ஆரம்பமும், முடிவும்
ஒரு மனிதனுடைய ஆரம்பத்தைப் பார்த்து அவனுடைய முடிவை யாரால் கணிக்க முடியும்?
தன் ஓவியங்களை விற்று வாழ்ந்த ஒரு சாதாரண வாலிபனாகிய ஹிட்லர், பின்னாளில் உலகமே நடுங்கும் அளவுக்கு ஒரு கொடூரமான சர்வாதிகாரியாக மாறுவான் என்று யாராவது நினைத்திருப்பார்களா? சில்லறை வியாபாரம் செய்த ஹாரி ட்ரூமன், ஒருநாள் அமெரிக்க அதிபராகி, அவருடைய ஆட்சிக்காலத்தில் ஹிரோஷிமா, நாகசாகிமீது அணுகுண்டுகள் வீசும் அதிகாரத்தின் இடத்தில் அமர்வார் என்று யாராவது நினைத்திருப்பார்களா?
ஆரம்பம் முடிவைச் சொல்வதில்லை.
சவுலின் ஆரம்பத்தைப் பார்க்கிறேன்.
இஸ்ரயேல் கோத்திரங்களிலே சிறியதாகக் கருதப்பட்ட பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவன். அவனே தன்னைப்பற்றி,
“நான் இஸ்ரயேல் கோத்திரங்களிலே சிறியதாகிய பென்யமீன் கோத்திரத்தான் அல்லவா? பென்யமீன் கோத்திரத்து வம்சங்களுக்குள்ளே என் குடும்பம் அற்பமானதல்லவா?” (1 சாமு. 9:21).
சிறிய கோத்திரத்தான்.
அற்பமான குடும்பத்தான்.
வயலில் வேலைசெய்கிறான். மாடுகளைப் பராமரிக்கிறான் (1 சாமு. 11:5). தகப்பனுடைய காணாமற்போன கழுதைகளைத் தேடிச் செல்கிறான். கீழ்ப்படிதலுள்ள மகன். தனக்குக் கொடுக்கப்பட்ட சாதாரண வேலையைச் செய்கிற கடுமையான உழைப்பாளி.
அவனிடம் பெருமையோ, அதிகாரத் தோரணையோ துளிகூட இல்லை. தன்னை உயர்த்திக்கொள்ள முயலவும் இல்லை. அவனை அரசனாக மக்கள்முன் நிறுத்த வேண்டிய நேரம் வந்தபோதுகூட, அவன் பொருட்களின் நடுவே ஒளிந்துகொண்டிருந்தான் (1 சாமு. 10:22).
எவ்வளவு அற்புதமான ஆரம்பம்!
ஆனால் அந்த மனிதனுடைய முடிவு எவ்வளவு துயரமானது!
ஒரு காலத்தில் தன்னைச் சிறியவன் என்று நினைத்தவன், பின்னர் தன் சிங்காசனத்தைப் பாதுகாக்க எதையும் செய்யத் தயாரானான். ஒரு காலத்தில் மறைந்து நின்றவன், பின்னர் தன் பெயரும் பதவியும் அதிகாரமும் நிலைத்திருக்க வேண்டும் என்று போராடினான். ஒரு காலத்தில் தன்னை உயர்த்தத் தயங்கியவன், பின்னர் தேவன் உயர்த்திய தாவீதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் போனான்.
சவுலின் பிரச்சினை அவன் உயர்ந்தது அல்ல.
அவன் உயர்ந்தபோது அவனுடைய இருதயம் மாறியது.
இதை நினைத்து நான் பயப்படுகிறேன்.
சவுலின் வீழ்ச்சியை நினைக்கும்போது, இன்னோர் ஆரம்பமும் முடிவும் என் நினைவுக்கு வருகிறது—லூசிபருடையது.
