07 - லேவியராகமம் - 3.1 - சமாதான பலி - அடித்தளம்- Leviticus 3.1 - Peace offering - foundation
இந்தப் பாடத்தில் சமாதான பலியின் ஆழமான ஆவிக்குரிய பொருளை ஆராய்கிறோம். சமாதான பலி வெறுமனே பழைய ஏற்பாட்டின ஒரு பலி அல்ல; அது முதலாவது தேவனுக்கும் மனிதனுக்கும், இரண்டாவது மனிதர்களுக்கிடையே ஏற்படும் உண்மையான ஐக்கியத்தைச் சுட்டிக்காட்டுகிறது.
இந்தப் பாடத்தில்: • நிழலும் மெய்யும் • பலிபீடத்தின் வாழ்க்கை • ஐக்கியத்தின் உண்மையான பொருள் • பெற்றறிவும் உற்றறிவும் • கிறிஸ்து செய்தது, பரிசுத்த ஆவியானவர் செய்வது • Objective Fact & Subjective Experience • சமநிலையான கிறிஸ்தவ வாழ்க்கை
ஆகிய முக்கிய சத்தியங்களை வேதாகமத்தின் வெளிச்சத்தில் ஆராய்கிறோம். “
அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது.” (கொலோசெயர் 2:17)
லேவியராகமம் அதிகாரம் 3, பாகம் 1
சமாதான பலி – அடித்தளம்
பாடம் 7
1. அறிமுகம் – பலிபீடத்தின் பார்வை
அன்புக்குரிய பரிசுத்தவான்கள் அனைவருக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய பெயரில் என் அன்பையும் வாழ்த்தையும் தெரிவிக்கிறேன்.
நாம் வாழ்கிற இந்தக் காலத்தில் மனிதர்களின் கவனம் ஒரே காரியத்தில் நீண்ட நேரம் நிலைத்திருப்பதில்லை என்பது ஒரு வருத்தமான உண்மை. கேளிக்கைகளும், பொழுதுபோக்கு அம்சங்களுமே இன்று சமூக ஊடகங்களில் அதிகம் விரும்பப்படுகின்றன.
ஆழமான வேதபாடம், வேத ஆராய்ச்சி, அமைதியான சிந்தனை, தியானம் — இவை அரிதாகிவிட்டன.
இந்தப் பாடங்களை இன்று பலர் கவனிக்காமல் போகலாம்.
ஆனால் பல ஆண்டுகளுக்குப்பிறகு சிலர் இதைத் தேடி வருவார்கள்.
ஒரு தலைமுறைக்குப்பிறகு சிலர் இதைப் பார்ப்பார்கள், படிப்பார்கள்.
இன்று நாம் விதைக்கிறோம். ஒருநாள் முளைக்கும்.
ஒருவன் பலிபீடத்துக்கு பலி கொண்டுவரும்போது, பிறர் அந்தப் பலியைப் பார்க்கிறார்களா என்று அவன் பார்ப்பதில்லை. அவன் பிறருடைய கைதட்டலுக்காக வருவதில்லை. அவன் கர்த்தருடைய சந்நிதியை நோக்குகிறான். அவன் கர்த்தருக்காக வருகிறான்.
இந்த வேதபாடமும் அப்படியே
இந்த உலகம் சத்தத்தை விரும்புகிறது.
தேவனுடைய அரசு ஆழத்தை விரும்புகிறது.
சத்தம் உடனே கவனத்தை ஈர்க்கும்.
ஆழம் மெதுவாக மனிதனை மாற்றும்.
இந்த வேதபாடம் ஒரு சத்தமல்ல.
இது வேர்.
மரம் கனிதருவதற்குமுன்,
அதன் வேர் மண்ணுக்குள் காணப்படாத இடத்தில் வளர வேண்டும்.
இது பொழுதுபோக்கு அல்ல.
இது பலிபீடம்.
2. நிழலும் நிஜமும்: வேதாகமத்தைப் புரிந்துகொள்ளும் ஆணிவேர்
2.1 நிழல் எதைக் சுட்டிக்காட்டுகிறது
பலிபீடத்தைப்பற்றிப் பேசும்போது, ஒரு மிக முக்கியமான கேள்வி எழுகிறது.
லேவியராகமத்தில் காணப்படும் இந்தப் பலிகள் பழைய காலத்தில் நடந்த வெறும் சடங்குகளா அல்லது இவை ஆழமான எதையாவது சுட்டிக்காட்டுகிறதா?
இவை நிழல்கள் என்று வேதாகமம் கூறுகிறது. ஆனால் நிழல் தனியாக நிற்காது. நிழல் இருந்தால், அதன் பின்னால் ஒரு நிஜம் இருக்க வேண்டும்.
நிழல் எப்போதும் தன்னைவிட பெரிய ஒன்றைச் சுட்டிக்காட்டும்.
அந்த நிஜம் யார்?
கிறிஸ்துவே.
“கொலோசெயர் 2:16,17 ஆகிய இரண்டு வசனங்களை வாசிப்போம்.
"ஆகையால், போஜனத்தையும் பானத்தையும்குறித்தாவது, பண்டிகைநாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையுங்குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக. அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது; அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது."
ஆகவே லேவியராகமத்தை நாம் வெறும் சடங்காகப் பார்க்கக் கூடாது.
நிழலாகப் பார்க்க வேண்டும்.
நிழலைத் தாண்டி நிஜத்தை அடைய வேண்டும்.
நிழல், சாயல், மாதிரி, ஒப்பனை, திருஷ்டாந்தம் என்ற வேறு பல வார்த்தைகளும் வேதாகமத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த வார்த்தைகள் உங்களுடைய மனதில் ஆழமாகப் பதியவேண்டும்.
இப்போது நாம் இந்த நிழல் — நிஜம் என்ற வேறுபாட்டை மெதுவாக ஆராயப்போகிறோம்.
2.2 வேதாகமத்தின் தரத்தைத் தாழ்த்தாதீர்கள்
வேதாகமத்தில் நாம் பார்க்கிற நிகழ்ச்சிகள், மனிதர்கள், பயிற்சிகள், பலிகள், பண்டிகைகள், அடையாளங்கள் - இவை அனைத்தும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு முன்னடையாளம் என்று நாம் ஏற்கனவே பார்த்தோம். இந்தப் பார்வை இல்லையென்றால் என்ன நடக்கும் தெரியுமா? நாம் வேதாகமத்தை ஒரு நன்னெறி நூல்போலப் பயன்படுத்த ஆரம்பித்துவிடுவோம். “குடும்பம் நடத்துவது எப்படி? பிள்ளைகளை வளர்ப்பது எப்படி? வியாபாரத்தில் வெற்றிபெறுவது எப்படி? நல்ல வேலை தேடுவது எப்படி?” என்று வேதாகமத்தின் தரத்தை நாம் தாழ்த்தி, அதை நாம் ஓர் “எப்படி” புத்தகமாக மாற்றிவிடும் ஆபத்து இருக்கிறது. இவை தவறான கேள்விகள் அல்ல. ஆனால் இவை வேதாகமத்தின் மையக் கேள்விகள் அல்ல. வேதாகமம் எதற்காக கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதன் தரத்தை நாம் ஒருபோதும் தாழ்த்தக் கூடாது. வேதாகமம் முதன்மையாக நாம் எப்படி வாழ வேண்டும் என்று கற்றுக்கொடுப்பதற்காக அல்ல; அது கிறிஸ்துவை வெளிப்படுத்துவதற்காக
2.3 கிறிஸ்து – மையமும் சுற்றுவட்டமும்
கிறிஸ்து யார்? அவர் செய்துமுடித்த வேலை என்ன? இந்த இரண்டு கேள்விகளே தேவனுடைய நித்திய நோக்கத்தைத் திறக்கின்றன. இதை நாம் எப்போதும் நம் கண்களுக்குமுன்பாக நிறுத்த வேண்டும். நாம் இதற்குக் குறைவாகவும் நிற்கக்கூடாது; இதற்குக் கூடுதலாகவும் போய்விடக்கூடாது. Mysticism without Christ, கிறிஸ்து இல்லாத மறைஞானம் — தவறு.
Legalism without Christ, கிறிஸ்து இல்லாத சட்டவாதம் — தவறு.
Activism without Christ, கிறிஸ்து இல்லாத செயல்வாதம் — தவறு.
Moralism without Christ, கிறிஸ்து இல்லாத ஒழுக்கவாதம் — தவறு.
கிறிஸ்துவே மையம்; கிறிஸ்துவே சுற்றுவட்டம். அவரே ஆதி, அவரே அந்தம். அவரே தொடக்கம், அவரே முடிவு. அவரே அல்பா, அவரே ஒமேகா. கிறிஸ்துவில்தான் ஆரம்பிக்க வேண்டும், கிறிஸ்துவில்தான் முடிக்க வேண்டும். இதுதான் தேவனுடைய பார்வை; இதுதான் தேவனுடைய நோக்கம். ஆகவே இதுவே நம் பார்வையாகவும், நம் நோக்கமாகவும் இருக்க வேண்டும்.
2.4 நிழல்களின் பரிமாணம்
வேதாகமத்தில் நாம் பார்க்கிற வெண்கல சர்ப்பம், மன்னா, கன்மலை, திரைச்சீலைபோன்ற நிகழ்ச்சிகளாக இருந்தாலும் சரி; மோசே, யோனா, யோசேப்பு, சாலொமோன், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபுபோன்ற தேவ மனிதர்களாக இருந்தாலும் சரி; அவர்கள் பின்பற்றின விருத்தசேதனம், ஓய்வுநாள் போன்ற பயிற்சிகளாக இருந்தாலும் சரி; ஐந்து விதமான பலிகளாக இருந்தாலும் சரி; ஏழு பண்டிகைகளாக இருந்தாலும் சரி – எல்லாம் கிறிஸ்துவையே முன்னிறுத்துகின்றன, அடையாளப்படுத்துகின்றன. அவையெல்லாம் கிறிஸ்துவுக்கு நிழல்.
கிறிஸ்துவை மையமாகக் கொண்ட பார்வை ஓர் இறையியல் கருத்து மட்டும் அல்ல; அது வாழ்க்கையிலும் வெளிப்பட்டுள்ளது.
2.5 வாழ்க்கையில் வெளிப்பட்ட சாட்சி
எனக்கு இரண்டு சீக்கியர்களைத் தெரியும்: ஒருவர் சாது சுந்தர் சிங்; இன்னொருவர் சாது பக்த் சிங். முதல் சீக்கியரைப்பற்றி ஒருவேளை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.
சாது சுந்தர் சிங் கிறிஸ்தவனானபிறகு ஒரு நாள் அவருடைய பெற்றோர்களும், சீக்கிய மதக் குருக்களும் அவரிடம், “நம்முடைய சீக்கிய மதத்திலோ அல்லது வேறு மதத்திலோ இல்லாத ஒரு விசேஷமான காரியத்தை நீ கிறிஸ்தவத்தில் கண்டுபிடித்தாயா? அன்பு, தாழ்மை, பொறுமை, நீதி, நியாயம் போன்ற நற்பண்புகளைப்பற்றி நம்முடைய மதத்தில் இல்லாத ஒன்று கிறிஸ்தவ மதத்தில் இருக்கிறது என்று உன்னால் சொல்ல முடியுமா? அதை நிரூபிக்க முடிந்தால் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்,” என்று சொன்னார்களாம்.
அப்போது சாது சுந்தர் சிங், “எல்லா மதங்களும் பேசக்கூடிய ஒழுக்கத்தைப்பற்றித்தான் கிறிஸ்தவமும் பேசுகிறது என்று வைத்துக்கொள்வோம். ஆனால் வேறு எந்த மதத்திலும் இல்லாத ஒன்று கிறிஸ்தவத்தில் மட்டுமே உண்டு. அது கிறிஸ்து என்ற நபர். வேறு எந்த மதத்திலும் இப்படி ஒரு நபர் கிடையாது. மதங்கள் ஒழுக்கத்தைக் கற்பிக்கலாம்; கிறிஸ்தவம் கிறிஸ்துவை அளிக்கிறது,” என்று சொன்னாராம்.
ஆம், கிறிஸ்தவம் என்பது சம்பிரதாயங்களோ, சடங்குகளோ, முதன்மையாக உபதேசங்களோ அல்ல. அது கிறிஸ்து என்ற நபரைப்பற்றியது. Christianity is about the Person of Christ and what He did. கிறிஸ்தவம் என்பது கிறிஸ்து என்ற நபரையும், அவர் செய்துமுடித்த வேலைகளையும் பற்றியது.
2.6 நிழல் – மெய்
ஒரு கேள்வி கேட்கிறேன்: “மெய்” என்ற வார்த்தைக்கு எதிர்ப்பதம் என்ன? நாம் பொதுவாக ‘பொய்’ என்று சொல்வோம். ஆனால் மெய்க்கு எதிர்ப்பதம் ‘பொய்’ என்று வேதாகமம் சொல்லவில்லை. மாறாக நிழல், சாயல், ஒப்பனை, அடையாளம், நகல் என்று கூறுகிறது. Copy, shadow, pattern, figure, model, symbol, type, — இப்படிப்பட்ட வார்த்தைகளையே வேதாகமம் பயன்படுத்துகிறது.
நிழலுக்கும் மெய்க்கும் இடையே உள்ள சில வேற்றுமைகளை நாம் முன்பு பார்த்தோம். நினைவிருக்கிறதா? இங்கே பாருங்கள்: இங்கு ஒரு நிழல் இருக்கிறது; ஒரு மனிதனும் இருக்கிறான். அந்த மனிதன்மேல் வெயில் படுகிறது; அவனிடமிருந்து நிழல் உருவாகிறது. மெய்யாகவே ஒரு மனிதன் நிற்கிறான்; அவனுடைய நிழல் இன்னொரு பக்கம் விழுகிறது. நிழலும் மெய்தான்; ஆனால் அது குறைவான மெய். அது பொய் அல்ல, கானல் நீர் அல்ல; மாயை அல்ல. நான் இருக்கிறேன்; என் நிழல் கீழே விழுகிறது. இந்த நிழல் மெய்தான்; ஆனால் அந்த நிழலுக்கு உயிர் இல்லை; வல்லமை இல்லை. மெய்யிலிருந்துதான் நிழல் வருகிறது. மெய்தான் ஆதாரம்; மெய்தான் உண்மை; மெய்தான் ஊற்று. ஊற்றிலிருந்து நிழல் வருகிறது. மெய்க்குத்தான் வல்லமை உண்டு; உயிர் உண்டு. மெய் தானாக நிற்கும்; ஆனால் நிழல் தானாக நிற்காது. மெய்க்காகத்தான் நிழல் இருக்கிறது. மெய் என்றைக்குமே இருக்கும்; நிழல் மறைந்து விடும். நிழல் நிரந்தரம் அல்ல. நிழல் மெய்யின் வெளியாக்கம், வெளிப்புற வடிவம். நிழல் குறைவானது; அதில் எல்லா விவரங்களும் இல்லை. ஆனாலும் அதில் ஓர் உண்மை இருக்கிறது. மெய்யில்தான் எல்லா விவரங்களும் இருக்கின்றன. இது மிக முக்கியமான காரியம்.
2.7 நிழலில் தங்கும் ஆபத்து
ஏனென்றால் பல வேளைகளில் விசுவாசிகளாகிய நாம் நிழலிலேயே தங்கிவிடுகிறோம். நிழல் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு முன்னடையாளம் என்பதை நாம் மறந்துவிடுகிறோம். வேதாகமத்தின் நோக்கம் தெரியாவிட்டால், நம்மை அறியாமலே நாம் அந்த நோக்கத்திற்குக் குறைவாக நின்றுவிடலாம் அல்லது அதைத்தாண்டியும் போய்விடலாம்.
ஆசரிப்புக் கூடாரத்தை எடுத்துக்கொள்வோம். அதில் வெளிப்பிரகாரம், பரிசுத்த ஸ்தலம், மகா பரிசுத்த ஸ்தலம் என மூன்று பகுதிகள் இருந்தன. ஒருவன் வெளிப்பிரகாரத்துக்குள் நுழையாமல் வெளியேயே நின்றுவிடலாம்; அல்லது மகா பரிசுத்த ஸ்தலத்தைத் தாண்டி வெளியேயும் போய்விடலாம். வெளிப்பிரகாரத்துக்குள் நுழையாமல் வெளியே நிற்பவன் குறைவாக நின்றுவிடுகிறான். மகா பரிசுத்த ஸ்தலத்தைத் தாண்டி வெளியே செல்பவன் அதிகமாகச் செல்கிறான். குறைவாக நின்றாலும் தவறு.
அதிகமாகச் சென்றாலும் தவறு.
நாம் ஏற்கெனவே பார்த்ததுபோல, “பிள்ளைகளை வளர்ப்பது எப்படி? குடும்பம் நடத்துவது எப்படி? வேலை தேடுவது எப்படி?” போன்ற உலகப்பிரகாரமான காரியங்களை கற்றுக்கொள்வதற்காக மட்டுமே வேதாகமத்தைத் தேடுபவன் பிரகாரத்துக்குள்கூட நுழையாமல் இன்னும் கூடாரத்துக்கு வெளியேதான் நிற்கிறான். அதுபோல வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ள வெளிப்புற செயல்களை அப்படியே நகலெடுப்பதே ஆவிக்குரிய வாழ்வு என்று நினைப்பதும் தவறு. “அவர்கள் வீடுகளில் கூடினார்கள்; எனவே நாமும் வீடுகளில் கூட வேண்டும். அவர்கள் கர்த்தருடைய நாமத்தை நோக்கிக் கூப்பிட்டார்கள்; எனவே நாமும் அப்படியே கூப்பிட வேண்டும். அவர்கள் தாடி வைத்திருந்தார்கள்; எனவே நாமும் தாடி வைக்க வேண்டும். அவர்களைப்போல நாமும் வெள்ளை ஆடைகளையே அணியவேண்டும்,” என்பதுபோன்ற போதனைகளையும் பயிற்சிகளையும் பின்பற்றுபவர்களும் போதிப்பவர்களும் மகா பரிசுத்த ஸ்தலத்தைத் தாண்டி வெளியே போய்விட்டார்கள் என்று சொல்லலாம். இவை எல்லாம் நிழலைப் பிடித்துக்கொண்டு மெய்யை இழப்பதற்குச் சமம்.
