சபை வரலாறு என்றால் என்ன? சபை வரலாற்றுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? சபை வரலாற்றை நாம் ஏன் படிக்க வேண்டும்? அறிய வேண்டும்? அறிந்தால் என்ன இலாபம்? அறியாவிட்டால் என்ன நட்டம்? சபை வரலாற்றைப் படிப்பது எளிதா? கடினமா? சபை வ்ரலாற்றைப் படிப்பதில் ஏதாவது சிக்கல்கள் உண்டா? என்ன சிக்கல்கள்? சபை வரலாற்றை அறிய என்ன வழி? சபை வரலாற்றை அறிவதற்கான வளங்கள் எங்கு கிடைக்கும்? நாம் ஏன் சபை வரலாற்றை அறிய வேண்டும்? சபை வரலாற்றை எந்தக் கண்ணோட்டத்தில் படிக்க வேண்டும்? இவை நியாயமான கேள்விகள். சபை வரலாற்றைப்பற்றிய தொடரின் இந்த முதல் பாகத்தில் இந்தக் கேள்விகளுக்குப் பதில் கிடைக்கும்.
பரம அழைப்புக்குப் பங்குள்ளவர்களாகிய பரிசுத்த சகோதரரே,
இன்று நான் சபை வரலாற்றைப்பற்றிபேசத் தொடங்குகிறேன். ஆண்டவராகிய இயேசுவின் வருகை தாமாதமானால், அவருக்குச் சித்தமானால், அடுத்த இரண்டு வருடங்கள் நான் சபை வரலாற்றைப்பற்றிப் பேசத் தீர்மானித்துள்ளேன். சபை வரலாறு என்பது கிறிஸ்தவத்தின் வரலாறு. தமிழ் பேசும் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் சபை வரலாற்றை அறியாதது வருந்தத்தக்கது. “சபை வரலாற்றை யாரும் எங்களுக்குப் போதிக்கவில்லை,” என்று நாம் சொன்னால், “நீங்கள் ஏன் கற்றுக்கொள்ள முயலவில்லை? மாநாடுகளுக்கும், கூட்டங்களுக்கும், சடங்குகளுக்கும், அமைப்புமுறைகளுக்கும் கொடுத்த முக்கியத்துவத்தை சபை வரலாற்றை அறிவதற்கு ஏன் கொடுக்கவில்லை?” என்ற கேள்வியை நான் எழுப்புவேன். “இன்றைய சபைதான் நமக்குத் தெரியும், கடந்த இருபது நூற்றாண்டுச் சபை நமக்குத் தெரியாது,” என்றால், நாம் ஒரு புத்தகத்தின் கடைசிப் பக்கத்தை மட்டுமே படித்துக்கொண்டிருக்கிறோம் என்று பொருள். முழுப் புத்தகத்தையும் படிக்க வேண்டும். பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
“வரலாறு என்பது வெறுமனே இடங்களையும், மனிதர்களையும், நிகழ்வுகளைப்பற்றிய கதைதானே! எங்கோ இருக்கும் இடங்கள்; நான் அந்த இடங்களுக்குப் போகப்போவதில்லை. எங்கோ வாழ்ந்த மக்கள்; அவர்களை நான் சந்திக்கப்போவதில்லை. எங்கோ நடந்த நிகழ்வுகள்; அவைகளுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. கடந்துபோன காலம்! இறந்துபோன மக்கள்! இன்று என் வாழ்வுக்குத் தொடர்பில்லாத நிகழ்வுகள்!” என்று சிலர் நினைப்பது தவறு. இந்தப் பார்வை குறைவுள்ளது. ஏனென்றால், சபை வரலாற்றிலிருந்து நம்மைப் பிரிக்க முடியாது. இன்று நாம் அனுபவிக்கின்ற தேவ காரியங்களைப்பற்றிய விசுவாசமும், அறிவும் சபைப் பிதாக்கள் பெரிய விலை கொடுத்து வாங்கி நமக்கு வைத்துவிட்டுப் போயிருக்கும் அரும்பெரும் சொத்துக்கள். இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்கவும், சபையின் சாட்சியைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும் அவர்கள் செய்த தியாகங்கள் மகத்தானவை. சபை வரலாறு இந்த உண்மையை உறுதிப்படுத்துகிறது.
என்ன நடந்தது, என்ன நடக்கிறது, என்ன நடக்கப்போகிறது என்பதெல்லாம் சேர்ந்ததுதான் வரலாறு. நாம் ஞானிகளாக இருந்தால், வரலாற்றைப்படித்து, 1 நாளாகமம் 12:32இல் இசக்கார் புத்திரர் தங்கள் காலத்தை அறிந்து, அதற்கேற்றாற்போல் என்ன செய்ய வேண்டும் என்று அறிந்திருந்ததுபோல, நாம் நம் காலத்தை அறிந்து, என்ன செய்யவேண்டும் என்று கற்றுக்கொள்வோம்.
“தேவனுடைய வேலைகளை மறப்பவர்கள், தங்கள் வேலையில் நிச்சயமாகத் தோற்பார்கள்,” என்று C H ஸ்பர்ஜன் கூறியதில் உண்மை உள்ளது. தேவனுடைய அற்புதமான வேலைகளை அடுத்த தலைமுறைக்கு நாம் அறிவிக்க வேண்டும். மனிதர்கள் செல்வங்களையும், சொத்துக்களையும் சம்பாதிக்கிறார்கள்; தாங்கள் சம்பாதித்தவைகளை அடுத்த தலைமுறைக்காகச் சேமித்தும் வைக்கிறார்கள். அடுத்த தலைமுறைக்கு பூமிக்குரிய சொத்துக்களை விட்டுப் போகாவிட்டால்கூடப் பரவாயில்லை; இணையற்ற, ஒப்பற்ற, நிகரற்ற, ஈடற்ற கிறிஸ்துவே நாம் சம்பாதிக்கவேண்டிய, அடுத்த தலைமுறைக்காகச் சேமித்துவைக்க வேண்டிய, அவர்களிடம் ஒப்படைக்க வேண்டிய செல்வம், சொத்து, என்பதை எனக்குக் கற்றுத்தந்த பல பகுதிகளுள் உபாகமம் 6ம் ஒன்று. அடுத்த தலைமுறைக்கு உறுதியோடும் உரத்தோடும் கிறிஸ்துவைத் தொடர்ச்சியாகக் கற்பிக்க வேண்டும், கடத்த வேண்டும், என்று மோசே வற்புறுத்துகிறார். தேவனுடைய கட்டளைகள் மக்களுடைய “இருதயங்களில்” இருக்க வேண்டும் (6:6). இருதயத்தின் நிறைவிலிருந்து “நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசு” (6:7) என்று அவர் சொன்னார்.