அவனுடைய ஆரம்பம் தீமையில் இல்லை. தீருவின் ராஜாவைப்பற்றி எசேக்கியேல் 28 பயன்படுத்தும் வார்த்தைகளில், சாத்தானின் வீழ்ச்சியையும் பிரதிபலிப்பதாக நாம் காணும் வார்த்தைகள் வியப்பூட்டுகின்றன:
“நீ சிருஷ்டிக்கப்பட்ட நாள்முதல் உன்னில் அநியாயம் கண்டுபிடிக்கப்பட்டதுவரைக்கும் உன் வழிகளில் குறையற்றிருந்தாய்” (எசே. 28:15).
ஆனால் ஒரு கட்டத்தில் அவனுடைய அழகு அவனுடைய பார்வையைத் தேவனிடமிருந்து தன்மீது திருப்பியது.
“உன் அழகினால் உன் இருதயம் மேட்டிமையாயிற்று” (28:17).
அங்கேதான் வீழ்ச்சி ஆரம்பித்தது.
கொலை, விபசாரம், திருட்டு, மோசடி போன்றவை பெரிய பாவங்கள் என்று நாம் நினைக்கிறோம். அவை கொடிய பாவங்கள்தான். ஆனால் தேவனுடைய பார்வையில் பெருமை எவ்வளவு பயங்கரமான பாவம்! ஏனென்றால் பெருமை ஒரு மனிதனை ஏதோ ஒரு பாவத்தைச் செய்யத் தூண்டுவது மட்டுமல்ல; தேவனுக்குரிய இடத்தில் தன்னை நிறுத்தத் தொடங்குகிறது.
“நான் ஏதோ ஒருவன்.”
இந்த எண்ணத்தை ஒருவன் வெளிப்படையாகச் சொல்லவேண்டியதில்லை. அது அவனுடைய இருதயத்தின் ஆழத்தில் எங்கோ ஒரு மூலையில் அமைதியாகப் பிறக்கும்.
என் திறமை.
என் அறிவு.
என் அனுபவம்.
என் பணிவிடை.
என் சாதனை.
என் செல்வாக்கு.
என் எழுத்து.
என் பாடல்.
தேவன் கொடுத்தவைகளை நான் என்னுடையவைகளாக எண்ண ஆரம்பிக்கும்போது, அவை மெதுவாக என்னை என் கண்களில் பெரியவனாக்கலாம்.
ஆகவேதான் சாமுவேல் சவுலிடம் சொன்ன வார்த்தை என்னைத் துளைக்கிறது:
“நீர் உம்முடைய பார்வைக்குச் சிறியவராயிருந்தபோது…” (1 சாமு. 15:17).
சவுல் சிறியவனாக இருந்தது பிரச்சினையல்ல. அவன் பெரியவனானதும் பிரச்சினையல்ல. பெரிய இடத்திற்கு வந்தபின், அவன் தன் பார்வையில் சிறியவனாக இருந்த அந்த எண்ணத்தை இழந்ததுதான் பிரச்சினை.
அப்படியானால் என் பாதுகாப்பு நான் சிறிய இடத்தில் இருப்பதிலோ, பெரிய இடத்தில் இருப்பதிலோ இல்லை. நான் எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருந்தாலும், என் பார்வையில் நான் சிறியவனாக இருப்பதில்தான் என் பாதுகாப்பு இருக்கிறது.
லூசிபருடைய வீழ்ச்சியும் என்னை எச்சரிக்கிறது. சவுலின் வீழ்ச்சியும் என்னை எச்சரிக்கிறது.
நான் மற்ற பாவங்களிலிருந்து என்னைக் காத்துக்கொள்வது ஒப்பீட்டளவில் ஒருவேளை எளிதாக இருக்கலாம். ஆனால் என் இருதயத்தின் ஆழத்தில், “நான் ஏதோ ஒருவன்” என்ற எண்ணம் வளர்ந்துகொண்டிருந்தால், நான் நினைப்பதைவிட மிகப் பெரிய ஆபத்தில் இருக்கிறேன்.
ஒரு மனிதனுடைய வீழ்ச்சி அவன் கீழே விழும்போது ஆரம்பிப்பதில்லை.
அவன் தன் கண்களில் உயர ஆரம்பிக்கும்போது வீழ்ச்சி ஆரம்பிக்கிறது.
