Richard Wurmbrand (1909–2001) was born to a Jewish family in Bucharest, Romania. In 1936, he married Sabina Oster and in 1938 they placed their faith in Jesus Christ.
During World War II, Richard and Sabina preached in bomb shelters and rescued Jewish children out of the ghettos. They were repeatedly arrested and beaten and, at least once, nearly executed. Sabina lost her Jewish family in Nazi concentration camps.
In 1945, when Romanian Communists seized power, Richard and Sabina attended a congress where many religious leaders praised Communism and swore loyalty to the new regime. Richard declared to the delegates, and to the whole nation, that their duty was to glorify God and Christ alone.
On Feb. 29, 1948, the secret police kidnapped Richard. In 1950, his wife, Sabina, was also imprisoned leaving their 9-year-old son, Mihai, alone and homeless. Sabina was released after three years, and Richard was also later released, only to be re-arrested and then released in an amnesty in 1964.
In December 1965, two organizations paid a ransom to allow the Wurmbrand family to leave Romania for Norway and then on to England. Richard began his ministry as a voice for persecuted Christians to the West, where he also wrote "Tortured for Christ", the story of his time in prison.
ரிச்சர்ட் உம்ப்ராண்ட்! இவர் 1909இல் ரொமேனியாவில் புகாரெஸ்ட் என்ற இடத்தில் பிறந்தார். நாம் இப்போது 2021இல் இருக்கிறோம். எனவே, இவரைப்பற்றித் தெரிந்துகொள்ள நாம் 112 ஆண்டுகள் பின்னோக்கி ருமேனியாவுக்குப் பயணிக்க வேண்டும்.
அவருடைய குழந்தைப் பருவம் இன்னல்களும், துன்பங்களும் நிறைந்தது. ஏனென்றால், ஒன்பது வயதில் அவர் தன் பெற்றோரை இழந்து, அனாதையானார். அவர் 1909இல் பிறந்தார் என்று சொன்னேன். அது முதல் உலகப்போர் நடந்துகொண்டிருந்த காலம். அவருடைய குழந்தைப் பருவம் எப்படியிருந்திருக்கும் என்று நினைத்துப்பாருங்கள். அவர் ஒரு யூதன். ஆனால், அவருடைய பெற்றோர் இறந்து, ஒன்பது வயதில் அவர் அனாதையானபிறகு, அவரை வளர்த்தவர்கள் அவரை யூதனாக வளர்க்கவில்லை. மாறாக, அவர்கள் அவனை ஒரு நாத்திகனாக, கடவுள் நம்பிக்கை அற்றவனாக, வளர்த்தார்கள். அவர்களைப் பொறுத்தவரை மதம் என்று ஒன்று இல்லை. அவருக்கும் யூத மதத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லாமலே அவர் வளர்ந்தார். மேலும், தன் வறுமையின் காரணமாகவும், தன் கடினமான குழந்தைப்பருவத்தின் காரணமாகவும், கடவுள் ஒருவர் இருக்கக்கூடும் என்று அவரால் நினைக்கவோ, நம்பவோ முடியவில்லை. உண்மையில், அவருடைய இளமைப் பருவத்தில் அவர் கடவுளைப்பற்றி என்ன நினைத்தார் தெரியுமா? கடவுள் ஒரு கறார் பேர்வழி என்றும், எல்லாரும் எப்போதும் தமக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார் என்றும் அவர் நினைத்தார். எனவே, மதம் என்ற எண்ணத்தை அவர் அடியோடு வெறுத்தார்.
ரிச்சர்ட் மிகவும் திறமைசாலி, புத்திசாலி. பள்ளியிலும், கல்லூரியிலும் சிறந்து விளங்கினார். அவருக்கு ஒன்பது மொழிகள் தெரியும். ஒன்பது மொழிகளில் மிகச் சரளமாகப் பேசினார். இளம் வயதிலேயே அவர் சபினா என்ற பெண்ணைத் திருமணம் செய்தார். சபீனாவும் யூதப் பெண்மணிதான். எங்காவது ஆடல் பாடலுடன் விருந்து நடந்தால் அவர்கள் இருவரும் அங்கு இருப்பார்கள். விருந்து, கேளிக்கை ஆகியவைகளுக்கு அவர்கள் இருவரும் உயிர்நாடிபோல் இருந்தார்கள். ரிச்சர்ட் மட்டும் அல்ல, சபினாவும் நல்ல புத்திசாலி. ரிச்சர்ட் ஸ்டாக்புரோக்கராக வேலை செய்தார். நல்ல வருமானம். எனவே, அவர்கள் வசதியான வாழ்க்கை வாழ்ந்தார்கள்.
ரொமேனியாவில் ஒரு மலைக் கிராமத்தில் சாதாரணமான ஒரு முதியவர் வாழ்ந்துவந்தார். அவர் ஒரு தச்சன். அவரும், அவருடைய மனைவியும் மிகவும் வயதானவர்கள். அவருக்கு ஓர் ஆசை. என்ன ஆசை தெரியுமா? ஒருநாள் அவர் தேவனிடம், "ஆண்டவரே, எனக்கு வயதாகிவிட்டது. ஆனால், நான் இறப்பதற்குமுன், இந்தப் பூமியில் நீர் எனக்கு ஒரு வெகுமதி தரவேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீர் தருவீரா? நான் விரும்பும் பூமிக்குரிய அந்த வெகுமதி என்ன தெரியுமா? நான் இறப்பதற்குமுன் ஒருவரையாவது உம்மிடம் கொண்டுவர விரும்புகிறேன். ஆனால், அந்த நபர் ஒரு யூதனாக, நீர் தெரிந்தெடுத்த இனத்தைச் சார்ந்தவனாக, இருக்க வேண்டும். அவரை நான் உமக்குள் வழிநடத்துவேன்," என்று ஜெபித்தார். பிரச்சினை என்னவென்றால், இந்த முதியவர் வாழ்ந்த கிராமத்தில் யூதர்களே கிடையாது. எனவே, அவர், "தேவனே, என்னுடைய இந்த'முதிர்வயதில் என்னால் வெளியே போய் ஒரு யூதனைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாது. நீர்தான் அவனை என்னிடம் கூட்டிவர வேண்டும்," என்று ஜெபித்து முடித்தார். தேவன் ஒரு யூதனைத் தங்களுடைய கிராமத்துக்குக் கொண்டுவருவதற்காகவும், அவனைக் கிறிஸ்துவுக்கு நேராக நடத்துவதற்காகவும் அவர்கள் தொடர்ந்து ஜெபித்தார்கள்.
ரிச்சர்ட் திடீரென நோய்வாய்ப்பட்டார். அவருக்குக் காசநோய். அவர் சுவாசிக்கச் சிரமப்பட்டார். அந்த நாட்களின் வழக்கத்தின்படி, அவருடைய நண்பர்கள், "நீ நல்ல சுகம் பெற வேண்டுமானால், உனக்கு ஆரோக்கியமான, சுத்தமான காற்று வேண்டும். அது, இங்கு நகரத்தில் இல்லை. எனவே, கொஞ்ச நாட்கள் எங்காவது ஒரு மலைக்கிராமத்துக்குச் சென்று வருவது நல்லது," என்று ஆலோசனை சொன்னார்கள். அவர் அந்த முதியவர் வாழ்ந்த மலைக் கிராமத்துக்குச் சென்று, அங்கு சில மாதங்கள் தங்க முடிவு செய்தார். அவரும், சபினாவும் அந்தக் கிராமத்திற்குச் சென்றார்கள். அவர்கள் அந்தக் கிராமத்துக்கு வந்தபின், புக்காரெஸ்டிலிருந்து , நாகரீகமான ஒரு புதிய தம்பதி தன் கிராமத்திற்கு வந்து தங்கியிருப்பதையும், அவர்கள் இருவரும் யூதர்கள் என்பதையும் அந்த முதியவர் தெரிந்துகொண்டார். அவருக்கு எல்லையற்ற மகிழ்ச்சி! அவர்களுடைய வருகை தங்களுடைய ஜெபத்திற்குத் தேவன் தந்த பதில் என்று நினைத்து அவர்கள் பரவசமடைந்தார்கள். அவர்கள் தொடர்ந்து ஜெபித்தார்கள். மணிக்கணக்கில் ஜெபித்தார்கள். விரைவில் ரிச்சர்ட்டையும், சபினாவையும் சந்திக்க அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அவர்களைச் சந்தித்தபோது அவர்கள் ரிச்சர்டுக்கும், அவருடைய மனைவி சபினாவுக்கும் ஒரு வேதாகமத்தை அன்பளிப்பாகக் கொடுத்தார்கள்.
முதியவர் கொடுத்த வேதாகமத்தை ரிச்சர்ட் ஒரு பொருட்டாகக் கருதவில்லை. அதில் அவருக்கு எந்த ஆர்வமும் இல்லை. மதத்தையும், மதப்பற்றுடையவர்களையும்பற்றி அவருக்கு நன்றாகத் தெரியும். மதத்தையோ, மதப்பக்தியுள்ளவர்களைப்பற்றியோ அவர்களுக்கு உயர்ந்த அபிப்பிராயம் இல்லை. அவரும் சபினாவும் மதம் சம்பந்தப்பட்ட காரியத்தில் ஈடுபாடுகொள்ள விரும்பவில்லை. அந்த முதியவர் வேதாகமத்தை அன்பளிப்பாகக் கொடுத்தபோது, "சரி, இது நல்ல இலக்கியத் தரம்வாய்ந்த புத்தகம். மற்ற இலக்கியங்களை வாசிப்பதுபோல் இதையும் வாசிக்கலாம். இது ஒரு நல்ல அனுபவமாக இருக்கலாம்," என்று நினைத்தார். அவர் அதை வாசித்தார். அவர் நற்செய்திகளைப் புரட்டினார், அவர் படிக்கத் தொடங்கினார். தொடர்ந்து படித்தார். வேதவாக்கியங்களின் வார்த்தைகளால் அவர் தொடப்பட்டார். இரட்சிக்கப்பட்டார். ஆனால், சபினா இரட்சிக்கப்படவில்லை. அவர் தன் மனைவிக்காக ஜெபிக்கத் தொடங்கினார். நற்செய்திகளிலும், வேதவாக்கியங்களிலும் தான் கண்ட இயேசுவைத் தன் மனைவி சபினாவும் பார்க்க வேண்டும் என்று அவர் விரும்பினார். அதற்காக அவர் ஊக்கமாக ஜெபித்தார். விரைவில் சபினாவும் இரட்சிக்கப்பட்டார். அவர்கள் இருவரும் இப்போது கிறிஸ்தவர்கள். அவர்களுடைய இரட்சிப்பு ஓர் அற்புதம். எந்த மனிதனின் இரட்சிப்பும் ஓர் அற்புதமே! ரிச்சர்ட் ஒரு போதகராக விரும்பினார். அதற்குத் தேவையான இறையியல் பயின்றார். ஒரு போதகரானார்.
அது இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்த நேரம். ஜெர்மானிய நாசிப் படை கிழக்கு ஐரோப்பாவில் இருந்த ரொமேனியாவின்மேல் படையெடுத்து அந்த நாட்டைக் கைப்பற்றியது. ரொமேனியாவை ஆக்கிரமித்த நாசிப் படைகள் அங்கிருந்த கிறிஸ்தவர்களைச் சித்திரவதைசெய்தார்கள். அவர்கள் யாரையும் நற்செய்தியைப் பிரசங்கிக்க அனுமதிக்கவில்லை. ரிச்சர்டும், வேறு பலரும் நாசிப் படை வீரர்களால் தாக்கப்பட்டார்கள். கிறிஸ்தவர்கள் தலைமறைவாக வாழவேண்டியிருந்தது. ரொமேனியாவில் இரகசியச் சபைகள் உருவாகத் தொடங்கின. விசுவாசிகள் தலைமறைவாக வாழ ஆரம்பித்தார்கள். கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக வாழ முடியவில்லை.
இந்த நேரத்தில் ரிச்சர்ட், சபினாவுக்கு ஒரு பையன் பிறந்தான். அவனுக்கு மிஹாய் என்று பெயர் வைத்தார்கள்.
நாசிப் படைகளின் ஆட்சி மிக மோசமாகவும், கொடுமையாகவும் இருந்தது. போர் சீக்கிரம் முடிந்துவிடும் என்றும், போருக்குப்பிறகு எல்லாம் சரியாகிவிடும் என்றும் மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், அவர்கள் நினைத்ததுபோல் நடக்கவில்லை. போர் முடிந்தது. ஆனால், போருக்குப்பின் நிலைமை முற்றிலும் தலைகீழாக மாறிற்று. ரொமேனியா கிழக்கு ஐரோப்பாவில் உள்ளது, ரஷ்யப் படைகள் கிழக்கு ஐரோப்பாவிற்குள் நுழைந்தன. அந்த நேரத்தில் ரஷ்யா ஒரு கம்யூனிஸ்ட் நாடு. 1944இல் ரொமேனியாவில் ஒரு பெரிய ரஷ்யப் படையெடுப்பு நடந்தது. அந்த நேரத்தில் மக்கள், "இது நல்லதுதான்," என்று நினைத்தார்கள். ஏனென்றால், போரில் ரஷ்யர்கள் நாசிப் படைகளைத் தோற்கடித்து, விரட்டினார்கள், வெற்றிபெற்றார்கள். ஆனால், ரஷ்யப் படையெடுப்பால் ரொமேனியாவுக்குள் கம்யூனிசமும் வந்தது, பத்து இலட்சம் ரஷ்யப் போர்வீரர்களும் வந்தார்கள். அவர்கள் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் ரொமேனியாவில் கம்யூனிச அரசாங்கத்தை நிலைநாட்டுவதற்காக நாடு முழுவதும் சென்றார்கள்.
