Transcribed from a message spoken in May 2015 in Chennai, CReNIEO
By Milton Rajendram
தேவனுடைய திட்டம் - அது கிறிஸ்துவின் முதன்மையைப்பற்றியது. தேவனுக்கு ஒரு நோக்கம் உண்டு. அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு தேவன் ஒரு திட்டம் தீட்டியுள்ளார். இந்த முழு வேதாகமமும் தேவனுடைய நோக்கத்தையும், தேவனுடைய திட்டத்தையும்பற்றியது. வேதாகமத்தின் முதல் புத்தகமாகிய ஆதியாகமம்தொடங்கி வேதாகமத்தின் கடைசிப் புத்தகமாகிய திருவெளிப்பாடுவரை ஒன்றேவொன்றைப்பற்றித்தான் பேசுகிறது. தேவன் தம்முடைய நித்திய நோக்கத்தையும், நித்தியத் திட்டத்தையும் எப்படி நிறைவேற்றுகிறார் என்பதைப்பற்றியே பேசுகிறது. தேவனுடைய இந்த நோக்கத்தையும், திட்டத்தையும் வேதம் நித்திய நோக்கம் என்றழைக்கிறது. “கிறிஸ்து இயேசுவுக்குள் தாம் கொண்டிருந்த அநாதி தீர்மானத்தின்படியே” (எபே. 3:9-11) என்று தேவனுடைய வார்த்தை கூறுகிறது. அநாதி தீர்மானம் என்றால் நித்திய நோக்கம். தேவனுடைய ஆதி நோக்கம் அதுதான். தேவனுடைய இறுதி நோக்கமும் அதுதான். இந்தப் பிரபஞ்சத்தை படைப்பதற்குமுன்பு தேவன் ஒரு நோக்கத்தை, குறிக்கோளை, உடையவராக இருந்தார். அந்த நோக்கத்தையும், குறிக்கோளையும் நிறைவேற்றுவதற்கே தேவன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். “காலங்கள் நிறைவேறும்போது விளங்கும் நியமத்தின்படி பரலோகத்திருக்கிறவைகளும், பூலோகத்திருக்கிறவைகளுமாகிய சகலமும் கிறிஸ்துவுக்குள்ளே கூட்டப்படவேண்டுமென்று, தமக்குள்ளே தீர்மானித்திருந்த தம்முடைய தயவுள்ள சித்தத்தின் இரகசியத்தை எங்களுக்கு அறிவித்தார். மேலும் கிறிஸ்துவின்மேல் முன்னே நம்பிக்கையாயிருந்த நாங்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாயிருக்கும்படிக்கு, தமது சித்தத்தின் ஆலோசனைக்குத்தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிற அவருடைய தீர்மானத்தின்படியே, நாங்கள் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரமாகும்படி குறிக்கப்பட்டோம்” (எபே. 1:10-12) என்றும் வாசிக்கிறோம். அவர் ஒரு நோக்கமும், ஒரு திட்டமும் வைத்திருக்கின்றார். தேவன் எல்லாவற்றையும் தம்முடைய ஆலோசனையின் சித்தத்திற்குத்தக்கதாக நடப்பிக்கிறார் என்று நாம் வாசிக்கிறோம். “He works all things according to the counsel of His will”.
ஆகவே, தேவனுக்கு ஒரு திட்டம் உண்டு. இந்தப் பழக்கப்பட்ட பிரபஞ்சத்திலே, வானிலே, பூமியிலே தேவன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். தம்முடைய நோக்கத்தையும், திட்டத்தையும் நிறைவேற்றுவதற்காக அவர் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். அவர் தம் நோக்கத்தையும், திட்டத்தையும் விட்டு இடதுபுறம், வலதுபுறம் சாய்வதில்லை. வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு எப்படித் தன்னுடைய இலக்கை நோக்கிப் பாய்கிறதோ, அதுபோல் தேவன் இடதுபுறம், வலதுபுறம் சாயாமல் தம் நித்திய நோக்கமும், நித்தியக் குறிக்கோளும், நித்தியத் திட்டமும் என்னவோ அதை நிறைவேற்றுவதற்காக நேர்கோட்டில் செல்கிறார்.
நாம் படைக்கப்பட்ட இந்தப் பிரபஞ்சத்தின் பகுதிகளாக இருக்கிறோம். எனவே, பிரபஞ்சத்தில் மட்டுமல்ல, தனிப்பட்ட மனிதன் என்கின்ற முறையில் நம்முடைய வாழ்க்கையில் இருக்கின்ற எல்லாவற்றையும்கூட, தேவன் ஒரேவொரு குறிக்கோளுக்காகவும், திட்டத்துக்காகவும் செய்கிறார். அவருடைய நித்தியக் குறிக்கோள், அவருடைய நித்தியத் திட்டம், நிறைவேற்றுவதற்காக மனிதனின் வாழ்க்கையிலே, தேவ மக்களுடைய வாழ்க்கையிலே, நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையிலே எவைகளை நிகழ்த்த வேண்டுமோ, எவைகளை நடப்பிக்க வேண்டுமோ, அவைகளைத் தேவன் நிகழ்த்துகிறார், நடத்துகிறார். இது நமக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கும். மிகச் சிறிய மனிதர்களாகிய நாம் தேவனுடைய நித்தியக் குறிக்கோளோடு தொடர்புடையவர்கள். என்னுடைய வாழ்க்கையில் நடைபெறுகிறவைகள், என்னுடைய வாழ்க்கையின் நிகழ்ச்சிகள் தேவனுடைய நித்தியக் குறிக்கோளோடும், தேவனுடைய நித்தியத் திட்டத்தோடும் தொடர்புடையவைகள். இன்னும் சொல்லப்போனால் தேவன் தம்முடைய நித்தியக் குறிக்கோளோடும், நித்தியத் திட்டத்தோடும் நம்மை இணைத்துக்கொள்வதற்காக நம்முடைய வாழ்க்கையிலே இடைப்படுகிறார்; நிகழ்ச்சிகளையும், நபர்களையும், காரியங்களையும் நம்முடைய வாழ்க்கையிலே நிகழ்த்துகிறார். நம்முடைய வாழ்க்கையிலே நடைபெறுகிற எவையும் விபத்துக்கள் அல்ல. ஏதோ அசம்பாவிதமாக இவைகளெல்லாம் நம்முடைய வாழ்க்கையிலே நடந்துவிட்டன என்பதல்ல. தேவன் தம்முடைய குறிக்கோளின்படியும், திட்டத்தின்படியும் நடத்துகிறார்.
தேவனுடைய நித்தியக் குறிக்கோள் என்ன? What is God’s eternal intention? What is God’s eternal purpose? What is God’s eternal plan? நோக்கம் அல்லது குறிக்கோள் என்பது ஒன்று. அந்த நோக்கத்தை அல்லது குறிக்கோளைப் பெறுவதற்காக, அடைவதற்காக, நிறைவேற்றுவதற்காக தேவனுடைய விவரமான ஏற்பாடுதான் தேவனுடைய திட்டம். தேவனுடைய இந்தத் திட்டம் என்னவென்று நாம் வேதத்தின் பல பகுதிகளிலே வாசிக்கிறோம். இரண்டு பகுதிகள் மிக முக்கியமானவைகள். அதை நான் வாசிக்க விரும்புகிறேன். “அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும் சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர். ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது. பரலோகத்திலுள்ளவைகளும், பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும், காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும் சகலமும் அவரைக்கொண்டும், அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது. அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர். எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது. அவரே சபையாகிய சரீரத்திற்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர். அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர்மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று” (கொலோ. 1:15-20). அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர். அவருக்குள் எல்லாம் நிலைநிற்கிறது. அவரே சபையாகிய சரீரத்துக்குத் தலையானவர். எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும் மரித்தோலிருந்தெழுந்த முதற்பேறுமானவர். எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி… அதுதான் இந்தச் செய்தியினுடைய தலைப்பு. அவர் எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, எல்லாவற்றிலும் அவருக்கு முதன்மை உண்டாயிருக்கும்படி That He may have the first place and preeminence in all things.
இதோடு தொடர்புடைய இன்னொரு வசனம்…“காலங்கள் நிறைவேறும்போது விளங்கும் நியமத்தின்படி பரலோகத்திருக்கிறவைகளும், பூலோகத்திருக்கிறவைகளுமாகிய சகலமும் கிறிஸ்துவுக்குள்ளே கூட்டப்பட வேண்டுமென்று தமக்குள்ளே தீர்மானித்திருந்த தம்முடைய தயவுள்ள சித்தத்தின் இரகசியத்தை எங்களுக்கு அறிவித்தார்” (எபே. 1:9-10). இந்த இரண்டு வசனங்களை நீங்கள் பொறுமையோடு வாசித்துப்பார்க்க வேண்டும். இந்த இரண்டு வசனங்களும் ஒன்றுக்கொன்று விளக்கம்போல இருக்கும்.
“பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளும் சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது” என்று கொலோசெயரில் வாசிக்கிறோம். காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமாகிய சகல வஸ்துக்களும்… இங்கே பூலோகத்திருக்கிறவைகளுமாகிய சகலமும்… தேவனுடைய நோக்கம் இந்த முழுப் பிரபஞ்சத்திலும், குறிப்பாக இந்தப் படைப்பின் மையமாகிய மனிதனில்…
இந்தப் படைப்பிலே தலைசிறந்த படைப்பு மனிதன். பரலோகத்திலுள்ளவைகளும், பூலோகத்திலுள்ளவைகளாகிய எல்லா வஸ்துக்களும், சகலமும், கிறிஸ்துவுக்குள்ளே கூட்டிச்சேர்க்கப்பட வேண்டும் அல்லது கிறிஸ்துவைத் தலையாகக்கொண்டு; கூட்டிச்சேர்க்கப்பட வேண்டும் என்பது தேவனுடைய திட்டம். இது தத்துவம்போலத் தோன்றலாம். இது தத்துவம் அல்ல. இது உங்கள் நடைமுறை வாழ்க்கையோடு மிகவும் பின்னிப்பிணைந்த ஒன்று என்பதை நான் உங்களுக்கு விளக்க முயற்சிசெய்கிறேன்.
