04 - லேவியராகமம்
அதிகாரம் 2,
போஜனபலி, பாகம் 1
நாம் இன்று லேவியராகமம் இரண்டாம் அதிகாரத்தைப் பார்க்கப்போகிறோம். லேவியராகமம் இரண்டாம் அதிகாரம் போஜன பலியைக்குறித்துப் பேசுகிறது.
போஜனபலி
இரண்டாம் அதிகாரம் போஜனபலியைக்குறித்துப் பேசுகிறது. முதல் பலியாகிய தகனபலியை மேலெழும்பும் பலி அல்லது அருகமர்த்தும் பலி என்று சொல்லலாம் என்று பார்த்தோம். எபிரேய மொழியில் olah. அதுபோல இதைப் போஜனபலி என்பதற்குப்பதிலாக தானிய பலி என்று சொல்வது சரியாக இருக்கும். எபிரேய மொழியில் mincha.
முதலாவது போஜன பலி என்றால் என்ன பொருள், என்ன அர்த்தம், என்று பார்ப்போம். இரண்டாவது, போஜனபலியில் என்னென்ன பொருட்கள் சம்பந்தப்பட்டிருக்கின்றன என்று பார்ப்போம். போஜனபலியில் மெல்லியமாவு, பச்சைக் கதிர்கள் ஆகிய இரண்டு பொருட்கள் சம்பந்தப்பட்டிருக்கின்றன. மெல்லியமாவில் சில பொருட்களைச் சேர்க்கலாம், வேறு சில பொருட்களைச் சேர்க்கக்கூடாது. மூன்று பொருட்களைச் சேர்க்கவேண்டும்: ஒன்று எண்ணெய், இரண்டு தூபவர்க்கம், மூன்று உப்பு.
மீண்டும் சொல்லுகிறேன். போஜன பலியில் இரண்டு பொருட்கள் உள்ளன. ஒன்று மெல்லியமாவு, இரண்டு பச்சைக்கதிர்கள்.
மெல்லியமாவானாலும் சரி, பச்சைக்கதிர்களானாலும் சரி, இரண்டிலும் சேர்க்கவேண்டியவை எண்ணெய், தூபவர்க்கம், உப்பு. எண்ணெய் என்றால் அது எப்போதும் ஒலிவ எண்ணெயைத்தான் குறிக்கும். இவை சேர்க்கவேண்டியவை.
சில பொருட்களைச் சேர்க்கக்கூடாது என்று நான் ஏற்கெனவே சொன்னேன். அவை புளிப்பு, தேன்.
மூன்றாவது, இந்த மெல்லியமாவை எப்படிப் பலியாகக் கொடுக்கலாம்? போஜனபலி கொடுக்கும் முறை என்ன? இரண்டு வகைகளில் மெல்லிய மாவைப் பலியாகக் கொடுக்கலாம். ஒன்று, சமைத்தும் கொடுக்கலாம்; இரண்டு சமைக்காமல் உதிர்ந்த மாவாகவும் கொடுக்கலாம். சமைத்துக் கொடுப்பதாக இருந்தால் அதை இரண்டு விதமாகச் சமைக்கலாம். ஒன்று மூடிய உலை அடுப்பிலும் சமைக்கலாம், இரண்டு திறந்த அடுப்பிலும் சமைக்கலாம். எவ்வளவு விவரங்கள் இருக்கின்றன என்று பாருங்கள்!
நன்றாகக் கவனியுங்கள். மூடிய உலைஅடுப்பிலும் சமைத்துக்கொடுக்கலாம், திறந்த அடுப்பிலும் சமைத்துக்கொடுக்கலாம்.
நாம் நம் ஊரில், நம் வீடுகளில், பயன்படுத்துகிற அடுப்பு திறந்த அடுப்பு, stove. மூடிய உலைஅடுப்பு என்றால் Oven. பேக்கரியில் ரொட்டி, கேக் செய்வதற்குப் பயன்படும் அடுப்பு மூடிய உலைஅடுப்பு. பொதுவாக இதை இன்று நாம் நம் வீடுகளில் பயன்படுத்துவதில்லை.
மூடிய உலை அடுப்பில் இரண்டுவிதமாகச் சமைத்துப் பலிகொடுக்கலாம். ஒன்று மாவைப் பிசைந்தும் சமைத்துக்கொடுக்கலாம், இரண்டு பிசையாத மாவிலும் சமைத்துக்கொடுக்கலாம். மீண்டும் சொல்லுகிறேன். மூடிய உலைஅடுப்பில் இரண்டு விதமாக சமைக்கலாம். ஒன்று பிசைந்த மாவிலும் சமைத்துக் கொடுக்கலாம்: இரண்டு பிசையாத மாவிலும் சமைத்துக்கொடுக்கலாம்.
பிசைந்த மாவை Cakeகாகச் சுட்டுக் கொடுக்கலாம். தமிழ் வேதாகமம் இதை அதிரசம் என்று சொல்லுகிறது.
அடுத்ததாக தோசைக்கல்போன்ற தட்டையான சட்டியில் griddle பலகாரம் செய்து கொடுக்கலாம்.
பிசையாத மாவினால் அடை சுட்டுக் கொடுக்கலாம், wafer.
நாம் நம் வீடுகளில் பயன்படுத்துகிறதுபோன்ற திறந்த அடுப்பில் பொறிக்கும் சட்டியில் பிசைந்த மாவிலே பலகாரம் சுட்டுக் கொடுக்கலாம்.
இதுவரை நாம் மெல்லிய மாவினால் எப்படிப் பலகாரம் சுட்டுப் பலி கொடுக்கலாம் என்று பார்த்தோம். பிசைந்த மாவா, பிசையாத மாவா? என்னென்ன சேர்க்க வேண்டும், என்னென்ன சேர்க்கக்கூடாது. திறந்த அடுப்பிலா, மூடிய உலை அடுப்பிலா? தட்டையான சட்டியிலா, குழிவிழுந்த சட்டியிலா? இந்த விவரங்களை நாம் பார்த்தோம். போஜன பலியில் மெல்லிய மாவும், பச்சைக் கதிர்களும் சம்பந்தப்பட்டிருக்கின்றன என்று ஆரம்பத்திலேயே சொன்னேன். இதுவரை மெல்லிய மாவைப்பற்றிப் பார்த்தோம். இப்போது பச்சைக் கதிர்களை எப்படிப் போஜன பலியாகக் கொடுக்க வேண்டும் என்று பார்ப்போம். பச்சைக் கதிர்களைப் போஜன பலியாகக் கொடுக்கும்போது அதோடு எண்ணெயும் தூபவர்க்கமும் சேர்க்க வேண்டும்.
இப்படித்தான் போஜனபலி கொடுத்தார்கள். மெல்லிய மாவினால் செய்த போஜன பலியானாலும் சரி, பச்சைக் கதிர்களானாலும் சரி, அவைகளைப் போஜனபலியாகக் கொடுக்கும்போது அதில் ஒரு பகுதியை மட்டும் ஆசாரியன் ஞாபகக்குறியாகப் பலிபீடத்தில் வைத்து தகனிப்பார்; மீதியெல்லாம் ஆசாரியர்களையே சாரும். இதுதான் போஜனபலியைப்பற்றிய சுருக்கமான பார்வை.
