாடுகளில் ஆறு மாட்டை எதிர்காலத்தில் உதவும் என்ற கண்ணோட்டத்தில் விட்டு வைப்போம். “ஒருவேளை நம்மைக் கூப்பிட்டது கர்த்தர் இல்லை என்றால் என்ன செய்வது? எனவே, தேவன் நம்மை அழைக்கும்போது ஒரு emergency exit அல்லது ஒரு safety net ஒன்று கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்,” என்று நாம் நினைக்கிறோம். கூப்பிட்டது கர்த்தர் இல்லை என்றால், கூப்பிட்டது கர்த்தர்தான் என்று உறுதிப்படுத்திக்கொள்ளும்வரை பன்னிரெண்டு ஏர் பூட்டி நீ உழுது கொண்டிரு. அப்படிக் கூப்பிட்டவர் கர்த்தர்தான் என்று தெரியாவிட்டால், “சாமுவேலே, சாமுவேலே” என்று கூப்பிடுபவர் ஏலியா, கர்த்தரா என்று தெரியாதவரை நீ கொஞ்சம் படுத்துத் தூங்கு.

கர்த்தர் பேதுருவை அழைத்தபோது பேதுரு மீன்பிடித் தொழில் இலாபகரமாக இல்லை என்பதால் தூங்கிக்கொண்டிருக்கவில்லை. அவன் மீன் பிடித்துக்கொண்டிருந்தான். கர்த்தர் யோவானையும், யாக்கோபும் அழைத்தபோது அவர்கள் தங்கள் தகப்பனோடு தங்கள் வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருந்தார்கள் வேலையில்லாத ஒரு மனிதனைத் தேவன் பிடித்து, “நான் உனக்கு ஒரு வேலை தருகிறேன், வா,” என்று சொல்லவில்லை. ஒருவன் இந்தப் பூமிக்குரிய வேலையைத் தன் முழு இருதயத்தோடும், முழுப் பலத்தோடும், முழு ஞானத்தோடும், முழு அர்ப்பணிப்போடும் செய்யவில்லை என்றால், அவன் பரம காரியங்களை எப்படி முழுப் பலத்தோடும், முழு பிரயாசத்தோடும், முழு இருதயத்தோடும் செய்வான்? அன்று அவனுடைய இருதயம் அரைகுறையாக இருந்தால், இன்றும் அது அரைகுறையாகத்தான் இருக்கும்.

ஆவிக்குரிய ஈடுபாடு

தேவனுடைய மக்களுடைய நிலையை நாம் அறிந்துகொள்ள வேண்டும்; ஆனால், இயற்கையான விதத்தில் அறிந்துகொள்ளக்கூடாது. ஆவிக்குரிய ரீதியில்தான் அறிந்துகொள்ள வேண்டும். “ஆகையால், இதுமுதற்கொண்டு, நாங்கள் ஒருவனையும் மாம்சத்தின்படி அறியோம்; நாங்கள் கிறிஸ்துவையும் மாம்சத்தின்படி அறிந்திருந்தாலும், இனி ஒருபோதும் அவரை மாம்சத்தின்படி அறியோம்” 2 கொரிந்தியர் 5:16. தேவனுடைய மக்களுடைய தனிப்பட்ட விவரங்களை அறிய வேண்டும் என்ற ஆரோக்கியமற்ற ஈடுபாடு நமக்கு இருக்கக்கூடாது. அவர்களுடைய ஊர், ஜாதி, வரவு செலவு, சாப்பாடு, உடை, வீடுபோன்றவைகளைப்பற்றி அறிந்துகொள்கிற ஓர் ஆரோக்கியமில்லாத ஈடுபாடு, unhealthy interest தேவனுடைய மக்களிடையே இருக்கக்கூடாது. ஆனால், ஆவிக்குரிய ஈடுபாடு இருக்க வேண்டும். ஆவிக்குரிய ஈடுபாடு என்றால், “நீங்கள் வேதம் வாசித்தீர்களா? ஜெபித்தீர்களா?” என்று விசாரிப்பதையும் சொல்லவில்லை. தேவனுக்குமுன்பாக அவர்களுடைய இருதயம் எப்படி இருக்கிறது என்று பார்க்கவேண்டும். தேவனுடைய மக்களுடைய பொருளாதார நிலைமை நமக்குத் தெரியவேண்டுமா? கண்டிப்பாகத் தெரிய வேண்டும். ஆகவே ஒரு பக்கம், எல்லாவற்றையும் தெரிந்துகொள்கிற ஆர்வம் இருக்கக்கூடாது. தேவனிடம் எப்படி ஜெபிக்க வேண்டும் என்றால், “ஆண்டவரே, உம்முடைய பிள்ளைகளுக்கு எங்கு நீர் குறைவுபடுகிறீரோ அந்த இடம் எனக்கு நன்றாகத் தெரிய வேண்டும்,” என்பதே ஒரு நல்ல உறவின் வாழ்க்கையிலே தேவனுடைய மக்களுடைய இருதயத்தின் துடிப்பாக, தவிப்பாக, இருக்க வேண்டும். உண்மையிலேயே நாம் எப்படிப்பட்ட ஒரு கூட்டு வாழ்க்கை வாழ வேண்டும் என்றால் ஒருவனுக்கு ஓர் ஆவிக்குரிய தேவ‍ை அல்லது ஓர் ஆவிக்குரிய குறைச்சல் அல்லது ஓர் ஆவிக்குரிய நெருக்கம் வரும்போது அதை ஒருவரிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறார். ஒருவர் ஜெபிக்கிறார் அல்லது நேற்றோ, அதற்கு முந்தைய நாளோ, அந்த வாரத்திலோ, அந்த மாதத்திலோ ஜெபித்தபோது, “ஓ! அந்தச் சகோதரனுக்கு அல்லது அந்தச் சகோதரிக்கு ஒரு phone பண்ணிப் பார்ப்போம் அல்லது அவரை நேரில் போய்ச் சந்தித்துவருவோம்,” என்ற ஒரு எண்ணம் வருகிறது என்றால் அது உண்மையாகவே “உன் ஆடுகளின் நிலையை நீ நன்றாய் அறிந்திருக்கிறாய்,” என்று பொருள். நான் சொல்வது புரிகிறதா? நம்மிடையே இது குறைவுபடுமென்றால், அது நிறைவாக வேண்டும். குறைந்தபட்சம் வாரத்தில் ஒரு நாளாவது ஒன்றிரண்டு சகோதரர்களுக்காவது நீங்கள் phone பண்ணுங்கள். இது நல்லதொரு நடைமுறைப் பயிற்சி; நடைமுறைக்குரிய ஆலோசனை. “இது பரிசுத்த ஆவியானவரின் நடத்துதலா இல்லையா?” என்று ரொம்ப ஆராய்ச்சிபண்ணவேண்டாம். பரிசுத்த ஆவியானவர் ‘போ’ அல்லது ‘போகாதே’ என்று உங்கள் தொலைபேசிக்குக் குறுஞ்செய்தி அனுப்பும்வரை காத்திருக்க வேண்டாம். இந்தக் குறுஞ்செய்தி நம் ஆவியில் வரும். இந்தத் தொனி நம் ஆவியில் கேட்கும். கூட்டு வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதைப்பற்றி நாம் ஆராய்ச்சிசெய்ய வேண்டும். நம்முடைய காரியங்களை எப்படி இன்னும் சிறப்பாகச் செய்ய வேண்டும், எப்படி நாம் தேவனுடைய மக்களைப்பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும், அவர்களுடைய ஆவிக்குரிய நிலையைப்பற்றி அல்லது ஆவிக்குரிய தேவையைப்பற்றி புரிந்துகொள்ள வேண்டும் என்றும் கற்க வேண்டும்.

