எகிப்திய, எத்தியோப்பிய சபை வரலாறு - 09 சபை வரலாற்றின் ஒன்பதாம் பாகத்தில் நாம் ஆதிச் சபையின் காலகட்டத்திலிருந்து கிறிஸ்தவப் பேரரசின் ஆரம்ப காலகட்டத்திற்குள் நுழையத் தொடங்குகிறோம். ஏனென்றால், இந்தப் பாகத்தில் ஆதிச் சபையின் காலத்துக்கும், கிறிஸ்தவப் பேரரசின் ஆரம்ப காலத்துக்கும் தொடர்புடைய சில சம்பவங்கள் இருக்கின்றன. இந்தப் பாகத்தில் முதல் ஐந்து நூற்றாண்டுகளில் ஆப்பிரிக்கக் கிறிஸ்தவத்தின் வரலாற்றைப் பொதுவாகவும், எகிப்திய எத்தியோப்பிய சபை வரலாற்றைக் குறிப்பாகவும் பார்க்கப்போகிறோம். 1. முன்னுரை 2. ஆப்பிரிக்காவில் கிறிஸ்தவம் 2.1. ஆப்பிரிக்கக் கிறிஸ்தவம் 3. எகிப்தில் கிறிஸ்தவம் 3.1. நற்செய்தியாளர் மாற்கு 3.2. அலெக்சாந்திரியாவின் அப்பொல்லோ 3.3 பெந்தெகொஸ்தே திருவிழாவில் அலெக்சாந்திரியர்கள் 3.4. வரலாற்றாசிரியர் 3.5. கிரேக்க எகிப்தியக் கலாச்சாரம் 3.6. காப்டிக் கிறிஸ்தவம் 3.7. காப்டிக் கிறிஸ்தவர்களுக்குச் சித்திரவதை 3.8. இஸ்லாமியப் படையெடுப்பும், எகிப்தியக் கிறிஸ்தவமும் 4. எகிப்தியக் கிறிஸ்தவத்தின் இரண்டு போக்குகள் 4.1. மோனோபிசிடிசம் – ஓரியல்புவாதம் 4.2. ஓரியல்புவாதமும், எகிப்தியக் கிறிஸ்தவமும் 5. தவசி ஆன்றனி 6. அத்தனேசியஸ் 7. எத்தியோப்பியாவில் கிறிஸ்தவம் 8. வழிகாட்டும் நெறிமுறைகள் 9. ஆன்றனியும், ஆவிக்குரிய பயிற்சிகளும் 10. முடிவுரை
சபை வரலாற்றின் ஒன்பதாம் பாகத்துக்கு நான் உங்களை அன்போடு வரவேற்கிறேன். கடந்த எட்டு பாகங்களையும் நீங்கள் பார்த்திருந்தால், கேட்டிருந்தால் சபை வரலாறு என்பது சபையோடு சம்பந்தப்பட்ட கடந்த கால நிகழ்வுகளும், ஆலோசனைச் சங்கங்களும், விவகாரங்களும், மனிதர்களும் மட்டும் அல்ல, சபை வரலாறு என்பது தேவன் தம் நித்திய நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகக் காலங்கள்தோறும் எப்படிச் செயல்பட்டார் என்பதையும், தேவனுடைய செயல்பாடுகளுக்கு மனிதர்கள் எப்படி மறுமொழி அளித்தார்கள் என்பதையும்பற்றியது என்று உங்களுக்குப் புரிந்திருக்கும். சபை வரலாறு என்பது இறையாண்மையுள்ள தேவன் தம் நித்திய நோக்கத்தை நிறைவேற்ற இந்தப் பூமியில் அன்று தம் ஒரேபேறான மகன் இயேசுவின்மூலம் செய்துமுடித்து, இன்று தம் ஆவியானவரால் செய்துகொண்டிருக்கிற வேலையைப்பற்றியது.
சபை வரலாற்றை, நம் வசதிக்காக, நான்கு காலகட்டங்களாகப் பிரித்துக்கொள்ளலாம் என்று நான் ஏற்கெனவே சொன்னேன்.
1. கி.பி 30முதல் கி.பி 100வரை அப்போஸ்தலர் காலத்துச் சபை,
2. கி.பி 100முதல் கி.பி 312வரை (அதாவது கான்ஸ்டன்டீன் கிறிஸ்தவனாகும்வரை) ஆதிச் சபை,
3. கி.பி 312முதல் கி.பி 1000வரை (அதாவது கான்ஸ்டன்டீன் கிறிஸ்தவனானபிறகு) ஆரம்ப காலக் கிறிஸ்தவப் பேரரசு,
4. கி.பி 1000முதல் கி.பி 1500வரை (அதாவது சீர்திருத்தகாலம்வரை) பிந்தைய காலக் கிறிஸ்தவப் பேரரசு.
இந்த ஒன்பதாம் பாகத்தில் நாம் ஆதிச் சபையின் காலகட்டத்திலிருந்து கிறிஸ்தவப் பேரரசின் ஆரம்ப காலகட்டத்திற்குள் நுழையத் தொடங்குகிறோம். ஏனென்றால், இந்தப் பாகத்தில் ஆதிச் சபையின் காலத்துக்கும், கிறிஸ்தவப் பேரரசின் ஆரம்ப காலத்துக்கும் தொடர்புடைய சில சம்பவங்கள் இருக்கின்றன.
இந்தப் பாகத்தில் முதல் ஐந்து நூற்றாண்டுகளில் ஆப்பிரிக்கக் கிறிஸ்தவத்தின் வரலாற்றைப் பொதுவாகவும், எகிப்திய எத்தியோப்பிய சபை வரலாற்றைக் குறிப்பாகவும் பார்க்கப்போகிறோம். மேற்கத்தியக் கிறிஸ்தவத்தை நாம் அறிந்திருப்பதுபோல், கிழக்கத்தியக் கிறிஸ்தவத்தை நாம் அறியவில்லையோ என்பது என் கருத்து. கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு எல்லாம் சேர்ந்ததுதானே நிலம்!
ஆப்பிரிக்கா உலகில் கிறிஸ்தவத்தின் உயிர்த்துடிப்பான மையம். உலகின் 240 கோடி கிறிஸ்தவர்களில் 72 கோடி கிறிஸ்தவர்கள் ஆப்பிரிக்காவில் இருக்கிறார்கள்.
ஒப்பீட்டிற்காகச் சொல்லுகிறேன்: இந்தியாவில் மொத்தம் 2.8 கோடி கிறிஸ்தவர்கள். தமிழ்நாட்டில் 45 இலட்சம் கிறிஸ்தவர்கள்.
2.1. ஆப்பிரிக்கக் கிறிஸ்தவம்
உலகின் கிறிஸ்தவர்களில் 30 விழுக்காடு evangelical கிறிஸ்தவர்களும், 20 விழுக்காடு பெந்தெகொஸ்தே கிறிஸ்தவர்களும், 15 விழுக்காடு ரோமன் கத்தோலிக்கர்களும் ஆப்பிரிக்காவில் இருக்கிறார்கள். மேலும் எத்தியோப்பிய, எரித்ரிய பழைமைவாத டெவாஹெடோ சபைகளும் (Ethiopian and Eritrean Orthodox Tewahedo Churches), அலெக்சாந்திரியாவின் காப்டிக் பழைமைவாத சபைகளும் (Coptic Orthodox Church of Alexandria) அங்கு உள்ளன.
ஆப்பிரிக்காவில் கிறிஸ்தவம் வடக்கு ஆப்பிரிக்காவில், அதாவது எகிப்து, நுபியா, எத்தியோப்பியாவில் மட்டுமே இருந்தது.
ஆப்பிரிக்கக் கண்டத்தின் மேற்குப் பகுதியில் உள்ள பல இடங்கள் கிழக்கு மண்டலத்தில் இருந்த சபையோடு நெருங்கிய தொடர்பு கொண்டு சபை வரலாற்றில் முக்கிய பங்கு வகித்ததைப்பற்றி, ஆதிச் சபை வரலாற்றைப்பற்றிய முந்தைய பாகங்களில், பார்த்தோம். அகுஸ்தீன், தெர்த்துல்லியன், அத்தனேசியஸ், சிப்பிரியான் போன்ற தலைவர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து எழும்பிய சபைப் பிதாக்கள் என்பதை மறக்க வேண்டாம். மிகவும் செல்வாக்குடைய இவர்கள் ஆப்பிரிக்காவில் மட்டும் அல்ல, அதையும் தாண்டி, அன்றைய உரோமப் பேரரசெங்கும் பரவியிருந்த கிறிஸ்தவத்திலும், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். . அதுபோல வட ஆப்பிரிக்காவில், குறிப்பாக எகிப்தில், இருந்த பரிசுத்தவான்களும் அன்றைய கிறிஸ்தவத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார்கள்.
ஆப்பிரிக்காவிலிருந்துதான் ஆரியவாதம், ஓரியல்புவாதம், நெஸ்டோரியவாதம் போன்ற வேதப்புரட்டுக்களும் தோன்றின.
ஆப்பிரிக்காவின் சபை வரலாற்றைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், அடிப்படையில் நாம் ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில் உள்ள எகிப்திய மற்றும் எத்தியோப்பிய சபை வரலாற்றைப் புரிந்துகொள்ள வேண்டும்.
3.1. நற்செய்தியாளர் மாற்கு
சரி, முதலாவது எகிப்திய சபை வரலாற்றையும், இரண்டாவது எத்தியோப்பிய சபை வரலாற்றையும் பார்ப்போம். நற்செய்தி எகிப்துக்கு எப்படி வந்தது என்பதை உறுதிப்படுத்த திடமான ஆதாரங்கள் இல்லை. நான்கு நற்செய்தியாளர்களில் ஒருவரான மாற்குதான் எகிப்தில் முதன்முதலாக நற்செய்தியைப் பிரசங்கித்தார் என்று பாரம்பரியம் கூறுகிறது. இவர் எகிப்தின் அலெக்சாந்திரியாவில் பிரசங்கித்ததாகவும், எகிப்தில் இரத்தசாட்சியாக மரித்ததாகவும் ஆரம்பகால கிறிஸ்தவ எழுத்தாளர்களான கிளெமெந்துவும், யூசேபியசும் கூறுகிறார்கள்.
3.2. அலெக்சாந்திரியாவின் அப்பொல்லோ
அப்பொல்லோ அலெக்சந்திரியா பட்டணத்தில் பிறந்து வளர்ந்த ஒரு யூதன், சாதுரியவான், வேதவாக்கியங்களில் வல்லவன், கர்த்தருடைய மார்க்கத்திலே உபதேசிக்கப்பட்டு, ஆவியில் அனலுள்ளவனாய்க் கர்த்தருக்கு அடுத்தவைகளைத் திட்டமாய்ப் போதகம்பண்ணிக்கொண்டுவந்தவன் என்று அப்போஸ்தலர் நடபடிகள் 18:24கிலிருந்து தெரிகிறது. அப்போஸ்தலர்களின் காலத்திலேயே அலெக்சாந்திரியாவில் கிறிஸ்தவம் பலமாக வேரூன்றியிருக்கிறது என்று தெரிகிறது.
பண்டைய கிறிஸ்தவ உலகில் ஐரோப்பாவில் உரோம், சிறிய ஆசியாவில் அந்தியோக்கியா, ஆப்பிரிக்காவில் அலெக்சாந்திரியா ஆகிய மூன்று இடங்கள்தான் சபையின் மூன்று மிக முக்கியமான மையங்களாகக் கருதப்பட்டன. பிற்காலத்தில் இந்த மூன்று மையங்கள் கிறிஸ்தவத்தின் மூன்று பிரிவினைகளின் மையங்களாக மாறின.
அலெக்சாந்திரியா எகிப்திலுள்ள ஒரு முக்கியமான நகரம் என்று நான் சொல்லத் தேவையில்லை. யூதனாகிய அப்பொல்லோ அலெக்சாந்திரியாவில் இருந்தபோது கிறிஸ்துவை விசுவாசித்து கிறிஸ்தவரானாரா அல்லது வேறு எங்காவது வாழ்ந்தபோது நற்செய்தியைக் கேட்டு விசுவாசியானாரா என்று தெளிவாகத் தெரியவில்லை.
ஆனால், அந்தக் காலகட்டத்தில் அலெக்சாந்திரியாவிலும், எகிப்தின் வேறு பல நகரங்களிலும் யூதர்கள் அதிகமாக வாழ்ந்தார்கள். எனவே, அன்று யூத மதத்தின் ஒரு பிரிவாக அல்லது பகுதியாகக் கருதப்பட்ட கிறிஸ்தவம் அங்கு பரவ நல்ல வாய்ப்பு இருந்தது.
3.3 பெந்தெகொஸ்தே திருவிழாவில் அலெக்சாந்திரியர்கள்
பெந்தெகொஸ்தே திருவிழாவின்போது "வானத்தின் கீழிருக்கிற சகல தேசத்தாரிலுமிருந்து வந்த தேவபக்தியுள்ள யூதர்கள் அப்பொழுது எருசலேமிலே வாசம்பண்ணினார்கள்," என்று நடபடிகள் 2இல் வாசிக்கிறோம். உரோமப் பேரரசின் எல்லைகளிலிருந்தும், அதற்கு அப்பாலிருந்தும் தேவபக்தியுள்ள திரளான யூதர்கள் பெந்தெகொஸ்தே திருவிழாவுக்கு எருசலேமுக்கு வந்திருந்தார்கள். அன்று அவர்கள் பேதுருவின் பிரசங்கத்தைக் கேட்டார்கள். அவருடைய பிரசங்கத்தைக் கேட்டவர்களில் 3000 ஆண்கள் விசுவாசிகளானார்கள், கிறிஸ்தவர்களானார்கள். அவர்களில் சிலர் நிச்சயமாக அலெக்சாந்திரியாவைச் சேர்ந்தவர்களாக இருந்திருப்பார்கள். ஏனெனில், அன்று பாலஸ்தீனத்தின் யூதேயாவுக்கு வெளியே அலெக்சாந்திரியாதான் யூதர்களின் மிகப் பெரிய குடியிருப்பாகக் கருதப்பட்டது.
3.4. வரலாற்றாசிரியர்
கென்னத் ஸ்காட் லேட்டரெட் (Kenneth Scott Latourette) என்ற சபை வரலாற்றாசிரியர் A History of the Expansion of Christianity, Christianity in a Revolutionary Age, and A History of Christianity என்ற தன் புத்தகத்தின் முதல் பாகத்தில் எகிப்தில் நற்செய்தி எப்படி பரவியது என்பதைப்பற்றி பின்வருமாறு எழுதுகிறார்.
