Preloader
சாட்சியின் கூடாரம்
15 Oct 2026 : என் உறவுகள் மேலும் வாசிக்க
3 Oct 2026 : ஆரம்பமும், முடிவும் மேலும் வாசிக்க
21 Sep 2026 : வனாந்தர வளங்கள் மேலும் வாசிக்க
என் உறவுகள்

என் உறவுகள்

எனக்கு உறவுகள் பிடிக்கும். உறவுகளை நான் அதிகமாக நேசிக்கிறேன். எந்த உறவையும் இழக்கக்கூடாது என்று நினைப்பவன் நான். ஒருவரோடு பழக ஆரம்பித்துவிட்டால், அந்த உறவு தொடர்ந்து நிலைக்க வேண்டும் என்பதும், ஆண்டுகள் கடந்தாலும், இடங்களும் வாழ்க்கைச் சூழ்நிலைகளும் மாறினாலும், உறவுகள் மாறாமல் இருக்க வேண்டும் என்பதும் என் நெஞ்சின் வாஞ்சை.

உறவுகள் வெறும் அறிமுகங்களாகவோ, அவ்வப்போது நலம் விசாரிக்கும் தொடர்புகளாகவோ மட்டும் இல்லாமல், உறவுகளால் வாழ்க்கை வளம்பெற  வேண்டும்; அவை ஒருவருக்கொருவர் ஆறுதலாகவும், ஆதரவாகவும், உறுதுணையாகவும், பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

ஆனால் என் வாழ்க்கையில் எல்லா உறவுகளும் அப்படி நிலைக்கவில்லை.

சில உறவுகள் பாதியிலேயே நின்றுபோயின. சில உறவுகள் தளர்ந்துபோயின. சில உறவுகள் முறிந்துபோயின. இன்னும் சில உறவுகள் எப்போது, எப்படி, ஏன் தொலைந்துபோயின என்றுகூட எனக்குத் தெரியாது.

அவை அனைத்தும் பகையினாலோ, மனக்கசப்பினாலோ முடிந்துபோன உறவுகள் அல்ல. சில உறவுகள் எந்தச் சண்டையும் இல்லாமல், எந்தப் பிரிவுபசாரமும் இல்லாமல், அமைதியாகத் தொலைந்துபோயின.

என் 42 ஆண்டுகாலக் கிறிஸ்தவ வாழ்க்கையில், நான் கிறிஸ்துவுக்குள் பெற்று வளர்த்த ஆவிக்குரிய மக்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களோடு நீண்ட காலம் பயணித்திருக்கிறேன். அவர்களுடைய இம்மைக்குரிய தேவைகளிலும் ஆவிக்குரிய வளர்ச்சியிலும் அக்கறை கொண்டிருக்கிறேன். அவர்களுடைய பிரச்சினைகளிலும் நெருக்கடிகளிலும் உடன் இருந்திருக்கிறேன். தேவன் எனக்குத் தந்த வளங்களை அவர்களோடு மனமுவந்து பகிர்ந்துகொண்டிருக்கிறேன்.

ஆனால் இன்று அவர்களோடு எனக்குத் தொடர்பில்லை.

உறவுகளை நேசிக்கும் ஒருவனுக்கு இது வலிக்கிறது. ஆனால் இந்த அனுபவங்களின் வழியாகக் கர்த்தர் எனக்கு உறவுகளைப்பற்றி மட்டுமல்ல, என்னைப்பற்றியும் பல உண்மைகளைக் கற்றுக்கொடுத்திருக்கிறார்.

1. வாழ்க்கை மாறுகிறது; உறவுகளும் மாறுகின்றன

நான் என் வாழ்க்கையில் நெடுந்தூரம் வந்துவிட்டேன். இன்னும் கடக்க வேண்டிய தூரம் கொஞ்சம்தான். ஆனால் நான் கிறிஸ்துவுக்குள் பெற்று வளர்த்தவர்கள் தங்கள் வாழ்க்கையில் இன்னும் கடக்க வேண்டிய தூரம் அதிகம். சுமக்க வேண்டிய பாரங்களும் அதிகம்.

குடும்பம், பிள்ளைகள், படிப்பு, வேலை, திருமணம், வீடு, பொருளாதாரத் தேவைகள், போக்குவரத்து, உடல்நலம், எதிர்காலத்தைப்பற்றிய கவலைகள் என்று எத்தனையோ பொறுப்புகள்!

எனக்கு அப்படிப்பட்ட அழுத்தங்களோ, பிரச்சினைகளோ அதிகம் இல்லை. எனவே, அவர்களுடைய நிலையை நான் நன்றாகவே புரிந்துகொள்கிறேன்.

வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் தேவைகள் மாறுகின்றன. பொறுப்புகள் மாறுகின்றன. முன்னுரிமைகள் மாறுகின்றன. ஒரு காலத்தில் முக்கியமாக இருந்த ஒன்று, இன்னொரு காலத்தில் அதே முக்கியத்துவத்தைப் பெறாமல் போகலாம்.

இந்த மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை மட்டுமல்ல; வளர்ச்சிக்குத் தேவையானவையும்கூட.

ஒரு குழந்தையின் வாழ்க்கையில் பெற்றோருக்கு இருக்கும் இடமும், அந்தப் பிள்ளைகள் வளர்ந்து குடும்பம் அமைத்தபிறகு பெற்றோருக்கு இருக்கும் இடமும் ஒரே விதமாக இருப்பதில்லை. அதற்காக அன்பு இல்லாமல் போய்விட்டது என்று சொல்ல முடியுமா?