ஆவியில்தான் அறிந்துகொள்ள வேண்டும். இதில் அவர்களுடைய பொருளாதார தேவைகளும் அடங்கும். “அது என்ன பொருளாதார தேவையை ஆவியில் புரிந்துகொள்வது? இது ரொம்ப நூதனமாக இருக்கிறதே!” என்று எண்ணத் தோன்றும். எடுத்துக்காட்டாக, ஒரு சகோதரனுக்கு 1000 ரூபாய் தேவைப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். அவருடைய தேவையை அறிந்தவுடனே போய் அவருக்கு 1000 ரூபாய் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை. இதன் பொருள் அவருடைய தேவையை அறிந்தும், அதைக் கொடுக்கக்கூடிய திராணி இருந்தும் நான் 1000 ரூபாய் கொடுக்க மாட்டேன் என்பதல்ல. அப்படியல்ல. அவருடைய தேவையை ஒருவேளை நாம் சந்திக்க வேண்டிய அவசியம் இருக்கலாம் அல்லது சந்திக்க வேண்டிய அவசியம் இல்லாமலும் இருக்கலாம். இதை நாம் நம் ஆவியில் அறியலாம். ஒருவேளை அவருடைய தேவையைச் சந்தித்தபின், “உங்கள் தேவைகளைப் பொறுத்தவரை, உங்கள் பொருளாதாரத்தை நீங்கள் கையாளுகிறவிதத்திலே சில திருத்தங்கள் செய்ய வேண்டும். எப்படித் திருத்திக்கொள்ள வேண்டும் என்றால், உங்கள் மனைவியின் வருமானத்தை நீங்கள் உங்கள் விருப்பப்படி செலவழிக்கக்கூடாது,” என்று அவருக்கு நீங்கள் தேவனுடைய வார்த்தை இருந்தால் அதைச் சொல்லலாம்.

எனக்கு ஒரு குடும்பத்தைத் தெரியும். கணவன் மனைவி இருவரும் விசுவாசிகள். இருவரும் முனைவர் பட்டம் பெற்றவர்கள். கணவன் ஒரு கல்லூரி முதல்வர். கணவர் காலையில் அரை மணிநேரம், சாயங்காலம் அரை மணி நேரம் தவறாமல் ஜெபிக்கிறார். இவர் ஜெபிக்கும் நேரத்தில் கல்லூரியின் சொந்தக்காரரே வந்தாலும் எழுந்து வர மாட்டார். ஆனால், இவருக்குப் பல கோடி கடன் இருக்கிறது. பெரிய வீடு. அதற்குக் கடன். இப்படிக் கர்த்தரைப் பற்றிப்பிடித்திருக்கிற ஒரு சகோதரன் தன் பொருளாதார விஷயத்தில் எப்படி இருக்கிறார் என்று பாருங்கள்!

“இந்தக் குடும்பத்தை இவர்களுடைய பொருளாதார விஷயத்தில் நான் தொடவே மாட்டேன்,” என்று சும்மா இருந்தால் இன்னும் ஐந்து வருடத்தில் இந்தக் குடும்பம் அழிந்து போகும். ஆனால், அவரிடம் போய், “உங்கள் குடும்பம் இன்னும் ஐந்து வருடத்தில் அழிந்துபோகப்போகிறது,” என்று சொல்லவும் கூடாது. கண்ணில் விழுந்த முள்ளை அல்லது ஒரு துகளை அல்லது கல்லை எடுப்பதுபோல அந்தச் சகோதரனுடைய வாழ்விலிருந்து இந்தக் சிக்கலை அகற்ற வேண்டும். “உங்களிடத்தில் இத்தனை சிக்கல்கள் இருக்கின்றன,” என்றும் அவர்களிடம் போய் சொல்லக்கூடாது. சொன்னால், பிரச்சினை இன்னும் அதிகச் சிக்கலாகிவிடும். நாம் அவருக்குச் சேவிப்பதற்குபதிலாக அது துன்பமாக மாறிவிடும்.