ஒரு பலூனுக்குள் காற்றை அடிக்க அடிக்க அது உப்பிக்கொண்டே போகிறது. பார்ப்பதற்கு அது பெரிதாகிக்கொண்டிருக்கிறது. ஆனால் அந்தப் பெரிதாகுதல் அதன் பலத்தின் அடையாளம் அல்ல; அது வெடிக்கும் நிலையை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது.
மனிதனும் அப்படித்தானோ என்று சில நேரங்களில் நான் நினைக்கிறேன்.
பாராட்டுகள் வர வர, வெற்றிகள் கூடக் கூட, செல்வாக்குப் பெருகப் பெருக, நாம் சொல்வதைக் கேட்கிறவர்கள் அதிகரிக்க அதிகரிக்க, நம்மை அறியாமலேயே உள்ளே ஏதோவொன்று உப்பும். வெளியே நாம் வளர்ந்துகொண்டிருப்பதுபோலத் தெரியும்; உள்ளே நாம் ஆபத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறோம்.
அப்படியானால், நம்மை நேசிக்கிற தேவன் என்ன செய்வார்?
பவுலின் அனுபவம் எனக்கு இங்கே மிகவும் ஆறுதலாக இருக்கிறது. அவருக்குக் கிடைத்த வெளிப்பாடுகளின் மிகுதியினிமித்தம் அவர் தன்னை உயர்த்தாதவாறு, அவருடைய மாம்சத்தில் ஒரு முள் கொடுக்கப்பட்டது என்று அவரே எழுதுகிறார் (2 கொரி. 12:7).
“நான் என்னை உயர்த்தாதபடிக்கு…”
அதை அவர் ஒருமுறை அல்ல, அதே வசனத்தில் இருமுறை சொல்கிறார்.
அப்படியானால் அந்த முள் வெறும் வேதனையா?
இல்லை. அது ஒரு பாதுகாப்பும்கூட.
அது பவுலுக்குப் பிடிக்கவில்லை. அதை நீக்கும்படி மூன்றுமுறை கர்த்தரிடம் வேண்டுகிறார். ஆனால் தேவன் முள்ளை எடுக்கவில்லை; அதற்குப் பதிலாக,
“என் கிருபை உனக்குப்போதும்” என்றார் (2 கொரி. 12:8–9).
இதை நினைக்கும்போது என் வாழ்க்கையில் எனக்குப் பிடிக்காத பல காரியங்களை நான் வேறுவிதமாகப் பார்க்கிறேன்.
சில சூழ்நிலைகள் என்னைத் தாழ்த்தலாம். சில மனிதர்கள் என்னைப் புறக்கணிக்கலாம், அசட்டைசெய்யலாம். சிலர் என்னைத் தவறாகப் புரிந்துகொள்ளலாம். நான் எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைக்காமல் போகலாம். நான் திட்டமிட்ட காரியங்கள் தோல்வியடையலாம். என்னால் மாற்ற முடியாத சில நிகழ்ச்சிகள் என் பலவீனத்தை எனக்கு உணர்த்தலாம். வேறு சில என்னைச் சிறுமைப்படுத்தலாம்.
இவைகளையெல்லாம் தேவன் நேரடியாகச் செய்தார், செய்கிறார் என்று நான் சொல்ல முடியாது. மற்றவர்கள் எனக்குச் செய்யும் தவறுகளையும் அநீதிகளையும் தேவனுடைய செயல் என்று திட்டவட்டமாக அழைக்கவும் முடியாது.
ஆனால் அவைகளைக்கூட தேவன் என் நன்மைக்காகப் பயன்படுத்த முடியும்.
அவைகளை அகற்றும்படி நான் ஜெபித்துக்கொண்டிருக்கும்போதே, தேவன் அவைகளின்வழியாக என்னிடமிருந்து வேறொன்றை அகற்றிக்கொண்டிருக்கலாம்—
என் பெருமையை.
நான் சூழ்நிலையை மாற்றும்படி கேட்கிறேன்;
தேவனோ என்னை மாற்றுகிறார்.
