வேத வாசிப்பு
யோவான் 10:10; 15:1-5; ரோமர் 6:4, 14; 8:29; 15:13; 1 கொரி. 1:2; 6:11; 2 கொரி. 1:8-10; 3:18; 4:7-12; 12:7-10; எபே. 5:18; எபி. 12:1-13; 1 பேதுரு 1:6-8
நாம் பரிசுத்தமாக்கப்படுகிற காரியம் நம் வாழ்நாள் முழுவதும் நடைபெறுகிற செயல் என்று 10ஆம் அதிகாரத்தில் நாம் பார்த்தோம். அதிலுள்ள கூடுதலான சில அம்சங்களை நாம் இப்போது பார்ப்போம்.
பரிசுத்தமாக்கப்படுதல் என்பது ஒரு நிலை அல்லது நிலைப்பாடு என்று வேதாகமம் சொல்லுகிறது. 1 கொரிந்தியர் 12இல் பவுல் கொரிந்துவிலுள்ள கிறிஸ்தவர்களை, “கிறிஸ்து இயேசுவில் பரிசுத்தமாக்கப்பட்டவர்கள்… அழைக்கப்பட்ட பரிசுத்தவான்கள்,” என்று சொல்லுகிறார். பரிசுத்தமாக்கப்படுகிற காரியத்தில், கொரிந்தியக் கிறிஸ்தவர்கள் நெடுந்தூரம் செல்ல வேண்டியிருந்தது. அவர்கள் புதிய ஏற்பாட்டில் காணப்படுகிற மிக மோசமான “மாம்சத்துக்குரிய” கிறிஸ்தவர்கள் என்று சொல்லலாம். எனினும், பவுல் அவர்களைப் “பரிசுத்தமாக்கப்பட்டவர்கள்” என்றும், “பரிசுத்தவான்கள்” என்றும் அழைக்கிறார். “பரிசுத்தமாக்கு” என்ற வினைச்சொல்லுக்கும், “பரிசுத்தவான்கள்” என்ற பெயர்ச்சொல்லுக்கும் “தூய்மையானதென வேறுபிரித்துவிடு” என்று பொருள். இந்த வார்த்தையில் நிலை, தரம் ஆகிய இரண்டு கருத்துக்கள் அடங்கியுள்ளன. தேவனுடைய குடும்பத்தில் நாம் அவருடைய பிள்ளைகள் என்பதால் பரிசுத்தமானவர்கள் என்ற நிலை நமக்கு வழங்கப்பட்டுள்ளது; அதே நேரத்தில், நாம் அவரைப்போல் பரிசுத்தமுள்ளவர்களாக மாறிக்கொண்டும் இருக்கிறோம். ஒருபுறம், நாம் அழைக்கப்பட்ட “தூய்மையான பரிசுத்தவான்கள்”; அதே நேரத்தில், நாம் “தூய்மையான பரிசுத்தவான்களாக” மாறவும் வேண்டும். நாம் இருக்கும் நிலைமை மெய்யாக்கப்பட வேண்டும்.
இந்த அம்சம் நீதிப்படுத்தப்படுவதில் நாம் கிருபையில் நிற்கிற நிலையோடு நெருங்கிய தொடர்புடையது. நீதிப்படுத்தப்படுகிற காரியத்தில், தேவனுடைய பரிசுத்தமான சட்டத்தைப் பொறுத்தவரை, நாம் குற்றமற்றவர்களாகவும், நீதிப்படுத்தப்பட்டவர்களாகவும் நிற்கிறோம். பரிசுத்தமாக்கப்படுகிற காரியத்தில், இப்போது தேவனுடைய குடும்பத்தில் நாம் அவருடைய பிள்ளைகள் என்ற அந்தஸ்து அல்லது நிலைப்பாடு நமக்குக் கிடைத்துள்ளது. “நீங்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிப்படுத்தப்பட்டீகள்,” என்று அதே கொரிந்தியர்களுக்குப் பவுல் எழுதுகிறார். ஒருநாள் நாம் எப்படிப்பட்டவர்களாக இருப்போம் என்று தேவனுக்குத் தெரியும். எனவே, நம்மைப் பரிசுத்தமாக்குகிற வேலை நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த வேளையிலும், நாம் அவருடைய பிள்ளைகளாக இருப்பதால் அவர் நம்மைப் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகக் கருதுகிறார்.