சபை வரலாறு பரிசுத்த வேதாகமம் இல்லை. ஆனால், தேவன் வரலாற்றில் செயலாற்றுகிறார்; ஆகவே, வரலாற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டும் என்றும், வரலாற்றை நாம் அடுத்த தலைமுறைக்குக் கடத்தவேண்டும் என்றும் விரும்புகிறார்.
சில நேரங்களில், வரலாற்றைப் படித்துப் புரிந்துகொள்வது கடினம்.
“சபை வரலாறு என்றால் என்ன? சபை வரலாற்றை அறிவதற்கான ஆதாரங்கள், வழிகள் என்ன? அவை எங்கு கிடைக்கும்? சபை வரலாற்றை நாம் ஏன் அறிய வேண்டும்?” என்ற நியாயமான கேள்விகளுக்கு நிச்சயமாகப் பதில் வேண்டும்.
நாம் பல கண்ணோட்டங்களில், பல கோணங்களில், சபை வரலாற்றைப் பார்க்கலாம், படிக்கலாம். ஆனால், கிறிஸ்தவம் முதன்மையாக ஒரு வாழ்க்கைத் தத்துவமோ, நடத்தை நெறிமுறையோ, இறையியல், போதனைகள், உபதேசங்கள், பயிற்சிகள், பழக்கவழக்கங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள் ஆகியவைகளின் தொகுப்போ அல்ல. கிறிஸ்தவத்தில் இவையனைத்தும் உண்டு. இது வெற்று விசுவாசம் அல்ல. கிறிஸ்தவம் ஒரு கற்பனைக் கதை அல்ல. அது வரலாறு. இயேசு மரித்தது, அடக்கம்பண்ணப்பட்டது, உயிர்த்தது, தரிசனமானது, பரமேறியது எல்லாம் வரலாறு.
கிறிஸ்தவம் என்பது கிறிஸ்து என்ற வரலாற்று நபர். கிறிஸ்துவே கிறிஸ்தவம். கிறிஸ்துவை உடையவன் கிறிஸ்தவன். கிறிஸ்தவன் கிறிஸ்துவை விசுவாசிப்பவன், கிறிஸ்துவை வாழ்பவன், கிறிஸ்துவால் வாழ்பவன், கிறிஸ்துவை வழங்குபவன். வரலாறு இதற்குச் சான்றுபகர்கிறது.
எனவே, சபை வரலாறு என்பது வெறுமனே சபையோடு சம்பந்தப்பட்ட கடந்த கால நிகழ்வுகளும், ஆலோசனைச் சங்கங்களும், விவகாரங்களும், மனிதர்களும் மட்டும் அல்ல; சபை வராலாறு என்பது தேவன் தம் நித்திய நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக எப்படிச் செயல்பட்டார் என்பதையும், தேவனுடைய செயல்பாடுகளுக்கு மனிதர்கள் எப்படி மறுமொழி அளித்தார்கள் என்பதையும்பற்றியது . தேவனுடைய நித்திய நோக்கத்திற்குச் சிலர் கீழ்ப்படிந்தார்கள்; சிலர் கீழ்ப்படியவில்லை. சபை வரலாறு என்பது இறையாண்மையுள்ள தேவன் தம் நித்திய நோக்கத்தை நிறைவேற்ற இந்தப் பூமியில் அன்று தம் ஒரேபேறான மகன் இயேசுவின்மூலம் செய்துமுடித்து, இன்று தம் ஆவியானவரால் செய்துகொண்டிருக்கிற வேலையைப்பற்றியது.
சபை வரலாற்றில் அப்போஸ்தலர்கள், ஆயர்கள், போப், இறையியலாளர்கள், அரசர்கள், சந்நியாசிகள், மடங்கள், போர்கள் எனப் பலரைப்பற்றிப் படிப்போம். ஆனால், எல்லாவற்றிக்கும்மேலாக, இவர்களிலும், இவர்கள்மூலமாகவும் தேவன் என்ன செய்தார், என்ன செய்துகொண்டிருக்கிறார் என்று அதிகமாகப் பாப்போம். சபை வரலாற்றில் தேவனுடைய அற்புத செயல்களைப் பார்ப்போம். தேவனுடைய அற்புத செயல்கள் என்று சொல்வதால், அங்கு தீய, மோசமான, செயல்கள் நடைபெறவே இல்லை என்று நான் சொல்லவில்லை. பல வழிகளில், பல அம்சங்களில் சபை வரலாற்றில் இருண்ட பகுதிகள் உண்டு. திரும்பத்திரும்ப தோல்விகள். ஆனால், இவைகளினூடாய் இறையாண்மையுள்ள தேவனுடைய கரத்தைப் பார்ப்போம். தேவ மக்களின் தனித்தனி வேலைகளைவிட தேவனுடைய வேலையைப் பார்ப்போம். சபை வரலாற்றில் சிலர் உண்மையாகவே நம் சகோதர சகோதரிகள் என்றும், இன்னும் சிலர் நம் சகோதர சகோதரிகளே இல்லை என்றும், வேறு சிலர் நம் சகோதர சகோதரிகள்போல் நடித்தார்கள் என்றும் புரிந்துகொள்வோம்.
பல்வேறு வழிகளில் நாம் சபை வரலாற்றை அறியலாம். 1. ஆதிச் சபையைப்பற்றி அப்போஸ்தலர் நடபடிகளிலும், வேறு சில மதச்சார்பற்ற நூல்களிலிருந்தும், கடிதங்களிலிருந்தும் காணலாம்; 2. சித்திரவதைக்குள்ளான சபையைப்பற்றி ரோம ஆவணங்களிலிருந்தும், ஜோசிஃபஸ்போன்ற வரலாற்றாசிரியர்களின் எழுத்துகளிலிருந்தும், அந்தியோகியாவின் இக்னேஷியஸ்போன்ற சபைப் பிதாக்களின் எழுத்துக்களிலிருந்தும், அறியலாம்; 3. சபையின் வழிபாட்டு முறைகளைப்பற்றி இரத்தசாட்சியாகிய ஜஸ்டின்போன்றவர்களின் எழுத்துக்களிலிருந்து கற்கலாம்;
4. அப்போஸ்தலர்களின் காலத்திலும், அவர்களுடைய காலத்துக்குப்பிறகும் சபையின் விரிவாக்கத்தைப்பற்றி யுசீபியஸ் எழுதிய வரலாற்று நூலில் பார்க்கலாம்; 5. வேதப்புரட்டுக்கு எதிரான கருத்துக்களை லியோன்ஸின் இரனேயசின் எழுத்துகளிலிருந்தும், 6. சபையின் ஆலோசனைச்சங்க நடவடிக்கைகளைப்பற்றி சங்கத்தின் குறிப்புகளிலிருந்தும், சங்கத்தின் கூட்டங்களில் கலந்துகொண்ட சபைப் பிதாக்களின் எழுத்துகளிலிருந்தும், எடுத்துக்காட்டாக கான்ஸ்டான்டினோபிள் ஆலோசனைச்சங்கக் கூட்டத்தில் கலந்துகொண்ட இறையியலாளர் கிரகரி போன்றவர்களின் எழுத்துகளிலிருந்து கற்கலாம்; இதுபோன்ற இன்னும் வேறு பல ஆதாரங்களிலிருந்தும் நாம் சபை வரலாற்றை அறியலாம்.
