Preloader
சாட்சியின் கூடாரம்
15 Oct 2026 : என் உறவுகள் மேலும் வாசிக்க
3 Oct 2026 : ஆரம்பமும், முடிவும் மேலும் வாசிக்க
21 Sep 2026 : வனாந்தர வளங்கள் மேலும் வாசிக்க
வனாந்தர வளங்கள்

வனாந்தர வளங்கள்

“அவர் அவர்களை நோக்கி: வனாந்தரமான ஓரிடத்தில் தனித்தே சற்று இளைப்பாறும்படி போவோம் வாருங்கள் என்றார்.” — மாற்கு 6:31

பாலைவனப் பயணம், இருளின் பள்ளத்தாக்கு, கடினமான பாதை, இடர்ப்படும் காலம் — இவை தேவ மக்களின் வாழ்க்கையில் இருக்கத்தான் செய்கின்றன. தேவன் தம் பிள்ளைகளைப் பாலைவன வழியில் நடத்துவது விந்தையல்ல என்பதை என் வாழ்க்கையின் பாதைகளிலும் கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக்கொண்டேன்.

நான் நம்பியிருந்தவைகளையும் சார்ந்திருந்தவைகளையும், நம்பியிருந்தவர்களையும் சார்ந்திருந்தவர்களையும் தேவன் என்னிடமிருந்து பிரித்திருக்கிறார், விலக்கியிருக்கிறார். இழந்தவைகளையும் இழந்தவர்களையும் நினைத்து நான் ஏங்கியிருக்கிறேன், அழுதிருக்கிறேன். பழக்கமான சூழல்கள் மாறியிருக்கின்றன. என்னைத் தாங்கியவர்கள் விலகியிருக்கிறார்கள். பாதுகாப்பாகத் தோன்றியவை ஒன்றன்பின் ஒன்றாக மறைந்துபோயிருக்கின்றன.

மாம்சப்பிரகாரமானவர்களும் என்னை விலக்கினார்கள்; ஆவிக்குரியவர்களும் என்னைவிட்டு விலகினார்கள். பெற்றவர்களும் விலகினார்கள்; வளர்த்தவர்களும் விலகினார்கள். நாளைக்கு எங்கு போவேன் என்று தெரியாது. என்ன செய்வேன் என்று தெரியாது. எங்கு தங்குவேன் என்று தெரியாது. யார் என்னைத் தாங்குவார் என்றும் தெரியாது.

பின்னால் திரும்பிப் பார்த்தால் பழக்கமானவை ஒவ்வொன்றாக மறைந்துகொண்டிருந்தன; முன்னால் பார்த்தால் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. இப்படிப்பட்ட காலங்களில்தான் வனாந்தரம் என்றால் என்ன என்பதை நான் புத்தகத்திலிருந்து அல்ல, வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொண்டேன்.

வனாந்தரத்தின் தனிமை

இப்போது என் வாழ்க்கையின் வட்டம் மிகவும் சிறியதாகிவிட்டது. மனிதர்களிடமிருந்து மின்னஞ்சல்கள் வருவதில்லை. வெளியுலகத் தொடர்பு மிகவும் குறைந்துவிட்டது. தொலைபேசியில் தொடர்புகொள்பவர்களையும், நேரில் சந்திப்பவர்களையும் விரலால் எண்ணிவிடலாம். இந்த வனாந்தரத்தில் நாங்கள் உயிரோடு இருக்கிறோமா இல்லையா என்பது இவர்களுக்கு மட்டுமே தெரியும்.

இதுதான் இன்று எங்கள் வாழ்க்கை வந்தடைந்திருக்கும் இடம்.

ஒரு காலத்தில் மனிதர்களும், தொடர்புகளும், ஓட்டங்களும், பணிகளும் நிறைந்திருந்த வாழ்க்கை இப்படியும் மாறும் என்று நான் நினைத்ததில்லை. சுற்றியிருந்த குரல்கள் ஒவ்வொன்றாகக் குறைந்தன. மனிதர்களின் காலடிச் சத்தங்கள் தொலைந்துபோயின. முதலில் இந்த அமைதி தனிமையாகத் தெரிந்தது. சில நேரங்களில் அது வலியாகவும் இருந்தது.

ஆனால் அந்த அமைதிக்குள் இன்னொரு குரலை இன்னும் தெளிவாகக் கேட்கவும் கற்றுக்கொண்டேன்.