2.8 நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசிகளும் கிறிஸ்துவைச் சுட்டிக்காட்டுகின்றன
மீண்டும் சொல்கிறேன்: “கிறிஸ்து யார்? அவருடைய வேலை என்ன?” என்பதை விவரிப்பதே வேதாகமத்தின் மைய நோக்கம். சில வசனங்களை வாசிப்போம். யோவான் 1:45. “நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம்; அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய இயேசுவே” என்றான். இது பிலிப்பு ஆண்டவராகிய இயேசுவைச் சந்தித்தபிறகு நாத்தான்வேலுக்குச் சொன்ன பதில். லூக்கா 24:27. “மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்.” இது இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தபின் எம்மாவுக்குப் போய்க்கொண்டிருந்த சீடர்களுக்குச் சொன்னது. லூக்கா 24:44. “மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக்குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேறவேண்டும்.” இது இயேசு தம் சீடர்களுக்குச் சொன்ன வார்த்தை.
“வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. அப்படியிருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை” (யோவான் 5:39–40).
எனவே வேதத்தை வாசிக்கிற நாம்
கிறிஸ்துவைத் தொடுகிறோமா?
கிறிஸ்துவைச் சந்திக்கிறோமா?
அவரை அறிகிறோமா?
இதுவே தேவனுடைய பார்வை. இந்தப் பார்வையோடுதான் நாம் வேதாகமத்துக்கு வர வேண்டும். இந்தப் பார்வை இல்லாமல் வேறு பார்வையோடு வேதாகமத்தை அணுகினால், நாம் அதைத் தவறாக பயன்படுத்துகிறோம். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, “நானே மெய்யான போஜனம்; நானே மெய்யான பானம்” (யோவான் 6:55), “நானே மெய்யான ஒளி” (யோவான் 1:9), “நானே மெய்யான அப்பம்” (யோவான் 6:32), “நானே மெய்யான திராட்சைச் செடி” (யோவான் 15:1) என்று கூறினார். இயேசு “மெய்யாகவே, மெய்யாகவே” என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்தினார். அவரே மெய்யான கூடாரம் (எபி. 8:2). அவரே மெய்யான பரிசுத்த ஸ்தலம் (எபி. 9:24). அவர் “மெய்யானவர்” என்று சொல்லும்போது, மற்றவை எல்லாம் நிழல்கள் என்பதை அவர் வெளிப்படுத்துகிறார்.
3. ஐந்து பலிகள் – இரண்டு வகைகள்
சரி, இப்போது சமாதான பலிக்கு வருவோம். மொத்தம் ஐந்து பலிகள் என்று பார்த்தோம். இந்த ஐந்து பலிகளை நாம் இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். இரத்தம் சிந்தப்படுகிற பலி, இரத்தம் சிந்தப்படாத பலி என்று நாம் பிரிக்கவில்லை. நாம் வாசனையின் அடிப்படையில் பிரிக்கிறோம். அவை:
3.1 சுகந்த வாசனையான பலிகள்: அர்ப்பணிப்பிலிருந்து ஐக்கியம்வரை
சுகந்த வாசனையான பலிகள் மூன்று:
முதலாவது சர்வாங்க தகன பலி – ஓலா. சர்வாங்க தகனபலி முழுவதும் பலிபீடத்தில் தகனிக்கப்பட்டது. அதனால் அதன் பெயர் சர்வாங்க தகனபலி; சர்வாங்கம் - முழுவதும் தகனிக்கப்பட்ட பலி.
ஆனால் “ஓலா” என்ற எபிரெய வார்த்தைக்கு “மேலெழும்பும் பலி”, “பரமேறும் பலி”, “தேவனருகே கொண்டு செல்லும் பலி” என்று பொருள். பெயர் என்னவாக இருந்தாலும் சரி. அது முழுமையான அர்ப்பணிப்பு.
இரண்டாவது போஜன பலி – மிஞ்சா. அதன் பொருள் தானிய பலி. இது இரத்தம் கலந்த பலி அல்ல. இது தானியமும் மெல்லிய மாவும் கலந்த பலி.
மூன்றாவது, சமாதான பலி. இந்தப் பலிக்கு “ஜேவா ஷலாமீம்” என்ற எபிரெய வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பலியைத்தான் நாம் இன்று பார்க்கப்போகிறோம்.
ஒன்று ஓலா; இரண்டு மிஞ்சா; மூன்று ஜேவா ஷலாமீம்.
3.2 மூன்று பலிகளின் ஒற்றுமை,வேற்றுமை
இந்த மூன்று பலிகளுக்கும் சில ஒற்றுமைகளும் சில வேற்றுமைகளும் இருக்கின்றன.
ஓலா முழுவதும் தகனிக்கப்பட்டது. அது முழுவதும் தேவனுக்கே உரியது. அதில் ஆசாரியனுக்கோ பொதுமக்களுக்கோ எந்தப் பங்கும் கிடையாது.
மிஞ்சாவாகிய தானியபலியில் ஒரு சிறு பங்கு மட்டுமே பலிபீடத்தில் தேவனுக்கென்று தகனிக்கப்பட்டது. மீதியெல்லாம் ஆசாரியனுக்குச் சேரும். இதில் தேவனுக்கும் ஆசாரியனுக்கும் பங்கு உண்டு.
ஜேவாவாகிய சமாதான பலியில் ஒரு சிறு பகுதி (கொழுப்பு) தேவனுக்கென்று பலிபீடத்தில் தகனிக்கப்பட்டது. மீதியை ஆசாரியனும் பலி கொண்டுவருபவனும் பகிர்ந்துகொண்டார்கள். இதன் பொருள் இதில் தேவன், ஆசாரியன், மக்கள் — மூவரும் பங்குபெற்றார்கள்.
இது வெறுமனே சடங்கில் இருக்கும் வித்தியாசம் அல்ல; இது உறவு எப்படி ஆழமடைகிறது என்பதை விளக்குகிறது. முதலில் அர்ப்பணிப்பு; பின்னர் போஜனம்; அதன்பின் ஐக்கியம்.
இந்த ஓட்டத்தைக் கவனியுங்கள்.
ஓலாவில் — முழுமையான அர்ப்பணிப்பு.
மிஞ்சாவில் — தேவனுடைய மேஜையில் போஜனம்.
ஜேவாவில் — தேவனோடும் மனிதனோடும் கூட்டுப் பங்கேற்பு
அளவு மற்றும் வகை வித்தியாசங்கள்
வித்தியாசத்தை மீண்டும் கவனியுங்கள். ஓலாவாகிய சர்வாங்க தகனபலியில் ஆசாரியனுக்கு எந்தப் பங்கும் கிடையாது. முழுவதும் தேவனுக்கே. மிஞ்சாவாகிய தானியபலியில் ஒரு சிறு பங்கு மட்டுமே அடையாளமாக, தேவனுக்கென்று பலிபீடத்தில் தகனிக்கப்பட்டது; பெரும் பங்கு ஆசாரியனுக்கே போய்ச்சேரும். ஜேவாவாகிய சமாதான பலியில் முக்கியமான பங்கு பலியைக் கொண்டுவருபவனுக்குக் கொடுக்கப்பட்டது. இது லேவியராகமத்தின் இதயத்தைத் தொடும் ஒரு முக்கியமான உண்மை.
சமாதான பலியில் தேவன் மட்டும் அல்ல.
ஆசாரியன் மட்டும் அல்ல.
மக்களும் பங்குபெறுகிறார்கள்.
அர்ப்பணிப்பிலிருந்து ஐக்கியம் வரை —
அதுதான் இந்த உறவின் முன்னேற்றம்.
3.3 லேவியராகமத்தின் மைய நோக்கம்
சரி, தொடர்ந்து பார்ப்பதற்குமுன் நான் ஒரு கேள்வி கேட்கிறேன். யாத்திராகமத்துக்கும் லேவியராகமத்துக்கும் உள்ள ஒரு முக்கியமான வித்தியாசம் உங்களுக்கு நினைவிருக்கிறதா?
யாத்திராகமத்தில் தேவன் பாவிகளாகிய மக்களைத் தேடி வருகிறார். லேவியராகமத்தில் தேவன் தாம் மீட்ட, அழைத்த மக்களைத் தம்முடனே நெருக்கமாக வைத்துக்கொள்ள விரும்புகிறார். இதுதான் இந்த இரண்டு புத்தகங்களின் மைய வித்தியாசம்.
யாத்திராகமத்தில் — மீட்பு.
லேவியராகமத்தில் — நெருக்கம்.
பாவியாகிய மனிதன் பரிசுத்தமான தேவனை அணுகுவதற்கு தேவன் பலிகளை ஏற்படுத்துகிறார்.
யாத்திராகமத்தில் தேவன் தம் மக்களை மீட்கிறார். லேவியராகமத்தில் மீட்கப்பட்ட மக்களைத் தம்மோடு, தமக்கு அருகில் வைத்துக்கொள்ள விரும்புகிறார். மீட்கப்பட்ட மக்களோடு தேவன் எப்போதும் இன்பமான, இணக்கமான, இனிமையான, இசைவான உறவை நாடுகிறார். அவர் அதை விரும்புகிறார். அவர் அதை மதிக்கிறார். இதுவே லேவியராகமத்தின் இதயம்.
எகிப்திலிருந்து ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் மீட்கப்பட்ட மக்களைத் தம்மருகிலேயே வைத்துக்கொள்ள விரும்புகிறார். புதிய ஏற்பாட்டிலும் இதையே நாம் பார்க்கிறோம். “முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள்” (எபேசியர் 2:13). மீட்கப்பட்டவர்கள் தூரத்தில் இருக்க வேண்டியவர்கள் அல்ல.
அவர்கள் தேவனுக்கு அருகில் இருக்க வேண்டியவர்கள். இந்த வசனத்தை நாம் மீண்டும் பார்ப்போம்.
இந்த இணக்கமான உறவுக்காகத் தேவன் பல வழிகளை அமைக்கிறார் —
குறிப்பாக பலிகள்மூலமாக.
எனவே, பலிகள் வெறும் சடங்கு அல்ல.
அது தேவனை அணுகுவதற்கான வழி.
அது நெருக்கத்தின் மொழி.
ஒரு கேள்வி: ஏன் இத்தனை பலிகள்? ஏன் இத்தனை திருவிழாக்கள்? ஏன் இத்தனை ஒழுங்குமுறைகள்? ஒரேவொரு பலி போதாதா? ஒரேவொரு திருவிழா போதாதா? என்ன காரணம்? காரணம் — கிறிஸ்து சிறியவர் அல்ல.
நாம் விசுவாசிக்கிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அவ்வளவு பெரியவர், அளவிட முடியாதவர், ஆராய்ந்தறிய முடியாதவர், தீர்ந்துபோகாதவர், வற்றாதவர், இவ்வளவு பெரிய கிறிஸ்துவை — ஒரேவொரு சின்னப் படத்தால் காட்ட முடியாது. அவருடைய எல்லாக் குணாம்சங்களையும், இலட்சணங்களையும், பண்புகளையும், செயல்களையும் விவரிப்பதற்கு இவ்வளவு காரியங்கள் தேவைப்படுகின்றன. இத்தனை பலிகளையும், திருவிழாக்களையும், சட்டதிட்டங்களையும் வைத்துத்தான் அவரைப்பற்றிய முழுமையான ஒரு படத்தை நாம் வரைய முடியும்.
இவை இல்லையென்றால், நாம் விசுவாசிக்கிற கிறிஸ்து எவ்வளவு பெரியவர் என்பதை உணர முடியாது. அதற்கு மாறாக சிறிதளவு மட்டும் பார்த்துவிட்டு, “ஓ, கிறிஸ்து இவ்வளவுதான்போலும்,” என்று நம் புரிதலைச் சுருக்கிவிடுவோம்.
பழைய ஏற்பாடு – நிழல் மட்டுமா?
தேவன் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நமக்குக் காட்டுவதற்காக இவை அனைத்தையும் பயன்படுத்துகிறார். புதிய ஏற்பாட்டில் கிறிஸ்து முழுமையாக வெளிப்படுகிறார்; ஆனால் பழைய ஏற்பாட்டில் அந்த முழுமையின் பரிமாணங்கள் காட்டப்படுகின்றன. ஆகவே பழைய ஏற்பாடு வெறும் நிழல் அல்ல; அது அளவைக் காட்டும் வெளிப்பாடு.
3.4 ஓலா – மிஞ்சா – ஜேவா : விரிவான ஒப்பீடு
ஓலா, மிஞ்சா, ஜேவா — இந்த முதல் மூன்று பலிகளுக்கு இடையேயுள்ள ஒற்றுமை வேற்றுமைகளைப் பார்க்க ஆரம்பித்தோம்.
சுகந்த வாசனையான மூன்று பலிகள் – ஒப்பீடு
முதலாவது, ஓலாவாகிய சர்வாங்க தகனபலி முழுவதும் தகனிக்கப்பட்டது. அது முழுவதும் தேவனுக்கே.
மிஞ்சாவாகிய போஜனபலியில் ஒரு சிறிய பகுதி மட்டும் தகனிக்கப்பட்டது; மீதிப் பகுதி ஆசாரியனுக்குக் கொடுக்கப்பட்டது.
ஜேவாவாகிய சமாதான பலியில் ஒரு பகுதி — குறிப்பாக கொழுப்பு — பலிபீடத்தில் தகனிக்கப்பட்டது; மீதியை ஆசாரியனும் பலி செலுத்துபவனும் பங்கிட்டுக்கொண்டார்கள். கவனியுங்கள் — தேவனுக்கான பங்கு மாறுகிறது. இது முதல் வித்தியாசம். அர்ப்பணிப்பின் அமைப்பு மாறுகிறது.
பலி கொடுக்கப்பட்ட மிருகங்கள்
இரண்டாவது வித்தியாசம் பலி கொடுக்கப்பட்ட மிருகங்கள். சர்வாங்க தகனபலியில் மாடு, ஆடு, பறவைகள் – பலிகளாகக் கொடுக்கப்பட்டன. ஆனால் சமாதானபலியில் என்னென்ன பலிகொடுக்கப்பட்டன என்று வாசிப்போம். லேவியராகமம் 3:1 வாசிப்போம். “ஒருவன் சமாதான பலியைப் படைக்கவேண்டுமென்று, மாட்டுமந்தையில் எடுத்துச் செலுத்துவானாகில், அது காளையானாலும் சரி, பசுவானாலும் சரி, பழுதற்றிருப்பதை கர்த்தருடைய சந்நிதியில் செலுத்தக்கடவன்.” அடுத்து லேவியராகமம் 3:6 யை வாசிப்போம். “அவன் கர்த்தருக்குச் சமாதான பலியைப் படைக்கவேண்டுமென்று ஆட்டு மந்தையிலிருந்து எடுத்துச் செலுத்துவானாகில், அது ஆண் ஆனாலும் சரி, பெண் ஆனாலும் சரி, பழுதற்றிருப்பதைச் செலுத்துவானாக.” சமாதான பலியாக 1) மாட்டு மந்தையிலிருந்தோ அல்லது ஆட்டு மந்தையிலிருந்தோ செலுத்தலாம். 2) அது காளையாகவோ, பசுவாகவோ இருக்கலாம். 3) ஆட்டு மந்தை என்பதால் அது செம்மறி ஆடாகவோ வெள்ளாடாகவோ இருக்கலாம்.
ஆனால் ஓலாவுக்கும் ஜேவாவுக்கும் இடையே ஒரு முக்கியமான வேற்றுமை உள்ளது. ஓலாவில் மூன்று வகையான பலிகள் கொடுக்கப்பட்டன — மாடு, ஆடு, பறவைகள். இது மூன்று அளவுகள் என்று நாம் எடுத்துக்கொள்ளலாம். மக்கள் அவரவர் அனுபவத்திற்கேற்ப மூன்று அளவுகளில் சர்வாங்க தகனபலி கொடுத்தார்கள் என்று கருதலாம்.
ஆனால் ஜேவாவாகிய சமாதான பலியில் மாடும் ஆடும் மட்டுமே கொடுக்கப்பட்டன; பறவைகள் கொடுக்கப்படவில்லை.
ஆண் / பெண் வித்தியாசம்
மூன்றாவது வித்தியாசம் சர்வாங்க தகனபலியில், ஆண் மிருகங்களே பலியாகக் கொடுக்கப்பட்டன. ஆனால் சமாதான பலியில், ஆணும் பெண்ணும் பலியாகக் கொடுக்கப்பட்டன. இது ஒரு முக்கியமான வித்தியாசம். இது பலியின் தன்மையை வெளிப்படுத்துகிறது.
அளவு மற்றும் வகை
சர்வாங்க தகனபலியில் — மூன்று அளவுகள். Three sizes.
ஆனால் சமாதான பலியில் — Three types.
இரத்தம் – தானியம்
நான்காவது வித்தியாசம், சர்வாங்க தகனபலியில் மிருகம் மட்டுமே சம்பந்தப்பட்டது. சமாதான பலியில் மிருகமும் தானியமும் சம்பந்தப்பட்டிருக்கின்றன. போஜனபலியில் மிருகங்கள் கிடையாது; தானியமும் மெல்லிய மாவும் மட்டுமே சம்பந்தப்பட்டிருக்கின்றன.
சர்வாங்க தகனபலியிலும் சமாதான பலியிலும் இரத்தம் உண்டு. தானியபலியில் இரத்தம் கிடையாது. இது பலிகளின் ஆவிக்குரிய அடிப்படை வேறுபாட்டைக் காட்டுகிறது.
ஆயத்தம் செய்யும் இடம்
ஐந்தாவது, சர்வாங்க தகனபலியும் சமாதான பலியும் ஆசரிப்புக்கூடாரத்தில்தான் ஆயத்தம் செய்யப்பட்டன. ஆனால் தானிய பலி வீட்டிலேயே ஆயத்தம் செய்யப்பட்டது. அணுகும் முறை மாறுகிறது.
இப்படிச் சிறிய சிறிய வித்தியாசங்கள் நிறைய இருக்கின்றன. இவைகளை வரவிருக்கும் வகுப்புகளில் விரிவாகப் பார்க்கலாம். இன்று ஒரேவொரு முக்கியமான அம்சத்தை மட்டும் பார்ப்போம்.
சர்வாங்க தகனபலி முழுவதும் தேவனுக்கே உரியது. அதில் ஆசாரியனுக்கோ மக்களுக்கோ எந்தப் பங்கும் கிடையாது. தானிய பலியில் பெரும் பங்கு ஆசாரியனுக்குக் கொடுக்கப்பட்டது. சமாதான பலியை தேவன், ஆசாரியன், மக்கள் ஆகிய மூவரும் பங்கிட்டுக் கொள்கிறார்கள். பலிபீடத்தில் ஒரு சிறு பங்கு தேவனுக்கென்று தகனிக்கப்படுகிறது. மீதியுள்ளதை பலியைக் கொண்டு வரும் சாமான்யனும் ஆசாரியனும் பகிர்ந்துகொள்கிறார்கள். இது மிகவும் முக்கியமான காரியம். இதைத்தான் இன்று நாம் பார்க்கப்போகிறோம். அர்ப்பணிப்பிலிருந்து போஜனம்; போஜனத்திலிருந்து ஐக்கியம்.
