Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More

ராபர்ட் முர்ரே மேக்சேன்


ராபர்ட் முர்ரே மேக்சேன் என்ற இந்தப் பரிசுத்தவானின் வாழ்க்கை வரலாற்றைப் படித்துமுடித்தவுடன், "ஓ! இவருடைய வாழ்க்கை எவ்வளவு சாதாரணமானது, எவ்வளவு இயல்பானது!" என்ற எண்ணம்தான்  முதன்முதலாக என்னைத் தாக்கியது. இவர் இயேசுவைப்போல் சிலுவையில் அறையப்படவில்லை. ஜிம் எலியட்டைபோல் ஈக்வடார் காடுகளில் ஈட்டியால் குத்திக் கொல்லப்படவில்லை. டேவிட் பிரைனெர்டைப்போல ஆரம்பகால அமெரிக்காவின் காடுகளில் கஷ்டப்படவில்லை. ஹென்றி மார்ட்டினைப்போல் துருக்கியில் தன்னந் தனியாக இறக்கவில்லை. இவர் எந்த நாட்டுக்கும் மிஷனரியாகச் செல்லவில்லை; தன் விசுவாசத்திற்காக இரத்தசாட்சியாக மரிக்கவில்லை. அப்படியானால், "இவ்வளவு சாதாரணமான ஒருவரைப்பற்றி நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள்? பேசுவதற்கு உங்களுக்கு வேறு ஆளே கிடைக்கவில்லையா?" என்ற கேள்வி ஒருவேளை சிலருக்கு எழக்கூடும். நியாயமான கேள்விதான். இவரைப்பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. இதிலிருந்தே இவர் எவ்வளவு சாதாரணமானவர் என்று தெரியவில்லையா? இவரை அறியும்போதுதான் இந்தச் சாதாரணமான நபர் பலருடைய வாழ்க்கையில் எப்படி ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார், இரண்டு நூற்றாண்டுகளுக்கும்மேலாக உலகெங்குமுள்ள எண்ணற்ற கிறிஸ்தவர்களின் உள்ளங்களை எப்படிக் கொள்ளைகொண்டார், ஆறு ஆண்டுகள் மட்டுமே நற்செய்தி அறிவித்து, ஒரு சபையின் போதகராக இருந்த இவர் இத்தனை கோடி மக்களின் மனதை எப்படிக் கவர்ந்தார் என்று புரிந்துகொள்வோம். 

இவர் தன் பதின்மவயதில் ஆண்டவராகிய இயேசுவைத் தன் இரட்சகராக விசுவாசித்து ஏற்றுக்கொண்டார்; பல்கலைக்கழகத்தில் கலை, இலக்கியம், இறையியல் படித்தார்; உதவி போதகரானார்; ஆறு ஆண்டுகள் ஒரு மாநகரத்தின் பேராலயப் போதகராக இருந்தார்; நிறையக் கடிதங்கள் எழுதினார்; தவறாமல் நாட்குறிப்பு எழுதினார்.  

இவர்தான் ராபர்ட் முர்ரே மேக்சேன்

நம்மில் பலருக்கு ஸ்பர்ஜனைத் தெரியும். "இதுவரை வெளியிடப்பட்டுள்ள புத்தகங்களில் இது மிகச் சிறந்தது. மிகப் பயனுள்ளது. எல்லாக் கிறிஸ்தவர்களும், மிகக் குறிப்பாக எல்லா ஊழியர்களும் ராபர்ட் முர்ரேயின் வாழ்க்கை வரலாற்றை, ஒருமுறை அல்ல, அடிக்கடி படிக்க வேண்டும்," என்று C  H ஸ்பர்ஜன் கூறினார்.

ராபர்ட் முர்ரேயின் வாழ்க்கையில் அப்படி என்ன இருக்கிறது? பலரின் வாழ்க்கையில் இப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்த அவர் அப்படி என்ன செய்தார்? இதோ! ராபர்ட் முர்ரேயின் குறுகிய, உண்மையாகவே மிகக் குறுகிய, வாழ்க்கை வரலாறு! இவர் ரோஜாவை முத்தமிட்டு, அதன் முள்ளையும் உணர்ந்தார். வாழ்வின் விடியலிலேயே வாழ்ந்து மரித்தார்.

ஆரம்பிப்பதற்குமுன் ஒரு வேண்டுகோள். ஆண்டவராகிய இயேசு கெத்செமனேயில் மரணத்துக்கேதுவான துக்கத்தோடு வியாகுலப்பட்டுக்கொண்டிருக்கையில், அவருடைய மூன்று சீடர்கள் உறங்கிக்கொண்டிருந்தார்கள். அப்போது இயேசு அவர்களிடம், "நீங்கள் ஒரு மணி நேரமாவது என்னோடேகூட விழித்திருக்கக்கூடாதா?" என்று வினவினார். இயேசுவே தம் சொந்தச் சீடர்களிடம் தன்னோடு ஒரு மணி நேரம் செலவழிக்கக் கெஞ்ச வேண்டியிருந்ததென்றால், நான் எம்மாத்திரம்? அவர் பச்சை மரம், நான் பட்ட மரம்! அவர் பழுத்த மரம், நான் புழுத்த மரம்! அவர் காய்த்த மரம், நான் காய்ந்த மரம்! ஒரு மணி நேரம்!   

சரி, ஆரம்பிப்போம்! நாம் இப்போது ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பரோவுக்குப் பயணிக்கப் போகிறோம். ஆம், இங்குதான் ராபர்ட் முர்ரே மேக்'செய்ன் மே 21, 1813இல் பிறந்தார். அவருடைய அப்பா ஆடம் மேக்'செய்ன்; அம்மா லாக்ஹார்ட் முர்ரே. அவர் பிறந்த அந்தக் காலகட்டத்தில் ஸ்காட்லாந்தில் கலாச்சாரரீதியாக எல்லாரும் கிறிஸ்தவர்கள். அவர்களுக்குத் தனிப்பட்ட விதத்தில் கிறிஸ்துவைத் தெரியுமோ தெரியாதோ, விசுவாசித்தார்களோ இல்லையோ எல்லோரும் கிறிஸ்தவர்களே. ஆம், பெயரளவிலாவது எல்லோரும் தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று அழைத்தார்கள். 

அந்த நேரத்தில் ஸ்காட்லாந்து சபையில் மிதவாத இயக்கம் ஒன்று தலைதூக்க ஆரம்பித்தது. இந்த மிதவாத இயக்கம் சபைக்கு வெளியே அல்ல, சபைக்குள் எழுந்தது. தீவிரவாதம், பயங்கரவாதம் என்ற வார்த்தைகளை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். பிரச்சினைகளைத் தீர்க்க சமரசமற்ற, தீவிர வழிமுறைகளைக் கடைப்பிடிக்கும் போக்கு தீவிரவாதம். சரியோ தவறோ தீவிரவாதத்துக்கு ஒரு கொள்கையுண்டு. பயங்கரவாதத்துக்கு எந்தக் கொள்கையும் கிடையாது. மிதவாதம் என்பது சற்று நிதானமான, மிதமான, அமைதலான, கொள்கை என்று சொல்லலாம். 

அன்று சபைக்குள் தலைதூக்கிய மிதவாதம், "கிறிஸ்தவம் என்பது ஒரு வாழ்க்கைமுறை, அது கிறிஸ்தவன் வாழும் வாழ்க்கைமுறை, அது அவன் நல்லொழுக்கமான நெறிமுறைகளைத் தெரிந்தெடுத்து, நல்ல தார்மீகக் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் ஆதாரமாகக் கொண்டு வாழும் வாழ்க்கைமுறை," என்று கூறியது. இதைக் கேட்டதும், "பரவாயில்லையே! வெதுவெதுப்பான கலாசாரக் கிறிஸ்தவத்தில் இப்படிப்பட்ட ஓர் எழுப்புதல் அங்கு ஏற்பட்டிருக்கிறதே!" என்று அவரசப்பட்டு பரவசமடையாதீர்கள். ஏனென்றால், அந்த மிதவாதம், "கிறிஸ்தவர்களைப் புண்படுத்தக்கூடிய, சங்கடப்படுத்தக்கூடிய பாவம், சிலுவை, நீதிப்படுத்துதல், நியாயத்தீர்ப்புபோன்ற அம்சங்களை நீர்த்துப்போகச் செய்தது." ஆம், மிதவாதம் சன்மார்க்க வாழ்க்கையைப் பரிந்துரைத்தது, ஆதரித்தது.; ஆனால், அது சிலுவையையும், பாவத்தையும் தவிர்த்தது.

ராபர்ட் முர்ரே மேக்'செயின் குடும்பத்தார் இப்படிப்பட்ட ஒரு மிதவாத சபையில் உறுப்பினர்களாக இருந்தார்கள். எனவே, அவர் நல்ல தார்மீகக் கொள்கைகளைக்கொண்ட மிதவாதப் போதனைகளைக் கேட்டு  வளர்ந்தார். அவருடைய பெற்றோருக்கு மொத்தம் ஐந்து பிள்ளைகள். ராபர்ட் முர்ரே ஐந்தாவது கடைசிப்பிள்ளை. அவருடைய அப்பா மிகப் பிரபலமான ஒரு சிறந்த வழக்கறிஞர். வசதியான குடும்பம். அவருடைய சகோதர சகோதரிகளைப்போல் அவரும் மிகச் சிறந்த கல்வி கற்றார். மிதவாதிகள் இன்றைய மோர்மன்ஸ்களைப்போல் உயர்ந்த ஒழுக்கம், சிறந்த கல்வி, பரந்த மனப்பாங்கு, திறந்த உள்ளம் போன்ற காரியங்களை வலியுறுத்தினார்கள்.

இளமையிலிருந்தே, அவர் கற்பதில் ஆர்வம் காட்டினார். ஆர்வம் மட்டும் அல்ல, அதற்கான ஆற்றலும் அவரிடம் இருந்தது. சிறுவனாக இருந்தபோது ஒருமுறை, உடல்நிலை சரியில்லாமல் படுத்திருந்தபோது, அவர் கிரேக்க எழுத்துக்கள் அனைத்தையும் கற்றுக்கொண்டார். நோயிலிருந்து குணமடைந்து எழுவதற்குள், அந்த மிகக்  குறுகிய காலத்தில், அவர் கிரேக்க எழுத்துக்களைத் தெளிவாக எழுதக் கற்றுக்கொண்டார். அப்போது அவருக்கு வயது நான்கு. நான்கு வயதில் சரளமாகப் பாடவும், வாசிக்கவும் தெரியும். பல மொழிகளைக் கற்பதில் மட்டும் அல்ல, தரமான உரைநடையில் எழுதுவதிலும், நல்ல தரமான கவிதை  இயற்றுவதிலும் அவர் ஆர்வமும், ஆற்றலும் கொண்டிருந்தார். தன் எட்டாவது வயதில் உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றார்; அவர் பல துறைகளில் ஆற்றல் மிக்கவர். குறிப்பாக ஓவியம் வரைதல், இசையமைத்தல், கவிதை எழுதுதல் ஆகியவைகளில் சிறந்து விளங்கினார். அவர் எழுதிய 'The Covenanters' என்ற கவிதைக்காகப் பேராசிரியர் வில்சன் ராபர்ட்டுக்குச் சிறப்புப் பரிசு வழங்கினார். 14வது வயதில் உயர்நிலைப்பள்ளிப் படிப்பை முடித்து பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.

தன் பதின்ம வயதில், அவர் கூர்மையான, நுட்பமான மனமும், வேடிக்கையான மனப்பாங்கும் உடைய உயிர்த்துடிப்புள்ள, ஊக்கமான, ஆற்றலுள்ள, வீரியமுள்ள, சுறுசுறுப்பான வாலிபனாக வளர்ந்தார். கோடை காலத்தில் ஸ்காட்லாந்தின் தெற்கே இருக்கும் ஸ்காட்டிஷ் ஹைலேண்ட்ஸ் மலைகளில் மலையேறுவது அவருக்குப் பிடிக்கும். 

அவரைப் பார்க்கின்ற, அவரோடு பழகுகிற யாரும், "இவன் எவ்வளவு நல்ல பையன்! நல்ல பையன் மட்டும் அல்ல. இவன் ஒரு நல்ல முன்மாதிரிக் கிறிஸ்தவன்," என்று சொல்வார்கள், சொன்னார்கள்.  கிறிஸ்தவ வாழ்க்கையின் நல்ல பண்புகள் நிச்சயமாக அவரிடம் நிறைய இருந்தன. ஆனால், அது வெளித்தோற்றம்! தன் அந்தரங்க வாழ்வில், தான் பிறர் தன்னைப்பற்றி நினைப்பதுபோன்ற நபர் இல்லை என்று  ராபர்ட் முர்ரேவுக்குத் தெரியும். அவர் பொழுதுபோக்கை விரும்பினார், நாடினார். அதைத் துய்த்தார். பொழுதுபோக்கான விருந்துகளின் உச்சகட்ட அம்சமாகிய நடனம், சீட்டு விளையாடுவது போன்றவைகளை அவர் மிகவும் ரசித்தார். பல்கலைக்கழகத்தில் அவர் கலை, கவிதை, இலக்கியம், ஓவியம், இசைபோன்ற காரியங்களில் மும்முரமாக மூழ்கினார் என்றுகூடச் சொல்லலாம். அந்த அளவுக்கு அவைகளில் அவருக்கு நாட்டம், ஈடுபாடு.

1831. அப்போது ராபர்ட்டுக்கு வயது 18. அவர் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அவர் அந்தப் பல்கலைக்கழகத்தின் மிகப் பிரபலமான டிவினிட்டி ஹாலில் இறையியல் படிப்பதற்குச் சேர்ந்தார். புகழ்பெற்ற இறையியலாளர், டாக்டர் தாமஸ் சால்மர்ஸ்தான் அவருடைய இறையியல் பேராசிரியர். இவர் ஸ்காட்லாந்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஓர் உண்மையான தேவமனிதர். இவரும் மிதவாத இயக்கத்திலிருந்து, மிதவாத சபையிலிருந்து, வந்தவர்தான். ஆனால், மிதவாத சபை வேதத்துக்கடுத்ததல்ல என்பதை அறிந்து அவர் அதிலிருந்து வெளியேறினார். 

"இரட்சிக்கப்படுவதற்குமுன்பே, கிறிஸ்தவராக மாறுவதற்குமுன்பே, ராபர்ட் ஏன் இறையியல் படிக்கத் தீர்மானித்தார், ஏன் ஊழியம்செய்வதைத் தேர்ந்தெடுத்தார்?" என்று ஒருவேளை நீங்கள் நினைக்கலாம், கேட்கலாம். நியாயமான கேள்விதான். ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அந்தக் காலத்தில்  இறையியல் படித்து ஒரு போதகராக மாறுவது மரியாதைக்குரிய ஒரு வேலையாகக் கருதப்பட்டது. மருத்துவர், பொறியாளர் என்பதுபோல் அன்று போதகர் என்பது ஒரு வேலை. மருத்துவராக மருத்துவம் படிப்பதுபோல் போதகராக இறையியல் படிக்க வேண்டும். அவ்வளவே. எனவே அவர் இறையியல் படித்தார். வேறு வேலையைத் தேடாமல் போதகர் வேலையை அநேகர் ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என்றால் ஊழியக்காரராக, போதகராக, பிரசங்கியாராக, இறையியலாளராக இருப்பது அன்று சமுதாயத்தில் மிக உயர்வாகக் கருதப்பட்டது. அதற்கு மதிப்பும் மரியாதையும் உண்டு. நிரந்தரமான வருமானம் உண்டு. எனவே, பலர் இதை ஆசையாய் நாடினார்கள்.    

ஆனால், ராபர்ட் முர்ரே இறையியல் படிக்க டிவினிட்டி ஹாலில் சேர்ந்ததில் நிச்சயமாகத் தேவனுடைய கரம் இருந்தது தெளிவாகத் தெரிகிறது. ஏனென்றால், இங்குதான் அவர் முதன்முதலாக நற்செய்தியைக் கேட்டார்.

அவர் இறையியலை மரியாதைக்குரிய ஒரு வேலைக்கான வழி எனக் கருதிப் படித்தபோதும், அவருடைய பாடங்கள் அவர்மேல் சின்னசின்னத் தாக்கங்களை ஏற்படுத்தத் தொடங்கின. இதற்கு முக்கியமான காரணம் நிச்சயமாக அவருடைய பேராசிரியராகிய டாக்டர் தாமஸ் சால்மர்ஸ். அவர் ராபர்ட்டின்மேல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்.

எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்த நேரத்தில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு பெரிய இடி விழுந்தது. அவருடைய குடும்பம் மிகவும் முன்மாதிரியான குடும்பம். ஒருவர்மேல் ஒருவருக்கு அன்பு, அக்கறை, பாசம், பிரியம், நெருக்கமான உறவு, அந்நியோன்னியம், இசைவு, இணக்கம்  - எல்லாம் மிகச் சிறப்பாகவும், நேர்த்தியாகவும் இருந்தன. குடும்பம் என்றால் இப்படி இருக்க வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு இலட்சிய குடும்பம். தன் உடன்பிறப்புகளுக்கும், பெற்றோருக்கும் ராபர்ட் மிகவும் நெருக்கமானவர். ஒருநாள் மருத்துவம் படித்திருந்த அவருடைய அண்ணன் வில்லியம் ஆஸ்வால்ட், "எனக்குக் கிழக்கிந்தியக் கம்பெனியின் 54ஆவது  பிரிவில் வேலை கிடைத்திருக்கிறது. அதற்காக நான் இந்தியாவிலுள்ள பம்பாய்க்குப் போகிறேன்," என்று சொன்னார். இது ராபர்ட்டுக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது. அந்த நாட்களில், ஒருவன் ஸ்காட்லாந்திலிருந்து இந்தியாவுக்குச் செல்வது திரும்பிவர முடியாத நிலாவுக்குச் செல்வதற்குச் சமமாகக் கருதப்பட்டது. அவருடைய அண்ணனுடைய அந்த முடிவு குடும்பத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

ராபர்ட்டின் இன்னோர் அண்ணன் டேவிட் தாமஸ்.  அவர் ராபர்ட்டைவிட எட்டு வயது மூத்தவர். ராபர்ட் தன் வாழ்வில் எல்லாவற்றிக்கும் அவரைத்தான் சார்ந்திருந்தார், எல்லாவற்றைக்குறித்தும் அவரிடம் பேசினார், கலந்தாலோசித்தார். ராபர்ட் தன் அண்ணன் டேவிட்டை தனக்கு ஒரு முன்மாதிரியாக வைத்திருந்தார். அவர் ஒருவிதமான ஆழ்ந்த மனச்சோர்வு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். melancholy or deep depression. ஆனால், அவர் இயேசுவைத் தன் சொந்த இரட்சகராக அறிந்திருந்தார். ஆம், அவர் இரட்சிக்கப்பட்டிருந்தார். இரட்சிக்கப்பட்ட டேவிட்டின் வாழ்வில் வியத்தகு மாற்றங்கள் ஏற்பட்டன. இது குடும்பத்தில் இருந்த எல்லாருக்கும் கண்கூடாகத் தெரிந்தது. ராபர்ட்டுக்கு இது ஒரு வகையில் அதிர்ச்சி; இன்னொரு வகையில் புரியாத புதிர். "எனக்கு மிகவும் நெருக்கமான ஒருவர், என் வாழ்க்கையில் எல்லாவற்றிக்கும் நான் நோக்கிப்பார்த்த, எதிர்பார்த்த ஒருவர் இப்போது மாறிவிட்டார், மிகவும் வித்தியாசமாக மாறிவிட்டார்," என்பதை .நினைத்து ராபர்ட் திடுக்கிட்டார். அவருடைய குடும்பத்தார் அனைவரும் தங்களைக் கிறிஸ்தவர்களாகத்தான் கருதினார்கள். ஆனால், இப்போது அவருடைய மூத்த சகோதரர் டேவிட் வேறு மனிதனாக மாறிவிட்டார். தன் தம்பி ராபர்ட் உலகத்தில் சிக்கிக்கொண்டிருப்பதை டேவிட் உணர்ந்தார். தனக்குள் வீசிய ஒளி தன் தம்பி ராபர்ட்டுக்குள்ளும்  வீசி, அவனும் இரட்சிக்கப்பட வேண்டும் என்று அவர் ஊக்கமாக ஜெபித்தார்.

டேவிட்டின் உடல்நிலை மிகவும் மோசமாகி அவர் தன் 26ஆவது வயதில் இறந்தார். அப்போது ராபர்ட்டுக்கு 18 வயது. அப்போதுதான் ராபர்ட் டிவினிட்டி ஹாலில் முதலாம் ஆண்டு இறையியல் படிப்பை ஆரம்பித்திருந்தார். எல்லாவற்றிக்கும் தான் நோக்கிப்பார்த்த, நம்பியிருந்த, சார்ந்திருந்த, தான் நேசித்த, தன்னை நேசித்த  தன் அண்ணனின் மரணம் ராபர்ட்டுக்குப் பேரிடியாக வந்தது. தன் அண்ணனின் மரணத்தை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. டேவிட் இறந்து பதினோரு ஆண்டுகளுக்குப் பிறகு ஜூலை 8, 1842 இல் அவர் தன் நாட்குறிப்பில், "பதினொரு ஆண்டுகளுக்குமுன்பு இந்த நாளில் என்னை மிகவும் அதிகமாக நேசித்த, நானும் மிகவும் அதிகமாக நேசித்த என் அண்ணனை இழந்தேன். அன்று நான் ஒருபோதும் இறக்க முடியாத ஒரு சகோதரனைத் தேட ஆரம்பித்தேன்," என்று எழுதினார்.

இந்தச் சோகத்திலிருந்து அவர் மீண்டு வந்தார். அவருடைய உள்ளக்குமுறல் அடங்கியது; கலக்கம் தீர்ந்தது. அறிவுத்தெளிவடைந்து அமைதலானார். ஆனால், ராபர்ட் இன்னும் இரட்சிக்கப்படவில்லை.

ராபர்டின் நண்பர்கள் ராபர்ட்டின் வாழ்வில் நிறைய மாற்றங்களைக் கவனித்தார்கள். ராபர்ட் முன்பு வேடிக்கையான மனப்பாங்குடையவர். இப்போது அந்த வேடிக்கை மனப்பாங்கு மறைந்துவிட்டது. இப்போது அவர் களிமயக்கமற்றமற்றவராகவும், கருத்தாழமிக்கவராகவும், அதிக முனைப்புடையவராகவும் மாறினார். ஆம், அவர் இப்போது தேவனைத் தேடத் தொடங்கினார்; ஏனென்றால், தன் அண்ணன் டேவிட் அவ்வளவு மோசமாக நோய்வாய்பட்டிருந்தபோதும் தன்னிடம் இல்லாத ஏதோவொன்று, வித்தியாசமான ஏதோவொன்று, அவரிடம் இருந்ததை ராபர்ட் கண்டார். தன் அண்ணன் தன்னோடு பகிர்ந்துகொள்ள விரும்பிய எல்லாவற்றிற்காகவும் தேவனிடம் ஜெபித்திருப்பார் என்று ராபர்ட்டுக்குத் தெரியும். அவருடைய அண்ணன் டேவிட்டின் மரணத்திற்குப்பின் ஏற்பட்ட உணர்ச்சிக்கொந்தளிப்பும், கொந்தளிப்பு  அடங்கியபின் ஏற்பட்ட உள்ளஅமைதியும், காலப்போக்கில், அவரைத் தேவனைநோக்கி நகர்த்தின. வேதாகமத்தை வாசித்தார், கூட்டங்களில் கலந்துகொண்டார். நல்ல கிறிஸ்தவப் புத்தகங்கள் படித்தார். தேவனைத் தேடினார். நற்செய்தியை அறிய கதவு திறந்தது. இதன் விளைவாக அவர் இரட்சிக்கப்பட்டார். அவர் எப்படி இரட்சிக்கப்பட்டார் என்பதைப்பற்றிய தெளிவான விவரங்கள் இல்லை. ஆனால், அவர் இரட்சிக்கப்பட்டபின் எழுதிய ஒரு கவிதை அவருடைய இரட்சிப்பின் அனுபவத்தை விவரிக்கிறது.

இந்தக் கவிதைக்கு எரேமியா 23:6இல் சொல்லப்பட்டுள்ள யெஹோவா சிதக்கேனு என்று பெயரிட்டிருந்தார். இதற்கு நீதியாயிருக்கிற கர்த்தர் என்று பொருள். இதோ அந்தக் கவிதை!

"ஒரு காலத்தில் நான் கிருபைக்கும், தேவனுக்கும் அந்நியன்; 

என் ஆபத்தை அறியவில்லை, என் சுமையை உணரவில்லை. 

சிலுவையில் மரித்த கிறிஸ்துவை நண்பர்கள் பரவசமாகப் பேசினும் 

யெஹோவா சிதக்கேனுவுக்கு நான் தூரமானவனே.

பரம ஒளியால் இலவச கிருபை என்னை எழுப்பியபோது,

பிரமாணத்தின் பயம் என்னை உலுக்க, அதன் விளைவாக நான் மரிக்கப் பயந்தேன்.

அடைக்கலம் என்னில் இல்லை, பாதுகாப்பு இல்லை.

யெஹோவா சிதக்கேனுவே என் இரட்சகர்.

இந்த இனிய பெயருக்குமுன் என் கண்ணீர்கள் மறைந்தன.

என் குற்றப் பயங்கள் விலக, துணிவுடன் வந்தேன்,

ஜீவ ஊற்றில் இலவசமாய்ப் பருக

எனக்கு எல்லாமே யெஹோவா சிதக்கேனுவே.

தன் அண்ணன் டேவிட் இறந்த முதலாம் ஆண்டு நினைவு நாளில் தன் நாட்குறிப்பில், "கடந்த ஆண்டு இன்று காலையில்தான், என் உலகப்பிரகாரமான வாழ்க்கைக்கு முதல் மிகப்பெரிய அடி விழுந்தது. தேவனே, நீர் என்னை நினைவுகூர்ந்து, என்னை நீர் உருவாக்கிக் கொண்டுவந்திருக்கும் இந்த நிலைமை எவ்வளவு ஆசீர்வாதமானது என்று உமக்கு மட்டுமே தெரியும்," என்று எழுதினார். ஆண்டுதோறும் தன் அண்ணனின் மரணத்தை அவர் துக்கத்தோடுதான் நினைவுகூர்ந்தார். ஆனால், அதே நேரத்தில் அவருடைய உள்ளத்தில்  நன்றியுணர்வு மேலோங்கி நின்றது. ஏனெனில், தன் அண்ணன் டேவிட்டின் மரணமே தன்னைக் கிறிஸ்துவிடம் அழைத்துச் சென்றது என்று ராபர்ட் உணர்ந்தார்.

அவர் இரட்சிக்கப்பட்டவுடன் அவருடைய வாழ்வில் எல்லாம் உடனே மாறிவிடவில்லை. மாற்றங்கள் படிப்படியாக நிகழ்ந்தன. உலகப்பிரகாரமான பல பழைய பழக்கங்களை அவர் வெல்ல வேண்டியிருந்தது; அவருடைய  மனச்சாட்சி படிப்படியாக கூர்மைப்படுத்தப்பட்டது. இந்த வழிமுறை அவருக்கு எளிதானது அல்ல. இந்த வழிமுறையைப்பற்றி அவர் தன் நாட்குறிப்பில், "நடனமாடச் செல்வதை நிறுத்திவிட்டேன். இது தாங்க முடியாத வலி! ஆனால் நான் சிலுவையைச் சுமக்க முயல்கிறேன்; முயல வேண்டும்," என்று எழுதினார்.

இந்த நேரத்தில், டிவினிட்டி ஹால் கல்லூரியில் அவரோடு படித்துக்கொண்டிருந்த ஒரு மாணவனும், அவருடைய நண்பனுமாகிய அலெக்சாண்டர் சோமர்வில்லி என்பவரும் இரட்சிக்கப்பட்டு இயேசுவைப் பின்பற்றத் தொடங்கினார். எனவே, இப்போது அங்கு இரண்டு கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். இருவரும் சேர்ந்து வேதாகமத்தை வாசித்தார்கள், ஜெபித்தார்கள். அவர்களோடு படித்துக்கொண்டிருந்த அவர்களுடைய இன்னொரு நண்பன் ஆண்ட்ரூ பொனார் என்பவரும் மிக விரைவில் இரட்சிக்கப்பட்டார். இப்போது மூன்றுபேர். அவர்கள் மூவரும் தங்கள் வாழ்நாள் முழுவதும் நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள்.

அவருடைய கிறிஸ்தவப் பயணத்தின் இந்த ஆரம்ப ஆண்டுகளில், கல்லூரியில் அவர் கிரேக்க மொழியும், எபிரேய மொழியும் கற்றுத் தேறினார்; சபை வரலாற்றைக் கருத்தாய் ஆராய்ந்துபடித்தார். இந்த விரங்களையெல்லாம் அவருடைய நாட்குறிப்பிலிருந்து அறிய முடிகிறது. இவைகளோடுகூட, அந்த ஆரம்ப நாட்களில் அவர் சந்தித்த அன்றாடப் போராட்டங்களையும், தோல்விகளையும், வெற்றிகளையும்பற்றிய நுணுக்கமான விவரங்களையும் அவருடைய நாட்குறிப்பிலிருந்து அறியமுடிகிறது. ஒரு நாள் மாலை வேடிக்கை பார்க்க, பொழுதுபோக்க, வெளியே சென்றுவந்தபிறகு, அவர், "இவையெல்லாவற்றிலிருந்தும் என் இருதயம் துண்டிக்கப்பட்ட வேண்டும். என் எஜமானின் நேரத்தைத் திருடவும், தவறாகப் பயன்படுத்தவும் எனக்கு என்ன உரிமை உண்டு? 'என் நேரத்தை மீட்டு ஆதாயப்படுத்து என்று கிறிஸ்து என்னிடம் கதறுகிறார்,' என்று தன் நாளேட்டில் எழுதினார். அவர் தன் சொந்தப் பலத்தையும், தன் சொந்த விருப்பத்தையும் முழுமையாக சார்ந்திருந்த நேரங்களைப்பற்றியும் தன் நாளேட்டில் பல இடங்களில் குறிப்பிடுகிறார். இதைக்குறித்து உவமை சொல்வதுபோல், "நானாகவே ஒரு தடியை உண்டாக்கி, அதின்மேல் சாய்ந்திருந்தேன். அது என் பாரம் தாங்காமல் உடைந்து நொறுங்கியபோதுதான், அது உம் கோல் அல்ல என்று உணர்ந்தேன்," என்று தான் உண்டாக்கிய தடிகளைப்பற்றி எழுதுகிறார்.

அவர் ஜோனதன் எட்வர்ட்சின் எழுத்துக்களை விரும்பிப் படித்தார். அவருடைய எழுத்துக்களால் ராபர்ட் மிகவும் ஈர்க்கப்பட்டார். ஜோனதன் எட்வர்ட்சைப்பற்றி, "நான் ஜோனதன் எட்வர்ட்சின் வாழ்க்கை வரலாற்றைப் படித்தேன். இப்பேர்ப்பட்ட சூரியனுக்கு அருகில் என் கிறிஸ்தவத் தீப்பொறி எவ்வளவு மங்கலாக இருக்கிறது, எரிகிறது! ஆனால், அதுவும் இரவல் வாங்கிய ஒளிதானே! அவர் எரிந்து ஒளிர்வதற்கு எந்த எண்ணெய் வியாபாரியிடம் எண்ணெய் வாங்கினாரோ, அந்த வியாபாரி இன்றும் இருக்கிறார்; எனக்கும் தர விரும்புகிறார். நானும் போய் வாங்கலாம்," என்று எழுதினார். 

அவர் தன் பாவத்தோடும், தகுதியின்மையோடும் போராடினார். அவர் தன்னிடமிருந்த அவிசுவாசத்தைக் கண்டார். சில நேரங்களில் அவர் தன் பழைய பழக்கங்களில் திரும்பவும் விழுந்தார். ஆகவே, அவர் தன் பரிதாபமான நிலையைக் கண்டு வருந்தினார். தான் சீர்கெட்டதன்மையின் முழு மொத்தம் அல்லது ஒரு புழு என்று அவர் அடிக்கடி பேசினார். இவைகளைக்குறித்து அவர் தன் நாளேட்டில், "ஒருவேளை என் பழைய பாவங்கள் மிகப் பயங்கரமாக இருப்பதாலும், என் அவிசுவாசம் மிகவும் பளிச்சென்று தெரிவதாலும் நான் கிறிஸ்துவிடம் வருவதில்லை. நான் கிறிஸ்துவிடம் வருகிறேன், பாவியாக இருந்தாலும் என்பதால் அல்ல; நான் பாவியாக இருப்பதால்தான் வருகிறேன், அதுவும் பெரும் பாவியாக இருப்பதால்தான் அவரிடம் வருகிறேன்," என்று  எழுதினார். "தேவனே! இந்த உலர்ந்த எலும்பு உயிரடையுமா? ஆண்டவரே, உமக்குத் தெரியும். ஆண்டவரே, நீர் தொடங்கியதைப் பூரணப்படுத்தும்," என்று அவர் தேவனிடம் கதறுகிறார். கர்த்தர் அவருடைய ஜெபத்தைக் கேட்டார்.

