Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More

தேவனுடைய நித்திய நோக்கத்தில் நம் பங்கு

Transcribed from a message spoken in December 2014 in Chennai 

By Milton Rajendram

நித்திய நோக்கம், நித்தியத் திட்டம்

நம்முடைய தேவன் ஒரு திட்டம் வைத்திருக்கிறார். நம்முடைய தேவனுக்கு ஒரு நித்தியத் திட்டம் உண்டு. இன்னும் சொல்லப்போனால், இந்த முழு வேதாகமமும் தேவனுடைய நித்தியத் திட்டத்தைப்பற்றிய புத்தகம்தான். நம் தேவன் ஒரு நித்திய நோக்கத்தை வைத்திருக்கிறார். அந்த நித்திய நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக ஒரு நித்தியத் திட்டத்தையும் வைத்திருக்கிறார்.

நித்திய நோக்கம், நித்தியத் திட்டம் என்றால் என்ன பொருள்? நாம் காண்கிற இந்தப் பிரபஞ்சத்தைப் படைப்பதற்குமுன்பே தேவன் ஒரு நோக்கம் வைத்திருந்தார். அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக அவர் ஒரு திட்டத்தை வகுத்தார். அதுபோல, யுகங்கள் நிறைவேறும்போது, தேவன் தம் நித்திய நோக்கத்தை சாதித்திருக்க வேண்டும் என்று விரும்புகிறார். இந்த இடைப்பட்ட காலத்தில், கடந்த நித்தியம்தொடங்கி வருகிற நித்தியம்வர‍ைக்கும் உள்ள இந்த இடைப்பட்ட காலத்தில், தேவன் இந்த ஒரேவொரு நோக்கத்தோடுதான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.

தேவ மக்களின் நித்திய நோக்கமும், நித்தியத் திட்டமும்

முழு உலகமாக இருந்தாலும் சரி அல்லது மனித வரலாறாக இருந்தாலும் சரி அல்லது நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் சரி, அது தேவனுடைய நித்திய நோக்கத்தோடும், தேவனுடைய நித்தியத் திட்டத்தோடும் தொடர்புடையது. நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையை கடந்த நித்தியம்தொடங்கி வருகின்ற நித்தியம்வரையிலான யுகத்தோடு ஒப்பிடும்போது அது எவ்வளவு சிறிய வாழ்க்கை. இல்லையா? மிக மிகச் சிறிய வாழ்க்கை. ஆனால், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவோடு தொடர்புள்ள ஒரு விசுவாசியின் வாழ்க்கை சாதாரணமானது அல்ல. அது தேவனுடைய நித்திய நோக்கத்தோடும், தேவனுடைய நித்தியத் திட்டத்தோடும் தொடர்புள்ளது. எனவே, அது மிகவும் முக்கியத்துவம்வாய்ந்தது. ஒரு பக்கம், ஒரு மனிதனுடைய வாழ்க்கை ஓர் எறும்பின் வாழ்க்கையைப்போல எந்த முக்கியத்துவமும் இல்லாதது; ஆனால், இன்னொரு பக்கம், நாம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவோடு தொடர்புக்கு வந்திருப்பதால், நம்முடைய வாழ்க்கை தேவனுடைய பார்வையில் மிகவும் முக்கியமானது, அருமையானது, விலையேறப்பெற்றது.

தேவன் ஒரு நோக்கமும், திட்டமும் உள்ளவராய் இருப்பதால், தேவனுடைய மக்களும் ஒரு நோக்கமும், ஒரு திட்டமும் உள்ளவர்களாக இருக்க வேண்டும். நம்முடைய வாழ்க்கையில் நம் நோக்கம் என்ன, நம் திட்டம் என்ன என்பதைக்குறித்த ஒரு தெளிந்த பார்வை நமக்கு இருக்க வேண்டும். அதைத்தான் புதிய ஏற்பாடு தரிசனம் என்றழைக்கிறது. நாம் தரிசனம் என்று சொல்லும்போது, தூங்கும்போது, ஜெபிக்கும்போது அல்லது உபவாசிக்கும்போது வருகிற காட்சியைத் தரிசனம் என்று சொல்லவில்லை. நம்முடைய வாழ்க்கையின் முடிவில் அல்லது இந்த யுகத்தின் முடிவில் தேவன் எதைச் செய்திருக்க, எதை சாதித்திருக்க விரும்புகிறார் என்பதைப்பற்றிய தெளிந்த பார்வைக்குத்தான் தரிசனம் என்று பெயர். இன்றைக்கு நாம் ஒரு வேலைக்குப் போகலாம் அல்லது கடைக்குப் போய் காய்கறிகள் வாங்கலாம், அரிசி வாங்கலாம்; ஒரு வீடு மாற்றலாம். இப்படிப் பல்வேறு காரியங்களில் நாம் ஈடுபடுகிறோம். ஆனால், இவையெல்லாவற்றிற்கும்பின்னால், இவையெல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டு தேவன் ஒரு நோக்கத்திற்காக அவருடைய பிள்ளைகளுடைய வாழ்க்கையிலே செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.

தேவனுடைய நித்தியத் திட்டத்தில் நம்முடைய வாழ்க்கையின் பங்கு என்ன என்பதைக்குறித்து நாம் சிந்தித்துப்பார்க்க வேண்டும். வயதானபிறகு நாம் இறந்து போவோம். நாம் இந்த உலகத்தைவிட்டுக் கடந்துபோகும்போது, தேவனுடைய திட்டத்தில் என்னுடைய பங்கு என்னவோ அந்தப் பங்கை நான் செய்து முடித்திருக்க வேண்டும். தேவனுடைய நித்தியத் திட்டத்தில் என் பங்கை நான் செய்யவில்லை என்றால் பெரிய நஷ்டம் ஏற்படுமா? ஆண்டவர் ஒரு Backup வைத்திருக்க மாட்டாரா? ஒருவேளை நான் என்னுடைய பங்கைச் செய்யவில்லை என்றால், என்னுடைய பங்கைச் செய்வதற்கு இன்னொரு ஆள‍ை ஏற்பாடு செய்திருக்கமாட்டாரா? செய்திருக்க மாட்டார். என்னுடைய பங்கை நான் நிறைவேற்ற வேண்டும். “நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு, தீங்கநுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று,” என்று அப்போஸ்தலனாகிய பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதுகிறார் (2 தீமோ. 4:5). என்ன parting word! இது அப்போஸ்தலனாகிய பவுல் தன்னுடைய வாழ்க்கையின் முடிவுக்கு வரும்போது, விசுவாசத்தில் தன்னுடைய உத்தம குமாரனாகிய தீமோத்தேயுவுக்குக் கொடுக்கிற வார்த்தை. இரண்டாம் வசனத்திலிருந்து வாசிப்போம். “சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு.” தமிழ் வேதாகமத்தில் இது சரியாகச் சொல்லப்படவில்லை. Whether it is favourable or unfavourable. சாதகமான காலமோ, பாதகமான காலமோ என்று மொழிபெயர்த்தால் சிறப்பாக இருக்கும்.

