லேவியராகமம் 4 ஆம் அதிகாரம் பாவநிவாரண பலியை அறிமுகப்படுத்துகிறது.
இந்தப் பலி, நாம் அறிந்தே செய்கிற பாவங்களை மட்டுமல்ல, நமக்கே தெரியாமல் இருக்கக்கூடிய பாவங்களையும் சிந்திக்க அழைக்கிறது. “தன் பிழைகளை உணர்கிறவன் யார்?” என்ற சங்கீதக்காரனின் கேள்வி நம் ஒவ்வொருவரையும் ஆழமாக ஆராய்கிறது.
நம் வாழ்க்கையில் நாமே இன்னும் பார்க்காத குருட்டுப்புள்ளிகள் இருக்க முடியுமா?
நான் ஒரு காரியத்தைப் பாவம் என்று உணரவில்லை என்பதால், அது தேவனுடைய பார்வையில் பாவமல்லாமல் போய்விடுமா? நம் மனச்சாட்சி, அறிவு, இருதயத்தின் நிலை, வீழ்ந்த மனித சுபாவம் ஆகியவை நம் பார்வையை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை இந்த வேதபாடத்தில் ஆராய்கிறோம்.
பாவத்தின் இறுதி அளவுகோல் நம் உணர்வோ, சமூகமோ, மனச்சாட்சியோ அல்ல; தேவனே இறுதி அளவுகோல்.
அதே நேரத்தில், தேவன் நம் பாவத்தை வெளிச்சத்திற்குக் கொண்டுவருவது நம்மைத் தம்மிடமிருந்து விரட்டுவதற்காக அல்ல; தாம் ஏற்படுத்திய பரிகாரத்திற்குள் நம்மைக் கொண்டுவருவதற்காக. தேவனுடைய வெளிச்சம் நாம் பார்க்காத பாவத்தை நமக்குக் காட்டுகிறது; தேவனுடைய கிருபை அந்தப் பாவத்தோடு நம்மைக் கிறிஸ்துவிடம் அழைத்துச் செல்கிறது.
எனவே நம் ஜெபம்: “ஆண்டவரே, எனக்கே தெரியாத என் குருட்டுப்புள்ளிகளை உம் வெளிச்சத்திற்குள் கொண்டுவாரும்.”
லேவியராகமம் – அதிகாரம் 4, பாகம் 1, பாடம் 09
பாவநிவாரண பலி - எனக்கே தெரியாத என் பாவங்கள்
1. பாவநிவாரண பலி — ḥaṭṭāʾt, Purification Offering
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
நாம் லேவியராகம் ஆய்வைத் தொடர்வோம். இன்றைக்கு லேவியராகமம் நான்காம் அதிகாரத்திற்கு வருகின்றோம். லேவியராகமம் நான்காம் அதிகாரத்தில் நாம் பார்க்கப்போகிற பலியை நம் தமிழ் வேதாகமம் பாவநிவாரண பலி என்று அழைக்கிறது.
நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். இந்தப் பலிகளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற பெயர்களை மட்டும் பார்த்தால் அவைகளின் முழுப் பொருளையும் நாம் புரிந்துகொள்ள முடியாது. அதற்காக மூல எபிரேயச் சொல்லையும், அந்தச் சொல்லின் அடிப்படைப் பொருளையும், அந்தப் பலி செய்கிற பணியையும் நாம் பார்க்க வேண்டும்.
எடுத்துக்காட்டாக, முதலாவது பலியை நம் தமிழ் வேதாகமம் சர்வாங்க தகனபலி என்று அழைக்கிறது. அதற்கான எபிரேயச் சொல் Olah. அதில் மேலே எழுவது என்ற கருத்து இருக்கிறது. அதனால்தான் அதை மேலெழும்பும் பலி என்று நாம் பார்த்தோம்.
அடுத்தது போஜனபலி அல்லது தானியபலி. அதற்கான எபிரேயச் சொல் Minchah. Minchah என்பதற்கு வெறுமனே “தானியம்” என்று பொருள் அல்ல; காணிக்கை, அன்பளிப்பு, ஒருவருக்கு அளிக்கப்படும் பரிசு அல்லது tribute என்ற கருத்து அதில் இருக்கிறது.
அடுத்தது சமாதானபலி. அதற்கான எபிரேயச் சொல் Shelamim. சமாதானம், நல்வாழ்வு, முழுமை போன்ற கருத்துகள் அந்தச் சொல்லில் இருக்கின்றன. அந்தப் பலியில் தேவனோடும், ஒருவரோடொருவரும் ஐக்கியப்பட்டுப் புசிக்கிற அம்சம் இருப்பதால், அதை ஐக்கியபலி என்ற கோணத்திலும் நாம் பார்த்தோம்.
அதுபோல இப்போது நான்காம் அதிகாரத்தில் பாவநிவாரண பலிக்கு வருகிறோம். இதற்கான எபிரேயச் சொல் ḥaṭṭāʾt. இது வழக்கமாக Sin Offering என்று மொழிபெயர்க்கப்படுகிறது. ஆனால் இந்தப் பலியின் செயல்பாட்டில் purification — சுத்திகரிப்பு — முக்கியமான இடம் பெறுவதால், பல வேதாகம அறிஞர்கள் இதை Purification Offering — சுத்திகரிக்கும் பலி என்றும் அழைக்கிறார்கள்.
எனவே “பாவநிவாரண பலி” என்ற பெயரை மட்டும் பார்ப்பதோடு நிறுத்தாமல், இந்தப் பலி எதைச் சுத்திகரிக்கிறது, ஏன் சுத்திகரிக்கிறது, அந்தச் சுத்திகரிப்பின் மூலம் தேவனுக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவு எப்படி மீட்டெடுக்கப்படுகிறது என்பதையும் இந்த அதிகாரத்தைத் தொடர்ந்து ஆய்வு செய்யும்போது விரிவாகப் பார்க்க வேண்டும்.
Qorbān என்பது தேவனிடம் கொண்டுவரப்படும் காணிக்கைக்கான பரந்த சொல். Sacrifice என்பது அந்தப் பரந்த வகைக்குள், குறிப்பாக பலி சம்பந்தப்பட்ட காணிக்கையைக் குறிக்கப் பயன்படுகிறது. ஆகவே ஒவ்வொரு sacrifice-ம் ஒரு qorbān ஆக இருக்கலாம்; ஆனால் ஒவ்வொரு qorbān-மும் இரத்தம் சிந்தப்படும் sacrifice அல்ல.
2. கிறிஸ்துவின் பரிபூரணத்தின் வெளிச்சத்தில் மனிதனுடைய நிலை
இதுவரை மூன்று பலிகளைப் பார்த்தோம். முதலாவது Olah — சர்வாங்க தகனபலி, மேலெழும்பும் பலி. இரண்டாவது Minchah — தானியபலி, போஜனபலி. மூன்றாவது Shelamim — சமாதானபலி, ஐக்கியபலி.
இந்த முதல் மூன்று பலிகளிலும் நாம் முதன்மையாக கிறிஸ்து யார், அவர் எப்படிப்பட்டவர் என்பதைப் பார்க்கிறோம். அவர் தேவனுக்குத் தம்மை முழுவதுமாக ஒப்புக்கொடுத்தவர். அவர் பரிபூரணமான மனிதர். அவர் தேவனுக்குப் பிரியமானவர். அவரில் சமாதானமும் ஐக்கியமும் இருக்கின்றன.
நாம் நம்முடைய தகுதியினால் தேவனுக்குமுன்பாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை; கிறிஸ்துவில் ஏற்றுக்கொள்ளப்படுகிறோம். கிறிஸ்துவுக்கு வெளியே தேவனுடைய அங்கீகாரத்தைப் பெறுவதற்கான தகுதி நம்மில் இல்லை. கிறிஸ்துவின் மூலமாகத்தான் நாம் தேவனை அணுகுகிறோம்.
ஆனால் இங்கே இன்னொரு காரியமும் நடக்கிறது. கிறிஸ்துவின் பரிபூரணத்தைப் பார்க்கப் பார்க்க, நம்முடைய நிலையும் நமக்குத் தெரிய ஆரம்பிக்கிறது.
அவர் எவ்வளவு பரிசுத்தமானவர் என்பதைப் பார்க்கும்போது, நம்முடைய அசுத்தம் தெரிகிறது. அவர் எவ்வளவு முழுமையான கீழ்ப்படிதலுள்ளவர் என்பதைப் பார்க்கும்போது, நம்முடைய கீழ்ப்படியாமை தெரிகிறது. அவர் எவ்வளவு தேவனுக்குப் பிரியமானவர் என்பதைப் பார்க்கும்போது, நம்மில் தேவனுக்குப் பிரியமில்லாதவை எவ்வளவு இருக்கின்றன என்பதும் தெரிகிறது.
எனவே முதல் மூன்று பலிகளின் பிரதான நோக்கம் நம்முடைய பாவசுபாவத்தின் பல அம்சங்களைக் காட்டுவது என்று சொல்லக்கூடாது. அவை முதன்மையாகக் கிறிஸ்துவின் பரிபூரணத்தை நமக்குக் காட்டுகின்றன. ஆனால் அந்தப் பரிபூரணத்தின் வெளிச்சத்தில் நம்முடைய பாவத்தன்மை வெளிப்படுகிறது.
அங்கேதான் இப்போது லேவியராகமம் நான்காம் அதிகாரத்திற்குள் வருகிறோம்.
முதல் மூன்று அதிகாரங்களில் கிறிஸ்துவின் பரிபூரணத்தின் வெளிச்சத்தைப் பார்த்தோம். அந்த வெளிச்சத்தில் மனிதனுடைய குறை வெளிப்படுகிறது. இப்போது நான்காம் அதிகாரம் இன்னும் ஒரு படி முன்னே சென்று, பாவத்தின் பிரச்சினையை நேரடியாகக் கையாள ஆரம்பிக்கிறது.
தேவன் நம்முடைய பாவசுபாவத்தை ஏற்றுக்கொள்ள முடியாது; அதிலிருந்து வெளிவருகிற பாவச் செயல்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படியானால் இந்தப் பாவப் பிரச்சினையை தேவன் எப்படிக் கையாளுகிறார்?
அதற்குத்தான் இப்போது பாவநிவாரண பலி நம்மை அழைத்துச் செல்கிறது.
3. லேவியராகமம் 4 — பாவம் முன்னிலைக்கு வருகிறது
இங்கே ஒரு கேள்வி. முதல் மூன்று அதிகாரங்களில் “பாவம்” என்ற வார்த்தை எங்கேயாவது வந்திருக்கிறதா? லேவியராகமம் 1, 2, 3 அதிகாரங்களை வாசித்துப் பாருங்கள்.
முதல் மூன்று அதிகாரங்களில் பாவம் முன்னிலைப்படுத்தப்படவில்லை. லேவியராகமம் 1:4-ல் மட்டும் “அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படி” என்று நம்முடைய தமிழ் வேதாகமத்தில் வருகிறது. ஆனால் இங்கே ஒரு முக்கியமான காரியத்தைக் கவனிக்க வேண்டும். எபிரேய மூலத்தில் அந்த இடத்தில் “பாவம்” என்ற சொல் இல்லை. அங்கே kipper என்ற வினைச்சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது; அதைத்தான் நம்முடைய தமிழ் வேதாகமம் “பாவநிவிர்த்தி” என்று மொழிபெயர்த்திருக்கிறது.
ஆகவே முதல் மூன்று அதிகாரங்களில் பாவம் என்பது foreground-ல் இல்லை; காணிக்கை, தேவனை அணுகுதல், தேவனுக்குமுன்பாக ஏற்றுக்கொள்ளப்படுதல், தேவனோடு ஐக்கியம் ஆகியவை foreground-ல் இருக்கின்றன.
ஆனால் நான்காம் அதிகாரத்திற்கு வந்தவுடன் மொழியே மாறுகிறது.
“ஒருவன் பாவஞ்செய்தால்...”
“அவன் செய்த பாவம்...”
“அவன் குற்றவாளியானால்...”
“பாவநிவாரண பலி...”
இப்படிப் பாவத்தைக் குறித்த சொற்கள் அதிகாரம் முழுவதும் திரும்பத் திரும்ப வருகின்றன. எபிரேயத்தில் ḥaṭṭāʾt — பாவம் அல்லது பாவநிவாரண பலி — என்ற சொல் மட்டும் இந்த அதிகாரத்தில் இருபது முறை வருகிறது. அதோடு ḥāṭāʾ — பாவஞ்செய்தல், ʾāšam — குற்றவாளியாகுதல் போன்ற சொற்களும் வருகின்றன.
எனவே லேவியராகமம் நான்காம் அதிகாரத்திற்கு வரும்போது பாவம் foreground-க்கு வருகிறது. இப்போது பாவத்தின் பிரச்சினையை தேவன் நேரடியாகக் கையாள ஆரம்பிக்கிறார்.
4. பாவச் செயல்கள் மட்டும் அல்ல — பாவசுபாவமும்
இங்கே ஒரு முக்கியமான காரியத்தைக் கவனிக்க வேண்டும்: பாவி, பாவம் — இந்த இரண்டுக்கும் இடையிலுள்ள தொடர்பு என்ன?
லேவியராகமம் 4 இங்கே மனிதனுடைய பாவசுபாவத்தை நேரடியாக விளக்கவில்லை. ஆனால் பாவச் செயல்களின் பிரச்சினையைப் பார்க்கும்முன், வேதாகமம் முழுவதும் மனிதனுடைய பாவப் பிரச்சினையை எப்படிக் காட்டுகிறது என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்.