ராபர்ட் பல்கலைக்கழகத்தில் இறையியல் படிப்பைத் தொடர்ந்தார். அவருடைய பேராசிரியர் டாக்டர் தாமஸ் சால்மர்ஸ் தன் மாணவர்கள் படிக்கும் இறையியல் வகுப்பறையிலேயே நின்றுவிடாமல், அது நடைமுறையில் அவர்களுடைய சொல்லிலும், செயலிலும் பயன்படுத்தபட வேண்டும், வெளிவர வேண்டும் என்பதை அறிய வேண்டும் என்று விரும்பினார்; இந்தக் கண்ணோட்டத்தை அவர்களுக்கு காண்பிக்க வேண்டும் என்ற பெரிய பாரம் அவருக்கு இருந்தது. "ஒருவன் கற்கும் கல்வி அவனுக்கும், பிறருக்கும் பயன்படவில்லையென்றால் அந்தக் கல்வியால் என்ன பயன் என்று டாக்டர் தாமஸ் சால்மர்ஸ் நினைத்தார். எனவே, அவர் தன் மாணவர்களை வகுப்பறைக்குள் அடைத்துவைக்காமல் எடின்பரோ நகரத்தின் குடிசைப்பகுதிகளுக்கு அழைத்துச் சென்று, அங்கிருந்த ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கச் சொன்னார். 

ராபர்ட் முர்ரே இப்போதுதான் முதன்முறையாக இந்தக் குடிசைப்பகுதிகளுக்குச் சென்றார்; பார்த்ததும் அதிர்ந்துபோனார், உறைந்துபோனார், உடைந்துபோனார். அதிர்ச்சி! பேரதிர்ச்சி! இதுபோன்ற இடத்தை அவர்  இதுவரை ஒருபோதும் பார்த்ததில்லை. ராபர்ட் தன் வாழ்நாள் முழுவதும் சவுகரியமாக, வளமையில் வாழ்ந்தவர். அவருக்கு வறுமை என்றால் என்னவென்று தெரியாது. கடந்த காலத்தில் சில நேரங்களில் அவர் இந்தக் குடிசைப் பகுதிகளின்வழியாக நடந்துபோனார். ஆனால், உள்ளே போனதில்லை. அங்கு என்ன நடக்கிறது, அங்கு மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்ற எண்ணம் அவருக்கு ஒருபோதும் எழுந்ததில்லை. இப்போதுதான் அவர் முதன்முறை அந்தக் குடிசைப் பகுதியில் இருந்த வீடுகளுக்குள் நுழைந்து, அந்த மக்களின் அவலநிலையைக் கண்டு குமுறினார்; மனம் வெதும்பினார். அன்று, "இதுபோன்ற காட்சிகளை நான் கனவிலும் நினைக்கவில்லை. என் சொந்த ஊரின் ஏழைகளுக்கு நான் ஏன் அந்நியனாக இருக்கிறேன்? நான் இவர்களின் கதவுகளை ஆயிரக்கணக்கானமுறை கடந்திருக்கிறேன்; உயரமான புகைபோக்கிகளையுடைய உயர்ந்த கட்டிடங்களை நான் பார்த்தேன், ரசித்தேன். ஆனால், இந்தக் குடிசைக்குள் நான் ஏன் இதுவரை நுழையவில்லை? தேவனுடைய அன்பு என்னில் இருக்கிறது என்று எப்படிச் சொல்ல முடியும்? இந்த ஏழைகளின் குரல், ஒடுக்கப்பட்டவர்களின் குரல், கிறிஸ்தவனின் காதுகளுக்கு இன்பமாக இல்லையே, ஏன்? ஏழைகளின் குரலுக்கு வரவேற்பு இல்லையே ஏன்? நண்பர்களோ, ஊழியக்காரர்களோ இவர்களைப் பார்ப்பதில்லையே ஏன்? இங்கு மக்கள் குவியல் குவியலாக வாழ்கிறார்களே! 'எங்கள் ஆத்துமாவைக்குறித்து யாருக்கும் கவலையில்லை" என்ற வார்த்தைகள் அவர்கள் ஒவ்வொருவருடைய நெற்றியிலும் எழுதப்பட்டிருக்கிறது. என் ஆத்துமாவே, விழித்தெழு! என் வீட்டு வாசலிலேயே இவ்வளவு மோசமான அவலம் குடியிருக்கும்போது, இந்த மாய உலகின் காரியங்களில் என் நேரங்களையும் நாட்களையும் நான் ஏன் செலவழிக்க வேண்டும்? ஆண்டவரே, உம் பலத்தை என்னில் வைத்தருளும்; என் ஒவ்வொரு நல்ல தீர்மானத்தையும் உறுதிப்படுத்தும்; என் கடந்த கால பயனற்ற, முட்டாள்தனமான வாழ்க்கையை மன்னியும்," என்று அவர் தன் நாளேட்டில் எழுதினார்.   

 அனைவருக்கும், குறிப்பாக, இவர்களைப்போன்ற மக்களுக்கு நற்செய்தியைக் கொண்டுசென்றாக வேண்டும் என்று அவர் இந்தக் கட்டத்தில்தான் முடிவுசெய்தார்; நற்செய்தி அறிவிக்க வேண்டும் என்ற பாரம் இந்த நேரத்தில்தான் அவருக்குள் ஆழமாக வேரூன்றியது. தான் செய்யப்போகிற ஊழியத்தைப்பற்றிய ஆழமான எண்ணமும், அழுத்தமான பாரமும் அவருக்குள் உருவாயின. இதற்குப்பின் அவர் தன் இறையியல் படிப்பை முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் பார்க்கத் தொடங்கினார். இவர்களைப்போன்ற மனிதர்களைச் சந்தித்து, அவர்களுக்கு நற்செய்தி அறிவிக்கவும், ஊழியம்செய்யவும் தேவையான எல்லாவற்றையும் தான் படிக்கும் காலத்தில் தன்னால் முடிந்த அளவுக்குக் கற்றுக்கொள்ளத் தீர்மானித்தார். பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்தைத் தன்னை ஊழியம் செய்வதற்குத் தகுதியான பாத்திரமாக மாற்றிக்கொள்ளவும், அதற்குத் தேவையான குணத்தை உருவாக்கவும், தன்னிடம் உள்ள தேவனுக்கு ஒவ்வாத எல்லாப் பழைய பழக்கங்களை விட்டுவிடவும், தான் செய்யும் எல்லாவற்றையும் முழு மனதுடன் செய்யவும் செலவழிக்கத் தீமானித்தார். இதற்குத் தேவையான ஞானத்திற்காக அவர் ஜெபித்தார்.

டிவினிட்டி ஹாலில் அவர் படித்து முடித்த நேரத்தில், ஆங்கிலத்தைப்போலவே எபிரேய, கிரேக்க மொழிகளை எழுதவும், பேசவும் கற்றுத் தேறினார். கர்த்தர் அவரை மறுசாயலாக்கிக்கொண்டிருந்தார்.

1835இல், அவர் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோதே ஸ்காட்லாந்தில் இருக்கும் லார்பெர்ட் என்று ஒரு சிறிய நகரத்தில் இருந்த ஒரு சபையில் உதவிப் போதகராக வருமாறு அவரை அழைத்தார்கள். அவரும் அழைப்பை ஏற்றுக்கொண்டார். அவர் பெரிய நகரங்களைவிட சிறிய கிராமப்புறங்களை அதிகம் விரும்பினார். இப்போது ராபர்ட் ஓர் உதவிப் போதகர். உதவிப் போதகராக இருந்த நாட்களில் அவர் நிறையப் பாடங்களைக் கற்றுக்கொண்டார்.

அவர் அநேகர் பிரசங்கிப்பதைப் பார்த்திருக்கிறார், கேட்டிருக்கிறார். தனக்கென்று ஒரு பிரசங்க பாணியை அவர் இன்னும் உருவாக்கவில்லை. தாங்கள் பிரசங்கிக்கும் எல்லாவற்றையும் மனப்பாடம் செய்து, பிரசங்க மேடையில் நின்றுகொண்டு, மனப்பாடம் செய்த பிரசங்கத்தை வார்த்தைக்கு வார்த்தை ஒப்பித்த சிலரை அவர் பார்த்திருக்கிறார். தங்கள் பிரசங்கத்தை எழுதிவைத்து அதை மிகத் தெளிவாகவும் மெதுவாகவும் வாசித்தவர்களையும் அவர் பார்த்திருக்கிறார். ஒரு நாள், அவர் ஒரு கூட்டத்திற்கு ஒரு நகரத்திலிருந்து இன்னொரு நகரத்திற்கு வேகமாக சவாரி போய்க்கொண்டிருந்தார். போகும் வழியில் அவர் ஆயத்தம்பண்ணிவைத்திருந்த பிரசங்கக் குறிப்புகள் அனைத்தும் தவறுதலாக எங்கோ விழுந்துவிட்டன. நகரத்திற்குப் போய்ச் சேர்ந்தபிறகுதான் அவர் அதைக் கவனித்தார். வந்த வழியே திரும்பிப்போய் அதைத் தேடுவதற்கு இப்போது நேரம் இல்லை. புதிய குறிப்புகளை எழுதுவதற்கும் நேரம் இல்லை. எனவே, எந்தக் குறிப்பும் இல்லாமல் பிரசங்கிக்க வேண்டியிருந்தது. ஆம், அன்று அவர் மிகவும் விடுதலையோடு பிரசங்கித்தார். அன்று அவர் ஆவியானவரின் திட்டவட்டமான நடத்துதலின்படி விடுதலையோடு சுதந்திரமாகப் பிரசங்கித்தார்; பிரசங்கத்தில் ஜீவன் பாய்ந்தோடியது. இப்படிப் பிரசங்கிக்கும் கொடையைத் தேவன் ராபர்ட்டுக்கு அருளினார். தேவன் தனக்கு இந்தக் கொடையைத் தந்திருக்கிறார் என்று அவரும்  உணர்ந்தார். பிரசங்கிக்கும்போது தேவையான வார்த்தைகள் அவருக்கு மிக எளிதாகவும், இயல்பாகவும் சரளமாகவும் வந்தன. இதன் பொருள் அவர் பிரசங்கிக்கப் போதுமான அளவுக்கு ஆயத்தம் செய்யவில்லை என்பதல்ல. உண்மையில், அவர் அதிகக் கவனமாக ஆயத்தம் செய்தார். ஏனென்றால், தான் பிரசங்கிக்கும்போது எப்போதும் ஆவியானவர் தன்னை நடத்த வேண்டும் என்று அவர் வாஞ்சித்தார். அவர் தன்னைச் சார்ந்திருக்க விரும்பவில்லை, தன் சொந்த ஆயத்தத்தைச் சார்ந்திருக்க விரும்பவில்லை. தன் பலத்தையோ, ஞானத்தையோ சார்ந்திருக்க விரும்பவில்லை; சார்ந்திருக்கவில்லை. தேவனை மட்டுமே சார்ந்திருக்க விரும்பினார்; சார்ந்திருந்தார். அவர் ஒரு கவிஞர். ஆனால், இந்தக் காலக்கட்டத்தில் அவர் எழுதிய கவிதைகள் மிகக் குறைவு. ஒருவேளை அவர் கவிதைகள் எழுதாமல் போயிருக்கலாம்; ஆனால், கவிதை எழுதும் கொடையை அவர் தன்  பிரசங்கத்தில் பயன்படுத்தினார் என்று சொல்லலாம். ஆம், அவருடைய பிரசங்கத்தில் கவித்துவம் நிறைந்திருக்கும்.    

அவர் லார்பர்ட்டில் உதவி போதகராக இருந்த காலத்தில், மக்களைச் சென்று சந்திக்கவும், அவர்களோடு ஐக்கியம்கொள்ளவும் கற்றுக்கொண்டார். நாம் 1800களைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதை நினைவில்கொள்ளுங்கள். அவர் போதகராக இருந்த லார்பர்ட் ஒரு சிறிய நகரம் என்று நான் ஏற்கெனவே சொன்னேன். அந்தக் கால கட்டத்தில் இன்று இருப்பதுபோன்ற மருத்துவ வசதிகள் கிடையாது. நோய்வாய்ப்பட்ட மக்கள் போதுமான, சரியான மருத்துவ உதவியின்றி மரித்தார்கள். எனவே, மரணத்தருவாயில் இருந்த மக்களை ராபர்ட் அடிக்கடி சந்திக்க நேர்ந்தது. இது அவர் நிறையக் காரியங்களைக் கற்றுக்கொள்வதற்கு ஏற்ற ஒரு பயிற்சித்தளமாக அமைந்தது.  விபத்துகள், குழந்தைப்பருவ நோய்கள், சளி, காய்ச்சல், நோய்த்தொற்றுகள் எனப் பல வழிகளில் மக்கள் அகால மரணத்தைச் சந்தித்தார்கள். நோய்களுக்கும், மரணத்துக்கும் பஞ்சமில்லை. ஆகையால், நோய்வாய்ப்பட்டவர்களின் வீட்டிற்கு ராபர்ட் அடிக்கடி செல்ல வேண்டியிருந்தது. அவர்களுடைய மரண நேரத்தில் அவர் அங்கு இருந்தார். ஒருநாள் மரணத் தருவாயில் இருந்த ஒரு பெண்மணியின் அருகில் நின்றுகொண்டிருந்தார். அவர் இறந்துவிட்டார். இறந்தபின் ராபர்ட் அவருடைய கண்களை மூடிவிட்டு வீட்டுக்கு வந்தார். வீட்டிற்கு வந்ததும், "ஆண்டவரே, உமக்காக வாழ்வதற்கு எனக்குப் பலம் தாரும்; நான் மரிக்கும் நேரத்திற்கும் பலம் தாரும்," என்று தன் நாளேட்டில் எழுதினார்.

ராபர்ட் முர்ரே அதிகமான ஆற்றலும், வீரியமும், நிறைய திறமைகளும், தாலந்துகளும், பல நல்ல யோசனைகளும் கொண்ட ஒரு வாலிபன். கவிதை, கட்டுரை எழுதத் தெரியும், ஓவியம் வரையத் தெரியும்; இசை அமைக்கத் தெரியும்; இலக்கியங்கள் தெரியும்; எபிரேய, கிரேக்க மொழிகள் தெரியும்;  இன்னும் பல. ஆனால், அவருடைய உடல்நிலை அவ்வளவு ஆரோக்கியமாக இல்லை. அவர் இதற்குமுன்  காசநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். ஓரளவுக்குக் குணமடைந்தபோதும், அவருடைய நுரையீரல் முற்றிலும் குணமடையவில்லை. ஆகையால், அவர் அவ்வப்போது குளிர்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையானார். நோயுற்ற நேரங்களில் அவர் பொறுமையைக் கற்றுக்கொண்டார்; ஆயினும், அவர் போராடினார். அவர், "நான் அப்பிரயோஜனமானவன் என்பதை உணரவும், என் பெருமையைக் குணப்படுத்தவும், இன்னொரு பருவகாலத்திற்கு மீண்டும் ஒரு முறை என்னை ஆயத்தமாக்குகிறீர். ஆண்டவரே, நான் இன்னும் ஓடுவேன், நான் இன்னும் சந்திப்பேன், நான் இன்னும் துணிந்து போராடுவேன் என்று சொன்னேன். கர்த்தரோ 'இல்லை, நீ படுக்கையில் படுத்துக்கிடந்து துன்பப்படு', என்றார்," என்று எழுதினார். அவர் அப்படித்தான் உணர்ந்தார். நோயுற்றுப் படுத்துக்கிடந்த காலங்கள் வாய்ப்புகளைத் தவறவிட்ட பயங்கரமான நேரம் என்று அவர் முன்பு நினைத்தார். ஆரோக்கியமாக இருந்தால் அவர் வெளியே வீதிகளில் நின்று மக்களுக்கு நற்செய்தி அறிவிக்க முடியும்; ஆலயத்தில் நின்று பிரசங்கிக்க முடியும். ஆனால் இவைகளைச் செய்யாமல், செய்யமுடியாமல், நோயுற்று, நகர முடியாமல், படுக்கையில் படுத்திருந்தார். தேவன் இறையாண்மையுள்ளவர் என்று அப்போதுதான் அவர் உணர்ந்தார். தேவன் இறையாண்மையுள்ளவர் என்பதால், அந்த நேரத்தில் கர்த்தரே தன்  வாயை அடைத்திருக்கிறார் என்று விசுவாசித்து, தான் தேவனுடைய கரத்தின்கீழ் வாழ்கிறேன் என்ற உண்மையில் இளைப்பாற வேண்டும் என்றும் அவர் கற்றுக்கொண்டார். அவர் எந்த அளவுக்கு மனத்தாழ்மையைக் கற்றுக்கொண்டார் என்றால் கிறிஸ்துவைக் கிறிஸ்துவின் பொருட்டு மட்டுமே பிரசங்கிக்க வேண்டும் என்று அவர் உணர்ந்தார். பிரசங்கம் பிரசங்கியாரைப்பற்றியதல்ல. பிரசங்கத்தின் கருப்பொருள் பிரசங்கியார் அல்ல. கிறிஸ்துவே பிரசங்கத்தின்  கருப்பொருள், மையம் என்று அவர் உணர்ந்தார். கிறிஸ்து யார், அவர் என்ன செய்து முடித்தார் என்பதுதான் பிரசங்கம். அவர் மக்களை ஒருபோதும் தன்னிடம் ஈர்க்கவில்லை. எனவே, அவர் கற்றுக்கொண்ட இந்தப்  பாடங்கள் அனைத்தும், அவருடைய வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்திற்கு நல்ல பயிற்சியாக அமைந்தன.