ஓ! தேவனுடைய பணிவிடைக்காரனாக இருப்பதற்கு நமக்கு எவ்வளவு ஞானமும், கிருபையும் தேவைப்படுகின்றன! பரிசுத்த ஆவியானவர் அந்த ஞானத்தையும், கிருபையையும் நமக்குத் தரவில்லை என்றால் நாம் அந்த விஷயத்தைத் தொடக்கூடாது. மீறித் தொட்டால் நாம் குடும்பங்களையும், தனிப்பட்ட நபர்களையும் சிதைக்கிறவர்களாய் மாறிவிடுவோம். We have to walk very softly, Very carefully. ஒரு முறைக்குப்பதிலாக ஐந்துமுறை, “ஆண்டவரே, இப்படிப்பட்ட ஒரு வார்த்தையை நான் கேட்கலாமா, பேசலாமா?” என்று ஜெபிக்க வேண்டும்.

ஆகவே முதலாவது, உன் ஆடுகளின் நிலையை நன்றாய் அறிந்துக் கொள். எப்படி அறிந்துகொள்ள முடியும்? விசாரித்து அறிந்துகொள்ளாதீர்கள். கூடுமானவரை, ஜெபித்து அறிந்துகொள்ளுங்கள். “ஜெபித்து அறிந்துசொள்ளமுடியுமா?” என்று சந்தேகிக்க வேண்டாம். நீங்கள் ஜெபியுங்கள். ஒன்று. அவர்களை நீங்கள் சந்தியுங்கள். துருவி எதுவும் விசாரிக்காதிருங்கள்; இயல்பாக உங்களுடைய கவனத்திற்கு எது வருகிறதோ, அதைக்கொண்டு அவர்களுடைய நிலை என்ன என்பதை தேவன் உங்களுக்குக் காட்டுவார். நாம் போய், “உங்கள் குடும்பத்தைப்பற்றிச் சொல்லுங்கள்,” என்று நாம் கதை கேட்கக்கூடாது. ஆனால், இயல்பாக ஒரு நாள் அந்தப் பாரமும், சுமையும், துக்கமும் தாள முடியாமல் வரும்போது நாம் அமைதியாக அதை கேட்டுக்கொண்டு, அதன்பின் செயல்பட வேண்டும். உடனே திடுத்திப்பென்று செயலில் இறங்கிவிடக்கூடாது. “என் வீட்டுக்கு வாருங்கள் அல்லது நான் உங்கள் வீட்டுக்கு வரட்டுமா?” என்று அடுத்த படி எடுக்க வேண்டும். அவர்கள் வந்தால் நாம் அடுத்த படி எடுக்கலாம். வரவில்லை என்றால் அடுத்த படி எடுத்து வைப்பதில்லை.

இப்படி தேவனுடைய மக்களைப்பற்றி மட்டும் அல்ல; நம்மோடு உடன் படிக்கின்றவர்கள், உடன் வேலைப்பார்க்கின்றவர்கள், நம்முடைய அயலகத்தார் எல்லாரைப்பற்றியும், “ஆண்டவரே, என்னுடைய ஆடுகளைப்பற்றி ஓர் அறிவை எனக்குத் தாரும். அவர்களுக்கு ஒரு தேவை அல்லது குறைச்சல் அல்லது ஒரு நெருக்கம் அல்லது அவர்கள் போகின்ற பாதையிலே இன்னும் ஒரு வருடம் அல்லது ஐந்து வருடம், 10 வருடம் கழித்து அழிவு திண்ணம், அழிவு உறுதி என்று தெரிகிறது. இதில் நான் என்ன செய்யவேண்டும்? எப்படிச் செய்ய வேண்டும்? இதை நான் சொல்லவில்லையென்றால், அவர்கள் அழிந்துபோகும்போது என்னிடம்,”சகோதரனே! இது அன்றே உங்களுக்குத் தெரியும் இல்லையா? நீங்கள் ஏன் எனக்குச் சொல்லவில்லை” என்று கேட்கிற நிலைமை வரக்கூடாது,” என்று ஜெபிக்க வேண்டும். இது முதல் குறிப்பு.

சந்தியுங்கள்

இரண்டாவது நடைமுறையில் இப்போது என்ன செய்வீர்கள்? தேவனுடைய பிள்ளைகள் எல்லாருக்காகவும் ஜெபிக்க வேண்டும். உடன் வேலைபார்ப்பவர்களுக்காக ஜெபியுங்கள், கூடுமானவரை அவர்களோடு சந்திப்புக்களை நீங்கள் ஏற்படுத்துங்கள். சந்திப்புக்கள் automaticகாக நடைபெறாது. சந்திப்புக்களை நாம் ஏற்படுத்த வேண்டும்?

உண்மையிலேயே ஆவிக்குரிய வாழ்க்கை என்றால் என்ன? “Praise the Lord brother! Hallelujah! Oh hallelujah! ஸ்தோத்திரம் ஆண்டவரே, ஸ்தோத்திரம் ஆண்டவரே,” என்று சொல்வதுதான் அல்லது சொன்னவுடன் நாம் ஆவிக்குரிய வாழ்க்கை என்று நாம் நினைக்கக்கூடாது.