ஒரு கேள்வியோடு ஆரம்பிப்போம். மனிதன் பாவம் செய்வதால் மட்டுமே பாவியாகிறானா? அல்லது பாவத்திற்குட்பட்ட வீழ்ந்த மனிதனாகப் பிறந்திருப்பதால் பாவம் செய்கிறானா?
வேதாகமத்தின்படி, மனிதனுடைய பிரச்சினை அவன் செய்கிற பாவச் செயல்கள் மட்டுமல்ல; அவனுக்குள்ளே இருக்கிற பாவசுபாவமும் அவனுடைய அடிப்படைப் பிரச்சினை. ஆதாமின் வீழ்ச்சியின்மூலம் பாவம் மனிதகுலத்திற்குள் நுழைந்தது என்று ரோமர் 5:12 சொல்கிறது. தாவீதும், “இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்” என்று சொல்கிறார் (சங். 51:5).
எனவே மனிதனுக்குள் இரண்டு காரியங்களை நாம் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்: Sinful Nature, Sinful Behavior — பாவசுபாவம், பாவச் செயல்கள்.
ஆதாமின் வீழ்ச்சிக்குப்பிறகு மனிதன் பிறப்பிலிருந்தே பாவத்தால் பாதிக்கப்பட்ட வீழ்ந்த நிலையில் இருக்கிறான். அந்த உள்ளான வீழ்ந்த நிலையிலிருந்து பாவச் செயல்கள் வெளிப்படுகின்றன.
இயேசுவும், “மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகள்...” புறப்படுகின்றன என்று சொல்கிறார் (மாற்கு 7:21–23). அதாவது, பிரச்சினை வெளியில் தெரிகிற செயல்களில் மட்டும் இல்லை; அந்தச் செயல்கள் எங்கிருந்து புறப்பட்டு வருகின்றனவோ அந்த உள்ளான மனிதனிலும் இருக்கிறது.
இதைப் புரிந்துகொள்வதற்காக நான் இரண்டு வார்த்தைகளைப் பயன்படுத்துகிறேன்: பாவவித்து, பாவவேர். வேதாகமம் மனிதனுடைய பாவசுபாவத்தை விளக்குவதற்கு “பாவவித்து,” “பாவவேர்” என்ற இந்தச் சொற்களைப் பயன்படுத்தவில்லை என்பதைத் தெளிவாகச் சொல்லிவிடுகிறேன். கருத்தைப் புரிந்துகொள்வதற்காக மட்டுமே இந்த வார்த்தைகளைப் பயன்படுத்துகிறேன்.
தேங்காய் காய்ப்பதினால் அது தென்னைமரம் அல்ல; தென்னைமரமாக இருப்பதினால்தான் தேங்காய் காய்க்கிறது. அதுபோல மனிதனுடைய பாவச் செயல்கள் அவனுடைய உள்ளான வீழ்ந்த நிலையிலிருந்து வெளிப்படுகின்றன.
ஆகவே பாவத்தைக் குறித்துப் பேசும்போது, மனிதன் செய்த பாவங்களை மட்டும் பார்க்கக்கூடாது. பாவச் செயல்களுக்குப் பின்னால் இருக்கிற பாவசுபாவத்தையும் பார்க்க வேண்டும். பாவம் என்பது மனிதன் செய்கிற செயல்களின் பிரச்சினை மட்டுமல்ல; அது மனிதனுடைய உள்ளான நிலையையும் தொட்டிருக்கிற பிரச்சினை.
5. “தேவன் பாவியை நேசிக்கிறார்; பாவத்தை வெறுக்கிறார்” — முழு உண்மையா?
ஒரு Statement பொதுவாகச் சொல்வார்கள்: “God loves the sinner, but He hates the sin — தேவன் பாவியை நேசிக்கிறார்; ஆனால் பாவத்தை வெறுக்கிறார்.” இது உண்மையா? வேதாகமம் உண்மையிலேயே இப்படித்தான் சொல்கிறதா? இந்த Statement-ஐ நாம் கொஞ்சம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
முதலில் ஒரு காரியத்தைத் தெளிவாகச் சொல்லிவிடுகிறேன். “God loves the sinner, but hates the sin” என்பது வேதாகம வசனம் அல்ல. வேதாகமத்தில் இருக்கிற பல உண்மைகளைச் சுருக்கமாகச் சொல்வதற்காகப் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிற ஒரு Statement.
தேவன் மனிதர்களை நேசிக்கிறார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்” என்று யோவான் 3:16 சொல்கிறது. “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்” என்று ரோமர் 5:8 சொல்கிறது.
நான் ஏற்கனவே Threefold Love of God — தேவனுடைய மும்மடங்கு அன்பு பற்றிச் சொல்லியிருக்கிறேன். தேவன் தாம் படைத்த மனிதர்கள்மேல் அன்பு வைத்திருக்கிறார். ஆனால் தேவனுடைய அன்பைப்பற்றிப் பேசும்போது, பாவத்தின்மேல் இருக்கிற அவருடைய பரிசுத்த வெறுப்பையும், பாவத்தில் நிலைத்திருக்கிற மனிதன்மேல் இருக்கிற அவருடைய நீதியான கோபத்தையும் மறந்துவிடக்கூடாது.
ஏனென்றால் வேதாகமம், “தேவன் பாவத்தை வெறுக்கிறார்” என்று மட்டும் சொல்லவில்லை. சில இடங்களில் பாவம் செய்கிற மனிதர்களைக் குறித்தும் மிகவும் வலிமையான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறது.
சங்கீதம் 5:4–5-ஐக் கவனியுங்கள்:
“நீர் துன்மார்க்கத்தில் பிரியப்படுகிற தேவன் அல்ல; தீமை உம்மிடத்தில் சேர்வதில்லை. வீம்புக்காரர் உம்முடைய கண்களுக்கு முன்பாக நிலைநிற்கமாட்டார்கள்; அக்கிரமக்காரர் யாவரையும் நீர் வெறுக்கிறீர்.”
இங்கே “அக்கிரமத்தை நீர் வெறுக்கிறீர்” என்று மட்டும் சொல்லவில்லை. “அக்கிரமக்காரர் யாவரையும் நீர் வெறுக்கிறீர்” என்று சொல்கிறது.
சங்கீதம் 11:5-லும்:
“கர்த்தர் நீதிமானைச் சோதித்தறிகிறார்; துன்மார்க்கனையும் கொடுமையில் பிரியமுள்ளவனையும் அவருடைய உள்ளம் வெறுக்கிறது.”
என்று வாசிக்கிறோம்.
ஆகவே, “God loves the sinner, but hates the sin” என்ற Statement-ஐ எந்த விளக்கமும் இல்லாமல் சொன்னால், அது முழு வேதாகமச் சாட்சியையும் வெளிப்படுத்துகிறதா என்ற கேள்வி எழுகிறது.
அதே நேரத்தில் இதற்கு எதிராக, “தேவன் பாவிகளை வெறுக்கிறார்” என்று மட்டும் சொல்லிவிட்டு நிறுத்துவதும் முழு வேதாகமச் சாட்சி அல்ல. ஏனென்றால் பாவிகளாகிய நம்மை தேவன் நேசித்தார்; நமக்காகத் தம்முடைய குமாரனைக் கொடுத்தார். நாம் பாவிகளாயிருக்கையிலேயே கிறிஸ்து நமக்காக மரித்தார்.
எனவே இங்கே ஓர் ஆழமான உண்மையைப் பார்க்கிறோம்: தேவனுடைய அன்பும் அவருடைய பரிசுத்த வெறுப்பும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்ல. பாவிகளாகிய மனிதர்கள்மேல் தேவன் தம் அன்பைக் காட்டுகிறார்; அதே நேரத்தில் பாவத்தை அவர் வெறுக்கிறார். மேலும், தேவனுக்கு விரோதமாக அக்கிரமத்தில் நிலைத்திருக்கிற மனிதர்களைக் குறித்தும் வேதாகமம் அவருடைய பரிசுத்த வெறுப்பையும் நீதியான கோபத்தையும் வெளிப்படுத்துகிறது.
ஆகவே, “God loves the sinner; God hates the sin” — இந்த Statement-க்கு நான் ஒரு கேள்விக்குறி வைக்கிறேன். அதை முழுவதுமாக நிராகரிக்கிறேன் என்று சொல்லவில்லை. அதே நேரத்தில் எந்த விளக்கமும் இல்லாமல் அதை ஒரு முழுமையான வேதாகம உண்மையாகவும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இதை நான் என்னுடைய இறுதித் தீர்ப்பாக உங்கள் முன்பாக வைக்கவில்லை. நீங்கள் வேதவசனங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்பதற்காக இந்தக் கேள்வியை உங்கள் முன்பாக வைக்கிறேன். தேவனுடைய அன்பையும், பரிசுத்தத்தையும், பாவத்தின்மேல் அவருடைய வெறுப்பையும், அக்கிரமத்தில் நிலைத்திருக்கிற மனிதன்மேல் இருக்கிற அவருடைய நீதியான கோபத்தையும் சேர்த்துப் பார்க்கும்போதுதான் வேதாகமம் வெளிப்படுத்துகிற முழுமையான சித்திரத்தைப் பார்க்க முடியும்.
இந்தப் பின்னணியோடு மீண்டும் லேவியராகமம் நான்காம் அதிகாரத்திற்குத் திரும்புவோம். இங்கே பாவத்தை மட்டும் அல்ல, பாவஞ்செய்த மனிதனைத் தேவன் எப்படிக் கையாளுகிறார் என்பதையும் பார்க்கப்போகிறோம்.
6. அறியாமல் நிகழும் பாவம் — High-handed rebellion அல்ல
இங்கே இன்னொரு மாற்றத்தையும் கவனிக்க வேண்டும்.
முதல் மூன்று அதிகாரங்களில் காணிக்கையைக் கொண்டுவருகிறவன், தேவனை அணுகுகிறவனாக, அவருக்கு ஒரு காணிக்கையைக் கொண்டுவருகிறவனாக, நம் முன்பாக நிற்கிறான். ஆனால் நான்காம் அதிகாரத்தில் அவனை வேறொரு நிலையில் பார்க்கிறோம்:
“ஒருவன் அறியாமையினால் பாவஞ்செய்தால்...”
இப்போது ஒரு குறிப்பிட்ட பாவம் நிகழ்ந்திருக்கிறது. அந்தப் பாவம் அறியப்படும்போது, அதற்கான பலியோடு அவன் தேவனிடத்தில் வருகிறான்.
முதல் மூன்று அதிகாரங்களில் பலியைக் கொண்டுவருகிறவன் ஒரு offerer, ஒரு worshipper என்ற நிலையில் நம்முன் வருகிறான். ஆனால் நான்காம் அதிகாரத்தில் ஒரு முக்கியமான மாற்றம் வருகிறது. இங்கே அவன் செய்த பாவம் அவனுக்குத் தெரியவருகிறது. லேவியராகமம் 4:23, 28 இதைத் தெளிவாகச் சொல்கிறது.
இங்கே அவனை “Convicted Sinner” என்று அழைக்க விரும்பினால் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் இந்த வசனங்கள் அவனுக்குள் ஒரு குறிப்பிட்ட உணர்ச்சிபூர்வமான குற்ற உணர்வு ஏற்பட்டதாகச் சொல்லவில்லை; அவன் செய்த பாவம் அவனுக்குத் தெரியவந்தது என்றுதான் சொல்கின்றன. எனவே இந்த அதிகாரத்தில் முக்கியமானது அவனுடைய உணர்ச்சி அல்ல; அவன் செய்த பாவம் வெளிச்சத்திற்கு வந்தது என்பதுதான்.
இப்போது லேவியராகமம் 4-ல் குறிப்பிடப்படுகிறவர்களைக் கவனியுங்கள்.
இந்த அதிகாரத்தில் நான்கு வகையான நபர்கள் அல்லது குழுக்கள் குறிப்பிடப்படுகிறார்கள்.
முதலாவது, அபிஷேகம் பண்ணப்பட்ட ஆசாரியன் — வசனங்கள் 3–12.
இரண்டாவது, இஸ்ரயேல் சபை முழுவதும் — வசனங்கள் 13–21.
மூன்றாவது, பிரபு அல்லது தலைவர் — வசனங்கள் 22–26.
நான்காவது, சாதாரண மக்களில் ஒருவன் — வசனங்கள் 27–35.
அபிஷேகம் பண்ணப்பட்ட ஆசாரியன் தொடங்கி சாதாரண மனிதன் வரை யாரும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆசாரியனும் பாவம் செய்யலாம்; முழுச் சபையும் பாவம் செய்யலாம்; அதிகாரத்தில் இருக்கிற தலைவனும் பாவம் செய்யலாம்; சாதாரண மனிதனும் பாவம் செய்யலாம்.
இதில் ஒரு முக்கியமான உண்மையைக் கவனிக்க வேண்டும். ஆவிக்குரிய பதவி ஒருவனைப் பாவம் செய்யாதவனாக மாற்றுவதில்லை. அதிகாரமும் அவனைப் பாவத்திலிருந்து பாதுகாப்பதில்லை. லேவியராகமம் 4:13-ன்படி, இஸ்ரயேல் சபை முழுவதும்கூட அறியாமல் தவறு செய்யக்கூடும். இதிலிருந்து நாம் ஒரு முக்கியமான நடைமுறை உண்மையையும் புரிந்துகொள்ளலாம்: ஒரு முழுச் சமூகமே ஒரு காரியத்தை ஏற்றுக்கொள்கிறது அல்லது செய்கிறது என்பதினால் மட்டும் அது தேவனுடைய பார்வையில் சரியானதாகிவிடுவதில்லை.
