Preloader
சாட்சியின் கூடாரம்
4 Sep 2026 : என் பசியும், என் தாகமும் மேலும் வாசிக்க
31 Aug 2026 : அப்பிரயோஜனமான ஊழியன் மேலும் வாசிக்க
26 Aug 2026 : என்னை நடத்தியவர் யார்? நடத்துகிறவர் யார்? மேலும் வாசிக்க
என் பசியும், என் தாகமும்

என் பசியும், என் தாகமும்

“ஓ, தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் தண்ணீர்களண்டைக்கு வாருங்கள்; பணமில்லாதவர்களே, நீங்கள் வந்து, வாங்கிச் சாப்பிடுங்கள்; நீங்கள் வந்து, பணமுமின்றி விலையுமின்றித் திராட்சரசமும் பாலும் கொள்ளுங்கள்.

நீங்கள் அப்பமல்லாததற்காகப் பணத்தையும், திருப்திசெய்யாத பொருளுக்காக உங்கள் பிரயாசத்தையும் செலவழிப்பானேன்? நீங்கள் எனக்குக் கவனமாய்ச் செவிகொடுத்து, நலமானதைச் சாப்பிடுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமா கொழுப்பான பதார்த்தத்தினால் மகிழ்ச்சியாகும்.

உங்கள் செவியைச் சாய்த்து, என்னிடத்தில் வாருங்கள்: கேளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும்.” — ஏசாயா 55:1–3

கடந்த 42 வருடங்களாக நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறேன், நேசிக்கிறேன், சேவிக்கிறேன். என் 71 ஆவது வயதில் இந்த நீண்ட பயணத்தைத் திரும்பிப் பார்க்கிறேன். கிறிஸ்துவை இன்னும் அதிகமாக அறியவேண்டும் என்ற பசியும் தாகமும் எனக்குள் இன்னும் அணையாமல் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது.

ஒரு நல்ல ஆவிக்குரிய புத்தகம் என் கையில் கிடைத்தால், கண்ணில் பட்டால், அதை வாசிக்காமல் என்னால் வேறு வேலை செய்ய முடியாது. “நான் இதுவரை அறியாத கிறிஸ்துவைப்பற்றிய ஏதாவது இதில் இருக்குமா? இதுவரை பார்க்காத ஒரு சத்தியத்தை ஆண்டவர் எனக்குக் காட்டுவாரா?” என்ற ஆவல் எனக்குள் இருக்கும். சில நேரங்களில் ஒரு புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தால், அதை முடிக்கும்வரை மற்ற வேலைகளை ஒதுக்கிவைத்துவிடுவேன்.

அதுபோல, கிறிஸ்துவை உண்மையாக அறிய விரும்புகிற ஒருவர் என்னிடம் வந்தால், அவரோடு மணிக்கணக்காகப் பேசுவதில் எனக்குச் சோர்வு ஏற்பட்டதில்லை. அவர் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் அவரைப் போய்ப் பார்க்கத் தயங்கியதில்லை. என்னிடத்தில் ஆண்டவர் கொடுத்திருக்கிற ஏதாவது அவருக்குப் பயன்படும் என்றால், என்னுடைய நேரத்தையும் வசதியையும் அதற்காகச் செலவிடுவது எனக்குச் சுமையாகத் தெரிந்ததில்லை.

ஆனால் இங்கேதான் என்னுடைய ஒரு குருட்டுப்புள்ளி இருந்திருக்கிறது என்பதை இப்போது புரிந்துகொள்கிறேன்.

என்னுடைய பசியையும் தாகத்தையும் மற்றவர்களிடமும் எதிர்பார்த்தேன்.

என் எதிர்பார்ப்பு

ஞாயிற்றுக்கிழமை கூட்டங்களில் சகோதரன் மில்டன் பேசிய செய்திகளின் உரைகளைக் கேட்டு, எழுதி, தட்டச்சு செய்து, நகலெடுத்து, பலருக்குக் கொடுத்தேன். இந்தப் பணி பல ஆண்டுகள் தொடர்ந்தது. அவர்கள் அவைகளை வாசிப்பார்கள், அதிலுள்ள சத்தியங்களைப் புசிப்பார்கள், அதன்மூலம் கிறிஸ்துவை இன்னும் அதிகமாக அறிந்துகொள்வார்கள் என்று எதிர்பார்த்தேன்.

