லேவியராகமம் கிறிஸ்தவர்களுக்குச் சம்பந்தமில்லாத பழைய சடங்குகளின் புத்தகம் அல்ல; அது கிறிஸ்துவை நமக்கு வெளிப்படுத்துகிற புத்தகம்.
தேவனை அணுகுவதற்கு மனிதன் தன் விருப்பப்படி ஒரு வழியை ஏற்படுத்த முடியாது; தேவன் நியமித்த வழியில்தான் அவரை அணுக வேண்டும்.
பாவம் என்பது வெறும் தவறான செயல் மட்டுமல்ல; அது தேவனோடும் மனிதர்களோடும் உள்ள உறவுகளைப் பாதிக்கிறது.
பாவம் நாம் எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்துகிறது; தேவனுடைய பரிசுத்தமான கோபத்திற்கும் நியாயத்தீர்ப்பிற்கும் நம்மை உட்படுத்துகிறது.
பாவம் மனிதனுடைய சிந்தனை, மனச்சாட்சி, விருப்பங்கள் ஆகியவைகளை நஞ்சாக்கக்கூடியது.
ஆனால் பாவத்தின் நஞ்சைக் காட்டுகிற தேவனே அதற்கான மாற்று மருந்தாகப் பாவநிவாரண பலியையும் ஏற்படுத்தியிருக்கிறார்.
பாவநிவாரண பலி மனிதனுடைய பொருளாதார நிலையை மட்டுமல்ல, அவனுடைய சமூக அந்தஸ்தையும் பொறுப்பையும் கருத்தில் கொள்கிறது.
ஆசாரியன், முழுச் சபை, தலைவன், சாதாரண மனிதன் என நான்கு சாரார் குறிப்பிடப்பட்டாலும், பாவநிவிர்த்தியின் தேவையிலிருந்து யாரும் விதிவிலக்கல்ல.
பாவத்தை மறுப்பதோ, மறைப்பதோ, நியாயப்படுத்துவதோ தீர்வல்ல; தேவனுடைய சந்நிதியில் அதை உண்மையாக அறிக்கையிட வேண்டும்.
லேவியராகமம், அதிகாரம் 4, பாகம் 2, பாடம் 10
பாவம், பலி, பாவ அறிக்கை
கர்த்தருக்குள் பிரியமான பரிசுத்தவான்கள் அனைவருக்கும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் வாழ்த்துக்கள்.
இன்றைக்கு நாம் லேவியராகமம் 4 ஆம் அதிகாரத்தில் பாவநிவாரண பலியைத் தொடர்ந்து பார்க்கப்போகிறோம்.
கடந்த பாடத்தில் “அறியாமையினால்” செய்யப்பட்ட பாவத்தைப்பற்றி நாம் விரிவாகப் பார்த்தோம். எனவே அதை இன்று மறுபடியும் விரிவாகப் பார்க்கப்போவதில்லை. தேவையான இடத்தில் மட்டும் நினைவுபடுத்திக்கொள்வோம்.
இந்த அதிகாரத்திற்குள் இன்னும் கொஞ்சம் ஆழமாகச் செல்லப்போகிறோம். ஏன் இத்தனை விதிமுறைகள்? ஏன் காளை? ஏன் பலியின்மேல் கை வைக்க வேண்டும்? ஏன் அது கொல்லப்பட வேண்டும்? ஏன் இரத்தத்தை உள்ளே கொண்டுபோக வேண்டும்? ஏன் இரத்தம் திரைச்சீலைக்கு முன்பாகத் தெளிக்கப்படுகிறது? ஏன் தூபபீடத்தின் கொம்புகளில் பூசப்படுகிறது? ஏன் மீதி இரத்தம் வேறொரு இடத்தில் ஊற்றப்படுகிறது? ஏன் கொழுப்பு மட்டும் பலிபீடத்திற்குச் செல்கிறது? ஏன் உடல் பாளயத்திற்கு வெளியே கொண்டுபோகப்படுகிறது?
இவையெல்லாம் வெறும் மதச் சடங்குகள்தானா? அப்படியானால் இவைகளை நாம் ஏன் படிக்க வேண்டும்? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை நாம் தொடர்ந்து வரும் பாடத்தில் விரிவாகப் பார்க்கப்போகிறோம். ஆனால் அதற்குமுன் பாவநிவாரண பலியின் பின்னணியையும், தேவன் ஏற்படுத்திய வழிகளையும், பாவத்தின் விளைவுகளையும் புரிந்துகொள்ள வேண்டும். அதைத்தான் இன்று பார்க்கப்போகிறோம்.
1. லேவியராகமமும் கிறிஸ்தவனும்
அதற்குமுன் ஒரு காரியத்தை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். பொதுவாகக் கிறிஸ்தவர்கள் பழைய ஏற்பாட்டிற்குக் கொடுக்கவேண்டிய முக்கியத்துவத்தைக் கொடுப்பதில்லை.
நாம் புதிய ஏற்பாட்டை வாசிக்கிறோம். நற்செய்தி நூல்களை, பவுலின் நிருபங்களை வாசிக்கிறோம். சங்கீதம், நீதிமொழிகளை வாசிக்கிறோம். ஆதியாகமம் நமக்குப் பிடிக்கும். யோசேப்பின் வாழ்க்கை, ஆபிரகாமின் வாழ்க்கை—அவைகளை ஆர்வமாக வாசிப்போம். யாத்திராகமத்தில் மோசே, பார்வோன், பத்து வாதைகள், செங்கடல்—இவைகளெல்லாம் நமக்குப் புரிகின்றன.
ஆனால் லேவியராகமத்திற்கு வரும்போது வேகம் குறைந்துவிடுகிறது! காளை. ஆடு. வெள்ளாடு. இரத்தம். கொழுப்பு. ஈரல். சிறுநீரகம். பலிபீடம். ஆசாரியன். சுத்தம். அசுத்தம். இதை இங்கே தெளிக்க வேண்டும்; அதை அங்கே பூச வேண்டும்; இதை வெளியே கொண்டுபோக வேண்டும்...
“ஆண்டவரே, இதற்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?” என்று தோன்றுகிறது. ஒருவேளை நாம் அப்படிச் சொல்லமாட்டோம். ஆனால் நடைமுறையில் அப்படித்தான் செய்கிறோம். “பழைய ஏற்பாடு இருக்கட்டும்; புதிய ஏற்பாடுதான் கிறிஸ்தவர்களாகிய எங்களுக்கான வேதாகமம்” என்பதுபோல நடந்துகொள்கிறோம்.
அப்படியானால், லேவியராகமம் யாருடைய வேதாகமம்? யூதர்களுடைய வேதாகமமா? கிறிஸ்தவனுக்கு இதனால் என்ன பயன்?
இந்தக் கேள்விக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே பதில் சொல்கிறார்.
அவர் உயிர்த்தெழுந்தபிறகு எம்மாவுக்குப் போய்க்கொண்டிருந்த இரண்டு சீடர்களோடு நடந்து செல்கிறார். அவர்களுக்கு இன்னும் காரியம் புரியவில்லை. அப்பொழுது லூக்கா 24:27 என்ன சொல்கிறது?
“மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்.”
அவர்களுடைய கையில் அப்போது புதிய ஏற்பாடு இல்லை. அவர் எந்த வேதாகமத்தைத் திறந்தார்? மோசேயைத் திறந்தார். மோசேயின் புத்தகங்களுக்குள்தான் லேவியராகமமும் இருக்கிறது. அங்கே அவர் தம்மைக் காட்டினார்.
இதுதான் லேவியராகமத்தை நாம் வாசிக்க வேண்டிய திறவுகோல்.
எபிரெயர் 10:1 இன்னும் ஒரு படி மேலே செல்கிறது. நியாயப்பிரமாணம் “வரப்போகிற நன்மைகளின்... நிழலாயிருக்கிறது” என்று கூறுகிறது.
நிழல் இருக்கிறது என்றால் எங்கேயோ ஒரு நிஜம், மெய், substance இருக்க வேண்டும். ஒரு மனிதனுடைய நிழலைப் பார்த்தால் அந்த நிழலையே பார்த்துக்கொண்டிருக்கமாட்டோம். அந்த நிழல் யாருடையது என்று திரும்பிப் பார்ப்போம்.
அதுபோல லேவியராகமத்தில் காளை, பலிபீடம், ஆசாரியன், இரத்தம், தூபம். பலி ஆகியவைகளைப் பார்க்கிறோம். நாம் நிழலை மட்டும் பார்த்துக்கொண்டிருக்கக்கூடாது.
திரும்பிப் பாருங்கள்.
அந்த நிழல் யாருடையது?
அதனால்தான் இந்தப் பாடத்தில் நான் உங்களிடம் மீண்டும் மீண்டும் ஒரு கேள்வியைக் கேட்கப்போகிறேன்:
இந்தப் பலியில் கிறிஸ்து இருக்கிறாரா?
இருந்தால் எங்கே இருக்கிறார்?
எப்படி இருக்கிறார்?
இந்தக் கேள்வியை மனதில் வைத்துக்கொண்டு லேவியராகமம் 4-ஐ வாசித்துப் பாருங்கள். அப்போது இது இறந்துபோன சடங்குகளின் புத்தகமாக இருக்காது.
காளையைப் பார்க்கும்போது கிறிஸ்துவைப் பார்ப்போம்.
இரத்தத்தைப் பார்க்கும்போது கிறிஸ்துவைப் பார்ப்போம்.
பலிபீடத்தைப் பார்க்கும்போது கிறிஸ்துவைப் பார்ப்போம்.
பாளயத்திற்கு வெளியே கொண்டுசெல்லப்படும் பலியைப் பார்க்கும்போது கிறிஸ்துவைப் பார்ப்போம்.
அப்போது லேவியராகமம் நமக்குச் சம்பந்தமில்லாத ஒரு பழைய புத்தகமாக இருக்காது.
அது கிறிஸ்துவை நமக்கு வெளிப்படுத்துகிற புத்தகமாக மாறிவிடும்.
2. ஐந்து பலிகளில் பாவநிவாரண பலியின் இடம்
சரி, இப்போது நாம் பாவநிவாரண பலிக்கு வருவோம். ஆனால் அதற்குமுன் ஒரு காரியத்தை மறுபடியும் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். லேவியராகமத்தின் முதல் அதிகாரங்களிலே தேவன் ஐந்து முக்கியமான பலிகளை நமக்குக் கொடுத்திருக்கிறார்.
சர்வாங்க தகனபலி.
போஜனபலி.
சமாதானபலி.
பாவநிவாரண பலி.
குற்றநிவாரண பலி.
இதில் ஒரு காரியத்தைக் கவனித்தீர்களா? பாவநிவாரண பலி முதலாவது வரவில்லை.
நம் எண்ணத்தின்படி பார்த்தால் அதுதான் முதலாவது வரவேண்டும் என்று தோன்றும். ஏனென்றால் நான் யார்? நான் ஒரு பாவி. எனக்கு முதலாவது என்ன தேவை? பாவமன்னிப்பு. அப்படியானால் தேவன் பாவநிவாரண பலியைத்தான் முதலாவதாக வைத்திருக்க வேண்டும். இல்லையா? ஆனால் தேவன் அப்படிச் செய்யவில்லை.
முதலாவது—சர்வாங்க தகனபலி.
அடுத்தது—போஜனபலி.
அடுத்தது—சமாதானபலி.
அதற்குப்பிறகுதான்—பாவநிவாரண பலி.
ஏன்?
இந்த வரிசை தற்செயலாக வந்ததா? மோசே ஐந்து பலிகளையும் ஏதோ ஒரு வரிசையில் எழுதிவிட்டாரா? இல்லை. இது தேவன் சொன்ன வரிசை. ஆகவே இந்த வரிசையிலும் ஒரு தெய்வீக எண்ணம் இருக்க வேண்டும்.
முதல் மூன்று பலிகளைப் பார்க்கும்போது ஒரு சொற்றொடர் திரும்பத் திரும்ப வருகிறது. லேவியராகமம் 1:9இல் சர்வாங்க தகனபலி, 2:2இல் போஜனபலி, 3:5இல் சமாதானபலி ஆகிய மூன்று பலிகளும் “கர்த்தருக்குச் சுகந்த வாசனையான பலி” என்று வாசிக்கிறோம்
அப்படியானால் இந்த முதல் மூன்று பலிகள் பாவியின் தேவையை அல்ல, தேவனுக்குக் கிடைக்கிற திருப்தியை அதிகமாக வலியுறுத்துகின்றன.