ஆவிக்குரிய உறவுகளிலும் அப்படிப்பட்ட மாற்றங்கள் ஏற்படுகின்றன.

ஒரு காலத்தில் என் ஆலோசனையையும் வழிகாட்டுதலையும் அதிகமாக நாடியவர்கள், இன்று தாங்களாகவே தீர்மானங்களை எடுக்கக்கூடிய முதிர்ச்சியைப் பெற்றிருக்கலாம். அவர்களுடைய வாழ்க்கையில் புதிய பொறுப்புகளும் புதிய உறவுகளும் உருவாகியிருக்கலாம்.

அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

பவுல், “நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன்” என்று எழுதுகிறார் (1 கொரிந்தியர் 13:11). வளர்ச்சியோடு சிந்தனைகளும் தேவைகளும் முன்னுரிமைகளும் மாறுகின்றன. அந்த மாற்றங்களால் உறவுகளின் தன்மையும் மாறலாம் என்பதை இப்போது புரிந்துகொண்டிருக்கிறேன்.

இதைப் புரிந்துகொண்டபிறகுதான், என் உறவுகளைப்பற்றிய இன்னொரு கேள்வி எனக்குள் எழுந்தது.

2. மற்றவர்களுடைய இருதயத்தில் என் இடம்

என் வாழ்க்கையில் நான் ஒருவரை முக்கியமானவராகக் கருதுவதால், அவரும் என்னைத் தன் வாழ்க்கையில் முக்கியமானவராகக் கருதுவார் என்று நினைக்கலாமா? நான் ஒருவருக்கு என் வாழ்க்கையில் அதிக இடம் கொடுப்பதால், அவருடைய வாழ்க்கையிலும் எனக்கு அப்படிப்பட்ட இடம் இருக்கும் என்று நம்பலாமா?

அப்படி இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

என் வாழ்க்கையில் நான் ஒருவருக்குக் கொடுக்கும் இடமும் முக்கியத்துவமும், அவருடைய வாழ்க்கையில் அவர் எனக்குக் கொடுக்கும் இடமும் முக்கியத்துவமும் ஒரே அளவாக இருக்க வேண்டியதில்லை.

இது அப்போது புரியவில்லை. உறவுகள் தொலைந்துபோனபிறகுதான் புரிந்தது. இதைப் புரிந்துகொள்ள எத்தனை ஆண்டுகள் ஆயிற்று!

பவுல் கொரிந்தியர்களிடம் சொன்ன ஒரு செய்தி இங்கே என் நினைவுக்கு வருகிறது.

“நான் உங்களில் எவ்வளவு அதிகமாய் அன்புகூருகிறேனோ அவ்வளவு குறைவாய் உங்களால் அன்புகூரப்பட்டிருந்தாலும்…” (2 கொரிந்தியர் 12:15).

பவுலின் இந்தக் கூற்றில் என் அனுபவத்தின் ஒரு பிரதிபலிப்பைக் காண்கிறேன். நான் ஒருவரை அதிகமாக நேசிப்பதால், அவரும் என்னை அதே அளவுக்கு நேசிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது.

அன்பு ஒருதலைப்பட்சமாக இருக்கலாம். ஆனால் நெருக்கமான உறவு ஒருதலைப்பட்சமான முயற்சியால் மட்டும் வளராது.

இதைப் புரிந்துகொண்டபோது, இன்னொரு உண்மையையும் நான்  ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது.

3. என் எதிர்பார்ப்புகளும் என் பணிவிடையும்

நான் அவர்களிடம் ஏதாவது எதிர்பார்த்தேனா? அவர்கள் என்னை அடிக்கடி தொலைபேசியில் அழைக்க வேண்டும் என்றோ, அவ்வப்போது மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் என்றோ, என் நலனை விசாரிக்க வேண்டும் என்றோ எதிர்பார்த்தேனா?

அப்படி எதிர்பார்க்கவில்லை. ஆனால் அந்த உறவுகள் தொடர்ந்து நிலைக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருந்தது. ஒருவேளை அந்த எண்ணம் ஒருவிதமான கைம்மாற்றை எதிர்பார்ப்பதாக மாறியிருக்குமோ?

என் பணிவிடையின் காரணமாக அவர்கள் என்னோடு தொடர்ந்து உறவுகொள்ள வேண்டும் என்று நினைத்தால், நான் செய்த பணிவிடையை அவர்களுக்குக் கொடுத்த கடனாக மாற்றிவிடுகிறேனோ?

அது எனக்கு விருப்பமில்லை.

நான் ஒருவரை நேசித்தது, அவர் என்னை வாழ்நாள் முழுவதும் நினைவுகூர வேண்டும் என்பதற்காக அல்ல; தேவன் எனக்குத் தந்த வளங்களை அவரோடு பகிர்ந்துகொள்வதற்காகவே.

இயேசு பத்துத் தொழுநோயாளிகளைச் சுகமாக்கினார். ஆனால் ஒரேவொருவன் மட்டுமே திரும்பிவந்து நன்றி சொன்னான் (லூக்கா 17:11–19). மற்ற ஒன்பது பேரும் திரும்பி வராததால் இயேசு அவர்களுக்குச் செய்த நன்மை இல்பொருளாகிவிடுமா?

என் பணிவிடையையும் இப்போது இந்த வெளிச்சத்தில்தான் பார்க்கிறேன். நான் செய்த பணிவிடையின் மதிப்பை, அதைப் பெற்றவர்கள் இன்று என்னோடு எவ்வளவு தொடர்பில் இருக்கிறார்கள் என்பதைக்கொண்டு அளக்க முடியாது.