அதே நேரத்தில், இந்த நான்கு வகையினரும் பாவம் செய்யக்கூடியவர்கள் என்றாலும், அவர்களுடைய பொறுப்பு ஒரே மாதிரியானது அல்ல. அபிஷேகம் பண்ணப்பட்ட ஆசாரியனுடைய பாவம், சபையின் பாவம், தலைவனுடைய பாவம், சாதாரண மனிதனுடைய பாவம் ஆகியவைகளுக்குக் கொடுக்கப்பட்ட பலிகளிலும் சில வேறுபாடுகள் இருக்கின்றன. அதைப் பின்னால் பார்க்கலாம்.
ஆனால் இப்போது இந்த நான்கு நிலைகளிலும் திரும்பத் திரும்ப வருகிற ஒரு கருத்தைக் கவனியுங்கள்:
“அறியாமையினால் பாவம் செய்தால்...”
லேவியராகமம் 4:2-ல் ஒருவன் அறியாமையினால் பாவம் செய்வதைப் பார்க்கிறோம்.
4:13-ல் இஸ்ரயேல் சபை அறியாமையினால் பாவம் செய்வதைப் பார்க்கிறோம்.
4:22-ல் பிரபு அல்லது தலைவர் அறியாமையினால் பாவம் செய்வதைப் பார்க்கிறோம்.
4:27-ல் சாதாரண மக்களில் ஒருவன் அறியாமையினால் பாவம் செய்வதைப் பார்க்கிறோம்.
அப்படியானால், லேவியராகமம் நான்காம் அதிகாரம் சொல்லுகிற “அறியாமையினால் செய்த பாவம்” என்றால் என்ன?
இந்த வேறுபாட்டைத் தமிழ் வார்த்தைகளின் அடிப்படையில் மட்டும் நாம் தீர்மானிக்கக்கூடாது.
இந்தப் பகுதியில் அறியாமல் அல்லது தவறுதலாக நிகழும் பாவத்தைக் குறிக்க shāgag / shegāgāh என்ற எபிரேயச் சொற்குடும்பம் பயன்படுத்தப்படுகிறது. இந்தச் சொல் அறியாமல், தவறுதலாக, நோக்கமில்லாமல், ஒரு பிழையாகச் செய்தல் போன்ற கருத்துகளை உள்ளடக்கிய ஒரு பரந்த சொல்.
எனவே, “எனக்கு இது பாவம் என்றே தெரியாது” என்பது இதில் வரக்கூடிய ஒரு நிலை. தேவனுடைய கட்டளை என்ன என்பது தெரியாமல் இருக்கலாம்; தான் செய்கிற காரியம் தேவனுக்குப் பிரியமில்லாதது என்பதை உணராமல் இருக்கலாம்; தவறான புரிதலினால் ஒரு காரியத்தைச் சரி என்று நினைத்துச் செய்யலாம்.
ஆனால் இந்த எபிரேயச் சொற்குடும்பத்தின் கருத்தை இதற்குள் மட்டும் அடைத்துவிடக்கூடாது. தவறுதலாக, நோக்கமில்லாமல், ஒரு பிழையாகச் செய்யப்பட்ட மீறுதல்களும் இதன் கருத்துக்குள் வரக்கூடும்.
இதற்கு எதிர்ப்பக்கமாக நியாயப்பிரமாணம் இன்னொரு தீவிரமான நிலையைப் பற்றிப் பேசுகிறது. அதைத் தெளிவாகப் பார்க்க எண்ணாகமம் 15:22–31 மிகவும் முக்கியமான பகுதி.
அங்கே அறியாமல் செய்யப்பட்ட பாவத்திற்கான ஏற்பாட்டைப்பற்றிச் சொல்லிவிட்டு, 30-ஆம் வசனத்தில் “துணிகரமாய்ச் செய்கிறவன்” என்று முற்றிலும் வேறொரு நிலையைப்பற்றிச் சொல்லப்படுகிறது.
எபிரேயத்தில் இதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிற சொற்றொடர் beyad ramah — “உயர்த்திய கையோடு,” with a high hand.
இது வெறுமனே ஒரு தவறு செய்வதல்ல. தேவனுடைய அதிகாரத்தைத் தெரிந்தே அலட்சியப்படுத்தி, அவருக்கு எதிராகத் துணிகரமாக, கலக மனப்பான்மையோடு செய்யப்படுகிற மீறுதலைக் குறிக்கிறது. அதனால்தான் இதை High-handed Sin என்று அழைக்கிறார்கள்.
இங்கே ஒரு காரியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
தெரிந்தே செய்யப்படுகிற ஒவ்வொரு பாவமும் High-handed Sin அல்ல.
எனவே இதை வெறுமனே unintentional sin versus intentional sin என்று பிரித்துவிடுவது போதாது.
பழைய ஏற்பாட்டில் பாவங்கள் இரண்டு வகை மட்டுமே என்றும் நாம் சொல்லக்கூடாது. பழைய ஏற்பாடு பாவத்தைப் பல கோணங்களில் விவரிக்கிறது. ஆனால் மோசேயின் நியாயப்பிரமாணத்தில், குறிப்பாக இந்தப் பகுதிகளில், அறியாமல் அல்லது தவறுதலாகச் செய்யப்பட்ட மீறுதலுக்கும், தேவனுடைய அதிகாரத்தையே எதிர்த்து உயர்த்திய கையோடு செய்யப்பட்ட கலகத்திற்கும் இடையில் ஒரு முக்கியமான வேறுபாடு காட்டப்படுகிறது.
7. அறியாமை என்றால் என்ன? — பவுலுடைய வாழ்க்கை
இந்தக் கருத்தைப் புரிந்துகொள்வதற்கு, புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலனாகிய பவுலுடைய அனுபவம் நமக்கு உதவுகிறது.
1 தீமோத்தேயு 1:13-ல் பவுல் தன்னுடைய முந்தைய வாழ்க்கையைப் பற்றிச் சொல்கிறார்:
“முன்னே நான் தூஷிக்கிறவனும், துன்பப்படுத்துகிறவனும், கொடுமை செய்கிறவனுமாயிருந்தேன்; அப்படியிருந்தும், அறியாமல் அவிசுவாசத்தினாலே அப்படிச் செய்தபடியினால் இரக்கம் பெற்றேன்.”
இங்கே “அறியாமல்” என்பதற்குப் பின்னால் இருக்கிற கிரேக்கச் சொல் agnoōn. Ignorance — அறியாமை என்ற கருத்து அதில் இருக்கிறது.
பவுல் என்ன செய்கிறார் என்பதே தெரியாமல் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தவில்லை. அவர் அதைத் தெரிந்தே செய்தார். திட்டமிட்டே செய்தார். அதற்காக அதிகாரம் பெற்றார்; விசுவாசிகளைத் தேடிச் சென்றார்.
அப்படியானால் அவருடைய அறியாமை எங்கே இருந்தது?
அவர் செய்கிற காரியத்தைப்பற்றிய அவருடைய புரிதலில்தான் அறியாமை இருந்தது. இயேசு கிறிஸ்து உண்மையில் யார் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களைத் துன்புறுத்துவது தேவனுக்குச் சேவை செய்வதாக நினைத்தார். அவருக்கு வைராக்கியம் இருந்தது; ஆனால் அது சரியான அறிவின்படியான வைராக்கியம் அல்ல. அவருடைய understanding was faulty. அவர் உண்மையென்று நம்பியதே தவறாக இருந்தது.
இதிலிருந்து ஒரு முக்கியமான காரியத்தைப் புரிந்துகொள்ளலாம்.
பவுலுடைய அனுபவம் நமக்கு காட்டுவது என்னவென்றால், அறியாமையோடு சம்பந்தப்பட்ட தவறு எப்போதும் accident ஆக இருக்க வேண்டியதில்லை. ஒருவன் ஒரு செயலை வேண்டுமென்றே செய்யலாம்; ஆனால் அந்தச் செயலைக் குறித்த அவனுடைய புரிதல் தவறாக இருக்கலாம்.
அதே நேரத்தில், பழைய ஏற்பாட்டில் இன்னொரு வகையான எடுத்துக்காட்டையும் பார்க்கிறோம். அடைக்கலப்பட்டணத்தைப் பற்றிய சட்டத்தில், ஒருவன் முன்பகை இல்லாமல், கொலை செய்யவேண்டும் என்ற நோக்கம் இல்லாமல், மற்றொருவனுடைய மரணத்திற்குக் காரணமாகிவிடுகிறான். அது ஒரு unintentional act. இதுவும் நோக்கமில்லாத குற்றத்திற்கும் வேண்டுமென்றே செய்யப்பட்ட கொலைக்கும் இடையிலுள்ள வேறுபாட்டைப் புரிந்துகொள்ள உதவுகிறது.
எனவே வேதாகமத்தில் அறியாமை, தவறு, நோக்கமின்மை, தவறான புரிதல் ஆகியவை பல சூழ்நிலைகளில் வருகின்றன. அவை அனைத்தையும் ஒரே மாதிரியாகக் கருதக்கூடாது. அதே நேரத்தில் அவற்றை High-handed rebellion உடனும் ஒன்றாக்கக்கூடாது.
ஆனால் இங்கே இன்னொரு மிக முக்கியமான உண்மை இருக்கிறது:
எனக்குத் தெரியவில்லை என்பதினால் ஒரு தவறு, தவறு அல்லாமல் போய்விடுவதில்லை.
எனக்குத் தெரியவில்லை என்பதினால் ஒரு பாவம், பாவம் அல்லாமல் போய்விடுவதில்லை.
ஒரு சட்டம் எனக்குத் தெரியவில்லை என்பதினால் அந்தச் சட்டம் இல்லாமல் போய்விடுவதில்லை. அதுபோல தேவனுடைய சித்தம் எனக்குத் தெரியவில்லை என்பதினால், தேவனுடைய தரம் மாறிவிடுவதில்லை.
அதனால்தான் லேவியராகமம் 4 மிகவும் முக்கியமானது. ஒருவன் தேவனுடைய கட்டளையை மீறியிருக்கிறான். அவன் அதைத் துணிகரமான கலகத்தோடு செய்திருக்காமல் இருக்கலாம். அவனுடைய பாவம் அவனுக்கே தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனாலும் பாவம் நிகழ்ந்திருக்கிறது.
பிறகு அந்தப் பாவம் அவனுக்குத் தெரியவருகிறது.
லேவியராகமம் 4:23-ல், “அவன் செய்த பாவம் அவனுக்குத் தெரியவந்தால்...” என்று வருகிறது. 28-ஆம் வசனத்திலும் அதே கருத்தைப் பார்க்கிறோம்.
இதுதான் மிகவும் முக்கியம்.
பாவம் அவனுக்குத் தெரியும்முன்பே அது பாவமாக இருந்தது. அவனுக்குத் தெரியவந்தபோதுதான் அது பாவமாக மாறவில்லை.
அவனுடைய அறிவு தேவனுடைய தரத்தை நிர்ணயிக்கவில்லை. தேவனுடைய பரிசுத்தமே பாவம் எது என்பதை நிர்ணயிக்கிறது.
அப்படியானால் அடுத்த கேள்வி மிகவும் முக்கியமானது:
அறியாமை ஒரு மனிதனுடைய குற்றப்பொறுப்பை முற்றிலுமாக நீக்கிவிடுகிறதா?
“எனக்குத் தெரியவில்லை” என்று சொல்லிவிட்டால் போதுமா?
வேதாகமத்தின் பதில் — இல்லை.
அறியாமை எப்போதும் பொறுப்பை நீக்கிவிடுவதில்லை. அதே நேரத்தில், அறியாமையினால் செய்யப்பட்ட பாவத்தையும், தேவனுக்கு எதிராக உயர்த்திய கையோடு செய்யப்பட்ட துணிகரமான கலகத்தையும் தேவன் ஒரே விதமாகக் கையாளுவதில்லை.
அந்த வேறுபாட்டைத்தான் அடுத்து நாம் பார்க்க வேண்டும்.
8. பலி, நியாயப்பிரமாணம், பரிகாரம், கிருபை
இங்கே இன்னொரு முக்கியமான காரியத்தைக் கவனிக்க வேண்டும்.
எபிரேய மக்களுக்குத் தேவன் கொடுத்த மோசேயின் உடன்படிக்கை முறைமையில், பாவத்தைக் கையாளுவதற்கு ஒரே விதமான ஏற்பாடு மட்டும் இருக்கவில்லை. நியாயப்பிரமாணத்திற்குள்ளேயே பலிகள் இருந்தன; பரிகாரத்திற்கான ஏற்பாடுகள் இருந்தன; சில குற்றங்களுக்கு restitution — இழப்பீடு — இருந்தது; சில குற்றங்களுக்கு நீதித்தீர்ப்பும் தண்டனையும் இருந்தன.
ஆகவே, நியாயப்பிரமாணம் ஒரு பக்கம், பலிகள் இன்னொரு பக்கம் என்று இரண்டு தனித்தனி முறைமைகளாக நாம் இதைப் பிரிக்கக்கூடாது. பலிகளும் நியாயப்பிரமாணத்தின் ஒரு பகுதிதான்.
லேவியராகமம் நான்காம் அதிகாரத்தில் நாம் பார்க்கிற பாவநிவாரண பலி, குறிப்பாக அறியாமல், தவறுதலாக அல்லது பிழையாக நிகழ்ந்த மீறுதல்களைக் கையாளுகிறது.
ஆனால் இங்கே இன்னொரு காரியத்திலும் கவனமாக இருக்க வேண்டும். “தெரிந்தே செய்யப்பட்ட எந்தப் பாவத்திற்கும் பழைய ஏற்பாட்டில் பலி கிடையாது” என்று சொல்ல முடியாது.