கிறிஸ்து சுகந்த வாசனையான காணிக்கை, பலி
போஜனபலியைப் பார்ப்பதற்குமுன், நான் உங்களுக்கு ஒன்றை நினைப்பூட்ட விரும்புகிறேன். கடந்த மூன்று வகுப்புகளில் நாம் முதல் பலியாகிய சர்வாங்கதகனபலியைப் பார்த்தோம்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே சர்வாங்கதகனபலி என்பதை ஒருபோதும் மறக்க வேண்டாம். “கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்தார்" என்று எபேசியர் 5:2 கூறுகிறது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்மைத் தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்தார் என்று நாம் வாசிக்கிறோம். காணிக்கை, பலி என்ற இரண்டு வித்தியாசமான வார்த்தைகளைக் கவனித்தீர்களா? இயேசு தம்மைக் காணிக்கையாகவும் ஒப்புக்கொடுத்தார், பலியாகவும் ஒப்புக்கொடுத்தார்.
காணிக்கை என்றால் கொர்பான். கொர்பான் என்ற வார்த்தை எல்லாக் காணிக்கைகளுக்குமுரிய பொதுவான பெயர். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம் கொர்பானாக மட்டுமல்ல, அவர் sacrificeஆகவும், பலியாகவும் ஆகியிருக்கிறார். போகப்போக நீங்கள் இந்த நுணுக்கமான வித்தியாசங்களெல்லாம் பார்க்க ஆரம்பித்துவிடுவீர்கள்.
The substance is of Christ
தொடர்ந்து பார்ப்பதற்குமுன் நாம் ஒரு வசனத்தை வாசிப்போம். கொலோசெயர் 2:16,17. “ஆகையால் போஜனத்தையும் பானத்தையும் குறித்தாவது, பண்டிகை நாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையுங் குறித்தாவது ஒருவனும் உங்களை குற்றப்படுத்தாதிருப்பானாக. அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது. அவைகளின் பொருள் கிறிஸ்துவைப் பற்றினது.” The substance is of Christ. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே எல்லாப் பலிகளின் மெய் அல்லது நிஜம் என்பதற்கு இது ஒரு நல்ல அடிப்படையான, ஆதாரமான வசனம். வேதாகமத்தில் எவ்வளவோ காரியங்கள் இருக்கின்றன. எவ்வளவோ நிழல்கள், மாதிரிகள், ஒப்பனைகள் இருக்கின்றன. ஆனால், இயேசு அவையனைத்தின் நிஜம் அல்லது மெய். இன்னும் கொஞ்ச நேரத்தில் இதை நாம் விவரமாகப் பார்ப்போம். இந்த வசனத்தை நீங்கள் ஒருபோதும் மறவாதீர்கள். இது மிகமிக முக்கியமான வசனம். இந்த வசனம் நம்மைப் பல தவறுகளிலிருந்து தற்காக்கும். அவைகளின் பொருள் கிறிஸ்துவைப் பற்றினது. The substance is of Christ.
The reality of duality
நான் சில தடவை சொன்னதுபோல The reality of duality. கண்ணெதிரே ஒரு நிழல் இருக்கிறது. நடைமுறையில், எழுத்தின்படி, practicalஆக ஒரு பலி கொடுக்கப்படுகிறது. ஆனால், இந்த நிழலின் மெய்மை, நிஜம் வேறொன்று இருக்கிறது. நிஜம் வேறொங்கோ இருந்தது. இருந்த மெய்யின் நிழலை நாம் அங்கு பார்க்கிறோம். இந்த நிழலுக்கு இன்னொரு நிஜம் அல்லது மெய்மை இருக்கிறது. அந்த மெய்மை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது. எழுத்தைப் பார்க்கும்போது, அந்த எழுத்துக்கு ஆவி இருக்கிறது என்று தெரிய வேண்டும். நிழல் இருக்கிறது, நிழலுக்கு மெய் இருக்கிறது. இது இரண்டு காரியங்கள். மூன்றாவது, மெய்யாகிய கிறிஸ்துவைப் பார்க்கும்போது அங்கு நாம் நம்மையும் பார்க்கவேண்டும். கண்ணாடிக்குமுன் நிற்கும்போது நாம் கண்ணாடியையும் பார்க்கிறோம், நம்மையும் பார்க்கிறோம். இதுபோல, கிறிஸ்துவைப் பார்க்கும்போது நாம் நம்மையும் பார்க்கிறோம். இன்னும் சொல்லப்போனால் கிறிஸ்துவைப் பார்க்கும்போது மட்டுமே நாம் நம்மையும் பார்ப்போம். இதை ஒரு நாளும் மறக்கவேண்டாம்.
வேதம் வாசிக்கின்றபோது இந்த மூன்று காரியங்களையும் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். ஒன்று, literalஆக எழுத்தின்படி அங்கு ஒன்று நடந்துகொண்டிருக்கின்றது. ஆனால் இதற்கு ஆழத்தில், அடிப்படையில், பின்னால் இதன் மெய்மை அல்லது நிஜம் ஒளிந்திருக்கிறது. மறைந்திருக்கும் நிஜம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. இன்னொன்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப் பார்க்கும்போது, நம்மையும் பார்க்க ஆரம்பித்துவிடுவோம். இது எப்போதுமே நமக்கு உதவி செய்யும். இதுதான் நடைமுறை வாழ்க்கை. நடைமுறை வாழ்க்கை இல்லையென்றால், இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவு ஏட்டுச்சுரைக்காய்போல் ஆகிவிடும்.
OLAH
சர்வாங்க தகனபலிக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் எபிரேய வார்த்தை OLAH. OLAH என்ற வார்த்தையின் literal translation மேலே எழும்பும் பலி, உயரே எழும்பும் பலி, பரமேறும் பலி, அருகில் கொண்டுவரும் பலி. இதுதான் OLAH என்ற வார்த்தையின் எழுத்தின்படியான பொருள். இந்தப் பலி முழுவதும் தகனிக்கப்பட்டது. எனவே, அதற்கு சர்வாங்க தகனபலி என்று பெயர் வைத்தார்கள்போலும். இது OLAH என்ற வார்த்தையின் functional translation.
Mincha - தானியபலி
அதுபோல போஜனபலியின் எபிரேய வார்த்தை Mincha, அது Ola. இது Mincha. கொஞ்சம் எபிரேய வார்த்தைகளைக் கற்றுக்கொள்ளலாம். Mincha என்ற வார்த்தையின் Literal translation தானிய பலி. It is not meal offering ஆங்கில வேதாகமத்தில் சில versionஇல் Meal offering அல்லது meat offering என்று சொல்லியிருக்கிறார்கள். அது தவறு. It is not a meal offering, neither is it a meat offering; it is a Grain offering தானிய பலி. இது போஜன பலியல்ல, இது தானிய பலி.
