என் குருட்டுப்புள்ளிகள்
எனக்குத் தெரியாது என்பதே எனக்குத் தெரியாதபோது...
சில நேரங்களில் எனக்குத் தெரியாத காரியங்களை நினைத்தால் எனக்கே ஆச்சரியமாக இருக்கும்.
நான் சிறுவனாக இருந்தபோது முருங்கைக்காய், வெண்டைக்காய், கத்தரிக்காய், சுரைக்காய் — இவைதான் எனக்குத் தெரிந்த காய்கள். கேரட், பீட்ரூட் என்று காய்கள் இருக்கின்றன என்பதுகூட எனக்குத் தெரியாது. எங்கள் ஊர்தான் என் உலகம். அருகில் இருந்த ஒன்றிரண்டு கிராமங்களைத் தவிர வேறு உலகம் எனக்குத் தெரியாது.
சிறுவயதில் அப்படி இருந்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஆனால் பெரியவனான பிறகும்?
திருமணமாகி, இரண்டு பிள்ளைகள் பிறந்து, அவர்கள் பெரியவர்களான பிறகும்கூட எனக்குத் தெரியாத காரியங்கள் நிறைய இருந்தன.
எங்கள் வீட்டில் ஒரு குளிர்சாதனப்பெட்டி இருந்தது. பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான் அதில் freezer என்று ஒரு பகுதி இருக்கிறது என்பதே எனக்குத் தெரிந்தது. ஏன் தெரியுமா? அந்தப் பதினெட்டு ஆண்டுகளில் நான் ஒருமுறைகூட அந்தக் குளிர்சாதனப்பெட்டியைத் திறந்ததில்லை!
இப்போது இன்னொன்று.
நான் பல ஆண்டுகளாக கார் ஓட்டுகிறேன். ஆனால் காரில் blind spots என்று ஒன்று இருக்கிறது என்பது எனக்கு இப்போதுதான் தெரியும்.
இதுதான் என்னைச் சிந்திக்க வைத்தது.
என் blind spots என்னவென்று எனக்குத் தெரியவில்லை என்பது அல்ல பிரச்சினை. அப்படி ஒன்று இருக்கிறது என்பதே எனக்குத் தெரியவில்லை.
நமக்குத் தெரியாதது ஒரு பிரச்சினை. ஆனால் நமக்குத் தெரியவில்லை என்பதே நமக்குத் தெரியாமல் இருப்பது அதைவிடப் பெரிய பிரச்சினை.
தேவனை அறிகிற காரியத்திலும் இப்படித்தானோ?
நாம் பல ஆண்டுகளாகக் கிறிஸ்தவர்களாக இருக்கலாம். வேதாகமத்தை வாசிக்கலாம். ஆராதனைகளுக்குச் செல்லலாம். பிரசங்கங்களைக் கேட்கலாம். வேதபாடங்களில் கலந்துகொள்ளலாம். ஊழியம் செய்யலாம். ஒருவேளை மற்றவர்களுக்குப் போதிக்கவும்கூட செய்யலாம்.
ஆனால் தேவனை எந்த அளவிற்கு அறிந்திருக்கிறோம்?
“ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்” (யோவா. 17:3).
நாம் தேவனை அறிய வேண்டும் என்பதே அவர் நம்மோடு இடைப்படுவதின் மேலான நோக்கம். இது மேலோட்டமான ஏட்டறிவல்ல; உள்ளான உற்றறிவு.
இதுதான் பவுலின் ஏக்கம். எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிய பிறகும் அவர், “அவரை அறிய வேண்டும்” என்று ஏங்கினார் (பிலி. 3:8, 10, 11). பரிசுத்தவான்களுக்காக ஜெபித்தபோதும், தேவனை அறிகிறதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை தேவன் அவர்களுக்குத் தரவேண்டும் என்று ஜெபித்தார் (எபே. 1:17).
இதை நினைக்கும்போது இன்னொரு காரியமும் எனக்குத் தோன்றுகிறது.
மனிதகுமாரன் என்ற முறையில் இயேசுவினுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு காரியத்திற்கும் பிதாவை அறிந்திருந்ததே ஆதாரம்.
பேசுவதா, அமைதியாக இருப்பதா?
செய்வதா, செய்யாமல் இருப்பதா?
போவதா, போகாமல் இருப்பதா?
சந்திப்பதா, சந்திக்காமல் இருப்பதா?
விட்டுக்கொடுப்பதா, மறுப்பதா?
வெளிக்காண்பிப்பதா, மறைந்துகொள்வதா?
உண்பதா, உபவாசிப்பதா?
அவருடைய வாழ்க்கை பிதாவை அறிந்ததிலிருந்து வந்தது.
அப்படியானால் நம் கிறிஸ்தவ வாழ்க்கையிலும் இதுதானே அடிப்படையாக இருக்க வேண்டும்?
ஆராதனைகள் இருக்கலாம். வேதபாடங்கள் இருக்கலாம். சிறப்புக் கூட்டங்கள் இருக்கலாம். மாநாடுகள் இருக்கலாம். ஊழியங்கள் இருக்கலாம். இவையெல்லாம் இருந்தும் தேவனை மிகக் குறைவாக அறிந்தவர்களாக இருக்க முடியாதா?
அப்படியானால் நம் பணிவிடையின் மதிப்பை எதைக்கொண்டு தீர்மானிப்பது?
எத்தனை கூட்டங்கள் நடத்தினோம் என்பதாலா? எத்தனை பேர் வந்தார்கள் என்பதாலா? எவ்வளவு ஊழியம் செய்தோம் என்பதாலா?
அல்ல.
தேவ மக்கள் தேவ அறிவில் வளர்கிறார்களா? அவர்கள் குணம் கிறிஸ்துவுக்கேற்றாற்போல் மாறுகிறதா?
இதுதான் முக்கியம்.
எனக்குத் தெரியாத காய்கள் இருந்தன. என் வீட்டிலேயே இருந்த குளிர்சாதனப்பெட்டிக்குள் என்ன இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. பல ஆண்டுகள் கார் ஓட்டிய பிறகும் குருட்டுப்புள்ளிகள் இருக்கின்றன என்பதே தெரியவில்லை.
இன்னும் எனக்குத் தெரியாதவை எவ்வளவோ இருக்கலாம்.
தேவனை அறிகிற காரியத்திலும் அப்படித்தான்.
எவ்வளவு அறிந்திருக்கிறோம் என்பதை நினைத்துப் பெருமைப்படுவதற்குப் பதிலாக, இன்னும் எவ்வளவு அறியவில்லை என்பதை உணர்ந்தால், பவுலின் அந்த ஆவல் நமக்கும் வரும்:
“அவரை அறிய வேண்டும்.”