லேவியராகமம் 5, 6 ஆம் அதிகாரங்களுக்கு வரும்போது இதை இன்னும் தெளிவாகப் பார்ப்போம். ஒருவன் மற்றவனை ஏமாற்றியிருக்கலாம்; அவனிடம் ஒப்படைக்கப்பட்ட பொருளில் மோசடி செய்திருக்கலாம்; பிறருடைய பொருளை அநியாயமாக எடுத்திருக்கலாம்; அல்லது ஒரு காரியத்தைப் பற்றிப் பொய் சொல்லியிருக்கலாம். இவற்றில் restitution செய்ய வேண்டியிருந்தது; அதோடு பலியும் செலுத்த வேண்டியிருந்தது; அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யப்பட்டபோது அவனுக்கு மன்னிப்பும் கிடைத்தது.
எனவே intentional sin என்பதையும் High-handed Sin என்பதையும் ஒன்றாகக் கருதக்கூடாது.
எண்ணாகமம் 15:30–31-ல் சொல்லப்படுகிற High-handed Sin என்பது வெறுமனே “தெரிந்தே செய்த பாவம்” என்பதைக் காட்டிலும் ஆழமானது. தேவனுடைய வார்த்தையை அறிந்திருந்தும், அவருடைய அதிகாரத்தை அவமதித்து, அவருக்கு எதிராகத் துணிகரமாக, கலக மனப்பான்மையோடு செய்யப்படுகிற மீறுதல் அது.
அப்படிப்பட்ட High-handed rebellion-க்கு எண்ணாகமம் 15 prescribed sacrifice ஒன்றைக் கொடுக்கவில்லை.
அதே நேரத்தில், லேவியராகமத்தில் தேவன் பாவியான மனிதனுக்குப் பலிகளின் வழியாக ஒரு பரிகார வழியை ஏற்படுத்தியிருக்கிறார்.
இங்கே ஒரு மிக முக்கியமான உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும்:
இங்கே பலியை ஒரு சாதாரண தண்டனையாகவோ, பாவத்தின் அளவுக்கேற்ப விதிக்கப்படுகிற அபராதமாகவோ புரிந்துகொள்ளக்கூடாது.
“பெரிய பாவம் செய்தால் பெரிய மாட்டைக் கொண்டுவா; சின்ன பாவம் செய்தால் ஒரு புறாவைக் கொண்டுவா” என்று இதைப் புரிந்துகொள்ளக்கூடாது.
லேவியராகமம் 4-ல் பலியின் வேறுபாடு பாவம் எவ்வளவு “பெரியது” அல்லது “சிறியது” என்பதை மட்டும் சார்ந்திருக்கவில்லை. பாவம் செய்தவர் யார், அவருடைய பொறுப்பு என்ன, அவருடைய பாவம் எவ்வளவு பரந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதும் முக்கியமானது.
அதனால்தான் அபிஷேகம் பண்ணப்பட்ட ஆசாரியனுக்கு விதிக்கபட்ட பலி, முழுச் சபைக்கு விதிக்கப்பட்ட பலி, தலைவனுக்கு விதிக்கப்பட்ட பலி, சாதாரண மனிதனுக்கு விதிக்கப்பட்ட பலி ஆகியவைகளில் வேறுபாடுகளைப் பார்க்கிறோம்.
அதுமட்டுமல்ல, லேவியராகமம் 5-ல் பொருளாதார வசதி இல்லாத ஒருவனுக்காகத் தேவன் வேறு ஏற்பாடுகளையும் கொடுத்திருக்கிறார். ஆட்டைக் கொண்டுவர முடியாதவன் பறவைகளைக் கொண்டுவரலாம்; அதற்கும் வசதியில்லாதவன் மாவைக் கொண்டுவரலாம்.
ஆகவே, பலியின் மதிப்பு பாவத்திற்கான fine அல்ல.
அப்படியானால் பலியின் நோக்கம் என்ன?
பாவம் என்பது பாவஞ்செய்த மனிதனை மட்டும் சம்பந்தப்படுத்துகிற தனிப்பட்ட பிரச்சினை அல்ல. லேவியராகமத்தின் பார்வையில் அது தேவனோடு அவனுக்கிருக்கிற உடன்படிக்கை உறவையும், தேவன் தம் மக்களிடையே வாசம்பண்ணுகிற பரிசுத்த வாசஸ்தலத்தையும் சம்பந்தப்படுத்துகிற பிரச்சினை.
இது மிகவும் முக்கியமான ஒரு கருத்து. பாவநிவாரண பலியில் சுத்திகரிக்கப்படுவது யார் அல்லது எது, பலியின் இரத்தம் ஏன் பரிசுத்த ஸ்தலத்தோடு சம்பந்தப்படுத்தப்படுகிறது என்பதையெல்லாம் இந்த அதிகாரத்தைத் தொடர்ந்து ஆய்வு செய்யும்போது விரிவாகப் பார்க்கலாம்.
அதனால்தான் பாவநிவாரண பலியில் atonement, purification, forgiveness ஆகிய கருத்துகள் ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டிருக்கின்றன.
தேவன் பாவத்தை அலட்சியப்படுத்தவில்லை. அதே நேரத்தில் பாவியான மனிதனைத் தம்மிடமிருந்து நிரந்தரமாகத் தள்ளிவிடுவதையும் அவர் நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. பாவத்தைச் சரியாகக் கையாண்டு, தம்முடைய பரிசுத்தத்தைப் பாதுகாத்து, மனிதன் தம்மோடு உடன்படிக்கை உறவில் தொடர்வதற்கான வழியைத் தேவனே ஏற்படுத்தினார்.
இதுதான் பலிமுறையில் நாம் பார்க்கிற தேவனுடைய கிருபை.
எனவே மோசேயின் நியாயப்பிரமாணத்தை கிருபையே இல்லாத ஒரு முறைமை என்று நாம் புரிந்துகொள்ளக்கூடாது. அதே நியாயப்பிரமாணத்திற்குள்ளேயே தேவனுடைய பரிசுத்தம் இருக்கிறது; அவருடைய நீதி இருக்கிறது; பாவத்திற்கான தீர்ப்பு இருக்கிறது; அதே நேரத்தில் பாவியான மனிதனுக்காக தேவன் ஏற்படுத்திய பரிகார வழியும் இருக்கிறது.
தேவன் பரிசுத்தமானவர்; ஆகவே பாவத்தை அவர் புறக்கணிக்க முடியாது.
தேவன் கிருபையுள்ளவர்; ஆகவே பாவியான மனிதனுக்குத் தம்மை அணுகுவதற்கான வழியையும் அவரே ஏற்படுத்துகிறார்.
லேவியராகமத்தின் பலிமுறை இந்த இரண்டு உண்மைகளையும் நம் கண்களுக்கு முன்பாக நிறுத்துகிறது.
9. எல்லாப் பாவத்தையும் விடப் பெரிய கிறிஸ்துவின் பலி
இங்கே ஒரு நற்செய்தியைச் சொல்லிவிட்டு நாம் தொடர்ந்து உள்ளே போகலாம்.
பழைய ஏற்பாட்டில் அறியாமையினால் செய்த பாவத்திற்கும், தேவனைத் துணிகரமாக எதிர்த்துச் செய்த High-handed Sin-க்கும் இடையில் ஒரு முக்கியமான வேறுபாட்டைப் பார்க்கிறோம்.
ஆனால் நமக்கு ஒரு மாபெரும் நற்செய்தி இருக்கிறது.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பலி எந்த வகையான பாவத்தையும் விடப் பெரியது.
அறியாமையினால் செய்த பாவமாக இருக்கட்டும்; தெரிந்தே செய்த பாவமாக இருக்கட்டும்; தேவனுக்கு எதிராகத் துணிகரமாக வாழ்ந்த கடந்தகாலமாக இருக்கட்டும்; மனந்திரும்பி கிறிஸ்துவிடம் வருகிற பாவிக்கு அவரில் மன்னிப்பு இருக்கிறது. மோசேயின் உடன்படிக்கையின் பலிமுறையில் ஒரு குறிப்பிட்ட பாவத்திற்குப் பலி ஏற்பாடு செய்யப்படவில்லை என்பதால், அந்தப் பாவம் கிறிஸ்துவின் இரட்சிக்கும் கிருபையின் எல்லைக்கு அப்பாற்பட்டது என்று அர்த்தமல்ல.
ஏனென்றால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் தம் இரத்தத்தைச் சிந்தி, நமக்காகத் தம்மையே பலியாக ஒப்புக்கொடுத்தார்.
இது மாபெரும் நற்செய்தி.
பழைய ஏற்பாட்டின் பலிகள் சுட்டிக்காட்டியதும், அவற்றால் இறுதியாக நிறைவேற்ற முடியாததுமான பாவநிவாரணத்தை கிறிஸ்துவின் ஒரே பரிபூரண பலி நிறைவேற்றியது. தம் இரத்தத்தைச் சிந்தி, தம்மையே ஒப்புக்கொடுத்த அவருடைய பலியின்மூலம் நமக்குப் பாவநிவாரணம் கிடைத்திருக்கிறது; அவரில் நமக்கு மன்னிப்பு இருக்கிறது; தேவனோடு ஒப்புரவாகுதல் இருக்கிறது; அவரில் நமக்கு இரட்சிப்பு இருக்கிறது.
அவர் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால்?
அவர் சிலுவையில் நமக்காகத் தம்மை ஒப்புக்கொடுக்காமல் இருந்திருந்தால்?
அவர் தம் இரத்தத்தைச் சிந்தாமல் இருந்திருந்தால்?
நம்முடைய கதி என்னவாயிருக்கும் என்பதை மட்டும் கொஞ்சம் கற்பனை பண்ணிப் பாருங்கள்.
நமக்கு வேறு நம்பிக்கை இல்லை. வேறு பலி இல்லை. வேறு இரட்சகர் இல்லை.
ஆனால் தேவனுக்கு ஸ்தோத்திரம்!
நமக்காகச் சிலுவையில் மரித்த இயேசு கிறிஸ்து இருக்கிறார். அவரில் நமக்கு முழுமையான மன்னிப்பும் இரட்சிப்பும் இருக்கிறது.
இதுதான் நற்செய்தி.
இப்போது இந்த வெளிச்சத்தோடு மீண்டும் லேவியராகமம் நான்காம் அதிகாரத்திற்குத் திரும்புவோம்.
10. எனக்கே தெரியாத பாவங்கள் — Blind Spots
சரி, அறியாமல் அல்லது தவறுதலாக நிகழ்கிற பாவங்களைக்குறித்து பார்த்தோம். இப்போது இதோடு சம்பந்தப்பட்ட இன்னொரு முக்கியமான வேதப்பகுதியைப் பார்ப்போம்.
சங்கீதம் 19:12–13-ல் சங்கீதக்காரன் இப்படி ஜெபிக்கிறான்:
“தன் பிழைகளை உணர்கிறவன் யார்? மறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும். துணிகரமான பாவங்களுக்கு உமது அடியேனை விலக்கிக்காரும்; அவைகள் என்னை ஆண்டுகொள்ள விடாதிரும்.”
இங்கே சங்கீதக்காரன் முதலில் ஒரு கேள்வியைக் கேட்கிறான்:
“தன் பிழைகளை உணர்கிறவன் யார்?”
இந்தக் கேள்வியை நாம் சாதாரணமாகக் கடந்துபோய்விடக்கூடாது.
ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் அவனுக்கே தெரியாத பிழைகள் இருக்க முடியுமா? அவனுடைய கண்களுக்கே மறைந்திருக்கிற குற்றங்கள் இருக்க முடியுமா?
முடியும்.
அதனால்தான் அடுத்ததாக அவன் ஜெபிக்கிறான்:
“மறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.”
இங்கே “மறைவான குற்றங்கள்” என்றால், நான் மற்றவர்களுக்குத் தெரியாமல் இரகசியமாகச் செய்கிற பாவங்களை மட்டும் குறிக்கிறது என்று புரிந்துகொள்ளக்கூடாது. இந்த வசனத்தின் சூழலில், என்னுடைய பார்வைக்கே மறைந்திருக்கிற பிழைகள், எனக்கே இன்னும் தெரியாத குற்றங்கள் என்ற கருத்து மிக முக்கியமாக இருக்கிறது.
இதைப் புரிந்துகொள்வதற்கு ஓர் எளிய எடுத்துக்காட்டு இருக்கிறது.
கார் ஓட்டுகிறவர்களுக்கு blind spot என்றால் என்ன என்று தெரியும்.
நாம் கண்ணாடியைப் பார்க்கிறோம். முன்னால் பார்க்கிறோம். பக்கத்திலும் பார்க்கிறோம். ஆனாலும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இன்னொரு கார் இருந்தால் அது நம்முடைய பார்வைக்குத் தெரியாமல் போகலாம்.
அதுதான் blind spot.
இங்கே கவனியுங்கள்:
Blind spot-ல் கார் இல்லை என்பதல்ல; கார் இருக்கிறது. ஆனால் அது எனக்குத் தெரியவில்லை.
அதுபோல என்னுடைய வாழ்க்கையிலும் சில காரியங்கள் இருக்கலாம். அவை தேவனுடைய பார்வையில் தவறாக இருக்கலாம்; ஆனால் அவை தவறு என்று நான் இன்னும் உணராமல் இருக்கலாம். அவை பாவமாக இருக்கலாம்; ஆனால் அவற்றின் பாவத்தன்மையை நான் இன்னும் பார்க்காமல் இருக்கலாம்.
எனக்குத் தெரியவில்லை என்பதால் அது என்னிடத்தில் இல்லை என்று அர்த்தமல்ல.
இதைத்தான் பவுலுடைய வாழ்க்கையிலும் பார்த்தோம். தேவனுக்குச் சேவை செய்கிறேன் என்று நினைத்துக்கொண்டே அவர் கிறிஸ்துவின் சபையைத் துன்புறுத்தினார். தான் பார்க்காத ஒரு பயங்கரமான blind spot அவருடைய வாழ்க்கையில் இருந்தது.