பொதுவாக நாம் இரட்சிப்பைப்பற்றிச் சிந்திக்கும்போது நம்மிடமிருந்துதான் நாம் ஆரம்பிக்கிறோம்.
என்னுடைய பாவம். என்னுடைய குற்றம். என்னுடைய மன்னிப்பு.
என்னுடைய இரட்சிப்பு. நான் நரகத்திற்குப் போகக்கூடாது. நான் பரலோகத்திற்குப் போக வேண்டும்.
இவையெல்லாம் உண்மை. இவைகளில் ஒன்றையும் குறைத்துச் சொல்லவில்லை. ஆனால் தேவன் எங்கிருந்து ஆரம்பிக்கிறார்?
தம்மிடமிருந்து.
இது நம்முடைய பார்வைக்கும் தேவனுடைய பார்வைக்கும் உள்ள ஒரு பெரிய வித்தியாசம்.
“இந்தப் பலியினால் எனக்கு என்ன கிடைக்கிறது?” என்று நாம் கேட்கிறோம். ஆனால், “இந்தப் பலியில் எனக்குப் பிரியமானது என்ன?” என்று தேவன் காட்டுகிறார். அதனால்தான் முதலாவது சர்வாங்க தகனபலி வருகிறது. அது முழுவதும் பலிபீடத்தின்மேல் தகனிக்கப்படுகிறது. அதில் மனிதனுக்கென்று ஒன்றும் இல்லை. அது தேவனுக்காக இருக்கிறது.
இதில் கிறிஸ்துவைப் பார்க்க வேண்டும். எபேசியர் 5:2 என்ன சொல்கிறது? “கிறிஸ்து நம்மில் அன்புகூர்ந்து, சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் தம்மைத்தாமே தேவனுக்கு ஒப்புக்கொடுத்தார்.”
கவனித்தீர்களா? “கிறிஸ்து நமக்காக மரித்தார்” என்று மட்டும் சொல்லவில்லை. அது உண்மை. ஆனால் இங்கே இன்னொரு பக்கம் காட்டப்படுகிறது.
அவர் தம்மைத்தாமே தேவனுக்கு ஒப்புக்கொடுத்தார்.
நமக்காக—ஆம்.
ஆனால் தேவனுக்கு.
சிலுவையை மனிதனுடைய தேவையிலிருந்து மட்டும் பார்க்கக்கூடாது. தேவனுடைய பக்கத்திலிருந்தும் பார்க்க வேண்டும்.
கிறிஸ்து நம்முடைய பாவத்தைச் சுமந்தவர் மட்டுமல்ல. அவர் தம்முடைய முழு வாழ்க்கையிலும், கீழ்ப்படிதலிலும், மரணத்திலும் பிதாவுக்குப் பரிபூரணமான திருப்தியைக் கொடுத்தவர்.
அதனால்தான் நான் அடிக்கடி ஒரு காரியத்தைச் சொல்வேன்:
தேவன் என்னை ஏற்றுக்கொள்ளாமல் நான் கொடுப்பதை ஏற்றுக்கொள்ளமாட்டார். அவருக்கு முதலாவது தேவை நாம். நம்மைக் கொடுத்தபிறகுதான் நாம் கொடுப்பதை அவர் ஏற்றுக்கொள்வார். நாம் தேவனுக்கு என்ன கொடுக்கிறோம் என்பதற்குமுன், நாம் தேவனுக்கு யாராக இருக்கிறோம் என்பது வருகிறது.
ரோமர் 12:1இல் பவுல், “உங்கள் பணத்தைக் கொடுங்கள். உங்கள் நேரத்தைக் கொடுங்கள். உங்கள் திறமையைக் கொடுங்கள்,” என்று சொல்லவில்லை. “உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுங்கள்,” என்று சொல்கிறார்.
முதலாவது நாம் நம்மைக் கொடுக்க வேண்டும். நான் தேவனுக்கு ஊழியம் செய்யலாம். பணம் கொடுக்கலாம். நேரம் கொடுக்கலாம். தேவனுக்காகப் பாடலாம். பிரசங்கிக்கலாம். வேலை செய்யலாம். பல காரியங்களைச் செய்யலாம்.
ஆனால் தேவனோ, “நீ எங்கே? உன் காணிக்கை மட்டும் எனக்கு வேண்டாம். உன் வேலை மட்டும் எனக்கு வேண்டாம். உன் ஊழியம் மட்டும் எனக்கு வேண்டாம். எனக்கு நீ வேண்டும்,” என்று கூறுகிறார்.
இப்போது மறுபடியும் லேவியராகமத்திற்கு வருகிறோம்.
சர்வாங்க தகனபலி—முழுவதும் தேவனுக்காக.
போஜனபலி—கிறிஸ்துவின் பரிபூரணமான மனித வாழ்க்கையின் அழகை நமக்குக் காட்டுகிறது.
சமாதானபலி—தேவனோடும் மனிதனோடும் உள்ள ஐக்கியத்தின் மகிழ்ச்சியை நமக்குக் காட்டுகிறது.
அதற்குப்பிறகு பாவநிவாரண பலி வருகிறது.
இங்கே இன்னொரு அழகான காரியம் இருக்கிறது.
இந்த ஐந்து பலிகளின் வரிசையை கிறிஸ்துவின் வெளிச்சத்தில் பார்க்கும்போது ஓர் அழகான ஆவிக்குரிய சித்திரத்தைக் காண்கிறோம். முதலில் கிறிஸ்து தேவனுக்குக் கொடுத்த பரிபூரணமான திருப்தியைக் காண்கிறோம். பின்னர் அவர்மூலம் கிடைக்கும் ஐக்கியத்தைக் காண்கிறோம். அதன்பிறகு நம்முடைய பாவத்தை அவர் எவ்வாறு கையாள்கிறார் என்பதைப் பார்க்கிறோம்.
நம் வரிசையில் என்ன?
பாவம் → மன்னிப்பு → கிறிஸ்து.
தேவனுடைய வரிசையில்?
கிறிஸ்து → அவர் தேவனுக்குக் கொடுத்த திருப்தி → அவரில் உள்ள ஐக்கியம் → பின்னர் அவர் நம் பாவத்தை எவ்வாறு கையாளுகிறார்.
ஆகவே, பாவநிவாரண பலி நான்காவதாக வருகிறது என்பதே அது முக்கியமல்ல என்று பொருளல்ல. மாறாக, தேவன் நம் பாவத்தைத் தனியாகப் பிரித்துப் பார்க்கவில்லை. கிறிஸ்து யார் என்ற வெளிச்சத்தில் நம் பாவத்திற்கான பதிலைக் காட்டுகிறார்.
இதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.
நாம் பாவத்தைப் பார்க்கப்போகிறோம்.
பாவத்தின் விளைவுகளைப் பார்க்கப்போகிறோம்.
இரத்தத்தைப் பார்க்கப்போகிறோம்.
மரணத்தைப் பார்க்கப்போகிறோம்.
பாளயத்திற்கு வெளியே எரிக்கப்படும் பலியையும் பார்க்கப்போகிறோம்.
இவை மிகவும் கனமான காரியங்கள். ஆனால் இவைகளைப் பார்க்கும்போது நம் கண்கள் பாவத்தின்மேல் மட்டும் இருக்கக்கூடாது. பலியின்மேல் இருக்க வேண்டும். இன்னும் தெளிவாகச் சொன்னால்—கிறிஸ்துவின்மேல் இருக்க வேண்டும். அதுதான் பாவநிவாரண பலியை நாம் புரிந்துகொள்ள வேண்டிய இடம்.
கடந்த பாடத்தில் இந்தப் பலி “அறியாமையினால்” செய்யப்பட்ட பாவத்தை லேவியராகமம் 4 எவ்வாறு கையாளுகிறது என்பதைப் பார்த்தோம். இன்று இந்தப் பலியில் தேவன் ஏற்படுத்தியிருக்கிற விதிமுறைகளையும், அவைகளின் வரிசையையும், பாவத்தின் விளைவுகளையும், பாவநிவாரண பலி செலுத்த வேண்டிய நான்கு சாராரையும் பார்க்கப்போகிறோம். மேலும், பாவம் நமக்குத் தெரியவரும்போது நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் ஆராய்வோம். பலியின் பத்து முக்கியமான அம்சங்களையும், அவைகளில் கிறிஸ்து எவ்வாறு வெளிப்படுகிறார் என்பதையும் அடுத்த பாடத்தில் விரிவாகப் பார்ப்போம்.
3. “அறியாமையினால்” — ஒரு சிறிய நினைவூட்டல்
சரி, இன்னொரு காரியத்தைச் சுருக்கமாக நினைவுபடுத்திக்கொள்வோம். கடந்த பாடத்தில் இதை விரிவாகப் பார்த்தோம். எனவே மறுபடியும் அதற்குள் முழுவதுமாகச் செல்லப்போவதில்லை.
லேவியராகமம் 4:2 எப்படி ஆரம்பிக்கிறது?
“ஒருவன் கர்த்தருடைய கட்டளைகளில் யாதொன்றை அறியாமையினால் மீறி, செய்யத்தகாததைச் செய்து பாவத்துக்கு உட்பட்டால்...”
இங்கே முக்கியமான வார்த்தை “அறியாமையினால்.”
அதாவது, நான் செய்கிற எல்லாப் பாவங்களையும் நான் செய்கிற அந்த நேரத்திலேயே பாவம் என்று உணர்ந்துதான் செய்கிறேன் என்று சொல்ல முடியாது. சில நேரங்களில் நான் பேசியது தவறு என்று எனக்குத் தெரியாமல் இருக்கலாம். நான் நடந்துகொண்ட விதம் தவறு என்று தெரியாமல் இருக்கலாம். என்னுடைய மனப்பாங்கில் ஒரு பிரச்சனை இருக்கலாம்; ஆனால் எனக்கு அது தெரியாமல் இருக்கலாம். மற்றவர்களுக்குத் தெரிந்திருக்கலாம்!
இதுதான் நம் பிரச்சனை.
நம் முகத்தை நம் கண்களால் நேரடியாகப் பார்க்க முடியாததுபோல, நம் வாழ்க்கையிலும் நமக்கே தெரியாத பகுதிகள் இருக்கலாம்.
அதைத்தான் நாம் குருட்டுப்புள்ளிகள் என்று சொல்கிறோம்.
சில நேரங்களில் தேவனுடைய வார்த்தையை வாசிக்கும்போது திடீரென்று வெளிச்சம் வருகிறது. சில நேரங்களில் ஒரு செய்தியைக் கேட்கும்போது வருகிறது. சில நேரங்களில் ஒரு சகோதரனோ சகோதரியோ ஒரு காரியத்தைச் சுட்டிக்காட்டலாம். அப்பொழுதுதான்,
“ஓ! நான் செய்தது தவறா?” என்று நமக்குத் தெரியவருகிறது. அதுவரை தெரியவில்லை.
நான் ஒரு கேள்வி கேட்கிறேன்.
எனக்குத் தெரியவில்லை என்பதால் அது பாவமல்ல என்று ஆகிவிடுமா? இல்லை. அதுதான் லேவியராகமம் 4 நமக்குக் கற்றுக்கொடுக்கிற மிகவும் பயபக்தியான உண்மைகளில் ஒன்று. என்னுடைய அறியாமை தேவனுடைய பரிசுத்தத்தின் தரத்தை மாற்றுவதில்லை.
நான் அறிந்திருக்கிறேனா, அறியவில்லையா என்பது ஒரு பக்கம். தேவன் பரிசுத்தமானவர் என்பது இன்னொரு பக்கம். அதனால்தான் சங்கீதக்காரன் சங்கீதம் 19:12இல் “தன் பிழைகளை உணருகிறவன் யார்? மறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்,” என்ற ஓர் அருமையான கேள்வியைக் கேட்கிறான்.
“எனக்குத் தெரிந்த பாவங்களை மட்டும் மன்னியும்” என்று அவன் ஜெபிக்கவில்லை. “எனக்கே தெரியாதவை இருக்கின்றன, ஆண்டவரே” என்பதுதான் அந்த ஜெபத்தின் பின்னால் இருக்கிற உணர்வு.
இது நம்மை மிகவும் தாழ்மைப்படுத்த வேண்டும்.
நான் 40 வருடமாக, 50 வருடமாக விசுவாசியாக இருக்கலாம். போதிக்கலாம். மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்லலாம். பல காரியங்களில் தேவன் எனக்கு வெளிச்சம் கொடுத்திருக்கலாம். ஆனாலும்—
எனக்கே தெரியாத என்னுடைய பகுதிகள் இருக்கும்.