பரிசுத்ததாக்கப்படுவது என்பது நம் “அனுதின நடை”, நம் “தற்போதைய அனுபவம்”, நாம் “ஜீவனின் புதுத்தன்மையில் நடக்கிற நடை”, “எப்போதும் ஆவியினால் நிரப்பப்படுதல்” என்றும் கருதலாம். பரிசுத்தமாக்கப்படுவதைப்பற்றி இன்று பல குழப்பமான கருத்துக்கள் நிலவுகின்றன. குறிப்பாக, பரிசுத்தமாக்க்கப்படுதல் நம் வாழ்நாள் முழுவதும் நடைபெறுகிற செயல் என்ற கருத்தில் பல குழப்பங்கள் உள்ளன. எனவே, நாம் இதைக் கவனமாகப் பார்க்க வேண்டும்.
முற்றிலும் முரணான இரண்டு நிலைமைகளின்மூலம் இந்தப் பிரச்சினையைக் கொஞ்சம் விளக்கலாம்.
ஒரு சாரார், “பரிசுத்தமாக்கப்படுதல் வாழ்நாள் முழுவதும் நடைபெறும் செயல்; எனவே உலகம், மாம்சம், பிசாசு ஆகியவைகளுக்கு எதிராகக் கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்வது ஒரு கடினமான போராட்டம், பரிசுத்தமாக இருப்பது ஒரு போராட்டம், கிறிஸ்துவைப்போல் இருப்பது ஒரு போராட்டம்,” என்று சொல்லுகிறார்கள். இப்படிப்பட்ட கருத்துடையவர்கள் அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லை; அவர்களுடைய இரட்சிப்பைப்பற்றிய நிச்சயமும் அவர்களிடம் இல்லை; அவருடைய கண்களில் ஒளிர்வு இல்லை; அவர்களுடைய வாழ்க்கையில் நிச்சயத்தையும், வெற்றியையும் வெளிப்படுத்துகிற எந்த அறிகுறியும் இல்லை; அவர்கள் பெரும்பாலும் கடமை உணர்ச்சியினாலும், “சட்டம்” கோருகிறது என்ற கட்டாயத்தினாலுமே காரியங்களைச் செய்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் உண்மையாகவே மீண்டும் பிறந்திருக்கிறார்களா என்ற கேள்வி எழத்தான் செய்யும்.
அடுத்த அற்றத்தில் இன்னொரு சாரார் இருக்கிறார்கள். “ஆவியானவர் தருகிற சில உச்சநிலை ‘அனுபவத்தில்’, பரிசுத்தத்துக்குள் அல்லது ஆவிக்குரிய நிறைவுக்குள் ஒருவகையான ஞானஸ்தானம் பெறுகையில், நாம் இலக்கை அடையலாம்,” என்று இவர்கள் வலியுறுத்துகிறார்கள். “இப்போதே, ஒரு கணப்பொழுதில் எல்லாவற்றையும் நாம் பெற முடியும்,” என்றும், “தங்களிடம் அது இருக்கிறது,” என்றும் இவர்கள் நினைக்கிறார்கள். இப்படிப்பட்ட போதனை பல உருவங்களில் வெளிவருகிறது. இந்தப் போதனை ஒருவகையான பாவமற்ற பூரணத்தை ஆசைகாட்டுகிறது. இது ஆபத்தான கொடிய வஞ்சகம். “நம்மிடம் பாவம் இல்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம்; சத்தியம் நமக்குள் இராது,” என்று வேதவாக்கியங்கள் கூறுகின்றன. எனவே, இவர்களும் உண்மையாகவே மீண்டும் பிறந்திருக்கிறார்களா என்ற கேள்வி எழத்தான் செய்யும். ஏனென்றால், புதிய பிறப்பின் ஒரு விளைவு என்னவென்றால் காலங்கள் செல்லச்செல்ல நம் பாவத்தன்மையைக்குறித்த விழிப்புணர்வு வளரும்.
முரண்பாடான இந்த இரண்டு நிலைமைகளும் பரிசுத்தமாக்கப்படுதல், அனுதின கிறிஸ்தவ அனுபவம் என்ற காரியங்களைப்பற்றி உண்மையான கிறிஸ்தவர்களுக்கிடையேகூட இருக்கும் பிரச்சினையையும், குழப்பத்தையும், பதற்றத்தையும் சிறிதளவு காண்பிக்கின்றன.