இப்போது சங்கீதம் 19-ஐ மறுபடியும் கவனியுங்கள். இதில் ஓர் ஆழமான முன்னேற்றம் இருக்கிறது.
முதலில்:
“தன் பிழைகளை உணர்கிறவன் யார்?”
அடுத்து:
“மறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.”
பிறகு:
“துணிகரமான பாவங்களுக்கு உமது அடியேனை விலக்கிக்காரும்.”
அதற்குப் பிறகு:
“அவைகள் என்னை ஆண்டுகொள்ள விடாதிரும்.”
என்ன ஒரு ஜெபம்!
எனக்கே தெரியாத பிழைகள் என்னிடத்தில் இருக்கலாம். ஆண்டவரே, அவற்றிலிருந்து என்னைச் சுத்திகரியும்.
அதோடு, நான் துணிகரமாகப் பாவத்தில் செல்லாதபடி என்னைக் காத்துக்கொள்ளும்.
அவை வளர்ந்து என்னை ஆளுகிற நிலைக்கு என்னைக் கொண்டுபோக விடாதிரும்.
அதனால்தான் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் ஒரு முக்கியமான கேள்வி இருக்கிறது:
“என்னுடைய வாழ்க்கையில் பாவம் இருக்கிறதா?” என்பது மட்டும் கேள்வி அல்ல.
“என்னுடைய வாழ்க்கையில் நான் இன்னும் பாவம் என்று பார்க்காத பாவங்கள் இருக்கின்றனவா?” என்பதும் கேள்வி.
நான் பார்க்காததால் தேவன் பார்க்காமல் இருப்பதில்லை.
நான் உணராததால் அது தவறு அல்லாமல் போய்விடுவதில்லை.
என்னுடைய மனச்சாட்சி என்னைக் குற்றப்படுத்தவில்லை என்பதால் மட்டும் நான் தேவனுடைய பார்வையில் சரியாக இருக்கிறேன் என்றும் சொல்ல முடியாது.
அதனால்தான் சங்கீதக்காரன் தன்னையே முழுமையாக நம்பவில்லை. தேவனுடைய வெளிச்சத்தை நாடுகிறான்.
“ஆண்டவரே, எனக்கே தெரியாத என்னுடைய பிழைகளையும் நீர் காண்கிறீர். அவைகளிலிருந்து என்னைச் சுத்திகரியும்.”
11. ஆவிக்குரிய பதவியும் Blind Spot-இலிருந்து பாதுகாப்பல்ல
இங்கே யாக்கோபு 3:2-ல் சொல்லப்பட்டிருக்கிற இன்னொரு வசனத்தையும் நினைவில் வைத்துக்கொள்வது நல்லது:
“நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்.”
தவறாத மனிதன் யார்?
யாருமில்லை.
லேவியராகமம் 4-லும் இதைத்தான் ஒரு விதத்தில் பார்க்கிறோம். அபிஷேகம் பண்ணப்பட்ட ஆசாரியன்முதல் சாதாரண மனிதன்வரை எல்லாரும் பாவம் செய்யக்கூடியவர்கள்.
அந்த “எல்லாரிலும்” நானும் அடக்கம்.
யாரும் தவறாவரம் பெற்றவர்கள் அல்ல.
ஆனால் இங்கே இன்னொரு முக்கியமான உண்மை இருக்கிறது. எல்லாரும் தவறக்கூடியவர்கள் என்றாலும், எல்லாருடைய பொறுப்பும் ஒரே அளவானது அல்ல.
பொறுப்பு அதிகமானவருடைய தவறு அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்.
மல்கியா 2:7-ல்,
“ஆசாரியனுடைய உதடுகள் அறிவைக் காக்கவேண்டும்; அவன் வாயில் வேதத்தைத் தேடுவார்கள்”
என்று சொல்லப்படுகிறது.
யாக்கோபு 3:1-லும்,
“போதகர்களாக அநேகர் ஆகாதிருப்பீர்களாக; நாம் அதிக ஆக்கினையை அடைவோம்”
என்று எச்சரிக்கப்படுகிறது.
ஒரு ஆசிரியருடைய பாவம் அவனிடத்தில் மட்டும் நின்றுவிடாமல், அவனைப் பின்பற்றுகிறவர்களையும் பாதிக்கக்கூடும்.
அதனால்தான் நான் அடிக்கடி சொல்லுகிற ஒரு வாக்கியம்:
“The sins of teachers become teachers of sin.”
ஆசிரியருடைய தவறான வாழ்க்கையே மற்றவர்களுக்குத் தவறான பாடமாக மாறிவிடலாம்.
ஆகவே ஆசாரியனாக இருந்தாலும் blind spot இருக்கலாம்.
முழுச் சபையாக இருந்தாலும் blind spot இருக்கலாம்.
தலைவனாக இருந்தாலும் blind spot இருக்கலாம்.
சாதாரண மனிதனாக இருந்தாலும் blind spot இருக்கலாம்.
யாரும் இதற்கு விதிவிலக்கல்ல.
12. Blind Spots உருவாக நான்கு காரணங்கள்
அப்படியானால் ஒரு கேள்வி வருகிறது.
ஒரு காரியம் என்னிடத்தில் பாவமாக இருந்தும், அது பாவம் என்று எனக்கே தெரியாமல் இருப்பதற்கு என்ன காரணம்?
ஏன் நம்முடைய வாழ்க்கையில் blind spots உருவாகின்றன?
லேவியராகமம் 4 இதற்கான காரணங்களைப் பட்டியலிடவில்லை. ஆனால் வேதாகமத்தின் மற்ற பகுதிகளைப் பார்க்கும்போது, மனிதன் தன்னுடைய பிழைகளை உணராமல் இருப்பதற்குப் பல காரணங்கள் இருக்கலாம் என்பதைப் பார்க்கிறோம்.
அவைகளி குறைந்தது நான்கு காரணங்களை நாம் கவனிக்கலாம். இவை மட்டும்தான் காரணங்கள் என்று நான் சொல்லவில்லை. ஆனால் நாம் புரிந்துகொள்ளக்கூடிய நான்கு முக்கியமான காரணங்கள் இவை.
1. அறிவின்மை — Lack of Knowledge
முதலாவது, அறிவின்மை — Lack of Knowledge.
தேவனைக் குறித்த சரியான, போதுமான அறிவின்மை; கிறிஸ்துவைக்குறித்த அறிவின்மை; வேதத்தைக்குறித்த அறிவின்மை; சத்தியத்தைக்குறித்த அறிவின்மை; தேவனுடைய சித்தத்தைக்குறித்த அறிவின்மை.
ஒரு மனிதனுக்குத் தேவனுடைய சித்தம் என்ன என்பது தெரியவில்லை என்றால், தேவனுக்குப் பிரியமில்லாத ஒன்றைச் செய்துகொண்டே, தான் சரியாகத்தான் செய்கிறேன் என்று நினைத்துக்கொண்டிருக்க முடியும்.
பவுலுடைய வாழ்க்கையிலேயே இதைப் பார்த்தோம். அவருக்கு வைராக்கியமும் வேத அறிவும் இருந்தன. ஆனாலும் இயேசு கிறிஸ்து யார் என்பதைப் பற்றிய அவருடைய புரிதல் தவறாக இருந்ததால், தேவனுக்குச் சேவை செய்கிறேன் என்று நினைத்துக்கொண்டே கிறிஸ்துவின் சபையைத் துன்புறுத்தினார்.
எனவே அறிவு இருப்பது மட்டும் போதாது; சரியான அறிவு வேண்டும்.
அதே நேரத்தில், “எனக்குத் தெரியவில்லை” என்று சொல்வதினால் நம்முடைய பொறுப்பு முழுவதுமாக நீங்கிவிடுகிறது என்றும் சொல்ல முடியாது.
எல்லா அறியாமையும் ஒரே மாதிரியானது அல்ல.
ஒருவனுக்கு உண்மையாக அறிய வாய்ப்பே கிடைக்காமல் இருக்கலாம். இன்னொருவன் அறிவைப் பெற முடிந்திருந்தும் அதைத் தேடாமல் இருக்கலாம். தேவன் கொடுத்த வெளிச்சத்தை அலட்சியப்படுத்தியிருக்கலாம்.
எனவே சில அறியாமைகள் வெறும் தகவல் இல்லாமையினால் வரலாம்; சில அறியாமைகள் நம்முடைய அலட்சியத்தினாலும், கிடைத்த வெளிச்சத்தைப் புறக்கணித்ததினாலும் உருவாகலாம்.
இதைத்தான் பின்னால் இன்னும் விரிவாகப் பார்க்கப்போகிறோம்.
இங்கே இப்போதைக்கு நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது இதுதான்:
அறிவு இல்லாததால் பாவம் பாவமல்லாததாக மாறிவிடுவதில்லை.
அதே நேரத்தில்,
அறிவு அதிகமான இடத்தில் பொறுப்பும் அதிகமாகிறது.
இதுதான் முதலாவது காரணம் — அறிவின்மை.
2. உணர்வு மழுங்கிப்போன மனச்சாட்சி
இரண்டாவது, உணர்வு மழுங்கிப்போன மனச்சாட்சி.
மனச்சாட்சியைப் பற்றி இங்கே கொஞ்சம் கவனிக்க வேண்டும்.
அப்போஸ்தலனாகிய பவுல் அப்போஸ்தலர் 24:16-ல்,
“தேவனுக்கும் மனுஷருக்கும் முன்பாக எப்பொழுதும் குற்றமற்ற மனச்சாட்சியை உடையவனாயிருக்க நானும் பிரயாசப்படுகிறேன்” என்று சொல்கிறார்.
எல்லா மனிதர்களுக்கும் மனச்சாட்சி இருக்கிறது. ரோமர் 2:15-ல் மனச்சாட்சி மனிதனுக்குள் சாட்சியிடுவதையும், அவனுடைய சிந்தனைகள் அவனைக் குற்றஞ்சாட்டுவதையோ ஆதரிப்பதையோ பவுல் குறிப்பிடுகிறார். ஆனால் மனச்சாட்சி தேவனுடைய வார்த்தைக்கு மாற்றான, தவறாத ஒரு உள்ளான நீதிபதி அல்ல.
மனச்சாட்சியைப் புரிந்துகொள்வதற்காக ஒரு illustration சொல்லலாம். அது மனிதனுக்குள் இருக்கிற ஒரு radar போலச் செயல்படுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் இது மனச்சாட்சிக்கான வேதாகம definition அல்ல; புரிந்துகொள்வதற்கான ஒரு illustration மட்டுமே.
Radar இருக்கிறது என்பது மட்டும் போதாது. அதன் sensitivity எப்படி இருக்கிறது என்பதும் முக்கியம்.
அதுபோல மனச்சாட்சி இருக்கிறது என்பதால் மட்டும் போதாது. அந்த மனச்சாட்சி எதனால் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது? எந்தத் தரத்தின் அடிப்படையில் அது செயல்படுகிறது? என்பதும் முக்கியம்.
ஒரு மனிதனுடைய culture அவனுடைய மனச்சாட்சியைப் பாதிக்கலாம். அவனுடைய குடும்பப் பின்னணி பாதிக்கலாம். அவன் வாழ்கிற சமூகம் பாதிக்கலாம். அவனுடைய பழக்கவழக்கங்கள் பாதிக்கலாம். அவனுடைய சொந்த அபிப்பிராயங்களும் நியாயப்படுத்தல்களும் அதைப் பாதிக்கலாம்.
அதனால்தான்,
“என் மனச்சாட்சி என்னைக் குற்றப்படுத்தவில்லை; ஆகவே நான் சரியாகத்தான் இருக்கிறேன்”
என்று சொல்லிவிட முடியாது.
மனச்சாட்சி இறுதி நீதிபதி அல்ல.
தேவனே இறுதி நீதிபதி. தேவனுடைய வார்த்தையே இறுதி அளவுகோல்.
நான் ஒரு காரியத்தைப் பாவம் என்று நினைக்காமல் இருக்கலாம். என்னுடைய சமூகம் அதைத் தவறு என்று நினைக்காமல் இருக்கலாம். பலர் அதைச் செய்துகொண்டிருக்கலாம். என்னுடைய மனச்சாட்சிகூட அதைப்பற்றி அமைதியாக இருக்கலாம்.
ஆனால் தேவன் அதை பாவம் என்று சொன்னால், அது பாவம்.
இதுதான் லேவியராகமம் 4 நமக்குக் கற்றுக்கொடுக்கிற மிக முக்கியமான உண்மைகளில் ஒன்று.
பாவம் அவனுக்குத் தெரியும்முன்பே அது பாவமாக இருந்தது.
அவனுடைய மனச்சாட்சி அதை உணர்ந்தபோதுதான் அது பாவமாக மாறவில்லை.
எனவே என்னுடைய understanding faulty ஆக இருக்கலாம். என்னுடைய mind blinded ஆக இருக்கலாம். என்னுடைய வைராக்கியம் தவறாக வழிநடத்தப்பட்டிருக்கலாம். என்னுடைய விருப்பங்கள்கூட என்னைத் தவறான வழியில் நடத்தலாம்.
இதை இன்னொரு illustration மூலம் புரிந்துகொள்ளலாம்.
ஒரு காந்த ஊசியை எப்படித் திருப்பினாலும், அது மீண்டும் வடக்கை நோக்கித் திரும்புகிறது.
அதுபோல நம்முடைய மனச்சாட்சியும் நம்முடைய சொந்த விருப்பத்தை நோக்கி அல்ல, தேவனுடைய தரத்தை நோக்கித் தொடர்ந்து திருத்தப்பட வேண்டும். தேவனுடைய வார்த்தைக்கு நம்முடைய இருதயம் திறந்திருக்க வேண்டும். தேவனுடைய வெளிச்சம் நம்மை ஆராய அனுமதிக்க வேண்டும்.