அரண்மனையிலிருந்து வனாந்தரத்திற்கு

மோசேயின் வாழ்க்கையை நினைக்கும்போதும் இந்தப் பாதை எனக்குத் தெரிகிறது. அவருடைய வாழ்க்கையின் முதல் நாற்பது ஆண்டுகள் எகிப்தின் அரண்மனையோடு தொடர்புடையவை. “மோசே எகிப்தியருடைய சகல சாஸ்திரங்களிலும் கற்பிக்கப்பட்டு, வாக்கிலும் செய்கையிலும் வல்லவனானான்” (அப்போஸ்தலர் 7:22). கல்வி இருந்தது; அறிவு இருந்தது; அரண்மனையின் பின்னணி இருந்தது; அவரைச் சுற்றிலும் எகிப்தின் வளங்கள் இருந்தன.

அடுத்த நாற்பது ஆண்டுகள் முற்றிலும் வேறுபட்டவை. அரண்மனை இல்லை; வனாந்தரம். எகிப்தின் பெருமை இல்லை; ஆடுகள். வாக்கிலும் செய்கையிலும் வல்லவன் என்று சொல்லப்பட்டவர், “நான் பார்வோனிடத்திற்குப் போகவும்... நான் எம்மாத்திரம்?” என்று கேட்கிறவராக மாறினார் (யாத்திராகமம் 3:11).

இதில் எனக்கு ஒரு விசித்திரமான அழகு தெரிகிறது.

எகிப்தின் அரண்மனையில் மோசே பலவற்றைக் கற்றுக்கொண்டார்; ஆனால் வனாந்தரத்தில் தேவனைச் சார்ந்திருக்கக் கற்றுக்கொண்டார். அரண்மனை அவருக்கு எகிப்தின் வளங்களைக் காட்டின; வனாந்தரம் தேவனுடைய வளங்களைக் காட்டியது. அரண்மனையில் மனித வல்லமை எவ்வளவு பெரியது என்பதைப் பார்த்தவர், வனாந்தரத்தில் மனிதன் எவ்வளவு சிறியவன் என்பதையும் தேவன் எவ்வளவு பெரியவர் என்பதையும் அறிந்தார்.

இன்னும் ஆச்சரியம் என்னவென்றால், எரிகிற முட்செடி மோசேக்கு அரண்மனையில் தோன்றவில்லை. அது வனாந்தரத்தில் தோன்றியது. தேவனுடைய அழைப்பின் புதிய கட்டமும் அரண்மனையில் தொடங்கவில்லை; ஆடுகளை மேய்த்துக்கொண்டு வனாந்தரத்தின் பின்புறத்திற்குச் சென்றிருந்தபோதுதான் தொடங்கியது.

நான் வனாந்தரத்தில் கற்றுக்கொண்டவை

என் வாழ்க்கையிலும் சில காரியங்களை வசதியான காலங்களில் அறிந்திருக்கிறேன். ஆனால் தேவனைச் சார்ந்திருத்தல், அவர்மேல் சாய்ந்திருத்தல், அவரைப் பற்றிக்கொள்ளுதல், அவரை நம்புதல், அவரையே நோக்குதல் — இவைகளை வனாந்தரத்தில்தான் அதிகமாகக் கற்றுக்கொண்டேன்.

பிடித்துக்கொள்ள வேறு எதுவும் இல்லாதபோது அவரைப் பற்றிக்கொள்வதையும், நாளை என்னவாகும் என்று தெரியாதபோது அவரை நம்புவதையும், எந்தத் திசையில் போவது என்று தெரியாதபோது அவரையே நோக்குவதையும் வனாந்தரம் எனக்குக் கற்றுத்தந்தது.

என்னைத் தாங்கியவர்கள் இருந்தபோது தேவன் என்னைத் தாங்குகிறவர் என்பதை ஏட்டளவில் அறிந்திருந்தேன். ஆனால் என்னைத் தாங்கியவர்கள் விலகியபோதுதான், தேவன் மட்டுமே என்னைத் தாங்குகிறவர் என்பதை அனுபவத்தில் அறிந்துகொண்டேன்.

எனக்குத் தெரிந்த ஆதாரங்கள் அகன்றபோதுதான், அதுவரை எனக்குத் தெரியாத தேவனுடைய வளங்கள் இருப்பதையும் அறிந்தேன்.

