Preloader
சாட்சியின் கூடாரம்
15 Oct 2026 : என் உறவுகள் மேலும் வாசிக்க
3 Oct 2026 : ஆரம்பமும், முடிவும் மேலும் வாசிக்க
21 Sep 2026 : வனாந்தர வளங்கள் மேலும் வாசிக்க
என் கண் — நல்ல கண்ணா, கெட்ட கண்ணா?

என் கண் — நல்ல கண்ணா, கெட்ட கண்ணா?

“கண் சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும். உன் கண் கெட்டதாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும்; இப்படி உன்னிலுள்ள வெளிச்சம் இருளாயிருந்தால், அவ்விருள் எவ்வளவு அதிகமாயிருக்கும்!” — மத்தேயு 6:22–23

இந்த வசனங்களை நான் பலமுறை வாசித்திருக்கிறேன். ஆனால் இவை ஏன் இந்த இடத்தில் வருகின்றன என்று புரியாமல் குழம்பியிருக்கிறேன். எவ்வளவோ முயன்றும் குழப்பம் தீரவில்லை.

இதற்கு முந்தைய வசனங்களில் இயேசு பொக்கிஷங்களைப்பற்றிப் பேசுகிறார்.

“பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டாம்... பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்.” — மத்தேயு 6:19–20

இதற்குப் பிந்தைய வசனத்தில் இரண்டு எஜமான்களைப்பற்றிப் பேசுகிறார்.

“இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்ய ஒருவனாலும் கூடாது... தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது.” — மத்தேயு 6:24

இரண்டுக்கும் நடுவில் கண்ணைப்பற்றியும் வெளிச்சத்தைப்பற்றியும் ஏன் பேசவேண்டும்?

22–23ஆம் வசனங்களை இந்தப் பகுதியிலிருந்து நீக்கிவிட்டுப் பார்த்தால், கருத்து நேராகத் தொடர்வதுபோல் தோன்றுகிறது: பூமியில் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்காதீர்கள்; பரலோகத்தில் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்; தேவனுக்கும் (பரலோகப் பொக்கிஷம்) உலகப்பொருளுக்கும் (பூமியின் பொக்கிஷம்) ஒரே நேரத்தில் ஊழியஞ்செய்ய முடியாது. கருத்து தடைபடாமல் தொடர்கிறது. எந்தத் தொய்வும் இல்லை.

ஆனால் இயேசு நடுவில் கண்ணைக் கொண்டுவருகிறார். இதன் பொருளை அறிந்தபோது, இதன் ஆழம் என்னைத் தாக்கியது.

ஏனென்றால், என் பொக்கிஷம் எங்கே இருக்கிறது என்பதற்கும், என் கண்கள் எதைப் பொக்கிஷமாகக் காண்கின்றன என்பதற்கும் ஆழமான தொடர்பு இருக்கிறது.

வன்கண்

இதைப் புரிந்துகொள்ள மத்தேயு 20:15 எனக்கு உதவியது.

ஒரு திராட்சைத்தோட்டத்தின் எஜமான் அதிகாலையிலே சில வேலையாட்களை வேலைக்கு அமர்த்துகிறார். சிலர் நாள் முழுவதும் வேலை செய்கிறார்கள். சிலர் ஒன்பது மணி நேரம், வேறு சிலர் ஆறு மணி நேரம், இன்னும் சிலர் மூன்று மணி நேரம் வேலை செய்கிறார்கள். கடைசியாக வந்த சிலர் ஒரேவொரு மணி நேரம் மட்டுமே வேலை செய்கிறார்கள்.

மாலையில் கூலி கொடுக்கும்போது, கடைசியாக வந்தவர்களுக்கும் எஜமான் தாராளமாக ஒரு வெள்ளிக்காசு கொடுக்கிறார். முதலில் வந்தவர்களுக்கும் அவர் பேசியபடியே ஒரு வெள்ளிக்காசு கொடுக்கிறார்.

அப்போது முதலில் வந்தவர்கள் முறுமுறுக்கிறார்கள்:

“பிந்திவந்தவர்களாகிய இவர்கள் ஒரு மணி நேரமாத்திரம் வேலை செய்தார்கள்; பகலின் கஷ்டத்தையும் வெயிலின் உஷ்ணத்தையும் சகித்த எங்களுக்கு இவர்களைச் சமமாக்கினீரே!”