நான் ஒரு மனிதரை என் பாதையிலிருந்து அகற்றும்படி கேட்கிறேன்;
தேவனோ அந்த மனிதரின்வழியாக என்னுள் இருக்கும் ஏதோவொன்றை வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறார்.
ஒரு முள் நீங்கவேண்டும் என்று நான் கேட்கிறேன்;
தேவனோ நான் உப்பி வெடித்துவிடாமல் இருக்குமாறு அந்த முள்ளை அனுமதிக்கிறார்.
இந்த எண்ணம் என்னை மிகவும் தாழ்த்துகிறது.
ஏனென்றால் தேவனுடைய அன்பு எப்போதும் எனக்கு வசதியான சூழ்நிலைகளை உருவாக்குவதில் மட்டும் வெளிப்படுவதில்லை. நான் என்னையே அழித்துக்கொள்ளாதபடி என்னைத் தடுத்து நிறுத்துவதிலும் அவருடைய அன்பு வெளிப்படுகிறது.
ஒரு தகப்பன் தன் பிள்ளையை நேசிப்பதால் எல்லாவற்றையும் அவனுக்குக் கொடுப்பதில்லை. சில கதவுகளை மூடுகிறான். சில நேரங்களில் அவன் ஓடுகிற வேகத்தைக் குறைக்கிறான். ஏனென்றால் பிள்ளை இன்று விரும்புகிறதைவிட, அவன் நாளை என்னவாக இருக்கப்போகிறான் என்பது தகப்பனுக்கு முக்கியம்.
அப்படியே, தேவன் தாம் நேசிக்கிற பிள்ளைகள் பெருமை என்ற பயங்கரமான பாவத்தில் விழுந்துவிடாதபடிக்குச் சூழ்நிலைகளையும், மனிதர்களையும், நிகழ்ச்சிகளையும் பயன்படுத்துகிறார்.
ஆகவே என் வாழ்க்கையில் வரும் ஒவ்வொரு தடையையும் எதிரியாகவும், ஒவ்வோர் அவமானத்தையும் இழப்பாகவும், ஒவ்வொரு முள்ளையும் சாபமாகவும் நான் பார்ப்பதில்லை.
சில முள்ளுகள் என்னைக் காயப்படுத்துவதற்காக அல்ல; என்னைக் காப்பாற்றுவதற்காக அனுமதிக்கப்பட்டிருக்கலாம்.
பலூன் இன்னும் பெரிதாக வேண்டும் என்று விரும்பலாம்.
தேவனோ அது வெடித்துவிடக் கூடாது என்று விரும்புகிறார்.
ஆனால் இங்கே இன்னொரு கேள்வியும் எழுகிறது.
ஒருமுறை இதே கருத்தை ஒரு கூட்டத்தில் நான் பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு விசுவாசி என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்:
“அப்படியானால், நாம் ஒன்றுமே இல்லாதவர்கள் என்பதுபோல நீங்கள் பேசுகிறீர்களே! நம்முடைய பிள்ளைகளுக்கு நாம் அப்படிக் கற்றுக்கொடுத்தால், இந்த உலகம் அவர்களை நசுக்கிவிடாதா? அவர்கள் தங்களைத் தாழ்வாக நினைக்கமாட்டார்களா?”
அந்தக் கேள்வியில் நியாயம் இருக்கிறது.
தாழ்மை என்பது தாழ்வு மனப்பான்மை அல்ல.
“நான் ஒன்றுக்கும் உதவாதவன்” என்று நினைப்பது தாழ்மை அல்ல. என் திறமைகளை மறுப்பதும், தேவன் எனக்குக் கொடுத்தவைகளை மதிக்காமல் இருப்பதும் தாழ்மை அல்ல.
தேவன் என்னைப் படைத்திருக்கிறார். கிறிஸ்து எனக்காகத் தம்மையே கொடுத்திருக்கிறார். எனக்குத் திறமைகளைக் கொடுத்திருக்கிறார். பொறுப்புகளைக் கொடுத்திருக்கிறார். ஆகவே நான் மதிப்பற்றவன் அல்ல.