போஜனம் என்றவுடன் சாப்பாடு breakfast, lunch, dinner என்று சாப்பாடுதான் நினைவுக்கு வரும். எனவேதான் இது போஜனபலியல்ல, it is not a meal offering, it is not a meat offering, it is a Grain offering என்று நான் சொன்னேன். அறுவடை செய்தபின் அறுத்த தானியங்களிலிருந்து விதை தானியங்களைப் பிரித்தெடுத்து வைப்பார்கள். இந்த விதை தானியங்களை மெல்லிய மாவாக அரைத்து, சமைத்து போஜனபலியாகக் கொண்டுவருவார்கள். விதை தானியத்தை somolina என்பார்கள். இந்த விவரங்களை நாம் அவசியம் தெரிந்திருக்க வேண்டும்.
மீண்டும் சொல்லுகிறேன். போஜனபலி, இது தானியபலி. Olah அது பரமேறும் பலி, உயரே எழும்பும் பலி. அருகில் கொண்டுவரும்பலி. இது Mincha, தானிய பலி.
Ola, Mincha உங்களுக்கு இருதயத்தில் எளிதாகப் பதிந்துவிடும்.
சரி, நாம் தொடர்வோம். கவனியுங்கள். போஜனபலியின், அதாவது தானியபலியின் சாராம்சம், theme, கருப்பொருள் என்ன? ஒரேவொரு கருப்பொருள்தான். இந்தக் கருப்பொருளை அறியும்போது, அதன் விளைவாக இன்னொன்றையும் நாம் அறிந்துகொள்வோம். we should apprehend Christ in His moral glory. இந்த வாக்கியத்தை நீங்கள் புரிந்துகொண்டால் தானியபலி உங்களுக்குப் புரிந்துவிடும். it should be an eye opener. we should apprehend Christ in His moral glory. கிறிஸ்துவினுடைய குணாம்சத்தின் மகிமையை தானிய பலியில் நாம் கண்டுணரவேண்டும்.
கிறிஸ்து எவ்வளவு மகிமையானவர்! அவருடைய குணாம்சங்கள் எவ்வளவு அழகானவை என்பதை நாம் மெல்லிய மாவினாலான தானியபலியில் பார்க்கமுடியும். அதைப் பார்க்கும்போது தேவனுக்கு நாம் செய்யக்கூடிய பணிவிடையின், ஊழியத்தின், தரம் எப்படி இருக்கமுடியும், எப்படி இருக்கவேண்டும் என்பதை உணர்ந்தறிவோம்.
இந்த இரண்டையும் நான் சேர்த்தே சொல்கிறேன். ஒன்று literalஆக நடக்கிறது. எழுத்தின்படி தானிய பலி கொடுக்கப்படுகிறது. இதைப் பார்க்கும்போது கிறிஸ்துவையும் பார்க்கிறோம், நம்மையும் பார்க்கிறோம். கிறிஸ்து எவ்வளவு அழகானவர்! எவ்வளவு மேன்மையானவர்! எவ்வளவு மகத்துமுள்ளவர்! அந்த அழகை, அந்த மகிமையை நாம் பார்க்கமுடியும். அதே நேரத்தில், நம்முடைய பணிவிடையின் தரத்தையும் நாம் உணர்ந்தறியமுடியும். பணிவிடையென்றால் ஊழியம். சரி, தானிய பலியின் கருப்பொருளைப் பார்த்தோம்.
அடுத்து தானியபலியை எங்கு ஆயத்தம் செய்யவேண்டும்? வீட்டில் ஆயத்தம் பண்ணவேண்டும். வீட்டில் வாழாத கிறிஸ்துவை, அந்தரங்கத்தில் வாழாத கிறிஸ்துவை, வெளியரங்கமாக வாழ முடியாது. தெருவில், அலுவலகத்தில், பள்ளியில், கல்லூரியில், சந்தையில் வாழாத கிறிஸ்துவை ஞாயிற்றுக்கிழமை மட்டும் வாழ முடியாது. போஜன பலியை முழுக்க முழுக்க வீட்டில்தான் ஆயத்தம்பண்ணவேண்டும்.
வீடுதான் கிறிஸ்துவை வாழவேண்டிய, வாழ்ந்துகாட்டவேண்டிய முக்கியமான இடம். வீட்டில் வாழாதவன் வேறு எங்கு எப்படி வாழமுடியும்? வீட்டில்தான் கிறிஸ்துவை நாம் ஆயத்தம்பண்ணமுடியும், ஆயத்தம் பண்ண வேண்டும்.
மெல்லியமாவு எப்படிக் கிடைக்கிறது? மெல்லிய மாவு தானாக வந்துவிடுமா? நிலத்தை உழவேண்டும், விதைக்கவேண்டும், வளர்க்க வேண்டும், அறுக்க வேண்டும், அறுவடை செய்ததை களத்தில் சேர்த்துப் போரடிக்கவேண்டும், தூற்றவேண்டும், மணிகளைச் சேர்க்க வேண்டும், அரைக்கவேண்டும். அரைத்து பின்பு சலிக்கவேண்டும், சலித்து அதன்பிறகு சமைக்கவேண்டும். சமைத்து அதை உடைத்துக் கொண்டுவரவேண்டும். கிறிஸ்துவை நாம் வீட்டில் எப்படி ஆயத்தம் செய்து கொண்டுபோகவேண்டும் அல்லது கொண்டுவரவேண்டும் என்று பாருங்கள்.
மெல்லியமாவு மட்டும்தான் நம் கண்களுக்குத் தெறிகிறது. இந்த மெல்லியமாவு எப்படி வருகிறது என்று நாம் சிந்திப்பதில்லை. மெல்லிய மாவினால் சமைத்து, உடைத்துக் கொண்டுவர வேண்டும். இவ்வளவு lengthy process இருக்கிறதே! எவ்வளவு நீண்ட வழிமுறை இருக்கிறது என்று பாருங்கள்! இது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் பொருந்தும், நமக்கும் பொருந்தும். இதை நாம் விவரமாகப் பார்ப்போம்.
மெல்லியமாவு
இன்று நான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவையும் மெல்லிய மாவையும் பொருத்திப் பேசப்போவதில்லை. இன்றைக்கு நாம் போஜன பலியை மட்டும்தான் பார்க்கப்போகிறோம். இது எவ்வளவு மென்மையான, மிருதுவான, மெல்லிய மாவு என்பதை உணர்த்த நான் ஒரு மேற்கோள் தருகிறேன். ஆண்டவராகிய இயேசுவின் முன்னோடியாகிய யோவான் ஸ்நானன், “கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள் என்றும், பள்ளங்களெல்லாம் நிரப்பப்படும், சகல மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்படும், கோணலானவைகள் செவ்வையாகும், கரடானவைகள் சமமாகும் என்றும்,” எடுத்துரைத்தார். நான்கு காரியங்கள் பள்ளங்கள், மலைகளும் குன்றுகளும், கோணலானவைகள், கரடானவைகள். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவில் எந்தப் பள்ளமும் கிடையாது, எந்த மலையும் குன்றும் கிடையாது, எந்தக் கோணலும் கிடையாது, எந்தக் கரடுமுரடும் கிடையாது. அவர் அவ்வளவு சமச்சீரோடு வாழ்ந்தார். இயேசு அவ்வளவு முழுமையானவர், பூரணமானவர், பரிபூரணமானவர், சம்பூரணமானவர்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அவ்வளவு மென்மையான, மிருதுவான, மெல்லியமாவு. வரக்கூடிய வாரங்களில் நாம் இதை விவரமாகப் பார்ப்போம்.