ஆனால் இங்கே இன்னொரு கேள்வியும் எழுகிறது. என் பணிவிடையைப்பற்றி நான் என்ன நினைக்கிறேன்?

4. நான் ஒரு பயனற்ற வேலையாள் 

ஒருமுறை ஒரு சகோதரனோடு பேசிக்கொண்டிருந்தபோது, சற்று வருத்தத்தோடு சில காரியங்களைச் சொன்னேன். அப்போது அவர் என்னிடம், “பிரதர், நீங்கள் எனக்குச் செய்தவைகளைக்குறித்து மேன்மைபாராட்டாதீர்கள். நீங்கள் எனக்குச் செய்ய வேண்டும் என்று கர்த்தர் உங்களுக்குச் சொல்லியிருக்கிறார். எனக்குப் பணிவிடை செய்வதற்குக் கர்த்தர் உங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்ததற்காக நீங்கள் கர்த்தருக்கு நன்றி சொல்லுங்கள். நீங்கள் செய்யாவிட்டால், கர்த்தர் வேறு யாரைக்கொண்டாவது எனக்குச் செய்திருப்பார்.” என்று சொன்னார்.

அவை என் நெஞ்சைக் குத்திக்கிழித்தன. ஆனால் என்னைச் சிந்திக்கவும் வைத்தன. அந்த வார்த்தைகளை நான் இன்றுவரை மறக்கவில்லை.

இயேசு சொன்ன ஒரு வார்த்தை என் நினைவுக்கு வருகிறது. “நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர்; செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள்.” — லூக்கா 17:10

தேவன் எனக்குத் தந்த வளங்களைக்கொண்டு, அவருடைய இறையாண்மையின்படி, ஒருவருடைய வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் நான் பணிவிடை செய்திருக்கலாம். ஆனால் அதற்காக, நான் இல்லாமல் அந்த மனிதருடைய வாழ்க்கையில் தேவன் செயல்பட்டிருக்க முடியாது என்று நினைக்கலாமா?

தேவனுடைய பணி என்னைச் சார்ந்ததல்ல.

பவுலின் வார்த்தைகள் இங்கே எனக்கு இன்னும் தெளிவாகின்றன. “நான் நட்டேன், அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினான், தேவனே விளையச்செய்தார்.” — 1 கொரிந்தியர் 3:6

நான் நட்டிருக்கலாம். வேறொருவர் நீர்ப்பாய்ச்சியிருக்கலாம். வளர்ச்சியைக் கொடுத்தவர் தேவன்.

ஆரம்பப்பள்ளி ஆசிரியர் ஆரம்பப்பள்ளியில்தான் பாடம் கற்பிப்பார். அவரிடம் கற்கும் மாணவர்கள் அங்கேயே நின்றுவிடுவதில்லை. மேற்படிப்புக்காக அடுத்தடுத்த வகுப்புகளுக்குச் சென்றுகொண்டே இருப்பார்கள். அவர்கள் தொடர்ந்து தன்னிடமே படிக்க வேண்டும் என்று அந்த ஆசிரியர் எதிர்பார்ப்பதில்லை. அவர்கள் வளர்ந்து முன்னேறுவதைக் கண்டு அவர் மகிழ்ச்சியடைகிறார்.

என் பணிவிடையையும் அப்படித்தான் பார்க்கிறேன்.

ஒருகாலத்தில் என் போதனையையும் ஆலோசனையையும் நாடியவர்கள் இன்று தாங்களாகவே நடக்கலாம். அல்லது வேறொருவருடைய பணிவிடையின்மூலம் பயனடைந்துகொண்டிருக்கலாம்.

அதில் வருந்துவதற்கு என்ன இருக்கிறது?

நான் எதற்காகப் பணிவிடை செய்தேன்? அவர்கள் என்னைச் சார்ந்து வாழ வேண்டும் என்பதற்காகவா? அல்லது கிறிஸ்துவில் வளர வேண்டும் என்பதற்காகவா?

அவர்கள் கிறிஸ்துவில் தொடர்ந்து வளர வேண்டும் என்பதே என் விருப்பம்.

இதையெல்லாம் சிந்திக்கும்போது, உறவுகள் தொலைந்துபோனதற்கான காரணங்களை மற்றவர்களிடம் மட்டும் தேடாமல், என்னையும் ஆராய வேண்டியிருக்கிறது என்பதை உணர்கிறேன்.

5. மற்றவர்களை அறிந்த அளவுக்கு என்னை அறிந்திருக்கிறேனா?

முப்பது ஆண்டுகளாகக் களப்பணி ஆற்றினேன். மனிதர்களோடு பழகினேன். அவர்களுடைய மகிழ்ச்சிகளிலும் துக்கங்களிலும், தேவைகளிலும் நெருக்கடிகளிலும் பங்குகொண்டேன்.

அந்த அனுபவங்களின்வழியாக மனிதர்களைப்பற்றியும் உறவுகளைப் பற்றியும் பல பாடங்களைக் கற்றுக்கொண்டேன்.

ஆனால் என்னைப்பற்றி எவ்வளவு அறிந்துகொண்டேன்?

நான் பேசிய விதம், நடந்துகொண்ட விதம், பழகிய விதம், சில நேரங்களில் எடுத்த தீர்மானங்கள், வெளிப்படுத்திய கருத்துகள் ஆகியவை சிலரை என்னிடமிருந்து விலகச் செய்திருக்குமா? அதற்கு வாய்ப்பில்லை என்று சொல்ல முடியாது.

