Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More

சபை வரலாற்றைப்பற்றிய தொடரின் இந்த எட்டாம் பாகத்தில் கி.பி 100முதல் கி.பி 312வரையிலான சபை வரலாற்றின் இரண்டாம் காலகட்டத்தில், உரோமப் பேரரசில் சபைகளுக்கிடையே வேகமாக ஊடுருவிப்பரவி மிகவும் உயிர்த்துடிப்புடன் செயல்பட்ட ஓர் இயக்கத்தைப்பற்றி - அதன் தொடக்கம், அது ஏற்படுத்திய நேர்மறையான தாக்கம், எதிர்மறையான பாதிப்பு, அதைப் பின்பற்றிய சில முக்கியமான தலைவர்கள், அதை எதிர்த்த சில முக்கியமான தலைவர்கள், சபை அதை எதிர்கொண்ட விதம், அதற்கு எதிரான குற்றச்சாட்டுகள், அதன் முடிவு - ஆகியவைகளைப் பார்க்கப்போகிறோம். மோன்டனிசம் சபை வரலாறு - 08 I. முன்னுரை II. மோன்டனிசம் 1. அறிமுகம் 2. சுருக்கமான பார்வை 2.1 மூன்று முக்கியமான பெயர்கள் 2.1.1 ஃபிரிஜியன்ஸ் 2.1.2 ஆவிக்குரியவர்கள் the spirituals 2.1.3 "புதிய தீர்க்கதரிசனம்" (New Prophecy) 2.1.4 பெபூசியர்கள் 3. மூன்று முக்கியமான போதனைகள் 4. மூன்று முக்கியமான தலைவர்கள்  5. மோன்டனிசம் பரவுதல் 6. மோன்டனிசம் - ஆதரவாளர்கள்  6.1. லியோனின் சபைத் தலைவர்கள் 7. வழிவிலகல்கள் 7.1 கழித்தல் அல்ல, கூட்டல் III. பாராட்டுக்குரிய அம்சம் -  தெர்த்துல்லியன் IV. தனித்தன்மைவாய்ந்த உபதேசங்கள் - விமரிசனங்களும், ஆய்வும் 1. குழப்பமான திரித்துவமா, இருத்துவமா, ஒருத்துவமா 2. பளபளக்கும் பரவசமும், ஆவேசமும் 3. இரத்தசாட்சிகள் 4. நிதானமிழந்த தீர்க்கதரிசனம் - முழுநிறைவும், முடிவும் 5. கருகலான  தீர்க்கதரிசிகளின் கனிகள் 6. புதிய யுகம், பிரதான தீர்க்கதரிசி 7. ஒழுக்கசீலர்களா, சட்டவாதிகளா 8. மிதமிஞ்சிய மோன்டனிச வாக்கியங்கள் 9. ஃபிரிஜியாவில் புதிய எருசலேம் 10. வெறியா, வேதப்புரட்டா 11. பாராட்டுக்குரிய காரியங்கள் V. எதிர்ப்பாளர்கள் 1. ஹிப்போலிட்டஸ் 2. யூசிபியஸ் 3. ஹயராபோலிஸின் அப்பொல்லினேரியஸ் 4. அபெர்சியஸ் மார்செல்லஸ் 5. எபிபானியஸ் 6. மேற்கத்திய சபை 7. அந்தியோக்கியாவின் ஆயரான செராபியன் VI. ஆதிச் சபையில் தீர்க்கதரிசனம் 1. இக்னேஷியஸ் 2. ஹெர்மசின் மேய்ப்பன் 3. ஜஸ்டின் மார்ட்டிர் 4. ஐரேனியஸ் 5. சிப்பிரியான் 6. யூசிபியஸ் 7. ஜெரோஸ்லாவ் பெலிகன் VI. கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் VII. முடிவுரை


மோன்டனிசம்

சபை வரலாறு - 08

I. முன்னுரை

சபை வரலாற்றைப்பற்றிய தொடரின் எட்டாம் பாகத்துக்கு நான் உங்களை அன்புடன் வரவேற்கிறேன். சபை வரலாற்றைப்பற்றிய இந்த எட்டாம் பாகத்தில் கி.பி 100முதல் கி.பி 312வரையிலான சபை வரலாற்றின் இரண்டாம் காலகட்டத்தில், உரோமப் பேரரசில் சபைகளுக்கிடையே வேகமாக ஊடுருவிப்பரவி மிகவும் உயிர்த்துடிப்புடன் செயல்பட்ட ஓர் இயக்கத்தைப்பற்றி - அதன் தொடக்கம், அது ஏற்படுத்திய நேர்மறையான தாக்கம், எதிர்மறையான பாதிப்பு, அதைப் பின்பற்றிய சில முக்கியமான தலைவர்கள், அதை எதிர்த்த சில முக்கியமான தலைவர்கள், சபை அதை எதிர்கொண்ட விதம், அதற்கு எதிரான குற்றச்சாட்டுகள், அதன் முடிவு - ஆகியவைகளைப் பார்க்கப்போகிறோம். எல்லாரிடமிருந்தும் - நல்லவர்களிடமிருந்து மட்டும் அல்ல, பொல்லாதவர்களிடமிருந்தும் - நாம் பாடம் கற்றுக்கொள்ளலாம். எனவே, இந்த இயக்கத்திலிருந்தும் நாம் சில பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும், கற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த இயக்கத்தைப்பற்றித் தெரிந்துகொள்ளும்போது, ஒரு பக்கம், உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும், இன்னொரு பக்கம், அதிர்ச்சியாக இருக்கும். ஒரு வாக்கியத்தில் சொல்வதானால் சுவாரசியமாக இருக்கும்.

இந்த இயக்கத்தைப்பற்றி நான் தெரிந்துகொண்டபோது, "முன் இருந்ததே இனிமேலும் இருக்கும்; முன் செய்யப்பட்டதே பின்னும் செய்யப்படும்; சூரியனுக்குக் கீழே நூதனமானது ஒன்றுமில்லை," என்ற பிரசங்கி 1:9 என் நினைவுக்கு வந்தது.

II. மோன்டனிசம்

1. அறிமுகம்

இந்த இயக்கத்தின் பெயரை நீங்கள் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பு குறைவு. இந்த இயக்கத்தின் பெயர் மோன்டனிசம். மோன்டனிசத்தையும் அதன் உண்மையான நிலைமையையும் என்னால் இயன்ற அளவுக்கு நான் கூற முயல்வேன். இது இரண்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் சுமார் 150வாக்கில் தொடங்கி சுமார் 80 ஆண்டுகள் வீறுநடை, வெற்றிநடை, போட்டது. அதற்குப்பிறகும், இந்த இயக்கம் வலுவிழந்து பொலிவிழந்து, வேறு சில வடிவங்களில் சில காலம் தொடர்ந்தது. முதலில் வேகமாக ஓடியது, பின்னர் வேகம் குறைந்த நடந்தது, அதன்பின் நொண்டியது, அதற்குப்பின் படுத்தது, கடைசியாகச் செத்தது.

சிறிய ஆசியாவில் ஃபிரிஜியா பகுதியில் தோன்றிய இந்த இயக்கம் உரோமப் பேரரசின் பல இடங்களுக்கும் பரவியது. சுமார் 80 ஆண்டுகள் வீறுநடை போட்டது என்று சொல்லலாம். கிறிஸ்தவம் சட்டப்பூர்வமான மதமாக அங்கீகரிக்கப்படுவதற்குமுன்னரே தோன்றிய இந்த இயக்கத்திலிருந்து பிரிந்துபோன சில குழுக்கள், அதற்குப்பின்னரும் சில காலம் ஏதோவொரு வகையில் பலமிழந்து 6ஆம் நூற்றாண்டுவரை ஆங்காங்கே செயல்பட்டன.

மோன்டனிசத்தைப்பற்றிய தகவல்கள் பெரும்பாலும் மோன்டனிசத்தை எதிர்த்தவர்கள் வழியாகவே தெரியவருகின்றன. எனவே, மோன்டனிஸ்ட்டுகள் எதை விசுவாசித்தார்கள், எதை விசுவாசிக்கவில்லை என்று துல்லியமாக வரையறுப்பது சற்று கடினம்.

இந்த இயக்கத்தைப்பற்றி பலர் பலவிதமாகச் சொல்வார்கள். "ஆதிச் சபை பரிசுத்த ஆவியானவரின் வரங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்காததாலும், இயேசு கிறிஸ்து மிக விரைவில் வரப்போகிறார் என்ற சத்தியத்தின் உணர்வை இழந்ததாலும், அதற்கு எதிராக எழுந்த எதிர்வினைதான் மோன்டனிசம்," என்று சிலர் சொல்வதுண்டு. இந்தக் கருத்து உண்மையா இல்லையா என்று நீங்கள் இன்னும் கொஞ்ச நேரத்தில் புரிந்துகொள்வீர்கள். "ஆதிச் சபை பரிசுத்த ஆவியானவரின் வரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. இதுதான் மோன்டனிசம் தோன்றக் காரணம்," என்ற மோன்டனிஸ்டுகளின் வாதத்தை, கூற்றை, சபை ஆமோதிக்கவில்லை, ஏற்றுக்கொள்ளவில்லை. அதே நேரத்தில், "பரிசுத்த ஆவியின் வரங்கள் அப்போஸ்தலர்களின் காலத்தோடு முடிந்துவிட்டன," என்ற கருத்தையும் சபை ஆதரிக்கவில்லை. இதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

இன்றைய கிறிஸ்தவத்தில் பல குழுக்களில் காணப்படுகிற பல அம்சங்களை அன்றைய மோன்டனிசத்தில் தெளிவாகப் பார்க்கலாம். எடுத்துக்காட்டாக, தேவனுடைய வார்த்தையில் சொல்லப்பட்டுள்ளதைவிட கூடுதலான போதனைகள், பழக்கவழக்கங்கள், பயிற்சிகள், சட்டவாதம், ஆவியானவரின் வரங்களைத் தவறாகப் பயன்படுத்துதல், நிதிகளைத் தவறாகக் கையாளுதல், தலைமைப்பொறுப்புக்கான சண்டை, மற்றவர்களைவிடத் தங்களை உயர்ந்த ஆவிக்குரியவர்களாகக் கருதுதல்போன்ற பல அம்சங்கள் அங்கு நிலவின.

மோன்டனிசத்தில் வேதாகமத்தின் வரம்பைக் கடந்த, மிஞ்சிய, மட்டுமீறிய நிறைய சிக்கல்கள் இருந்ததால், அது பலராலும், குறிப்பாக சபையாலும், கடிந்துகொள்ளப்பட்டது, கண்டிக்கப்பட்டது, விமரிசிக்கப்பட்டது. மோன்டனிசத்தைப்பற்றிய சபையின் விமரிசனமும், கடிந்துகொள்ளுதலும், கண்டனமும் சரியா தவறா என்பதை உங்கள் முடிவுக்கு விட்டுவிடுகிறேன்.

2. சுருக்கமான பார்வை

சரி, மோன்டனிசத்தைப்பற்றிய ஒரு பரந்த பார்வையை நான் உங்களுக்குத் தருகிறேன். 16ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் எழுந்த சமயச் சீர்திருத்த இயக்கங்களைப்பற்றியும், கத்தோலிக்க சபையில் ஏற்பட்ட மறுமலர்ச்சியைப்பற்றியும் நமக்குத் தெரியும். இதுபோல், மோன்டனிசம் இரண்டாம் நூற்றாண்டில் கிறிஸ்தவ சமூகத்திற்குள், சபைக்குள், முளைத்த ஒரு கிறிஸ்தவ இயக்கம். மோன்டனிசம் சிலரால் பாராட்டப்பட்டது, பலரால் கண்டனம்செய்யப்பட்டது; சிலரால் வரவேற்கப்பட்டது, பலரால் வெறுக்கப்பட்டது; சிலரால் போற்றப்பட்டது, பலரால் தூற்றப்பட்டது.

2.1 மூன்று முக்கியமான பெயர்கள்

இந்த இயக்கத்தை நிறுவியவரின் பெயர் மோன்டானுஸ். எனவேதான் இந்த இயக்கம் மோன்டனிசம் என்று அழைக்கப்படுகிறது. லூத்தரன் சபை, வெஸ்லி சபை, ஆங்கிலிக்கன் சபை என்று அழைக்கப்படுவதுபோல், இது மோன்டனிச இயக்கம் என்று அதை நிறுவியவரின் பெயரால் அழைக்கப்படுகிறது. ஆனால் இவர்கள் தங்களை மோன்டானுஸ் சபை என்றழைக்கவில்லை. மோன்டானுசைப்பற்றி இன்னும் கொஞ்ச நேரத்தில் பார்ப்போம். அதற்குமுன் மோன்டனிஸ்டுகளைப்பற்றிப் பார்ப்போம்.

2.1.1 ஃபிரிஜியன்ஸ்

இந்த இயக்கத்துக்கும் இந்த இயக்கத்தைப் பின்பற்றியவர்களுக்கும் பல்வேறு பட்டப்பெயர்கள் சூட்டப்பட்டன.

ஒன்று, இவர்களைச் சிலர் ஃபிரிஜியன்ஸ் அல்லது கேடாஃபிரிஜியன்ஸ் என்று அழைத்தார்கள். ஏனென்றால், மோன்டனிஸ்டுகள் முதலாவது சிறிய ஆசியாவிலுள்ள, அதாவது இன்றைய துருக்கியிலுள்ள, ஃபிரிஜியா என்ற வட்டாரத்தில்தான் வாழ்ந்தார்கள். சிறிய ஆசியா துருக்கியின் கிழக்குப் பகுதியின் நடுவில் இருக்கிறது. ஃபிரிஜியாவுக்கு வடக்கே இஸ்தான்புல்லும் தெற்கே அனடோலியாவும் இருக்கின்றன. ஃபிரிஜியா இந்த இரண்டுக்கும் நடுவில் உள்ள பகுதி. கலாத்தியா, கப்பதோக்கியா, பித்தினியா, பம்பிலியா, லிதியா போன்ற நகரங்கள் இந்தப் பகுதியைச்சுற்றி இருக்கின்றன. இந்தப் பெயர்கள் நமக்குப் பரிச்சயமானவை. பெந்தெகொஸ்தே நாளில் "கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா, பிரிகியா" போன்ற நாடுகளிலிருந்து யூதர்கள் எருசலேமுக்கு வந்திருந்தார்கள் என்று நடபடிகள் 2:9இல் வாசிக்கிறோம். இந்தப் பிரிகியாதான் ஆங்கிலத்தில் ஃபிரிஜியா. மோன்டனிஸ்ட்டுகள் இந்தப் பகுதியில் குவிந்திருந்ததால் இவர்கள் பிரிகியர்கள் அல்லது கேட்டாபிரிகியர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். கேட்டாபிரிகியர்கள் என்றால் பிரிகியாவிலிருந்து வந்தவர்கள் என்று பெயர்.

2.1.2 ஆவிக்குரியவர்கள் the spirituals

இரண்டு, இந்தக் குழுவைச் சார்ந்தவர்கள் தங்களை உயர்ந்த ஆவிக்குரியவர்கள் என்றும், தாங்கள் மாத்திரமே "ஆவியால் நிரப்பப்பட்டவர்கள்", மற்ற கிறிஸ்தவர்கள் "ஆவியைப் பெறாதவர்கள், ஆவியால் நிரப்பப்படாதவர்கள்" என்றும் மார்தட்டிக்கொண்டார்கள். தாங்கள் பரிசுத்தமான வாழ்க்கை வாழ வழிவகுக்கும் ஆவியானவரின் சிறப்பு ஞானஸ்நானத்தைப் பெற்றிருப்பதால், அவர்கள் தங்களை மிகவும் உயர்வானவர்களாகவும் தங்களிடம் உயர்வான கிறிஸ்தவம் இருப்பதாகவும் கருதினார்கள். இவர்கள் தங்களை ஆவிக்குரியவர்கள் the spirituals என்று அழைத்து தங்களைப் பிறரிடமிருந்து வேறுபடுத்தினார்கள்.

ஓர் ஏணியில் கீழேயிருந்து மேலேவரை பல படிகள் இருக்கின்றன. ஆவிக்குரிய வாழ்வில் பல அடுக்குகள் இருப்பதாக எடுத்துக்கொண்டால், தாங்கள்தான் இந்த அடுக்கின் மிக உயர்ந்த அடுக்கு, ஆவிக்குரிய உச்சம், spiritual elite, என்று உறுதியாக நினைத்தார்கள். அன்றைய சபையை இவர்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. தங்களைத்தவிர மீதி எல்லாரையும் துச்சகமாக மதித்தார்கள். தங்களைத்தவிர மீதி அனைவரும் மாம்சப்பிரகாரமானவர்கள் என்று தயக்கமேயின்றி தாராளமாகச் சொன்னார்கள். தாங்கள் மட்டுமே "ஆவிக்குரிய" மக்கள்; பிறர் "மாம்சம்சார்ந்த" மக்கள் என்று அவர்கள் கருதினார்கள். தங்கள் இயக்கத்தில் உள்ளவர்களைத்தவிர மீதி அனைவரையும் “மாம்சப்பிரகாரமானவர்கள், பாவத்தை மிக மேலோட்டமாகக் கருதுபவர்கள், பரிசுத்த ஆவியானவரைக்குறித்த உணர்வற்றவர்கள்,” என்று மோன்டனிஸ்ட்டுகள் முத்திரைகுத்தினார்கள்.

ஆக, ஒன்று, இவர்கள் பிரிகியர்கள் அல்லது கேட்டாபிரிகியர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். இரண்டு, இவர்கள் தங்களை the spirituals ஆவிக்குரியவர்கள் என்று அழைத்துக்கொண்டார்கள்.

2.1.3 "புதிய தீர்க்கதரிசனம்" (New Prophecy)

மூன்று, மோன்டனிசம் "புதிய தீர்க்கதரிசனம்" (New Prophecy) என்றும் அழைக்கப்பட்டது. இந்த இயக்கம் முழுக்க முழுக்க ஒரு "தீர்க்கதரிசன" இயக்கம். எனவே இந்தப் பெயரே அவர்களுக்கு நிலைத்தது. மோன்டனிஸ்டுகளும் மோன்டனிசத்தின் எதிர்ப்பாளர்களும் இந்தப் பெயரையே அதிகம் பயன்படுத்தினார்கள். எனவே, பிரிகியர்கள், ஆவிக்குரியவர்கள் என்ற பட்டப்பெயரைவிட "புதிய தீர்க்கதரிசனம்" என்ற பெயரையே நானும் பெரும்பாலும் பயன்படுத்துவேன். ஏனென்றால், அதுதான் காரியத்தின் கடைத்தொகை. 'புதிய தீர்க்கதரிசனம்'. நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

2.1.4 பெபூசியர்கள்

நான்கு, இவர்களுக்கு பெபூசியர்கள் என்ற பட்டப்பெயரும் உண்டு. இது இவர்கள் தங்களுக்குச் சூட்டிக்கொண்ட பெயர் இல்லை. இது பிறர் இவர்களுக்குக் கொடுத்த பெயர். இதற்கு ஒரு காரணம் உண்டு. பிரிகியாவின் மேற்குப்பகுதியில் இருக்கும் பெபுசா, தைமின் என்ற இரண்டு நகரங்களை உள்ளடக்கிய பகுதிகளை மோன்டனிஸ்டுகள் புதிய எருசலேம் என்றழைத்தார்கள். புதிய எருசலேம் பெபுசாவில்தான் வந்திறங்கும் என்று இவர்கள் நம்பினார்கள். எனவே, இவர்களுக்கு இந்தப் பெயர் வந்தது.

ஆக, இவர்களுக்கு மொத்தம் நான்கு பெயர்கள் – ஃபிரிஜியன்ஸ் அல்லது பிரிகியர்கள், The Spirituals, "புதிய தீர்க்கதரிசனம்" (New Prophecy), பெபூசியர்கள்.

3. மூன்று முக்கியமான போதனைகள்

இவர்கள் பல புதிய போதனைகளைப் போதித்தபோதும், மிக முக்கியமானதாக மூன்று போதனைகளை அதிகம் வலியுறுத்தினார்கள். போகப்போக இவர்களைப்பற்றிய பல காரியங்களைப் பார்ப்போம். இப்போது இந்த மூன்று காரியங்களைக் குறிப்பிடுகிறேன்.

3.1. முதலாவது, அவர்கள் பரிசுத்த ஆவியானவரை அனுபவிக்கும் அனுபவத்தை வலியுறுத்தினார்கள். இதில் குறிப்பாக தீர்க்கதரிசனம் உரைப்பதும், அந்நிய பாஷை பேசுவதும் அடங்கும். பரிசுத்த ஆவியானவர் தம்மைத் தங்கள் கூட்டங்களில் வெளிப்படுத்துகிறார் என்று இவர்கள் போதித்தார்கள். வேதாகமத்தைவிட, வேதவசனங்களைவிட, தீர்க்கதரிசனம் உரைப்பதற்கும், தீர்க்கதரிசிகள் என்று அழைக்கப்பட்டவர்கள் பேசிய வார்த்தைகளுக்கும் இவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள்.

"பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சிகொடுப்பார்," என்று யோவான் 15:26இல் இயேசு தம் சீடர்களை வழிநடத்த தாம் ஒரு தேற்றரவாளனை, "துணையாளரை" (Paraclete), அனுப்புவதாக வாக்குரைத்தார். அந்தத் தேற்றரவாளனாகிய பரிசுத்த ஆவியே தங்களைத் தீர்க்கதரிசனம் உரைக்கத் தூண்டியதாக மோன்டானுசும், அவருடைய உடன்ஊழியக்காரர்களும் கூறினார்கள்.

ஒரு மிக முக்கியமான காரியம். நான் மேலே குறிப்பிட்ட வசனத்தில் சொல்லப்பட்டுள்ள தேற்றரவாளன் என்ற வார்த்தை கிரேக்க மொழியில் paraclete. மோன்டனிஸ்ட்டுகள் பரிசுத்த ஆவியானவரை பரிசுத்த ஆவி என்று சொல்லாமல் paraclete என்றே குறிப்பிட்டார்கள்.

3.2. இரண்டாவது, இயேசு கிறிஸ்து, அவர்கள் வாழ்ந்த அந்த நாட்களிலேயே வருவார் என்றும், தம் ஆயிரவருட அரசாட்சியை உடனே அப்போதே நிறுவுவார் என்றும், அவர்கள் நம்பினார்கள். இதையும் போகப்போக விவரமாகப் பார்ப்போம்.

3.3. மூன்றாவது, கடுமையான சமய நடத்தையே தேவனுக்கு உகந்தது என்று போதித்தார்கள். மிகக் கண்டிப்பான சட்டதிட்டங்கள் வைத்திருந்தார்கள். நோன்பு, தவம், ஒறுத்தல் ஆகியவைகளில் அளவுக்கதிகமான ஈடுபாடு கொண்டிருந்தார்கள். எனவே, எல்லாவற்றையும் துறந்து துறவிகள்போல் வாழும் ஒரு வகையான மனப்பாங்கு அவர்களிடம் இருந்தது. மோன்டனிசத்தை "சந்நியாசி இயக்கம்" என்றுகூடச் சிலர் சொல்வதுண்டு. தங்கள் உடலை வருத்துவதும், தண்டிப்பதும், ஆவிக்குரிய வளர்ச்சிக்கு அவசியம் என்று மோன்டனிஸ்ட்டுகள் நம்பினார்கள், போதித்தார்கள்.

நிறைய காரியங்கள் உள்ளன. அவைகளை நாம் இன்னும் கொஞ்ச நேரத்தில் விரிவாகப் பார்ப்போம்.

4. மூன்று முக்கியமான தலைவர்கள்

மோன்டனிசத்தில் மூன்று முக்கியமான தலைவர்கள் இருந்தார்கள். இந்த மூவரைப்போல் வேறு யாரும் மோன்டனிசத்தில் அவ்வளவு பிரபலமாகவில்லை.

1. முதலாவது, அதன் நிறுவுனர் மோன்டானுஸ். இவரைக்குறித்த நம்பகமான வரலாறு மிகக் குறைவாகவே உள்ளது. மோன்டானுஸ் தீர்க்கதரிசனம் உரைக்கத் தொடங்கிய ஆண்டு கி.பி. 135 என்று சிலர் கருதுகின்றனர். வேறு சிலர் கி.பி. 177க்குமுன் அவர் தீர்க்கதரிசன ஊழியத்தைத் தொடங்கவில்லை என்கிறார்கள். சிறிய ஆசியாவில் வாழ்ந்த இவர் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொள்வதற்குமுன், சைபலே என்ற வெறித்தனமான ஒரு பண்டைய கிரேக்க அஞ்ஞான மதத்தின் பூசாரியாக இருந்தார் என்று சொல்லப்படுகிறது. ஆனால், இவர் உண்மையாகவே ஓர் அஞ்ஞான கோயில் பூசாரியாக இருந்தாரா என்பதை நிரூபிக்கப் போதுமான ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஆயினும், அவருடைய எதிர்ப்பாளர்கள் இப்படிக் குற்றம் சுமத்தினார்கள் என்பதற்கு நிறைய ஆதாரம் இருக்கிறது.

இரண்டாவது, யூதாசைப்போல, இவரும் கடைசியில் தற்கொலை செய்துகொண்டதாகச் சிலர் கூறுகிறார்கள். இதற்கும் சமகால ஆதாரம் இல்லை. ஆனால், இதையும், இவருடைய எதிர்ப்பாளர்கள் பலர் எழுதியிருக்கிறார்கள். எனவே, இவர் கோயில் பூசாரியாக இருந்தார் என்பதும், தற்கொலை செய்துகொண்டார் என்பதும் உறுதிப்படுத்தப்படாத கூற்றுக்கள், குற்றச்சாட்டுகள்.

2. மோன்டனிச இயக்கத்தின் மற்ற இரண்டு தலைவர்கள் பிரிஸ்கில்லா, மாக்சிமில்லா என்ற இரண்டு பெண்மணிகள். மோன்டானுசும், இந்த இரண்டு பெண் தீர்க்கதரிசிகளும் தங்களை "ஒன்று-மூன்று" என்று அழைத்தார்கள்.

இந்த மூவரும் தாங்கள் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால் உந்தப்பட்டு தீர்க்கதரிசனம் உரைப்பதாகவும், பேசுவதாகவும், ஜெபிப்பதாகவும் சொன்னார்கள். தங்களைப் பின்சென்றவர்களும் தங்களைப்போல் ஜெபத்திலும் தவத்திலும் ஈடுபட்டால் தங்களைப்போல் தீர்க்கதரிசன வரம் பெறுவார்கள் என்று கூறினார்கள்.

இந்த மூவரும்தான் இந்த இயக்கத்தின் தீர்க்கதரிசன மையமாகத் திகழ்ந்தார்கள். பிரிஸ்கில்லா, மாக்சிமில்லா என்ற இரண்டு பெண்மணிகளும் திருமணமானவர்கள். ஆனால், இருவரும் தங்கள் கணவன்மார்களையும், பிள்ளைகளையும், குடும்பத்தையும் உதறிவிட்டு, இந்த இயக்கத்துக்காக, தீர்க்கதரிசன ஊழியத்துக்காக, தங்களைக் கன்னிகைகளாக ஒப்புக்கொடுத்தார்கள். மோன்டனிசத்தில் பெண்கள் பெரும் பங்காற்றியதும், முக்கியமான இந்த இரண்டு பெண்களும் தங்கள் குடும்பங்களைத் துறந்து, தங்கள் இயல்பான கடமைகளைச் செய்யத் தவறி, ஊழியத்துக்கென்று தங்களை ஒப்புக்கொடுத்தது, பல குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுத்தது. "இது தேவபக்தியல்ல. இது தெய்வீகமானதல்ல. தங்கள் கணவன்மார்களையும், குடும்பங்களையும், தங்கள் குழந்தைகளையும் நிர்க்கதியாக விட்டுவிட்டு, ஊழியத்துக்குப் போவது எப்படி தேவபக்தியாக இருக்க முடியும்," என்ற கேள்வி எழுந்தது.

மோன்டனிசத்தில் மாக்சிமில்லா மோன்டானுசைவிட மிகப் பிரபலமானார்.

தாங்கள் நற்செய்தியாளர் பிலிப்புவின் தீர்க்கதரிசன வரம்பெற்ற மகள்கள், அகபு தீர்க்கதரிசி போன்றோரின் வாரிசுகளான பிலடெல்பியாவின் குவாட்ரடஸ், அம்மியா என்ற இரண்டு தீர்க்கதரிசிகளின் வாரிசுகள், என்று இவர்கள் கூறினார்கள். அதாவது, இவர்கள் தீர்க்கதரிசன பரம்பரையாம்.

5. மோன்டனிசம் பரவுதல்

மோன்டனிசம், பவுல் ஒரு நூற்றாண்டுக்குமுன் நிறுவியிருந்த எபேசு, கலாத்திய சபைகள் இருந்த சிறிய ஆசிய பிராந்தியத்தில் வேகமாக வளர்ந்தது என்று நான் ஏற்கெனவே சொன்னேன். காலப்போக்கில், புதிய தீர்க்கதரிசனம், மோன்டானுசின் பூர்வீகமான ஃபிரிஜியாவிலிருந்து கிறிஸ்தவ உலகம் முழுவதும், கவுல்வரை பரவியது. அது வட ஆப்பிரிக்காவில் மிகவும் செழித்து வளர்ந்தது.

வட ஆப்பிரிக்காவில் கார்த்தேஜின் மிகப் பிரபலமான தலைவரான தெர்த்துல்லியன் மோன்டனிசத்தின் ஆதரவாளனானார். அங்கு அவர் மோன்டனிசத்தின் செய்தித் தொடர்பாளர்போல் செயல்பட்டார் என்றுகூடச் சொல்லலாம். தெர்த்துல்லியன் 160முதல் 220வரை வாழ்ந்தார். அவர் ஒரு சிறந்த தன்விளக்கவாதி. இவரைப்பற்றி முந்தைய பாகங்களில் பார்த்தோம். இவர் ஓர் இறையியல் அறிஞர். இவர் தன் வாழ்வின் பிற்பகுதியில் மோன்டனிசத்தை முழுமனதுடன் ஏற்றுக்கொண்டு, தனக்கே உரித்தான வைராக்கியத்தோடு அதைப் பேணிப்பாதுகாத்து பராமரித்தார் என்று சில வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். "இல்லை, அவர் அதை ஆதரித்தார். அவ்வளவுதான்," என்று வேறு சிலர் கூறுகிறார்கள்.

அது ஒரு புறம் இருக்கட்டும். ஆனால், மோன்டனிசம், உரோமப் பேரரசெங்கும் கிறிஸ்தவர்களிடையே பரவியது அல்லது ஊடுருவியது என்று சொல்லலாம்.

6. மோன்டனிசம் - ஆதரவாளர்கள்

மோன்டனிசத்துக்கு பாராட்டு விமரிசனம் ஆகிய இரண்டும் இருந்தன என்று நான் மீண்டும் ஒருமுறை வலியுறுத்த விரும்புகிறேன். இந்த வெளிச்சத்தில் பார்த்தால், மோன்டனிசத்தின் தொடக்கம் சரியாக இருந்ததுபோல் தோன்றுகிறது. ஆனால், காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக வழிவிலகி மோசமாகிவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. காலப்போக்கில் மோன்டனிசம் கிறிஸ்தவத்தில் ஒரு பிரிவினையை ஏற்படுத்தியது. மரபுவழிக் கிறிஸ்தவத்தைப் பின்பற்றியவர்கள் மோன்டானுஸ் ஒரு புதுக் கொள்கையைக் கொண்டுவருகிறார் என்று கூறி அவருடைய கொள்கையை நிராகரித்தார்கள். ஆனால், வியன்னாவையும் லியோனையும் சேர்ந்த கிறிஸ்தவர்கள் மோன்டனிசத்தை ஆதரித்தார்கள், பாராட்டினார்கள். 117இல் எழுதப்பட்ட கவுலின் ஒப்புதல் வாக்குமூலத்தின்மூலம் இது தெரிகிறது. ஆரம்பத்தில் உரோம ஆயர் எலியூத்தெரஸ் மோன்டனிசத்தை ஆதரித்தார். உரோம ஆயர் விக்டர் இந்த இயக்கத்தை ஆதரித்ததாகத் தெர்த்துல்லியன் கூறுகிறார். ஐரேனியஸ் மோன்டனிசத்தின்மீது அனுதாபம் கொண்டிருந்தார் என்பதற்கானச் சான்றுகள் உள்ளன.

சுமார் கி.பி. 177இலிருந்து, மோன்டனுஸ் தன் புதிய தீர்க்கதரிசன்னத்தைத் தொடங்கிய சுமார் இருபது ஆண்டுகளுக்குப்பிறகு, சபை அவரையும் அவருடைய இரண்டு தீர்க்கதரிசிகளையும் நிராகரிக்க ஆரம்பித்தது. இதில் குறிப்பிடத்தக்க ஒரு விதிவிலக்கு தெர்த்துல்லியன். இவருடைய ஆதரவு குறிப்பிடத்தத்தக்கது. அவர் கார்த்தேஜில் இந்த இயக்கத்தை பாதுகாத்து, அதன் தலைவராக இருந்தார். தெர்த்துல்லியன் யாரோவொருவர் அல்ல. அவர் மிகவும் அறிவார்ந்த இறையியலாளர், கிறிஸ்தவத்தின் மரபுவழி விசுவாசத்தின் பாதுகாவலராக இருந்தார். வட ஆப்பிரிக்காவில் வாழ்ந்த அவர் மோன்டனிச இயக்கத்தைத் தன் முழு மனதுடன் ஆதரித்தார். அவர் மோன்டனிச இயக்கத்தை முற்றிலும் தழுவினாரா என்று திட்டவட்டமாகக் கூற முடியாது. ஆயினும், மோன்டானுஸ் ஓர் உண்மையான தீர்க்கதரிசி என்றும், அவர் தவ முயற்சிகளில் ஈடுபட்டது பாரட்டத்தக்கது என்றும் தெர்த்துல்லியன் கருதினார்.

பல்வேறு இடங்களில் இருந்த சபைகள் மோன்டனிசத்தை அதன் பிளவுபடுத்தும் தன்மைக்காகவும், புதிய வெளிப்பாட்டைப் போதிப்பதற்காகவும், கண்டிக்கத் தொடங்கினார்கள். ஆனால், மோன்டானுசும் அந்த இரண்டு பெண்களும் தங்கள் தீர்க்கதரிசனங்கள் உண்மை என்று சாதித்தார்கள். மாக்சிமில்லா சபையைவிட்டு வெளியேற்றப்பட்டபோது, “ஆடுகளுக்கு நடுவிலிருந்து நான் ஓர் ஓநாய்போல் வெளியே துரத்தப்பட்டேன்; நான் ஓநாய் அல்ல, ஆனால் நான் பேசுதல், ஆவி, வல்லமை”என்று கூறினார்

மோன்டனிசத்துக்கு மூன்று முக்கியமான பட்டப்பெயர்கள், மூன்று முக்கியமான தலைவர்கள், இப்போது மோன்டனிசத்தின் மூன்று முக்கியமான ஆதரவாளர்களைப்பற்றிப் பேசுவோம்.

1. லியோனின் சபைத் தலைவர்கள்

ஆதிச் சபை மூன்றாம் நூற்றாண்டின் முதல் பகுதியில்தான் மோன்டனிசத்தை முற்றிலும் நிராகரித்தது. ஆரம்ப நாட்களில் மோன்டனிசத்துக்கு அன்பான வரவேற்பு கிடைத்தது. அதைப் பலர் வரவேற்று ஏற்றுக்கொண்டார்கள். அந்தக் காலகட்டத்தில் மோன்டனிச இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் பிற விசுவாசிகளைப்போல கிறிஸ்துவினிமித்தம், விசுவாசத்தினிமித்தம், சிறையில் அடைக்கப்பட்டார்கள், சித்திரவதை செய்யப்பட்டார்கள், இரத்தசாட்சிகளாக மரித்தார்கள். எனவே, "சபை அவர்களை நிராகரிக்கக்கூடாது, மாறாக, அவர்களை ஏற்று அரவணைக்க வேண்டும்," என்று பிரான்ஸிலுள்ள லியோனைச் சேர்ந்த சபைத் தலைவர்கள் மோன்டனிசத்துக்கு ஆதரவாக 177ஆம் ஆண்டு உரோம சபையின் ஆயர் எலியூத்தேரசுக்குக் (Eleuterus) கடிதம் எழுதினார்கள். "மோன்டனிசவாதிகளுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கை எடுப்பதன்மூலம் பரிசுத்த ஆவியானவரின் நகர்வைத் தணிக்க வேண்டாம்," என்று அவர்கள் வற்புறுத்தினார்கள். இவர்களுடைய பரிந்துரையை ஏற்று, இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், மோன்டனிசம் உரோமின் ஆயர் எலியூத்தெரெசின் அதிகாரபூர்வமான ஆதரவையும் அங்கீகாரத்தையும் பெற்றது.

2. அவருக்குப்பின் வந்த உரோம ஆயர் விக்டரும் மோன்டனிசத்தை வரவேற்றார். ஒன்றைக் கவனியுங்கள். ஆரம்பத்தில் மோன்டனிசத்தை விமரிசித்தவர்கள், எதிர்த்தவர்கள்கூட, அதன் அடிப்படையான இறையியல் கிறிஸ்தவத்தின் இன்றியமையாத, அடிப்படையான, ஏற்புடைய மரபுவழி போதனைகளுக்கும், உபதேசங்களுக்கும் ஒத்தவை (Orthodox) என்று ஏற்றுக்கொண்டார்கள்.

3. 199இல் கலாத்தியாவின் அன்கிரியா சபையில் பலர் மோன்டனிசத்தை ஆதரித்தார்கள். இதனால் அங்கு பிரிவினை உண்டாயிற்று. பிரிவினை ஏற்படும் அளவுக்கு அவர்களுக்கு ஆதரவு கிடைத்திருக்கிறது.

7. வழிவிலகல்கள்

7.1 கழித்தல் அல்ல, கூட்டல்

மோன்டனிசத்தில் பிரச்சினைகள் இருந்தனவா? நிச்சயமாக. கோளாறுகள், குளறுபடிகள், கோமாளித்தனங்கள் நிறைய இருந்தன. ஆனால், திரித்துவம், கிறிஸ்துவின் தெய்வீகம், கிறிஸ்துவின் மனுஷீகம், மரணம், உயிர்த்தெழுதல், பரமேறுதல், கிறிஸ்துவின் இரண்டாம் வருகைபோன்ற கிறிஸ்தவத்தின் மரபுவழி போதனைகளில் அவர்கள் ஆரம்பத்தில் மாறுபடவில்லை. எனவே, ஆரம்பத்தில் அவர்களுடைய இறையியலில் பிரச்சினை இருக்கவில்லை; மாறாக, அவர்களுடைய கோளாறு நடைமுறைப் பழக்கத்திலும் பயிற்சியிலும் தோன்றியது. எடுத்துக்காட்டாக, "மோன்டனிசம் அடிப்படை விசுவாசத்திலிருந்து விலகவில்லை. மாறாக, ஆதிச் சபையின் நடைமுறை ஒழுக்கத்தையும், நெறிப்படுத்துதலையும் அளவுக்கு அதிகமாக வலியுறுத்தினார்கள்," என்று சபை வரலாற்றாசிரியரும், இறையியலாளருமான பிலிப் ஸ்காஃப் (Philip Schaff) கூறுகிறார். சபை வரலாற்றாசிரியர் கென்னத் ஸ்காட் லேட்டரெட் (Kenneth Scott Latourette) பிலிப் ஸ்காஃப்பின் இந்த மதிப்பீட்டை அப்படியே ஏற்றுக்கொள்கிறார். "மோன்டனிசம் வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ள கிறிஸ்துவின் போதனைகளையும், அவருடைய அப்போஸ்தலர்களின் உபதேசங்களையும் மதிக்கிறது; வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளவைகளை அவர்கள் மறுக்காவிட்டாலும், வேதாகமத்துக்கு முரணாக அவர்கள் எதுவும் சொல்லாவிட்டாலும், பாராக்லீட் தங்கள் தீர்க்கதரிசிகள்மூலமாக, குறிப்பாக பெண் தீர்க்கதரிசிகள்மூலமாக, தொடர்ந்து பேசினார் என்றும், அவைகள் வேதவாக்கியங்களுக்கு நிகரானவை என்றும் அவர்கள் நம்பினார்கள்," என்று லேட்டரெட் தன் புத்தகத்தில் கூறுகிறார்.

"இந்தப் புத்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார். ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புத்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுத்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்." இது திருவெளிப்பாடு 22:18, 19. மோன்டனிசம் வேதாகமத்தின் அடிப்படையான அம்சங்கள் எதையும் எடுத்துப்போடாமல், அதாவது கழித்துப்போடாமல், வேதாகமத்தோடு வேறு நிறைய காரியங்களைச் சேர்த்துக்கொண்டது, அதாவது கூட்டிக்கொண்டது. அவர்களுடைய மிகப் பெரிய பிரச்சினை கழித்தல் அல்ல, மாறாக கூட்டல். வேதாகமத்தோடு ஒருவன் எதையாவது கூட்டுகிறான் என்றால் என்ன பொருள்? "வேதாகமத்தில் கொடுக்கப்பட்டுள்ளவை எனக்குப் போதுமானவை இல்லை. எனவே, நான் இன்னும் கூடுதலான காரியங்களை அதிகாரப்பூர்வமாகக் கூட்டிக்கொள்கிறேன்," என்பதுதான் இதன் பொருள், இதற்குக் காரணம். ஜீவமரம் போதாது என்பதால்தானே ஆதாமும் ஏவாளும் அறிவு மரத்தை நாடினார்கள். அவர்கள் ஜீவ மரம் வேண்டாம் என்று சொன்னதுபோல் தெரியவில்லை. அறிவுமரமும் வேண்டும் என்றார்கள்.