நம் நாட்டில் இப்போதைய ஆட்சிக்காலம் சுவிசேஷம் அறிவிப்பதற்கு ஏற்ற, சாதகமான சமயமா அல்லது ஏற்ற, சாதகமான சமயம் இல்லையா? ஏற்ற சமயம் இல்லை. ஆனால், சுவிசேஷத்திற்கு ஏதாவது தடையுண்டா? தடை இல்லை. இதைத்தான் நான் சொல்ல விரும்புகிறேன். சமயம் வாய்த்தாலும் சுவிசேஷத்தை அறிவி, சமயம் வாய்க்காவிட்டாலும் சுவிசேஷத்தை அறிவி. தொடர்ந்து வாசிப்போம். “எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம்பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு. ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு, சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும். நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு, தீங்கநுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று.” Fulfill your ministry.

தேவனுடைய நித்திய நோக்கத்தில் உங்களுடைய பணிவிடையும், என்னுடைய பணிவிடையும் தனித்தனிப் பணிவிடை அல்ல. ஒரே பணிவிடையில் உங்களுக்கு ஒரு பங்கு உண்டு, எனக்கு ஒரு பங்கு உண்டு. நாமெல்லாரும் நம் பங்குகளைச் செய்யும்போதுதான் அந்தப் பணிவிடை நிறைவேற்றப்படுகிறது.

எருசலேமின் மதில்சுவர்

இந்த வாரமும், அடுத்த வாரமும் நீங்கள் படிப்பதற்கு ஒரு புத்தகத்தை நான் உங்களுக்குப் பரிந்துரைக்கிறேன். நெகே‍மியா, எஸ்றா ஆகிய இரண்டு புத்தகங்களை வாசியுங்கள். குறிப்பாக நெகேமியாவின் புத்தகத்தை வாசியுங்கள். அந்தக் காலத்தில், எருசலேம் சூறையாடப்பட்டு, எரிக்கப்பட்டு, ஒரு பாழும் தேசமாக இருந்தது. எருசலேம் என்ற நகரம் இல்லை. அந்தக் காலத்தில் ஒரு நகரம் என்றால், அந்த நகரத்திற்கு ஒரு மதில் சுவர் இருக்கும். பழைய தமி‍ழில் அலங்கம். அந்தக் காலத்தில் மதில் சுவர் இல்லாத நகரங்கள் கிடையாது. நேபுகாத்நேச்சருடைய காலத்தில், அவன் எருசலேமை முற்றுகையிட்டு, முறியடித்து, எரித்து, தரைமட்டமாக்கிவிட்டுப் போய்விட்டான்.

சில ஏழைகள் மட்டும் எருசலேமைச் சுற்றியுள்ள கிராமங்களில் வாழ்ந்து வந்தார்கள். நெகேமியா சூசான் தேசத்தில், ஓர் அரண்மனையில் அந்த அரசனுக்குப் பானபாத்திரக்காரனாக இருக்கிறான். அரசனுக்கு நெருங்கின வேலைபார்க்கிறான். ஆனால், எருசலேம் எரிக்கப்பட்டு, அதின் மதில்சுவர் தரைமட்டமாக்கப்பட்டுவிட்டது என்பதை அவன் கேள்விப்படும்போது, அவன் உபவாசித்து ஜெபிக்கிறான். துக்கமுகமாய் இருக்கிறான். “நீ இதுவரை துக்கமுகமாய் இருந்ததில்லை‍யே! ஏன் துக்கமுகமாய் இருக்கிறாய்,” என்று அரசன் அவனை விசாரிக்கிறான். அதற்கு நெகேமியா, “என் பிதாக்களின் கல்லறைகள் இருக்கும் ஸ்தலமாகிய நகரம் பாழானதும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதுமாய்க் கிடக்கும்போது, நான் துக்கமுகத்தோடு இராதிருப்பது எப்படி,” என்று பதில் சொல்லுகிறான். அரசன் இன்னும் கூடுதல் விவரங்களைக் கேட்கிறான். அப்போது நெகேமியா விவரமாக எடுத்துரைத்து, “என் பிதாக்களின் கல்லறைகளிலிருக்கும் பட்டணத்தைக் கட்டும்படி, யூதா தேசத்துக்கு நீர் என்னை அனுப்ப வேண்டிக்கொள்ளுகிறேன்,” என்று எருசலேமுக்குப் போக அனுமதி கேட்கிறான். அரசன் அவனுக்கு அனுமதி கொடுக்கிறான். நெகேமியா அரசனுடைய அனுமதிக் கடிதத்தோடு இஸ்ரயேலுக்குத் திரும்பி வருகிறான்.

நெகேமியாவின் முதல் அதிகாரத்திலே அவன் தனக்காகவும், தன்னுடைய மக்களுக்காகவும், அவர்கள் செய்த பாவங்களுக்காகவும் மனம் வருந்தி ஜெபிக்கிறான்.

எருசலேமுக்குத் திரும்பிவந்தபின், அவன் ஓர் இரவில் ஒரு கோவேறுக் கழுதையின்மேல் ஏறி, நகரத்தைச்சுற்றிப் பார்வையிடுகிறான்; “ஆனாலும் எருசலேமுக்காகச் செய்யும்படி என் தேவன் என் மனதிலே வைத்ததை நான் ஒருவருக்கும் அறிவிக்கவில்லை; நான் ஏறிப்போன மிருகமேயல்லாமல் வேறொரு மிருகமும் என்னோடிருந்ததில்லை,” என்று அவன் கூறுகிறான்.

எந்த அளவுக்கு நீங்கள் நெகேமியாவின் புத்தகத்தை வாசிக்க வேண்டுமென்றால், ஐந்து முறை வாசித்தபிறகு, அந்தப் புத்தகத்தைத் திறந்துவைத்துக்கொண்டுதான் சிந்திக்க வேண்டும் என்ற நிலைமை இருக்கக் கூடாது. மேற்கோள் காட்டுவதற்குத்தான் புத்தகத்தைத் திறக்கவேண்டும்., ஐந்து அல்லது பத்துமுறை வாசித்தபிறகு, அந்தப் புத்தகத்தின் சம்பவங்கள், பெயர்கள் எல்லாம் நமக்கு ஞாபகம் இருக்க வேண்டும்.

எழுந்து கட்டுவோம் வாருங்கள்

நகரத்தைச் சுற்றிவந்து பார்த்தபிறகு, எருசலேமின் மதில்சுவரை கட்டுவது தான் நினைப்பதுபோல எளிய காரியம் அல்ல என்று நெகேமியா புரிந்துகொள்கிறார். ஏனென்றால், அங்கு செல்வந்தர்கள் பலர் இல்லை. அங்கு வாழ்கின்றவர்கள் எல்லாம் மிகவும் ஏழைகள். ஒரு சில செல்வந்தர்கள்தான் இருக்கின்றார்கள். நெகேமியாவின் திட்டம் என்ன? நெகேமியா இரண்டாம் அதிகாரம் 18ஆம் வசனம். “எழுந்து கட்டுவோம் வாருங்கள்,” என்றான். “எழுந்து கட்டுவோம், வாருங்கள்.” Arise, let us build it. “Arise, shine, stop not until you achieve” என்றெல்லாம் மேற்கோள் காட்டுவார்கள். நெகேமியா மிக எளிமையாகச் சொல்கிறார். “எழுந்து கட்டுவோம் வாருங்கள்.” இது மிகப் பிரபலமான வசனம்.