என் நோக்கங்கள் நல்லவையாக இருந்திருக்கலாம். ஆனால் அதற்காக நான் செய்த அனைத்தும் சரியானவை என்று ஆகிவிடாது. நான் அன்போடு சொன்னதாக நினைத்த சில வார்த்தைகள் மற்றவர்களுக்குக் கடினமாக இருந்திருக்கலாம். அவர்களுடைய நன்மைக்காகச் செய்ததாக நினைத்த சில செயல்களை அவர்கள் வேறுவிதமாகப் புரிந்துகொண்டிருக்கலாம்.

நான் கண்டிப்பானவன், கடுமையானவன், கறார்பேர்வழி, கரடுமுரடானவன், பழகுவதற்கு இனிமையானவன் அல்ல என்று சிலர் என்னைப்பற்றிச் சொல்லியிருக்கிறார்கள். அந்த விமர்சனங்களை நான் புறக்கணிக்கவில்லை.

ஒருவேளை அவர்கள் கண்ட என் குருட்டுப்புள்ளிகளை நான் காணாமல் இருந்திருக்கலாம். அந்தக் குருட்டுப்புள்ளிகளில் ஒன்று, உறவுகளைப் பராமரிப்பதில் எனக்கிருந்த குறையாகவும் இருக்கலாமோ?

நல்ல அழகான பூங்காவை நினைத்துப் பார்க்கிறேன். எத்தனை அழகான செடிகள், பூக்கள், மரங்கள்! ஆனால் அதை ஒழுங்காகப் பராமரிக்காவிட்டால், காலப்போக்கில் முட்களும் களைகளும் நிறைந்த புதர்க்காடாக மாறிவிடுகிறதே!

உறவுகளும் அப்படித்தானோ?

உறவுகள் உருவானால் மட்டும் போதாது. அவைகளைப் பராமரிக்கவும் வேண்டும். அக்கறை காட்ட வேண்டும். பாராட்ட வேண்டிய இடத்தில் பாராட்ட வேண்டும். ஊக்கப்படுத்த வேண்டும். சில நேரங்களில் விட்டுக்கொடுக்கவும் வேண்டும்.

உறவுகளை உருவாக்குவதிலும், பிறருக்குப் பணிவிடை செய்வதிலும் காட்டிய அக்கறையை, அவைகளைப் பராமரிப்பதிலும் காட்டியிருக்கிறேனா? ஒருவேளை இந்தக் காரியத்தில் நான் தவறியிருக்கலாமோ?

ஆனால் இங்கே இன்னொரு சிக்கல் இருக்கிறது.

உறவுகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக எல்லாவற்றையும் பாராட்ட வேண்டுமா? தவறுகளையும் புகழ வேண்டுமா? குறைகளைக் கண்டும் காணாததுபோல் இருக்க வேண்டுமா? தேவனுடைய வார்த்தையின் தரத்தைத் தாழ்த்த வேண்டுமா?

என்னால் அப்படிச் செய்ய முடியாது.

உறவுகளைப் பராமரிப்பதற்கும், உறவுகளைத் தக்கவைத்துக்கொள்வதற்காகச் சத்தியத்தைச் சமரசம் செய்வதற்கும் பெரிய வேறுபாடு இருக்கிறது.

இங்கே நீதிமொழிகளில் சொல்லப்பட்டிருக்கும் ஒரு வார்த்தை என் நினைவுக்கு வருகிறது.

“சிநேகிதன் அடிக்கும் அடிகள் உண்மையுள்ளவைகள்; சத்துரு இடும் முத்தங்களோ வஞ்சனையுள்ளவைகள்.” — நீதிமொழிகள் 27:6

என் அனுபவத்தில், சில நேரங்களில் நண்பனின் உண்மையான அடிகளைவிட, எதிரியின் இனிமையான முத்தங்களையே மனிதர்கள் விரும்புகிறார்களோ என்று தோன்றுகிறது.

ஆனால் இந்த வசனம் என்னையும் ஆராயச் செய்கிறது.

நான் கொடுத்த “அடிகள்” உண்மையான நண்பனின் அடிகள்தானா? நான் சுட்டிக்காட்டிய குறைகள் தேவனுடைய வார்த்தையின் அடிப்படையில் சொல்லப்பட்டவைகள்தானா?

நான் சொன்னது உண்மையாக இருந்திருக்கலாம். ஆனால் அதைச் சொன்ன விதத்தில் அன்பும் பொறுமையும் இருந்தனவா?

நாத்தான் தாவீதிடம், “நீயே அந்த மனுஷன்” என்று கூறியபோது, தாவீது தன் பாவத்தை ஒப்புக்கொண்டார் (2 சாமுவேல் 12:1–13). மற்றவர்கள் காணும் நம் குறைகளை நாமே காணாமல் இருக்கலாம் என்பதை இந்தச் சம்பவம் எனக்கு நினைவுபடுத்துகிறது.

தேவனை அறிகிற அறிவுக்கு அடுத்ததாக, என்னை அறிகிற அறிவு எவ்வளவு முக்கியமானது என்பதை இப்போது இன்னும் ஆழமாக உணர்கிறேன்.

தேவனை அறிகிற அறிவும் என்னை அறிகிற அறிவும் ஒன்றுக்கொன்று தொடர்பற்றவை அல்ல. தேவனுடைய வார்த்தையின் வெளிச்சத்தில் என்னை ஆராயும்போதுதான், நான் காணாத என் குறைகளும் எனக்குத் தெரியவருகின்றன.

கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக வகுப்பறையில் கற்றுக்கொண்டிருக்கிறேன். களத்தில் பெற்ற அனுபவங்களை இப்போது கற்றுக்கொண்டிருக்கும் பாடங்களோடு இசைத்துப் பார்க்கிறேன்.

முன்பு புரியாத சில காரியங்கள் இப்போது புரிகின்றன. முன்பு சரியென்று நினைத்த சிலவற்றை மறுபடியும் ஆராய்கிறேன். களப்பணி எனக்கு அனுபவங்களைக் கொடுத்தது. வகுப்பறை அந்த அனுபவங்களை ஆராய்வதற்கான வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது. களத்தில் மற்றவர்களைப்பற்றிக் கற்றுக்கொண்டேன். வகுப்பறையில் என்னைப்பற்றியும் கற்றுக்கொண்டிருக்கிறேன்.

ஆனால் என் கற்றல் இன்னும் முடிந்துவிடவில்லை.

என் தவறுகளை அறியும்போது திருத்திக்கொள்கிறேன். அதே நேரத்தில், ஒவ்வொரு பிரிவுக்கும் நானே காரணம் என்று நினைத்து வருந்தவும் விரும்பவில்லை.

என்னை அறிந்துகொள்வது முக்கியம். ஆனால் மற்றவர்களுடைய இருதயத்தில் என்ன இருக்கிறது என்பதை என்னால் முழுமையாக அறிந்துகொள்ள முடியாது என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

6. எல்லாப் பிரிவுகளுக்கும் விளக்கம் கிடைப்பதில்லை

உறவுகளில் உராய்வுகள் ஏற்படும். சிராய்ப்புகள் உண்டாகும். கீறல்கள் விழும். சில நேரங்களில் ஆழமான காயங்களும் ஏற்படும்.

காலப்போக்கில் கர்த்தர் அவைகளைக் குணமாக்குகிறார். சில காயங்கள் விரைவில் ஆறலாம். சில காயங்கள் ஆறுவதற்கு நீண்ட காலம் ஆகலாம். ஆறிய காயங்களின் தழும்புகள்கூட சில நேரங்களில் மறையாமல் இருக்கலாம்.

உறவுகளில் விரிசல்கள் ஏற்படும். சில விரிசல்கள் சரியாகிவிடும். சில விரிசல்கள் பெரிதாகி உறவுகளே முறிந்துபோகும். ஆனால் சில உறவுகள் எந்த விரிசலும் இல்லாமலேயே தொலைந்துபோகின்றன.

என் வாழ்க்கையிலும் அப்படி நிகழ்ந்திருக்கிறது.

பவுலும் பர்னபாவும் மாற்குவை அழைத்துச் செல்வதைப்பற்றிய கருத்து வேறுபாட்டால் பிரிந்தார்கள் (அப்போஸ்தலர் 15:36–41). அவர்களுடைய பிரிவுக்கான காரணத்தை வேதம் சொல்கிறது; ஆனால் பின்னர் அவர்களுடைய உறவு எவ்வாறு இருந்தது என்பதை முழுமையாகச் சொல்லவில்லை.

என் வாழ்க்கையில் சில உறவுகள் ஏன் தொலைந்துபோயின என்பதற்கான காரணங்கள்கூட எனக்குத் தெரியாது.

அவர்களுடைய வாழ்க்கையில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று எனக்கு முழுமையாகத் தெரியாது. அவர்களுடைய அமைதிக்குப் பின்னால் என்ன காரணம் இருக்கிறது என்றும் தெரியாது.

அந்தக் காரணங்கள் தெரிந்தால் நலமாக இருக்குமே என்று ஒரு காலத்தில் நினைத்தேன். ஆனால் இப்போது எல்லாக் கேள்விகளுக்கும் பதில் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்பதைப் புரிந்துகொண்டிருக்கிறேன்.

சில உறவுகள் ஏன் தொலைந்துபோயின என்ற கேள்விக்குப் பதில் தெரியாமலேயே என் வாழ்க்கைப் பயணம் முடிந்துபோகலாம். அதையும் ஏற்றுக்கொள்ளக் கற்றுக்கொண்டிருக்கிறேன்.

ஆனால் காரணங்களை அறியாமல் இருப்பதற்கும், உறவுகளைத் தொடர்ந்து பற்றிக்கொண்டிருப்பதற்கும் இடையில் இன்னொரு பாடத்தை நான் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.

7. நேசித்தாலும் போகவிடக் கற்றுக்கொள்கிறேன்

நித்திய ஜீவனைப்பற்றிக் கேட்க இயேசுவிடம் வந்த பணக்கார வாலிபனின் நிகழ்ச்சி என் நினைவுக்கு வருகிறது. அவன் ஆசையாய் ஓடிவந்தான். இயேசுவுக்கு முன்பாக முழங்கால்படியிட்டான். நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று ஆர்வத்தோடு கேட்டான் (மாற்கு 10:17).

மாற்கு ஒரு முக்கியமான செய்தியைக் குறிப்பிடுகிறார். “இயேசு அவனைப் பார்த்து, அவனிடத்தில் அன்புகூர்ந்து...” — மாற்கு 10:21

இயேசு அவனை நேசித்தார். ஆனால் அவனுடைய குறையைச் சுட்டிக்காட்டத் தயங்கவில்லை.

“இன்னும் உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு” என்று கூறி, அவனுடைய செல்வப்பற்றை வெளிப்படுத்தி, தம்மைப் பின்பற்றும்படி அழைத்தார் (லூக்கா 18:22).