சபை வரலாற்றை நாம் ஏன் படிக்க வேண்டும்?அதைப் படித்து என்ன சாதிக்கப்போகிறோம்? என்ன நடக்கப்போகிறது? என்ன மாறப்போகிறது? படிக்காவிட்டால் என்ன நட்டம்? அறியாவிட்டால் என்ன இழப்பு? இந்தக் கேள்விக்குப் பதில் தேவை.
முதல் காரணம். நாம் தேவனை அறிய வேண்டுமானால் சபை வரலாற்றைப் படிக்க வேண்டும். வேதாகமம் ஒரு வரலாறு. அது இந்த உலகத்தில் தேவன் தம்மைத் தம் மக்களுக்கு வெளிப்படுத்திய வரலாறு; அது தேவன் தம் மக்களிலும், மக்கள்மூலமாகவும், மக்களுக்காகவும் செய்தவைகளைப்பற்றிய வரலாறு. வேதாகமத்தில் எவ்வளவோ காரியங்கள் இருக்கின்றன. ஆனால், முதன்மையாக அது தேவனின் வரலாறு, தேவ மக்களின் வரலாறு. அப்போஸ்தலர் நடபடிகளின் கடைசிப் பகுதியை வாசிக்கும்போது, தேவனுடைய நித்திய நோக்கம் இன்னும் நிறைவேறிவிடவில்லை என்றும், அந்த நோக்கம் ஒரு தொடர்கதை என்றும் தெரிகிறது. ஏனென்றால், தேவன் இந்த உலகத்தில் இன்னும், இன்றும் வேலைசெய்துகொண்டிருக்கிறார்.
வேதாகமத்துக்குப் பிந்தைய வரலாறு வேதாகமத்தைப்போல், தேவனால் ஏவப்பட்டு எழுதப்பட்ட வார்த்தை இல்லைதான்; ஒப்புக்கொள்கிறேன். ஆனாலும், வரலாறு முழுவதும் தேவன் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பதை அறியும்போது, தேவனை நாம் இன்னும் அதிகமாக அறிய முடியும். வேதாகமம் எழுதப்பட்டபிறகும் தேவன் வரலாற்றில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் என்பது உண்மை. வேதாகமத்தின் காலத்தோடு தேவன் தம் செயல்களை நிறுத்திவிடவில்லையே!. எனவே, வரலாறு என்பது தேவனுடைய வேலையைப்பற்றிய கதை. “வானங்கள் அவரை வெளிப்படுத்துகின்றன; ஆகாயவிரிவு அவருடைய கைவேலை” (சங். 19:1). அதுபோல, வரலாறு அவருடைய கைவேலைகளையும், வழிகளையும் வெளிப்படுத்துகின்றன. ஏனென்றால், அடிப்படையில் history is his story. இறையாண்மையுள்ள தேவனே வரலாற்றிலும், வரலாற்றையும், ஆளுகைசெய்கிறார். “உன்னதமானவர் மனிதருடைய இராஜ்ஜியத்தில் ஆளுகைசெய்து, தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறார்” (தானி. 4:32). பாபிலோனின் நேபுகாத்நேச்சார் தன் அரண்மனையையும், நகரத்தையும் பார்த்து, “இது என் வல்லமையின் பராக்கிரமத்தினால், என் மகிமைப்பிரதாபத்துக்கென்று…நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா?” என்று அதிகார போதையில் சொல்லி முடிப்பதற்குமுன் ஆட்சியை இழந்தான். அதிகாரத்தில் இருப்பவர்கள்தான் ஆள்பவர்கள் என்று நாம் நினைக்கலாம். இல்லை, இறையாண்மையுள்ள தேவனே ஆளுகைசெய்கிறார். பேரரசனாகிய நேபுகாத்நேச்சார் ஒரு மாட்டைப்போல் புல்லை மேய்ந்தான். அவன் புத்தி தெளிந்தபோது தேவனைப்பற்றிய அவனுடைய எண்ணம் மாறிற்று. “தேவனே ஆளுகைசெய்கிறார். அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிகளையும் நடத்துகிறார். அவர் தம் விருப்பப்படி யாருக்கு வேண்டுமானாலும் ஆட்சியைக் கொடுப்பார்” என்று அவன் புரிந்துகொண்டான். தேவன் அரசாளுகிறார்.
எனவே, வரலாற்றுக்கு ஆழமான பொருள் உண்டு. ஏனென்றால், அது தேவனுடைய கதை. தேவன் தாம் வரலாற்றை எப்படி நிறைவாக்க வேண்டும் என்று விரும்புகிறாரோ, அதற்கேற்றாற்போல் மனிதர்களையும், நிகழ்வுகளையும் அமைக்கிறார், அனுமதிக்கிறார். ஏற்பாடுசெய்கிறார், வனைகிறார்.
வரலாற்றைத் தேவனுடைய நித்திய நோக்கத்தின் கண்ணோட்டத்தில் பார்த்தால், அதன் ஆழம் புரியும். ஏனென்றால், முழு வரலாறும் இரண்டு அரசுகளுக்கிடையிலான ஒரு போர்க்களம். எனவே, முழு வரலாறும் தேவனுடைய நித்திய நோக்கம் நிறைவேற வேண்டும் என்ற இலக்கைநோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. இந்தப் போக்கில், வரலாறு தேவனை வெளிப்படுத்துகிறது.
இரண்டாவது, நாம் மக்களை அறிய வேண்டும். வரலாறு ஓர் ஆய்வகம். இந்த ஆய்வகத்தில் ஆயிரக்கணக்கான மக்களையும், அவர்களுடைய சொற்களையும் செயல்களையும் நாம் ஆய்வுசெய்கிறோம். வரலாற்றிலிருந்து மனித இயல்பைப்பற்றி நாம் அதிகமாகத் தெரிந்துகொள்ளலாம். மனிதன் அற்புதமானவன், அருமையானவன். எனினும், அவன் தவறுவான், அவன் தவறுசெய்யக்கூடியவன்; அவன் தவறா வரம்பெற்றவன் இல்லை. மனிதனை நாம் நேசிக்கலாம், கொண்டாடலாம்; எனினும், அவனை முழுமையாக நம்பமுடியாது. தேவனுடைய சாயலில் படைக்கப்பட்ட மனிதன் பல நல்ல, சரியான, தரமான காரியங்களைச் செய்கிறான்; பாவத்தால் சீரழிந்த அதே மனிதன் பல கெட்ட, தவறான, மோசமான செயல்களையும் செய்கிறான். இன்னொருபுறம் கிறிஸ்தவர்கள் நற்செய்தி அறிவித்து அவருடைய அரசை விரிவாக்குகிறார்கள்; கிறிஸ்துவின் சாயலுக்கு ஒத்த சாயலாக்கப்படுகிறார்கள். இப்படிப் பலதரப்பட்ட மனிதர்களைப் பார்க்கிறோம்.