சரி, தொடர்வதற்குமுன் ஒரு கேள்வி. Olahவுக்கும் Minchaவுக்கும் இடையே வித்தியாசம் ஏதாவது உண்டா? வித்தியாசம் இருந்தால் என்ன வித்தியாசம். அல்லது Olahவுக்கும் Minchaவுக்கும் இடையே ஏதாவது ஒற்றுமை இருக்கிறதா? என்ன ஒற்றுமை இருக்கிறது? இரண்டுக்கும் இடையேயுள்ள ஒற்றுமை வேற்றுமை என்ன?
Olah VS Mincha
முதலாவது Olahவுக்கும் Minchaவுக்கும் இடையேயுள்ள வேற்றுமையைப் பார்ப்போம். அதன்பின் ஒற்றுமையைப் பார்ப்போம். வித்தியாசம் என்னவென்றால், ஒன்று, Olahவில், சர்வாங்க தகனபலியில், பலி முழுவதும் தகனிக்கப்பட்டது. தானியபலியில் ஒரு சிறு பகுதி மட்டும் ஞாபகமாக, அடையாளமாக, தகனிக்கப்பட்டது. இரண்டு, Olahவில் மிருகங்கள் சம்பந்தப்பட்டிருக்கின்றன. Minchaவில் தானியங்கள் மட்டுமே சம்பந்தப்பட்டிருக்கின்றன. அதில் மிருகங்கள் கிடையாது. மூன்று, Olahவில் இரத்தம் இருக்கிறது. Minchaவில் இரத்தம் கிடையாது. நான்கு, Olah மனமுவந்து கொடுக்கவேண்டும். சர்வாங்கதகனபலி கொடுக்கவேண்டும் என்பது நிர்ப்பந்தம் கிடையாது, கட்டாயம் கிடையாது. It’s not an obligation; it’s neither compulsory nor obligatory. It is voluntary. தானியபலியும் ஒருவகையான voluntary பலிதான். But I can say, it is involuntary. அது என்ன involuntary? involuntary என்பதை விளக்க நான் ஓர் எடுத்துக்காட்டு சொல்லுகிறேன்.
அமெரிக்காவில் ஒரு பழக்கம் உண்டு. டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் திருவிழாவின்போது கிறிஸ்தவர்கள், விசுவாசிகள், அவிசுவாசிகள் என எல்லாருடைய வீடுகளிலும் பொதுவாக Christmas tree இருக்கும். அந்தக் கிறிஸ்துமஸ் மரத்துக்குக் கீழே பரிசுப்பொருட்கள் வைத்திருப்பார்கள். வீட்டில் இருக்கும் பெரியவர்கள், சிறியவர்கள் எல்லாரும் எல்லாருக்கும் பரிசுப்பொருட்கள் வாங்கி வைத்திருப்பார்கள். இது எல்லாரும் எல்லாருக்கும் கொடுக்கக்கூடிய ஒரு பழக்கம். இது ஒருவகையில் voluntaryதான். இது எல்லாருக்கும் கொடுக்கவேண்டும் என்று எந்தக் கட்டாயமோ, நிர்ப்பந்தமோ இல்லை. அப்படிப்பட்ட ஒரு பழக்கம் வந்தது. எனவே, இதை voluntary என்றும் சொல்லமுடியாது, involuntary என்றும் சொல்லமுடியாது. இந்தத் தானியபலி அப்படிப்பட்டது. ஆனால், சர்வாங்கதகனபலி அப்படி கிடையாது. That is purely voluntary: it is a gift. அதுபோல தானியபலியும் பரிசுதான். ஆனால், கொடுக்கவேண்டும் என்று ஒரு சிறிய எண்ணம் இழையோடுகிறது.
ஐந்து, Olahவில் ஆசாரியனுக்கு எந்தப் பங்கும் கிடையாது. தானியபலியில் ஆசாரியனுக்குத்தான் நிறைய பங்கு கொடுக்கப்படுகிறது. ஆறு, சர்வாங்க தகனபலியில் மிருகங்களை ஆசரிப்புக் கூடாரத்துக்குக் கொண்டுவந்து, அங்குதான் எல்லா ஆயத்தமும் நடக்கும். ஆனால், தானியபலியில் எல்லா ஆயத்தமும் வீட்டில் நடக்கும். இதுவரை நாம் வேற்றுமைகளைப் பார்த்தோம். இனி, ஒற்றுமைகளைப் பார்ப்போம்.
சர்வாங்க தகனபலிக்கும் தானியபலிக்கும் ஒற்றுமை இருக்கிறதா? இருக்கிறது. ஒன்று, முதல்தரமானவைகளைப் பலியாகக் கொடுக்க வேண்டும். இரண்டு, சர்வாங்க தகனபலி, போஜனபலி ஆகிய இரண்டுமே தகனிக்கப்படுகின்றன. Olahவும் தகனிக்கப்படவேண்டும், Minchaவும் தகனிக்கப்பட வேண்டும். மூன்று, இரண்டும் கர்த்தருக்கு சுகந்த வாசனையான பலிகள். நான்கு, இரண்டும் பரிசுகள், நன்கொடைகள். இவைகள் Olahவுக்கும் Minchaவுக்கும் உள்ள ஒற்றுமைகள்.
போஜனபலியில் மெல்லியமாவினால் செய்யப்பட்ட பலகாரங்கள் சம்பந்தப்பட்டிருக்கின்றன என்று பார்த்தோம். போஜன பலியைப்பற்றிப் படிக்கும்போது, அதாவது லேவியராகமம் இரண்டாம் அதிகாரத்தை வாசிக்கின்றபோது, மெல்லியமாவு, தூபம், எண்ணெய் என்று வாசிக்கும்போது, பழைய ஏற்பாட்டிலும் சரி, புதிய ஏற்பாட்டிலும் சரி, அதிகமாகச் சொல்லப்பட்டுள்ள ஒரு நிகழ்ச்சி அல்லது காரியம் உங்கள் நினைவுக்கு வந்திருக்க வேண்டும். என்ன தெரியுமா? மன்னா.
மன்னா vs Mincha
மன்னாவுக்கும் மெல்லியமாவுக்கும், மன்னாவுக்கும் போஜன பலிக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? ஏதாவது ஒற்றுமை இருக்கிறதா அல்லது வேற்றுமை இருக்கிறதா? என்ன ஒற்றுமை அல்லது என்ன வேற்றுமை? மன்னா, and Mincha, மன்னாவும் Minchaவும், மன்னாவும் போஜனபலியும்.