சர்வாங்க தகனபலி — தேவனுக்கே.
தானிய பலி — தேவனும் ஆசாரியனும்.
சமாதான பலி — தேவன், ஆசாரியன், மக்கள்.
இது வெறும் சடங்கு வித்தியாசமல்ல.
இது உறவு எப்படி ஆழமடைகிறது என்று விவரிக்கிறது.
ஒற்றுமைகள்
இந்த மூன்று பலிகளுக்கும் இடையேயுள்ள சில வேற்றுமைகளைப் பார்த்தோம். இப்போது சில ஒற்றுமைகளையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 1) மூன்றும் கர்த்தருக்குச் “சுகந்த வாசனையான பலிகள்.” 2) கொடுக்கப்பட்ட மிருகங்கள் பழுதற்றவையாக இருக்க வேண்டும். கொடுக்கப்பட்ட மெல்லிய மாவு சுத்தமாக இருக்க வேண்டும். 3) மூன்று பலிகளும் மனமுவந்து கொடுக்கப்பட்ட பலிகள். வற்புறுத்தல் இல்லை; அன்பின் வெளிப்பாடு.
4. பலி செலுத்துபவனும் ஆசாரியனும்
இருவருக்கும் பங்கு உண்டு
இப்போது இன்னும் ஒரு முக்கியமான விஷயத்தைப் பார்ப்போம். இது மிகவும் நடைமுறைக்குரிய பகுதி. பலி செலுத்துவதில் இரண்டு சாரார் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். மக்கள் பலியைக் கொண்டுவருகிறார்கள். ஆசாரியன் பலி செலுத்துகிறான். பலி கொண்டுவருகிறவன் செய்யவேண்டிய வேலை என்ன? பலி செலுத்துகிற ஆசாரியன் செய்யவேண்டிய வேலை என்ன?
பலி கொண்டுவருகிறவனே அதைக் கொல்ல வேண்டும்; அதன் தோலை உரிக்க வேண்டும்; அதைத் துண்டுதுண்டாக வெட்ட வேண்டும்; மிருகத்தின் உள்ளுறுப்புகளைக் கழுவ வேண்டும்; கடைசியாக அதை ஆசாரியனிடம் கொடுக்க வேண்டும். அவன் முழுமையாகப் பங்கேற்கிறான். அவனே கொல்ல வேண்டும். உரிக்க வேண்டும். வெட்ட வேண்டும், கழுவ வேண்டும். அவன் வெறும் பார்வையாளன் அல்ல. இந்தப் புரிதல் பெரும்பாலான கிறிஸ்தவர்களுக்கு இல்லை.
சரி, ஆசாரியன் என்ன செய்யவேண்டும்? பலி கொண்டு வருகிறவன் மிருகத்தைக் கொல்லும்போது அதன் இரத்தத்தை ஒரு கிண்ணத்தில் பிடிக்க வேண்டும்; அதைப் பலிபீடத்தைச் சுற்றிலும் தெளிக்க வேண்டும்; பலிபீடத்தில் கட்டைகளை வரிசையாக அடுக்க வேண்டும்; துண்டு துண்டாக வெட்டப்பட்ட மிருகத்தைப் பலிபீடத்தில் அடுக்கி வைக்க வேண்டும்; பின்னர் நெருப்பைக் கொளுத்தி அதைத் தகனிக்க வேண்டும். இது ஆசாரியனின் வேலை.
இரண்டு தரப்பினருக்கும் பங்கு இருக்கிறது. பலியைக் கொண்டுவருபவன், ஆசாரியனிடம் மிருகத்தைக் கொடுத்துவிட்டு, “இதோ நியாயப்பிரமாணம் கோருகிற மிருகம்; என் வேலை முடிந்துவிட்டது. இனி உன் பாடு, பார்த்துக்கொள்ளுங்கள்,” என்று செல்ல முடியாது. அது வேதாகமத்தின் முறை அல்ல. பலி செலுத்திய பிரகாரம் எப்படி இருந்திருக்கும் என்று கொஞ்சம் கற்பனைசெய்து பாருங்கள். மீட்பு தேவனுடைய கிருபை; ஆனால் தேவனை அணுகுவதற்கு பலி கொண்டுவருபவன் முழுமையாகப் பங்கேற்க வேண்டும்.
இன்னுமொரு காரியம்: பலி செலுத்த வருபவன், தான் கொண்டுவந்த பலிமிருகத்தின்மேல் தன் கையை வைத்து ஜெபிக்க வேண்டும். ‘கை வைப்பது’ (laying on of hands) என்றால் என்ன? பாவ நிவாரண பலிகளில் கை வைப்பது பாவம் சுமத்துதலை வலியுறுத்துகிறது; ஆனால் சமாதான பலியில் அது அடையாளப்படுத்துவதை, பங்கேற்பை வலியுறுத்துகிறது. இது வெறும் சடங்கு அல்ல. ஆழமான பொருள் நிறைந்த ஒரு நிழல்.
5. சுகந்த வாசனையான பலிகள் – பாவ நிவாரணம் அல்ல
உறவை மையமாகக் கொண்ட பலிகள்
நாம் சுகந்த வாசனையான மூன்று பலிகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். நன்றாகக் கவனியுங்கள். இதில் மிகவும் அடிப்படையான ஓர் உண்மை இருக்கிறது. பொதுவாக கிறிஸ்தவர்கள் தங்கள் வாழ்க்கையைப் பாவ மன்னிப்பிலிருந்து தொடங்குகிறார்கள். ஆனால், சர்வாங்க தகனபலி, போஜனபலி, சமாதான பலி - இந்த மூன்று பலிகளிலும் ‘பாவ நிவாரணம்’ இன்னும் நேரடியாக வரவில்லை. கவனியுங்கள் — இது பாவத்திலிருந்து ஆரம்பிக்கவில்லை.
‘பாவ நிவாரண பலி’, ‘குற்ற நிவாரண பலி’ — அவை பின்னர்தான் வருகின்றன. இந்த வரிசையைக் கவனியுங்கள். முதல் மூன்று பலிகள் “சுகந்த வாசனையான பலிகள்.” இவை பாவத்தோடு நேரடியான தொடர்புடைய பலிகள் அல்ல. இவை தண்டனையை மையமாகக் கொண்டவை அல்ல. இவை குற்றத்தை மையமாகக் கொண்டவை அல்ல. இவை உறவை மையமாகக் கொண்ட பலிகள். சர்வாங்க தகனபலி - அர்ப்பணிப்பு, போஜன பலி - போஜனம், விருந்து, சமாதான பலி - ஐக்கியம் — இவையே இவைகளின் மையம். தேவன் முதலாவது உறவை விரும்புகிறார்; பின்னர் பிரச்சினையைத் தீர்க்கிறார்.
தேவன் மனிதனைப் “பாவி” என்ற அடையாளத்திலிருந்து பார்க்கவில்லை;
தேவன் மனிதர்களை “என் மக்கள்” என்ற உறவிலிருந்து ஆரம்பிக்கிறார்.
இதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
6. கிறிஸ்துவில் நிறைவேறும் பலிகள்
சர்வாங்க தகனபலி – கிறிஸ்துவின் முழுமையான அர்ப்பணிப்பு
முதல் பலி: சர்வாங்க தகனபலி. இது நேரடியாக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைச் சுட்டிக்காட்டுகிறது.
எபேசியர் 5:2யை வாசிப்போம்: “கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்தார்.” “சுகந்த வாசனை”. கிறிஸ்து தம்மைத் தேவனுக்குச் சுகந்த வாசனையான பலியாக ஒப்புக்கொடுத்தார். இது லேவியராகமத்தின் மொழி. கிறிஸ்துவே தேவன் ஏற்றுக்கொண்ட சுகந்த வாசனையான சர்வாங்க தகனபலி. இது நிழலும் நிஜமும் சந்திக்கும் இடம்.
சர்வாங்க தகன பலி நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கான நேரடி முன்னறிவிப்பு, நிழல், முன்மாதிரி. இதற்கு வேதாகமம் முழுவதும் சாட்சி தருகிறது.
இந்த வசனத்தில் வருகிற காணிக்கை, பலி என்ற இரண்டு வார்த்தைகளைக் கவனித்தீர்களா? “காணிக்கை” (offering) என்பதற்கு எபிரெயத்தில் “கோர்பான்” என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. அதற்கு “அருகில் கொண்டு வருவது” என்ற அடிப்படை அர்த்தம் உண்டு. அது எல்லாப் பலிகளையும் பொதுவாகக் குறிக்கும் வார்த்தை. ஆனால் ஒவ்வொரு பலிக்கும் தனித்தனியான பெயர்கள் உள்ளன: சர்வாங்க தகன பலி — ஓலா, போஜன பலி — மிஞ்சா, சமாதான பலி — ஜேவா (ஷலாமீம்). ஒவ்வொரு பெயரும் தனித்துவமான அம்சத்தை வெளிப்படுத்துகிறது.
சர்வாங்க தகனபலி முழுவதும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப்பற்றியது. இது தேவனுக்கான கிறிஸ்துவின் அர்ப்பணிப்பு. தேவன் ஒரேவொரு நபரில் பிரியப்படுகிறார் என்றால், அந்த நபர் கிறிஸ்துவே. இவர் என் நேச குமாரன். இவர்மேல் பிரியமாயிருக்கிறேன். தேவன் வேறு யாரிலும் அல்ல. தேவன் கிறிஸ்துவில் பிரியம் கொள்கிறார். தேவன் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்கிறார். நாம் கிறிஸ்துவின் மூலமாகத்தான் தேவனை அணுகுகிறோம். தேவனைப் பிரியப்படுத்துபவர் — கிறிஸ்துவே. நாம் அவருக்குள் ஏற்றுக்கொள்ளப்படுகிறோம்.
ஆகையால் கிறிஸ்து முதலாவது தம்மைத் தேவனுக்கு முழுமையாக ஒப்புக்கொடுத்தார். ஒரு பகுதி அல்ல. ஒரு சதவீதம் அல்ல. முழுவதும். தேவன் அவரில் பிரியமாயிருக்கிறார், மகிழ்கிறார், சந்தோஷப்படுகிறார், களிகூருகிறார். எனவே சர்வாங்க தகனபலி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நிழல். முழுமையான அர்ப்பணிப்பின் நிழல்.
சர்வாங்க தகனபலி மனிதன் தேவனுக்கு கொடுத்த அர்ப்பணிப்பு அல்ல; தேவன் மனிதனுக்காக ஏற்றுக்கொண்ட கிறிஸ்துவின் அர்ப்பணிப்பு.
7. மூன்று பார்வைகள் – வேதத்தைப் புரிந்துகொள்ளும் முறை
நாம் தொடர்ந்து பார்ப்பதற்குமுன் இன்னொரு முக்கியமான காரியத்தைச் சொல்ல விரும்புகிறேன். இவைகளையெல்லாம் நாம் சரியாகப் புரிந்துகொள்ளாவிட்டால் நாம் லேவியராகமத்தைப் புரிந்துகொள்ள முடியாது.
நாம் ஒவ்வொரு பலியையும் பார்க்கும்போது நமக்கு மூன்று பார்வைகள் கட்டாயம் தேவை. இவைகளில் ஒன்றை விட்டுவிட்டால்கூட சமநிலை குலைந்து விடும். அது என்ன மூன்று பார்வை?
7.1 வரலாற்றுப் பார்வை
முதலாவது வரலாற்றுப் பார்வை. அங்கு நடந்தது அப்படியே ஒரு வரலாற்றுச் சூழலில் எழுத்தின்படி நிஜமாக நடந்தது. அது நாடகம் அல்ல; நடிப்பு அல்ல. கற்பனை அல்ல. அன்று இஸ்ரயேலர்கள் உண்மையாகவே பலிகள் கொடுத்தார்கள். திருவிழாக்கள் கொண்டாடினார்கள். கட்டளைகளைக் கடைபிடித்தார்கள்.. இதை மறுப்பது வேதத்தை மறுப்பதற்குச் சமம்.
7.2 நிழல் பார்வை
இரண்டாவது நிழல் பார்வை. அவர்கள் செய்த காரியங்கள்
அந்த நேரத்திற்காக மட்டுமல்ல. அவர்கள் எழுத்தின்படி செய்த காரியங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைச் சுட்டிக்காட்டிய நிழல்கள், அடையாளங்கள். பலிகள், திருவிழாக்கள், சடங்குகள் அனைத்தும் கிறிஸ்துவில் நிறைவேறுகின்றன, நிஜமாகின்றன. அன்று நடந்தவை நிழல்கள். நிழல்கள் மறையும்; மெய் நிற்கும்.
7.3 நடைமுறைப் பார்வை
மூன்றாவது நடைமுறைப் பார்வை. இப்போது கேள்வி: இவைகளிலிருந்து இன்று நாம் என்ன கற்றுக்கொள்ள வேண்டும்? வரலாற்றில் நடந்தது. சரி. இயேசு கிறிஸ்துவைச் சுட்டிக்காட்டுகிறது. சரி. அதனால் என்ன? ஆண்டவராகிய இயேசு எப்படிப்பட்டவர் என்பதைப் பார்க்கும்போதுதான் நாம் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று கற்றுக்கொள்ள முடியும். கற்றுக்கொள்ள வேண்டும். இது மாற்றம் நிகழும், நிகழ வேண்டும்.
இந்த மூன்று பார்வைகளும் எப்போதும் நம் கண்களுக்குமுன்பாக இருக்க வேண்டும். மூன்றில் ஒன்றை மட்டும் பிடித்துக்கொண்டால் தவறு.
மூன்றும் சேர்ந்தால்தான் சமநிலை.
7.4 சர்வாங்க தகனபலியின் நடைமுறைப் பதில்
இதை மூன்று பலிகளிலும் பார்ப்போம்.
இஸ்ரயேலர்கள் அன்று எழுத்தின்படி சர்வாங்க தகனபலி கொடுத்தார்கள். இது வரலாற்றுப் பார்வை. சர்வாங்க தகனபலி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நிழல். இது நிழல் பார்வை. இதன் நடைமுறைக்குரிய பார்வை என்ன? நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்ன?
“நான் என்னை முழுவதும் கர்த்தருக்கு ஒப்புக்கொடுக்கிறேன். நான் முழுவதும் கர்த்தருக்கே சொந்தம். நான் முழுமையாக தேவனுக்குரியவன்.” இதுவே சர்வாங்க தகனபலியின் நடைமுறைக்குரிய பார்வை.
ஆனால் கவனியுங்கள். இது நாம் பெற்ற கிருபைக்கான பதில்; இது கிருபையைப் பெறும் முயற்சி அல்ல. “நான் ஏற்கனவே கிறிஸ்துவில் ஏற்றுக்கொள்ளப்பட்டதால் நான் இப்படிப் பதிலளிக்கிறேன்” என்பதே சரியான புரிதல்.
நாம் பார்த்துக்கொண்டிருக்கும் காரியங்களை ஒரே நாளில் முழுவதும் புரிந்துகொள்ளவேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இது மெதுவான பயணம்., ஆழமாகச் சிந்திக்கவேண்டிய ஒரு பயணம். அவசரப்பட வேண்டிய பாடம் அல்ல. ஆழமாக அமைய வேண்டிய உண்மை.
வரலாறு நம்மை நிலைநிறுத்துகிறது; நிழல் நம்மைக் கிறிஸ்துவிடம் கொண்டுசெல்கிறது; நடைமுறை நம்மை மாற்றுகிறது
இப்போது நாம் போஜன பலிக்கு வருகிறோம்.
8. போஜன பலி – கிறிஸ்து நம்முடைய ஜீவ அப்பம்
இரண்டாவது பலி போஜன பலி, அதாவது தானிய பலி — மிஞ்சா. அவர்கள் எழுத்தின்படி போஜன பலி கொடுத்தார்கள். இது வரலாற்றுப் பார்வை. இது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நிழல். இது நிழல் பார்வை. அவர் நம் ஜீவ அப்பம். இதன் நடைமுறைப் பார்வை என்ன? தானிய பலியிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ள வேண்டும்? இதன் ஆவிக்குரிய பொருள் என்ன? இது உணவைப்பற்றியது.
ஆண்டவராகிய இயேசு, “நானே ஜீவ அப்பம். நானே பரலோகத்திலிருந்து இறங்கிய அப்பம்,” என்று கூறினார். இது போஜன பலியின் நிறைவேற்றம்.
சர்வாங்க தகனபலி கிறிஸ்துவின் தேவனுக்கான அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. போஜன பலி கிறிஸ்து நம் ஜீவ ஆதாரமாக இருப்பதைக் காட்டுகிறது.
போஜன பலியின் நடைமுறைப் பார்வை என்ன? நான் இந்தக் கிறிஸ்துவால் வாழ்கிறேனா அல்லது இன்னும் என்னையே சார்ந்திருக்கிறேனா? இந்தக் கிறிஸ்து என் வாழ்க்கையாக ஆகிவிட்டாரா? அவர் நான்
கற்றுக்கொண்ட ஒரு சாதாரண சத்தியமா அல்லது என்னில் வாழும் மெய்யா?
“மனிதன் அப்பத்தினால் மட்டுமல்ல, தேவனுடைய வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்.”
அப்படியானால் —உண்மையாகவே நான் கிறிஸ்துவால் வாழ்கிறேனா? கிறிஸ்துவே என் உள்ளார்ந்த ஆதாரமா? என் ஆவிக்குரிய உணவா? இதுவே அனுபவத்தின் பக்கம்.
அர்ப்பணிப்பிற்குப்பின் — போஜனம்.
தேவனுக்குத் தம்மை அர்ப்பணித்தவர் இப்போது நமக்குள் ஜீவனாக வருகிறார்.
சர்வாங்க தகனபலி தேவனின் திருப்தியைப் பேசுகிறது;
போஜன பலி விசுவாசியின் போஷிப்பைப் பேசுகிறது
9. சமாதான பலியின் ஆழம்
இப்போது மூன்றாவது சமாதான பலியைப் பார்ப்போம். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்மைச் சர்வாங்க தகனபலியாக ஒப்புக்கொடுத்தார். அவரே போஜன பலியாகவும் இருக்கிறார் — ஜீவ அப்பமாக. போஜன பலியில் நாம் அவருடைய அழகைப் பார்க்கிறோம்; அவருடைய மேன்மையைப் பார்க்கிறோம்.
இந்த இரண்டு உண்மைகளின் அடிப்படையில் இப்போது நமக்கு “சமாதான பலி” வருகிறது. அர்ப்பணிப்பு முடிந்தது, போஜனமும் முடிந்தது. இப்போது ஐக்கியம்.