ஆனால் இங்கே மிக நுட்பமான ஒரு வேறுபாடு இருக்கிறது:
எனக்கு மதிப்பு இருக்கிறது; ஆனால் நான் பெருமைப்படுவதற்கு என்னிடம் ஒன்றுமில்லை.
“உன்னை விசேஷித்தவனாகும்படி செய்கிறவர் யார்? உனக்கு உண்டாயிருக்கிறவைகளில் நீ பெற்றுக்கொள்ளாதது யாது? நீ பெற்றுக்கொண்டவனானால் பெற்றுக்கொள்ளாதவன்போல் ஏன் மேன்மைபாராட்டுகிறாய்?” என்று பவுல் கேட்கிறார் (1 கொரி. 4:7).
இதுதான் என்னைச் சரியான இடத்தில் நிறுத்துகிறது.
நான் என் பிள்ளைகளுக்கோ, பேரப்பிள்ளைகளுக்கோ, “நீ ஒன்றுமில்லை; யார் வேண்டுமானாலும் உன்னை மிதித்துவிட்டுப் போகட்டும்” என்று கற்றுக்கொடுப்பதில்லை. அதே வேளையில், “நீ மிகவும் விசேஷமானவன்; மற்றவர்களைவிட நீ பெரியவன்; உலகம் உன்னை அங்கீகரிக்க வேண்டும்” என்றும் கற்றுக்கொடுப்பதில்லை.
அதற்குப்பதிலாக நான் சொல்ல விரும்புவது:
நீ தேவனால் படைக்கப்பட்டவன்; ஆகவே உனக்கு மதிப்பு இருக்கிறது.
தேவன் உனக்குக் கொடுத்த வரங்களும் திறமைகளும் இருக்கின்றன; ஆகவே அவைகளைத் துணிவோடு பயன்படுத்து.
ஆனால் உன்னிடம் இருப்பதில் நீ பெற்றுக்கொள்ளாதது ஒன்றுமில்லை; ஆகவே பெருமைப்படாதே.
இந்த உணர்வு ஒரு மனிதனை பலவீனமாக்குவதில்லை. மாறாக, அது அவனை ஒரு விசித்திரமான சுதந்திரத்திற்குள் கொண்டுவருகிறது.
என்னை நான் பெரியவனாக நிரூபிக்க வேண்டியதில்லை. மற்றவர்களைவிட உயர்ந்தவன் என்று காட்ட வேண்டியதில்லை. யாராவது என்னைப் பாராட்டினால்தான் எனக்கு மதிப்பு என்று நினைக்க வேண்டியதில்லை. யாராவது என்னை மதிக்காவிட்டால் நான் ஒன்றுமில்லாமல் போய்விடுவதுமில்லை.
என் மதிப்பு தேவனிடமிருந்து வருகிறது; என் பெருமைக்கு இடமில்லை.
இதுதான் நான் கற்றுக்கொண்ட சமநிலை:
தாழ்வு மனப்பான்மை — “நான் மதிப்பற்றவன்.”
பெருமை — “நான் ஏதோ ஒருவன்.”
தாழ்மை — “நான் என்னவாக இருக்கிறேனோ, அது தேவகிருபையினாலே இருக்கிறேன்.”
(1 கொரி. 15:10)
ஆகவே “நான் ஒன்றுமில்லை” என்ற உணர்வு என்னை உலகத்துக்குமுன் கூனிக்குறுகச் செய்வதில்லை. அது தேவனுக்குமுன் என்னைச் சரியான இடத்தில் நிறுத்துகிறது.
மனிதர்களுக்குமுன் நான் தலைநிமிர்ந்து நிற்கிறேன்.
தேவனுக்குமுன் நான் தலைவணங்கி நிற்கிறேன்.
உலகத்திற்குமுன் துணிவு;
தேவனுக்குமுன் தாழ்மை.
இவை ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல.
இப்போது நான் மீண்டும் சவுலிடம் வருகிறேன்.