பின்னர் ஒரு கட்டத்தில் அவைகளை ஒரு புத்தகமாக அச்சிட்டுப் பலருக்கு வழங்கினேன். அவர் பேசிய செய்திகளை pendrive-இல் பதிவேற்றிப் பலரிடம் பகிர்ந்துகொண்டேன். ஓராண்டுக்குமுன் சகோதரன் மில்டனின் செய்திகளை இன்னொரு புத்தகமாக அச்சிட்டோம். இவைகளுக்கு யாரிடமிருந்தும் மறுமொழி வரவில்லை.

இப்போது நாங்கள் எழுதிக்கொண்டிருக்கும் ஒரு புத்தகத்தின் ஒன்றிரண்டு அதிகாரங்களைச் சிலருக்கு அனுப்பினேன். சிலர் அவைகளை உடனே வாசிக்கவில்லை; சிலர் பல வாரங்களுக்குப் பிறகு வாசித்தார்கள்; வாசித்த சிலரிடமிருந்தும் எந்த மறுமொழியும் வரவில்லை. சில வாரங்களுக்குப் பிறகு, “அடுத்த அதிகாரத்தை அனுப்புங்கள்” என்று சிலர் கேட்டார்கள்.

“நன்றாக எழுதியிருக்கிறீர்கள்,” “அருமையாக இருக்கிறது,” “நல்ல செய்தி” என்று யாராவது பாராட்டவேண்டும் என்பதற்காக நாங்கள் எழுதவோ, பேசவோ, அனுப்பவோ இல்லை. நான் எதிர்பார்த்தது வேறு.

ஒரு சிறிய மணல் துகளைத் தண்ணீரில் போட்டால்கூட அதைச் சுற்றி வட்ட அலைகள் உருவாகின்றன. அதுபோல, கிறிஸ்துவைப்பற்றிய ஒரு சத்தியம் ஒருவனுடைய உள்ளத்தைத் தொடும்போது, அது அவனுக்குள் ஏதாவது ஓர் அசைவை ஏற்படுத்தும் என்று நான் எதிர்பார்த்தேன். அவன் அதைப்பற்றி இன்னும் அறிய விரும்பலாம்; ஒரு கேள்வி கேட்கலாம்; அதைப்பற்றிப் பேச விரும்பலாம்; அல்லது அந்தச் சத்தியம் அவனை ஆண்டவரிடம் இன்னும் நெருக்கமாகக் கொண்டுசெல்லலாம்.

என்னுடைய எதிர்பார்ப்பு மிகவும் எளிமையானது: பசியுள்ளவன் உணவு கிடைத்தால் புசிப்பான்; தாகமுள்ளவன் தண்ணீர் கிடைத்தால் குடிப்பான்.

ஆனால் நான் புரிந்துகொள்ளத் தவறிய ஒரு காரியம் இருந்தது. என் பசியின் அளவையும், என் தாகத்தின் அளவையும் மற்றவர்களுடைய பசியையும் தாகத்தையும் அளக்கும் அளவுகோலாக அறியாமலேயே வைத்திருந்தேன்.

ஒரு நல்ல ஆவிக்குரிய புத்தகம் எனக்குக் கிடைத்தால் நான் உடனே வாசிப்பதால், மற்றவர்களும் அப்படியே வாசிப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். ஒரு சத்தியம் என் உள்ளத்தை அசைத்தால், அது மற்றவர்களுடைய உள்ளத்தையும் அசைக்கும் என்று எதிர்பார்த்தேன். கிறிஸ்துவை இன்னும் அறிந்துகொள்ள நான் ஏங்குவதால், மற்றவர்களுக்குள்ளும் அதே ஏக்கம் இருக்கும் என்று எதிர்பார்த்தேன்.

அந்த எதிர்பார்ப்புதான் என்னை ஏமாற்றியது.