அதனால் நம்முடைய ஜெபம் எப்போதும், முதலில்: “ஆண்டவரே, என்னுடைய குருட்டுப்புள்ளிகளை எனக்குக் காட்டும்.” அதுதான் பாதுகாப்பான ஜெபம்.
ஆனால் இங்கே இன்னொரு அழகான காரியத்தையும் பாருங்கள். என்னுடைய பாவம் எனக்குத் தெரிவதற்குமுன்பே— தேவன் பலியை ஏற்படுத்தியிருக்கிறார். நான் என் பிரச்சினையை முழுவதுமாக அறிந்துகொள்வதற்குமுன்பே தேவன் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வைத்திருக்கிறார். இதில்தான் மறுபடியும் கிறிஸ்துவின் அருமையைப் பார்க்கிறோம். எனக்குத் தெரிந்த என்னுடைய பாவங்களுக்காக மட்டும் அல்ல, எனக்கே தெரியாத என்னுடைய ஆழங்களுக்காகவும் எனக்குக் கிறிஸ்து தேவை.
அதனால்தான் நாம் நம்முடைய அறிவின்மேல் நம்பிக்கை வைக்கவில்லை. நம்முடைய சுய பரிசோதனையின் பரிபூரணத்தின்மேல் நம்பிக்கை வைக்கவில்லை.
நம்முடைய நம்பிக்கை கிறிஸ்துவின்மேல் இருக்கிறது.
சரி. இப்போது அடுத்த காரியத்திற்கு வருவோம். தேவன் பாவத்திற்கான பலியை ஏற்படுத்தியிருக்கிறார். ஆனால் அந்தப் பலியை மனிதன் தன் விருப்பப்படி செலுத்த முடியுமா? “நான் ஒரு பலி கொடுக்க வேண்டும்; நான் எப்படி வேண்டுமானாலும் தேவனிடம் வரலாம்” என்று சொல்ல முடியுமா? முடியாது.
பலியை ஏற்படுத்திய தேவனே, அந்தப் பலி எப்படி செலுத்தப்பட வேண்டும் என்பதையும் ஏற்படுத்தியிருக்கிறார். அங்கேதான் நாம் அடுத்ததாகப் பார்க்கப்போகிற வழிகளும் விதிகளும் patterns and principles வருகின்றன.
4. Patterns and Principles — தேவன் ஏற்படுத்திய வழிகளும் விதிகளும்
சரி, இப்போது இந்தப் பலிகளை இன்னும் கொஞ்சம் கவனமாகப் பார்ப்போம்.
லேவியராகமத்தை வாசிக்கும்போது, “ஒரு காளையைக் கொண்டுவந்தார்கள்; அதைக் கொன்றார்கள்; இரத்தத்தைத் தெளித்தார்கள்; கொழுப்பை எரித்தார்கள்” என்று சம்பவங்களை மட்டும் வாசித்துவிட்டுப் போய்விடக்கூடாது.
இவைகளுக்குப் பின்னால் சில patterns வழிகள் இருக்கின்றன. சில principles விதிகள் இருக்கின்றன. அவைகளைப் புரிந்துகொண்டால் லேவியராகமம் நமக்கு இன்னும் தெளிவாகத் திறக்கும்.
முதலாவது தேவனை அணுகுவதற்கு தேவனே ஒரு வழியை ஏற்படுத்துகிறார்.
மனிதன் அவனாக ஒரு வழியை உருவாக்கிக்கொண்டு தேவனிடம் வருவதில்லை. இதை ஆரம்பத்திலிருந்தே வேதாகமத்தில் பார்க்கிறோம். காயீனும் ஆபேலும் தேவனிடத்தில் வந்தார்கள். இருவரும் ஏதோ ஒன்றைக் கொண்டுவந்தார்கள். “நான் தேவனை விசுவாசிக்கிறேன்; நான் அவருக்கு ஏதாவது கொடுக்கிறேன்; அது போதும்” என்று சொல்ல முடியாது. தேவனை அணுகுகிற காரியத்தில் மனிதனுடைய உத்தமம் மட்டும் போதாது; தேவனுடைய வழியும் முக்கியம்.
லேவியராகமத்திற்கு வரும்போது இது இன்னும் தெளிவாகிறது. தேவன், “ஒரு பலியைக் கொண்டுவா; மற்றபடி உனக்கு எப்படி வசதியோ உன் விருப்பம்போல் செய்,” என்று சொல்லவில்லை.
எந்த மிருகத்தைக் கொண்டுவர வேண்டும்?
அது எப்படி இருக்க வேண்டும்?
எங்கே கொண்டுவர வேண்டும்?
அதன்மேல் என்ன செய்ய வேண்டும்?
யார் அதைக் கொல்ல வேண்டும்?
இரத்தத்தை யார் எடுக்க வேண்டும்?
அதை எங்கே தெளிக்க வேண்டும்?
எங்கே பூச வேண்டும்?
மீதி இரத்தத்தை என்ன செய்ய வேண்டும்?
கொழுப்பை என்ன செய்ய வேண்டும்?
உடலை எங்கே கொண்டுபோக வேண்டும்?
எல்லாவற்றிற்கும் தேவன் நெறிமுறைகள் கொடுக்கிறார்.
ஏன் இவ்வளவு விவரம்? ஏனென்றால் நாம் பரிசுத்தமான தேவனை அணுகுகிறோம். இவை வெறும் ஆலோசனைகள், பரிந்துரைகள், அல்ல. அவை தேவன் வரையறுத்த கோட்பாடுகள். They are prescribed principles. தேவன் ஏற்படுத்திய விதிமுறைகள்.
இதில் ஒரு பெரிய ஆவிக்குரிய பாடம் இருக்கிறது. இன்றைக்கு மனிதன் பொதுவாக என்ன நினைக்கிறான்? “நான் உத்தமமாக இருந்தால் போதும். நான் தேவனை என்னுடைய விதத்தில் வழிபடுகிறேன். நீ உன்னுடைய விதத்தில் வழிபடு. எல்லா வழிகளும் கடைசியில் ஒரே இடத்திற்குத்தானே போகின்றன?” வேதாகமம் அப்படிச் சொல்லவில்லை. தேவனை அணுகுகிற வழியை மனிதன் தீர்மானிப்பதில்லை. தேவன் தீர்மானிக்கிறார்.
அதனால்தான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, “நான் ஒரு வழி” என்று சொல்லவில்லை. யோவான் 14:6-ல் அவர் என்ன சொன்னார்? “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.”
நானே வழி. அப்படியானால் லேவியராகமத்தில் தேவன் ஏற்படுத்திய பலிகளைப் பார்க்கும்போது, “என்ன ஒரு complicated system!” என்று மட்டும் சொல்லாதீர்கள். அதற்குப் பின்னால் ஒரு பெரிய உண்மை இருக்கிறது:
பாவியான மனிதன் பரிசுத்தமான தேவனிடத்தில் தன் வழியில் வர முடியாது. தேவன் ஏற்படுத்திய வழியில் வர வேண்டும்.
பழைய ஏற்பாட்டில் தேவன் பலியையும் ஆசாரியனையும் இரத்தத்தையும் ஏற்படுத்தினார். அவைகளெல்லாம் எங்கே கொண்டுபோகின்றன? கிறிஸ்துவிடம்.
இப்போது இரண்டாவது principle, கோட்பாடு.
தேவன் ஒரு வழியை மட்டும் ஏற்படுத்தவில்லை; அந்த வழிக்குள் ஒரு ஒழுங்கையும் ஏற்படுத்தியிருக்கிறார்.
There is a prescribed order.
“எல்லாவற்றையும் செய்கிறேன்; ஆனால் எந்த வரிசையில் செய்தால் என்ன?” என்று சொல்ல முடியாது.
இரத்தத்தை எடுப்பதற்குமுன் பலி கொல்லப்பட வேண்டும். பலியைக் கொல்வதற்குமுன் அது கொண்டுவரப்பட வேண்டும். அதன்மேல் கை வைக்கப்பட வேண்டும். இரத்தம் எங்கே செல்ல வேண்டும் என்பதற்கும் ஒரு வரிசை இருக்கிறது.
தேவன் ஒழுங்கின் தேவன், ஒழுங்கீனத்தின் தேவன் அல்ல. அவர் ஏற்படுத்திய வழியில், அவர் ஏற்படுத்திய வரிசையில் மனிதன் அவரை அணுகுகிறான். இதை நம் இரட்சிப்பிலும் நாம் பார்க்கிறோம்.
நான் என்னுடைய நல்ல செயல்களைக் கொண்டுவந்து, என்னைச் சுத்தப்படுத்திக்கொண்டு, என்னைத் தகுதியுள்ளவனாக்கிக்கொண்டு, கடைசியில் கிறிஸ்துவிடம் வருவதில்லை.
முதலில் கிறிஸ்துவிடம் வருகிறேன்.
அவர்தான் என்னைச் சுத்திகரிக்கிறார். அவர்தான் என்னை ஏற்றுக்கொள்ளத்தக்கவனாக்குகிறார். அவருடைய பலியின் அடிப்படையில்தான் நான் தேவனிடத்தில் நிற்கிறேன்.
நம்முடைய ஒழுங்கை தேவனுடைய ஒழுங்காக மாற்ற முயலக்கூடாது.
இப்போது மூன்றாவது principle.
இது மிகவும் முக்கியமானது.
இந்தப் பாவநிவாரண பலியின் தேவை யாருக்கும் இல்லாமல் போய்விடவில்லை. லேவியராகமம் 4-ஐப் பாருங்கள். அங்கு நான்கு சாராரைப் பார்க்கிறோம்.
அபிஷேகம் பெற்ற ஆசாரியன் பாவம் செய்கிறான்.
முழு இஸ்ரயேல் சபையும் பாவம் செய்கிறது.
தலைவன் பாவம் செய்கிறான்.
சாதாரண மக்களில் ஒருவனும் பாவம் செய்கிறான்.
யாரையும் விடவில்லை. ஆசாரியனும் பாவம் செய்வான். தலைவனும் பாவம் செய்வான். சாதாரண மனிதனும் பாவம் செய்வான்.
இதை நம் வாழ்க்கைக்குக் கொண்டுவாருங்கள்.
ஒருவர், “நான் 40 வருடமாகப் பரிசுத்தவானாக இருக்கிறேன்.”என்று சொல்லலாம். சரி. இன்னொருவர், “எனக்கு இப்போது 80 வயது. 85 வயது. இத்தனை வருடமாக ஆண்டவரோடு நடந்திருக்கிறேன்” என்று சொல்லலாம்.
தேவனுக்கு ஸ்தோத்திரம்.
ஆனால் நான் ஒரு கேள்வி கேட்கிறேன்.
40 வருடமாக ஆண்டவரோடு நடந்ததால் உங்களுக்குக் கிறிஸ்து தேவையில்லாமல் போய்விட்டாரா? உங்களுக்கு 80 வயது ஆனதால் பாவம் செய்யக்கூடிய சாத்தியம் இல்லாமல் போய்விட்டதா? உங்களுக்கு 85 வயது என்பதால் சோதனை ஓய்வு எடுத்துக்கொள்கிறதா என்ன?
இல்லை.
ஆவிக்குரிய முதிர்ச்சி மிகவும் முக்கியமானது. பரிசுத்தத்தில் வளர வேண்டும். பாவம் நம்மை ஆளுகிற வாழ்க்கையிலிருந்து தேவன் நம்மை விடுவிக்கிறார். ரோமர் 6 அதைப்பற்றி மிகவும் தெளிவாகப் பேசுகிறது.
ஆனால் நாம் இந்தப் பூமியில் இருக்கும்வரை, “என்னிடம் பாவத்தின் பிரச்சினை முடிந்துவிட்டது; இனி நான் விழவே முடியாது” என்று சொல்லக்கூடிய நிலைக்கு வருவதில்லை.
1 யோவான் 1:8 என்ன சொல்கிறது?
“நமக்குப் பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம்; சத்தியம் நமக்குள் இராது.”
ஆகவே வயது நம்மைப் பாதுகாக்காது. அனுபவம் நம்மைப் பாதுகாக்காது. வேத அறிவு நம்மைப் பாதுகாக்காது. ஊழியம் நம்மைப் பாதுகாக்காது. அந்தஸ்து நம்மைப் பாதுகாக்காது.
நமக்கு எப்போதும் கிறிஸ்து தேவை.