மன்னாவைப்பற்றி யோவான் 6:31,33இல் வாசிக்கிறோம். "வானத்திலிருந்து அவர்களுக்கு அப்பத்தைப் புசிக்கக்கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடி, நம்முடைய பிதாக்கள் வனாந்தரத்தில் மன்னாவைப் புசித்தார்களே என்றார்கள்." "வானத்திலிருந்திறங்கி, உலகத்துக்கு ஜீவனைக் கொடுக்கிற அப்பமே தேவன் அருளிய அப்பம் என்றார்." தானியபலியைப்பற்றி லேவியராகமம் இரண்டாம் அதிகாரத்தில் படிக்கிறோம். இரண்டு, மன்னா வானத்திலிருந்து வருகிறது. தானியபலி பூமியிலிருந்து வருகிறது; தானியம் பூமியின் கனி, நிலத்தின் விளைச்சல். மன்னா வானத்திலிருந்து வருகிறது: தானியம் பூமியிலிருந்து முளைக்கிறது அல்லது பூமியிலிருந்து எழும்புகிறது. அது பூமியின் கனி, fruit of the earth. மூன்று, மன்னா இஸ்ரயேல் மக்கள் எல்லாருடைய உணவு. தானியபலி ஆசாரியர்களுக்கான உணவு. நான்கு, மன்னா இஸ்ரயேல் மக்களுக்கு வனாந்தரத்தில் உணவு; தானியபலி ஆசாரியர்களுக்குக் கூடாரத்தில் உணவு. ஐந்து வானத்திலிருந்து வருகிற மன்னா ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தெய்வீகத்தைக் குறிக்கிறது. பூமியிலிருந்து முளைக்கிற தானியம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மனுஷீகத்தைக் குறிக்கிறது. ஒற்றுமை என்னவென்றால் இரண்டுமே உணவுதான். மன்னாவும் உணவுதான், மெல்லியமாவும் உணவுதான்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே வானத்திலிருந்து வந்த மன்னா; பூமியிலிருந்து தோன்றிய தானியம். அவர் தேவன், அவர் மனிதர். அவர் தெய்வீகத்தையும், மனுஷீகத்தையும் உடையவர். தேவன் என்ற முறையில் அவர் அநாதியான வார்த்தை. மனிதன் என்ற முறையில் அவருக்குத் தொடக்கமும் முடிவும் உண்டு.
யாக்கோபு தன் அண்ணன் ஏசாவுக்குப் பயந்து தன் மாமா லாபான் வீட்டிற்குப் போகிறார். போகும்வழியில் களைத்துப்போய் ஒரு நாள் இரவு ஒரு கல்லைத் தலையணையாக வைத்துக்கொண்டு, படுத்து உறங்குகிறார். அன்று இரவு அவர் ஒரு கனவு காண்கிறார். ஆதியாகமம் 28:12யை வாசிப்போம், “அங்கே அவன் ஒரு சொப்பனங் கண்டான்: இதோ, ஒரு ஏணி பூமியிலே வைக்கப்பட்டிருந்தது. அதின் நுனி வானத்தை எட்டியிருந்தது. அதிலே தேவதூதர் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாய் இருந்தார்கள்.” சரி இப்போது யோவான் 1:51யை வாசிப்போம். “பின்னும் அவர் அவனை நோக்கி: வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன் என்றார்.”
அங்கு யாக்கோபு ஒரு கனவு காண்கிறார். அந்தக் கனவில் ஒரு ஏணி வானத்தையும் பூமியையும் இணைத்திருக்கிறது. வானம் அவருடைய சிங்காசனம், பூமி அவருடைய பாதபடி. அவர் வானம் கொள்ளாதவர், பூமி கொள்ளாதவர். அவர் பரலோகத்தில் இருக்கிறவர், பரலோகத்திலிருந்து இறங்கினவர், பரலோகத்திற்கு ஏறினவர். ஒரு ஏணி, அந்த ஏணி மேலே வானத்தைத் தொட்டிருக்கிறது. கீழே பூமியையும் தொட்டிருக்கிறது. ஏணியின்மூலமாக தேவதூதர்கள் ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து, "இதுமுதல் தேவதூதர்கள் ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள்," என்று இயேசு கிறிஸ்து சொல்கிறார். வானம் திறந்திருக்கிறதையும் தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் காண்பீர்கள் என்று சொல்கிறார்.
இயேசு கிறிஸ்து இப்பொழுது என்ன சொல்கிறார்? “அந்த ஏணி நான்தான். அந்த ஏணி வேறு யாருமில்லை, எப்படி யாக்கோபு கண்ட அந்தக் கனவிலே, அந்த ஏணியின் மூலமாய் தேவதூதர்கள் ஏறி இறங்கிக்கொண்டிருந்தார்களோ, அதுபோல, அந்த ஏணி நான்தான். அந்த ஏணியின் ஒரு பக்கம் வானம், இன்னொரு பக்கம் பூமி. வானத்திலிருந்து வந்த மன்னாவும் நான்தான், பூமியிலிருந்து முளைத்தவரும் நான்தான். தெய்வீகத்தை உடையவரும் நான்தான், மனுஷீகத்தை உடையவரும் நான்தான். நானேதான், என்மூலமாகத்தான் தேவதூதர்கள் ஏறி இறங்கிக்கொண்டிருக்கிறார்கள்," என்று இயேசு கிறிஸ்து சொல்கிறார். வானத்தையும் பூமியையும் இணைக்கும் ஏணி தானே என்கிறார். மன்னாவும் இவரே! மெல்லிய மாவும் இவரே!
மெல்லிய மாவு எப்படி அரைத்துக்கொண்டுவந்தார்கள் என்பதை மட்டுமே நாம் இதுவரை பார்த்திருக்கிறோம். இந்த மெல்லியமாவை சமைத்தும் கொடுக்கலாம், சமைக்காமலும் கொடுக்கலாம். எண்ணெய் சேர்க்கவேண்டும். எண்ணெய் என்றால் ஒலிவஎண்ணெய்தான்.
நாம் லேவியராகமம் 2ஆம் அதிகாரத்திற்கு வருவோம். சமைத்துக் கொடுக்கும்போது, ஒன்று மெல்லியமாவில் எண்ணெய் ஊற்றிப் பிசையலாம், இன்னொரு புறம் மெல்லியமாவில் எண்ணெய் தடவலாம். எண்ணெய் ஊற்றிப் பிசையலாம் அல்லது எண்ணெய் தடவலாம். இந்த இரண்டிலிருந்தும் உங்களுக்கு ஏதாவது புரிகிறதா? ஒரு புறம் மெல்லியமாவில் எண்ணெய் ஊற்றிப் பிசையவேண்டும்: இன்னொரு வகையில், மெல்லிய மாவினால் பலகாரம் செய்தபிறகு அதன்மேல் எண்ணெய் தடவவேண்டும். இந்த இரண்டிற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? இருக்கிறது. கவனியுங்கள்.