பசியையும் தாகத்தையும் என்னால் உருவாக்க முடியாது

அந்த ஏமாற்றங்களின்மூலம் நான் ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொண்டேன்: என்னால் யாருக்குள்ளும் ஆவிக்குரிய பசியையும் தாகத்தையும் உருவாக்க முடியாது.

நான் உணவைக் கொடுக்கலாம்; பசியைக் கொடுக்க முடியாது. தண்ணீரைக் காட்டலாம்; தாகத்தை உருவாக்க முடியாது. கிறிஸ்துவைப்பற்றிப் பேசலாம்; எழுதலாம்; புத்தகங்களைக் கொடுக்கலாம்; செய்திகளை அனுப்பலாம். ஆனால் ஒருவனுக்குள் கிறிஸ்துவை அறியவேண்டும் என்ற வாஞ்சையை என்னால் உண்டாக்க முடியாது.

ஆண்டவராகிய இயேசு சொன்னார்:

“ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன்.” — யோவான் 7:37

இந்த வார்த்தையை இப்போது நான் வேறுவிதமாகப் பார்க்கிறேன். ஆண்டவர் தாகமாயிருக்கிறவனை அழைக்கிறார். “தாகமாயிருந்தால் என்னிடத்தில் வரக்கடவன்.” தாகமுள்ளவன் வருகிறான். தண்ணீரைத் தேடுகிறான். கிடைத்தால் குடிக்கிறான்.

வேதாகமத்தின் கடைசி அதிகாரத்திலும் இதே அழைப்பு வருகிறது:

“தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்.” — வெளிப்படுத்தின விசேஷம் 22:17

ஏசாயாவிலும் இதே அழைப்பைத்தான் பார்க்கிறோம்:

“ஓ, தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் தண்ணீர்களண்டைக்கு வாருங்கள்.”

இங்கே ஒரு காரியம் என்னைத் தொடுகிறது. தண்ணீர் தாகமுள்ளவனைத் தேடிவருவதில்லை; தாகமுள்ளவன் தண்ணீரைத் தேடி வருகிறான்.

அப்படியானால் என் பொறுப்பு என்ன?

கிறிஸ்துவைப் பேசுவது என் பொறுப்பு. நற்செய்தி அறிவிப்பது என் பொறுப்பு. ஆண்டவர் எனக்குக் கொடுத்திருக்கிற சத்தியத்தை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வதும் என் பொறுப்பு. ஆனால் நான் பேசுவதாலும், எழுதுவதாலும், மீண்டும் மீண்டும் நினைவூட்டுவதாலும் ஒருவருக்குள் ஆவிக்குரிய பசியையும் தாகத்தையும் உருவாக்கிவிட முடியும் என்று நினைப்பது தவறு. விதையை விதைக்கலாம்; தண்ணீர் பாய்ச்சலாம்; ஆனால் வளரச்செய்கிறவர் தேவன்.

எனவே நான் அறிவிப்பதை நிறுத்தவில்லை; பகிர்ந்துகொள்வதை நிறுத்தவில்லை. ஆனால் ஒருவருடைய உள்ளத்தில் ஏற்படவேண்டிய விளைவையும் நானே உருவாக்க முயல்வதை நிறுத்துகிறேன்.

பசியுள்ளவன் வந்தால், என்னிடத்தில் உணவு இருந்தால், அதை அவனுக்குக் கொடுக்க வேண்டும். தாகமுள்ளவன் வந்தால், என்னிடத்தில் தண்ணீர் இருந்தால், அதை அவனோடு பகிர்ந்துகொள்ள வேண்டும். கிறிஸ்துவை அறியவேண்டும் என்ற தவிப்போடு ஒருவன் வந்தால், அவனுக்காக என் நேரத்தையும் வசதியையும் செலவிடுவதற்கு நான் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.

பசியை உருவாக்குவது என் வேலை அல்ல; பசியுள்ளவனுக்கு உணவளிப்பதே என் வேலை.

தாகத்தை உருவாக்குவது என் வேலை அல்ல; தாகமுள்ளவனுக்குத் தண்ணீர் கொடுப்பதே என் வேலை.

என் பசி எதன்மேல்?