இந்த முழுப் பிரபஞ்சமும், காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமாகிய எல்லாப் பொருட்களும், கிறிஸ்துவோடு கூட்டிச்சேர்க்கப்பட வேண்டும், கிறிஸ்துவைத் தலையாகக்கொண்டு கூட்டிச்சேர்க்கப்பட வேண்டும். ஆகவே, இந்த யுகத்தின் இறுதியிலே தேவன் ஒன்றே ஒன்றைத்தான் காண விரும்புகிறார். அது என்னவென்றால் கிறிஸ்துவை வெளியாக்குகிற ஒரு பிரபஞ்சம். எல்லாவற்றையும் கிறிஸ்துவோடு கூட்டிச்சேர்க்க முடியாது. எவைகள் கிறிஸ்துவால் நிரப்பப்பட்டிருக்கிறதோ அவைகளை மட்டுமே கிறிஸ்துவோடு கூட்டிச்சேர்க்க முடியும். இந்த ஒரு கோட்பாட்டை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும்.
தேவன் இந்த உலகத்திலே எல்லாப் பிராணிகளையும், தாவரங்களையும் சிருஷ்டித்தபிறகு மனிதனுக்கு ஏற்ற துணை காணப்படவில்லை என்று கண்டார். மனிதனோடு கூட்டிச்சேர்க்கப்படுவது இன்னொரு மனித உயிராகத்தான் இருக்க முடியும். அதேபோல கிறிஸ்துவோடு கூட்டிச்சேர்க்கப்பட வேண்டுமென்றால் கிறிஸ்துவால் நிரப்பப்பட்ட அல்லது உயிரிலும், தன்மையிலும், குணத்திலும், கட்டமைப்பிலும் கிறிஸ்துவால் நிரப்பப்பட்ட பொருட்கள்தான் கிறிஸ்துவோடு கூட்டிச்சேர்க்கப்பட முடியும். எளிமையாய்ச் சொல்வதானால் தேவனுடைய நித்தியக் குறிக்கோளும், நித்தியத் திட்டமும் இதுதான். காலங்கள் நிறைவேறும்போது அல்லது இந்த யுகங்கள் நிறைவேறும்போது, யுகங்கள் முடிவடையும்போது, இந்தப் பிரபஞ்சம் எங்கும் தேவன் தம்முடைய குமாரனாகிய கிறிஸ்துவையே காண விரும்புகிறார் அல்லது இந்தப் பிரபஞ்சம் முழுவதும் கிறிஸ்துவால் நிரம்பியிருக்க வேண்டுமென்று தேவன் விரும்புகிறார்.
என்னமோ பிரபஞ்சம் ஒரு பாண்டம் அல்லது ஒரு பாத்திரம்போலவும் அவர் magicalஆக தம்முடைய குமாரனைவைத்து இந்தப் பாத்திரத்தை நிரப்பிவிடுவார்போலவும் நீங்கள் கற்பனை செய்ய வேண்டாம். “இந்தப் பிரபஞ்சம், மனிதர்கள், ஒரு பாத்திரத்தைப்போல இருக்கிறார்கள்; எப்படி ஒரு பாட்டிலிலே தண்ணீரைவைத்து நிரப்புகிறோமோ, அதுபோல இந்தப் பாத்திரத்திலே அவர் கண்ணிமைப் பொழுதில் அவருடைய குமாரனாகிய கிறிஸ்துவைக்கொண்டு நிரப்பிவிடுவார். ஆகவே, தேவன் இந்தப் பாட்டில்களைப் பார்க்கமாட்டார். இந்த பாட்டில்களுக்குள் இருக்கிற தண்ணீரைத்தான் பார்ப்பார். குமாரனாகிய இயேசுகிறிஸ்துவைத்தான் பார்ப்பார்,” என்பதுபோல நீங்கள் கற்பனை செய்துகொள்ளக்கூடாது. அப்படியல்ல. இது ஒரு உயிருள்ள படைப்பு. இந்தப் பிரபஞ்சத்திலே மனிதர்கள் உண்டு. அவர்கள் வாழ்வார்கள். அவர்கள் ஒருவரோடொருவர் இடைப்படுவார்கள். ஒருவரோடொருவர் கொடுக்கல் வாங்கல் செய்வார்கள். ஒருவரோடொருவர் போக்குவரத்து இருக்கும். இவை எல்லாவற்றிலும் படைக்கப்பட்ட மனிதன் வெளிப்படக் கூடாது. மாறாக, தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து வெளிப்பட வேண்டும் என்பது தேவனுடைய குறிக்கோள்.
ஒருசில வசனங்களை நான் மீண்டும் வாசிக்க விரும்புகிறேன். இவைகள் வெளிப்படுத்தினவிசேஷத்தில் உள்ளன. என்னுடைய எண்ணத்தை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். காலங்கள் நிறைவேறும்போது தேவன் அவருடைய குமாரனை வெளிப்படுத்தும்விதமாக எதை உற்பத்தி செய்கிறார் அல்லது எதை உருவாக்குகிறார், எதைக் கட்டியமைக்கிறார் என்பதைப் பரிசுத்த வேதாகமம் புதிய எருசலேம் என்ற நகரம் என்று சொல்கிறது. “நீ இங்கே வா. ஆட்டுக்குட்டியானவருடைய மனைவியாகிய மணவாட்டியை உனக்குக் காண்பிக்கிறேன் என்று சொல்லி பெரிதும், உயரமுமான ஒரு பர்வதத்தின்மேல் என்னை ஆவியில் கொண்டுபோய் தேவனுடைய மகிமையை அடைந்த எருசலேமாகிய பரிசுத்த நகரம் பரலோகத்தைவிட்டு தேவனிடத்திலிருந்து இறங்கிவருவதை எனக்குக் காண்பித்தான். அதின் பிரகாசம் மிகவும் விலையுயர்ந்த இரத்தினக்கல்லைப்போலவும், பளிங்கினொளியுள்ள வச்சிரக்கல்லைப்போலவும் இருந்தது” (வெளி. 21:9-11). இவையெல்லாம் குறியீடுகள். ஏதோ ஒரு நாளிலே ஒரு தொங்கும் நகரம் வானிலிருந்து இறங்கிவருவதுபோல் நீங்கள் கற்பனை செய்துகொள்ள வேண்டாம். தேவன் அவருடைய குமாரனை வெளியாக்குகின்ற ஒரு கூட்டம் மக்களை உருவாக்குகின்றார். அது பரத்திலிருந்து இறங்கி வருகிறது என்பதின் பொருள் என்னவென்றால் கிறிஸ்துவை வெளியாக்குகிற இந்த மக்கள் கூட்டத்திலே பூமிக்குரிய சுவடுகூட இல்லை. முற்றுமுடிய அது பரத்திற்குரியது. அதனுடைய ஒளி இரத்தினக்கல்லைப்போலவும் பளிங்கினொளியுள்ள வச்சிரக்கல்லைப்போலவும் இருந்தது.
நான் இறையியல் சொல்ல முற்படவில்லை. திருவெளிப்பாட்டின் முதலிலேயே தேவன் கடைசி நாட்களில் நடைபெறுபவற்றைக் குறியீடுகள்மூலமாக (signs) தம் பணியாளனாகிய யோவானுக்கு வலியுறுத்தினார் என்று வாசிக்கிறோம். திருவெளிப்பாடு கடினமான புத்தகம். தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்று சொல்வதுபோல “மனம்போல, இந்தக் குறியீட்டிற்கு அந்த அர்த்தம், அந்தக் குறியீட்டிற்கு இந்த அர்த்தம்,” என்று சொல்கின்ற போக்கு மக்கள் மத்தியிலே மலிந்து காணப்படுகின்றது. ஆகவே மிகவும் கவனத்தோடும், எச்சரிக்கையோடும், பயபக்தியோடும் நாம் பேசுகிற எல்லா விளக்கங்களைக்குறித்தும் தேவன் நம்மை நியாயந்தீர்ப்பார் என்கின்ற நடுக்கத்தோடு நாம் இவைகளைத் தொட வேண்டும். உறுதியாக எது இருக்கிறதோ அதை மட்டுமே நாம் தேவனுடைய மக்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும். வச்சிரக்கல் என்றால் jasper, அதன் நிறம் பச்சை. இதற்குப் பெரிய theology படிக்க வேண்டாம். இதற்கு உலக ஞானம் இருந்தால் போதும். எனவே, கிறிஸ்துவை வெளியாக்குகின்ற இந்தப் புதிய எருசலேமினுடைய நிறம் பச்சையாக இருந்தது அல்லது பசுமையாக இருந்தது என்று பொருள். பசுமையாக இருக்கிறதென்றால் அது மிகவும் உயிர்த்துடிப்புள்ளதாக இருக்கின்றது, ஜீவன் நிறைந்ததாக இருக்கின்றது என்று பொருள்.
“பரலோகத்தில் திறக்கப்பட்டிருந்த ஒரு வாசலைக் கண்டேன்…உடனே ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது இதோ, வானத்தில் ஒரு சிங்காசனம் வைக்கப்பட்டிருந்தது. அந்தச் சிங்காசனத்தின்மேல் ஒருவர் வீற்றிருந்தார். வீற்றிருந்தவர், பார்வைக்கு வச்சிரக்கல்லுக்கும் பதுமராகத்துக்கும் ஒப்பாயிருந்ததார்” (வெளி. 4:1-3).