டண்டீ என்ற ஒரு பெரிய நகரத்தில் அப்போது ஒரு புதிய தேவாலயத்தைக் கட்டிக்கொண்டிருந்தார்கள். அந்தச் சபையில் ஊழியம் செய்ய ஒரு போதகர் தேவைப்பட்டார். ராபர்ட்டின் பிரசங்கத்தைக் கேட்டவர்கள் அவர்தான் தங்கள் போதகராக வரவேண்டும் என்று விரும்பினார்கள். அவருடைய பெயர் முன்மொழியப்பட்டு, அவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சுமார் 10 அல்லது 11 மாதங்கள் மட்டுமே லார்பர்ட்டில் உதவி போதகராக ஊழியம்செய்தபிறகு அவர் அங்கிருந்து டண்டீக்குக் கிளம்பவேண்டியிருந்தது. லார்பர்ட்டில்  தான் பட்ட  உழைப்பையும், ஊழியத்தையும், முதலீட்டையும் விட்டுவிட்டுப்போவது அவருக்கு மிகக் கடினமாக இருந்தது. தனக்குப்பதிலாக அங்கு ஒருவர் வர வேண்டும் என்றும், வருகிறவர் தேவனையும், தேவ மக்களையும் உளமார நேசிக்க வேண்டும் என்றும் ராபர்ட் விரும்பினார், எதிர்பார்த்தார். அவருடைய நல்ல நண்பர் அலெக்சாண்டர் சோமர்வில்லேதான் அவருக்குப்பதிலாக வரப் போகிறார் என்பதையறிந்து ராபர்ட் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

எனவே, அவர் தன் 23வது வயதில் 1836 நவம்பரில் டண்டீயில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சபையில் போதகராக பிரதிஷ்டைசெய்யப்பட்டார். இப்போது அவர் ரெவெரெண்ட் ராபர்ட் முர்ரே மேக்சேன்.

பல்கலைக்கழகத்தில் டிவினிட்டி ஹாலில் படித்துக்கொண்டிருந்தபோது இவரும் இன்னும் இருவரும் நல்ல நண்பர்கள் என்று சொன்னேன். அதில் ஒருவரான அலெக்சாண்டர் சோமர்வில்லே இப்போது லார்பர்ட்டில் ராபர்டின் இடத்தில் ஊழியத்துக்குப் போகிறார். ராபர்ட் டண்டீக்கு ஊழியத்துக்கு வந்த ஒரு வருடத்திற்குப்பின் அவருடைய இன்னொரு நண்பரான ஆண்ட்ரூ பொனார் டண்டீக்கு அருகில் சில மைல்கள் தொலைவில் இருந்த கோலஸ் என்ற நகரத்தில் இருந்த ஆலயத்தில் போதகராக நியமிக்கப்பட்டார். ராபர்ட்டின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.  மூன்று நண்பர்களும் அருகருகே இருந்த ஆலயங்களில் போதகர்களாக இருந்து ஊழியம்செய்தார்கள்.

டண்டீ நகரம் ராபர்ட் முன்பு ஊழியம்செய்த லார்பர்ட் பட்டணத்தைவிட மிகவும் வித்தியாசமானது. முதலாவது, டண்டீ ஒரு தொழில்நகரம்; அங்கு ஜவுளி ஆலைகள் அதிகமாக இருந்தன. எனவே,  கிராமப்புறங்களிலிருந்த ஏராளமான மக்கள் டண்டீக்குக் குடிபெயர்ந்தார்கள். நகரத்தின்பால் மக்கள் ஈர்க்கப்பட்டார்கள். மக்கள்தொகை அதிகமாக இருந்தது. இடவசதிக் குறைவினால் டண்டீயில் பல குடிசைப்பகுதிகள் முளைத்தன. அவர் பொறுப்பேற்றிருந்த திருச்சபையில் சுமார் 4000பேர் இருந்தார்கள். சுமார் 1000பேர் செயின்ட் பீட்டர்ஸ் திருச்சபையின் செயல்படும் உறுப்பினர்களாக இருந்தார்கள். ஆனால், ராபர்ட் கூறியபடி, இது கடினமான இருதயம் கொண்ட ஒரு நகரம். ஏனென்றால், அங்கு 60 விழுக்காடு மக்கள் மட்டுமே தேவாலயத்திற்கு ஒழுங்காகச் சென்றார்கள். அந்த நாட்களின் தரத்தின்படி இந்த எண்ணிக்கை மிகவும் குறைவு. ஏனென்றால், அந்த நாட்களில் மக்கள் எல்லாரும் பெயரளவிலாவது கிறிஸ்தவர்கள். பழக்கத்தின் காரணமாவது அவர்கள் ஆலயத்திற்குச் சென்றுவந்தார்கள். எனவே, 60 விழுக்காடு என்பது மிகக் குறைவு. 

அந்த நகரத்தில் இருந்த தொழிற்சாலைகளின் இரைச்சல், புகை, மாசுபட்ட காற்று ஆகியவைகளால் டண்டீ நகரம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு ஏற்ற இடமாகக் கருதப்படவில்லை.  அதுமட்டுமின்றி, அவர் டண்டீக்கு வந்த நேரத்தில் நகரத்தில் காய்ச்சலும், காலரா நோயும் வேகமாகப் பரவிக்கொண்டிருந்தது. ஏராளமானோர் பாதிக்கப்பட்டார்கள். எனவே, அவர் அங்கு வந்ததும் நேரே களத்தில் இறங்க வேண்டியிருந்தது. 4000 பேர் கொண்ட சபை. ஏராளமானோர் நோயுற்றார்கள். வீடுகளுக்குச் சென்று மக்களைச் சந்தித்துக்கொண்டேயிருந்தார். ஓய்வில்லை; மூச்சுவிட நேரமில்லை. சில நேரங்களில் அவர் ஒரே நாளில் பலரைச் சந்தித்துவிட்டு அப்போதுதான் வீட்டிற்குத் திரும்பியிருப்பார். உடனே இன்னோர் அழைப்பு வரும். உடனே ஓட வேண்டும். மரணப் படுக்கையில் இருப்பவர்களைப் போய்ப் பார்க்க வேண்டும். இந்த நிலைமையை நான் உங்கள் கற்பனைக்கு விட்டுவிடுகிறேன்.

ஒருமுறை அவர் நோயுற்று படுத்திருந்த ஒரு சிறுவனைப் பார்க்கச் சென்றார்; அவனுக்கு இயேசுவை எடுத்துரைத்தார். அவர் பேசி முடித்தவுடன் அந்தச் சிறுவன் இறந்துவிட்டான். பூமியில் மனித வாழ்வு மிகக் குறுகியது என்ற அவருடைய எண்ணத்தை இது மீண்டும் உறுதிப்படுத்தியது. இந்த நேரங்களில் ராபர்ட், "ஆண்டவரே, வாழ்வதற்குப் பலம் தாரும். இறக்கும் நேரத்திற்கும் எனக்குப் பலம் தாரும்," என்று ஜெபித்தார்.

எல்லாருடைய தேவைகளிலும் வீதிகளிலும், வீடுகளிலும், குடும்பங்களிலும் எல்லாருக்கும் எல்லாம் ஆனார். நெருக்கடியான நேரங்களிலும், இக்கட்டுகள் நிறைந்த இன்னல் வேளைகளிலும், அவர் எல்லாரும் நம்பத்தக்கவரானார், நெருங்கத்தக்கவரானார். குடும்பங்களில் ஒரு தாயையோ, ஒரு தந்தையையோ, ஒரு குழந்தையையோ இழந்துகொண்டிருந்த நேரத்தில் ராபர்ட் அவர்களுக்காக அங்கே அவர்களுடன் இருந்தார். அவர்களில் ஒருவராக அவரும் அவர்கள் நடுவில் இருந்தார். சில சமயங்களில் அக்கம்பக்கத்தினரும், நண்பர்களும் அவருடன் அங்கு இருந்தார்கள். இப்படிப்பட்ட நெருக்கடியான சூழலில் அவர் மக்களுக்கு ஊழியம் செய்தார். சபை மக்கள் எல்லாருக்கும் அவரை நன்றாகத் தெரியும். இப்போது அவர் டண்டீ நகரத்தார் அனைவருக்கும் அறிமுகமானார்.

ராபர்ட் மக்களைக் கவர்ந்திழுக்கும் வகையில் மிகவும் கவர்ச்சியாகப் பிரசங்கிப்பார். அவருடைய பிரசங்கம் மக்கள் மனதைக் கொள்ளைகொள்ளும். அவருடைய பிரசங்கத்தைக் கேட்க மக்கள் கூட்டம்கூட்டமாகத் திரண்டார்கள். "டண்டீயின் மிக மோசமான பாவிகள்கூட உங்கள் பிரசங்கத்தைக் கேட்க வருகிறார்களே! இதற்கு என்ன காரணம்?" என்று ராபர்ட்டிடம் கேட்டபோது, "என் இருதயம் அவர்களுடைய இருதயத்தைப் பிரதிபலிப்பதுதான் காரணம்," என்று கூறினார்.

ராபர்ட்  உபதேசத்தைப் பிரசங்கிப்பதைவிட கிறிஸ்துவைப் பிரசங்கிப்பதையே நாடினார், தேடினார். அதற்கும் மேலாக, "என் தனிப்பட்ட பரிசுத்தமே என் மக்களின் மிகப் பெரிய தேவை," என்ற கோட்பாட்டின்படி அவர் வாழ விரும்பினார். அவர், "பரிசுத்தமான ஓர் ஊழியக்காரன் தேவனுடைய கைகளில் ஒரு பயங்கரமான [அதாவது பலம்வாய்ந்த] ஓர் ஆயுதம்," என்று எழுதினார். இதுவே  அவருடைய ஊழியம், வாழ்க்கை ஆகிய இரண்டின் குணம், இலட்சணம். 

தான் கொடுக்கும் பொருள்விளக்கமோ அல்லது விளக்கவுரையோ அல்லது தான் தேவனுடைய வார்த்தையைப் பகிர்ந்தளிக்கும் விதமோ ஆத்துமாக்களை இரட்சிக்காது; ஆத்துமாக்களை இரட்சிப்பது முழுக்கமுழுக்க தேவனுடைய செயல், அது தேவனுடைய வேலை மட்டுமே என்பதில் அவர் மிகத் தெளிவாக இருந்தார். நகர மக்களிடையே அவருக்குப் நாளும் பொழுதும் பேரும் புகழும் பெருகிக்கொண்டே இருந்ததால், அவர் எப்போதும் மிகவும் விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் இருந்தார். பெருமை மூலையில் பதுங்கியிருப்பதை அறிந்திருந்த ராபர்ட் எப்போதும் தாழ்மையை உடுத்திக்கொள்வதில் மிகவும் கவனமாக இருந்தார். மோசே தேவனுடைய பிரசன்னத்தில் இருந்துவிட்டு, சாட்சிப் பலகைகள் இரண்டையும் தன் கையில் எடுத்துக்கொண்டு, சீனாய் மலையிலிருந்து இறங்கியபோது அவருடைய முகம் பிரகாசித்தது என்ற யாத்திராகமப் பகுதியைப்பற்றி ஒருமுறை ராபர்ட் தன் சகபோதகர் ஒருவருக்கு எழுதினார்.  அந்தப் பகுதியைப்பற்றி அவர், "ஆத்துமாவும் உடலும், தலையும், முகமும், இருதயமும் தெய்வீக அழகால்  பிரகாசிக்கும்வரை நாம் தேவனுடன் நெருக்கமாகக் கலந்துறவாட வேண்டும், ஐக்கியம்கொள்ள வேண்டும்.  ஆனால், தன் முகம் பிரகாசித்திருப்பதை மோசே அறியாதிருந்ததுபோல நாமும் அறியாதிருக்க வேண்டும். இந்தப் பரிசுத்தமான அறியாமைக்காகத் தேவனைத் துதிக்கிறேன். இதற்காக ஜெபியுங்கள்; ஏனென்றால், இதுவே உங்களுடைய என்னுடைய இன்றைய இன்றியமையாத் தேவை," என்று எழுதினார். அவர் தன்  பாவத்தன்மையை அறிந்து அடிக்கடி வருத்தப்பட்டபோதும், இதுவும் தேவைக்கும் அதிகமான சுயபரிசோதனைக்கு வழிவகுக்கும் என்பதை அவர் புரிந்துகொண்டார். இந்தக் காரியத்தைக்குறித்து அவர் ஒரு நண்பருக்கு, "கிறிஸ்துவின் இருதயத்தைப் பார்த்துப் படிப்பதைப்போல, நீங்கள் எப்போதும் உங்கள் இருதயத்தைப் பார்ப்பதிலும் படிப்பதிலும் உங்கள் நேரத்தை அதிகம் செலவழிக்காதீர்கள். உங்கள் இருதயத்தை நீங்கள் ஒருமுறை பார்த்தால், படித்தால், அதற்குச் சமமாக கிறிஸ்துவின் இருதயத்தைப் பத்துமுறை பாருங்கள், படியுங்கள்" என்று எழுதினார்.

அவருடைய மோசமான உடல்நிலை அவர் எப்போதும் தாழ்மையாக இருக்க அவருக்கு உதவியது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், காய்ச்சலாலும், நோய்களாலும் பாதிக்கப்பட்டுப் பலவீனமடைந்த ராபர்ட் அடிக்கடி தன் அன்றாட அலுவல்களிலிருந்து விலகிஇருக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தன் பலவீனத்தையும், காய்ச்சலையும், நோயையும் அவர் ஒரு சிரமமாகவோ, பிரச்சினையாகவோ, தொல்லையாகவோ பார்க்கவேயில்லை; மாறாக அவைகளை அவர் தன் பயிற்சியாகவே பார்த்தார். இதைப்பற்றி அவர், "புத்திசாலித்தனமான எல்லாத் தொழிலாளிகளும் தங்கள் கருவிகளை எப்போதும் பயன்படுத்திக்கொண்டேயிருக்காமல், கருவிகளுக்கு அவ்வப்போது ஓய்வு கொடுக்கிறார்கள். துடைத்துச் சுத்தமாக்குவதற்காக, கூர்மையாக்குவதற்காக, மீண்டும் பயன்படுத்துவதற்காக, அவைகளைப் பயன்படுத்தாமல் கீழே வைத்துவிடுகிறார்கள்; அதுபோல சர்வ ஞானியாகிய யெஹோவா தம் ஊழியக்காரர்களை தம் பணிவிடையின் கடினமான வேலைக்காகக் கூர்மையாக்குவதற்காகவும், ஆயத்தமாக்குவதற்காகவும் இருள், தனிமை, பிரச்சினை ஆகியவைகளின்வழியாக அடிக்கடி அழைத்துச் செல்கிறார்," என்று எழுதினார்.