“இரண்டாம் நூற்றாண்டின் இறுதியிலேயே சபைகள் அங்கு மிகப் பலமாக இருந்தன. 'எகிப்தியர்கள் எழுதிய ஒரு நற்செய்தி' நூலும் அங்கு இருந்தது. கிறிஸ்தவத்தின் பழமைவாத, வைதீக, சபைகளும், விசுவாசத்துக்கு எதிரான சில வேதப்புரட்டுகள் உட்பட கிறிஸ்தவத்தின் பல பிரிவுகளும் எகிப்தில் இருந்தன. அலெக்சாந்திரியாவில் பிரபலமான ஓர் இறையியல் கல்லூரி செயல்பட்டது. கிளெமெந்து, ஓரிஜென் போன்ற புகழ்பெற்ற இறையியல் அறிஞர்கள் இந்தக் கல்லூரியில் ஆசிரியர்களாக இருந்தார்கள். அலெக்சாந்திரியாவின் கிறிஸ்தவத்தில் கிரேக்கர்களின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஆயினும், கான்ஸ்டன்டீனின் காலத்திற்குமுன்பே, கிறிஸ்தவம் எகிப்தின் பிற பகுதிகளிலும், பழங்குடி மக்களிடையேயும் பரவியது. வேதாகமத்தின் சில பகுதிகள் எகிப்தியர்களின் பேச்சுவழக்கில் மட்டுமே இருந்த சில வட்டார மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தன. கிறிஸ்தவ விசுவாசம் எகிப்தின் வட பகுதியிலும், தென் பகுதியிலும் பரவியிருந்தது. இவ்வாறு பூர்வீக எகிப்திய சபையான காப்டிக் சபைக்கான அஸ்திபாரம் ஏற்கெனவே போடப்பட்டிருந்தது,” என்று அவர் எழுதுகிறார்.
லேட்டரெட்டின் பகுப்பாய்வும், கூர்நோக்கும் கவனிக்கத்தக்கவை. கிறிஸ்தவம் இரண்டாம் நூற்றாண்டிலேயே அலெக்சாந்திரியாவில், குறிப்பாக கிரேக்க மொழி பேசுபவர்களிடையிலும், கிரேக்க கலாச்சாரதில் வாழ்ந்த மக்களிடையிலும், வேகமாகப் பரவியிருந்தது என்று அவர் கூறுகிறார்.
எகிப்து என்று சொன்னவுடன் பார்வோன் மன்னர்களும், பிரமிடுகளும், சிங்கம் செம்மறி ஆடு வல்லூறு உடலும் மனிதத் தலையும்கொண்ட ஸ்பிங்க்சும், அவர்களுடைய பாரம்பரிய எழுத்துமுறையாகிய ஹைரோகிளிஃபிக்சும், பண்டைய சமுதாய வாழ்க்கையும்தான் பொதுவாக நம் நினைவுக்கு வரும்.
3.5. கிரேக்க எகிப்தியக் கலாச்சாரம்
ஒருபுறம் எகிப்தியக் கலாசாரத்தின் தாக்கம் வேதாகமத்தின் காலம்வரை மட்டும் அல்ல, அதற்குப்பின் ஆதிச் சபையின் காலம்வரைகூட நீடித்தது என்று சொல்லலாம். ஆனால் இன்னொரு புறம், அதற்குமுன்னரே, அதாவது உரோமப் பேரரசு வடக்கு ஆப்பிரிக்காவின் பகுதிகளை ஆக்கிரமிக்கிறதற்குமுன்னரே, கிரேக்க மன்னன் அலெக்சாந்தரும், அவனுக்குப்பின் ஆண்ட பிற கிரேக்க மன்னர்களும் மேற்கொண்ட நடவடிக்கைகளினால் கிரேக்க கலாச்சாரத்தின் தாக்கம் அங்கு அதிகமாக இருந்தது, ஊடுருவிப் பரவியது, நிலைத்திருந்தது. எனவே, எகிப்திலும் எத்தியோப்பாவிலும் கிரேக்கக் கலாச்சாரத்தின் ஆதிக்கமும் செல்வாக்கும் கணிசமான அளவுக்கு இருந்தது என்று சொல்லலாம். உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த மக்கள் அங்கு வாழ்ந்தார்கள். கிரேக்க மொழி பேசியவர்கள் அதிகம் இருந்தார்கள். ஆனால், அதே நேரத்தில் எகிப்தின் பூர்வீகக் குடிகளும் கணிசமான அளவுக்கு இருந்தார்கள்.
3.6. காப்டிக் கிறிஸ்தவம்
கிரேக்க மொழி பேசியவர்களிடையே மட்டும் அல்ல, எகிப்தின் பூர்வீகக் குடிகளிடையேயும் கிறிஸ்தவம் செழித்து வளர்ந்தது. இந்த இரு சாராரிடையேயும் நற்செய்தி வேகமாகப் பரவ ஆரம்பித்தது. சபைகள் நிறுவப்பட்டன. வேதவாக்கியங்கள் பூர்வீகக் குடிகளின் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன. அங்கிருந்த பூர்வீகக் குடிகள் காப்டிக் இனத்தார் என்று அழைக்கப்படுகிறார்கள். காப்டிக் இனத்தாரிடையே கிறிஸ்தவம் பரவத் தொடங்கியபோது, அவர்கள் வேதாகமத்தை எளிமையாகப் புரிந்துகொள்வதற்கு வசதியாக அவர்கள் அப்போது பயன்படுத்திக்கொண்டிருந்த கடினமான ஹைரோகிளிஃபிக்சுக்குப்பதிலாக கிரேக்க எழுத்துக்களை அடிப்படையாகக்கொண்டு ஓர் இலகுவான எழுத்துமுறையை உருவாக்கினார்கள் என்று லேட்டரெட் கூறுகிறார். அவர்கள் இவ்வாறு உருவாக்கிய எழுத்துமுறை காப்டிக் மொழி என்று அழைக்கப்பட்டது. இதுதான் காப்டிக் கிறிஸ்தவ இலக்கியம் பிறந்த வரலாற்றின் தொடக்கம். காப்டஸ் எகிப்தின் பழங்குடி கிறிஸ்தவர்கள். காப்டிக் இலக்கியம் முக்கியமாக எகிப்தின் வட பகுதியில் வேகமாக வளர்ந்தது. அங்கு பேசப்பட்ட காப்டிக் மொழி சாடிக் மொழியாக்கம் என்று கூறப்பட்டது. வேதாகமம் இந்த மொழியில் கி.பி 350இல் மொழிபெயர்க்கப்பட்டது என்று கூறப்படுகிறது.
காப்டிக் மொழியை உருவாக்கி, காப்டிக் கிறிஸ்தவ இலக்கியத்தை வளர்த்ததில் பெரும் பங்கு வகித்தவர்கள் எகிப்திய துறவிகள். அவர்கள் நன்கு படித்தவர்கள். ஒன்றைக் கவனியுங்கள். கிறிஸ்தவம் எகிப்தில் வாழ்ந்த யூதர்களிடையேயும், கிரேக்கக் கலாசாரத்திலும், பரவி செழித்து வளர்ந்தது. இவர்கள் அலெக்சாந்திரியாவின் பெரிய தரமான பல்கலைக்கழகங்களில், கல்விக்கூடங்களில், முதல்வர்களாகவும் பேராசிரியர்களாகவும் இருந்தவர்கள், கற்றவர்கள், கல்விமான்கள். அலெக்சாந்திரியாவின் சபைப் பிதாக்களான கிளெமெந்து, அத்தனேசியஸ், ஓரிஜென் போன்றவர்களின் எழுத்துக்களும் பேச்சுக்களும் இவர்கள்மேல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இது ஒரு புறம்.
இன்னொரு புறம் எகிப்தின் பழங்குடியின மக்களிடையேயும், பூர்வீகக் குடிகளின் கலாச்சாரத்திலும் நற்செய்தி ஊடுருவிப் பரவியது. நம் தமிழ்நாட்டில் நற்செய்தி அறிவிக்க வந்த மேல்நாட்டினர் நற்செய்தி அறிவித்ததோடு நிற்காமல், தமிழையும் வளர்த்தார்கள். அதுபோல கிறிஸ்தவம்தான் எகிப்தில் காப்டிக் மொழியின் வளர்ச்சிக்குக் காரணம் என்பது மறுக்கமுடியாத உண்மை. கிறிஸ்தவத் துறவிகள் காப்டிக் என்ற ஒரு புத்தம்புதிய மொழியை உருவாக்கவில்லை. அங்கு ஏற்கெனவே எகிப்திய மொழி இருந்ததது. படங்களைப் பயன்படுத்தி எழுதும் முறையான ஹைரோகிளிஃபிக்ஸ் என்ற முறையில் அவர்கள் எழுதினார்கள். அதின் பல அம்சங்களை அடிப்படையாகக்கொண்டு, கிரேக்க எழுத்துக்களைப் பயன்படுத்தி அவர்கள் காப்டிக் மொழியை உருவாக்கினார்கள். ஆகவே, எகிப்தில் கிறிஸ்தவர்களுக்கு வேதாகமம் எபிரேய, கிரேக்க, காப்டிக் மொழிகளில் கிடைத்தது. இதனால் ஏற்பட்ட மாபெரும் விளைவு, வட ஆப்பிரிக்காவில் எகிப்தின் மேற்குப் பகுதியில், குறிப்பாக கார்த்தேஜிலும் அதைச் சுற்றியிருந்த பகுதிகளிலும், கிறிஸ்தவம் வேகமாகப் பரவியது, கிறிஸ்தவத்தின் செல்வாக்கு அதிகமாக வளர்ந்தது, கிறிஸ்தவர்களின் விசுவாசம் பலமாக இருந்தது. அன்றைய கார்த்தேஜ் இன்றைய துனிசியா; அதைச் சுற்றியிருந்த பகுதிகள் இன்றைய அல்ஜீரியா. கவனியுங்கள். வடக்கு ஆப்பிரிக்காவின் வடமேற்குக் கடற்கரைப் பகுதிகளில் கிறிஸ்தவம் ஆழமாக வேரூன்றியது. கான்ஸ்டன்டீனின் காலத்தில், உரோமப் பேரரசில் கிறிஸ்தவத்தின் செல்வாக்கு முதலாவது ஆசியா மைனரில் அதிகமாக இருந்தது என்று சொல்லலாம். அது இன்றைய துருக்கி. உரோமப் பேரரசில் கிறிஸ்தவத்தின் செல்வாக்கு அதிகமாக இருந்த இரண்டாவது பெரிய பகுதி வட ஆப்பிரிக்காவின் இன்றைய துனிசியாவும், அல்ஜீரியாவும் ஆகும். அங்கு அப்போது ஏராளமான கிறிஸ்தவர்கள் இருந்தார்கள். அவர்கள் பலமாகவும் இருந்தார்கள்.
3.7. காப்டிக் கிறிஸ்தவர்களுக்குச் சித்திரவதை
மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எகிப்தின் காப்டிக் கிறிஸ்தவர்களுக்கு எதிராக ஒரு பயங்கரமான சித்திரவதை எழுந்தது. அப்போது காப்டிக் சபை, குறிப்பாக அலெக்சாந்திரியாவிலும் அதைச் சுற்றியிருந்த பகுதிகளிலும், செழிப்பாக வளர்ந்து செல்வாக்கோடும், பலத்தோடும் இருந்தது. உரோமப் பேரரசு எகிப்தில் கிறிஸ்தவர்களைச் சித்திரவதை செய்தபோது, எகிப்தின் காப்டிக் கிறிஸ்தவர்கள்தான் அதிகமாகப் பாதிக்கப்பட்டார்கள். ஆப்பிரிக்கா கண்டத்தில் காப்டிக் கிறிஸ்தவர்கள் பட்ட பாடுகளை மறக்க முடியாது. ஏறக்குறைய 311இல், உரோமப் பேரரசன் டயக்ளீஷியன் ஆட்சியின்போது, எகிப்திய காப்டிக் கிறிஸ்தவர்கள் அனுபவித்த பயங்கரமான பாடுகளையும், உபத்திரவங்களையும் செசரியாவின் யூசிபியஸ் சபை வரலாறு என்ற தன் புத்தகத்தின் எட்டாம் பாகத்தில் 7, 8, 9 ஆகிய மூன்று அத்தியாயங்களில் விவரிக்கின்றார். இவைகளுக்குத் தான் நேரடி சாட்சி என்று அவர் கூறுகிறார். ஆம், அப்போது அவர் எகிப்தில் இருந்தார்.
சிலர் தலை வெட்டப்பட்டுக் கொல்லப்பட்டார்கள்; வேறு சிலர் நெருப்பில் தூக்கி வீசப்பட்டார்கள்; இன்னும் சிலர் காட்டு மிருகங்களுக்கு இரையாக்கப்பட்டார்கள். மிருகங்களுக்குமுன் தூக்கி வீசப்பட்டபோது அவர்களால் தங்களைக் காத்துக்கொள்ளமுடியவில்லை; கையறு நிலையில் நிர்வாணிகளாக நின்றார்கள். ஜெபித்தார்கள். பல வேளைகளில் மிருகங்கள் அவர்களைத் தாக்கவில்லை. இது தேவனுடைய தெய்வீக ஏற்பாடு. தேவன் அவர்களை அற்புதமாகப் பாதுகாத்தார். பின்னர் அவர்கள் "வாளால் வெட்டப்பட்டார்கள்", அவர்களுடைய உடல்கள் கடலில் தூக்கிவீசப்பட்டன.
விதிவிலக்கின்றி ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் சித்திரவதைசெய்யப்பட்டார்கள். சிலுவையில் தலைகீழாக அறையப்பட்டார்கள்; வேறு சிலர் பட்டினியால் இறந்தார்கள்.
எகிப்தில் தெபெஸ் என்ற மாநிலத்தில் கிறிஸ்தவர்கள் பட்ட பாடுகளும், உபத்திரவங்களும், சித்திரவதைகளும் வேறெங்காவது நடந்திருக்குமா என்பது சந்தேகம். மரக் கிளைகளை வளைத்து கிறிஸ்தவர்களின் கைகளையும் கால்களையும் அவைகளோடு சேர்த்துக் கட்டினார்கள். வளைத்துக் கட்டிய மரக்கிளைகளை விட்டபோது அவைகளில் கட்டியிருந்த கைகளும் கால்களும் தனித்தனியாகக் கிழிந்து தொங்கின. ஒரே நாளில் நூற்றுக்கணக்கானோர் இப்படிக் கொல்லப்பட்டார்கள். இந்தச் சித்திரவதை பல ஆண்டுகளாக நீடித்தது. பெண்களையும், சிறு குழந்தைகளையும்கூட விட்டுவைக்கவில்லை.
சில இடங்களில் ஒரே நாளில் சில நூறு பேர் தலை துண்டிக்கப்பட்டு இரத்தசாட்சிகளாக மரித்ததால், அவர்களை வெட்டிய கோடரிகள் மழுங்கிப்போனதாம்; தலைவெட்டிகள் களைத்துப்போனார்களாம். விசுவாசிகளின் வைராக்கியத்தைக் கண்ட தீர்ப்பாயம் மலைத்துப்போனது. அப்படி என்ன நடந்தது? விசுவாசிகள் இப்படிக் கொல்லப்படுவதைப் பார்த்து பிற விசுவாசிகள் பின்வாங்கிப்போவார்கள், விசுவாசத்தை மறுதலிப்பார்கள் என்று அரசு நினைத்தது. ஆனால், அரசு நினைத்தற்கு முற்றிலும் மாறாக நடந்தது. தீர்ப்பாயம் ஒரு கிறிஸ்தவனுக்கு மரண தண்டனை கொடுத்துத் தீர்ப்பளித்து அவனைக் கொலைக்களத்துக்குக் கொண்டுபோனபோது, இன்னொரு கிறிஸ்தவன் தானாக முன்வந்து தானும் ஒரு கிறிஸ்தவன் என்று தன் விசுவாசத்தை அறிக்கைசெய்தான். அவனுக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டது.
