அப்பிரயோஜனமான ஊழியன்
“செய்யவேண்டிய கடமையை மாத்திரம் செய்தேன்”
சிறுவயதுமுதல் நான் ஒரு வேலையாள்.
இதை நான் ஒருபோதும் ஒரு குறையாகவோ, வருத்தத்திற்குரிய ஒன்றாகவோ நினைத்ததில்லை. மாறாக, மகிழ்ச்சியோடு நினைத்துப் பார்க்கிறேன்.
என் ஊர் ஒரு சிறிய கடற்கரைக் கிராமம். கூரை வீடு, மண்தரை. இரவில் தரையில் குருத்துமண் போட்டுப் படுப்போம். அப்படிப் போட்டால் தரை குளிர்ச்சியாக இருக்கும். அதற்காக ஒவ்வொருநாளும் கடற்கரையில் நீண்ட தூரம் நடந்துபோய், ஒரு பெரிய பெட்டியில் காய்ந்த குருத்துமண்ணை அள்ளிக்கொண்டு வருவேன்.
என் அப்பா ஒரு மீனவர். அவருடைய தொழிலுக்குத் தேவையான சிறுசிறு வேலைகளில் அவருக்கு உதவுவேன். காட்டுக்குச் சென்று விறகு வெட்டிக்கொண்டு வருவேன். இப்படி வேலை செய்வது சிறுவயதிலேயே என் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிட்டது. வேலை செய்வதை ஒரு சுமையாக நினைத்ததாக எனக்கு நினைவில்லை.
பின்னர் குருமடத்தில் படித்துக்கொண்டிருந்தபோதும் அதே இயல்பு தொடர்ந்தது. கழிவறைகளைக் கழுவுவது, தோட்டத்தில் களை பிடுங்குவது, அரங்கங்களைச் சுத்தம்செய்வதுபோன்ற வேலைகளை விரும்பிச் செய்தேன். மற்றவர்கள் விரும்பாத வேலை என்பதற்காக அவைகளை நான் ஒதுக்கவில்லை. யாராவது ஒருவர் செய்யவேண்டிய வேலைதானே! அதை நான் செய்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இருந்ததில்லை.
இரட்சிக்கப்பட்டபிறகும் அதே வாழ்க்கை தொடர்ந்தது. வேலைகளின் இடமும் வடிவமும் மட்டும் மாறின.
கூடும் இடங்களைச் சுத்தம்செய்வது, பரிசுத்தவான்கள் உட்காரும் நாற்காலிகளைத் துடைப்பது, கூட்டம் முடிந்தபின் இடத்தைக் கழுவிச் சுத்தம்செய்வது என்று தொடங்கி, பரிசுத்தவான்களுக்குப் பயணச்சீட்டு முன்பதிவு செய்வது, ரயில்நிலையங்களுக்குச் சென்று அவர்களை வரவேற்பது, வழியனுப்புவது, அவர்கள் தங்குவதற்கு ஏற்பாடுசெய்வது எனப் பல வேலைகளைச் செய்தேன்.
வருடாந்தரக் கூட்டங்களை ஏற்பாடுசெய்வது, உணவு ஏற்பாடுகளைக் கவனிப்பது, செய்திகளை மொழிபெயர்ப்பது, நகலெடுத்து விநியோகிப்பது, திருமண ஏற்பாடுகளில் உதவுவது எனப் பணிவிடையின் வடிவங்கள் மாறிக்கொண்டே இருந்தன. சில வேலைகள் சிறியவை; சில வேலைகள் பெரியவை. சிலவற்றை எல்லாரும் பார்த்தார்கள்; பலவற்றை யாரும் பார்த்ததில்லை.
ஆனால் அவை அனைத்தும் எனக்கு ஒரே வேலைதான் — பணிவிடை.
இந்தப் பட்டியல் இன்னும் நீண்டுகொண்டே போகும்.
அவ்வப்போது கூட்டங்களில் பேசினேன். பிரசங்கித்தேன். என் பேசுதலின்மூலம் சிலர் பயன்பெற்றிருக்கலாம்.
ஆனால் காலப்போக்கில் என்னைப்பற்றிய ஒரு காரியம் எனக்குத் தெளிவாகிக்கொண்டே வந்தது:
நான் ஒரு வேலையாள்.
நான் பேசுவதால் நான் போதகனாகிவிடுவதில்லை. பிரசங்கிப்பதால் நான் நற்செய்தியாளனாகிவிடுவதில்லை. மற்றவர்களுடைய தேவைகளைக் கவனித்ததால் நான் மேய்ப்பனாகிவிடுவதில்லை. என் மூலமாகச் சிலர் பயன்பெற்றிருக்கலாம் என்பதால் என் அழைப்பும் மாறிவிடுவதில்லை.