மூன்றாவது, நாம் நம்மையும், நம் பரம்பரையையும் அறிவதற்காக வரலாற்றைப் படிக்கிறோம். “பின்வரும் சந்ததியான பிள்ளைகளுக்கு நாங்கள் அவைகளை மறைக்காமல், கர்த்தரின் துதிகளையும் அவருடைய பலத்தையும், அவர் செய்த அவருடைய அதிசயங்களையும் விவரிப்போம்,” என்று சங்கீதம் 78இல் ஆசாப் சொல்வதுபோல் அடுத்த தலைமுறைக்கு நம் வரலாற்றைக் கடத்தவேண்டியது நம் கடமை, நம் கட்டாயம்.
நாம் ஓர் அரச பரம்பரையைச் சார்ந்தவர்கள் என்றால், அது நம்மைப்பற்றிய நம் பார்வையையும் நம் நடத்தையையும் பாதிக்கும், மாற்றும். கூம்புவடிவ பிரமிட்டின் அடிப்பாகம் பரந்துவிரிந்திருக்கிறது. மேலே செல்லச்செல்லக் கூம்பு சுருங்கிக்கொண்டேபோகிறது. மேலே இருக்கும் கற்கள் தனக்குக் கீழே இருக்கும் கற்களின்மேல் நிற்கின்றன. உச்சியில் இருக்கும் கற்களுக்குக்கீழே எத்தனை அடுக்குக் கற்கள் இருக்கின்றன! கீழே இருக்கும் எத்தனையோ அடுக்குக் கற்களின்மேல்தான் மேலே இருக்கும் கற்கள் நிற்கின்றன. இதுபோல ஒவ்வொரு தலைமுறையும் அதற்கு முந்தைய தலைமுறைகளைச் சார்ந்த முன்னோடிகளின் தோள்களின்மேல்தான் நிற்கிறது. நாம் நமக்கு முந்தைய பல தலைமுறைகளின் தோள்களின்மேல் நிற்கிறோம். நாம் யாருடைய வாரிசுகள் என்றும், நம் மூதாதையர்கள், முற்பிதாக்கள், யார் என்றும், நம் சந்ததி எது என்றும் தெரியும்போது, நாம் நம் வாழ்க்கை வரலாற்றுக்கு ஒரு நீண்ட முன்னுரை எழுதுகிறோம் என்று பொருள். தமிழ்நாட்டில் அப்பாவின் பெயர் மகனின் கடைசிப் பெயர். பேரனின் கடைசிப் பெயர் அவன் அப்பாவின் பெயர். பேரனின் கடைசிப் பெயர் தாத்தாவின் பெயர் இல்லை. ஒரு தலைமுறையோடு ஒருவனுடைய பெயர் மறைந்துவிடுகிறது. கடைசியில் குடும்ப வரலாறு தெரியாமல் போய்விடுகிறது. கடைசிப் பெயர் ஒரே பெயராக இருந்திருந்தால் பரம்பரை நிலைத்திருந்திருக்கும்.
சபை வரலாறு என்பது நம் குடும்ப வரலாறாகும். ஏனென்றால், நாம் பரலோகத்திலும், பூமியிலும் இருக்கிற தேவனுடைய முழுக்குடும்பத்தின் ஒரு பகுதியாக இருக்கிறோம் (எபேசியர் 3:14). ஆகையால், சபை வரலாற்றை அறிவது என்பது நம் குடும்பத்தின் நிழற்படங்கள் அடங்கிய செருகேட்டைப் பார்த்து, நம் குடும்பப் பரம்பரையை ஆராய்ந்தறிவதுபோன்றதாகும். கடந்த காலத்தைப் புரிந்துகொள்ளாமல், நம்மைப் புரிந்துகொள்ள முடியாது. ஏனென்றால், ஒரு வகையில், கடந்த காலம் இன்னும் நம்மில் வாழ்கிறது, அது நாம் யார் என்பதையும், கிறிஸ்தவச் செய்தியை நாம் எப்படி ஏற்றுக்கொள்கிறோம் என்பதையும் பாதிக்கிறது. கடந்த காலத்தைப்பற்றிய அறிவு நாம் யார் என்பதையும், என்ன செய்கிறோம் என்பதையும் உருவாக்குகிறது.
நம் குடும்ப வரலாறை நாம் அறிய வேண்டும் என்பதற்காக ஸ்டீபன் மான்ஸ்ஃபீல்ட் என்பவர் தன் புத்தகத்தில் கூறியிருக்கும் ஒரு கதையைச் சொல்லுகிறேன்.ஸ்டீபன் என்ற ஓர் இத்தாலிய மாலுமி. 1400களில் அவரும், இன்னொரு சக மாலுமியும் கப்பலில் தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்புவதற்குமுன் கப்பல் தங்கியிருந்த அல்ஜீரியக் கடற்கரையில் பேசிக்கொண்டே நடந்தார்கள். அப்போது தூரத்தில் ஓர் உடல் கிடப்பதைக் கண்டார்கள். அருகில் சென்று பார்த்தார்கள். அடித்து உதைத்துக் குற்றுயிராய் வீசியெறியப்பட்ட ஓர் உடல். இன்னும் சாகவில்லை, உயிர் ஒட்டிக்கொண்டிருக்கிறது. அவர் யார் என்று அவர்கள் உடனே அடையாளம் கண்டுகொண்டார்கள். அவர் அருகிலிருந்த இஸ்லாமியர்களுக்கு நற்செய்தி அறிவிக்கச் சென்றிருந்த ஒரு மிஷனரி. அவர்கள் அவரைத் தங்கள் கப்பலில் ஏற்றிக்கொண்டு பயணப்பட்டார்கள். கப்பல் வழியில் புயலில் சிக்கி, திசைமாறி ஓடியது. கடைசியாக மல்லார்க்கா என்ற தீவின் கரையோரமாகக் கப்பல் ஒதுங்கியது. அதுதான் அந்த மிஷனரியின் சொந்த நாடு. மரித்துக்கொண்டிருந்த மிஷனரி தன் ஊரைப் பார்த்தால் மகிழ்ச்சியடைவார் என்று நினைத்து, அவர்கள் அவரைக் கப்பலின் மேல்தளத்திற்குக் கொண்டுவந்தார்கள். அவர் பார்த்தார்; ஆனால், தன் ஊரையல்ல; அதற்குஅப்பால் தூரத்திலிருக்கும் மேற்கு அடிவானத்தை சுட்டிக்காட்டி, “கடல் தழுவும் நமக்குத் தெரிந்த இந்தத் தீவுக்கு அப்பால் இந்தக் கண்டத்துக்கு அப்பால் நமக்குத் தெரியாத இன்னொரு கண்டம் இருக்கிறது. அங்கு இருக்கும் குடிகள் இதுவரை நற்செய்தியைக் கேள்விப்பட்டதேயில்லை. ஆண்டவரே, அவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்க ஆட்களை அனுப்பும்,” என்று சொல்லிமுடித்து அவர் இறந்தார்.