ஒலிவ எண்ணெய், எண்ணெய், பரிசுத்தஆவியானவருக்கு அடையாளம் என்று நம் எல்லோருக்கும் தெரியும். இரண்டு காரியங்கள் இருக்கின்றன. பரிசுத்த ஆவியானவருக்கு இரண்டு அம்சங்கள் இருக்கின்றன. ஒன்று, மெல்லிய மாவோடே எண்ணெய் ஊற்றி பிசைகிற அம்சம். இது உள்ளான அம்சம். இன்னொன்று, எண்ணெயை மெல்லியமாவுமேல் தடவுகிற அல்லது பூசுகிற அம்சம். இது புறம்பான அம்சம். ஒன்று பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வாசம்பண்ணுகிற அம்சம். இன்னொன்று, பரிசுத்த ஆவியானவர் நம்மேல் இருக்கிற அம்சம்.
நமக்குள்ளே இருக்கிற பரிசுத்தஆவியானவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எப்படிப்பட்டவர், அவர் என்னவாக இருக்கிறார், அவர் என்ன செய்துமுடித்தார் என்பவைகளையெல்லாம் நமக்கு மெய்யாக்குகிறவர். நமக்குள் வாசம்பண்ணுகிற பரிசுத்தஆவியானவர் மெல்லியமாவோடே பிசைந்த எண்ணெய். He makes Christ real to me. நமக்குமேல் இருக்கிற பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்துவை மற்றவர்களுக்கு மெய்யாக்குகிறார். The indwelling spirit நமக்குள் இருக்கும் எண்ணெய் is to make Christ real to me. நம்மேல் இருக்கும் எண்ணெய் is to make Christ real to others.
ஒன்று எண்ணெய் எனக்குள், என்மேல். இரண்டு, எனக்குள் இருக்கும் எண்ணெய் கிறிஸ்துவை எனக்கு மெய்யாக்குகிறார். என்மேல் இருக்கும் எண்ணெய் கிறிஸ்துவைப் பிறருக்கு மெய்யாக்குகிறார். மூன்று, எனக்குள் இருக்கும் ஆவியானவர் எனக்கு ஜீவனாக மாறுகிறார், அதாவது எனக்குள் இருக்கும் ஆவியானவர் ஜீவனுக்கு அடையாளம். கிறிஸ்து எனக்கு ஜீவன் Christ in me is life. என்மேல் இருக்கும் ஆவியானவர் வல்லமைக்கு அடையாளம். power.
பரிசுத்த ஆவியானவரின் இந்த இரண்டு அம்சங்களைக்குறிக்கும் சில வசனங்களை நாம் இப்போது பார்ப்போம். ரோமர் 8ஆம் அதிகாரம் 9ஆம் வசனம். இது மிகவும் அற்புதமான பகுதி. இதில் இருக்கக்கூடியவைகள் நமக்குப் போதுமானவை. ஆயினும் ரோமர் 8:9,10,11 வசனங்களை வாசிப்போம். “தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல.” பாருங்கள், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், ‘உங்கள்மேல்’ என்று இல்லை ‘ உங்களில் வாசமாயிருந்தால்’ என்று இருக்கிறது. அடுத்தது பத்தாம் வசனம். "மேலும் கிறிஸ்து உங்களிலிருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாக இருந்தாலும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும்.” கிறிஸ்து ‘உங்களில் இருந்தால்’ என்று இருக்கிறது. அடுத்தது பதினோறாம் வசனம், “அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.” இந்த வசனங்களில் வருகிற “உங்களில் வாசமாயிருந்தால்” “உங்களுக்குள் வாசமாயிருந்தால்”, “ஆவியானவர் உங்களில் வாசமாயிருந்தால்” என்ற சொற்றொடர்களைக் கவனியுங்கள். 1 கொரிந்தியர் 6:19 பெரும்பாலும் எல்லாக் கிறிஸ்தவர்களுக்கும் தெரியும். “நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும் தேவனுடைய ஆவியானவர் உங்களில் வாசமாயிருக்கிறார் என்றும் நீங்கள் அறியாதிருக்கிறீர்களா? “ ‘உங்களில்’ ‘in you’. "நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார். உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்" யோவான் 14:16, 17. "இதற்கு நம்மை ஆயத்தப்படுத்துகிறவர் தேவனே; ஆவியென்னும் அச்சாரத்தை நமக்குத் தந்தவரும் அவரே" 2 கொரி. 5:5. "நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள். அவருக்குச் சொந்தமானவர்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக மீட்கப்படுவார்கள் என்பதற்கு ஆவியானவர் நம்முடைய சுதந்தரத்தின் அச்சாரமாயிருக்கிறார்" எபேசியர் 1:14. இந்த வசனங்களில் சொல்லப்பட்டுள்ள "உங்களில்" "உங்களுக்குள்" "வாசம்பண்ணி" "தங்கியிருக்கிற" "அச்சாரம்" "முத்திரை" என்ற வார்த்தைகளைக் கவனியுங்கள், தியானியுங்கள். அந்த மெல்லிய மாவில் எண்ணெய் ஊற்றி பிசைந்திருக்கிறது. இது உள்ளான அம்சம்.
நமக்குள் இருக்கும் ஆவியானவருடைய அம்சத்தை, மாவில் எண்ணெய் ஊற்றி பிசைந்த அம்சத்தை, வேதாகமம் இரண்டு காரியங்களுக்கு ஒப்பிடுகிறது.
ஒன்று தண்ணீர், “பண்டிகையின் கடைசிநாளாகிய பிரதான நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன். வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார். தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக்குறித்து இப்படிச் சொன்னார். இயேசு இன்னும் மகிமைப்படாதிருந்தபடியினால் பரிசுத்த ஆவி இன்னும் அருளப்படவில்லை" யோவான் 7:37-39. இங்கு ஆண்டவராகிய இயேசு பரிசுத்த ஆவியானவரை நமக்கு உள்ளேயிருந்து வெளியே பாய்ந்தோடும் தண்ணீருக்கு ஒப்பிட்டுப் பேசுகிறார்.
யோவான் 20ஆம் அதிகாரம் 22ஆம் வசனம், “அவர்கள்மேல் ஊதி: பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.” சீடர்களெல்லாரும் யூதர்களுக்குப் பயந்து, ஓர் அறைக்குள் பூட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த அன்று பூட்டியிருக்கும் அந்த வீட்டிற்குள் நுழைந்து, அவர்கள்மேல் ஊதி "பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்," என்று சொன்னார். அன்று அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டார்களா, பெற்றுக்கொள்ளவில்லையா? அன்று அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றார்கள் என்றால், பெந்தேகொஸ்தே நாளில் அவர்கள் பெற்ற பரிசுத்த ஆவியானவர் யார்? அது என்ன?
உன்னிப்பாகக் கவனியுங்கள். இயேசு உயிர்த்தெழுந்த நாளில் அவர்களுக்குள் சுவாசத்தை ஊதினார். நான் ஏற்கெனவே சொன்னதுபோல, நமக்குள் இருக்கும் இந்த எண்ணெய், நமக்குள் இருக்கும் பரிசுத்த ஆவியானவர், ஜீவனுக்கு அடையாளம். இது indispensable.