இது நம்மை பயமுறுத்துவதற்காக அல்ல. தாழ்மையாக வைத்திருப்பதற்காக. நாற்பது வருடத்திற்குமுன்பு நான் கிறிஸ்துவைச் சார்ந்தேன்; இன்று நான் அவரை இன்னும் அதிகமாகச் சார்கிறேன். அப்போது எனக்குத் தெரிந்த என்னுடைய பாவங்கள் கொஞ்சம். இன்று தேவன் வெளிச்சம் கொடுக்கக் கொடுக்க, என்னுடைய உள்ளத்தின் ஆழங்களை இன்னும் அதிகமாகப் பார்க்கிறேன். அதனால் ஒரு முதிர்ந்த கிறிஸ்தவன், “எனக்கு இனி கிருபை அதிகமாகத் தேவையில்லை” என்று சொல்லமாட்டான்.
மாறாக, “ஆண்டவரே, உம்முடைய கிருபை இல்லாமல் என்னால் ஒன்றும் செய்ய முடியாது” என்று இன்னும் ஆழமாகச் சொல்வான்.
இதுதான் இந்த patterns and principles வழிகளும் விதிகளும் நமக்குச் சொல்லுகிற காரியம்.
தேவனை அணுகுவதற்குத் தேவன் ஏற்படுத்திய வழி இருக்கிறது.
அந்த வழிக்குள் தேவன் ஏற்படுத்திய வரிசை இருக்கிறது.
அந்த வழியும் அந்த provision-ம் நம் எல்லாருக்கும் தேவை.
இப்போது ஒரு கேள்வி வருகிறது.
தேவன் ஏன் பாவத்தை இவ்வளவு கடுமையாக எடுத்துக்கொள்கிறார்?
ஏன் இத்தனை ஏற்பாடுகள் provision?
ஏன் பலி?
ஏன் மரணம்?
ஏன் இரத்தம்?
பாவத்தில் அப்படி என்ன இருக்கிறது?
5. பாவத்தின் விளைவுகள் — நான் கவனித்த நான்கு காரியங்கள்
பாவத்தின் விளைவுகள் ஏராளம். நான் எல்லாவற்றையும் இங்கே பட்டியலிடப்போவதில்லை.
எனக்குத் தெரிந்த, நான் கவனித்த நான்கு விளைவுகளை மட்டும் உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.
இவைகள்தான் பாவத்தின் விளைவுகள் என்று நான் சொல்லவில்லை. இன்னும் பல இருக்கின்றன. ஆனால் இந்த நான்கையும் நாம் சரியாகப் புரிந்துகொண்டாலே, தேவன் பாவத்தை ஏன் இவ்வளவு கடுமையாக எடுக்கிறார் என்பதையும், பாவநிவாரண பலி ஏன் தேவைப்படுகிறது என்பதையும் இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும்.
5.1 பாவம் ஐக்கியத்தைப் பாதிக்கிறது
முதலாவது, பாவம் ஐக்கியத்தைப் பாதிக்கிறது. தேவனோடு இருக்கிற ஐக்கியத்தையும் பாதிக்கிறது. மனிதர்களோடு இருக்கிற ஐக்கியத்தையும் பாதிக்கிறது.
இதை நாம் மிகவும் கவனமாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு விசுவாசி பாவம் செய்தவுடன் அவன் தேவனுடைய பிள்ளையாக இல்லாமல் போய்விடுகிறான் என்று நான் சொல்லவில்லை. ஒவ்வொரு முறையும் பாவம் செய்தவுடன் இரட்சிப்பை இழந்து, மறுபடியும் இரட்சிக்கப்பட வேண்டும் என்றும் நான் சொல்லவில்லை.
Relationship வேறு; fellowship வேறு. உறவு வேறு, ஐக்கியம் வேறு.
ஒரு தகப்பனுக்கும் மகனுக்கும் இடையே ஏதோவொரு பிரச்சினை ஏற்பட்டுவிட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள். மகன் தகப்பனுக்கு விரோதமாக ஏதோ செய்துவிட்டான். அப்போது அவன் தகப்பனுடைய மகன் இல்லை என்று ஆகிவிடுமா? இல்லை.
Relationship உறவு இருக்கிறது. ஆனால் fellowship ஐக்கியம்? அதற்குச் சேதம் ஏற்பட்டுவிட்டது. பேச்சுவார்த்தை இல்லாமல் போகிறது. இருவரும் ஒரே வீட்டில் இருக்கலாம். ஒரே மேஜையில் உட்காரலாம். ஆனால் முன்பு இருந்த சுதந்திரம் இல்லை. முன்பு இருந்த சந்தோஷம் இல்லை. பேசுவதில் ஒரு தடுமாற்றம் இருக்கிறது. இருவருக்கும் இடையே ஏதோ ஒன்று தடையாக நிற்கிறது.
பாவமும் அப்படித்தான்.
ஏசாயா 59:2இல் மிகக் கடுமையான ஒரு வசனத்தை வாசிக்கிறோம்:
“உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது.”
இது ஏசாயா பேசுகிற உடனடியான சூழலில் இஸ்ரயேலுக்குச் சொல்லப்பட்ட வார்த்தை. ஆனால் இதில் இருக்கிற கோட்பாட்டை நாம் தவறவிடக்கூடாது.
பாவம் தேவனுடனான ஐக்கியம் – இரண்டும் சேர்ந்து சமாதானமாக வாழ முடியாது.
ஆகவேதான் தாவீது பாவம் செய்தபிறகு சங்கீதம் 51இல், “ஆண்டவரே, மறுபடியும் என்னை உம்முடைய பிள்ளையாக்கும்” என்று ஜெபிக்கவில்லை. அவன், “உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தாரும்” (சங்கீதம் 51:12), என்று ஜெபிக்கிறான்.
இரட்சிப்பைத் திரும்பத் தாரும் என்று அல்ல; இரட்சிப்பின் சந்தோஷத்தைத் திரும்பத் தாரும்.
அப்படியானால் ஐக்கியத்துக்கு ஏதோ நடந்திருக்கிறது. நம்முடைய வாழ்க்கையிலும் இதை அனுபவித்திருக்கிறோம். ஜெபிக்க முழங்கால்படியிடுகிறோம். ஆனால், சில நேரங்களில், சுதந்திரமாக ஜெபிக்க முடியவில்லை. வேதாகமத்தைத் திறக்கிறோம். வார்த்தை இருக்கிறது; ஆனால், சில நேரங்களில், அதை அனுபவிக்கிற உள்ளான சுதந்திரம் இல்லை. கூட்டத்திற்கு வருகிறோம். பாடுகிறோம். மற்றவர்கள் எல்லாரோடும் சேர்ந்து “ஆமென்” சொல்கிறோம். வெளிப்புறத்தில் எல்லாம் சரியாக இருக்கலாம். ஆனால் உள்ளே, Something is wrong, என்று நமக்குத் தெரியும்:
ஏன்?
சில நேரங்களில் தேவன் ஏற்கெனவே ஒரு காரியத்தை நம்முடைய மனச்சாட்சியில் தொட்டிருப்பார். நாம் அதைச் சரிசெய்யாமல் இருந்திருப்போம். அங்கேதான் பிரச்சனை.
நாம் தொடர்ந்து மதச் செயல்களைச் செய்யலாம். தொடர்ந்து ஊழியம் செய்யலாம். பேசலாம். பாடலாம். ஜெபிக்கலாம். ஆனால் தேவனோடு இருக்கிற அந்தப் பசுமை, அந்த விடுதலை, கலந்துறவாடுதலின் மகிழ்ச்சி பாதிக்கப்பட்டிருக்கலாம். அதனால்தான் பாவத்தை நாம் இலேசாக மேலோட்டமாக எடுத்துக்கொள்ளக்கூடாது.
ஆனால் பாவம் தேவனோடுள்ள ஐக்கியத்தை மட்டும் பாதிப்பதில்லை.
மனிதர்களோடுள்ள ஐக்கியத்தையும் பாதிக்கிறது.
இதை நம் வீடுகளிலேயே பார்க்கலாம். கணவன் ஒரு வார்த்தை சொல்லிவிடுகிறான். மனைவியின் உள்ளம் காயப்படுகிறது. அல்லது மனைவி ஏதோ சொல்லிவிடுகிறார். கணவனுடைய உள்ளம் காயப்படுகிறது. பெற்றோர் பிள்ளையிடம் சொல்லக்கூடாத ஒரு வார்த்தையைச் சொல்லிவிடலாம். பிள்ளை ஒன்றும் பதில் சொல்லாமல் போய்விடலாம்.
வெளியில் என்ன நடந்தது? ஒரு வார்த்தைதான். ஆனால் அந்த ஒரு வார்த்தை உள்ளே போய் என்ன செய்தது என்பது நமக்குத் தெரியாது.
சில நேரங்களில், “நான் அப்படிச் சொல்ல நினைக்கவில்லை. நான் சொன்னதின் பொருள் அதுவல்ல. நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை,” என்று சொல்வோம். சரி. நீங்கள் அப்படிச் சொல்ல நினைக்காமல் இருந்திருக்கலாம். நீங்கள் அந்த அர்த்தத்தில் சொல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் நான் ஒரு கேள்வி கேட்கிறேன்:
அது அவர்களைப் புண்படுத்தியதா இல்லையா? நம்முடைய நோக்கம் மட்டும் பாவத்தின் விளைவுகளைத் தீர்மானிப்பதில்லை.
ஒரு கோபம்.
ஒரு கடுமையான வார்த்தை.
ஒரு பொய்.
ஒரு சுயநலம்.
ஒரு பொறாமை.
ஒரு மன்னிக்காத மனம்.
இவை நம்முடைய உள்ளத்திற்குள் மட்டும் இருப்பதில்லை. அவை உறவுகளுக்குள் செல்கின்றன. இதனால்தான் பாவம் மிகவும் கடுமையானது, ஆபத்தானது. அது என்னையும் தேவனையும் மட்டும் சம்பந்தப்படுத்துகிற ஒரு தனிப்பட்ட காரியம் மட்டும் அல்ல.
பாவம் ஐக்கியத்தைத் தாக்குகிறது.
மேல்நோக்கி—தேவனோடுள்ள ஐக்கியத்தை. பக்கவாட்டில்—மனிதர்களோடுள்ள ஐக்கியத்தை. ஆனால் தேவனுக்கு ஸ்தோத்திரம், லேவியராகமம் 4 பிரச்சனையை மட்டும் காட்டவில்லை.
பலியையும் காட்டுகிறது.
பாவம் ஐக்கியத்தைப் பாதிக்கிறது. ஆனால் தேவன், “நீ பாவம் செய்துவிட்டாய்; இனி வெளியே நில்” என்று சொல்லவில்லை. திரும்பி வருவதற்கான வழியை அவரே ஏற்படுத்துகிறார்.
அங்கே ஒரு பலி இருக்கிறது.
அங்கே இரத்தம் இருக்கிறது.
அங்கே தேவனுடைய ஏற்பாடு இருக்கிறது.
நமக்கோ—
கிறிஸ்து இருக்கிறார்.
1 யோவான் 1:7 என்ன சொல்கிறது? “அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும்.” இதுதான் நற்செய்தியின் அழகு.
வேதம் பாவத்தைச் சிறிதாக்கவில்லை. பாவத்தின் விளைவை மறுக்கவில்லை. ஆனால் பாவத்தைவிடப் பெரிய ஒரு ஏற்பாட்டைத் தேவன் கொடுத்திருக்கிறார்.
கிறிஸ்துவின் இரத்தம்.
சரி. பாவத்தின் முதலாவது விளைவைப் பார்த்தோம். ஆனால் பாவத்தின் பிரச்சினை இங்கேயே முடிவதில்லை. நாம் ஒரு பாவத்தைச் செய்யும்போது, “இதனால் என்ன ஆகப்போகிறது என்று எனக்குத் தெரியும்” என்று நினைக்கலாம்.
உண்மையில் நமக்குத் தெரியுமா? தெரியாது. பாவத்தின் விளைவு எங்கே போய் முடியும் என்பதை நாம் முன்கூட்டியே அறிய முடியுமா?
அதுதான் இரண்டாவது காரியம்.
5.2 பாவம் நாம் எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்துகிறது
பாவம் நாம் எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்துகிறது. நாம் ஒரு காரியத்தைச் செய்யும்போது அந்த நேரத்தில் நம்முடைய கண்களுக்கு முன்னால் இருப்பது அந்தக் காரியம் மட்டும்தான். “இதைச் செய்தால் இவ்வளவுதான் நடக்கும்,” என்று நாம் நினைக்கிறோம். ஆனால் உண்மையில் நமக்குத் தெரியாது.