“ஓ, தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் தண்ணீர்களண்டைக்கு வாருங்கள்; பணமில்லாதவர்களே, நீங்கள் வந்து, வாங்கிச் சாப்பிடுங்கள்” (ஏசாயா 55:1).

தேவன் இஸ்ரயேலர்களுக்கு விண்ணிலிருந்து மன்னாவைக் கொடுத்தார். சங்கீதக்காரன் அதை “வானத்தின் தானியம்,” “தூதர்களின் உணவு” என்று அழைக்கிறார் (சங். 78:24–25). ஆனால் இஸ்ரயேலர்கள் ஒரு கட்டத்தில் அதையே “அற்பமான அப்பம்” என்று வெறுத்தார்கள் (எண். 21:5). எகிப்தில் சாப்பிட்ட மீன்களையும், வெள்ளரிக்காய்களையும், வெங்காயங்களையும், வெள்ளைப்பூண்டுகளையும் நினைத்து ஏங்கினார்கள் (எண். 11:5–6).

அவர்களுக்கு உணவு இல்லாமல் இல்லை. விண்ணிலிருந்து உணவு வந்துகொண்டிருந்தது; ஆனால் அவர்களுடைய பசி வேறொன்றின்மேல் இருந்தது.

இதை வாசிக்கும்போது நான் என்னையே கேட்டுக்கொள்கிறேன்: எனக்குப் பசி இருக்கிறதா என்பது மட்டும் போதுமா? நான் எதற்காகப் பசிக்கிறேன்? எனக்குத் தாகம் இருக்கிறதா என்பது மட்டும் போதுமா? நான் எதற்காகத் தாகப்படுகிறேன்?

விண்ணின் மன்னாவைவிட மண்ணின் உணவு எனக்கு அதிகமாகப் பிடிக்கலாம். தேவன் “நலமானது” என்று சொல்வதைவிட என் நாவுக்கு ருசியானதை நான் விரும்பலாம். அவர் கொடுக்கும் “முத்துக்கள்” எனக்குக் கூழாங்கற்களாகத் தெரியலாம். அவர் விலையேறப்பெற்றதாகக் கருதுவதை நான் அற்பமாகக் கருதலாம். என் இச்சைகளுக்கேற்ற உணவைத் தேடி நான் அலைந்துகொண்டிருக்கலாம்.

அதனால்தான் ஏசாயாவின் கேள்வி என்னைத் துளைக்கிறது:

“நீங்கள் அப்பமல்லாததற்காகப் பணத்தையும், திருப்திசெய்யாத பொருளுக்காக உங்கள் பிரயாசத்தையும் செலவழிப்பானேன்?” (ஏசாயா 55:2).

நான் எதற்காக என் நேரத்தைச் செலவழிக்கிறேன்? எதற்காக என் வளங்களைச் செலவழிக்கிறேன்? எது என் கவனத்தை ஈர்க்கிறது? எதைத் தேடி ஓடுகிறேன்? எது கிடைக்காதபோது எனக்குள் தவிப்பு ஏற்படுகிறது?

இந்தக் கேள்விகளுக்கான என் பதில்கள்தான் என் உண்மையான பசியும் தாகமும் எங்கே இருக்கின்றன என்பதை எனக்குக் காட்டுகின்றன.

தேவன் தருகிற நல்ல, திருப்தியான உணவுக்காக நான் பசியோடு இருக்கிறேனா? அவர் தருகிறதைப் புசித்து வாழ்கிறேனா, வளர்கிறேனா? அல்லது “எனக்கு ஒரு குறைவுமில்லை” என்ற மனநிலைக்கு வந்துவிட்டேனா? அப்படியானால், என் ஆவிக்குரிய பசியையும் தாகத்தையும் இழந்துவிடுகிற ஆபத்து இருக்கிறது.

ஆகவே இப்போது மற்றவர்களிடம், “உங்களுக்கு ஏன் பசியில்லை?” என்று கேட்பதற்குமுன், என்னையே நான் கேட்க விரும்புகிறேன்:

எனக்குப் பசிக்கிறதா?
எனக்குத் தாகமாயிருக்கிறதா?
நான் எதற்காகப் பசிக்கிறேன்?
நான் எதற்காகத் தாகப்படுகிறேன்?

