Posts by மெர்லின் இராஜேந்திரம்
தேவ அறிவு
"ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன் (யோவா 17:3). நாம் தேவனை அறிய வேண்டும் என்பதே அவர் நம்மோடு இடைப்படுவதின் மேலான நோக்கம். இது மேலோட்டமான ஏட்டறிவல்ல; உள்ளான உற்றறிவு. இதுவே பவுலின் ஆவல் (பிலி. 3:8, 10, 11). இதுவே பரிசுத்தவான்களுக்கான அவருடைய ஜெபம் (எபே. 1:17). மனித குமாரன் என்ற முறையில் இயேசுவினுடைய வாழ்க்கையின் எல்லா விவரங்களுக்கும் இதுவே ஆதாரம்: பேசுவதா, அமைதியாக இருப்பதா? செய்வதா, செய்யாமல் இருப்பதா? போவதா, போகாமல் இருப்பதா? சந்திப்பதா, சந்திக்காமல் இருப்பதா? விட்டுக்கொடுப்பதா, மறுப்பதா? வெளிக்காண்பிப்பதா மறைந்துகொள்வதா? உண்பதா உபவாசிப்பதா? இதில் தேவனை அறிகிறோமா என்பதே தேவ மக்களுடைய வாழ்க்கையின் அடிப்படைச் சட்டமாக இருக்க வேண்டும். ஆராதனைகள், வேதபாடங்கள், சிறப்புக் கூட்டங்கள், மாநாடுகள், ஊழியங்கள் ஆகியவைகள் இருந்தும் தேவனை மிகக் குறைவாக அறிந்த கிறிஸ்தவர்கள் அதிகம். தேவமக்கள் தேவ அறிவில் வளர்கிறார்களா, அவர்கள் குணம் கிறிஸ்துவுக்கேற்றாற்போல் மாறுகிறதா என்பதே நம் பணிவிடையின் மதிப்பைத் தீர்மானிக்கும்.
8
Mar 2025இயேசுவை நோக்கி
இயேசு படகிலிருந்த பேதுருவை "வா" என்று அழைத்தபோது அவன் படகையும், கடலையும், காற்றையும், அலைகளையும், சக பயணிகளையும் ஒரு பொருட்டாகக் கருதாமல், படகை விட்டிறங்கி தன்னை அழைத்த ஆண்டவரைநோக்கித் "தண்ணீரின்மேல் நடந்தான்." சூழ்நிலையைப் பார்த்தவுடன் மூழ்கத் தொடங்கினான். நம் வாழ்க்கையில் சில காரியங்களில், சில நேரங்களில், இயேசுவை நோக்கிப்பார்த்து நேராய் நடக்கிறோம். ஆனால், சூழ்நிலைகளால் மேற்கொள்ளப்பட்டு நாம் மூழ்குகிற தருணங்களே ஏராளம். அவர் "வா" என்று சொன்னபின் தயங்காமல் நடக்க ஆரம்பிக்க வேண்டும். நடக்க ஆரம்பித்தபின், உண்மையிலேயே அவர் வரச் சொன்னாரா என்று சந்தேகித்தால், "ஏன் சந்தேகப்பட்டாய்?" (மத். 14:31) என்பதே ஆண்டவருடைய கேள்வியாக இருக்கும். தன்னையும் தனக்குரிய எல்லாவற்றையும் தயங்காமல் பலிபீடத்தில் கிடத்துவதற்கு ஆயத்தமாயிருக்கிறவன் இயேசுவை நோக்கிப்பார்க்கவும், அவருடைய குரலைத் தெளிவாகக் கேட்கவும், முடியும். அப்போது அவன் சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல் எல்லாவற்றையும் பணயம் வைத்து துணிவோடு தடைகளைத் தாண்டி நடப்பான்.