Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More

05- லேவியராகமம் - போஜனபலி - அதிகாரம் 2, பாகம் 2 இந்த ஐந்தாம் பாடத்தில் நாம் போஜனபலியைத் தொடர்கிறோம். இந்தப் பாடத்தில் போஜனபலியில் என்னென்ன பொருட்கள் பயன்படுத்தக்கூடாது என்றும், போஜனபலியை எப்படிப் பலிகொடுத்தார்கள், அதாவது சமைத்துக் கொடுத்தார்களா, சமைக்காமல் உதிரிமாவாகக்  கொடுத்தார்களா என்றும் பார்ப்போம். 



05 - லேவியராகமம்,

அதிகாரம் 2

போஜனபலி, பாகம் 02

1. வேதாகமத்தின் நோக்கம் - கிறிஸ்துவைக் காண்பது

பரிசுத்தவான்களே, இன்று நாம் லேவியராகமம் இரண்டாம் அதிகாரத்தைத் தொடர்கிறோம். வேதாகமத்தில் நிறையத் தகவல்கள், விவரங்கள், இருக்கின்றன. கணவன் மனைவி உறவு, குடும்பம், பிள்ளைகளை வளர்த்தல், வெற்றிகரமாக தொழில் செய்தல் என மனித வாழ்க்கைக்குத் தேவையான எல்லாம் வேதாகமத்தில் இருக்கின்றன. ஆனால், இப்படிப்பட்ட தகவல்களையோ, பாடங்களையோ, போதனைகளையோ தேடி நாம் வேதாகமத்துக்கு வருவதில்லை, வரக்கூடாது. ஒருநாள் சில கிரேக்கர்கள் பிலிப்புவிடம் வந்து, "ஐயா, நாங்கள் இயேசுவைக் காண விரும்புகிறோம்" என்று சொன்னதுபோல  "நான் இயேசுவைப் பார்க்கவேண்டும், இயேசு கிறிஸ்து யார், அவர் எப்படிப்பட்டவர், அவர் என்ன செய்துமுடித்தார், அவர் செய்துமுடித்த வேலை என்னவென்று நான் பார்க்க விரும்புகிறேன்," என்ற நோக்கத்தோடுதான் நாம் வேதாகமத்துக்கு வரவேண்டும். சில போதனைகளையும், சில சட்டதிட்டங்களையும், சில ஒழுங்குகளையும், சில நெறிமுறைகளையும்  கற்றுக்கொள்வதற்காக வேதாகமத்தை வாசிப்பது தாழ்வான நோக்கம்.  இயேசு கிறிஸ்து யார், அவர் எப்படிப்பட்டவர், அவர் என்ன செய்தார் என்பதை வெளிப்படுத்துவதுதான் வேதாகமத்தின் முதலும் முடிவுமான நோக்கம்.  

2. நிழலும், நிஜமும் (மெய்ப்பாடும்)

பழைய ஏற்பாட்டில் கொடுக்கப்பட்ட பலிகள், கொண்டாடிய பண்டிகைகள், நிறைவேற்றிய சடங்குகள் ஆகிய அனைத்தும் நிழல் என்றும், அவைகள் சுட்டிக்காட்டும் மெய்ப்பாடு வேறோர் இடத்தில் இருக்கிறது என்றும் முதல் பாடத்தில் பார்த்தோம். தமிழ் வேதாகமத்தில் நிழல் என்ற வார்த்தைக்கு இணையாக  சாயல், ஒப்பனை, மாதிரி, படிவம், நகல்போன்ற பல வார்த்தைகளும், ஆங்கில வேதாகமத்தில் copy, shadow, demonstration, illustration, representation, prototype, symbol, type என்ற வார்த்தைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒரு புறம் நிழல் இருக்கிறது. நிழலுக்குரிய நிஜம், மெய், மெய்ப்பாடு, மெய்ப்பொருள், அதாவது truth, reality, actuality, originality வேறெங்கோ இருக்கிறது. லேவியராகமத்தில் நாம் பார்க்கிற இந்தப் பலிகள் நிழல்கள், சாயல்கள், ஒப்பனைகள், மாதிரிகள், நகல்கள், படிவங்கள். 

இஸ்ரயேலர்களின் அறியாமை

இஸ்ரயேலர்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைத் தங்களுடைய சொந்த இரட்சகராக, மேசியாவாக, ஏற்றுக்கொள்ளவில்லை; இது அவர்களுடைய ஒரு தவறு. இன்றும் பெரும்பாலான இஸ்ரயேலர்கள் இயேசுவை மேசியாவாக விசுவாசிக்கவில்லை. இதற்கு ஒரு முக்கிய காரணம் தாங்கள் செலுத்திய பலிகள்தான், கொண்டாடிய திருவிழாக்கள்தான் மெய், மெய்ப்பாடு; அவைகள்தான் முடிவான இலக்கு என்று நினைத்தார்கள். தாங்கள் செலுத்திய பலிகள், கொண்டாடிய திருவிழாக்கள், பின்பற்றிய ஆராதனைமுறைமைகள், அணிந்த ஆடைகள் ஆகியவைகளெல்லாம் வரப்போகிற  ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைக் காண்பிக்கின்ற நிழல்கள் என்பதை அவர்கள் பார்க்கத் தவறினார்கள். இதைப் பார்க்கத் தவறியதால்தான் அவர்கள் நிழல்களை முடிவானதாக, இறுதியானதாக மெய்ப்பொருளாக, மெய்ப்பாடாக, சத்தியமாக, எடுத்துக்கொண்டார்கள். இவைகள் சுட்டிக்காட்டிய நிஜத்தை, மெய்மையை, அவர்கள் தவறவிட்டார்கள். அவர்கள் செய்த அந்தத் தவறை நாம் செய்யக்கூடாது.    

3. பழைய ஏற்பாடு - நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும்

நீங்கள் இப்போது எனக்குமுன் இருந்தால், "பழையஏற்பாட்டை இரண்டே இரண்டு வார்த்தைகளில் சொல்வதானால், என்ன  வார்த்தைகள் பயன்படுத்தலாம்?" என்ற ஒரு கேள்வியை நான் உங்களிடம் கேட்க விரும்புவேன். பழைய ஏற்பாட்டை நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் என்று இரண்டு வார்த்தைகளில் சுருக்கிவிடலாம்.

"நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்," என்று மத்தேயு 5:17இல் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கூறுகிறார்.அழிப்பதற்கு வரவில்லை, நிறைவேற்றுவதற்கு வந்ததாக என்று இயேசு கூறுகிறார். நிறைவேற்ற என்றால் fulfill என்று பொருள். fill to the full. அதாவது "அந்த நிழலை, அந்த மாதிரியை, அந்த ஒப்பனையை, நான் நிறைவேற்ற வந்தேன். அந்த நகலின் originalனாக, அசலாக, மெய்யாக, மெய்ப்பொருளாக, மெய்ப்பாடாக நான் வந்தேன்," என்று அவர் கூறுகிறார்.

யோவான் ஸ்நானன் புதிய ஏற்பாட்டின் முன்னோடி. "நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசன வாக்கியங்களும் யோவான்வரைக்கும் வழங்கிவந்தது," என்று லூக்கா 16:16 கூறுகிறது. அதாவது யோவான்ஸ்நானன்வரை நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனமும் இருந்தன. யோவான்ஸ்நானன் வந்தவுடன் அவைகளின் அசல் ஆரம்பித்தது.

மூன்று கூடாரங்கள்

மத்தேயு பதினேழாம் அதிகாரத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மறுரூபமாகும் நிகழ்ச்சி விவரிக்கப்பட்டுள்ளது. இயேசு மறுரூபமாகும்போது மோசேயும் எலியாவும் அவரோடுகூடத் தோன்றுகிறார்கள். "அப்பொழுது பேதுரு இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது; உமக்குச் சித்தமானால், இங்கே உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்றான்."