எனக்கு முத்து; இன்னொருவருக்குக் கூழாங்கல்

நாங்கள் எழுதுகிறவைகளும், பகிர்ந்துகொள்கிற செய்திகளும் என்னைப் பொறுத்தவரை முத்துக்கள். ஆனால், அவைகளில் குறைகளே இல்லை என்றோ, நாங்கள் எழுதுகிறவைகள்தான், பேசுகிறவைகள்தான் உயர்ந்த சத்தியங்கள் என்றோ நான் சொல்லவில்லை. ஆனால் நாங்கள் கிறிஸ்துவைத் தேடியதில், அவருடைய வார்த்தையை ஆராய்ந்ததில், பல ஆண்டுகளாக அவரோடு நடந்ததில் பெற்றுக்கொண்ட சில காரியங்கள் எனக்கு விலையேறப்பெற்றவை. அதனால் அவைகளை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

ஆனால் எனக்கு முத்தாகத் தெரிவது இன்னொருவருக்குக் கூழாங்கல்லாகத் தெரியலாம்.

இப்போது அதை நான் மறுப்பதில்லை. “இது முத்து; இதன் மதிப்பை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்று யாரிடமும் நிரூபிக்க முயல்வதில்லை.

ஒருவேளை அவர்களுக்குத் தேவையான, போதுமான உணவு அவர்களிடம் ஏற்கெனவே இருக்கலாம். அல்லது அவர்களுக்கு இந்த உணவின் சுவை பிடிக்காமல் இருக்கலாம். அல்லது இப்போது அவர்களுக்குப் பசி இல்லாமல் இருக்கலாம்.

நான் பகிர்ந்துகொள்கிற ஒன்றை ஒருவர் வாசிக்காமல் இருக்கலாம்; அல்லது வாசித்தபிறகும் அதில் அவருக்கு ஆர்வம் ஏற்படாமல் இருக்கலாம். அதற்காக அவரைத் தொடர்ந்து வற்புறுத்தவோ, மீண்டும் மீண்டும் அனுப்பி நினைவூட்டிக்கொண்டிருக்கவோ தேவையில்லை. நான் பகிர்ந்துகொள்ள வேண்டியதைப் பகிர்ந்துகொண்டேன். அதற்குப்பிறகு அது அவருக்குள் என்ன செய்கிறது என்பதை நான் தீர்மானிக்க முடியாது.

இதில் கோபமோ, தண்டிக்கும் மனநிலையோ இருக்கவேண்டியதில்லை. “நான் கொடுத்ததை நீங்கள் மதிக்கவில்லை; இனிமேல் உங்களுக்குக் கொடுக்கமாட்டேன்” என்ற மனநிலையும் அல்ல.

நான் கற்றுக்கொண்டிருப்பது மிகவும் எளிமையானது: கொடுக்கப்பட்ட உணவு புசிக்கப்படாமல் இருக்கும்போது, மேலும் மேலும் உணவை அங்கே குவித்துக்கொண்டிருக்க வேண்டியதில்லை.

ஒருநாள் அவருக்குள் பசி ஏற்பட்டு அவரே தேடினால், நான் கொடுக்கத் தயாராக இருப்பேன். ஒருநாள் தாகம் ஏற்பட்டு அவரே வந்தால், என்னிடத்தில் இருப்பதைப் பகிர்ந்துகொள்ளத் தயாராக இருப்பேன். அதற்காக எவ்வளவு நேரம் செலவிட வேண்டியிருந்தாலும், எவ்வளவு தொலைவு செல்ல வேண்டியிருந்தாலும், அது எனக்குச் சுமையாக இருக்காது.

இப்போது நான் கற்றுக்கொண்டிருப்பது இதுதான்: நான் கொடுப்பதை நிறுத்தவில்லை; திணிப்பதை நிறுத்துகிறேன். பசியுள்ள இடத்தில் உணவைத் தாராளமாகக் கொடுக்க விரும்புகிறேன்; தாகமுள்ள இடத்தில் தண்ணீரைத் தாராளமாகப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஆனால் ஒருவர் நான் கொடுப்பதை விரும்பவில்லை என்பதை உணரும்போது, அவருக்குள் பசியை உருவாக்குவதற்காக மீண்டும் மீண்டும் கொடுத்துக்கொண்டிருப்பதை நிறுத்துகிறேன்.

