என்னை நடத்தியவர் யார்? நடத்துகிறவர் யார்?
தேவனுக்காகச் செய்வதற்கும், தேவனால் நடத்தப்பட்டுச் செய்வதற்கும் இடையில்...
“எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்.” — ரோமர் 8:14
நான் 1984இல் இரட்சிக்கப்பட்ட நாள்முதல் ஏறக்குறைய முப்பது ஆண்டுகள் பரபரப்பாக, பம்பரம்போல் பணிவிடை செய்தேன்.
அந்தக் காலங்களில் பயணங்கள், அலைச்சல்கள், பசி, தாகம், குறைவு, நெருக்கம், எதிர்ப்பு, புறக்கணிப்பு, ஒதுக்கப்படுதல், இழப்பு, நஷ்டம் — இப்படிப் பல அனுபவங்களைக் கடந்துபோக வேண்டியிருந்தது.
தேவ மக்களுடைய தேவைகள் என்னுடைய தேவைகளாக மாறின. அவர்களுடைய படிப்பு, மருத்துவம், திருமணம், தங்க இடம் என்று பல காரியங்களை என் பொறுப்பாக மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டேன்.
இவைகளை இப்போது நினைவுகூருவது, நான் பட்ட பாடுகளையோ செய்த தியாகங்களையோ பட்டியலிடுவதற்காக அல்ல.
ஒரு காலத்தில் தேவ மக்கள்தான் என் வாழ்க்கை, இவர்கள்தான் எனக்கு எல்லாம், இவர்கள்தான் என் குடும்பம் என்று நான் நினைத்தேன்.
தேவ மக்களை முன்னுக்கு வைத்தேன்; என் சொந்தக் குடும்பத்தைப் பின்னுக்குத் தள்ளினேன். அப்போது அது எனக்கு ஒரு தியாகமாகவே தெரிந்தது. ஆனால் என் குடும்பம் அதற்குக் கொடுத்த விலையை நான் அப்போது பார்க்கவில்லை.
என் பிள்ளைகள் வளர்ந்துகொண்டிருந்த காலத்தில், ஒரு தகப்பனாக அவர்களுக்குக் கொடுத்திருக்க வேண்டிய நேரத்தையும் கவனத்தையும் அருகாமையையும் நான் கொடுக்கத் தவறியிருக்கிறேன். நான் அவர்களை நேசிக்கவில்லை என்பதல்ல. தேவனுக்காகவும் தேவ மக்களுக்காகவும் வாழ்வதே மேலானது என்று நினைத்தேன்.
அதன் காயம் இன்றும் இருக்கிறது. காலப்போக்கில் காயம் குணமாகலாம்; ஆனால் வாழ்நாள் முழுவதும் தழும்பு இருக்குமோ!
இன்னொரு பக்கம், யாரை என் வாழ்க்கையாக, குடும்பமாக, எல்லாமுமாக, நினைத்தேனோ, யாருக்காக என் குடும்பத்தைப் பின்னுக்குத் தள்ளினேனோ, நான் கிறிஸ்துவுக்குள் பெற்று வளர்த்த அவர்களில் ஒருவர்கூட இன்று என்னோடு தொடர்பில் இல்லை.
என் குடும்பத்தைப் பின்னுக்குத் தள்ளினேன். தேவ மக்களை முன்னுக்கு வைத்தேன். இன்று இரு சாரரையும் இழந்து, இந்தக் கசப்பான உண்மைக்கு நடுவில் நிற்கிறேன்.
யார்மேலும் குற்றம் சுமத்துவதற்காக நான் இதை எழுதவில்லை. என் பிள்ளைகளைக் குறைசொல்ல முடியாது. தேவ மக்களையும் குறைசொல்ல முடியாது.
என்னைத் திரும்பிப் பார்ப்பதற்காக எழுதுகிறேன்.
கடந்த பத்து ஆண்டுகளாக என் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்க ஆரம்பித்திருக்கிறேன். இப்போது என்னைச் சிந்திக்க வைப்பது நான் எவ்வளவு செய்தேன், எவ்வளவு சகித்தேன் என்பதல்ல.
என்னைச் செய்ய வைத்தது எது?
என்னை நடத்தியவர் யார்?
இதுதான் கேள்வி.
“எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்” (ரோமர் 8:14).
இந்த வசனத்தை முன்பும் வாசித்திருக்கிறேன். சில நேரங்களில் பிரசங்கங்களில் மேற்கோளும் காட்டியிருக்கிறேன். ஆனால் இப்போது இந்த வசனம் என்னிடம் வேறொரு கேள்வியைக் கேட்கிறது.