இதோ! அவருடைய வாழ்க்கை! மிகக் கடுமையான கால அட்டவணை, நகரங்களுக்கு இடையே இடைவிடாத பயணம், நகரத்தில் நிலவிய தொற்றுநோய்கள், தொழிற்சாலைகளின் ஓயாத இரைச்சல், மாசுபட்ட புகைநிறைந்த காற்று, நகரத்தில் புறக்கணிக்கப்பட்ட ஒரு பகுதியில் அவருடைய வீடு. அவர் கூறியதுபோல், அவருடைய உடல்நலத்தைக் கருதி அவருடைய குடும்பத்தார் உட்பட பலர் அவரை அந்த நகரத்தைவிட்டு வேறெங்காவது போகுமாறு வற்புறுத்தினார்கள். இன்னொரு திருச்சபையில் போதகராகப் போவதற்கு அவருக்கு வாய்ப்பும் வழங்கினார்கள். அந்தச் சபையில் ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் இல்லை; சில நூறு பேர் கொண்ட மிகச் சிறிய சபை. இப்போதைய சபையில் கிடைக்கும் ஊதியத்தைவிட அதிக ஊதியம் கிடைக்கும். இங்கு உள்ள கடுமையான வாழ்க்கையைவிட அங்கு மிகவும் எளிதான வாழ்க்கைமுறை. ஆனால், தன் எஜமானாகிய ஆண்டவர் தன்னை டண்டீயில் வைத்ததாகவும், அங்கேயே இருக்கச்சொன்னதாகவும் அவர் நம்பினார். எனவே, தான் டண்டீயைவிட்டு வெளியேற வேண்டும் என்று தேவன் சொல்வதாக தான் உறுதியாக உணர்ந்தால் மட்டுமே வெளியேறுவதாகச் சொன்னார். இதற்காக அவர் ஜெபித்தார். தேவனிடம் ஒரு திட்டவட்டமான அடையாளத்தையும் கேட்டார். அவருடைய ஜெபமும், அடையாளமும் என்ன தெரியுமா? "தேவனே! சபையில் உலர்ந்த எலும்புகளைப்போல் இருக்கும் பலரில் ஒரு சிலராவது தங்களுக்கு ஓர் இரட்சகர் தேவை என்பதை உணரும்படி அவர்களை உயிர்ப்பியும்." இதுதான் அவருடைய ஜெபம். அவர் கேட்ட அடையாளம். 

 மறுநாள் காலையில், இரண்டு பேர் அங்கலாய்ப்போடும், தவிப்போடும் அவரைத் தேடி வந்தார்கள். அவர்கள் மிகுந்த துயரத்தில் இருந்தார்கள். அவர்கள் ராபர்ட்டிடம், "எங்கள் ஆத்துமாவின் நிலை என்னவென்று எங்களுக்குத் தெரியவில்லை. தேவன் எங்களுக்காக வகுத்த நோக்கம் என்னவென்று தெரியவில்லை. தயவுசெய்து நீர் எங்களுக்கு உதவ வேண்டும்," என்று கெஞ்சினார்கள். இது தேவன் தன் ஜெபத்திற்குத் தந்த தெளிவான பதில், அடையாளம், என்று ராபர்ட் உணர்ந்தார்.

எனவே, அவர் டண்டீயில் ஊழியத்தைத் தொடர்ந்தார். ஒவ்வொரு நாளும் மக்களை சந்தித்தார், பிரசங்கித்தார், போதித்தார், கற்பித்தார். அவருடைய நாட்குறிப்பைப் படிக்கும்போது, அவருடைய அனுதின நடவடிக்கைகளை அறியமுடிகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் அவர் இரண்டுமுறை பிரசங்கித்தார்; ஞாயிற்றுக்கிழமைகளில் இரண்டு பிரசங்கங்களோடு நிறுத்தவில்லை; ஞாயிறு பள்ளிவகுப்பிலும் பாடம் நடத்தினார். செவ்வாய்க்கிழமைகளில் வாலிபர்களுக்கு வேதபாட வகுப்பு நடத்தினார். இந்த வேதபாட வகுப்பில் 250 வாலிபர்கள் கலந்துகொண்டார்கள். அவர் வாலிபர்களை மிகவும் நேசித்தார். ராபர்ட்டுக்கும் வயது 25 அல்லது 26தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வியாழக்கிழமை ஜெபக்கூட்டம்; அவர் ஆரம்பித்த இந்த ஜெபக்கூட்டத்தில் ஒரு சில வருடங்களில் சுமார் 800பேர் பங்குபெற்றார்கள். சனிக்கிழமைகளில் மக்கள் தன் வீட்டுக்கு வந்து கேள்வி கேட்பதற்காக அவர் தன் வீட்டைத் திறந்துவைத்தார். ஏராளமான மக்கள் சனிக்கிழமைகளில் அவருடைய வீட்டில் கூடினார்கள். வாரத்தில் எல்லா நாட்களிலும் அவர் மக்களை அவர்களுடைய வீடுகளில் போய்ச் சந்தித்தார். ஒவ்வொரு நாளும் 10முதல் 20 குடும்பங்கள்வரை சந்தித்தார். இடைப்பட்ட நேரங்களில், அவர் படித்தார், வழக்கமான ஊழியத்திற்குத் தேவையானவைகளைத் தயாரித்தார், மக்களுக்குக் கடிதம் எழுதினார்.

அந்த நாட்களில், ஸ்காட்லாந்து சபைகளில் வருடத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே கர்த்தருடைய பந்தியை அனுசரிக்கும் பழக்கம் இருந்தது. ராபர்ட் அதை மாற்ற விரும்பினார். அவர் அதிரடியாக அதை வருடத்திற்கு நான்கு முறை என்று இரட்டிப்பாக்கினார். அவருடைய இந்த நடவடிக்கை அன்று ஸ்காட்லாந்து சபைகளில் பலருடைய தாக்குதலுக்கு உள்ளானது.

அவர்களுடைய பந்தி நாம் இன்று சபைகளில் அப்பம் பிட்டு, திராட்சை ரசம் பருகி அனுசரிக்கின்ற கர்த்தருடைய பந்தி போன்றதல்ல. கர்த்தருடைய பந்தி, கர்த்தருடைய இராப்போஜனம், அப்பம் பிட்குதல், திருவிருந்து என்று இன்று பல பெயர்களில் நாம் அழைக்கிறோம். அந்தக் காலகட்டத்தில் அவர்கள் கர்த்தருடைய பந்தியை திருவிருந்தின் காலம், Communion Seasons, என்று அழைத்தார்கள். அந்தக் காலகட்டத்தில் அவர்கள் திருவிருந்தின் காலத்தை ஒரு பெரிய பண்டிகைபோல், ஆனால் பயபக்தியோடு கொண்டாடினார்கள். இன்று மக்கள் திருவிழா கொண்டாடத் தங்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதுபோல, அன்று பல்வேறு இடங்களில் வாழ்ந்த சபை மக்கள் திருவிருந்தின் காலத்தில் தங்கள் தங்கள் சபைகளுக்குச் சென்றார்கள். மக்கள் தவறாமல் திருவிருந்தில் பங்குபெற்றார்கள். எல்லாரும் பயணித்தார்கள். அது பயணம் செய்யும் காலம். அவர்களுடைய பயணம் எப்படி இருந்திருக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கு விட்டுவிடுகிறேன். அவர்கள் தங்கள் சொந்தச் சபைகளுக்கு வந்து ஒரு சில நாட்கள் தங்கியிருப்பார்கள். திருவிருந்து நிகழ்ச்சி நாள்முழுவதும் நடக்கும். ஆனால், திருவிருந்து நிகழ்ச்சிக்கு முந்தைய ஒன்றிரண்டு நாட்கள் அவர்கள் ஜெபத்திலும், உபவாசத்திலும் கழித்தார்கள். திருவிருந்தில் பங்குபெற மக்கள் மிகவும் பயபக்தியோடு தங்களை ஆயத்தம்செய்தார்கள். ராபர்ட் இந்த நாட்களை நற்செய்தி அறிவிப்பதற்குப் பயன்படுத்தினார். திருவிருந்தின் காலத்தில் ராபர்ட்டின் பிரசங்கத்தைக் கேட்பதற்காக எல்லா இடங்களிலிருந்தும் மக்கள் டண்டீக்குத் திரண்டுவந்தார்கள். திருவிருந்தின் காலம் முடிந்து அவரவர் தத்தம் ஊர்களுக்குத் திரும்பியபோது, "அவருடைய பிரசங்கத்தைக் கேட்கும்போது நம் இருதயம் நமக்குள்ளே கொளுந்துவிட்டு எரிகிறதே!" என்று பரவசமடைந்தார்கள்.

ராபர்ட் முர்ரே அந்த மக்களிடையே மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். இதற்கு உண்மையான காரணம் அவருடைய பிரசங்கம் மட்டும் அல்ல; அவருடைய வாழ்க்கை; அவர் அந்த மக்களிடையே வாழ்ந்த  வெளிப்படையான பரிசுத்தமான வாழ்க்கையே இதற்கு முக்கியமான காரணம். அந்த மக்கள் ராபர்ட்டைத் தனித்தன்மைவாய்ந்த ஒரு மனிதனாகப் பார்த்தார்கள். அவர்கள் ராபர்ட்டைக்குறித்து, "இவர் தேவனுடைய விசித்திரமான ஒரு மனிதர்; இவர் பிறரைவிட ஏதோவொரு குறிப்பிட்ட காரியத்தில் மிகவும் உயர்ந்தவர் என்று சொல்வதைவிட, இவர் எல்லாரும் மிகவும் அணுகதக்கவர்; கிருபையால் மிகத் திட்டவட்டமாக இரட்சிக்கப்பட்டவர்; எங்கள் சோதனைகளை அறிந்தவர்; கண்ணீரோடு எங்களுக்குப் போதித்து, வழிநடத்துபவர்," என்று சொன்னார்கள். ராபர்ட் டண்டீயின் மக்களை உண்மையாகவே உளமார நேசித்தார்; இது அவர்களுக்கும் நன்றாகத் தெரியும். ஒருமுறை ஓர் அவிசுவாசப் பெண், ராபர்ட்டின் பிரசங்கத்தைக் கேட்டபின், "அவர் பிரசங்கித்த பொருளையும், அவர் பிரசங்கித்த விதத்தையும்விட கிறிஸ்துவின் உயிருள்ள நிருபமாகிய பிரசங்கியார்தான் என்மேல் அதிக தாக்கத்தை ஏற்படுத்தினார்," என்று கருத்து தெரிவித்தார்.

ராபர்ட் முர்ரே தன் வாழ்நாள் முழுவதும் நற்செய்தி அறிவிப்பதிலும், மிஷனரி வேலைகளிலும் தணியாத் தாகம் கொண்டிருந்தார். டேவிட் பிரைனெர்டின் நாட்குறிப்பால் அவர் ஈர்க்கப்பட்டார், கவர்ந்திழுக்கப்பட்டார். டண்டீயிலும், டண்டீயைச் சுற்றியிருந்த சிறு நகரங்களிலும், கிராமங்களிலும் நற்செய்தி அறிவிப்பதற்கான  வாய்ப்புக்களை எப்போதும் தேடினார். கிடைத்த எந்த வாய்ப்பையும் அவர் தவறவிடவில்லை. தன் வாழ்க்கை மிகவும் குறுகியது என்ற ஆழமான உணர்வு அவருக்குள் இருந்தது. தனக்கு ஏற்பட்ட நோயின் காரணமாக அல்லது தான் அருகிருந்த பார்த்த அநேக மரணங்களின் காரணமாக ஒருவேளை அவர் இப்படி நினைத்திருக்கலாம். எனவே, நற்செய்தி அறிவிக்க வாய்ப்பு வ ந்தபோதெல்லாம், "இதோ அடியேன்! என்னை அனுப்பும்," என்பதுதான் அவருடைய உடனடி பதில், அதுதான் அவருடைய மனப்பாங்கு. 

ராபர்ட் எபிரேய மொழியில் புலமைபெற்றவர். அவருடைய எபிரேய புலமையின் காரணமாக , இன்றைய இஸ்ரயேலாகிய அன்றைய பாலஸ்தீனத்திற்கு நற்செய்தி அறிவிக்கச் சென்ற ஒரு குழுவில் ராபர்ட்டும் சேர்க்கப்பட்டார். இது யூத மக்களுக்கு நற்செய்தி அறிவிக்கச் சென்ற மிஷனரிகளின் பயணம். அன்று பாலஸ்தீனத்தில் வாழ்ந்த யூதர்களின் வாழ்க்கையை ஆராய்ந்துபார்க்க வேண்டும் என்பதும் இந்தக் குழுவின் நோக்கமாகும். இந்தக் குழுவில் நான்குபேர் இடம்பெற்றிருந்தார்கள். அவருடைய நண்பர் ஆண்ட்ரூ பொனாரும் இந்தக் குழுவின் நால்வரில் ஒருவர். பாலஸ்தீனத்தில் வாழும் யூதர்களுக்கு நற்செய்தி அறிவிக்க வேண்டும். பாலஸ்தீனத்தில் மட்டும் அல்ல, அவர்கள் பயணிக்கப்போகிற கிழக்கு ஐரோப்பாவிலும் யூதர்களின் நிலை என்ன என்பதைப்பற்றிய முழு விவரங்களையும் சேகரித்து வர வேண்டும் என்பது இந்தக் குழுவின் இலக்கு. அன்று இஸ்ரயேல் என்ற ஒரு நாடு இல்லை.

பாலஸ்தீனத்துக்குச் செல்லும் குழுவில் ராபர்ட் சேர்க்கப்பட்ட நேரத்தில் ராபர்ட்டின் உடல்நிலை மோசமாக இருந்தது. அந்த நேரத்தில் மருத்துவரின் பரிந்துரையின்பேரில் அவர் எடின்பரோவில் தன் குடும்பத்தாரோடு தங்கி ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார். டண்டீயில் அவர் தன் கடுமையான கால அட்டவணையைப் பின்பற்றினால், அவர் சீக்கிரம் இறந்துவிடுவார் என்று அவருடைய மருத்துவர் கூறியிருந்தார். எனவே அவர் தன் பரம ஓட்டத்தை ஓடுவதற்குத் தேவையான பலத்தைப் பெறுவதற்காக எடின்பரோவில் தன் குடும்பத்தாரோடு தங்கி இளைப்பாறினார். பாலஸ்தீனத்துக்குச் செல்லும் மிஷனரி குழுவில் அவர் சேர்க்கப்பட்ட நேரத்தில் அவர் மெதுவாகக் குணமடைந்துகொண்டிருந்தார். இதைக் கேள்விப்பட்ட அவருடைய மருத்துவர், "இது ஒரு சிறந்த யோசனை. வெப்பமான பாலைவனக் காலநிலை உங்கள் நுரையீரலுக்கு நல்லது. அது உங்கள் சுவாசக் குழாய்களுக்கு இதமாக இருக்கும்," என்று சொன்னார். இதுதான் அந்தக் கால மருத்துவம்.

பாலஸ்தீனத்துக்குச் சென்று இந்த வேலைகளையெல்லாம் செய்து முடித்துத் திரும்பிவர குறைந்தது எட்டு மாதங்களாவது ஆகும். அவருக்குப் பதிலாக டண்டீயில் ஊழியத்தைப் பார்த்துக்கொள்ள ஒருவர் தேவை. வில்லியம் பர்ன்ஸ் என்ற ஒரு போதகர் இருந்தார். ராபர்ட் அவருக்கு, "நான் பாலஸ்தீனத்துக்குச் சென்று திரும்பிவரும்வரை எட்டு மாதங்கள் டண்டீயில் ஊழியம்செய்ய வருமாறு வேண்டுகிறேன். இந்த மக்களிடையே நீங்கள் என்னைவிட ஆயிரம் மடங்கு அதிகமாக ஆசீர்வதிக்கப்படுவீர்கள் என்று நம்புகிறேன்," என்று கடிதம் எழுதினார்.

பாலஸ்தீனத்திற்குச் செல்கிறோம் என்ற எண்ணம் அவருக்கு மிகவும் இன்பமாக இருந்தது. யூதர்கள் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு, பிரித்தெடுக்கப்பட்ட விசேஷமான மக்கள் என்று அவர் உறுதியாக நம்பினார். "இஸ்ரயேலர் இரட்சிக்கப்படவேண்டும் என்பதே என் இருதயத்தின் விருப்பமும் நான் தேவனை நோக்கிச் செய்யும் விண்ணப்பமுமாயிருக்கிறது," என்று பவுல் சொன்னதுபோலவே ராபர்ட்டும் விரும்பினார், ஜெபித்தார். நற்செய்தி முதலாவது யூதருக்கும், அதற்குப்பிறகுதான் புறவினத்தார்களுக்கும் வந்தது என்றும் ராபர்ட் நம்பினார். எனவே, யூதர்களுக்கு எப்படியாவது நற்செய்தியை அறிவிக்க வேண்டும் என்ற அவருடைய பாரமும், ஆவலும் அவரை நெருக்கியதால் அவர் பாலஸ்தீனத்துக்குச் செல்ல விரும்பினார். 