1. தேவனுடைய மக்களின் நோக்கமும், திட்டமும்

நான் இரண்டு காரியங்களை மட்டுமே சொல்ல விரும்புகிறேன். ஒன்று தேவனுடைய மக்களுக்கு ஒரு நோக்கமும், ஒரு திட்டமும், வேண்டும். தேவன் தம்முடைய மக்களுடைய இருதயத்தில் அந்த நோக்கத்தையும், திட்டத்தையும் வைக்காமல் அதை இந்தப் பூமியில் நிறைவேற்ற முடியாது. எருசலேமின் மதில்சுவர்கள் தானாக கட்டப்பட்டுவிட முடியாது. ஒரு மனிதன் இதைப்பற்றி சிந்திக்க வேண்டும். “என்னுடைய நகரத்திற்கு மதில்சுவர் வேண்டும்,” என்று ஒரு மனிதன் சிந்திக்க வேண்டும்.

2. தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்றும் வளங்கள் நம்மிடம் இல்லை

அதுபோல தேவனுடைய நோக்கத்தையும், தேவனுடைய திட்டத்தையும் செய்துமுடிக்கின்ற வளங்கள் எப்போதும் நம்மிடம் இருக்காது; இதை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். அதைச் செய்துமுடிப்பதற்குரிய வளங்கள் நம்மிடத்தில் இருந்து, தேவன் ஒரு திட்டத்தை நம்முடைய கையில் கொடுத்தால், அதில் தேவன் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. சாதாரணமான மீனவர்களை எடுத்து, “நீங்கள் புறப்பட்டுப்போய், சகல இனங்களையும் சீடராக்குங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணி, அவர்களையும் சீடராக்குங்கள்,” என்று இயேசு சொன்னார். உலகமெங்கும்போய் ஒரு கூட்டம் மனிதர்களைச் சீடர்களாக்க வேண்டுமென்றால் எப்படிப்பட்ட ஆட்களை அனுப்ப வேண்டும் தெரியுமா? மூன்று வருடம் நல்ல பயிற்சி கொடுத்து, நல்ல பேச்சாளர்களாக மாற்றி, அவர்களுக்கு வில்வித்தை, வாள்வித்தையெல்லாம் கற்றுக்கொடுத்து, அதற்குபிறகு அனுப்பினால், அவர்கள் உலகமெங்கும் போய் போதிக்க முடியும், சீடர்களாக்க முடியும். இல்லையா? நாம் அப்படித்தான் நினைக்கிறோம்.

இந்த நாட்டில் பேச்சாற்றல் இல்லாத, கல்வி இல்லாத குரு இருந்திருக்கிறார்களா? இருந்திருக்கலாம். ஆனால், பெரிய சாதனைகள் செய்து முடித்த குருக்கள் பேச்சாற்றல், கல்வியறிவு இல்லாதவர்களா? இல்லை. அவர்கள் சிறந்த பேச்சாளர்கள், கல்வியாளர்கள். ஆனால்,

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினுடைய சீடர்கள், எப்படிப்பட்டவர்கள்? “அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதைமையுள்ளவர்களென்றும் அறிந்தபடியினால் ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவுடனேகூட இருந்தவர்களென்றும்,” ஆலோசனை சங்கத்தார் அறிந்துகொண்டார்கள். பேதுரு, அந்திரேயா, யோவான், யாக்கோபு ஆகியவர்களெல்லாம் கல்வியில் கரைதேறினவர்க‍ளோ அல்லது மாபெரும் பேச்சாளர்களோ அல்லது சொற்பொழிவாளர்களோ அல்ல. தேவன் இவர்களை நம்பி உலகம் முழுவதும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியைக் கொண்டுபோய் மக்களை சீடர்களாக்கும் பொறுப்பைக் கொடுக்கிறார். அதற்குத் தேவையான திறமைகளோ, பலமோ, வளமோ அவர்களிடத்தில் இருந்ததா? இல்லை, ஆனால், தேவன் தம்முடைய திட்டத்தை வகுக்கும்போது, அதை நிறைவேற்றுவதற்குரிய பலத்தையும், திறமையையும், வளத்தையும் பரத்திலிருந்து தருகிறார். “பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.” தேவனுடைய திட்டத்தை நிறைவேற்றுகின்ற திறமையோ, பலமோ, வளமோ நம்மிடத்தில் இல்லை.

தேவனுடைய நோக்கத்திற்குத் தடைகள்

“நாங்கள் மாம்சத்தில் நடக்கிறவர்களாயிருந்தும், மாம்சத்தின்படி போர்செய்கிறவர்களல்ல. எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது. அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்.” என்று 2 கொரிந்தியர் 10:3, 4, 5இல் அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார். “எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது.”

அருமையான தேவனுடைய மக்களே, நான் கொஞ்சம் formalஆகச் சொல்லுவதுபோல் தோன்றலாம். நான் என் இருதயத்தின் ஆழத்திலிருந்து சொல்கிறேன். “நாங்கள் மாம்சத்தில் நடக்கிறவர்களாயிருந்தும், மாம்சத்தின்படி போர்செய்கிறவர்கள் அல்ல.” நாம் இந்த உலகத்தில் வாழ்கின்றோம். ஆனால், இந்த உலகம் கையாளுகின்ற யுக்திகளையும், சக்திகளையும், தந்திரங்களையும், மந்திரங்களையும், எந்திரங்களையும் நம்பி நாம் போர்புரிகின்றவர்கள் அல்ல.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நற்செய்திக்கு இந்த உலகத்திலே எதிரி உண்டா? பகைவன் உண்டா? ஓ! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நற்செய்திக்கு அல்லது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் முதன்மையானவரும், மேன்மையானவருமாக இருப்பதற்கு இந்த உலகத்தின் அதிபதி எதிரியாக, பகைவனாக இருக்கிறான். எபேசியர் 6ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிறதுபோல அவன் “துரைத்தனங்களையும், அதிகாரங்களையும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளையும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளையும்” எழுப்பி இருக்கிறான்.

எனவே, தேவனுடைய திட்டத்திற்கு என்ன உண்டு? எதிர்ப்பு உண்டு, பகை உண்டு, போராட்டம் உண்டு. “ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு” (எபே. 6:12).

ஆ! நமக்குப் போராட்டம் உண்டு. நாம் ஒரு திட்டம் வகுத்தவுடன், அப்படியே நேர்கோட்டில் அம்பு போவதுபோல், நாம் அந்தத் திட்டத்தை நிறைவேற்றி விடுவோமா? நமக்குப் போராட்டம் உண்டு. ஆனால், “நம்முடைய போராட்டம் மாம்சத்திற்குரியதல்ல, நம்முடைய போராட்டம் ஆவிக்குரியது. நாம் மாம்சத்தில் வாழ்கின்றவர்களாய் இருந்தாலும், மாம்சத்தின்படி போர்புரிகிறவர்கள் அல்ல,” என்று 2 கொரிந்தியர் 10ஆம் அதிகாரத்திலும் , எபேசியர் 6 ஆம் அதிகாரத்திலும், பவுல் மிக அழகாகச் சொல்கிறார்.