ஸ்டீபன் இத்தாலிக்குத் திரும்பினார். அவர் இந்த நிகழ்ச்சியைத் தன் பிள்ளைகளுக்கும், தன் பேரப்பிள்ளைகளுக்கும் சொன்னார். இந்த நிகழ்ச்சி அவருடைய ஒரு பேரக்குழந்தையின் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்தது. அந்த மிஷனரியின் வார்தைகள் அவருடைய உள்ளதை உலுக்கின. அவர் தேவனைத் தேடினார். நற்செய்தியாகிய ஒளியை இதுவரை அறியப்படாத நிலப்பரப்புக்குக் கொண்டுசெல்ல இயேசு தன்னை அழைப்பதை அவர் உணர்ந்தார். இந்தப் பேரன் யார் தெரியுமா? கிறிஸ்டோபர் கொலம்பஸ்.
நம் பரம்பரையையைப்பற்றிய வரலாறு நாம் யார் என்பதையும், நாம் என்ன செய்கிறோம் என்பதையும் தீர்மானிக்கிறது.
எனவேதான், இன்று பல நாடுகள் மக்களைப் பிரிக்க, பிளவுபடுத்த, தங்கள் வரலாற்றை மாற்றி எழுத முயல்கின்றன. குடிமக்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று தலைவர்கள் விரும்புகிறார்களோ, அதற்கேற்றவாறு அவர்களை மாற்றியமைக்க, அவர்களுடைய உண்மையான அடையாளத்தை அழித்துவிட்டு, தங்கள் விருப்பத்தின்படி நயவஞ்சகமாக வரலாற்றை மாற்றி எழுதுகிறார்கள்.
ரஷ்யா, சீனா, வட கொரியா, கியூபா போன்ற நாடுகள் தங்களுக்கும் கடந்த காலத்துக்கும் இருந்த உறவை அழிக்க, தங்கள் வரலாறுகளைத் திருத்தி மாற்றி எழுதினார்கள். இந்தியாவும் அந்தப் பாதையில் பயணிக்க ஆரம்பித்திருக்கிறது. “மக்களின் பரம்பரையைப்பற்றிய வரலாற்றை அழித்துவிட்டால், அவர்களை எளிதில் அடக்கி வென்றுவிடலாம்,” என்று ஒரு சமூக அறிவியல் அறிஞர் சொன்னார். எனவே, நல்ல, உண்மையான, நேர்மையான வரலாறு நம்மையும், நம் அடையாளத்தையும், தேவன் தந்த பரம்பரையையும், அடையாளத்தையும் பாதுகாக்கும். அதனால், தீய மனிதர்கள் நம்மேல் திணித்த ஏதோவொரு இலக்கை அல்ல, தேவன் தந்த இலக்கை அடைய நாம் மறுவுருவாக்கப்படுவோம்.
நமக்கும் நம் மட்டுப்பட்ட அனுபவத்திற்கும் அப்பால் இருப்பதை அறிந்துகொள்வதற்காகவும் நாம் வரலாற்றைப் படிக்கிறோம். உலகமும், உலகத்தில் தேவனுடைய செயல்களும் நம் காலத்தையும் இடத்தையும் கடந்தவை. கடந்த கால வரலாற்றுக்கு நாம் நேரடியான முதல் சாட்சிகள் இல்லை; எனினும், வழிவழியாகக் கடந்துவந்த வரலாற்றுக்கு நாம் மறைமுகமான இரண்டாவது சாட்சிகளாக மாறலாம். வரலாற்றைக் கற்றுக்கொள்ளவில்லையென்றால் நாம் வறுமையில் வாட நேரிடும். இந்த உலகம் நீங்களும் நானும் பிறந்தபிறகு உருவாக்கப்படவில்லை; நாம் பிறப்பதற்குமுன்பே படைக்கப்பட்ட இந்த உலகத்தில் தேவன் அப்போதிருந்தே செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். மேலும், உருவாக்கப்பட்ட இந்த உலகம் உங்களையும் என்னையும் சுற்றிச்சுழலவில்லை. உருவாக்கப்பட்ட இந்த உலகத்தின் மையம் நீங்களும் நானும் இல்லை. எனவே, நம்மைத்தாண்டி, நமக்கு அப்பால், நம்மைவிடப் பெரிய காரியத்தில் இதற்கான உண்மையான பொருளைத் தேட வேண்டும்.
நீரில் நீந்திக்கொண்டிருக்கும் மீனுக்குத் தான் நீரில் நீந்திக்கொண்டிருப்பது தெரியாது. வரலாறு என்பது நம் கலாச்சாரத்தையும், மொழியையும், இடத்தையும் தாண்டி நடந்தது. இன்னொரு கலாச்சாரத்தில், இன்னொரு யுகத்தில், இன்னோர் இடத்தில் வாழ்ந்தவர்களின் சில நம்பிக்கைகளும், பழக்கவழக்கங்களும், பயிற்சிகளும் இன்று நமக்கு முட்டாள்தனமாகவும், குழந்தைத்தனமாகவும் தோன்றலாம்; அவைகளைப்பார்த்து நாம் நகைக்கலாம். அவர்களுடைய குருட்டுப் புள்ளிகள் அவர்களுக்குத் தெரியவில்லை. இன்று அவை நமக்குத் தெரிகின்றன. அதுபோல இன்று நம் சில நம்பிக்கைகளும், பழக்கவழக்கங்களும், பயிற்சிகளும் எவ்வளவு முட்டாள்தனமானவை, குழந்தைத்தனமானவை என்று அறிந்தால், அதிர்ச்சியடைவோம். வரலாற்றில் நாம் இருக்கும் இடத்தின் காரணத்தால், நம்மால் நம் குருட்டுப்புள்ளிகளைப் பார்க்க முடியவில்லை. ஆனால், நாம் வாழும் காலத்திலும், இடத்திலும் உள்ள குருட்டுப் புள்ளிகளைப் பார்ப்பதற்கு வரலாறு நமக்குத் தாழ்மையையும், திறமையையும் தருகிறது. வரலாற்றைப் பார்க்கும்போதும், முற்பிதாக்களை அறியும்போதும், முன்னோடிகளின் தோள்களில் நிற்கும்போதும் ஒரு தெளிவான கண்ணோட்டம் கிடைக்கும். எடுத்துக்காட்டாக, puritans என்ற தூய்மையாளர்களைபற்றிப் படிக்கும்போது நம் பக்தி அர்ப்பணிப்பு ஆகியவைகளின் ஆழமின்மையையும், அற்பத்தனத்தையும் அறிந்து அவமானத்தில் கூனிக்குறுகிப் போய்விடுவோம். ஜோனதன் எட்வர்ட்சை அறியாதவரைக்கும் நாம் நம்மைப் புத்திசாலிகள் என்று நினைப்போம். ஜாண் கிறிசோஸ்டெமைப் படிக்காதவரை நமக்குப் பிரசங்கிக்கத் தெரியும் என்று நினைப்போம். ஜேம்ஸ் ஹட்ஸன் டெய்லரைச் சந்திக்காதவரை நம்மிடம் மலையளவு விசுவாசம் இருப்பதாக நினைப்போம். Anchorites என்ற சந்நியாசிகளைச் சந்திக்காதவரை நாம் நம்மைத் தேவனுக்கு அர்பணித்திருக்கிறோம் என்று நினைப்போம். முழு உலகத்தையும் எதிர்த்துநின்ற அத்தனேசியசைச் சந்திக்காதவரை நாம் தைரியசாலிகள் என்று நினைப்போம். நம் யுகத்தைக் காணவும், கணிக்கவும், அளக்கவும் வரலாறு நமக்குப் பரந்த கண்ணோட்டத்தைத் தருகிறது.