ரஷ்யாவில் பல ஆண்டுகளாகக் கம்யூனிச ஆட்சி நடந்துகொண்டிருந்தது. நாத்திகமும் கம்யூனிசமும் கைகோர்த்துச் செல்கின்றன. கம்யூனிஸ்ட்கள் கடவுளையோ, மதத்தையோ நம்புவதில்லை.
ரொமேனியாவில் கம்யூனிசம் வேகமாகப் பரவியது. மதச் சுதந்திரம் பறிபோயிற்று. ஆராதனை உரிமை பறிக்கப்பட்டது. மதம் ஒரு கட்டுக்கதை என்று கம்யூனிஸ்டுகள் நம்பினார்கள். இந்தக் கருத்தை அவர்கள் மக்களிடம் தீவிரமாக விதைத்தார்கள். மதம் என்பது பெரியவர்களுக்கோ அல்லது சிந்திக்கும் திறனுடையவர்களுக்கோ தகுதியானதல்ல என்று அவர்கள் நினைத்தார்கள், சொன்னார்கள். ரொமேனியாவுக்கு வந்த ரஷ்யப் போர்வீரர்கள் இப்படிப்பட்ட சிந்தனை கொண்டவர்களே. ஏனென்றால், அவர்கள் இந்தச் சிந்தனையோடுதான் அவர்கள் நாட்டில் வாழ்ந்தார்கள், வளர்ந்தார்கள். எனவே, அவர்களுக்கு மதத்தைப்பற்றியோ, தேவனைப்பற்றியோ ஒன்றும் தெரியாது. அதைப்பற்றிய கடுகளவு அறிவுகூட கிடையாது. தேவனைப்பொறுத்தவரை, ஆவிக்குரிய காரியங்களைப்பொறுத்தவரை, அவர்கள் குருடர்கள் என்று சொல்லலாம். அவர்களெல்லாம் மூளைச்சலவைச் செய்யப்பட்டவர்கள்.
அவர்கள் தங்கள் குடும்பத்தையும், வீட்டையும்விட்டு வெகு தொலைவில் இருப்பதை அங்கிருந்த கிறிஸ்தவர்கள் உணர்ந்தார்கள். இந்தப் போர்வீரர்கள், ஒருவேளை, தாங்கள் செய்யவிரும்பாத ஒன்றைச் செய்துகொண்டிருக்கக்கூடும் என்று அவர்கள் நினைத்தார்கள். அவர்களுடைய வாழ்க்கையில் தேவன் என்று ஒருவர் இல்லை. தேவனைப்பற்றி யாரும் அவர்களுக்குக் கற்பிக்கவில்லை. அப்படித்தான், அவர்கள் வாழ்ந்தார்கள், வளர்ந்தார்கள். அவர்களுக்குக் கம்யூனிச ஆட்சியையும், கம்யூனிஸ்ட் தலைவர் ஸ்டாலினைப்பற்றியும் மட்டுமே தெரியும். இதைத்தான் அவர்கள் நாட்டில் அவர்களுக்குக் கற்பித்தார்கள். எனவே, இந்த வீரர்களுக்கும் ஏதோவொரு தாகம் இருக்கக்கூடும் என்று அங்கிருந்த கிறிஸ்தவர்கள் நினைத்தார்கள். ஆனால், அது என்ன தாகம் என்று அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
உம்ப்ராண்ட் பல மொழிகளில் புலமை பெற்றவர் என்று ஏற்கெனவே சொன்னேன். அவருக்கு ரஷ்ய மொழி நன்றாகத் தெரியும். அது இப்போது அவருக்கு மிகவும் வசதியாகவும், உதவியாகவும் இருந்தது. ரஷ்ய மொழி தெரிந்ததால் அவரால் இந்த ரஷ்ய வீரர்களிடம் உரையாட முடிந்தது. அவர் இந்த வீரர்களிடம் பேசினார். அவர்களுக்கு நற்செய்தியை அறிவித்தார். அவர் இந்த வீரர்களுக்கு நற்செய்தி அறிவித்தபோது பல அற்புதமான அனுபவங்களைப் பெற்றார். நம்பமுடியாத அளவுக்கு இந்த ரஷ்ய வீரர்கள் தேவனுடைய வார்த்தையின்மேல் பசிதாகம் கொண்டிருந்தார்கள். அது அவர்களுக்கே தெரியவில்லை.
ஒருமுறை அவர் ஒரு போர்வீரனுக்கு நற்செய்தி அறிவித்தபோது, மத்தேயு நற்செய்தியிலிருந்து பேசத் தொடங்கினார். மலைப்பிரசங்கத்தைப்பற்றிப் பேசத் தொடங்கினபோது, அந்த வீரர் அவரைத் தடுத்துநிறுத்தி, "இது முற்றிலும் புதிய வாழ்க்கை முறையாக இருக்கிறததே! இது எவ்வளவு அழகாக இருக்கிறது!” என்றார். ரிச்சர்ட் தொடர்ந்து ஆண்டவராகிய இயேசுவைப்பற்றியும், அவர் செய்த அற்புதங்களைப்பற்றியும் கூறினார். இயேசு சிலுவையில் அறையப்படுவதைப்பற்றிப் பேசினார். அதைக் கேட்டதும் அந்தப் போர்வீரர் முகங்குப்புற விழுந்து அழுதார். "என்னது! அவரைப்பற்றி இவ்வளவு காரியங்கள் சொன்னபோது, எனக்கு எவ்வளவு நம்பிக்கை ஏற்பட்டது. கடைசியில் அவர் இறந்துவிட்டார் என்று சொல்வதற்காகவா இத்தனையும் சொன்னீர்கள்? இப்படிப்பட்டவர் பிறர் தன்னைக் கைதுசெய்யவும், சிலுவையில் அறையவும் எப்படி அனுமதித்தார்?" என்று ஆச்சரியத்துடன் வினவினார். அதற்கு ரிச்சர்ட், "நான் அவருடைய கதையை இன்னும் முடிக்கவில்லையே!" என்றார். அவர் மரணத்தை வென்று மீண்டும் உயிர்த்தெழுந்ததைப்பற்றித் தொடர்ந்து பேசினார். அதைக் கேட்டதும் அந்த வீரன் குதித்தெழுந்து அறையில் நடனமாடத் தொடங்கினான். அந்த வீரன் அற்புதமான முறையில் இரட்சிக்கப்பட்டான். அவனை ஜெபிக்குமாறு ரிச்சர்ட் சொன்னார். அவனுக்கு ஜெபத்தைப்பற்றி ஒன்றும் தெரியாது. யாரும் ஜெபித்தையும் அவன் பார்த்ததில்லை. அவன் தரையில் முழங்கால்படியிட்டு, அண்ணார்ந்துபார்த்து, "தேவனே! நீர் மிகவும் நல்லவர், நான் நீராகவும், நீர் நானாகவும் இருந்தால், நீர் செய்த எல்லாக் கெட்ட காரியங்களுக்காக நான் உம்மை மன்னிக்க மாட்டேன். ஆனால் நீர் உண்மையாகவே மிகவும் நல்லவர். எனவே, நான் உமக்கு என் நன்றியைத் தெரிவிக்கின்றேன். நான் உம்மை என் முழு இருதயத்தோடு நேசிக்கிறேன்," என்றான். அதுவே அவன் ஜெபம். தேவனைப்பற்றிய எந்தப் புரிதலும் இல்லாத ரஷ்யப் போர்வீரர்கள் தேவன்மேல் எவ்வளவு பசி தாகம் கொண்டிருந்தார்கள் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.
அந்த நேரத்தில் அறுப்பு மிகுதி என்பதையும், அறுவடை கண்ணெதிரே ஆயத்தமாக இருக்கிறது என்பதையும் மற்ற கிறிஸ்தவர்களும் உணர்ந்தார்கள். ஆம், கிறிஸ்துவே அந்த வீரர்களின் உடனடித் தேவை. எனவே, பல கிறிஸ்தவர்கள் நற்செய்தி அறிவிக்க ஆரம்பித்தார்கள். ஆனால், அந்தச் சூழ்நிலையில் நற்செய்தி அறிவிப்பது மிகவும் ஆபத்தானது. ஏனென்றால், அந்த நேரத்தில் ரொமேனியாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. கம்யூனிஸ்ட் அரசாங்கச் சட்டத்தின்படி நற்செய்தி அறிவிப்பது சட்டவிரோதம். கம்யூனிஸ்ட் ஆட்சியில் ஒருவன் தான் கிறிஸ்தவன் என்று சொல்ல முடியாது, ஒருவன் தன்னைக் கிறிஸ்தவன் என்றுகூடச் சொல்ல முடியாத நிலைமையில் அவன் மற்றவர்களுக்கு நற்செய்தி அறிவிக்க முடியுமா? குறிப்பாக ரஷ்ய வீரர்களுக்கு நற்செய்தி அறிவிக்க முடியுமா? சாத்தியமேயில்லை. அப்படிச் செய்தால், அது கண்டுபிடிக்கப்பட்டால், அவனை நிச்சயமாகக் கைதுசெய்து, முகாமுக்கு இழுத்துச்சென்று, சித்திரவதை செய்தார்கள். எனவே, சட்டவிரோதம் என்று தெரிந்தாலும், பாடுகள் ஏற்படும் என்று தெரிந்தாலும் நற்செய்தி அறிவித்தே தீர வேண்டும் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். எனவே, பல கிறிஸ்தவர்கள் ஒன்றிணைந்து, அந்த வீரர்களுக்கு நற்செய்தியை அறிவிப்பதற்கான வழிகளை ஆராய்ந்தார்கள்.
ஒரேவொரு வழியில்தான் மிகவும் வீரியமாக நற்செய்தி அறிவிக்க முடியும் என்று அவர்கள் கண்டுபிடித்தார்கள். வேதாகமத்துக்கு தடை. அவர்களிடம் வேதாகமம் இல்லை. அரசாங்கம் அவர்களிடமிருந்து வேதாகமங்களைப் பறித்துக்கொண்டது. எனவே, மறைத்து வைத்திருந்த வேதகாமத்தையும் பகிரங்கமாகக் கொண்டுசெல்ல முடியாது. பலரிடம் இன்னும் வேதாகமம் இருந்தது. மறைத்துவைத்திருந்தார்கள். அவர்கள் கிறிஸ்தவ இலக்கியங்களையும், வேதாகமத்திலிருந்து சில பகுதிகளையும், சில நேரங்களில், முழு நற்செய்தியையும் துண்டுப்பிரசுரங்களாக அச்சிட்டு, அவைகளைச் சிறுவர்களிடம் கொடுத்து, ரஷ்ய வீரர்களிடம் கொண்டுபோய்க் கொடுக்கச் சொன்னார்கள். பெரும்பாலும் 10வயத்துக்குக் குறைந்த சிறுவர்கள் இதைச் செய்தார்கள். அவர்கள் அதைப் போர்வீரர்களிடம் கொடுத்து, அவர்களுடன் உரையாடினார்கள். ரிச்சர்ட்டின் மகன் மிஹாய்க்கு அப்போது ஏழு அல்லது எட்டு வயது இருக்கும். அவன் போய் ரஷ்ய வீரர்களிடம் பேசினான். அந்த வீரர்களில் பலர் தங்கள் குழந்தைகளை ரஷ்யாவில் விட்டுவந்திருந்தார்கள். பல ஆண்டுகளாக அவர்கள் தங்கள் குடும்பத்தைப் பார்க்கவில்லை. எனவே, இந்தச் சிறுவர்களைப் பார்த்ததும், அவர்கள் இந்தக் குழந்தைகளுடன் மிகவும் அன்பாகப் பேசினார்கள். அவர்களுக்கு சிறிய மிட்டாய்களையும் கொடுத்தார்கள். குழந்தைகள் வீரர்களுடன் பேசினார்கள். அவர்களுடைய துப்பாக்கிகளைப்பற்றியும், வேறு பல காரியங்களைப்பற்றியும் பேசியபின் அவர்களிடம் ஒரு துண்டுப்பிரதியைக் கொடுத்தார்கள். வீரர்களால் அதை மறுக்கமுடியவில்லை. எனவே, அதை வாங்கிக்கொண்டார்கள். அப்படித்தான் கிறிஸ்துவின் நற்செய்தி ரஷ்ய இராணுவ முகாம்களுக்குள் நுழையத் தொடங்கியது, குழந்தைகள் மிகவும் அபூர்வமாகவே கைதுசெய்யப்பட்டார்கள். ஏனெனில் குழந்தைகள் நற்செய்தியை அறிவிப்பார்கள் என்று யாரும் சந்தேகப்படவில்லை. ஆனால், அவர்கள் தேவனுடைய வேலையைச் செய்தார்கள்.
அந்தக் காலத்தில் ரஷ்யாவில் கைக்கடிகாரங்களுக்கு பெரிய தட்டுப்பாடு இருந்தது. இந்த ரஷ்ய வீரர்கள் ஐரோப்பாவுக்குச் சென்றபோது அங்கு எல்லா மக்களும் கைக்கடிகாரங்களைப் பயன்படுத்துவதைக் கண்டார்கள். அவர்களுக்குக் கைக்கடிகாரங்கள்மேல் அப்படியொரு மோகம். ஆகையால், கைக்கடிகாரங்களை வாங்குவதற்கு அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வதற்கு ஆயத்தமாயிருந்தார்கள். கண்ணியமற்ற வீரர்கள் தெருவில் நடந்துபோனவர்களைத் தடுத்தி நிறுத்தி, அவர்களுடைய கைகளிலிருந்து கைக்கடிகாரத்தைப் பிடுங்கினார்கள். வேறு சிலர் பண்டம்மாற்றுவதுபோல் எதையாவது கொடுத்து பிறருடைய கைக்கடிகாரங்களை வாங்கினார்கள். இன்னும் சிலர் பிறரிடம் கைக்கடிகாரங்களை அன்பளிப்பாகக் கேட்டு வாங்கினார்கள். சில வீரர்கள் தங்கள் இரண்டு கைகளிலும் இரண்டு கடிகாரங்களைக் கட்டியிருந்தார்கள். நேரமும், வாய்ப்பும் கிடைத்தபோது அவர்கள் அவைகளை ரஷ்யாவிற்கு அனுப்பினார்கள்.