நான் அடிக்கோடிட்டுக் காட்ட விரும்புகிற எண்ணம் இதுதான். தேவன் வச்சிரக்கல்லுக்கு ஒப்பாக இருந்தார். புதிய எருசலேமும் வச்சிரக்கல்லுக்கு ஒப்பாக இருக்கிறது. இதன் பொருள் என்ன? தேவனுடைய குணத்தை, அவருடைய தன்மையை, புதிய எருசலேமாகிய நகரம் வெளிப்படுத்துகிறது என்கிற எண்ணத்தை நாம் இங்கே பார்க்கிறோம். இது மிகப் பெரிய நோக்கம். மனிதர்களாகிய நாம் கிறிஸ்துவை வெளிப்படுத்துகின்றவர்களாக, கிறிஸ்துவை வெளியாக்குகின்றவர்களாக, மாற வேண்டும் என்பது தேவனுடைய நோக்கமும், தேவனுடைய திட்டமுமாய் இருக்கிறது.
இதை முதன்முதலாக நான் கேட்டபோது மிகவும் அதிர்ச்சியடைந்தேன். “இப்படிப்பட்ட மிக உயர்ந்த நோக்கத்தையும், திட்டத்தையும் என்னால் எட்ட முடியாது,” என்று நான் நினைத்தேன். “நாம் எல்லாரும் ஒருநாள் கிறிஸ்துவை முற்றுமுடிய வெளியாக்குகின்ற, வெளிக்காண்பிக்கின்ற, மனிதர்களாய் மாறுவோம்,” என்று யாராவது உங்களிடத்திலே ஒரு திட்டத்தைக் கொண்டுவந்தால் நீங்கள் எல்லாரும் “அல்லேலூயா!” என்று ஆர்ப்பரிப்பீர்களா அல்லது “நம்முடைய வாழ்க்கையிலிருக்கிற மகிழ்ச்சியையெல்லாம் இது கெடுத்துவிடும் போலிருக்கிறதே!” என்று நினைப்பீர்களா? “என்ன பண்ணுவது பிரதர், நாம் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டாயிற்றே! அதனால் அல்லேலூயா என்றுதான் சொல்ல வேண்டும்,” என்று வலுக்கட்டாயத்தின்பேரில் நீங்கள் சொல்ல வேண்டாம்.
நம் எல்லாரையும் கிறிஸ்துவை வெளியாக்குகின்ற, கிறிஸ்துவை வெளிக்காண்பிக்கின்ற நபர்களாய் மாற்ற வேண்டும் என்பது தேவனுடைய நோக்கமும் திட்டமுமாய் இருக்கிறது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! “இது ரொம்ப உயர்ந்த நோக்கம் பிரதர். ஆறு அடி அல்லது எட்டு அடி உயரத்தைத் தொடு என்றால் என்னால் தொட முடியும். கொஞ்சம் பயிற்சி செய்தால் இந்தக் கூரையைக்கூட ஒருவேளை நான் தொடலாம். ஆனால், இரண்டாவது மாடியினுடைய கூரையை என்னால் எட்டித் தொட முடியுமா? தொட முடியாது,” என்று நீங்கள் நினைத்தால், “தேவன் உங்களுக்காக ஒரு நோக்கமும், திட்டமும் வைத்திருக்கிறார். நீங்கள் எல்லாரும் இரண்டாவது மாடியின் கூரையைத் தொட வேண்டும் என்பதே தேவனுடைய நோக்கமும், திட்டமும்,” என்று சொன்னால் நீங்கள் யாரும் பரவசப்பட்டு “அல்லேலூயா” என்று சொல்லமாட்டீர்கள். “இது நடக்கக்கூடிய காரியம் இல்லை. நடக்கக்கூடியது எதையாவது சொல்லுங்கள்,” என்று நீங்கள் சொல்லலாம். “கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். உங்களுக்கு நல்ல வேலையைத் தருவார். நல்ல படிப்பைப் தருவார். நல்ல சுகத்தைத் தருவார்,” என்பதுதான் நடக்கக்கூடிய காரியம்போலத் தோன்றலாம். ஏறக்குறைய கையில் ஒரு குடுகுடுப்பை இல்லாமல் என்னவெல்லாம் சொல்ல முடியுமோ அவை எல்லாவற்றையும் சொல்லி “நல்ல காலம் பிறக்கிறது,” என்பதை மட்டும்தான் இன்று மக்கள் சொல்வது இல்லை. “நல்ல காலம் பிறக்கிறது,” என்று சொன்னால் இவன் குடுகுடுப்பைக்காரன் என்று மக்கள் கண்டுபிடித்துவார்கள். அதற்குச் சமானமாக ஒரு கிறிஸ்தவன் எப்படிப்பட்ட பதங்களை, சொற்களைப் பயன்படுத்திச் சொல்ல முடியுமோ அந்தப் பதங்களைப் பயன்படுத்தி “கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்,” என்று சொல்வார்கள். இது நடக்கக்கூடிய காரியம் மட்டுமல்ல. நடக்க வேண்டுமென்று நாம் விரும்புகின்ற காரியம்.
நீங்கள் கிறிஸ்துவை வெளியாக்குகிறவர்களாகவும், வெளிக்காண்பிக்கிறவர்களாகவும் இருப்பது நடக்க முடியாத காரியம்போல் தோன்றலாம். நற்செய்தி என்னவென்றால் தேவனுடைய நோக்கத்தையும், திட்டத்தையும் நிறைவேற்றுவது நம்மைப் பொறுத்ததல்ல, அது நம்மைச் சார்ந்தது அல்ல; அது தேவனைச் சார்ந்தது. இந்த நோக்கத்தையும், திட்டத்தையும் தேவன் தீட்டியிருப்பதால் இந்த நோக்கத்தையும், திட்டத்தையும் நிறைவேற்றுகிற பொறுப்பை தேவனே எடுத்திருக்கிறார். அந்த இலக்கை எட்ட வைப்பது தேவனுடைய பணி. “நான் என்னதான் முரண்டு பிடித்தாலும்கூட தேவன் செய்துவிடுவாரா?” என்று சிறுபிள்ளைத்தனமாய் கேள்வி கேட்க வேண்டாம். “Can God do all things? Does He create a stone which He cannot move Himself?” என்பதுபோன்ற அதிபுத்திசாலித்தனமான கேள்விகளைக் கேட்க வேண்டாம். அது தேவனுடைய பொறுப்பு. அது தேவனுடைய வாக்குறுதி. அவர் அதை நிறைவேற்றுவார். இது நற்செய்தி.
நம்மைவைத்து தேவன் இப்படிப்பட்ட ஒரு நோக்கத்தையும், திட்டத்தையும் தீட்டவில்லை. நம்மை நம்பி இப்படி ஒரு நோக்கத்தையும், திட்டத்தையும் தீட்ட முடியுமா? “தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர். நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்,” (யோபு 42:2) என்று யோபு சொல்கிறார்.
தேவனுடைய நோக்கம் கிறிஸ்துவை முதன்மையாகக் கொண்டது என்பதை விளக்குவதற்காக நான் உங்களுக்கு மூன்று குறிப்புகளைச் சொல்கிறேன். “எப்போதுமே உங்களுக்கு இந்த மூன்று குறிப்புகள்தான் ரொம்பப் பிடிக்குமா?” என்று நீங்கள் நினைக்கலாம். இரண்டு குறிப்புகள் மிகக் குறைவானது. நான்கு குறிப்புகள் மிக அதிகமானது. அதனால் நான் மூன்று குறிப்புகளை எடுத்துக் கொண்டேன்.
முதலாவது, கிறிஸ்து வெளிப்படுத்தப்படுவதும், கிறிஸ்துவை நாம் அறிவதும். இரண்டாவது, கிறிஸ்து நம்மில் வாழ்வதும், நம்மில் உருவாக்கப்படுவதும். மூன்றாவது, கிறிஸ்துவை நாம் வெளியாக்குவதும், கிறிஸ்துவை நாம் வழங்குவதும். இந்தக் குறிப்புளைச் சொல்வதிலே ஒரு அநுகூலம் என்னவென்றால் மற்ற எல்லாவற்றையும் மறந்துவிட்டாலும், குறைந்தபட்சம் இந்த மூன்று குறிப்புகளாவது நம் மனதிலே தங்கியிருக்கும்.
தேவனுடைய நோக்கம் கிறிஸ்துவைக்கொண்டு இந்தப் பிரபஞ்சத்தை நிரப்பி, குறிப்பாக மனிதர்களை நிரப்பி, கிறிஸ்துவை மட்டுமே வெளிக்காண்பிப்பது தேவனுடைய நோக்கம். எந்தெந்தக் காரியங்களில் நாம் கிறிஸ்துவுக்கு முதன்மை இடம் கொடுக்கும்போது தேவன் தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றுகிறார் என்பதை இந்த மூன்று குறிப்புகள் சொல்கின்றன.
நாம் கிறிஸ்துவை வெளியாக்க வேண்டுமென்பது தேவனுடைய இறுதி இலக்கு. கிறிஸ்துவை வெளியாக்குவது. To express Christ, to manifest Christ is the ultimate intention of God. நீங்கள் கிறிஸ்தவர்களாக இருந்து, கிறிஸ்தவ ஐக்கியங்களிலே கேள்விப்பட்டீர்களோ இல்லையோ என்று எனக்குத் தெரியாது அல்லது மனிதர்களாக இருந்து, மனித தத்துவஞானிகளிடம் கேள்விப்பட்டிருக்கிறீர்களோ இல்லையோ என்று எனக்கு தெரியாது. ஆனால் தேவனுடைய வார்த்தை தெள்ளத் தெளிவாக விளம்புகிறது. கிறிஸ்துவை மனிதர்கள்மூலமாய் வெளியாக்குவதே தேவனுடைய இறுதிக் குறிக்கோள். God’s ultimate intention is to express, manifest, Christ through the Body of Christ.
இது எங்கே தொடங்குகிறது என்றால் முதலாவது நாம் கிறிஸ்துவை அறிய வேண்டும் அல்லது கிறிஸ்துவைக் காண வேண்டும். நாம் அறியாத, நாம் காணாத, கிறிஸ்துவை ஒருநாளும் வெளியாக்க மாட்டோம். முதலாவது நாம் கிறிஸ்துவைக் காண வேண்டும், கிறிஸ்துவை அறிய வேண்டும். இரண்டாவது, கிறிஸ்துவைக் கண்டவுடன் அல்லது அறிந்தவுடன் கிறிஸ்துவை வெளியாக்குவது இல்லை; நாம் அறிகின்ற அல்லது காண்கின்ற கிறிஸ்துவால் வாழ வேண்டும். நாம் அறிந்த, நாம் கண்ட, கிறிஸ்துவால் நாம் வாழும்போது கிறிஸ்து நமக்குள் உருவாக்கப்படுவார். நாம் வாழாத, நமக்குள் உருவாக்கப்படாத, கிறிஸ்துவை நாம் வெளியாக்க முடியாது; மற்றவர்களுக்கு நாம் வழங்கவும் முடியாது.