அதற்கு எஜமான்,

“சிநேகிதனே, நான் உனக்கு அநியாயஞ்செய்யவில்லை... என்னுடையதை என் இஷ்டப்படிச் செய்ய எனக்கு அதிகாரமில்லையா? நான் தயாளனாயிருக்கிறபடியால், நீ வன்கண்ணனாயிருக்கலாமா?” என்று கேட்கிறார்.

இந்தக் கேள்வி என்னைத் தடுத்துநிறுத்தியது. இந்தக் கேள்வியில் உள்ள வன்கண் என்ற வார்த்தை என்னைச் சம்மட்டியால் அடித்ததுபோல் இருந்தது.

அந்த வேலையாட்களின் பிரச்சினை அவர்களுக்குக் கூலி கிடைக்கவில்லை என்பதல்ல. அவர்களுக்குப் பேசிய கூலி முழுவதும் கிடைத்தது. எஜமானுடைய தாராளகுணத்தின் அழகை அவர்களுடைய கண்களால் காணமுடியவில்லை என்பதுதான் அவர்களுடைய பிரச்சினை.

ஒரு மணி நேரம் மட்டுமே வேலை செய்த ஒருவனுக்கு ஒரு நாள் கூலி கிடைத்திருக்கிறது. அதைக் கண்டு அவர்கள் மகிழ்ந்திருக்கலாம். எஜமானுடைய தாராளகுணத்தைக் கண்டு வியந்திருக்கலாம். எதிர்பாராத கிருபையைப் பெற்ற அந்த மனிதனோடு சேர்ந்து சந்தோஷப்பட்டிருக்கலாம்.

ஆனால் அவர்களுடைய கண்கள் அப்படிப் பார்க்கவில்லை.

தேவ கிருபையின் அழகைக் காணமுடியாத கண் வன்கண்.

தேவனுடைய தாராளகுணத்தின் மிளிர்வைக் காணமுடியாத கண் வன்கண்.

பிறருக்குக் கிடைக்கும் எதிர்பாராத ஆசீர்வாதத்தைக் கண்டு மகிழமுடியாத கண் வன்கண்.

உண்மையாகவே எது அழகானது, எது பிரகாசமானது, எது விலையேறப்பெற்றது, எது மதிப்புடையது, எது தேவனைப்போன்றது என்பதைக் காணமுடியாத கண் வன்கண்.

எது பரத்துக்குரியது, எது நித்தியத்துக்குரியது, எது ஆவிக்குரியது, எது நிரந்தரமானது என்று பார்க்கமுடியாத கண் வன்கண்.

என் கண்களுக்கு எது விலையேறப்பெற்றது?

இதைப் பார்த்தபின் மத்தேயு 6ஐ நான் வேறுவிதமாக வாசித்தேன்.

உலகத்தின் கண்களுக்கு பணம் பிரகாசமாகத் தெரிகிறது. சொத்து விலையேறப்பெற்றதாகத் தெரிகிறது. புகழ் பெரிதாகத் தெரிகிறது. பதவி உயர்வாகத் தெரிகிறது. செல்வாக்கு பலமாகத் தெரிகிறது. வசதி ஆசீர்வாதமாகத் தெரிகிறது. பாதுகாப்பு நம்பிக்கைக்குரியதாகத் தெரிகிறது.

இவை எதுவுமே தங்களளவில் தவறானவை அல்ல. பணம் தேவை; வீடும் நிலமும் நல்லவை; பிள்ளைகளுடைய எதிர்காலத்தைக் கவனிப்பது பொறுப்பு; நாளைக்காகச் சேமிப்பதும் தவறல்ல. பிரச்சினை அவைகளில் இல்லை; அவைகளைப் பார்க்கும் என் கண்ணில்தான் இருக்கிறது.

தற்காலிகமானது நிரந்தரமானதைவிட விலையேறப்பெற்றதாகத் தெரியும்போது என் கண் ஏமாந்துவிட்டது. பூமிக்குரியது பரத்துக்குரியதைவிடப் பெரிதாகத் தெரியும்போது என் கண் ஏமாந்துவிட்டது. கண்ணுக்குத் தெரிகிறவை கண்ணுக்குத் தெரியாதவைகளைவிட மெய்யானவையாகத் தெரியும்போது என் கண் ஏமாந்துவிட்டது. பணம் தேவனுடைய கிருபையைவிடப் பிரகாசமாகவும், சொத்து தேவனுடைய சாயலைவிட விலையேறப்பெற்றதாகவும், உலகத்தின் மகிமை கிறிஸ்துவின் குணாதிசயத்தைவிட விரும்பத்தக்கதாகவும் தெரியும்போது — என் கண் கெட்டுப்போய்விட்டது.