உபதேசங்களிலும், போதனைகளிலும், பயிற்சிகளிலும் இந்தப் போக்கு பேராபத்தை உண்டாக்கும்.

மோன்டனிஸ்டுகள் சில நேரங்களில் விசுவாசத்தைத் தற்காப்பதில் முன்னணியில் நின்றார்கள் என்பதை மறுக்க முடியாது. எடுத்துக்காட்டாக, திரித்துவத்துக்கும், கிறிஸ்துவின் தெய்வீகத்தையும் மனுஷீகத்தையும்பற்றிய உபதேசங்களுக்கும் எதிரான வேதப்புரட்டுகள் கொடிகட்டிப்பறந்த காலத்தில் மோன்டனிசத்தை ஆதரித்த தெர்த்துல்லியன் கிறிஸ்தவத்தின் மரபுவழி விசுவாசத்தைத் தற்காக்க ஆணித்தரமாக எழுதினார், வாதாடினார். மோன்டனிசம் தோன்றிய ஆரம்ப காலத்தில் அது அன்றைய சபையைப்போல் மரபுவழி உபதேசங்களையே பின்பற்றியது. நல்ல ஆரம்பம். ஆனால், மோசமான முடிவு.

ஒரு சாதாரண ஓவியனாகிய ஹிட்லர் கொடூரமான அரக்கனாக மாறக்கூடும் என்றும், ஒரு சில்லறை வியாபாரியாகிய ஹாரி ட்ரூமன் நாகசாகி ஹிரோஷிம்மாவில் அணுகுண்டு வீசக்கூடும் என்றும் யாராவது நினைத்திருப்பார்களா? சவுலிடம் ஆரம்பத்தில் இருந்த தாழ்மையும் பணிவும் அவன் உயர்ந்தபோதும் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்! நல்ல ஆரம்பம் இருப்பதால் நல்ல முடிவு இருக்கும் என்ற எந்த உத்தரவாதமும் இல்லை

III. பாராட்டுக்குரிய அம்சம் - தெர்த்துல்லியன்

மோன்டனிசத்தின் இத்தனை அம்சங்களை ஆராய்ந்தபிறகும் 'புதிய தீர்க்கதரிசன' சபைக் கூட்டங்களில் அன்று நடந்த சில சுவாரசியமான காட்சிகளை நான் கொஞ்சம் விவரிக்க விரும்புகிறேன். தெர்த்துல்லியனின் காலத்தில், அவருடைய வழிகாட்டுதலின்கீழ் நடந்த மோன்டனிச சபைக் கூட்டம் எப்படி நடந்தது என்பதை தெர்த்துல்லியனே விளக்குகிறார். இந்த விளக்கம் என்னைக் கவர்ந்தது. ஏனென்றால், தெர்த்துல்லியனே இதைச் சொல்லாமல் போயிருந்தால், மோன்டனிசக் கூட்டங்களைப்பற்றிய இந்த நுட்பமான விவரங்கள் நமக்குத் தெரியாமல் போயிருக்கும். தெர்த்துல்லியன் என்ன கூறுகிறார்? இதோ, அவர் கூறுபவை: "பலவிதமான வெளிப்பாட்டு வரங்களைப்பெற்ற ஒரு சகோதரி எங்களிடையே சபையில் இருக்கிறார். இவர் கர்த்தருடைய நாளில் பரிசுத்த வழிபாடு நடக்கும்போது ஆவியானவரால் பரவசமான தரிசனங்களையும் காட்சிகளையும் காண்கிறார்; பரவசமானவைகளை அனுபவிக்கிறார்: இவர் தேவதூதர்களோடும், சில சமயங்களில் கர்த்தரோடும், உரையாடுகிறார்; இவர் பரம்புதிரான காரியங்களைப் பார்க்கிறார், பரம்புதிரான தகவல்களைக் கேட்கிறார்; சிலருடைய இருதயங்களை இவர் புரிந்துகொள்கிறார்; தேவையிலுள்ளவர்களின் தேவைகளுக்கேற்ப இவர் தீர்வுகள் வழங்குகிறார்; வேதவாக்கியங்களை வாசிக்கும்போது அல்லது சங்கீதங்கள் பாடும்போது அல்லது பிரசங்கிக்கும்போது அல்லது ஜெபிக்கும்போது - இப்படி சபையில் வழிபாட்டின்போது இவர் தரிசனங்களைத் தரிசிக்கிறார்," என்று தெர்த்துல்லியன் தன் புத்தகத்தின் முதல் பகுதியில் விவரிக்கிறார்.

சரி, அவர் என்ன சொல்லுகிறார் என்பதை கவனிப்போம்: "எங்களிடையே ஒரு சகோதரி இருக்கிறார். அவர் தரிசனங்களைக் காண்கிறார். அவர் தேவனிடமிருந்து நேரடியாக வெளிப்பாடுகளைப் பெறுகிறார்," என அவர் இந்தச் சகோதரியைப்பற்றி உயர்வாகப் பேசுகிறார். அவர் அந்தச் சகோதரியின் பெயரைக் குறிப்பிடவில்லை. ஆனால், அவர் சபையில் இருந்த மரியாதைக்குரிய ஒரு சகோதரி என்று தெரிகிறது. அவர் நிறைய தரிசனங்கள் காண்கிறார் என்றும் தெரிகிறது.

சரி, இப்போது அவர் எழுதியிருப்பதின் இரண்டாவது பகுதிக்கு வருகிறேன். இந்தச் சகோதரி தான் கண்ட காட்சிகளையும், தரிசனங்களையும், தான் கேட்டவைகளையும் என்ன செய்தார் என்றும், சபை இந்தக் காட்சிகளையும், தரிசனங்களையும், அந்தச் சகோதரி சொன்னவைகளையும் என்ன செய்தது என்றும் தெர்த்துல்லியன் இரண்டாவது பகுதியில் விவரிக்கிறார். முதல் பகுதியைவிட இரண்டாம் பகுதி மிகவும் சுவாரசியமாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.

தெர்த்துல்லியனுடைய விளக்கத்தின் இரண்டாம் பகுதி இதோ! "சபையின் பரிசுத்த வழிபாட்டின் முடிவில் எல்லாரும் வெளியேறியபிறகு, அவர் எங்களிடம் வந்து தான் கண்ட தரிசனங்களையும், காட்சிகளையும், வெளிப்பாடுகளையும் எங்களுக்குத் தெரிவிப்பது வழக்கம். அவர் தரிசனத்தில் பார்த்த எல்லாவற்றையும் எங்களுக்குத் தெரிவித்தார். நாங்கள் அவைகளை மிகக் கவனமாக பரிசீலித்து அதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்தோம்," என்று குறிப்பிடுகிறார். அவர் குறிப்பிடுகிற "எங்களிடம்" என்ற வார்தையைக் கவனியுங்கள். சபைக் கூட்டம் முடிந்து எல்லாரும் வீடுகளுக்குப் போனபிறகு, அந்தச் சகோதரி தான் தரிசனத்தில் கண்ட எல்லா விஷயங்களையும் சபையின் தலைவர்களிடம், மூப்பர்களிடம், தெரிவித்தார் என்று தெரிகிறது. அந்த எல்லா விஷயங்களையும் சபையின் மூப்பர்கள் மிக நுணுக்கமாக, வேதாகமத்தின் வெளிச்சத்தில், ஆராய்ந்துபார்த்தார்கள், பரிசோதித்தார்கள், பரிசீலித்தார்கள். அவர் சொன்னவை, தரிசனத்தில் கண்டவை, உண்மைதானா என்று ஆராய்ந்தார்கள். சபையில் ஆவிக்குரிய வரங்கள் இருக்கும், செயல்படும், என்று அப்போஸ்தலனாகிய பவுல் ஏற்கெனவே எழுதியிருக்கிறார். தரிசனம் கண்டவர், தான் கண்ட தரிசனங்களையும், பார்த்த வெளிப்பாட்டையும், கூட்டம் நடந்துகொண்டிருக்கும்போதோ அல்லது பாடல்கள் பாடிக்கொண்டிருக்கும்போதே அல்லது போதகர் பிரசங்கித்துக்கொண்டிருக்கும்போதோ அங்கேயே அப்போதே எழுந்து சொல்லவில்லை. கூட்டம் முடிந்தபிறகு, சபைத் தலைவர்களையும் மூப்பர்களையும் சந்தித்து அவர்களுக்குத் தெரிவித்தார் என்ற விஷயம் எனக்கு வியப்பாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது. இதைப் பார்க்கும்போதும், படிக்கும்போதும் அன்று மோன்டனிஸ்டுகள் ஆவியானவரின் வரங்களை காட்டுத்தனமாக, கண்ணைமூடிக்கொண்டு பயன்படுத்தவில்லையோ என்று எண்ணத்தோன்றுகிறது. சபையில் ஆவியானவரின் வரங்கள் செயல்பட்டிருக்கின்றன என்றும், அவர்கள் அவைகளை வேதாகமத்துக்கு ஒத்தவாறு, சமநிலையில் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்றும் தெரிகிறது. குறைந்தபட்சம் வட ஆப்பிரிக்காவின் கார்த்தேஜில் அப்படி நடந்திருக்கிறது.

இதோ ஒரு சகோதரி இருக்கிறார். இவர் தீர்க்கதரிசனம் உரைக்கிறார்; தரிசனங்கள் காண்கிறார், கர்த்தருடைய பேசுதலையோ அல்லது தேவதூதர்களின் குரல்களையோ கேட்கிறார்; தரிசனங்கள் பார்க்கிறார்; தேவைக்கேற்ப அறிவின் வார்த்தைகளையும், உற்சாகத்தின் வார்த்தைகளையும் பேசுகிறார். ஆயினும் இவையெல்லாவற்றையும் சபைக் கூட்டம் நடந்துகொண்டிருக்கும்போதே செய்யவில்லை. இவர் தன் தரிசனத்தையும் வெளிப்பாட்டையும் கூட்டத்தில் சொல்லவில்லை; ஆராதனையின்போது எழுந்து நின்று கூச்சலிடவில்லை; எதையோ பேசிவிட்டு கடைசியில், "கர்த்தர் உரைக்கிறதாவது," என்று சொல்லி முடிக்கவில்லை. மாறாக, சபையின் ஆராதனை முடிந்ததும், அவர் சபைத் தலைவர்களையும் மூப்பர்களையும் சந்தித்து தான் கண்ட வெளிப்பாடுகளையும், தரிசனங்களையும், தான் கேட்ட பரலோக பேச்சுக்களையும் சபைத் தலைவர்களிடம் எடுத்துரைத்தார். அவர் சபைத் தலைவர்களிடம், " இந்தத் தரிசனங்கள்மூலமாகவும், பேச்சுக்கள்மூலமாகவும் தேவன் இவைகளைக் கற்றுக்கொடுத்தார் என்று நான் நம்புகிறேன்" என்று எடுத்துரைத்தார். அதன்பின் அவர் சொன்னதை சபைத் தலைவர்கள் கருத்தாய் ஆராய்ந்தார்கள், நிதானித்தார்கள், பரிசோதித்தார்கள், மதிப்பிட்டார்கள். இதிலிருந்து ஆவியானவரின் வரத்தைப் பெற்றவரும், சபைத் தலைவர்களும், ஆவியானவரின் வரங்களை எப்படிக் கையாண்டார்கள் என்று தெரிகிறது. இது மோன்டனிசத்தில் இருந்த பாராட்டத்தக்க அம்சம் என்று நான் நினைக்கிறன்.

IV. தனித்தன்மைவாய்ந்த உபதேசங்கள் - விமரிசனங்களும், ஆய்வும்

ஆனால், பாராட்டவோ, ஏற்றுக்கொள்ளவோ, அங்கீகரிக்கவோ முடியாத நிறைய விஷயங்கள் அவர்களிடையே இருந்தன. மோன்டனிசத்தின் பல உபதேசங்கள் தனித்தன்மைவாய்ந்தவை; அவைகளை நாம் கவனமாகப் பரிசீக்கவேண்டும். அவை பிரதான சபையின் மைய நீரோட்டத்திலிருந்து வித்தியாசமானவை. அவைகளை நாம் இப்போது சுருக்கமாகப் பார்ப்போம்.

1. குழப்பமான திரித்துவமா, இருத்துவமா, ஒருத்துவமா

மோன்டனிசத்தைப்பற்றி பிற்கால எழுத்தாளர்கள் எழுதியிருப்பவைகளை நாம் ஏற்றுக்கொண்டால், மோன்டனிசம் ஒரு வேதப்புரட்டா இல்லையா என்று தீர்மானிப்பது கடினம். முடியாட்சிதான் மோன்டனிசத்தின் முக்கியமான தவறு என்று நான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு கருத்து நிலவியது. அது என்ன முடியாட்சி? தேவத்துவத்தில் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு இடையேயுள்ள நிரந்தரமான, தனிப்பட்ட வேறுபாடுகளை மோன்டனிசம் நிராகரித்தது. 381இல் நடந்த கான்ஸ்டான்டிநோபிள் ஆலோசனைச் சங்கம் மோன்டனிசத்தின் இந்த விசுவாசமீறலைக் கண்டித்தது. மோன்டனிசத்தின் முடியாட்சியே 'விசுவாச விதிமீறலின்' தலையாய பிறழ்வு என்று சபைப் பிதா ஜெரோம் கூறினார்.

398இல் மரித்த அலெக்சாந்திரியாவின் டிடைமஸ் ஏன் மோன்டனிஸ்டுகளின் ஞானஸ்நானத்தை சபை அங்கீகரிக்க மறுத்தது என்பதை விளக்குகிறார். "நானே பிதா, குமாரன், பாராக்லீட்" என்று மோன்டானுஸ் தீர்க்கதரிசம் உரைத்ததாலும், 'பெபுசியர்கள்' என்றழைக்கப்பட்ட மோன்டனிஸ்ட்டுகள் பிதா, குமாரன், மோன்டானுஸ் அல்லது பிரிஸ்கில்லா என்ற பெயரில் ஞானஸ்நானம் கொடுத்ததாலும் அவர்களுடைய ஞானஸ்நானத்தை சபை அங்கீகரிக்கவில்லை என்று டிடைமசும், சிசேரியாவின் பேசிலும் கூறினார்கள் (ஆதாரங்கள், Syntagma, பக். 155, 113).

ஹயராபோலிசின் அப்பொல்லினேரியஸ், "சிறிய ஆசியா முழுவதிலும் உள்ள விசுவாசிகள் பல இடங்களில் அடிக்கடி சந்தித்து, 'புதிய தீர்க்கதரிசனத்தின்' உபதேசங்களை ஆராய்ந்து, அவைகள் அருவருப்பானவை என்றும், கிறிஸ்தவத்துக்கு எதிரானவை என்றும் கண்டு அவைகளை நிராகரித்தார்கள்; அவர்களை சபையிலிருந்து வெளியேற்றினார்கள்" என்று எழுதுகிறார்.

சிறிய ஆசியாவின் மற்ற பகுதிகளிலும், கிழக்கிலும்கூட இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம். 230 ஆம் ஆண்டு ஐகோனியத்திலும், கிழக்கு ஃபிரிஜியாவிலும் கூடிய ஆயர்களின் கூட்டத்தில் "மோன்டனிசப் போதகர்கள், ஆயர்கள், சபைத் தலைவர்கள் கொடுக்கும் ஞானஸ்நானம் செல்லாது. மோன்டனிஸ்டுகள் சபையில் மீண்டும் ஞானஸ்நானம் பெற வேண்டும்," என்ற ஒரு தீர்மானம் இயற்றி மோன்டனிஸ்டுகள் கொடுத்த ஞானஸ்நானத்தை அங்கீகரிக்க மறுத்தார்க்கள். மோன்டனிச இயக்கத்தைச் சேர்ந்த அனைவரும் கிட்டத்தட்ட சபையிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். மோன்டனிசக் குழுவில் ஞானஸ்நானம் பெற்ற ஒருவனை சபை உண்மையான கிறிஸ்தவனாக ஏற்றுக்கொள்ளவில்லை. அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்த சபைப் பிதாக்களின் எழுத்துக்களை வாசிக்கும்போது, "மோன்டனிசம் மிக ஆபத்தானது," என்று அவர்களெல்லாரும் ஒருமனதாக நினைத்தார்கள் என்றும், மோன்டனிசத்தை நிராகரித்தார்கள் என்றும் தெரிகிறது.

ஆவியானவரைப்பற்றிய அவர்களுடைய தவறான விசுவாசமே மோன்டனிஸ்டுகளின் ஞானஸ்நானத்தை ஐகோனிய ஆலோசனைச் சங்கம் ஏற்றுக்கொள்ளாதற்குக் காரணம் என்று மூன்றாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வாழ்ந்த சிசேரியாவின் பேசிலின் முன்னோடியான ஃபிர்மிலியன் கூறுகிறார். "ஆவியானவரைப்பற்றிய அவர்களுடைய விசுவாசம் தவறாக இருப்பதால் அவர்கள் பிதாவையும் குமாரனையும் இழந்துவிட்டார்கள்," என்றும் அவர் கூறினார்.

ஆனால், மோன்டனிசத்தை ஆதரித்த தெர்த்துல்லியன் சபையின் திரித்துவ இறையியலைப் பாதுகாக்க பெரும் பங்காற்றியவர் என்பதை வேத வல்லுநர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். எனவே, ஒரு பக்கம், பிதாவையும், குமாரனையும்பற்றிய மோன்டனிஸ்டுகளின் விசுவாசம் சபையின் தொன்மையான, மரபுவழி விசுவாசத்திலிருந்து மாறுபட்டதல்ல என்று தெரிகிறது. இன்னொரு பக்கம், முற்றிலும் மாறுபட்டது என்று தெரிகிறது. எனவே, இவர்கள் திரித்துவக்காரர்களா அல்லது ஒருத்துவக்காரர்களா அல்லது இருத்துவக்காரர்களா? யூசிபியசின் புத்தகத்தில் இதைப்பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.

2. பளபளக்கும் பரவசமும், ஆவேசமும்

அவர்கள் திரித்துவமா, இருத்துவமா, ஒருத்துவமா என்று தீர்மானிக்க இயலவில்லை என்று வைத்துக்கொள்வோம். சரி, அவர்கள் வேதப்புரட்டர்கள் இல்லையென்றால், அவர்கள்மேல் வேறு என்ன குற்றம்சுமரும்? "சபையின் ஆரம்பத்திலிருந்து தலைமுறை தலைமுறையாக, வழிவழியாக, பாரம்பரியங்கள்மூலம் கடந்துவந்த மரபுமுறைமைக்கு முற்றிலும் மாறாக மோன்டனிஸ்டுகள் தீர்க்கதரிசனம் உரைத்தார்கள்" என்பது இன்னொரு குற்றச்சாட்டு. மோன்டானுஸ் தன்னிடம் தீர்க்கதரிசன வரம் இருப்பதாகக் கூறி, பரிசுத்த ஆவியானவரின் வேலை என்ற போர்வையில் தன் பழைய அஞ்ஞான பரவசத்தைக் கிறிஸ்தவமயமாக்கினார் என்றும் இவருடைய எதிர்ப்பாளர்கள் குற்றச்சாட்டினார்கள். அவர்கள் விசித்திரமான ஒலிகளை எழுப்பியதாகவும், வினோதமான வார்த்தைகளை உச்சரித்ததாகவும், மோன்டனிசத்தின் இரண்டு பெண் தீர்க்கதரிசிகளான பிரிஸ்கில்லாவும், மாக்சிமில்லாவும் 'வெறித்தனமான, பொருத்தமற்ற, இயற்கைக்கு மாறான பாணியில் பேசியதாகவும்" யூசிபியஸ் (HE 5:16:7, 9) எழுதுகிறார். "இவர்கள் இருவரும் பரிசுத்த ஆவியின் தூண்டுதலால் தீர்க்கதரிசனம் உரைத்ததாகக் கூறினார்கள். பெரும்பாலும், அவர்கள் பேசியவைகளைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர்கள் அந்நியபாஷைகளுக்கும், கொன்னிகொன்னிப் பேசுதலுக்கும், முனகுதலுக்கும், குதலைப்பேச்சுக்கும் பெயர் பெற்றவர்கள். பழைய ஏற்பாட்டிலும் சரி, புதிய ஏற்பாட்டிலும் நற்செய்தியாளனாகிய பிலிப்புவின் நான்கு தீர்க்கதரிசி மகள்களோ, அகபுவோ, சீலாவோ அல்லது வேறு எந்தத் தீர்க்கதரிசியோ, பரிசுத்த ஆவியால் ஏவப்பட்ட, தூண்டப்பட்ட யாரும் இவ்வாறு பேசவில்லை,” என்று அல்சிபியாடெஸ் குறிப்பிடுகிறார் ((ibid., 5:17:1, 3).

மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த சபை வரலாற்றாசிரியரான யூசிபியஸ், மோன்டானுசைப்பற்றி, “தலைமைத்துவத்தின்மேல் அவருக்கு இருந்த கட்டுக்கடங்காத இச்சையினால், அவர் திடீர் திடீரென்று வெறிபிடித்தவர்போலவும், வலிப்பு வந்தவர்போலவும் கீழே விழுந்தார். அவர் பரவசமடைந்து, விசித்திரமாகவும் விநோதமாகவும் பேசத் தொடங்கினார். மரபுவழி சபையில் இருந்த வழக்கத்திற்கு மாறாக அவர் தீர்க்கதரிசனம் உரைத்தார். அவரைக் கேட்டவர்கள் அவருக்குப் பித்துப் பிடித்திருப்பதாக நம்பினார்கள். ‘கள்ளத் தீர்க்கதரிசிகள் வருவார்கள் என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,’ என்ற ஆண்டவராகிய இயேசுவின் வார்த்தையை நினைவுகூர்ந்து, அவரைக் கண்டித்து, பேசவிடாமல் தடை செய்தார்கள்” என்று எழுதுகிறார் (Ecclesiastical History, 5.16.1).

தன் பரவசமான வார்த்தைகளில் பரிசுத்த ஆவியானவர் தன்மூலம் பேசுகிறார் என்று மோன்டானுஸ் வலியுறுத்தினார்.

"பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் தாங்கள் என்ன பேசுகிறோம் என்று எல்லாத் தீர்க்கதரிசிகளும் அறிந்திருந்தார்கள். அவர்களுடைய புலன்கள் கட்டுப்பாட்டில் இருந்தன, கட்டுப்பாட்டை இழக்கவில்லை," என்று ஜெரோம் கூறினார். ஜெரோம் பரவசம் என்பதற்கான ekstasis என்ற கிரேக்க வார்த்தையின் பொருளை கிரேக்க வேதாகமத்தில் ஆராய்ந்தார். புரிந்துகொள்ளக்கூடிய, பொருளுள்ள, செய்திகளைக் கேட்கும்போதுகூட ஒருவனுக்குப் பரவசம் ஏற்படலாம் என்று அவர் சொன்னார். ஆனால், மோன்டனிச தீர்க்கதரிசனத்தின் பெரிய பிரச்சினை அவர்கள் பேசிய புரிந்துகொள்ளமுடியாத தெளிவற்ற வார்த்தைகள் அல்ல; அவர்களுடைய பரவசம் அதைவிட அதிகம்.

ஆதிச் சபை அனைத்து தீர்க்கதரிசனங்களையும் நிராகரிக்கவில்லை; ஆனால் புதிய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் தேவனுடைய முந்தைய தீர்க்கதரிசிகளின் மாதிரியைப் பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசிகள் தங்கள் சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் நிதானத்தோடு, கட்டுப்பாட்டோடு, புரிந்துகொள்ளக்கூடிய செய்தியைப் பேசினார்கள். இதற்கு நேர்மாறாக, மோன்டானுஸ், பிரிஸ்கில்லா, மாக்சிமில்லா ஆகியோர் தீர்க்கதரிசனம் உரைத்தபோது அதில் நிதானமோ கட்டுப்பாடோ இல்லை என்பது அவர்கள்மேல் வைக்கப்பட்ட ஒரு குற்றச்சாட்டு.

'பரவசப்பேச்சு, பரவசக்காரர்கள்' என்ற குற்றச்சாட்டு மோன்டனிசத்தோடு ஒட்டிக்கொண்டது. இரண்டு கேள்விகள் எழுகின்றன. ஒன்று, ஒருவேளை வேதாகமத்தில் தீர்க்கதரிசிகள் பரவசப்பேச்சு பேசவில்லையென்றாலும், தீர்க்கதரிசன மரபில், சபை வரலாற்றில் தீர்க்கதரிசிகள் பரவசப்பேச்சு பேசினார்களா என்பதுதான் முதல் கேள்வி. ஆவியானவரால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் தங்களை மறந்த நிலையில் பேசினார்களா அல்லது கட்டுப்பாட்டோடு பேசினார்களா? ஆவியானவரால் ஆட்கொள்ளப்படுகிறவர்கள் இசைக்கருவிபோன்றவர்கள் என்று இரண்டாம் நூற்றாண்டு எழுத்தாளர்கள் சிலர் கூறுகிறார்கள். இதையே மோன்டானுஸ், "இதோ, மனிதன் ஒரு யாழ் இசைக்கருவி. நான் அவன்மேல் அசைவாடும் இறகடிகோல்," என்று தீர்க்கதரிசனமாக உரைத்தார். நியூ இங்கிலீஷ் வேதாகமம் glōssolalia என்ற வார்த்தையை ‘ecstatic utterance’, அதாவது 'பரவசப் பேச்சு', 'இயல்பு மீறிய உளவியல் உணர்வுநிலையில் தெரியாத மொழிகளில் பேசும் ஆற்றல்' என்று குறிப்பிடுகிறது. இதுதான் பரவசப் பேச்சு என்பதின் பொருள் என்றால் கிறிஸ்தவத் தீர்க்கதரிசிகள் ஒருபோதும் பரவசப் பேச்சு பேசவில்லை என்று உறுதியாகச் சொல்லமுடியுமா என்ற கேள்வி எழுகிறது.

இரண்டாவது கேள்வி: உண்மையாகவே மோன்டானுஸ் இவ்வளவு மோசமாகத் தீர்க்கதரிசனம் உரைத்தாரா? மோன்டனிசத்தின் ஆரம்பத்தில் யாரும் அவர்களை இவ்வளவு கடுமையாக எதிர்க்கவில்லை. போகப்போக அவருடைய தீர்க்கதரிசன பாணியில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று தெரிகிறது.

3. இரத்தசாட்சிகள்

மோன்டனிஸ்ட்டுகள் இரத்தசாட்சிகளாக மரிக்கவில்லை என்று சிலர் குற்றம்சாட்டுவதுண்டு. ஒருவேளை மோன்டனிஸ்டுகள் நிறையப்பேர் இரத்தசாட்சிகளாக மரிக்காமல் போயிருக்கலாம். அப்படி மரித்திருந்தாலும் நமக்குத் தெரியாமல் போயிருக்கலாம். ஆனால், அவர்கள் இரத்தசாட்சிகளாக மரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உண்மையல்ல. இரத்தசாட்சிகளாக மரிக்கும் காரியத்தில் இவர்கள் வெதுவெதுப்பாக இருந்தார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். The Soldier’s Garland என்ற புத்தகத்தில் தெர்த்துல்லியன், "இரத்தசாட்சிகளாக மரிக்கத் தயாராக இருக்குமாறு பராக்கிலீட் நம்மை அழைக்கிறார்," என்று எழுதுகிறார். சித்திரவதைக்குத் தப்பியோடுவதையும், ஒரு சரியான செயலைச் செய்தால் தண்டனை பெற நேரிடும் என்பதால் அதைத் தவிர்ப்பதையும் தெர்த்துல்லியன் கண்டனம்செய்கிறார். தெர்த்துல்லியனின் சபையில் ஒரு தீர்க்கதரிசி, "படுக்கையிலோ, கருக்கலைப்பிலோ அல்லது வாட்டும் காய்ச்சலிலோ அல்ல, மாறாக இரத்தசாட்சியாக மரணத்தை எதிர்பார்க்க வேண்டும்; அப்போது உங்களுக்காகப் பாடுபட்டவர் மகிமைப்படுவார்," என்று உரைத்த தீர்க்கதரிசனத்தைப்பற்றிய குறிப்பு அந்தப் புத்தகத்தில் உள்ளது. அதுபோல 117இல் லியோன்சில் இரத்தசாட்சிகளாக மரித்தவர்களில் வெட்டியஸ் எபகதஸ் என்பவர் பெயர் உள்ளது. இவர் ஒரு மோன்டனிஸ்டு. பிரிகியாவின் சில கல்லறைகளில் காணப்படும் வாசகங்கள் அவர்கள் இரத்தசாட்சிகளாக மரித்தார்கள் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

வட ஆப்பிரிக்காவில் இரத்தசாட்சிகளாக மரித்த பெர்பெத்துவா, ஃபெலிசிடாஸ் என்ற இரண்டு பெண்கள் மோன்டனிச இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். இரத்தசாட்சிகளைப்பற்றிப் பேசும்போது இவர்களைப்பற்றிப் பேசினோம். இவர்கள் இயேசுவுக்காக இரத்தசாட்சிகளாக மரித்த வரலாற்றைப் படித்துப்பாருங்கள். உங்கள் இருதயம் உடைந்துவிடும்.

மூன்றாம் நூற்றாண்டின் முதற்பகுதியில் மோன்டனிச இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் பிற விசுவாசிகளைப்போல கிறிஸ்துவினிமித்தம், தங்கள் விசுவாசத்தினிமித்தம், சிறையில் அடைக்கப்பட்டார்கள், சித்திரவதை செய்யப்பட்டார்கள், இரத்தசாட்சிகளாக மரித்தார்கள் என்று பிரான்ஸிலுள்ள லியோனைச் சேர்ந்த சபைத் தலைவர்கள் 177ஆம் ஆண்டு உரோம சபையின் ஆயர் எலியூத்தெரசுக்குக் (Eleuterus) கடிதம் எழுதியிருக்கிறார்கள்.

மோன்டனிஸ்டுகள் உரோமப் பேரரசின் அதிகாரத்துடன் சமரசம் செய்ய மறுத்தார்கள். பல மோன்டனிஸ்டுகள் இரத்தசாட்சிகளாக மரித்தார்கள். “உங்களுக்காக பாடநுபவித்தவர் உங்களில் மகிமைப்படும்படியாக இரத்தசாட்சிகளாக மரிக்க ஆயத்தமாயிருங்கள்" என்று மோன்டானுஸ் தன்னைப் பின்பற்றியவர்களுக்குக் கூறினார் (Tertullian, De Fuga in Persecutione, 9).

மோன்டனிசத்தை பிரதான சபை நிராகரிக்கத் தொடங்கியபோது, "மத்தேயு 23:34 இல் தம் உண்மையான சீடர்கள் துன்புறுத்தப்படுவார்கள் என்று இயேசு கூறியதுபோல் நாங்கள் துன்புறுத்தப்படுகிறோம்," என்று மோன்டானுஸ் வாதிட்டார். இருப்பினும், மோன்டானுசை எதிர்த்தவர்கள், அவரும் அவரைப் பின்பற்றியவர்களும் அவர்களுடைய தனித்தன்மைவாய்ந்த விசுவாசத்தின் காரணமாக எந்தவொரு சித்திரவதையையும் அனுபவிக்கவில்லை என்று குற்றம்சாட்டினார்கள். ஆனால், இராயனுக்கும், உரோம தேவர்களுக்கும் முழங்கால்களை முடக்க மறுத்ததால் மோன்டனிஸ்டுகள் இரத்தசாட்சிகளாக மரித்தார்கள் என்பது உண்மை.

4. நிதானமிழந்த தீர்க்கதரிசனம் - முழுநிறைவும், முடிவும்

மோன்டனிஸ்டுகளின் பொய்த் தீர்க்கதரிசனங்களுக்கு எதிரான ஒரு குற்றச்சாட்டு உண்டு. "போர்களும் கொந்தளிப்புகளும் வரும்," என்று மாக்சிமில்லா முன்னறிவித்திருந்தார். ஆனால் அவர் இறந்து பதின்மூன்று வருடங்கள் ஆனபிறகும் "உலகில் ஒரு பகுதியில்கூட போர் எதுவும் வரவில்லை" ((Eusebius, HE 5:16:18) என்று யூசுபியஸ் கூறுகிறார். மேலும், "‘எனக்குப்பிறகு இனி தீர்க்கதரிசனம் இருக்காது; என்னோடு அது முழுநிறைவடைந்துவிடும்," என்று மாக்சிமில்லா உரைத்தார். அவரோடு தீர்க்கதரிசனம் முழுநிறைவடையவும் இல்லை, முழு நிறைவடையைப்போவதும் இல்லை. அவருக்குப்பின்னும் தீர்க்கதரிசனம் சபையில் தொடர்ந்தது என்றும், தொடரும் என்றும், ஓரிஜென், எபிபேனியஸ், ஜெரோம் ஆகியோர் தங்கள் எழுத்துக்களில் வலியுறுத்தியிருக்கிறார்கள். எனவே, மோன்டனிஸ்டுகள் தீர்க்கதரிசனத்துக்குத் தாங்கள்தான் மொத்த உரிமையாளர்கள் என்பதுபோலவும், தங்களோடு அது முடிவடைந்துவிடும் என்றும் பிதற்றியது தவறு.

5. கருகலான தீர்க்கதரிசிகளின் கனிகள்

மோன்டனிசம் தோன்றிய 50 ஆண்டுகளுக்குப்பிறகு 212இல் அப்பொல்லோனிரியஸ் மோன்டனிசத்தையும் மோன்டனிசத் தலைவர்களைப்பற்றியும் எழுதுகிறார். இவர் பெரும்பாலும் பல்வேறு மோன்டனிசத் தலைவர்களின் நடத்தையை அம்பலப்படுத்துகிறார். "கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்திக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள். அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்," என்பதின்படி, மோன்டனிசத் தலைவர்கள் காணிக்கைகளைத் தவறாகப் பயன்படுத்தியதாகவும், தங்களை அதிகார மையங்களாக்கித் தங்களை அப்போஸ்தலர்கள் என்று அழைத்ததாகவும், ஆட்சேபணை எழுப்புகிறார். இவருடைய இந்தக் குற்றச்சாட்டு எனக்குப் பெரிய காரியமாகத் தெரியவில்லை. ஏனென்றால், இதுபோன்ற குற்றச்சாட்டுகளை யார் வேண்டுமானாலும் யார்மேல் வேண்டுமானாலும் சுமத்தலாம். இது எல்லாக் குழுக்களிலும் இன்றும் நடக்கிறது. இப்படிப்பட்டவர்கள் அங்கு இருந்தார்கள் என்று வைத்துக்கொண்டாலும், அதே வேளையில் தெர்த்துல்லியன்போன்ற கண்டிப்பான அறநெறியாளர்களும், பெர்பெத்துவா, ஃபெலிசிடாஸ் போன்ற இரத்தசாட்சிகளும் அங்கு இருந்தார்கள் என்பதையும் மறுக்க முடியாதே!

எனவே, முக்கியமான பிரச்சினை அதுவல்ல. மோன்டனிஸ்டுகள் தீர்க்கதரிசனத்தையும், தீர்க்கதரிசிகளையும் நிதானிக்கத் தவறினார்கள் என்று சொல்லலாம். மோன்டனிசத்தை எதிர்த்தவர்கள் அவர்களுடைய தீர்க்கதரிசனத்திற்காக அதைக் கடுமையாக எதிர்த்தார்கள். ஏனென்றால், ஒருவன் கர்த்தருடைய பெயரால் பேசும்போது, அவன் பேசுகிற எல்லாவற்றையும் மிகக் கண்டிப்பாகவும், கவனமாகவும் பரிசீலிக்க வேண்டும், நிதானிக்க வேண்டும். ஆனால், மோன்டனிஸ்டுகள் அப்படிச் செய்யவில்லை. நிதானம் தவறினார்கள். எப்படியென்றால் ஒரு தீர்க்கதரிசி வருங்காரியத்தைக்குறித்துத் தீர்க்கதரிசனம் உரைத்தால், அது நிறைவேறவில்லையென்றாலும் அது கள்ளத் தீர்க்கதரிசனம் என்பதை அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. மேலும், பிரதான சபை மோன்டனிசத்தை ஏற்றுக்கொள்ள மறுத்ததால் மோன்டனிச தீர்க்கதரிசிகள் சபைக்குவிரோதமாகத் தூஷணமாகத் தீர்க்கதரிசனம் உரைத்தார்கள். இதையும் யாரும் கண்டிக்கவில்லை.

இரண்டாவது, தீர்க்கதரிசிகளின் தேற்றவாளர். மோன்டனிசத்தின் மூன்று முக்கியமான தலைவர்கள்மேல் அவர்கள் அதீத நம்பிக்கை வைத்திருந்தார்கள் என்பது ஹிப்போலிடசின் முக்கியமான குற்றச்சாட்டு. "நியாயப்பிரமாணத்திலிருந்தும், வேதாகமத்திலுள்ள தீர்க்கதரிசிகளிடமிருந்தும், நற்செய்திகளிலிருந்தும் கற்றுக்கொண்டதைவிட மோன்டனிச தீர்க்கதரிசிகளிடமிருந்து அதிகமாகக் கற்றுக்கொண்டதாக இவர்கள் கூறுகிறார்கள்.… இவர்கள் மோன்டனிசத்தின் பெண் தீர்க்கதரிசிகளையும், அவர்களுடைய கிருபா வரங்களையும் அப்போஸ்தலர்களைவிட உயர்வாகக் கருதுகிறார்கள்; அவர்களில் கிறிஸ்துவைவிட உயர்ந்த ஏதோவொன்று இருப்பதாக வலியுறுத்துகிறார்கள்.… அவர்கள் நற்செய்திகளைவிட மோன்டானுசின் செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்" என்று ஹிப்போலிட்டஸ் கூறுகிறார். "மூவரில் மோன்டானுஸ் ஒரு தீர்க்கதரிசியாகக் கருதப்பட்டதாகவும், தேற்றரவாளர் மாக்சிமில்லாவுக்குள்ளும், பிரிஸ்கில்லாளுக்குள்ளும் சென்றதாகவும் கூறுகிறார்கள்" என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

"அப்போஸ்தலர்களுக்குள் இருந்தவர் பரிசுத்த ஆவியானவர்; பாராக்லீட்டாகிய தேற்றரவாளர் அல்ல. நற்செய்திகளில் கிறிஸ்து கூறியதைவிட பாராக்லீட் மோன்டானுஸில் அதிக விஷயங்களை மட்டுமல்ல, சிறந்தவைகளையும், உயர்ந்தவைகளையும் கூறினார்" என்று மோன்டனிஸ்டுகள் சொன்னார்கள். இது தேவதூஷணமா இல்லையா?

மோன்டானுசின் சில தீர்க்கதரிசனங்களை நான் இங்கு மேற்கோள்காட்டுகிறேன். "நானே மனிதனில் வாசம்செய்கிற சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர்". "நான் தேவதூதனோ அல்லது தேவதூதுவனோ அல்ல. நான், தேவனாகிய கர்த்தர், பிதா, நான்தான் வந்திருக்கிறேன்". "நான் தேவனாகிய கர்த்தர்." மோன்டானுஸ் இவ்வாறு தீர்க்கதரிசனம் உரைத்தபோது, பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசிகளின் பாணியிலிருந்து தடம்புரண்டார் என்று சொல்லலாமா? ஒருவேளை அவர் தீர்க்கதரிசனம் உரைத்தபின், பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசிகள் முடித்ததுபோல், "இவ்வாறு கர்த்தர் உரைக்கிறார்" என்று முடித்திருந்தால் எல்லாம் சரியாகிவிடுமா? பாரக்லீட்டுடன் தனக்குப் பிரத்தியேகமான உறவு இருப்பதாக மோன்டானுஸ் கோரியதாகப் பலர் நினைத்தார்கள். அவர் இவ்வாறு தீர்க்கதரிசனம் உரைத்ததை சபை ஏற்றுக்கொள்ளவில்லை, அங்கீகரிக்கவில்லை. ஏனென்றால், அன்று சபைகளில் தீர்க்கதரிசனம் பொதுவாக இதுபோல உரைக்கப்படவில்லை. இருப்பினும் பிரதான சபையில் இப்படி நடந்திருக்கவே நடந்திருக்காது என்று சொல்லமுடியுமா என்று தெரியவில்லை.

6. புதிய யுகம், பிரதான தீர்க்கதரிசி

அப்போஸ்தலர்களுடைய மறைவுக்குப்பின், தங்கள் மோன்டனிச இயக்கம் தேவனுடைய வேலையின் ஒரு புதிய காலகட்டம், ஒரு புதிய தொடக்கம், புதிய யுகம் என்று அவர்கள் நம்பினார்கள். தங்கள் மோன்டனிச இயக்கத்தின்மூலம் தேவன் முற்றிலும் ஒரு புதிய வேலையைச் செய்கிறார் என்ற எண்ணம் அவர்களுக்குள் ஆழமாக இருந்தது. இந்த எண்ணமும், மனப்பாங்கும் எப்போதும் ஆபத்தானவை என்று நான் நினைக்கிறேன்.

மோன்டானுஸ்தான் பரிசுத்த ஆவியானவரின் பிரதான தீர்க்கதரிசி என்று அதன் நிறுவனரான மோன்டானுசும், அவருடைய இயக்கத்தின் ஆதரவாளர்களும் உறுதியாக நம்பினார்கள். தேவனுடைய வேலையின் புதிய தொடக்கத்தில் தானே பிரதான தீர்க்கதரிசி என்று மோன்டானுசும் சொன்னார். அவருடைய ஆதரவாளர்களும் பறைசாற்றினார்கள். இந்தப் புதிய தொடக்கத்தில் பரிசுத்த ஆவியானவர் தன்மூலமாகவும், தன் இயக்கத்தைப் பின்பற்றுபவர்கள்மூலமாகவும் மட்டுமே பேசுகிறார் என்றும், தொடர்ந்து புதிய வெளிப்பாட்டைத் தருகிறார் என்றும் இவர்கள் நம்பினார்கள்.