அடுத்து இன்னொருவன் முன்வந்தான். மரணசாலைக்குக் கொண்டுபோனபோது எல்லாரும் சங்கீதங்களும், கீர்த்தனைகளும் பாடிக்கொண்டு மகிழ்ச்சியுடன் சென்றார்கள். இவர்களில் பெரும்பாலோர் பெரும் செல்வந்தர்கள், உயர்குடி மக்கள், பேரும் புகழும் வாய்ந்தவர்கள், மிகச் சிறந்த கல்விமான்கள்.
இவர்களில் குறிப்பிடத்தக்க இரத்தசாட்சிகள் அலெக்சாந்திரியாவில் அரசு அதிகாரியான ஃபிலோரோமஸ், தூதிடீசின் ஆயர் ஃபிலியாஸ். அவர்கள் ஆளுநருக்குமுன் கொண்டுவரப்பட்டபோது, "நீங்கள் இயேசுவை மறுதலித்தால் உங்கள் முதிர் வயதினிமித்தமும், உங்கள் குடும்பத்தினிமித்தமும் நான் உங்களை விடுதலையாக்குவேன்," என்று ஆளுநர் பரிந்துரைத்தபோதும், அவர்கள் தங்கள் விசுவாசத்தைவிட்டு அசையவில்லை.
எகிப்திய காப்டிக் விசுவாசிகள் மரணத்தைத் தைரியமாக எதிர்கொண்டார்கள். அவர்கள் தங்கள் மரணத்திலும் நற்செய்தியாளர்களாக மாறினார்கள். அவர்கள் அதிகமாக உபத்திரவத்தை அனுபவித்தபோதும், பாடுபட்டபோதும் அந்தக் கொடிய நேரத்திலும், அவர்கள் உண்மையாக இருந்தார்கள் என்று யூசேபியஸ் விவரிக்கிறார்.
கார்த்தேஜில் படுகொலைசெய்யப்பட்டவர்களில் பெர்பெத்துவா, பெலிசிட்டாஸ் என்ற இரண்டு பெண்கள் மிகவும் முக்கியமானவர்கள்.
தங்கள் சகோதர சகோதரிகள் சித்திரவதைகளை அனுபவித்து இரத்தசாட்சிகளாக மரித்ததை எகிப்தின் காப்டிக் கிறிஸ்தவர்கள் இன்றுவரை மறக்கவில்லை. மறக்கக்கூடிய நாள்களா அவை! மறக்கக்கூடிய அவலங்களா அவை! அத்தனை காப்டிக் கிறிஸ்தவர்கள் இரத்தசாட்சிகளாக மரித்தபோதும் அது கிறிஸ்துவின் வெற்றி என்றே இன்றுவரை காப்டிக் கிறிஸ்தவர்கள் பெருமிதத்துடன் கூறுகிறார்கள்.
3.8. இஸ்லாமியப் படையெடுப்பும், எகிப்தியக் கிறிஸ்தவமும்
642ஆம் ஆண்டு எகிப்தில் நிகழ்ந்த இஸ்லாமியப் படையெடுப்புக்குப்பின் எகிப்தில் கிறிஸ்தவம் கிட்டத்தட்ட அழிந்தது என்று சொல்லலாம். இஸ்லாமியப் படையெடுப்புக்குமுன்பே எகிப்தில் கிறிஸ்தவர்கள் பல தசாப்தங்களாக தங்களுக்கிடையே சண்டைபோட்டுக்கொண்டிருந்தார்கள். ஒரு காலத்தில் ஒற்றுமையாக இருந்தபோது இருந்த பலம் குன்றி, இப்போது மிகவும் பலவீனமாக இருந்தார்கள். இந்த நேரத்தில் இஸ்லாமியர்கள் படையெடுத்து அவர்களை எளிதாக வீழ்த்தினார்கள்.
இஸ்லாமியப் படைகள் வந்தபோது காப்டிக் கிறிஸ்தவர்கள், "இனி நாங்கள் பைசாந்தியப் பேரரசின் ஆளுகையின்கீழ் இல்லை," என்று நினைத்து நிம்மதியடைந்தார்கள்.
இப்போது, நாம் இங்கு நின்று உரோமப் பேரரசின் நிர்வாகத்தைக் கொஞ்சம் புரிந்துகொள்ள வேண்டும். 285ஆம் ஆண்டு உரோமப் பேரரசன் டயக்ளீசியன் அரசின் நிர்வாகத்தைக் கிழக்குப் பகுதி, மேற்குப் பகுதி என இரண்டு பகுதிகளாகப் பிரித்தான். கிழக்குப் பகுதியின் தலைநகரம்தான் துருக்கியில் உள்ள பைசாந்தியம். 642 வாக்கில், மேற்கு உரோமப் பேரரசு ஜெர்மானிய காட்டுமிராண்டிகளால் கைப்பற்றப்பட்டது; உரோமப் பேரரசின் மேற்குப் பகுதி வீழ்ந்தது. ஆயினும், பைசாந்தியத்தில் இருந்த கிழக்கு உரோமப் பேரரசு தன் ஆட்சியையும் அதிகாரத்தையும் தக்கவைத்துக்கொண்டது. அந்த ஆட்சி மாறவில்லை. கிழக்கத்திய பைசாந்தியப் பேரரசின் செல்வாக்கு இன்னும் ஆப்பிரிக்காவில் நீடித்தது. பைசாந்தியத்தின் ஆட்சியாளர்கள் மக்களை முன்பைவிட அதிகமாகக் கொடுமைப்படுத்தினார்கள். எனவே, அங்கிருந்த காப்டிக் கிறிஸ்தவர்கள் அவர்களை வெறுத்தார்கள். இந்த நேரத்தில், இஸ்லாமியப் படைகள் படையெடுத்து அந்தப் பகுதியைக் கைப்பற்றியபோது அவர்கள் ஆரம்பத்தில் நிம்மதிப் பெருமூச்சுவிட்டார்கள். ஆனால், அவர்கள் நிவாரணம் என்று நினைத்தது அவர்களுடைய மூலப் பிரச்சினையைவிட மிக மோசமான பிரச்சினையாக மாறியது. அரபியப் படையெடுப்பாளர்கள் காப்டிக் கிறிஸ்தவர்களை முஸ்லீம்களாக மாற்றுவதற்கு முயன்றார்கள்; மாறாதவர்களைப் பயமுறுத்தினார்கள்; அடிபணியாதவர்களுக்குக் கடுமையான வரி விதித்தார்கள். அவர்களுடைய நெருக்கடிகளுக்கும், பயமுறுத்தல்களுக்கும், கொடுமைகளுக்கும் பயந்து ஏராளமானவர்கள் மதமாறினார்கள். அவர்களுடைய தந்திரங்கள் வேலைசெய்தன.
அதுவரை எகிப்தின் பொதுமொழியாக இருந்த காப்டிக் மொழி மறையத் தொடங்கியது. ஏறக்குறைய 1100 வாக்கில், அரபு மொழி எகிப்தின் பொதுவான மொழியாக மாறிவிட்டது. அரபியர்களுடைய படையெடுப்பின் விளைவு இது. இது இஸ்லாம் பல நூற்றாண்டுகளாக எகிப்தில் வேரூன்றியதால் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க மாற்றம்.
சரி, பைசாந்தியப் பேரரசரின் வரலாற்றையும், இஸ்லாமியப் படையெடுப்பையும் இத்தோடு நிறுத்திவிட்டு, இப்போது எகிப்தியக் கிறிஸ்தவத்தின் இரண்டு முக்கியமான போக்குகள்பற்றி பார்ப்போம். இந்த இரண்டு போக்குகளும்தான் எகிப்தியக் கிறிஸ்தவத்தின் திசையை நிர்ணயித்த, எகிப்துக்கு வெளியே இருக்கும் மேற்கத்தியக் கிறிஸ்தவர்கள் எகிப்தியக் கிறிஸ்தவர்களைப் பார்க்கும் பார்வையைத் தீர்மானித்த, முக்கியமான காரணிகளாகும்.
4.1. மோனோபிசிடிசம் – ஓரியல்புவாதம்
ஒன்று, மோனோபிசிடிசம் என்ற ஓரியல்புவாதம். இதை நான் விளக்க வேண்டும், நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். சபை வரலாற்றைப்பற்றிய ஐந்தாம் பாகத்தில் நான் இதைக் கொஞ்சம் விளக்கியிருக்கிறேன். சரி, தொடர்வோம். இது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இயல்பைப்பற்றிய ஒரு தர்க்கம், விவாதம், விசுவாசம்.
இயேசு கிறிஸ்துவின் இயல்பைப்பற்றி இதற்குமுன் எபேசு நகரில் கூடிய ஆலோசனைச் சங்கம் நிறைவேற்றிய தீர்மானங்களை விரிவாக ஆலோசிப்பதற்காக 451ஆம் ஆண்டு பைசாந்தியப் பேரரசர் மார்சியனின் வேண்டுகோளின்படி உலகெங்குமிருந்து சுமார் 520 ஆயர்கள் சிறிய ஆசியாவில் பித்தினியாவிலுள்ள கல்செடானில் கூடினார்கள். இயேசு கிறிஸ்து தெய்வீக இயல்பு, மனித இயல்பு ஆகிய இரண்டு இயல்புகளையுடைய ஒரு நபர் என்றும், அவர் முழுமையான தேவன், முழுமையான மனிதர் என்றும் ஆலோசனைச் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இயேசு இரண்டு இயல்புகளைக்கொண்ட ஒரு நபர் என்ற ஓர் உபதேசத்தையும், இயேசு முழுமையான தேவன், முழுமையான மனிதன் என்ற உபதேசத்தையும் ஆலோசனைச் சங்கம் திடுதிப்பென்று உருவாக்கவில்லை. நிறைய விவாதங்களுக்கும், கலந்துரையாடல்களுக்கும், ஆய்வுகளுக்கும், பகுப்பாய்வுகளுக்கும்பிறகுதான் இயேசு யார் என்று வேதாகமம் திட்டவட்டமாகப் போதிப்பதையும், தாங்கள் தெளிவாகப் புரிந்துகொண்டதையும், உறுதியாக விசுவாசிப்பதையும் இந்தத் தீர்மானத்தின்மூலம் அறிவித்தார்கள்.
"இயேசு கிறிஸ்து தெய்வீகம், மனுஷீகம் ஆகிய இரண்டு தன்மைகளைக்கொண்ட முழுமையான தேவன், முழுமையான மனிதன்," என்பதே 451இல் கூடிய கல்செடான் ஆலோசனைச் சங்கத் தீர்மானத்தின் சாராம்சம். இது இயேசுவின் தன்மையைப்பற்றிய வேதாகமத்தின் அடிப்படை விசுவாசம். இது இன்றுவரை கிறிஸ்தவத்தின் வைதீகமான உபதேசமாகும். அவருடைய தன்மையை விவரிக்க, "இந்த இரண்டு தன்மைகளும் எந்தக் குழப்பமோ, எந்த மாற்றமோ, எந்தப் பிரிவினையோ, எந்தப் பிரிவோ இல்லாமால் இயேசு கிறிஸ்து என்ற நபரில் உள்ளன" என்ற சொல்லாடலைப் பயன்படுத்தினார்கள்.
இந்தத் தீர்மானத்தை அறியும்போது, "அப்படியானால் கிறிஸ்துவுக்கு ஒரேவொரு இயல்பு மட்டுமே உண்டு என்று வாதித்த கிறிஸ்தவர்கள் அன்று இருந்தார்களா?" என்ற கேள்வியும், சந்தேகமும் நிச்சயமாக எழும், எழ வேண்டும். ஆம், இருந்தார்கள். இயேசுவுக்குத் தெய்வீக இயல்பு என்ற ஒரேவொரு இயல்பு மட்டுமே உண்டு என்று போதித்த கிறிஸ்தவக் குழுக்கள் இருந்தன. "இயேசுவுக்கு இரண்டு இயல்புகள் இருந்திருக்க முடியாது. அவருக்குத் தெய்வீக இயல்பு என்ற ஒரேவொரு இயல்பு மட்டுமே உண்டு. அவருக்கு தெய்வீக இயல்பும், மனுஷீக இயல்பும் இணைந்த ஓர் இயல்பு இருந்திருந்தால் அவருடைய மனுஷீக இயல்பு அவருடைய தெய்வீக இயல்பால் உறிஞ்சப்பட்டிருக்கும். கடலில் விழும் ஒரேவொரு திராட்சைத் துளியும் கடலில் கரைந்து மறைந்துவிடுவதுபோல் இயேசுவின் தெய்வீகம் என்னும் கடலில் அவருடைய மனுஷீகத் துளி கரைந்துவிடும்," என்பது இவர்களுடைய போதனை. மோனோ என்றால் ஒன்று என்றும், பிசிடிசம் என்றால் இயல்பு என்றும் பொருள். இதுதான் monophysitism என்ற ஓரியல்புவாதம்.
கல்செடான் ஆலோசனைச் சங்கம் இந்த ஓரியல்புவாதத்தைக் கடிந்து, கண்டனம்செய்து, நிராகரித்தது.
4.2. ஓரியல்புவாதமும், எகிப்தியக் கிறிஸ்தவமும்
இது எப்படி எகிப்திய, எத்தியோப்பிய கிறிஸ்தவத்தைப் பாதித்தது என்ற கேள்வி எழக்கூடும்.
உண்மையில், கல்செடான் ஆலோசனைச் சங்கம் இப்படிப்பட்ட அடிப்படையான ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற ஒரு காரணம் எகிப்தியக் கிறிஸ்தவம். எகிப்திய ஆயர்கள் இயேசுவின் தெய்வீக இயல்பை மட்டுமே ஏற்றுக்கொண்டு, அவருடைய மனித இயல்பை மறுத்த ஓரியல்புவாதிகள் என்று உலகத்தின் பிற பகுதிகளில் இருந்த சபைகள் நினைத்தன. எனவே, அவர்களுடைய உண்மையான நிலை என்னவென்று பிற பகுதிகளில் இருந்த சபைகள் அறிய விரும்பின, எகிப்திய சபையையும் பிரதான நீரோட்டத்தில் இணைத்துக்கொள்ள விரும்பின. எனவே, இயேசுவின் இயல்பைப்பற்றி எகிப்தில் பரவியிருந்ததாக பிறர் நினைத்த அவர்களுடைய தவறான போதனைகளைத் திருத்த வேண்டும் என்ற நோக்கத்தோடும் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இயேசுவின் இயல்பைப்பற்றிய கல்செடான் ஆலோசனைச் சங்கத்தின் இந்த வரையறை உரோமப் பேரரசெங்கும் இருந்த கிறிஸ்தவத்தை ஒருங்கிணைக்கும் என்று பிரதான சபை நம்பியது. ஆனால், அவர்கள் எதிர்பார்த்தற்கு மாறாக, எகிப்தில் பூகம்பம் வெடித்தது. எகிப்திலும், எத்தியோப்பியாவிலும் இருந்த காப்டிக் சபைகள் கல்செடான் ஆலோசனைச் சங்கத்தின் பிரகடனத்தை ஏற்க மறுத்தன. எனவே, சபைகள் இரண்டாகப் பிரிந்தன; கிறிஸ்துவின் இரண்டு சுபாவங்களை ஏற்றுக்கொண்ட சபைகள், இயேசுவின் தெய்வீக சுபாவத்தை மட்டும் ஏற்றுக்கொண்ட சபைகள் என சபைகள் இரண்டாகப் பிரிந்தன. பிரிந்துபோன சபைகள் ஓரியல்புசபைகள் என்றழைக்கப்பட்டன. ஏழாம் நூற்றாண்டில் இஸ்லாமியப் படையெடுப்புக்குப்பின்னரும் இந்த சபைகள் சில அங்கு இன்னும் இருந்தன. ஆனால், அவை வலுவிழந்துவிட்டன.