சாத்தானும் இயேசுவுக்கு “உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும்” காட்டினான் (மத். 4:8). அவன் அசிங்கமான ஒன்றைக் காட்டவில்லை; மகிமையைக் காட்டினான். ஆனால் அது எந்த மகிமைக்கு முன்னால் ஒன்றுமில்லாத மகிமை என்பதை இயேசுவின் கண்கள் அறிந்திருந்தன.

அதுதான் நல்ல கண்ணின் அடையாளம் என்று எனக்குத் தோன்றுகிறது. அது உலகத்தில் எதற்கும் மதிப்பில்லை என்று சொல்வதில்லை. ஒவ்வொன்றையும் அதற்குரிய மதிப்பில் பார்க்கிறது. பூமிக்குரியதை பூமிக்குரியதாகவும், பரத்துக்குரியதை பரத்துக்குரியதாகவும் பார்க்கிறது. தற்காலிகமானதைத் தற்காலிகமானதாகவும், நித்தியமானதை நித்தியமானதாகவும் பார்க்கிறது.

ஆனால் தேவனுடைய கண்களுக்கு விலையேறப்பெற்றவை வேறு.

கிருபை, தயவு, தாராளகுணம், தேவசாயல், கிறிஸ்துவின் குணாதிசயம், பிறருடைய நன்மை — இவைகளின் மதிப்பைக் காணக்கூடிய கண்தான் நல்ல கண்.

இதை எழுதும்போது என் வாழ்க்கையின் சில நிகழ்வுகள் என் நினைவுக்கு வருகின்றன.

அப்போது என் கண்களுக்கு எது பொக்கிஷமாகத் தெரிந்தது என்பதை இன்று திரும்பிப் பார்க்கிறேன்.

வீடு மதிப்புடையதுதான். நிலம் மதிப்புடையதுதான். என் பிள்ளைகள் ஒரு நல்ல பள்ளியில் படிப்பதும் மதிப்புடையதுதான். என் ஊரும், உறவுகளும் மதிப்புடையவைதான். வங்கியில் கொஞ்சம் பணம் சேர்ப்பதும் மதிப்புடையதுதான்.

ஆனால் அந்தக் காலத்தில் என் கண்களுக்கு இவைகளைவிட வேறு சில காரியங்கள் அதிக மதிப்புடையவைகளாகத் தெரிந்தன.

வீட்டை இழந்தது இழப்பாகத் தெரியவில்லை. நிலத்தைக் கொடுத்தது நட்டமாகத் தெரியவில்லை. என் சொந்தப் பிள்ளைகளுக்குக் கிடைக்கக்கூடிய சில கல்வி வசதிகளைவிட, தேவனுடைய பிள்ளைகள் உயர்கல்வி பெற்று அவர்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வாய்ப்பு விலையேறப்பெற்றதாகத் தெரிந்தது.

அன்று என் கண்கள் அப்படிப் பார்த்தன.

ஆனால் அந்த நினைவுகளோடு நான் திருப்தியடைந்துவிட முடியாது.

இன்று என் கண்கள் எப்படிப் பார்க்கின்றன?

இதுதான் இன்று என்னை அதிகமாகச் சோதிக்கும் கேள்வி.

அன்று அப்படிப் பார்த்த என் கண்கள் இன்று எப்படிப் பார்க்கின்றன?

நேற்றைய பார்வை இன்றைய பார்வைக்கு உத்தரவாதமல்ல.

வயது கூடும்போது பாதுகாப்பு முக்கியமாகத் தெரிகிறதோ! இழப்பதற்குப் பயம் வருகிறதோ! கையில் இருப்பதை இன்னும் இறுக்கமாகப் பிடித்துக்கொள்ள மனம் விரும்புகிறதோ! ஒருகாலத்தில் எளிதாக விட்டுக்கொடுத்ததை இன்று விட்டுக்கொடுக்கத் தயக்கம் வருகிறதோ!

ஒருகாலத்தில் மனிதர்களைச் செல்வங்களைவிட விலையேறப்பெற்றவர்களாகக் கண்ட என் கண்கள், இன்று செல்வங்களை மனிதர்களைவிட விலையேறப்பெற்றவைகளாகக் காணத் தொடங்குகின்றனவா?