அவர்கள் தங்கள் கூட்டங்களில் பரிசுத்த ஆவியானவரின் வரங்களைப் பயன்படுத்த அனுமதித்தார்கள், ஊக்கப்படுத்தினார்கள். ஆண்டவராகிய இயேசு யோவான் 14:26இல் தாம் அனுப்பப்போவதாக வாக்களித்த சத்திய ஆவியானவரின் ஊனுரு தானே என்று மோன்டனுஸ் கூறினார். மோன்டனிசத்தைப் பின்பற்றியவர்களும் தங்களுக்குப் பிரத்தியேகமான ஏவுதலும், வெளிப்பாடும் இருப்பதாகக் கூறினார்கள். அது மட்டும் அல்ல, தங்கள் வெளிப்பாடுகளும், தங்கள் தீர்க்கதரிசன வார்த்தைகளும் வேதவாக்கியங்களைப்போல அதிகாரமுடையவை, அதிகாரப்பூர்வமானவை என்றும் கூறினார்கள்.

ஒரு கிறிஸ்தவக் குழுவின் தலைவன் தான்தான் தேவனுடைய நகர்வில் பிரதானமானவன் என்றும், அந்தக் குழுவில் இருப்பவர்கள் தங்கள் தலைவர்தான் பிரதானமானவர் என்றும் என்றைக்கு நினைக்க ஆரம்பிக்கிறார்களோ, அன்றே அவர்கள் கிறிஸ்துவைவிட்டு விலகத் தொடங்கிவிட்டார்கள் என்று பொருள். இல்லையா? "இவர்தான் இந்த யுகத்தின் அப்போஸ்தலர். இவர்தான் இந்த யுகத்தின் வெளிப்பாட்டின் ஊற்று. எங்களிடம்தான் வெளிப்பாடு இருக்கிறது," என்ற எண்ணம் ஒரு நஞ்சு.

தாபோர் மலையில் இயேசு மறுரூபமானபோது, "மோசேயும், எலியாவும் அவரோடே பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள். அப்பொழுது பேதுரு இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது; உமக்குச் சித்தமானால், இங்கே உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம்," என்று சொன்னதுபோல ஒரு குழு இயேசுவுக்குக் கூடாரம் கட்டும் அதே வேளையில், தங்கள் தலைவருக்கும் கூடாரம்போட ஆரம்பிக்கும்போது, ஆபத்தும் ஆரம்பித்துவிடும். நாளடைவில் இயேசுவுக்கான கூடாரம் எங்கோவொரு மூலையில் மிகச் சிறியதாக இருக்கும். இயேசுவுக்குக் கூடாரம் அறவே இருக்காது என்று சொல்ல முடியாது. ஆனால், அவர்களுடைய தலைவரின் கூடாரம்தான் மிகப் பெரியதாக இருக்கும். அவர்களுடைய தலைவரின் ஒலிநாடாக்கள், ஒளி நாடாக்கள், காணொளிகள், பாடல்கள், புத்தகங்கள் என அவர்தான் எங்கும் நிறைந்திருப்பார். கூட்டங்களில்கூட, "நம் தீர்க்கதரிசி சொன்னார். நம் அப்போஸ்தலர் சொன்னார். நம் யுகத்தின் ஊழியர் சொன்னார்," என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்லுவார்கள்.

ஒரு சகோதரன் நமக்கு ஓர் உதவி செய்தவுடன், அவர்மேல் நமக்கு ஒரு தனி அபிமானம் வரும். நாளடைவில் மற்ற சகோதர சகோதரிகளின்மேலுள்ள அபிமானத்தைவிட இந்தச் சகோதரன்மேலுள்ள அபிமானம் கொஞ்சம் அதிகமாகும். நாட்கள் செல்லச்செல்ல இன்னும் கொஞ்சம் அதிகமாகும். கடைசியில் இந்த அகில உலகத்திலும், எந்த யுகத்திலும் இந்த சகோதரன் அளவுக்குக் கொடை பெற்றவர்கள் வேறு யாரும் இல்லவே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அந்த அபிமானம் போய்விடும்.

பேதுரு சொன்னதுபோல, இயேசுவுக்கும், அப்படியே மோசேக்களுக்கும் எலியாக்களுக்கும் கூடாரம் போடுவது மனிதனுடைய மாம்சத்தில் இருக்கிறது. இது மதரீதியான மாம்சம். மோசே நியாயப்பிரமாணத்தின் பிரதிநிதி. எலியா தீர்க்கதரிசிகளின் பிரதிநிதி. சபை சரித்திரம் முழுவதும் இப்படி இயேசுவுக்கு ஒரு கூடாரமும், தத்தம் தலைவர்களுக்குப் பல உபகூடாரங்களும் போட்ட பல கிறிஸ்தவக் குழுக்களையும், இயக்கங்களையும் நாம் பார்க்கிறோம், இன்றைக்கும் பார்க்கிறோம், கர்த்தருடைய வருகைவரை நாம் பார்த்துக்கொண்டேதான் இருப்போம். இதில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இப்படி கொடை பெற்றவர்கள் தாங்கள் கிறிஸ்துவைச் சேவிப்பதாகத்தான் சொல்வார்கள். கிறிஸ்துவுக்கு ஒரு கூடாரம் இருக்கும். ஆனால், கூடவே இன்னும் இரண்டு கூடாரங்களும் இருக்கும். துரதிருஷ்டவசமாக இன்று மோசேக்கும், எலியாவுக்கும் கூடாரங்கள் இருப்பது மட்டும் அல்ல. அவர்களுடைய கூடாரங்கள் இயேசுகிறிஸ்துவின் கூடாரத்தைவிட பெரியதாகவும் இருக்கின்றன. சபையின் அங்கீகாரத்தையும், உதவியையும், பாதுகாப்பையும் பெறுவதற்காக இயேசுவின் கூடாரத்தைத்தான் காட்டுவார்கள். ஆனால் பின்புலத்தில் மோசேக்களின், எலியாக்களின், கூடாரங்கள் எழும்பிக்கொண்டிருக்கும். ஒருநாள் தேவன், “இவர் என் நேசகுமாரன். இவர்மேல் பிரியமாயிருக்கிறேன். இவருக்குச் செவிகொடுங்கள்,” என்று சொல்வார். அப்போது அவர்கள் கண்விழித்துப் பார்ப்பார்கள். கண்விழிக்கும்போது அவர்கள் இயேசுவைத்தவிர வேறு யாரையும் பார்க்கமாட்டார்கள். அவர்கள் கட்டின கூடாரங்கள் காணாமல் போகும். "நாங்கள் மோசேக்கு கூடாரம் கட்டவில்லை, நாங்கள் எலியாவுக்கு கூடாரம் கட்டவில்லை, நாங்கள் இயேசுவுக்குத்தான் கூடாரம் கட்டினோம்; கிறிஸ்து வாழ்வதற்காக, கிறிஸ்து வெளியாவதற்காக, கிறிஸ்துவைப் பெரிதாக்குவதற்காக,” என்று அவர்கள் சொன்னதெல்லாம் உண்மையா பொய்யா என்பது அப்போது வெளிச்சத்திற்கு வந்துவிடும். மோன்டனிசம் அப்படித்தான் போனது.

7. ஒழுக்கசீலர்களா, சட்டவாதிகளா

மோன்டனிஸ்டுகள் சட்டவாதத்தின் ஆவியையும், கடுமையான தவத்தின் ஆவியையும் வளர்த்துக்கொண்டார்கள். மோன்டனிசம் ஓர் அருங்கொடை இயக்கம்போலத் தோன்றி, பரிசுத்த ஆவியானவரின் தூண்டுதலுக்கும், நகர்வுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்ததுபோலத் தோன்றினாலும், அவர்கள் மிகக் கண்டிப்பான சட்டவாதிகளாகச் செயல்பட்டார்கள் என்று தெரிகிறது.

அப்போஸ்தலர்களைப்போல் தீர்க்கதரிசகளுக்கும் பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் உண்டு என்று அவர்கள் கூறினார்கள். இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்கள் பெண்களை சபைகளில் ஆயர்களாகவும், போதகர்களாகவும் நியமித்தார்கள். கடும் நோன்பு இருத்தல் கட்டாயம் என்றும், முதல் மனைவியோ கணவனோ இறந்துபோனால் மறுமணம் செய்யலாகாது என்றும், மறுமணம் செய்வது விபச்சாரம் என்றும் அவர்கள் சொன்னார்கள். இது அவர்களுக்கு எதிரான மிகக் கடுமையான, ஆனால் நியாயமான, குற்றச்சாட்டு என்று நான் கருதுகிறேன். மோன்டனிச இயக்கத்தின் இந்த "ஆவிக்குரிய" மேட்டிமை, கர்வம், நம்மைச் சிந்திக்க வைக்கிறது. இவ்வாறு, மோன்டானுசும் அவருடைய துணையாளர்களும் தீர்க்கதரிசனம் உரைத்து கிறிஸ்தவக் கொள்கையிலிருந்து பிறழ்ந்து சென்றார்கள் என்று செசாரியா யூசிபியஸ் கூறுகிறார்.

சட்டவாதம் என்றால் என்ன? "கொடுக்கப்பட்ட சட்டங்களுக்கும், விதிகளுக்கும் ஏற்ப ஒருவன் தன்னை வடிவமைக்கும் முயற்சியே சட்டவாதம்." ஒருவன் தன்னை சட்டதிட்டங்களுக்கு ஒத்தவனாக்க முயலும்போது, அங்கு பழைய மனிதனே கண்முன் நிற்கிறான். கொடுக்கப்பட்ட தரத்திற்கு ஒத்திருக்கும் அளவைப்பொறுத்து அவன் திருப்தியடைகிறான். இது கிறிஸ்தவம் அல்ல.

அவர்கள் கடுமையான ஒழுக்கமுறைகளைக் கற்பித்தார்கள். நீண்டநாள் உபவாசத்தை வலியுறுத்தினார்கள், வற்புறுத்தினார்கள். திருமணம்செய்வதை ஊக்கப்படுத்தவில்லை. இரண்டாவது திருமணம் முற்றிலும் தடைசெய்யப்பட்டது. திருமணமானவர்களைக் குடும்பங்களைவிட்டுப் பிரித்தார்கள்.

மோன்டனிசத்தைச் சேர்ந்தவர்கள் என்னென்ன செய்யலாம், என்னென்ன செய்யக்கூடாது என்பதைப்பற்றிய ஒரு நீண்ட பட்டியல் வைத்திருந்தார்கள். குறிப்பாக பெண்கள் என்ன உடை உடுத்தலாம், என்ன உடை உடுத்தக்கூடாது என்று கண்டிப்பான கட்டுப்பாடுகள் விதித்தார்கள். ஈஸ்டருக்குமுன்பு வரும் தவக்காலத்தில் அனுசரிக்கவேண்டிய சுத்தபோசனம், ஒருசந்தி, ஆகியவைகளைப்பற்றி பல விதிமுறைகள் இருந்தன. மிகக் கடுமையான அறச் சட்டங்களை உருவாக்கினார்கள். அவர்கள் மிகக் கடுமையான சந்நியாச வாழ்க்கையை வலியுறுத்தினார்கள். ஒருவன் பின்வாங்கிப்போனால் அவன் மனந்திரும்புவதற்கு வழியே கிடையாது என்று மோன்டனிஸ்டுகள் நம்பினார்கள்.

இயேசு கிறிஸ்து மிக விரைவில் அவர்களுடைய காலத்திலேயே திரும்பி வருவார் என்று அவர்கள் நம்பினார்கள். எனவே, இயேசுவைச் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும் என்றும் நினைத்தார்கள். இந்த வெளிச்சத்தில் பார்த்தால், அவர்கள் ஏன் கடுமையான தவ முயற்சிகளில் ஈடுபட்டார்கள் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

சட்டவாதம் பேராபத்தானது. சட்டவாதம் ஒரு குற்றம்; இது தேவபக்தியற்றவர்கள் செய்கிற தவறல்ல; மாறாக, தேவன்மேல் ஊக்கமான பக்திவைராக்கியம் கொண்டவர்கள் செய்கிற தவறாகும். கலாத்தியர்கள், மனந்திரும்பியபோது தாங்கள் இடித்துப்போட்ட கட்டிடத்தை, தாங்களே மீண்டும் கட்டின அந்த ஆபத்து எப்போதும் இருக்கிறது. இலவசமான கிருபை என்ற தளத்திற்கு வந்தபிறகு, அதைவிட்டு அவர்கள் வேகமாக விலகிச்சென்றுவிடுகிறார்கள். விசுவாசத்தில் ஆரம்பித்தபிறகு கிரியைகளினாலே பரிபூரணப்பட நாடுகிறார்கள்.

சட்டவாதிகள் எப்போதுமே புறம்பான காரியங்களாலே ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறார்கள். சட்டவாதி இறுமாப்புடையவனாக மாறிவிடுகிறான். சட்டவாதம் விவாதங்களில் மட்டுமீறி ஈடுபடுகிறது.

தெர்த்துல்லியன் இந்த முரண்பாட்டை ஒப்புக்கொண்டார். கடுமையான அற நடத்தையைப் பின்பற்ற வேண்டும் என்ற வேட்கையினால், தங்களை அறியாமலே அவர்கள் சட்டவாதிகளானார்கள் அல்லது அப்படிப் பிறர் நினைத்தார்கள் என்று அவர் ஒப்புக்கொண்டார். மோன்டனிஸ்டுகள் கடுமையான சட்டவாதிகள் என்று சொல்லும் அளவுக்கு அவர்கள் சட்டங்கள் வகுத்தார்கள், வைத்திருந்தார்கள்.

இதனால் மோன்டனிசம் மிகப் பெரிய எதிர்ப்பைச் சந்தித்தது. மோன்டனிசம் பிற்காலத்தில் வேதப்புரட்டு என்று அழைக்கப்பட்டாலும், அதன் ஆரம்ப காலத்தில், அது கிறிஸ்தவத்தின் அடிப்படைகள் பலவற்றை மாற்றமுறாமல் ஏற்றது. மோன்டனிசம் மரபுவழிக் கிறிஸ்தவக் கொள்கைக்கு எதிரானது என்று ஆயர் அனிசேட்டஸ் மோன்டனிசத்தைக் கண்டனம் செய்தார். அது வேறு விஷயம். ஆனால், ஆரம்பத்தில், இந்தப் புதிய தீர்க்கதரிசன இயக்கத்தின் மூன்று முக்கியமான தலைவர்களாகிய மோன்டானுஸ், பிரிஸ்கில்லா, மாக்சிமில்லா ஆகியோர் வேறொரு கிறிஸ்துவைப் பிரசங்கித்தார்கள் என்பதாலோ அல்லது கிறிஸ்தவத்தின் அடிப்படையான விசுவாசத்தின் எந்த அம்சத்தையாவது மாற்றினார்கள் என்பதாலோ கிறிஸ்தவம் அவர்களை நிராகரிக்கவில்லை. மாறாக, அவர்கள் கிறிஸ்துவைவிட, திருமணத்தையும், உபவாசத்தையும்பற்றி அடிக்கடி பேசினார்கள். கடும் நோன்பு இருத்தல் தேவை என்றார்கள். முதல் மனைவியோ கணவனோ இறந்துபோனால் மறுமணம் செய்யலாகாது என்றார்கள். எனவே, "இவர்கள் நூதனமானவைகளைப் பிரசங்கிக்கிறார்கள் என்ற காரணத்தினால் நாங்கள் நிந்திக்கப்படுகிறோம்," என்று தெர்த்துல்லியன் எழுதுகிறார்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தெர்த்துல்லியன் சொல்வதுபோல், கிறிஸ்தவர்கள் மோன்டனிசத்தை எதிர்த்ததற்குக் காரணம் அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் தூண்டுதலுக்கு, ஏவுதலுக்கு, நகர்வுக்கு, அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்பதல்ல, உண்மையான பிரச்சினை பரிசுத்த ஆவியானவரின் செயல்பாடுகள் அல்ல. மாறாக, அவர்கள் சட்டவாதிகள். "இவர்கள் சட்டத்தால் வாழ்கிறவர்கள். ஆகையால் வேதாகமத்திற்கும் அப்பாற்பட்டு பல சட்டங்கள் இயற்றினார்கள்," என்பதுதான் பெரிய பிரச்சினை. பரிசுத்த ஆவியானவரின் அசைவுக்கும், தூண்டுதலுக்கும், நகர்வுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதாகக் கூறும் கிறிஸ்தவக் குழுக்கள் சபை வரலாறு முழுவதும் அடக்குமுறையான சட்டவாதத்தையும் திணித்திருக்கிறார்கள் என்பது மிகவும் கவனிக்கத்தக்க நிகழ்வு என்று நான் நினைக்கிறேன். இது அப்பட்டமான முரண்பாடு. தற்காலத்திய கிறிஸ்தவத்தில் காணப்படுகிற ஏராளமான மதப்பிரிவுகள், வேதப்புரட்டுகள், நம்மைத் திகைப்புக்குள்ளாக்குகின்றன, அச்சுறுத்துகின்றன. அவை ஒவ்வொன்றின் தவறை, குற்றத்தை, பிழையைக் கண்டுபிடிக்க நம் வாழ்நாள் முழுவதையும் செலவழிக்க வேண்டியிருக்கும். ஆனால், இங்கு ஓர் எளிமையான பரீட்சை இருக்கிறது; சட்டவாதம் ஜென்மசுபாவமான மனிதனின் பெருமைக்குக் கவர்ச்சியாக இருக்கிறது. இந்த முரண்பாடு இன்றுவரை கிறிஸ்தவக் குழுக்களில் நீடிக்கிறது.

இந்த இயக்கத்தின் தீர்க்கதரிசன முறை பலருடைய கவனத்தை ஈர்த்தது; அநேகரைத் தன்பால் இழுத்தது. ஆனால், அதே நேரத்தில் இவர்களுடைய சட்டவாதமும், துறவறப் போக்கும், கடுமையான எதிர்ப்பைச் சம்பாதித்தது.

8. மிதமிஞ்சிய மோன்டனிச வாக்கியங்கள்

ஆண்டவராகிய இயேசு "நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்," என்று தாம் "சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை" அனுப்புவதாக வாக்குறுதியளித்தார். இங்கு கூறப்பட்டுள்ள தேற்றரவாளன் என்ற வார்த்தை ‘Paraclete’ என்ற கிரேக்க வார்த்தையின் மொழியாக்கம். Paraclete என்ற இந்தக் கிரேக்க வார்தையைத் தமிழில் பொழிபெயர்ப்பது அவ்வளவு எளிதல்ல. தாம் அனுப்பப்போகிற இந்த Paraclete எதிர்காலத்தில் என்ன செய்வார் என்றும் இயேசு எடுத்துரைத்தார். Paraclete என்ற இந்த வார்த்தைக்கும், Paraclete செய்கிற செயலுக்கும் மோன்டனிஸ்டுகள் அதீத முக்கியத்துவம் கொடுத்தார்கள்.

மோன்டனிசத்துக்கு "புதிய தீர்க்கதரிசனம்" என்ற ஒரு பெயர் உண்டு என்று நான் ஏற்கெனவே சொன்னேன். மோன்டனிஸ்டுகள் தங்களை மோன்டனிஸ்டுகள் என்றழைக்கவில்லை. அவர்கள் தங்களைப் "புதிய தீர்க்கதரிசனம்" என்றே அழைத்தார்கள்.

பொதுவாக ஒரு குழு அல்லது பிரிவு தங்கள் தலைவரை சபையின் சீர்திருத்தவாதியாகக் கொண்டாடும்போது தங்களைத் தங்கள் தலைவரின் பெயரால் அடையாளப்படுத்திக்கொள்வார்கள். எடுத்துக்காட்டாக சிலர் தங்களை "லூத்தரன்" "வெஸ்லியன்" என்று சொல்லும்போது, அவர்கள் தாங்கள் லூத்தரின், வெஸ்லியின் போதனைகளை முதன்மைப்படுத்துவதாக அறிவிக்கிறார்கள். ஆனால், எல்லாரும் தங்கள் குழுவுக்குத் தங்கள் தலைவரின் பெயரை வைப்பதில்லை. சிலர் தங்கள் தலைவர்களையே முதன்மைப்படுத்துவார்கள், தங்கள் தலைவர்களின் போதனைகள்மட்டுமே வேதத்தின் போதனைகள் என்பார்கள். வேறு குழுவைச் சார்ந்த தலைவர்களின் புத்தகங்களைக்கூட வாசிக்கமாட்டார்கள். இப்படிப்பட்டவர்கள், தங்கள் தலைவருடைய பெயரை நாசுக்காக மறைத்து, தாங்கள் கிறிஸ்துவைமட்டுமே முதன்மைப்படுத்துவதுபோன்ற ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்க "கர்த்தருடைய திருப்புதல்", "கர்த்தருடைய தீர்க்கதரிசனம்" என்று கர்த்தருடைய பெயரைப் போர்வையாகப் பயன்படுத்துவார்கள். அதுபோல மோன்டனிஸ்டுகள் முழுக்கமுழுக்க மூன்று தலைவர்களையே பின்பற்றியபோதும் அவர்கள் தங்கள் சபைக்குத் தங்கள் தலைவரின் பெயரை வைக்கவில்லை. மாறாக அவர்கள் தங்களை "புதிய தீர்க்கதரிசனம்" என்றழைத்தார்கள்.