ஏதேன் தோட்டத்தில் தேவனாகிய கர்த்தர் மனுஷனை மண்ணினால் உண்டாக்கி அவனுக்குள் தன் சுவாசத்தை ஊதினார், அவன் ஜீவாத்துமானான், he became a living soul. அதுபோல, இங்கு உயிர்த்தெழுந்த அன்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, அவர்கள்மேல் ஊதி "பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்" என்று சொன்னார். உயிர்த்தெழுந்த அன்று நமக்குள் வந்த ஆவியானவர் நம் மூச்சு, சுவாசம், ஜீவன். பெந்தெகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் அவர்கள்மேல் வந்தார். உயிர்த்தெழுந்த அன்று அவர் அவர்களுக்குள் வந்தார். இவ்வாறு நமக்குள் இருக்கும் ஆவியானவர் தண்ணீருக்கும், சுவாசத்துக்கும் ஒப்பிடப்படுகிறார். நமக்குமேல் இருக்கும் ஆவியானவர் வல்லமைக்கு அடையாளம். "பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்." அப். 1:8. it is power.
லூக்கா 24:49ஐ வாசிப்போம். “என் பிதா வாக்குத்தத்தம்பண்ணினதை இதோ நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள் என்றார்”. இது ஆண்டவராகிய இயேசு தம் சீடர்களிடம் சொன்ன வார்த்தை. தான் மரித்து உயிர்த்து, பரமேறிச் செல்வதாகவும், அதன்பின் உன்னதத்தை பலம் அவர்கள்மேல் வரும் என்றும் கூறுகிறார். இந்த வசனத்தில் சொல்லப்பட்டுள்ள "தரிப்பிக்கப்படும்வரைக்கும்" என்ற வார்த்தையைக் கவனியுங்கள். தரிப்பித்தல் என்றால் உடுத்துதல் என்று பொருள். ஆடைகளை உடுத்துகிறோம். ஆடைகளை யாரும் சாப்பிடுவதில்லை. ஆடைகளைத் தரித்துக்கொள்கிறோம்.
ஆவியானவரின் இந்த இரண்டு அம்சங்களையும் நாம் பார்க்கவேண்டும். மெல்லிய மாவோடே எண்ணெயைச் சேர்த்துப் பிசையவும் வேண்டும், மெல்லியமாவுமேல் எண்ணெயைத் தடவவும் அல்லது பூசவும் வேண்டும். இரண்டு அம்சங்கள் இருக்கின்றன. ஒன்று எனக்குள், இன்னொன்று என்மேல். எனக்குள், அது உள்ளானது; என்மேல், அது புறம்பானது.
எடுத்துக்காட்டு தண்ணீர். நான் தண்ணீருக்குள் இருக்கிறேன் என்றால், தண்ணீர் எனக்கு வெளியே இருக்கிறது. நான் தண்ணீரைக் குடிக்கிறேன் என்றால், தண்ணீர் எனக்கு உள்ளே இருக்கிறது. இரண்டு அம்சங்கள் இருக்கின்றன. நான் தண்ணீர்த் தொட்டிக்குள் உட்கார்ந்திருக்கிறேன் என்றால், தண்ணீர் எனக்கு வெளியே இருக்கிறது; நான் குளித்துக்கொண்டிருக்கிறேன் என்று பொருள். தண்ணீரை நான் குடிக்கிறேனென்றால் அது எனக்கு உள்ளே போகிறது என்று பொருள். இது விளங்கிக்கொள்ளமுடியாத ஒன்றல்ல.
அப்போஸ்தலர் நடபடிகள் 2ஆம் அதிகாரம் 3ஆம் வசனம், “அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது.”
நம்மில் இருக்கும் ஆவியானவர் யோவான் 20ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ளபடி, நம் சுவாசம், மூச்சு. நம்மேல் இருக்கும் ஆவியானவர் அப்போஸ்தலர் நடபடிகள் முதல் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ளபடி காற்று. உள்ளான ஆவியானவர் தண்ணீருக்கும், மூச்சுக்காற்றுக்கும் ஒப்பிடப்படுகிறார். புறம்பான ஆவியானவர் ஆடைக்கும், காற்றுக்கும் ஒப்பிடப்படுகிறார்.
நான் ஒரு சிறிய கேள்வி கேட்கிறேன்: பழையஏற்பாட்டு ஆவியானவருக்கும் புதிய ஏற்பாட்டு ஆவியானவருக்கும் இடையேயுள்ள ஒரு முக்கியமான வேறுபாடு என்ன? பழைய ஏற்பாட்டில் பரிசுத்த ஆவியானவர் நபர்கள்மேல் இறங்கி வந்தார்; தாம் செய்ய நினைத்த செயல்களைச் செய்தார், பேச விரும்பிய வார்த்தைகளைப் பேசினார். தம் வேலை முடிந்தவுடன் போய்விட்டார். தீர்க்கதரிசிகள், தலைவர்கள் இவர்கள்மேல் வந்தார், செயல்பட்டார், போய்விட்டார். ஒன்று, பழைய ஏற்பாட்டில் பரிசுத்த ஆவியானவர் ஒரு மனிதனுக்குள் போக முடியாது. யோவான் 7ஆம் அதிகாரத்தில் வாசித்ததுபோல், பழைய ஏற்பாட்டு ஆவியானவர் எந்த மனிதனுக்குள்ளேயும் போகமுடியாது. ஏனென்றால், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மரித்து உயிர்த்தெழாதவரை, பரிசுத்த ஆவியானவர் ஒரு மனிதனுக்குள் போகமுடியாது. மனிதர்கள்மேல்தான் வரமுடியும். ஆனால் புதிய ஏற்பாட்டில், நம்முடைய பெரிய சிலாக்கியம், அவர் மரித்து உயிர்த்தெழுந்ததால், நாம் அவரை விசுவாசிக்கும்போது நமக்குள் வந்து நிரந்தரமாகத் தங்குகிறார். இது மிகவும் முக்கியமான அம்சம்.
தானியபலியில் இந்த விவரங்களைப் பார்த்து மலைத்துவிடாதீர்கள். மாவைப் பிசைந்தார்கள், கொடுத்தார்கள்: மாவிலே எண்ணெய் தடவினார்கள், பூசினார்கள். இத்தனை விவரங்களா? யோசித்துப் பாருங்கள், எவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன! எவ்வளவு காரியங்கள் இருக்கின்றன!