நடுவில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, ஒரு பக்கம் மோசே, இன்னொரு பக்கம் எலியா. மோசே நியாயப்பிரமாணத்தின் பிரதிநிதி; எலியா தீர்க்கதரிசிகளின் பிரதிநிதி. "அவன் பேசுகையில், இதோ, ஒளியுள்ள ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது. இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று." மத். 17:5.

இதன் பொருள் என்ன? "இதுவரை நீங்கள் மோசே அடையாளப்படுத்தும் நியாயப்பிரமாணத்திற்கும் எலியா அடையாளப்படுத்தும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடுத்தது போதும். நியாயப்பிரமாணங்களும் தீர்க்கதரிசிகளும் சுட்டிக்காட்டியவர் இப்போது வந்துவிட்டார். இதோ! அவருக்குச் செவிகொடுங்கள்," என்று பிதா கூறுகிறார். “அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுத்துப் பார்க்கையில் இயேசுவைத்தவிர வேறொருவரையும் காணவில்லை.” இது வசனம் 8. இயேசு கிறிஸ்துவே நேரில் தோன்றினபிறகும் பேதுருவால் மோசேயையும் எலியாவையும் விடமுடியவில்லை. இயேசுவுக்கு ஒரு பெரியகூடாரம் போட்டு, மோசேக்கும் எலியாவுக்கும் சிறிய கூடாரங்கள் போட்டுக்கொள்ளலாம் என்று பேதுரு நினைத்திருக்கலாம். ஆனால் கண்களை ஏறெடுத்துப் பார்க்கின்றபோது அங்கு இயேசு ஒருவரைத் தவிர வேறு யாரும் இருக்கவில்லை.   

நிஜம், மெய்ப்பொருள், மெய்ப்பாடு, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து

லூக்கா 24ஆம் அதிகாரத்தில் உள்ள நிகழ்ச்சி உங்களுக்கு நினைவிருக்கலாம். இது ஆண்டவராகிய இயேசு உயிர்த்தெழுந்தபின் நடக்கிற ஒரு நிகழ்ச்சி. கிலெயோப்பாவும் இன்னொருவரும் எம்மாவுக்கு நடந்துபோகிறார்கள். இயேசு கிறிஸ்து அவர்களோடு ஏழு எட்டு மைல் தூரம் நடந்துபோகிறார். கூட வருகிறவர் இயேசு என்று அவர்களுக்குத் தெரியாது. இயேசு அவர்களோடு நடந்துபோகையில், "மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்." கடைசியாக, கூடவந்தவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து என்று  தெரிந்தபோது, "அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி: வழியிலே அவர் நம்முடனே பேசி, வேதவாக்கியங்களை நமக்கு விளங்கக்காட்டினபொழுது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா?"  என்று இரண்டுபேரும் கேட்பார்கள். நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் தம்மையே சுட்டிக்காட்டின என்பதை ஆண்டவராகிய இயேசு இங்கு குறிப்பிடுகிறார். இந்தக் காரியத்தை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

பழைய ஏற்பாட்டைச் சுருங்கக்கூறின் நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும். இந்த இரண்டும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவையே சுட்டிக்காட்டுகின்றன. பழைய ஏற்பாட்டில் நியாயப்பிரமாணங்களிலும் தீர்க்கதரிசனங்களிலும் நிழலை, மாதிரியை, சாயலை, படிவத்தை, நகலைப் பார்க்கின்றோம், அதன் மெய்மை, நிஜம், மெய்ப்பொருள், மெய்ப்பாடு, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து.

அன்று இரவே, இயேசு அவர்களுக்குத் தோன்றி, "அவர்களை நோக்கி: மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக்குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேறவேண்டியதென்று, நான் உங்களோடிருந்தபோது உங்களுக்குச் சொல்லிக்கொண்டுவந்த விசேஷங்கள் இவைகளே என்றார்."        

4. போஜனபலி - பொருட்கள் - எண்ணெய், தூபவர்க்கம், உப்பு

இதை நினைவில் வைத்துக்கொண்டு நாம் லேவியராகமம் இரண்டாம் அதிகாரத்தைத் தொடர்வோம்.  போனவாரம் நாம் போஜனபலியைக்குறித்துப் பார்க்க ஆரம்பித்தோம். தமிழ் வேதாகமம் இந்தப் பலியை போஜனபலி என்று குறிப்பிடுகிறது. போஜன பலி என்பதற்குப் பதிலாகத் தானியபலி என்று சொல்வது சிறப்பாக இருக்கும். இந்த இரண்டு வார்த்தைகளையும் நான் மாறிமாறிப் பயன்படுத்துவேன்.

சரி, தொடர்ந்து பயணிப்போம், வாருங்கள். தானிய பலியில் எண்ணெய், தூபவர்க்கம், உப்பு, ஆகியவை சேர்க்கப்பட்டன. இந்த மூன்று பொருட்களில் தூபவர்க்கத்தைப்பற்றிப் பார்க்க ஆரம்பித்தோம்.

ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். எண்ணெய் என்று சொன்னால் அது எப்போதும் ஒலிவ எண்ணெயைத்தான் குறிக்கும். எண்ணெயின் உள்ளான அம்சம், புறம்பான அம்சம் என்னவென்று நாம் போனவாரம் பார்த்தோம்.

சரி, தூபவர்க்கம் எதற்காக? மிருகங்களைப் பலிகளாகச் செலுத்தும்போது, அதில் இயற்கையான ஒரு வாசனை (smell) இருக்கும். துர்வாசனை என்று சொல்லலாமா? தெரியவில்லை. அந்த இறைச்சியின் இயற்கையான வாசனை முகர்வதற்கு அவ்வளவு நன்றாக இருக்காது. ஆனால், சர்வாங்க தகனபலியின் புகையைத் தேவன் முகர்கிறார். எனவே, துர்வாசனையைப்போக்கி சுகந்த வாசனையை ஏற்படுத்துவதற்காக தூபவர்க்கம்  சேர்த்திருக்கலாம் என்பது வேதவல்லுனர்களின் கருத்து. தூபவர்க்கம் மிகவும் விலையேறப்பெற்றது. அந்த நாட்களில் அது எளிதாகக் கிடைக்கவில்லை. அதை அவர்கள் அரேபியாவிலிருந்து இறக்குமதி செய்திருப்பார்கள் என்று கருதப்படுகிறது.  எனவே, துர்வாசனையை நீக்கி சுகந்த வாசனையை உருவாக்குவதற்க்காகவும், மதிப்புவாய்ந்தவைகளைத் தேவனுக்குக் கொடுப்பதற்காகவும் அவர்கள் தூபவர்க்கத்தைப் பயன்படுத்தியிருக்கலாம்.               

உடன்படிக்கையின் உப்பு

போனவாரம் உப்பைக்குறித்துப் பார்க்க ஆரம்பித்தோம். சரி, தொடர்வோம். லேவியராகமம் 2:13யை வாசிப்போம். “நீ படைக்கிற எந்த போஜனபலியும் உப்பினால் சாரமாக்கப்படுவதாக. உன் தேவனுடைய உடன்படிக்கையின் உப்பை உன் போஜனபலியிலே குறையவிடாமல், நீ படைப்பது எல்லாவற்றோடும் உப்பையும் படைப்பாயாக.” இந்த வசனத்தில் உப்பு என்ற வார்த்தை மூன்றுமுறை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. வெறுமனே "உப்பு" என்று குறிப்பிடப்படவில்லை. அது ‘உடன்படிக்கையின் உப்பு.’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது என்ன உடன்படிக்கையின் உப்பு? அந்த நாட்களில் இரண்டுபேர் உடன்படிக்கை செய்தபோது சம்பந்தப்பட்டவர்கள் பலிகள் கொடுப்பதும், மிருகங்களைக் கொன்று இரத்தம் சிந்துவதும் வழக்கமாக இருந்தது. மேலும், உடன்படிக்கை செய்தவர்கள் உடன்படிக்கையை உறுதிப்படுத்த சேர்ந்து சாப்பிட்டார்கள், பரிசுப்பொருட்களை அன்பளிப்புகளாகக் கொடுத்தார்கள். உடன்படிக்கை செய்தபோது இப்படிப்பட்ட பல பழக்கங்கள் நடைமுறையில் இருந்தன.