பழைய புத்தகங்களைப் படிப்பதைப்பற்றி C. S.லூயிஸ் சொன்னதுபோல, “கடந்த நூற்றாண்டுகளின் சுத்தமான கடல் காற்று நம் மனங்களில் தொடர்ந்து வீச வேண்டுமானால்,” பழைய புத்தகங்களைப் படிப்பதுதான் பாதுகாப்பான ஒரே வழி. கடந்த காலத்தைப் படிப்பதில் ஏதோவொரு மந்திரம் இருக்கிறது என்று நான் சொல்லவில்லை. இப்போது இருக்கும் மக்களைவிட அவர்கள் பெரிய புத்திசாலிகள் என்று நான் சொல்லவில்லை. நம்மைப்போலவே அவர்களும் பல தவறுகள் செய்தார்கள். ஆனால், அவர்களுடைய தவறுகள் நாம் தவறு செய்யலாம் என்பதற்கான உரிமம் இல்லை. நாம் செய்துகொண்டிருக்கும் தவறுகளுக்காக அவர்கள் நம்மைப் பாராட்டமாட்டார்கள்.
எடுத்துக்காட்டாக, இன்றைய சபையின் நிலை, அதன் பிரிவுகள், ஸ்தாபனங்கள், பயிற்சிகள், பலம், பிரச்சினைகள், வாய்ப்புகள் என எல்லாவற்றையும் கடந்தகால சபை வரலாற்றிலும் பார்க்கலாம்; இப்போது நாம் சந்திக்கின்ற எல்லாம் எப்படி வந்தன என்பதை வரலாறு விளக்குகிறது. இந்தியாவைப்பற்றி நீங்கள் என்ன கேள்விப்பட்டாலும் சரி. இந்தியா இன்னும் இந்தியாவாக இருப்பதற்குக் காரணம் கிறிஸ்தவர்களும் கிறிஸ்தவமுமே. இந்தியாவின் பெரும்பாலான பிரச்சினைகளுக்குக் காரணம் இந்தியா கிறிஸ்துவையும் கிறிஸ்தவத்தையும், கிறிஸ்தவக் கருத்துக்களையும் ஏற்க மறுப்பதும், வெறுப்பதும், ஒதுக்குவதுமே. இந்தியாவின் அலங்கோலத்துக்குக் காரணம் என்னவென்பதையும், இதற்குத் தீர்வு என்னவென்பதையும் வரலாற்றைப் படிக்கும்போது அறியலாம். இந்தியா இன்னும் இந்தியாவாக இருப்பதற்குக் கிறிஸ்தவர்கள் விதைத்த விட்டுச்சென்ற கிறிஸ்துவின் மீதமே. அந்த மிச்சமீதியும் இல்லையென்றால், இந்தியா என்ற ஒரு நாடு உலக வரைபடத்தில் இருக்காது. இது அமெரிக்காவுக்கும் பொருந்தும்.
தேவன் மாறுவதில்லை.ஒருபோதும் மாறுவதில்லை. மாறுபவன் மனிதன். சில காரியங்களைத் தேவன் எப்போதும் ஆசீர்வதிக்கிறார்; சில காரியங்களை அவர் எப்போதும் சிட்சிக்கிறார், மனிதனுடைய விழுந்துபோன இயல்பு அடிப்படையில் அப்படியேதான் இருக்கிறது. அது மாறவில்லை; அதன் விளைவுகளைத் தவிர்க்கமுடியாது. நாம் ஞானவான்கள் என்றால், நமக்குக் கடந்தகால வரலாறு தெரிந்தால், கடந்த கால வரலாற்றை நாம் உன்னிப்பாகக் கவனித்தால் வரலாற்றுக் காற்று எந்தத் திசையை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது என்று நாம் நிதானிக்க முடியும்.
கடந்த காலத்தை அறிவது நிகழ் காலத்திற்கும், வருங்காலத்திற்கும் பேருதவியாக இருக்கும். அங்கு நாம் கற்றுக்கொள்வதற்கு நிறையப் பாடங்கள் - நன்மைகளும் தீமைகளும், வெற்றிகளும் தோல்விகளும், சரிகளும் தவறுகளும் உள்ளன. வரலாற்றைப் படிக்கும்போதுதான் இவைகளை அறியமுடியும். கடந்த காலத்தை அறியாதவன் வாழ்நாள் முழுவதும் குழந்தையாகவே இருக்கிறான். கடந்த காலத்தை அறியாதவன் முன்னோர்கள் செய்த அதே தவறுகளை மீண்டும் மீண்டும் செய்வான் என்பது உறுதி.
அப்போது நாம் ஆற்றவேண்டிய கடமையையும் திட்டவட்டமாக அறிய முடியும். நீங்கள் ஒரு நடிகர் என்றும், ஒரு நாடகத்தின் 15ஆவது காட்சியில் நடிக்க உங்களை நாடக மேடையில் ஏற்றிவிட்டிருக்கிறார்கள் என்றும் வைத்துக்கொள்வோம். நாடகத்தின் முதல் 14 காட்சிகள் உங்களுக்குத் தெரிந்தால் 15ஆவது காட்சியில் நீங்கள் சிறப்பாக நடிக்க முடியும். முதல் 14 காட்சிகள் தெரியாமல் 15ஆவது காட்சியில் எப்படி நடிப்பீர்கள்?