"கிறிஸ்து வேதாகமத்தில் சொன்னவைகளைவிட பாராக்லீட் புதிய தீர்க்கதரிசனத்தின்மூலம் 'அதிகமானவைகளை, ஆம் பெரியவைகளையும், சிறந்தவைகளையும்' வெளிப்படுத்துவதாக நான் புரிந்துகொள்கிறேன்," என்று மோன்டனிசத்தின் ஆதரவாளரான தெர்த்துல்லியன் கூறுகிறார். "அதிகமானவைகள், சிறந்தவைகள், பெரியவைகள்" என்று தெர்த்துல்லியன் குறிப்பிடும்போது அவர் அப்போஸ்தல விசுவாசப் பிரமாணத்தை மாற்றும் தன்மையுள்ள வெளிப்பாட்டையோ, போதனைகளையோ குறிப்பிடவில்லை. "புதிய தீர்க்கதரிசனம்" என்ற மோன்டனிசம் தங்களுடைய புதிய வெளிப்பாட்டின்மூலம் அப்போஸ்தல விசுவாசப் பிரமாணத்தைக் கேள்விக்குள்ளாக்கினது என்ற குற்றச்சாட்டைத் தெர்த்துல்லியன் மறுத்தார். வேதாகமத்தில் ஏற்கெனவே இருந்த, ஆனால் மறைந்திருந்த, காரியங்களை பாராக்லீட் வெளியரங்கமாக்கினார் என்பதையே "அதிகமானவைகள், சிறந்தவைகள், பெரியவைகள்" என்று தெர்த்துல்லியன் குறிப்பிட்டார் என்று தெரிகிறது. ஆயினும், தெர்த்துல்லியனின் வாதம் ஏற்புடையதா என்று தெரியவில்லை. ஒருவேளை தெர்த்துல்லியன் மிதவாதி என்பதால் அவருடைய வாதத்தை ஏற்றுக்கொண்டாலும்கூட, மோன்டனிசத்தின் பற்றாளர்களும், ஆதரவாளர்களும், பக்தகோடிகளும், சீடர்களும் தீர்க்கதரிசன வரமுடைய தங்கள் தலைவர்களின் போதனைகளுக்கும், உபதேசங்களுக்கும் வரம்புமீறிய, எல்லைமீறிய, மட்டுமீறிய, அளவுகடந்த, அதீத மரியாதையும், மதிப்பும், தங்கள் தலைவர்களை எல்லாத் தலைமுறைகளிலும் வாழ்ந்த தலைவர்களைவிட மிக உயர்ந்த தலைவர்களாகவும் கருதினதால், அவர்களுடைய பேசுதல்களைப் பொக்கிஷமாகக் கருதி, அவைகளை வேதவாக்கியங்களுக்கும்மேலாக உயர்த்தினார்கள். "நான் பவுலைச் சேர்ந்தவன், நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவன், நான் கேபாவைச் சேர்ந்தவன்" என்ற மனப்பாங்கு முதல் நூற்றாண்டில் கொரிந்து சபையில் இருந்தது. இதுபோன்ற மனப்பாங்கை இடைப்பட்ட ஒவ்வொரு நூற்றாண்டிலும், ஏன் இந்த நூற்றாண்டிலும்கூட, பொதுவாக பெரும்பாலான சபைகளில் காணலாம்.

இந்த மனப்பாங்கு அன்றும் இருந்தது, இன்றும் இருக்கிறது என்பதால், மோன்டானுஸ், பிரிஸ்கில்லா, மாக்சிமில்லா ஆகியோரின் தீர்க்கதரிசனங்கள் வேதவக்கியங்களுக்குச் சமமானவை அல்லது முதன்மையானவை அல்லது உயர்ந்தவை என்ற கூற்றை நியாயப்படுத்தமுடியாது.

சபைத் தலைவர்களின் பேசுதல்களைக் கேட்பதையோ, அவர்களுடைய கடிதங்களையும், புத்தகங்களையும் படிப்பதையோ யாரும் எந்தக் காலத்திலும் ஆட்சேபிக்கவில்லை. ஆனால், தங்கள் தலைவர்களுக்கு ஒப்பானவர்கள், நிகரானவர்கள், சமகால சபையில் யாரும் இல்லை; தங்கள் தலைவர்களின் பேசுதலுக்கும், எழுத்துக்களுக்கும் ஒப்பானவை, நிகரானவை, எதுவும் இல்லை என்ற மனப்பாங்கும், எண்ணமும் முற்றிலும் பிழையானது, அழிவுக்கேதுவானது.

மோன்டனிஸ்டுகள் இதற்கும் மேலாகப் போய், தங்கள் தலைவர்களின் பேசுதல்களை வேதவாக்கியங்களுக்கு ஒப்பாக்கியதும், அதற்கு அடுத்தாற்போல் வேதவாக்கியங்களுக்கு மேலாக உயர்த்தியதும், இவர்களுடைய பெரிய வழிவிலகல்கள்.

மோன்டானுசுக்குப்பின் அதன் தலைவரான மில்டியாட்ஸின் புத்தகங்களை முராடோரியன் ஆலோசனைச் சங்கம் வேதப்புரட்டு என்று நிராகரித்தது. உரோம எழுத்தாளர் காயஸ் 210இல் 'புதிய வேதாகமங்களை உருவாக்கும் மோன்டனிஸ்டுகளின் அடாவடித்தனத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்' என்று எழுதுகிறார் (யூசிபியஸ், HE 6:20:3). ஆனால், மோன்டானுஸ் தீர்க்கதரிசனம் சொல்ல ஆரம்பித்து நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகும் மோன்டனிஸ்டுகள் ‘புதிய வேதாகமங்களை’ உருவாக்கிக்கொண்டிருந்தார்கள் என்று யூசிபியஸ் குறிப்பிடுகிறார்.

9. ஃபிரிஜியாவில் புதிய எருசலேம்

இன்று பெரும்பாலான கிறிஸ்தவர்கள் விசுவாசிப்பதுபோல், அவர்களும் ஆண்டவராகிய இயேசுவின் இரண்டாம் வருகையை உறுதியாக விசுவாசித்தார்கள். ஆனால், பிரச்சினை என்னவென்றால், இயேசு தங்கள் காலத்தில், சிறிய ஆசியாவின் நடுவில் தங்களுடைய தலைமையகம் இருந்த பெபுசா நகரத்திற்குத்தான் திரும்பிவருவார் என்றும், புதிய எருசலேமைத் தங்கள் இயக்கத்தின் தலைமை இடமாகிய ஃபிரிஜியாவில் நிறுவுவார் என்றும் அவர்கள் போதித்தார்கள். எனவே, வரவிருக்கும் அரசில் பங்குபெற, தங்களை ஆயத்தம்செய்ய, பல மோன்டனிஸ்டுகள் அந்தப் பகுதிக்குக் குடிபெயர்ந்தார்கள். விரைவில் திரும்பி வரப்போகிற இயேசு கிறிஸ்துவுக்காகச் சபையைப் பரிசுத்தப்படுத்த பரிசுத்த ஆவியானவர் மோன்டானுஸ் வடிவில் வந்தார் என்று மோன்டனிசம் கற்பித்தது.

ஆம், புதிய எருசலேம் ஃபிரிஜியாவின் அருகே உடனடியாக இறங்கிவரும் என்று அவர்கள் தீர்க்கதரிசனம் உரைத்ததாக அவர்கள்மேல் குற்றம் சுமத்தப்பட்டது -- ஒரு சந்தேகம்: புதிய எருசலேம் உடனடியாக இறங்கிவரும் என்று அவர்கள் எதிர்பார்த்திருந்தால் அவர்கள் சபையின் எதிர்காலத் தேவைக்காகப் புதிய வேதாகமத்தை உருவாக்க ஏன் முயன்றார்கள் என்ற சந்தேகம் எழுகிறது. "ஃபிரிஜியாவின் அருகே பெபுசாவில் எருசலேம் இறங்கிவரும் என்று 'குயின்டிலா அல்லது பிரிஸ்கில்லா' ஒரு தரிசனம் கண்டதாகச் சொன்னார். குயின்டிலாவா அல்லது பிரிஸ்கில்லாவா என்று என்னால் துல்லியமாகச் சொல்ல முடியவில்லை" என்று எபிபானியஸ் தன் புத்தகத்தில் எழுதுகிறார். மோன்டானுஸ், மாக்சிமில்லா ஆகிய இருவரும் மரித்தபிறகு, குயின்டிலா அல்லது பிரிஸ்கில்லா இந்தத் தரிசனத்தை கண்டிருக்கலாம் என்று அவர் கூறுகிறார் (Sources, pp. 139.).

மோண்டானுஸ் வாழ்ந்த காலத்தில் எல்லா இடங்களிலுமிருந்த மோன்டனிஸ்டுகளை சிறிய ஆசியாவில் பிரிஜியாவின் அருகே உள்ள பெபுசா, டைமின் ஆகிய இரண்டு நகரங்களில் கூட்டிச்சேர்க்க வேண்டும் என்ற ஆவலில், அந்த இரண்டு நகரங்களையும் அவர் "புதிய எருசலேம்" என்று அழைத்தார். எனவே, "புதிய எருசலேம் இறங்கிவந்துகொண்டிருப்பதாக அவர்கள் சொன்னபோது, எதிர்காலத்தில் நிகழப்போகிற ஒரு நிகழ்ச்சியை அவர்கள் குறிக்கவில்லை. மாறாக, ஆதி அப்போஸ்தலர்கள் காலத்தில் எப்படி எருசலேம் கிறிஸ்தவத்தின் மையமாகத் திகழ்ந்ததோ, அதுபோல இப்போது இந்த இரண்டு நகரங்களும் கிறிஸ்தவத்தின் மையமாகத் திகழப்போகின்றன என்ற பொருளில் சொல்லியிருக்கலாம் என்று சிலர் சொல்லக்கூடும்," என்று அப்பல்லோனியஸ் கூறுகிறார்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், எப்படி ஆவியானவரின் செயல்பாடு அன்று அப்போஸ்தலர்களின் காலத்தில் பெந்தெகொஸ்தே எருசலேமில் தொடங்கி, எருசலேமிலிருந்து பரவியதோ, அதுபோல இன்று அது பெபுஸாவில்தான் இருக்கிறது, இங்கிருந்துதான் உலகெங்கும் பரவும் என்ற எண்ணத்தை அவர்கள் மக்களிடம் விதைத்தார்கள். எனவே, தாங்கள்தான் பரிசுத்த ஆவியானவரின் செயல்பாடுகளுக்கு முன்னோடிகள் என்ற கருத்தை முன்னெடுத்துச்செல்ல, அவர்கள் இந்த நகரங்களை எருசலேம் என்று அழைத்திருக்கலாம். எல்லாச் சபைகளுக்கும் ஒரு தலைமையகம் இருக்கிறது. அவரவருக்கு அவரருடைய தலைமையகம் "புதிய எருசலேம்."

மோன்டனிஸ்டுகள் பரவலாக இப்படிப் போதித்தாலும், புதிய எருசலேம் பாலஸ்தீனத்தில்தான் வரும் என்று இரண்டாம் நூற்றாண்டின் சபை எதிர்பார்த்ததுபோலவே தெர்த்துல்லியனும் எதிர்பார்த்தார். தெர்த்துல்லியன் ஒரு விதிவிலக்கு.

நாம் ஏற்கெனவே பார்த்ததுபோல், தன் மரணத்திற்குப்பிறகு எல்லாம் நிறைவுபெறும் என்று மாக்சிமில்லா உரைத்தார். அவர் மரித்தவுடன் எல்லாம் முடிந்துவிடும் என்று சொன்னாரா அல்லது அவர் மரித்தபின் கொஞ்சகாலம் ஆகும் என்று சொன்னாரா தெரியவில்லை. ஆனால், மாக்சிமில்லா கிறிஸ்துவின் வருகை உடனடியாக இருக்கும் என்று தீர்க்கதரிசனம் உரைத்தார். பலவிதமான மரணங்களைப்பற்றிப் பேசும் மோன்டனிசம் சாகாமல் எடுத்துக்கொள்ளப்படுவதைப்பற்றி எங்கும் பேசியதுபோல் தெரியவில்லை. அப்படியானால் அவர்கள் உண்மையிலேயே ஆண்டவருடைய வருகை உடனே இருக்கும் என்று எதிரிபார்த்தார்களா என்ற கேள்வி எழுகிறது. எனவே, இயேசுவின் வருகையின் நேரத்தையும், இடத்தையும்பற்றிய அவர்களுடைய நம்பிக்கையினிமித்தம் ஆசிய ஆயர்களின் ஆலோசனைச் சங்கம் அவர்களைக் கண்டித்தது, நிராகரித்தது.

10. வெறியா, வேதப்புரட்டா

மோன்டனிஸ்டுகள் பெரும்பாலான சபை வரலாற்றாசிரியர்கள் சொல்வதுபோல் வேதவெறியர்களா அல்லது வேதப்புரட்டர்களா என்று சொல்வது எளிதான காரியம் இல்லை என்று நான் நினைக்கிறன். Fanatical, or heretical? அவர்கள் தீர்க்கதரிசனம் உரைத்த பாணி, தங்கள் குழுவின் ஆதரவாளர்கள் துறவிகள்போல் வாழ அவர்கள் வலியுறுத்திய விதம், அதற்காக அவர்கள் முன்வைத்த விசித்திரமான கோரிக்கைகள், தங்கள் தீர்க்கதரிசன வரமும் பாரக்கிலீட்டும் கிழக்கிலும் மேற்கிலும் சிறிய ஆசியாவிலும் இருந்த பிரதான சபை ஆயர்களால் நிராகரிக்கப்பட்டதால் அவர்கள்மேல் ஏற்பட்ட கடுங்கோபம், மோன்டனிசத்தின் மூன்று முக்கியமான தலைவர்களின் தனிப்பட்ட நடத்தை, அவர்களுடைய மேலாதிக்கம், சகிக்கமுடியாத அளவுக்கு சுய-முக்கியத்தும் ஆகியவைகளை பிரதான சபை கவனிக்கத் தவறவில்லை. ஒரு புதிய விசுவாசியும் (மோன்டானுஸ்), இரண்டு பெண்களும் (பிரிஸ்கில்லா, மாக்ஸிமில்லா) "இன்று சபைக்கு ஆவியானவரின் அறிவுறுத்தல்களையும் வழிகாட்டுதலையும் வழங்கும் வழிகள், கருவிகள், நாங்களே. நாங்கள் சொல்பவை ஆவியானவரின் வார்த்தைகள்," என்று சொன்னால் சபை ஏற்றுக்கொள்ளுமா? ஏற்றுக்கொள்ளமுடியுமா? இந்த மூவரும் தாங்கள் சொல்வதை சபை ஏற்றுக்கொண்டு, அதற்குக் கண்டிப்பாகக் கீழ்ப்படியவேண்டும் என்று வலியுறுத்தினால் சபை பொறுத்துக்கொள்ளுமா?

அன்றைய காலகட்டத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். 170, 180களில் சபை ஓர் இக்கட்டான கட்டத்தைக் கடந்துபோய்க்கொண்டிருந்தது. சபை அப்போதுதான் ஞானவாதக் குழப்பத்திலிருந்தும், மார்சியனுடனான கடுமையயான மோதலிலிருந்தும் மீண்டுவந்துகொண்டிருந்தது. இந்தச் சூழ்நிலையில் "புதிய தீர்க்கதரிசனம்" சபையை இணைப்பதற்குப்பதிலாகப் பிரிக்க முற்பட்டது. சபை ஸ்திரப்பட வேண்டிய நேரத்தில் இந்தப் புதிய இயக்கம் பிளவை ஏற்படுத்தியது. மோன்டனிசம் சிலருக்குக் கிளர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும். ஆனால், அது பெரும்பாலும் இடையூறுகளையே ஏற்படுத்துயது.

"தெர்த்துல்லியன், 'வறண்ட உணவுகளையும், முள்ளங்கியின் மறுஉணவையும்" (ஹிப்போலிடஸ்; ஆதாரங்கள், ப. 57) பற்றிக் கவலைப்படவில்லை. அதாவது தெர்த்துல்லியன் பிரிவு, பிளவு ஆகியவைபற்றி பெரிதாகக் கவலைப்படவில்லை. "புதிய தீர்க்கதரிசனத்திற்கு"ச் சாதகமாக அவர் மிகவும் நுட்பமாக மேம்பட்ட விதத்தில் காய்களை நகர்த்தினார். அவர் சபையின் ஒழுக்கத்தின் தரத்தைச் சுட்டிக்காட்டி, அதை நெறிப்படுத்துவதற்கு பாரக்லீட்டின் வார்த்தைகளைத் தயக்கமின்றி ஏற்றுக்கொள்ள பரிந்துரைத்தார். அதோடு நிறுத்தாமல், கன்னிகைகள் முக்காடுபோட வேண்டும், உபவாசங்களை இரண்டுமடங்காக அதிகரிக்க வேண்டும், மறுமணத்திற்கு முழுத் தடை விதிக்க வேண்டும், ஞானஸ்நானம் பெற்றபிறகு ஒருவன் செய்யும் மோசமான பாவத்தை மன்னிக்கக் கூடாது, மன்னிக்க முடியாது, என்றும் அவர் வாதித்தார்.

இதை நீங்கள் என்ன சொல்வீர்கள்? வைராக்கியமா? பக்தியா? தீவிரவாதமா? வெறியா? வேதப்புரட்டா? அதிர்ச்சி!

புதிய தீர்க்கதரிசனத்தின் மூலம் பரிசுத்த ஆவியானவர் வேதாகமத்தின் கருகலான காரியங்களைத் தெளிவாக்கினார் என்றும், புதிய தீர்க்கதரிசனம் புதிய உபதேசத்தை உருவாகவில்லை; மாறாக, கண்டிப்பான நெறிமுறையைக் கட்டாயப்படுத்தியது என்றும், On the Resurrection of the Flesh என்ற நூலில் தெர்த்துல்லியன் எழுதுகிறார்.

ஆனால், "’புதிய தீர்க்கதரிசனம்' அப்போஸ்தலர்களால் அறிவிக்கப்பட்ட உபதேசங்களை முறியடித்து வேற்று உபதேசங்களை உருவாக்கியதாக மரபுவழி சபை நம்பியது. சபை அவர்களை நிராகரித்தது," என்று ஜெரோம் Three Lents instead of One’ என்ற புத்தகத்தில் எழுதுகிறார்.

11. பாராட்டுக்குரிய காரியங்கள்

இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் பிரதான சபை "புதிய தீர்க்கதரிசனத்தை" நிராகரித்ததைப் புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனால், இன்று நாம் கொஞ்சம் பின்னோக்கிப்பார்த்தால் அதை நாம் இன்னும் கொஞ்சம் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம் என்று நினைக்கிறன். மோன்டனிசத்தின் மிக அழகிய பக்கத்தை 202இல் கார்தேஜில் மோன்டனிஸ்டுகள் இரத்தசாட்சிகளாக மரித்ததை நேரில் கண்ட ஒருவர் Passion of Perpetua என்ற புத்தகத்தில் விவரமாக எழுதியிருக்கிறார். அதை நான் இங்கு தருகிறேன். முடிவு உங்கள் கையில்.