இந்தப் புரிதலோடு இந்த வசனத்தை வாசித்தால், தேவன் தம் மக்களிடம், "இது உடன்படிக்கையின் உப்பு; நீங்களும் நானும் உடன்படிக்கை பண்ணுகிறோம். இந்த உடன்படிக்கையிலே என் பங்குக்கு நான் உண்மையும் உத்தமுமாயிருப்பேன்; நீங்கள் உங்களுடைய பங்குக்கு உண்மையும் உத்தமுமாயிருப்பதற்கு அடையாளமாக, அதாவது இந்த உடன்படிக்கையை மீறமாட்டீர்கள் என்பதற்கு அடையாளமாக, பலியில் உப்பைக் குறையவிடக்கூடாது. இது  உடன்படிக்கையின் உப்பு," என்று கூறுகிறார் என்று புரிந்துகொள்ளலாம். இது முதல் குறிப்பு.

உப்பு என்று சொன்னதும், சுவைதான் முதலாவது நம் மனதில் தோன்றும். ஆனால், ஒரு பொருளை அழுகாமல், கெட்டுப்போகாமல், பாதுகாப்பதுதான் உப்பின் பிரதானமான தன்மை. இதுதான் உடன்படிக்கையின் முதல் அம்சம். இன்று பதிவு அலுவலகத்தில் அல்லது ஓர் ஒப்பந்தத்தில் பத்திரத்தில் கையெழுத்து போடுவதுபோல அவர்கள் உடன்படிக்கையின்போது உப்பைப் பயன்படுத்தினார்கள்.

இரண்டாவது, உடன்படிக்கை மிகவும் பரிசுத்தமானது. ஒருவன் தேவனோடு உடன்படிக்கை, அதாவது ஒப்பந்தம், பண்ணுகிறான். "தேவனோடுடனான உறவை நான் மிகவும் பத்திரமாக, பரிசுத்தமாக, பாதுகாத்துக்கொள்வேன், அதைப் பரிசுத்தக் குலைச்சலாக்கமாட்டேன்,"  என்பதற்கு அடையாளமாக பலியில் உப்பைச் சேர்க்கவேண்டும்.

மூன்றாவது, தூபவர்க்கத்தைப்போல் உப்பும் மிகவும் விலையேறப்பெற்றது. அந்த நாட்களில் உப்பு மலிவாகக் கிடைக்கவில்லை. அதனால் பலியில் உப்பைச் சேர்க்கும்போது, "தேவனே, உம்முடனான உறவை நான் மிகவும் உயர்வாக, மிகவும் விலையேறப்பெற்றதாக, கருதுகிறேன்," என்று பறைசாற்றுகிறான்.

எனவே, இது உடன்படிக்கையின் உப்பு. "இந்த உடன்படிக்கையைக் காத்துக்கொள்வதற்கு, தக்கவைத்துக்கொள்வதற்கு, பேணிப்பாதுகாத்துப் பராமரிப்பதற்கு என்ன செய்யமுடியுமோ அனைத்தையும் நான் செய்வேன், நீங்களும் இந்த உடன்படிக்கையைக் காத்துக்கொள்ள பலியில் உடன்படிக்கையின் உப்பு ஒருபோதும் குறையக்கூடாது," என்று தேவன் கூறுகிறார். 

உப்பு எப்படி சாரமற்றுப் போகும் என்பதை போனவாரம் பார்த்தோம். அதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இவ்வாறு, தேவனுக்கு உண்மையும் உத்தமுமாக இருப்பதின் அடையாளமாகவும்,  இது நீடித்த, நிலையான, பரிசுத்தமான, விலைமதிப்புள்ள உறவு என்பதை மனிதன் உணர்ந்துகொள்கிறான் என்பதின் அடையாளமாகவும் உப்பு பயன்படுத்தப்பட்டது. 

போஜனபலியில் உப்பு எவ்வளவு முக்கியமானது என்று இப்போது உங்களுக்குப் புரியும்.

போஜனபலியில் ஒன்று எண்ணெய், இரண்டு தூபவர்க்கம், மூன்று உப்பு ஆகியவை பயன்படுத்தப்பட்டன.

"என் உப்பைத் தின்றுவிட்டு எனக்கே துரோகம் செய்தான்," என்று சொல்வதுண்டு. உப்பு நன்றியுணர்வைக் குறிக்கிறது. எப்போதும் நாம் நன்றியுணர்வோடு தேவனிடத்தில் வரவேண்டும் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

தானிய பலியில் சேர்க்கக்கூடாது பொருட்கள் - புளிப்பு, தேன்

இதுவரை போஜனபலியில் என்ன பொருட்கள் சேர்க்க வேண்டும் என்று பார்த்தோம். இப்போது போஜன பலியில் என்ன பொருட்கள் சேர்க்கக்கூடாது என்று பார்ப்போம். இரண்டு பொருட்களைச் சேர்க்கக்கூடாது. ஒன்று தேன், இரண்டு புளிப்பு. "ஆசாரிப்புக்கூடாரத்தில் எதிலும் புளிப்பைப் பயன்படுத்தக்கூடாது," என்று தேவன் சொல்லவில்லை. தேவசமுகத்தில் பரிசுத்த ஸ்தலத்தில் இருந்த மேஜையில் வைத்த பன்னிரெண்டு அப்பங்ளில் புளிப்பு பயன்படுத்தப்பட்டது. எபிரெயர்கள் தங்கள் சமையலில் புளிப்பு பயன்படுத்தினார்கள். வேறு சில பலிகளில்கூட புளிப்பு பயன்படுத்தப்பட்டது. அப்படியானால் எதில் புளிப்பு பயன்படுத்தக்கூடாது? பலிபீடத்தில் வைத்துத் தகனிக்கவேண்டிய பொருட்களில் புளிப்பு பயன்படுத்தக்கூடாது. தானிய பலியில் புளிப்பு பயன்படுத்தக்கூடாது. ஏனென்றால், தானிய பலியின் ஒரு சிறு பகுதி பலிபீடத்திலே ஞாபகக்குறியாகத் தகனிக்கப்பட்டது. இது முக்கியமாகக் கவனிக்கவேண்டிய காரியம்.

புளிப்பின் குணம்

தகனபலியில் ஏன் புளிப்பைப் பயன்படுத்தக்கூடாது? புளிப்பில் ஏதாவது எதிர்மறையான குணம் இருக்கிறதா? இதைப் புரிந்துகொள்வதற்கு வேதாகமம் புளிப்பைப்பற்றி என்ன சொல்கிறது என்று பார்க்க வேண்டும். 

1. “பரிசேயருடைய புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்” 

2.  “சதுசேயருடைய புளித்தமாவைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்” 

3.  “ஏரோதின் புளித்தமாவைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்”  என்று ஆண்டவராகிய இயேசு கூறுகிறார்.

4. பவுல் கொரிந்தியருக்கு எழுதியுள்ள நிருபத்தில், “துர்க்குணம் பொல்லாப்பு” என்ற புளித்தமாவைப்பற்றிப்  பேசுகிறார்.

பரிசேயருடைய புளித்தமாவு மாய்மாலம், அதாவது வெளிவேடத்தைக் குறிக்கிறது.

சதுசேயருடைய புளித்தமாவு உலகத்துக்கு அடையாளம். சதுசேயர்கள் உலகவாதிகள்.

ஏரோதினுடைய புளித்தமாவு அரசியலையும், அதிகாரத்தையும் குறிக்கிறது.

பவுல் கூறுகிற புளித்தமாவாகிய துர்க்குணம், பொல்லாப்பு என்றால் என்ன என்பதை நீங்கள் கொஞ்சம் ஆராய்ந்துபாருங்கள்.