சவுலைப்பற்றி எழுதுவது எளிது. அவன் செய்த தவறுகளை வரிசைப்படுத்துவதும் எளிது. ஆனால் தேவனுடைய வார்த்தை அவனை ஆராய்வதற்காக மட்டும் எனக்குக் கொடுக்கப்படவில்லை; என்னை ஆராய்வதற்காகவும் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆகவே நான் சவுலைப் பார்க்கும்போது, அவனை மட்டும் பார்க்கவில்லை.
என்னையும் பார்க்கிறேன்.
என் ஆரம்பம் எப்படி இருந்தது?
எதுவும் இல்லாதபோது நான் எப்படி இருந்தேன்? யாருக்கும் என்னைத் தெரியாதபோது நான் எப்படி இருந்தேன்? எனக்குப் பெயரோ, இடமோ, செல்வாக்கோ இல்லாதபோது தேவனை எப்படித் தேடினேன்? சிறிய பொறுப்புகளைக் கொடுத்தபோது எவ்வளவு கவனமாகச் செய்தேன்? யாருடைய பாராட்டும் இல்லாமல் பணிசெய்ய முடிந்ததா?
அப்போது இருந்த அந்த எளிமை இப்போதும் என்னிடம் இருக்கிறதா?
தேவன் கொஞ்சம் உயர்த்தும்போது, மனிதர்கள் மதிக்கத் தொடங்கும்போது, நாம் சொல்வதைக் கேட்க ஆட்கள் இருக்கும்போது, நம்முடைய பெயர் அறியப்படும்போது, நம்முடைய கருத்துக்கு மதிப்பு கிடைக்கும்போது—நம்மை அறியாமலேயே ஏதோ ஒன்று உள்ளே மாறலாம்.
ஆரம்பத்தில் தேவனைப் பற்றிக்கொண்டிருந்த நாம், பின்னர் தேவன் கொடுத்தவைகளைப் பற்றிக்கொள்ள ஆரம்பிக்கலாம்.
பணிவிடையைப் பற்றிக்கொள்ளலாம்.
பதவியைப் பற்றிக்கொள்ளலாம்.
பெயரைப் பற்றிக்கொள்ளலாம்.
மரியாதையைப் பற்றிக்கொள்ளலாம்.
நாம் உருவாக்கியவைகளைப் பற்றிக்கொள்ளலாம்.
ஒரு காலத்தில், “நான் யார்?” என்று கேட்டவன், ஒருநாள், “என் இடத்தை வேறு யாராவது எடுத்துக்கொள்வார்களோ?” என்று பயப்பட ஆரம்பிக்கலாம்.
சவுலின் வாழ்க்கையில் என்னை மிகவும் எச்சரிப்பது அவனுடைய வீழ்ச்சி மட்டுமல்ல.
அவனுடைய ஆரம்பத்திற்கும் முடிவிற்கும் இடையில் ஏற்பட்ட மாற்றம்.
அந்த மாற்றம் ஒரே நாளில் நிகழவில்லை.
ஒரு சிறிய கீழ்ப்படியாமை.
ஒரு சுயநியாயப்படுத்துதல்.
மக்கள் என்ன நினைப்பார்கள் என்ற பயம்.
தன் இடத்தைப் பாதுகாக்கும் முயற்சி.
பொறாமை.
தேவன் சொல்வதைவிடத் தன் தீர்மானத்திற்கு அதிக முக்கியத்துவம்.
இப்படியாக, மெதுவாக, ஆரம்பத்தில் இருந்த சவுல் காணாமல் போனான்.
இதுதான் என்னை இன்னும் அதிகமாகப் பயமுறுத்துகிறது. ஏனென்றால் ஒரு மனிதன் ஒரே நாளில் வேறொரு மனிதனாக மாறுவதில்லை. சிறிய சிறிய மாற்றங்கள் அவனுக்குள்ளே நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. அவனோ அதை உணராமலேயே இருக்கலாம்.
மற்றவர்கள் அதைக் கவனிப்பதற்குமுன்பே அது ஆரம்பித்திருக்கலாம்.