"பண்டைய கால விசுவாசத்தின் முன்மாதிரிகள் தேவனுடைய கிருபைக்கு சாட்சியாகவும், மனிதர்களுடைய பக்திவிருத்திக்காகவும் இருக்க முடியுமானால், அவைகளை இப்போது நாம் படித்து தேவனை மகிமைப்படுத்தவும் தேவ மக்களைப் பலப்படுத்தவும் முடியுமானால், இந்த இரண்டு நோக்கங்களுக்காக, இன்றைய நிகழ்வுகளை எதிர்காலச் சந்ததிக்காக நாம் ஏன் சேகரித்து வைக்கக்கூடாது? ஒரு நாள், இவைகளும் பண்டைய நிகழ்வுகளாக மாறி, அந்தச் சந்ததியினருக்குப் பயன்படும். இந்த நிகழ்வுகளை இப்போதைய சபை அங்கீகரிக்காமல் போகலாம், மதிக்காமல் போகலாம், வெறுக்கலாம், எங்களைக்குறித்த தவறான எண்ணத்தினால் அவர்கள் எங்களை ஏற்காமல்போகலாம். ஆனால் ஒருபோதும் மாறாத பரிசுத்த ஆவியானவரின் மாறாத வல்லமையை பல்வேறு சகாப்தங்களில் மதிப்பிடுபவர்கள் நான் சொல்வதைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். உலக வரலாற்றின் இறுதிக் கட்டங்களில் தேவ கிருபை ஏராளமாகவும், தாராளமாகவும் வரும் என்ற வாக்குறுதியின்படி சமீபத்திய நிகழ்வுகள் பெரியவைகளாகக் கருதப்பட வேண்டும். ஏனென்றால், நாம் கடைசிநாட்களில் இருக்கிறோம். 'கடைசி நாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.…' எனவே, வாக்குறுதியளிக்கப்பட்ட புதிய தீர்க்கதரிசனங்களையும், தரிசனங்களையும் ஒரே மாதிரியாக அங்கீகரித்து கனம்பண்ணுகிற நாங்கள் ஆவியானவரின் பிற வரங்கள் சபையைச் சிறப்பாகச் சீர்பொருத்துவதற்காகவே கொடுக்கப்பட்டிருக்கின்றன என்று கருதுகிறோம். ஒவ்வொரு மனிதனுக்கும் கர்த்தர் பகிர்ந்தளித்த அளவின்படியே அவர்களுக்கு வரங்களை வழங்க ஆவியானவர் அனுப்பப்பட்டார். நாங்கள் உண்மைகளைத் தொகுத்து, அவைகளை மக்களுக்கு வழங்க விரும்புகிறோம். இது எங்கள் கடமை. தேவனுடைய கிருபை தேவனுடைய மகிமைக்காக பண்டைய நாட்களில் ஒரு சில இரத்தசாட்சிகளிலும், ஒரு சிலருடைய வெளிப்பாடுகளிலும் மட்டும்தான் வெளியரங்கமானது என்று பலவீனமானவர்கள் நினைத்துவிடக்கூடாது என்பதற்காக நாங்கள் இன்றைய நிகழ்வுகளைத் திரட்ட விரும்புகிறோம். தேவன் எப்போதும் தாம் வாக்குறுதியளித்தபடி செயல்படுகிறார்; அவர் விசுவாசிகளுக்கும் அவிசுவாசிகளுக்கும் நல்லவர்களுக்கும் உண்மையுள்ளவர்களுக்கும் தம் சாட்சியைத் தெரியப்படுத்துகிறார். ஆகையால், சகோதரர்களே, சிறு குழந்தைகளே, நாங்கள் கேட்டதையும் கண்டதையும் கைகளால் தொட்டதையும் நாங்கள் உங்களுக்கு அறிவிக்கிறோம்; இன்று இங்கு இருந்த நீங்கள் கர்த்தருடைய மகிமைக்காக இதை நினைவுகூரவும், இதைக் கேட்பவர்கள் பரிசுத்த இரத்தசாட்சிகளோடு ஐக்கியம்கொள்ளவும் இதைப் பகிர்ந்துகொள்கிறோம்." இது கார்தேஜில் மோன்டனிஸ்டுகள் இரத்தசாட்சிகளாக மரித்ததை நேரில் கண்ட ஒருவருடைய சாட்சி.

"பிசாசு எப்போதும் இயங்கிக்கொண்டும், புதிய புதிய அக்கிரமங்களைத் தினமும் சேர்த்துக்கொண்டும் இருக்கும் வேளையில், தேவனுடைய வேலைமட்டும் முடிந்துபோயிருக்க வேண்டும் அல்லது முன்னேறாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பது என்ன மாதிரியான அனுமானம்?" என்று தெர்த்துல்லியன் கேட்கிறார். "மனிதனால் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் எடுத்துக்கொள்ள முடியாததால், தேவன் தம் ஆவியால் சபையைக் கொஞ்சம்கொஞ்சமாக நெறிப்படுத்தி, வழிநடத்தி, பூரணப்படுத்த பாரக்கிலீட்டை அனுப்பினார். பரிசுத்த ஆவியாகிய பாராக்லீட் நெறிப்படுத்துதல், வேதவசனங்களை வெளிப்படுத்துதல், மனதை மறுவுருவாக்குதல், மேலானவைகளைநோக்கி முன்னேற்றுதல் ஆகிய அலுவலைத்தான் இன்றும் செய்துகொண்டிருக்கிறார்"

இவைகள் மேலானவைகளா, உயர்ந்தவைகளா, சிறந்தவைகளா, அதிகமானவைகளா என்பதை உங்கள் முடிவுக்கு விட்டுவிடுகிறேன்.

V. எதிர்ப்பாளர்கள்

சில தலைவர்கள் மோன்டனிசத்தைப் பாராட்டியபோதும், சில முக்கியமான தலைவர்கள் மோன்டனிசத்தைக் கடுமையாக விமரிசித்தார்கள், கண்டனம்செய்தார்கள், எதிர்த்தார்கள்.

1. ஹிப்போலிட்டஸ்

மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உரோம ஆயராக இருந்த ஹிப்போலிட்டஸ் மோன்டனிசத்தை மிகக் கடுமையாகக் கண்டித்தார். இவரைப்பற்றி சபை வரலாற்றின் இரண்டாம் பாகத்தில் பார்த்தோம். "மோன்டனிசம் என்ற கள்ளப்போதகமும், அதன் ஆதரவாளர்களும் ஆசியாவிலும், ஃபிரிஜியாவிலும் விஷப் பிராணிகளைப்போல் ஊடுருவிப் பரவியிருக்கிறார்கள்," என்று ஹிப்போலிட்டஸ் கடுமையாகச் சாடியதாக யூசிபியஸ் The Ecclesiastical History என்ற தன் புத்தகத்தில் கூறுகிறார்.

2. யூசிபியஸ்

"மோன்டானுசும் அவருடைய உடன் ஊழியக்காரர்களும் வழக்கத்துக்கு மாறாக தீர்க்கதரிசனம் உரைத்ததே அவர்கள் கிறிஸ்தவ உபதேசங்களிலிருந்து பிறழ்ந்து சென்றதற்கு முக்கியக் காரணம்," என்று செசாரியாவின் யூசிபியஸ் கூறுகிறார். அவர்கள் திடீரென்று ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு, மெய்மறந்த நிலையில் பிதற்றியதாகவும், பொருளற்ற சொற்களை உரைத்ததாகவும் யூசிபியஸ் கருதினார். "அவர்கள் உண்மையாகவே தேவனுடைய ஆவியால் தூண்டப்படவில்லை, மாறாக, தீய ஆவியின் தாக்கத்தால்தான் பிதற்றினார்கள். எனவே, அவர்கள் போலித் தீர்க்கதரிசிகள்," என்று யூசிபியஸ் குறிப்பிடுகிறார்.

3. ஹயராபோலிஸின் அப்பொல்லினேரியஸ்

"ஹயராபோலிசின் அப்பொல்லினேரியஸ் மோன்டனிசத்திற்கு எதிரான ஒரு ‘பலமான, வெல்ல முடியாத ஆயுதம்’ என்றும், வேறு பல 'கற்றறிந்த மனிதர்களும்' மோன்டனிசத்தை எதிர்த்தார்கள்," என்றும் அதே புத்தகத்தின் 16ஆம் அதிகாரத்தில் யூசிபியஸ் எழுதுகிறார்.

4. பெயர் குறிப்பிடாத ஒருவர் அபெர்சியஸ் மார்செல்லஸ் என்பவருக்கு எழுதிய ஒரு புத்தகத்திலிருந்து யூசிபியஸ் பல மேற்கோள்கள் காட்டுகிறார். அவருடைய நாட்களில் மோன்டனிசத்தின் ஒரு பிரிவாகிய மில்டியாட்ஸ் குழு வேகமாகப் பரவியிருந்ததாகத் தெரிகிறது.

இவர்கள் ஒவ்வொருவரும் யார், என்ன சொன்னார்கள் என்று விவரமாகப் பேசவேண்டுமானால், நான் இன்னும் ஒரு மணி நேரம் பேசவேண்டியிருக்கும். எனவே, நீங்கள் கொஞ்சம் தேடி வாசியுங்கள்.

5. எபிபானியஸ்

அதற்குமுன் ஒரு காரியத்தைச் சொல்ல வேண்டும். நான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த எபிபானியஸ் என்பவர் கள்ளப்போதகங்கள் என்ற தன் நூலில் மோன்டானுசையும், அவருடைய சகாக்களான பிரிஸ்கில்லாவையும் மாக்சிமில்லாவையும், அவர்கள் பேசியவைகளையும்பற்றி எழுதியிருக்கிறார். மோன்டனிஸ்டுகள் தங்களைக்குறித்து எழுதியவை அதிகமாக இல்லை. அவர்கள் எழுதியவை பெரும்பாலும் அழிந்துவிட்டன. அவர்களைப்பற்றிய நேர்மறையான காரியங்களை தெர்த்துல்லியனின் எழுத்துக்களிலிருந்தே பெரும்பாலும் அறிய முடிகிறது. எனவே, அவைகளைக் கருத்தில் கொள்ளவேண்டும்.

6. மேற்கத்திய சபை

மேற்கத்திய சபையிலும் மோன்டனிசத்திற்கு அதே கதிதான் ஏற்பட்டது. உரோம ஆயர்களான சோட்டர், எலியூதெரஸ், அவர்களுக்குப்பின் வந்த விக்டர் ஆகியோர் 'பாரக்லீட்டை' விரட்டியடிக்கத் தீர்மானித்தார்கள், அப்படிச் செய்யுமாறு விசுவாசிகளையும் வற்புறுத்தினார்கள். ஆயினும், அவர்கள் வெளிப்படையாக மோன்டனிசத்தைத் தணிக்கைசெய்யவில்லை அல்லது வெளியேற்றவில்லை என்று தெரிகிறது.

7. அந்தியோக்கியாவின் ஆயரான செராபியன்

மாக்சிமினசைத் தொடர்ந்து அந்தியோக்கியாவின் ஆயரான செராபியன் 192ஆம் ஆண்டில் எழுதிய ஒரு கடிதத்தில், " 'புதிய தீர்க்கதரிசனம்' என்றழைக்கப்படும் இந்தப் பொய்யான அமைப்புமுறையும், இதன் செயல்பாடுகளும் உலகெங்கும் உள்ள சகோதரத்துவத்தால் அருவருப்பானது என்று கருதப்படுகிறது," என்று எழுதினார். "புதிய தீர்க்கதரிசனத்திற்கு" எதிராக ஹயராபோலிசின் ஆயர் கிளாடியஸ் அப்பொல்லினேரியஸ் எழுதியதை இவர் பாராட்டினார்.

8. ஐரேனியசும் மோன்டனிசத்தை வேதப்புரட்டு என்று விமரிசித்தார்.

VI. ஆதிச் சபையில் தீர்க்கதரிசனம்

இந்த இயக்கத்தைப்பற்றிப் பலருக்குப் பல கேள்விகள் எழலாம்.

முதலாவது, மோன்டனிசத்தின் தொடக்கம்கூட சரியாக இருந்ததா என்ற கேள்வி எழக்கூடும். ஆனால், அது மோசமாக முடிந்ததா என்று நாம் விவாதிக்கத் தேவையில்லை. ஏனென்றால், அதன் முடிவு எப்படியிருந்தது என்று வரலாறு கூறுகிறது. மெல்லத் தேய்ந்து மறைந்துபோனது. மோன்டனிசம் சிறிய ஆசியாவில் மூன்றாம் நூற்றாண்டுவரை எப்படி நீடித்தது என்பதை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு வரலாற்றாசிரியர் விளக்குகிறார். ஏறக்குறைய மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் இந்த இயக்கத்தின்மேல் இருந்த பரவலான உற்சாகம் மங்கி மறைந்துவிட்டது என்று சொல்லலாம்.

மோன்டனிசத்தைப்பற்றிய விமரிசனங்களில் மிகவும் சுவாரசியமான காரியம் என்னவென்றால், ஆரம்பகால மோன்டனிசத்தை எதிர்த்த அல்லது விமரிசித்த யாரும் தீர்க்கதரிசனம் செல்லாது என்று சொல்லவில்லை. ஏனென்றால், பரிசுத்த ஆவியின் வரங்கள் அப்போஸ்தலர் காலத்திலிருந்தே சபைப் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகக் கருதப்பட்டது. பரிசுத்த ஆவியின் வரங்கள் அப்போஸ்தலர்களின் காலத்தோடு முடிந்துவிட்டன என்று யாரும் சொல்லவில்லை. ஒருவேளை இன்று சிலர் சொல்லக்கூடும், சொல்கிறார்கள். மோன்டனிசத்தைப்பற்றிய சர்ச்சை எழுவதற்குமுன்பே பரிசுத்த ஆவியின் வரங்கள் சபை வாழ்க்கையின் இன்றியமையாத ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனவே மோன்டனிசத்தை எதிர்த்தவர்கள் அதைக் கண்மூடித்தனமாக எதிர்க்கவில்லை. ஆவியானவரின் செயல்பாடுகளையும், வரங்களையும் ஆதிச் சபை தெளிவாகப் புரிந்துகொண்டது. ஆனால், "சபை பரிசுத்த ஆவியானவரை இழந்துவிட்டது," என்று மோன்டனிஸ்டுகள் தவறாகப் புரிந்துகொண்டார்கள் என்பதை அப்போஸ்தலர்கள் காலத்துக்குப் பிந்தைய எழுத்துக்களைப் படிக்கும்போது தெளிவாகத் தெரிகிறது.

1. இக்னேஷியஸ்

எடுத்துக்காட்டாக, "எங்களிடையே தீர்க்கதரிசன வரம் தொடர்கிறது," என்று அப்போஸ்தலனாகிய யோவானின் சீடராகிய இக்னேஷியஸ் எழுதுகிறார். 96இல் இறந்த உரோமின் கிளமெந்துவும், 107இல் இறந்த இக்னேஷியசும் அன்று சராசரி கிறிஸ்தவர்களிடையே ஆவியானவரின் வரங்கள் தொடர்ந்து செயல்பட்டதாக ஆவணப்படுத்தியிருக்கிறார்கள்.

Didache என்ற ஆரம்பகால கிறிஸ்தவ ஏடு, "தீர்க்கதரிசனம் இல்லை" என்று எங்கும் கூறவில்லை. ஆனால், பொய்த் தீர்க்கதரிசிகளைக்குறித்து அது எச்சரிக்கிறது;

2. ஹெர்மசின் மேய்ப்பன்

அடுத்து, ஹெர்மஸ். இவர் தன் பிரபலமான "மேய்ப்பன்" என்ற நூலில் மெய்யான தீர்க்கதரிசனத்தையும் பொய்யான தீர்க்கதரிசனத்தையும் மிகக் கவனமாக வேறுபடுத்துகிறார். "ஒரு கூட்டத்தில் கூடியிருப்பவர்கள் கேட்க விரும்புவதை உரைப்பவன் பொய்த் தீர்க்கதரிசி; மெய்த் தீர்க்கதரிசி சாந்தமும், சமாதானமும், பரிசுத்தமும் உடையவன்," என்று ஹெர்மஸ் கூறுகிறார். தீர்க்கதரிசனத்தைப்பற்றிய அவருடைய வரையறை சரியா, தவறு என்று நான் விவாதிக்கப்போவதில்லை. ஆதிச் சபை தீர்க்கதரிசன வரத்தை மறுக்கவில்லை என்பதற்குச் சான்றாக மட்டுமே நான் ஹெர்மசின் மேய்ப்பன் என்ற புத்தகத்திலிருந்து மேற்கோள்காட்டுகிறேன்.

"உங்களிடையே அன்று பொய்த் தீர்க்கதரிசிகள் இருந்ததுபோல் இன்று எங்களிடையேயும் பொய்த் தீர்க்கதரிசிகள் இருக்கிறார்கள். ஆனால், நாங்கள் அவர்களை இனங்கண்டு நிராகரிக்கிறோம்," என்று ஹெர்மஸ் தன் மேய்ப்பன் புத்தகத்தின் 82ஆம் அதிகாரத்தில் எழுதுகிறார்.

3. ஜஸ்டின் மார்ட்டிர்

165இல் இரத்தசாட்சியாக மரித்த ஜஸ்டின் மார்ட்டிர் யூத ரபீ ட்ரைபோவுடன் நடத்திய உரையாடலில், "பழைய உடன்படிக்கை இனி செல்லுபடியாகாது; அதன் இடத்தைப் புதிய உடன்படிக்கை எடுத்துக்கொண்டது," என்று வாதிட்டார் (The Dialogue with Trypho என்பது மிகப் பிரபலமான நூல்). இந்த உரையாடலில் யூத மதத்திற்கு எதிரான தன் வழக்கை வலுப்படுத்த, "பரிசுத்த ஆவியின் உண்மையான வரங்கள் கிறிஸ்தவர்களிடையே செயல்படுகின்றன, யூதர்களிடையே செயல்படவில்லை," என்ற வாதத்தை ஜஸ்டின் மார்ட்டிர் முன்வைக்கிறார். "தீர்க்கதரிசன வரங்கள் இன்றுவரை எங்களிடம் இருக்கின்றன. தேவனுடைய ஆவியின் வரங்களைப் பெற்ற ஆண்களும், பெண்களும் எங்களிடையே இருக்கிறார்கள்," என்று அவர் தன் தன்விளக்கநூலில் எழுதுகிறார்.

இதிலிருந்து, பரிசுத்த ஆவியின் வரங்கள், குறிப்பாக தீர்க்கதரிசன வரம், ஜஸ்டின் மார்ட்டிரின் நாட்களில் இருந்ததாகத் தெரிகிறது.

4. ஐரேனியஸ்

அப்போஸ்தலர்களின் காலத்துக்குப்பின் ஆதிச் சபையில் ஆவியானவரின் வரங்கள் தொடர்ந்தன என்பதற்கு மற்றொரு சான்று ஐரேனியஸ். ஐரேனியஸ் இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். ஆவியின் வரங்களைப் பெற்று அவைகளை நடைமுறைப்படுத்திய அநேகக் கிறிஸ்தவர்கள் தன் காலத்தில் தன் சபையில் இருந்ததாக ஐரேனியஸ் குறிப்பிடுகிறார். குறிப்பாக பிசாசுகளைத் துரத்துபவர்கள், வருங்காரியங்களை முன்னுரைப்பவர்கள், வெளிப்பாடு பெற்றவர்கள், தரிசனம் காண்பவர்கள், நோய்களைக் குணப்படுத்தும் வரம் பெற்றவர்கள் சபையில் இருந்ததாக அவர் குறிப்பிடுகிறார். இதோ ஐரேனியசின் மேற்கோள்: "உண்மையாகவே இயேசுவின் சீடர்களாக இருப்பவர்கள், அவரிடமிருந்து கிருபை பெற்று, ஒவ்வொருவரும் தான் பெற்ற வரத்தின்படி, பிற மனிதர்களின் நலனை மேம்படுத்துவதற்காக, அவருடைய பெயரில் அற்புதங்கள் செய்கிறார்கள். சிலர் உண்மையாக, நிச்சயமாக, பிசாசுகளை விரட்டுகிறார்கள்; இதனால் தீய ஆவிகளிலிருந்து விடுதலையாகிச் சுத்திகரிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் கிறிஸ்துவை விசுவாசித்து, சபையோடு தங்களை இணைத்துக்கொள்கிறார்கள். வேறு சிலர் வரவிருக்கும் காரியங்களை முன்கூட்டியே அறிந்திருக்கிறார்கள்: அவர்கள் தரிசனங்களைப் பார்க்கிறார்கள், தீர்க்கதரிசன வெளிப்பாடுகளை உரைக்கிறார்கள். இன்னும் சிலர், நோயாளிகள்மீது தங்கள் கைகளை வைத்து ஜெபித்து குணமாக்குகிறார்கள். ஆம், மேலும், நான் சொன்னதுபோல், இறந்தவர்களும் உயிர்த்தெழுந்து, நம்மிடையே பல ஆண்டுகள் இருந்தார்கள். மேலும் நான் என்ன சொல்வேன்? உலகம் முழுவதும் சிதறியிருக்கும் சபை இயேசு கிறிஸ்துவின் பெயரால் தேவனிடமிருந்து பெற்ற வரங்களை எண்ணிக் கணக்கிட முடியாது." மோன்டனிசவாதிகள் சொன்னதுபோல் ஆதிச் சபை ஆவியானவரின் வரங்களை அற்பமாகக் கருத்தவில்லையென்றும், அதே நேரத்தில் மோன்டனிசத்தைத் தாக்குபவர்கள் சபையிலிருந்து உண்மையான வரங்களை விரட்டியடித்துவிடக்கூடாது என்றும் ஐரேனியஸ் கவலைப்பட்டார் என்று தெரிகிறது.

5. சிப்பிரியான்

சபைப் பிதா சிப்பிரியான், சபை வரலாற்றாசிரியர் யூசிபியஸ் ஆகியோரும் ஆவியானவரின் வரங்களைப்பற்றி எழுதியிருக்கிறார்கள். அற்புத வரங்கள்உட்பட ஆவியானவரின் வரங்கள் அப்போஸ்தலர்களோடு முடிந்துவிடவில்லை என்று ஆரம்பகால கிறிஸ்தவ எழுத்தாளர்களான இவர்கள் வலியுறுத்துகிறார்கள். ஆதிச் சபை தரிசனங்களையும், வெளிப்பாடுகளையும், கனவுகளையும் தொடர்ந்து அனுபவித்ததாக சிப்பிரியான் குறிப்பிடுகிறார். அவர்கள் கண்ட பல தரிசனங்களையும், கனவுகளையும், பெற்ற பல வெளிப்பாடுகளையும் அவர் தன் நிருபங்களில் எழுதியிருக்கிறார்.