2. தனிப்பட்ட குறைவு, பொதுவான குறைவு

இரண்டாவது தேவனுடைய மக்களுடைய குறைச்சல். அது தனிப்பட்ட குறைச்சல்களாக இருக்கலாம், பொதுவான குறைச்சல்களாகவும் இருக்கலாம். இதைப்பற்றி எப்போதுமே நமக்கு ஓர் உணர்வு வேண்டும். 2 இராஜாக்கள் 4ஆம் அதிகாரத்திலே எலிசாவைப்பற்றிய ஒரு காரியம் இருக்கிறது. அவர் சூனேம் என்ற ஊர் வழியாய்ப் போக்கும்வரத்துமாய் இருக்கிறார். அங்கே ஒரு சீமாட்டி, செல்வமுடைய ஒரு பெண் எலிசாவைத் தன்னுடைய வீட்டிலே வரவேற்று அவருக்கு உணவளிக்கிறாள்; அவருக்கு ஓர் அறையை ஆயத்தப்படுத்திக்கொடுக்கிறாள். எனவே, எலிசா அந்த வழியாய்ப் போகும்போதும் வரும்போதும் அந்த வீட்டிலே தங்கி, சற்று இளைப்பாறுகிறார். எலிசாவின் இருதயம் மிகவும் இளகிய இருதயம்! “என்னை இவ்வளவு அருமையாக இளைப்பாற்றி, உபசரித்து அனுப்புகிற இந்தப் பெண்ணுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும்,” என்று நினைக்கிறார். இது தேவனுடைய மக்களுடைய இருதயமாய் இருக்க வேண்டும். தேவனுடைய மக்கள் எல்லோரையும் நாம் பார்க்கும்போது நம்முடைய இருதயம், “இவர்களுக்கு நான் எதாவது செய்ய வேண்டும்,” என்று நினைக்க வேண்டும். “இதோ, இப்படிப்பட்ட சகல சலக்கரணையோடும் எங்களை விசாரித்து வருகிறாயே, உனக்கு நான் என்ன செய்யவேண்டும்? ராஜாவினிடத்திலாவது சேனாபதியினிடத்திலாவது உனக்காக நான் பேசவேண்டிய காரியம் உண்டோ,” என்று எலிசா கேட்கிறார். அவள் உயர்ந்த ஆவிக்குரிய பெண்ணாக இருக்கிறாள். “அதற்கு அவள்: என் ஜனத்தின் நடுவே நான் சுகமாய்க் குடியிருக்கிறேன் என்றாள்.” உண்மையிலேயே பவுலினுடைய ஆவி தொன்றுதொட்டு சில ஆட்களிடம் இருந்திருக்கிறது. அதில் இந்தப் பெண் ஒருத்தி. உடனே எலிசா தன்னுடைய வேலைக்காரனாகிய கேயாசியைக் கூப்பிட்டு, “அவளுக்குச் செய்யவேண்டியது என்னவென்று கேயாசியை அவன் கேட்டதற்கு,” “அவளுக்குப் பிள்ளை இல்லை, அவள் புருஷனும் பெரிய வயதுள்ளவன் என்றான்.”

இந்தச் சூனேமியாள் தன்னுடைய வீட்டை எப்படி வைத்திருக்கிறாள் பாருங்கள்! எலிசா ஒன்றும் சாதாரண ஆள் கிடையாது. அவர் அந்த வீட்டிற்கு வந்து போகிறார், தங்குகிறார், சாப்பிடுகிறார். அவர்களுக்குப் பிள்ளை இல்லை என்று அவருக்குத் தெரியவில்லை. அவர்களுக்குப் பிள்ளை இல்லை என்பதை அவர்களுடைய நடை, உடை, பாவனை, தோற்றம், தொனி ஆகியவைகளைவைத்து எலிசாவால் கண்டுபிடிக்கமுடியவில்லையென்றால் அவள் எப்படிப்பட்ட கனத்திற்குரிய ஒரு பெண்மணியாக இருந்திருப்பாள்! “எந்தக் குறைச்சலும் இல்லை. எல்லாவற்றிலும் நான் நிறைவாய் இருக்கிறேன்,” என்ற ஒரு impressionயை அவள் எலிசாவுக்குக் கொடுக்கிறாள்.

ஒரு குறையைக் கண்டுபிடித்தவுடன் அல்லது அந்தக் குறை பார்வைக்கு வந்தவுடன் எலிசாவுக்குக் கொஞ்சம் relief. “ஒரு பிராண உற்பத்திகாலத்திட்டத்திலே ஒரு குமாரனை அணைத்துக்கொண்டிருப்பாய் என்றான்.” “நான் உங்களிடத்தில் வரும்போது கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் சம்பூரணமான ஆசீர்வாதத்தோடே வருவேனென்று அறிந்திருக்கிறேன்,” என்று பவுல் ரோமர் 15:29இல் கூறுகிறார். I will come with the fullness of the blessing of Christ. நாம் ஒரு தனிப்பட்ட நபரையோ அல்லது ஒரு குடும்பத்தையோ அல்லது தேவனுடைய மக்களையோ சந்திக்கச் செல்லும்போது, நாம் கிறிஸ்துவின் ஆசீர்வாதத்தின் பரிபூரணத்தோடு செல்ல வேண்டும். அவர்களுடைய ஒரு குறைவையாவது நிறைவாக்குகிறவர்களாய் நாம் இருக்க வேண்டும். நம்முடைய குறைவுகளே நம்முடைய மனமெல்லாம் நிறைந்திருக்குமென்றால் பிறருடைய குறைவுகள் எப்படி நம் மனதில் தோன்றும்?

தேவனுடைய தரம்

தேவனுடைய மக்களுக்கு நான் ஓர் உயர்ந்த தரத்தை முன்வைக்கிறேன். “நீங்கள் அதிகம் பயமுறுத்துகிறீர்கள். ஏனென்றால், இவ்வளவு பெரிய தரத்தை எட்ட முடியாது,” என்று சிலர் சொல்லலாம். நானும் இவ்வளவு பெரிய தரத்தை எட்டி விடுவேன் என்று சொல்லவில்லை. ஆனால், இதுதான் தேவனுடைய வார்த்தை. 2 கொரிந்தியர் 8ஆம் அதிகாரத்திலே பவுல் இதைப்பற்றி எழுதியிருக்கிறார். குறைச்சலில் இருக்கிற எருசலேம் பரிசுத்தவான்களைப்பற்றி கொரிந்துவில் அகாயாவிலுள்ள பரிசுத்தவான்களுக்கு, “சமநிலைப் பிரமாணத்தின்படியே, அவர்களுடைய செல்வம் உங்கள் வறுமைக்கு உதவும்படிக்கு இக்காலத்திலே உங்களுடைய செல்வம் அவர்களுடைய வறுமைக்கு உதவுவதாக,” என்று எழுதுகிறார். By the law of equality. தேவனுடைய மக்களுடைய குறைவுகளைக்குறித்த ஓர் உணர்வு, பரிவு, நமக்கு வேண்டும். அவர்களுக்கு உண்மையிலேயே என்ன குறைவுபடுகிறது என்ற உணர்வு வேண்டும்.