அவர்கள் காலாட்படையின் தளத்தில் சண்டை போடுகிறார்கள், நாமும் அதே தளத்தில் சண்டைப்போடக்கூடாது. நாம் காலாட்படையின் தளத்தில் சண்டைப்போடக் கூடாது, போர்புரியக் கூடாது. நாம் எந்தத் தளத்தில் போர்புரிய வேண்டும், ஓ! ஆவிக்குரிய தளத்தில் அல்லது ஆகாயத் தளத்தில் போர்புரிய வேண்டும். என்னமோ தேவனுடைய மக்கள் அனாதைகளாக இந்த உலகத்திலே விடப்பட்டிருக்கிறார்கள், கையாலாகதவர்களாக இருக்கிறார்கள் என்பதுபோல் நாம் நினைக்கக்கூடாது. நம்முடைய போராயுதங்கள் அரண்களை நி‍ர்மூலமாக்குகிறதற்கு தேவ‍பலமுள்ளவைகளாய் இருக்கிறது. அப்படியானால் நமக்குப் போராயுதங்கள் இருக்கிறதா, இல்லையா? தேவன் நம்மை போராயுதங்கள் இல்லாதவர்களாக விட்டுவிட்டாரா அல்லது நமக்குப்போராயுதங்கள் உண்டா?

போராட்டங்களும், போராயுதங்களும்

நமக்குப் போராட்டங்கள் உண்டு, ஆனால் அதைவிட முக்கியமானது என்ன? போராயுதங்களும் உண்டு. போராட்டங்கள் மட்டும் உண்டு, ஆனால் நமக்குப் போராயுதங்கள் இல்லை என்றால் நாம் முறியடிக்கப்பட்ட போர்வீரர்கள்போல் உணர்வோம். நமக்குப் போராட்டங்களும் உண்டு, போராயுதங்களும் உண்டு. நம்முடைய போராயுதங்கள் அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு மனித பலமுள்ளவைகள் அல்ல, தேவ பலமுள்ளவைகள். தேவபலமுள்ள போராயுதங்களையுடைய மக்களாகிய நாம் ஆயுதமே இல்லாத நிராயுதபாணிகளைப்போல இருப்பதாக நினைக்கக்கூடாது.. “நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்; ஜாதிகளுக்குள்ளே உயர்ந்திருப்பேன், பூமியிலே உயர்ந்திருப்பேன்,” என்று சங்கீதம் 46:10இல் வாசிக்கிறோம். இந்தச் சங்கீதத்தை நீங்கள் பிறகு வாசியுங்கள். ஜாதிகள் என்று தமிழில் மொழிபெயர்த்திருப்பது தேசங்கள். இது நம் தமிழ்நாட்டிலுள்ள ஜாதி என்று நினைக்கவேண்டாம்.

ஈட்டிகளின் சத்தம், வாள்களின் சத்தம், தீ எரிகிற சத்தம், துப்பாக்கி சத்தம் - இதையெல்லாம் கேட்கும்போது, தேவனுடைய மக்களாகிய நாமும் வாளைத் தீட்டவேண்டும், ஈட்டியைத் தீட்டவேண்டும் என்று யோசிக்கவேண்டிய அவசியம் இல்லை.

நமக்கு நாமே திட்டம்

ஒன்றை நான்றாய்க் கவனிக்க வேண்டும். நாமே ஒரு திட்டத்தை உருவாக்கிக்கொள்வதில்லை. “அடுத்த பத்து வருடத்தில், சென்னையில் ஓர் ஏக்கர் நிலம் வாங்கி சபை கட்டப்போகிறேன்,” என்று நாமே ஒரு திட்டத்தை உருவாக்குவதில்லை. இப்படித் திட்டம் தீட்டினால் பரலோகத்தில் இருக்கிறவர் அதைப் பார்த்து நகைப்பார்.

நெகேமியாவின் போராட்டங்கள்

நாம் தேவனுடைய திட்டத்தை நம் திட்டமாக எடுத்துக்கொள்ளவேண்டும். சில வசனங்களை வாசித்து, நான் ஒரேவொரு வாக்கியதத்தில் ஒரு குறிப்பு சொல்ல விரும்புகிறேன். நெகேமியா எல்லாப் போராட்டங்களையும் சந்திக்கிறான். நெகேமியாவின் புத்தகத்தை திறந்து வைத்துக்கொள்ளுங்கள். நெகேமியா 6ஆம் அதிகாரம் 11 ஆம் வசனம். “அதற்கு நான்: என்னைப்போன்ற மனிதன் ஓடிப்போவானோ? என்னைப் போன்றவன் உயிர்பிழைக்கும்படி தேவாலயத்திலே போய்ப் பதுங்குவானோ? நான் போவதில்லை என்றேன்.” அவன் அந்த மதிலைக் கட்ட ஆரம்பிக்கும்போது, பல போராட்டங்கள் வருகின்றன.

1. பயமுறுத்துதல்

முதலாவது அவனுடைய எதிரிகளாகிய சன்பல்லாத்தும், தொபியாவும், அரபியனான கேஷேமும் அவனைப் பயமுறுத்துகிறார்கள். ஆனால், இது பயமுறுத்துதல் இல்லை. “உம்மைக் கொலைசெய்வதற்குத் தேடுகிறார்கள், ஆகையால், நீர் தேவாலயத்திலே ஒளிந்துகொள்ளும்,” என்று அவர்களில் ஒருவன் நெகேமியாவுக்கு ஆலோசனை சொன்னான். அவர்களுடைய திட்டம் என்னவென்றால், நெகேமியா அவர்களுடைய பயமுறுத்தலுக்குப் பயந்து தேவாலயத்திற்குள் ஓடிப்போய் ஒளிந்துகொள்ளுவான். அதன்பிறகு அந்த மக்களிடம், “உங்கள் தலைவனுடைய குணத்தைப் பார்த்தீர்களா? எவ்வளவு பெரிய கோழை பாருங்கள்! ஆபத்து என்று சொன்னவுடன் ஆலயத்திற்குள் போய் ஒளிந்துகொண்டான்,” என்று சொல்லி அவனை இழிவுபடுத்துவதுதான் அவர்களுடைய நோக்கம். நெகேமியாவின் பதில் என்ன தெரியுமா? “என்னைப்போன்ற மனிதன் ஓடிப்போவானோ? என்னைப் போன்றவன் உயிர்பிழைக்கும்படி தேவாலயத்திலே போய்ப் பதுங்குவானோ? நான் போவதில்லை,” என்றான்.

அந்த வேலை கஷ்டமாக இருக்கிறது; அதனால் ஓடிப்போகிறேன். அந்த நாடு கஷ்டமாக இருக்கிறது; அதனால் ஓடிப்போகிறேன். தேவனுடைய சித்தம் என்பதால் மட்டுமே ஒரிடத்தை விட்டு நகரலாமேதவிர பயந்து ஓடிப்போவது இல்லை. ஒரு நாட்டிலோ, ஒரு வீட்டிலோ, ஒரு வேலையிலோ, ஒரு பள்ளிக்கூடத்திலோ நம்மை அமர்த்துகிறவர் கர்த்தர். “ஜாதிகளுக்குள்ளே நான் உயர்ந்திருப்பேன்.” I will be exalted over the nations.

அவர்கள் தேவனை அறிந்தவர்களாயிருந்தாலும் சரி, அறியாதவர்களாய் இருந்தாலும் சரி, தானியேல் புத்தகத்தினுடைய செய்தி என்னவென்றால், பரலோகங்கள் ஆளுகை செய்கின்றன. The Heavens rule. இந்தியாவை ஆளுகைசெய்வது பூமியா, பரலோகமா? என்னமோ ஒரு சில மனிதர்களிடத்தில் கர்த்தர் ஆட்சியைக் கொடுத்து விட்டு, “நான் இப்போது இந்தியாவை என்ன செய்வது என்று தெரியவில்லையே!” என்று தேவன் பரலோகத்தில் கையைப் பிசைந்துகொண்டிருப்பதுபோல் நாம் கற்பனை செய்ய வேண்டாம். இல்லை, இல்லவே இல்லை. “ஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதாக்காரியத்தைச் சிந்திப்பானேன்? கர்த்தருக்கு விரோதமாகவும், அவர் அபிஷேகம்பண்ணினவருக்கு விரோதமாகவும், பூமியின் ராஜாக்கள் எழும்பிநின்று, அதிகாரிகள் ஏகமாய் ஆலோசனைபண்ணி: அவர்கள் கட்டுகளை அறுத்து, அவர்கள் கயிறுகளை நம்மைவிட்டு எறிந்துபோடுவோம் என்கிறார்கள். பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார்; ஆண்டவர் அவர்களை இகழுவார்” சங்கீதம் 2:1-4.