முதலாவது நாம் கிறிஸ்துவைக் காண வேண்டும் அல்லது அறிய வேண்டும். கிறிஸ்துவை அறிவது நம்முடைய முயற்சியினால் இல்லை. தேவன் கிறிஸ்துவை நமக்கு வெளிப்படுத்துவதினால்தான் கிறிஸ்துவை அறிய முடியுமேதவிர நம்முடைய படிப்பறிவினாலோ அல்லது நம்முடைய கல்வி அறிவினாலோ நாம் கிறிஸ்துவைக் கண்டுபிடிப்பதில்லை.
கலாத்தியர் 1:16; மத்தேயு 11:27, 28; 1 கொரிந்தியர் 1:18 ஆகிய வசனங்களைக் குறித்துக்கொள்ளுங்கள்.
ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து ஜெபிக்கின்றார். “பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும், கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியினால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆம் பிதாவே, இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது” (மத்.11:25, 26). இது தங்களை ஞானிகள் என்று கருதுகிற மனிதர்களுக்கு ரொம்ப humiliationஆக இருக்கும். “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது” (1 கொரி. 1:18). தொடர்ந்து நீங்கள் அந்த அதிகாரம் முழுவதையும் வாசியுங்கள். அந்தப் பகுதியினுடைய கருத்து என்னவென்றால் தேவன் ஞானிகளைத் தெரிந்துகொள்ளவில்லை. உலகத்திலே முட்டாள்களாய் எண்ணப்பட்டவர்களைத் தெரிந்துகொண்டார்; பலவான்களைத் தெரிந்துகொள்ளவில்லை, உலகத்திலே பலவீனமாய்க் கருதப்படுபவைகளைத் தெரிந்துகொண்டார்; உலகத்திலே உள்ளவைகளையும், பிரபுக்களையும் தெரிந்துகொள்ளவில்லை, இல்லாதவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும் தேவன் தெரிந்துகொண்டார். ஆனால், “யூதர்கள் அடையாளத்தைத் தேடுகிறார்கள். கிரேக்கர் ஞானத்தைத் தேடுகிறார்கள். நாங்களோ சிலுவையிலறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம். அவர் யூதருக்கு இடறலாயும், கிரேக்கருக்குப் பைத்தியமாயும் இருக்கிறார்” (1 கொரி. 1:22, 23).
இந்தப் பகுதியை நீங்கள் வாசித்துப் பார்க்க வேண்டும். இதை எழுதினவன் ஒரு பைத்தியக்காரன் அல்ல. அவன் ஒரு யூதன். கிரேக்கக் கலாச்சாரத்திலே ஊறினவன். அவனுக்குக் கிரேக்கக் கலாச்சாரமும், கிரேக்கத் தத்துவமும் தெரியும், யூதப் பாரம்பரியமும் அவனுக்குத் தெரியும். தொடர்ந்து, “இயேசு கிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன்” (1 கொரி. 2:2) என்றும், “ஜென்ம சுபாவமான மனிதனோ (அல்லது இயற்கையான மனிதனோ soulical man or intellectual man who is very highly appreciative of the psychological faculties of man) தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான். அவனால் அவைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் அவைகள் அவனுக்குப் பைத்தியமாய்த் தோன்றும்” (1 கொரி. 2:14) என்று சொல்கிறார். நீங்கள் 1 கொரிந்தியர் 1, 2ஆம் அதிகாரங்களைப் பல தடவை வாசியுங்கள். தேவன் உங்களுக்கு வெளிச்சத்தைத் தருவார்.
தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவை இந்த உலகம் தன்னுடைய ஞானத்தால் கண்டுபிடிக்கவே முடியாது. அவரை வெளிப்பாட்டின்மூலமாக மட்டுமே அறிய முடியும். மனிதனுடைய ஆத்துமாவுக்குரிய புலன்களால் கிறிஸ்துவை அறிய முடியாது. ஆத்துமாவைவிட ஆழமாக உள்ளான ஒரு பகுதி உண்டு. அது மனிதனுடைய ஆவி. எப்படி நம்முடைய ஆத்துமாவுக்குரிய புலன்களால் நாம் காரியங்களைப் புரிந்துகொள்ள முடியுமோ அல்லது அறிய முடியுமோ அதுபோல ஆவியினாலும் நாம் காரியங்களை அறிந்துகொள்ள முடியும். ஆவியினால் மட்டுமே கிறிஸ்துவை நாம் அறிந்துகொள்ள முடியும் அல்லது கிறிஸ்துவை நாம் காண முடியும். ஆகவே, வெளிப்பாடு என்பது மூடநம்பிக்கையோ அல்லது கண்மூடித்தனமோ அல்லது நம்முடைய கற்பனையோ அல்ல. மனிதர்களுடைய மனம் ரொம்ப உண்மையானது என்றால் ஆவி என்பதும் மிகவும் உண்மையானது.
எனவே, அப்போஸ்தலனாகிய பவுல் “என் தாயின் வயிற்றிலிருந்ததுமுதல் என்னை வேறுபிரித்த தேவன் அவருடைய குமாரனைப் புறவினத்தாரிடத்தில் நான் நற்செய்தியாய் அறிவிக்கிறதற்கு அவரை எனக்குள் வெளிப்படுத்தப் பிரியமாயிருந்தது,” (கலா. 1:14) என்று எழுதுகிறார். இது மிக முக்கியமான வசனம். பவுலைப் பொறுத்தவரை இயேசுகிறிஸ்துதான் நற்செய்தி. இயேசுகிறிஸ்து தருகின்ற ஏதோவொன்றல்ல நற்செய்தி. மாறாக இயேசுகிறிஸ்துவே நற்செய்தி. “தம் குமாரனைப் புறவினத்தாரிடத்தில் நற்செய்தியாய் அறிவிக்க வேண்டும் என்பதற்காகத் தம்முடைய குமாரனை எனக்குள் வெளிப்படுத்துவது தேவனுக்குப் பிரியமாயிருந்தது,” என்று பவுல் சொல்லுகிறார். தேவன் ஒரேவொரு இடத்தில்தான் தம்முடைய குமாரனாகிய கிறிஸ்துவை வெளிப்படுத்த முடியும். அது ஒரு மனிதனில், மனிதனுக்குள்; அவனுடைய மிக உள்ளான மிக ஆழ்ந்த பகுதியில், மனிதனுடைய ஆவியில், மட்டுமே அவருடைய குமாரனை வெளிப்படுத்த முடியும்.
அப்போஸ்தலனாகிய பவுல் தமஸ்குவுக்குப் போகின்ற வழியிலே புறம்பாக சூரிய வெளிச்சத்தைவிட அதிக வெளிச்சமாக இயேசுகிறிஸ்துவைக் கண்டார். அது உண்மைதான். “சவுலே, சவுலே முள்ளில் உதைப்பது உனக்குக் கடினமாமே,” என்று இயேசுகிறிஸ்து சொன்னதைக் கேட்டார். ஆனால், சவுலைப் பொறுத்தவரை புறம்பாக நடந்த எதுவும் பெரிதல்ல. மாறாக, உள்ளாக தன்னுடைய ஆவியிலே தேவன் தம்முடைய குமாரனை வெளிப்படுத்தினார் என்பதையே அவர் பெரிய காரியமாகக் கருதுகிறார்.
இந்த அறையை விட்டு வெளியே போவதற்கு ஒரு கதவு இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். Ph. D. படித்த கண் பார்வையில்லாத ஒரு மனிதன் இருக்கிறான். பள்ளிக்கூடத்திற்கே போகாத பார்வையுள்ள ஒரு மூன்று வயதுக் குழந்தையும் இருக்கிறது. இந்த அறையை விட்டு வெளியே போவது எப்படி அல்லது உள்ளே வருவது எப்படி என்பதை இந்த இருவரில் யார் இலகுவாய்க் கண்டுபிடிப் பார்கள்? Ph. D. படித்த, கண்பார்வை இல்லாத அறிவாளியா அல்லது படிப்பறிவே இல்லாத, பார்வையுள்ள மூன்று வயதுக் குழந்தையா? குழந்தையா அல்லது அறிவாளியா? குழந்தைதான். ஏனென்றால் அந்தக் குழந்தைக்குப் பார்வை இருக்கிறது. கதவு எங்கே இருக்கிறது, அறைக்குள் போவது எப்படி, வெளியே போவது எப்படி என்பதைத் தெரிந்துகொள்வதற்குப் பெரிய Ph. D. படிப்பு அவசியம் இல்லை. அதற்குப் பார்வை அவசியம்.
அதுபோல தேவன் தம்மை வெளிப்படுத்தவதற்கு மனிதனுக்கு ஒரு புலன், faculty, கொடுத்திருக்கிறார். அது அறிவல்ல. உடனே நீங்கள் திடுதிப்பென்று அறிவு பயனற்றது என்று ஒரு முடிவு கட்டிவிடாதீர்கள். அறிவுக்குப் பயன் உண்டு. ஆனால், நம் அறிவைக்கொண்டு நாம் தேவனை அறிய முடியாது.