இதுதான் எகிப்தியக் கிறிஸ்தவத்துக்கும் மேற்கத்தியக் கிறிஸ்தவத்துக்கும் இடையே ஒரு பெரிய பிரிவினை ஏற்பட்ட காலம். எகிப்தியக் கிறிஸ்தவர்கள் முழுவதும் என்று சொல்ல முடியாவிட்டாலும், பெரும்பான்மையானவர்கள் மேற்கத்தியக் கிறிஸ்தவத்திலிருந்து விலகினார்கள். ஏற்கெனவே, பெரும்பாலான மேற்கத்தியக் கிறிஸ்தவர்கள் எகிப்தியக் கிறிஸ்தவத்தைச் சந்தேகத்துடன்தான் பார்த்தார்கள். இப்போது அது வெளிப்படையாயிற்று.
இங்கு நான் இன்னொரு காரியத்தையும் சொல்ல வேண்டும். எகிப்தியக் கிறிஸ்தவத்தில் இயேசுவின் இயல்பைப்பற்றிய தவறான நம்பிக்கை இருந்தபோதும், எல்லாக் காப்டிக் கிறிஸ்தவர்களும் ஒரே மாதிரி விசுவாசிக்கவில்லை. அவரவர் பல்வேறு விதமாக விசுவாசித்தார்கள். எனவே, கிழக்கத்தியக் கிறிஸ்தவர்களிடையே, அதாவது பைசாந்தியப் பேரரசில் வாழ்ந்த விசுவாசிகளிடையேகூட, ஒருமித்த விசுவாசம் இருக்கவில்லை. இது சபை வரலாற்றின் ஒரு முக்கியமான திருப்பம். எகிப்திய கிறிஸ்தவமும் மேற்கத்தியக் கிறிஸ்தவமும் பிரிந்தன. இரண்டும் தனித்தனி தீவுகளாயின.
எகிப்தியக் கிறிஸ்தவத்தின் போக்கை மாற்றியமைத்த இரண்டாவது முக்கியமான காரணி தவசி ஆன்றனி. இவரைத் தவசி அல்லது துறவி என்று அழைக்கலாம். இவரை ஒரு துறவி என்பதைவிட தவசி என்று சொல்லலாம். எனவே, நான் தவசி ஆன்றனி என்று அழைக்கிறேன்.
எகிப்தியக் கிறிஸ்தவத்தின் போக்கை மாற்றியமைத்த முதல் காரணி இயேசுவின் இயல்பைப்பற்றிய கல்செடான் ஆலோசனைச் சங்கத்தின் தீர்மானம் என்றும், அதனால் மேற்கத்தியக் கிறிஸ்தவமும் கிழக்கத்தியக் கிறிஸ்தவமும் இரண்டாகப் பிரிந்தன என்றும் பார்த்தோம். ஆயினும், எகிப்தியக் கிறிஸ்தவம் கிறிஸ்தவ உலகில் பரவலாகக் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை மறுக்க முடியாது. இரண்டாவது காரணி. எகிப்தின் மிகப் பெரிய துறவி அல்லது உலகத்திலேயே தலைசிறந்த துறவி என்று கருதப்படும் ஆன்றனியின்மூலம் எகிப்தியக் கிறிஸ்தவம் உலகத்தின் பிற பகுதியிலிருந்த கிறிஸ்தவத்தின்மேல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இவரைப்பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கேள்விப்பட்டிருக்கமாட்டீர்கள். துறவி, துறவறம், மடம் - இந்த வார்த்தைகள் நமக்கு அதிகமாகப் பரிச்சயம் இல்லை. இவரைப்பற்றி நீங்கள் கொஞ்சமாவது தெரிந்துகொள்ள வேண்டும். இவரே இதுவரை வாழ்ந்த கிறிஸ்தவத் துறவிகளில் மிகப்பெரிய துறவியாகக் கருதப்படுகிறார். இவர்தான் உலகத்திலேயே தலைசிறந்த துறவியா, மிகப் பெரிய துறவியா, முதல் துறவியா என்பதல்ல காரியம். ஆயினும் கண்டம், நாடு, இனம், மொழி, நிறம் அனைத்தையும் கடந்து இவர் ஒரு நல்ல, சிறந்த, உண்மையான, முன்மாதிரியான துறவி என்பதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் இல்லை.
கத்தோலிக்கர்கள் இவரை "வனத்து அந்தோனியார்" என்று அழைக்கிறார்கள். Desert Fathers, "பாலைவனப் பிதாக்கள்" என்ற ஒரு சிறிய புத்தகம் இருக்கிறது. வாசிக்குமாறு உங்களை உற்சாகப்படுத்துகிறேன். இவர்கள் மூன்றாம் நூற்றாண்டில் எகிப்தின் பாலைவனங்களில், காடுகளில், பள்ளத்தாக்குகளில், குகைகளில் வாழ்ந்த வனவாசிகள், தவசிகள், துறவிகள் (hermits, ascetics, monks). எகிப்தின் முதல் தவசி ஆங்கரைட் பவுல். கத்தோலிக்கர்கள் இவரை 'வனத்துச் சின்னப்பர்" என்பார்கள். இவர் தன் 16 வயதிலிருந்து 129வயதுவரை ஒரு குகையில் வாழ்ந்தார். இவருடைய 43ஆவது வயதிலிருந்து மரிக்கும்வரை ஒரு காகம் இவருக்கு உணவு கொண்டு வந்ததாக இவரைப்பற்றி சபைப் பிதா ஜெரோம் எழுதுகிறார். நான் இவரைப்பற்றிப் பேசப்போவதில்லை. இவரே முதல் துறவியாக இருந்தபோதும், இவர் துறவற இயக்கம் என்று ஒன்றை ஆரம்பிக்கவில்லை. ஆன்றனிதான் அதைச் செய்தார். எனவே, ஆன்றனிதான் பாலைவனத் துறவறத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.
ஆன்றனி நிறுவிய துறவற இயக்கம் எகிப்தைத் தாண்டி வெளியேயும் பரவியது. என்றைக்காவது ஒருநாள் துறவற இயக்கத்தைப்பற்றி நாம் விரிவாகப் பார்ப்போம். அதற்குமுன் இந்தப் பாகத்தில் அதைப்பற்றி கொஞ்சம் சுருக்கமாகப் பார்ப்போம்.
துறவற இயக்கம் எகிப்தின் கிறிஸ்தவத்தின் போக்கை மிகப் பெரிய அளவில் வடிவமைத்தது, மாற்றியமைத்தது, என்பதை நாம் கவனிக்க வேண்டும். துறவற இயக்கம் ஐரோப்பாவில் கிறிஸ்தவத்தைப் பரப்புவதில் முன்னணியில் இருந்தது. ஆம், உண்மை. எனவே, தவசி ஆன்றனியைக்குறித்துப் பேசுவதற்கு இந்த இரண்டு காரணங்கள் போதாதா?
சரி, ஆரம்பிப்போம். எகிப்தில் கெய்ரோவுக்குத் தென்கிழக்கே சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் ஒரு மடம், ஓர் உயர்ந்த கோபுரம், கோபுரத்தின் உச்சியில் ஒரு காப்டிக் சிலுவை. இதுதான் தவசி ஆன்றனியின் மடம். இந்த மடம்தான் கிறிஸ்தவத் துறவற இயக்கத்தின் பிறப்பிடம், தொடக்கம். இந்த மடத்தின் மையப்பகுதியில் அப்போஸ்தலர் சபை ஆலயம் இருக்கிறது. இந்த மடம் 15ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. ஆனால், அந்தக் காலத்தின் வழக்கத்தின்படி இந்த மடம் இதற்குமுன்பு அதில் இருந்த ஒரு பழைய ஆலயத்தின் அஸ்திபாரத்தின்மேல்தான் கட்டப்பட்டிருக்கும் என்றும், அது தவசி ஆன்றனியின் காலத்தைச் சேர்ந்ததாகதான் இருக்கக்கூடும் என்றும் கருதப்படுகிறது. அந்த இடத்தில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சிகளில் நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த சிறிய அறைகள் பல அங்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அறைகள் அந்த மடத்தில் இருந்த துறவிகளுக்கான அறைகளாக இருக்கலாம் என்றும், அவை தவசி ஆன்றனியின் காலத்திலேயே கட்டப்பட்டிருக்கக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
5.1 பிறப்பும், வளர்ப்பும்
ஆன்றனி கி.பி. 251ஆம் ஆண்டு எகிப்தில் உள்ள கோமா என்ற இடத்தில் செல்வச் செழிப்பான ஒரு குடும்பத்தில் விசுவாசப் பெற்றோருக்குப் பிறந்தார். இவருடைய குடும்பத்திற்கு ஆயிரக்கணக்கான ஏக்கரில் நிலபுலன்கள் இருந்தன. இவர் ஒரு பழங்குடி எகிப்தியர். எகிப்தின் பழங்குடி கிறிஸ்தவர்கள் காப்டிக் என்று அழைக்கப்படுகிறார்கள் என்று நாம் ஏற்கெனவே பார்த்தோம்.
251இல் எகிப்து இன்னும் உரோம ஆதிக்கத்தின்கீழ்தான் இருந்தது. கிறிஸ்தவர்கள் அவ்வப்போது சித்திரவதைக்கு ஆளானார்கள். ஆனால், உரோமப் பேரரசில் இருந்த மேற்கத்தியக் கிறிஸ்தவர்களைவிட எகிப்தியக் கிறிஸ்தவர்கள் மிகவும் உயிர்த்துடிப்போடும், ஜீவனோடும் இருந்தார்கள். எகிப்தின் அலெக்சாந்திரியாவைச் சேர்ந்த கிளெமெந்து, ஓரிஜின் என்ற இரண்டு சபைப் பிதாக்கள் கிறிஸ்தவத்தின் பெரிய இறையியலாளர்கள் என்பதை மறக்க வேண்டாம்.
செல்வமும் செல்வாக்கும் கொண்ட பல எகிப்தியர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, சபையில் சேர்ந்தார்கள். உண்மையான விசுவாசிகளாகிய ஆன்றனியின் பெற்றோர் ஆன்றனியை விசுவாசத்தில் வளர்த்தார்கள். ஆன்றனி தன் பெற்றோருடன் தவறாமல் ஆலயத்திற்குச் சென்று வந்தார். எகிப்து உரோமப் பேரரசின் ஆதிக்கத்தின்கீழ் இருந்தபோதும், பேரரசெங்கும் மக்கள் பெரும்பாலும் கிரேக்க மொழியே பேசினார்கள். கிரேக்க கலாச்சாரமே எங்கும் பரவியிருந்தது. சில இடங்களில் மக்கள் இலத்தீன் மொழியும் பேசினார்கள்.
ஆனால், எல்லாரையும்போல் கிரேக்கம் அல்லது இலத்தீன் அல்லது இரண்டையும் படிக்க வேண்டும், பேச வேண்டும், என்று ஆன்றனி விரும்பவில்லை. அவருக்கு அவருடைய தாய்மொழியாகிய காப்டிக் மொழி மட்டுமே தெரியும். ஆனால், சிறுவயதிலேயே வேதத்தைப் பிறர் வாசிப்பதைக் கேட்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தார். அவர் வாசிக்கவில்லை. ஏனென்றால், வாசிக்கத் தெரியாது. பிறர் வாசிப்பதை வாஞ்சையோடு கேட்டார்.
5.2 மனந்திரும்புதல்
ஆன்றனியின் 19ஆவது வயதில் அவருடைய வாழ்க்கையில் நடந்த இரண்டு நிகழ்ச்சிகள் அவருடைய வாழ்க்கையைத் தலைகீழாகத் திருப்பிப்போட்டன. ஒன்று, அவருடைய 19ஆவது வயதில் அவருடைய பெற்றோர் இருவரும் காலமானார்கள். அப்போது எகிப்தில் ஏற்பட்ட கொள்ளைநோயில் அவர்கள் இறந்திருக்கலாம் என்று தெரிகிறது. ஆன்றனி இப்போது ஓர் அனாதை. அவருடைய தங்கையையும், குடும்பத்துக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களையும், பல சொத்துக்களையும் கவனிக்கவேண்டிய, பாதுகாத்துப் பராமரிக்க வேண்டிய, பொறுப்பும் கடமையும் அவர்மேல் விழுந்தது. இது முதல் நிகழ்வு. இதை இன்னும் கொஞ்ச நேரத்தில் தொடர்வோம். இப்போது இரண்டாவது நிகழ்வுக்குச் செல்வோம்.
இரண்டாவது நிகழ்வு ஆறு மாதங்களுக்குப்பிறகு நடந்தது. ஒரு ஞாயிற்றுக்கிழமை. ஆன்றனி வழக்கம்போல் ஆலயத்திற்குச் சென்றார். ஒன்றை நான் மீண்டும் நினைவுபடுத்துகிறேன். இவருக்கு கிரேக்கமோ, இலத்தீனோ எழுதப் படிக்கத் தெரியாது. இலத்தீன் அல்லது கிரேக்கம் படிப்பதற்கோ, எழுதுவதற்கோ, அவர் ஆர்வம் காட்டவில்லை. அவருடைய தாய்மொழியாகிய காப்டிக் மொழி தெரியும். ஆனால், இலத்தீன், கிரேக்க மொழிகளைப் பேசினார், புரிந்துகொண்டார். நான் ஏற்கெனவே சொன்னதுபோல் அவர் வேதம் வாசிப்பதைக் கேட்க விரும்பினார்.
சரி, தொடர்வோம். ஆன்றனி ஆலயத்திற்குச் சென்றபோது, அப்போஸ்தலர் நடபடிகள் நான்காம் அதிகாரத்தில் கிறிஸ்தவர்கள் தங்கள் நிலங்களையும் வீடுகளையும் விற்றுத் தங்களிடமிருந்த அனைத்தையும் தேவனுக்குக் கொடுத்தார்கள் என்ற வேதப்பகுதியைச் சிந்தித்துக்கொண்டிருந்தார். அதைச் சிந்தித்துக்கொண்டே ஆலயத்திற்குள் நுழைந்தபோது, அங்கு, "நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா," என்று மத்தேயு 19:21 வாசிக்கப்படுவது அவருடைய காதுகளில் விழுந்தது. அப்போஸ்தலர் நான்காம் அதிகாரத்தில் விசுவாசிகள் தங்கள் நிலங்களையும் உடைமைகளையும் விற்றுக்கொடுப்பதைப்பற்றிச் சிந்தித்துக்கொண்டு ஆலயத்துக்குள் நுழைகிறார். அங்கு இந்த வசனம் வாசிக்கப்படுகிறது.