ஒரு பாவத்தின் பயணம் எங்கே போய் முடியும் என்பதை, அதைச் செய்கிற நேரத்தில் நாம் முழுமையாக அறிந்துகொள்ள முடியாது.
நீங்கள் ஒரு சிறிய கல்லை சலனமற்ற தண்ணீருக்குள் போட்டிருக்கிறீர்களா? கல் விழுந்த இடத்தில் மட்டும் தண்ணீர் அசைவதில்லை. ஒரு சிறிய வட்டம் உருவாகிறது. அதிலிருந்து இன்னொரு வட்டம். அதிலிருந்து இன்னொரு வட்டம். அது தொடர்ந்து வெளியே போய்க்கொண்டே இருக்கிறது. நாம் போட்டது என்ன? ஒரு சிறிய கல்தான். ஆனால் அதன் விளைவு அந்தக் கல் விழுந்த இடத்தில் மட்டும் நிற்கவில்லை.
பாவமும் அப்படித்தான்.
நாம் செய்கிற காரியம் நம்மோடு முடிந்துவிடும் என்று நினைக்கிறோம். ஆனால் அது இன்னொருவரைத் தொடலாம். அந்த மனிதன்மூலமாக இன்னொருவரைத் தொடலாம். ஒரு குடும்பத்தைத் தொடலாம். சில நேரங்களில் அடுத்த தலைமுறையைக்கூடத் தொடலாம்.
வேதாகமத்தில் இதற்கு ஒரு மிகவும் ஆழமான ஓர் எடுத்துக்காட்டு இருக்கிறது.
ஆபிரகாமைப் பாருங்கள். தேவன் அவருக்கு ஒரு வாக்குறுதியைக் கொடுக்கிறார். காலம் ஓடிக்கொண்டிருக்கிறது. வாக்குறுதி நிறைவேறவில்லை. அப்போது ஓர் எண்ணம் வருகிறது.
ஆதியாகமம் 16:2-ல் சாராள், “நான் பிள்ளைபெறாதபடிக்குக் கர்த்தர் என் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார்; என் அடிமைப்பெண்ணோடே சேரும், ஒருவேளை அவளால் என் வீடு கட்டப்படும்,” என்று ஆபிரகாமிடம் சொல்கிறாள். இது அந்த நேரத்தில் அவர்களுக்கு ஒரு நடமுறைக்குரிய தீர்வுபோலத் தெரிந்திருக்கலாம்.
“தேவன் வாக்குறுதி கொடுத்திருக்கிறார். ஆனால் அது நடக்கவில்லை. ஆகவே நாமே கொஞ்சம் உதவி செய்வோம்.”
எவ்வளவு அறிவுபூர்வமாகத் தெரிகிறது! ஆபிரகாம் ஆகாரிடத்தில் செல்கிறார். இஸ்மவேல் பிறக்கிறான். அதோடு காரியம் முடிந்துவிட்டதா? இல்லை. ஆகார் கர்ப்பவதியானவுடன் வீட்டிற்குள்ளேயே இழுபறி ஆரம்பிக்கிறது.
“தான் கர்ப்பவதியானதைக் கண்டபோது, தன் நாச்சியாரை அற்பமாக எண்ணினாள்,” என்று ஆதியாகமம் 16:4 சொல்கிறது:
ஒரு தீர்மானம். அதிலிருந்து ஒரு கர்ப்பம், அதிலிருந்து அற்பம், அதிலிருந்து சண்டை.
சாராளுக்கும் ஆகாருக்கும் இடையே பிரச்சினை. ஆபிரகாமுடைய வீட்டிற்குள் துக்கம். பின்னர் இஸ்மவேலும் ஈசாக்கும் ஒரே வீட்டில் இருக்கிறார்கள். ஆதியாகமம் 21-க்கு வரும்போது மீண்டும் பிரச்சினை வருகிறது. கடைசியில் ஆகாரும் இஸ்மவேலும் வீட்டைவிட்டு அனுப்பப்படுகிறார்கள்.
ஆதியாகமம் 21:14-ல் ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, அப்பத்தையும் தண்ணீரையும் ஆகாருக்குக் கொடுத்து அவளை அனுப்புகிறான். அந்தக் காட்சியைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். இது ஆபிரகாமுக்கு எளிதாக இருந்திருக்குமா? இஸ்மவேல் யார்?
அவனுடைய மகன்.
ஒரு காலத்தில் ஒரு நடைமுறைக்குரிய தீர்வு என்று தோன்றிய காரியம் இப்போது ஒரு தகப்பனுடைய இருதயத்தைக் கிழிக்கிறது. ஒரு தாயையும் அவளுடைய மகனையும் வனாந்தரத்திற்குக் கொண்டுபோகிறது.
ஆபிரகாமின் இந்தச் செயல்தான் இன்று உலகத்தில் நடக்கிற பெரிய பிரச்சினைக்குக் காரணம் என்று சொல்லவில்லை. ஆனால் வேதாகமம் நமக்குக் காட்டுகிற படத்தை நாம் தவறவிடக்கூடாது.
அவர்கள் எடுத்த அந்த முடிவின் விளைவுகள், அந்த முடிவை எடுத்த அந்த நிமிடத்தோடு முடிந்துவிடவில்லை. இதுதான் நான் சொல்ல வருகிற காரியம். பாவம் செய்யும்போது அது எங்கே போய் முடியும் என்று நமக்குத் தெரியாது.
ஒருவர் ஒரு பொய் சொல்கிறார். “இது ஒரு சாதாரண பொய்தானே?” என்று அப்போது அவர் நினைக்கலாம். ஆனால் அதை மறைக்க இன்னொரு பொய் தேவைப்படுகிறது. பின்னர் இன்னொன்று. ஒருநாள் உண்மை வெளிவரும்போது பொய் மட்டும் அல்ல பிரச்சினை. trust itself has been damaged. அந்த நபர்மேல் உள்ள நம்பிக்கை தவிடுபொடியாகிறது.
ஒருவர் கோபத்தில் ஒரு வார்த்தையைச் சொல்லிவிடுகிறார். ஐந்து நிமிடத்தில் அவருடைய கோபம் மறைந்துவிடலாம். ஆனால் அவர் கோபத்தில் சொன்ன அந்த வார்த்தையைக் கேட்டவருக்கு ஐந்து வருடம் கழித்தும் அது நினைவில் இருக்கலாம். சொன்னவருக்கு ஐந்து நிமிடம். கேட்டவருக்கு ஐந்து வருடம்! அதனால்தான், “நான் sorry சொல்லிவிட்டேன்; முடிந்துவிட்டது” என்று சொல்ல முடியாது.
ஒருவர் ஒரு தவறான பழக்கத்தை ஆரம்பிக்கிறார். “நான் இந்தப் பழக்கத்தைக் கட்டுப்படுத்திக்கொள்வேன்,” என்கிறார். ஆரம்பத்தில் அது ஒரு தேர்வு. கொஞ்ச காலத்திற்குப்பிறகு அந்தப் பழக்கமே அவரைக் கட்டுப்படுத்த ஆரம்பித்துவிடும்.
இதுதான் பாவத்தின் வஞ்சனை. எபிரெயர் 3:13 “பாவத்தின் வஞ்சனையினாலே” கடினப்பட்டுப்போகாதபடி எச்சரிக்கிறது.
பாவம் வரும்போது அது தன் முழு உருவத்தையும், நிறத்தையும், வடிவத்தையும் நமக்குக் காட்டுவதில்லை. அது சிற்றின்பத்தைக் காட்டும். சௌகரியத்தைக் காட்டும். உடனடியாகக் கிடைக்கும் ஆதாயங்களைக் காட்டும். ஆனால் பின்னால் வரப்போகிற எல்லா விளைவுகளையும் அது முதலிலேயே நமக்குக் காட்டாது.
இதனால்தான் பாவத்தோடு நாம் விளையாடக்கூடாது. “எவ்வளவு தூரம் போனால் இது பாவம் இல்லை?” “எதுவரை இதைச் செய்யலாம்?” “இதனால் பெரிய பிரச்சனை ஒன்றும் வராதே?” இதுபோன்ற கேள்விகள் ஆபத்தானவை.
ஒரேவொரு கேள்விதான் நாம் கேட்க வேண்டும்: “ஆண்டவரே, இது உமக்குப் பிரியமா?”
பாவத்தின் முடிவு எது என்று எனக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் தேவனுக்குத் தெரியும். ஆகவேதான் அவர் ஒரு காரியத்தை “வேண்டாம்” என்று சொன்னால், அது நம்முடைய சந்தோஷத்தைக் கெடுப்பதற்காக அல்ல. நம்மால் பார்க்க முடியாததையும் அவர் பார்க்கிறார்.
இப்போது மீண்டும் லேவியராகமம் 4க்குத் திரும்புவோம். ஒருவன் அறியாமையினால் பாவம் செய்கிறான். அந்த நேரத்தில் அது அவனுக்குத் தெரியாமல் போகலாம். ஆனால் தெரியவந்தவுடன் தேவன் என்ன சொல்கிறார்? “அதை இலேசாக எடுத்துக்கொள்ளாதே. அதனோடு நீ இடைப்படவேண்டும். பலியோடு வா.”
ஏன்? ஏனென்றால் பாவம் ஒரு தனிப்பட்ட செயல் அல்ல. அது பக்க விளைவுகளை உருவாக்கும். அதனால்தான் தேவன் பாவத்தை நம்மைவிடக் கடுமையாக எடுத்துக்கொள்கிறார்.
5.3 பாவம் தேவனுடைய பரிசுத்தமான கோபத்தை எதிர்கொள்கிறது
சரி. இப்போது மூன்றாவது காரியத்திற்கு வருவோம். இது இன்று அதிகம் பேசப்படாத ஒரு கருப்பொருள். தேவன் அன்புள்ளவர் என்று நாம் பேசுகிறோம். அது உண்மை. God is love. ஆனால் வேதாகமம் அதோடு இன்னொரு காரியத்தையும் சொல்கிறது. பாவம் மனிதனுடைய வாழ்க்கையில் விளைவுகளை மட்டும் ஏற்படுத்துவதில்லை. பாவம் தேவனுடைய பரிசுத்தமான கோபத்தை எதிர்கொள்ள வேண்டும்.
நாம் தேவனுடைய அன்பைப்பற்றிப் பேசுகிறோம். பேச வேண்டும். 1 யோவான் 4:8 மிகத் தெளிவாகச் சொல்கிறது: “தேவன் அன்பாகவே இருக்கிறார்.” இதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
தேவன் நம்மை நேசிக்கிறார். தேவனுடைய அன்பின் உச்சகட்ட வெளிப்பாடு கல்வாரி. யோவான் 3:16-ஐ நாம் எல்லாரும் அறிவோம்:
“தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.”
ஆனால் இங்கே நாம் ஒரு தவறு செய்யக்கூடாது. தேவன் அன்புள்ளவர் என்பதால் அவர் பாவத்தைப் பார்த்து ஒன்றும் சொல்லாமல் இருப்பார் என்று நினைக்கக்கூடாது. நான் இதை இப்படிச் சொல்ல விரும்புகிறேன்: God is not only a God of love; God is also a God of wrath.
இந்த வாக்கியத்தைக் கேட்டவுடன் சிலருக்கு கொஞ்சம் அசௌகாரியமாக, அதிர்ச்சியாக, இருக்கலாம். “Wrath? தேவனுக்குக் கோபம் வருமா?” ஆம். ஆனால் உடனே இன்னொரு காரியத்தையும் சொல்ல வேண்டும். தேவனுடைய கோபத்தை மனிதனுடைய கோபத்தைப்போல நினைக்கக்கூடாது.
நமக்குக் கோபம் வரும்போது என்ன நடக்கிறது?
சில நேரங்களில் கட்டுப்பாடு போய்விடுகிறது. சொல்லக்கூடாததைச் சொல்லிவிடுகிறோம். செய்யக்கூடாததைச் செய்துவிடுகிறோம். ஐந்து நிமிடம் கழித்து, “ஐயோ, நான் ஏன் அப்படிச் செய்தேன்?” என்று வருந்துகிறோம்.
தேவனுடைய கோபம் அப்படிப்பட்டது அல்ல. அவர் temper lose பண்ணுவதில்லை. அவர் emotional outburst-ல் செயல்படுவதில்லை. தேவனுடைய wrath என்பது பாவத்திற்கு எதிரான அவருடைய பரிசுத்தமான, நீதியான எதிர்வினை.