நாமும் வாழ்க்கை என்னும் வரலாற்றில் நுழைந்திருக்கிறோம். இந்த வரலாறு எப்போதோ தொடங்கி போய்க்கொண்டேயிருக்கிறது. காட்சிகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. நாமும் நம் அழைப்பை நிறைவேற்ற வேண்டும். குழப்பமான இந்த உலகத்தில் தேவன் வேலைசெய்துகொண்டிருக்கிறார் என்று நாம் வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்கிறோம். எனவே, நாம் நம் வாழ்க்கையைப் பொருளுள்ள வகையில் வாழ்வதில் மும்முரமாக இருக்க வேண்டும். எங்கு? உலகிலிருந்து ஒதுங்கி எங்கோவொரு காட்டில் இருக்கும் மௌன மடங்களிலா? குகைகளிலா? கோவில்களிலா? அல்லது இதுபோன்ற இலட்சிய இடங்களிலா? இல்லை. இந்தக் குழப்பமான உலகத்தில், பள்ளியில், கல்லூரியில், தெருவில், அலுவலகத்தில், சந்தையில், நாட்டில், வீட்டில், காட்டில், வயலில், வாழ வேண்டும். முழு வாழ்க்கையே கிறிஸ்தவம் என்று தெரிகிறது.
எடுத்துக்காட்டுகள்மூலம் பாடங்களைக் கற்றுக்கொள்ள வரலாறு நமக்கு உதவுகிறது என்று நான் வலியுறுத்த விரும்புகிறேன். “ஆகையால், நீர் முந்தின தலைமுறையாரிடத்தில் விசாரித்து, அவர்கள் முன்னோர்களின் செய்தியை ஆராய்ந்துபாரும். நாம் நேற்று உண்டானவர்கள், ஒன்றும் அறியோம்; பூமியின்மேல் நம்முடைய நாட்கள் நிழலைப்போலிருக்கிறது. அவர்கள் உமக்கு உபதேசித்து, உமக்குத் தெரிவித்து, தங்கள் இருதயத்திலிருக்கும் நியாயங்களை வெளிப்படுத்துவார்கள் அல்லவோ?” என்று யோபு 8:8-10இல் வாசிக்கிறோம். அதே பிரச்சினகைள், அதே சர்ச்சைகள் மீண்டும்மீண்டும் வருவதை நாம் வரலாற்றில் பார்க்கிறோம். இடங்களும் பெயர்களும் மட்டுமே மாறுகின்றன. ஆனால், அடிப்படையான சிக்கல்கள் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. நம் சூழ்நிலையோடு நாம் எப்படி இடைப்பட வேண்டும் என்பதையறிய கடந்த காலத்தில் இதுபோன்ற சூழ்நிலைகளில் மக்கள் எப்படி இடைப்பட்டார்கள் என்பதை அறிவது நமக்கு உதவியாக இருக்கும். எடுத்துக்காட்டு, சபை தன்னைச் சுற்றியிருக்கும் கலாச்சாரத்தோடு எப்படி இடைப்படவேண்டும் என்று எல்லா நூற்றாண்டுகளிலும் விவாதித்தார்கள். இதைப்பற்றிய ஞானம் டன் கணக்கில் இருக்கிறது. அதில் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டிய நேர்மறையான காரியங்களும், தவிர்க்கவேண்டிய எதிர்மறையான காரியங்களும் நிறைய இருக்கின்றன. நம் முற்பிதாக்களிடமிருந்தும், முன்னோடிகளிடமிருந்தும் நாம் கற்றுக்கொள்ளுமாறு தேவன் கட்டளையிடுகிறார். பின்பற்றுவதற்கு உண்மையுள்ள நல்லவர்கள் இருக்கிறார்கள்; ஞானமுள்ள செயல்களும் இருக்கின்றன. தவிர்க்க வேண்டிய பல மோசமான முட்டாள்களும், முட்டாள்தனமான செயல்களும் இருக்கின்றன. அவைகளின் விளைவுகளிலிருந்து நாம் பாடங்களைக் கற்றுக்கொள்கிறோம். ஒரு நேரத்தில் புத்திசாலித்தனமாகத் தோன்றும் செயல்கள் பிற்காலத்தில் எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தும் என்ற உண்மையை நாம் கற்றுக்கொள்ளலாம். திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்திருக்கிறார்கள் என்று எபிரேயர் 12:1 கூறுகிறது. நம்மை உற்சாகப்படுத்துவதற்காக கடந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்களும், கதைகளும் சாட்சிகளாக இருக்கின்றன.
தேவன், “காலம் நிறைவேறும்போது பரலோகத்திலும் பூலோகத்திலும் இருக்கிற சகலமும் கிறிஸ்துவின் தலைமைக்குள் கூட்டிச்சேர்க்கபட வேண்டும்,” என்ற தம் நித்திய நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகக் கடந்த நித்தியத்திலிருந்து செயல்பட்டுக்கொண்டேயிருக்கிறார். சபை வரலாற்றைப் படிக்கும்போது, நூற்றாண்டுள்தோறும் சபை தன் விவகாரங்களை எப்படிக் கையாண்டிருக்கிறது என்று தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது. அங்கு தோல்விகளும், வெற்றிகளும் ஏராளமாகக் கிடக்கின்றன. நாம் பின்பற்றுவதற்கும் தவிர்ப்பதற்கும் அங்கு நிறையக் காரியங்கள் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, பவுலுக்கும் பர்னபாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தபோதும், அவர்கள் தேவனைச் சேவிப்பதை விட்டுவிடாமல், இருவரும் தத்தம் வழிகளில் பல்வேறு இடங்களுக்குச் சென்று தொடர்ந்து நற்செய்தியை அறிவித்தார்கள். இது நாம் பின்பற்ற வேண்டிய ஒரு மாதிரி. கல்சீடன் ஆலோசனைச் சங்கத்தில் இறையியல் என்னும் முகமூடியைப் போட்டுக்கொண்டு அதிகாரத்திற்காகச் சண்டைபோட்டார்கள். சபையை அரசியலோடு கலந்து, பிளவுகளையும் பிரிவினையையும் ஏற்படுத்தக்கூடாது என்பதற்கு இது ஒரு சான்று. சபை வரலாற்றைப் படிக்கும்போது கிறிஸ்தவத்தின் அடிப்படைக் கூறுகளுக்கு எதிரான கலாச்சார கூறுகளை அடையாளம் காண முடிகிறது. எடுத்துக்காட்டாக, சபைப் பிதாக்கள் தங்கள்தங்கள் கலாச்சாரத்தின் மொழியைப் பயன்படுத்தித்தான் திரித்துவம், இரட்சணிய இயல், கிறிஸ்துவயியல் போன்ற உபதேசங்களை வரையறுத்தார்கள். ஆயினும், அந்தக் கலாச்சாரத்தின் அஞ்ஞான மதத்தோடு சம்பந்தப்பட்ட தீமைகளுக்கு ஒத்துப்போகாமல், அக்காலக் கலாச்சாரத்தைப் பயன்படுத்தினார்கள். இது நம் கலாச்சாரத்தோடு நாம் எப்படி இடைப்பட்ட வேண்டும் என்பதற்கு ஒரு பாடம். மேற்கத்திய கலாச்சாரமோ, கிழக்கத்திய கலாச்சாரமோ எதுவானாலும் சரி. இஸ்ரயேலர்கள் எகிப்தியர்களைக் கொள்ளையடித்துக் கொண்டுவந்த தங்கத்தையும் வெள்ளியையும் தேவனுடைய கூடாரத்தைக் கட்டுவதற்குப் பயன்படுத்தியதுபோல, கிறிஸ்தவர்கள் தங்கள் இறையியலை உருவாக்க மதச்சார்பற்ற தத்துவ மொழியைப் பயன்படுத்தலாம் என்று நைஸாவின் கிரகரி மோசேயின் வாழ்க்கை என்ற தன் புத்தகத்தில் கூறுகிறார். எனவே, நற்செய்தியை எளிமையாகவும், தெளிவாகவும் அறிவிப்பதற்கு சபைப் பிதாக்கள் தங்கள் காலத்தின் மொழியைப் பயன்படுத்தியதுபோல, நாமும் நம் காலத்தின் மொழியைப் பயன்படுத்தி நற்செய்தி அறிவிக்கலாம். இப்படிக் கற்றுக்கொள்வதற்கு நிறையப் பாடங்கள் உள்ளன.