2. திசைதிருப்பங்கள்

நெகேமியா 6:1முதல் 9வரையிலான வசனங்கள். “நான் அலங்கத்தைக் கட்டிமுடித்ததையும், இனி அதிலே திறப்பு ஒன்றுமில்லை என்பதையும், சன்பல்லாத்தும், தொபியாவும், அரபியனான கேஷேமும் எங்களுக்குண்டாயிருந்த மற்றப் பகைஞரும் கேள்விப்பட்டபோது, நான் வாசல்களுக்கு இன்னும் கதவு போடாதிருக்கையில், சன்பல்லாத்தும், கேஷேமும் ஆள் அனுப்பி: நாம் ஓனோ பள்ளத்தாக்கில் இருக்கிற கிராமங்கள் ஒன்றில் ஒருவரையொருவர் கண்டு பேசுவோம் வாரும் என்று கூப்பிட்டார்கள்; அவர்களோவென்றால் எனக்குப் பொல்லாப்புச் செய்ய நினைத்தார்கள். அப்பொழுது நான் அவர்களிடத்திற்கு ஆட்களை அனுப்பி: நான் பெரிய வேலையைச் செய்கிறேன், நான் வரக்கூடாது; நான் அந்த வேலையைவிட்டு உங்களிடத்திற்கு வருகிறதினால் அது மினக்கட்டுப்போவானேன் என்று சொல்லச்சொன்னேன். அவர்கள் இந்தப்பிரகாரமாக நாலுதரம் எனக்குச் சொல்லியனுப்பினார்கள்; நானும் இந்தப்பிரகாரமாகவே அவர்களுக்கு மறுமொழி அனுப்பினேன். ஐந்தாந்தரமும் சன்பல்லாத்து அந்தப் பிரகாரமாகவே தன் வேலைக்காரனையும், அவன் கையிலே முத்திரைபோடாத ஒரு கடிதத்தையும் எனக்கு அனுப்பினான். அதிலே: நீரும் யூதரும் கலகம்பண்ண நினைக்கிறீர்கள் என்றும், அதற்காக நீர் அலங்கத்தைக் கட்டுகிறீர் என்றும், இவ்விதமாக நீர் அவர்களுக்கு ராஜாவாகப் போகிறீர் என்றும், யூதாவிலே ஒரு ராஜா இருக்கிறார் என்று உம்மைக்குறித்து எருசலேமிலே கூறுகிற தீர்க்கதரிசிகளையும் சம்பாதித்தீரென்றும் புறஜாதிகளுக்குள்ளே பிரஸ்தாபமாயிருக்கிறது, கஷ்மூவும் அப்படிச் சொல்லுகிறான்; இப்போதும் இந்தச் செய்தி ராஜாவுக்கு எட்டுமே; ஆகையால் நாம் ஒருவரோடொருவர் ஆலோசனைபண்ணுகிறதற்காக நீர் வரவேண்டும் என்று எழுதியிருந்தது. அதற்கு நான்: நீர் சொல்லுகிற அந்தக் காரியங்களில் ஒன்றும் நடக்கவில்லை; அவைகள் உம்முடைய மனோராஜ்யமே ஒழிய வேறல்ல என்று சொல்லியனுப்பினேன். அந்த வேலை நடந்தேறாதபடிக்கு, எங்கள் கை சலித்துப்போம் என்று சொல்லி, அவர்கள் எல்லாரும் எங்களைப் பயமுறுத்தப்பார்த்தார்கள். ஆதலால் தேவனே நீர் என் கைகளைத் திடப்படுத்தியருளும்,” 

இதில் நிறையக் காரியங்கள் இருக்கின்றன. ஒன்றைக் கவனித்தீர்களா? “நான் பெரிய வேலையைச் செய்கிறேன்,” என்று நெகேமியா கூறுகிறார். வேறு எந்த வேலையும் இல்லாததால் ஏதோ பொழுபோக்குக்காக ஒரு துண்டு வேலையை செய்துகொண்டிருப்பதாக நாம் நினைக்கக்கூடாது. ”

முதல் போராட்டம் இழிவுபடுத்துவது. இரண்டாவது போராட்டம் distraction. “நாம் பேச்சு வார்த்தை நடத்துவோம் வாரும்,” என்று கூப்பிட்டார்கள். “எனக்கு நேரம் இல்லை. நான் மிகவும் முக்கியமான வேலை செய்துகொண்டிருக்கிறேன். நான் ஒரு பாடல் மொழிபெயர்த்துக்கொண்டிருக்கிறேன். நான் செய்திகளைத் தொகுத்துக்கொண்டிருக்கிறேன்.” “அதெல்லாம் ஒரு பெரிய வேலையா? ஆயிரம் பாட்டு இருக்கிறது,” என்று ஒருவர் கேட்கலாம். பதில் ஆம், அது பெரிய வேலை. “நாங்கள் ஒரு tract எழுதிக்கொண்டிருக்கிறோம்.” “எவ்வளவோ tract இருக்கிறது. இதெல்லாம் ஒரு பெரிய வேலையா?” என்று யாராவது கேட்டால், “ஆம், அது பெரிய வேலைதான்.” “என் வேலை மினக்கெட்டுப்போவானேன்.” மினக்கெட்டுப்போகும்.

“நீர் வரவேண்டும், நீர் வரவேண்டும், நீர் வரவேண்டும், நீர் வரவேண்டும்.” நான்காம் முறை, ஐந்தாம் முறை, ஆறாம் முறை “நீர் வரவேண்டும்.” அதற்கு நான் “நீர் சொல்லுகிற அந்தக் காரியங்களில் ஒன்றும் நடக்கவில்லை. அவைகள் உம்முடைய மனோராஜ்யமே ஒழிய வேறல்ல என்று சொல்லியனுப்பினேன். அந்த வேலை நடந்தேறாதபடிக்கு எங்கள் கைகள் சலித்துப்போம் என்று சொல்லி, அவர்கள் எல்லாரும் எங்களைப் பயமுறுத்தப் பார்த்தார்கள். ஆதலால் தேவனே நீர் என் கைகளைத் திடப்படுத்தியருளும்.”