ஆன்றனி இதைக் கேட்டுத் திடுக்கிட்டார். ஒரு புறம் ஆச்சரியம்! இன்னொரு புறம் அதிர்ச்சி! இந்த வசனத்தைத் தேவன் தனக்காகவே பேசியதாக ஆன்றனி கருதினார். தேவன் இந்த வசனங்களின்மூலம் தன்னோடு தனிப்பட்ட முறையில் பேசுவதாக அவர் உறுதியாக நம்பினார்.
உணர்ச்சிப்பெருக்கில், ஆத்திரத்தில், அவசரத்தில், திடீரென்று, சிந்திக்காமல் எடுக்கிற முடிவுகள் வெந்தும் வேகாமலும் இருக்கும். ஆனால், இவர் தேவனுடைய வார்த்தையைக் கேட்டார். தேவ ஆவியானவரின் வழிநடத்துதலைப் பின்பற்றினார். சிந்தித்தார், தியானித்தார், தீர்மானித்தார், நடவடிக்கையில் இறங்கினார்.
வீட்டிற்குச் சென்று, தனக்குச் சொந்தமான 3000 ஏக்கர் நிலத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு நிலத்தை தன்னுடைய தங்கைக்குக் கொடுத்தார். தன் தங்கையை ஒரு conventஇல் பாதுகாப்பாக தங்கவைத்தார்; சொத்துக்கள் அனைத்தையும் தன் நகரத்தில் இருந்த ஏழைகளுக்கு விற்றும், தானமாகவும், கொடுத்துவிட்டு, "ஒரு பெரிய எஸ்டேட்டைக் கவனித்துக்கொள்வதில் என் வாழ்க்கையைச் செலவழிப்பதற்குப்பதிலாக ஆவிக்குரிய பயிற்சிகளின்மூலம் நான் இயேசுவை ஆசையாய்ப் பின்தொடர்வதற்காக என் வாழ்க்கையை அர்ப்பணிக்கப்போகிறேன்," என்று கூறி, துறவற வாழ்க்கை மேற்கொள்ளத் தொடங்கினார். இயேசுவைத் தேடி தனிமையில் கடுந்தவ வாழ்க்கை வாழப் புறப்பட்டார்.
சில நொடிகள் நான் இங்கு நிறுத்துகிறேன். எத்தனை ஆயிரம் பிரசங்கங்கள் கேட்டிருக்கிறோம். அவைகள் எப்படுத்திய தாக்கம் என்ன? ஒரேவொரு வசனத்தால் தன் சொத்துக்களை விற்று ஏழைகளுக்குக் கொடுத்த ஆன்றனி எங்கே? நான் எங்கே? தேவனுடைய நடத்துதலுக்கு எப்போதும் சிலர் கீழ்ப்படிக்கிறார்கள், பலர் கீழ்ப்படிவதில்லை.
5.3 துறவறத்தின் தொடக்கம் - முதல் 15 ஆண்டுகள்
கடும்துறவு வாழ்வு வாழத் தீர்மானித்த அவர், தொடக்கத்தில் தன் ஊருக்கு அருகிலே இருந்த ஒரு காட்டில் மலையடிவாரத்தில் ஒரு சிறிய குகையில் ஆங்கிரைட் பவுல் என்ற துறவியின் சீடராக வாழ்ந்தார். அக்குகையின்மேல் அடர்ந்திருந்த ஈச்சமரத்தின் ஓலைகளே ஆங்கிரைட் பவுலின் உடை, அதன் பழங்களே அவருடைய உணவு, அவ்விடத்தில் இருந்த ஊற்றுத் தண்ணீரே அவருடைய குடிநீர். ஆன்றனி இவரோடு சில காலம் தங்கியிருந்ததாகவும், பின்னர் அவர் எகிப்து நாட்டின் அலெக்சாந்திரியாவுக்கு மேற்கே, ஏறத்தாழ 95 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள மேற்கு பாலைநிலத்தின் விளிம்பிலுள்ள Nitrian பாலைநிலத்திற்குச் சென்று 13 ஆண்டுகள் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
ஆன்றனிதான் பாலைவனத்தில் வாழ்ந்த முதல் துறவி எனவும், இவர்தான் பாலைவனத்தில் தனியாக வாழும் வாழ்வை ஆரம்பித்து வைத்தார் எனவும் சொல்லப்படுகிறது. ஆயினும், கிறிஸ்தவத் துறவி தேக்ளாபோன்ற சிலர் இவருக்குமுன்னே கடும் துறவு வாழ்வை வாழ்ந்தார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
இவர் "தனித்திருத்தல், பசித்திருத்தல், விழித்திருத்தல், ஜெபித்திருத்தல்," என்ற நான்கு முக்கியமான ஆவிக்குரிய பயிற்சிகளை மேற்கொண்டார்.
பாலைவனத்தில் சாத்தான் ஆன்றனியைக் கடுமையாய்ச் சோதித்தான் என்று அத்தனேசியஸ் குறிப்பிடுகிறார்.
இவர் மக்களிடமிருந்து விலகி 15 ஆண்டுகள் தனிமையில் காட்டில் வாழ்ந்தாலும், மத்திய தரைக்கடலைச் சுற்றியிருந்த எல்லா நாடுகளிலும் நன்றாக அறியப்பட்டார். எளியவர்கள், எழுத்தறிவற்றவர்கள். ஏழைகள் அவரைப் போற்றினார்கள் என்றால் அதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், மேல்தட்டு மக்களும்கூட, செல்வாக்குடையவர்களும், கற்றவர்களும் அவருடைய ஞானத்திற்காக அவரைத் தேடினார்கள், அவருடைய வாழ்க்கையைப் பார்க்க விரும்பினார்கள்.
சபைப் பிதாக்களில் ஒருவரான அத்தனேசியஸ் 'புனித ஆன்றனியின் வாழ்க்கை' என்ற நூலில் பின்வருமாறு எழுதுகிறார். "அவர் ஒருவனிடம் இருந்த கிருபையையும், இன்னொருவனிடம் இருந்த ஜெபிப்பதற்கான ஆர்வத்தையும், ஒருவன் கோபத்திலிருந்து பெற்ற விடுதலையையும், இன்னொருவன் மனிதர்கள்மேல் வைத்திருந்த அக்கறையையும் , ஒருவனிடம் இருந்த பொறுமையையும், இன்னொருவன் தன்னை ஒறுத்து உபவாசிப்பதையும், வேறொருவன் வசதிகளைத் துறந்து வெறுந்தரையில் உறங்குவதையும் கவனித்தார், பாராட்டினார், பற்றிக்கொண்டார். அவர்களெல்லாரும் கிறிஸ்துவின்மேல் வைத்திருந்த தேவபக்தியையும், ஒருவர்மேல் ஒருவர் வைத்திருந்த பரஸ்பர அன்பையும் அவர் காணத் தவறவில்லை. பல துறவிகளின் வாழ்க்கையை உன்னிப்பாகக் கவனித்து, அவர்கள் மேற்கொண்டிருந்த ஆவிக்குரிய பயிற்சிகளில் அவர்கள் எல்லாரையும் விஞ்சிவிட வேண்டும் என்று ஆன்றனி தீர்மானித்தார். பல நாள்கள் அவர் இடைவிடாமல் விழித்திருந்து ஜெபித்தார். எப்போதோ ஒரு முறை அல்ல; அடிக்கடி இப்படிச் செய்தார். அற்புதம்! ஒரு நாளில் ஒரேவொருமுறை மட்டுமே மக்கள் கொடுத்த மிக எளிமையான உணவைச் சாப்பிட்டார். ரொட்டித் துண்டும், கொஞ்சம் உப்பும்தான் அவருடைய உணவு. தண்ணீர் குடித்தார். தூங்குவதற்கு ஒரு பாய் வைத்திருந்தார். ஆனால், பெரும்பாலும் அவர் வெட்டாந்தரையில்தான் படுத்தார்," என்று அத்தனேசியஸ் எழுதுகிறார்.
ஆம், ஆன்றனி ஊருக்கு ஒதுக்குப்புறமாகப் போய்விட்டார், தனித்திருந்தார். இரவு முழுவதும் விழித்திருந்து ஜெபித்தார். அடிக்கடி உபவாசம் இருந்தார். ரொட்டி, உப்பு, தண்ணீர் - இதுதான் அவருடைய வழக்கமான சாப்பாடு. உறங்குவதற்குப் பஞ்சு மெத்தை கிடையாது. மிக மெல்லிய பாய் அல்லது வெட்டாந்தரை. கரடுமுரடான கட்டாந்தரையில் படுத்து உறங்கினார்; உடலை ஒறுத்து வாழ்ந்தார். 20 வருடம் யாருடைய முகத்தையும் பார்க்காமல் தலைமறைவாக வாழ்ந்து தவம் இருந்தார்.
5.4 கல்லறைக்குழியில் சில காலம்
ஆன்றனியின் வாழ்க்கை அவரைச் சுற்றியிருந்த மக்களை வெகுவாய்க் கவர்ந்தது. ஆனால், ஆன்றனி தான் வாழ்ந்த வாழ்க்கையில் திருப்தியடையவில்லை. அதனால் அவர் தான் தவமிருந்த இடத்திலிருந்து தூரமாகப் போனார். அங்கு கேட்பாரற்ற ஒரு கல்லறைக்குழி இருந்தது. அந்தக் கல்லறைக் குழியில் அவர் வாழத் தொடங்கினார். யாராவது கல்லறைக் குழியருகே வைத்துவிட்டுச் சென்ற ரொட்டித் துண்டுகளும், தண்ணீரும்தான் அவருடைய உணவு. ஆன்றனி அதை எடுத்தபின் கல்லறையின் நுழைவாயிலை மூடிவிடுவார்.
சாத்தானின் சோதனைகள்
ஆன்றனி இந்தக் கல்லறையில் 6 அல்லது 7 ஆண்டுகள் வாழ்ந்தார். அவர் இந்தக் கல்லறையில் வாழ்ந்தபோது பேயின் பயங்கரமான சோதனைகளை எதிர்கொண்டதாக அத்தனேசியஸ் எழுதுகிறார். இவருடைய கடும் தவவாழ்வு, ஆழ்ந்த ஜெபம் ஆகியவைகளால் பொறாமை கொண்ட சாத்தான், அவரைப் பல நேரங்களில் இரக்கமின்றி அடித்து, நினைவற்ற நிலையில் விட்டுச் சென்றதாகவும், அவரைப் பார்க்க வந்த கிராமத்தார் அவருடைய பரிதாபமான நிலையைக் கண்டு, அருகிலிருந்த ஆலயத்திற்கு அவரைத் தூக்கிச் சென்றதாகவும், அந்நிலையிலிருந்து குணமடைந்த ஆன்றனி மீண்டும் வெகுதொலைவில் இருந்த நைல் பகுதி பாலைவனத்துக்குச் சென்று தவவாழ்க்கையைத் தொடர்ந்ததாகவும் அத்தனேசியஸ் கூறுகிறார்.
ஒருமுறை சாத்தான், “இவ்வளவு சொத்து சுகங்களை எல்லாம் விட்டுவிட்டு, இந்தக் கல்லறைக்குழிக்குள் இப்படிக் கஷ்டப்பட வேண்டுமா? பேசாமல் இங்கிருந்து போய், சந்தோஷமான வாழ்க்கை வாழ்,” என்று ஆலோசனை சொல்லி அவரை சோதித்தான். அத்தகைய தருணங்களில் ஆன்றனி சாத்தானிடம், “ஒப்பற்ற செல்வமாகிய இயேசுவைத்தவிர, வேறு செல்வம் எனக்குத் தேவையில்லை” என்று சொல்லி சாத்தானின் தந்திரங்களை முறியடித்தார். ஒரு முறை சாத்தான் பெண் வேடமிட்டு வந்து அவரைச் சோதித்ததாகவும், இன்னொருமுறை தங்க வெள்ளிக்கட்டிகளை அவருடைய பாதையில் போட்டு பொருளாசையால் சோதித்ததாகவும், ஆன்றனி அவைகளையெல்லாம் ஒரு பொருட்டாகக் கருதாமல் இயேசுவின் பெயரால் விரட்டியடித்ததாகவும் அத்தனேசியஸ் கூறுகிறார். இப்படிப் பல சோதனைகள். சாத்தான் அவரை வெற்றிகொள்ள முடியாது என்பதை உணர்ந்து அவரிடமிருந்து விலகிச் சென்றான். இந்தச் சோதனைகளில் மத்தியில் அவர் தேவனுடைய ஆசீர்வாதத்தையும், அங்கீகாரத்தையும் உணர்ந்தார்
5.5 பாழடைந்த கோட்டையில் வாசம்
சில ஆண்டுகள் கல்லறையில் வாழ்ந்தபின், கல்லறையை விட்டு வெளியேறி, நாகரிகத்தின் சுவடே இல்லாத, ஆள் அரவமற்ற ஓர் இடத்தில் இருந்த ஒரு பாழடைந்த கோட்டையில் வாழத் தொடங்கினார். கோட்டைக்குள் தன்னை அடைத்துக்கொண்டார். "தனித்திருத்தல், விழித்திருத்தல், பசித்திருத்தல், ஜெபித்திருத்தல்" என்ற ஆவிக்குரிய பயிற்சிகள் தொடர்ந்தன.
இந்தப் பாழடைந்த கோட்டையில் இவர் ஏறக்குறைய இருபது ஆண்டுகள் வாழ்ந்தார். அத்தனேசியசின் கூற்றுப்படி, சாத்தான் அவரை இங்கும் விட்டுவைக்கவில்லை. நரிகள், சிங்கங்கள், பாம்புகள், தேள்கள் போன்ற கொடிய காட்டு விலங்குகளால் சாத்தான் அவரைச் சோதித்தான்.
"உடலுக்குரிய சிற்றின்பம் பலவீனமாக இருக்கும்போது, ஆவிக்குரிய பேரின்பம் பலமாக இருக்கும்," என்று அவருடைய காலத்தில் வாழ்ந்த பெரும்பாலான கிறிஸ்தவர்களைப்போலவே ஆன்றனியும் நம்பினார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், "உன் ஆத்துமா பலமாக இருக்க வேண்டும் என்று நீ விரும்பினால், நீ உன் உடலுக்குரிய சிற்றின்பங்களை மறுக்க வேண்டும். உன் உடல் சொகுசாக ஓய்வெடுத்தால், நீ நல்ல உணவையும், இந்த வாழ்க்கையின் நல்ல விஷயங்களையும் அனுபவித்து மகிழ்ந்தால், ஆவிக்குரிய வகையில் நீ சோம்பேறியாகிவிடுவாய். அடிப்படையில், இழப்பு இல்லையென்றால் ஆதாயம் இல்லை; பாடுகள் இல்லையென்றால் ஆளுகை இல்லை; உலகை ஆதாயம்பண்ணினால் ஆத்துமாவை நஷ்டப்படுத்துவாய்," என்று ஆன்றனி கூறினார்.