வனாந்தரத்தில் மறைந்திருக்கும் வளங்கள்

வனாந்தரப் பயணத்தின் தொடக்கத்தில் சுட்டெரிக்கும் வெயிலும், வறண்ட மணலுமே என் கண்களுக்குத் தெரிந்தன. ஆனால் போகப்போக வனாந்தரத்தில் மணல் மட்டுமல்ல, பரம வளங்களும் மறைந்திருக்கின்றன என்பது தெரிய ஆரம்பித்தது.

இஸ்ரயேலருக்கு எகிப்தில் நைல் நதி இருந்தது. வனாந்தரத்தில் நைல் இல்லை; ஆனால் அங்கே கற்பாறை இருந்தது. எகிப்தில் உணவைப் பெறுவதற்கான இயற்கையான வழிகள் இருந்தன. வனாந்தரத்தில் அவை இல்லை; ஆனால் அங்கே ஒவ்வொரு காலையிலும் மன்னா இருந்தது.

எகிப்தில் தண்ணீர் எங்கிருந்து வரும் என்று அவர்களுக்குத் தெரியும். வனாந்தரத்தில் தெரியாது. எகிப்தில் நாளைக்கான உணவை எப்படிப் பெறுவது என்று ஓரளவு கணக்கிட முடியும். வனாந்தரத்தில் முடியாது. ஒவ்வொரு நாளும் தேவனை எதிர்பார்க்க வேண்டியிருந்தது.

வனாந்தரத்தில் அவர்கள் இழந்தது அதிகம். ஆனால் அவர்கள் கண்டுபிடித்தது அதைவிட அதிகம்.

இதையே என்னுடைய வனாந்தரங்களிலும் கொஞ்சம் கொஞ்சமாகக் கண்டிருக்கிறேன்.

நான் நதியை எதிர்பார்த்த இடத்தில் தேவன் கற்பாறையைத் திறந்திருக்கிறார்.

நான் நிலத்திலிருந்து வருவதை எதிர்பார்த்தபோது பரத்திலிருந்து வந்திருக்கிறது.

நான் ஒரு நிழலைத் தேடியபோது எதிர்பாராத ஒரு மேகம் நிழல் தந்திருக்கிறது.

இருள் என்று நான் நினைத்த சில இரவுகளில் அதே மேகம் எனக்கு வெளிச்சமாகவும் இருந்திருக்கிறது.

சுனைகள் சுரந்திருக்கின்றன. எதிர்பாராத இடங்களில் மலர்கள் துளிர்த்திருக்கின்றன.

வனாந்தரத்தில் நுழைந்தபோது இஸ்ரயேலருக்குக் கற்பாறைக்குள் தண்ணீர் இருப்பது தெரியாது. வானத்தில் அவர்களுக்கான அப்பம் இருக்கிறது என்பதும் தெரியாது. நாள்தோறும் தங்களை நடத்துவதற்கு மேகம் காத்திருக்கிறது என்பதும் தெரியாது.

அவை அங்கே இருந்தன. ஆனால் தேவையான நேரம் வரும்வரை அவைகளை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

என் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போது இதுதான் என்னை அதிகமாக ஆச்சரியப்படுத்துகிறது. என்னிடம் இல்லாததையும், இல்லாதவர்களையும்  மட்டுமே நான் பார்த்துக்கொண்டிருந்தேன். ஆனால் அடுத்த நாளுக்காக தேவன் வைத்திருந்ததை அன்று என்னால் பார்க்க முடியவில்லை.

வனாந்தரம் என் தேவைகளை மட்டும் எனக்குக் காட்டவில்லை; தேவனுடைய போதுமான தன்மையையும் காட்டியிருக்கிறது. என் பலவீனத்தை மட்டும் எனக்கு உணர்த்தவில்லை; அவருடைய வல்லமையையும் அறியச் செய்திருக்கிறது. என்னுடைய வளங்கள் எவ்வளவு குறைவானவை என்பதை மட்டும் காட்டவில்லை; அவருடைய வளங்கள் எவ்வளவு அளவற்றவை என்பதையும் கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுத்தந்திருக்கிறது.

என் கைகளிலிருந்து ஒவ்வொன்றாக அகன்றபோது, என் கைகள் காலியாகிக்கொண்டிருக்கின்றன என்றுதான் நினைத்தேன். பின்னர்தான், என் கைகள் காலியானபோது தேவனுடைய கரங்கள் எவ்வளவு நிறைந்திருக்கின்றன என்பதை அறிந்தேன்.

வனாந்தரத்தில் இளைப்பாறுதல்

“வனாந்தரமான ஓரிடத்தில் தனித்தே சற்று இளைப்பாறும்படி போவோம் வாருங்கள்.”