நெகேமியாவில் ஓர் அருமையான அம்சம் உண்டு. அது என்னவென்றால், முதல் அதிகாரத்தில் ஒரு நீண்ட ஜெபம் உண்டு. அப்புறம் மீதி எல்லா இடங்களிலும் நிறைய ஜெபம் இருக்கிறது. உங்களுக்கு ஒரு வீட்டுப்பாடம் தருகிறேன். நெகேமியா அப்படி எத்தனை ஜெபங்கள் ஜெபித்தார் என்று நெகேமியாவின் புத்தகத்திலே எழுதப்பட்டிருக்கின்றது என்று பாருங்கள். எல்லா ஜெபங்களுமே பெரும்பாலும் ஒரு வாக்கியமாகத்தான் இருக்கும். “ஆண்டவரே, என் எதிரிகளை நினைத்தருளும்; ஆண்டவரே, எங்கள் கைகளைத் திடப்படுத்தியருளும்; ஆண்டவரே, நான் செய்த நன்மைகளை நினைவுகூரும்.” அவ்வளவுதான். வேலைசெய்து கொண்டிருக்கும்போதே அவன் ஜெபிக்கிறான். வேலை செய்யும்போது ஜெபிப்பது எப்படி? நெகேமியாவினிடத்திலிருந்து கற்றுக்கொள்ளுங்கள். அவ்வளவுதான் நெகேமியா ஜெபித்தான் என்று நான் நினைக்கிறேன். “பரிசுத்த பிதாவே, இந்த மாலை வேளைக்காக நன்றி செலுத்துகிறேன்,” என்று ஆரம்பித்து, “எங்கள் கைகளைத் திடப்படுத்தியருளும், துதி, கனம், மகிமை எல்லாம் உமக்கே செலுத்துகிறேன். இயேசுவின்மூலம் ஜெபம் கேளும் இரக்கம் நிறைந்த அருமை பிதாவே,” என்றெல்லாம் ஜெபிப்பதற்கு நேரம் கிடையாது. “தேவனே எங்கள் கைகளைப் பலப்படுத்தும்.” அவ்வளவுதான்.

  1. ஒன்றாவது பயமுறுத்துவது,
  2. இரண்டாவது திசைத்திருப்புவது,

3. மூன்றாவது சலித்துப்போகப்பண்ணுவது.

“இதெல்லாம் உங்களால் செய்ய முடியாது” என்று சலிப்புண்டாக்குவது.

4. நான்காவது பரியாசம்பண்ணுவது.

“ஓ நீங்கள் சாதித்து விடுவீர்களா?” என்ற கிண்டல், கேலி, பரிகாசம். “ஓரோனியனான சன்பல்லாத்தும், அம்மோனியனான தொபியா என்னும் ஊழியக்காரனும், அரபியனான கேஷேமும் இதைக் கேட்டபோது, எங்களைப் பரியாசம்பண்ணி, எங்களை நிந்தித்து: நீங்கள் செய்கிற இந்தக் காரியம் என்ன? நீங்கள் ராஜாவுக்கு விரோதமாகக் கலகம்பண்ணப்போகிறீர்களோ” என்றார்கள் (நெகேமியா 2:19).

நான் பத்தாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தபோது மாநிலத்தில் rank வாங்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை. படித்தபோது கற்பனையெல்லாம் பண்ணுவேன். அப்போது state rank வாங்குவது ஒரு பெரிய காரியம். தேர்வுகள் முடிந்தன. ஒரு பரீட்சை என் தரத்தின்படி நான் நன்றாக எழுதவில்லை. “சரி, வாழ்க்கையில் பல கற்பனைகள் இருக்கும். இதுவும் ஒரு கற்பனை,” என்று விட்டுவிட்டேன். என் நண்பர்கள் கேலிபண்ணத்தொடங்கினார்கள். “டேய், First rank வாங்கினியா? செய்தியாளர்களும், பத்திரிகைக்காரர்களும் உன் வீட்டுக்கு வந்தார்களா?” என்று கிண்டல்பண்ணத் தொடங்கினார்கள். கோடை விடுமுறையில் நணபர்களோடு விளையாடியபோது, ஒவ்வொரு நாளும் கேலிபண்ணினார்கள். “என்னடா செய்தித்தாளில் உன் பெயர் வந்ததா?” என்று கேலிசெய்தார்கள். state rank வாங்க வேண்டும் என்று நான் என் நண்பர்களிடம் எப்போதோ சொல்லியிருப்பேன். ஆனால், அவர்கள் கிண்டல்செய்வதை நிறுத்தவேயில்லை. ஒரு நாள் வந்தது; என் கனவு மெய்யானது; அவர்கள் கிண்டல் நின்றது. எனவே, பரிகாசம் நடக்கும். பிறர் பரிகாசம் செய்யக்கூடும் என்ற எண்ணம் எழுந்தால் நாம் ஒரு காரியத்தைச் செய்யத் துணியமாட்டோம்.

“நீங்கள் கட்டிவிடுவீர்களா? நகரத்திற்கு இவ்வளவு பெரிய சுவரை நீங்கள் கட்டிவிடுவீர்களா?” என்று ஒவ்வொருநாளும் பிறர் பரியாசம் செய்வார்கள். “நாங்கள் அலங்கத்தைக் கட்டுகிற செய்தியைச் சன்பல்லாத் கேட்டபோது, அவன் கோபித்து, எரிச்சலடைந்து, யூதரைச் சக்கந்தம்பண்ணி: அந்த அற்பமான யூதர் செய்கிறது என்ன, அவர்களுக்கு இடங்கொடுக்கப்படுமோ, பலியிடுவார்களோ, ஒருநாளிலே முடித்துப்போடுவார்களோ, சுட்டெரித்துப் போடப்பட்டு மண்மேடுகளான கற்களுக்கு உயிர் கொடுப்பார்களோ, என்று தன் சகோதரருக்கும் சமாரியாவின் சேனைக்கும் முன்பாகச் சொன்னான். அப்பொழுது அம்மோனியனாகிய தொபியா அவன் பக்கத்தில் நின்று: அவர்கள் கட்டினாலும் என்ன, ஒரு நரி ஏறிப்போனால் அவர்களுடைய கல்மதில் இடிந்துபோகும் என்றான்” (நெகேமியா 4:1-3).

நான்காம் அதிகாரம் ஒன்றுமுதல் மூன்றுவரையிலான இந்த வசனங்கள் மிகவும் நேர்மறையான விஷயங்களா? என்ன மாதிரியான எச்சரிப்பு என்று பாருங்கள். “சுட்டெரித்துப் போடப்பட்டு மண்மேடுகளான கற்களுக்கு உயிர் கொடுப்பார்களோ!” “இங்கு என்ன ஐயா இருக்கிறது? கல்லுகூடக் கிடையாது. இவர்கள் கட்டிவிடுவார்களா?” என்ற கேலி. தாவீது சவதரித்தான்; அவருடைய மகனாகிய சலொமோன் கட்டினான் என்பதுபோல் நெகேமியா ஆலயம் கட்டவில்லை. “ஒவ்வொரு கல் கல் ஆகத் தேடிக் கட்ட வேண்டும்” என்று தன் சகோதரருக்கும் சமாரியாவின் சேனைக்கும்முன்பாகச் சொன்னான். “கட்டவே முடியாது,” என்றார்கள். “சரி, அவர்கள் கட்டினாலும் என்ன, ஒரு நரி ஏறிப்போனால் அவர்களுடைய கல்மதில் இடிந்துபோகும்,” என்றார்கள்.