இவ்வாறு வேதாகமம் பரிசேயருடைய புளித்தமாவு, சதுசேயருடைய புளித்தமாவு, ஏரோதினுடைய புளித்தமாவு, துர்க்குணம் பொல்லாப்பு என்ற புளித்தமாவு என்று பலவிதமான புளிப்பைப்பற்றிப் பேசுகிறது.   சரி, இப்போது புளிப்பைப்பற்றிக் கொஞ்சம் பார்ப்போம். புளிப்பின் குணம் என்ன? புளிப்புகுத் தன்னைப்போல பிறரை மாற்றும் குணம் உண்டு என்று சொன்னால், அது நேர்மறையான பொருளில் சொல்வதாகத் தோன்றும். எனவே, அப்படிச் சொல்லமுடியாது. "புளிப்பு கூடாது" என்றும், "புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்" என்றும் ஆண்டவராகிய இயேசு சொல்லும்போது அதில் எதிர்மறையான பொருள் இருக்கிறது என்றே தெரிகிறது. அப்படியானால் அதை வேறு எப்படிச் சொல்லலாம்? புளிப்புக்கு வேறொன்றின் சாயலை, குணத்தை, மாற்றும் தன்மை உண்டு, குணம் உண்டு என்று சொன்னால் ஓரளவு சரியாக இருக்கும் என்று நான் நினைக்கிறன். இதை வரையறுக்கிறது கொஞ்சம் கஷ்டம். ஆனால், எடுத்துக்காட்டின்மூலம் எளிதாகப் புரிந்துகொள்ளலாம்.

இட்டிலிக்கு மாவு அரைக்கின்றோம், அரைத்த மாவை வெளியே வைத்துவிட்டு, அடுத்தநாள் காலையில் பார்த்தால் அது பொங்கியிருக்கும், உப்பியிருக்கும். அரைத்த மாவின் இயல்பான சுவை புளிப்பாக மாறியிருக்கும். பல சுவைகளில் புளிப்பு ஒரு சுவை என்று நமக்குத் தெரியும். ஆனால், புளிப்பு, ஈஸ்ட் (yeast) ஒரு பொருளின் இயல்பான தன்மையைமாற்றி அதை உப்பப்பண்ணுகிறது, அது புளித்துப்போகிறது. 

1 கொரிந்தியர் 5:8யை நான் Message Bibleலிலிருந்து நான் மேற்கோள்காட்டுகிறேன் கவனியுங்கள். "The Messiah, our Passover Lamb, has already been sacrificed for the Passover meal, and we are the Unraised Bread part of the Feast. So, let’s live out our part in the Feast, not as raised bread swollen with the yeast of evil, but as flat bread—simple, genuine, unpretentious." இதை நான் தமிழ் கூறுகிறேன். கவனியுங்கள்.

நம்முடைய பஸ்காவாகிய மேசியா நம் பஸ்கா விருந்தாக ஏற்கெனவே பலியிடப்பட்டிருக்கிறார். நாம் அந்த பஸ்கா விருந்தின் புளிக்காத தட்டையான அப்பம். எனவே தீமை எனும் புளிப்பினால் உப்பிப்போன அப்பமாக அல்ல, மாறாக எளிமையான, உண்மையான, பாசாங்கில்லாத தட்டையான அப்பமாக நாம் இந்த விருந்தில் நம் பங்கை நிறைவேற்றுவோம்.

ஏன் புளிப்பு கூடாது? ஏன் தேன் கூடாது? ஏன் கூடாது என்பதற்கு நான் இரண்டு சொற்றொடர்களைக் கூறுகிறேன். கவனியுங்கள். புளிப்பு - it is an artificial sour. தேன்- artificial sweetener. போஜன பலியில் ஏன் தேனைச் சேர்க்கக்கூடாது? பலியில் செயற்கையான ஒரு சாயலை, செயற்கையான ஒரு குணத்தை, செயற்கையான ஒரு தன்மையைக் கூட்டாதே என்பதே இதன் பொருள். ஏன் புளிப்பைச் சேர்க்கக்கூடாது. மாவு தட்டையாக தான் இருக்கிறவண்ணமாகவே இருக்க வேண்டும். அரைத்த மாவு இயல்பாகத் தட்டையாகத்தான் இருக்கும் என்றால் அது தட்டையாகத்தான் இருக்க வேண்டும். "இல்லாத ஒன்றை இருப்பதுபோல காட்டாதே" என்பதே புளிப்பைச் சேர்க்காதே என்பதின் பொருள். தன்னிடம் இல்லாத நிறைகளை இருப்பதுபோலக் காட்டுவதும், தன்னிடம் இருக்கிற குறைகளை இல்லாததுபோல மறைப்பதும் விழுந்துபோன மனிதனுடைய சுபாவம். 

"புளிப்பு வேண்டாம்," என்று தேவன் சொல்லுகிறார் என்றால், “நீ உன்னை பெரிய ஆளாகக் காட்டிக்கொண்டு என்னிடத்தில் வராதே; நீ கொடுக்கக்கூடிய பலி it should be unraised bread, flat. நீ இருக்கிறபடி வா, simple, genuine, எந்த நடிப்பும் வேண்டாம்." இதுவே புளிப்பு வேண்டாம் என்பதின் பொருள்.

பரிசேயர்களைக்குறித்துச் சொல்லும்போது, பரிசேயர்களுடைய புளித்தமாவைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்று சொன்னாரே! அதன் பொருள் என்ன? "அவர்கள் சொல்வது ஒன்று, செய்வது வேறொன்று. அவர்களிடத்தில் மாய்மாலம், வெளிவேடம், இருக்கிறது. அவர்களில் உண்மையில்லை. அவர்கள்  புளித்துப்போய் இருக்கிறார்கள்," என்பதே அதன் பொருள். சதுசேயர்களைக்குறித்தும், "அவர்கள்  புளித்துப்போய் இருக்கிறார்கள். ஏனென்றால், அவர்கள் என் பெயரைச் சொல்லிக்கொண்டு வருகிறார்கள். ஆனால் அவர்கள் முழுக்க முழுக்க உலகவாதிகள், அவர்கள் உலக மக்கள்," என்கிறார். ஏரோதைக்குறித்து, "இவன் எனக்காகச் செய்வதெல்லாம் முழுக்க முழுக்க அரசியல்," என்கிறார். எனவே, "புளித்தமாவு வேண்டாம், Be simple, be genuine,  நீ இருக்கிறவண்ணம் வா." இதுதான் புளிப்பு கூடாது என்பதற்கு மிக முக்கியமான காரியம்.

நம் ஊரில் பிரமாண்டமான கிறிஸ்தவக் கூட்டங்களில் பேசுகிற பிரசங்கிமார்களுக்குப்பின்னாலே ஒளிவட்டங்கள் சுழல்வதை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் ஒருவித பிரத்தியேகமான குரலில் பேசுவார்கள். அவர்களைப் பார்க்கும்போது, “ஏ! அப்பா! இவர்கள் வானத்திலிருந்து இறங்கி வந்தவர்களோ!” என்று எண்ணத் தோன்றும். தேவன் சொல்கிறார், புளித்தமாவு வேண்டாம், புளிப்பு வேண்டாம். நான் சொல்வது உங்களுக்குப் புரிகிறதா? artificial sour வேண்டாம். புளித்தமாவு கூடாது என்பதற்கு "எளிமையோடே உண்மையும் உத்தமுமாக நீ இருக்கிறபடி வா, இல்லாத ஒன்றை இருப்பதாக நீ காட்டக்கூடாது." இதுதான் புளிப்பில்லாத தன்மை, செயற்கையாக எதுவும் சேர்க்கக்கூடாது.