வரலாற்றை ஆராய்ந்துபார்க்கும்போது, வாழ்க்கை எவ்வளவு சிக்கலானது என்றும், காரியங்கள் எப்படி ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன என்றும், அவைகளுக்கான காரண காரியங்களையும்கூட நாம் அறியமுடிகிறது. எத்தனை காரணிகள்! அரசியல் காரணிகள், சமூகக் காரணிகள், பொருளாதாரக் காரணிகள், தனிப்பட்ட காரணிகள் எனப் பல சிக்கலான காரணிகள் இருக்கின்றன. உபதேசம் இன்னொரு முக்கியமான காரணி. இறையியல், உலகப் பார்வை, மனிதர்களின் கருத்துக்கள் - பலவிதமான காரணிகள். எல்லாவற்றிக்கும் விளைவுகள் உண்டு; இவைகள் மக்களுடைய வாழ்க்கையில் பல்வேறு வழிகளில் தானாகவே செயல்படுகின்றன.
தேவன் இறையாண்மையுள்ளவர், உண்மையுள்ளவர், என்பதை அறியவும் நாம் வரலாற்றைக் கற்கிறோம். பாதாளத்தின் வாசல்கள் தம் சபையை மேற்கொள்ளாது என்று இயேசு வாக்களித்தார். வரலாறு அதை நிரூபிக்கிறது. பாதாளத்தின் வாசல்களால் சபையை மேற்கொள்ளமுடியவில்லை. கொடுங்கோலர்கள் காலங்காலமாகக் கிறிஸ்துவையும் சபையையும் அழிக்க முயன்றார்கள். கொடுங்கோலர்கள் மாண்டார்கள்; சபை வாழ்கிறது. இது நமக்குத் தாழ்மையை மட்டும் அல்ல, நம்பிக்கையையும் நன்றியையும் உறுதியையும் தருகிறது. எல்லாக் காரண காரியங்களையும், அதன் விளைவுகளையும் நம்மால் கண்காணிக்க முடியாது. எனவே, நாம் தேவனுடைய வழிகாட்டுதலை நாடுகிறோம். இது நீண்ட நெடிய வரலாறு. எல்லாவற்றையும் அறிவது கடினம். நம்மால் எல்லாவற்றையும் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும், நீங்களும் நானும் செய்வதையும் தாண்டி, தேவன் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்று அவருக்குத் தெரியும். புரிந்துகொள்வது கடினம் என்றால், நடைமுறைப்படுத்துவது இன்னும் அதிகக் கடினம்.
நாம் ஏன் வரலாற்றைப் படிக்கிறோம்? வரலாற்றை வாழ்வதற்கும், வரலாற்றை உருவாக்குகிறதற்கும் நாம் வரலாற்றைப் படிக்கிறோம். கடந்த காலத்தின் மூலப்பொருட்களைக்கொண்டுதான் எதிர்காலம் கட்டப்படுகிறது என்று புக்கர் டி வாஷிங்டன் கூறினார்.
வரலாறு சலிப்பாக இருக்கத் தேவையில்லை. சில நேரங்களில் சலிப்பாக இருக்கலாம்; ஆனால், வரலாறு வியப்பானது, விறுவிறுப்பானது. நாம் உத்தமமாக வரலாற்றைப் படிக்க வேண்டும்.
எனவே, தேவனையும், மனிதர்களையும், நம்மையும், நம் பரம்பரையையும், நமக்குஅப்பால் உள்ளவைகளையும், நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும், நம் அழைப்பையும், பிறருடைய அனுபவங்களையும், வாழ்க்கை எப்படி இயங்குகிறது என்பதையும், தேவன் எவ்வளவு உண்மையுள்ளவர், இறையாண்மையுள்ளவர் என்பதையும், அறிய நாம் வரலாற்றைப் படிக்கிறோம்.
சபை வரலாற்றைப்பற்றிய இந்தத் தொடர்களில் நான் சொல்லப்போகிற எல்லாவற்றுக்கும் முழுமுதல் காரணம் நான் அல்ல. அநேகருடைய உழைப்பின் விளைவுதான் இந்தத் தொடர்கள்.
இந்தத் தொடர்களின் நோக்கம் என்ன? கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக, சபை வரலாற்றில், தேவன் என்ன செய்துகொண்டிருக்கிறாரோ, அவை இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் வாழ்ந்துகொண்டிருக்கிற நமக்கு எந்த வகையில் பொருந்தும் என்று நாம் பார்க்க வேண்டும். சபை வரலாற்றின்மூலம் தேவன் நமக்குச் சொல்ல விரும்புவதை கற்றுக்கொள்ள வேண்டும், அதற்குக் கீழ்ப்படிய வேண்டும் என்ற ஆசை உங்களுக்குள் எழுந்தால் அதுவே போதும்.
எனவே, என் வேண்டுகோள். என்னோடு நடந்துவாருங்கள். தொடர்ந்து பயணிப்போம். கேள்விகள் எழலாம், சந்தேகங்கள் விழலாம், விளக்கம் தேவைப்படலாம்; எழுதுங்கள். இயன்றவரை பதிலளிப்பேன். மீண்டும் சந்திப்போம். அதுவரை சிந்தியுங்கள்.