இன்றைக்கும் என்னைப்பற்றிய என் அடிப்படைப் புரிதல் இதுதான்:
நான் ஒரு வேலைக்காரன்.
ஆனால் இதை எப்போதும் நினைவில் வைத்திருக்கிறேனா?
இல்லை.
சில நேரங்களில் என்னைக்குறித்து நான் வேறு விதமாக நினைக்க ஆரம்பித்துவிடுகிறேன். நான் செய்த காரியங்கள் என் கண்களுக்குப் பெரிதாகத் தெரிய ஆரம்பிக்கின்றன. எனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை என்னுடைய வேலையாக நினைக்க ஆரம்பிக்கிறேன். வேலைக்காரன் என்ற இடத்திலிருந்து கொஞ்சம் நகர ஆரம்பிக்கிறேன்.
அப்போது தேவன் என்னை விட்டுவிடுவதில்லை.
மனிதர்கள்மூலமாகவும், தம் வார்த்தையின்மூலமாகவும், நிகழ்வுகள்மூலமாகவும் எனக்கு ஊசிகுத்தி, என் அசல் நிலைக்கு என்னைக் கொண்டுவருகிறார்.
சில ஊசிகள் வலிக்கும்.
ஆனால் அந்த வலி எனக்குத் தேவை.
ஏனென்றால் அது மறுபடியும் என்னை ஒரு பழைய கேள்விக்கு அழைத்துச் செல்கிறது:
ஊழியம் என்றால் என்ன? ஊழியன் என்றால் யார்?
ஊழியம் என்றால் பணிவிடை, வேலை. ஊழியன் என்றால் பணியாள் (மத். 20:26; 22:13), வேலையாள் (மத். 10:10).
இந்த எளிய உண்மையை நான் மறந்துபோகும்போதுதான் பிரச்சினை ஆரம்பிக்கிறது.
ஆண்டவராகிய இயேசு லூக்கா 17:7–10-ல் ஒரு வேலைக்காரனை நம் கண்முன் நிறுத்துகிறார். அவன் வயலில் உழுதுவிட்டு அல்லது மந்தையை மேய்த்துவிட்டு வீட்டுக்கு வருகிறான். ஆனால் வீட்டுக்கு வந்தவுடன் அவனுடைய வேலை முடிந்துவிடவில்லை. எஜமானுக்குப் பணிவிடை செய்யவேண்டியிருக்கிறது. தனக்குக் கட்டளையிடப்பட்ட எல்லாவற்றையும் செய்துமுடித்தபின் அவன் சொல்ல வேண்டியது:
“நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர்; செய்யவேண்டிய கடமையை மாத்திரம் செய்தோம்.” (லூக். 17:10)
இந்த வார்த்தை என்னை அடிக்கடி என் இடத்திற்குத் திரும்பக் கொண்டுவருகிறது.
“செய்யவேண்டிய கடமையை மாத்திரம் செய்தோம்.”
இது வேலைக்காரனுக்கு மதிப்பு இல்லை என்பதல்ல. அவனுக்குச் சம்பளம் கொடுக்கக்கூடாது என்பதுமல்ல. “வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரன்” என்று ஆண்டவரே சொன்னார் (லூக். 10:7).
ஆனால் வேலைக்காரன் தன் வேலையை வைத்து எஜமானிடம் உரிமைகோருவதில்லை.
“நான் இவ்வளவு செய்தேன். ஆகவே எனக்கு இது வேண்டும்.”
“நான் இத்தனை ஆண்டுகள் உழைத்தேன். ஆகவே என்னை இப்படித்தான் நடத்த வேண்டும்.”
“நான் இவ்வளவு கொடுத்தேன். ஆகவே எனக்கு இந்த மரியாதை கிடைக்க வேண்டும்.”
இந்தக் கணக்குகள் ஆரம்பிக்கும்போது, வேலைக்காரனுடைய மனப்பாங்கிலிருந்து நான் நகர ஆரம்பித்துவிட்டேன் என்பதை உணர்கிறேன்.
சம்பளம், அன்பளிப்பு, வெகுமதி, விருந்துபசாரம், பாராட்டு, நன்றி, விடுமுறை, அங்கீகாரம், மரியாதை — இவை தவறானவை அல்ல. அவைகளைப் பெறுவதும் தவறல்ல. ஆனால் அவைகளை எதிர்பார்த்து நான் பணிவிடை செய்தால், பணிவிடையின் இயல்பே மாறிவிடுகிறது.
ஒரு வேலைக்காரனுக்கு எஜமானுடைய கட்டளையும், தனக்குக் கொடுக்கப்பட்ட கடமையும் முதன்மையானவை.