இவருடைய தேவபக்திமணம் நாடெங்கும் வீசியது. அவரைப் பார்க்க கிறிஸ்தவர்களும், கிறிஸ்தவர்களல்லாதவர்களும் குவிந்தார்கள். அவருடைய வார்த்தையைக் கேட்ட, அவருடைய வாழ்க்கையைக் கண்ட, கிறிஸ்தவர்கள் இன்னும் அதிக பக்தியுள்ளவர்களாக மாறினார்கள், தேவனை அதிகமாகத் தேடினார்கள்; கிறிஸ்தவர்களல்லாத அஞ்ஞானிகள் கிறிஸ்தவர்களானார்கள். அவருடைய பேச்சாற்றலோ, ஞானமோ அல்ல, அவர் இயேசு கிறிஸ்துவின்மேல் கொண்டிருந்த தீவிரமான பக்தியே மக்களை வியப்பில் ஆழ்த்தியது.
ஆன்றனியின் பேரும் புகழும் பரவிற்று. இவரைப் பார்க்கவும், இவருடைய ஞானமுள்ள வார்த்தைகளைக் கேட்கவும் மக்கள் கோட்டைக்குப் படையெடுத்தார்கள். கோட்டைக்கு வெளியே மக்கள் காத்திருந்தார்கள். கோட்டையைச் சுற்றி கூடாரம் போட்டுத் தங்கினார்கள். எப்போதாவது கோட்டை வாசலுக்கு வந்து, சுவரில் இருந்த ஒரு துவாரத்தின் வழியாக மக்களோடு பேசினார். பல ஆண்டுகளாக ஆன்றனி கோட்டையைவிட்டு வெளியேறவில்லை.
இந்தப் பாழடைந்த கோட்டையில் இருந்தபோது, ஒரு சிறு இடுக்கு வழியாகவே, வெளியுலகத்திடம் தொடர்புகொண்டார். மக்கள் உணவு கொண்டுவந்து இதன் வழியாகக் கொடுத்தபோது சில வார்த்தைகள் பேசினார். தன் இடத்துக்குள் இவர் யாரையும் அனுமதிக்கவில்லை. இவரிடம் ஆலோசனையும் அறிவுரையும் கேட்பதற்கு வந்தவர்கள் எல்லாரும் வெளியே நின்றுதான் கேட்டார்களாம்.
ஒருமுறை ஆறு மாதங்களாக ஒருவர்கூட ஆன்றனியை ஒருமுறைகூடப் பார்க்கவில்லை. கோட்டைக்கு உணவு கொண்டுவந்தவர்கள் துவாரத்தின்வழியாக உணவைக் கொடுக்க முயன்றார்கள். ஆன்றனி வரவில்லை. ஆறு மாதங்களாகப் பார்க்காத மக்கள் பொறுமையிழந்து ஒருநாள் அவர் தங்கியிருந்த கோட்டைச் சுவரை உடைத்து உள்ளே சென்றார்கள். தனித்திருந்ததால் அவருக்குப் பைத்தியம் பிடித்திருக்கலாம் அல்லது பசித்திருந்ததால் மரித்திருக்கலாம் என்ற எண்ணத்தில் கோட்டைக்குள் தேடினார்கள். ஆனால், அவரோ நல்ல உடல்நலத்துடன் அமைதியாக ஒளியூட்டப்பட்டவர்போல் உட்கார்ந்திருந்தார்.
ஆன்றனியால் ஈர்க்கப்பட்ட பலர் அவருடைய சீடர்களானார்கள். தேவனால் ஏவப்பட்ட இவர்கள் அவரைப்போல வாழ விரும்பினார்கள். தங்களை வழிநடத்த வருமாறு அவர்கள் இவரைத் தொடர்ந்து வற்புறுத்தினார்கள். சீடர்களின் வேண்டுகோளுக்கு இணங்கித் தன் 55ஆவது வயதில் துறவிகளுக்கு ஒரு மடத்தை ஆரம்பித்தார். இதனால்தான், இவர் கிறிஸ்தவத் துறவற வாழ்வின் தந்தை, துறவற இயக்கத்தின் நிறுவனர் என்று என்றழைக்கப்படுகிறார். ஆனால், முதல் துறவி இவர் அல்ல. இவருக்குமுன் சில துறவிகள் இருந்தார்கள், குறிப்பாக ஆங்கிரைட் பவுல். ஆனால், கிறிஸ்தவத்தில் துறவறம் என்ற எண்ணத்தை விதைத்தவர் இவர்தான்.
"தனித்திருப்பதும், விழித்திருப்பதும், பசித்திருப்பதும், ஜெபித்திருப்பதும்" தங்களைத் தேவனுக்கு நெருக்கமாகக் கொண்டுவரும் என்ற நம்பிக்கையில் இவருடைய சீடர்களும் தங்கள் உடலை வருத்தி, ஆத்துமாவை வெறுத்து, அனைத்தையும் மறுத்து கிறிஸ்துவைப் பின்பற்றத் தொடங்கினார்கள்.
5.6 துறவற மடம்
ஆரம்பகாலக் கிறிஸ்தவர்களும், அவர்களைத் தொடர்ந்துவந்த கிறிஸ்தவர்களும் ஆவிக்குரிய பயிற்சிகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஆன்றனியின் வாழ்க்கையையே முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டார்கள். ஆவிக்குரிய பயிற்சிகள் என்றவுடன் ஆன்றனியின் "தனித்திரு, விழித்திரு, பசித்திரு, ஜெபித்திரு" என்ற பயிற்சிகள்தான் எல்லாருடைய நினைவுக்கும் வந்தன.
அன்று ஆன்றனியைப்போல் பலர் தீவிரமான ஆவிக்குரிய பயிற்சிகளில் ஈடுபடவில்லை. அவரைப்போல் கடுமையான ஆவிக்குரிய பயிற்சிகளைச் செய்யவேண்டிய அவசியம் இல்லை என்று நினைத்தவர்கள்கூட கிறிஸ்தவ வாழ்க்கைக்கு நல்ல ஆவிக்குரிய பயிற்சிகள் அவசியம் என்று உணர்ந்தார்கள், ஒப்புக்கொண்டார்கள். ஏன்? இதற்கு இரண்டு காரணங்கள்.
ஒன்று, முதல் நூற்றாண்டிலேயே, அதாவது அப்போஸ்தலர் காலத்திலேயே, இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை இருக்கும் என்ற ஓர் எதிர்பார்ப்போடுதான் தேவமக்கள் வாழ்ந்தார்கள், நற்செய்தி அறிவித்தார்கள். இயேசுவின் வருகையில் தங்களுடைய பாடுகள் முடிவுக்கு வந்துவிடும் என்ற நம்பிக்கையில், அவருக்காக இரத்தசாட்சிகளாக மரிப்பதை அவர்கள் ஒரு பொருட்டாகக் கருதாமல், பாக்கியமாகக் கருதினார்கள். இயேசுவின் வருகை தாமதமானதால், அந்த எதிர்பார்ப்பு மங்கியது, அந்த நம்பிக்கை குறைந்தது; எனவே, தேவ மக்களுடைய வாழ்க்கை நடையும், சபை வாழ்க்கை முறைமைகளும், அமைப்புகளும் மாறின. கிறிஸ்தவ வாழ்க்கையின் தரம் குறையத் தொடங்கியது.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வாக்குறுதி அளித்தபடியே எந்தக் கணமும் திரும்பி வரலாம் என்று நாம் புரிந்துகொண்டபோதும்கூட, அவர் எந்தக் கணமும் வரலாம் என்ற எதிர்பார்ப்போடு நாம் வாழவில்லையே! அதுபோல.
இரண்டாவது, உரோமப் பேரரசன் கான்ஸ்டன்டீன் ஆட்சியின்போது கி.பி 313இல் கிறிஸ்தவம் ஒரு மதமாக அங்கீகரிக்கப்பட்டு, அரசின் ஆதரவையும் பெற்றது. அன்றுமுதல் சபை அதுவரை அனுபவித்த சித்திரவதைகள், உபத்திரவங்கள், பாடுகள் அனைத்தும் ஓய்ந்தன. எதிர்ப்பும், சித்திரவதைகளும் இருந்தபோது கிறிஸ்தவம் வளர்ந்தது; கிறிஸ்தவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்வாக இருந்தது. அரசின் அங்கீகாரம் கிடைத்தது, துன்பங்கள் நின்றன; நிலைமை சாதகமாக மாறியது; கிறிஸ்தவர்களின் அன்பு தணிந்தது, ஆர்வம் குறைந்தது, அனல் சாம்பலானது.
இந்த நிலைமையில்தான் துறவறம் துளிர்த்தது என்பதை மறக்க வேண்டாம். இயேசு கிறிஸ்துவின்மேல் உள்ள அன்பைத் தணியாது காக்க, தேவ மக்களுக்குள் இருந்த ஆதி அனலை அணையாது காக்க, நற்செய்தியை அறிவிப்பதில் தொய்வில்லாமல் தொடர, கிறிஸ்தவர்களின் வாழ்க்கைத் தரம் குறையாது தடுக்க, தோன்றியதுதான் துறவறம்.
சரி, தொடர்வோம்.
20 ஆண்டுகள் அற்ப உணவில் வாழ்ந்த ஆன்றனியைப் பார்க்க மக்கள் கூட்டம் அவருக்காக வெளியில் காத்திருந்தது. அவர் கோட்டையை விட்டு வெளியே வந்தபோது நல்ல ஆரோக்கியமாக இருந்தார். இது அவருடைய உடலைப்பற்றிய மதிப்பீடு.
அவருடைய ஆத்துமாவின் நிலையைப்பற்றி அத்தனேசியஸ் "ஆன்றனியின் வாழ்க்கை" என்ற தன் புத்தகத்தில், "அவருடைய ஆத்துமா அவ்வளவு தூய்மையானது! ஏனென்றால், அது துக்கத்தால் துவளவில்லை, சிற்றின்பத்தால் மகிழவில்லை. மக்கள் கூட்டம் அலைமோதி அவரை நெருக்கியபோது அவர் எரிச்சலடையவில்லை. மாறாக, மக்களின் அன்பைக் கண்டு மகிழ்ந்தார்," என்று எழுதுகிறார்.
20 ஆண்டுகள் தங்கியிருந்த கோட்டையை விட்டு அவர் வெளியேறினார். இத்தனை வருடங்கள் மறைவான வாழ்க்கை வாழ்ந்த ஆன்றனி இப்போதுதான் முதன்முறையாகப் பகிரங்கமாக ஊழியம் செய்ய ஆரம்பித்தார். ஊழியத்தின்போது பேய்களை விரட்டினார், நோயாளிகளைக் குணமாக்கினார், எதிரிகளுக்கிடையே சமாதானத்தை ஏற்படுத்தினார், துக்கப்படுகிறவர்களை ஆறுதல்படுத்தினார், ஆவிக்குரிய நடத்துதலை நாடியவர்களுடன் மணிக்கணக்காகப் பேசினார்.
ஆன்றனி ஒரு புறம் "தனித்திரு, பசித்திரு, விழித்திரு, ஜெபித்திரு," என்று தன் துறவற வாழ்க்கைக்கும், இன்னொரு புறம் பகிரங்கமான ஊழியத்துக்கும் போக்கும் வரத்துமாக இருந்தார். பாலைவனத்தில் தனித்திருந்தார்; நகரத்தில் பிரசங்கித்தார்.
5.7 எகிப்தில் சித்திரவதை
கி.பி. 311இல் உரோமப் பேரரசு எகிப்தில் கிறிஸ்தவர்களைச் சித்திரவதைசெய்து கொன்றபோது ஆன்றனி நகரத்தில்தான் இருந்தார். அரசு அதிகாரிகள் அவரைத் தொட மறுத்தனர். கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல, அஞ்ஞானிகளும் அரசுக்கு எதிராகத் திரும்பக்கூடும் என்ற பயத்தினாலா? அவர்களுடைய கோபத்துக்கு ஆளாகிவிடக்கூடாது என்ற காரணத்தினாலா? தெரியவில்லை. ஆனால், அந்த நேரத்தில் இவர் பல இடங்களுக்குச் சென்று கிறிஸ்தவர்களை ஆறுதல்படுத்தினார், விசுவாசத்தில் நிலைத்திருக்க ஊக்கப்படுத்தினார், உறுதிப்படுத்தினார்.
5.8 பாலைவனத்தில் ஆன்றனி
சித்திரவதை ஓய்ந்தபின், ஆன்றனி மீண்டும் நகரத்தைவிட்டு கெய்ரோவுக்குத் தென்கிழக்கே 160 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு பாலைவனத்துக்குப் போய்விட்டார். இந்த நேரத்தில் ஆன்றனிக்குச் சுமார் 40 வயது இருக்கும். இதற்குப்பின் அவர் மேலும் 65 ஆண்டுகள் வாழ்ந்தார். ஆம், அவர் 105 வயதுவரை வாழ்ந்தார். இந்தப் பாலைவனம்தான் 65 ஆண்டுகள் இவருடைய வீடு. இவருடைய தேவபக்தியும், நீண்ட ஆயுளும் உண்மையாகவே இவர் ஒரு பரிசுத்தவான், ஒரு தேவமனிதன், என்ற பெயரை ஏற்படுத்தியது.
இயேசு படகைப் பிரசங்க மேடையாக மாற்றினார். பேதுரு வீட்டைப் பிரசங்க மேடையாக மாற்றினார். பவுல் தன் பயணத்தைப் பிரசங்க மேடையாக மாற்றினார். ஆன்றனி பாலைவனத்தைப் பிரசங்க மேடையாக மாற்றினார். பாலைவனத்தில் தன்னைச் சந்திக்க வந்த மக்களுக்கு தேவனுடைய நற்செய்தியைப் பிரசங்கித்தார். படிப்பறிவு இல்லாத இவருடைய பிரசங்கத்தைக் கேட்க மக்கள் திரளாய்க் கூடினார்கள். அவருடைய வார்த்தையைக் கேட்ட மக்கள் விசுவாசிகளானார்கள்.
5.9 இறுதிக்காலம்
ஆன்றனியின் வாழ்க்கையில் நடந்த பல குறிப்பிடத்தக்க நிகழ்வுகளை அத்தனேசியஸ் தன் புத்தகத்தில் எழுதுகிறார். மக்களிடையே அவரைப்பற்றி உலாவந்த பல கதைகளையும் அந்தப் புத்தகத்தில் குறிப்பிடுகிறார். அவைகளில் எது உண்மை, எது கதை என்பதைக் கண்டுபிடிப்பது கடினம்.
ஆன்றனிக்கு அப்போது 105 வயது. உடல் பலவீனமாக இருந்தது. பற்கள் விழுந்துவிட்டன. தான் இறக்கும் நேரம் நெருங்கிவிட்டது என்று அவருக்குத் தெரியும். எனவே, தன் உடைமைகளை என்ன செய்ய வேண்டும் என்று தன் நண்பர்களிடம் கூறினார். தன் ஆதரவாளர்களைக் கிறிஸ்துவைப் பின்பற்றுமாறு ஊக்குவித்தார். தான் இறந்தபின் தன்னை அடக்கம் செய்யும் இடம் யாருக்கும் தெரியக்கூடாது என்று கண்டிப்பாகக் கூறினார். அவருடைய மரண நேரத்தில் அவரருகில் அமத்தாஸ், மாக்ரியுஸ் (Amathas, Macrius) என்ற இரு துறவிகள் மட்டும் இருக்க அவர் கி.பி 356ல் இறந்தார். அவர் விருப்பப்படி அந்த இரு துறவிகளைத்தவிர வேறு எவருக்கும் தெரியாமல் ஆன்றனி அடக்கம்செய்யப்பட்டார். அவர் எங்கே புதைக்கப்பட்டார் என்று இன்றுவரை யாருக்கும் தெரியாது. கல்லறை வெளிப்படையாக இருந்திருந்தால் மக்கள் தம் கல்லறைக்கு வர ஆரம்பித்துவிடுவார்கள்; தங்களைப் படைத்த தேவனை மறந்துவிடுவார்கள் என்று அவர் கருதியதே இதற்கு காரணம்.