தேன் - செயற்கையான இனிப்பூட்டி

அடுத்தது தேன். தானிய பலியில் தேனைச் சேர்க்கக்கூடாது என்று தேவன் கூறினார். வேதாகமத்தில் தேன் என்று மொழிபெயர்த்துள்ள வார்த்தை தேனையும் குறிக்கலாம். ஆனால், இங்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் வார்த்தை பொதுவாக பேரிச்சம்பழப்பாகையோ அல்லது திராட்சைச்சாறையோ குறிக்கலாம் என்று வேத வல்லுநர்கள் கூறுகிறார்கள். it is a kind of artificial sweetener. ஒன்றில் இனிப்பைச் சேர்ப்பதற்காகப் பயன்படுத்தப்படும் செயற்கையான இனிப்பூட்டி.

செயற்கையான எதையும் பலியில் சேர்க்கக்கூடாது என்பது தேவனுடைய கோட்பாடு. அந்தக் கோட்பாட்டின்படி செயற்கையா பழச்சாற்றை பயன்படுத்தக்கூடாது. செயற்கையான புளிப்பும் வேண்டாம், இனிப்பும் வேண்டாம் என்பது தேவனுடைய எண்ணம். "இயற்கையான எண்ணெய், இயற்கையான தூபவர்க்கம், இவைகளோடு உண்மையும் உத்தமுமாக உடன்படிக்கையின் உப்பைச் சேர்த்து செலுத்தினால் போதுமேதவிர, இல்லாத ஒன்றை இருக்கிறதுபோல கூட்டிச்சேர்த்து எனக்கு எதுவும் செலுத்தவேண்டிய அவசியம் இல்லை," என்பதுதான் தேவனுடைய கருத்து.

தேனைப் பயன்படுத்தக்கூடாது என்பதற்கு இன்னொரு காரணம் சொல்லப்படுகிறது. அஞ்ஞானிகள் தங்கள் தெய்வங்களுக்குச் செலுத்திய பலிகளில் அவர்கள் தேனையும் சேர்த்தார்களாம்.  எனவே, போஜன பலியில் தேனைச் சேர்த்தால் பலி செலுத்தும்போது அவர்களுக்கு அஞ்ஞான தெய்வங்களுடைய எண்ணம் வந்துவிடக்ககூடும், அதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகவும் "தேனைச் சேர்க்க வேண்டாம்," என்று சொல்லியிருக்கலாம் என்கிறார்கள்.

தம் மக்கள் தம்மை அணுகும்போது அஞ்ஞான தெய்வங்களின் எண்ணம் வந்துவிடக்கூடாது என்பதில் தேவன் குறியாக இருந்திருக்கிறார். எனவேதான் சர்வாங்க தகனபலி செலுத்துவதற்குத் தேவன் சில  மிருகங்களைத் தெரிந்தெடுத்தார், சில மிருகங்களைத் தெரிந்தெடுக்கவில்லை. எந்த மிருகங்களை அஞ்ஞான மதங்களில் பயன்படுத்தினார்களோ அந்த மிருகங்களைத் தேவன் தவிர்த்தார். அஞ்ஞான மதங்களோடு தொடர்புடைய மிருகங்களை அவர் எப்படி அனுமதிக்கவில்லையோ, அதுபோல அஞ்ஞான தெய்வங்களுக்குப் பலிகொடுக்கும்போது பயன்படுத்திய தேனையும் அவர் தடைசெய்திருக்கிறார் என்பது அறிஞர்களுடைய கருத்து.

புளிப்பு  - செயற்கையாக ஒரு தோற்றத்தை உருவாக்குவது. தேன், செயற்கையான இனிப்பைச் சேர்க்கிறது.  புளிப்பு உப்பச் செய்யும்; அது பெருமை, சுயம் நிறைய இருக்கும்.

தேன் - செயற்கையான இனிப்பு. செயற்கையான கவர்ச்சி. அதிகமான உணர்ச்சி. மிக எளிமையாகப் பிரசங்கம் செய்தால், இருப்பதை இருப்பதுபோல் காட்டினால், "அதில் என்ன கவர்ச்சி இருக்கிறது!" என்று சொல்வார்கள். எனவே, இல்லாததை இருக்கிறதுபோல் காட்டுகிறார்கள், தங்களைப் பெரிய ஆளாகக் காட்டுகிறார்கள். தேவன் இந்த இரண்டையும் வெறுக்கிறார். "புளிப்பு வேண்டாம், தேன் வேண்டாம். செயற்கையான எதையும் சேர்க்காதே, செயற்கையான கவர்ச்சிகளைச் சேர்க்காதே," என்று தேவன் திட்டவட்டமாகக் கூறுகிறார்.

போஜனபலியில் தூபவர்க்கம், எண்ணெய், உப்பு ஆகிய மூன்று பொருட்களைச் சேர்க்கவேண்டும்:  புளிப்பு, தேன் ஆகிய இரண்டு பொருட்களைச் சேர்க்கக்கூடாது.

சரி, அடுத்த குறிப்புக்குப் போவோம். தானியபலியில் சில பலகாரங்களுக்குத் திட்டவட்டமான உருவம் shape, form உண்டு. எடுத்துக்காட்டாக அதிரசம். இது அடைபோன்றது என்று நான் ஏற்கனவே சொன்னேன். அடைக்குத் திட்டவட்டமான உருவம் உண்டு. அது வட்டமாக, தட்டையாக இருக்கும். ஆனால், வேறு சில பலகாரங்களுக்குத் அப்படிப்பட்ட திட்டவட்டமான  வடிவம் கிடையாது.

Challah (சல்லா)

தமிழ் வேதாகமத்தில் அதிரசம் என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தையை அடை என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். ஏனென்றால், அதிரசம் உப்பிப்போய் இருக்கும். அதிரசத்தில் புளிப்பு சம்பந்தப்பட்டிருக்கும். போஜனபலியில் புளிப்பு சேர்க்கக்கூடாது. எனவேதான் அந்த வார்தைக்குப் பதிலாக ஆடை என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது சிறப்பாக இருக்கும். அடை உப்பி இருக்காது, தட்டையாக இருக்கும்.

ஆங்கிலத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிற வார்த்தை வேறு; எபிரெய மொழியில் Challah (சல்லா) என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் மூடிய உலைஅடுப்பிலே தயாரித்த Challah சல்லா வட்டமான தடித்த ரொட்டியைக் குறிக்கும்.

இந்தக் காரியத்தை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அடுத்த வாரம் நாம் இதைக்குறித்து விவரமாகப் பேசுவோம். 

தானியபலியில் இன்னொரு முக்கியமான காரியத்தைக் கவனியுங்கள். தானியபலியில் சம்பந்தப்பட்ட பொருட்களெல்லாம் வீட்டில் ஆயத்தம்செய்யவேண்டும். அவைகள் ஆலயத்திலோ, கூடாரத்திலோ தயாரிக்கப்படவில்லை.  என் பிரியமான பரிசுத்தவான்களே, இவைகளெல்லாம் வீட்டில்தான் ஆயத்தம்பண்ணப்பட்டது. மெல்லியமாவு, எண்ணெய், தூபவர்க்கம் சம்பந்தம்பட்ட அனைத்தும் வீட்டில் சமைத்துக் கூடாரத்துக்குக் கொண்டுவரப்பட்டன. 