சமாதான பலி. இதை ஆரோக்கிய பலி (offering of well-being), ஐக்கிய பலி (offering of fellowship), வாழ்த்துப் பலி (sacred gift of greeting) என்றும் சொல்லலாம்.
9.1 “ஜேவா ஷலாமீம்” - சொற்பொருள்
சமாதான பலிக்குப் பயன்படுத்தப்படும் எபிரெயச் சொல் “ஜேவா ஷலாமீம்” (zevaḥ shelamim). “ஷலாமீம்” என்ற வார்த்தை ஆங்கிலத்தில் பல விதமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அது வெறும் “peace offering” மட்டுமல்ல. அதற்கு ஆழமான அர்த்தம் உண்டு. அதை மெதுவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
9.2 “ஷாலோம்” – முழுமையின் மொழி
நாம் ஒருவரிடம் “எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்கும்போது அதன் பொருள் என்ன? அது வெறும் “வணக்கம்” அல்ல. அது அக்கறையின் மொழி. “உடலில் நலமா? நன்றாகச் சாப்பிட்டீர்களா? நன்றாகத் தூங்கினீர்களா? மனம் அமைதியாக இருக்கிறதா? சந்தோஷமாக இருக்கிறீர்களா? வீட்டில் அனைவரும் நலமா? பிள்ளைகள் நன்றாக இருக்கிறார்களா?” — இவையெல்லாம் அந்த ஒரு கேள்விக்குள் அடங்கியுள்ளது.
“எப்படி இருக்கிறீர்கள்?” என்ற கேள்வி உறவை உறுதிப்படுத்துகிறது. அது உறவின் மொழி. அது உறவு உயிரோடு இருக்கிறது என்பதைச் சொல்கிறது.
“ஷாலோம்” (shalom) என்ற வார்த்தையும் அப்படித்தான். “ஷாலோம்” என்றால் “சண்டை இல்லாத நிலை” மட்டுமல்ல. அது வாழ்க்கையின் முழுமை, உறவு மறுசீரமைப்பு, ஆசீர்வாதமான நல்வாழ்த்து, நலம் விசாரித்தல், ஆரோக்கியம், அமைதி, பூரணநலம், ஐக்கியம், பாதுகாப்பு, சமநிலை, சந்தோஷம், நன்றியுணர்வு — தேவனுடைய நோக்கத்தில்
மனிதன் இருக்க வேண்டிய நிலை — அதுதான் ஷாலோம். இந்த வார்த்தையிலிருந்துதான் “ஷலாமீம்” — சமாதான பலி — என்ற வார்த்தை வருகிறது.
9.3 மொழிபெயர்ப்புகளின் வரம்பு
ஆகவே சில ஆங்கில வேதாகமங்கள் இதை “peace offering” என்று மட்டுமல்லாமல் “fellowship offering,” “communion offering,” “well-being offering,” “thanksgiving offering,” “welfare offering” என்றும் மொழிபெயர்க்கின்றன. ஒவ்வொரு மொழிபெயர்ப்பும் ஒரு பக்கம் மட்டுமே. முழுமை அல்ல.
9.4 மிக முக்கியமான வேறுபாடு
எனவே சமாதான பலியை “ஐக்கிய பலி,” “நலனின் பலி,” “நன்றிப் பலி,” “ஒற்றுமையின் பலி,” “உறவின் பலி” என்றும் சொல்லலாம்.
ஒரு கேள்வி: நாம் தேவனிடத்தில் “சமாதானம் பெற” வருகிறோமா அல்லது “பெற்ற சமாதானத்தை அனுபவிக்க” வருகிறோமா? அதாவது நாம் ஏற்கெனவே பெற்ற சமாதானத்தில் இன்புற வருகிறோமா?
சமாதான பலி “சமாதானத்தைப் பெறுவதற்கான” பலி அல்ல. அது ஏற்கெனவே ஏற்படுத்தப்பட்ட சமாதானத்தின் கொண்டாட்டம். “சமாதானத்தை அனுபவிப்பதற்கான” பலி.
இது மிக முக்கியமான வேறுபாடு. சர்வாங்க தகனபலியில் சமாதானம் ஏற்படுகிறது; சமாதான பலியில் அந்த சமாதானம் கொண்டாடப்படுகிறது.
10. சமாதான பலி = ஐக்கியத்தின் பலி
10.1 தேவன் – ஆசாரியன் – மக்கள்
இதை “ஐக்கிய பலி” என்று சொல்வது தகும். ஏன்? காரணம் அமைப்பிலேயே இருக்கிறது.
சர்வாங்க தகனபலி முழுவதும் தேவனுக்கே உரியது. அதில் ஆசாரியனுக்கோ பொதுமக்களுக்கோ எந்தப் பங்கும் இல்லை.
போஜன பலியில் ஒரு சிறு பகுதி மட்டும் தேவனுக்கு “ஞாபகக்குறி”யாகத் தகனிக்கப்படுகிறது; மீதி ஆசாரியனுக்குரியது.
ஆனால் சமாதான பலியில் தேவனுக்கு ஒரு பங்கு (கொழுப்புபோன்ற முக்கியமான பாகங்கள் பலிபீடத்தில் தகனிக்கப்படுகின்றன). ஆசாரியனுக்கு ஒரு பங்கு. மக்களுக்கும் — அதாவது பலி கொண்டுவருபவருக்கும் — ஒரு பங்கு கிடைக்கிறது. இது தனிப்பட்ட ஒருவனுக்குரிய பலி அல்ல; இது கூட்டுப் பங்கேற்பு.
மொத்தத்தில் மூவர் — தேவன், ஆசாரியன், பலி கொண்டுவருபவர் — கர்த்தருடைய சந்நிதியில் ஒன்றாகப் பங்குபெறுகிறார்கள். இது ஐக்கியத்தின் படம்.
“கூட்டுப்பங்கேற்பு,” “கூட்டு விருந்து,” “ஐக்கியம்,” “பகிர்தல்,” “fellowship,” “communion” — இதுவே சமாதான பலியின் சாரம். இது விருந்தின் மொழி.
10.2 வரிசை முக்கியம்
முதலாவது — சர்வாங்க தகன பலி.
இரண்டாவது — போஜன பலி.
மூன்றாவது — ஐக்கிய பலி.
சமாதானம் ஏற்கனவே கிடைத்துவிட்டது. முதல் இரண்டு பலிகளால் —தேவனோடு உறவு ஏற்படுத்தப்பட்டது. நாம் ஏற்கனவே தேவனோடு சமாதானமாக இருப்பவர்கள்.
இப்போது சமாதான பலி அந்த சமாதானத்தை அனுபவிக்கச் செய்கிறது. அந்த உறவை நாம் ஒன்றாக அமர்ந்து, பகிர்ந்து, “உண்டு மகிழும்” நிலைக்குக் கொண்டுவருகிறது. இது விருந்து.
ஐக்கியத்தின் ஒழுங்கு
சர்வாங்க தகனபலி — கிறிஸ்து நம் சுகந்த வாசனையான பலி.
தானிய பலி — கிறிஸ்து நம் ஜீவ அப்பம்.
மூன்றாவது — ஐக்கிய பலி.
இதன் பொருள் என்ன? மனிதனுக்குத் தேவனோடு நேர்த்தியான ஐக்கியம் வேண்டும்; மனிதனோடும் நேர்த்தியான ஐக்கியம் வேண்டும். ஆனால் முதலாவது தேவனோடுதான் ஐக்கியம் வேண்டும். வரிசை மாறக்கூடாது.
ஒருவனுக்குத் தேவனோடு சமாதானம், ஒப்புரவு, ஐக்கியம் இல்லையெனில் மனிதனோடும் நேர்த்தியான ஒப்புரவோ சமாதானமோ இருக்க முடியாது. அது நிலைக்காது.
10.3 ஆதாரம் — பலிபீடம்
நாம் தேவனோடு ஐக்கியமாவதற்காக கிறிஸ்து தம்மைச் சர்வாங்க தகனபலியாக ஒப்புக்கொடுத்தார். கிறிஸ்துவின்மூலம் நாம் தேவனோடு ஐக்கியமானபிறகுதான் மனிதனோடும் ஐக்கியமாக இருக்க முடியும்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைச் சர்வாங்க தகன பலியாகவும், போஜன பலியாகவும் அனுபவிக்கிறவர்கள்தான் சமாதான பலியாகிய ஐக்கிய பலியை அனுபவிக்க முடியும்.
எனவே ஐக்கியத்தின் ஆதாரம் பலிபீடம். தேவனோடும் மனிதனோடும் ஐக்கியமாய் இருப்பதற்கான ஆதாரம் பலிபீடம். சிலுவை இல்லாமல் ஐக்கியம் இல்லை.
10.4 சமாதானத்தின் விலை – இரத்தம்
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்மைக் கல்வாரிச் சிலுவையிலே சர்வாங்க தகனபலியாக ஒப்புக்கொடுத்த பலிபீடம்தான் உறவின் அடிப்படையான ஆதாரம்.
“இயேசு சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகளும் பரலோகத்திலுள்ளவைகளும் யாவையும் அவர்மூலமாய் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று” (கொலோ. 1:20). சமாதானத்திற்கான விலை — இரத்தம்.
இரண்டாவது, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நாம் ஜீவ அப்பமாக அனுபவிக்க வேண்டும்.
சிலுவையிலே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைச் சந்திக்காத மனிதன் தேவனோடு ஐக்கியம்கொள்ள முடியாது. அனுபவிக்கப்படும் சமாதானம் சிலுவையில் ஆரம்பிக்கிறது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் சிந்தின இரத்தத்தால்தான் சமாதானம், ஐக்கியம், ஒப்புரவு உண்டாயிற்று.
11. சமாதான பலி எதின்மேல் தகனிக்கப்படுகிறது?
சர்வாங்க தகனபலியின்மேல்
லேவியராகமம் 3:5-ஐ வாசிப்போம்:
“அதை ஆரோனின் குமாரர் பலிபீடத்து அக்கினியிலுள்ள கட்டைகளின்மேல் போட்டிருக்கும் சர்வாங்க தகனபலியின்மீதில் போட்டுத் தகனிக்கக்கடவர்கள்; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.”
அதை என்பது சமாதான பலியை. ஒரு கேள்வி: சமாதான பலி தனியாகத் தகனிக்கப்பட வேண்டுமா அல்லது இன்னொரு பலியின்மேல் வைத்துத் தகனிக்கப்பட வேண்டுமா?
பதில்: அதை இன்னொரு பலியின்மேல் வைத்துத்தான் தகனிக்க வேண்டும். எந்தப் பலியின்மேல்? சர்வாங்க தகன பலியின்மேல்.
லேவியராகமம் 6:12யையும் வாசிப்போம்.
“பலிபீடத்தின்மேலிருக்கிற அக்கினி அவியாமல் எரிந்துகொண்டிருக்கவேண்டும்; ஆசாரியன் காலைதோறும் அதின்மேல் எரியும்படி கட்டைகளைப் போட்டு, அதின்மேல் சர்வாங்க தகனபலியை வரிசையாக வைத்து, அதின்மேல் சமாதான பலிகளின் கொழுப்பைப் போட்டுத் தகனிக்கக்கடவன்.”
கவனியுங்கள்.
பலிபீடத்தின்மேல் இருக்கும் அக்கினி அணையக் கூடாது. ஆசாரியன் ஒவ்வொரு நாள் காலையிலும் கட்டைகளைச் சேர்க்க வேண்டும். அதன்மேல் சர்வாங்க தகன பலியை வரிசையாக வைத்து, பின்பு அதன்மேல் சமாதான பலிகளின் கொழுப்பைத் தகனிக்க வேண்டும்.
மீண்டும் கவனியுங்கள்: சமாதான பலி — சர்வாங்க தகன பலியின்மேல் வைத்துத்தான் தகனிக்கப்பட வேண்டும்.
இது சின்ன விஷயம் அல்ல. வரிசை — மிக முக்கியம். அடித்தளம் இல்லாமல்
மேல்தளம் இல்லை. இது அடிப்படையே இல்லாமல் ஒருவன் “எனக்குள் சமாதானத்தை உணர்கிறேன்” என்று சொல்வது அல்ல. அடித்தளம் சர்வாங்க தகன பலி.
12. ஐக்கியத்தின் அடித்தளம் – பலிபீடம்
12.1 பலிபீடம் = சிலுவை
சர்வாங்க தகனபலிதான் சமாதான பலியின் ஆதாரம், அடித்தளம், ஊற்று, மூலம். அன்று பலிபீடம். இன்று சிலுவை. சிலுவை இல்லாமல் அனுபவம் இல்லை. சர்வாங்க தகனபலி இல்லாமல் சமாதான பலி இல்லை. கிறிஸ்துவின் அர்ப்பணிப்பு இல்லாமல் ஐக்கிய அனுபவம் இல்லை. ஐக்கியத்துக்கு ஆதாரம் சிலுவை, பலிபீடம்.
நான் கூற விரும்பும் முக்கியமான உண்மை இதுதான்: முதலாவது: சர்வாங்க தகன பலி = ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்மை முழுமையாக ஒப்புக்கொடுத்த வேலை. இரண்டாவது: அவர் போஜன பலியாக, ஜீவ அப்பமாக, நம் உணவாக இருக்கிறார். நாம் அவரால் வாழ்கிறோம். இந்த இரு உண்மைகளையும் கவனியுங்கள். சமாதான பலி சர்வாங்க தகன பலியின்மேல் வைத்துத்தான் தகனிக்கப்பட வேண்டும். அதாவது: ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்மை ஒப்புக்கொடுத்த அர்ப்பணிப்பின் அடிப்படையில்தான் நாம் சமாதானத்தை அனுபவிக்க முடியும். சமாதானம் ஓர் உணர்ச்சி அல்ல. அது ஓர் அடித்தளத்தின்மேல் கட்டப்படும் அனுபவம்.
12.3 தெய்வீக வரிசை
(1) கிறிஸ்து தம்மை ஒப்புக்கொடுத்தார் (நிறைவுற்ற வேலை), (2) அவர் நம் ஜீவ அப்பமாக இருக்கிறார் (நம் உள்ளார்ந்த அனுபவம்) – (3) இந்த இரண்டு உண்மைகளையும் நாம் பிரிக்க முடியுமா? பதில்: முடியாது. சமாதான பலி
சர்வாங்க தகன பலியின்மேல் தகனிக்கப்படுகிறது.
அதாவது —ஐக்கியம் சிலுவையின்மேல் கட்டப்படுகிறது. “சிலுவை இல்லாத சமாதானம் — மாயை. அர்ப்பணிப்பு இல்லாத ஐக்கியம் — நிலைக்காது.
இயேசு கிறிஸ்து செய்துமுடித்த வேலையின்மேல்தான் சமாதான பலி தகனிக்கப்படுகிறது. நாம் பிதாவை அணுகுவதற்கான வழி என்ன? கிறிஸ்து செய்துமுடித்த வேலை (நிறைவுற்ற உண்மை). பரிசுத்த ஆவியானவர் நம்முள் செய்துகொண்டிருக்கும் வேலை (நம் அனுபவமாகும் உண்மை). இந்த இரண்டையும் அடிப்படையாக வைத்துத்தான் நாம் தேவனுடைய முன்னிலைக்கு வருகிறோம்.
13. சிலுவையின் இறையியல்: தேவனோடும் மனிதனோடும் கூட்டு விருந்து
13.1 நேர்ச் சட்டம் & குறுக்குச் சட்டம்
சிலுவையில் இரண்டு சட்டங்கள் உள்ளன.
ஒரு நேர்ச் சட்டம்.
ஒரு குறுக்குச் சட்டம்.
நேர்ச் சட்டம் தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே இருக்கும் ஐக்கியம், உறவு. குறுக்குச் சட்டம் மனிதர்களுக்கிடையே இருக்கும் உறவு, ஐக்கியம். ஆனால் கவனியுங்கள் —குறுக்குச்சட்டம் நேர்ச் சட்டத்தின்மீதுதான் நிற்கிறது. மேலிருந்து கீழே நேர்ச்சட்டம் சரியாக இல்லையென்றால்
இடமிருந்து வலம் குறுக்குச்சட்டம் சரியாக இருக்காது. இதன் பொருள் என்ன?
13.2 ஐக்கியத்தின் நடைமுறை அடித்தளம்
குடும்பத்தில் கணவன்–மனைவி, பெற்றோர்–பிள்ளைகள், உடன்பிறந்தவர்கள் அல்லது சமுதாயத்தில் — மனிதர்களுக்கிடையே தேவன் விரும்புகிற உண்மையான ஐக்கியம் இருக்க வேண்டுமானால் என்ன வேண்டும்? ஓர் அடித்தளம் வேண்டாமா? ஓர் ஆதாரம் வேண்டாமா? வேண்டும். அந்த ஆதாரம் சிலுவை என்று வேதாகமம் கூறுகிறது.
ஐக்கியத்துக்கு ஆதாரமாக அன்பு வேண்டும். நம்பிக்கை வேண்டும். புரிதல் வேண்டும், ஒருமனம் வேண்டும். இதுபோன்ற பல நற்பண்புகள் வேண்டும் என்று நாம் நினைக்கலாம். இவை வேண்டாம் என்றோ, தவறு என்றோ நான் சொல்லவில்லை. ஆனால் வேதாகமம் சொல்லும் பதில் என்ன தெரியுமா? சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்து. சர்வாங்க தகனபலியாகிய கிறிஸ்து.
எபேசியர் 2:14–16யை வாசிப்போம். “அவரே நம்முடைய சமாதான காரணராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி… பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் தேவனுக்கு ஒப்புரவாக்கினார்.”
கவனியுங்கள் — சமாதானம் மனிதர்கள் நாம் உருவாக்குவது அல்ல. அது தேவனால் உண்டாக்கப்பட்டது. எங்கு? சிலுவையில்.
இந்த “இருதிறத்தார்” யார்? இதைப் பின்னர் விவரமாகப் பார்ப்போம். கணவன்–மனைவியாக இருக்கலாம்; பெற்றோர்–பிள்ளைகளாக இருக்கலாம்; சகோதர–சகோதரிகளாக இருக்கலாம்; சமுதாயத்தில் இரண்டு நபர்களாக இருக்கலாம். இரண்டு பேருக்கு இடையே சமாதானம் வேண்டுமானால் அது சிலுவையில் உண்டாக்கப்பட்டது.
இரண்டு பேருக்கிடையில் சிலுவை இல்லை என்றால் அங்கு தேவன் விரும்புகிற நிலையான ஐக்கியம், சமாதானம், ஒப்புரவு இருக்காது.