அப்போஸ்தலனாகிய பவுல், “திருடுகிறவன் இனித் திருடாமல், குறைச்சலுள்ளவனுக்குக் கொடுக்கத்தக்கதாகத் தனக்கு உண்டாயிருக்கும்படி, தன் கைகளினால் நலமான வேலைசெய்து, பிரயாசப்படக்கடவன்,” என்று எபேசியர் 4:28இல் கூறுகிறார். “திருடுகிறவன் இனித் திருடாமல், தன் சொந்தக் கைகளினாலே வேலைசெய்து பிரயாசப்படக்கடவன்.” “திருடுகிறவன் திருடாமல் எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஊழியத்திற்கு வந்துவிடு,” என்பதல்ல. அவன் தன் சொந்தக் கைகளினாலே வேலைசெய்து பிரயாசப்படக்கடவன்.” எதற்காக? நீ மற்றவர்களுக்குப் பாரமாயிருக்கக் கூடாது என்பதற்காக மட்டுமல்ல. குறைச்சலுள்ளவனுக்குக் கொடுக்கத்தக்கதாக அவனிடம் இருக்க வேண்டும்.

இன்னொன்று ரோமர் 12ஆம் அதிகாரம் 13 ஆம் வசனம். “பரிசுத்தவான்களுடைய குறைவில் அவர்களுக்கு உதவிசெய்யுங்கள்; அந்நியரை உபசரிக்க நாடுங்கள்.” நன்றாய்க் கவனிக்க வேண்டும். பொதுவாகப் பாஸ்டருக்குக் காணிக்கை கொடுக்க வேண்டும் அல்லது சபைகளில் ஒரு பெரிய பொருள் வாங்க வேண்டும் என்பதற்காக இந்த வசனங்களையெல்லாம் எடுத்துக் கையாளுவார்கள். சபைக்கு ஒரு பெரிய projector வாங்க வேண்டும். ஏனென்றால், கையில் பாட்டுப் புத்தகத்தை வைத்துக்கொண்டு பாட முடியவில்லை. அது மட்டும் அல்ல, பாட்டுப் புத்தகத்தைச் சபைக்கும் தூக்கிக்கொண்டு வர முடியவில்லை. அதிக சுமையாகிவிட்டது. அதனால் technologyயைப் பயன்படுத்தி கர்த்தரைத் துதித்துப் பாட வேண்டும். இவைகள் வீண் ஆடம்பரங்கள் இல்லையா? ஒரு பாட்டுப் புத்தகத்தைக் கொண்டு வர முடியாதா? கற்றறிந்தவர்கள் நிறையப்பேர் வருவதால் அவர்களுக்கு ஏற்றாற்போல் technologyயைப் பயன்படுத்த வேண்டாமா என்பது இவர்களுடைய கேள்வி. கற்றவர்கள் அன்று கிறிஸ்துவிடம் வந்தததற்கு என்ன காரணம்? அவர் காண்பித்த technologyயினால் impressஆகி வந்தார்களா? அவர்கள் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து என்ற உன்னதமான, மகா மேன்மையான நபரினால் ஈர்க்கப்பட்டு கர்த்தரிடத்தில் வந்தார்களேதவிர technologyயை நம்பி வரவில்லை. இவைகளை நான் குறைச்சல் என்று சொல்லமாட்டேன்.

தேவ மக்களுடைய குறைவுகள் பல்வேறு விதமாக இருக்கலாம். பொருளாதாரக் குறைவாக இருக்கலாம், உடல்நலக் குறைவாக இருக்கலாம், மனநலக் குறைவாக இருக்கலாம், பல்வேறு குறைச்சல்கள் இருக்கலாம். “ஆண்டவரே, அந்தக் குறைச்சல்களை நீக்குவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்,” என்று நாம் தேவனிடத்தில் ஜெபிக்க வேண்டும். ஒருவேளை நம்மால் ஒன்றும் செய்ய முடியாமலும் போகலாம் அல்லது நம்மால் எதாவது செய்யவும் முடியலாம். சில சமயங்களில் ஒன்றிரண்டுபேர்களால் செய்ய முடியும். எடுத்துக்காட்டாக, ஒருவர் வீடு மாறிப்போகிறார். அது ஒரு குறைச்சல் இல்லையா? என்ன குறைச்சல்? ஆள்பலம் குறைவுபடுகிறது. ஒரேவொரு ஆளால் வீடு மாற்ற முடியுமா? முடியாது. வீடு மாற்றுகிறார் என்றால், ஆள்பலம் தேவை. ஒரு ஆள் போதாது. எத்தனை ஆள் வேண்டும்? இரண்டு மூன்று பேர் வேண்டும். இது ஓர் எடுத்துக்காட்டு.

தேவனுடைய மக்களிடையே குறைச்சல்களிலே உதவுவதற்கு அல்லது அந்தக் குறைச்சல்களை நிறைவாக்குவதற்கு. பிலிப்பியர் 4 ஆம் அதிகாரத்தை மீண்டும் வாசியுங்கள். ஆனால், நம்முடைய குறைச்சல்களைப்பற்றி தேவனுடைய மக்கள் எண்ண வேண்டும் என்று நாம் ஆசைப்படக்கூடாது. “என்னை விசாரிப்பதற்கு நீங்கள் இப்பொழுது மறுபடியும் மனமலர்ந்தபடியினாலே கர்த்தருக்குள் மிகவும் சந்தோஷப்பட்டேன்; இப்படிச் செய்ய எண்ணங்கொண்டிருந்தீர்கள், சமயம்மாத்திரம் உங்களுக்கு நேரிடவில்லை,” என்று பவுல் சொல்கிறார். “நீங்கள் எப்போதுமே என்னைக்குறித்து அக்கறை உள்ளவர்கள்தான். சமயம் மட்டும்தான் உங்களுக்கு வாய்க்காதிருந்தது. இப்பொழுதும்கூட நீங்கள் பணம் அனுப்பினீர்கள் என்பதில் இல்லை என் மகிழ்ச்சி. ஆனால், என்னைப்பற்றி சிந்தித்துப்பார்த்தீர்களே! ஓ! பரிசுத்தவான்களின் குறைச்சல்களிலே கொடுக்க வேண்டும் என்கிற ஒரு மனம் வந்ததே என்பதுதான் என்னுடைய மகிழ்ச்சியேதவிர எனக்குத் தந்துவிட்டீர்கள் என்பதில் என்னுடைய மகிழ்ச்சி இல்லை. எனக்கு நீங்கள் தந்தாலும், தராவிட்டாலும் எந்த வேறுபாட்டையும் இது ஏற்படுத்தாது. என் குறைச்சலினால் நான் இப்படிச் சொல்லுகிறதில்லை; ஏனெனில் நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன். தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன்.” நம்முடைய குறைச்சல்களைப்பற்றி பரிசுத்தவான்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நாம் ஆசைப்படக்கூடாது. ஆனால், பரிசுத்தவான்களுடைய குறைச்சசல் என்ன என்பதைப்பற்றி நாம் எப்போதுமே அக்கறையுள்ளவர்களாய் இருக்க வேண்டும். நிறையப் பிரச்சினைகள் இருக்கலாம்.