அவன் அந்த வார்த்தைகளைக் கேட்டுத் துக்கத்தோடு திரும்பிப்போனான். ஓடிவந்தவன் திரும்பிப்போனான். முழங்கால்படியிட்டவன் எழுந்து சென்றான். ஆனால் இயேசு அவன் பின்னால் ஓடவில்லை. அவனைத் தம்மோடு தக்கவைத்துக்கொள்வதற்காகத் தம் வார்த்தைகளை மாற்றவில்லை. அவனைப் போகவிட்டார்.

இன்னொரு நிகழ்ச்சியும் என் நினைவுக்கு வருகிறது. இயேசுவின் போதனையைக் கேட்ட அவருடைய சீடர்களில் அநேகர் அவரோடு தொடர்ந்து நடவாமல் பின்வாங்கிப்போனார்கள் (யோவான் 6:66). அப்போது இயேசு பன்னிருவரையும் பார்த்து, “நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ?” — யோவான் 6:67 என்று கேட்டார்.

இயேசு தம்மோடு இருந்தவர்களை நேசித்தார். ஆனால் அவர்கள் தம்மோடு தொடர்ந்திருக்க வேண்டும் என்பதற்காகத் தம் போதனையை மாற்றவில்லை. அவர்களுடைய தீர்மானத்தை வற்புறுத்தவும் இல்லை.

என்னைவிட்டுப் பிரிந்தவர்கள் அந்த வாலிபனைப்போலவோ, பின்வாங்கிப்போன சீடர்களைப்போலவோ சத்தியத்தை நிராகரித்தவர்கள் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை.

ஆனால் இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் எனக்குப் புரிகிற ஓர் உண்மை இருக்கிறது. ஒருவரை நேசிப்பதற்கும், அவர் நம்மோடு இருக்க வேண்டும் என்பதற்காக அவரைப் பற்றிக்கொள்வதற்கும் இடையில் பெரிய வேறுபாடு இருக்கிறது.

என் உறவு ஒருவருடைய வாழ்க்கையை இன்னும் கனிநிறைந்ததாகவும், பயனுள்ளதாகவும், வீரியமுள்ளதாகவும் மாற்றும் என்று அவர் உணர்ந்தால், நம்பினால், அந்த உறவை அவராகவே விரும்பலாம். அப்படி உணராதவரிடம், “நான் இன்னும் இருக்கிறேன். என்னை மறக்காதீர்கள்” என்று சொல்லிக்கொண்டிருக்க விரும்பவில்லை.

ஒருவரைத் தொடர்புகொள்வது தவறல்ல. அவருடைய நலனை விசாரிப்பதும் தவறல்ல. ஆனால் அவர் என்னோடு உறவுகொள்ள விரும்பவில்லை என்பதைச் சொல்லால் அல்லது செயலால் தெளிவாக்கும்போது, அந்த உறவைத் தொடருமாறு அவரைத் துரத்திக்கொண்டிருக்க விரும்பவில்லை.

உறவுகளை நேசிப்பதை நிறுத்தவில்லை. ஆனால் உறவுகளைத் தக்கவைத்துக்கொள்வதற்காக மற்றவர்களைத் துரத்துவதைத் தவிர்க்கக் கற்றுக்கொண்டிருக்கிறேன்.

அதே நேரத்தில், ஒருவரைப் போகவிடுவதும் அவர்மீது கசப்புணர்வு கொள்வதும் ஒன்றல்ல என்பதைப் புரிந்துகொண்டிருக்கிறேன்.

8. தனியாக விடப்பட்டாலும் கசப்புணர்வு இல்லை

பவுல் தன் வாழ்க்கையின் இறுதிக்காலத்தில் எழுதிய ஒரு வார்த்தை எனக்கு மிகவும் பிடிக்கும்.

“நான் முதல்விசை உத்தரவுசொல்ல நிற்கையில் ஒருவனும் என்னோடேகூட இருக்கவில்லை, எல்லாரும் என்னைக் கைவிட்டார்கள்; அந்தக் குற்றம் அவர்கள்மேல் சுமராதிருப்பதாக.” — 2 தீமோத்தேயு 4:16

தம்மைக் கைவிட்டவர்கள்மீதும் குற்றம் சுமத்த விரும்பாத பவுலின் மனப்பாங்கு என்னை ஆழமாகச் சிந்திக்க வைக்கிறது.

அடுத்த வசனத்தில், “கர்த்தரோ எனக்குத் துணையாக நின்று...” — 2 தீமோத்தேயு 4:17 என்று எழுதுகிறார்.

பவுலின் சூழ்நிலையும் என் சூழ்நிலையும் ஒன்றல்ல. ஆனால் அவருடைய மனப்பாங்கு  எனக்கும் தேவை.

என்னோடிருந்த உறவை அறவே அறுத்தெறிந்தவர்களை நினைத்தபோது முன்னொரு காலத்தில் வலித்தது. ஆனால் அந்த வலி ஒருநாளும் கசப்புணர்வாக மாறவில்லை. அவர்களுக்காக நான் செய்த பணிவிடையை நினைத்து வருந்தவும் இல்லை. அவர்கள் என்னை மறந்திருக்கலாம். ஆனால் நான் அவர்களோடு பகிர்ந்துகொண்ட நாட்களை மறக்கவில்லை. அவர்கள் என்னோடு தொடர்பில் இல்லாதபோதும், அவர்களுடைய இம்மைக்குரிய நன்மைகளையும் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும் விரும்பவும், அவைகளுக்காக ஜெபிக்கவும் முடியும் என்பதை என் வாழ்க்கையில் கற்றுக்கொண்டிருக்கிறேன்.