இந்த வார்த்தைகளில் இப்போது எனக்கு ஒரு விசித்திரமான கேள்வி எழுகிறது.

வனாந்தரத்தில் யாராவது இளைப்பாறுவார்களா? இளைப்பாறுவதற்காக வனாந்தரத்திற்கா போவார்கள்?

வனாந்தரம் என்றால் வெறுமை. தனிமை. மனித நடமாட்டம் குறைந்த இடம். பழக்கமான வசதிகள் இல்லாத இடம். சுற்றியிருந்த குரல்கள் கேட்காத இடம்.

அப்படிப்பட்ட இடத்தைத்தான் ஆண்டவர், “தனித்தே சற்று இளைப்பாறும்படி போவோம் வாருங்கள்” என்று குறிப்பிடுகிறார்.

இந்த வசனத்தின் பொருளை முன்பு நான் இவ்வளவு ஆழமாகப் புரிந்துகொள்ளவில்லை. ஆனால் இன்று என் வாழ்க்கையைப் பார்க்கும்போது அது எனக்கு வேறுவிதமாகத் தெரிகிறது.

முதலில் தனிமையாகத் தெரிந்த இடமே போகப்போக இளைப்பாறுதலின் இடமாகவும் மாறியிருக்கிறது.

மனிதர்களின் எதிர்பார்ப்புகளிலிருந்து விலகியிருப்பதில் ஓர் இளைப்பாறுதல் இருக்கிறது. என்னை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லாததில் ஓர் இளைப்பாறுதல் இருக்கிறது. எல்லாவற்றுக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை என்பதில் ஓர் இளைப்பாறுதல் இருக்கிறது. எல்லாவற்றையும் நான் செய்ய வேண்டியதில்லை என்பதில் ஓர் இளைப்பாறுதல் இருக்கிறது. எல்லாராலும் அறியப்பட வேண்டியதில்லை என்பதிலும் ஓர் இளைப்பாறுதல் இருக்கிறது.

ஒரு காலத்தில் வனாந்தரத்திலிருந்து எப்போது வெளியே வருவேன் என்று நினைத்தேன். ஆனால் இன்று வனாந்தரத்திலிருந்து வெளியேறுவதைவிட, வனாந்தரத்தில் நான் கண்டுகொண்டவைகளை இழந்துவிடக்கூடாது என்ற எண்ணமே எனக்குள் அதிகமாக இருக்கிறது.

இப்போது என் வனாந்தரப் பாதைகளைத் திரும்பிப் பார்க்கும்போது, சுட்டெரிக்கும் வெயிலும் வறண்ட மணலும் மட்டுமே நினைவுக்கு வருவதில்லை.

கற்பாறை நினைவுக்கு வருகிறது.

சுனைகள் நினைவுக்கு வருகின்றன.

காலையில் கிடைக்கும் மன்னா நினைவுக்கு வருகிறது.

பகலில் நிழல் தரும் மேகமும், இரவில் வெளிச்சம் தரும் அதே மேகமும் நினைவுக்கு வருகின்றன.

அவைகளோடு இன்னொன்றும் நினைவுக்கு வருகிறது — இளைப்பாறுதல்.

வனாந்தரமும் இளைப்பாறுதலும் ஒன்றுக்கொன்று முரணானவை என்று முன்பு நினைத்தேன். இன்று அப்படித் தோன்றவில்லை.

என் வனாந்தரமே என் இளைப்பாறுதலாகியிருக்கிறது.

வனாந்தரம் வளமற்ற இடமல்ல. என்னுடைய வளங்கள் முடிந்த இடங்களில் தேவனுடைய வளங்கள் வெளிப்பட்டிருக்கின்றன. மனிதர்களின் குரல்கள் குறைந்த இடத்தில் அவருடைய குரல் தெளிவாகியிருக்கிறது. நான் சாய்ந்திருந்தவை விலகிய இடத்தில் அவர்மேல் சாய்ந்திருக்கக் கற்றுக்கொண்டிருக்கிறேன்.

என் வனாந்தரத்தில் நான் இழந்தது அதிகம். ஆனால் நான் கண்டுபிடித்தது அதைவிட அதிகம்.


21 செப்டம்பர் 2026
மெர்லின் இராஜேந்திரம்

மெர்லின் இராஜேந்திரம்

ஒரு சிறிய கைகாட்டி

எழுத்தின் வழியே எழும் சில அதிர்வலைகள்...

அதிர்வலைகள்