ரஷ்ய வீரர்களின் இந்தக் கடிகார மோகத்தை ரொமேனியர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். ஆம், அவர்கள் இதை வியாபாரமாக்கினார்கள். ஆனால், கிறிஸ்தவர்கள் இந்த நிலைமையை வேறுவிதமாகப் பார்த்தார்கள். ஆம், அவர்கள் இதை நற்செய்தி அறிவிப்பதற்கான வாய்ப்பாகக் கருதினார்கள். ரிச்சர்ட் கைக்கடிகாரங்களை எடுத்துக்கொண்டு இராணுவ முகாம்களுக்குள் சென்றார். அவர் அங்கே உட்கார்ந்தார். வீரர்கள் கூட்டம்கூடினார்கள். அப்போது அவர் கைக்கடிகாரங்களை அவர்களுக்குக் காட்டி, அவர்களோடு உரையாடத் தொடங்கினார். மிக இயல்பாக, "ஆ, இங்கு பீட்டர் யார், பவுல் யார்?" என்று கேட்டார். இவைகளெல்லாம் பொதுவான பெயர்கள் இல்லையா? எனவே, அங்கு யாராவது ஒருவருடைய பெயர் பீட்டர் அல்லது பவுலாக இருக்கும் என்று அவருக்குத் தெரியும். யாராவது ஒருவர், "என் பெயர் பீட்டர்" அல்லது "நான்தான் பால்" என்று சொன்னார். உடனே, ரிச்சர்ட், "உன் பெயர் பீட்டரா? உனக்கு பீட்டர் என்பவரைப்பற்றித் தெரியுமா? உன் பெயர் பவுலா? பவுலைப்பற்றி நான் சொல்கிறேன். கேட்கிறாயா?" என்று ஆரம்பித்து பீட்டரைப்பற்றியும், பவுலைப்பற்றியும், அவர்கள் யாருடைய சீடர்கள் என்பதையும், இயேசுவைப்பற்றியும் சொன்னார். இந்த ரஷ்யர்களில் சிலர், "நீர் எங்களுக்குக் கைக்கடிகாரங்களை விற்க வரவில்லை என்று தெரிகிறது. மாறாக ஏதோவொரு மதத்தைக் கொடுக்க வந்திருக்கிறா ய் என்று தெரிகிறது. பரவாயில்லை. தொடர்ந்து சொல்," என்று சொன்னார்கள். ஏனெனில், அவர்கள் தாகமாக இருந்தார்கள். மதத்தைப்பற்றிப் பேசுவது சட்டவிரோதமானது என்று தெரிந்திருந்தும், அவர்கள் தேவனைப்பற்றி அறிய விரும்பினார்கள்.
கூடிய விரைவில் இது அவருக்கு ஒரு வாடிக்கையாக மாறிற்று. ரிச்சர்ட் அவர்களை அடிக்கடிச் சந்தித்தார். அவர்களைச் சந்திக்கப் போகும்போதெல்லாம் ஒன்றிரண்டு கைக்கடிகாரங்களைக் கொண்டுசென்றார். அவரைப் பார்த்ததும் வீரர்கள் கூடிவந்தார்கள். அவர் அவர்களுக்குத் தன்னிடம் இருந்த கைக்கடிகாரங்களைக் காட்டினார். கைக்கடிகாரங்களை வைத்துக்கொண்டு அவர் அவர்களுக்கு நற்செய்தி அறிவித்தார். தேவனைப்பற்றிப் பேசினார். உயர் அதிகாரி ஒருவர் அந்தப் பக்கமாக நடந்துசெல்வதையோ அல்லது வேவுகாரன் ஒருவன் தங்களைக் காட்டிக்கொடுத்துவிடுவான் என்று சந்தேகித்தாலோ அவர்களில் ஒரு வீரன் தன் கையை முழங்காலில்கீழ் நுழைத்து ஒருவிதமான சமிக்ஞை செய்தான். உடனே அவர்கள் தங்கள் உரையாடலை நிறுத்திவிடுவார்கள். ரிச்சர்ட் கடிகாரங்களைப்பற்றி பேசத் தொடங்கிவிடுவார். எனவே, அதிகாரிகள் அவர்களைக் கடந்து செல்லும்போது, "ஓ, கடிகார விற்பனை அமோகமாக நடக்கிறது," என்று நினைத்துக்கொண்டார்கள். அதிகாரிகள் அந்த இடத்தைவிட்டுச் சென்றதும், அந்த வீரர் முழங்காலிலிருந்து கையை எடுத்ததும், அவர்கள் தொடர்ந்து நற்செய்தியைப்பற்றிப் பேசினார்கள். இவ்வாறு, ரொமேனியாவில் பரவியிருந்த பல ரஷ்ய வீரர்கள் தங்கள் வாழ்க்கையில் முதன்முறையாக நற்செய்தியைக் கேட்டார்கள்.
ஒரு ரஷ்ய வாலிபன், போர்வீரன், ரிச்சர்டுடன் அமர்ந்து உரையாடிக்கொண்டிருந்தான். ஆண்டவராகிய இயேசு எம்மாவுக்குச் செல்லும் சாலையில் இரண்டு மனிதர்களுடன் உரையாடிக்கொண்டு செல்வதைப்பற்றி ரிச்சர்ட் பேசிக்கொண்டிருந்தார். எம்மாவுக்குச் சென்றபின் இயேசு இன்னும் வெகுதூரம் செல்வதுபோல் காண்பித்தார் என்று சொல்லப்பட்ட பகுதிக்கு வந்தார்கள், அவர்கள் அவரை நோக்கி: நீர் எங்களுடனே தங்கியிரும், சாயங்காலமாயிற்று, பொழுதும் போயிற்று, என்று அவரை வருந்திக் கேட்டுக்கொண்டார்கள். அப்பொழுது அவர் அவர்களுடனே தங்கும்படி உள்ளே போனார். இந்தப் பகுதியை வாசித்தபோது, அந்த வீரன் ரிச்சர்டைத் தடுத்து நிறுத்தி, "என்னது? அதை மீண்டும் சொல்லமுடியுமா!" என்று வினவினான். ரிச்சர்ட், "நீர் எங்களுடனே தங்கியிரும," என்று அவர்கள் வற்புறுத்தினார்கள் என்ற வார்த்தைகளை மீண்டும் வாசித்தார். "கொஞ்சம் பொறுங்கள். இயேசு ஏன் அவர்களுடன் தங்கவில்லை? அவர்கள் அவரிடம் கேட்கும்வரை அவர் ஏன் காத்திருந்தார்? ஏன் காத்திருந்தார்? அவர் காத்திருக்க வேண்டியதில்லையே! அவர்கள் கேட்காமலே அவர் தங்கியிருக்கலாமே!" என்று கேட்டார். ரிச்சர்ட் இதைப்பற்றிச் சிந்தித்ததில்லை. "ஏனென்றால், இயேசு கண்ணியமானவர். அவர் யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை. அவர் பலவந்தமாக உள்ளே நுழையமாட்டார். பிறர் தம்மை அழைப்பதற்காக அவர் காத்திருக்கிறார். அவர் வாசலில் நின்று தட்டுகிறார்; கதவைத் திறந்து அழைத்தால் அவர் உள்ளே வருவார்," என்று பதில் சொன்னார். இதைக் கேட்டு ஆச்சரியப்பட்ட இராணுவ வீரர், "உங்கள் இயேசுவின் கண்ணியம் என்னைத் திக்குமுக்காடச்செய்கிறது. அவர் என்னை வென்றுவிட்டார். இந்தக் கம்யூனிஸ்டுகள் உங்கள் இயேசுவைப்போல் கண்ணியமானவர்கள் இல்லை. அவர்கள் தங்கள் கருத்துக்களை உங்கள்மேல் திணிக்கிறார்கள். வானொலி, திரைப்படங்கள், சுவரொட்டிகள் என எல்லாவகையிலும் அவர்கள் தங்களையும், தங்கள் கருத்துக்களையும் உங்கள்மீது திணிக்கிறார்கள். பயமுறுத்தல், பலவந்தம் எனப் பல வகைகளில் அவர்கள் தங்களைத் திணிக்கிறார்கள். ஆனால், உங்கள் இயேசு பிறர் தம்மைத் தேர்ந்தெடுப்பதற்காகக் காத்திருக்கிறார், அவர் பிறருடைய விருப்பத்தை மதிக்கிறார். இது ஆச்சரியமாக இருக்கிறது. அவர் என்னைக் கவர்ந்துவிட்டார்," என்று சொன்னார். இந்தக் குணம் இந்தப் போர்வீரனை முற்றிலும் கவர்ந்துவிட்டது. இவன் மிகவும் அற்புதமான முறையில் இரட்சிக்கப்பட்டான். மிக விரைவில் அவன் ரஷ்யாவிற்கு வேதாகமத்தைக் கடத்த ஆரம்பித்தான், ஆனால், அப்படிக் கடத்தியபோது அவன் பிடிபட்டான், கைதுசெய்யப்பட்டான், அவன் கைதுசெய்யப்பட்டபின், அவனை வேறு யாரும் மீண்டும் பார்க்கவில்லை. அவனுக்கு என்னவாயிற்று யாருக்கும் தெரியாது.
தலைமறைவாக வாழ்ந்த தேவ மக்கள் நற்செய்தியைப் பல்வேறு வழிகளில் அச்சிடத் தொடங்கினார்கள். லூக்கா நற்செய்தி முழுவதையும் ஒரு சிறு புத்தகமாக அச்சிட்டார்கள். ஆனால், அவர்கள் அதை லூக்கா நற்செய்தி என்ற பெயரிலோ, கிறிஸ்தவப் பத்திரிகை என்ற பெயரிலோ விநியோகிக்கவில்லை. மாறாக, அந்தப் புத்தகத்தின் அட்டையில் ஸ்டாலின், லெனின், வேறு சில ரஷ்யத் தலைவர்கள், சில சிறந்த கம்யூனிஸ்ட் தொண்டர்கள் இவர்களின் அழகான படத்தை அச்சிட்டார்கள். அந்தப் புத்தகத்தின் முதல் சில பக்கங்களில் அந்தத் தலைவரின் வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாகச் சொல்லியிருந்தார்கள். பத்தாவது பக்கத்திலிருந்து லூக்கா நற்செய்தி ஆரம்பிக்கும். தலைமறைவாக வாழ்ந்த கிறிஸ்தவர்கள் இந்தப் புத்தகத்தை எடுத்துக்கொண்டு கம்யூனிஸ்ட்களின் ஆர்ப்பாட்டங்களுக்கும், கூட்டங்களுக்கும் சென்றார்கள். அங்கு அவர்கள் இந்தச் சிறு புத்தகங்களை விற்பனை செய்தார்கள். அழகான அட்டைப்படத்தையும், அந்தத் தலைவரைப்பற்றிய விவரங்களையும் பார்த்த, படித்த மக்கள் அந்தச் சிறு புத்தகங்களை விலைக்கு வாங்கினார்கள். அவர்கள் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்து பத்தாவது பக்கத்துக்கு வந்தபோதுதான், தங்கள் கையில் இருப்பது வேதாகமம் என்று தெரிய வந்தது. ஆனால், அந்தப் புத்தகத்தை விற்றவர்கள் ஏற்கெனவே அங்கிருந்து போய்விட்டார்கள். இவ்வாறு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கு அவர்கள் நற்செய்தியைக் கொண்டுசென்றார்கள்.
கிழக்கு ஐரோப்பாவில் கம்யூனிசம் ஆழமாக வேரூன்றியது. ரொமேனியாவில் கிறிஸ்தவர்களுக்கான ஓர் அமைப்பு இருந்தது. அதை அவர்கள் கிறிஸ்தவர்களுக்கான பாராளுமன்றம் என்றழைத்தார்கள். இவர்கள் ஒரு பெரிய மாநாடு நடத்த ஏற்பாடு செய்தார்கள். இந்தப் பெரிய மாநாட்டில் பங்கேற்க ரொமேனியாவில் இருந்த எல்லாக் கிறிஸ்தவ அமைப்புகளும், நிறுவனங்களும், 4000 போதகர்களும், ஊழியக்காரர்களும், பாதிரியார்களும், மதகுருமார்களும் அழைக்கப்பட்டார்கள். அவர்கள் அந்த மாநாட்டுக்கு வந்தபோது, கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அனைத்து அதிகாரிகளும்கூட அங்கு இருப்பதைக் கவனித்தார்கள். கம்யூனிச நாட்டில் எப்படிக் கிறிஸ்தவனாக வாழ்வது, எப்படி நற்செய்தி அறிவிப்பதுபோன்ற காரியங்களைப் பேசுவதற்காக அவர்கள் கூடினார்கள். ரிச்சர்டும் அழைப்பை ஏற்று வந்திருந்தார். அவரைப் பெரும்பாலான கிறிஸ்தவர்களுக்குத் தெரியும். பல ஊழியக்கார்கள் பேசினார்கள். பாதிரியார்கள், குருமார்கள் உரையாற்றினார்கள். அவர்களெல்லாம், "கிறிஸ்தவமும், கம்யூனிசமும் கைகோர்த்துச் செயல்படமுடியும்;, கம்யூனிசத் தலைவர் ஸ்டாலினுக்கு நாம் விசுவாசமாக இருக்க வேண்டும்; கிறிஸ்தவம், கம்யூனிசம் ஆகிய இரண்டின் அடிப்படைக் கொள்கைகள் ஒரே மாதிரியானவை. எனவே, நாம் கம்யூனிசத்தோடு சேர்ந்து முன்னேறலாம், மக்களின் நலனுக்காக உழைக்க முடியும்," என்ற வகையில் பேசினார்கள். ரொமேனியா முழுவதிலும் இருந்த ஸ்தாபனங்களின் தலைவர்கள் கம்யூனிசத் தலைவர்களுக்குப் பயந்து தேவனை முழுமையாக மறுதலித்துப் பேசினார்கள்.