ஒருவேளை நானும் என்னில் ஏற்படும் மாற்றங்களை உடனே கவனிக்காமல் இருக்கலாம்.
ஒரு காலத்தில் என்னை வருத்திய ஒரு காரியம் இப்போது என்னை வருத்தாமல் போகலாம். ஒருகாலத்தில் உடனே மனந்திரும்பச் செய்த ஒன்று இப்போது சாதாரணமாகத் தோன்றலாம். ஒரு காலத்தில் தேவனுடைய உதவியில்லாமல் என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று உணர்ந்த நான், இப்போது என் அனுபவத்தையும் திறமையையும் நம்ப ஆரம்பிக்கலாம். ஒரு காலத்தில் தேவனுக்குக் கொடுத்த மகிமையில் கொஞ்சத்தை, என்னை அறியாமலேயே எனக்காக எடுத்துக்கொள்ள ஆரம்பிக்கலாம்.
இதனால்தான் நல்ல ஆரம்பத்தைவிட நல்ல முடிவை நான் அதிகமாக விரும்புகிறேன்.
ஒரு காலத்தில் நான் எப்படி இருந்தேன் என்பதை நினைத்துப் பெருமைப்படுவதில் பயனில்லை.
நான் எப்படி ஆரம்பித்தேன் என்பது முக்கியம்.
ஆனால் அதைவிட—
இன்று நான் எப்படி இருக்கிறேன்?
நான் எப்படி மாறிக்கொண்டிருக்கிறேன்?
எல்லாவற்றிற்கும்மேலாக, நான் எப்படி முடிக்கப்போகிறேன்?
பவுல் தன் வாழ்க்கையின் இறுதியில்,
“நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்”
என்று சொன்னார் (2 தீமோ. 4:7).
அந்த வார்த்தைகள் என்னை ஈர்க்கின்றன.
அதுவே என் வாஞ்சை.
பெரிதாக ஆரம்பிக்க வேண்டும் என்பதல்ல.
பெரியவனாக வேண்டும் என்பதல்ல.
என் பெயர் அறியப்பட வேண்டும் என்பதல்ல.
மக்கள் என்னை நினைவுகூர வேண்டும் என்பதுமல்ல.
நான் எப்படி முடிக்கிறேன் என்பதுதான் முக்கியம்.
தேவன் என்னை எப்படித் தொடங்கினாரோ, அவரைச் சார்ந்தவனாகவே முடிக்க விரும்புகிறேன்.
ஆரம்பத்தில் இருந்த தாழ்மை முடிவிலும் இருக்க வேண்டும். ஆரம்பத்தில் இருந்த தேவபயம் முடிவிலும் இருக்க வேண்டும். ஆரம்பத்தில் இருந்த கீழ்ப்படிதல் முடிவிலும் இருக்க வேண்டும். ஆரம்பத்தில் இருந்த எளிமை முடிவிலும் இருக்க வேண்டும். ஆரம்பத்தில் இருந்த கிறிஸ்துவின்மேலான அன்பு முடிவில் குறைந்துபோகாமல், இன்னும் ஆழமாகியிருக்க வேண்டும்.
எனவே, தேவன் என் வாழ்க்கையில் அனுமதித்த சில முட்களுக்காகவும் நான் அவருக்கு நன்றி சொல்கிறேன்.
நான் அழுத சில காரியங்களுக்காக.
நான் புரிந்துகொள்ளமுடியாத சில நிகழ்ச்சிகளுக்காக.
என்னைத் தாழ்த்திய, சிறுமைப்படுத்திய சில சூழ்நிலைகளுக்காக.
எனக்குப் பிடிக்காத சில மனிதர்களுக்காக.
திறக்கப்பட வேண்டும் என்று நான் விரும்பியும் திறக்கப்படாத சில கதவுகளுக்காக.
அப்போது அவை எனக்கு வேதனையாகத் தெரிந்தன. ஆனால் அவைகளில் சில, நான் உப்பி வெடித்துவிடாமல் தேவன் வைத்த பாதுகாப்புகளாக இருந்தன.