சிறு பிள்ளைகள்

சிறுபி‍ள்ளைகளைப்பற்றி நாம் சிந்திக்க வேண்டும். இந்தப் பிள்ளைகளை நாம் வாரவாரம் வைத்துச் சமாளிப்பதாக நினைக்கக்கூடாது. ஒவ்வொரு வாரமும் அவர்கள் கூடிவருவதை ஒரு வாய்ப்பாகக் கருத வேண்டும். ஐந்து வருடமோ, பத்து வருடமோ கழித்து அவர்களுடைய ஆவிக்குரிய அல்லது overall வளர்ச்சிக்கு இந்தக் கூட்டங்கள் பயனுள்ளவைகளாக இருக்க வேண்டும் என்றால் நாம் சமாளிக்கிற modeடிலிருந்து பயன்படுத்துகிற modeக்கு வர வேண்டும். ஓ! இது பிள்ளைகள் சமாளிக்கப்பட வேண்டிய ஒரு பிரச்சினை அல்ல, வளர்ப்பதற்குக் கொடுக்கப்பட்டுள்ள வாய்ப்பு. இதை யார் செய்வார்? ஒருவர் கொஞ்சம் பொறுப்பு எடுங்கள். ஒரு நாளைக்கு நீங்கள் அவர்கள் வீட்டிற்குப் போங்கள். நீங்கள் ஜெபித்துத் திட்டமிடுங்கள். அவர்கள் வளரும்போது கர்த்தருடைய நாள் ஞாயிற்றுக் கிழமை கூடுகைகளை நினைத்துப் பார்க்கும்போது அவர்கள் இருதயங்களிலே மகிழ்ச்சி உண்டாக வேண்டும். கூடுகைகளை நினைத்துப் பார்க்கும்போது “அப்பாடா, எப்போது hostelக்குப் போவோம், இனிமேல் இந்தக் கூடுகைகளுக்குப் போக வேண்டாம்,” என்பதுபோல் இருக்க வேண்டாம். இதைத் தயவு செய்து சிந்தித்துப் பாருங்கள். திட்டமிடுங்கள்.

ஒருவேளை நீங்கள் ஒரு கோடி ரூபாய் முதலீடு செய்து ஒரு வியாபாரம் செய்தால் எப்படித் திட்டமிடுவீர்களோ, ஜெபிப்பீர்களோ, அப்படித் திட்டமிடுங்கள், ஜெபியுங்கள். உயிரைக்கொடுத்து ஜெபிப்போம், இல்லையா? ஒரு கோடி ரூபாயைவிட மதிப்புவாய்ந்த சொத்து நம்முடைய கைகளிலே இருக்கிறது. எத்தனை கோடிகளும் இந்தச் சொத்துக்களுக்கு ஈடாகாது. “பிதா தந்தவைகளில் ஒன்றையாகிலும் நான் இழந்து போகவில்லை,” என்று கர்த்தர் சொல்கிறார். இந்தப் பிள்ளைகளில் ஒருவராகிலும் அவர்கள் வாலிபர்களாகும்போது “இயேசு கிறிஸ்துவை எனக்குப் பிடிக்காது அல்லது நான் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளவில்லை,” என்று சொல்கிற ஒரு நிலைமை வரக்கூடாது. “இல்லை. அது பெற்றோர்களைப்பொறுத்தது,” என்று யாராவது நினைத்தால், என் பதில், “இல்லை. அது தேவனுடைய மக்களாகிய நம்மைப் பொறுத்தது. நம் எல்லோரையும் பொறுத்தது.” ஒருவேளை பெற்றோர்கள் தவறு செய்யலாம். இல்லையா? 24 மணி நேரமும் பிள்ளைகளோடு வாழ்கின்றவர்கள் பிள்ளைகள் தவறு செய்யும்போது ஒருஅடி அடிக்கலாமா, அடிக்கக்கூடாதா? அடிக்கிற வாய்ப்புக்கள் உண்டு. ஒருவேளை தேவனுடைய சபை அதைத் தன் அன்பினால் ஈடு செய்யலாம். எனவே, நீங்கள் இதைச் சிந்தித்துப் பாருங்கள்.