மகா பரிசுத்தமானது

ஒரு மிக முக்கியமான காரியத்தைப் பார்க்கப்போகிறோம்.  தானிய பலிக்காக எல்லாவற்றையும் வீட்டில் ஆயத்தம்செய்து கொண்டுவந்தாயிற்றுகொண்டுவருபவன் அவைகளில் ஒரு சிறிய பங்கை எடுத்து ஆசாரியனிடத்தில் கொடுக்கிறான்ஆசாரியன் அதில் ஒரு சிறிய பங்கை மட்டும் ஞாபகக்குறியாகப் பலிபீடத்தில் தகனிக்கிறான்மீதியனைத்தும் ஆசாரியர்களுக்குரியதுசர்வாங்கதகனபலியில் மொத்த மிருகமும் பலிபீடத்தில் தகனிக்கப்பட்டதுஅதாவது முழுவதும் தேவனுக்குச் சொந்தம்ஆனால்போஜனபலியில் ஒரு சிறிய பங்கு மட்டுமே தேவனுக்குச் சொந்தம்மீதியனைத்தும் ஆசாரியர்களுக்குக் கொடுக்கப்பட்டது

தேவன் தம்மைச் சேவிக்கிற மக்களைக்குறித்து எவ்வளவு அக்கறையுள்ளவர் என்று பாருங்கள்

தேவன் தம்மைச் சேவிக்கிறதமக்குப் பணிவிடைசெய்கிறஊழியம்செய்கிறமக்களுக்கு, "நானே உங்களுடைய பங்குநானே உங்களுடைய சொத்துநானே உங்களுடைய ஆஸ்திநானே உங்களுடைய காணியாட்சி," என்று சொல்லிவிட்டுஅவர்களுக்குத் தேவையானவைகளைக் கொடுக்காமல் பட்டினி போடுவதில்லை

"பார், உனக்கு நான் ஒரு provision, வழி, வைத்திருக்கிறேன். உன்னுடைய provisionஐ நான் மறப்பதில்லை," என்று தேவன் இங்கு கூறுவதுபோல் இருக்கிறது. ஆசாரியர்களுக்குக் கொடுப்பதோடு மட்டுமின்றி, லேவியராகமம் 2ஆம் அதிகாரம் 3ஆம் வசனத்தை வாசிப்போமா? “அந்தப் போஜனபலியில் மீதியாயிருப்பது ஆரோனையும் அவன் குமாரரையும் சேரும். கர்த்தருக்கு இடும் தகனபலிகளில் இது மகா பரிசுத்தமானது.” ஒன்றைக் கவனித்தீர்களா? இது மகா பரிசுத்தமானது என்று தேவன் சொல்லுகிறார். அதாவது, தேவன் தம் ஆசாரியர்களுக்குரிய பங்கை சாதாரண பரிசுத்தம் என்று சொல்லவில்லை, மகா பரிசுத்தமானது, மகா பரிசுத்தமான பங்கு என்று சொல்லுகிறார்.   

பழைய ஏற்பாட்டை, குறிப்பாக லேவியராகமத்தை, புரிந்துகொள்ளாமல் புதிய ஏற்பாட்டில் சொல்லப்பட்டுள்ள அநேகக் காரியங்களைப் புரிந்துகொள்வது கடினம். அதற்கு எடுத்துக்காட்டாக ரோமர் 11:16யை வாசிக்கலாம்: “மேலும் முதற்பலனாகிய மாவானது பரிசுத்தமாயிருந்தால், பிசைந்தமா முழுவதும் பரிசுத்தமாயிருக்கும்..” பவுல் இங்கு எதைப்பற்றிப் பேசுகிறார் என்று தெரிகிறதா? ஒருவன் மாவைப் பிசைந்து கொண்டுவருகிறான். பிசைந்து கொண்டுவந்த மாவில் ஒரு கைப்பிடியைப் பலிபீடத்தில் ஞாபக்குறியாகப் பலி செலுத்துகிறான். அதன்பின் பிசைந்தமா முழுவதும் பரிசுத்தமாகிவிடுகிறது. பவுல் இங்கு போஜனபலியைக் குறிப்பிடுகிறார் என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. போஜனபலியைப் புரிந்துகொள்ளாமல் இந்த வசனத்தைப்  புரிந்துகொள்ளமுடியாது.

சர்வாங்கதகனபலி கொடுத்தபோது, அதோடு மற்ற பலிகளும், குறிப்பாக போஜனபலியும், சேர்த்துக்கொடுத்தார்கள். 

ஒரு கேள்வி கேட்கட்டுமா? வாற்கோதுமை என்றால் என்ன? பார்லி என்றால் என்ன? தமிழ் வேதாகமத்தில் பார்லி என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை. வாற்கோதுமை என்ற வார்த்தைதான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. எடுத்துக்காட்டாக, ஒரு சிறுவன் கொடுத்த 2 மீன்களையும் 5 அப்பங்களையும் ஆசீர்வதித்து ஆண்டவராகிய இயேசு 5000 பேரைப் போஷித்தார். அந்த 5 அப்பங்கள் வாற்கோதுமை அப்பங்கள். "இங்கே ஒரு பையன் இருக்கிறான், அவன் கையில் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உண்டு." எதற்காக நான் வாற்கோதுமையையும் பார்லியையும்பற்றிக் கேட்டேன் தெரியுமா? நாம் போஜனபலியைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். போஜனபலி மாவும், மாவு சம்பந்தப்பட்ட பொருட்களும் சார்ந்தவை. எதிலிருந்து வருகிற மாவு என்று தெரியவேண்டும் இல்லையா? அதற்காகத்தான் கேட்டேன்.

சரி, என் கேள்விக்கு வருகிறேன். வாற்கோதுமைதான் பார்லி. கோதுமை விதைத்து முதன்முதலாக விளைந்துவருகிற முதற்பலன்தான் பார்லி. லேவியராகமம் இரண்டாம் அதிகாரத்தில் கடைசியாக மாவைக்குறித்துப் பார்த்தோம்.

போஜனபலியில் எல்லாம் மாவு சம்பந்தப்பட்டவை என்று நினைக்க வேண்டாம். போஜனபலியில் பச்சையான கதிர்களும் சம்பந்தப்பட்டிருக்கின்றன. பச்சையான கதிர்களை நெருப்பிலே சுட்டு, உதிர்த்து, எண்ணெய் தடவி, அதன்மேல் தூபவர்க்கம் போட்டு தேவனுக்குப் போஜனபலியாகச் செலுத்தினார்கள். இது தானிய பலி இப்படியும் செலுத்தப்பட்டது. இதையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்

முதற்கனி - முதற்பலன்

லேவியராகமதைப் படிக்கும்போது சில வேளைகளில் நாம் குழம்பிவிடுவோம். எடுத்துக்காட்டாக லேவியராகமம் 2:12யையும், 14யையும் படிப்போம்,  “முதற்கனிகளைக் காணிக்கையாகக் கொண்டுவந்து, அவைகளைக் கர்த்தருக்குச் செலுத்தலாம். ஆனாலும் பலிபீடத்தின்மேல் அவைகள் சுகந்த வாசனையாகத் தகனிக்கப்படலாகாது.” முதற்கனிகளைக் காணிக்கையாகக் கொண்டுவந்து கர்த்தருக்குச் செலுத்தலாம். ஆனால், அவைகளைப் பலிபீடத்தின்மேல் போஜனபலியில் ஒரு சிறு பங்கைத் தக்கணிப்பதுபோல் தகனிக்கக்கூடாது. என்று இந்த வசனம் கூறுகிறது. 14ஆம் வசனம், “முதற்பலன்களை போஜனபலியாக நீ கர்த்தருக்குச் செலுத்தவந்தால், நிறைந்த பச்சையான கதிர்களை நெருப்பிலே வாட்டி உதிர்த்து, அதை  உன் முதற்பலனின் போஜனபலியாக கொண்டுவரக்கடவாய்.”  முதற்பலன்களைக் காணிக்கையாகக் கொண்டுவந்து, அவர்களை போஜனபலியாகச் செலுத்தலாம் என்று இந்த வசனம் கூறுகிறது. 12ஆம் வசனம் முதற்கனி என்றும், 14ஆம் வசனம் முதற்பலன் என்றும் கூறுகின்றன? இதுதான் வித்தியாசமா அல்லது வேறு வித்தியாசம் இருக்கிறதா? முதற்கனியைப் போஜனபலியாகச் செலுத்தக்கூடாது என்று 2:12ம், முதற்பலனைப் போஜனபலியாகச் செலுத்தலாம் என்று 2:14ம் கூறுகின்றன. இந்த வசனங்களை வாசிக்கும்போது தகனிக்க வேண்டுமா, வேண்டாமா என்ற சந்தேகம் எழுகிறதா இல்லையா?