ரோமர் 1:18 என்ன சொல்கிறது?
“சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.”
அவபக்திக்கும் அநியாயத்துக்கும் எதிராகத் தேவனுடைய கோபம் இருக்கிறது. அதாவது, தேவன் கோபப்படுவது அவர் அன்பில்லாதவர் என்பதற்கான அடையாளம் அல்ல. மாறாக, அவர் பரிசுத்தமானவர் என்பதற்கான அடையாளம். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.
தேவன் அன்புள்ளவர் என்று சொல்கிறோம். ஆனால் அநியாயத்தைப் பார்த்தாலும் அவருக்கு ஒன்றும் இல்லை. கொடுமையைப் பார்த்தாலும் ஒன்றும் இல்லை. பொய்யைப் பார்த்தாலும் ஒன்றும் இல்லை. தீமையைப் பார்த்தாலும் ஒன்றும் இல்லை. மனிதன் இன்னொரு மனிதனை அழித்தாலும் அவருக்கு ஒன்றும் இல்லை என்றால் அப்படிப்பட்ட தேவனை உண்மையில் நல்லவர் என்று சொல்ல முடியுமா?
நன்மையை நேசிக்கிறவர் தீமையை எதிர்க்க வேண்டும்.
பரிசுத்தத்தை நேசிக்கிறவர் பாவத்தை எதிர்க்க வேண்டும். நீதியை நேசிக்கிறவர் அநியாயத்தை எதிர்க்க வேண்டும். ஆகவேதான் தேவனுடைய அன்பும் தேவனுடைய கோபமும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல.
இரண்டுமே அவருடைய பரிசுத்தமான இயல்பிலிருந்து வருகின்றன.
ஓர் எடுத்துக்காட்டுத் தருகிறேன். வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்திருகின்றன. தூரத்தில் பார்க்கிறோம். மேகம் அமைதியாகத் தெரிகிறது. ஆனால் அந்த மேகத்திற்குள் என்ன இருக்கிறது என்று நமக்குத் தெரியாது. திடீரென்று மின்னல் வருகிறது. இடி முழங்குகிறது. அந்த இடி அந்த நொடியில் திடீரென்று எங்கிருந்தோ உருவாகவில்லை. அதற்கான மெய் reality அந்த மேகத்திற்குள் இருந்தது; ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அது வெளிப்பட்டது.
அதுபோல தேவன் ஒவ்வொரு பாவத்திற்கும் உடனடியாக நீதித்தீர்ப்பு கொடுக்கவில்லை என்பதால், அவர் பாவத்தைப் பொருட்படுத்தவில்லை என்று நினைக்கக்கூடாது. இது மனிதனுடைய பெரிய தவறுகளில் ஒன்று.
“நான் தவறு செய்தேன். ஒன்றும் நடக்கவில்லையே!” “இத்தனை வருடங்களாக நான் இப்படித்தான் வாழ்கிறேன். தேவன் என்ன செய்தார்?” “எனக்கு எல்லாம் நன்றாகத்தானே போய்க்கொண்டிருக்கிறது?”
கவனமாக இருங்கள்.
தேவனுடைய பொறுமையை தேவனுடைய அங்கீகாரம் என்று தவறாகப் புரிந்துகொள்ளக்கூடாது.
ரோமர் 2:4 இதைப்பற்றி ஓர் அருமையான வார்த்தையைச் சொல்கிறது:
“தேவதயவு உன்னைக் குணப்படும்படி நடத்துகிறதென்று அறியாமல், அவருடைய தயவு பொறுமை நீடியசாந்தம் இவைகளின் ஐசுவரியத்தை அசட்டைபண்ணுகிறாயோ?” ஏன் தேவன் உடனடியாக நியாயந்தீர்க்கவில்லை? அவர் பாவத்தைப் பொருட்படுத்தாததால் அல்ல. அவருடைய தயவு நம்மை மனந்திரும்புதலுக்கு நடத்துகிறது.
இப்போது லேவியராகமம் 4-க்குத் திரும்புவோம். ஏன் ஒரு மிருகம் மரிக்க வேண்டும்? ஏன் இரத்தம் சிந்தப்பட வேண்டும்? ஏன் தேவன், “பரவாயில்லை, தெரியாமல் செய்துவிட்டாய்; போ” என்று சொல்லவில்லை? ஏனென்றால் பாவம் என்பது வெறும் தவறு அல்ல.
பாவம் பரிசுத்தமான தேவனுக்குமுன்பாக இருக்கிற ஒரு moral reality.
அறியாமையினால் செய்திருந்தாலும், அது தேவனுடைய பரிசுத்தத்தோடு சம்பந்தப்படுகிறது. அதனால் பாவத்தோடு இடைப்பட வேண்டும். அங்கேதான் பலி வருகிறது. இப்போது இன்னும் கொஞ்சம் கவனமாகப் பாருங்கள். பாவத்தின்மேல் நீதித்தீர்ப்பு வரவேண்டும். ஆனால் பாவி எங்கே நிற்கிறான்? பலியின் அருகில். அவன் தன் கையை பலியின்மேல் வைக்கிறான். பின்னர் பலி மரிக்கிறது. இதைக் கேட்டவுடனே யாரை நினைக்கிறீர்கள்?
கிறிஸ்துவை.
இங்கேதான் கல்வாரியின் ஆழத்தை நாம் பார்க்க வேண்டும். சிலுவையில் தேவனுடைய அன்பை மட்டும் பார்க்கிறோமா? இல்லை. பாவத்தின் பயங்கரத்தையும் பார்க்கிறோம். தேவனுடைய பரிசுத்தத்தையும் பார்க்கிறோம். தேவனுடைய நீதியையும் பார்க்கிறோம். அதே நேரத்தில்— தேவனுடைய அன்பையும் பார்க்கிறோம். இதுதான் சிலுவையின் அதிசயம். தேவன் பாவத்தைப் பார்த்து, “பரவாயில்லை” என்று சொல்லி நம்மை மன்னிக்கவில்லை.
பாவத்துக்குப் பரிகாரம் பண்ணப்பட்டது. பலி கொடுக்கப்பட்டது. இரத்தம் சிந்தப்பட்டது.
அதனால்தான் ரோமர் 3:26இல் பவுல் கிறிஸ்துவைப்பற்றிப் பேசும்போது, தேவன் “கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதார பலியாக அவரையே ஏற்படுத்தினார்” என்று கூறுகிறார்.
கல்வாரியில் தேவன் பாவத்தைச் சிறிதாக்கவில்லை. அவர் பாவத்தை நியாயமாகக் கையாண்டார்; அதே இடத்தில் பாவியை இரட்சிக்கிற தம் அன்பையும் வெளிப்படுத்தினார். அதனால்தான் சிலுவையைப் பார்க்கும்போது நாம் இரண்டு காரியங்களையும் சொல்ல முடியும்: பாவம் எவ்வளவு பயங்கரமானது! அதே நேரத்தில்—தேவனுடைய அன்பு எவ்வளவு பெரியது!
பாவத்தை இலேசாக எடுத்துக்கொள்ள விரும்புகிறீர்களா? சிலுவையைப் பாருங்கள். தேவன் உங்களை நேசிக்கிறாரா என்று சந்தேகப்படுகிறீர்களா? மறுபடியும் சிலுவையைப் பாருங்கள்.
அங்கே தேவனுடைய பரிசுத்தமும் இருக்கிறது. தேவனுடைய நீதியும் இருக்கிறது. தேவனுடைய அன்பும் இருக்கிறது. கிறிஸ்து இருக்கிறார். அதனால்தான் பாவநிவாரண பலியைப் படிக்கும்போது இரத்தத்தைக் கண்டு முகத்தைத் திருப்பிவிடக்கூடாது. அந்த இரத்தம் நம்மை கல்வாரியை நோக்கித் திருப்ப வேண்டும்.
சரி, பாவத்தின் மூன்றாவது விளைவைப் பார்த்தோம்.
ஆனால் பாவம் தேவனுக்குமுன் இருக்கிற ஒரு பிரச்சினை மட்டுமல்ல. பாவம் நம்மைச் சுற்றியுள்ளவர்களைப் பாதிக்கிற பிரச்சினை மட்டுமல்ல.
பாவம் நமக்குள்ளேயே ஏதோவொன்றைச் செய்கிறது.
அது மனிதனுடைய உள்ளான வாழ்க்கைக்குள் நுழைந்து வேலை செய்கிறது.
எளிமையாகச் சொன்னால்—
Sin is poison. பாவம் விஷம்.
அதுதான் நான் கவனித்த நான்காவது காரியம்.
5.4 பாவம் மனிதனுடைய உள்ளான வாழ்க்கையை நஞ்சாக்குகிறது
பாவம் வெளியே சில விளைவுகளை ஏற்படுத்திவிட்டு நின்றுவிடுவதில்லை. அது மனிதனுக்குள்ளேயே வேலை செய்கிறது. மனிதனுடைய சிந்தனையை, விருப்பத்தை, உணர்வுகளை, மனச்சாட்சியை, தேவனைப் பார்க்கிற பார்வையைப் பாதிக்கிறது. எளிமையாகச் சொன்னால், Sin is poison. பாவம் ஒரு விஷம்.
இதை நாம் ஆதியாகமம் 3-லேயே பார்க்கிறோம். சர்ப்பம் ஏவாளிடம் வந்து பேசும்போது, முதலாவது அவளை ஒரு பெரிய வெளிப்படையான தீமையைச் செய்ய அழைக்கவில்லை. தேவனைப்பற்றிய அவளுடைய எண்ணத்திற்குள் விஷத்தைச் செலுத்துகிறது. “தேவன் உண்மையாகவே சொன்னாரா?” என்ற சந்தேகம் வருகிறது. அதற்குப்பிறகு, தேவன் ஏதோ ஒரு நல்ல காரியத்தைத் தங்களிடமிருந்து மறைத்திருக்கிறார் என்ற எண்ணம் வருகிறது. அதாவது, பாவம் கனியைப் பறித்துச் சாப்பிடுவதற்குமுன்பே உள்ளே வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது.
அதற்குப்பிறகு என்ன நடக்கிறது என்று பாருங்கள். ஆதாமும் ஏவாளும் கனியைச் சாப்பிடுகிறார்கள். உடனே அவர்களுடைய பார்வை மாறுகிறது. முன்பு நிர்வாணமாக இருந்தும் வெட்கப்படாதவர்கள், இப்போது தங்களை மூடிக்கொள்ள முயல்கிறார்கள். முன்பு தேவனுடைய சந்நிதியில் இருந்தவர்கள், இப்போது தேவனுடைய சத்தத்தைக் கேட்டதும் ஒளிந்துகொள்கிறார்கள். ஆதியாகமம் 3:8 சொல்கிறது: “ஆதாமும் அவன் மனைவியும் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளித்துக்கொண்டார்கள்.”
பாவம் ஒரு கனியைச் சாப்பிட்டதோடு முடிந்துவிடவில்லை. சந்தேகம் வந்தது; கீழ்ப்படியாமை வந்தது; வெட்கம் வந்தது; பயம் வந்தது; ஒளிந்துகொள்ளுதல் வந்தது. பின்னர் தேவன் ஆதாமிடம் விசாரிக்கும்போது, பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்குப்பதிலாக குற்றத்தை மற்றவர்மேல் சுமத்துகிற மனநிலையும் வருகிறது. “என்னுடனே இருக்கும்படி தேவரீர் தந்த ஸ்திரீயானவள்...” என்று ஆதாம் சொல்கிறான் (ஆதியாகமம் 3:12). ஏவாளும் சர்ப்பத்தைச் சுட்டிக்காட்டுகிறாள். பாவம் செயலை மட்டும் பாதிக்கவில்லை; மனிதனுடைய உள்ளான கட்டமைப்பையே விஷமாக்க ஆரம்பித்துவிட்டது.
இதுதான் பாவத்தின் தன்மை. நாம் சில நேரங்களில் பாவத்தை ஒரு தனிப்பட்ட செயலாக மட்டும் பார்க்கிறோம்: “நான் ஒரு பொய் சொன்னேன்,” “நான் கோபப்பட்டேன்,” “நான் இதைச் செய்தேன்.” ஆனால் அந்தச் செயலை மட்டும் பார்த்தால் பாவத்தின் ஆழம் நமக்குப் புரியாது. தொடர்ந்து பொய் சொன்னால் பொய் சொல்லுவது எளிதாகிவிடுகிறது. தொடர்ந்து மனச்சாட்சியின் குரலைப் புறக்கணித்தால், ஒருகாலத்தில் நம்மைத் தொந்தரவு செய்த காரியம் பின்னர் தொந்தரவு செய்யாமல் போகலாம். அதுதான் ஆபத்து.