1 கொரிந்தியர் 1:30, 31ஆம் வசனங்களிலே வாசிப்பதுபோல “மாம்சமான எவனும் தேவனுக்குமுன்பாகப் பெருமை பாராட்டாதபடிக்கு அப்படிச் செய்தார்.” தேவன் அவரை வெளிப்படுத்தும்போது நாம் அவரைக் காண்கிறோம் அல்லது அவரை அறிகிறோம். “நீங்களோ இவ்விதமாய்க் கிறிஸ்துவைக் கற்றுக்கொள்ளவில்லை” (எபே. 4:20). தேவன் கிறிஸ்துவை வெளிப்படுத்தும்போது ஒரே நாளிலே நாம் இந்த கிறிஸ்துவைக் கற்றுக்கொள்வதில்லை. இந்தக் கிறிஸ்து ஒரு மாபெரும் உலகம், மாபெரும் அமைப்புமுறை, மாபெரும் ஒழுங்குமுறை என்று சொல்லலாம்.
சில வெளிநாட்டுப் பயணிகள் மாமல்லபுரத்திற்குப் போவார்கள். எனக்கு மாமல்லபுரத்திலே எதுவுமே சுவாரசியமாக இருக்காது. எனக்கு எல்லாமே கல்லாகத்தான் தோன்றும். ஆனால், அவர்கள் அதை வியப்புடன் பார்ப்பார்கள். அதுபோல, சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியில் டாக்டர்.தயாநிதி என்று ஒருவர் வேலை பார்த்தார். அவருக்கும் எல்லாமே ரொம்ப அதிசயமாக இருக்கும். இவரும் அதே கல்லைப் பார்த்துவிட்டுப் பரவசமாய்ப் பேசுவார்.
இரண்டு மனிதர்களிடத்தில் தேவன் கிறிஸ்துவைக் கொடுத்துப் பார்க்கிறார். ஒரு மனிதனுக்குக் கிறிஸ்து அளவில்லாத செல்வங்கள் அடங்கிய புதிய உலகமாக இருக்கிறார். இன்னொரு மனிதனுக்கு அந்தக் கிறிஸ்து அப்படியொன்றும் சுவாரசியமானவராகத் தோன்றவில்லை. பரவசப்படாத மனிதன் ரொம்பப் பரவசப்பட்ட மனிதனைப் பார்த்து, “இந்தக் கிறிஸ்துவில் அப்படி எதைக் கண்டுபிடித்தாய்?” என்று கேட்டால் அவன் என்ன பதில் சொல்ல முடியும்?
அருமையானவர்களே! இந்தக் கிறிஸ்து அற்புதமானவர். இவரைக் கண்டுபிடித்து, கற்றுக்கொள்வதற்கு இந்த ஒரு வாழ்க்கை போதாது; இந்த மனித வாழ்க்கை போதாது. நித்திய நித்தியமாய் நாம் இந்தக் கிறிஸ்துவைக் கற்றுக்கொண்டேயிருப்போம். “ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும், நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்,” என்று (யோவான் 17:3) ஆண்டவராகிய இயேசு சொன்னார். அவரை அறிவதற்கு தேவன் நமக்கு ஒரு ஜீவனைக் கொடுத்திருக்கிறார். மறுபடியும் சொல்கிறேன்: இது ஒரு mental knowledge அல்லது academic knowledge இல்லை. இது மனதளவிலான அறிவோ அல்லது பள்ளிப்படிப்பிலான அறிவோ அல்ல. மாறாக இது ஒரு அனுபவ அறிவு என்று சொல்ல வேண்டும்.
யோபுவின் புத்தகம் மிக அருமையான புத்தகம். 41ஆம் அதிகாரம்வரை யோபுவிற்கும் அவனுடைய நண்பர்களுக்கும், எலிகூவுக்கும் தேவனுக்கும் நடுவிலே உரையாடல் நடைபெறுகிறது. யோபுவினுடைய வாக்குவாதங்கள் மிகவும் ஆணித்தரமானவைகள். உடல் முழுவதும் புண்களால் வெந்து இருக்கிற நிலைமையில்கூட ஒரு மனிதன் இவ்வளவு உயர்ந்த வாக்கியங்களைப் பேச முடியுமானால் அவன் உடல்நலம் நன்றாயிருந்தபோது எப்படிப் பேசியிருப்பான் என்று நான் யோசித்துப் பார்ப்பதுண்டு. நம்முடைய பிரசங்கங்களெல்லாம் யோபுவின் பேசுதலுக்குப் பக்கத்தில்கூடப் போக முடியாது. அவன் பேசுகின்ற ஒவ்வொரு வாக்கியத்தையும் எடுத்துப் பார்க்கும்போது, உடலிலே வேதனையால் துடிக்கின்ற மனிதன் இப்படிப்பட்ட அழகான, அறிவுநிறைந்த, மனிதர்களுடைய இருதயத்தைத் தொடுகின்ற வாக்கியங்களைப் பேச முடியுமா என்று தோன்றும். யோபு தேவனை நோக்கிப் பல கேள்விக்கணைகளைத் தொடுக்கின்றார்.
தேவனுடைய ஒரு அற்புதமான குணம் என்னவென்றால் அவர் மிகவும் அமைதியாக இருக்கிறார். நம்முடைய இருதயத்தைக் கொட்டித் தீர்க்கும்போது, தேவன், “முட்டாளே! வாயை மூடு. உளறுகிறாய்,” என்றெல்லாம் சொல்வதே இல்லை. நாம் தேவனுடைய மக்களுக்குப் பிரசங்கிக்க மிகவும் அவசரப்படுகிறோம். யாராவது பேசும்போது, அவர்கள் ரொம்ப உளறிக் கொட்டுகிறார்கள் என்று தெரிந்தாலும், அவர்களுக்கு நாம் 41 அதிகாரங்கள் கொடுக்க வேண்டும். நாம் முதல் அதிகாரத்திலேயே “உளறாதே” என்று கொட்டிவிடுவோம்.
யோபு பேச, யோபுவினுடைய நண்பர்கள் பேச, என்று வாக்குவாதம் மாறி மாறி நடக்கின்றது. யோபுவினுடைய கடைசி அதிகாரத்துக்கு வரும்போது யோபு என்ன சொல்கிறான் என்பதை நீங்கள் வாசிக்க வேண்டும். “அறிவில்லாமல் ஆலோசனையை மறைக்கிற இவன் யார்? ஆகையால் நான் எனக்குத் தெரியாததையும், என் புத்திக்கு எட்டாததையும், நான் அறியாததையும் அலப்பினேன் என்கிறேன்” (யோபு 42:3). அறிவில்லாமல் ஆலோசனையை மறைக்கிறவன் யார் என்று யோபு தன்னைப் பற்றித்தான் சொல்கிறான். “அலப்பினேன்” என்றால் “உளறினேன்” என்று பொருள். தொடர்ந்து வாசிப்போம். “நீர் எனக்குச் செவிகொடும், அப்பொழுது நான் பேசுவேன். நான் உம்மைக் கேள்விகேட்பேன், நீர் எனக்கு உத்தரவு சொல்லும். என் காதினால் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டேன். இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது. ஆகையால், நான் என்னை அருவருத்து, தூளிலும்; சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன்” (யோபு 42:4, 5). “என் காதினால் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டேன். இப்பொழுதோ என் கண்களினால் உம்மைக் காண்கிறேன்.” என்னுடைய நவீன மொழிபெயர்ப்பு என்ன வென்றால் “எனக்கு இரண்டாந்தரமான அறிவு இருந்தது. இப்பொழுது எனக்கு முதல் தரமான அறிவு இருக்கிறது. நான் என்னை அருவருத்து, தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன்.”
அருமையான தேவனுடைய மக்களே, பரிசுத்தவான்களே, நம்முடைய பெரும்பாலான அறிவு இரண்டாந்தரமான அறிவு. இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்தார் என்று பேதுருவுக்கும் தெரியும், மகதலேனா மரியாளுக்கும் தெரியும். பேதுருவின் அறிவு இரண்டாந்தரமான அறிவு. கல்லறைக்குப் போகிறார்; கல்லறை வெறுமையாக இருக்கிறது. ஆகவே, இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்துவிட்டார் என்று அவர் புரிந்துகொள்கிறார். ஆனால், மரியாளுடைய அறிவு அப்படிப்பட்டதல்ல. கல்லறை வெறுமையாக இருக்கிறது என்பதல்ல. அவள் உண்மையாகவே உயிர்த்தெழுந்த இயேசுவைக் கண்டாள்.
ஆகவேதான், “கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன். குப்பையுமாக எண்ணுகிறேன்” (பிலி. 3:8, 10) என்று அப்போஸ்தலனாகிய பவுல் சொல்கிறார். இது வெறுமனே 2 மதிப்பெண் கேள்வி, 5 மதிப்பெண் கேள்வி, 10 மதிப்பெண் கேள்விக்காகப் பெறுகிற அறிவு அல்ல. “அவரை அறிகிறதற்கும்” (வ. 10) என்று அவர் சொல்கிறார். என்னுடைய வாழ்வினுடைய இலக்கு அவரை அறிவது.
இது முதலாவது நாம் பார்க்க வேண்டிய குறிப்பு. இயேசுகிறிஸ்துவை வெளிப்பாட்டின்மூலமாக மட்டுமே நாம் அறிய முடியும். தேவனுடைய பக்கம் அவர் கிறிஸ்துவை நமக்கு வெளிப்படுத்த வேண்டும். நம்முடைய பக்கத்தில் வெளிப்படுத்தப்பட்ட கிறிஸ்துவை நாம் அறிய முடியும், காண முடியும். அது நம்முடைய வாழ்க்கையை மாற்றும்.