குடும்பங்களில் ஏற்படும் விரிசல்களுக்கும் உராய்வுகளுக்கும் மனிதனுடைய 'சுயமே' (Self) மூலக்காரணம். சிலுவை அந்தச் சுயத்தை உடைக்கிறது. ஆகவே, சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவை அனுபவிப்பவர்கள்தான் — அதாவது அதாவது சுயத்தை வெறுத்து, சிலுவையில் அறையப்பட்ட வாழ்க்கை வாழ்பவர்கள்தான் — உண்மையான ஐக்கியத்தை அனுபவிக்க முடியும்.
நேர்ச் சட்டம் நிலைத்திருக்கும்போது குறுக்குச் சட்டம் நிலைக்கும். நேர்ச் சட்டம் உடைந்தால், குறுக்குச் சட்டம் உடையும்; நேர்ச் சட்டம் நிலைத்தால், குறுக்குச் சட்டம் நிலைக்கும்
13.3 சிலுவை சேர்க்கும் — சிலுவை பிரிக்கும்
சிலுவைக்கு இரண்டு அம்சங்கள் உள்ளன. ஓர் அம்சம் சிலுவை சேர்க்கும், இணைக்கும், ஒன்றாக்கும், சம்பந்தப்படுத்தும், தொடர்புபடுத்தும். சிலுவைதான் உண்மையான ஐக்கியத்தை உருவாக்கும். மனிதன் உருவாக்கும் ஐக்கியம் தற்காலிகம். சிலுவை உருவாக்கும் ஐக்கியமே நிலையானது.
ஆனால் சிலுவைக்கு இன்னோர் அம்சமும் உண்டு. சிலுவை சேர்க்கும்முன், பிரிக்கும். அது அகம்பாவத்தைப் பிரிக்கும். சுயநலத்தைப் பிரிக்கும். பெருமையைப் பிரிக்கும். மனிதனின் “நான்” என்பதைக் கிழிக்கும்.
சிலுவை இல்லாமல் சேர்ப்பது — சமரசம்.
சிலுவையால் சேர்ப்பதுதான் — உண்மையான மாற்றம்.
சிலுவை முதலாவது மனிதனைத் தேவனோடு சேர்க்கிறது, மனிதனைத் தேவனோடு ஒப்புரவாக்குகிறது. அதன்பின் தேவனோடு ஒப்புரவாக்கப்பட்ட மனிதனை மற்ற மனிதர்களோடு இணைக்கிறது.
அதனால்தான் சிலுவை இல்லாமல் ஐக்கியம் இல்லை.
சிலுவை இல்லாமல் சமாதானம் இல்லை.
சிலுவைக்கு மட்டுமே சேர்க்கும் வல்லமை, சுத்திகரிக்கும் வல்லமை உண்டு.
14. ஐக்கியத்தின் வரையறை
14.1 ஐக்கியம் என்றால் என்ன?
ஐக்கியம் என்ற வார்த்தையை நான் அடிக்கடி பயன்படுத்துகிறேன். ஐக்கியம் என்றால் என்ன? இது வெறுமனே சமூகத் தொடர்பு அல்ல. ஐக்கியம் என்றால் கலந்துறவாடுதல், ஒன்றித்து உறவாடுதல், ஊடாடுதல், பகிர்ந்து உறவாடுதல் என்று பொருள். இந்த உறவுக்கு ஒரு தெய்வீக மதிப்பு உண்டு.
இதை இப்படிச் சொல்லலாம்:
I am one with you.
You are one with me.
I enjoy you.
You enjoy me.
I participate in you.
You participate in me.
நான் உங்களோடு ஒன்றாக இருக்கிறேன்.
நீங்கள் என்னோடு ஒன்றாக இருக்கிறீர்கள்.
நான் உங்களில் பங்குபெறுகிறேன்.
நீங்கள் என்னில் பங்குபெறுகிறீர்கள்.
நான் உங்களில் இன்புறுகிறேன்.
நீங்கள் என்னில் இன்புறுகிறீர்கள்.
இதுவே ஐக்கியம்.
இது சும்மா உட்கார்ந்து பேசுவது அல்ல.
இது ஒன்றுக்குள் ஒன்று வாழ்வது.
This is a costly fellowship. இது மலிவான தொடர்பு அல்ல. இது மேலோட்டமான உணர்ச்சி அல்ல. இது ஓர் உடன்பாடு. இது தற்காலிக இணைப்பு அல்ல.
இது பலிபீடத்தில் பிறந்த உறவு. ஐக்கியம் என்பது ஒன்றாக இருப்பது அல்ல;
ஒன்றாக வாழ்வது
14.2 Discipleship → Fellowship → Stewardship
கிறிஸ்தவ வாழ்க்கை சீடத்துவத்தில் discipleship-இல் ஆரம்பிக்கும். ஆனால் அது அங்கேயே நிற்காது. அது ஐக்கியமாக fellowship-ஆக வளர வேண்டும். இந்த இரண்டும் இருந்தால் அது உக்கிராணத்துவமாக stewardship-ஆகப் பாய்ந்தோடும்.
Discipleship இல்லை என்றால் fellowship இல்லை. Fellowship இல்லை என்றால் stewardship வராது. இங்கும் வரிசை முக்கியம்.
14.3 சபை என்றால் என்ன?
ஒரு கேள்வி. சபை வாழ்க்கை என்றால் என்ன? கட்டிடமா? செயல்களா? நிகழ்ச்சிகளா? இல்லை. சிலுவையில் அறையப்பட்ட மக்களுக்கிடையேயுள்ள காலந்தறவாடுதல்தான் சபை வாழ்க்கை. எங்கு சிலுவையில் அறையப்பட்ட மக்கள் வாழ்கிறார்களோ அங்கே சபை இருக்கும்; அங்கே உறவு இருக்கும். கட்டிடம் அல்ல; உறவுதான் சபை வாழ்க்கை.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைச் சர்வாங்க தகனபலியாக அனுபவிக்காத மக்களுக்கிடையில் ஐக்கியம் சாத்தியமில்லை. ஒரு சங்கம் நடத்துவதற்கு சிலுவை தேவையில்லை. ஆனால் ஐக்கியத்திற்கு சிலுவை அவசியம். சிலுவை இல்லையென்றால் அது வெறுமனே ஓர் வெளிப்புற அமைப்பு மட்டுமே.
ஒருவன் தன் வாழ்க்கையில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைச் சிலுவையில் சந்திக்காதவரை அங்கே உண்மையான ஐக்கியம் இருக்காது.
பிறரோடு சேர்ந்து பங்குபெற வேண்டும், பகிர்ந்து கொள்ள வேண்டும், அனுபவிக்க வேண்டும் என்றால் முதலாவது சர்வாங்க தகனபலியை அனுபவிக்க வேண்டும்.
சிலுவை – சேர்க்கும் ஆற்றல், பிரிக்கும் ஆற்றல்
சிலுவை முதலாவது சேர்க்கிறது. ஆனால் சிலுவை பிரிக்கவும் செய்யும். The cross is the greatest divider. இது ஒருவேளை உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம்.
மத். 10:34–35யை வாசிப்போம்.
“பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்பவந்தேன்…”
இதை ஏற்றுக்கொள்ள முடியுமா? “இயேசுவை ஏற்றுக்கொண்டால் சமாதானம் கிடைக்கும் என்று நினைத்தேன். ஆனால் அவர் பிரிவினை உண்டாக்குவேன் என்று கூறுகிறாரே!” என்று ஒரு விசுவாசி நினைக்கக்கூடும்.
சிலுவை உண்மையை வெளிப்படுத்தும். அது உண்மையை வெளிப்படுத்தும்போது சேர வேண்டியவர்கள் சேர்கிறார்கள். பிரிந்துசெல்ல வேண்டியவர்கள் பிரிகிறார்கள்.
2 கொரிந்தியர் 6:14–18-இல் உள்ள “ஐக்கியம்,” “பிணைப்பு,” “சம்பந்தம்,” “இசைவு,” “பங்கு” என்ற வார்த்தைகளை கவனியுங்கள்.
இவ்வாறு சிலுவை ஒருபுறம் சேர்க்கிறது; இன்னொரு புறம் பிரிக்கிறது.
தேவன் ஏன் மனிதனைப் படைத்தார்?
என்னுடைய அடுத்த கேள்வி: தேவன் ஏன் மனிதனைப் படைத்தார்?
“படைத்தான் படைப்பெல்லாம் மனுவுக்காக; மனுவைப் படைத்தான் தன்னை வணங்க” என்று புலவர்கள் கூறினார்கள். அது elementary truth. ஆனால் அது உண்மைதான்.
தேவனை வெளியாக்கும் பாத்திரமாகத் தேவன் மனிதனைப் படைத்தார் என்பதும் தவறல்ல. ஆனால், அந்த வெளியாக்கம் உறவில் நடக்கிறது. இன்னொரு மனிதன் இல்லை என்றால் ஒரேவொரு மனிதன் அன்பை எப்படி வெளிப்படுத்த முடியும்? சந்தோஷத்தை எப்படிப் பகிர முடியும்? சமாதானத்தை எப்படி அனுபவிக்க முடியும்?
மனிதனைப் படைத்து அவனோடு ஐக்கியம் கொள்ளும்போதுதான் தேவன் தாம் செய்ய விரும்பியதைச் செய்ய முடியும். எனவே, மனிதனோடு உறவாட வேண்டும்; உரையாட வேண்டும்; ஐக்கியம் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தேவன் மனிதனைப் படைத்தார்.
15. பலிபீடத்தின் வாழ்க்கை
சர்வாங்க தகனபலி, போஜன பலி, சமாதான பலி — இந்த மூன்றிலும் நீங்கள் ஒரு காரியத்தைக் கவனித்தீர்களா? இந்த மூன்று பலிகளிலும் முதல் இடம் தேவனுக்கே. முதலாவது பலி பீடத்தில் பலி தகனிக்கப்பட வேண்டும்.
இதன் பொருள் என்ன?
நம் வாழ்க்கையில் முதல் இடம் தேவனாகிய கர்த்தருக்கே. எல்லாவற்றையும் முதலில் பலிபீடத்தில் வைக்க வேண்டும். தேவனுக்குக் கொடுக்க வேண்டிய இடம், பொருள், நேரம் — இவைகளை வேறு யாருக்கும் கொடுக்கக் கூடாது.
பலிபீடத்தில் வைப்பவையெல்லாம் தேவனுக்குரியவை. தேவனுக்கு உரியதைத் தேவன் தம் விருப்பம்போல் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.
நாம் ஒன்றைப் பலிபீடத்தில் வைத்தபிறகு அதை மறந்துவிட வேண்டும். அது இப்போது அவருடையது.
இந்தப் பூமியில் தேவன் நமக்குத் தந்திருக்கும் உறவுகள், வீடு, சொத்து, வேலை, பணம், சுகம், படிப்பு என எத்தனையோ ஆசீர்வாதங்களைத் தந்திருக்கிறார்.
இவைகள் நமக்குச் சொந்தமா?
Are we the owners? இல்லை.
We just possess them; we do not own them. உரிமை அவருக்கு; பொறுப்பு நமக்கு.
நம்மையும், நம்மிடம் உள்ளவைகளையும், நம்மால் இயன்றவைகளையும் முதலில் பலிபீடத்தில் தேவனுக்குக் கொடுக்க வேண்டும்.
பலிபீடத்தில் தகனிக்கப்பட்டபிறகு ஏதாவது மீதி இருந்தால் அதை நாம் அனுபவிக்கலாம். பலிபீடத்தில் வைக்காத எதையும் எடுத்துக்கொள்ளக் கூடாது.
15.1 தேவன் முதலிடம்
ஓர் எடுத்துக்காட்டு தருகிறேன். கர்த்தர் கற்பித்த ஜெபம் எப்படி ஆரம்பிக்கிறது?
“பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக.”
That is our priority.
“உம்முடைய ராஜ்யம் வருவதாக.”
That is our program.
“உம்முடைய சித்தம்… பூமியிலேயும் செய்யப்படுவதாக.”
That is our plan.
He is our priority.
He is our program.
He is our plan. இதுதான் பலிபீடத்தின் ஒழுங்கு.
இன்னோர் எடுத்துக்காட்டு தருகிறேன். இயேசு பிறந்தபோது தேவதூதர்கள் பாடினார்கள்: எப்படி?
“உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும்…” (லூக். 2:14)
முதலில் தேவனுக்கு மகிமை. அதன் பிறகுதான் பூமியில் சமாதானம். மீதினும் வரிசையைக் கவனியுங்கள்.
கொலோசெயர் 1-இல் அவர் “எல்லாவற்றிலும் முதல்வர்” என்று சொல்லப்படுகிறது.
இவ்வாறு நம் வாழ்க்கை பலிபீடத்தின் வாழ்க்கை. நம் வாழ்க்கை கூடாரத்தின் வாழ்க்கை. பலிபீடத்தில் தொடங்கி — ஐக்கியத்தில் முடிகிறது.
பலிபீடம்தான் சபையின் பிறப்பிடம்;
ஐக்கியம்தான் அதன் கனி.
16. முழுமையின் இரு பக்கங்கள் (காளை – பசு)
16.1 ஆண் – பெண் (காளை – பசு) – முழுமை
இப்போது நாம் லேவியராகமம் மூன்றாம் அதிகாரம் முதல் வசனத்தைத் திரும்பிப் பார்ப்போம்: “ஒருவன் சமாதான பலியைப் படைக்கவேண்டுமென்று, மாட்டுமந்தையில் எடுத்துச் செலுத்துவானாகில், அது காளையானாலும் சரி, பசுவானாலும் சரி, பழுதற்றிருப்பதை கர்த்தருடைய சந்நிதியில் செலுத்தக்கடவன்.” இங்கு இரண்டு அம்சங்கள் இருக்கின்றன: 1) அது காளையாகவோ, பசுவாகவோ இருக்கலாம். 2) அது பழுதற்றதாக இருக்க வேண்டும்.
சர்வாங்க தகனபலிக்கும் சமாதான பலிக்கும் இடையேயுள்ள சில முக்கியமான வித்தியாசங்களைப் பார்த்தோம். அவைகளுள் ஒன்று, சமாதான பலியாகக் கொடுக்கப்படும் மிருகங்கள் ஆணாகவோ பெண்ணாகவோ இருக்கலாம், அதாவது காளையாகவோ பசுவாகவோ இருக்கலாம். இது முதல் அம்சம். சரி இதை நாம் இப்போது விவரமாகப் பார்ப்போம். ஆண், பெண்.
ஆதியாகமத்தில் தேவன் மனிதனை “ஆணும் பெண்ணுமாகப் படைத்தார்.” ஆணும் பெண்ணும் சேர்ந்ததுதான், ஆதாமும் ஏவாளும் சேர்ந்ததுதான், மனிதன். கிறிஸ்து “மணமகன்,” சபை “மணமகள்.” கிறிஸ்து தலை, சபை உடல். இரு பக்கங்கள் சேரந்தால்தான் முழுமை.
16.2 பெற்றறிவும் உற்றறிவும்: கிறிஸ்தவ வாழ்வின் இரு சிறகுகள்
இதுபோலவே வேதாகமத்தில் எல்லாச் சத்தியங்களுக்கும் இரண்டு பக்கங்கள் உள்ளன. இரண்டும் சேரந்தால்தான் முழுமை. ஒரு பக்கம் அறிவு; மறுபக்கம் அனுபவம். ஒன்று “பெற்றறிவு,” மற்றொன்று “உற்றறிவு.” ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து செய்துமுடித்தவை நாம் வேதாகமத்திலிருந்து பெறும் பெற்றறிவு. அதே உண்மை நம் வாழ்க்கையிலே உள்ளார்ந்த அனுபவமாக மாறுகிறது உற்றறிவு. ஒரு பக்கம் – நிறைவுபெற்ற நித்திய உண்மை. இன்னொரு பக்கம் – நம்முள் நடந்துகொண்டிருக்கும் வேலை. இந்த இரண்டையும் நாம் சமநிலைப்படுத்த வேண்டும். ஒரு பக்கம், “எனக்கு எல்லா உண்மைகளும் தெரியும்,” என்று நான் சொல்லலாம். ஆனால் அது போதாது. அந்த உண்மைகள் என் வாழ்க்கையில், என் நடத்தையில் மெய்ப்பட வேண்டும்.
இரண்டும் சேரும்போதுதான் முழுமை கிடைக்கிறது. ஒரேவொரு பக்கத்தை மட்டும் பார்க்கக்கூடாது. இரண்டு பக்கங்களையும் பார்க்க வேண்டும். இதற்கு நான் சில நடைமுறை எடுத்துக்காட்டுகளைத் தருகிறேன். அதன்பின் வேதாகமத்தின் சில சத்தியங்களைப் பார்ப்போம்.
ஒரேவொரு காலால் நடக்க முடியும். ஆனால் இரண்டு கால்களால் நடந்தால்தான் சீராக நடக்க முடியும். ஒரேவொரு கண்ணால் பார்க்க முடியும்; ஆனால் இரண்டு கண்களால் பார்த்தால்தான் சரியான பார்வை கிடைக்கும். ஒரேவொரு சிறகால் பறக்க முடியாது; ஆனால் இரண்டு சிறகுகள் தேவை. இதைத் தான் சில வேதவல்லுனர்கள் “Objective fact” & “Subjective experience” அல்லது “Historical truth” & “Personal appropriation” என்று சொல்கிறார்கள். இரண்டு அம்சங்கள் நமக்கு அவசியம்: அறிவு, அனுபவம். எல்லாவற்றையும் வெறும் வரலாறுபோல் – “அவர் அப்படிச் செய்தார்; இது இப்படி நடந்தது” என்று வைத்துவிட முடியாது. அதே நேரம் எல்லாவற்றையும் “எனக்குள்ளே இப்படித்தான் உணர்ச்சி வருகிறது” என்ற உணர்வு மட்டுமே எனவும் வைத்துக்கொள்ள முடியாது.
17. கிறிஸ்து செய்தது, ஆவியானவர் செய்வது
17.1 யோவான் 14:27 – சமாதானம்
சில வசனங்களை வாசிப்போம்.
“சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக," என்று இயேசு கூறினார் (யோவான் 14:27). இந்த வசனத்தில் இயேசு நமக்குச் சமாதானத்தை வைத்துப்போவதாகக் கூறுகிறார். அதே சமயம், கலாத்தியருக்கு எழுதிய நிருபத்தில் “சமாதானம்” பரிசுத்த ஆவியின் கனிகளில் ஒன்று என்று நாம் பார்க்கிறோம். ஒரு பக்கம், கிறிஸ்து நமக்குச் சமாதானத்தை வைத்துச் சென்றார். இன்னொரு பக்கம், பரிசுத்த ஆவியானவர் அந்த சமாதானத்தை நம்முள் அனுபவமாக உண்டாக்குகிறார்.