இப்போது நாம் இந்தத் திட்டத்தைத் தொடர்வோமா அல்லது கைவிட்டுவிடுவோமா? நம்மைச் சுற்றியிருப்பவர்கள், “சகோதரனே, நீங்கள் இதைச் செய்யுங்கள். ஆரம்பித்ததை விடவேண்டாம். ஆரம்பித்த படிப்பை விடவேண்டாம். தொடங்கிய வேலையை விடவேண்டாம்,” என்று உற்சாகப்படுத்தினால் நாம் ஒருவேளை நம் திட்டத்தைத் தொடர்வோம். நெகேமியாவின் சூழ்நிலையில் என்ன செய்வோம்? “எருசலேமின் அலங்கத்தைக் கட்டுகிற வேலை வளர்ந்தேறுகிறது என்றும், இடிக்கப்பட்ட இடங்கள் அடைபட்டு வருகிறது என்றும் சன்பல்லாத்தும், தொபியாவும், அரபியரும், அம்மோனியரும், அஸ்தோத்தியரும் கேட்டபோது, அவர்கள் மிகவும் எரிச்சலாகி, எருசலேமின்மேல் யுத்தம்பண்ண எல்லாரும் ஏகமாய் வரவும், வேலையைத் தடுக்கவும் கட்டுப்பாடு பண்ணினார்கள். ஆனாலும் நாங்கள் எங்கள் தேவனை நோக்கி ஜெபம்பண்ணி, அவர்கள் நிமித்தம் இரவும் பகலும் ஜாமங்காக்கிறவர்களை வைத்தோம்” (நெகேமியா 4:7-9). ### 5. ஐந்தாவது சண்டை. இதற்குமுன் 1. அச்சுறுத்தல், 2. திசைதிருப்புதல், 3. பரியாசம் பண்ணுதல், 4. சலித்துப்போகப்பண்ணுதல். 5. இப்போது சண்டை. அதே நான்காம் அதிகாரம் 10முதல் 14ஆம் வசனங்களவரை. “அப்பொழுது யூதா மனிதர்: சுமைகாரரின் பெலன் குறைந்துபோகிறது; மண்மேடு மிச்சமாயிருக்கிறது; நாங்கள் அலங்கத்தைக் கட்டக் கூடாது என்றார்கள். எங்கள் சத்துருக்களோவென்றால்: நாங்கள் அவர்கள் நடுவே வந்து, அவர்களைக் கொன்றுபோடுமட்டும், அவர்கள் அதை அறியாமலும் பாராமலும் இருக்கவேண்டும்; இவ்விதமாய் அந்த வேலையை ஓயப்பண்ணுவோம் என்றார்கள். அதை அவர்களண்டையிலே குடியிருக்கிற யூதரும், பல இடங்களிலுமிருந்து எங்களிடத்துக்கு வந்து, பத்துவிசை எங்களுக்குச் சொன்னார்கள். அப்பொழுது நான் அலங்கத்துக்குப் பின்னாக இருக்கிற பள்ளமான இடங்களிலும் மேடுகளிலும் பட்டயங்களையும், ஈட்டிகளையும், வில்லுகளையும் பிடித்திருக்கிற ஜனங்களைக் குடும்பங் குடும்பமாக நிறுத்தினேன். அதை நான் பார்த்து எழும்பி, பிரபுக்களையும் அதிகாரிகளையும் மற்ற ஜனங்களையும் நோக்கி: அவர்களுக்குப் பயப்படாதிருங்கள்; நீங்கள் மகத்துவமும் பயங்கரமுமான ஆண்டவரை நினைத்து, உங்கள் சகோதரருக்காகவும், உங்கள் குமாரருக்காகவும், உங்கள் குமாரத்திகளுக்காகவும், உங்கள் மனைவிகளுக்காகவும், உங்கள் வீடுகளுக்காகவும் யுத்தம்பண்ணுங்கள் என்றேன்.” ”இதற்குமேல் முடியாது. இதுவரை சமாளித்தோம். சுமை சுமக்கிறவர்களுடைய பெலன் குறைந்துபோகிறது. இன்னும் சுமப்பதற்கு நிறைய இருக்கிறது. போர் வரப்போகிறது. எங்களால் முடியாது,” என்று சொன்னார்கள்.

இன்னொரு பக்கம் எதிரிகள். “அதை அவர்கள் அண்டையிலே குடியிருக்கிற யூதரும், பல இடங்களிலுமிருந்து எங்களிடத்துக்கு வந்து, பத்துவிசை எங்களுக்குச் சொன்னார்கள்.” எத்தனை தடவை சொன்னார்கள்? பத்துத் தடவை. “சாகப் போகிறீர்கள், சாகப்போகிறீர்கள், உங்களால் வீட்டைக் கட்ட முடியாது, அலங்கத்தைக் கட்ட முடியாது, உங்கள் திட்டம் நிறைவேறாது,” என்று தொடர்ந்து சொல்கிறார்கள். நன்றாய்க் கவனிக்க வேண்டும். பேயினுடைய போர் தந்திரத்திற்குப் பெயர் கொரில்லா யுத்தம். அப்படியானால் என்ன பொருள் என்றால் ஒரு முறை, இரண்டு முறை, மூன்று முறை, நான்கு முறை, ஐந்து முறை, ஆறு முறை, ஏழு முறை, எட்டு முறை, ஒன்பது முறை, பத்து முறை என்று அவன் களைத்துப்போகப்பண்ணுவான், இற்றுப்போகப்பண்ணுவான், சோர்ந்துபோகச் செய்வான்.

ஆனால், தேவனுடைய மக்களாகிய நாம் பத்துத் தடவை முயன்றும் இந்த வருடத்தில் நம்மால் வேதத்தை ஒரு முறைகூட வாசித்து முடிக்க முடியவில்லை என்று வைத்துக்கொள்வோம். அடுத்த வருடமும் வேதாகமத்தை வாசிக்கத் திட்டம் போடலாமா அல்லது விட்டு விடலாமா? திட்டம் போடுவோம். தொடர்ந்து வாசிக்கலாம். “அப்பொழுது நான் அலங்கத்துக்குப் பின்னாக இருக்கிற பள்ளமான இடங்களிலும், மேடுகளிலும், பட்டயங்களையும், ஈட்டிகளையும், வில்லுகளையும் பிடித்திருக்கிற ஜனங்களைக் குடும்பங் குடும்பமாக நிறுதூதினேன். அதை நான் பார்த்து எழும்பி, பிரபுக்களையும், அதிகாரிகளையும், மற்ற ஜனங்களையும் நோக்கி அவர்களுக்குப் பயப்படாதிருங்கள் நீங்கள் மகத்துவமும், பயங்கரமுமான ஆண்டவரை நினைத்து, உங்கள் சகோதரருக்காகவும், உங்கள் குமாரருக்காகவும், உங்கள் குமாரத்திகளுக்காகவும், உங்கள் மனைவிகளுக்காகவும், உங்கள் வீடுகளுக்காகவும், யுத்தம் பண்ணுங்கள் என்றேன்.” 15முதல் 21வரை தொடர்ந்து வாசிப்போம். “எங்களுக்குச் செய்தி தெரியவந்ததென்றும், தேவன் அவர்கள் ஆலோசனையை அபத்தமாக்கினாரென்றும், எங்கள் பகைஞர் கேட்டபோது, நாங்கள் எல்லாரும் அவரவர் தங்கள் வேலையைச் செய்ய அலங்கத்துக்குத் திரும்பினோம். அன்றுமுதற்கொண்டு என் வேலைக்காரரில் பாதிப்பேர் வேலைசெய்தார்கள், பாதிப்பேர் ஈட்டிகளையும் பரிசைகளையும் வில்லுகளையும் கவசங்களையும் பிடித்து நின்றார்கள்; அதிகாரிகள் யூதா வம்சத்தார் எல்லாருக்கும் பின்னாக நின்றார்கள். அலங்கத்திலே கட்டுகிறவர்களும், சுமைசுமக்கிறவர்களும், சுமையேற்றுகிறவர்களும், அவரவர் ஒரு கையினாலே வேலைசெய்து, மறுகையினாலே ஆயுதம் தரித்திருந்தார்கள்.” ஒரு கையினாலே வேலை செய்து, மறுகையினாலே ஆயுதம் பிடித்திருந்தார்கள். நாம் வேலைக்கும் போகவேண்டும், தேவன் நமக்குக் கொடுத்த அந்தப் பணிவிடையையும் செய்ய வேண்டும். இந்தப் பொருளில்தான் இது சொல்ளப்பட்டிருக்கிறது என்று நான் சொல்லவில்லை. மதில்சுவரை கட்டுவதே பெரிய வேலை. அதில் extra வேலையும் செய்ய வேண்டும். ஆயுதமும் வைத்திருக்க வேண்டும்.