இரண்டாவது, தேவன் கிறிஸ்துவை நமக்கு வெளிப்படுத்துவதின் அல்லது கிறிஸ்துவை நாம் காண்பதின் நோக்கம் என்னவென்றால் நாம் அறிவு பெருத்தவர்களாக மாற வேண்டும் என்பதற்காக அல்ல. இயேசுகிறிஸ்துவைக்குறித்த சுவாரசியமான தகவலைச் சொல்ல வேண்டும் என்பதற்காக அல்ல. தேவன் கிறிஸ்துவை வெளிப்படுத்துவதும், நாம் கிறிஸ்துவைக் காண்பதும் எதற்காகவென்றால் இந்தக் கிறிஸ்துவால் நாம் வாழ வேண்டும் என்பதற்காக. “கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன். ஆயினும் வாழ்கிறேன்; இனி நானல்ல, கிறிஸ்துவே என்னில் வாழ்கிறார். இப்பொழுது நான் என் மாம்சத்தில் வாழ்கிறது என்மேல் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்தினாலே வாழ்கிறேன்” (கலா. 2:20). இனி நானல்ல, கிறிஸ்துவே என்னில் வாழ்கிறார். கிறிஸ்து என்னில் வாழ்கிறார் என்றால் கிறிஸ்து என்னில் வாழ்வதற்கு நான் அவரோடு ஒன்றாக இருக்கிறேன் என்று பொருள். நாம் கிறிஸ்துவுக்கு ஒப்புதல் கொடுக்காமல், இசைவு கொடுக்காமல், அவரோடு ஒன்றாக இருக்காமல் கிறிஸ்துவை நம்மால் வாழ முடியாது.
இதை ஒரு அற்றத்திற்கு நான் கொண்டுபோக விரும்பவில்லை. நானும் அப்படிக் கொண்டுபோகவில்லை; வேதாகமும் அப்படிக் கொண்டுபோகவில்லை. “கிறிஸ்து வாழ்கிறார். உங்கள் மனங்களை நீங்கள் passive ஆக வைத்துக்கொள்ளுங்கள்,” என்று நான் சொல்லவில்லை. passiveஆக வைத்துக் கொண்டால் பிசாசும், அவனுடைய தூதகணங்களும் வெள்ளம்போல மனதிற்குள் வந்து குடிபுகுந்து விடுவார்கள். activeஆக கிறிஸ்துவோடு இசைந்து வாழ்கிற வாழ்க்கையை கிறிஸ்து நம்மில் வாழ்கிற வாழ்க்கை என்று வேதம் சொல்கிறது.
ஆகவே, தேவன் கிறிஸ்துவை எதற்காக நமக்கு வெளிப்படுத்துகிறார்? அந்தக் கிறிஸ்து நம்மில் வாழ்வதற்காக. அந்தக் கிறிஸ்துவால் நாம் வாழ்வதற்காக. இது மிக முக்கியமான காரியம். இந்தக் குறிப்பை நீங்கள் புரிந்துகொள்ள முடியும். பல்வேறு விதமான சூழ்நிலைகள் வழியாக நாம் போகிறோம். பல பாடுகள், பல பாரங்கள், பல சோதனைகள், பல சோர்வுகள், பல போராட்டங்கள், பல வருத்தங்கள், பல வேதனைகள், பல வழிகள் வழியாக நாம் போகிறோம். எல்லா மனிதர்களும் அப்படிப்பட்ட பாதை வழியாகப் போகிறார்கள். ஆனால், மற்ற மனிதர்களுக்கும், தேவனுடைய மக்களுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் தேவனுடைய மக்கள் வாழ்க்கையின் சூழ்நிலைகளில் கிறிஸ்துவால் வாழ முடியும். கிறிஸ்து நம்மில் வாழும்போது அல்லது கிறிஸ்துவால் நாம் வாழும்போது என்ன நடைபெறும் என்றால் “என் சிறுபிள்ளைகளே, கிறிஸ்து உங்களில் உருவாகுமளவும் நான் மீண்டும் கர்ப்பவேதனைப்படுகிறேன்” (கலா. 4:19) என்று பவுல் சொல்வதுபோல கிறிஸ்து நம்மில் உருவாவார். “முதலாவது, கிறிஸ்து உங்களில் பிறப்பதற்காக, கிறிஸ்து உங்களுக்குள் வருவதற்காக, நான் கர்ப்பவேதனைப்பட்டேன். இப்பொழுது கிறிஸ்து உங்களில் உருவாவதற்காக நான் மீண்டும் கர்ப்பவேதனைப்படுகிறேன்,” என்று பவுல் சொல்லுகிறார்.
கிறிஸ்து நமக்குள் வருவதற்கும், கிறிஸ்து நமக்குள் உருவாவதற்கும் தீர்க்கமான ஒரு வேறுபாடு. ஒருவேளை ஒரு தாயின் கருவிலே ஒரு குழந்தை உண்டாகியிருக்கலாம். ஆனால் உருவாகியிருக்காது. இது என்ன? பெரிய வேறுபாடு இருக்கிறதா? தமிழிலே உண்டாகியிருக்கிறதென்றால் ஒரு குழந்தை தாயின் கருவிலே இருக்கிறது என்று பொருள். ஆனால், ஒரு சில மாதங்கள் கழித்துத்தான் அந்தக் குழந்தையினுடைய உறுப்புகளெல்லாம் ஒரு வடிவத்தைப் பெறுகின்றன. மூக்கு, காது, கை, கால் என்று அந்தக் குழந்தை ஒரு உருவத்தைப் பெறுகிறது.
தேவனுடைய மக்கள் பலருக்குள் கிறிஸ்து உண்டாகியிருக்கிறார். ஆனால் அவர்களுக்குள் இருக்கிற கிறிஸ்துவினிடத்தில் ஒரு உருவமோ அல்லது ஒரு வடிவமோ இல்லை. Praise the lord சொல்வார்கள். ஸ்தோத்திரம் சொல்வார்கள். அந்நிய பாஷை பேசுவார்கள். ஞாயிற்றுக்கிழமை வெள்ளையும் சுள்ளையுமாக வருவார்கள். ஏதோவொரு விதத்திலே இவர்கள் தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று காண்பிப்பதற்காகச் சட்டையில் பேட்ஜ் ஒன்று வைத்துக்கொள்வார்கள். முடிந்தவிதத்தில் தங்களை ஒரு கிறிஸ்தவன் என்று காண்பிப்பதற்கு அவர்கள் முயற்சி செய்யலாம்.
ஆனால், மனிதர்கள் நம்மிடத்தில் கிறிஸ்துவைப் பார்ப்பது அப்படிப்பட்ட அடையாளங்கள்மூலமாக அல்ல. அது வாழ்க்கைச் சூழ்நிலைகளிலும், நிலைகளிலும் தேவனுடைய மக்கள் எப்படி வாழ்கின்றார்கள், எப்படிச் செயல்படுகின்றார்கள், எப்படி மறுசெயலாற்றுகின்றார்கள் என்பதைப் பொறுத்தது. நாம் எப்படிச் சிந்திக்கின்றோம், என்ன பேசுகின்றோம், நம்முடைய நபர் எப்படி இருக்கிறது என்பதை வைத்துத்தான் மனிதர்கள் கிறிஸ்துவைக் காண்பார்களேதவிர புறம்பான அடையாளங்களைவைத்து அவர்கள் ஒருநாளும் கிறிஸ்துவைக் காண்பதில்லை.
ஆகவே, தேவனுடைய நோக்கமும் திட்டமும் கிறிஸ்துவை நமக்கு வெளிப்படுத்தி, அந்தக் கிறிஸ்துவை நாம் கண்டு, அந்தக் கிறிஸ்துவை நாம் வாழ வேண்டும். நாம் காணாத கிறிஸ்துவை ஒருநாளும் நாம் வாழ மாட்டோம். ஒரு சூழ்நிலையில் நாம் கிறிஸ்துவைக் காணும்போது, இந்தக் கிறிஸ்துவால் இந்தச் சூழ்நிலையில் வாழ முடியும் என்கிற நம்பிக்கையும், விசுவாசமும், பற்றுறுதியும் நமக்குப் பிறக்கும். இதுதான் தேவனுடைய மக்களுடைய வாழ்க்கை. அப்பொழுது இந்தச் சூழ்நிலையிலே உலக மக்கள் ஒருவிதமாய் வாழ்வார்கள். ஆனால், தேவனுடைய மக்களாகிய நாம் நமக்கு வெளிப்படுத்தப்பட்ட, நாம் அறிந்த, நாம் கண்ட கிறிஸ்துவால் இந்தச் சூழ்நிலையிலும் வாழ முடியும் என்று வாழும்போது அந்தக் கிறிஸ்து நமக்குள்ளே உருவாகின்றார்.
ரோமர் 8:28-30யை நாம் பொறுமையாய் வாசிப்போம். இந்த வசனத்தை இந்தச் செய்தியினுடைய கரு என்று சொல்லலாம். தேவனுடைய நித்திய நோக்கத்தையும், திட்டத்தையும்பற்றிய ஒரு அடிப்படையான ஆதார வசனம் ரோமர் 8:28-30. “அன்றியும் அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கேதுவாகவே நடக்கிறது என்று அறிந்திருக்கிறோம். தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார். எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார். எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார். எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்.”
அவருடைய தீர்மானத்தின்படி அல்லது அவருடைய நித்திய நோக்கத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கும். “அதைத்தானே எல்லாம் நன்மைக்கே என்று நாங்களும் சொல்வோம். நீங்கள் என்ன புதிதாக சொல்கிறீர்கள்!” என்று இந்த வாக்கியத்தின் வீரியத்தையும், கூர்மையும் உடைக்கிற ஆட்கள் உண்டு. அது வேறு. லாசருவின் வீட்டிற்குப் போகும்போது இயேசு கண்ணீர் விட்டார். எருசலேமைப் பார்த்து அவர் கண்ணீர் விட்டார். அவர் உணர்ச்சியில்லாத ஒரு கல் அல்ல.