இதைக் கேட்டுக்கொண்டிருந்த சபினா ரிச்சர்டிடம், "ரிச்சர்ட், நீ எழுந்து நின்று இவர்கள் கிறிஸ்துவின் முகத்தில் துப்பிய அவமானத்தைக் கழுவு," என்றார். ரிச்சர்ட் அவளிடம், "நான் அதைச் செய்தால், நீ உன் கணவனை இழந்துவிடுவாய். இதற்குச் சம்மதமா?" என்று கேட்டார். அதற்கு அவள், “என் கணவன் ஒரு கோழையாக இருப்பதை நான் பார்க்க விரும்பமில்லை,” என்றாள். ரிச்சர்ட் எழுந்து நின்று பேசினார். "கம்யூனிசமும் கிறிஸ்தவமும் இணைந்து செயல்பட முடியாது, கைகோர்த்துச்செல்ல முடியாது. ஏனென்றால், எங்களைப்பொறுத்தவரை தேவனுக்குத்தான் முதன்மையான இடம். ஸ்டாலின் எங்கள் தலைவர் இல்லை. தேவனே எங்கள் தலைவர். நாங்கள் தேவனுக்கே விசுவாசமாக இருப்போம். நாங்கள் தேவனைச் சேவிப்போம்," என்றார். தேவனுக்கு முதன்மையான இடம் கொடுக்க வேண்டும் என்பதைப்பற்றி அவர் மிகத் தெளிவாகப் பேசினார், அவர் நற்செய்தியையும் அறிவித்தார். அந்த மாநாடு நாடு முழுவதும் ஒலிபரப்பாகிக்கொண்டிருந்தது. கம்யூனிஸ்ட் அதிகாரிகள் அனைவரும் அவர் தைரியமாக நற்செய்தி அறிவித்ததைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அந்த மாநாட்டில் இருந்த பார்வையாளர்களில் சிலர் அவர் பேசியபோது கைதட்டி, ஆரவாரம் செய்தார்கள். ஏனென்றால், தாங்கள் நினைத்ததைச் சொல்வதற்குத் தங்களிடம் தைரியம் இல்லாதபோது அந்தத் தைரியம் ஒருவருக்கு இருந்ததே என்பதற்காக அவர்கள் அவரைப் பாராட்டினார்கள், மற்றவர்கள் மிகவும் பயந்தார்கள். "அடடா! இவரை எனக்குத் தெரியும். இவர் இப்படிப் பேசியதால், நான் கைதட்டியதால் கம்யூனிச அதிகாரிகள் என்னைப் பிடுத்துவிடுவார்கள்," என்று அவர்கள் பயந்து நடுங்கினார்கள். ரிச்சார் உம்ப்ராண்ட்டைக் கொன்றுவிடுவார்கள் என்று அவர்களுக்குத் தெரியும்.
அந்த நேரத்தில், ரொமேனியாவில் இருந்த பல சபைகள் கம்யூனிசத்திற்கு அடிபணிந்தன, கம்யூனிசத்திற்கு அடிபணியாவிட்டால் சித்திரவதை அனுபவிக்கவேண்டியிருக்கும் என்று அவர்களுக்குத் தெரியும். எனவே, பாடுகளையும், பயமுறுத்தல்களையும் தவிர்ப்பதற்காக அவர்கள் கம்யூனிசத்திற்கு அடிபணிந்தார்கள் என்று சொல்லலாம். நாளடைவில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள்தான் சபைகளின் தலைவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள். அவர்கள் தேர்ந்தெடுத்த இந்தத் தலைவர்கள் பெரும்பாலும் கிறிஸ்தவர்களே அல்ல, அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள். ஒரு சபையில் மொத்தம் 30 பேர் மட்டுமே இருக்க முடியும். அதற்குமேல் ஓர் ஆள் இருந்தால் அவ்வளவுதான். இவ்வாறு சபைகள் வளராதபடிக்குப் பார்த்துக்கொண்டார்கள். மேலும், சபைகளில் என்ன பேச வேண்டும், என்ன பேசக்கூடாது என்பதையும் கட்சிதான் தீர்மானித்தது. ஆகையால் வேதாகமத்தைப் பற்றியோ, இரட்சிப்பைப்பற்றியோ பிரசங்கிக்க முடியவில்லை. காலப்போக்கில் கட்சியின் கட்டுப்பாடுகள் அதிகரித்தன. சபைகள் கம்யூனிசத்தின் பிரச்சாரக் கூடங்களாக மாறின. இதைக் கிறிஸ்தவர்கள் உணர்ந்தார்கள். அதனால் அவர்கள் தலைமறைவாக வாழ ஆரம்பித்தார்கள்.
கிறிஸ்தவர்கள் இரகசியமாகக் கூட ஆரம்பித்தார்கள். அவர்கள் தலைமறைவாக வாழ்ந்தார்கள். உண்மையில், சில நேரங்களில் அவர்கள் கட்டிடத்தின் அடித்தளங்களில்தான் கூடினார்கள். சில நேரங்களில் அவர்கள் மிகவும் ஒதுக்குப்புறமான காடுகளில் கூடினார்கள். அவர்கள் இரகசியமாக நற்செய்தி அறிவித்தார்கள். நற்செய்தியைச் சிறிய துண்டுப்பிரதிகளாக அச்சிட்டு இரகசியமாக அவைகளை விநியோகம்செய்தார்கள். இதுபோன்ற பல காரியங்களை செய்தார்கள். ரிச்சர்ட் தலைமறைவு சபையின் ஒரு முக்கிய நபர். அவர் ஒரு பாஸ்டர் என்று ஏற்கனவே பலருக்குத் தெரியும். கிறிஸ்தவத் தலைவர்களும், கம்யூனிசத் தலைவர்களும் கூடிய மாநாட்டில் அவர் பேசியபிறகு எல்லாருக்கும் அவரைத் தெரியவந்தது.
1948ஆம் வருடம் பெப்ருவரி 29ஆம் தேதி. ரிச்சர்ட் வழக்கம்போல் சபைக்கு நடந்துபோய்க்கொண்டிருந்தார். அவர்களிடம் கார் கிடையாது. அப்படி நடந்துபோய்க்கொண்டிருந்தபோது, ஒரு வேன் தன்னைப் பின்தொடர்வதை அவர் கவனித்தார். ஓடிவிடலாம் என்று நினைப்பதற்குள், வேனிலிருந்து இரண்டு பேர் இறங்கி, அவரைப் பிடித்து, வேனின் பின்பக்கத்தில் ஏற்றி, அவருடைய கண்களைத் துணியால் கட்டி, வேகமாகச் சென்றார்கள். தான் எங்கு செல்கிறேன் என்று அவருக்குத் தெரியாது. விசாரிப்பதற்காகவா அல்லது தூக்கில்போடவா என்று அவருக்குத் தெரியாது. வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ள "பயப்படாதே" என்ற கட்டளைதான் முதன்முதலாக அவருடைய நினைவுக்கு வந்தது. எனவே, அவர், "இதோ, இங்கு நிலைமை என் கட்டுப்பாட்டில் இல்லை. என்ன நடக்கப்போகிறது என்று எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால், எனக்கு ஒன்று தெரியும், 'பயப்படாதே' என்று கர்த்தர் சொல்லியிருக்கிறார்," என்று தனக்குள் பேசிக்கொண்டார்.
அவருடைய மனைவி சபினா அவருக்காகக் காத்திருந்தார், மதியம் வந்தது, மாலை வந்தது, இரவு வந்தது; ஆனால், ரிச்சர்ட் வரவில்லை. மறுநாள் வந்தது; ஆனால், ரிச்சர்ட் திரும்பவில்லை. அவள் காத்திருந்தாள், காத்திருந்தாள், கலங்கிய கண்கள்; கனத்த இருதயம். ஒரு வாரம், இரண்டு வாரம், ஒரு மாதம். நாட்கள், வாரங்கள், மாதங்கள் கடந்தன. ஒருநாள் ஒருவன் அவருடைய வீட்டுக்கு வந்தான். அவன் தான் ஒரு கைதி என்றும், அப்போதுதான் விடுதலையானதாகவும், தான் ரிச்சர்டுடன் சிறையில் இருந்ததாகவும், ரிச்சர்டை தூக்கில்போட்டதாகவும், அவருடைய அடக்கத்தில் கலந்துகொண்டதாகவும் கூறினான். சபினாவால் அதை நம்ப முடியவில்லை. ஆனால், நம்பாமலும் இருக்கமுடியவில்லை. அந்த நபர் சொன்ன தகவலை அவளால் உறுதிசெய்யமுடியவில்லை. ரிச்சர்ட் எங்கு இருக்கிறார் என்று அவளுக்குத் தெரியவில்லை. உயிரோடிருக்கிறாரா அல்லது இறந்துவிட்டாரா? யாரும் அவளுக்கு எந்தத் தகவலும் சொல்லவில்லை. அவர் தூக்கில் தொங்கினாரா அல்லது அவரைத் தூக்கில்போட்டார்களா என்று அவருக்கு ஒன்றும் தெரியாது. அந்தக் கைதி சொன்னது உண்மைதானா என்ற சந்தேகம் அவருக்கு எழுந்தது.
ரிச்சர்ட் கடந்துபோன பாதையை நம்மால் கற்பனைசெய்து பார்க்க முடியாது, அவரைச் சிறைச்சாலைக்குக் கொண்டுசென்றார்கள். அவர் இருந்த சிறைச்சாலையின் நிலைமையை நாம் புரிந்துகொள்வது மிகக் கடினம். சிறைகளைப்பற்றி நாம் எவ்வளவுதான் கற்பனைசெய்தாலும் அவர் கொண்டுசெல்லப்பட்ட சிறைச்சாலையின் உண்மையான நிலைமையைப் புரிந்துகொள்ள முடியாது. கைதிகளின் உடலையும் உள்ளத்தையும் உடைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே அந்தக் காலத்தில் கம்யூனிச ஐரோப்பாவில் சிறைச்சாலைகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. அதிகாரிகள் கைதிகளிடமிருந்து தகவல்களைத் திரட்டினார்கள், அரசுக்கு எதிரானவர்களை அடையாளம் காட்டுமாறு வற்புறுத்தினார்கள், அவர்களைப்பற்றிய விவரங்களைக் கேட்டு துன்புறுத்தினார்கள், சித்திரவதைசெய்தார்கள், அவர்களுடைய இடங்கள், பெயர்கள்போன்ற விவரங்களைக் கேட்டு அடித்துத் துன்புறுத்தினார்கள். கைதிகள் கிறிஸ்தவர்கள் என்றால், அவர்கள் கிறிஸ்துவை மறுதலிக்குமாறு வற்புறுத்தினார்கள்; முழு மனதுடன் கம்யூனிசத்தைத் தழுவும் அளவுக்கு அவர்களை மூளைச்சலவை செய்தார்கள். சிறைச்சாலைகளின் நோக்கம் இதுவே. அந்த நேரத்தில் கம்யூனிச ஐரோப்பாவில் என்ன நடக்கிறது என்று மேற்கத்திய நாடுகளுக்கு எதுவும் தெரியவில்லை. அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் மக்கள் கம்யூனிசத்தைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். அது ஒரு சுவையான விவாதப் பொருளாக மட்டுமே இருந்தது. ஆனால், கம்யூனிச ஐரோப்பாவில் உண்மையில் என்ன நடக்கிறது என்பது யாருக்கும் எதுவும் தெரியாது .
கம்யூனிசம் வரும்போது கூடவே நாத்திகமும் வரும். நாத்திகவாதிகள் தேவன் இல்லை என்று நம்புவதால் கம்யூனிசத்தில் கட்டுப்பாடு இல்லாமல் போய்விடுகிறது என்பது உண்மைதான். எனவே, கம்யூனிசச் சிறைகளில் கிறிஸ்தவர்கள் அனுபவித்த சித்திரவதைகளை விவரிப்பது மிகக் கடினம். தான் சிறைச்சாலைகளில் அனுபவித்த சித்திரவதைகளைத் தன்னால் விவரிக்கமுடியாது என்று ரிச்சர்ட் தன் புத்தகத்தில் எழுதுகிறார். அதை விவரிப்பதற்கு அவர் போராடுகிறார். கிறிஸ்தவர்கள் மிகவும் கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டார்கள். கத்தியால் குத்தினார்கள். சூடான கம்பிகளால் குத்தினார்கள். நான்கு முதுகெலும்புகளை உடைக்கும் அளவுக்கு அவர் கடுமையாகத் தாக்கப்பட்டார், கால் நரம்பைச் சேதப்படுத்தி, நடக்கமுடியாத அளவுக்குக் குதிகால்களில் அடிக்கப்பட்டார், தலைகீழாகத் தொங்கவிடப்பட்டு, குத்துச்சண்டைப் பயிற்சிக்காகப் பயன்படுத்தும் பைகளைப்போல அடித்தார்கள். ஆணிகள் நிறைந்த கைவிலங்குகளை மாட்டினார்கள். உறைபனியில் நடுங்கும்போது அவர்களின் மணிக்கட்டுகள் கிழிந்துவிடும். உலோகத்துண்டுகள் நிறைந்த பெட்டிகளில் நிற்கவைத்தார்கள். அசையாமல் நின்றால் காயம் ஏற்படாது, ஆனால், ஒரு பெட்டிக்குள் ஆடாமல் அசையாமல் எவ்வளவு நேரம் நிற்க முடியும்? களைத்துப்போய் அசையும்போது உலோகத்துண்டுகள்மேல் சாய வேண்டியிருக்கும். அவை அப்போது உடலைக் கிழித்துவிடும்.