வழக்கமான காணிக்கை வேறு, பலி வேறு. காணிக்கை என்பது கொர்பான். லேவியராகமம் இரண்டாம் அதிகாரத்தில் நாம் வழக்கமான காணிக்கையைப்பற்றிப் பார்க்கவில்லை. மாறாக போஜனபலி எப்படி கொடுக்கப்படவேண்டும் என்று நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.  அந்தந்த பருவங்களில் விளையக்கூடிய பார்லி அல்லது கோதுமையைக் காணிக்கையாகக் கொண்டுவரும்போது அதை ஒருவன் எப்படி வேண்டுமானாலும் கொடுக்கலாம். ஏனென்றால் அது அவன் கொண்டுவருகிற முதற்பலன்களின் காணிக்கை. 12ஆம் வசனம் முதற்கனிகளின் காணிக்கை. 14ஆம் வசனம் முதற்பலன்களைப் போஜனபலியாகக் கொடுப்பதோடு தொடர்புடையது. 12ஆம் வசனம் Seasonal Offering, 14ஆம் வசனம் seasonal sacrifice. Offering is different from sacrifice. அந்தந்த பருவங்களில் விளையக்கூடிய முதற்பலன்களைக் காணிக்கையாகக் கொண்டுவருவது வேறு; அதைத் தேவனுக்குச் சுகந்த வாசனையான பலியாக ஒப்புக்கொடுப்பது வேறு. எனவே இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும். இப்போது நீங்கள் ஓரளவுக்குத் தானியபலியைப் புரிந்திருப்பீர்கள் என்று நான் நினைக்கிறன்.    

போஜனபலியை என்னென்ன வகைகளில் செலுத்தினார்கள் தெரியுமா? உதிரிமாவை அப்படியே போஜனபலியாகச் செலுத்தினார்கள். உதிரி மாவைச் சமைத்தும் கொடுக்கலாம், சமைக்காமலும் கொடுக்கலாம். சமைத்துக் கொடுப்பதாக இருந்தால், ஒன்று, மூடிய உலை அடுப்பில் சமைக்கலாம். இரண்டு, திறந்த உலை அடுப்பிலும்  சமைக்கலாம். மூடிய உலை அடுப்பில் மாவை  அடைபோல் சமைக்கலாம். இரண்டு உலை அடுப்புக்களிலும் சமைத்துக் கொடுக்கலாம். இவ்வாறு போஜனபலியை என்னென்ன வழிகளில், எப்படி ஆயத்தம்பண்ணினார்கள், அவைகளின் பொருள் என்ன என்று நாம் வரும் நாட்களில் விவரமாகப் பார்ப்போம்.    

Olah, சர்வாங்க தகனபலி, Mincha போஜனபலி - இந்த இரண்டு பலிகளிலும் இரண்டு காரியங்களைக்குறித்து நான் இன்னும் ஒன்றும் சொல்லவில்லை.

ஒன்று, பலிபீடம். பலிபீடம் என்றால் என்னவென்று நான் இதுவரை சொல்லவில்லை. பலிபீடம் என்றால் என்னவென்று எல்லாருக்கும் தெரியும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். பலிபீடம் என்றால் என்ன? பலிபீடம் எதைக் குறிக்கிறது? பலிபீடம் ஒரு நிழல், சாயல், மாதிரி, ஒப்பனை, திருஷ்டாந்தம். பலிபீடம் கல்வாரிச் சிலுவையைக் குறிக்கிறது. ஒருவன் கூடாரத்தின் கிழக்கே இருக்கும் வாசல் வழியாக ஆசரிப்புக்கூடாரத்திற்குள் நுழைந்தவுடன் அவன் சந்திக்கும் முதல் இடம் பலிபீடம். பலிபீடத்தைச் சந்திக்காமல் அவன் உள்ளே போகமுடியாது. பலிபீடத்தைக் கண்டுகொள்ளாமல் அவர் கடந்துபோக முடியாது.

ஆம், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைக் கல்வாரிச் சிலுவையில் சந்திக்காத ஒரு மனிதனுக்குத்  தேவனோடு எந்த உறவும் கிடையாது. ஆணடவராகிய இயேசு சிலுவையில் உயர்த்தப்படவேண்டும், கிடத்தப்படவேண்டும், கொல்லப்படவேண்டும், இரத்தம் சிந்தவேண்டும். இவ்வாறு பலிபீடம் சிலுவையின் நிழல்.

இரண்டாவது, ஆசாரியன். ஆசாரியன், ஆசாரியன் என்று நான் சொல்லுகிறேனேதவிர ஆசாரியன் என்றால் யார், அவனுடைய பொறுப்பு என்ன, அவனுடைய கடமை என்ன, அவன் எப்படி பலி செலுத்தினான் என்று நான் இதுவரை சொல்லவில்லை. வரூம் நாட்களில் இவைகளைக்குறித்து நாம் அதிகமாகப் அதிகமாகப் பார்ப்போம். போகப்போக லேவியராகமம் முழுவதும் நாம் ஆசாரியர்களைக் குறித்து அதிகமாகப் பார்ப்போம். எனவேதான் ஆசாரியர்களைக் குறித்து இதுவரை எதுவுமே நான் சொல்லவில்லை. ஆசாரியர்களுக்கு ஒரு ability உண்டு, ஒரு intelligence உண்டு, ஒரு discernment உண்டு.

தேவன் எவ்வளவு கிருபையுள்ளவர் பாருங்கள். இவைகளையெல்லாம் பார்க்கின்றபோது நான் பரவசமடைகின்றேன். தேவன் எவ்வளவு அற்புதமாக ஒவ்வொன்றையும் செய்கிறார்.

இன்றைக்கு ஆசாரியனைக்குறித்து ஒரேவொரு காரியம் பார்ப்போம். "நாம் எல்லாரும் ஆசாரியர்கள்தான்" என்று முதல் பாடத்திலேயே நாம் பார்த்தோம். இதை பேதுரு எழுதுகிறார். பேதுரு அந்த வசனத்தை எங்கிருந்து மேற்கோள் காட்டுகிறார் தெரியுமா?

“இப்பொழுது நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையை கைக்கொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள். பூமியெல்லாம் என்னுடையது. நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமாய் இருப்பீர்கள் என்று நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டிய வார்த்தைகள் என்றார்.” யாத்திராகமம் 19:5, 6 .

இஸ்ரயேல் மக்கள் அனைவரும் ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமாய் இருக்கவேண்டுமென்று தேவன் விரும்பினார். ஆனால், அவர்கள் அந்த அழைப்பைத் தவறவிட்டார்கள். இன்று நாம் அனைவரும் ஆசாரியர்கள்  என்று 1 பேதுரு 2ஆம் அதிகாரத்தில் பேதுரு எழுதுகிறார்.

“நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை  அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும் ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்தஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்" 1 பேதுரு 2:9,.

சரி, இப்படிப்பட்ட ஆசாரியர்கள் என்ன செய்யவேண்டும். “ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசு கிறிஸ்து மூலமாய்த் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்தஆசாரியக்கூட்டமாகவும் கட்டப் பட்டுவருகிறீர்கள்," 5ஆம் வசனம்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்தைவிட்டுப் பிதாவிடம் போவதற்குமுன் தம் சீடர்களைக்  கூட்டிவைத்து பஸ்காவை அனுசரித்தார். அப்போது அவர் தம் போஜனத்தை விட்டெழுந்து, வஸ்திரங்களைக் கழற்றிவைத்து, ஒரு சீலையை எடுத்து, அரையிலே கட்டிக்கொண்டு, பின்பு பாத்திரத்தில் தண்ணீர் வார்த்து, சீடர்களுடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக்கொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினார்.