வாசித்து முடிப்போம். “கட்டுகிறவர்கள் அவரவர் தங்கள் பட்டயத்தைத் தங்கள் இடுப்பிலே கட்டிக்கொண்டவர்களாய் வேலைசெய்தார்கள்; எக்காளம் ஊதுகிறவன் என்னண்டையிலே நின்றான். நான் பிரபுக்களையும் அதிகாரிகளையும் மற்ற ஜனங்களையும் நோக்கி: வேலை பெரிதும் விஸ்தாரமுமாயிருக்கிறது; நாம் அலங்கத்தின்மேல் சிதறப்பட்டு ஒருவருக்கு ஒருவர் தூரமாயிருக்கிறோம். நீங்கள் எவ்விடத்திலே எக்காளச் சத்தத்தைக் கேட்கிறீர்களோ அவ்விடத்திலே வந்து, எங்களோடே கூடுங்கள்; நம்முடைய தேவன் நமக்காக யுத்தம்பண்ணுவார் என்றேன். இப்படியே நாங்கள் வேலைசெய்துகொண்டிருந்தோம்; அவர்களிலே பாதிப்பேர் கிழக்கு வெளுக்கும் நேரமுதல் நட்சத்திரங்கள் காணுமட்டும் ஈட்டிகளைப் பிடித்திருந்தார்கள்.” “நீங்கள் கூடுங்கள் நம் தேவன் நமக்காக யுத்தம் பண்ணுவார்.”

இவர்களெல்லாம் வீட்டுவேலை செய்கிற ஆட்களா, போர்வீரர்களா? இவர்கள் வீடுகட்டுகிறவர்களும் ஆட்கள் கிடையாது. போர்வீரர்களும் கிடையாது. இவர்கள் அங்கிருந்த சாதாரண பாமரர்கள். இந்தப் பாமரர்கள் இப்போது பொறியாளர்கள். இந்தப் பாமரர்கள் இப்போது தேவனுடைய பொறியாளர்கள். இவர்கள் எங்கிருந்துதான் வருவார்கள்? பாமரர்களிலிருந்துதான் வருவார்கள். தேவனுடைய போர்வீரர்கள் எங்கிருந்துதான் வருவார்கள்? எகிப்திலிருந்த ஒரு கூட்டம் அடிமைகளை தேவன் பெரிய போர்ப் படையாக மாற்றவில்லையா? அதனால் “எங்களால் முடியவே முடியாது சகோதரனே,” என்று சொல்லாதீர்கள். கண்டிப்பாக நம்மால் முடியாது. உங்களால் முடிந்தது, நீங்கள் கூடுங்கள். நம் தேவன் நமக்காக யுத்தம் செய்வார். *“இப்படியே நாங்கள் வேலைசெய்துகொண்டிருந்தோம். அவர்களில் பாதிப்பேர் கிழக்கு வெளுக்கும் நேரமுதல் நட்சத்திரங்கள் காணும்மட்டும் ஈட்டிகளைப் பிடித்திருந்தார்கள்.” **“அக்காலத்திலே நான் ஜனங்களைப் பார்த்து: இராமாறு நமக்குக் காவலுக்கும் பகல்மாறு வேலைக்கும் உதவ, அவரவர் தங்கள் வேலைக்காரரோடுங்கூட எருசலேமுக்குள்ளே இராத்தங்கக்கடவர்கள் என்று சொல்லி,”* எருசலேமை இப்போதுதான் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய வீடுகள் எருசலேமுக்கு வெளியே சில கிராமங்களில் இருந்தன. இப்போது யாரும் எங்கே போக வேண்டாம்? *“பகல் முழுவதும் வேலைசெய்வோம். இராத்திரி முழுவதும் மதில்களுக்குள்ளே, நாம் கட்டுகிற மதில்களுக்குள்ளே, நாம் படுத்துக்கொள்வோம்.” **“நானாகிலும், என் சகோதரராகிலும், என் வேலைக்காரராகிலும், என்னைப் பின்பற்றிக் காவல்காக்கிற சேவகராகிலும் எங்கள் வஸ்திரங்களைக் களைந்து போடாதிருந்தோம். அவரவருக்கு ஆயுதமும் தண்ணீரும் இருந்தது.” *24 மணிநேரம்,

எட்டாம் அதிகாரம் 9 முதல் 12 ஆம் வசனம். வாசித்து முடித்துவிடலாம். “ஜனங்கள் எல்லாரும் நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளைக் கேட்டபோது, அழுதபடியால், திர்ஷாதா என்னப்பட்ட நெகேமியாவும், வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனும், ஜனங்களுக்கு விளக்கிக்காட்டின லேவியரும் சகல ஜனங்களையும் நோக்கி: இந்த நாள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தமான நாள்; நீங்கள் துக்கப்படவும் அழவும் வேண்டாம் என்றார்கள். பின்னும் அவன் அவர்களை நோக்கி: நீங்கள் போய்க் கொழுமையானதைப் புசித்து, மதுரமானதைக் குடித்து, ஒன்றுமில்லாதவர்களுக்குப் பங்குகளை அனுப்புங்கள்; இந்த நாள் நம்முடைய ஆண்டவருக்குப் பரிசுத்தமான நாள், விசாரப்படவேண்டாம்; கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன் என்றான்.” இது உங்களுடைய மதில்சுவர் திட்டம் முடிந்த நாள். இந்த வசனம் உங்களுக்குத் தெரியும். சங்கீதம் 126:5, 6. “கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள். அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்; ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடே திரும்பிவருவான்.” “லேவியரும் ஜனங்களையெல்லாம் அமர்த்தி: அழாதிருங்கள், இந்த நாள் பரிசுத்தமான நாள், விசாரப்படவேண்டாம் என்றார்கள். அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் தங்களுக்கு அறிவிக்கப்பட்ட வார்த்தைகளை உணர்ந்துகொண்டபடியால், புசித்துக் குடிக்கவும், பங்குகளை அனுப்பவும், மிகுந்த சந்தோஷம் கொண்டாடவும் போனார்கள்.” 

நான் இன்று செய்தி ஒன்றும் கொடுக்கவில்லை. வேதத்தின் சில பகுதிகளை மட்டும் வாசித்தோம். இந்த வாரத்தில் நீங்கள் நெகேமியாவின் புத்தகத்தை வாசியுங்கள். அடுத்த வாரத்திலே நான் நெகேமியாவின் புத்தகத்தின் அடிப்படையிலே நாம் எல்லோரும் பகிர்ந்துக் கொள்ளலாம். Praise the Lord.