ஆனால் இவைகளைவிடக் கொடுமையானது மூளைச்சலவை. கைதிகளை ஒரு ஸ்டூலில் உட்காரவைப்பார்கள். நேராக உட்கார வேண்டும், தலையை ஆட்டவோ அசைக்கவோ கூடாது. தலையைக் கைகளால் தாங்கிப்பிடிக்கக் கூடாது. கண்களை மூடாமல் திறந்தே வைத்துக்கொள்ள வேண்டும். "கம்யூனிசம் நல்லது, கம்யூனிசம் நல்லது, கிறிஸ்தவம் முட்டாள்தனமானது, அதை விட்டுவிடு. தேவன் இல்லை, தேவன் இல்லை, கம்யூனிசம் நல்லது, " என்று காலை 5 மணிமுதல் இரவு 10 மணிவரை அந்த ஸ்டூலில் உட்கார்ந்து கேட்டுக்கொண்டேயிருக்க வேண்டும். "போதும், நிறுத்து" என்று சொல்லும் அளவுக்கு, அவர்களுக்குப் பைத்தியம் பிடிக்கும் அளவுக்குக் கத்திக்கொண்டேயிருந்தார்கள்.
சில சமயங்களில், ரிச்சர்ட் தன்னைச் சித்திரவதை செய்தவர்களிடம், "உங்கள் இதயத்தில் ஈவு இரக்கமே இல்லையா?" என்று கேட்பாராம். அதற்கு அவர்கள், "முட்டைகளை உடைக்காமல் ஆம்லெட் செய்ய முடியாது," என்று கம்யூனிஸ்ட் தலைவர்கள் சொன்னதை மேற்கோள் காட்டுவார்களாம்.
ரிச்சர்ட் சிறையில் சித்திரவதைகளை அனுபவித்தபோதும், அவரைச் சித்திரவதை செய்தவர்கள் எதிர்பார்த்ததுபோல், அவர் கிறிஸ்துவை மறுதலிக்கவில்லை, தலைமறைவான சபையின் விசுவாசிகளைப்பற்றியோ அல்லது தலைவர்களைப்பற்றியோ எந்தத் தகவலும் கொடுக்கவில்லை. இந்த நிலைமையில் சபினாவும் மிகவும் அவதிப்பட்டார். சபினாவுக்கு என்னவாயிற்று என்று ரிச்சர்ட் பின்னர் தெரிந்துகொண்டார். சபையின் தலைவர்களைக் கைதுசெய்து சிறையில் அடைத்துவிட்டால் தலைமறைவான சபை அழிந்துவிடும் என்றும், கிறிஸ்தவர்கள் சிதறிவிடுவார்கள் என்றும் கம்யூனிசத் தலைவர்கள் நினைத்தார்கள். ஆனால், ரிச்சர்ட் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டதும், சபினா அவர் விட்டுச்சென்ற வேலையைத் தொடர ஆரம்பித்தார். ரிச்சர்ட் திரும்பிவரப்போவதில்லை என்று சபினா உணர்ந்தாள், ஆகையால், அவர் தலைமறைவாக வாழ்ந்த கிறிஸ்தர்களுக்கிடையில் வேலைசெய்ய ஆரம்பித்தார். அவர் சபையை வளர்க்க, காக்கத் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தார். அவரைப்போல் பல பெண்கள் ஊழியம்செய்தார்கள். கிறிஸ்தவர்கள் பெருகுவதையும், கிறிஸ்தவம் தழைத்து வளர்வதையும் தங்களால் தடுக்க முடியாது என்பதைக் கம்யூனிசத் தலைவர்கள் உணர்ந்தார்கள். தலைமறைவான சபை ஓங்கி வளர்வதை நிறுத்தமுடியவில்லை. பல பெண்கள் மும்முரமாக உழைத்தார்கள். விரைவில் பெண்களையும் கைதுசெய்யத் தொடங்கினார்கள்.
சபினாவும் கைதுசெய்யப்பட்டார். அவர் ஒரு முகாமுக்குக் கொண்டுசெல்லப்பட்டார். கைதிகளைச் சித்திரவதைசெய்யும் முகாம். அங்கு அவரை ஒரு கால்வாய் கட்டும் வேலையில் ஈடுபடுத்தினார்கள். திடகாத்திரமான ஒரு வாலிபன் இந்த வேலையைச் செய்வதே மிகக் கடினம். பசிபட்டினியால் வாடும் ஒரு பெண்ணை இந்த வேலையைச் செய்யச் சொன்னால் எப்படியிருக்கும்! சிறை அதிகாரிகள் பெண்களைக் கேவலமாக நடத்தினார்கள். அது மிகவும் குளிரான நாடு என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். காவலர்கள் கைதிகளை அடிக்கடி வெளியே அழைத்துச்சென்றார்கள். காவலர்கள் அவர்களை ஆற்றில் வீசிவிட்டு, அவர்கள் கஷடப்படுவதை வேடிக்கை பார்த்தார்கள். பின்னர் மீன்களைப் பிடிப்பதுபோல் அவர்களைப் பிடித்து இழுத்து கரையில் போட்டார்கள். அவர்கள் குளிரில் நடுங்குவதைப் பார்த்து நகைத்தார்கள். கைதிகள் பெரும்பாலும் பட்டினிதான். பசிதாங்காமல் பலர் மரங்களிலிருந்து பட்டைகளைக் கிழித்துச் சாபிட்டார்கள். கால்நடைகளைப்போல் புல்லைச் சாப்பிட்டார்கள், உயிர் வாழ வேண்டுமே! வேறு வழி ! மூன்று வருடங்கள், சபினாவின் சிறைவாசம் இப்படித்தான் கழிந்தது.
சபினா கைதுசெய்யப்பட்டபோது, மிஹாய்க்கு ஒன்பது வயதிருக்கும், உண்மையாகவே அவன் அப்போது தெருவில் நின்றான். ஒரு பெண்மணி அவனுக்கு அடைக்கலம் கொடுத்தார், அவனைத் தன் வீட்டில் ஏற்றுக்கொண்டு வளர்த்தார். அவன் அவரோடு சில காலம் வாழ்ந்தான். அவன் அந்த வீட்டில் இருப்பதை இரகசிய போலீசார் கண்டுபிடித்தார்கள். ஒருநாள் அவர்கள் அந்தப் பெண்மணியின் வீட்டுக் கதவைத் தட்டி, அவளை வெளியே இழுத்து அடித்து உதைத்தார்கள். பற்கள் உடைந்தன; கால்கள் முறிந்தன. அவள் செய்த குற்றம் என்ன? அவள் ஒரு கிறிஸ்தவனுக்கு அடைக்கலம் கொடுத்தாள். அதற்கான தண்டனை அது. மிஹாய் இதையும், இதுபோன்ற பல மோசமான காரியங்களையும் கண்கூடாகப் பார்த்தான். கிறிஸ்தவர்களுக்கு அடைக்கலமும், ஆதரவும் கொடுத்தவர்களுக்கு இதுதான் நேர்ந்தது. அந்த நேரத்தில், அவனுடைய விசுவாசம் ஆடிப்போயிற்று. இவ்வளவு கொடுமைகள் நடக்கும்போது, அக்கிரமம் அரசாளும்போது, தேவன் ஒருவர் இருக்கிறார் என்று எப்படி நம்ப முடியும் என்று அவன் வினவினான்? எனவே, அந்தச் சிறுவயதில் அவன் தேவனைக் கேள்வி கேட்க ஆரம்பித்தான். அதற்குமுன், அவனுக்கு எந்தச் சந்தேகமும், கேள்வியும் எழவில்லை. அதற்குமுன் அவன் தன் விசுவாசத்தில் உறுதியாக இருந்தான். உறுதியாக இருப்பதாக அவன் நினைத்தான். ஆனால், இப்போது அவனால் விசுவாசிக்க முடியவில்லை. அது மிகவும் கடினமாக இருந்தது. அவனுக்கு 11 வயது இருக்கும்போது, அவன் வேலைக்குப் போக ஆரம்பித்தான். உயிர்வாழ வேண்டுமே? பட்டினியால் சாகாமல் இருக்க வேண்டுமே! சாப்பிட வேண்டுமே! பணம் வேண்டுமே! எனவே, 11 வயதில் வேலை செய்யத் தொடங்கினான்.
சபினா கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகுதான், அவர் எங்கு இருக்கிறார் என்று மிஹாய்க்குத் தெரியவந்தது. மிஹாய்க்கு அப்போது 11 வயது இருக்கும். சபினாவைப் பார்ப்பதற்கு மிஹாயைக் கூட்டிக்கொண்டு சென்றார்கள். இது கம்யூனிச அதிகாரிகள் பயன்படுத்திய ஒரு யுக்தி. அவர்கள் கைதிகளின் பிள்ளைகளை அழைத்துக்கொண்டுபோய், அவர்களிடம் காட்டி, "நீ கர்த்தராகிய இயேசுவை மறுதலித்து, கம்யூனிசத்தை ஏற்றுக்கொண்டால், உனக்குத் தெரிந்த சிலருடைய பெயர்களைச் சொன்னால், நீ உன் குழந்தையோடு சந்தோசமாக இருக்கலாம். இல்லையென்றால், உன் குழந்தைக்கு என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும்?" என்று கைதிகளை மிரட்டினார்கள். பொறுக்க முடியாத பல பெண் கைதிகள், மிரட்டலுக்குப் பயந்து, வளைந்து கொடுத்தார்கள், மிஹாய் சிறைக்குக் கொண்டுசெல்லப்பட்டான். அவன் தன் தாயைப் பார்க்கக் காத்திருந்தான். சபினா வெளியே வந்தார். காவலர்கள் அவரை வெளியே இழுத்துக்கொண்டு வந்தார்கள். மிஹாய் அதிர்ச்சியடைந்தான். சபினா அழுக்காகவும், ஒல்லியாகவும், பரிதாபமாகவும் இருந்தார். அவரைப் பார்த்ததும் பயங்கரமாக அடித்திருக்கிறார்கள் என்று தெரிந்தது. அடையாளம் காண முடியாத அளவுக்கு மிக மோசமாக இருந்தார். தன் தாயைப் பார்த்ததும் மிஹாய் உறைந்துபோனான். தன் மகனைப் பார்த்ததும் சபினா சொன்ன முதல் வார்த்தைகள் என்ன தெரியுமா? "மிஹாய், இயேசுவை விசுவாசி". இதைக் கேட்ட சிறைக்காவலர்கள் உக்கிர கோபத்தோடு அவரைத் தரதரவென்று உள்ளே இழுத்துகொண்டுபோய் அடித்தார்கள். அவரை அடிக்கும் சத்தத்தை மிஹாய் கேட்டான். இந்த அனுபவம் மிஹாய்யுக்குள் மிக ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால், அவன், "இந்த நிலைமையிலும் என் அம்மா இயேசுவை மறுதலிக்கவில்லையென்றால், நான் அவரை விசுவாசிக்க இது போதும்," என்று நினைத்தான். அந்த நேரத்தில் அவன் கர்த்தராகிய இயேசுவை உண்மையாகவே விசுவாசித்தான்.
அந்த அனுபவம் அவனுக்குள் பெரிய தாக்கத்தையும், மாற்றத்தையும் ஏற்படுத்தியது. ஏனென்றால், கிறிஸ்துவின் அன்பு தான் இதுவரை அனுபவித்த அனைத்தையும் மிஞ்சியது என்று அவன் உணர்ந்தான். இதற்குப்பின், மிஹாயை ஓர் உறைவிடப் பள்ளியில் சேர்த்தார்கள்.இதுவும் கம்யூனிச அரசின் இன்னோர் உத்தியாகும். சிறுவர்களை, இளைஞர்களை, அழைத்துச் சென்று, இதுபோன்ற உறைவிடப் பள்ளிகளில் சேர்த்து மூளைச்சலவை செய்தார்கள். தேவனைப்பற்றிய எண்ணமே இல்லாத, கம்யூனிசத்தைப்பற்றி மட்டுமே சிந்திக்கக்கூடிய ஓர் இளையதலைமுறையை உருவாக்க அரசு முயன்றது. இப்படிப்பட்ட ஓர் உறைவிடப்பள்ளியில்தான் மிஹாய் தனியாக இருந்தான். பள்ளியில் எல்லாப் பாடங்களையும் நாத்திகத்தோடு தொடர்புபடுத்திப் பேசினார்கள். என்ன கற்றுக்கொடுத்தாலும் சரி, கடைசியில் தேவன் இல்லை, கம்யூனிசம் நல்லது என்ற பாடத்துக்கு வந்துவிடுவார்கள். அங்கு கற்பிக்கப்பட்ட இதுபோன்ற மூளைச்சலவை செய்யும் பாடங்களில் தேறியவர்களுக்குச் சிவப்பு நிறக் கழுத்துப்பட்டை கொடுத்தார்கள். இந்தக் கழுத்துப்பட்டை அவர்களுக்கு ஒரு வெகுமதி. கழுத்துப்பட்டை பெற்ற குழந்தைகள் நல்ல கம்யூனிஸ்ட் உறுப்பினர்களாக மாறினார்கள். அவர்களுக்குச் சில சலுகைகள் வழங்கப்பட்டன.
மிஹாய் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்றதால், அவனுக்கும் அந்தச் சிவப்பு நிறக் கழுத்துப்பட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரு பெரிய விழாவில்தான் அவனுக்கு இந்தச் சிறிய கழுத்துப்பட்டை வழங்குவதாக இருந்தது. அவனை மேடைக்கு அழைத்தபோது அவன் மேடைக்குச் சென்றான். ஆனால், அவன் அதை வாங்க மறுத்துவிட்டான். "என் அம்மாவையும், அப்பாவையும் கைதுசெய்து, சிறையில் அடைத்தவர்களின் சிவப்புக் கழுத்துப்பட்டையை நான் ஒருபோதும் அணியமாட்டேன்," என்று கூறினான். அங்கு நின்றுகொண்டிருந்த ஆசிரியர் அவனை வெளியே இழுத்துக்கொண்டு பள்ளி முதல்வரிடம் கொண்டுபோய் நிறுத்தினார். முதல்வர் அவனைப் பள்ளியிலிருந்து வெளியேற்றினார், அதற்குப்பின் மிஹாய் அந்தப் பக்கம் திரும்பிவரவேயில்லை.