விஷம் உடலுக்குள் சென்றால், “அது உள்ளே போய்விட்டதே; வெளியே ஒன்றும் தெரியவில்லையே” என்று நாம் அமைதியாக இருப்போமா? இல்லை. வெளியே அறிகுறிகள் தெரியாவிட்டாலும் அது உள்ளே என்ன செய்துகொண்டிருக்கிறது என்பதுதான் நம்முடைய கவலை. அதுபோல பாவத்தின் ஆபத்து, அது வெளியே ஏற்படுத்துகிற அவதூறும், அவமானமும் மட்டும் இல்லை. அது எனக்குள்ளே என்ன செய்துகொண்டிருக்கிறது? என்பதுதான் இன்னும் ஆழமான கேள்வி.
இதனால்தான் பாவத்தோடு நாம் பழகக்கூடாது. ஒரு பாவத்தை முதலாவது செய்தபோது மனச்சாட்சி மிகவும் தொந்தரவு செய்த ஒரு காரியம், பத்தாவது முறை அவ்வளவாகத் தொந்தரவு செய்யாமல் இருக்கலாம். அது அந்தக் காரியம் இப்போது சரியாகிவிட்டது என்பதற்கான அடையாளம் அல்ல. நம்முடைய உள்ளம் அதற்குப் பழகிவிட்டது என்பதற்கான அடையாளம். எபிரெயர் 3:13 சொல்வதுபோல, பாவத்திற்கு ஒரு “வஞ்சனை” இருக்கிறது; அது மனிதனைக் கடினப்படுத்தக்கூடியது.
ஆகவே பாவம் தேவனோடுள்ள ஐக்கியத்தைப் பாதிக்கிறது. நாம் எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்துகிறது. தேவனுடைய பரிசுத்தமான கோபத்தை எதிர்கொள்கிறது. இப்போது இன்னொரு காரியத்தையும் பார்த்தோம்: அது மனிதனுடைய உள்ளான வாழ்க்கையையே நஞ்சாக்குகிறது. அதனால்தான் நான் இதை ஒரு வாக்கியத்தில் சொல்கிறேன்: Sin is poison.
ஆனால் இங்கேயே நின்றுவிட்டால் நற்செய்தி இல்லை. “உனக்குள் விஷம் இருக்கிறது” என்று தேவன் சொல்லிவிட்டு நம்மை விட்டுவிடவில்லை. விஷம் எவ்வளவு ஆபத்தானது என்பதைச் சொல்லுகிற தேவனே, அதற்கான விஷமுறிவையும் ஏற்படுத்துகிறார். நோயைக் காட்டுகிற தேவனே மருந்தையும் காட்டுகிறார்.
அங்கேதான் லேவியராகமம் 4 இன்னும் அழகாகிறது. மனிதன் பாவம் செய்திருக்கிறான். பாவம் அவனைப் பாதித்திருக்கிறது. அவனுடைய பாவம் தேவனுக்கு முன்பாகக் கையாளப்பட வேண்டும். ஆனால் தேவன் அவனைப் பார்த்து, “இப்போது நீயே இதற்கு ஒரு வழியைக் கண்டுபிடி” என்று சொல்லவில்லை. தேவனே ஒரு பலியை ஏற்படுத்துகிறார்.
இதைத்தான் நாம் பாவநிவாரண பலி என்று சொல்கிறோம். எபிரெய மொழியில் ḥaṭṭā’t. இந்தச் சொல் பாவத்தையும் குறிக்கலாம்; பல இடங்களில் பாவத்தைக் கையாளுவதற்காகக் கொடுக்கப்படும் பலியையும் குறிக்கிறது. அதனால் இங்கே ஓர் அழகான படம் நமக்குக் கிடைக்கிறது: Sin is poison; God provides the remedy.
ஆனால் அந்தத் தீர்வு, மருந்து, ஒரு கோட்பாடு அல்ல. ஒரு தத்துவம் அல்ல. மனிதன் தன்னைத்தானே திருத்திக்கொள்கிற ஒரு self-improvement program அல்ல. அது லேவியராகமத்தில் ஒரு பலியாக வருகிறது. புதிய ஏற்பாட்டிற்குள் வந்தவுடன் அந்தப் பலியின் நிறைவை நாம் ஒரு நபரில் பார்க்கிறோம்.
அவர் கிறிஸ்து.
அதனால்தான் லேவியராகமம் 4-ஐ வாசிக்கும்போது பாவத்தையே பார்த்துக்கொண்டிருக்காதீர்கள். பாவம் எவ்வளவு ஆழமானது, கடுமையானது, பயங்கரமானது என்பதைப் பாருங்கள்; ஆனால் அங்கேயே நின்றுவிடாதீர்கள். பாவத்தைவிட தேவனுடைய ஏற்பாடு பெரிது. விஷத்தைக் காட்டுகிற அதே அதிகாரம் பலியையும் காட்டுகிறது.
இப்போது அந்தப் பலியை இன்னும் அருகில் சென்று பார்ப்போம். யார் அந்தப் பலியைச் செலுத்த வேண்டும்? எல்லாரும் ஒரேவிதமாகச் செலுத்துகிறார்களா? ஒருவருடைய பொறுப்புக்கும் அவர் செய்யும் பாவத்தின் தாக்கத்திற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா?
அதுதான் நாம் அடுத்ததாகப் பார்க்கப்போகிற காரியம்.
6. பாவநிவாரண பலியும் பொறுப்பும்
சரி, இப்போது இன்னொரு சுவாரஸ்யமான காரியத்தைப் பார்ப்போம். இதற்குமுன் நாம் பார்த்த பலிகளில், பலி செலுத்துகிற மனிதனுடைய பொருளாதார நிலையை தேவன் கருத்தில் எடுத்துக்கொண்டதைப் பார்த்தோம். எல்லாராலும் ஒரே பலியைச் செலுத்த முடியாது. ஒருவனிடம் மாடு இருக்கலாம்; இன்னொருவனிடம் ஆடு மட்டுமே இருக்கலாம்; இன்னொருவனால் அதையும் கொடுக்க முடியாமல் இருக்கலாம்.
சர்வாங்க தகனபலியை எடுத்துக்கொள்வோம் லேவியராகமம் 1:3இல் ஒருவன் மாட்டுமந்தையிலிருந்து பலி கொண்டுவரலாம். 10ஆம் வசனத்திற்கு வரும்போது ஆட்டை அல்லது வெள்ளாட்டைக் கொண்டுவரலாம். 14-ஆம் வசனத்திற்கு வரும்போது காட்டுப்புறாவையாவது புறாக்குஞ்சுகளையாவது கொண்டுவரலாம். தேவன் எல்லாரிடமும் ஒரேவிதமான பொருளாதார நிலையை எதிர்பார்க்கவில்லை.
இதில் தேவனுடைய கிருபையைப் பார்க்கிறோம். ஏழை மனிதன், “என்னிடம் காளை இல்லை; ஆகவே நான் தேவனிடம் வர முடியாது” என்று சொல்ல வேண்டியதில்லை. அவனுடைய வசதிக்கேற்ற ஏற்பாடு இருந்தது. பணக்காரனுக்கு மட்டும் தேவனுடைய சந்நிதி திறந்திருக்கவில்லை. ஏழைக்கும் வழி இருந்தது.
ஆனால் லேவியராகமம் 4 வேறோர் அம்சத்தை வலியுறுத்துகிறது. இங்கே கேள்வி, “உன்னிடம் எவ்வளவு பணம் இருக்கிறது?” என்பது அல்ல. இன்னொரு கேள்வி வருகிறது: “நீ யார்? உன்னிடம் என்ன பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது? நீ செய்கிற பாவம் எத்தனை பேரைப் பாதிக்கும்?”
இது மிகவும் முக்கியமான கோட்பாடு. எல்லாருடைய ஆத்துமாவும் தேவனுக்கு விலையேறப்பெற்றதுதான். ஆசாரியனுடைய ஆத்துமாவுக்கு அதிக விலை, சாதாரண மனிதனுடைய ஆத்துமாவுக்குக் குறைந்த விலை என்று வேதாகமம் சொல்லவில்லை. ஆனால் எல்லாருக்கும் ஒரே அளவிலான பொறுப்பு கொடுக்கப்படவில்லை. ஒருவருடைய அந்தஸ்து, நிலைமை, அதிகமானால், அவனுடைய செல்வாக்கு அதிகமாகும்; அவனுடைய தவறின் பாதிப்பும் அதிகமாகும்.
ஒரு சாதாரண மனிதன் ஒரு தவறான காரியத்தைச் செய்தால் அது அவனையும் அவனைச் சுற்றியுள்ள ஒரு சிலரையும் பாதிக்கலாம். ஆனால் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மக்களுக்கு முன்பாக நிற்கிற ஒருவர் அதே தவறைச் செய்தால்? ஒரு குடும்பத்திற்குத் தலைமை தாங்குகிறவர் தவறினால்? ஒரு சபையை வழிநடத்துகிறவர் தவறினால்? தேவனுடைய வார்த்தையை மற்றவர்களுக்குப் போதிக்கிறவர் தவறினால்? அங்கே கேள்வி அவருடைய தனிப்பட்ட பாவத்தைப்பற்றியது மட்டும் அல்ல; அவருடைய செல்வாக்கு எவ்வளவு தூரம் செல்கிறது என்பதும் வருகிறது.
அதனால்தான் நான் இதை இப்படிக் கேட்க விரும்புகிறேன்: “நீ இந்த மக்களுக்கு எவ்வளவு ஆபத்தை ஏற்படுத்த முடியும்?” இது கொஞ்சம் கடுமையான கேள்வியாகத் தெரியலாம். ஆனால் பொறுப்பு அதிகமாக இருக்கும்போது, நம்முடைய தவறு நம்மோடு மட்டும் முடிந்துவிடாது என்பதைப் புரிந்துகொள்ள இந்தக் கேள்வி உதவுகிறது.
ஆண்டவராகிய இயேசு லூக்கா 12:48-ல் ஒரு கோட்பாட்டைச் சொல்கிறார்: “எவனிடத்தில் அதிகங் கொடுக்கப்பட்டதோ அவனிடத்தில் அதிகங் கேட்கப்படும்; மனுஷர் எவனிடத்தில் அதிகமாய் ஒப்புவித்தார்களோ அவனிடத்தில் அதிகமாய்க் கேட்பார்கள்.” அதிகமான சிலாக்கியத்தோடு அதிகமான பொறுப்பும் வருகிறது.
இப்போது லேவியராகமம் 4ஐத் திறந்து வாசியுங்கள். இந்த அதிகாரத்தில் தேவன் அறியாமையினால் பாவம் செய்கிற நான்கு சாராரைக் குறிப்பிடுகிறார். அவர்களுடைய பலிகளையும் அவைகளில் உள்ள வித்தியாசங்களையும் நாம் இன்றைக்கு விரிவாகப் பார்க்கப்போவதில்லை. அதை அடுத்த பாடத்தில் பார்ப்போம். ஆனால் இந்த அதிகாரத்தின் அமைப்பைப் புரிந்துகொள்வதற்காக அந்த நான்கு சாரார் யார் என்பதை மட்டும் குறிப்பிடுகிறேன்.
முதலாவது, அபிஷேகம் பெற்ற ஆசாரியன் — லேவியராகமம் 4:3–12. இரண்டாவது, இஸ்ரயேல் சபை முழுவதும் — 4:13–21. மூன்றாவது, ஒரு தலைவன் — 4:22–26. நான்காவது, சாதாரண மக்களில் ஒருவன் — 4:27–35. இந்த வரிசையைக் கொஞ்சம் கவனியுங்கள். தேவன் தனிநபரை மட்டும் பார்க்கவில்லை; பொறுப்பையும், அந்தப் பாவம் எவ்வளவு தூரம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் நம்முடைய கவனத்திற்குக் கொண்டுவருகிறார்.
முதலாவது யார் என்று பாருங்கள். வெளிப்படையான பாவி அல்ல. தேவனை அறியாத மனிதன் அல்ல. அபிஷேகம் பெற்ற ஆசாரியன். தேவனுடைய காரியங்களைச் செய்கிறவன். தேவனுடைய சந்நிதியில் ஊழியம் செய்கிறவன். மற்றவர்களுக்காக நிற்கிறவன். அவனுக்குக்கூட பாவநிவாரண பலி தேவைப்படுகிறது.