3. முன்னுதாரணங்கள்

மூன்றாவது காரியத்தைச் சொல்லி நான் முடித்துக்கொள்கிறேன். பல முன்னுதாரணங்கள் நமக்கு அவசியம். “அப்பொழுது, இயேசு அவர்களைக் கிட்டவரச்செய்து: புறஜாதியாருடைய அதிகாரிகள் அவர்களை இறுமாப்பாய் ஆளுகிறார்கள் என்றும், பெரியவர்கள் அவர்கள் மேல் கடினமாய் அதிகாரஞ்செலுத்துகிறார்கள் என்றும், நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்,” என்று மத்தேயு 20:25இல் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொன்னார். “பூமியிலுள்ள இராஜாக்கள் தங்கள் கைகளிலே ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளவர்களை மிகவும் இறுமாப்பாய் ஆளுகை செய்கிறார்கள்.” என்னே ஒரு வார்த்தை அது! நாம் தேவனுடைய மக்களை இறுமாப்பாய் ஆளுகை செய்கிற ஆட்சியாளர்களாக ஒருநாளும் இருக்கக் கூடாது. ஆடுகளுக்கு ஓர் அறிவுரையோ, கடிந்துகொள்ளுதலோ சொல்லவேண்டி இருக்கலாம். அதற்கு நாம் அச்சப்படக்கூடாது. ஆனால், பொருளற்ற, தேவையற்ற, வீணான விதங்களிலே தேவனுடைய மக்களிடமிருந்து நம்மை ஒரு நாளும் உயர்த்திக்காட்டக் கூடாது. எடுத்துக்காட்டாக, உடுத்துகிற உடையின்மூலம் நாம் நம்மைத் தேவனுடைய மக்களிடமிருந்து உயர்த்திக்காட்டுவது. ஏற்கெனவே பாஸ்டர் என்ற அடைமொழி, ஆசாரியன் என்ற பட்டப்பெயர் இருக்கின்றன. இவைகளின்மூலம் ஏற்கெனவே அவருடைய positionஆல் ஒருவன் தான் உயர்த்தப்பட்ட ஆள் என்று நினைத்துக்கொண்டிருக்கிறான். இப்போது உடையினாலும் அவர் தன்னை உயர்ந்தவராகக் காட்டும்போது அவர் இப்போது ‘ஒருவரும் சேரக்கூடாது ஒளியில் வாசம்பண்ணுகிறவராக’ மாறிவிடுகிறார். Unapproachable “இதோ! இந்த இடத்தில் இது பலிபீடம். இந்தப் பலிபீடத்தில் வெள்ளை அங்கி அணிந்த, அழைக்கப்பட்ட பாஸ்டர் மட்டும்தான் வரலாம். சாதாரண ஆட்கள் இந்த இடத்தில் வரக்கூடாது,” என்பது புதிய ஏற்பாட்டுக் கருத்து அல்ல. தேவனுடைய மக்களுக்குமுன்பாக நாம் முன்னுதாரணங்களாய் இருக்க வேண்டும். வழிநடத்துகிறதுகூட இல்லை, வழிநடக்கிறதில்தான் நம்முடைய தலைமைத்துவம் அல்லது தலைமைப்பொறுப்பு இருக்கிறது.

1 பேதுரு 5 ஆம் அதிகாரம் 2, 3 ஆம் வசனங்களை வாசித்து நாம் முடித்துக்கொள்வோம். “உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும், அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும், சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்புச் செய்யுங்கள்.” “மந்தைக்கு மாதிரிகளாக இருங்கள்,” என்று மூப்பர்களைக்குறித்து மிகவும் எளிமையாக எழுதப்பட்டிருக்கிறது. யார் முன்னுதாரணமாய் இருக்க வேண்டும்? தேவனுடைய மக்கள் எல்லாருக்கும் அப்படிப்பட்ட முன்னுதாரணமாய் இருக்க வேண்டும் என்ற ஒரு வாஞ்சை இருக்க வேண்டும். “ஒரு சிலர் மட்டும் முன்னுதாரணமாய் இருப்பார்கள். மீதிப்பேர்களெல்லாம் பின்னுதாரணமாய் இருப்போம்,” என்பதல்ல. எந்த அளவுக்கு முன்னுதாரணங்கள் நம் மத்தியிலே இருக்கிறதோ அந்த அளவுக்கு நல்லது.

தலைமைப்பொறுப்பை விரும்புகிறவன் தீய ஆவியை உடையவனாய் இருக்கிறானா அல்லது நல்ல ஆவியை உடையவனாய் இருக்கிறானா? “கண்காணிப்பை விரும்புகிறவன் நல்ல வேலையை விரும்புகிறான், இது உண்மையான வார்த்தை” 1 தீமோத்தேயு 3:1. He who aspires to be an elder, desires a good thing. தலைமைப்பொறுப்பை எடுக்க விரும்புகிறவன் ஒரு நல்ல விருப்பத்தை உடையவனாய் இருக்கிறான். ஏனென்றால், அது மிகவும் கனமானது. அவன் எதற்கு முன்வருகிறான்? அவன் தேவனுடைய மக்களுக்குமுன்பாக ஒரு முன்னுதாரணமாக வாழ்வதற்குத் தன்னை ஒப்புக்கொடுக்கிறான். பலர் செய்கிற காரியங்களை அவனால் செய்ய முடியாது. சட்டப்படியல்ல; எல்லாவற்றையும் செய்ய எனக்கு அதிகாரம் உண்டு. ஆனால் எல்லாம் பிரயோஜனமாய் இராது. இதுதான் முன்னுதாரணமாய் நடக்கிறவனுடைய வாழ்க்கை. அது எனக்குத் தகுதியாயிராது என்ற ஒரு நிலைப்பாட்டிற்குள் வருகிற தேவனுடைய மக்கள் இருக்கலாம்.