நான் செய்தது நல்லதா, கெட்டதா என்பதல்ல கேள்வி.
சரியா, தவறா என்பதல்ல கேள்வி.
இலாபமா, நஷ்டமா என்பதுமல்ல கேள்வி.
அதைச் செய்யும்படி தேவனுடைய ஆவியானவர் என்னை நடத்தினாரா என்பதுதான் கேள்வி.
ஒரு காரியம் நல்லதாக இருக்கலாம்; சரியானதாகவும் இருக்கலாம். அதனால் மற்றவர்கள் பயனடையலாம். அதைச் செய்வதால் எனக்கு நஷ்டம்கூட ஏற்படலாம். நான் அதற்காக ஒரு பெரிய விலையைக் கொடுத்திருக்கலாம்.
இவை அனைத்தும் உண்மையாக இருந்தாலும், தேவன் என்னை அதைச் செய்யும்படி நடத்தினாரா என்ற கேள்விக்கு அவை பதிலாகிவிடாது.
அந்த முப்பது ஆண்டுகளில் நான் செய்த பல காரியங்களை இப்போது செய்யச் சொன்னால், நான் செய்யத் தயங்குவேன்.
செய்ய மாட்டேன் என்று சொல்லவில்லை.
ஆனால் முன்புபோல் உடனே ஓடிவிட மாட்டேன்.
ஏனென்றால் இப்போது எனக்குள் ஒரு கேள்வி எழும்:
“இதைச் செய்யும்படி தேவன் என்னை நடத்துகிறாரா?”
ஒரு மனிதனுடைய தேவை உண்மையானதாக இருக்கலாம். அதைச் சந்திக்க என்னிடம் வசதியும் இருக்கலாம். அதைச் செய்வது நல்ல காரியமாகவும் இருக்கலாம். அதைச் செய்வதற்காக நான் ஒரு பெரிய விலையைக்கூட கொடுக்கலாம்.
ஆனால் இவை அனைத்தும் சேர்ந்தாலும், அதைச் செய்யும்படி தேவன் என்னை நடத்தினார் என்பதை நிரூபிக்குமா?
இந்தக் கேள்வியை அப்போது நான் போதுமான அளவுக்குக் கேட்டேனா என்று இப்போது எனக்குத் தெரியவில்லை.
நான் ஒரு குருடன். எனவே நான் ஒரு முரடன்.
தெரியாதது மட்டும் என் பிரச்சினை அல்ல; தெரியாதபோதும் தயங்காமல் செயல்பட்டதுதான் என் பிரச்சினை.
ஒரு காரியம் நல்லது என்று தெரிந்தால் போதும். ஒரு தேவை என் கண்களுக்குத் தெரிந்தால் போதும். ஒருவர் கஷ்டப்படுகிறார் என்று தெரிந்தால் போதும். என்னால் ஏதாவது செய்ய முடியும் என்றால் போதும். நான் இறங்கிவிடுவேன்.
நோக்கம் நல்லதாக இருக்கலாம். தியாகம் உண்மையானதாக இருக்கலாம். நான் கொடுத்த விலையும் பெரிதாக இருக்கலாம்.
ஆனால் நல்ல நோக்கம், உண்மையான தியாகம், பெரிய நஷ்டம் — இவை எதுவுமே தேவனுடைய நடத்துதலுக்கு மாற்றாக முடியாது.
தேவனுடைய பிள்ளைகளின் வாழ்க்கையைத் தீர்மானிக்க வேண்டியது நல்லது–கெட்டது, சரி–தவறு, இலாபம்–நஷ்டம் என்ற கணக்கு மட்டுமல்ல.
தேவனுடைய நடத்துதல்.
இன்னொரு காரியத்தையும் கடந்த சில ஆண்டுகளில் சிந்தித்துப் பார்க்கிறேன்.
தேவனுக்கும் மனிதர்களுக்கும் நாம் செய்யும் ஊழியம் கலப்படமற்றது, அப்பழுக்கற்றது, தூய்மையானது என்றும், அதற்குள் மறைவான உள்நோக்கம் எதுவும் இல்லை என்றும் நாம் நினைக்கலாம்.
நானும் அப்படி நினைத்திருக்கலாம்.
ஆனால் நம் பணிவிடை அக்கினியினால் பரீட்சிக்கப்படும்.
வாழ்க்கையின் சூழ்நிலைகள் அதைச் சோதிக்கும். தோல்விகள் அதைச் சோதிக்கும். புறக்கணிப்பு அதைச் சோதிக்கும். ஒதுக்கப்படுதல் அதைச் சோதிக்கும். நாம் எதிர்பார்த்த விளைவு கிடைக்காமல் போவது அதைச் சோதிக்கும்.