இன்று என்னோடு தொடர்பில் இல்லாதவர்கள் மீண்டும் என்னைத் தேடி வந்தால், அவர்களை மகிழ்ச்சியோடு வரவேற்பேன்.

ஒருகாலத்தில் மாற்குவைத் தம்மோடு அழைத்துச் செல்ல விரும்பாத பவுல், பின்னர் “மாற்குவை உன்னோடே கூட்டிக்கொண்டுவா; ஊழியத்தில் அவன் எனக்குப் பிரயோஜனமுள்ளவன்” என்று தீமோத்தேயுவுக்கு எழுதினார் (அப்போஸ்தலர் 15:37–39; 2 தீமோத்தேயு 4:11).

ஒரு காலத்தில் ஏற்பட்ட பிரிவு உறவின் இறுதி நிலையாக இருக்க வேண்டியதில்லை என்பதை இந்த நிகழ்ச்சி எனக்கு நினைவுபடுத்துகிறது. என் கதவு திறந்தே இருக்கிறது. ஆனால் யாரையும் உள்ளே வரும்படி ஒருபோதும் வற்புறுத்தமாட்டேன்.

இப்படி, என் உறவுகளைப்பற்றிய புரிதல் மாறிக்கொண்டிருந்த காலத்தில், என் வாழ்க்கையின் போக்கும் நான் எதிர்பாராத விதத்தில் மாறிக்கொண்டிருந்தது.

9. நான் திட்டமிடாத பாதையில் தேவன் நடத்துகிறார்

என் வாழ்நாளில் மில்டனின் செய்திகளையெல்லாம் திருத்தி, எழுதி, ஒழுங்குபடுத்த வேண்டும்; மொழிபெயர்த்த பாடல்களை முடிந்தால் பதிவுசெய்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று மட்டுமே எண்ணியிருந்தேன்.

ஆனால் நான் ஒருபோதும் கனவுகூட காணாத பல பணிகளுக்கான பாரங்களை இந்தக் காலத்தில் தேவன் என் இருதயத்தில் வைத்திருக்கிறார்.

சபை வரலாற்றைப் படிக்க வேண்டும் என்றோ, கிறிஸ்தவ முன்னோடிகளின் வாழ்க்கையை ஆராய வேண்டும் என்றோ, லேவியராகமத்தையும் எபிரெயர் நிருபத்தையும் வேதபாடங்களாகத் தயாரிக்க வேண்டும் என்றோ நான் ஒருபோதும் நினைத்ததில்லை. ஆனால் இன்று இவைகளைப் படித்து, ஆராய்ந்து, எழுதி, பதிவுசெய்து, காணொளிகளாக உருவாக்கிக்கொண்டிருக்கிறேன்.

தேவன் தந்த பாரத்தை, அவர் தந்த வளங்களைக்கொண்டு, அவருடைய மகிமைக்காகச் செய்துகொண்டிருக்கிறேன்.

இவை ஒவ்வொன்றுக்கும் நேரமும், கவனமும், பொறுமையும், உழைப்பும் தேவைப்படுகின்றன. சில நேரங்களில் ஒரு சிறிய காரியத்தைச் செய்து முடிப்பதற்கே பல நாட்கள் செலவிட வேண்டியிருக்கிறது. ஆனாலும் இவைகளைச் செய்வதில் என்னே மனநிறைவு!

இவைகளை என் வாழ்நாளில் செய்து முடித்தால், அவை தமிழ் பேசும் கிறிஸ்தவர்களுக்கு நான் விட்டுச் செல்லும் சொத்தாக இருக்கும்.

பத்மு தீவில் இருந்த யோவானிடம், தான் கண்டவற்றை எழுதும்படி கர்த்தர் கட்டளையிட்டார் (வெளிப்படுத்தின விசேஷம் 1:9–11). யோவானின் சூழ்நிலையும் என் சூழ்நிலையும் ஒன்றல்ல. ஆனால் மனிதர்களிடமிருந்து தனித்திருக்கும் காலத்திலும் தேவன் ஒருவருக்குப் பணியைக் கொடுக்க முடியும் என்பதை அந்த நிகழ்ச்சி எனக்கு நினைவுபடுத்துகிறது.

ஒருவேளை முன்புபோலப் பல உறவுகளோடு தொடர்ந்து தொடர்பில் இருந்திருந்தால், இத்தனை காரியங்களைச் செய்வதற்கு நேரம் கிடைத்திருக்குமா என்று தெரியவில்லை.

அதற்காக உறவுகள் தொலைந்துபோனது நல்லது என்று சொல்லவில்லை. அவை தொலைந்துபோக வேண்டும் என்று நான் விரும்பியதுமில்லை.

ஆனால் ஒருகாலத்தில் என் நேரத்தையும் கவனத்தையும் பெற்றிருந்த பல உறவுகள் இன்று என்னோடு இல்லை. அந்த நேரத்தை இப்போது தேவன் என் இருதயத்தில் வைத்திருக்கும் பாரங்களை நிறைவேற்றுவதற்காகப் பயன்படுத்த முடிகிறது.

என் வாழ்க்கையில் பல காரியங்களை என்னால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. இந்த மாற்றங்களுக்குப் பின்னால் தேவனுடைய திட்டம் என்ன என்பதையும் முழுமையாக அறியவில்லை.