சபினா சிறையில் அடைக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆயின. அந்த மூன்று வருடங்களில், சிறுவன் மிஹாய் அவனுடைய வயதுடைய பல குழந்தைகள் அனுபவித்திராத, அனுபவிக்கக்கூடாத பல துன்பங்களை அனுபவித்தான். அந்த மூன்று ஆண்டுகள் அவனாகவே ஏதாவது செய்யவேண்டியிருந்தது. சில நேரங்களில் உணவு இல்லை; பள்ளிகளிலிருந்து வெளியேற்றப்பட்டான்; அவனை ஏற்றுக்கொண்டவர்கள் கைதுசெய்யப்பட்டார்கள், அடிக்கப்பட்டார்கள், தெருவில் இழுத்துச்செல்லப்பட்டார்கள். இவையனைத்தையும் மிஹாய் கண்கூடாய்க் கண்டான். இத்தனைத் துன்பங்களை அனுபவித்தாலும், அவனுடைய தாயின் அன்பின் காரணமாக, அவன் மிகவும் மாறிவிட்டான். உண்மையாகவே, அவனுடைய விசுவாசம் மேன்மேலும் வளர்ந்தது, பலமானது.
ரிச்சர்ட் இன்னும் சிறையில்தான் இருந்தார். ஆம், அவர் பல ஆண்டுகள் சிறையில் இருந்தார். அவர் சிறையில் இருந்தபோதும் நற்செய்தி அறிவிப்பதை ஒருபோதும் நிறுத்தவேயில்லை. சில நேரங்களில் சிறையில் அவரைத் தனி அறையில் அடைத்துவைத்தார்கள். வேறு பல நேரங்களில் 100 அல்லது 200 கைதிகளுடன் சேர்த்து அடைத்துவைத்தார்கள். அறை நிரம்பி வழிந்தது. அந்த நேரத்தை அவர் நற்செய்தி அறிவிப்பதற்குப் பயன்படுத்தினார். எனவே, நற்செய்தி அறிவிப்பதற்குச் சூழ்நிலைகள் ஒரு தடையாக இருக்கவில்லை. அதில் அவர் பெருமகிழ்ச்சி அடைந்தார். சிறையில் இருந்த கிறிஸ்தவக் கைதிகள் ஒவ்வொருவராக எழுந்து நின்று பிரசங்கித்தார்கள். சிலர் கற்பித்தார்கள், தேவனைப்பற்றிப் பேசாத நேரமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவர்கள் வாழ்ந்தார்கள். சிறையில் கிறிஸ்தவர்கள் மட்டும் அல்ல. பல கம்யூனிஸ்டுகளும் கைதிகளாக இருந்தார்கள். கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் இருந்தார்கள். ஒருவேளை அரசாங்கத்தின் கொள்கைமாற்றத்தின் காரணமாகவோ அல்லது தன் வளர்ச்சிக்குத் தடை என்று கருதியதாலோ இவர்களைச் சிறையில் அடைத்திருந்தார்கள். ஏராளமான அரசியல் கைதிகளும் இருந்தார்கள். தங்களுக்கு விரோதமானவர்கள் என்று அரசு கருதிய முதலாளிகள், பேராசிரியர்கள், வியாபாரிகள் என பலதரப்பட்ட கைதிகள் அங்கு இருந்தார்கள். எனவே, சாதாரண விவசாயிகள்முதல் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள்வரை பலதரப்பட்ட மக்கள் இருந்தார்கள். கிறிஸ்தவர்கள் தேவனைப்பற்றிப் பிரசங்கித்தார்கள், கற்பித்தார்கள். இதைக் கேட்ட, கண்ட சிறைக் காவலர்கள் ரிச்சர்டை வெளியே இழுத்து, அடித்து, மீண்டும் அறைக்குள் தள்ளிவிட்டார்கள். இதைக்குறித்து பின்னாட்களில் ரிச்சர்ட, "சிறையில் ஒரு நல்ல ஏற்பாடு இருந்தது. நான் பிரசங்கித்தேன். அவர்கள் என்னை அடித்தார்கள். எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்தோம்," என்று வேடிக்கையாகச் சொன்னார். அவரை அடித்து மீண்டும் சிறையின் அறைக்குள் தூக்கி எறிந்தபிறகு, மற்ற கிறிஸ்தவர்கள் அவருக்கு உதவினார்கள். அப்போது அவர், "நல்லது, சகோதரர்களே, நான் எங்கே இருந்தேன்?" என்று கேட்டு தொடர்ந்தார்.
ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையின் பல பாதிரியார்களும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள். ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபை மிகப் பெரிய சபை. அதற்கு நீண்டகாலப் பாரம்பரியம் உண்டு. இந்த அன்பான வயதான பாதிரியார்களுக்கு இப்போது பகட்டான பட்டங்கள், அலங்காரமான அடையாளங்கள் இல்லை; பிரமாண்டமான சடங்குகள், ஆடம்பரமான ஆடைகள், சிறப்பு ரொட்டிகள், கண்கவர் கட்டிடங்கள் எல்லாம் போய்விட்டன. எதுவும் இல்லை. இந்த நிலைமையில் தங்களால் ஒன்றேவொன்றுதான் செய்யமுடியும், ஜெபிப்பதைத்தவிர வேறொன்றும் செய்யமுடியாது என்பதை உணர்ந்தார்கள். இவர்களில் பலர் சிறைச்சாலையில் இருந்தபோது இரட்சிக்கப்பட்டார்கள். மதரீதியான சடங்குகள், சம்பிரதாயங்கள், பாரம்பரியங்கள் எல்லாவற்றிலுமிருந்து அவர்கள் விடுதையானார்கள். அவர்கள் தேவனைக் கண்டடைந்தார்கள்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், கொடூரமான துன்பத்திலும் சித்திரவதையிலும், அங்கிருந்த கிறிஸ்தவர்கள் தாக்குப்பிடித்தார்கள் என்றால் அது அற்புதமே! இந்த அசாதாரணமான சூழ்நிலைகளில், சித்திரவதைகளில், தேவன் அவர்களுக்கு அசாதாரணமான காரியங்களைச் செய்தார்.
ரிச்சர்ட் பல வருடங்கள் சிறையில் இருந்தார். சிறையில் பேனா, தாள், வேதாகமம் எதுவும் கிடையாது. அவர் வேதாகமத்தை மறக்க ஆரம்பித்தார், வசனங்களை நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லை, காரியங்களைத் தெளிவாக நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லை. அது மட்டுமின்றி, அவர்கள் பட்டினியால் வாடினர்கள் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். வாரத்திற்கு ஒருமுறை ஒரு துண்டு ரொட்டி கொடுத்தார்கள். அந்த ஒரு ரொட்டித்துண்டில்தான் ஒரு வாரத்தைக் கழிக்க வேண்டும். சில கைதிகளின் மனதைக் கலங்கடிக்க அவர்களுக்கு ஏதோவொரு ஊசிமருந்து கொடுத்தார்கள்.அதனால் அவர்களால் சரியாகச் சிந்திக்கக்கூட முடியவில்லை. ஒவ்வொரு நாளும் தாக்கப்பட்டார்கள், சித்திரவதை செய்யப்பட்டார்கள், மூளைச்சலவை செய்யப்பட்டார்கள். அவர்களால் தங்கள் எண்ணங்களை ஒருமுகப்படுத்த முடியவில்லை. பல ஆண்டு சிறைவாசத்திற்குப்பின் பலரால் ஒழுங்காகச் சிந்திக்கவோ, பேசவோ முடியவில்லை. ஆனால், ரிச்சர்டைப் பொறுத்தவரை, அவர் நான்கு காரியங்களை உறுதியாகப் பற்றிப்பிடித்துக்கொண்டார். அவர், “நான் வேதாகமத்தை அறியாத ஒரு போதகர்,” என்று அவர் அடிக்கடி கூறுவாராம். அவரிடம் எதுவும் இல்லை, எல்லாவற்றையும் மறக்க ஆரம்பித்தார். ஆனால் இந்த நான்கு விஷயங்களையும் அவர் அறிந்திருந்தார். "தேவன் நிஜம், மெய்; இயேசு என் இரட்சகர்; நித்தியத்தைப்பற்றிய மகிமையான நம்பிக்கை உண்டு; தேவனுடைய அன்புதான் வழி," என்று அவர் அறிந்திருந்தார். அவர் இவைகளை உறுதியாகப் பற்றிக்கொண்டார். அவர் சிறையில் இருந்த பல வருடங்களில் இந்த நான்கு எளிய உண்மைகளை உறுதியாகப் பிடித்துக்கொண்டார்.
இப்படிப்பட்ட அசாதாரணமான சூழ்நிலைகளில், இந்தக் கைதிகள் சில அசாதாரணமான காரியங்களை அனுபவித்தார்கள். அவர்கள் உடலிலும், உள்ளத்திலும், உணர்ச்சியிலும் மிகவும் பலவீனமாகவும், சோர்வாகவும் இருந்த வேளைகளில், இதற்குமேல் தாக்குப்பிடிக்க முடியாது என்பதுபோன்ற வேளைகளில், திடீரென, அவர்களுடைய அறை முழுவதும் ஒளியினால் நிரம்பிற்று. சுவர்கள் வைரத்தால் மூடப்பட்டதுபோல் ஆயிற்று. நம்பமுடியாத அளவுக்கு இனிமையான இசை வந்தது. அறையில் இசையும் ஒளியும் நிறைந்ததுபோல் இருந்ததாம். தேவன் தங்களோடு இருக்கிறார் என்பதை அவர்கள் அறிந்ததால், அவர்கள் தங்கள் பசி, வலி, வருத்தம், துக்கம், எல்லாவற்றையும் மறந்தார்கள்.
தனிமைச் சிறையில் இருந்தபோது தனக்கு ஏற்பட்ட இன்னோர் அனுபவத்தைப்பற்றி ரிச்சர்ட் பின்னாட்களில் பேசினார். தனிமைச் சிறை அனுபவங்கள் மிகவும் கசப்பானவை. ஒருவனை மனரீதியாக உடைப்பதற்காகவே அவனைத் தனிமைச் சிறையில் அடைத்தார்கள். தனிமைச் சிறையின் நோக்கம் அதுதான். கைதிகளை இருட்டறையில் அடைத்தார்கள். அந்த அறை எந்த அளவுக்கு இருட்டாக இருக்கும் என்றால் உங்கள் கையை உங்கள் முகத்துக்கு நேராக வைத்தாலும் அதை உங்களால் பார்க்க முடியாது. அந்த அறையில் ஜன்னல்கள் இருக்காது. கதவுக்குக்கீழ் சிறு வெளிச்சம்கூட வராது. இப்படிப்பட்ட அறைக்குள் கைதிகளை அடைத்தார்கள். தனிமைச் சிறை! வெளிச்சம் கொஞ்சம்கூட கிடையாது. எந்த சத்தமும் வராது. சிறைக் காவலர்கள்கூட நடக்கும்போது சத்தம் வராதவாறு தங்கள் காலணிகளில் ஒருவிதமான ரப்பர் அணிந்திருந்தார்கள், எனவே, காவலர்கள் நடக்கும் சத்தம்கூடக் கேட்காது. மயான அமைதி என்று சொல்லலாம். காது மடல்களில் இரத்தம் துடிக்கும் சத்தத்தைக் கேட்க முடியும். அந்த அளவுக்கு அமைதி. சாதாரணமான ஒருவன் இப்படிப்பட்ட சூழ்நிலையில் சீக்கிரம் உடைந்துபோவான். இந்த அறையில் இருப்பவனுக்கு நாளும், கிழமையும் தெரியாது, பகலும் இரவும் தெரியாது. சித்திரவதை செய்வதற்காக மட்டுமே அந்தச் சிறையிலிருந்து அவனை வெளியே இழுத்துக்கொண்டு போனார்கள். புலன்கள் சீக்கிரம் செத்துப்போகும். வலியும், வேதனையும் மிச்சம். சாமான்யர்கள் இந்த நிலைமையில் சீக்கிரம் உடைந்துபோவார்கள். எனேவ, பலவீனமான பல கைதிகள் இவைகளைத் தாக்குப்பிடிக்க முடியாமல் சரணடைந்துவிடுவார்கள். ஆனால், ரிச்சர்ட் இதற்கு விதிவிலக்கல்ல. அவரும் இவைகளைச் சந்தித்தார், சகித்தார். அவர் உண்மையில் போராடினார். அவர் மூன்று வருடங்கள் தனிமைச் சிறையில் வாடினார்.