அவர்கள் பாலஸ்தீனத்திற்குச் சென்றபோது நிகழ்ந்த சாகசங்களையெல்லாம் நான் சொல்லப்போவதில்லை. அந்தப் பயணத்திற்குப்பின் அவரும் ஆண்ட்ரூ பொனாரும் தங்கள் பயணத்தைப்பற்றி ஒரு புத்தகம் எழுதினார்கள். அந்தப் புத்தகத்தின் தலைப்பு "Narrative of a Mission of Inquiry to the Jews from the Church of Scotland in 1839." ஒரு புத்தகத்திற்கு யாராவது இவ்வளவு நீளமான தலைப்பு வைப்பார்களா என்று ஒருவேளை நீங்கள் நினைக்கலாம். வைத்தார்கள். இந்தப் புத்தகம் வெளியிடப்பட்ட ஆண்டில் இந்தப் புத்தகம்தான் மிக அதிகமாக விற்பனையான புத்தகம்.  ஏனென்றால், மத்திய கிழக்கில் வாழும் மக்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று பிறர் அறிய விரும்பினார்கள்.

ராபர்ட் முர்ரே தன் நண்பர்களுடன் பயணத்தைத் தொடங்கினார். பாலஸ்தீனத்திற்குச் சென்று யூதர்களுக்கு  நற்செய்தி அறிவிக்கும் மகிழ்ச்சிகரமான பயணம் தொடங்கியது. ஐரோப்பாவைத் தாண்டியதும் எங்கு பார்த்தாலும் பாலைவனங்கள்; ஒட்டகங்களிலும், கழுதைகளிலும் அவர்கள் பயணம் தொடர்ந்தது. கடல்வழியாக சிரமமான கப்பல் பயணத்திற்குப்பிறகு, தரைவழியாக ஒட்டகத்தின்மூலம் பயணித்து, எகிப்தின் பாலைவனத்தில் அராபிய நாடோடிகளின் வழிநடத்துதலின் துணையோடு எருசலேம் வந்தடைந்தார்கள். அங்கிருந்த ஸ்காட்லாந்து சபை இவர்களுடைய வரவால் மகிழ்ந்தது. பாலஸ்தீன யூதர்களுக்கு இயேசு கிறிஸ்துவே மேசியா என்பதை ராபர்ட் ஆதாரங்களுடன் விளக்கிக் கூறினார். கல்லூரியில் கற்ற இறையியலும், தத்துவமும், அனுபவத்தோடுகூடிய விசுவாசமும், எபிரேய மொழியும் யூதர்களிடம் ஆணித்தரமாக நற்செய்தியைப் போதிப்பதற்கு அவருக்கு உதவியாக அமைந்தன.

ராபர்ட்டும் பொனாரும் எருசலேம் வீதிகளிலும், பாலஸ்தீனத்தின் பகுதிகளிலும் நடந்தபோது, இயேசு இந்தப் பூமியில் வாழ்ந்தபோது நடந்து சென்ற காட்சிகளைக் கண்முன் நிறுத்தி நெகிழ்ந்தார்கள். அவர் எருசலேமிலிருந்து வீட்டிற்கு எழுதிய ஒரு கடிதத்தில், "தெய்வீகக் காரியங்களைக் கண்டறிய உதவ இந்தப் பூமியில் ஓர் இடம் இருக்கும் என்றால், அது ஒலிவ மலையாகத்தான் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இதோ என் காலடியில் இருக்கும் கெத்செமனே நமக்காகத் தேவனுடைய கோபாக்கினையைச் சகித்த கிறிஸ்துவின் அன்பையும், மனஉறுதியையும் தியானிக்க என் ஆத்துமாவை ஏவுகிறது. இந்தப் பக்கம் திரும்பி, தென் கிழக்கில் பார்த்தால், பெத்தானியா தெரிகிறது. அது கிறிஸ்து தம்முடையவர்களில் வைத்திருந்த அன்பும், கல்லறைகளில் இருப்பவர்கள் ஒரு நாள் அவருடைய சத்தத்தைக் கேட்டு வெளியே வருவார்கள் என்ற நம் நம்பிக்கையையும் நினைப்பூட்டுகிறது. இன்னும் கொஞ்சம் கீழே பார்த்தால், மலைகளின் ஊடே நீண்டு கிடக்கும் சாக்கடல்  'இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்" என்று எண்ணத்தை ஏற்படுத்துகிறது" என்று எழுதினார்.  

இந்த ஸ்காட்லாந்துக்காரர்கள் இப்போது தங்கள் நாட்டிலிருந்தும், வீட்டிலிருந்தும் வெகு தொலைவில், முற்றிலும் மாறுபட்ட வேறோர் உலகத்தில், வேறொரு கலாச்சாரத்தில், பாலஸ்தீனத்தில் நடக்கிறார்கள், நற்செய்தி அறிவிக்கிறார்கள், நாலாபக்கமும் சென்று நலம் விசாரிக்கிறார்கள். அந்த நாட்களில் மக்கள் இவ்வளவு தூரம் பயணிக்கவில்லை. அவர்களுடைய பயணம் மிகவும் அசாதாரணமானது. இந்த ஸ்காட்லாந்துக்காரர்கள் வனாந்தரத்தில் நடந்து செல்வதை மக்கள் வேடிக்கை பார்த்தார்கள், விநோதமாகப் பார்த்தார்கள். அவர்கள் ஒரு சுற்றுலா அம்சமாக மாறினார்கள்.  

ஸ்காட்லாந்திலிருந்து இவ்வளவு தூரத்தில் இருந்தபோதும் ராபர்ட் எப்போதும் டண்டீயில் உள்ள தன் மக்களைப்பற்றி நினைத்துக்கொண்டிருந்தார். அவர்கள் லெபனானில் பெய்ரூட்டில் இருந்தபோது, கிளாஸ்கோ நகரத்தைச் சேர்ந்த ஒரு ஸ்காட்லாந்து மிஷனரி அங்கு இருப்பதாகவும், அந்த நேரத்தில் அவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மிகவும் பலவீனமாக இருப்பதாகவும் கேள்விப்பட்டார். தன் நாட்டைச் சேர்ந்த ஒருவர், அந்நிய நாட்டில் மிஷனரியாக இருக்கிற ஒருவர், நோயுற்றிருக்கிற ஒருவர் - இப்படிப்பட்ட ஒருவரைப் பார்க்காமல் இருக்க முடியுமா? ராபர்ட் போய்ச் சந்தித்தார். அதற்குப்பின் ராபர்ட்டுக்கும் அந்தக் காய்ச்சல் வந்தது. விரைவில் அவருடைய உடல்நிலை சரியில்லாமல் போனது.

அவர்களுடைய பயணம் தொடர்ந்தது. துருக்கியில் உள்ள சிமிர்னாவை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார்கள். நேரமும், காலமும், தட்பவெப்பமும் எவ்வளவு சாதகமாக இருந்தாலும், அந்த நாட்களில் பயணம் செய்வது மிகவும் கடினம். அப்படியிருக்கையில், நோயுற்றிருக்கும்போது ஒருவன் பயணம் செய்வதை நினைத்துப்பார்க்க முடியாது. ராபர்ட் நோயுற்று, பலவீனமானார், அவ்வப்போது மயக்கமடைந்தார்; ஒரு நாள் சில மணிநேரங்கள் நினைவாற்றலை இழந்தார். மருத்துவ உதவி எதுவும் கிடைக்காததால், அவருடைய நண்பர்கள் செய்வதறியாது திகைத்தார்கள். கப்பல் பயணம் தொடர்ந்தது. தரையிறங்கியவுடன், அவர்கள் மருத்துவ உதவி தேடி அங்குமிங்கும் அலைந்தார்கள். அவர்கள் அவரை ஒரு கழுதையின்மேல் ஏற்றிக்கொண்டு சிமிர்னாவுக்கு வந்தார்கள். அங்கு அவர்கள் ஒரு மிஷனரி தம்பதியைக் கண்டு அவர்களுடன் தங்கினார்கள். கடைசியாக அவர்களுடைய ஒத்தாசையோடு ராபர்ட்டுக்குத் தேவையான மருத்துவ உதவி கிடைத்தது.  

ராபர்ட் மிகவும் பலவீனமாக இருந்தார், அவரால் எதையும் படிக்கவோ எழுதவோ முடியவில்லை; பேசவும் முடியவில்லை. ஒன்றெவொன்றுதான் செய்யமுடிந்தது. அவரால் படுத்திருந்து ஜெபிக்க முடிந்தது. அதைத்தான் அவர் செய்தார். அவர் தன் மக்களுக்குத் தேவனுடைய ஆசீர்வாதம் வர வேண்டும் என்று ஊக்கமாக ஜெபித்தார். தான் இந்தப் பூமியில் தன் இறுதி நாட்களில் இருப்பதாகவே அவர் நம்பினார். "தேவனே, உமக்குச் சித்தமானால் என் மக்களை மீண்டும் ஒருமுறை பார்ப்பதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு தாரும்," என்று ஜெபித்தார்.

ராபர்ட் உடல்நலம் சரியில்லாமல் சிமிர்னாவில் படுத்தபடி ஜெபித்துக்கொண்டிருந்த அதே நேரத்தில், டண்டீயில் வில்லியம் பர்ன்ஸ் பிரசங்கித்துக்கொண்டிருந்தார். அன்று வியாழக்கிழமை. வழக்கம்போல் ஜெபக் கூட்டத்திற்குப்பிறகு, மக்கள் கலைந்துபோகாமல் அங்கேயே தரித்திருந்தார்கள். பர்ன்ஸ் இதைக் கவனிக்கத் தவறவில்லை. "நீங்கள் யாராவது இன்று  இரட்சிப்பைப் பெற விரும்புகிறீர்களா?" என்று அவர் கேட்டார். சுமார் 100பேர் முன்வந்தார்கள். அவர் அவர்களுக்குப் போதித்தார். தேவனுடைய பிரசன்னம் அந்த இடத்தை நிரப்பியதுபோல் இருந்தது. பலர் கண்ணீரோடு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொண்டார்கள். அந்த இரவு அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் தாங்கள் பெற்ற இரட்சிப்புக்காகத் தேவனைத் துதித்து வீட்டுக்குச் சென்றார்கள். அடுத்த நாளும் கூட்டம் நடந்தது. முந்தைய நாளில் நடந்ததுபோல் அன்றும் அநேகம்பேர் இரட்சிக்கப்பட்டார்கள். அதற்கடுத்த நாளும் கூட்டம் தொடர்ந்தது. நூற்றுக்கணக்கான மக்கள் இரட்சிக்கப்பட்டார்கள். அப்போஸ்தல நடபடிகளில் வாசிப்பதுபோல், "இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டுவந்தார்."

டண்டீயில் என்ன நடக்கிறது என்று ராபர்ட்டுக்கு எதுவும் தெரியாது. அப்போது அவர்கள் தங்கள் பயணத்தின் கடைசிக் கட்டத்தில் இங்கிலாந்தில் இருந்தபோது அவருக்கு ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தின்மூலம் டண்டீயில் தான் இல்லாத நேரத்தில் தேவன் செய்துகொண்டிருக்கும் மகத்தான வேலையை அறிந்து வியந்தார். ஒருவன் தேவனுடைய காரியத்தில் பொறாமையோ, காய்மகாரமோ படக்கூடாது என்பது மட்டும் அல்ல, கடுகளவு பெருமையும் படக்கூடாது என்பதைத் தனக்குக் காண்பிக்க இது தேவன் தெரிந்துகொணட வழியாகவும், அளவுகோலாகவும் இருக்கலாம் என்று ராபர்ட் நினைத்தார். ராபர்ட் டண்டீ மக்களுக்காகக் கடுமையாகப் பிரயாசப்பட்டார், பாடுபட்டார், ஒவ்வொரு நாளும் அவர் தன் உயிரை அவர்களுக்காகப் பானபலியாக ஊற்றினார். எனினும், அவர் டண்டீயைவிட்டு வெளியே போனபிறகு அவர் அங்கு இல்லாதபோது, தேவன் அங்கு மாபெரும் வேலைகள் செய்தார். இதைப்பற்றி ராபர்ட், "எப்படியாகிலும், என் மக்களின் இரட்சிப்பு ஒன்றைத்தவிர எனக்கு வேறு விருப்பம் இல்லை," என்று முழு மனதோடு கூறினார்.  பின்னும் இதைப்பற்றி, "நான் இல்லாத நேரத்தில்தான் என் மக்களுக்குப் பெரிய ஆசீர்வாதம் வரக்கூடும் என்று நான் சில நேரங்களில் நினைக்கிறேன். ஏனென்றால், என் பிரயாசத்தால்தான், என் பிரசங்கத்தால்தான், என் பேச்சாற்றலால்தான், என் ஜெபத்தால்தான், என் உழைப்பால்தான், என்னால்தான் இது சாத்தியமாயிற்று என்ற எண்ணம் எழுவதைத் தடுக்க, தேவன் பெரும்பாலும் நாம் இருக்கும்போது, நம் பிரயாசத்தின்போது நம்மை ஆசீர்வதிப்பதில்லை," என்று எழுதினார்.

தேவனுடைய மகத்துவமான செயலைக் கண்டு ராபர்ட் மலைத்தார். "15 வயதுடைய ஒரு பையன், 11 வயதில் ஒரு பெண். இவர்கள் இருவரும் தங்கள் பாவத்தை உணர்ந்து கிறிஸ்துவிடம் வந்திருக்கிறார்கள். இருவரும் மிகவும் மாறிவிட்டார்கள். நகரத்தில் ஒரு குடிகாரன். கடின இருதயமுள்ளவன். அவன் தன் பாவத்தை உணர்ந்து, மனந்திரும்பி கிறிஸ்துவிடம் வந்திருக்கிறான். அவன் அடியோடு மாறிவிட்டான். தங்கள் பழைய வழிகளில் இறுகிப்போன பல முதியவர்கள். அவர்களும் அவைகளைத் தூக்கியெறிந்துவிட்டு இரட்சகரிடம் ஒட்டிக்கொண்டார்கள்," என்று அவருடைய நண்பர் கடிதத்தில் எழுதியிருந்தார். தான் இல்லாத நேரத்தில் தேவன் அங்கு செய்த வேலையை நினைத்துநினைத்து ராபர்ட் மருகினார். 

பாலஸ்தீனத்தில் அநேக யூதர்களைக் கிறிஸ்துவுக்குள் வழி நடத்தி தாய் நாடு திரும்பினார் ராபர்ட். டண்டீ  மக்களிடையே அவர் தொடர்ந்து உழைத்து மாபெரும் அறுவடையை அறுத்தார். ராபர்ட் அங்கு வந்தபிறகு வில்லியம் பர்ன்ஸ் சீனாவுக்கு மிஷனரியாகச் சென்றார். அவர் அங்கு இருந்தபோது, நமக்கு மிகவும் பரிச்சயமான, சீனாவுக்கு மிஷனரியான ஜேம்ஸ் ஹட்சன் டெய்லர் என்ற வாலிபனை மிஷனரிப் பணியில் பயிற்றுவித்தார்.

எழுப்புதல் தீ ஆரம்பத்தில் பற்றி எரிந்தது. மக்கள் பரவசமடைந்தார்கள். உண்மையாகவே ஏராளமானோர் உயிர்மீட்சியடைந்தார்கள். ஆனால், தீ மெல்ல மெல்ல மங்கியது; விஷயங்கள் வழக்கமான பழக்கப்பட்ட முந்தைய நிலைக்குத் திரும்பின. மக்கள் பின்வாங்குவதை ராபர்ட் பார்த்தார். பலர் தங்கள் பாவத்தின் அகோரத்தையும், அசிங்கத்தையும் பார்த்தபோதும், அவர்கள் உண்மையில் இயேசுவிடம் வரவில்லை, அவரை விசுவாசித்துப் பெற்றுக்கொள்ளவில்லை என்பதை ராபர்ட் தெளிவாக உணர்ந்தார். மக்கள் தங்கள் பாவத்திலிருந்து விழித்திருந்தார்கள், ஆனால், இயேசுவிடம் வரவில்லை. எனவே, அவர்கள் தங்கள் பழைய பழக்கங்களுக்கும், கெட்ட சகவாசத்திற்கும் திரும்பினார்கள். இயேசுவை விசுவாசித்து அவரைப் பற்றிக்கொள்ளவில்லை. இதைச் செய்யத் தவறிவிட்டார்கள். இந்தக் கடைசிப் படியை அவர்கள் தாண்டவில்லை. இப்படிப்பட்ட நிலையில் இருந்த ஒரு வாலிபப் பெண்ணுக்கு ராபர்ட் ஒரு கடிதம் எழுதினார். அவள் உண்மையாகவே தேவனைத் தேடினாள்; தேடிக்கொண்டிருந்தாள். ஆனால், அவளும் வேறு பலரைப்போல் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை, பெற்றுக்கொள்ளவில்லை. "நற்செய்தியை நீ சரியாகப் புரிந்துகொண்டாலும்கூட, உன் சரியான புரிதல், உன்னை நீதிப்படுத்தாது. நீ இயேசுவின் குற்றமற்ற, மாசற்ற நீதியால் மூடப்பட வேண்டும். உன் இருதய மாற்றமோ, வாழ்க்கை மாற்றமோ உன்னை நீதிப்படுத்தாது. அவைகளால் உன் கடந்தகால பாவங்களை மறைக்க முடியாது; அது பூரணமானது அல்ல. நீ இதற்குமேலும் காத்திருக்காமல் உடனடியாக இயேசுவிடம் வரவேண்டும். திறந்த இருதயத்தோடும், விரித்த கரங்களோடும் கிறிஸ்துவை நீ ஏற்றுக்கொள்வாயா? என் ஆண்டவரே, என் தேவனே, என் உத்தரவாதமே, என் எல்லாமே என்று நீ கதறுவாயா? அன்பான நண்பரே, தாமதிக்காதே, நித்தியம் மிகச் சமீபமாயிருக்கலாம். கிறிஸ்துவோடு உன் வாழ்கையை இணைத்துக்கொள்ள இதுவே மிகச் சிறந்த நேரம், ஒருவேளை உன் ஒரே நேரம்," என்று எழுதினார். பலர் நற்செய்தியைக் கேட்டு, புரிந்துகொண்டார்கள்;  ஆனால், அவர்கள் கிறிஸ்துவிடம் திரும்பவில்லை, வரவில்லை, கிறிஸ்துவைப் பெறவில்லை.