அப்போதுதான் நம்முடைய மனச்சாட்சி தேவனுடைய வார்த்தையால் தொடர்ந்து பயிற்றுவிக்கப்பட்டு, அதன் உணர்திறன் கூர்மையடையும்.
இதற்கு எதிரான நிலையும் இருக்கிறது.
1 தீமோத்தேயு 4:2-ல் வேதாகமம் “சூடுண்ட மனச்சாட்சி” என்ற ஒரு பயங்கரமான நிலையைப் பற்றிப் பேசுகிறது.
இந்த வசனம் மனச்சாட்சி எப்படி அந்த நிலைக்கு வந்தது என்ற முழு psychological process-ஐ விளக்கவில்லை. ஆனால் உணர்விழந்துபோன மனச்சாட்சியின் ஒரு நிலை இருக்க முடியும் என்பதை நமக்குக் காட்டுகிறது.
ஒரு காயம் தொடர்ந்து காயப்பட்டு, அந்த இடத்தில் scar tissue உருவாகும்போது முன்பு இருந்த உணர்வு குறைந்துபோகலாம்.
அதுபோல ஒருகாலத்தில் நம்மை உறுத்திய ஒரு காரியம் பின்னால் நம்மை உறுத்தாமல் போகலாம்.
அப்போது நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
என்னுடைய மனச்சாட்சி இப்போது அமைதியாக இருக்கிறது என்பதால் பாவம் சரியாகிவிட்டதா?
அல்லது
பாவம் சரியாகிவிடவில்லை; என்னுடைய மனச்சாட்சியின் உணர்வுதான் மழுங்கிவிட்டதா?
இதுதான் நாம் கேட்க வேண்டிய கேள்வி.
ஆகவே மனச்சாட்சியின்படி வாழ்வது மட்டும் போதாது; தேவனுடைய வார்த்தையால் பயிற்றுவிக்கப்பட்ட மனச்சாட்சியோடு வாழ வேண்டும்.
பாவத்தை நான் எப்படிப் பார்க்கிறேன் என்பது இறுதி கேள்வி அல்ல.
மற்றவர்கள் அதை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதும் இறுதி கேள்வி அல்ல.
தேவன் அதை எப்படிப் பார்க்கிறார் என்பதே இறுதி கேள்வி.
3. இருதயக் கடினம் — Hardness of Heart
மூன்றாவது, இருதயக் கடினம் — Hardness of Heart.
எபிரெயர் 3:13-ல்,
“பாவத்தின் வஞ்சனையினாலே உங்களில் ஒருவனும் கடினப்பட்டுப் போகாதபடிக்கு...”
என்று வாசிக்கிறோம்.
பாவத்திற்கு ஒரு வஞ்சிக்கும் தன்மை இருக்கிறது. பாவம் நம்மை ஏமாற்றுகிறது. தொடர்ந்து ஏமாற்றப்படுகிற இருதயம் படிப்படியாகக் கடினப்படுகிறது. கடினப்பட்ட இருதயம் தன்னுடைய உண்மையான நிலையைச் சரியாகப் பார்க்க முடியாமல் போகிறது.
ஒரு காலத்தில் தவறு என்று தெரிந்தது பின்னால் சாதாரணமாகத் தெரிய ஆரம்பிக்கலாம். ஒரு காலத்தில் மனதை உறுத்தியது பின்னால் ஒன்றுமே இல்லாததுபோல் தெரியலாம். பாவத்தின் வஞ்சனை இருதயத்தைக் கடினப்படுத்தும்போது, மனிதன் பாவத்தைப் பற்றிய உணர்வை மட்டும் இழப்பதில்லை; தேவனுடைய சத்தத்திற்கும் வெளிச்சத்திற்கும் பதிலளிக்காதவனாக மாறுகிற ஆபத்தும் இருக்கிறது.
பாவம் மாறிவிட்டதினால் அல்ல; இருதயம் மாறிவிட்டதினால்.
இங்கே இதற்கு எதிரான இன்னொரு ஆவிக்குரிய உண்மையையும் நாம் பார்க்க வேண்டும்.
இருதயம் கடினப்படக் கடினப்பட ஆவிக்குரிய உணர்திறன் மழுங்குகிறது. ஆனால் தேவனோடு நடக்க நடக்க, கிறிஸ்துவை அறிகிற அறிவில் வளர வளர, தேவனுடைய வார்த்தையின் வெளிச்சத்திற்கு நம்மைத் திறந்துகொடுக்கக் கொடுக்க, நம்முடைய ஆவிக்குரிய பகுத்தறியும் திறனும் வளர வேண்டும்.
எபிரெயர் 5:14-ல் ஒரு முதிர்ச்சியடைந்த மனிதனுடைய அடையாளத்தைப் பற்றி சொல்லும்போது,
“நன்மை தீமையைப் பகுத்தறியத்தக்கதாக முயற்சியினால் பழக்கப்பட்ட புலன்களையுடையவர்களாகிய பூரண வயதுள்ளவர்களுக்கே பலமான ஆகாரம் தகும்”
என்று வாசிக்கிறோம்.
இங்கே “புலன்கள்” என்று சொல்லப்படுவது மிகவும் அழகானது.
நம்முடைய சரீரத்திற்கு புலன்கள் இருப்பதுபோல, ஆவிக்குரிய வாழ்க்கையிலும் ஒரு discernment — பகுத்தறியும் திறன் — வளர வேண்டும். இதை ஏதோ தனிப்பட்ட மர்மமான “ஆவிக்குரிய புலன்கள்” என்று புரிந்துகொள்ளக்கூடாது; எபிரெயர் இங்கே வலியுறுத்துவது, தொடர்ந்து பயிற்சி பெறுவதினால் நன்மையையும் தீமையையும் பகுத்தறியும் திறன் முதிர்ச்சியடைவதைத்தான்.
எது தேவனுக்குப் பிரியமானது, எது பிரியமில்லாதது; எது நல்லது, எது தீமை; எது சத்தியம், எது தவறு என்பதைப் பகுத்தறியும் திறன் வளர வேண்டும்.
ஒரு குழந்தையின் புலன்களுக்கும் வளர்ந்த மனிதனுடைய புலன்களுக்கும் வித்தியாசம் இருப்பதுபோல, ஆவிக்குரிய வாழ்க்கையிலும் முதிர்ச்சி வர வர பகுத்தறியும் திறன் வளர வேண்டும்.
அதனால்தான் கிறிஸ்துவை அறிகிற அறிவில் வளருகிற ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் ஒரு விசித்திரமான காரியம் நடக்கிறது.
அவன் வளர வளர,
“என்னிடத்தில் பாவம் குறைந்துவிட்டது; ஆகவே நான் பெரிய பரிசுத்தவான்”
என்று தன்னைப்பற்றி பெருமையாக நினைப்பதற்குப் பதிலாக, முன்பு தன்னிடத்தில் பார்க்காத பல காரியங்களை இப்போது பார்க்க ஆரம்பிக்கிறான்.
ஏன்?
தேவனுடைய வெளிச்சத்தில் அவன் இன்னும் தெளிவாகப் பார்க்க ஆரம்பிக்கிறான். கிறிஸ்துவின் பரிசுத்தத்தை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்கிறான். தேவனுடைய தரத்தையும், அந்தத் தரத்தின் வெளிச்சத்தில் தன்னுடைய உண்மையான நிலையையும் இன்னும் தெளிவாக உணர ஆரம்பிக்கிறான்.
அதனால் முன்பு சாதாரணமாகத் தெரிந்த சில காரியங்கள் இப்போது அவனுக்கு சாதாரணமாகத் தெரியவில்லை. முன்பு கவனிக்காத சில மனப்பான்மைகள் இப்போது அவனுக்குத் தெரிகின்றன. முன்பு நியாயப்படுத்திய சில காரியங்களை இப்போது அவனால் நியாயப்படுத்த முடியவில்லை.
இதுவும் ஆவிக்குரிய வளர்ச்சியின் ஒரு அடையாளம்.
ஆகவே ஒரு மனிதன்,
“என்னிடத்தில் எந்தக் குறையும் இல்லை; நான் மிகவும் பரிசுத்தமாக இருக்கிறேன்”
என்று தன்னைப்பற்றி மிக உயரமாக நினைக்கிறான் என்றால், அது அவன் பரிசுத்தத்தில் மிகவும் உயர்ந்துவிட்டான் என்பதற்கான அடையாளமாக இருக்க வேண்டியதில்லை.
தேவனுடைய பரிசுத்தத்தை அவன் இன்னும் ஆழமாகப் பார்க்கவில்லை என்பதற்கான அடையாளமாகவும் இருக்கலாம்.
ஏசாயாவை நினைத்துப் பாருங்கள்.
ஏசாயா 6-ல் தேவனுடைய பரிசுத்தத்தை அவர் பார்த்தபோது,
“ஐயோ! அதமானேன்; நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன்”
என்றார்.
தேவனுடைய பரிசுத்தத்தைப் பார்த்தபோது அவருடைய முதல் பார்வை மற்றவர்கள்மேல் போகவில்லை; தன்னிடமே திரும்பியது.
அதுபோல பேதுருவும் இயேசுவின் மகத்துவத்தை ஒரு புதிய விதத்தில் எதிர்கொண்டபோது,
“ஆண்டவரே, நான் பாவியான மனுஷன்; நீர் என்னைவிட்டுப் போகவேண்டும்”
என்றார்.
தேவனுடைய வெளிச்சத்தில் நாம் இன்னும் தெளிவாகப் பார்க்க ஆரம்பிக்கும்போது, இதுவரை நமக்கே தெரியாமல் இருந்த blind spots ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வர ஆரம்பிக்கின்றன.
இங்கே ஒரு முக்கியமான காரியத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். தேவனுடைய வெளிச்சம் நம்முடைய வாழ்க்கையில் புதிய பாவங்களை உருவாக்குவதில்லை; ஏற்கெனவே இருந்தும் நாம் பார்க்காமல் இருந்தவற்றை வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறது.
ஒரு அறைக்குள் வெளிச்சம் வரும்போது அந்த வெளிச்சம் தூசியை உருவாக்குவதில்லை. அதுவரை இருளில் நமக்குத் தெரியாமல் இருந்த தூசியை அது நம்முடைய கண்களுக்குத் தெரியச் செய்கிறது. அதுபோல தேவனுடைய வெளிச்சம் நம்முடைய வாழ்க்கைக்குள் அதிகமாக வர வர, முன்பு நாம் பார்க்காத காரியங்களைப் பார்க்க ஆரம்பிக்கிறோம்.
அதனால்தான் ஆவிக்குரிய வாழ்க்கையில் ஒரு விசித்திரமான அனுபவம் ஏற்படலாம். நாம் கிறிஸ்துவை அதிகமாக அறிய அறிய, “முன்பைவிட இப்போது என்னிடத்தில் அதிகமான குறைகள் தெரிகிறதே” என்று நினைக்கலாம். அதற்கு நாம் முன்பைவிட மோசமானவர்களாகிவிட்டோம் என்பதுதான் அவசியமான காரணம் அல்ல. நாம் முன்பைவிட அதிகமான வெளிச்சத்தில் பார்க்க ஆரம்பித்திருக்கலாம்.
வெளிச்சம் என் குறையை உருவாக்கவில்லை; வெளிச்சம் என் குறையை எனக்குக் காட்டியது.
அதனால்தான் ஆவிக்குரிய முதிர்ச்சி என்பது நான் மற்றவர்களுடைய பாவங்களை அதிகமாகப் பார்க்க ஆரம்பிப்பது அல்ல.
தேவனுடைய பரிசுத்தத்தின் வெளிச்சத்தில் என்னையே இன்னும் தெளிவாகப் பார்க்க ஆரம்பிப்பது.
4. வீழ்ந்த, பாவத்தால் சீர்கெட்ட மனித சுபாவம்
நான்காவது, வீழ்ந்த, பாவத்தால் சீர்கெட்ட மனித சுபாவம் — our fallen, sinful nature.
இது மிகவும் ஆழமான பிரச்சினை.
எரேமியா 17:9 சொல்கிறது:
“எல்லாவற்றைப் பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது; அதை அறியத்தக்கவன் யார்?”
அடுத்த வசனத்தில் தேவன், “கர்த்தராகிய நானே இருதயத்தை ஆராய்கிறவரும் உள்ளிந்திரியங்களைச் சோதித்தறிகிறவருமாயிருக்கிறேன்” என்று சொல்கிறார். அதாவது, மனிதன் தன்னையே முழுமையாக அறியாத இடத்திலும் தேவன் அவனுடைய இருதயத்தை முழுமையாக அறிந்திருக்கிறார்.
மனிதனுடைய பிரச்சினை அவனுக்கு வெளியே மட்டும் இல்லை; அவனுக்குள்ளேயே இருக்கிறது.
நம்முடைய வீழ்ந்த சுபாவம் மற்றவர்களை ஏமாற்றுவதற்கு மட்டுமல்ல, நம்மையே நாம் ஏமாற்றிக்கொள்வதற்கும் இடமளிக்கிறது.
நம்முடைய தவறுக்கு நாம் காரணம் கண்டுபிடிக்கலாம். நம்முடைய பாவத்தை நியாயப்படுத்தலாம். மற்றொருவன் செய்தால் தவறு என்று சொல்லுகிற அதே காரியத்தை நாம் செய்தால் அதற்கு விளக்கம் கொடுக்கலாம்.
இதற்கு ஒரு எளிய illustration சொல்லலாம்.