ஒரேவொரு நன்மையைத்தான் தேவன் தம் மக்களுக்கு வைத்திருக்கிறார். தேவனுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து அநேக சகோதர்களுக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, இயேசுகிறிஸ்து முதல் மகனாகவும், அவரை விசுவாசிக்கிற நாம் பல மகன்களாகவும் இருக்க வேண்டும் என்பது தேவனுடைய திட்டம். இந்தப் பல மகன்களுக்காக தேவனுடைய திட்டம் என்ன? பல மகன்கள் தேவனுடைய முதல் மகனுக்கு ஒத்தசாயலாக வேண்டும். Many sons should be conformed to the image of the first Son.** ஒத்த சாயல் என்றால் ஜீவனில் ஒத்த சாயல், தன்மையில் ஒத்த சாயல், குணத்தில் ஒத்த சாயல், கட்டமைப்பில் ஒத்தசாயல். நான் ஒரு அட்டவணையைச் சொல்வேன். நம்முடைய ஆவல்களில், நம்முடைய விருப்பங்களில், நம்முடைய சாய்மானங்களில், நம்முடைய நோக்கங்களில், நம்முடைய உள்நோக்கங்களில், நம்முடைய சுவைகளில், நம்முடைய முன்னுரிமைகளில், நம்முடைய நடை உடை பாவனைகளில், நம்முடைய தொனியில், நம்முடைய தோற்றத்தில் என்று மனிதனுடைய கைவைக்க முடியாத எல்லா உள்ளான பகுதிகளிலும் பல மகன்களாகிய நாம் தேவனுடைய முதல் மகனாகிய இயேசுகிறிஸ்துவோடு ஒத்தசாயலாக்கப்படுவது தேவனுடைய திட்டம்.** தேவன் இதற்கென்று நம்மை முன்னறிந்தார், முன்குறித்தார், அழைத்தார், நீதிமான்களாக்கினார், மகிமைப்படுத்தினார்.
“நாமெல்லாரும் முக்காடில்லாத திறந்த முகத்தினராய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியைப் போலக் கண்டு, பிரதிபலித்து ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுசாயலாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம்”(2 கொரி. 3:18) என்று பவுல் சொல்லுகிறார். நாம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை நம்முடைய வாழ்க்கையிலே வெளிப்படுத்தும்போது, நாம் அவரைக் காணும்போது, நாம் அவரால் வாழ்கிறோம். அவருடைய சாயல் நமக்குள் உருவாக்கப்படுகிறது.
மூன்றாவது குறிப்பைச் சொல்லி நான் முடித்துக்கொள்கிறேன். 1. முதலாவது குறிப்பு, தேவன் கிறிஸ்துவை வெளிப்படுத்துவது, நாம் கிறிஸ்துவை காண்பது அல்லது அறிவது. 2. இரண்டாவது குறிப்பு, நாம் காண்கின்ற அந்தக் கிறிஸ்துவால் நாம் வாழ்வது, கிறிஸ்து நமக்குள் உருவாக்கப்படுவது. 3. மூன்றாவது குறிப்பு, அந்தக் கிறிஸ்து நம்மூலமாய் வெளியாக்கப்படுவது, அந்தக் கிறிஸ்துவை நாம் வழங்குவது.
தேவனுடைய மக்கள் ஒருவிதமான ஒரு மதபக்தியுள்ள வாழ்க்கை வாழ்வதிலே மிகவும் திருப்தி கண்டுவிடுகிறார்கள். பொதுவாகக் கிறிஸ்தவர்கள், “நான் கிறிஸ்தவன்” என்று சொல்பவர்கள் கொடூரமான பாவத்திலே ஈடுபடுவது இல்லை. அதிலே அவர்கள் மிகவும் திருப்தியடைகிறார்கள். ஆனால் தேவனுடைய நோக்கம் நம்மூலமாய்க் கிறிஸ்து வெளியாக வேண்டும். கொலோசெயர்1:27 மிக முக்கியமான வசனம். கிறிஸ்து ஒரு மனிதன்மூலமாக அல்லது ஒரு கூட்டம் மனிதர்கள்மூலமாக வெளியாவதுதான் மகிமை என்று பொருள்.
நான் ஒரு ரோமன் கத்தோலிக்கப் பின்புலத்தில் வளர்ந்தவன் என்பதால் புனிதர்களுக்குப் பின்னால் போட்டிருக்கின்ற அந்த ஒளிவட்டத்திற்குப் பெயர்தான் மகிமை என்று நினைத்தேன். ஒரு நாளிலே நாம் மகிமையாக இருப்போம் என்றால், ஒரு நாளிலே நம் தலைக்குப் பின்னால் ஒரு ஒளிவட்டம் இருக்கும் என்று நினைத்தேன். இதை நான் கேலியாகச் சொல்லவில்லை. ரோமன் கத்தோலிக்கர்கள் மட்டும் இல்லை. ரொம்பப் பெரிய கிறிஸ்தவர்களுடைய மூடநம்பிக்கையும் அதுவாகத்தான் இருக்கிறது. “நாங்கள் ரொம்ப நவீனக் கிறிஸ்தவர்கள்,” என்று சொல்கிறவர்களும் மகிமை என்றால் “நாம் 1000 வோல்ட் விளக்கைப்போல சுடர்விடுவோம்,” என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
தேவனுடைய வார்த்தையைப் பொறுத்தவரை மகிமை என்பது எங்கு கிறிஸ்து வெளியாகுகிறாரோ அதுதான் மகிமை. ஒருநாளிலே ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து முற்றுமுடிய அவருடைய வருகையிலே எந்தத் தடையுமின்றி வெளியாவார். ஆனால், அதுவரை அவர் வெளியாக வேண்டிய அவசியமே இல்லை என்பதுபோல் நாம் வாழ்வது மூடத்தனம். நன்றாய்க் கவனிக்க வேண்டும்.
ஒருநாளிலே ஒரு செடியிலிருந்து ஒரு மலர் முழுவதாய் மலர்ந்து, விரிந்து அழகாய் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அது ஒரு நாளிலே நடைபெறுகிறதா அல்லது அந்தச் செடியினுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் நடைபெறுகிறதா? ஒவ்வொரு நாளும் அது வளர்ந்து, வளர்ந்து, வளர்ந்து, சிறிது சிறிதாய் மகிமை அடைந்துகொண்டே இருக்கிறது. ஒரு நாளிலே அது முற்றிலும் மகிமையடைகிறது.
அதுபோல நம்முடைய வாழ்நாளின் ஒவ்வொரு நாளிலும் சிறிதளவாவது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்மூலமாய் வெளியாகிறார், வெளியாக வேண்டும். அது தேவனுடைய மக்களுக்காக தேவனுடைய நோக்கம். Glory is the destiny of God’s people. மகிமையே தேவனுடைய மக்களுக்கான இலக்கு அல்லது போய்ச் சேரும்இடம். தேவனுடைய இலக்கு, தேவனுடைய மக்கள் மகிமைப்பட வேண்டும். தேவனுடைய மக்கள் மகிமைப்பட வேண்டும் என்றால் என்ன பொருள்? “ஆண்டவரே என்னை மகிமைப்படுத்தும்,” என்றால் என்ன பொருள்? “நான் கிறிஸ்தவனானதால் என் சொந்தக்காரர்களெல்லாம் என்னைக் கேவலமாக நினைக்கிறார்கள். அவர்கள் எல்லாரையும்விட நான் பணக்காரனாக இருக்க வேண்டும். எனக்கு நோயே வரக்கூடாது,” என்பதா அதன் பொருள்? எனக்குத் தெரிந்த ரொம்ப ஒரு ஆவிக்குரிய குடும்பத்திலுள்ள ஒருவருக்கு ஒரு நோய் வந்தவுடன் அவர்கள் ரொம்ப கஷ்டப்பட்டு விட்டார்கள். “எப்படி நாங்கள் சாட்சி சொல்வது? surgery நடப்பதற்கு முன்னாடியே எங்களைச் சுகமாக்கியிருந்தால் நாங்கள் சாட்சி சொல்லியிருப்போமே. இப்போது surgery எல்லாம் நடந்து போயிற்றே. Jesus never fails என்று நாங்கள் சொல்ல முடியாதே!” என்று அங்கலாய்த்தார்கள்.
அப்படி சாட்சி சொல்ல வேண்டுமென்றால் இயேசுகிறிஸ்து மட்டும்தான் சாட்சி சொல்ல முடியும். சிலுவையிலறையப்பட்ட அவரைக் கல்லறைக்குள்ளே வைத்தாகிவிட்டது. என்ன சாட்சி சொல்வது? கல்லறைக்குள்ளே வைக்கும்போதே resurrection guaranteed என்ற assuranceயோடு ஒன்றும் இயேசு கிறிஸ்து கல்லறைக்குள் போகவில்லை. அவர் பிதாவின்மேல் நம்பிக்கையாய்ப் பிதாவுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்தார்.
எனவே அருமையான பரிசுத்தவான்களே! மகிமை என்பது நமக்குச் சேரவேண்டிய ஒரு பெருமை அல்ல. மகிமை என்பது தேவனுடைய அந்த நித்தியக் குறிக்கோளும், அந்த நித்தியத் திட்டமும் நம்முடைய வாழ்க்கையிலே நிறைவேறுவது. கிறிஸ்து நம்மூலமாய் வெளியாவதுதான் மகிமை. அந்த அர்த்தத்தோடு நாம் ஜெபிக்க வேண்டும். “ஆண்டவரே, என்னில் நீர் உம்மை மகிமைப்படுத்தும்.” மகிமையின் வழி எப்போதுமே சிலுவையின் வழிதான். அது தெரிந்தபிறகு, “என்னை மகிமைப்படுத்தாவிட்டாலும் பரவாயில்லை, ஆளை விட்டுவிடும். எசேக்கியாவைப்போல என்னுடைய வாழ்நாளிலாவது சமாதானமாய் வாழ்ந்து முடிக்க விரும்புகிறேன். ஏனென்றால், இந்த மகிமையின் பாதையெல்லாம் நமக்குச் சரிவராது. மகிமைக்கு ஏதாவது bypass இருக்குமென்றால் நான் மகிமைப்பட விரும்புகிறேன். மகிமை என்பது சிலுவையின் வழியாகப்போய் அதன்மூலமாகத்தான் மகிமைப்படுத்த வேண்டுமென்றால் I have to think againஅதைதப்பற்றி நான் இரண்டாவது முறை சிந்திக்க விரும்புகிறேன். இந்த மகிமை எனக்குக் கண்டிப்பாக வேண்டுமா அல்லது இதைவிட குறைவாக ஒரு மகிமை இருந்தால்கூட சொல்லும், அதை நான் எடுத்துக்கொள்கிறேன்,” என்று சொல்வோம். அப்படியல்ல.
“கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்” (கொலோ. 1:27). Christ in you is the hope of glory. This is our slogan. ஒரு நாளிலே கிறிஸ்து நம்மிலிருந்து முற்றுமுடிய வெளிப்படுவார், வெளியாக்கப்படுவார், மகிமைப்படுவார் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? என்ன ஆதாரம் என்றால் இன்று கிறிஸ்துவானவர் அந்த மகிமையின் நம்பிக்கையாக நமக்குள் இருக்கின்றார். ஒரு நாளிலே அந்த மகிமையானது முற்றிலும் நம்மூலமாய் வெளிப்படும். ஒருநாளிலே ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து வருவார். இது தேவனுடைய மக்கள் நம்பியிருக்கின்ற ஆனந்த பாக்கியம் என்று தீத்து 2:13 சொல்கிறது. தேவனுடைய மக்கள் நம்பியிருக்கின்ற ஆனந்த பாக்கியம். The blessed hope of God’s people is the Lord will come again.
ஆண்டவர் மீண்டும் இந்தப் பூமிக்கு வருவார். எதற்காக வருகிறார் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். “தீர்க்கதரிசனத்தைப்பற்றிய ஆராய்ச்சி. இயேசுகிறிஸ்துவின் இரண்டாவது வருகையைப்பற்றிய வேத பாடங்கள்,” என்று என்னமோ கடவுள் காலண்டர் ஒன்று வைத்துக்கொண்டிப்பதுபோலவும், அதிலே என்றைக்குப் பூமிக்குத் திரும்பிவரக் காத்துக்கொண்டிருக்கிறார் என்பதுபோலவும் அவர்கள் தீர்ககதரிசனத்தை அக்குவேறு, ஆணிவேறாக ஆராய்ச்சி செய்கின்றார்கள். ஆனால் “அந்நாளிலே தம்முடைய பரிசுத்தவான்களில் மகிமைப்படத்தக்கவராயும், நீங்கள் என்னுடைய சாட்சியை விசுவாசித்தபடியினாலே உங்களிடத்திலும், விசுவாசிக்கிறவர்களெல்லாரிடத்திலும் ஆச்சரியப்படத்தக்கவராயும், அவர் வருவார்” (2 தெச.1:9) என்று வாசிக்கிறோம். நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மகிமைப்பட வருகிறார். அவர் எங்கு மகிமைப்படுகிறார்? பரிசுத்தவான்களில் அவர் மகிமைப்படுகிறார். இயேசுகிறிஸ்து எங்கோ இருந்து வெளியாவதில்லை. தேவனுடைய மக்களுக்குள் கிறிஸ்துவானவர் உருவாகிக்கொண்டிருக்கிறார். உருவாகி, உருவாகி, உருவாகி முற்றுமுடிய வெளிப்படுகிற ஒரு கட்டத்தை, ஒரு நிலையை, எட்டிவிட்டார்கள்.
நியூட்டனின் விதி உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கின்றேன். இரண்டு பொருட்கள் ஒன்றையொன்று ஈர்க்கும். எவ்வளவு அதிகமாக ஈர்க்கும் என்பது அந்த இரண்டு பொருள்களின் எடையைப் பொறுத்தது. இந்தப் பூமியும், சந்திரனும் ஒன்றையொன்று ஈர்க்கிறது. பூமிக்கு ஒரு எடை இருக்கிறது. சந்திரனுக்கு ஒரு எடை இருக்கிறது.
கிறிஸ்துவானவர் பரத்திலிருக்கிறார். கிறிஸ்து இன்று தேவனுடைய மக்களிலும் இருக்கிறார். அவர்களில் வாழ்கிறார். அவர்களுக்குள் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார். ஆனால் இன்னும் அந்த உருவாக்கப்பட்ட கிறிஸ்துவுக்கும், பரத்திலிருக்கும் கிறிஸ்துவுக்கும் ஈர்ப்பு இருக்கிறது. உருவாக்கப்பட்ட கிறிஸ்து ஒரு thresholdயைத் தாண்டும்போது உண்மையிலேயே ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து உருவாகிவிட்டார் என்று பொருள். அப்போது பரத்திலிருக்கும் கிறிஸ்து பூமிக்குத் திரும்பி வருவார்.
உண்மையிலேயே இப்படிப்பட்ட ஒரு ஈர்ப்பு இருக்கிறதா என்று எனக்குத் தெரியாது. ஆனால், அவருடைய மக்களுக்குள் கிறிஸ்து போதுமான அளவுக்கு உருவாகிவிட்டால் அதன்பின் கிறிஸ்துவானவர் ஒரு கணம்கூடத் தாமதிக்காமல் பரத்திலிருந்து தன்னுடைய பரிசுத்தவான்களில், தன்னுடைய மக்களில், மகிமைப்படுவதற்காக வந்துவிடுவார். “என்னுடைய மக்களிலே கிறிஸ்து எவ்வளவாய் உருவாகியிருக்கிறார்!” என்று அவர் ஈர்க்கப்பட்டுவிடுவார். ஆனால், இது ஒரு நாளிலே நடப்பது அல்ல.
அன்பான சகோதர சகோதரிகளே, “எங்களைக்கொண்டு எல்லா இடங்களிலும் கிறிஸ்துவை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்” (2 கொரி.2:14). ஒரு நாளிலே திடுதிப்பென்று தேவன் உருவாகிவிடுவதில்லை. இன்று நம்முடைய எல்லா சாதாரண சூழ்நிலைகளிலும், நம்முடைய குடும்பங்களில், நாம் கூடி வாழ்கையில், நம்முடைய போக்குவரத்தில், நம்முடைய வாழ்க்கையின் சிறிய பெரிய சூழ்நிலைகள் எல்லாவற்றிலும் கிறிஸ்துவின் வாசனை நம்மூலமாய் ஒரு சிறிதளவாவது மற்றவர்களுக்கு வெளிப்பட வேண்டும். இது தேவனுடைய குறிக்கோளும், தேவனுடைய திட்டமுமாயிருக்கிறது. என்றோ ஒருநாள் கிறிஸ்து நம்மில் மகிமைப்படுவதற்காய் நாம் காத்திருக்க வேண்டியதில்லை. இன்று கிறிஸ்து நமக்குள் சிறிதளவாவது நம்மூலமாய் வெளியாக வேண்டும். யாருக்கு வெளியாக வேண்டும்? நம்மைச் சுற்றியிருக்கின்ற, நம்முடைய வாழ்க்கையில் நம்மோடு தொடர்புடைய எல்லாருக்குள்ளும் நம்மூலமாய்ச் சிறிதளவாவது கிறிஸ்து உருவாக வேண்டும். நம்மைச் சுற்றியிருப்பவர்கள் யார்? நம்முடைய குடும்பம் என்றால் நம்முடைய வாழ்க்கைத்துணை, பெற்றோர்கள், நம்முடைய பிள்ளைகள், நம்மோடு உடன் வேலை பார்ப்பவர்கள், நாம் வாழ்கின்ற சகோதர சகோதரிகள் என்று நாம் யார் யாரோடு தொடர்புக்கு வருகின்றோமோ அவர்கள் சிறிதளவாவது நம்மிடம் கிறிஸ்துவை முகர்ந்து பார்க்க வேண்டும். இது நம்முடைய இருதயத்தின் வாஞ்சையும், கதறுதலுமாய் இருக்க வேண்டும்.
தேவனுடைய நோக்கம், கிறிஸ்துவை நமக்கு முதன்மையாக்குவது.
காலங்கள் மாறலாம், சூழ்நிலைகள் மாறலாம், அரசியல் கட்சிகள் மாறலாம், அரசாங்கங்கள் மாறலாம், ஆனால் தேவனுடைய மக்கள்மூலமாய்க் கிறிஸ்து வெளியாக்கப்படுவதை எந்த மாற்றமும் எதிர்க்க முடியாது. “நீங்கள் மதம்மாற்றக் கூடாது,” என்று ஒருவர் சொல்லலாம். நாங்கள் மதமாற்றம் செய்வதில்லை. ஒரு பூவானது தன்னை முகர்ந்துபார்ப்பதற்காக அருகில் வருகிறவர்களை மதமாற்றம் செய்வதில்லை. “நீ வேறு எதையும் முகர்ந்துபார்க்கக் கூடாது. என்னை மட்டுமே முகர்ந்துபார்,” என்று இந்தப் பூச்செடி பத்துப்பேரை convert பண்ணிவிட்டது என்று யாராவது சொல்வார்களா? சொல்ல மாட்டார்கள். அப்படிப்பட்ட தேவனுடைய மக்களாய் நாம் இந்தத் தலைமுறையிலே வாழ வேண்டும். அதை எந்த அரசாங்கமும், எந்த நாடும், எந்த அரசியல் கட்சியும், எந்த சட்டமும், தடைசெய்யாது. “மனிதர்கள்மூலமாய் கிறிஸ்து வெளியானார். இந்தக் கிறிஸ்துவின் நறுமணமும், சுகந்த வாசனையும் என்னை ஈர்த்தது. ஆகவே, நான் இந்த ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை அறிந்துகொண்டேன்,” என்பது நம்முடைய சாட்சியாக இருக்க வேண்டும். நீங்கள் இதைச் சிந்தித்துப்பாருங்கள்.
ஜெபிப்போம். “பரிசுத்த பிதாவே, நன்றியோடு உம்மைத் துதிக்கிறோம். இந்தக் கூடுகைக்காய், கலந்துபேசிய இந்தக் காரியங்களுக்காய் உமக்கு நன்றி செலுத்துகிறோம். பரிசுத்த ஆவியானவர் எங்கள் இருதயங்களிலே எழுதி அதைப் பயனுள்ளதாக மாற்றுவாராக. உம்முடைய பிள்ளைகளின் உள்ளான நிலைமையை நீர் அறிவீர். நிலைமைக்கு தக்கதாய் இந்த வார்த்தைகளை பொருள் நிறைந்ததாய் மாற்றும். இயேசுவின் நாமத்தில் பிதாவே, ஆமென்.