தனிமைச் சிறையில் இருந்தபோது ஒருநாள் அவர், “என்னால் இதற்குமேல் தாக்குப்பிடிக்க முடியாது,” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டார். அவர் மிகவும் பலவீனமாக உணர்ந்தார். தன்னால் முடியாது என்று நினைத்தார். கர்த்தரைப்பற்றி நினைப்பதற்கும், அவரைப் பற்றிக்கொள்வதற்கும், அவரை விடாப்பிடியாய்ப் பிடித்துக்கொள்வதற்கும் அவர் போராடினார். போராடிக் களைத்துப்போனார். அவர் கர்த்தரைநோக்கிக் கதறினார். ஆண்டவரே, "இந்த இடத்தில் பேச்சுத்துணைக்குக்கூட ஓர் ஆள் இல்லை. நீர் என்னிடம் பேச வேண்டும், நீர் என்னிடம் பேச வேண்டும்," என்று கூறினார். ஆம், தேவன் ரிச்சர்டிடம் பேசினார். தேவன் பேசுவார் என்று ரிச்சர்ட் எதிர்பார்க்கவில்லை. ரிச்சர்ட் ஒரு குரலைக் கேட்டார், அவர் அந்தக் குரலைத் தன் காதுகளால் கேட்டார். அவர், "உன் பெயர் என்ன?" என்று கேட்டார். அவர் அதிர்ச்சியடைந்து, "நிச்சயமாக, ஆண்டவரே, என் பெயர் உமக்குத் தெரியும். என் பெயர் உமக்குத் தெரியும் என்று எனக்குத் தெரியும்," என்றார். ஆனால், ஆதியாகமத்தில் கர்த்தர் ஆதாமிடம் கேட்ட கேள்வியை அவர் நினைவுகூர்ந்தார். அவர், "ஆதாமே, நீ எங்கே இருக்கிறாய்?" என்று தேவன் ஆதாமிடம் கேட்டார். ஆதாம் இருக்கும் இடம் நிச்சயமாகத் தேவனுக்குத் தெரியும், அப்படியானால் தேவன் அவனிடம் ஏன் இந்தக் கேள்வியைக் கேட்டார். ஆதாம் இருக்கும் இடம் தேவனுக்குத் தெரியுமா, தெரியாதா என்பதல்ல கேள்வி. தான் எங்கு இருக்கிறேன் என்பதை ஆதாம் அறிய வேண்டும் என்பதே அந்தக் கேள்வியின் பொருள். தான் இருக்க வேண்டிய இடம் இதுவல்ல, இந்த இடம் நல்ல இடம் அல்ல என்பதை ஆதாம் அறிய வேண்டும் என்பதே அந்தக் கேள்வியின் கரு. ஒருவேளை இந்தக் கேள்வியின் பொருளும் இதுதானோ என்று ரிச்சர்ட் உணர்ந்தார். அவர் அதைப்பற்றி யோசித்தார். "உன் பெயர் என்ன?" சரி, என் பெயர் ரிச்சர்ட் என்று எனக்குத் தெரியும். இந்த ரிச்சர்ட் என்பவர் யார்? அவர் இங்கிலாந்தில் தன் விசுவாசத்தினிமித்தம் இரத்தசாட்சியாக மரித்தவர். அவருடைய பெயரைத்தான் தன் பெற்றோர் தனக்கு வைத்தார்கள் என்று ரிச்சர்டுக்குச் சிறுவயதிலேயே தெரியும். தன் விசுவாசத்திற்காகத்தான் அவர் மரித்தார் என்று அவருக்குத் தெரியும். அந்த நினைவுகள் வந்தபோது தன்னால், "என் பெயர் ரிச்சர்ட்," என்று சொல்ல முடியாது என்று நினைத்தார். தன்னால் அப்படிச் சொல்ல முடியும் என்று அவர் நினைக்கவில்லை. அப்படியானால், "நான் யார்?" என்று நினைத்தார், "நான் யார்?" "ஒருவேளை நான் ஒரு பாஸ்டர். ஆனால், இப்போது நான் ஒரு பாஸ்டர் இல்லை. என்னால் யாரையும் நடத்த முடியாது." எனவே, அவர், "இயேசுவே, எனக்குப் பெயர் இல்லை, உம் பெயரைத் தாங்க என்னை அனுமதியும்," என்றார். அந்தத் தருணத்தில், தான் எதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்பதை ரிச்சர்ட் உணர்ந்தார். "கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்." அந்த நேரத்தில் கம்யூனிச சோவியத் யூனியனில் இருந்த இந்தக் கைதிகள், ஆண்களும் பெண்களும், உண்மையில் பவுலுடன் சேர்ந்து, "அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான உபத்திரவம் ," என்றால் என்னவென்பதைப் புரிந்துகொண்டார்கள். ஏனென்றால், அவர்கள் நித்தியத்தைப் பார்த்தார்கள், தேவனுடைய பிரசன்னத்தை அனுபவித்தார்கள்.
எட்டரை ஆண்டுகளுக்குப்பிறகு, ரிச்சர்ட் சிறையிலிருந்து விடுதலையானார். சித்திரவதைகள், அடி, உதை, தனிமைச் சிறைவாசம், பட்டினி- எதுவும் அதிகாரிகள் எதிர்பார்த்த பலன் கொடுக்கவில்லை. எனவே, அவர்கள் அவரை விடுதலை செய்தார்கள். எனினும், அவரை விடுதலை செய்தபோது, "நீ இப்போது சுதந்தரமாகப் போகிறாய். ஆனால், வெளியே போனபின் பிரசங்கிக்கக் கூடாது. மதத்தைப்பற்றிப் பேசக்கூடாது. மதசம்பந்தமான எந்தக் காரியத்திலும் ஈடுபடக்கூடாது," என்று நிபந்தனை விதித்தார்கள். நிபந்தனைகளை மீறினால் அவரை மீண்டும் கைதுசெய்து சிறையில் அடைத்துவிடுவதாகக் கூறினார்கள். இந்த நிபந்தனைகளுக்கு ரிச்சர்ட் கட்டுப்பட்டு நடப்பார் என்று அரசு அதிகாரிகள் நினைத்தார்கள். எட்டரை ஆண்டுகளுக்குப்பின் விடுதலையாகி அவர் தன் மனைவி, மகனோடு வந்து சேர்ந்தார். அத்தனை வருடங்களில் தன் மனைவியும், மகனும் தலைமறைவான சபையில் மிகவும் மும்முரமாக ஈடுபாடு கொண்டிருப்பதை அவர் அறிந்தார். அவர் விட்டுச்சென்ற ஊழியத்தை அவர்கள் தொடர்ந்துசெய்துகொண்டிருந்தார்கள். தலைமறைவான சபை செழித்து வளர்ந்தது. இந்தச் சூழ்நிலையிலும்கூட பலர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள், கிறிஸ்தவர்கள் தேவனை இன்னும் ஆழமாக அறிந்துகொண்டார்கள். அரசு அதிகாரிகள் விதித்த நிபந்தனைகளைத் தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ரிச்சர்டுக்குத் தெரியும். அவர் தன் குடும்பத்தினருடன் பேசினார், தன்னால் தேவனுடைய வேலையைச் செய்யாமல் இருக்க முடியாது என்று சொன்னார். தேவனுக்காகச் செய்யவேண்டிய வேலை நிறைய இருந்தது. எனவே, அவர் தன் ஊழியத்தைத் தொடர்ந்தார். அது மிகவும் ஆபத்தான செயல். அதனால் வரும் ஆபத்துகள் அவருக்கு நன்றாகத் தெரியும். ஆனால், அவர் தேவனுடைய வேலையைச் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
அந்த நாட்களில் ரொமேனியாவில் கிறிஸ்தவர்கள் ஓரிடத்தில் பகிரங்கமாகக் கூடமுடியவில்லை. கிறிஸ்தவர்களை அரசு இயந்திரம் தேடித்தேடி வேட்டையாடியது. அந்த நாட்களில் எல்லா இடங்களிலும் அரசு உளவாளிகள் இருந்தார்கள். எனவே, அரசாங்கத்துக்குத் தெரியாதவாறு, கிறிஸ்தவர்கள் பல்வேறு இடங்களில் தலைமறைவாகக் கூடினார்கள். காடுகளில் ஒதுக்குப்பிரகாரமாகக் கூடினார்கள். பிறந்தநாள் விழாவைப்போல் அல்லது வேறு ஏதொவொரு கொண்டாட்டம்போல் கூட்டங்களை ஏற்பாடு செய்தார்கள். உளவாளிகள் யாராவது அங்கு நடந்து சென்றால், உடனே அவர்கள், "பிறந்த நாள் வாழ்த்துக்கள்" என்று சொல்வார்கள். அப்போது யாருக்கும் சந்தேகம் வராது. இப்படித்தான் அவர்கள் கூடினார்கள். வேறு வழியில்லை. அவர்கள் ஒருபோதும் ஒரேயிடத்தில் கூடவில்லை. பல்வேறு இடங்களில் பல்வேறு நேரங்களில் கூடினார்கள்.
ரிச்சர்ட் விடுதலையாகிக் கொஞ்சக் காலத்திற்குப்பிறகு இன்னொரு கிறிஸ்தவன் அவரை இரகசியக் காவலரிடம் காட்டிக்கொடுத்தான். அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த முறை நிலைமை முன்பைவிட மோசமாக இருந்தது. ஏனென்றால், என்ன நடக்கும் என்று அவருக்குத் தெரியும். ஆனால், இப்போது அரசியல் களத்தில் நிலைமை கொஞ்சம் மாறியிருந்தது. சோவியத் யூனியன்மீது பன்னாட்டு அழுத்தம் அதிகம் இருந்தது, ரஷ்யாவில் நிலைமை தாங்கள் நினைத்ததுபோல் இல்லை என்றும், ஸ்டாலின் தாங்கள் நினைத்ததுபோல் பெரிய தலைவர் இல்லை என்றும் அமெரிக்காபோன்ற நாடுகளில் உள்ளவர்கள் உணரத்தொடங்கினர். கம்யூனிசத்தின் இரும்புத்திரைக்குப்பின்னால் பயங்கரமான காரியங்கள் நடந்துகொண்டிருந்தன. அந்த நேரத்தில், கிறிஸ்தவ மிஷனரிகள் ரஷ்யாபோன்ற நாடுகளுக்குள் ஊடுருவத் தொடங்கினர், அங்கு என்ன நடக்கிறது என்பதை அவர்கள் நேரடியாகப் பார்த்தார்கள்.
அரசியல் களத்தில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாகவும், தேவனுடைய அற்புதச் செயலினாலும், ஒரு நாள் ரிச்சர்ட்டை அவருடைய சிறையிலிருந்து வெளியே இழுத்துச்சென்றார்கள். அவருடைய கண்களைத் துணியால் கட்டியிருந்தார்கள். தன்னைத் தூக்கில் போடப்போகிறார்கள் அல்லது சுட்டுக்கொல்லப் போகிறார்கள் என்று அவர் நினைத்தார். தன்னை எங்கு, எதற்காக, கொண்டுபோகிறார்கள் என்று அவருக்குத் தெரியாது. யாரும் அவரிடம் ஒன்றும் சொல்லவில்லை, பேசவில்லை. கொஞ்ச நேரத்திற்குப்பின் அவரைத் தரையில் தூக்கி எறிந்தார்கள். அங்கு உலோகங்கள் உரசிக்கொள்கிற சத்தம் கேட்டது. பின்னர் எல்லாம் அமைதியாயிற்று. தன்னைச் சுட்டுக்கொல்வார்கள் என்று அவர் காத்திருந்தார். ஆனால், யாரும் அவரைச் சுடவில்லை, தூக்கில் போடவில்லை. எதுவும் நடக்கவில்லை. எனவே, அவர் தன் கண்ணைக் கட்டியிருந்த துணியைக் கழற்றினார். கண்ணைத் திறக்க முடியவில்லை. வெளிச்சத்தில் கண் கூசிற்று. ஏறக்குறைய குருடானர் என்று சொல்லலாம். நீண்டநாள் இருட்டறையில் இருந்துவிட்டு வெளிச்சத்திற்கு வந்தால் இதுதான் நடக்கும். சுற்றிப் பார்த்தபோது, அங்கு யாரும் இல்லை. தன்னைச் சிறையிலிருந்து கொண்டுவந்து வெளியே விட்டுவிட்டுச் சென்றுவிட்டார்கள் என்பதையும், தான் இப்போது சுதந்தரமாக இருப்பதையும் அவர் உணர்ந்தார். அவர் சிறை உடையில் இருப்பதை வைத்து மக்கள் அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள். பிறருடைய உதவியோடு, அவர் தன் வீட்டுக்குச் சென்றார். தன் மனைவியையும், மகனையும் கண்டு மகிழ்ச்சியடைந்தார். இரண்டாவது சிறைவாசம் ஐந்தரை ஆண்டுகள். ஆக மொத்தத்தில் அவர் 14 ஆண்டுகள் சிறையில் இருந்தார்.
தன் மனைவி சபினா, மகன் மிஹாய் இருவரின் வறுமை நிலையைக் கண்டு வருந்தினார். அவர்களிடம் எதுவும் இல்லை. அவர்களிடமிருந்து எல்லாவற்றையும் பிடுங்கிக்கொண்டார்கள். ஆயினும், அவர்கள் தலைமறைவான சபையில் மும்முரமாக ஊழியம்செய்துகொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் ரொமேனியாவில் அமெரிக்க மிஷனரிகள் இருந்தார்கள். 14 ஆண்டுகளுக்குப்பிறகு ஒருவர் சில வாரங்களுக்குமுன்பு சிறையியிருந்து விடுதலை செய்யப்பட்டார் என்று அவர்கள் கேள்விப்பட்டார்கள். அவரைச் சந்திக்கவும், அவருடைய அனுபவங்களைத் தெரிந்துகொள்ளவும் அவர்கள் ஆர்வமாக இருந்தார்கள். இந்த அமெரிக்க மிஷனரிகள் ரிச்சர்டைச் சந்தித்தார்கள். அவர்கள் தலைமறைவாக இருந்த கிறிஸ்தவர்களுக்கு வேதாகமத்தை இரகசியமாக அனுப்பிக்கொண்டிருந்தார்கள். ஏனென்றால், அந்த நேரத்தில் வேதாகமம் கிடைப்பது அரிதாக இருந்தது. ஆனால், கிறிஸ்தவர்களுக்கு வேதாகமம் தேவைப்பட்டது. இந்த மிஷனரிகள் ரொமேனியாபோன்ற நாடுகளுக்கு வேதாகமத்தை இரகசியமாக அனுப்பிக்கொண்டிருந்தார்கள். ஏற்கெனவே, அவர்களுக்குப் பல கிறிஸ்தவர்களையும், கிறிஸ்தவத் தலைவர்களையும் தெரியும். அவர்கள்மூலமாக அவர்கள் ரிச்சர்டைப்பற்றிக் கேள்விப்பட்டு அவரைச் சந்தித்தார்கள். கம்யூனிச சிறைகளில் என்ன நடக்கிறது என்பதையும், கம்யூனிச சோவியத் யூனியனில் கிறிஸ்தவர்கள் அனுபவிக்கும் சித்திரவதைகளையும், பாடுகளையும் அவர்கள் கண்கூடாகக் கண்டார்கள், நேரடியாகத் தெரிந்துகொண்டார்கள்.