அவர் சீமோன் பேதுருவினிடத்தில் வந்தபோது, அவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் என் கால்களைக் கழுவலாமா என்றான்.  இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் செய்கிறது இன்னதென்று இப்பொழுது நீ அறியாய், இனிமேல் அறிவாய் என்றார். அதற்குச் சீமோன் பேதுரு: ஆண்டவரே, என் கால்களைமாத்திரமல்ல, என் கைகளையும் என் தலையையும்கூட கழுவவேண்டும் என்றான். இயேசு அவனை நோக்கி: முழுகினவன் தன் கால்களைமாத்திரம் கழுவவேண்டியதாயிருக்கும், மற்றப்படி அவன் முழுவதும் சுத்தமாயிருக்கிறான்," என்றார். இதை வாசித்துவிட்டு கடைசியாக "நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன் என்று இயேசு சொன்னார். ஆகையால், தேவன் ஒரு மாதிரியை வைத்திருக்கிறார், தாழ்மை, சாந்தம் ஆகியவைகளுக்கு ஓர் எடுத்துக்காட்டை முன்வைத்துப்போனார். அவருடைய முன்மாதிரியை நாமும் பின்பற்றுவோம்," என்று இந்த வசனத்தை நாம் மேலோட்டமாக எடுத்துக்கொள்கிறோம். 

நான் இந்த நிகழ்ச்சியை மனதில் வைத்துக்கொண்டு யாத்திராகமம் 29ஆம் அதிகாரத்திலிருந்து ஒரு சிறிய பகுதியை மட்டும் வாசித்துக்காட்டுகிறேன். அங்கு தேவன் முதன்முறையாக மோசேயிடம் ஒரு காரியம்  சொல்கிறார்.

அதற்குமுன்'இன்னொரு காரியத்தைக் கவனித்தீர்களா? லேவியராகமத்தில் இரண்டு அதிகாரங்களை ஏறக்குறைய முடிக்கப்போகிறோம். ஆனால், இதுவரை ஆரோன் மேடைக்கு வரவேயில்லை. ஆரோனின் மகன்களாகிய ஆசாரியர்கள்தான் இதுவரை பணிவிடைசெய்துகொண்டிருக்கிறார்கள். பிரதான ஆசாரியனாகிய ஆரோன் இதுவரை வரவில்லை. பிரதான ஆசாரியனுடைய குமாரர்கள்தான் களத்தில் இருக்கிறார்கள்.

பாருங்கள், இந்தக் குறிப்பு மிகவும் சுவாரஸ்யமானது.  பிரதான ஆசாரியராகிய இயேசு கிறிஸ்துவினுடைய குமாரர்கள் சகோதரர்கள்தான் முன்னிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

சரி, தொடர்வோம். யோவான் 13ஆம் அதிகாரத்தை மனதில் வைத்துக்கொண்டு லேவியராகமம் 8:6யை வாசிப்போம்.  “கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, மோசே ஆரோனையும் அவன் குமாரரையும் வரவழைத்து, அவர்களை ஜலத்தினால் ஸ்நானம்பண்ணுவித்து.” மோசே ஆரோனையும் அவனுடைய  குமாரர்களையும் ஆசாரியர்களாக ஏற்படுத்துவதற்குமுன்பு, பிரதிஷ்டை பண்ணுவதற்கு அல்லது அபிஷேகம் பண்ணுவதற்குமுன், ஒருமுறை அவர்களைத் தண்ணீரினால் கழுவுகிறான். இந்தப் பகுதிக்கும் யோவான் 13ஆம் அதிகாரத்திற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?

மோசே ஆரோனையும் அவன் குமாரர்களையும் ஆசாரியர்களாக ஏற்படுத்துவதற்குமுன் ஒரேவொருமுறை கழுவுகிறார். ஒருமுறை கழுவப்பட்டபிறகு ஆரோனும் அவன் குமாரர்களும் தேவனுக்குப் பணிவிடை செய்வதற்குமுன்பு ஒவ்வொருமுறையும் கழுவும் தொட்டியில் அவர்கள்தான் தங்களைக் கழுவிக்கொள்ளவேண்டும்.

இதை மனதில் வைத்துக்கொண்டு யோவான் 13ஆம் அதிகாரத்திற்கு வாருங்கள். யோவான் 13ஆம் அதிகாரத்தில், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சீடர்களை உட்கார வைத்து ஒருமுறை கழுவுகிறார். அவர் சொல்கிறார், "நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை." அதற்குச் சீமோன் பேதுரு: ஆண்டவரே, என் கால்களைமாத்திரமல்ல, என் கைகளையும் என் தலையையும்கூட கழுவவேண்டும் என்றான். இயேசு அவனை நோக்கி: முழுகினவன் தன் கால்களைமாத்திரம் கழுவவேண்டியதாயிருக்கும், மற்றப்படி அவன் முழுவதும் சுத்தமாயிருக்கிறான். மோசே செய்ததுபோல உங்களை ஆசாரியர்களாக ஏற்படுத்துவதற்குமுன் நான் ஒரேவொருமுறை உங்களைக் கழுவுகிறேன். இனி ஒவ்வொரு முறையும் கழுவவேண்டியது உங்களைப் பொறுத்தது?" என்று இயேசு சொல்லாமல் சொல்லுகிறார்.  கர்த்தருடைய புத்தகத்திலே தேடி வாசியுங்கள். அதிலே ஒன்றும் குறைவுபடாது. 

இப்போது தானியபலி உங்களுக்கு ஓரளவுக்குப் புரிந்திருக்கும் என்று நான் நம்புகிறேன். மூடிய உலை அடுப்பு, திறந்த உலை அடுப்பு, திட்டவட்டமான உருவமுடைய பலகாரம், திட்டவட்டமான உருவமில்லாத பலகாரம், அவைகளின் பொருள் என்ன, அவைகள் யாரைக் குறிக்கின்றன என்ற விவரங்களை நாம் அடுத்தவாரம் பார்த்து தானிய பலியை நிறைவுசெய்வோம்.

ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அந்த மக்கள் நிழலை, சாயலை, மாதிரியை, திருஷ்டாந்தத்தைப் பார்த்தார்கள், மெய்யைத் தவறவிட்டார்கள். கர்த்தருடைய கிருபையினால் இன்றைக்கு மெய் அல்லது நிஜம் யார் என்று நமக்குத் தெரியும். இவர் யார்? இவர் மெல்லிய மாவு, எண்ணெய் பூசப்பட்டவர், எண்ணெய் தடவப்பட்டவர், எண்ணெயினால் பிசையப்பட்டவர், தூபவர்க்கம் நிறைந்தவர், உப்பால் சாரமேற்றப்பட்டவர், புளிப்பில்லாதவர், தேன் இல்லாதவர். 

இப்பேர்ப்பட்டவரைப் பார்க்கும்போது, அவருடைய மக்கள் எப்படி இருக்கவேண்டும் என்று நாம் தெரிந்துகொள்ளலாம். நாம் தானியபலி கொண்டுவருகின்றபோது என் பலி எப்படிப்பட்டதாக  இருக்கவேண்டும். மெல்லியமாவு என்றால் என்ன? நான் யார்? என் பலியிலே தூபவர்க்கம் இருக்கிறதா? எண்ணெய் இருக்கிறதா? உப்பு இருக்கிறதா? புளிப்பு இருக்கக்கூடாது, தேன் இருக்கக்கூடாது. இந்தப் பலியை நான் எப்படிக் கொடுக்கப்போகிறேன் என்று பார்க்கப்போகிறோம். 

Mincha பலி கொடுக்கவேண்டிய முறை என்ன, உதிரிமாவு என்ன, சமைத்தமாவு என்ன, எண்ணெய் பிசைந்த மாவு என்ன, எண்ணெய் பூசப்பட்ட மாவு என்ன, இதன் விவரங்கள் என்ன என்று அடுத்த வாரம் நாம் தெளிவாகப் பார்க்கலாம்.

இந்த போஜனபலி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு ஓர் அடையாளம். நானே ஜீவஅப்பம். போஜனபலி அதுதான். நானே ஜீவஅப்பம். இது அப்பங்கள்தானே, இது ரொட்டிகள்தானே.

அடுத்த வாரம் தொடர்வோம்.