மெல்லிய மாவோடு மூன்று பொருட்கள் சேர்க்கவேண்டும் என்று சொன்னேன். ஒன்று எண்ணெய். எண்ணெய் பூசினார்கள் அல்லது தடவினார்கள். இரண்டாவது, தூபவர்க்கம். அந்த நாட்களில் இஸ்ரயேல் மக்களைச் சுற்றியிருந்த வேறு சில கலாச்சாரங்களிலும் தங்கள் வழிபாடுகளில் தூபவர்க்கம் பயன்படுத்தினார்கள். தூபவர்கத்தின் விலை மிகவும் அதிகம். அன்று அவர்கள் தூபவர்க்கத்தைப் பெரும்பாலும் இறக்குமதிதான் செய்தார்கள். தூபவர்க்கம் ஜெபத்தைக் குறிக்கிறது. ஜெபம் எதற்காக? என்னைப் பொறுத்தவரை இரண்டு காரியங்கள் சொல்வேன். ஒன்று "நான் தேவனே, உம்மையே சார்ந்துள்ளேன்." இரண்டு "தேவனே, நான் உம்மேல் சாய்ந்துள்ளேன். நான் உம்மைச் சாராதவரை, உம்மேல் சாயாதவரை, எனக்கு வழி இல்லை." அதைக் கர்த்தர் முகர்ந்து பார்க்கிறார். . அவர் முகர்ந்தார் என்றவுடன் அவருக்கு மூக்கு இருப்பதாகக் கற்பனைசெய்ய வேண்டாம்.
விவரங்களைத் தொடர்ந்து பார்ப்போம்.
அடுத்ததாக, உப்பு. "நீ படைக்கிற எந்த போஜனபலியும் உப்பினால் சாரமாக்கப்படுவதாக; உன் தேவனுடைய உடன்படிக்கையின் உப்பை உன் போஜனபலியிலே குறையவிடாமல், நீ படைப்பது எல்லாவற்றோடும் உப்பையும் படைப்பாயாக" லேவியராகமம் 2:13. உப்பைப்பற்றி ஒரு சுவையான கதை சொல்லி இன்றைக்கு முடித்துக்கொள்வோம். அடுத்தவாரம் தொடர்ந்து பார்ப்போம். உப்பைக்குறித்து வேதாகமத்தில் நிறைய இடங்களில் நாம் வாசிக்கிறோம். எடுத்துக்காட்டாக, "நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது," என்று மத்தேயு 5:13இல் வாசிக்கிறோம். இல்லையா? உப்பு சாரமற்றுப் போனால்? இதன் பொருள் என்ன?
உப்பின் தன்மை என்ன? ஒரு பொருளுக்குச் சுவைகொடுப்பதுதான் உப்பின் தன்மை என்று பரவலாக நாம் நினைக்கிறோம். உப்புக்கு இப்படிப்பட்ட ஒரு குணம் உண்டா? நிச்சயமாக உண்டு. ஆனால், உப்பின் பிரதானமான குணம் இதுவல்ல. ஒரு பொருள் கெட்டுப்போகாமல் பாதுகாப்பதுதான், அழுகாமல் காப்பதுதான், பதப்படுத்துவதுதான், உப்பின் முதன்மையான குணம், தன்மை, இலட்சணம். preservation. ஒரு பொருளைப் பதப்படுத்துவதுதான், அதன் தூய்மை கெடாமல் காப்பதுதான், அதன் வாழ்நாளை நீட்டிப்பதுதான் அதன் முதன்மையான குணம். preservation, purity, endurance. இதுதான் உப்பின் மிக முக்கியமான குணம். Preserve பண்ணும்.
ஒன்று, ஒரு பொருள் கெட்டுப்போகாமல் இருக்கவேண்டுமானால் உப்பைப் பயன்படுத்தவேண்டும்.
நான் ஒரு கேள்வி எழுப்புகிறேன்: பலி கொடுக்கும்போது, இரத்தத்தோடு பலி கொடுக்கக்கூடாது. இல்லையா? அதாவது இரத்தத்தோடு என்றால், ஒரு மிருகத்தை வெட்டிக் கொலைசெய்தபின், அந்த மிருகத்தின் இரத்தத்தை ஒரு பாத்திரத்தில் பிடிக்க வேண்டும். அதன்பின் மிருகத்தைப் பலிபீடத்தில் வைத்துத் தகனிக்க வேண்டும். அந்த மிருகத்தைப் பலிபீடத்தில் வைக்கக் கொண்டுபோகும்போது அந்த மிருகத்தில் கொஞ்சம்கூட இரத்தம் இருக்கக்கூடாது. இரத்தத்தை எப்படிச் சுத்தம் செய்தார்கள் தெரியுமா? அந்த நாட்களில் ஒற்றி எடுப்பதற்கு tissue paper roll இல்லை. என்ன செய்தார்கள்? மிருகங்களைக் கழுவினபின் இருந்த இரத்தத்தைச் சுத்தம்செய்ய அதில் உப்பு தடவினார்கள். உப்பு இரத்தத்தை உறிஞ்சி எடுத்துவிடும். இவ்வாறு மிருகத்தின் உடலிலிருந்து இரத்தத்தைச் சுத்தம்செய்தார்கள். it is not only a preservative . இரத்தத்தை உறிஞ்சிகொள்ளும். கொல்லப்பட்ட மிருகத்தின் உடலில் இரத்தத்தின் சுவடே இல்லை என்று நிச்சயித்தபிறகுதான், அந்த மிருகங்களைப் பலிபீடங்களில் வைத்துத் தகனித்தார்கள்.
சரி, மிருகத்தின் உடலிலிருந்து இரத்தத்தைச் சுத்தம்செய்யத் தடவின உப்பை என்ன செய்தார்கள்? இரத்தம்தோய்ந்த உப்பு. உப்போடு சேர்த்து மிருகத்தைப் பலிபீடத்தில் வைத்துத் தகனிக்க முடியாது. இல்லையா? அப்படியென்றால் என்ன செய்யவேண்டும்? தடவின உப்பைப் பலிபீடத்தின் பக்கத்தில் கொட்டிவிடவேண்டும். இப்படி கொட்டப்பட்ட உப்பு அங்கு மலைபோல் குவிந்துகிடக்கும். இந்த உப்பை எங்கு புல்கூட முளைக்கக்கூடாது என்று நினைக்கிறார்களோ, அங்கு கொண்டுபோய் வெளியே கொட்டிவிடுவார்கள். கொல்லப்பட்ட மிருகங்களின் உடலிலிருந்து இரத்தத்தைச் சுத்தம்செய்யத் தடவின உப்பு இனி எதற்கும் பயன்படாது. இது இப்போது சாரமற்றுப் போய்விட்டது. it is used up, that’s it.
இந்த உப்பை வெளியே கொண்டுபோய் கொட்டிவார்கள். இதுதான் "உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது" என்பதின் பொருள். மக்கள் நடக்கக்கூடிய பாதையில், முட்களும் புல்லும் சாக வேண்டுமானால் அப்படிப்பட்ட இடங்களில் இந்த உப்பைக் கொட்டினார்கள். ஒருவனுடைய தோட்டத்தில் எதுவும் முளைக்கக்கூடாது என்று பொறாமைப்பட்டவன் இந்த உப்பைக் கொட்டிவிடுவானாம்.
சரி, இன்றைக்கு தானியபலியைப்பற்றிய ஒரு முன்னுரை பார்த்திருக்கிறோம். இத்தோடு நிறுத்திக்கொள்வோம். அடுத்தவாரம் தொடர்வோம்.