இது ஊழியம் செய்கிற நமக்கு மிகவும் நிதானமான காரியம். நான் மற்றவர்களுக்குப் போதிக்கிறேன் என்பதால் பாவத்திற்கு அப்பாற்பட்டவன் அல்ல. நான் வேதாகமத்தை நன்றாக அறிந்திருக்கிறேன் என்பதால் எனக்குக் குருட்டுப்புள்ளிகள் இருக்காது என்று சொல்ல முடியாது. நான் மற்றவர்களைத் தேவனிடம் நடத்துகிறேன் என்பதால், எனக்கு ஒவ்வொரு நாளும் கிறிஸ்து தேவையில்லை என்று ஆகிவிடாது.
அதனால்தான் முன்னின்று நடத்துவது, தலைமைத்துவம் என்பது ஒரு சிலாக்கியம் மட்டும் அல்ல; அது ஒரு பொறுப்பு. தேவன் நமக்கு அதிகமான வெளிச்சத்தைக் கொடுத்திருந்தால், அந்த வெளிச்சத்திற்கேற்ப நாம் நடக்க வேண்டும். அதிகமான செல்வாக்குக் கொடுத்திருந்தால், அதை மிகவும் பயபக்தியோடு கையாள வேண்டும். “நான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்; இது என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை” என்று ஒரு தலைவன் சொல்ல முடியாது. ஏனென்றால் சில நேரங்களில் அவனுடைய தனிப்பட்ட தவறு பலருடைய ஆவிக்குரிய வாழ்க்கையைப் பாதிக்கும்.
ஆனால் இங்கே இன்னொரு தவறும் செய்யக்கூடாது. ஆசாரியன், சபை, தலைவன், சாதாரண மனிதன் என்று பிரித்திருப்பதால், “அப்படியானால் சிலருக்குப் பாவநிவாரண பலி அதிகமாகத் தேவை; சிலருக்குக் குறைவாகத் தேவை” என்று நினைக்கக்கூடாது. நான்கு சாராருக்கும் பலி தேவை. வேறுபாடு அவர்களுக்குப் பலி தேவையா என்பதில் இல்லை; அவர்களுடைய பொறுப்பிலும், அவர்கள் செலுத்த வேண்டிய பலியின் முறையிலும் இருக்கிறது.
இதில்தான் நாம் எல்லாரும் ஒரே இடத்தில் நிற்கிறோம். நான் ஆசாரியனாக இருந்தாலும், தலைவனாக இருந்தாலும், சாதாரண மனிதனாக இருந்தாலும்—எனக்கு ஒரு பலி தேவை. புதிய ஏற்பாட்டிற்குள் வந்தவுடன் நம்முடைய கண்கள் மறுபடியும் கிறிஸ்துவிடம் செல்கின்றன. நம்முடைய அந்தஸ்து நம்மை இரட்சிப்பதில்லை. நம்முடைய ஊழியம் நம்மை இரட்சிப்பதில்லை. நம்முடைய பல வருட அனுபவம் நம்மை இரட்சிப்பதில்லை. நமக்காகத் தேவன் ஏற்படுத்திய பலியே நம்முடைய நம்பிக்கை.
இந்த நான்கு சாரார் செலுத்துகிற பலிகளில் சில முக்கியமான வித்தியாசங்கள் இருக்கின்றன. அவைகளை அடுத்த பாடத்தில் ஒவ்வொன்றாகப் பார்ப்போம். குறிப்பாக அபிஷேகம் பெற்ற ஆசாரியன் பாவம் செய்தால் என்ன நடக்கிறது, முழுச் சபை பாவம் செய்தால் என்ன நடக்கிறது, தலைவனுக்கும் சாதாரண மனிதனுக்கும் என்ன வித்தியாசம்—அவைகளுக்குள் இப்போது செல்ல வேண்டாம்.
ஆனால் இந்தப் பாடத்தில் இன்னொரு காரியத்தை நாம் தவறவிடக்கூடாது. குறிப்பாக லேவியராகமம் 4இல் முதலாவது இரண்டு சாராருடைய பலிகளைப் பார்க்கும்போது, பாவநிவாரண பலியில் திரும்பத் திரும்ப வருகிற சில முக்கியமான அம்சங்கள் இருக்கின்றன. அவைகளை ஒன்றன்பின் ஒன்றாகப் பார்த்தால், இந்தப் பலியின் முழுக் காட்சியும் நம்முடைய கண்களுக்குமுன்பாக வரும்.
அதிலும் முக்கியமாக, ஒவ்வோர் அம்சத்திலும் நாம் ஒரு கேள்வியைக் கேட்டுக்கொண்டே போவோம்:
இதில் கிறிஸ்து எங்கே இருக்கிறார்?
இந்த நான்கு சாராருடைய பலிகளிலும் காணப்படும் வித்தியாசங்களையும், பலியின் முக்கியமான அம்சங்களையும் அடுத்த பாடத்தில் ஆராய்வோம். ஆனால் அதற்குமுன், பாவம் நமக்குத் தெரியவரும்போது நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற ஒரு முக்கியமான நடைமுறைக் கேள்வியைப் பார்ப்போம்.
7. பாவம் தெரியவந்தவுடன் என்ன செய்ய வேண்டும்?
நாம் ஆரம்பத்தில் பார்த்ததை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். லேவியராகமம் 4-ல் திரும்பத் திரும்ப வருகிற ஒரு முக்கியமான எண்ணம் என்ன?
பாவம் தெரிய வருகிறது.
ஒரு காலத்தில் தெரியவில்லை. இப்போது தெரிகிறது.
அப்படியானால் பாவம் தெரியவந்தவுடன் முதலாவது என்ன செய்ய வேண்டும்?
தேவனிடமிருந்து ஓடக்கூடாது.
இதுதான் நாம் பல நேரங்களில் செய்யக்கூடிய முதல் தவறு. நான் தவறு செய்துவிட்டேன் என்று தெரிந்ததும், “இப்போது நான் எப்படி ஜெபிப்பது? எப்படி வேதாகமம் வாசிப்பது? எப்படி தேவனுடைய சந்நிதிக்குச் செல்வது?” என்று அவரிடமிருந்து விலக ஆரம்பிக்கிறோம்.
ஆனால் ஒரு குழந்தை கீழே விழுந்து காலில் ஆழமான காயம் ஏற்பட்டுவிட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள். இரத்தம் வருகிறது. அந்தக் குழந்தை என்ன செய்ய வேண்டும்?
“அப்பாவிடம் போனால் அவர் என்ன சொல்வாரோ? அம்மாவிடம் போனால் திட்டுவாரோ?” என்று ஒரு மூலையில் உட்கார்ந்து காயத்தை மறைத்துக்கொண்டிருக்க வேண்டுமா?
இல்லை.
காயத்தோடு அவர்களிடமே ஓட வேண்டும்.
முதலில் காயத்தைக் கவனிக்க வேண்டும். இரத்தத்தை நிறுத்த வேண்டும். சுத்தம் செய்ய வேண்டும். தேவையானால் மருத்துவரிடம் கொண்டுபோக வேண்டும். “நீ ஏன் அங்கே ஓடினாய்? எத்தனை முறை சொல்லியிருக்கிறேன்?” என்ற பகுப்பாய்வு பின்னர் வரலாம். ஆனால் காயம் ஏற்பட்டிருக்கும்போது முதலாவது தேவை சிகிச்சை.
அதுபோல பாவம் தெரியவந்தவுடன், அதை மறைத்துக்கொண்டு தேவனிடமிருந்து ஓடுவது தீர்வு அல்ல.
காயத்தோடு மருத்துவரிடம் போவதுபோல, பாவத்தோடு தேவனுடைய வெளிச்சத்திற்கு வாருங்கள்.
1 யோவான் 1:9-ஐ மறுபடியும் நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்: “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.”
அவர் உண்மையுள்ளவர்.
அவர் நீதியுள்ளவர்.
அவர் மன்னிக்கிறார்.
அவர் சுத்திகரிக்கிறார்.
ஆகவே பாவம் தெரியவந்தவுடன் முதலாவது மறுவினை- நம்பிக்கையின்மை அல்ல, மனமுறிவு அல்ல.
Confession. அறிக்கை
மறைத்தல் அல்ல.
வெளிச்சத்திற்கு வருதல்.
தேவனிடமிருந்து ஓடுதல் அல்ல.
தேவனிடத்தில் வருதல்.
ஆனால் இங்கே இன்னொரு ஆபத்து இருக்கிறது. சிலர் பாவத்தை அறிக்கையிட்டபிறகும் பாவத்தையே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். “நான் இப்படிச் செய்துவிட்டேனே! நான் இப்படிப்பட்டவனாக இருக்கிறேனே!” என்று அதையே நினைத்து, அதையே திரும்பத் திரும்பப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
அது தாழ்மைபோலத் தெரியலாம்.
ஆனால் ஒரு கட்டத்தில் அது நம்முடைய கண்களைக் கிறிஸ்துவிலிருந்து நம்மிடமே திருப்பிவிடலாம்.
லேவியராகமம் 4 நமக்கு என்ன காட்டியது?
பாவம் தெரியவந்தது.
ஆனால் தேவன் பாவத்தை மட்டும் காட்டவில்லை.
பலியையும் காட்டினார்.
இதுதான் முக்கியம்.
பாவத்தை இலேசாக எடுத்துக்கொள்ளாதீர்கள்.
அதை மறைக்காதீர்கள்.
அதற்குச் சாக்குப்போக்குச் சொல்லாதீர்கள்.
அதை அறிக்கையிடுங்கள்.
அதைவிட்டு விலகுங்கள்.
பின்னர் பாவத்தையே பார்த்துக்கொண்டிருக்காமல் பலியைப் பாருங்கள்.
நம்முடைய பாவம் பெரியதாக இருக்கலாம்.
ஆனால் நம்முடைய பலி அதைவிடப் பெரியது.
நம்முடைய தோல்வி உண்மையானது.
ஆனால் கிறிஸ்துவின் இரத்தமும் உண்மையானது.
நம்முடைய மனச்சாட்சி நம்மைக் குற்றப்படுத்தலாம்.
ஆனால் நம்முடைய நம்பிக்கை நம்முடைய மனச்சாட்சியின் உணர்ச்சியில் இல்லை.
கிறிஸ்துவில் இருக்கிறது.
அதனால் பாவம் தெரியவந்தவுடன் என்ன செய்வோம்?
அதை வெளிச்சத்திற்குக் கொண்டுவருவோம்.
அதை அறிக்கைசெய்வோம்.
அதைவிட்டு விலகுவோம்.
பின்னர் பலியைப் பார்ப்போம்.
அறிக்கைசெய்தல் என்று சொல்வது மிகவும் எளிது. ஆனால், நடைமுறையில் நாம் பாவத்தைச் சந்திக்கும்போது நான்குவிதமான காரியங்களைச் செய்ய முயல்வோம்.
இந்த நான்கு அணுகுமுறைகளையும் அடுத்த வேதபாடத்தில் விரிவாக ஆராய்வோம். இப்போது நாம் கற்றுக்கொண்ட உண்மைகளை நினைவுகூர்ந்து இந்தப் பாடத்தை நிறைவு செய்வோம்.
முடிவுரை
இன்று பாவத்தின் விளைவுகளையும், பாவநிவாரண பலியின் அவசியத்தையும், தேவன் ஏற்படுத்திய வழியையும் பார்த்தோம். பாவம் தெரியவந்தால் தேவனிடமிருந்து ஓடாமல், அவரிடம் திரும்ப வேண்டும்.
ஆனால் நம்முடைய நம்பிக்கை நம்முடைய அறிக்கையின் சிறப்பில் இல்லை; நமக்காகத் தம்மை ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவில்தான் இருக்கிறது.
அடுத்த பாடத்தில், பாவத்தை எதிர்கொள்ளும் நம்முடைய நான்கு அணுகுமுறைகளை முதலில் ஆராய்வோம். அதன் பிறகு, பாவநிவாரண பலியின் பத்து அம்சங்களையும் ஒன்றன்பின் ஒன்றாகப் பார்த்து, அவை ஒவ்வொன்றிலும் கிறிஸ்து எவ்வாறு வெளிப்படுகிறார் என்பதைக் காண்போம்.
ஆமென்.