எழுப்புதல் தீ டண்டீயைச் சுற்றியிருந்த வேறு பல நகரங்களிலும் பற்றிப் பரவியது; எனவே, பல்வேறு நகரங்களில் பிரசங்கிக்க வருமாறு ராபர்ட்டை அழைத்தார்கள். அவர் நற்செய்தியைப் பிரசங்கிக்கக் கிடைத்த எந்த வாய்ப்பையும் தவறவிட விரும்பவில்லை. முன்பு ஆலயத்திலும், ஆலயத்துக்கு அருகிலும் பேசிக்கொண்டிருந்தவர், இப்போது திறந்த வெளிகளில் பேசத் தொடங்கினார். இருட்டிய பிறகும் தெளிந்த வானத்தில் விண்மீன்கள் வலம்வர, நிலவு வெளிச்சத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டத்தில் பலமுறை பேசினார். அந்தக் காலத்தில் ஒலிபெருக்கி கிடையாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அவர் திருவெளிப்பாட்டின் 20ஆம் அதிகாரத்திலிருந்து பெரிய வெள்ளை சிங்காசனத்தையும், நியாயத்தீர்ப்பையும்குறித்துப் பேசினார். இறுதியில், அவர் "இதோ! உங்களுக்குமுன் இன்று நான் ஜீவனையும் மரணத்தையும் வைக்கிறேன். எதைத் தெரிந்தெடுக்கப்போகிறீர்கள் என்பதை நீங்கள் முடிவுசெய்யுங்கள்" என்று முடித்தார். ஒருநாள் அவர் டண்டீயில் சந்தையில் இன்னொரு பெரிய கூட்டத்தில் பேசினார். அவர் மீண்டும் திருவெளிப்பாட்டின் 20ஆம் அதிகாரத்திலிருந்து பேசினார். கூட்டம் நடந்துகொண்டிருக்கும்போதே மழை பெய்யத் தொடங்கியது. எல்லாரும் மழையில் உட்கார்ந்திருந்தார்கள். கூட்டத்தில் அவர் கடைசி வார்த்தை பேசி முடிக்கும்வரை யாரும் நகரவில்லை.

பாலஸ்தீனத்துக்கு மிஷனரிப் பயணம், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஒரே நாளில் பலமுறை பிரசங்கம். இடைவிடாத வீடு சந்திப்பு, ஆலயத்தில் அனுதின வேலைகள் ஆகியவைகள் அவருடைய உடல் நலத்தைப் பாதித்தன. ஆலயத்தில் பிரசங்கிக்கும்போது, வேதபாட வகுப்பு நடத்தும்போது, ஜெபக்கூட்டங்களில் இருக்கும்போது, மக்களைச் சந்திக்கும்போது, திறந்த வெளிகளில் பிரசங்கிக்கும்போது தான் ஒரு ஜாம்பவானைப்போல் பலமாக இருப்பதாகவும், ஆனால் அவைகளெல்லாம் முடிந்தபின் தான் சாதாரணமான ஓர் அலரிச்செடியின் குச்சிபோல் பலவீனமாக இருப்பதாகவும் உணர்ந்ததாக அவர் கூறினார். அந்த நாட்களில் ஒலிபெருக்கி கிடையாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நற்செய்தியைப் பிரசங்கிக்கக் கிடைத்த வாய்ப்பை அவர் ஒருபோதும் தவறவிடவில்லை, தவறவிட விரும்பவில்லை. அருகிலோ, தூரத்திலோ பயணம்செய்வதற்குத் தயங்கவில்லை. அதுபோல  ஆயிரக்கணக்கானவர்களுக்கு மட்டுமல்ல, நூறு பேருக்கும், பத்துப்பேருக்கும், ஏன் ஒரு தனி நபரைச் சந்திப்பதற்கும்கூட எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் செல்வார். இயேசு தன் வழக்கமான வழியிலிருந்து விலகிச் சென்று ஒரு கிணற்றருகே ஒரேவொரு பெண்ணைச் சந்தித்ததை அவர் எப்போதும் நினைவுகூர்ந்தார். 

ராபர்ட் சொன்ன பல காரியங்களைப் பலர் பின்னாட்களில் அன்போடு நினைவுகூர்ந்தார்கள். "உன் இருதயம் கடினமாகவும், அஜாக்கிரதையாகவும், ஏனோதானோவென்றும் இருந்தால், கிறிஸ்து ஏற்கெனவே உன் இருதயக் கதவில் கடைசியாகத் தட்டிவிட்டுப் போய்விட்டாரோ என்று நினைத்துப் பயப்படு," என்று சொன்னதாக ஒரு சிறுமி கூறினார். 

அவர் எப்போதும் தம் மக்களைக்குறித்தே நினைத்துக்கொண்டிருந்தார். ஒரு முறை அவர் ஒரு வயல்வெளி வழியாக நடந்துபோய்க்கொண்டிருந்தார். அப்போது "என் மந்தையின் எல்லா ஆடுகளும் முந்தியோ பிந்தியோ ஒன்று பரலோகத்தில் அல்லது நரகத்தில் இருக்க வேண்டும்," என்ற எண்ணம் அவரைப் பலமாகத் தாக்கியது. தன் சபையில் இருந்த 4000 பேரும், டண்டீ நகரத்தில் இருந்த எல்லாரும் கிறிஸ்துவின் நற்செய்தியைக் கேட்டாக வேண்டும் என்ற அவசர உணர்வு அவருக்குள் எழுந்தது; அதற்காக உழைக்க வேண்டும் என்ற பாரம் அவரை அழுத்தியது.

ஆனால், தன் சொந்த வாழ்க்கை, தன் பெருமை, தன் சொந்த வார்த்தைகள், தேவனுடைய வேலையைத் தடுக்கும், பாதிக்கும் என்று அவர் இன்னும் மிகவும் பயந்தார். இலண்டனில் விட்ஃபீல்ட் பிரசங்கம் செய்ததைப்பற்றியும், அங்கிருந்த மக்களிடையே பரிசுத்த ஆவியானவர் எவ்வாறு செயல்பட்டார் என்பதைப்பற்றியும் ராபர்ட் படித்திருந்தார். "அதே இயேசுவே இப்போதும் ஆளுகைசெய்கிறார்; அதே ஆவியானவரால் இப்போதும் அதே வேலையைச் செய்ய முடியும்; ஆனால், அவர் இப்போது அதே வேலையைச் செய்யாதபடிக்கு அவரைத் தடுப்பவர் யார்? மட்டுப்படுத்துபவர் யார்? முட்டுக்கட்டை என்ன? நம்முடைய  பாவமா! நாம் பரலோகப் பனிகளை மூடிவைத்துக்கும் குப்பிகளா?" என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டார்.  

தன் தனிப்பட்ட பரிசுத்தமே தன் மக்களின் மிகப் பெரிய தேவை என்ற நிஜத்தில் ராபர்ட் வாழ்ந்தார். தான் கற்றுக்கொள்ள வேண்டிய காரியங்கள் என்ன, தன் சொந்த நடையிலும், வாழ்விலும் சரிசெய்ய வேண்டிய காரியங்கள் என்ன என்பதைப்பற்றி அவர் ஆழமாகச் சிந்தித்தார் என்று அவருடைய நாளேட்டிலிருந்து அறியமுடிகிறது. அவர் தன் நாளேட்டில் எழுதியிருக்கும் அவருடைய சில எண்ணங்களை நான் இங்கு தருகிறேன். அவை நிச்சயமாக உங்களுக்கு மிகவும் பயனுள்ளவைகளாக இருக்கும்.  அவை நம் வாழ்க்கையோடு தொடர்புடையவை, நடைமுறைக்குரியவை. 

பாவத்தைக்குறித்து 

தான் பாவம் செய்தவுடன், கிறிஸ்துவிடம் செல்லத் தயங்குவதாக உணர்ந்ததாக அவர் எழுதினார். "நான் ஏன் போவதில்லை? வெட்கத்தாலா அல்லது அவரிடம் போவதால் எந்த நன்மையும் நிகழாது என்று நான் ஆழத்தில் நினைக்கிறேனா அல்லது ஒருவேளை அகங்காரதத்தினால் நான் போவதில்லையோ!" என்று நினைத்தார். ஆனால், " ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்," என்று யோவான் தன் நிருபத்தில் வித்தியாசமாக வாதிடுவதையும் அவர் உணர்ந்தார்.

மது அருந்துதல், ஆணையிடுதல்போன்ற சில பாவங்களால் தன்னை ஒருபோதும் தீண்டவோ, அணுகவோ முடியாது; ஆகையால் அந்தப் பாவங்களைக்குறித்துத் தான் ஒருபோதும் பயப்படத் தேவையில்லை என்று சில நேரங்களில் ராபர்ட் நினைத்தார். இதைக்குறித்து அவர், "இது பெருமை, துணிகரமான பொய். எல்லாப் பாவங்களின் வித்தும் என் இருதயத்தில் இருக்கிறது. நான் அவைகளைப் பார்க்கவில்லை என்பதால் அவை என்னில் இல்லை என்றாகிவிடாது. எல்லாப் பாவங்களும் என்னைத் தீண்டக்கூடிய ஆபத்து இருக்கத்தான் செய்கிறது," என்று அவர் எழுதினார்.  

ஜெபத்தைக்குறித்து 

ஜெபிக்க வேண்டிய அவசியத்தைப்பற்றி அவர் எழுதினார். குறிப்பாக யாரையாவது சந்தித்துப் பேசுவதற்குமுன் ஜெபிக்க வேண்டிய அவசியத்தை அவர் மிகவும் வலியுறுத்தினார். சில நேரங்களில் அவர் அதிகமாகத் தூங்கிவிட்டார். வேறு சில நேரங்களில் அவர் சீக்கிரமாக எழுந்து பயணிக்க வேண்டியிருந்தது. இதன் விளைவாக அன்று அவரால் காலையில் ஜெபிக்க முடியவில்லை. வேறு நேரத்தில் ஜெபிக்க வேண்டியதாயிற்று. இதைப்பற்றி அவர், "மனச்சாட்சி குற்றவாளிபோல் உணர்கிறது; ஆத்துமாவுக்குத் தேவையான உணவில்லை; விளக்கின் திரி சுத்தம்செய்யப்பட்டு எண்ணெய் ஊற்றப்படவில்லை; ஆத்துமாவில் இசைவில்லை," என்று எழுதினார். ஒரு வேலை முடிந்தவுடன் இன்னொரு வேலை என்று பரபரப்பாக செயல்பட்ட நேரங்களைப்பற்றி, "தேவனைத் தேடாமல், அவரைத் தொடர்புகொள்ளாமல், அவருடைய அங்கீகாரத்தை நாடாமல் நான் இந்த வேலையைச் செய்தேன். அவரைக் கேட்காமல்  ஒன்றைச் செய்வதால் அல்லது ஒருவரைச் சந்திப்பதால் எந்தப் பயனும் இல்லை," என்று கூறினார். எனவே, ஒன்றைச் செய்வதற்குமுன், ஒருவரைச் சந்திப்பதற்குமுன் ஒவ்வொருநாளும் தவறாமல் ஜெபிக்க வேண்டும் என்று அவர் தீர்மானித்தார். "வேறொருவரைச் சந்திப்பதற்குமுன், வேறொருவருடைய முகத்தைப் பார்பதற்குமுன் முதலாவது  தேவனுடைய முகத்தைப் பார்ப்பது, என் ஆத்துமாவை அவருக்குமுன் அமரச்செய்வது, அவரைச் சந்திப்பது மிகவும் சிறந்தது என்று நான் உணர்கிறேன்," என்று அவர் எழுதினார். அவசரமாக எங்காவது கிளம்ப வேண்டியிருந்தாலும், யாரையாவது அவசரமாகச் சந்திக்க வேண்டியிருந்தாலும், எப்படியாகிலும் ஒரு நிமிடமாவது தேவனோடு உறவாடியபின்தான் அவர் கிளம்பினார். இதுதான் ராபர்ட் முர்ரே.

வேதாகமத்தை வாசிப்பதைப்பற்றி 

வேதாகமத்தை வாசிப்பதற்கு அவர் ஒரு குறிப்பிட்ட முறையைப் பின்பற்றினார். ஒவ்வொரு நாளும் குறைந்தது மூன்று அதிகாரங்களை  வாசிப்பது என்று அவர் முடிவுசெய்தார். அதையும் ஒரே புத்தகத்தில் தொடர்ச்சியாக மூன்று அதிகாரங்களைப் படிப்பதைவிட வெவ்வேறு புத்தகங்களில் மூன்று அதிகாரங்களைப் படிப்பதே சிறந்தது என்று முடிவுசெய்தார். பழைய ஏற்பாட்டில் ஒரு அதிகாரம், புதிய ஏற்பாட்டில் இன்னொரு அதிகாரம், ஒரு சங்கீதம் என மூன்று அதிகாரங்களைப் படித்தார். தன் சபை மக்கள் வேதாகமத்தை வாசிப்பதற்கு இப்படி ஒரு முறையை அவர் உருவாக்கிக் கொடுத்தார். இதற்கு அன்றன்றுள்ள அப்பம் என்று பெயர் கொடுத்தார். இது பின்னர் வெளியிடப்பட்டது. இந்த முறையின்படி வேதாகமத்தை வாசித்தால், ஒரு வருடத்தில் பழைய ஏற்பாட்டை ஒரு தடவையும் புதிய ஏற்பாட்டை இரண்டு தடவைகளும் வாசித்துமுடித்துவிடலாம். அது மட்டும் அல்ல, சபையார் அனைவரும் ஒரே நேரத்தில்  வேதாகமத்தின் ஒரே பகுதியை வாசிக்கலாம். ராபர்ட்டின் இந்த முறை இன்றும் நடைமுறையில் உள்ளது. இந்த முறையை என் வாழ்வில் நான் 10 ஆண்டுகள் பின்பற்றினேன். வேதாகமத்தை எப்படி வாசிக்கலாம் என்று அறிய முற்பட்டபோதுதான் இந்த முறையைத் தெரிந்துகொண்டேன். இதன்மூலம் நான் ராபர்ட் முர்ரேயை அறிய முனைந்தேன். இவரை எப்படியாவது தமிழ் பேசும் கிறிஸ்தவர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்று அன்றுமுதல் இன்றுவரை என் உள்ளத்தில் பாரம் இருந்தது. அது இன்று வெளியாகிறது. 

அவர் தயாரித்த வேதாகமத்தை வாசிக்கும் முறையில் ஒவ்வொரு  குடும்பமாக வாசிக்க வேண்டிய அதிகாரங்களும், தனியாக வாசிக்க வேண்டிய அதிகாரங்களும் இருந்தன. D.A.கார்சன் என்ற பரிசுத்தவான் பின்னாட்களில் இந்த முறையைச் சற்று மெருகேற்றி for the love of God என்ற பெயரில் வெளியிட்டார். இது இன்றும் நடைமுறையில் பலரால் பின்பற்றப்படுகிறது.