கிறிஸ்து செய்து முடித்தார். இது அறிவு, வரலாறு. பரிசுத்த ஆவியானவர் செய்துகொண்டிருக்கிறார். இது நம் அனுபவம், நடைமுறை.
17.2 கிறிஸ்துவில் நாம் – கிறிஸ்து நம்மில்
வேதம் இதை இரண்டு வழிகளில் கூறுகிறது. ஒரு பக்கம், “என்னில் நிலைத்திருங்கள்,” என்று இயேசு கூறுகிறார். இன்னொரு பக்கம், “நான் உங்களில் நிலைத்திருப்பேன்,” என்றும் அவர் கூறுகிறார். “ஒருவன் என்னில் இருந்தால், நான் அவனில் நிலைத்திருப்பேன்” (யோவான் 15:4). இயேசு நம்மோடு இருந்தார். பரிசுத்த ஆவியானவர் நம்முள் இருக்கிறார். “நீங்கள் கிறிஸ்து இயேசுவில் இருக்கிறீர்கள்” என்று 1 கொரி. 1:30இல் வாசிக்கிறோம். “கிறிஸ்து உங்களில் இருக்கிறார்” என்று கொலோ. 1:27இல் வாசிக்கிறோம். ஒரு பக்கம் நாம் கிறிஸ்துவில் இருக்கிறோம். இன்னொரு பக்கம் கிறிஸ்து நம்மில் இருக்கிறார். இந்த இரண்டு அம்சங்களும் சேர்ந்ததுதான் உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை. நாம் கிறிஸ்துவில் இருப்பது தேவனுக்குமுன்பாக. கிறிஸ்து நம்மில் இருப்பது நாம் மனிதர்களுக்கு முன்பாக.
17.3 கிறிஸ்து மரித்தார் – நாமும் மரித்தோம்
இதை நாம் தொடர்ந்து பார்ப்போம். உன்னிப்பாகக் கவனியுங்கள். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மரித்தார், அடக்கம் பண்ணப்பட்டார், உயிர்த்தெழுந்தார், பரமேறினார், சிங்காசனத்தில் அமர்ந்தார், நமக்காகப் பரலோகத்தில் பரிந்துபேசிக்கொண்டிருக்கிறார். இவைகள் எல்லாம் நமக்கு வெளியே நடந்து முடிந்த வரலாற்று உண்மைகள். இது objective. ஆனால் வேதம் அங்கே நிறுத்தவில்லை. “நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டது” என்று ரோமர் 6:8ம், நாம் “கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்” என்று ரோமர் 6:4ம், நாமும் “கிறிஸ்துவுடன்கூட எழுந்தோம்,” என்று கொலோசெயர் 3:1ம், “கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்” என்று எபேசியர் 2:7ம் கூறுகின்றன. ஒன்று நடந்தது. இன்னொன்று நம்மில் நடக்கிறது. ஒன்று நமக்கு வெளியே நடந்துமுடிந்த உண்மைகள். இன்னொன்று நம்மில் நடந்துகொண்டிருக்கும் அனுபவங்கள்.
17.4 நிலை & குணம்
ஒன்று நடந்துமுடிந்த உண்மைகள். இன்னொன்று நம்முடைய தனிப்பட்ட அனுபவம். ஒன்று புறம்பானது, இன்னொன்று உள்ளானது. ஒன்று வெளியரங்கம், இன்னொன்று உணர்ந்தறிதல். ஒன்று Manifestation, இன்னொன்று Apprehension. ஒன்று Position, Status. இன்னொன்று State, Character. ஒன்று இடத்தைப் பொறுத்தது. இன்னொன்று குணத்தைப் பொறுத்தது.
இதை விளக்குவதற்கு நான் சில கேள்விகள் கேட்கிறேன். நாம் பரிசுத்தமாகிவிட்டோமா அல்லது பரிசுத்தமாகிக்கொண்டிருக்கிறோமா. பரிசுத்தமாக்கப்பட்டோம் என்பதும் உண்மை; பரிசுத்தமாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம் என்பதும் உண்மை. பரிசுத்தமாக்கப்பட்ட பரிசுத்தவான்கள் பரிசுத்தமாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம். 1 கொரி, 1:1யை வாசிப்போம். “கொரிந்துவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாயும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களாயுமிருக்கிற தேவனுடைய சபைக்கும்…” ஒருமுறை நாம் நீதிமானாக்கப்பட்டோம். இது ஒருமுறை நிகழும் நிகழ்வு. பரிசுத்தமாக்கப்படுதல் தினந்தோறும், கணந்தோறும், வாழ்நாள் முழுவதும் நிகழும் நிகழ்வு. இரண்டும் உண்மை. நாம் முதன்முறை ஆண்டவராகிய இயேசுவை நம் சொந்த இரட்சகராக விசுவாசித்து, ஏற்றுக்கொண்டபோது நம்முடைய எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்பட்டன, இயேசுவின் இரத்தத்தினால் கழுவிச் சுத்திகரிக்கப்பட்டன, நாம் நீதிப்படுத்தப்பட்டோம், நிலைமையில் பரிசுத்தமாக்கப்பட்டோம். இப்போது நாம் நம் குணத்தில் பரிசுத்தமாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம். இது நம் அனுதின அனுபவம்.
ஒன்று objective fact. இன்னொன்னு subjective experience. இதைக்குறித்த ஒரு தெளிவான புரிதல், அறிவு, இல்லையென்றால் பரிசுத்தவான்களின் அனுபவமும், வளர்ச்சியும், முதிர்ச்சியும், தேர்ச்சியும் மிகவும் மட்டுப்படுத்தப்படும்.
சேற்றில் விழுந்துவிட்ட ஒரு பாத்திரத்தைக் கழுவிச் சுத்தம்செய்து வீட்டுக்குள் கொண்டுவருகிறோம். அதன்பின் நாம் அதைப் பயன்படுத்த ஆரம்பிக்கிறோம். இப்போது இது சுத்தமான பாத்திரம்தானே! இனிமேல் இதைச் சுத்தம்செய்யவேண்டிய அவசியம் இல்லையே! “இல்லை, ஒவ்வொருநாளும் அது அழுக்காகும். எனவே, அதைப் பயன்படுத்துவதற்குமுன் மீண்டும் கழுவிச் சுத்தம்செய்ய வேண்டும்,” என்று நாம் சொல்லக்கூடும். அது உண்மைதான். ஆனால், இங்குதான் நம் புரிதல் குறைவுபடுகிறது. நாம பாவச் சேற்றில் விழுந்துகிடந்த மண்பாத்திரம்போன்றவர்கள் என்று வைத்துக்கொள்வோம். தேவன் நம்மை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவிச் சுத்திகரித்துத் தமக்கென்று பிரித்து எடுத்துவிட்டார். இது சுத்தமாயிற்று. இது ஒரு Position, Status, condition. இது ஒரு மண்டலம், ஒரு சூழல், ஒரு நிலைமை. முன்பு சேற்றில் கிடந்த மண்பாத்திரத்தின் இடம் மாறிவிட்டது. அது இப்போது வீட்டுக்குள் வந்துவிட்டது. பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் இதன் State, Character மாறவில்லை. மண் பாத்திரம் இன்னும் மண்பாத்திரமாத்தான் இருக்கிறதேதவிர அதன் குணம், இயல்பு, தன்மை, சுபாவம் மாறவில்லை. அதன் இடம், நிலைமை, மாறி இருக்கிறது.
நேற்று மகனாக இருந்தவன் இன்றைக்கு கணவனாக மாறி இருக்கலாம்; நேற்று மகளாக இருந்தவள் இன்றைக்கு மனைவியாக மாறி இருக்கலாம்; நேற்று மனைவியாக இருந்தவள் இன்றைக்குத் தாயாக மாறி இருக்கலாம். இவர்களுடைய Position, Status, condition மாறி இருக்கலாம். ஆனால், இவர்களுடைய State, Character குணம் மாறாமல் இருக்கக்கூடும்.
மண் பாத்திரம் பொற்பாத்திரமாக மாறும்போதுதான் அதன் State, Character மாறுகிறது என்று சொல்லமுடியும். ஒன்று Objective Fact. தேவன் நம்மை இயேசுவின் இரத்தத்தால் கழுவுதல் நமக்கு எந்தப் பங்கும் இல்லை. ஆனால், நாம் கழுவப்பட்டபின் நம் மனம் புதிதாக்கப்படுதல், நாம் மறுசாயலாகக்கப்படுதல், கிறிஸ்துவின் சாயலுக்கு ஒத்தசாயலாகக்கப்படுதல் ஆகியவைகளெல்லாம் Subjective Experience.
ஒன்று பெற்றறிவு அல்லது ஏட்டறிவு அல்லது எழுத்தறிவு. மற்றொன்று உற்றறிவு அல்லது கற்றறிவு.
17.7 எடுத்துக்காட்டுகள்
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைச் சந்தித்த சமாரியப் பெண் சமாரியாவில் போய் இயேசுவைக்குறித்துப் பேசினாள். அவர்கள் விசுவாசித்தார்கள். “அந்த ஸ்திரீயினுடைய வார்த்தையினிமித்தம் அந்த ஊரிலுள்ள சமாரியரில் அநேகர் அவர்மேல் விசுவாசமுள்ளவர்களானார்கள்” (யோவான் 4:39). அது பெற்றறிவு. அதன்பின் அவர்கள் இயேசுவின் பேசுதலை நேரடியாகக் கேட்டு விசுவாசித்தார்கள். “அப்பொழுது அவருடைய உபதேசத்தினிமித்தம் இன்னும் அநேகம்பேர் விசுவாசித்து, அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள்” (யோவான் 4:41, 42). இது உற்றறிவு.
Objective Fact என்பதை ஒருவர் உணவைச் சமைத்து மேஜைமேல் வைத்துவிட்டுப் போவதற்கு ஒப்பிடலாம். ஆனால் Subjective Experience என்பதைச் சமைத்து வைத்த உணவைச் சாப்பிடுவதற்கு ஒப்பிடலாம்.
Objective Fact என்பதை ஒரு மருத்துவர் ஒரு நோயாளியைப் பரிசோதனைசெய்து நோயாளியின் நோயைக் கண்டுபிடித்து, நோயைக் குணமாக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கச் சொல்வதற்கு ஒப்பிடலாம். Subjective Experience என்பதை மருத்துவர் சொன்ன பரிசோதனைகளைச் செய்து, பரிந்துரைத்த மருந்து மாத்திரைகளைச் சாப்பிட்டு குணம்பெறுவதற்கு ஒப்பிடலாம்.
மனிதர்களின் இரட்சிப்புக்காக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எல்லாவற்றையும் செய்து முடித்தார். இது Objective. அவர் செய்து முடித்தவைகளை நாம் விசுவாசிப்பது Subjective. இயேசுவை விசுவாசிப்பதற்குமுன் இருளில் இருந்த நம்மை அவரை விசுவாசித்தபோது அவர் ஒளிக்குள் கொண்டுவந்தார். மரணத்தில் இருந்த நம்மை ஜீவனுக்குள் கொண்டுவந்தார். இது Objective. ஒளி நமக்குள் வருவது, ஜீவன் நமக்குள் பகிரப்படுவது Subjective. தேவன் நம்மில் அன்பு கூர்ந்தார். இது Objective. நாம் அவரில் அன்புகூர்கிறோம்; இது Subjective. மோசே மலையில் ஜெபித்துக்கொண்டிருந்தார். இது Objective. யோசுவா கீழே யுத்தம்செய்துகொண்டிருந்தார். இது Subjective. இப்படி இந்த இரண்டு அம்சங்களையும் நாம் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.
இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து வெளியே புறப்பட்டுப் போகிறார்கள். பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தத்தைக் கதவின் நிலைக்கால்களிலும் நிலைச்சட்டத்திலும் பூசுகிறார்கள். அழிவின் தூதனிடமிருந்து இரட்சிக்கப்பட இந்த இரத்தம் போதும்தானே! இது Objective. இதற்கு Subjective அம்சம் இருக்கிறது. அவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? எந்த ஆட்டுக்குட்டியின் இரத்தத்தை நிலைக்கால்களிலும் நிலைச்சட்டத்திலும் பூசினார்களோ அந்த ஆட்டுக்குட்டியின் இறைச்சியைச் சுட்டு சாப்பிட்டார்கள். இரத்தத்தைப் பூசியது இரட்சிப்பின் Objective அம்சம். அவர்கள் வனாந்தரத்தில் 40 ஆண்டுகள் பயணிக்க வேண்டும். அவர்களுடைய வாழ்க்கைப் பயணத்திற்கு ஆட்டுக்குட்டியி இறைச்சி அவசியம். எனவே, மிச்சம் மீதி வைக்காமல் சாப்பிட்டார்கள். பூசுவது வெளியே. இது Objective. புசிப்பது உள்ளே. இது Subjective.
அப்பாவின் வீட்டைவிட்டு வெளியேறிய இளைய மகன் அப்பாவின் வீட்டுக்குத் திரும்பி வருகிறான், அப்போது அவனுடைய அப்பா அவனுக்கு விலையுயர்ந்த ஆடைகளையும், கைக்கு மோதிரத்தையும், கால்களுக்கு மிதியடிகளையும் மட்டும் கொடுக்கவில்லை. இவைகளெல்லாம் அவனுக்கு வெளியே நடந்தவை. கொழுத்த கன்றை அடித்து விருந்து கொண்டாடினார்கள். இது அவனுக்கு உள்ளே நடந்தது.
ஒன்றைக் கவனியுங்கள். சர்வாங்க தகனபலி கூடாரத்தில் கொடுக்கப்பட்டது. ஆனால், சமாதான பலி வீட்டில் தயாரிக்கப்பட்டது. இதிலும் சத்தியத்தையும், அனுபவத்தையும் பார்க்கிறோம்.
இந்த இரண்டு அம்சங்களையும் இன்னும் கொஞ்சம் அதிகமாக விளக்குவதற்காக நான் வேறு இரண்டு வார்த்தைகளைப் பயன்படுத்துகிறேன். ஒன்று கிறிஸ்து வரலாற்றில் செய்து முடித்த வேலை. மற்றொன்று இன்று பரிசுத்த ஆவியானவர் நம்மில் செய்துகொண்டிருக்கும் வேலை. ஒன்று நமக்கு வெளியே நடந்து முடிந்தது. மற்றொன்று நமக்குள் நடந்துகொண்டிருக்கிறது. ஒன்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வேலை; இன்னொன்று பரிசுத்த ஆவியானவரின் வேலை. இந்த இரண்டு அம்சங்களையும் ஒருபோதும் மறக்கக்கூடாது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்காகச் செய்துமுடித்தார்; பரிசுத்த ஆவியானவர் நம்மில் செய்துகொண்டிருக்கிறார். இயேசு கிறிஸ்து செய்து முடித்த வேலையில நமக்கு எந்தப் பங்கும் கிடையாது. அவர் மரித்தார்; அதில் எனக்கு எந்தப் பங்கும் இல்லை. அவர் இரத்தம் சிந்தினார்; அதில் எனக்கு எந்தப் பங்கும் இல்லை. அவர் அடக்கம் பண்ணப்பட்டார்; அதில் எனக்கு எந்தப் பங்கும் இல்லை. அவர் பரமேறினார்; அதில் எனக்கு எந்தப் பங்கும் இல்லை. அவர் சிங்காசனத்தில் அமர்ந்தார்; அதில் எனக்கு எந்தப் பங்கும் இல்லை.
ஆனால் இவைகள் எல்லாவற்றையும் பரிசுத்த ஆவியானவர் இன்று நம்மில் அனுபவமாக்கிக்கொண்டிருக்கிறார். பரிசுத்த ஆவியானவர் நம்மில் செயல்படும்போது நாம் அவருக்கு மறுமொழி கொடுக்கிறோம். இயேசு கிறிஸ்து செய்துமுடித்த வேலைகளைப் பரிசுத்த ஆவியானவர் வெளிப்படுத்துகிறார், நினைப்பூட்டுகிறார். யோவான் 1:12-13 இல் வாசிப்பதுபோல் அவர் நம்மை மறுபடிஜெநிப்பிக்கிறார். 2 கொரிந்தியர் 4:16 இல் வாசிப்பதுபோல் நம்மைப் புதிதாக்குகிறார். 2 கொரிந்தியர் 3:18 இல் வாசிப்பதுபோல் நம்மை மறுசாயலாக்குகிறார்; 1 தெசலோனிக்கேயர் 5:23, எபேசியர் 4:23 இல் வாசிப்பதுபோல் நம் குணத்தில் பரிசுத்தமாக்குகிறார். ரோமர் 8:28-29 இல் வாசிப்பதுபோல் நம்மைக் கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாக மாற்றுகிறார்; ரோமர் 8:21, பிலிப்பியர் 1:21 இல் வாசிப்பதுபோல் நம்மை மகிமைப்படுத்துகிறார். இவைகள் நம் அனுபவம்
குமாரன் & குமாரனுடைய ஆவி
கிறிஸ்துவின் வேலையையும், பரிசுத்த ஆவியானவரின் வேலையையும் தெளிவாக்க கலாத்தியர் 4:5, 6 யை வாசிப்போம். “காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார். மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாக தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார்.”
கலாத்தியர் 4:5, தேவன் தம்முடைய குமாரனை அனுப்பினார். கலாத்தியர் 4:6, தேவன் தமது குமாரனுடைய ஆவியை அனுப்பினார். இயேசு கிறிஸ்து மனித வரலாற்றில் நுழைந்த தேவன். ஆவியானவர் மனித இருதயத்தில் நுழையும் தேவன். இயேசு மனித வரலாற்றில் நுழைந்த தேவன்; ஆவியானவர் மனித இருதயத்தில் நுழையும் தேவன். யோவான் 3:16 இன்படி தேவன் குமாரனைத் தந்தருளினார்; யோவான் 14:16 இன்படி தேவன் தேற்றரவாளனைத் தந்தருளினார். யோவான் 1:12 இன்படி குமாரனை விசுவாசிக்கும்போது நாம் தேவனுடைய பிள்ளைகளாக மாறுகிறோம். இதுதான் குமாரன் வந்ததன் நோக்கம். “அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.” ரோமர் 8:14, கலாத்தியர் 5:25 இன்படி தேற்றரவாளனாகிய பரிசுத்த ஆவியானவர் நம்முடைய இருதயத்தில் வந்திருப்பது பிள்ளைகளை மகன்களாக மாற்ற, மகன்களாக வாழச்செய்ய. “எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்.” “நீங்கள் ஆவியின்படி நடந்தால் ஆவியின்படி நடக்கவும் கடவீர்கள்.” அதுபோல சமாதானத்தை எடுத்துக்கொள்ளுங்கள். யோவான் 14:27 இன்படி ஒரு பக்கம் அவர் நம்மை சமாதானம் என்ற சூழலுக்குள் வைக்கிறார். இன்னொரு பக்கம், யோவான் 16:33 இன்படி சமாதானம் என்ற நிஜத்தை நமக்குள்ளே உருவாக்கவும் செய்வார்.