பசியை உருவாக்குவது என் பொறுப்பு அல்ல. தாகத்தை உண்டாக்குவது என் பொறுப்பு அல்ல. மற்றவர்களுடைய பசியை என் பசியால் அளப்பதும் என் பொறுப்பு அல்ல. ஆனால் எங்கே பசியையும் தாகத்தையும் காண்கிறேனோ, அங்கே ஆண்டவர் எனக்குக் கொடுத்திருக்கிறதைத் தாராளமாகக் கொடுப்பது என் பொறுப்பு.

எனக்கு முத்தாக இருப்பதை எல்லாரும் முத்தாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற எதிர்பார்ப்பிலிருந்தும் என்னை விடுவித்துக்கொள்கிறேன்.

என் பசியும், என் தாகமும்

இந்த நீண்ட பயணத்தில் நான் கற்றுக்கொண்ட பாடம் மற்றவர்களுடைய பசியையும் தாகத்தையும் அளப்பது அல்ல. என் பசியையும் என் தாகத்தையும் காத்துக்கொள்வதுதான்.

“அவர் ஏன் வாசிக்கவில்லை? இவர் ஏன் ஆர்வம் காட்டவில்லை? இவருக்கு ஏன் கிறிஸ்துவைப்பற்றி இன்னும் அறியவேண்டும் என்ற தவிப்பு இல்லை?” என்று மற்றவர்களைப் பார்த்துக்கொண்டிருப்பதைவிட, நான் என்னையே பார்த்துக்கொள்ள வேண்டும்.

42 வருடங்களுக்கு முன்பு கிறிஸ்துவை அறிந்தபோது எனக்குள் இருந்த அந்தப் பசி இன்றும் இருக்கிறதா? அவரைப்பற்றி இன்னும் அறியவேண்டும் என்ற ஏக்கம் இருக்கிறதா? நான் இதுவரை பார்த்திராத கிறிஸ்துவின் மகிமையை இன்னும் பார்க்கவேண்டும் என்ற தவிப்பு இருக்கிறதா? அவருடைய வார்த்தையை வாசிக்கும்போது, “ஆண்டவரே, இன்று உம்மைப்பற்றி நான் இதுவரை அறியாத ஒன்றை எனக்குக் காட்டும்” என்ற எதிர்பார்ப்பு இருக்கிறதா?

என் 71 ஆவது வயதில் ஆண்டவரிடம் நான் கேட்பது இதுதான்: ஆண்டவரே, மற்றவர்களுடைய பசியை அளந்துகொண்டிருக்காமல், என் பசியைக் காத்துக்கொள்ள எனக்கு உதவும். மற்றவர்களுடைய தாகத்தை ஆராய்ந்துகொண்டிருக்காமல், என் தாகம் வற்றிப்போகாமல் காத்துக்கொள்ளும்.

நான் கிறிஸ்துவை அறிந்துவிட்டேன் என்று ஒருநாளும் திருப்தியடையாமல், அவரை இன்னும் அறியவேண்டும்; இன்னும் பார்க்கவேண்டும்; இன்னும் அனுபவிக்கவேண்டும் என்ற பசியும் தாகமும் என் கடைசி மூச்சுவரை எனக்குள் அணையாமல் எரிந்துகொண்டிருக்கட்டும்.

“உங்கள் செவியைச் சாய்த்து, என்னிடத்தில் வாருங்கள்: கேளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும்.” — ஏசாயா 55:3

ஆண்டவரே, என் பசியையும் என் தாகத்தையும் காத்துக்கொள்ளும்.


வகை: ஊழியம்
4 செப்டம்பர் 2026
மெர்லின் இராஜேந்திரம்

மெர்லின் இராஜேந்திரம்

ஒரு சிறிய கைகாட்டி

எழுத்தின் வழியே எழும் சில அதிர்வலைகள்...

அதிர்வலைகள்