ராபர்ட் உடல்நலத்தோடு போராடினார். இந்தப் பூமியில் தான் நீண்ட நாள் வாழப்போவதில்லை என்று அவருக்குத் தெரியும். ஆயினும், இந்த நேரத்தில், தன் நேரம் நெருங்கி வந்துவிட்டது என்று அவர் உணர்ந்தார். அவர் தன் கடிதங்களில், "நான் நீண்ட காலம் வாழ்வேன் என்று நினைக்கவில்லை. ஒரு நாள் விரைவில்  திடீர் அழைப்பு வரும் என்று எதிர்பார்க்கிறேன், ஒருவேளை அந்த அழைப்பு மிக விரைவில் வரக்கூடும்; ஆகையால், நான் மிகவும் தெளிவாகப்  பேசுகிறேன்," என்று எழுதினார். அவர் தன் நண்பர்களை, "நித்தியத்திற்காக வாழுங்கள், இன்னும் கொஞ்சக் காலம்தான்; நம் பயணம் முடிந்துவிடும்," என்று வேண்டினார்.

இயல்பாகவே அவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு. எனவே, உடல்நலம் அடிக்கடி பாதிக்கப்பட்டது. இருப்பினும், அவர் தொடர்ந்து பயணம் செய்தார், மக்களைச் சந்தித்தார். அவர் கடைசியாக ஸ்காட்லாந்தின் வடக்கேயுள்ள அபெர்டீன் என்ற நகரத்துக்கு ஒருமுறை நற்செய்திப் பயணம் சென்றுவர விரும்பினார். டண்டீ சபை மக்கள் உட்பட அந்த நகரத்தாரும், இன்னும் அநேகரும் "போக வேண்டாம்" என்று சொன்னார்கள், அவரைத் தடுக்க முயன்றார்கள். எல்லாரும் அவருடைய உடல்நலத்தில் மிகுந்த அக்கறை கொண்டவர்கள். அவர் அபெர்டீனுக்குச் செல்லத் தீர்மானித்திருப்பதை நினைத்து அவர்கள் கவலைப்பட்டார்கள். "ஆலயத்தில் இருந்த விளக்கின் எண்ணெய் எரிந்ததால்தான் வெளிச்சம் வந்தது. விளக்கு எரிந்துதான் அணைந்தது. நாமும் அப்படித்தான் இருக்க வேண்டும்," என்று அவர் பதில் சொன்னார். இதிலிருந்துதான் நான் "எரிந்து அணைந்த விளக்கு" என்ற தலைப்பை எடுத்துள்ளேன். இதுவே அவர் மேற்கொண்ட கடைசிப் பயணம்.

அவருடைய இந்தப் பயணத்தில் சிரமம் இல்லாமல் இல்லை. அந்த நேரத்தில் ஸ்காட்லாந்தில் நிலைமை மாறிக்கொண்டிருந்தது. நாடு நகரங்களில் சுற்றித்திரிந்து நற்செய்தி அறிவித்துக்கொண்டிருந்த நற்செய்தியாளர்கள்மேல் மக்களுக்கு ஒருவிதமான கோபம் எழும்பியிருந்தது. எனவே, மக்கள் நற்செய்திக் கூட்டங்களைச் சீர்குலைக்க முயன்றார்கள். ராபர்ட் பேசிக்கொண்டிருந்த கூட்டத்திலும் மக்கள் கற்களை வீசினார்கள். கூட்டம் முடிந்து அவர் தெருவில் நடந்துபோனபோது அவர்மேல் சேற்றை வாரி ஊற்றினார்கள். ஆனால், அவர் துளியும் சலனமின்றி மிகுந்த உற்சாகத்துடன் தன் சபைக்குத் திரும்பினார். இந்தக் கூட்டங்களின் விளைவாக அபெர்டீனிலும் ஸ்காட்லாந்தின் வடக்கே உள்ள வேறு பல நகரங்களிலும் கர்த்தர் மாபெரும் வேலை செய்தார். ராபர்ட்  டண்டீக்குத் திரும்பியபோது மிகவும் சோர்வாக இருந்தார்.

ஆயினும், எந்தத் தொய்வுமின்றி அவர் தன் ஊழியத்தைத் தொடர்ந்தார். வழக்கம்போல் ஞாயிறு கூட்டங்கள், ஜெபக்கூட்டங்கள், வேதபாட வகுப்புகள், வீடுகளுக்குச் சென்று மக்களைச் சந்தித்தல் என அவர் தேவனுடைய பணிவிடை ஓட்டத்தை ஓடிக்கொண்டிருந்தார். இவையெல்லாம் அவருக்கு அந்த நேரத்தில் ஒரு சவாலாகவே  இருந்தது. அது மட்டும் அல்ல, அவர் டண்டீக்குத் திரும்பி வந்த நேரத்தில் நகரம் முழுவதும் டைபஸ் என்ற ஒருவகையான நச்சுக் காய்ச்சல், சன்னிக் காய்ச்சல், வேகமாகப் பரவிக்கொண்டிருந்தது. இந்தச் சூழ்நிலையிலும் ராபர்ட் தொடர்ந்து விசுவாசிகளின் வீடுகளுக்குள் சென்றார், அவர்களைச் சந்தித்தார்.

ஒரு நாள் அவர் தேவனுடைய இறையாண்மையைப்பற்றிப் பிரசங்கித்தார். இன்னொரு நாள் "எழும்பிப் பிரகாசி; உன் ஒளிவந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது," என்ற ஏசாயா 60:1லிருந்து பிரசங்கித்தார். இந்த இரண்டும்தான் அவர் தன் மக்களுக்குப் போதித்த கடைசிப் பிரசங்கங்கள். அவருடைய கடைசிப் பிரசங்கத்தைக் கேட்ட ஒருவர், கூட்டம் முடிந்தபிறகு அவருக்கு ஒரு குறிப்பு எழுதி அனுப்பினார். அதில், "உங்களுக்கு நான் ஓர் அந்நியன். இந்த அந்நியன் உங்களுக்கு இந்தக் குறிப்பை எழுதுவதால் நீங்கள் என்னை மன்னிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். கடந்த ஓய்வுநாள் மாலையில் நான் உங்கள் பிரசங்கத்தைக் கேட்டேன். நீங்கள் பேசிய கருப்பொருளைவிட நீங்கள் அதைப் பேசிய விதம் என்னை மிகவும் கவர்ந்தது. நான் என் வாழ்நாளில் இதுவரை பார்த்திராத அழகையும், பரிசுத்தத்தையும் உங்களில் கண்டேன்," என்று எழுதப்பட்டிருந்தது. 

அடுத்த ஒரு சில நாட்களில், டைபஸ்  சன்னிக் காய்ச்சல் அவரைத் தொற்றிக்கொண்டது. குளிர் காய்ச்சல்.  உடல்நிலை சரியில்லாமல் போனது. மருத்துவரை அழைத்தார்கள். வந்தார், பரிசோதித்தார். எழுதிக் கொடுத்தார். மருத்துவர் எழுதிக்கொடுத்த சீட்டு அவருடைய மேஜையில் இருந்தது. அன்றிரவு, தாங்க முடியாத வலியோடும், ஆற்றமுடியாத வேதனையோடும், படுக்கச் சென்றார். தூங்க முடியவில்லை; குளிர் காய்ச்சலில் படுக்கையில் உருண்டு புரண்டார். சொல்லொணா வேதனை! அவர் அருகிலிருந்த தன் நண்பர்களிடம், "தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ!" என்றார். உடல்நலம் தேற கொஞ்ச நாட்கள் ஆகும் என்று தெரிந்ததால் தன் பொறுப்புகளையும், கடமைகளையும் கவனிக்க சிலரை ஏற்பாடு செய்தார்.

ராபர்ட் முர்ரே அந்தப் படுக்கையிலிருந்து மீண்டும் எழவே இல்லை. சன்னிக்காய்ச்சல் அதிகமாகி சுயநினைவிழந்து பிதற்ற ஆரம்பித்தார். அவருடைய சகோதரி எலிசபெத் மேரி அவரை அருகிலிருந்து கவனித்துக்கொண்டார்; அவர் ராபர்ட்டுக்கு வேதம் வாசித்தார், வில்லியம் கூப்பரின் பாடல் வரிகளையும் வாசித்தார். ஒரு கட்டத்தில்,  மயக்கத்தில் இருந்தபோதும், தன் சுய நினைவு தவறிபோய்க்கொண்டிருந்தபோதும், தன் முழுப் பலத்தோடு அங்கு இருந்த எல்லாருக்கும் தெளிவாகக் கேட்கும் விதத்தில், "எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக," என்று 1 கொரிந்தியர் 15:58யைச் சொன்னார். இதற்குப்பிறகு, அவர் தெளிவாகப் பேசவில்லை. இதற்குப்பிறகு அவர் பேசிய தருணங்களும், பேசிய வார்த்தைகளும் மிகக் குறைவு. அந்த நேரத்திலும், அந்த நிலையிலும் அவர் தன் மக்களை மறக்கவில்லை. அவ்வப்போது, "இந்தத்  திருச்சபை...ஆண்டவரே...இந்த மக்கள்...இந்த இடம்...இந்த இடம் முழுவதும்..." என்று சிற்சில வார்த்தைகளைச் சொல்லி ஜெபிப்பதுபோல் தோன்றியது. இன்னொரு முறை, "ஆண்டவரே, உமக்காகச் செய்யும், உம் பலவீனமான இந்த வேலைக்காரனுக்காக அதைச் செயயும்," என்று சொன்னார்.

1843, மார்ச் மாதம் 25ஆம் தேதி சனிக்கிழமை காலை 9:30 மணிக்கு  ராபர்ட் முர்ரே மேக்சேன் என்ற விளக்கு எரிந்து மறைந்தது. ஆம், ராபர்ட் முர்ரே மேக்சேன் தன் கடைசி மூச்சை நிறுத்தினார். ஆம், ராபர்ட் நித்தியத்துக்குள் நுழைந்தார். கர்த்தர் அவரை அழைத்துக்கொண்டார். அப்போது அவருக்கு வயது 29. ஆறு ஆண்டுகள் மட்டுமே நற்செய்தி அறிவித்தார். ஆறு ஆண்டுகள் மட்டுமே சபை நடத்தினார். ஆறே ஆண்டுகள். 29 வயது.

தன் நல்ல நண்பர் ராபர்ட் நித்தியத்துக்குள் நுழைந்துவிட்டார் என்ற செய்தி அன்று மாலை 5 மணிக்கு ஆண்ட்ரூ பொனாருக்குக்  கிடைத்தது. அவர் எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு உடனே டண்டீக்கு விரைந்தார். "நற்செய்தி அறிவித்து ஆத்துமாக்களை இரட்சிப்புக்கு வழிநடத்தலாம் என்ற நம்பிக்கை மட்டும் இல்லாவிட்டால், நான் என் வாழ்வின் பாதி மகிழ்ச்சியை இழந்துவிட்டேன். நான் இவ்வளவு அதிகமாக நேசித்த நண்பர் வேறு யாரும் இல்லை," என்று பொனார் எழுதினார்.

ஆண்ட்ரூ டண்டீயின் தெருக்களில் நடந்துபோனபோது, தான் அனுபவிக்கும் சோகத்தை டண்டீ நகரம் முழுவதும் அனுபவிக்கிறது என்பதை உணர்ந்தார். தங்கள் பாஸ்டர் இறந்துவிட்டார் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட மக்கள் வீடுகளைவிட்டு வீதிகளுக்கு வந்துவிட்டார்கள். வீதிகளில் அழுகையும் ஒப்பாரியும் கேட்டன. சபை சோகத்தில் அமிழ்ந்தது. டண்டீ நகரம் மட்டும் அல்ல, ஸ்காட்லாந்து நாடே அன்று சோகத்தில் ஆழ்ந்தது. இதுபோன்ற சோகத்தை ஸ்காட்லாந்து இதற்குமுன் பார்த்ததில்லை. The Witness என்ற நாளேடு தொடர்ந்து மூன்று நாட்கள் ராபர்ட்டைக் குறித்து "மிகக் குறுகிய விலைமதிப்பற்ற வாழ்க்கை" என்றும் "கிறிஸ்தவ அனுபவத்தில் ஒரு முதிர்ந்த பரிசுத்தவான்" என்றும் எழுதியது.

அனைத்துத் தரப்பினரும் ஆயிரக்கணக்கானோர் தெருக்களில் அணிவகுத்து நின்றார்கள். அடக்க ஆராதனையில் ஆலயம் நிரம்பி வழிந்தது.  

அவருடைய அடக்க ஆராதனையில் ஆண்ட்ரூ பொனார் பேசினார். அடக்க ஆராதனையில் 7000 பேர் பங்கேற்றார்கள். தன் ஒவ்வொரு துளி பலத்தினாலும் தங்களுக்குச் சேவை செய்த தங்கள் போதகரை நினைவுகூர மக்கள் தெருக்களில் வரிசையாக நின்றதால், டண்டீ நகரம் அன்று ஸ்தம்பித்தது.

அவர் divinity Hallலில் படித்துக்கொண்டிருந்தபோது, இரட்சிக்கப்பட்ட புதிதில் யெஹோவா சிதக்கேனு என்ற எபிரேய தலைப்பில் எழுதிய கவிதையின் கடைசி நான்கு வரிகளை நான் இங்கு கூறுவது பொருத்தமாக இருக்கும். 

மரண நிழலெனும் பள்ளத்தாக்கில் நடந்தாலும் ,

யெஹோவா சிதக்கேனு என் கடைசி மூச்சைத் தாங்குவார்;

வாழ்வின் தாக்கத்திலிருந்தும், தாகத்திலிருந்தும் என் தேவன் என்னை விடுவிப்பார்;

மரண நேரத்திலும் யெஹோவா சிதக்கேனு என் பாடலாய் இருப்பார்.

ராபர்ட் முர்ரேயைப்பற்றிய ஆண்ட்ரூ பொனார் தன் நினைவுக்குறிப்பில் இவ்வாறு எழுதுகிறார், "ஒரு மனிதன் எவ்வளவு செய்ய முடியும், தேவனுடைய பிரசனத்துக்குள் எவ்வளவு தூரம், எவ்வளவு ஆழம் செல்ல முடியும் என்பதை  ராபர்ட் முர்ரேயில் பார்க்கலாம், கற்கலாம். ராபர்ட் முர்ரேயின் மிகக் குறுகிய கீழ்ப்படிதல் நிறைந்த எளிமையான வாழ்க்கையில் அவ்வளவு வளமும், செழிப்பும் இருக்கிறது. ஒருவன் ஏற்படுத்தும் தாக்கம் அவன் வாழ்ந்த வாழ்வின் கூட்டுத்தொகையைச் சார்ந்திருக்கிறது என்பதைவிட, அவன் ஒவ்வொரு நாளும் தேவனுக்குமுன்பாக கீழ்ப்படிவதையும், மனந்திரும்புவதையும், கற்பதையும், நடப்பதையும் சார்ந்திருக்கிறது  என்பதை ராபர்ட் முர்ரேயின் வாழ்வில் காணலாம்," என்று குறிப்பிடுகிறார்.

 கனத்த இருதயத்தோடு நான் முடிக்கப் போகிறேன். நமக்குமுன்பாகத் தன் பணிவிடை ஓட்டத்தை ஓடி முடித்த  ஊழியக்காரனாகிய ராபர்ட் முர்ரே மேக்சேயின் ஒரு மேற்கோளோடு முடித்துக்கொள்வோம்.

*"ஆ! சகோதரர்களே, ஞானமாயிருங்கள். ஏன் நாள் முழுவதும் சும்மா நிற்கிறீர்கள்? இன்னும் கொஞ்சக் காலத்தில் எல்லாம் முடிந்துவிடும்; இன்னும் கொஞ்சக் காலத்தில் கிருபையின் நாள் முடிந்துவிடும். இன்னும் கொஞ்சக் காலத்தில் பிரசங்கிப்பதும், ஜெபிப்பதும் முடிந்துவிடும். இன்னும் கொஞ்சக் காலத்தில் நாமெல்லாரும் பெரிய வெள்ளை சிங்காசனத்திற்குமுன் நிற்போம். இன்னும் கொஞ்சக் காலத்தில் துன்மார்க்கர்கள் இருக்கமாட்டார்கள். அவர்கள் நித்திய தண்டனையைப் பெறப் போவார்கள். இன்னும் கொஞ்சக் காலத்தில்  நித்தியத்தின் வேலை தொடங்கிவிடும்; நாம் அவரைப்போல் இருப்போம். நாம் அவருடைய ஆலயத்தில் அவரை இரவும் பகலும் தரிசிப்போம்; பாவமும் சோர்வும் இல்லாமல் என்றென்றும் புதிய பாடலைப் பாடுவோம்."*

ஆமென்.