18. ஆபத்தும் சமநிலையும்
இப்படி வேதாகமத்தின் எல்லாச் சத்தியங்களுக்கும் இந்த இரண்டு அம்சங்கள் இருக்கின்றன. இரண்டையும் சமநிலையில் பார்க்க வேண்டும். ஒன்றைப் பிடித்துக்கொண்டு மற்றொன்றைப் புறக்கணிப்பது ஆபத்தை விளைவிக்கும். வரலாற்று உண்மைகளை மட்டும் பிடித்துக்கொண்டால் Passivity ஏற்படும். அதாவது “நாம் செய்வதற்கு ஒன்றும் இல்லை. எல்லாம் நடந்து முடிந்தவை. எல்லாவற்றையும் தேவன் செய்துமுடிதார்,” என்ற ஒரு கையறு நிலைக்குத் தள்ளப்படுவோம். இதற்கு மாறாக தனிநபர் அனுபவத்தை மட்டும் பிடித்துக்கொண்டால் Subjectivism ஏற்படும். அதாவது, உணர்ச்சிகளுக்கும், பரபரப்பான செயல்பாடுகளுக்கும் அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்து தேவன் செய்து முடித்தவைகளைப் பின்னுக்குத் தள்ளிவிடுவோம். இதனால்தான் பொய்யான மதங்கள் உருவாகின்றன.
இதே கருத்தை வலியுறுத்த இன்னொரு வசனத்தை வாசிப்போம். பிலிப்பியர் இரண்டாம் அதிகாரம் பன்னிரண்டாம் வசனம். “ஆதலால், எனக்குப் பிரியமானவர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, நான் உங்களுக்குச் சமீபமாயிருக்கும்பொழுது மாத்திரமல்ல, நான் தூரமாயிருக்கிற இப்பொழுதும், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்.” “உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்.” நாம் ஏற்கெனவே இரசிக்கப்பட்டவர்கள் என்றால் “உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்,” ஏன் எழுதியிருக்கிறது? நாம் மறுபடிபிறந்தபோது தேவனுடைய ஜீவனைப் பெற்றோம். அன்றுமுதல் நம் மனம் புதிதாக்கப்படுகிறது, நாம் மறுசாயலாக்கப்படுகிறோம், குணத்தில் பரிசுத்தமாக்கப்படுகிறோம். இரட்சிப்பின் அனுபவம் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. இன்று இத்துடன் முடித்துக்கொள்வோம். அடுத்த வாரம் தொடர்வோம்.
பழுதற்ற பலி – கிறிஸ்துவின் குற்றமற்ற வாழ்க்கை
பகுதி 4: பழுதற்ற பலி: கிறிஸ்துவின் மாசற்ற மாண்பு
சமாதான பலியின் மைய நோக்கம் “ஒருவன் சமாதான பலியைப் படைக்கவேண்டுமென்று, மாட்டுமந்தையில் எடுத்துச் செலுத்துவானாகில், அது காளையானாலும் சரி, பசுவானாலும் சரி, பழுதற்றிருப்பதை கர்த்தருடைய சந்நிதியில் செலுத்தக்கடவன்” (லேவி. 3:1).
இங்கு நாம் கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான சொல் — “பழுதற்றது.” “பழுதற்றது” என்றால் உச்சிதமானது, மிகச் சிறந்தது, மாசில்லாதது, குற்றமில்லாதது, காயமில்லாதது, கீறலில்லாதது, குறைவில்லாதது என்று பொருள். தேவனுக்கு கொடுக்கப்படுவது எதுவானாலும் சரி, அது மிகச் சிறந்ததாகத்தான், உயர்ந்த தரமானதாகத்தான் இருக்க வேண்டும். நமக்குத் தேவையில்லை என்பதால் அதைக் கொடுக்கக்கூடாது. மீதியாக இருப்பதை அல்ல.
மிகச் சிறந்ததை. “What we give to God is poor but yet it must always be the best.” நாம் கொடுப்பது எப்போதும் குறைவானதே; ஆனாலும் நாம் கொடுப்பது மிகச் சிறந்ததாகவே இருக்க வேண்டும். இது எழுத்தின்படி நடந்தது.
ஆவிக்குரிய நிறைவேற்றம் – கிறிஸ்துவே பழுதற்ற பலி
இப்போது இதன் ஆவிக்குரிய பொருளைப் பார்ப்போம். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே அந்த “பழுதற்ற பலி.” அவர் 'குற்றமில்லாத, மாசற்ற ஆட்டுக்குட்டி' என்று பேதுரு எழுதுகிறார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பூமிக்குரிய வாழ்க்கையைச் சிந்தித்துப்பாருங்கள். அவர் இந்த உலகத்தில் வாழ்ந்தபோது, அவருடைய எதிரிகள், மதத் தலைவர்கள், அரசியல் அதிகாரிகள் அவரை ஆய்ந்தார்கள். அவரோடு இருந்த சீடர்கள் பார்த்தார்கள். ஒரு மனிதனாலும் ஒரு தவறு, ஒரு பிழை, ஒரு குற்றமும் அவரிடத்தில் கண்டுபிடிக்க முடியவில்லை. எல்லாவற்றையும், எல்லாரையும்விட அவருடைய சொந்த சாட்சியே இதற்கு ஆதாரம். அவருடைய சாட்சி என்ன? “என்னிடத்தில் பாவம் உண்டு என்று உங்களில் யார் என்மேல் குற்றம் சொல்ல முடியும்” என்று அவர் சவால் விடுகிறார். “இதோ, உலகத்தின் அதிபதி வருகிறான்; அவனுக்கு என்னிடத்தில் ஒன்றும் இல்லை," என்றார். அவர் பாவமில்லாதவர். பாவம் அறியாதவர். பாவம் செய்யாதவர். குற்றமற்றவர். மாசற்றவர். அவர் தம்மைப் பழுதற்ற பலியாக ஒப்புக்கொடுத்தார். தேவன் ஏற்றுக்கொண்ட ஒரே பழுதற்ற பலி — கிறிஸ்துவே.
சமாதான பலியின் மைய நோக்கம் (பலிபீடத்திலிருந்து ஐக்கியம் வரை)
சரி. இதைத் தொடர்ந்து பார்ப்போம். இதுவரை பார்த்த அனைத்தையும் ஒன்றாகக் கொண்டுவரும்போது,
சமாதான பலியின் உண்மையான நோக்கம் தெளிவாகிறது. சமாதான பலி என்பது
“இப்போது தேவனுடன் சமாதானம் பெறுவதற்கான” பலி அல்ல.
ஏன்?
ஏனெனில் சர்வாங்க தகனபலியில் — ஓலாவில் —
நாம் ஏற்கெனவே தேவனுடன் சமாதானம் பெற்றிருக்கிறோம்.
அப்படியானால் சமாதான பலி என்ன செய்கிறது? அது புதிதாக சமாதானத்தை உருவாக்குவதில்லை.
அது ஏற்கெனவே ஏற்பட்ட சமாதானத்தை
தேவனுடைய சந்நிதியில் அனுபவிக்கச் செய்கிறது. தேவனுக்கும்,
ஆசாரியருக்கும்,
பலியைக் கொண்டு வந்தவருக்கும்
இடையே உருவாகியுள்ள அந்த ஐக்கியத்தை
ஒன்றாக அமர்ந்து கொண்டாடச் செய்கிறது. அதனால் இதை:
என்று அழைக்கிறார்கள்.
இது ஒரு விசாரணை மேடை அல்ல.
இது ஒரு விருந்து.
அதாவது:
கிறிஸ்து செய்து முடித்ததை அடிப்படையாக வைத்து,
பரிசுத்த ஆவியானவர் நமக்குள் செய்து கொண்டிருக்கும் வேலையின்மூலம்,
நாம் தேவனோடு
இருக்கிற நிலையே
சமாதான பலி காட்டும் ஆவிக்குரிய படம்.
சுருக்கமாகச் சொன்னால்:
சமாதான பலி என்பது தேவனோடு மீண்டும் சமாதானம் பெறுவதற்கான வழி அல்ல;
தேவன் ஏற்கெனவே கொடுத்த சமாதானத்தை அவருடைய சந்நிதியில் அனுபவிப்பதற்கான அழைப்பு.
பலிபீடம் முன் – பந்தம் பின் (ஒழுங்கின் இறையியல்)
சமாதான பலியில் ஒரு மிக முக்கியமான ஒழுங்கு இருக்கிறது:
முதலாவது பலி. பிறகு விருந்து
லேவியராகமம் 3இலும் 7இலும் நாம் பார்க்கிறோம் — முதலாவது பலி கர்த்தருடைய சந்நிதியில் செலுத்தப்படுகிறது; அதன்பிறகே விருந்து வருகிறது. இது வெறும் சடங்கு ஒழுங்கு அல்ல.
இது இறையியல் ஒழுங்கு.
இதன் ஆவிக்குரிய பொருள் தெளிவானது:
பலிபீடம் இல்லாமல் பந்தம் இல்லை.
சிலுவை இல்லாமல் ஐக்கியம் இல்லை.
இரத்தம் இல்லாமல் சமாதானம் இல்லை.
கிறிஸ்தவ ஐக்கியம் என்பது ஒரு சமூகச் சங்கமம் அல்ல. உணர்ச்சி வட்டாரம் அல்ல. ஒரு மனித ஒப்பந்தம் அல்ல.
அது ஒரே பலிபீடத்தைச்சுற்றி நிற்கும் ஐக்கியம்.
ஒரே மரணத்தின் அடிப்படையில் உருவாகும் பந்தம். ஒரே இரத்தத்தின் மூலம் நிலைநிறுத்தப்படும் உறவு.
சமாதான பலி காட்டும் காட்சி என்ன? ஒருவன் முதலாவது தேவனுடைய சந்நிதியில் பலியைச் செலுத்துகிறான். முதலாவது பலிபீடம்.
அதன்பிறகுதான், அவனும் ஆசாரியரும் மற்றவர்களும் ஒன்றாக அமர்ந்து உண்கிறார்கள்.
அதாவது —
முதலாவது தேவனோடு சரியான உறவு.
பிறகு சகோதரர்களோடு பந்தம்.
வரிசை மாறக்கூடாது.
“அவன் தானே கொல்லவேண்டும்” – தனிப்பட்ட ஒப்புதல்
பலி கொண்டுவருபவனே மிருகத்தை அறுத்துக் கொல்லவேண்டும் என்று லேவியராகமம் 3:2இல் வாசிக்கிறோம். “அவன் தன் பலியின் தலைமேல் தன் கையை வைத்து, ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு முன்பாக அதைக் கொல்லக்கடவன்.”
கவனியுங்கள் —
அவன் தானே கொல்லவேண்டும்.
இதன் பொருள் என்ன?
சமாதான பலி என்பது ஒரு பொது விழா அல்ல. அது கூட்டமாகச் சேர்ந்து கொண்டாடும் வெளிப்புற நிகழ்ச்சி அல்ல.
அது தனிப்பட்ட ஒப்புதலில் தொடங்குகிறது.
பலியைக் கொண்டு வந்தவன்:
இது வெறும் சடங்கு அல்ல.
இது அடையாளப்படுத்துதல்.
இது ஒப்புதல்.
இது பங்கேற்பு.
நான் என்னைக் கிறிஸ்துவின் மரணத்தோடு அடையாளப்படுத்திக்கொள்ளாமல்,
நான் அவருடைய சிலுவையை என்னுடைய சிலுவையாக ஏற்காமல்,
உண்மையான ஐக்கியத்தில் நுழைய முடியாது.
அதனால்தான், “நாம் கிறிஸ்துவோடேகூட சிலுவையில் அறையப்பட்டோம்,” என்று வேதாகமம் சொல்கிறது:
கிறிஸ்தவ பந்தம் என்பது
ஒரே கருத்தைப் பகிர்ந்துகொள்வது அல்ல;
ஒரே மரணத்தை ஏற்றுக்கொள்வது.
ஒரே உணர்வைப் பகிர்வது அல்ல;
ஒரே சிலுவையின் அடிப்படையில் நிற்பது.
ஐக்கியம் பலிபீடத்தில் தொடங்குகிறது —
சந்திப்பறையில் அல்ல.
இரத்தம் – தேவனுடைய உரிமை (உயிரின் இறையியல்)
“மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது,” என்று லேவியராகமம் 17:11 இல் வாசிக்கிறோம். இந்த வசனம் ஓர் அடிப்படை இறையியல் உண்மையை வெளிப்படுத்துகிறது.
இரத்தம் முழுவதும் தேவனுக்கே.
அதை யாரும் உண்ணக்கூடாது. அதை மனிதன் தன் உரிமையாகக் கொள்ளக்கூடாது.
ஏன்?
ஏனெனில் இரத்தம் உயிரைக் குறிக்கிறது.
உயிர் தேவனுடையது.
உயிரின் உரிமை தேவனுக்கே.
சமாதான பலியில் நாம் ஐக்கியத்தை அனுபவிக்கிறோம்;
ஆனால் அந்த ஐக்கியத்தின் அடிப்படை —
உயிரின் உரிமை தேவனுக்கே என்பதை ஒப்புக்கொள்வதே.
இரத்தம் முதலில் பலிபீடத்தில்.
பிறகு தான் விருந்து.
சிலுவை என்ன சொல்கிறது?
உயிர் தேவனுக்கே சொந்தமானது.
மனிதன் தன் உயிரின் உரிமையாளர் அல்ல.
அவர் கொடுத்தார்.
அவர் பெற்றார்.
அவருக்கே மகிமை.
ஐக்கியம் அனுபவிக்கப்படுகிறது —
ஆனால் உயிரின் உரிமை தேவனுக்கே ஒப்படைக்கப்படுகிறது.
இதுவே இரத்தத்தின் இறையியல்.
கொழுப்பு – தேவனுக்கான பங்கு
சமாதான பலியில் “கொழுப்பு” முழுவதும் கர்த்தருக்கே.
“எல்லாக் கொழுப்பும் கர்த்தருக்கே” என்று வேதம் தெளிவாகச் சொல்கிறது.
இது ஒரு சின்ன காரியம் அல்ல.
இது பலியின் உள்ளார்ந்த மையம்.
கொழுப்பு எதைக் குறிக்கிறது?
உள்ளார்ந்த வல்லமை.
உட்புற மேன்மை.
உயிரின் செழுமை
ஆழமாய் மறைந்திருக்கும் சிறந்த பகுதி
அந்த மிகச் சிறந்த பகுதி —
மனிதனுக்கல்ல.
கர்த்தருக்கே.
இதன் ஆவிக்குரிய பொருள் தெளிவானது.
ஐக்கியத்தில் நாம் இன்புறுவதற்குமுன்,
தேவன் இன்புறவேண்டும்.
நாம் அனுபவிக்கிற பந்தம்,
முதலாவது தேவனுக்கு வாசனை தரும் பலியாக இருக்க வேண்டும்.
தேவனை மறந்த fellowship,
உண்மையான fellowship அல்ல.
தேவனை மறந்த communion —
ஒரு மனித வட்டாரம் மட்டுமே.
சமாதான பலியில் வரிசை மீண்டும் தெரிகிறது:
முதலில் பலிபீடம்.
முதலில் இரத்தம்.
முதலில் கொழுப்பு — கர்த்தருக்கே.
பிறகுதான் பங்கேற்பு.
தேவன் வாசனையை முகர்ந்தபிறகே
நாம் ஐக்கியத்தை அனுபவிக்கிறோம்.
உலகத்திலிருந்து பிரிக்கப்பட்ட ஐக்கியம்
“ஒரே பலிபீடத்தில் பங்கேற்பவர்கள் ஒன்றாக இணைக்கப்படுகிறார்கள்” என்று 1 கொரிந்தியர் 10இல் பவுல் தெளிவாகச் சொல்லுகிறார்.
“நாம் ஆசீர்வதிக்கிற ஆசீர்வாதத்தின் பாத்திரம் கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா? நாம் பிட்கிற அப்பம் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா”
“பலிகளைப் புசிக்கிறவர்கள் பலிபீடத்தோடே ஐக்கியமாயிருக்கிறார்களல்லவா”
ஒரே பலிபீடத்தோடு ஐக்கியமாக இருக்கிறோம் என்றால்,
மற்ற பலிபீடங்களோடு ஐக்கியமாக இருக்க முடியாது.
ஏன்?
ஏனெனில் பலிபீடம் என்பது வெறும் சின்னம் அல்ல —
அது உரிமை.
அது சொந்தம்.
அது அடையாளம்.
சமாதான பலி காட்டுவது:
ஒரே மகிழ்ச்சியின் மூலாதாரம்.
ஒரே சந்தோஷத்தின் ஆதாரம்.
ஒரே இரட்சிப்பின் அடிப்படை.
அதனால் கிறிஸ்தவ fellowship என்பது:
இது உலக மகிழ்ச்சியிலிருந்து வேறுபட்டது. இது பொதுவான மனித ஒற்றுமை அல்ல. இது சுவாரஸ்யமான தொடர்பு அல்ல.
இது ஒரே இரத்தத்தின் அடிப்படையில் நிலைநிறுத்தப்பட்ட உறவு. ஒரே பலிபீடத்தில் நிற்கும் மக்கள் வேறு பலிபீடங்களில் கலந்துகொள்ள முடியாது. அதனால் தான் கர்த்தருடைய பலிபீடத்திலும் பேய்களின் பலிபீடத்திலும்
ஒரே நேரத்தில் பங்கேற்க முடியாது என்று பவுல் எச்சரிக்கிறார்.
ஆகவே, சமாதான பலி என்பது வெறும் “அமைதி” அல்ல.
அது சிலுவை மரணத்தின் அடிப்படையில் உருவான
தேவனை முன்னிலைப்படுத்தும்
உலகத்திலிருந்து பிரிக்கப்பட்ட, ஆனந்தமான
ஐக்கிய அனுபவம்.