எந்த முள் என்னை எதிலிருந்து காப்பாற்றியது என்பதை இப்போது நான் முழுமையாக அறியவில்லை.
ஆனால் ஒன்றை மட்டும் அறிகிறேன்:
நல்ல ஆரம்பம் இருப்பதால் நல்ல முடிவு இருக்கும் என்ற எந்த உத்தரவாதமும் இல்லை.
லூசிபருக்கு அற்புதமான ஆரம்பம் இருந்தது.
சவுலுக்கு அற்புதமான ஆரம்பம் இருந்தது.
அவர்களுடைய ஆரம்பத்தையும் முடிவையும் நினைக்கும்போது நான் மற்றவர்களைப் பார்க்க விரும்பவில்லை.
என்னைப் பார்க்க விரும்புகிறேன்.
மற்றவர்களைப் பார்த்து, “அவர் எப்படி மாறிவிட்டார்!” என்று சொல்வதற்குமுன்,
“நான் எப்படி மாறிக்கொண்டிருக்கிறேன்?”
என்று நான் என்னையே கேட்கிறேன்.
இந்தக் கேள்வி இப்போது எனக்கு இன்னும் முக்கியமாகிறது.
என் வயது கூடிக்கொண்டிருக்கிறது. என் வாழ்க்கையின் ஆரம்பத்தைவிட அதன் முடிவுக்கு நான் அருகில் வந்துகொண்டிருக்கிறேன். ஆகவே இப்போது என் முக்கியமான கேள்வி,
“நான் எப்படி ஆரம்பித்தேன்?”
என்பதல்ல.
“நான் எப்படி முடிக்கப்போகிறேன்?”
என் ஆரம்பத்தைப்பற்றி நான் பெருமைப்பட ஒன்றுமில்லை. என் முடிவைக்குறித்தும் என்னால் எந்த உத்தரவாதத்தையும் கொடுக்க முடியாது.
எனக்குத் தேவை தேவனுடைய கிருபை.
ஆரம்பிக்கக் கிருபை தேவைப்பட்டது.
தொடரக் கிருபை தேவைப்படுகிறது.
முடிக்கவும் கிருபையே தேவை.
நான் என்னைப் பிடித்துக்கொண்டு நன்றாக முடிக்க முடியாது.
என்னைப் பிடித்துக்கொண்டிருக்கிற அவருடைய கிருபையால்தான் முடிக்க முடியும்.
ஆகவே என் ஜெபம் இதுதான்:
கர்த்தாவே,
நீர் என்னை உயர்த்தினாலும், என் பார்வையில் நான் சிறியவனாக இருக்க எனக்கு உதவும்.
நீர் என்னைப் பயன்படுத்தினாலும், என்னை நான் ஏதோ ஒருவனாக நினைத்துக்கொள்ளாதபடி காத்துக்கொள்ளும்.
மனிதர்கள் என்னைப் பாராட்டினாலும், அந்தப் பாராட்டு என் இருதயத்தை உப்பச் செய்யாதபடி காத்துக்கொள்ளும்.
என்னைத் தாழ்த்த ஒரு முள் தேவைப்பட்டால், அந்த முள்ளை வெறுக்காமல், அதற்குள் இருக்கும் உம் கிருபையைப் பார்க்க எனக்குக் கற்றுத்தாரும்.
என் பாதையில் வரும் மனிதர்களையும், சூழ்நிலைகளையும், நிகழ்ச்சிகளையும் பயன்படுத்தி, என்னுள் உமக்குப் பிரியமில்லாதவைகளை அகற்றும்.
நான் ஆரம்பித்தபோது இருந்ததைவிட, முடிக்கும்போது இன்னும் அதிகமாக உம்மைச் சார்ந்தவனாக இருக்கச் செய்யும்.
நன்றாக ஆரம்பித்தது என் பெருமையாக இருக்க வேண்டாம்.
நன்றாக முடிப்பதே என் வாஞ்சையாக இருக்கட்டும்.