6. யூசிபியஸ்

தீர்க்கதரிசன வரங்கள் கிறிஸ்துவின் வருகைவரை நீடிக்கும் என்று அப்போஸ்தலர்கள் சொன்னதாக மோன்டனிசத்தை எதிர்த்தவர்களும் நம்பினார்கள் என்று ஆதிச் சபை வரலாற்றாசிரியரான யூசிபியஸ் தன் சபை வரலாறு என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.

இவைகளிலிருந்து, ஆதிச் சபையில் ஆவியானவரின் வரங்கள் செயல்பட்டன என்று தெரிகிறது. மோன்டனிசத்தோடு சபைக்கு நியாயமான பல கருத்துவேறுபாடுகள் இருந்தபோதும், சபை ஆவிக்குரிய வரங்கள் செயல்படுவதை மறுக்கவில்லை; அவைகள் செல்லுபடியாகாது என்று சபை சொல்ல முற்படவில்லை. மோன்டனிசத்தை எதிர்ப்பதற்கு அவர்கள், “நீங்கள் செய்வது சரியல்ல. ஆவியானவரின் வரங்கள் அப்போஸ்தலர்களோடு முடிந்துவிட்டன என்று நம் அனைவருக்கும் தெரியும்," என்ற வாதத்தை முன்வைத்ததாகத் தெரியவில்லை.

7. ஜெரோஸ்லாவ் பெலிகன்

சபை வரலாற்றாசிரியர் ஜெரோஸ்லாவ் பெலிகன், "பரிசுத்த ஆவியின் இயற்கைக்கு அப்பாற்பட்ட ஏவுதலே தங்கள் தீர்க்கதரிசனத்தின் ஆதாரம் என்று மோன்டனிசம் உரிமை கோரியது; மேலும் சபையின் ஒழுக்கத்தின் தரம் தாழ்ந்ததே சபை ஆவியானவரின் இந்த வல்லமையை இழந்ததற்கு முக்கியக் காரணம் என்று மோன்டனிஸ்டுகள் சுட்டிக்காட்டினார்கள். பரிசுத்த ஆவியானவரின் இத்தகைய ஏவுதல் சாத்தியமானது மட்டுமின்றி, அது சபையில் தற்போதும் செயல்படுகிறது என்று இரண்டாம், மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரும்பாலான மரபுவழி எழுத்தாளர்கள் கூறுகிறார்கள். மோன்டனிசத்தின் சவாலை எதிர்கொள்வதற்கு, பரிசுத்த ஆவியானவரின் இயற்கைக்கு அப்பாற்பட்ட ஏவுதலின் காலம் முடிந்துவிட்டது என்ற அணுகுமுறையை அவர்களால் பெரும்பாலும் எடுக்க முடியவில்லை. மோன்டனிசத்தை ஆரம்பகாலத்தில் விமரிசித்தவர்கள் புதிய தீர்க்கதரிசனத்தின் இயற்கைக்கு அப்பாற்பட்ட தன்மையை மறுக்கவில்லை." என்று இந்த விஷயத்தைப்பற்றிப் பேசுகிறார்.

மோன்டனிசத்திற்கு எதிராகச் சொல்ல திட்டவட்டமான நிறைய விஷயங்கள் இருந்தன. நான் முன்பு கூறியதுபோல், இந்த இயக்கம் நன்றாக ஆரம்பித்ததா இல்லையா என்று நாம் வாதிடலாம்; ஆனால் அது எப்படி முடிந்தது என்பதைப்பற்றி வாதிட வேண்டிய தேவையில்லை. எனவே, ஆரம்ப காலத்தில் சபை மோன்டனிசத்தை எதிர்த்தபோது, ஆவியானவரின் வரங்கள் முடிந்துவிட்டன என்ற வாதத்தை முன்வைத்து எதிர்க்கவில்லை.

8. 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜான் டி சோய்ரெஸ் (John de Soyres) என்ற சபை வரலாற்றாசிரியரும், "ஆவிக்குரிய வரங்கள் தொடர்ந்து பகிர்ந்தளிக்கப்படுவதையும், கிறிஸ்தவர்கள் அவைகளைத் தொடர்ந்து அனுபவிப்பதையும் கிளமெந்து, இக்னேஷியஸ், ஹெர்மஸ், ஜஸ்டின் மார்டிர், ஐரேனியஸ் ஆகியோர் உறுதிப்படுத்துகிறார்கள் என்பதை மறுக்கமுடியாது," என்று கூறுகிறார்.

VII. கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள்

1. ஆக மொத்தத்தில் இவைகளிலிருந்து நாம் என்ன புரிந்துகொள்கிறோம் அல்லது கற்றுக்கொள்கிறோம்? மோன்டனிச இயக்கத்திலிருந்து நாம் சில திட்டவட்டமான பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம் என்று நான் நினைக்கிறேன். ஆவியின் வரங்கள் இந்தக் காலத்துக்கு உரியவையா இல்லையா என்பது ஒரு விவாதப் பொருள். இது வேதவல்லுனர்கள் வேதாகமத்தின் அடிப்படையில் தீர்மானிக்க வேண்டிய விஷயம்..

ஆனால், நான் வரலாற்று ரீதியாகப் பேசுகிறேன். வரலாற்று ரீதியாகப் பார்த்தால், பரிசுத்த ஆவியின் வரங்கள் அப்போஸ்தலர் காலச் சபையோடு அல்லது புதிய ஏற்பாட்டு விசுவாசப் பிரமாணங்கள் உருவாக்கப்பட்டவுடன் அழிந்துவிடவில்லை, முடிந்துவிடவில்லை என்று உறுதியாகக் கூறலாம். அப்போஸ்தலர் காலத்துக்குப்பிறகும் ஆவிக்குரிய வரங்கள் சபையில் செயல்பட்டதை சபைப் பிதாக்கள் உறுதிப்படுத்துகிறார்கள், அவைகள் செல்லுபடியாகும் என்றும் அவர்கள் சாட்சிபகர்கிறார்கள். ஜான் டி சோய்ரஸ் குறிப்பிடுவதுபோல் கிளமென்ட், இக்னேஷியஸ், ஹெர்மஸ், ஜஸ்டின் மார்ட்டிர், ஐரேனியஸ் ஆகியோர் இதை சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். பரிசுத்த ஆவியின் வரங்கள் அப்போஸ்தல காலச் சபையோடு அழிந்துவிடவில்லை என்பது மோன்டனிச இயக்கத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய முதல் பாடம் என்று நான் கருதுகிறேன்.

2. இரண்டாவது பாடம். எந்த ஓர் இயக்கமும், "இது ஒரு புதிய ஆவிக்குரிய யுகம். நாங்கள் ஒரு புதிய ஆவிக்குரிய யுகத்தின் தொடக்கம் ," என்று அறிவிப்பதும் வாதிப்பதும் மிகவும் ஆபத்தானது என்று நான் நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரை இதுவே மோன்டனிச இயக்கத்தின் மிகப் பெரிய பிரச்சனை, ஆபத்து. இது ஒருவனுடைய, ஓர் இயக்கத்தினுடைய, ஆவிக்குரிய மேட்டிமையான, ஆணவமான, மனப்பாங்கை வெளிப்படுத்துகிறது. "ஓ, பரிசுத்த ஆவியானவர் இன்று எங்களிடையேதான் அசைவாடுகிறார், செயல்படுகிறார்; எங்களிடம் மட்டும்தான் பரிசுத்த ஆவியின் உண்மையான வல்லமை இருக்கிறது. எங்களிடம்தான் தேவனைக்குறித்த உண்மையான வெளிப்பாடு இருக்கிறது. நாங்கள்தான் தேவனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட, அபிஷேகம்பண்ணப்பட்ட வாழ்க்கை வாழ்கிறோம்; இன்று உலகத்தில் தேவனுடைய வேலையைச் செய்வதில் நாங்கள்தான் முன்னணியில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறோம்; பரிசுத்த ஆவியானவர் அசைவாடுவதற்கு ஏற்ற தளம் எங்களிடம் மட்டுமே இருக்கிறது; இது ஒரு புதிய காலகட்டம், இது ஒரு புதிய பாதை; இது ஒரு புதிய ஆவிக்குரிய யுகம். எங்கள் தலைவர் இந்த யுகத்தின் அப்போஸ்தலர். நாங்கள்தான் சபை. மீதியெல்லாம் குழுக்கள், பிரிவினைகள்," என்ற மனப்பாங்கு முற்றிலும் தவறு, ஆபத்தானது. தேவ மக்களிடம் மனத்தாழ்மை இருக்க வேண்டும். நான் மேலே சொன்ன எண்ணத்தின் சுவடு ஒருவனிடம் இருந்தால்கூட அது ஆவியானவரின் செயலுக்கு முரணானது. தாங்கள் ஒரு புதிய ஆவிக்குரிய யுகத்தைத் தொடங்குவதாகப் பிரகடனப்படுத்துவதும், தங்களைப் பிறரைவிட ஆவிக்குரிய ஜாம்பவான்களாகக் கருதுவதும், மிகவும் ஆபத்தான விஷயம். ஒருவனுடைய வாழ்க்கையில் பரிசுத்த ஆவியின் செயல்பாடு இருந்தால், அவனிடம் உண்மையாகவே பணிவும் தாழ்மையும் இருக்கும். பரிசுத்த ஆவியானவரின் குணத்துக்குப் பொருத்தமான மனத்தாழ்மை அவனிடம் இல்லையென்றால் அவனுடைய வாழ்க்கையில் ஏதோ பெரிய கோளாறு இருக்கிறது என்று பொருள்.

முதலாவது, வரலாற்று ரீதியாக பரிசுத்த ஆவியின் வரங்கள் அப்போஸ்தல காலச் சபையோடு அல்லது புதிய ஏற்பாட்டுபிரமாணங்கள் உருவாக்கப்பட்டவுடன் அழிந்துவிடவில்லை. இரண்டாவது ஒரு புதிய ஆவிக்குரிய யுகத்தை அறிவிப்பது ஆபத்தானது.

3. மூன்றாவது, பரிசுத்த ஆவியின் செயல்பாட்டைக் கனம்பண்ணுகிறவர்கள் சட்டவாதத்துக்கும், நிதானம் தவறுவதற்கும் எதிராக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மோன்டனிசம் சரியாக ஆரம்பித்து, இடையில்தான் தடம் புரண்டது என்றும், அதன் சட்டவாதமும், நிதானம்தவறியதுமே அது தடம்புரண்டதற்கு முக்கியமான ஒரு காரணம் என்றும் சொல்லலாம். அவர்களுடைய ஆரம்பமே சரிதானா என்பது விவாதத்துக்குரிய விஷயம். "இயேசு கிறிஸ்து திரும்பி வந்து, சிறிய ஆசியாவின் நடுவில் உள்ள புபுசாவில் தம் அரசை நிறுவுவார்," என்று மோன்டனிச தீர்க்கதரிசிகள் அறிவித்தபோது, அது பைத்தியக்காரத்தனம் என்றும், வேதவசனங்களுக்கு முற்றிலும் புறம்பானது என்றும், அவர்களில் ஒருவர்கூட நிதானிக்கவில்லையே! ஒருவராவது உணர்ந்திருக்க வேண்டாமா? "இயேசு கிறிஸ்து சீக்கிரம் திரும்பி வரப் போகிறார், அவர் தம் அரசை நிறுவப் போகிறார். சென்னைதான் புதிய எருசலேமாக மாறப்போகிறது. சென்னை மாநகரதத்தின் தலைமைச் செயலகம் விரைவில் இயேசுவின் தலைமையகமாக மாறும்," என்று நான் தீர்க்கதரிசனம் உரைத்தால், நீங்கள் "சரி உனக்கு என்ன ஆயிற்று? உனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது,” என்று சொல்ல வேண்டும். ஏனென்றால், இயேசு சென்னையில் தம் பூமிக்குரிய அரசை நிறுவுவார் என்று வேதாகமம் சொல்லவில்லையே! அப்படி எந்தக் குறிப்பும் வேதாகமத்தில் இல்லையே! ஆம், அவர்கள் தீர்க்கதரிசனங்களை நிதானிக்கத் தவறினார்கள்.

அவர்கள் மிகக் கடுமையான, கண்டிப்பான சட்டவாதத்தைக் கடைப்பிடித்தார்கள். யாராவது ஒருவன் "நான் பரிசுத்த ஆவியின் செயல்பாட்டை மதிக்கிறேன்; அவருடைய நடத்துதலைப் பின்பற்றுகிறேன்," என்று சொன்னால், அவன் ஒரு சட்டவாதியாக மாறாமலும், நிதானம் தவறாமலும் இருக்க எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இந்தக் காரியத்தில், தங்களிடையே இருந்த ஒரு சகோதரி தான் கண்ட தரிசனங்களையும், வெளிப்பாடுகளையும் தங்களிடம் தெரிவித்ததாகவும், அவைகளை அவர்கள் மிகக் கவனமாகப் பரிசீலித்ததாகவும் தெர்த்துல்லியன் கூறியதை நான் அதிகமாகப் பாராட்டுகிறேன். அந்தச் சகோதரி சொன்ன எல்லாவற்றையும் அவர்கள் அப்படியே ஏற்றுக்கொள்ளவில்லை; எல்லாவற்றையும் சீர்தூக்கிப்பார்த்தார்கள். வேதவாக்கியங்களோடு ஒப்பிட்டுப்பார்த்தார்கள்.

4. நான்காவது, இறுதியாக, மோன்டனிச இயக்கத்திலிருந்து நாம் எதிர்வினை இறையியல் (reactive theology ) என்ற ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம். இது ஒரு பெரிய ஆபத்து. எதிர்வினை இறையியல் என்றால் என்ன? மோன்டனிச இயக்கம் தடம் புரண்டு போவதைப் பார்த்து, “இவர்கள் தடம் புரள்கிறார்கள், திசை மாறுகிறார்கள். எனவே, இவர்கள் வலியுறுத்துகிற பரிசுத்த ஆவியின் அசைவுக்கும், இயேசு கிறிஸ்துவின் வருகைக்கும் நாம் கவனம் செலுத்தத் தேவையில்லை," என்று சபை சொன்னால், அதுதான் எதிர்வினை இறையியல். ஓர் இயக்கம் வேதாகமத்தைவிட்டு விலகும்போது, அடிப்படை சத்தியங்களைவிட்டுத் திசைமாறும்போது, அவர்கள் கற்பித்த, விசுவாசித்த, எல்லாவற்றையும் தூக்கியெறிவது தவறு. மோன்டனிசம்போன்ற ஓர் இயக்கத்தின் ஆபத்தைப் பார்க்கும்போது, இறைச்சியைச் சாப்பிட்டுவிட்டு, எலும்பைத் தூக்கியெறிய வேண்டும். இரண்டையும் தூக்கியெறிவதுதான் எதிர்வினை இறையியல். அவர்கள் சொன்ன, செய்த, எல்லாவற்றையும் எதிர்ப்பதுதான் எதிர்வினை இறையியல். இந்தச் சூழ்நிலையில் நாம் வேதாகமத்துக்குத் திரும்பி, அவர்கள் சொல்லுகிறவைகளில் எவைகள் வேதாகமத்துக்கு ஒத்திருக்கின்றன, எவைகள் முரணாக இருக்கின்றன என்று ஆராய்ந்து பார்த்து, ஒத்திருப்பவைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும், அங்கீகரிக்க வேண்டும், அரவணைத்துக்கொள்ள வேண்டும்; முரணானவைகளைத் தள்ளிவிட வேண்டும். எனக்கு நாசரேத்தைப் பிடிக்கவில்லை என்பதால், "நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா?" என்று கேட்பது தவறு. நாசரேத்திலிருந்து நன்மை வரக்கூடும்.

VIII. முடிவுரை

டேவிட் ரைட் (David F Wright) என்ற வரலாற்றாசிரியர் சபை வரலாற்றைப்பற்றிய ஒரு கையேட்டில் மோன்டனிச இயக்கத்தைப்பற்றி எழுதியிருக்கிறார். அந்தப் புத்தகத்தின் ஒரு மேற்கோளோடு நாம் முடித்துக்கொள்ளலாம். "அன்றைய சபை மோன்டனிஸ்ட்டுகளை நிராகரித்ததின்மூலம் இழந்தது அதிகம். மோண்டனிஸ்ட்டுகள் வேதாகமத்தில் இல்லாத பல காரியங்களைக் கூட்டியபோதும், பரிசுத்த ஆவியானவர் அப்போஸ்தலர் காலச் சபையில் தொடக்கத்தில் செயல்பட்டதுபோலவே தற்கால சபையிலும் செயல்படுகிறார் என்றும், சொல்லப்போனால், அப்போஸ்தலர்களுடைய காலத்தில் செயல்பட்டதைவிட கடைசிக் காலத்தில் இன்னும் அதிகமாகச் செயல்படுவதாக வேதாகமத்தில் வாக்குறுதி இருக்கிறது என்றும் அவர்கள் நம்பினார்கள்.

மோன்டனிஸ்ட்டுகள் சர்ச்சைக்குரியவர்கள் என்பதை நான் புரிந்துகொள்கிறேன், ஒப்புக்கொள்கிறேன். ஆனால், இவர்களைப்பற்றிப் பேசவே கூடாது என்று சொல்லும் அளவுக்கு இவர்கள் மோசமானவர்கள் இல்லை. மோன்டனிசம் மிக மோசமான கள்ளப்போதகம் என்பதால் அவர்களை விட்டுவிலக வேண்டும் என்று பலர் சொல்வார்கள். ஆனால், நான் அப்படி நினைக்கவில்லை. ஏனென்றால், இப்படிச் சொல்பவர்களின் கூற்று வேதாகமத்துக்குப் பொருத்தமாக இல்லை. குறிப்பாக, மோன்டனிசத்தை அதன் ஆரம்ப ஆண்டுகளில் புகழ்ந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். எனவே, மோன்டனிசத்தை ஓர் எச்சரிக்கையாக எடுத்துக்கொள்வது நல்லது என்று நான் நினைக்கிறேன். வேதாகமத்தின் அடிப்படையான காரியங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு ஆவியின் வரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதைக் குறித்தும், ஆவியின் வரங்களைப்பற்றியே பேசிக்கொண்டிருப்பதைப்பற்றியும், வேதாகமத்தின் பிற காரியங்களை இருட்டடிப்புச் செய்வதைக்குறித்தும், இவைகளையே ஆசையாய் நாடுவதைக்குறித்தும், வேதாகமம் போதாது என்பதுபோல் தீர்க்கதரிசிகள் தீர்க்கதரிசனம் உரைத்தால்தான் வாழ முடியும் என்பதுபோல் தீர்க்கதரிசனம் உரைப்பதில் குறியாக இருப்பதைக்குறித்தும், உரைக்கும் தீர்க்கதரிசனத்தை நிதானிக்கத் தவறாமல் இருப்பதைக்குறித்தும், ஆவியானவரின் செயல்பாட்டுக்கும், அசைவுக்கும், நடத்துதலுக்கும் முதன்மையான இடம் கொடுப்பதாகச் சாதித்துவிட்டு, அவருக்கு இடமே கொடுக்காமல் மனம்போனப்போக்கில் சட்டங்களை உருவாக்கி, சட்டவாதிகளாக மாறாமல் இருப்பதைக்குறித்தும், கிறிஸ்தவ வாழ்க்கை கடுமையான தவ முயற்சிகளைச் சார்ந்தது என்ற தவறான புரிதலினால் விசுவாசிகளைத் துறவிகளாக வாழ வற்புறுத்துவத்தைக்குறித்தும், எச்சரிக்கையாக இருக்க வேண்டும்."

ஆதிச் சபையில் முதல் சில நூற்றாண்டுகளில் பல வகையான இயக்கங்கள் எப்படி எழும்பின, சபை அவைகளை எப்படி எதிர்கொண்டது என்பதை இன்று நாம் தெரிந்துகொள்வது மிகவும் அவசியம் என்று கருதுகிறேன்.

ஓர் இயக்கம் தோன்றுகிறது, வளர்கிறது, மறைகிறது; அதே இயக்கம் வேறொரு பெயரில், வேறொரு நிறத்தில், வேறோர் இடத்தில், வேறொரு நாளில் தோன்றுகிறது, வளர்கிறது, மறைகிறது. "காற்று தெற்கே போய், வடக்கேயுஞ்சுற்றி, சுழன்று சுழன்று அடித்து, தான் சுற்றின இடத்துக்கே திரும்பவும் வருவதுபோல்," (பிரசங்கி 1:6) முன்பு இருந்த அதே இயக்கங்கள் சுழன்றுசுழன்று வந்துகொண்டேயிருக்கின்றன.