கிறிஸ்து – பரிசுத்த ஆவி – சபை
(சமாதானத்தின் சமூக நிறைவு)
கிறிஸ்துவில் உடைந்த பிரிவினைகள் (எபேசியர் 2 – சமாதானத்தின் நிறைவு)
“அவரே நம்முடைய சமாதானம்”
“முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள். எப்படியெனில், அவரே நம்முடைய சமாதான காரணராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து, சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து, இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம்பண்ணி, பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாக தேவனுக்கு ஒப்புரவாக்கினார். அல்லாமலும் அவர் வந்து, தூரமாயிருந்த உங்களுக்கும், சமீபமாயிருந்த அவர்களுக்கும், சமாதானத்தைச் சுவிசேஷமாக அறிவித்தார்” (எபே. 2:13-17).
இங்கே நாம் ஒரு புதிய பரிமாணத்துக்குள் நுழைகிறோம். இதுவரை நாம் பார்த்தது —
பலிபீடம்,
இரத்தம்,
கொழுப்பு,
தனிப்பட்ட ஒப்புதல்,
உலகத்திலிருந்து பிரிக்கப்பட்ட ஐக்கியம்.
இப்போது அதற்கான சமூக நிறைவு.
“அவரே நம்முடைய சமாதானம்.”
கவனியுங்கள் —
அவர் சமாதானத்தைக் கொடுக்கிறவர் மட்டும் அல்ல;
அவரே சமாதானம்.
அவர் இருதிறத்தாரையும் ஒன்றாக்கினார்.
பகையைச் சிலுவையினால் கொன்றார்.
நடுச்சுவரைத் தகர்த்தார்.
ஒரே புதிய மனிதனை உருவாக்கினார்.
ஒரே சரீரமாக தேவனுக்கு ஒப்புரவாக்கினார்.
இது சமாதான பலியின் நிறைவேற்றம்.
அங்கு:
பலிபீடத்தில் இரத்தம் சிந்தப்பட்டது.
இங்கே:
சிலுவையில் இரத்தம் சிந்தப்பட்டது.
அங்கு:
ஒரே பலியைச்சுற்றி மக்கள் இணைந்தார்கள்.
இங்கே:
ஒரே சிலுவையைச்சுற்றி மக்கள் இணைக்கப்படுகிறார்கள்.
வேதாகமத்தின் மைய நோக்கம் – கிறிஸ்து
நாம் இதுவரை பார்த்த காரியங்களை ஒருமுறை சுருக்கமாகச் சொல்லுகிறேன். ஒன்று: வேதாகமத்தை நாம் எந்த நோக்கத்தோடு அணுக வேண்டும்? குடும்ப ஆலோசனைகளுக்காக மட்டும் அல்ல.
ஒழுக்க விதிகளுக்காக மட்டும் அல்ல.
சமூக வழிகாட்டுதலுக்காக மட்டும் அல்ல. வேதாகமத்தின் மைய நோக்கம்:
கிறிஸ்து யார்?
கிறிஸ்து எப்படிப்பட்டவர்?
அவர் என்ன செய்து முடித்தார்?
அவருடைய நபர்.
அவருடைய நிறைவேற்றிய கிரியை.
வேதாகமத்தில் வேறு பல காரியங்கள் இருக்கின்றன. கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல, கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களும், கிறிஸ்துவை விசுவாசிக்காத அரசியல்வாதிகளும்கூட வேதாகமத்திலிருந்து மேற்கோள் காட்டலாம், வேதத்தைப் படிக்கலாம், தங்களுக்குச் சாதகமான விஷயங்களை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் வேதாகமம் “உலக மக்களுக்கு ஒரு நல்லொழுக்கப் புத்தகம்” அல்ல. தேவன் தம்மால் மீட்கப்பட்ட மக்களுக்கு — தம்முடைய மக்களுக்கு — தம்முடைய குமாரனை வெளிப்படுத்துவதற்காகவே
வேதத்தை அளித்திருக்கிறார். வேதாகமத்தின் நோக்கம்: – கிறிஸ்து யார்? கிறிஸ்து எப்படிப்பட்டவர்? அவருடைய வேலை என்ன? என்பதைக் காண்பிப்பதே அவருடைய நோக்கம்.
தூரத்திலிருந்து அருகில் (நிழலிலிருந்து நிறைவேற்றம்வரை)
வேதாகமத்தின் மைய நோக்கம் – கிறிஸ்து
வேதாகமத்தில் — குறிப்பாக பழைய ஏற்பாட்டில் —
நியாயப்பிரமாணங்கள், தீர்க்கதரிசனங்கள், பலிகள், பண்டிகைகள் ஆகிய அனைத்திலும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நாம் பார்க்க முடியும். எம்மாவுப் பாதையில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சீடர்களுடன் நடந்துசெல்லும்போது என்ன செய்தார்? நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் புத்தகங்களிலும் சொல்லப்பட்டிருக்கும் அனைத்தும் தம்மைப்பற்றியே பேசுகின்றன என்று விளக்கிக் காட்டினார்; அவைகளிலிருந்து தம்மை வெளிப்படுத்தினார். (லூக்கா 24 சுருக்கம்). வேதத்தைப் படிக்கும்போது இதே நோக்கத்தோடு வர வேண்டும். இதுதான் முதல் புள்ளி. வேதாகமம் முதன்மையாக ஒழுக்க நூல் அல்ல.
அது கிறிஸ்துவை வெளிப்படுத்தும் நூல்.
ஐந்து பலிகள் – இரண்டு வகைகள்
இரண்டாவது: மொத்தம் ஐந்து பலிகள். அவைகளை நாம் (1) “சுகந்த வாசனையான பலிகள்.” (2) “சுகந்த வாசனையற்ற (அதாவது பாவ நிவாரண நோக்குகொண்ட) பலிகள்.” என்று இரண்டு வகையாகப் பிரித்துப்பார்க்கலாம். சர்வாங்க தகன பலி, போஜன / தானிய பலி, சமாதான பலி ஆகிய மூன்றும், “சுகந்த வாசனையான பலிகள்”: இந்த மூன்று பலிகளும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து யார் என்று விவரிக்கின்றன. அவர் சர்வாங்க தகன பலியாகத் தம்மை ஒப்புக்கொடுத்தார். அவர் ஜீவ அப்பமாக இருக்கிறார். அவர் சமாதான பலியாக இருக்கிறார். இவைகளிலிருந்து நாம் இன்று முக்கியமான ஒரேவொரு காரியத்தைத்தான் பார்த்தோம்.
Objective & Subjective – இரு பரிமாணங்கள்
இந்த இரண்டு காரியங்களை நாம் அனுபவிக்கும்போது — (1) இயேசு கிறிஸ்து செய்து முடித்த வரலாற்று உண்மைகளை நாம் பார்க்கிறோம் (அதாவது objective fact), (2) அதை நாம் உண்மையாக அனுபவிக்கிறோம் (subjective experience) — இந்த இரண்டையும் சேர்த்துப் பார்க்கும்போதுதான், கிறிஸ்துவின் சமாதானத்தை நாம் ஆழமாக அனுபவிக்க முடியும். நாம் ஒரேவொரு பக்கமாகச் சாய்ந்து விடக்கூடாது. அதாவது, ஒரு பக்கம், வெறும் அறிவோடு மட்டும் நின்றுவிடக்கூடாது அல்லது, இன்னொரு பக்கம், அனுபவத்தோடு மட்டும் நின்றுவிடக்கூடாது. அறிவும், அனுபவமும் சேர்ந்தே செல்ல வேண்டும்.
கிறிஸ்துவின் வேலை, ஆவியானவரின் வேலை
ஒரு பக்கம், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து செய்து முடித்த வேலை. இன்னொரு பக்கம், பரிசுத்த ஆவியானவர் இன்றைக்கு நம்முள் செய்து கொண்டிருக்கும் வேலை. சமாதான பலிக்கு “fellowship offering” என்று பெயர் வைத்தோம். ஏன்? ஏனென்றால், சமாதான பலியின்போதுதான் தேவனும், ஆசாரியரும், சாமான்ய மக்களும் தேவனுடைய சந்நிதியில் உட்கார்ந்து சாப்பிடுகிறார்கள், பங்குபெறுகிறார்கள். அங்கு அனைவரும் கலந்து கொள்கிறார்கள். அங்கு பங்கேற்பு (participation) இருக்கிறது. அங்கு ஐக்கியம் (communion / fellowship) இருக்கிறது. fellowship, participation, communion — இதைப்பற்றி நாம் வரவிருக்கும் காலங்களில் விரிவாகப் பார்க்கலாம்.
அதற்குமுன்பு ஒரு சிறிய கேள்வி மட்டும் கேட்டு, நான் இன்று முடிக்கிறேன். அதன்பிறகு உங்களுடைய கேள்விகளுக்கு வருவேன்.
Fellowship என்றால் என்ன?
நாம் “ஐக்கியம்,” “ஒற்றுமை,” “சமாதான உறவு,” “சங்கமம்” என்று சொல்கிறோம். ஐக்கியம் என்பதற்கு “கொயினோனியா” (koinonia) என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. அதைச் சரியாக மொழிபெயர்த்தால், “பொது பங்கேற்பு” அல்லது “கூட்டு பங்குபெறுதல்” (common participation). யார் யாரெல்லாம் கிறிஸ்துவை “பொது அடிப்படையாக” வைத்து, அவரில் பங்குபெறுகிறார்களோ, அவர்களுக்கிடையேதான் ஐக்கியம் இருக்கிறது. அதுதான் உண்மையான fellowship.
எடுத்துக்காட்டு
ஒரு கிராமத்தில் ஒரேவொரு பொதுக்கிணறு இருந்தால், ஊர் மக்கள் அனைவரும் அந்தக் கிணற்றில்தான் தண்ணீர் எடுக்கிறார்கள். இது “common participation.” எல்லோருமே அதில் பங்குபெறுகிறார்கள். ஒரு திருமணம் நடந்தால் —ஊரார் அனைவரும் பங்கேற்கிறார்கள். ஒரு இறப்பு நடந்தாலும் —
ஊர் முழுவதும் சேர்ந்து நிற்கும். இது “common participation.” இன்றைக்கு தேவ மக்களுக்குப் பொதுவாகக் கொடுக்கப்பட்டிருக்கும் ஒரே “சொத்து” ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே. அவரே பொதுக் கிணறு.
அவரே பொதுப் பங்கு.
அவரே பொதுச் சொத்து.
முடிவுரை
சமாதான பலிக்கு “fellowship offering” என்ற பெயர் சூட்டுவதற்கு இதுவே காரணம். கர்த்தருடைய சந்நிதியில் தேவன், ஆசாரியன், மக்கள் மூவரும் மூவரும் சேர்ந்து சமாதானபலியில் பங்குபெறுகிறார்கள்.
அதன் நிறைவேற்றம்: சமாதான பலி = சிலுவையில் நிறுவப்பட்ட சமாதானம், சபையில் அனுபவிக்கப்படும் ஐக்கியம்.
சமாதான பலியின் இறுதி அழைப்பு (பலிபீடத்தைத் தாண்டாமல் fellowship இல்லை)
கிறிஸ்து செய்தது – ஆவியானவர் செய்கிறார்
அவர்கள் உட்கார்ந்து சாப்பிடுவதற்குமுன் என்ன செய்ய வேண்டும்? முதலாவது பலிபீடத்தில் பலி செலுத்தப்பட வேண்டும். fellowship — பங்கேற்பு, ஒன்றிணைவு, கூட்டு சம்பந்தம் — இது வெறுமனே “உணவைப் பகிர்ந்துகொள்வது” அல்ல. சாப்பிடுவதற்குமுன் பலிபீடத்தில் பலி செலுத்தப்பட்டிருக்க வேண்டும். இது ஒரு மாறாத ஒழுங்கு.
பலிபீடமே ஆரம்பம்.
பலிபீடமே ஆதாரம்.
பலிபீடத்தைத் தாண்டாமல்
யாரும் ஐக்கியத்தில் நுழைய முடியாது. ஒருவரும் பலிபீடத்தைப் புறக்கணித்து,
பக்கவழியாக,
பின்வழியாக,
உள்ளே நுழைய முடியாது.
ஒரு கிறிஸ்தவ வாழ்க்கையின் ஆரம்பம் — பலிபீடம்.
ஒரு கிறிஸ்தவ ஐக்கியத்தின் அடித்தளம் — பலிபீடம்.
“நாம் சம்பாதித்த கிறிஸ்து” — என்ன அர்த்தம்?
நாம் கிறிஸ்துவை நம்முடைய சொந்தக் கிரியைகளால் சம்பாதிப்பதில்லை; அவர் கிருபையால் இலவசமாகக் கொடுக்கப்பட்டவர். ஆனால்:
“சம்பாதிப்பது” என்பது பரிசுத்த ஆவியானவரின் துணையோடு நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நாம் சொந்தமாக்கிக்கொண்ட (Appropriated) கிறிஸ்துவைக் குறிக்கிறது. அவரை நாம் அறிவில் பெற்றிருக்க வேண்டும்; அவரை அனுபவத்தில் உடையவர்களாக இருக்க வேண்டும்..
அறிவில் அறிந்த கிறிஸ்து,
அனுபவத்தில் வாழப்பட்ட கிறிஸ்து —
அதுவே நம் ஆவிக்குரிய சொத்து.
அதுவே spiritual wealth.
அறிவு மட்டும் போதாது.
அனுபவமும் வேண்டும்.
பெற்றறிவும் வேண்டும்.
உற்றறிவும் வேண்டும்.
இந்த இரண்டும் ஒன்றிணைந்தபிறகே
நாம் கிறிஸ்துவை அவருடைய சந்நிதியில் பகிர்ந்துகொள்ளத் தொடங்குகிறோம்.
பங்கேற்கத் தொடங்குகிறோம்.
அனுபவிக்கத் தொடங்குகிறோம்.
இதுவே சமாதான பலியின் அடிப்படை கோட்பாடு.
உடைந்த பிரிவுகள் – சிலுவையில் முடிவு
எபேசியர் இரண்டாம் அதிகாரம் 14ஆம் வசனம் "எப்படியெனில், அவரே நம்முடைய சமாதான காரணராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்தார்," என்று கூறுகிறது. ‘இருதிறத்தார்’ என்றால் யூதரும் புறவினத்தாரும். இந்த இரண்டு இனங்களுக்கும் இடையே இருந்த பிரிவினையை யாராலும் தீர்க்கமுடியாது. இந்தப் பிரிவினை சமாதானப்படுத்த முடியாத அளவுக்கு கடினமானது. கணவன்–மனைவி உறவில் உள்ள உராய்வுகள்?
பெற்றோர்–பிள்ளைகள் இடையிலான கீறல்கள்?
சகோதரர்கள் இடையிலான காயங்கள்?
இவைகளை யார் தீர்ப்பது?
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே
கல்வாரிச் சிலுவையில்
பிரிவினையை உடைத்தார்.
அவர் பகையைச் சிலுவையினால் கொன்றார்.
இந்தச் சமாதானம் —
தேவன் நமக்காகச் செய்து முடித்த காரியம்.
இது Objective.
ஆனால்
இந்தச் சமாதானம் நம்முள் மெய்ப்பட வேண்டும்.
நாம் அதை அனுபவிக்கும் நிஜமாக ஆக வேண்டும்.
அதைச் செய்பவர் — பரிசுத்த ஆவியானவர்.
மீண்டும் அதே இரண்டு பக்கங்கள்:
கிறிஸ்து செய்து முடித்த வேலை.
பரிசுத்த ஆவியானவர் நம்முள் செய்து கொண்டிருக்கும் வேலை.
சபை – சமாதானத்தின் வெளிப்பாடு
எபேசியர் 2-ல் சொல்லப்படுகிற இன்னொரு முக்கியமான காரியத்தைக் கவனியுங்கள். “தூரமாயிருந்த நம்மை அவர் சமீபமாக்கினார்.” நாம் எங்கோ தூரத்தில் இருந்தோம்; அவர் நம்மை அருகில் கொண்டு வந்தார். இதுவே மீட்பின் இயக்கம். யாத்திராகமத்தில் எகிப்தில் அடிமைகளாக இருந்த மக்களை அவர் வெளியே கொண்டு வந்தார்; லேவியராகமத்தில் அவர்களைத் தம்மருகில் வைத்துக்கொள்கிறார். வெளியே கொண்டு வருவது மட்டும் அல்ல;
அருகில் வைத்துக்கொள்வதே தேவனுடைய நோக்கம்.
இதை லூக்கா 15-இலும் நாம் பார்க்கிறோம். தூரத்தில், பன்றிகளுடன் இருந்த இளைய குமாரன் வீட்டிற்குத் திரும்பி வருகிறான். அவனைக் கண்ட தந்தை ஓடிச் சென்று சந்திக்கிறார். வீட்டுக்குள் அழைத்து வருகிறார். கொழுத்த கன்றைக் கொன்று, வீட்டில் விருந்து கொண்டாடுகிறார். பிதாவுக்கும் மகனுக்கும் இடையே சமாதானம் ஏற்படுகிறது. அங்கே விருந்து நடக்கிறது. அது பகிர்ந்துகொள்ளுதல் (fellowship). குமாரன் திரும்பி வந்தபிறகு, அவர்களுக்குள் சமாதானம் ஏற்பட்டது. அந்தச் சமாதானத்தின் மகிழ்ச்சியே அந்த விருந்து. இதை நாம் சமாதான பலியோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். கிறிஸ்து செய்து முடித்த வேலையின் காரணமாக, பிதாவுக்கும் மகனுக்கும் இடையில் சமாதானம் நிறுவப்பட்டது. அதன் விளைவு — அவர்கள் ஒன்றாக உட்கார்ந்து கொண்டாடுகிறார்கள். அதுதான் சமாதான பலியின் ஆவிக்குரிய படம். சபை என்றால் என்ன?
சிலுவையில் நிறுவப்பட்ட சமாதானம்
சமூகமாக வெளிப்படும் இடமே சபை.
சமாதானம் அனுபவிக்கப்படும் குடும்பமே சபை.
4. முடிவுரை (கிறிஸ்து செய்தது – ஆவியானவர் செய்கிறார் – நாம் அனுபவிக்கிறோம்)
முடிவாக: நாம் எல்லோரும் சேர்ந்து பயணிக்கிறோம். நான் “பெரிய நிபுணன்” என்ற எண்ணத்தோடு வரவில்லை. நானும் உங்களோடு சேர்ந்து கற்றுக்கொள்கிறேன். நாம் எல்லோரும் சேர்ந்து இதைப் பார்க்கப் போகிறோம். நாம் ஒன்றாக:
கிறிஸ்து செய்தது — நம் அடித்தளம்.
பரிசுத்த ஆவியானவர் செய்கிறார் — நம் மாற்றம்.
நாம் அனுபவிக்கிறோம் — நம் வாழ்வு.
இதன் விளைவாக
நம்முடைய வாழ்க்கை:
மாறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
கர்த்தர் ஆசீர்வதிப்பாராக.
ஆமென்.