மூன்று குறிப்புக்களைச் சொன்னேன். முதலாவது தனிப்பட்ட வாழ்க்கையிலும், உறவின் வாழ்க்கையிலும் தேவனுடைய திட்டம், தேவனுடைய இலக்கு, தேவனுடைய குறிக்கோள் நிறைவேற வேண்டும். அதாவது நம்முடைய உறவின் வாழ்க்கையில், கூட்டு வாழ்க்கையில், தேவனுடைய இலக்கும், தேவனுடைய குறிக்கோளும் நிறைவேற வேண்டும். உண்மையிலே தேவனுடைய மக்களிடையேயுள்ள உறவின் வாழ்க்கை, கூட்டு வாழ்க்கை, எப்படி இருக்க வேண்டும் என்பதை நாம் கண்டுபிடிக்கப் பிரயாசப்படுகிறோம். நாம் கண்டு பிடித்தவைகளை நாம் பகிர்ந்துகொள்கிறோம். ஒன்றாவது, ஒருவரைக்குறித்து ஒருவரின் உணர்வு. என் சகோதரன் பாடுபடும்போது அதைப்பற்றிய உணர்வு இருக்க வேண்டும். என் சகோதரன் மகிழ்ச்சியடையும்போதும் அதைப்பற்றிய உணர்வு இருக்க வேண்டும். “உன் ஆடுகளின் நிலையை நன்றாய் அறிந்துகொள். உன் மந்தையைக்குறித்து கவனமாய் இரு.” இது பாஸ்டர்களுக்குச் சொல்லப்பட்டது இல்லை. இது நம் எல்லோருக்கும் பொருந்தும். பாஸ்டர் என்பவர் மேய்ப்பர், மீதிப்பேர்கள் ஆடுகள் என்ற பொய்யான கற்பனையை வைத்துக்கொள்ள வேண்டாம். எல்லோரும் ஆடுகள்தான். ஒரோவொருவர்தான் மேய்ப்பர். சில ஆடுகள் முன்னால் செல்லும், சில ஆடுகள் பின்னால் செல்லும். செம்மறி ஆடுகள் எப்படிப் போகும் தெரியுமா? முன்னால் போகிற ஆடு எப்படிப் போகுமோ, அப்படியே பின்னால் போகிற ஆடுகள் போகும். முன்னால் போகிற ஆடு வேகமாகப் போனால், பின்னால் போகிற ஆடுகளும் வேகமாகப் போகும். இதனால்தான் திட்டும்போது “செம்மறியாட்டுக் கூட்டமாக இருக்கிறீர்களே,” என்று திட்டுவார்கள்.

நம்முடைய இருதயம் விசாலமாய் இருக்க வேண்டும். “ஆண்டவரே, உம்முடைய மக்கள் எல்லோரையும்குறித்து, உடன் வேலைபார்ப்பவர்களைக்குறித்து, சந்திக்கிறவர்களைக்குறித்து ஓர் உணர்வுள்ள இருதயத்தைத் தாரும்,” என்று ஜெபிக்க வேண்டும். அவர்களுடைய நிலை என்ன என்பதை நன்றாய் அறிகிற ஓர் ஆவிக்குரிய உணர்வு வேண்டும்.

இரண்டாவது, தேவனுடைய மக்களுடைய குறைச்சலிலே நாம் நிறைவு செய்ய வேண்டும். உணர்வு மட்டும இருந்தால் போதாது. ஒரு குறைச்சல் வரும்போது அதை நிறைவுசெய்கிற மக்களாக நாம் வளரவேண்டும். ஒரு பாடல் அதை நிறைவுசெய்யும், ஒரு ஜெபம் நிறைவு செய்யும். உண்மையாகவே நாம் பிறருடைய குறைவுகளை நிறைவுசெய்கிற மக்களாக இருக்க வேண்டும். நாம் பிறருடைய குறைவுகளை நிறைவுசெய்கிற மக்களாக இருந்தால் “ஜெபிப்போம்” என்று சொன்னவுடனே நாம் ஜெபிப்போம். “இந்த மாதிரி இவரும், அவரும் ஜெபிப்பார்,” என்று சொல்வது நம்முடைய பலவீனத்தைக் காட்டுகிறது. ஜெபிப்பதற்கு காசா, பணமா? “இல்லை. நான் மிகவும் அசுத்தமானவன். நான் ஜெபித்தால் கர்த்தர் கேட்க மாட்டார். அதுதான் நான் ஜெபிப்பதில்லை,” என்று யாராவது நினைத்தால், அது உண்மைதான். நானும் அசுத்தமானவன்தான். நான் ஜெபித்தாலும் கர்த்தர் கேட்க மாட்டார். ஆனால், நான் கிறிஸ்துவில் இருக்கிறேன். அதனால் பிதாவானவர் என்னைப் பார்க்க மாட்டார். நான் யாரில் இருக்கிறேனோ அந்தக் கிறிஸ்துவைத்தான் அவர் பார்ப்பார். இது என் நம்பிக்கை. இது எனக்கு மட்டும் அல்ல, நம் எல்லாருக்கும் இது பொருந்தும். நாம் எல்லாரும் கிறிஸ்துவில் இருக்கிறோம். இது எவ்வளவு மாபெரும் விடுதலை! இதுதான் இரகசியம். வேறு எந்த இரகசியமும் இல்லை. “ஜெபி‍ப்போம்” என்று சொன்னவுடன் பத்துப் பேர் ஜெபிக்க வேண்டும். பத்துப் பேர் ஆளுக்கு ஒரு வாக்கியம் சொல்லி ஜெபித்தால் போதும். ஆமென் என்று நிறுத்தும்வரை நாம் ஜெபிக்க வேண்டும். அந்த நன்னாள் என்று வருமோ எனக்குத் தெரியவில்லை. இது ஒரு குறைச்சலிலே நாம் நிறைவுசெய்கிறது. ஏனென்றால், அதே சகோதரர்களே ஜெபிப்பதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், அது க்கியமான சூழல் அல்ல. இந்த ஆரோக்கியமற்ற தலைமைத்தவம் வளர்வதற்கு நாமே காரணமாகி விடுகிறோம். இது எல்லாரும் செய்ய முடியும். எங்கெல்லாம் ஒரு குறைச்சல் இருக்கிறதோ அங்கெல்லாம் கிறிஸ்துவின் பரிபூரணத்தைக்கொண்டு நிரப்புகிற மக்களாய் நாம் மாற வேண்டும். அது தனிப்பட்ட குறைச்சலாய் இருக்கலாம் அல்லது பொதுவான குறைச்சலாய் இருக்கலாம் .

மூன்றாவதும் கடைசியுமாக எந்த அளவுக்கு முன்னுதாரணங்களை நாம் ஏற்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு முன்னுதாரணங்களை ஏற்படுத்த வேண்டும். தேவனுடைய மக்கள‍ை ஆளுகை செய்வதல்ல, இப்படித்தான் வாழவேண்டும் என்று தேவனுடைய மக்களுக்குமுன்பாக நாம் வாழ்ந்துகாட்டுவது, சேவித்துக்காட்டுவது. இப்படிப்பட்ட ஓர் உறவின் வாழ்க்கை வாழ்வதற்குப் பரிசுத்த ஆவியானவர் ஞானத்தையும், அறிவையும், கிருபையையும் அருள்வாராக ஆமென்.