வேதாகமம் என்ன சொல்லுகிறது? ஒருபக்கம், இயல்பான கிறிஸ்தவ வாழ்க்கை உயிர்த்துடிப்பும், வீரியமும், மகிழ்ச்சியும், சமாதானமும், தைரியமும், வெற்றியும் நிறைந்த வாழ்க்கை என்று தேவனுடைய வார்த்தை காண்பிக்கிறது. ஆதிக் கிறிஸ்தவர்களின் வாழ்க்கையில் இந்தக் குணாம்சங்கள் காணப்பட்டன. புதிய ஏற்பாட்டிலும் நாம் இதைப் பார்க்கிறோம். எனவே, இது ‘எட்டமுடியாத கடினமான போராட்டம்’ என்று சாதிக்கிறவர்களின் கூற்று தவறு என்று வேதவாக்கியங்கள் தள்ளிவிடுகின்றன.
இன்னொரு பக்கம், “பலவிதமான சோதனைகள்…பிழைப்போம் என்கிற நம்பிக்கை அற்றுப்போயிற்று… நெருக்கப்படுகிறோம், கலக்கமடைகிறோம், துன்பப்படுத்தப்படுகிறோம், கீழேதள்ளப்படுகிறோம்…அவருடைய பாடுகளின் ஐக்கியம்…அவருடைய பரிசுத்தத்தில் நாம் பங்குபெறுவதற்காக கர்த்தர் நம்மைச் சிட்சிக்கிறார்,” போன்ற வசனங்களையும் நாம் வாசிக்கிறோம். எனவே, மேலெழுந்தவாரியான ‘வெற்றித்தோரணை’, தற்பெருமை, உணர்ச்சிவசப்படுகிற கிறிஸ்தவம் ஆகியவைகளும் தள்ளப்படுகின்றன. மகிழ்ச்சியான ஆவியோடு துதிப்பதும், உணர்ச்சிவசப்பட்டு பரவசப்படுவதும் ஒன்றல்ல. உண்மையான கிறிஸ்தவன் நிச்சயமாகத் தாழ்மையுள்ளவன்.
இரண்டு கருத்துக்களிலும் கொஞ்சம் உண்மை இருக்கிறது. இங்கு, இப்போது நாம் பெற்று அனுபவிக்க வேண்டிய காரியங்கள் அதிகம் இருக்கின்றன. அதே நேரத்தில், நாம் படிப்படியாக மட்டுமே அனுபவிக்க முடிகிற காரியங்களும் நிறைய இருக்கின்றன. பரிசுத்தமாக்கப்படுவதில் உச்சநிலை, படிப்படியான முன்னேற்றம் ஆகிய இரண்டும் உள்ளன. எண்ணற்ற வேறு பல அனுபவங்களும் உள்ளன. நம்மிலும், நம்மூலமாகவும் தம் திட்டத்தைச் செய்துமுடிக்க வேண்டும் என்று பிதாவானவரே இவைகளை வடிவமைத்துள்ளார். உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கையில் நெருக்கடி, முன்னேற்றம், மகிழ்ச்சி, சிட்சை, பாடுகள், மகிமை ஆகிய எல்லாம் காணப்படுகின்றன.
பின்வரும் மூன்று அம்சங்கள் இல்லாத கிறிஸ்தவ வாழ்க்கையை மக்களுக்கு அறிவிப்பது தவறான கூற்றாகும். அதனால் ஆவிக்குரிய இழப்பு (அது ஒருவேளை நித்திய இழப்பாக இருக்கலாம்), வஞ்சகம், மனச்சோர்வு, ஏமாற்றம் ஆகியவைகள் ஏற்படுவதைத் தடுக்க முடியாது.
கிறிஸ்து போதுமானவர் என்பதை அறிவதே நம் இயல்பான, அன்றாட அனுபவமாக இருக்க வேண்டும். அவருடைய வெற்றியும், மகிழ்ச்சியும், சமாதானமும், பாவம் சுயம் சூழ்நிலைகள் ஆகியைவகளுக்குமேலாக உள்ளன. வரைபடத்தில் உள்ள ‘புள்ளிகள்’ கிறிஸ்துவின் வல்லமையால் இருள் விலகுவதைக் குறிக்கின்றன. ஒரு கிறிஸ்தவன் போராடித் தவிப்பதோ, தோற்றுப்போவதோ, மனமடிவதோ இயல்பானதல்ல. “என் கிருபை உனக்குப் போதும்”.