ஒரு தோட்டத்தில் களைகளை எல்லாம் பிடுங்கிவிடலாம். நிலத்தைச் சுத்தப்படுத்தலாம். Weed cloth போடலாம். Mulch போடலாம்.
சில காலம் எல்லாம் சுத்தமாகத் தெரியும்.
ஆனால் சில வாரங்கள் கழித்து பார்த்தால், மீண்டும் எங்கிருந்தோ ஒரு களை மேலே வந்திருக்கும்.
“இது எங்கிருந்து வந்தது?” என்று நாம் கேட்கலாம்.
மேலே தெரிந்த களைகளை அகற்றிவிட்டதினால், மண்ணுக்குள் இருந்த பிரச்சினை முழுவதுமாகத் தீர்ந்துவிட்டது என்று அர்த்தமல்ல.
அதுபோல நம்முடைய வாழ்க்கையிலும் சில பாவங்களின் வெளிப்பாடுகளைத் தற்காலிகமாக அடக்கலாம். ஆனால் அதனால் உள்ளேயுள்ள வீழ்ந்த சுபாவத்தின் பிரச்சினை தீர்ந்துவிட்டது என்று அர்த்தமல்ல.
அதே நேரத்தில், கிறிஸ்துவுக்குள் இருக்கிற விசுவாசி இந்த வீழ்ந்த சுபாவத்தின் அடிமையாக வாழ வேண்டியவன் அல்ல. ரோமர் 8:13 சொல்வதுபோல, ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்துப்போட அழைக்கப்பட்டிருக்கிறோம்.
எனவே நமக்கு வெறும் self-control மட்டும் போதாது.
நமக்கு தேவனுடைய வார்த்தையின் வெளிச்சம் தேவை.
நமக்கு உணர்வுள்ள மனச்சாட்சி தேவை.
நமக்கு மென்மையான இருதயம் தேவை.
நமக்கு பரிசுத்த ஆவியானவரின் கிரியை தேவை.
13. பாவத்தின் அளவுகோல் யார்?
இந்த நான்கு காரணங்களையும் பார்த்த பிறகு, இன்னொரு அடிப்படையான கேள்வி வருகிறது.
நான் ஒரு காரியத்தைப் பாவம் என்று உணர்கிறேனா, உணரவில்லையா என்பது ஒருபுறம் இருக்கட்டும். முதலில் பாவம் என்றால் என்ன? பாவத்தைத் தீர்மானிக்கிற அளவுகோல் என்ன?
வேதாகமம் பாவத்தைப் பல விதங்களில் விவரிக்கிறது. நியாயப்பிரமாணத்தை மீறுவது பாவம் என்று சொல்லப்படுகிறது. அநீதி பாவம் என்று சொல்லப்படுகிறது. தேவனுக்கு எதிரான கலகம், அக்கிரமம், கீழ்ப்படியாமை போன்ற பல கோணங்களில் பாவத்தை வேதாகமம் வெளிப்படுத்துகிறது.
ஆனால் பாவத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிற முக்கியமான எபிரேயச் சொற்களில் ஒன்று ḥāṭāʾ.
இந்தச் சொல்லின் பயன்பாட்டில் “தவறுதல்,” குறிப்பாக “குறியைத் தவறவிடுதல்” என்ற கருத்தையும் பார்க்கிறோம்.
இதற்கு நீதிபதிகள் 20:16 ஒரு அழகான எடுத்துக்காட்டு.
பென்யமீன் கோத்திரத்தில் இடதுகைப் பழக்கமுள்ள எழுநூறு பேர் இருந்தார்கள். அவர்கள் கவணிலிருந்து கல்லெறியும்போது ஒரு மயிரிழையளவுகூட “தப்பாமல்” எறியக்கூடியவர்கள் என்று அந்த வசனம் சொல்கிறது.
அங்கே “தப்பாமல்” என்பதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிற எபிரேய வினைச்சொல் ḥāṭāʾ என்பதே. அந்த இடத்தில் அது பாவத்தைக் குறிக்காமல், குறியைத் தவறவிடுதல் என்ற சாதாரண பொருளில் பயன்படுத்தப்படுகிறது. அதாவது அவர்கள் குறியைத் தவறவிடவில்லை.
ஒரு இலக்கை வைத்திருக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதன் நடுவில் ஒரு புள்ளி இருக்கிறது. அம்பு அந்தப் புள்ளியை அடிக்க வேண்டும். அது இடதுபக்கமாகப் போனாலும் குறியைத் தவறவிட்டுவிட்டது; வலதுபக்கமாகப் போனாலும் குறியைத் தவறவிட்டுவிட்டது. இலக்கை அடையவில்லை என்றால் அது miss.
இந்தப் படம் பாவத்தைப் புரிந்துகொள்ள நமக்கு உதவுகிறது.
ஆனால் இங்கே கவனமாக இருக்க வேண்டும்.
“பாவம் என்றால் குறியைத் தவறவிடுதல் மட்டும்தான்” என்று சொல்ல முடியாது.
வேதாகமம் பாவத்தை அதைவிட ஆழமாகப் பேசுகிறது. பாவம் சில நேரங்களில் மீறுதல்; சில நேரங்களில் அக்கிரமம்; சில நேரங்களில் கீழ்ப்படியாமை; சில நேரங்களில் தேவனுக்கு எதிரான கலகம்.
ஆனாலும் “குறியைத் தவறவிடுதல்” என்ற இந்தப் படம் ஒரு முக்கியமான உண்மையை நமக்குக் காட்டுகிறது.
ஒரு குறி இருக்கிறது. ஒரு தரம் இருக்கிறது.
அந்தத் தரத்தை நான் நிர்ணயிக்கவில்லை.
என்னுடைய culture அதை நிர்ணயிக்கவில்லை.
என்னுடைய குடும்பப் பழக்கவழக்கம் அதை நிர்ணயிக்கவில்லை.
என்னுடைய அபிப்பிராயம் அதை நிர்ணயிக்கவில்லை.
என்னுடைய மனச்சாட்சிகூட அதை நிர்ணயிக்கவில்லை.
அந்தத் தரத்தின் இறுதி அடித்தளம் தேவனே — அவர் யார் என்பதும், அவருடைய பரிசுத்தமும், நீதியும், சத்தியமும், அவர் வெளிப்படுத்திய சித்தமும்தான் பாவம் எது என்பதைத் தீர்மானிக்கின்றன.
அவருடைய பரிசுத்தம், அவருடைய நீதி, அவருடைய சத்தியம், அவருடைய அன்பு, அவருடைய இரக்கம், அவருடைய சித்தம் — இவைகளின் வெளிச்சத்தில்தான் நம்முடைய வாழ்க்கையைப் பார்க்க வேண்டும்.
அதனால்தான் பாவத்தைப் பற்றிய கேள்வி,
“நான் மற்றவர்களைவிட நல்லவனாக இருக்கிறேனா?”
என்பது அல்ல.
மற்றவருடைய அம்பு இலக்கிலிருந்து பத்து அடி தள்ளிப் போயிருக்கலாம்; என்னுடைய அம்பு ஒரு அடி மட்டும் தள்ளிப் போயிருக்கலாம்.
அதனால் என்னுடைய அம்பு இலக்கை அடைந்துவிட்டது என்று அர்த்தமல்ல.
ஒப்பீடு மற்ற மனிதனோடு அல்ல.
குறி தேவனுடைய தரம்.
அதனால்தான் ரோமர் 3:23,
“எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி...”
என்று சொல்கிறது.
மனிதர்களோடு நம்மை ஒப்பிட்டுப் பார்ப்பது இறுதி அளவுகோல் அல்ல. பாவத்தின் உண்மையான தீவிரம் தேவனோடும், அவருடைய பரிசுத்தத்தோடும், அவருடைய மகிமையோடும் தொடர்புடையது.
இதனால்தான் லேவியராகமம் 4-ல் நாம் பார்த்த உண்மை இன்னும் தெளிவாகிறது.
நான் குறியைத் தவறவிட்டிருக்கலாம்; ஆனால் அதை நான் இன்னும் உணராமல் இருக்கலாம்.
நான் miss செய்ததை அறியாமல் இருக்கலாம்; ஆனால் அதனால் நான் target-ஐ hit செய்துவிட்டேன் என்று அர்த்தமல்ல.
இதுதான் அறியாமல் அல்லது தவறுதலாக நிகழ்கிற பாவத்தின் தீவிரத்தைப் புரிந்துகொள்ள நமக்கு உதவுகிறது.
14. Ignorance is not innocence — அறியாமை குற்றமின்மை அல்ல
இங்கே ஒரு முக்கியமான வாக்கியத்தை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்:
Ignorance is not innocence. அறியாமை என்பது எப்போதும் குற்றமின்மை அல்ல.
இதைத்தான் லேவியராகமம் நான்காம் அதிகாரம் மிகத் தெளிவாக நமக்குக் காட்டுகிறது.
ஒருவன் அறியாமையினால் தேவனுடைய கட்டளையை மீறியிருக்கிறான். அவனுக்குத் தான் செய்தது பாவம் என்று அப்போது தெரியாமல் இருக்கலாம். ஆனால் பின்னால் அது அவனுக்குத் தெரியவரும்போது பலி செலுத்த வேண்டியிருக்கிறது.
அப்படியானால் ஒரு மிக முக்கியமான உண்மை:
அவனுக்குத் தெரியவந்தபோதுதான் அது பாவமாக மாறவில்லை. அவனுக்குத் தெரியும்முன்பே அது பாவமாக இருந்தது.
அறியாமை பாவத்தைப் பாவமல்லாததாக மாற்றவில்லை.
இந்த உண்மையைப் புதிய ஏற்பாட்டிலும் பார்க்கிறோம். அப்போஸ்தலர் 3:17-ல் பேதுரு,
“சகோதரரே, நீங்களும் உங்கள் அதிகாரிகளும் அறியாமையினாலே இதைச் செய்தீர்களென்று அறிந்திருக்கிறேன்”
என்று சொல்கிறார்.
அவர்கள் செய்ததில் அறியாமை இருந்தது. ஆனால் அதனால் அவர்கள் குற்றமற்றவர்களாகிவிடவில்லை. அதனால்தான் சில வசனங்களுக்குப் பிறகு, அப்போஸ்தலர் 3:19-ல்,
“உங்கள் பாவங்கள் நிவிர்த்திசெய்யப்படும்பொருட்டு நீங்கள் மனந்திரும்பிக் குணப்படுங்கள்”
என்று பேதுரு அழைக்கிறார்.
இதைக் கவனியுங்கள். அறியாமை இருந்தது; ஆனாலும் மனந்திரும்புதல் தேவைப்பட்டது. அறியாமை இருந்தது; ஆனாலும் பாவமன்னிப்பு தேவைப்பட்டது. எனவே அறியாமை பாவத்தைப் பாவமல்லாததாக மாற்றிவிடுவதில்லை.
இதே உண்மையை இயேசுவின் சிலுவை ஜெபத்திலும் பார்க்கிறோம். லூக்கா 23:34-ல்,
“பிதாவே, இவர்களுக்கு மன்னியும்; தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே”
என்று இயேசு ஜெபித்ததாக நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.
அவர்கள் செய்கிற காரியத்தின் முழு உண்மையையும் அறியவில்லை; ஆனாலும் அவர்களுக்கு மன்னிப்பு தேவைப்பட்டது.
அதே நேரத்தில் இதன் மறுபக்கத்தையும் நாம் மறக்கக்கூடாது.
எல்லா அறியாமையும் ஒரே மாதிரியானது அல்ல.
ஒருவனுக்கு உண்மையாகவே ஒரு காரியம் தெரியாமல் இருக்கலாம். இன்னொருவனோ தெரிந்துகொள்ள வாய்ப்பு இருந்தும் தெரிந்துகொள்ளாமல் இருக்கலாம். ஒருவன் வெளிச்சம் கிடைக்காததால் அறியாமல் இருக்கலாம்; இன்னொருவன் கிடைத்த வெளிச்சத்தை அலட்சியப்படுத்தியதால் அறியாமல் இருக்கலாம்.
அதனால்தான் ஓசியா 4:6-ல்,
“என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள்”
என்று சொல்லும்போது, தொடர்ந்து,
“நீ அறிவை வெறுத்தாய்... உன் தேவனுடைய நியாயப்பிரமாணத்தை மறந்தாய்”
என்றும் சொல்லப்படுகிறது.
சில அறியாமைகள் innocent ignorance அல்ல; அது அலட்சியத்தினால், நிராகரிப்பினால், கிடைத்த வெளிச்சத்தைப் புறக்கணித்ததினால் உருவான அறியாமையாக இருக்கலாம்.
அதனால்தான் லூக்கா 12:47–48-ல் ஆண்டவர் அறிந்த ஊழியக்காரனுக்கும் அறியாத ஊழியக்காரனுக்கும் வேறுபாடு காட்டுகிறார்.
அறிந்தும் செய்யாதவன் அநேக அடிகள் அடிக்கப்படுகிறான்.
அறியாமல் அடிகளுக்கு ஏதுவானதைச் செய்தவன் சில அடிகள் அடிக்கப்படுகிறான்.
இதில் இரண்டும் இருக்கின்றன:
அறிவு பொறுப்பை அதிகரிக்கிறது.
அதே நேரத்தில்,
அறியாமை எல்லாப் பொறுப்பையும் அழித்துவிடுவதில்லை.
ஆகவே அறியாமையை நாம் ஆசீர்வாதமாகப் பார்க்க முடியாது.
ஒரு மனிதன் ஆவிக்குரிய இருளில் இருக்கிறான் என்றால்,
“அவனுக்குத் தெரியவில்லை; அப்படியே இருக்கட்டும்”
என்று நாம் சொல்ல முடியாது.