அப்போது நமக்குள்ளேயே மறைந்திருந்த சில காரியங்கள் வெளியே வர ஆரம்பிக்கலாம்.
செல்வாக்கு வேண்டுமா?
நற்பெயர் வேண்டுமா?
அங்கீகாரம் வேண்டுமா?
அந்தஸ்து வேண்டுமா?
ஆதாயம் வேண்டுமா?
வெற்றி வேண்டுமா?
இவை எதுவுமே எனக்குள் இல்லை என்று நான் உறுதியாக நினைக்கலாம். ஆனால் நான் அசட்டைபண்ணப்படும்போது என்ன நடக்கிறது? புறக்கணிக்கப்படும்போது? மறக்கப்படும்போது? ஒதுக்கப்படும்போது?
நான் செய்ததை யாரும் நினைவுகூராதபோது?
நான் யாருக்காக என்னைச் செலவழித்தேனோ, அவர்களே என்னைவிட்டு விலகிப்போகும்போது?
தேவனுக்கும் மனிதர்களுக்கும் நான் செய்ததாக நினைத்த பணிவிடை முடிவுக்கு வரும்போது?
அப்போதுதான் சிலுவை நம் மறைவான உள்நோக்கங்களை வெளியரங்கமாக்க ஆரம்பிக்கிறது.
நாம் செய்த காரியங்கள் மட்டுமல்ல; ஏன் செய்தோம் என்பதும் வெளிச்சத்திற்கு வருகிறது.
ஒருவேளை நம் ஊழியத்தை இழந்தபிறகுதான், அந்த ஊழியம் நமக்கு என்னவாக இருந்தது என்பதை அறிய ஆரம்பிக்கிறோம்.
மனிதர்களால் மறக்கப்பட்டபிறகுதான், மனிதர்களால் நினைவுகூரப்பட வேண்டும் என்ற ஆசை நமக்குள் இருந்ததா என்பதை அறிய ஆரம்பிக்கிறோம்.
செல்வாக்கை இழந்தபிறகுதான், செல்வாக்கு நமக்கு எவ்வளவு முக்கியமாக இருந்தது என்பதை அறிய ஆரம்பிக்கிறோம்.
வெற்றி இல்லாமல் போனபிறகுதான், தேவனுடைய மகிமையைவிட வெற்றியை நாம் எவ்வளவு நேசித்தோம் என்பது தெரிய ஆரம்பிக்கலாம்.
இவைகளை எழுதும்போது, என் முப்பது ஆண்டுகால பணிவிடை எல்லாம் தவறு என்று நான் சொல்லவில்லை.
அதில் உண்மையான அன்பு இருந்தது. உண்மையான தியாகம் இருந்தது. உண்மையான நஷ்டமும் இருந்தது.
ஆனால் இன்று நான் கேட்கும் கேள்வி வேறு.
அவைகளில் எவ்வளவு தேவனுடைய திட்டவட்டமான நடத்துதல்?
எவ்வளவு என்னுடைய சொந்த ஆர்வம்?
எவ்வளவு மனிதர்கள்மேல் கொண்ட அன்பு?
எவ்வளவு என் இயற்கையான குணம்?
எவ்வளவு என்னுடைய மறைவான உள்நோக்கங்கள்?
எனக்குத் தெரியாது.
தேவனுக்காகச் செய்வதற்கும், தேவனால் நடத்தப்பட்டுச் செய்வதற்கும் வித்தியாசம் இருக்கலாம் என்பதை இப்போதுதான் கற்றுக்கொண்டிருக்கிறேன்.
அதனால்தான் இப்போது நான் முன்புபோல் அவ்வளவு வேகமாக ஓட விரும்பவில்லை.
தேவனுடைய திட்டவட்டமான நடத்துதலின்படி, தேவனுடைய பரம வளங்களைக்கொண்டு, தேவனுடைய மகிமைக்காக வாழ்வதும் செய்வதுமே என் உள்நோக்கமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
ஆனால் இங்கும் நான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கடந்த காலத்தைப் பார்த்து, “அப்போது எனக்குத் தெரியவில்லை; இப்போது தெரிந்துவிட்டது” என்று சொல்லிவிட முடியாது.
அப்படி சொன்னால் இன்னொரு குருட்டுப்புள்ளிக்குள் விழுந்துவிடலாம்.
அதனால்தான் கேள்வி,
“என்னை நடத்தியவர் யார்?”
என்பதோடு முடிவதில்லை.
இன்றும் நான் என்னையே கேட்டுக்கொள்ள வேண்டிய இன்னொரு கேள்வி இருக்கிறது:
“என்னை நடத்துகிறவர் யார்?”