இவர் மிகவும் பிரத்தியேகமான ஒரு மனிதர். இவர் துறவற இயக்கத்தின் தந்தை; துறவற இயக்கத்தை ஆரம்பிக்கக் காரணமானவர். துறவற இயக்கத்தின் வரலாற்றில் மிகவும் செல்வாக்கு மிக்க துறவி. ஐரோப்பா முழுவதும் நற்செய்தி அறிவிப்பதற்கும், ஐரோப்பாவைக் கிறிஸ்தவமயமாக்குவதற்கும் ஆன்றனி மறைமுகமான முக்கிய காரணம் என்றால் அது மிகையாகாது. ஏனென்றால், ஐரோப்பாவில் நற்செய்தி அறிவித்ததில் பெரும் பங்கு ஆற்றியவர்கள் துறவிகள். துறவிகளுக்கான மடங்களை ஏற்படுத்தியவர் ஆன்றனி. எழுத்தறிவற்ற ஒரு பழங்குடி எகிப்தியர் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார் என்றால் நம்ப முடிகிறதா? "தனித்திருந்த, பசித்திருந்த, விழித்திருந்த, ஜெபித்திருந்த" ஒரு துறவி! தன் வாழ்நாளின் பெரும் பகுதியைப் பாலைவனத்தில் கழித்த ஒரு துறவி! தன் ஆத்துமாவை வெறுத்த, தன் ஆசைகளை மறுத்த, தன் உடலைத் துன்புறுத்திய, தன் விருப்பங்களைச் சாகடித்த, தனக்குண்டான யாவற்றையும் துறந்த, மக்கள் தேவமனிதன் என்று கொண்டாடிய இந்த ஆன்றனியைப்பற்றி என்ன சொல்லலாம்? என்றாவது ஒருநாள் நான் கிறிஸ்தவத் துறவறத்தைப்பற்றிப் பேசுவேன். அதுவரை இந்தக் கேள்விக்கான விவரமான பதிலைத் தள்ளிப்போடுகிறேன்.
ஆன்றனியின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் அத்தனேசியஸ் என்று பார்த்தோம். இந்த அத்தனேசியஸ் யார்? சபை வரலாற்றின் முந்தைய சில பாகங்களில் இவரைப்பற்றிப் பேசியிருக்கிறேன். அத்தனேசியஸ் 328முதல் 373வரை 45 ஆண்டுகள் அலெக்சாந்திரியாவின் ஆயராக இருந்தார். அந்தக் காலகட்டத்தில் இவர் உரோமப் பேரரசர்களால் ஐந்துமுறை மொத்தம் 17 ஆண்டுகள் நாடுகடத்தப்பட்டார். ஆரம்பகாலக் கிறிஸ்தவர்களிடையே எழுந்த மிக முக்கியமான விவாதங்களில் ஒன்று கிறிஸ்துவின் தெய்வீகத்தைப்பற்றியது. "இயேசு மாம்சத்தில் வந்த மெய்யான தேவனா அல்லது தேவனால் படைக்கப்பட்ட ஒருவரா? இயேசு தேவனா இல்லையா?" என்ற சச்சரவு அங்கு அப்போது நிலவியது. ஏரியஸ் என்பவர் இயேசுவின் தெய்வீகத்தை மறுத்தார்; இயேசு தேவனால் படைக்கப்பட்ட படைப்பின் முதல் செயல் என்றும், இயேசுவின் இயல்பு பிதாவாகிய தேவனுடைய இயல்பு போன்றதல்ல என்றும் அவர் கூறினார். "இயேசு சில தெய்வீகப் பண்புகளுடன் படைக்கப்பட்ட வரம்புக்குட்பட்ட ஒரு நபர்; அவர் நித்தியமானவர் அல்ல, அவர் தெய்வீகமானவர் அல்ல," என்று அவர் கூறினார். மரபுவழிப் போதனைகளுக்கு விரோதமாக எழுந்த இந்த வேதப்புரட்டை அத்தனேசியஸ் ஆணித்தரமாக எதிர்த்தார்; அவர் திரித்துவத்தை முழுமையாக ஆதரித்தார். ஆனால், திரித்துவத்தை ஆதரிக்காத பெரும்பான்மையானவர்கள் அவருக்கு விரோதமாகத் திரண்டார்கள். அத்தனேசியஸை நாடுகடத்தினார்கள். அப்படி நாடுகடத்தப்பட்டபோது அவர் பாலைவனத்தில் ஆன்றனியோடு தங்கினார். அப்போது அவர் ஆன்றனியின் வாழ்க்கையை நேரில் பார்த்தார். எனவே, பின்னாட்களில் அவர் ஆன்றனியின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார்.
எத்தியோப்பியாவின் ஆரம்பகால கிறிஸ்தவத்தைப்பற்றிக் கொஞ்சம் பார்த்துவிட்டு இந்தப் பாகத்தை நாம் முடித்துக்கொள்வோம். ஆரம்பிப்பதற்குமுன் ஒரு சிறிய துணுக்கைச் சொல்லுகிறேன். எத்தியோப்பியாவின் கடைசி வம்சம் சாலொமோனின் வம்சம் என்றழைக்கப்படுகிறது. சேபாவின் அரசி ஏராளமான பரிசுகளோடு வந்து சாலொமோனைச் சந்தித்தாள் என்று 1 இராஜாக்கள் 10இல் வாசிக்கிறோம். சேபா அரசி எத்தியோப்பிய வரலாற்றின்படி அப்போது எத்தியோப்பாவை ஆண்டார். இவருக்கும் சாலொமோனுக்கும் பிறந்த ஒரு மகன் முதலாம் மெனெலிக் என்பவர்தான் எத்தியோப்பியாவின் முதல் பேரரசர் என்பது எத்தியோப்பியர்களின் பாரம்பரிய வரலாறு. எனவே, அவர்களுக்கு அப்போதே யூதமதத்தைப்பற்றிய ஒரு புரிதல் இருந்திருக்கலாம்.
எத்தியோப்பியக் கிறிஸ்தவம் கிறிஸ்தவ விசுவாசத்தின் பழைமையான ஒன்றாகும். ஓரியண்டல் ஆர்த்தடாக்ஸி என்று அழைக்கப்படும் இவர்களுடைய கிறிஸ்தவத்தில் ஆர்மீனிய அப்போஸ்தல சபை மற்றும் எகிப்தின் காப்டிக் சபையின் மூலக்கூறுகள் அதிகமாக உள்ளன.
எத்தியோப்பியாவில் கிறிஸ்தவத்தின் வரலாறு கந்தாகே அரசியிடமிருந்து தொடங்குகிறது என்று கூறலாம். கந்தாகே என்ற பெண் எத்தியோப்பியாவின் அரசியாக இருந்தார். நற்செய்தியாளர் பிலிப்பு எத்தியோப்பிய அரசி கந்தாகேயுவின் அமைச்சரும், பொருளாளருமான மந்திரிக்கு நற்செய்தி அறிவித்து ஞானஸ்நானம் கொடுக்கும் நிகழ்ச்சி அப்போஸ்தலர் 8ஆம் அதிகாரத்தில் உள்ளது. இந்த அமைச்சர் எத்தியோப்பியாவுக்குத் திரும்பிச் சென்று, அரசிக்கு நற்செய்தி அறிவித்தார். அதன் விளைவாக அரசி கிறிஸ்தவரானார். அவருடைய கணவரும் கிறிஸ்தவரானார். அரசி என்பதால் அவருடைய செல்வாக்கினால் எத்தியோப்பியாவிலும், அதைச் சுற்றியிருந்த நாடுகளிலும் கிறிஸ்தவம் வேகமாகப் பரவியது. அவர் கி.பி. 25முதல் 41வரை எத்தியோப்பாவை ஆண்டார்.
கிழக்கு ஆப்பிரிக்காவில் எத்தியோப்பியப் பேரரசில் கிறிஸ்தவத்தின் வரலாற்றைப் பார்க்க இப்போது கொஞ்சம் வேகமாக நாம் நான்காம் நூற்றாண்டுக்குச் செல்வோம். இன்றைய லெபனானிலுள்ள தீருவிலிருந்து ஃபெர்மென்டியஸ், ஒடிஸியஸ் என்ற இரண்டு வாலிபர்கள் கி.பி. 340இல் அபிசீனியா என்று அழைக்கப்படும் எத்தியோப்பியாவிற்குக் கைதிகளாகக் கொண்டுவரப்பட்டார்கள். இவர்கள் இருவரும் சகோதர்கள் என்று சொல்லப்படுகிறது. இவர்கள் வியாபாரிகளா அல்லது யார் என்று தெளிவாகத் தெரியவில்லை. இவர்களை ஏன் பிடித்துக்கொண்டு வந்தார்கள் என்றும் தெரியவில்லை. எத்தியோப்பாவுக்குக் கொண்டுவரப்பட்ட இவர்கள் இருவரும் அன்றைய அக்சுமின் அரசரின் அரசவையில் ஊழியர்களாக நியமிக்கப்பட்டார்கள். அரசரின் மரணத்திற்குப்பிறகு, ஃபெர்மென்டியஸ் அரசியின் மன்றத்தில் அரச நிர்வாகியாகத் தொடர்ந்தார்; அதே நேரத்தில் பட்டத்து இளவரசர் எசானாவுக்கு ஆசிரியராகவும் இருந்தார். அக்சுமின் அரசர் இறந்தபின் இளவரசர் எசனா அரியணை ஏறியபோது ஃபெர்மென்டியசுக்குப் அரசர் எசனாவின் ஆதரவும், அனுதாபமும் கிடைத்ததால், அவர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டார்கள். ஆனால், அவர்கள் விடுதலைபெற்று வெளியேறவில்லை. அவர்கள் இருவரும் எத்தியோப்பியாவில் நற்செய்தி அறிவிக்கத் தொடங்கினார்கள். உரோமப் பேரரசிலிருந்து எத்தியோப்பியாவுக்கு வரும் கிறிஸ்தவ வணிகர்களுக்கு மதச் சுதந்திரம் வழங்கும் அதிகாரம் ஃபெர்மென்டியசுக்கு வழங்கப்பட்டது. நற்செய்தி அறிவிக்க அவருக்கு அதிகாரமும், சுதந்திரமும் வழங்கப்பட்டது. ஃபெர்மெண்டியஸ் எத்தியோப்பியா முழுவதும் கிறிஸ்தவத்தைப் பரப்பினார்.
340இல் ஃபெர்மென்டியஸ் அலெக்சாந்திரியாவின் ஆயர் அத்தனேசியசைச் சந்தித்து எத்தியோப்பாவுக்கு ஓர் ஆயரை அனுப்புமாறு வேண்டினார். அத்தனேசியஸ் ஃபெர்மெண்டியசை எத்தியோப்பியாவின் ஆயராக நியமித்தார். எகிப்திய காப்டிக் சபைகளுக்கும் எத்தியோப்பிய சபைகளுக்குமிடையே இவ்வாறு ஓர் இணைப்பு நிறுவப்பட்டது. நாளடைவில் ஃபெர்மெண்டியஸ் புதிய மன்னர் எசானாவுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார். கிறிஸ்தவம் அக்சும அரசின் அதிகாரப்பூர்வ மதமாக மாறியது. நான்காம் நூற்றாண்டில் ஏரியவாதம் தலைதூக்கியபோது அலெக்சாந்திரியாவின் மரபுவழி இறையியலிலின்படி இவர் கிறிஸ்தவ சபையைக் கட்டினார்.
ஆறாம் நூற்றாண்டில் அரபியர்கள் படையெடுக்கும்வரை எத்தியோப்பியாவில் கிறிஸ்தவத்தின் செல்வாக்கு மேலோங்கியிருந்தது. அரபியர்களின் படையெடுப்பிற்குப்பின் அவர்களுடைய ஆதிக்கம் மேலோங்கியதால் எகிப்தில் இருந்த காப்டிக் சபையைத்தவிர மற்ற கிறிஸ்தவர்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. ஆறாம் நூற்றாண்டில் இஸ்லாமின் படையெடுப்புக்குப்பின், எகிப்தில் உள்ள சிறுபான்மை காப்டிக் சபையையும், எத்தியோப்பியாவின் ஒரு சிறிய கிறிஸ்தவ சபையையும் தவிர, கிறிஸ்தவம் பெரும்பாலும் மறைந்து விட்டது. தீவிர கிறிஸ்தவ மிஷனரி முயற்சிகள் பதினாறாம் நூற்றாண்டுவரை மீண்டும் தொடங்கவில்லை.
சரி, சபை வரலாற்றின் இந்த ஆரம்ப காலத்தில் ஆப்பிரிக்க கிறிஸ்தவத்தைப்பற்றி என்ன பார்த்தோம்?
1. கிறிஸ்தவம் வட ஆப்பிரிக்காவிற்கு, குறிப்பாக எகிப்துக்கும், எத்தியோப்பியாவுக்கும், அப்போஸ்தலர் காலத்திலேயே வந்துவிட்டது.
2. இயேசுவின் தன்மையைப்பற்றிய உபதேசத்தில், எகிப்தியக் கிறிஸ்தவர்கள் பெரும்பாலும் ஓரியல்புவாதிகள், அதாவது அவர்கள் இயேசுவின் தெய்வீகத்தை மட்டுமே விசுவாசித்தார்கள். இவர்கள் மோனோபிசிஸ்ட்ஸ். மோனோபிசிசம் தவறான உபதேசம்.
3. எகிப்தியக் கிறிஸ்தவம் துறவறத்தோடு நெருங்கிய தொடர்புடையது. இதுதான் துறவறம் தொடங்கிய காலம். பாலைவனத் துறவிகள் குறிப்பாக மிகவும் செல்வாக்கு செலுத்திய ஆன்றனி.
4. ஆறாம் நூற்றாண்டில் அரபியர்கள் ஆப்பிரிக்காவில் படையெடுக்கும்வரை கிறிஸ்தவம் ஆப்பிரிக்காவில், குறிப்பாக எகிப்தில், 500 ஆண்டுகளுக்கும் அதிகமாக ஆதிக்கம் செலுத்தியது.
5. அப்போஸ்தலர் காலத்திலோ, ஆதிச் சபையின் காலத்திலோ ஆப்பிரிக்காவின் தெற்குப் பகுதியில் நற்செய்தி பரவவில்லை. பல நூற்றாண்டுகளுக்குப்பிறகுதான் அங்கு நற்செய்தி அறிவிக்கப்பட்டது.
ஆன்றனியைப்பற்றியும், அவருடைய ஆவிக்குரிய பயிற்சிகளைப்பற்றியும் கொஞ்சம் பார்த்துவிட்டு இந்தப் பாகத்தை முடித்துக்கொள்வோம்.