ஒருகாலத்தில் பிறருடைய நன்மையில் மகிழ்ந்த என் கண்கள், இன்று பிறருக்குக் கிடைப்பதை என்னோடு ஒப்பிட்டுப் பார்க்கின்றனவா?

ஒருகாலத்தில் தேவனுடைய கிருபையையும் தாராளகுணத்தையும் அழகாகக் கண்ட என் கண்கள், இன்று உலகத்தின் மின்னொளியால் கவரப்படுகின்றனவா?

இந்தக் கேள்விகளுக்கு நான் நேற்று கொடுத்த பதிலைக்கொண்டு இன்று வாழ முடியாது.

வெளிச்சம் என்று நான் நினைப்பதே இருளாக இருந்தால்?

இயேசுவின் அடுத்த வார்த்தை இன்னும் பயங்கரமானது:

“உன்னிலுள்ள வெளிச்சம் இருளாயிருந்தால், அவ்விருள் எவ்வளவு அதிகமாயிருக்கும்!”

என் கண்கள் காரியங்களை தேவன் பார்க்கிறபடி பார்க்கின்றன என்றால், நான் வெளிச்சத்தால் நிறைந்திருக்கிறேன். ஆனால் என் கண்கள் அப்படிப் பார்க்கவில்லை என்றால், இந்த உலகத்தின் காட்சிகள், கவர்ச்சிகள், பகட்டு, மின்னொளி, தோல், தசை, புகழ், செல்வம் ஆகியவற்றில் நான் காண்பதாக நினைக்கும் வெளிச்சம்கூட இருளாக இருக்கலாம்.

இருளில் இருப்பதைவிட, இருளையே வெளிச்சம் என்று நினைத்துக்கொண்டிருப்பது ஆபத்தானது.

அதன்பின் இயேசு சொல்வது இயல்பாக வருகிறது:

“தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது.”

என் கண்கள் எதை விலையேறப்பெற்றதாகக் காண்கின்றனவோ, அதை நான் பொக்கிஷமாகக் கருதுகிறேன். என் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ, அங்கே என் இருதயமும் இருக்கிறது. என் இருதயம் எதனோடு கட்டப்பட்டிருக்கிறதோ, இறுதியில் அதற்கே நான் ஊழியம் செய்யத் தொடங்குகிறேன்.

அதனால்தான் பொக்கிஷத்திற்கும் எஜமானுக்கும் நடுவில் கண் இருக்கிறது.

என் கண்களின் பொக்கிஷம் என்ன?

இப்போது நான் என்னையே கேட்கிறேன்:

என் கண்களுக்கு இன்று எது அழகாகத் தெரிகிறது? எது விலையேறப்பெற்றதாகத் தெரிகிறது?

எதை இழந்துவிடக்கூடாது என்று நான் பயப்படுகிறேன்?

பிறருக்குக் கிடைக்கும் தேவகிருபையைக் கண்டு நான் மகிழ்கிறேனா?

கிறிஸ்துவின் குணாதிசயம் உலகத்தின் மகிமையைவிட எனக்கு விலையேறப்பெற்றதாகத் தெரிகிறதா?

நான் ஒருகாலத்தில் எதை விட்டுக்கொடுத்தேன் என்பது இன்று முக்கியமான கேள்வியல்ல.

இன்று என் கண்கள் எதைப் பொக்கிஷமாகக் காண்கின்றன?

ஆண்டவரே, உலகத்தின் மின்னொளியை வெளிச்சம் என்று நினைத்து என் கண்கள் ஏமாந்துவிடாதபடி என்னைக் காத்துக்கொள்ளும். நீர் விலையேறப்பெற்றதாகக் காண்பதை நானும் விலையேறப்பெற்றதாகக் காணவும், நீர் அழகாகக் காண்பதை நானும் அழகாகக் காணவும், நீர் மகிமையாகக் காண்பதை நானும் மகிமையாகக் காணவும் என் கண்களைத் தெளிவாக்கும்.

என் கண்களின் பொக்கிஷம், உம்முடைய கண்களின் பொக்கிஷமாக இருக்கட்டும்.


15 செப்டம்பர் 2026
மெர்லின் இராஜேந்திரம்

மெர்லின் இராஜேந்திரம்

ஒரு சிறிய கைகாட்டி

எழுத்தின் வழியே எழும் சில அதிர்வலைகள்...

அதிர்வலைகள்