சோதனை, அழுத்தம், கலக்கம், சிட்சை ஆகியவைகளின் பின்புலத்தில் இந்தக் குறிப்பைப் பார்க்க வேண்டும். பரிசுத்தமாக்கப்படுதல் என்ற ஆழமான செயல்முறைக்கு இது மிக அவசியம். உண்மையான ஆவிக்குரிய முன்னேற்றத்துக்கு எந்தக் குறுக்குப் பாதையும் இல்லை. ‘உடனடி’ கிறிஸ்தவம் பொய். ‘அனுபவங்களை’ வலியுறுத்துகிற மேலோட்டமான, உணர்ச்சிமயமான கிறிஸ்தவம் இந்த அம்சத்தை வெறுத்து ஒதுக்கித்தள்ளுகிறது. ஆனால், இது பெரும் ஆபத்தில் முடிவடையும். உண்மை எப்போதும் வெற்றி பெறும். நம் அடித்தளங்கள் உறுதியாக இல்லையென்றால், கடைசியில் நம் நிலைமை அம்பலமாகிவிடும்.
சில வேளைகளில், கர்த்தர் நம்மை இருண்ட ‘சுரங்கப்பாதை“வழியாக நடத்துவார். சூரியன் தென்படாது; ஆவிக்குரிய வானிலை மப்பும்மந்தாரமுமாக இருக்கும்; தேவனும் விலகிவிட்டார்போல் தோன்றும். இப்படிப்பட்ட வேளைகளில் விசுவாசத்தால் மட்டுமே வாழ்வதற்கு நாம் அடைபட்டிருப்போம். நம் அனுபவமும், நம் மகிழ்ச்சியும் செத்துப்போய்விட்டதுபோல் தோன்றும். நாம் அவரை இன்னும் ஆழமாக அறிய வேண்டும் என்பதே இதன் நோக்கம். ஆவிக்குரிய முன்னேற்றத்துக்கு இது அவசியமுமாகும். நாம் சூரிய ஒளியையும், இனிய வானிலையையும் மிகவும் விரும்புகிறோம். ஆனால், மேகங்கள் அவசியம். மேகங்கள் இல்லையேல் மழை இல்லை; மழை இல்லையேல் கனிகள் இல்லை. நாம்”சுரங்கப்பாதை“வழியாக கடந்துபோகிறோம். அவ்வளவுதான்.’ சுரங்கப்பாதை அனுபவம்’ தொடர்ந்து நீடித்தால் அதைக்குறித்து மற்றவர்களுடன் ஐக்கியப்பட்டு நாம் கர்த்தரைத் தேட வேண்டும்.
நாம் “அவரில் நிலைத்திருந்தால்” முதல் குறிப்பும், இரண்டாவது குறிப்பும் பெரும்பாலும் ஒன்றாகச் சேர்ந்தே செல்லும். உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை சமநிலையான வாழ்க்கை. எடுத்துக்காட்டாக பரிசுத்தமாக்கப்படுதல் என்பது வாழ்க்கைச் செயல்முறையா அல்லது அன்றாட நடையா என்பதில் சமநிலை வேண்டும்; உபதேசத்துக்கும் அனுபவத்துக்கும் இடையே சமநிலை வேண்டும்; தெய்வீக முதற்படிக்கும் மனிதனுடைய மறுமொழிக்கும் இடையே சமநிலை வேண்டும்; நம் சொந்தக் காலில் கர்த்தரில் நிற்பதற்கும் , பிறருடன் ஐக்கியம்கொண்டு வாழ்வதற்கும் இடையே சமநிலை இருக்க வேண்டும். இதுபோன்ற காரியங்களில் வேதாகமத்திற்கேற்ற சமநிலையைப் பராமரிக்காததே நம் பல பிரச்சினைகளுக்குக் காரணம்.
வேத வாசிப்பு
யோவான் 10:10; 15:1-5; ரோமர் 6:4, 14; 8:29; 15:13; 1 கொரி. 1:2; 6:11; 2 கொரி. 1:8-10; 3:18; 4:7-12; 12:7-10; எபே. 5:18; எபி. 12:1-13; 1 பேதுரு 1:6-8