ஆனால் தேவன் இறையாண்மையுள்ளவர். அவர் எதையும் ஏனோதானோவென்று செய்வதில்லை. என் வாழ்க்கையின் இந்தக் கட்டத்திலும் அவர் என்னை நடத்திக்கொண்டிருக்கிறார் என்று உறுதியாக எனக்குத் தெரியும்.

நான் தனியாக இல்லை. தேவன் என்னோடு இருக்கிறார்.

இந்தப் பூமியில் இன்னும் எத்தனை காலம் இருப்பேன் என்று எனக்குத் தெரியாது. ஆனால் தேவன் எனக்குக் கொடுத்திருக்கும் நாட்களை வீணாக்க விரும்பவில்லை. என்னால் இயன்றவரை அவர் என் இருதயத்தில் வைத்திருக்கும் பாரங்களை நிறைவேற்ற விரும்புகிறேன்.

உறவுகள் குறைந்திருக்கின்றன. ஆனால் என் வாழ்க்கையின் பயன் குறைந்துவிடவில்லை.

முடிவுரை — இம்மையைக் கடந்த உறவுகள்

என் வாழ்க்கையில் வந்த உறவுகளுக்காகக் கர்த்தருக்கு நன்றி சொல்லுகிறேன்.

சிலர் என் வாழ்க்கையில் ஆழமான தடங்களை விட்டுச் சென்றிருக்கிறார்கள். சிலருடைய வாழ்க்கையில் நானும் ஏதோ ஒரு விதத்தில் தடம் பதித்திருக்கலாம். அந்த உறவுகளின்வழியாக நான் பெற்ற அனுபவங்களையும் கற்றுக்கொண்ட பாடங்களையும் மறக்கவில்லை.

இன்று என்னோடு தொடர்பில் இல்லாதவர்கள் நாளை மீண்டும் என்னைத் தேடி வரலாம். சிலர் இனி ஒருபோதும் தொடர்புகொள்ளாமல் போகலாம். அதை என்னால் தீர்மானிக்க முடியாது.

ஆனால் என் வாழ்க்கையில் இப்போது வருகிறவர்களையும் அன்போடு நேசிக்கிறேன். கடந்துபோன உறவுகளின் நினைவுகளிலேயே வாழாமல், இன்று எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வாழ்க்கையை உண்மையாக வாழ்கிறேன்.

உறவுகளை இழந்திருக்கிறேன். ஆனால் உறவுகளின்மீது எனக்கிருந்த அன்பை இழக்கவில்லை.

என் உறவுகளின் எண்ணிக்கையோ, அவை நீடித்த ஆண்டுகளோ, எத்தனை பேர் என்னைத் தொடர்புகொள்கிறார்கள் என்பதோ என் வாழ்க்கையின் மதிப்பைத் தீர்மானிப்பதில்லை. நான் மற்றவர்களிடமிருந்து எவ்வளவு அன்பைப் பெற்றேன் என்பதைவிட, அவர்களிடம் எவ்வளவு உண்மையாக அன்புகூர்ந்தேன் என்பதே எனக்கு முக்கியம்.

எல்லா உறவுகளும் கல்லறைவரை வராது என்று எனக்குத் தெரியும். ஆனால் சில உறவுகள் கல்லறையையும் தாண்டி நித்தியம்வரை தொடரும் என்று நினைத்தேன். எதிர்பார்த்தேன் என்று சொல்ல முடியாது; அப்படி நினைத்தேன்.

ஆனால் நித்தியம்வரை தொடரும் என்று நினைத்த சில உறவுகள், காலப்போக்கில் இம்மையிலேயே தொலைந்துபோயின. அதற்காக அவைகள் நித்தியத்திலும் தொலைந்துபோய்விட்டதாக நான் நினைக்கவில்லை.

இம்மையில் தொலைந்துபோன சில உறவுகள், கிறிஸ்துவுக்குள் நித்தியத்தில், புதிய எருசலேமில், மீண்டும் மலரும் என்று விசுவாசிக்கிறேன். இந்த விசுவாசம் எனக்கு ஆறுதலளிக்கிறது.

இம்மையில் நம்மைப் பிரித்த வாழ்க்கைச் சூழ்நிலைகளும், தவறான புரிதல்களும், மனக்காயங்களும் நித்தியத்தில் நம்மைப் பிரிக்கப்போவதில்லை என்று நம்புகிறேன்.

அங்கே நம்முடைய உறவுகள் இப்போது இருப்பதைப்போலவே இருக்கும் என்று நினைக்கவில்லை. ஆனால் கிறிஸ்துவுக்குள் தேவனுடைய பிரசன்னத்தில் பூரணமான ஐக்கியம் இருக்கும் என்று விசுவாசிக்கிறேன்.

அதுவரை என் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்கிறேன்.

உறவுகளை நேசிப்பேன். அவைகளைப் பாதுகாக்க என்னால் இயன்றதைச் செய்வேன். ஆனால் அவை தொடர வேண்டும் என்பதற்காக யாரைsயும் துரத்தமாட்டேன்.

என் அன்பு குறையாது. என் கதவு மூடப்படாது. ஆனால் யாரையும் உள்ளே வரும்படி வற்புறுத்தமாட்டேன்.


வகை: ஊழியம்
15 அக்டோபர் 2026
மெர்லின் இராஜேந்திரம்

மெர்லின் இராஜேந்திரம்

ஒரு சிறிய கைகாட்டி

எழுத்தின் வழியே எழும் சில அதிர்வலைகள்...

அதிர்வலைகள்