ரிச்சர்ட் விடுதலையாகியிருந்தாலும்கூட, விரைவில் அவரை மீண்டும் கைதுசெய்வார்கள் என்றும், எனவே ஒன்றும் செய்யாமல் சும்மா இருக்க முடியாது என்றும் நார்வேயில் உள்ள ஒரு கிறிஸ்தவ அமைப்பினர் உணர்ந்தார்கள். எனவே, இந்தக் கிறிஸ்தவ அமைப்பு கம்யூனிச அரசாங்கத்திற்கு, 10,000 டாலர் கொடுத்து, அவரை மீட்டுக்கொண்டார்கள். அந்த நாட்களில் அது பெரும் தொகை. ஒருவேளை இப்போது ஒரு மில்லியன் அல்லது அதற்கும் அதிகமான டாலர்களுக்கு சமமாக இருக்கலாம். அதாவது இன்றைய மதிப்பின்படி 7 கோடி ருபாய். அவர்கள் இவ்வளவு பணத்தைத் அரசாங்கத்திற்குக் கொடுத்து, ரிச்சர்டையும், அவருடைய குடும்பத்தாரையும் நார்வேக்கு அழைத்துக்கொண்டார்கள். அரசாங்கம் அவரை அழைத்துச்செல்ல அனுமதியளித்தது. தான் தன் தாய்நாட்டை விட்டு வெளியேறி, நார்வேயில் மீண்டும் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கப்போவதை நினைத்துப்பார்த்தார். அவர் நாட்டைவிட்டு வெளியேறுவதை அன்றைய தலைமறைவாக இருந்த சபையார் கேள்விப்பட்டு மகிழ்ச்சியடைந்தார்கள். அவர்கள் அவரிடம், "நீங்கள் வெளியே செல்ல வேண்டும். ஏனென்றால், மேற்கத்திய நாடுகளில் உள்ள கிறிஸ்தவர்களிடம் நீங்கள் சொல்ல வேண்டும். எங்களுக்கு அவர்களுடைய உதவி தேவை என்று நீங்கள் அவர்களிடம் சொல்ல வேண்டும். நாங்கள் இங்கு எப்படி இருக்கிறோம் என்று அவர்களுக்குத் தெரியாது. எங்களிடம் வேதாகமம் இல்லை என்று அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் தங்கள் வீடுகளில் பயன்படுத்தாமல் அழகாக அடுக்கிவைத்திருக்கும் ஆயிரக்கணக்கான வேதாகமங்கள் இங்கு எங்களுக்குத் தேவை என்று சொல்லுங்கள். எப்படியாவது அவர்கள் எங்களுடன் சேர்ந்து வேலை செய்யலாம்," என்று சொன்னார்கள். ரிச்சர்ட் அதைத்தான் செய்தார். அவர் ரொமேனியாவைவிட்டு வெளியேறி நார்வேயில் வாழ முடிவு செய்தார். இப்போது அவருக்கு வேறு வழி இல்லை. மேலும், அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பாபோன்ற பல நாடுகளுக்குச் சென்று ரொமேனியாவில் என்ன நடக்கிறது என்பதை விளக்கிச் சொன்னார்.
அவர் நாட்டைவிட்டு வெளியேறுவதற்குச் சற்றுமுன், இரகசியக் காவலர் சிலர் அவரை வந்து சந்தித்து, "நீங்கள் வெளியேபோனபின் கம்யூனிசத்திற்கு எதிராக அல்லது சிறையில் நீங்கள் அனுபவித்த உங்கள் அனுபவங்களை அல்லது பொதுவாக இங்கு எங்கள் சிறைகளில் என்ன நடக்கிறது என்பதை யாரிடமாவது சொன்னாலோ ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். எங்கள் உளவாளிகள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள். உங்களைப் பிடிப்பது எங்களுக்கு ஒரு பெரிய காரியம் இல்லை. உங்களைப் பிடித்துக் கடத்திக்கொண்டு வந்து, கொன்று விடுவோம். உங்களைப்பற்றி தவறான வதந்திகளைப் பரப்பி, உங்கள் நற்பெயரைக் கெடுப்போம். நாங்கள் விரும்புவதை எங்களால் செய்ய முடியும். உங்களைக் கடுமையாக எச்சரிக்கிறோம்," என்று பயமுத்தினார்கள். எவ்வளவு ஆறுதலான வார்த்தைகள்! இந்த வார்த்தைகளோடு, டிசம்பர் 1965 இல், ரிச்சர்ட், சபினா, மிஹாய் ஆகியோர் ரொமேனியாவை விட்டு நார்வேக்குப் பறந்தனர். அது வெறுமனே ஓர் அச்சுறுத்தல் மட்டும் அல்ல. அவர்களுடைய உளவாளிகள் நிச்சயமாக எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள் என்பது ரிச்சர்டுக்குத் தெரியும். என்ன ஆனார்கள் என்று தெரியாமல் காணாமல் போன பல பாஸ்டர்களை அவருக்குத் தெரியும். காரணமேயில்லாமல் சித்திரவதைக்குள்ளான போதகர்களை அவருக்குத் தெரியும். ஆஸ்திரியாவில் வாழ்ந்த சில கிறிஸ்தவர்கள் திடீரென்று மாயமானது அவருக்குத் தெரியும். எனவே, இது வெற்று அச்சுறுத்தல் அல்ல என்பதை அவர் அறிந்திருந்தார், ஆனால், அவர் அதை ஒரு பொருட்டாகக் கருதவேயில்லை. ஏனென்றால், தான் நிறைவேற்றவேண்டிய மாபெரும் பணி என்னவென்று அவருக்குத் தெரியும்.
நார்வேக்குச் சென்றபின் அவர் தேவனுக்குச் செய்த ஊழியத்தின் போக்கு சற்று மாறிற்று. 1967 இல், சில ஆண்டுகளுக்குப்பிறகு, அவர் இரத்தசாட்சிகளின் குரல் என்று ஓர் அமைப்பை நிறுவினார். நீங்கள் இதைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம். கம்யூனிச நாடுகளில் என்ன நடக்கிறது என்பதை மேற்கத்திய நாடுகளில் உள்ள கிறிஸ்தவர்கள் அறிய வேண்டும் என்று அவர் விரும்பினார். "எங்களுக்குத் தேவையான கருவிகளைக் கொடுங்கள். தலைமறைவான சபைக்கு நீங்கள் தேவை. எங்களுடன் ஐக்கியம் கொள்ளுங்கள். எங்களுக்கு வேதாகமத்தைத் தாருங்கள்," என்று அவர் கூறினார்.
மிக முக்கியமாக அவர்கள் வேதாகமங்களையே கேட்டார்கள். நற்செய்தியைக் கேட்க வேண்டும் என்பதற்காகத் தன் திருமண மோதிரத்தைக் கழற்றிக்கொடுத்த ஒருவரை ரிச்சர்ட் பார்த்தார். இது பைத்தியக்காரத்தனமாகத் தோன்றலாம். தேவையான பணத்தைச் சம்பாதித்து ஒரு வேதாகமம் வாங்க வேண்டும் என்பதற்காக குளிர்காலம் முழுவதும் ஆற்றில் பனி உடைக்கும் வேலையைச் செய்த இரண்டு கிராமவாசிகளை, ரஷ்யர்களை, அவருக்குத் தெரியும். அதைக் கேள்விப்பட்ட அவர் ஒரு வேதாகமத்தைக் கண்டுபிடித்து அவர்களிடம் கொண்டுபோய்க் கொடுத்தார். அந்த வேதாகமத்தை இலவசமாகப் பெற்றதும் அவர்கள் மிகவும் திகைத்துப்போனார்கள். அவர்களால் அவருக்குப் போதுமான அளவுக்கு நன்றிசொல்ல முடியவில்லை. சில வாரங்கள் கழித்து இந்த இரண்டு பேரும் அவருக்கு ஒரு கடிதம் அனுப்பினார்கள். ரிச்சர்ட் கடிதத்தைத் திறந்து பார்த்தார், அதில் 30 கிராமவாசிகள் கையெழுத்து போட்டிருந்தார்கள். அந்த ஒரு வேதாகமம் ரொமேனியாவின் ஏதோவொரு மலைக்கிராமத்தில் இருந்த கிராம மக்களுக்குப் பயன்பட்டது. அந்தக் கிராமத்தில் 30 பேர் இருந்தார்கள். எனவே, அவர்கள் வேதாகமத்தை மிகக் கவனமாக 30 பகுதிகளாகப் பிரித்தார்கள். அதனால், அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் வேதாகமத்தின் ஏதோவொரு பகுதியைப் படிக்கலாம். அதன்பின் அதைப் பிறருடன் மாற்றிக்கொள்ளலாம். அந்த அளவுக்கு வேதாகமம் அவர்களுக்கு மதிப்புமிக்கதாக இருந்தது.
ரிச்சர்ட் நார்வேயிலும், பின்னர் அமெரிக்காவிலும் பலவிதமான வேதாகமத்தைப் பார்த்து வியந்தார். பெண்களுக்கான வேதாகமம், ஆண்களுக்கான வேதாகமம், குழந்தைகளுக்கான வேதாகாமம். அவரால் இதை நம்ப முடியவில்லை. ரொமேனியாவில் உள்ள கிறிஸ்தவர்களின் நிலைமையையும், சபையின் நிலைமையையும் எடுத்துரைத்து, மற்ற நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களும், கிறிஸ்தவ அமைப்புகளும் அவர்களுக்கு எப்படி உதவ முடியும் என்று அவர் கூறினார். அவர்கள் தங்கள் சகோதர சகோதரிகளுக்கு உதவ வேண்டும் என்று அவர் விரும்பினார்.
ரிச்சர்ட் உலகம் முழுவதும் பயணம் செய்தார், அவர் இந்தியாவுக்கும் வந்தார். அவர் சிறையில் இருந்தபோது ஏற்பட்ட ஓர் அனுபவத்தின் காரணமாக இந்தியாவின்மேல் அவருக்கு ஒரு தனி அன்பு இருந்தது. அவர் சிறையில் இருந்தபோது அங்கு மரணத் தருவாயில் இருந்த ஒரு ரோமன் கத்தோலிக்க குருமாணவனை அவர் சந்தித்தார். இந்தியாவுக்குச் சென்று, அங்குள்ள மக்களுக்கு நற்செய்தியை அறிவிக்க வேண்டும் என்பது தன்னுடைய பேராவல் என்றும், அது இப்போது நிறைவேறாமல் போகிறதே என்றும் வருந்தினானாம். எனவே, சிறையிலிருந்து யாராவது விடுதலையாகிப் போனால், இந்தியாவுக்குச் செல்லுமாறு வேண்டினானாம். அந்த நேரத்தில், தான் விடுதலையாவேன் என்று ரிச்சர்ட் நினைக்கவில்லை. ஆனால், தேவனுடைய திட்டம் வேறு. ரிச்சர்ட் விடுதலையானார். இந்தியாவுக்கு வந்தார். குறிப்பாக கேரளாவுக்கு வந்தார். அங்கு இந்த நிகழ்ச்சியைப்பற்றிப் பேசினார்.
1991இல் கிழக்கு ஐரோப்பாவில் கம்யூனிசம் வீழ்ந்தது. அங்கு கிறிஸ்தவர்கள் விடுதலையோடு தேவனை ஆராதிக்கவும், அறிவிக்கவும் தொடங்கினார்கள். ஆனால், இன்றைக்கும் உலகின் பல்வேறு நாடுகளில் கிறிஸ்தவர்கள் இதுபோல் அல்லது இதைவிடக் கொடுமையாகத் துன்புறுத்தப்படுகிறார்கள், சித்திரவைதைசெய்யப்படுகிறார்கள். கம்யூனிச வட கொரியாவில் உள்ள கிறிஸ்தவர்களுக்கு என்ன நடக்கிறது என்று யாருக்குத் தெரியும்? இன்னும் ஐந்து, பத்து வருடங்களில் நம் நாட்டில் என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும்? நம் எதிர்காலம் என்னவென்று நமக்குத் தெரியாது. நாளைக்கு என்ன நடக்கும் என்றுகூட நமக்குத் தெரியாது. நிலைமைகள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். சாதகங்கள் பாதகங்கள் ஆகலாம். பாதகங்கள் சாதகங்கள் ஆகலாம். இப்போதைக்கு, நாம் இங்கு மிகவும் வசதியாக, சுதந்திரமாக, சௌகரியமாக, வெதுவெதுப்பாக, இலகுவாக இருக்கிறோம். நெருப்பால் புடமிடப்பட்ட பரிசுத்தவான்களிடமிருந்து நாம் நிறையக் கற்றுக்கொள்ள வேண்டும்.
ரிச்சர்டின் மனைவி சபினா சொன்ன ஒரு வாக்கியத்தைச் சொல்லி நான் முடிக்கப்போகிறேன். கம்யூனிச ருமேனியாவில் தலைமறைவாக இருந்த சபையில் இவ்வளவு பெரிய ஆபத்துக்களைத் தைரியமாக எதிர்கொண்டு, பலருக்கு ஒரு தாயைப்போல இருந்து எப்படி ஊழியம் செய்ய முடிந்ததது என்று அவரிடம் கேட்டபோது, அவர் சொன்ன பதிலைத்தான் நான் இங்கு சொல்கிறேன். "தேவனுடைய வேலையைச் செய்வதில் ஆபத்து உண்டு. ஆனால், தேவனுடைய வேலையைச் செய்யாமல் இருப்பது அதைவிட ஆபத்தானது". இது நம் எல்லாருக்கும் ஒரு தெளிவான எச்சரிக்கை என்றே நான் நினைக்கிறன்.