9.1 உலகம் அல்ல, பரம இயேசுவே காரியம்
தவசி ஆன்றனியின் வாழ்க்கையைப் படிக்கும்போது "இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும், அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன்" என்ற பவுலின் வரிகள் என் நினைவுக்கு வருகின்றன. ஒப்பற்ற, தன்னிகரற்ற, ஈடுயிணையற்ற செல்வமாகிய இயேசுவுக்காக ஆன்றனி எல்லாவற்றையும் இழந்தார். இயேசுவுக்காக மட்டுமே மிகவும் எளிய வாழ்க்கை, வாழ்ந்தார்.
நான் என்னைத்தானே ஒவ்வொரு நாளும் கேட்கும் ஒரு கேள்வி இது. நான் யாருக்காக வாழ்கிறேன்? நான் எதற்காக வாழ்கிறேன்? நான் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன்? என் வாழ்க்கையில் யார் முதன்மையானவர், யார் தலையானவர், யார் மையமானவர்? இந்தக் கேள்வி உங்களுக்கும் பொருந்தும்.
இந்த உலகத்தில் இயேசு ஒருவரைத்தவிர வேறொன்றும் ஒருவனுக்கு நிலையான, நிரந்தரமான சமாதானத்தை, திருப்தியை, தரப்போவதில்லை என்ற உண்மைக்கு ஆன்றனி ஒரு சான்று. “இவ்வுலக வாழ்வு நிலையற்றது, பரம வாழ்வே நிலையானது. அதைச் சிந்தித்துப் பயனடையுங்கள்" என்று ஆன்றனி அடிக்கடி கூறினார், அதன்படி அவர் வாழ்ந்தார்.
9.2 ஆவிக்குரிய பயிற்சிகள்
ஆன்றனி மேற்கொண்ட ஆவிக்குரிய பயிற்சிகள் எளிமையானவை அல்ல. அவை கடுமையானவை. நம் கிறிஸ்தவ வட்டாரத்தில் இதுபோன்ற பயிற்சிகளைப்பற்றி நாம் அதிகமாகக் கேள்விப்படுவதில்லை.
தனித்திருக்கும் பயிற்சியை வளர்த்துக்கொள்பவர்கள் சிந்தனைவாதிகளாகவும், திறம்படச் செயலாற்றும் வல்லுநர்களாகவும் வாழ்வதை நாம் கண்டிருக்கிறோம். ஆவிக்குரிய வாழ்வில் முன்னேற விரும்புகிறவன் தனித்திருத்தல் அவசியம். தேவமக்கள் தேவனோடு தனியாக நிற்கப் பழக வேண்டும். ஆண்டவராகிய இயேசுவின் சீடர்கள் பலர் அவரோடு நடக்காமல் அவரைவிட்டுப் பிரிந்தார்கள். அவர் சிலுவையைத் தனியாகச் சுமந்தார், சிலுவைக்குத் தனியாகச் சென்றார். இயேசு கிறிஸ்து ஐந்து அப்பம், இரண்டு மீன்களை ஆசீர்வதித்து ஐயாயிரம் பேருக்குக் கொடுத்தபின், அவர் மக்களை வழியனுப்பிவிட்டு, சீடர்களைத் துரிதமாக அக்கரைக்குப் போகச்சொன்னபின், சாயங்காலமானபோது அவர் மலையிலே தனிமையாக இருந்தார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நாற்பது நாட்கள் தனிமையில் இருந்தார்.
அப்போஸ்தலனாகிய பவுல் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவைச் சந்தித்தபிறகு அரபு தேசத்திற்குப் போய் தனித்திருந்தார். பவுல் தன் இறுதி நாட்களில் ஒருவனும் தன்னோடு இல்லையென்றும், எல்லாரும் தன்னைக் கைவிட்டதாகவும், கர்த்தர் தனக்குத் துணை நின்றதாகவும் கூறுகிறார். யாப்போக்கு ஆற்றங்கரையில் யாக்கோபு தனித்திருந்து தேவனோடு போராடினான். அவனுடைய வாழ்க்கை மாறிற்று. தேவமக்கள் எப்போதும் தேவனுடைய முகத்தை உற்றுநோக்கியிருப்பவர்கள். மனித விளக்குகளின் வெளிச்சத்தில் நாம் சில காலம் நடக்கலாம். ஆனால், நம் நம்பிக்கை "அணையா விளக்காகிய" இயேசுவின்மேல் மட்டுமே இருக்க வேண்டும். அப்போது தேவனுடைய முகப்பிரகாசம் மோசேயின் முகத்தில் இருந்ததுபோல் நம்மேலும் வீசும்.
"அவர் அவர்களை நோக்கி வனாந்தரமான ஓரிடத்தில் தனித்தே சற்று இளைப்பாறும்படி போவோம் வாருங்கள் என்றார்" (மாற்கு 6:31). பாலைவனப் பயணம், இருளின் பள்ளத்தாக்கு, கடினமான பாதை, இடர்ப்படும் காலம் தேவ மக்களுக்கு இருக்கத்தான் செய்கிறது. தேவன் தம் பிள்ளைகளை தனிமைப் பாதையில் நடத்துவது விந்தையல்ல! நாம் எவைகளை அல்லது எவர்களைச் சார்ந்திருக்கிறோமோ, அவைகளையும் அவர்களையும் நம்மிடமிருந்து பிரிக்கிறார், விலக்குகிறார். இழந்தவைகளையும் இழந்தவர்களையும் நினைத்து நாம் ஏங்குகிறோம், அழுகிறோம். இந்தப் பயணத்தின் தொடக்கத்தில் சுட்டெரிக்கும் வெயிலும், வறண்ட மணலுமே கண்ணுக்குத் தெரிகின்றன. ஆயினும், இந்தப் பயணத்தில் சுயநம்பிக்கையை இழந்து, தேவன்மேல் மட்டுமே நம்பிக்கை வைக்கிறவர்களுக்குச் சுனைகள் சுரக்கின்றன, மலர்கள் துளிர்க்கின்றன, இறைச்சிக்குப்பதிலாக பரத்திலிருந்து மன்னா வருகிறது, நைல் நதியின் நீருக்குப்பதிலாக கற்பாறையிலிருந்து நீர் வருகிறது, பகலில் மேகம் நிழல் தருகிறது, இரவில் மேகம் ஒளி தருகிறது!
பசித்திரு என்றால் பட்டினி கிட என்பதல்ல பொருள். பசித்திரு என்றால், மூச்சுவிடக்கூட முடியாமல், பெருந்தீனி தின்னாமல் சுறுசுறுப்பாக இயங்குமாறு அளவோடு உண்ணுதல் என்று பொருள். அதிகமாக, அடிக்கடி சாப்பிடும்போது சாப்பிட்டது ஜீரணிக்கவே இரத்த ஓட்டத்தின் பெரும் பகுதி செலவழிவதால், மற்ற இடங்களுக்கு, முக்கியமாக சிந்தனை செய்யும் மூளைப்பகுதிக்கு சரியான இரத்த ஓட்டம் செல்லாமல் திசைமாறிப்போகிறது. சிறந்த சிந்தனைக்கும், சுறுசுறுப்பான செயல்களுக்கும் பசித்திருத்தல் ஓர் ஒப்பற்ற ஆவிக்குரிய பயிற்சி. அதிகமாக உண்ண ஆசைப்படுபவர்கள், அதிகமாகப் பேசி மகிழ வேண்டும் என்ற ஆவேசம்கொண்டவர்கள்.
தேவன் தம் மக்களைச் சிறுமைப்படுத்தி, சோதித்து, பசியினால் வருத்தி "மனிதன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்" (மத். 4:4) என்று அவர்களுக்குக் கற்பிக்க விரும்புகிறார். “பந்தயச்சாலையில் ஓடுகிறவர்கள் எல்லாரும் ஓடுவார்கள். ஆகிலும், ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள். பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள். நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம். ஆதலால் நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன். ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணேன். மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்” (1 கொரி. 9:24-27).
உபவாசம் ஒரு பயிற்சி. ஏறக்குறைய உபவாசம் என்கிற ஆவிக்குரிய பயிற்சியை நாம் இழந்தே விட்டோம். தனியாகவும் உபவாசிக்க வேண்டும். கூட்டாகவும் உபவாசிக்க வேண்டும். கிருபையைப் பெறுவதற்கு உபவாசிக்க வேண்டுமா? ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து மறுரூபமலையிலிருந்து இறங்கிவரும்போது சீடர்கள் பிசாசைத் துரத்துவதற்கு முயற்சி செய்கின்றார்கள். பிசாசு போகவில்லை. “நாங்கள் துரத்தினோம். அவைகள் ஏன் போகவில்லை?” என்று தனிமையிலே அவர்கள் அவரை விசாரிக்கின்றார்கள். “இந்த வகைப் பிசாசுகள் ஜெபத்தினாலும், உபவாசத்தினாலுமேயன்றி வேறொன்றினாலும் போகாது,” என்று சொல்கிறார்.
சதாகாலமும் தூங்கிக்கொண்டிருப்பவன் அல்லது தூக்க உணர்வோடு சோம்பல் கொண்டிருப்பவன், சகல சம்பத்துக்களுக்கும் சொந்தக்காரனாக இருந்தாலும், விரைவில் அனைத்தையும் இழந்து, தரித்திரனாகி விடுவான். விழிப்புணர்வு உடையவன் வெற்றிக்கு உரியவன். கருமமே கண்ணாக இருப்பவன் கண்ணுறக்கம்கூட கொள்ளமாட்டான் என்பது பழந்தமிழ் பாட்டு! உறக்கம்தான் உயிர் என்று தூங்குபவர்கள் வாழலாம்; ஆனால், பயனுள்ள, பொருள்ள, வீரியமுள்ள வாழ்க்கை வாழ்வார்களா என்பது கேள்விக்குறி.
விழிப்பு ஒரு ஆவிக்குரிய பயிற்சி. விழிப்பதென்றால் கண் விழிப்பது. இயேசு இராமுழுதும் விழித்திருந்து தேவனோடு ஜெபித்தார் என்று வேதாகமத்தில் நாம் வாசிக்கிறோம். அவரால் பகலிலே ஜெபிக்க முடியாதா? இராமுழுவதும் தேவனோடு ஜெபிக்க வேண்டிய அத்தியாவசம் இருந்ததா? விழித்திருக்க வேண்டிய தேவையில்லாத இயேசு விழித்திருந்தார். விழித்திருக்கவேண்டிய தேவையுள்ள நாம் விழித்திருக்கவில்லையே!
தேவனைத் தேட, தியானிக்க, தனிமை வேண்டும். உயிர்வாழ கொஞ்சம் உணவு வேண்டும். தேவனோடு உறவாட விழித்திருந்து ஜெபிக்க வேண்டும். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கெத்செமனேயிலே, “நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள். ஆவி உற்சாகமுள்ளதுதான். மாம்சமோ பலவீனமுள்ளது,” (மத். 26:11) என்று தம்முடைய சீடர்களுக்குச் சொன்னார். இதன் பொருள் என்ன? "இன்னும் கொஞ்ச நேரத்தில் உங்களுக்கு ஒரு சோதனை வரப்போகிறது! அப்போது எனக்கு உத்தமமாக இருக்க வேண்டும் என்று உங்களுடைய ஆவி உற்சாகமாக இருக்கும். ஆனால், உங்கள் மாம்சம், 'இவனை அறியேன்' என்று பலவீனத்தில் சொல்லும். 'நம்மைக் கொன்றுவிடுவார்களோ' என்று அந்த சோதனையில் வீழ்ந்துவிடக் கூடாது. ஆகையால் விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்,” என்று சொன்னார். ஜெபம் ஆவிக்குரிய பயிற்சிகளில் மிக முக்கியமான ஒன்று.
ஆன்றனி "தனித்திருத்தல், பசித்திருத்தல், விழித்திருத்தல், ஜெபித்திருத்தல்" என்ற ஆவிக்குரிய பயிற்சிகளைக் கடுமையாகக் கடைப்பிடித்தார். "அவர் துறவி. எனவே, இப்படிப்பட்ட பயிற்சிகளை அவர் பின்பற்றினார். நான் இல்லறத்தில் இருக்கிறேன். எனக்கெதற்கு இவைகள்?" என்று பலர் நினைக்கலாம், கேட்கலாம். நாம் ஒருவேளை நீண்ட நேரம் ஜெபிக்காமல் போகலாம். ஆனால், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, அன்று சீடர்களிடம், “நீங்கள் ஒரு மணி நேரமாவது என்னோடேகூட விழித்திருக்கக்கூடாதா?” என்று (மத் 26:40) கேட்ட கேள்வியை உங்களுக்கு நினைப்பூட்டுகிறேன். நாம் ஒவ்வொருவரும் ஜெபத்தில் தேவனோடு உரையாடி, உறவாடி அவரோடு இணைந்திருக்கவேண்டும் என்பதுதான் அவருடைய இருதய விருப்பம். இன்று நாம் எது எதையோ தேடி பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறோம், எதை எதையோ செய்துகொண்டிருக்கிறோம். ஆனால், ஜெபத்தின்மூலம் தேவனோடு உரையாடுவதற்கும், உறவாடுவதற்கும் போதிய நேரம் ஒதுக்குகிறோமா என்ற ஒரு மிகப் பெரிய கேள்வியையும் உங்கள்முன் வைக்கிறேன்.
தேவனைத் தேடி, எல்லாவற்றையும் துறந்து, உடலை ஒரிடத்தில் அமர்த்தி, உள்ளத்து நினைவுகளை ஒருவழிபடுத்தித் தவம் செய்யும் துறவிகளுக்குத் தேவை தனித்திருத்தல், பசித்திருத்தல், விழித்திருத்தல், ஜெபித்திருத்தல். இவை துறவிகளுக்கு மட்டுந்தான் சொந்தமா? இல்லை! தேவமக்கள் அனைவரும் உடன்பாடு கொண்டு, ஒழுகவேண்டிய ஆவிக்குரிய பயிற்சிகளை இவை.
சபை வரலாற்றின் இந்தப் பாகதத்தைப்பற்றிப் பேச வேண்டுமா அல்லது இதைவிட்டுவிட்டு நேரே கிறிஸ்தவப் பேரரசின் ஆரம்ப காலத்துக்குப் போய்விடலாமா என்று சிந்தித்தேன். தவசி ஆன்றனி எகிப்தியக் கிறிஸ்தவத்தின் ஏக பிரதிநிதி என்று சொல்லமுடியாவிட்டாலும், குறைந்தது மிக முக்கியமான பிரதிபலிப்பாக இருப்பதாலும், இவர் எகிப்தியக் கிறிஸ்தவத்தின் போக்கை மாற்றியதாலும், இவரால் எகிப்தியக் கிறிஸ்தவத்தின் செல்வாக்கு பிற இடங்களில் உணரப்பட்டதாலும் இவரைப்பற்றிச் சொல்லித்தான் ஆகவேண்டும் என்று தீர்மானித்தேன். சொல்லிவிட்டேன்.
இந்தப் பகுதி உங்களுக்கு உதவியாக இருந்திருக்கும் என்று நான் நினைக்கிறன். அடுத்த பாகத்தில் மீண்டும் சந்திப்போம்.