அதிலும் அவன் தன் எஜமானையும், எஜமானுடைய வீட்டாரையும் நேசித்துவிட்டால், அவனுடைய பணிவிடை வெறும் கடமையாக இருப்பதில்லை.
உடல் வருத்தம், பசி, தூக்கமின்மை, அவமதிப்பு, இழப்பு, தனக்கு இழைக்கப்படும் தீங்குகள் — இவைகளைக் கணக்குப்பார்த்துக்கொண்டிருக்காமல், நாளைய தினத்தைப்பற்றிய கவலையில் மூழ்காமல், “வயலிலும் வீட்டிலும்” — வெளியேயும் உள்ளேயும் — தன்னை உளமார ஊற்றுகிறான்.
இந்தப் பாதையில் நமக்கு முன்பாக நடந்தவர் ஆண்டவராகிய இயேசு.
அவர்,
“ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்ய...” வந்தார் (மத். 20:28).
அவரே,
“நான் உங்கள் நடுவிலே பணிவிடைக்காரனைப்போல் இருக்கிறேன்” என்றார் (லூக். 22:27).
அவர் எஜமான். ஆனாலும் பணிவிடை செய்தார்.
அவர் ஆண்டவர். ஆனாலும் சீடர்களுடைய கால்களைக் கழுவினார்.
அவருக்குச் சகல அதிகாரமும் இருந்தது. ஆனாலும் தம்மை ஊற்றினார்.
அவரைப் பார்க்கும்போது “ஊழியம்” என்பது மேடை அல்ல என்பது எனக்குத் தெரிகிறது. அது ஒரு பதவியும் அல்ல. ஒரு பட்டமும் அல்ல. மற்றவர்கள் என்னை என்னவென்று அழைக்கிறார்கள் என்பதும் அல்ல.
ஊழியம் என்பது பணிவிடை. ஊழியன் என்பவன் பணியாள்.
இந்த உண்மையை எழுதுவது எளிது. வாழ்வதுதான் கடினம்.
ஏனென்றால் நமக்குள் இருக்கும் “நான்” வேலைசெய்ய மறுப்பதில்லை. அது பல வேலைகளைச் செய்யும். தியாகம்கூடச் செய்யும். கஷ்டப்படவும் தயாராக இருக்கும்.
ஆனால் ஒருநாள் அது செய்த வேலைகளுக்குக் கணக்குப்பார்க்க ஆரம்பிக்கும்.
“என்னை யாராவது கவனித்தார்களா?”
“எனக்கு நன்றி சொன்னார்களா?”
“என்னை மதித்தார்களா?”
“நான் செய்ததை நினைவில் வைத்திருக்கிறார்களா?”
அந்தக் கேள்விகள் எழும்போது, மற்றவர்களை நான் குறைசொல்ல விரும்பவில்லை. அந்தக் கேள்விகளை எழுப்புகிற என் சொந்த இருதயத்தைத்தான் நான் பார்க்க விரும்புகிறேன்.
ஏனென்றால் எஜமான் மறக்கவில்லை.
அது போதும்.
பல ஆண்டுகள் கடந்துவிட்டன. நான் செய்த வேலைகளின் வடிவம் மாறியிருக்கிறது. மனிதர்கள் மாறியிருக்கிறார்கள். சூழ்நிலைகள் மாறியிருக்கின்றன. நானும் மாறியிருக்கிறேன்.
ஆனால் என் வாழ்க்கையின் இறுதிவரை நான் மறக்க விரும்பாத ஒன்று இருக்கிறது:
நான் எஜமான் அல்ல.
நான் வீட்டின் உரிமையாளர் அல்ல.
இந்த வேலை என்னுடையது அல்ல.
இந்த வீடும் என்னுடையது அல்ல.
நான் ஒரு வேலைக்காரன்.
எஜமான் எனக்குக் கொடுத்த வேலையை, அவர் கொடுத்த காலத்திற்குள், அவர் விரும்புகிற விதத்தில் செய்துமுடிப்பதுதான் என் பொறுப்பு.
ஒருநாள் என் பணிவிடை முடியும்.
அன்று என் எஜமானுடைய முகத்திற்கு முன்பாக நிற்கும்போது, நான் செய்த காரியங்களின் பட்டியலைக் கையில் வைத்துக்கொண்டு அவரிடம் எதையும் உரிமைகோர விரும்பவில்லை.
என்னால் உண்மையாகச் சொல்ல முடிந்தால் போதும்:
“நான் செய்யவேண்டிய கடமையை மாத்திரம் செய்தேன்.”
அதுவரை,
எனக்குக் கொடுக்கப்பட்ட பணிவிடை ஓட்டத்தை நான் நிறைவேற்ற வேண்டும்.