இருளில் இருக்கிறவன் வெளிச்சத்திற்கு வர வேண்டும்.
மரணத்தில் இருக்கிறவன் ஜீவனுக்குள் வர வேண்டும்.
அடிமைத்தனத்தில் இருக்கிறவன் விடுதலை பெற வேண்டும்.
அறியாதவன் சத்தியத்தை அறிய வேண்டும்.
15. John Newton — காணாததைப் பின்னால் கண்ட மனிதன்
இதற்கு வரலாற்றிலிருந்து ஒரு எடுத்துக்காட்டையும் பார்க்கலாம்.
John Newton என்ற பெயரை உங்களில் அநேகர் கேள்விப்பட்டிருப்பீர்கள். உலகம் முழுவதும் பாடப்படுகிற “Amazing Grace” என்ற பாடலை எழுதியவர் அவர்தான்.
John Newton-ன் வாழ்க்கையில் அடிமை வியாபாரத்தோடு ஆழமான தொடர்பு இருந்தது. ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைப்படுத்தப்பட்ட மக்களை ஏற்றிச் சென்ற கப்பல்களில் அவர் பணியாற்றினார்; பின்னர் slave-trading voyages-க்கு captain ஆகவும் இருந்தார்.
1748-ல் கடலில் ஏற்பட்ட ஒரு பயங்கரமான புயலின்போது அவருடைய வாழ்க்கையில் ஒரு முக்கியமான ஆவிக்குரிய திருப்பம் ஏற்பட்டது. பின்னாளில் அந்தக் காலத்தைத் தன்னுடைய conversion-ன் ஆரம்பமாக அவர் பார்த்தார்.
ஆனால் இங்கேதான் நம்முடைய ஆய்வுக்கு மிகவும் முக்கியமான ஒரு காரியம் இருக்கிறது.
அந்த ஆவிக்குரிய திருப்பம் ஏற்பட்ட உடனேயே John Newton அடிமை வியாபாரத்தின் முழுத் தீமையையும் உணர்ந்து அதிலிருந்து வெளியே வந்துவிடவில்லை.
அதற்குப் பிறகும் அவர் slave trade-ல் தொடர்ந்தார்.
ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் தேவன் கிரியை செய்ய ஆரம்பித்திருக்கலாம். அவன் கிறிஸ்துவை நோக்கித் திரும்பியிருக்கலாம். ஆனால் அதனால் அவனுடைய வாழ்க்கையில் இருக்கிற எல்லா blind spots-உம் ஒரே நாளில் வெளிச்சத்திற்கு வந்துவிடுகின்றன என்று சொல்ல முடியாது.
சில காரியங்களை தேவன் காலப்போக்கில் வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறார். இதனால் அந்தக் காலத்தில் செய்யப்பட்ட தவறு சரியானதாகிவிடுவதில்லை; வெளிச்சம் வருவதற்கு முன்பும் தவறு தவறுதான். ஆனால் தேவனுடைய கிருபை, ஒருவன் இதுவரை பார்க்காததை அவனுக்குக் காட்டி, அதிலிருந்து திரும்புவதற்கும் வழிநடத்த முடியும்.
ஒரு சமூகம் ஒரு காரியத்தைச் சாதாரணமாக ஏற்றுக்கொண்டிருக்கலாம்; அந்தச் சமூகத்திற்குள் வாழ்கிற ஒரு மனிதனுடைய மனச்சாட்சியும் அதனால் பாதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் சமூகம் ஒரு காரியத்தை ஏற்றுக்கொண்டதினால் அது தேவனுடைய பார்வையில் சரியாகிவிடுவதில்லை.
John Newton பின்னாளில் அடிமை வியாபாரத்திலிருந்து விலகியது மட்டுமல்லாமல், அதன் கொடுமைகளை வெளிப்படையாக எதிர்த்தார். தானே நேரடியாகக் கண்ட slave trade-ன் கொடுமைகளைப் பற்றிச் சாட்சியளித்தார். பிரிட்டனில் அடிமை வியாபாரத்தை ஒழிப்பதற்கான போராட்டத்திலும் அவருடைய சாட்சி பயன்படுத்தப்பட்டது.
ஒருகாலத்தில் அவர் பார்க்காததைப் பின்னால் பார்க்க ஆரம்பித்தார்.
ஒருகாலத்தில் அவருடைய வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்ததைப் பின்னால் பயங்கரமான தீமையாக உணர்ந்தார்.
அதுதான் blind spot-ன் பயங்கரம்.
ஒரு காரியம் என்னுடைய blind spot-ல் இருக்கிறது என்பதினால் அது இல்லாமல் போய்விடுவதில்லை.
அதே நேரத்தில் அதுதான் தேவனுடைய கிருபையின் அழகும்.
தேவன் நம்மை இருளிலேயே விட்டுவிடுவதில்லை. நம்முடைய கண்களைத் திறக்கிறார். முன்பு பார்க்காததைப் பார்க்கச் செய்கிறார். முன்பு நியாயப்படுத்தியதை இனி நியாயப்படுத்த முடியாதபடி செய்கிறார். முன்பு சாதாரணமாகத் தெரிந்ததை அவருடைய வெளிச்சத்தில் பார்க்கச் செய்கிறார்.
John Newton எழுதிய “Amazing Grace” பாடலில் மிகவும் பிரபலமான ஒரு வரி இருக்கிறது:
“Was blind, but now I see.”
இந்த வரியை அவர் குறிப்பாக slave trade-ஐ மட்டும் நினைத்துத்தான் எழுதினார் என்று நாம் சொல்ல முடியாது. அது அவருடைய முழு கிருபை அனுபவத்தைப் பற்றிய ஆழமான சாட்சி.
ஆனால் அவருடைய வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போது, அந்த வார்த்தைகள் இன்னும் ஆழமான அர்த்தத்தை நமக்குக் கொடுக்கின்றன.
ஒரு காலத்தில் பார்க்கவில்லை.
பிறகு பார்க்க ஆரம்பித்தார்.
அதுதான் நமக்கும் தேவையான கிருபை.
16. ஆண்டவரே, என்னுடைய Blind Spots-ஐ எனக்குக் காட்டும்
“ஆண்டவரே, மற்றவர்களுடைய blind spots-ஐ எனக்குக் காட்டும்” என்பது நம்முடைய முதல் ஜெபமாக இருக்கக்கூடாது.
“ஆண்டவரே, என்னுடைய blind spots-ஐ எனக்குக் காட்டும்” என்பதுதான் நம்முடைய ஜெபமாக இருக்க வேண்டும்.
நம்முடைய உண்மையான நிலையை நாமே முழுமையாகக் காண முடியாததால், நமக்கு வெளியிலிருந்து தேவனுடைய வெளிச்சம் வர வேண்டும்.
ஆனால் இங்கே இன்னொரு அழகான உண்மையையும் நாம் மறந்துவிடக்கூடாது. தேவன் நம்முடைய பாவத்தை வெளிச்சத்திற்குக் கொண்டுவருவது நம்மைத் தம்மிடமிருந்து விரட்டுவதற்காக அல்ல; நாம் பார்க்காததைப் பார்க்கச் செய்து, அவர் ஏற்படுத்திய பரிகாரத்திற்குள் நம்மைக் கொண்டுவருவதற்காக.
லேவியராகமம் 4-ஐ மறுபடியும் நினைத்துப் பாருங்கள். ஒருவன் அறியாமல் பாவம் செய்திருக்கிறான். பிறகு அந்தப் பாவம் அவனுக்குத் தெரியவருகிறது. தேவன் அவனுடைய பாவத்தை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துவிட்டு, “இப்போது உனக்கு நம்பிக்கை இல்லை” என்று அவனை விட்டுவிடவில்லை. அந்தப் பாவத்திற்கான பலியையும் தேவனே ஏற்படுத்தியிருந்தார்.
இதுதான் எவ்வளவு அழகானது!
பாவத்தை வெளிப்படுத்துகிற தேவனே பரிகாரத்திற்கான வழியையும் ஏற்படுத்துகிறார். வெளிச்சத்தைக் கொடுக்கிற தேவனே கிருபையையும் கொடுக்கிறார்.
புதிய ஏற்பாட்டில் இந்த உண்மை இன்னும் மகிமையாக நம்முன்பாக நிற்கிறது. தேவனுடைய வெளிச்சத்தில் நம்முடைய பாவத்தைப் பார்க்கும்போது, அந்த வெளிச்சத்திலிருந்து ஓடிப்போக வேண்டியதில்லை. நம்முடைய பாவத்திற்காகத் தம்மையே பலியாக ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவிடம் வரலாம்.
எனவே தேவனுடைய வெளிச்சமும் தேவனுடைய கிருபையும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல.
தேவனுடைய வெளிச்சம் நான் பார்க்காத பாவத்தை எனக்குக் காட்டுகிறது; தேவனுடைய கிருபை அந்தப் பாவத்தோடு என்னைக் கிறிஸ்துவிடம் அழைத்துச் செல்கிறது.
அதனால், “ஆண்டவரே, என்னுடைய blind spots-ஐ எனக்குக் காட்டும்” என்று ஜெபிப்பதற்கு நாம் பயப்பட வேண்டியதில்லை. அவர் காட்டுகிற இடத்திலேயே அவருடைய கிருபையும் நம்மைச் சந்திக்கிறது.
அதனால்தான் நற்செய்தி அறிவிக்கப்படுகிறது; தேவனுடைய வார்த்தை போதிக்கப்படுகிறது. அந்தச் சத்தியத்தின் வெளிச்சத்தில் பரிசுத்த ஆவியானவர் பாவத்தைக் குறித்தும், நீதியைக் குறித்தும், நியாயத்தீர்ப்பைக் குறித்தும் மனிதனை உணர்த்துகிறார்.
எனவே நாம் இரண்டு தவறுகளையும் செய்யக்கூடாது.
“முதலாவது, ‘எனக்குத் தெரியவில்லை; ஆகவே நான் குற்றமற்றவன்’ என்று சொல்லக்கூடாது.
அதே நேரத்தில்,
இரண்டாவது, அறியாமல் அல்லது தவறுதலாக நிகழ்ந்த மீறுதலையும், தேவனுடைய அதிகாரத்தை அவமதித்து அவருக்கு எதிராகத் துணிகரமாகச் செய்யப்படுகிற கலகத்தையும் ஒரே விதமாகக் கருதக்கூடாது.
தேவன் மனிதனுடைய அறிவின் அளவையும் அறியாமையையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறார்; அதற்கேற்ப பொறுப்பிலும் வேறுபாடு இருக்கிறது. ஆனால் மனிதன் அறியாமல் செய்தான் என்பதினால், தேவனுடைய பார்வையில் தவறானது சரியானதாக மாறிவிடுவதில்லை.
இதுதான் லேவியராகமம் நான்காம் அதிகாரத்தின் அற்புதமான சமநிலை.
அதனால் மீண்டும் சங்கீதக்காரனுடைய ஜெபத்துக்குத் திரும்புகிறோம்:
“தன் பிழைகளை உணர்கிறவன் யார்? மறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.”
நான் என்னைக் குறித்துத் தெரிந்திருக்கிறதைவிட, தேவன் என்னைக் குறித்து அதிகமாக அறிந்திருக்கிறார்.
அதனால்தான் நான் என்னையே நம்பாமல், தேவனுடைய வெளிச்சத்தை நாட வேண்டும்.
அதனால் இந்தப் பாடத்தை ஒரு ஜெபத்தோடு முடிப்போம்.
ஆண்டவரே, மற்றவர்களுடைய வாழ்க்கையில் இருப்பதைப் பார்க்கிற கண்களை மட்டும் எனக்குத் தராமல், உம்முடைய வெளிச்சத்தில் என்னையே பார்க்கிற கண்களை எனக்குத் தாரும்.
நான் என்னைப்பற்றி நினைத்துக்கொண்டிருப்பதைவிட, நீர் என்னைப்பற்றி அறிந்திருக்கிறதே உண்மை. நான் பார்க்க விரும்புகிறதை மட்டும் அல்ல, நீர் எனக்குக் காட்ட விரும்புகிறதையும் பார்க்க எனக்குக் கிருபை தாரும்.
நான் சரி என்று நினைத்துக்கொண்டிருக்கிற, ஆனால் உம்முடைய பார்வையில் சரியில்லாத காரியம் என்னிடத்தில் இருந்தால் அதைக் காட்டும். நான் நியாயப்படுத்திக்கொண்டிருக்கிற காரியம் இருந்தால் அதைக் காட்டும். என் மனச்சாட்சி உணராமல் போன இடம் இருந்தால் அதைக் காட்டும். என் இருதயம் கடினப்பட்டிருக்கிற இடம் இருந்தால் அதைக் காட்டும். எனக்கே தெரியாத என்னுடைய blind spots-ஐ உம்முடைய வெளிச்சத்திற்குள் கொண்டுவாரும்.
ஆனால் ஆண்டவரே, நீர் காட்டுகிறதைப் பார்த்து நான் உம்மைவிட்டு ஓடிப்போகாமல், உம்மிடமே ஓடிவர எனக்குக் கிருபை தாரும். ஏனென்றால் என்னுடைய பாவத்தை வெளிப்படுத்துகிற நீரே, அந்தப் பாவத்திற்கான பரிகாரமாக உம்முடைய குமாரனை எனக்காகத் தந்திருக்கிறீர்.
உம்முடைய வெளிச்சத்தில் நான் பார்க்கட்டும். உம்முடைய கிருபையில் நான் மனந்திரும்பட்டும். கிறிஸ்துவில் நான் சுத்திகரிக்கப்படட்டும். உம்முடைய ஆவியானவரால் நான் மாற்றப்படட்டும்.
“தன் பிழைகளை உணர்கிறவன் யார்? மறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.”
ஆமென்.